in , , ,

ஆம்பலரியைத் தீண்டிய செம்புனலே-21

செம்புனல் -21

அவளது வார்த்தைகள் நரயட்சினியின் கோவத்தை அதிகரிக்க,  அதேநேரம் நேரம் அவள் பூஜை செய்வதற்கான கால அவகாசம் நெருங்கிவிட்டதை உணர்த்தியது    நிலவொளியின் நிழல்.  வருணியைப் பார்த்து முறைத்துக் கொண்டே தன் பிரம்ம யட்சினி  தேவியின் சிலை இருக்கும் இடத்திற்கு சென்றாள். ஏற்கனவே பத்து பதினைந்து ஆட்களைக் கொண்டு தேவையான அனைத்து சடங்கு சம்பிரதாய பூஜைகள் செய்வதற்கான பொருட்களை ஏற்கனவே அந்த இடத்தில் இருக்கும் படி செய்திருந்தாள். எதெது இருக்க வேண்டும்? அவையும் எந்தெந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பது பற்றி அவர்களிடம் தெளிவாக உரைத்து அனைத்தையும் ஏற்பாடு செய்திருந்தபடியால் இப்போது அவள் தன் வேலையைத் துவங்குவதற்கான ஆயத்தப் பணியில் இருந்தாள்.

அந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட 12 அடிக்கு மேல் உயர்ந்திருந்தது அச்சிலை.  பார்ப்பதற்கு அவ்வளவு விகாரமாக இருந்தது.‌ பெரிதாக இரு விழிகள், வயிற்றுப் பகுதி வரை தொங்கிய நாக்கு,‌ தலைவிரி கோலத்தில் சடை சடையாகத் விரிந்திருந்த முடிக்கற்றைகள், அகல விரிந்திருந்த கைகள் என நின்ற நிலையில் இருந்தது அச்சிலை.   அச்சிலைக்கு பின்புறமும் ஒரு தலைப்பகுதி இருந்தது. மொத்தம் ஆறு கைகள் பக்கவாட்டில் நீண்டிருந்தன.‌ ஒரு புறம் மூன்று கைகளும், மறுபுறம் மூன்று கைகளும் நீட்டிக் கொண்டிருக்க ஆறு கைகளின் முடிவிலும் பொருத்தப்பட்டிருந்த தட்டு போன்ற அமைப்பு மேலிருந்துச் சொட்டும் ரத்தத்தை ஏந்தியவாறு நின்றிருந்தது.‌

அச்சிலையினது காலின் கீழடியில் எண்ணற்ற  பிணங்களின் சிலைகள் வடிக்கப்பட்டிருக்க, அச்சிலைகள் அனைத்தும் தலையின்றி முண்டமாகவே காணப்பட்டன. அவற்றின் தலைகள் பிரம்ம யட்சினி தேவியின் முடிக்கற்றைகளின் இறுதியில் ஒவ்வொன்றாக அலங்காரப் பொருள் போன்று கற்றைக்கு ஒன்றாகத் தொங்கிக் கொண்டிருந்தன.
அத்தலைகளில் இருந்து வழிந்துக் கொண்டிருந்த ரத்தமானது தேவியவள் நீட்டிக்கொண்டிருந்த கரங்களில் வீற்றிருக்கும் தட்டு போன்ற போன்ற அமைப்பில் சேகரிக்கப்படுவது போன்ற அமைப்பில் இருந்தது அச்சிலை. யட்சினி அங்கு அமரும் வேளையில் அங்கே அனைத்தும் தயாராக இருந்தது. வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூஜை ஸ்தானமும், தேவி சிலையும் மலர்களாலும், நரமாமிச மாலையாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதேபோல் பலியிடுவதற்கான பலி மேடையும் அவளின் கட்டளையின் படியே அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே வசியம் செய்து சில மனிதர்களை அழைத்து வந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லி இருந்தாள். தன் வேலை முடிந்ததும் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணிகளை பிணந்தின்னிகளிடம்  ஒப்படைத்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினாள். இதனை அடுத்து பிணந்தின்னிகளின் உதவியோடு அவர்கள் நால்வரையும் பூஜையில் அமர வைக்க முயன்றாள்.  அந்தோ பரிதாபம் அவர்களுள் ஒருவரைக் கூட அவர்களால் நெருங்க இயலவில்லை.  நால்வரையும் சுற்றி அந்த அளவிற்கு விஸ்தாரமான கவச பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.‌ ஒன்று ஏற்கனவே துலாவின்  விரலில் இருக்கும் சர்ப்பம் ஏற்கனவே அவர்களை பாதுகாத்துக் கொண்டிருக்க,  இப்போது அந்த சித்த யோகிப் பெண்மணியின் சக்தியும் இணைந்துகொள்ள அவர்கள் இருக்கும் இடத்திற்கு முன்னே ஒரு அடி காத தூரத்தினைக் கூட நரயட்சினி அனுப்பிய பிணந்தின்னிகளால் நெருங்க முடியவில்லை.

அதை நரயட்சினியிடம் அவர்கள் சொல்ல. அவளும், ‘ நம்மை மீறி நல்ல சக்தி உள்ளே வந்திருக்க வாய்ப்பில்லையே’ என்ற சிந்தனையோடு வேகமாக தன் முன்பு இருந்த ரத்தத் துளிகளை அள்ளி அவர்கள் மீது தெளிக்க. அந்த ரத்தத் துளிகள் அவர்கள் மீது விழுந்து அவர்களை நனைக்க முடியாமல் மீண்டும் தரையில் சிந்தியது.‌ அதிலிருந்து அவர்களை சுற்றி ஏதோ ஒரு மாய வலை பின்னப்பட்டு இருப்பதை உணர்ந்து கொண்டவள் அடுத்து என்ன செய்வது? என்று தீவிர ஆலோசனையில் விழிகளை மூடி தன் தாயவளை வேண்டிக் கொண்டிருந்த அதே நேரம் கால நேரம் நள்ளிரவு நேரத்தை எட்டியிருந்தது.‌

‘இதற்கு மேலும் தாமதித்தால் அது சரிவராது.தான்  தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தனது  லட்சிய பயணத்திற்கான வாய்ப்பு குறைந்திடும்’ என்று நினைத்த நரயட்சினி பூஜையிலிருந்து எழாமலேயே,‌ “தைரியம் இருந்தால் நேருக்கு நேர்  நின்று மோத வேண்டும் கோழை போல் பயந்துகொண்டு என்னை ஜெயிக்க முனைவது எதனாலோ?” என்ற விதண்டாவாதமாக தன் வாதத்தை ஆரம்பித்தாள்..

இங்கே அவர்களைப் பாதுகாப்பில் வைத்திருந்த சித்த பெண்மணிக்கும் அவள் சொல்வதில் இருந்த உண்மை புலப்பட்டது. ‘எவ்வளவு நேரம் இவர்களை தங்களால் பாதுகாக்க முடியும்.‌ விடியற்காலை நாலு மணி வரை அவளது சக்தி தான் மேலோங்கி இருக்கும் அப்படி இருக்கும்போது நேரம் ஆக ஆக தங்களது பலமும் சக்தியும் குறைய வாய்ப்பு இருக்கிறது’ என்பதை உணர்ந்தவர் சட்டென்று சக்தியின் உடலுக்குள் தன்னை முன்பு போலவே புகுத்திக் கொண்டார்.

அதனால் சக்தி மட்டுமே எழுந்து நின்று அவர்களை சுற்றி பிணையப்பட்டிருந்த மாய வளையத்தில் இருந்து வெளியே வந்து நிற்க,  மற்ற மூவரையும் பாதுகாக்கும் பொருட்டு அந்த சர்ப்பம் அவர்களைச் சுற்றி வளைத்த போது அதை தடுக்கும் முயற்சியாக கடைசியாக நரயட்சினி  6 தலைட்சம் பிள்ளைகளைப் பறிகொடுத்து இருந்தால் அல்லவா! அந்த நால்வரின் ஆத்மாவையும் ஒன்றிணைத்து ஆயுதமாக்கி சர்பத்தை  நோக்கி   அனுப்பிட. சிறு பிஞ்சுகளின் உயிர்களை திருப்பி வதைக்கும் வழியின்றி அவர்களின் கட்டுக்குள் அடங்கி போனது சர்ப்பமது.

கொடூர குணமும். அரக்கத் தன்மையும் கொண்ட சக்திகளை அழிக்க அவைகள் எள்ளளவும் தயங்குவதில்லை ஆனால் பிறந்த சில தினங்களிலேயே,  காரணமற்ற நிலையில் இவளால் உயிர் வதை செய்யப்பட்டு அவளின் கைதியாக மாறியிருக்கும் இளம்பிஞ்சுகளை சிதைக்க அந்த சர்பத்திற்கு மனம் வராததால் அவர்களது ஆளுமைக்குள் அடங்கிப் போனது.‌ இதை எதிர்பார்த்து தானே அக்குழந்தைகளின் ஆத்மாக்களை ஆயுதமாக பயன்படுத்தி  தனது முதல் தாக்குதலிலேயே  வெற்றியைக் கண்டாள் நரயட்சினி.‌ இப்போது அவள் சுலபமாக மற்ற மூவரையும் தன் வசம் கொண்டு வர முடியும்.  முதலில் அவர்களைக் காக்க வேண்டும் என்றெண்ணிய சக்தி வேகமாக அவர்களை நெருங்குவதற்குள் பிணந்தின்னிகளால் சுற்றிவளைக்கப்பட்டு ஏற்கனவே சக்கரவியூகம் அமைக்கப்பட்டிருந்த மேடையில் மூவரும் கிடத்தப்பட்டனர்.

முன்பு போலவே இப்போதும் சக்தி ஒருவனே தன்னந்தனியாக நின்று இருந்தான். அடுத்து அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை? ஆனால் உள்ளிருந்து அவனை அந்த சித்த யோகிப் பெண்மணி ஆட்டுவிக்க துவங்கினார். சில பல மந்திர உச்சாடனங்களை அவன் உதடுகள் உச்சரிக்க தரையில் நின்று கொண்டே இருந்தவன் தரையில் சம்மணமிட்ட நிலையில் தன் திவ்ய சக்தியைத் திரட்டினான்.

அந்தரத்தில் மிதந்தவாறு மேலெழுந்த நரயட்சினி இதழோரம் துளிர்த்த புன்னகையோடு, “உனது உடலை விட்டு இன்னொருவனின் உடலில் கூடுவிட்டு கூடு பாய்ந்து என்னை எதிர்க்க வந்துவிட்டாயா?  சடைமுடி தரித்தவளே! என்னை விட பலம் குறைந்த உன்னால் என்னிடத்தில் இருந்து கொண்டு  என்னையே எதிர்க்க முடியும் என்று நம்புகிறாயா? வேண்டுமென்றால் முயற்சி செய்து பார்”- என்று கூறிவிட்டு கீழிறங்கி மீண்டும் தன் பூஜையில் கவனமானாள்.
பிரம்மயட்சினி தேவிக்கு ரத்தத்தில் அபிசேஷகம் துவங்கியது.‌

பிணந்தின்னிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருத்தரையும் இழுத்துக் கொண்டு வந்து அவள் முன்பு நிறுத்த,  ஒவ்வொருத்தருடைய தலையையும் துண்டித்து, அவர்களது ரத்தத்தை தன் தேவியவளுக்கு அர்ச்சனை செய்துவிட்டு, ஒவ்வொரு உயிரையும் தன் உடலுக்குள் சேகரமாக்கினாள். அவள் அனைத்தையும் செய்து முடிக்கும் வரை அந்தரத்தில் மேலே செல்வதும், கீழங்கி மந்திர உச்சாடனங்கள்  செய்வதுமாகத் தான் இருந்தான் சக்தி. ஏனெனில் அவனுக்கு சாதகமான நேரம் கிடைத்தால் மட்டுமே நரயட்சினியின் அருகில் நெருங்க கூட முடியும் என்பதால் அவ்வாறு அமைதியாக இருந்தான்..

கிட்டத்தட்ட அவள் தன் பூஜைகள் அனைத்தையும் முடித்துவிட்டு எழுந்து நின்றவள் வேகமாக வருணியின் அருகில் சென்று அவள் முடிக்கற்றைகளை கொத்தாகப் பற்றி எழுந்து நிற்க வைக்க கடைசியாக தன் உயிரானவனின் முகத்தைத் தன் நெஞ்சில் நிறைத்துக் கொண்டு எழுந்து நின்றாள் வருணி.

தன் கையிலிருந்த ஆயுதம் கொண்டு வருணியிம் கழுத்தை நரயட்சினி வெட்ட போகும் தருணம் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்த சக்தியின் நெற்றி பொட்டில் இருந்து ஒரு ஒளி பாய்ச்சல் நரயட்சினியை நோக்கி பாய்ந்து செல்ல, அந்த ஒளி அவள் உடலைத் துளைப்பதற்கு முன்பாகவே வருணியைக் கொண்டு வந்து தன் முன்னால் நிறுத்தி இருந்தால் நரயட்சினி. அச்சக்தி வருணியைத் தாக்கிய மறுகணம் அவள் உடலில் இருந்த ரத்தம் யாவும் அந்த துளையின் வழியே வெளியேற துவங்கிட, தன்னவனை இறுதியாக விழிகளில் நிரப்பிக் கொண்டே மயங்கிச் சரிந்தாள்.

அதை சற்றும் எதிர்பார்த்திராத சக்தியின் ஆத்மா அப்பெண்மணியின் ஆத்மாவை முந்திக் கொண்டு சட்டென்று வெளியில் எட்டிப்பார்த்து,
“அய்யோ அண்ணி?”  என்று அறை கூவலோடு கீழிறங்கி  அங்கிருந்து ஓட முற்பட்ட மீண்டும் அவன் ஆத்மாவை பிடித்து தனக்குள்ளேயே தள்ளிவிட்டு அப்பெண்மணியின் ஆத்மா முன்னே வந்து நின்றது.‌ மீண்டும் அந்த இடத்தில் ஒரு யுத்தம்  மீண்டது. மீண்டும் ஒரு மந்திர உச்சாடனம் நிகழ்த்தப்பட்டு மீண்டும் ஒரு ஒளிக் கற்றை நரயட்சினியியை நோக்கி பாய்ச்சப்பட, மீண்டும் அதை தடுக்கும் பொருட்டு வினோவைத் தீண்ட சென்றவளது கரங்கள் அந்தரத்திலே நின்றது.  ஏனெனில் இப்போது சக்தி நேரடியாகத் தாக்கியிருந்தது வினோவைத் தான். அவளது உடலிலிருந்து குருதி வெளியேறிட அவளோ கண்கள் சொருகி ஆழ்ந்த மயக்கத்திற்கு சென்று இருந்தாள். அப்போது தான் மெல்ல விழிப்பு தட்டியவளுக்கு மீண்டும் ஒரு தாக்குதல் ஏற்பட முற்றிலுமாக மயங்கியிருந்தாள்.

இதைக்கண்ட சக்தியின் ஆத்மா அலறித் துடித்து மீண்டும் வெளிவரத் துடி துடிக்க, அதை தன் பலம் கொண்ட மட்டும் அடக்கி தனக்குள்ளேயே ஒடுக்கிய அப்பெண்மணியின் ஆத்மாவானது மீண்டும் நரயட்சியுடன் ஒரு போரினைத் தொடுப்பதற்காக தயாராகியது.. வேகமாகத் தான் எடுத்து வந்திருந்த பொருட்களில் இருந்த ருத்ராட்ச மாலைகளைத் தன் கழுத்திலும் இடுப்பிலும் அணிந்து கொண்டு இன்னபிற பொருட்களை தரையில் பரப்பி விட்டு நொடியில் பூஜையையும் ஆரம்பித்திருக்க.  பூஜை சத்தமும், வார்த்தை பிரயோகமும் நரயட்சினியின் செவியை குடைந்து அவளை சிதைக்க துவங்கியது. இருந்தும் தன் நிலையில் இருந்து மாறாமல் துலாவை நோக்கி முன்னேற முன்னேற இங்கே சக்தியின்  இதழில் இருந்து வரும் வார்த்தைகள் யாவும் உச்சகட்டத்தை எட்டி இருந்தது. துலாவை நெருங்கியவள் அவனை இழுத்து பலிபீடத்தின் முன்னிலையில் கீழே தள்ளியவள், அந்த மந்திர குடுவையைத் திறந்தாள்.

அவள் மந்திரக் குடுவையைத் திறந்த நொடியிலிருந்து ஒவ்வொரு ஆத்மாவாக அவளது உடலில் சேகரமாகியது‌ கிட்டத்தட்ட ஆயிரம் கன்னிப்பெண்களுடைய தூய்மையான ஆத்மா அவளுள் சேகரமாகிய அடுத்த கணம் அவள் முகம் விகாரமாக மாறியது, உருவம் பெரிதாகியது.  இன்னும் அவள் உயரம் சற்று அதிகரித்தது, சாதாரணமான மனிதருக்கு இரண்டு கை இரண்டு கால் ஆனால் தற்போது அவள் உடலில் இருப்பதோ? ஒற்றை ஆத்மா அல்லவே!  உடல் ஒன்று தான் ஆனால் அதனுள் குடு கொண்டிருப்பது ஆயிரம் ஆத்மாக்கள் ஆயிற்றே! ஆக இரண்டாயிரம் கைகளோடும், இரண்டாயிரம் கால்களோடும், ஆயிரம் தலைகளோடும்,‌ஒற்றை உடலோடும் விகாரமாக தன் சுயரூபத்தை வெளிக்காட்டியவள், நொடிப்பொழுதில் அவற்றை தனக்குள் உள்வாங்கிக் கொண்டாள். 

இன்னும் நரயட்சினிக்கு தேவையானது ஒரே ஒரு ஆத்மா மட்டுமே! திரும்ப வருணியைப் பார்த்தாளவள்.  சலனமற்றுக் கிடந்தவளது உயிரே தனக்குத் தேவையானது என்று எண்ணியவள், வருணியின்   கையைத் தூக்கி அவள் நாடியைப் பரிசோதித்தாள், உயிர் இருக்கிறதா? இல்லையா? என்று.

வருணியின் உயிரானது தன்னவனுடன் வாழாமல் அவ்வளவு எளிதில் உன் உடலை விட்டு நீங்க மாட்டேன் என்பது போல் இன்னும் துடித்துக் கொண்டு தானிருந்தது. நரயட்சினியோ  இதழில் தோன்றிய புன்னகையோடு அவளை தூக்கி நிறுத்தியவள்‍, ஏதோ ஒரு பொடியைத் தூவி வருணியை விழி திறக்க செய்திருந்தாள். வருணி விழி திறந்த மறுநிமிடம் அவள் விழிகளைத் தன் விழிகளுடன் கலக்க விட்டு அவளை வசியம் செய்ய முற்பட்டாள். ஆனால் அவளது சக்தியால் கூட வருணியை அசைக்க முடியவில்லை.‌ வருணியினது உடல் பலவீனமாக இருந்தபோதிலும் அவளை நரயட்சினியால் வசியம் செய்ய முடியவில்லை.

வருணியை வசியம் செய்தாவது  தானாக முன்வந்து  உயிரை கொடுக்க வைத்து விடலாம் என்று எண்ணிய நரயட்சினியின்  முயற்சி முறிந்து போனது.‌ அடுத்து என்ன செய்வது? என்ன செய்தால் தன்னுடைய குறிக்கோள் நிறைவேறும்? என்று யோசிக்கத் தொடங்கினாள்.  அவள் யோசிக்கத் தொடங்கிய அந்த ஒரு நிமிட இடைவெளியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சக்தி சட்டென்று நரயட்சினி  கையில் அணிந்திருந்த அந்த வெண்கல நிறத்திலான அணிகலனை பார்த்து தன் தாக்குதலைப் பயன்படுத்த.  சரியாக அது தன் இலக்கை எட்டி இருந்ததால், அவள் கையில் அணிந்திருந்த காப்பு கழண்டு கீழே விழுந்தது.‌ அந்த ஒரு நிமிடத்தில் நிலைகுலைந்த நரயட்சினி தான் நின்றிருந்த இடத்திலிருந்து சற்றே பின்னோக்கி நகர்ந்திட‌ அந்த இடைவெளியைப் பயன்படுத்தி கொண்ட சக்தி அதிவேகமாக விரைந்து சென்று வருணியின் கையைப் பிடித்து அழைத்து வந்து தன் மந்திர கட்டுக்குள் நிறுத்தியிருந்தான். 

அதை சற்றும் எதிர்பார்த்திராத நரயட்சினி அடுத்து என்ன செய்வது? என்று யோசித்தவள் ‘இனிமேல் தனக்கு இருக்கும் ஒரே ஆயுதம் யார்?’ என்பதனை யூகித்தவளாய் வேகமாகத் துலாவைக் கொல்வதற்கான முயற்சியில் ஈடுபட, அதற்குள் தன் ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதலைத் தொடங்கி இருந்தான் சக்தி.
நரயட்சினியுள் சிறைபட்டிருக்கும்  ஆத்மாக்களை சிறையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்று முடிவு செய்த செய்தவன் அதற்கான மந்திரங்களை உச்சரித்தவன் கூடவே மந்திரக் கயிற்றைக் கொண்டு தன்னை சுற்றி ஒரு பெரும்  வளையத்தை வரைந்தான்.  அடுத்து அந்த வளையத்தை சுற்றிலும் தன் முடி, ரத்தம்,‌நகம் தன் உடையின் சிறு துண்டு என அனைத்தையும் பரப்பி வைத்து இடையே ருத்ராட்ச மணிகளையும் ஒவ்வொன்றாக பிரித்து எடுத்து வைத்தான்.  எந்த சக்திக்கும் அப்பாற்பட்ட சக்தி என்று ஒன்று வளிமண்டலத்தில் உள்ளது தானே!  அதேபோல் அவளிடம் சிறைப்பட்டிருக்கும் சக்திகள் அனைத்திற்கும் முக்தி கொடுத்து விட்டால் அவளிடம் இருந்து பிரிந்து செல்ல வாய்ப்பிருக்கிறது என்பதை புரிந்து கொண்டு இன்னும் சப்தமாக வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கினான்.

“அந்த தீயவளால் சிறைபிடிக்கப்பட்டு இருக்கும் அத்தனை பேரும் ஒன்றை கவனிக்க மறந்து விட்டீர்கள்?  உங்களுக்கு மணமகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவள் அருகில் சலனமற்றுக் கிடக்கும் அந்த ஆண் மகனுக்கு நீங்கள் தான் மணப்பெண்ணாய் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள் என்று  தெரிந்து இருக்க வாய்ப்பும் இல்லை,‌ அது தெரியவும் இல்லை இதுதான் உண்மை. அதையும் மீறி அவனுக்கும், உங்களுக்கும் திருமணம் முடிக்க வேண்டும் என்று பெரியோர்கள் நிச்சியித்த பின்பும் உங்கள் திருமணம் நின்றதற்கு காரணம் நீங்கள் யாரிடமும்  சிறைப்பட்டிருக்கிறீர்களோ?  அவள் தானே ஒழிய, இவனும் இவன் குடும்பத்தாரும் இல்லை. உங்களது ஒவ்வொரு மரணத்திற்கும் காரணம் அவள்தான். அவனிடம் இருக்கும் திவ்ய சக்தியைக் கவர்வதற்காக அவளுக்கு ஆயிரம் கன்னிப் பெண்களது உயிர்கள் தேவை, அதிலும் நீங்கள் பிறந்த நட்சத்திரத்தில் பிறந்து, உங்களது குணாதிசயங்களைப் பெற்றிருந்து, அவனது ஜாதகத்திற்கு பொருந்திப் போகிற படியான ஆத்மாக்கள் தேவை!  அதனால்தான் எந்த வித நல்ல எண்ணமும் இன்றி, அவளது சுயநலத்திற்காக உங்களைக் கொன்று, உங்களது ஆத்மாக்களை கட்டுப்படுத்தி இருக்கிறாள்.‌ அவளது கட்டுக்குள் இருந்து நீங்கள் வெளிவர வேண்டும். உங்களால் முடியும், முடிந்தவரை  முயற்சி செய்து அவளிடம் இருந்து நீங்கள் வெளிவர வேண்டும், நீங்களே முயலாத வரை உங்களால் அவளிடமிருந்து மீள முடியாது.  நீங்கள் வெளிவர வேண்டும் என்று விரும்பினால் ஒரே ஒருவராவது உங்களது முழு உருவத்தை அவள் உடலிலிருந்து பிரித்துக் காட்டுங்கள், அதன் பிறகு உங்களை அவளிடம் இருந்து விடுவிப்பது என் பொறுப்பு”
என்றிட. 

நரயட்சியின் உள்ளே இருந்து இறுதியாக இறந்துபோன சுகேந்தினியின் ஆத்மா  ஆக்ரோஷமாக விருட்டென்று வெளியே வந்து விட்டு உட்செல்ல.  அது ஒன்றே போதும் என்று நினைத்த சித்த பெண்மணி தன்னிடமிருந்த மந்திரக் கயிறு கொண்டு ஒரு சுற்று வளையத்தை உருவாக்கி ஆத்மாவின் மீது தூக்கி எறிந்து, அதை இறுகப் பற்றிக்கொள்ள சொல்லியவாறு கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அங்கிருந்து அவ்வுயிரை இழுத்து தன்னுடைய சுற்று வட்டத்திற்குள் கொண்டு வந்தான்.  இதேபோல் நூல் பிடித்தாற்போல் அனைத்து ஆத்மாக்களும் ஒவ்வொன்றாக நரயட்சினியின் உடலில் இருந்து வெளியேற அதன் தாக்கம் தாங்க முடியாமல் அலறி துடிக்க ஆரம்பித்தாள் அவள்.  ஒவ்வொரு ஆத்மாவும் அவள் உடலில் இருந்து வெளியேறும் போதெல்லாம் தங்களது கோவத்தை அவள் மீது இறக்கி விட்டு தான் சென்றன.  ஒவ்வொன்றும் அவள் உடலில் இருந்து வெளியேறுகையில் தன்னுள் ஒரு  எலும்பு உடைவது போன்றதொரு  வலியை உணர்ந்தாள். 

அவள் பிறப்பால் பெண் என்ற போதும் பேராசையின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னுடைய குணாதிசயங்களை மாற்றிக் கொண்டவள் இறுதியாக கெட்ட குணம் கொண்ட அரக்கியாகவே மாறிப்போனாள். எந்த ஒரு சிறு விடயத்திற்கும் பேராசை கொண்டால் சாதாரணமான ஒருவரையே அவ்வாசை அடியோடு  அழித்துவிடும் என்ற நிதர்சனம் நடைமுறையில் இருக்கையில் இவ்வளவு பாவங்கள் செய்தவள் உயிரோடு வாழ்ந்திடுவாளா என்ன? அவள் செய்த கொடும் பாவங்கள் அவளுக்கு எதிராகத் திரும்பிட காத்திருப்பதை அவள் அறியாமல் தீய செயல்களைச் செவ்வனே
செய்து கொண்டு இருந்திருக்கிறாள். ஒரு கட்டத்திற்கு மேல் 999 ஆத்மாக்களும் அவள் உடலில் இருந்து வெளியேறிய தருணம் அவள் உடலில் அவளது ஆத்மா மட்டுமே மிஞ்சி இருந்தது. அவை வெளியேறியதற்கு பிறகு தன் சக்திகள் யாவும் குறைந்தது போல் உணர்ந்தவள், தான் இறந்தாலும் சரி! இவனை காப்பாற்றுவற்காகத்தானே இத்தனை போராட்டங்களும், ஆக இவனும் உயிர் பிழைக்கக் கூடாது’ என்ற எண்ணத்தில் துலாவின் மணிக்கட்டில் கத்திக் கொண்டு காயத்தை ஏற்படுத்தியவள், அடுத்த நிமிடம் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு தன் உடம்பிலிருந்து உயிரை வெளியேற்றி கொண்டவள் தாமதிக்காமல் அடுத்த கணம் வினோவின் உடலுக்குள் பிரசன்னமாகி இருந்தாள்.

இதை சற்றும் எதிர்பாராத அந்த சித்த பெண்மணியோ. ‘வினோவின் உயிரைக் கொல்வதற்கு பதிலாக அவளை அப்படியே மந்திரக்கட்டுக்குள் சிறை வைத்து, காற்றோடு காற்றாக அவளைக் கரைத்தால் மட்டுமே அவளது ஆத்மாவிற்கு விமோசனம் அளிக்க முடியும்’ என்பதை உணர்ந்தவர் அதைச் செயலாக்க முற்பட்ட வேளையில், துள்ளி எழுந்து முன்னே வந்து அவரது ஆத்மாவை வெளியே தள்ளியிருந்தது சக்தியின் ஆத்மா. தன்னவளுக்கு ஏதாவது ஒன்று என்றால் பார்த்துக் கொண்டு அவன் சும்மா இருப்பானா?  ‘எப்படியாவது தன்னவளை மீட்டு விட வேண்டும்’ என்று அவளை நோக்கி சென்ற அவனைத் தடுத்து நிறுத்திய அந்தப் பெண்மணி அவனிடம் உரையாட தொடங்கினார்.

“இத்தகைய ஒரு தருணம் வரும் என்பதற்காகத்தான் உனது மனோதிடத்தை அதிகரித்திட அத்துணை சோதனைகள் நிகழ்த்தப்பட்டன. அப்படி இருக்கும் போது இப்பொழுது நீ இப்படி நடந்து கொள்வது சரியில்லை சக்தி. இவள் இல்லையென்றாலும் இவ்வுலகில் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள் ஆனால் இப்போது இவளை அழிக்கவில்லை எனில் மீண்டும் மீண்டும் இது போல் ஏதாவது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் உங்கள் குடும்பத்தை மட்டுமின்றி இன்னும் பல பேருடைய உயிர்களையும் வதைத்திட அவள் காத்திருக்கிறாள் அதனால் முடிந்தவரை எனக்கு உதவி செய்ய முயற்சி செய்” என்றிட.

சக்தியோ, “என்ன ஆனாலும் சரி என் வினுவைக் கொல்ல விடமாட்டேன். நான் இருக்குற வரைக்கும் என்னோட வினோவ நீங்க நெருங்க முடியாது, என்னோட உயிரைக் கொடுத்தாவது என்னவளைக் காப்பாத்துவேன்”  என்று சொல்லி பிடிவாதமாக தன்னவளைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்றான். கூடவே அந்த சித்த யோகிப்பெண்மணியின் ஆத்மாவை தன் உடலுக்குள் நுழைய விடாமல் அவன் தர்க்கம் செய்து கொண்டிருக்கும் போதே நரயட்சினி தன் ஆத்மாவை வினோவின் உடம்பில் புகுத்தியிருந்தாள்.

வினோவின் உடம்போடு எழுந்து நின்றிருந்த நரயட்சினியோ, “உன்னுடைய காதலியின் உயிர் வேண்டுமென்றால், உனது அண்ணனுடைய உயிரைக்  காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினால், உனது அண்ணியை என்னிடம் கொண்டு வந்து ஒப்படைத்திடு”  என்று அந்த நிலைமையிலும் எப்படியாவது தன்னுடைய குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமென்று பேசினாள்.

சக்தியோ இருகொள்ளிப் பாம்பாய் தவித்துப் போனான்.  தன்னவளைக் காப்பாற்ற அவன் செய்யும் செயல் அவன் குடும்பத்தை மட்டுமின்றி மொத்த உலகத்தையும் அல்லவா ஆபத்தில் தள்ளிடும்.‌ தன்னவளைக் காப்பாற்றிட தன் அண்ணியை ஆபத்தில் விட அவனால் முடியுமா? அல்லது எதையும் செய்யாமல்  தன் கண்முன்னே தன்னவளது உயிர் வேதனையோடு பறிபோவதைத் தான்  காணமுடியுமா? என்ன செய்வது என்று தெரியாமல் அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அவனுள் நுழைந்திருந்தார் அந்த சித்த யோகிப்பெண்மணி.

இதை சக்தி சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“உங்களை யாரு என்னுடைய உடலுக்குள்ள வரச்சொன்னது?” என்று அவன் ஆத்மா அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது. மெல்ல மெல்ல துலாவின் உயிரும் அங்கே அடங்கி கொண்டிருந்தது.  இங்கு வருணியின் உடலும் மேலும், கீழும் தூக்கிப்போட துவங்கியது.

இதைக் கண்கூடாக கண்டு கொண்டிருந்த நரயட்சினியோ, தான் வணங்கும் பிரம்ம யட்சினி தேவியைப் பார்த்தவாறு, தேவியவளின் பாதத்திற்கு சற்று மேலே வரி வரியாக இருந்தக் கட்டுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கத் தொடங்கிய போது தான் அதை தடுக்கும் விதமாக முன்னே வந்து நின்றான் சக்தி. ஆனால் அவனையும் மீறி நரயட்சினி வினோவின் உடலுக்குள் இருந்து கொண்டு அந்தக் கட்டுகளை அவிழ்க்க முற்பட்டபோது தன் பலம் கொண்ட மட்டும் அவளை தள்ளி விட்டதில் வினோவின் தலை அங்கிருந்த சிலையின் மீது மோதியதில் ரத்தம் வழிந்தது.

அப்போதும் அவள் அக்கட்டுக்களை அவிழ்ப்பதிலே முனைப்பாக இருந்தாள். ஒருவேளை தேவியின் பாதத்திற்கு மேலே இறுக்கமாகப் போடப்பட்டிருக்கும் கட்டுகள் யாவும் அவிழ்க்கப்பட்டால், இதுவரை இறந்து போயிருந்த அத்தனை உயிர்களின் ஆத்மாக்களும் ஒரே நேரத்தில் வினோவின் உடலுக்குள் பிரவேசிக்க வாய்ப்பு உண்டு.  அப்படி மட்டும்  நிகழ்ந்தால் உலகம் கண்டிப்பாக அழிவது உறுதி என்பதை அறிந்த சித்தயோகி பெண்மணி தன்னால் முயன்ற மட்டும் அவளைத் தடுக்க முயன்றார்.  ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அச்சிலையின் மீது போடப்பட்டிருந்த ஆறு கட்டுகளில் இரு கட்டுகளை வினோ அவிழ்த்திருக்க, மீதியுள்ளவற்றையும் அவிழ்க்க முயன்று கொண்டிருந்தாள். சக்தியோ  அவளைத் தடுத்திட முயன்றான்.  இதற்கு மேலும் இவள் உயிருடன் இருந்தால் மொத்தக் கட்டினையும் அவிழ்க்க வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்ந்த சக்தியின் உடலிலிருந்த சித்த யோகிப் பெண்மணியோ கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு வினோவைத் தாக்கினாள். வினோ உடலளவில் பலவீனமடைந்திட்டால் அவளை எளிதில் வீழ்த்தலாம் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. அவர் தாக்கியதில் அவள் உடலெங்கும் காயங்கள் ஏற்பட்டாலும், தன் குறிக்கோள் கட்டுகளை அவிழ்ப்பது மட்டுமே என்ற முனைப்பில் அவள் செயலாற்றி கொண்டிருந்தாள்.

தன்னவளின் நிலையைக் கண்டு வருந்தி வெளியே வர துடித்துக் கொண்டிருந்த சக்தியின் ஆத்மாவைத் திரும்பி ஒரு பார்வை பார்த்த சித்த யோகி பெண்மணியின் ஆத்மா பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவாறு தன் கையிலிருந்த கூரிய கலசத்தின் முனையை வைத்து வினோவின் நெஞ்சு பகுதியில் ஒரே இறக்க இறக்க அவள் உயிரோடு சேர்த்து நரயட்சினியின் உயிரும் அவள் உடலில் இருந்து வெளியேறியது. அடுத்த கணம் வினோவின் நெற்றிப்பொட்டில் ஒரு அழுத்தம் கொடுத்தவாறே தன் கையிலிருந்த மந்திர கயிற்றின் மூலம் வினோவின் ஆத்மாவை கட்டி அவள் உடலை நோக்கி இழுத்து,  மீண்டும் நெற்றிப்பொட்டில் இருந்து விரலை எடுத்து அதன் வழியாக அவள் உயிரை அவள் உடலில் செலுத்தியவர் அடுத்த கணம், நரயட்சினியின்  ஆத்மாவைப் பிடித்து மீண்டும் அந்த மந்திர கயிற்றோடு சேர்த்து பிரம்ம யட்சினி தேவியினின் காலடியில் சேர்த்துக் கட்டி, விடுபட்டிருந்த இரு முடிச்சுகளைப் போட்டிருந்தார்..

மரணதேவனின் 
கரத்தை அடைவதற்கு 
சில நொடி நேரமே 
இருப்பினும்,
அக்கண நேரத்திலாவது
என் கரம் சேர்ந்திடு 
உயிரே!!
மரிக்கையிலாவது 
மண(ன)ம் 
கொண்டவளி(னி)ன்
கரம் கோர்த்து 
மகிழ்வோடு மரித்துப் போகிறேன்..!!

– இனியும் தீண்டும் செம்புனல்

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Hero

Written by Ramyachandran

சருகாக மாறிடும் இலைகளைப் போன்று மாறிடாமல்,  மண்ணில் முட்டி மோதி , எதிர்வரும் சூழல்களை சமாளித்து துளிர்த்து வேர் விட்டு தழைத்து செழித்தோங்கிடும் விதைகளைப் போல் தன்னம்பிக்கையோடு போராரிட முனைந்திடும் பாவையிவள்....

Story MakerContent AuthorYears Of Membership

என் நெஞ்சமே உன் வாழ்வின் எல்லை 14

ஆம்பலரியைத் தீண்டிய செம்புனலே-22 ( இறுதி அத்தியாயம்)