in , , ,

ஆம்பலரியைத் தீண்டிய செம்புனலே-13

செம்புனல்-13

வலி தாங்க முடியாமல் துலா அரண்டு புரண்டு கொண்டிருந்ததைக் கண்டு மற்ற மூவரும் பயந்து அவனை நெருங்க முயல, எங்கிருந்தோ காற்றில் பறந்து வந்த நாகமொன்று நொடியில் துலாவைச் சுற்றி ஏதோ ஒளி அலைகளை எழுப்பி அவனை அங்கிருந்து மறைய வைத்திட, வினோ, வருணி,  சக்தி மூவரும் அதிர்வோடு செய்வதறியாது நின்றிருக்க, எங்கிருந்தோ பறந்து வந்த நீர்த்துளிகள் அவர்கள் மூவரது தேகத்திலும்  பட்டு தெறித்த மறு நிமிடம் மூவரும் அங்கேயே மயங்கி மடங்கிச் சரிந்தனர். துலா அங்கிருந்து மறைந்த மறுகணம் இங்கு நரயட்சினியின் பிடியில், அவள் ஆட்டுவிக்கும் பொம்மை போல் மாறி இருந்த சுகேந்தினி சித்தம் தெளிந்து விழித்தெழுந்து நல்லபடியாக அமர்ந்திட்ட போதும் அவளால் எதையுமே யூகித்து உணர முடியவில்லை. அவள் எழுந்தமர்ந்த வேளையில் அங்கே இருந்த மந்திர பொருட்களும் அவள் கையிலிருந்த உருவ பொம்மையும் காணாமல் போனது. 

துலாவை அங்கிருந்து மீட்டுக்கொண்டு வந்து அவன் அறையில் படுக்க வைத்த அந்த நாகமானது அவனையே சுற்றி சுற்றி வந்தது. அவனை மூன்று முறை சுற்றி வந்ததிற்கு பிறகு பவ்யமாக அவன் காலடியில் படுத்துக்கொள்ள,  கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தி ஒன்று அவன் அருகில் தோன்றி அவன் நெற்றி பொட்டில் எதையோ வைத்து  பிரயோகிக்க அவன் பின்னந்தலையில் ஏற்பட்டிருந்த காயம் இருந்த சுவடே இல்லாமல் மறைந்து போய் விட,  அவன் அங்கங்களில் சிறிது சிறிதாக ஏற்பட்டிருந்த காயங்களும்  மறைந்து அவன் உடல் முழு மஞ்சள் நிறமாக மாறி பின்பு இயல்புக்கு மீண்டது.
அவன் உடல் இயல்புக்கு மீண்ட மறு கணம் அவன் காலடியில் படுத்திருக்கும் சர்ப்பத்தை எச்சரிக்கும் பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து மறைந்தது அந்த மாயசக்தி. பவ்யமாக அச்சக்தியை வணங்கி எழுந்த நாகமானது மீண்டும் துலாவின் விரல்களில் மோதிரம் மாறிப் போனது.

அவன் விரலில் மோதிரமாக மாறியிருந்த சர்ப்பமானது மீண்டும் உயிர் பெற்று எழுந்து துலாவின் உடலைத் தீண்டி விட்டு முன்னோக்கிச் செல்ல, அவனது தேகமுமே காற்றில் மிதந்தவாறு சர்ப்பத்தை பின்பற்றி சென்றது அவனது ஒத்துழைப்பின்றி. 

சமையலறை வாயிலிலுக்கு  வந்து அந்தரத்தில் மிதந்த நிலையில் துலாவைப் பார்த்து தன் நாவினை நீட்ட, முதலில் எப்படி துலா நின்றிருந்தானோ?  அதே போல் அசையாது நின்றது அவனது தேகம்.  மற்றவர்களையும் முன்பிருந்தது போல் மாற்றி அசையாது  நிற்க வைத்துவிட்டு தன் நாவினால் அனைவரது சிரசிலும் தீண்டி விட்டு மீண்டும் துலாவின் விரலில் மோதிரமாக மாறிவிட, அதற்கு அடுத்த நிமிடம் அவர்கள் அனைவரும் சுய உணர்வு பெற்று திடுக்கிட்டு விழித்தெழுந்தனர்.
அவர்களுக்கு சிறிது நேரத்துக்கு முன்பு நடந்த அனைத்தும் மறந்து,  எதுவுமே  சிந்தனையில் இல்லை.  முன்பு போலவே மறுபடியும் அனைவரும் பேசி சிரித்தவாறு உணவருந்தி விட்டு அங்கிருந்து அகன்று இருந்தனர். நரயட்சினியின்  கட்டுப்பாட்டில் இருந்த சுகேந்தினியும் மயக்கத்தைத் தழுவி பிறகு மீண்டிருந்தாள்.

தன் திட்டம் தோல்வி அடைந்ததில் உச்சகட்ட கோபமடைந்த நரயட்சினி வேகவேகமாக பூஜையிலிருந்து எழுந்தவள் இருட்டாக இருந்த பகுதிக்குள் நுழைந்து தன் கோபாவேசத்தைத் தன்னைச் சுற்றி ஒளிப்பிழம்பாக மாற்றியவள் அங்கே துர்மந்திர சக்திகளின் மூலமும், துர்தேவதைகளின் ஆசிபெற்ற  மந்திரத்தாலும் சிறை வைக்கப்பட்டிருந்த சித்த மந்திர யோகியை விழிகளால் எரிப்பது போல் பார்த்தாள்.

“என்ன உனது திட்டம் அனைத்தும் தோல்வியடைந்து விட்டது போல் தெரிகிறது அப்படியா!”-  என்று எக்காளச் சிரிப்போடு அவர் விளித்திட.

அவரை இன்னுமே ஆத்திரத்தோடு முறைத்தவாறு அவரருகில் நெருங்கியவள், “அவர்களுக்கு உதவி செய்வதால் தானே இப்போது என்னிடம் அகப்பட்டு, சிறைபட்டு இருக்கிறாய்! இப்போதும் உனது ஆணவம் அடங்கவில்லையா!  எனது திட்டம் தோல்வி அடைந்து விட்டதன்று பார்க்கிறாயா?  இதெல்லாம் எனக்கு சர்வ சாதாரணம்.  குறிப்பிட்ட நாளுக்குள் அனைத்தும் என் திட்டப்படி நிறைவேறும்,  அந்த சக்தி எனது கரங்களுக்கு கண்டிப்பாக வந்து சேரும்”

“நீ நினைப்பது அனைத்தும் பகல் கனவாய் மட்டுமே போகும்.  என்னப்பன் இருக்கும் வரை இது எதுவும் நிகழாது.  அவ்வளவு எளிதில் அதை நீ கைப்பற்றி விடலாம் என்று எண்ணாதே! வல்லவனுக்கு வல்லவன் இந்த உலகத்தில் உண்டு அதை என்றும் மறவாதே, நரயட்சினி”-  என்றவாறு அவர் விழிகளை மூடி தியானத்தில் அமர்ந்து விட.‌ அவரைக் கொல்லவும் முடியாது என்ற ஆத்திரத்தில் மீண்டும் பிரம்ம யட்சினிதேவியைத் தேடிச் சென்றாள் நரயட்சினி.   அடுத்த திட்டத்தை வகுப்பதற்கும்,  அதற்கு தேவையான சக்திகளை தனக்கு கொடுக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைப்பதற்கும், கூடவே 1000 பெண்களை அடைவதற்கு இன்னும் சொற்ப எண்ணிக்கையே உள்ளதால் அதற்கேற்ற பெண்களை விரைவில் தன்வசம் சேர்ப்பித்திட வேண்டும் என்று சொல்வதற்காகவும். 

சற்று முன்பு துலாவிற்கும், மற்றவர்களுக்கும் நடந்த நிகழ்வுகளும்,  அதற்கு அவர்கள் பதறிய பதற்றங்களும்,  கதறிய கதறல்களும் என  அனைத்தும் சிந்தையில் இருந்து மறைந்து போயிருந்தன.‌ அனைத்தும் தெய்வத்தின் சங்கல்பமோ!  என்னவோ!  யார் கண்டார்.‌ அதன் பிறகு உணவு உண்டுவிட்டு துலா, சக்தி இருவரும் வெளியில் கிளம்பி விட.  வருணி, வினோ  இருவரும் தோட்டத்தை நோக்கி சென்றனர்.  அவர்களுடன் சத்தமில்லாமல் உணவு கொண்டு கொண்டிருந்த சுகேந்தினியோ கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தாள். உணவருந்தையில் அவ்வபோது  துலாவின் பார்வை வருணியையே தீண்டிச் செல்வதைக் கண்டு அவளுக்கு கோபமும், ஆத்திரமும் ஒரு சேர எழுந்தது.  அதே நேரம் ‘தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியவன் அவன் தானே! அவனோ தன்னைக் கண்டு கொள்ளாது அவளையே விழிகளால் விழுங்குகிறானே’ என்று எண்ணி   பொறாமையும் அவளுள் எழுந்தது.  பாவம் பேதை அவளுமே தான் வேறொரு உடலில் இருக்கிறோம் என்பதை மறந்து போயிருந்தாள். வேறொரு உடலில் இருக்கையில் அவளுமே அவனுக்கு அந்நியம் தானே!

தோட்டத்திற்குள் பாதுகாப்பாக வருணியை  அழைத்துக் கொண்டு சென்ற வினோ  அவ்வப்போது அவள் முகத்தை பார்த்தவாறே வர, வருணிக்கு, ‘வினோ  ஏதோ தன்னிடம் பேச நினைக்கிறாள்’  என்ற எண்ணம் எழ ஒரு இடத்தில் வினோவை அமர வைத்து தானும் அவளருகே  அமர்ந்தவள், “சொல்லு வினோ ஏதோ என்கிட்ட கேட்கணும்னு நினைக்கிற,  ஆனா தயங்குற?”- என்று கேட்க. 

“இல்ல மித்ரா நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்.  இரண்டு நாளைக்கு முன்னாடி அந்த முடிவுல உறுதியாய் இருந்தேன்,  நேத்துல இருந்து அந்த முடிவு தப்போன்னு தோணுச்சு,  ஆனா இப்ப அந்த முடிவுல தெளிவாக இருக்கிறேன்.‌ அதை சொன்னா நீ எப்படி ரியாக்ட் பண்ணுவியோன்னே கொஞ்சம் பயமா இருக்குதுடி”

“அப்படியா.! ம்ம்  அப்படி என்ன முடிவெடுத்து இருக்க சொல்லு கேட்போம்”

“இல்ல மித்ரா நானும் வைஷ்ணவியும் ஹாஸ்டல்ல போய் தங்கிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்.  எத்தனை நாளைக்கு தான் அங்கயே இருக்க முடியும், என்னதான் இருந்தாலும் வயசு பசங்க இருக்க இடத்துல  இருக்கறது நல்லது கிடையாது இல்லையா?”

“ஏன் வினோ இப்படி நினைக்கிற? யாராவது ஏதாவது சொன்னாங்களா?”

“யாராவது ஏதாவது சொல்லிடுவாங்களோன்னு இதை நான் சொல்லல மித்ரா அப்படி யாரும் பேசுறதுக்கு நாங்களா ஒரு வாய்ப்பு கொடுக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன்”

“நீ சொல்றது தப்பு கிடையாது தான் வினோ.  நானே எங்க வீட்டுக்கு போகலாம்னு முடிவு பண்ணிட்டேன்டி”

“நீயுமா? ஏன் என்னாச்சு மித்ரா  உனக்கு அங்க இருக்க பிடிக்கலையா?”

“என்னது அங்க இருக்க எனக்கு பிடிக்கலையா? என்னோட மனசு முழுதும் நெறஞ்சு இருக்க, என்னோட சுகி இருக்கற இடத்துல எனக்கு இருக்க பிடிக்காம போகுமா வினோ‌. ஆனா இன்னும் கொஞ்ச நாள் தான் என்னோட அப்பாவுக்கும்,  அப்புறம் உன்னோட அப்பா அம்மாவையும் சேர்த்து மூணு பேரோட காரியங்களும் முடிச்சதுக்கப்புறம், சுகியோட அம்மா என்கிட்ட ஒரு வேலையை ஒப்படைச்சிருக்காங்க அதையும் முடிச்சதுக்கு அப்புறம் கண்டிப்பா நான் அங்க இருக்க மாட்டேன்,  இங்க அப்பாவோட வீட்டுக்கே வந்துடுவேன் வினோ”

“அப்படி என்ன முக்கியமான வேலையை  உன்கிட்ட ஒப்படைச்சிருக்காங்க.  சொல்லனும்னு தோனுனா சொல்லலாம்”- என்று வினா கேட்டதும் ஆழ்ந்த பெருமுச்சொன்றை வெளியிட்டவள் பார்வையை அங்கிருந்த செடிகளின் மீது படர விட்டவாறு, “அவருக்கு கல்யாணம் பண்றதுக்கு ஒரு பொண்ணு பாத்து இருக்காங்களாம். அந்த பொண்ண பாக்குறதுக்கு, அவருக்கே தெரியாம அவரை சம்மதிக்க வைத்து கூட்டிட்டு வரணுமாம்.  பெங்களூர்ல ஒரு ரெஸ்டாரண்டுல  மீட் ஏற்பாடு பண்ணியிருக்காங்க,  விஷியத்தை அவருக்கிட்ட சொல்லாம அவரை நான் அங்க அழைச்சிட்டு போகணுமாம்,  அதுதான் எனக்கு கொடுக்கப்பட்ட வேலை”

“நீ என்ன லூசாடி.  அவரை விரும்பிட்டு உன்னால எப்படிடி இப்படி எல்லாம் பேச முடியுது. உன் இடத்துல  நான் இருந்திருந்தா சத்தியமா உன் அளவுக்கு தைரியமா இருந்திருக்க முடியாது.  மனசுல காதலை வச்சுக்கிட்டு அதை  கண்ணால கூட காட்டாம, அவங்க முன்னாடி சத்தியமா என்னால நடமாட முடியாதுடி.   அப்புறம் எனக்கென்னமோ துலா சாரும் உன்னை விரும்புறாரோன்னு தோணுது” என்று நேற்றிரவு அவர்களது இணக்கத்தினைக் கண்டதை மனதில் வைத்துக் கொண்டு கேட்டாள். 

“அவரும் என்னை விரும்புறாரோ? இல்லையோ? இது சரிவராது வினோ. நான் ஒன்னும் அவ்வளவு பலவீனமானவ கிடையாது வினோ. அப்பா வளர்க்கும்போது சொல்லிக் கொடுத்துதான் வளர்த்தாரு. ஏமாற்றங்கள் வாழ்க்கைல சகஜம்,‌ ஏமாற்றங்களை சகஜமா ஏத்துக்கத் தான் வேணும்.  நெனச்சது கிடைக்கலைங்குறதுக்காக  நாம சாகனும்னோ? வருத்தப்பட்டு மீதி வாழ்க்கைய நரகமாக்கிக்கனும்னோ?  அவசியம் கிடையாது வினோ. இதோட இந்த  பேச்சுவார்த்தையை மறந்துடனும் இதைப் பத்தி இனி பேசாத வா வேலையைப் பார்ப்போம்”

“என்னமோ போடி எனக்கு குழப்பமாவே இருக்கு…. ஆமா இந்த தனு போன் ஏதும் பண்ணுனாளா? வந்ததுமே தோழிங்க டூர் கூப்டாங்கன்னு கெளம்பி போயிட்டா.”

“ம்ம்.. அப்பப்ப அவங்க அம்மாவுக்கு கூப்டு பேசுவாளாம்.. நாம வேணும்னா நைட் பேசலாம்” 

“ம்ம்.. பேசலாம். இந்த கைய வச்சுக்கிட்டு   நீ எங்க வேலை பார்க்க  வர்ற நான் உள்ளே போய் பூ பறிக்க ஆரம்பிக்கிறேன்,  நீ சும்மா எல்லாரையும் ஒரு ரவுண்ட் பாத்திட்டு கையில எங்கயும் இடுச்சுக்காம அந்த மரவீட்டுல போய் உட்காரு,  நான் எல்லாத்தையும் முடிச்சிட்டு வரேன்”-  என்று சொன்னவள் அங்கிருந்த மர வீட்டிலிருந்து ஒரு துணியை எடுத்து தன் முன் பக்கத்தில் கழுத்தைச் சுற்றிலும் இடுப்பைச் சுற்றிலும் கட்டிக்கொண்டு தோட்டத்திற்குள் நுழைந்து அங்கிருந்த ஆட்களோடு பேசியவாறு வேலையைத் தொடர்ந்தாள்.  வருணியம் அங்கிருந்த அனைவரிடமும் பேச்சுக் கொடுத்தவாறு வீட்டின் திட்டில் அமர்ந்துக் கொண்டாள்.

சுகேந்தினி அவர்கள் வருவதற்குள் ஏதாவது செய்ய வேண்டுமென்று வீட்டில் ஏதேதோ வேலைகளை செய்து முடித்துவிட்டு, அப்பாவி போல் வீட்டு வேலைகளையும் செய்து முடித்துவிட்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

இங்கிருந்து கிளம்பிய துலா, சக்தி இருவரும் நேராக டிடெக்டிவ்வை சென்று சந்தித்து ஏதாவது தகவல் கிடைத்ததா என்று கேட்டு தெரிந்துகொண்டு விட்டு, வீட்டிற்கு வந்தவர்கள் மாலை மங்கும் நேரத்தில் தோட்டத்திற்கு சென்றனர். அவர்கள் உள்ளே நுழையும்போதே அந்த மர வீட்டின் திட்டில் அமர்ந்திருந்த வருணி, வினோ இருவரும்  அவர்களை சுற்றி அமர்ந்திருந்த மற்ற அனைவரோடும் சிரித்து பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட இருவரும் ஒரு நிமிடம் தத்தமது உள்ளம் கவர்ந்த காரிகைகளின் பிம்பத்தை கண்களில் நிரப்பிக் கொண்டு அவர்களை நோக்கி சென்றனர்.

 தொலைவிலேயே அவர்களைக் கண்ட வினோ, “அவங்க இங்க வர்றதுக்கு முன்னாடி நாமளே அங்கப்போறது நல்லது”- என்று சொல்ல. வருணியும் சின்ன தலையசைப்போடு மற்றவர்களைப் பார்த்து,‌“இன்னைக்கு இவ்வளவுதான் வேலை. நாளைக்கு காலையில முடிஞ்சவரைக்கும் மெதுவாவே நீங்க வேலைக்கு வரலாம். இன்னும் ரெண்டு நாளுக்கு அப்புறம் தான் வொர்க் அதிகமா இருக்கும் அதனால அப்ப நேரமே வந்து வேலை பார்த்த போதும்.‌ காலையில நான் வர்றதுக்கு முன்னாடியே மேனேஜர் பணம் தருவார் வாங்கிக்கங்க, இப்ப எல்லாரும் பார்த்து வீட்டுக்கு போங்க”- என்று சொல்லி விட்டு வினோவோடு  வரப்பில் ஏறி நடந்தாள். அவர்கள் பாதி காட்டை கடந்து இருந்த நிலையில் தான் அண்ணன் தம்பி இருவரும், இவர்களை வந்தடைந்தனர்.

வருணியின் கையில் அடிபடவில்லை என்பதை ஆராய்ந்து அறிந்து கொண்டவன், “கொஞ்ச நேரமாவது ரெஸ்ட் எடுக்கலாம்ல வருணி உடனே வந்து வேலை பார்க்கனும்னு என்ன அவசியம் வந்துச்சு.‌ இங்க வந்து  ஏதாவது அடிபட்டிருந்தா என்ன பண்றது”

“என்ன சார் இப்படி சொல்றீங்க!  வேலைக்கு போகாம எப்படி சார் சம்பளம் வரும்,  அப்புறம் எப்படி சாப்பிடறது சொல்லுங்க பார்க்கலாம் எனக்கு தான் சொந்த பந்தம் யாருமே இல்லையே”-  என்று சொல்லிவிட்டு அவள் முன்னே நடக்க. அவள் சொன்ன வார்த்தைகள் அவனைத்தான் கொல்லாமல் கொன்றது. செல்பவளின் முதுகினை வெறித்த பார்வையோடு அவன் பின்தொடர்ந்து செல்ல. 

 சக்தியோ  வினோ தன்னிடம் ஏதாவது கேட்பாள் என்று அவள் முகத்தையே பார்த்திருந்தான்.  அவளோ அவனைத் தவிர்த்து விட்டு வேகமாக மித்ராவுடன் இணைந்து கொண்டாள். ‘அடிப்பாவி என்னமோ கொலைக்காரனைப் பார்த்த மாதிரி ஓடுறா? உன் மூஞ்சியிலையே முழிக்க்கூடாதுன்னு தான்டி ஊருக்கு போக பிளான் பண்ணுனேன் என் அண்ணன் தான் அனுப்ப முடியாதுனு சொல்லி இங்கையே தங்க வெச்சுது. இப்ப என்னடான்னா உன்னை பார்க்காம, பேசாம இருக்க முடியலடி நரக வேதனையா இருக்கு’ என்று புலம்பியவாறு தன் அண்ணனோடு சென்றான். இரு பெண்களாலும் தாங்கள் கஷ்டப்படுவதை உணர்ந்தே இருந்தாலும் ஆண்கள் இருவரும் எதுவும் செய்ய முடியாத நிலையில் அவர்களை மௌனமாகப் பின் தொடர்ந்தனர்.

அவர்கள் வீட்டிற்குள் நுழையும்போது கற்பகாம்பாள் ஹாலில் அமர்ந்திருக்க, சுகேந்தினியோ அவரது அருகில் அமர்ந்து சிரிக்க சிரிக்கப் பேசிக் கொண்டிருந்தாள். அனைவரும் வருவதைக் கண்ட சுகேந்தினியின் பார்வை துலாவின் மீது மட்டும்  நொடிக்கு அதிகமாகப் பதிந்து  பின்பு வேறு புறம் திரும்பியது.  கற்பகாம்பாளிடம் பேசி விட்டு வருணி, வினோ இருவரும் மேலே சென்றிட. மகன்கள் இருவரும் அவரது அருகிலேயே பேசியபடி அமர்ந்து விட்டனர்.  மூவருக்கும்  குடிப்பதற்கு டீ கொண்டு வந்த சுகேந்தினி துலாவிடம்,
“சார் நானும் வீட்ல சும்மாதான் இருக்கேன் நானும் வேலைக்கு வரட்டுமா?”- என்று கேட்க.

 அவனோ அவள் முகத்தை கூட பார்க்காது டீயைக் குடித்துக்கொண்டே  தன் தம்பியைப் பார்த்தவன்‌ பேச வாய் திறக்கும் முன்பே,

“அதெல்லாம் வரலாம் வரலாம்.  ஆனா அதுக்கு முன்னாடி நீங்க யாரு?  எந்த ஊருங்குற  டீடைலை சொன்னா நல்லா இருக்கும்”-  என்று சக்தி கேட்க.  அவளோ சக்தியை முறைத்துவிட்டு, “எனக்கு தான் யாரும் இல்லையே!  அதுக்கப்புறம் நான் எந்த ஊருன்னு தெரிஞ்சு என்னாகப் போகுது சார். அங்க போனாலுமே எனக்கு யாரு இருக்காங்க சார்”-  என்று கூறி போலிக் கண்ணீர்த் துளிகளைச் சிதற விட. அவளது வார்த்தைகளில் கற்பகாம்பாள் கரைந்து தான் விட்டார். வீட்டிற்கு வந்ததும் கற்பகாம்பாளின் காலை பிடித்து விட்டு, அவருக்கு தேவையானதை   செய்துக் கொடுத்து இவ்வளவு நேரம் கலகலவென்று பேசி அவரது மனதில் ஒரு இடத்தினைப் பிடித்திருந்தாள் சுகேந்தினி

 இப்போது அவள் அழுவதைத்  தாங்கிக் கொள்ள முடியாமல் தன் மகனைக் கடிந்தவர், “சின்ன பொண்ணு கிட்ட இவ்வளவு கோவமா தான்  பேசுவியா சக்தி.  உனக்கு என்ன வேலை செய்யணும் தோணுதோ செய்யும்மா, அதே மாதிரி நீ எங்கயும் போக வேண்டாம் இங்கேயே இருக்கலாம் சரியா”- என்று சொல்ல. தன் திட்டம் ஜெயித்துவிட்ட மிதப்பில் இதழ்கடையோரம் மர்மமாய் புன்னகைத்துக் கொண்ட சுகேந்தினி வருணி கீழிறங்கி வருவதைக் கண்டு கிச்சனுக்குள் நுழைந்துக் கொண்டாள்.

அதன்பிறகான நாட்கள் வெகு வேகமாக நகர்ந்தது.‌ அவ்வப்போது சுகேந்தினியை தன்வசப்படுத்திய நரயட்சினி துலாவை சிறைபிடிக்க எவ்வளவு முயன்றும் அவளால் முடியவில்லை. சரி அவனைத்தான் பிடிக்க முடியவில்லை, அவன் மனதில் இடம் பிடித்திருக்கும் பெண்ணையாவது சிறை பிடிக்கலாம் என்று முயல அதுவும் அவளால் இயலாது போக.‌ தனது ஒட்டுமொத்த கோபத்தையும் சிறை வைக்கப்பட்டிருந்த சித்தயோகியிடம் காட்ட முயல அதுவும் அவளால் முடியாது போனது. ஏனெனில் அவளது தீய கட்டினைத் தாண்டி அவரால் அங்கிருந்து தப்பி வெளி வர முடியவில்லை. அதே போல தன்னைச் சுற்றி அவர் ஏற்படுத்திய மந்திரக் கட்டினை  தாண்டி அவளாலும் அவரைத் தீண்டிட முடியவில்லை.

அதன் பிறகு அவர்களுக்கு ஒவ்வொரு தடங்கலாக ஏற்படுத்தினாள். ஆனால் அவை அனைத்தையும் துலாவின் விரலிலிருந்த மோதிர வடிவிலான சர்ப்பம் தவிடுபொடியாக்கியது  இதற்கு என்ன வழி என்று அவளது தேவியை வணங்கி கேட்கையில்,
‘நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும்’- என்று அவளுக்கு பிரம்ம யட்சினி தேவி தெரிவிக்க,  அதுவரை தியானத்தில் அமர்வதே தனது பலத்தை அதிகரிக்கும் என தியானத்தில் மூழ்கிப்போனாள் ஆனால் எப்போதும் அங்கு நடக்கும் நிகழ்வுகளைப் பற்றிய தகவலைத் தனக்குத் தெரிவிக்கும்படி அவ்வப்போது பிணந்தின்னிகளைப்   அவ்வீட்டை சுற்றி உலா வர விட்டாள். அதுவும் நடுநிசி பொழுதுகளில் எப்போதும் போல் தீய சக்திகளை அதிகரிப்பதற்கான அனைத்து வேலைகளையும், ஜாமகாலப் பூஜைகளையும் குரோதாத்மாக்கள் மற்றும் அகால மரணமடைந்த ஆத்மாக்களைக் கொண்டு செய்து கொண்டிருந்தாள்..

நாட்கள் அதன் போக்கில் வெகு வேகமாக நகர்ந்தது.  வினோவோ சக்தி என்று ஒருவன் இருப்பதை மறந்தது போல் அவனிடம் பேசுவதை அறவே தவிர்த்தாள். வருணியோ மெது மெதுவாக துலாவிடம் பேச்சை குறைத்துக் கொண்டாள்.‌ இதில் அண்ணன், தம்பி இருவரும் வெகுவாக காயப்பட்டு போனார்கள். பெண்கள் இருவரும் விலக விலக சுகேந்தினி இன்னும் அதிகமாக கற்பகாம்பாளுடன் நெருங்கி இருந்தாள். அடுத்து  முதலில் வருணியின் தந்தைக்கு காரியம் செய்த முடித்ததற்கு பிறகு அடுத்து வந்த நாட்களில் வினோவின் பெற்றோருக்கும் ஈமக்கிரியை சடங்குகள் அனைத்தும் செய்து முடித்தனர்.

எப்போதடா  தன்னவளிடம்  பேசுவதற்கு தனிமை கிட்டும்  என்று துலா நினைத்திருக்க,  அதையே தான் சக்தியும் நினைத்திருந்தான். ஆனால் பெண்கள் இருவரும் சொல்லி வைத்தார் போல் அவர்கள் இருவரிடமும் தனிமையில் மாட்டக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்தனர்.  ‌ துலாவின் பொறுமையும் நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே வந்தது.

அவ்வப்போது நடுச்சாமத்தில் உறங்கும் துலாவைப் பார்த்தவாறு நின்றிருப்பாள் சுகேந்தினி.  உடல்தான் வேறே தவிர, உள்ளிருக்கும் ஆன்மா அவனை மணக்க விரும்பின பெண்ணவளுடையது  தானே!  அவன் மேல் இருந்த கோபம் மெல்ல மெல்ல மட்டுப்பட்டு அவன்பால் சாய்ந்து கொண்டிருந்தாள் சுகேந்தினி.‌ அந்த உடலால் முடியாத நிகழ்வை இந்த உடலை வைத்து முடித்துக் கொள்ள வேண்டும் என்று அவள் மனம் சிந்திக்கத் துவங்க, இதை அறிந்தாலும்  கண்டுக் கொள்ளாமல் இருந்தாள் நரயட்சினி. 

இதோ ஒரு மாதகாலம் நொடிப்பொழுதில் கடந்திருக்க,  அன்று காலையில் எழும்போதே ஒரு வித படபடப்போடு எழுந்திருந்தார் கற்பகாம்பாள்.  ஏனெனில்  இந்த நாள் தான் துலாவுக்காக  அவர் பார்த்திருந்த பெண்ணையும், துலாவையும் சந்திக்க வைப்பதற்கு அவர் தேர்ந்தெடுத்திருந்த நாள்.  காலையில் தனியாக சமைத்துக் கொண்டிருந்த வருணியை நெருங்கியவர், “இன்னைக்கு தான் அந்த நாள் மித்ரா மறக்காம என் பையன கூட்டிட்டு வந்துடுமா”-  என்று சொல்ல. 

வருணிக்கு உள்ளம் ஊமையாய் அழுதது. ஒரு பக்கம் இதுக்கு துலா சம்மதிப்பாரா? என்பதை நினைத்து அவளுக்கு பயமாகவும் இருந்தது. இருந்தும் அவரிடம் இதுபற்றி பேச முடியாது என்பதால்,
“ம்ம்ம்.. கண்டிப்பாக அவரைக் கூட்டிட்டு வர்றேன்ம்மா”- என்று ஏற்கனவே வாக்கு கொடுத்து விட்டாளே வேறு என்ன செய்வாள் அவளும் சரி என்று தலையசைத்து வைத்தாள்.

அதேநேரம் புதுவிதமான வாசனைத் திரவியம் தயாரிப்பதற்கான ஆரம்பகட்ட பரிசோதனைகள் நிகழ்ந்து கொண்டிருக்க,  இங்கிருந்து பூக்களும் சென்றாகி விட்டது. அது ஆய்வுப் பணியில் இருப்பதால் அது சம்பந்தமாக அங்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தான் துலா.‌ இன்னும் இரு தினங்களில் செல்ல வேண்டும் என்பதால், இப்போது சென்றால் திரும்பி வர குறைந்தது ஒரு மாதமாவது ஆகும் அதனால் இன்றே தன்னவளிடம்  பேசி அவளது இறுதி முடிவை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவன் அவளைத் தேடி வந்தான்.

சமைத்து முடித்து விட்டு தோட்டத்திற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள் வருணி. சோபாவில் அமர்ந்து  ஏதோ பைல் ஒன்றினை சக்தி புரட்டிக் கொண்டிருக்க, சுகேந்தினி கற்பகாம்பாளோடு இருக்க,  வினோ கீழே அனைவருக்கும் உணவினை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள், வைஷ்ணவி பள்ளிக்கு சென்று இருந்தாள். ஆக  யாரும் தன்னை கவனிக்கவில்லை என்றதும் வருணியின் அறைக்குச் சென்ற துலா அவளை நெருங்கியவன்,

“ஈவினிங் ரெடியா  இரு வருணிம்மா வெளியே போலாம்.  உங்கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்”-  என்று சொல்ல.

 அவளும் அவனிடம் என்னவென்று கேட்பது? என்ன சொல்லி அவனை அங்கே அழைத்துச் செல்வது  என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள். அவனே அதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததும் முகம் மலர்ந்தவள்,
“கண்டிப்பா போலாம் சார்”- என்று சொல்லிவிட்டு சட்டென்று அந்த அறையிலிருந்து வெளியேறி விட்டாள்.

அவனும் தன்னறைக்கு வந்தவன் வீடியோ காலில் தனது தொழில் சம்பந்தமாக பேசியவாறு  அமர்ந்திருந்தவன் யாரோ கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழையும் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தான். காஃபி கோப்பையோடு சுகேந்தினி தான் நின்றிருந்தாள்.  ஏனோ சில நாட்களாக அவளது பார்வை வித்தியாசமாக  தன்மீது படருவதை அவனும் உணர்ந்திருந்தான் தான்‌  ஆனால் அவளை  கோபமாக, லேசாகக் கடிந்து பேசினால் கூட தன் தாயின் முகம் வாடுவதைக் கண்டதால் தனக்குள்ளேயே அவளைத் திட்டி  புகைந்துக் கொள்ள  மட்டும்தான் அவனால் முடிந்தது. 

காஃபியை  வைத்து விட்டு செல்லுமாறு சைகை செய்தவன் மீண்டும் தன் கவனத்தை லேப்டாப்பின் புறம் திருப்பினான்.  ஆனால் அவளோ அவனையே விழியகலாதுப் பார்த்திருந்தாள்.   அதன்பிறகு அவள் நிற்கிறாள் என்பதை கூட கவனிக்காமல் துலா தன் வேலையில்  கவனமாகி இருக்க, அவளோ மெல்ல மெல்ல அவனை நெருங்கி அவன் தோளில் கை வைக்க போகும் நேரத்தில் சட்டென்று அவனது உள்ளுணர்வு  ஏதையோ அறிவுறுத்த சடாரென்று அவள் புறம் திரும்பினான்.
 அவளை அவ்வளவு நெருக்கத்தில் கண்டவனுக்கு சற்று அதிகமாகவே கோபம் வர,
“மொதல்ல ரூமை விட்டு வெளியே போ”-  என்று வேகமாக கத்தினான்.  அவனது கத்தலில் அதிர்ந்தவள் எதுவும் பேசாது அறையை விட்டு வெளியே சென்றுவிட்டாள். ஆனால்,‌‘இதற்கு நீ பதில் சொல்ல வேண்டும்’  என்ற எண்ணம் அவளுள்  வெறியாக தோன்றியது.

 கிழே சென்றவள் எப்போதும் போல் கற்பகாம்பாளுடன் ஐக்கியமாகி விட்டாள். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து உறங்கியவன் எழும் போது மணி நான்கு.  குளித்து முடித்து தயாராகிக் கீழே வந்தவன் வெளியே செல்வதாக தாயிடம் மட்டும் சொல்லிவிட்டு கிளம்பினான்.  அவள் அருகில் அமர்ந்திருந்த சுகேந்தினியை மறந்தும் கூட  அவன் பார்வை தீண்டவில்லை. சக்திக்கு படி ஏறுவதில் ஏதேனும் சிரமம் ஏற்படலாம் என்ற எண்ணத்தில் தன் தாயின் படுக்கை அறையில் இருக்கும் மற்றொரு கட்டிலிலேயே அவனை தூங்க சொல்லிவிட்டான் துலா. அதனால் எப்போதும் சக்தி அவன் தாயின் அறையிலேயே இருக்க, கற்பகாம்பாளோ  எப்போதும் சுகேந்தினியோடு  ஒன்னு ஹாலில் இருப்பார், இல்லையென்றால் அவளோட அறையில் இருப்பார்.

வெளியே சென்ற துலா  தனக்கு தேவைப்பட்டதை வாங்கிக் விட்டு மனமகிழ்வோடு வீட்டிற்குள் நுழையும் போது மணி ஆறரையைத் தொட்டிருந்தது. மீண்டும் தனது அறைக்குச் சென்று குளித்து முடித்து மெருன் கலர் சட்டை, க்ரீம் கலர் பேண்ட்டும் அணிந்தவன் சட்டையின் மேல் ஜர்கின்  அணிந்து கொண்டு தன் வாங்கியதை உடைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டு கீழே இறங்கி வந்தான். அதே நேரம் வருணியும் இளஞ்சிவப்பு நிற மெல்லிய கரையிட்ட புடவையை அணிந்து கொண்டு கீழே வந்தவள் வினோவைப் பார்த்து தலையாட்டிவிட்டு வெளியே செல்ல.

 அவனோ தன் தாயை தேடினான்.  அதை உணர்ந்து கொண்ட வினோ,
 அவங்க சுகேந்தினி கூட பேசிகிட்டு இருக்காங்க சார்”-  என்று சொல்ல அவனும் சரி என்று தலையசைத்து விட்டு வெளியே கிளம்பினான். அந்த நேரத்தில் சக்திக்கு திடீரென்று டிடெக்டிவ்விடம் இருந்து போன் வர அவனும் அறை கதவை சாத்தி தாழிட்டு விட்டு சுவாரசியமாக அவருடன்  பேச்சில் மூழ்கியிருந்தான்.  அவர் சொன்ன ஒவ்வொரு தகவலும் அவனுக்கு நம்பமுடியாத அதிர்ச்சியாக இருந்தாலும், ‘இப்படியும் கூட நடக்க வாய்ப்பு இருக்கிறதா?’  என்றுதான் அவனுக்குத் தோன்றியது. துலா இங்கிருந்து சென்ற அடுத்த 15 நிமிடத்தில் சக்தியும் வீட்டிலிருந்து கிளம்பி இருந்தான்.

எதிர்பார்ப்போடும்
எல்லையில்லா
பூரிப்போடும் 
கனவுகளின் கரம் 
பிடித்து இவன்
மிதக்கையில்,

தவிப்போடு.
அச்சமென்ற 
அரிதாரத்தினை 
அணிகலனாய் 
சூடியவளோ
உண்மையை 
அறிகையில் 
அவன் தரும்
 வலிதனை ஏற்றிட
இப்போதிருந்தே
விழிநீரை சுமக்கிறாள்.

– இனியும் தீண்டும் செம்புனல்

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Ramyachandran

சருகாக மாறிடும் இலைகளைப் போன்று மாறிடாமல்,  மண்ணில் முட்டி மோதி , எதிர்வரும் சூழல்களை சமாளித்து துளிர்த்து வேர் விட்டு தழைத்து செழித்தோங்கிடும் விதைகளைப் போல் தன்னம்பிக்கையோடு போராரிட முனைந்திடும் பாவையிவள்....

Story MakerContent AuthorYears Of Membership

முதல்காதல்

செந்தேன் பூவே… 41