in , , ,

இழப்பேனென்று நினையாதே நிழலுறவே-20

நிழலுறவு – 20

அறை எங்கும் பரவி கிடந்த ரத்தமே அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் வீட்டில் இருந்த மலரை வேறு காணவில்லை என்றதும் அண்ணனாக தீனாவின் உள்ளம் பதறியது என்றால்,  கணவனாக யுவாவின் உள்ளமும் கலங்கிக் தவித்தது. வீடெங்கும் தேடிக் கலைத்தவன் வேக வேகமாக அந்த வீட்டிலிருந்து வெளியேறி மேலிருந்து கீழே இறங்கி வருவதற்கும்,  நவநீதனின் அலைபேசியில் இருந்து தீனாவிற்கு அழைப்பு வருவதற்கும் சரியாக இருந்தது.‌ அழைப்பை ஏற்று பேசியவன் முகம் பலவிதமான உணர்ச்சிகளைக் கொடுத்தது.‌ அவன் என்ன விதமான தகவலைச் சொல்லப் போகிறானோ?  என்ற எதிர்பார்ப்பில் மற்ற இருவரும் அவன் முகத்தையே பார்த்து இருந்தனர்.

பேசிவிட்டு அழைப்பை துண்டித்தவன் மற்ற இருவரிடமும்  எதுவும் சொல்லாமல் நேராக மருத்துவமனைக்கு கிளம்பி விட்டான். வேறுவழியின்றி அவர்களும் அவனைப் பின்தொடர்ந்தனர். மருத்துவமனை வாயிலில் வாகனம் நின்றதைத் கண்டதும் யாருக்கோ? ஏதோவொரு விதத்தில் ஏதோ நிகழ்ந்துவிட்டது என்று அவனுக்குப் புரிந்து விட்டது.‌ கலங்கத் தொடங்கிய மனதை திடப்படுத்திக் கொண்டு தான் உள்ளே நுழைந்தான் யுவா.

அவர்கள் மருத்துவமனைக்குள் நுழைந்த போது அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்த நவநீதன் அவர்களின் அருகில் வந்தான்.‌ அவன் உடையெங்கும் ரத்தம் படிந்திருக்க, அவன் காலிலும் கைகளிலும் சிராய்ப்பு ஏற்பட்டிருந்ததால் மருந்து வைத்துக் கட்டு கட்டியிருந்தனர்.  தலையில் பெரிய கட்டு ஒன்றும் போடப்பட்டிருந்தது.‌ அவனது நிலையைக் கண்டு பயந்த யுவா.

“டேய் நவா என்னாச்சு டா உனக்கு? இந்த காயமெல்லாம் எப்படி ஆச்சு?” என்று கேட்க.

கண்களில் துளிர்த்தக் கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கியபடி, “எதுவா இருந்தாலும் மேலே போய் பேசிக்கலாம் வாங்க” என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு அவசர சிகிச்சை பிரிவு இருக்கும் பகுதிக்குச் சென்றான்..

நவநீதன் ஏதும் சொல்லாமல் அழைத்துச் செல்வதிலேயே மற்ற மூவருக்கும் உயிர் ஆட்டம் கண்டது.‌  யாருக்கு என்னானதோ என்றெண்ணி மூவரையும் பயம் பிடித்துக் கொண்டது.

அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஒரு அறையின் அருகில் வந்தவன் கண்ணாடி கதவின் வழியாக உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு விழியில் இருந்து கசியும் கண்ணீரோடு அங்கிருந்து நகர்ந்திருக்க.

அடுத்து வெண்ணிலா எட்டிப்பார்த்தாள்,  அவளும் அதே போல் கலங்கிய விழிகளோடு நகர்ந்தவள் முகத்தை மூடிக்கொண்டு விம்மி விம்மி அழுதாள்.  அடுத்து மெதுவாக நகர்ந்து எட்டிப்பார்த்த தீனா உள்ளுக்குள் நொறுங்கி விட்டான், தன்னை மீறி பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல் தான் ஒரு ஆண் மகன் என்பதையும் மறந்தவாறு சுவரினோரம் கிடந்த இருக்கையில் தொப்பென்று விழுந்து அழத் துவங்கினான்.

மற்றவர்கள் அழுவதை வைத்து யாருக்கு என்ன ஆனதோ? என்று கணிக்கவும் முடியாமல் நெஞ்சம் பதைபதைக்க கண்ணாடி கதவின் வழியே எட்டிப் பார்த்த யுவாவின் விழிகள் வினாடியில் கண்ணீரைக் கொட்டித் தீர்த்தது. அவன் உள்ளமோ ஓலமிட்டு குமுறி குமுறி அழுதது.

தலையில் மிகப்பெரிய கட்டோடும், கை கால்களில் சிறியளவிலான கட்டுகளோடும், செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்ட நிலையில் ஆழ்ந்த மயக்கத்தில் படுக்க வைக்கப்பட்டிருந்தாள் மலர். அவளை அந்த நிலையில் கண்டு விட்டு கிட்டத்தட்ட உயிரற்ற ஜடம் போல மாறி இருந்தவன் அங்கிருந்து நகர மறுத்தவனாய் கண்ணாடி கதவின் மீது தலை சாய்த்து தள்ளாடி விழச் சென்றவனை தாங்கி பிடித்தான் நவநீதன்.

அருகில் கிடந்த இருக்கையில்  அமர வைத்து, அவனைத் தட்டி எழுப்ப முயல.‌ அதற்குள் அவன் நிலையைக் கண்டு தன் சோகத்தை ஒதுக்கி வைத்த தீனா ஓடிச் சென்று தண்ணீர் பாட்டிலை யாரிடமிருந்தோ பெற்றுக் கொண்டு வர, அதை யுவாவின் முகத்தில் தெளித்து அவனது விழிகளைத் திறக்க செய்திருந்தனர். விழிகளைத் திறந்த அவனது கண்களில் இருந்து கண்ணீர் கரைபுரண்டு ஓட உள்ளம் மொத்தமும் தன்னவளுக்காக அழுது புலம்பித் தவித்தது.. அவனின் அருகில் அமர்ந்து அவனை சமாதானப்படுத்த முயன்ற தீனாவின் கைகளைக் கெட்டியாக பிடித்து தன் முகத்தில் ஒற்றி அதில் தன் முகத்தைப் புதைத்தவன்,‌“எனக்கு மட்டும் ஏன்டா இப்படி எல்லாம் நடக்குது.‌ சொல்லுடா ஏன்டா எனக்கு இப்படி நடக்குது,‌ அப்பா என்னை தனியா தவிக்க விட்டுட்டு  போனப்ப நடைப்பிணமா இருந்தேன்,‌ ஆனா அதுக்கப்புறமும் நான் உசுரோட இருந்தது இவளுக்காக தானேடா. அவர் எங்கிட்ட சொல்லிட்டு போன கடைசி ஆசையை நிறைவேத்தனும்னு தானேடா இவ்வளவு கஷ்டப்பட்டு அவளைக் கல்யாணம் பண்ணுனேன். ஆசைப்பட்டவளைக் கல்யாணம் பண்ணி முழுசா ரெண்டு நாள்கூட முடியல அதுக்குள்ள இப்படி சுய நினைவில்லாம படுத்துருக்காளேடா! இதுக்காடா இவளைக் கல்யாணம் பண்ணுனேன். அவளுக்கு உண்மை தெரிஞ்சா என்ன ஆகுமோன்னு ஒவ்வொரு நிமிஷமும் பயந்துகிட்டு இருந்தாலும் அதையும் மீறி அப்பாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேத்துன ஒரு ஆறுதலோட தான்டா இத்தனை நாள் கொஞ்சம் நிம்மதியா இருந்தேன், ஆனா அதுக்குள்ள  இப்படி ஆகும்னு நான் நெனச்சு பாக்கலைடா” என்றவன் விசும்பியவாறே, வேகமாக நவநீதனின் புறம் திரும்பியவன்,

“அப்படி என்னதாண்டா நடந்துச்சு. தலைவலிக்குது வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு வந்தா. அப்படி சொல்லிட்டு அவ வந்து ரெண்டு மணி நேரங்கூட ஆகல,  திரும்பி வந்து பார்த்தா  இப்படி குற்றுயிரும் கொலை உயிருமா போட்டு வச்சிருக்கீங்க, அப்படி என்ன தான்டா  நடந்துச்சு” என்று கேட்டான்.

யுவாவின் மற்றொரு புறம் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த நவநீதனோ கலங்கிய விழிகளோடு, “மலரைப் பத்தியே எல்லாரும் கவலைப்படுறீங்க, கவியைப் பத்தி யாருமே கேட்கலையே?” என்றதும்.  அனைவரும் மீண்டும் ஒருமுறை அதிர்ந்தவர்களாய், “கவிக்கு என்ன ஆச்சு?” என்று கேட்க. அவனும் அவசர சிகிச்சைப் பிரிவின் அருகிலிருந்த மற்றொரு அறையைக் கைகாட்ட, மூவரும் அங்கு சென்று பார்த்தனர். மலரை விட இன்னும் மோசமான நிலையில் பேச்சு மூச்சற்றுக் கிடந்தாள் கவி.

இவ்வளவு நேரம் மலரைக் கண்டு வருத்தப்பட்டு கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்போது கவியின் நிலையைக் கண்டு மேலும் கலங்கினார்கள். நவநீதனின் விழிகளில் இருந்து நில்லாமல் வழிந்துக் கொண்டிருந்த கண்ணீர் மற்றவர்களுக்கு சந்தேகத்தை கொடுத்தது தான். இருந்தாலும் இப்போது இருக்கும் மனநிலையில் அதைக் கேட்கக் கூட அவர்களுக்குத் தோன்றவில்லை.

இரண்டு சிகிச்சை பிரிவின் அறையில் இருந்தும் வெவ்வேறு மருத்துவர்கள் வெளியே வர ஆளுக்கு இருவராய் பிரிந்துகொண்டனர்.‌ மலரின் நிலையைப் பற்றி விசாரிக்க, யுவா, தீனா இருவரும் நின்று கொள்ள.  கவியைப் பற்றி விசாரிக்க வெண்ணிலாவும், நவநீதனும் நின்று இருந்தனர்.   மருத்துவர்களும் ‘தங்களால் முடிந்ததை செய்து விட்டோம் இனி எல்லாம் இறைவனின் கையில் தான் உள்ளது’  என்று சொல்லிவிட்டு சென்று விட நால்வரும் இடிந்து போய் வந்து அமர்ந்தனர்.

“டாக்டர்ஸ் என்ன சொன்னாங்க” என்று பொதுப்படையாகவே நவநீதன் கேட்க.‌ யுவாவோ இதழ் திறவாது இறுக்கமாக அமர்ந்திருந்தான்.‌ அவன் கண் மூடி தன் கைகளால் தலையைத் தாங்கியிருந்த விதமே அவன் சொல்ல முடியாத துயரத்தில் மூழ்கி இருக்கிறான் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தியது. 

 அதேநேரம், “தலையில ரொம்ப அடி பட்டுருக்கு, இடது காலுலையும், வலது கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்காம்.  அதனால கட்டுப் போட்டு இருக்காங்கலாம். இன்னும் நினைவு திரும்பலையாம், இப்போதைக்கு நினைவு திரும்புமான்னு தெரியலைன்னு சொல்லிட்டாங்க. கவியோட நிலைமை எப்படி இருக்குது  நவா? ” என்று தீனா கேட்க.

“கவிக்கு தலையிலையும், நெற்றிலையும் ரொம்ப அடிபட்ருக்காம். மத்ததெல்லாம் சின்ன சின்ன காயம் தானாம், கொஞ்சம் சிராய்ப்புகளும் இருக்குதாம் மத்தபடி அவளுக்கு ஒன்னும் இல்லையாம்.  சுய நினைவு திரும்புவதற்கு ரொம்ப நேரம் ஆகும்னாங்க. அவளோட மூளை பலத்த அதிர்ச்சியை உள்வாங்கி இருக்கிறதால இப்புடி இருக்கான்னு சொல்லிட்டு போயிருக்காங்க” என்றவனின் விழிநீர் அதிக அளவு சுரந்திட அதைத் தன் புறங்கையால் துடைத்தவன், “கவலைப்படாதடா யுவா சீக்கிரமே மலர் சரியாயிடுவா!” என்றான்.

“கண்டிப்பா மலர் சரியாகி எங்கிட்ட வந்துடுவாடா. ஏன்னா  அவ என் உயிருக்கும் மேலடா.‌ நிஜமும், நிழலும் ஒன்னு தானே! என்ன வெயில்ல போகும் போதும், வெளிச்சம் படும் போதும் தான் நிழல் தெரியும். நான் நிஜம்னா என்னோட விழி என்னோட நிழலுறவுடா. அதே போல் அவள் நிஜம்னா நான் அவளோட நிழலுறவுடா. என்னோட உடல்,‌ உயிர், உணர்வு எல்லாமே அவ தான்டா.  எங்கிட்ட இருந்து அவளை யாரும் பிரிக்க முடியாது.‌ அப்படி ஒரு சூழ்நிலை வந்தா நானும் உயிரோட இருக்க மாட்டேன்டா. என்னோட விழி கண்டிப்பா எங்கிட்ட திரும்பி வந்துடுவான்னு எனக்கு நம்பிக்கை இருக்குதுடா.‌

இப்ப அது  முக்கியம் இல்ல வீட்ல என்ன நடந்துச்சுன்னு எனக்கு இப்போ தெரிஞ்சாகணும்.‌ தலை வலிக்குதுன்னு சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்தா மலர். அவ கெளம்பி ஒன்றரை மணி நேரத்துலையே நாங்களும் அங்கிருந்து கெளம்பிட்டோம். நாங்க வீட்டுக்கு வந்து பார்க்கும்போது வீடு இருந்த நிலைமையே சொல்லுச்சு அங்க ஏதோ கலவரம் நடந்துருக்குன்னு. சொல்லு எப்படி இதெல்லாம் நடந்துச்சு?  உங்களுக்குள்ள ஏதாவது சண்டையா?  இல்ல வேற ஏதாவது பிரச்சினையா? எதுவா  இருந்தாலும் பரவால்ல வாய தொறந்து சொல்லு.  இதுக்கு மேல என்னால தாங்க முடியாதுடா. அவளைக் காதலிக்க ஆரம்பிச்சதுல இருந்து ஏகப்பட்ட பிரச்சனைகள், அவளுக்கு ஏதாவது ஒன்னுன்னா சத்தியமா என்னால தாங்கிக்க முடியாதுடா எதா இருந்தாலும் சொல்லிடு” என்று கிட்டத்தட்ட கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தான் யுவா.

கண்மூடி அமர்ந்திருந்த நவநீதன் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு முன்பு நடந்ததைச் சொல்லத் துவங்கினான்.

கைகளைக் கட்டிக் கொண்டு இருவரையும் குற்றம் சாட்டும் பாவனையில் பார்த்திருந்தாள் மலர். அவளுக்கு எதிரே கைகளை கோர்த்து இருந்த நிலையில் நின்றிருந்த நவநீதன், கவி இருவரும் ஒரு நிமிடம் மலரைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாலும் மறுநிமிடமே சகஜமாகினார்கள். அவளை இன்னும் தன்னோடு அணைத்து நிற்க வைத்து தோளில் தன் கரங்களைப் போட்டுக் கொண்ட நவநீதன் மலரைப் பார்த்து, “நான் மட்டும் தானே கவியை விரும்புனேன். அவ எப்ப எனக்கு ஓகே  சொன்னான்னு தானே யோசிக்கிற? மலர்” என்று அவன் கேட்ட கேள்விக்கு ஆமாம் என்று தலையசைத்தாள்.

அதற்கு நவநீதனோ, “அவ ஓகே மட்டும் சொல்லலை. எங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகிடுச்சு மலர்” என்று உண்மையைச் சொல்ல.

உச்சகட்ட அதிர்ச்சிக்கு உள்ளானாள் மலர். அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவராதவளாய் 

தட்டுத்தடுமாறி அவர்களின் முன்பு வந்து நின்றவள்,‌“ஒரு வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணம் ஆயிருச்சுன்னா என்ன அர்த்தம்? நீங்க ரெண்டு பேரும் விரும்புறதுல எனக்கு  எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனா பெத்தவங்களை மதிக்காம நீங்களே கல்யாணம் பண்ணிக்கிட்டது எந்த விதத்துல ஞாயாயம்? இது நல்லதுன்னு நினைக்கிறீங்களா?”

“கண்டிப்பா நல்லது கிடையாது தான் மலர்.‌ ஆனா நான் அப்படி பண்ணலைன்னா உன்னோட ஃப்ரெண்டு கடைசி வரைக்கும் என்னை விரும்புறதை மனசுக்குள்ளயே போட்டு புதைச்சுருப்பா, வெளிய சொல்லியிருக்க மாட்டா? அதே மாதிரி கல்யாணத்துக்கும் சம்மதம் சொல்லி இருக்க மாட்டா.  ஏன்னா அவ மனசுல எங்க அம்மா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்காது,  எனக்கு வேற பக்கம் பொண்ணு பார்த்துட்டாங்க, அது இதுன்னு  ஏகப்பட்ட நினைப்பு இவளுக்கு  இருந்துச்சு. சொல்லப்போனா அன்னைக்கி நான் மிரட்டி தான்  அவளை சம்மதிக்க வச்சேன்.  அப்போ கூட  அவ என்னை தாலிகட்ட விடலை இன்ன வரைக்கும் நான் தாலியும் கட்டல.  எங்களுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் மட்டும்தான் நடந்துச்சு மலர், அதுவும் நடந்து ஒருவருஷம் ஆகிடுச்சு.‌சொல்லப் போனா நான் வீட்ல எங்களைப் பத்தி பேசிட்டேன்மா, அடுத்த முகூர்த்தத்துலயே எங்களுக்கு கல்யாணம் நடந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை”

“என்ன தான் நீங்க செஞ்ச தப்ப நியாயப்படுத்த நினைச்சாலும் நீங்க செஞ்சது தப்புதான் அண்ணா.‌ கல்யாணங்குறது சொந்த பந்தங்களோட, ஊரறிய  நடக்குறது வேற, தனியா யாருமில்லாம நடக்குறது வேறன்ணா. இப்ப என்னை எடுத்துக்கங்க தாலி கட்டிக்கப் போற நிமிஷம் வரைக்கும்  மாப்பிள்ளை யாருன்னு எனக்குத் தெரியாது.  ஆனா எங்க அம்மா மேல கோவமா இருந்தாலும் அவங்களோட விருப்பத்துக்காக இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். ஏன் தெரியுமா? மத்தவங்க முன்னாடி அவங்க மானம் பறிபோயிடக் கூடாதுங்குறதுக்காக தான்.

அதை ஏன்ண்ணா  நீங்க யோசிக்கலை”

“புரியுது மா அதுக்காகத் தான் நாங்க இன்னும் தாலி கட்டி கல்யாணம் பண்ணிக்கலை.‌ நான் விஷம் குடிக்கப் போறேன்னு சொல்லாம இருந்துருந்தா  உன்னோட பிரண்ட்  கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு  சம்மதிச்சுருக்க மாட்டாம்மா”

“நீங்க என்ன சொல்லி என்னைச்  சமாதானப்படுத்தினாலும் என் மனசு ஆறமாட்டேங்குது அண்ணா. சரி ரெண்டு பேரும் மனசார விரும்புறீங்க அது வரைக்கும் சந்தோசம்.  இதுவரைக்கும் நடந்தது நடந்ததாவே இருக்கட்டும்,‌ அடுத்து வர்ற முகூர்த்தத்துல கல்யாணம் பண்ணிக்கங்க. ஏன்னா நான் பார்த்த மாதிரி மத்தவங்க உங்களை ஒன்னா பார்த்தா நீங்க விரும்புறீங்கன்னு சொல்ல மாட்டாங்க அதுக்கு வேற பேரை வச்சாருவாங்க நான் என்ன சொல்ல வர்றேன்னா உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன் அண்ணா.  அதனால முடிஞ்ச வரைக்கும் வீட்ல சொல்லிடுங்க,  என்ன கவி எதுவும் பேச மாட்டேங்குற”

“நீ சொல்றதுல ஞாயம் இருந்தாலும் அன்னைக்கு எல்லாரையும் விட இவரோட உயிர் போயிடுமோங்குற பயத்துல தான் இந்த முடிவெடுத்தனே தவிர அன்னையில இருந்து இதை  வீட்ல சொல்லிடுங்கன்னு நான் சொல்லிட்டு தான் இருந்தேன்டி”

“ஆனாலும் இதெல்லாம் அநியாயம்டி எனக்கு சொல்லாம கல்யாணம் பண்ணிட்டல்ல. ம்ம்..‌ பரவால்லடி  நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும், ரெண்டு பேத்துக்கும் திருமண நாள் வாழ்த்துகள்” என்று மலர் சொன்ன போது அவர்களின் வீட்டு வாசல் கதவு தட்டப்பட அவர்கள் இருவரையும் உள்ளே போய் இருக்க சொல்லிவிட்டு மலர் சென்று கதவை திறந்தாள்.

கதவைத் திறந்தவுடன் வாயிலின் முன்பு நின்றிருந்த அவனைக் கண்டு அவள் உடலில் நடுக்கம் பிறந்தாலும், உள்ளே நவநீதன் இருக்கிறான் என்ற தைரியத்தில்,‌“யார் நீங்க? உங்களுக்கு யார் வேணும்?”  என்று தெரியாதவனிடம் பேசுவது போல் பேச.

அவனோ அவளைப் பார்த்து இதழ்கடையோரம் புன்னகையை நவிழ விட்டவாறு, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை விழிகளால் அளவிட்டான். நிதானமாக அவளை அளவிட்டவனின் விழிகள் இறுதியாக அவள் கழுத்தில் புதிதாக மின்னிக் கொண்டிருந்த மஞ்சள் கயிற்றில் நிலைத்தது. 

“பார்றா கல்யாணம் ஆகிடுச்சு போல. சும்மா சொல்லக்கூடாது டி அன்னைக்கு பார்த்ததை விட இன்னைக்கு செமயா இருக்கடி. ஆனா உன்னையும் ஒருத்தன் கல்யாணம் பண்ணிக்கான் பாரு அவனை எல்லாம்  என்ன சொல்றது, சரியான அலைச்சல் பேர்வழியா இருப்பான் போல. அவன் தான் வழிஞ்சுக்கிட்டு வெட்கமே இல்லாம உன்னைக் கட்டிக்க கேட்டான்னா? நீயும் பத்தினி மாதிரி கழுத்தை நீட்டி‌, அவங்கட்டுனதை வாங்கிட்டு வந்து நிற்கிற” என்று வார்த்தைகளால்  பெண்ணவளை வதைத்தான். அவனது வார்த்தைகளோடு, பல மாதங்களாக பேதையவள்

மறக்க வேண்டும் என்று நினைத்த நிகழ்வுகள் யாவும் நினைவு வந்து அவளைக் கொல்லாமல் கொன்று போட்டது.

அவன் வார்த்தைகள் அளவில்லாத வலியைத் தந்தாலும் முயன்று வரவழைத்த தைரியத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“சில கழுசடைகளால எனக்கு ஏற்பட்ட அந்த பல கசப்பான சம்பவங்களை வச்சு என்னோட கேரக்டரை முடிவு பண்றதுக்கு உனக்கு யாரு ரைட்ஸ் கொடுத்தாங்க” என்று அவள் சொல்லி கொண்டிருக்கும் போதே, அவளை உள்ளே தள்ளிக்கொண்டு வீட்டினுள்ளே நுழைந்திருந்தான் அஸ்வின்.

அவனது செயலில் அதிர்ந்த மலர், “முதல்ல வெளிய போடா” என்று வேகமாக சத்தமிட. அவள் சத்தத்தைக் கேட்டு நவநீதனும், கவியும் கூட வெளியே வந்து இருந்தனர்.  அங்கு அஸ்வினை எதிர்பார்த்திராத கவியோ முதலில் அதிர்ந்தாலும் மறுநிமிடமே வேக வேகமாக அவனை நெருங்கியவள் அவன் கன்னத்தில் ஓங்கி ‘பளார்’ என்று அடித்து அவனை அங்கிருந்து அப்புறப்படுத்த முயலவும்,  அவளைப் பிடித்து கீழே தள்ளி விட்டவன் கவியின் கழுத்தை நெறிக்க துவங்கினான். தன்னவளது கழுத்தில் கை வைத்து நெறிப்பவன் யாரென்று ஞாபகத்திற்கு கொண்டு வர முடியாமல் தவித்த நவநீதனோ சட்டென்று சுதாரித்தவனாய் வேகமாக அஸ்வினின் அருகில் நெருங்கி அவனிடமிருந்து கவியைப் பிரித்தெடுத்து அவளை அருகில் இருந்த சோஃபாவில் தள்ளிவிட்டவன்  அவனோடு கைகலப்பில் ஈடுபட்டான்.

ஆனால் எவ்வளவோ முயன்றும் நவநீதனால் அஸ்வினை அசைக்கக்கூட முடியவில்லை.‌ உடலளவில் அவனை விட சற்று பலவீனமாக இருந்தாலும் தன்னால் முயன்ற அளவு அஸ்வினை தாக்க முயன்றான்.‌ அதற்குள் நவநீதனைப் பிடித்து சுவற்றில் மோதிக் கீழே தள்ளி விட்டு வேக வேகமாக கவியை நெருங்கிய அஸ்வின், “அன்னைக்கு நீ ஒருத்தி மட்டும் வராம இருந்திருந்தா நான் நினைச்சதெல்லாம் நடந்துருக்கும்டி. உன்னை யாருடி அன்னைக்கு வரச்சொன்னது.  அன்னைக்கு நான் விட்டதை இன்னைக்கு எடுத்துக்காம விட மாட்டேன்” என்று சொன்னவன் வேக வேகமாக கவியின் கன்னத்தில் அறைந்து கீழே கிடந்த பிளவர் வாஷை எடுத்து அவள் நெற்றியில் அடிக்க கவி மெல்ல மெல்ல மயங்கத் துவங்கினாள்.

கவியை தாக்கியவன் அதே வேகத்தோடு மலரை நெருங்கி அவள் இரு கன்னத்திலும் ஓங்கி அறைந்தான். அவள் தடுமாறிய நேரத்தில் அவளது முந்தானையை பற்றி இழுத்தான். அதற்குள் தட்டுத்தடுமாறி எழுந்து நின்ற நவநீதன் தன் உடலெங்கும் இருந்த காயங்களையும், அதிலிருந்து வழியும் ரத்தத்தையும் பொருட்படுத்தாமல் மீண்டும் அஸ்வினை தாக்க முற்பட, அதில் இருவராலும் தள்ளப்பட்டு சுவரில் சென்று மோதினாள் மலர். தன் பலம் கொண்ட மட்டும் அவனை கீழே பிடித்துத் தள்ளிவிட்டு அங்கே சுவரில் மோதி தலையில் இரத்தம் கசிய கிடந்த மலரை நெருங்கினான் அஸ்வின்.

அடிபட்ட காயத்தின் தாக்கத்தினால் எழ முடியாமல் கீழே கிடந்த அவளை நெருங்கியவன் குனிந்து அவள் முடிக்கற்றைகளைக் கொத்தாகப் பற்றி தூக்கி நிறுத்தியவன் அவள் முகமெங்கும் காயம் ஏற்பட்டு வழியும் இரத்தத்தையும், தனக்கு ஏற்பட்டிருக்கும் காயத்தையும் பொருட்படுத்தாமல் புன்னகைத்தவன்,“அன்னைக்கு உன்னோட பிரண்ட் மட்டும் வராம இருந்திருந்தா நீ எனக்கு சொந்தமாகிருப்படி, ஆனா அவ நேரங்கெட்ட நேரத்துல வந்து காரியத்தை கெடுத்துட்டா.‌ இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை அன்னைக்கு பார்த்ததை விட இன்னைக்கு  ரொம்ப அழகாகவே இருக்க. சும்மா சொல்லக்கூடாது இந்த  ஆறு மாசத்துல உடம்பு கொஞ்சம் போட்டுடுச்சு போல கொஞ்சம் கோக்குமாக்கா  பார்க்க செமயா இருக்கடி” என்று சொல்லிக் கொண்டே அவளை மேலும் நெருங்கி அவள் கன்னத்தில் இதழ் பதித்து இருந்தான்.

அவனது வார்த்தைகளிலேயே கோபம் வரத் துவங்கிய மலருக்கு அவனது செய்கை அதிகளவு கோவத்தை தர தன் பலம் அனைத்தையும் ஒன்று திரட்டி அவனை பிடித்து கீழே தள்ளியவள் கைக்கு ஏதாவது கிடைக்குமா? என்று தேடினாள். வரிசையாக அலங்காரத்திற்கு மாட்டி வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களும், செல்பில் அழகுபடுத்தி வைக்கப்பட்டிருந்த பொருட்களும் கண்ணில் பட கண்ணில் தட்டுபட்டது அனைத்தையும் எடுத்து அவனை அடிக்க ஆரம்பித்தாள். அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டாலும் ஒரு முடிவோடு அவளை நெருங்கியவன்,“அன்னைக்கு உங்கிட்ட அந்த மாதிரி நடந்துக்கிட்டேன்னு ஆள் வச்சு என்னை அடிச்சு போட்டுட்டல்ல.‌ அதுக்காகவே உன்னை பழிவாங்கணும்டி.

அன்னைக்கு நீ அனுப்புன ஆள்  அடிச்ச அடியில கிட்டத்தட்ட கோமாவுக்கு போற நிலமைக்கு வந்துட்டேன், ரெண்டு காலும் ஒடஞ்சு இத்தனை நாள் நடக்க முடியாம படுத்தப் படுக்கையா கெடந்தேன்டி. ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் கட்டு பிரிச்சதுக்கு அப்புறம் ஓரளவுக்கு நடக்குற  அளவுக்கு சரியாச்சு.  சரியானதும் உன்னை தான் தேடி வந்து பார்க்கணும் நெனச்சேன், ஆனா நான் தேடாம நீயே இன்னைக்கு என் கண்ணுல பட்டுட்டடி.  அப்பவும் நீ  கல்யாணம் பண்ணிக்கிட்டு ரொம்ப சந்தோசமா இருப்பன்னு நான் நெனச்சு பாக்கலை‍, எனக்கு கிடைக்காதவ வேற யாருக்கும் கிடைக்கக்கூடாதுடி.‌ அதே மாதிரி நான் அனுபவிச்ச கஷ்டத்தை நீயும் அனுபவிச்சே தீரணும்டி” என்று வன்மத்தோடு கருவியவன் ஏற்கனவே அடிபட்டு கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை  இழந்துக் கொண்டிருந்த பெண்ணவளை சிதைப்பதற்கு துவங்கினான்.‌

அவளது ஆடையின் மீது கை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக அவளை சித்திரவதை செய்ய ஆரம்பித்த போது, ஓரளவிற்கு தட்டுத்தடுமாறி எழுந்து நின்ற நவநீதன் வேகமாக அவர்களை நெருங்குவதற்குள் உடைந்த கண்ணாடிச் சில்லுகளில் ஒன்றைத் தேடி கையிலெடுத்திருந்த மலர் அதை அஸ்வினின் வயிற்றில் குத்தி இருந்தாள். வயிற்றில் குத்தியதோடு விடாமல் மேலும் இன்னொரு துண்டை எடுத்து அவன் கழுத்தில் வைத்து கழுத்து நரம்பை அறுத்து அவனைப் புரட்டி கீழே தள்ளியவள், அதே இரத்தக் கறையோடு இருந்த கண்ணாடித் துண்டை தன் கழுத்தில் வைத்தாள்.‌

‘இவ்வளவு நடந்த பிறகும் தான் ஏன்? உயிருடன் இருக்க வேண்டும்’ என்று எண்ணியவள் தற்கொலை செய்து கொள்வதற்காக தன் கழுத்தில் அந்தக் கண்ணாடித் துண்டை  வைத்து அறுக்க முற்பட்டபோது அவர்களை நெருங்கி இருந்த நவநீதன் அங்கு இருந்த சூழ்நிலைப் புரிந்தவனாய் வேகமாக அவள் கையை தட்டிவிட, கண்ணாடித் துண்டு அவள் கையிலிருந்து நழுவியது, கூடவே மயங்கி அவன் மீதே சரிந்திருந்தாள் மலர்.

மலர் மயங்கியதும் தள்ளாட்டத்தோடு அவளைத் தாங்கியவன், சொருகத் துவங்கிய விழிகளை கஷ்டப்பட்டு திறத்துப் பார்த்த நவநீதனோ தன் கன்னத்தில் தானே தட்டி தன்னை சுய நினைவுக்கு கொண்டு வந்தவனாய் அஸ்வினை எட்டிப் பார்த்தான்.‌ அவனுக்கு உயிர் இருக்கிறதா? இல்லையா?  என்று பார்ப்பதற்காக  அவன் கையைப் பிடித்து உயிர் நாடியைப்  பரிசோதிக்கும் போதே அவனின் உயிர் பிரிந்திருந்தது. அதன்பிறகு தட்டுத்தடுமாறி அலைபேசியை எடுத்து ஆம்புலன்சுக்கு தகவல் சொன்னவன், தன் நண்பனுக்கும் அழைத்து தன் வீட்டிற்கு வர வைத்திருந்தான்.‌நவநீதனின்  நண்பன் வீட்டிற்கு வரும்போதே  மயக்க நிலைக்குச் சென்று இருந்தான் நவநீதன்.‌ அதன் பிறகு அவனது நண்பன் தான் நால்வரையும் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, போலீசுக்கும் தகவல் சொல்லியிருந்தான். நவநீதனுக்கு சிகிச்சை முடிந்து அவன் கண்விழித்ததற்குப்  பிறகு இவர்கள் அங்கு வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு தான் அவனது நண்பன் வீட்டுக்கு கிளம்பினான்..

உனக்கு வேதனையைத் 
தருவது 

உனைப் 
பின்தொடராது 

என்றெண்ணிய என்

எண்ணமது

பொய்த்திட்டதடி?

உன் ரத்தத் துளிகளை 

என் விழிகள் கண்டு 

மெய்தனை உணருகையில்…!

உயிருள் கலந்திட்ட

எந்தன் நிழலுறவே!

நித்தமும் நின்

நினைவில் நீரின்றி

தவிக்கும் மீனினைப்

போல் தவித்துத்

துவள்கிறேனடி!

நிழல்தனை நீங்கி நிஜம் 

வாழ்ந்திடுமா?

உன்னுடனான வாழ்வினை

நீங்கி எந்தன் வாழ்வும்

நகர்ந்திடுமா?

– நிழலுறவின் தாக்கம் தொடரும்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Hero

Written by Ramyachandran

சருகாக மாறிடும் இலைகளைப் போன்று மாறிடாமல்,  மண்ணில் முட்டி மோதி , எதிர்வரும் சூழல்களை சமாளித்து துளிர்த்து வேர் விட்டு தழைத்து செழித்தோங்கிடும் விதைகளைப் போல் தன்னம்பிக்கையோடு போராரிட முனைந்திடும் பாவையிவள்....

Story MakerContent AuthorYears Of Membership

கடவுள் அமைத்து வைத்த மேடை -19

என் நித்திய சுவாசம் நீ இறுதி அத்தியாயம்