in ,

12 – 🎶 மூங்கில் குழலான மாயமென்ன

ஆர்யவை கண்டதும் இன்னதென்று பிரித்தறிய இயலாத கோபம் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது சமர்திறமறவனுக்கு. ஆர்யவுக்கோ அவன் மானஸ்வியை அதட்டியது எரிச்சலை கிளப்ப, “மானஸ்… கிளம்பலாமா?” என்று அவளிடம் வினவியதில், அவள் பேசுவதற்கு கூட வாய்ப்பளிக்காமல், சமர் தான், “இப்ப நீ பேசாம படுக்கப்போறியா இல்லையா?” என்றான் கடுமையாக.

அதற்கு மேல் பொறுக்க முடியாத ஆர்யவ், “என்னடா ரொம்ப ஓவரா மிரட்டுற? உன்னால தான் அவளுக்கு இப்ப மறுபடியும் பெயின் வந்துருக்கு. தாலி கட்டிட்டா நீ என்ன வேணா பண்ணுவியா? இல்ல அவளுக்கு கேட்க யாரும் இல்லன்னு நினைச்சியா?” என்று நேரடியாக சமரை தாக்க, அவனை அழுத்தமாக  சில நொடிகள் பார்த்தவன்,

“ஓ! எவனோ ஒருத்தன் உன் பிரெண்டுக்கு தாலி கட்டி கூட்டிட்டு போனதும், எப்படியோ போவட்டும்ன்னு விட்டுட்டு போனப்போ வராத அக்கறை… இப்ப மட்டும் என்ன திடீர்ன்னு?” என்று எகத்தாளமாக கேள்வியெழுப்பியதில் ஆர்யவ் தான் உறைந்தான்.

அதோடு விடாமல் சமர், “அது சரி, என்னால அவளுக்கு இந்த நோவு வந்துச்சா? சரிதான்…! அப்போ இதுக்கு முன்னால ஒழுங்கா வைத்தியம் பார்த்துருக்க வேண்டியது யாரு?” என்றான் இதழில் சிறிதான வளைவுடன்.

அதில் இறுகி நின்ற ஆர்யவின் மனதில் ஏகப்பட்ட காயங்கள் துரத்த, அவன் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் வைத்திருந்தாலும், ஏனோ அதனை கூற தோன்றாமலேயே அவனை உணர்ச்சிகளற்று நோக்க, சமருக்கு தான் தான் எப்படி உணர்கிறோம் என்றே தெரியவில்லை.

இடைப்பட்ட நாட்களில், மானஸ்வியின் பெற்றோர் உயிருடன் இல்லை என்பதையும், ஆர்யவின் குடும்பம் மட்டுமே அவளுக்கு சொந்தம் என்றும் அவன் அறிந்தே இருந்தான். அதன் பிறகே, அவளை சீண்டுவதை விட்டு விட்டு, தனியாக வளர்ந்த பெண் அதனால் தான் நல்லது எது கேட்டது எது என தெரியாமல் இருக்கிறாள் என்று எண்ணிக்கொண்டு, அமைதி காத்தவனுக்கு நில விஷயத்தில் மட்டும் அவளை மன்னிக்க இயலவில்லை. ஆனால், அந்த கோபத்தை அவள் உடல் நலத்தில் காட்டவும் அவன் விரும்பவில்லை.

ஆர்யவ் வந்ததும் ஏனென்றே அறியாமல் சமருக்கு சிறிய பொறாமையை தட்டி விட்டாலும், அதன் பின் ஆர்யவ் பேசியதில் அவனை காயப்படுத்த வேண்டும் என்றே சீண்டியவனுக்கு இக்கேள்வி எல்லாம் மனதில் குடைந்திடவே செய்தது.

அதனை கேட்டு விட்ட பிறகு அவனின் பாவனைகள் சமரை சிந்திக்க வைக்க, இருந்தும் தன் நிலையில் இருந்து விலகாமல், மானஸ்வியை பார்த்தவன், அவள் இவனை பார்வையால் சுட்டுக்கொண்டிருப்பதை கண்டு, “உன்ன நான் படுக்க சொன்னேன்… காதுல விழுந்துச்சா இல்லையா?” என்றான் கண்டிப்புடன்.

அவளுக்கு அருகிலேயே மாத்திரைகள் இருந்ததை அப்போது தான் கவனித்த ஆர்யவ் இருவரையும் பாராமாலேயே வெளியில் சென்று விட, மானஸ்வி சமரை பிடி பிடியென பிடித்து விட்டாள்.

“உன் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்க காட்டான்? உன்ன நான் ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு போக சொன்னேனா? நீயா திடீர்னு ஓவரா அக்கறை எடுக்குற மாதிரி எடுத்துட்டு, இத்தனை வருஷமா எனக்கு எல்லாமா கூட இருந்தவனை எப்படி நீ அப்படி கேட்கலாம்?  ஏற்கனவே அவனை அடிச்சதுக்கு நான் உன்னை உண்டு இல்லைன்னு ஆக்கிருக்கணும் சமர். இன்னொரு தடவை அவனை ஏதாவது சொன்ன… அப்பறம் நான் என்ன வேணா செய்வேன்” என்று கோபத்துடன் சுள்ளென பேசியவளை கண்கள் சுருங்க முறைத்தான் சமர்.  

பின் அவளே, “நீ தான சொன்ன, என் சம்பந்தப்பட்ட யாரும் இங்க வரக்கூடாது பிளா பிளான்னு அதான், நான் அவனை வர வேண்டாம்ன்னு சொன்னேன். இப்போ கூட நான் மெஸேஜ் பண்ணதும் உடனே கிளம்பி வந்துட்டான். அவனை மட்டும் சொல்ற, உன் வீட்டு பொண்ணையும் எவனோ ஒருத்தன் தாலி கட்டிட்டான்னு நீங்க மட்டும் அனுப்பலையா?? அவளை போய் யாராவது பார்த்தீங்களா என்ன? எனக்கு தான் யாரும் இல்ல சோ பார்க்க வரல… அவளுக்கு இத்தனை பேர் இருக்கீங்கள்ல?” என்றாள் அவன் விழிகளை சாடியபடி.

சமரோ சில நிமிடம் கழித்து, பாயில் சுருண்டு அமர்ந்திருந்தவளின் எதிரில் முட்டி இட்டவன், ஆழ்ந்த குரலில் “உன் பிசினெஸ் சம்பந்தப்பட்ட யாரும் தான் வரக்கூடாதுன்னு சொன்னேனே தவிர, உன் சம்பந்தப்பட்டவங்க யாரும் வரக்கூடாதுன்னு நான் சொல்லவே இல்லை… அப்படியே நான் சொன்னாலும், இவ்ளோ செல்வாக்கு இருக்குறவ, ஏன் என் பேச்சை கேட்கணும்…? ஏன் இங்க இருக்கனும்?” என்று விழி உயர்த்தி வினவினான்.

அவனின் இக்கேள்வியில் மானஸ்வியின் கருவிழிகள் சிறிது சிறிதாக உணர்ச்சிகளை இழந்து கொண்டிருப்பதை உணர்ந்து, அவள் முகத்தருகில் சென்று “என் நிலத்தை எழுதி வாங்கவா? இல்ல என் நெல்லை நாசமாக்கவா?” எனக் கேட்டான் கூர்மையாக பார்த்து.

அதில் சட்டென உணர்ச்சிகளை மீட்டவள், ஏளனமாக அவனை நோக்கி, “குட் கெஸ்!” என திமிராக கூறிட, அவளை இன்னும் அழுத்தத்துடன் நோக்கியவன், “எண்ணியதை பெற வாழ்த்துகள்!” என்றான் இளக்காரமாக.

அதற்கு அவளோ லேசான புன்னகையுடன், “நன்றிகள் பல!” என்று கேலியாக தலையை குனிந்து நன்றி உரைத்தவள், போர்வையை முகம் வரை போர்த்தி விட்டு கண்ணை மூடிக்கொள்ள, சமர் அவளின் போர்வையை எடுத்து விட்டான்.

“ப்ச்… என்னடா இப்போ உனக்கு? இவ்ளோ நேரம் படு படுன்னு உயிரை வாங்குன? இப்ப படுத்தா இம்சையை குடுக்குற?” என்று பல்லைக்கடித்தவளிடம், “நீ கேட்ட கேள்விக்கெல்லாம் நான் இன்னும் பதில் சொல்லி முடிக்கல. என் வீட்டு பொண்ணு அங்க பாதுகாப்பா இருக்கான்னு தெரிஞ்ச நாள தான் நான் அமைதியா இருக்கேன். உன் பிரெண்ட் மட்டும் அவளை கஷ்டப்படுத்துனான்னு தெரிஞ்சுது… கல்யாணம் பண்ணி வைச்ச உன்னையையும், கல்யாணம் பண்ண அவனையும் துண்டு துண்டா வெட்டி என் வயலுக்கு உரமா போட்டுடுவேன்…” என்றவன், போர்வையை அவள் முகத்தில் எறிந்து விட்டு வெளியில் சென்றான்.

அவன் சென்ற திசையை சில நொடிகள் சுவாரஸ்யமாக பார்த்தவள், “சரியான காட்டான்…!” என முணுமுணுத்து விட்டு சற்று நேரம் கண்ணயர்ந்து விட்டாள். ஆனால் கண் விழித்ததும் மீண்டும் வலியினால் அவள் அவதிப்பட, சீதாவும் பாண்டியம்மாளும் அவளை காண அவள் அறைக்கு வந்து விட்டனர்.

பாண்டியம்மாள் தான், “ஏத்தா, கல்லை தின்னாலும் செரிக்கர வயசு… இந்த வயசுல வல்லு வதக்குன்னு நல்லா சாப்புடுறது இல்ல?” என்று நொடித்து கொள்ள, சீதா தட்டில் உணவை அவளிடம் கொடுத்து “சாப்பிடு மா!” என்றார். சமர் எதுவும் பேசாமல் சேரில் அமர்ந்து செய்தித்தாள் ஒன்றை படித்துக் கொண்டிருக்க,

அவளோ, “எனக்கு வேணாம்… அதான் கல்ல சாப்பிட்டாலும் செரிக்கர வயசு தான, அப்போ அந்த கல்லும் அதுவே செரிச்சுடும்…” என்றாள் சற்று குறும்புடன்.

பாண்டியம்மாளோ, அவள் குமட்டிலேயே நங்கென்று குத்தி, “வாய் சடவாள் மட்டும் வருது நல்லா… ராத்திரியில கொல்ல பக்கம் போக மட்டும் பயம் வருதாக்கும்…” என்றிட, வலித்த கன்னத்தை அவரை முறைத்து கொண்டே தடவியவள் ‘கிழவி, என்னையவா அடிக்கிற?’ என எண்ணிக்கொண்டு, “எனக்கு பயம்ன்னு யாரு சொன்னா? உங்களை டிஸ்டர்ட்ப் பண்ண வேணாம்ன்னு தான் நான் வெளிய வரல” என்றாள் தோளை குலுக்கி கொண்டு.

“எது?” என்று அவர் புரியாமல் பார்க்க, அவளோ “ஆமா… நீங்க தான் நைட்ல யாருக்கும் தெரியாமல் கிட்சன் ல போய் சக்கரை சாப்டீங்களே…! அந்த நேரத்துல வெளிய வந்து, நான் உங்களை போட்டு குடுத்து, நீங்க என் மேல கடுப்பாகி, அப்பறம் போட்டு தள்ளிட்டீங்கன்னா அதான் நான் வரல…” என ஒவ்வொரு வார்த்தையாக உச்சரித்து, சிறப்பாக பாண்டியம்மாளை சமரிடம் போட்டுக் கொடுத்தவளை, ‘அடி நாசமா போனவளே!’ என்று கொடூரமாக முறைத்தார் பாண்டியம்மாள்.

ஆனால், அதை விட தீப்பார்வை சமரிடம் இருந்து வந்ததில், மிரண்ட பாண்டியம்மாள், “மருமவளே… உம்ம மாமனார் வர்ற நேரமாச்சு. நான் போய் பாக்குறேன்!” என சீதாவிடம் கூறியவர் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியில் செல்ல, சீதா உதட்டுக்குள் புன்னகைத்து கொண்டார்.

“தொப்பி! தொப்பி!” என வாசலை பார்த்து கேலியாக சிரித்த மானஸ்வியை இப்போது சமர் முறைக்க, சீதா தான், “மொதோ சாப்புடுத்தா…” என்றவர், “கொல்லைப்பக்கம் போவ பயமா இருந்தா என்ன உசுப்பிருக்க வேண்டியது தான! இதுனால எம்புட்டு நோவு பாரு!” என்று அக்கறையாக மொழிந்தார்.

“எனக்கு பயம்லாம் இல்ல…” என்று மறுப்பாக கூற வந்தவளை தடுத்த சீதா, “அத்தைய ஏய்ச்ச மாதிரி என்ன ஏய்க்க முடியாதுத்தா! எழிலு கூட ஏதாவது பேய் படத்தை பார்த்துட்டு இப்டி தான் பயப்படும். நான் தான் கூட்டிட்டு போவேன் எந்நேரமா இருந்தாலும். அதுனால நீ சங்கடப்படாம என்ன உசுப்பு. சரியா?” என அவளை உணர்ந்தவர் போல் பேசினார்.

சின்னதாக புன்னகைத்தது “ம்ம்…” என்று தலையை மட்டும் ஆட்டியவள், “நான் அப்பறமா சாப்ட்டுக்குறேன்” என்றாள் அமைதியாக.

அவரோ, “இப்பயே மதியம் ஆவ போவுது. அப்பறம் மத்தியானம் சாப்பாடு எப்ப சாப்பிட… இப்ப கொஞ்சம் சாப்பிட்ட தான் தெம்பா இருக்கும்…” என்று அவளை சாப்பிட வைக்க முயற்சி எடுத்து கொண்டிருந்தவருக்கு மறுப்பாய் வேண்டாம் என்றிட, அவர் ஏதோ பேசும் முன் “மா…” என்ற சமரின் குரலில் அவர் திரும்பினார்.

“நீங்க வச்சுட்டு போங்க…” என்று மட்டும் கூறியதில், சீதா எதுவும் பேசாமல் தட்டையும் நீரையும் வைத்து விட்டு செல்ல, சேரில் இருந்து எழுந்தவன், மானஸ்வியின் அருகில் வந்து நின்றான்.

ஆறடி உயரத்தில் இருப்பவனை நின்றாலே நிமிர்ந்து தான் பார்க்க வேண்டும். இப்போது மானஸ்வி தரையில் அமர்ந்திருந்ததில், இன்னும் அவன் உயரமாக தெரிய, சில நொடிகள் தலையை தூக்கி என்ன வென புருவத்தை உயர்த்தி கேள்வியாக வினவியவளை அவனும் சில நொடிகள் முறைத்தான்.

பின் அவளே, “காட்டான், காட்டு மரம் மாதிரி வளர்ந்து இப்படி நின்னுகிட்டே இருக்க… உன்ன நிமிர்ந்து பார்த்து கழுத்துல கல்லு வந்துரும் போல…!” என வறுத்தவளை ‘அடங்க மாட்டடி நீ!’ என்பது போல் பார்த்தவன், அமர்ந்து “சாப்டு” என்றான் பொறுமையாக.

“எனக்கு வேணாம்னு தனி தனியா சொல்லனுமா எல்லாருக்கும்? எனக்கு பசிக்கும் போது சாப்ட்டுக்குவேன்” என்று குரலை உயர்த்தியவளிடம் “உன் இஷ்ட மானாக்கு சாப்பிட இதென்ன ஹோட்டலா? இங்க எப்போ எல்லாரும் சாப்புட்ருற நேரமோ அப்ப தான் சாப்பிடணும்…” என கர்ஜித்தான்.

அவளோ கடுப்பாக, “என் இஷ்ட மானாவுக்கு தான் சாப்பிடுவேன்… உன் வேலைய பாரு!” என்றிட, அவனோ வெறியாகி விட்டான்.

பல்லைக்கடித்தபடியே, மானஸ்வியின் கன்னத்தை பிடித்து வலிக்கும் படி கிள்ளி, அவளை முன்னும் பின்னும் ஆட்டிய சமர், “சாப்பாடு கொண்டு வந்து குடுத்தா, அதை அவமதிக்காம சாப்பிடணும். எப்பவும் சாப்பாட்டுக்காக நம்ம தான் காத்திருக்கணும். சாப்பாட்டை காக்க வைக்க கூடாது. பசிக்குதோ இல்லையோ, உன்ன மனுசியா மதிச்சு சாப்பாடு குடுத்தா, வேணாம் நோணாம்ன்னு சொல்லாம மூடிக்கிட்டு திங்கணும்…!” என்று அவன் பேச பேச அவளின் அலறல் சத்தம் தான் கேட்டது.

“ஆஆ… டேய் காட்டான் கன்னத்தை விடுடா… டேய் அடி வாங்கிட்டு போய்டுவ… எடுடா கைய…!” என்று அவள் கத்த கத்த காதில் வாங்காதவன், “நீ தனியா இருக்குறப்பா சாப்பிடு சாப்பிடாம கூட போ. ஆனால் என் அம்மா வந்து குடுத்தா ஒடனே சாப்பிடணும். இல்ல… கன்னத்தை தனியா பிச்சு எரிஞ்சுருவேன்” என்று மேலும் நன்றாக கிள்ளியவன், கன்னம் சிவந்து நிற்பதை கண்டவுடனே தான் கையை எடுத்தான்.    

அவன் கையை எடுத்ததும் தான் தாமதம், வாரி சுருட்டி எழுந்தவள் தன்னவனின் தோள்களில் தன் மென்கரங்களால் படபட வென அடித்து, “நீ அடிச்சா நானும் அடிப்பேன். கை நீட்டுற வேல எல்லாம் வச்சுக்காத சொல்லிட்டேன்” என்றாள் அவன் கிள்ளியதில் தன்னிச்சையாக சிவந்திருந்த விழிகளுடன்.

அவள் அடிகள் எல்லாம் தன்னை பாதிக்கவே என்ற ரீதியில், இரு கைகளையும் தட்டி விட்டவன், தட்டை எடுத்து அவள் கையில் திணித்து “ம்ம்…” என்றான் விழி மொழியில்.

‘வீம்பு புடிச்சவன்…!’ என மானசீகமாக அவனை திட்டியபடி இட்லியை பிய்த்து வாயில் வைத்தவளுக்கு, தான் ஏன் அவனுக்கு இந்த அளவு அடங்கி போகிறோம் என்றே புரியவில்லை. ஆனாலும், ஏதோ ஒரு இதமான உணர்வு மனதை தாக்குவதையும் உணர்ந்தவள், சில நிமிடம் அமைதியாக சாப்பிட்டாள்.

பின் திடீரென, “ஹோட்டல்ல இருந்து வாங்கிட்டு வந்ததா சாப்பாடு?” என்று தலையை நிமிர்த்தி சமரை பார்த்து வினவியவளை, அவன் முறைப்புடன் பார்த்து, “வேலையத்து உனக்கு இட்லி சுட்டு கொண்டு வந்தா நீ இதையும் கேட்ப இன்னுமும் கேட்ப… உன்னையெல்லாம் வீட்டு வேல அத்தனையையும் செய்ய விட்டுருக்கணும்…” என்று அவன் பல்லவி பாட ஆரம்பித்ததில், ‘ஒரு டவுட்டு கேட்டதுக்கு இவன் ஏன் கொந்தளிக்கிறான்…’ என அவனை மேலும் கீழும் பார்த்தவள் தட்டில் புதைந்திட, ஏற்கனவே சாப்பிட்ட ருசி தெரிந்ததில் தான் இக்கேள்வியை கேட்டாள்.

சாப்பிட்டு முடித்து தண்ணீரை குடிக்கும் வரை, அவள் முன் அமர்ந்திருந்தவன் பின் எழுந்து செல்ல, மானஸ்வி தான், “டேய்… காட்டான்! ஒரு சின்ன திருத்தம்!” என அவனை அழைக்க, அவன் என்னவென பார்த்தான்.

“இட்லிய சுட முடியாது. அவிக்க தான் முடியும்…” என வெகு தீவிரமாக விளக்கம் கொடுத்தவளை, கீழ்க்கண்ணால் சமர் முறைக்க, ‘பார்வைய பாரு!’ என்று முனகி கொண்டவள் மீண்டும் நித்திரா தேவியிடம் தஞ்சம் அடைந்தாள்.

அது வரை, அவள் ‘ஹோட்டல் சாப்பாடா?’ என கேட்டதில் எழுந்த புன்னகையை அடக்கி இருந்தவன் அப்போது அதனை சிறியதாக வெளிப்படுத்தி விட்டு, ‘சரியான அரக்கி! வாயை தொறந்தா மூட மாட்டா போல! இவ எதுல சேர்த்தின்னே தெரியல…’ என்று அவளை பார்வையால் வருடியபடி பெருமூச்சுடன் பார்த்தவன் எவ்வளவு நேரம் அப்படியே நின்றான் என்பதை அவனே அறிவான்.

சமர்திறமறவன் கேட்ட கேள்விகள் ஆர்யவின் ஆழ்மனதில் புதைந்திருந்த நிகழ்வுகளையெல்லாம் தூசு தட்டி எழுப்பி விட்டிருக்க, மானஸ்வியின் தாய் உமாவுடன் எடுத்த சிறு வயது புகைப்படங்களை எல்லாம் போனில் இலக்கற்று பார்த்துக்கொண்டிருந்தவனின் கரங்கள் காற்றிலேயே நின்றது.

பல மாதங்களுக்கு முன் எடுத்திருந்த அப்புகைப்படம் அவனுள் ஒரு மாபெரும் வலியை தோற்றுவிக்க, அதில் அவனுக்கும் மானஸ்விக்கும் இடையில் புன்னகை முகத்துடன் நின்றிருந்த ரிக்ஷிதாவை கண்ணில் நிறைந்த நீருடன் பார்த்தான். இருவரை விட இரு வயது தான் சிறியவள். ஆனால் எப்பேர்ப்பட்ட மாற்றங்களை வாழ்க்கையில் நிகழ்த்தி விட்டு சென்று விட்டாள் என பழைய எண்ணங்களின் மூழ்கி போனவன், அருகில் நிழலாடியதில் தான் தன்னிலைக்கு வந்தான்.

வீட்டினுள் வரும் போதே தன்னவனின் முகம் கசங்கி இருப்பதை கண்ட எழில்மதி, கோபத்தை இழுத்து பிடித்தாலும் அதனை தற்போது காட்ட மனமற்று அவனருகில் சென்றாள். அவளை கண்டதும், போனை லாக் செய்து விட்டு கண்ணை துடைத்துக் கொள்ள, அவன் லாக் செய்யும் முன்னமே அப்புகைப்படத்தை அவள் பார்த்து விட்டாள்.

ஆனால் எதுவும் கேளாமல் நின்றவளிடம், குரலில் உற்சாகத்தை வர வைத்த ஆர்யவ் “ஹே! பேபி! வாட் அ பிளசன்ட் சர்ப்ரைஸ்! எப்போவும் நான் வீட்டுக்கு வந்தா ரூம்ல போய் இருந்துப்ப. இன்னைக்கு என்ன அதிசயமா இருக்கு” என விழி விரித்து வியப்பாய் கேட்பது போல் கேட்டவனை ஒரு நொடி ஆழமாக பார்த்தவள்,

“இல்ல, அத்தை வெளிய போயிருக்காக… நீங்க வந்ததும் உங்களுக்கு குடிக்க ஏதாவது வேணுமான்னு கேட்க சொன்னாக அதான் வந்தேன்!” என்று பாதி உண்மையுமாக பாதி பொய்யுமாக உரைத்தவளிடம் “ஹான் நம்பிட்டேன் எழில் பேபி!” என்று அவள் பெயரை அழுத்தமாக உச்சரித்து கூறினான் ஆர்யவ். அவன் பெயரை கூறியதில் செங்கொழுந்தாக சிவந்து நின்றவள்,

அவனின் கண்ணோரம் சுருங்கிய கேலி புன்னகையில் அவனை முறைத்து, “எதுக்கு இப்ப சிரிக்கிறீக? போனா போகுதுன்னு வந்து கேட்டேன்ல என்ன சொல்லணும்!” என்று சிலுப்பிக்கொண்டு சிலிர்த்த கன்னங்களை அவனிடம் காட்டாமல் அடுக்களையில் சென்று நின்றவளை கண்டு மேலும் புன்னகைத்தவன், முந்தைய நாள் இரவு நடந்ததை மீண்டும் நினைத்து பார்த்தான்.

எழில்மதி கூறிய பிளாஷ்பேக்கிலும், சொன்ன காரணத்திலும் சுவற்றில் தன்னை தானே முட்டிக்கொண்டவனை விழி அகல பார்த்தவள், “ஏங்க… என்ன ஆச்சு?” என்று அவனை தடுக்க போனாள்.

அவனோ, “பாலன்ஸ் இல்லைன்றதுலாம் ஒரு காரணமாடி! நீ சொன்ன காரணத்துக்கு நான் சீன சுவருல போய் முட்டுனாலும் பத்தாது… இதுல நடக்காத கல்யாணத்தை நிறுத்தி… ஓ மை காட்!” என்று  மீண்டும் அவன் முட்டியதில், பொங்கிய சிரிப்பை அடக்கிய எழில்மதி, “எல்லாம் உங்களால தான். இனிமேலாவது யாராவது ஏதாவது சொல்ல வந்தா முழுசா கேட்டுட்டு பேசுங்க. இல்லன்னா இப்படி தான் சுவத்துல முட்டணும்” என்று நக்கலடிக்க, அவனோ “ஏய் ஐ போன் பேபி! உங்கிட்ட இப்ப பிரீ அட்வைஸ் கேட்டேனா?” என்றான் முறைப்பாக.

அதில் எழில் தான், “எப்போ பாரு என்ன ஐ போன் பேபின்னு கூப்புடுறீக, இல்லைன்னா பேபின்னு கூப்புடுறீக! நான் என்ன சின்ன பொண்ணா?” என்று சிணுங்களாக ஆரம்பித்தவள், அவனின் முறைப்பு ரசனையாக மாறியதில் தலையை தாழ்த்திக் கொள்ள,

அவன், “ஏன் ஐபோன் பேபி உனக்கு இந்த பேர் பிடிக்கலையா?” எனக் கேட்டான் மென்மையுடன்.

அவளோ, அதற்கு பதில் கூறாமல், அவன் பேசியதை மனதில் வைத்து கொண்டு, “அதான் நான் என் மாமாவையே கல்யாணம் பண்ணிருக்காலம்ன்னு சொன்னீகள்ள! நீங்க அப்படி ஒன்னும் கூப்பிடவேணாம்” என்று முகம் சுருங்கியவளை எப்படி சமன் செய்ய என்று புரியாமல், “பேபி” என பாவமாக அழைத்தான்.

“வேணாம்… அப்டி கூப்பிடாதீக!” என்று சற்று கோபமாகவே உதட்டைக்கடித்தவளை, “வேற எப்படிடி கூப்பிட? நான் தெரியாம சொல்லிட்டேன் பேபி! அதுக்காக என்ன பழி வாங்காத!” என்றதும், “பழி வாங்குறது எப்படின்னு உங்களுக்கும் உங்க பிரெண்டுக்கும் தான் தெரியும் எங்களுக்கு தெரியாது…” என்றாள் வீம்பாக.

அதில் சற்றே கடுப்பாகி, “பேபி!” என எச்சரித்தவன், பின் தயக்கமாக “ஆமா, உன் பேர் என்ன?” என்றான் கேள்வியாக. அக்கேள்வியில் அவள் தான் திகைத்து, “என்ன? என் பேர் என்னவா? அதுவே உங்களுக்கு தெரியாதா?” என நெற்றிக்கண்ணை திறந்தவள், கோபமாக நடக்க போக,

அவளை பிடித்து தன் கை வளைவுக்குள் வைத்தவன், “ஆமாடி, பேர் தெரியாது. உன்னை பத்தி எதுவுமே தெரியாது. ஆனாலும் உன்ன தான் லவ் பண்றேன். உன் மேல தான் பைத்தியமா இருக்கேன். பேர் சொல்லு இன்னும் கொஞ்சம் பைத்தியம் ஆகிடுறேன்…” என்று அவளை தன்னுள் இறுக்கியவனை விட்டு விலக இயலாமல், அவனின் பேச்சில் இழந்த மனதை மீட்க இயலாமல் அதே நேரம், ஏதோ ஒரு கோப உணர்வை விட்டு வெளியில் வரவும் முடியாமல் தவித்த எழில்மதி,” விடுங்க மொதோ!” என்றாள் நடுங்கிய குரலில்.

“நீ முதல்ல பேர் சொல்லு நான் விடுறேன்…” என்று கட்டளையிட்டவனுக்கு பதிலையே அமைதியாக தந்தவளின் கீழுதட்டை அழுத்தி பிடித்தவன், “நல்லா கேட்டுக்கோ பேபி, நீ பேர் சொல்ற வரை இந்த லிப்ஸ், என் கஸ்டடி ல தான் இருக்கும். அப்பறம் நீ என்னை குறை சொல்ல கூடாது” என எச்சரித்தவன், அவளின் இதழ்களை நோக்கி குனிய, அதில் திகைத்தவள், “சொல்றேன் சொல்றேன்…” என்றாள் குளறியபடி.

உடனே, அவள் உதட்டில் இருந்து கையை எடுத்தவன் பார்வையை மட்டும் அகற்றாமல், “சொல்லு பேபி!” என்றிட, அவள் அவனின் அருகாமையில் வார்த்தை எழாமல் நெளிந்து நின்றதில், “நீ சொல்ல மாட்ட” என்று மீண்டும் அவன் இதழ் நோக்கி குனிந்ததில், “எழில்மதி” என்று வேகமாக பெயரை கூறினாள்.

அவள் பெயரை கேட்டு, உதட்டை மடித்து புன்னகைத்தவன், “எழில்…” என்று ரசித்து கூறியபடி அவள் இடையின் அளவை விரல்களால் அளந்தவன், “சரியா தான் பேர் வைச்சுருக்காங்க. எழில்ன்னு!” என கண்ணடித்து விட்டு, பட்டும் படாமல் அவள் இதழில் இதழ் பதித்து விட்டு, கீழிறங்கி சென்று விட, அவள் தான் அவன் தீண்டலில் உருகி சிதைந்திருந்தாள்.

ஆனால், சிறிது நேரமே அம்மயக்கம். மீண்டும், ஒரு கோப உணர்வை மனதில் ஏற்றியவள், முருங்கை மரத்திற்கே ஏறி விட்டாள்.

ஊரே அமைதியின் சின்னமாக இருளடைந்து இருந்தது. அவரவர் உறக்கத்திற்குள் தங்களை புகுத்தி கொண்டு, வேறொரு உலகம் செல்ல, இங்கு மானஸ்வி தான் உறக்கம் வராமல் விழித்திருந்தாள். வயிற்று வலியோடு, பாத்ரூம் செல்ல வேண்டும் என்ற நிர்பந்தம் வேறு இருந்தது. அவ்வீட்டின் கொல்லைப்புறம், சுற்றி மரங்கள் இருந்ததில் இருள் சூழ்ந்து காணப்படும். அதனாலேயே இரவு நேரத்தில், எழும்பாமல் உறங்கி விடுவாள். அப்படியே இன்றும் உறங்கி விடுவோம் என கண்ணை மூடி உறங்க முயன்றாள்.

வெகு நேரம் விழித்திருந்த சமர், அப்போது தான் உறங்கி இருக்க, சட்டென ஏதோ தோன்ற விழித்தவன், மானஸ்வியின் புறம் ஒரு முறை பார்த்து, அவள் லேசாக நெளிந்து கொண்டிருப்பதை கண்டு, “மானஸ்வி முழிச்சுருக்கியா?” எனக் கேட்டான் கேள்வியாக.

அதில் அவன் புறம் திரும்பியவள், “ம்ம்…” என்க, “பாத்ரூம் போகணுமா?” என மறுகேள்வி கேட்டவனிடம், “ம்ம்ம்” என்று வேகமாக மேலும் கீழும் தலையாட்டினாள். அவள் பாவனையில் ஏதோ மாதிரி உணர்ந்தவன், “காலையில தான் படிச்சு படிச்சு சொன்னாக அம்மா. பாத்ரூம் போகணும்னா அவகளை உசுப்ப சொல்லி. அறிவே இல்லையா… என்னையவாச்சு உசுப்பிருக்கலாம்ல…” என்று கண்டிப்பாக பேச ஆரம்பத்தவனின் வார்த்தைகள் மென்மையாகவே வர, அவள் எழுந்து நின்றதில் அவளுடன் சென்றான்.

அவளோ நடந்து கொண்டே, “நான் உன் அம்மா ரூம்ல போய் பார்த்தேன். அவங்க நல்லா தூங்கிட்டு இருந்தாங்க அதான் எழுப்பல” என்று கூறியவள் கொல்லைப்புறம் வந்ததும் வேகமாக குளியலறைக்குள் நுழைந்தாள்.

 சமர் தான், அவள் கடைசியாக கூறிய வாசகத்தில் அவளை பற்றியே சிந்திக்க தொடங்கினான். ஆனால் எங்கு தொடங்கினாலும் அவனுக்கு கிடைத்த பதில் பூஜ்யமாகவே இருந்தது. சுழியத்தின் தொடக்கம் தன்னவளே என்று அவன் அறியும் நாள் என்றோ!

மூங்கில் குழலாகும்!

மேகா!

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 3 சராசரி: 4.7]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Megavani

Story MakerContent AuthorYears Of Membership

வைரத்தாரகை 11

அன்பின் அரசனே…. 13