in , ,

காதல் துளிரே -6

காதல் துளிரே

அத்தியாயம் -6

நெஞ்சில் நிறைந்திருந்த காதல் கனவுகள் சட்டென தகர்ந்து போனால் மனதும் உடலும் அசந்து அல்லல் படுமே… இறக்கி வைக்க முடியா இரும்பு குண்டு ஒன்றை எந்நேரமும் நெஞ்சம் சுமந்திருக்க வேண்டுமே… அதன் பாரம் தாங்காமல் வீசி எரிய வேகம் கொண்டு விழையும் போதெல்லாம் இருமடங்காய் பாரம் ஏறிப்போகுமே…

கவிதை பெண்ணவளின் நினைவுகளை வெட்டி எரிய நினைக்கிறான் ஜீவா.. இதயத்தை மட்டும் கொய்து எரிய முடிந்திருந்தால் சத்தியமாய் செய்திருப்பான்.. கிட்டத்தட்ட அரைப் பைத்தியம் போலவே சுற்றிய நண்பனின் உடனிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் பேசி மனதை திசை திருப்ப முயன்று கொண்டிருந்தான் சஞ்சய்… வீட்டிற்கு கூட செல்லாமல் வேலை சம்பந்தமாக வெளியூர் செல்வதாக சொல்லி பெங்களூரு வந்திருந்தனர்…

ஒருவரமாகவே இங்கேயே தான் தங்கி இருக்கின்றனர்… பசி தூக்கம் மறந்து விட்டத்தை வெறித்துக் கொண்டிப்பவனை  சஞ்சய் தான் வற்புறுத்தி சாப்பிட வைத்துக் கொண்டிருந்தான்..அன்றும் அப்பிடித்தான் சாப்பிட வைத்து தூக்க மாத்திரை குடுத்து தூங்க வைத்திருந்தான்…

ஜீவாவை தூங்க வைத்து விட்டு ஓய்வாய் அலுவலக வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான் சஞ்சய்… அப்போது அவன் போன் அடிக்கவே, எடுத்து பார்த்தான்… துளிர் தான் அழைத்திருந்தாள்… கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ஜீவாவை பார்த்தான்..ஒரு பெரு மூச்சுடன் எடுத்து பேசினான்..

“என்ன கல்யாண பொண்ணு.. எப்படி இருக்க? “

“நல்லாருக்கேன் ண்ணா.. நீங்க எப்படி இருக்கீங்க..? “

“நல்லாருக்கேன் முல்லை…. வினய் எப்படி இருக்கார்..? “

“நல்லாருக்காங்க ண்ணா… “

“அட என்ன மாப்பிள்ளைக்கு மரியாதை எல்லாம் பலமா இருக்கே…? “என்று கூறி சிரித்தான்…

“நீங்க வேற ண்ணா.. எல்லாம் இந்த அம்மா பண்றது தான்… அவங்க முன்னாடி ஒரு நாள் அவன் இவன்னு பேசிட்டேன்.. செம்ம டோஸ்…. விட்டா அடியே விழுந்துருக்கும்… அதான் கஷ்டமா இருந்தாலும் மாத்திக்கிட்டேன்… “என்று பாவம் போல சொல்ல,

“பாரேன்.. ஒரு பச்சை புள்ளைய எவ்ளோ கொடுமை பண்றாங்கன்னு.. ஜோ ஜேட்…” என்று கிண்டல் செய்தான்…

“அண்ணாஆஆஆஆ… “என்று சிணுங்க..

“சரி சரி.. அழக்கூடாது சரியா… “

“ஹய்யோ!! வந்தேன் கடிச்சு வச்சிருவேன்..”

“ஹாஹாஹா… வினய் பாவம்.. சிலபல கடிகள் வாங்கி தான் வாழ்க்கையை ஓட்டணும் போலயே.. “

“டேய் அண்ணா.. வந்தேன் வெளுத்து விட்டுருவேன்… எருமை… “

“ஹாஹாஹா.. மரியாதை தேஞ்சு கட்டெறும்பு ஆகிருச்சு…சரி ஆத்தா மலையிறங்கு… வினய் கூட கடலை போடாம எனக்கு போன் பண்ணிருக்கியே என்ன விஷயம்…? “

“ஆமாம் எதுக்கு போன் பண்ணேன்.. ஹான் நியாபகம் வந்துருச்சு…நீங்க எங்க இருக்கீங்க… பத்திரிக்கை குடுக்கணும்.. அதை கேக்க தான் பண்ணேன்.. “

“நான் பெங்களூர்ல இருக்கேன்டா… ஒரு வேலை விஷயமா வந்தோம்… “

“ஓ… எப்ப சென்னை வருவீங்க..? “

என்ன சொல்வது என்று யோசித்தவன், “தெரியலைடா.. வந்த வேலை எப்ப முடியும்னு சரியா சொல்ல முடியாது.. ஒரு வாரம் இல்லை அதுக்கு மேலையும் ஆகலாம்… “

“அப்போ நாங்க பெங்களூரு வரவா..? “

“லூசு.. கல்யாணத்த பக்கத்துல வச்சிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் ஏன் அலையறீங்க.. பத்திரிக்கை வச்சா தான் வருவோமா என்ன..? போன்ல இப்ப சொல்லிட்டியே இதுவே போதும்…. “

“அப்போ சரி கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துரனும்.. “என்று சொல்லி திருமண நாள் மற்றும் விவரங்களை சொன்னாள்.. பின்னர் “ஜீவா எங்க அண்ணா.. போன் பண்ணா சுவிட்ச் ஆப்ன்னு வருது.. “

என்ன சொல்வது என்று திகைத்தவன், பின் சற்று சமாளித்து “அவன் போன் உடைஞ்சிடுச்சுமா… என் கூடத் தான் இருக்கான்.. தூங்கறான்.. எழுந்ததும் பேச சொல்றேன்… “

“சரி அண்ணா… மறக்காம பேச சொல்லுங்க.. சரி வச்சிடறேன்.. “என்று கூறி வைத்து விட, சஞ்சய்க்கு ஆயாசமாய் இருந்தது…

‘எப்படி என்ன சொல்லி இவனை பேச வைக்கிறது.. ஏற்கனவே ஒடஞ்சு போய் இருக்கான்.. இப்போ பேசுனா இன்னும் கஷ்டப்படுவான்.. ப்ச் இதுக்கு தான் லவ்வே பண்ணக் கூடாது சாமி ‘என்று புலம்பினான்..

மாலை போல் ஜீவா எழுந்தான்… சஞ்சய் சோபாவிலேயே தூங்கிவிட்டிருக்க ஜீவா சென்று குளித்து விட்டு வந்தான்…. இவன் அரவத்தில் சஞ்சயும் எழுந்து விட்டிருந்தான்… சாப்பாடு ஆர்டர் செய்து விட்டு சஞ்சயும் பிரெஷ் அப் ஆகி வந்தான்…

வந்தவன் ஜீவாவின் போனை எடுத்துப் பார்க்க அது இன்னும் அணைத்தே வைக்கப்பட்டிருந்தது…

“ஜீவா…. ஏன் இன்னும் போனை சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருக்க… வீட்ல கேட்டா என்ன சொல்ல..? “

“ப்ச்… ஒடஞ்சிருச்சுன்னு சொல்லு..” என்றான் சலிப்பாய்..

“அப்பிடித்தான் சொல்லி சமாளிச்சிருக்கேன்… அதோட முல்லை போன் பண்ணுச்சு.. அதுகிட்டயும் அப்பிடி தான் சொல்லிருக்கேன்… என்னோட போன்ல உன்னை கூப்பிட சொல்லுச்சு. “

“என்னால பேச முடியும்னு தோணலைடா…”

“இப்படி சொன்னா எப்படி ஜீவா… இப்படி திடிர்னு பேசாம இருந்தா முல்லை என்ன நினைக்கும்..? “

“இன்னும் பேசி என்னை நானே ஹர்ட் பண்ணிக்க விரும்பல சஞ்சய்…அதோட எந்த விதத்துலயாச்சும் என்னை வெளிப்படுத்தி துளிரை கஷ்டப்படுத்திட கூடாது… அப்பிடி பண்ணிட்டா துளிர் வாழ்க்கை முழுக்க உறுத்திட்டே இருக்கும்.. அதனால் இனிமேல் துளிரை பார்க்கவும் கூடாது பேசவும் கூடாது… இது வரைக்கும் அவளுக்காக காத்திருந்த போது என்னோட காதலை வெளிப்படையா சொல்லாம மனசுக்குள் பல கனவுகளை வச்சிருந்தேன்…அப்போஅது தப்பும் இல்லை..

ஆனால் எப்ப துளிர் எனக்கு சொந்தம் இல்லைனு ஆகி போச்சோ அப்பவே அவளை பார்க்கும் போதும் பேசும் போதும் என் மனசுல எந்த கள்ளமும் இருக்க கூடாது.. நான் இன்னும் அந்த நிலைக்கு வர ரொம்ப நாள் ஆகும் சஞ்சய்.. அவகிட்ட பேசும் போது ‘நீ ஏன் என் லவ்வ புரிஞ்சுக்காம போனீன்னு.. ‘என் மனசு ஒவ்வொரு நிமிஷமும் அவகிட்ட கேக்க சொல்லி தவிக்கும்… நீ என்னோடவ துளிர்ன்னு அவ கையை விடாம பிடிச்சுக்க சொல்லி மனசு எங்கும்.. எப்படி என்னால் கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்க முடியும்… நிச்சயம் எந்த நேரத்துலயும் ஒடஞ்சு போய் அவ கிட்ட கொட்டிருவேன்டா… அப்ப ‘ச்ச்சே’ ன்னு அவ பார்த்தாலே செத்துருவேன்டா… வேண்டாம் எனக்கு எதுவுமே வேண்டாம்.. துளிரை எப்ப மூணாவது மனுசியா பாக்க முடியுதோ அப்போ அவளை பார்த்துக்கறேன்..

அதுவரைக்கும் நான் பார்க்க போவதும் இல்லை.. பேச போறதும் இல்லை… “என்ற நீண்டதாய் தன் உணர்வுகளை வார்த்தையில் கொட்டியவன் மனதின் பாரம் தாங்காமல் ஆண் என்றும் பாராது தன் நண்பனை அணைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தான்…

காதலில் ஆண் பெண் பேதமென்ன… முதல் காதலில் தோற்கும் வலி உயிர் பிரியும் வேதனை ஆயிர்றே… அதிலும் சொல்லாத காதலின் வலி மிக கொடியதாய்… ஒருவேளை சொல்லியிருந்தால் இருவரும் சேர்ந்து இருப்போம் என்ற நினைவே ஊசி முள்ளாய் இதயம் நிரடுவதாய்…. இதயம் சிரமப்பட்டு துடிப்பதாய்…

சஞ்சய், தான் அன்று விளையாட்டாய் சொன்ன வார்த்தை இன்று நிஜமாகவே நண்பனின் வாழ்க்கையாய் மாறிப் போனதை நினைத்து நொந்து போனான்… தன்னை கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்கும் ஜீவாவை அழ விட்டு அமைதியாய் இருப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை அவனுக்கு…

சிறிது அழுது ஓய்ந்தவன் தன்னை ஆறுதல் படுத்திக்கொண்டு சஞ்சயை விட்டு விலகினான்…

“சாரி மச்சான்… உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தறேன்… “

“அடி வாங்க போறடா.. இதெல்லாம் கஷ்டமா… எனக்கு உன்னை பார்த்து தான்டா கஷ்டமா இருக்கு… “

“கவலை படாத மச்சான்… தேவதாஸ் மாதிரியெல்லாம் ஆகிட மாட்டேன்.. துளிர் அளவுக்கு இன்னொரு பொண்ணு என் மனசுல பாதிப்பு ஏற்படுத்தினா நிச்சயம் லேட் பண்ணாம லவ் சொல்லி கல்யாணம் பண்ணிக்குவேன்…. “

“இப்போ தான்டா நிம்மதியா இருக்கு… அப்போ இந்த தாடி… “

“இனி இதுவும் கூட எனக்கு சொந்தமில்லை…. கண்ணாடி பார்க்கும் போதெல்லாம் இந்த தாடியை பார்த்தா துளிர் தான் நியாபகத்துக்கு வருவா… இன்னைல இருந்து கிளீன் சேவ் தான்.. “

“எல்லாரும் லவ் பெயிலியர்ன்னா தாடி வளர்ப்பாங்க.. ஆனால் கிளீன் சேவ் பண்றது நீயாதாண்டா இருப்ப…”என்றான் அவனை இலகுவாக்கும் பொருட்டு..

“நீ முன்னாடியே சொன்ன மாதிரியே என் நிலைமை தேவதாஸ் மாதிரி ஆகிட்டு பாத்தியா.. என்ன தாடி இல்லை… அவ்ளோ தான் வித்தியாசம்… “என்றான் விரக்தியாய்…

“ப்ச்.. மச்சான் நான் அன்னைக்கு சும்மா தாண்டா சொன்னேன்… “என்று சஞ்சய் வருத்தப்பட்டு சொன்னான்…

“எனக்கு தெரியும்டா… நீ வருத்தப்படாத… “

அப்போது சஞ்சயின் போன் ஒலிக்க, எடுத்து யார் என்று பார்த்தான்..துளிர் தான் அழைத்திருந்தாள்… சஞ்சய் ஜீவாவை பார்த்தான்.

“துளிரா… “என்று ஜீவா கேட்க ஆமாம் என்று தலையசைத்தான்….

“நான் வெளிய போய்ட்டேனு சொல்லிரு சஞ்சய் “என்று விட்டு பால்கனிக்கு சென்றுவிட்டான்….

அவன் பின்னாடியே வந்த சஞ்சய் “ஜீவா ப்ளீஸ்டா இப்ப ஒரு தடவை மட்டும் பேசிரு… இப்போதைக்கு கல்யாணத்துக்கு வரோம்னு மட்டும் சொல்லி வை… இல்லைனா என்னவோ ஏதோனு பதறிட்டே இருக்கும்… கல்யாணம் ஆகிட்டா வினய் அவங்க குடும்பம்னு பிஸியாகிடும்.. நம்ம பத்தி பெருசா யோசிக்க டைம் இருக்காது… ப்ளீஸ்டா… “என்று கெஞ்ச ஜீவாவிற்கும் அவன் சொல்வதில் இருந்த உண்மை புரிபட போனை சஞ்சயிடம் இருந்து வாங்கி இருந்தான்…

ஜீவா பேசட்டும் என்று தனிமை கொடுத்து விட்டு விலகி சென்றான் சஞ்சய்.. கையில் இருந்த போனை பார்த்தான்… விரல்கள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது… மீண்டும் துளிரிடமிருந்து அழைப்பு வந்தது… மெதுவாய் அழைப்பை ஏற்று காதில் வைத்தான்…

“ஹலோ அண்ணா எங்க உங்க பிரண்ட்..? இன்னுமா தூங்கிட்டு இருக்காரு… வர வர பொறுப்பே இல்லாம போச்சு… போய் பாக்கெட் தண்ணிய ஊத்தி எழுப்பி விடுங்க… இல்ல நானே பெங்களூருக்கு கெளம்பி வந்துருவேன்… “என்று புரிய எப்போதும் போல் புன்னகை வந்து தொலைத்தது… வந்த நிமிடமே மறைந்தும் போனது..

நெகிழ்ந்த குரலை லேசாய் இறுக்கினான்.. “ஹலோ துளிர்.. நான் ஜீவா தான் பேசுறேன்… “

“யாரு ஜீவா.. எனக்கு அப்புடி யாரையும் தெரியாதே… “என்று அவள் விளையாட்டாய் முறுக்கி கொள்ள, அந்த விளையாட்டு பேச்சு கூட அவனை காயப் படுத்தியது..

“அதுக்குள்ள நான் யாருன்னே தெரியாம போயிருச்சா.. இன்னும் கொஞ்ச நாள் போன சுத்தமா என்னை மறந்துருவ தானே… “எப்பொழுதும் அவள் கண்டிரா வேதனை அவன் குரலில் தெரிய,

“அச்சோ அப்பிடிலாம் இல்லை ஜீவா.. நீங்க இவ்ளோ நாள் பேசாததுனால கொஞ்சம் கோவத்துல அப்பிடி பேசிட்டேன்…சாரி ஜீவா… “என்று வருத்தப்பட்டு சொல்ல, அப்பொழுதும் பதிலேதும் பேசாமல் அமைதியாய் இருந்தான்..

“ஹேய் இதெல்லாம் ரொம்ப அநியாயம் ப்பா.. உங்க கிட்ட சண்டை போட நினச்ச என்னை சாரி கேக்க வச்சுடீங்க பார்த்தீங்களா… “என்று பாவம் போல் சொல்ல, லேசாய் சிரித்து விட்டிருந்தான் ஜீவா…

“ஹப்பா புலவர் ஒருவழியா சிரிச்சாச்சு.. இனி தாராளமா திட்டலாம்… என்ன சார் ரொம்ப பிசியா… ஒரு போன் கூட இல்லை… பத்திரிக்கை குடுக்க வரோம்னு சொல்லிருந்தேன் தானே.. அதுக்குள்ள ஓடிப் போய்ட்டிங்க… “

“இங்க ஒரு பாஷன் ஷோ நடத்தறது விஷயமா வந்தோம்… “

“சரி விடுங்க… கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துருங்க… வரலைனா அஜியை விட்டு தூக்கிட்டு வர சொல்லிருவேன்…. “இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தவன் மனது திருமணம் என்ற சொல்லில் மீண்டும் அயர்ந்து போய் நின்றது… சமாளித்து,

“வினய் எப்படி இருக்கார் .. “

“அவருக்கென்ன ஆள் செம்ம சூப்பரா இருக்கார்… ஒரு சீக்ரெட் சொல்லட்டா இப்பவெல்லாம் நானும் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன் ஜீவா… இவ்ளோ நாள் இந்த பாசத்தை எல்லாம் எங்க வச்சிருந்தான்னே தெரியலை… அவன் காதலை விட என் காதல் கம்மியோன்னு நினைக்க வச்சிடறான்…

உங்களுக்கு தெரியும் தானே ஜீவா நான் எல்லோர்கிட்டையும் ரொம்பவே பிரண்ட்லியா பழகினாலும் இது வரைக்கும் யாரும் என்கிட்ட லவ் சொன்னதில்லை.. எனக்கும் யாரு மேலையும் தோணினதும் இல்லை.. இப்ப புதுசா ஒருத்தர் என்ன விரும்பறாங்க அப்டிங்கும் போது மனசு குதிச்சு குத்தாட்டம் போடுது… ஹேய் என்ன சத்தத்தையே காணோம்… என்ன ரொம்ப பேசுறேனா… அப்பிடித்தான் பேசுவேன்… நீங்க தான் பெஸ்ட் பிரண்ட் ஆச்சே.. ” இப்படி அவள் பேசிக்கொண்டே செல்ல ஜீவாவின் நிலைமை தான் நெருப்பில் வெந்து கொண்டிருந்த இரும்பு தகட்டின் மேல் நிற்பதை போன்றதொரு தாங்க முடியா நிலையை தந்தது..

வேதனையில் இதோவென கொட்ட காத்திருந்த மனதை கட்டுப்படுத்தும் வழி தெரியாது போனை எடுத்து வீசியிருந்தான் சுவற்றில்… அப்பிடியே மண்டியிட்டு அமர்ந்து தலையை இரு கைகளிலும் அழுந்த பற்றி இருந்தான்.. உள்ளம் வெள்ளமாய் வேதனையில் பொங்கிக் கொண்டிருந்தது..

அதற்கு சற்றும் குறையாத வேதனையில் இன்றும் அமர்ந்திருந்தான் முல்லையின் காதலவன்💖💖💖

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

அன்பின் அரசனே 27

என் நெஞ்சுநேர்பவளே -6