in , , ,

கை நீட்டி அழைக்கிறேன்- Part 27

மருத்துவரிடம் பேசியபிறகு, அவரின் அறிவுரையின் பேரில் ஸ்லிங்க் கையில் அணிவிக்கபட்டது கையை அதிகம் அசைக்க கூடாது என அறிவுறுத்தி இருந்தார். மருந்து சீட்டோடு, ஓய்வு தேவை படும் என அறிவுறுத்தி கடிதமும் எழுதி கொடுத்தார்.

மூர்த்தியை தவிர வீட்டின் மற்ற பெரியவர்கள் எல்லோரும் வீடு திரும்பியிருந்தனர். சுரேஷ் எந்த தகவலையும் இப்போது கூற வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. சுகந்தி பூரணி இருவரின் லெக்ச்சரர் முன்பே சேர சொல்லி பரிந்துரைத்த வகுப்பில் இவர்கள் இதுவரை பதிவு செய்யாதது பற்றி போனில் அழைத்து கடிந்து கொண்டார்.
“அப்பா மேம் ரொம்ப வருத்த பட்டாங்க. ப்ளீஸ் போய்ட்டு ரிஜிஸ்டர் பண்ணிட்டு வந்துடுறோம் பா. நாளைக்கு தான் லாஸ்ட் டேட், அடுத்த வாரம் தான் க்ளாஸ். தனியா தான போக கூடாது நாங்க மிலி அக்காவை கூட்டிட்டு போறோம்” என மகள் வைக்கும் நியாயமான கோரிக்கையை ஏற்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் தவித்தார் சுரேஷ். 

அவர் தயங்குவதற்கான காரணம் புரிந்த ஷர்மிளா, “அங்கிள் நான் கல்யாணம் வரைக்கும் டிரைவ் பண்ண கூடாதுனு பப்பா ஆர்டர். நான் ஜோஸப் அண்ணாவை கார் டிரைவ் பண்ண சொல்றேன்” என்றாள். சட்டென தலையை நிமிர்த்திய சுரேஷிடம் தெரியும் என்பது போல் தலை அசைத்து உணர்த்தினாள். 

அவளும் நடந்த அனைத்தயும் சந்தீப்பின் மூலம் கேட்டதிலிருந்து நெருப்பின் மீது அமர்நதிருந்தது போல் தவித்தாள். 

“சரி மா போய்ட்டு வந்துருங்க. நானே ஜோஸப் கிட்ட சொல்றேன்” 

“தாங்கஸ் அங்கிள்! சைத்தானுங்களா போய் ரெடி ஆகுங்க. நானும் போய் ரெடி ஆகிட்டு கார் கீ எடுத்து வரேன். அஞ்சு நிமிஷத்துல கீழே இருக்கணும்” என்று கூறி புறப்பட்டாள். 

ஏதோ சரியில்லை என பட்டது பூரணிக்கு, ஷம்மு சுரேஷிடம் ஜாடையாக தெரிவித்ததை கவனித்திருந்தாள். அமைதியாக புறப்பட்டு சென்றாள், ஆனால் ஷம்முவிடம் இது பற்றி கேட்காமல் விடுவதில்லை என தீர்மானித்தாள்.

அவர்கள் புறப்பட்டு சிறிது நேரத்தில் மூர்த்தியும் வந்தார். நடந்த சம்பவத்தை தாய்மார்களை அதிகம் அச்சுறுத்தாத வண்ணம் தெரியப்படுத்தினர். சுரேஷ் மனைவியையும் மகனையும்அழைத்து கொண்டு வீட்டிற்கு போய்விட்டார். சிறு வயது முதல் பிள்ளைகள் எல்லோரும் ஒன்றாய் வளர்ந்ததனால் மாப்பிள்ளை என்பதை விட மகன் என்ற உணர்வே மேலோங்கி இருந்தது அவர்கள் மனதில். அவர்கள் பாசத்தை அறிந்த அர்ஜுனும் மாப்பிள்ளைனு கூப்பிட்டா ரொம்ப அன்னியமா இருக்கு, எப்பவும் போல அர்ஜுன் னே கூப்பிடுங்க என்று தீர்மானமாக கூறிவிட்டான்.

  பிள்ளைகளை நினைத்து கண்ணீர் சிந்தாத, வேதனை படாத தாயுள்ளம் ஏது? மகன்கள் இருவரும் வாயிலில் வந்து சிரித்த முகமாக சாதாரணமாக வந்து நின்ற போதும் ஆறுதல் அடையவில்லை யமுனா. ஒரு பாட்டம் பேசி, திட்டி, அழுது, புலம்பி, மூர்த்தியை குற்றம் சாட்டி இவ்வளவையும் செய்து முடித்தார். காவேரியை நினைத்து தான் விஷ்வா அதிகம் பயந்தது ஆனால் அவர் அமைதியாக அர்ஜுனிடம் வந்து, “அந்த மகாலட்சுமியே உன் பொண்டாட்டி ரூபத்துல உன் கூட இருக்கா டா ராஜா, உனக்கு ஒரு ஆபத்தும் வராது” என கூறி விட்டு கண்களை துடைத்தவாறே, “யமுனா சும்மா அழுதுட்டு நிக்காத, நான் போனவாட்டி அவனுக்கு ஜுரம் வந்தப்பவே சொன்னேன் வாரத்துல ஒரு நாளாச்சும் சுத்தி  போடுனு செஞ்சியா? இப்ப கூட்டிட்டு போய் முதல்ல அதை செய்” அர்ஜுனிடம் “நீ குளிச்சுட்டு வாடா” என்றார்.

அக்காவின் சொல்லுக்கு கட்டுபட்டவர், சட்டென நின்று, “சாப்பிடலை இல்ல டா ரெண்டு பேரும்?” என்றார் முகத்தை சேலை தலைப்பில் துடைத்தவாறே. 

உண்மையாகவே அப்போது தான் அவர்களுக்குமே நினைவு வந்தது, காலையில் வீட்டில் எனோதானோ என்று சாப்பிட்டு ஓடியது. அடுத்த ரௌண்டு ஆரம்பிக்கும் என்ற பயத்தோடே, இல்லை என தலையை ஆட்டினர். 

“முகரைய பாத்தாவே தெரியுது.  விச்சு நீ போய் கை கால் கழுவிட்டு வா, சேந்து சாப்பிடுங்க. அக்கா ரெண்டு பேருக்கும் சேத்து நீயே திருஷ்டி சுத்திரு. நான் அதுக்குள்ள சாப்பாடு சூடு பண்றேன்”. 

வீட்டிற்கு வந்ததும் அதுவரை வலுக்கட்டாயமாக ஒதுக்கி வைத்திருந்த மனச்சோர்வும், வேதனையும் அவனை ஆக்கிரமித்து கொள்ள, அவன் அறைக்கு சென்று உடை மாற்ற கூட பிடிக்காமல் நாற்காலியில் கண் மூடி அமர்ந்தான். 

சற்று முன் பிரகாஷ் அவர்களை வீட்டு வாயிலில் இறக்கி விட்டு, மீண்டும் ஒரு நாள் வந்து அவர்கள் குடும்பத்தினரை சந்திப்பதாக கூறி விடை பெற்றான்.
சரியாக அங்கே ஷர்மிளா வின் கார் வந்து நிற்க, சுகந்தியும், ஷம்முவும் இறங்கினர். 

.”பூரி எங்க சுகு?” என்றான் அர்ஜுன் . “அவளை வீட்டுல விட்டுட்டு தான் வரோம் அர்ஜுன்” என்றாள் ஷம்மு. சுகந்தியின் முகத்தை அப்போது வெளிச்சத்தில் கவனித்தான் அர்ஜுன், அழுதிருந்தாள். ஷம்முவை பார்த்தான். அவள் ஆமோதித்து தலையாட்டி, “ஏய் சுகி பேபி ரிலாக்ஸ் டா. ஹீ இஸ் ஆல்ரைட் ஸீ! பாத்துக்கோ அர்ஜுன்” என்று சொல்லி அவள் அங்கிருந்து நகர அவர்களுக்கு தனிமை கொடுத்து விஷ்வாவும் ஷம்முவோடு நகர்ந்தான்.

“எப்படி இருக்க டா?” என்றாள் ஷம்மு, அமைதி காத்தான். “பேபிக்கும் தெரியும் டா. அவளுக்கு போன் பண்ணி பேசு. தோ பார், கில்டியா ஃபீல் பண்ணும் போது வாயில பூட்டு போட்டுகிட்டா எல்லாம் சரியா ஆகிடுமா?” அவன் அசைந்து கொடுக்க வில்லை, அவனை பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினாள்,
“வி ஸ்டாப் இட், ரிப்ளை பண்ணு டா. உன்னோட இடியாட்டிக் மேனரிஸம் எனக்கு தெரியும். கில்டியா ஃபீல் பண்ண ஆரம்பிச்சா நார்மல் ஆகுற வரை வாய திறந்து பேச மாட்ட. உன்னோட கோபம்,  பிடிவாதம் ரெண்டும் தான்டா உனக்கு பெரிய எதிரி” அழ தொடங்கினாள் ஷர்மிளா. “இங்க பாரு, என்ன பண்ணுவியோ தெரியாது. உன்னோட இந்த மைண்ட் செட்லேந்து வெளிய வா. விஷயம் தெரிஞ்சு அவ அழுதிருந்தா கூட நான் பயப்பட மாட்டேன், ரியாக்ட் பண்ணாம இறங்கி உள்ள போயிட்டா, இவ உடைஞ்சு அழுவறா. நான் யாரை பார்ப்பேன்? இரண்டு பொண்ணுங்களும் அவங்க உயிரா நினைக்குறவனை நினைச்சு அழுவாங்களா இல்லை அண்ணனா நினைக்கிறவன நினைச்சா? எனக்கே இன்னைக்கு பாதி உசிரு போன மாதிரி தான் இருந்தது, உங்க ரெண்டு பேரையும் பாக்கற வரைக்கும். எருமைகளா!” என அவள் பெரிதாக அழவும் கொஞ்சம் இயல்புக்கு வந்தான் விஷ்வா.
“ஸாரி ஷம்ஸ்!” என்றான் அவள் கையை பிடித்து ஆறுதலாய், கெஞ்சும் பாவனையில். “வேணும்னே வம்பு சண்டைக்கா டீ போனேன், எதிர்பாராம நடந்தது தானே?” 

கண்ணை துடைத்து கொண்டு, “வீட்டுக்கு போடா அவள்ட்ட பேசி நார்மல் ஆக்கு. அவளுக்கே இப்ப தான் கொஞ்சம் பழைய ஞாபகம் வர ஆரம்பிச்சிருக்கு ஏதாவது மைண்ட்ல வச்சிட்டு அப்ஸெட் ஆகபோறா வி. காலைல அவ முகத்துல அப்படி ஒரு க்ளோ (glow) பார்த்தேன் வி உன்னை பத்தி பேசும் போது, டோண்ட் லூஸ் ஹர் டா” என்று கெஞ்ச. 

” சரி நீ வீட்டுக்கு போ. அழாத யாரா பாத்தா பிரச்சினை ஆயிடும்.”

 அறைக்குள் வந்த காவேரி, “விசு துணி மாத்திட்டு சாப்பிட வா” நினைவு கலைந்து கண் திறந்து அவரை பார்த்தான். “நான் உதவி பண்றேன் வாடா” தயங்கினான். “வா பா அம்மா தானே.  ஆறடிக்கு வளர்ந்தாலும், ஊருக்கே ராஜாவானாலும் புள்ளை என்னைக்கும் அம்மாவுக்கு புள்ளை தான் மனசளவுல” என சட்டையை கழட்ட உதவி செய்தவர் அவன் வீட்டிற்கு அணியும் கையில்லாத டீஷர்டை அணிவித்தார், காயத்தில் படாமல். பின் தான் எடுத்து வந்த சுடு தண்ணீரில் டவலை நனைத்து அவன் முகத்தையும், மெதுவாக வலது கையையும் சுத்தம் செய்து விட்டார். கலைந்த அவன் தலையை கையால் கோதி, “வலி இருக்கா?” அவர் முகத்தில் வலி பிரதிபலித்தது.

 “கொஞ்சம். அந்த நேரத்துல தம்பி தான் மா பெருசா தெரிஞ்சான். அவனுக்கு ஒண்ணும் ஆகாம காப்பாத்தணுமேனு தான் தோணுச்சு. அப்புறமா அர்ஜுன் திட்டும் போது தான் உங்களையும் அவளையும் பத்தி யோசிக்கலையேனு நினைவு வந்தது. மன்னிச்சிருங்க மா” 

“இங்க பாரு எனக்கு நீ வேற அர்ஜுன் வேற இல்லை. உங்க ரெண்டு பேர்ல யாருக்கு எந்த தீங்கு நடந்தாலும்  ஒரே மாதிரி தான் வலிக்கும், எந்த நல்லது நடந்தாலும் ஒரே மாதிரி தான் சந்தோஷ படுவேன். நடந்து முடிஞ்சதை பத்தி யோசிச்சு, பேசி ஒண்ணும் ஆகாதுனு நீதான் எனக்கு சொல்லிட்டு இருப்ப. இப்ப நீ ஏன் அப்படி உக்காந்திருக்க?” என்ற அன்னையை அமரந்த படியே கட்டிகொண்டான் விஷ்வா. அவனை அணைத்தபடி மெல்ல தலையையும் முதுகையும் வாஞ்சையாய் தடவி கொடுத்தார். சில நிமிடங்கள் மௌனமாய் கரைந்தது.

” என் வாழ்க்கை அனுபவத்தை வச்சு சொல்றேன். வாழ்க்கையோட விளையாட்டு நாம எதிர்பார்க்க முடியாத படி இருக்கும் விசு. எப்ப என்ன நடக்கும்னு சொல்ல முடியாது. அதுக்காக வாழாம பயந்து கிட்டு இருக்கவும் முடியாது. என்ன பண்ணாலும் ஒரு நாள் இறக்க தானே போறோம்னு வறட்டு வேதாந்தமும் பேச கூடாது. இருக்குற வரை நாமளும், நல்லபடியா வாழ்ந்து அடுத்தவங்களையும நல்லபடியா வாழ வைக்கணும் அட்லீஸ்ட் காயப்படுத்தாம இருக்கலாம். டைம் இஸ் எஸென்ஸ் அப்படீன்னு ஆங்கிலத்துல கேள்விபட்டிருப்பியே – எது செய்யணும்னாலும் காலத்தோடு செய்யணும். அன்பை வெளிப்படுத்தவோ, மன்னிப்பு கேக்கவோ, வருத்த்தை பகிர்ந்துக்கவோ எதுவாக இருந்தாலும் நாம நேசிக்கிறவங்க கிட்ட காலம் தாழ்த்தாம சொல்லிடணும். காலம் கடந்து பகிர படுற நேசம் கூட சில சமயம் விழலுக்கு இரைத்த நீர் போல னு வீணா ஆயிடும் கண்ணா” தன்னிடமிருந்து மகனை விலக்கி அவன் முகத்தை பார்த்து “முக்கியமா என்னைக்கும் ஈகோ வரவே கூடாது உறவுகளுக்குள்ளே அதுவும் கணவன் மனைவிக்குள்ள. இரு கூர் முனை கொண்ட வாள் மாதிரி கண்ணா அது, நம்மையும், நம்மை சேர்ந்தவங்களையும் காயப்படுத்தும்” மீண்டும் அன்னையை கட்டி கொண்டான்.

 “சாப்பிட வா, அப்புறமா யோசி. உன் சித்தி கவலை படுவா” என்று அவனை அழைத்து கொண்டு போனார். அர்ஜன் அன்னையை கட்டிபிடித்து அவன் பாணியில் மன்னிப்பு கேட்டு அவரை சிரிக்க வைக்க முயன்று கொண்டு தோற்று கொண்டிருந்தான். 

“ப்ரோ இன்னிக்கு என் மம்மிக்கும் லவ்வருக்கும் செம போட்டி ப்ரோ. யாரு எனக்காக பெட்டரா அழுவறாங்கனு. கமான் மாதா, இன்னும் நல்லா பெர்ஃபார்ம பண்ணு..” என கலாய்க்க. அவர் பட்டென அவன் முதுகில் ஒன்று வைத்து, “எல்லாமே விளையாட்டு தான்டா உனக்கு. கொஞ்சமாச்சும் என் கவலை புரியுதா பாரு. அவளுக்கும் எனக்கும் சண்டை மூட்டி விட பாத்த ராஸ்கல், நீ உங்க அப்பா சமையல் தான் சாப்பிடணும்” 

“அவருக்கும் எனக்கும் சூடு தண்ணி மட்டும் தான வெக்க தெரியும்” என அவன் யோசிக்க. 

“தெரியும். பட்டினி தான் கிடக்கணும்னு பாலிஷா சொன்னேன்”
“என் அண்ணன் எனக்கு..” என ஆரம்பிக்க
“அடிங்க… இந்த விஷயத்துல நானும் அம்மாவும் சித்திக்கு  தான் ஃபுல் சப்போர்ட்” என யமுனாவை பக்கவாட்டில் அணைத்துகொள்ள.
அவரும் கோபம் விடுத்து, “ஏண்டா தம்பி இப்படி பண்ணுன?” என ஆற்றாமையை அவன் பக்கம் திருப்ப. 

“சின்ன காயம் தான் சித்து. சின்ன வயசுல இந்த காலனியோட கட்டிட வேலை நடந்துட்டு இருந்தப்ப அவன் காலுல தகர ஷீட்டு கிழிச்சுதே, அதே அளவு தான் இருக்கு” அர்ஜனின்   வலது காலில் அந்த காயத்தை காட்டி நினைவு படுத்த.  

அவன் “ஹேய் ப்ரோ சேம் பிஞ்ச்” என சிறு பிள்ளை போல கிள்ள. விஷ்வாவும் சிரித்துகொண்டே அவன் தலையில் குட்டினான். 

யமுனா தலையில் அடித்து கொண்டு, “ஐயோ! இவனை கட்டிகிட்டு அவ என்ன பாடுபட போறாளோ? அபிராமி!” என அவர் இஷ்ட தெய்வத்தை அழைக்க. 

அவன் சீரியஸாக, “மா உன் மருமக பேரு சுகந்தி, நீ யாரோ அபிராமிய கூப்பிடுற” எனவும் 

அவர் “சீ போடா கிறுக்கா” என்று விட்டு பூஜை அறைக்குள் போய்விட. காவேரி பிள்ளைகள் இருவருக்கும் திருஷ்டி கழித்து முடித்து, திருநீறு இட்டார் நெற்றியில்.

சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்த பின் தான் உணர்நதான் அடிபட்டிருப்பது வலது கையில், “ஸ்பூன் குடுங்க சித்து” என்றான் இடது கையால் சாப்பிட எண்ணி.
“உன் ஆளை வேணா வர சொல்லலாமா ப்ரோ?” என்று கிசுகிசுத்தான் அர்ஜுன்.

 விஷ்வா புரியாமல் அவனை பார்க்க.
“பொண்டாட்டி ஊட்டி விட்டா செம குஜாலா இருக்கும் டா” என்க. 

“பக்கி வாயை மூட்றா” என அவன் காலை மிதித்தான். இருப்பினும் அவன் சொன்னதை நினைத்து வெட்கத்தோடு சிரித்து விட்டு உட்கார்ந்திருக்க அவன் முக மாறுதல் உள்ளிருந்து வந்த அவன் சி

த்துவின் கண்ணிலிருந்து தப்பவில்லை.
 “ம்மமி வருது, இளிப்பை குறை” என்று அண்ணனை எச்சரிக்கவும் தவறவில்லை அர்ஜுன். தட்டில் உணவு பரிமாறவும் மூர்த்தி உள்ளே வரவும் சரியாக இருந்தது.

 “அர்ஜுன்” என்ற அவர் குரலை கேட்டு நால்வரும் அவரை பார்க்க. “மருமக ரொம்ப பயந்துட்டா போல இருக்கு. அழுகையை சமாதானம் பண்ண முடியலைய்யா. நானும் பேசி பாத்துட்டேன். சாப்பிடவும் மாட்டேங்குறா. நீ கொஞ்சம் போய் பேசி, சமாதானம் பண்ணு டா. ஓயாம அழுது உடம்புக்கு எதாவது ஆகிட போகுது வீஸிங்க் வேற இருக்கே பா அவளுக்கு” என்றார் தவிப்புடன். அர்ஜுன் சட்டென எழுந்து வெளியேறினான். “அர்ஜுன்” அவர் மீண்டும் அழைக்க “மன்னிச்சிரு டா” அனைவருமே அதிர்ந்தனர்.

 “அப்பா! என்ன பா… நீங்க ஏன் பா…” என குரல் தழுதழுக்க ஸோபாவில் உட்கார்நதிருந்தவரின்  அருகே வந்து அவர் கையை பிடித்தவன். 

“இல்லைடா, நான் இன்னும் கூட கேர்ஃபுல்லா இருந்திருக்கணும். உன் ஜாதகத்துல இப்படி ஒரு ஆபத்து இருக்குனு தெரிஞ்சும் நான் இதை லைட்டா எடுத்திருக்க கூடாது. ஸாரி அர்ஜுன்!” என்றார் மகனின் கண் பார்த்து பேச முடியாமல். 

சரேலென அவரை அணைத்து கொண்டான் அர்ஜுன், “பா ப்ளீஸ் நீங்க இப்படி இருக்காதீங்க பா. யாரோ பண்ண தப்புக்கு நீங்க என்ன செய்வீங்க? உங்க சக்திக்கு உட்பட்டு என்ன பாதுகாப்பு குடுக்க முடியுமோ குடுத்தீங்க. அது தான் விபரீதம் எதுவும் நடக்கலையே. ஏன் கில்டியா ஃபீல் பண்றீங்க? நேர்மையாகவும் உண்மையாவும் நடக்க உங்க கிட்டேந்து தான பா கத்துக்கிட்டேன். கம்பெனி டைரக்டர்ல இருந்து எல்லாரும் என்னை அவ்வளவு பாராட்டுனாங்க அந்த பெருமை உங்களை தான் பா சேரும். சுகந்தி கொஞ்சம் பயந்த சுபாவம், ஆனா புரிஞ்சுக்குவா, நான் பேசறேன் நீங்க கில்டியா ஃபீல் பண்ணாதீங்க. விசு..” என்று அவனை அழைக்க. நீ போ என சைகை காட்டி அவர் அருகே உட்கார்ந்தான் விஷ்வா. அவளை பார்க்க மாடிக்கு சென்றான். விஷ்வா அவரை கட்டாயபடுத்தி சாப்பிட உட்காரவைத்தான்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by அனு

வணக்கம்! என் பெயர் அனு. நான் housewife, இரண்டு குழந்தைகளின் தாய். புத்தகம் வாசிக்க மிகவும் பிடிக்கும். எழுதும் ஆர்வமும் உண்டு. பள்ளி கல்லூரி நாட்களில் எழுதியது உண்டு, டைரியில். நீண்ட இடைவேளைக்கு பிறகு எழுதும் ஆர்வம் தலைதூக்க, இந்த வலைதளம் வடிகாலாய் அமைந்திருக்கிறது. எனது எழுத்துக்களை வாசிக்கும் அனைவரைககும் நன்றி. 

Story MakerContent Author

25 நினைவைத் தேடும் நிலவே

கை நீட்டி அழைக்கிறேன்- part 28