in

என் நெஞ்சமே உன் வாழ்வின் எல்லை 22

நெஞ்சம் 22 

வாகிணிக்கு திதி கொடுக்கும் நாளும் வந்தது. அன்று அனைவரும் மிகாவின் வீட்டில் தான் இருந்தனர். அவர்களோடு ரஞ்சனும் இருந்தான். ஆனால் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. தவிர்க்கவே நினைத்தனர். திதி கொடுப்பதற்கான சடங்குகள் ஆரம்பிக்க, அந்தநேரம் மஞ்சரியும் அங்கு வந்தார். சுரேஷ் அதிக நேரம் இங்கு வந்து அமர்ந்திருக்க முடியாது என்ற காரணத்தால் வர முடியாது என்று சொல்லிவிட, அவரின் தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு வருவதற்கு மஞ்சரிக்கு கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது.

 ஆனால் மஞ்சரியின் வரவையே மிகா விரும்பவில்லை. என்று வாகிணியின் திதி பற்றி நிரஞ்சனா கூறினாரோ, அன்றிலிருந்து பழைய நினைவுகள் அவளை வாட்டி வதைத்துக் கொண்டிருக்க, அதற்கு காரணம் மஞ்சரி தானே என்ற கோபமும் அவளுக்குள்ளே எரிமலையாய் வெடிக்க காத்துக் கொண்டிருந்தது. அதற்கேற்றார் போல் அவர் வந்து நிற்கவும்,

 “நீங்க எங்க இங்க வந்தீங்க? எதுக்கு வந்தீங்க?” என்று அவள் கேட்க,

 “ஏன் வரக் கூடாது. வாகிணி என்னோட அண்ணி. அவங்களை எனக்கு எப்போதும் பிடிக்கும், அவங்களுக்கு திதி கொடுக்க நான் வரக் கூடாதா?” என்று மஞ்சரி கேட்டார்.

 “அவங்களை பிடிக்க போய் தான், அவங்க உயிரோட இருந்தவரைக்கும் அவங்களை நிம்மதியா இருக்க விடாம செய்தீங்களா? அவங்க மனசை கஷ்டப்படுத்தி அவங்களுக்கு சீக்கிரம் மரணத்தை தேடி கொடுத்திட்டு, இப்போ வந்து அவங்க திதியில் கலந்துக்கிறதில் என்ன பிரயோஜனம், முதலில் இங்க இருந்து போங்க,” என்று மிகா கோபமாககூற, 

ஏற்கனவே எப்போதும் அதுகுறித்து மஞ்சரிக்கு உள்ளுக்குள் சிறு குற்ற உணர்வு இருந்துக் கொண்டுதான் இருக்கும், ஆனால் அதை மிகா சுட்டிக் காட்டவும், அவரால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. “என்ன பேசற? வாகிணி அண்ணி மரணத்துக்கு நான் காரணம்னு சொல்றீயா?” என்று அவர் கேட்க, 

“ஆமாம் அதுதான் உண்மை. அவங்க நீண்ட நாள் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டியவங்க, ஆனா என்னை காரணமா வச்சு அவங்களை நீங்க ரொம்பவே வேதனைப்படுத்தி அவங்களை படுத்த படுக்கையாக்கி, மரணம் மூலமா அவங்களை என்கிட்ட இருந்து பிரிச்சுட்டீங்க, அவங்க மட்டும் என்னோட இருந்திருந்தா என் வாழ்க்கை பாதை மாறியிருக்குமா? அவங்க இப்போ இந்த உலகத்தில் இல்லாததுக்கு காரணம் நீங்க தானே, உலகத்தில் எத்தனையோ பேர் என்னென்ன தப்பெல்லாம் செய்றாங்க, ஆனா வாகிம்மா ஒரு நல்லது தானே செய்தாங்க, அதுக்கு அவங்களை உயிரோடு இருந்தவரை வாட்டி வதைச்சீங்க, அவங்க போனப்பிறகும் என்னை இங்க இருந்து துரத்தி என் வாழ்க்கை பாதையையே மாத்திட்டீங்க, இதெல்லாம் செய்றதால உங்களுக்கு என்ன கிடைச்சுது? சொல்லுங்க என்ன கிடைச்சுது? 

உயிரோட இருந்தவரை அவங்க மனசை கஷ்டப்படுத்திட்டு, இப்போ அவங்க ஆன்மாவை அமைதிப்படுத்த திதி கொடுக்க வந்துட்டீங்களா? இத்தனை வருஷம் எப்படியோ, ஆனா இதுக்குமேல என் அம்மாக்கு திதி கொடுக்கும்போது நீங்க இங்க இருக்கறதை விரும்பமாட்டேன். இன்னும் ஏதாவது நான் மரியாதை குறைவா பேசறதுக்கு முன்ன இங்க இருந்து போயிடுங்க,” என்று அவள் உணர்ச்சிவசப்பட்டு பேச, மஞ்சரி அந்த நொடி அவமானமாக உணர்ந்தார். யாராவது தனக்கு சாதகமாக பேசுவார்களா? என்று அவர் பார்க்க, அங்கிருந்த அனைவருக்குமே மிகாவின் ஆதங்கம் நன்றாகவே புரிந்தது. அதனால் இப்போதாவது அவள் அதை கொட்டி தீர்க்கட்டும் என்று அமைதியாக இருந்தனர். 

மற்றவர்கள் அமைதியாக இருந்தாலாவது பரவாயில்லை. ஆனால் தன் மகன் ரஞ்சனும் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தததை தான் மஞ்சரியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் அங்கிருந்து உடனே வெளியே சென்றுவிட்டார். 

அவரை பேசிவிட்டு அதே கோபத்தோடும் படபடப்போடும் மிகா நின்றிருக்க, “நடக்கறது நடக்கணும் இருந்திருக்கு, இதுக்கு மேல நடந்ததை நினைச்சு என்னாக போகுது, அதனால வீணா மனசை கஷ்டப்படுத்திக்காத, வா வந்து உட்காரு,” என்று நிரஞ்சனா சமாதானமாய் கூறவும், மிகாவும் போய் அமர்ந்து திதி கொடுக்கும் சடங்குகளில் கலந்துக் கொண்டாள்.

 இதையெல்லாம் அமைதியாக பார்த்திருந்த ரஞ்சனுக்கோ, இப்போது தன் அன்னையை பார்த்து மிகா கேட்டதெல்லாம் தவறாக தோன்றவில்லை. சரியாக தான் கேட்டிருக்கிறாள். ஆனால் இதையெல்லாம் ஆரம்பத்திலேயே அவள் கேட்டிருந்தால், இப்படி இவர்களுக்குள் இத்தனை நீண்ட பிரிவு ஏற்பட்டிருக்காது. இதோ இப்போது அவளது முகத்தை பார்த்து பேசக்கூட அச்சப்படும் சூழ்நிலை உருவாகியிருக்காது. ஒருபக்கம் அவளிடம் கோபமாக சவால் விட்டாலும், மறுபக்கம் அவளை காயப்படுத்திவிட்டு அதற்கு அதிகம் வேதனை கொள்பவனும் அவனே அல்லவா? இப்படியான சூழ்நிலைகளை தவிர்ப்பதற்கு தான் அவன் இங்கு இந்தியா வராமல் பிரான்ஸிலேயே இருந்தான். ஆனால் மிகாவின் பேட்டி அவனை இங்கே இழுத்துக் கொண்டு வந்துவிட்டது. அதற்கு ஒருவகையில் காரணம் அழகுராணிக்கு அவன் செய்த சத்தியத்தையும் சொல்லலாம், 

வாகிணி தான் தன் இறுதி காலத்தில் இவனுக்கு மிகாவின் மீது இருக்கும் அன்பு குறித்து புரிந்துக் கொள்ளாமல் போனார். ஆனால் அழகுராணி அப்படியில்லை. தன் மரணத்திற்கு முன்பு ரஞ்சனிடம் மிகா குறித்து பேசியிருந்தார். அப்போது மிகா நடிகையாக மாறி மூன்று வருடங்கள் முடிந்திருந்தது. அழகுராணிக்கோ கர்ப்பப்பை புற்று நோய் அதுவும் ஆரம்பத்தில் தெரியாமல் கொஞ்சம் தீவிரமானதும் தான் கண்டுப்பிடித்து அவர் பிழைப்பதே சிரமம் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். அவ்வப்போது அவரை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு செல்வதே அவரின் இரு மகள்களின் கடமையாக இருந்தது. 

அவந்திகாவும் முன்பு போல் இல்லாமல் இப்போது நன்றாகவே மாறியிருந்தாள். தாயிடமும் சரி தங்கையிடமும் சரி அன்பாகவும் பாசமாகவும் நடந்துக் கொண்டாள். அவளின் மாற்றத்திற்கு காரணம் சுதாகர் தான், 

சுதாகர் ஒரு திரைப்பட தாயாரிப்பாளர். தந்தைக்கு பிறகு அவர்களது தயாரிப்பு நிறுவனத்தை அவர் ஏற்று நடத்திக் கொண்டிருந்தார். அவருக்கும் அவந்திகாவிற்கும் கிட்டத்தட்ட பத்து வயதிற்கும் மேல் வித்தியாசம். அவர் ஏற்கனவே திருமணமானவர். கொஞ்சம் பிரமாண்டமாய் படம் எடுக்க நினைத்து தொடர்ந்து படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் அவருக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டது. அதனால் நஷ்டத்தை ஈடுகட்ட அவரின் சொத்துக்களை விற்க வேண்டிய சூழல், அதனால் அவரின் மனைவிக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டைகள் வந்து இருவரும் விவாகரத்து மூலமாக பிரிந்துவிட்டனர். இன்னுமே கடன் தொல்லைகள் தீராததால் அவர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். 

அடுத்து மீண்டும் படமெடுத்து தலைதூக்க நினைக்க, அவர்கள் நிறுவனம் தந்த வாய்ப்புகளால் இன்று முன்னனி கதாநாயகனாக இருந்த ஒரு நடிகன் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுப்பதாக கூற, அதேபோல் குறைந்த சம்பளத்தில் நடிக்க ஒரு முன்னனி நடிகையை சுதாகர் தேடி தான் அவர் அவந்திகாவை பார்க்க வந்தார். அவரைப்பற்றி கேள்விப்பட்டிருந்ததால் அவந்திகாவும் நடிக்க ஒத்துக் கொள்ள, அப்படித்தான் அவர்களுக்குள் நட்பு ஆரம்பித்து அது இருவரும் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்ற நிலையில் வந்தது. 

தாகரின் நட்பு அவந்திகாவின் மனதில் இருந்த வெறுமையை போக்க, அவள் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த படங்களை நடித்துக் கொடுத்ததும், சினிமாவிற்கு ஓய்வு கொடுத்துவிட்டு குடும்ப வாழ்க்கையில் நுழைய முடிவெடுத்து சுதாகரை திருமணம் செய்துக் கொள்வதாக அறிவிப்பை வெளியிட்டாள். அதையும் ஊடகங்களில் எப்படியெப்படியோ சித்தரித்து எழுதினர். 

அவந்திகாவிடம் உள்ள பணத்துக்காக அவந்திகாவின் முந்தைய வாழ்க்கையைப் பற்று தெரிந்தும் சுதாகர் அவளை திருமணம் செய்ய முடிவெடுத்ததாகவும், அவந்திகாவிற்கோ பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் தன்னைவிட அதிக வயதானவராக இருந்தாலும் சுதாகரை திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்ததாகவும் அதிகம் பேச்சுகள் வந்தது. ஆனால் திரையுலகத்தில் இதெல்லாம் சர்வ சாதாரணம் என்பதால் இருவருமே அதையெல்லாம் பொருட்படுத்தாமல் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்தனர். 

அவந்திகாவின் வாழ்க்கை சீரானது குறித்து அழகுராணிக்கு மகிழ்ச்சி. அதேபோல் மிகாவின் வாழ்க்கையும் சரியாக வேண்டுமென்று அவர் நினைத்தார். ஒருநாள் மிகா படப்பிடிப்பு சம்பந்தமாக வெளியூர் சென்றிருக்க, அப்போது அவந்திகாவிடம், “மிகாவை ஒரு நல்ல இடத்தில் தத்து கொடுத்தேன். ஆனா என்னோட வச்சிருந்து உன்னோட வாழ்க்கையை அழிச்சிட்டேனேன்னு எத்தனையோ நாள் வருத்தப்பட்டிருக்கேன். ஆனா எப்படியெப்படியோ போய் இப்போ உன்னோட வாழ்க்கையை ஒரு சரியான நிலைக்கு கொண்டு வந்துட்ட, 

ஆனா மிகாவை நினைச்சா தான் கவலையா இருக்கு, ஒன்னுல அவ பிடிவாதமா நின்னுட்டா அவளை மாத்தறது கஷ்டம். மனசுல அவ ரஞ்சனை நினைச்சிட்டு இருந்தாலும், அவங்க அம்மா மேல இருக்க கோபத்தில் அவனை கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்கா, எங்க அந்த பிடிவாதம் வாழ்க்கை முழுசும் இருந்துடுமோன்னு பயமா இருக்கு, கடைசிவரைக்கும் அவ தனியா நின்னுட்டா என்ன செய்றது? அவ மனசை மாத்தணும், அதுக்காகவாவது எனக்கு இன்னும் கொஞ்ச வருஷம் அந்த கடவுள் ஆயுளை கொடுத்திருக்கலாம், எப்போ என் உயிர் போகும்னு தெரியல, எனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா, நீதான் அவளை பார்த்துக்கணும்,” என்றார். 

“இதை நீங்க எனக்கு சொல்லணுமா ம்மா, முன்ன எப்படியோ, இப்போ நான் ரொம்பவே மாறிட்டேன். அவளை நான் நல்லப்படியா பார்த்துக்கிறேன்.” என்று அவந்திகா ஆறுதலாக பேச, 

“எனக்கு தெரியும், ஆனாலும் அவ குணமும் நல்லா எனக்கு தெரிஞ்சது தானே, வாகிணி அக்கா சொன்னதால தான் இப்போ அவ நம்மளோட இருக்கா, இல்ல அவ இங்க வந்திருப்பாளா? அப்படி வராம இருந்திருந்தாலும் நல்லப்படியா இருந்திருக்கும், அவ மனசை மாத்தி ரஞ்சன் அவளை கல்யாணம் செய்திருப்பான். ஆனா விதி இப்படியெல்லாம் நடக்கணும்னு இருக்கு, அவந்திகா, எனக்கு ரஞ்சனை பார்க்கணும்னு இருக்கு, இப்போ மிகா இங்க இல்லாத சமயம் தான் சரி. ரஞ்சனை இங்க வர வைக்கிறீயா?” என்று அழகுராணி கேட்டார். 

“அவன் உங்களை வந்து பார்ப்பானா? நம்ம மேலல்லாம் அவனுக்கு அந்த அளவுக்கு மரியாதை இல்லம்மா,” 

“அதைப்பத்தி எனக்கு ஒன்னுமில்ல, போகறதுக்கு முன்ன மிகாவை குறித்து நிம்மதியா போகணும், அதான் எனக்கு வேணும், உனக்கு ரஞ்சனிடம் பேச ஒருமாதிரி இருந்தா போன் போட்டு கொடு நான் பேசறேன். அவன் இங்க வந்தா அப்போ நீ வேணும்னா வெளிய எங்கேயாச்சும் போ.” 

“அப்படியெல்லாம் இல்லம்மா, முன்ன எப்படியோ, இப்போ மிகாவை என் தங்கையா நான் பார்க்க ஆரம்பிச்சிட்டேன். அவளோட எதிர்காலத்தை பத்திய அக்கறை எனக்கும் இருக்கு,” என்று கூறிய அவந்திகா ரஞ்சனுக்கு அழைத்து மிகாவை பற்றி பேச விரும்புவதாக கூற, மறுநாளே அவன் அவர்களை பார்க்க வந்தான். நோயால் இன்னுமே உருக்குலைந்து போயிருந்த அழகுராணியை பார்த்தவனுக்கு மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவரிடம் அவரின் உடல்நிலை குறித்து அவன் விசாரித்ததற்கு பதில் கூறிய அழகுராணி மிகாவை பற்றி பேச ஆரம்பித்தார். உடன் அவந்திகாவும் இருந்தாள். 

அவந்திகாவிடம் கூறியதை அவனிடமும் கூறியவர், “கடைசி வரைக்கும் என்னைப்பத்தி மிகாக்கு தெரியாம இருந்தாலே நல்லா இருந்திருக்கும், இப்போ என்னோட வந்து அவ இருப்பது உனக்கு பிடிக்கலன்னு எனக்கு தெரியும், இதில் ஏதோ ஒரு கோபத்தில் நடிக்கணும்னு ஒரு முடிவை எடுத்திட்டா, நடிச்சிட்டும் இருக்கா, இந்த பாதையிலே போவோம்னு முடிவெடுத்திட்டா, ஆனா கண்டிப்பா ஒருநாள் தான் இளைப்பாற ஒரு இடம் தேவையா இருக்கும்னு கண்டிப்பா நினைப்பா, ஆனா அவ குணத்துக்கு அதுக்கு வேற ஒருத்தரை தேடிப் போகமாட்டா, ஆனா உன்க்கிட்டேயும் வருவாளான்னு தெரியல, அதுக்காக அவளை நீ விட்ற மாட்டீயே, அவ மனசை புரிஞ்சு அவளுக்காக நீ காத்திருப்பியா ப்பா,” என்றுக் கேட்க, 

“என்னோட வாழ்க்கையே நான் வாழறதே அவளுக்காக தான், அவ எப்போ என் வாழ்க்கையில் முழுமையா வருவான்னு நான் எதிர்பார்த்துட்டு இருக்கேன். அவளுக்காக எந்த நேரத்திலும் எப்படிப்பட்ட சூழலா இருந்தாலும் நான் காத்திருப்பேன். சிமி மேல அந்த அளவு நான் காதல் வச்சிருக்கேன். என்னோட இந்த காதலை என் அம்மா, சிமி, வாகிணி அத்தை, என்னோட பெரியம்மா யாருமே சரியா புரிஞ்சிக்கல, நீங்களும் அதை எப்படி புரிஞ்சிக்கிட்டீகன்னு தெரியல, ஆனா என் மேல நம்பிக்கை வச்சு இதை பேசினீங்களே, அதுவே எனக்கு சந்தோஷம். கண்டிப்பா சிமி எங்க சுத்தினாலும் அவ இளைப்பாரும் இடம் என்னோட நெஞ்சமா தான் இருக்கும், இது உங்க மேல சத்தியம்.” என்று அவன் கூறவும் தான் அழகுராணிக்கு நிம்மதியாக இருந்தது.

 அடுத்து சிறிதுநாட்களில் அவர் மரணம் அடைய, இனியாவது தன் அன்னையுடன் இருந்து அவரை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்திருந்த அவந்திகாவிற்கு அவரது மரணம் மிகவும் வேதனையை அளித்தது. அழுகையில் கரைந்தாள். 

ஆனால் மிகாவோ ஏற்கனவே வாகிணியின் மரணத்தை அருகில் இருந்து பார்த்ததால், மனதளவில் அவளுக்கு அதிகம் பக்குவம் வந்துவிட்டிருந்தது. ஆனாலும் ஒன்றுக்கு இரண்டு அம்மாக்களை கொடுத்துவிட்டு, வெகு விரைவில் அவர்களை அவளிடமிருந்து பிரித்துவிட்ட விதியை நினைத்து அவளால் வேதனையடையாமல் இருக்க முடியவில்லை. 

அடுத்து சில மாதங்களில் அவந்திகாவும் சுதாகரும் திருமணம் செய்துக் கொள்ள, அவர்களோடு வந்து இருக்க சொல்லி எவ்வளவோ வேண்டிக் கேட்டும் மிகா அவர்களோடு இருக்க ஒத்துக் கொள்ளவில்லை. இங்கு சஞ்சன் வீட்டிலும் அவளை அழைத்துப் பார்த்தனர். ஆனால் அவள் வர மறுத்துவிட்டாள். நேத்ராவோ ஒருபடி மேலே போய் அஞ்சனை குடியிருப்பிலிருந்து வெளியே வந்துவிடுகிறோம் அப்போதாவது வருகிறாயா? என்று கேட்டுப் பார்த்தாள். ஆனால் மிகா அதற்கும் ஒத்துக் கொள்ளவில்லை. 

அங்கே அழகுராணி இருந்த வீட்டிலும் இருக்க பிடிக்காமல், தனியாக வீடு வாடகை எடுத்து தங்கிக் கொண்டாள். தனிமையை மட்டுமே தனக்கு துணையாக தேடிக் கொண்டாள். 

இதையெல்லாம் தள்ளி இருந்து பார்த்து ரஞ்சன் மிகவுமே வேதனை கொண்டான். அவளை தன்னிடம் வரவைக்கும் வழி எப்படி என்று அவனுக்கு தெரியவில்லை. ஆனால் எப்படியாவது கூடிய சீக்கிரம் வரவைக்க வேண்டுமென்று நினைத்தான். ஆனால் அவள் முகத்தில் கூட விழிக்க முடியாத காரியத்தை செய்து அவளின் வெறுப்புக்குள்ளாகிவிட்டான். அப்போது பிரான்ஸ்க்கு சென்றவன் தான், திரும்ப வரவே கூடாதென்று தான் நினைத்தான். ஆனால் அவளின் பேட்டியை கண்டு வந்துவிட்டான். ஆனால் அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்பது தெரியாமல் திரும்பவும் சொதப்பவே செய்கிறான். 

இதற்கு முடிவென்பதே இல்லையா? இவர்கள் இப்படி தள்ளித்தான் நிற்க வேண்டுமா? விதி அப்படித்தான் முடிவு செய்திருக்கிறதா? என்று நினைத்து மனம் வருத்தப்பட்டது மட்டும் தான் மிச்சம். 

போன வேகத்திலேயே மனைவி வந்ததை சுரேஷ் புரியாமல் பார்த்தவர், “என்ன மஞ்சு, அதுக்குள்ள திதி முடிஞ்சுதா? நீ லேட்டா போயிட்டீயா? இல்லை இன்னும் ஆரம்பிக்கவே இல்லையா?” என்று கேள்விகள் கேட்க, 

“இப்போ தான் ஆரம்பிக்குது. ஆனா நான் அங்க இருக்கக் கூடாதாம், ஏன்னா நான்தான் அண்ணி சாவுக்கு காரணமாம், மிகா என்னை வெளிய போக சொல்லிட்டாங்க,” என்று மஞ்சரி கணவரிடம் குற்றப்பத்திரிகை வாசித்தார். 

“மிகாவா? அவளா அப்படி சொன்னா? நம்ப முடியாமல் அவர் கேட்க, “அவ தான் அப்படி சொன்னாங்க, அவங்க உயிரோட இருக்கும்போது அவங்களை இம்சை பண்ணினேனாம், அவங்களை சாகடிச்சிட்டேனாம், இப்போ அவங்க இறந்ததுக்கு பிறகு அவங்க ஆத்மா சாந்தியடைய திதி கொடுக்க வந்துட்டேனாம், அண்ணி சாகணும்னு என்னைக்காவது நான் நினைச்சிருக்கேனா? அவங்க இறப்பு எனக்கும் இன்னைக்கு வரைக்கும் எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? 

ஆனா அவ எப்படியெல்லாம் பேசறா, இதைவிட கொடுமை அவ பேசினதுக்கு கூட இருந்தவங்க யாரும் மறுப்பு சொல்லல, நான் அங்க தான் இருக்கணும்னு யாரும் பேசல, அப்போ அவங்களும் அதை ஆமோதிக்கிறாங்களா? அவங்க பேசலன்னா கூட பரவாயில்லைங்க, ஆனா நம்ம ரஞ்சன் கூட அமைதியா இருக்கான். என்னைவிட எல்லோருக்கும் அவ தான் முக்கியமா போயிட்டால்ல,” என்று மஞ்சரி புலம்பவும், 

“எனக்கு எப்போதும் இருக்கும் பயமே, வாகிணியோட மரணத்துக்கு நீதான் காரணம்னு யாரும் சொல்லிடக் கூடாது என்பது தான், ஆனா இப்போ அந்த குற்றச்சாட்டும் வந்திடுச்சா?” என்று சுரேஷ் கேட்டார். அதை கேட்டு மஞ்சரி அதிர்ந்தவராக, 

“அப்போ நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீங்களா? உங்களுக்கே தெரியும் நிரஞ்சனா அக்காவை விட வாகிணி அண்ணிக்கு நான்தான் நெருக்கம். பிரபஞ்சனை கல்யாணம் செய்துக்கிட்டு அவங்க வாழ்க்கை நாசமா போயிடுச்சேன்னு எல்லோரையும் விட நான்தான் அவங்களுக்காக வருத்தப்பட்டேன். அவங்க இன்னொரு கல்யாணம் செய்துக்கிட்டு சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சேன். 

அவங்க குழந்தையை தத்தெடுத்தது கூட நான் தப்புன்னு சொல்லல, ஆனா அது ஏன் அழகுராணியோட பொண்ணை தத்தெடுத்தாங்க, அதுதான் எனக்கு பிடிக்கல, அப்போ கூட அவங்க அவளை வளர்க்கவே கூடாதுன்னு நான் நினைக்கலியே, ஆனா அவ ரஞ்சனோட நெருங்க கூடாதுன்னு நினைச்சேன். ஆனா நான் நினைக்கறதுக்கு எதிரா தானே எல்லாம் நடந்துச்சு, நம்ம ரஞ்சன் அப்போதிலிருந்து இப்ப வரை மிகாவுக்காக தானே உருகுறான். 

அதுதான் எனக்கு பிடிக்கல, நீங்களே சொல்லுங்க, அழகுராணியோட மகளை நம்ம மருமகளா ஏத்துக்க முடியுமா? அழகுராணி எப்படிப்பட்ட படங்களில் நடிச்சா, அப்படிப்பட்டவளோட பொண்ணை நம்ம மருமகளா எப்படி ஏத்துக்க முடியும்? அதுவும் அவளும் இப்போ ஒரு நடிகை. ஒரு நடிகையை நம்ம மருமகளா ஏத்துக்கறது நல்லாவா இருக்கும்? அப்படிமட்டும் நடந்தா நம்மளை எல்லாம் எப்படி மதிப்பாங்க? அதைதான் நீங்க விரும்பறீங்களா?” என்று மஞ்சரி கேட்க, 

“இப்படியான நிலை வந்ததுக்கு காரணமே நீதானே மஞ்சு,” என்று அவர் பதில் கூறவும், 

“எல்லாத்துக்கும் காரணம் நான்தானா? மத்தவங்க சொன்னா கூட பரவாயில்லை. நீங்களே இப்படி சொல்றீங்களே,” என்று மஞ்சரி வருத்தத்தோடு கூறினார். 

“உண்மையை உனக்கு எடுத்து சொல்லணுமில்ல, நீயா புரிஞ்சிப்பன்னு பார்த்தேன். ஆனா புரிஞ்சிக்கல, அப்போ நான் எடுத்து சொல்லித்தானே ஆகணும், நீயா புரிஞ்சிப்பன்னு விட்டா நிலைமை இன்னும் மோசமாகலாம், 

மிகா ஒரு நடிகையோட மகள் அப்படின்னு சொல்றியே, இதுவரைக்கும் அவ வாகிணியோட மகளா தான் இந்த உலகத்துக்கு தெரியுறா, நீ மட்டும் தான் அவளை அழகுராணி மகள்னு சொல்லிட்டு இருக்க, அழகுராணி மகளா பிறந்தது மிகாவோட தப்பா, தன்னோட அம்மா இப்படியானவங்கன்னு கூட தெரியாம வளர்ந்த பொண்ணுக்கு அழகுராணி தான் அம்மான்னு சொன்னதே நீதானே, 

அதுமட்டுமா அம்மாவை போல தான் பொண்ணும் இருப்பான்னு அவளோட குணத்தையே தப்பா பேசினியே, அழகுராணி மட்டும் விரும்பியா இப்படியெல்லாம் செய்திருப்பா, ஏதோ ஒரு கஷ்டம்னு வர போய் தானே இப்படி நடிக்க வந்திருப்பா, ஆனா அது தப்புன்னு நினைச்சு அதுக்காக தண்டனையை மிகாக்கு கொடுத்திட்டீயே, மிகா கேட்டது போல வாகிணி அப்படி என்ன தப்பு செஞ்சா, கணவனோட சேர்ந்து தனக்கு துரோகம் செய்த பொண்ணுன்னு கூட பார்க்காம, அவளோட குழந்தையை நல்லப்படியா வளர்க்கனும்னு தானே வாகிணி நினைச்சா, அது அவ்வளவு தப்பா, ஆனா அதை நடக்கவிட்டீயா? உன்னோட பயத்தை அவங்க மேல திணிச்சு வாகிணியையும் மிகாவையும் நிம்மதியா வாழ விடாம செய்தது நீதானே, 

நீயே உன்னோட மனசாட்சியை தொட்டு சொல்லு வாகிணியோட மரணத்தை நினைச்சு உனக்கு குற்ற உணர்வு இருக்க தானே செய்யுது?” என்று அவர் கேட்க, அது உண்மைதான் என்பதால் மஞ்சரி தலைகுனிந்தார். 

வாகிணி இறந்ததுக்கு பிறகாவது நீ மனசு மாறினீயா? ஒரு நடிகையை எப்படி நம்ம மருமகளா ஏத்துக்க முடியும்னு கேட்டீயே, ஆனா அவளை அப்படி ஒரு சூழ்நிலைக்கு தள்ளினது யாரு? நீதானே, நீ மட்டும் அவளை இந்த வீட்டை விட்டு அனுப்பலன்னா அவ இப்படி ஒரு பாதையை தேர்ந்தெடுத்திருப்பாளா? இவ்வளவுக்கும் காரணம் நீதானே, 

இதெல்லாம் ரஞ்சன் மிகாவை நெருங்கக் கூடாதுன்னு நினைச்சு தான் நீ செஞ்சதா சொல்ற, ஆனா உன்னால ரஞ்சனையும் மிகாவையும் பிரிக்க முடிஞ்சுதா? அவங்க இப்போ பிரிஞ்சு தானே இருக்காங்கன்னு நீ கேட்கலாம், ஆனா அதுக்கு அவங்களுக்குள்ள இருக்க பிரச்சனை தான் காரணமே தவிர, நீ இல்லை. சொல்லப்போனா நம்ம விருப்பம் ரஞ்சனுக்கு முக்கியமேயில்லை. நம்ம விருப்பத்துக்காக அவன் காத்துக்கிட்டும் இல்லை. மிகா மட்டும் சரின்னு சொல்லியிருந்தா எப்பவோ அவன் அவளை கல்யாணம் செய்துட்டு இருந்திருப்பான். அதை முதலில் நீ புரிஞ்சுக்கோ, அவ ரஞ்சனை வேண்டாம்னு சொன்னதுக்கு காரணமும் நீயா தான் இருப்பியோன்னு எனக்கு தோனுது, அப்படி அவங்க பிரிஞ்சு இருக்கறது உனக்கு வேணும்னா சந்தோஷமா இருக்கலாம், ஆனா அதில் பாதிக்கப்பட போறது நம்ம மகனோட வாழ்க்கை தான், அது உனக்கு புரியவே இல்லையா? 

இத்தனைநாள் அவனோட மனசுல இருக்கறதை புரிஞ்சிக்காம போயிட்டோம், இப்போ நான் புரிஞ்சிக்கிட்டேன். இனியும் நீ புரிஞ்சிக்கலன்னா நம்ம மகன் நமக்கு இல்லை அதையாவது தெரிஞ்சிக்கோ, இப்பவே நம்மளைவிட்டு அவன் முக்கால்வாசி விலகிட்டான். இனி முழுசா அவன் நம்மள விட்டு விலகாம இருக்கறது உன்கிட்ட தான் இருக்கு, 

இவ்வளவுநாள் நம்ம வாழ்க்கை நம்ம குறிக்கோளை நோக்கி நகர்ந்திருக்கலாம், ஆனா இனி நாம எதுக்காக வாழணும், நம்ம பிள்ளைங்களுக்காகவும் அவங்க சந்தோஷமான வாழ்க்கைக்காகவும் தானே, நம்ம பொண்ணு நாம நினைச்ச நேரம் போய் பார்க்க முடியாத தூரத்தில் இருக்கா, நம்ம பையன் நம்மளோட இருக்கான்னு தான் பேரு, ஆனா நம்மக்கூட இல்லாத மாதிரி தான், அதை நிரந்தரமா ஆக்கிடாத மஞ்சு, 

இப்போ இவ்வளவு பேசறீங்களே, இத்தனைநாள் ஏன் அமைதியா இருந்தீங்கன்னு நீ கேட்கலாம், இந்த விஷயத்தை தவிர மத்த எல்லா விஷயத்திலும் நீ சரியா தான் இருந்த, ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வசதியான வீட்டில் வீட்டோட மாப்பிள்ளையா போகறது எவ்வளவு தர்மசங்கடமான விஷயம் தெரியுமா? நம்ம சுயமரியாதையை காப்பத்திக்க போராட வேண்டியிருக்கும், ஆனா அப்படி ஒரு சூழ்நிலையை நீ எனக்கு வரவிட்டதேயில்லை. எனக்கான மரியாதையை நீயும் கொடுத்திருக்க, உன்னை சேர்ந்தவங்களையும் கொடுக்க வச்சிருக்க, அதுவே என்னை உனக்கு மதிப்பு கொடுக்க வச்சது. நீ சொல்றதை கேட்க வச்சது. அது பார்க்கறவங்களுக்கு நான் உனக்கு தலையாட்டுவதா கூட தெரியலாம், ஆனா அதை நான் பெருசா எடுத்துக்கிட்டதில்ல, 

நீ எடுக்கும் முடிவில் உனக்கு ஆதரவா இருக்கணும்னு நினைச்சேன். ஒவ்வொரு முறையும் நீ அவசரப்பட்டு செய்ற காரியம் தப்பா இருந்தாலும், உனக்கு ஆதரவா இருக்கணும்னு நினைச்சு தான் அமைதியா இருந்தேன். ஆனா அதனால நம்ம மகனோட வாழ்க்கை கேள்விக்குறியா இருக்குன்னு தெரிஞ்சும் இதுக்கு மேல நான் அமைதியா இருக்க முடியாது. இப்போக்கூட உன்னை மீறி ரஞ்சன் விஷயத்தில் நான் முடிவெடுக்கலாம், ஆனா உன்னோட விருப்பத்துக்கு மதிப்பு கொடுக்கணும்னு நினைக்கிறேன். இனியாவது ரஞ்சன், மிகா விஷயத்தில் நல்லா யோசிச்சு நல்ல முடிவா எடுப்பன்னு நம்பறேன். நான் சொன்னதெல்லாம் கொஞ்சம் யோசிச்சுப் பாரு,” என்றவர், 

“எனக்கு லேசா பசிக்கிற மாதிரி இருக்கு, சாப்பிட ஏதாச்சும் கொண்டு வர்றீயா?” என்றுக் கேட்க, மஞ்சரியும் சரியென்று தலையசைத்துவிட்டு, அங்கிருந்து செல்ல, கண்டிப்பாக மனைவி நல்ல முடிவாக எடுப்பாள் என்று சுரேஷ் நம்பினார். 

ஆனால் மஞ்சரியே சம்மதித்தாலும் மிகா இதற்கு ஒத்துக் கொள்வாளா? மஞ்சரியிடம் பேசியது கூட ஒரு ஆதங்கத்தில் பேசியது தான், அதுவே அவளது மனதிற்கு நிம்மதியை கொடுக்க மறுநாள் படப்பிடிப்பு இல்லாததால் அவள் குருகுலத்திற்கு செல்வதற்கு புறப்பட்டவள் சிலபேரால் கடத்தப்பட்டாள். 

அவள் சென்ற வழியில் ஆள் அரவம் இல்லாத இடத்தில் அவளின் காரை வழி மறித்து அவளது மூக்கில் மயக்க மருந்தை வைத்து அவளை கடத்தியிருந்தனர். அவள் மயக்கம் தெளிந்து கண் விழித்துப் பார்க்கும்போது அவளை நாற்காலியில் கட்டிப் போட்டு வைத்திருந்தனர். மிகாவிற்கு இது யாருடைய வேலை என்பது நன்றாகவே தெரிந்தது. ஆனால் அதிலிருந்து தப்பிக்கும் வழிதான் அவளுக்கு தெரியவில்லை. 

எல்லைகள் விரியும்..

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

10 – 🎶 மூங்கில் குழலான மாயமென்ன

அன்பின் அரசனே 12