in

அஸ்தமிக்கும் பொழுதுகள் 1

*இந்த கதை முழுவதும் கற்பனையே.. இதில் வரும் பெயர்களும் சம்பவங்களும் உண்மையில் இருந்தால் அது தற்செயலாக நடந்ததாகவே இருக்கும்.*

வெள்ளான்பட்டி கிராமம். இரவு நேரம். பேருந்தில் இருந்து இறங்கியதும் ஒரு பெரிய சாலை ஊருககுள் அழைத்து செல்ல அமைந்து இருந்தது. அதில் ஒரு பெண் நடந்து கொண்டிருந்தாள்

மையிருட்டு என்பார்களே ? அது இப்படி தான் இருக்குமோ என்று தோன்றியது அவளுக்கு. அவள் ஜீவிதா.

தோளின்‌ இரண்டு பக்கமும் பைகள் தொங்கியது. போதாத குறைக்கு கையில் ஒரு பெட்டி. மற்றொரு கையில் செல் போன். அந்த இருட்டை கிழித்துக் கொண்டு செல்போன் வெளிச்சத்தை பாய்ச்சிக் கொண்டிருந்தது.

அந்த வெளிச்சத்தை துணையாக கொண்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தாள். அன்னைக்கென்று அறைகுறையாக எரிந்து கொண்டிருந்த தெருவிளக்கு மொத்தமாக அணைந்து போயிருந்தது.

அதோடு வீசிக் கொண்டிருந்த காற்று மரக்கிளைகளை ஆட்டி விட்டு சடசடவென சத்தத்தை கிளப்பியது. உர்ரென்ற காற்றின் சத்தம் காதில் வந்து மோத லேசாக உடல் சிலிர்த்து ஒரு பயம் உருவானது.

போனில் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அந்த போனின் உயிர் இருக்கும் வரை வெளிச்சம் கிடைக்கும். அதற்குள் எப்படியாவது ஊருக்குள் சென்று விட வேண்டும் என்று நடந்தாள்.

இந்த ஊருக்கு அவள் புதியவள் அல்ல. ஆனால் புதியவள் தான். நினைக்கவே ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தது. மறு பக்கம் மனம் கொள்ளா சோகமும் வந்தது. இருட்டில் நடந்த இடத்திலேயே நடப்பது போல் தோன்றியது. சுற்றியும் கேட்ட விதவிதமான சத்தங்கள் இதயத்துடிப்பை எகிற வைத்தது.

எதற்காகவோ எங்கோ இருந்த நாய் குரைத்துக் கொண்டே இருந்தது. சில சிறிய வண்டுகளின் ரீங்காரமும் பயங்கரமாக கேட்க “இந்த ஊருக்குள்ள போறதுக்கு முன்னாடி பயத்துலயே செத்துடுவேன் போலயே” என்று முணுமுணுத்துக் கொண்டாள்.

கையில் இருந்த பையின் கனம் கை முட்டுக்களை வலிக்கச் செய்ய கீழே வைத்து விட்டு நின்று விட்டாள். கையை உதறிக் கொண்டே மணியை பார்த்தாள்.

“மணி எட்டு தான் ஆகுது. அதுக்குள்ள இவ்வளவு இருட்டா இருக்கே… இன்னும் எவ்வளவு தூரம் தான் நடக்குறது?”

சலிப்பாக நினைத்துக் கொண்டவள் நடந்து வந்த தூரம் சொற்பமே. ஆனால் இருட்டில் நடப்பதால் அது மனதையும் களைப்படைய செய்திருந்தது.

காற்றின் கோர சத்தத்தையும் மீறி யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டது. போனின் வெளிச்சத்தை பாய்ச்சி யாரென்று கண்டு பிடிக்க முயற்சித்தாள். சற்று நேரத்திற்கெல்லாம் சத்தம் அருகில் கேட்டது.

ஜீவிதா இருந்த இடத்தை விட்டு அசையவே இல்லை. கொலுசு சத்தம் வேறு கேட்டதால் அவளால் பயத்தை விட்டு நகர முடியவில்லை. திடீரென ஒரு பெண் வெளிச்சத்தில் பட்டாள். அவளை நன்றாக பார்க்க வெளிச்சத்தை அவள் முகத்தில் பாய்ச்சினாள் ஜீவிதா.

அந்த பெண் வெளிச்சத்தை கண்டு மிரண்டு முகத்தை மூடிக் கொண்டாள்.

‘இந்த பொண்ணு கிட்ட வழி கேட்டா என்ன?’ என்று யோசித்து ஜீவிதா வாயை திறக்க போக அந்த பெண் வேறு பக்கம் திரும்பி ஓட ஆரம்பித்து விட்டாள்.

“ஏய்.. பொண்ணே..” என்று ஜீவிதா அழைத்தது எதுவும் அவள் காதில் விழுந்தது போல் தெரியவில்லை. எங்கோ ஓடி மறைந்து விட்டாள்.

“போச்சா… ” என்று சலித்துக் கொண்டு கீழே வைத்த பைகளை மீண்டும் கையில் எடுத்தாள். நான்கு அடி நடக்க இருட்டை கிழித்துக் வெளிச்சம் பரவியது.

“இது என்னது?” என்று ஜீவிதா நன்றாக பார்க்க கார் ஒன்று வந்தது. அவள் அசையாமல் நின்று விட அவள் முன்னால் காரும் நின்றது.

உள்ளே இருந்து ஒருவன் இறங்கி வந்தான்.

“நீங்க ஜீவிதா வா?”

“ஆமா.. நீங்க?”

“நான் கார்த்திக். சாரிங்க. உங்கள கூப்பிட தான் வந்தேன். ஆனா லேட்டா வந்துட்டேன் போல”

“ஓ.. பரவாயில்ல”

“வாங்க. கார்ல போகலாம்” என்று கூறி அவளது உடமைகளை எடுத்து காரில் வைத்தான்.

ஜீவிதா ஏறிக் கொள்ள கார் புறப்பட்டது. ஜீவிதா வெளியே இருட்டை பார்த்துக் கொண்டே வர “என்ன தேடுறீங்க?” என்று கேட்டான்.

“இல்ல.. ஒரு பொண்ணு இந்த பக்கம் போனா.. அந்த பொண்ணும் வந்தா கூட கூட்டிட்டு போகலாம் னு. இருட்டா இருக்கே”

“பொண்ணா? நான் யாரையும் பார்க்கலையே… ஒரு வேலை அது பொண்ணு தானா? இல்ல பேய் எதுவும் பார்த்தீங்களா?”

அவனை திரும்பி மேலும் கீழும் பார்த்தவள் “பயந்துட்டேன்” என்றாள். அவளது குரலில் கேலி தெரிய கார்த்திக் சிரித்து விட்டான்.

“நீங்க நல்ல தைரியசாலி தான். இல்லனா இருட்டுக்குள்ள தனியா நடந்து வருவீங்களா?”

“தெரிஞ்சா சரி”

“என்ன நம்பி எப்படி கார்ல உட்கார்ந்தீங்க? ஒரு வேலை நான் பேயா இருந்தா? இல்ல பேய்ல உங்களுக்கு நம்பிக்கை இல்ல. சோ நான் ஒரு தப்பானவனா இருந்தா?”

“என்ன பாதுகாத்துக்க எனக்கு நல்லாவே தெரியும். அண்ட் என் பேர சொல்லி கூப்பிட வந்ததா சொன்னீங்க. என் பேரண்ட்ஸ் என் பேர சொல்லாம உங்களுக்கு எப்படி தெரிஞ்சுருக்கும்?”

“பரவாயில்ல. சேந்தனோட பொண்ணு பட்டணத்துல படிக்குது‌னு சொன்னப்போ என்னமோ நினைச்சேன். தெளிவான ஆளா தான் இருக்கீங்க”

ஜீவிதா பதில் சொல்லவில்லை. அமைதியாக இருட்டை வெறித்தாள். கார்த்திக் அவளது மௌனத்தை கவனித்து திரும்பி பார்த்தான். சரியாக தெரியவில்லை என்றாலும் அவளது முகத்தில் சோகம் இருந்தது.

“உங்கள இந்த ஊருல அதிகமா பார்த்தது இல்லையே?”

ஜீவிதாவின் முகத்தில் விரக்தி சிரிப்பு வந்தது. கார்த்திக் அதை ஆராய்ச்சியாக பார்க்க “உங்களுக்கு இந்த ஜாதகம் ஜோசியம் மேல எல்லாம் நம்பிக்கை இருக்கா?” என்று கேட்டாள்.

“ம்ம்….. ” என்று தீவிரமாக யோசித்தவன் “நல்லது சொன்னா நம்புவேன். கெட்டது சொன்னா எல்லாம் பொய் னு சொல்லிடுவேன்” என்று கூறி வைத்தான்.

ஜீவிதாவிற்கு சிரிப்பு வந்தது. ஆனால் அந்த சிரிப்பு தொண்டையோடு நின்று விட்டு உதட்டில் வெறும் புன்னகை மட்டுமே தோன்றியது.

“ஏன்?”

கார்த்திக் ஒற்றை வார்த்தையில் கேட்க “அப்போ உங்களுக்கு எதுவும் புரியாது. விட்ருங்க.” என்றாள்.

அவளை வற்புறுத்தி கேட்க கார்த்திக்கின் நாகரீகம் விடவில்லை.

கார் சில நிமிடங்களில் ஊருக்குள் நுழைந்தது. அங்கு விளக்குள் பளிச்சென்று எரிந்து கொண்டிருக்க ஜீவிதா புருவம் சுருக்கி பார்த்தாள்.

“இங்க இவ்வளவு வெளிச்சமா இருக்கு? அங்க மட்டும் ஏன் இருட்டா இருந்தது?”

“பகல்ல அங்க லைட் எதுவும் தேவை படாது. இன்னைக்கு னு தெருவுக்கு போட்டிருந்த லைட் ரிப்பேர் ஆகிடுச்சு. காலையில மாத்த சொல்லனும். நீங்க இருட்டுல நடந்து வருவீங்க னு எதிர் பார்க்கவே இல்ல.”

“ம்ம்…

“உங்கள இங்க‌ கூப்பிட வர கிளம்புனவன் எதோ பிரச்சனை னு போயிட்டான். அதுனால கொஞ்சம் லேட்டாகிடுச்சு”

“பரவாயில்ல” என்றவள் ‘இருபத்தஞ்சு வருசம் வெயிட் பண்ணிட்டேன். இந்த பத்து நிமிஷம் என்ன ஆகிட போகுது?’ என்று நினைத்துக் கொண்டாள்.

அவளது வீட்டின் முன் காரை நிறுத்த அவளது குடும்பம் அவளுக்காக காத்துக் கொண்டு நின்றிருந்தது.

கரை விட்டு இறங்கி அவர்கள் அருகில் சென்றாள். அவளுடைய அன்னை வள்ளியம்மை வேகமாக வந்து அவளை அணைத்துக் கொண்டார்.

“ஜீவிதா மா” என்றவருக்கு வார்த்தை வராமல் நா தழுதழுத்தது.

“என்ன மா? ஏன் இப்படி அதான் வந்துட்டனே..” என்று கூறி சமாதானப் படுத்தினாள்.

கார்த்திக்கும் ஜீவிதாவின் தம்பி நிலவனும் அவளது உடமைகளை காரில் இருந்து எடுத்து வைத்தார்கள்.

“நல்லா இருக்கியாமா?” என்று அவளது தந்தை சேந்தன் வினவ “நீங்க எப்படி இருக்கீங்க? மாத்திரை எல்லாம் ஒழுங்கா போடுறீங்களா?” என்று கேட்டு வைத்தாள்.

“வாசல்லயே ஏன் நின்னுட்டு? உள்ள போய் பேசலாமே” என்று நிலவன் கூற ஜீவிதா புன்னகைத்தாள்.

“நீங்களும் வாங்க தம்பி” என்று சேந்தன் கார்த்திக்கை அழைக்க “இருக்கட்டும். அம்மா எனக்காக சாப்டாம உட்கார்ந்து இருப்பாங்க. நான் கிளம்புறேன்” என்று கூறினான்.

“தாங்க்ஸ்” என்று ஜீவிதா கூற “பை” என்று கிளம்பி விட்டான்.

அவளை வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். உள்ளே சேந்தனின் அன்னை அமர்ந்து இருந்தார். பிடிக்கவில்லை என்றாலும் ஜீவிதா அவரருகில் சென்றாள்.

“பாட்டி” என்று மெல்லிய குரலில் அழைக்க “வாடி மா.. வந்து சேர்ந்திட்டியா?” என்று கேட்டு வைத்தார் தங்கமணி.

“ஆமா பாட்டி”

“ம்ம்… இனிமேலாவது இந்த வீடு உருப்படுதா னு பார்ப்போம்”

ஜீவிதாவிற்கு மனம் கசந்து போக அது முகத்திலும் தெரிந்தது. உடனே வள்ளியம்மை உள்ளே புகுந்தார்.

“நீ முகத்த கழுவிட்டு வா ஜீவிதா. சாப்புடலாம்” என்று கூற ஜீவிதா எதுவும் பேசாமல் திரும்பி நடந்தாள். வீட்டின் நடுவில் வைக்கப்பட்டு இருந்த தன் உடமைகளை கையில் எடுத்துக் கொண்டாள்.

“இத கொஞ்ச நேரத்துக்கு எங்கயாவது வைக்கனுமே?” என்று கேட்டாள்.

அவளது கேள்வியில் எல்லாருக்குமே அதிர்ச்சி தான்.

“கொஞ்ச நேரமா?” என்று நிலவன் கேட்க “என்ன மா சொல்லுற?” என்று சேந்தன் கேட்டார்.

“பேச்ச விடுங்க. அப்புறம் பேசிக்கலாம். நீ போய் அக்காவோட ரூம்ம காட்டு போ” என்றார் வள்ளியம்மை.

நிலவன் ஜீவிதாவின் கையில் இருந்ததை வாங்கப்போக அவள் தரவில்லை.

“பரவாயில்ல. ரூம்ம மட்டும் காட்டு” என்று கூறினாள்.

நிலவன் குழப்பத்துடன் அறையை காட்டினான்.

“இது தான் அக்கா உங்க ரூம். இந்த கதவு வழியா பின் வாசலுக்கு போகலாம். அங்க பாத்ரூம் இருக்கு. உங்க வேலைய முடிச்சிட்டு சாப்ட வாங்க”

ஜீவிதா தலையை மட்டும் ஆட்டி வைக்க அவன் சென்று விட்டான். கதவை அடைத்து தாழிட்டவளுக்கு நெஞ்சை அடைத்தது. கண்ணீர் விட வேண்டும் என்று தோன்றியது. வழக்கம் போல் ஆழ மூச்செடுத்து தன்னை நிதானித்துக் கொண்டாள்.

முகம் கழுவி தன் வேலையை முடித்துக் கொண்டு வெளியே வந்தாள். சுடச்சுட இட்லியும் கோழிக் குழம்பும் பரிமாறப்பட்டன.

இரவு ஒன்பது மணிக்கு மேல் சாப்பிட்டு பழகியவளுக்கு எட்டு மணிக்கு சாப்பிடுவது சிரமமாக இருந்தது. ஒரு மணி நேரம் ஒன்றும் பெரிய மாற்றம் இல்லை தான். ஆனால் நேரம் இருக்கும் இடத்தை பொறுத்தும் அமையலாம் அல்லவா?

இரண்டு இட்லிக்கு மேல் சாப்பிட முடியவில்லை. ஜீவிதா உடனே எழுந்து விட ‌”இன்னும் வச்சுக்கமா” என்றார் வள்ளியம்மை.

“போதும் மா” என்று கூறி விட்டு எழுந்து தட்டை எடுத்துக் கொண்டு சென்றாள். தட்டை கழுவி வைக்க “நீ ஏன் பண்ணுற? நான் பண்ணுறனே.. நீ போய் தூங்கு ‌மா” என்று மீண்டும் வள்ளியம்மையே பேசினார்.

“இருக்கட்டும். எனக்கு இதெல்லாம் பழக்கம் தான்” என்றாள்.

எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க அங்கு இருக்க பிடிக்காமல் வெளியே வந்தாள். வெளியே ஒரு சிறுமி அவளது தங்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். திண்ணையில் அமர்ந்து அதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

விளையாடிக் கொண்டிருந்த பெண் ஜீவிதாவிடம் வந்தாள்.

“நீங்க தான் நிலா அண்ணனோட அக்கா வா?”

“ஆமா மா. உன் பேரு என்ன?”

“சுஜி. உங்க பேரு ஜீவிதா தான?”

“ம்ம்.. தெரிஞ்சு வச்சுருக்கியே”

“நேத்து உங்க அம்மா எங்க அம்மா கிட்ட சொன்னாங்க”

“ஓஹோ..”

“உங்க தம்பி பேரு நிலா னா உங்க பேரு சூரியன் னு தான இருக்கனும்? “

சுஜி கேட்டு விட்டு சிரிக்க “வாண்டு.. வாய பாரு… அவன் பேரு நிலா இல்ல. நிலவன்” என்று அழுத்தி கூறினாள்.

“ம்ஹூம்.. நிலா தான்.”

“உன் விருப்பம். எப்படியோ கூப்பிடு. என்ன படிக்குற?”

“நாலாவது”

“அப்படியா?” என்று கேட்டவள் சுஜியை பக்கத்தில் இழுத்து அமர வைத்து பேச ஆரம்பித்து விட்டாள். நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருக்க வள்ளியம்மை வந்து நின்றார்.

“சுஜி.. நேரமாகுது தூங்கலையா? உங்கம்மாவ ஏமாத்திட்டு வந்துட்டியா?” – வள்ளியம்மை.

“இல்ல பெரியம்மா. அம்மா பக்கத்து வீட்டு மலர் அக்கா கூட கதை பேசிட்டு இருக்காங்க”

“நீ இங்க உட்கார்ந்து கதை பேசுறியா? பாரு உன் தங்கச்சி உக்கார்ந்துட்டே தூங்குறா.. உங்கம்மாவ கூட்டிட்டு வா போ”

சுஜி வேகமாக ஓடிச் சென்றாள். அவளின் அன்னை வந்து ஜீவிதாவிடம் இரண்டு நிமிடம் பேசி விட்டு பிள்ளைகளுடன் சென்று விட்டாள்.

ஜீவிதா வள்ளியம்மையோடு உள்ளே சென்றாள்.

“தூங்குமா. களைச்சு போய் தெரியுற பாரு” என்று வள்ளியம்மை கூற தலையாட்டி விட்டு அவளது அறை பக்கம் சென்றாள்.

உள்ளே சென்று கதவை அடைத்து விட்டு அந்த அறையை சுற்றி பார்த்தாள். முன்னே பின்னே பார்த்து அறியாத அறை. அந்த அறையோடு அவளால் ஒட்டிப் போக முடியவில்லை. எதோ ஒரு ஹோட்டலில் தங்குவதாக நினைத்து மனதை தேற்றிக் கொண்டாள்.

பிரிக்கப்படாத தன் உடமைகளை ஓரமாக வைத்து விட்டு தன் போனை எடுத்துக் கொண்டாள். சில நிமிடங்கள் தனக்கு தேவையானதை அதில் தேடி விட்டு படுத்துக் கொண்டாள். வழக்கமாக வரும் வேதனைகளை விட இன்று அதிகமாக வந்தது மனவலி. தூக்கத்திற்காக வைத்திருக்கும் மாத்திரைகளை எடுத்தாள்.

குடிக்க தண்ணீர் இல்லை. அதை எடுக்க அறையை விட்டு வெளியேற யாரோ விசும்பலுடன் அழும் சத்தம் கேட்டது. சற்று உற்று கவனித்தாள். வள்ளியம்மையின் குரல் அது. மனம் கலங்கிய போதும் அங்கு நிற்காமல் சமையலறை பக்கம் சென்றாள்.

தண்ணீர் எங்கே இருக்கிறது என்று இருட்டில் தெரியவில்லை. விளக்கை போட்டு தண்ணீரை எடுத்தவள் மாத்திரையை விழுங்கி விட்டாள்.

அதற்குள் விளக்கின் வெளிச்சத்தை பார்த்து விட்டு வள்ளியம்மை வந்து விட்டார்.

“தூங்கலையாமா?”

“தண்ணி குடிக்க வந்தேன்” என்று கூறியவள் வள்ளியம்மையின் அழுத முகத்தை கவனித்து விட்டு எதுவும் சொல்லாமல் சென்று விட்டாள்.

காலை ஏழு மணி வரை ஜீவிதா அறையை விட்டு வெளியே வர வில்லை. தங்கமணி வாய்க்குள் முணுமுணுக்க ஆரம்பித்து விட்டார்.

மேலும் அரை மணி நேரம் கடந்த பின்னரே ஜீவிதா எழுந்து வந்தாள். அவளை பார்த்ததும் “பொம்பள பிள்ள இவ்வளவு நேரம் தூங்குனா வீடு விளங்குமா?” என்று கேட்டு வைத்தார்.

“விடுங்க அத்த. புது இடம் அசந்து தூங்கி இருப்பா. நீ போய் குளிச்சுட்டு வா ஜீவிதா. அம்மா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்”

வள்ளியம்மை இடையில் பேசியதும் ஜீவிதாவிற்கு விரக்தி சிரிப்பு வந்தது. குளித்து முடித்து அவள் வர தெருவே எதோ பரபரப்புடன் இருந்தது.

வீட்டில் இருந்த எல்லோரும் வெளியே நிற்க அவளும் வந்தாள். அக்கம் பக்கம் இருந்தவர்கள் கூட வெளியே தான் நின்று இருந்தனர். ஆளாளுக்கு எதையோ ரகசியமாக பேசிக் கொண்டிருந்தனர். சுஜி ஓரமாக நிற்பதை பார்த்த ஜீவிதா அவளிடம் சென்றாள்.

“ஓய்.. சுஜி.. என்னாச்சு? ஏன் எல்லாரும் இப்படி பதறிட்டு இருக்காங்க?”

“மகிழி அக்காவ பேய் அடிச்சு கொண்ணுருச்சு. அதான்”

சுஜியின் குரலில் ஒரு பயம் தெரிய ஜீவிதா புருவம் சுருக்கினாள். ஆனாலும் அவள் வாய் “அச்சச்சோ” என்றது.

“பாவம் அந்த அக்கா”

“உனக்கு தெரிஞ்சவங்களா?”

“ஆமா.. உங்கள மாதிரி நல்லா அழகா இருப்பாங்க”

ஜீவிதாவிற்கு நேற்று இருளில் பார்த்த பெண்ணின் முகம் சம்பந்தமில்லாமல் நியாபகம் வந்தது. அவளும் அழகாக தானே இருந்தாள். அவளுக்கு எதாவது…?

சுஜியிடம் கேட்கலாம் என்று பார்க்க அவளது முகம் பயத்தில் வெளுத்து இருந்தது.‌அதோடு சற்று கலங்கி இருந்தது. சின்ன பெண்ணை மேலும் பேசி காய படுத்த வேண்டாம் என்று நினைத்தவள் அவள் தலையை தடவி கொடுத்தாள்.

அந்நேரம் ஒரு பெண்ணின் உடலை துணியை வைத்து மூடி தூக்கி வந்தார்கள். அவள் முகத்தை மூடியிருந்த துணி சற்று விலக முகம் கறுப்பாக இருந்தது. நேற்று பார்த்த பெண்ணாக இருக்க முடியாது என்று ஜீவிதா முடிவு செய்தாள்.

அவள் பார்த்த பெண் அழகான மஞ்சள் நிறத்தில் இருந்தாள். அவளது முகம் இவ்வளவு கறுப்பு இல்லை. ஆனாலும் எதோ ஒரு பெண் இறந்து போனது அவளது மனதை கஷ்டப்படுத்தியது.

நான்கு விடுகள் தள்ளி தான் அந்த இறந்த பெண்ணின் வீடு இருந்தது. அங்கு வாசலில் அவளை படுக்க வைத்தனர். ஊரில் இருப்பவர்கள் எல்லாம் வந்து சேர ஜீவிதாவிற்கு ஒரு முறை பார்க்க வேண்டும் போல் இருந்தது.

பந்தல் வேகமாக போடப்பட்டது. அதை பார்த்துக் கொண்டே சென்றவள் துணியால் மூடாமல் இருந்த பெண்ணின் முகத்தை பார்த்தாள். சற்று உற்று பார்த்த பிறகு அதிர்ந்து போனாள்.

நேற்று இரவு அவள் பார்த்த அதே பெண் தான். இவ்வளவு கறுப்பாக அவள் முகம் மாறியதை அவளால் நம்ப முடியவில்லை. கன்னத்தில் பல விரல் தடங்கள் இருந்தது. அவளால் அதை சரியாக கணிக்க முடியாத படி முகம் கறுத்து போயிருந்தது.

மஞ்சள் நிற அழகு முகம். மிரண்டு விழித்த அந்த பெரிய கண்கள் எல்லாம் இன்னும் ஜீவிதாவின் மனதில் இருந்தது. சுஜி வேறு அவளது அன்னையின் சேலையை பிடித்துக் கொண்டு பின்னால் ஒளிந்து கொண்டு நின்று இருந்தாள். அவளை பார்க்கவே ஜீவிதாவிற்கு பாவமாக இருந்தது.

சுஜியை அங்கிருந்த அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டாள்.

தொடரும்

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Hani novels

வணக்கம். நான் ஹனி. கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதில் வரலாற்று கதைகள் என்றால் ரொம்பவுமே பிடிக்கும். "பொன்னியின் செல்வன்" படித்த பிறகு கதைகளின் மீதும் நாவல்களின் மீதும் வந்த ஆர்வம். ஒரு கட்டத்தில் எழுத ஆரம்பித்து விட்டேன். சாதாரண குடும்ப கதைகளும் காதல் கதைகளுமே எனக்கு எழுத தெரியும். அதையே இங்கும் பதிவிடுகிறேன். நன்றி.

Story MakerContent AuthorYears Of Membership

💞மறுமண(ன)த்தில் இணைந்த இதயம்💞2

என் நெஞ்சுநேர்பவளே -2