in

உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி

உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி…..

அழகான காலை பொழுது, சிறுவர்கள் ஓர் இடத்தில் விளையாட, தூரமாய் இருந்த ஓர் கல் பெஞ்சில் அமர்ந்து அவர்களை ரசித்து கொண்டு இருந்தான் அந்த ஆறடி ஆண்மகன்.

கண்கள் அவர்களை பார்த்திருக்க, அவன் முகத்தில் கனிவு ததும்பியது, இதழில் ஓர் லேசான புன்னகை, அவன் நரேந்தர்.

அவன் அமர்ந்து இருந்தது ஓர் ஆனாதை ஆசிரமம், அவன் அமர்ந்திருந்த இடத்தின் அருகில் இருந்த மரத்தில் இருந்து பூக்கள் உதிர்ந்து, அவனை சுற்று கொட்டி கிடந்தது.

அதில் ஒரு பூ வந்து அவன் மடியில் விழ

அதனை கையில் எடுத்து பார்த்தான், நினைவுகள் எங்கெங்கோ சென்றது, அதன் கணம் தாங்கதவன், எழுந்து கடலை நோக்கி நடந்தான்.

அவன் அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஓர் தடுப்பு அதனை திறந்து கடலை நோக்கி நடை போட்டான்.

அவன் அணிந்து இருந்த ஷூவை கழட்டி மணலில் வைத்தவன், கால்கள் மணலில் புதைய கடல் அருகில் சென்றான், கடல் அலை அவன் கால் தொடா தூரத்தில் நின்று கொண்டான்.

அலைகளுக்கு அருகில் அவள், அவள் சுடிதார் துப்பட்டா காற்றில் பறக்க, அலைகளுடன் அவள் கால்கள் விளையாட, அதற்க்கு ஏற்றாற்போல அவள் காதில் ஜிமிக்கள் நர்த்தனம் ஆடியது.

கரு விழிகள் அங்கும் இங்கும் ஆட, அவள் கால்கள் ஓர் இடத்தில் நிற்க்காமல் துள்ளி குதித்து கொண்டு இருந்தது.

அவனை நோக்கி திரும்பினாள், அவன் புறமாய் ஒற்றை கை நீட்டி, ” இந்தர் வா  ” என்று அழைத்தாள்.

அவன் முடியாது என தலை அசைக்கவும், ” போடா பயந்தாங்கொள்ளி ” என்று விட்டு மீண்டும் அலைகளுடன் விளையாட துவங்கி விட்டாள்.

அவன் அவளையே ரசித்து இருந்தான்.

பெரிய அலை ஒன்று வருவதை பார்த்தவள், ஓடி வந்து அவள் இந்தர் தோள்களை கட்டி கொண்டாள், ” இந்தர் பெரிய அலை அய்யோ வருது பாரு ” என அவன் தோள்களில் முகம் புதைத்து கொண்டாள்.

அவன் அவளை அணைக்க போக முடியவில்லை, காற்றாய் கலந்திட்டாள்.

மௌனமாய் புன்னகைத்து கொண்டான்.

நின்ற இடத்தில் நின்றே கைகளை வாய்க்கு அருகில் குவித்து ” கண்ணம்மா ” என்று கடலை நோக்கி கத்தினான்.

அவளுக்கு அவன் குரல் கேட்டதோ, பெரிய கடல் அலை ஒன்று வந்து அவன் பாதம் நனைத்து சென்றது.

அவன் நினைவுகள் பின்நோக்கி சென்றது,

அவன் நரேந்தர், விசுவநாதன், காமாட்சியின் ஒரே மகன், விஸ்வநாதனும் காமாட்ச்சியும் வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டனர், ஜாதியை காரணம் காட்டி அவர்களை சேர்த்து கொள்ளவில்லை, விஸ்வநாதனும் தன்னை நம்பி வந்த பெண்ணை ராணியாக வாழவைக்க ஆசைப்பட்டார், அதற்காக தொழில் துவங்கினார், முதலில் சற்று தடுமாறினாலும் அதன் பின் அவர் முயட்சிகள் அனைத்தும் வெற்றியே.

அந்த சமயத்தில் தான் அவர்களின் காதலின் அடையாளமாய் பிறந்தான் நரேந்தர் , இது அவன் அன்னையின் தந்தை பெயர், அவர் நரேந்திரன் இவன் நரேந்தர் சிறு வித்தியாசம் மட்டுமே.

மிகவும் சந்தோசமான வாழ்க்கை வாழ்ந்தான் நரேன், கேட்டேதெல்லாம் கிடைத்தது, சிறு சிறு கண்டிப்பு காட்டும் தந்தை, பாசத்தை மழையென பொழியும் தாய், இன்ப கடலில் மூழ்கி வாழ்ந்தான், அந்த வாழ்க்கைக்கும் முற்று புள்ளி வந்தது, தொழில் முறை நட்பின் திருமண விழாவிற்கு சென்ற விஸ்வநாதனும் காமட்சியும் உயிரற்ற உடல்களாய் தான் திரும்பி வந்தனர், திருமணத்தில் இருந்து திரும்பும் வழியில் ஓர் கொரவிபத்தில் நரேன் ஆநாதை ஆனான்.

அவர்கள் இறக்கும் போது நரேனுக்கு பதினாறு வயது, அடுத்து என்ன செய்வது என்று அவன் தவித்து கொண்டிருக்கும் போது, அவர்களின் அனைத்து இறுதி காரியங்களையும் முன் நின்று முடித்தார், ராமச்சந்திரன், விஸ்வானதனின் உயிர் நண்பன்.

அவர் கம்பனியில் ஜிஎம் ஆக பணியாற்றுகின்றார், அவருக்கு குடும்பம் என்று யாரும் இல்லை, நரேன் சிறுவயதிலேயே மகளை விசகாய்ச்சலில் இழந்தார், மகள் இறந்த சோகத்திலே மனைவியும் இறந்து விட, விஸ்வநாதன் தன்னுடன் அழைத்து வந்து விட்டார்.

விஸ்வநாதன் இறந்ததும், நரேனின் பொறுப்பை தனதாக்கி கொண்டார்.

ஆனால் நரேன் அவரிடம் ஒட்டவில்லை, அவன் தாய் தந்தையே உலகம் என வாழ்ந்தவன், அவர்கள் போனதும் தனக்குள் இறுகி கொண்டான்.

யாரிடமும் அதிகம் பேசுவதில்லை, எப்போதுமே அவன் முகத்தில் ஓர் கடுமை இருக்கும்.

ராம்சந்திரனும் அவனிடம் எத்தனை அன்பாய் பழகினாலும் விழகியே இருப்பான், அவரும் அவன் விருப்பம் என விட்டு விட்டார், அவர் தான் விஸ்வநாதனின் அனைத்து தொழில்களையும் பார்த்து கொண்டார், அவர் தொழிலை கையில் எடுக்கும் போதே கூறிவிட்டார், நீ தான் படித்து முடித்து வந்து பொறுபேற்க்க வேண்டும் என, அவனும் சரி என தலையாட்டி சென்றான்.

அதன் படி அவன் கல்லூரி இரண்டாம் ஆண்டில் இருந்து அவனை ஆபீஸ் அழைத்து செல்ல துவங்கினார்.

அவனும் விருப்பத்துடனே அங்கு சென்று பணிகளை கற்று கொள்ள துவங்கினான்.

அவன் கல்லூரி மூன்றாம் வருடம் செல்லும் போது தான் அவளை பார்த்தான், அன்றில் இருந்து அவன் வாழ்வை மாற்ற வந்தவள்.

அவன் ஓர் வட்டம் போட்டு அதனுள் வாழ, அவனை அதனுள் இருந்து வெளியில் அழைத்து வந்து இப்படியும் வாழலாம் என அவனுக்கு கற்று தந்தவள்.

அவனுக்கு காதலை அறிமுகம் செய்தவள், காதலில் அவனை மூழ்க செய்தவள் அவள் கயல்விழி.

அன்று……

அந்த மிக பெரிய கல்லூரியினுள் நுழைந்தாள் கயல், அன்று முதல் நாள் ஒரு புறம் பயமாகவும், ஒரு புறம் சந்தோசமாகவும் இருந்தது அவளுக்கு.

அவள் அந்த கல்லூரியில் சேர்ந்தது, அவளே எதிர் பாராதது.

அதே கல்லூரியில் திர்ட் யேர் படித்து கொண்டிருந்த நரேன், அவன் நண்பர்கள் ஃபிரேஷீஸ் ஐ ராகிங் செய்வதை அவன் ஃபக் மேல் ஒருபக்கம் சரிவாய் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தான்.

அப்போது தான் கண்டான் அவன் தேவதையை, கயல் காலேஜ் உள் சுற்றிமுற்றி பார்த்து கொண்டே வந்தாள்.

அவளை கண்டவன், ஃபக் மேல் இருந்து இறங்கி அவளையே ரசித்து கொண்டு இருந்தான்.

அதற்குள் அவன் நண்பன், அவளை அருகில் அழைத்து இருந்தான், இவளும் தயங்கி கொண்டே அவர்களிடம் சென்றாள்.

அவள் வந்ததும் அவளை மேல் இருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்த நரேனின் நண்பன் ரமேஷ்,” ஃபர்ஸ்ட் யீர் ஆ” என்று வினவினான் ஏளனமாக, அவள் ” ஆம் ” என தலை அசைக்கவும், ரமேஷ் எதோ கூற போக அவனை தள்ளி கொண்டு கயலுக்கு முன் வந்து நின்றான், இவ்வளவு நேரம் அவளை ரசித்து கொண்டிருந்த நரேன்.

அவன் வந்து நின்றதும், ரமேஷ் பேச வர அவனை ஒரு பார்வையில் அடக்கியவன், கயல் புறம் திரும்பினான்.

அவன் திரும்பவும் நிமிர்ந்து அவன் கண்களை பார்த்தாள் கயல், அவனும் அவள் கண்களை தான் பார்த்தான், ஆழ் கடல் போல் அவனை உள்ளே உள்ளே இழுத்து செல்லும் கண்கள், அதனுள் விழுந்து எங்கோ தொலைவது போல் ஒர் எண்ணம், விரும்பியே அவள் கண்களில் தொலைந்து போனான் அந்த காதல்காரன்.

ஒருவாறு தன்னை சமன் செய்தவன், அவள் கண்களை பார்த்து கொண்டே மொழிந்தான், ” உன்னை பார்த்ததும் எதோ எனக்கான ஒன்னு என்கிட்ட வந்த சந்தோசம், உன்னை பார்த்தவுடனே பல கற்பனைகள், உன் கைய பிடிச்சிட்டு காலம் பூரா போகனும்னு ஒரு ஆசை, நீ என் லைஃப் லாங் வேணும்ன்னு தோணுது இதுக்கு பெயர் தான் காதல்னா, ஆமா நா உன்ன காதலிக்கிறேன், ஐ லவ் யூ கண்ணம்மா ” என்றான்.

அவன் வார்த்தைகளில் அவள் மட்டும் அன்றி அவன் நண்பர்கள் கூட சம்பித்து நிற்க்க, அவள் முன் சொடுகிட்டு கைகளை ஆட்டினான்.

எதோ தூக்கத்தில் இருந்து விழித்தவள் போல் அவள் ” ஆன் ” என, அதே நேரம் பெல் அடிக்கவும் தன்னிலை அடைந்தாள்.

அவன் ஒற்றை புருவம் உயர்த்தி என்ன என்று வினவினான்.

கயல் ” நா போகவா ” என்று கேற்க்க போ என சைகை செய்தான், விட்டால் போதும் என அங்கிருந்து ஓடி விட்டாள் கயல்.

அவள் போன திசையே புன்னகையுடன் பார்த்து நின்றான் நரேன்.

அவனை உலுக்கிய அவன் நண்பன் ரமேஷ் ” டேய் என்னடா சட்டுன்னு பிரபோஸ் பண்ணிட்ட, நாங்க அப்படி ராகிங் பண்ணாலே திட்டுவ, இப்போ நீ பண்ற ” என வினவ, ” நா ராகிங் பண்ணல டா, நெஜமாவே எனக்கு அவளை பிடிச்சு இருக்கு அதான் சட்டுன்னு சொல்லிட்டேன் ” என்றான்.

அவன் நண்பர்கள் அவனை ஆச்சரியமாக பார்க்க, அவர்களை பார்த்து ” என்னடா ” என்றான் புன்னகையுடன்.

அவன் நண்பர்களில் ஒருவனான சதிஷ் ” டேய் இவள விட அழகான பொண்ணுங்க எல்லாம் உன் கிட்ட புரோபோஸ் பண்ணும் போதெல்லாம் சித்தர் மாதிரி இருந்த இப்போ என்னடா ஆச்சு ” என்றான் குரலில் ஆச்சரியத்தை காட்டி, அதற்க்கு பதிலாய் ” எனக்கு புரோபொஸ் பண்ணவங்க யார் மேலவும் எனக்கு லவ் வரல்ல, இவள பார்த்ததும் வந்த ஃபீல் வேற எந்த பொண்ணு கிட்டவும் நா கண்டது இல்ல, அவ கிட்ட எனக்கு வந்த காதல் அவளுக்கு மட்டும் தான், போதுமா விளக்கம், போங்க போய் அவ யாரு எந்த டிபார்ட்மென்ட் எல்லாம் தேடுங்க, ப்ரேக்ல்ல அவள பத்தின எல்லா டிடைல்ஸ் உம் என் கையில இருக்கணும் புரிஞ்சுதா ” என்றான்.

ரமேஷ் ” எல்லாம் எங்க தலை எழுத்து, போடா போ எல்லா டிடையல்ஸ் உம் கலெக்ட் பண்ணிட்டு வாரேன்.” என்றான்.

அதன் பின் அனைவரும் அவர்கள் க்ளாஸ் நோக்கி சென்றனர்.

லஞ்ச் பிரக்கில் கேண்டீனில் நரேன் முன் வந்து அமர்ந்தான் அவன் நண்பன் ரமேஷ்.

அவன் வந்ததும் ஆர்வமாய் நரேன் அவன் முகம் பார்க்க ” பறக்காத சொல்றேன் கேளு,

உன் ஆளு பேர் கயல்விழி, வளர்ந்தது ஆசிரமத்தில..” என கூற

அவள் பெயரை கூறும் போது மனதினுள் கூறி அழகு பார்த்தவன், அவள் வளர்ந்த இடத்தை அறிந்தததும், அதிர்ச்சியாய் அவன் நண்பனை பார்த்தான்.

அவன் நண்பனின் அதிர்வை கண்டு, ” ஆமா அவளுக்கு யாரும் இல்ல, நம்ம காலேஜ் சேர்மன் மூலமா வருஷா வருஷம் வசதி இல்லாதவங்களுக்கு  ஒரு ஆளுக்கு ஃப்ரீ படிப்பு தெரியும் இல்ல ” அவன் ஆம் என தலை அசைக்க ரமேஷ் தொடர்ந்தான் ” கயலும் அப்படி தான், என்ன இந்த முறை ஒரு ஆர்ஃபண்க்கு குடுத்து இருக்காரு, அது கயல், அப்பறம் அவ பி ஸ் சி மத்ஸ் படிக்கிறா ” என்று அவளை பற்றி கூறி முடித்தான் ரமேஷ்.

அதன் பின் நரேனிடம் நீண்ட மௌனம்,

அவன் கைகளில் தட்டினான் ரமேஷ், ” என்னடா யோச்சிட்டு இருக்க ” என வினவ ” ஒன்னும் இல்லடா ” என்றான்.

அவர்கள் பேச்சு தொடர, அங்கு அதே நேரம் கேன்டீன் வந்தாள் கயல், அவளுடன் யாருமில்லை தனித்தே வந்திருந்தாள்.

அவள் வரும் போதே அவளை கண்டு விட்ட நரேன் அவள் ஓரிடத்தில் அமர்ந்ததும் அவளிடம் சென்றான்.

அவள் எதிரில் உள்ள இருக்கையில் அமர்ந்தவன், ” ஒய் என்ன தனியா வந்து இருக்க ப்ரெண்ட்ஸ் யாரும் செட் ஆகலையா ” என வினவினான், அவன் எதிரில் வந்து அமர்ந்ததிலிருந்து அவனை இமைக்காமல் பார்த்திருந்த கயல், அவன் கேள்வியில் ” இல்ல சீனியர் நா ஆசிரமத்தில வளர்ந்தவன்றால யாரும் என் கூட பேச மாட்டிகிறாங்க, நானே பேசினாலும் பேசுறாங்க இல்ல, அங்க ரொம்ப போர் இன்னைக்கு லேட்சர் எதுவும் இல்ல,  அதான் பசிச்சுதா கேன்டீன் வந்தேன், ஏன் சீனியர் ” என்றாள்.

அவள் சொல்ல சொல்ல அவனுக்கு ஓர் விடயம் புரிந்தது, இந்த கல்லூரியில் படிப்பவர்கள் அதிகமானோர் பண்ணகாரர்களே , வருடா வருடம் வரும் அனைத்து ஏழை மாணவனுக்கும் இன்றைய கயலின் நிலமை தான், ஏன் அவன் உடன் படிக்கும் பிரேம் என்ற பையனுடன் யாரும் பேசுவதில்லை, நரேனும் கூட, இத்தனை நாள்  பெரிதாய் தெரியாத ஓர் விடயம் அவன் உயிரானவளுக்கு என்று தெரிந்ததும் அவன் மனம் வலித்தது.

அவன் யோசனையை கண்டவள், ” என்ன சீனியர் யோசனை ” என வினவினாள்.

நரேன் ” சாரி ” என்று சொல்ல, அவள் நெற்றி சுருக்கி ” எதுக்கு ” என ” யாரும் பேசாததால நீ கஷ்டபட்டு இருப்ப இல்ல அதான் சாரி ” என அவள் கலகலவென சிரிக்க துவங்கினாள்.

அவள் சிரிப்பை கண்டு ” இப்போ எதுக்கு சிரிக்கிற ” என வினவினான், ” பின்ன என்ன சீனியர் அவங்க பேசாததுக்கு நீங்க எதுக்கு சாரி கேக்குறீங்க, அதான் நீங்க என் கூட பேசுறிங்களே இது போதாதா, இருக்கிறதை வச்சி சந்தோசபடுவோம் சீனியர் எதுக்கு இல்லாதத பத்தி யோச்சிகிட்டு ” என்று விட்டு கூல் ஆக உண்ண துவங்கி விட்டாள், அவள் வார்த்தைகளில் அவனுக்கு அவள் புதிதாய் தெரிந்தாள்.

அவள் உண்டு முடிக்கும் வரை பொறுமை காத்தவன், அவள் முடித்ததும் தண்ணீர் எடுத்து அவள் முன் நீட்டினான், அதனை பெற்று கொண்டவள் ” தாங்க்ஸ் சீனியர் ” என்று வாங்கி குடித்தாள்.

பின் அவன் கண்ணை பார்த்து அவள் ” அப்பறம் சீனியர் ” என  அவன் குறும்பாய் அவளை பார்த்து ” அப்பறம் காலையில நா சொன்னதுக்கு நீ பதிலே சொல்லலையே ” என்றான், ஒற்றை புருவம் உயர்த்தி.

முதலில் அவன் கேள்வியில் தடுமாறியவள், தன்னை சமன் செய்து கொண்டு அவனை போலவே ஒற்றை புருவம் உயர்த்தி ” எனக்கு கிளாஸ்க்கு லேட் ஆச்சு சீனியர், அப்பறம் மீட் பண்ணலாம் ” அப்பறம் இல் அழுத்தம் கொடுத்து அங்கு இருந்து ஓடிவிட்டாள்.

மேசை மீது கை வைத்து , உள்ளங்கையில் அவன் முகம் வைத்து அவள் சென்ற திசை பார்த்திருந்தான் கயலின் இந்தர் ஆக காத்து இருப்பவன்.

அடுத்த நாள் நரேன், அவன் நண்பர்களுடன் கயல் முன் வந்து நின்றான்.

அவனை கண்டவள், ” ஹாய் சீனியர் ” என்றிட, ” ஹாய் கண்ணம்மா, இவங்க என்னோட ப்ரெண்ட்ஸ் இன்னையில இருந்து உன்னோட ப்ரெண்ட்ஸ்யும் ” என்றான் தன் நண்பர்களை காட்டி.

கயல் ” சீனியர் நேத்து எனக்கு ப்ரெண்ட்ஸ் இல்லன்னு சொன்னேனே அதுவா, தாங்க்ஸ் சீனியர், அப்பறம் சீனியர் என் பெயர் கண்ணம்மா இல்ல கயல், கயல் விழி ” என்றாள்.

அவளை பார்த்து சிரித்து, ” எனக்கு கண்ணம்மா தான் ” என்றிட ” என்னமோ போங்க ” என்று விட்டு அவன் நண்பர்களிடம் தன்னை அறிமுகப்படுத்த துவங்கி விட்டாள்.

” ஹாய் அண்ணாஸ் என் பெயர் கயல் விழி …” என்று துவங்கி அவளை பற்றி கூறினாள், மற்றவர்களும் தங்களை அறிமுக படுத்தி கொள்ள, நரேனின் நண்பர்கள் அவள் நண்பர் ஆயினர்.

தினம் தினம், அவள் மேல் நரேன் கொண்ட காதல் கூடி செல்ல, அங்கு நாட்கள் வேகமாக நகர்ந்தது, தினம் நரேன் கயலிடம் ” நா சொன்னதுக்கு என்ன பதில் ” என கேட்டால் அங்கிருந்து ஓடி விடுவாள், ஆனால் காதல் இல்லை, என்று கூறமாட்டாள், அதற்காக காதல் தான் என்று ஒத்துகொள்ளவும் மாட்டாள்.

ஒவ்வொரு நாளும் நரேனுக்கு,  வாழ்வின் புது பக்கத்தை காட்டினாள் அவனின் கண்ணம்மா.

ஒரு நாள் காலையிலே அவனை தேடி வந்தாள், அவன் ஒரு மரத்தடியில் அமர்ந்து இருக்க, அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

அவன் முகம் எல்லையில்லா வேதனை சுமந்து இருக்க, ” சீனியர் என்னாச்சு ஏன் சோகமா இருக்கீங்க, உங்களுக்கு இந்த ஃபேஸ் செட் டே ஆகல, சிரிங்க சீனியர் ” என்றாள்.

அவளை நோக்கி வருத்த முறுவல் ஒன்றை சிந்தியவன், ” இன்னைக்கு என் அம்மா அப்பா என்னை விட்டு போன நாள், யாருமே இல்லாம நான் தனிமரமா நின்ன நாள் ” என்றான் எங்கோ வெறித்து கொண்டு, அவன் கைகள் ஆறுதலாய் ஓர் முறை அழுத்தி விடுவித்தவள், ” கவலை படாதீங்க சீனியர், கடவுள் யாராவது நம்ம கிட்ட இருந்து எடுத்து கிட்டார்ன்னா, வாழ்க்கையில நமக்கு வேறு எதோ குடுக்க போறார்ன்னு அர்த்தம், இப்படி கடந்த காலத்தை நினைச்சு கவலைப்படனும்னா

நா எல்லாம் தினமும் அழுகனும், நீங்க உங்க அம்மா அப்பா உங்கள விட்டு போனதை நினைச்சு கவலை படுறிங்க, எனக்கு என் அம்மா அப்பா யார்ன்னே தெரியாது, மதேர் சொல்லுவாங்க, ஒரு நாள் அவங்களுக்கு நடு ராத்திரி தூக்கம் கலைஞ்சுதாம், எழுந்து வெளிய வந்து இருக்காங்க, அப்போ பெரிய காத்து சின்ன சின்ன தூறல் மழை, ஆசிரமம் கேட் காத்துல ஆடவும், இழுத்து மூட போய்ருக்காங்க, அப்போ வெளியில இருக்க மரத்துக்கு கீழ குழந்தை சத்தம் கேட்டதுன்னு வெளிய வந்து பார்த்து இருக்காங்க, நா தான் அங்க அழுந்துட்டு இருந்து இருக்கேன், தூரத்துல ஒரு பொண்ணு ஓடுறது தெரிஞ்சுதாம், மதெர் அன்னைக்கு வெளியில வரலன்னா, நைட் ஃபுல்லா அந்த மழையில நனைஞ்சு செத்து போய்ருப்பென், மதேர் சொல்லுவாங்க கடவுள் ஓட கிருபையால தான் நா இன்னைக்கு உயிரோட இருக்கேன்னு, அன்னைக்கு என்னை அங்க விட்டு போனவங்க உயிரோட இருக்காங்களா இல்லையா எதுமே தெரியாது, இவ்வளவு இருக்கு இதுக்கு மேலவும் இருக்கு, ஆனா அழுகுரன்னா பாரு, இல்லைல்ல, கவலைபடாதீங்க சீனியர் ஒரு நாள் எல்லாம் மாறும் ” என்றாள் ஆறுதலாய்.

நரேன் அவளை தான் பார்த்திருந்தான், அவளின் கஷ்டத்தின் முன் அவனது துரும்பாய் தான் தெரிந்தது, அவனுக்கு ஆச்சரியமே இவளால் எப்படி முடிகிறது அனைத்தையும் தன்னுள் புதைத்து, அவ்வளவையும் இலகுவாய் கடந்து புன்னகையுடன் வலம் வருகிறாள்.

நரேன் ” கண்ணம்மா உன் கைய பிடிச்சி கிட்டா” என்று வினவினான் கெஞ்சலாக, அவள் சிறு சிரிப்புடன் சரி என தலை அசைக்கவும் அவள் விரலுடன் விரல் கோர்த்து கொண்டான், சில நொடிகள் அவள் கை கோர்த்து இருந்தவன், அவள் கையை விடுவித்து, ” தாங்க்ஸ் கண்ணம்மா  ” என்றான் , அதற்க்கு ” பரவல சீனியர் விடுங்க, இந்த மாதிரி டிப்ஸ் வேணும்ன்னா வாங்க, நா பீஸ் எல்லாம் வாங்க மாட்டேன், எப்போவெனும்மன்னாலும் சர்வீஸ் இருக்கு ” என்றாள் குறும்பாக, அவள் தலையில் வலிக்கமால் கொட்டியவன் அவளையும் அழைத்து கொண்டு அங்கிருந்து சென்றான்.

இன்னொரு நாள் அவன் நண்பர்களுடன் இருக்க அனைவரையும் தள்ளி விட்டு அவனிடம் ஓடி வந்தாள், மூச்சு வாங்கி கொண்டே எதோ சொல்ல வந்தவளை தடுத்தவன், ” மூச்சு வாங்கிட்டு சொல்லு ” எனவும், மூச்சை இழுத்து தன்னை சமன் செய்தவள், கையில் இருந்த சிறு பேப்பரை பிரித்து, அதில் இருந்த வீபூதி எடுத்து அவன் நெற்றியில் வைத்து விட்டாள், அதனை கண்டு வியப்பாக ” என்னது இது நீ கோவில் போனியா…” என்று வினவ, ” ஆமா சீனியர் நா வரவழில ஒரு கோவில் இருக்கு அதை கடந்து வரும் போது எல்லாம் அங்க போகனும்னு தோணும், அதான் இன்னைக்கு போனேன், உங்களுக்கு ஒன்னு தெரியுமா சீனியர் எனக்கு எப்படி சாமி கும்புடுறதுன்னே தெரியல, அங்க இருக்கவங்க கிட்ட கேட்டு கேட்டு தான் எல்லாம் செஞ்சேன், நல்ல ஃபீல் எனக்கு ரொம்ப பிடிச்சுது ” என்றாள்.

அடுத்த நாள் தேவாலயம் செல்வாள்,கேட்டால் ” நமக்கு எல்லா மதமும் சம்ம்தம் சீனியர் ” என்பாள்.

கயல் நரேனுடன் பழகுவதை கண்டு பல பெண்கள் பொறாமை கொண்டனர், அப்படி யாரையும் கயலை நெருங்காமல் பார்த்து கொண்டான் நரேன், அதையும் மீறி அவள் தனித்து இருக்கும் போது ஓர் பெண் கயலிடம் வந்தாள்.

நான்கு ஐந்து தோழிகளை உடன் சேர்த்து கொண்டு கயலிடம் வந்தாள் ஷ்ரேயா.

கயல் கேண்டீனில் அமர்ந்து இருக்க, அவள் எதிரில் சென்று அமர்ந்தார்கள்.

ஷ்ரேயா ” ஹெய் உனக்கு என்ன பெரிய அழகின்னு நினைப்பா, நரேன் பின்னாடியே சுத்துற, ” என கூற, அவள் நண்பர்களில் ஒருத்தி ” ஹே எல்லாம் அவன் பெரிய பணக்காரன் அதுனால தான், இந்த மாதிரி பொண்ணுக்கு எல்லாம் சொல்லியா குடுக்கணும் பணக்கார பசங்கள மடக்குறதுக்காகவே வாரங்க ” என்றாள் ஏளனமாக.

இன்னும் பேசினர் என்ன என்ன பேசினால் அவள் மனம் வலிக்குமோ அவ்வளவும் பேசினர், கயல் அவர்களை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை, அவர்கள் பேசுவதை மௌனமாய் கேட்டு கொண்டு இருந்தாள்.

அவர்கள் சென்றதும், சிறிது நேரம் அங்கேயே இருந்தவள், ஒரு முடிவு எடுத்தவளாக நரேனை தேடி சென்றாள்.

நேராக அவனிடம் சென்று, ” சீனியர் நீங்க பெரிய பணக்காரங்களா…” என வினவினாள், அவன் ஆம் என தலை அசைக்க, ” சரி சீனியர் ” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அதன் பின் கயல் நரேனுடன் முன் போல் பழக வில்லை, ஹாய் என்றால் ஹாய் என்பாள், அத்துடன் முடிந்து கொள்ளும் அவளின் உரையாடல், அவன் நெருங்கி நெருங்கி செல்ல அவள் விலகி விலகி சென்றாள்.

சில நாட்களில் அந்த ஹாய்யும் இல்லாமல் போனது, அவள் ஒவ்வொரு செய்கையும் ரசிப்பவன், அவள் விலகலை கூட ரசித்தான், எத்தனை நாளுக்கு என்று காத்திருக்க முடிவெடுத்தான்.

முதல் நாள் அவளிடம் புரோபோஸ் செய்ததோடு சரி அதன் பின் அவளிடம் பதில் கேட்டானே ஒழிய அவன் காதலை திரும்ப திரும்ப கூறவில்லை.

அவன் எண்ணியதற்க்கு மாறாய் கயலின் விலகல் கூடி கொண்டே சென்றது, அவளிடம் மொபைல் இல்லை, அதனால் அவ்வாறும் அவளுடன் பேசமுடியவில்லை.

ஒரு மின்னஞ்சல் முகவரி அது அவர்கள் ஆஷ்ரமத்தினது, அவள் ஆசிரமத்தில் அலுவலக அறையில் உள்ள கணனி மூலம் தான் அவள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வாள்.

அவளை கண்ணில் காண்பதே போதும் என்று எண்ணும் அளவிற்க்கு வந்து இருந்தான் நரேன், அதற்க்கும் தடை வந்தது, விடுமுறை தினங்களில் அவளை காணும் வாய்ப்பையும் இழந்தான், எப்போது மீண்டும் அவளை காண்போம் என விடுமுறை முழுதும் காத்திருப்பான், விடுமுறை முடிந்து அவன் கண்ணம்மா தரிசனத்திற்கு….

நாட்கள் வேகமாக நகர்ந்தது நரேனின் இறுதி தேர்வும் நிறைவடைந்தது, இன்று எப்படியாவது அவன் கண்ணம்மாவுடன் பேசுவது என முடிவெடுத்து இருந்தான்.

அவளை தேடி சென்றான், அவர்கள் வழமையாய் சந்திக்கும் மரத்தடியில் தனிமையில் அமர்ந்திருந்தாள்.

அவள் அருகில் சென்று அமர்ந்தான், அவனை திரும்பி ஓர் பார்வை பார்த்தவள் மீண்டும் திரும்பி கொண்டாள், அவள் எதுவும் பேசவில்லை, அவனும் பேசவில்லை இருவர் இடையும் மௌனம் என்னும் பெரும் ஆயுதம்.

அவனே ஆரம்பித்தான் ” கண்ணம்மா ” காதலை குரலில் காடிட்டட முடியுமா, இதோ அவனின் மொத்த காதலையும் அவன் கொண்ட வலியையும் குரலில் தேக்கி அவளை அழைத்தான், கண்கள் குளமாக அவனை திரும்பி பார்த்தாள் ” சீனியர் யுஎஸ் போறீங்களா, ” என வினவினாள்.

அவன் ஆம் என தலை அசைக்கவும் திரும்பி கொண்டாள்.

அவள் அவனை பார்க்கவில்லை, அப்படியே அழைத்தாள் ” சீனியர் “

நரேன் ” சொல்லு ” 

கயல் ” இந்த ரெண்டு வருஷமும் என் கூட பேசாதீங்க, பார்க்காதீங்க, ரெண்டு வருசம் அபறமும் உங்க காதல் அப்படியே இருந்தா என்னை தேடி வாங்க ” என்றாள்

அவள் சொல்ல சொல்ல அதிர்ச்சியாய் அவளை பார்த்தான் நரேன், சில நாள் அவளை பார்க்காமல் இருபதற்க்கே தவித்து போனான், இரு வருடம் பார்க்காமல் பேசாமல் இருக்க கூறுகிறாள்.

அவள் எங்கோ பார்வையை வெறித்து இருந்தாள், அவள் அவன் காதலை மறுக்க வில்லை, எதோ அவள் குழம்பி போய் இருக்கிறாள், அவனுக்கு புரிந்தது, என்று அவள் அவனிடம் நீங்க பணக்காரரா என்று கேட்டாலோ அன்றில் இருந்து தான் இந்த ஓதுக்கம், இப்போதும் கூட முழுதாய் விலக்க முடியாமல், அவன் காதலை பரிசோதிக்கும் பெயரில் அவளை அவளே சோதித்து கொள்கிறாள், நரேந்தரின் வாழ்க்கையில் அவள் அங்கத்தை அறிய விரும்புகிறாள்.

சிறு மௌனதிற்க்கு பின், அவள் புறம் திரும்பி ” சரி கண்ணம்மா, இன்னும் ரெண்டு வருஷம் உன்ன பார்க்க மாட்டேன் பேச மாட்டேன், ஆனா அதுக்கு அப்பறம் நா உன்னை தேடி வருவேன், அப்போ என் முடிவு தான் ” என்றான் தீர்க்கமாய்.

அவளும் திரும்பி அவன் கண்களை பார்த்து ” சரி ” என்றாள், அதன் பின் சிறிது மௌனத்தில் அங்கிருந்து எழுந்து சென்று விட்டாள் அவள்.

போகும் அவளை கண்களில் நிறைத்து கொண்டிருந்தான் நரேன்.

அவன் அறியவில்லை, அவன் கூறிய இரண்டு வருடம் இன்னும் எத்தனை வருடம் ஆக போகிறதோ என, விதி அவனை சுழற்ற காத்திருக்கிறது அதை அறியாது தன்னவளுக்கு தன் காதலின் ஆழத்தை உணர்த்த காத்திருக்கிறான் கயலின் இந்தர்.

இரண்டு வருடங்களின் பின்……..

அமெரிக்காவில் நரேன் அவன் மேற்படிப்பை முடித்திருந்தான். நாளை அவன் தாயகம் திரும்ப உள்ளான், இரண்டு வருடமாய் நெஞ்சில் நினைவுகளாய் சுமந்த அவன் கண்ணம்மாவை காண போகிறான், அவளுக்கு அவன் காதலை உணர்த்த போகிறான், இப்படி ஆயிரம் கற்பனைகள் அவன் மனதில்…….

அவன் இன்பமாய் அவள் நினைவுகளில் மூழ்கி இருக்க இந்தியாவில் இருந்து வந்தது அந்த அழைப்பு, அழைப்பை ஏற்று காதில் வைத்தான்………

நரேன் பல கனவுகளுடன் தாயகம் திரும்ப காத்திருக்க, இந்தியாவில் இருந்து ஓர் அழைப்பு வந்தது, அதில் சொல்லப்பட்ட செய்தியில் அதிர்ந்தவன், அடுத்து கிடைத்த ஃப்ளைட் இல் இந்தியா நோக்கி பயணமானான்.

அதில் கூறப்பட்டதாவது , அவனை தந்தை ஸ்தானத்தில் இருந்து வழி நடத்திய ராமசந்திரன், மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதே.

அவன் இந்தியா சென்று சேர்ந்து, மருத்துவமனை சென்று பார்க்கும் போது, அவர் உடலில் இருந்து உயிர் பிரிந்து இருந்தது.

அவன் கதறவில்லை, ஆனால் அவன் கண்கள் சத்தமின்றி கண்ணீரை வெளியேற்றி கொண்டு இருந்தது, தாய் தந்தை இழந்து அவன் சரிந்து நிற்க்கும் போது அவர் தோள் தந்து தாங்கியவர், அவர் உடன் இருந்த காலங்களில் அவரின் துணை எத்தகையது என அவனுக்கு புரியவில்லை, இன்று புரிகிறது ஆனால் அவர் அருகில் இல்லை.

அதன் பின் அவருக்கான இறுதி காரியங்கள் மளமளவென நடந்தது, அவரின் புதல்வனாய் அவனே அனைத்தையும் முன் நின்று நடத்தினான்.

அப்போது தான் அறிந்து கொண்டான், அவரின் தீடீர் மாரடைப்பின் காரணத்தை,

விசுவநாதன் உருவாக்கிய சாம்ராஜ்யம் அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தது, அத்தனை பெரிய சரிவு, இந்த சரிவு யாரும் எதிர்பாராதது, இத்தனை வருடம் அந்த சாம்ராஜ்யத்தை வழிநடத்திய ராமச்சந்திரன் நரேன் வந்து பொறுபெற்க்கும் சமயத்தில் வந்த இந்த சரிவால், அவர் சரிந்து போனார்.

தற்போதைய அவர்களின் தொழில் நிலமையை அறிந்தவன், ராமச்சந்திரனின் ஈமகாரியங்கள் முடிந்ததும் தொழிலை கையில் எடுத்து கொண்டான், உண்மையில் மிக மோசமாய் இருந்தது நிலமை, அவர் இறந்த சோகத்தில் இருந்து முழுதாய் வெளிவரும் முன்னே, அவன் கண்முன் வரிசைகட்டி நிற்க்கும் பொறுப்புக்கள்.

தனது ஆசாபாசம் அனைத்தையும் ஓதுக்கி, முழு மூச்சாய் தொழிலில் இறங்கினான்.

அதில் இடுபடும் முன் கண் மூடி அவன் கண்ணம்மாவை மனதில் நினைத்து கொண்டான், ” எனக்காக இன்னும் கொஞ்சநாள் காத்திருடா கண்ணம்மா ” என்று மானசீகமாய் அவளிடம் பேசி, மனதை திடபடுத்தி கொண்டான், அவன் நம்பிக்கை கொண்டான் அவன் காதல் மேல் நம்பிக்கை கொண்டான், எத்தனை காலம் ஆனாலும் அவன் கண்ணம்மா அவனுக்காய் காத்திருப்பாள் என நம்பிக்கை கொண்டான்.

கொண்ட நம்பிக்கையினால், அனைத்தையும் மறந்தான், தொழிலில் முழுதாய் இறங்கினான்.

ஊன் உறக்கம் மறந்து உழைத்தான், கடினமாய் உழைத்தான், அனைத்தையும் முதலில் இருந்து ஆராய்ந்தான், தவறை கண்டு பிடித்து, அஸ்திவாரத்தில் இருந்து புதிதாய் உருவாக்கினான்.

அவன் கல்லூரி நாட்க்களிலே ராமச்சந்திரன், அவனுக்கு தொழில் நுணுக்கங்களை கற்று தந்துள்ளதால், தடுமாற்றம் இன்றியே நடத்தினான்.

அனுபவசாலிகளை உடன் வைத்திருந்த அதே நேரம் திறமையானவர்களை தேடி தேடி சேர்த்தான், புது புது வித்தியாசமான யோசனைகள் மூலம் படிப்படியாக முன்னேறினான்.

அவன் ஓரளவு தொழிலை நிலைநிறுத்த, முழுதாய் ஓர் வருடம் ஆனது, இப்போதும் அவன் பழைய நிலையை அடைந்திடவில்லை, ஆனால் ஓரளவுக்கு சரி செய்திருந்தான், இப்போது சிறிது ஆசுவாசமாக மூச்சு விட முடிந்தது அவனால்.

அதற்காக அவன் ஓயவில்லை, இன்னும் உத்வேகமாய் முன்னேறினான், அப்போது கயலின் எண்ணம் அதிகமாய் தாக்க அவளை தேடி அவள் ஆசிரமம் சென்றான்.

அங்கோ அவள் ஆசிரமம் இருந்த இடத்தில் ஓர் மால் கட்டுவதற்கான பணிகள் நடந்து கொண்டு இருந்தது.

அதிர்ந்து போனவன் விசாரித்தான் அவன் அறிந்த தகவல் அங்கிருந்து அவர்கள் இடத்தை மாற்றி கொண்டது மட்டுமே, அவர்கள் எங்கு சென்றார்கள் என்று எந்த தகவலும் இல்லை, அவனுடன் படித்த அவன் நண்பர்களும் மேற்படிப்புக்காக வெவ்வேறு நாட்டிற்கு சென்று இருக்க யாருக்கும் அவளை பற்றி தெரியவில்லை.

அவன் கல்லூரியிலும் சென்று விசாரித்து விட்டான், அவள் பிஎஸ்சி உடன் அங்கிருந்து நீங்கி விட்டதாய் கூறினர், அதைத்தவிர அவனால் வேறு எதுவும் அறியமுடியவில்லை.

இந்த பிரச்சனையில் முழுதாய் கவனம் செலுத்த முடியாது, தடையாய் அவன் தொழில் இருந்தது.

ஆக அவன் டிடெக்டிவின் உதவியை நாடினான், அதன் மூலம் கயல் எல்லா இடத்திலும் தேடபட்டாள்.

கல்லூரி நாட்களில் அவள் அறியாமல் அவளை தன் மொபைலில் கிளிக் செய்து கொண்டான்.

அந்த நிழற்படமே அன்றும், இன்றும்  அவன் துனையானது.

மேலும் ஓர் வருடம் கடந்த நிலையில்….

நரேன் அவன் கேபினில் அமர்ந்து இருந்தான், அவன் தலையை கணனியில் புதைத்து கொண்டு, எதோ தட்டி கொண்டு இருந்தான்.

அப்போது, ” மே ஐ கம் இன் சார் ” என கேட்டு கொண்டு உள்ளே நுழைந்தான் அவன் பிஏ ராஜ்.

” கம் இன் ” எனவும் உள்ளே வந்தவன், எதும் பேசாமல் நின்றான், அவன் எதும் பேசாமல் நிற்க்கவும் அவனை நிமிர்ந்து பார்த்தவன், ” சொல்லுங்க ராஜ் என்ன விஷயம் ” என்று வினவினான்.

” சார் கொஞ்சம் பேசன்னும் ” 

” சொல்லுங்க ராஜ் ” என்றான் கணனியில் இருந்து தலையை அகற்றாமலே….

” சார் கொஞ்சம் பெர்சனலா பேசன்னும் ” என்றிட , கணனியில் இருந்து தலையை அகற்றி அவன் பக்கமாய் திரும்பி அமர்ந்து அமரும் படி செய்கை செய்தான்.

ராஜ் அமர்ந்ததும், ” இப்போ சொல்லுங்க ராஜ் என்ன பேசணும் ” என வினவினான்.

ராஜ் ” சார் கேக்குறன்னு தப்பா நினைக்காதீங்க, இந்த போட்டோல இருக்கிறது யாரு ” என தயங்கி கொண்டே, அவன் மேசை மீது இருந்த அந்த சிறிய ஃபோட்டோ ஃப்ரேமை காட்டி வினவினான்.

அவன் கேள்வியில், நரேனின் பார்வை அவன் மேசை மீதிருந்த அந்த நிழற்படத்திடம் சென்றது, அவளை கண்டதும் மனம் கொண்ட இறுக்கம் தளர, இதழ்கள் புன்னகையால் விரிந்தது.

ராஜின் கேள்விக்கு பதிலாய் ” என் உயிர் ” என்றான் அந்த படத்தை பார்த்தவண்ணம்.

ராஜ் ” அவங்க பெயர் என்ன சார் ” என வினவ, ” கயல், கயல் விழி அவ அப்படிதான் சொல்லுவா ” என்றான் அவன் கண்ணம்மாவின் நினைவுகளில் மிதந்தபடி.

ராஜ்  ” இப்போ அவங்க எங்க சார் இருக்காங்க ” என வினவினான் எதோ அறிந்தவனாய்.

அவன் கேள்வியில் முகம் வேதனையை சுமக்க ” தெரியாது ” என்றான் நிழலில் அவள் கண்களை கண்டவாறு.

ராஜ் ” சார் இதை கொஞ்சம் பாருங்களேன் ” என்றான் அவன் மொபைலை காட்டி, அதனை வாங்கி பார்த்தான் நரேன்.

அதனுள் அவன் கண்ணம்மா அழகாய் சிரித்து கொண்டு இருந்தாள்.

அதனை கண்டு அதிர்ச்சியில் இருக்கையில் இருந்து எழுந்து விட்டான், குரல் நடுங்க கேட்டான், ” இது எப்படி, இந்த ஃபோட்டோ எப்போ எங்க எடுத்தது ” 

ராஜ் ” சார் இது நா ஊருக்கு போய் இருந்தேன்ல்ல அங்க எடுத்தது, இவங்க எங்க ஊர்ல டீச்சர் ஆ வொர்க் பண்றாங்க, அதான் உங்க கிட்ட கேட்டேன், நா இந்த ஃபோட்டோ பார்த்து அவங்கள மாதிரி இருக்காங்களோண்ணு யோசிச்சேன், ஆனா நீங்க பெயரை சொன்னதும் இது உங்க கயல் தான்னு கன்ஃபர்ம் ஆகிருச்சு… ” 

நரேன் அவனிடம் வந்து அவனை அணைத்து கொண்டான், ” தாங்க்ஸ் ராஜ், எனக்கு என்ன சொல்லன்னே தெரியல தாங்க் யூ சோ மச் ” என்றான்.

ராஜ் அதற்க்கு ஓர் விரிந்த புன்னகையை சிந்த அவனிடம் அவன் சொந்த ஊர் எது என கேட்டு கொண்டு, வேலைகளை ஒவ்வொருவருக்கும் பிரித்து குடுத்து அவன் கண்ணாம்மாவை காண கிளம்பினான்.

மனம் மகிழ்ச்சி கடலில் குதித்து விளையாட செல்கிறான் அவன் கண்ணம்மாவை காண, அவன் கொண்ட காதலின் வலிமையை உணர்த்த, அவள் காதலை அவளுக்கு உணரவைக்கை, போகிறான் அவளை உயிரென அள்ளி அவன் உயிரில் போதித்துகொள்ள.

அவன் அங்கு சென்று சேர மாலையானது,

இதோ ஊரினுள் நுழைந்து விட்டான், அவள் வீட்டை தேடி பிடித்து இதோ வாசலில் நிற்க்கிறான், படபடப்பும் மகிழ்ச்சியுமாய், கதவு மூடி இருந்தது, உள்ளே ஆள் இருப்பதற்கான சிறு சத்தம் கேட்டது, ஆம் அது அவள் குரல் தான் மெலிதாய் பாடலை முணுமுணுத்து கொண்டிருந்தாள்.

அதனை கேட்டு அவன் முகம் புன்னகையால் மலர்ந்தது, அதே புன்னகையுடன் கதவை தட்டினான்.

இதோ அவள் குரல் நின்று விட்டது, உள் பக்கமாய் கதவு திறக்கும் ஓசை கேட்கிறது, இங்கோ இவனுக்கு அவன் இதயத்தின் ஓசை அவன் காதில் கேட்கிறது.

கதவை முழுதாய் திறந்தாள் அவன் கண்ணம்மா, திறந்தவள் சிலையேன நின்ற இடத்திலேயே நின்று விட்டாள் இத்தனை நாள் யாரை காண தவம் இருந்தாலோ அவன் அவள் முன் நிற்க்க உலகம் மறந்து , அனைத்தும் மறந்து நின்று விட்டாள், அவள் கண்கள் கண்ணீரை மழையேன பொழிந்து கொண்டு இருந்தது.

அவனும் உறைந்து விட்டான், இத்தனை நாள் காணமாட்டோமா என்று தவித்த அவன் கண்ணம்மாவை கண்டு, அவன் கண்களிலும் கண்ணீர் பிரிவின் கொடிய வலி எண்ணி………

நிமிடங்கள் நொடிகளேன கரைய இருவரும், ஒருவர் கண்ணில் மற்றொருவர் தொலைந்து கொண்டு இருந்தனர்.

சற்று நேரத்தில் இருவரும் தன்னிலை அடைய, கண்களால் அவனை உள்ளே அழைத்து வழி விட்டு நின்றாள்.

அவன் வந்து அமர்ந்ததும், அவள் கண்ணீர் துடைத்து கொண்டாள், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்.

அதன்பின், ” எப்படி இருக்கீங்க இந்தர் “, ” எப்படி இருக்க கண்ணம்மா ” என இருவரும் ஒரே சமயத்தில் கேட்டு கொண்டனர்.

அதில் இருவரும் வாய்விட்டு சிரிக்க, ஒன்றாக பேசியதால் அவள் கூறிய இந்தர் அவன் செவிகளில் சரியாய் விழவில்லை.

” கண்ணம்மா, எப்படி டா இருக்க ”  என வினவினான், கண்களில் காதல் வழிய, அவ்வளவு தான் அவன் அருகில் நெருங்கியவள் அவனை அடிக்க துவங்கினாள்.

” ஹே விடு டி , ஹே வலிக்குது “

” ஏண்டா இத்தனை நாள் வரல்ல, நா ரெண்டு வருஷம்ன்னு தான சொன்னேன் நீ நாலு வருஷம் கழிச்சு வார லூசு , எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா, ” என்று அழுகையுடே அவனை அடித்து கொண்டு இருந்தாள்.

” எங்க உன்னை கடைசிவரைக்கும் பார்க்கவே முடியாதோன்னு எவ்வளவு பயந்தேன் தெரியுமா, மனசு சொல்லும் நீ கண்டிப்பா வருவேன்னு ஆனா எப்போ எப்போன்னு எவ்வளவு கஷ்டப்பட்டேன், சில சமயம் செத்துரலாம் கூட தோணும் ”  என கூறி அவனை அடித்தாள்.

அவளின் செத்துரலாம்ன்னு தோணும் என்ற வார்த்தையில் அதிர்ந்து, அவள் கைகளை பற்றி தடுத்தவன், அவளை இழுத்து மார்போடு அணைத்து கொண்டான்.

நரேன் ” நீ இல்லன்னா நானும் இல்ல கண்ணம்மா, இந்த உலகத்துல எனக்குன்னு இருக்க ஒரே உறவு நீ தான் கண்ணம்மா, நீ இல்லன்னா நா இல்லடி ” என்றான் கண்களில் கண்ணீர் வழிய.

அவன் வார்த்தைகளில் அவளும் அவனை இறுக அணைத்து கொண்டு ஓவென கதறி அழுதாள், அவள் அழுகை ஓயும் வரை அவளை அணைத்து ஆறுதல் படுத்தியவன், அவள் அழுகை ஓய்ந்ததும், அவள் முகம் நிமிர்த்தி அவன் விரல் கொண்டு கண்ணீர் துடைத்து விட்டான்.

” சாரி டா கண்ணம்மா, நா இந்தியா வந்ததுமே உன்ன பார்க்க வரலாம்னு தான் இருந்தேன் ….. ” என துவங்கி நடந்த அனைத்தையும் கூறி முடித்தான்.

” நா ஒரு வருஷத்துக்கு முன்னாடி இருந்து உன்னை தேடிட்டிட்டு இருக்கேன், உங்க ஆசிரமத்துக்கு போனேன் , அங்க எதோ மால் கட்டிராங்க, அப்பவும் உன்ன எல்லா இடத்துலயும் தேடி பார்த்தேன், இப்போ தான் கிடைச்ச “

” அது எங்க ஆசிரமம் இருந்த இடத்தோட ஓனர் அந்த இடத்தை அவங்களுக்கு வித்துட்டாங்க, அப்பறம் எங்களுக்கு வேற இடம் அரேஞ்ச் பண்ணி தந்தாங்க, இப்போ ஆசிரமம் அங்க தான் இருக்கு “

” சரி கண்ணம்மா, நீ எப்படி இங்க இவ்வளவு தூரம் வந்த …. ” என்று வினவினான்.

” சரி கண்ணம்மா, நீ எப்படி இங்க இவ்வளவு தூரம் வந்த …. ” என்று வினவினான்.

அவனை பார்த்து மெலிதாய் சிரித்தவள், ” ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இங்க வந்தேன், சென்னையில தான் இருந்தேன் நா தனி ஆள் அப்படின்ற ஒரே காரணத்துக்காக நிறைய தப்பான பார்வைகள் அங்க இருக்கவே பிடிக்கல, அப்போ தான் அங்க என் கூட வேலை பாக்குற இன்னொரு மிஸ் தான் சொன்னாங்க இப்படி அவங்க ஊர்ல ஒரு சின்ன ஸ்கூல் இருக்கு, அவங்க இங்க தான் வொர்க் பண்ணாங்களாம் ஆனா கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் அவங்க சென்னை வந்துட்டாங்க நா என் பிரச்சனைய சொன்னதும் இங்க வந்து வொர்க் பண்றீங்களான்னு கேட்டாங்க நானும் சரின்னு சொல்லிட்டேன், எனக்கு இங்க ரொம்ப பிடிச்சிருக்கு ரொம்ப பாதுகாப்பான இடம் கொஞ்சம் பசங்க சின்ன ஸ்கூல் ஆனா மனசு முழுக்க சந்தோசம் ” என்றாள் விரிந்த புன்னகை மேலும் விரிந்தபடி……

அவள் கைபிடித்து அருகில் அமர்த்தி மெதுவாய் அவள் கேசம் வருடி கொடுத்தான், அவன் செயலில் அவள் அவனை பார்த்து புன்னகை பூக்க, அவன் இதழ்களும் புன்னகைத்தது.

தனியாக அவள் அனுபவித்த கஷ்டங்கள் இவனை வேதனை கொள்ள செய்ய, அவள் கண்களை பார்த்து ” சாரி கண்ணம்மா ” என்று வினவினான் வருத்த குரலில்….

ஆறுதலாய் அவன் கை பற்றி அழுத்தியவள்

” பரவல இந்தர், வர முடிஞ்சா வந்துருக்க மாட்டியா, நா மன்னிச்சிட்டென் சோ நோ ஃபீலிங் ” என்றாள் தலை சாய்த்து….

அவள் வார்த்தைகளில் மெலிதாய் சிரித்து, ” அது யாரு இந்தர், நா உன் சீனியர் ஆச்சே, சீனியர் எப்போ இந்தர் ஆனாரு …. ” என வினவினான்.

எழுந்து நின்று அவன் முன் உச்சி கேசம் கலைத்து, பின் கைகட்டி, ” சீனியர், என் அழகு சீனியர் நாம இப்போ காலேஜில இல்ல சீனியர், சோ இப்போ நீங்க என் சீனியர் இல்ல சீனியர், புரிஞ்சுதா சீனியர், இப்போ நீங்க இந்த கண்ணம்மா வொட இந்தர் மட்டும் தான், சரியா சீனியர்…..” என்றாள்.

அவளை பார்த்து பணிவாய் ” சரிங்க மேடம், கிளம்பலாமா… ” என வினவினான்.

” கிளம்பலாம் இந்தர், அதுக்கு முன்னாடி ஸ்கூல சொல்லிட்டு வந்துறேன்….., எனக்கு தங்க வீடு குடுத்த ஐயாக்கும் சொல்லனும்… “

” சொல்லலாம் டா, நீ எல்லாத்தையும் எடுத்து வை, நானும் வாரேன் சொல்லிட்டு கிளம்பலாம் “

அதன் பின் கயல் அவள் துணிகளை எடுத்து கொண்டு , அனைவரிடமும் கூறி விட்டு கிளம்பி சென்றாள் அவள் இந்தருடன்…..

காரில் செல்லும் போது அவள் எதும் பேசவில்லை, வெளியில் வேடிக்கை பார்த்தவண்ணமே வந்தாள், தீடிரென்று எதோ தோன்றியவளாக…

” நாம எங்க போறோம் இந்தர்.. ” என வினவினாள்.

அவளை பார்த்து மென்னகை புரிந்தவன், ” நம்ம வீட்டுக்கு… ” என்றான்.

அதன் பின் அவள் எதுவும் பேசவில்லை, மீண்டும் வெளியில் வேடிக்கை பார்க்க துவங்கி விட்டாள்.

=============================

இருவரும் நரேனின் இல்லம் வந்தனர்.

மாளிகை போல் இருந்த வீட்டை கண்கள் விரிய பார்த்தவாறே அவனுடன் உள் நுழைந்தாள் கயல்.

அவன் கை கோர்த்து நடந்தவள், அவன் கை பிடித்து இழுத்தாள், அவள் இழுப்பில் நின்றவன் அவளை கேள்வியாக நோக்க, கண்கள் விரிய ” உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு இந்தர்… ” என்றாள்.

அவளின் உங்க வீடு என்ற கூற்றில் அவன் அவளை முறைக்க, அவன் முறைப்பை பார்த்து தன் தவறு உணர்ந்து நாக்கை கடித்து கொண்டவள், ” சாரி, சாரி நம்ம வீடு இப்போ ஓகே யா… ” என்று புன்னகைத்தாள்.

இதோ மீண்டும் அவன் வாழ்வில் வந்து விட்டாள் அவன் கண்ணம்மா, அன்று கல்லூரி காலங்களில் ஓர் புது இளமையை காட்டியவள், இன்று அவன் வாழ்வின் புது பக்கத்தை காட்ட காத்திருக்கிறாள்….

காதலின் அர்த்தம் உணர்த்த காத்திருக்கிறாள்……

உயிர் வலியின் கொடூரத்தை அவனுக்கு காட்ட காத்திருக்கிறாள்……

நாட்கள் நகர, அந்த வீட்டில் நன்றாய் பொருந்தி கொண்டாள் கயல், அந்த வீட்டில் அவர்கள் தவிர வேலையாட்கள் தான்.

அங்கு வேலை செய்யும் அனைவருடனும் பாகுபாடின்றி பழகினாள்.

அவர்களுடன் ஒன்றாய் தரையில் அமர்ந்து உண்டாள், ஒவ்வொரு வேலையும் அவளும் செய்தாள்.

அதிலும் அங்கு சமயல் செய்யும் லட்சுமி என்பவரிடம் நன்கு ஓட்டிகொண்டாள்.

தினம் அவரிடம் ஓர் புது சமயலை கற்று அவள் இந்தருக்கு விருந்து அளிப்பாள்.

அவனும் அவளை ரசித்தே உண்ணுவான்.

ஓர் நாள் அவளவனை அழைத்து கொண்டு அவள் வளர்ந்த ஆஷ்ரமத்திற்க்கு சென்றாள்.

” இந்தர் உனக்கு தெரியுமா, எங்க ஆசிரமம் இருந்த பழைய இடத்தை விட எனக்கு இங்க தான் ரொம்ப பிடிக்கும் , ஏன்னு தெரியுமா…. “

அவன் அவள் செய்கைகளை ரசித்து கொண்டு, அவன் இல்லை என தலையாட்ட, அவள் இதழ் சுழித்து “போடா உனக்கு ஒன்னுமே தெரியல, அங்க பாரு தூரத்துல கடல் தெரியுது இல்ல எனக்கு அது தான் பிடிக்கும், அந்த பெஞ்ச்ல இருந்து கொஞ்ச தூரத்துல ஒரு தடுப்பு இருக்கு அதை திறந்து போன, கொஞ்ச தூரத்தில கடல், இங்க வந்தா போதும் மதேர்க்கு தெரியாம அங்க போய்ருவேன், மதெர்க்கு தெரிஞ்சா திட்டுவாங்க, என்னை பார்த்து மத்த குழந்தைகளும் பழகுவாங்கன்னு… ஹே மதர் கிட்ட சொல்லிராத…” என்றாள் கண் சிமிட்டி……

அவன் கை பிடித்து அந்த பெஞ்ச் அருகில் அழைத்து சென்று, அவனை அமரவைத்து அவளும் அருகில் அமர்ந்து கொள்ளவாள்.

அங்கு இருந்த மரத்தில் இருந்து உதிரும் ஒவ்வொரு பூவும் அவள் மேல் விழ உடல் சிலிர்த்து போவாள்.

அவளின் அந்த செயலால் அவன் கண்ணுக்கு ஓர் அழகிய கவிதையாய் தெரிவாள் அவன் கண்ணம்மா…..

சிறிது நேரத்தில் அங்குள்ள குழந்தைகளுடன் மண்ணில் உருண்டு விளையாடுவாள், அவள் கால்கள் என்றுமே ஓர் இடத்தில் நிற்க்காது, துள்ளி குதித்து கொண்டே இருப்பாள்.

அவனின் வாழ்க்கையை அவளின் புன்னகையால், வண்ணம் தீட்டினாள் இந்தரின் கண்ணம்மா…..

ஓர் நாள் வீட்டிற்குள் அவன் நுழையும் போதே கண்டு விட்டான் அவன் கண்ணம்மாவை…

தோட்டத்தில் முயல்கள் பின் துரத்தி ஓடி கொண்டு இருந்தாள்.

எட்டி அவளை பிடித்தவன், தோட்டத்தில் இருந்த இருக்கையில் அவளை அமர வைத்து அவன் ஒற்றை காலில் முட்டி இட்டு அமர்ந்து அவள் பாதத்தை அவன் தொடைகளில் தாங்கினான்.

அவள் அவன் செய்கைகளை தான் பார்த்திருந்தாள், கண்கொட்டாமல்….

கையில் இருந்த ஓர் பெட்டியை திறந்தவன், அதில் இருந்த தங்க கொலுசுகளை அவள் பொன் பாதத்தில் அணிவித்து விட்டான்.

அவளின் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை, அவள் இந்தரை தவிர, அவனை அணுஅணுவாய் ரசித்து கொண்டு இருந்தாள்….

அவன் அணிவித்து முடித்ததும் மெதுவாய் அவள் பாதங்களில் முத்தமிட்டான்.

இதுவரை அவன் அன்று வார்த்தையால் கூறிய அந்த காதலை மீண்டும் வார்த்தையால் கூறவில்லை, ஆனால் அவனின் ஒவ்வொரு அசைவிலும் அவள் மேல் அவன் கொண்ட காதலை காட்டுகிறான்…..

அவள் அவனுக்கும் மேல், கண்ணில் செயலில் குரலில் காதலை காட்டுபவள், வார்த்தையாக அவள் காதலை உரைக்க வில்லை…

இருவரும் திருமணம் பற்றியும் இன்று வரை பேசவில்லை….

அவன் செய்கைகளை ரசித்து இருந்தவள், அவன் நிமிர்ந்ததும் அவன் கேசம் கலைத்து நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு மீண்டும் அந்த முயல் குட்டி பின் ஓடிவிட்டாள்.

நாட்கள் நகர, அன்று ஓர் பெளர்ணமி இரவு…….

தனது அறையின் பால்கனியில் தரையில் அமர்ந்து, வான் நிலவை ரசித்திருந்தான் நரேன்……

அவனை தேடி வந்தவள், சற்று இடைவெளி விட்டு அவன் அருகில் அமர்ந்தாள்.

அவன் வான் நிலவை ரசிக்க, இவள் கால்களை மடக்கி கொண்டு முழங்காலில் முகத்தை வைத்து தன்னவனை ரசித்திருந்தாள்.

திரும்பாமலே அவள் பார்வையை உணர்ந்தவன், அவள் புறமாய் ஒற்றை கை நீட்டினான்.

அவன் கைகளை பற்றி கொண்டு அவன் இரு கால்களுக்கும் நடுவில் சென்று அமர்ந்தாள்.

அவன் ஒரு கால் நன்றாய் மடித்து இருக்க, மற்றொரு காலை பாதி நீட்டிய நிலையில் வைத்திருந்தான்.

அவன் இடக்கை அவள் இடைவளைக்க, அவன் வலக்கை அவன் நீட்டிய கால்கள் மேல் கிடந்தது.

இடைவளைத்த அவன் கைகளின் மேல் இரு கைகளையும் வைத்து அழுத்தியவள், தலையை அவன் தோள்களில் சாய்த்து கொண்டாள்.

” என்ன கண்ணம்மா…”

” இந்தர்…”

” சொல்லு டா… “

” இந்தர், இந்த நிம்ஷம் இந்த உலகத்திலே நா தான் ரொம்ப சந்தோசமானவளா இருப்பேன், அவ்வளவு ஹேப்பி ஆ இருக்கு என்கிட்ட சொல்றதுக்கு வார்த்தைகளே இல்ல, இப்படியே மரணம் வந்தா கூட நா சந்தோசமா ஏத்துப்பேன்….” என்றாள் விழியோரம் சிறு கண்ணீர் கசிய….

இடை வளைத்த கை இன்னும் இடை இறுக்க, மற்றொரு கை தோள் வளைத்து மேலும் அவனுடன் அவளை இறுக்கியது. அவள் காதோரமாய் உதடுகளை கொண்டு சென்று ” என்னடி பேச்சு இது மரணம் அது இதுன்னு, எனக்கு வாழனும்ன்னு டி உன் கூட வாழனும் நூறு வருஷம் உன் கூட சந்தோசமா வாழனும், ஏண்டி உனக்கு இந்த மாதிரி எல்லாம் ஆசை இல்லையா… ” 

லேசாய் அவன் புறம் முகத்தை திருப்பி, அவன் கன்னங்களில் அவள் முகத்தை பதித்து கொண்டாள்.

” இருக்கு நிறைய ஆசை இருக்கு, ஆனா நூறு வருஷம் போதுமா..” என அவன் காதோடு ரகசியம் பேசினாள்.

அதில் அவன் முகத்தில் சிறு கீற்றாய் புன்னகை தோன்ற, முகத்தை திருப்பி வான் நிலவை கண்டவள் , குரலில் அவன் மேல் கொண்ட காதலை காட்டினாள்.

உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை

உன்னை விட……

உன் கூட நான் கூடி இருந்திட

எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா

நூறு ஜென்மம் வேணும் அத கேட்குறேன் சாமியே

நூறு ஜென்மம் நமக்கு போதுமா

வேற வரம் ஏதும் கேட்போமா?

சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய

காத்தா அலைஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும்

ஆகாசமா ஆன போதிலும்

என்ன உரு எடுத்த போதிலும் சேர்ந்தே தான் பொறக்கணும்

இருக்கணும் கலக்கணும்

உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை

உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை எவருமில்லை

வாழ்கை தர வந்தான் விருமாண்டி

சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி

சாதி சனம் எல்லாம் அவன் தான்டி

கேட்ட வரம் உடனே தந்தான்டி

உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை

என்னை விட …

உன்னை விட ………….

அவள் பாடி முடிக்கும் போது இருவர் கண்களிலும் கண்ணீர் வழிந்து கன்னங்களில் உருண்டோடியது.

அவள் அப்படியே கண்களை மூடி கொண்டு அவன் புறம் திரும்பி அவன் தோளில் முகத்தை புதைத்து கொள்ள, அப்படியே அவளை அவனின் இரு கைகளிலும் அள்ளி கொண்டான் அவளின் இந்தர்.

அவளை படுக்கையில் கிடத்தி அவள் அருகில் படுத்தவன், அவளை மென்மையாக அணைத்து கொண்டான்.

அவன் மனதில் நாளை தங்கள் இருவர் வாழ்விலும் மறக்க முடியா நாளாக மாற்ற ஓர் அழகிய திட்டம் உருவாகியது…

அவன் கண்ணம்மா முழுதாய் தன்னவள் ஆகும் நாளை எண்ணி பல கனவுகளுடன் கண்களை மூடி கொண்டான்……….

சூரிய கதிர்கள் முகத்தில் கோலமிட மெதுவாய் கண் விழித்தான் நரேன், அவன் இமை பிரித்ததும் அவன் கண்ணம்மா தரிசனம், இதழ்கள் புன்னகையால் விரிய மென்மையாய் அவள் நெற்றியில் இதழ் ஒற்றி எழுந்தான்.

பின் சிறிது நேரத்தில் அவளும் எழுந்ததும், அவளை அவசர அவசரமாக தாயாராக சொல்லி அவளை கிளப்பி கொண்டு சென்றான்.

காரில் இருவரும் அமர்ந்து இருந்தனர், கார் அவள் ஆசிரமம் செல்லும் பாதையில் செல்லவும் அங்கே தான் செல்கிறோம் என எண்ணி இருந்தாள்.

ஆனால் கார் அவர்களின் ஆஷ்ரமமும் தாண்டி சென்றது, அவள் கண்களில் கேள்வியை தாங்கி அவனை காண, அவள் பார்வை உணர்ந்து அவள் புறம் திரும்பி ஒற்றை கண் சிமிட்டி, ” சஸ்பென்ஸ் ” என்று கூறி வண்டியை செலுத்தினான்.

அவளும் தன்னவனின் புன்னகை முகத்தில் தன்னை தொலைத்தவளாக, அவன் தரப்போகும் ஆச்சர்யத்தை அறிய காத்திருந்தாள்.

கார் அந்த கடற்கரையோரம் இருந்த வீட்டின் முன் சென்று நின்றது.

அதனை கண்டு அவள் கண்கள் பெரிதாய் விரித்து, ” இந்தர் எப்படி, நா சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன் ….அதுக்குன்னு வீட்டையே வாங்கிருவீங்களா…..” என்றாள்.

” நீ கேட்டா என்ன வேணும்னாலும் செய்வேன் கண்ணம்மா…..” என்றான் குரலில் காதலை காட்டி, பின் அவளை அழைத்து கொண்டு அந்த வீடிட்க்குள் நுழைந்தான்.

அன்று அவள் ஆசிரமத்திற்கு வந்திருந்த அன்று, இந்த வீட்டை கடக்கும் போது கயல் இயல்பாய் ” இந்தர் இந்த வீடு ரொம்ப அழகா இருக்கு இல்ல, அங்க இருந்து அப்படியே கடலுக்கு போகலாம் சூப்பர் ஆ இருக்கு…. ” என கூறினாள்.

அன்று அவள் கூறியதை சிறு சிரிப்புடன் கேட்டு தலை அசைத்தவன், இன்று அந்த வீட்டை அவளுக்காக வாங்கி விட்டான்.

வீட்டை சுற்றி பார்த்தவள், சிறிது நேரத்தில் கடலை நோக்கி ஓடிவிட்டாள்.

அவனும் அவள் பின் சென்று நின்று கொண்டான் அலைகள் பாதம் தொடாதவாறு.

அவள் துள்ளி குதித்து அலைகளுடன், விளையாடி கொண்டிருந்தாள், அவள் கால்கள் ஓய்ந்து அவன் பார்த்தது இல்லை, சிறு காய்ச்சல் என்றாலும் உடல் சோர்வை பொருட்படுத்தாது, வீட்டில் எங்கும் அவள் பாதம் பட சுற்றி திரிவாள்.

பெரிய அலை வந்ததும் ஓடி வந்து அவனை அணைத்து கொள்வாள், ” இந்தர் பெரிய அலை, ” என்று அவன் தோளில் முகத்தை புதைத்து கொள்வாள், அவனும் அவளை அணைத்து கொள்வான்.

நேரங்கள் நகர, நிலவு பெண்ணவள் இரவு காதலனுடன் கை கோர்த்து கொண்டாள்.

மணலில் அமர்ந்து வானில் தெரியும் வெள்ளி நிலவை ரசித்து இருந்தாள்.

அவள் அருகில் வந்து அவள் தோளில் கையிட்டு அமர்ந்தான்.

அவள் காதுக்கு அருகில் மென் குரலில் அழைத்தான், ” கண்ணம்மா… ” அவன் அழைக்கும் போது அவன் உதடுகள் அவள் காதில் உரசி சென்றது, அந்த இதழ் உரசலில் அவள் உடல் சிலிர்த்து நின்றாள்.

அவளில் இருந்து அவன் கைகளை அகற்றி கொண்டு அவள் முன் சென்று முழங்கால் இட்டு அமர்ந்தான்.

அவள் முகம் சிவந்து இருக்க, அவனை காணாது தலை குனிந்து கொண்டாள்.

அவள் முகத்தை ஓர் விரலால் நிமிர்த்தி, மற்ற கையால் அவள் கன்னத்தில் கோலமிட்டான், அவள் கண்களை மூடி கொண்டாள்.

நெற்றியில் முத்தமிட்டு, மூடிய இமைதனில் முத்தமிட்டு, அவள் நெற்றியோடு நெற்றி முட்டி, அவன் மூச்சு காற்று அவள் முகம் தீண்ட, ஒற்றை கையால் முகம் தாங்கி, மற்றொரு கையை அவன் பாகெட் உள் விட்டு எதோ ஒன்றை கைகளில் எடுத்தான்.

அவள் இன்னும் கண்களை மூடி தான் இருந்தாள், கண் திறந்து வெகு அருகில் அவள் முகத்தை ரசித்தவன், மெதுவாய் அழைத்தான் காற்றும் நோகாவண்ணம், ” கண்ணம்மா ” , அவன் குரலில் உருகி கரைந்து தொலைந்து மூடிய இமைகளை மேலும் இறுக்கி கொண்டாள்.

அவள் உடலின் சிலிர்ப்பு அவள் வதனம் தாங்கிய கைகளால் அவனால் உணர முடிந்தது.

அவளை கண்டு மெதுவாய் சிரித்து, மென்மையாய் அவள் கன்னம் வருடி, ” கண்ணம்மா கண்ணை திற டா… ” என்றான்.

அவள் இந்தர் சொல்லுக்கு மறுப்பேது, மெல்ல இமை பிரித்தாள், கண்ணெதிரே அவளவன் காதல் சொட்டும் கண்கள்,விரும்பியே அதில் கலந்து கரைந்து காணாமல் போனாள்.

அவள் விழி வழி கசிந்த காதலில் மெய் உருகி, அவளை விட்டு சற்று விலகி சிறு இடைவெளி விட்டு அமர்ந்து, அவன் கைகளில் வைத்திருந்த அந்த ஒற்றை கல் வைர மோதிரத்தை அவள் முன் நீட்டினான்.

அவள் கண் விரித்து பார்க்க, மென்மையாய் சிரித்து ஒரு கை மோதிரம் ஏந்த மறு கையால் அவள் கைகளை பற்றினான்.

” கண்ணம்மா, கல்யாணம் பண்ணிக்கலாமா, எனக்கு உன் மேல காதல் இருக்கு அன்பு பாசம் எல்லாமே இருக்கு, என்னோட உலகமே நீ தான்டா, எல்லாமும் இருக்குற நீ என் மனைவியா என் கூட வாரியா…. ” என்று வினவினான்.

அவள் கண்கள் கலங்கி கண்ணீரை வெளியேற்ற, உதடு துடிக்க அவனை பார்த்தாள், அவளிடம் வார்த்தைகள் இல்லை, ஆம் என தலை அசைத்தாள், பற்றிய கைகளை விடாமல் சிறு சிரிப்புடன், அவள் விரலில் அந்த மோதிரத்தை மாட்டி விட்டான்.

அதே கையில் இதமாய் இதழ் பதித்து, அவள் வதனம் தாங்கினான், வதனம் தாங்கிய கைகளை பற்றி கொண்டவள், அழுகையூடே பேச துவங்கினாள், ஆனால் பேச முடியாது அவளுக்கு உடல் எல்லாம் வியர்க்க, கண்கள் சொருக மயங்கி சரிந்தாள் இந்தரின் கண்ணம்மா.

அவள் மயங்கவும் பதறியவன், அவள் உடல் மணலில் சரியும் முன் அவளை கைகளில் தாங்கி கன்னத்தை தட்டினான்.

” கண்ணம்மா, கண்ணம்மா பாருடா கண்ணை திறடா, எனக்கு பயமா இருக்கு கண்ணை திறடா ….கண்ணம்மா கண்ணம்மா… ” அவளிடம் அசைவில்லை, தண்ணீர் தெளித்தும் பார்த்து விட்டான் அவள் கண் விழிப்பதாய் இல்லை, மீண்டும் அவளை கைகளில் தாங்கி, கன்னத்தை தட்டினான், அவளிடம் அசைவில்லை, கடல் அலைகளின் ஆர்ப்பரிக்கும் ஓசைக்கு எதிராக கத்தினான், ” கண்ணம்மா….” அவன் குரல் அந்த இரவை கிழித்து கொண்டு சென்றது.

நிகழ்காலம்

கடல் அலை வந்து நரேனின் பாதம் நனைய, நினைவுகளில் இருந்து மீண்டான்.

அன்றைய நாளின் நினைவு பெரும் கணத்தை நெஞ்சில் ஏற்ற, அவன் காற்சட்டையை மடித்து விட்டு, அலைகளில் கால் நனைய நடந்து சென்றான்.

உடன் அவன் கண்ணம்மா வருவது போல் ஒரு எண்ணம்.

நினைவுகள் அன்றைய நாளை நோக்கி பயணித்தது.

கயல் கண் விழிக்காமல் இருக்க, அவளை தூக்கி கொண்டு மருத்துவமனை சென்றான்.

கயலை பரிசோதித்து மருத்துவர் கூறும் வார்த்தைக்காக காத்திருந்தான்.

அவரும் கூறினார், அவன் வாழ்வை மாற்றும் விடயத்தை, அது அவன் கண்ணமாவிற்க்கு ரேத்த புற்று நோய் என்று, அதனை கேட்டவன் இடிந்து போனான்.

அடுத்து அவள் உயிரை காக்கும் முனைப்பில் இறங்கினான்.

அது அத்தனை சுலபமாய் இருக்கவில்லை, அவளிடம் பிரச்சனையை கூறுவதற்கே உயிரற்று போனான்.

அவள் எதும் கூறவில்லை, அவன் கன்னம் வருடி அழுத்தமாய் அவன் நெற்றியில் இதழ் பதித்து ” நா உன் கூட நூறு வருஷம் வாழனும் இந்தர், சந்தோசமா வாழனும்… ” என்றாள்.

” கண்டிப்பா மா, கண்டிப்பா நா உன்னை காபாத்துவேன்…”

அதன் பின் அவளுக்கான சிகிச்சைகள் ஆரம்பம் ஆகின.

ஆனால் அது அத்தனை இலகுவாய் இருக்கவில்லை, அதற்க்கு  மனதால் அத்தனை வலிகளை அனுபவித்தனர் இருவரும்.

அவள் வலியால் துடிக்க அதனை கண்டு அவன் உயிருடன் இறக்க, அதனை கண்டு இன்னும் அவள் வேதனை கொண்டாள்.

ஓர் இடத்தில் அமராதவள், உடல் சோர்வினால் படுக்கையிலே கிடந்தாள், அவன் எந்த தோள்கள் மென்மை என்றானோ அது இன்று வரண்டு அவள் கைகளை பிடிக்க முடியா நிலையில்.

அவள் கையில் நரம்பை நரம்பை தேடி தேடி குத்தி பல காயங்கள், அதில் வலியில் அவள் அழுந்ததை விட அவன் அழுந்த நாட்கள் அதிகம்.

சிகிச்சையின் விளைவால் அவள் தலை மொட்டை ஆனது.

அன்று அவள், அவள் நரேனை சந்திக்கவில்லை உண்மையில் சந்திக்கும் அளவு அவள் மனதில் திடம் இல்லை.

கயலுக்கு இடைவரை நன்கு நீண்டு வளர்ந்த கரும் கூந்தல்.

அதனை என்றும் அவள் முடிந்தது இல்லை, காதோரமாய் இரு முடி கற்றை எடுத்து சிறு கிளிபில் அடக்கி கொள்வாள், இது அவள் இந்தரின் பிடித்தம், ஆக அது அவள் விருப்பம் ஆனது.

எந்த கூந்தலை அவன் தினம் ரசித்தானோ அது இன்று அற்று முழுதாய் மாறி போய், நினைக்க நினைக்க கண்கள் குளம் கட்டியது பாவை அவளுக்கு.

அன்று இரவு நரேன் வந்தான், இல்லை இல்லை கயலின் இந்தர் வந்தான்.

அவன் கண்ணம்மா இருட்டில் இருந்தாள், அவளுக்கு அவளை காணவே பிடிக்கவில்லை, அவளுக்கான அந்த பிரத்தியேக அறைக்குள் நுழைந்தான் அவன்.

அந்த இருட்டில் அவன் வருவது அவள் கண்களுக்கு தெரிந்தது, கத்தினாள் ” போ இந்தர் இங்க இருந்து போ நா யாரையும் பார்க்க விரும்பல போ போ…போ….” 

அவன் எதும் பேசவில்லை அந்த இருட்டில் அவள் இடம் உணர்ந்து அவளிடம் சென்றான்.

அவள் தரையில் ஓர் மூலையில் கால்களை குறுக்கி அமர்ந்து இருந்தாள்.

அவள் அருகில் சென்றவன், ஒற்றை காலில் முழங்கால் இட்டு அமர்ந்து ஒற்றை விரலால் அவள் தாடை பிடித்து அவள் முகத்தை தூக்கினான்.

அவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள், விழி திறக்கவில்லை.

மென்மையாய் அவள் இமைகளில் இதழ் பதித்தவன், லைட்டை ஆன் செய்தான், அப்போதும் அவள் விழி திறக்கவில்லை, அவன் அணிந்து இருந்த தொப்பியை கலட்டினான், ” கண்ணம்மா கண்ணை திற…”

அவன் குரலில் என்ன கண்டாளோ, மெதுவாய் இமை பிரித்தாள், பிரித்தவள் கண்களோ அகல விரிந்தது, அந்த மாயவன் சிரித்தான், கண்கள் விழியே காதல் கசிய சிரித்தான்.

அவள் கண்ணில் இருந்து பொல பொலவென கண்ணீர் கொட்டியது.

அவனோ சிரித்து, அவள் தலையை தடவி, அவன் தலையையும் தடவி , ” கண்ணம்மா செம் ஹேர் ஸ்டைல் டா…எப்படி நல்லா இருக்கு இல்ல.” என்றான் சிரிப்புடன்.

அவன் கூறி முடித்து அடுத்த நொடி அவனை இறுக கட்டி கொண்டாள், அவள் கண்ணில் கண்ணீர், இப்போது அவன் கண்களிலும் கண்ணீர்.

அவள் முகம் நிமிர்த்தி  இதழ்களில் அழுந்த முத்தமிட்டான்.

இதோ அவர்களின் முதல் இதழ் முத்தம், இதழ் முத்தம் காமத்தின் வெளிப்பாடா இல்லவே இல்லை இதோ ஓர் தன்னலமற்ற எல்லையில்லா காதலின் வெளிப்பாடு.

அவர்கள் கண்ணில் வழிந்த கண்ணீர் அவர்கள் இதழ் நனைத்தது.

காதலின் ஆழம் என்ன அதை அறிந்தோர் யார், இவர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா…..

உயிர் தீண்டி செல்லும் இதழ் முத்தம், இன்று அவர்கள் கொண்ட உயிர் வலியை உணர்த்தி சென்றது.

அவள் இதழில் இருந்து பிரிந்து அவள் முகம் முழுதும் முத்தமிட்டவன், இறுதியாய் அவள் உச்சில் அழுத்தமாய் முத்தமிட்டான்.

கண்கள் கசிய அவனை கட்டி கொண்டாள்.

மாதங்கள் சென்றது, அவளின் ஆபரேஷன்க்கான நாளும் வந்தது.

அவளை உள்ளே அழைக்கும் முன் அவனிடம் பேச வேண்டும் என்றாள்.

அவன் அவள் முகம் காண, ” உன்னை பார்த்ததும் எதோ எனக்கான ஒன்னு என்கிட்ட வந்த சந்தோசம், உன்னை பார்த்தவுடனே பல கற்பனைகள், உன் கைய பிடிச்சிட்டு காலம் பூரா போகனும்னு ஒரு ஆசை, நீ என் லைஃப் லாங் வேணும்ன்னு தோணுது இதுக்கு பெயர் தான் காதல்னா, ஆமா நா உன்ன காதலிக்கிறேன், ஐ லவ் யூ இந்தர், நீ சொன்னது எனக்கும் அன்னைக்கு இது தான் தோணிச்சு , ஆனா அது சரியா தப்பான்னு புரியல அதான் பதில் சொல்லாம ஓடி ஓடி போனேன், ஆனா அந்த நாலு வருஷ பிரிவு நீ எவ்வளவு முக்கியம்னு எனக்கு புரிய வச்சிட்டு…”

அதற்க்கு மேல் அவள் பேச விடாமல் அவன் கையால் அவள் இதழ்களை முடியவன், ” எனக்கு நீ வேணும் டி, என்னை விட்டு போய்ருவன்னா இதெல்லாம் இப்போ சொல்லிட்டு இருக்க, எனக்கு எதுவும் வேணாம் டி நீ நீ என் கண்ணம்மா தான் எனக்கு வேணும், என் காலம் பூரா வேணும் நல்லா படியா என்கிட்ட திரும்பி வந்துடு டா…வந்து மீதிய சொல்லு உனக்காக உன் இந்தர் காத்துட்டு இருக்கேன்..” என கூறி அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு அவளை அனுப்பி வைத்தான்.

அவளுக்கு அங்கு ஆபரேஷன் நடக்க தன் வாழ்வின் கொடிய நொடிகளை நகர்த்தி கொண்டு இருந்தான் நரேன்.

மணி துளிகள் கரைந்து, டாக்டர் ஆபரேஷன் தியட்டரில் இருந்து வெளிப்பட்டார், அவன் ஆர்வமாய் அவர் முகம் காண அவர் தவிப்பாக சிரம் தாழ்த்தி கொண்டார்.

மனம் பதைபதைக்க அவரை தள்ளி விட்டு, பைத்தியம் பிடித்தவன் போல் அவளிடம் ஓடினான்.

சலனமின்றி படுத்திருந்தாள் அவன் கண்ணம்மா.

அவளிடம் சென்றான் அவள் முகத்தை ஒற்றை கையால் தாங்கி, மறு கையால் அவள் கன்னத்தில் தட்டினான், பலம் கொண்டு தட்டினான்.

அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது, ” கண்ணை திறடி கண்ணை திற, என்னை பாரு கண்ணம்மா உன் இந்தர் வந்து இருக்கேன் கண்ணை திறந்து பாருடி, எனக்கு பயமா இருக்கு பிளீஸ் டி கண்ணை திற, நீ இல்லன்னா நா செத்துருவென் டி பிளீஸ், உன்ன விட்டா எனக்குண்ணு யாரும் இல்ல கண்ணம்மா பிளீஸ் கண்ணை திற, ஹே தங்கம் என் கூட நீ விளையாடுற இல்ல, போதும் டா உன் இந்தருக்கு பயமா இருக்கு வாடா என்கிட்ட வந்துரு டா, நீ இல்லன்னா என்னால முடியாது டி, ஒன்ன இழந்தா இன்னொரு உறவை கடவுள் தருவார்ன்னு சொல்வியே எனக்குண்ணு இப்போ யார் இருக்கா நீ வேணும் டி நீயும் இல்லன்னா என்னால முடியாது டி….” என்று கதறினான்.

அவன் கண்களின் வழி வழிந்த கண்ணீர் , இமை தாண்டி கன்னத்தின் வழியே பயணித்து , அவள் இதழில் பட்டு தெறித்தது.

அவன் கண்களின் வழி வழிந்த கண்ணீர் , இமை தாண்டி கன்னத்தின் வழியே பயணித்து , அவள் இதழில் பட்டு தெறித்தது.

” அப்பா……”. தூரத்தில் இருந்து தேனாய் நரேனின் செவி அடைந்தது அந்த குரல்.

அதில் சிந்தனை கலைந்து நிகழ்காலம் திரும்பி, இதழ்கள் தன்னால் புன்னகை சூடி கொள்ள அவளை நோக்கி திரும்பி கைகளை நீட்டி அழைத்தான்.

ஓடி வந்து அவன் கைகளில் தஞ்சம் புகுந்த அந்த பத்து வயது பூச்செண்டை கைகளில் அள்ளி கொண்டான்.

அவன் கண் முன் திரை போல் அந்த தேவதை கை சேர்ந்த காட்சி விரிந்ததது.

அவன் கண்ணம்மாக்கு சிகிச்சை அளிக்கும் நாட்க்கள், அன்று ஒருநாள் அவன் மதியம் அவன் கண்ணம்மா அவள் அறையில் சென்று பார்க்க அங்கு அவளில்லை, மருத்துவமனை முழுதும் அவளை தேடினான், ஓர் தளத்தில் நடந்து வந்து கொண்டிருந்தாள், எங்கு சென்றாள் என வினவ, ஓர் அறையை கைகாட்டி கூறினாள், தன்னை போலவே யாருமற்ற ஓர் எட்டு வயது சிறுமி புற்று நோயால் இங்கு அனுமதிக்க பட்டு உள்ளதை, அன்று அவனிடம் ஓர் கோரிக்கை வைத்தாள் அவன் கண்ணம்மா.

அந்த குழந்தையின் மருத்துவ செலவை ஏற்பது மற்றும் அவளை தத்தெடுப்பது தான் அந்த கோரிக்கை.

அவனும் சந்தோசமாய் அதனை ஏற்றான்.

அதன் பின்னான நாட்க்கள், கயலுக்கு அந்த தேவதை உடன் தான் கழிந்தது.

சிகிச்சையின் பின் அவளை தத்தெடுக்கும் பணிகளும் செய்தான்.

அந்த நாட்களில் கயல் அவளை அம்மா என்று அழைக்க கூறி இருந்தாள்.

அந்த தேவதையும் மழையென அவள் மேல் அன்பை பொழியும் கயலை அம்மா என அழைக்க துவங்கி இருந்தாள்.

அவளின் இந்தரை இந்தரப்பா என அறிமுகப்படுத்த, அவளை அம்மா என்று அழைத்தவள், அவனை அப்பா என அழைக்க மறுத்தாள்.

கயலின் ஆபரேஷன்க்கு முன் தினம் தான் அவளின் ஆபரேஷன் ,அதில் அந்த தேவதை காப்பாற்ற பட்டாள், ஆனால் கண் விழிக்கவில்லை.

அவனின் கண்ணம்மா அவனை விட்டு பிரிந்த வேதனை தாளாது, அவளின் கன்னத்தை தட்டி, அரற்றி கொண்டிருந்த நரேனின் அழுகை அவள் இதழில் பட்டு தெறிக்கும் சமயம், செவிலியர் வந்து அவசரமாக அவனை அழைத்து சென்றாள்.

அத்தனை நேரம் அவன் கண்ணம்மா அன்றி வெறேதும் அறியாது இருந்தவன், ” அனு ” என்ற ஒற்றை வார்த்தையில், அவன் கண்ணம்மா நெற்றியில் ஆழ இதழ் பதித்து அவளை காண விரைந்தான்.

அந்த குட்டி தேவதை கண் விழித்திருந்தாள், அவன் அருகில் சென்று கைகளை பற்றி கொள்ளவும், மெதுவாக இமை பிரித்து, ” இந்தர்ப்பா…” என்றாள்.

இத்தனை நாள் அப்பா என்று அழைக்காதவள், இன்று அழைக்கிறாள் அதனை கேட்டு மனம் குளிர அவன் கண்ணம்மா இல்லை, மீண்டும் கண்களில் கண்ணீர் அருவியேன வழிந்தது.

அந்த நொடி அன்று அவன் கண்ணம்மா கூறிய வார்த்தைகள் அவன் காதில் ஒலித்தது.

” கடவுள் யாராவது நம்ம கிட்ட இருந்து எடுத்து கிட்டார்ன்னா, வாழ்க்கையில நமக்கு வேறு எதோ குடுக்க போறார்ன்னு அர்த்தம்…..”

செவி கேட்ட ஒலியில், உண்மை உரைக்க கண்களை இறுக மூடி கொண்டான்.

நிகழ்காலம்…..

அவன் கைகளில் இருந்து இறங்கி, அலைகளில் விளையாட துவங்கினாள், அவனின் குட்டி கண்ணம்மா.

” அப்பா வாங்க…” என்று அவனையும் கைபிடித்து இழுத்து கொண்டு அலைகளில் விளையாடினாள்.

அவனும் சந்தோசமாய் அவன் குழந்தை உடன் விளையாடினான்.

நெஞ்செங்கும் நீ யவ்வனா

என் கண்ணீர் நீ யவ்வனா

என் சுவாசம் நீ யவ்வனா

திரன திரனனா ஆ ஆ

மெய் தானா சொல் யவ்வனா

ஓர் வார்த்தை சொல் யவ்வனா

நான் வாழ்வேன் சொல் யவ்வனா

என் மீதி வாழ்வொன்றை

என் கையில் தந்தாயோ

காதல், ஆம் கயலின் இந்தர் இன்னும் காதலிக்கிறான், அவனின் கண்ணம்மாவை காதலிக்கிறான், அவள் நினைவுகளை காதலிக்கிறான், அந்த காதல் அது அவளுக்கு மட்டும், அவன் கண்ணாம்மாவிற்க்கு மட்டும் சொந்தம்.

அவளுடன் அவன் உடலால் வாழவில்லை, உள்ளத்தால் வாழ்கிறான் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.

” ஹும்ம் அவ்வளவு தான் இந்தர்…” என கூறி அவள் கையில் இருந்த புத்தகத்தை மூடி வைத்தாள் திருமதி. நரேந்தர்…..

” எனக்கு இந்த கதையே பிடிக்கல டி, என்னடி இது எதுக்கு என் கயலை இப்போ கொன்ன…” என்று  கட்டிலில் சாய்ந்து கொண்டு ஒற்றை கையால் தலை தாங்கி வினவினான் கயலின் கணவன் இந்தர்.

” கதை தானப்பா…விடு”

” அப்படியெல்லாம் விட முடியாது, என் கயல் இல்லாம நா வாழவே மாட்டேன் நீ என்ன எழுதி இருக்க…”

” இந்தர், என் அழகு புருஷா…இந்த கதை என் இந்தரோட எல்லையில்லா காதலை காட்ரதுக்கு ஆக எழுதினது, சும்மா தோணிச்சு நா இல்லன்னா நீ எப்படி இருப்பேன்னு, உண்மையா இந்த கதைய எழுதும் போது அவள்ளவு கஷ்டமா இருந்தது, அழுது வடிஞ்சு தான் எழுதினேன் அதான் இவ்வளவு சின்ன கதை….”

” போடி எனக்கு பிடிக்கவே இல்ல, என் கயலை என்கிட்ட இருந்து பிரிச்சிட்ட…இதுல  உன் பொண்ணுக்கு கெஸ்ட் ரோல் வேற, நீ இல்லாம நா இருக்க மாட்டேன் டி….”

” எனக்கு தெரியும் டா, நா இல்லன்னா நீ இல்லன்னு, ஒருவேளை நம்ம ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து ஒன்னா இல்லன்னா எப்போ பார்த்து இருப்போம் இப்படி யோசிச்சு தான் எழுதினேன் போதுமா…”

அவன் எதோ கேக்க வாய் திறக்கவும், கை எடுத்து கும்பிட்டு, ” அப்பா சாமி போதும் விட்டுரு எதோ தெரியா தனம்மா எழுதிட்டேன், … விட்டிரு இதுக்கு மேல என்னால முடியாது….” என்று கூறி விட்டு கட்டிலில் இருந்து எழுந்து சென்றாள்.

அவள் எழுந்து போகவும் , அவனும் எழுந்து ஒரே தாவலில் அவளை எட்டி பிடித்து, பின்னிருந்து அணைத்து கொண்டான்.

அவள் காதோரமாய் குனிந்து, ” அது என்னடி கண்ணம்மா….நா உன்னை கண்மணின்னு தான கூப்பிடுவேன்…”

இடை வளைத்த அவன் கைகளை தன் கைகளால் மேலும் அழுத்தி கொண்டவள், தலையை பின்னால் சாய்த்து அவன் தோளில் தலை வைத்து, மோகனமாய் புன்னகைத்து, ” எனக்கு நீ கண்ணாம்மான்னு கூப்படணும்ன்னு ஆசை, ஆனா நீ கண்மனின்னு தான கூப்டுவ அதான் கதையில ஆவது அப்படி இருக்கட்டும்ன்னு எழுதினேன்….” என கூறினாள்.

அப்போது ” அம்மா ” என அழைத்து கொண்டே அந்த அறைக்குள் நுழைந்தாள் அனு.

அந்த குரலில் இருவரும் சட்டென்று விலகி நின்றனர்.

அம்மாவை அழைத்து கொண்டு வந்தவள், தந்தையை கண்டு அவன் கைக்குள் தஞ்சம் புகுந்து கொண்டாள்.

அவளை தூக்கி கொண்டவன், ” என் அனு செல்லத்துக்கு என்ன வேணுமாம்..” என்றான்.

” அப்பா….வாப்பா விளையாடலாம்.”

” வாரேன் டா, நீங்க போய் விளையாடுங்க அப்பா வாரேன்…” 

” ம்ம்..” என தலை அசைத்து, அவன் கைகளில் இருந்து இறங்கினாள்.

அவள் அறையை விட்டு செல்ல போகவும், ” உன் அப்பா கூட பேசுறதுக்கு என்னை எதுக்கு டி கூப்ட்டிட்டு வந்த” என வினவினாள் அவளின் தாய்.

நாடியில் ஒற்றை விரல் தட்டி யோசிப்பது போல் பாவனை செய்து, ” ஆன் மறந்து போச்சு நியாபகம் வரும் போது சொல்றேன்..” என கூறி விட்டு ஓடவும்.

கயல் ஓடி சென்று அவளை பிடித்து, அவள் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டு, ” இப்போ போடி..” என்றாள்.

அந்த குட்டி தேவதை, அவள் முத்தமிட்ட இடத்தை துடைத்து, இதழ் சுழித்து கழுத்தை திருப்பி கொண்டு சென்றது.

அவளை கண்டு கயலும் இதழ் சுழித்து, ” ரொம்ப தான் போடி..” என்றாள்.

இவர்களின் சண்டையை சுவற்றில் சாய்ந்து கை கட்டி ரசித்தான் அந்த கள்வன்.

அவள் சென்றதும், திரும்பி அவனை முறைத்து ” என்ன பார்வை…” என்று கூறி ஒற்றை புருவம் ஏற்றி இறக்கினாள்.

அவன் நின்ற நிலை மாறாது நின்று, உதடு குவித்து காற்றில் பறக்கும் முத்தம் ஒன்றை பறக்க விட்டான்.

அவன் செய்கையில் இதழ் சுழித்து, சிவந்த முகத்தை மறுபுறம் திருப்பி கொண்டாள்.

அந்த சுவற்றில் மாட்ட பட்டிருந்த அவர்கள் வாழ்வின் நிழல்கள், புகைப்படமாக இருப்பதை ரசித்தாள்.

ஒன்றில், அவளின் இந்தர் அவள் கை பிடித்து அழைத்து செல்கிறான், இருவரும் சிறுவர்கள்.

மற்றொன்று கோவிலில், பீச், என எல்லா இடங்களிலும் அந்த அன்றில் பறவைகளின் நிழற்படங்கள் இருந்தது, அது அவர்களின் சிறு வயது முதல் இன்று வரையான அனைத்தும் இருந்தது.

அவற்றை சிறு சிரிப்புடன் பார்த்து இருந்தவளை பின் சென்று அணைத்து கொண்டான் அவள் இந்தர்.

பின்னால் தலை சாய்த்து அவன் தோள்களில் சாய்ந்து, ” இந்தர்..” என அழைத்தாள், அதில் தான் எத்தனை காதல்.

அவள் கன்னத்தோடு கன்னம் இழைந்து, ” சொல்லு டி என் ஆசை கண்மணி” என்றான்.

” பச் போடா, எனக்கு உன் மேல கொள்ளை கொள்ளையா காதல் வருது, ஏண்டா என்னை இப்படி ஆக்கிட்ட…உனக்கு தெரியுமா உன் பெயரை எழுதும் போதே அவள்ளவு காதல், திரும்ப திரும்ப எழுதினேன், அது என் இந்தரொட காதல், அதுக்கு எல்லையே இல்ல, அந்த காதலுக்கு சொந்தக்காரி நா நா மட்டும் தான் அப்படி என்கிற கர்வம் அதான் அந்த கதை, உன் காதல் தான்டா அது, எனக்கு தெரியும் எனக்காக நீ என்ன வேணும்னாலும் செய்வன்னு, உன்னோட காதல் ஆழத்தை காட்ரதுக்கு தான் இது, உன் கயலை கதையில கொன்னதுக்கு சாரி…”

அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு, ” சாரி இப்படியா கண்மணி சொல்வாங்க, இரு உனக்கு எப்படி சாரி சொல்றதுன்னு சொல்லி தாரேன்…” என்றான் குறும்பாய்.

மெலிதாய் சிரித்து கொண்டு அந்த புகைப்படங்களை ரசித்து இருந்தவள், எதோ தோன்றியவளாக சட்டென்று அவன் புறம் திரும்பினாள்.

” என்ன டி..”

” டாக்டர் சார் என்ன இன்னைக்கு மிக பெரிய ஆபரேஷனை சக்ஸஸ் ஃபுல்லா முடிச்சிட்ட போல…”

அதில் மெலிதாக சிரித்து, ஆம் என தலை அசைத்தான், அவன் முன் உச்சி முடியை கலைத்து விட்டு…

உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்

உயிருள்ள நானோ என்னாகுவேன்

என பாடினாள்.

அவளை சுவற்றுடன் சாய்த்து அவள் நெற்றியுடன் நெற்றி முட்டி,

உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி 

என பாடி, அவள் இதழில் ஓவியம் வரைய துவங்கினான் அவளின் இந்தர்.

அவர்களுக்கு அருகில், அவன் அவள் கழுத்தில் மாங்கல்யம் சூட்ட, அவள் இமை தாண்டும் ஒரு துளி சந்தோச கண்ணீர், மின்னுவது போல் ஓர் நிழற்படம், அவர்களின் முத்தத்தை கண்டு கொண்டு இருந்தது.

இது காதல் வார்த்தைகளால் விவரிக்க முடியா காதல், எல்லையில்லா காதல், வார்த்தைகளால் வடிக்க முடியா காதல், தன்னலமற்ற இரு உள்ளங்களின் இணையில்லா காதல், இது அவளின் காதல் அவளுக்கான அவள் இந்தரின் காதல், அவள் உயிரில் கலந்து உணர்வில் உறைந்து இருக்கும் காதல்.

*********முற்றும்**********

– சக்தி –

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Enthusiast

Written by Shakthi

ஆனந்த கவிதை அவள் 3

ஆனந்த கவிதை அவள் 4