in

கவி(தை)யின் கலங்கும் வ(லி)ரிகள்

கவி(தை)யின் கலங்கும் வலி(ரி)கள் 

மூடும் இமை இரண்டும்
மூடாமல் விழித்திருக்க
கருவிழி பாவைகளோ
அசையாமல்
நிலைத்திருக்க
பசித்திருக்கும் பெருவயிரோ
பசியின்றி தவித்திருக்க
துடிக்கும் இதயமும்
துடிப்பின்றி துடிதுடிக்க
இரத்தம் கூட
ஓடாமல் உறையாமல் 
ஓரிடத்தில் நின்றிருக்க
உயிர்வெடிக்க காத்திருக்கிறேன் 
உன் உயிர் குடிக்கும் நாள்
பார்த்திருக்கிறேன் நான்
……………..
கருவறை கதவு திறந்து
கருவிழி கண்விழித்து 
கால் முளைத்து மண் தவழ்ந்து
பள்ளி சென்று பருவம் பூத்தேன்
உன் உருவம் பார்த்தே என்
உள்ளம் வேர்த்தேன்
தருணம்தான் பார்த்தாயோ என்
கர்ப்பப்பை நிறைத்தாயோ எனை
தர்ப்பை புல் என நினைந்தாயோ
என் கருவறை தாழ் திறக்கும்முன்னே எனை
கல்லறைதான் சேர்த்தாயோ
கல்லறைக்கும் கதவு திறப்பேன்
என் கண்ணாளனே காத்திரு
என் வரவை எதிர்பார்த்திரு
………………
உன் காதல் நெருப்பு
எனை தீண்டும் நொடி
காணாமல்தான் போனேனோ
கானல்நீராய் ஆனேனோ
உன் தேகதீயில் பற்றிக்கொண்டு
உருகும் மெழுகாய் கரைந்தேனோ
உயிரில் விழுந்து கலந்தேனோ
தணலில் எறிந்த மரதுண்டாய்
சொல் எனும் கணலை
என்னுள் எறிந்துவிட்டாய்
அனலில் இட்ட சிறகானேன்
உன் காலில் மிதிபடும் சருகானேன்
கனவாய் இருக்க கூடாதோ
என் காதலா எனை நீ 
வெறுத்து போன அந்தநொடி
வெறும் கனவாய் இருக்க கூடாதோ
…………………
உன் காந்தபார்வையில்
எனை இரும்பாய் ஈர்த்துவிட்டாய்
உன் காதல்தூண்டிலில் 
எனை புழுவாய் மாட்டிவைத்தாய்
உன் ஆசைவார்த்தையில்
வசமாய் மயக்கிவிட்டாய்
உன் மோகமுள்ளில் என்
தேகம் கீறி உன் தாகம்
தீர்த்துக்கொண்டாய் 
எனை பெண்ணாய்
முழுமையாக்கி என்
பெண்மைதனை உணரவைத்தாய் 

எனக்குள்ளே உன் உயிரையும் 

விதைத்துவிட்டாய் 
ஒரே ஒரு வார்த்தையில்
எனை மொத்தமாய்
புதைத்தும் விட்டாயே
…………………..
அரைஜான் வயிற்றுக்காக
அற்ப உடலை அர்ப்பணித்து
பிழைக்கும் அழகுதாசியின்
மகள்தான் நான் ஆனாலும்
எனக்கும் ஓர் மனமுண்டு
அதில் நீயின்றி யாருண்டு
தாசியின் மகள் வேசியென எனை தூற்றி பேச எப்படி துணிந்தாய் 
காதல்வசனம் பேசிய கண்கள்
என் கற்பை காரி உமிழ்ந்ததோ
என் கண்ணீரை கண்டும்
என் காதல் உனக்கு 
புரியாமல்தான் போனதோ
என் தாயவள் உடலை விற்று
வளர்த்த உடல்தான் இது
உயிரோடிருக்கும்வரை 

உனையன்றி வேறொருவர்
தீண்டியதில்லை உயிர் 

பிரிந்தாலும் என் உடல் 
அழுகினாலும் வெட்டியானும்
தீண்டவேண்டாமென தீயை
தீண்டிக்கொண்ட தீவதனி நான்
………………….
காதலில் காத்திருத்தலும்
நேரம் கடந்து வருகையில்
நீ சொல்லும் பொய்களும்
பொய்யின் முடிவில்
எனது பொய் கோபமும்
கோபத்தின் பலனாய்
உனது கொஞ்சல்களும்
எனது மிஞ்சல்களும்
இதழின் வீணை மீட்டும்
சத்தமில்லா முத்தங்களும்
இதுவன்றோ சுகமென்று
நான் நினைத்திருக்கையில்
அத்தனையும்
மாயையென்று
உணர்த்திவிட்டாய் நீ அன்று
……………..
தொண்டையில் தொடங்கி
அடிக்குடல் வரை இறங்கிய
விஷத்தின் தன்மை உன்
வார்த்தையை விட கசப்பில்லை
சங்கு கழுத்தை பதம்பார்த்த 
அந்த அரிவாள் உன் சொல்லை
விட கூர்மையில்லை
நானே ஊற்றிக்கொண்ட
மண்ணெண்ணெயின் நாற்றம்
என் மேல் நீ வீசிய சந்தேக

சாக்கடையை விட அதிகமில்லை
என் உடலை தாக்கிய அக்னியின்
வெப்பம் உன் வெறுப்பை கக்கிய
கண்களை விட மோசமில்லை
இத்தனையும் ஒன்றாய் நான்
அனுபவித்த போதிலும் மரண 
வாயிலிலும் என் உயிர் உனை
தேடி தவித்த அந்த நொடிதனை
அதன் வலியின் கொடுமைதனை
அறிவாயா என் காதலா
………………………
காற்றில் அலைந்துதவிக்கும் காரிருளில் மூழ்கி தத்தளிக்கும்
வைத்துக்கொண்ட நெருப்பின் சூடு தாங்காது தகிக்கும் 
எனது இன்னுயிர் உன்னுயிர்
தந்தால் மண்ணுலகம்அலையாது
விண்ணுலகம் செல்லும் 
காலம் நேரம் கடந்து உன்
கிரகம் மடங்கும் நாளன்று
என் காதலா உன் உயிர்
என்னோடு சேரும் பார்நின்று
என் விதி முடியும் நாள் முன்பே
உன் விதி முடிப்பேன் என் அன்பே
என்னுயிர்பட்ட வலிகள் உன்னுயிர் படாது பார்த்து கொள்வேன் 
ஆனாலும் விடாது கொல்வேன்
………………
என் மன்னவனின் ஆசை
காதலில் பூத்த என்
குறிஞ்சிபூவே அரும்புமலரே
ஆசைகொழுந்தே என்னுள்
உதித்த என் அழகுகிளியே
உனை அள்ளி கொஞ்சும்
நாள் எப்போதென காத்திருக்கும்
உன் அன்பு தாயின் குரலது
உன் செவி வழி விழுகிறதா
அதிர்ஷ்டம் கெட்ட  உன்
அன்னை மனம்படும் பாடு
உன் சிறுஇதயம் உணர்கிறதா கொற்றை வெண்மங்கை இவள்
அனுபவிக்கும் வேதனையை
அறிவாயா என் ஆரமுதே
என் கண்ணீர் துளிகளின்
ஈரம் பட்டே காயாமல் நிற்கும்
என் கன்னம் வருடி உன்
பிஞ்சு இதழ்களால் முத்தமிட்டு
துடைப்பாயென துயில்
கொள்ளாமல் துடிக்கிறேனடா
…………………

எனதழகு பொன் பூந்தளிரே
உனதழகு பொற் பாதங்களை
என் நெஞ்சில் வைத்து கொஞ்ச
அடங்கா ஆசைகொண்டிருந்தேன் 
குட்டி பவளவாய் தன்னில்
முட்டிமோதி நீ அமுதம் அருந்தும்
அழகை பார்த்து பார்த்து
பூத்துபோக எண்ணியிருந்தேன்
அழகு இதழ் திறந்து அம்மாவென
நீ அழைக்க இன்பத்தேனாய்
என் செவி குளிர காத்திருந்தேன்
சின்னஞ்சிறு சேட்டைகளும்
சில்வண்டு விழி குறும்பும்
செல்ல சிணுங்கல்களுமாய்
சிங்காரமே உனை காண்பதற்குள்
கறைப்பட்ட காரிகை இவள்
காற்றாய்த்தான் ஆகியிருந்தேன்
………………..

காதலா காதல் இருக்கிறது
உன்னில் நான்கொண்ட காதல்
இன்னும் மிச்சம் இருக்கிறது
அதனால்தான் உனை 
கொல்ல நீளும் எங்கரங்கள் 
உன் முகமதனை கண்டபின்
துணிவின்றி துவள்கின்றன 
கொல் கொல் கொல் என
வேதனை தாங்கிய எனது
நெஞ்சம் கொந்தளிக்கிறது
நில்  நில் நில் வேண்டாமென
காதல் நெஞ்சம் கெஞ்சுகிறது
காதல் பேசிய கண்களில்
கடும் வெறுப்பை கண்டபின்னும்
சகித்துக்கொண்ட என்துள்ளம்
கரும்புகையாகிப்போன எனை
கண்டு மரணபீதி கொண்டு
மிரளும் உன் கண்களை
காணசகியவில்லை என்காதலா
……………….
கொல்லாதே என் காதலே
உன்னால் மதியிழந்து
மானமிழந்து மண்ணிலும்
வீழ்ந்துவிட்டேன் இனியும்
என் உயிரை விட்டு பிரியாது
என் நெஞ்சைவிட்டு நீங்காது
என்னுள்ளே இருந்து என்னுயிரை
மண்ணுலகம் தங்கவிடாது
விண்ணுலகம் செல்லவிடாது
எனை கொல்லாதே என் காதலே
காதலித்தவனை கரம்பிடிக்க
இயலவில்லை காற்றாய்
ஆனபின்னும் அவனுள்ளே
நுழைந்து என்னுயிரை
எடுத்துச்செல்ல இயலவில்லை
நேரம் பார்க்கிறேன் கிரகம்
சரியும் நாளும் தேடுகிறேன்
அதுவரை எரிந்து போன
நெஞ்சுள்ளே இருந்து எனை
மீண்டும்கொல்லாதே என்காதலே
………………
என்ன மாயம் செய்தாய் மதனா
மயங்குகிறாள் இந்த வதனா
துரத்தியடித்தாலும் ஓயாது
மோதிதிரும்பும் அலைகடலாய்
நீ தூக்கிவீசிய என் காதல்
மீண்டும் மீண்டும் உன்னிடமே
முட்டி மோதி அலைகிறது
உன்னுடன் சேர இன்னுமோர்
பிறவியுண்டா என தேடிதிரிகிறது
ஆனாலும் உன்னால் என்
என்னிதயம் பட்ட வேதனைகள் 
மறக்கமுடியவில்லை என்னால்
வேதனை தீர என்செய்வேன் நான்
உன்னை கொல்லட்டுமா
கொல்லாமல் செல்லட்டுமா
கொன்றால் உடனே தீருமா
தீராத என் ஆசைகாதல் 
சொல்லென் மாய மதனா
……………..

கரைசேராத அலைகடல் நான்
கறைபடிந்த கன்னிகை நான்
கண்ணா உன்னை நினைந்தே
கண்மூடிகிறங்கும் காரிகைநான்
கண்ணுக்குள் உனை வைத்து
கண்ணிமையாயானவள் நான்
கல்யாணமேடை காணும்முன்னே
கட்டில்மேடை கண்டவள் நான்
கட்டுக்கடங்கா காதல் காய்ச்சல்
கண்டு கண்ணுறங்காமல் 
கண்ணாளா உன் மோகத்தில்
காலனுக்கு உணவாகியவள் நான்
காற்றாய் ஆனபின்னும் என்
கண்ணா உன்னுடன் சேர
காத்திருக்கிறேன் உன்
கண்ணின் மணியில் உறுத்தும்
கண்மணியாகிய மதிவதனி நான்
………………
மறக்கமுடியவில்லை மதனா
உன் காதல் மட்டுமல்ல
உன் துரோகமும் கூட என்னில்
காதல் செய்தாயோ அன்பில்
காயம் செய்தாயோ உள்ளத்தின்
உள்ளே அன்பை உறுதிசெய்தாயோ
என்னுள்ளே புகுந்து அம்பை எய்துவிட்டாயோ இதயம்
இரண்டாய் உடைந்தபின்னும்
காதல் செய்கிறேன் உனக்காய்
என் உயிரின் எச்சம்
மிச்சம் வைக்கிறேன் எனக்காய்
உன் உயிரை தந்துவிடு
அல்லது மீண்டும் என்னை 
கொன்றுவிடு இல்லையேல்
என்னையாவது கொல்லவிடு
………………….
என் உயிர்பறவை அலைகிறது
உன் உயிர்த்தேடி திரிகிறது
உன் உறவுவேண்டி மருகுகிறது
நான் காதல்பிச்சை கேட்கிறேன்
துரத்தாதே என் தலைவா எனை
விரட்டினாலும் துரத்தினாலும்
மீண்டும் வருவேன் மீண்டுஎழுவேன்
உன் உயிர் கொத்தி தின்னாமல்
ஓயாது இப்பறவை விடாது
உன் உறவை பார்த்திரு என்
தலைவா எனக்காக காத்திரு
வருகிறேன் உன்னைத்தேடி
என்றும் நீ அல்லவா என் உயிர்நாடி
……………….
பத்து திங்கள் உனை சுமந்தேன்
பத்தியங்களும் பல இருந்தேன்
என் பட்டுப்பூவே நீ மொட்டவிழும்
நாளும் எந்நாளோ என் உதிரம்
திரித்து அமுதமாக உனக்குஊட்ட
ஆசையோடு உன் அன்னை நான்
நீ   பூமி   மிதிக்கும்  பொன்நாளின்
வரவுக்காக அளவில்லா ஆவலோடு 
அளப்பரியா பேரின்பமாய் நிற்கிறாள் 
அம்மா எனும் அரிய வரம் தந்த 
அழகிய வரப்பிரசாதம் நீ என்
பெண்மையை பூர்த்தி செய்த
பெரும் பொக்கிஷம் நீ உலகில்
இன்பமானவலி என்று 

ஒன்று உண்டென்றால் அது உன்னை பெற்றெடுக்கபோகும் பிரசவவலிதான் என்பது 

மிகையாகிவிடுமா என் கண்ணே
……………………

ஓடும் நதியின் ஓடம் ஒன்றில்
ஒற்றை ஆளாய் நானும் நின்று
வெற்று பார்வை வீச்சினிலே
கற்றைமுடி காற்றில் அலைய
அன்றில் பறவையாய் அன்றும்
இன்றும் காலங்கள் கரைந்து
போனபின்பும் கரைபார்த்து 
கண்கள்தான் பூத்தபின்பும்
கன்னிமலர் இவள் காதலினால்
உன் கால்தடம் மண்ணில்
காணாதா கரைதனில் உன்
உருவம் வாராதா கட்டுமரம்
தன்னில் என்னுடன் கை
கோர்த்துவிட மாட்டாயா என
கரைந்துருகி கண்ணீர்விட்டு
கரைகாணா ஓடமதில் வெள்ளம்
பெருகி சூழ்ந்தும் கூட தத்தளித்து
மனமுருகி உனையே நினைந்தேனே
மன்னவா உன்மனம் இளகமாட்டாயா
………………….
கன்னி இவள் கருநாகப்பூவோ
கண்களிரண்டும் அசைந்தாடும்
கருவண்டுதானோ கன்னமது
மாம்பழச்சதையோ செவ்விதழ்
தேனூறும் செந்தாழம்பூவோ
பொன்னுடல் மதுசுரக்கும் ஊற்றோ
அலைபுரளும் பாற்கடலோ
அமிர்தம் ததும்பும் பொற்குடமோ
அம்மம்மா என் சொல்வதம்மா
அவள் வதனம்தான் மயக்குதம்மா
கள்வன் அவன் மோகத்தால்
கற்பிழந்த கன்னி இவள் 
மாறித்தான் போனாளோ விஷம்
கொண்ட கருநாக பாம்பாக 
சீறிதான் நின்றாளோ
……………..
நளினமாய் பாயும் நதி அவள்
ஆவேசம்கொண்ட கங்கையானாள்
அழகு பொங்கும் ஆறு அவள்
பொங்கியெழும் வெள்ளமானாள்
மெல்லிய சுடர்விடும் தீபம் அவள் 
பற்றிக்கொண்ட நெருப்பானாள்
நுரைததும்பும் கடல் அவள்
ஆர்ப்பரித்து எம்பியெழுந்து
ஆளைகொல்லும் சுனாமியானாள்
அவள் வலி உணர்த்த அழுதாள்
கரைந்தாள் கெஞ்சினாள் 
வலிக்கு பழி தீர்க்க மையம்
கொண்ட புயலாய் பூமனம்
கொண்ட மெல்லியபூவை அவள் 
பூகம்பமாய் மாறித்தான் நின்றாளோ
…………………
அந்தி மயங்கும் மாலைநேரம்
ஆளில்லாத தீவின் ஓரம்
குளிரும் நெருப்பாய் நானும்
தகிக்கும் நீராய் நீயும் ஒன்றாய்
கலந்து ஒன்றுக்குள் இணைந்து
உலகையும் மறந்து உவகையுடன்
காலநேரம் கடந்து காதலில்
கரைந்து கணநேரம் பிரியாமல்
வாழவே எண்ணினேன் வரம்
கேட்டு மருகினேன் இன்னும்
உன்னுடன் வாழவே விரும்புகிறேன்
இனியும் என் காதலை மறுப்பதேனோ
என்னை மேலும் வெறுப்பதேனோ
………………..

தொலைந்து போன காதலை
தொலைத்த இடம் தேடியே
தொலைவில் தொலைவில்
போகிறேன்
தொலைந்து தொலைந்தும்
போகிறேன்
காதல் செய்த காலங்கள்
கனவாய் இன்று போனதோ
காத்திருந்து காத்திருந்து
காலம் கரைந்து போனதோ
ஏற்றி வைத்த தீபம் இது
எண்ணெய் இன்றி தீயுதோ
தீய்ந்து தீய்ந்து தீரவே
திரியும் கருகிப்போனதோ
உன்னை எண்ணி வாடினேன்
உன்னை காண ஏங்கினேன்
என்னைத் தேடி வாராயோ
ஏக்கம் தன்னை தீராயோ
……………..

காதல் உணரா கணவா
கனவில் நெருங்கும் திருடா
உன் உறக்கம் திருட வரவா
என் தூக்கம் கலைத்த கள்வா
உன் அருகில் நிற்கும் போதிலே
என்   உள்ளம்   தடுமாறுதே
நீ தூரம் செல்லும் போதிலோ
என் நெஞ்சம் உனை தேடுதே
காதல் அதனன் பொருளோ
உந்தன் கண்ணில் காந்தம் உளதோ
ஆணின் திமிரும் அழகோ
அதில் மயங்கும் பெண்மை திமிரோ
அழகா   ஆணழகா 
பெண்கள் விரும்பும் பேரழகா 
பெண்ணை வெறுக்கும் கள்ளழகா
உறவா உன் உறவா
உன் உயிரில் கலந்து விடவா
உன்னில் எனை கரைத்திடவா
உன்னை நான் நெருங்கும்
வேளையில் ஏதோ தடை போடுதே
இதயம் திறந்து பேசவே
இதழும் சதிராடுதே
நாணம் அதனன் பெயரோ
எனக்கும் நாணம் வருமோ
ஆணை அடக்க நினைத்த 
பெண்மை நான் உனக்குள்
அடங்கிப்போனேன் உண்மைதான்
என் இதயம் நுழைந்த இணைவா
உன்னுள் இணைய என்னை தரவா
என் காதல் உணரா கணவா
என் மேல் காதல் உனக்கு உளதா
………………..

உன்னோடு பயணிக்கும் 
நாள் ஒன்றே போதும்
உன்னுடன் கை கோர்க்கும் 
நொடி ஒன்றே போதும் 
உன் தோள் சாயும் 
வரம் ஒன்றே போதும்
உன் விழிகள் தேடும் காட்சியாய்
நான் இருந்தால் போதும்
உன் முகம் பார்க்கும் சாட்சியாய்
என் விழிகள் இருந்தால் போதும்
உன்னோடு நான் கூடும் 
நேரம் வாராமல் போனாலும்
என் இதயம் என்றென்றும்
உன் நினைவுடனே சேரும் 
உன் அருகில் நான் நின்றே
என் காலங்கள் போகும்…..
உன்னுடன் சேராமல்  எப்போது
என் ஜென்மங்கள் தீரும்
………………….
மையிட்ட விழிகளால் எனை
மையலிட பார்க்கிறாய்
விழியெனும் விளக்கில் விட்டில்
பூச்சியென இந்த விண்மீனையே
வீழ்த்திவிட  பார்க்கிறாய் 
செங்குறு நாசியில் செதுக்கிடவும்
செவ்விதழ் தீயில் சிதைத்திடவும் 
செம்பவள கன்னத்தில் பதுக்கிடவும்
உடுக்கை இடையில் சனல்போல்
எனை திரித்திடவும் சித்தம்
கொண்டு அலைகிறாய்
உணவை விழுங்கும் மூங்கில்
தொண்டைக்குள் என்னையும்
சேர்த்து விழுங்கிவிட பார்க்கிறாய்
மயக்கும் மோகனத்தில் 
மன்னன் இவனை 
மண்குதிரையாக்க பார்க்கிறாய்
வேங்கை வேடன் இவனையே 
வேட்டையாடப் பார்க்கிறாய்
நடக்குமா முடியுமா உன்னால்
ம்ஹூம் ம்ஹூம் ஒருக்காலும் 
நடக்கப்போவதில்லை
உனைகண்டு  நான் மயங்கப்போவதுமில்லை 
உனதழகில் நான் 
வீழ்ந்து விடப்போவதுமில்லை
…………………..

எப்படிச் சொல்வேனடி அதை
எப்படிச்சொல்வேன் கண்ணே
உன்னோடு நான் சேர்ந்தால் 
விண்ணோடு நீ சேர்வாயென எப்படிச்சொல்வேன் உன்னிடம்
கொதிக்கும் உன் விழிகளில்
தெறிக்கிறது உன் காதல்
காதல் கொதிநீர் சிதறியதில்
சில்லென உறைகிறது என்னிதயம்
செந்தீயாய் பற்றி எறியும்
உன் இதழோடு உறவாட 
இம்சிக்கிறது என்னிதழ்கள்
நீ வீசிச்சென்ற வார்த்தையொன்று
மீண்டும் நினைவில் வந்து
கொல்கிறது நித்தம் என்நெஞ்சில்
ஒரு கண்ணில் காதல்
ஒரு கண்ணில் துரோகம்
இரண்டுக்கும் நடுவில் 
சிக்கித்தவிக்கிறது என் மோகம்
துரோகத்தின் விடை சொல்லாமலே 
துடிப்போடு வீழ்ந்தாய்  நீ அன்று 
விடை தேடியே நொந்தேன் நானும் 
இறந்தும் புதைந்தும் பிறந்தும்
துரோகத்தின் சுவடுகள் மீண்டும்
ஏன்தான் என் நினைவிழாடியதோ
துரோகமும் உன் சாபமும்
காதலும் என்னின் மோகமும்
ஒன்றாய் கலந்து பிசைந்து
நெஞ்சக்குழியின் மத்தியில்
மத்தை போல் மாட்டிக்கொண்டு
விழுங்கவும் முடியாமல்
முழுங்கவும் முடியாமல்
தவிக்கிறேன் என்பதை
எப்படிசொல்வேனடி கண்ணே
நினைவுகள் உனக்குள்ளும்
தோன்றினால் என் செய்வாய் நீ
எனைக் காதலா செய்வாய்
இல்லை வாள் வீசி கொல்வாய்
வீறு கொண்டு துள்வாய்
வேதனையில் துவள்வாய்
வேண்டாமடி வேதனைகள்
உன் நெஞ்சம் வேகாது
என் இதயம் தாங்காது
நீயும் நானும் இருதுருவங்கள்
காதலிலும் சேரமுடியாது
கட்டிலிலும் கூட முடியாது
நெஞ்சை அறுக்கும் துரோகமும்
உயிரை கொல்லும் நினைவுகளும்
என்னோடு போகட்டும் உனக்கு
வேண்டாம் நினைவுகளின்வலி 
பிரிவோம் நன்பர்களாய்
போதும் இது போதும்
இந்த ஜென்மத்திற்கு உன்
நட்பு மட்டும் போதும் அதுவும்
தூரம் நின்று தந்தால் போதும்
நீ அருகில் வந்தால் என்னில்
புகுந்த அவன் உன்னை
கொல்லவும் தயங்கமாட்டான்
போய்விடு காதலே எனக்குள்
சிக்கி சாகாமல் என்னை 
கடந்து தூரம் போய்விடு
மீண்டும் உன் உயிர் தின்னும்
வேதனை எனக்கு தாராமல்
தொலைதூரம் போய் விடு 
……………
   நிலவுக்கவிகிறுக்கல்கள்

அவளை நினைத்து நிலவை 
பார்த்தால் நிலவும் திமிரோடு 
நிற்பதுபோல் தெரிகிறதே
நெளியும் நட்சத்திரம் கடன்வாங்கி
கூராய் ஒரு வாள் செய்து
வாளேந்தி இறங்கிவந்து 
வம்பு செய்வதுபோல் இருக்கிறதே….
அமைதியாய் ஜொலிக்கும் 
குளிர்நிலவுக்கும் அவள் பெயர்
வைத்தால் அடங்காப்பிடாரியாய் 
ஆகிவிடுமோ…..
……………
வெண்ணொளி வீசும் வெண்மதியே
உன்னொளி கண்டு அந்நியவர் காண்பாரோ என்று என் மனையாள்
என்னை நெருங்க மறுக்கிறாள்
சற்றுநேரம் ஒளிந்து கொண்டு
இருளை கொஞ்சம் இரவல் கொடு
என்னவளை கொஞ்சலுடன் முத்தாடிக்கொள்கிறேன்.……
………………..
அடி சந்திரமதி ஏன் என்னைகண்டதும்
பதுங்குகிறாய் பூலோகத்து கன்னியர்கள்தாம் என்னை இமயத்தோடு
ஒப்பிட்டு எட்ட நின்று எட்டிப்பார்த்து
பயந்து ஓடுகின்றனர் விண்ணில் 
உலாவும் உனக்கும் என்னைக்கண்டால்
ஏளனமாய் தெரிகிறதோ காதலுக்கு
இவன் உகந்தவன் அல்ல என்று 
கங்கணம் கட்டிக்கொண்டாயோ
எனக்கும் காதல்செய்து காதலியுடன்
கைகோர்த்து பாரடி பெண்ணிலவே
என வெண்ணிலவுன்னை கைகாட்டி
கவிபாடவேண்டும் என்று ஆசைதான் 
இருக்காதோ எங்கே எனக்கானவள்
எத்திசையில் இருந்தாலும் தேடிக்
கொணர்ந்து என்னிடம் ஒப்படைத்துவிடு
இல்லையேல் விண்ணிற்கு வந்து
உன் சிறகை ஒடித்துவிடுவேன்…….
…………..
முழுமதியே உன்னைக்காட்டி
எத்தனை முறை அன்னமூட்டி
வளர்த்தேன் என் அன்புதங்கையை
நான் இங்கிருக்கிறேன் இதோ
நீயும் வந்துவிட்டாய் அன்னமும்
இருக்கிறது அவள் எங்கே கூறு
அழகு வீரம் அன்பு பண்பு
அடக்கம் ஆளுமை அனைத்தும்
ஒன்றாய் அமைய பிறந்தவளுக்கு
ஆயுள் மட்டும் முழுதாய் அமையாமல்
போனதேனோ எமனைகண்டால் கூறு
என் முன் வந்தால் அவன் மரணம்
என்னால்தான் என்று கூறு……..
மணக்கோலத்தில் பார்க்கவேண்டியவளை
பிணக்கோலத்தில் காண்பேனேன்று
நினைக்கவில்லையே எங்கே வந்தாய்
என்னுடன் பிறந்தவள் இல்லா உலகில்
உனக்கும் இடமில்லை போய்விடு
…………….
வாடி என் வெண்ணிலவே 
உன்னை வரைவேன் என 
இங்கே நின்றாயோ என்
இதயம் வரைந்த மன்னவன்
இன்று இன்னொருத்திக்கு 
உறவான மாயமென்ன மதியே
இதயம் ஏற்கா ஒருவனுடன் 
என்னை இணைத்துக்கொள்ள 
கூறினால் ஒப்புக்கொள்ளுமா என்மனம்
மனதில் ஒருவன் நிறைந்தபிறகு
மதி கெட்டு போய் இன்னொருவனை
மணத்தல் நியாயமாகுமோ மதியே
மதி இருந்தால் கூறு என் விதி
என்னவென்று விளக்கி கூறு
இனி என் நிலை என்னவென்று
விளக்கமாய் கூறிவிடு
………………….
வந்தாயா என் தேன்மதியே
கண்டாயா என் அழகுநதியை
என் செய்கிறாளோ எப்படி
இருக்கிறாளோ நலமாய் 
இருக்கிறாளா மெலிவாய் 
போய்விட்டாளா என்னை 
நினைக்கிறாளா சேதி ஏதும் 
கூறினாளா மறைக்காமல் 
உரைத்துவிட்டு செல் நான்
என்றும் அவள் பொன்முகம்
தாங்கும் தினவான தோளோடு
காத்திருக்கிறேன் என்று எடுத்துச்சொல்
என்னிடம் பாராமுகம் காட்டாமல்
பதமாய் ஒரு பார்வையேனும்
பார்த்தால் போதுமென்று இதமாய்
எடுத்துக்கூறு என் இதயம் அவளுக்காய்
துடிக்கிறதென்று நயமாய் உரத்து கூறு
……………..
காதல் கொண்ட கணவன் 
கர்வம் நிறைந்த கள்வன்
கட்டியணைத்து கொல்லும்
கன்னம் வைத்த கயவன்
முத்தமிட்டு மூர்ச்சையுற்று
என்னை மொத்தமாய் விழுங்கிவிட்டு
சென்றுவிட்டான் உன்னிடம் ஏதும்
உரைத்தானோ கூறடி என்
வெண்ணிலவே உரைத்த மொழி
ஒன்றுவிடாமல் என்னிடம் மொழிந்துவிடு
ஆனால் அவன் ஆணவம் கொண்ட
அலும்பன் ஆயிற்றே உண்மையில்
என்னை நினைத்து தவிக்கிறானா
தவிப்பதாய் உன்னிடம் கூறினானா
சரியாய் கண்டாயா நீ கூறடி
என் பொன்னிலவு தோழி
………………

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

2 Comments

Leave a Reply
  1. வளமான வார்த்தைகள் வடிவமைக்கப்பட்டு கருத்துக்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன அருமை சகோதரி வாழ்க வளமுடன்.👌👌👌👍👍

  2. வளமான வார்த்தைகள் வண்ணம் தீட்டப்பட்டு ,வரிகளின் ஆழமான கருத்துகள் செதுக்கப்பட்டு, உயிர் ஓவியமாக படைக்கப்பட்டு, உலா வரட்டும் கவிதை பாராட்டப்பட்டு, சொல் வளமும் செயல் வளமும் பெருக என் வாழ்த்துக்கள் . 👌👌👌👌👍👍👍 அருமை சகோதரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Advocate

Written by rani thenral

அன்பின் அரசனே…. 9

இழப்பேனென்று நினையாதே நிழலுறவே இரண்டாம் பாகம்-13