in

அங்க என்னமோ இருக்கு!

1.அங்க என்னமோ இருக்கு

“ஏலேய்….மக்கா….நம்ம முனியன் மவ ஜானகி கள்ளிகாட்டுல செத்துகிடக்கால
வயக்காட்டில் அறுப்பில் நின்றுகொண்டிருந்தவர்கள் அத்தனை பேர் தலையும் ஒன்றாக நிமிர்ந்து அதிர
“எலெய் என்னலே சொல்லுதே….முனியன் மவளா
“ஆமோய் சித்தப்பு
“அடி ஆத்தாடி இதென்னடி கூத்தும் கொடுமையுமா
“முனியனுக்கு தகவல் சொல்லுதே
“அங்கத்தேன் சித்தப்பு போய்கிட்டிருக்கேன்
“அடியே வேலம்மா பாவி மவளே எங்கடி இருக்க….. எமனுக்கு வாரி குடுக்கத்தேன் உம்மவள சீராட்டி வளத்தியோடி சிறுக்கி
“ஆத்தோய் அவ அப்பன் ஊருக்கு இப்பத்தேன் கெளம்பிப்போனா யாராவது வெரசா போய் கூட்டியாங்கலே
அறுப்பை அப்படியே போட்டுவிட்டு அலறியடித்து அனைவரும் ஓட

மாட்டுக்கு தண்ணி காட்டிக்கொண்டிருந்த பூவாயி கிழவிக்கும் சேதி எட்டியது
“அடி என்னபெத்த ஆத்தா….அடி யாத்தே நா என்னத்த செய்யுவேன்…எம்மவன் ஒத்த பொட்டப்புள்ளயாச்சேன்னு கண்ணுக்குள்ள வச்சு வளத்தானே அய்யா….எய்யா மணியா….எம்புள்ள எப்புடி தாங்கபோறானோ தெரியலயே
ஆத்தா மகமாயி 

சேலையை அள்ளி சுருட்டிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக கள்ளிகாட்டை நோக்கி ஓடினாள் கிழவி
“ஏ…ஆத்தா….ஏ இப்படி பேயாட்டம் ஓடிக்கிட்டிருக்க
ஊரணியில் குளித்துக்கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தின் கேள்விக்கு ஓடிக்கொண்டே மூச்சிரைக்க அழுகையோடு
“அடி…….எம்பேத்தி கள்ளிக்காட்டுல செத்துகிடக்காளாமுடி
“என்னத்தா சொல்லுதே….அடி ஆத்தி..
கிழவி என்னடி இப்புடி சொல்லுது
“அதானே பொத்தாம்பொதுவுல பேத்தின்னு சொல்லுது மவன்ம்புட்டு புள்ளயா மவ புள்ளயா தெரியலயடி எழவு …..ஓடியாங்கடி ஓடியாங்கடி
“எக்கோய் கேட்டியா…..மணியன் மவ ஜானகிதான் செத்ததான்
“அடி ஆத்தாடி ஆத்தா….அந்த புள்ளயா கிளியாட்டம் இருப்பாளே
“மணியன் மவள பட்டனத்துக்கெல்லாம் அனுப்பி பெரிய படிப்புல்ல படிக்க வக்கான்…..
“பொட்டப்புள்ளய வீட்டோட வச்சுக்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன் கேட்டான்னா….ஊருல உள்ள காலிபயலுவ அவ பின்னாடியே சுத்திக்கிட்டு திரிஞ்சானுவ…எவனும் என்னமும் பண்ணிருப்பானோ
“அப்டித்தேன் இருக்குமோக்கா….
“பொறவு அவ எதுக்கு கள்ளிகாட்டு பக்கம் போகப்போறா
ஈர சேலையை இறுக பிழிந்து சுற்றிக்கொண்டு அனைவரும் கிழவியின் பின்னாலே ஓடிக்கொண்டிருக்க கிழவி ஓரிடத்தில் விழுந்து எழுந்து மறுபடியும் ஓடியது

கேப்பையை கரைத்து சட்டியில் ஊற்றி குந்துகாலிட்டு அமர்ந்து மிளகாயை கடித்து குடித்துக்கொண்டிருந்த ராக்கம்மாள் வெளியில் கேட்ட சலசலப்பு என்னவென்று எட்டிப்பார்க்க
“அடியேய் என்னங்கடி எல்லாரும் எங்கடி ஓடிக்கிட்டு கெடக்கிய
“ஏக்கா ராக்கம்மாக்கா உனக்கு வெசயமே தெரியாதா
“என்னா வெசயம்
“உந்தம்பி மவ ஜானகி கள்ளிக்காட்டுல பொணமா கெடக்காளாம் நீ என்ன கூழ கலக்கிக்கிட்டிருக்க
“அடி எழவு மவளே என்னாடி சொல்லுதே நெசமாத்தேன் சொல்லுதியா
“எனக்கென்ன கிறுக்கா புடிச்சு தெரியுறேன் நெசமாத்தேன் ஊரே அங்கதேன் ஓடிக்கிட்டிருக்கு உங்க ஆத்தா கீழ விழுந்து முட்டியில இரத்தத்தோட ஓடிக்கிட்டிருக்கு நீ வெரசா வா
“அய்யோ அய்யோ இதென்னடி எழவு…அட நாசமா போறவனே எம்மவனுக்கு உம்மவள கட்டிவைன்னு உன் வீட்டு வாசலுக்கு நடையா நடந்தேனே… ஓஞ்சாரமா வீஞ்சிக்கிட்டியே…படிக்க வைக்கேன் படிக்க வைக்கேன்னு பட்டனத்துக்கு அனுப்பி….இள வட்டபயலுவோ கண்ணு பூரா அவ மேல விழுந்து தொலைஞ்சுச்சே… எவன் என்ன செஞ்சானோ என்ன கர்மமோ உனக்கேண்டா இந்த நெலம
அடியே கண்ணாத்தா உனக்கு கண்ணாடி அவிஞ்சு போச்சு

கயிற்றுகட்டிலில் காலை அகல விரித்து அரைபோதையில் உறங்கிக்கொண்டிருந்த மகனை தட்டி உருட்டி தள்ளினாள்
“எலெய் குடிகாரபயலே…. எந்திரிலே…உம்மாமன் மவ அங்க பொணமா கெடக்காளாமுடா வாடே போவோம்
“ஹே ஹெ…. செத்துட்டாளா சிறுக்கி மவ…..சாகட்டும் சாகட்டும் எனக்கு கெடைக்காதவ எவனுக்கும் கெடைக்கக்கூடாது….ரொம்பத்தேன் ஆட்டிக்கிட்டு தெரிஞ்சா
“அட கூறுகெட்டபய மவனே….என்னலே உளறுதே…. என்ன பேச்சுலே பேசுறே…. ஆயிரந்தேன் இருந்தாலும் அவ எந்தம்பி மவ….என் நெஞ்சு கெடந்து வேகுது…. நீ குடிச்சுப்புட்டு உளறுதியாக்கும்….சீ நாயே….நகருலே…..

இடிந்து பேர்ந்து கிடந்த அந்த அரசாங்க கட்டிடத்தின் குட்டிச்சுவர் ஒன்றில் காலை ஆட்டிக்கொண்டு வம்பளந்துகொண்டு அரட்டை அடித்துக்கொண்டு இருந்தது வாலி்பக்கூட்டம் ஒன்று…. அந்த ஊரின் படித்த வேலை இல்லாத இளைஞர்கள்
“ஏலே அங்க பாரு நம்ம சோனமுத்தேன் தல தெறிக்க ஓடியாறான்….
“ஆமாலே…. அவசரமா கொல்லைக்கு ஒதுங்க போறானோ என்னவோ
“இருக்கும்லே …நாறப்பய…ஒரு.நாளைக்கு நாளுதரவ போயிர்ரான்
“அவுக ஆத்தா எப்பவும் மொச்சைகொட்ட கொழம்பா வச்சு ஊத்துனா அவந்தேன் என்ன பண்ணுவாம்லே பாவம்
அவர்கள் சிரித்துக்கொண்டிருக்க
“எலெய் மக்கா….ஊருக்குள்ள என்ன நடக்குதுன்னு தெரியாம என்னலே பல்ல காட்டிக்கிட்டு கெடக்கிய
“ஊருக்குள்ள எல்லாம்தேன் நடக்குது நீதாம்லே எந்த நேரமும் கொல்லைக்கு ஓடிக்கெடக்க
“சும்மா இருலே கிறுக்கா நெலம தெரியாம…..எலெய் ஆதி….உன் ஆளு அந்த புள்ள ஜானகி கள்ளிக்காட்டுல செத்துக்கெடக்காளாம்லே….
அவன் படக்கென்று தன்னிச்சையாய் கீழே குதித்து அவன் சட்டையை பிடித்து அலேக்காக தூக்கினான்
“டேலே….எதுனாச்சும் வெளாட்டுக்கு சதம்புன கொன்னேபுடுவேன்
“விடுலே….நா எதுக்குடே வெளாடப்போறேன்….கருப்பன் மேலே சத்தியமாலே…..இப்பத்தேன் அவுக அப்பனும் ஆத்தாலும் அழுதுகிட்டே பஸ்ஸ விட்டு இறங்கி போனாகளே போலீஸ்காரவுகளும் வந்துட்டாக….இந்தா ஜீப்பு போவுது பாரு
“அய்யோ…..என்னடே…. அவ எப்டிடே செத்தா
“லே ஆதி ஓடியா அங்க போய் என்ன ஏதுண்டு பாப்போம்
“என்னால நம்பவே முடியல மக்கா அவ எப்டி….தானா செத்தாளா…. எதுக்கு செத்தான்னு தெரியலயே

அவன் ஒருவாரத்துக்கு முன்புதான் தன் காதலை தயங்கி தயங்கி அவளிடம் தெரிவித்திருந்தான் அவள் அலட்சியமாக அவனை வெற்று பார்வை பார்த்துவிட்டு பஸ்ஸில் ஏறிசென்றுவிட்டாள்….ஒருவாரமும் அவள் கடைக்கண் பார்வை சொல்லும் பதிலுக்காக இவன் தவம் கிடக்க

கள்ளிச்செடி அடர்ந்து படர்ந்திருந்த அந்த காட்டில் ஊரே அழுகையும் ஆர்ப்பாட்டமும் கூச்சலும் குழப்பமுமாக சலசலவென்று குழுமியிருக்க……. போலீஸ்காரர்கள் முகத்தை பொத்தி சுற்றி நின்று கொண்டிருந்தனர்….இரண்டொரு கான்ஸ்டபிள்கள் கூட்டத்தை நெருங்காவிடாமல் விரட்டிக்கொண்டிருந்தனர்…..
அவர்கள் வேலையை அவர்கள் பார்க்கட்டும் நாம் அடித்து பிடித்து உள்ளே நுழைந்துவிடுவோம்….அப்போது தானே ஜானகியை பார்த்து அவளை பற்றி தெரிந்துகொள்ள முடியும்
கள்ளி செடிகளின் முட்களின் மீது அவள் மல்லாந்துகிடந்தாள்….விழிகள் மேலே பார்த்தபடி திறந்திருந்தது….விழிகளின் வாயிலில் தான் உயிர் வெளியேறியிருக்க வேண்டும் …அது திரும்பவும் வந்து தன்னிடம் சேர்ந்து விடாதா என்ற ஆசையோடு அவள் இமைகள் மூடாமலே வான் நோக்கிஇருந்தாளோ 

நேற்றுவரை அந்த ஊர் இளைஞர்களின் கனவு தேவதை…அத்தனை வாலிபர்களையும் பித்துபிடித்து பின்னால் சுற்ற வைத்த கிராமத்து கட்டழகி…..மணியன் ஆசையாய் பெற்றுவளர்த்த அருமை மகள் ……கனவுகளின் பிடியில் கல்லூரியில் பறந்து திரிந்துகொண்டிருந்த வண்ண பட்டாம்பூச்சி……தோழிகள் அனைவரும் மாடல் டிரசுக்கு மாறியிருக்க மண்மணம் மாறாமல் பாவாடை தாவனியிலேயே கல்லூரிக்கு சென்றவள்….அதனாலேயே நகரத்து இளைஞர்களையும் தன் பக்கம் திரும்ப வைத்தவள்…..இங்கிருந்து பஸ்ஸில் ஏறும்போது கிராமத்து காளையர்கள் கடைக்கண் பார்வை கிடைக்காதா என எதிர்நோக்க… அங்கு இறங்கும்போது நகரத்து சிங்கங்கள் அவளின் வரவுக்காக காத்திருக்க…..இவள் அத்தனைக்கும் அலட்சியமாய் ஒரு பார்வையை சுழற்றி விட்டு அணைத்தபடி போவாள் புத்தகத்தை………
அவள் லட்சியமே வேறு….அதற்க்காகவே அலட்சியத்தை சூடிக்கொண்டாள்….. அதற்கு திமிர் என்றும் நற்பெயர் சம்பாதித்துக்கொண்டாள்…..

கிழவி நரைத்தமுடி விரித்து நெஞ்சில் அடித்து ஒப்பாரி வைத்தது……..
நா பெத்த மவராசன் பெத்தெடுத்த ரத்தினமே……..முத்து ரதமே….. பாதியிலே போறதுக்கா பாலும் பருப்பும் தேனும் தினையும் சேத்தெடுத்து வளத்தானோ எம்மவன் உழுத்த கட்ட நானிருக்க……
பச்ச மரம் சாஞ்சிருச்சே எம்மக்கா…..
பாவி மவ…..இந்த பாவிக்கிட்ட சொல்லாம போனியேடி….எமனையும் பாத்திருந்தா என் உசுர குடுத்தேனும் உன்ன கூட்டியாந்திருப்பேனே……நா கும்பிட்ட சாமியூந்தேன் கல்லாகிப்போனதேடி எம்மக்கா……எய்யா மணியா….கல்யாணம் காட்சி கூட பண்ணிப்பாக்கலயே….சிறுக்கி மவ சொல்லாம கொள்ளாம பாதியிலயே நட்டாத்துல விட்டுப்புட்டு போயிட்டாளே…..யாரு கண்ணு பட்டுச்சோ….. எஞ்சாமி……பச்ச ஓல கருகிடுச்சே…….

மணியனும் வேலம்மாளும் அவள் முன் விழுந்து துடித்து அரற்றிக்கொண்டிருக்க பூவாயி கிழவியின் ஒப்பாரி பாட்டில் ஊரே கண்களில் கண்ணீரோடு கலங்கி நிற்க
போலீஸ்காரர் ஒவ்வொருவராக விசாரிக்க ஆரம்பித்தார்….
“இத பாத்து தகவல் சொன்னது யாரு…முன்னால வாங்க
“நான்தானுங்க
“நீ எப்போ பாத்த ஆள் நடமாட்டம் இல்லாத காடா இருக்கு இங்க எதுக்கு வந்த
“அய்யா நானு மாட்ட ஓட்டிட்டு போக வந்தேனுங்க அப்பத்தேன் பாத்தேனுங்க
“கள்ளிக்காட்டுல மாடு எப்டிடா மேயும்
“அய்யோ இல்லீங்க அந்தா மேக்கால கோரப்புல்லு மண்டிக்கிடக்குதுங்க எம்புட்டு மாடு அவுத்துகிட்டு ஓடியாந்து அங்கன மேஞ்சுகிட்டு இருந்துச்சுங்க அத இழுத்துட்டு போகும்போது இங்கன கழுகும் காக்கையும் வட்டம் போட்டுகிட்ருந்துச்சு….என்ன ஏதுன்னு பாப்போமுன்னுட்டு வந்து பாத்தா நெஞ்சு வெடிச்சுருச்சுங்க….வழக்கமா இங்கன ஆடு மாடு தான் செத்து விழும் இப்பம் மனுச உசுரும் போயிருச்சேன்னு பதருதுங்க
“என்னடா சொல்ற
“அவன் சொல்றது சரிதானுங்க….அஞ்சாறுவருசமா இந்த பக்கம் மேய வர்ற ஆடு மாடெல்லாம் உசுரோட திரும்பறதில்ல….நாங்களும் கோடங்கி குறின்னு பாத்து ஓஞ்சு போயிட்டோம்…..பெரும்பாலும் யாரும் இந்தப்பக்கம் ஆடுமாட்ட மேச்சலுக்கு விடுறதில்ல அப்புடியும் ஒன்னுரெண்டு கயித்த அத்துகிட்டு கோரப்புல்லு ருசிக்காக ஓடியாந்துரும் தேடியாந்து பாத்தா செத்துகெடக்கும் இங்ஙயே புதைச்சுட்டு போயிருவோம் வேற என்னத்த செய்யுறது
“அப்டியா….ஏன் என்ன காரணம்
“அதான் ஒன்னும் புரியலிங்களே
“அடிபட்டு செத்துகிடக்குமா
“அதெல்லாம் இல்லீங்க…..ஒரு கீறல் பொட்டு ரத்தம் கூட இருக்காதுங்க….கால வெரச்சுகிட்டு கெடக்கும்
“சரி இந்த பொண்ணு இந்தப்பக்கம் அடிக்கடி வருமா….காதல் கன்ராவின்னு ஏதாச்சும் இருக்கா….யார் மேலயாவது சந்தேகம் இருக்கா
“அது நல்ல புள்ளைங்க….வீட்லருந்து காலேசுக்கு போகும் வரும்…..மத்தபடி அந்த புள்ளய ஊருக்குள்ள அங்க இங்கன்னு எங்கயும் பாக்கமுடியாது…
எந்த பயலுவ கிட்டயும் பேசிப் பாத்ததில்லங்க….படிக்கிற எடத்துலயும் நல்ல பேருதானுங்க…..

அவர் கண்கள் கூட்டத்தை பிளந்து உள்ளே வர துடித்துக்கொண்டிருந்த ஆதியின் மீது விழுந்தது……அவன் கண்கள் கலங்கி துடித்தது தெளிவாகவே தெரிந்தது….முகம் இருண்டுபோய் இருந்தது……அவன் கூட்டாளிகள் அவனை அங்கிருந்து இழுத்துக்கொண்டு போக முனைந்துகொண்டிருந்தனர்…..
“அதோ அந்த பய யாரு….இந்த பொண்ணுக்கு சொந்தக்காரனா
“யாரு…..அந்தபயலா….அவன் மாடசாமி மவன் ஆதிசங்கரன்…..படிச்சு முடிச்சு வேலயில்லாம சுத்திக்கிட்டு தெரியுறான் பத்து பதினஞ்சு பயலுவோ அவன் கூட இருக்காணுவோ….ஊருக்குள்ள பொது காரியம் எதுனா நடந்தா அந்த பயலுவ தான் முன்ன நிப்பானுவோ…வாய்த்தேன் அதிகம் மத்தபடி நல்ல பயதேன்…. சார்வாள் அந்த பயல தப்பா நினைக்குறதுக்கு ஒன்னுமில்ல

அவனை நினைவில் இருத்திக்கொண்டவர்…..”அதெல்லாம் நா பாத்துகிறேன்….இந்த பொண்ணு செத்ததுக்கு வேற என்ன காரணமா இருக்கும்னு நினைக்கிறீங்க…..யாருக்காவது ஏதும் தெரிஞ்சா தயங்காம முன்ன வந்து சொல்லுங்க
மணியன் கொஞ்சம் இப்டி வாங்க….வீட்ல எதுவும் பிரச்சினையா….அடிக்கவோ திட்டவோ செஞ்சீங்களா உங்கபொண்ணுக்கு வேற ஏதும் பழக்கம் இருக்கா
அவர் முகத்தில் அறைந்துகொண்டு அழுது துடித்து விழுந்தார்…ஊர்க்காரர்கள் சிலபேர் தாங்கிப்பிடித்து….”சார்வாள்…..அவர் பொண்ண தங்கமா வளத்தாருங்க…. நீங்க நினைக்கிறபடி ஒன்னுமில்லங்க….அவர் ஒடஞ்சு போயிருக்காரு……உங்க வெசாரணைய நாள பின்ன வச்சுக்கங்க…ஒடம்ப குடுத்தியன்னா ஆக வேண்டிய காரியத்த பாப்போம் 

“நோ நோ இது கொலையா தற்கொலையான்னு போஸ்டமார்ட்டம் பண்ணி பாத்தாதான் தெரியும்….அதுக்கு முன்னாடி பொணத்த ஒப்படைக்க முடியாது…..ஏட்டையா மத்த ஏற்பாடுகள பாருங்க

“அடி யாத்தே…..எறும்பு கூட கடிக்காம வளத்த எம்புள்ளைய கூறுபோட போரியலா அய்யோ வேணாசாமி…அவள பொத்துனாப்புல எங்கையில குத்துருங்க சாமி உங்களுக்கு புண்ணியமா போகட்டும்
வேலம்மாள் அவர் காலை பிடித்துக்கொண்டு கதறி அழுதாள்
“ஏம்மா விடும்மா….இதெல்லாம் பார்மலிட்டீஸ் மா….செஞ்சுதான் ஆகணும் வேற வழியில்ல….என்ன என்ன பண்ண சொல்றீங்க……

கூட்டம் சுற்றி நின்று ஆளாளுக்கு கசகசத்துக்கொண்டிருக்க
“டேலே ஆதி வாலே போவோம்….போலீஸ்காரரு உன்னயே குறுகுறுன்னு பாக்காரு…போலீஸ்காரன் கண்ணு வச்சா லேசுல வுடமாட்டான்
அவன் அவர்கள் இழுத்த இழுப்பிற்கு நகர்ந்த கனம் பார்வை ஜானகியின் மேல் செல்ல…….

எதிர்புறம்
கூட்டத்தின் நடுவில் நின்றுகொண்டு ஜானகி வெறித்து கொண்டிருந்தாள்….மெதுவாக நகர்ந்து குனிந்து தன் உடலை தொட்டாள்….தீ பட்டதுபோல் துடித்து விலகினாள்….மறுபடியும் உடலின் மேலே ஏறி படுத்தாள்…..மீண்டும் மேலே தூக்கி வீசப்பட்டாள்….ஆவேசத்தோடு மீண்டும் மீண்டும் உடலின் மேலே ஏறுவதும் தூக்கிவீசப்படுவதுமாய் தொடர்ந்துகொண்டிருக்க…..பின் அவளே விலகி தூரமாய் கூட்டத்தின் முன் நின்றுகொண்டாள்….பார்வை சற்றும் மாறாமல் உடலின் மீதே இருந்தது…..ஆதி தன் கண்களை கசக்கினான் பிரமையோ என மறுபடியும் உற்று பார்க்க…..அவளின் அலட்சியபார்வை இவனை தொட்டது……இவன் பார்த்ததும் உதட்டோரம் சிறு புன்னகை……
கடைக்கோடி புன்னகையும்….. கடைக்கண் பார்வையும்…….

ஆதி மிரண்டான்…….அரண்டான்…….

ஆதி மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கூட்டத்தில் நின்ற ஜானகி நகர்ந்து இல்லை பறந்து வந்து….
“டேலே செந்திலு அங்கேருடா ஜானகி..ஜானகி உங்கண்ணுக்கு தெரியுறாளாடே
“என்னலே உளறுதியான் இவன்….அந்த புள்ளதேன் பொணமா கெடக்கேலே…. ஏலே கிறுக்கு புடிச்சு தெரியுதியா…நீ வாலே மொதல்ல போவம்
அவள் உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டது….பின்னாலே அவளும் ஏறினாள்…அவனை பார்த்து நான்கு விரலை நீட்டி விரித்து சிரித்து வாவென அழைத்தாள்…
இவன் ஆம்புலன்ஸின் பின்னாலேயே ஓடினான்….”ஏலே ஆதி…ஆதி…நில்லுலே….நண்பர்கள் பின்னாலேயே ஓடினர்…கண்ணாடியை பிளந்துகொண்டு இரு கைகளையும் நீட்டி வளைகரத்தை ஆட்டி அழைத்தாள்
நண்பர்கள் அனைவரும் அதிவேகமாய் முன்னே ஓடி அவனை சுற்றி பிடித்தனர்
“ஏலே கிறுக்கு பயலே…என்னலே ஆச்சு ஒனக்கு….எல்லாரும் ஒன்னையே பாக்குறாங்கலே
“செந்திலு….அவ அவ போறாலே…என்னய வா வா ன்னு கூப்பிட்டாலே
“என்ன முத்திபோச்சா… அந்த புள்ள என்ன நீ தாலிகட்டின பொஞ்சாதியா…இல்ல வருசக்கணக்கா ரெண்டுபேரும் காதலிச்சுக்கிட்டு தெரிஞ்சியலா…கொஞ்சநாள் பின்னாடி சுத்துன…சம்மதம் கேட்ட ….அந்த புள்ள ஒத்துக்கல அதோட முடிஞ்சு போச்சு எல்லாம் …அம்புட்டுத்தேன்…புரிஞ்சுதாலே….அது செத்தது ஒனக்கு மட்டுமில்ல ஊருக்கே வருத்தம்தேன்..விதி முடிஞ்சுபோச்சு….அதுக்கு என்ன பண்ண முடியும்…
“இல்லடே என்னால தாங்க முடியல…அவ செத்துட்டான்னு என்னால நம்பவே முடியல….இன்னும் புதுசா பூத்த பூ மாதிரி என் கண்ணு முன்னாடி நிக்கிறா….நா அவள உசுராத்தேன் விரும்புனேன்….புரிஞ்சுக்கங்கல….
“அய்யோ…ஏலே ராசு….என்னலே இவன்….
அவன் தலையிலடித்துக்கொண்டான்
மற்றவர்கள் அவனை ஆறுதல்படுத்த முயற்சித்துக்கொண்டிருக்க

“ஏலே ஆதி….பொசகெட்ட பயலே…
அவனது அப்பா மாடசாமி அவனை கையை பிடித்து முறுக்கி முதுகிலேயே அடித்து துவைத்தார்

“என்னமோ கட்டின பொஞ்சாதிய தூக்கிட்டு போற மாதிரி அலரியடிச்சு வண்டி பின்னால ஓடிக்கிட்டு தெரியுறவ….ஊருக்கார பயலுவ எல்லாம் உம்மவனுக்கும் அந்த புள்ளைக்கும் என்ன சம்மந்தம்னு கேக்றாணுவோ….என்னலே நெனைச்சுக்கிட்டு தெரியுறவ….
“அப்புச்சி வுடுங்க அப்புச்சி…. நடுரோட்டுல போட்டு அடிக்கிரிய
“அத்தன பயலுவலையும் இங்ஙயே கொன்னுபோட்ருவேன்…. போங்கலே அந்தாண்ட… நீ வூட்டுக்கு வாலே…காடு கரைய வித்து படிக்க போட்டதுக்கு ஊரு முன்னாடி மானத்த வாங்கிபுட்டலே….இனிமே அவனவன் வாயில போட்டு அரைப்பானுவோ

பிரேதபரிசோதனை கூடம்….
அழுது தேய்ந்த கண்களும் கவலை தோய்ந்த முகங்களுமாக உறவினர்கள் அனைவரும் அவளது உடலை வாங்குவதற்கு காத்திருக்க…
இது கொலையா தற்கொலையா என்ற குழப்பதோடு போலீஸ்காரர்கள் காத்திருக்க….
ரிப்போர்ட் வந்ததும் வாங்கி பார்த்த அதிகாரியின் முகத்தில் குழப்ப ரேகை கன்னாபின்னாவென்று ஓடியது அப்பட்டமாக தெரிந்தது…தொப்பியை கழட்டி வியர்வையை துடைத்து மறுபடியும் டென்ஷனோடு மாட்டிக்கொண்டார்

“என்னதேன் இருந்தாலும் படிச்ச புள்ளய தோளுக்கு மேல வளந்த புள்ளய நடுரோட்டுலயா போட்டு அடிக்கிறது….இந்த மனுஷனுக்கு ஆத்திரம் வந்துட்டா புத்தி பெசகிபோயிருது….ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு ங்கிறது சரியாத்தேன் இருக்கு….நீ ஏன் ராசா அந்த வண்டி பின்னாடி ஓடுன…. அப்டி செய்யலாமா….சும்மாவே இந்த ஊரு ஒண்ணுன்னா பத்தா ஊதி பெருசாக்கும்….
அவன் தலையில் தண்ணீரை இறைத்து ஊற்றிக்கொண்டே பேசிக்கொண்டிருந்தாள் அவன் அம்மா செல்வி….அவன் எதையும் கேட்டானில்லை….தூரத்தில் கேட்ட சங்கு சத்தமும் மேள சத்தமும் அவனை நெருங்கி வந்து கொண்டிருந்தது

தகணத்திற்காக உடல் இடுகாட்டை நோக்கி பயணமானது….ஆதியின் வீட்டை கடந்து செல்கையில்…
ஈரத்துண்டோடு வாசலுக்கு ஓடிவந்தான்….
நேற்றுவரை மண மேடையில் ஒன்றாக அமர்ந்து அவளை பூமாலையுடன் அழகுப்பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தவன்…இன்று அவளை அமர ஊர்தியில் பூக்கோலத்துடன் பார்க்க சகிக்கவில்லை….கண்கள் குளமாய் பெருகியது….நீரில் கலங்கிய கண்களில் மங்களாய் அவள் உருவம் தெரிந்தது….அவள் உடலின் அருகில் உட்கார்ந்து அவனை விழி வெறிக்க பார்த்தாள் …..அந்த பார்வை….

இவன் அவளை நோக்கி வாசலில் காலெடுத்து வைக்க….
அவன் கையை பிடித்து இழுத்து உள்ளே அழைத்து போனாள் செல்வி
“எய்யா ராசா ஆதி….என்ன ராசா….நீ என்ன பன்றேன்னு தெரிஞ்சுதேன் பண்ணுதியா….எஞ்சாமி….நா என்ன பண்ணுவேன்….மொகமே இருளடைஞ்சு கெடக்கே…. வா ராசா குளிச்சுட்டு குலசாமி துன்னூறு எடுத்து பூசு….அய்யா கருப்பன் எல்லாத்தையும் பாத்துப்பான்

தகதக….சட சட வென்று நெருப்பு பற்றி எரிந்துகொண்டிருந்தது….வெட்டியான் நீண்டதொரு கட்டையை பிடித்து எரியும் நெருப்பில் தெறித்து விழும் விறகுகளை ஒழுங்கு படுத்தி கொண்டிருந்தான்…அவனுக்கு துணையாக அவன் மச்சினனும் மகனும்…..
ஓநாய்களும் ஆந்தைகளும் கூகுரலிட்டுக்கொண்டிருக்க…. ஆக்ரோசமாய் அடித்த காற்றில் நெருப்புஜுவாலைகள் தன் நாக்கை நாலாபுறமும் நீட்டி சுற்றி இருப்பவற்றையும் இழுத்துக்கொள்ள முயற்சித்து கொண்டிருந்தது….எரியும் பிண நாற்றத்தையும் மீறி அவர்கள் அடித்த சாராய நாற்றம் காற்றில் கலந்து அடித்தது…..நடு மையத்தில் எரிந்து கொண்டிருந்த தீ பனை மரத்தை தொட்டு விடும் முயற்சியில் மேலே மேலே விஸ்வரூபம் எடுத்த வண்ணமிருக்க…..
“பாவம் மச்சான் நல்லா அழகான புள்ள…வாழ வேண்டிய வயசு…இப்புடி பொசுக்குன்னு போயிருச்சு….மனசுக்கு சங்கடமா இருக்கு….அது நெத்திக்காச எடுக்க கூட மனசு வரல
“என்ன பண்ணுறது….எல்லாம் விதி…அவன் முடிவு பண்ணிட்டான்…நம்ம கைல என்ன இருக்கு
“அய்யோ அப்பா….கையில் இருந்த கட்டையை போட்டுவிட்டு
அவனது மகன் அலறிக்கொண்டு அவன் அருகில் ஓடிவந்தான்
அங்கே …….
எரியும் நெருப்பில் அவள் உடல் எழுந்து உட்கார்ந்து எரியும் தலையோடு திரும்பி பார்த்து மொத்தமாக எழுந்து நிற்க முற்பட…
இருவரும் கட்டையால் அதன் தலையில் ஓங்கி தட்டி அடித்து அமுக்கினர்… அது ஓயாமல் கைகளை நீட்டி அவர்கள் கழுத்தை பிடிக்க முயற்சித்தது….மீண்டும் மீண்ண்டும் அடிக்க …அது ஓய்ந்து ஓங்காரத்தோடு அழுது அடங்கியது….அந்த அழுகையின் எதிரொலி ஓங்காரமாய் மாறி ஆதி வீட்டை தொட்டு அவனின் செவிக்குள் நுழைந்து சிந்தையை கலைக்கும் முன் வாசல் எல்லையில் காவல் காத்து நின்ற கருப்பன் தன் கருங்கரத்தால் அறைந்து திருப்பிஅனுப்ப அது மீண்டும் எரியும் பிணத்தை அடைய……
உடல் ஒருமுறை ஒருஅடி உயரத்திற்கு உயர எழும்பி மீண்டும் சிதையில் பொத்தென்று விழுந்து அடங்கியது….மூவரும் ஒருகணம் அதிர்ந்து சட்டென்று பத்தடி தள்ளி பின் வாங்கினர்….
எரிந்து முடிக்கும்வரை அங்கும் இங்கும் நகராமல் மூவரும் அங்கேயே நிலையாய் நின்றனர்….அனைத்தும் சாம்பலாகி புகை மட்டும் எழும்ப….நெஞ்சுக்கூடு மட்டும் எந்த சேதாரமும் இல்லாமல் அப்படியே கிடந்தது….மண்ணெண்ணெய் ஊற்றி மீண்டும் அதை எரிக்கமுனைந்தனர்…எந்த மாற்றமும் இல்லை…..பெருமூச்சோடு தங்கள் குடிலுக்கு வந்து முழுக்கு போட்டனர்

இரண்டாம் நாள் அனலாத்தும் காரியத்திற்காக ஊர் மணியன் வீட்டு முன்பு திரண்டிருந்தது… அழுது அழுது வீங்கிப்போன கண்களுடன் வேலம்மாள் மகளின் படத்தின் முன்னாள் எரியும் விளக்கில் எண்ணெய் ஊற்றி கொண்டிருக்க….
பூவாயி கிழவி நேற்று முழுதும் வைத்த ஒப்பாரியில் தொண்டை கட்டி முனங்களாய் இன்னும் ஒப்பாரியை தொடர்ந்து கொண்டிருந்தது….வெட்டியான் வந்து சொல்லும் சேதியின் வருகைக்காக அனைவரும் எதிர்பார்த்த வண்ணமிருந்தனர்

“ஏப்பா வெட்டியான் வந்துட்டானப்பா….என்ன ஏதுண்டு கேட்டு சட்டுப்புட்டுன்னு காரியங்கள பாருங்கலேய்
“என்னலே….ஏதும் சேதி உண்டா
“ஐயா நெஞ்சுக்கட்டை வேகலைங்க…. அதோட….அவன் அந்த பெரியவரின் காதில் நடந்ததை சொல்ல அவர் துனுக்குற்றார்….
“எய்யா…கட்ட வேகலயாம்…. சாங்கியம் பண்ணாம பால் ஊத்த முடியாதப்போய்….மளமளன்னு ஆகவேண்டிய காரியங்கள பாருங்கப்போய்….
தொண்டை கட்டி வறண்ட குரல்கள் மீண்டும் அழுது புலம்பியது
“அடி ஆத்தோய்…..எம்புள்ள கட்ட வேகமா கெடக்காளே….என்ன ஏதுண்டு தெரியலயே…. நா என்னத்த செய்யுவேன்…எந்த சாமிய கேப்பேன்

படத்தின் முன்னால் எரிந்து கொண்டிருந்த விளக்கு தூண்டிவிடாமலே உயரமாய் எழுந்தது
வேலம்மாளின் அரண்ட பார்வையை கண்டு மீண்டும் சிறிதாய் அடங்கியது

“எம்மா…. ஆதி எங்கம்மா….
“அவன் நல்லா தூங்குதியான்….எழுப்பாதீங்கலே அவன …ஏம்ப்லே காலங்காத்தால அந்த குட்டிசுவத்துல உக்காரதுக்கு தொணைக்கு ஆள் புடிக்க வீடு வீடா தெரியுரியலாலே
“அதெல்லாம் இல்லம்மோய்….அந்த பய நேத்து பூரா உளரிக்கிட்டு தெரிஞ்சுதியான்….அதேன் பாத்துபுட்டு போலாமுன்னுட்டு வந்தோம்
“கருப்பன் துன்னூர பூசி வுட்டேன்….ரொம்ப நேரம் கழிச்சுத்தேன்.தூங்கினியான்….இன்னிக்கு பூசாரிகிட்ட கூட்டிபோய் கயறு மந்திரிச்சு கட்டிவுடலாமுன்னு இருக்கேன்….ஏலே வெட்டிபயலுவளா…எம்புட்டு நாளைக்குலே அந்த குட்டிசுவத்துலயே தொங்கிக்கிட்டு தெரியுவிய….வேல வெட்டிக்கு போகனுமின்னு எண்ணம் வச்சுருக்கியலா இல்லயா
“போலாம் போலாம்….கெடச்சா போகத்தேன் செய்யலாம்….கெடைக்க மாட்டேங்குதே….
“வேல என்ன வெத்தல பாக்கு எடுத்துக்கிட்டு வீடுதேடியா வரும்….நாமதேன் தேடோனும்….எந்த நேரமும் குட்டிசெவத்துல ஒக்காந்து அத தேச்சுகிட்டிருந்தா அதுவும் தேயும் ஒங்களுக்கும் தேஞ்சுபோகும்லே…… நீங்களுவோ உக்காந்து உக்காந்துதேன் நல்லாருந்த செவரு குட்டிசெவரா போயிருச்சுலேய்…..
“இல்லேன்னா ஓங்க வூட்டுக்காரரு அத கோட்டையா மாத்தியிருப்பாராக்கும்
“அட எடுபட்ட பயலே….வாயில சுண்ணாம்ப வச்சு தேச்சுப்புடுவேன் தேச்சு….இந்த வாய் மட்டும் இல்லேன்னா ஒங்களை எல்லாம் நாய் கவ்விட்டு போயிரும்லே
“எம்மோய்…. ஏம்மோய் காலங்காத்தால அவனுங்கள வஞ்சுகிட்டு கெடக்க
அப்போதுதான் தூங்கி எழுந்து வந்தான் ஆதி…..
“விடுலே ஆதி….நம்மள என்னிக்கு இவுக வாழ்த்திருக்காவோ….எம்மோய் ஒருநாள் இல்ல ஒருநாளைக்கி எல்லாரும் எங்கள எப்புடி வாய பொளந்து பாக்கபோரிய பாருங்க
“பாப்போம் பாப்போம்….ஏலே ஆதி பல்லு கூட வெளக்காம அதுக்குள்ள எங்கடே கெளம்புறே…..நில்லுடே… உங்க அப்பாரு வந்தாருன்னா அம்புட்டுத்தேன் சொல்லிட்டேன்….ஒழுங்கா போய் பல்ல தேயுலே….
“பல்லு வெளக்குறதுக்கெல்லாம் பஞ்சாயத்தா…..இரும்மோய் அஞ்சு சுருக்குல வந்துர்றேன்…..வாங்கடே
“வெளங்காத பயலுவோ….நேத்து போட்டதெல்லாம் பத்தாது இந்த பயலுக்கு…..
“ஏண்டி…. தொர எங்க கெளம்பிட்டாரு…சீமைக்கு புல்லு புடுங்க போறாரோ…
“ஆமா…..என்னட்டயே மல்லுக்கு நில்லுங்க….அது எங்க போவும்…..கழுத கெட்டா குட்டிசொவரு….
“மொதல்ல ஒம்புள்ளய அந்த தண்டபயலுகளோட சேக்கைய நிப்பாட்ட சொல்லு….அப்பத்தேன் உருப்படுவியான்….

“ஏ மணியா எஸ்.ஐ சாரு வந்துருக்காரு வெசாரிக்கணுமா…. சுருக்கா வாலே…
“ஒக்காருங்க சாரு….. ரிப்போட்டு என்ன சொல்லுதுங்க….புள்ளைக்கு ஏதும் சேதாரமுங்களா
“அந்த பொண்ண யாரும் எதுவும் பண்ணல சுத்தமாத்தேன் இருக்கு..உடம்புலயும் எந்த காயமும் இல்ல….விஷமருந்து குடிச்ச மாதிரியும் இல்ல..இயற்கையான மரணம் நடந்ததுக்கான அறிகுறியும் இல்ல….எப்புடி செத்துச்சுன்னு குழப்பமாதான் இருக்கு….ஆனா ……..அதுக்கு கல்யாணமாயிருச்சா
“அய்யயோ என்ன சாரே இப்புடி கேட்டுபுட்டிய….புள்ள படிச்சுக்கிட்டு இருக்குன்னுதானே ராக்கம்மா மவனுக்கு கூட கட்டித்தரமாட்டம்னு சொல்லிபுட்டான்….நீங்க ஏன் இப்புடி கேக்குறிய…..
“போஸ்டமார்ட்டம் பண்ணும்போது அது கழுத்துல தாலிகொடி கிடந்ததா டாக்டர் சொன்னாரே…..
“அடி ஆத்தே என்ன இப்புடி ஒரு குண்ட தூக்கி போடு்தியலே…..
மீண்டும் அழுகையும் ஆர்ப்பாட்டமும்….
“அடி ஆத்தி இது என்ன புது கதையால்ல இருக்கு….அதெப்படி அப்பன் ஆத்தாளுக்கு தெரியாம அந்த புள்ள கழுத்துல தாலி கெடக்கும்….இதென்னடி கூத்து இது….
“அதானே எந்த பய கட்டுனான்னு தெரியலயேடி எழவு….
“ஏன்டா….கூறுகெட்டவனே எம்மவனுக்கு கட்டித்தரமாட்டம்னுட்ட…இப்போ எவனோ தாலி கட்டியிருக்கான்….என்னடே இதெல்லாம்….ஏண்டி சிறுக்கி பொட்டக்கழுதைய வளத்த லட்சணம் இதானாடி…. ஒனக்கு தெரியாமயா இருந்துருக்கும்….தெரிஞ்சுகிட்டே .அமுக்கினியாட்டம் இருந்துட்டியோ
“அய்யோ மதினி நா என்னத்த கண்டேன்…நீங்க வேற வாய்க்கு வந்தத பேசாதிய…. எம்புள்ளய நா அப்புடி வளக்கல….
“அப்பம்…போலீஸ்காரவுக என்ன பொழுது போகாம வந்து சொல்லிட்டு போராவுளோ….யாருடி அவன்…ஒனக்கு தெரிஞ்சிருந்தா ஒழுங்கு மரியாதயா சொல்லிபுடு…. உங்கண்ணன் மவனுக்கு யாருக்கும் தெரியாம கண்ணாலம் பண்ணி வச்சுட்டியோ…இல்ல பட்டனத்துக்கு படிக்க அனுப்புனியலே அங்க எவனையும் கட்டிக்கிட்டு ஏமாந்துபோய்தான் போய் சேந்துட்டாளோ…என்னலே பொழப்பு இது…தூ…
“எக்கா… என்னக்கா…நீயே எம்புள்ளய பத்தி இப்புடி பேசலாமா…எரியுற கொள்ளியில எண்ணைய ஊத்துறாப்புல பேசுறியே…எம்பொண்ணு பத்தரமாத்து தங்கம்கா
“ஏ ராக்கம்மா….நீ கொஞ்சம் வாய மூடு இருக்குற நெலமையில நீ வேற ஏன் தாளிச்சுட்டு கெடக்க….போலீஸ்காரர் சொன்னத ஒழுங்கா கவனிச்சியா இல்லயா…அந்த புள்ள எந்த சேதாரமும் இல்லாமதான் செத்துருக்கு…. நீ நெனைக்கிற மாதிரியெல்லாம் ஒன்னும் கெடையாது….
“பொறவு கழுத்துல எப்புடி தாலி தொங்குச்சு
“அது என்ன ஏதுண்டு போலீஸ்காரவுக கண்டுபிடிச்சுப்பாவோ….நீ வாய்சவடால் பேசாம ஒக்காரு
“சாரு….நீங்கதான் சீக்கிரமா அத கண்டுபிடிச்சு சொல்லணும்
“அது படிச்ச காலேஜ்ல போய் இன்னும் தெளிவா விசாரிக்கனும்….உங்கள்ள யாருக்காவது தெறிஞ்சிருந்தாலோ யார் மேலயாவது சந்தேகம் இருந்தாலோ ஸ்டேஷனுக்கு வந்து சொல்லுங்க….ஆமா ஆம்புலன்ஸ் பின்னாடி அழுதுகிட்டே ஓடுனானே அந்த பையன் வீடு எங்கேருக்கு….அவனுக்கு இதுல ஏதாவது சம்மந்தம் இருக்கும்னு நெனைக்கிறீங்களா….
“இருந்தாலும் இருக்குமுங்க…. அந்த புள்ள போறப்ப வாரப்ப எல்லாம் அந்த பய வெறிக்க வெறிக்க பாப்பான்
“அப்டிபாத்தா ராக்கம்மா மவன் அன்னிக்கு தண்ணிய போட்டு வந்து பொண்ணு தரலன்னா தூக்கிட்டு போய் தாலி கட்டுவேன்னு மிரட்டுனானே அவனையும்தான் சந்தேகப்படனும்
“யாருலே அது….நாக்கு மேல பல்ல போட்டு எம்மவன கோத்து வுடுறது…அந்த ஆதி பய ஒங்க சொந்தக்காரங்கிறதால வக்காலத்து வாங்குதியலாக்கும்
“பொறவு உம்மவன் சாவுக்கு ஏன் வரல
“அவந்தேன் மாமன் பொண்ணு தரமாட்டேன்னு சொன்னதுலருந்து தண்ணியில கெடக்கானே….அவன் சாவுக்கு வரலன்னா அவந்தான்னு சொல்லுவியலோ
“ஆமாமா அதுக்கு முன்னாடியெல்லாம் உம்மவன் குடிச்சதே இல்ல போ
“இப்ப என்ன சொல்ல வரியாலுவோ…ஆளாளுக்கு கூட்டு சேந்துகிட்டு எம்மவன் மேல பழி போடுதியலே…. என்ன சேதிண்டு கேக்கேன்……
“இந்தாம்மா நீ சும்மா இருக்க போறியா இல்லயா….ஏற்கனவே எனக்கு உன் மகன் மேலயும் சந்தேகம் இருக்கத்தான் செய்யுது….நா ஒவ்வொருத்தரா விசாரிச்சுக்கிட்டு இருக்கேன்ல…..குறுக்க குறுக்க கத்திக்கிட்டே இருக்க
“ஐயா இல்லீங்கய்யா….எம்மவன் அப்டியெல்லாம் செய்ய மாட்டானுங்கய்யா….நீங்க மத்தவுக பேச்ச கேட்டுகிட்டு….
“ஏம்மா நீ பேசாம இருன்னா இருக்க மாட்டியா
“ஏ ராக்கு வாய கொஞ்சம் மூடுடி…ஆம்பலைக பேசிட்டிருக்கும்போது நீ எதுக்கு ஒ தொண்டைய தொறந்துகிட்டிருக்கவ…..ஒம்மவன் என்ன அம்புட்டு நல்லவனாக்கும்….அவனுக்கு வக்காலத்து வாங்கிக்கிட்டு தெரியுறவ….வெசாரிக்கிற ஐயா எல்லாத்தையும் பாத்துப்பாக…. நீ வாய மூடிக்கிட்டு இருக்குறதுன்னா இரு….இல்லன்னா சீல துணிய ஒதரிகிட்டு கெளம்பு…..புருஷன் மாயாண்டி அதட்டியதும் அவள் வாய்க்கு பூட்டு போட்டுக்கொண்டாள்
அதிகாரி அரைமணிநேரம் துருவி துருவி கேள்விகளை கேட்டு முடித்துவிட்டு மண்டையை சொரிந்துகொண்டே சென்று விட்டார்

காவல் நிலையம்…..
“யோவ் ஏட்டு…. என்னய்யா இது நொம்பலம் புடிச்ச கேஸா இருக்கும்போல தெரியுது…..அது எப்புடி செத்துச்சுன்னு போஸ்டமார்ட்டம் பண்ணவனுக்கே கண்டுபிடிக்க முடியல…..ஒரு காரணமும் புடிபடல….விசாரிச்ச வரைக்கும் உருப்படியான தகவல் எதுவும் கிடைக்கல….காலேஜ்ல யாரையும் லவ் பண்ணுச்சான்னு விசாரிச்சா இல்லன்னு எல்லாம் ஒரே மாதிரி பதில் தான் சொல்லுதுக…. எவன் தாலிகட்டினான்….ஏன் கள்ளிகாட்டுக்கு போச்சுண்ணே ஒரு எழவும் புரியலயே…..உனக்கு எதுவும் தோணுதாயா…நீதான் இங்க முப்பது வருசமா குப்ப கொட்டுறியே
“சார் அது ஒரு மாதிரியான இடம்….இதுவரைக்கும் அஞ்சாறுதடவ தான் அந்த பக்கம் போயிருப்பேன்…எப்பவும் காத்துல இரத்த வாட தான் வீசும்…ஒருமாதிரி சுடுகாட்டுக்குள்ள நுழைஞ்சுட்டா மாதிரி இருக்கும்….அதுக்குள்ள என்னமோ மர்மம் இருக்குதுங்கய்யா
“யோவ்…நீ ஒரு சரியான ஆளுயா….ஊர்காரனுங்க மாதிரியே அறிவுகெட்டதனமா பேசிக்கிட்டு….உங்கிட்ட போய் கேட்டேன் பாரு….நா இன்னும் ரெண்டுமாசத்துல ரிட்டையர்ன்மெண்ட் ஆயிருவேன்…கடைசி கடைசின்னு இந்த கேச குடுத்து இந்த ஊருக்கு அனுப்பிவிட்டு என் உயிர வாங்குராணுங்க….ஒருமாசம் அப்டி இப்டி விசாரிச்சிட்டு ஒன்னுமில்லன்னு கேச இழுத்து மூடிட்டு போகவேண்டியதுதான்….இல்லன்னா கெடப்புல போட வேண்டியதுதான் அடுத்து எவனாவது வந்தான்னா கண்டுபிடிச்சுக்கட்டும்
“சார் அது வந்து
“சும்மா இருயா…நா வெளியில போய்ட்டு வர்றேன்….இந்த கேஸ் விஷயமா எவனாவது வந்தான்னா தரோவா விசாரிச்சு கேட்டுவை

“என்னம்மோய்… உந்தம்பி மவளுக்கு எல்லா காரியமும் முடிஞ்சுதா….பொண்ணு கேட்டு போனப்போ அம்புட்டு அவமானப்படுத்துனானுங்க.அதயெல்லாம் மறந்துட்டு வெக்கமே இல்லாம போய்ட்டு வந்துருக்கவ
“எலெய்….என்னலே கோட்டி கணக்கா பேசிக்கிட்டு தெரியுறவ….நீ ஏலே வரல
“ஹே ஹெ….நா எதுக்கு வரோனும்…
“நீ அன்னிக்கு தண்ணிய போட்டு தகராறு பன்னத காரணமா வச்சு உம்மேலயும் சந்தேகம்னு ஊர்க்காரபயலுவோ கோத்து விட்டானுவோ….எதுத்து பேசுன என்னயும் உங்கப்பன் வாய மூட வச்சுப்புட்டாவோ….எந்த நேரமும் போலீசு ஒன்னய வெசாரிக்கும்லே…சூதானமா இருந்துக்க
அவனிடம் சிறு திடுக்கிடல் தோன்றி மறையை உடனடியாக வெளியேறினான்….
“ஏலே…தண்ணிய போட்டுப்புட்டு ரவைக்கு ரொம்ப நேரம் ஊருக்குள்ள சுத்திக்கிட்டு தெறியாதல….வெரசா வூடு வந்து சேரு

போதையின் பிடியில் தள்ளாடியபடி காளியப்பன் வந்து கொண்டிருந்தான் திடீரென்று வீசிய பலமான காற்றில் தடுமாறி கீழே விழுந்து உளரியபடியே தவழ்ந்து எழுந்தவன் எதிரே யாரோ நிற்பதை பார்த்து கண்களை சுருக்கி கூர்ந்து கவனித்தான்… ஒன்றும் தெரியவில்லை அவனால் அந்த இடத்தை விட்டு நகரவும் முடியவில்லை….மீண்டும் கீழே விழுந்து உருண்டான்….அவன் கழுத்தை அவன் கைகளே பிடித்து நெறித்தது…அடி தொண்டையில் அலறினான்…சமாளித்து எழுந்து தலை தெறிக்க ஓடினான்…பின்னாலே கூட்டமாக பலபேர் துரத்திக்கொண்டு வருவதுபோல் தோன்றியது…திரும்பி பார்க்க நினைத்தும் பார்க்காமலே பயத்தில் ஓட்டமாய் ஓடினான்….போதை சுத்தமாய் தெளிந்து விட்டிருந்தது….தொண்டை தாகத்தில் வரண்டது….நீண்ட தூரம் ஓடியும் சுற்றி இருள் மட்டுமே கவிழ்ந்து கிடந்ததால் அருகில் இருக்கும் வீடுகள் எதுவும் கண்ணில் படவில்லை….ஊருக்குள்ளே இருக்கிறோமா ஊருக்கு வெளியில் இருக்கிறோமா ஒரு நிமிடம் சந்தேகமாய் இருந்தது…ஓடி ஓடி மூச்சு வாங்கியபடி முட்டியை பிடித்துக்கொண்டு குனிந்து நின்றான் நிமிர்ந்த போது கரிய முரட்டு உருவம் பயத்தில் தானாக தொண்டையிலிருந்து ஓலகுரல் எழும்ப….
“ஐயா …யாரு சாமி நீங்க….இந்த நேரத்துல இங்கன என்ன சோலி ஒங்களுக்கு
அவன் மனிதன்தான்…அப்பாடா என்றிருந்தது….அவன் தோளிரண்டை ஆதரவாய் பிடித்துக்கொண்டான்
“நீ யாரப்பா….
“நா இடுகாட்டு வெட்டியானுங்க சாமி…
“வெட்டியானா….அருவருப்புடன் படக்கென்று கைகளை எடுத்துக்கொண்டான்
“ஏஞ்சாமி நடுநிசி நேரத்துல இடுகாட்டுக்கு வந்திருக்கியலே….போதையில வழி மாறி வந்துட்டியலா சாமி
“அய்யோ என்னலே சொல்லுதே…. இது இடுகாடா
“ஆமாஞ்சாமி
“எலெய் ஒனக்கு புண்ணியமா போகட்டும்… என்ன ஊருக்குள்ள கொண்டு விட்ருலே
“ரொம்ப பயந்து போயிருக்கியலா சாமி….எதையும் பாத்தியளா
“அதெல்லாம் இல்ல நீ எங்கூட மட்டும் வா
திடீரென்று அழுகை சத்தம் விம்மலுடன் கேட்டது
“ஏலே என்னலே அது…யாருலே அழுகுறது
“இங்க அப்டித்தேன் சாமி…நீங்க வெரசா நடங்க….
அவன் நடுங்கிய கால்களோடு தடுமாறியபடி அவனை உரசிக்கொண்டே நடந்தான் உரசும்போது காற்றை உரசுவதுபோலவே ஒரு பிரம்மை
ஓரிடத்தில் அவன் மட்டும் தனியாக நடப்பதுபோல் தோன்ற சுத்தி முத்தி பார்த்தபோது…ஆமாம் அங்கு அவன் தனியாகத்தான் நின்றான்…மீண்டும் ஓட்டம்…மீண்டும் பின்னாடி பல காலடி சத்தம்….உருண்டு விழுந்தோடி எழுந்தபோது அது அவன் வீடுதான்…பட்டி வைத்து அடித்த மட்டைவெளி கதவு சாமான்யத்தில் திறப்பேனா என்றது….அம்மாவை அழைக்க வாயை திறந்தால் சத்தம் மட்டும் எழும்பவில்லை…பின்னாடி கேட்ட காலடி சத்தம் இப்போது கூட்டமாய் சேர்ந்து சிரிப்பது போல் கேட்டது…மெதுவாய் திரும்பினான்….
“சா…..சா…
மூர்ச்சையானான்….

முகத்தில் தெளித்த தண்ணீரின் ஜில்லிப்பில் கண்களை திறக்க எதிரே ராக்கம்மாவின் கடுகடு முகம் தெரிந்தது
பளபளவென்று விடிந்திருந்தது
“ஏலே குடிகாரபயலே நீயி திருந்தவே மாட்டியாலே….குடிச்சுப்புட்டு வந்து இப்புடி வாசல்லயே விழுந்து கிடக்குறவ….அப்புடி என்னலே ஒனக்கு குடி வேண்டிகெடக்கு….நாசமா போறவனே…நெதமும் ஓங்கூட இதே ரோதனையா போச்சு எனக்கு….எந்திரிலே எந்திரிச்சு உள்ளார வந்து தொலைல எடுபட்ட மூதி….
இரவு நடந்தவை அனைத்தும் கண்முன்னால் தெரிய சர்வமும் நடுங்கியது அவனுக்கு

“ஏ ராக்கம்மாக்கா ஒம்மவனுக்கு இப்ப எப்புடி இருக்கு….
“அத ஏ கேக்குற என்னத்த பாத்து பயந்து தொலைஞ்சானோ எழவு… கடுமையான சொரம் வந்து கூடிப்போச்சு….மருந்து மாத்திர தின்னும் தீரல…..கோடங்கிட்ட கூட்டிபோய் மந்திரிச்சேன்….சங்கிலி கருப்பனுக்கு பூச போட்டேன்….ஒன்னத்துக்கும் அடங்குவனா ங்குது…பெனாத்திக்கிட்டே இருக்கியான்
“அக்கா அந்த ஜானகி நெதம் நடுநிசியில ஊருக்குள்ள அலைஞ்சுகிட்டு இருக்காளாம்… நெறைய பேரு பாத்துருக்காவோ….எனக்கென்னமோ ஒம்மவன் அத்தேன் பயந்துருப்பான்னு நெனைக்கேன்
“இருக்குமுடி…கோடங்கியும் லேசுபாசா அப்புடித்தான் சொன்னாரு….இன்னிக்கு ஊர்கூட்டத்துல அதப்பத்தி பேசி முடிவெடுக்க போறதா எங்க வூட்டுக்காரரு சொன்னாரு…இந்த பயல இன்னிக்கு பட்டணத்து ஆஸ்பத்திரிக்கு கூட்டிபோய் காட்டலாமுன்னு இருக்கேன்….
“எக்கோய் இது ஆஸ்பத்திரிக்கு போனால்லா தீராதுகோய்….. நம்மூரு கோடங்கி முன்ன மாதிரி ஒன்னும் சரியில்ல…மலையம்பட்டில ஒரு ஆளு இருக்காராமா….நம்ம மூஞ்சிய பாத்தவுன்ன அக்கு வேறு ஆணிவேறா எல்லாத்தையும் புட்டு புட்டு வச்சுபுடுறாராம்….பேய் கோளாறு எல்லாம் வந்த சுவடு தெரியாம காணாம போயிடுதாமே….டவுன் காரவுக கூட அவர் வூட்டு வாசல்லதேன் காத்துக்கெடந்து குறி பாத்துபுட்டு போராகலாம்….நீ காளியப்பன கூட்டிகிட்டு அங்ஙன போய் ஒருக்கா பாத்தாராது நல்லது மலையம்பட்டில இறங்கி குளித்தல வீராசாமி வூடு ஏதுண்டு கேட்டா அவுகளே கூட்டியாந்து விடுவாகளா
“அப்புடியா சொல்லுதே….அப்பம் நாளைக்கே போய் பாத்தாரேன்…..அதயும்தேன் என்னான்னு பாத்துபுடுவோமே

“ஏப்பா….ஊர்கூட்டத்துக்கு வந்துருக்கவோ எல்லாத்துக்கும் வணக்கமப்பா….முக்கியமான ஆளுக எல்லாரும் வந்தாச்சுல்ல மாயாண்டி…
“வந்தாச்சு…வந்தாச்சு….நீங்க ஆரம்பிங்க பெரியப்பு
“அதாச்சும் இந்த கூட்டத்துல பேசப்போறது என்னான்னா….ஒங்க எல்லாருக்கும் தெரிஞ்சதுதேன் நம்ம மணியன் மவ செத்து காரியமெல்லாம் முடிஞ்சது….அடுத்த வாரம் கருப்பனுக்கு திருவிழா எடுக்கறதா ஊர்கூடி முன்னம் பேசியிருந்தோம்….அத இப்போ மாத்த வேண்டியதா இருக்குது….வருஷமாகட்டும்னு நாங்க எல்லாரும் நினைக்கோமப்பா….நீங்க எல்லாரும் என்ன சொல்லுதிய….
“ஒருவருசம் தள்ளிபோடனுமா மச்சான்….ஏற்கனவே ரெண்டு தரம் திருவிழா தடப்பட்டுப்போச்சு….முப்பது நா முடிஞ்சப்பொறவு வச்சுக்கலாம்ல….மணியன் குடும்பம் மாத்தரம் ஒதுங்கிக்க வேண்டியதேன்…
“அட என்னப்பா நீ கூறுகெட்ட ஆளா இருக்கவ….ஊர் தலக்கட்டுல மணியன் முக்கியமான ஆளப்பா…. அவன் குடும்பத்த ஒதுக்கி திருவிழா எடுத்தா நல்லாவா இருக்கும்….
“அட அவன் ஒரு வெவரங்கெட்ட பய….அவன் பேச்ச போய் கேட்டுகிட்டு…..நாம முடிவு பண்ண்படி அடுத்த வருஷம் திருவிழா வச்சுகிடலாமப்பா
“நீங்களா முடிவெடுக்கறதுக்கு எதுக்குய்யா வெட்டியா கூட்டத்த கூட்டி கேக்கீறு
“இந்த பய எப்ப வந்தாலும் ஒடந்த இழுத்துகிட்டே இருப்பானய்யா
“ஏலே…புரியாம கெடந்து சலம்பாதலே அந்த புள்ள ஜானகி நோய் நொடி வந்து செத்துபோச்சா இல்ல வாழ்ந்து முடிச்சு போய்சேந்துச்சா….வயசு புள்ளயா….பச்ச மண்ணு… அது அந்த கள்ளிகாட்டுக்கு ஏன் போச்சு எப்புடி போச்சுன்னு ஒரே மர்மமா இருக்கு…..நெஞ்சுகட்ட வேகமா வேற கெடந்துருக்கு…எவளவு சாங்கியம் பண்ணி  கட்டய எரிச்சோம்….அது இன்னும் சாந்தியடையாம ஊருக்குள்ள அலைஞ்சுகிடக்கு….இந்த நெலமையில நாம சந்தோஷமா திருவிழா கொண்டாட முடியுமா….வடக்க நல்ல கோடங்கி இருக்காவலாம்….அடுத்த பொதன் கெழம அவர கூட்டியாந்து பூச போட்டு என்ன பரிகாரம் பண்ணலாம்னு கேக்கலாம்னு இருக்கோம்….இதேன் எங்க முடிவு….மத்தவுகல்லாம் என்ன சொல்லுதிய…

அங்கிருந்த ஆதியும் கூட்டாளிகளும் வாயாட ஆரம்பித்தார்கள்
“இப்புடித்தான் அஞ்சாறு வருஷத்துக்கு முந்தி இங்கருக்குற கோடங்கிய எங்கருந்தோ புடிச்சாந்திய….அந்தாளுக்கு இப்பம் சீசன் முடிஞ்சு போச்சா மாமோய்….அரசியல்வாதிய தேர்ந்தெடுக்காப்புல நம்மூருள கோடங்கிய தேர்ந்தெடுக்கியலோ….
“லே ராசு…இனி அடுத்து என்ன பண்ணுவாவோ சொல்லு
“அடுத்து என்ன கோடங்கி பூச ன்னு சொல்லி ஊர் ஊரா கொடத்த தூக்கிக்கிட்டு ஊர் பெருசு எல்லாம் வசூல் பண்ண ஆரம்பிப்பாவோ….”அந்தாளும் இதான் சாக்குன்னு அந்த பூச இந்த பூசன்னு சொல்லி நல்லா வசூல் வேட்ட பண்ணுவான்…..
“அப்பறம் நம்மூட்டு பொம்பலைகளுவோ வூட்டுல இருக்குறத கொண்டு போய் அந்தாளு கால்ல விழுந்து விழுந்து கும்பிடுவாவோ…..
“கடவுளே நேர்ல வந்துட்டா மாதிரி ஊரெல்லாம் அந்தாளு பெருமதான் பேசிக்கிட்டு தெரியும்
“அப்பறம் அந்தாளுக்கும் மவுசு கொறஞ்சு போயிரும்….
“அதுக்கப்புறம் தெக்குலருந்து இன்னொரு கோடங்கிய தேடுவாவோ
“குறி கோடங்கின்னு அலையரத விட்டுட்டு பெரிய அதிகாரிகிட்ட ஊரு ஒண்ணா கூடி மனு குடுத்து ஜானகியோட சாவுக்கு என்ன காரணம்னு வெரசா கண்டுபிடிக்க சொல்லலாம்ல…..
“அடேய் ஆதி….அதேன் எஸ்..ஐ வெசாரிச்சுக்கிட்டு இருக்காருலோ…அப்புறம் என்னலே
“சித்தப்பு…அந்தாளு சும்மா அந்தா இந்தான்னு இழுத்தடிச்சுட்டு கேச கெடப்புல போட்டுட்டு அடுத்த மாசம் ரிட்டையர்டாகி போயிருவாறு…..அப்புறம் ஏட்டும் ரெண்டு கான்ஸடபிலும் மட்டும் ஸ்டேஷன்ல காலாட்டிட்டு உக்காந்திருப்பாவோ….ஒரு அதிகாரியும் வரமாட்டோவோ…அதோட கோடங்கி பூசன்னு நீங்களும் எல்லாத்தையும் மறந்திட்டு போயிருவிய….ஜானகியோட சாவுக்கு யாரு தீர்வு சொல்றது….அவள யாரோ கொன்னுருக்காவோ….எனக்கு நல்லா தெரியும்….அந்த கருங்காளி மேலதான் என் சந்தேகம் முழுசும் இருக்கு….அவள கொன்னவன் யாருன்னு மட்டும் தெரிஞ்சுது நா லேசுல வுடமாட்டேன்
எல்லோரும் அவனை ஒரு சேர பார்த்து தங்களுக்குள் ரகசியமாய் கிசுகிசுத்துகொள்ள

“லேய்…பொசகேட்ட பயலே….வாய மூடுலே…. ஒனக்கு மட்டும் என்னலே அந்த புள்ள மேல தனியா அம்புட்டு அக்கற எங்களுக்கு தெரியாது என்ன செய்யனும்ட்டு….வேலைக்கு போயி குடும்பத்த காப்பாத்த துப்பில்ல ஒனக்கு ஊர்கூட்டத்துல என்னலே வேல….கெளம்புல இங்கருந்து
மாடசாமி ஊர் வாய்க்கு பயந்து அவன் வாயை மூட முயற்சித்தார்
“வேலைக்கு போகலன்னா ஊர் பிரச்சினைல தலையிடக்கூடாதா….
“வாய மூடுன்னு சொல்றம்ல….
“ஏலே வெட்டிபயலுவளா என்னலே பெரிய மனுசர எதித்து பேசி நக்கல் பண்ணிக்கிட்டு தெரியுறவோ…
“படிச்சுப்புட்டு இப்புடி ஊற சுத்திக்கிட்டு வம்பு வளத்துகிட்டு தெரியுரியலே மக்கா….எதுனா வேலைக்கு போனா உங்கப்பன் ஆத்தாளுக்கு ஒதவியா இருக்கும்லே
“டேலேய்….வேலவெட்டி பாத்தாதானே கண்ணாலங்காட்சி பண்ணலாம்…புள்ள குட்டிய பெத்துபோடலாம்….சீக்கிரமா வேலைக்கு போற வழிய பாருங்கப்பா
“மாமோய் ஈரோட்டுல கலெக்டர் வேலைக்கு கூப்பிட்டாவோ….நாங்கதேன் தொணைக்கு ஆளில்லன்னு போகல….உம்ம பொண்ண கட்டி தந்தியன்னா புள்ள குட்டிய பெத்து கண்ணாலங்காட்சி பண்ணி வேலவெட்டிய பாப்போம் என்ன சொல்லுதிய…..
“அடி…. எடுபட்ட பய மக்கா…..
“யோவ் நீ எதுக்குயா அவ்னுகள்ட்ட வாய குடுக்குறவ…..சும்மா இருயா….
“யாருலே அது…மொதல்ல அந்த வெட்டிபயலுவல இங்கருந்து தொரத்தி விடுங்கப்பா….
“அட அவ்னுகல விட்டுதள்ளிப்பூட்டு அய்யா சொன்ன வெஷயத்துக்கு ஒரு முடிவுக்கு வாங்கய்யா எல்லாரும்

ஆளாளுக்கு சலசலவென்று பேசிக்கொண்டார்கள்….
“கருத்து சொல்ரவுக சொல்லுங்கப்பா..ஒங்களுக்குள்ள பேசிக்கிட்டியன்னா நாங்க எப்புடி தெரிஞ்சுக்கறது….இருட்டிக்கிட்டு வேற போகுது….காலாகாலத்துல வூடு வாசல் போ வேண்டாமா
“கருத்து சொல்லுங்கன்னு சொல்றாவோ சொன்னா வெரற்றாவோ….என்னா ஊருலே இது
“எங்களுக்கெல்லாம் கருத்து சொல்ற உரிம இல்லயா மாமோய்
“லே வாய மூடுங்கலே
“ஐயா நாங்க சொல்றதுக்கு என்ன இருக்கு….பெரியவுக முடிவு பண்ணா சரியாதான் இருக்கும்
“அப்பம் சரி….பூச போடுறவரைக்கும் யாரும் வூட்டுல கவுச்சி பொழங்க வேணா…சரியாப்பா…

திடீரென விளக்குகள் அனைத்தும் மொத்தமாய் அணைந்தது….மழையோடு சூறைகாற்றும் சேர்ந்து போட்டிபோட்டுக்கொண்டு அந்த இடத்தையே புரட்டிபோட்டுக்கொண்டிருக்க அங்கிருந்த மிகப்பெரிய மரம் ஒன்று சடசடவென்று முறிந்து சரிய….. கூடியிருந்தவர்கள் இருட்டிலும் பயத்திலும் கண்மண் தெரியாமல் அங்கும் இங்கும் ஓடினர்…..
“ஏலே ஆதி எங்கலே இருக்க….ஆதி….. ஆதி…..
“லே செந்திலு ஆதி எங்கலே…..
“எம்பக்கத்துல நின்னான் காணோமேலே…..
“கண்ணே முழிக்க முடியலயே……ஒரு எழவும் தெரிய மாட்டேங்கு….இந்த பய சத்ததையே காணோமே…
“ஆதி …..ஆதி…….
“ஆதி…ஆதி….ஆதி
நண்பர்கள் ஆளாளுக்கு அவனை அழைக்க எந்த பதிலும் இல்லை…..ஆங்காங்கே மரங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாய் முறிந்து விழ தொடங்க…..கவிழ்ந்து கிடந்த கும்மிருட்டில் அங்கிருந்த அனைவரும் திசை தெரியாமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டும் ஒவ்வொருத்தரையும் பெயர் சொல்லி அழைத்து தேடிக்கொண்டும் இருக்க….வீடுகளில் குழந்தைகள் பயத்தில் அழும் சத்தமும் கேட்டது…
“லே சோனமுத்தா ஆதி எங்க போய் தொலைஞ்சான் தெரியலலே…. மொதல்ல இங்கருக்குற நெலமைய சமாளிக்க என்ன வழிண்டு பாப்போம்லே….
“அதும் சரிதான் செந்திலு….லே ராசு பக்கத்துலதானே நிக்கா
“ஆமாலே இங்கதான் நிக்கேன்
“முத்து நீ எங்கல இருக்கே
“செந்திலு நா உம்பக்கத்துல வந்துட்டேன்லே….
“மத்தவனுங்க எல்லாருக்கும் நா பேசுறது கேக்குதா….லே பழனி..அழகு. ராசா..நெல்ல..சுந்தரு.. மணி..சந்தனம் இங்கன எல்லாரும் ஒண்ணா கைய கோத்துக்குகிட்டு நில்லுங்கல

“வந்துட்டோம்லே…என்னலே சூரகாத்து இப்புடி போட்டு தாக்குது…கண்ணையே புடுங்கி எரிஞ்சாப்புல ஒரு எழவும் கண்ணுக்கு புலப்படமாட்டேங்கு…
“அடிக்கிற காத்து ஆளயே தூக்கி அடிச்சுறும் போலயேல
“சோனமுத்தா….நீ ஸ்ட்ராங்கா புடிச்சு நின்னுக்கலா…ஒனக்கு இருக்குற ஒடம்புக்கு பறந்துற கிறந்துற போற
“அவன் பறந்தாலும் கரண்டு கம்பியில மாட்டி தொங்கிக்கிட்டு கெடப்பான்லே காத்தால பாத்து கழட்டிக்கிட்டு வந்துடலாம் வுடு
“லே குண்டு பூசணி…நீ உருண்டு கிருண்டு விழுந்து வெடிச்சுராம இருலே மொதல்ல
“நாம எல்லாரும் இங்கன இருக்கோம் ஆதி மட்டும் எங்கலே போனியான்
“பேச்ச கொறைங்கலே மொதல்ல…அங்ஙன எல்லாரும் கத்திக்கிட்டு கெடக்காவோ…ஏ மாமோய்…எப்போய் சித்தப்பு….ஒருத்தரும் பதறாதிய…பீடி சுருட்டு குடிக்கிறவுக இடுப்புல தீப்பெட்டி வச்சுறுப்பியல்ல எடுத்து பொருத்துங்க….
ஆங்காங்கே சிறு சிறு வெளிச்சங்கள் தோன்ற ஆட்கள் நிற்கும் அரவம் தெரிந்தது….
“எல்லாரும் ஒண்ணா இங்கன மண்டபத்துக்குள்ள வாங்க…யாரும் ரோட்டுல நிக்க வேணா…வீட்டுக்கு நடந்து போக வேணா…மரமெல்லாம் முறிஞ்சு விழுந்து கெடக்கு….யாரும் ஓடாதிய….ஓடுனா பலத்த காத்து உருட்டி தள்ளிபுடும் ஒருத்தர் கைய ஒருத்தர் கோத்துக்கங்க விடியட்டும் பாத்துக்கலாம்
பழங்காலத்து கல்தூனால் கட்டப்பட்ட கோவில் மண்டபம்….ஆயிரங்காலத்து பழமையானது…..சூறைகாற்றால் ஒன்றும் ஆகாது என்ற அசராத நம்பிக்கையில்……
அத்தனை பேரும் கோவில் மண்டபத்துக்குள் தஞ்சம் அடைந்தனர் மண்டபத்தின் இருபுறமும் இருந்த மரங்கள் மொத்தமாய் சரிந்து மண்டபத்தின் வாசலை அடைத்தது

ஆதி தனித்து விடப்பட்டு எந்த இடமென்று தெரியாமல் குழம்பிப்போய் எதுவும் தட்டுப்படுகிறதா என்று கண்களை கசக்கி கசக்கி பார்த்துக்கொண்டிருந்தான்…கும்மிருட்டு ஆழ்ந்த நிசப்தம் காற்றும் தன் கைகளை கட்டிக்கொண்டு நிற்பதுபோல் இருந்தது….உடல் வியர்வையில் நனைந்து பிசுபிசுத்தது நண்பர்களை அழைக்க சொல்லி மூளை விடுத்த கட்டளையை ஏற்க… தொண்டை முயற்சித்ததே தவிர குரல் வெளியே வரவில்லை…இன்னதென்று புரிபடாத ஏதோ ஓர் உணர்வு தொண்டைகுழியிலிருந்து நெஞ்சுகுழி வரை பந்தாய் மாறி உருண்டது…கால்கள் பூமியோடு பசை போட்டு ஒட்டிக்கொண்டதை போல் …ஆனமட்டும் முயற்சித்தாலும் நகர்வேனா என்றது… கண்கள் குருடாகி விட்டதோ என எண்ணும் அளவிற்கு இருட்டை தவிர எதுவும் புலப்படவில்லை…. அவன் மனம் எண்ணமிட ஆரம்பித்தது….
புயல் காற்றில் கால்தடுமாறி விழுந்தேனே எதிலோ அடிப்பட்டதே….
ஒருவேளை நான்
மரணித்துவிட்டேனோ….
எண்ணமே பெரும் அச்சத்தை உண்டாக்க…கைகளை கிள்ளி பார்த்தான்…உணர்வில்லை…அடிப்பட்டதாய் நினைத்த பின்னந்தலையை தொட்டுப்பார்த்தான்…கையில் பிசுபிசுப்பாய் தட்டுப்பட்டது…இரத்தம்…கையை கண்ணுக்கு முன்னால் வைத்து கூர்ந்து பார்த்தான்…புறங்கை வரை வழிந்தோடியது……இரத்தத்தின் நிறம் கருப்பாகவா இருக்கும்….அடிபட்ட இடம் ஏன் வலிக்கவில்லை…நான் இறந்துதான் விட்டேனா…இது சொர்க்கமா நரகமா…..அப்படியென்றால் என் ஜானகி இங்கிருப்பாளே…. என் காதலுக்கு பதில் சொல்லாமலே சென்றுவிட்டவளை தேடிப்பிடித்து கேட்கவேண்டுமே…. என்னை உனக்கு பிடித்ததா இல்லையா என்னை விரும்பினாயா இல்லையா….உள்ளுக்குள்ளே குழம்பி தவிக்கிறேன்…உன் பார்வைக்கும் புன்னகைக்கும் அர்த்தம் தேடி அலைகிறேன்….விடை தேடி சொர்க்கத்திற்கே வந்து விட்டேன் என் ஜானகி….எங்கிருக்கிறாய்….நான் என் காதலை சொல்லி காத்திருந்த தினங்கள் வெறும் ஏழுதான்…. சொல்லாமலே புழுங்கி தவித்த தினங்கள் கணக்கில் அடங்குவதா…..அது உன் கருத்தில் நிலைத்ததா….

சொல் ஜானகி…இப்போதாவது சொல்
முகத்தின் கண்கள்தான் இருளில் இருந்தது….
அகத்தின் கண்கள் வெளிச்சத்தை கண்டது….

திடீரென வெட்டிய பெரும் மின்னலொன்று முகத்தின் கண்களை கூசசெய்து திறந்தது….குப்பென்று வீசிய தென்றல் காற்று வியர்வையில் குளித்த உடலை குளிர செய்தது….ஜில்லென்று மனமும் நனைந்தது….எதிரில்….
பத்தடி தூரத்தில்….
நின்றாள்….
ஜானகி….
மல்லிகை சரம் சூடிய பின்னலை ஒருபக்கமாய் தவழ விட்டு…
பாவாடை தாவணியில் பளிச்சென்று..
கையில் அணைத்த புத்தகங்களுடன்…
அலட்சிய பார்வை பூத்த கண்களுடன்..
அதே கடைக்கோடி புன்னகையுடன்….

பரவசம் கொண்டவனாய்…ஆதி அவன் …….அழைத்தான் காதலுடன்….
“ஜானகி….ஜானு…..
அவள் கைகளை நீட்டி அழைத்தாள் அருகில்….
அவன் கால்கள் விடுபட்ட அம்பாய் அவளை நோக்கி தானாக நகர்ந்தது
இடைவெளி இனிதாய் குறைந்து கை தொடும் தூரம்….

நிலவை மறைக்கும் கருமேகமாய் ஒரு கரிய முரட்டு உருவம் அவன் முன்னால்…அவனது அப்பாவை போல் தோற்றத்துடன்…உருட்டிய விழிகளும் முறுக்கிய மீசையும்….
“அப்…அப்பு…அப்புச்சி….நீங்க ஏன் வித்தியாசமா இருக்கிய…இங்க எப்புடி வந்திய…
“ம்ம்ம்….ம்ம்க்க்ம்ம்…
கரிய தொண்டையில் கர்ஜனையாய் உறுமல்…
உருண்ட பெரிய கண்கள் பெரிதாய் விரிந்து மிரட்டியது
“…போ… வூட்டுக்கு போ….
அரட்டலாய் வந்த மிரட்டல்……
“அப்புச்சி ….நா…. ஜானகி…..
“ம்ம்ம்…..போலே……
கோட்டைசுவராய் தெரிந்த அவரின் பின்னால் ஜானகியை தேடினான்…
அகன்ற நெஞ்சமும் பரந்த தோள்களையும் தாண்டி எதுவும் தெரியவில்லை…..
கோபத்தில் விரிந்த விழிகள் சிவந்து மீண்டும் உறுமிய உறுமளில் அடுத்த நொடி திரும்பி ஓடினான்….
பாம்போ கொம்போ கயிற்று சுருளோ எதோ ஒன்றுக்கிடையில் மாட்டி கால்கள் மடங்கி விழுந்து தோள்பட்டையில் கூர்மையான ஒன்று குத்தி இழுக்க சரசர வென கேட்ட சத்தம் காதில் விழுந்து கவனிக்கும் முன்….வாயின் ஓரத்தில் சூடாய் பிசு பிசுவென ஒட்ட…. இரத்தமாய் இருக்குமோ என மூளை யோசித்து முடிக்கும் முன்…..
வெளிச்சம் சூழ்ந்த ஒரு பிரகாசமான இடத்தை நோக்கி படிக்கட்டுகளில் ஏறி பயணித்து கொண்டிருந்தான்…..படிக்கட்டு மேல் நோக்கி உயர உயர நகர்ந்தது….முடிவின் முடிவில் உடல் சூடாக ஆரம்பிக்க கண்களை வெளிச்சம் தாக்க… பல நீண்ட கொம்புகள் அவன் முதுகை தட்டி தட்டி அவன் பெயரை சொல்லி அழைத்தது

மண்டபத்தின் வாசலை மறைத்து கிடந்த மரங்களை அகற்ற ஊர் மொத்தமும் பாடுப்பட்டுக்கொண்டிருந்தது…உள்ளே மாட்டிக்கொண்ட மற்றவர்களும் அங்கிருந்தபடியே கோடாலி கொண்டு மரங்களை வெட்டி வெளியே வீசி கொண்டிருந்தனர்….
பெண்கள் இரவு நடந்தவற்றை பற்றி பேசி பேசி ஆச்சர்யத்தில் மாய்ந்துகொண்டிருந்தனர்…அந்த ஊர்காரர்களுக்கு இது புது அனுபவம்தான்….இதற்கு முன் இப்படி நடந்ததில்லை….ஊர் முழுக்க சாய்ந்த மரங்களும் பிய்ந்து தொங்கிய கூரைகளும் எங்கிருந்தோ பறந்து வந்த குப்பைகளுமாய் தாறுமாறாய் மாறியிருந்தது….வாழை தோப்புகள் மொத்தமாய் அழிந்து சின்னாபின்னமாகி கிடந்தது…கரண்டு கம்பங்கள் முறிந்து விழுந்து கம்பிகள் அறுந்து தொங்கியபடி இருந்தது….பலபேருக்கு சின்ன சின்ன காயங்கள் உண்டாகியிருந்தது….இயற்கையின் கோரதாண்டவமா இல்லை வேறு எதுவும் காரணமாக இருக்குமோ என ஆளாளுக்கு தங்களுக்கு தோண்றியவற்றை பேசிக்கொண்டனர்

“ஏலே…இந்த ஆதி பய எங்கலே போயிருப்பான்
“லே முத்து…எம்மவன் ஆதி எங்கலே
“அவனத்தேன் தேடிக்கிட்டு தெரியுறோம் அப்புச்சி
“என்னலே சொல்லுதிய எல்லாரும் ஒண்ணாதேனே இருந்திய….
“அங்க பாருங்க….அது ஆதிதானே
விழுந்து கிடந்த மரத்தின் கொப்புகளுக்கு இடையில் சுருண்டு கிடந்தான் ஆதி

அவசர அவசரமாக அவன் மேலே கிடந்த மரங்களை அகற்றினர்
“ஆதி ஆதி
“லே ஆதி
“மூச்சு இருக்கா பாருலே
“நீ வேற…. கிறுக்கா…மூச்சு இருக்குலே
“ஆதி…லே மவனே…அய்யா…ராசா
“லே வெரசா ஆஸ்பத்திரிக்கு தூக்குங்கலே
“அய்யோ….எம்மவனுக்கு என்னலே ஆச்சு….அய்யா கருப்பசாமி….எம்புள்ளைய காப்பாத்தி குடப்பா….ஒனக்கு தீ மிதிக்கிறேன் எஞ்சாமி
“அயயயோ எம்மவனுக்கு என்ன….ஒன்னுமில்லயே…..உசுருக்கு ஒன்னுமில்லயே….ஏனுங்க….எம்மவனுக்கு என்னங்க ஆச்சு…
“அப்புச்சி…. எம்மோய்….அவனுக்கு ஒன்னுமில்ல மயக்கமாத்தேன் இருக்கியான்….நீங்களுவோ பதறாதிய….வெலகுங்க வெலகுங்க காத்து வரட்டும்
“எலெய் இங்கன வெயிலா இருக்கு….அங்க நெழளுக்கு தூக்கி போங்க….யாராவது தண்ணி கொண்டு வாங்கப்போய்….
“அய்யோ….இங்க பாருங்க….எம்மவனுக்கு தலையிலயும் தோள்பட்டையிலயும் இரத்தமா இருக்கு….நா என்ன பண்ணுவேன் சாமி…அய்யோ …அய்யோ….எம்புள்ள பொழைக்கணுமே….கருப்பா….கருப்பா காப்பத்துயா…எம்புள்ளய காப்பாத்தி குடுத்துருயா…. ஒனக்கு கிடா வெட்டி பூச போடுறேன் எஞ்சாமி….எங்குலத்த காப்பாத்துயா
செல்வி அழுது ஒப்பாரி வைக்க ….அவளை விலக்கி….
அவனை தோளிலேயே தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு திடு திடுவென்று நண்பர்கள் கூட்டம் முன்னே ஓட….
அவர்களுக்கு பின்னே மாடசாமியும் செல்வியும் ஆதியின் தங்கைகளும் அழுதுகொண்டே ஓடினர்

அங்கே காளியப்பனின் வீட்டில் ராக்கம்மாவின் அலறல் சத்தம் கேட்டு எல்லோரும் அங்கே ஓடினர்…
காளியப்பன் படுத்திருந்த இடத்தை சுற்றி கள்ளிச்செடிகள் மண்டிபோய் கிடக்க அவன் பேந்த பேந்த விழித்தப்படி உட்கார்ந்திருந்தான்…சுவரோரம் ராக்கம்மாவின் மகள்கள் இருவரும் பயந்த விழிகளோடு இருந்தனர்…. ஊரே அதிர்ச்சியில் வாய் பிளந்தது
“அடி ஆத்தி…இதென்ன அதிசயமா இருக்கு ….ஊரோட கடைசி எல்லயில இருக்குற கள்ளிக்காட்டுச்செடி இங்கன எப்புடி வந்தது
“அதானே …அய்யோ நம்மூருக்குள்ள புதுசு புதுசா என்னமோ நடக்குதே
“ஏ ராக்கு…நீ ராவுல இங்கதானே இருந்த
“இங்கதேன் இருந்தே….ராவு பூரா இருட்டுல ஒரு எழவும் தெரியல….இப்பத்தேன் பின்னாடி இருக்க மரம் முறிஞ்சு கெடக்கேன்னு எந்திரிச்சு போய் பாத்துட்டு வந்து உள்ள வாறேன் இப்புடி கெடக்கு….ஒன்னும் புரியலயே….
“எனக்கென்னமோ பயம்மா இருக்கு…அந்த புள்ள ஜானகி செத்ததுலருந்து நடக்குறதெல்லாம் வினோதமா இருக்குலே
“இப்பத்தேன் மாடசாமி மவன் ஆதிக்கு பொடதியில அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கி போயிருக்காவோ…பொழப்பானோ மாட்டானோ தெரியல..
“அப்புடியா….அந்த பயலுக்கு நல்லா வேனுமலே…
“அப்புடியெல்லாம் சொல்லாத ராக்கு…அவன் என்ன பண்ணான் ஒன்ன
“ஜானகி செத்ததுக்கு அவன்தான் காரணமா இருக்கோணும்… எம்மனசுக்கு அப்புடித்தேன் படுது
“அட நீ ஒன்னு….அதெல்லாம் இருக்காது…
“ஏ… மொதல்ல இந்த செடியெல்லாம் அந்தபக்கட்டு தூக்கி போடுற வேலய பாருங்கப்பா…அப்புறம் ஒக்காந்து கத பேசலாம்
“அது போகட்டும் ராக்கு…உம்மவன் ஏன் மந்திரிச்சு வுட்டாப்புல இப்புடி முழிக்கான்…என்ன ஏதுண்டு பாத்தியா இல்லயா…
“அத ஏண்ணே கேக்கீய…எல்லாம் பாத்துப்புட்டேன்….சொரமும் வுடல… இவனும் இப்புடி இருக்கான்….எனக்கு என்ன செய்யறதுண்டு ஒன்னும் புரியல
“சரி சரி வெசனப்படாத…..பொதன் கெழம பெரிய கோடங்கி வாராகல…பூச போட்டு என்னான்னு பாத்துப்புடலாம்….ஆமா மாயாண்டி மச்சான் எங்க
“அவுக ராவுல நடந்த கூட்டத்துக்கு அங்கதான வந்தாக….என்னட்ட கேக்கீய
“சூரக்காத்துக்கப்புறம் அவன பாக்கலயே…வூட்டுக்கு போயிருப்பான்னு நெனச்சேன்…
“என்ன சொல்லுதிய அண்ணே…. அவுக இங்க வரலயே….எங்குட்டு போனாகண்டு தெரியலயே…ராவு பூரா என்னென்னமோ சத்தமும் அழுகையுமா கேட்டுச்சு……இருட்டுல எங்கயும் நகர முடியாம நானும் எம்புட்டு மக்கமார்களும் பயந்துகிட்டேல்ல ஒக்காந்துருந்தோம்

வெளியே சிலபேர் கத்தினார்கள்
“ஏ ராக்கு…ஓடியா ஓடியா….எல்லாரும் வெரசா ஓடியாங்க….
ராக்கம்மா வீட்டு பின்புறத்து வேலியோரம் மாயாண்டி வாயில் ஒழுகிய ரத்தத்துடன் கள்ளிச்செடிகளின் மேலே பிணமாக சரிந்திருந்தார்….கண்கள் நிலை குத்தி இரத்தமாய் நின்றது….
ராக்கம்மாவின் கதறல் ஊரையே ரெண்டாக்கியது
அந்த பெரிய பங்களாவின் வாசலில் அவர்கள் ஒருமணி நேரமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள்….எவளவு கெஞ்சியும் காவலாளி உள்ளே விடுவதாக இல்லை….நல்லவேளையாக உள்ளிருந்து காட்டான் வந்தான்…அவர்களிடம் விஷயம் என்னவென கேட்டு யோசித்து பின் கேட்டை திறந்து அவர்களை அங்கேயே நிற்க சொல்லிவிட்டு அவன் பங்களாவிற்குள் வேகமாய் நுழைந்தான்
அது எம்.எல்.எ.மறுத்தமுத்துவின் ஆஸ்தான பங்களா…அவர் பின்பக்கத்து தோட்டத்து ஊஞ்சலில் உட்கார்ந்து யாரிடமோ போனில் கத்தி கொண்டிருந்தார்…வார்த்தைகள் கடுமையாக பச்சை பச்சையாக வந்து விழுந்துகொண்டிருந்தது…அவர் பேசி முடிக்கும் வரை காட்டான் ஓரமாக நின்று கொண்டான்…அவர் இவனை கவனித்து செல்லை அனைத்து விட்டு என்ன என்று எரிச்சலுடன் கேட்டார்
“அய்யா அதியம்பரத்துலருந்து ஊர் பெரியவுகல்லாம் வந்துருக்காக
“என்னவாம் அவ்னுகளுக்கு…திருவிழா வெளக்கமாறுன்னு கொடத்த தூக்கிக்கிட்டு வசூல் பண்ண வந்திருக்காணுகலா
“இல்லயா…நேத்து அங்க பெரும்புயல் வந்து ஊரயே நாஸ் பண்ணிட்டு போயிருச்சுங்களாம்….நெறைய சேதாரமாயிருச்சாம்…நிவாரண ஒதவி கேட்டு வந்திருக்காங்க…ஒங்களை நேர்ல பாத்து பேசன்னு சொல்றாங்க
“ஆமா நா என்ன மடியில கட்டிக்கிட்டா அலையுறேன்…உடனடியா எடுத்து நீட்டுறதுக்கு…அதெல்லாம் இப்ப பாக்கமுடியாதுன்னு சொல்லு போ…அப்புறமா மாயாண்டிய மட்டும் வந்து என்ன பாக்க சொல்லு
“அய்யா ….அப்புறம் இன்னொரு கெட்ட சேதி
“என்னய்யா
“நம்ம மாயாண்டி செத்துட்டாராமா
“அடடா என்னடா சொல்ற….அடிச்ச புயல் மழையில போய் சேந்துட்டானாமா…அவன வச்சுத்தானே அந்த ஊர்ல மொத்த ஓட்டையும் வாங்கிட்டிருந்தோம்…எலெக்சன் வேரா வருது… இப்ப என்ன பண்றது
“அதில்லங்க அந்த ஜானகி ஆவிதான் வந்து கொன்னுருச்சுன்னு சொல்றாங்க…நம்ம கோடங்கி வீராசாமியதான் கூப்பிட்டு பூச போட சொலிருக்கங்களாம்
“எந்த ஜானகி..என்ன ஆவி
“ஊர் தலக்கட்டுல ஏழாம் தலக்கட்டுகாரர் மணியன் மவ ஜானகி நம்ம காலேஜ்ல படிச்சுதுங்களே
“அந்த புள்ளயா…சரி அவுங்கள்ட்ட நா நாளைக்கு வந்து சேதாரத்த பாக்குறேன் சொல்லு…போய் ஒரு அஞ்சோ பத்தோ குடுத்துட்டு வருவோம்….எலெக்சனுக்கு ஒதவும்… அப்புறம்…அங்க இருக்குற பெரிய கையா பாத்து கைக்குள்ள போட்டுவச்சுக்க….
“சரிங்கய்யா
அவர் யோசனையுடன் நெற்றியை தேய்த்துக்கொண்டே உட்கார்ந்தார்

“லே முத்து…இந்த ஆதி பயலுக்கு எப்டிலே இருக்கு…நல்லாருக்கானா டாக்டர் என்ன சொல்றாக…வூட்டுக்கு எப்பம் கூட்டியாருவாகளா
“நல்லாருக்கான் பெருசு….தலையில ஸ்கேன் போட்டு பாத்தாக….லேசான அடிதானாம் ஒன்னும் பயமில்லன்னு சொல்லிட்டாக…நாளைக்கு இல்லன்னா மறுநா கூட்டியாருவாக
“சேரி. சேரி..ஊர்கூட்டம் நடக்குது…உங்கப்பன வரசொல்லு
“இன்னிக்கு என்னத்த பேச போறிய பெருசு…
“ஏலே…சொன்னத செய்யுலே போலே

“ஏப்பா…இன்னிக்கு நம்மூருக்கு எம்.எல்.எ.வர்றாக…. யாராருக்கு என்ன சேதாரமோ என்ன தேவையோ கேட்டுகுங்கப்பா
“ஆமா என்னத்த பெருசா செஞ்சுடப்போறாரு…கூட நின்னு போட்டோ எடுத்துக்கிட்டு போவாரு…இந்த மாயாண்டிபய இருந்தா பேசி கீசி காரியம் செய்வியான்….அவன் இப்புடி பொசுக்குன்னு போய்ட்டானப்பா
“நாமத்தேன் அவர்கிட்ட கேக்கோணும் நெறைய நஷ்டமாகிப்போச்சு எப்புடி சரிக்கட்டுறது
“நாம கேட்டா அவர் செய்வாரா…மாயாண்டிக்குத்தான் அவர்கிட்ட செல்வாக்கு அதிகம்
“நாமலும்தென் அவருக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சோம்…மாயாண்டி மட்டும்தேன் ஓட்டு போட்டானாக்கும்
“நாம அவர் வீட்டு வாசல்ல எம்புட்டு நேரம் கால்கடுக்க நின்னோம்…அவரை பாக்க முடிஞ்சுதா…மாயாண்டி இருந்தா அவன் மட்டுமாவது உள்ள போய் பாத்து பேசிட்டு ஏதாவது வாங்கிட்டுவந்திருப்பான்
“என்ன இருந்தாலும் மாயாண்டி செத்தது பெரிய இழப்புத்தேன்… அவருக்கப்புறம் அவர் மவனுக்கு தலக்கட்டு மரியாத செய்யணும்…அவன் புத்தி பெசகிபோய் இருக்கானே
“அப்பன் செத்ததுலருந்து ரொம்ப மோசமாயிட்டாம்பா
“காளியபன்தே அரைபைத்தியமாவே ஆயிட்டானெப்பா…..எப்புடி ஆடிக்கிட்டு தெரிஞ்ச பய…இப்புடி ஒரே இடத்துல வெறிச்சுக்கிட்டு உக்காந்துருக்கானே
“ராக்கம்மா பாவம் ரெண்டு பொட்டபுள்ளகள வெச்சுக்கிட்டு என்ன செய்ய போவுதோ
“அந்த புள்ள ஜானகி செத்ததுலருந்து ஊருக்குள்ள என்னென்னமோ நடக்குதப்பா
“கோடங்கிய நாளைக்கே வரசொல்லியாச்சு….சீக்கிரமா என்ன ஏதுண்டு பாத்து அதுக்கு ஒரு பரிகாரத்த பன்னிப்புடனும்…அப்பத்தேன் ஊரு நல்லாருக்கும்
“அதேன் சரி
“ஆனா காசுதேன் எப்புடி பெறட்டுறதுன்னு தெரியல…ஊர் இருக்குற நெலமையில அவனவன் நொந்து போயிருக்கான் இப்ப எப்புடி வசூல் பண்ணுறது
“மணியன்கிட்டயே மொத்த காசையும் குடுக்க சொல்ல வேண்டியதுத்தேன் அவன் பொண்ணு தானே எல்லாத்துக்கும் காரணம்
“அது நல்லாவா இருக்கும் மச்சான்
“வேற என்னத்த பண்றது நீங்களே சொல்லுங்க
“அவன் புள்ளய இழந்துட்டு தவிச்சுகிடக்கான் அவன்கிட்ட எப்புடியா கேக்குறது
“கேட்டுத்தேன் ஆகோனும் வேற வழி
“சரி எல்லாரும் சொல்லுதிய அப்புடியே செய்யுவோம்
“நாளைக்கு பொழுது சாஞ்சப்பொறவு பொண்டு பொடிசுக யாரும் வெளியில வராம பாத்துகிடுங்க….
“ஆமாப்பு ஆமாப்பு

மறுநாள் நடுநிசி…
கோடங்கி வீராசாமி கழுத்து நிறைய ருத்ராட்ச மாலை அணிந்து நெற்றிமுழுக்க பட்டையாய் திருநீறும் முகம் முழுக்க மஞ்சள் பூசி கைகள் முழுக்க கருப்பு கயிறுகளை கட்டி ஒருபக்கமாய் முடிந்த குடுமியில் கயிறும் பாசியும் சந்தனமாலையும் ருத்ராட்சமும் சுற்றி பளபளக்கும் சிவந்த கண்களுடன் அரை நிர்வாணமாய் சீடர்கள் சுற்றி இருக்க நட்சத்திர கோலமிட்டு நடுவில் அமர்ந்திருந்தார் கும்பம் ஒன்றில் பூஜை பொருட்கள் நிறைந்துருக்க அதை சுற்றி எலும்பு துண்டங்களும் இன்னும் பல ஈமகாரிய பொருட்களும் நிறைந்திருக்க அரளி பூக்களை எடுத்து தூவிக்கொண்டே மந்திர உச்சாடனம் செய்துகொண்டிருந்தார்…பக்கத்தில் இருந்த குண்டத்தில் சீடர்கள் சுள்ளிகளையும் முடி தாயத்து எழும்புதுண்டு சாம்பல் புளியம்பட்டை இன்னும் என்னென்னவோ பல பொருட்களை உள்ளே போட்டுக்கொண்டிருந்தனர்…எதிரே சிக்கலான கோலம் ஒன்ரு வரையப்பட்டிருந்தது…அதில் வெள்ளை நிறப்பொடிகள் தூவப்பட்டிருந்தது…மந்திரஜெபம் உக்கிரமாக ஆரம்பிக்க வெள்ளைப்பொடிகள் சிவப்பு நிறமாக மாறி இரத்தமாக திரண்டது…

மெல்லிய அழுகை சத்தம் அந்த பிராந்தியம் முழுதும் கேட்க ஆரம்பித்தது…அழுகை ஒப்பாரியானது…பலபேர் கூட்டாக சேர்ந்து அழுவதுபோல் அப்படி ஒரு சத்தம் அது ஆங்காரமாகவும் மாறியது அவர்கள் இருந்த இடம் தவிர மற்ற இடங்களில் மழையும்காற்றும் சுழண்டடித்தது….மரம் தானாக பியத்துக்கொண்டு அவர்களை நோக்கி வேகமாகவந்து தொடமுடியாமல் பக்கத்திலேயே விழுந்தது….கும்பம் உயரே எழும்பி அந்தரத்தில் நின்றது….வீராசமியின் குடுமி அவிழ்ந்து காற்றில் பறந்தது…சீடர்கள் கண்களில் புழுதி பறந்து குண்டம் வளர்க்க முடியாமல் அவதிப்பட்டனர்….அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து மந்திரம் உச்சரித்துக்கொண்டே இருந்தார்….மேலே கைகளை உயர்த்தி கும்பத்தை கீழே இறக்கினார்…விபூதியை அள்ளி தெளித்தார்
“யாரு நீ என் முன்னால வா உனக்கு என்ன வேணும் என்ன தேவைன்னு சொல்லு உன் ஆசை என்ன சொல்லு நா தீத்து வைக்கிறேன் முன்னால வா
“நடிக்கிரியாலே பரதேசி….நா யாருண்டு ஒனக்கு தெரியாது
“தெரியும்….அது உன்னோட விதி…அப்புடித்தான் போகணும்னு எழுதிருக்கு…அத மாத்த முடியாது…நீ மொதல்ல என் முன்னாடி வந்து உக்காரு உன் கடைசி ஆசை என்ன சொல்லு
“எ ஆச தேவ எல்லாம் அந்த கடவுளாலேயே தீத்து வைக்க முடியாதுலே நீ என்னலே பரதேசி நாயி நீ தீத்து வைக்க போரியோ
“இங்க பாரு இந்த ஊருக்குள்ள நெறைய சேதாரத்த உண்டு பண்ணி வச்சிருக்க…பண்ண வரைக்கும் போதும்…போ இங்கிருந்து…உனக்கு என்ன செய்யணுமோ அத செய்ய சொல்றேன்
“நா ஏலே போகணும்…நீ போ நாயே இங்கிருந்து
“என்ன ரொம்ப கோவபடுத்தாத…கண் மறைவா நின்னாலும் உன்ன இழுத்து இந்த தீக்குள்ள போட்டு பொசுக்கிருவேன்
பயங்கர சிரிப்பு….அண்டம் அதிரும்படி அப்படி ஒரு கோரசிரிப்பு
“அதேன் பொசுக்கிட்டியலே…இன்னும் பொசுக்க என்னலே இருக்கு
“இந்த ஊர ஏன் பாடப்படுத்திக்கிட்டிருக்க….என்னதான் வேணும் ஒனக்கு
“என்ன காப்பாத்தாத கருப்பனுக்கு திருவிழாவே நடக்க கூடாது…அடுத்த வருஷம் இல்ல அடுத்த ஜென்மத்துலயும் நடத்த  வுடமாட்டேன் என்ன காப்பாத்தாத கருப்பனுக்கு பூச எதுக்கு புனஸ்காரம் எதுக்கு…எல்லா தலக்காட்டுக்காரணுங்க வூட்டுலயும் எழவு விழும்…. யாரையும் விட்டு வைக்க மாட்டேன்…பாக்குறியா ….
“நா உன்ன விடுறேனா பாரு
மந்திரம் தொடர்ந்தது….பையில் இருந்த ஒன்றை எடுத்து உயரே தூக்கிப்பிடித்தார்
“வேணா என்ன ரொம்ப உக்கிரமாக்கின உன் கடைசி சந்ததியையும் வுட்டுவைக்க மாட்டேன் இந்த ஊரயே சுடுகாடாக்கிருவேன்
“என்னயே மிரட்டுரியா
கழுத்தில் இருந்த ருத்ராட்சையை கழட்டி காற்றை நோக்கி சுழற்றி கையில் பிடித்திருந்த பையைசுற்றி அரை வட்டம் போல் ஒருசுற்று சுற்றி பின் எரியும் குண்டத்திற்குள் கைவிட்டு எதையோ கைப்பிடிக்குள் அள்ளி அதை அந்த பைக்குள் இட்டு மூன்றுமுறை சுற்றி எரியும் குண்டத்திற்குள் வீசினார்….பயங்கர ஓங்கார சப்த்தத்துடன் குண்டம் கருப்பாய் மாறி புகையாய் நெளிந்தது அது உருவமாய் மாறி கண்களை சிவப்பாக்கி அவரை எரிக்க முயற்சித்தது…..அதன் கழுத்தை கைக்குள் பிடித்து பலம் கொண்ட மட்டும் இழுத்தார்…அது பிடிக்குள் இருந்து திமிறி வெளியேற முயற்சித்தது….மீண்டும் ஆக்ரோஷமாக இழுத்து கும்பத்திற்குள் நுழைத்து ருத்ராட்சையால் இறுக கட்டினார்…

காலையில் ஊர் மொத்தமும் மண்டபத்தின் முன் இருந்தது…அனைவரின் பார்வையும் கோடங்கியின் மீது…
“அய்யா அந்த புள்ளதேன் காரணமா…அது எப்புடி செத்துச்சு….என்ன காரணம்…
“சொல்றேன் சொல்றேன்….அதெல்லாம் நேரம் வரும்போது சொல்றேன்….அதுக்கு முன்னாடி….அது ரொம்ப உக்கிரமா இருக்கு….திருவிழா நடக்க கூடாதுன்னு பிடிவாதமா இருக்கு…ஏற்கனவே ரெண்டு வருஷம் தள்ளி போச்சு….கருப்பன் வேற கட்டுக்குள்ள கெடக்கு ரொம்ப நாள் தலமாடு காக்காது… சீக்கிரமா திருவிழாவ நடத்துங்க…அத மொத்தமா அழிக்கிறது ரொம்ப கஷ்டம்…எட்டூரு மாந்த்ரீகர்களை வரவச்சு பெரிய பூஜை ஒன்னு பண்ணனும் ….கொஞ்ச நாளாகும்…. நிறைய செலவாகும்…எப்போ பூஜை பண்ணனும்னு நா இன்னொருநாள் வந்து சொல்றேன்….இப்போதைக்கு அதை கும்பத்துல அடைச்சு கள்ளிக்காட்டுல புதைச்சு வச்சிருக்கேன்….யாரும் மறந்தும் கூட அந்த பக்கம் போக வேண்டாம்….மனுசனோட இரத்தம் அந்த பூமியில வடிஞ்சா அது ரொம்ப ஆக்ரோஷமா எந்திரிச்சிரும்…. அடக்குறது ரொம்ப கஷ்டமாயிரும்….மாடசாமி உம்மவனுக்கு எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் கல்யாணத்த பண்ணி வை….எப்புடிப்பட்ட ஜாதகம் பாக்கணும்னு நா அப்புறம் சொல்றேன்….அதான் உன் குடும்பத்துக்கு நல்லது….கருப்பன் துணையால இதுவரைக்கும் தப்பிச்சுட்டான்…நேரம் எப்பவும் ஒரே மாதிரி இருக்காது…ராக்கம்மா உம்மவன் கொஞ்ச நாளைக்கு பைத்தியமாவே இருக்கட்டும்…அதான் அவனுக்கு நல்லது….வெசனப்படாதே..சீக்கிறம் சரியாயிடும்…இந்த மருந்த உள்ளுக்கு குடு…சொரம் குறைஞ்சுடும்
அப்புறம் நா சொன்னது எல்லாருக்கும் நினைவுல இருக்கட்டும்…நா கிளம்புறேன்
ஊர்மக்கள் அனைவரும் செய்வதறியாது ஸ்தம்பித்து போய் நின்றனர்….

இரண்டொரு மாதங்கள் கழிந்து மற்றுமொரு ஊர்கூட்டத்தில்…..
“ஏப்பா இந்த மணியன் இப்புடி பண்ணுவாறுன்னு நினைக்கலயப்பா….நம்ம பேச்ச மீறி கிளம்பிட்டாரே… ஊர் கட்டுப்பாட்ட அவரே மீறினா எப்புடி….இப்பம் நாம என்ன செய்யுறது
“என்ன செய்யுறது….வழக்கம்போல ஊர்கட்டுப்பாட்ட மீறினவுகல என்ன செய்யுவிய
“ஊர விட்டு ஒதுக்கி வைப்போம்..ஆனா….மணியன எப்புடி…
“தலக்கட்டுக்காரனுக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாமா
“என்ன அப்புடி சொல்லுற…இங்க எல்லாருக்கும் ஒரே நியாயம்தேன்…ஏற்கனவே அவன் தம்பிய ஊர விட்டு ஒதுக்கி வச்சிருக்கோம் நெனவிருக்கா இல்லயா
“அந்த தம்பி வீட்டுக்கு இவர் போயிருக்காரு…..அது நியாயமா…ஊர விட்டு ஒதுக்கினவன் வீட்டுல யாரும் அன்னம் தண்ணி பொலங்கக்கூடாது….நல்லது கெட்டது போக கூடாது…இதான் ஊர்கட்டுப்பாடு…பொறவு இவர் எப்புடி போவலாம்….
“அட என்ன இருந்தாலும் கூடப்போறந்த பொறப்பு… யாருமில்லாம அனாதையா கெடந்து செத்துபோயிட்டான்….மனசு தாங்காம சாவுக்கு போய்ட்டான்….அதுவும்  பட்டனத்துக்குத்தானே….ஊர் எல்லையிலேயே தலைய முழுகிட்டு வர சொல்லுங்கப்பா….இதே ஊரா இருந்தா நீங்க சொல்றதும் நியாயம்
“நீங்கல்லாம் என்னப்பா சொல்லுதிய

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே பஸ் வந்து நின்றது….அதிலிருந்து பூவாயி கிழவியும் வேலம்மாளும் முதலில் இறங்க பின்னால் மணியன் இறங்கினார்….இறங்கியவர் பஸ்ஸின் உள்ளே தலையை நுழைத்து….
“வாம்மா துளசி….இதான் நம்ம ஊரு…கீழ இறங்குமா…பாத்து பாத்து….
துளசி படிகட்டிலிருந்து இறங்கினாள் இல்லை குதித்தாள்….பெயருக்கேற்றார் போல் பசுமையாய் பளிச்சென்று பச்சை நிற சுடிதார் அணிந்து அடர்ந்த கூந்தலை பாதியில் க்ளிப்பில் அடக்கியிருந்தாள்….
அடங்காத மீதி கூந்தல் காற்றோடு காதல் உறவாடிக்கொண்டிருந்தது….
அதை அநாயசமாய் கைகளில் வளைத்து ஒருபுறமாய் போட்டுக்கொண்டவள்….எதிரில் கூட்டத்தில் நிற்கும் ஆதியை மலர்ந்த சிரிப்புடன் பார்த்தாள்….கண்களில் வியப்பு விளைந்தது…..
ஆதி அவளை கண்டு ஐயத்துடன் விழிகளை சுருக்க…..
அவள் அவனை கண்டு ஆச்சர்யத்துடன் விழிகளை உயர்த்தினாள்…..
கள்ளிச்செடியின் முட்களும்….
துளசிசெடியின் புனிதமும்…..
ஏப்பா….மணியா என்னப்பா இது …ஊர் கட்டுப்பாட்ட மீறி நீ உந்தம்பி சாவுக்கு போனதே தப்பு…இப்பம் அவன் பொண்ண வேற இங்க கூட்டிவந்துருக்கியே….நீயே இப்புடி நடந்துகிட்டனா மத்தவுகல்லாம் என்ன செய்வாக….ஊருக்கு என்ன பதில சொல்லுறது
“எதுக்காக உந்தம்பிய ஊர விட்டு தள்ளி வெச்சோம்
“அவன் பன்னதெல்லாம் மறந்துபோச்சா ஒனக்கு
“உங்கல்யாணத்துக்கு தேதி குறிச்சிருக்கும்போது அவன் கீழ்சாதி பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னான்….அந்த ஊர் காரனுங்க என்ன குதி குதிச்சானுங்க….அந்த சாதிக்கரனுக்கே அவ்ளோ திமிரு….பொசகெட்ட பயலுக…என்னா பேச்சு…ஊர் மத்தியில நின்னு மானத்த வாங்கிபுட்டானுங்க…அதுனாலதானப்பா உங்கப்புச்சி செத்தாரு….உந்தம்பிய ஊர விட்டு தள்ளி வெச்சோம்….அந்த பய அந்த புள்ளய கூட்டிகிட்டு ஊர விட்டே ஓடிட்டான்….அவனால ஊருக்கே கெட்ட பேரா போச்சு.. அப்புடியிருந்தும் நிக்க இருந்த உங்கல்யாணத்த பேசி நடத்திவச்சோம்…உனக்கு தலக்கட்டு மரியாத செஞ்சப்புறமும்தேன் உம்மாமனாரு கல்யாணத்துக்கே ஒத்துகிட்டாரு….மறந்துட்டியா…இப்பம் இந்த புள்ளய கூட்டியாந்து எங்களயெலாம் அவமானப்படுத்திறியா

“ஒங்கள அவமானப்படுத்துறது எ நோக்கமில்ல…இம்புட்டு வருஷமும் அவன் கூட ஒட்டுறவு இல்லாமதேன் இருந்தேன்…இப்பம் ரெண்டுபேரும் வண்டியில போகும்போது விபத்தாகி அங்கனையே உசுர விட்டு அனாதையா அரசாங்க ஆஸ்பத்திரியில கெடக்கான்னு கேள்விப்பட்டதும் மனச கல்லாக்கிக்கிட்டு இருக்க முடியல…இந்த பொட்டப்புள்ள தனியா என்ன பண்ணும்….ரெண்டுபேரும் இல்லன்னதும் பித்துப்பிடிச்சு போய் உக்காந்திருச்சு….அப்புடியே அநாதயா விட்டுபோட்டு வரமுடியல….எம்புள்ள ஜானகி நியாபகம் வந்துருச்சி…இவ செத்தவள நெனைச்சுக்கிட்டு சோறு தண்ணியில்லாம கெடக்கா…இந்த புள்ள கூட இருந்தா அதுக்கும் தொணை எங்களுக்கும் ஆதரவு….அதான் கூட்டியாந்துட்டோம்….
“அதெல்லாம் சரிப்பு… ஆனா ஊர்கட்டுப்பாடுன்னு ஒன்னு இருக்குல்ல….ஒ ஒருத்தனுக்காக அதயெல்லாம் விட்டுர முடியாதுலே
“இப்பம் என்னதேன் சொல்ல வாரீக…ஒடைச்சு சொல்லிபுடுங்க….எம்பேத்தி துளசி  இங்க எங்கூடத்தேன் இருப்பா…வேணும்னா என்னயும் அவளையும் தள்ளிவெச்சுக்கிடுங்க… நா செத்தா கூட ஒரு பயலும் எனக்கு கொள்ளி வெக்கவும் வேணா….இம்புட்டு வருஷம் ஒங்க கட்டுப்பாட்டுக்கு கட்டுப்பட்டுத்தேன் இருந்தோம்…அவன் செஞ்ச தப்புக்கு இந்த பச்ச புள்ள என்ன பண்ணும்…தாய் தகப்பன் இல்லாத பொட்டப்புள்ளய நடுரோட்டுல அம்போன்னு விட்டார முடியுமா.எந்த எடுபட்ட பயலும் என்ன முடிவு வேணா பண்ணிக்குங்கலே….. ஆனத பாத்துக்கங்க….நீ வா தாயி….பூவாயி கிழவி அவள் கையை பிடித்து கொண்டு தோளை வெட்டியபடி போனது….
“கிழவி எப்புடி பேசிட்டு போகுது பாத்தியா பெரியப்பு
“சரிப்பா…மணியா நீ ஒன்னும் நெனைச்சிக்க வேணா…வேற வழியில்ல…தலக்கட்டு மரியாத இனி உங்குடும்பத்துக்கு கெடயாது…..நல்லதுக்கு கலந்துக்க மாட்டோம்….கெட்டதுக்கு மட்டும் வந்து நின்னுட்டு வருவோம்…அது கூட நீ தலக்கட்டுக்காரனா இருந்தனாலதான்….உங்கப்புச்சி மேல இருந்த மரியாதைக்காகவும் இவ்ளவோட நிறுத்திக்குறோம் அம்புட்டுத்தேன்….எல்லாரும் என்னப்பா சொல்லுதிய….
எல்லோரும் ஒருமனதாக ஆமோதித்துக்கொண்டார்கள்
மணியன் முகத்தை வேலம்மாள் கவனித்தாள் அதில் எந்த வருத்தமும் இருந்ததாக தெரியவில்லை
துளசி திரும்பி ஆதியை பார்த்துக்கொண்டே போனாள் அவன் கவனம் வேறு எங்கோ இருந்தது…

“லே ஆதி…அந்த புள்ள துளசிய எங்கயோ பாத்தா மாதிரி இருக்குலே….ஒனக்கு அப்புடி இருக்கா
“அது நம்ம ஆதிய பாத்துகிட்டே இருந்துச்சே…அத யாராவது பாத்தியலாலே
“அப்பம் நீ அந்த புள்ளய பாத்துகிட்டே இருந்துருக்க
“அய்ய….லே…. சோன…ஒன்னு விட்டன்னா அப்டியே காத்துல பறந்துருவ….பாத்துக்கல..நக்கலா பண்றவ….
“அடேலேய்…எனக்கு நியாபகம் வந்துருச்சுலே….நம்ம காலேஜ்ல மூணாம் வருஷம் படிக்கும்போது புதுசா வந்து சேந்துச்சே…..ஒருதரம் அந்த புள்ளயோட சுடிதார் சாலு…. லைப்ரரி கதவிடுக்குல மாட்டி கிழிஞ்சுப்போனப்போ நம்ம ஆதி ஓடிபோய் புதுசா வாங்கிகுடுத்தானே….
“யே… ஆமா…இப்பத்தேன் நியாபகம் வருது….நாம கடைசி நாள் வெளில வந்தப்போ கூட ஆதிகிட்ட ஏதோ பேசனும்னு ஓடி வந்துச்சு…இவன்தான் நிக்காம வந்துட்டான்
“லே ஆதி…என்னலே நீ ஒன்னும் சொல்லாம இருக்க
“இவனுக்கு மண்டைல அடிப்பட்டதுலருந்து பேச்சையே குறைச்சுட்டான்….எப்ப பாத்தாலும் எதையோ யோசிச்சுகிட்டே இருக்கியலே ஆதி…எந்த கோட்டைய பிடிக்கிறதுன்னு இருக்கியோ
“இப்ப என்னலே வேணும் ஒங்களுக்கெல்லாம்…. எனக்கு எப்பவும் ஜானகி முகம்தான் மனசுக்குள்ளேயே நிக்குது…வேற யாரையும் நியாபகப்படுத்தி பாக்க தோணல….அவள யாரு கொன்னதுன்னு இன்னும் கண்டுபிடிக்க முடியல…அவன் யாருன்னு மட்டும் தெரிஞ்சுது..அவனுக்கு என் கையாலத்தேன் சாவு….அவ சாகும்போது எப்புடி துடிச்சிருப்பா…என்ன நெனைச்சிருப்பா….என்னைய நினைச்சிருப்பாளாடே….
“பேசாம நாமளே இவன கொன்னு போட்ரலாம்ணு நெனைக்கேன்…நீங்க என்னலே நெனைக்கிறியே….
“எங்களுக்கும் அதான்லே தோணுது….நேரா சொர்க்கத்துக்கு போய் அந்த புள்ளக்கிட்டயே கேட்டுட்டு வந்துரட்டும்…
“அதுக்கு எதுக்கு சொர்க்கத்துக்கு போகணும்..அதுவே ஆவியா அலைஞ்சு கெடக்கு…
“நீ பாத்தியாலே சந்தனம்
“என்னத்தலே….
“ஆவியத்தேன்
“பாத்துருக்கேனே
“பார்ரா….எப்பலே பாத்த….கோடங்கி கும்பத்துக்குள்ள அடைச்சு பொதைச்சிட்டேன்னு சொல்லிட்டு போனான்
“அட… எங்கம்மா இட்லி அவிக்கும்போது சட்டிக்குள்ளருந்து ஆவி வந்துச்சுலே….
“எங்கம்மா இட்லி அவிக்கும்போது பூதமே வரும் தெரியுமாலே…
“அந்த இட்லியே பூதம் மாதிரிதாலே இருக்கும் எ வென்று….
“அங்க பாருங்கலே நம்ம ஏட்டு வாராப்புல…கூப்பிட்டு ஒடந்தைய போடுவோமாலே
“போட்ருவோம்

“அய்யா ஏட்டையா…என்னய்யா ரொம்ப நேரம் ஸ்டேசன்ல சும்மா ஒக்காந்து போராடிச்சு போச்சுன்னு காலாத்திட்டு போலாம்னுட்டு வந்தியலோ
“என்னங்கடா… இன்னிக்கு வேற யாரும் மாட்டலயா ஒங்கள்ட்ட… .போலீசையே நக்கல் பண்ண ஆரம்பிச்சுட்டிய
“ஏ.. சும்மா நக்கல் பண்ணாதியலே….ஏட்டையா கேஸ் துப்பு துலக்க வந்திருப்பாரு
“எந்த கேசுக்கு பல்லு விளக்க வந்தாரு பழனி….
“அட வெளங்காதவனே… பல்லு விளக்க இல்லடா…துப்பு துலக்க
“அட நீ ஒன்னு…எங்கக்கா கல்யாணத்துல காணாம போன மோதிரத்தையே இன்னும் அவரு கண்டுபிடிச்சு தரல… எங்கக்காவுக்கு பொண்ணு பொறந்து அதுவும் குத்த வச்சுருச்சு மாப்புள
“அலேய்…உங்கக்கா மகளுக்கு ரெண்டு வயசுதானேடா ஆகுது அதுக்குள்ளயா குத்த வச்சுருச்சு
“அட… எங்கக்காவோட மச்சினன் மக…அதுவும் மக தானே…
“ரெண்டுவருஷம்தானேயே ஆச்சு…எப்புடியும் இன்னும் பத்து வருஷத்துல கண்டுபிடிச்சுருவாரிலே
“நம்ம ஏட்டையாவை பத்தி பெருமையா ஒரு விஷயம் சொல்லட்டுமாலே…
“சொல்லு கேப்போம்
“பாட்டாவே பாடி காட்டட்டுமா
“நீ பாடு மாப்புள…சும்மா பாடு….
“ஏட்டையாவை பத்தின பாட்டுன்னா சும்மாவா…பாடு கேப்போம்

“அரச மரத்திலொரு ஆண்டி……
அவன் ஆத்துல விட்டான்……
கோமானம்தாண்டி……
கண்டுபுடுச்சு தரவேண்டி…….
அய்யா ஏட்டையாகிட்ட……. வந்தாண்டி ஆண்டி…….

“ஏட்டையா கண்டுபிடிச்சாரா

“ஆண்டாண்டு காலம்……..
ஆண்டாண்டு காலம்…….
ஓடோடி ஓடி ஆண்டி அவன்…….
ஓடோடி ஓடி…….

அய்யா வாசல்ல …….
ஏட்டையா வீட்டு வாசல்ல……
அடி நின்னாண்டி ஆண்டி…..

“பொறவு….

“கோமணம் காணா…….. கேவலத்தோட…….
அய்யோயய்யய்யோ……

“என்னலே ஆச்சு

“கோமணம் காணா…..
கேவலத்தோட……
அய்யோயய்யய்யோ…….

“ஏலே என்னலே ஆச்சு

“ஆண்டி உயிர விட்டா…ண்டி…..
நம்ம ஆண்டி ……உயிர
விட்டா…ண்டி….
அய்யோயய்யய்யோ..

எல்லோரும் சேர்ந்து கோரஸாக பாடினர்
அய்யோயய்யய்யோ……..

“டேய்… ஒருநாளைக்கு ஏதாவது ஒரு கேச போட்டு ஒட்டு மொத்தமா ஒங்களையெல்லாம் உள்ள தள்ளுறேனா இல்லையா பாருங்கடா வெட்டிபயலுகளா
“இருக்குற கேச கண்டுபிடிக்கிற வழிய காணோம்… புதுசா ஒரு கேஸ் போடுறாராம்…. போங்க ஏட்டையா…ஸ்டேஷன்ல பேன் சும்மா சுத்திகிட்டு கெடக்கு…ஒக்காந்து காத்து வாங்குங்க
“டேய்…. இன்னிக்கு புது எஸ்.ஐ.வர்றாரு….இந்த கேச கண்டுப்புடிக்காம போக மாட்டாரு…நிரந்தரமா இங்கயே இருக்க போறாரு….அப்புறம் இருக்குடா ஒங்களுக்கு…அவர்கிட்ட சொல்லி மொதல்ல உங்களையெல்லாம் உள்ள தள்ள சொல்றேன்…சொல்லிவிட்டு
அவர் முறைத்துக்கொண்டே சென்றார்….அவர் முதுகின் பின்னால் இவர்கள் டான்ஸ் ஆடினர்

“ஹாய்…பிரண்ட்ஸ்…எல்லாரும் எப்டி இருக்கீங்க…என்ன நியாபகம் இருக்கா
“ஒங்கள பத்தித்தேன் பேசிட்டிருந்தோம்…நியாபகம் இருக்கு…
“உங்கப்பாவும் அம்மாவும் ஒரே நேரத்துல இறந்துட்டாங்கள்ள…பாவம்…மனசுக்கு கஷ்டமா இருக்கு…எங்க ஊர்காரனுங்க வேற ஒங்கள இன்னும் கஷ்டப்படுத்திட்டானுங்க
“நானே அத மறக்கணும்னு நினைக்கிறேன்…நீங்க வேற நியாபகப்படுத்தாதீங்க ப்ளீஸ்…
ஆதி…நீங்க ஏன் பேசவே மாட்டேங்குறீங்க..என்ன உங்களுக்கு நியாபகம் இல்லயா
“ம்ம்ம்….இருக்கு
“அன்னிக்கு உங்ககிட்ட ஒரு விஷயம் பேசனும்னு ஓடி வந்தேன்….நீங்க வேகமா போய்ட்டீங்க….
“ம்ம்ம்
“அது என்னனு கேக்க மாட்டீங்களா ஆதி
“கேட்டு என்னாகபோகுது…நீங்க கெளம்புங்க…. இது சிட்டி கிடையாது…கிராமம்…இங்க இப்புடி நின்னு பேசுனா ஊர்க்காரங்க கண்ணு மூக்கு வெச்சு பேசுவாங்க…உங்களுக்குத்தான் கெட்ட பேரு சீக்கிரம் கெளம்புங்க

புழுதியை கிளப்பிக்கொண்டு வேகமாய் ஜீப் ஒன்று அவர்களை கடந்து சென்றது…கொஞ்சதூரம் சென்று மறுபடியும் ரிவர்ஸ் வந்தது…அவர்கள் அருகில் டயரை தேய்த்து நின்றது…கதவை திறந்து கொண்டு அவன் இறங்கினான்…ஆஜானுபாகுவாய் நல்ல உயரத்தோடு கம்பீரமாய்… அணிந்திருந்த உடை சொன்னது அவன்தான் புதிதாய் வந்திருக்கும் எஸ்.ஐ என்று…..
அவர்களை நோக்கி வந்தவன்..நீங்க எல்லாரும்தான் இங்கிருக்குற வேலை இல்லா இளைஞர்கள் பட்டாளமா….
நீங்க யாருமா…..பாத்தா இந்த ஊரு பொண்ணு மாதிரி தெரியலயே
“நா இங்க …எங்க பெரியப்பா வீட்டுக்கு வந்திருக்கேன்
“உங்க பேரு
“துளசி
“நைஸ் நேம்….உங்களுக்கும் உங்கபெயருக்கும் ரொம்ப பொருத்தமா இருக்கு….மழையில நனைஞ்ச துளசிசெடி மாதிரியே இருக்கீங்க….
“சார்…நீங்க எதுவா இருந்தாலும் எங்ககிட்ட பேசுங்க….துளசி நீங்க கெளம்புங்க
“உங்க பேர் என்ன மிஸ்டர்
“ஆதி
“முழுப்பேர் ஆதிசங்கரன் கரெக்ட்டா…பயோடெக் முடிச்சுருக்கீங்க…..அப்பா பேர் மாடசாமி…அம்மா பேர்….செல்வி…..ஒரு அக்காவும் ரெண்டு தங்கையும் ஒரு குட்டி தம்பியும் இருக்காங்க….அக்காவுக்கு கல்யாணம் ஆகி அசலூர்ல இருக்காங்க….புயல்ல மாட்டிகிட்டு அடிபட்டு இப்பதான் பொழைச்சு வந்துருக்கீங்க…நா சொன்ன தகவல் எல்லாம் கரெக்ட்டா இருக்கா மிஸ்டர் ஆதிசங்கரன்

“சார்..நீங்க கேஸ் கண்டுபுடிக்க வந்தியலா…எ பயோடேட்டாவ குடுத்துட்டு போக வந்தியலா
அவன் கண்ணாடியை கழட்டி பாக்கெட்டில் வைத்துக்கொண்டே சிரித்தான்
“கேசுக்கு சம்மந்தப்பட்டவங்க எல்லார் பயோடேட்டாவையும் கொண்டு வந்திருக்கேன் ஆதிசங்கரன்…..முதல் பக்கத்துல நீங்கதான் இருக்கீங்க…..எனிவே ஐ யாம் கதிர்வேல்….கை குடுங்க மிஸ்டர் ஆதிசங்கரன்…..நாம அடிக்கடி மீட் பண்ண வேண்டி இருக்கும்….அப்புறம் இந்த குட்டிசுவர சீக்கிரமே மறந்துடுங்க…..ரொம்ப நாளைக்கு எல்லாரும் இங்க ஒண்ணாவே இருக்க மாட்டீங்க அவன் சிரித்துக்கொண்டே ஜீப்பில் ஏறினான்….
புழுதி பறந்தது……
கதிர்வேல் மணியன் வீட்டிலிருந்து விசாரணையை ஆரம்பித்திருந்தான்..அதே சமயம் கோடங்கி வீராசாமி ஆடி அமாவாசை அன்று பூஜை செய்யவேண்டும் என்றும் ஒருவாரம் முன்னதாக தான் வருவதாகவும் சீடனிடம் சொல்லி அனுப்பியிருந்தார்.ஆதிக்கு பெண் தேடும் படலமும் நடந்துகொண்டிருந்தது…அன்று மூன்றாம் முறையாக கதிர் மணியன் வீட்டிற்கு வந்திருந்தான்
“வாங்க சார்..ஏன் சார் மருவுடியும் வந்திருக்கிய…எம்புட்டு தடவதேன் வெசாரிப்பிய…போதும் சார் எங்களாள முடியல….
“என்ன மன்னிச்சுக்கங்க ஐயா…உங்க பொண்ணோட மரணத்துக்கு என்ன காரபம் யார் காரணம்னு கண்டுபிடிக்க வேணாமா
“கண்டுபிடிச்சு என்னங்கயா ஆகபோவுது… எம்பொண்ணு திரும்பி வரபோறாளா
“என்ன காரணம்னு தெரியாம தவிச்சுகிட்டிருக்கீங்கள்ள…. அ்துக்காகத்தான்…அதோட இது என்னோட ட்யூட்டி…நா செஞ்சுதான் ஆகணும்…ப்ளீஸ் எனக்கு உதவி பண்ணுங்க
“சொல்லுங்க சார்..அன்னிக்கே நெறைய கேள்வி கேட்டுட்டிய…இன்னும் என்ன கேக்கணும்
“உங்க பொண்ணுக்கு தனியா ரூம் எதுவும் கிடையாதுன்னு அன்னிக்கு சொன்னீங்க இல்லயா
“ஆமா சார்….ரெண்டு ரூம்புலயும் மகணுவலும் மருமகளுவலும் இருக்காங்க…நாங்க மூணுபேரும் இங்கய ஒட்டுக்காதான் தூங்குவோம்
“அப்போ படிக்கும்போதும் இங்கதான் ஒக்காந்து படிப்பாங்களா
“இல்ல சார்…இங்க பேரன்பேத்தி எல்லாம் சத்தம் போட்டுட்டு கெடக்கும் மொட்டைமாடியில சின்னதா ஒரு குடிச இருக்குங்க….அது எப்பவும் பொஸ்தகமும் கையுமா அங்கதேன் இருக்கும்…சாப்பாடு கூட இவத்தேன் கொண்டு குடுப்பா…செல நேரம் அங்கயே தூங்கிரும்….எழுப்புனா கோவப்படும்…தொணைக்கு நானும் அங்ஙய தூங்கிறது
“சாகுறதுக்கு முதல்நாள் அவங்க அங்கதான் இருந்தாங்களா
“இல்ல…கொஞ்ச நேரம் ஒக்காந்து படிச்சிகிட்டிருந்துச்சு…நாந்தேன் தூங்கிருமேன்னுட்டு திட்டி கீழ கூட்டியாந்துட்டேன்…இவரு வேற தோட்டத்து காவலுக்கு போயிட்டாரு…மகணுவலும் அவுங்க பொண்டாட்டியயோட ஊருக்கு போய்ட்டாணுவோ…
“அவங்க மறுபடியும் மொட்டைமாடிக்கு போனாங்களா
“இல்ல…அது தூங்கின பொறவு நானும் பக்கத்துலயே படுத்து தூங்கிட்டேனுங்க…காலைல எந்திரிச்சு பாத்தப்போ அது வூட்டுல இல்ல…சரி அது அப்பத்தா வூட்டுக்கு போயிருக்கும்னுட்டு நானும் அவசரமா எங்க அப்புச்சி ஊருக்கு கிளம்பிட்டேன் பொறவுதேன்….
வார்த்தை முடியாமல் அழுகை பொத்துக்கொண்டு வர வேலம்மாள் சேலை தலைப்பை வாயில் வைத்து பொத்திக்கொண்டாள்

மொட்டைமாடியில் துளசி குடிசைக்குள் உட்கார்ந்திருந்தாள்..திடீரென கத்திரவேலை கண்டதும் சட்டென கைகளை பின்னுக்கு இழுத்து எதையோ மறைத்தாள்…அவன் கவனித்துக்கொண்டான்
“துளசி…நீங்க எங்க இங்க
“இவர்தான் எங்க பெரியப்பா
“சார் ஒங்களுக்கு இந்த புள்ளய எப்புடி தெரியும்
“நா ஊருக்குள்ள வந்தப்போ இவங்க அந்த ஆதி க்ரூப் கூட நின்னு பேசிட்டிருந்தாங்க…ஜஸ்ட் யாருன்னு கேட்டேன் அவ்ளோதான்
மணியன் துளசியை கோபமாக பார்த்தார்
“துளசி..என்னமா இது அந்த காலி பயலுவளோட ஒனக்கென்ன பேச்சு வேண்டிகெடக்கு…
“இல்ல பெரியப்பா அவங்க எங்கூட காலேஜ்ல படிச்சவங்க
“அதெல்லாம் டவுனுல….இங்க இப்புடி ரோட்டுல நின்னு பேசக்கூடாதுமா…ஊர்காரணுவோ பாத்தக்கா கண்ணு காது வச்சு பேசுவானுவோ… இனிமே அவனுங்க கிட்ட பேச்சு வச்சுக்காத தாயி
அவள் கதிரை பார்த்து முறைத்துக்கொண்டே பெரியப்பாவிடம் தலையாட்டினாள்…அவன் அவளை பார்த்து தோள்களை குலுக்கியபடி வந்த வேலையை பார்த்துக்கொண்டிருந்தான்…
குடிசை முழுக்க உள்ள பொருட்களை ஆராய்ந்தான்…ஜானகியின் புத்தகங்களை ஒவ்வொன்றாய் புரட்டினான்…ஒரு அட்டை பேட்டி முழுக்க கிடந்த நாவல்கள் கிடந்தது..அதை தலைகீழாய் கொட்டி கிளறினான்…மேற்கூரையில் இடுக்குகளில் சொருகி வைத்திருந்த காகிதங்களை எடுத்து பார்த்தான்…கூரையின் மேல் இருந்த பூந்தொட்டிகளையும் விட்டு வைக்கவில்லை…மாடி முழுக்க சுற்றி வந்தான்…துளசி கையில் வைத்திருந்த கவர் காற்றி பறந்து மூலையில் ஒதுங்கியது…யாரும் பார்க்கவில்லை பிறகு எடுத்துக்கொள்ளலாம் என அவள் அசால்ட்டாக இருக்க அது அவனின் சட்டைப்பையில் சமத்தாய் புகுந்துகொண்டது

“மிஸ் ஜானகி….மிஸ்தானே…
“ம்ம்
“நா உங்ககிட்ட கொஞ்சம் விசாரிக்கணுமே
“எங்கிட்ட என்ன விசாரிக்கணும்
“அய்யோ சார்…அந்த புள்ள இப்பத்தேன் இந்த ஊருக்கே வந்துருக்கு….அது ஜானகிய பாத்தது கூட கெடையாது…..
“அப்டியா துளசி..நீங்க ஜானகிய இதுவரைக்கும் பாத்ததே இல்லயா
“இ..இல்ல…பாத்ததில்ல
“ஓ…அப்போ அவங்களோட மரணத்தை பத்தி உங்களுக்கு எதுவும் தெரியாது இல்லயா
முகத்தை திருப்பிக்கொண்டு கூறினாள் “தெரியாது…
“அவங்க உங்களுக்கு அக்காவா தங்கையா
“அவ என்ன ஒரு வயசு சின்னவ
“ஓ…..அப்போ கன்பார்மா நீங்க இதுவரைக்கும் ஜானகியை பாத்ததே கிடையாது இல்லயா….
“எத்தனை தடவைதான் கேப்பீங்க
அவளை பார்த்து சிரித்துக்கொண்டே கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டவன்
“நாம மறுபடியும் சந்திப்போம் துளசி…

“லே ஆதி ஒன்ன பாக்க போலீஸ்காரவுக வந்துருக்காவ….சார் எம்புள்ளய எதுக்கு சார் வெசாரிக்க வந்துருக்கிய….அவன் எந்த தப்புதண்டாவுக்கும் போகமாட்டான் சார்….
“பயப்படாதீங்க…..சும்மா பிரண்ட்லியாத்தான் பாக்கவந்தேன்…
“என்ன சார்….எங்க வீட்டுக்கு வந்துருக்கிய….பயோடேட்டா இன்னும் மிச்சம் இருக்கா என்ன….
“ஒரு சின்ன என்கொயரி…நாம அப்டியே உங்க தோட்டத்துல நடந்துகிட்டே பேசலாமா ஆதி….தோட்டம் ரொம்ப நல்லாருக்கு….வீட்டுக்கு தேவையான காய்கறிகள் எல்லாமே போட்ருக்கீங்க போல…பிரஸ்ஸா அப்டியே பறிச்சு சாப்பிடலாம் இல்ல…
“என்ன சார் விஷயம்….எதுக்கு என்ன பாக்க வந்துருக்கிய
“ம்ம் சொல்றேன் சொல்றேன்…இறந்துபோன ஜானகிய உங்களுக்கு தெரியுமா
“ஒரே ஊர் சார்…சின்ன வயசுலருந்தே தெரியும்….
“அவங்க எப்புடி
“எப்புடின்னா….புரியல
“இல்ல….நீங்க அவங்களுக்கு ரொம்ப க்ளோஸா….எல்லார் கூடையும் நல்லா பழகுவாங்களா
“நா அவ கிட்ட…அவங்க கிட்ட பேசுனதில்ல….அவங்க யார்கூடயும் அவளவா பேச மாட்டாங்க….ஸ்கூல் காலேஜ் போற நேரம் தவிர அவங்கள எங்கயும் பாக்கமுடியாது
“இங்க நெறைய பசங்க அவங்க பின்னாடி சுத்தினதா கேள்விப்பட்டேனே
“ஒரு பொண்ணு பாக்க ரொம்பஅழகா இருந்தா எல்லா பசங்களும் பின்னாடி சுத்ததான் செய்வாங்க….அதுக்காக அந்த பொண்ண தப்பா நினைக்க முடியுமா சார்
“அப்போ நீங்களும்தானே ஆதி
“…….சார்……
“நீங்க அவங்கள ரொம்ப சின்சியரா லவ் பண்ணதா உங்க பிரண்ட்ஸ் சொன்னாங்களே….. அவங்க இறந்த அன்னிக்கு நீங்க ரொம்ப கதறி அழுதத ஊரே பாத்துருக்கு…. எல்லாரையும் விசாரிச்சதுல அதேதான் சொன்னாங்க….நீங்க என்ன சொல்றீங்க
“……..ம்…..லவ் பண்ணேன்….நா மட்டும்தான் லவ் பண்ணேன்….அவ என்ன விரும்பினாளான்னு கூட எனக்கு தெரியாது…..பதில் சொல்லாமலே போய் சேந்துட்டா
“பதில் சொல்லாமலே போய் சேந்துட்டாளா…. இல்ல பதில் சொல்லலன்னு போய்சேர வச்சுட்டீங்களா
சட்டென்று ஆதி ….கதிரின் சட்டையை கொத்தாக பிடித்தான்……அவன் போலீஸ்காரன் என்பதையும் மறந்து..
“வார்த்தையை அளந்து பேசுங்க….. அவள கொன்னு நா வாழணும்னு எந்த அவசியமுமில்ல….அந்த அளவுக்கு நா மோசமானவனுமில்ல….அவள நா எந்தளவுக்கு நேசிச்சேன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்….அவள யாரோ கொன்னுருக்காங்க….அது யாருன்னு கண்டுபிடிச்சு அவன என் கையால கொல்லணும்னு காத்துகிட்டிருக்கேன்

“சட்டைய விடுங்க ஆதி….கோவத்துல யார்கிட்ட என்ன பேசனும்னு தெரியாம பேசிக்கிட்டிருக்கீங்க….. நா யார்மேல வேணாலும் எப்புடி வேணாலும் சந்தேகப்படலாம்….அதான் என்னோட ட்யூட்டி….உங்க மேல எந்த தப்பும் இல்லன்னா…..நீங்க கோவப்படவேண்டிய அவசியமே இல்ல….கூல்….
அவன் சட்டையை விடுத்தான் முகத்தில் கடுமை மிச்சமிருந்தது
“நீங்க அவங்களை கடைசியா எப்போ பாத்தீங்க….
“சாகுறதுக்கு ரெண்டுநாள் முன்னாடி…
“எங்க பாத்தீங்க
“கோயில்ல
“பேசினீங்களா
“இல்ல
“இல்லயே…நீங்க அவங்களோட பேசிட்டிருந்ததா வாசல்ல இருந்த பிச்சைக்காரன் சொன்னானே
அவன் முகம் மாறியது
“இல்ல சார்….நான்தான் பேசலன்னு சொல்றேன்ல….அந்த பிச்சைக்காரனுக்கு கண்னே ஒழுங்கா தெரியாது….அவன் லா ஒரு சாட்சியா சார்
“அந்த கோயில்ல நாலு பிச்சைக்காரங்க இருக்காங்க….அதுல எந்த பிச்சைக்காரன்னு நா சொல்லவே இல்லயே ஆதி
ஆதி முகம் சுருக்கினான்
“சார் நீங்க கேக்குற தோரனைய பாத்தா என்னய டார்கெட் பண்ற மாதிரி இருக்கு
“அப்டியா தோணுது உங்களுக்கு….ஓகே….அப்போ அப்டியே இருக்கட்டும் நீங்க அவங்க கூட பேசவே இல்லன்னு சொல்றீங்க இல்லயா….
“சார் தயவு செஞ்சு கெளம்புறீங்களா…உண்மையான குற்றவாளிய வெரசா கண்டுபுடிங்க சார்….
“அத நா பாத்துகிறேன் மிஸ்டர்….எத வச்சு அவங்க கொலைதான் செய்யப்பட்டிருப்பாங்க ன்னு உறுதியா சொல்றீங்க….யாரோட டார்ச்சராவது தாங்கமுடியாம தற்கொலை கூட பண்ணிருக்கலாம் இல்லயா
“என்ன சார் சொல்ல வர்றீங்க
“நீங்க ஏன் கோவப்படுறீங்க…. ஜஸ்ட் ஒரு யூகம் அவ்ளோதான்….பட் இதுல என்ன சிக்கல்னா….போஸ்டமார்ட்டம் ரிப்போர்ட் இது கொலை இல்லன்னு சொல்லுது….தற்கொலை பண்ணிக்கிட்டதுக்கான அறிகுறியும் இல்ல…..சோ…. இது என்ன மாதிரியான மரணம்னு தெரியல….அதான் குழப்பமா இருக்கு….ஏதோ பேய் பிசாசுதான் கொன்னுருக்கும்னு உங்க ஊர்ல பேசிக்கிறாங்களே….உங்களுக்கு அதுல எல்லாம் நம்பிக்கை இருக்கா ஆதி
“இதுவரைக்கும் இல்ல….நடக்குறதெல்லாம் பார்த்தா நம்பலாமோன்னு தோணுது
கதிர் சத்தமாக சிரித்தான்….
“பேயை புடிச்சு ஜெயில்ல போடமுடியாதே ஆதி…..இட்ஸ் ஓகே…பாக்கலாம்….நா அடிக்கடி உங்கள தொந்தரவு பண்ணவேண்டி இருக்கும் வேற வழியில்ல ….ஓகே….நா வரட்டுமா
போகும் அவனின் முதுகை துளைத்து இரத்தம் குடிக்க நினைத்தது ஆதியின் கண்கள்

கோவில் தெப்பகுளத்தில் கல்லை விட்டெறிந்து அதில் சுழலும் வளையத்தில் சுழன்றுகொண்டிருந்தாள் துளசி….இரண்டொரு மாதங்களில் வாழ்க்கை எப்படி தலைகீழாய் புரண்டது….மனதில் என்னென்னவோ லட்சியங்களை சுமந்து வாழ்ந்தவள்…இப்போது இந்த சிறிய கிராமத்தில் தத்தளித்துக்கொண்டு….நேரம் போவதே கடினமான ஒன்றாக இருக்கிறது….ஏகப்பட்ட கண்டிஷன்கள் வேறு….அங்கே போகாதே இங்கே போகாதே…..அப்படி செய்யாதே இப்படி செய்யாதே…..சே…. என்னோட அப்பா இப்படி ஒருநாளும் என்னை அடக்கியதே இல்லயே…..
இங்கிருந்து என்ன செய்யப்போகிறோம்….யாருக்காக நான் இங்கிருக்க வேண்டும்…..பேசாமல் நம் ஊருக்கே போய்விட்டால் என்ன….படிப்பிருக்கிறது…ஏதாவது ஒரு வேலை தேடிக்கொண்டு….

எண்ணங்கள் முடியும் முன் வாசலில் ஆதி நிற்பதை கண்டாள்… தனியாக வந்திருக்கிறான்….மலர்ச்சியுடன் வாசலுக்கு ஓடினாள்

“ஹாய் ஆதி….ஒரே ஊர்ல இருந்தாலும் பாத்துக்க முடியரதில்ல…உங்க ஊர்ல நிறைய கட்டுப்பாடெல்லாம் போட்டு வச்சிருக்காங்க
“இங்க அப்டித்தான்….
“உங்க கிட்ட நா நிறைய பேசணும் ஆதி…வாங்க கோயில்ல ஒப்பவா யாரும் இல்ல….அங்க தெப்பகு்ளத்துல உக்காந்து பேசலாமா
அவன் அந்த தெப்பகுளத்தையே வெறித்து பார்த்தான்….கண்கள் கலங்கியது
“என்னாச்சு ஆதி…என் திடீர்னு ஒரு மாதிரியாயிட்டீங்க
“என்ன பேசணும் துளசி…..
“குளத்துல உக்காந்து பேசலாமே
“இல்ல நா இந்த கோயிலுக்குள்ளயே வர்றத்தில்லன்னு இருக்கேன்….நீங்க இங்கயே சொல்லுங்க….எல்லாரும் காட்டுவேலை முடிஞ்சு வர்ரநேரம்….வெரசா சொல்லிட்டு வீட்டுக்கு கெளம்புங்க
“என்ன ஆதி நீங்க…நா என்ன சொல்ல தவிக்கிறேன்னு நிஜமாவே உங்களுக்கு புரியலையா…இல்ல என் வாயால சொல்லணும்னு விரும்புறீங்களா
அவன் அவளையே கேள்வியாய் பார்க்க….
பெருமூச்சு விட்டபடி தலையை குனிந்துகொண்டாள்…..விழிகள் பூமியில் புதிதாய் முளைத்திருந்த ஆவாரம்பூ செடியை அளந்துகொண்டிருந்தது
“எப்டி சொல்றதுன்னு தெரியல.ஆதி..என்ன காரணம்னு சொல்ல தெரியல…பட்… நா உங்கள…..உங்கள…விரும்புறேன் ஆதி…அன்னிக்கே அத சொல்றதுக்குத்தான் தேடி வந்தேன்…நீங்க கேக்காமலே போய்ட்டீங்க…உங்களுக்கு என்ன….
இன்றும் அவன் கேக்காமலேதான் போய்கொண்டிருந்தான்…..தூரத்தில் வந்து கொண்டிருக்கும் ராக்கம்மாவின் பார்வையில் பட்டால் வீணான பிரச்சினைகளுக்கு வித்தாகுமே என எண்ணி அவள் குனிந்தவுடனே அவன் நடக்க ஆரம்பித்துவிட்டான்…
போகும் அவனை வெற்று பாரவையால் பார்த்தவள்….”நிஜமாவே இவனுக்கு புரியுதா …..இல்ல புரியாத மாதிரி நடிக்கிறானா….
தலையை இடத்தும் வலதுமாக ஆட்டிக்கொண்டவள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்….ஸ்டேஷனை கடந்து போகையில் ஏட்டையா வந்து அவளை வழி மறித்தார்….
“இந்தா பொண்ணு….சார் ஒன்ன உள்ள வரசொன்னாரு
“எதுக்கு….
“ஏதோ விசாரிக்கனுமா உள்ள வாம்மா
அவளுக்கு கோவம் பொத்துக்கொண்டு வந்தது
“என்ன நினைச்சுட்டிருக்காரு உங்க சாரு….ரோட்டுல போய்கிட்டிருக்கவள கூப்பிட்டு விசாரிக்கணும்னா என்ன அர்த்தம்….
அவன் வெளியில் வந்தான்…
“ஹலோ துளசி…எதுக்கு இவ்ளோ கோபம்….உங்கள அரஸ்ட் பண்ண சொல்லலயே….
“ஏன் அரஸ்ட் பண்ணிதான் பாருங்களேன்
“ஹவுஸ் அரஸ்ட் பண்ணலாம்னு இருக்கேன்….என்ன பண்ணுவீங்க என்றான் சிரித்துக்கொண்டே
“ஹலோ சார்….தேவையில்லாம எங்கிட்ட எதுக்கு வம்பு பண்றீங்க
“வம்பு பன்றேனா… நோ..நோ…நா என்னோட ட்யூட்டியதான் பாக்குறேன்
“சம்மந்தமே இல்லாதவள விசாரனைங்கிற பேர்ல தொல்ல பண்றதுதான் உங்க ட்யூட்டியா சார்
மறுபடியும் சிரித்தான்
“நா விசாரிக்கும்போது நீங்க எல்லா உண்மைகளையும் சொல்லிட்டா நா உங்கள தொந்தரவு பண்ணவே போறதில்ல
“என்ன சார் இது…சுத்த நான்சென்சா இருக்கு…..நா என்ன உண்மை சொல்லணும்….
“உங்களுக்கு ஜானகிய முன்னாடியே தெரியும்னு நா சொல்றேன்…பாத்ததே இல்லன்னு நீங்க சொல்றீங்க….போய் சொல்றது தப்பில்லயா துளசி
அவள் அவனை முறைத்தாள்
“சார்….நீங்க தேவையில்லாம கற்பனை பன்னிக்காதீங்க…..நா அவள பாத்ததில்ல…. அவ்ளோதான்
“அப்படின்னா இந்த போட்டோவுல ஜானகி கூட இருக்குறது யாரு….உங்கள மாதிரியே இருக்குற வேற யாராவதா இருக்குமோ
அந்த போட்டோவில் ஜானகியும் துளசியும் கன்னம் உரசியபடி வெண்முத்து பற்கள் பளிச்சிட போஸ் கொடுத்தபடி நிற்க…..
அவள் அதிர்ச்சியாய் கதிரை மிரட்ச்சியுடன் பார்த்தாள்

“இப்போ உள்ள வந்து பொறுமையா பேசலாமா
அவன் கைகளை கட்டியபடி கேக்க…அவள் அமைதியாக உள்ளே சென்றாள்….
“சொல்லுங்க துளசி….
அவள் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது….
அவன் நாற்காலியில் சாய்ந்துகொண்டு அவள் பதிலுக்காக காத்திருந்தான்
தரையில் தத்தளிக்கும் கெண்டை மீன் போல் அவள் விழிகள் துடித்தது….அவள் அனுமதியில்லாமலே கண்ணீரானது அவள் கன்னத்தை தழுவியது…புறங்கையால் துடைத்துக்கொண்டாள்….
நாற்காலியில் சாயந்திருந்தவன் நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டான்
“சொல்லுங்க துளசி
ஒருமுறை கண்மூடி மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு பேச ஆரம்பித்தாள்
“அப்பா அடிக்கடி பெரியப்பா குடும்பத்தை பத்தி பேசுவாரு…. அவருக்கு பெரியப்பா மேல ரொம்ப பாசம்….ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல அம்மாவ கல்யாணம் பண்ணிக்கிட்டாரு…அதனால பெரியப்பாவோட கல்யாணம் நிக்கிற அளவுக்கு போனத நினைச்சு அப்பா அடிக்கடி வருத்தப்படுவாரு…மறுபடியும் அவரோட சொந்த ஊருக்கு வரணும்னு அவருக்கு ரொம்ப ஆசை….எனக்கு ஒரு வயசு இருக்குறப்போ அம்மா இன்னொரு பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில அட்மிட் ஆயிருந்தாங்க…..அங்கதான் பெரியம்மாவும் பிரசவத்துக்கு வந்திருக்காங்க….பெரியப்பா பொண்ணுதான் பிறக்கணும்னு ரொம்ப ஆசையா பெரியம்மாகிட்ட பேசிட்டு இருந்தத அப்பா பாத்துருக்காரு…..அப்போ அம்மாவுக்கு பொண்ணு பிறந்துச்சு….அவங்களுக்கும் பெண் குழந்தைதான் பிறந்திருக்கு…கருத்தடையும் பண்ணிட்டாங்க….ஆனா பிறந்த கொஞ்ச நேரத்துல மூச்சு திணறி இறந்துருச்சு….பெரியப்பாவுக்கு தெரிஞ்சா அவர் உடைஞ்சு போயிடுவாறேன்னு அப்பா அவருக்கு பிறந்த குழந்தைய பெரியம்மா பெட்ல மாத்தி வச்சிட்டாரு.அவரால பெரியப்பாவுக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு பிரதிபலனா பெரியப்பாவோட ஆசைய நிறைவேத்தின சந்தோசம் அப்பாவுக்கு….
ஒருநாள் நானும் அப்பவும் வண்டியில போய்கிட்டிருந்தப்போதான் ஜானகி ரோட் கிராஸ் பண்றப்போ பின்னாடி வந்த ஸ்கூட்டில அடிபட்டு கெள விழுந்துட்டா….பெருசா ஒன்னும் அடியில்ல…கால்லதான் சின்ன காயம்.நாங்கதான் ஹாஸ்பிடல் தூக்கிட்டு போய் மருந்து வச்சு கட்டிட்டு காலேஜ்ல டிராப் பண்ணோம்….அப்போ அவளப்பத்தி விசரிச்சப்போதான் பெரியாப்பாவோட பொண்ணுன்னு தெரிய வந்தது….அப்பாவுக்கு அவ்ளோ சந்தோசம்….எங்கப்பா அப்போதான் அவ எங்கூடபிறந்தவன்னு நடந்த உண்மைய சொன்னாரு…இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேணான்னு கேட்டுகிட்டாரு….அதுக்கப்புறம் ஜானகி எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவா….சித்தப்பா சித்தி அக்கான்னு அவ்ளோ பாசமா இருப்பா.நானும் அவளும் ரொம்ப க்ளோஸ் ஆயிட்டோம்…ரெண்டு பேரும் ஒரே நேரத்துல ஒரே ஊர்லயே கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒண்ணாவே இருக்கணும்னு நினைச்சோம்….ஆனா இப்டி பொசுக்குன்னு போவான்னு நா நினைச்சே பாக்கல….அவ இறந்து ரெண்டு மாசத்துக்கப்புறம்தான் அவ தோழி மூலமா எங்களுக்கு தெரிய வந்தது….நா அப்போ காலேஜ்ல இருந்தேன்….அப்பா எனக்கு போன் பண்ணி என்ன வரசொல்லிட்டு பெரியப்பாவை பாக்குறதுக்காக ஊருக்கு போய்ட்டிருக்கோம் பஸ்டாண்டுல வந்து நில்லுன்னு சொன்னாரு….கொஞ்ச நேரம் கழிச்சு அவங்க ரெண்டு பேருக்கும் ஆக்சிடன்ட் ஆயிடுச்சுன்னு போன் வந்தது….
அவளிடம் விம்மல் வெடித்தது….அம்மா அம்மா…ஸ்பாட்லயே…..
முகத்தை மூடிக்கொண்டு குலுங்கினாள்….

அப்பா சாகுறதுக்கு முன்னாடி எங்கிட்ட பேசினாரு….அவர் வண்டியில போய்ட்டிருந்தப்போ எதிர்ல ஜானகி நிக்கிறமாதிரி இருந்துருக்கு….பதட்டத்துல வண்டிய நிறுத்துணப்போ பின்னாடி வந்த வேன் மோதிருச்சாம்…
அப்பா கீழ விழுந்தப்போ ஜானகி பக்கத்துல உக்காந்து அக்காகிட்ட நா மன்னிப்பு கேட்டேன்னு சொல்லுங்கப்பா ன்னு சொன்னாளாம்….அந்த நேரத்துல எனக்கு ஒண்ணுமே புரியல…அப்பா வலி தாங்காம வேதனை தாங்க முடியாம ஏதோ உளறுறாருன்னு நினைச்சேன்….செத்துப்போனவங்க ஆவியா வந்து பேசுவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்ல…இங்க வந்து பாத்தா இந்த ஊர்ல நடந்ததையெல்லாம் கேட்டா…என்னால நம்புறதா வேண்டாமான்னு தெரியல…..அவ இந்த ஊரையே அழிக்க போறதா சொல்றாங்க….அவ எதுக்கு அப்டி செய்யணும்….

“சரி…உங்க பெரியப்பாகிட்ட இந்த உண்மைய ஏன் சொல்லல
“இனிமே சொல்லி என்னாகபோகுதுன்னு சொல்லல….தெரிஞ்சா இன்னும் வருத்தப்படுவாங்கதானே….அவ அவங்க பொண்ணாவே அவங்க மனசுல வாழ்ந்துட்டு போகட்டுமே
“எஸ்…அதுவும் கரெக்ட்தான்….சரி அப்புறம்….
“அப்புறம் என்ன சார் சொல்லணும்…அதான் எல்லாத்தையும் சொல்லிட்டேனே
“அவ்ளோதானா….வேற எதுவும் இல்லயா
“வேற… வேற சொல்றதுக்கு என்ன சார் இருக்கு

“இந்த கடிதத்துல ஜானகி இன்னொரு விஷயம் குறிப்பிட்டிருக்காங்க… அதுக்கு உங்ககிட்டதானே பதில் இருக்கு
“கடிதமா
“யா….ஜானகியோட புக்ஸ்க்குள்ள இருந்தது….இந்தாங்க படிச்சுப்பாருங்க
அதை நடுக்கத்துடன் கையில் வாங்கினாள்…. அதில் ஜானகியின் சாய்வான மிக சிறிய எழுத்துகள் ஓடியது….

“அக்கா….நீ என்னட்ட ஒரு உதவி கேட்ட..ஆனா ஒனக்கு ஒதவி செய்ரதுக்கு பதிலா நானே ஒனக்கு ஒபத்திரவமா ஆயிட்டேன்….என்ன மன்னிச்சுடு….நா இத தெரிஞ்சு செய்யல…நானே எதிர்பாராதவிதமா நடந்தது….ஒனக்கு தெரிஞ்சா நீ என்ன நம்புவியா கோவப்படுவியான்னு தெரியல….இருதலை கொள்ளி எறும்பா மாட்டிகிட்டு முழிக்கேன்….அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன கொன்னே போட்ரும்….ஒங்கிட்ட நா இன்னொரு வெசயம் சொல்லாம மறைச்சுட்டேன்..உன்னோட பிறந்தநாள் அன்னிக்கு சர்ப்ரைஸா சொல்லலாம்னு இருந்தேன்…நா ஒருத்தர லவ் பண்றேன்…..ரொம்ப நல்லவர்…எனக்கு பிடிச்சது….உனக்கும் பிடிக்கும்….அக்கா….. ஆனா….நேத்து திடீர்னு இப்புடி நடந்துருச்சு….எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல…பித்துக்குளி மாதிரி முழி பிதுங்கி போய் நிக்கேன்….விதியோ…இல்ல என் தலையெழுத்தோ தெரியல… அப்பா தோட்டத்து காவலுக்கு போயிட்டாரு…அம்மா இப்பதான் என்ன திட்டி கீழ வந்து தூங்குன்னு கூட்டிட்டு வந்துச்சு….எனக்குத்தான் தூக்கமே வரல….இப்போ மொட்டை மாடியில வந்து ஒக்காந்துருக்கேன்….எப்பவும் அம்மா துணைக்கு இருப்பாங்க….இப்போ பயம்மாவும் இருக்கு….மனசுக்குள்ள எண்ணவோ பண்ணுது……உடனடியா உங்கிட்ட ஓடிவந்து அழுகணும் போல இருக்கு….நீதான் காலேஜ் டூர் போய்ட்டியே….நீ எப்போ வருவ…நேத்து நைட் நீ போன் பண்ணப்போ உங்கிட்ட சொல்லிடலாம்னு நினைச்சேன்….எப்டி சொல்றதுன்னு தெரியல…..அதான் மனசுல இருக்குறத லெட்டரா எழுதி பாக்குறேன்….எனக்கு என்ன செயறதுன்னு தெரியல…..ஒண்ணுமே புரியல….அழுகை மட்டுந்தான் வருது…நீ பக்கத்துல இருந்தா நல்லாருக்கும்னு தோணுது…ஒனக்கு வெசயம் தெரியும்பொது என்ன தப்பா எடுத்துக்குவியோ….
பேசாம நா இத……
அதோடு கடிதம் முடிந்து போயிருந்தது குழப்பமாய் கதிரை ஏறிட்டு பார்த்தாள்.
“சார் இதுல அவ என்ன சொல்ல வரான்னு சத்த்தியமா புரியல…..என்ன விஷயம்னு தெளிவாவே சொல்லாம விட்ருக்காளே….
“அவங்களுக்கு ஏதோ ஒரு விஷயம் நடந்துருக்கு…அது என்னனு உங்களால யூகிக்க முடியுதா
“ஒருவேளை அவகிட்ட யாராவது தப்பா…
“நோ நோ…ரிப்போர்ட்ல தெளிவா இருக்கு….அவங்க மேல ஒரு சின்ன காயம் கூட கிடையாது….அந்த மாதிரியெல்லாம் எதுவுமே நடக்கல
“பின்ன…இவ என்ன சொல்ல வர்றான்னு புரியலயே
“நீங்க அவங்க கிட்ட என்ன உதவி கேட்டீங்க….
“நானா….நா….

“சார் உங்கம்மா வந்துருக்காங்க
“அம்மாவா….என்ன திடீர்னு…
ஒரு நிமிஷம்….துளசி நீங்க கிளம்புங்க….அப்புறமா இதை பத்தி பேசலாம்…யார்கிட்டயும் இந்த விஷயத்தை பத்தி பேச வேண்டாம்
அவள் கடிதத்தை பற்றிய சிந்தனையுடனே வெளியேறினாள்
அவளை பார்த்துக்கொண்டே கதிரின் அம்மா லட்சுமி உள்ளே வந்தாள்
“வாங்கம்மா…என்னம்மா ஒரு போன் கூட பண்ணாம வந்துருக்கீங்க
“நீ இங்க எப்புடி கஷ்டப்படுறியோன்னு ஒரே கவலையா இருந்துச்சு…அதான் ஒரு எட்டு பாத்துட்டு போலாம்னு வந்தேன்….ஆமா யாருடா இந்த பொண்ணு பாத்தா நல்ல பொண்ணாட்டம் இருக்கு
“ஏம்மா ஸ்டேஷனுக்கு வர்ற பொண்ணுங்கள்ளா கெட்ட பொண்ணாதான் இருக்கணுமா
“அப்டி இல்லடா…இந்த பொண்ணுக்கு ஏதும் பிரச்சினையா…..
கண்ணுமுழி எல்லாம் கலங்கிப்போய் போகுதே
“அதெல்லாம் அப்புறம் விரிவா சொல்றேம்மா..இப்போ வீட்டுக்கு போலாம் வாங்க…பஸ்டாண்டுல இருந்து நடந்தா வந்தீங்க…முன்னாடியே சொல்லிருந்தா வண்டி அனுப்பியிருப்பேன்லம்மா
“இருக்கட்டும்டா…. ஒன்னும் கஷ்டமில்ல…வீடு ரொம்ப தூரமா
“இல்லம்மா பக்கத்துலதான்….பஞ்சாயத்து தலைவரோட தோப்பு வீட்டுலதான் தங்கியிருக்கேன்….வீடு எளிமையா இருந்தாலும் ரம்யமா இருக்கும்மா…காலைல எந்திருச்சா பறவைகளோட சத்தம் காதுக்கு இனிமையான கேக்கும்போது மனசு அப்டியே சந்தோஷமா மாறிடும்…பேசாம நா இங்கயே நிரந்தரமா இருந்துடலாம்னு இருக்கேன்…என்ன சொல்றீங்கம்மா….நீங்களும் இங்கயே வந்துடுங்க
“இல்லப்பா….நா எப்டி இங்க வரமுடியும்….நா நடத்திட்டிருக்குற டிரஸ்ட்ட விட்டுட்டு இங்க இருக்க முடியாதில்லயா…உனக்கு பிடிச்சிருந்தா இங்கயே இரு…அப்டியே கல்யாணத்தையும் பண்ணிக்கோ….நீ தனியா இருக்கியென்னு நானும் கவலைப்படாம இருப்பேன்
அவன் மவுணமானான்….அம்மா அவன் முகத்தில் ஏதாவது தெரிகிறதா என்று தேடிப்பார்த்தார்கள்….

ஆதி நண்பர்களுடன் வழக்கம்போல் குட்டிசுவரும் அரட்டையுமாய் உட்கார்ந்திருக்க….
இன்று ஒரு முடிவு தெரியாமல் விடுவதாய் இல்லை என துளசி அவனை நோக்கி வந்தாள்
“ஆதி…இன்னிக்கு நா கண்டிப்பா ஒரு முடிவு தெரியாம இங்கிருந்து போறதா இல்ல…நீங்க சொல்ற பதில்லதான் நா இந்த ஊர்ல இருக்குறதும் ஊர விட்டு போறதும் அடங்கியிருக்கு….எனக்கு இங்கருக்கவே முடியல…..நைட் தூங்கமுடியல….யாரோ என்ன கழுத்த பிடிச்சு வெளியில தள்ளுரா மாதிரி கனவு வருது….. போ போன்னு விரட்டுராமாதிரியே இருக்கு….நிம்மதியே இல்ல….. உங்களுக்காகத்தான்…..உங்களுக்காகத்தான் நா இன்னும் இங்க இருக்கேன்…..புரியுதா ஆதி
அவன் அமைதியாய் தலை குனிந்தபடி இருக்க….
“லே…ஆதி….பாவம்லே அந்த புள்ள…நல்ல பதிலா சொல்லு….போனவளை நெனைச்சுக்கிட்டு இருக்குறவங்களை வதைக்கிறது என்னலே நியாயம்
“செந்தில் நீங்க என்ன சொல்றீங்க
“துளசி…நீங்க தப்பா நெனைச்சுக்கிடாதிய….அவன் உங்க தங்கச்சி துளசியத்தேன் விரும்பினியான்…. அது சாகுறதுக்கு ஒருவாரம் முன்னாடி அதுகிட்ட போய் லவ் பண்றேன்னு சொன்னியான்….அந்த புள்ள ஒரு பதிலும் சொல்லாம போயிருச்சு….அது மனசுல எதுவும் இல்ல….இவந்தேன் இன்னும் அதையே நெனைச்சுக்கிட்டு மறுகிக்கிட்டு கெடக்கான் லூசுப்பய
துளசி நெருப்பை மிதித்தாற்போல் அதிர்ந்தாள்…..ஜானகியின் கடிதத்திற்கு இதுதான் அர்த்தமா….அவள் காதலிக்கிறேன் என்று எழுதியிருந்தது ஆதியைத்தானோ…இது தெரியாமல் நானே அவளை எனக்கு தூது போக சொன்னேனே…ஆதி ஜானகியின் ஊர் என்று தெரிந்துகொண்ட பிறகு….அவள் ஆதியை விரும்புவதாய் ஜானகியிடம் கூறி தனக்காக அவனிடம் பேசசொல்லி சொல்லியிருந்தாள்….ஆனால் ……ஆனால் என்னமோ ஒரு குழப்பமாகவே இருந்தது….எங்கோ தவறு நடந்திருக்கிறது….அன்று என்னதான் நடந்திருக்கும்….கடிதத்தின் வரிகள் மறுபடியும் மனதிற்குள் ஓடியது…அவள் சொல்ல வந்த விஷயம் மட்டும் தெளிவாகவே புரியவில்லை….முன்னுக்கு பின் முரனாகவே இருந்தது…..
அவளின் மவுனத்தை ராசுவின் குரல் கலைத்தது
“துளசி….நீங்களும் ஆதியும் கல்யாணம் பண்ணிக்கணும்னு நாங்க நெனைக்கிறோம்…..நீங்க ஆதிய விரும்புறது நிசம்தானே…. ஆதி நடந்தது எல்லாத்தையும் தூக்கிபோட்டுட்டு துளசிய கட்டிக்க….அதேன் ஒனக்கு நல்லதுன்னு எனக்கு தோணுது…..ஜானகி ஒ காதலுக்கு பதில் சொல்லாமயே போய் செந்தூருச்சு…அது மனசுல என்ன இருந்துச்சுன்னு யாருக்கும் தெரியல…அதே தப்பதேன் இப்ப நீயும் பண்ற…நல்ல யோசிச்சு பாரு….துளசிய ஏத்துக்குறதுல ஒனக்கு என்னலே செரமம்….வெரசா நல்ல பதிலா சொல்லு….துளசி நீங்க கவலப்படாதிய…..நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம்….நாங்க பாத்துக்குறோம்
ஆதி நிமிர்ந்து துளசியை பார்த்தான்…அவளும்…..இருவர் கண்களும் நேருக்கு நேராய் சந்தித்து மீளமுடியாமல் நின்றது….அவள் கண்களில் அவன் மீதான காதல் நிறைகுடமாய் தழும்பி வழிய…..அதை தன் கண்களால் நிரப்பிக்கொண்டிருந்தான் அவன்…இதழ்கள் இறுக்கமாய் மூடிக்கொண்டன….பேச நினைத்தும் வார்த்தைக்கு பஞ்சமாய் போயிற்று….
இமைகளும் இமைக்க மறந்து உறைந்துபோனது…….
“அப்டி போடு மாப்புள…லேய்….நாங்கல்லாம் பக்கத்துல இருக்கோம்லே
நண்பர்களின் கேலிகூத்தில் இருவரும் தன்நிலை திரும்பி புன்னகையுடன் தலை தாழ்த்திக்கொண்டார்கள்…..

அங்கே கள்ளிகாட்டில் கள்ளிச்செடிகள் முட்களை தானாய் உதிர்த்து கொட்டி மனிதர்களின் இரத்தவாடைக்காக புயல் காற்றாய் சுழன்றுகொண்டிருந்தது….கும்பம் புதைத்த இடம் மேடாய் ஏறியது….மேலே முளைத்திருந்த கள்ளிச்செடி ஒன்று பிடுங்கி எறியப்பட்டதுபோல் தூரபோய் விழுந்தது….இரத்தம் இரத்தம் என்று அது கூப்பாடு போட்டுக்கொண்டிருக்க…..அதற்கு தீனி போடுவதற்காகவே ஒருவன் கிளம்பி வந்துகொண்டிருக்கிறான்….அவன் விதி அங்குதான் எழுதப்பட்டிருக்கிறது….அவன் விதியானது அவனை கைபிடித்து அழைத்து வந்துகொண்டிருக்குறது

“அம்மா வாங்க ….இந்த ஊர ஒரு ரவுண்ட் போய் பாத்துட்டு வரலாம்..வயல்வெளி தோப்புன்னு கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்
“நீ ஸ்டேஷன் போக வேண்டாமா
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சினையில்லம்மா….வாங்க
“அங்க என்னப்பா கூட்டமா இருக்கு
“ஊர்கூட்டம் போட்ருக்காங்க…இந்த மண்டபம் ஆயிரங்காலத்து பழமையானது…பொதுகூட்டமா இருந்தாலும் வீடுகள்ள நடக்குற நல்லகாரியங்களா இருந்தாலும் இங்கதான் வச்சு பேசிமுடிப்பாங்களாம்…. பெரும்பாலான விசேஷங்கள் எல்லாம் இங்கதான் நடத்துவாங்க….பின்னாடி இருக்குறது பேச்சியம்மன் கோயில்மா….விசேஷமான சக்திவாய்ந்த  அம்மனாம்….சங்கிலி கருப்பனோட தங்கச்சியாம் கருப்பனுக்கு நடத்துற எல்லா பூஜையும் இந்த அம்மனுக்கும் நடத்துவாங்களாம் கருப்பனுக்கு பூஜை செய்யாம இங்க செஞ்சா அம்மன் ஏத்துக்க மாட்டாங்களாம் சன்னதி கதவு தானா மூடிக்குமாம் ஆச்சர்யமா இருக்குல்ல…உள்ள போய் பாக்கலாமா
“வேணா கதிர்…உங்கப்பா இறந்ததுலருந்து நா எந்த கோயிலுக்குள்ளேயும் போறதில்ல….சாமி கும்பிடுறதையே விட்டுட்டேன் ..நாம போலாம்பா
“கூட்டத்துல என்ன விஷயம் பேசுறாங்கன்னு கேப்போம்னு வாங்க

“ஏப்பா….கோடங்கி வந்துருக்காரு…வீட்ல இருக்கிறவங்க எல்லாரும் மண்டபத்துக்கு வந்து சேருங்க
“சாமி நீங்க அன்னிக்கு பாத்துட்டு போனதுலருந்து எந்த பிரச்சினையும் இல்ல…கொஞ்சம் நிம்மதியா இருக்குங்க
“அப்டியெல்லாம் சாதாரணமா விட்டுடமுடியாது….அத முழுமையா அழிக்குற வரைக்கும் நிரந்தரமா நிம்மதியா இருக்க முடியாது புரிஞ்சுதா….அமாவாசை நிறைஞ்ச வெள்ளிக்கிழமை வருது…அது வரைக்கும் நா இங்கதான் இருப்பேன்..எட்டுநாள் தொடர்ந்து காளி பூஜை பண்ணவேண்டி இருக்கு…..இந்நிலருந்து யாரும் ஆறுமணிக்கு மேல வீட்டை விட்டு வரக்கூடாது…வீட்டுக்கு விலக்கான பெண்கள் வீட்டு வாசப்படியை விட்டு தாண்டக்கூடாது… எல்லாரும் சுத்த பத்தமா இருக்கணும் அசைவம் சமைக்கக்கூடாது….
புதன் கிழமை எட்டூரு மாந்த்ரீகர்களும் வந்துருவாங்க….அவங்க தங்குறதுக்கான ஏற்பாடுகளை செஞ்சு குடுத்துருங்க….இடையில எந்த அசமபாவிதமும் தடங்கலும் நடக்காம பாத்துக்கணும்….பூஜை தடைப்பட்டுச்சுன்னா மறுபடியும் ஏற்பாடுபண்ண நாளாகும்….அது வெளிய வர்றதுக்குள்ள நாம இந்த பூஜைய செஞ்சே ஆகணும்
பேசிக்கொண்டிருந்தவரின் கண்கள் அங்கு வந்து சேர்ந்த கதிரையும் அவன் அம்மாவையும் சுருங்கி விரிந்து கண்டது….
“அம்மா நீங்க சாமி கும்பிடுறதையே விட்டுடீங்கள்ல….ரொம்ப தப்பு பண்ணிட்டீங்க….உங்களுக்கு இந்த பேசியம்மன்தான் குலதெய்வம்…போய் முதல்ல அவள தரிசனம் பண்ணிட்டு வாங்க….உங்க பையனுக்கு பெரிய கண்டம் ஒன்னு காத்துகிட்டிருக்கு……

கள்ளிக்காடும் காத்துக்கொண்டிருக்கிறது
“லட்சுமி அம்மா நீங்க உங்க குல தெய்வத்த கை எடுத்து கும்பிட்டு வருசங்களாச்சு இல்லயா…இப்போ உங்க பையன் பெரிய கண்டத்துல இருக்காரு…போங்க அந்த ஆத்தாள தரிசனம் பண்ணிட்டு வாங்க….அவ மனசு வச்சான்னா உங்க பையன் பிழைக்க வழியிருக்கு…அதோட….
கோடங்கியின் பேச்சை அதற்குமேல் கேக்க லட்சுமியம்மாவுக்கு விருப்பமில்லை
“போதும் போதும்…நா சாமியையும் நம்புரதில்ல ஆசாமியையும் நம்புரதில்ல….உயிருக்கு ஆபத்தான வேலைன்னு தெரிஞ்சேதான் என் பையனை போலீசாக்குனேன்….போற உயிரை தடுத்து நிறுத்த யாராலையும் முடியாது….என் புருஷன் நல்லாருக்கணும்னு கோயில் குளம் பூஜை விரதம்னு இருந்தவதான்….அவர் அல்ப ஆயுசுலேயே போய்ட்டார்…சாமியும் இல்ல பூதமும் இல்ல…கதிர் வா போலாம்
கூட்டத்தில் இருந்த முதியவர் தடுத்து நிறுத்தினார்
“அம்மா அப்படியெல்லாம் பேசாதீங்க…சாமி எது சொன்னாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்….அவர் சொல்றதை கேளுங்கம்மா
“ஐயா…அவங்க போகட்டும் விடுங்க…எப்ப என்ன நடக்கணும்னு இருக்கோ அது நடக்கும்
கோடங்கியை ஒரு பார்வை பார்த்தவாறு முன்னே நடக்கும் அம்மாவை தொடர்ந்த கதிர்….
“அம்மா என்னம்மா ஆச்சு…அவர் கோயிலுக்குள்ள போய் சாமி கும்பிடுங்கன்னு தானே சொன்னாரு..அதுக்கேன் இப்டி பேசணும்
“என்ன கதிர் நீ எப்போ இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் நம்ப ஆரம்பிச்ச
“அதில்லம்மா….நா இந்த ஊருக்கு வந்ததிலருந்து அந்தகோயிலுக்குள்ள போனதில்ல….இன்னிக்கு என்னமோ உள்ள போய் பாக்கலாம்னு தோணிச்சு…அவ்ளோதான்
“இல்லடா…அந்த கோடங்கிய பாக்கவே எனக்கு பிடிக்கல….அவனும் அவன் தோற்றமும்…அவன் என்ன நமக்கு உத்தரவு போடுறது….இத்தனை வருஷமும் சாமி கும்பிடாமதான் உன்ன வளத்துருக்கேன்….நீ என்ன கெட்டுப்போய்ட்ட இப்போ….நா என்மேல நம்பிகை வச்சு இவளவு தூரம் வளந்துருக்கேன்…இப்போ என்னய நம்பி நூறு பேர் இருக்காங்க..நீயும் அப்படியே இரு….நமக்கு சாமியும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்…சாமியை நம்பி நம்பி இழந்ததுதான் அதிகம்…நா நாளைக்கு ஊருக்கு கிளம்புறேன்… நீ வந்த வேலைய முடிச்சுட்டு சீக்கிறம் வந்துசேரு…இங்க இருக்க வேண்டாம்
அம்மாவின் இறுக்கமான முகம் பார்த்தவன் அதற்குமேல் ஒன்றும் பேசாமல் வீட்டில் இறக்கிவிட்டு ஸ்டேசன் சென்றான்

“சாமி அந்த அம்மா இப்புடி பேசிபுட்டு போய்ட்டாங்களே
“அத விடுங்க…நாம நம்ம வேலைய பாப்போம்…நாளைக்கு காலம்பற அஞ்சுமணிக்கெல்லாம் முதல் பூஜையை ஆரம்பிச்சுருவேன்…எல்லாரும் குளிச்சு முழுகி குடும்பத்தோட இங்க வந்துரனும்…எல்லாரும் வந்தே ஆகணும்..புரிஞ்சதா
“சாமி…அது வந்து..மணியன் குடும்பத்த ஊரவிட்டு ஒதுக்கி வச்சிருக்கு… அவனும் வரணுமுங்களா
“எதுக்காக அப்டி செஞ்சீங்க
நடந்ததை கூறினார்கள்….கோடங்கி தாடியை தடவிக்கொண்டே சிரித்தார்
“அந்த துளசி கீழ் ஜாதி பொண்ணுக்கு பிறந்த பொண்ணுன்னு தான் தலக்கட்டு பதவிய பிடுங்கி ஒதுக்கி வச்சுருக்கீங்களா
“ஆமா சாமி..ஊர்கட்டுப்பாடு எல்லாருக்கும் ஒன்னுதானுங்களே
“அப்போ ஜானகி…
“சாமி…
“ஜானகியும் அதே கீழ் ஜாதிக்கு பிறந்தவதான்…மணியனுக்கு பிறந்தது இறந்துருச்சு…ஜானகி அவன் தம்பி பொண்ணு…
ஊர் முழுக்க கசமுஸா என்று பேசிக்கொண்டார்கள்
“அப்போ மணியன் இம்புட்டு நாளா ஊரையே ஏமாத்திட்டுத்தேன் இருந்தானுங்களா
“அவன் மேல எந்த தவறும் இல்ல…இது அவன் அறியாம நடந்தது….நீங்க யாரும் கோபமோ வருத்தமோ படவேண்டாம்….நாளைக்கு அவன் குடும்பமும் வரட்டும்…அவன்தான் முக்கியமா வரணும்…இப்போ எல்லாரும் கிளம்புங்க

மணியனுக்கு கோடங்கி சொன்ன விஷயங்கள் காதுக்கு எட்டியது…அவனும் வேலம்மாளும் அதிர்ந்துபோனார்கள்…துளசி அப்போதுதான் ஆதியின் சம்மதம் கிடைத்த சந்தோசத்தில் பாட்டுபாடி துள்ளிக்கொண்டே வந்தாள்…. அவனுடன் தனியாக அமர்ந்து நிறைய பேசவேண்டும் என எண்ணியிருந்தாள்….எத்தனை நாட்கள் இரவில் தூக்கம் வராமல் அவனை நினைத்து புரண்டிருக்கிறாள்….என்னென்னவோ பேசவேண்டும் என மனம் முழுக்க எப்படியெல்லாம் கற்பனை செய்து வைத்திருந்தாள்…. இன்று அவன் கண்களை நேருக்குநேராய் சந்தித்தபிறக்கு அத்தனையும் மறந்து போயிற்றே…..இந்த வாய் ஏன் பூட்டு போட்டுக்கொண்டது….கஷ்டப்பட்டு பேச வாய் திறந்த சமயத்தில் ஊரில் உள்ளவர்கள் அங்கு வந்துகொண்டிருந்ததால் அவள் அவசரமாக வரவேண்டியதாயிற்று…நாளை காலையில் ஊர் எல்லையில் இருக்கும் கருப்பன் கோவிலில் தனியாக சந்திப்பதாக ஏற்பாடு…பெரும்பாலும் வெயில் பொழுதில் அங்கு யாரும் இருக்கமாட்டார்கள்…அவள் ஊரில் இப்படி பயந்து பயந்து பார்க்கவேண்டியதில்லை…நினைத்தால் பார்க் பீச் காபி ஷாப் என்று எங்குவேண்டுமானாலும் சந்தித்துக்கொள்ளலாம்… இங்கு ஏகப்பட்ட சட்ட திட்டங்கள்….இப்படி திருட்டுத்தனமாக பார்த்துக்கொள்வது கூட நன்றாகத்தான் இருக்கிறது…ஜானகி கூட இந்த ஊரை பற்றி நிறைய சொல்லியிருக்குறாள்….அதென்னடி அப்படி ஒரு ஊரு…நம்ம இஷ்டத்துக்கு இருக்கமுடியாம என்ன கட்டுப்பாடு…பேசாம நீ இங்கயே செட்டிலாயிடு…அந்த ஊர்காரனையெல்லாம் கல்யாணம் பண்ணிக்காத என்று இவள் சொல்வதுண்டு….இப்போது அவளே…நினைத்தால் ஆச்சர்யமாக இருந்தது.. ஜானகியை பற்றி நினைத்ததும் சட்டென்று மனதில் கவலை வந்து குடிகொண்டது…கூடத்தில் மாட்டியிருந்த அவளது புகைப்படம் முன்னாடி நின்று அவளையே பார்த்தாள்…. கள்ளமில்லாத புன்னகையுடன் அழகான ஜானகி அவளை அச்சுறுத்தினாள்… ஜானு நீயும் ஆதிய லவ் பண்ணியாடி….நீ எங்கிட்ட சொல்லிருந்தா கண்டிப்பா நா விலகிபோயிருப்பேன்…ஏன்னா அவன் உன்னதான் அதிகமா நேசிச்சுருக்கான்….இப்போ நீ இல்லாத இடத்த நிறப்புறதுக்குத்தான் நா அவன கல்யாண பண்ணிக்கப்போறேன்….நீ அவன் மேல கோவப்படக்கூடாது….இது உன் வீடு…இங்க நீ விட்டுட்டுப்போன
இடத்துலயும் நான்தான் இருக்கேன்…எனக்காக நீ நிறைய விட்டுபோயிருக்க….உனக்காக நா என்ன செய்யணும் ஜானு…நீ ஆவியா அலையுரேன்னு எல்லாரும் சொல்றாங்க…என் கண்ணுக்கெல்லாம் தெரிய மாட்டியா..எங்கிட்டயெல்லாம் வந்து பேசமாட்டியாடி…உன்னோட ஆத்மா சாந்தியடையுனும்….நீ எப்பவும் கஷ்டப்படக்கூடாது

“துளசி
“என்ன பெரியம்மா…அய்யோ ஏன் பெரியம்மா அழுறீங்க… பெரியப்பா நீங்களும்…என்னாச்சு உங்களுக்கு…ஜானகிய நினைச்சு அழறீங்களா
“ஏம்மா எங்க கிட்ட சொல்லல
“அது…என்ன சொல்லல
“ஜானகி….நாங்க பெத்த பொண்ணு இல்லயா….யார கீழ் ஜாதிக்காரின்னு பேசி விரட்டுனோமோ அவ பெத்த பொண்ணத்தேன் இம்புட்டு நாளா நாங்க வளத்தோமா…. எனக்காக உங்கப்பன் அவன் பெத்த குழந்தையையே தூக்கி குடுத்துட்டானா…இது எப்புடி நடந்துச்சு
அவள் அன்று நடந்ததை சொன்னாள்
மணியனும் வேலம்மாளும் ஜானகியின் புகைப்படத்தை கட்டிக்கொண்டு அழுதார்கள்…
“தம்பி நீ பெத்த ஒருபுள்ளய என்னட்ட குடுத்த….அத நா எமங்கிட்ட தூக்கிகுடுத்துட்டேனே….இப்போ இன்னொரு புள்ளயயையும் எங்கிட்ட ஒப்படைச்சிட்டு நீ பெத்த பொண்ணுக்கு தொணையா எமங்கிட்டயே போய்ட்டியாடா படுபாவிபயலே….நீ கவலப்படாதய்யா இந்த புள்ளய நா பத்தரமா பாத்துப்பேன்….கல்யாணம் காட்சின்னு பண்ணி வச்சு நல்லபடியா வாழவைப்பேன்… அதுவரைக்கும் என்கட்ட வேகாது
மணியன் குலுங்கி குலுங்கி அழுதார்..துளசி அவர்களை சமாதானப்படுத்தினாள்…

பூவாயி கிழவியும் ஓடி வந்தது… இறந்துபோன தன் இரண்டாவது மகனுக்காக இன்னொருமுறை தலைமுடியை விரித்துக்கொண்டு ஒப்பாரி வைத்தது …துளசியை ஆரதழுவிக்கொண்டு அழுதது….ராசாத்தி…எந்தங்கம்… ஒரு சாடைக்கு பாக்க ஜானகி மாதிரியே இருக்கியென்னு நெனைச்சேன்….மகாலட்சுமியாட்டம் ரெண்டு பொட்டபுள்ளைகள பெத்துபுட்டு இப்புடி எந்த நல்லகாரியமும் பாக்காம போய் சேந்துட்டானே எம்மவன்…அலேய் மணியா…எம்பேத்திக்கு வெரசா ஒரு மாப்புள்ளய பாரு….நல்ல படிச்ச புள்ளயா வசதியான புள்ளயா பாத்து கட்டிவக்கோணும்….இந்த ஊர்காரனுங்க நல்ல காரியத்துக்கெல்லாம் கலந்துக்க மாட்டோம்னு சொன்னானுவல்லோ…அவனுங்க அத்தன பெரும் மூக்குல விரல வைக்கிற மாதிரி அசலூர்க்காரனுங்கள மொத்தமா கூட்டியாந்து ஜாம் ஜாம்னு கல்யாணத்த நடத்திப்புடனும்…தப்பித்தவறி கூட இந்த ஊர்ப்பயலுகளுக்கு பொண்ண குடுக்கப்படாது…என்னலே சொல்லுதே
“ஆம்மாம்மோய்….நா நெனச்சேன் நீ சொல்லிபுட்ட….நா ஏம்மா இந்த ஊர்காரனுக்கு எம்மவள கட்டிகுடுக்கேன்….எம்மவ கல்யாணத்த எப்புடி நடத்துறேன்னு மட்டும் பாரு
“எம்பேத்தி கல்யாணத்த பாத்துபுட்டுத்தேன் நா கண்ண மூடுவேல்ல….வெரசா மாப்புள பாக்குற ஜோலிய பாரு
“இந்தா…இப்பவே தரகன பாத்தாறேன் அம்மோய்…. எப்புடிப்பட்ட மாப்புள்ளய தேடிப்பிடிக்கேன் பாரு….துளசி…ஆத்தா… இனிமே எங்கள அப்பன் ஆத்தான்னே கூப்பிடு தாயி..

துளசிக்கு தலை சுற்றியது…இதென்னடா இது பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்பார்களே…அது போல் அல்லவா இருக்கிறது…இப்போ எப்டி பெரியப்பாவிடம் ஆதியை பற்றி பேசுவது…திடீரென்று எவனையாவது மாப்பிள்ளை என்று நிறுத்தினால் எப்படி தட்டி கழிப்பது…மனம் குழம்பினாலும்…நடக்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று சமாதானம் செய்துகொண்டாள்..நாளை ஆதியுடன் தனித்திருக்கும் தருணத்திற்காக அவள் மனம் இப்போதிருந்தே வெட்கத்தில் அலைபாய்ந்துகொண்டிருந்தது…. ஆதி உனக்கு ரொமான்ஸ் எல்லாம் செய்ய தெரியுமா…கிண்டலாக கேலி பேசி வம்பு செய்வாயா….என்னிடம் முத்தம் கேட்டு கெஞ்சுவாயா….என்னை கள்ள பார்வை பார்ப்பாயா….என்னிடம் காதல் வசனம் பேசுவாயா….துரத்தி பிடித்து சிணுங்க வைப்பாயா…என்னை தூக்கிக்கொண்டு வயல்வரப்பில் சுற்றுவாயா….என்னை எப்படி காதலிக்க போகிறாய் என் காதலா….நிலவே இன்று நீ சீக்கிரம் மறைந்து போய் விடு…. சுடும்சூரியன் விரைவில்வரட்டும்….என் ஆதியின் காதலில் நான் நனையவேண்டும்…அந்த நேரம்….
ஜானகி புகைப்படத்தின் முன் ஏற்றப்பட்டிருந்த விளக்கில் இருந்து கரும்புகை எழும்பி அவளது நாசியை நெருட செய்தது….இருமிக்கொண்டே திரும்பியவள் புகைப்படத்தை பார்த்து ஒருகணம் கண்களை கசக்கினாள்….கரும்புகை புகைப்படத்தின் நடுவில் கோடாய் படர்ந்து ஜானகியை இரண்டாய் பிரித்திருந்தது…ஒரு பாதியில் வாயில் ஒழுகும் இரத்தமும் மறுபாதியில் வாயில் முடிக்கற்றைகளும் தொங்கியது…படக்கென்று எழுந்து விளக்கை போட்டாள்… புகைப்படம் பழைய மாதிரியே இருந்தது….மறுபடியும் விளக்கை அணைத்துவிட்டு நகர்ந்து சென்று வேலம்மாள் அருகில் சென்று இடித்துக்கொண்டு படுத்தாள்…
“என்னம்மா
“ஒன்னுமிலம்மா
“துளசி….நாளைக்கு என்ன நடந்தாலும் அத அப்புடியே மறுக்காம ஏத்துக்க…எல்லாம் உன் நன்மைக்குத்தான்….பயப்படாத….அம்மாவும் அப்பாவும் அந்த பேச்சிஆத்தாலும் அவ அண்ணன் கருப்பனும் உங்கூடவே இருக்கோம்…..
வேலம்மாள் பேசியது புரியாமல் அந்த குரல் அம்மாவின் குரல் போல் இருக்கிறதே என நினைத்து பெரியம்மா பெரியம்மா என்று அவளை உலுப்பினாள்
“என்ன புள்ள துளசி…எதுக்கு இப்புடி உலுப்புறவ…எதுனா வோனுமா
“பெரியம்மா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க பேசினிங்களா
“இல்ல ஆத்தா…ஏ கேக்குறவோ…கனா கண்டியா
“இல்ல பேசின மாதிரி இருந்துச்சு
“இல்லயே…சரி சரி…தூங்கு….காலையில வெரசா எந்திரிச்சு கோடங்கி பூசைக்கு போவோனுமில்ல

லட்சுமியம்மா தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருக்க யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு கண்ணாடியை எடுத்து அணிந்தபடி பக்கத்தில் படுத்திருந்த கதிரை பார்த்தாள்… அவன் நன்றாக அசந்து தூங்கிக்கொண்டிருந்தான்….அவன் முடியை கோதி கொஞ்ச நேரம் அவனையே பார்த்தாள்… எத்தனை வயது ஆனாலும் பேரன் பேத்தியே எடுத்தாலும் தூங்கும் பிள்ளையின் அழகு பெற்றதாய்க்கு ஒரு தனி இன்பம்தான்….கதவு தட்டும் சத்தம் தொடர்ந்து கேக்க அவனை தொந்தரவு செய்யாமல் விளக்கை போட்டால் அவன் தூக்கம் கெடுமே என்று தட்டுத்தடுமாறி எழுந்து டார்ச் லைட்டை தேடிப்பிடித்து எடுத்து கடிகாரத்தை பார்த்தாள்… மணி அதிகாலை மூன்று..இந்த நேரத்தில் யார் அது….யோசனையுடன் கதவை திறக்க…வெளியே ஒரு நாற்பது வயதுக்கு மேல் மதிக்கத்தக்க ஒரு அம்மாள் நின்றிருந்தாள்…. நூல்புடவையும் கொண்டையில் சுற்றிய மணக்கும் செவ்வந்தி பூவும்…நெற்றியில் ஒரு ரூபாய் அகலத்திற்கு சிவப்பு நிறப்போட்டு கழுத்தில் புதிதாய் மஞ்சள் மணம் வீசும் தாலிகயிறு முகம் முழுக்க புன்னகை விரிந்து நிறைந்திருந்தது…..லட்சுமியம்மா ஆச்சர்யத்தில் அப்படியே நிற்க மரங்களில் கூடுகட்டியிருந்த கிளிகளும் மைனாக்களும் இன்னும் பல பறவைகளும் அந்த அம்மாவின் பின்னால் தோளில் தலையில் என்று கூட்டம் கூட்டமாய் பறந்துவந்து அமர்ந்து கீச் கீச் என்று பெரிதாய் சப்தமிட….அந்த அம்மாள் அவைகளை பார்த்து வாயில் ஆட்காட்டி விரலை வைத்து ஸ்ஸ்ஸ் என்று புன்னகையுடன் சிறிதாய் ஒலி எழுப்பி அமைதியாய் சிரிக்க அவை அனைத்தும் சமத்தாய் கூடுகளில் போய் அமர்ந்துகொண்டது….

“என்ன தாயி நல்லாருக்கியா
“நீ ….நீங்க…நீங்க யாரு….
“என்ன தெரியலையா தாயி…மறந்துட்டியா….பரவால்ல….என்ன மறந்தவங்களையும் நா எம்மனசுக்குள்ள பொத்தி வச்சுப்பேன்
” நீங்க யாருன்னு ஆர்யா தெரியலயே இந்த நேரத்துல வந்துருக்கீங்க….என்ன வேணும் உங்களுக்கு
அந்த அம்மாள் சிரித்தாள் சத்தமில்லாத தெய்வீகசிரிப்பு லட்சுமியை மெய் மறக்க செய்தது
“எல்லாரும் எங்கிட்ட வந்து அது வேணும் இது வேணும்னு கேப்பாங்க..நீ எனக்கு என்ன வேணும்னு கேக்குறியே….வேடிக்கைத்தேன் போ.. சரி வீட்டுக்கு வந்தவள உள்ள வான்னு கூப்பிட மாட்டியா
“வா…வாங்க…உள்ள வாங்க…இரு கதவுகளையும் விரிய திறந்து நிமிர்ந்து திரும்பியபோது…அந்த அம்மாள் உள்ளே நாற்காலியில் ஒரு காலை மடக்கி ஒரு காலை தரையில் அழுத்தமாய் பதித்து நாற்காலியின் கைப்பிடி இரண்டிலும் இரண்டு கைகளையும் வைத்து பிடித்தபடி கம்பீரமாய் லட்சுமியை பார்த்து புன்னகைத்து…..
“என்னய உள்ள வர சொல்லிட்டு நீ ஏன் வெளிய நிக்குற தாயி….வா…இப்புடி வந்து உக்காரு
“அம்மா…உங்கள எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு…சரியா நியாபகம் வரல….இந்த நேரத்துல வந்துருக்கீங்க என்ன விசயம்…
“விஷயம் கொஞ்சம் பெறுசுதான்…நீ என்ன பாக்க வரமாட்டேன்னு சொல்லிட்ட….அதேன் நானே உன் வீடு தேடி வந்துட்டேன்…உன் கையால சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு….தண்ணி கொண்டாரியா
“இதோ… ஓடிப்போய் அடுப்படியில் உருட்டினாள்… ஆச்சரியமாய பாத்திரத்தில் கூழ் இருந்தது…இது எப்புடி வந்தது…கதிருக்கு கூழ் குடிக்கும் பழக்கமெல்லாம் இல்லயே…ஆராய பொழுதில்லை…அதை எடுத்துக்கொண்டு அந்த அம்மாவிடம் கொடுக்க அவள் சிரித்தபடி வாங்கி பாதியை குடித்து மீதியை அவளிடமே திருப்பி கொடுத்தாள்…
“அம்மா….நீங்க…
“நா உன் வீட்டுக்கு வந்தேன்ல….நீ என் வீட்டுக்கு வா….என்ன விஷயம்னு சொல்றேன்….நெறைய பெரு காத்துகெடக்காங்கள்ல…..நா வரட்டுமா….நீ அங்க வா
அந்த அம்மாள் அமர்ந்த இடம் அவளவு ஜில்லிப்பாய் இருந்தது….

திடுக்கிட்டு கண் விழித்தாள் லட்சுமியம்மா….மணி நாலு….வேகமாய் எழுந்து பார்க்கா மூடிய கதவு மூடியபடி இருந்தது….நாற்காலியில் ஒரு பாத்திரம்….அதில் பாதி கூழ்… “அம்மா பேச்சி….நீயா நீயா இங்க வந்த…..இவளோ வருஷமும் உன்ன மறந்து இருந்துருக்குறேனே…அதுக்கு பதிலா நா இறந்துருக்கலாம்
“கதிர் ……கதிர்…….எழுந்திரு….எந்திரிடா
“என்னம்மா இந்த நேரத்துல
“சீக்கிரம் போய் குளிச்சுட்டு வா
“இப்போவா…
“ஆமாண்டா கோயிலுக்கு போகணும்…ஆத்தா பேச்சிய மறுபடியும் கண்ணால பாத்து மனச நெறைக்கணும் எந்திரி எந்திரி
“அம்மா என்னம்மா ஆச்சு உங்களுக்கு
“கோயிலுக்கு போய்ட்டு வந்து அப்புறம் சொல்றேன்….நீ சீக்கிரம் கிளம்பு
அம்மாவை ஆச்சரியமாய் பார்த்துக்கொண்டே அவன் குளிக்க போனான்

கோடங்கி காளியம்மனின் உருவம் வடித்து பூஜைக்கு எல்லாம் செய்து வைத்து அமர்ந்திருக்க….
மண்டபத்தில் ஊர் மொத்தமும் கூடியிருந்தது….
“வாங்க லட்சுமியம்மா….எனக்கு தெரியும் நீங்க வருவீங்கன்னு…வாங்க பூஜையில கலந்துக்கங்க
“நா உங்க பூஜையில் கலந்துக்க வரல என் ஆத்தாள பாக்க வந்தேன்…வெடுக்கென்று சொல்லிவிட்டு அவள் மகனின் கைபிடித்து அழைத்துக்கொண்டு கோயிலுக்குள் செல்ல….கோடங்கி மவுன சிரிப்பாய் பார்த்தார்

உள்ளே நுழைந்ததும் லட்சுமியம்மாவின்
மனம் அப்படி ஒரு கொண்டாட்டம் கொண்டது
“கதிர் பூஜை பண்ண பூசாரி இல்லயே
“எல்லாரும் வெளியில இருக்காங்க போல…நா போய் பூசாரியை கூட்டிட்டு வர்றேம்மா….
அவன் போய் விட
சன்னதி கதவு தானாய் திறந்தது…
உள்ளே அம்மனின் சிலை பிரகாசமாய் மின்னியது…கண்
கொட்டாமல் அதையே பார்த்துக்கொண்டிருக்க
“அம்மா உன் கருணைய என்னனு சொல்றது…நான்தான் என் புருஷன சீக்கிரமே எங்கிட்டருந்து பறிச்சுட்டியென்னு வீம்புலயும் கோவத்துலயும் உன்ன மறந்து இருந்துட்டேன்….நீ என்ன மறக்காம என்ன தேடி வந்துட்டியே….என்ன சொல்ல வந்த….சொல்லு…என்ன ஏன் பொட்டிழந்தவளா ஆக்குன…உனக்கு எவ்ளோ பூஜை பண்ணியிருப்பேன்…அதுக்கெல்லாம் நீ கொடுத்த பரிசு இதானா….தனியா நின்னு எம்புள்ளய வளக்க எவ்ளோ கஷ்டப்பட்டேன்…அப்பல்லாம் நீ எங்க போன
“லட்சுமி….உன் புருஷனோட கர்மா வினைப்படி அவன் அந்த வயசுல உயிர் துறந்துதான் ஆகணும்…விதி என்பது அவரவர் கர்மவினைபயனை பொறுத்தே அமையும்…தெய்வமும் அந்த விதிக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும்….ஆனால் மனிதனின் சதியால் ஒருவரின்உயிர் போகபோகிறது என்றால் அவரது புண்ணியபலன் அதிகமாய் இருக்கிறது என்றால் தெய்வத்தின் அருள் அவரை எப்பாடுபட்டேனும் காப்பாற்றியே தீரும்….ஒருவர் வாழ்வில் எதை மறந்தாலும் குலதெய்வத்தை மட்டும் மறக்கவே கூடாது…அந்த மறதியானது சரியான சமயத்தில் கிடைக்க வேண்டிய தெய்வசங்கல்பத்தை தடுத்துவிடும்…அந்த தவறை தான் நீ இதுநாள் வரை செய்துகொண்டிருந்தாய்…அதை சுட்டிக்காட்டவே நான் உன்னிடத்தில் வந்தேன்…எப்பொழுதும் உன் அருகிலேயே நான் இருப்பதால்தான் உன்னால் இவ்ளவுதூரம் வாழமுடிந்தது… நீதான் அதை உணர மறுத்துவிட்டாய்….போகட்டும்…என் பிள்ளைகளின் தவறுகளை நான் பெரிதாய் எடுத்துக்கொள்வதில்லை…இதோ இதை எடுத்துக்கொண்டு விரைவாக வெளியில் செல்….
“அம்மா ….நானா… எதுக்குமா…அதை கை நடுங்க வாங்கிக்கொண்டாள் லட்சுமி

அதே சமயம் மண்டபத்தில்…..
தலைகட்டுக்காரர்கள் குடும்பத்தில் அனைவரும் வரிசையாக கையில் காப்புகட்டி கொண்டார்கள்…மணியன் குடும்பத்தில் அனைவரும் காப்பு கட்டி முடிந்த பின் துளசி கையை நீட்ட….கோடங்கி அருள் வந்தவராய் எழுந்து ஆடினார்
“மணியா…இவ உன் வீட்டுல இல்ல இந்த ஊருலயே இருக்குறது நல்லது இல்ல….உனக்கு பெண் பிள்ளை தங்காதுங்குறது விதி….நீ பெத்ததும் போச்சு வளத்ததும் போச்சு….அது இப்போ ஊரையே காவு வாங்க காத்துகிட்டிருக்கு….அதுக்கு துணையா இதையும் கூட்டியாந்தியா..
இதை விரட்டு….இந்த ஊரை விட்டே விரட்டு…ஒன்னு இது சாகும்…இல்ல ஊரையே சாவடிக்கும்….
அனைவரும் பேச்சு மூச்சு அற்று சிலையாகிப்போனார்கள்…
மணியனும் வேலம்மாளும் கதறினார்கள்
“சாமி என்ன சொல்றிய…இப்புடி சொல்லிபுட்டியலே…அய்யோ நாங்க என்ன பண்ணுவோம்
“மணியா…அந்த பொண்ண இப்பவே வெளியேத்தினா அது உயிரோடவாவது இருக்கும்…இல்லீன்னா நடக்குறது எதுக்கும் நா பொறுப்பில்ல…. இது ஆத்தாவோட உத்தரவு….உனக்கு பெண்ணாய் இருந்தால் அது இந்த பூமியில் நிலைக்காது….
ஊர் மொத்தமும் அவர்களுக்கு எதிராய் திரும்பியது…..துளசியை ஊரை விட்டு அனுப்புமாறு மணியனை நிர்பந்தப்படுத்தியது
“சாமி வேற வழி ஏதும் இல்லீங்களா…
அழுது புலம்பினார்கள்
“பெரியப்பா…விடுங்க நா போறேன்…என்னால உங்களுக்கு எந்த கஷ்டமும் வேணா
“ஒரு வழியிருக்கு…
அனைவரும் திரும்பி பார்க்க லட்சுமியம்மாள் கோவிலுக்குள்ளிருந்து வந்தாள்
“இந்த பொண்ணு அவருக்கு பொண்ணா இருக்குறதுதானே பிரச்சினை
“ஏன் நீங்க தத்தெடுக்க போறீங்களா…அது செல்லாது
“எதுக்கு தத்தெடுக்கணும்…மணியன் நீங்க உங்க பொண்ண தாரைவார்த்துக்கொடுக்கிறீங்களா…
“அம்மா…
“என் பையனுக்கு தாரை வார்த்து குடுக்குறீங்களான்னு கேட்டேன்….அவ உங்களுக்கு பொண்ணா இருக்கவேண்டாம் எங்க வீட்டு குளவிளக்கா இருக்கட்டும்…உங்களுக்கு சம்மதம்னா என் பையன் உங்க பொண்ணு கழுத்துல தாலி கட்டுவான்…
“லட்சுமியம்மா தவறான முடிவெடுக்குறீங்க…இந்த பொன்னால உங்க பையன் உயிருக்கே ஆபத்தாகும்…..பாத்துக்கங்க
“இது அம்மனோட மஞ்சள்கயிரு…..இது அவங்க ரெண்டுபேரையும் வாழவைக்கும்….மணியன் நீங்க என்ன சொல்றீங்க
மணியன் கண்ணுக்கு அவள் பேசியம்மனாய் தெரிந்தாள்… மறுவார்த்தையில்லாமல் தலையாட்டினான்
“கதிர்…இந்தா அவ கழுத்துல கட்டு….
“அம்மா நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க….
“அம்மாதான் சொல்றேன் கட்டு
அன்புகட்டளை மீற வழியில்லை…மீறவும் முடியவில்லை….அம்மாவின் வெற்று நெற்றியில் எப்படி இவளவு பெரிதாய் குங்குமம் வந்தது…..முகத்தின் மீது வைத்த கண்ணை எடுக்காமல் தாலியை தானாய் வாங்கினான்
அங்கு பெரியப்பாவிடம் மறுத்து போராடிக்கொண்டிருந்த துளசியின் முன் லட்சுமியம்மாள் நின்றாள்
“துளசி….நீ நினைக்கிறது எல்லாமே நடந்துடாது…உனக்கு எது விதிச்சிருக்கோ அதான் நடக்கும்….உனக்கு எது நல்லதுன்னு எனக்கு தெரியும்…அம்மா சொல்றேன் கழுத்தை நீட்டு…..
நேற்று இரவு அம்மாபோல் வேலம்மாள் சொன்னது நினைவுக்கு வந்தது…
ஊரார் வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்க….கதிர் துளசியின் கழுத்தில் மூன்றாவது முடிச்சை முழுதாய் போட்டு முடித்த சமயம்….

மூச்சிரைக்க ஓடி வந்த ஆதி மண்ணில் மடங்கி உட்கார்ந்தான்….
இது என்ன விதியோ…..யார் செய்த சதியோ…..எனக்கும் காதலுக்கும் எட்டாக்கனியா என்ன….
காதலை சொன்ன மறுநாளே ஒருத்தி எமனுக்கு சொந்தமாகிவிட்டாள்
இன்னொருத்தி எவனுக்கோ சொந்தமாகிவிட்டாள்….
துவண்டு சரிந்தவனை கருப்பனின் கருமையான கரம் காற்றாய் அவன் தலையை வருடியது……
துளசி நடப்பதெல்லாம் கனவா நனவா…என புரியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்…கழுத்தில் தொங்கும் இந்த தாலி நிஜம்தானா…அல்லது நான் தூக்கத்தில் இருக்கிறேனா…நான் ஏன் இதை தடுக்கவில்லை…எப்படி இந்த அம்மாவிற்கு கட்டுப்பட்டேன்…நிமிர்ந்து லட்சுமியம்மாவின் முகத்தை பார்த்தாள்… அவள் இருகண்களையும் அசைத்து கவலைப்படாதே என்று சொல்வதுபோல் இருந்தது…முகத்தில் அப்படி ஒரு தேஜஸ்…தெய்வீகமான புன்னகை… பார்த்த நிமிடம் மனம் லேசானதுபோல் ஒரு உணர்வு
ஊர்மக்கள் ஆளாளுக்கு நடந்து முடிந்த கல்யாணத்தை ஏற்றுக்கொள்ளலாமா…இவர்களை ஊரை விட்டு அனுப்பலாமா என்று சலசலவென்று பேசிக்கொள்ள அவரவர் ஆளுக்கு ஒரு கருத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்கள்…கோடங்கி லட்சுமியம்மாவை பார்த்தார்…லட்சுமியம்மா அவரை பார்த்து மர்மபுன்னகை புரிய…அவரும் கோணலாக சிரித்தார்….
லட்சுமியம்மா ஊர்மக்களிடம் திரும்பி ஆட்காட்டி விரலை வாயில் வைத்து ஸ்ஸ்ஸ் என்று அதட்டலாய் போட்ட சப்ததத்தில் அவர்கள் அனைவரும் மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் அப்படியே அடங்க….மறுபடியும் கோடங்கியை பார்த்து மந்தகாசமான புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு…

“கதிர் …துளசி…ரெண்டு பேரும் கோயிலுக்குள்ள போய் அம்மனை தரிசனம் பண்ணிட்டு மாலையை மாத்திக்கிட்டு வீட்டுக்கு கிளம்புங்க…மணியன்… நீங்களும் குடும்பத்தோட உள்ள வாங்க..என்றபடி முன்னே சென்று கோயிலுக்குள் மறைந்து போனாள்…. பின்னால் வந்தவர்கள் அவளை எங்கே காணோம் என்று தேட…சன்னதியின் முன் கண்மூடி சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தாள் லட்சுமி…
அம்மா என்று அழைத்த கதிரின் குரல் கேட்டு திரும்பியவளின் கண்கள் அவன் துளசியுடன் ஜோடியாய் நிற்ப்பதை கண்டு ஆச்சர்யடைந்தது….ஆச்சர்யம் விலகாமல் திரும்பி அம்மனை பார்த்தாள்….
“லட்சுமி…நீ தயங்கியதால் நானே உன் உருவத்தில் சுமங்கலியாய் சென்று உனது மகனுக்கு தாலி எடுத்து கொடுத்திருக்கிறேன்…எல்லாம் நன்மைக்குத்தான்….எதைப்பற்றியும் யோசியாமல் அப்படியே ஏற்றுக்கொள்…
தன் காதில் மட்டும் ஒலித்த அந்த தெய்வீக குரலுக்கு அவள் கட்டுப்பட்டாள்…

இருவரையும் மனமார ஆசிர்வதித்து ஆரத்தழுவிக்கொண்டாள்… மனதுக்கு நிறைவாய் இருந்தது….காரண காரியங்கள் இல்லாமல் எதுவும் நடக்காது…அம்மா இது உனது திருவிளையாடல்….அதன்படியே அப்படியே ஏற்று நடந்துகொள்வது என் கடமை
மணியனும் வேலம்மாளும் மனம் குளிர்ந்து போனார்கள்…நல்ல ஜோடிபொருத்தம் என்று சிலாகித்துக்கொண்டார்கள்…நேற்றுதான் கல்யாணத்தை பற்றிய பேச்சு எழுந்தது….இன்றே அது நிறைவேறும்…அதுவும் தாங்கள் நினைத்தது போலவே மாப்பிளை கிடைத்ததில் அளவில்லா ஆனந்தம்….மணியன் கண்களுக்கு இப்போதும் லட்சுமியம்மாள் பேச்சியம்மனாகவே தெரிந்தாள்…. கை எடுத்து கும்பிட்டு கொண்டார்….பூவாயி கிழவி நெடுஞ்சான் கிடையாக சன்னதியில் விழுந்து ஆனந்த கண்ணீருடன் ஆத்தாளை கும்பிட்டு கொண்டது 

வெளியே மண்டபத்தில்…. கண்மூடி பூஜையில் அமர்ந்திருக்கும் கோடங்கியையே அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்
கண் திறந்து என்ன கூற போகிறார் என்று ஆவலாக இருந்தார்கள்…நடந்து முடிந்த விஷயங்கள் அவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது என்பது…அவர்களது முகங்களிலிருந்து தெளிவாகவே தெரிந்தது
கோடங்கி கண்களை திறந்து காளியம்மனை வணங்கிவிட்டு ஊர்காரர்களை பார்த்தார்
“சாமி …இப்போ என்னங்க பண்றது…நீங்க ஒன்னு சொன்னிய…இங்க நடந்தது வேறயால்ல இருக்கு….
“ஆமாப்பு….இந்த மணியன் குடும்பத்தால எப்பவும் தொல்லையாளப்பா இருக்கு
“இப்ப அந்த துளசி புள்ள…போலீஸ்காரனுக்கு பொண்டாட்டியாயிருச்சு….எப்புடி ஊர விட்டு வெரட்டுறது..
“அட…அரசாங்க அதிகாரிய ஊர விட்டு போங்கன்னு சொல்ல முடியுமாலே…
“அதானே…அப்பம் கவமெண்டுக்காரவுக நம்மள இல்ல கேள்வி கேப்பாக
“அதுக்குண்டு….அந்த புள்ளயால ஊருக்கு ஆபத்து இருக்குண்டு தெரிஞ்ச பொறவு எப்புடிலே சும்மா இருக்குறது
“சாமி…நீங்கத்தேன் எதுனா சொல்லோனும்
“யாரும் கவலைப்படவேணாம்..எல்லாம் அவளோட திருவிளையாடல்…விரட்ட சொன்னதும் அவதான்…நடத்தி வச்சதும் அவதான்…யாரும் கலங்கவோ குழம்பவோ தேவையில்ல…நாம தொடர்ந்து எட்டுநாள் பூஜையை முடிச்சு அம்மாவாசை அன்னிக்கு யாகம் பண்ணியாகனும்…நாம அந்த வேலையை பாப்போம்…இப்ப நடந்தது எல்லாத்தையும் மறந்துட்டு அவங்கவங்க வேலையை பாருங்க….மாடசாமி…உம்மவன் ஆதியோட கல்யாண விஷயம் என்னாச்சு
“எங்க சாமி…நீங்க சொன்ன ஜாதகபிரகாரம் நங்களும்தேன் ஊர் ஊரா தேடி அலையிறோம்.ஒன்னும் அமையிராப்புல இல்லீங்களே

“கைல வெண்ணெய் வச்சுக்கிட்டு நெய்க்கு அலைஞ்சாப்புல இருக்கு நீ சொல்றது
“சாமி
“உந்தங்கச்சி மவ இருக்காளே..அவ ஜாதகத்த வாங்கி பாத்தியா
“சாமி..அது வந்துங்க…தங்கச்சி வீட்டுக்காரரோட பேச்சு வார்த்த அத்து போயி அஞ்சாறு வருசமாச்சுங்க…அதேன்
“நாளைக்கே அங்க போ… எல்லாம் சுமுகமா முடியும்
“சாமி…அது எப்புடிங்க…அந்தாளு வீட்டுக்கு போயி
“சொன்னத செய் மாடசாமி…உம்மவனுக்கு நல்லது நடக்கணும்னு நினைப்பிருக்கா இல்லயா…அமாவாசை அன்னிக்கு சாமத்துலருந்து கருக்கல் வர கருப்பன் கட்டுல கிடக்குற நேரம்…என்ன வேணாலும் நடக்கலாம்…அதுக்கு முன்னாடி அவனுக்கு கல்யாணம் பண்ற வழிய பாரு
“ஆகட்டுங்க சாமி…நா அப்புடியே செய்றேன்னுங்க

மாலையும் கழுத்துமாய் வெளியில் வந்த துளசியின் கண்களில் தூரத்தில் தவித்து நிற்கும் ஆதி தெரிந்தான்….அவனின் நிலை என்னவாக இருக்கும் ….மனம் துடிக்க தானாக விழிகள் கண்ணீரை கொட்டியது….இவள் பார்வையை கண்டதும் அவன் விழிகள் ஆயிரமாயிரம் கேள்விகளை கேட்டது..பதில் சொல்ல இவளிடம் வார்த்தைகள் இருக்கிறதா…அவன் பதிலுக்காக காத்திருந்த காதல்…..அவன் விழிகளில் தன் மீதான காதலை கண்டதும் பேசா மடந்தையாகி நின்ற காதல்…அவனுடன் தனித்திருக்கும் பொழுதுகளை எண்ணி தூங்காத காதல்….காதல் மொழி உரைக்காமலே வளர்ந்த காதல்…..இன்று காற்றில் கலந்து காணாமல் போனதோ….எப்படித்தான் வந்ததோ…ஏன்தான் தொலைந்ததோ…..
அவனை அவன் நண்பர்கள் வந்து அழைத்து சென்றுவிட போகும் அவனை ஆற்றாத நெஞ்சத்துடன் அடங்காத விம்மலுடன் இவள்….
அருகில் கதிர்….யார் இவன்… எங்கிருந்து வந்தான்….எப்படிப்பட்டவன்….இனி என் பயணம் இவனுடன்தானா..
அம்மா….ஏன் என்னை இவனுடன் இணைத்தாய்….இந்த நொடியில் கூட மனம் முழுக்க அவன் நிறைந்திருக்க அப்படியே துடைத்து போட்டு விட்டு…. இவனுடன் எப்படி வாழப்போகிறேன் நான்….இருவருக்குமே துரோகம் இழைத்தவளாகி விடுவேனே… அய்யோ…ஏன்தான் என்னை படைத்தாயோ….

கதிரின் வீடு….
மணியனும் வேலம்மாளும் துளசியை சமாதானப்படுத்தி கொண்டிருந்தனர்
“துளசி…இந்தா புள்ள…இனிமே இதேன் ஒ வூடு…அவுகதேன் ஒனக்கு எல்லாம்…புரிஞ்சு நடந்துக்க தாயி….அந்த ஆத்தாவா பாத்து ஒன்ன நல்ல இடத்துல சேத்துருக்கா…ஏத்துகிட்டு நல்லபடியா வாழு தாயி…அப்பத்தேன் உங்க அப்பனும் ஆத்தாலும் மேல இருந்து ஒன்னய சந்தோஷமா பாத்து நிம்மதியா இருப்பாக… நாங்களும் நிம்மதியா இருப்போம்…சரியா தாயி..
இந்த பாவிபயலுக ஒன்னய ஊர விட்டு அனுப்ப சொன்னதும் நாங்க எப்புடி தவிச்சுபோனோம் தெரியுமா..இப்பத்தேன் மனசுக்கு சந்தோஷமா இருக்கு…உசுர திரும்பி வந்தப்போல இருக்கு…ஒனக்கு செய்ய வேண்டிய சீர் சீராட்டு எல்லாம் நாளைக்கே கொண்டாந்து தாரோம்..சரியா தாயி…நாங்க வரட்டுமா ஆத்தா.

பின்பகுதியில் இருந்த மாமரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சலில் அவன் கலக்கமாய் அமர்ந்திருந்தான்…ஊஞ்சலைபோலவே அவன் மனமும் நிலையில்லாமல் ஆடிக்கொண்டிருந்தது….
“கதிர்…கதிர்….
“அம்மா
“என்ன கதிர்…அம்மா உங்கிட்ட கேக்காமலே இப்படி பண்ணிட்டேன்னு வருத்தத்துல இருக்கியாப்பா
“என்ன விடுங்கம்மா….அந்த பொண்ண பத்தி யோசிச்சு பாத்தீங்களா…அவங்ககிட்ட ஒரு வார்த்தை கூட கேக்காம…எல்லாருமா சேந்து நிர்பந்தப்படுத்தினது தப்பில்லயா
“தப்புதான் கதிர்…ஆனா இது நாம எடுத்த முடிவில்லயே…அவ எடுத்த முடிவு…அவ நடத்தி வச்ச கல்யாணம்…வேற வழியில்ல ஏத்துகிட்டுத்தான் ஆகணும்
“அம்மா…இருந்தாலும்…
“இருக்கட்டும்பா…அவ உள்ள இருக்கா…நீ போய் பேசு
அவன் தயங்கினான்…
“என்னடா…
“இல்லம்மா…நா……என்ன பேசுறது…..அவங்க எப்டி எடுத்துப்பாங்கன்னு தெரியலயே
“பேசினாதாண்டா தெரியும்….நீ பேசினா அவ கொஞ்சம் ஆறுதலா இருப்பாள்ள…போ…
அவன் தயங்கியபடியே உள்ளே வந்தான்….அவள் தரையில் ஒரு மூலையில் சுருண்டு தூங்கிக்கொண்டிருந்தாள்…. தூங்குவதுபோல் நடித்துக்கொண்டிருந்தாள் என்றும் சொல்லலாம்

அங்கே….
கோடங்கி சொன்னதுபோல் மாடசாமி நீண்ட நாட்கள் கழித்து தங்கையின் வீட்டிற்கு தட்டு தாம்பலத்துடன் சென்றார்….மச்சானின் சந்தோஷ வரவேற்பை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை….அவர் பெண் கேட்டு வந்ததில் அவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி….ஜாதகமும் பத்திற்கு பத்தாய் பொருந்தியது…..அப்போதே தட்டு மாற்றி திருமணத்திற்கு நாளும் குறித்து வந்தார்கள்…

ஆதியின் பாதி அவள் யாரென நாமும் பார்த்துவிடலாமா…..

அடி மேல் அடி வைத்து வெயிலையும் நிலவாய் பாவித்து….கோவிலை சுற்றி அடிப்பிரதட்சணம் செய்துகொண்டிருந்தாள் பேச்சி…. தலையில் இன்னும் குளித்த ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது….நுனி முடியை மட்டும் சுருட்டி சிறிதாய் கொண்டை போட்டிருக்க அதில் துளசியும் அரளியும் வைத்து கட்டிய கதம்ப பூ அதோடு கொஞ்சம் குண்டு மல்லியும் இடம் பிடித்திருந்தது….. முதுகு முழுதும் அடர்ந்து படர்ந்திருந்தது அவளது கருங்க்கூந்தல்…அவற்றில் சில பிரிந்து அவளது சந்தன இடுப்பை தொட்டு கூசவும் செய்தது….கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டு விட முடியுமா என்பது போல்……சிவப்பு நிற பட்டுபாவாடை…. இடுப்பில் இழுத்து சொருகிய வெள்ளைதாவணி….நெற்றியில் சிறிதும் இடைவெளி இல்லாமல் திருநீறு மஞ்சள் சந்தனம் குங்குமம் செந்தூரம் என வரிசையாய் இடம் பிடித்திருக்க பூமிக்கு நோகுமோ…அவள் பாதம்தான் தேயுமோ என பார்த்து பார்த்து ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்…..
“அடி…. பேச்சி…..நீ இருந்த விரதமெல்லாம் வீண்போகலடி.கத்திகொண்டே ஓடிவந்தார்கள் அவள் தோழிகள்….மூச்சிரைக்க அவள் முன் நின்று….இப்பத்தேன் ஒ வூட்டுக்கு உம்மாமனும் அய்த்தையும் வந்துட்டு போராக….சும்மா போகலடி உனக்கும் உம்மச்சானுக்கும் தேதி குறிச்சுட்டு போறாகடி…
நிமிர்ந்தாள்…கண்களை கருவண்டாய் சுழற்றியபடி…பட்டாம் பூச்சியாய் விரித்தபடி….இதழ்களை ஆரஞ்சு சுளையாய் பிரித்தபடி….
நல்லவேளை எதிரில் எந்த வாலிபனாவது நின்றிருந்தால் அந்த நொடி அவளுக்கு அடிமையாகியிருப்பான்….பிறகு ஆதிக்கு அவனும் எதிரியாகியிருப்பான்….

“நெசமாவாடி
“ஆத்தா மேல சத்தியமா
“எப்புடி திடீர்னு வந்தாக…அப்புச்சி சண்ட போடலையா…எம்மாமன் எப்புடி இறங்கி வந்தாக
“நா நெனைக்கேன்…ஒன்ன மாதிரியே ஒம்மாமனும் ஒன்னியே நெனைச்சுக்கிட்டு கெடந்துருப்பாக….அவுக சொல்லுதேன் உம்மாமன் இங்க வந்துருக்கோணும்….ஆனா உங்க அப்புச்சி ஒன்னும் சொல்லாததுதேன் அதிசயம் போ….
அவள் அடிப்பிரதட்சணம் முடித்துக்கொண்டு பூசாரி கொடுத்த திருநீறை அள்ளி அப்பிக்கொண்டு….”ஏ புள்ள பேச்சி ஒனக்கு கல்யாணம் பேசிறுக்காவலாம்….என
கேட்ட ஐயருக்கு…..
“ஆமா குடுமி….எம்மச்சானோட.அவுகல பாத்துருக்கியலா…பாத்தியன்னா அசந்துபுடுவிய தெரியுமா….என்று ஓடிக்கொண்டே பதில் சொல்லிவிட்டு…….வாசலில் கிடந்த செருப்பில் காலை நுழைத்துக்கொண்டு ஓடினாள் அம்மாவிடம் உறுதிபடுத்திக்கொள்ள….
“அடி…. கூறு கெட்டவளே…. செருப்ப கால் மாத்தி போட்ருக்கடி……
“இருக்கட்டும் இருக்கட்டும்….வூட்டுல போய் கழட்டத்தானே போறேன்….எந்த செருப்ப எந்த கால்ல போட்டாத்தேன் என்ன…சாமி என்ன கண்ணையா குத்திபுடும்
“அதும் சரித்தேன்….தரையில கால வச்சு நடடி….மறந்துபோய் தலையை வச்சு நடக்காத…..எப்புடி ஓடுறா பாரு…..
“அவ சின்ன வயசுலருந்து ஆதி மச்சானத்தேன் கட்டிக்கிடனும்னு ஒத்தகால்ல நின்னு சாதிச்சுப்புட்டால்ல…பொறவு தலைகீழாத்தேன் நடப்பா

மூச்சிரைக்க ஓடிவந்து நிற்கும் மகளை பார்த்த கோமதி
“அடி இவளே….ஏண்டி இப்புடி பின்னங்கால் பொடதியில அடிக்க ஓடி வாரவ
மூச்சிறைப்புடனே கேட்டாள்
“மாமன் வந்தாகளா
“ஆமா
“தேதி குறிச்சுப்புட்டு போனாகளா
“ஆமா…
“நெசமாவா
“ம்ம்ம்….நெசமாத்தேன் நெசமாத்தேன்….எங்கடி அர்ச்சனை பண்ண தேங்கா பை ஒன்னத்தையும் காணோம் ஓடி வர்றோம்னு எல்லாத்தையும் தெருவுல வெசரிட்டியா
“தேங்காத்தானே….அது நம்ம தோப்புல நிறைய கெடக்கு…அப்புறமா பறிச்சு தாறேன்….மச்சானுமா வந்தாக….
“அவன் எப்புடி வருவான்….சாமிக்கு ஒடைச்ச தேங்கா எங்கடின்னா தோப்புல பறிச்சு தாராளம்….ஒன்னய பெத்துபுட்டு நா படுற பாடு….நீ உள்ளாரா வந்து மசாலா அரைச்சு வை….அப்புச்சி இப்பம் வந்துருவாக…பொழுது ஆச்சு
“மச்சான் என்னய புடிச்சுருக்குன்னு சொல்லிட்டாவளா
“அவன் சொல்லாமத்தேன் ரெண்டுபேரும் தட்ட தூக்கிட்டு வந்துருப்பாகளா
“தேதி எப்பம் குறிச்சுருக்கிய
“எல்லாம் நல்ல நேரத்துலத்தேன் குறிச்சுருக்கு…நீ …..நா சொன்னத செய்யி
“அம்மா
“என்ன
“அம்மா
“என்னடி
“அம்மாமாமா
“அடி என்ன சொல்லு
“எம்மோய்
“எடு வெளக்கமாத்த… என்னன்டு கேக்கேன்….அம்மா மா….. ண்டு மாடு மாதிரி கத்திக்கிட்டிருக்கவ
“இல்லம்மா….மச்சான் போன் வச்சுருக்காவல்ல….அவுக நம்பர் தெரியுமா ஒனக்கு
“ஆமா நாந்தேன் நெதம் அவன்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேனாக்கும்….எதுக்கு கேக்குறவ……
“இல்ல….மச்சான்கிட்ட பேசலாம்னுத்தேன்
“அடி கழுத முண்ட…..கெடந்து அலையுறவ….அப்புடி அவங்கிட்ட என்னத்ததேன் கண்டாளோ தெரியல…..மச்சான் மச்சான் ன்னு நாளும் பொழுதும் விரதம் இருந்து சாகுறாளேன்னு அந்த மனுஷனும் சண்டையெல்லாம் மறந்துட்டு கல்யாணத்துக்கு நாள் குறிச்சுருக்காறு….இவளுக்கு அது வரைக்கும் பொறுக்க முடியலையாம்….வெளக்கமாத்த எடுத்து விசிரிபுடுவேன்…ஒழுங்கா மருவாதையா போயி மசாலா அரைச்சு வையி
“வயசுப்புள்ளய அடிக்க கூடாதுன்னு உங்க ஆத்தா ஒனக்கு சொல்லிகுடுத்து வளக்கலையா கோமதி
“அடியேய்….வாயாடி கழுத….பேரையா சொல்லுற… இருடி..எங்க…இங்க தானே வச்சுருந்தேன்…. நில்லுடி….நில்லுடி….ஓடாத….அடி…. விழுந்து கிழுந்து தொலைஞ்சுராதடி….
“பின்ன….நின்னு ஒங்கிட்ட அடி வாங்க சொல்லுரியாக்கும்…கல்யாணத்துக்கப்புறம் நீ இப்புடியெல்லாம் வெளக்கமாத்த தூக்கிட்டு துரத்த முடியாது தெரிஞ்சுக்கோ….
“நா ஏன் துரத்துறேன்….நீ பேசுற வாய்க்கு அங்க ஒ மாமியா புது வெளக்கமாறு கட்டி வச்சுக்கிட்டு ரெடியா இருக்காளாம் போ
“அவுக ஒன்னும் ஒன்ன மாதிரி கெடையாது….கோமதி
“அடியேய்….அடங்காதவளே…..மருவுடியும் பேரையா சொல்லுறவ…..
அவள் சந்தோசத்தில் குதித்துக்கொண்டிருக்க….

ஆதி அங்கே கோவத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக்கொண்டிருந்தான்…
“யாரா கேட்டு நாள் குறிச்சுட்டு வந்திய….கல்யாணமும் வேணா ஒன்னும் வேணா…எல்லாத்தையும் நிப்பாட்டுங்க
“அப்பன்னா உம்மவன எனக்கு கருமாதி பண்ண ரெடியா இருக்கானா கேளு
“அய்யோ…என்ன வார்த்த சொல்லிபுட்டிய…..அலேய்…என்னலே இது…பெத்தவுக நாங்க என்ன ஒனக்கு கெடுதலா பண்ணுவோம்…நீ நல்லாருக்கணும்னு தானே நெனைக்கோம்…ஓங்க அப்புச்சி வாயில இருந்து இப்புடி ஒரு வார்த்தைய சொல்ல வச்சுட்டியேலே…..ஒழுங்கா மருவாதையா கல்யாணத்த பண்ணு சொல்லிட்டேன்
“முடியாதுமா…என்னால முடியாது….
“முடிவா என்னதாலே சொல்லுறவ
“முடியாதுன்னுதேன் சொல்லுறேன்
வாக்குவாதம் முற்றியது….அப்பாவின் மிரட்டலையும் அரட்டலையும் விட அம்மாவின் அழுகையும் கண்ணீரும் அவன் காலில் விழ முனைந்த செயலும் அவனை ஜெயித்தது. வேண்டா வெறுப்பாய் தலையில் அடித்து கொண்டு தலையாட்டி வைத்தான்….
குறித்த தேதியில் அவர்களது திருமணமும் நடை பெற்றது….

எட்டாம் நாள் பூஜையும் முடிந்தது…..கோடங்கி கள்ளிகாட்டில் நின்றார்….கும்பம் புதைத்த இடம் மேலே ஏறி இறங்கி வெளியே வர துடித்தது….பேராளியாய் காற்று அவரை கீழே தள்ள முயற்சித்தது….உருமலும் அழுகையும் சீற்றமும் மாறி மாறி ஒலித்தது….கள்ளிகள் முட்களை அவர் மேல் எறிந்தது.அவர் அப்படியே சிலையாக நின்றார்…..
“ஜானகி….நீ என்ன முயற்சி செஞ்சாலும் உன்னால வெளிய வரமுடியாது….என்னோட கட்டு அப்புடி….அம்மாவாசைக்கு பண்ணபோற யாகத்துல உன்ன முழுமையா என் கைபிடிக்குள்ள கொண்டு வந்திருவேன்….உனக்கு துணையா இன்னும் ரெண்டு பேர் வந்துருவாங்க….
சிரித்தார்….காற்றையும் மீறி அவர் சிரிப்பு அந்த பிராந்தியத்தை உலுக்கியது….அவரோடு சேர்ந்து பின்னால் நின்ற இருவரும் கோரசாக சிரித்தார்கள்….
அவர்கள்….
எம்.எல்.எ.மருதமுத்துவும்… அவர் கைத்தடி காட்டானும்…..
கோடங்கியின் ஆரவார சிரிப்பு கள்ளிகாட்டை புரட்டிபோட்டு கொண்டிருந்தது….கும்பம் புதைத்த இடம் இன்னும் மேலே மேலே உயர்ந்தது….உள்ளிருந்து வந்த ஆவேச உக்கிரமான உறுமல் மருதமுத்துவை திகிலடைய செய்ய கொஞ்சம் பயத்துடனே…..
“கோடங்கி…வாங்க போயிடலாம் அது வெளியில வந்துடப்போகுது
“பயப்படாத….நா இருக்கும்போது என்ன பயம்….மனித இரத்தம் இந்த மண்ணுல விழுந்தாதான் அது வெளிய வரும்…அதுவும் கல்யாணமாகாத காளை ஒருத்தனோட இரத்தம்தான் படனும்…அப்டியே வந்தாலும் அதால இந்த கள்ளிகாட்ட விட்டு வெளில வரமுடியாது…சுத்தி மந்திர கட்டு போட்டிருக்கேன்…
“சரி…நாளைக்குதானே சாம பூஜை பண்ணனும்…இன்னிக்கு எதுக்கு இங்க வரசொன்னீங்க
“நாளைக்கு என்ன தடங்கல் வேணாலும் நடக்கலாம்…அதுக்கு முன்னாடி இதுக்கு இன்னொரு மந்திரவளையம் போட வேண்டியிருக்கு…ஒருவேளை நாளைக்கு பூஜை பண்ண முடியாம போய்ட்டா….மறுபடி ஏற்பாடு பண்ற வரைக்கும் இது வெளில வராம இருக்கணும்….இது வெளில வந்துட்டா ரொம்ப ஆவேசமாயிடும்…அதோட நமக்கு தேவையான பலிகளை இதுவே கொன்னுடும்….அதுக்கு உங்க உதவி தேவை..அதுக்குத்தான் வர சொன்னேன்…உங்க பெரியபையன் எப்புடி இருக்கான்…
“ம்ம்ம்ம்….இருக்கான்
“கவலை படாதீங்க மருது..நிச்சயம் உங்க பையனுக்கு குணமாகும்…..இனிமே உங்களுக்கு ஏறுமுகம்தான்….. என்ன நம்புங்க……நீங்க நினைச்சதும் நடக்கும்…நா எதிர்பாக்குறதும் நடக்கும்…காட்டான் அந்த பைல இருக்குற பொருள்களை எல்லாம் எடு….இந்த விளக்கை அணையாம பாத்துக்க….மருது… இங்க வந்து இப்படி உக்காருங்க….பயமே இல்லாம இருக்கணும்…பயந்தா அது இன்னும் பயமுறுத்தும்..
“கோடங்கி…நாளைக்கு பலி…ஒண்ணா ரெண்டா
“ஒண்ணுதான்….அடுத்ததுக்கு இன்னும் நாள் பாக்கல
“அதுவரைக்கும்…..
“அது கன்னியாவே இருக்கும்…..கவலை வேண்டாம்….அதுக்காகத்தான் ஊர்ல எல்லாரும் சுத்த பத்தமா இருக்கணும்னு சூசகமா சொல்லியிருக்கேன்….
அவர் மந்திரத்தை ஆரம்பித்தான்..அதன் உறுமல் அழுகையாய் மாறி பின் அதுவும் கொஞ்ச நேரத்தில் சத்தமற்று நிசப்தமாய் இருந்தது….மயான அமைதி….அவன் மந்திரம் மட்டுமே மிக மெலிதாய் கேட்டது….சுழன்றடித்தத்த காற்று கை கட்டி வாய் பொத்தி இருந்தது….மந்திரம் முடியும் தருவாயில் திடீரென அந்த மணல் மேடு கோடங்கியின் தலைக்கு மேலே இரண்டடி உயர்ந்து……அவன் மேல் கொஞ்சம் மணல் சிதறியது….முன்னும் பின்னும் மேலே கீழே என்று துடித்து கதறி ஆங்காரத்துடன் வெளியேறும் வழியற்று அப்படியே அடங்கியது….பழைய படி அந்த இடம் மாறியிருக்க….மறுபடியும் ஆலகால அமைதி….. கோடங்கி வெற்றிசிரிப்புடன் எழுந்தான்

கருக்கல் மூன்று மணி…
கோடங்கி மண்டபத்திற்கு திரும்பியிருந்தான்….வெளியில் நின்று கோயில்கோபுரத்தை உற்று நோக்கினார்….சிரிப்பு…..அதில் ஆணவம் கர்வம் அகங்காரம் அலட்சியம் எல்லாம் கலந்து அடங்கியிருந்தது…..ஏய் பேச்சி ஆத்தா….பார்…..நா ஜெயிக்கப்போறேன்…இல்ல ஜெயிச்சுட்டேன்….நாளைக்கு மட்டும் நா அந்த பூஜையை நடத்திட்டா முதல் வெற்றி…அதுக்கப்புறம் நான்கு பலிகள் ரொம்ப சுலபமா நடந்தேறிடும்…பாத்தியா உன் கையாலேயே என்னுடைய பலியை கொண்டுவர வச்சிட்டேன்….அஞ்சு பலிகளையும் முடிச்சதுக்கப்புறம் நீயும் என்னோட அடிமை….அந்த கருப்பனும் என் காலுக்கு கீழ காவல் காப்பான்…உன்ன குலதெய்வமா கும்பிடுற எட்டூரு ஜனமும் என்ன குலதெய்வமா கொண்டாடும்…அதுக்கப்புறம் இந்த உலகமே நா சொல்றபடி ஆடும்….கல்யாணம் ஆகி கட்டிய கயிற்றின் புதுமஞ்சள் வாசனையோடு மனசு முழுக்க நிறைவேறாத ஆசையோட குழப்பத்தோட…. கன்னியா நிக்கிற மூன்று பெண் பலி…..இரண்டு ஆண் பலி…. என் காளிக்கு காணிக்கையாக்குவேன்….அதுல ஒன்னு வெற்றிகரமா முடிஞ்சுது….மீதியும் முடியும்…முடிச்சுறுவேன்….உன்னால என்ன பண்ணமுடியும்….முதல் பலியையே தடுக்கமுடியல….உன்னையும் அடக்குவேன் அந்த கருப்பனையும் அடக்குவேன்….
மறுபடியும் சிரிப்பு….
கோபுரத்தில் சுடர் விட்டு எரிந்த விளக்கின் ஒளி அதிக பிரகாசமாய் எரிந்தது….

“என்ன….என்ன சொல்ல வர்ற…என் முன்னாடி வர பயமா…வா..
ஆத்தா…பேச்சி பெரியாத்தா…வா ஆத்தா…. முன்னாடி வந்து நில்லு….நா பனிரெண்டு வருஷம் அண்ண ஆகாரமில்லாம…..ருத்ர தவம் இருந்தவன்….உன் சூலாயுதமும் வேலாயுதமும் என்ன ஒன்னும் செய்ய முடியாது….வந்து குத்தி பாக்குறியா….வா….என் மரணத்தை நிகழ்த்த உன்னால் முடியாது…..நாளைக்கு நடுநிசி நீயும் கருப்பனும் என் கட்டுக்குள்ள அடங்கி இருப்பீங்க….பாக்குறியா….என்னய உன்னால என்ன செய்ய முடியும்….
உருமிக்கொண்டே குறுக்கும் நெடுக்குமாய் நடந்தான்….விளக்கு சுடர் இன்னும் பிரகாசமாய் எரிந்து அவன் உடல் முழுவதையும் மூடியது…
“என்ன…எரிக்கலாம்னு பாக்குறியா…..நா காட்டு தீ…இந்த சிறிய விளக்கின் ஒளி என்னை சுட்டு விடுமா….ஹாங்… சுட்டுவிடுமா….பைத்தியகாரி அவன் சிரித்துக்கொண்டே மண்டபத்தின் உள்ளே உட்கார்ந்து பூஜை வேலைகளை செய்ய ஆரம்பிக்க….உடல் முழுவதும் தீயாய் காந்தியது….கையில் இருந்த செம்பில் மந்திர ஜலம் எடுத்து உடல் முழுவதும் தெளித்தான்…காந்தல் அடங்கவில்லை….கண்கள் தீக்கங்குகளாய் எரிச்சலை உண்டாக்க….கண்களை மூடி அதில் மூலிகை இலை ஒன்றை கட்டி அப்படியே தூணில் சாய்ந்தான்…

அங்கே….
கதிரின் வீட்டில் துளசியின் நிலை பற்றி கொஞ்சம் பார்த்துவிட்டு வந்துவிடலாம்…அங்கு அவளின் மனம் அவனை மறக்க முடியாமல் கதிரை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவியாய் தவித்துக்கொண்டிருந்தது…லட்சுமியம்மாவுடன் நெருங்கி கொண்டாள்…. மகள் போல் பாசம் காட்டும் அவரிடம் அவளுக்கும் ஒரு பற்றுதல் உண்டானது….இந்த ஒருவார காலமாய் கதிரிடம் ஒன்றிரண்டு வார்த்தைகளை தவிர அதிகமாய் பேசவில்லை..அவனும் புரிந்து கொண்டு அவளிடம் எந்த உரிமையும் எடுத்துக்கொள்ளவுமில்லை…நேற்று லட்சுமியம்மாள் ஊருக்கு கிளம்பிவிட்டார்..போகும்போது…புரிஞ்சு நடந்துக்கம்மா….என்று சொல்லிவிட்டு சென்றார்….அவரை வாசல் வரை சென்று வழி அனுப்பிவிட்டு புதிதாய் பூத்திருந்த பிச்சிபூக்களின் வாசத்தை அனுபவித்தபடி அவற்றை ஒவ்வொன்றாய் கிள்ளி பறித்துக்கொண்டிருந்தவள்…மேளதாள சத்தம் கேட்டு வாசலுக்கு வந்தாள்…..
அங்கே ஆதி கல்யாணக்கோலத்தில் ஊர்வலமாய் வந்துகொண்டிருக்க….அன்று இவளை அந்த கோலத்தில் பார்த்தபோது அவன் மனம் எத்தகைய வேதனையில் குமுறியிருக்கும் என்பதை இன்று அனுபவித்து தெரிந்துகொண்டாள்…. அவனும் இவளை கடந்து செல்கையில் இவள் மீது ஒரு நொடி பார்வையை வீசினான்..இவள் கலங்கிய கண்களோடு திரும்பிக்கொண்டாள்…இனொருத்தியை அவன் அருகில் சேர்த்து பார்க்க அவள் விழிகள் தயக்கம் கொண்டது….அவர்கள் பக்கத்தில் இருந்த வீட்டில் நுழைந்த பொழுதுதான் பாவிமகள் உணர்ந்தாள்….அவன் வீடு அவள் வீட்டிற்கு அருகில்தான் இருக்கிறது என்பதை….ஒருவாரமாய் இது எனக்கு தெரியவில்லையே…அய்யோ மறக்கவேண்டியவன் அருகிலேயே இருந்தால்….நெஞ்சம் விம்மி உடைந்து கரை காணாத கற்றாராய் கண்ணீர் வழிந்தோட உள்ளே ஓடியவள் யாருமில்லா வீட்டில் கதறி அழுது தன் துக்கத்தை கரைக்க முயன்றாள்…. அவளவு எளிதான விஷயமா அது….

“துளசி….துளசி…. எந்திரிங்க
அழுது சிவந்த கண்களை கசக்கி மேலும் சிவப்பாக்கியபடி விழித்து பார்த்தவள்…எதிரே கதிர் நிற்பதை கண்டதும் வாரி சுருட்டி எழுந்து உட்கார்ந்தாள்
“என்னாச்சு உடம்பு சரியில்லையா
இவன் எப்போது வந்தான்…கதவை கூட மூடாமல் தூங்கிவிட்டேனா…மணி என்ன இருக்கும்….கண்களை சுருக்கி கடிகாரத்தை பார்த்தாள்…. மணி மாலை மூன்று…காலையில் அத்தை கிளம்பும்பொழுது ஒன்பது மணியிருக்கும்….இவ்ளோ நேரமாகவா தூங்கினேன்….சீ..பசி என்ற உணர்வு கூட எழவில்லையே….
“துளசி…. என்னாச்சு….
“இல்ல …ஒன்னுமில்ல…..அவன் முகம் பார்க்காமலே கூறிவிட்டு எழுந்து சென்று பாத்ரூமிற்குள் ஒளிந்து கொண்டாள்…. திரும்பி வந்த போது அவன் பின்பக்கத்து ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தான்…அத்தை இருந்தவரை அவரே சமைத்துவிடுவார்…அவரே இருவரையும் அழைத்து உட்கார வைத்து பரிமாறி விடுவார்…பெரும்பாலும் இவள் இதுவரை எந்த வேலையும் செய்யவில்லை….இப்போது இந்த நேரத்தில்….சாப்பிடத்தான் வந்திருப்பானோ….நான் பாட்டுக்கு அசடு மாதிரி தூங்கி விட்டேனே….வேகமாய் அடுக்களைக்குள் நுழைய…அங்கு சமைத்து முடித்து சாப்பாடு ரெடியாய் இருந்தது….
“நான்தான் துளசி ரெடி பண்ணேன்….லேட்டாயிருச்சு சாப்பிடுங்க….
சாப்பாடு கொஞ்சம் சுமாராதான் இருக்கும்…அடஜஸ்ட் பண்ணிக்கோங்க….சொல்லிவிட்டு..
தொப்பியை எடுத்து மாட்டிக்கொண்டு அவன் கிளம்ப……
“நீங்க….நீங்க… சாப்டலையா…இவள் தயங்கி தயங்கி கேட்டாள்….

சிரித்துக்கொண்டே திரும்பினான்….”நா சாப்பிட்டாச்சு….நீங்க சாப்பிடுங்க….இரவு வழக்கம்போல் அவன் வரும்போது தூங்குவதுபோல் கடித்துக்கொண்டாள்….
மறுநாள் காலையிலும் அவனே காப்பியோடு எழுப்பினான்….திரும்பவும் வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தவள் தன்னைத்தானே நொந்துகொண்டாள்….அவனே காலை டிபனும் செய்து வைத்து கிளம்ப தயாராகிக்கொண்டிருந்தான்…சே… நான் ஒரு முட்டாள்….
“ஸாரி…..இனிமே நானே சமையல் பன்றேன்….உங்களுக்கு ரொம்ப சிரமம்
“எப்பவும் செஞ்சு பழக்கம்தான்.சிரமம் எல்லாம் ஒன்னுமில்ல…நீங்க சகஜமா இருங்க துளசி…என்ன பாத்து பயப்படவேணா…நா அவ்ளோ மோசமானவனெல்லாம் கிடையாது…நீங்க தாராளமா எங்கூட பிரண்ட்லியா பழகலாம்….ப்ரீயா பேசலாம்….ஓகேவா….வரட்டுமா….ஏதாவது தேவைன்னா தயங்காம போன் பண்ணுங்க….ம்ம்ம்…நம்பர் தெரியும்ல
“ம்ம்ம்…ஸ்டேசன் நம்பர் தெரியும்

“அப்ப ஓகே….உங்களுக்கு எப்ப தேவைன்னு…….படுதோ அப்போ என்னோட நம்பர் வாங்கிக்கங்க….புன்னகைத்து விட்டு அவன் சென்று விட்டான்
அவன் இருபொருள் பட சொன்னானா ….அல்லது சாதாரணமாகத்தான் சொன்னானா….

இங்கே ஆதியின் வீட்டில்…
பேச்சி துரு துருவென்று கண்களை சுழற்றி ஆதியை தேடிக்கொண்டிருந்தாள்… இன்னும் அவன்ஒருவார்த்தை கூட இவளிடம் பேசவில்லை…ஏன்… நேசமாய் சிரிக்க கூட இல்லை….பக்கத்தில் இருந்த நாத்தி….ஆதியின் தங்கை ரேவதியின் காதை கடித்தாள்
“ஏண்டி…மச்சானுக்கு ஒடம்பு சரியில்லயோ
“ஏன்… அதுக்கென்ன…அது நல்லாத்தேன் இருக்கு….
“இல்ல…மச்சான் மூஞ்சிய உம்முண்டு வச்சுருக்காவளே அதேன் கேட்டேன்
“உன்ன போய் கட்டி வச்சுட்டாவளேன்னு நெனைச்சு பீல் பண்ணுது போல
“ஏய்…ஏண்டி… எனக்கென்னவாம்
“ஒனக்கு என்ன…ஒரு குறையும் இல்ல…..
வால் மட்டும்தான் முளைக்கல….மத்தபடி ஒன்னும் பெரிய வித்தியாசமில்ல
“அடியேய்…மஞ்ச நாத்தி கள்ளி…என்னய குரங்குன்னா சொல்லுறவ…ஒன்னய கொன்னுபுடுவேன்..
பாத்துக்கோ….நா ஒ மதிணி..எங்கிட்ட முன்ன மாதிரி ரொம்ப கோளாறு பண்ணுன….விரல் நீட்டி முழி உருட்டி நாத்தியை மிரட்டி கொண்டிருந்தவளை…
அவள் அம்மா வந்து தோளை இடித்தாள்…”இன்னிக்கு ஒருநாளைக்காவது வாய மூடிக்கிட்டு இருக்கியாடி… வாயாடி கழுத…அவகிட்ட என்னடி சலம்பிக்கிட்டு கெடக்குறவ….
“அய்த்த….மதிணிக்கு அண்ணன் கூட தனியா பேசோனுமாம்…நீங்கல்லாம் இப்புடி கூட்டமா நின்னு உயிர வாங்கிரியலாம்
“அடி ஆத்தி…அம்மா…நா அப்புடியெல்லாம் சொல்லவே இல்ல…ஏய்…ஏண்டி…அது கிட்ட மாட்டி விடுறவ…அப்புறம் அது இங்கயே வெளக்கமாத்த தேட ஆரம்பிச்சுறும்….சும்மா இருக்க மாட்ட
“மருமகளே… எம்மவன் அங்ஙன பயிற்குழிக்கு பின்னால ஒக்காந்துருக்கான்..போய் பேசு போ…
செல்வி சிரித்துக்கொண்டே சொல்ல அவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது
“ஆத்தா…மருமகளே…அப்புடியே அவன இனியாச்சும் வேலைவெட்டிக்கு போகசொல்லு….நீ சொல்லியாவது கேக்கானா பாப்போம்
“போ… மதிணி…பேசணும் பேசனும்னு குதிச்சுக்கிட்டு கெடந்த
“போடி….நா எப்பம் சொன்னேன்….நா போவல
“அய்ய…ரொம்பத்தான்…இப்பதானே சொன்ன…போ.. போ… அவளை பிடித்து தள்ளி தோட்டத்தில் விட்டு விட்டு அழகு காட்டி விட்டு போனாள் ரேவதி…அவளுக்கு கால்கள் இரண்டும் வெல வெலத்துப்போனது…வியர்த்துகொட்டி படப்படப்பானது…அவனுக்கு அருகில் சென்று நின்றாள்..அவன் ஒரு கல்லில் உட்கார்ந்து மிளகாய் செடிகளின் இலைகளை கிள்ளி கிள்ளி எரிந்து கொண்டிருந்தான்…
“ம்க்கும்….ம்க்கும்…தொண்டையிலிருந்து மெலிதாய் சத்தமிட்டாள்…
அவன் நிமிர்ந்து…
பட்டுபுடவை ஜொலிக்க தலை நிறைய பூக்கூடைகளை அள்ளி திணித்து கண்ணில் மையிட்டு.கன்னத்தில் திருஷ்டிப்போட்டு வைத்து மருண்ட விழிகளை உருட்டியபடி வியர்வை வழிந்தோட நின்றவளை பார்த்து
“என்ன
“அது…அது…ஒங்…..ஒங்..கள்ட்ட…வந்து….அவுக….அய்.. அய்த்த
“ஒனக்கு என்ன திக்குவாயா

“அடி ஆத்தி…என்ன மச்சான் இப்புடி கேட்டுபுட்டிய….
“சொல்ல வந்தத சொல்லிட்டு வெரசா கிளம்பு
“கோவமா இருக்கியளா மச்சான்…ஒடம்பு சொகமில்லையோ
“எதுக்கு வந்தேன்னு சொல்லு
“அய்த்ததேன் ஒங்கள்ட்ட பேசிக்கிட்டு இருக்க சொன்னாவோ
“பேச்சுத்தொனைக்கு ஆளில்லைன்னு நா சொன்னேனா….கெளம்பு போ
அவள் அப்படியே உதட்டை பிதுக்கிக்கொண்டு நின்றாள்
“என்ன…
“எதுக்கு இப்புடி என்னய வெரட்டுரிய… எதுக்கு மச்சான் எரிச்சலா பேசுறிய….எங்க அப்புச்சி சீர் செனத்தி ஏதும் குறை வச்சுப்புட்டாவலோ
அவன் தலையில் அடித்துக்கொண்டான்
“அடி ஆத்தி….ஏன் மச்சான் தலையில அடிச்சுக்கிரிய…நா தப்பா பேசிப்புட்டேனா
“ஒழுங்கா மருவாதையா இங்கருந்து போ சொல்லிட்டேன்….எரிச்சலா வருது…. ஆமா இதென்ன….ஊருக்குள்ள இவளவு பூவுதான் கெடைச்சுச்சா….பத்து கூட பூவையும் மொத்தமா அள்ளி தலையில வச்சுக்கிட்டு தெரியுற
“ம்க்கும்….அதுக்கா இம்புட்டு கோவமா இருக்கிய…நானா வச்சுகிட்டேன்….ஊருல இருக்குறவலுவோ அலங்காரம் பணறேன்னு என்னய கோலப்படுத்தி வச்சுருக்காலுவோ….வேணும்னா இப்பவே எல்லாத்தையும் எடுத்துட்டு கொஞ்சமா வச்சுக்கிறேன்….ஒங்களுக்கு மல்லி புடிக்குமா கனகாம்பரம் புடிக்குமா மச்சான்….
அவன் முறைத்தான்…..
“இப்ப நீ இங்கருந்து போறியா இல்லயா…
அவன் கொஞ்சம் காட்டமாகவே கத்த….அவள் உதட்டை பிதுக்கிக்கொண்டு ஓடினாள் உள்ளுக்குள்…
“என்ன மதிணி….ஓடியார…அண்ணன் பின்னாடி துரத்துதா
“போடி இவளே….உங்க அண்ணன் ரொம்ப கோவமா இருக்குறாரு
“கோவப்படுற அளவுக்கு என்னத்த பேசிட்டு வந்த
அவள் பேசியதை சொல்ல ரேவதி விழுந்து விழுந்து சிரித்தாள்…

கோடங்கிக்கு அம்மை பாவித்திருந்தது…முகம் உடல் முழுக்க கொப்புளம் கொப்புளமாய் வீங்கியிருக்க வேப்பிலை படுக்கையில் காய்ச்சலில் எழுந்திரிக்க முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருந்தான்..
“சாமி…அம்மை பார்வை பாக்க ஒரு அம்மா வந்துருக்காங்க
கண்களின் சூட்டில் திறக்க முடியாமல் மெதுவாய் திறந்து பார்க்க…..சிரித்த மஞ்சள் முகத்துடன் கையில் வேப்பிலை ஏந்தி சிவப்பு நிற பட்டுகாரி குங்கும பொட்டுக்காரியாய் வந்தாள் அம்மா….
“என்னப்பா வீராசாமி….நல்லாருக்கியா….கருக்கல்ல என் வீட்டு வாசல்ல நின்னு  ஆத்தா வா ஆத்தா வான்னு கூவினியே….அதான் வந்துட்டேன்….இன்னைக்கு  நீ என்ன கட்டுக்குள்ள வைக்கிரியா…இல்ல நா இந்த அம்மைகட்ட போக்கட்டுமா…..

கோடங்கி அம்மையின் வெம்மை தாங்காமல் அவதியுற்றான்….அன்றைய அமாவாசை சாம பூஜை தடைபட்டது….அவனுக்கு ஆற்றாத கோபம் உண்டானதே தவிர ஆத்தாவின் மீது பயம் வரவுமில்லை… தான் செய்வது தவறு எனவும் உணரவில்லை.. அம்மை இறங்க எப்படியும் பதினைந்து நாட்களாகும்….அதன்பிறகு பூஜைக்கான நாள் நேரம் எல்லாம் எப்போது கூடிவருகிறது என பார்க்கவேண்டும்…அடுத்தமுறை இன்னும் ஜாக்கிரதையாக இருந்து தடங்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்…நான்கு பலிகளையும் காலம் தாழ்த்தாமல் வெகுவிரைவாக நடத்திவிடவேண்டும்….தான் நினைத்ததை சாதித்தேவிடவேண்டும் என்று அடங்கா எண்ணம் கொண்டான்….எம்.எல்.எ.வந்தார் பூஜை தடைப்பட்டதில் பெரும் வருத்தம் அவருக்கு….அவரது கணக்கிலடங்கா அத்தனை சொத்திற்கும் ஒரே வாரிசான அவரது மகனுக்கு மனைவிகள் தங்கமாட்டார்கள்..வாரிசும் உண்டாகாது என்று ஜாதக கட்டத்தில் இருப்பதாக பிரசித்தி பெற்ற அத்தனை ஜோசியர்களும் ஒன்றுபோல் சொல்லிவிட்டார்கள்…கடைசியாக கோடங்கியிடம் வந்தபோது அவன் அந்த சாபத்தை தான் போக்கி தருவதாக உறுத்தியளித்திருந்தான்….அதற்காக திருமணம் ஆன கன்னி கழியாத பெண்கள் மூவரின் உயிரை காயமில்லாமல் காளியம்மனுக்கு தாரை வார்த்தால்….அவர் மகனது சாபம் நீங்கி திருமணம் முடிந்து வாரிசு தழைக்கும் என்பதாய் கூறி முதல் பலியாய் ஜானகியின் உயிரை காவு வாங்கியாயிற்று….
கவலையுடன் இருந்த மருதமுத்துவிற்கு எப்படியும் தான் சொன்னபடி நிரைவேற்றுவதாய் ஆறுதல் கூறி அனுப்பி வைத்தான்….மனதில் ஆத்தாவின் மீது அடங்கா துவேஷம் கொண்டான்

துளசி வீட்டில் பூத்திருக்கும்
ஜாதிபிச்சி பூக்கள் கொத்து கொத்தாய் மலர்வதும்….பறிப்பாரில்லாமல் செடியிலேயே காய்வதுமாய் இருப்பதை பார்த்த பேச்சி…..அவளாகவே சென்று துளசியிடம் பேச்சை தொடங்கினாள்
“வூட்டுல யாரு….போலீஸ்காரம்மா…வூட்டுல இருக்கியளா
வாசலில் புன்னகையுடன் பேச்சி நிற்பதை கண்ட துளசி…ஒரு கணம் யோசித்தாலும் வலிய வரவழைத்த புன்னகையோடு வெளியில் வந்தாள்
“வாங்க
“நா…பேச்சி…இங்க பக்கத்து வூட்டுல இருக்கேன்….என்ன பாத்துருக்கியலா

“ம்ம்ம்…அவங்க மருமகதானே
“ஆமாமா…..நா வந்ததிலருந்து பாக்கேன்….இந்த செடியில பூவெல்லாம் பறிக்காமலே கெடக்கே….நீங்க பறிக்க மாட்டியலா
“எனக்கு பூ கட்ட தெரியாது…பூ வச்சுக்க ஆசையும் இல்ல…அதான்
“அடி ஆத்தி….யாருக்காவது பூ வச்சுக்க ஆசையில்லாம இருக்குமா….நீங்களும் புதுசா கல்யாணம் ஆனவுகதேனே…எங்க அய்த்த ஒங்களபத்தி சொன்னாவ…..எனக்கு பாவமா போச்சு….திடீர்னு போலீஸ்காரவுக கூட கல்யாணம் பண்ணி வச்சுட்டாவளே…ஒங்களுக்கு அவர பாத்தா பயம்மா இல்லயா
எனக்கு போலீஸ்காரவுகள தூரத்துல பாத்தாலே கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுறும்….அதென்ன கர்மமோ தெரியல….
அவளின் வெகுளி பேச்சு இவளை கவர அவள் மீது புதிதாய் சிநேகம் ஒன்று பூத்தது
“போலீஸ்காரம்மா….நீங்க செரிண்டு சொன்னா நா இந்த பூவை நெதம் பறிச்சுக்கட்டுமா எல்லாம் வாடி விழுந்து வீணாப்போவுது….மனசுக்கே கஷ்டமா இருக்கு
“ஓ… அதுக்கென்ன தாரளமா பறிச்சுக்கோ… எனக்கு நோ பிராப்ளம்
அதன் பிறகு அவளோடு இவளுக்கு நன்றாக பொழுது போனது….பூ பறிக்க என்று மட்டும் இல்லாமல் கிடைத்த நேரங்களிலும் அவள் இங்கு வர ஆரம்பித்திருந்தாள்

“போலீஸ்காரம்மா…என்ன செய்யுரிய
“பேச்சி…. நீ என்னய துளசின்னே கூப்பிடு….அதென்ன போலீஸ்காரம்மா….நா என்ன போலீஸா
“அடி ஆத்தி…அதெப்புடி பொட்டுல அடிச்சாப்புல பேர் சொல்லி கூப்பிடுறது….வேணும்னா துளசிக்கான்னு கூப்பிடவா
“அக்காவா…அது சரி….
“அத விடுங்க….நீங்க எனக்கு இங்கிலீசு சொல்லிதாரியலா
“தாரளாமா சொல்லிதாறேன்..
ஆமா நீ என்ன படிச்சுறுக்க
“நா எட்டாவத தாண்டல….நானும் எம்மச்சானுக்கு ஏத்தாப்புல படிப்பு படிச்சுபுரலாம்னுத்தேன் நெனச்சேன்….எழவு இந்த படிப்பு மட்டும் மண்டைக்குள்ளயே நுழைய மாட்டேங்கு….இப்பத்தேன் அது எம்புட்டு தப்புன்னு யோசிக்கேன்…நா படிக்களென்னுதேன் எம்மச்சானுக்கு என்ன புடிக்கல போல….
“அய்யோ பேச்சி… என்ன இப்டி சொல்ற….ரெண்டுபேரும் சந்தோசமாதானே இருக்கீங்க…அவள் மனசுக்குள் குடைந்து கொண்டிருந்த கேள்வி சந்தர்ப்பம் கிடைத்ததும் பட்டென்று வந்து குதித்தது
“எங்க….ஊர்க்கட்டுப்பாடுன்னு சொல்லி ரெண்டுபேரையும் தனித்தனியாத்தேன் வச்சுருக்காவ….சரி… சந்தோஷமா பேசவுமா கூடாது.எப்பவும் மூஞ்சிய உம்முன்னு வச்சுக்கிட்டு தெரியுறாக…நானா வெக்கத்த விட்டு வலிய போய் பேசினாலும் எந்திருச்சு போயிராக துளசிக்கா….என்னதேன் பண்றது….அப்ப என்ன அர்த்தம்….என்ன புடிக்கலேண்டு தேனே அர்த்தம் நாந்தேன் பைத்தியகாரி மாதிரி சின்ன வயசுலருந்து மச்சானையே நெனைச்சுக்கிட்டு கெடந்தேன்..அவுகல கட்டிக்கிடணுமுன்னு எம்புட்டு விரதம் இருந்தேன் தெரியுமா துளசிக்கா…அவுகளுக்கு எ நினைப்பே இல்லன்னு இந்த பைத்தியகாரிக்கு தெரியவே இல்ல…அவுக படிப்புக்கும் அறிவுக்கும் இந்த எட்டங்கிலாஸ் படிச்சவள எப்புடி புடிக்கும்…
அவளின் கலங்கிய கண்கள் இவளுக்கு சட்டென்று ஜானகியை நியாபகப்படுத்தியது…பாவம் இந்த பெண்….ஆதி இவளிடம் பாராமுகம் காட்டுவது இவளுக்கு எந்தளவிற்கு வேதனையை உண்டாக்கும்…இதற்கு நானும் ஒரு காரணம் அல்லவா…என்னை போலவே அவனும்….ம்ஹூம் இந்த சின்ன பெண்ணை அழவைப்பது என்ன நியாயம்…
“சே சே… அப்டியெல்லாம் இருக்காது பேச்சி….நீ கொஞ்சம் உன்ன மாத்திகிட்டா ஆதி உன் பக்கம் சாஞ்சுடுவான்
“துளசிக்கா….ஒங்களுக்கு மச்சான முன்னமே பழக்கமா
“அது…பழக்கமெல்லாம் இல்ல…ஒரே காலேஜ்லதான் படிச்சோம்….ஜஸ்ட் பாத்துருக்கேன் அவ்ளோதான்
“ஓ….சேரி… என்னமோ மாத்திக்க சொன்னியலே…என்னத்த மாத்தனும்…..
“நானே உன்ன மாத்தி காட்டுறேன் வா

“மச்சான்…இங்க பாருங்க நா எப்புடி இருக்கேன்…
அவளை பார்த்து அவன் ஆச்சர்யப்பட்டது அவன் கண்களின் வழியே தெரிந்தது..வழக்கமான கிராமத்துபாணியில் இல்லாமல் மிக நேர்த்தியாக புடவையை கட்டி இருந்தாள்… நகைகள் அனைத்தையும் அள்ளிபோட்டு நடமாடிக்கொண்டிருந்தவள் எளிமையாக இரண்டு நகைகள் மட்டும் அணிந்து கூந்தலை விரித்து தவழ விட்டு கட்டியிருந்தாள்….ஒருபக்கம் மட்டும் அளவாய் மல்லிகை சரம் தொங்கியது….சிவந்த முகம் அளவான மேக்கப்பில் சந்தனபாவாய் மின்னியது….வழக்கமாய் நெற்றி முழுக்க மறைத்து கொண்டிருக்கும் திருநீர் வகையறாக்கள் இல்லை…சிறிய பொட்டும் நடு வகிட்டு குங்குமமும்…..ம்ம்ம் அழகிதான்…நினைத்துக்கொண்டான்
“மச்சான்…இப்டி இருந்தா ஒங்களுக்கு பிடிக்கும்ல….இனிமே நா ஒங்களுக்கு பிடிச்சா மாதிரியே இருக்கேன்..துளசிக்கா எனக்கு இங்கிலீசு சொல்லிதாரேன்னு சொல்லிருக்காவ….வெரசா கத்துக்குவேன் மச்சான்….

எல்லாம் அவ வேலதானா…ஒன்றும் சொல்லாமல் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தான்….
“என்ன மச்சான்….நல்லாருக்கான்னு ஒண்ணுமே சொல்லாம போறிய
அவள் வேதனை அவனுக்கு புரியாமல் இல்லை…ஒன்றும் அறியா பெண்ணை நோகடிப்பது முட்டாள்தனம்….அவள் முகம் வாடியதை பார்த்தவன் அறைக்குள் நுழைந்து
“பேச்சி… இங்க வா
“மச்சான்….என்னயா கூப்பிட்டிய
“பேச்சிங்கிறது யாரு
“நாந்தேன்
“அப்போ உன்னத்தேன் கூப்பிட்டுருப்பேன் வா
அவள் வந்ததும் மிக அருகில் நெருங்கி நின்றவன்
“இங்க பாரு புள்ள….நீ எனக்காக ரொம்ப சிரமப்பட்டு உன்ன மாத்திக்கணும்னு அவசியமில்ல….எனக்கு கொஞ்சம் மனசு சரியில்ல…நானே என்ன கொஞ்சம் சரி பண்ணிக்க வேண்டியிருக்கு.எனக்கு உன்ன பிடிக்காம எல்லாம் இல்ல….புடிக்கும் போதுமா….எல்லார்கிட்டயும் போயி மச்சான் கண்டுக்க மாட்டேங்கிராகன்னு அழுது வடிக்காத சரியா…நீ எப்பவும் ஜாலியா சந்தோஷமா இரு..ம்ம் “ம்ம்ம்…தலை குனிந்து கொண்டே சந்தோசத்துடன் தலையாட்டினாள்…அவள் முகவாயை பற்றி நிமிர்த்தியவன்…. சின்ன சிரிப்புடன்….
“அலங்காரம் பண்ணாத்தேன் நீ அழகா இருப்பேன்னு யார் சொன்னது….நீ எளிமையா இருந்தாலே அழகிதான் எப்பவும்….
வெட்கத்துடன் முகத்தை மூடி திரும்பி கொண்டாள்…கூடத்தில் ஆள் அரவம் கேட்கிறதே என வேகமாய் நகர்ந்த போது முந்தானை பற்றி இழுக்கப்பட
“அய்யோ விடுங்க மச்சான்…யாரோ வந்துருக்காவ..பாத்துற போராக என சிணுங்க
“ஏய் லூசு மதிணி….அண்ணன் எப்பவோ போயிருச்சி… ஒ சேலய புடிச்சு இழுத்தது இந்த துருப்புடிச்ச ஆணி…ஒ முட்ட கண்ண தொறந்து நல்லா பாரு
முகத்தை மூடிய கைகளை திறந்து பார்க்க எதிரில் ரேவதி சிரிப்பை அடக்கமுடியாமல் நின்றாள்….
“ஏய் எதுக்குடி லூசுன்னு சொல்லுறவ
“பின்ன நீ பண்ணுறத எல்லாம் பாத்தா வேற என்ன சொல்லுவாக
“அத்துக்குண்டு லூசுன்னு சொல்லுவியாடி…ஒன்னய…
“ஆனாலும் மதிணி….நீ இப்புடியெல்லாம் அலைய கூடாது….
“அடி…. ஓடாதடி….
அவளை துரத்தி பிடித்தவள் தென்னை மரத்திற்கு பின்னால் ஸ்ஸ்ஸ் என்று சத்தம் கேட்க என்னவென்று பாக்க நகர்ந்தாள்
“அய்யோ…அது….அங்க ஒன்னுமில்ல மதிணி….நீ போ நா பாத்தாறேன்
“இருடி….
என்னவென்று பார்த்தால் உள்ளிருந்து அசடு வழிந்தபடி பாண்டி எழுந்து வந்தான்…ரேவதி கையை உதறிக்கொண்டு நிற்க…பேச்சிக்கு புரிந்து விட்டது….
அவள் காதை பிடித்து திருகினாள்
“வாடி……எ…….நாத்தி
எங்க அம்மாயி பேத்தி
இதானா……..சேதி
“மதிணி….நீ பாட்டுக்கு அண்ணன்கிட்ட ஒளரிடாத மதிணி…..
“எம்புட்டு நாளா நடக்குது இந்த கூத்து….நீங்க அசலூர்ல வேல பாக்குற மச்சான் பிரண்டு……
பெரிய தல கட்டுக்காரவுக மவன்தானே….எப்பம் ஊருளருந்து வந்திய
“தங்கச்சி மா…..ஆதிகிட்ட சொல்லிராதம்மா…அவனுக்கு தெரிஞ்சா தப்பா நினைப்பான்

“அவுக கூட்டாளிகள்ள அரசாங்க வேல
பாத்து கை நிறைய சம்பாதிக்குறவுக நீங்க ஒருத்தர்தானே அண்ணாச்சி….ரேவதிய புடிச்சுருந்தா ஊரறிய வந்து பொண்ணு கேளுங்க….யார் என்ன சொல்ல போராவ….இப்புடி வந்து ஒளிஞ்சுகிட்டு நின்னியன்னா பாக்குறவுக என்ன சொல்லுவாக….
“நிச்சயமா….அப்புடியே செய்யுறேன்….நாளைக்கே வீட்டுல பேசுறேன்….இங்க ஆதி ஒத்துப்பானா….
“நா பேசுறேன் ஒங்களுக்காக..ஏன் கவலப்படுறிய…..
இப்ப கெளம்புங்க வயக்காட்டுக்கு போயிருக்குற அய்த்தையும் மாமனும் வந்துருவாகள்ள….
ரேவதியை காதலுடன் பார்த்து கை அசைத்து விடை பெற்று சென்றான் பாண்டி…..

பாண்டி அவனதுவீட்டின் பெரிய சுவற்றின் மீது ஏறி உட்கார்ந்து எப்படி வீட்டில் ரேவதியை பற்றி பேச்சை ஆரம்பிப்பது….ஒத்துக்கொள்வார்களா தெரியவில்லையே என யோசித்துக்கொண்டிருந்தான்…காலையில்தான் ஊரிலிருந்து வந்திருந்தான்….ஆதியையும் மற்றவர்களையும் பார்த்து அரட்டை அடித்து விட்டு இப்போதுதான் வந்தான்….அப்போதே ஆதியிடம் சம்மதம் கேட்கலாமா என்று தோன்றத்தான் செய்தது….ஆனால் காலையில் பெரியவர்களுடன் சேர்ந்து பெண் கேட்க சென்றால்தான் மரியாதையாக இருக்கும் என்று விட்டுவிட்டான்…பெரியவர்களிடம் பேசத்தான் தயக்கமாக இருந்தது….
அப்போது அவன் முகத்தில் திடீரென்று ஏதோ வெளிச்சம் பரவி மறைந்தது….தூரத்தில் தெரிந்த கள்ளிக்காட்டின் நடுவில் இருந்த அந்த பெரிய பனைமரத்தில் தான் அந்த வெளிச்சம் பிரகாசமாய் தெரிந்தது….அங்கே என்ன… எப்படி அவளவு உயரத்தில் வெளிச்சம் தெரிகிறது என யோசித்தபடி செல்லில் இருந்த டார்ச்சை ஆன் செய்தபடி கொஞ்ச தூரம் வரை சென்று பார்த்தான்….அந்த வெளிச்சமும் கண்ணை கூசும்படி அதிகமாகிக்கொண்டே போனது…. சுய நினைவு இழந்தவனாய் அதை நோக்கி சென்றுகொண்டிருந்தான்….கிட்டே நெருங்க பனை மரம் மட்டும் இருட்டில் தனியாய் ஒற்றையாய் பிரம்மாண்டமாய் நின்றது…..அந்த வெளிச்சம் மறைந்து….கையில் இருந்த செல்லும் தவறி கீழே விழுந்து அவனை கும்மிருட்டில் தள்ள ஒரு கணம் மதி திரும்பியவனாய் சட்டென்று வீடு நோக்கி திரும்பி நடக்க ஆரம்பித்தான்…..திசை மறந்து போனது….இல்லை மறைந்துபோனது…..சுற்றி சுற்றி நீண்ட நேரம் நடந்துகொண்டே இருக்கிறான் அந்த பனை மரம் மட்டுமே அருகில் நிற்கிறது…வழியே தெரியவில்லை…கள்ளிகள் வேறு காலில் தட்டி தட்டி அதன் முள் குத்தியதோ தெரியவில்லை….வலி உயிர் போனது…..திடீரென்று ஆந்தை அலறும் சத்தம் அவன் காதை கிழித்தது….அதோடு கோரமான உறுமல் அதைத்தொடர்ந்து யாரோ அவனை வா வா என்று கூப்பிடுவது போலவே இருந்தது…..சின்ன சிரிப்பு சத்தம்….பாண்டி இங்க வா….ரேவதியின் குரல்….ரேவதி….நீ எங்க இங்க வந்த….எங்கருக்க…தொண்டை வலிக்க கத்தினான்….
இங்கத்தேன் இருக்கேன்….நம்ம காதல் நிறைவேறாது….என்ன கொன்னுட்டாங்க…
அய்யோ ரேவதி என்ன சொல்லுற நீ….யார் உன்ன என்ன செஞ்சா….
அழுகை சத்தம் கேட்டது….விம்மி விம்மி கேட்ட அழுகை சத்தம் அவன் வயிற்றை கலக்கியது….திடீரென்று நாசியை துளைத்தபடி பயங்கரமாய் நாற்றம் கிளம்பி குடலை உருவியது….மூக்கை பொத்தியும் அந்த நாற்றம் உள்ளே சென்று வாந்தியை வரவழைக்க….அங்கேயே நின்று கொட கொட வென்று வாந்தி எடுத்தான்….
பாண்டி எனக்கு மூச்சு முட்டுது..என்ன வெளியில எடு…சீக்கிரம் வா…
ரேவதி….நீ எங்கருக்கண்ணே தெரியல….ஒரே நாத்தம் வேற அடிக்குது….எங்க மாட்டிக்கிட்டுருக்க….எப்புடி இங்க வந்த…..
அழுகை தொடர்ந்து பெரும் ஒப்பாரியாய் குமுறலாய் மாறியது….அது அவனது காதின் மிக அருகிலேயே கேட்பது போல் இருக்க….காது சவ்வு கிழிவது போல் அப்படி ஒரு வலி… தாங்க முடியாமல் காதை பொத்தினான்…..காலில் ஏதோ மேடாய் பெரிதாய் தட்டுப்பட்டு தடுமாறி அவன் விழ…. காலில் இருந்து கிளம்பிய வலியை பொறுக்க முடியாமல் தொட்டுப்பார்த்தான்…பிசு பிசு வென்று தட்டுப்பட்டது….கள்ளி முள் குத்தி ரத்தம் வருகிறது போல என்று நினைத்தபடி சே தெரியாத்தனமா இங்க வந்துட்டோம் என்று எழமுனைந்தவன் முடியாமல் கையில் கிடைத்த எதையோ பிடித்துக்கொண்டு தட்டுத்தடுமாறி எழுந்திருக்க….கையில் பிடித்திருந்தது உயர்ந்துகொண்டே போனது…இருட்டில் உற்று நோக்கினான்..என்னது இது….கையில் முடிக்கற்றைகள் சிக்கியது….பயத்துடன் கைகளை உதறினான்….அவன் நின்ற இடம் வெடி வைத்தாற்போல் வெடித்து சிதற தூரத்தில் போய் குப்புற விழுந்தான்…பதரித்துடித்து வேகமாய் எழுந்தவன் பயங்கரமான மின்னல் வெட்டிய வெளிச்சத்தில் எதிரே பார்த்து முழி பிதுங்கி சிலையானான்
ஜானகி….நீ…நீ…..வாய் குழறியது….இதயம் தாருமாறாய் அடித்து கொண்டது…..கால்களை கஷ்டப்பட்டு இழுத்து ஓடமுயன்றான்….
டேய்ய்ய்ய்ய்ய்ய்…….ஆங்கார சப்தம்….திரும்பி பார்த்தான்…அவனும் ஜானகியை திருட்டுதனமாக சைட் அடித்திருக்கிறான்….அழகாய் இருந்தவளை இவளவு கோரமாக பார்க்க முடியவில்லை அவனால்….அலட்சிய பார்வை பார்த்து கண்டுகொள்ளாமல் செல்ல அவள் என்ன பழைய ஜானகியா…..அவளுக்கு இப்போது ஒரு உயிர் தேவை….தன் துக்கத்தை தீர்த்து பழி வாங்க யாரோ ஒரு உடல் தேவை…….அவளை பார்க்க அவனுக்கு வேதனை நெஞ்சை வாட்டியது……உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடினான்…
மூச்சிரத்து நின்றவன் முன்னால் வாயில் கொத்தாக முடி தொங்க கொலைவெறியோடு அவன் கழுத்தை பிடித்து இறுக்கினாள்….இல்லை இருக்கியது…அவனது வாய் கண் மூக்கு தொண்டை என அனைத்து இடத்திலும் இரத்தம் ஒழுக கண்கள் சொருகி ரேவதியை மனதில் நினைத்துக்கொண்டே அவன் துவண்டு சரிய….
டேய்…. என் காதல் நிறைவேராம நா மட்டும் சாகனும்….நீங்கல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழனுமா…. இந்த ஊர்ல எவனும் சந்தோஷமா வாழவே முடியாது…நா வாழ விடமாட்டேன்…. விடமாட்டேன்…இந்த ஊரையே சுடுகாடா மாத்தாம நா ஓயமாட்டேன்….அவன் கழுத்தில் வடிந்த இரத்தத்தை முடிகளை வளைத்து கோதி சுழற்ற இரத்தம் ஊர் முழுக்க சுற்றி தெறித்தது…….
கோடங்கி அரண்டு எழுந்தான்
எல்லையில் நின்ற கருப்பனின் சிலை தன் பெரிய கண்களை திறந்தது……
நடுசாமம்…. தூங்கிக்கொண்டிருந்த ஆதி அலறி எழுந்து தொண்டையில் ஆசிட் பட்டதை போல் எரிகிறது எரிகிறது என கத்த ….பேச்சியும் அவனது குடும்பமும் பயந்து அவனுக்கு தண்ணீரை கொடுத்து திருநீர் பூசி…தொண்டையில் மோர் தடவி பக்குவம் செய்து கொண்டிருக்க….துளசிக்கும் அவனது சத்தம் கேட்டு பதறிக்கொண்டே எழுந்து அவன் வீட்டிற்கு ஓடினாள்….பின்னாலேயே கதிரும் எழுந்து ஓடினான்…..
ஆதி உருண்டு புரண்டு தொண்டையை பிடித்துக்கொண்டு அரற்றிக்கொண்டிருந்தான்….பேச்சியை விடவும் துளசி….என்னாச்சு ஆதி…என்னாச்சு.ஆதி……என அழுதுகொண்டே அவனை தொட்டு உலுப்பி அதிகமாய் துடிக்க ….கதிர் அவளது துடிப்பை முகம் சுருங்க கவனித்தான்…….

“துளசி……ஆதியும் நீங்களும் லவ் பன்னீங்களா
எதிர்பாராமல் முகத்துக்கு நேரே நீட்டப்பட்ட கூர்வாள்….குத்தி பார்க்கட்டுமா கொன்று தீர்க்கட்டுமா…என்று கேட்பது போல்….அவனது கேள்வி அவளை புரட்டிபோட கையில் இருந்த சாம்பார் கிண்ணம் நழுவி தரையில் நங் என்று மோதி உருண்டு கொண்டிருந்தது….அவள் கால்கள் பின்புறமாய் நகர்ந்து சுவற்றில் முதுகை இடித்தபடி நின்றாள்….தன் கண்ணெதிரிலியே தன் மனைவி இன்னொருவனுக்காக கதறிஅழுதால் அவன் அவளது முன்னாள் காதலன் என்றும் தெரிந்தால்…அடுத்து என்ன கேட்பான்….
முகவாயில் இரண்டு கைகளையும் வைத்தபடி ஒரு நிமிடம் அவளது கண்களை நேருக்கு நேராக பார்த்தான்….பின் தட்டில் இருந்த இட்லியை நகர்த்தி வைத்துவிட்டு எழுந்தவன் சிதறிய சாம்பாரை சுத்தம் செய்து உருண்டோடி மூலையில் கிடந்த கிண்ணத்தை எடுத்து அடுக்களையில் வைத்துவிட்டு நிதானமாய் கை கழுவி மற்றொரு கிண்ணத்தில் சாம்பாரை எடுத்துக்கொண்டு அவளை பார்த்துக்கொண்டே வந்தான்….சாவதானமாய் இட்லியை பிட்டு வாயில் வைத்துக்கொண்டே…..
“நீங்களும் உட்கார்ந்து சாப்பிடுங்க துளசி….சாம்பார் கொஞ்சம்தான் இருக்கு….ரெண்டுபேரும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்….அட….வாங்க….ஏன் சுவத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டிருக்கீங்க….மெதுவாக நடந்து வந்தவள் அவனுக்கு மேலும் இரண்டு இட்லிகளை எடுத்து வைக்க..
“சொல்லுங்க துளசி….நா கேட்டதுக்கு பதில் சொல்லவே இல்லயே….வெய்ட்…சாம்பார் நானே ஊத்திக்கிறேன்….இதுவும் கொட்டிட்டா அப்புறம் வெறும் இட்லியை சாப்பிட முடியாது என்றான் மெதுவாய் சிரித்துக்கொண்டே….

அவள் வார்த்தைகள் வராமல் எச்சிலை மென்று முழுங்கிக்கொண்டிருந்தாள்….
“சாப்பிடுங்க துளசி….உக்காருங்க…
அவனே அவளுக்கு தட்டு வைத்து இட்லியை எடுத்து வைத்தான் அவள் முகத்தை உற்று பார்த்துக்கொண்டே…அவன் கண்களை சந்திக்கும் தைரியம் இவளுக்கு இல்லை
“அப்புறம்….துளசி….உங்களதான் துளசி….
“ம்ம்…
“நீங்க ஏதாவது கொலை பண்ணிட்டீங்களா
“கொலையா….அய்யோ…நானா…
“பின்ன…கொலை குற்றவாளி மாதிரிதான் இப்போ பிகேவ் பண்ணிக்கிட்ருக்கீங்க….நா என்ன கேட்டேன்….லவ் பன்னீங்களான்னு தானே கேட்டேன்….. ஆமான்னா ஆமான்னு சொல்லுங்க…இல்லன்னா இல்லன்னு சொல்லுங்க…..எதுக்கு இவ்ளோ பெரிய ரியாக்சன்…ம்ம்ம்….ஒற்றை புருவம் உயர்த்தி அவன் கேட்க
அவள் அதிர்ச்சியும் குழப்பமுமாய் அவனை பார்த்தாள்
“லவ் பண்றது ஒன்னும் அவ்ளோ பெரிய தப்பான விஷயம் கிடையாது…அது உங்களோட தனிப்பட்ட விஷயம்..
நா அதெல்லாம் பெருசா எடுத்துக்கல..நீங்க நார்மலா இருங்க….டென்ஷன் வேண்டாம் ஓகே….
எல்லா காதலும் கை கூடாது இல்லயா.
நீங்க ஆதிய கல்யாணம் பண்ணிக்க முடியாம போனதுக்கு நான்தான் காரணம்னு நினைக்கிறேன்….
அவள் மவுனமாக தலை குனிந்தாள்…
“உங்க மனசுல இருக்குற தவிப்பு எனக்கு நல்லாவே புரியுது….எனக்கும் கஷ்டமாதான் இருக்கு…பட்..இப்போ ஆதிக்கும் கல்யாணம் ஆயிடுச்சு…அந்த பொண்ணு பேச்சி ஒரு இன்னசண்ட்…..ம்ம்….நீங்க உங்கள கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கோங்க…..நா தப்பான அர்த்தத்துல சொல்லல….ஏன்னா அந்த பொண்ணு எப்புடி புரிஞ்சுப்பான்னு நமக்கு தெரியாதில்ல….உங்களால அவங்க குடும்பத்துல எதுவும் பிரச்சினையாயிடக்கூடாது இல்லயா… தேவையில்லாம உங்களுக்கும் கெட்ட பேர்…..அதுக்காகத்தான்…
அவள் பயம் விலகி ஆச்சர்யத்துடன் அவனை பார்த்தாள்…. பரவாயில்லயே….இவனால் எப்படி இந்த விஷயத்தை இவளவு ஈசியாக எடுத்துக்கொள்ளமுடிந்தது…அவளவு நல்லவனா என்ன….நாம்தான் தேவையில்லாமல் என்னென்னவோ கற்பனை செய்து குழப்பிக்கொண்டோமோ
அவள் கண்முன் சொடக்கு போட்டான்
“ஹலோ துளசி…..என்ன….என் முகத்துல ஏதாவது ஒளிவட்டம் தெரியுதா….கண் சிமிட்டாம பாத்துட்டுருக்கீங்க
“இ….இல்ல…ஒன்னுமில்ல
“அப்ப சாப்பிடுங்க….நா சொன்னதுல உங்களுக்கு ஒன்னும் வருத்தமில்லையே
“ம்ஹூம்
“ஓகே…எனக்கு டைம் ஆச்சு..
நா கிளம்புறேன்
“ம்ம்…
புன்னகைத்து வாசல் வரை சென்றவன்
“துளசி…
“ம்
“ஆதிய மறக்க முயற்சி பண்ணுங்க….அவன் இன்னொருத்திக்கு சொந்தமாயிட்டான்….எதார்த்தம் இதான்….அத மாத்தமுடியாது….வீட்ல தனியா இருந்தா ஒரு மாதிரியா இருக்கும்….வேணும்னா உங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டு வாங்க

அவனை நினைத்து அவளுக்கு பெருமிதம் உண்டானது….எத்தனை ஆண்கள் இப்படி இருக்க முடியும்….சுவற்றில் மாட்டியிருந்த அவன் புகைப்படத்தின் அருகில் சென்று இமைக்காமல் பார்த்தாள்… காக்கி உடை அவனுக்கு அவளவு கம்பீரமாய் இருந்தது….தானாய் புன்னகை ஒன்று இதழில் குடிகொண்டது….சேலை தலைப்பை எடுத்து இல்லாத தூசியை இரண்டு நிமிடமாய் துடைத்தாள்….

இரவு… பின்பக்கத்து ஊஞ்சலில் கம்பிகளின் க்ரீச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது…ஜன்னல் வழியே பார்த்தாள்… கதிர்தான்….காலையில் எழுந்ததும் அதில் ஆடிக்கொண்டே பேப்பர் படிப்பதும் இரவு தூங்கும் முன் ஊஞ்சலில் அரைமணிநேரமாவது சாய்ந்து ஒரு குட்டி தூக்கம் தூங்கிவிட்டுத்தான் உள்ளேயே எழுந்து வருவான்….இப்போதும் அதே போல்….இவளுக்கு தூக்கம் வரவில்லை….அவனிடம் கொஞ்ச நேரம் பேசலாமா…தயக்கம் எழுந்தாலும் ஏதோ ஒன்று அவன் அருகில் அவளை இழுத்துக்கொண்டு போனது….
அவள் கம்பியை பிடித்ததும் அவன் சட்டென்று விழித்து திரும்பினான்
“ஸாரி….தூக்கத்த கெடுத்துட்டேனா
“அதெல்லாம் இல்ல….அதிசயமா இருக்கு….இந்த நேரத்துக்கு இங்க வந்துருக்கீங்க….
“இல்ல…தூக்கம் வரல…அதான்…
“அப்டியா…..ஆச்சரியம்தான்….
“இதுல என்ன ஆச்சரியம்
“வழக்கமா நா வர்றதுக்கு முன்னாடியே கண்ண இறுக்கமா மூடிக்கிட்டு படுத்துருப்பீங்க….இப்போ தேடி வந்து பேசுறீங்களே….ஒருவழியா நம்பிக்கை வந்துருச்சா….
அவள் அமைதியாய் இருந்தாள்..
என்ன பதில் சொல்வது…
“உக்காருங்களேன்…எழுந்து அமர்ந்து விலகி இடம் விட்டான்…அவளும் ஓரமாக உட்கார்ந்துகொண்டாள்…இருவருக்குமிடையில் மவுனம்….யார் முதலில் என்ன பேசுவது….
“ம்ம்…சொல்லுங்க துளசி….ஏதோ பேசனும்னு வந்துருக்கீங்க
“அது…ஆமா….அது…அவள் என்ன பேச நினைத்து வந்தாள்…திடீரென்று நினைவு வந்தது….ஜானகி கேஸ் எந்தளவுக்கு போய்ட்டிருக்கு….
“கிட்டத்தட்ட நெருங்கிட்டேன்….அநேகமா இதுல மந்திரமும் தந்திரமும் சேந்தே இருக்குன்னு நினைக்கிறேன்..
“மந்திரமா….நீங்க இதெல்லாம் நம்புறீங்களா
“இதுவரைக்கும் நம்பினதில்ல….ஜானகி விஷயத்துல கொலை தற்கொலை…ரெண்டுத்துக்குமே எந்த அறிகுறியும் இல்ல…சோ… அந்த மாதிரி இருக்கலாமோன்னு தோணுச்சு….அப்புறம் இந்த எம்.எல்.எ.மருதமுத்து அடிக்கடி கோடங்கிய பாக்க வந்து போய்ட்டிருக்கார்….எலெக்சன் வேலையெல்லாம் விட்டுட்டு ஏன் இங்கயே தங்கியிருக்கார்னு தெரியல…நா விசாரிச்சப்போ அவரோட பையனுக்கு உடம்பு சரியில்லன்னும் அதுக்காக கோடங்கி பரிகாரபூஜை செய்துட்டிருக்கார்னும் வாட்ச்மேன் சொன்னான்….எனக்கென்னவோ அதுல முழுசா உண்மை இல்லன்னு தோணுது….
அப்புறம் நேத்து ஆதிய ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனோம் இல்லயா…அப்போ அவரோட தோப்பு பங்களாவுல அந்த ராக்கம்மா பையன் காளிமுத்துவ பாத்தேன்….அவன் பைத்தியமாயிட்டான்னு ஊர்ல எல்லாரும் சொன்னாங்க… அதனாலதான் நா அவன அதிகமா விசாரிக்கல…..ஆனா அவன் எம்.எல்.எ.கூட சகஜமா நின்னு பேசிக்கிட்டிருக்கான்….நிச்சயமா அவன் நடிக்கிறான்னு தெளிவா தெரியுது….அவனுக்கும் இதுல ஏதோ சம்மந்தம் இருக்கணும்….சரியான சமயத்துல அவன கையும் களவுமா புடிக்கணும்….இதுல இன்னொரு விஷயமும் இடிக்குது… ஜானகி கழுத்துல தாலி எப்படி வந்தது….யாரா இருக்கும்னு குழப்பமா இருக்கு…
துளசி அமைதியாக இருந்தாள்…. ஜானகியை நினைத்து கண்களில் நீர் திரண்டது…..
“துளசி….என்னாச்சு….உங்க தங்கச்சிய நினைச்சு அழறீங்களா…
“அவள நினைச்சா என்னால தாங்கவே முடியல
“இட்ஸ் ஓகே….நடந்த எதையும் மாத்த முடியாதில்ல….தாங்கிக்கிட்டுத்தான் ஆகணும்
“ம்ம்….நா….போய் தூங்குறேன்
“ம்….ஓகே…நீங்க போங்க
“அப்புறம்…
“அப்புறம்…
“நீங்க….. என்ன…… வா போ ன்னே கூப்பிடலாம்….மரியாத குடுத்து எல்லாம் கூப்பிட வேண்டாம்
அவள் தலை குனிந்தபடி சொல்ல…அவன் கழுத்தை சாய்த்து அவளை பார்த்தான்….
“அப்டியா…..ஏன் அப்டி
“அது…..எதுக்கு…மரியாத எல்லாம்….பிரண்ட்லியா பழகலாம்னு….நீங்கதானே சொன்னீங்க
“ம்ம்ம்…..அப்போ நாம பிரண்ட்ஸ் ஆயிட்டோமா….
“ம்ம்
கைகளை கட்டிக்கொண்டு சிரித்தான்..ஓகே பிரண்ட்….குட் நைட்

அவளும்
பதிலுக்கு சிரித்து குட்நைட் சொல்லி உள்ளே நுழைகையில்…
செந்தில் வேகமாய் ஓடி வந்துகொண்டிருந்தான்…ஆதி வீட்டை நோக்கி….வாசலில் நின்று அவன் சத்தமாக பேசியது இவர்களுக்கும் கேட்டது

“லே ஆதி…நம்ம பாண்டிய நேத்து நைட்லருந்து காணோம்னு தேடிக்கிட்டு இருந்தோம்ல….கள்ளிகாட்டுக்கு போற ஒத்தையடி பாதையில அவனோட போன் கெடக்குலே….மனசு திக்கு திக்குண்டு அடிச்சுக்குது….கோடங்கி ஜானகி ஆவி வெளிய வந்துருச்சுன்னு வேற சொல்லிக்கிட்டிருக்காரு….நைட்டு ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கும்னு சொல்றாரு….பாண்டிக்கு ஏதும் ஆகியிருக்குமோ….பயம்மா இருக்குலே
கதிர் வேகமாய் வெளிகதவை திறந்துகொண்டுஅவர்கள் இருக்குமிடம் சென்றான்….பின்னாலேயே இவளும் சென்றாள்…
“செந்தில்….என்னாச்சு….
“சார்….அது வந்து…..பாண்டியோட போன்….அந்த பாதையில கிடந்தது சார்…அதுவும் மேல ரத்தம் சிந்தியிருக்குது பாருங்க சார்….
“இத யார் எடுத்தது
“நாந்தேன் சார்….பாண்டி வீட்டுக்கு போயி அவங்கம்மாவுக்கு ஆறுதல் சொல்லிட்டு வரும்போது…அந்த பக்கம் வெளிச்சம் தெரிஞ்சுதேனு போய் பாத்தேன்….இது கீழ கெடந்தது….பாத்தா ஒரே ரத்தமா இருக்கு…
“சரி வாங்க….போய் பாக்கலாம்
“நானும் வர்றேன்….பாண்டிக்கு ஒன்னும் ஆயிருக்காது…எனக்கு நம்பிக்கை இருக்கு…இந்த கோடங்கித்தேன் ஆவி பூதம்னு சொல்லி எல்லாரையும் ஏமாத்திக்கிட்டிருக்கான்…..அவன முதல்ல புடிச்சா…பாண்டி இருக்குற இடம் தெரிஞ்சுடும்…….ஆதியும் கிளம்பினான்
“அய்யோ…இந்த நேரத்துல போக வேண்டாம்….காலைல பாத்துக்கலாம் கதிர்…..வாங்க
“ஆமா மச்சான்….நேத்தே நீங்க எதையோ பாத்து பயந்து அலருனிய..
இப்போ இந்த நேரத்துல அந்த பக்கம் போவ வேண்டாம்….உள்ளார வாங்க மச்சான்
“அதெல்லாம் ஒரு பயமும் இல்ல…பந்தம் கொழுத்திக்கிட்டு போகலாம்…பாண்டிக்கு என்ன ஏதுண்டு பாக்க வேண்டாமா
“ஆதி….நாம மூணு பேரும் இப்பவே போய் பாத்துட்டு வந்துடலாம்….செந்தில் அந்த இடத்துல வேற எதையாவது பாத்தீங்களா
“இல்ல சார்…ஆனா வினோதமா ஏதோ சத்தம் கேட்டது…எதிர் பக்கத்துல இருந்து கோடங்கி வந்துகிட்டிருந்தாறு…என்ன சாமி இந்த இருட்டுக்குள்ள எங்க போயிட்டு வாரியன்னு கேட்டேன்…அப்பத்தேன் சொன்னாரு…..இங்க நிக்காத…அது வெளியில வந்துருச்சு…நா போய் பெரிய மந்திரவாதிய கூட்டிட்டு வந்துடுறேன்….அது கள்ளிகாட்ட தாண்டி வெளியில வராது….அந்த பக்கத்துல யாரும் போயிடவேண்டாம் எல்லாரும் ஜாக்கிரதையா இருங்கன்னு சொல்லிட்டு வேகமா போயிட்டாரு…பின்னாடியே எம்.எல்.எ.காரும் போச்சு சார்….
“நா நினைச்சது கரெக்ட்டா இருக்கு….கோடங்கியும் எம்.எல்.எ.வும் ஏதோ சதி பண்றாங்க…உடனடியா அங்க போய் பாத்தே ஆகணும்…வாங்க போலாம்
“ம்ஹூம்…மச்சான் நா ஒங்கள விடமாட்டேன்…. சார்…எல்லாம் காலைல பாத்துக்கலாம் சார்
“பேச்சி… எனக்கு ஒன்னும் ஆகாது…
நீ பயப்படாம உள்ள போ…நா வந்துடுறேன்
“ஆதி…அவங்க பயப்படுறாங்க….நீங்க வரவேண்டாம்….நா பாத்துக்குறேன்..செந்தில் நீங்க
“சார் எனக்கும் பயம்மா இருக்கு சார்….இந்த இருட்டுக்குள்ள போய் என்ன பண்ண முடியும்…காலைல பாத்துக்கலாம் சார்
“கோடங்கி சொன்னத கேட்டு பயப்படுறீங்களா…சரி பரவால்ல நா பாத்துக்குறேன்
“கதிர்….நா உங்கள இப்போ விட போறதில்ல….எதுவா இருந்தாலும் சரி….காலைல போய் பாத்துக்கங்க
“துளசி….நா சொல்றத கேளுமா…நா பாக்குறது போலீஸ் வேலை….இதுல நைட் பகல் எல்லாம் பாக்க முடியாது..
“இப்போ நீங்க வரபோறீங்களா இல்லயா…செந்தில் நீங்க பாத்து வீட்டுக்கு போங்க…பேச்சி…..கவனமா இரு…..கதிரின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றாள்….
ஆதி ஒரு நிமிடம் நின்று…. போகும் துளசியையே பார்த்தான்….அவள் அவனுக்கு முழுதாகவே மனைவியாகி விட்டாள் போலிருக்கிறது….இந்த பெண்கள் எவளவு சுலபமாக மனதை மாற்றிக்கொள்கிறார்கள்….நாம்தான் மறக்க முடியாமல் நொந்து சாகிறோம்….அவ்ளவுதான்….அவள் வாழ்க்கையை அவள் வாழ ஆரம்பித்துவிட்டாள்….இனி நாமும்….
“என்ன மச்சான்….என்ன யோசிச்சுக்கிட்டு இருக்கிய…உள்ளாரா வாங்க…இன்னும் நீங்க சாப்பிடல….
“ஏலே….புருஷனும் பொண்டாட்டியும் இந்த நேரத்துல வாசல்ல நின்னுகிட்டு என்ன செய்யுரிய
“இல்ல அய்த்த….சும்மாதேன்
“சரி சரி ரெண்டுபேரும் சாப்புட்டு போய் படுங்க…லே ஆதி….கருப்பன் துன்னூற பூசிக்கிட்டு படு…என்ன…நேத்து மாதிரி….எல்லாரையும் பயமுறுத்திப்புடாத….அடியே அவனுக்கு சாப்பாட்ட போட்டுப்புட்டு ரேவதி கூட படுத்துக்க…
சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் நின்று கொண்டிருந்தவளை அருகில் இழுத்து உட்கார வைத்தான்
“பேச்சி…
“என்ன மச்சான்…ஏதாச்சும் வோனுமா
“ஒனக்கு நிஜமாவே என்னய ரொம்ப பிடிக்குமா
“போங்க மச்சான்….இப்புடியெல்லாம் கேட்டியன்னா நா அழுதுருவேன்….எங்கிட்ட போய் இந்த கேள்விய கேக்கலாமா….புடிக்காமயா ஒங்களத்தேன் கட்டிக்கிடனும்னு விரதம் இருந்து கோயில் கோயிலா சுத்திக்கிட்டு தெரிஞ்சேன்
அவன் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு அவளையே கண்கொட்டாமல் பார்க்க….அவள் வெட்கத்தில் சிவந்து பூத்துப்போனாள்…
சாப்பிட்டு கை கழுவி அருகில் நின்ற அவளின் இடுப்பில் சொருகியிருந்த முந்தானையை இழுத்து துடைத்துக்கொண்டவன்….அவள் காதருகில் குனிந்து…உள்ள வா என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு போக….அவள் இருகைகளையும் கொண்டு முகம் பொத்தி ஒரு குதி குதித்தாள்….அந்த நேரம் அங்கு வந்த செல்வி
“அடி இவளே…என்னடி கெடந்து குதிக்கிறவ
“இல்ல அய்த்த…அது…எப்பவும் மச்சான் ஒழுங்கா பேசவே மாட்டாவளா…இப்போ எ சேலையில கை தொடைச்சு சிரிச்சுட்டு போனாவளா…அதேன்…
“ம்க்கும்….இதுக்கா இந்த குதி குதிச்சவ…நல்லாத்தேன்….பாத்து குதி…. விட்டத்துல முட்டிக்க போறவ….அவன் முந்தானைல தொடைச்சானாம்….இவ கெடந்து குதிச்சாளாம்….போடி..ரேவதி முழிச்சுக்கிட்டு கெடக்கா… போய் தூங்கு போ…
“அய்த்தே…மச்சான் உள்ளார…அவள் சொல்லி முடிக்கும்முன் உள்ளிருந்து அவன் சொல்லாதே என்று கை அசைக்க அவள் வாய் மூடிக்கொண்டாள்…அவன் தலையில் அடித்துக்கொண்டு உள்ளே போனான்…

சிறிது நேரம் கழித்து
உள்ளே வந்தவளின் தலையில் கொட்டியவன் “ஏண்டி அறிவுகெட்டவளே…ஓட்டவாயி..அம்மாகிட்ட என்ன சொல்லணும் என்ன சொல்லக்கூடாதுன்னு தெரியாதா ஒனக்கு
ஆஆ…..என தலையை தடவி உதட்டை பிதுக்கி நின்றவளை கண்டு அவனுக்கு அடக்கமாட்டாமல் சிரிப்புதான் வந்தது…..அவளை சுவற்றோடு சாய்த்து முகவடிவை அளந்துகொண்டிருந்தான்
“மச்சான் இப்புடி குறு குறுன்னு
பாத்துகிட்டிருந்தியன்னா எனக்கு என்னமோ பண்ணுது..
“ம்ம்ம்….என்ன பண்ணுது….

“போங்க மச்சான்….
“ஏ… பேச்சி….எங்கடி இருக்க…
“அய்யோ…அய்த்த கூப்புடுறாக.தோ….வந்திட்டேன் அய்த்தே…
“ஒன்னய என்ன சொன்னேன்…கொஞ்ச நாளைக்கு ரெண்டு பேரும் பொறுத்திருங்க….நீ ரேவதி கூட போய் படு போ….

வீட்டினுள்ளே நுழைந்த பிறகுதான் தான் கதிரின் கையை பிடித்திருக்கிறோம் என்று உணர்ந்த துளசி உதட்டை கடித்து தலை குனிந்து ஒரு கண்ணை மூடி அவனை சாய்வாக பார்த்து அவன் சிரித்ததும்  மெதுவாக கையை விடுவித்து விலகினாள்….அவன் மறுபடியும் சிரித்துவிட்டு தலையை இடம் வலமாக ஆட்டி புருவம் உயர்த்தி அவளை பார்த்துவிட்டு படுக்கையில் போய் சாய்ந்து கொண்டான்…

அவள் சோபாவிலேயே யோசனையுடன் உட்கார்ந்திருந்தவள் தன்னையறியாமல் தூங்கிப்போனாள்….

யாரோ உலுக்கி எழுப்பியதைப்போல பதறி எழுந்த கதிர்….வெளியே ஏதோ வினோதமான சத்தம் கேக்க எழுந்துவந்தான்….மணி பார்த்தான்…. பனிரெண்டு….துளசி சோபாவிலேயே தூங்கிக்கொண்டிருக்க….கதவை திறந்து வெளியில் வந்தான்….தூரத்தில் ஒரு வெளிச்சபுள்ளி ஒன்று நகர்வது போல் இருக்க வெளிகதவையும் திறந்துகொண்டு வந்து பார்த்தான்….யாரோ கையில் டார்ச்சுடன் வேகமாய் போவது தெரிந்தது….சட்டென்று உள்ளே வந்து துப்பாக்கியும் டார்ச்சும் எடுத்துக்கொண்டு தூரத்தில் நகர்ந்து சென்று கொண்டிருக்கும் அந்த புள்ளியை நோக்கி இவனும் வேகமாக தொடர்ந்தான்…கதவு திறக்கும் சத்தம் கேட்டு விழித்த துளசி அவன் வேகமாய் வெளியே செல்வதை கண்டு பின்னாடியே  ஓடினாள்….

யார் அது….இவளவு வேகமாய் எங்கு செல்கிறான்….யோசித்துக்கொண்டே துப்பாக்கியை தயாராக வைத்துக்கொண்டு அவன் வேகத்துக்கு ஈடு கொடுத்து இவனும் முன்னேறினான்…தெரு விளக்குகள் எல்லாம் அனைந்து போயிருந்தது….கும்மிருட்டு……நாய்கள் வேறு குலைத்துக்கொண்டும் ஊலையிட்டுக்கொண்டும் பீதியை கிளப்பியது….எங்கோ கூட்டிலிருந்த பறவைகள் மொத்தமாய் படபடவென்று சிறகை அடித்து கொண்டு கத்தும் ஒலி தெளிவாக கேட்டது…..ஆந்தையோ கோட்டானோ ஏதோ ஒன்று கொடூரமாய் அலறியது…அந்த பக்கம் யாரோ நாலைந்து பேர் தடதடவென்று ஓடுவது போல் இருந்தது….காய்ந்த சருகுகள் காலில் மிதிபட்டு அந்த நேரத்துக்கு அதுவும் கொஞ்சம் பயத்தை உண்டுபண்ணியது…முன்னால் போகும் ஒருவனை தொடர்வதா அல்லது அந்த பக்கம் கூட்டமாய் ஓடும் சத்தத்தை  தொடர்வதா என கதிர் ஒருநிமிடம் அப்படியே நின்றான்….. திடீரென்று வெட்டிய மின்னல் கண்ணை பறிக்க எதிரில் வேகமாய் சென்றுகொண்டிருந்தவன் தெளிவாய் தெரிந்தான்….
ஆதி…
ஆதியா…
நடு சாமம்…மை போல் இருள்…குளிர் காற்று…வித வித மான சத்தங்கள்…என்னதான் தைரியசாலியாக இருந்தாலும் மனதுக்குள் அச்சம் வந்து குடிகொள்ளத்தான் செய்தது…கதிர் வேக வேகமாய் ஆதியை பின்தொடர்ந்தான்….ஆதி சிறிதும் தயக்கமோ அச்சமோ இல்லாமல் ஏதோ சாவி கொடுத்த பொம்மை போல் அந்த ஒத்தையடி பாதையில் அவன் பாட்டுக்கு போய்கொண்டிருந்தான்…துளசியும் கதிரின் பின்னாலேயே அவனை அழைத்துக்கொண்டே வந்தாள்… அவனுக்கு உண்மையிலேயே கேட்கவில்லையா…இந்த காற்றின் சத்தத்தில் அவன் காதில் விழவில்லையா….யாரை பின் தொடர்ந்து போய்கொண்டிருக்கிறான்.கதிர்…கதிர்…எங்க போறீங்க….ரொம்ப இருட்டா இருக்கு…வாங்க கதிர்…

அந்த ஒத்தையடி பாதை கள்ளிகாட்டில் முடிந்தது….முன்னால் வந்த ஆதியை காணவில்லை….சற்று நேரம் யோசனையுடன் நின்றான்…டார்ச்சை அடித்து சுற்றும் முற்றும் தேடினான்…அவளவு பெரிய இருள் சூழ்ந்த பிராந்தியத்தில் அந்த சிறிய வெளிச்சம் போதுமானதாய் இல்லை…மரங்களும் கள்ளிகளும் மட்டுமே கண்ணுக்கு புலப்பட்டது…ஏதோ ஒரு நறுமணம் மூக்கை வருடியது…அவன் பழக்கப்பட்டதுதான்…அவனுக்கு பிடித்ததும் கூட…இந்த ஆதி எங்கு சென்றான்…அழைத்து பார்க்கலாமா…வேறு யாரோ நிறைய பேர் ஓடுவது போல் கேட்டதே…முள் வேலி அடைத்திருந்த அந்த இடத்திற்குள் லாவகமாய் முள்ளை விலக்கி உள்ளே சென்றான்…

பின்னால் வந்த துளசி தட்டுத்தடுமாறி நின்றாள்…எந்த பக்கம் போவது என்று தெரியவில்லை…சூழ்நிலை அவளை அச்சுறுத்தியது…அய்யோ என்னது இது…எந்த தைரியத்தில் நான் இங்கு வந்து நிற்கிறேன்…கதிர்…கதிர்..பயத்தில்…தொண்டையை தாண்டி சத்தம் வெளியே வர மறுத்தது….திடீரென இரண்டு முரட்டு கைகள் அவளை வம்புடியாய் பற்றியது…கத்த நினைத்தால் முடியவில்லை…அவள் வாயை யாரோ கைகளால் பொத்தியிருந்தார்கள்…விடுபட முயன்று மல்லுகட்டினாள்…அவளை இழுத்துக்கொண்டு போனார்கள்….சிறிது தூரம் கடந்து மந்திரம் ஓதும் ஒலி காதில் கேட்டது…தீ எரியும் வெளிச்சமும் தென்பட்டது…பலகை போல் ஏதோ ஒன்றில் அழுத்தி உட்காரவைக்கப்பட்டாள்…எதிரில் யார் அது….கூர்ந்து கவனித்தாள்…..கோடங்கி தீவிரமாக மந்திரம் ஓதிக்கொண்டிருந்தான்…கோடங்கியா…என்ன நடக்கிறது இங்கே…என்ன செய்ய போகிறார்கள்….வாய் கட்டியிருந்ததால் பேசவும் முடியவில்லை…அந்த வேலையை கண்கள் செய்துகொண்டிருந்தன….என்னை இழுத்து வந்தவர்கள் யாராக இருக்கும்…கண்களை சுழற்றி பார்த்தாள்… அருகில் காளியப்பன் நின்றிருந்தான்..இன்னொருவன் யார் என்று தெரியவில்லை….கோடங்கியின் பக்கத்தில் இருப்பது….அவர் எம்.எல்.எ.தானே….அப்படியென்றால் கதிர் சந்தேகித்தது சரிதானா…இவர்கள்தான் ஜானகியையும் கொன்றிருப்பார்களா…எதற்காக இப்படி செய்கிறார்கள்….எழுந்து ஓட முயன்றாள்….எழவே முடியவில்லை….எவளவு முயற்சி செய்தும் ஒரு அடி கூட நகர முடியவில்லை….பயமோ வேதனையோ கண்களில் கண்ணீர் திரண்டு கொட்டியது.அவள் எதிரில் நீண்டதொரு முடிக்கற்றைகள் வைக்கப்பட்டிருந்தது….அதை பார்த்தாலே குமட்டிக்கொண்டு வந்தது….என்னது இது…கர்மம்……இதை எதற்கு வைத்திருக்கிறார்கள்…அவ்ளவுதானா நானும் பலியாகப்போகிறேனா அம்மா பேச்சி… இதற்காகவா எனக்கு அவசரமாக தாலி எடுத்துக்கொடுத்தாய்…இவர்களுக்கு நீயும் துணை நிற்கிறாயா….கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாயா.அய்யோ கதிருக்கு என்னாச்சோ தெரியவில்லையே….அவனை இவர்கள் ஏதாவது செய்திருப்பார்களோ….நாங்கள் இருவரும் இந்த கள்ளிகாட்டிற்கு உரமாகபோகிறோமா….

நினைவுகளின் முடிவில் கோடங்கி ஏதோ சைகை காட்ட பக்கத்தில் நின்றவர்கள் அவன் அருகில் போய் நின்று குனிந்தனர்… அவன் ஏதோ காதில் சொன்னதும் அவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த கத்தி ஒன்றை எடுத்து வந்து அவள் அருகில் வர…பயம் நெஞ்சை கவ்வியது….மனம் கொந்தளித்தது….கூப்பாடு போட்டது….கண்கள் உருட்டி உருட்டி தன் ஆற்றாமையை வெளிக்காட்டியது….கதிர்….கதிர்….எங்கு இருக்கிறீர்கள்…உங்களோடு சந்தோசமாக வாழ வேண்டும் என்று நினைத்திருக்கும் தருணத்தில் என் உயிர் என்னை விட்டு போகப்போகிறதே….காதலித்தவனுடன் சேர நினைக்கும் தருணம் விதி உங்களுடன் சேர்த்தது….உங்களை புரிந்துகொண்டு மனதை மாற்றிக்கொண்ட நேரம் அதே விதி என்னை எமனிடம் சேர்க்க துணிகிறதே…..என்ன கொடுமை இது….உடனே ஓடி வந்து என்னை காப்பாற்ற மாட்டீர்களா….வாழாமலே போகப்போகிறேனா….அய்யோ கடவுளே….அம்மா….நீயும் அப்பாவும் என்னுடனே இருக்கிறீர்கள் என்று சொன்னீர்களே….அம்மா பேச்சி இருக்கிறாள் அவள் அண்ணன் கருப்பன் இருக்கிறான் பயப்படாமல் இரு என்று நீதானே வந்து சொல்லிவிட்டு போனாய்….எங்கே போனீர்கள் எல்லோரும்….ஒருவேளை இவை அனைத்துமே என் பிரம்மைதானா….நானே விதைத்துக்கொண்ட கற்பனையா….

கத்தியை பிடித்திருந்தவன் அவன் பின்புறம் வந்து நின்றான்….அவள் கூந்தலை பற்றினான்…திமிறிக்கொண்டு திரும்பினாள்….உதைத்துக்கொண்டு எழ முனைந்தாள்….இந்த முறை அவளால் எழ முடிந்தது….பின்புறம் கட்டியிருந்த கைகளை உதறினாள்…. இன்னொருவன் அவளை வலுக்காட்டாயமாய் மறுபடியும் உட்காரவைக்க முனைந்தான்..
கோடங்கி அனைத்தையும் கவனித்துக்கொண்டே மிக உக்கிறமாய் மந்திரம் சொல்லிக்கொண்டிருந்தான்….அந்த மந்திரம் வேறு அவள் மூளையை குடைந்து உள்ளே ஊடுருவி உள்ளிருக்கும் ஒவ்வொரு நரம்பும் உருவப்பட்டு அவள் கண்முன்னே கீழே விழுவதுபோல் அவள் கண்களுக்கு தெரிந்தது….இதயம் எகிறி குதித்து அவள் காலடியில் விழுந்து துடித்தது..வயிற்றில் இருந்த குடல் எல்லாம் புழு போல் நெளிந்துகொண்டு மலைப்பாம்பாய் அவளை சுற்றி பின்னி வளைத்தது….இருள் எல்லாம் சிவப்பு நிறமாய் தெரிந்தது….முன்னே எரிந்து கொண்டிருந்த தீ கைகளை நீட்டி உள்ளே வா என அழைத்தது….அந்த முடிக்கற்றைகள் எழுந்து நடனமாடின…. அது அவளது வாயை நோக்கி வந்தது….காளியப்பன் மறுபடியும் அவள் கூந்தலை பற்றி கத்தியை அதில் வைத்த சமயம்….அவனே பின் மண்டையை பிடித்துக்கொண்டு சரிந்தான்…பக்கத்தில் நின்றிருந்தவனும் அதேபோல் சரிந்து விழுந்தான்
மந்திரம் நின்றது….கோடங்கி கோபமாய் சட்டென்று எழுந்தான்….. துளசி தன்னிலை திரும்பி என்ன நடந்தது என்ன பார்க்க ஆதி கையில் ஒரு பெரிய கட்டையை வைத்துக்கொண்டு நின்றான்..

“துளசி…நீ போ… வேகமா போ இங்கிருந்து….
“ஆதி…நீங்க…எப்புடி…
“என்ன பத்தி கவலப்படாத…வெரசா போ… போ….
அவள் ஓடுவதா வேண்டாமா என்று புரியாமல் நிற்கும்போதே ஆதி கட்டையை எடுத்து எம்.எல்.எ.வை தாக்கினான்….”துளசி….எதுக்கு இன்னும் நிக்குற…..போ… போ..கத்திகொண்டே அங்கிருந்தவர்களை தாக்கி கொண்டிருக்க அவர்கள் அவனை வளைத்துப்பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்….கதிர் வந்தாரே….எங்கே…அவருக்கு என்னாயிற்றோ என மனம் பதறியது… தேடி ஓட கால்கள் துடித்தாலும் மனம் ஆதியை விட்டு போக மறுத்தது…..ஆதியை இவர்கள் ஏதாவது செய்துவிட்டால்…இவன் ஒருவன் எப்படி இத்தனை பேரை சமாளிப்பான்….அவனையும் மந்திரத்தால் கட்ட முயற்சித்தால்…. அய்யோ எப்படி காப்பாற்றுவது….அங்கே அவரையும் தேட வேண்டுமே…மறுபடியும் ஆதி அவளை போகசொல்லி கத்தினான்…

அங்கே….
முள்வேலியை தாண்டி உள்ளே வந்த கதிர் எங்கோ மந்திரம் ஒலிக்கும் சத்தம் கேட்டு எந்த திசை என உறுதி செய்துகொண்டு அந்த பக்கமாய் செல்ல ஆரம்பித்தான்…கொஞ்சதூரம் கடந்து அவனை சுற்றி முன்புபோல் அதே நறுமணம் வீசியது….ஓரிடத்தில் கொஞ்சம் வெளிச்சம் தெரிந்தது….அது ஒரு பெரிய மரம்….அதன் பின்னால்தான் அந்த வெளிச்சம் வந்துகொண்டிருந்தது… கிட்டே நெருங்க நெருங்க அது இன்னும் தூரமாய் நகர்வதுபோல் தோன்றியது…மனம் ஒரு புதிய உணர்வை உணர்ந்தது…. கையில் இருந்த துப்பாக்கியும் டார்ச்சும் அவனிடம் சொல்லாமலே சத்தமில்லாமல் கீழே விழுந்தது…..மாய உணர்வு ஒன்று அவனை ஆக்கிரமித்தது…. அந்த மரத்தை நெருங்கினான்…வெளிச்சம் அவன் கண்களை கூசசெய்தது…ஆனாலும் அருகில் சென்றான்….அவன் பார்த்த காட்சியில் மூளை செயலிழந்து கண்கள் நிலைகுத்தி நின்றது…..
“ஜா….ஜானகி…யார் உன்ன இப்புடி கட்டிபோட்டது….
“அதோ அவந்தேன்….என்னய கட்டிபோட்டுட்டான்….கட்ட அவுத்துவிடுங்க
வேகமாய் அவள் அருகில் சென்று கட்டை அவிழ்த்தான்…அவிழ்த்த கயிறு கையிலிருந்து நழுவி தானாய் மேலே ஏறி மரத்தின் கொடியாய் மாறியது
அவள் அழுதாள்….முகத்தை கைகளால் மூடிக்கொண்டு குமுறி குலுங்கி அழுதாள்
“அய்யோ…ஜானு…எதுக்கு அழகுற….
அவள் அழுதுகொண்டே இரு கைகளையும் அவனை நோக்கி நீட்ட…..
அவனுக்கு பின்னால்….
“கதிர்….கதிர்….இங்க என்ன பண்றீங்க….சீக்கிறம் வாங்க…ஆதி ஆபத்துல மாட்டிக்கிட்டாரு….
திரும்பினான்….துளசி நின்றிருந்தாள்….
“கதிர் …அவ கூட போகாதீங்க…உங்கள கூட்டிட்டு போகத்தான் வந்தேன்….வாங்க நாம போயிடலாம்….
துளசி ஓடிவந்து கதிரின் கையை பற்றி இழுத்தாள்….”கதிர் வாங்க….அங்க அந்த மந்திரவாதியும் அவன் ஆட்களும்…..ஆதிய….அவள் முடிக்குமுன்…..
“ஏய்….கையை விடுடி…..
அப்போதுதான் துளசி கவனித்தாள்…அந்த மரமும் வெளிச்சமும் அதன் உள்ளிருந்த ஜானகியும் அவள் கண்களுக்கு தெரிய…. அரண்டு மிரண்டு ஒருகணம் கதிரின் கையை இருக்க பற்றினாள்….”கதிர்….அங்க இருக்குறது….
“ஜானகிதான்
“உங்க கண்ணுக்கும் தெரியிறாளா….உங்களுக்கு பயம்மா இல்லயா….வாங்க போயிடலாம்…
அவன் மந்திரித்து விட்டவன் போல் நின்றான்….அவனை உலுக்கினாள்….கதிர் என்னாச்சு உங்களுக்கு….
அவன் தலையை இரண்டுமுறை உழுப்பினான்….
“துளசி….நீ எதுக்கு வந்த….ஆதி இங்க வேகமா வந்துட்டிருந்தான்….அவன பின்தொடர்ந்து நானும் வந்தேன்….திடீர்னு அவன காணோம்….
“அய்யோ….அங்க ஆதிக்கு பெரிய ஆபத்து….இங்க நிக்க வேண்டாம்…..வாங்க போயிடலாம்….ஊருக்குள்ள போய் எல்லாரையும் கூட்டிட்டு வந்துடலாம்….

“ஏய்….கதிர்….போயிடுவியா…என்ன விட்டுட்டு போயிடுவியா…..என்ன துரத்தி துரத்தி காதலிச்சியே….என்ன தவிர யாரையும் திரும்பிக்கூட பாக்கமாட்டேன்னு சத்தியம் பண்ணியே…..என்ன தவிர வேற எவளையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு நீதானே சொன்ன….இப்போ என்னய விட்டுட்டு  அவ கூட போறியே….
துளசி கதிரை பிடித்திருந்த கைகளை விட்டு விலகி அதிர்ச்சியுடன் அவனை நிமிர்ந்துபார்த்தாள்…. அவனும் அப்போதுதான் ஜானகியை பார்த்தது போல முகம் வெளுக்க நின்றவன் பின் மண்டியிட்டு ஜானு ஜானு என்று குலுங்கி அழுதான்….
“ஜானு நீ எங்கண்ணுக்கு தெரியுற….நிஜம்தானா….நா வேணும்னே உன் சத்தியத்த மீறலடி…எல்லாமே எதிர்பாராம நடந்தது….நம்ம வாழ்க்கையில நடக்குற எல்லாத்தையும் நாம ஏத்துகிட்டுத்தானே ஆகணும்…
உன் மரணத்துக்கு காரணம் என்னனு தெரியாம கண்டுபுடிக்க முடியாம தவிச்சுக்கிட்டு இருக்கேன்….சொல்லு உன்ன யாராவது கொன்னுட்டாங்களா….யார் அது….சொல்லு ஜானு….உனக்கு யார் தாலிகட்டினது
“அது இப்போ முக்கியமில்ல…எனக்கு நீ வேணும்….உன்ன யாருக்கும் விட்டுதரமாட்டேன்…எங்கூட வா….நாம இந்த உலகத்தை விட்டு தூரமா போயிடுவோம்….

துளசி நடந்து கொண்டிருக்கும் அனைத்தும் கனவா நனவா என்று குழம்பிப்போனாள்….ஜானகி கதிரின் கழுத்தில் கை வைத்து வ்ன் உயிரை வெளியே கொண்டு வர முயற்சித்துக்கொண்டிருந்தாள்
துளசி சுதாரித்து….வேகமாய் கதிரின் கையை பலம் கொண்ட மட்டும் பிடித்திழுத்து தன் பக்கத்தில் இழுத்தாள்…
“வேணா துளசி….நீ போயிடு…நீ போயிடு….நா செத்தாலும் பரவால்ல…உனக்கு  எந்த கஷ்டமும் வேண்டாம்…நீ போ கதிர் அழுதுகொண்டே கூறினான்
ஜானகி ஆங்காரமாய் கத்தினாள்….
“ஜானகி….இங்க என்ன நடக்குது….நீயும் ஆதியும்தானே லவ் பன்னீங்க….
“ஆதியா…..நா எதுக்கு அவன லவ் பண்ண போறேன்…. நா மனசார நேசிச்சது கதிரை மட்டும்தேன்…..வேற யாரையும் ஏறெடுத்து கூட பார்த்தது கிடையாது…..
“அப்போ….அவன எதுக்கு நேத்து தொந்தரவு பண்ண….அவன் நேத்து துடிக்கும்போது ஜானகி விட்டுடு விட்டுடு ன்னு தான் துடிச்சான்….
“அவனை நாந்தேன் கொல்லணும்னு நெனச்சேன்…அதுக்கு என்ன இப்போ
“அவன எதுக்குடி கொல்ல பாக்குற பாதகத்தி….நீந்தான் அவன விரும்பலைல….அப்புறம் என்ன….உன் பின்னாடி சுத்துனவன் எல்லாரையும் கொல்லுவியா
அவள் ஆங்காரமாய் அழுதாள்..அரற்றினாள்…உக்கிறமாய் கதறினாள்
“ஜானு….அழாதடி…. என்ன நடந்தது சொல்லு…ஆதி மேல உனக்கு என்னடி கோவம்….உன்ன கொன்னது யாரு…அந்த கோடங்கியா….உனக்கு தாலி கட்டினது யாரு…சொல்லு…துளசி கேட்க….
அவளின் அழுகை பெரிதானது
“எதுக்கு சொல்லணும்…சொன்னா ஆகப்போறது ஏதாவது இருக்கா….சாமி கூட பேதமை பாக்குது….எல்லாரையும் காப்பாத்துற கருப்பன் நா உயிருக்கு போராடினப்போ கண்ண மூடிக்கிட்டு தானே இருந்தான்…
மறுபடியும் குலுங்கி அழுதாள்
“ஜானு தெய்வத்தை பலிக்காத.காரணமில்லாம எதுவும் நடக்காது…..உன்னுடைய விதி அதுதான்னா அதுக்காக மத்தவங்களை வதைக்கிறது என்ன நியாயம்….நீ அமைதியா தெய்வத்தோட காலடியில சரணடைஞ்சுடு…உன் ஆத்மா சாந்தியடையுட்டும்
“முடியாது….நா எவ்ளோ வேதனையோட நிறைவேறாதஆசைகளோட அந்த கொடிய மரணத்த அனுபவிச்சேன்னு தெரியுமா ஒனக்கு…ஹாங்…அவள் கொடூரமாய் முகத்தை மாற்றி கத்தினாள்…

“ஜானு….நா சொல்றதை கேளுடி
“ஏய்……….நீயும் நா அனுபவிச்ச மரண வேதனைய அனுபவிக்க கூடாதுன்னுதேன் நா கொல்லணும்னு காத்திருந்த அந்த ஆதிபய இந்த காட்டுக்குள்ள வந்த பொறவும் ஒன்னய காப்பாத்துறதுக்காக தெசைய மாத்தி அங்க அனுப்பி வெச்சேன்….அவ்ளோத்தேன் நா ஒனக்கு காட்டுற இரக்கம்….இப்போ அவன் அந்த கோடங்கி கையால செத்து ஒழியட்டும்….ஒனக்கு தெரியுமா…..அந்த கோடங்கி கதிரையும் அவன் பூஜைக்கு பலியாக்கத்தேன் போறான்….அதுக்கு முன்னாடி நா எ கதிரை எங்கூட பத்திரமா கூட்டிட்டு போறேன்….எனக்கு எ கதிர்தேன் வோனும்….அந்த கோடங்கிக்கிட்ட மாட்டிக்காம நீ இங்கருந்து போ…. போடி…கதிர நா கூட்டிட்டு போய்ட்டா அவன் ஒன்ன பலியாக்க மாட்டான்….நா எ கதிர் கூட சந்தோஷமா போய்ட்டா இந்த ஊரையும் ஒன்னும் செய்ய மாட்டேன்..ஆனா போறதுக்கு முன்னாடி என்ன கொன்னவனுங்க அத்தனை பேர் ரத்தத்தையும் குடிச்சுட்டுத்தேன் போவேன்……உன்ன ஊர விட்டு போகசொல்லி முன்னாடியே எச்சரிச்சேன்….அன்னிக்கே நீ போயிருந்தா….. எ கதிர் ஒனக்கு புருஷனா ஆயிருக்க மாட்டான்…..இப்பவும் சொல்றேன்…..எ கதிர எங்கிட்ட விட்டுட்டு ஒ வழிய பாத்து போய்கிட்டே இரு….உன்ன எதுவும் செய்ய மாட்டேன்னு அப்பா அம்மாவுக்கு சத்தியம் செஞ்சிருக்கேன்…..அத மீற வெச்சிராத……அவளின் கொடூரம் கண்டு…….

துளசி அதிர்ந்தாள்….என்ன சொல்கிறாள் இவள்….என் கண் முன்னே ஆதியும் கதிரும் உயிரை விட்ட பிறகு நான் மட்டும் உயிர் பிழைத்து ஓடுவதா….
“ஜானகி…..அப்போ…..என்ன உயிர் பிழைக்க வச்சு விதவையாக்க போற…. அப்டித்தானே….இதான் நீ எம்மேல காட்டுற இரக்கமா… தேவையில்ல…. உனக்கு கதிர்தானே வேணும்….நீ மொதல்ல என்ன கொன்னுட்டு அப்புறமா கதிர கொல்லு…. ஆதிய கொல்லு…. இந்த ஊர்ல உலகத்துல இருக்குற எல்லாத்தையும் கொன்னுடு….அப்பவாவது உன் ஆத்திரம் தீருமா….
ஜானு…நீ ஏன் இப்டி கொடூரமானவளா மாறிட்ட….
“என்ன…….பேசியே என்ன தொரத்தலாம்னு பாக்குறியா…எ ஆசையும் கனவும் நிறைவேறாம எ ஆத்மா அடங்காது….வெலகுடி…..அவளை நோக்கி அவள் கைகளை வீச அவள் அந்தபக்கமாய் விழுந்தாள்….கதிரின் மீது பார்வையை வீச அவன் கழுத்தை அவன் கைகளே நெறிக்க அவன் துடித்தான் கதறினான்….துளசி நீ போ….சீக்கிறம் இங்கருந்து போ…. என்ன பத்தி கவலைப்படாத….நீ போ….துடித்தபடியே கதிர் கத்தினான்

அங்கே….
ஆதி அனைவரையும் சமாளித்து அவர்களை கட்டையாலேயே வெளுத்து கட்டிக்கொண்டிருந்தான்….ஜானகியை கொன்றது அவர்கள்தான் என்று தெரிந்தபிறகு வெறி கொண்ட வேங்கையாக அவன் மாறிக்கொண்டிருக்க…. கோடங்கி அவனை மந்திரத்தால் கட்டி வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்….எம்.எல்.எ..அவன் அடித்த ஒரு அடிக்கே தலையில் இரத்தம் வடிய நின்றான்….மற்ற இருவரும் அவனை பிடித்து வளைக்க முயற்சி செய்து கொண்டிருக்க கோடங்கியின் சீடர்கள் நான்கு பேர் அனைந்து போயிருந்த யாகத்தீயை மறுபடியும் உருவாக்கி பூஜையை நடத்த உதவி செய்து கொண்டிருந்தனர்…..கோடங்கி தன் கையில் கட்டியிருந்த கருப்பு கயிறை உருவி ஜெபித்து அதை எரியும் தீக்குள் விட்டு எடுத்து சாம்பலாக்கி ஆதியின் மீது ஊத அவன் அப்படியே மயங்கி சரிந்தான்…அவனை இழுத்து வந்து பலிபீடத்தில் உட்காரவைத்தனர்…..
அனைவரும் சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு….
“அய்யோ…சாமி…இப்போ என்ன பண்ணுறது…. அந்த துளசி ஓடிட்டாளே….
“அவ எங்கயும் போகல….ஜானகிய கட்டி வெச்ச இடத்துலதான் இருக்கா….

“நாங்க போய் இழுத்துட்டு வந்துரட்டுமா….
“இப்ப யாரும் அங்க போகவேண்டாம்…ஆவி கட்ட அவுத்துருச்சு….கதிர கொண்டு போற வெறியில இருக்கு….
“அய்யோ….அப்ப நம்ம பூஜை
“கதிர் செத்துட்டா…பலி குடுக்க அதே மாதிரி ஜாதகக்காரண தேடுறது கஷ்டமாச்சே சாமி
“துளசி உயிரோட இருக்குறவரைக்கும் கதிர் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது….ஜானகிஆவி துளசிய கொல்லாது….அதனாலதான் அந்த பேச்சியம்மன் கதிருக்கு அவசர கல்யாணம் பண்ணி வெச்சது….நாம இப்போ செய்ய வேண்டியது மறுபடியும் அந்த ஆவிய கட்டி வைக்கிறதுதான்…ஆனா அதுக்கு இப்போ நேரம் பத்தாது….இன்னும் நாப்பத்தெட்டு மணி பொழுதுக்குள்ள நாம ரெண்டு பெண் பலிகளை குடுத்தே ஆகணும்….ஜானகி ஆவி நம்மள நெருங்க நேரம் பாத்துகிட்டிருக்கு….

“அய்யோ அது எங்களை கொன்னுடுமா சாமி
“பயப்படவேண்டாம்….உங்க சுக்குரதிசை இப்போ ரொம்ப பிரமாதமா இருக்கு….உயிருக்கு எந்த ஆபத்தும் இப்போதைக்கு வராது….ஆனா எப்போ வேணாலும் நேரங்கள் மாறுபடலாம்….அதுக்குள்ள மிச்சம் இருக்குற எல்லா பலி பூஜையும் முடிச்சு அஞ்சு ஆவிகளையும் இந்த கைக்குள்ள அடக்கி வச்சுக்கிட்டா அப்புறம் அந்த கடவுளால் கூட நம்மள ஒன்னும் பண்ணமுடியாது….
“அப்போ இந்த ஆதிபயல இப்பவே பலிகுடுத்துடலாமா
“முட்டாள்….முதல்ல பெண் பலிகளைத்தான் குடுக்கனும்…அப்போதான் அவனுங்க ஆயுசு ஆட்டம் குறையும்…அந்த சமயத்துலதான் ஆண் பலிகொடுக்கனும்….அதுதான் சாராம்சம்….
“என்னதான் சாமி பண்றது இப்போ….உங்களால அந்த ஆவிய இப்போ கட்ட முடியாதா
“முடியும்…. ஆனா நேரமில்லன்னு தான் சொல்றேன்….நடு நிசி முடியறதுக்குள்ள ஒரு பலி குடுக்கணுமே….
“எல்லாம் இந்த ஆதிபயதேன்… இப்புடி காரியத்தையே கெடுத்துட்டானே….
“நான் எதிர்பார்த்ததுதான்….ஆனாலும் எத்தனை தடங்கல்கள் வந்தாலும் நான் ஓயமாட்டேன்….ஏ…பேச்சி ஆத்தா…எங்கிட்டயே விளையாட்டு காட்டுறியா….சூட்சுமமா இருந்து இந்த தடங்கல்களையெல்லாம் நீதான் பண்றேன்னு எனக்கு தெரியும்….ஆனாலும் நான் நினைச்சா காரியத்தை முடிக்காம விடமாட்டேன்….உன்ன கயிறா மாத்தி இதே கைல கட்டாம விடமாட்டேன்…நீ என் ஏவலுக்கு அடிபணியத்தான் போகிறாய்…

கோடங்கி ஆவேசமாய் கத்தினார்…

“சாமி அடுத்து என்ன பண்ணலாம்னு சொல்லுங்க…நடு நிசி முடியபோகுதே
“காளியப்பா…. உன்னால உடனடியா ஆதியின் மனைவி பேச்சியை இங்கு இழுத்து வரமுடியுமா….துளசியைத்தான் இன்று பலி கொடுக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்….அவளை அடுத்த பூஜையில் பார்த்துக்கொள்ளலாம்….

“இழுத்து வர வேண்டிய அவசியமே இல்ல வீராசாமி….நானே வந்துட்டேன்….
என்றபடி பேச்சி புன்னகையுடன் வந்து பலி பீடத்தில் அமர்ந்தாள்….. முகத்தில் ஒளிவட்டம் மின்னியது….உட்கார்ந்திருந்த தோற்றம் அத்தனை கம்பீரம்…
“ம்….ஆகட்டும் வீரச்சாமி….உன் மந்திரத்தை ஆரம்பி….நேரம் வீணாகிறது அல்லவா
“நீ எப்படி இங்கு வந்தாய்….உன்னை கருக்கல் வரை அடக்கி வைத்திருந்தேனே…
“அடக்கினாயா…..என்னயா….என்னை அடக்கும் சக்தி உனக்கு வரவேண்டுமென்றால்…..அதற்கும் நானே மனது வைக்கவேண்டும் வீராசாமி…..
நீதானே அழைத்தாய் வீராசாமி…..நீ அழைத்தபின் நான் வராமல் இருக்க முடியுமா.என்னை கயிராக்கி உன் கைகளில் கட்டிக்கொள்வேன் என்றாயே…என் பாரம் உன் கைகள் தாங்குமா…..அதையும் பார்த்துவிடலாமா….தவறு செய்யும் பிள்ளைகளை அன்னை அவள் தூணில் கட்டிவைப்பது வழக்கமானது…தவறை புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக……அன்னையே கயிராய் மாறி பிள்ளையை கட்டிவைக்க முனைய மாட்டாள்…..ஜானகியின் உயிரை நீ எடுத்ததும்….அதை நான் தடுக்காமல் போனதும்…
அவளது கர்ம வினையின் பலன்….அதை அவள் அனுபவிக்க வேண்டும் என்பதும் அவளது விதி….என் பிள்ளைகளாய் இருந்தாலும் எனது பரம பக்தையாய் இருந்தாலும் அவரவர் பாவ புண்ணிய கணக்குகளை அவர்கள்தான் தீர்த்துக்கொள்ளவேண்டும்….அவர்களது கஷ்டங்களை குறைக்க முயலுவேனே தவிர முழுதாய் தீர்க்க வேண்டுமென்றால் அவர்கள் செய்யும் புண்ணிய காரியங்களே அவற்றை தீர்மானிக்கும்…..ஒரு பலி உன் இஷ்டப்படி முடிந்து விட்டதென்ற மமதையில் அடுத்தடுத்து பலி கொடுக்க துணிந்து விடுவாயா…..அதற்கும் நான் அமைதியாய் இருப்பேன் என்று நினைந்தாயா….வீராசாமி உன் பாவகணக்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது….போதும்….இத்தோடு நிறுத்திக்கொள்….துடித்து வெடித்து இறந்தவளை மேலும் மேலும் கட்டி வைத்து அவளின் வேதனையை உக்கிரத்தை அதிகமாக்காதே…யார் ஒருவனாலும் இயற்கையை மீறி உலகத்தை ஆள முடியாது….இறைவனுக்கு இணையாக எவராலும் மாற முடியாது….. போதும் அனைவரையும் விட்டுவிட்டு நேர்மையான தொழில் செய்து பிழைக்கும் வழியை பார்…..

வீராசாமி உக்கிரத்துடன் பார்க்க மற்றவர்கள் புரியாமல் விழிக்க…..

இங்கே…..
ஜானகி கதிரின் உயிரை கொண்டுசெல்ல போராடிக்கொண்டிருந்தாள்…அவளிடமிருந்து அவனை காப்பாற்றும் வழியறியாது அவன் துடிப்பதை பார்க்க சகியாமல் ஜானகியிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாள் துளசி…..
“ஜானு….கதிர் பாவம்…அவர விட்டுடு…..நீ காதலிச்சவனையும் கொல்ல துடிக்குற….உன்ன காதலிச்சவனையும் கொல்ல போறேங்கிற….. என்னடி அக்கிரமம் இது….நீ செத்ததுக்கப்புறமும் கூட உன் ஆத்மா கஷ்டப்படக்கூடாதுன்னு நினைச்சேண்டி….. ஆனா நீ இப்டி என்ன உயிரோட கஷ்டப்படுத்துறியே……
கதிர் துடிக்கிறத பாக்குறப்போ உனக்கு இரக்கமே வரலையா….காதலுக்கு என்னடி அர்த்தம்….அவங்க கூட நாம சேர முடியலன்னாலும் கூட அவங்க நல்லாருக்கணும்னு நினைக்கிறதுதானே உண்மையான காதலுக்கு அர்த்தமாகும்….உனக்காக நாங்க எல்லாரும் எவ்ளோ வேதனைப்பட்டிட்டுருக்கோம் தெரியுமா….உன்ன கொன்னவங்கள கண்டுபிடிக்க கதிர் எவ்ளோ போராடிக்கிட்டிருக்கார் தெரியுமா….ஆதி உன்ன எவ்ளோ உண்மையா விரும்பினார் தெரியுமா….உன்ன கொன்னது யாருன்னு தெரிஞ்சா அவங்கள கொலை பண்ண கூட தயங்க மாட்டாரு…ஆனா நீ எல்லாரையும் இப்டி துடிக்க வைக்கிறியே…..ஜானு நீ அரக்கியா மாறுவேன்னு நா கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல….

“போதும் நிறுத்துடி….அந்த ஆதிக்காக நீ ஏன் வக்காலத்து வாங்குற…..அவனாலதேன் எல்லாமும்…..அவன் மட்டும் அன்னிக்கு என் கழுத்துல தாலி கட்டாம இருந்திருந்தா அந்த கோடங்கி என்ன பலி பூஜைக்கு இழுத்துட்டு போயிருக்க மாட்டான் தெரியுமா……
ஜானகி கூறியதை கேட்டு துளசி ஒரு நிமிடம் ஆடிப்போய் விட்டாள்
“ஜானு…நீ என்ன சொல்ற….ஆதியா…
“ஆமா…அவந்தேன்…எ தலவிதிய மாத்துனதே அவந்தேன்….
அழுது கொண்டே அவள் இறப்பதற்கு முன் தினம் நடந்தவற்றை நினைத்தபடி….அவள் அப்படியே நிற்க…….?…

ஆதி ஜானகியின் ஊரை சேர்ந்தவன் என்று தெரிந்துகொண்டபிறகு….
ஆதியை தான் காதலிப்பதாக அவனிடம் தெரிவிக்க சொல்லி அவன் மனதில் என்ன நினைக்கிறான் என்பதை தெரிந்துகொள்ள ஜானகியின் உதவியை நாடினாள் துளசி……ஜானகிக்கு தயக்கமாகத்தான் இருந்தது…எப்படி அவனிடம் பேசுவது…ஒரே ஊர்காரன்தான்…ஆனாலும் அவனிடம் ஒருமுறை கூட அவள் பேசியதில்லையே….அக்கா அவனை எந்தளவிற்கு விரும்புகிறாள் என்பதை இவள் நன்றாக புரிந்துகொண்டாள்…எவளவு நம்பிக்கையோடு தன்னை உதவ சொல்லி கேட்கிறாள்….எப்படி மறுப்பது…அவள் காதலிப்பவனோடு அவள் சேர்வதற்கு நான் உதவி செய்யாமல் எப்படி…..

தினமும் அவன் உட்கார்ந்திருக்கும் அந்த குட்டிசுவரை தாண்டி செல்லும்பொழுது அவனிடம் இன்று பேசிவிடலாமா என்று ஒரு பார்வையை வீசுவாள்….தனியாக இருந்தால் எப்படியும் சொல்லிவிடலாம்….அத்தனை நண்பர்களின் மத்தியில் எப்படி பேசுவது….சில நாட்கள் கழித்து அவனே அவளை தனியாக சந்தித்தான்….நல்லதாகபோயிற்று என்று இவள் துளசியை பற்றி பேச ஆரம்பிக்கும்முன்னே அவன் சொல்லி விட்டான்…வார்த்தைகளை பிசிறு பிசிராக கோர்த்து…. ஜானகி நா ஒன்ன சின்ன வயசுலருந்து விரும்புறேன்….ஒனக்கும் பிடிச்சிருந்தா வெரசா நல்ல பதிலா சொல்லு….மாட்டேன்னு மட்டும் சொல்லிராத….சத்தியமா என்னால தாங்க முடியாது….நாளைக்கு கோயில்ல ஒனக்காக காத்துகிட்டிருக்கேன்….கண்டிப்பா செரிண்டு சொல்லுவேன்னு நம்பிக்கையோட காத்துகிட்டிருக்கேன்.என்ன ஏமாத்தாம வந்துரு….
சொல்லிவிட்டு அவன் போய்விட…இவள் கையை பிசைந்துகொண்டு நின்றாள்….அக்காவின் காதலை சொல்ல வந்தால் இவான் என்னை காதலிப்பதாக சொல்கிறானே…. இதென்ன வம்பாபோச்சு…அக்காவுக்கு என்ன பதில் சொல்றது….நாளைக்கு கண்டிப்பா கோயிலுக்கு போய் தயங்காம அவங்கிட்ட ஒடைச்சு சொல்லிபுடனும்…நா கதிர்னு ஒருத்தர காதலிச்சுக்கிட்டிருக்கேன்….எங்கக்காதான் ஒங்களையே நினைச்சுக்கிட்டு கெடக்கான்னு….கதிர்கிட்ட இத சொல்லலாமா வேண்டாமா….வேண்டாம்….இவன் ரொம்ப பிரச்சினை பண்ணா அப்புறம் சொல்லிக்கலாம்….ஒருவழியாய் மனதை சரிசெய்துகொண்டாள்…

மறுநாள் கோயிலில் அவள் கண்மூடி மனமுருக வேண்டியபடி நிற்க…கழுத்தில் ஏதோ நெருடியதை உணர்ந்தவள் கண்களை திறந்து பார்க்க நெஞ்சில் பொன் தாலி மின்னியது…எதிரில் ஆதி…அதிர்ந்து போனாள்…கத்தவேண்டும் என்றோ அவனை திட்டவேண்டும் என்றோ கூட அவளுக்கு தோன்றவில்லை….அவள் பித்து பிடித்தவள் போல் நிற்க ….அவன் அப்படியே மந்திரித்து விட்டவன் போல் போய்விட்டான்….இவள் எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்பது இவளே அறியாத ஒன்று….

அன்று இரவு மொட்டை மாடியில் அமர்ந்து நடந்ததை நினைத்து குழம்பிப்போய் அக்காவுக்கு கடிதம் எழுத்திக்கொண்டிருக்கையில் திடீரென்று விளக்கு அணைந்து விட..யாரோ இருவர் அவள் வாயை பொத்தியதை உணர்ந்தவள்….அதன் பிறகு கள்ளிக்காட்டின் இருளில்தான் கண் விழித்தாள்….அருகில் மாமன் மாயாண்டியும் அவர் மகன் காளியப்பனும் நிற்க….கோடங்கி மந்திரம் ஓதி கொண்டிருக்க….அரை மயக்கம்…என்ன ஏது என்று முழுதாய் சிந்திப்பதற்கும் முடியவில்லை….கோடங்கியின் மந்திர ஒலி அவள் மூளையை மேலும் ஏதேதோ செய்து புரட்டிபோட்டுக்கொண்டிருந்தது….விடிந்தபிறகு தன் உடல் அசைவற்று கிடப்பதையும் பெற்றவர்களும் ஊராரம் கதறி அழுததையும் பார்த்த பிறகுதான் தான் இறந்துதான் விட்டோமோ என்று தோன்ற….மீண்டும் தன் உடலில் நுழைய அவள் செய்த போராட்டங்களை முதல் அத்தியாயத்தில் தெரிந்துகொள்ளலாம்….அவள் நினைவில் கடைசியாக நின்றதெல்லாம் கழுத்தில் கிடந்த தாலியும் எதிரில் நின்ற ஆதியும் தான்.தன் நிலைக்கு ஆதிதான் காரணம் என அவள் முழுதாய் நம்பிவிட்டாள்…. ஆனால் பின்னால் அவளறியாமல் நடந்தது என்னவென்று அவளுக்கு தெரியாதல்லவா…..

கோடங்கி எம்.எல்.எ.வுக்காக பலி பூஜை செய்ய ஆயத்தமானபோது….அவன் எதிர்பார்த்த ஜாதக அம்சங்களுடன் முதலில் பொருந்தியது ஜானகியும் ஆதியும்தான்….அவர்களின் பெற்றவர்களிடம் பேசி அவர்களுக்கு ஊரறிய திருமண செய்து வைக்கத்தான் முதலில் நினைத்தான்..பின் இருவரையும் பலி கொடுத்தபிறகு ஊரார்கள் இவனது குறி வாக்கின் மீது அதிருப்தி கொள்வார்கள் என நினைத்து முடிவை மாற்றிக்கொண்டான்….அப்போதுதான் ஜானகியிடம் ஆதி காதலை சொல்லி சம்மதம் கேட்டதை பார்க்கிறான்…இதுதான் சமயம் என….ஆதியை சூட்சுமமந்திரத்தின் மூலம் அவன மனதை வசியப்படுத்தி யாருக்கும் தெரியாமல் அவள் கழுத்தில் தாலி கட்ட வைத்துவிட்டான்.
ஜானகியின் மூளையும் ஒருகணம் செயலிழந்து விட்டதன் காரணமும் அந்த வசியமே……

ஜானகி நடந்ததை நினைத்து வானத்தை வெறித்து கண்கள் சிவக்க நின்றாள்
“ஜானு….ஆதிதான் உண்மையிலேயே தாலி கட்டினானா….நீ என்ன சொல்ற…உன் சம்மதமில்லாம அவன் எப்படி அப்படி செய்யமுடியும்….நா நம்ப மாட்டேன்….
“அப்போ நா போய் சொல்றேனா….ஒ காதல அவங்கிட்ட சொல்லலாம்னு பாத்தா அவன் பாட்டுக்கு எனக்கு தாலி கட்டிட்டு போய்ட்டான் தெரியுமா…
“நீ சொல்றது நம்புற மாதிரியே இல்லயடி….ஆதி எதுக்கு திடீர்னு அப்புடி செய்யணும்…
அவள் அப்படி கேட்டதும் ஜானகி மேலும் ஆங்காரமாய் மாறினாள்… முகத்தை கொடூரமாய் மாற்றி கத்தினாள்….
“ஒன்ன நம்ப வைக்கணும்னு எனக்கு எந்த அவசியமுமில்ல….போடி…. கனவுகளும் ஆசைகளும் நிறைவேறாம நா தவிக்கிற தவிப்பு ஒனக்கு எப்புடி தெரியும்….என்னால நிம்மதியா இருக்க முடியல….மேலேயும் போகமுடியாம… பூமியிலயும் வாழமுடியாம இந்த கள்ளிக்காட்டுக்குள்ள காத்தோட காத்தா நிரந்தரமில்லாம அலைஞ்சுகிட்டு கெடக்கேன்….இந்த இருட்டு எவ்ளோ வேதனை தெரியுமா..கழுத்துல தொங்குற இந்த தாலி எவ்ளோ பாரம் தெரியுமா….எரிஞ்சு போன ஒடம்பு எவ்ளோ எரிச்சல் தெரியுமா….அடங்காத ஆசை எவ்ளோ கொடூரம் தெரியுமா…..நெஞ்சு முழுக்க எங்கதிர் கூட வாழமுடியலன்னு எவ்ளோ துக்கத்தொட அலையுரேன்னு தெரியுமா….. எனக்கு ஒரு தொனை வோணும்….எங்கதிர் எனக்கு வோனும்….கதிர் எங்கூட வா….ஒன்னோட சேந்து வாழத்தான் முடியல…சாவுலயாவது ஓங்கூட சேந்திருக்கேன்….
அவள் அவன் உயிரை பறிக்கும் முயற்சியில் இறங்கினாள்….கதிர் துடித்தான்….துளசி கதறினாள் கெஞ்சினாள்…..ஜானு என்ன கொன்னுட்டு அப்புறம் அவரை கொல்லு….
“அப்படித்தான் செஞ்சாகணும்னா அதையும் நா செய்வேன்….போடி அந்தப்பக்கம்…..
அவளை ஒரே வீச்சாக தூக்கி வீசினாள்….அவள் ஏதோ ஒரு புதரின் அருகில் போய் விழுந்தாள்….மீண்டும் எழுந்து ஓடி வந்தாள்….கதிர் ஜானகியின் கைப்பிடிக்குள் சிக்கியிருந்தான்….துளசி அவன் கையை பிடித்து இழுத்து செல்ல முனைந்தாள்….ஜானகியின் உக்கிரம் அதிகமாகியது….மீண்டும் துளசியை ஆவேசமாக  தள்ளினாள்…

அங்கே….
கோடங்கி பேச்சியை கயிராய் மாற்றும் முயற்சியில் இறங்கினான்..மந்திரத்தை உக்கிரமாய் ஓதினான்… என்ன ஆனாலும் சரி…நான் எடுத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டேன்…..இப்போதே உன் கண் முன்னாடியே எல்லா பலிகளையும் கொடுக்கிறேனா இல்லையா பார்…உன்னால் என் உயிரை எடுக்க முடியாது….நான் வாங்கிய வரம் அப்படி….எமன் கூட என் அனுமதியின்றி என்னருகில் வரமாட்டான்…..என்ன செய்ய முடியும் உன்னால்…..அவன் கோபமாய் உறுமியபடி காளி காளி என்று காளியை அழைத்துக்கொண்டிருந்தான்…..
பேச்சி சிரித்தபடி அமர்ந்திருந்தாள்….முட்டாள் நீ அழைக்கும் காளியும் நானே….என்னை அடக்க என்னையே துணைக்கு அழைப்பாயா….
வீராசாமி….இன்னும் உன் அகங்காரம் அடங்கவில்லையா
மயங்கி விழுந்து கிடந்த ஆதி எழுந்து வந்தான் கம்பீர நடையோடு….
“பேச்சி….இவனுக்கு புத்திமதிகள் எடுபடாது…மூளை இல்லாதவனுக்கு புத்திமதிகள் எப்படி ஏறும்….இவனை நான் பார்த்துக்கொள்கிறேன்….நீ செல்…..

இங்கே….
“ஜானகி…..போதும்…..உன் ஆவேசத்தை அடக்கு….ஆசைக்கும் ஒரு எல்லை உண்டு….இங்கே வா..அவனை விட்டுவிட்டு இங்கே வா…
பேச்சி அவளை அழைக்க….உக்கிரம் குறையா பார்வையோடு அவள் அப்படியே நிற்க….
“நடந்த யாவட்ரிற்கும் அந்த  வீராசாமி ஒருவனே காரணம்….அவனால் உன் உயிர் முடியவேண்டும் என்பது விதி….முற்பிறவியில் நீ அவனுக்கு செய்த பாவமே இப்பிறவியில் கணக்கு தீர்க்கப்பட்டுள்ளது…அப்பாவியாய் அசடாய் பிறந்த அவனுக்கு…..
மன்னிக்க முடியாத துரோகத்தை நீ  செய்திருக்கிறாய்….அதன் பலனே இப்போது நீ அனுபவித்த வேதனைகளுக்கு காரணம்…..உனக்கும் அவனுக்கும் பாவகணக்கு தீர்க்கப்பட்டுவிட்டது…..தவறு செய்யாத இவர்களை தண்டிக்க நினைக்காதே….வா மகளே….என்னிடம் வா….

ஜானகி கோபம் குறைந்து குளிர்ந்து காற்றாய் மாறி பேச்சியிடம் சென்றாள்
பேச்சியின் புன்னகை  முகம் ஒளிர்ந்தது….
“துளசி நீ உனது கணவனை அழைத்துக்கொண்டு செல்….நடந்த அத்தனையையும் மறந்துவிடு…மிச்சமிருக்கும் உன் வாழ்க்கையை சந்தோசமாக அனுபவித்து மகிழு

வீராசாமி இன்னும் கொஞ்ச காலம் புத்தி இழந்து பைத்தியமாக அலைந்து பேச்சியம்மன் கோவில் மண்டபத்தில் உருண்டு புரண்டு தூங்கி எழுந்து மரணத்தை கொடு கொடு என்று வேண்டி விரும்பி கேட்டு பின் உயிர் துறக்க வேண்டும் என்பது அவன் விதி எம்.எல்.எ…தான் செய்த தவறை உணர்ந்து தன்னால் முடிந்த அளவுக்கு அந்த ஊருக்கு நிறைய நல்ல காரியுங்களை செய்து கொண்டிருக்கிறான்….கள்ளிகாடு முற்றிலும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது….நமது குட்டி சுவர் நண்பர்கள் முழுநேரமும் அங்குதான் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் குறித்துக்கொள்ளுங்கள் வேர்வை சிந்தி உழைக்கிறார்கள்….
அங்கு ஒரு அரசு கலைகல்லூரி  வரப்போவதாக சொல்கிறார்கள்…நிச்சயம் நமது நண்பர்கள் சில பேருக்காவது அங்கு வேலை கிடைக்கும் என்று நம்புவோம்.காளியப்பன் அந்த ஊரில் இருக்க மனதில்லாமல் வேறு ஏதோ வெளியூரில் வேலை பார்ப்பதாக கேள்வி….

அடுத்து என்ன….முக்கியமானவர்களை பார்த்து விடலாமா….

கதிர் அவசரமாக கிளம்பிக்கொண்டிருந்தான்….துளசி வேக வேகமாய் சாப்பாடு தயார் செய்து பரிமாறினாள்….விடைபெற்று கிளம்பும் நேரம்….
“கதிர்…
“ம்ம்…என்னமா
“அது…எனக்கு உங்க போன் நம்பர் வேணும்
“உனக்குத்தான் ஸ்டேசன் நம்பர் தெரியுமே
“உங்க நம்பர்தான் வேணும்….
அருகில் வந்து நின்று அவள் விழியோடு விழி பார்த்து….
“நம்பர் மட்டும் வேணுமா……நானுமா
அவள் விழிகளை தாழ்த்தினாள்…வெட்கத்துடன்…..
“ம்ம்ம்….பதில் இன்னும் வரலயே
“ரெண்டும்தான்…
முகம் முழுக்க சிவக்க அவன் முகம் பார்க்க முடியாமல் கண்கள் நிலம் நோக்க….
அவன் அவள் கை கோர்த்து முகம் நிமிர்த்தி அவள் விழியை ஊடுருவி கண் சிமிட்டி மேலும் அவளை சிவக்க வைத்தான்…..அவள் அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்
“டூட்டிக்கு போற நேரத்துல இப்டி பண்ணா நா எப்டி போறது…
“ம்ம்ம்….போகாதீங்க…
“போகாம……
அவள் கன்னம் தடவி இதழ் வருடி….

அதன் பிறகு அவன் டூட்டிக்கு  போயிருப்பான் என்றா நினைக்கிறீர்கள்….
டூட்டியாவது ஒன்னாவது….அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்…நீங்க என்ன சொல்றீங்க….

“பேச்சி….என்ன பண்ணிட்டிருக்க
“பாத்தா தெரியலையா மச்சான்….இட்லிக்கு மாவு அரைச்சுகிட்டிருக்கேன்
“அதெல்லாம் அம்மா பாத்துப்பாங்க…நீ எந்திரிச்சு உள்ள வா
“அய்யோ….அய்த்தே ஆட்டி வெக்க சொல்லிருக்காவளே
“நீ இப்போ வரபோரியா இல்லயா
“என்ன விசயம் சொல்லுங்க மச்சான்
“ம்ம்ம்….உள்ள வா சொல்றேன்
“மாவு அரைச்சுக்கிட்டிருக்கேன்ல….இப்டியே எப்டி வாறது….இங்கயே சொல்லுங்களேன்
“இங்கையா….அது சரி….
என்றவன் அவளை அப்படியே மாவு அரைத்த கையோடு தூக்கினான்
“அய்யோ….அடி ஆத்தி….என்ன மச்சான் நீங்க….வுடுங்க மச்சான்…யாராச்சும் வரபோராக…..முகத்தை இரு கைகளால் பொத்திக்கொண்டு மீன் போல் துள்ளினாள்…
“எலெய்…. என்னலே இது நடுவூட்டுக்குள்ளார….எறக்கி உடுடா அவள….நல்ல நேரம் பாத்து அனுப்பி வெக்க மாட்டோமா….நல்லாத்தேன்….கல்யாணம் பண்றதுக்கு கால்ல வுழுந்து கெஞ்சுனோம்….இப்ப என்னமோ குட்டி போட்ட பூன மாதிரி….பொண்டாட்டி முந்தானைய சுத்திக்கிட்டு தெரியுறவ…..உள்ளார போலே…..பன்னெண்டு மணிக்கு மேலத்தேன் நல்ல நேரம்னு சோசியர் சொல்லிருக்காரு….அதேன் அவள மாவாட்ட ஒக்கார வெச்சேன்…பொறவு வருவா போ….செல்வி அதட்ட….
அவன் அசடு வழிந்தபடி அவளை இறக்கி விட்டு….நல்ல நேரம் பாத்தீங்க….பன்னெண்டுமணிக்கு….எனக்கு நேரமே சரியில்ல…..முணங்கிவிட்டு போனான்…..அவள் வாய் பொத்தி சிரித்தாள்….அம்மா அந்த பக்கம் திரும்பிய நேரம் சட்டென்று அவள் பின்புறத்தில் அடித்துவிட்டு அவன் மறைந்துகொள்ள
“அடி ஆத்தி….
என்று கத்தியவாறு மாவரைத்த கையை செல்வியின் கன்னத்தில் வைக்க…..
“என்னடி…..எ மூஞ்சியில மாவ அள்ளி அப்புறவ….
“இல்ல….அய்த்தே….பல்லி….
“ம்க்கும்……பல்லியா…..நானும் பல்லிய பாத்துத்தேன் வந்தேன்…..நீ போய் மாவ ஆட்டு போ….
செல்வி தனக்குள் சிரித்துக்கொண்டு..கருப்பா…..எம்புள்ள குடியும் குடித்தனமுமா சந்தோஷமா இருக்கோணும்…..நீதேன் என்னைக்கும் அவனுக்கு தொணையா இருக்கோணும்…வேண்டியபடி அவள் கொல்லைபுரம் சென்றுவிட….

ஆதி பூனை போல்  திரும்பி வந்து அவள் வாய் பொத்தி தூக்கிக்கொண்டு போனான்….
“ஏலே… அலெய்…. இந்தருடா…..ஆக்கப்பொறுத்தவன் ஆறப்பொறுக்குறானா பாரு…..செல்வி கத்தியது அவன் காதிலாவது விழுவதாவது……
“வுடு….செல்வி…மனசு பொருந்திப்போனா…..எல்லா நேரமும் நல்ல நேரந்தேன்….
மாடசாமி சொல்வதும் சரிதானே…

ஆதியின் வீடு கல்யாண களை கத்திக்கொண்டிருந்தது….மணப்பெண் ரேவதி சந்தோசமாய் தயாராகிக்கொண்டிருந்தாள்…
முகமெல்லாம் அப்படி ஒரு பூரிப்பு….இருக்காதா பின்னே….
மாப்பிள்ளையும் அளவு கடந்த சந்தோசத்தில் மணவரையில் உட்கார்ந்திருக்கிறானே…..யார் அது….அட…..நம்ம பாண்டி…..
என்னங்க ஆச்சர்யத்தோட முழிக்கிறீங்க……
அடடா…..நா உங்ககிட்ட சொல்லவே மறந்துட்டேன் பாருங்க…..
அன்னிக்கு ராத்திரி ஜானகி ஆவி அவன தூக்கி வீசுச்சு இல்லயா….அவன் போய் விழுந்த இடம் எதுன்னு நினைக்கிறீங்க….நம்ம எல்லை கருப்பன் காலடியிலதான்….அதனாலதானே கருப்பன் படக்குன்னு கண்ண தொறந்தான்….பாண்டி உயிர எடுத்துட்டு போக வந்த நம்ம எமதர்மராசன் கருப்பன் முழிய பாத்து பயந்து அப்டியே ஓடிபோயிட்டான்ல….பொறவு என்ன….விடிஞ்ச பிறகு அந்த பக்கமா வந்த குறவக்கூட்டம் அவன ஆஸ்பத்திரியில கொண்டு போய் சேத்துட்டாங்க…..அவனும் பொழைச்சு எந்திரிச்சு வந்து இங்க பாருங்க….பக்கத்துல உக்காந்திருக்குற ரேவதிய யாருக்கும் தெரியாம கிள்ளிக்கிட்டிருக்கான்…..அவ நெளிஞ்சுகிட்டிருக்கா…..
தப்பு செய்யாத பாண்டிய தண்டிக்கிறதும் தப்புதானேங்க….பின்ன….ஒரு காதலையாவது பிரிக்காம சேத்து வச்சுரு கருப்பான்னு நாந்தேன் ஒரு மனுவ போட்டு வெச்சேன்….அதுனால பாருங்க இந்த ஜானகி ஆவி ராவெல்லாம் வந்து தொல்லை பண்ணிபுருச்சு….என்னையும் சாக விடாம காப்பாத்தியிருக்க கூடாதான்னு ஒரே அழுக….பொறவு அவ செத்ததாலதானே இந்த கதையே வந்துச்சு….சேரி ஆத்தா அடுத்த ஜென்மத்துல உன்ன கண்டிப்பா சேத்து வச்சறேன்னு சொன்னேன்….உன் பேர கதிர் மக்களுக்கு வைக்க சொல்லி கூப்பிட சொல்றேன்னு சொன்னேன்…..அதுவும் சமாதானமாகிப்போச்சு…..அதுக்குள்ள இங்க பாத்தா….இந்த துளசி இருக்காளே…..அவ பேச்சியம்மன்கிட்ட போய் ஏழேழு ஜென்மத்துக்கும் கதிர்தான் புருஷனா வரணும்னு கோரிக்கை வச்சுக்கிட்டு நிக்கா….
நா என்ன செய்யட்டும் மக்கா…..

அவுங்களை எல்லாம் மனசார வாழ்த்திப்புட்டு நாமளும் பேச்சியம்மன ஒரு கும்பிடு போட்டுப்புட்டு கெளம்புவோம்…..கருப்பன் ஒங்க வூட்டு வாசல்லயும் காவலுக்கு நிக்கட்டும்…..நடப்பதெல்லாம் நன்மைக்கேன்னு அப்டியே நெனைச்சுக்கிட்டு இன்ப துன்பம் எல்லாத்தையும் சந்தோஷமா ஏத்துக்கிடுங்க….
🙏நன்றி வணக்கம்🙏

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 5]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Advocate

Written by rani thenral

அன்பின் அரசனே….. 14

கல்யாண சாப்பாடு