மணமக்கள் வீட்டிற்கு வந்ததும், வீடு கலகலப்பு மோடிர்க்கு மாறியது. வாணிக்கு ஜூனியர் பாலாவை பார்த்ததிலிருந்து மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. சில சமயங்களில் அப்படிதான்…எதிர் பாராத விஷயம் நடக்கும் பொழுது சுயம் இழத்தல். வாணி இறுக்கி கட்டிக்கொண்டாள் பாலாவை. அவள் மனதின் உள்ளுக்குள் பாலா அண்ணியாக வரும் நாள் என்று என எண்ணிகொண்டது. சிவா பாலா திருமணத்தை வெகுவாக எதிர் பார்த்தாள்.
ரகுவும் ஜானகியும் ஒருவாறு மகள் சொன்னவற்றை விழுங்கி சிரிக்க முயற்சி செய்தார்கள். கடப்பாறையை முழுங்கி கஷாயம் குடிக்கும் முயற்சி.
ரகுவுக்குமே பெற்ற பெண்ணின் காதலை ஒரு தகப்பன் எனும் நிலையில் ஒப்பு கொள்ள கஷ்டமாக இருந்தது. பெற்று, வளர்த்து, படிக்க வைத்து… ஒரு வரனை தேடும் உரிமை கூட கிடையாதா என்று கேள்வி கேட்டது ரகு ஜானகியின் மனம். இது தவறா என்றால் பெற்றோரின் நிலையில் நிச்சயம் இது தவறு என்று சொல்ல மாட்டேன்.
திருமணமும் அது தொடர்ந்து வரவேற்பும் முடிந்து இன்றுடன் இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில் ரஞ்சன் வாணி இருவரும் பெங்களூரு வந்து சேர்ந்துவிட்ட.னர். வேலைக்கு செல்வதும் வீடு திரும்பியதும் காதல் செய்வதும் வழமை என ஆயிற்று. கல்யாணம் எனும் பந்தம் எவ்வளவு அவசியம் என்பது இருவருக்கும் நிறைய புரிந்தது. அதிசயங்கள் நிறைந்த அற்புத உலகம்.
சிறு சிறு ஊடல்கள் அதை தொடர்ந்து வரும் கூடல் என்று ஸ்வாரஸ்யம் நிறைய கொண்ட மண வாழ்க்கை.
திருமணம் ஆன புதிதில் கலவியல் இன்பம் தரும் எனில் மனம் நிறைந்த மண வாழ்க்கை வாழ்நாள் முழுவதும் மனம் நிறையும் மணம் தரும்.
ரஞ்சனுக்கு ஸ்பெயின் செல்லவேண்டிய மாறுதல் உத்தரவு வர, மறுக்க முடியாது நிலையில் அவன் காத்திருந்த அவன் கனவு பயணம்.
முதலில் ரஞ்சன் செல்வதாகவும்,பின்னர் மூன்று மாதங்களில் வாணி செல்வதாகவும் ஏற்பாடு ஆயிற்று. வாணிக்கு கண்ணீர் நிற்காமல் வழிந்தது. திருமணம் முடிந்து புகுந்த வீடு செல்லும் பொழுதும் அவளுக்கு கண்ணீர் வரவில்லை. இன்று கணவனை பிரிந்து வாழ வேண்டிய சில மாதங்களை அவளால் சஹிக்க இயலவில்லை.இந்த பிரிவு இருவருக்குமே புதிது.
வாணியும் வேலை செய்யும் இடத்தில் இரண்டு மாத நோட்டீஸ் கொடுக்க வேண்டும். பயண ஏற்பாடுகளுக்கு ஒரு மாதம்.
ரஞ்சன் கிளம்பும் முன் இருவரும் ஒருவாரம் விடுப்பு எடுத்து கொண்டு ஒருவருடன் ஒருவர் பின்னிகொண்டார்கள். மூன்று மாத பிரிவை ஒரே வாரத்தில் சமன் செய்யும் முயற்சி.
ரஞ்சன் கிளம்பும் முன் வாணி சிவாவுடன் தங்க ஏற்பாடு செய்து விட்டு கிளம்பினான்.
வாணியின் கண்ணீரில் சிவாவுக்கு வாணி நிஜமாகவே தன் சிறிய தங்கை போல் இருந்தது. வாணி சிவாவை விட இரண்டு மாதங்கள் பெரியவள்தான் . ஆனால், சிவா அண்ணன் போல், அவளுக்கு காப்பாளன் போல் நடந்து கொள்வான். வயதில் மூத்தவன் போல் அவளை சிவா அரவணைக்க, பாதுக்காக்க…
வாணியின் போதாத நேரம் விளையாடும் பொழுது வலது கை உடைந்து வாணி ஒரு வருஷம் வீட்டில் இருக்க வேண்டிய நிலைமை.படிப்பும் ஒரு வருஷம் தடைப்பட்டது. சிவா அவளுக்கு அண்ணன் ஆகி போனான். அவளும் ‘டேய் சிவாண்ணா’என்றே அழைக்க பழகிவிட்டாள்.இருவரும் ‘செட் தோசை வகை’, வாணியின் திருமணம் வரை.
இன்றோ… வாணியின் கண்ணீர் சிவாவை உலுக்கியது. அவள் கண்ணீர் சிந்தி சிவா பார்த்ததில்லை. அனுமதிக்கவும் மாட்டான். ரஞ்சன் கிளம்பி இரண்டு நாட்கள் வாணி யாருடனும் பேசவில்லை. ரஞ்சன் வந்து சேர்ந்ததாக தகவல் சொல்லும் வரை மௌன விரதம். அனு வாணியை தேற்ற பெங்களூரு வந்ததுதான் மிச்சம். அனுவுக்கு தெளிவாக புரிந்து போனது இங்கிருப்பது தன் மகள் அல்ல, ரஞ்சனின் மனையாள் என்று. இந்த பிணைப்பு அனுவுக்குள் சந்தோஷத்தை பரப்பியது. அவள் தன் முதல் திருமணத்தில் தோற்ற முதல் விஷயம் கணவன் மனைவி பிணைப்பு. தன் மகள் என்றும் மகிழ்ச்சியான இல்லறம் நடத்த தாயுள்ளம் ஆசிர்வதித்தது.
பாலா திருச்சி வர அங்கு பெற்றவர்களிடம் வழக்கமான மகிழ்ச்சி இல்லை. ஒருவித இறுக்கம். பாலா அவர்களிடம் பேச அருகில் சென்றால் பதட்டத்துடன் விலகி செல்லும் கண்ணாமூச்சி ஆட்டம்.
மகளுக்கு பிடிக்கும் ஒன்றை மறுக்க வேண்டிய நிர்பந்தத்தில் ரகு. அதையும் தாண்டி சிவாவின் பெற்றோர், அவர்களும் மறுக்கக் கூடும். இதை எவ்வாறு மகளிடம் புகல இயலும்? சிவாவின் அம்மா என் முன்னாள் காதலி என்றா?
விதியை வெகுவாக சபித்தார் ரகு.
காதல் திருமணத்தில் ஜானகிக்கு பிடித்தம் இல்லை. ஆனால், சிவாவின் குடும்பம், அவன் படிப்பு, ஜாதி என மறுக்க பொதுக் காரணங்கள் ஏதும் இல்லை. ஆனால் மறுக்க வேண்டிய நிலைமை உள்ளதே? நல்ல வரன். ஆனால்…
பாலாவால் நிலைமை சகிக்க முடியாதாதாக இருந்தது. பெற்றோர் மறுக்க கூடும் என அவள் நினைக்கவில்லை.
இன்று வரை ஒற்றை பெண் குழந்தை, அவளுக்கு கிடைக்கும் சலுகைகள், பெற்றோரின் மறுப்பில்லாத, கேட்டதை கிடைக்க செய்யும் நடத்தை அவளுக்குள் நம்பிக்கை விதைத்தது. சிவாவை பற்றி சொல்ல தயங்கினாள்தான். மறுக்க செய்யும் காரணங்களையும், ஜானகி காதலை வெறுப்பவள் என்பதாலும். சிவா உறவு என்றான பின்… இந்த மறுப்பு பாலாவுக்கு புரியலை.
ஒரு வார விடுப்பில் வந்தவள் நான்கு நாட்களில் கிளம்பி விட்டாள்.
பாலாவுக்கு அவள் பயிற்சி செய்த நிறுவனத்தில் மும்பை பிரிவில் வேலை கிடைத்து விட்டது. கல்லூரியில் தேர்வுகளை முடித்து விட்டு சேர்ந்தாக வேண்டும். அவளுக்குள் ஆயாசம். சிவாவிடம் இன்னும் நடந்தவற்றை சொல்லவில்லை. பெற்றோர் மூலமாக அடுத்த கட்டத்திற்கு செல்ல நினைத்து இருந்தாள். சிவா பெங்களூருவில் இருக்க விரும்பினான். அவனுக்கு இன்னும் வேலை அமையவில்லை. சென்னை வர அவனுக்கு இஷ்டம் உண்டு. மற்ற இடங்களுக்கு செல்ல ம்ஹுஹும்… விதியும் சேர்ந்து சதி செய்வதாக பாலாவுக்கு தோன்றியது. சிவா கிடைத்த வேலைய விடாதே என்றான். பிரிவு அவனுக்கு இன்று பெரியதாக தோன்றவில்லை போலும்.
பெங்களூரு வந்த பாலா வாணி வற்புறுத்தி சொல்ல கடைசி ஒரு மாதம் இறுதி தேர்வுகளை சிவா வாணியுடன் தங்கி முடித்தாள்.
ஏனோ, சிவா இப்பொழுதெல்லாம் பாலாவை நிர்பந்திப்பதோ, அதிகம் அவளை சுற்றுவதோ இல்லை. கொஞ்சம் விலகியே இருந்தான்.
ஒன்று வாணி… இரண்டு இன்னும் வேலை சரியாய் அமையவில்லை.பாலாவை திருமணம் செய்து கொள்ள வேலை அவசியம்.
பாலாவுக்கு இந்த விலகல் அதிகம் மன அழுத்தத்தை கொடுத்தது. பெற்றோர், சிவா இவர்களின் ஒதுக்கம். தான் செய்த தவறு என்ன என்று புரியாது சூழ்நிலை பொம்மை ஆனாள்.
வாணி வேலையை விட எத்தனிக்க, நிர்வாகமோ ஸ்பெயின் நாட்டில் இருக்கும் அவர்கள் அலுவலகம் சென்று ப்ராஜெக்ட்டை தொடர சொன்னது. வாணி போன்ற திறமையான பெண்ணை விட அவர்களுக்கு இஷ்டம் இல்லை. நிர்வாகம் அவளது பயணத்தை ஏற்க, அதிகபட்ச அலட்டல்கள் இன்றி, சுலபமாய் ஸ்பெயின் கிளம்பினாள் வாணி. ரஞ்சன் சென்ற ஒன்னரை மாத இடைவெளியில் வாணியும் கிளம்பிவிட்டாள்.
காலம் பறக்க, இரண்டு மாதங்களில் பாலா மும்பை வாசியாக, பெங்களூருவில் வேலையில் அமர்ந்தான் சிவா.
சென்னை:
வாணியின் திருமண வரவேற்புக்கு ரம்யா வராதது மனதில் காயத்தை உண்டாக்கியது ஆனந்த்துக்கு. ரம்யாவுடன் பேசக் கூட அவனுக்கு இஷ்டம் இல்லை.
சொந்தமாக ஒரு சிறு மருத்துவ மனை கட்டும் எண்ணத்தில் நிலம் வாங்கி இருந்தான். அந்த விஷயங்களில் தன்னை முழுவதும் புகுத்திக் கொண்டான். ரம்யா அவன் ஒதுக்கத்தை பெரிதாக எண்ணவில்லை. ஓரிரு முறை கேன்டீனில் பேச முயன்றாள்தான். அவன் இவளை தள்ளி நிறுத்த சுய கௌரவம் முக்கியம் என அவளும் நகர்ந்துவிட்டாள்.
“காதல் எனும் நீறுபூத்த நெருப்பு என்று வேண்டுமானாலும் காட்டுத் தீ போல “பரவி பற்றி எரியும் சாத்தியம் வாய்ந்தது என்பது இருவருக்குமே புரியவில்லை.
அவனும் தனது பழைய தோழியான அந்த பெண்மணியை காண்பதற்காக ஒரு ஞாயிறு அன்று தன் அக்கா பாலாவையும் அத்தான் ராமனையும் அழைப்பதற்காக பாலாவின் வீட்டிற்கு வர ஆனந்தை காரை ஓட்டி கொண்டு எங்களுடன் நிச்சயம் வரவேண்டும் என்று அனு நிர்பந்திக்க தொடங்கினாள்.
இந்த விந்தையை கண்டும் காணாதது போல இருந்தார் பிரசாத்.
அனுவின் மனதில் இருப்பது என்ன என்று நிச்சயமாக இருப்போர் யாருக்குமே புரியவில்லை.
வேறுவழியின்றி ஆனந்தும் அவர்களுடன் வர சம்மதித்தான்.
உள்ளுக்குள் ஏதோ ஒன்று இருப்பது அங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் புரிந்தது. கூடைக்குள் இருக்கும் பூனை தானாகவே வெளிவரட்டும் என்று அனைவருமே மௌனமாக சிரித்த முகமாக கிளம்பினார்கள். ஆனந்த மனம் முழுவதும் ஏதோ ரம்யாவின் மணம் வீசிக் கொண்டிருந்தது. அவளால் அதைத் தவிர்க்க முடியவில்லை. இவர்கள் இவ்வாறு நிர்பந்த படுத்தாமல் இருந்தால் ரம்யா பற்றிய நினைவுகளுடன் தனிமையாக இருப்பதற்கு அவன் மனம் ஆசைப்பட்டது. வேண்டாம் என்று அவளை ஒதுக்கவும் முடியாமல் வேணும் என்று சேர்த்துக் கொள்வதற்கு அவள் ஒப்புக்கொள்ளாமல் இது என்ன தலைவலி?
அவனுக்கு நிகிலா பற்றிய இது போன்ற எண்ணங்கள் வந்ததில்லை. நிகிலவின் பிரிவு அவளை வேறுவிதமாக தாக்கியது. ஆனால் ரம்யாவிடம் இருக்கும் இந்த ஒழுக்கம் அவனை குத்தி கூறு போட்டுக் கொண்டிருக்கிறது. அவள் திருமணமானவள். அவளுக்கு ஒரு குழந்தை உண்டு. அவள் கணவன் உயிருடன் இல்லை. இது போன்ற எந்தவிதமான விஷயங்களும் அவன் காதலை ஆட்டம் காண செய்யவில்லை. மாறாக பரிதாபத்தில் ஆரம்பித்தது இன்று அவனை பரிதாபத்திற்கு உள்ளாகும் அளவில் அவன் ஒரு காதல் என்ற ஒரு மாய விருட்சத்தை இதயத்திற்குள் வேரூன்ற செய்திருக்கிறது.
இன்னும் சிறு சிறு திருப்பங்களுடன் மீண்டும் சந்திப்போம்.
சுகீ.