in

அஸ்தமிக்கும் பொழுதுகள் 3

இரவு உணவிற்கு பிறகு தனது லாப்டாப்பை எடுத்துக் கொண்டு ஜீவிதா வெளியே வந்தாள். திண்ணையில் அமர்ந்து கொண்டு எதையோ பார்க்க ஆரம்பித்தாள்.

அந்நேரம் சுஜி வந்து அவளருகில் நின்றாள்.

“சுஜி.. காய்ச்சல் சரியா போச்சா?” என்று அவளை தொட்டு பார்த்தாள்.

“ஊசி போட்டேன். சரியா போச்சு”

“குட் கேர்ள். தூங்க வேண்டியது தான? காத்து இப்படி அடிக்குது. திரும்ப காய்ச்சல் வந்துட போகுது”

“தூக்கம் வரல.. இதுல என்ன பார்க்குறீங்க? படமா?”

“இல்ல. வேலை பார்க்குறேன்”

“நீங்க என்ன வேலை பார்க்குறீங்க?”

“நான்… இன்ஜினியரிங்”

“ஓ.. அப்படினா?”

“அப்படினா நீ பெரிய பொண்ணாகி காலேஜ் போவல அப்போ புரியும்”

“ஓஓ…”

சுபாஷினி சுஜியை தேடி வந்து விட சுபாஷினியிடம் பேசி விட்டு சுஜியை அனுப்பி விட்டாள்.

“அக்கா…” என்று நிலவன் வர “ம்ம்…” என்று நிமிர்ந்து பார்க்காமல் சத்தம் எழுப்பினாள்.

“என்ன லாப்டாப் எடுத்து வச்சுட்டு‌ இங்க வந்து உட்கார்ந்து இருக்கீங்க?”

“வீட்டுக்குள்ள நெட்வொர்க் கிடைக்கல. அதான்”

“நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லல. சுஜி கேட்டா சொல்லுறீங்க?”

ஜீவிதாவின் உதட்டோரம் கேலி சிரிப்பு தோன்றியதே தவிர பதில் வரவில்லை.

சேந்தன் “தூங்கலையா மா? என்ன பண்ணிட்டு இருக்க?” என்று வினவினார்.

“தூங்கனும். யூஸூவலா ரெண்டு மணி ஆகிடும் தூங்க. சீக்கிரமே தூங்க பிடிக்கல”

“ரெண்டு மணி வரை முழிச்சு இருந்தா உடம்புக்கு நல்லது இல்ல மா” என்று சேந்தன் அக்கறையோடு கூற “ஓஹோ…” என்றாள்.

அந்த ஓஹோவில் நக்கல் பாதி கோபம் பாதியாக கலந்து இருந்தது. அது நிலவனுக்கு தெளிவாக புரிந்தது. சேந்தனும் புரிந்து கொண்டார். அவர் அடுத்து எதோ பேச வர ஜீவிதா எழுந்து விட்டாள்.

“குட் நைட்” என்றவள் வேகமாக வீட்டுக்குள் சென்று விட்டாள்.

அறைக்குள் வேலை பார்க்க முடியவில்லை. பின்வாசல் கதவை திறந்து வைத்துக் கொண்டு அங்கு அமர்ந்து வேலை பார்த்தாள்.

‘இங்க நெட்வொர்க் பரவாயில்ல.‌ ஒரு வாரத்துக்கு இங்கயே உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டியது தான்’ என்ற முடிவுக்கு வந்தாள்.

அறையின் முன் பக்க கதவை அடைத்து விட்டதால் யாரும் அவளை தொந்தரவு செய்ய முடியாது.

மூன்று நாட்களாக விட்டு போன வேலையை முடித்து விட்டு நிமிர மணி ஒன்றை கடந்து இருந்தது.

“நாட் பேட்” என்று தனக்கு தனே முணுமுணுத்துக் கொண்டு எழுந்து உள்ளே வந்தாள்.

கதவை அடைக்கும் போது கார் செல்லும் சத்தம் கேட்டது. அசையாமல் நின்று உற்று கேட்க‌ சத்தம் உறுதியானது. ஆனால் வெளிச்சம் எதுவும் இல்லை.

“இருட்டுல யாரு கார ஓட்டுறது?” என்ற சந்தேகத்துடன் சத்தம் வராமல் படிகளில் இறங்கினாள்.

கார் அவளிருக்கும் இடத்தை கடந்து செல்வது போல் தெரிந்தது.

“யாரு இன்னேரத்துல இருட்டுல போறது? ” என்று குழம்பியவள் மேலே சென்று பார்ப்பதா வேண்டாமா என்று யோசித்தாள்.

காரின் சத்தம் முழுவதுமாக குறைந்து மறைந்து விட அந்த யோசனையை கை விட்டாள்.

இதற்கு மேல் போய் தேடி கண்டு பிடிக்க முடியாது. அதனால் அறையில் வந்து படுத்துக் கொண்டாள்.

மனதில் நேற்று பார்த்த பெண் வந்து போனாள். முதல் நாள் உயிரோடு பார்த்த பெண் அடுத்த நாள் இறந்து போனது வருத்தமாக இருந்தது. அதுவும் அந்த பெண்ணின் இறப்பு மர்மமாக இருந்தது.

‘நாளைக்கு அந்த இடத்த எப்படியாவது போய் பார்க்கனும்’ என்று முடிவு செய்து கொண்டாள். சில நிமிடங்கள் யோசனையில் தூக்கம் வராமல் போக மாத்திரையை எடுத்து விழுங்கி தூங்கி விட்டாள்.

*.*.*.*.*.*.*.*.

அடுத்த நாள் காலையும் ஜீவிதா ஏழு மணிக்கு மேல் தான் எழுந்து வெளியே வந்தாள். தங்கமணி எதோ சொல்ல வர “என்ன வீடு விளங்குமா விளங்காதா னு பட்டி மன்றம் நடத்தனுமா? எனக்கு அதுக்கு நேரமில்ல. அம்மாவ கூப்பிட்டு நடத்துங்க” என்று கூறி விட்டு வள்ளியம்மையை தேடி சென்றாள்.

அவளது அதிகமான பேச்சில் தங்கமணிக்கு கோபம் பொத்துக் கொண்டு வர திட்ட ஆரம்பித்து விட்டார். அதை காதில் வாங்காமல் சென்றவள் “உங்க மாமியார் உங்கள தான் தேடுறாங்க போங்க.” என்று அனுப்பி வைத்தாள்.

வள்ளியம்மை முதலிலேயே போட்டு வைத்திருந்த காபியை குடித்து விட்டு குளித்து கிளம்பினாள்.

“குட் மார்னிங் அக்கா” என்று நிலவன் வர “குட் மார்னிங். நறுமலர் எக்ஸாம் எப்போ முடியுது?” என்று கேட்டாள்.

“அடுத்த வாரம் இன்னேரம் நம்ம முன்னாடி இருப்பா. நீங்க வந்துட்டீங்க னு சொன்னதும் எக்ஸாம் முடிஞ்ச அன்னைக்கே கிளம்பி வரேன் னு சொல்லிட்டா”

“ஓகே. எனக்கு ஒரு வேலை இருக்கு. உன் பைக் சாவி தரியா?” என்று கேட்டாள்.

“பைக் சாவியா?”

நிலவன் ஆச்சரியமாக கேட்க ” ஆமா.. ஏன் உனக்கு வேற வேலை இருக்கா?” என்று கேட்டாள்.

“இல்ல இல்ல.” என்றவன் வேகமாக எடுத்துக் கொடுத்தான்.

“பெட்ரோல் போட்ருக்க தான?”

“ம்ம்..”

“ஓகே.”

இன்றைக்கு ஜீவிதாவின்‌ உடையும் மாறியிருப்பதை அப்போது தான்‌ அவன் கவனித்தான். இரண்டு நாட்களாக சுடிதார் அணிந்து இருந்தவள் இன்று ஜீன்ஸ் டாப் என்று அணிந்து இருந்தாள்.

அதன் மேல் ஒரு சிறிய கோட்டும் அணிந்து கிளம்பி இருந்தாள்.‌ நிலவன் அவள் பைக்கில் ஏறி அமர்ந்து கிளம்புவதை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்க “என்னடா உன் அக்கா எங்க கிளம்பிட்டா?” என்று வள்ளியம்மை கேட்டார்.

“சொல்லல மா”

“இந்த மாதிரி டிரஸ் போட்டுட்டு ஊருக்குள்ள போனா எதாவது பேசுவாங்க டா”

“அதுக்கு?”

“நீயாவது சொல்லலாம்ல?”

“எப்படி?”

“இந்த மாதிரி டிரஸ் போடாத னு”

“நான் வேணா இப்படி சொல்லுறனே… இங்க இருக்கதுனா இப்படி டிரஸ் பண்ணாதீங்க. பண்ணா மறுபடியும் இந்த வீட்ட விட்டு போயிடுங்க னு”

“டேய்…”

வள்ளியம்மை அதிர்ச்சியோடு பார்க்க “என்ன? சாக்காகுறீங்க? இத்தனை வருசம் அக்கா அவங்களுக்கு பிடிச்ச மாதிரி தான் வாழ்ந்து இருக்காங்க. இங்கேயும் அப்படி தான் இருப்பாங்க. உங்களுக்கு மட்டும் இல்ல. உங்க மாமியாருக்கும் சேர்த்து தான் சொல்லுறேன்” என்று கூறி விட்டு திரும்பி உள்ளே சென்றான்.

பைக்கில் கிளம்பியவள் கண்ணில் கூலரை மாட்டிக் கொண்டாள். இருட்டில் வந்த பாதையை ஞாபக படுத்தி சென்றாள்.

ஓரளவிற்கு சரியான பாதை கிடைத்து விட பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்து விட்டாள்.

‘இங்க இருந்து தான் நடக்க ஆரம்பிச்சேன்’ என்று நினைத்தவள் பைக்கை வளைத்து திருப்பி கிளம்பினாள்.

குறிப்பிட்ட இடம் வந்ததும் நின்று விட்டாள்.

“இங்க இருந்து தான் அந்த பொண்ணு ஓடுனா. இந்த பக்கம் போனா என்ன?” என்று யோசித்துக் கொண்டு நிற்க பின்னால் காரின் ஹாரன் சத்தம் கேட்டது.

கார்த்திக்கின் காரை பார்த்ததும் ஜீவிதாவின் முகத்தில் ஒரு சந்தோசம் வந்தது.

“நடுரோட்டுல நின்னு என்ன யோசிச்சுட்டு இருக்க?” என்று கார்த்திக் எட்டி பார்த்து கேட்க பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு வந்தாள்.

அருகில் வந்து பார்க்க காரில் வேறு ஒருவர் அமர்ந்து இருந்தார். ஜீவிதா பேசாமல் தயங்கி நின்றாள்.

“இவங்க என் மாமா. பாலாஜி.” என்று கூறியவன் “மாமா இது என் ஃப்ரண்ட்” என்றான்.

ஜீவிதா கை கூப்பினாள். அவர் தலையசைத்து ஏற்றுக் கொண்டார்.

“இங்க என்ன பண்ணுற?”

“நீ ஃப்ரியா?”

“மாமாவ வீட்டுல விடனும்”

“அப்போ விட்டுட்டு வா. நான் இங்கயே இருக்கேன்”

“ஓகே. வந்துடுறேன்” என்று கூறி விட்டு கார்த்திக் கிளம்பி விட்டான்.

பாலாஜி அவளை திரும்பி பார்த்துக் கொண்டே சென்றார். அவரை பற்றி தான் ஜீவிதாவும் அப்போது நினைத்துக் கொண்டிருந்தாள்.

‘முழுக்க காவி ட்ரஸ் போட்டு சாமியார் மாதிரி இருக்காரே. ஆனா அந்த பார்வை… ப்பா.. ஆளையே ஸ்கேன் பண்ணுற மாதிரி’ என்று நினைத்துக் கொண்டாள்.

“என்ன‌ மாமா?” – கார்த்திக்.

“அந்த பொண்ணு எப்ப இந்த ஊருக்கு வந்தா?”

“முந்தா நாள் தான்”

“ம்ம்..”

“ஏன் ?”

“ஊருக்குள்ள கெட்டதா நடந்துட்டு இருக்கு. அந்த பொண்ணு தைரியமா தனியா நிக்கிறேன் னு சொல்லுதே. அதான் ஊருக்கு புதுசு போல னு கேட்டேன்”

“ம்ம்… ரொம்ப தைரியமான பொண்ணு. இத பத்திலாம் கண்டுக்க மாட்டாங்க”

“பெண்ணுக்கு தைரியம் அவசியம் தான். ஆனா குருட்டு தைரியமும் இருக்க கூடாது”

“நான் சீக்கிரம் போய் பார்த்துக்கிறேன்”

கார்த்திக் அவரை வீட்டில் விட்டு விட்டு நேராக ஜீவிதாவிடம் சென்று விட்டான்.

பாலாஜியை வரவேற்ற யாதவ் “எங்க கிளம்பிட்டான்?” என்று கேட்டாள்.

“அவனோட ஃப்ரண்ட்.. தோழி .. காத்துட்டு இருக்காளாம்.‌ பார்க்க போறான்”

யாதவ்வின் முகம் சட்டென மாற அதை பாலாஜி கவனித்துக் கொண்டார். அவர் தன்னை கூர்ந்து பார்ப்பது புரிந்து உடனே முகத்தை மாற்றிக் கொண்டு அவரை உள்ளே அழைத்துச் சென்றான் யாதவ்.

“என்னடா ரெண்டு நாளா ஆள காணோம்?” என்று கேட்டுக் கொண்டே உமா மகேஸ்வரி வந்தார்.

“படைச்சவன் கூப்பிடுற இடத்துக்கெல்லாம் போய் தான கா ஆகனும்”

“இங்கயும் படைச்சவன் கூப்பிட்டு தான் வந்தியா?”

“ஆமா.. அவன் சித்தம் இல்லாம என்ன நடக்க போகுது?”

“ஓஹோ… சரி தான். இவனுக்கு பொண்ணு பார்க்கனும் பேசலாம் வாடா னு கூப்பிட தான் தேடுனேன். ரெண்டு நாளா தொலஞ்சுட்டு இன்னைக்கு வந்து பழிய படைச்சவன் மேல போடு”

“அதெல்லாம் பார்க்கலாம். பார்த்தா உன் மகன் அந்த பொண்ண பேசியே ஓட வச்சுடுறான். அடுத்து பொண்ணு பார்க்குறதுனா இவன் பேசி ஓட விட கூடாது னு சத்தியம் வாங்கிட்டு பாரு கா. அவ்வளவு தான் சொல்லுவேன்”

உமா மகேஸ்வரி மகனை பார்க்க யாதவ் எங்கோ பார்த்து வைத்தான்.

“இந்த முறை இவன பொண்ணு பார்க்க கூட்டிட்டு போக போறது இல்ல. நாம தான் போறோம். இவன நேரா கல்யாண மேடைக்கு தான் கூட்டிட்டு போகனும் னு இருக்கேன்”

“ம்மா‌.”

“இது தான் சரி. நாம மட்டும் போவோம்” என்று பாலாஜி கூற “நீங்க சும்மா இருக்கீங்களா? ம்மா.. கல்யாணம் பண்ணி வாழ போறது நான். எனக்கு பிடிக்கலனா எப்படி கல்யாணம் பண்ணுறது?” என்று யாதவ் கேட்டு வைத்தான்.

“நீ போடுற கண்டீஷன்க்கு எந்த பொண்ணும் ஒத்துக்க மாட்டாடா. உனக்கென்ன வயசு திரும்புது நினைப்பா? இப்பவே முப்பத்தி ஒன்னு. மரியாதையா பார்க்குற பொண்ணு கழுத்துல தாலி கட்டு”

“முடியாது. நான் சொல்லுறதுக்கெல்லாம் சரி னு ஒத்துக்கிட்டா தான் கல்யாணம்.‌ இல்லனா ஆள விடுங்க”

யாதவ் எழுந்து சென்று விட்டான்.

அவனுடைய ஒரே விசயம். சொத்தில் எதையும் அவள் எதிர் பார்க்க கூடாது. அத்தனையும் கார்த்திக் பேரில் எழுதி வைத்தாலும் கேட்க கூடாது.

இதை எந்த பெண் வீட்டாரும் ஒப்புக் கொள்ளவில்லை. எந்த பெண்ணும் ஏற்றுக் கொள்ளவில்லை. பணத்துக்காக திருமணம் செய்யும் பெண் அவனுக்கும் வேண்டாம்.

இப்படி பேசி பேசியே பல வருடமாக திருமணத்தை தள்ளி போட்டு விட்டான். இனிமேலும் பொறுமை காக்க முடியாமல் உமா மகேஸ்வரிக்கு கோபம் வந்தது.

ஆனால் அவரது கோபத்தை யாதவ் கண்டு கொள்ளாமல் பிடித்தபிடியில் நின்றான்.

“இவன‌ என்ன தான்டா பண்ணுறது?” – உமா மகேஸ்வரி.

“இப்போதைக்கு எதுவும் பண்ணாத கா.‌ கொஞ்ச நாள் போகட்டும். மாறுவான்”

“இன்னும் எவ்வளவு காலமோ தெரியல. சரி உனக்கு சாப்ட எதாவது எடுத்துட்டு வரேன்” என்று கூறி எழுந்து சென்று விட்டார்.

*.*.*.*.*.*.

கார்த்திக் வரும் வரை ஜீவிதா அந்த இடத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். சில நிமிடங்களில் கார்த்திக் வந்து விட்டான்.

“என்ன விசயம்?”

“ஒரு விசயம் சொல்லுவேன். யோசிக்காம ஹெல்ப் பண்ணனும்?”

“அது கேட்குற விசயத்த பொறுத்து”

“நேத்து ஒரு பொண்ணு செத்து போனால?”

“ஆமா..”

“அவ செத்த இடத்த பார்க்கனும்.”

“என்ன எல்லாரும் இத பத்தியே பேசிறீங்க?”

“வேற யாரு பேசுனா?”

“அடுத்தவங்கள விடு. நீ ஏன் போகனும்ங்குற?”

“எனக்கு இந்த சாவுல எதோ மறைஞ்சு இருக்கு னு தோனுது”

“இல்ல. இப்போ நாம போக முடியாது”

“ஏன்?”

“போக கூடாது னு ஆர்டர்”

“யாரு சொன்னா?”

“அண்ணன்”

“ஏன்?”

“அதெல்லாம் கேட்கல. நீயும் போகாத”

“சரி நீ வர வேணாம். எனக்கு எங்க இருக்கு னு மட்டும் சொல்லு”

“நோ. ஜீவிதா தேவையில்லாத ரிஸ்க் இது”

“நீயும் பேய் தான் இருக்கு னு நம்புறியா?”

“பேயோ பூதமோ. போக கூடாது னு சொன்னா சொன்னது தான்”

“சரி போ. நான் வேற யாரு கிட்டயும் கேட்டுக்குறேன்”

“யாரும் சொல்ல மாட்டாங்க”

“நானே கண்டு பிடிச்சுக்கிறேன்”

“ப்ச்ச்.. இப்போ எதுக்கு அத பார்க்கனுங்குற?”

“நான் கார்ல வரும் போது ஒரு பொண்ண பார்த்தேன் னு சொன்னேன்ல. அது அந்த செத்து போன பொண்ணு தான். அந்த பொண்ண பார்த்துட்டு ரொம்ப கில்டியாகிடுச்சு. நாம தேடி அப்பவே கார்ல வீட்டுக்கு கூட்டிட்டு போகாம விட்டோமே னு ரொம்ப கஷ்டமாகிடுச்சு”

“நிஜம்மாவா?”

“ஆமா. அந்த பொண்ணு முகத்த பார்த்ததுல இருந்தே ஒரு மாதிரி இருக்கு. அந்த இடத்த பார்த்தே ஆகனும் னு தோனுது. எதாவது பண்ண முடிஞ்சா நல்லா இருக்கும் னு தோனுது”

“இதுக்கு நீ ஏன் எமோஷனல் ஆகுற? என்ன நடந்தது னு விசாரிக்குறவங்க விசாரிக்கட்டும்”

“இல்ல கார்த்திக். எனக்கு நானே எதாவது பண்ணனும்”

“விடுனு சொல்றேன்ல. நீ முதல்ல கிளம்பு இங்க இருந்து. ஊருக்கு இப்போ தான் வந்து இருக்க. எதையாவது தலையில தூக்கி போட்டுக்காத. கிளம்பு னு சொன்னேன்”

கார்த்திக் அதட்டலுடன் பைக்கில் ஏற்றி அனுப்பி விட்டு பின்னாலே வந்தான். அவள் வீட்டுக்குள் சென்ற பின் தான் தன் வீட்டை நோக்கி கிளம்பினான்.

சோகத்துடன் வந்த ஜீவிதா நிலவனை தேட “அவன் பின்னாடி உக்கார்ந்து இருக்கான் போய் பாரு மா” என்றார் வள்ளியம்மை.

சேந்தன் வீட்டில் இல்லை.‌ அவர் வேலையை பார்க்க கிளம்பி சென்று விட்டார். வள்ளியம்மை சமையலறையே கதியாக கிடக்க தங்கமணி தொலைகாட்சியில் வரும் வில்லிக்கு சாபம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

‘யாரு யாருக்கு சாபம் கொடுக்கனும் னு ஒரு விவஸ்தை வேணாம்’ என்று நினைத்துக் கொண்டு நிலவனை தேடிச் சென்றாள்.

அவனது லாப்டாப்பில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.

“இந்தா நிலா. உன் சாவி” என்று‌ கொடுக்க வாங்கிக் கொண்டான்.

“என்ன பண்ணுற?”

“இன்டர்வியூ க்கு அப்ளை பண்ணுறேன். இனியும் வீட்டுல இருக்க பிடிக்கல. அதான் எந்த வேலைனாலூம் கிளம்பி போகலாம் னு இருக்கேன்”

“ஹெல்ப் வேணுமா?”

“ம்ம்.. சொல்லுங்களேன்”

அவனது லாப்டாப்பை வாங்கிக் கொண்டு அமர்ந்தவள் அவனது முழு விவரத்தை உன்னிப்பாக படித்தாள். பிறகு மூன்று நிறுவனங்களை தேர்வு செய்தாள்.

“இதுல கண்டிப்பா உனக்கு வேலை உண்டு. லாஸ்ட் செலக்ஸன் உன்னோடதா தான் இருக்கும். பிடி”

லாப்டாப்பை திரும்பி வாங்கிக் கொண்டவன் அவளை ஆச்சரியமாக பார்த்தான்.

“நான் செலக்ட் பண்ணுறதா?”

“ம்ம்.. நீ எதுக்கு போகனும் னு முடிவு பண்ணிக்கோ.” என்று கூறி விட்டு‌ எழுந்து சென்று விட்டாள்.

அன்றைய நாளை யோசனையுடன் கடந்தவள் அடுத்த நாள் சுபாஷினியிடம் கேட்க முடிவு செய்தாள்.

“அந்த இடத்த பத்தி உனக்கெதுக்கு? நீயே இப்ப தான் ஊருக்கு வந்துருக்க. சும்மா இருக்க மாட்டியா?”

சுபாஷினி அதட்டலாக பேசினாள்.

“இல்லகா.. அந்த இடம் எதுனு தெரிஞ்சா நல்லா‌ இருக்குமே னு…”

“ஒன்னும் தெரிஞ்சுக்க வேணாம். சும்மா இரு. அது பேயே இல்லனாலும் கூட பரவாயில்ல‌ தெரிஞ்சே உயிர பணயம் வைக்க கிளம்பிடாத. அவ்வளவு தான் சொல்லுவேன்”

“என்ன என்ன னு நினைச்சீங்க? நான் ஒரே நேரத்துல ரெண்டு பேர அடிச்சு போட்டுட்டு போற அளவு தைரியமானவ தெரியுமா?”

“அதுனால? அங்க போய் பார்க்க போறியா? அந்த வீட்டுல யாரும் கிடையாது. அந்த வீட்ட சுத்தியும் யாரும் போக மாட்டாங்க. கிணறு தண்ணி எல்லாம் பிணம் மிதந்து கெட்டு போச்சு. உன் ஆராய்ச்சிய இந்த மாதிரி விசயத்துல பண்ணாத”

“ப்ச்ச்.. யாரோ ஒருத்தன் வரிசையா பொண்ணுங்கள கொண்ணுட்டே இருப்பான். நீங்க எல்லாம் பேய் னு சொல்லிட்டு வேடிக்கை பார்க்குறீங்க. உங்களுக்கே தப்பா தெரியலையா?”

“பெத்தவங்க சும்மா இருக்காங்களே. அந்த பொண்ண பெத்தவங்க வாய திறந்தாங்களா? இல்லயே… அப்புறம் நீ போய் நியாயம் வாங்கி கொடுக்குறேன் னு கிளம்புனா எப்படி? அவங்களே உன்ன இதெல்லாம் செய்ய விட மாட்டாங்க”

“செய்ய விட அவங்க யாரு? பெத்துட்டா என்ன வேணா முடிவு பண்ணுவாங்களா? நான் போலிஸ் கம்ப்ளைண்ட் கொடுக்க போறேன். யாரு என்ன பண்ணுறா னு பார்த்துடுறேன்”

“போலீஸா?” என்று சுபாஷினி அதிர்ச்சியாக கேட்க “ஆமா. பார்க்குறேன் அவங்களா நானா‌ னு” என்று கூறினாள்.

சுபாஷினி பேசும் முன்பே நிலவனின் பைக் சாவியை‌ எடுத்துக் கொண்டு வந்தவள் உடனே கிளம்பி விட்டாள்.

தொடரும்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Hani novels

வணக்கம். நான் ஹனி. கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதில் வரலாற்று கதைகள் என்றால் ரொம்பவுமே பிடிக்கும். "பொன்னியின் செல்வன்" படித்த பிறகு கதைகளின் மீதும் நாவல்களின் மீதும் வந்த ஆர்வம். ஒரு கட்டத்தில் எழுத ஆரம்பித்து விட்டேன். சாதாரண குடும்ப கதைகளும் காதல் கதைகளுமே எனக்கு எழுத தெரியும். அதையே இங்கும் பதிவிடுகிறேன். நன்றி.

Story MakerContent AuthorYears Of Membership

34 – 🎶 மூங்கில் குழலான மாயமென்ன

அஸ்தமிக்கும் பொழுதுகள் 4