in

அஸ்தமிக்கும் பொழுதுகள் 2

அந்த பெண் மகிழினியை பேய் அடித்து கொன்று விட்டதாகவே எல்லாரும் கூறினர். ஜீவிதாவிற்கு இதை நம்ப முடியவில்லை. அந்த பெண்ணின் உடலை நிறைய நேரம் வைத்திருக்கவில்லை. சீக்கிரமே தகனம் செய்து விட்டனர். சுஜிக்கு பயத்தில் காய்ச்சல் வந்து விட்டது.

ஜீவிதா போனில் எதையோ பார்த்துக் கொண்டு வீட்டுக்குள் அமர்ந்து இருக்க “என்ன தனியா உட்கார்ந்து இருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டே நிலவன் வந்தான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள் “நறுமலர் எப்போ வருவா?” என்று கேட்டாள்.

“அடுத்த வாரம். அவ எக்ஸாம் முடிஞ்சதும் வருவா”

“ஓகே. நீ வேலைக்கு ட்ரை பண்ணலையா?”

“கிடைக்கிறது எல்லாம் வெளியூரா இருக்கு. இங்க இருந்து போக பாட்டி விடல”

ஜீவிதா அதை கேட்டதும் ஒரு விரக்தி சிரிப்பு சிரித்தாள். அதை பார்த்து விட்டு நிலவனுக்கு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.

“சரி உன் வேலைய பாரு. எனக்கு வேலை இருக்கு” என்று கூறி ஜீவிதா எழ “அக்கா… ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டீங்களே?” என்று கேட்டான்.

“கேளு”

“என்ன படிச்சு இருக்கீங்க? என்ன வேலை பார்க்குறீங்க?”

ஒரு கேலி சிரிப்பு சிரித்து விட்டு வெளியே சென்று விட்டாள்.

வீட்டுக்கு வெளியே துக்கம் நடந்த இடம் என்று அப்பட்டமாக தெரிந்தது. சுஜியின் அன்னை அவள் கண்ணில் பட “அக்கா ஒரு நிமிஷம்” என்று அழைத்தாள்.

“என்ன ஜீவிதா?” என்று கேட்டுக் கொண்டு சுபாஷினி வந்தாள்.

“ஒரு சந்தேகம் கேட்கவா?”

“கேளேன்”

“அந்த மகிழினிய பேய் தான் அடிச்சு கொண்ணுச்சு னு எப்படி சொல்லுறீங்க?”

“அந்த பொண்ணு செத்து கிடந்த இடம் அப்படி”

“எந்த இடம்?”

“ஊருக்கு வெளிய ஒரு வீடும் கிணறும் இருக்கு. அந்த வீட்டு கிட்ட போனவங்க யாருமே உயிரோட இருந்ததே இல்ல”

“என்ன கா பயமுறுத்துறீங்க?”

“எல்லாம் நிஜம். நானும் முதல்ல பெருசா நம்பல. அந்த வீட்டுக்குள்ள போன எல்லாரும் செத்துடுவாங்க னு சும்மா தான் சொல்லுறாங்களோ னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா இதுக்கு முன்னாடி அந்த வீட்டுல ரெண்டு பொண்ணுங்க செத்து கிடந்துச்சுங்க. அதுவும் உடம்புல காயம் எதுவும் இருக்காது. ஆனா டிரஸ் எல்லாம் ரத்தமா இருக்கும். முகம் கறுப்பாகி கிணததுக்குள்ள ஊறி கிடக்கும்”

“யாராவது இத பண்ணி பேய் மேல பலி போட்ருக்கலாம் ல?”

“யாருக்கும் அந்த பொண்ணுங்கள கொல்ல நோக்கம் இல்லையே? இதுக்கு முன்னாடி செத்த ரெண்டு பேருக்கும் சம்பந்தம் இல்ல. இந்த பொண்ணுக்கும் சம்பந்தம் இல்ல. ஆனா எதுக்கு இந்த மூணு பேரும் அந்த வீட்டுக்கு போச்சுங்க னு தெரியல”

“அந்த கிணற மூடி வீட்ட இடிச்சுட வேண்டியது தான?”

“அத செய்ய அந்த வீட்டுக்கு பக்கத்துல போகனும்ல? எதாச்சு பண்ண போய் குடும்பமே கஷ்டத்துல மாட்டிகிச்சுனா னு பயம்”

“ஓ…”

“இந்த சுஜிக்கு வேற இந்த கலவரத்துல காய்ச்சல் வந்துடுச்சு. எங்க அத்த மந்திரி அது இது னு சொல்லிட்டு இருக்கு. அது எதுவும் பண்ணுறதுக்குள்ள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகனும், அப்புறம் பேசலாம்” என்று கூறி விட்டு சுபாஷினி சென்று விட்டாள்.

சுஜியை நினைத்து அவளுக்கு வருத்தமாக இருந்தது. அதோடு இந்த விசயம் சாதாரண விசயமல்ல என்றும்‌ மனதில் உறுத்தியது.

அந்த இடத்திற்கு சென்று பார்த்தால் என்ன என்று தோன்றியது. ஆனால் அது எங்கே இருக்கிறது? யாரிடமும் வழி கேட்டால் நிச்சயமாக சொல்ல மாட்டார்கள்.

வேறு என்ன செய்வது?‌ இந்த ஊர் பழகும் வரை காத்திருக்கலாமா? இல்லை இந்த ஊரை விட்டு உடனே சென்று விட நினைப்பவள் எத்தனை நாள் காத்திருப்பாள்?

யோசித்துக் கொண்டே தெருவில் இறங்கி நடந்தவள் கார் சத்தம் கேட்டு திரும்பி‌ பார்த்தாள். கார்த்திக்கின் கார் அது. ஜீவிதாவை பார்க்கவும் காரை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கி வந்தான்.

“ஹாய்…” என்று கார்த்திக் உற்சாகமாக கூற‌ “ஹாய்..” என்றாள்.

“என்ன வாக்கிங்கா?” – கார்த்திக்.

“இல்ல சும்மா … நீங்க எங்க கிளம்பிட்டீங்க?”

“போரடிச்சது. அதான்…”

“அவுட்டிங்கா?”

“அதுக்கு ஃப்ரண்ட்ஸ் வேணுமே.. இந்த ஊருல எனக்கு ஒரு ஃப்ரண்ட் கூட இல்ல”

“ஏன்? உங்க ஏஜ் குருப் எதுவும் இல்லையா?”

“இருக்காங்க. என் கிட்ட பழக தான் பயம்”

அவனை மேலும் கீழும் பார்த்தவள் பொங்கி வந்த சிரிப்பை அடக்கினாள்.

“என்ன காமெடி பீஸூ னு சொல்லுறீங்க. அதான? நான் டெரர் எல்லாம் இல்லைங்க. எல்லாருக்கும் எங்க குடும்பத்து மேல மரியாதை. அத விட்டு இறங்கி பழக மனசு வரல”

“ஊருக்குள்ள பெரிய ஆளோ?”

“அப்படியும் சொல்லிக்கலாம். ஏன் நீங்க எனக்கு ஒரு ஃப்ரண்டா இருங்களேன்”

“இருக்கலாமே… ஆனா ஊருல எதுவும் தப்பா நினைக்க மாட்டாங்களே?”

“கண்டிப்பா தப்பா தான் நினைப்பாங்க”

ஜீவிதா சற்று அதிர்ச்சியோடு அவனை பார்க்க உடனே சிரித்து விட்டான்.

“இந்த ஊருலயும் வருசம் போயிட்டு தாங்க இருக்கு. இங்க இருக்கவங்களும் கொஞ்சம் மார்டன் தான். அப்படி எதுவும் நினைக்க மாட்டாங்க. பயப்படாதீங்க”

“அது சரி.. “

“வாங்களேன் என் ஃபேமிலிய காட்ரேன். அவங்களுக்கும் என் புது ஃப்ரண்டு னு உங்கள காட்டுறேன்”

“ம்ம்.. போலாமே”

காரிலேயே அவனது வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.

ஊருக்கு நடுவில் பெரிய மாளிகையாக அமைந்து இருந்தது கார்த்திக்கின் வீடு. அதை பற்றி எந்த பிரம்மிப்பும் இல்லாமல் சாதாரணமாக பார்த்துக் கொண்டு வந்தாள் ஜீவிதா.

இரும்புக் கதவை திறந்து உள்ளே சென்று கார் நின்றது. சுற்றியும் ஆட்கள் நடந்த வண்ணம் இருந்தனர்.

“இது தான் எங்க வீடு” என்று கார்த்திக் கூற “நைஸ்” என்றாள்.

“இந்த பக்கம் மாடுங்க இருக்கு. பார்க்குறீங்களா?”

“நோ.. மாடு னா பயம். எனக்கு விலங்கு எல்லாத்து மேலையும் பயமிருக்கு. வேணாம்”

“பேய்க்கு பயப்படா மாட்டீங்க னு தெரிஞ்சதும் உங்கள என்னவோ நினச்சனே”

கார்த்திக் கிண்டல் குரலில் கூற “எல்லாருக்கும் எதோ ஒரு வீக்னஸ் இருக்கும்” என்று சாதாரணமாக கூறினாள்.

அவனுடைய பணபலம் எப்படி அவளை பாதிக்கவில்லையோ அதே போல் அவனது கிண்டலும் பாதிக்கவில்லை.

“உண்மை… வாங்க உள்ள போகலாம்”

இருவரும் வீட்டை நோக்கி நடந்தனர். வழியில் வேலை செய்பவர்கள் இருக்க அவர்களில் சிலரை அறிமுக படுத்திக் கொண்டே வந்தான்.

வீட்டுக்குள் நுழைந்ததும் யாரோ படிகளில் வேகமாக இறங்கி வரும் சத்தம் கேட்டது. ஜீவிதா நிமிர்ந்து பார்த்தாள். வீட்டு வராண்டாவில் அமைந்திருந்த படியில் யாரோ இறங்கி வந்தனர்.

ஒரு கையில் வெள்ளை வேட்டியை பிடித்துக் கொண்டு படிகள் அதிர வேகமாக இறங்கி வந்தவரை பார்த்து ஜீவிதா வாயை பிளந்தாள்.

“எங்க போன நீ?” என்று கார்த்திக்கை பார்த்து கேட்டுக் கொண்டே இறங்கியவர் ஜீவிதாவை பார்த்து புருவம் சுருக்கினார்.

“இவங்க ஜீவிதா. சேந்தன் சாரோட பொண்ணு.”

அவரின் பார்வையை கவனித்து கார்த்திக் பதில் சொல்ல “வணக்கம்” என்று ஜீவிதா கை கூப்பினாள்.

அவரும் கை கூப்பி “வணக்கம்” என்று கூறி விட்டு “உள்ள போங்க. நீ அப்புறமா ஃபேக்டரிக்கு வந்து சேரு” என்று ஜீவிதாவிடம் ஆரம்பித்து கார்த்திக்கிடம் முடித்து விட்டு சென்று விட்டார்.

“வாவ்.. யாரு இவரு?”

ஜீவிதா ஆர்வமாக கேட்க “எங்கண்ணன். யாதவ் கிருஷ்ணன்” என்றான்.

“வாட்?”

ஜீவிதாவின் முகத்தில் அளவுக்கு அதிகமாக அதிர்ச்சி தெரிந்தது.

“என்ன ஆச்சு?”

“ஹான்… ஒன்னும் இல்ல”

“சும்மா சொல்லுங்க”

“தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?”

“இல்ல சொல்லுங்க”

“நான் அவர… உங்க சித்தப்பாவா இருப்பாரு னு நினைச்சேன்”

கார்த்திக் அதிர்ந்து போவான் என்று எதிர்பார்க்க சிரித்து வைத்தான்.

“என்ன சிரிக்கிறீங்க?”

“நீங்க மட்டும் இல்ல. என் காலேஜ் ஃப்ரண்ட்ஸ் கூட ஃபர்ஸ்ட் டைம் பார்க்கும் போது இப்படி தான் கேட்டாங்க”

“நான் அவர் ஓல்ட் னு சொல்லல. வாய்ஸ் எங்க் ஆ இருக்கு. படியில இறங்கி வந்த ஸ்பீட் கூட சூப்பர். ஆனா ஃபேஸ்…”

“அதே தான். அண்ணன் வொர்க் ப்ரஸர்க்குள்ள நுழைஞ்சு இப்படி ஆகிட்டாங்க. இல்லனா என்ன விட எங்க் ஆ தெரிவாங்க”

“ஓ…”

“அவர் சின்ன வயசு போட்டோவ அப்புறம் காட்டுறேன். இப்போ அம்மாவ பார்க்கலாம் வாங்க”

இருவரும் உள்ளே வர எதிரில் ஒரு பெண் வந்தார்.

“அக்கா அம்மா எங்க?”

“பின்னாடி இருக்காங்க தம்பி. பெரிய தம்பி எதுக்கோ உள்ள வந்துட்டு திரும்பி போறாரே ஏன்?”

கார்த்திக்கும் ஜீவிதாவும் அவசரமாக திரும்பி பார்த்தனர். அப்போது தான் யாதவ் கிருஷ்ணன் படிகளில் இறங்கிச் சென்றான்.

கார்த்திக்கும் ஜீவிதாவும் ஒருவரை ஒருவரை பார்த்துக் கொண்டனர். அப்படியென்றால் இவர்கள் பேசியதை திரும்பி வந்த யாதவ் கிருஷ்ணன் கேட்டு விட்டுப் போகிறான்.

ஜீவிதா நாக்கை கடித்துக் கொண்டாள். யாரென்று தெரியாத ஒருவனை பற்றி இப்படி பேசி விட்டோமே. அதையும் அவன் கேட்டு விட்டானே என்று வெட்கமாக இருந்தது.

“பயப்படாதீங்க.” என்று கார்த்திக் மெல்லிய குரலில் கூறி விட்டு “தெரியல கா. நீங்களே போய் கேளுங்களேன்” என்று அந்த பெண்ணை அனுப்பி விட்டான்.

“அண்ணன் கோச்சுகிட்டா என் கிட்ட தான் கோச்சுப்பார். நீங்க கவல படாதீங்க” என்று ஜீவிதாவிற்கு ஆறுதல் கூறினான்.

“முன்ன பின்ன தெரியாதவங்கள பத்தி கமெண்ட் பண்ணது ஒரு மாதிரி இருக்கு”

“நீங்க இல்லாதத சொல்லலையே. இனியாச்சும் இத கேட்டு அண்ணன் மாறுறாரா பார்ப்போம். “

ஜீவிதா தெளிவில்லாத முகத்துடன் நிற்க “வாங்க அம்மாவ பார்க்கலாம்” என்று அழைத்து சென்றான்.

வீட்டின் பின்னால் மாட்டை கவனித்துக் கொண்டிருந்தவர்களுடன் நின்று இருந்தார் ஒரு பெண்மணி. அது தான் கார்த்திக்கின் அன்னையாக இருக்க வேண்டும் என்று ஊகித்துக்கு கொண்டாள்.

கார்த்திக் அழைக்க திரும்பி பார்த்தார். நெற்றியில் வெறும் திருநீறு பூசிக் கொண்டு தெய்வீகமாக இருந்தார். கார்த்திக்கை பார்த்ததும்‌ ஒரு புன்னகை கலந்த கோபத்துடன் “எங்க டா போன? கிருஷ்ணா உன்ன தேடிட்டு இருந்தான்” என்று மிரட்டினார்.

“சொன்னேன்ல மா.. வீடு செம்ம போர் வெளிய போறேன் னு”

“அத அவன் கிட்ட சொல்லி என்ன வாங்கி கட்டிக்க சொல்லுறியா?” என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்தவர் ஜீவிதாவை பார்த்தார்.

“நாம அப்புறம் பேசிக்கலாம். இந்த பொண்ணு யாரு?” என்று கேட்க “இவங்க ஜீவிதா மா. என்னோட புது ஃப்ரண்ட்” என்றான்.

“அப்படியா?”

“வணக்கம்” என்று ஜீவிதா கை கூப்ப “வணக்கம் மா. இவன எங்க பார்த்த நீ?” என்று கேட்டார்.

“இவங்கள தான் மா நேத்து நான் கூப்பிட போயிருந்தேன்.” 

கார்த்திக் இடையில் புகுந்து கூற “ஓஓ.. சரி உள்ள உட்காருங்க. நான் இப்போ வந்துடுறேன். நீ எதாவது சாப்ட கொடு . பேசிட்டே மறந்துடாத” என்று மகனிடம் அதட்டலுடன் கூறி விட்டு விட்ட வேலையை பார்க்க சென்று விட்டார்.

“இத்தனை மாடுங்க இருக்கே. பால் வியாபாரம் பண்ணுறீங்களா என்ன?” என்று ஜீவிதா கேட்க “ஆமா..” என்றான்.

“நிஜம்மாவா?”

“ம்ம்.. பண்ணை இருக்கு. இது எல்லாம் அப்பாவுக்கு பிடிச்ச மாடுங்க.‌ அதுனால வீட்டுல இருக்கு. மத்த எல்லாம் பண்ணையில இருக்கு.”

“ஓ..‌ சூப்பர்.”

“உள்ள வாங்க. புதுசா கறந்த பாலுல அஞ்சலி அக்கா காபி போட்டு வச்சுருப்பாங்க. குடிச்சா சொர்க்கத்துக்கே போன மாதிரி இருக்கும்”

“நிஜம்மா போயிடாம இருந்தா சரி”

கார்த்திக் மெலிதாக சிரித்து விட்டு உள்ளே திரும்பி சென்றான்.

“அஞ்சலி அக்கா.. ரெண்டு காபி போடுங்க பார்ப்போம்” என்று கார்த்திக் சமையலறை பக்கம் குரல் கொடுக்க அஞ்சலி கையில் காபியோடு வந்து விட்டாள்.

“வீட்டுக்குள்ள நீங்க வந்தத பார்த்ததுமே காபி போட ஆரம்பிச்சுட்டேன்” என்று அந்த அஞ்சலி காபி கோப்பையை நீட்ட “சூப்பர்கா..” என்று கூறி எடுத்துக் கொண்டான்.

அதில் ஒன்றை ஜீவிதாவிடம் கொடுக்க வாங்கி குடித்தாள்.

“நல்லா இருக்கு” என்று ஜீவிதா ஆச்சரியமாக கூற “டாங்க்ஸ் மா” என்றாள் அஞ்சலி.

“உங்க இங்கிலிஸ்ஸ உங்க பையன் ஸ்கூலோட வச்சுக்கோங்க.‌ வந்தவங்கள துரத்தி விட்ராதீங்க” என்று கார்த்திக் கூற “போங்க தம்பி.‌ நான் உங்கள விட நல்லா இங்கிலீஸூ பேசிடுவேன்னு பொறாமை” என்றாள் அஞ்சலி.

“ஆமா ஆமா.. அடுப்புல எதோ கருகுது”

“அய்யோ…” என்று அஞ்சலி ஓடி விட்டாள்.

“காபி எப்படி ?” – கார்த்திக்.

“சூப்பர்”

அவன் காபியை ருசித்துக் குடிக்க ” உங்க அம்மா‌ பேரு என்ன?” என்று கேட்டாள்.

“உமா மகேஸ்வரி. சமயத்துல உம்மாமா னு கூப்பிடுவேன்”

“உங்க அப்பா?”

“ராஜ் முருகன். அதோ போட்டோ இருக்கே… ஆறு வருசத்துக்கு முன்ன இறந்துட்டார். அடுத்து அண்ணன் தான் எல்லாம். அவர் பார்த்துட்டு‌ இருந்த வேலைய விட்டுட்டு குடும்பத்த பார்க்க வந்துட்டார்”

“என்ன படிச்சுருக்கார்?”

“எம் டெக்”

“நீங்க என்ன படிச்சுருக்கீங்க?”

“நான் டம்பி. எம்.ஏ எம்.ஃபில்”

“எம்.ஃபில் டம்மியா?”

“எனக்கு டம்மி தான். பி.எச்.டி பண்ணலாம் னு இருக்கேன்”

“பண்ணுங்க பண்ணுங்க”

“நீங்க என்ன படிச்சு இருக்கீங்க?”

“நான் ரொம்ப டம்மி. எம்.இ”

“இது டம்மியா?”

“எனக்கு டம்மி தான்” என்று கார்த்திக்கை போலவே பேசிக் காட்ட சிரித்து விட்டான்.

உமா மகேஸ்வரி வந்து “என்ன ஜோக்? தனியா நீ மட்டும் சிரிக்கிற?” என்று கேட்டுக் கொண்டே அமர்ந்தார்.

“இவங்க தான் மா என்ன கலாய்க்குறாங்க. என்ன னு கேளுங்க”

“அப்படியாமா? என்ன னு சொல்லு. நானும் சிரிக்க முடியுதா பார்க்குறேன்”

கார்த்திக் முறைக்க ஜீவிதா சிரித்தாள். சில நிமிடங்கள் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தாள். நேரம் கடப்பது புரிய எழுந்து விட்டாள். கார்த்திக் அவளை மீண்டும் வீட்டில் விட கிளம்பினான்.

“நாம தான் ஃப்ரண்ட்ஸ் ஆச்சே. இந்த போங்க வாங்கவ விட்டுரலாமே?” என்று கார்த்திக் கேட்க “விட்டுரலாமே. டேய் னு சொல்லி கூப்பிடுறதுல எனக்கு பிரச்சனை இல்ல” என்றாள்.

“அடப்பாவி” என்று கார்த்திக் அதிர கலகலவென சிரித்தாள்.

அந்த சிரிப்பை பார்த்துக் கொண்டே யாதவ் கிருஷ்ணன் வந்து நின்றான்.

அவனை பார்த்ததும் ஜீவிதாவின் சிரிப்பு காணாமல் போய் விட்டது. சற்று முன் நடந்தது எல்லாம் ஞாபகம் வந்து விட அமைதியாகி விட்டாள்.

“என்ன ணா? எதையும் மறந்துட்டீங்களா என்ன?” என்று கார்த்திக் கேட்க “இல்ல” என்று கூறினான்.

“அப்புறம்?”

“நீ எங்க கிளம்பிட்ட?”

“ஜீவிதாவ வீட்டுல விட”

“விட்டுட்டு வா” என்று கூறி விட்டு சென்று விட்டான்.

“உங்க அண்ணன் கோச்சுகிட்டாரா?” என்று ஜீவிதா வருத்தமாக கேட்க “அத நான் பார்த்துக்கிறேன். நீ வா கிளம்பலாம்” என்று அழைத்து சென்றான்.

ஜீவிதா வீட்டில் இறங்கிக் கொள்ள கார்த்திக் உடனே கிளம்பி விட்டான்.

வீட்டுக்குள் நுழைந்ததும் “இவ்வளவு நேரம் எங்க சுத்திட்டு வர்ர நீ? விளக்கு வச்சதும் பொம்பள பிள்ள வீட்ட விட்டு வெளிய போனா வீடு விளங்குமா?” என்று கேட்டார் தங்கமணி.

சுருக்கென பதில் கொடுக்க வாய் துடித்தது ஜீவிதாவிற்கு.‌ ஆனால் வாயை இறுக மூடிக் கொண்டாள்.

‘பொறு பொறு.. உனக்கு னு ஒரு நாள் வரும் . அன்னைக்கு பேசிக்கலாம்’ என்று மனதுக்குள் கூறிக் கொண்டு அமைதியை கடை பிடித்தாள்.

“ஜீவிதா மா.. வந்துட்டியா? கார்த்திக் தம்பி கூட எங்கயோ போன னு சொன்னாங்க?”

வள்ளியம்மை வழக்கம் போல் இடையில் புகுந்தார்.

“ஆமா. அவங்க வீட்டுக்கு அவங்கம்மாவ பார்க்க போனேன்”

“அந்தம்மா ரொம்ப நல்லவங்க. பேசுனியா?”

“ம்ம்..”

“சரி கால் கைய கழுவிட்டு வா. காபி போட்டு தரேன்”

“வேணாம்.‌ அங்கயே குடிச்சுட்டு தான் வந்தேன்” என்றவள் தனது அறை பக்கம் சென்று விட்டாள்.

தொடரும்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Hani novels

வணக்கம். நான் ஹனி. கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதில் வரலாற்று கதைகள் என்றால் ரொம்பவுமே பிடிக்கும். "பொன்னியின் செல்வன்" படித்த பிறகு கதைகளின் மீதும் நாவல்களின் மீதும் வந்த ஆர்வம். ஒரு கட்டத்தில் எழுத ஆரம்பித்து விட்டேன். சாதாரண குடும்ப கதைகளும் காதல் கதைகளுமே எனக்கு எழுத தெரியும். அதையே இங்கும் பதிவிடுகிறேன். நன்றி.

Story MakerContent AuthorYears Of Membership

💞மறுமண(ன)த்தில் இணைந்த இதயம்💞3

காதல் துளிரே -3