in

மௌனத்தின் மனசாட்சி-16

அத்தியாயம் 16

மணமேடையில் நிச்சயதார்த்த சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. சம்பந்திகள் மரியாதை செய்து, தாம்பூலத் தட்டு மாற்றிக் கொண்டபின், “பெண்ணை அழைத்துக் கொண்டு வாருங்கள்..” என்று பெரியவர்கள் சொல்ல, ஆரபி, சுரபி அழைத்து வரப்பட்டனர்.

ஆரபிக்கு தோழியாக இதயா கூடவே வந்தாள். சுரபி தனியாக வரவும், மயூராவிடம், “நீ கொஞ்சம்  அண்ணி கூட இரு..” என்று  சொல்ல, சுரபியும் கணவன் வீட்டு பெண்களின் மத்தியில் தனக்கு ஒரு துணை வேண்டும் என்று தன்னருகில் அவளை  நிறுத்திக்கொண்டாள்.

ஏற்கனவே காதலர்கள் என்பதால் புன்னகையோடு ஒருவரை ஒருவர் கண்களால் பருகிக் கொண்டு சசிசேகரனும், ஆரபியும் இருக்க, கிருஷ்ணா, விஷ்ணு, இதயா மூவரும் அவர்களை ஓட்டிக் கொண்டிருந்தனர்.

வீட்டின் மூத்த பிள்ளையாக, பொறுப்பாக வருபவர்களை வரவேற்று, தகுந்த இடத்தில் அமர வைத்து, எல்லோரையும் அறிமுகப்படுத்தி, பம்பரமாக சுழன்று கொண்டிருந்தான் அரசு.

பிரபாகரனின்  தொழில் வட்டாரத்தில் உள்ள அனைத்து நண்பர்களும் அரசுவை பற்றி பெருமையாக பேச, மகனின் வளர்ச்சியில் ஒரு தந்தையாக அவனது மனம் மகிழ்ச்சி கொண்டது.

மதனாவின்  மகனாக இருந்தாலும், வளர்ப்பு புவனாவோடது. தனது அன்பைக் கொட்டி, மூன்று குழந்தைகளையும் ஒன்றுபோல் வளர்த்த மனைவியை  அவர்  மனதார நேசித்தார்.

என்றோ மாமனார்  சொன்னது ஞாபகத்தில் இருந்தது. ‘எந்த நினைவுகளையும் நம்மால் மறக்க முடியாது. ஆனால் மனதின் அடி ஆழத்தில் போட்டு புதைக்க முடியும். அப்படி இருந்தால் தான் நம்மால் தற்போதைய வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியும்..’ மனப்பூர்வமாக அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை அன்று உணர்ந்தார்.

மதனா  இறந்த காலமாக மட்டுமல்ல, ஒருசில நினைவுகளோடு மனதில் தெய்வமாக நின்று விட, புவனாவின் பரிபூரண அன்பு அவரை வாழ்நாள் முழுவதும் ஆக்கிரமித்து கொண்டது.

“என்ன உங்க பையனுக்கு எப்போ கல்யாணம்..?”

“முதல்ல பொண்ணுங்க கல்யாணம் முடியட்டும். அப்புறம் தான் பார்க்கணும்..” இந்த பதிலை சொல்லி சொல்லி, அரசுவுக்கு பெண் தர துடித்த தொழில் வட்டார நண்பர்களையும், மற்றும் உறவினர்களையும் ஒருவழியாக சமாளித்தார்.

மேடையில் இருந்த சசி, அரசுவை அழைக்க, மேலே ஏறியவன், நண்பனிடம் பேசிக்கொண்டே தனது தங்கையையும் அவரது வருங்கால கணவரையும் பார்க்க, தங்கையின் அருகில் நின்றிருந்த மயூரா அவனது கண்ணில் பட்டாள்.

“யார் இந்த பெண்..?” யோசனையில் நெற்றி சுருங்கும் போதே, அன்று ஒரு நாள் அவள் வீட்டுக்கு வந்தது நினைவுக்கு வந்துவிட்டது. சுரபிக்கு உதவிக் கொண்டே அவள் கொடுக்கும் பரிசுப் பொருள்களை வாங்கி ஒரு இடத்தில் வைக்கவும், மற்றும் அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவுமாக இருந்த மயூராவின் அசைவுகளை கிருஷ்ணாவும் கண்டும் காணாமல் பார்த்திருந்தான்.

தன்னை பார்ப்பதும் பின்னர் கண்களை விலக்கிக் கொள்வதுமாக அவள்  இருந்தது அவனுக்கு புரியவே செய்தது. ”ஏது, நானே பார்த்தாலும் திரும்பி கூட பாக்க மாட்டா, இன்னைக்கு என்ன புதுசா..?’ மனம் கேள்வி கேட்டாலும், அந்த நாடகத்தை அவன் ரசிக்கவே செய்தான்.

பாட்டி தாத்தாவுக்கு  தங்களது பேத்திகளின் திருமணம் என்பதில் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு மனிதருக்கும் உண்டான ஆசை அது. தங்களுடைய பிள்ளைகளின் திருமணத்தை விட பேரன் பேத்திகளின் திருமணம் என்பது விசேஷமான ஒன்று.

கண்முன்னால் தங்களது வாரிசுகள் அடுத்த தலைமுறையை நோக்கி காலடி எடுத்து வைப்பது என்பது எல்லா தாத்தா பாட்டி களுக்கு ஆனந்தம் தரக்கூடிய விஷயம். அதை பூரண மகிழ்வுடன் இருவரும் அனுபவித்தனர்.

பிரபாகரனும் எல்லா இடத்திலும் தனது மாமனாரை  முன்னிறுத்தி சடங்குகள் செய்து கௌரவம் செய்தார். மருமகனாக இருந்தாலும் கடைசிவரை தன்னுடைய மகனாகவே வாழ்ந்துவிட்ட பிரபாகரனின்  அன்புக்கு முன்னால் தான் அவனுக்கு செய்தது ஒன்றுமே இல்லை என்பதுதான் இந்நாள்வரை தாத்தாவின்  எண்ணமாக இருந்தது.

நிச்சயதார்த்தம் முடிந்து சாப்பாடு முடிந்தது. அதிகாலையிலேயே விழிக்க வேண்டும் என்பதால் எல்லோரையும் சற்று படுக்கும்படி புவனா  சொல்லிக்கொண்டே இருந்தாள்.

தாத்தா பாட்டி எல்லோரும் வீட்டுக்கு சென்றுவிட, மற்ற எல்லோரும்  மண்டபத்திலேயே தங்கிவிட்டனர். பெண்களுடன் புவனா, அனு  தங்கிவிட பிரபாகரனும், சிவராமனும்  தனி அறையில் தங்கி விட்டனர்.

வீட்டுக்கு போய்விட்டு அதிகாலை வந்துவிடுகிறேன் என்று சொல்லி விட்டு சென்று விட்டான் அரசு. விஷ்ணுவையும் கிருஷ்ணாவையும் மண்டபத்திலேயே இருக்க வேண்டும் என்று அரசு சொல்லி சென்றுவிட்டதால் அவர்கள் இருவரும் மண்டபத்தில் இருந்த ஒரு அறையில் இருந்தனர்.

“ஆனாலும் அரசு அத்தானோட முடியல. அவர் மட்டும் வீட்டுக்கு போய் நல்ல ரெஸ்ட் எடுத்துட்டு வருவாராம். நம்ம மட்டும் இந்த மண்டபத்தில் இருக்கணுமாடா..?” புலம்பிய விஷ்ணுவிடம், 

“நீ வேணா வீட்டுக்கு போயிட்டு, நாளைக்கு  காலையில் வா.” கிருஷ்ணா தனது தயாள குணத்தை காட்டினான்.

“ஏதோ சரியில்லையே, எங்கோ இடிக்குதே..” நெற்றியில் ஒற்றை விரலால் தட்டி யோசித்த தனது நண்பனை மேலும் யோசிக்க விடாமல், “டேய் அதெல்லாம் ஒண்ணும்  இல்லை. என்னை  விட நாளைக்கு காலைல உனக்கு வேலை ஜாஸ்தி..” பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு  கூறினான்.

“இன்னும் என்னடா வேலை..? ஏற்கனவே ஆளாளுக்கு ஒரு வேலை சொல்லி நம்மை பிழிஞ்சு எடுத்துட்டாங்க..!” கலங்கிப் போன நண்பனின் தோளில் ஆறுதலாக தட்டி,

“டேய் உன்னோட அக்காவுக்கு நீ ஒரே தம்பி. நமக்கு அப்படி இல்லை, அந்த பொறுப்பு எல்லாம் அண்ணாகிட்ட போயிருச்சு. புரியுதா, நாளைக்கு நீதான் மச்சினன் முறைக்கு சசி அண்ணாவை அழைச்சிட்டு வரணும், எல்லா சடங்கும் செய்யணும். அதனால இப்ப கொஞ்ச நேரம் போய் நல்ல ரெஸ்ட் எடுத்துட்டு வா.. காலையில சீக்கிரம் வந்துரு..”

“வீட்டுக்கு போனா எல்லாரும் திட்டுவாங்களே..”

“வீட்டுக்கு ஏன்டா போற..? அடுத்த ஹோட்டல்ல ரூம் புக் பண்ணி  இருக்கோம் இல்ல. சத்தம் காட்டாம  போய் படுத்து எந்திரிச்சு வா..” இலவச ஆலோசனையுடன் சாவியையும் சேர்த்துக் கொடுத்தான்.

“என்ன இருந்தாலும் நீ என் நண்பேண்டா..”  அவனை கட்டி பிடித்து வாழ்த்து சொல்லிவிட்டு விஷ்ணு  பறந்து சென்றான்.

“அப்பா, இவனை அனுப்புவதற்குள்ள என்னா பாடு, ஊப்..” வாய்விட்டே புலம்பினான்.

மண்டபத்தில் செட்டிங்ஸ் எல்லாம் சரியாக நடக்கிறதா என்று மேற்பார்வை பார்த்துவிட்டு தனது அறைக்கு செல்வதற்காக மாடிக்கு படியேறினான்.

கீழே சாப்பாட்டு அறையும், முதல் மாடியில் கல்யாணம் நடத்துவதற்கான இடமும், மூன்றாவது மாடியில் சுற்றிலும் கைப்பிடி சுவரோடு சேர்த்த பால்கனியும், தங்குவதற்கு என்று நிறைய அறைகளும் இருந்தன.

இவன் மாடிப்படி ஏறும்போது மாடியில் தனது அறைக்கு எதிர் வரிசையில் இருந்த ஒரு அறையிலிருந்து மெல்ல கதவை திறந்து கொண்டு மயூரா வெளியே வருவது இவன் கண்ணில் பட்டது.

‘இவ எதுக்கு இந்நேரம் வெளியே வரா..?’ யோசனையுடனே படியேறி மேல் தளம் வந்ததும் அறைக்கு செல்லாமல் நின்று விட்டான். சுற்று முற்றும் பார்த்து யாரையோ தேடிக்கொண்டே வந்தவள் மாடிப்படி முடியும் இடத்தில் நின்றவனை  பார்த்து விட்டாள்.

“என்ன வேணும்.? யாரை தேடற.? இதயாவையா..?” ஆராய்ச்சி பார்வையுடன் அவளை விசாரித்தவனை பார்த்து, மறுப்பாக தலையாட்டினாள்.

“அப்புறம்..?” பாதி கேள்வியிலேயே அவனை இடைமறித்த மயூரா, “உங்களைத்தான் தேடுறேன். இப்ப உங்களுக்கு காயம் எப்படி இருக்கு..? ஆறிடுச்சா…? யார் இதை பண்ணுனது..? எங்க ஏரியாவுக்கு வந்து எனக்காக ஒரு பொறுக்கி கிட்ட சண்டை போட்டீங்களே, அவனா…?”

“ஆமாம்..”

“பாக்குறதுக்கு அந்த அளவு தைரியமானவன்  மாறி தெரியல, அப்புறம் எப்படி..?”

“அவன்னா, அவன் கிடையாது. அவன் சொல்லி இன்னொருத்தன்..”  முழுவதும் சொல்லாமல் மறைத்தான்.

“ஐ அம் சாரி, என்னால தானே உங்களுக்கு பிரச்சனை…” சொல்லும் போதே அவளுக்கு அழுகையில் குரல் கரகரத்தது. கண்ணீர் முட்டிய விழிகளை, அவனிடம் காட்ட பிரிய படாமல், வேறு திக்கில் பார்வையை செலுத்தினாள்.

“மயூரா..” அவன் அழைக்கும் போதே சுற்றுமுற்றும் விழிகளை சுழல விட்டான். ஆங்காங்கே கல்யாண வேலையாய் அலைபவர்கள் இவர்களைப் பார்த்துக் கொண்டே செல்லவும், “ப்ளீஸ் ஒரு நிமிஷம் மொட்ட மாடிக்கு வா. இங்கே நிற்பது யார் கண்ணிலாவது பட போகுது..” அவனுடைய வார்த்தைகளில் இருந்த நிதர்சனம் அவளுக்கு புரிந்தது.

ஆனாலும் மாடியில் அவனை தனிமையில் சந்திக்க ஒருமனம் மறுக்க, ஆசை கொண்ட மற்றொரு மனம், ‘இவ்வளவு பெரிய உதவி செய்தவனுக்கு ஒரு நன்றி கூட முழுசா சொல்லட்டா, நான் மனுஷியே இல்லை.’ தன்னுடைய நியாயத்தை எடுத்துரைத்தது. தயங்கியவாறே மொட்டை மாடிக்கு செல்லும் படியில் அவனை தொடர்ந்து ஏறினாள்.

அமாவாசை முடிவடைந்து வளர்பிறை நாட்கள். பாதி நிலவு விண்ணில் ஜொலிக்க, சுற்றிலும் நட்சத்திரங்களை கண்சிமிட்டி சிரிக்க, விண்ணிலிருந்து பார்வையை பூமிக்கு திருப்பினால் பூமியிலும் மனிதனால் உருவாக்கப்பட்ட நட்சத்திரங்கள் சென்னை மாநகரம் எங்கும் மின்கம்பம் விளக்குகளாக பளீரென்று கண்ணைப் பறிக்க, அந்த அழகில் கவரப்பட்டவனாக, மொட்டை மாடியின் கைப்பிடிச் சுவரை பிடித்துக்கொண்டு வெளியே வேடிக்கை பார்த்து நின்றான் கிருஷ்ணா.

பின்னால் கொலுசொலி கேட்க, மயூரா வந்துவிட்டது உறுதிப்பட்டது. திரும்பியவன் கண்ணில் தயக்கத்தை பூசிக்கொண்ட அவளது முகம் கண்ணில் பட்டது.

“என்ன விஷயம்..? ஏன் மாடிக்கு வர சொன்னீங்க..?” எதிர்பார்ப்பும் கவலையும் ஆக நீன்றவளை ஒரு முறை தீர்க்கமாக பார்த்தான்.

சொல்ல வேண்டியதை முழுதாக சொல்லி விடுவோம் என்ற எண்ணத்துடன், “மயூரா தெரிஞ்சோ தெரியாமலோ காலேஜ்ல ஆரம்பிச்ச பிரச்சனை இன்னும் முடியல. சேவாக் என்னை பழி வாங்குவதில் இன்னும் முனைப்பாக தான் இருக்கான். நீ முடிஞ்சவரை தனியா எங்கேயும் போகாதே..!”

“என்ன சொல்றீங்க..?”

“உண்மைதான் சொல்றேன். உனக்கு இந்த காதல் மேலே எல்லாம் நம்பிக்கை இல்லை என்று எனக்கு தெரியும். அதனால தான் என்னோட விருப்பத்தை நான் மனசுக்குள்ளேயே போட்டு வச்சுக்கிட்டேன். என்னோட விருப்பமும் உனக்கு தெரியும்னு எனக்கு தெரியும்.

வற்புறுத்தி எதையும் அடைவதில் எனக்கு விருப்பமில்லை. அதனாலேயே நான் உன்னை விட்டு ஒதுங்கணும்னு நெனச்சேன். ஆனா விதி அப்படி இருக்க விட மாட்டேங்குது.

உன்னோட பாதுகாப்பு எனக்கு முக்கியமா தெரியுது. என்னைத்தவிர உன்னை வேற யாராலயும் பாதுகாக்க முடியாது. உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா அதை தாங்குற சக்தி எனக்கு இல்லை. இந்த பிரச்சனை மட்டும் இல்லேன்னா உன்னுடைய விருப்பத்துக்கு மதிப்புக் கொடுத்து உங்க அப்பாவோட விருப்பப்படியே உன்னோட வாழ்க்கை அமையட்டும்ன்னு  நான் மனப்பூர்வமாக விலகி இருப்பேன்.

ஆனா அது சாத்தியமில்லை என்று தெரிஞ்சு போச்சு. அதனால இப்ப சொல்றேன். ஐ லவ் யூ… எனக்கு உன் மேல காதல் இருக்கு. உனக்கும்  என்னை பிடிக்கும். அது எனக்கு தெரியும். 

அதனால என்னோட ஐபிஎஸ் கனவு நனவானதும்  நான் எங்க குடும்பத்தோட வந்து உன்னை உங்க அப்பாகிட்ட பொண்ணு கேட்கிறேன். நீ என்னை  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நான்தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க போறேன்… ஒரு வாரத்தில் நான் டிரெய்னிங் கிளம்பனும். அதுக்குள்ள யோசித்து ஒரு பதில் சொல்லு…” தன்னுடைய விருப்பத்தை தெளிவாக உரைத்தான்.

தன்னுடன் அறையில் இருந்த மயூரா திடீரென்று அறையில் இல்லாததை இதயா கவனித்தாள். ‘ரெஸ்ட் ரூம் போயிட்டு வர்றதுக்குள்ள இவ எங்க போனா?’ தனக்குள்ளே வினவிக் கொண்டு அவளைத் தேடிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.

மண்டபத்தின் கீழ் பகுதியிலும், மற்ற அறைகளிலும் தேடி விட்டு, அவளை  காணவில்லை என்றதும் அவளுக்கு சற்று பயம் கொடுத்தது.

தோழியின்  பயந்த சுபாவம் அறிந்தவள் ஆதலால் அவளுக்கு எதுவும் ஆகி விட்டதோ, என்ற பயத்துடன் திரும்பவும் மண்டபத்தின் வெளி வாசலில்  சென்று தேடினாள்.

அவள் யாரையோ  தேடுவதைப் பார்த்த மண்டபத்தில் வேலை செய்யும் ஒருவர் அவளிடம் விசாரித்தார். இவள் அடையாளம் சொல்லி கேட்டதும், “அந்த பொண்ணு மொட்டை மாடிக்கு போன மாதிரி இருந்துச்சுமா. போய் பாருங்க..” தற்செயலாக தான் பார்த்ததை அவளிடம் கூறிவிட்டார்.

அவசர அவசரமாய் மொட்டை மாடிக்கு சென்று  சுற்றி முற்றிலும் தேட ஒரு ஓரத்தில் தோழியும், கிருஷ்ணாவும் நிற்பது தெரிந்தது.

“இங்க என்னடி பண்ற..?” இதயாவின் குரல் கேட்டதும் திடுக்கிட்டுத் திரும்பியது அவள்  மட்டும்தான். அவன் எந்தவித முகக் குறிப்பும் காட்டவில்லை. 

“என்ன இதயா? மயூராவை தேடி  வந்தியா..?”

“ஆமா இங்க என்ன பண்றீங்க ரெண்டு பேரும்..?” சிறிது சந்தேகத்தோடு கேட்ட இதயாவிற்கு, “உன் பிரண்டுக்கு பிரபோஸ் பண்ணிட்டு இருக்கேன்..!” கூலாக பதில் சொன்னான்.

விதிர்த்துப் போய் அவள் கிருஷ்ணாவை பார்க்க, “பின்ன என்னடி? என்னோட காயம் ஆறிடுச்சான்னு  கேட்க வந்தா. பதில் சொல்லிட்டு இருக்கேன். நீ என்னமோ என்னை வில்லன் ரேஞ்சுக்கு பார்த்தா…!” அலட்டலாக கிருஷ்ணா சொன்ன பதிலை கேட்ட இதயா சமாதானம் ஆனாள்.

“நீ வீட்டுக்கு போகலையா…?”

“மண்டபத்துல யாராவது உங்களுக்கெல்லாம் துணை இருக்க வேண்டாமா..? அண்ணா என்னை தான் இருக்க சொல்லி இருக்கார்…”

“அதான் மொட்டை மாடியில் காவல் இருக்க போல இருக்கு..”

“எங்க காவல் இருந்தாலும், போலீஸ்காரன் கண்ணு எல்லா பக்கமும் இருக்கும்..”

“பார்றா, ட்ரைனிங் தான் போக போற, அதுக்குள்ள இந்த அலட்டலா..!” அவர்கள் இருவரின் வார்த்தை ஜாலத்தை, வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த, மயூராவின் தோளில் தட்டி, “வா போகலாம்.. காலைல மூணு மணிக்கு எந்திரிக்கணும். அவனுக்கு பிரச்சினை கிடையாது. குளித்து ஒரு வேட்டியை கட்டிட்டு ஈஸியா வந்துடலாம். ஆனா நமக்கு அப்படியா..? பட்டு சாரி கட்டணும்..!” அவளை இழுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

இதயாவிற்கு பின்னால் சென்ற மயூரா மொட்டை மாடி கதவு பக்கம் சென்றவுடன், திரும்பி அவனை  பார்த்தாள். அந்த இடத்திலிருந்து அவர்கள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த அவனின்  முகத்திலிருந்து எதுவும் கண்டுபிடிக்க இயலவில்லை.

அறைக்கு சென்றதும், இதயா இழுத்து மூடி படுத்து விட, மயூரா விற்கு தூக்கம் வருவேனா என்றது. தோழியிடம்  அவன் பேசியதை பார்த்து பயந்து போனவள், அதை சமாளித்த விதத்தை கண்டு அசந்து போனாள். ‘அடப்பாவி ஒரு நிமிஷத்துல என்ன கதிகலங்க வச்சுட்டானே…’ நினைவு ஒருபக்கம் இப்படி ஓடினாலும், ‘அவனுடைய கேள்விக்கு என்ன பதில் சொல்வது’ அது வேறு மண்டையை குடைந்தது.

மறுநாள் காலையிலேயே பெண் அலங்காரம் பண்ண வேண்டும் என்பதனால் எல்லோரும் எழுந்து விட, அதற்குமேல் தூங்குவதற்கு வழியில்லாமல் அவளும்  எழுந்து குளித்து கல்யாணத்திற்கு தயாராக ஆரம்பித்தாள்.

சற்று நேரத்திலேயே மணப்பெண்ணை அலங்கரிக்க பார்லரிலிருந்து பெண்கள் வந்துவிட, அவர்களுக்கு உதவியாக மயூராவும், இதயாவும் மணப்பெண்களை அலங்கரிக்க உதவினர். அவர்களை வைத்து தானும் அலங்காரம் செய்து கொண்ட இதயா, மயூராவுக்கும் செய்துவிட சொன்னாள். அழகிய மிளகாய்பழம் சிவப்பு கலரில் பட்டுப் புடவையும் அதற்கு ஏற்ற டிசைனர் வைத்த ரவிக்கையும், கழுத்திலும் காதிலும் சிவப்புக்கல் வைத்த அட்டிகையும்  ஜிமிக்கியும் கைநிறைய சிவப்பு கலர் சில்க் த்ரெட் வளையல்களும் அவளது அழகை பன்மடங்கு எடுத்துக் காட்டியது.

இதயாவே அவளது அழகை பார்த்து கன்னத்தைக் கிள்ளி, ‘ஏய் நான் மட்டும் பையனா பொறந்து இருந்தேன்னு  வை, உன்னை தூக்கிட்டு போய் தாலி கட்டி இருப்பேன். ஏண்டி எதுக்கு இப்படி காமா, சோமான்னு டிரஸ் பண்ணிட்டு காலேஜ்க்கு வர்றே? அதான் எவன் பார்த்தாலும் உன்னை மடிகஞ்சின்னு நினைச்சுட்டு, சைட்டடிக்கதோட நிறுத்திட்டு போய்ட்டானுங்க, ஒருத்தன் கூட ப்ரொபோஸ் பண்ணலேயேடி..?” ஆதங்கத்தோடு முகவாயில் கையை வைத்தாள்.

“யார் சொன்னது..? நேத்துக்கூட உங்க அத்தான் என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணிட்டு தான் இருந்தார்..” அவள் தன்னை மடிகஞ்சி என்றதும், ஏற்பட்ட கோபத்தில் மயூரா வாயை விட்டாள்.

“என்னது…?” இதயா அலறிய அலறலில், ஆரபியும், சுரபியும் என்னவென்று கேட்க, தோழியின் வாயை பொத்தி கையை பிடித்து இழுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே சென்றாள்.

“தயவு செய்து கத்தாத. நான் சொன்னதை மறந்துடு அல்லது அழி ச்சுடு. பேசாம இரு. ஏதாவது பேசினே பாதியிலேயே கல்யாண வீட்டிலிருந்து நான் கிளம்பிடுவேன்..” மிரட்டி வைத்தாள்.

“இருடி கல்யாணம் முடிஞ்சதும் உனக்கு வச்சுக்கிறேன்..” கருவியவள் அதற்குள் உள்ளே ஆரபி அழைக்கவும் “இதோ வரேன்கா”  குரல் கொடுத்து கொண்டே அறைக்குள் சென்றாள்.

‘ஐயோ உளறிட்டியே மயூரா, இவ கிட்ட இருந்து எப்படி தப்பிக்க..?” மானசீகமாக தலையில் கை வைத்து கொண்டு திரும்பியவள் முன்னால் கண்கள் விரிய, முகத்தில்  புன்முறுவல் பூக்க, நின்றிருந்தான் கிருஷ்ணா. வார்த்தைகளால் சொல்லாத காதல், அவனது கண்களில் தெரிய, முதன்முதலில் முழு அலங்காரத்தில் பெண்ணவளை பார்த்த சந்தோஷம் அவனது முகத்தில் தெரிந்தது.

உச்சி முதல் உள்ளங்கால் வரை அவளை ரசித்துப் பார்த்த அவனது பார்வையில், பெண்களுக்கே உரிய இயற்கையான நாணம் ஏற்பட, தலைகுனிந்து அறைக்குள் நுழையப் போனவளை, “இவ்வளவு அழகை நீ எங்க ஒளிச்சு வச்சு இருந்த..?” அவனது கேள்வி மேலும் அவளை சிவக்க வைத்தது.

பதில் சொல்லாமல் நகர முற்பட தனது வலது கையால் அவளது இடது கையை பிடித்தவன், “ப்யூட்டிஃபுல் மயூ. ஊருக்கு போறதுக்கு முன்னாடி கண்டிப்பாக நான் உன்னை பார்க்க வேண்டும்..” எதிரில் இருப்பவர் மீற முடியாத அழுத்தமான குரலில் அவளிடம் கூறினான்.

அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு, கையை வலுக்கட்டாயமாக அவனிடமிருந்து பிரித்துவிட்டு, அறைக்குள் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள். அவளது பயத்தைப் பார்த்தவன், ‘எத்தனை நாள் ஓடுவ, அதையும் பார்க்கிறேன்..’ தனக்குள் சொல்லியபடி வீட்டிலிருந்து மற்றவர்கள் வந்துவிட்டார்களா என்று பார்ப்பதற்கு வெளியே சென்றான்.

இரண்டு மணமேடை போடப்பட்டு இரண்டு ஜோடிகளும் மணமேடையில் அமர்ந்து இருந்தனர். இரண்டு மாப்பிள்ளை வீட்டார், பெண்  வீட்டு உறவினர்கள் என்று மண்டபம் நிறைந்து இருந்தது. மணப்பெண்களின் தோழியாக இதயா, மயூரா இருவருமே மேடையில் நிற்க, மச்சினர்கள் என்ற முறையில் அரசு, விஷ்ணு, கிருஷ்ணா அவர்களும் மேடையிலேயே நின்றிருந்தனர்.

கிருஷ்ணாவின் விழிகள் மயூராவை வட்டமிடுவதை இதயாவின் கண்கள் படம்  பிடித்துக் கொண்டே இருந்தன. திருமணம் மிகச் சிறப்பாக முடிந்தது. பெரியவர்கள், மற்றும் விருந்தினர்கள் ஆசி வழங்கி பரிசுப்பொருட்களை கொடுக்க வர, அரசு, விஷ்ணுவையும் கிருஷ்ணாவையும்  சுரபி பக்கத்தில் ஒருவரும் ஆரபி பக்கத்தில் ஒருவரும் நின்று பரிசுப் பொருளை வாங்கி பத்திரப்படுத்தும்  பணியை ஒப்படைத்தான்.

ஆரபி பக்கத்தில் ஏற்கனவே இதயா நிற்க, விஷ்ணுவிடம் கிருஷ்ணா, “டேய் நீ உங்க அக்கா பக்கத்துல நில்லு. நான் எங்க அக்காவுக்கு துணையாக நிற்கிறேன்…” தந்திரமாக பாகம் பிரித்துக் கொண்டான். காரணம் சுரபி பக்கத்தில் நின்றது மயூரா.

கிருஷ்ணா நின்ற இடத்தில் திடீரென்று விஷ்ணு வந்து நின்று பரிசு பொருளை வாங்க உதவி செய்யவும், “என்னடா திடீர்னு, இந்த மாதிரி வேலை எல்லாம் செய்யறே?” என்றாள் இதயா.

“நானா எங்க செய்கிறேன்? எல்லாம் மேலிடத்து உத்தரவு.” கீழே நின்று நண்பர்களுடன் அரட்டை அடிக்க முடியாது போனதை நினைத்து எரிச்சலாக நின்றவனை  இதயாவின் கேள்வி கோபமூட்டியது.

“கிருஷ்ணா எங்கே..?” அடுத்த கேள்வி அவளிடமிருந்து பிறக்கவும் கண்ணாலேயே அவன் நிற்கும் இடத்தை சுட்டிக்காட்டினான்.

கிருஷ்ணா பரிசு பொருளை வாங்கி வாங்கி மயூராவிடம் கொடுக்கும் சாக்கில், கண்ணாலேயே காதல் செய்வதை பார்த்தவள், ‘ஓ கதை இப்படி போகுதா…? இருடா உனக்கு ஆப்பு வைக்கிறேன்…’ என்று நினைத்து தோழியை தன் அருகில் அழைத்தாள்.

‘என்னவென்று’ வந்தவளிடம் “கொஞ்ச நேரம் நீ இங்கே இரு. நான் மதனி பக்கம் நிற்கிறேன்..” என்று அவளை இடம் மாற்றி விட்டாள். அங்கே இதயா சென்றதும் கிருஷ்ணாவின் முகம் போன போக்கை பார்த்து அவளுக்கு சிரிப்பாக வந்தது. அடக்கிக்கொண்டு அவனிடம், “விஷ்ணு என்கிட்ட வம்பு பண்ணிட்டே இருக்கான். நான் இங்க நிக்கறதுல உனக்கு ஒன்றும்  ஆட்சேபனை இல்லையே..?” வேண்டும் என்றே கேட்க, கிருஷ்ணா பல்லைக் கடித்துக் கொண்டு இல்லை எனும் விதமாக தலையாட்டினான்.

தான் ஆரபி, சசிசேகரன் பக்கமாக வந்த பின்னும் பார்வையாலேயே தன்னை தொடர்ந்த கிருஷ்ணாவிற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் மனதுக்குள் மலைத்துப் போனாள் மயூரா..

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 7 சராசரி: 4.6]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

31 – 🎶 மூங்கில் குழலான மாயமென்ன

யார் வருவாரோ