in , , , ,

வைரத்தாரகை 11

அத்தியாயம்-11

ரிப்போர்ட்டுகளை முழுவதும் படித்து பார்த்தவளுக்கு ஆச்சரியம். மீண்டும் ஒருமுறை ரிஷிதா அதை வாசித்தாள். அன்று தலைமை மருத்துவர் வளர்மதி‌ விடுமுறை எடுத்திருந்ததால், அவரது நம்பிக்கைக்கு பாத்திரமான,ரிஷிதாவிடம் ரிப்போர்டுகளை சேகரித்து அவருக்கு அலைபேசியில் தகவல் தெரிவிக்க சொல்லியிருக்க, முதலில் இருந்தது வைஜெயந்தியின் இரத்த மாதிரிகளின் ஆய்வு முடிவுகள். 

“இந்த அளவுக்கா பிரச்சனை இருக்கும்?” வியப்பாக தான் இருந்தது அவளுக்கு. இந்தளவிற்கு ஆபத்தென்றால்,

“அப்போ மிஸ்டர்.வேலுவிற்கு எல்லா உண்மையும் தெரியும்” நினைக்கையிலேயே வியர்த்து கொட்ட, அதை வைத்து விட்டாள். மற்றைய ஆய்வு அறிக்கைகளையும் சரி பார்த்தவள் வளர்மதிக்கு‌ அழைப்பெடுக்க, அலைபேசியை எடுக்க, ஏற்கனவே கேசி அழைத்து கொண்டிருந்தான். “சைலன்டில் போட்டிருந்ததால் தெரியவில்லை போலும்” நினைத்து கொண்டே அவள் அழைப்பை ஏற்க,

“என்ன குடாக் ரிப்போர்ட் என்ன சொல்லுது?” தூக்கம் இன்னும் கலையாத குரலில் நீலகேசி கேட்க, 

“அண்ணன் தம்பி இரண்டு பேருக்குமே ஃபோன் பண்ணா எப்படி பேசனுன்னு தெரியாதா?” ஒரு கடி கடித்தாள் ரிஷிதா. இவன் மட்டுமில்லை நிறைய பேர் இப்படித்தான்.

“ஏன் குடாக் ரிப்போர்ட் ஏதும் சைனீஸ்ல டைப் பண்ணிருக்கா? இந்த கடி கடிக்கிற?” கேசியின் கேலியில்‌ சிரிப்பு வந்தாலும், அதை காட்டி கொள்ளாமல், 

“ஏன் உன் ரகசிய காதலி சைனாக்காரியா நீலா?!” ஒரு கொட்டு வைத்தவள்,

“ஆமா.. அந்த வெள்ளை இங்க்கு எதுக்கு எனக்கு ஃபோன் பண்ணி பேசுறான்? எனக்கும் அவனுக்கும் எப்பவும் முட்டிக்கும்னு தான் உனக்கு தெரியும்ல?” தரையிலிருந்து எகிறி எகிறி பேசும் அவளது தோற்றம் கண்முன் விரிய, சத்தமாக புன்னகைத்தான் கேசி.

“இங்க பாரு குடாக். உங்க பஞ்சாயத்து என்னைக்குமே தீருகிற விஷயமல்ல. அதனால நீயே அதை பேசி முடி. இப்ப ரிப்போர்ட்டுக்கு வா” காரியத்திலேயே அவன் கண்ணாய் இருக்க, 

“உங்களுக்கு உங்க வேலைதான்டா முக்கியம்” பதிலுக்கு கொதித்தாள் அவளும்.

“என்ன வேலைன்னு சொல்லு குடாக்.. செய்ய வச்சுட்டா போச்சு” கேசி சொன்ன பதிலோடு இன்னொருவனின் குரலும் மனதில் எதிரொலித்தது. 

ஆனால் அவன் இதே பேச்சை‌ நேற்று சற்று மாற்றி பேசினான்.

“என்ன வேலைன்னு சொல்லுடி குட்டச்சி ஒரு நிமிஷத்துல செஞ்சு முடிக்கிறேன்” ஷஷாங்கின் குரல் மனதில் எதிரொலித்தது. 

நேற்று எடுத்தவுடன் சண்டை போட்டாலும், “ரிஷூ நல்லாருக்கியா?” ஆழ்ந்து ஒலித்த அவனது குரலில் தனக்கென ஒரு தனி சொந்தம் உருவானதைப்போல் உணர்ந்தாள் ரிஷிதா.

“நலம் விசாரிக்கிற நேரமா இது?” இருந்தும் அதை காட்டிக்கொள்ளாது, பட்டும் படாமலேயே பதில் சொன்னாள்.

“வேணும்னா அப்பாயின்மென்ட் கொடுங்க டாக்டரம்மா. நீங்க சொல்ற நேரம் வந்து நலம் விசாரிக்கிறேன்” என்றவனின் பதிலில் சிரிப்பு வர, உடன் ஆத்மிகாவும் சிரிப்பதை பார்த்தவள், வேகமாக அலைபேசியை லவுட்ஸ்பீக்கரில் இருந்து எடுத்துவிட்டு காதில் வைத்தாள். 

‘ஏய்!’ ஆது அவளிடம் கைநீட்டி ஃபோனை பறிக்க முயற்சிக்க, 

“ஓடிப் போடி” அவளை விரட்டி விட்டாள் ரிஷிதா.

ஆத்மிகா சென்றுவிட,” அதெல்லாம் முடியாது. எனக்கு நிறைய வேலை இருக்கு. நீ எதுக்கு கால் பண்ண? விஷயத்தை சொல்லு” வெகுநாளைக்கு பிறகு உற்சாகத்துள்ளல் காட்டும் மனதினை‌ அதட்டியவாறு அவள் விஷயத்தை மட்டும் பேசினாள்.

“என்னவேலைன்னு சொல்லுடி குட்டச்சி. ஒருநிமிஷத்துல முடிச்சிடறேன்” என,

“விஷயத்தை பேசுறியா? இல்லை வைக்கவா?” ரிஷிதா செல்லக் கோபம் காட்ட,

“சரிங்க.. டாக்டரம்மா.. ராஜஸ்தான் கிளம்ப தயாராகிட்டாங்களான்னு கேட்க தான் கால் பண்ணேன்?” ஷஷி கேட்கவும்‌ மறுபுறம் சிறு அமைதி. 

“ரிஷூ… ” ஷஷி‌ மீண்டும் அழைக்க,

” ம்ம்.. அதான் உங்களுக்கு இப்ப அந்த வைஜெயந்தி மேடம் கூட வார்றாங்களே?! பின்னே நான் எதுக்கு?” ரிஷிதாவின் பதிலில் குழப்பமானான் ஷஷி. 

“என்ன சொல்றடி‌ குட்டச்சி? பேசுறத‌ தெளிவா பேசு?” கேட்டும் விட்டான். 

“இதுல குழம்ப என்ன இருக்கு? ஆரம்பத்துல இருந்தே இந்த திட்டம் வேணாங்கறதை நான் சொல்லிட்டேன். உண்மையை அவகிட்ட சொல்லிட்டு அடுத்து நடக்கிறதை பார்க்கலாம்னு சொன்னா நீலன் கேட்க மாட்டேங்கிறான்.நீயாவது அவனுக்கு சொல்லலாம் இல்லை?”அவளின் ஆதங்கத்தில் சில விஷயங்கள் அவனுக்கு தெளிவாக, 

“நான் சொல்லி கேட்கறவரா அண்ணன்?” உற்சாகத்துடன் கேட்டவனை நினைத்து தலையில் அடித்து கொண்டாள் ரிஷூ.

“இதை இவ்வளவு சந்தோஷமா சொல்லனுமாடா வெள்ளை இங்கு” பேச்சிலும் அவளது அதிருப்தியை காட்ட, 

“சரி நான் வேணும்னா முயற்சி பண்றேன்.அதுக்கு பதிலாக நான் சொல்றதை செய்யனும்” ஒப்பந்தம் பேச முயற்சிக்க,

“அதெல்லாம் முடியாது போங்கடா. உன் பாடு உன் அண்ணன் பாடு” என்றவள் வைக்கப்போக,

“ஹே..ஹே..குட்டச்சி..” கிட்டதட்ட அவன் கத்தியது அருகில் படுத்திருந்த ஆத்மிகாவின் காதுகளுக்கே கேட்டது.

“படுத்தாத ஷஷி.. ” தன்னை மீறி அவள் சிறுவயதில் அழைப்பதை போல் அழைக்க, ஷஷாங்கின் முகத்தில் ஆயிரம் கோடி சூர்யன்களின் பிரகாசம்.

“சரி.. இனி டெய்லி கால் பண்ணுவேன். இதே டைம்கு பண்ணட்டுமா?” மனதின் ஆசையை மறைமுகமாக வெளிப்படுத்த, ரிஷிதாவோ பயந்து விட்டாள். 

“ஹேய்..‌உனக்கு ஏதும் பெரிய வியாதி வந்துடுச்சா மேன்? எதா இருந்தாலும் இப்பவே சொல்லிடு. அதான் டெய்லி பேசனும்னு சொல்றியா?” அக்கறையுடன் பேச, தலையில் அடித்து கொண்டான் ஷஷாங்க்.

“இந்த குட்டச்சி படிக்கும் போது மட்டும், மூளைக்கு லைட்ட ஆன் பண்ணிப்பா போல?!” மனதிற்குள் திட்டியவன்,

“ஆமா.. வியாதி தான்.அதுவும் நாலரை அடில இருக்குற நீதான்” அதை வார்த்தைகளிலும் வெளிப்படுத்தி விட்டான்.

“எதேய் நான் வியாதியா?உன் கண்ணுக்கு அப்படிதான்டா தெரியும்? என்னை டென்ஷன் பண்றதுக்குன்னே கால் பண்ணியா? ஏற்கனவே நமக்குள்ள பல வாய்க்கால் தகராறு இருக்கு? என் ரஸமலாய திருடி சாப்பிட்டவன் தானடா நீ?” எகிறிக் கொண்டு சண்டையிடும் தோழியை சிரித்துக்கொண்டே பார்த்திருந்தாள் ஆத்மிகா.‌

“நீ மட்டும் என்னடி? என் ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி நான் பெட்ல சுச்சூ போனேன்னு சொல்லி என்னை அசிங்கப்படுத்தினியா இல்லையா?” தங்கள் வயதை மறந்து ஷஷாங்கும் சிறுபிள்ளையாய் சண்டையிட,

“உண்மையதான்டா சொன்னேன். ஆன்ட்டி தான் எனக்கு சொன்னாங்க. நீ என்னைக்கு தான் உண்மைய ஒத்துட்டுருந்துருக்க?” ஆதங்கத்துடன் அவள் பேச,

“இப்ப எல்லா உண்மையும் ஒத்துக்கறேன். என்கூட பேசுடி குட்டச்சி” திடீரென அவன் மெல்லொளிக்கு மாறியதில் மயிர் கூச்செறிந்தது அவளுக்கு. 

“ஒண்ணும் வேணாம். நீங்கள்ளாம் பெரிய பணக்காரங்க.. உங்களுக்கு பிடிச்ச மாதிரியெல்லாம் என்னால நடக்க முடியாது. 

அதுவும் இப்ப துணைக்கு சேர்த்திருக்கிங்களே அந்த வைஜெயந்தி? பார்வைலயே ஒருத்தரை மட்டம் தட்டுற அவளை எல்லாம் என்னால சகிச்சுக்க முடியாது” வைஜெயந்தியையும் சேர்த்து பொறிந்து தள்ளினாள் ரிஷிதா.

அவளது கோபத்தை ரசித்து சிரித்தவன் “சரி.மிச்சத்தை நாளைக்கு பேசலாம். நாளைக்கு இதே நேரம் கால் பண்ணுவேன். நீ எடுக்கற?” என்றவன் வைத்தும் விட்டான்.

ஏனோ ஒருபுறம் ஆத்திரமாக வந்தாலும், சிறுவயது நினைவுகள் புதைந்த சந்தோஷங்களையும் மேலெழும்ப வைத்து அவள் உதட்டில் புன்னகையையும் உறைய வைத்தது. 

“ஹே.. குடாக்.. லைன்ல தான் இருக்கியா?” கேசி மறுமுனையில் கத்திக்கொண்டிருக்க நினைவுகளிலிருந்து மீண்டிருந்தாள் ரிஷிதா.

“ஹான்.. அதெல்லாம் இருக்கேன்” என்றவள்,

“வியாதிக்கு கூட உன் ஆளை பிடிக்கலை. அவ்வளவு மோசமான இரத்தம் அவளுடையது” என, 

“சைனா ரத்தம் அப்படிதான் குடாக் இருக்கும்” அவள் பேசியதை அவளுக்கே திருப்பிக்கொடுத்தவனை ரசிக்க தான் தோன்றியது மனம். 

“இருக்கட்டும்.. இருக்கட்டும்” என்றவள் வைக்கப்போக,

“நம்ம ப்ளான் தெரியும்ல குடாக். மூட்டை‌ முடிச்செல்லாம் கட்டிகிட்டு நீ பரிசோதனை பண்ண நினைக்கிற மருந்தெல்லாம் அள்ளி தூக்கிட்டு, ராஜஸ்தான் கிளம்ப ரெடியா இரு” என்றவனின் பேச்சில் ஆத்திரமாக வந்தது அவளுக்கு. 

“இங்க பாரு நீலா.. நான் முதல்லயே உன்னை இந்த வேலை பண்ண வேணாம்னு சொல்லிட்டேன். இதுக்கு நான் உடந்தையாக இருக்க மாட்டேன்” என்றவளின் பயப்பட்டு பேசுவது, அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. 

“உன்னை எப்படி சம்மதிக்க வைக்கனுன்னு எனக்கு தெரியும். ரிப்போர்ட்டை எனக்கு மெயில் பண்ணிடு. வளர்மதி மேம்கு நான் தகவல் தெரிவிச்சுக்கிறேன்” சொல்லியவன்,பேச்சு முடிந்ததென வைத்தும் விட்டான்.

“திமிரு புடிச்சவனுங்க!” திட்டத்தான் முடிந்தது அவளால். அந்த ஆத்திரத்தை யாரிடமாவது கொட்ட வேண்டும் போலிருக்க, அவளின் அடுத்த அழைப்பு சென்றது ஷிவானிக்கு. 

அன்றைய காலை ஏனோ பலவித குழப்பங்களை சுமந்த காலையாக தான் விடிந்தது வைஜெயந்திக்கு. 

“தன்னை கொடுமைபடுத்தும் ஒருவனை எப்படி தனக்கு பிடிக்கும்?” என்ற சிந்தனைதான் அவளுக்கு இரவு முழுவதும். 

கருவிலுள்ள மழலை அதன் முகம் பார்க்க முடியுமா? உள்ளே புதைந்திருக்கும் நீலகேசியின் மீதான ஈர்ப்பும், அபிப்பிராயமும் அப்படித்தான் இருந்தது வைஜெயந்திக்கு. 

அன்றைய நாளிற்கான முக்கியத்துவமும் அதில் சேர,

“இத்தனை நாள் கையில் வளர்த்த தொழிலை தூக்கி கொடுத்து தன்னுடைய அடையாளத்தையே இழப்பது போன்ற சம்பவத்திற்கு தான் எப்படி துணைபோக?!” பரிதவித்தது மனம். 

எத்தகைய சூழ்நிலையும் சமாளித்தவள், அன்னை மீதான எதிர்பார்ப்பை கூட தனக்குத்தானே அனைத்தேயும் ஏற்படுத்தி கொண்டு சுயம்புவாய் உயர்ந்து நின்றவளுக்கு, அஸ்திவாரம் மண்தரையில் புதைவது போன்ற பிரம்மை ஏற்பட, தலையை உலுக்கிக் கொண்டவள், தயாராகி கீழே இறங்கினாள்.

மகளின் வரவிற்காக வேலுவும் காத்திருக்க,” போலாம் டாட். நம்ம லாயரையும் வரச்சொல்லிருக்கேன். டாக்குமென்ட்ஸ் உங்ககிட்ட தானே டாட் இருக்கு” என,

“எல்லாம் சரியாதான் இருக்கு குட்டிமா. இப்ப நம்ம போர்ட்ல இருக்குற வினய்சந்திரன் பேசினாரு”கூடுதல் விவரத்தையும் சேர்த்து சொல்ல, யோசனைக்கு சென்றது வைஜெயந்தியின் முகம்‌.

“என்ன சொன்னார் டாட்?” என,

“வாழ்த்துக்கள் சொன்னாரு. நீங்க நினைச்ச மாதிரியே உங்களுக்கு மாப்பிள்ளை கிடைச்சாச்சு. எங்களையும் அப்பப்ப கவனிச்சுக்கங்க. வர்ற வெள்ளிக்கிழமைக்குள்ள ரகசியமா ரெஜிஸ்டர் மேரேஜ் கூட பண்ண போறாங்களாம். ரொம்ப நெருங்கிய வட்டத்தில் இருந்து தகவல் வந்ததுன்னு சொன்னாரு குட்டிமா. உனக்கு இந்த விஷயம் தெரியுமா?” வேலுவின் முகத்தில் இன்னதென்று சொல்ல முடியாத பாவனை.

பேசிக்கொண்டே இருவரும் கீழே இறங்கி வந்திருக்க, தன்னையறியாது வைஜெயந்தியின் பார்வை புடவையை தூக்கி எறிந்த இடத்திற்கு தொட்டு மீள, அங்கு புடவை இல்லை.

“ரோஷினிஈஈ…” வேலைக்காரப்பெண்ணை அழைக்க, வேகமாக ஓடிவந்தாள் அவள்.

“இங்க யாரு இன்னைக்கு சுத்தம் பண்ணது?” என்று கேட்க,

“நான்தான் மேம். இங்க கிடந்த புடவையை இன்னைக்கு காலைலயே ஜார்ஜ் சார் வந்து வாங்கிட்டு போயிட்டாரு. அவங்க ஆளுங்க வந்து மைக் ரிமூவ் பண்ணிட்டும் போனாங்க. உங்க ரூமிற்கும், சார்‌ ரூமிற்கு மட்டும் நீங்க கிளம்பியதும் தகவல் சொல்ல சொன்னாங்க” ஒப்பித்து முடித்து விட்டாள் அவள். 

நடந்து ரோஷினியிடம் வந்தவள், அவளை ஓங்கி ஓர் அறை அமைந்திருந்தாள்‌.

“உனக்கு நாங்க முதலாளியா? இல்லை அவங்களா? மைன்ட் இட். இனி இந்த வீட்டில் தூசி நகர்ந்தா கூட எனக்கு தெரியாம நடக்கக்கூடாது” ஒற்றை விரல் நீட்டிய வைஜெயந்தியின் எச்சரிக்கையில் ரோஷினியின் கண்களில் பொங்கி வந்த அழுகை தானாக நின்றது.

அவளை அழுத்தமாய் ஓர் பார்வை பார்த்தவள்,” போலாம் டாட்” முன்னே சென்று தனது காரை எடுக்க, யோசனையுடன் மகளை பின்தொடர்ந்தார் வேலு.

“காயம் நல்லா ஆறிடுச்சு நீலா?” என்ற ரிஷிதா,காய்ந்து தோல் மேவியிருந்த அவனது இடது மார்பு காயத்தின் தோலை எடுத்துவிட்டவள், தனது கையில் இருந்த மருத்துவ உபகரணத்தை சுடுதண்ணீரில் போட்டுவிட்டாள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு பைக்கிலிருந்து கீழே விழுந்தவன் கடைசி நொடியில் சுதாரித்து தப்பியதில் காயத்தோடு தப்பினான். சற்று ஆழமான காயம் தான்.

“ஈரம் படக்கூடாதுன்னு அவ்வளவு சொல்லியும். என்ன பண்ணி வச்சுருக்க? சுத்தி தோல் தொற்று ஏற்பட்டிருக்கு. இந்த ஆயின்மென்ட் மறக்காம போடனும்” அவன் முகத்தை பார்க்காது அவன் கைகளில் கொடுத்தாள்.

படுக்கையிலிருந்து எழுந்தவன்,” சரி.. நாளைக்கு நைட் ஃப்ளைட் லக்கேஜ் ரெடி பண்ணிக்கோ” என்று கூறி, அவள் முகம் பார்க்க, கைகளில் இருந்த க்ளவுசை நிதானமாக கழற்றியவள்,

“நான் எப்ப உன்கூட வரேன்னு சொன்னே? அதான் உன் காதலி இருக்காளே அவளை கூட்டிப்போ” என்றவள் விரிந்திருந்த முடியை ஒதுக்கிவிட, அவளது கோர்ட்டில் அவளது தலைமுடி உதிரிந்திருந்தது. 

“ச்ச.. முடி வேற ரொம்ப கொட்டுது?” என்றவள் சலித்துக்கொள்ள,

“மூளையொண்ணும் கொட்டிடலையே?” என்றவனின் பேச்சில் சிரித்து விட்டாள்.

“நீ மாறவேயில்லை நீலா?” ரிஷிதா அவன் கையில் அடிக்க, அடித்த அவளது கையை பிடித்தவன்,

“நாளைக்கு ஜார்ஜை பிக்கப் பண்ண அனுப்புறேன்” என்று கூற,

“ஐ செட் நோ.. அன்ட் இட்ஸ் நோ ஒன்லி” ரிஷிதா அவனது கையை தட்டிவிட்டு கதவை நோக்கி நடந்தாள். 

“சரட்” என்ற மெல்லிய சத்தம் அவளது காதுகளில் கேட்க, திரும்பி பார்த்தவள் முறைத்துக் கொண்டு நின்றாள். 

சற்று நேரத்திற்கு முன் அவள் அவனது உதிர்ந்த தோல் நீக்க உபயோகப்படுத்திய கத்தியால் மீண்டும் அவனது இடது மார்பில் ஆழமாக கீறியிருந்தான் கேய்சி. ரத்தம் வழிந்து கொண்டிருக்க,

“காயம் இன்னும் ஆறலை. வந்து ட்ரீட்மெண்ட் பாரு. நீ சம்மதம் சொல்ற வரைக்கும் ஆறாது” என்றவன் அவளது கண்களையே பார்க்க, இயந்திரமாக அவனருகே வந்து காயத்திற்கு மருந்திட்டவள், 

“நாளைக்கு நான் வர்றேன்” கதவை ஓங்கி அடித்துவிட்டு சென்றுவிட்டாள்.

தனது ஓய்வறைக்கு சென்று கைகளில் முகம் புதைத்து படுத்திருந்தவளை, தொட்டு எழுப்பியது கேசியின் கரங்கள். 

இன்னும் இரத்தம் வழியதான் நின்று கொண்டிருந்தான்.

“வலிக்குதுடி குடாக்” என்றவனின் பேச்சில் அவனது கையை பிடித்து இழுத்து கொண்டு நடந்தாள் ரிஷிதா. 

அவன் முகத்தை பார்க்காது மீண்டும் காயத்திற்கு மருந்திட,” சரி அடுத்த வாரம் கிளம்பலாமா?” குரலின் மென்மையில் தானாக அவன் முகத்திற்கு உயர்ந்தது ரிஷிதாவின் கண்கள். 

“விடாக்கண்டன் நீ நீலா” என்றவள் தன்னை மீறி சிரிக்க, 

“சரி அப்ப வைஜெயந்தி கூடவே நீயும் கிளம்பு. இன்னும் ஒருவாரம் கழிச்சே கிளம்புவோம்” என, வைஜெயந்தியின் பேரை எடுத்ததுமே அவள் முகம் சுருங்க, கேசியின் அலைபேசி ஒலித்தது. வைஜெயந்தி தான் அழைத்து கொண்டிருந்தாள்.

“திங்க் ஆஃப் தி டெவில்..” ரிஷிதா முணுமுணுக்க,

“டெவில் இல்லை குடாக்.‌டயன் என் மனம் கவர்ந்த பெண் ராட்சசி” ரசித்து சொன்னவன், அவளின் அழைப்பை ஏற்காது காலை கட் செய்தான் நீலகேசி.

தாரகை தடமிடுவாள்🖤🖤🖤…. 

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 10 சராசரி: 4.3]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Ruthivenkat

 

About Author:

 

                  வாசகர்களுக்கு வணக்கம். நான் ருதி வெங்கட். இது எனது புனைப்பெயர். உண்மையான பெயர் உதயா வெங்கட்ரமேஷ். முதுகலை பட்டதாரி, இல்லத்தரசி. கதை படிப்பது மிகவும் பிடித்த விஷயம். அதுவே கதை எழுத ஊக்கசக்தியாக அமைந்து விட்டது. போட்டிக்கதையின் மூலம் எழுத்துப்பயணமும் தொடங்கியது. இதுவரை நான்கு கதைகள் எழுதி முடித்துள்ளேன். முதல்கதை புத்தகமாக  AD பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது. முகநூலில் ஓரளவு வாசகர்களுக்கு முகமறிந்த நபர்தான் . எனது கதைகளை தொடர்ந்து படிக்க Ruthivenkat (ருதிவெங்கட்)என்கிற எனது பெயரை FOLLOW செய்யுங்கள். கதைகளை பற்றிய அறிவிப்புகள் உங்களுக்கு வந்துவிடும்.

               வாசகர்களின் ஆதரவிலும், உற்சாகமூட்டலிலும்தான் கடந்த ஒருவருடத்தில் நான்கு கதைகளை வேகமாக முடிக்க முடிந்தது. உங்களது ஆதரவுகளை தொடர்ந்து வழங்குங்கள். 

 

        நன்றி

Story MakerContent AuthorYears Of Membership

மௌனத்தின் மனசாட்சி -6

12 – 🎶 மூங்கில் குழலான மாயமென்ன