in

அஸ்தமிக்கும் பொழுதுகள் 4

நேராக காவல்நிலையம் சென்றாள் ஜீவிதா. அங்கு இரண்டே பேர் தான் இருந்தனர். காவல்நிலையமும் அவர்கள் ஊரில் இல்லை. பக்கத்து ஊரில் இருந்தது.

“கம்ப்ளைண்ட் கொடுக்கனும்” என்று கூற “எஸ்.ஐ ஊருல இல்லமா. நாளைக்கு வந்துடுவாரு. நாளைக்கு வாங்களேன்” என்றனர்.

ஜீவிதாவும் சற்று யோசனையுடன் கிளம்பி விட்டாள். பெரிய ஊர்களை போல் இல்லை இங்கு. சிறிய அளவில் இருந்த காவல்நிலையம். அதில் மூன்றே நபர் தான் இருந்தனர்.

அதிலும் ஒருவர் இப்போது இல்லையாம். இங்கு வழக்கை கொடுத்தால் சரி வருமா? என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

மீண்டும் அவள் ஊருக்கு வந்து சேரும் போது மதிய நேரம் வந்திருந்தது. சுற்றியும் வேடிக்கை பார்த்து அந்த கிணறு இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க முயற்சி செய்தால்.

நாலாபக்கமும் தேடி ஓய்ந்து போக நிலவனிடமிருந்து அழைப்பு வந்தது.

“அக்கா அம்மா உங்கள தேடுறாங்க. எப்போ வருவீங்க?”

“வந்துட்டு இருக்கேன்” என்று அழைப்பை துண்டித்து விட்டாள்.

வீட்டுக்கு சென்று சேர வள்ளியம்மை “எங்க மா போன? காலையில இருந்து ஆள காணோம்” என்று பதட்டத்துடன் கேட்டார்.

அவரது பதட்டத்தை உணர்ச்சியே இல்லாமல் பார்த்தவள் “இதுக்கு முன்னாடி நான் எங்க போறேன் வரேன் னு உங்களுக்கு தெரிஞ்சது இல்லையே. இப்போ மட்டும் என்ன கவல புதுசா?” என்று கேட்டு வைத்தாள்.

தேடியது கிடைக்காத கோபம் வள்ளியம்மையின் மீது திரும்பி விட்டது. ஆனால் அவள் கோபத்தில் நியாயம் இருக்க வள்ளியம்மை வாயடைத்து நின்று விட்டார்.

“அக்கா.. அம்மா பாவம் ப்ளீஸ்” என்று நிலவன் கெஞ்ச சாவியை அவன் கையில் வைத்து விட்டு சென்று விட்டாள்.

மதிய உணவிற்கு அழைக்க ஜீவிதா வரவில்லை. அவளை வற்புறுத்தி நிலவனே அழைத்து வந்து சாப்பிட வைத்தான்.

உணவு பரிமாறிய வள்ளியம்மையை நிமிர்ந்து பார்த்தாள். அழுது கண்கள் சிவந்து இருந்தது. மனம் கசந்து போக பாதி சாப்பாட்டில் எழுந்து விட்டாள்.

வாசலில் அமர்ந்து இருந்தவள் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள். அந்நேரம் யாரோ வீட்டின் முன்பு பைக்கை கொண்டு வந்து நிறுத்தினர்.

“ஹாய்..‌ நிலா இருக்கானா?” என்று அந்த புதியவன் கேட்க “நிலா உன்ன யாரோ தேடி வந்து இருக்காங்க” என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டாள்.

அவனும் அவள் பின்னால் உள்ளே நுழைந்தான்.

“ஹாய் கணிகன் அண்ணா” என்று நிலவன் வர “உன்ன அண்ணன் னு கூப்பிடாத னு எத்தனை தடவ சொல்லி இருக்கேன்” என்று முறைத்தான்.

“எனக்கு பழகிடுச்சு”

“ஆமா அது யாரு?”

“என் அக்கா.”

“ஓ.. உனக்கு ஒரு அக்கா இருந்தாங்கள்ல. கூப்பிடேன். ஒரு ஹாய் சொல்லலாம்”

“அக்கா… இங்க வாங்க” என்று கூப்பிட ஜீவிதா வந்தாள்.

“இவர் கணிகன் அண்ணா” என்றதும் கணிகன் முறைத்து பார்த்தான்.

“அதாவது என்னோட ஃப்ரண்ட்” என்று சமாளித்து விட்டு “இவங்க என் அக்கா ஜீவிதா” என்றான்.

கணிகன் “ஹாய் ஜீவிதா” என்க “ஹலோ” என்றாள்.

“இவரு யாதவ் சாரோட க்ளோஸ் ஃப்ரண்ட். அவங்க பால் இண்டஸ்ட்ரில ஆல் இன் ஆல்”

“ஓ…”

“உங்கள நான் பார்த்ததே இல்ல. என்ன பண்ணுறீங்க?” என்று கணிகன் கேட்க ஜீவிதா பதில் பேசும் முன் வள்ளியம்மை வந்து “எப்படி தம்பி இருக்க? ஒரு வாரமா ஆள காணோமே” என்று கேட்டார்.

“எல்லாம் வேலை தான் அத்த. ஊரு ஊரா சுத்த வேண்டி இருக்கு”

“வாசல்ல நின்னுட்டே ஏன் பேசுறீங்க.. உள்ள வா பா.” என்று உள்ளே அழைத்துச் சென்றார்.

“எதாவது சாப்டுறியா?” – வள்ளியம்மை.

“நான் நிலாவ பார்க்க தான் வந்தேன். அவன கூட்டிட்டு கிளம்புறேன். இன்னொரு நாள் வரேன்” என்று கணிகன் கூற “ஆமா மா.. யாதவ் சார பார்க்கனும். நாங்க போயிட்டு வந்துடுறோம்” என்றான் நிலவன்.

“அவர ஏன் நீங்க பார்க்க போறீங்க?” என்று ஜீவிதா புருவம் சுருக்கி தம்பியை பார்த்து கேட்டாள்.

“எனக்கு அவர் ஃப்ரண்டு கா. ஃபேக்டரி ல வேலை பார்த்துட்டே எதாவது பேசிட்டு இருப்போம். அங்க தான் என்ன வேலைக்கு சேர சொன்னாரு. நான் தான் வேற வேலை வேணும் னு தேடிட்டு இருக்கேன்”

ஜீவிதா தலையாட்டி வைத்தாளே தவிர வாயை திறந்து இதற்கு எதுவும் சொல்லவில்லை.

கணிகனுடன் நிலவன் உடனே கிளம்பி விட்டான்.

“அப்புறம் மச்சான். ஒரு வாரம் எப்படி போச்சு?” என்று கேட்டுக் கொண்டே நிலவன் தோளில் கை போட்டுக் கொண்டான்.

“அண்ணா.. ஒரு வாரம்…” என்று நிலவன் ஆரம்பிக்க தோளில் போட்ட கையால் கழுத்தை வளைத்து பிடித்தான்.

“டேய்… இன்னொரு தடவ அண்ணன் னு கூப்பிட்ட பல்ல கலட்டிருவேன். நான் உன்ன மச்சான் னு கூப்பிட்டா நீ அண்ணன் னு கூப்பிட்டு அசிங்க படுத்துற?”

“ஓகே சாரி.. ஆனா அது பழகிருச்சு”

“நீ டேய் னு கூட கூப்பிடு கோச்சுக்க மாட்டேன். அண்ணன் னு வந்தா சாவடிச்சுருவேன்” என்று மிரட்டி விட்டு கையை எடுத்து விட்டான்.

இருவரும் அவர்களது பைக்கில் ஏறி கிளம்பி விட்டனர்.

நேராக யாதவ் கிருஷ்ணனின் பால் பண்ணை இருக்கும் இடத்திற்கு சென்றனர். ஏசி அறையில் அமர்ந்து யாதவ் வேலை பார்த்துக் கொண்டிருக்க இருவரும் வந்து நின்றனர்.

“வா டா. போன வேலை என்னாச்சு?” யாதவ்.

“கிட்டத்தட்ட முடிஞ்சது” – கணிகன்.

“கிட்டத்தட்ட வா?”

“உனக்கு ரிப்போர்ட் வந்தா எல்லாம் முடிஞ்சுரும்”

“ம்ம்..”

நிலவன் இருவரும் பேசுவதை கவனிக்காமல் அங்கிருந்த எதோ ஒரு காகிதங்களை எடுத்து படித்துக் கொண்டிருந்தான்.

“நீ என்ன அக்கா வந்த சந்தோசத்துல வேலைய மறந்துட்டியா?” என்று யாதவ் அதட்ட “அதெல்லாம் நான் சரியா பண்ணிட்டேன். அடுத்த அட்டம்ப்ட் பக்காவா முடிஞ்சுடும்” என்றான்.

“லாஸ்ட் டைம் மாதிரி சொதப்ப கூடாது சொல்லிட்டேன்”

“டோன்ட் வர்ரி. அப்புறம் ஒரு முக்கியமான விசயம்.”

“என்ன?”

“நான் வேலைக்கு அப்ளை பண்ணிட்டேன்”

“மறுபடியுமா? எங்க வேலை கிடச்சாலும் உன் பாட்டி அழுது உன்ன போக விடாதே. அப்புறம் என்ன?”

“இனி அதெல்லாம் செல்லாது. எனக்கு வீட்டுல சும்மா இருக்கவும் பிடிக்கல. அழுதா மத்தவங்க பார்த்துக்கட்டும் னு கிளம்ப போறேன்”

“போன தடவ மாதிரி நெஞ்ச பிடிச்சுட்டு விழுந்தா?” – கணிகன்.

“ஹாஸ்பிடல்ல விட்டுட்டு கிளம்பிடுவேன்”

“எப்படி மச்சான் உனக்குள்ள இப்படி ஒரு தைரியம் வந்துச்சு?”

“அவன் அக்காவ பார்த்து னு நினைக்கிறேன்” என்று யாதவ் அக்கறை இல்லாதது போல் காட்டிக் கொண்டு கூறினான்.

“ஆமா” என்று நிலவனும் ஒப்புக் கொண்டான்.

“சரிடா.. எங்க அப்ளை பண்ணி இருக்க?” என்று கணிகன் விசாரிக்க “ஜீவிதா அக்கா தான் அண்ணா ஹெல்ப் பண்ணாங்க” என்றான்.

“திரும்ப அண்ணா னு சொன்ன வாய்ல ஒரு பல்லு மிஞ்சாது சொல்லிட்டேன்”

கணிகன் பாய “நீங்க எம்.பி.ஏ படிச்சதுக்கு பதிலா டென்டில்க்கு படிச்சு இருக்கலாம்” என்று வாயை கையால் மூடிக் கொண்டு நிலவன் கூறினான்.

“ஹா ஹா..‌ நானும் அதான் நினைச்சேன்.‌ எப்ப பாரு பல்ல கழட்ட ரெடியா இருக்கான்” – யாதவ்.

“அது ஒன்னும் இல்ல சார். சகவாச தோசம்” என்று கணிகனை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே நிலவன்‌ கூற அவன் முதுகில் அடி விழுந்தது.

“இதெல்லாம் நல்லா பேசு. ஆனா அண்ணா னு கூப்பிட்டு மானத்த வாங்கு” என்றான் கணிகன்.

“சின்ன வயசுல அப்படி கூப்பிட்டு பழகிடுச்சு.‌ உடனே உங்க இஷ்டத்துக்கு மாத்த முடியாது”

“நான் வேணா மாத்தி காட்டவா?” என்று கணிகன் கையை முறுக்க நிலவன் கும்பிடு போட்டான்.

“கேட்கனும் னு இருந்தேன்.‌ உன் தங்கச்சிக்கு எக்ஸாம் எப்போ முடியுது?” – யாதவ்.

“வியாழக்கிழமை” என்று கணிகன் கூற “ஓ…” என்றான்.

“எப்போ இங்க வராளாம்?”

“வியாழக்கிழமை நைட்டே”

“சரி தான்… நிலா கிட்ட கேட்டா நீ ஏன் டா பதில் சொல்லுற? நறு உன் தங்கச்சியா?”

“டேய்.. இவன் அண்ணனாக்க பார்க்குறான். நீ மலர எனக்கு தங்கச்சியாக்க பார்க்குற? உங்கள எல்லாம் கூட வச்சுகிட்டு….”

கணிகன் தலையிலடித்துக் கொள்ள யாதவ்வும் நிலவனும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

நறுமலர் நிலவனுக்கும் ஜீவிதாவுக்கும் தங்கை. பல் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறாள். கணிகனின் காதலி. அவளது வருகைக்காக தான் ஜீவிதாவும் கணிகனும் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இருவரின் நோக்கமும் வெவ்வேறாக இருந்தது.

*.*.*.*.*.*.

சுபாஷினி மதிய நேரம் ஜீவிதாவை தேடி வீட்டுக்கு வந்தாள்.

“என்ன கா?”

“உன் கிட்ட பேசனும் வா” என்று தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டாள்.

“சுஜி எங்க?” – ஜீவிதா.

“இன்னும் ஸ்கூல்ல இருந்து வரல”

“ஓ… குட்டி பாப்பா எங்க?”

“தூங்குறா… அத விடு.‌ கம்ப்ளைண்ட் பண்ணுற னு போன? என்னாச்சு?”

“அங்க எஸ்.ஐ இல்ல.‌ அதுனால வந்துட்டேன்”

“என்ன கம்ப்ளைண்ட் கொடுப்ப?”

“இப்படி இந்த ஊருக்குள்ள மூணு பொண்ணுங்க செத்து போயிட்டாங்க. அவங்க சாவ பேய் மேல பழிய போட்டு தப்பிக்க பார்க்குறாங்க.‌ எனக்கு சந்தேகமா இருக்கு. வந்து என்ன னு கேளுங்க னு சொல்லுவேன்”

“சொல்லிட்டா?”

“வந்து விசாரிப்பாங்க”

“அடுத்து என்ன? உண்மைய கண்டு பிடிச்சுடுவாங்களா? முட்டாள்.‌ உன்ன பைத்தியம் னு சொல்லுவாங்க”

“ஏன்?”

“பெத்தவங்களே என் பொண்ணு வயிறு வலியில தற்கொலை பண்ணிக்கிட்டா.. தீராத வியாதியல செத்து போயிட்டா னு சொல்லுவாங்க”

“வாட்?”

“ம்ம்.. இது கூட தெரியாம கம்ப்ளைண்ட் பண்ண கிளம்பிட்ட நீ”

“என்ன கா இது? பெத்த பெண்ணு செத்து போனா இப்படி பேசுறாங்க.‌ இந்த ஊரே இப்படி தானா? இங்க பெத்தவங்களுக்கு தான்‌ கல்லு மனசா? நீங்க அப்படி‌ இருந்துடாதீங்க.‌ சுஜிய குட்டி பாப்பாவ எதுக்கும் விட்ர மாட்டீங்களே?”

“முட்டாள் பொண்ணே. நான் ஏன் என்‌ பிள்ளைங்கள விட போறேன்? என்ன என்ன இந்த ஊரு மத்த பெத்தவங்க மாதிரி நினைச்சியா? ஆனா இங்க இருக்கவங்க எல்லாருமே இப்படி தான். ஏன் தெரியுமா?”

“ஏன்? அதுக்கும் எதாவது சப்ப கட்டு இருக்கும்.‌ சொல்லுங்க”

“அந்த வீடு யாரோடதுங்குறது ல‌ இருக்கு எல்லாம்”

“யாரோடது?”

“நேத்து வர எனக்கும் தெரியாது. நீ கம்ப்ளைண்ட் பண்ண போற‌னு சுஜி அப்பாவுக்கு போன் பண்ணி சொன்னேன். வீண் வேலை னு அவர் சொன்னார். ஏன் னு கேட்டப்போ தான்‌ அந்த இடம் யாரோடது‌ னு சொன்னார்”

“யாருயா அது?”

“பால் பண்ணை காரவங்களோடது”

ஜீவிதா இதை எப்போதோ ஊகித்து விட்டாள். அவள் முகத்தில் அதிர்ச்சிக்கு பதில் யோசனை தெரிந்தது.

“என்ன யோசிக்குற?”

“ஊருக்குள்ள பெரியவங்க அவங்க. அவங்க இடத்துல மூணு பொண்ணு செத்து போயிருக்கு. எப்படி சும்மா இருக்காங்க?”

“அது தான் தெரியல.‌ ஆனா அவங்களுக்கு எதிரா கம்ப்ளைண்ட் கொடுத்தா அந்த கம்ப்ளைண்ட் செல்லாது”

“அப்படி னு யாரு சொன்னா?”

ஜீவிதா ஒரு புன்னகையோடு கூற “அந்த போலீஸ் யாதவ்க்கு ஃப்ரண்டு” என்றாள்.

“அந்த எஸ்.ஐ யா? நான் அவர் கிட்ட கம்ப்ளைண்ட் கொடுக்குற ஐடியாவ எப்பவோ மாத்திக்கிட்டேன்”

“பின்ன என்ன பண்ண போற?”

“சொல்ல மாட்டேன்.‌”

“எதுலையாவது மாட்டிக்குவ ஜீவிதா”

“நீங்க அந்த கிணறு இருக்க இடத்த சொல்லுங்க.‌ நான் என்ன பண்ண போறேன் னு சொல்லுறேன்”

“முடியாது”

“அப்போ என்னாலையும் முடியாது.‌ நான் பண்ண போறத பொறுத்து இருந்து பாருங்க”

எழுந்து வாசலுக்கு சென்றவள் மீண்டும் திரும்பி வந்து “இன்னைக்கு நைட் அந்த கிணறு இருக்க இடத்துக்கு போக போறேன்” என்று மெல்லிய குரலில் கூறி விட்டு சென்று விட்டாள்.

சுபாஷினி அதிர்ந்து போக ஜீவிதா தன் வீட்டுக்கு சென்று விட்டாள்.

“கடவுளே.. நீ தான் இந்த பொண்ண எப்படியாவது காப்பாத்தனும்” என்று சுபாஷினி வேண்டிக் கொண்டாள்.

ஜீவிதா வீட்டுக்குள் வந்து அமர தங்கமணி எதையோ முணுமுணுத்தார். அவரை திரும்பி பார்த்தவள் “என்ன முணுமுணுப்பு? நேரா சொல்ல தைரியம் இல்லையா?” என்று சீண்டி விட்டாள்.

“தைரியம் எனக்கு இல்லயா? பேசுவ பேசுவ.. ஏன் பேச‌ மாட்ட? உன்ன நடு வீட்டுல வச்சு சோறு போட்டா இதுக்கு மேலையும் பேசுவ”

“இங்க பாருங்க திருமதி தங்கமணி. அந்த வீட்டுல உங்களுக்கு‌ இருக்க அதிகாரம் எனக்கும் இருக்கு. நான் ஒன்னும் குப்பையில கிடந்து வரல. சேந்தனுக்கும் வள்ளியம்மைக்கும் பிறந்த மக. சும்மா சீண்டிட்டே இருந்தா இந்த வீடு எனக்கு வேணும் னு கோர்ட்ல கேஸ் போட்ருவேன். தாத்தா சொத்து பேத்திக்கு னு தூக்கி என் கையில கொடுத்துடுவாங்க. நீங்க நடுத்தெருவுல நிக்கனும். ஜாக்கிரத”

“என்னது?‌ நான் நடுத்தெருவுல நிக்கனுமா? யாரு யார நடுத்தெருவுல நிறுத்துறது னு பார்க்குறேன். முதல்ல இது என் வீடு. போ வெளிய”

“முடியாது. இது‌ என் தாத்தா வீடு.”

“உன் தாத்தா என் புருஷன்”

“நான் இல்லனா சொன்னேன்? ஆனா புருஷன் வீடு னு நீங்க சாகுற வரை இருக்கலாம். அதுக்கு மேல சொத்துல சொந்தம் கொண்டாட முடியாது”

தங்கமணி மேலும் எதையோ பேச போன் இசைத்தது. அதை கையில் எடுத்துக் கொண்டவள் “உங்க திருவாய கொஞ்சம் மூடுங்க. எனக்கு வேற வேலை இருக்கு” என்று எழுந்து சென்று விட்டாள்.

தங்கமணி தனியாக புலம்பிக் கொண்டிருப்பதை‌ நிலவன் ஒரு மாதிரி பார்த்து வைத்தான்.

அவன் பார்வையை கவனித்து விட்டு “என்னடா?” என்று கேட்டு வைத்தார்.

‘எங்கோ போற மாரியாத்தா நம்ம பக்கம் திரும்புதே’ என்று நினைத்தவன் “ஒன்னும் இல்ல. காத்துல எதோ நிக்குது போல னு பார்த்தேன்” என்றான்.

“காத்துலயா?”

“அதான்‌ நம்ம ஊருக்குள்ள பேய் கதை நிறைய சுத்துதே. அதுல ஒன்னு எதுவும் வந்து உங்க கிட்ட பேசிட்டு இருக்கு னு நினைச்சேன். எப்படி பேய் சௌக்கியமா இருக்கா?”

“அடேய்..” என்று ஆரம்பித்து அவனை திட்ட ஆரம்பிக்க “ம்மா..‌ ம்மா.. எங்க மா போனீங்க? இந்த டீவிக்கு தண்ணி பத்தல ச்சீ..‌ டீவி பார்க்குற பாட்டிக்கு கொஞ்சம் தண்ணி கொடுங்க பத்தலையாம்” என்று கூறிக் கொண்டே ஓடி விட்டான்.

பின்னால் இருந்த வள்ளியம்மை “பாட்டிக்கு தண்ணி பத்தலையா? என்னடா உளறுற?” என்று கேட்டு வைத்தார்.

“நீங்க வேற நடுவுல. நானே பாட்டி கிட்ட இருந்து தப்பிக்க எதையோ சொன்னேன் மா. நடு வீட்டுல உட்கார்ந்து‌ தானா புலம்பிட்டு‌ இருக்காங்க..”

“அது ஒன்னும் இல்ல. உன் அக்கா வந்தா. சும்மா இருக்காம எதையோ சொல்லி‌ வச்சுடுச்சு உன் பாட்டி. அதுக்கு அவ பதிலுக்கு நல்லா பேசிட்டு போயிட்டா. அது பொறுக்காம புலம்பிட்டு இருக்கு.”

“அக்கா பேசிடுச்சா…‌ சூப்பரு”

“அதான் புலம்பட்டும் னு விட்டுட்டு இங்குட்டு வந்துட்டேன்”

“அக்கா சைலண்ட்டாவே இருக்காங்களே. நேச்சரே அது தானோ னு நினைச்சேன். பரவாயில்ல. பேசிட்டாங்க.”

“ம்ம் ம்ம்..”

“ஆனா அக்கா நம்ம கூட ஒட்டவே மாட்ராங்க மா. அவங்கள எதாச்சும் கேட்டா நக்கலா ஒரு சிரிப்பு சிரிப்பு சிரிக்குறாங்க பாரு… அப்படியே அவமானமா இருக்கு. கூட பிறந்த அக்கா. ஆனா அவங்கள பத்தி ஒன்னுமே தெரியல..”

“உன் அக்கா இப்போ தான் ஒட்டல னு உனக்கு தெரியுதா? அவ இத முடிவு பத்தி பன்னெண்டு வருசம் ஆச்சு”

வள்ளியம்மைக்கு குரல் கம்மியது.

“இந்த விசயத்துல அக்கா உங்கள மன்னிச்சாலும் நான் மன்னிக்க மாட்டேன். நீங்க பண்ணது தப்பு தான்”

“உன் அக்கா என்ன மன்னிச்சுட கூடாது நிலா. மன்னிச்சுட்டா னா அத விட பெரிய தண்டனை எதுவுமே இல்ல. அவ இங்க இருக்க வர அவள கண்ணால பார்க்குறதே போதும் னு இருக்கேன்”

“பாருங்க பாருங்க. அக்கா இங்க நிரந்தரமா இருப்பாங்க னு எனக்கு நம்பிக்கை இல்ல. அவங்க ரூம பார்த்தீங்களா? பேக் பண்ணத பிரிக்கவே இல்ல. நறு வந்ததும் கிளம்ப போறாங்க னு நினைக்கிறேன். என் கிட்ட எப்ப வருவா எப்ப வருவா னு கேட்டுட்டே இருக்காங்க”

“எப்படியாவது இன்னும் கொஞ்ச நாள் அவ இங்க இருந்தா நல்லா இருக்கும் நிலா”

“வாய்ப்பே இல்ல. பக்கத்துல வச்சு அழகு பார்க்குற நேரம் எல்லாம் விட்டுட்டு இப்போ ஆசை படாதீங்க. அதுவும் உங்க மாமியார் உயிரோட இருக்க வரை நடக்கவே நடக்காது”

நிலவன் வேகமாக தன் அறை பக்கம் சென்று விட வள்ளியம்மைக்கு எப்போதும் இப்போதும் துக்கம் தொண்டயை அடைத்தது.

தொடரும்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Hani novels

வணக்கம். நான் ஹனி. கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதில் வரலாற்று கதைகள் என்றால் ரொம்பவுமே பிடிக்கும். "பொன்னியின் செல்வன்" படித்த பிறகு கதைகளின் மீதும் நாவல்களின் மீதும் வந்த ஆர்வம். ஒரு கட்டத்தில் எழுத ஆரம்பித்து விட்டேன். சாதாரண குடும்ப கதைகளும் காதல் கதைகளுமே எனக்கு எழுத தெரியும். அதையே இங்கும் பதிவிடுகிறேன். நன்றி.

Story MakerContent AuthorYears Of Membership

அஸ்தமிக்கும் பொழுதுகள் 3

கோம்ஸ் – மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! – மண(ன)ம் 12