in

கடவுள் அமைத்து வைத்த மேடை -13

அத்தியாயம் 13  

 ஒரு மாதம் விரைந்ததே தெரியவில்லை நீலாவிற்கு. பொழுது போக வேண்டுமே என்று தங்கையுடன், அல்லது பவனுடன் சேர்ந்து சமையல் செய்ய கற்றுக் கொண்டாள். அவர்களுடன் சேர்ந்து அருகில் உள்ள கோவில் கடைகளுக்கு சென்று வந்தாள். நடுத்தர மக்களின் வாழ்க்கை புரிந்த போது தான் எவ்வளவு கொடுத்து வைத்தவள் என்ற உண்மை அவளுக்கு புரிந்தது.

பணக்காரி என்ற ஹோதாவில் தான் செய்த அனாவசிய செலவுகளும், மற்றவர்களிடத்தில் நடந்து கொண்டதும் நிதரிசமான வாழக்கையில் புரிந்து போக இவ்வளவுதானா வாழ்க்கை என்று தோன்றிற்று..

அன்று காலையிலேயே எங்கோ கூட்டி செல்வதாக பவன் சொல்லி இருந்ததால் சீக்கிரம் எழுந்தவள் குளித்து விட்டு வெளியில் செல்ல தயாரகி கதவை திறந்தாள். அவள் இங்கு வந்த நாளில் இருந்து அவன் ஹாலில் படுத்துக் கொள்ள இவள் மட்டுமே அவர்களின் அறையை பயன்படுத்தி வந்தாள்.

லேப்டாப்பில் ஏதோ செய்து கொண்டு இருந்தவன், அறைக் கதவை திறந்து இவள் வெளியே வந்ததைக் கண்டதும், “என்ன எங்க கிளம்பிட்டே..?”

“”நீங்க தானே வெளியே போகணும்னு சொன்னிங்க..!”

“ஒஹ்.. சொன்னேன்ல மறந்தே போயிட்டேன்.. கொஞ்சம் வேலையா இருந்துட்டேன்.. ஜஸ்ட் டென் மினிட்ஸ்.. கிளம்பி வந்துடறேன்..” என்றவன் “ஒரு சின்ன ஹெல்ப்.. கொஞ்சம் சிஸ்டரையும்,  சகலையும் கிளம்பியாச்சான்னு பாரு..”

“ஒ.கே..” என்றவள் அவர்களின் அறைக் கதவை தட்டினாள். கதவை திறந்த தில்லை, “அவ குளிச்சிட்டு இருக்கா.. இப்ப வந்திடறோம்..” என்று கூறவும் வந்து விட்டாள்.

பசிக்கவே காபி போட்டு வைத்திருப்பனோ என்ற நப்பாசையில் கிச்சன் சென்று பார்க்க அங்கு எந்த வேலையும் செய்த அறிகுறி இல்லாததால், ப்ரிட்ஜை திறந்து பாலை எடுத்து காச்சி டிக்காசன் போட்டு வைத்தாள்.

கிளம்பி வெளியில் வந்த தில்லையும், காதுவும் கிச்சனில் சென்று பார்க்க அங்கு டிக்காசன் இருக்கவும் காபி கலந்து குடித்தனர்.. “என்னதான் சொல்லு..! சகலை சகலைதான்.. பால் காச்சி, டிகாசன் போட்டு எல்லாம் வச்சிட்டு போயிருக்கான்..” தில்லையின் பேச்சை கேட்டுக் கொண்டே வெளியில் வந்த பவன்..

“என்னடா என் தலையை உருட்டிட்டு இருக்கே…?”

“இல்லடா,உன் சின்சியாரிட்டி பத்தி பேசிட்டு இருந்தேன்..”

“என் சின்சியரிடியா..?’ என்று புரியாமல் கேட்டவனிடம்..

“ஆமா நேத்து என்ன சொன்னே..? விடிய விடிய வேலை இருக்குன்னு.. நான் கூட நீ எங்க காலையில காபி போட்டு வைக்கப் போறேன்னு நினச்சேன்..” என்ற சகலையின் பதிலில்..

‘நான் ஒண்ணும் செய்யலியே..’ என்று சொல்ல வந்தவன், நீலாவைப் பார்த்தான்.. அவனையே பார்த்துக் கொண்டு இருந்த அவள், சடக்கென்று பார்வையை திருப்பவும், ‘ஒஹ் அம்மிணி வேலை தான் போல இருக்கு.. ஏதேது கொஞ்சம் கரிசனம் எல்லாம் வந்திருக்கு போல..’ நினைத்தவன் பதில் சொல்லாமல்..

“ரெடி ஆயாச்சுன்னா கிளம்பலாம்.. டேய் அவனுக எல்லாரும் வர்றாங்க இல்ல..”

“ஆமாம்.. வந்திடுவாங்க..” 

“சரி வாங்க போகலாம்..” என்று கிளம்பினர்..

“ஏய் எங்க  போறோம்னு தெரியுமா..?” காதம்பரியிடம் நீலா வினவ…

“தெரியாது.. தில்லையும் சொல்லலை..”

“அப்படியா..!” சஸ்பென்ஸ் தாங்காமல் பவனிடம் கேட்டாள்..

“எங்க போறீங்க..?”

“இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடப் போகது.. அப்புறம் ஒரு சின்ன உதவி.. அங்க அம்மா அப்பா வந்து இருப்பாங்க.. உனக்கு பிரியம் இருந்தால் பேசு.. ஆனால் அதுக்காக டைவர்ஸ் விசயம் எல்லாம் அவங்களுக்கு தெரியாது.. அப்புறம் சொல்லிக்கலாம்னு நினைச்சு இருக்கேன்.. ஞாபகம் வச்சுக்கோ..” 

அதற்கப்புறம் பவன் வாயை திறக்கவே இல்லை. சென்னை அவுட்டரில் உள்ள அநாதை ஆசிரமம் ஒன்றிற்கு அவர்கள் சென்ற போது அங்கு ஏற்கனவே பவனின் அம்மா, அப்பா, தங்கை, தனது அண்ணன், அஸ்வின், தினகர், பரணி எல்லோருமே வந்து இருந்தனர்..

“டேய் ஹாப்பி பர்த்டே..” என்று கட்டிப் பிடித்து நண்பர்கள்  வாழ்த்து சொல்ல, அத்தனையையும் இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டான்.. அவனது அம்மா, அப்பா காலில் விழுந்து வணங்க “நல்லா  இருப்பா..” என்று வாழ்த்தினர்.

கனிகாவும், தீபனும் அவனுக்கு ஒரு பார்சலை பரிசளித்தனர்..
“மாப்பிள்ளை இதெல்லாம் எதுக்கு..?”

“இருக்கட்டும்.. நியாயமா பார்த்தா வீட்டு மாப்பிள்ளை நீங்க.. நான் நிறைய செய்யணும்… இப்ப அந்த அளவு வசதி இல்லை.. வசதி வந்ததும் செய்யறேன்..”

“பணத்தை  வைத்து அன்பை அளக்காதீங்க.. இதுவே ரொம்ப சந்தோசம்.. நீங்க கொடுக்கிற கிப்ட்டோட மதிப்பு நீங்க என் மேல வச்சு இருக்கிற அன்புல  இருக்கு.. ஒ.கே.. வாங்க உள்ள போவோம்…” என்று உள்ளே நுழைந்தனர்.

எல்லோரும் அவளை பார்த்தனர்.. ஆனால் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அதுவே அவளுக்கு உறுத்தலாய் இருந்தது.. ஒரு புன்சிரிப்பு மட்டுமே.. அவன் அம்மா, அப்பாவிடம் தனியாக ஆசி வாங்கும் போது கூட அவளை வற்புறுத்தவில்லை..

ஆனால் தில்லையும், காதம்பரியும், கனிகாவும், தீபனும் ஜோடியாக அவர்கள் காலில் விழுந்து வணங்கினர்.. இவளுக்கு என்னவோ ஆளே இல்லாத தனியான தீவு ஒன்றில் இருப்பது போல இருந்தது.. 

உள்ளே நிறைய குழந்தைகள் உணவுக்காக  அமர்ந்து இருந்தனர்.. இவர்கள் சென்றதும் பவனுக்கு எல்லோரும் பிறந்த நாள் வாழ்த்து பாட, நன்றி சொல்லி எல்லா குழந்தைகளுக்கும் இனிப்புடன் உணவை தன் கையாலேயே பரிமாறினான்.

சந்தோசமாக சாப்பிட்ட குழந்தைகளிடம் இன்னும் என்ன வேண்டும் என்று கேட்டு, கேட்டு எல்லோருமே பரிமாற அவர்கள் சந்தோசமாய் கேட்டு வாங்கி சாப்பிட்டனர்.

அங்கே  நிற்க பிடிக்காமல் நீலா மெதுவாக வெளியே வந்து அந்த ஆசிரமத்தை  சுற்றி பார்க்கலானாள்.. “என்னம்மா அந்த ஐயாவுக்கு பிறந்த நாளா..?” என்று கேட்ட ஒரு தோட்ட வேலை செய்யும் பெண்மணி.. 

இவள் பதில் கூறு முன்னே, ‘நல்ல தம்பிங்க.. வருசா வருஷம் எல்லார் பிறந்த நாளுக்கும் இங்க தான் வருவாங்க.. வந்து இந்தப் பிள்ளைங்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து, பிறந்த நாள் கொண்டாடுவாங்க.. அது போக வருஷம் இவ்வளவு ரூபான்னு ஆசிரமத்துக்கு நன்கொடை கொடுப்பாங்க.. ஆமாம் நீங்க அந்த தம்பிக்கு என்னு உறவு..?”

கழுத்தில் இருந்த தாலியை பார்த்து விட்டு, “அவுக பொண்டாட்டியாம்மா..? என்று அவளாகவே கேட்டாள்.

“ஆமாம்..” என்று தலையாட்டியதும்.. “மகராசி நீங்க ரெண்டு பேரும் பிள்ளை குட்டிகளோடு, ரொம்ப நாளைக்கு நீடுடி வாழணும்..” என்று வாழ்த்தி விட்டு தன் போக்கில் சென்றாள்.

எல்லா குழந்தைகளும் சாப்பிட்டு முடித்ததும் மற்றவர்கள் எல்லாரும் அந்தக் குழந்தைகளோடு பேசிக் கொண்டு இருக்க, பவன் நீலா எங்கே என்று தேடினான்.  அவளை ஆசிரமத்திற்குள் காணாமல் வெளியே தோட்டத்தில் வந்து பார்க்கவும், அவள் தனியாக ஒரு மரத்தடி பெஞ்சில் அமர்ந்து இருப்பது தெரிந்தது..

“ஹாய் பொண்டாட்டி என்ன இங்க வந்து உட்கார்ந்துட்டே..? யாரும் அருகில் இல்லாததால் வழக்கம் போல சீண்டினான்.

எப்போதும் எதாவது பதில் சொல்லும் நீலா, அவனை வெறித்து பார்க்கவும் “ஹேய்  என்னாச்சு..?’ என்று அவள் அருகில் சற்று இடைவெளி விட்டு உட்கார்ந்தான்.

“இல்லை.. பிடிக்கலை..”

“அது தெரிஞ்ச விஷயம் தானே..” என்று கூலாக சொல்ல.

“என்ன சொல்றீங்க..?”

“இல்லை உனக்கு என்னை பிடிக்காதுங்கிறது தெரிஞ்ச விஷயம் தானே.. அதனாலேதானே டைவர்ஸ் கேட்டு இருக்கே..”

“இல்லை அதை சொல்லலை.. இங்க என்னவோ நான் தனியா இருக்கிற பீல் இருக்கு.. இதுக்கு என்னை நீங்க இங்கே கூட்டிட்டே வந்திருக்க வேணாம்..”

“ஏய் என்ன நடந்தது..?”

“இன்னும் என்ன நடக்கணும். என்னை ஒரு வார்த்தை கூட யாரும் எதுவும் கேட்கலை.. என்னமோ என்னை விலக்கி வச்சிட்டு எல்லாரும் பண்ணற மாதிரி இருக்கு..”

“விலக்கி வைச்சது நீயா.. அவங்களா..?” ஒரு மாதிரி கேட்டவன்.. ”ஏய் தப்பா புரிஞ்சிட்டு இருக்கே, உன் தங்கைக்கும், என் தங்கைக்கும் உண்மை தெரியும். அதனால அவங்க உனக்கு பிடிக்காதுன்னு உன்னை சேர்த்துக்கலை..

எங்க அம்மா, அப்பாவுக்கு பயம்.. என் பிரண்ட்ஸ் கிட்ட நீ இன்னும் பேசவே ஆரம்பிக்கலை.. அதனால் எல்லோரும் உன்கிட்ட என்ன சொல்றதுன்னு தயங்கி இருப்பாங்க.. அவ்வளவுதான்..”

“ஒ.கே.. நீங்க சொல்லி இருக்கலாமே..!”

“என்னன்னு..?”

“உங்க பர்த்டே இன்னிக்குன்னு..” 

‘நானா இன்னைக்கு என் பர்த்டேன்னு யார் கிட்டேயும் சொல்லலை.. அவங்களா தெரிஞ்சிட்டு ஏற்பாடு பண்ணினாங்க.. என்னோட பிரண்ட்ஸ்க்கு நான் ஏற்பாடு பண்ணுவேன்.. அதனால் என்ன..? இங்க வந்ததுல என்ன பிரச்சினை..?” என்று அவன் தன்மையாகவே பேச, அவளுக்கு பதில் பேச முடியவில்லை..

“வா எல்லாரும்  கிளம்பியாச்சு.. போகலாம்..”

பதில் சொல்லாமல் கூட நடந்தவளின் மனம் புரிந்து அவனும் பேசாமல் வந்தான்.. அம்மாவும், அப்பாவும்   “வாங்க வீட்டுக்கு போகலாம்.. அங்கே சாப்பாடு எல்லாம் செஞ்சு ரெடியா இருக்கு..” என்று சொல்ல அவளுக்கு அங்கு செல்ல மனம் இல்லை..

தங்கையிடம் சொல்லலாம் என்றால் அவள் மாமியார், நாத்தனார் கூட மும்மரமாய் பேசிக்  கொண்டு இருக்க, இவளால் பேச முடியாமல் காரில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

“ஏய் நீங்க எல்லரும் போங்க.. எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு.. நான் போயிட்டு வரேன்..” என்று எல்லோரையும் அனுப்பிவிட்டு வந்து காரை எடுத்தான்.

“காது வரலை…”

“அவங்க எல்லோரும் அந்த வண்டில போயிட்டாங்க..”

நேராக வீடு வந்து சேரவும், ‘அங்க உங்க வீட்டுக்கு போகலியா..?”

“இல்ல.. வா..” என்று வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான்.

“உனக்கு இஷ்டம் இல்லாமல் அங்கு வர வேண்டாம்.. நான் போயிட்டு வந்திடறேன். கதவு தாள் போட்டுக்கோ.. நானும் போகாம இருந்திடுவேன்.. ஆனால் எனக்காக அம்மா செஞ்சு வச்சு இருக்காங்க.. நான் போகலைன்னா வருத்தப் படுவாங்க..”

அவன் சொல்வது நியாயம் என்று உணர்ந்து “ஒ.கே நா பத்திரமா இருக்கேன்.. நீங்க போயிட்டு வாங்க..” என்று கூறி கதவை அடைத்துக் கொண்டாள்.

அவன் சென்றதும் என்னவோ போல இருக்க, தன்னையறியாது வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு படுத்தவள் தூங்கியே போய் விட்டாள். 

அவளுக்கு விழிப்பு வந்த போது  மதியம் ஆகி இருந்தது.. பசி வேறு  வயிற்றைக் கிள்ளியது. ஏதாவது செய்து சாப்பிடலாம், என்று நினைத்தால், என்ன செய்வது என்று தெரியவில்லை.. சரி சிம்பிள் ஆக உப்புமா கிண்டலாம் என்று நினைத்து கூகுளை பார்த்து வெங்காயம் எல்லாம் வெட்டி, ரவை வறுத்து, தண்ணீர் கொதிக்க வைத்து கிளறினால், அடி பிடித்து தீந்து போயிற்று..

அடி பிடித்த  வாசம் வரவே, அதை சாப்பிட முடியாது என்று குப்பையில் போட்டு விட்டு வந்து ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு வந்து ஹாலில் உட்கார்ந்தாள் .

தன்னை நினைத்து அவளுக்கே அசிங்கமாக இருந்தது.. ஒரு நேரம் தன்னால் சமாளிக்க் முடியவில்லை.. பெண்தான் வீட்டு வேலை செய்ய வேண்டும், ஆண் செய்ய கூடாது என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல், தங்களது சூழ்நிலையை கையாண்ட பவனையும், தில்லையையும் நினைத்து பார்த்தாள்.

பவன் சொன்னது ஒவ்வொன்றும் அவளுக்கு நினவு வர அதில் உள்ள நிதர்சனத்தில், அதில் ஒரு விசயத்திற்கு கூட லாயக்கு இல்லாத தன்னிடத்தில், நியாயமாய் கோபப் படுவதற்கு பதில், தனக்கு புரிய வைக்க முயலும் அவனது முயற்சிகள் குறித்து அவன் மீது முதன் முறையாக மதிப்பு வந்தது.. 

   

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 7 சராசரி: 4.6]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

கண்டுக்கொள்வாயா

செந்தேன் பூவே…45