in

உன் காதல் என் காவியம் (பாகம் 2) -அத்தியாயம் 9

அத்தியாயம் 9

பிரணதியை பெரும்பாடு பட்டு உறங்க வைத்து விட்டு ஒருவழியாக அப்பொழுது தான் கண்களை மூடினான் அருண்.ஆனால் பிரணதி அன்று அவனை விடுவதில்லை என்று சபதம் எடுத்திருந்தாள் போல!

“அபிம்மா..அபிம்மா”

“நதிம்மா..ஒன்னும் இல்ல தூங்கு” தூக்கத்திலேயே சிணுங்கியவளை தன் தூக்கத்தை துறந்து தட்டிக் கொடுத்தான் அருண்.

“அபிம்மா வேணும்”

“அபிம்மா இங்க இல்ல..உன் அபி தான் இருக்கேன்”

“நீ வேணாம் போ..நீ என்னை விட்டுட்டு போயிடுவ.நீ போ”

மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தாள் அவனின் அருமை மனைவி.மாத்திரை கொடுத்த உறக்கம் பாதி தன் மனக்கலக்கம் மீதியாக பேசிக்கொண்டிருந்தாள்.

அவளின் படுத்தலில் முற்றிலும் உறக்கம் கலைந்தவன் அவளை தன் மேல் போட்டு நன்கு இறுக்க அணைத்துக் கொண்டு அவளின் காதோரத்தில் “இனி உன் அபி உன்னை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன்.அப்படி போனா உன்னையும் கூடவே கூட்டிட்டு போயிடுறேன்..சரியா இப்போ தூங்கு” என்றான்.

“ம்ம் எனக்கு அபிம்மா தான் வேணும்”

“இப்போ நான் தான் உன் அபிம்மா..அப்படியே நினைச்சிக்கிட்டு தூங்கு”

“இல்ல நீ என் அபிம்மா இல்ல.அவங்களுக்கு தாடிலாம் இருக்காது ‌.அவங்க கன்னம் மிருதுவா இருக்கும்‌.உன் கன்னம் சொரசொரன்னு இருக்கு”

“தாடி வச்ச அபிம்மான்னு நினைச்சுக்கோடா நதி” அவளின் பேச்சில் எழுந்த சிரிப்புடன் பதில் சொன்னான்.

“வேணாம் வேணாம் தாடி எல்லாம் வேணாம்.நீ போ போய் என் அபிம்மாவை வரச்சொல்லு”

பிரணதி சிறுபிள்ளையாய் அடம்பிடிக்க சிரிப்பு தான் வந்தது அருணுக்கு.

‘இத்தனை  நாள் அபி ..அபி என்று அவனை சுற்றி வந்து அவன் மேல் அப்பிக்கொண்டு இவள் உறங்கியது என்ன?இன்று நான் வேண்டாம் அவளின் அபிம்மா தான் வேண்டும் என்று அடம்பிடிப்பதென்ன!’ ஏனோ அவளின் மேல் அவனுக்கு கோபம் வரவேயில்லை.அவளின் அட்டகாசங்களை அழகாய் ரசித்தான் அவன்.

“நீ வேணாம் போ. அபிம்மாவை வரச்சொல்லு”

“அவங்க தான் என்னை அனுப்பி வச்சாங்க” சொல்லிக் கொண்டே அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான் அருண்.

“ம்‌ஹூம்” என்று சிணுங்கியவள்”உன் தாடி குத்துது போ‌..நீ போ” என்று அவனை தள்ளி விட்டாள்.

அவளை மெத்தையில் உறங்க வைத்து விட்டு அந்த இரவிலும் தாடியை எடுக்க ஷேவ் செய்து விட்டு வந்தான் ‌.

அவன் வரும் வரையிலுமே அவள் பினாத்திக் கொண்டு தான் இருந்தாள்.

மீண்டுமாய் அவளை எடுத்து தன் மீது போட்டுக் கொண்டவன் “இப்போ என் தாடி குத்தாது..நீ தூங்கு” என்று தட்டிக் கொடுக்க  மனதின் அலைப்புறுதலால் அனத்திக் கொண்டு இருந்தவள் விடியற்காலையில் தான் உறங்கிப் போனாள்.அருணும் அதன் பின் தான் கண்ணயர்ந்தான்‌.

இருவரும் காலை பத்து மணிக்கு மேல் தான் எழ அவர்களை வேறு யாரும் தொந்தரவு செய்யவில்லை.

காலையில் கண்விழித்த பிரணதி இரவு நடந்தது அனைத்தும் கனவு என்று எண்ணியிருந்தவள் தன் அருகில் இருந்த அருணைக் கண்டதும் தான் அது கனவு அல்ல நனவு என்று தெளிந்தாள்.

இரவு அவனை மிகவும் படுத்தி விட்டோம் என்று புரிந்தவள் தன்னையே நொந்தாள்.

தனக்காக அவ்வளவு வேலைகளுக்கும் மத்தியில் வந்தவனைப் போட்டு இப்படி படுத்தி எடுத்துவிட்டோமே என்று வருந்தினாள்.

ஆனால் அருணோ அதையெல்லாம் பெரிதுபடுத்தவே இல்லை.பிரணதியின் வருத்தத்தையெல்லாம் தன் அன்பால்  துடைத்து எறிந்தவன் காலை உணவு உண்டவுடன் அவளை வெளியே அழைத்துச் சென்றான்.

தன் அபியுடன் வெளியே செல்கிறோம் என்று படு குஷியாக இருந்தவள் அவன் தன்னை அழைத்துச் சென்ற இடத்தைக் கண்டதும் முகம் சுருக்கினாள்.

அருண் அவளை அழைத்துச் சென்றது மருத்துவமனைக்கு தான்.மருத்துவமனை வாசம் பிடிக்காத பிரணதி அதனால் தான் முகத்தை சுருக்கினாள்.

“அபி எனக்கு காய்ச்சல் எல்லாம் சரியா போயிடுச்சு.நம்ம வீட்டுக்கே போயிடலாம்” என்றதெல்லாம் அவன் காதிலேயே வாங்கவில்லை.

இவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றதிலேயே அவன் மேல் கடும் கோபத்தில் இருந்தவள் அவன் மருத்துவரிடம் சொன்னதை சரியாக கவனிக்கவில்லை.

இவளின் காய்ச்சலை பரிசோதித்து அதற்கு ஒரு ஊசியை முதலில் போட்டவர் பின்பு சில பரிசோதனைகளுக்காக அவளை தனியே அழைத்துச் சென்றார்.

அதுவரையிலுமே ஊசி போட்டதால் எரிச்சலில் இருந்தவள் மருத்துவர் எடுக்க சொன்ன பரிசோதனையை அப்பொழுது தான் தன் காதில் கேட்டதால் வெகுவாய் அதிர்ந்தாள்.

பரிசோதனை முடியும் வரையிலுமே மிகுந்த படபப்பில் இருந்தவள் முடிந்ததும் வேகமாய் அருணின் அருகினில் சென்று அவன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு அவனின் தோள் சாய்ந்துக் கொண்டாள்.

அவளின் இறுக்கமே அவளின் நிலையை உணர்த்த அவளின் தோள்களை சுற்றி தன் கையைப் போட்டு அவளை அணைத்துக் கொண்டான்.

மருத்துவர் வருவதற்காக காத்திருந்த நேரம் இருவருக்குமே ஒரு இனிய படபடப்பாகவே இருந்தது.தங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியாக வேண்டுமே என்று மிகுந்த ஆர்வத்தில் இருந்தார்கள்.

அவர்களை சோதிக்காமல் மருத்துவரும் அவர்களின் எண்ணம் சரிதான் என்று சொல்ல இருவருக்கும் வானத்தை வசப்படுத்திய மகிழ்ச்சி ‌.

 “வி ஆர் பிரக்னென்ட் நதிம்மா” என்று  சொன்னவன் மகிழ்ச்சி மிகுதியில் அவளை அணைத்துக் கொண்டான்.

அவனுக்கு சற்றும் குறையாத மகிழ்வில் இருந்தாள் பிரணதி.அவள் இத்தனை வருடம் ஏங்கிய ஒன்று அவளே எதிர்பாரா தருணத்தில் கிடைத்து இருக்கிறது.

மருத்துவரிடம் நன்றி கூறி அவரிடம் வேண்டிய அறிவுரைகளையும் பிரணதிக்கு தேவையான மருந்துகளையும் வாங்கிக் கொண்டு தங்கள் வீடு வரும் வரையிலேமே இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

தங்கள் மகிழ்ச்சியை மௌனமாய் மனதோடு கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.இருவரும் பிடித்த கைகளை விலக்கவுமில்லை.

வீடு வந்து சேர்ந்து தங்கள் அறைக்குள் நுழைந்தவர்கள் ஒருவரை ஒருவர் இறுக அணைத்துக் கொண்டார்கள்.

“நான் எதிர்பார்க்கவே இல்ல அபி.நம்ம பேபி எனக்குள்ள இருக்குன்னு எனக்கு தெரியவே இல்ல.நீ எப்படி கண்டுபிடிச்ச?”

“உன்னோட மூட் ஸ்விங்ஸ் வச்சுத்தான்.அதுவும் உன் பிக்ஸ் எல்லாம் அப்ப அப்போ ரம்யா அண்ணி அனுப்பிட்டு தான் இருந்தாங்க.என் நதிம்மா முன்ன விட ரொம்ப அழகா  இருந்தாங்க.அப்புறம் திடீர் திடீர்னு மாறுன உன் மனநிலை.அப்புறம் உன்னோட மென்சுரேஷன் டேட் எல்லாம் எனக்கு தெரியும்ல.லாஸ்ட் மந்த் உனக்கு ஆகவே இல்ல.சரி இங்க வந்ததுக்குப் பிறகு ஆகியிருக்கும்னு நினைச்சேன்.உன்கிட்ட பேசும் போது தான் தெரிஞ்சுக்கிட்டேன் உனக்கு ஆகலைன்னு ‌.அப்போலாம் கூட எனக்கு இதுவா இருக்கும்னு லைட்டா தான் சந்தேகமா இருந்துச்சு.நேத்து நைட் உன்னோட மாறிட்டே இருந்த மூட்.உன்னோட அதிகபட்ச கோபம்,அழுகை எல்லாம் சேர்ந்து இதுவா தான் இருக்குமோன்னு ரொம்ப சந்தேகம்.அதை உறுதிபடுத்த தான் காலைல உன்னை டாக்டர்ட கூட்டிட்டு போனேன் ‌.ஒருவேளை இல்லைன்னா நீ கஷ்டப்படுவேன்னு தான் உன்கிட்ட சொல்லாம கூட்டிட்டு போனேன் அங்க போய் டாக்டர் உன் பல்ஸ் செக் பண்ணிட்டு டெஸ்ட் எடுத்து கன்ஃபார்ம் பண்ணிடுவோம்னு சொன்னவுடன் தான் உனக்கே தெரிய வந்தது.மேடம் அவ்ளோ நேரம் உனக்கு ஊசி போட்ட கடுப்புல இருந்ததால் நாங்க என்ன பேசினோம்னு கண்டுக்கவே இல்ல.அதுவும் நல்லதா தான் போச்சு”

“நமக்கு சீக்கிரம் பேபி வேணும்னு நினைச்சேன்.இப்ப தான் எல்லாம் சரியாகிடுச்சே உன்கிட்ட பேபி பத்தி பேசலாம்னு இருந்தேன் ‌.ஆனா அதுக்கு முன்னவே பேபி எனக்குள்ள வந்துருச்சு.நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அபி”

“நானும் தான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் நதிம்மா..உன்னை மாதிரியே தான் நானும் பேபி பத்தி பேசலாம்னு இருந்தேன்.ஆனா நம்ம பேபி நமக்கே சர்ப்ரைஸ் கொடுத்திருச்சு பாரேன்.நாம சொல்லாமலே நம்ம மனசுல உள்ளதை புரிஞ்சுக்கிட்டு நம்ம கிட்ட வந்திருக்கு.நம்ம ரொம்ப ப்லெஸ்ட் நதிம்மா”

அருணின் கூற்றை ஆமோதித்தவள் “அபி எனக்கு வாந்தி,தலைசுத்தல் எதுவுமே இல்லையே.ரம்யா அக்காவுக்கு எல்லாம் இருந்துச்சுன்னு சொன்னாங்க” என்று தன் சந்தேகத்தை  கேட்டாள்.

“எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காதாம்டா நதிம்மா.நான் டாக்டர் கிட்ட ஆல்ரெடி கேட்டுட்டேன்.உனக்கு அதிகமா மூட் ஸ்விங்ஸ் அப்புறம் தூக்கம் தான் வருது.நீ ரொம்ப டென்ஷன் ஆகாதே இனி.ஸ்ட்ரெஸ் எடுத்துக்காத.உனக்குள்ள நம்ம பேபி இருக்கு.நீங்க ரெண்டு பேரும் எனக்குள்ள இருக்கீங்க.நீங்க ரெண்டு பேரும் நல்லா இருந்தா தான் இந்த அபி நல்லா இருப்பான் .ஓகே யா”

“நீ என் பக்கத்துலயே இருந்தா நான் ஏன் டென்ஷன் ஆகப்போறேன்‌.நீ எப்படி என்னை பார்த்துக்குவியோ அதே மாதிரி இல்ல இல்ல அதை விட அதிகமா நம்ம பேபியை பார்த்துப்ப”

“நீ சொன்ன மாதிரியே நான் உங்களை பார்த்துக்கிறேன்‌.உங்க கூடயே இருக்கேன்.இப்போ நாம வீட்டுல உள்ளவங்க கிட்ட இந்த விசயத்தை சொல்வோம்‌‌.எல்லாரும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க”

இருவரும் வீட்டில் உள்ளவர்களிடம் விசயத்தை சொல்ல அனைவரும் ஆனந்த கூத்தாடினர்.

ரம்யாவிற்கு தலைகால் புரியவில்லை மகிழ்ச்சியில்..”நம்ம வீட்டுல குட்டி பொண்ணுனா அது பிரணதி தான்‌.இப்போ அவளுக்கே ஒரு பேபி வரப்போகுது” என்று சொல்லிக் கொண்டே திரிந்தாள் அன்று முழுவதும்!

வருணின் திருமணமும் பிரணதியின் கர்ப்பமும் அந்த வீட்டை கோலகலமாக்கியது.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 4]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Contributor

Written by Risha Begum

Story MakerContent Author

கோம்ஸ் – மதி ஒரு நாளும் மறவேன்!! – நினைவு 6

செந்தேன் பூவே…28!!