in ,

11 – 🎶 மூங்கில் குழலான மாயமென்ன

சமர்திறமறவனின் எண்ணம் முழுதும் மானஸ்வியே நிறைந்திருக்க, ஆர்யவின் எண்ணம் முழுதும் சமரின் மீதிருந்த கோபமே வலம் வந்தது. ‘அதெப்படி, அவன் மானஸை இப்படி சாப்பிட கூட செய்யாமல் அவ்வளவு தூரம் அனுப்புவான்…?’ என்றே சினம் தலைக்கு ஏற, அன்றிரவு வீட்டிற்கு வந்தவன்,  யாரையும் பாராமல் மொட்டை மாடிக்கு சென்று விட்டான். அங்கோ, அவனின் காதல் மனைவி தேய்ந்த வெண்ணிலவை கண்டு, தானும் தேய்ந்த படி நின்றதில், இப்போது இருக்கும் கோபத்தில் எதையாவது பேசி விடுவோம் என்றெண்ணி  அங்கிருந்து நகர தான் நினைத்தான்.

ஆனால், இவனை கண்டதும் முதல் வேலையாக அவள் முகத்தை திருப்பிக்கொண்டு கீழிறங்கி செல்ல எத்தனித்ததில் அவனின் கோபம் கரை புரண்டது. மின்னல் வேகத்தில் எழில்மதியின் முன் சென்று, அவளின் தோள்பட்டையை அழுத்தி பிடித்தவன், 

“ஏய்! என்னடி ரொம்ப ஓவரா போற? நானும் பொறுமையா இருக்கலாம்ன்னு அமைதியா போனா நீ தலைக்கு மேல ஏறி உட்காருவியா? காதலை சொன்னப்போ உன்னை பிடிக்கலைடான்னு சொல்லிருந்தா நான் மூடிக்கிட்டு போயிருப்பேன்ல… அப்போ எல்லாம் கண்ணீர் விட்டு கதறிட்டு, எப்படியும் உன்ன மிஸ் பண்ண கூடாதுன்னு கல்யாணத்தை நிறுத்தி தாலி கட்டுனா மேடம்க்கு வலிக்குது…! அப்படி தான?” என்று மேலும் கீழும் கடும் கோபத்தில் மூச்சிரைத்தான். 

“இல்ல தெரியாம தான் கேட்குறேன்… குடும்பத்து மேல இவ்ளோஓஓஓ அக்கறை  இருக்குறவள், என்ன டேஷுக்கு கல்யாணம்ன்னு அவனை முடிவு பண்ணதுக்கு அப்பறமும் என்னை லவ் பண்றேன்னு அழுகணும்? உன்னால, என் பிரெண்ட் அந்த பட்டிக்காட்டுல கஷ்டப்படுறா! உனக்கும் உன் மாமனுக்கும் எங்களை பார்த்தா எப்படி தெரியுது? கிறுக்கு மாதிரி இருக்கா? நீ என்னமோ மூஞ்சிய திருப்புற… அவன் என்னமோ அவளை கட்டாயக்கல்யாணம் பண்ணி டார்ச்சர் பண்றான்” என அவன் பேச பேச எழிலுக்கு தான் கண்ணீர் ஆறாக ஓடியது. அவன் பேசிய வார்த்தைகள் அவளுள் வலியை பிறக்க செய்ய, 

அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காமல் அவனை தாண்டி செல்ல போனவளை, வலுக்கட்டாயமாக தன்னுடன் இழுத்து, நெஞ்சில் சாய்த்தவன் கனலாக “பேசிட்டு இருக்கேன்ல…! நீ பாட்டுக்கு போற…?” என்றவனின்  பிடியின் அழுத்தம் அதிகமாக, அவளோ உதட்டைக்கடித்து பாவமாக “வலிக்குது” என்றாள் அவன் கையை எடுத்தபடி.

அதில் சிறிது அமைதியான ஆர்யவ், “நான் பேசிட்டு இருக்கும்போது பாதியில போனா, எனக்கு ரொம்ப கோபம் வரும் பேபி!” என்று அவன் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு  கூற, அவள் தான், “நீங்க மட்டும் நான் பேசுறதை முழுசா கேட்டீங்களா? நீங்களா ஒரு முடிவு எடுத்து, நீங்களா தாலி கட்டி…” என்று தேம்பியவள், அதே தேம்பலுடன் 

“இப்போ கூட, உங்க காசை பார்த்து என் மாமாவை கட்டிக்காம உங்கள விரும்புனேன்னு என்னை கேவலமா நினைக்கிறீகள்ள?” என மேலும் கண்ணீர் உகுத்தாள்.

சன்னமாய் அதிர்ந்த ஆர்யவோ அதன் பிறகே தான் பேசியதை அவள் இப்படி பொருள்கொண்டால் என்று  உணர்ந்து, “என்ன பேபி பேசுற? நான் போய் அப்படி…” என பேசும் முன், அவனை தடுத்தவள் “வேணாம்… நீங்க பேசுறதை கேட்க நான் தயாரா இல்ல. நீங்க என்ன எப்படி வேணா நினைச்சுக்கோங்க. நான் நான் இங்க இருந்து போயிடுறேன்…” என்று கூறும்போதே அவளின் குரல் கம்மி கலங்கி இருந்தது.

அவள் கண்ணீரில் சிதைந்தவன் தான், “பேபி! பேபி! சத்தியமா நான் அப்படி சொல்லல பேபி! நான் ஏதோ ஒரு கோபத்துல அப்படி… இல்ல நான் பேசுனது தப்பு தான். ஆனால் நிஜமா நான் அந்த அர்த்தத்துல பேசல பேபி! நீ இதுவரை உன் வாயால உன் காதலை சொல்லலைன்னாலும், அது எனக்கானதுன்னு என்னால உணர முடியும். அந்த உள்ளுணர்வுல தான் தைரியமா உன் கழுத்துல தாலி கட்டினேன். இப்போ வர, நீ என்னை என்னைக்காவது ஒரு நாள் புருஞ்சுப்பன்னு என்னை நானே கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன்…” என்றவன், 

அவளின் கன்னத்தை பிடித்து அவன் அதரங்களுக்கு வெகு அருகில் இழுத்து, “இல்லைன்னா, இந்நேரம் இந்த ரெட் லிப்ஸ் எப்போவோ எனக்கு சொந்தமாகியிருக்கும்…” என்றான் ரகசிய குரலில்.

அதில், ஒரு நொடி கரைந்தவள், தன்னவனின் மூச்சு காற்றில் சுவாசம் கொண்டு மூச்சிழுத்தவள், மெல்ல விலகிட அவளை தடுக்காமல் ரசனையாக பார்த்தான். அவனின் தீண்டலில் எழிலின் சிவந்த கன்னமது மேலும் சிவந்து அவனை  கட்டி இழுக்க, தன்னை அடக்கிக்கொண்டு நின்றவன், “பேபி!” என்றான் ஹஸ்கி குரலில்.

அப்பொழுது தான் சுயநினைவு பெற்றவள், இறுகிய குரலில் “பேசி முடிச்சுட்டீகளா? நான் போகட்டா?” என்றாள் வினவளுடன். மன்னவனின் பெருமூச்சு காற்றோடு கலந்து அவளை அசைக்க  முயல, அவளோ உணர்ச்சி துடைத்த முகத்துடன் நின்றாள்.

“ஏன் பேபி! என்மேல இவ்ளோ கோபம்? நான் தான் சொல்றேன்ல…” என்று பேச தொடங்கியவன் பின், “சரி அன்னைக்கு நீ என்ன சொல்ல வந்த, நான் என்ன கேட்கல… அதை சொல்லு இப்ப கேட்குறேன்…” என்றான் அமைதியாக.

அவளோ தன்னை மீறி எழுந்த கடுப்பில், “ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டீக… இன்னும் பத்து வருசம் கழித்து கேட்க வேண்டியது தான…?  நான் எதுவும் சொல்ல வரல சாமி…!” என்று கும்பிட்டவளை ‘ஐயோ கேட்டாலும் சண்டை போடுறா கேட்கலைன்னாலும் சண்டை போடுறாளே’ என தனக்குள் பொருமிக்கொண்டு பாவமாக பார்த்த ஆர்யவ் “அதான் இப்ப கேக்குறேன்ல… சொல்லு பேபி! ப்ளீஸ்!” என்றதில் அவளுக்கு எரிச்சல் எல்லை மீறியது.

“என்னத்த சொல்ல? நடக்காத கல்யாணத்தை நிறுத்தி, தேவையில்லாம தாலி கட்டி, இம்புட்டு பெரிய பஞ்சாயத்தை இழுத்து விட்டுட்டு, அதை காதுல கூட வாங்காம இப்ப வந்து சொல்லு சொல்லுன்னா என்னத்த சொல்ல?” என்று முகம் சுருக்கி முறைத்தவளை அவன் தான் ‘பே’ வென பார்த்தான். 

“இப்ப நீ என்ன சொன்ன? நடக்காத கல்யாணமா? எனக்கு புரியல… தெளிவா சொல்லு” என்று கேட்டவனுக்கு இதயம் பலமாக துடித்தது. 

“மண்ணாங்கட்டி… அப்படியே புருஞ்சுட்டாலும்…” என்று சிலுப்பிக்கொண்டவள், “அன்னைக்கு அந்த கல்யாணம் நடந்துருக்கவே நடந்துருக்காது… அதை தான் சொல்றேன்” என்றவள், சமருடனான தன் உறவை பற்றி விளக்கினாள்.

மாமன் மகன், அத்தை மகள் என்ற உறவை தாண்டி சிறு வயதில் இருந்தே, இருவருக்குள்ளும் ஒரு நட்பு இழையோடும் யாரும் அறியாமல். இதில் எழில்மதி சமரை விட எட்டு வயது சிறியவள். அவள் வளர்ந்த பின்னும், சமருக்கு அவள் சிறுபிள்ளை போல் தான் தெரிந்தாள். 

வீட்டினர் அவளை கட்டிக்க போகிற பெண் என்று சொல்லும் போதெல்லாம் அவனுக்கு சிரிப்பு மட்டுமே வரும். உலகம் அறியாத சிறு பெண்ணுக்கு திருமணத்தையும், குடும்ப பொறுப்பையும் திணித்து, இதில் தன்னையும் இழுத்து விடுகின்றனரே என்று எண்ணுபவனுக்கு வளர வளர அவள் தோழியாகவே மாறி விட்டாள். 

ஆனால், வெளியில் இருவரும் காட்டிக்கொள்ள மாட்டார்கள். சிறியதாக பேசினாலும் வீட்டினரின் கிண்டல் பேச்சுக்கு ஆளாக நேரிடும் என அறிந்த இருவரும் வாட்சப் இல் தான் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வது. 

இருந்தும், எழில்மதி பன்னிரண்டாவது படிக்கும் போதே, ராஜசெல்வனும் சமரின் தந்தை சக்கரபாண்டியனும் சமருக்கு திருமணம் செய்து வைப்பதை பற்றி பேச, அப்போதே சமர் எழிலிடம் பேசினான்.

“எழிலு.. எனக்கு எப்போவும் நீ சின்ன புள்ள தான். உன்னை கல்யாணம் பண்ணுற எண்ணம் எனக்கு இப்போ இல்ல எப்போவுமே வராது தான். ஆனால் உனக்கு அந்த எண்ணம் இருந்தா சொல்லு. நான் எந்த தடையும் சொல்லல. சந்தோசமா உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா இப்ப இல்ல நீ காலேஜ் முடிச்சதும்” என்று தன் விருப்பத்தையும், கூடவே அவளின் விருப்பத்தையும் தெரிந்து கொள்ள, கேள்வி எழுப்பி விட்டு அவளை நோக்கினான் சமர்திறமறவன்.

அவளோ, தலையை சொரிந்து, “நீ என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சரி தான் மாமா. கல்யாணம் வேணும்னு முடிவு பண்ணாலும் எனக்கு சந்தோசம் தான்… வேணாம்னு முடிவெடுத்தா ரெண்டு மடங்கு சந்தோசம் தான்” என்று தலையை சாய்த்து கண் சிமிட்டியவளின் பதிலிலேயே அவளின் விருப்பத்தை உணர்ந்தவன், அழகாய் புன்னகைத்து கொண்டான். அவர்களின் தோழமையும் எந்த தங்கு தடையுமின்றி நளினமாய் தொடர்ந்தது.

 வீட்டில் பேசி அவள் மூன்று வருடம் படிக்க அனுமதி வாங்கி, படிக்க வைத்தவன் பிறகு இதை பற்றி வீட்டில் பேசலாம் என்று எண்ணிக்கொள்ள, இறுதியில் இப்படி ஒரு திடீர் திருமணத்தை அவனும் எதிர்பார்க்கவில்லை.

இங்கோ, இப்படி ஒரு கதையை ஆர்யவும் எதிர்பாராமல் பேந்த பேந்த விழித்த படி நின்றான். “இரு இரு! என்ன சொல்ல வந்தன்னு கேட்டா, நீ ஏன் இப்ப முஸ்தபா பாட்டு பாடிட்டு இருக்க…?” என்று கேலி செய்தவன், பின், “அந்த காட்டான் இவ்ளோ பொறுமையா யோசிச்சு முடிவெடுப்பானா என்ன?” என்றான் சற்று கிண்டலுடன். ஆனால், இப்போது மனம் சிறிது அமைதியாகி இருந்தது.

அதில் அவனை முறைத்த எழில்மதி தான், “என் மாமா, எது பண்ணாலும் அது சரியா தான் இருக்கும். அதோட என் மாமா ஒன்னும் காட்டான் இல்ல. எம் எஸ் சி அக்ரிகல்ச்சர் படிச்சுட்டு, இப்ப பி எச் டி பண்ணிட்டு இருக்கு. கூடிய சீக்கிரமே டாக்டர் பட்டம் வாங்கிடும். அப்பறம் தெரியும் யாரு காட்டான்னு” என்று இடுப்பில் கை வைத்து சமருக்கு வக்காலத்து வாங்கியவளை சற்று வியப்பாக பார்த்தவனுக்கு சமரை எண்ணியும் வியப்பு தான்.

அவன் படித்திருக்கிறானா? அவனை பார்த்தா அப்படி தெரியவே இல்ல… என்று தனக்குள் எண்ணிக்கொண்டவன், தன்னவளின் கோபத்தை மேலும் ரசிக்கவே செய்தான்.

பின், தலையை உலுக்கி எழில்மதியை முறைத்தவன், “சரிடி, அதான் அவன் உனக்கு பிரெண்ட் தோஸ்து, மாமா எல்லாம் தான… அப்பறம் ஏண்டி என் மாமாவுக்கு அசிங்கம் … லொட்டு லொசுக்குன்னு பல்லவி பாடுன? அவன் கிட்ட நீயே சொல்லிருக்க வேண்டியது தான?” என்றான் பார்வையால் சுட்டு.

அவளோ கடுகடுப்பாக, “ஆமா, அப்டியே நம்மளும் பத்து வருசமா லவ் பண்றோம் பாருங்க… உங்களை எனக்கே கொஞ்ச நாளா தான் தெரியும். அதுலயும் உங்க கிட்ட பேசுனது ரொம்ப கம்மி… ஆனாலும் உங்களை விரும்புறதை மறைக்க முடியாம அன்னைக்கு தோப்புக்கு மாமா கிட்ட சொல்ல தான் போனேன். ஆனால் சரியா உங்க பிரெண்ட்காரி வந்து ஏதேதோ பேசி மாமாவை கோபப்படுத்திட்டா, அதோட எனக்கும் அப்போ தான் நீங்க எங்க ஊருல பிரச்சனை பண்ண வந்தீகன்னு தெரியும். என் மாமாவுக்கு இவ்ளோ குடைச்சல் குடுக்குறவகளை நான் விரும்புறேன்னு எப்படி நான் போய் அதுகிட்ட நிக்க முடியும்?” என்று நியாயமாய் கேள்வி கேட்டவளை வெறியாய் பார்த்தவன், 

“அடி பிக்காளி நாயே…! அப்போ நீ மானம் போச்சு மரியாதை போச்சுன்னு அழுதது இதுக்கு தானா?” என்று தலையில் கை வைத்தான்.

பின், சட்டென நிமிர்ந்து, “சரிடி, அதான் இவ்ளோ விஷயம் இருக்குல்ல, அட்லீஸ்ட் கல்யாணத்துக்கு முன்னாடி நாளாவது சொல்லிருக்கலாம்ல டி…” என்றான் அதட்டலாக.

அதில் எழில்மதி, “உங்களை என்ன செஞ்சா தகும்? நான் பேச வந்தத கொஞ்சமாவது கேட்டீகளா.. அதான் நான் பொறுமையா பேசலாம்ன்னு சொன்னேன்ல… அதோட எனக்கும் கொஞ்சம் அதிர்ச்சியா இருந்துச்சு. போயும் போயும் மத்தவங்க உழைப்ப சுரண்டுற ஒருத்தரை விரும்புறோம்னு…” என்று சத்தமாக ஆரம்பித்தவள் மெலிதாக முடிக்க, அவன் தான், அப்பேச்சை எடுக்கவே இல்லை. அதனை கண்டுகொள்ளவும் இல்லை.  
 
“அட லூசு பேபி! போன்ல தான் நான் கேட்கலைன்னா ஒரு மெஸேஜ் ஆச்சு பண்ண வேண்டியது தானடி… அதான் உன் போன்ல வாட்சப் இருக்குல்ல…?” எனக் கேட்டான் ஆதங்கமாக.

அவளோ, “நான் என்ன பண்ண, போன்ல நெட் பாலன்ஸ் தீந்துருச்சு. எப்படியும் விடிஞ்சு மாமா தான் போட்டுவிடும். அதான் போன் பண்ணிக்கிட்டே இருந்தேன்…நீங்க திடுதிப்புன்னு கடத்துவீகன்னு கனவா கண்டேன்!” என்று ஆர்ப்பாட்டமில்லாமல் அவள் கூறிய பதிலில் அழுவதா சிரிப்பதா என அறியாதவன், “ஐயோ ஐயோ ஐயோ!” என முட்டிக்கொண்டான் தன்னை நொந்து.

குயில்களின் இனிய இசை செவியறையை தட்டி எழுப்ப,  திடுக்கென கண் விழித்த சமர்திறமறவன் தான் எப்போதும் எழும் நேரத்தை விட தாமதமாகி விட்டதில் வாரி சுருட்டி எழுந்தான். முதலில் அவன் விழிகள் ஒரு ஓரத்தில் சுருண்டு படுத்திருந்த அவனின் மனையாளை ஒரு கணம் வருடிவிட, அவள் அசையாமல் உறங்கியதில் அவன் வேலைகளை காண சென்றான்.

 வயலுக்கு சென்று விட்டு குளிப்பதற்காக வந்த சமர், அப்போது தான் படுக்கையில் இருந்து எழும்பாமல் நெளிந்து கொண்டிருந்த மானஸ்வியை பார்த்து விட்டு, அமைதியாக துவாலையை எடுக்க, சில நொடிகளில் வேகமாக எழுந்த மானஸ்வி குளியலறை நோக்கி ஆவேசமாக ஓடினாள்.

‘எதுக்கு இவள் இப்படி ஓடுறா?’ என்று புரியாமல் பார்த்த சமரும் அவள் பின்னே செல்ல, அங்கு வாந்தி எடுத்துக்கொண்டிருந்தவளை கண்டு படபடத்தவன், “ஏய்! எதுக்குடி வாந்தி எடுக்குற?” என்றான் அவள்  தலையை பிடித்த படி.

இதில், அங்கு தான் விறகு அடுப்பில் வெந்நீர் வைத்துக்கொண்டிருந்த பரமேஸ்வரியும் சீதாவும் சமரை ஒரு மார்க்கமாக  பார்க்க, அவனோ “ப்ச் என்ன இங்க பார்வை… போய் அவளுக்கு குடிக்க எதுனா எடுத்துட்டு வாங்க” என்று உத்தரவிட்டவன், மானஸ்வியை பார்க்க, அவளோ வாந்தி எடுத்து சோர்ந்து போய் வயிற்றை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தாள்.

வயிற்று வலியின் வீரியம் அவள் முகத்தில் தெரிய, “என்னடி ஆச்சு… பீசாவா தின்னு குடலு வெந்துருச்சா?” என அப்போதும் தன் திமிரை விட்டுக்கொடுக்காமல் கேள்வி எழுப்பியவனை முறைத்தவளை அவனும் முறைத்து, இன்னும் அங்கேயே இருந்த பரமேஸ்வரியை ஒரு முறை முறைக்க, அவர் அடுத்த நொடி தலைமறைவாகி இருந்தார்.

மானஸ்வி சுருண்டு அமர்ந்த கோலம் அவனை குடைய, “இன்னைக்கு தலைக்கு குளிச்சியா?” எனக் கேட்டான் சூசகமாக. என்ன ஆச்சு திடீர்னு வயிறு வலிக்குது என சிந்தித்து இருந்தவளோ, “இப்போ தான எந்திரிச்சேன் அதுக்குள்ள எப்படி குளிக்க முடியும்… இனிமே தலைக்கு குளிக்கிறதை பத்தி யோசிக்கலாம்” என்றாள் கடுப்பாக. 

அதில் தலையில் அடித்த சமர், “வீட்டுக்கு தூரமான்னு கேட்டேன்?” என்றான் பல்லைக்கடித்து கொண்டு. அவள் அப்போதும் புரிந்து கொள்ளாமல், “ஆமா பாத்ரூம் வீட்டுல இருந்து இவ்ளோ தூரமா இருக்கு. வீட்டுக்குள்ள பாத்ரூம் வைச்சா தான் என்ன?” என்று மேலும் வயிற்றை இறுக்கி பிடித்தாள்.

“கிரகம் புடிச்சவளே!” என்று கையை நீட்டி திட்டியவன், “தீட்டான்னு கேட்டேன்…” என்று ஆரம்பித்து பின்,  ‘இதுவும் இந்த கிறுக்கச்சிக்கு புரியுமோ புரியாதோ?’ என எண்ணி, “பீரியட்ஸ் ஆ?”  எனக் கேட்டான்.

அவள் “ஸ்ஸ்ஸ்…” என வலியை பொறுத்துக்கொண்டு, “ம்ம்ஹும்” என மறுப்பாய் தலையாட்ட, அதில் புருவம் சுருக்கி, “பொறவு ஏன் வயித்து வலிக்குது” என தயக்கமாக கேட்டவனிடம், “எனக்கு என்ன தெரியும்… நான் என்ன டாக்டரா?” என்று எரிந்து விழுந்தவள், அறைக்கு சென்றிட சிறிது சிறிதாய் வலி அவள் மேனி எங்கும் பரவ, துவண்டு விட்டவள், ஆர்யவுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு போன் செய்ய எத்தனித்தாள்.

ஆனால், அதற்கு அவளின் தலைவன் இடம் கொடுக்காமல், அறைக்கு வந்து “வா… சீக்கிரம்!” என்று அழைக்க, மானஸ்வி தான் எங்க எனப் பார்த்தாள்.

சமரோ “ப்ச்… விளக்க மானா வேற சொல்லணும் இவுகளுக்கு…” என்று முணுமுணுத்தபடி அவளை கையில் அள்ளி இருக்க, உறக்கத்தில் அவனை தூக்கி இருந்தாலும் இப்போது தான் அவன் தீண்டலை உணர்ந்தவள், திரு திரு வென விழித்தாள்.

பின் உடனேயே, “டேய்! காட்டான்… எங்கடா தூக்கிட்டு போற? அப்படியே போய் புதைக்க போறியா?” என்று வலியை அடக்கிக்கொண்டு கேட்க, அவனோ, அவன் வைத்திருந்த ஜீப்பில் அவளை கிடத்தி விட்டு, “உன்னை இங்க புதைச்சா, என் நிலம் தான் வீணாகும்… வேற ஏதாவது புல்லு கூட முளைக்காத இடத்துல புதைக்கிறேன்…” என்று எதிராய் பேசி முறைத்து விட்டு, ஜீப்பை எடுக்க, அவள் தான் கண்ணாடி வழியே அவனை தீயாக முறைத்தாள்.

அவன் அதனை கண்டுகொள்ளாமல், நேராக மருத்துவமனையில் ஜீப்பை நிறுத்தி விட்டு, மீண்டும் அவளை தூக்க, “எனக்கு நடந்து வர தெரியும்… தள்ளி போ!” என்று சிடுசிடுத்தாள் மானஸ்வி.

“ஓ! அப்ப இறங்கு!” என்று திமிராய் அவளை பார்த்து இடுப்பில் கை வைத்து நின்றவனை வாய்க்குள் திட்டிக்கொண்டு, நெற்றியில் படர்ந்திருந்த கூந்தலை பின்னால் தள்ளி விட்டு, இறங்க போனவளுக்கு மீண்டும் வயிற்றில் ஒரு சுள்ளென்ற வலி கிளம்ப, தடுமாறி விழ போனவளுக்கு, வலியில் விழியும் கலங்கி விட்டது.

ஆனால், அவள் விழாதவாறு, தன் இரும்பு கரம் கொண்டு பிடித்து கொண்ட சமர், “திமிர கொஞ்சமாச்சும் கொற அரக்கி…” என்று இலவசமாக அறிவுரையை கூறி, சட்டென்று தூக்கி கொண்டு, உள்ளே சென்றான்.

உள்ளே இருந்த மருத்துவரோ, சமரை ஒரு மாதிரி பார்த்து விட்டு, மானஸ்வியை சோதிக்க, சமர் வெளியில் காட்டா விட்டாலும் உள்ளுக்குள் படபடத்து தான் இருந்தான்.

சோதனைகள் முடிந்து வெளியில் வந்த மானஸ்வியிடம் “என்னவாம்?” என சமர் வினவ, அவள் தான் கடுப்பாக, “அந்தம்மா எதுவுமே சொல்ல மாட்டேங்குது… டாக்டர்ன்னா கேள்வி கேட்டா பதில் சொல்லணும்! நான் சென்ஸ்!” என்றவள் ‘என்ன ப்ராப்லம்?’ என்று அந்த மருத்துவப்பெண்மணியிடம் கேட்டும் அவர் பதில் கூறவே இல்லை என்று எரிச்சலடைந்தாள்.

பின், “சரி நீ போ! நான் ஆரிய வர சொல்லிக்கிறேன்” என்று அவனுக்கு உத்தரவிட்டவளுக்கு, அவன் அருகில் இருப்பது என்னவோ போல் இருந்தது. அவனோ, அவளை விழி உயர்த்தி அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு, மருத்துவர் அறைக்குள் அவளை இழுத்து செல்ல, அவள் தான் ‘திமிரு புடிச்சவன்’ என முணுமுணுத்தாள்.

உள்ளே சென்றதும் அந்த மருத்துவரோ, “என்ன சமர், புது வைஃப் அ சரியா பாத்துக்குறது இல்லையா?” என்று வினவ, அவன் கண்கள் இடுங்க “என்ன ஆச்சு சித்தி?” என்றான் புரியாமல். அவனின் சித்தி என்ற அழைப்பில் சற்று திடுக்கிட்டவள், “எது சித்தியா?” என்று முழிக்க, அவன் அவனின் சித்தியான பானுவை நோக்கி கொண்டிருந்தான்.

பானுவோ,” ஹ்ம்ம்… உன் பொண்டாட்டிக்கு கிட்னில கல் இருக்கு. அதான் இந்த வலி” என்றதில் அவன் சற்று அதிர்ந்து மானஸ்வியை பார்க்க, அவளோ, “ஓ! அப்போ அந்த கல்லை எடுத்து கையில குடுங்க… இவன் தலையை உடைக்கணும்…” என்றவளின் அசட்டையிலேயே இது ஏற்கனவே அவளுக்கு தெரியும் என்று உணர்ந்தவன், அவளை தீப்பார்வை பார்த்து விட்டு, 

பானுவிடம், “எதுனால இந்த நோவு வருது சித்தி?” என்றான் கேள்வியாக.
 
“ம்ம்… சரியான சாப்பாடு இல்லைன்னா வரலாம். அப்பறம் நேச்சர் காலிங் அ அடக்குனா கூட இந்த ப்ராப்லம் வரும்! அனேகமா இந்த ப்ராப்லம் ஆல்ரெடி இருந்துருக்கு. இப்போ கல் சைஸ் கொஞ்சம் பெருசாகி இருக்கு. நான் சொன்னதுல ஏதோ ஒன்னை உன் வைஃப் தொடர்ந்து செஞ்சதுனால வந்த வினை இது. எதுக்கும் என்ன ஏதுன்னு விசாரிச்சுக்கோ. நான் பத்து நாள் மாத்திரை எழுதி தரேன். அதுல கரைஞ்சுட்டா நல்லது இல்லைன்னா ஆபரேஷன் தான் பண்ணனும்…” என்றவர் சிரத்தையாக மருந்தை எழுதினார். 

“ஊஃப்… நான் கிளம்புறேன்!” என்று எழுந்த மானஸ்விக்கு அவர் போட்ட ஊசியில் சற்று வலி மட்டுப்பட்டு இருக்க, அவள் கையை பிடித்து அழுத்தி அமர வைத்த சமர், மருந்து சீட்டை வாங்கி விட்டே கிளம்பினான்.

வீட்டிற்கு சென்றதும், பதறி இருந்த சீதா மற்றும் பாண்டியம்மாளிடம் விஷயத்தை கூறியவன் அவளை அறைக்கு அழைத்து சென்றான். மானஸ்வியோ “ப்ச் இப்ப எதுக்கு நீ இதை என்னமோ தம்பட்டம் அடிச்சுட்டு இருக்க… இதுல திடீர் அக்கறை வேற? எனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆகுது…” என்று கிளம்பியவளை தடுக்காமல் அவனும் ஒரு சேரில் சென்று அமர்ந்திட, நேரம் ஆக ஆக, அவளுக்கு வலி அதிகரிக்க தொடங்கியது.

தன்னவளின் முக மாற்றமே உள்ளதை சொல்லி விட, பாயை விரித்து தலையணையை போட்டவன், “படு!” என்று கண்ணை காட்டினான். “நீ உன் வேலைய பாரு!” என கண்டித்தவள் நகர போக, வலுக்கட்டாயமாக அவளை பிடித்து படுக்க வைத்து, முட்டி போட்டு அவளருகில் அமர்ந்து அவளின் இரு கன்னத்தையும் பிடித்தான்.

“எந்திரிச்ச… அறைஞ்சு பல்லை கழட்டிடுவேன்…! ஒழுங்கா சாப்புட்றது இல்லையா நீ? அதான் ஊரை அடிச்சு சம்பாதிக்கிறியே சாப்பிட வேண்டியது தான?” என்று அவன் கேட்ட கேள்விக்கு, “மைண்ட் யுவர் ஓன் பிசினெஸ்!” என பதிலளித்தாள்.

அதில் கடுப்பானவன், சப்பென்று ஓங்கி அறைந்து விட்டான். அவன் அறைவான் என்று எதிர்பாராதவள் கன்னத்தில் கை வைத்து திகைக்க, முயன்று தன் கோபத்தை அடக்கியவன், 

“அதான் கொல்லைப்பக்கம் பாத்ரூம் இருக்குல்ல, சித்தி சொன்ன மாதிரி சாப்பிட மட்டும் தான் செய்யலையா, இல்ல பாத்ரூம் போகாம அடக்குனியா?” என்று நேரடியாக கேள்வி கேட்டவனுக்கு என்ன பதில் கூற என்று புரியாமல் ஒரு நொடி விழித்தவள், அவனின் அழுத்த பார்வை தொடர்ந்ததும், “நீ ஒரு ஓரத்துல பாத்ரூம் வைச்சுருந்தா நான் எப்படி போறதாம்…” என்றாள் மெல்லிய குரலில்.

அதில் கனிந்த சமர் தான், “அப்போ அதான் பிரச்சனையா?” எனக் கேட்டதில், “நைட் அங்க ஒரே இருட்டா இருந்துச்சு. அதான் போகல” என்று முணுமுணுப்புடன் உண்மையை ஒத்துக்கொண்டவளை பெருமூச்சுடன் பார்த்தவன், “அறிவிருக்கா? படிச்ச புள்ள தான நீ? ஏற்கனவே சாப்பிடாம இருந்ததுல இந்த நோவு இருந்துருக்கு. இப்ப அதை இவ்ளோ பெருசா இழுத்து விட்டிருக்க… என்னை கூப்டருந்தா நான் துணைக்கு வந்துருப்பேன்ல. இல்ல எங்கம்மாவையாவது கூட்டிட்டு போக வேண்டியது தான!” என்று கடிந்தவன், மென்மையாக ஏதோ பேசும் முன், சடசடவென உள்ளே வந்தான் ஆர்யவ். 

“மானஸ்… என்ன ஆச்சு டா. மறுபடியும் பெயின் வந்துருச்சா…? நான் ஸ்பெஷலிஸ்ட்கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கிட்டேன். வா போகலாம்…” என்று பரபரப்பாய் பேசி, அவளின் தலை முடியை ஓரமாக ஒதுக்கி விட்டவன், அவள் கையை பிடித்து எழுப்பி விட்டு சமரை முறைக்க, சமரோ அனலாய் தகித்து நின்றான்.

“ஏய்! உன்னை நான் படுக்க தான சொன்னேன். மவளே… ஒழுங்கா இப்ப நீ தூங்குற! இல்ல… இன்னும் நாலு கல்லை முழுங்க வைச்சுடுவேன்” என்று விழி தெறிக்க அதட்ட, மானஸ்வி தான் ‘இப்ப உனக்கு என்ன தாண்டா வேணும்?’ என்ற ரீதியில் கொட்ட கொட்ட விழித்தாள்.  

 மூங்கில் குழலாகும்!🎶
மேகா!

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 5]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Megavani

Story MakerContent AuthorYears Of Membership

கை நீட்டி அழைக்கிறேன்- Part 45

தொலைதூர விழி ஈர்ப்பு நீ