in ,

ஆருயிர் ஆதிரையாள் 4

கோதையம்மாளின் பருவ வயதில் அவரைத் தத்தெடுத்து வளர்த்த செல்வந்தர் இறக்கும் தருவாயில் தனது சொத்துக்கள் அனைத்தையும் அவர் பெயரில் எழுதி வைக்க, திருமணம் புரிய மனமில்லாது இருந்த கோதையம்மாள், தந்தை இறந்த பிறகு அவரது நூல் ஆலை தொழிலை நிர்வகித்ததோடு, அதில் வரும் அதிக லாபத்தை அனாதரவாய் நிற்கெதியற்று இருக்கும் சிறு பிள்ளைகளுக்கு வழங்கி உதவுவதற்காக இந்த இல்லத்தை உருவாக்கினார்.

பதினைந்து வருடங்களாய் ஆசிரமமும் பள்ளியுமாய் இணைந்து இயங்கும் இந்த இல்லத்தில் படிக்க விருப்பமிருந்தும் வழியில்லாத பிள்ளைகளுக்கு இலவசமாய்த் தங்க இடமளித்துக் கல்வியும் அளிக்கப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள கோதை பள்ளியில் பயிலும் பிள்ளைகளுக்கு அதன் பிறகான கல்வியை வேறொரு பள்ளியில் அவர்கள் படிப்பதற்கும் வழிவகைச் செய்து வருகிறார். ஆசிரமத்தில் இருந்து படித்தவர்களுக்கே இங்கு ஆசிரியராய் பணி செய்ய முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சனி ஞாயிற்றுக் கிழமைகளில் தன்னார்வலர்கள் என விருப்பமுள்ளவர்கள் வந்து இங்குத் தங்கி இருக்கும் பத்தாம் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு இலவசமாய்ப் பாடங்களை டியூசன் எடுப்பார்கள்.

இலக்கியா கல்லூரியில் படிக்கும் போது, இந்த இல்லத்தில் தங்கி இருந்த பெண்ணொருத்தி அவளது தோழியாய் அமைய, அவள் மூலம் தன்னார்வலராய் இங்குச் சேர்ந்தாள் இலக்கியா. தனது தாய் தமையன் என அனைவரையும் இங்கு கோதையம்மாளுக்கு அறிமுகப்படுத்தி இப்பிள்ளைகளுக்குத் தங்களால் ஆன உதவி செய்து என இலக்கியா தனது குடும்பத்தினரை இந்த இல்லத்தில் ஒரு உறுப்பினராய் மாற்றியிருந்தாள். ஆக கோதையம்மாவின் பேச்சை இளங்கவின் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் தட்டாது கேட்பர்.

அதனால் தான் தனது அன்னையிடம் கூறி அண்ணனை கோதையம்மாளிடம் பேசுமாறு உரைத்தாள் இலக்கியா.

கோதையம்மாளின் திருமணம் என்ற சொல்லில் இளங்கவினும் ஆருத்ராவும் அதிர்வுடன் ஒருவரையொருவர் பார்த்தனர்.

சட்டெனக் கோதையாம்மாவின் புறம் திரும்பிய ஆருத்ரா, ‘ஏன்மா இப்படி?’ எனக் கண்கள் சுருங்க முகத்தில் விருப்பமின்மையைத் தேக்கி வைத்து பார்க்க,

அவள் முகப் பாவனையில் விருப்பமின்மையை உணர்ந்து கொண்ட கவினுக்கு மனம் ஏனோ சுணங்கிப் போனது.

“இவன் தான்மா இலக்கியாவோட அண்ணன்” என்றார் கோதை.

ஓ என்றவளின் மனம், தன்னைக் காணும் போதெல்லாம் இலக்கியா தனது தமையனை பற்றி உரைத்த நல்லுரைகள் யாவிலும் உலவி சென்று வந்தாலும் முகத்தில் எவ்வித உணர்வையும் காட்டாது அமைதியாய் இருந்தாள் அவள்.

“ஆரு எத்தனை நாள் தான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு சுத்திட்டு இருப்ப?” கோதையம்மாள் அவளை நோக்கி பேசவும்,

கவின், “எனக்கு இப்ப கல்யாணம் செஞ்சிக்கிறதுல விருப்பமில்லைமா! தங்கச்சியை வச்சிக்கிட்டு நான் முன்னாடி பண்ணா நல்லா இருக்காது” பொறுமையாய் கூற,

‘அய்யோ நான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னதை, எனக்கு அவரைப் பிடிக்கலைனு வேண்டாம்னு சொன்னது போல நினைச்சிக்கிட்டாரோ! ஃபீல் செஞ்சிருப்பாரோ’ என ஆருவின் மனம் அவனது மன வலியை எண்ணி கவலை கொண்டது.

இலக்கியா அவனைப் பற்றிப் பேசும் போதெல்லாம், ‘இந்தக் காலத்தில் இப்படி ஒருத்தரா! குடும்பத்திற்காக எவ்ளோ செய்கிறார்’ எனப் பல நாட்கள் எண்ணியிருக்கிறாள். அப்பேர்பட்ட நல்லவரை காயம் செய்ய மனம் வரவில்லை அவளுக்கு.

“உன் தங்கைக்குத் தான் மாப்பிள்ளை எதுவும் சரியா அமையாமலேயே இருக்கே! நீ முதல்ல கல்யாணம் செஞ்சிட்டு கூடத் தங்கைக்குப் பார்க்கலாமே!” கோதையம்மாள் அவனைச் சமாதானம் செய்ய முயல,

“இல்லம்மா அது சரி வராது” என இவன் மறுக்க,

“உனக்கு இப்ப கல்யாணம் வேணும் வேணாங்கிறது இருக்கட்டும். உனக்கு ஆருவ பிடிச்சிருக்கா இல்லையா? அதைச் சொல்லு முதல்ல” எனக் கோதையம்மாள் கேட்க,

தாய் தங்கை தவிர மற்ற பெண்களிடம் தோழைமையாய் உரிமையாய் பேசி பழகிடாதவனுக்கு, முதன் முறையாய் அவனுக்காக ஒரு பெண்ணைப் பார்த்திருப்பதாய் கூறி பெண் பார்க்கும் படலம் போல் இவ்வாறு ஒரு பெண்ணின் அருகே அமர வைத்து அவளைப் பிடித்திருக்கிறதா இல்லையா எனக் கேட்பதே அவனுக்கு வெட்கத்தை வரவழைத்தது.

அவனின் முகத்தைப் பார்க்கவும் அவளுக்கு நாணம் தடுக்க, அவனின் முகத்தில் தோன்றிய வெட்கத்தை அறியாது, அவனுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை எனத் தான் உரைக்கப் போகிறானென எண்ணிக் கொண்டாள் இவள்.

“அவங்க தானம்மா கல்யாணம் வேண்டாம்னு முதல்ல ரியாக்ட் பண்ணாங்க. அவங்ககிட்டயே கேளுங்களேன்” சற்றும் தன் முகம் அவள் பக்கம் திரும்பி விடக் கூடாதெனக் கவனமாய்க் கோதையம்மாளை மட்டுமே பார்த்து அவன் கூற,

ஏற்கனவே அவனைத் தான் நிராகரித்ததாய் எண்ணி கலங்குகிறானோ எனக் கவலை கொண்டவளுக்கு, அவனின் இந்தக் கேள்வி அப்படித் தானென ஊர்ஜிதம் செய்வதாய் இருக்க,

அவன் உரைத்த மறு நொடி, தான் என்ன கூறுகிறோமென யோசியாது அவன் மனக்கவலை நீக்கும் பொருட்டுப் பேசுவதாய் எண்ணி, “அம்மா எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்னு சொன்னேனே தவிர இவரைப் பிடிக்காம இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லலை”

அவளின் இக்கூற்றில் சட்டெனத் தலையைத் திருப்பிப் பக்கவாட்டில் அமரந்திருந்தவளை வருடின அவனின் கண்கள்.

“அப்ப உனக்குக் கவினை பிடிச்சிருக்கு! ஆனா இப்ப கல்யாணம் வேண்டாம். அப்படித் தானே அர்த்தம்” எனச் சிரிப்பாய் கோதையம்மாள் கேட்க,

“அய்யோ அப்படிஈஈஈஈ இல்… ” இல்லையெனக் கூற வந்தவள், ‘அவங்க முன்னாலயே எப்படி அவங்களைப் பிடிக்கலைனு சொல்றது. அவங்களுக்குக் கஷ்டமா இருக்காதா’ என யோசித்து இல்லை எனக் கூறாது வாயை மூடிக் கொள்ள, அவளின் முகப் பாவனையில் உணர்வுகளைப் படித்தவனுக்குச் சிரிப்பு வந்தது.

கவினின் சிரிப்பில் சங்கோஜமாய் அவன் பக்கம் திரும்பி பார்த்தவள், மீண்டுமாய்க் கோதையைப் பார்த்து தலையைக் குனிந்து கொண்டாள்.

கோதையம்மாளும் கவினுடன் இணைந்து சிரித்தவர், “ஒரே பார்வைல என் பொண்ணைச் சாச்சிபுட்டியே கவினு” எனக் கிண்டல் செய்தவர், “இது தான்ப்பா அவ குணம்” என்றார்.

“யாரையும் கஷ்டபடுத்த கூடாதுனு நினைப்பா! யார் மனசையும் புண்படுத்துற மாதிரி பேசிட கூடாது! அவளோட எந்தச் செயலும் யாரையும் காயப்படுத்திட கூடாதுனு பார்த்து பார்த்து நடந்துப்பா. இதுக்காக அவ மனசு கஷ்டபடுற மாதிரி எது நடந்தாலும் ஏத்துப்பா! இவளை விட நல்ல பொண்ணு உனக்குக் கிடைக்காது கவின்”

கோதையின் மொழியில் அன்பாய் அவளை ஸ்பரிசத்தது அவனின் கண்கள். இத்தனை நேர அவளின் செய்கையில் அவனுக்கும் அவளின் குணநலன் புரிந்திருந்தது.

ஆருத்ரா குனிந்த தலை நிமிராது அமர்ந்து இருந்தாள்.

“திருச்சி ஆர்ஃபனேஜ்ல தான் தங்கிருந்து ஸ்கூல் வரை படிச்சா! ஸ்கூல்ல இருந்து காலேஜ் வரை அவ படிப்புக்கு ஸ்பான்சர் இருந்தாங்க. இவளும் ரொம்ப நல்லா படிப்பா… அதனால ஈரோடுல ஒரு காலேஜ்ல இன்ஜினியரிங் படிச்சா” என அவர் முடிப்பதற்குள், இங்குக் கவினுக்குத் தூக்கிவாறி போட்டது.

திருமணமே தற்சமயம் வேண்டாமென எண்ணியிருந்தவன், இத்தனை நேரம் கோதை பேசிய பேச்சிலும், ஆருவின் செயலிலும் கவரப்பட்டு, தாயிடமும் தங்கையிடமும் அவளை மணம் புரிவதை பற்றிப் பேசி முடிவெடுக்கலாம் என எண்ணியிருந்தவனுக்கு, அவளின் படிப்பை பற்றிய இந்த வார்த்தைகள் பெரிய இடியாய் விழுந்தது.

“என்னம்மா இது! இஞ்சினியரிங் படிச்ச பொண்ணைப் போய்ப் பத்தாவது படிச்ச எனக்குக் கட்டிக் கொடுக்கக் கேட்டுட்டு இருக்கீங்க. இது சரி வராதுமா” சட்டென்று இனிய கனவு அறுந்து போன மனநிலையில் இருக்கையிலிருந்து எழுந்து உரைத்தான்.

இவளின் விழிகள் அவனைத் தான் பார்த்தது. அவனின் இச்செயலில் இவளின் மனம் ஏன் ஏமாற்றம் அடைகிறது எனப் புரியவில்லை அவளுக்கு.

“ம்ப்ச் உட்கார் கவின். நான் சொல்றதை முழுசா கேளு” கவினை அமர பணித்து மீண்டுமாய்ப் பேசினார் கோதை.

“நல்ல படிப்பு, வசதி, வேலைனு இருக்கப் பையனை விட அவளை அன்பா பாசமா அரவணைச்சிக்கிற ஒரு குடும்பம் தான் அவளுக்குத் தேவை. அவளோட ஆசையும் அது தான். அதுக்காக வசதி இல்லாத குடும்பத்துல அவளைக் கட்டிக்கொடுத்து கஷ்டபடுத்தவும் எனக்கு விருப்பம் இல்லை. ஆரு போலவே படிச்ச பையனா இருக்கவங்க வீட்டுல அனாதை பொண்ணை ஏத்துக்கத் தயாரா இல்லை. அங்க அவளைப் பையன் சம்மதத்தோட கட்டியே கொடுத்தாலும் அந்தக் குடும்பம் அவளை எப்படி நடத்தும். அதனால நான் ஆருக்காக மாப்பிள்ளை பார்க்க வச்சிருந்த கண்டிஷன் இரண்டு தான். ஒன்னு முழுக் குடும்பமும் அவளை அவங்க குடும்பத்துல ஒருத்தியா ஏத்துக்கனும். இன்னொன்னு அந்தக் குடும்பம் கொஞ்சம் ஃபினான்சியலி ஸ்டேபிள்லா இருக்கனும். அது போல ஒரு வேலைல பையன் இருந்தா போதும்னு தான் நான் நினைச்சேன். உங்கம்மா பத்தி எனக்குத் தெரியும். அவங்களால யாருக்கும் கெடுதல் நினைக்க முடியாது. உன் தங்கைகிட்ட இதைப் பத்தி மூனு மாசம் முன்னாடியே பேசி அவளுக்கு இதுல முழுச் சம்மதம்னு தெரிஞ்ச பின்னாடி தான் உன்கிட்ட பேச வந்தேன். இப்ப சொல்லு அவளுக்கு ஒரு பாதுக்காப்பான அன்பான குடும்பத்தை உங்க குடும்பத்தைத் தவிர வேற யாரால கொடுக்க முடியும். அதனால படிப்பு ஒரு பெரிய பிரச்சனையா எனக்குத் தெரியலை”

திருமணமே வேண்டாம் என்றவன் தற்போது அமைதியாய் அமர்ந்து இவரின் பேச்சை கேட்டு யோசிப்பதிலேயே கோதைக்கு இந்தத் திருமணம் நடந்துவிடும் என்ற நம்பிக்கை வந்திருந்தது.

ஆருவிற்குக் கோதையிடம் நிறையப் பேச வேண்டியிருந்தது. ஆனால் அவன் முன்பு பேச வேண்டாமென அமைதி காத்தாள்.

சற்று நேரம் அமைதியாய் எதையோ சிந்தித்தவன், “எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்மா” என்றான்.

“கண்டிப்பா டேக் யுர் டைம். யோசிச்சு சொல்லு கவின். ஆரு இங்க தான் டீச்சரா வேலை பார்க்கிறா! அவளைப் பத்தி யாருக்கிட்ட என்ன விசாரிக்கனும்னாலும் இங்க விசாரிக்கலாம். இவ முன்னாடி இருந்த திருச்சி ஈரோடு முகவரி கூடத் தர்றேன். அங்கயும் என்ன விசாரிக்கனுமோ விசாரிச்சிட்டு நீ பதில் சொன்னா போதும்”

“சரிம்மா ஒரு வாரத்துல சொல்றேன்” என்றவன் கை கூப்பி அவரிடம் விடைபெற்று விட்டு, ஆருத்ராவை நோக்கி கண் சிமிட்டி தலை அசைத்து விடைப்பெற்றான்.

அவன் தலை மறையும் வரை அவன் செல்லும் திசையையே நோக்கியிருந்தவள், அவன் சென்ற பிறகு கோதையம்மாவை பார்க்க, அவர் புருவம் உயர்த்தி, “பையன் எப்படி?” எனக் கேட்டுச் சிரித்திருந்தார்.

“போங்கம்மா” நாணம் செவ்வானமாய் முகத்தை நிறங்கொள்ளச் செய்யக் குனிந்து சிணுங்கினாள் அவள்.

அவளின் இச்செயலிலேயே கவினை அவளுக்குப் பிடித்திருக்கிறது எனப் புரிந்தது அவருக்கு.

“ஆனா பயமா இருக்குமா! என்னோட பாஸ்ட் பத்தி சொன்னீங்களாமா? அவங்க குடும்பத்துல பின்னாடி யாரும் நான் அவங்களை ஏமாத்திட்டதா சொல்லிட கூடாதுமா. அது என்னால தாங்கிக்கவே முடியாது! என்னைச் சந்தேகபடுற மாதிரி யார்கிட்ட இருந்தும் ஒரு வார்த்தை வந்தாலும் என் மனசு தாங்காதுமா!” என வேதனை படர்ந்த முகத்துடன் கூறவும்,

“ம்ப்ச் ஆரு” என மேஜை மேல் இருக்கும் அவளின் கை மீது கை வைத்த கோதை,

“பழசை மறந்துடுனு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். நீ இங்க வந்து நாலு வருஷம் ஆகுது. இன்னும் ஏன் அதையே நினைச்சிட்டு இருக்க? கவின்கிட்ட உன்னோட பாஸ்ட் பத்தியெல்லாம் பேச வேண்டியது என்னோட பொறுப்பு. நீ கல்யாணத்துக்குப் பிறகு இதைப் பத்தி என்னிக்கும் கவின்கிட்ட பேசாத. இப்ப உன் மனசு முழுக்கக் கவின்னோடு உனக்கு நடக்கப் போற கல்யாணத்தைப் பத்தின கனவு தான் இருக்கனும். கவின் கண்டிப்பா கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்வான்ற நம்பிக்கை எனக்கு இருக்கு” என அவர் அவளுக்கு ஆறுதல் மொழி உரைக்க,

கண்ணில் நீருடன் அவரைப் பார்த்தவள், “ஏன்மா என் மேல மட்டும் உங்களுக்கு இந்த தனிப் பாசம் கரிசனம். இங்க வேற யாருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறது பத்தியெல்லாம் நீங்க பேசினதே இல்லையே. அவங்கவங்க வாழ்க்கை அவங்க பார்த்துக்கட்டும்னு விட்டுட்டீங்களே” என நெகிழ்வுடன் அவள் கேட்க,

“ஏன்னா என் ஆரு பொண்ணுக்கு தானாவே அவளோட வாழ்க்கைய அமைச்சிக்கிற சாமர்த்தியம் அவளுக்கு இல்லை” எனக் கூறி அவர் கண் சிமிட்ட,

“போங்கம்மா” எனச் சிணுங்கியவள் சிரிக்க,

“போடா போ வேலையைப் பாரு! எல்லாம் நல்லபடியா நடக்கும்” எனக் கூறி அவளை அனுப்பி வைத்தவர் தனது கைபேசியை எடுத்தார்.

“நீங்க சொன்னா மாதிரியே கவின்கிட்ட பேசிட்டேன். அவனுக்கும் ஆருவை பிடிச்சிருக்கு. ஆரு அவளோட பாஸ்ட் பத்தி கவின் ஃபேமிலிகிட்ட சொல்லனும்னு சொல்றா…” எனக் கோதை தயங்கி தயங்கி கைபேசியில் உரைக்க,

மறுபக்கம் இருந்தவர் என்ன கூறினாரோ, இவரின் முகம் யோசனையைத் தத்தெடுத்தது.

“அப்ப கவின்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்றீங்களா? அது ஆருவோட வாழ்க்கையைப் பாதிச்சிடாதா?” எனக் கேட்ட கோதை, மறுபுறம் கூறிய பதிலில் பெருமூச்செறிந்தவராய்,

“ஹ்ம்ம் சரி எதுனாலும் உங்க விருப்பம் தான். நான் கவின்கிட்ட ஆரு பத்தி எதுவும் சொல்லலை ஆனா நாளை பின்ன அவ வாழ்க்கைல ஏதாவது பிரச்சனைனா நான் பொறுப்பேத்துக்க மாட்டேன் சொல்லிட்டேன்!” எனக் கூறி கைபேசியை வைத்தவரின் மனமோ ஏனோ ஒரு நிலையில் இல்லை.

— தொடரும்

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

இன்று அன்றி(ல்)லை 30

"தமிழ்"