in

மௌனத்தின் மனசாட்சி -15

 

அத்தியாயம் 15

வாழ்க்கை எப்போதும் ஒரே விதமாக போவதில்லை. மயூரா பயந்ததுபோல் சேவாக்கோ அவனது நண்பர்களோ  அவளைத் தொடரவில்லை, என்றாலும் மனபயம் குறையவில்லை. அலைபாய்ந்த விழிகளும், பயந்த முகமாய் வலம் வந்தவளை இதயாவின் தைரியம் நிறைந்த பேச்சு சற்று ஆறுதல் படுத்தியது எனலாம்.

வலுக்கட்டாயமாய் அவளை அழைத்துக் கொண்டு சென்று கிருஷ்ணாவின்  முன் நிறுத்தினாள்.

“சொல்லு, எப்ப பாரு பயந்துட்டே இருக்கா..? இப்படி பயந்துட்டே இருந்தா எப்படி படிக்கிறது? வேலை பார்ப்பது..?” அவளது  கேள்வியில் அவன் மயூராவின்  முகத்தைப் பார்க்க, அவளது முகம் சற்றே கசங்கியது.

அவளுக்கு தன்னிடம் பேச விருப்பமில்லை என்பது புரிந்ததால் சற்றே மனம் சுணங்கி இருந்தான். இப்போது எதிர்பாராதவிதமாக இதயா அவளை கொண்டு வந்து அவன் முன்னால் நிறுத்தவும், எப்படி பேசுவது என்று புரியாமல் திகைத்தான்.

“என்னடா பேசாம இருக்க.? பெரிய போலீஸ் ஆபிஸர் ஆக போறேன்னு அலட்டிக்கிற..? சொல்லேன் அவளுக்கு தைரியம்..”

“நான் ஏற்கனவே அவகிட்ட சொல்லி இருக்கேன். வாய் வார்த்தையா வந்து மிரட்டிட்டு போறவன் எல்லாம் ஒண்ணும் செய்யமாட்டான்னு. எங்க, உன் பிரண்டு என்னை பார்த்தே பயந்து ஓடினால், என்ன செய்யறது…?” 

அவனை ஏறிட்டும் பார்க்காமல் தலைகுனிந்து நின்றவளை பார்க்கையில் அவனுக்கு இந்த காலத்திலும் இப்படி ஒரு பயந்தாங்கொள்ளியா   என்று இருந்தது.

“என்னடி இது, அவன்தான் அவ்வளவு சொல்லி இருக்கான்ல, அப்புறம் என்ன..? அவன்  உண்மையிலேயே ரொம்ப தைரியசாலி, கண்டிப்பா ஐபிஎஸ் ஆபீஸர் ஆயிடுவான்…” 

“ஏய் என்னடி ரொம்ப ஓவரா போற..!” அவள் மேல் இருக்கும் கோபத்தை இவளிடம்  காட்டினான்.

“கூல்  கூல்டா மச்சான், என்ன இருந்தாலும் உன்னோட அருமை பெருமை எல்லாம் உன் கூடவே இருந்த எனக்கு தானே தெரியும்.. அதான் அவகிட்ட வாக்குறுதி கொடுத்துட்டு இருக்கேன்..” விஷ்ணுவின் பாணியில் அவள் இறங்கி அடிக்கவும் மயூராவிற்கு சிரிப்பு வந்தது.

வழக்கம்போல் அவளிடம் மல்லுக்கட்ட முடியாமல் மயூராவின் தோற்றம் அவனை ஈர்த்தது.

இருள் வானில் தெரியும் மூன்றாம் பிறை போல, மின்னலென தோன்றி மறைந்த அவளது சிரிப்பு, அந்த முகத்துக்கு ஒளியூட்ட ஏற்கனவே அவள்மேல் ஊசலாடும் பெண்டுலம் போல் இருந்த ஈர்ப்பு, இன்னும் அதிகமாக, இரு நிலையிலிருந்த அவனது மனம் என்னும் தராசு அவள் பக்கம் சாய்ந்தது.

நாட்கள் விரைவாக நகர ஆரம்பித்தது. கிருஷ்ணாவின் பார்வை தன் மீது படிவதை மயூரா உணர்ந்தே இருந்தாள்.  காதல் என்றால் தவறு என்று சொல்லியே வளர்க்கப் பட்ட விதமும்  அம்மா அப்பாவின் மீது இருந்த பயமும், அந்த வார்த்தையையே  தீண்டத்தகாதது போல் நினைக்க, எந்தவிதமான பிரதிபலிப்பும் இல்லாத முக பாவனையோடு வலம் வர கற்றுக் கொண்டாள்.

சேவாக் தனது தந்தையின் ஆலோசனைப்படி தங்களது பைனான்ஸ் தொழிலையும், மற்றும் டிராவல்ஸ் தொழிலையும் மேற்பார்வை பார்க்க தொடங்கியிருந்தான். கல்லூரியில் இருக்கும் அவனது நண்பர்கள் எப்போதாவது அவனுக்கு அங்கு நடக்கும் விஷயத்தை சொல்லி வந்தனர்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஆரபி சசி சேகரன் காதல் வளர்ந்து வந்தது. இன்னும் சரியாக இரண்டு மாதங்களில் ட்ரெயினிங் முடித்து சசி போஸ்டிங்கோடு தமிழ்நாடு வரப்போகிறான்.

கிருஷ்ணா தன்னுடைய ஐபிஎஸ் தேர்வை எழுதி இருந்தான்.. இந்த இடைப்பட்ட நாட்களில் மயூராவின் நினைவு அவனுள் இருந்தாலும், அவளது படிப்பும், தன்னுடைய லட்சியமும் நிறைவேறட்டும் என்று பொறுமையாக காத்திருந்தான்.

அவன் நினைத்தது போலவே எக்ஸாமில் பாஸ் பண்ணிவிட்டான். இனி அடுத்த கட்ட தேர்வு மட்டுமே. அதற்கு சில மாதங்கள் இருந்தது. அதற்குள் சசி திரும்பி வந்துவிட, அவர்களுடைய கல்யாணமும் சுரபியின் கல்யாணமும் ஒன்று போல நிச்சயமாயிற்று.

கிருபாகரன் பிரபாகரின்  தொழில்முறை நண்பரின் மகன். சொந்தமாக ஒரு சாப்ட்வேர் கம்பெனி நடத்தி வந்தான். வீட்டில் அனைவருக்கும், சுரபிக்குமே பிடித்திருந்ததால் இரண்டு திருமணத்தையும் ஒரே நேரத்தில் நடத்த திட்டமிட்டனர்.

இதற்கிடையில் மயூராவே  கிருஷ்ணாவை அழைக்கும்படியான நிலை உருவாயிற்று. அவளது ஏரியாவில் இருந்த ஒரு பையன் அவள் கல்லூரி செல்லும் போதும் வரும் போதும் விடாது தொடர ஆரம்பித்தான்.

சில சமயங்களில் அவள் பஸ் ஸ்டாப்பில் நிற்கும் போது அவளிடம் அவன் பேச முயற்சிக்க, கூட்டத்தில் உள்நுழைந்து பஸ் ஏறி விடுவாள்.

இது தொடரவே அவளுக்கு பயம் பிடித்துக் கொண்டது. இந்த விஷயம் வீட்டுக்குத் தெரிந்தால் எங்கே தனது படிப்புக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து தோழியிடம்  விஷயத்தைக் கூறினாள்.

இதற்குள் ஒரு விதமாக கிருஷ்ணாவின் மனநிலையை அறிந்து இருந்த இதயா இதை ஒரு சந்தர்ப்பமாக உபயோகித்து மயூராவிடம், “நீ கிருஷ்ணா கிட்ட சொல்லு. நிச்சயமா அவனால இதற்கு ஒரு தீர்வு சொல்லமுடியும்..” மறைமுகமாக அவர்களின் நட்பு பலப்பட உதவி செய்தாள்.

“நீ சொல்லேன்..”

“பிரச்சனை உனக்கா எனக்கா..? நான் சொன்னா நம்ப மாட்டான். நீயா ஹெல்ப் கேட்டால்தான் செய்வான்…”  அலைபேசி எண்ணை கொடுத்து பேச சொன்னாள். 

வேறு வழி இல்லாமல் மயூரா அவனுக்கு அழைக்க, யாரோ என்று எடுத்தவன், ‘ஹலோ’ என்ற அழைப்பில் அவனது அத்தனை செல்களும் நிலைகுத்தி நின்றன.

உடலில் புது ரத்தம் பாய்ந்து ஓட, மூளையில் சுறுசுறுப்பு தொற்றிக் கொண்டதில், “இன்னைக்கு வானிலை அறிக்கையில் மழை உண்டுன்னு  சொல்லாவிட்டாலும், கண்டிப்பாக மழை பெய்யும்…  சொல்லு என்ன விஷயம்..?” கறார் போலீஸ்காரனாக  பேசியதில் மயூராதான் வியர்த்து போனாள்.

“வந்து…!” அவள் தயங்க..

“நான் அதே கிருஷ்ணாதான். பயப்படாம சொல்லலாம். என்ன பிரச்சனை…?” அவன் பேசிய தொனியில் உன்னை இன்னும் மறக்கவில்லை, என்பதை பூடகமாக உணர்த்தினான்.

இதற்கு மேலும் தயங்கினால்  பக்கத்தில் நிற்கும் இதயாவிடம் வேறு பாட்டு வாங்க வேண்டியிருக்கும் என்பதால், தனது பிரச்சினையை சுருக்கமாகக் கூறினாள்.

“ஓகே நாளைக்கு காலையில நீ எத்தனை மணிக்கு உங்க ஏரியா பஸ் ஸ்டாப் வருவ..?”

“எட்டு மணிக்கு…”

“அதுக்கு முன்னாடியே நான் அங்க இருப்பேன். என்ன தெரிஞ்ச மாதிரி காட்டாதே. போன்ல மெசேஜ் பண்ணு..” என்றவன் தேவையில்லாமல் அவளிடம் வழியாமல் அலைபேசியை  அணைத்தான்.

வேற எதாவது கேட்பான், அல்லது தன்னைப் பற்றி விசாரிப்பான் என்று வெகுவாக எதிர்பார்த்த மயூரா, விஷயத்தை மட்டும் பேசிவிட்டு அவன் பட்டென வைத்து விடவும், ஏமாற்றம் அடைந்தாள்.

போனை கையில் வைத்துக்கொண்டு  யோசனையுடன் நின்ற தோழியை பார்த்த இதயா, “என்ன அதுக்குள்ள பேசிட்டே..?”

“ஆமா சொல்லியாச்சு…”

“என்ன சொன்னான்…?”

“காலையில எங்க ஏரியாவில் உள்ள பஸ் ஸ்டாப்புக்கு வரேன்னு சொல்லி இருக்கார்..”

“ஓகே, பிரச்சனை ஈசியா முடிஞ்சிடும்…” தோழி  சொன்னதைக் கேட்டதும் அவளும்  சற்று ஆசுவாசமானாள். ஆனால் அவர்கள் நினைத்தபடி பிரச்சனை எளிதாக முடியவில்லை.

மறுநாள் காலை மயூராவின் வீட்டுக்கு அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பிற்கு சென்றவன், அவள் ஒருவனை அடையாளம் காட்டி விட்டு  பஸ்ஸில் ஏறியதும், அவனது தோளில் தட்டி கவனத்தை திருப்பினான்.

“என்ன தம்பி காலேஜ்க்கு போகல..?”

“காலேஜ் ஹாஹா..” என்று சிரித்தவன், “அண்ணாத்த அதெல்லாம் நான் சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன். பத்து  பாஸ் பண்ணதே  பெருசு.. சும்மா ஃபிகர் நல்லா இருந்ததுனா  ரூட் விட்டு பார்ப்பேன். படிஞ்சுதுனா..” அவன் சொல்லி வாய் மூடுமுன் இவனின்  கை அவனது கன்னத்தை பதம் பார்த்தது.

போலீஸ் வேலை என்பதற்காகவே தனது உடலை கச்சிதமாக வைத்திருந்த கிருஷ்ணாவின் அடியை அந்த லோக்கல் பொறுக்கியால்  தாங்க முடியவில்லை. 

“நான் யாருன்னு நெனச்சே, போலீஸ் ட்ரெய்னிங்கில் இருக்கிறவன், இனி ஒரு தரம் இந்த ஏரியாவில உன்ன பார்த்தேன், உள்ள தூக்கிபோட்டு மிதி மிதின்னு  மிதித்து விடுவேன்..” என்று எச்சரிக்கை செய்ததும், கிருஷ்ணாவை முறைத்துக் கொண்டே அவன் அங்கிருந்து அகன்றான்.

அத்துடன் பிரச்சினை முடிந்திருந்தால் பரவாயில்லை. அவன் உண்மையில் அந்த ஏரியாவில் உள்ள ரவுடியின் ஆள். அந்த ரவுடி சேவாக்கிற்கு மிகவும் வேண்டியவன். ஆகவே விஷயம் தெரிந்த சேவாக் தான் எதிர்பார்த்த நேரம் வந்துவிட்டது என்று நினைத்து, அந்த ரவுடியிடம் கிருஷ்ணாவை காலி பண்ணுமாறு கூறினான்.

மறுநாள் முதல் அந்த ரவுடி அங்கு தென்படாததால், நிம்மதி அடைந்த மயூரா கிருஷ்ணாவிடம் நன்றி கூறினாள். “நன்றி எல்லாம் வேண்டாம். கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு.. இந்த வருஷம் தானே கடைசி வருஷம்…”

“ஆமாம்… “

“பேசாமல் காலேஜ் ஹாஸ்டலில் சேர்ந்து படித்து முடி…” அறிவுரை கூறிவிட்டு போனை வைத்தான். இன்னும் ஒரு மாதத்தில் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு திருமணம் என்ற நிலையில் எல்லோருமே மிகவும் பிஸியாக இருந்தனர்.

சரியாக ஒரு வாரம் கழித்து, தன்னுடன் ஐபிஎஸ் தேர்வு எழுதிய நண்பனுடன் பீச்சில் ரிசல்ட் பற்றியும், நடக்கும் ட்ரெய்னிங் பற்றியும் பேசிக் கொண்டிருந்த போது, முகம் தெரியாத அளவுக்கு கர்சிப் கொண்டு மூக்கை மறைத்துக்கொண்டு, இரண்டு பேர் கிருஷ்ணாவை தாக்கினர்.

ஆனால் நண்பர்கள் இருவர்களுமே தற்காப்புக்கலை தெரிந்திருந்ததால், திருப்பி தாக்க அவர்கள், பயந்து ஓடினர். போகும்போது ஒருவன் தன் கையிலிருந்த கத்தியால் கிருஷ்ணாவை எப்படியாவது குத்தி விட வேண்டும் என்று முயல, அதிலிருந்து அவன்  விலகி விட்டாலும், அவனது புஜத்தை கத்தி கிழித்து விட்டது.

உடனே நண்பன் அவர்களை விரட்டுவதை  நிறுத்திவிட்டு, அவனை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை செய்து வீடு வரை கொண்டுவந்து விட்டு சென்றான்.

“ஏய் என்னடா இது…?”  அம்மா  அழ ஆரம்பித்தாள். 

“ஒண்ணும்  இல்லமா, ஒரு சின்ன அடி..!” மனமறிந்து பொய் சொன்னான்.

“எப்படிடா..?”

“எதிர்த்தார் போல வந்த ஒரு வண்டிக்காரன் என்மேல லேசாய் இடிச்சுட்ட்டான்மா, அதுல கொஞ்சம் லேசா அடிபட்டுருச்சு..” அவன் சொன்ன பொய் கேட்டு, நண்பன் ஒரு நிமிடம் திகைத்தாலும், அடுத்த நிமிடம் சமாளித்துக் கொண்டான்.

எல்லோரும் அவன்  மேல் கவனமாக இருக்க, தாத்தாவின் கண்களுக்கு இது தப்பவில்லை. அவன்  உள்ளே போய் ரெஸ்ட் எடுக்க சென்றுவிட, வெளியே சென்று தனது பைக்கை ஸ்டார்ட் பண்ணி கொண்டிருந்த அவனது நண்பனை தாத்தா விரைந்து பிடித்தார்.

“கொஞ்சம் நில்லு தம்பி, உண்மையைச் சொல்லி விட்டு போ, என்ன விஷயம்..?” பெரியவராய் அவனிடம் கேட்க, அவனால் உண்மையை மறைக்க முடியவில்லை.

“எதுக்கு யாருன்னு தெரியலை தாத்தா, ஆனா ரெண்டு பேர் அவனை கத்தியால் குத்த வந்தாங்க. அத நாங்க தடுத்து விட்டாலும், கத்தி லேசா அவன் கையை கிழித்து விட்டது. எதுக்கும்  அவனை எச்சரிக்கையா இருக்க சொல்லுங்க…” உண்மையைச் சொல்லி விட்ட மன நிம்மதியுடன் நண்பன் வீட்டிற்கு சென்று விட்டான்.

வீட்டில் இருக்கும் பெண்களிடம் சொன்னால் பயப்படுவார்கள் என்று சொல்லாமல் மறைத்தவர், அரசு வந்ததும் அவனிடம் விவரத்தைக் கூறி விட்டார்.

அவன் தம்பியிடம்  கேட்க, கத்தியால் குத்த வந்தார்கள் என்பதை கூறியவன், அது சேவாக்கின் ஆட்களாக இருக்கும் என்று, மயூராவை இந்த விஷயத்தில் இழுக்காமல் இருப்பதற்காக, சொல்லி வைத்தான்.

உண்மையில் அந்த ஆள் சேவாக்கின் ஆள் என்பது அவன் அறியவில்லை. அப்பாவிடம்  இடம் கலந்தாலோசித்து அவரது போலீஸ் துறையில் இருக்கும் நண்பரின் உதவியால் கத்தியால் குத்த முயற்சித்தது யாரென்று கண்டுபிடிக்க முயற்சி செய்தனர்.

விசாரணையின் சேவாக்கின் ஆள் என்பது உறுதிபட, தம்பியிடம் வந்து, “டேய் வருஷம் ரெண்டாக போகுது. ஆனாலும் மந்திரியோட  பையன் உன் விஷயத்தை மறக்கல. அதனால எதற்கும் கவனமாக இரு..” தம்பியை எச்சரித்தான்.

‘தான் ஒன்று சொல்ல, அதுவே உண்மை என்று ஊர்ஜிதம் ஆக, இதை எப்படி மயூராவிடம் தெரிவிப்பது…? சும்மாவே பயந்தாங்கொள்ளி ஆச்சே..!” அவனது மனம் பலவாறு யோசித்தது.

இதயா மூலம் விஷயம் அறிந்த மயூரா தவித்துப் போனாள். அவளால் அவனை வந்து பார்க்கவும் முடியவில்லை, அதேசமயம் தன்னால்தான் அவனுக்கு காயம் ஏற்பட்டது, என்ற குற்ற உணர்ச்சியையும் தவிர்க்க முடியவில்லை.

இன்னும் பத்து நாட்களில் அவர்கள் வீட்டில் திருமணம் என்பதால் அங்கு ஏற்கனவே விருந்தினர்கள் வர தொடங்கிவிட்டதாக இதயா வேறு கூறியிருந்தாள். தன் கண் முன்னால் இருக்கும் பொழுது, பார்வையால் தொடரும் பொழுது வராத நேசம் இப்பொழுது வந்து தொலைத்தது.

தனக்காக ஒருவன் அடிபட்டுக் கிடக்கிறான், சாதாரண ஆட்கள் மாதிரி உடனே அதை அவளிடம் சொல்லி பெருமை படுத்திக் கொள்ளவில்லை. அவனிடம் கண்டிப்பாக சொல்லக்கூடாது என்று இதயாவிடம்  கூறி இருந்ததாக வேறு அவளே கூறிவிட்டாள்.

தன்னுடைய சுபாவம் புரிந்து, தான் பயப்படுவோம் என்று அறிந்து, சொல்லக்கூடாது என்று சொன்ன கிருஷ்ணாவின் பண்பை அவளது மனம் விரும்பியது.

தான் அவனை விரும்பவில்லை என்பதை முக குறிப்பிலேயே அறிந்து கொண்டதும், எந்த விதத்திலும் தொந்தரவு பண்ணாமல் விலகி நின்று அவளது நலன் மட்டும் பேணிய அந்த உயரிய குணத்தை அவள் மதித்தாள்.

பெண்களின் மனது எப்போதுமே சற்று நுணுக்கமானது. அழகையோ, பணத்தையோ, ஆடம்பர வசதிகளையும் கொண்ட ஆடவனை விட, தன்னை விரும்புகிற, தன்னை பாதுகாக்கிற, முக்கியமாக தன்னுடைய விருப்பத்தை மதிக்கிற ஆணைத் தான் ஒரு பெண் மிகவும் விரும்புவாள்.

இந்த குணங்கள் பூரணமாக கிருஷ்ணாவிடம் நிறைந்து இருந்தது.. அவைகளால் ஏற்கனவே மனதளவில் அவன் பால் ஈர்க்கப்பட்டு இருந்த மயூரா, இப்போது அவனுக்கு காயம் பட்டிருக்கிறது என்ற செய்தி தெரிந்ததும், எப்படியாவது அவனை பார்த்துவிட வேண்டுமென்ற முடிவில் இருந்தாள்.

அதற்கு ஏற்றார்போல் இதயா அவர்கள் வீட்டுக்கு வந்து, ஆரபி சுரபி அவர்களின் கல்யாண பத்திரிக்கையை கொடுத்து அவர்களை குடும்பத்தோட அழைத்தாள்.

தெரியாத இடங்களுக்கு போவது  மயூராவின்  அப்பாவுக்கு பிடிக்காது என்பதால்  இதயாவிடம் “ஞாயிற்றுக்கிழமை தானம்மா, மயூராவையே அனுப்புகிறேன். எனக்கு இதெல்லாம் பிடிக்காது…” உண்மையை சற்று பக்குவமாக கூறினார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எப்படியாவது கிருஷ்ணாவை சந்தித்து விட வேண்டும் என்று முடிவு செய்த மயூரா கல்யாணத்திற்கு கிளம்பினாள்.

“அம்மா நாளைக்கு காலையில கல்யாணம்..?”

“யாருக்குடி..?” நினைவில்லாமல் கேட்ட அம்மாவின் ஞாபக மறதியை மனதுக்குள் சபித்தபடி, “என்னம்மா அதுக்குள்ள மறந்துட்டீங்க..? என் ஃப்ரெண்ட் இதையா  அன்றைக்கு தானே பத்திரிக்கை கொண்டு வந்து  கொடுத்தாள்..”

“ஓ.. அவங்க வீட்டு கல்யாணமா…? கட்டாயம் போகணுமா என்ன…?” என்று கேட்ட அம்மாவை, மனதுக்குள் அலறியபடி ஒரு பார்வை பார்த்தாள்.

“என்ன இப்படி சொல்லிட்டீங்க..? அவ எத்தனை தடவை நம்மை அழைச்சிட்டு போய் இருக்கா. நியாயப்படி நம்ம ரெண்டு பேருமே போகணும். நீங்க வராட்டி கட்டாயமா நானாவது போகணும்…” மகளின் கூற்றிலுள்ள நியாயம் புரிந்தது.

“அம்மா இன்னைக்கு சாயங்காலம் நிச்சயதார்த்தம். நாளைக்கு காலையில கல்யாணம். ஈவினிங் ரிசப்ஷன். நான் இன்னைக்கு போய்ட்டு நாளைக்கு சாயங்காலம் வரவா…?”

“இன்னைக்கு எதுக்குடி..? அப்புறம் நைட்டு அங்க தங்க வேண்டி இருக்கும்…”

“அதெல்லாம் நான் அவ கூட இருக்கிறேன்மா. அவங்க வீட்டுல உள்ள ரெண்டு அக்காவுக்கு கல்யாணம். அவள்  ரெண்டு பேருக்கு மாத்தி, மாத்தி கூடவே இருக்கா. அதான் என்னை சீக்கிரமே வரச் சொல்றா..!”

“வேண்டாம் பாப்பா, அப்பாவுக்கு தெரிஞ்சதுன்னா வம்பு..”

“அப்பாதான்  வேற ஒரு கல்யாணத்துக்கு  கோவில்பட்டி போயிருக்காருதானே. பின்ன என்னம்மா..? நீங்க சொன்னாதான் தெரியும்..” பலவிதமாக கெஞ்சி கொஞ்சி அம்மாவை சம்மதிக்க வைத்தாள்

“சரி கிளம்பு. கல்யாண வீட்டுக்கு போக போற. சும்மா இப்படியே மொட்டையா போய்விடாதே. பட்டுப்புடவை கட்டி நகை எல்லாம் போட்டு கொண்டு போ…” சொன்னதோடு மட்டுமல்லாமல் தானே அவளை கிளப்பியும் விட்டாள்.

அடர்ந்த ஊதா நிறத்தில் ரோஸ் கலர் பார்டர் வைத்த பட்டு புடவை, ரோஸ் நிறக் கற்களை வைத்த கழுத்தை ஒட்டிய ஒற்றைக்கல் வரிசையில் அட்டிகை, அதே கற்கள் பதித்த குடை  ஜிமிக்கி, கைகளில் அதே நிறத்தில் பட்டு நூலால் செய்த  டஜன் வளையல்களையும் போட்டுக் கொண்டாள்.

தளர பின்னிய கூந்தலில் நிறைய மல்லிகை பூவை  வைத்து பின்னை குத்திய லட்சுமி, மெல்ல மகளிடம், “பாப்பா அவங்க எல்லாம் பெரிய இடம். போனமா, வந்தோமான்னு இருக்கணும். தேவையில்லாத பிரச்சனை எதையும் இழுத்து வச்சுட்டு வந்திராத பாப்பா. உங்க அப்பா குணம் தெரியும்தானே…!”

“தெரியும்மா, அதெல்லாம் பண்ண மாட்டேன். எப்ப பாத்தாலும் நீங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி இதை சொல்லி எனக்கு மெமரி ஆயிடுச்சு. இனி மெமரி லாஸ் ஆனால்தான் அந்த தப்பு பண்ணுவேன்..!” ஒருவழியாய் அம்மாவை தாஜா செய்து விட்டு கிளம்பினாள்.

மயூராவின் நிறத்துக்கு அந்த அலங்காரத்தில்  ஓவியப்பாவை என திகழ்ந்தாள். சிற்பம் போன்ற அவளது உடலமைப்பும், அவளது நிறத்திற்கு பொருந்திய   வண்ணமும், நகை அலங்காரமும், ஏதோ ஒரு கந்தர்வலோக மங்கை பூமிக்கு வந்தது  போலிருந்தது.

மறுநாள் காலையும், மாலையும் அணிவதற்கு சிறிய பையில் டிரஸ் எடுத்து வைத்தாள். எல்லாம் ரெடி பண்ணி விட்டு இதயா விற்கு அழைப்பு விடுத்தாள்.

“மயூ ரெடி ஆயாச்சா…?”

“ஆமாம். ஆனா அம்மா தனியா கால் டாக்ஸியில்  அனுப்ப மாட்டேங்குறா..”

“வெயிட் பண்ணு.  நான்  உனக்கு எங்க  வண்டி  அனுப்பி வைக்கிறேன். டிரைவர் பேரும், போன் நம்பரும்  உனக்கு மெசேஜ் பண்றேன்..” என்றவள் நேராக கிருஷ்ணாவிடம் போய் நின்றாள்.

“என்ன இன்னும் மண்டபத்துக்கு கிளம்பாமல் இங்கே என்ன வேலை பண்ணிட்டு இருக்க…?”

“கிளம்பியாச்சு, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனுமே ..!”

“என்ன சொல்லு..? மண்டபத்துல எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டாங்க. நான் போகலைன்னா அப்பா கிட்ட இருந்து திட்டு விழும்..”

“மயூராவுக்கு ஒரு வண்டி அனுப்பி வைக்கணும்..”

“அவ கல்யாணத்துக்கு வர்றாளா..?”

“ஆமா. நம்ம வீட்ல உள்ள நம்பிக்கையான டிரைவர் யாராவது ஒருத்தர் அனுப்பி வை…” அவள்  வாய் மூடும் முன் அரசுவின் குரல் கேட்டது.

“இங்க என்னடா பண்ணிட்டு இருக்க? மண்டபத்துல மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் வர ஆரம்பிச்சாச்சு. மச்சினன் முறைக்கு நீயும் அங்க இருக்கணும். கிளம்பு, விஷ்ணு எங்கே..? நீ என்னமா பண்ணிட்டு இருக்க…?” 

“இதோ அண்ணா..” என்றவன், இதயாவையும் விஷ்ணுவையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான். மண்டபத்தின் வாயில் இறங்கியதும்,  வீட்டு டிரைவரை அழைத்து, மயூராவின் அட்ரஸை சொல்லி அழைத்து வருமாறு பணித்தான்.

“ஏய், அவ கிளம்பி தானே இருக்கா..? இல்லேன்னா கிளம்பி ரெடியா இருக்க சொல்லு. லேட் ஆயிடுச்சின்னா, டிரைவர்   அங்கிளை யாராவது தேடுவாங்க…” வீட்டுப் பெண்கள் தனியாக செல்வது என்றால் அவரை தவிர வேறு யாருடனும் செல்ல மாட்டார்கள். அதனாலேயே இதயாவிடம் அதை சொல்லி எச்சரித்தான்.

“இல்ல அவ கிளம்பி ரெடியா தான் இருக்கா. எதுக்கும் நான் இப்போ ஒரு தடவை கூப்பிட்டு சொல்லிடுறேன்..” அவனிடம் கூறிவிட்டு அதுபோலவே தோழியை அழைத்து தகவல் சொல்லி விட்டாள்.

அடுத்த அரை மணி நேரத்தில் மயூரா வந்ததும் வாசலுக்கு வந்து அவளை அழைத்துக் கொண்டு மணமகளின் அறைக்கு சென்றாள்.

பார்லர் பெண்களின் உதவியால் ஆரபியும், சுரபியும் மணப்பெண்களின் அலங்காரத்தில் ஜொலிக்க, மற்றும் அருகிலிருந்த புவனாவும், அனுவும்  கெட்டி ஜரிகை வைத்த பட்டுப் புடவையும், நிறைய நகைகளும் அணிந்து தங்களது அந்தஸ்தை பறைசாற்றிக் கொண்டு நின்றனர்.

கல்யாணத்திற்கு என்று வந்திருந்த உறவினர்கள் கூட அவர்களை மாதிரியே மிகவும் வசதி படைத்தவர்களாக தெரிய தனது அம்மா கூறியது, நினைவில் வந்தது. அங்கிருந்த அனைவரும் மயூராவை இன்முகத்துடன் வரவேற்றனர். தோழிகள் இருவரும் மணப் பெண்களை கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் மயூராவின் மனதில் கிருஷ்ணாவை பார்த்து நன்றி சொல்ல வேண்டும் என்ற ஆவல் நிரம்பி வழிந்தது.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 10 சராசரி: 4.4]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

ஆருயிர் ஆதிரையாள் 12

25 – 🎶 மூங்கில் குழலான மாயமென்ன