in , , , ,

வைரத்தாரகை 10

அத்தியாயம்-10:

“நீயே பார்க்குறல்ல வேலு? பார் என் பையன் நிலைமையை?” கோமாவில் படுத்திருந்த மகனை கண்டு அடக்க மாட்டாத ஆத்திரத்துடனும், முகம் கொள்ளா வேதனையுடனும் பேசிய நண்பனை கண்டு மனம் குமைந்தது வேலுவிற்கு. 

“இவன் எதுக்கு வந்துருக்கான்னு எனக்கும் தெரியலை தாஸ்? உண்மை தெரிஞ்ச ஒரே ஆளும் உயிரோட இல்லை. அப்பறம் எப்படி இந்த கேசி நம்ம விஷயத்துல மூக்கை நுழைக்கிறான்? எம் பொண்ணை எதுக்கு குறி வைக்கறான்னு என்னால முடிவுக்கே வர முடியலை? அவளைத்தான் கல்யாணம் செய்துப்பேன்னு வேற சொல்றான்?!

இதோ இன்னைக்கு மீட்டிங் கூட போர்ட் ஆஃப் டைரக்டர்ஸோட நாங்க இல்லாமலயே அரேன்ஜ் பண்ணிருக்கான்” என்றவர் கையெழுத்திட்ட விபரங்களையும் சொல்ல,

“முழு முட்டாளாகிட்டியா வேலு? இதுக்காக நாம எவ்வளவு வேலை பார்த்தோம்? எப்படி அவன்பேர்ல அத்தனையும் எழுதி கொடுத்த?மகமேல உனக்கு அவ்வளவு பாசமா?” தாஸிற்கு இருப்பு கொள்ளவில்லை. 

“உளறாத தாஸ். வைஜெயந்தி தான் எனக்கு முக்கியம்” வேலுவின் பேச்சில் தாஸின் புருவங்கள் யோசனையாய் சுருங்கியது.

அவனின் பாவனையை பார்த்தவர்,” நீ யோசிக்கிற அளவுக்கு இதுல ஒன்னுமில்லை? நீ முதல்ல ராகுலை பாதுகாப்பா ஒரு இடத்துக்கு மாற்று. நான் போய் மீட்டிங்கை எப்படியாவது நிறுத்த பார்க்குறேன்” அதற்குமேல் பேசாது விடைபெற்றவர், அலுவலகத்திற்கு கிளம்பி செல்லும் வழியிலேயே வைஜெயந்திக்கு அழைக்க, தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக கூற, வீட்டு எண்ணிற்கு அழைத்தார்.

“சார்.. மேம்.. கேசி சாரோட கார்ல போயிட்டாங்க” வேலைக்கார பெண்ணின் தகவலில், ஆத்திரம் அதிகம் ஆனாலும், அலுவலகத்திற்கு தான் சென்றிருப்பார்கள் என்ற நினைப்புடன் வண்டியை விரட்டியவருக்கு, அங்கும் ஏமாற்றம், அலைக்கழிப்பு, போராட்டமென கழிந்து ஒருவழியாய் வீடு திரும்பியிருக்க, இன்னும் வீடு வந்து சேராத மகளை நினைத்து ஒருபுறம் கோபமாகவும், மறுபுறம் பதற்றமாகவும் வாயிலிலேயே மகளுக்காக காத்துக்கொண்டு அமர்ந்திருந்தார் வேலு. 

சற்று நேரத்திற்கெல்லாம் கேசியின் வாகனமும் உள்ளே நுழைந்தது. 

“அடடே அம்மா.. அண்ணியை பார்த்திங்களா? அண்ணன் என்ன சொன்னாரு?” இளைய மகனிடம் மருமகளைப்பற்றியும் அவள் வந்து போனதிலிருந்து நடந்த விஷயங்களை பற்றியும் விவரித்து கொண்டிருந்தார் ஷிவானி. 

இடையில் ரிஷிதாவின் பேரும் வர,” என்ன பண்றாம்மா அந்த குட்டச்சி?” ரிஷிதாவை பற்றி கேட்க, 

“ஏய்..‌கொஞ்சமாவது மரியாதை குடுத்து பேசுடா.நான் வளர்த்த பொண்ணு, டாக்டரா வந்துருக்கா? அதுக்கு ஒரு மரியாதை கொடுக்கிறியா நீ?” மகனை கடிந்து கொண்டார் ஷிவானி.

“அதான்மா டவுட்டே. நீங்க வளர்த்து அவ எப்படி டாக்டர் ஆனா? எங்களையும் நீங்கதான் வளர்த்திங்க? ஆனால் நாங்க ஆளுதானே வளர்ந்துருக்கோம்? அந்த குட்டச்சிக்கு மட்டும் எப்படி மூளை வளர்ந்துச்சு?” ஷஷாங்க் கேலி பேச, 

“ரொம்ப பேசாதடா.. இதை அவகிட்ட நீயே கேட்டு தெரிஞ்சுக்கோ?” மகனின் மனம் அறிந்து பேச, ஓர் நிமிடம் மறுபுறம் அமைதியானது. 

“ஷஷி..” ஷிவானி அழைக்க, 

“ம்ம்.. அவளுக்கு எப்பவும் அண்ணன் தான்மா ஹீரோ” ஆழ்ந்து ஒலித்தது அவனது குரல். 

“போடா.. முட்டாள் மாதிரி பேசாத. ரிஷிதாவைப் பற்றி எனக்கு தெரியும்” தாயின் பேச்சில் சற்றே நம்பிக்கை துளிர்விட, 

“வீட்டுக்கு வர்றாளாமா?” ஷஷியின் கேள்வியில் சிரித்து கொண்டார் ஷிவானி.

“இல்லைடா பெரியவன் வர்றதுக்கு முன்னாடியாவது என்னோட ரெகுலர் செக்கப்புக்கு வந்துகிட்டு இருந்தா. இப்ப வர்றதில்லை. இன்னைக்கு கூட வர முடியாதுன்னுட்டு சொல்லிட்டா” என,

“ம்ம்.. சரிங்கம்மா.. ” என்றவன்,

“ம்மா.. அண்ணன் கால் தான் வருது. நான் அப்பறம் கூப்பிடுறேன்” என்றுவிட்டு, வேகமாக கேசியின் அழைப்பை ஏற்றான் அவன். 

ஷிவானியிடமிருந்து விடைபெற்று மலர்ந்த முகமாகவே கேசியுடன் கிளம்பினாள் வைஜெயந்தி. 

காரில் சிறிதுநேரம் அமைதியே நிலவ,” அரைகிறுக்கோட வர்றதுக்கு ரொம்பவே சந்தோஷமா வர்ற போலவே வைரா?” கிட்டதட்ட அவளது வீட்டை நெருங்கும் நேரம் அவன் பேச்சு கொடுக்க, வைஜெயந்தியிடம் எந்த பதிலுமில்லை. 

வீடும் வந்துவிட,கதவை திறந்து இறங்க போனவள்,” உங்க அம்மாவை சந்தோஷப்படுத்த தானே என்னை கூட்டிட்டுப்போன? அந்த வேலையை நான் முடிச்சுட்டேன்” இறங்கியவள் கார் ஜன்னலில் சாய்ந்து மிடுக்குடன் பதில் கொடுத்தவள்,

“சோ.. நீ இனி என்கூட நேரடியா மோது. எங்கப்பாவை நீ எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய கூடாது” முடித்து விட்டு திரும்ப போக,

தனது வழக்கம் போல் கேசி “இன்ட்ரெஸ்டிங்” உச்சரிக்க,ஏனோ இந்த இன்ட்ரெஸ்டிங் சற்று கடுமையான முகத்துடன் அவன் சொன்னானோ? என தோன்றியது. நின்று திரும்பி பார்த்தவளுக்கு சற்று ஐயமாக இருக்க,

“இதனால் தாங்கள் சொல்ல வருவது?! எங்கம்மா சந்தோஷமா இருக்கனுன்னா? உங்கப்பாவை நான் எதுவும் செய்யக்கூடாது? இல்லைன்னா வைஜெயந்தி மேடம் என்னை வச்சு செஞ்சுடுவாங்க?” அடக்கப்பட்ட ஆத்திரம் அவனது பேச்சில் தெரிய, உனது ஆத்திரம் என்னை என்ன செய்துவிடும் என்ற பார்வை தான் பார்த்தாள் வைஜெயந்தி.

“இந்த தைரியம் தான் உன்கிட்ட எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு டயன். நாளைக்கு ஆபிசில் சந்திப்போம்” என்றவனுக்கு அவள் வழிவிட்டு வீட்டை நோக்கி நடைபோட, கார் பின்னெடுத்து நகராமல் நேராக அவளை இடிக்கும் நோக்கில் வர, அதிர்ந்து பின்வாங்கினாள் வைஜெயந்தி. 

ஒதுங்கினாலும் அவளை உரசிக்கொண்டு கார் நிற்க,” உன் ஸ்டோலை விட்டுட்ட வைரா” அவள் அணிந்திருந்த ஸ்டோலை அவள் முகத்தில் விட்டெறிந்தவன், அவளது அதிர்ச்சியை கண்டு கொள்ளாது கிளம்பி சென்று விட்டான்.

“ரிஷிதா இப்ப எழுந்து சாப்பிட வரப்போறியா இல்லையா?” தூங்குவது போல் பாவனை செய்து கொண்டிருந்தவளை அவளது அறைத்தோழி அடித்து எழுப்ப,

“ஏன்டி என்னை இப்படி படுத்துற? எனக்கு தான் இப்ப பசிக்கலைன்னு சொல்லிட்டேன் தானே?” சுணங்கிய முகத்துடன் எழுந்தமர்ந்தவளின் தலையில் ஓங்கி கொட்டினாள் அவளது தோழி ஆத்மிகா.

“நானும் கவனிச்சுட்டு தான் இருக்கேன். மிஸ்டர்.கேசி வந்ததுல இருந்து நீ நல்லாவே இல்லை? நீ அவரை ஏதும் லவ் பண்றியா?” நேரடியாக விஷயத்திற்கு வர, 

“ச்சீ.. வாயை மூடு குரங்கு” அவளது வாயில் அடித்தாள் ரிஷிதா.

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. எனக்கு கேசி நல்ல நண்பன். அவனை எனக்கு ரொம்பவே பிடிக்கும்” அவளது விளக்கம் ஆத்மிகாவிற்கு ஆச்சரியத்தை தான் தந்தது. 

“அதான் அவரைப்பற்றி எல்லாம் தெரிஞ்சு நீ தெளிவா இருக்கியே? அப்பறம் என்னதான்டி உன் பிரச்சனை?” ரிஷியின் விளக்கத்தில் குழம்பிப் போனாள் ஆத்மி.

“எல்லாம் தெளிவா தெரிஞ்சது தான் பிரச்சனையே ஆது” என்றவளின் பதிலில் கிறுக்கு பிடிப்பதை போல் இருந்தது ஆத்மிகாவிற்கு. 

பதில் சொல்லிவிட்டு தனது சிந்தனையில் மூழ்கியிருந்தவளை முதுகில் ஓங்கி ஒரு குத்து குத்தியவள்,” நீ எதைப்பத்தி வேணும்னாலும் யோசி. என்ன பிரச்சனை வேணும்னாலும் வரட்டும். அதை சாப்பிட்டுட்டு பண்ணு. வா என்கூட..” கிட்டதட்ட அவளை உணவறைக்கு இழுத்து சென்றுவிட்டாள். 

முதல் அழைப்பை ஏற்கும் முன் அழைப்பு துண்டிக்கப்பட்டு விட, மீண்டும் கேசி தான் அழைத்து கொண்டிருந்தான். 

“ஹலோ.. அண்ணா”

“ஷஷி… முழுசா விசாரிச்சு முடிச்சிட்டியா? அந்த சிஇஓ அவனுங்க ஆளுதானா?” மேலும் சில தொழில் விவரங்களை அவன் பேச,

“ரொம்ப நேக்கா வேலை பார்த்துருக்கார் அண்ணா. மீட்டிங் அரேன்ஜ் பண்ணி உடனே தூக்கிட்டா நல்லது” தொழில்முறை பேச்சுக்களை பேசி முடித்தவன் ஆலோசனை சொல்லி வர, 

“ம்ஹூம் அவன் இருக்கட்டும். நான் சொன்ன ஏற்பாடுகளை செய்து முடிச்சாச்சா?” கேசியின் எண்ணிற்கு தொடர்ந்து மெசேஜூகள் வந்ததற்கான சத்தம் கேட்டு கொண்டே இருந்தது. 

“ம்ம்.. பண்ணியாச்சு அண்ணா. நீங்க ஓகே‌‌ சொன்னதும் ஒரு யூனிட் கிளம்பிடுவாங்க” என,

“அப்ப அவங்களை கிளம்பறதுக்கு உத்தரவு கொடுத்துட்டு, யூனிட் பொறுப்பை நம்ம முரளி கையில் கொடு. அவன் அந்த சிஇஓவை சமாளிப்பான். 

நீயும் கிளம்பிடு, வர்ற வெள்ளிக்கிழமை வைஜெயந்தியை நான் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிடுவேன்” அலைபேசியில் தொடர்ந்து வந்த அறிவிப்பு செய்திகளை பார்க்க, அவன் முகத்தில் புன்னகை தானாக மலர்ந்தது.

“இவ்வளவு சீக்கிரத்துல முடிக்க முடியமாண்ணா?” ஷஷி சற்று கவலையாக கேட்க, 

“அதெல்லாம் முடியும். பார்த்துக்கலாம்” என்று விட்டான் கேசி. அதற்குமேல் அவனென்ன பேச?

“சரிண்ணா.. ரிஷிதா ஒத்துகிட்டாளா? ” என்ன முயன்றும் அவனது குரலில் எட்டிப்பார்த்த ஆர்வத்தை அவனால் கட்டுப்படுத்த இயலவில்லை.

“நீயே அந்த குடாக் கிட்ட பேசி சம்மதம் கேளேன்டா” கேசியின் குரலிலும் புன்னகை பூத்திருக்க,

“அண்ணி ஏதும் மறுபடி வேலைய ஆரம்பிச்சுட்டாங்களா அண்ணா?” சரியாக விஷயத்திற்கு வந்தவனை நினைத்து சத்தமாக சிரித்தான் கேசி.

“அவள் செய்றது எல்லாமே எனக்கு இன்ட்ரெஸ்டிங்கான வேலைதான். பார்க்கலாம் எந்த அளவிற்கு போறான்னு?” மேலும் சிறிது நேரம் அவனுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டிய‌ விஷயங்களை செய்துவிட்டு, இணைப்பை துண்டித்தவன், வந்த ஒலித்தகவல்களை வாட்ஸப்பில் திறந்து கேட்டவனின் உதடுகள் தானாக முணுமுணுத்தது, “இன்ட்ரெஸ்டிங்”.

வீட்டிற்குள் நுழைந்த மறுநிமிடம் தந்தையின் அருகே தான் சென்றமர்ந்தாள் வைஜெயந்தி.

“டாட் ஆர் யூ ஓகே? உடம்புக்கு ஏதும் இல்லையே?” அவரது உடம்பில் கைவைத்து பார்க்க, உடல்வெப்பத்தில் எந்த மாற்றமும் இல்லை. சோஃபாவில் களைத்து ஓய்ந்த தோற்றத்தில் களைத்து சாய்ந்து அமர்ந்திருந்தார் வேலு.

மகளின் பரிவில் மனம் மகிழ்ந்தாலும்,” இப்படி கேட்க உனக்கு இந்த ஒருநாள் முழுதும் தேவைப்பட்டுச்சாம்மா? என் எச்சரிக்கையையும் மீறி அந்த கேசியோட ஏன் நீ கிளம்பிப்போன‌ சொல்லு?” பிரியமாய் ஆரம்பித்து கோபத்தில் முடிந்த தந்தையின் குரலில் அவரை காண முடியாது எழுந்து நின்றாள் வைஜெயந்தி.

அப்பொழுது அங்கு டேபிளில் வைக்கப்பட்டிருந்த ஷிவானி அளித்த புடவையும் கண்ணில் பட, வரவழைத்த குரலில்,

“அப்பா.. என்னையறியாமலேயே நான் கேசியை விரும்ப ஆரம்பிச்சுட்டேன்னு நினைக்கறேன்பா” என்றவள் முடிக்கும் முன்பே,

“நிஜமா தான் சொல்றியா வைஜெயந்தி?!” குட்டிமா வைஜெயந்தியாக மாறிப்போன விதம் உறுத்தினாலும், வியர்த்து வழிந்து நின்றிருந்த தந்தையை பரிதாபமாக பார்த்தாள் அவள்.

“ஆமாப்பா நான் பதினெட்டு வயது பருவப்பெண், கேசி இருபத்தைந்து வயது கட்டிளங்காளை. அவரோட வீர பராக்கிரமத்தை பார்த்து நான் மயங்கி விழுந்துட்டேன்” கேலி சுமந்த குரலில் கைகொட்டி சிரித்தவள், ஷிவானி அளித்த புடவையை மேஜையில் இருந்து தட்டுடன் தூக்கி எறிய, ஹாலில் இருந்த அலங்காரத்தூணில் பட்டு அபஸ்வரமாய் ஒலி எழுப்பியது அந்த வெள்ளித்தட்டு.

மகளின் செயலில் இன்பமாய் அதிர்ந்தவர், “இதை ..இதைதான் உன்கிட்ட எதிர்பார்த்தேன் குட்டிமா” பலம் மீண்ட வாலியைப்போல் வேலுவின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். 

“நான் உங்க பொண்ணுப்பா.. என் வாழ்க்கையை இன்னொருத்தன் கையில் முடிவு செய்ய விடுவேனா? அவன் நோக்கம் என்னன்னு தெரிஞ்சு அதை நடக்க விடாம இந்த வைஜெயந்தி பண்றாளா இல்லையான்னு பாருங்க ” அவள் விசிறியடித்ததில், தரையின் மூலையில் இன்னதென்று சொல்ல முடியாத கோணத்தில் ஷிவானி அன்பளிப்பாக அளித்த புடவை கிடக்க, அந்த இடத்தில் நீலகேசியே அப்படி சுருண்டு விழுந்து விட்டதைப்போல் கற்பனை செய்து மகிழ்ந்தது அவளது மனம்.

“நாளைக்கு மீட்டிங் அரேன்ஜ் பண்ணிருக்கானே? எப்படி சமாளிக்க போற குட்டிமா? இவன் வந்ததிலிருந்து நமக்கு உதவி செய்றதுக்கு ஒருத்தர் கூட முன்வரலயே? இவ்வளவு நாள் இந்த மும்பை நகரில் தொழில் சாம்ராஜ்யத்தையே‌ நடத்திட்டு வர்ற என்னாலயே முடியலையே?”தந்தையின் வருத்தம் மனம் வாடினாலும்,

“நடத்தட்டும் டாட். அவன் என்ன செய்யனும்னு நினைக்கிறானோ செய்யட்டும்” மகளின் பதிலில் குழம்பிப் போனார் வேலு. 

“என்னம்மா சொல்ற?” அதை கேட்கவும் செய்ய,

“அவன் மட்டுமா உண்மையை மறைக்குறான்? நீங்களும் தான் டாட் உண்மையை மறைக்கிறிங்க?” ஏவிய அம்பு தன்புறம் திரும்பியதில் சற்று கலவரமானாலும்,

“உனக்கு தேவையில்லாத விஷயன்னு கூட நான் நினைச்சுருக்கலாம் இல்லையா குட்டிமா?” சமாளித்தார் வேலு. 

“இப்பவும் நீங்க சமாளிக்க தான் பார்க்குறிங்க. என்கிட்ட சொல்றதுல என்ன தயக்கம் டாட்?” வைஜெயந்தியின் பார்வை தந்தை முகத்திலேயே இருக்க,

“தாஸீம் நானும் அவங்க கம்பெனில பார்ட்னரா இருந்தப்போ சில கையாடல்கள் செஞ்சு சொத்து சேர்த்துட்டான். அதை கையும் களவுமா ஆர்.கே பிடிச்சு சட்ட ரீதியா தண்டனை கொடுக்க முயற்சி செஞ்சப்போ, நான் என் நண்பனை காப்பாத்திட்டேன்” ஒருவாறு சொல்லிவிட்ட தந்தையை ஆச்சரியமாக பார்த்தாள் வைஜெயந்தி. 

“எப்படி டாட் தாஸ் அங்கிள் இவ்வளவு கெட்டவரா இருந்தும் அவரோட நட்பா இருக்கிங்க? ” மகளின் கேள்வி நியாயமானது தான்!? ஆனால் பதில் சொல்லும் சூழலிலா அவர் இருக்கிறார்? 

“தாஸ் கெட்டவன் தான் குட்டிமா. ஆனால் எனக்கு எப்பவும் நல்ல நண்பனா தான் இருந்திருக்கான்” என, உதட்டை பிதுக்கினாள் மகள். 

அதுவே சொல்லாமல் சொல்லியது, நீங்கள் பேசுவது நம்பும் படியாக இல்லை என்று. 

“என்னவாக வேணும்னாலும் இருக்கட்டும் டாட்.ஆனால் இனிமேலாவது நீங்க தாஸ் அங்கிளோட கான்டாக்ட்ட குறைச்சுக்கோங்க.. எனக்கு நீங்க தான் முக்கியம்” ராகுலுடனான சம்பந்தைத்தை பற்றிய பேச்சு எதுவும் எடுக்காமல், மகள் தன்னைப் பற்றிய அக்கறையில் பேசுவது அவருக்கு குற்ற உணர்வை கொடுக்க,

“அது வந்து குட்டிமா.. ராகுல்னா நாம சொல்றதுக்கெல்லாம் ஒத்து வருவான். உன்னை மீறி எதுவும் செய்ய மாட்டான்னு தான்டா அவனை பேசி வச்சேன். அதோட நீயும் என்னை விட்டு எங்கயும் போக வேண்டி இருக்காதுன்னு தான்” தன்னை பக்கத்திலேயே வைத்து கொள்ள தந்தை விரும்பினார் என்பது மனதிற்கு சற்றே இதம் தந்தாலும், 

“இந்த சென்டிமென்ட் பேச்செல்லாம் நமக்குள்ள எப்ப வர ஆரம்பிச்சது டாட்?” என்றாளே பார்க்கலாம். முதன்முறையாக தனது வளர்ப்பை நினைத்து வேலுவிற்கு சற்று பயமாக கூட வந்தது. 

“இந்த பேச்சு கேள்விப்பட்டப்பவே எனக்கு ஆத்திரம் வந்தது டாட். இருக்கட்டும் முடிஞ்சது பத்தி இனி நான் பேச விரும்பலை” பேசிக்கொண்டே, வேலைக்கார பெண்ணை அழைத்தாள். 

” ரோஷினி.. முதல்ல இங்க மறைச்சு வச்சுருக்குற மைக் எல்லாம் எடுக்க ஒரு நல்ல டெக்னிஷியன் வர சொல்லு” என்றவளை வியப்பாக பார்த்தார் வேலு. 

“சிம்பிள்பா.. தகவல் சொல்ல கதிர் இப்போ உயிரோட இல்லை. இருந்தாலும் கேசிக்கு எல்லா விவரமும் தெரியுது. கண்டிப்பா அவங்க எல்லா இடத்திலேயும் ஆளும் வச்சுருக்காங்க, சிப்பும் செட் பண்ணிருப்பாங்க” அவள் பேச பேச வாய் பார்த்து கொண்டிருந்த ரோஷினியை அவள் ஒரு முறை முறைக்க, வேகமாக அந்த இடத்தை காலி செய்தாள் அவள்.

“ஒண்ணு மட்டும் தெளிவா புரியுது டாட். இது இன்னைக்கு திடீர்னு செய்ற விஷயம் கிடையாது. வருடக்கணக்கில் நம்மளை சிக்க வைக்க போட்ட ப்ளான் இது. கேசியோட ப்ளான் வெற்றியடைய நான் அவனுக்கு முக்கியம்” வைஜெயந்தி பேசும் போதே, அவளது மனம், இப்படி ஒரு அறிமுகத்தை தவிர்த்து கேசி தனக்கு நல்ல முறையில் அறிமுகமாகி இருக்கக் கூடாதா என்ற எண்ணம் தோன்ற, தலையை குலுக்கியவள், வேகமாக மேலேறி தனது அறைக்கு சென்றுவிட்டாள்.

அதுவரை அவள் பேசியதை எல்லாம் கேட்ட கேசியின் முகத்தில் புன்னகை அரும்ப, ஜார்ஜை அழைத்தான்.

“ஜார்ஜ்… நீ போய் நாம செட் பண்ணி வச்ச மைக்ஸெல்லாம் நாளைக்கு எடுத்து விட்டுட்டு, அம்மா வைஜெயந்திக்கு கொடுத்த புடவையை வாங்கிட்டு வா” கட்டளையிட்டவனின் நினைவு முழுவதும் வைஜெயந்தியே.

உணவுண்டு முடித்து விட்டு அறைக்கு திரும்பிய ரிஷிதா, சாவகாசமாக படுக்கையில் அமர்ந்து தோழியுடன் பேசிக் கொண்டே, தனது அலைபேசியை எடுத்து பார்க்க, ஏகப்பட்ட விடுபட்ட அழைப்புகள் அயல்நாட்டிலிருந்து வந்திருந்தது. 

ஏதோ ராங் நம்பர் என்று நினைத்தவள் வைக்கப்போக, மீண்டும் அலைபேசி கைகளில் அதிர, 

“என்னடி ஃபோனையே உத்து பார்த்துட்டுருக்க? எடுத்து பேசு” ஆத்மிகா அழைப்பை ஏற்க சொல்ல,

“ஏதாச்சும் ராங் காலா இருக்கும்டி? எனக்கு யாரு ஃபாரின் கால் பண்ண போறா?” என்றவள் அலைபேசியை லவுட்ஸ்பீக்கரில் போட்டு அழைப்பை ஏற்க,

“நான் கால் பண்ணா மட்டும் எடுக்கவே மாட்டியாடி குட்டச்சி?” எடுத்த எடுப்பிலேயே ஷஷாங்க் கத்த, அவன் பேச்சிலேயே யாரென்பதை கண்டுபிடித்தவள்,

“நீ கால் பண்ணா நான் எதுக்குடா எடுக்கனும் வெள்ளை இங்க்கு?!” பதிலுக்கு இவளும் எகிற, இவர்களது பேச்சை சுவாரசியமாக வேடிக்கை பார்த்த ஆத்மிகா, 

“யாருடி இது?” ஒற்றை விரலால் அவள் தோளை சுரண்டி மெதுவாக கேட்க, 

“சத்தமாவே கேளு.. தி கிரேட் நீலகேசி தம்பி,ஷஷாங்க் தான் ” தன்னவளின் அதரங்களில் தனது பெயர் உச்சரிக்கப்பட்டதற்கே ஷஷியின் காதல் நரம்புகள் சௌந்தர்யலஹரி வாசிக்க ஆரம்பித்தது.

தாரகைதடமிடுவாள்🖤🖤🖤…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 8 சராசரி: 4.8]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Ruthivenkat

 

About Author:

 

                  வாசகர்களுக்கு வணக்கம். நான் ருதி வெங்கட். இது எனது புனைப்பெயர். உண்மையான பெயர் உதயா வெங்கட்ரமேஷ். முதுகலை பட்டதாரி, இல்லத்தரசி. கதை படிப்பது மிகவும் பிடித்த விஷயம். அதுவே கதை எழுத ஊக்கசக்தியாக அமைந்து விட்டது. போட்டிக்கதையின் மூலம் எழுத்துப்பயணமும் தொடங்கியது. இதுவரை நான்கு கதைகள் எழுதி முடித்துள்ளேன். முதல்கதை புத்தகமாக  AD பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது. முகநூலில் ஓரளவு வாசகர்களுக்கு முகமறிந்த நபர்தான் . எனது கதைகளை தொடர்ந்து படிக்க Ruthivenkat (ருதிவெங்கட்)என்கிற எனது பெயரை FOLLOW செய்யுங்கள். கதைகளை பற்றிய அறிவிப்புகள் உங்களுக்கு வந்துவிடும்.

               வாசகர்களின் ஆதரவிலும், உற்சாகமூட்டலிலும்தான் கடந்த ஒருவருடத்தில் நான்கு கதைகளை வேகமாக முடிக்க முடிந்தது. உங்களது ஆதரவுகளை தொடர்ந்து வழங்குங்கள். 

 

        நன்றி

Story MakerContent AuthorYears Of Membership

ஆனந்த கவிதை அவள் 1

கை நீட்டி அழைக்கிறேன்- Part 45