அத்தியாயம் 6
அரசுவுக்கும், கிருஷ்ணா, விஷ்ணு இருவருக்கும் ஐந்து வயது வித்தியாசங்கள். ஆதலால் அவன் எப்போதும் அவர்களிடத்தில் ஒரு பெரிய மனிதன் தோரணையோடு நடந்து கொள்வான்.
அவன் ப்ளஸ் டூ படுத்துக் கொண்டிருக்க, ஆரபி, சுரபி ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தனர். கௌதம் விஷ்ணு ஏழாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தனர்.
படிப்பில் விஷ்ணுவும், கிருஷ்ணாவும் சிறந்து விளங்கினாலும் ஊமையாய் சேட்டை இருவரும் பண்ணிவிட்டு ஆரபி, சுரபியை மாட்டி விடுவர்.
அன்றும் அது மாதிரிதான் தோட்டத்தில் எல்லோருமாக விளையாண்டு கொண்டே இருந்தனர். விஷ்ணுவும் கிருஷ்ணாவும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று சொல்ல ஆரபியும், சுரபியும் வேண்டாம் ஷட்டில் கார்க் விளையாடலாம் என்று கூறினர்
“டேய், அது பொம்பள பசங்க விளையாடும் விளையாட்டு. நாங்கள் அது விளையாட வரல..” கிருஷ்ணா தான் முதலில் ஆரம்பித்தான்.
விஷ்ணு அவனிடம் ரகசியமாக “இப்படி சொன்னா அவங்க வரமாட்டாங்க.. அப்புறம் நமக்கு யார் பால் எடுத்து போடுவா. அதனால முதல்ல அவங்க கிட்ட நம்ம கூட விளையாட சொல்லலாம். அதுக்கப்புறம் அவங்க கூட நாம விளையாட வருவோம்னு பிராமிஸ் பண்ணு..” ஐடியா சொல்லிக் கொடுத்தான்.
அதுபடியே கிருஷ்ணா தனது அக்கா சுரபி இடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்ள, “போங்கடா இப்படி தான் சொல்லுவீங்க, அப்புறம் வரவே மாட்டிங்க..”
“சத்தியமா வருவோம்கா. ப்ளீஸ்கா, உன்னைக் கெஞ்சி கேட்டுக்குறேன்கா..” நூறு ப்ளீஸ் போடவும் மனமிரங்கி அவர்கள் பால் எடுத்து போட ஒப்புக் கொண்டனர்.
கிருஷ்ணா மட்டையை வைத்து அடிக்க விஷ்ணு பால் வீசி எறிந்தான்… தொலைவில் விழும் பந்துகளை ஆரபி ஒரு பக்கமும், சுரபி ஒரு பக்கமும் இருந்து எடுத்துப் போட்டுக் கொண்டு இருந்தனர்.
சற்று நேரம் எல்லாம் ஒழுங்காக சென்றது. எதிர்பாராத விதமாக விஷ்ணு பந்து போடும் போது கிருஷ்ணா சுழற்றி அடிக்க, பந்து, முதல் மாடியில் இருந்த பிரபாகர் அறையின் ஜன்னலை பதம் பார்த்தது..
அவ்வளவுதான் நால்வருமே பயந்து விட்டனர். அக்காக்கள் இருவரும் பயத்தில் அழ ஆரம்பிக்க அருகிலிருந்த கிருஷ்ணா அலட்சியமாக அவர்களிடம், “எதுக்கு அழறேங்க….?”
“டேய், அம்மாவுக்கு தெரிஞ்சா தோலை உரிச்சிடுவாங்க..”
“தெரியாம இருக்கணும்னா ஒரே வழிதான் இருக்கு. எல்லாரும் அமைதியா போய் அவங்க அவங்க இடத்துல படிக்க உட்கார்ந்துரலாம். அம்மா கிட்ட யாரையும் காட்டிக் கொடுக்கக் கூடாது ஓகேவா…”
“ஏண்டா நீ தானே உடைச்ச..?”
“அது எப்படி..? எல்லாரும்தானே விளையாடினோம். அப்ப எல்லாருக்கும் பங்கு இருக்கு.. என்னை மட்டும் மாட்டி விட்டீங்க, நானும் உங்களை மாட்டி விடுவேன்..”
“எப்படி மாட்டி விடுவே…?”
“போன தடவை மார்க் கம்மியா எடுத்துட்டு அப்பாகிட்ட சைன் வாங்காம, அம்மா கிட்ட நீ வாங்கிட்டு போனே இல்ல பார்த்துட்டுதான் இருந்தேன்..”
“டேய் அது போன மாசம்..”
“அதனாலென்ன அப்பாவுக்கு இதுவரை தெரியாது இல்ல..”
“அவர்கள் இருவரும் பயந்து விட்டனர். அதன்படியே சொல்வதாக ஒப்புக் கொண்டனர்…” குழந்தைகளை அழைத்து புவனா விசாரிக்க ஆரம்பித்தாள்..
ஹாலில் உள்ள சோபாவில் உட்கார்ந்து கொண்டு, “டேய் யார் உடைச்சதுன்னு முதலிலேயே சொல்லி விட்டீங்கன்னா தண்டனை கிடையாது. இல்லேனா அப்பா கிட்ட சொல்லி கண்டிப்பா அடி வாங்கி கொடுப்பேன்..”
“அம்மா நாங்க யாருமே உடைக்கலம்மா..” சுரபி பயந்துகொண்டே பதில் சொல்ல, “ஆரபியும் ஆமா நாங்க யாருமே உடைக்கலை..” என்று கூறினாள்.
“நீங்க உடைச்சு இருக்க மாட்டீங்க.. அவனுக ரெண்டு பேரும் உடைச்சுசுட்டாங்க அப்படித்தானே…” என்று கேட்க இல்லை என்று நான்கு பேருமே சாதித்தனர்.
“உண்மை சொல்ற வரைக்கும் நீங்க எல்லாரும் அப்படியே கைகட்டி நின்னுட்டு இருங்க. நைட் சாப்பாடு கிடையாது..” சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.
அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தாத்தா பேரன் பேத்திகள் அருகில் வந்தார்.
“டேய் கிருஷ்ணா நீயும் விஷ்ணுவும் கிரிக்கெட் விளையாண்டு தானே கண்ணாடியை உடைச்சீங்க..?” தாத்தாவின் கேள்விக்கும் யாருமே பதில் சொல்லவில்லை..
“கிருஷ்ணா, விஷ்ணு பொய் சொல்லக்கூடாது. அதே மாதிரி பொய் சொல்லுன்னு மத்தவங்களை வற்புறுத்தக்கூடாது. தப்பு செய்வது சகஜம். அத நேர்மையா ஒத்துக்கணும். திருத்திக்கணும். அதுதான் நல்ல குழந்தைக்கு அடையாளம். இப்போ ஒரு பழக்கத்தை அடிக்கு பயந்து பழகுனீங்க. அந்தக் குணம் உங்களது இரத்தத்தில் ஊறி விடும்.
அம்மா கிட்ட உங்க தப்பை ஒத்துக் கோங்க. உங்கள அடிக்காம பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு. சரியா..” எல்லோருக்கும் புரியும்படியாக அறிவுரை கூறினார்.
குழந்தைகள் இடத்தில் அப்பா பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கொண்டே வந்த புவனா “என்ன உங்க கிட்ட ஐஸ் வைக்கிறார்களா, இன்னைக்கு நீங்க என்ன சமாதானம் சொன்னாலும் சரி. அவங்கள விட போறது இல்ல..”
“கொஞ்சம் பொறு. அவங்களுக்கு சொன்னதைத் தான் நான் உனக்கு வேற விதமா சொல்றேன். குழந்தைங்க கிட்ட கண்டிப்பு காட்ட வேண்டியது அவசியம் தான். ஆனா அதே கண்டிப்பு அவங்க தப்பு பண்றாங்கன்னு தெரிஞ்சா கொஞ்சம் சமாதானமா போயி அதப்பத்தி கேட்டு இருக்கணும். அவங்க தப்பை திருத்தணும். இப்ப அவங்க என்ன சொல்றாங்கன்னு முதல்ல கேளு..” என்றதும் கிருஷ்ணாவை பார்த்து என்னடா…?” என்றாள்.
“அம்மா நானும் விஷ்ணுவும் விளையாடும்போது பால் பட்டு உடைஞ்சு விழுந்துருச்சு, சாரிம்மா..” என்றான். “சாரி அத்தை..” விஷ்ணுவும் தன் பங்குக்கு அவளிடம் மன்னிப்பு கேட்டான். “அப்புறம் ஏன்டா அக்காகளை மிரட்டி வச்சீங்க..?” அவள் கோபப்பட அவளிடம் “அவங்கள முதல் அனுப்பு..” என்று சொல்லி குழந்தைகளை போகும்படி சைகை காட்டினார்.
பின்னர் மகளிடம் “ஒரு வகையில் அந்தப் பிள்ளைகளை பாராட்டணும்.. ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுக்காமல் ஒற்றுமையாய் இருக்காங்க. அது ரொம்ப நல்ல குணம். இப்படி இருக்கிறவங்க நாளைக்கு பெரிய பசங்க ஆன பிறகும் ஒருத்தருக்கு ஒருத்தர் பாசமா இருப்பாங்க. நான் அதை கணக்கு வைத்து தான் அவங்கள சமாதானமா தப்ப ஒத்துக்க சொன்னேன்..
குழந்தைங்க கிட்ட அன்பா பேசி தாம்மா காரியம் சாதிக்கணும். இப்ப என்ன மாப்பிளை வர்றதுக்குள்ள ஆள் வெச்சு கண்ணாடியை சரி பண்ணு..” அப்பாவை மறுத்து அவளால் பேச முடியவில்லை.. அதிலிருந்து கிருஷ்ணா எந்த விஷயம் என்றாலும் தாத்தாவிடம் மட்டும் உண்மையை கூறிவிடுவான்.
அதேபோல் பள்ளியில் பசங்களுக்கு இடையே நடந்த பிரச்சனையில் விஷ்ணுவை ஒரு பையன் கீழே தள்ளிவிட கிருஷ்ணா அந்தப் பையனை புரட்டி எடுத்து விட்டான். விஷயம் பிரின்ஸ்பால் வரைக்கும் சென்றது.
அரசு அவனின் அண்ணன் என்று தெரிந்ததால், பிரின்சிபால் முதலில் அவனை அழைத்து அவனிடம் விஷயத்தை கூறி விட்டு, அப்பாவை கூட்டி வரும்படி பணித்தார். “இது மாதிரி நடக்காம நானே இனி பார்த்துக்கிறேன்.. அப்பா பிசினஸ் விஷயமா வெளியூர் போயிருக்காங்க..” என்று கூறி அவரை சமாளித்துவிட்டு தம்பியிடம் வந்து “என்னடா நடந்தது..?” என்று கேட்டான்.
தப்பு எதிர்த்தரப்பு பையன் மேல்தான் என்று தெரிந்ததும் தம்பியிடம் “இனி இந்த மாதிரி என்ன பிரச்சினை வந்தாலும் என்கிட்ட சொல்லு. நான் பார்த்துக்கிறேன், அதை விட்டுட்டு நீயா யாரையும் அடிக்க கூடாது..” அவனிடம் அறிவுறுத்தி விட்டு அந்த பையனை அழைத்து மிரட்டி அனுப்பி வைத்தான்.
விஷயத்தையும் அப்பாவிடம் சொல்லாமல், அண்ணனே தங்களுக்கு உதவியாக இருந்தது அவனுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அதன் பிறகு தம்பி, விஷ்ணு இருவரையும் அரசு தன்னுடைய கவனத்தில் வைத்துக் கொண்டான்..
அரசு பள்ளி இறுதிப் படிப்பை முடித்து அப்பாவை போலவே மெக்கானிக்கல் என்ஜினீயர் படிப்பை தேர்ந்தெடுத்து படிக்க ஆரம்பித்தான்
வருடங்கள் விரைந்து ஓடின. அரசு இன்ஜினியரிங் முடித்து எம்பிஏ முதல் வருடம் படிக்கும் பொழுது விஷ்ணுவும், கௌசிக்கும் கல்லூரிக்குள் நுழைந்தனர். சுரபி என்ஜினியரிங்கிலும், ஆரபி மருத்துவ படிப்பில் மூன்றாவது வருடம்
இருவருமே ஒரே கல்லூரியில் சேர்ந்தனர். விஷ்ணு மெக்கானிக்கல் பிரிவும், கிருஷ்ணா பிடெக் எஞ்சினியரிங் எடுத்து படிக்க ஆரம்பித்தனர். கிருஷ்ணாவுக்கு ஆரம்பத்திலிருந்தே போலீஸ் துறையின் மீது தான் நாட்டம். ஆதலால் கல்லூரியில் உள்ள அனைத்து விளையாட்டுகளிலும் பங்கு பெற ஆரம்பித்தான்.
ஏற்கனவே பள்ளியில் விளையாட்டுகளில் பல பரிசுகள் வாங்கி இருந்தவன் என்சிசியிலும் தலைமை பொறுப்பு ஏற்று இருந்தான்.
அந்த ஆளுமைத் திறனும், விளையாட்டில் அவன் காட்டிய ஆர்வமும் சுலபமாக மாணவர்களின் நட்பை பெற்று தந்ததால் கல்லூரி முதலாம் ஆண்டு இறுதியிலேயே அவனுக்கு பல பொறுப்புகள் தானாக வந்தது.
கிருஷ்ணா இனி நீதான் வாலிபால் டீம் கேப்டன், அவர்களது கல்லூரி பிடி மாஸ்டர் கூறியதும், சந்தோஷமாக அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல், மாணவர்களை ஒருங்கிணைத்து தனிப்பட்ட பயிற்சி அளித்து அந்த வருடம் இறுதியில் நடந்த கல்லூரி மாணவர்கள் இடையேயான போட்டியில் தங்களது கல்லூரியை வெற்றி பெறச் செய்தான்.
மாணவர்களும் ஆசிரியர்களும் அவனை கொண்டாட, அதுவரை டீம் கேப்டனாக இருந்த மாணவன் சேவாக்குக்கு மிகுந்த அவமானமாக இருந்தது.
விகாஷ் சேவாக் டெல்லி மத்திய அரசவையில் இருக்கும் மத்திய அமைச்சர் ஒருவரின் மகன். தனது செல்வாக்காலும், அதிகாரத்தாலும் கல்லூரியில் மதிப்புமிக்க வலம் வந்து கொண்டிருந்தான். அவனுக்கு இது மிகப் பெரிய அவமானமாக தோன்றியது.
“விகாஸ் என்ன இது…? மாஸ்டருக்கு இப்போது நம்ம தயவு வேண்டாம் போல இருக்கு…” ஒரு நண்பன் புலம்ப இன்னொருவன் “டேய் இவங்க எல்லாருக்கும் நீ யாருன்னு புரூப் பண்ணனும்டா…” அவனுக்கு வெறி ஏற்றி விட்டான்.
அவனைப் பொறுத்தவரை படிப்பு என்பது கௌரவத்துக்கு தான். இப்போதே தனது தந்தையின் கட்சியில் இளைஞரணி உறுப்பினர். மேலும் அவரது தொழில்களின் ஏகபோக வாரிசு..
படிப்பில் சுமார் ரகம் என்றாலும், குறுக்கு வழியிலும், புத்தியிலும் கைதேர்ந்தவன். எல்லாவற்றையும்விட, தனக்கு எதிரி என்று ஒருவரை கணித்து விட்டால் அவனை கடைசிவரை தலையெடுக்க விடாமல் வைப்பது அல்லது பூண்டோடு அழித்து விடுவது அவனது கலை.
கல்லூரியிலும் இதுவரை தான் தனிப்பட்ட முறையில் ராஜாங்கம் நடத்திக் கொண்டிருக்க, புதிதாக வந்த ஒருவன் தனது இடத்தை பறித்து கொள்வதா என்று ஏற்கனவே மனதுக்குள் குமைந்து கொண்டிருந்தவன், நண்பர்கள் வேறு இப்போது உசுப்பேற்றி விட, கிருஷ்ணாவை எந்த வகையில் ஒழித்துக் கட்டலாம் என்று யோசித்தான்.
தற்செயலாக கிருஷ்ணா அவனது நண்பர்களுடன், இவர்களைத் தாண்டி ப்ளே கிரவுண்ட் நோக்கி சென்று கொண்டிருக்க, தான் மட்டும் அவனது எதிரில் போய் நின்றான்.
திடீரென்று தன் எதிரில் வந்து நின்றவனை யார் என்று அறியாமல், கிருஷ்ணா பார்த்தான். அவனது கூட இருந்த மற்ற விளையாட்டு நண்பர்களுக்கு அவனை தெரியுமாதலால், கிருஷ்ணாவுக்கு அருகில் உள்ள சீனியர் மாணவன் ஒருவன், காதுக்குள் மெதுவாக “இதுதான் விகாஷ். விளையாட்டு, கல்சுரல் எதுவானாலும் இவன் கிட்ட கேட்டு தான் முடிவு பண்ணுவாங்க. அந்த அளவுக்கு காலேஜிலே இவனது அதிகாரம் பிரபலம்..” என்றான்.
“அப்படியா…? அப்ப காலேஜ் சேர்மேனா..?”
“இல்ல, உண்மையா அதலடிக் மட்டும்தான் இவனோட கேம். ஆனால் மத்திய மந்திரியோட பையன், பிரின்ஸ்பாலுக்கு ரொம்ப வேண்டியவன்… அதனால இவன் வச்சதுதான் சட்டம்..”
விகாஷ் கிருஷ்ணாவின் எதிரே வந்து முறைத்துக் கொண்டு நிற்க, அவன் நிற்பதை பற்றி கவலைப்படாமல் கூட இருந்தவன் இடம் விசாரணை செய்து கொண்டிருந்தான். அதுவே அவனின் சினத்தை அதிகரிக்க, முகத்திற்கு எதிரே தனது வலது கையால் சொடக்கிட்டு அழைத்து, “என்ன வந்ததுமே டீம் கேப்டன் ஆயிட்டோம்னு ரொம்ப திமிரா இருக்கியா…?” வேண்டுமென்றே சண்டையை ஆரம்பிப்பதற்காக கேட்டான்.
“புரியல.. டீம் கேப்டன் ஆனா திமிர் வருமா என்ன…? எனக்கு அப்படி எதுவும் இதுவரை வரல. உங்களுக்கு தேவைன்னா வரவழைக்கலாம்…” அவன் பாணியிலேயே பதில் சொல்ல, விகாஷுக்கு முகம் கருத்தது. கூட இருந்த மாணவர்கள் அடக்க முடியாமல் சிரித்து விட, அத்தனை பேரையும் முறைத்துப் பார்த்தான்.
“வேண்டாம் கிருஷ்ணா என்கிட்ட வெச்சுகாதே…!”
“பாருங்க மிஸ்டர் நானா உங்க கிட்ட வந்து பேசல.. எந்த வம்புக்கும் வரல. மாஸ்டர் என்ன சொன்னாரோ அதை மட்டும் தான் நான் செய்றேன். கிளாஸ்லயும் என்னோட வேலை உண்டுன்னு இருக்கேன். எனக்கு என்னோட படிப்பு விளையாட்டு இது மட்டும் தான் முக்கியம்.. எதுவா இருந்தாலும் நீங்க உங்க ப்ரொபசர் கிட்ட பேசுங்க..!” தெளிவாக கூறி விட்டு, வழி மறித்து நின்று அவனை ஒற்றைக் கையால் விலக்கித் தள்ளிவிட்டு, ப்ளே கிரவுண்ட் நோக்கி நடந்தான்.
மற்ற மாணவர்களும் அவனைப் பின்பற்றி சென்றுவிட, தான் நின்ற இடத்தில் இருந்தே அவன் செல்வதை முறைத்துக்கொண்டே நின்றவனை அவனது நண்பர்கள் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர்.
இன்ஜினியரிங் சென்னையில் முடித்துவிட்டு எம்பிஏ ஹைதராபாத் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த, அரசு விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தான்..
ஞாயிறு காலை அவனை பார்த்தவர்கள் எல்லோரும் உற்சாகத்தோடு சுற்றி கொண்டனர்.
“நேத்து நைட்டுதான்டா வந்தேன்.. ஆமா எல்லோர் படிப்பும் எப்படி போயிட்டு இருக்கு?”
“அண்ணா வந்ததுமே ஆரம்பிக்கணுமா..? வேற ஏதாவது கேளு. ரொம்ப நாளைக்கப்புறம் இப்பதான் நீ வந்திருக்கே. எங்கேயாவது வெளியே போகலாமா…?”
“ஓகே, மதியத்துக்கு மேல மாலுக்கு போயிட்டு, சினிமா போயிட்டு வரலாம். இப்ப சொல்லு படிப்பு பத்தி…?”
“அது எல்லாம் நோ ப்ராப்ளம்….” கிருஷ்ணா ஒரே வார்த்தையில் முடித்து விட, மற்றவர்கள் தங்களது சப்ஜெக்ட் பற்றி அவனிடம் விவாதம் செய்தனர்.
“என்னடா அவங்க எல்லாரும் படிப்பு பத்தி இவ்வளவு டிஸ்கஸ் பண்றாங்க. நீ ஏன் இப்படி இருக்க..?”
“எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு. உன்னோட ஃப்ரண்ட் சசி அண்ணா இருக்காங்கல்ல, அவங்க எந்த கோச்சிங் சென்டர்ல படிக்கிறாங்க என்று கேட்டு என்னையும் சேர்த்து விடேன்..”
“டேய் அவன் ஐபிஎஸ் எக்ஸாம் எழுத கோச்சிங் போறான்.. நீ எதுக்கு கோச்சிங் போப்போறே..?
“அதுக்குதான்..” அவர்கள் பேசிக் கொண்டே இருக்கையில் தாத்தா அங்கே வந்தார்.
அரசு அவரைப் பார்த்து நலம் விசாரித்தான்.
“ஹெல்த் எப்படி இருக்கு தாத்தா..?”
“அதெல்லாம் சூப்பரா இருக்கு…” அவர் ஜம்பம் ஆக சொல்ல..
“அதெல்லாம் சும்மா அண்ணா, போனவாரம் தான் டாக்டர் வந்து பார்த்துட்டு நல்ல டோஸ் கொடுத்துட்டு போனார்..” கிருஷ்ணா அண்ணனிடம் போட்டுக் கொடுத்தான்.
“டேய் அந்த டாக்டருக்கு வேற பேஷன்டே இல்லை. அதான் என்னை போட்டு பாடா படுத்திட்டு இருக்கிறார்…” அவர் அள்ளி விட்டார்.
“ஏன் தாத்தா, மருந்து ஒழுங்கா சாப்பிடுறீங்களா இல்லையா…?” அரசு சற்று கண்டிப்புடன் கேட்க…
“டேய் அவன் சும்மா உன்கிட்ட என்னை மாட்டி விட பார்க்கிறான்..” அரசுவின் கண்டிப்புக்கு முன்னால் அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
அதற்குள் அப்பாவும் வந்துவிடவே பேச்சு வேறு திசையில் திரும்பியது.. தம்பியின் ஆசையை சொல்ல, “அவன் என்னதான் மனசில நெனச்சிட்டு இருக்கான்…? நம்ம கம்பெனி பாக்குறதுக்கு எத்தனை ஆள் இருந்தாலும் போதாது..? அரசு ஒருத்தனா பார்க்க முடியுமா…? இவனுக இரண்டு பேரும் கண்டிப்பா நம்ம பிசினஸ் தான் பார்க்கணும்…” சத்தம் போட ஆரம்பித்தார்.
“விஷ்ணு மாமா சொல்ற மாதிரி படிச்சிட்டு கம்பெனிக்கு வந்து விடுவான். கிருஷ்ணாவோட ஆசை அது இல்லப்பா. அவனை அவன் ஆசைப்படி விடுங்க. அவன் ஐபிஎஸ் ஆகணும்னு கனவு கண்டுட்டு இருக்கான்..”
“நல்ல வேலை தான். நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா நாளைக்கு கம்பெனியில இவனோட ஷேர் வரும்போது அதை யார் மேனேஜ் பண்றது..?”
“நானும் விஷ்ணுவும் மேனேஜ் பண்ணி கொடுக்கிறோம்பா…”
“எத்தனை நாளைக்கு…? இப்ப சரியா இருக்கும். பின்னால் அது சரிவராது..” அவர் சொல்வதும் எல்லோருக்கும் நன்றாக புரிந்தது..
அதை அப்புறம் பாத்துக்கலாம். இப்ப படிக்கட்டும்பா…” அரசு சொல்ல, மாமனாரும் அவனுடன் சேர்ந்து கொண்டு “ஆமா, அவன் இஷ்டப்படி படிக்கட்டும்… கொஞ்ச நாள் வேலை பார்த்துட்டு அப்புறம் கூட பிசினஸ் பார்க்கலாம்…”
தாத்தா அண்ணன் இருவர் சப்போர்ட்டும் அவனுக்கு இருக்க பிரபாகர் வேறு வழியில்லாமல் அதற்கு சம்மதித்தார்..
அப்பா சம்மதித்த அந்த சந்தோஷத்தில் கிருஷ்ணா அண்ணனை தூக்கி நிறுத்தி ஒரு சுழற்று சுழற்றி விட..
“டேய் விடுடா, இப்பவே உன் பலத்தை என்கிட்ட காட்டாதே. உடற்பயிற்சி எல்லாம் செய்ற போல இருக்கு. இப்பவே உன் பிடி போலீஸ்காரன் பிடியாட்டம் பலமா இருக்குடா…” தம்பியின் முதுகில் அறைந்து மகிழ்ச்சியுடன் சிரித்தான்.
அன்று மாலை அரசுவுடன் நான்கு பேரும் சினிமாவிற்கு சென்றனர். சினிமா முடிந்து அனைவரும் பெரிய ஹோட்டல் ஒன்றுக்கு சென்றனர்.. உள்ளே சென்று அமர்ந்ததும் அடுத்த பத்து நிமிடங்களில் “ஹாய்..” என்று அரசுவின் அருகில் வந்து சசிசேகரன் அமர்ந்தான்.
“ஹாய் அண்ணா உங்களுக்கு ஆயுசு நூறு. இன்னைக்கு தான் உங்களை பார்த்து பேசணும்னு அண்ணன் கிட்ட சொல்லிட்டு இருந்தேன். அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க…!” என்றான் கிருஷ்ணா.
“உங்க அண்ணன் தான் மெசேஜ் கொடுத்தான். என்ன எல்லாரும் அவுட்டிங்கா…?” கேள்வி அனைவரிடமும் இருந்தாலும் பார்வை ஆரபியிடம் பாய்ந்து மீண்டது..
அரசுகூட பள்ளி இறுதியிலிருந்து படித்து வருபவன் சசிசேகரன். கல்லூரியில் ஒரே பாடப்பிரிவு என்பதால் நண்பர்கள் இருவரின் நெருக்கம் அதிகம் ஆயிற்று..
ஆனாலும் சசியின் கனவு ஐபிஎஸ் மேல் இருந்ததால் கடந்த ஒரு வருடமாக அதற்கென்று தனியாக கோச்சிங் சென்டர் சென்று கொண்டு இருக்கிறான்.
மிகவும் நெருக்கமான நண்பன் எiன்பதால் கல்லூரி நாட்களில் அடிக்கடி வீட்டுக்கு வருவான். சுரபி, கிருஷ்ணா, விஷ்ணு அனைவரும் அவனிடம் சகஜமாக பேசுவார்கள். ஆனால் ஆரபி மட்டும் எப்போதுமே அவனை கண்டதும் உள்ளே நழுவி விடுவாள்.
கல்லூரி இறுதி ஆண்டு படிக்கையில் ஒருநாள் அரசு இல்லாத சமயம் அவனைத்தேடி சசி வீட்டுக்கு வந்திருந்தான். கிருஷ்ணாவும் விஷ்ணுவும் கூட வெளியே சென்றிருந்தனர்.
சுரபி குளித்துக்கொண்டிருந்தாள். வேறு வழியில்லாமல் ஹாலுக்கு வந்த ஆரபி தயங்கி தயங்கி அவனிடம் “அத்தான் இல்ல வெளிய போயிருக்காங்க…” என்றாள். சொல்லிவிட்டு அவனை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு நின்றாள்.
“அப்படியா எங்கே போய் இருக்கான்னு தெரியுமா…?” சசியின் கேள்விக்கு இல்லை எனும் விதமாக குனிந்திருந்த தலை மட்டும் மெல்ல ஆடியது.
சற்று நேரம் அப்படியே தலைகுனிந்து இருந்தவள் அவன் போயிருப்பான் என்று நினைவில் மெல்ல தலை நிமிர்த்திப் பார்க்க அவளுக்கு மிகவும் அருகில் எதிரில் வந்து நின்று கொண்டு அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் சசி.
திடுக்கிட்டு விதிர்த்தவள் “என்ன விஷயம் எதுவும் அத்தான் கிட்ட சொல்லணுமா ?” என்று திக்கித் திணறி கேட்க…
“இல்ல இப்ப எதுக்கு திக்கி, திணறி பதில் சொல்கிறே? நான் உன்னை என்ன பண்ணினேன்…?” அவள் மனதை துளைக்கும் பார்வையுடன் கேட்டான்.
“ஒண்ணும் இல்லை..” என்றவளுக்கு அதற்கு மேல் வார்த்தை வராமல் சிக்கித் தவிக்க கண்களில் மிரட்சி தெரிய, கைகள் இரண்டையும் தன்னையறியாமல் கோர்க்கவும் பிரிக்கவும் ஆக செய்தவள் “அம்மாவை வரச் சொல்றேன்..” என்று கூறி விட்டு உள்ளே பறந்தாள்.
அவளது தயக்கமும், தவிப்பும் அவனுக்கு எதையோ உணர்த்த, அதனுடன் சேர்ந்து நண்பன் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையும் மனதை உறுத்த, திரும்பி விடலாம் என்று நினைத்த போது உள்ளிருந்து புவனா வந்து விட்டாள்.
“அரசு வெளியில் போய் இருக்கான்பா.. வா உட்காரு.. அம்மா அப்பா நல்லா இருக்காங்களா..?”
“எல்லாரும் நல்லா இருக்காங்க ஆன்ட்டி.. ப்ராஜக்ட் சம்பந்தமா ஒரு பைல் அரசு கிட்டே இருந்து வாங்கணும்.. அதான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்..”
“போன் பண்ணி பாக்கலையா..?”
“இல்ல ஆன்ட்டி. எனக்கு இந்த ஏரியாவுக்கு வர வேண்டிய வேலை இருந்தது. அதனால அப்படியே வாங்கிட்டு போயிடலாம்னு நினைச்சி வந்துட்டேன். ஓகே, ஆன்ட்டி நான் இன்னொரு தடவை வரேன்…”
“இருப்பா ஜூஸ் குடிச்சிட்டு போ. இல்லை அரசு சத்தம் போடுவான்..” அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அரசு வந்துவிட்டான். நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டே மாடிக்கு சென்று விட்டனர். மாடி ஏற முடியாததால் ஜூசை ஆரபியிடமே கொடுத்து விட்டாள்.
ஜூஸ் கொடுத்த போதும் தன் முகம் பார்க்காமல் கொடுத்துவிட்டு விரைந்து சென்று விட்ட ஆரபியை அப்போதுதான் கூர்ந்து கவனித்துப் பார்த்தான்.
அதன் பிறகு எப்போது அவளைப் பார்க்க நேர்ந்தாலும், எதிர்பாராத விதமாக அவளது கண்களை சந்திக்க நேரும் பொழுது அதில் தெரிந்த செய்தியில் அவனது மனமும் அவளிடம் வீழ்ந்து போனது.
சசி ♥️ஆரபி லவ் மேரேஜ்ஜா சூப்பர் 👌👌👌♥️♥️♥️🌺🌺🌺