in , ,

காதல் துளிரே -5

காதல் துளிரே


அத்தியாயம் -5

நெஞ்சில் நிறைந்திருந்த நினைவுகள் மெல்ல அலையாய் அவனை வாரி சுருட்டி தனக்குள் அழுத்தி வைத்ததில் நேரம் காலம் தெரியாமல் தோட்டத்திலேயே இருட்டிய பிறகும் அமர்ந்திருந்தான் ஜீவா…

அவன் ஜீவன் பருகிடும் நினைவுகளில் இருந்து மீட்டாள் மேகா… அர்ஜுன் நினைவுகளில் இருந்தவள் பால்கனி வழி நிலவை ரசித்துக் கொண்டிருந்த பொழுது தான் தோட்டத்தில் இருந்த ஜீவா கண்ணில் பட்டான்… பிறகு தான் மேகா அவனை அழைக்க கீழிறங்கி வந்தது..

“அண்ணா!! இந்நேரத்துல இங்க ஏன் உக்காந்து இருக்க… “என்று கேட்டவாறே அருகில் வந்து அமர்ந்தாள் மேகா..

அவள் குரலில் மீண்டவன் “சும்மா தான்டா… “என்றதில் அவனையும் மீறிய கரகரப்பு குரலில்…

“என்னாச்சு அண்ணா.. ஏன் உன் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு… எதாவது பிரச்சனையா… “என்று வருத்தமாய் கேட்க,

“ஹேய் அப்பிடிலாம் இல்லடா.. இவ்ளோ நேரம் பனியில் உக்காந்து இருந்தேன் இல்லியா.. அதான் தொண்டை கட்டுன மாதிரி இருக்கு… “என்று சமாளித்தான்..

“அப்புறம் ஏன் இன்னமும் இங்க உக்காந்திருக்க.. வா உள்ள போகலாம்.. “

“இருடா!! கொஞ்ச நேரம் கழிச்சு போகலாம்… சரி சொல்லு உனக்கு அர்ஜுனை பிடிச்சு இருக்கா…? “

“ரொம்ப பிடிச்சு இருக்கு அண்ணா… ரொம்ப நல்லவங்க…. “

“ஹ்ம்ம் பார்ரா…. எப்படி கொஞ்ச நேர பேச்சிலேயே நல்லவங்கன்னு தெரிஞ்சுடுச்சா.. “

“நல்லவங்கனு தெரிய வாழ்க்கை பூரா பழகி பார்க்கணுமா என்ன… என்னமோ பார்த்தவுடனே தோணுச்சு…அதோட நீயும் ஓகே சொல்லிருக்கும் போது அவங்க கிட்ட எந்த குறையும் பார்க்க முடியாதே.. “

“ஹாஹா…. நான் ஓரளவு பழகி இருக்கேன்.. அதனால் சொன்னேன்… உனக்கு எப்படி பார்த்ததும் பிடிச்சுது? “

“அதெல்லாம் உனக்கும் தோணும் போது புரியும்… எங்க அண்ணியை பார்த்து நீ பிளாட் ஆகும்போது தெரியும் நான் தொபுக்கடீர்னு விழுந்த கதை  “என்று கூறி சிரித்தாள்..

லேசாய் பெருமூச்சு ஒன்றை அவளறியாமல் வெளியிட்டவன் மீண்டும் துளிரின் நியாபகங்கள் துளைக்க, மேகாவிடம் மேலோட்டமாய் பேசிவிட்டு அவளையும் அழைத்துக் கொண்டு வீட்டினுள் சென்றான்… சாப்பிட சொன்ன பத்மாவிடம் பசியில்லை என்று விட்டு தன் அறைக்கு சென்று படுக்கையில் விழுந்தான்…அந்த நாளின் நினைவுகள் இன்றும் அதே வலியை தந்தது…

அவன் மறக்க நினைத்த நாளில் அதுவும் ஒன்று… மிக்க ஆவலாய் காத்திருந்த நாளும் இவனை ரணமாக்கிய நாளும் அதுவே…

துளிர் தன் இறுதி தேர்வை முடித்திருந்தாள்… ஜீவாவும் அன்று பார்த்து விட்டு சென்றது தான்.. இடையில்  அலுவலகம் அமைப்பது ஆர்டர் பிடிப்பது என்று அவனும் ஓய்வில்லாமல் அலைந்ததில் துளிரை சந்திக்க முடியவில்லை… சஞ்சயும் இவனுடனே அலுவலத்தில் இணைந்து கொண்டதால் துளிரை சந்திக்கவே இல்லை…

இன்று தான் துளிரை பார்த்து தன் காதலை சொல்லவும் வந்திருந்தான்…. தேர்வுகள் முடிந்து மாணவர்கள் வெளியே வர ஆரம்பிக்க துளிருக்காய் காத்திருந்தான்…

எப்பொழுதும் போல் குறும்பும் துள்ளலுமாய் இல்லாமல் முகம் வாடி வந்தவளை பார்த்தான்… அவள் தோழிகளை அணைத்துக் கொண்டு பிரியா விடை கொடுப்பது புரிந்தது… பிறகு தான் ஜீவாவை பார்த்தவள் வாடிய முகம் லேசாய் புன்னகைக்க இவனை நோக்கி வந்தாள்…

இவன் மனதிலோ தடுமாறும் உணர்வு… தள்ளி இருந்து ரசித்த, நேசித்த, காதல் செய்த கணங்கள் இல்லாத பரவசம் கலந்த தவிப்பு.. எப்படி சொல்வது என்று ஆயிரம் முறை செய்த ஒத்திகை எல்லாம் கடைசி நிமிட மனப்பாடம் போல் பயனற்று போனது… எழுதாத வெள்ளைத்தாள் போல் ஆனது மனது….

அவளோ அந்த தாக்கம் சிறிதும் இன்றி இவன் அருகில் வந்தாள்… முகத்தில் சிறிது பொலிவு கூடி இருந்தது…

“ஹாய் ஜீவா….ரொம்ப பிஸியா…இவ்ளோ நாள் ஆளையே பார்க்க முடியலை.. இன்னைக்கு நீங்களா வரலைனா நானே உங்களை தேடி வந்திருப்பேன்… “இந்த வார்த்தையில் ஜீவாவின் மனதில் ஜில் சரால்தான்….

“ஜிலேபிக்கு திடிர்னு என்ன என்னை பார்க்க ஆர்வம்…. இவ்ளோ நாள் ஒரு மெசேஜ் கூட இல்லை… “உள்ளுக்குள் அவ்ளோ குறுகுறுப்பு..

“என் போன் தண்ணிக்குள்ள விழுந்து சூசைட் பண்ணிடுச்சுப்பா… அப்புறம் ப்ராஜெக்ட் எக்ஸாம்ன்னு உப்ப்.. ஒரு வழி ஆகிட்டேன்…. “

“அப்புறம் போன் பிழைச்சுதா இல்லியா… “

“அது பிழைக்கலை.. ஸ்பாட் அவுட்… பட் புது போன் கிடைச்சுடுச்சே… அதோட உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்…. “என்றவள் தன் போனில் இருந்த ஒரு போட்டோவை கட்டினாள்….

ஆர்வமாய் அதை பார்த்தவன் அடைந்தது மின் அதிர்ச்சி,  சட்டென வலி மனதில்… கூர் கத்தியொன்று சத்தமின்றி ரத்தமின்றி இதயத்தை கூறு போட்டது… கண்கள் லேசாய் கண்ணீர் திரையிட அவளிடம் எதுவும் சொல்லாமல் திரும்பி வேகமாக நடக்க ஆரம்பித்தான்…

‘எப்படி… ஏன்.. என் காதல் உனக்கு  கொஞ்சம் கூட புரியாம போயிருச்சா…உன்  மனசுல கொஞ்சம் கூட தாக்கத்தை ஏற்படுத்தாத அளவுக்கு என் காதலுக்கு வலிமை இல்லாம போயிருச்சா.. உனக்காய் உன் படிப்புக்காய்  காத்திருந்து தப்பு செஞ்சுட்டேனோ…இனி எப்படி நீ இல்லாமல் வாழறது.. அடுத்தவர் மனைவியை நினைப்பது கூட பாவமே.. உன் நினைவுக்கு கூட சொந்தமில்லா நான் இனி என்ன செய்வேன் ‘என்று மனதில் எண்ண இரைச்சல் போட சட்டென அயர்ந்து அமர்ந்துவிட்டான்… அவன் பின்னாடியே வந்த துளிர்,

“ஜீவா சாரி.. கோச்சுக்கிட்டிங்களா… போனா வாரம் தான் என்கேஜ்மென்ட் முடிஞ்சுச்சு… உங்களுக்கு நேருல சொல்லனும்னு தான் முன்னாடியே சொல்லலை.. இடையில் எக்ஸாம் வந்ததுனால இதை பத்தி சொல்ல முடியலை…அதோட எல்லாம் சட்டுனு முடிவாகிருச்சு… “என்று வருத்தமாய் சொல்ல, ஜீவாவோ எதுவும் பேசவில்லை… அமைதியாய் இருந்தான்.. அவள் முகம் பார்க்காமல் தூரத்தை வெறித்திருந்தான்…

அவன் அமைதியை கண்டவள் மனம் இன்னும் வருந்தியது…

“ஜீவா… உங்க ஜிலேபி மேல நீங்களே கோவப் படலாமா… நான் உங்க பெஸ்ட் பிரண்ட் தானே… என்கிட்டயே கோச்சுக்கலாமா… ப்ளீஸ் “என்று அவன் கொஞ்சலாய் கேட்ட நொடியில் அவள் முகம் பார்த்தான்…

‘நீ என் பிரண்டு மட்டும் இல்லடி… என்னோட உயிரு… உன்னை மூணு வருசமா லவ் பண்றேன்டி ஜிலேபி…உன்னை வேற ஒருத்தன் கூட பார்த்தும் இப்படி உக்காந்து இருக்கேனே… ரொம்பவே வலிக்குது… ப்ளீஸ் இதெல்லாம் பொய்யா இருக்கனும்.. கனவா இருக்கனும் ஜிலேபி.. உன்னை மிஸ் பண்ண முடியாது ஜிலேபி ‘என்று மனம் பரிதவித்து கொண்டிருக்க நிஜம் அவன் முகத்தில் அறைந்தது…

ஆம் துளிருடன் அந்த போட்டோவில் இருந்தவன் வந்து கொண்டிருந்தான் இவர்களை நோக்கி….

“ஹேய் அம்மு… உன்னை எங்கெல்லாம் தேடுறது… “என்றவாறு இவர்களிடம் வந்தான் வினய்…

“சாரி வினு… இதோ இந்த சாருக்கு கோவம்.. நான் நம்ம மேரேஜ் பத்தி முன்னாடியே சொல்லலைனு… “என்று துளிர் சொல்லவும்,

“அதெல்லாம் இல்ல பிரதர்… சும்மாதான்” என்ற ஜீவா தன் உணர்வுகளை ஒருவாறு சமாளித்து இருந்தான்…

“எது சும்மாவா.. இவ தலைலயே ரெண்டு போடுங்க ஜீவா.. நான் முன்னாடியே சொன்னேன்.. உங்ககிட்ட சொல்ல சொல்லி… இந்த மேடம் தான் ஸர்ப்ரைஸ் குடுக்கணும்னு சொல்லாம விட்டுட்டாங்க…ஆனால் உங்களை பத்தி எல்லாத்தையும் சொல்லிட்டா.. அந்த பேப்பர் ராக்கெட் ஆரம்பிச்சு, ஜிலேபி கதை, ஈபிள் டவர் கிப்ட் வரைக்கும் சொல்லியாச்சு… இவ ஒரு ஓட்ட வாய்னு உங்களுக்கு நான் சொல்லி தான் தெரியனுமா என்ன…  பை தி வே நாம  இப்ப இன்ட்ரோ ஆகிக்கலாமே.. என் பேரு வினய்.. அம்முவோட சொந்த அத்தை பையன்… “

“ஓ அப்போ லவ் மேரேஜா…. “என்றான் உணர்வே இல்லாமல்…

“யார இந்த ராட்சசியையா… ஐயோ நோவே ஜீவா.. “

“ஹான் நீ  மட்டும் பெரிய இவன்.. கொரங்கு…என்னை வம்பிழுத்துட்டே திரிவான் ஜீவா … இவனை போய் யாராவது லவ் பண்ணுவாங்களா… “

“நீ தான்டி கொரங்கு… ஹய்யோ உன்னை வச்சு எப்படி சமாளிக்க போறேனோ தெரியலையே… எல்லாம் இந்த அம்மாவால வந்தது.. இந்த பிசாசு  மருமகளா வந்தா தான் ஆச்சுன்னு நின்னுட்டாங்க… எல்லாம் என் விதி..” என்று சோகம் போல் சொல்ல,

“அப்பிடியெல்லாம் யாரும் என்னை கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிக்க வேண்டாம் “என்று சொல்லிவிட்டு கோவமாக செல்ல,

“ஹேய் அம்மு சும்மா சொன்னேன்டி” என்று அவள் பின்னே ஓடினான் வினய்…

இங்கு ஜீவா தான் எதையும் ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தவித்தான்… இனி துளிர் தன்னவள் இல்லை என்று நொடிக்கு நொடி மனதில் ஜெபித்தான்… விஷத்தை விழுங்குவதை விட கொடியது அவள் தன்னுடையவள் இல்லை என்ற உண்மையை ஜீரணிப்பது…

என்னதான் தடுத்தாலும் கண்ணீர் விழிகளில் நிறைவதை தடுக்க முடியவில்லை.. துளிர் வினய் வருவதை கண்டவன் அவசரமாய் கண்களை துடைத்துக் கொண்டான்…

“சாரி ஜீவா… வெயிட் பண்ண வச்சுட்டோம்… “

“இட்ஸ் ஓகே நோ ப்ராப்லம்….மேரேஜ் டேட் எப்ப பிக்ஸ் பண்ணிருக்கீங்க… “

“அடுத்த மாசம்…. இன்விடேஷன் அடுத்த வாரம் ரெடி ஆகிடும்… அப்போ நேருல வந்து தரோம்…. “

“ஓகே வினய்.. ரெண்டு பேருக்கும் கங்கிராட்ஸ்….. “

இத்தனை நேரமும் ஜீவா துளிர் முகம் பார்த்து பேசவே இல்லை… அவள் புறம் திரும்பவும் இல்லை…

“ஓகே வினு.. நீங்க பேசிட்டு இருங்க… நான் ஹாஸ்டல் போய் திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு வரேன்… ” என்று விட்டு சென்று விட்டாள்…

போகும் துளிரையே பார்த்துக் கொண்டிருந்த வினய், ஜீவாவிடம் “அம்மு மேல இன்னும் கோவம் போகலையா ஜீவா.. “

“கோவம் எல்லாம் இல்லை வினய்.. அவ மேல எப்பவும் கோவப்பட முடியாது… “

“ஹ்ம்ம் கரெக்ட்… ஸ்வீட் கேர்ள்… ரொம்ப குறும்பு.. அதே நேரம் ரொம்ப பொறுப்பு… எல்லார் மேலயும் ரொம்பவே பாசம் வச்சிடுவா… அவளை யாருக்கும் பிடிக்காம போகாது… எனக்கும் சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்… எப்ப இருந்து லவ் பண்ண ஆரம்பிச்சேன்னு தெரில.. அம்முன்னா உயிருன்னு தோன ஆரம்பிச்சது… அம்மா கிட்ட சொன்னேன்.. அப்பிடியே மாமா வீட்டுலயும் பேசி அரேஞ் மேரேஜ் மாதிரியே எல்லாம் நடந்துருச்சு…. நான் லவ் பண்ணது இன்னும் அம்முக்கு கூட தெரியாது… மேரேஜ் முடிஞ்சதும் சொல்லி ஷாக் குடுக்கணும்… “என்று அவன் ரசித்து சொல்லிக் கொண்டிருக்க கேட்டுக் கொண்டிருந்தவன் மனம் கூட சிறு நிலைப்பாட்டை பெற்றது… ஆசையை துறந்த புத்தனை போல் துளிரை நேசித்த மனதை ஒதுக்கி வைத்தான்.. ஒதுக்கி வைக்க முயன்றான்…

ஒரு மூன்றாம் மனிதனை போல் நடந்த நடக்கும் நிகழ்வுகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.. அவனுக்கு தேவை துளிரின் சந்தோசம் மட்டுமே… அவள் வினயுடன் நிச்சயம் மகிழ்வாய் இருப்பாள் என்ற உறுதி கிடைக்க அவளை வினையின் மனைவியாய் என்ன ஆரம்பித்தான்…

அதெல்லாம் துளிரை பார்க்கும் வரை தான்…ஹாஸ்டல் காலி செய்து விட்டு பொருட்களை தூக்கி வந்த துளிரிடம் சென்ற வினய் அவள் கையில் இருந்த பைகளை வாங்கி கொண்டு நடக்க, அவனோடு பேசி சிரித்தவாறு வந்த துளிரை கண்டவன் தான் ஏன் வினய் இடத்தில் இல்லாமல் போனோம் என்று மருகினான்….

இதயம் கொய்யும் வலியை


தாங்க இயலா துன்பத்தை


நெஞ்சம் விம்மும் வேதனையை


வெளிக்கொணர முடியா ரணத்தை


தாங்க முடியாது தவிக்கறேன்


சாய துணையின்றி வீழ்கிறேன்


என் கண்ணீர் துடைக்கும்


உன் கரங்கள் எனக்கு சொந்தமில்லை


உன் கண்களில் நிறையும் புன்னகை


எனக்கு சொந்தமில்லை


நான் யாரோ


மூன்றாமவன்…

துளிரின் உடமைகளை எடுத்துக்கொண்டு வினய் காருக்கு செல்ல, ஜீவாவிடம் வந்தாள் துளிர்…. “ஜீவா கோவம் போயாச்சா… “என்றவாறு ஜீவா அருகில் அமர்ந்தாள் துளிர்…

“கோவமெல்லாம் இல்லை… வினய் உனக்கு பொருத்தமா இருக்கார்.. நீ சந்தோசமா இருக்கனும்  துளிர்…. “

“ம்ம் வினு ரொம்ப ஸ்வீட் தான்.. எப்பவும் என்னை வம்பிழுத்து கிண்டல் செய்வான் …எனக்கு முதலில் இவங்க பொண்ணு பார்க்க வந்தப்ப ஷாக்கா இருந்துச்சு… பட் வினு கூட தனியா பேசவும் சம்திங் சாச்சுட்டான் பக்கி.. இப்பவெல்லாம் ரொம்ப கேரிங் ரொம்ப லவ்வுன்னு காதல் மன்னன் ஆகிட்டான்…” என்று காதலுடன் சொல்ல, இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த  ஜீவாவிற்கு தன் இழப்பு எவ்வளவு பெரிது என்ற எண்ணம் வலுத்தது.. ஒருவேளை முன்னாடியே சொல்லியிருந்தால் துளிரை இழந்திருக்க மாட்டேன் என்ற எண்ணம் அவனை வெகுவாய் வேதனைப் படுத்தியது…

“நீ வினயை எப்ப இருந்து லவ் பண்ற..? ” ஏனோ ரொம்ப நேரமாய் உறுத்தி கொண்டிருந்த கேள்வியை கேட்டு விட்டான்..

“முன்னாடிலாம் இல்லை…. இப்ப மேரேஜ் பிக்ஸ் பண்ணதுல இருந்து தான்.. அது லவ்வான்னு தெரியல.. பட் பிடிக்கும்… என்னை நல்லா பார்த்துக்குவான்னு ஒரு நம்பிக்கை…..”

“ஹ்ம்ம்… கண்டிப்பா பார்த்துக்குவார்…”

“ம்ம் சரி… உங்க கிட்ட ரொம்ப நாளா ஒன்னு கேக்கணும்னு நினச்சேன்… நீங்க யாரையாச்சும் லவ் பண்ணீங்களா… “

‘இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வான்.. எப்படி சொல்வான்…’எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருக்க,

“நீங்க அமைதியா இருக்கறத பார்த்தால் ஏதோ இருக்கு போலயே… ஹேய் யார் அது சொல்லுங்க ஜீவா… “

“யாரும் இல்லை… நீயா கற்பனை பண்ணிக்காத துளிர்… “என்றான் வெறுமையாய்….

“ம்ம்ம்.. நம்பிட்டேன்… பார்க்கலாம் எத்தனை நாளைக்குன்னு… ”  இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வந்தான் வினய்…

“ஹே ரம்பம் அறுத்தது போதும் வா கிளம்பலாம்… “என்றவன் ஜீவாவிடம் “பை ஜீவா… நெக்ஸ்ட் வீக்ல வரோம்..”என்று விட்டு கிளம்பினர்…

துளிரின் கை கோர்த்து நடந்து சென்ற வினையுடன் ஜீவாவின் காதலும் சென்றது வழித்துணையாய்…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

மௌனத்தின் மனசாட்சி -19

என் நெஞ்சுநேர்பவளே -5