in

மௌனத்தின் மனசாட்சி -1

 அத்தியாயம் 1

                          

சென்னை ‘தி’ நகரில் உள்ள அந்த மிகப் பெரிய பங்களாவின் முதல் மாடியில், உள்ள அறையில் இருந்து ஒரு உருவம், மெல்ல அங்குமிங்கும் பார்த்தபடி வெளியே வந்தது. வெளியே உள்ள நீண்ட ஹாலில், இரவில் மட்டும் எரியும் மிகக் குறைந்த விளக்கொளியில், பதுங்கிப் பதுங்கி நடந்த உருவம், மாடிப்படிகளில் தனது காலில் இருந்த கேன்வாஸ் ஷூவின்  உதவியால் சப்தமில்லாமல் இறங்கி, வீட்டின் மிகப்பெரிய ஹாலை கடந்து, வாசற்கதவை நோக்கி சென்றது.

கதவின் லாக் திறக்கும் சத்தம் கூட கேட்காமல், மெல்ல அழுத்திப் பிடித்து கதவை, ஒரு ஆள் மட்டும் வெளியே  செல்லும் அளவு திறந்து, காலை வெளியே எடுத்து வைக்க போகும் போது, ஹாலின் விளக்கொளி பளீரென்று எரிய, திடுக்கிட்டுத் திரும்பினான் அவன்.

ஹாலில் உள்ள சோபாவில் ட்ராக் சூட்டில் கால் மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்து இருந்த கோமா  தாத்தா, “என்னடா பேராண்டி என்ன விட்டுட்டு நீ மட்டும் போகலாம்னு பார்க்கிறாயா…? யார்கிட்ட..?” அமர்த்தலாக  கூறி,  தனது கம்பீரமான வெள்ளை மீசையை உருவியபடி உட்கார்ந்து இருந்தார்.

 வாசலில் நின்றவன் தலையில் கை வைத்தபடி உள்ளே திரும்பினான். “தாத்தா திஸ் இஸ் டூ மச். அப்பாவுக்கும், பாட்டிக்கும்  தெரிஞ்சதுனா அவ்வளவுதான்..”

“தெரியாம பாத்துக்கலாம்…”

“அதைவிட அண்ணாவுக்கு தெரிஞ்சதுனா, என்னை எல்லாரும் தொலைச்சு கட்டிடுவாங்க..”

“உன்னை  தொலைக்காமல் நான் பாத்துக்குறேன்…”

“ஐயோ தாத்தா…” கோபத்துடன்  பல்லைக் கடித்தவன், நீங்க தோட்டத்திலேயே வாக்கிங் போங்க. நான் ஜாகிங் போகப்போறேன்…”

“அதையேதான் நானும் சொல்றேன். நம்ம ரெண்டு பேரும் கடற்கரைக்கு போவோம். நான் வாக்கிங் போறேன். நீ ஜாகிங் போ. இந்த  ரோட்ல எவளை பார்க்க முடியும். அதே கடற்கரையில்  விதவிதமா பார்க்கலாம்…..!”

தலையில் அடித்துக் கொண்டவன், “சரி வாங்க..”   அவரையும் அழைத்துக்கொண்டு வெளியில் சென்றான்.

“இங்கே  நில்லுங்க. நான் கார் எடுத்துட்டு வரேன்…” அவரிடம் சொல்லிவிட்டு செட்டிலிருந்து காரை எடுத்துக்கொண்டு வந்து அருகில் நிறுத்தினான். தாத்தா ஏறியதும் கார் விருட்டன்று கிளம்பியது. கேட் அருகில் சென்றதும் செக்யூரிட்டியை  அழைத்து, “வாச கதவு திறந்திருக்கு, பத்திரம்..” சொல்லிவிட்டே வெளியே சென்றான்.

ஆளரவமற்ற சாலையில் கார் அவன் கைகளில் பறந்தது. ஒரு சீட்டில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு அவனது டிரைவிங்கை ரசித்த தாத்தாவிடம், ஒரு வார்த்தை கூட பேசாமல் கோபத்துடன் காரை  விரட்டினான்.

கடற்கரைக்கு சென்றதும் ஓரிடத்தில் காரை பார்க் செய்துவிட்டு இறங்கியவன் தாத்தாவிடம், ஒரு குறிப்பிட்ட தூரத்தை காட்டி, “இந்த ஏரியால மட்டும் நடந்தா போதும். நான்  ஜாகிங் ஓடிட்டு வந்துடறேன்…” சொன்னவன்,  ஓட ஆரம்பித்தான்.

ஆறடிக்கு மேல் உயரம், வெயிலில் அலைந்து திரிந்ததால் சற்றே மங்கிப்போன வெள்ளை நிறம், முறையான பயிற்சியாலும், அளவான சாப்பாட்டிலும், துளிகூட எக்ஸ்ட்ரா சதை இல்லாத, கட்டுக்கோப்பான தேகம். தீர்க்கமான முகமும், எதிராளியை ஊடுருவும் கண்களும், உதட்டுக்கு மேல் அடர்த்தியான கச்சிதமான மீசையும், நிகோடின் கரை படியாத உதடுகளும், ஓவல் வடிவ முக வாயும், அதை ஒட்டிய கன்ன குழிகளும், ஒரு கம்பீரமான ஆண் மகனை பறைசாற்ற, அவனது ஒட்டிய கிராப்பும், நிமிர்ந்த நன்னடையும், பேசும் தோரணையுமே  அவனது வேலையை   தெரியப்படுத்த, கடற்கரைச் சாலையில் வேகமாக ஜாகிங் ஓடிக் கொண்டிருந்தான்.

போட்டிருந்த டீஷர்ட் வேர்வையில் குளிக்க, முகத்திலும் கைகளிலும் வேர்வை மினுமினுக்க, ஜாகிங் முடித்து காருக்கு அருகில் வந்தவன், காரிலிருந்து டர்க்கி டவலை எடுத்து முகம் கைகளை கையைத் துடைத்துக் கொண்டான். சூரிய பகவான் தன்னுடைய இருப்பிடத்தை விட்டு வெளியே வந்து, செந்நிறமான கதிர்களை பூமியின் மேல் பாய்ச்ச, அந்தக் கடற்கரையும் அதில் நடமாடும் மக்களும், அந்த வெளிச்சத்தில் தெரிய ஆரம்பித்தது. 

அவனை  தெரிந்த பலரும், விஷ் செய்த வண்ணம் கடக்க, ஒருவன் வந்ததும், இருவரும் கைகுலுக்கி கொண்டனர். சற்று நேரம் அவர்கள் இருவரும் அங்கு நின்று பேசிக் கொண்டிருப்பதை அவர்களை நெருங்காமலே, அந்தக் கடற்கரையில் இருந்த மக்கள் வேடிக்கை பார்த்து விட்டு நகழ,  தாத்தா புதியவனை  பார்த்துவிட்டு தங்களது காருக்கு அருகில் வந்தார்.

அவருடனும் ஓரிரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு அந்த புதியவன் நகர்ந்து விட்டான். காருக்குள் ஏறியவன் தாத்தாவிடம், “வீட்டுக்கு வர்ற மாதிரி ஐடியா இல்லையா…? பாட்டி கிட்ட சொல்லிடவா…?” என்று கேட்டதும் அடித்து பிடித்து காருக்குள் ஏறி அவர் உட்கார்ந்ததும், காரை விருட்டென்று கிளம்பி சென்றான் இளையவன்.

சென்னை மாநகரத்து போக்குவரத்தில் லாவகமாக நீந்தி, பங்களாவின் போர்ட்டிகோவில் கொண்டு வந்து காரை நிறுத்தியவன், தாத்தா இறங்கும் முன்னரே இறங்கி, விசிலடித்துக் கொண்டே உள்ளே சென்றான்.

ஹாலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த, பாட்டியிடம்  ஒரு சில வார்த்தைகள் முணுமுணுத்துவிட்டு, படிகளில் துள்ளிக்குதித்து ஏறி  மாடியில் உள்ள தனது அறைக்கு சென்றான்.

மெல்ல இறங்கி தோட்டத்தை ஒரு பார்வையிட்டு, தனது வாக்கிங் ஸ்டிக்கின் உதவியால் படியேறி வீட்டுக்குள் சென்றவர்  ஹாலில் மனைவி இருப்பதைப் பார்த்து, சற்றே துணுக்குற்றாலும் காட்டிக் கொள்ளாது, தனது கம்பீரக் குரலில், “ஹாய் பொண்டாட்டி குட் மார்னிங். என்ன இப்பதான் எந்திரிச்சிங்களா எல்லாரும்…?” கேட்டுக் கொண்டே அங்கு இருந்த இன்னொரு சோபாவில் உட்கார்ந்தார்.

“இந்நேரம் எங்க போய்ட்டு வர்றீங்க..?”

“பாத்தா தெரியலை, வாக்கிங். காலைல எழுந்ததும் வாக்கிங் போகணும், வயசாயிடுச்சுனா  இதெல்லாம் கூட உனக்கு மறந்துருமா.. உன் கிட்ட  டாக்டர் சொல்லலையா…?” அனு  உள்ளே இருந்து வருவதை பார்த்துக்கொண்டே, வேண்டுமென்றே மனைவியையை வாரினார்.

“என்ன மாமா  வாக்கிங் போயிட்டு வந்தாச்சா.. குட், நீங்க மட்டும்தான் இந்த வீட்டுல நான் சொல்றதை பாலோ பண்றீங்க..” என்றதும் மனைவியின் முகத்தை பார்த்து விட்டு சிரித்தார்.

“என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு உங்களுக்கு…?”  பாட்டி  அவரை முறைத்தாள்.

“இல்ல, டாக்டர் கிட்ட நல்ல  பெயர் எடுக்கணும்னு இந்த வீட்ல யாருக்காவது தோணுதா..? அதுல கூட நான் தான் பர்ஸ்ட்..”

“எல்லாரும் உங்களை மாதிரி இருக்க முடியுமா..?” சொன்ன கௌரி  முகத்தை தோள்பட்டையில் இடிக்க…

“ஹா ஹா ஹா…”  தனது வழக்கமான அதிரடி சிரிப்பால் ஹாலை அதிரவைத்தவர், “பார்த்துடி.. தோள்பட்டை ஒடிஞ்சு கை தூக்க முடியாமல் போயிட போகுது.. என்னதான் நம்ம வீட்டிலேயே டாக்டர் இருந்தாலும், வலி நீதான தாங்கிக்கணும்….”  என்றார் மனைவியிடம் கரிசனத்துடன்.

அதற்குள் டிரேயில் காபியை எடுத்துக்கொண்டு வந்த அனு, இருவருக்கும் காபியை கொடுத்தாள். 

“புவனா எங்கம்மா…?” என்று கேட்ட மாமியாரிடம்  “அண்ணி பூஜை பண்றாங்கன்னு நினைக்கிறேன் அத்தை..” கூறிவிட்டு உள்ளே சென்று விட, சரியாக பூஜை அறையில் மணிச் சத்தம் கேட்டது.

சற்று நேரத்தில் கையில் ட்ரேயுடன்  அங்கே வந்த புவனா  “குட் மார்னிங்ப்பா, மார்னிங்மா..” என்று கூறிவிட்டு மாடி ஏறினாள்.

முதல் மாடியில் உள்ள பயிற்சிக் கூடத்தில் பயிற்சியில் இருக்கும் பிரபாகருக்கு  காலை நேர காபி, தன்  கையாலேயே  எடுத்து செல்வது வழக்கம். உள்ளே  அவள் நுழைந்ததும், அப்போதுதான்   ட்ரெட்மில்லில் ஓடி முடித்து விட்டு, வேர்வையை துடைத்துக் கொண்டிருந்தவர்  அவளை கண்டதும் “குட் மார்னிங் புவன்.. எல்லோரும்   எந்திரிச்சாச்சா..?” என்று வழக்கமாக தான் கேட்கும் கேள்வியை  கேட்டான்.

“அதெல்லாம் ஆச்சு. காப்பி குடிச்சாச்சு.. ஏதோ பஞ்சாயத்து ஓடிட்டு இருக்கு, நான் வந்துட்டேன்..”

“உங்க அப்பா இருக்கிற இடத்தில பஞ்சாயத்துக்கு என்ன குறைச்சலா..?” 

“என்னது? எதுனாலும் எங்க மாமா மாதிரி உண்டான்னு சொன்னவரு, இன்னைக்கு என்ன புதுசா? எங்க அப்பாவை குறை சொல்கிறீங்க..?”  சிறிது கோபத்துடன் கேட்டாள்..

காபி கப்பை அங்கிருந்த டீபாயில் வைத்தவன், மனைவியின்  கையை பிடித்து தனது அருகில் இழுத்தான்.  “இதுக்குதான்டி, நீ கோபப்படுவதை பாக்குறதுக்கு தான் அப்படி சொன்னேன். என் மாமனார் மாதிரி யாரடி உண்டு உலகத்துல? வேணும்னா பாரு. கலகத்துக்கு காரணமே அவராதான் இருப்பார். ஆனா பஞ்சாயத்தும்  பண்ணுவார். சும்மா உன்னை சீண்டினால் நீ கோபப்படுவே. உன்னை சமாதானப்படுத்துற  சாக்குல, கொஞ்சதான்…” என்றவன் அவளை இழுத்து அணைத்தான்.

வெட்கத்துடன் அவனிடமிருந்து திமிறிக்கொண்டு, “என்ன இது? பொண்ணுங்களுக்கு கல்யாணமாகி மாப்பிள்ளை வந்தாச்சு. பசங்க வளர்ந்து பெரிய பிள்ளைங்க ஆயாச்சு.  இந்த வருஷம் ராஜாவுக்கு பொண்ணு பாக்கணும். ராஜா வேற கல்யாணத்துக்கு பிடி கொடுக்கவே மாட்டேங்கிறான். இதெல்லாம் உங்களுக்கு கவலை இல்லை.. எப்ப பார்த்தாலும் இதே வேலையா போச்சு உங்களுக்கு..! வரிசையாய் குற்றச்சாட்டுகளை அடுக்கினாள்.

“ஏண்டி அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்..? உன் பையன் கல்யாணம் வேண்டாம்னா, யார் பின்னால் சுத்துறான்னு பாரு. பொண்ணு பாக்கணும்னா அதுக்கு   தாத்தா, பாட்டி இருக்கங்க. மாமா இருக்கான். எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையே கிடையாது. என்னோட கவலையெல்லாம் என் கம்பெனி, அடுத்து நீ. உன்னை  நல்லா கவனிச்சுக்கணும்.

என்ன…! கம்பெனி அரசு கவனிச்சுக்குவான் என்கிற  நம்பிக்கை இருக்கு. ஆனா உன்னை  கவனிக்க நான் மட்டும் தானே இருக்கேன். எந்த வயதானால் என்ன..? என் பொண்டாட்டி நான் கொஞ்சுறேன் எவன்டி கேட்கிறது….?”

“அப்பாகூட சேர்ந்து, சேர்ந்து உங்களுக்கும் அடாவடி ஜாஸ்தி ஆகிடுச்சு. எதுக்கெடுத்தாலும் ஏதாவது சொல்லிகிட்டு, குளிச்சிட்டு சீக்கிரம் கீழே வாங்க. உங்களுக்காக எல்லாரும் சாப்பிடாம உட்கார்ந்திருப்பாங்க..” மறுமொழி  கூறி விட்டு கிளம்ப போனவளை, இழுத்துப் பிடித்து கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தே, அவளை அனுப்பி வைத்தான்.

“கடவுளே கடவுளே, இவரை  வச்சுக்கிட்டு எப்படித்தான் ரெண்டு மருமக கூட குப்பை கொட்ட போறேனோ..!” வாய் அப்படி சொன்னாலும், மனது என்னவோ கணவனின்  மாறாத அன்பில் திளைத்திருந்தது.

பிரபாகர் அலுவலகத்துக்கு கிளம்பி, சாப்பிட கீழே இறங்கி வரும் பொழுது வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும்  டைனிங் ஹாலுக்கு வந்திருந்தனர். 

“குட் மார்னிங் அத்தான்…” கூறிக்கொண்டே சிவராமன்  வர, அவன் பின்னாலேயே அனுவும்   கிளம்பி வந்தாள்.

“அண்ணி எனக்கு ஒரு டிபன் பாக்ஸில் போட்டு கொடுத்துடுங்க. நான் ஹாஸ்பிடல்ல போய் சாப்பிட்டுக்குறேன், டெலிவரிகேஸ்.. என்னை  அவசரமா வர சொல்றாங்க..” என்றாள்.

கிச்சனில் நின்று கொண்டிருந்த பார்வதியிடம் சொன்னதும், அவர் ஒரு சிறிய டிபன் கேரியரில் எல்லாம் எடுத்து வைத்து தந்தார். அதைக் கொண்டு வந்து அவளிடம்  கொடுத்ததும்,  தங்களது மருத்துவமனைக்கு கிளம்பினாள். அவளை தொடர்ந்து சிவராமனும்  கிளம்பி விட்டார். அவருக்கு இன்று ஒரு முக்கியமான கேஸ் வேறு ஒரு மருத்துவ மனையில்.

சென்னையில் மிகப் பெரிய தொழில் அதிபரான கோமதி நாயகத்துக்கு இரட்டை பிறவிகளாக இரண்டு பெண்கள். ஒரு ஆண். மூத்த மகள் மதனாவை தனது நெருங்கிய நண்பரின் மகனான பிரபாகருக்கு விரும்பி திருமணம் செய்து வைத்தார். மதனா முதல் பிரசவத்தில் குழந்தையை பெற்று விட்டு இறந்து விட, அவளின் இரட்டையான புவனாவை மருமகனுக்கு  திருமணம் செய்து கொடுத்து தங்களுடனே வைத்துக் கொண்டார். மகன் சிவராமனுக்கும் மாப்பிளையின் தங்கையை மணமுடித்ததால், அவர்களும்  இவர்கள் கூடவே இருந்தனர். 

ஏராளமான தொழில்களும் சொந்தமான மருத்துவமனையும்  உண்டு. மகனும் மருமகளும் டாக்டர். மருத்துவமனை நிர்வாகத்தை மகனும் மருமகளும் பார்க்க, மற்ற தொழில்களை மருமகனும் மூத்த பேரனும் நிர்வகித்து வந்தனர். 

மூத்த பேரன் அரசு மதனாவின் மகன். புவனாவுக்கு மூத்தது பெண் சுரபி. பின்னர் கிருஷ்ணா. மகனுக்கு மூத்தவள் ஆரபி. பின்னர் விஷ்ணு.  

ஆரபிக்கும், சுரபிக்கும் திருமணம் முடிந்து விட்டது. சுரபி இன்ஜினியரிங் முடித்து விட்டு தனது கணவருடன் சேர்ந்து பிசினஸ் பார்த்துக் கொள்கிறாள்.

ஆரபி அம்மாவைப் போலவே டாக்டர். அவளது கணவன் அரசுவின் நெருங்கிய நண்பன் சசிசேகரன். சென்னை சிட்டி கமிஷனர் ஆப் போலிஸ்..

காலைவேளை, எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவது வழக்கம் என்பதால், முடிந்தவரை சிறியவர்களும் அவர்களுடன் இணைந்து கொள்வர். 

“பிரபாகரா, தரகர் பொன்னுசாமி வந்திருந்தாரு. நிறைய ஜாதகம் கொடுத்தாரு, அதுல பொருந்துற  மாதிரி உள்ளது கொஞ்சம் எடுத்து வச்சிருக்கேன். உனக்கு நேரம் இருந்தா அதை எல்லாம் பார்த்துட்டு, எதை  பார்க்கலாம்னு சொல்லு…”

“நீங்களும் அத்தையும் பார்த்து, யாரோடது பொருந்தும்னு சொல்லுங்க. அதுக்கப்புறமும் பேசி முடிவு பண்ணலாம். ஜாதகம் பார்க்கணுமா…?”

“அதெல்லாம் அவரே பொருத்தம் பார்த்துதான் கொண்டு வந்திருக்கிறார். எதுக்கும் நம்ம ஜோசியரை வரச்சொல்லி நான் ஒரு தடவை பார்த்திடறேன். அப்படியே அரசு கிட்ட நீ சம்மதம் வாங்கினா பொண்ணு பார்க்கப் போகலாம்…”

“எங்க உங்க பேரங்கிட்ட சம்மதம் வாங்கணுமே…? என்றவர் மனைவியிடம், “ஆமா உன் செல்லப்பிள்ளை இப்ப எங்க இருக்கான். ஒரு வாரம் ஆச்சு  அவன் வீட்டை விட்டுப் போய். எங்க போயிருக்கான்னாவது  உனக்கு ஏதாவது தெரியுமா..?” என்றான்.

“பிசினஸ் விஷயமா, ஜப்பான் போறேன்னு சொல்லிட்டுதான் ராஜா  போயிருக்கான். எப்படியும் இன்னும் இரண்டு நாள்ல வந்துருவான்…..!” கணவனின்  கோபம் அறிந்து சமாளித்தாள்.

“சரி, போனாவது  பண்ணினா…?”

“இல்லங்க, அவனுக்கு அங்க என்ன பிசியோ, கட்டாயம் போன் பண்ணுவான்…!”  அவள் சொன்னதும் மாமாவிடம் திரும்பி, “கேட்டுக்கோங்க, இதுதான் உங்க மூத்த பேரன் லட்சணம். அடுத்து உங்க செல்ல பேரன்  எங்கே…?”  மாமாவிடமே  கேட்க,

“இப்ப வருவான்..” என்று சொல்லி வாய் மூடும் முன், “ஹாய் டாட் குட் மார்னிங்..” என்று சொல்லியபடி கனகம்பீரமாக போலீஸ் யூனிபார்மில் இறங்கி வந்தான் கிருஷ்ணா.

“ஹாய்மா, குட்மார்னிங்..” என்றபடி அம்மாவின் தோளை அணைத்து சொன்ன  மகனை, பெருமையுடன் அளந்தன பிரபாகரின்  கண்கள்.

அந்த யூனிபார்மில் அவனை பார்க்கையில், அதற்கென்றே பிறந்தவன் போல் தோற்றமளித்த, கிருஷ்ணாவின் கம்பீரம், மகிழ்ச்சி அளித்தாலும், தான் எத்தனையோ மறுத்தும் பிடிவாதமாக அந்த வேலைக்கு சேர்ந்த மகனிடம் அவருக்கு  ஒரு சிறு மனக்குறை உண்டு.

மாமனார்  கவனித்து வந்த தொழில்களை, தான் ஒருவனே கட்டிக் காப்பாற்றி இத்தனை வருடம் கொண்டு வந்து, தற்போது அரசுவின் பொறுப்பில் விட்டு இருக்க, அவனுக்கு உதவியாக கம்பெனியை பார்த்துக்கொள் என்று சொன்னபோது, “எனக்கு போலீசாக மட்டுமே விருப்பம்…” என்று பிடிவாதம் பிடித்து,  அதற்கு தாத்தா, அண்ணன் என்று அத்தனை பேர் சிபாரிசும்  பெற்று, ஃபர்ஸ்ட் குரூப் எக்ஸாம் எழுதி, ஐபிஎஸ் பாஸ் பண்ணி தற்போது அசிஸ்டன்ட் கமிஷனர்  இன் சென்னை, என்ற பதவியில் அமர்ந்து இருக்கும் சிறிய மகனை பார்க்கும் பொழுது, எப்பொழுதும் தோன்றும் அதே எண்ணம் அன்றும் தோன்றியது.

‘அப்படியே தனது மாமனாரின்  பிரதிபலிப்பாக இருக்கும் சின்ன மகனை, உண்மையில் பிரபாகருக்கு மிகவும் பிடிக்கும்.’ ஆனால் வீட்டில் அனைவரின் செல்லத்தையும் வைத்துக் கொண்டு, அவன் அடிக்கும் லூட்டிகள் அதிகம் என்பதால், தன் பாசத்தை வெளியில் காட்டாமல் உள்ளேயே பொத்தி வைத்தார்.

மச்சினனின்   வாரிசான, விஷ்ணுவும், கிருஷ்ணாவும் ஒரே வயதுதான். தான் அப்பாவுக்கு உதவியாக இல்லை என்பதால், பிடிவாதமாக மகனை பாரினில் எம்பிஏ படிக்க அனுப்பியிருந்தார் சிவராமன். திரும்பி வந்ததும் அரசுவுடன் சேர்ந்து தொழில் பொறுப்புகளை அவனிடம் கொடுப்பதாக ஏற்பாடு செய்திருந்தனர்.

“ஹாய்மா இன்னைக்கு என்ன டிபன்..?” அம்மாவிடம் கேட்டுக் கொண்டே தாத்தாவின் அருகில் உட்கார்ந்த கிருஷ்ணா, “என்ன தாத்தா பூஜை, புனஸ்காரம் எல்லாம் முடிஞ்சிடுச்சா…?” திரும்பி  நக்கலாக தாத்தாவிடம் கேட்டான்.

“நீ எந்த பூஜைய சொல்ற..?” அதைவிட கிண்டலாக பதில் கொடுத்த  தாத்தாவை பார்த்து…

“அப்படியா, இன்னும் ஸ்டார்ட் ஆகலையா…! ஆமாம் கடற்கரையில், புதுசா ஒரு நாற்பது வயது அழகான  லேடி உங்க கிட்ட என்னமோ கேட்டுட்டு இருந்தாங்களே.. நீங்க கூட அப்புறம் பாக்கலாம்னு    சொன்ன மாதிரி ஞாபகம்….!”  தாடையை தடவி,  மிகவும் யோசிப்பவன் போல் போஸ் கொடுத்துவிட்டு, “கரெக்ட் நாளைக்கு திரும்பிப் பார்க்கிறேன்னு சொல்லி இருக்கீங்கல்ல. நாளைக்கு காலைல ரெடியா இருங்க, நாம ரெண்டு பேரும் ஜாகிங் போகலாம்…” என்று சிரிக்காமல் அப்பாவியாக சொல்லிவிட்டு, அம்மா கொடுத்த பூரியை  சாப்பிட  ஆரம்பித்தான்.

“என்ன இது…?” பாட்டி தாத்தாவை  பார்த்து சிடுசிடுக்க, “அது ஒண்ணும் இல்லடி, வாக்கிங் போன இடத்துல…” தாத்தா  சமாளிக்க ஆரம்பித்தார்.

“பாட்டி, தாத்தாவை நீங்க எங்க வாக்கிங் போகச் சொல்லி இருக்கீங்க..? தோட்டத்துல தானே, தாத்தா உங்க பேச்சு கேட்கிறதே இல்லையே, அது ஏன்…? ஒருவேளை நீங்க தாத்தாவை சரியாக கவனிக்கலையோ…?” தன்னால் முடிந்த அளவு  பாட்டியை வேறு ஏற்றிவிட…

அவன் சொன்னதை பிடித்துக்கொண்ட தாத்தா, “ஆமாண்டா, உங்க பாட்டி சரியே இல்லை. என்னை  சரியாவே கவனிக்கிறது இல்லை…” என்று கூறி கண்ணை சிமிட்டி விட்டு “ஒரே பாட்டியை  வச்சு ரொம்ப போரா இருக்கு. அதான் உன் கூட  ரிலாக்ஸ்டா வாக்கிங் போயிட்டு வரலாம்னு நெனச்சேன்..”  சிரிக்காமல் சொன்னார். பாட்டி  கொலை வெறியுடன் கணவரை முறைத்தாள்.

அவர்கள் ரெண்டு பேருக்கும் இடையில் கிருஷ்ணா கோள் மூட்டி விடுவது பார்த்து கணவர் சிரிக்க, அம்மாவின் கோபத்தை பார்த்த புவனா  “என்ன இது…? உனக்கு தாத்தா, பாட்டி என்கிற மரியாதையே இல்லை. அவருக்கு என்ன உன்னோட வயசா ஆகுது..  சின்ன பசங்க கிட்ட கலாட்டா பண்ற மாதிரி அவர் கிட்ட பண்ற… !” என்று சத்தம் போட…

“சாரிம்மா இப்படி பண்ண மாட்டேன்….!” என்றவன் அடுத்த நொடி, “என்ன இருந்தாலும் எங்க அப்பாவோட ஹேன்ட்சமுக்கு முன்னாடி நீங்க கொஞ்சம் பூவர் தான்மா. மிஸ்டர் பிரபாகர்  யூ ஆர் லுக் லைக் வெரி ஹான்ட்சம். எதுக்கும் வேற ஏதாவது ஆபர் பார்க்கலாமா…?” என்று அம்மாவையும், அப்பாவையும் கோர்த்து விட முயற்சித்தான்.

பதிலே பேசாமல் மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்து வாஷ்பேஸின் சென்று கை கழுவி விட்டு வந்தவர், அனைவர் முன்னிலையிலும் மனைவியை இழுத்து அணைத்தார். “என்னுடைய எவர்கிரீன் பியூட்டி  இவதான்.  இவ போதும் எனக்கு, ஓகேயா..? இந்த கோர்த்துவிடற வேலையெல்லாம் உங்க தாத்தாவோட வச்சுக்கோ..  ஏண்டா ஒரு பொறுப்பான பதவியில் இருக்கிற மாதிரியா பேசுற..? புவன்  ப்ரீப் கேஸ் எடுத்துட்டு வா..!” என்றார்.

அப்பாவைப் பார்த்து தோள்களை குலுக்கி விட்டு, “ஓகே உங்களுக்கே போதும் என்றால் எனக்கு என்ன..!”  பெருந்தன்மையாக சொல்வதுபோல் சொன்னவன், தாத்தாவிடம் திரும்பி மெல்லிய குரலில், “தாத்தா நானும் எத்தனையோ தடவை ட்ரை பண்ணிட்டேன். பட் இவங்கள கோத்து விட முடியலையே…”  கனகாரியமாக யோசனை கேட்டான்.

“இதோ பாரு, இந்த வீட்டிலேயே நான் மட்டும்தான், உன்னோட இந்த மாதிரி விளையாட்டுக்கு சரியான ஆளு. மத்தவங்க எல்லாம் பொண்டாட்டிக்கு பயந்தவனுக. விட்டுத்தள்ளு லெட்ஸ் என்ஜாய்…”  பேரனுக்கு ஏற்ற வகையில் சமாதானம் பண்ணிய தாத்தாவை பார்த்து குடும்பமே சிரித்தது.

“ஓகே தாத்தா, எனக்கும் டியூட்டிக்கு நேரம் ஆச்சு.. நான் கிளம்புறேன்….” என்று அவனும்  கிளம்ப, ஏற்கனவே வாசலில்  அம்மாவும், அப்பாவும் நின்று இருந்தனர்.

கிருஷ்ணாவை அழைத்துப்போக அவனது ஸ்டேஷன் ஜீப்பும், டிரைவரும் தயாராக இருந்தனர். வாசலில் நின்றிருந்த அப்பாவிடம், “ஓகேபா கிளம்பறேன்…” சொல்லிக் கொண்டு இருக்கும்போது, மிக வேகமாக ஒரு வாடகை டாக்ஸி உள்ளே வந்து நின்றது.

அதில்  வருவது யாராக இருக்கும், என்ற யோசனையோடு மூவரும் இறங்குபவரை பார்க்க, உள்ளிருந்து மாலையும் கழுத்துமாக இறங்கினான் அரசு. அவனைப் பின் தொடர்ந்து கண்ணீர் நிரம்பிய விழிகளும், வெளுத்த முகமுமாய் இன்னொரு பெண் இறங்கினாள்.

அவளைப் பார்த்ததும் மூவருக்கும் மின்னல் தாக்கியது போல் அதிர்ச்சி அளித்தது. ஜீரணிக்க முடியாமல், “ராஜா  என்ன இது…? மாலையும் கழுத்துமா…? அதுவும் இவளோட..? நீயா இப்படி பண்ணினே…? நான் நம்ப மாட்டேன்..” என்று புவனா  கத்தினாள்.

அவளது சத்தம் கேட்டு உள்ளிருந்த அனைவரும் ஓடோடி வந்தனர். வாசலில் நின்றிருந்த அரசுவையும் அந்தப் பெண்ணையும் பார்த்தவர்களுக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது.

என்ன நடக்குமோ…? என்று, கவலையோடு பிரபாகர்  பார்க்க, கண்களில் ஏறிய சிவப்பும், நீயா இப்படி..? என்கின்ற ஒற்றை பார்வையும், கொண்டு கிருஷ்ணா அவர்களை வெறித்தான்.

“அரசு நீயா இப்படி பண்ணினே…? என்னால நம்ப முடியலைடா…? ஏன்  இப்படி பண்ணினே  சொல்லு.. இவ யாருன்னு உனக்கு தெரியும் தானே…? தெரிஞ்சும் ஏன் இப்படி பண்ண சொல்லு….?”  தாத்தாவின்  அத்தனை கேள்வியும், அங்கிருந்த அனைவரின் பிரதிபலிப்பாய் இருந்தது.

எல்லோரையும் ஒருமுறை அழுத்தமாக பார்த்தவன், “தெரிஞ்சுதான் பண்ணினேன். இவ யார்னு  எனக்கு  நல்லாவே தெரியும்….!” வறண்ட குரலில் பதில் அளித்தான். 

“தம்பியின்   காதலி. இவளைத்தான் அவன் கல்யாணம் பண்ணிக்க போறான்னு தெரிஞ்சுதான், நீ கல்யாணம் பண்ணி கிட்டேயா…? அல்லது சும்மா மாலையும் கழுத்துமா வந்து நிக்கிறீங்களா…?”    

“நிஜமாகவே எங்களுக்கு கல்யாணம் ஆகி விட்டது…!”  ஒருவித இறுக்கத்தோடு அரசு பதில் சொன்னான். அவன் சொன்ன பதிலைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் இடிந்து போயினர்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 17 சராசரி: 4.5]

2 Comments

Leave a Reply
  1. Ooooooooo enna mam staring ye இப்படி ஒரு twist oda ஆரம்பிச்சி irukinga o my God… Ivan ஏன் அவன் love 😍 panna பொண்ணு ah கல்யாணம் pannikitaan….. Semma semma starting maa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

இந்த கணவன் மனைவிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும் ! Nalla Seithi – 159 | Sri Talks | @WAYAM TV

அன்பின் அரசனே…6