in , , ,

ஆம்பலரியைத் தீண்டிய செம்புனலே-12

செம்புனல்-12

அதிகாலைப் பொழுதில் செம்மையில் குளித்தெழுந்த செங்கதிரோன் தன் வெம்மையை அனுப்பி தன்  வரவை உலகுக்கு தெரிவித்திட்ட அந்த கணத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர் துலாவின் வீட்டினர் அனைவரும். நன்றாக உறங்கிக் கொண்டிருந்த வருணிக்கு தன் மீது ஏதோ உஷ்ணமான காற்று படுவது போலவும், தன் கழுத்துப்பகுதியில் ஏதோ  கதகதப்பாக இருப்பது போன்றதொரு  உணர்வையும் ஒருசேர  உணர்ந்தவள் மெதுவாக கண்களை திறந்து பார்த்தாள். தன் முகத்திற்கு வெகு அருகில் துலாவின் முகம் இருப்பதைக் கண்டு பயந்து எழுந்து கொள்ள முயல, அவனது கரங்கள் அவளை வலுவாக அணைத்திருந்ததில் மீண்டும் அவன் மீதே வந்து விழுந்தாள். அவளது எழும்  முயற்சியில் விழி திறந்த துலா தன்னவளின் செய்கை எதற்கு என்று தெரிந்ததால் மேலும் அவளை தன்னோடு இழுத்து இறுக்கமாக அணைத்தவன்,
“என்ன செல்லம், இப்ப எதுக்கு எழுந்திரிக்கிற. இன்னும் கொஞ்ச நேரம் தூங்குடா! இன்னும் விடியவே இல்லையே அப்புறம் ஏன்டாமா எழுந்த, தூங்கு செல்லம் அப்புறமா வெளிய போலாம்”- என்று மனைவிடம் சொல்வது போல் உரிமையாக சொன்னவன் மேலும் அவளை அணைத்துக் கொண்டு கண்களை மூட.

 வருணியோ கோபமாக,
“என்ன சார் பண்றீங்க? மொதல்ல  எழுந்திரிச்சி வெளியில போங்க. என் மேல இருந்து கையை எடுங்க,  யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க”-  என்று தன் பதட்டத்தையும், தனக்குள் ஏற்பட்டிருக்கும் நடுக்கத்தையும், தடுமாற்றத்தையும் மறைத்தவாறே கேட்டாள்.

ஆனால் துலாவோ அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்து விட்டு,“ஏன்,  இப்ப என்னாச்சு? எதுக்கு இந்த ஆர்ப்பாட்டம்.  நான் எந்த தப்பும் பண்ணலையே அப்புறம் ஏன் என்னை வெளியே போகச் சொல்ற வருணிமா” 

“நீங்க தெரிஞ்சுதான் பேசுறீங்களா?  கல்யாணம் ஆகாம ஒரு ஆணும் பெண்ணும் மட்டும் தனியா ஒரே ரூம்ல இருந்தா தப்பா தான் பேசுவாங்க. மொதல்ல  நீங்க எழுந்திரிச்சி வெளியிலே போங்க”

“அப்படியா, அப்ப வா இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்.  என்னால உன்னை விட்டுட்டு இருக்க முடியாது வருணிமா”-  என்று ஏதோ குழந்தை போல அவன் அடம்பிடிக்க,  இவள்தான் துளித்துளியாக உருகிக் கரைந்து அவனுள் மூழ்கிக் கொண்டிருந்தாள். திடீரென்று ஏதோ தோன்றியவளாய்  அவன் கையை தன் உடலில் இருந்து பிரித்தெடுக்க முயல,  அவனோ அவளை சற்று வேகமாக தன்னை நோக்கி இழுத்ததில் அவன் மீது வந்து விழுந்தாள் மலர்க்கொடியாள். விழுந்த வேகத்தில் நான்கு இதழ்களும் பின்னிப் பிணைந்து கொள்ள, இருவரும் அதில்  அதிர்ந்து ஒருவரை ஒருவர் விலக்கிவிட வேண்டும் என்று கூடத் தோன்றாமல் விழிகளை மூடிக் கொண்டனர். தானாக கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் துலாவும் அவளுள் கரைந்து உறைய,‌ அவனை விலக்கிடத் தோன்றாமல் ஏதோ ஒரு நினைவில் தானும் அவனுள்  கரைந்துக் கொண்டிருந்தாள் வருணி.

நொடிகள் தான் கரைந்து காலநிலையை தனக்குள் விழுங்கிக் கொண்டு இருந்ததே தவிர இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தபாடில்லை. நேரம் செல்ல செல்ல துலாவின் கரங்கள் அவளது வரிவடிவை அறிந்துக் கொள்ள, அளந்துக் கொண்டிருந்தது.  அதே நேரம் வெளியே யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தவன் முதலில் தன்னிலை  மீண்டு அவளை விட்டு விலகி எழுந்து நின்றான்.‌ தன்னை சமன் செய்வதற்கு அவனுக்கு ஏகப்பட்ட நேரம் தேவைப்பட்டது அதனால் குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டான். அவன் சென்ற பிறகும் கூட வருணி தன்னிலை மீளவில்லை.  நடந்த அனைத்தும்  கண்முன் நிழலாடிட நானி கோனி சிவந்த தன் கன்னங்களைக்  கைகளைக் கொண்டு மறைத்து   தலை குனிந்து தன் முகத்தை மடியில் புதைத்துக் கொண்டாள்.  சிறிது நேரத்துக்குப் பிறகு அறைக் கதவு தட்டப்படும் சத்தம் நின்றுவிட்டது.‌ அதேநேரம் கைகால் முகம் கழுவிக்கொண்டு வெளியே வந்த துலாவும் தன்னவள் இருக்கும் கோலம் கண்டு மேலும் மேலும் அவள் மேல் வைத்திருந்த காதல் ஆறாக பெருகி ஓடுவதை உணர்ந்தவன் அடிமேல் அடிவைத்து அவளை நெருங்கினான்‌  அவள் தோள் பட்டையில் விரல் பதித்து அவளை சுயநினைவுக்கு மீட்டுக் கொண்டு வந்தவன் அவள் விழியெடுத்து தன்னைப் பார்க்கும் வரை பொறுமையாக நின்று இருந்தான்.

  அவளுமே  மெல்ல விழியுயர்த்தி அவனைக் கண்டதும்,  அவள் விழிகளில் தன்னைப்  புதைத்து, தன் விழிகளை அதனுள் உருவேற்றி அவளுள் மூழ்கியவன்,
“நீ மொதல்ல வெளியே போ வருணி மா. யாராவது இருக்காங்களான்னு பாரு,  அதுக்கப்புறம் நான் போறேன்”-  என்று சொல்ல.

 அதன் பிறகே மற்றவை அனைத்தும் நினைவு வர அவனை முறைத்தவாறு, “எதுக்காக இங்க வந்து தூங்குனீங்க?”-  என்று வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு நிற்க. 

 அவளை ஒற்றைக் கையால் தன்னை நோக்கி  தன் அருகிலேயே இழுத்து மற்றொரு கையை கொண்டு அவளை தன் இடுப்போடு சேர்த்தணைத்து தூக்கியவன் அலுங்காமல் குலுங்காமல் கதவருகில் சென்று கதவை திறந்து அவளை வெளியே நிற்க வைத்தான்.  அவன் செயலில் விதிர்த்துப் போயிருந்த  பெண்ணவளுக்கு வார்த்தைகள் இதழுக்குள்ளேயே சிறை பட்டு போயின.‌ 

“வெளிய யாராவது இருக்காங்களான்னு பாருடா”- என்று துலா சொல்ல. அவளும்  எட்டிப்பார்க்க சரியாக அதே நேரம் சமயலறைக்குள் வினோ செல்வது தெரிந்தது.  பின்னால் திரும்பி அவனைப்பார்த்து, “வினோ தான் கிச்சனுக்கு போறா!  இப்ப நீங்க உங்க ரூமுக்கு போங்க.‌ அதுக்கப்புறம் இருக்கும் உங்களுக்கு, எவ்வளவு தைரியம் இருந்தா எம்பக்கத்துல வந்து படுத்துருப்பீங்க”-  என்று சொன்னவாறே அவனைப் பிடித்து‌ இழுத்து வெளியில் தள்ளி விட்டு மீண்டும் அறைக்குள் நுழைந்து கதவை சாத்தி மறக்காமல் தாழிட்டாள்.  அந்த   சத்தத்தைக் கேட்டு மெலிதாகப் புன்னகைத்தவன்,
“உன்னை என்னால  புரிஞ்சுக்கவே முடியல வருணி”-  என்று சொல்லிக்கொண்டே தனது அறைக்கு வந்து கதவைத் திறந்து கொண்டு அவன் உள்ளே நுழைந்தான்.  சக்தி கட்டிலில் அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தவன் கதவு திறக்கும் சத்தம் கேட்டு வாயிலைப் பார்த்தவன் தன் அண்ணனை குற்றம் சாட்டும் பாவனையோடு எதிர்கொண்டான்.

தம்பியின் பார்வையிலேயே தன்னை நோக்கி  கேள்விக்கணைகளைத் தொடுக்க போகிறான்  என்பதை உணர்ந்த துலா கண்களிரண்டையும் மூடி திறந்து தன்னை சமாளித்துக் கொண்டு, “குளிச்சிட்டு  வந்துடுறேன் சக்தி அதுக்கப்புறம் எதுவா இருந்தாலும் கேளு”- என்று சொல்லிவிட்டு குளியலறைக்குள் நுழைந்து குளித்து முடித்து வேறு உடை மாற்றியவன் சாவகாசமாகப் தன் தம்பியின் அருகில் அமர்ந்து,

“இப்ப கேளு என்ன கேள்வி கேட்கணும்?”- என்றிட. 

“நைட் எங்க  தூங்குனீங்கண்ணா?” 

“உண்மைய சொல்லனுமா? இல்ல வாய்க்கு வந்ததை சொல்லலாமா?”

“உண்மை சொன்னா பெட்டர். ஏன்னா எனக்கு உண்மை தெரியும், இருந்தாலும் அதை உங்க வாயால கேட்டு கன்ஃபார்ம் பண்ணிக்கிறதுக்காக தான் உங்ககிட்ட கேள்வி கேட்டுட்டு இருக்கேன் ண்ணா”-என்றான் சக்தி.

 ஏதோ சக்தியின்  வார்த்தைகளில் தனக்கிருந்த மரியாதை சற்றே குறைந்து இருப்பதை போல் உணர்ந்த துலா, “வருணியோட அம்மா ரூம்ல”-  என்று‌ ஆரம்பித்தவன்  வார்த்தைகளை முழுதாக முடிக்கும் முன்பே,  
“இது தப்பு அண்ணா அவங்க என்னோட அண்ணியாவே இருந்தாலும் இப்படி நீ பண்ணி இருக்க கூடாது.  மத்தவங்க பார்த்தா என்ன நினைப்பாங்க,  உன்ன தப்பா நினைக்கிறதோட அண்ணியவும்  தப்பா நினைப்பாங்க இல்லையா?  படிச்ச நீயே  இப்படி நடந்துக்கலாமா?”

“இல்லடா அது வந்து‌‌”-  என்று துலா மறுப்பாக ஏதோ பேசுவதற்கு முன்பு கை நீட்டி அதை தடுத்து நிறுத்திய சக்தி, “என்ன தான் இருந்தாலும் நீங்க இப்புடி பண்ணிருக்கக் கூடாது அண்ணா!  எவ்வளவு சீக்கிரம் முடியுமோ?  அவ்வளவு சீக்கிரம் அண்ணிகிட்ட சம்மதம் வாங்குங்க‍, சீக்கிரமாவே  உங்களுக்கு மேரேஜ் முடிஞ்சு வைக்கணும்”- என்று திட்டவட்டமாக சொல்ல.

“ஏன்னு  நான் தெரிஞ்சுக்கலாமா? என்று எதிர் கேள்வி கேட்டான் துலா.

தன் அண்ணனைக் கண்டு பேச முடியாமல் வேறு புறம் பார்வையை திருப்பிய சக்தி,
“அப்பதான் அவுங்க உரிமையா எனக்கு அண்ணியா வருவாங்க, நீயும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை,  நானும் யாருக்கும் பதில் சொல்லணும்னு அவசியம் இருக்காது இல்லையா! அதனால தான்”

“ஆனா எனக்கென்னமோ அப்படி தோணலையே சக்தி. எனக்கு கல்யாணம் முடிஞ்சா தான் உன்னோட  ரூட்டு கிளியராகும்னு  நீ நினைக்கிற மாதிரி இருக்குதே”-  என்று துலா கேட்டதும்.

அதிர்ந்து தன் அண்ணனின் புறம் திரும்பிய சக்தி, “இல்லண்ணா  அப்படியெல்லாம் எதுவும் இல்லையே”- என்று மழுப்பிட.

“அப்படியா நீ என்னைப்  பத்தின உண்மைய தெரிஞ்சுகிட்டே மாதிரி நானும் ஒரு உண்மை தெரிஞ்சு கிட்டேன் சக்தி. அது வந்து என்னன்னா லேட் நைட் நான் இங்க வரலாம்னு வந்தேன்,  நீ ரூம்ல இல்ல எங்க போனன்னு தெரியலை,  திடீர்னு ஏதோ சத்தம் கேட்டுச்சு  நான் வெளிய வந்து பார்த்தேன், நீ கீழே என்னத்தையோ செக் பண்ணிட்டு கிச்சன்ல இருந்து வெளிய வந்த, நான் ரூம் வாசல்ல நிக்கிறதைக் கூட கவனிக்காம,  ஏதோ எடுத்துக்கிட்டு வினோவோட ரூமுக்கு போன. ஆமா எதுக்கு அங்க போன?”- என்று கேட்டிட.

“இல்லண்ணா அது வந்து, நேற்றைய வரவு, செலவு கணக்குல  ஒரு டவுட் அதான் உங்க கிட்ட கேட்கலாம்னு உங்களைத் தேடுனேன்.  உங்கள ரூம்ல காணோம் அதன் கீழே வந்து செக் பண்ணினேன் அங்கேயும் காணோம், கடைசியா கிச்சன்ல கூட காணோம் அதான் வேற வழியில்லாம வினோவ கேட்கலாம்னு அவ ரூமுக்கு போனேன் அண்ணா”-  என்று மழுப்பலாக பதில் சொன்னான். தான் சொன்னதை  தன் அண்ணன் நம்பி இருக்க வேண்டும் என்று ஆயிரம் வேண்டுதலோடு தான் சொன்னான்.

தன் தம்பியை நம்பாத பார்வை பார்த்த துலா, “நீ சொல்றதை நான் நம்பியிருப்பேன் சக்தி,  நானும் வினோவோட ரூமுக்கு நீ போகும்போது உன் பின்னாலையே  வந்து நீ செஞ்ச செயலை, உன்னோட நடவடிக்கையை கண்ணால பாக்காம  இருந்திருந்தா. ஆனா  பாத்ததுக்கு அப்புறமும் நீ சொல்ற பொய்யை நான் நம்பிடுவேன்னு  நீ எப்படி நினைக்கிற?” என்ற துலாவின் அதிரடியான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினான் சக்தி.

“ம்ம் ‌. பதில் சொல்லு சக்தி அங்க எதுக்கு போன?” -என்று துலா சற்று குரலை உயர்த்தி கேட்டிட.

“அண்ணா நான் எந்த தப்பான நோக்கத்துலையும் அங்க போகலண்ணா”-  என்று பதிலுரைத்தான்‌. 

 தன் தம்பியைப் பார்த்து நகைத்த துலா, “தன்னோட காதலியோட அறைக்கு போறது தப்பு இல்ல ஆனா கல்யாணத்துக்கு முன்னாடி அந்த பொண்ணோட அறைக்கு  போக கூடாதுன்னு எனக்கு நீ அட்வைஸ் பண்ணுன.  ஆனா இப்ப அதே தப்பைத் தான நீயும்  பண்ணிருக்க?”- என்று கேட்ட  துலாவின் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தான் சக்தி.

சிறிது நேரம் தன்னவளின் அருகில் தன்னை மறந்து உறங்கிப் போயிருந்தான் துலா. நடு இரவில் எழுந்து தன் அறைக்கு செல்லலாம் என்று மேலே வந்து பார்த்த போது தான் சக்தியை அறையில் காணவில்லை. தன் அண்ணன் எங்கே இருக்கிறான் என்று வீடெங்கும் தேடி முடித்துவிட்டு,
‘ஒருவேளை மித்ரா  இருக்கிற அறையில் இருக்கலாம்’ என்று எண்ணி கொண்டவன் அதை உறுதியும் செய்து கொண்டு மேலே ஏறினான். தன்னைக் கூட கவனிக்காமல் சக்தி வினோவின் அறைக்குச் செல்வதைக் கண்ட துலா, ‘எதுக்கு இந்த நேரத்துல இங்க போறான்?’- என்ற யோசனையோடு தன் தம்பியை பின்தொடர்ந்தான்.

தன் தங்கையின் அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வினோவை வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்த சக்தி பின்பு என்ன நினைத்தானோ?  அவள் அறியாமல் அவள் புகைப்படத்தை தனது அலைபேசியில் பதித்துக் கொண்டவன் அவளருகில் சத்தமில்லாமல் அமர்ந்தான். சக்திக்கு  ஆரம்பத்திலிருந்தே வினோவை பிடித்திருந்தது ஆனால் அது காதலா என்று கேட்டால் தெரியாது என்று சொல்வான். 

 சற்று முன்பு தன்னறையில் தான் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவாகவும், அதே நேரம் புத்திக் கூர்மையுடனும் பதிலளித்த அவளது திறமையைக் கண்டு மெச்சிக் கொண்டான்,  எந்த ஆண்களிடமும் நறுக்குத் தெரித்தார் போல் பேசும் அவளது கண்ணியமான பேச்சும், சுயமரியாதையும் அவனை அவள் பால் சாய்த்து இருந்தது. ஏதோ ஒரு உந்துதலில் அண்ணன் இல்லை என்ற தைரியத்தில் அவளை பார்க்க வந்து விட்டானே! தவிர எந்த நேரத்திலும் அவள் எழுந்து விடலாம் என்ற எச்சரிக்கையுடனே அவளைப் பார்த்தவாறு அமர்ந்து இருந்தான். அமர்ந்த நிலையிலேயே அவளது கைகளை மென்மையாக வருடியவன்,  சிறிது நேரத்தில் அவள் மதிமுகம் தனை நெஞ்சில் நிரப்பிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான். தம்பியை பின் தொடர்ந்து உள்ளே நுழைந்த துலா அவனது ஒவ்வொரு அசைவையும்  உன்னிப்பாக கவனித்தவன் தம்பியின் மனதில் என்ன ஓடுகிறது என்பதை தெளிவாக கணித்தவனாய் சத்தமில்லாமல் மீண்டும் கீழே இறங்கி வந்து தன்னவளுடன் ஐக்கியமாகி விட்டான். இது எதுவும் தெரியாமல் தன்னவளின் மீதான நேசத்தை உணர்ந்துக் கொண்டவன்,  சிறிது நேரத்தில் தன்னவளது  முகத்தை நெஞ்சில் ஆழமாக பதித்துக் கொண்டு தனது அறைக்கு வந்து சேர்ந்தான் சக்தி.

இப்போது அண்ணன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் விழித்தவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு,
“ஏன்னா  நான் உடல் ஊனமுற்றவனா  இருக்குறதுனால வினோவ நான் விரும்பக் கூடாதுன்னு நினைக்கிறியா?”- என்று கேட்டவனின் மனதில் இருந்த விரக்தி குரலிலும் பிரதிபலிக்க.

 அதைத் தாங்க முடியாமல் தன் தம்பியை அனைத்து கொண்டவன்,
“உனக்கு யாரு இப்போ உடல் ஊனமா  இருக்குன்னு சொன்னது.  உடலளவில் இருக்குற குறை ஊனம்  கிடையாது சக்தி.  மனசளவுல சிறுமையைக் கொண்டு மத்தவங்களை காயப்படுத்துறவங்க தான் உண்மையான ஊனமுற்றோர். சில தன்னலமற்ற நல்லவர்கள் மத்தியில் இந்த மாதிரி மனசு புல்லா அழுக்கு மட்டுமே நெறஞ்சு இருக்குற மனுஷங்களும் இருக்காங்க. இந்த மாதிரியான  மனுஷங்கதான் வாழவே தகுதி இல்லாதவங்க,  பிறரை விரும்புவதற்கு கொஞ்சம் கூட அருகதை இல்லாதவங்க. நீ அப்படி கிடையாது டா உனக்கு வினோவ விரும்புறதுக்கு மட்டுமல்ல அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்குக் கூட தகுதி இருக்குது,  நீ வினோவ விரும்புற அப்படித்தானே!”

“எனக்கு ஆரம்பத்தில் இருந்தே வினோவ  அவ்வளவு புடிக்கும் ணா. ஆனா அவளோ கிட்டக்கூட எந்த பசங்களையும்  சேர்க்க மாட்டா, நா உட்பட.  ரொம்பவே நல்ல பொண்ணுண்ணா,  அவ மேல இருந்த ஒரு பிடித்தம்,  இப்போ அவளோட நிமிர்வாலையும், தைரியத்தாலையும்,அன்பாலையும் காதலா மாறிடுச்சி அண்ணா.  அப்பா, அம்மா இல்லாத நிலமையிலையும்,  வசதி வாய்ப்பு இல்லாட்டியும் எந்த இடத்திலும் தரம் தாழ்ந்து போகாம தலைநிமிர்வோட அவ  இருக்கிறதுதான் எனக்கு ரொம்ப புடிச்சிருக்குண்ணா.”

“சரி இந்த பேச்ச இனிமே பேசக்கூடாது சரியா! என்னைக்குமே என் தம்பி ஊனமுற்றவன் கிடையாது, அதை மட்டும் ஞாபகம் வச்சுக்கோ.  அப்புறம் இன்னொரு விஷயம் கொஞ்ச நாளைக்கு வினோ  முன்னாடி அடக்கி வாசி,  வினோவோட மனசுல என்ன இருக்குன்னு நமக்கு தெரியாது இல்லையா?  நான் எதுக்கு சொல்றேன்னு உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்”-  என்று சொன்ன  தன் அண்ணனை கலக்கத்தோடு நிமிர்ந்து பார்த்த சக்தி,  பின்பு ஏதோ நினைத்தவனாய்…“ சரி அண்ணா நீங்க சொல்றபடியே செய்யறேன்.  அதே மாதிரி நான் வினோக்கிட்ட பேசலாமா? பேசக்கூடாதா?”.

“வினோகிட்ட பேசு.  நான் பேச கூடாதுன்னு சொல்ல மாட்டேன்,  ஆனா உன்னோட ஒரு செயல் கூட நீ அவளை விரும்புகிறேங்குறதை  அவளுக்கு புரிய வைத்துவிட கூடாது அதனால பார்த்து கவனமா நடந்துக்க, ஏன்னா என்னோட காதல் விஷயத்தையே இன்னும் அம்மாக்கிட்ட சொல்லாம இருக்கேன்.‌ கொஞ்ச நாளைக்கு பொறுமையா இரு அதுக்கப்புறம் நானே இதைப் பத்தி அம்மாக்கிட்ட பேசுறேன் அதுக்கப்புறம் எதுவா இருந்தாலும்  பண்ணிக்கலாம்.   நீ அவசரப்பட்டு  அது அம்மாக்கு தெரிஞ்சா மொத்தமா எல்லாமே கொலாப்ஸ் ஆகிடும் அதனாலதான் சொல்றேன், நான் சொல்றது உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்”

“புரியுதுண்ணா.  இனிமே நீங்க சொன்ன மாதிரி நடந்துக்கிறேன் சரியா! சரிண்ணா அண்ணி என்ன சொன்னாங்க? ஏதாவது கோபப்பட்டாங்களா?”

“எது அண்ணியா?  ஏன்டா  நீ வேற!  அவ முன்னாடி  இப்புடி கூப்பிட்டு வச்சிராத,  ஏற்கனவே செம கோவத்துல இருக்கா, அப்புறம் இதுக்கும் சேர்த்து என்னை தாளிச்சு எடுத்துடுவா. வாயைத் தொறந்து எதுவும் சொல்ல மாட்டேங்குறாடா, அழுத்தக்காரி. சரி அதை விடு, அதை நான் பார்த்துக்கறேன் அந்த டிடெக்டிவ் ஏதாவது சொன்னாரா?  எதாவது டீடைல்ஸ் கொடுத்தாரா? ஏன்?  எல்லா பொண்ணுங்களும் மர்மமான முறையில் இறந்த போறாங்க?  அதுவும் எனக்கு கல்யாணம் பண்றதுக்கு பாக்குற பொண்ணுங்க மட்டும் ஸ்பெஷலா மர்மமான முறையில ஏன்  இறந்து போறாங்கன்னு எதையாவது கண்டுபிடிக்க முடிந்ததா?”

“நானும் பேமஸான‍, திறமை வாய்ந்த டிடெக்டிவ் கிட்ட தான் இதை  ஒப்படைத்து விசாரிக்கச் சொல்லி இருக்கேன்ணா.  ஆனா இதுவரைக்கும் எந்த இம்ப்ரூமென்ட்டும் இல்லை ணா. சொல்ல போனா உனக்கு எந்த பிஸ்னெல் எதிரியும் இல்லைங்கிற மாதிரி தான் அவர் சொல்றாரு,  தெரியல வெயிட் பண்ணு பாப்போம்”

“ம்ம்.. பார்ப்போம், சரி சக்தி கீழே போலாம்.‌ நான் இங்க வந்து ரொம்ப நேரமாச்சு”

“பொய்  சொல்லாதீங்க அண்ணா அண்ணிய பாக்காம இருக்க முடியல அதுக்காக தானே இப்ப கீழ போகனுங்குறீங்க?”- என்று அவன் காலை வார.

 அதற்கு துலாவும் மெலிதாக சிரித்து விட்டு, “நீயும்  இப்ப என்னோட நிலமையில தான் இருக்கேங்குறதை  மறந்துடாத”- என்று சொல்ல. அசடு வழிய சிரித்த சக்தி தானும் குளியலறை சென்று தன்னை தூய்மைப்படுத்திக் கொண்ட வெளியே வர ஆண்கள் இருவரும் தயாராகிக் கீழே வந்தார்கள்.

இங்கே துலா சென்றதும் எதை எதையோ சிந்தித்தவாறு அமர்ந்திருந்தாள் வருணி.‌ மீண்டும் அறை கதவு தட்டப்படும் சத்தத்தில் எழுந்து சென்று சிரமப்பட்டு கதவை திறக்க உள்ளே நுழைந்தாள் வினோ.  உள்ளே வந்தவள் அவளை முறைத்துப் பார்த்துவிட்டு,
“இரண்டு கையிலையும் கட்டுப் போட்டு இருக்கு எப்படி நீ உன்னையே கிளீன் பண்ணிக்குவ.  அதுக்காக தானே கதவை தட்டிக்கிட்டே இருந்தேன்‍, அப்படி என்ன தூக்கம் டி உனக்கு.  நீ இவ்ளோ நேரம் தூங்கி நான் பார்த்ததே கிடையாது, என்ன ஆச்சு மித்ரா  உடம்பு ஏதும் சரியில்லையா?”-  என்று கேட்டவள் வருணியின் கழுத்தில், நெற்றியில் கை வைத்து வெப்பத்தைப் பரிசோதித்தாள். அது மாதிரி எதுவும் இல்லை என்றதும்,
“இல்லையே உடம்பு கூட சுடலையே, அப்புறம் எதுக்கு இவ்ளோ நேரம் தூங்கணும், டயர்டா இருக்கா மித்ரா”-  என்று கேட்டாள்‌

பாவம் பேதையவளும் என்ன பதில் தான் சொல்வாள். வெகு நாட்களுக்கு பிறகு  நேசித்தவனின் அருகாமையில் உலகத்தை மறந்து ஆழ்ந்த துயிலில் இருந்தவள் எப்படி அந்த தகவலைத் தோழியிடம் பகிர்ந்து கொள்வாள். இதழோரப் புன்னகையை சிந்தியவள்,‌ “தெரியலை ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல. சரி அதை விடு நான் பிரஸ்ஸப் ஆகுறதுக்கு ஹெல்ப் பண்ணுடி நான் ரெடியாகனும் ப்ளீஸ்..  கொஞ்சம் ஹெல்ப் பண்ணு வினோ இன்னைக்காவது பூவெல்லாம் போய் பார்த்துட்டு வரணும்” 

“இதுக்கு எதுக்கு மித்ரா ப்ளீஸ் எல்லாம் சொல்ற.. நான் உன்னோட தோழி தான்டி வேத்து மனுஷி கெடையாது, இன்னொரு தடவ இப்புடி பேசுன அடி வாங்குவ பாத்துக்கோ ”- என்று சொல்லி வருணியைக் கடிந்துக் கொண்டவள் அவளை அழைத்துச் சென்று அவள் குளிப்பதற்கு உதவியவள், அவள் ரெடியாகியதும் இருவரும் நேராக கிச்சனுக்கு சென்றனர். இருவரும் கிச்சனில் பேசியவாறு சமைத்துக் கொண்டிருந்தனர்.  வருணி ஏதோ பேசிக் கொண்டிருக்க,  வினோ அதைக் கேட்டவாறே சமைத்துக் கொண்டிருந்தாள்.  அப்போதுதான் சக்தி, துலா இருவரும் தயாராகி  கீழே வந்தவர்கள் ஹாலில் வந்து அமர்ந்தனர்.  சமையலறையையே எட்டிப் பார்த்தவாறு அமர்ந்திருந்த தன் அண்ணனைப் பார்த்து தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டு சக்தி, ‘கல்யாணத்துக்கு முன்னாடியே இப்புடீன்னா? அப்ப கல்யாணம் ஆகிட்டா அண்ணனை கையில புடிக்க முடியாது போலயே’ என்று மனதில் நினைத்துக் கொண்டவன் வெளியே,

“வேணும்னா உள்ள போய் பார்த்துட்டு வாண்ணா”-  என்று சொல்ல.

 சரி என்று தலையசைத்த துலா சின்னக் குழந்தை போல துள்ளிக் குதித்துக் கொண்டு சென்றான். அவனை மகிழ்வுடன் பார்த்த சக்திக்கு தன்னவளைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவன் உள்ளத்திலும் எழ அண்ணனை பின்பற்றி தம்பியும் கிச்சனுக்குள் நுழைந்தான்.

சமையலறை மேடையில் வருணி ஏறி அமர்ந்தவாறு வாய் அளந்து கொண்டிருக்க, சமையலில் கவனமாக இருந்த வினோவும் அவ்வப்போது அவளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தாள்.

சமையல் அறை வாசலிலேயே நின்று ஆண்கள் இருவரும் அவரவர் உள்ளம் கவர்ந்த கன்னியரை ரசித்துக்கொண்டிருக்க, அவ்வப்போது துலாவின் விழிகள் தன்னவளது மலரிதழையே ஏக்கமாகப் பார்த்து வைத்தது.  எதேச்சையாக வாயிலின் புறம் பார்வையை செலுத்திய வருணி சட்டென்று கீழே இறங்கி நின்றவள் பார்வையை தாழ்த்திக் கொண்டாள். அவனைக் கண்டதும்  பொங்கி வந்த வெக்கத்தையும், அவனுடனான பொக்கிஷ தருணங்களையும் அவ்வளவு எளிதில் அவளால் மறைத்திட, மறந்திட முடியுமா? என்ன. அவனது கூர் பார்வையில் உடல் கூசிட அவளால் உள்ளத்து உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

தன்னவளின் முகத்தில் இருந்த வெட்கச்சிவப்பில் உள்ளம் உருகிய துலா ஓரடி முன்னே எடுத்து வைப்பதற்கும்,  எதுவோ அவன் தலையில் பட்டு கீழே விழுந்து உடைந்து சிதறி பெரும் சப்தத்தை உண்டாக்குவதற்கும் சரியாக இருந்தது.‌ இதில் உடைந்த பொருள் தரையோடு தரையாக கரைந்து, மறைந்து சுவடே இல்லாமல் மாயமாகியும் விட்டது. சத்தம் கேட்டதில் அனைவரும் அதிர்வுடன் அவனை நெருங்கி ஆராய துலாவின் பின்னந்தலையில் இருந்து சிறிது சிறிதாக கசியத் தொடங்கிய ரத்தம் செந்நிறத்தில் இருந்து சற்று பழுப்பு நிறத்திற்கு மாறிட, அனைவரும் அதிர்ந்து பயத்தில் சிலையென சமைந்து நின்றிருந்தனர்.

அதே நேரம் இங்கு தனது அறையில் தலைகீழாக அமர்ந்திருந்த சுகேந்தினியின் விழிகள் இரண்டும் விழித்த நிலையிலேயே இருக்க, அவள் கையிலிருந்த ஒற்றை  உருவ பொம்மையின் தலையில் இருந்து பழுப்பு நிற திரவம் கசிந்து கொண்டிருக்க,  சிறிது சிறிதாக அவளது கை அந்த பொம்மையின் தலையை அழுத்திப் பிடித்து திருக முனைய,  அதே நேரம் அங்கே வலி தாங்க முடியாமல்  கத்திக் கதறி துடித்து கொண்டிருந்தான் துலா.

கொண்ட காதலும், 
நினைத்த எண்ணமும்
எளிதில் கரம் சேர்ந்திட்டால் 
கிடைக்கவே கிடைக்காது
என்றறிந்த  பொருளின் மீதும் பேராவல்  தோன்றி விடும்.

உயிரைத் தானே உடலை
விட்டு பிரித்தெடுத்திட
இயலும், உணர்வோடு
கலந்திட்ட என்னவளின்
பிம்பத்தையோ?
உயிரைத் தாண்டி
செல், அணுக்களில்
கரைந்திட்ட அவள்
மீதான நேசத்தினையோ
பிரித்திட மட்டுமல்ல,
பிரித்தறிந்து கண்கொண்டு

 காணக்கூட முடியாது.!!

இனியும் தீண்டும் செம்புனல்

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 4]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Ramyachandran

சருகாக மாறிடும் இலைகளைப் போன்று மாறிடாமல்,  மண்ணில் முட்டி மோதி , எதிர்வரும் சூழல்களை சமாளித்து துளிர்த்து வேர் விட்டு தழைத்து செழித்தோங்கிடும் விதைகளைப் போல் தன்னம்பிக்கையோடு போராரிட முனைந்திடும் பாவையிவள்....

Story MakerContent AuthorYears Of Membership

கருவேலங்காட்டு மனிதர்கள்

இழப்பேனென்று நினையாதே நிழலுறவே-14