in ,

10 – 🎶 மூங்கில் குழலான மாயமென்ன

சமர்திறமறவனை பழி வாங்கும் விதமாக அவன் குளியலறை சென்றதும், வெளியில் இருந்து தாழிட்டு, அங்கு போட்டிருந்த துண்டை தன் கையில் எடுத்துக்கொண்ட மானஸ்வி, “இன்னைக்கு முழுக்க நீ உள்ளேயே இருந்து குளிச்சுக்கிட்டே இரு!” என்ற படி, சாவகாசமாய் துணி துவைக்கும் கல்லில் அமர, சில நிமிடத்தில் குளித்து முடித்த சமர்திறமறவன் கதவை திறந்து பார்த்து விட்டு, புருவம் சுருக்கினான்.

பின், துவாலையையும் காணவில்லை என்று தேடியவன், அதன் பின்னே மானஸ்வியின் விசில் சத்தம் கேட்டதில் தான் ‘ஓ! இந்த அரக்கி பாத்த வேலையா இது?’ என்றெண்ணிக்கொண்டவன், “ஏய்! அரக்கி! கதவை தொரடி!” என்றான் சற்று கண்டிப்பாக.

அவளோ, எதையும் காதில் வாங்காதவாறு அமர, அவன் தான், “பதில் பேசுடி அரக்கி! நீ வெளிய தான் இருக்கன்னு எனக்கு நல்லா தெரியும்… மவளே! வெளிய வந்தேன் உன்ன கண்டந்துண்டமா வெட்டிடுவேன்!” என மிரட்டியவனுக்கு, “அதுக்கு நீ மொதல்ல வெளிய வரனும்ல காட்டான்…” என்ற நக்கலை பதிலாக கொடுத்தாள் மானஸ்வி.

அதில் அவன் முதலில் கடுகடுத்து பின், மெல்லிய இதழ் வளைவுடன், “ஏன்டி! இது பெரிய தேக்கு மரக்கதவு இதை வெளிய பூட்டுனா என்னால ஒடைக்க முடியாதா என்ன?” என்றவன் அந்த கதவை நங்கென்று மிதிக்க, அதற்கே அக்கதவின் தாழ்ப்பாள் லேசாக வளைந்தது.

அதனை கண்டவளோ, மெல்லிய அதிர்ச்சியை முகத்தில் காட்டி விட்டு, பின், “கதவை உடைச்சு அப்படியே வெளிய வாடா! காட்டான்… ஆனால், யாருக்கு மானம் போகும்! உனக்கு தான்… உன் டவல் என்கிட்ட இருக்கு மறந்துடாத!” என்றாள் சற்று எகத்தாளமாகவே.

கதவை மேலும் உடைத்து இவள் பேசியதை கேட்டவன் தான், குரலில் ஏகத்துக்கும் கிண்டலையும் கேலியையும் ஏற்றி, “மானஸ்வி அம்மையார் அவர்களே! வீட்டுல எல்லாரும் கோவிலுக்கு போயிருக்காக. இப்ப நான் கதவ திறந்து இப்படியே வந்தாலும் எனக்கு ஒன்னும் இல்ல. உனக்கு தான்…” என்று இழுத்தவனின் ரீங்காரமே, அவன் கூறாத வார்த்தைகளை புரிய வைக்க, 

அதில் உண்மையாகவே உறைந்து விட்ட மானஸ்வி, “டேய்! டேய்! வந்து தொலஞ்சுடாத…” என்று அவசரமாக துண்டை கதவின் மேல் போட்டவள், தாழ்ப்பாளையும் திறந்து விட்டு விட்டு, அடுத்த நொடியே அங்கிருந்து ஓடியவள் அவன் வருவதற்குள் கிளம்பி காரிலேயே பறந்து விட்டாள்.

தலையை துவட்டியபடி, அவளை பிடிக்க வந்த சமரோ அவள் கண்ணாடி வழியே உதட்டை சுழித்து விட்டு அவனை தாண்டி சென்றதை கண்டு :வீட்டுக்கு தான வருவ! வா! உன்ன பாத்துக்குறேன்!” என்று முறைத்து பார்த்தாலும் அதில் சிறிது யோசனையும் கலந்தே இருந்தது. முதன் முறை பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் அவளிடம் ஏதோ ஒரு முரண் தெரிய, அம்முரண்பாடுகளை களைய முடியாதவாறு எழிலில் வாழ்க்கை அவன் சிந்தையில் தோன்றி, அவனை சினம் கொள்ளவே வைத்தது.

அதன்பிறகு வந்த நாட்களில், இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளவும் இல்லை. வாரிக்கொள்ளவும் இல்லை. மானஸ்வியும் அவளின் வேலைகளுடன், அமைதியுடன் கழித்திட, சமரும் இம்முறையாவது அறுவடை சரியாக நடக்க வேண்டும் என்ற யோசனையில் அதற்கு ஆயத்தமானான்.

இங்கோ, காதல் ஜோடிகளின் நிலைமை வெகு மோசமாக இருந்தது. எழில்மதி தாமரையுடன் ஓரளவு பேசிக்கொண்டும் அவருடனே ஒட்டிக்கொண்டும் இருந்ததில், தாமரைக்கு அவளின் குணமும் வெள்ளந்தி பேச்சும் பிடித்து விட, அவரின் மொத்த கோபமும் ஆர்யவின் மேல் மட்டுமே இருந்தது. இதில் கட்டாய கல்யாணம் வேறு செய்திருக்கிறான் என்றறிந்து அவளை அன்புடனே பார்த்துக்கொண்டார்.

அவள் அவ்வீட்டிற்கு வந்து இரண்டு நாளில் தான், வெளியூருக்கு வேலை விஷயமாக சென்றிருந்த ஆர்யவின் தந்தை தினகர் வீட்டிற்கு வந்தார் கோப முகத்துடன்.

அவரை கண்டதும் எழில்மதி திருதிருவென விழிக்க, தினகரோ அவளை விழியால் சுட்டு விட்டு, “ஆர்யவ்… டேய் ஆர்யவ்” என்று கர்ஜித்தார். அதில் அவளுக்கு தான் இதயம் படபடக்க, இமைக்க கூட மறந்து அப்படியே உறைந்திருந்தாள். 

ஆர்யவோ எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், வெளியில் வந்து அவரை என்னவென பார்த்ததும், தினகர், “என்னடா காரியம் பண்ணிருக்க” என்று அவன் சட்டையை பிடித்து இழுக்க, எழிலோ பதறி விட்டாள். இந்த இரு நாட்களாக அவனின் வாடிய முகத்தையும் அவளிடம் பேச முயற்சி செய்து தவிப்பதையும் அவளும் கண்டால் தானே. இத்தனைக்கும் அவ்வீட்டில் அவளுக்கு எக்குறையும் இல்லாமல் அனைத்தையும் மறைமுகமாக பார்த்துக் கொண்டு தான் இருந்தான். 

ஆனால், அவளால் தான் அவன் செய்த காரியத்தையும், அதோடு அவன் செய்யும் தொழிலையும் ஏற்றுக்கொள்ள இயலவில்லையே. அதில் முயன்று அப்படியே நின்றவளை ஆர்யவ் அமைதியாய் ஒரு முறை நோக்கி விட்டு, அதே பார்வையை அவன் தந்தையிடம் வீச அவரோ கோபத்தின் உச்சியில் இருந்தார்.

“நீ என்னடா சொன்ன? போன மாசம் கூட என்ன சொன்ன?” என்று அவர் எகிற, ஆர்யவ் “என்ன சொன்னேன்?” என்றான் இறுகிய முகத்துடன்.

“அது சரி! அதுக்குள்ளே சாருக்கு மறந்து போச்சு அப்படி தான? அப்பா மேல கொஞ்சமாவது மரியாதையும் பயமும் இருக்கணும்… அப்போ தான ஞாபகம் இருக்கும். தோளுக்கு மேல வளர்ந்து நாலு காசு சம்பாதிக்கவும் மறதி ரொம்பதான் வந்துருச்சு…” என்று பல்லைக்கடித்தவர், “என் கனவுல மண்ணை அள்ளிப்போட உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு…” என்றார் மீண்டும் வெகுண்டு.

எழிலுக்கு தான், அவரின் கோபத்தையும் தாண்டி, ‘அப்படி என்னதான் சொல்லிருப்பாரு… இவரு என்னத்த மறந்தாருன்னு தெரியலையே’ என்று ஒன்றும் புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்க்க, ஆர்யவோ ‘ஒரு மணிநேரம் கூட லவ் பண்ணல. அதுக்குள்ள ஓராயிரத்தெட்டு பஞ்சாயத்து…’ என்று நொந்து போனவன், 

“யோவ்… பா… இப்ப உனக்கு என்னப்பா பிரச்சனை…?” என்று சத்தமாக ஆரம்பித்தவன், பின் அடிக்குரலில், “கல்யாணம் பண்ணிட்டேன்னு சொன்னதும், அம்மாவுக்கு பயந்து ஊருக்கு எஸ்கேப் ஆகிட்டு இப்ப வந்து சும்மா இருக்குறவளை கிளப்பி விடாதப்பா…” என்று எழிலை கண்ணில் காட்டி முறைத்தான்.

அதற்கு தினகரோ, “அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ போன மாசம் என்ன சொன்ன?” என்று அவர் பிடியில் பிடிவாதமாக இருக்க, ‘ஓ! மை முருகா! கொஞ்சம் கருணை காட்டு’ என்று மானசீகமாக வேண்டுதலை போட்ட ஆர்யவ் “என்னத்த தான் சொல்லி தொலைச்சேன்… நீயே சொல்லுப்பா” என்றான் சற்று கடுப்பாகவே.

“நீ கல்யாணம் பண்ணும்போது, எனக்கும் பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன். உங்க அம்மாகிட்ட இருந்து விடுதலை வாங்கித்தரேன்னு சொன்னியா இல்லையா? இப்ப நீ மட்டும் கல்யாணம் பண்ணுனா என்னடா அர்த்தம்…” என்றவரின் குரலில் இப்போது கோபம் இல்லை. கேலியும் குறும்புமே இருக்க, ஆர்யவ் தான், “க்கும்… இங்க ஒத்த கல்யாணம்… அதுவும் காதல் பண்ணி கல்யாணத்துக்கே நாக்கு தள்ளுதாம். இதுல, இவரு வந்துட்டாரு… ரெண்டாவது கல்யாணத்துக்கு!” என்று தீயாக முறைத்தவன், திருமணம் முடித்த கையோடு தினகரிடம் ஆஜராகி விட்டான். 

முதலில் சிறிது நேரம் அமைதி காத்தவருக்கு மானஸ்வியின் நிலையை எண்ணி கலக்கம் தான். ஆனாலும், அவனிடம் கோபம் கொள்ளாமல், நடந்ததை உள்வாங்கி கொண்டவர், தாமரையிடம் பேசி எழிலை வீட்டிற்கும், மானஸ்வியை அவளின் புகுந்த வீட்டிற்கும் அனுப்ப உத்தரவிட்டார்.

இக்கலவரத்துனூடே சமரை பற்றி ஆட்கள் வைத்து அவர் அவசரமாக விசாரிக்க, அவன் மேல் நம்பிக்கை வரவும் தான் இம்முடிவை எடுத்திருந்தார். ஆனால் உடனே கிளம்பி வர இயலாத சூழ்நிலையில் இன்று தான் ஊருக்கு திரும்ப முடிந்தது. வந்ததும் அலுவலகம் சென்று மானஸ்வியை பார்த்து விட்டு தான் வீட்டிற்கு வந்தவர், சூழ்நிலையை இயல்பாக்கும் பொருட்டு, இந்த நாடகத்தை நிகழ்த்தி இருந்தார்.

இதில், சமரும் எழில்மதியை ஆர்யவுடன் அனுப்ப அவன் குடும்பத்தார் முடிவெடுத்ததுமே, ஆர்யவ் பற்றி விசாரித்ததையும் அவர் அறிந்தே இருந்தார். மறைமுகமாக ஒருவர் மாற்றி ஒருவர் கண்ணாமூச்சி விளையாட, தன் அரக்கியின் கண்ணாமூச்சி ஆட்டம் அறியாமல் விட்டது காட்டானின் பிழையோ! 

இங்கு நடந்த தந்தை மகனின் உரையாடலை கேட்ட எழில்மதிக்கு தான் மயக்கமே வருவது போல் இருந்தது. ‘அடக்கிரகமே!’ என விழித்திருந்தவளை பார்த்த தினகர், “என்ன மருமகளே, மாமனார் வீட்டுக்கு வந்தா ஒரு கப் காபி கூட கிடைக்காதா…?” எனக் கேட்க, அவரை திகைத்து பார்த்தவள், என்ன பதில் பேச என்று கூட அறியாமல் அடுக்களை நோக்கி செல்ல போக கையில் காபியுடன் தாமரையே வெளியில் வந்து, “முதல்ல மாமனார மருமகள் கிட்ட அறிமுகப்படுத்துனா தான வந்தது மாமனாரான்னே தெரியும்…!” என நொடித்துக்கொண்டு தினகர் கையில் காபியை திணித்தார்.

அவரோ தாமரையை கண்டுகொள்ளாமல், ஆர்யவிடம் “என்னடா இழுவை ஜாஸ்தியா இருக்கு!” என்று நக்கலடிக்க, ஆர்யவ் தான், அமைதியுடன் அறைக்கு சென்று விட்டான். இந்த அமைதி அவனிடம் புதிது தான். ஆனாலும், அவன் இழுத்து விட்ட இந்நிலையையும் அவன் தானே சரி செய்யவேண்டும் என்றெண்ணி தாய் தந்தையர் அறைக்குள் செல்ல, எழில்மதிக்கு தான் அவனின் தேய்ந்த கண்கள் அவள் விழி முன் வந்து சென்றது.

தாமரை தான், “என்னங்க நீங்க? ஒரு தடவையாவது அவனை நீங்க அறைஞ்சுருக்கலாம். என்ன காரியம் பண்ணிருக்கான் பார்த்தீங்களா? பாவம் இந்த பொண்ணு வேற… என்ன ஏதுன்னு விசாரிக்காம அவன் பாட்டுக்கு தாலி கட்டிருக்கான்! அப்படி என்ன பொறுமையில்லாம போய்ட்டான்…” என்று கரித்து கொட்டியவருக்கு, பாசம் கொட்டி வளர்த்த பிள்ளைகள் ஆளுக்கொரு மூலையிலும், வாழ வந்த பெண்ணோ, வீட்டின் நினைவிலும் வாடுவதை கண்டு வேதனையாக இருந்தது.

தினகரோ அவரை அமைதிபடுத்தி, “பொறு தாமரை! இப்ப அடிச்சு என்ன பண்ண? தப்புன்னு ஒன்னு பண்ணிட்டாங்க. இதுல மானு வேற மாட்டிக்கிட்டா… இப்போ அவங்களை தண்டிக்கிறதை விட, அவங்க பண்ண தப்பை அவங்களை சரி பண்ண வைக்கிறது தான் முக்கியம். எனக்கு என்னமோ நம்ம மானு மாற இதுவும் ஒரு வாய்ப்பா இருக்கும்ன்னு தோணுது. ஆரி கூட இருந்தா அவன் போடுற ஆமா சாமில, அவள் எப்பவுமே இப்படியே தான் இருப்பா…” என்றிட, தாமரைக்கும் அது சரி என பட்டாலும் மனம் தான் பதறிய படியே இருந்தது.

மொட்டைமாடி குளிர் காற்று, மேனியை சிலிர்க்க வைத்தாலும், தூசியற்ற தன்னுடைய ஊரின் பசுமை காற்றிற்கு இது ஒப்பாகாது என்று எண்ணியவாறே, திண்டில் சாய்ந்து தனிமை தாக்க எங்கோ வெறித்திருந்தாள் எழில்மதி.

தன் அருகில் நிழலாட, அந்நிழலிலே அது தன்னவன் என்று உணர்த்தியதில், திரும்பி நடக்க போனவளின் தளிர் கரங்கள் ஆர்யவிடம் சிக்கியது. எழில் கரத்தை இழுக்க முயல, அவனோ “பேபி! நீ என்கிட்ட பேசவேண்டாம்… என்மேல கோபமாவே இரு. ஆனால் ஒரு ரெண்டு நிமிஷம் நான் சொல்றதை கேளு ப்ளீஸ். ரெண்டு நிமிஷத்துல நானே இங்க இருந்து போயிடுறேன்… ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…” என்று அழுத்தமாய் கெஞ்சலாய் ஒரு முடிவுடன் கேட்டவனின் முகத்தை காணாமல் கையை மட்டும் உருவிக்கொண்டு அப்படியே நின்றாள்.

அவள் நிற்பதில் சற்று நிம்மதி ஆனவன், “நான் பண்ணதை நியாயப்படுத்த மாட்டேன் பேபி! நான் பண்ற எல்லாமே தப்பாவே இருக்கட்டும். ஆனால், உன்னை காதலிக்கிறது மட்டும் நூறு சதவீதம் நிஜம். அந்த காதலை காப்பாத்த உனக்கு அவசரமா தாலி கட்டுனதும் என் மனசார தான். ஆனால் இதுனால இவ்ளோ ப்ராப்லம் வரும்… உன்னையும் கஷ்டப்படுத்துவேன்னு நான் நினைக்கவே இல்ல. இதுல அவளையும் சேர்த்து அந்த காட்டான்…” என்று ஆரம்பித்தவன் அவளின் உஷ்ணபார்வை அதிகரித்ததில் வேறு புறம் பார்த்து, 

“சரிய்ய்… உன் அன்புள்ள அமைதியான மாமன்காரன்கிட்ட மாட்டிவிட்டுட்டேன்” என சமாளித்தவன், பெருமூச்சு விட்டு, “ஓகே… நான் அன்னைக்கு பேசுனது தப்பு தான் ரொம்ப சாரி பேபி… நான் ஏதோ டென்ஷன்ல! நான் உன் வீட்டுல பேசி புரியவைக்கிறேன். எனக்கு கொஞ்சம் டைம் குடு! அவங்க கோபத்தை போக்க வேண்டியது என் பொறுப்பு… மானஸ்…” என்று மிக  பொறுமையாக பேசிக்கொண்டு திரும்பியவன் அவள் எதையும் கேட்காமல் சென்றிருப்பதை உணர்ந்து தலையை நிமிர்த்தி கலைந்திருந்த மேகத்தை வெறித்தான். 

இப்படியாக வாரம் ஒன்று கடந்தது. அந்த ஒரு வாரத்தில், மூங்கில்பட்டு கிராமத்தின் பல பகுதிகள் மானஸ்வியின் ஆக்கிரமிப்பில் வரத்தொடங்கியது. இதில், சமருக்கு அவளால் ஏகப்பட்ட தொந்தரவுகள் வேறு. ஆட்கள் யாரையும் வரவிடாததோடு, பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியற்று அவன் வாங்கிய மெஷின்களையும் பழுதாக்கி விட, அறுவடைக்கு தாமதமானால் நெல்மணிகள் நாசமாகிவிடும் என்ற திகைப்பு சமருக்கு வந்ததில், கூடவே கடுமையாக கோபமும் கனலாக எரிந்தது.

அவனை கண்காணித்திருந்த மானஸ்வியின் ஆட்களை கையும் களவுமாக பிடித்தவன், அவர்களை அடித்து பிரித்து மானஸ்வியிடமே அனுப்பி இருக்க, அவளோ அவனுக்கு குடைச்சல் கொடுப்பதையே முழு நேர வேலையாக வைத்திருந்தாள்.

அவள் கொடுக்கும் எத்தகைய குடைச்சலையும் தாங்கி, திருப்பி அடிக்க முடியும் தான். ஆனால், தான் உயிராய் நினைக்கும் விவசாயத்தையல்லவா அவள் நாசம் செய்கிறாள் என எரிச்சலுடன் எண்ணியவன், வெகுண்டு அலுவலகம் கிளம்பி கொண்டிருந்தவளிடம் சென்றான்.

அவள் விழி உயர்த்தி நக்கலாக பார்க்க, சமர் தான், “உனக்கு என்னடி பிரச்சனை? காசுக்காக என்ன வேணா செய்வியா? சோறு போடுற நெல்ல அழிக்க இவ்ளோ வேல பாக்குறவ…! மனுசி தான் நீ எல்லாம்…?” என்று பல்லைக்கடித்தவன், 

பின், ஒரு விரல் நீட்டி, “வேணாம் மானஸ்வி. உனக்கு என் மேல பகைன்னா அதை என் மேல காட்டு. ஆனால் நெல்லுக்கு எதுனா ஆச்சு…!!! சொல்லிக்கிட்டே இருக்க மாட்டேன்… நான் உன்னை என்ன வேணா பண்ணுவேன்” என்றான் விழியில் தெறித்த தீப்பொறியுடன்.

அதற்கு மானஸ்வி தான், அசட்டையாக “ப்ச்… இந்த ஊருல இருக்குற எல்லா நிலத்தையும் வாங்கிட்டு உன் நிலத்தை மட்டும் இன்னும் ஏன் வாங்காம இருக்கேன்னு தெரியுமா காட்டான்?” என்று கேள்வியெழுப்பியவள், அவளே பதிலாக ஏளன நகையுடன், “ஏன்னா, புருஷன் சொத்துல பொண்டாட்டிக்கும் பங்கு இருக்கு! அப்படி பார்த்தா நீ என்ன வலுக்கட்டாயமா தாலி கட்டி, மானபங்கம் படுத்தி, இந்த பட்டிக்காட்டுல விட்டதுக்கு நான் கேஸ் போட்டு, அந்த இடத்தை ஜீவானம்சமா கூட வாங்கிக்குவேன்…!” என்று கண் சிமிட்டியவள், “பண்ணட்டா?” என்றாள் கையை கட்டிக்கொண்டு.

அவனோ அதே ஏளன பார்வையை கண்ணிமையில் சுமந்து, “பண்ணுடி அரக்கி! தாராளாமா பண்ணு! நானும் கேஸ் போடுறேன். நான் கட்டிக்க போற பொண்ண எவனுக்கோ கட்டி வைச்சு அவள் வாழ்க்கையை கெடுத்துட்டன்னு சொல்றேன்…” என்றவனை கண்டு ‘கிளுக்’ என புன்னகைத்தவள், “ப்ச், கேஸ் நிக்காது காட்டான்… அதுவும் என் முன்னாடி…! வாய்ப்பே இல்ல…!” என்றாள் திமிராக.

அதில் சமர் தான், “அப்போ வேற பண்ணுவேன்…!” என்று குறுகுறுவென அவளை நோக்க, அவளோ கண்ணை சுருக்கி “என்ன பண்ணுவ? ஹோ! புருஷன்ற உரிமையை சார் காட்டுவீங்களோ?” என நக்கலாக கூறியவளின் விதமே, எங்க என்னை தொட்டு தான் பாரேன் என்ற சவால் கலந்திருக்க, இப்போது ‘கிளுக்’ என புன்னகைப்பது அவனின் முறையானது.

அவளை விழியால் தீண்டிக்கொண்டே, அவளின் மூச்சு படும் தூரம் நெருக்கியவன், “அரக்கி…! உங்கிட்ட புருஷன்ற உரிமையை காட்டணும்னா நான் எப்போவோ காட்டிருப்பேன். ஆனால், அதுக்குலாம் நீ தகுதியே இல்ல. அதுவும் எனக்கு பொண்டாட்டியா வரணும்னா கொஞ்சமாவது பொண்ணா இருக்கணும். ஆனால் நீ தான் அரக்கியாச்சே…! அதோட, உங்கூட ஒரு ஒரு மணி நேரம்… இல்ல… ஒரு அரை மணி நேரம் வேணா… இருக்கலாம்… அதுவும் உன்…” என்று நிறுத்தியவன் அவளை மேலிருந்து கீழ் வரை ஆழமாய் அளந்து விட்டு, 

“அதுவும் உன் அழகுக்காக… மத்தபடி வாழ்க்கை முழுக்கலாம் நீ ஒத்து வர மாட்ட…” என வார்த்தையின் நஞ்சை கலந்து அவளுக்கு ஊட்டியவன், “உன்னை என்ன பண்ணுவேன்னு கேட்டீல, கண்டிப்பா பண்ணுவேன்… நீயே எதிர்பார்க்காத விதத்துல கேஸ் சும்மா வலுவா நிக்கிற மாதிரி… சிறப்பா பண்ணுவேன்! அதுவும் சீக்கிரமே!” என எக்களிப்பை எதிர்வினையாய் கொடுத்தவன், சட்டென்று அங்கிருந்து அகன்று விட்டான்.

சில நொடிகள் மானஸ்வியிடம் இருந்து தான் எந்த பிரதிபலிப்பும் இல்லை. அவள் கருமணிகள் திகைப்பையையும் ஏதோ ஒரு ஏமாற்றத்தையும் தாங்கி திகைத்து இருக்க, அவன் பேசிய வார்த்தைகள் தான் அவளுள் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது.

அந்நினைவிலேயே எப்போது அலுவலகம் வந்தோம் என்று கூட அறியாது, ஒரு வித வலியை சுமந்தே அவள் இடத்தில் வந்து அமர்ந்தவளுக்கு, தலை வேறு வலித்தது.

வந்ததுமே, வேலை வேலை என ஆர்ப்பாட்டமாய் இருப்பவள், இன்று அமைதியாக இருந்ததை கண்ட ஆர்யவோ ஒரு வாரமாக அவளிடம் பேசாமல் இருந்ததையும் மறந்து, அவளுக்கு பக்கவாட்டில் சென்று அமர்ந்தவன், “என்ன மானஸ்… ஏன் டல்லா இருக்க?” என்றான் மென்மையாக.

அதன் பிறகே சுற்றம் உணர்ந்தவள், “நத்திங்…” என்று விட்டு கணினியை ஆன் செய்து, இலக்கற்று எதையோ பார்க்க, அதனை மூடி வைத்த ஆர்யவ் தான் “என்னன்னு சொல்லு… ஏன் முகம் லாம் இவ்ளோ டல்லா இருக்கு!” என்றான் மீண்டும்.

சிறிது நேரம் அமைதி காத்தவள், மெதுவாக, “எனக்கு பசிக்குது” என்றாள் கணினியின் மேல் ஒட்டி இருந்த ஒரு ஸ்டிக்கரை சுரண்டியபடி. இதனை கேட்ட ஆர்யவுக்கு தான் இத்தனை வருடம் கழித்து ஏனோ தானோ வென்று கெஞ்சி கெஞ்சி சாப்பிட வைத்தவள் வாய் திறந்து பசிக்கிறது என சொன்னதற்காக மகிழ்வதா? அல்லது, இப்படி பசியுடன் இருப்பவளுக்கு வீட்டில் ஒரு வாய் சாப்பாடு கூட யாரும் கொடுக்காமலா இருக்கிறார்கள் என்று கோபம் கொள்வதா என பிரித்தறிய இயலாது, பிழிந்தெடுக்கும் வலியை நெஞ்சில் உணர்ந்தவன், 

“நீ இன்னும் சாப்பிடலையா…மானூ! இரு 2 மின்ட்ஸ் நான் சாப்பாடு கொண்டு வர சொல்றேன்…” என்று பதட்டமாக கேன்டீனுக்கு போன் செய்ய அடுத்த நொடி சாப்பாடு கேரியரில் வந்தது.

இவ்வளவு சீக்கிரம் எப்படி சாப்பாடு வந்தது என்று அவனும் யோசிக்கவில்லை. சமரின் சுடு சொல்லில் தேங்கி நின்ற மானஸ்வியும் சிந்திக்கவில்லை. வேக வேகமாக ஒவ்வொரு டிபன் பாக்ஸையும் பிரித்தவன், அதில் பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார், வடை என வித விதமாக இருந்ததை அவசரமாக பிய்த்து அவளுக்கு ஊட்டினான்.

அவளும் மறுக்காமல் வாங்கி உண்ண, இடை இடையே தண்ணீரையும் குடித்தவளை முறைத்த ஆர்யவ் “எத்தனை தடவை சொல்றேன்… சாப்பிடும் போது இவ்ளோ தண்ணி குடிக்காதன்னு” என்று நீர் குவளையை ஓரமாக வைத்தவன் வாஞ்சையாய் ஊட்டி விட, அவளுக்கு தான் என்ன உணர்கிறோம் என்றே புரியவில்லை. பின், உள்ளே உணவு இறங்கியது ஒரு வித தெம்பை கொடுக்க, “வீட்டுல இருந்தா சாப்பாடு வர வைச்ச?” எனக் கேட்டாள் ஆர்யவிடம்.

அவனோ தலையாட்டி, “இல்லையே… கேன்டீன்ல இருந்து தான் வரவைச்சேன். ஏன் நல்லா இல்லையா? வேற ஹோட்டல் ல வாங்கிட்டு வரவா…” என்று கேள்வியாய் வினவ, அவள் தான், “இல்ல இல்ல… நல்லாருக்கு. ஆனா வீட்டு சாப்பாடு மாதிரி இருக்கு. அதான் கேட்டேன்!” என்றவள் சாப்பிடுவதில் ஆயத்தமாக, அவனும் அதன் பிறகு எதுவும் பேசவில்லை. ஆனால், உள்ளுக்குள் ஒரு கோபம் கனன்றது சமரின் மீது.

மாலை ஆக ஆக, மானஸ்விக்கு ஒரு வித வலி பரவ, மீண்டும் அவ்வளவு தூரம் கார் ஓட்டி செல்வதை நினைத்தாலே மேலும் சோர்வாக இருந்தது. ஆனால், அங்கு தான் செல்ல வேண்டும் என்று மனமும் முரண்டு பிடிக்க, ஏழு மணிக்கு தான் அலுவலகத்தில் இருந்து கிளம்பியவள், 10 மணிக்கு தான் வீட்டை அடைந்தாள்.

அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்திருக்க, “எப்படியும் லேட்டா வந்ததுக்கு ராசு கூட தான் டூயட் ஆட விடுவான்… அதுக்கு நம்மளே போய்டுலாம்…” என்றெண்ணியவள் நேராக சென்றது மாட்டு கொட்டகைக்கு தான். 

அங்கு அமர்ந்திருந்த ராசுவோ அவளை கண்டதும் எழுந்து முறைத்து பார்ப்பது போன்றே இருக்க, மானஸ்வி தான், “என்னடா எருமை மாடு முறைக்கிற…! அதுவும் உன் பாஸ் எரும மாடு மாதிரியே… மூஞ்சிலயே குத்துவேன்!” என்று கையை மடக்கி சைகை காட்ட, அது “மா…” என கத்தியது.

அதில் அவளோ, “உஷ்ஷ்ஷ்ஷ்…” என்று வாயில் விரலை வைத்து, “என்ன போட்டுகுடுக்கிறியா அந்த காட்டான் கிட்ட… இரு உனக்கு டைவர்ஸ் பண்ணி விடுறேன்…” என்று ராசுவுடன் பேசிக்கொண்டே, அப்படியே அமர்ந்து உறங்கியே விட்டாள்.

இங்கோ, சமர்திறமறவன் தான், தன் துணைவியார் இன்னும் வீட்டிற்கு வராததால் பதறி இருந்தான். அலுவலகத்திற்கு போன் செய்து கேட்டால், அவள் அப்பொழுதே கிளம்பி விட்டதாக செய்தி வர, படபடப்புடன் அமர்ந்திருந்தவன், அவளின் கார் சத்தம் கேட்டதுமே ஆசுவாசமானான்.

மனமோ அன்று காலையில் அவளிடம் விட்ட வார்த்தைகளில் வீரியத்தில் தொய்ந்து இருந்தது. அதிலும் அவன் பேசியதும், அவள் கண்ணில் தோன்றிய திகைப்பு இன்னும் இன்னும் அவன் கண் முன் வந்து அவனை பைத்தியம் பிடிக்க வைக்க, மேலும் அவன் அறிந்த உண்மை அவனை வதக்கியது.

காலையில் அவளிடம் பேசி விட்டு, வயலுக்கு சென்ற சமர் மீண்டும் மதியம் போல் வீட்டிற்கு வந்திருக்க, அப்போதும் யாரும் வீட்டில் இல்லை.

கோவிலில் விஷேஷம் என்று அனைவரும் அதிகாலையிலேயே கோவிலுக்கு சென்றிருக்க, வீடே அமைதியாக இருந்தது. இதில், எழிலில் நினைவு வேறு. இந்நேரம் அவள் இருந்தா ஏதாவது பேசிக்கிட்டு, அங்கேயும் இங்கயும் திரிஞ்சுட்டு இருப்பா… என பெருமூச்சு விட்டவன், பரமேஸ்வரியின் அறையில் ஏதோ உடையும் சத்தம் கேட்டதில், என்ன வென பார்க்க போனான்.

 அங்கிருந்த பூ ஜாடி ஒன்று தான் பூனையின் தயவில் உடைந்திருக்க, அதனை ஒதுக்கியவனுக்கு கையில் கீறல் ஏற்பட, “ப்ச்…” என சலித்தவன், அங்கிருந்த ட்ராயரை திறந்து மருந்தை எடுக்க போனான். ஆனால் அவன் கண்ணில் சிக்கியது. அன்று எழில்மதி அவனுக்காக எழுதிய கடிதம் தான். 

சற்றே கசங்கி இருந்த அக்காகிதத்தை அடுத்தவனுக்கு நன்றாக தெரியும் அது எழிலில் கையெழுத்து என. எனவே, அதனை படிக்க தொடங்கியவனின் முகத்தில் ஆயிரம் கலவையான உணர்வுகள். அப்பொழுதும் அவனால் நம்ப இயலவில்லை அவளும் தான் ஆர்யவை விரும்பினாள் என்று. 

ஆனால் சில நொடிகளிலேயே நடந்த விஷயத்தை கணித்து கொண்டவனுக்கு, “அப்போ இந்த விஷயத்துல அரக்கி மேல தப்பு இல்லையா?” என்றே சிந்தை எழ, மூளையோ, “இதுல இல்லாம இருக்கலாம்… ஆனா நிலம் விசயத்துல அவள் பண்றது பெரிய பாவம்… எப்படி இருந்தாலும் அவளுக்கு இந்த தண்டனை தேவை தான்” என்றது நாராசமாக.

மனமும் மூளையும் போட்டி போட்டு அவனை குழப்ப, அப்போதைக்கு மனமே வென்றது. ‘என்ன இருந்தாலும், அவள் உதவி செய்ய போய் தான இப்புடி ஆகிடுச்சு… ஒருவேளை அவ இடத்துல நம்ம இருந்துருந்தாலும் இதே தான் பண்ணிருப்போம்… நம்மளும் தேவ இல்லாம ஏதேதோ பேசி…’ என மேலும் யோசிக்க தோன்றாமல், அவன் அறையிலேயே அடைந்தான்.

இப்போது அந்நினைவில் மூழ்கியவன், சட்டென தன்னிலை உணர்ந்து, “என்ன இந்த அரக்கி கார் சத்தம் அப்பவே கேட்டுச்சு… இன்னும் காணோம்!” என்று புருவம் சுருக்கி யோசித்தபடியே வெளியில் வந்தவன், மானஸ்வி ராசுவுடன் பேசுவதை தான் கேட்டான்.

அவளைப்பற்றி தேவையற்ற உணர்வுகளும், குழப்பங்களும், யோசனைகளும் அவன் தலைக்குள் சென்று குடைய, இவளை என்ன தான் செய்வது…? சிறிது பாவம் பார்த்தால், ஊரை அடித்து உலையில் வைத்து சாப்பிட்டு விடுவாள். ஆனால், இவள் மேல் முழு கோபத்தையும் காட்ட தன்னால் இயலவும் இல்லை என்று தன்னையே நொந்து போன சமர், முயன்று யோசனைகளை ஒதுக்கி விட்டு, மானஸ்வியை கைகளில் தூக்கினான்.

அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, இந்த ஒரு வாரத்தில் அலைச்சலினால் அவள் முகமும் லேசாக கறுத்திருந்தது. அவளை பார்த்துக்கொண்டே அவன் அறையில் படுக்க வைத்தவன், உறங்கும் அவளின் கன்னங்களை பிடித்து கிள்ளினான் வலிக்காதவாறு.

“நீ யாருடி! ஏன் என்ன இவ்ளோ யோசிக்க வைக்கிற? உங்கிட்ட ஏதோ ஒன்னு இருக்கு… நீ திமிரா பேசுனாலும், என் நிலத்துக்கு எதிரா ஏதோ பண்ணுனாலும் அதை என்னால முழுசா நீ தான் பண்றன்னு ஏத்துக்கவே முடியல… ஏன்டி?” என்று ஆதங்கமாய் கேட்டவனுக்கு, கோபமும் வலியும் சேர்ந்தே துரத்த, கிள்ளுவதை நிறுத்தி விட்டு, சுவற்றோரம் சென்று படுத்தவனுக்கு அன்று உறங்கா இரவானது, 

இங்கோ, ஆர்யவின் நிலையும் தூங்கா இரவு தான். பின்னே, தன் வீட்டு சுவற்றில் தானே முட்டிக் கொண்டு எழில்மதியை முறைத்தபடியே இருந்தால்… உறக்கம் தான் தழுவிடுமோ…?    
 
மூங்கில் குழலாகும்!🎶
மேகா

ஹாய் பிரெண்ட்ஸ்… எதிர்ப்பார்க்காத வேலைகளால சுத்தமா நேரம் கிடைக்கல எழுத… வெரி சாரி… 🥰 அப்பறம் thank u soooooooo much all for ur lovable cmnts and stickers… Seekiram ellarukum rly panrne…drs…🥰 

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 5]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Megavani

Story MakerContent AuthorYears Of Membership

அன்பின் அரசனே…11

என் நெஞ்சமே உன் வாழ்வின் எல்லை 22