in , ,

ஆருயிர் ஆதிரையாள் 2

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு…

“அம்மா! இந்தாங்க காபி” எனத் தனது அன்னை பாக்கியத்திடம் காபி கோப்பையை அவசரமாக வழங்கிவிட்டு, இடையில் கட்டியிருந்த சாரத்தைத் தூக்கி மடித்துக் கட்டியப்படி சமையலறைக்கு விரைந்தோடி பொங்கி வழிய இருந்த சாம்பாரை, அடுப்பை அணைத்து நிறுத்தியிருந்தான் இளங்கவின்.

“இலக்கியா… இலக்கியா” எனக் கீழிருந்து மேலறை நோக்கி குரல் கொடுத்தான் அவன்.

மேலறையில் படுக்கையில் புரண்டு படுத்தவளின் காதில் அவனின் குரல் கேட்ட நொடி, “இதோ வந்துட்டேன்ணா” என அடித்துப் பிடித்து எழுந்தாள்.

அங்கிருந்த கடிகாரத்தைப் பார்க்க மணி காலை ஆறு மணியெனக் காண்பிக்க, “அய்யய்யோ டைம் ஆகிடுச்சே” எனப் பதறி எழுந்து சென்று குளித்து முடித்துக் கீழறை நோக்கி சென்றாள்.

மூன்று அறைகள் ஒன்றன் மேல் ஒன்றாய் இரண்டு மாடியில் கட்டப்பட்டிருந்த வீடு அது. தரை தளத்தில் வரவேற்பறையும் சமையலறையும், முதல் மாடியில் ஒரு படுக்கையறையும் அதனுடன் இணைந்த குளியலறையும் இருந்தது. இரண்டாம் மாடியில் பால்கனியுடன் கூடிய ஒற்றை அறையும் வெளியில் குளியலறையும் இருந்தது.

முதல் மாடியில் இலக்கியா அவளது தாயுடனும், இரண்டாம் தளத்தில் இளங்கவின் அவன் கடையில் வேலை செய்யும் கதிரேசனுடன் அறையைப் பகிர்ந்து கொண்டான்.

படிகட்டின் வழியாய் அத்தளத்தை அடைந்தால் இடது புறத்தில் சிமெண்ட் தரையுடன் எந்தப் பொருட்களும் இல்லாது ஆங்காங்கே பாய் மற்றும் பெட்டிகள், துணிமணிகள் வைக்கபட்டு காலியாய் இருந்தது அந்த ஒற்றை அறை. அறையின் முன்னால் பால்கனி போல் சிறிது இடம் விடப்பட்டுக் கைப்பிடி வைக்கப்பட்டிருக்க அந்த இடத்தில் துணி காயப்போட கயிறு கட்டிப்பட்டிருந்தது. சற்று ஒதுக்குபுறமாய் இரும்பு கதவு கொண்ட சிறிய குளியலறை இருந்தது.

தரை தளமும் இரண்டாம் மாடி முழுவதும் டைல்ஸ் தரை வைக்கப்பட்டு, சுவரெல்லாம் பல வண்ணங்களில் ஆயில் பெயிண்ட் செய்யப்பட்டிருந்தது.

மணி காலை ஆறரை எனக் காண்பிக்க, ஜீன்ஸ் குர்தி அணிந்து, தோளில் இருந்த ஷாலை சரி செய்தவாறே, “அண்ணா டிபன் ரெடியா? டைம் ஆயிடுச்சுணா” எனக் கூறிக் கொண்டே கீழிறங்கி வந்தாள் இலக்கியா.

வரவேற்பறையில் மேஜையில் அமர்ந்து அவளின் தாய் காய்கறி நறுக்கி கொண்டிருக்க, சமையலறையில் இலக்கியாவின் உணவு பையில் சாம்பார் சாதமும் உருளை கிழங்கு பொறியலுமாய் டப்பாவில் அடைத்துத் திணித்துக் கொண்டிருந்தான் இளங்கவின்.

“காலைலயே எழுந்திரிச்சு அண்ணனுக்குக் கூடமாட உதவி செய்வோம்னு இல்லாம… வக்கனையா லன்ச் ரெடி ஆகிடுச்சானு மட்டும் கேள்வி கேளு” என இலக்கியா தலையில் குட்டு வைத்தார் பாக்கியம்.

“அம்மாஆஆஆ!” எனத் தன் தலையைத் தடவி அலறியவாறே, “பாருண்ணா இந்த அம்மாஆஆவ” எனச் சமையலறை நோக்கி சென்று தனது அண்ணனிடம் அவள் புகார் வாசிக்க,

அன்னை மற்றும் தங்கையின் செயல்களைப் பார்த்து வாய்க்குள் சிரித்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தான் இளங்கவின்.

அங்கிருந்த இட்லி சட்னியையும் ஒரு டப்பாவில் அடைந்தவள், “அண்ணா நான் ஆபிஸ் போய்ச் சாப்டுக்கிறேன்” எனக் கூறி தன் பையைக் கையில் எடுத்து கொண்டவள் செல்ல, “இதையாவது குடிச்சிட்டு போ” என அவள் கையில் ஒரு குவளை பாலை அவன் திணிக்க, “ஆபிஸ் பஸ் போய்டும்ணா” என முகம் சுருங்க கூறியவள், அவன் கண்ணில் தெரிந்த கண்டிப்பில் அதை வாங்கி அவசரமாய்ப் பருகி விட்டு அவன் கையில் திணித்தாள்.

அதே சாரமும் டீ சர்ட்டுமாய் கிளம்பி தனது பஜாஜ் பைக்கை தட்டி கொண்டு அவன் தயாராய் நிற்க, பின் இருக்கையில் ஏறிக் கொண்டவள், “சீக்கிரம் போணா, டிரைவர் விட்டுட்டு போய்டுவாரு” என முகத்தைச் சோகமாய் வைத்துக் கொண்டு கூற,

“தினமும் இதே வேலையா போச்சு உனக்கு” என அவளை முறைத்தவனாய், சற்று மிதமான வேகத்தில் சென்று நிறுத்தத்தில் அவன் நிற்கவும் அவளது பேருந்து வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

அதன் பின் தாய்க்கும் தனக்குமாய் டிபன் எடுத்து வந்து அவருடன் பேசிக் கொண்டே உண்டவன், எட்டு மணியளவில் வழமையான அவனது உடையான வெள்ளை வேஷ்டி சட்டையுடன் பணிக்கு செல்ல ஆயத்தமாய் வந்தவன்,

“அம்மா சாப்பாடுலாம் ரெடியா இருக்கு. மதியம் நேரத்துக்குச் சாப்டு மாத்திரை போட்டுடுங்க. இப்ப தான் நெஞ்சு வலி வந்து சரியாகிருக்கு, அதனால எதைப் பத்தியும் கவலைபடாம நான் ரிசார்ஜ் செஞ்சி வச்சிருக்க டிவி ஆப்ல போய் உங்களுக்குப் பிடிச்ச சீரியலெல்லாம் பாரத்து சந்தோஷமா இருங்க சரியா” எனக் கூறிக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் கிளம்பியவன், தங்கம் மளிகை கடை எனப் பெயரிடப்பட்ட அந்தக் கடையில் தனது வாகனத்தை ஓரமாய் நிறுத்தினான்.

“என்னடா காலைல சரக்குலாம் சரியா வாங்கிட்டு வந்தியா? நேத்து மாதிரி சொத்த காய்கறி இல்லாம ஃப்ரஷ்ஷா தானே வாங்கிட்டு வந்த” எனத் தனது கடையில் பணிபுரியும் கதிரேசனிடம் கேட்டவாறே காய்கறிகளை மேற்பார்வையிட்டான்.

அதன்பின் கல்லாபெட்டியில் அமர்ந்து அன்றைய காலை விற்பனை கணக்கு வழக்குகளைப் பார்த்தவன், கடைக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களையும் கதிரேசனையும் நோட்டமிட்டவாறே தன் வேலையினைக் கவனிக்கலானான்.

இளங்கவினின் தந்தை அவன் பத்தாவது படிக்கும் போது இறைவனடி சேர்ந்துவிட, பத்து வருடங்களுக்கு மேலாய் இருக்கும் கடையையும் அதில் வரும் லாபத்தையும், வாடிக்கையாளரையும் விட மனசில்லாமல், குடும்ப நலத்திற்காக அவன் சம்பாதிக்க வேண்டிய சூழலில் இருப்பதை உணர்ந்தவன், தனது படிப்பை நிறுத்திவிட்டு தந்தை பார்த்து வந்த மளிகை கடை வியாபாரத்தினை அவனே மேற்கொண்டு செய்ய ஆரம்பித்தான்.

இளங்கவின் இயல்பிலேயே அமைதியான சுபாவமுடையவன். எண்ணி எண்ணியே பேசும் அவன் வாயிலிருந்து வெகு அரிதாய் தான் சிரிப்பு வரும். கண்டிப்பான தோரணையுடன் தான் வலம் வருவான். அவன் பார்வையின் முறைப்பிலேயே அவனின் கோபத்தை உணர்ந்து அடங்கிப் போய்விடுவர் அவனை அறிந்தோர்.

தனக்கென்று எந்த விருப்பும் இல்லாமல், தாயையும் தங்கையையும் நன்றாய் கவனித்து நல்வாழ்வு அமைத்து தருவதே வாழ்வின் லட்சியமாய் வாழ்பவன்.

இலக்கியா இவனை விட இரண்டு வயது சிறியவள். அண்ணனின் உபயத்தால் வாழ்வின் துன்பம் அறியாது இன்பமாய் வளர்க்கபட்டு நன்றாகப் படித்துத் தற்போது புகழ்பெற்ற நிறுவனத்தில் மென்பொருளாளினியாய் இருக்கிறாள்.

மரியாதை நிமித்தமாய் அண்ணனிடம் அளந்து அளந்து பேசுபவள் நெருக்கமானவர்களிடம் கலகலவெனப் பேசும் சுபாவம் கொண்டவள். அவளின் சம்பாத்தியம் அனைத்தையும் அவளுக்கான சேமிப்பு பணமாகவே வைத்துவிட்டான் இளங்கவின்.

மாலை அலுவலகப் பேருந்திலிருந்து இறங்கி தனது இல்லத்திற்கு நடந்து வந்த இலக்கியா, ரிஃப்ரஷாகி விட்டு தாய்க்கு காபி கலந்து கொடுத்து தானும் குடித்தவாறு அன்னையிடம் அன்றைய நிகழ்வுகளை உரைக்க ஆரம்பித்தாள்.

பாக்கியத்திற்குப் பைபாஸ் சர்ஜரி செய்த இந்த இரண்டு வருடத்தில் அவரை எந்த வேலையும் செய்ய விடாது கவனித்துக் கொள்கின்றனர் இருவரும். அதன் பொருட்டுக் காலை கடைக்குச் செல்லும் கவின் இரவு தான் வருவான் என்பதால், மாலை மற்றும் இரவின் சமையல் வேலை அனைத்தையும் இலக்கியா கவனித்துக் கொள்வாள். காலை மற்றும் மதிய வேளை உணவை விடியற்காலையில் கவின் செய்து விடுவான். இவர்களுக்குக் காய்கறி நறுக்கி கொடுப்பது, சாம்பார் பொடி, கார பொடி அரைத்துக் கொடுப்பது, துணியை மடித்து வைப்பது போன்ற வேலைகளைப் பாக்கியம் கவனித்துக் கொள்வார். வீட்டை சுத்தம் செய்ய வேலையாள் வைத்திருந்தான் அவன்.

இவ்வாறாக இவர்களின் வாழ்வு அமைதியாய் சென்று கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் இலக்கியா இளங்கவினுக்குத் தான் பெண் பார்த்திருப்பதாய் தன் அன்னையிடம் உரைத்தாள்.

“அம்மா! நம்ம வீட்டுக்கு அண்ணிய நான் தேர்ந்தெடுத்துட்டேன்” எனத் தாயிடம் காபி வழங்கியவாறே அவள் உரைக்க,

“யாரும்மா அது?” என அவர் கேட்டார்.

“நான் வீக்கெண்ட்ல என் ஃப்ரண்ட் கல்யாணி கூடக் கோதை இல்லம் போய் அங்கிருக்கப் பிள்ளைங்களுக்கு டியூஷன் எடுப்பேன்லமா.. அங்க தான் ஒருத்தங்களைப் பார்த்தேன். அண்ணா போலவே அவங்களும் ரொம்பச் சைலண்ட் டைப். ஆனா அண்ணா போலக் கோவக்காரங்க இல்ல. ரொம்பப் பொறுமையானவங்க. அண்ணாக்குக் கொஞ்சம் இறுக்கமான முகம். அவங்களுக்குச் சிரிச்ச முகம்” என இவள் கூறிக் கொண்டே போக,

“என்னம்மா நீ எக்ஸாம்ல டிபரன்ஸ் பிட்வீன் த டூ கேள்விக்குப் பதில் எழுதுறது மாதிரி சொல்லிட்டே போற” எனப் பாக்கியம் இலக்கியாவை கேலி செய்ய,

“அட ஆமா மா.. மூனு மாசமா இவங்க நம்ம குடும்பத்துக்கு ஒத்து வருவாங்களா மாட்டாங்களானு நான் செஞ்ச அனாலிஸிஸ்சின் பலன் தான் இது” எனக் கூறி சிரித்தவள்,

“அம்மா அம்மா அவங்க நம்ம வீட்டுக்கு வந்தா அமைதியா போய்ட்டு இருக்க நம்ம வாழ்க்கை எந்தப் பிரச்சனையும் இல்லாம போகும்னு தோணுதுமா”

பின்னாளில் அவளின் அண்ணியால் வர போகும் பிரச்சனையைப் பற்றி அறியாது அவள் தான் அண்ணியாய் வர வேண்டுமெனக் கூறி தன் கைபேசியிலிருந்த அந்தப் பெண்ணின் புகைபடத்தினைப் பாக்கியத்திடம் காண்பித்தாள் இலக்கியா.

“பொண்ணு நல்லா தான் இருக்கு. ஆனா உன் அண்ணன் உனக்குக் கல்யாணம் செய்றதுக்கு முன்னாடி அவன் செஞ்சிக்க ஒத்துக்க மாட்டானே. நானும் அவன்கிட்ட நீங்க இரண்டு பேரும் இப்படி மாத்தி மாத்தி சமைச்சு கஷ்டபடுறதுக்கு நீ ஒரு பெண்ணைக் கட்டிக்கிட்டா அவ எங்களையும் உன்னையும் சேர்த்து பார்த்துப்பாளேனு அவன் கிட்ட நிறைய நேரம் சொல்லி பார்த்துட்டேன்” என அவள் அன்னை கூறவும், அவரை முறைத்து பார்த்தவள்,

“ஏன்மா நீ இந்த வீட்டுக்கு மருமகளைத் தேடுறீயா இல்ல வீட்டு வேலைகாரியை தேடுறீயா? என்னைய யாராவது இப்படி வந்து சொல்லி பொண்ணு கேட்டா கட்டி கொடுப்பியா?” என மூச்சு வாங்க கோபமாய் முறைத்து அவள் கேட்க,

“என் தங்கம் இரண்டும் ஒரே மாதிரி பேசுதுங்களே” எனக் கூறி பூரிப்பாய் தன் மகளின் முகத்தில் திருஷ்டி சுற்றி சொடுக்கு போட்டவர், “இதே தான் உன் அண்ணனும் சொன்னான்” எனக் கூறவும்,

“அம்மாஆஆ அம்மாஆஆஆ இவ்ளோ வெள்ளந்தியா இருக்கியே என் அம்மா! நான் உன்னைத் திட்டிட்டு இருக்கேன்மா” எனக் கூறி அவரின் கழுத்தை கட்டிக் கொண்டு கொஞ்சினாள்.

“என் பிள்ளைங்க அறிவா பேசும் போது எனக்குப் பெருமையா தானே இருக்கும்” என அவரும் செல்லம் கொஞ்ச,

“உனக்கு அண்ணிய பிடிச்சிருக்கானு மட்டும் சொல்லுமா. அண்ணனை சம்மதிக்க வைக்க நான் ஒரு பிளான் வச்சிருக்கேன்” என்றாள்.

“ஆமா அந்தப் பொண்ணு என்ன படிச்சிருக்கு” பாக்கியம் கேட்க,

“இஞ்சினியரிங் படிச்சிருக்காங்க” அசால்ட்டாய் ஒரு அணுகுண்டை அவள் போட,

“என்னது இஞ்சினியரிங்கா.. என்னமா நீ! எந்த இஞ்சினியரிங் படிச்ச பொண்ணு பத்தாவது படிச்ச பையனை கட்டிக்கச் சம்மதிக்கும்” எனப் பாக்கியம் கேட்க,

“அதுக்கும் ஒரு பிளான் வச்சிருக்கேன்” எனக் கண் சிமிட்டி அவள் கூற,

“என்ன ப்ளான்?” எனப் பாக்கியம் கேட்க,

“கோதையம்மா! அவங்க தான்மா இந்தக் கல்யாணத்தைப் பத்தி பேசின முதல் ஆள். அதனால அவங்களைப் பேச வைக்கலாம். அவங்க பேச்சை அண்ணாவும் சரி அண்ணியும் சரி தட்ட மாட்டாங்க”

“அது சரி அண்ணினே முடிவு பண்ணிட்டியா நீ” எனப் பாக்கியம் கேட்க,

“ஆமா மா. நீ நான் சொல்றதை கேளு. நாளைக்கு அண்ணாவை கோதையம்மாவை போய்ப் பார்க்க சொல்லு! அவங்க ஏதோ அவசரமா பேசனும்னு சொன்னாங்கனு மட்டும் சொல்லு போதும். மீதியெல்லாம் அவங்க பார்த்துப்பாங்க”

பாக்கியம் சற்றாய் யோசிக்க, “உனக்கு உன் பையனுக்குக் கல்யாணம் ஆகனுமா வேண்டாமா?” என இலக்கியா கேட்க,

ஆமென அவர் தலையசைக்க, “அப்ப நான் சொல்றதை செய்மா” எனக் கூறி விட்டு சென்று விட்டாள்.

தனது தாய் கூறியதை ஏற்று மறுநாள் காலை கோதை இல்லத்திற்கு வந்திருந்தான் இளங்கவின்.

கோதை இல்லம் எனப் பெரிய பெயர் பலகையுடன் கூடிய பெரிய நுழைவாயிலில் தனது வண்டியை இயக்கி கொண்டு உள்நுழைந்தான் இளங்கவின்.

உள்ளே நுழைந்ததும் வலது புறமிருந்த வண்டி நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத்தியவன், சற்றுத் தொலைவு நடந்து சென்றதும் மரங்கள் சூழ ஒற்றை அடி பாதையில் இடபுறமிருந்த சிறியதாய் அமைக்கப்பெற்றிருந்த அந்த விநாயகர் கோவிலை நோக்கி சென்றான். இங்கு வரும் போதெல்லாம் அந்த விநாயகரை வழிபட்டு செல்வது அவனின் வழக்கம்.

அந்த விநாயகர் அருகில் சென்றவனின் காதில், “என்னிக்கும் இதே மாதிரி நற்பண்புகளுடன் ஒழுக்கமான நல்ல பிள்ளையெனப் பேர் வாங்கி நீ வாழ்வாங்கு வாழனும்” என்ற வாழ்த்து விழ,

‘நல்லா படிக்கனும், சந்தோஷமா இருக்கனும், நினைச்சதெல்லாம் நடக்கனும்னு தானே பொதுவா எல்லாரும் வாழ்த்துவாங்க. இது யாரு இப்படி எப்பவும் நீ நல்ல பிள்ளையாவே இருக்கனும்னு வாழ்த்துறது’ என மனதில் எண்ணி கொண்டே சுற்றும் முற்றும் பார்வையைச் சுழலவிட,

விநாயகர் சன்னதியின் வலபுறமாய் இருந்த படிக்கட்டில் அமர்ந்து ஒரு பத்து வயது சிறுமியை அணைத்தவாறு பேசிக் கொண்டிருந்தாள் அப்பெண்.

‘ஓ இவங்க தானா அந்த வாழ்த்தொலி மேடம்’ என மனதில் எண்ணி கொண்டவனாய், விநாயகரை கை கூப்பி வணங்கி விட்டு அங்கிருந்து சென்று கோதையம்மாவின் அலுவலக அறைக்கு வெளியே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

அலுவலக ஊழியரிடம் தான் வந்திருப்பதாய் கோதையம்மாவிடம் உரைக்கக் கூறி விட்டு அவர் அழைப்பதற்காகக் காத்திருத்தவன், நேரத்தை போக்குவதற்காகத் தனது கைபேசியை நோண்டியவாறு அமர்ந்திருக்க, “ஹலோ சொல்லு ராதா! என்னடி பிரச்சனை?” எனப் பேசியவாறே அவன் எதிரிலிருந்த நாற்காலியில் வந்தமர்ந்தாள் அந்தப் பெண்.

‘எங்கேயோ கேட்ட குரல்’ என எண்ணியவாறே நிமிர்ந்து பார்த்தவன், ‘அட நம்ம வாழ்த்தொலி மேடம்’ வாய்க்குள் முனகி கொண்டு அவளைப் பார்த்து சிரித்து வைக்க,

“எந்தப் பிரச்சனையா இருந்தாலும் சரியாகிடும்டி! எப்பவுமே பாசிட்டிவ்வாவே யோசினு சொல்லிருக்கேனா இல்லையா? எந்த ஒரு விஷயமுமே நாம எந்த விதத்துல அதை எடுத்துக்கிறோம்ங்கிறதை பொறுத்து தான் இருக்கு. வாழ்க்கைல எல்லாமே ஒரு அனுபவம். ஒரு படிப்பினை. அவ்ளோ தான்”

அவனைச் சற்றும் நோக்காது தனது கைபேசியில் பேசுவதிலேயே கவனம் வைத்து இவள் பேசிக் கொண்டே போக,

‘ஹ்ம்ம் எவ்ளோ பாசிட்டிவ்வா பேசுறாங்கள்ல… இவங்களைக் கட்டிக்கிறவர் கொடுத்து வச்சவங்க தான்! சோர்ந்து போகும் போது இவங்க வார்த்தையே செம்ம புத்துணர்ச்சி தரும்’ என எண்ணியவன் தன் மனம் போகும் போக்கை எண்ணி தலையில் தட்டிக் கொண்டவனுக்கு,

‘ஆமா இவங்க புடவை கட்டியிருக்காங்களே ஒரு வேல கல்யாணம் ஆகிருக்குமோ’ என மனம் அடுத்துக் கேள்வி கேட்க,

‘அவங்களுக்கு ஆகியிருந்தா உனக்கென்ன ஆகலைன்னா உனக்கென்ன’ அவனின் மனசாட்சி கேட்டு குட்டு வைக்க,

‘அதுவும் சரி தான்’ எனத் தலையைத் தனது கைபேசியினுள் நுழைத்து கொண்டாலும் மீண்டுமாய் நிமிர்ந்து அவனின் கண்கள் அவளையே நோட்டமிட,

‘இந்தக் காலத்துல இப்படிப் பட்டன் டைப் வச்ச மொபைல் வச்சிருக்கப் பொண்ணா.. ஒரு வேளை பெரிய ஃபோன் ரிப்பேர் ஆகிருக்குமோ?’ என மனம் அடுத்தக் கேள்வியைக் கேட்க,

‘டேய் இளா! என்னடா ஆச்சு உனக்கு?’ எனத் தனக்குத் தானே கேட்டுக் கொண்டு பின் மண்டையை அவன் தட்டிக் கொண்டிருக்க,

பேசிக் கொண்டே அவனை ஏதேச்சையாய் பார்த்தவள் அவனின் இந்தச் செய்கையைக் கண்டு புருவத்தை நெரித்தவள் தனது கைபேசியை வைத்து விட்டு அமர்ந்து விட்டாள்.

வெள்ளை வேஷ்டி, சிவப்பும் நீலமுமாய்க் கோடு போட்ட சட்டையின் நீள கையை முழுங்கை வரை மடித்து விட்டிருந்தான். அடர்த்தியான மீசை, லேசான தாடி, சற்று மாநிறத்தில் களையான முகம் என அவளறியாது அவனைக் குறித்துக் கொண்டிருந்த தனது மனதை சற்றே திடுக்கிடலுடன் கட்டுபடுத்தியவளுக்கு, ‘இந்தக் காலத்துலயும் இப்படி வேஷ்டி கட்டுற சின்ன வயசு பசங்க இருக்காங்களா’ என எண்ணாமல் இருக்க முடியவில்லை.

அலுவலக ஊழியர் வந்து கோதையம்மாள் இவர்கள் இருவரையும் உள்ளே அழைத்தார் என உரைக்க, இருவருமாய் மற்றவரை வியப்பாய் பார்த்தவாறே உள் நுழைந்தனர்.

“வா ஆருத்ரா! வா கவின்” என இருவரையும் வரவேற்று நாற்காலியில் அமர சொன்னார் கோதையம்மா.

“ஓ இந்த வாழ்த்தொலி மேடம் பேரு ஆருத்ராவா” என அவனும்,

“ஓ இந்த வேஷ்டிகாரர் பேர் கவின்னா” என அவளும் ஒரு சேர நினைத்தவாறே நாற்காலியில் அமர்ந்த மறுநொடி,

“எதுக்குமா வர சொல்லியிருந்தீங்க” என இருவருமே ஒரே நேரத்தில் கேட்க,

வாய்விட்டு சிரித்த கோதையம்மா, “உங்க ரெண்டு பேரோட கல்யாணத்தைப் பத்தி பேச தான் வர சொன்னேன்” எனக் கூற,

இருவரும் அதிர்வாய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

அதே நேரம் பொதிகை மலையடிவாரத்தில் இருந்த சோதனை சாவடிக்குப் பேருந்தில் வந்து இறங்கினான் அறிவழகன்.

— தொடரும்

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 4]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

இரும்பு காவலன் இருதய காதலன் 42

கும்பிக்கு அன்னமிட்ட கை