in

சொ(பொ)ல்லாத ரகசியங்கள் 31-35

அத்தியாயம் 31

உயரத்திலிருந்து ஆதீரன் தொப்பென கீழே விழ கையில் இருந்த கண்ணாடி துண்டை தூக்கி எறிந்து விட்டு ஷ்ராவ்யா அவனிடம் ஓடினாள். அவனது கழுத்தை தொட்டு பார்க்க அது கயிறு இறுகியதால் சிவந்து போயிருந்தது.

அவசரமாக அவனது இதயத்தில் காதை வைத்து கேட்டு பார்த்தாள். மெல்லியதாய் இதயம் துடிக்கும் சத்தம் கேட்க அவனை தூக்கி மடியில் படுக்க வைத்தாள்.

கண்ணீர் வழிந்து கொண்டே இருக்க அதை துடைக்க கூட தோன்றவில்லை. ஆதீரனுக்கு எதுவும் ஆக வில்லை என்று உறுதி படுத்திக் கொண்டவள் நிமிர்ந்து பார்த்தாள்.

“ஏன் மா… ஏன் இப்படி பண்ணுறீங்க? அந்த குடும்பமே கொல கார குடும்பம் தான். இல்ல னு சொல்லல. ஆனா அதுல அருள் மொழி உங்கள பாதுகாக்கலையா? உங்கள படிக்க வச்சு நல்ல வாழ்க்கைய அமைச்சு குடுக்கலையா? அவரோட பிள்ளை இவர் மட்டும் எப்படி தப்பானவரா இருப்பார்?

நீங்க செத்ததும் உங்கள அருள்மொழி தேடி அலைஞ்சுருக்கார் மா… உங்களுக்கு நியாயம் வாங்கி குடுக்க நினைச்சு இருக்கார். அதுக்கு தண்டனையா சாப்பாட்டுல விசம் வச்சு அவரையும் கொன்னு இருக்காங்க அந்த படுபாவிங்க..

நீங்க எப்படி உங்க பிள்ளைய இழந்துட்டு இருக்கீங்களோ .. அப்படி தான் இவர் அவரோட அப்பாவ அந்த பாவிங்களால இழந்துட்டு வாழ்ந்துட்டு இருக்கார். அவர போய்…

விட்ருங்க மா.. இந்த கோபத்த இதோட விட்ருங்க. ப்ளீஸ்…”

ஷ்ராவ்யா கண்ணீரோடு பேசி விட்டு கை கூப்ப தியா அவளை பார்த்தாரே தவிர எதுவும் சொல்ல வில்லை.

ஷ்ராவ்யா குனிந்து ஆதீரன் கழுத்தில் இருந்த கயிறு தடத்தை பார்த்தாள். அதை விரல்களால் வருடி விட்டு “ஆதீ… எந்திரிங்க.. ” என்று எழுப்பினாள்.

அவன் எழ வில்லை. முழு மயக்கத்தில் இருந்தான். அவன் முகத்தில் விழுந்த அவளது கண்ணீரை துடைத்து விட்டாள். ஷ்ராவ்யா மடியில் இருந்த ஆதீரனை பார்க்க தியா அவளருகில் வந்து தலையை தடவி கொடுத்தார்.

ஷ்ராவ்யாவால் அதை உணர முடியவில்லை. மெல்ல தடவி கொடுத்து விட்டு விலகி வெளியே நடந்தார். அதன் பின் வந்த தனேஷ்வரும் எதுவும் பேசாமல் மகளை ஆசிர்வதிப்பது போல் தலையில் கை வைத்து விட்டு சென்றார்.

சௌந்தர்யா மட்டும் “இனி உன் ஆதிக்கு எதுவும் ஆகாது .. பத்திரமா பார்த்துக்கோ” என்று கூறி விட்டு நடந்தார்.

குனிந்து ஆதீரனையே பார்த்துக் கொண்டிருந்தவள் அப்போது தான் நிமிர்ந்து பார்த்தாள். மூவரும் வாசல் நோக்கி செல்வதை… அதிர்ந்து எழ பார்க்க மடியில் ஆதீரன் இருந்தான்.

“ம்மா.. அப்பா.. அத்தை” என்று அவள் அழைக்க மூவரும் அவளை திரும்பி பார்த்தனர். ஷ்ராவ்யா அவர்கள் போகிறார்கள் என்று அதிர்ச்சியாய் பார்க்க தியாவின் முகத்தில் புன்னகை வந்தது. அதே நேரம் மற்றவர்களும் புன்னகைத்து விட்டு திரும்பி நடந்தனர்.

தன் மகள் தனக்காக யோசிக்கவில்லையோ என்ற வருத்தம் தியாவை விட்டு இப்போது விலகியது.

ஷ்ராவ்யா அவசரமாக கை நீட்டி அவர்களை தொட முயற்சித்தாள். அவள் தொட முடியாத தூரத்திற்கு சென்றவர்கள் மீண்டும் அவளை பார்த்து புன்னகைத்து விட்டு வெளிச்ச புள்ளிகளாக மாறி மறைந்து போனார்கள்.

ஷ்ராவ்யா அதிர்ந்து போய் அமர்ந்து விட்டாள். அவளது குடும்பம் மொத்தமாக அவளை விட்டு பிரிந்து விட்டது. அதை நினைக்கும் போது இதயம் வலித்தது. அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்து விட வீட்டை சுற்றி இருந்த கரு மேகம் மெல்ல விலகியது.

கொஞ்சம் கொஞ்சமாக வீட்டிற்குள் வெளிச்சம் வர அந்த வெளிச்சத்தில் ஆதீரன் கண் விழித்தான். ஷ்ராவ்யா அவனை கவனிக்கவில்லை. மறைந்து போன தன் குடும்பத்தை தான் நினைத்துக் கொண்டு இருந்தாள்.

ஆதீரன் அவளை பார்த்து விட்டு எழுந்து அமர்ந்தான். வீட்டில் இருந்த வெளிச்சத்தை பார்த்தவனுக்கு எல்லாம் புரிந்தது. அசையாமல் அமர்ந்து இருந்த ஷ்ராவ்யாவை பார்த்தான்.

கையில் வழிந்த இரத்தத்தை கூட உணராமல் அமர்ந்து இருந்தாள். அவளது துப்பாட்டாவை எடுத்து கையில் கட்டு போட்டு விட்டான். ஷ்ராவ்யா அவனிடம் கையை கொடுத்து விட்டு வாசலையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.

அவளது கழுத்தை திருப்பியவன் எழுந்து நின்று அவளையும் எழுப்பினான். பொம்மை போல் எழுந்து நின்றவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான். அந்த வீட்டை சுற்றி இருந்த இருள் எல்லாம் மறைந்து போயிருந்தது. அதை பார்த்து பெரு மூச்சு விட்டவன் ஷ்ராவ்யாவை அழைத்துக் கொண்டு வந்து காரில் ஏறினான்.

அவன் கழுத்தில் இன்னும் வலி இருந்தது. அதை தடவிக் கொண்டே காரை ஓட்டி வீட்டிற்கு வந்து விட்டான். சந்தானலட்சுமி இல்லாததால் அவனே வீட்டை திறந்து அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.

முதல் வேலையாக ஷ்ராவ்யாவின் காயத்தை துடைத்து மருந்து போட்டான். ஆதீரன் இவ்வளவு செய்தும் ஷ்ராவ்யாவிடம் அசைவே இல்லை. வெறித்த பார்வையோடு தான் இருந்தாள்.

தன் கழுத்து வலிக்கு மருந்தை தடவிக் கொண்டவன் அவள் அருகில் வந்து நின்றான். ஷாயா நிமிராமல் இருக்க அவள் கையை பிடித்து எழுப்பி நிற்க வைத்தான்.

அவள் பின் தலையில் கை வைத்தவன் இழுத்து தன் தோளில் சாய்த்துக் கொள்ள… அதற்காகவே காத்திருந்தது போல் ஷ்ராவ்யா அழுது விட்டாள். அவளது அழுகையில் ஆதீரனின் கண்ணும் கலங்கி விட்டது. அவன் ஒரு தோளில் சாய்ந்து இருந்தவள் மறு தோளை அடிக்க ஆரம்பித்தாள்.

“ஏன் இப்படி பண்ணீங்க..? ஏன் போனீங்க? நான் ஒரு அஞ்சு நிமிஷம் லேட்டா வந்து இருந்தா என்ன நடந்துருக்கும் தெரியுமா? ஏன்? ஏன் போனீங்க?”

ஒவ்வொரு கேள்விக்கும் அவனை அடித்துக் கொண்டே இருந்தாள். ஆதீரன் அவளை தடுக்கவில்லை. வேகமாக அவனிடமிருந்து தலையை விலக்கியவள் அவனது சட்டை காலரை பிடித்தாள்.

“இப்போ எல்லாரும் போயிட்டாங்க… என்ன விட்டு போயிட்டாங்க.. மறுபடியும் நான் அனாதையாகிட்டேன். திருப்பி குடுங்க.. எனக்கு என் அப்பா அம்மா அத்தை எல்லாரும் வேணும். குடுங்க”

காலரை பிடித்து உலுக்கி அவள் கேட்க ஆதீரனுக்கு எதுவும் பேச முடியவில்லை. காலரை விட்டவள் வேகமாக அவனை அணைத்துக் கொண்டு அழுதாள்.

“எனக்கு அம்மா வேணும்.. அப்பா வேணும்.. அத்தை வேணும்” என்று மாற்றி மாற்றி சொல்லி அழுது கொண்டே இருந்தாள். ஆதீரன் அவளை அணைத்து முதுகையும் தலையையும் தடவிக் கொண்டே இருந்தான்.

சில நிமிடங்கள் ஷ்ராவ்யா அழுகையிலேயே கழிக்க திடீரென அழுகை நின்று விட்டது. தோளில் இருந்தவள் மயங்கி விழப்போக அவசரமாக தாங்கி பிடித்தான்.

அவளை படுக்க வைத்து முகத்தில் நீரை தெளிக்க எழுந்திரிக்கவில்லை. மருத்துவரை அழைக்க போக மேகலா அழைத்தாள்.

“சார் … ஷ்ராவ்யாவ பார்த்தீங்களா? வீட்டுல அவ இல்ல”

“இங்க என் கூட தான் இருக்காங்க. ரொம்ப அழுது மயங்கிட்டாங்க”

“அய்யோ ஏன்? நாங்க வரோம்” என்றவள் வேகமாக கிளம்பினாள்.

அவர்கள் வரும் வரை ஆதீரன் ஷ்ராவ்யாவின் பக்கத்தில் அமர்ந்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

தியாவிடம் அவள் பேசியது எல்லாம் நியாபகம் வந்தது. அவனை காப்பாற்ற ஷாயா இவ்வளவு போராடுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. கடைசியில் அவள் கையை கிழித்து தன்னையே தண்டித்துக் கொள்ளும் போது ஆதீரனுக்கு உயிரே போனது.

அவளை புரிந்து கொள்ளாமல் கை நீட்டி அடித்ததை நினைத்து இப்போது ரொம்பவும் வருத்தப்பட்டான். கடைசியாக அவள் கழுத்தில் கண்ணாடி துண்டை வைத்ததும் மயங்கி விட்டான்.

அடுத்து என்ன நடந்தது என்று அவனுக்கு தெரியவில்லை.‌ ஆனால் ஷ்ராவ்யா அவள் குடும்பம் பிரிந்த போது துடித்து இருப்பாள் என்று தோன்றியது.

அவள் கையை பிடித்துக் கொண்டவன் “மன்னிச்சுடு மது.. உன்ன புரிஞ்சுக்காம போனதுக்கு என்ன சாக விட்ருக்கலாம். அவ்வளவு போராடி என்ன காப்பாத்தி இருக்க வேணாம்” என்றான்.

பிறகு அமைதியாக அவள் முகத்தை பார்த்துக் கொண்டு இருக்க ஷாயாவின் நண்பர்கள் வந்து சேர்ந்தனர்.

என்ன நடந்தது என்று கேட்டால் ஆதீரன் வாயை திறக்கவில்லை. ஆனால் அழுது தான் மயங்கினாள் என்று கூறினான்.

“அழுது மயங்கினா அவளா தான் எந்திரிக்கனும் சார். விடுங்க” என்று ரமணி கூறி விட எல்லோரும் ஷாயா எழ காத்திருந்தனர்.

இரண்டு மணி நேரத்தை மயக்கத்தில் கடத்தி விட்டு ஷாயா கண் திறந்தாள். அவளருகில் அமர்ந்திருந்த ரமணி “இப்ப எப்படி இருக்கு? ” என்று கேட்டு தண்ணீரை கொடுத்தாள்.

அதை குடித்த ஷ்ராவ்யா எதுவும் பேசவில்லை. சில நிமிடங்களுக்கு பிறகு “கிளம்பலாம்” என்றாள். மற்றவர்கள் அவளை அழைத்துக் கொண்டு அவர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு வந்து விட்டனர்.

நாளை சென்னைக்கு‌ கிளம்ப வேண்டும்‌ என்று அவள்‌ கூற “அதெல்லாம் முடியாது. உடம்பு சுடுது . காய்ச்சலோட ட்ராவல் எல்லாம் ஒன்னும் பண்ண வேணாம். பொங்கல் முடிஞ்சு போயிக்கலாம்” என்று சித்ரா கூறினாள்.

“பொங்கலுக்கு எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்கு போறதா தான‌ முடிவு பண்ணி இருந்தோம்”

“அதுனால என்ன? எத்தனையோ பங்சன வெளிய நாம கொண்டாடுனது இல்லையா? இதையும் இங்கயே பாரத்துக்கலாம். முதல்ல சாப்ட்டு மாத்திரை போடு” என்று அதட்டி சாப்பிட வைத்தாள்.

மருந்தை உண்டு விட்டு படுத்த ஷ்ராவ்யா நன்றாக உறங்கிப்போனாள். அடுத்த நாள் மாலை வரை இருந்த காய்ச்சல் மெல்ல மெல்ல குறைந்து காணாமல் போனது.

வீட்டு வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ஆதீரனிடம் கூற அந்த வீட்டை சென்று பார்க்க ஆதீரனுக்கு பிடிக்கவில்லை. வேலை முடிந்ததோடு விட்டு விட்டான்.

மாலை ஆதீரனிடம் பேசி விட்டு வந்தவர்கள் ஷாயாவை அழைத்துக் கொண்டு வெளியே கிளம்பி விட்டனர். வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பதும் நல்லதல்லவே.

தைத்திருநாள்… எல்லோருக்கும் அருமையாக விடிய ஷ்ராவ்யா உற்சாகமாக எழுந்தாள். நேற்று இரவு யோசித்ததன் பலன். தன்னை விட்டு பிரிந்த பெற்றோர்கள் சொர்க்கத்தில் நிம்மதியாக இருப்பார்கள். அவர்களை நினைத்து கவலை பட்டு அவர்களையும் கவலை படுத்த வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.

எழுந்து குளித்து நேற்று நண்பர்கள் வற்புறுத்தி வாங்க வைத்த உடையை அணிந்து கொண்டாள். நீள பாவாடை வட நாட்டு மக்கள் அணிவது போல் இருக்க மேலே அழகாக தாவணி கட்டிக் கொண்டாள்.

அவள் குளித்து முடித்து வரும் போதே சித்ரா பொங்கல் வைக்க ஆரம்பித்து விட்டாள். இடையில் சென்று குழப்பாமல் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தாள்.

அவளருகில் யாரோ வந்து நிற்க திரும்பி பார்த்தாள். ஆதீரன் நின்று இருந்தான்.

“ஹாய்.. ஹாப்பி பொங்கல்” என்று ஷ்ராவ்யா கூற ஆதீரனும் பதில் கூறினான்.

“என்ன சிம்பிளா இருக்கீங்க? “

“வீட்டுல துக்கம் நடந்துருக்கு.சோ பொங்கல் கொண்டாட முடியாதே”

“ஓஓஓ… யாரு பா இதெல்லாம் கண்டு பிடிச்சா? சுத்த போர்”

“எதுக்கும் ஒரு காரணம் இருக்கும் ஷ்ராவ்யா”

“ஓகே ஓகே.. லீவ் இட்.. நான் எப்படி இருக்கேன்?”

அவளை மேலும் கீழும் பார்த்தவன் “பதில் கண்டிப்பா வேணுமா?” என்று கேட்டான்.

“அவ்வளவு கஷ்டப்பட்டு நீங்க ஒன்னும் சொல்ல வேணாம் . நான் போய் வேற ஆளு கிட்ட கேட்டுக்குறேன்”

“யாரு அது?”

“நான் தான்” என்ற பதில் வேறு பக்கம் இருந்து வந்தது. அந்த குரலை கேட்டதும் ஷ்ராவ்யா ஆச்சரியத்துடன் திரும்பினாள். இந்திரஜித் அவளை முறைத்துக் கொண்டு நின்று இருந்தான்.

“ஜித்து…” என்றவள் தன் நீள பாவாடையை தூக்கிக்கொண்டு அவனை நோக்கி ஓடினாள். அவள் ஓடிவந்து அவனது கையை கட்டிக் கொண்டு தோளில் சாய்ந்த போதும் இந்திரஜித் முறைப்பதை நிறுத்தவில்லை.

“ஜித்து டியர்… ஐ ரியலி மிஸ் யூ… ” என்று கொஞ்சும் குரலில் கூற அவன் அவளை கொலைவெறியோடு பார்த்து வைத்தான்.

“ஆமா.. எப்ப வந்த? எப்படி வந்த?” என்று கேட்டவள் அப்போது தான் கோபத்தை கவனித்தாள்.

“என்னாச்சு?”

“நீ என்ன மிஸ் பண்ணியா? யார் காதுல பூ சுத்துற?” என்று கேட்டவன் அவள் காதை பிடித்து திருகினான்.

“ஆஆஆ… வலிக்குது… வலிக்குது” என்று நின்ற இடத்திலேயே ஷ்ராவ்யா குதிக்க “குதிக்காத. லாங் ஸ்க்கர்ட் தட்டி விழுந்துடுவ” என்றான்.

“அப்போ காத விடு” என்றதும் உடனே விட்டு விட்டான்.‌ ஷாயா அந்த காதை நன்றாக தேய்த்து விட்டாள். அதில் அவளது கையில் இருந்த கட்டை இந்திரஜித் கவனித்து விட்டான். ஆனால் அதை பற்றி விசாரிக்காமல் “எங்க உன் போன்?” என்று கேட்டான்.

“என் போனா?” என்று முழித்தவள் “ஆமா.. எங்க என் போன்?” என்று கேட்டு வைத்தாள்.

“என் கிட்டயே திருப்பி கேளு…” என்றவன் பல்லை கடிக்க ஷ்ராவ்யா “ஹி…” என்று பல்லை காட்டினாள்.

“சரி பா.. கோச்சுக்காத…” என்று கூறியவள் போனை எங்கே விட்டோம் என்று யோசித்தாள்.

“அட அது ஆதீரன் சார் வீட்டுல தண்ணிக்குள்ள விழுந்துச்சு” என்றவள் தலையிலடிக்க போக இந்திரஜித் வேகமாக அவளது கையை பிடித்து தடுத்தான்.

“நல்ல நாள் அதுவுமா தலையில அடிக்காதடி மக்கு” என்று திட்ட “ஓகே ஓகே.. அடிக்கல… நீ கோச்சுக்காத.. நானே பாவம்” என்றவள் அவனது இரண்டு கையை பிடித்து ஆட்டி முகத்தை சுருக்கி பாவமாக பார்த்தாள்.

அவளிடமிருந்து ஒரு கையை விலக்கியவன் கழுத்தை சுற்றி போட்டு தன்னை நோக்கி இழுத்துக் கொண்டான்.

“ஆமா இது என்ன கோலம்?” என்று அவளது உடையை காட்ட அவசரமாக அவனிடமிருந்து தள்ளி நின்றாள்.

“எப்படி இருக்கு? நல்லா இருக்கா? ” என்று கேட்டு தன்னை திருப்பி காட்ட “சூப்பர் டியர். பட் இத எப்போ வாங்குன?” என்று கேட்டான்.

“நேத்து தான்.. இவளுங்க சேலை தான் வாங்கனும் னு அடம்பிடிச்சாளுங்க. நான் என்னைக்கு சேலை கட்டி இருக்கேன்? அதான் ட்ரடிஸனலா இருக்கட்டும் னு இத வாங்கிட்டேன்”

“இது நம்ம ட்ரடிஸனலா? யாரு சொன்னா? இது நார்த் சைட் போடுற ட்ரஸ்”

“அட விடேன் டா. எனக்கு இது தான் பிடிச்சது. வாங்கிட்டேன். ஆமா நீ ஏன் இங்க வந்த?”

“ம்ம்… இந்த ஊர சுத்தி பார்க்க… அப்படியே போட்டேன்னா… போனுல அழுதுட்டு கட் பண்ணிட்ட.. உன் ஃப்ரண்ட் எல்லாம் உன்ன காணோம் னு சொல்லிடுச்சுங்க. பதறி கிளம்பி வந்துருக்கேன். கேள்வி கேளு”

“திரும்ப பேசி இருக்க வேண்டியது தான.. நான் நல்லா தான் இருக்கேன்”

“பார்த்தாலே தெரியுது.. நேத்து முழுக்க காய்ச்சல்ல இருந்தது கொஞ்சம் கூட தெரியல”

“காய்ச்சல் சரியா போச்சு பா” என்று பேசிக் கொண்டே போனவளுக்கு திடீரென ஆதீரனின் நியாபகம் வந்தது.

வேகமாக ஆதீரன் இருந்த பக்கம் திரும்பி பார்த்தாள். ஆதீரன் அவளை தான் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்று இருந்தான்.

அவனுக்கு தெரிந்த ஷ்ராவ்யா புத்திசாலி. இப்படி வார்த்தைக்கு வார்த்தை ஒருவனிடம் திட்டு வாங்குவதை இப்போது தான் பார்க்கிறான். அதிலும் இந்திரஜித்தை பார்த்ததும் குழந்தை போல் அவள் ஓடியது அவனுக்கு புதிதாக இருந்தது.

பார்வை மாற்றாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க ஷ்ராவ்யா நாக்கை கடித்தாள்.

“ஹே இவர சொல்ல மறந்துட்டேன். இவர் தான் ஆதீரன்” என்று கை காட்டி விட்டு இந்திரஜித்தை ஆதீரனிடம் அழைத்துச் சென்றாள்.

“சாரே.. இவன் தான் என் ஜித்து.. இந்திரஜித்”

இந்திரஜித் கை நீட்ட ஆதீரன் சிறு புன்னகையுடன் கை குலுக்கினான். ஆதீரன் எதோ பேச வர சித்ரா எல்லோரையும் அழைத்தாள்.

பொங்கல் பானையில் பால் நன்றாக பொங்கி வர எல்லோரும் கடவுளுக்கு நன்றி தெரிவித்தனர். பிறகு அதில் அரிசி போடும் வேலை ஷ்ராவ்யா விற்கு கொடுக்கப்பட அவள் வேலையில் இறங்கி விட்டாள்.

ஆதீரன் சற்று தள்ளி நிற்க இந்திரஜித் அவனருகில் வந்து நின்றான்.

“உங்க தோப்ப கொஞ்சம் சுத்தி காட்டுங்களேன்” என்று கூற “ம்ம் போகலாமே” என்று ஆதீரன் அவனை அழைத்துச் சென்றான்.

சற்று தூரம் நடந்ததுமே “ஷாயா கையில கட்டு எப்படி?” என்று கேட்டான். ஆதீரனுக்கு உடனே பதில் சொல்ல முடியவில்லை. அவன் மௌனம் காக்க “ஷாயா கிட்ட கேட்ருவேன். ஆனா இப்ப இருக்க அவளோட நல்ல மூட் கெட்டு போயிடும். அதான் உங்க கிட்ட கேட்குறேன். ஏன் கை கட் ஆகி இருக்கு?” என்று மீண்டும் கேட்டான்.

“கட் பண்ணிகிட்டாங்க. என்னால தான்”

“உங்களாலயா? இல்ல உங்களுக்காக வா?”

“எனக்காக”

“நினைச்சேன்”

“எத?”

பதில் சொல்லாமல் ஒரு புன்னகையுடன் இந்திரஜித் முன்னால் நடந்தான்.

அத்தியாயம் 32

“உங்க ஊர் நல்லா இருக்கு.. பசுமையா …‌ இயற்கை மாறாம… மொத்த தேனியே இப்படி தான்‌ இல்ல?”

இந்திரஜித் கேட்க ஆதீரன் மௌனமாக ஆமோதித்தான். இந்திரஜித் சற்று முன் சொன்ன வார்த்தையில் குழம்பி இருந்ததால் அவன் வாய் திறந்து எதுவும் பேசவில்லை.

அங்கிருந்த தென்னை மரங்களை பார்த்து விட்டு “ஷாயாக்கு இளநி னா ரொம்ப பிடிக்கும். சென்னை போனா அத தான் எப்பவும் வாங்கி குடிச்சுட்டே இருப்பா” என்று கூற ஆதீரன் “ஓ..” என்றான்.

அதன்‌ பின் இந்திரஜித் பேசிய வார்த்தைகளில் எல்லாம் ஷாயா மட்டுமே இடம் பெற்றாள். அதை கவனித்த ஆதீரன் “ஷ்ராவ்யாவ உங்களுக்கு எத்தனை வருசமா தெரியும்?” என்று கேட்டான்.

இந்த கேள்விக்காக தானே இந்திரஜித் காத்து இருந்தான். ஆனால் அந்த கேள்வி வந்ததும் உடனே பதில் சொல்லவில்லை. கைகளை பேன்ட்‌ பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டு மெதுவாக நடந்தான்.

“எட்டு வருசத்துக்கு முன்னாடி… எங்கப்பா ஒரு பொண்ண நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டார். அவருக்கு ஹெல்ப் பண்ண ஹாஸ்பிடல் போனேன்..

அப்போ தான் ஒரு பொண்ண பார்த்தேன். பதினேழு வயசு தான். ஆனா அந்த வயச விட அதிகமான மனமுதிர்ச்சியோட இருந்தா.

யூ நோ… ஒரு பதினஞ்சு வயசு பொண்ணுக்கு கனவு வருது… அந்த கனவு சரியா நைட் ரெண்டு மணிக்கு வருது. சாதாரண கனவு இல்ல. அந்த கனவுல ரெண்டு பேர பார்க்குறா…

ஒன்னு சின்ன குழந்தை.. இன்னொன்னு ஒரு ஆணோட முகம்‌.. இந்த கனவுல அவ்வளவு பெரிசா‌ எதுவும் இல்ல தான்… ஆனா தினமும் ரெண்டு மணிக்கு அந்த கனவு வந்தா ? நீங்களாவோ நானாவோ இருந்தா நிச்சயமா பயந்துடுவோம்.

ஆனா அந்த பொண்ணு ரெண்டு வருசம் யாரு கிட்டையும் சொல்லாம தனியா தாங்கி இருக்கா… அந்த கனவு வந்து முழிச்சா… அழுகை வருமாம். தனியாவே அழுதுருக்கா. தனியாவே அத்தனையும் தாங்கி இருக்கா..

காரணம் என்ன னு உங்களுக்கு தெரிஞ்சு‌ இருக்கனுமே? அவளோட‌ உண்மையான அம்மா அப்பா யாரு னு அவளுக்கு தெரியாது. தத்தெடுத்து வளர்க்குறவங்கள அவ கஷ்டப்படுத்த விரும்பல.

பதினஞ்சு வயசு … ஒரு வயசு கூட போனா காதலிக்கலாம் னு சொல்லுறாங்க. எனக்கு தெரிஞ்சு யாருக்கும் இவ்வளவு பக்குவம் அந்த வயசுல வராது.

ஆனா கண் முன்னாடி பார்த்தேன்‌ வயசுக்கு‌ மீறின பாரத்த மனசுல சுமந்துட்டு.. துணையா யாரையும் தேடாம தனியா உட்கார்ந்து இருந்தா…

ரெண்டு வருசமா கனவு வந்தத யாரு கிட்டயும் சொல்லல. மத்தவங்க தான் கண்டு பிடிச்சு இருக்காங்க. அப்பவும் கூட வாய திறந்து என்ன கனவு னு அவ சொல்லல.

அந்த பொண்ணு என் கிட்ட சொன்னா… எல்லாத்தையும் சொன்னா… என் பேர் கூட தெரியாம என்ன நம்பி சொன்னா.. அப்போ முடிவு பண்ணேன். அவள கடைசி வர பாதுகாக்கனும் னு..

அவளோட தனிமைய துரத்தனும் னு… அவ என் மேல வச்ச நம்பிக்கைய உயிரே போனாலும் உடச்சுட கூடாது னு… இன்னும் நிறைய…”

இந்திரஜித் ஒரு நொடி நிறுத்தி விட்டு மரத்தில் சாய்ந்து நின்றான். ஆதீரன் அவனுக்கு எதிரில் இருந்த மரத்தில் சாய்ந்து கொண்டான். ஆனால் பார்வை மட்டும் தொடுவானில் இருந்தது.

ஷ்ராவ்யா கஷ்டத்தை கேட்கும் போது அவனும் அவனது குடும்பமும் நிம்மதியாய் வாழ்ந்ததை நினைத்து கேவலமாக இருந்தது. இடைவெளி விட்டு நிறுத்திய இந்திரஜித் ஆதீரனை ஆராய்ந்து பார்த்தான்.

பிறகு உதட்டில் புன்னகையுடன் “இதெல்லாம் ஏன் சொல்லுறேன் னு நினைக்கிறீங்க?” என்று கேட்டு வைத்தான். ஆதீரன் அவனை திரும்பி பார்க்க இந்திரஜித் பதில் சொல்லாமல் புன்னகையுடன் பார்த்தான்.

“ஏன்…?”

“யோசிங்க” என்றவன் மீண்டும் நடந்தான். நான்கடி நடந்தவன் “ஒன்றரை மாசமா வராம இப்ப ஏன் வந்துருக்கேன் தெரியுமா?” என்று கேட்டு நிறுத்தினான். ஆதீரன் எதுவும் பேசாமல் நிற்க இந்திரஜித் திரும்பி பார்த்தாள்.

ஆதீரன் மரத்திலிருந்து அகன்று இந்திரஜித்தை நோக்கி வர “ஷாயாவ திரும்ப கூட்டிட்டு போக” என்றான். நடந்து கொண்டிருந்த ஆதீரன் ‌சட்டென நின்று விட இந்திரஜித் வந்த பாதையை நோக்கி திரும்பி நடந்தான்.

ஆதீரன் அதிர்ந்து நிற்க இந்திரஜித்தின முகத்தில் புன்னகை மட்டுமே…

இந்திரஜித் வந்த பாதையில் நடந்து கொண்டிருக்க ஷ்ராவ்யா தூரத்தில் வந்து கொண்டிருந்தாள். அவளை பார்த்ததும் இந்திரஜித் ஓடிச்சென்றான்.

ஓடி அவள் முன்னால் போய் நிற்க ” இந்தா ஜித்து பொங்கல்…” என்று நீட்டினாள். வாழை இலையில் வைத்திருந்த பொங்கலை அவன் எடுக்க போக “நானே பண்ணேன்” என்றாள்.

கையை எடுத்து விட்டு அவளை முறைத்தவன் “நீ? பொங்கல்? சித்ராவோ ரமணியோ பண்ணிருக்குங்க” என்றவன் வேறு பக்கம் நடந்தான்.

“டேய்.. நான் தான் டா பண்ணேன்”

“அது எவனாவது தலையில கேனையன் னு எழுதி ஒட்டி இருப்பான். அவன் கிட்ட சொல்லு. நம்புவான்”

“ஹி.. அது நீ தான”

இந்திரஜித் திரும்பி அவள் தலையில் நறுக்கென கொட்டு வைத்து விட்டு கை கழுவினான்.

“ஆ… வலிக்குது டா… ” என்று அவள் தலையை தேய்க்க “பொய் சொன்னா இப்படி தான்” என்று கூறி விட்டு இப்போது பொங்கலை எடுத்துக் கொண்டான்.

“நான் தான் டா அரிசி போட்டு நெய் ஊத்தி எல்லாம் பண்ணேன்”

“இங்க பாரு ஷாயா… உன் வேலையில நீ உலகளவுல சாதிச்ச னு சொல்லு.. கண்ண மூடிட்டு நம்புறேன். சமையல்ல சுடு தண்ணி வச்ச னு சொன்னா கூட சத்தியமா நம்ப மாட்டேன்”

“ஏன் சுடு தண்ணி வைக்கிறது பெரிய விசயமா? தண்ணிய பிடிச்சு அடுப்புல வைக்கனும்”

“முதல்ல அடுப்ப ஆன் பண்ணனும்”

“ஆமா ஆன் பண்ணனும்” என்று வேகமாக பதில் சொன்னவள் அவன் கிண்டல் செய்வதை புரிந்து கொண்டு கீழே தேடி கல்லை எடுத்தாள்.

அவள் கல்லை தேடும் போதே இந்திரஜித் தூரமாக ஓடி விட்டான். கல்லை எடுத்து விட்டு நிமிர்ந்தவள் அவன் ஓடுவதை பார்த்து விட்டு “டேய் … நில்லு” என்று கத்தினாள்.

அவன் நிற்காமல் ஓட ஷாயாவும் துரத்தி ஓடினாள். தூரமாக சென்றவன் “ஓடி வராத… ஸ்கர்ட் தட்டி விழுந்துடுவ” என்று கத்திக் கொண்டே சென்று விட்டான்.

அவன் சொன்னது போல் அடுத்த அடியில் பாவாடை கொலுசில் மாட்டியது. தடுமாறியவள் அப்படியே நின்று விட்டாள். ஒரு கையில் கல்லும் மறு கையில் பொங்கல் வைத்திருந்த தட்டும் இருக்க கல்லை தூக்கி எறிந்தாள்.

பிறகு குனிந்து கொலுசை பார்க்க திடீரென யாரோ அவளை தூக்கி விட்டனர். அதிர்ச்சியில் துள்ள போக “நான் தான் வெயிட்” என்றான் ஆதீரன்.

‘இவனா’ என்று பார்த்தவளுக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. அவள் அதிர்ச்சியிலிருந்து வெளியே வரும் முன்பே ஆதீரன் அவளை ஒரு கல்லில் அமர வைத்து கொலுசில் சிக்கியிருந்த நூலை விடுவித்தான்.

“தாங்க்ஸ்” என்றவள் எழுந்து நின்றாள்.

ஆதீரன் பதில் சொல்லாமல் மௌனமாக நடக்க ‘இவனுக்கு என்ன ஆச்சு?’ என்று யோசனையோடு பார்த்து விட்டு ஷாயாவும் நடந்தாள்.

சிறிது தூரம் நடந்த பிறகு தான் நியாபகம் வந்தது ஷ்ராவ்யாவுக்கு. ஆதீரனுக்கும் சேர்த்து தான் பொங்கலை எடுத்து வந்திருந்தாள்.

“ஸ்ஸ்… மறந்துட்டேன் பாருங்க… இந்தாங்க … பொங்கல்” என்று நீட்டினாள்.

ஆதீரன் யோசிக்க “ஹலோ… நீங்க பொங்கல் கொண்டாட கூடாது தான். நாங்க செஞ்சு குடுத்தா சாப்டலாம். அதுலையும் தப்பு னா சாமி என் கண்ண குத்தட்டும். புடிங்க ” என்று தட்டோடு அவனிடம் கொடுத்து விட்டாள்.

ஆதீரன் புன்னகைத்து விட்டு “கை கழுவிட்டு சாப்புடுறேன்” என்றான். இருவரும் நடந்து வீட்டின் அருகில் வந்து விட “ஷ்ராவ்யா…” என்று ஆதீரன் அவளை நிறுத்தினான்.

“என்ன?”

“சாரி…”

“எதுக்கு?”

“உன்ன புரிஞ்சுக்காம … அன்னைக்கு கோபப்பட்டு….”

“ஓஓஓ… இட்ஸ் ஓகே விடுங்க” என்று சொல்லி விட்டு திரும்ப இந்திரஜித் வந்தான்.

“என்ன வச்சுட்டே இருக்கீங்க சாப்டுங்க” என்று அவனும் கூற ஆதீரன் தலையாட்டி வைத்தான்.

‘என்ன ?’ என்று ஷாயாவை பார்க்க “ஆதீரன் சார் என்ன அடிச்சதுக்கு வருத்த படுறார்” என்றாள்.

“என்னது??? அடிச்சாரா???? இது எங்கயோ இடிக்கிதே” என்று அதிர்ச்சியில் ஆரம்பித்து யோசனையில் வந்து நிறுத்தினான் இந்திரஜித்.

இந்திரஜித்தின் கையை பிடித்து ஆட்டிக் கொண்டே “ஹி… பதிலுக்கு நானும் அடிச்சேன்” என்றாள் ஷாயா.

இந்திரஜித்தின் ஆச்சரியம் விலகி சிரிப்பு வந்தது.

“இப்போ பர்ஃபெக்ட்டா இருக்கு… நீயாவது யாரையும் சும்மா விடுறதாவது”

“பட் நான் அடிச்சதுக்கு சாரியெல்லாம் கேட்க மாட்டேன் சாரே… உங்களுக்கு உண்மை எல்லாம் தெரியாது தான். ஒத்துக்குறேன். ஆனா அதுக்காக கோபத்துல கை ஓங்குவீங்களா?

நீங்க என் கிட்ட கேட்ட கேள்விக்கு பதில நீங்களே தேடி கண்டு பிடிச்சு இருக்கலாம். அப்படி இல்லனாலும் கொஞ்சம் பொறுமையா நடக்குறத வேடிக்கை பார்த்து இருக்கலாம்.

நான் ஊர விட்டு போறதுக்கு முன்னாடி அவங்கள பேசி அனுப்பி வச்சுட தான் நினைச்சு இருந்தேன். ஆனா‌… நீங்க நடுவுல கோவ பட்டு… எங்கயோ வந்து முடிஞ்சுடுச்சு”

ஷாயா வருத்தமாக கூற இந்திரஜித் அவளது தோளில் கை போட்டுக் கொண்டான்.

“விடுங்க.. அதெல்லாம் ஏன் பேசி கிட்டு… நீங்க சாப்டுங்க” என்று ஆதீரனிடம் கூறி விட்டு ஷாயாவை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.

யாரும் இல்லாத இடத்தில் வந்ததும் என்ன நடந்தது என்று விசாரித்தான். ஷாயா கனவில் ஆரம்பித்து தன் கையை கிழித்துக் கொண்டது வரை எல்லாவற்றையும் கூறி விட்டாள்.

“அவங்க போனத நினைச்சு தான் அழுது காய்ச்சல் வந்துடுச்சு… உனக்கு சொல்லனும் னு மறந்தே போயிட்டேன்”

“பரவாயில்ல.. இப்பவும் வருத்தப்படுறியா?”

“இல்ல… சாகும் போது கூட நிம்மதியா சாகாம என்ன நினைச்சு பயந்துட்டே உயிர விட்டவங்க என் அம்மா.. அவங்க இப்போ தான் நிம்மதியா சொர்க்கத்துல இருக்காங்க. இப்போவும் அவங்கள வருத்த படுத்த நான் விரும்பல”

“தட்ஸ் மை கேர்ள்” என்றவன் அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

“ஆமா நீ ஏன் கிளம்பி வந்த?”

“நீ அழுது மயங்கிட்ட னு கேட்டுட்டு எப்படி அங்கயே இருப்பேன்? உன்ன அழுகவே கூடாது னு சொல்லி இருக்கேன். ஆனா நீ கொஞ்ச நாளா அழுறத மட்டுமே வேலையா வச்சு இருக்க. அங்க வேலை பார்க்கவே முடியல.

எல்லா அப்பாயிண்ட்மண்டையும் வேற டாக்டர்ஸ்க்கு மாத்திட்டு உடனே கிளம்பிட்டேன். இப்ப நீயா மாறி இருக்க.. அதுவே போதும். ஆனாலும் செக்கப் இருக்கு. ஈவ்னிங்கே சென்னை கிளம்பலாம்”

“என்னது ? ஈவ்னிங்கே வா???”

“ஆமா.. ஏன்?”

“இப்ப தான ட்ராவல் பண்ணி வந்த… உடனே திரும்ப ட்ராவல் பண்ணா எப்படி தாங்குவ? நாளைக்கு மார்னிங் கிளம்பலாம். நைட் இரு”

“ஏன்? நீ கார் ஓட்டு. நான் தூங்கிட்டே வரேன். உடனே கிளம்புறோம் அவ்வளவு தான். செக்கப்ப முடிச்சா தான் எனக்கு நிம்மதி”

“அடப் போடா.. ” என்றவள் வேகமாக எழுந்து அவனது கையை பிடித்து எழுப்பினாள்.

“வா வா.. வந்து சாப்ட்டு தூங்கு… ஈவ்னிங் மறுபடியும் ட்ராவல் னு உடம்ப கெடுத்துக்காத… நானே கார் ஓட்டுறேன். இப்ப வா”

இந்திரஜித்தை இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள். எல்லோரும் சாப்பிட அமர ஆதீரனையும் சாப்பிட அழைத்தனர்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இந்திரஜித் ஷாயாவின் வேலையை பற்றி விசாரித்தான்.

“நேத்து முடிச்சுட்டோம். லீவ்ல பஸ் டிக்கெட் கிடைக்காது. சோ பொங்கல் முடிஞ்சதும் கிளம்பலாம் னு இருக்கோம்”

“வேலை முடிஞ்சதா? யாரு சொன்னது?” என்று ஆதீரன் கேட்க சாப்பிட குனிந்த இந்திரஜித்தின் முகத்தில் மெல்லிய புன்னகை வந்தது.

“ஏன் நேத்து முடிச்சுட்டேன் னு சொன்னாங்களே?” என்று ஷ்ராவ்யா கேட்டாள்.

“அது அந்த வீடு… மூனாவது வீட்டு வேலை இன்னும் முடியலையே”

“அத வேணாம் னு சொல்லிட்டீங்களே?”

“அது அப்போ.. இப்போ தான் எல்லாம் சரியாகிடுச்சே… பேசுன நாள்ல இன்னும் பதினஞ்சு நாள் இருக்கு. வேலைய ஈசியா முடிச்சுடலாம்”

“நோ சாரே… அந்த வீடு இருக்க கண்டீஷன்க்கு பதினஞ்சு நாள் எல்லாம் கண்டிப்பா பத்தாது”

“சோ…?”

ஷ்ராவ்யா ஒருநிமிடம் யோசித்தாள். பிறகு “ஒன்னு பண்ணுங்க.. இந்த காண்ட்ராக்ட் இதோட முடியட்டும். அந்த வீட்டுக்கு புது காண்ட்ராக்ட் போட்டுக்கோங்க. ரெண்டு நாள் கழிச்சு பிரதாப் சார் வருவார். அவர் கிட்ட இத நான் சொல்லிடுறேன். பழைய காண்ட்ராக்ட் முடிஞ்சு சில டெர்ம்ஸ் எல்லாம் பண்ணனும். அத பார்த்துட்டு புது காண்ட்ராக்ட் சைன் பண்ணிடுங்க.” என்று கூறினாள்.

ஆதீரன் சம்மதமாக தலையாட்டிய அடுத்த நொடி “அந்த காண்ட்ராக்ட் ல உன் பேரு இருக்க வேணாம்” என்றான் இந்திரஜித்.

“ஓகே ஜித்து” என்று கட்டை விரலை காட்டி விட்டு ஷ்ராவ்யா சாப்பாட்டில் கவனமாக ஆதீரன் நொந்து போனான்.

அவனது முகத்தை கடைக்கண்ணால் பார்த்த ஜித்துவிற்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. உதட்டை கடித்து சிரிப்பை அடக்கியவன் சாப்பிடுவது போல் குனிந்து கொண்டான்.

“ஸ்மார்ட் மூவ்” என்ற முணுமுணுப்போடு இந்திரஜித் சாப்பிட ஆதீரனுக்கு சாப்பிடும் ஆசையே விட்டு போனது.

ஏனோ ஷ்ராவ்யா இந்த ஊரை விட்டு இப்படியே போவதில் அவனுக்கு விருப்பம் இல்லை. அவள் இன்னும் சில நாட்கள் இங்கிருக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அதற்கு இந்திரஜித் விடுவதாக இல்லை.

இந்திரஜித் நிம்மதியாக சாப்பிட்டு விட்டு தூங்கி விட ஷ்ராவ்யா தன் உடமைகளை எல்லாம் எடுத்து கிளம்ப தயாரானாள். இதற்கு மேல் ஆதீரனால் எதுவும் செய்ய முடியாது என்று புரிந்து விட அமைதியாகி விட்டான்.

உடமைகளை எடுத்து வைத்து விட்டு கரும்பு தின்ன அமர்ந்து விட்டனர் எல்லோரும். ஷ்ராவ்யா கரும்பில் குறியாக இருக்க “நீ கிளம்பிட்டா நாங்க மட்டும் எப்படி வேலை பார்க்குறது?” என்று சித்ரா கேட்டாள்.

“நானா போறேன் னு சொன்னேன்? ஜித்து கிளம்பு னு சொல்லிட்டான். கிளம்பிட்டேன்”

“ஏன்? என்ன அவசரம்?”

ஷாயா பதில் சொல்லாமல் தோளை குலுக்கினாள்.

“எங்களுக்கு வேலையில டவுட் வரும் ஷாயா”

“வந்தா போன் பண்ணு… இல்லனா ஆதீரன் சார் கிட்டயே கேளு. அவரே ஹெல்ப் பண்ணுவார். “

“சோ கிளம்புறது னு முடிவு பண்ணிட்ட?”

“ஆமா. பட் ஒரே ஒரு வருத்தம்… “

“என்ன?”

“ஆதீரன் சாரோட அம்மாவ பார்த்துட்டு சொல்லிட்டு போக முடியல னு. அவங்க கிட்ட சில விசயங்கள் கேட்கனும் னு வேற நினைச்சு இருந்தேன். இட்ஸ் ஓகே. என்னைக்காவது பார்த்தா கேட்டுக்குறேன்”

ஷாயாவுக்கு அந்த ஊரை விட்டு கிளம்புவதில் எந்த வருத்தமும் இல்லை. மாலை நேரமும் வந்து சேர இந்திரஜித்தின் காரிலேயே கிளம்பினர்.

ஷ்ராவ்யா ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கொள்ள அவளருகில் இந்திரஜித் அமர்ந்து கொண்டான். எல்லோருக்கும் கையாட்டி விட்டு புறப்பட்டு விட்டனர்.

அவர்கள் சென்ற திசையையே ஆதீரன் பார்த்துக் கொண்டு நிற்க அவனருகில் மேகலா வந்து நின்றாள்.

“அவங்க ரெண்டு பேர பத்தியும் என்ன நினைக்கிறீங்க?”

“நான் நினைக்க என்ன இருக்கு?”

“சும்மா சொல்லுங்க”

“எனக்கு தெரியல. நீங்க சொல்லுங்க மேகலா”

“ரெண்டு பேரும் ஃப்ரண்ட்ஸ் னும் சொல்ல முடியாது. லவ்வர்ஸ் னும் சொல்ல முடியாது. அதை எல்லாம் தாண்டின ஒரு உறவு… அதுக்கு என்ன பேர் வைக்குறது னே தெரியல”

“யோசிச்சு நல்லதா பார்த்து ஒன்ன வைங்க”

மேகலா இரண்டு நொடி யோசித்து விட்டு இந்திரஜித்தை அழைத்து விட்டாள்.

“சார்… உங்களுக்கும் ஷாயாக்கும் இடையில இருக்க ரிலேஷன்சிப்க்கு பேர் வைக்கலாம் னு யோசிச்சா எதுவுமே கிடைக்கல”

“அப்பாவி ஒரு பாவி கிட்ட மாட்டுனா அதுக்கு என்ன பேரோ அதான் எங்களுக்கும்”

“இதுல யாரு பாவி?” என்று ஷ்ராவ்யா முறைக்க இந்திரஜித் சிரித்தான்.

“இது ரொம்ப கஷ்டமாச்சே”

“நான் சொல்லட்டா?” என்று ஆதீரன் கேட்க “எங்க சொல்லுங்களேன்” என்றாள் ஷ்ராவ்யா.

“டாக்டர் அண்ட் பேஷண்ட்”

“ஆதீ…….” என்று ஷ்ராவ்யா கத்த இந்திரஜித் வாய் விட்டு சிரித்தான். ஷ்ராவ்யா அவனை முறைக்க “ரோட்ட பார்த்து ஓட்டு ” என்று கூறி தலையை திருப்பி விட்டான்.

“ஆதீ உங்கள அப்புறமா பார்த்துக்கிறேன்” என்று பல்லை கடித்துக் கொண்டு கூறினாள்.

“பட் ஆதீரன்.. இது எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு… ஷி இஸ் மை பேஷண்ட்”

“வேணாம் டா.. ஒழுங்கா ஊர் போய் சேர ஆசை இருந்தா வாய மூடிட்டு வா. இல்ல எங்கயாவது பிடிச்சு தள்ளி விட்ருவேன்”

“ஓகே ஓகே… நான் போன கட் பண்ணுறேன். இல்லனா இவ என் உயிர பலி குடுத்துடுவா” என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டான். மேகலா சிரிப்போடு அழைப்பை துண்டித்து விட்டு சென்று விட்டாள்.

ஷ்ராவ்யா சாலையில் கவனமாக “சோ… ஷாயாவும் குடுத்த வாக்க காப்பாத்தல” என்றான் இந்திரஜித்.

“என்ன வாக்கு? எத நான் காப்பாத்தல?”

“இந்த ஊருக்கு வரதுக்கு முன்னாடி எனக்கு ப்ராமிஸ் பண்ணியே?”

“ஆமா.. திரும்ப வந்துடுவேன் னு… அத்தனை பிரச்சனையையும் முடிச்சுட்டு உன் கூட வந்துட்டு தான இருக்கேன்”

“நோ.. நோ… நீ என்ன சொன்ன? எப்படி போறியோ அப்படியே வருவேன் னு சொன்ன”

“ஆமா… என்ன கொஞ்சம் வெயிட் குறஞ்சுட்டேன். அந்த கனவு இனி வராது.. என் குடும்பம் பத்தி தெரிஞ்சுகிட்டேன். இது ஒரு விசயமா?”

“இதெல்லாம் விட முக்கியமான ஒன்னு இருக்கு”

“எது?”

“நீ தேனியில இருந்து வந்ததும் உனக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வைக்குறதா இருந்தாங்களே.. அது… சொல்லு.. இப்போ போய் டேட் ஃபிக்ஸ் பண்ண சொல்லட்டுமா?”

ஷ்ராவ்யா சட்டென ப்ரேக்கை மிதித்து விட்டாள். அவள் நிறுத்தியதும் இந்திரஜித் கண்ணை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டான்.

“கார எடு.. நைட் சாப்டதும் நான் ட்ரைவ் பண்ணுறேன். இப்ப பார்த்து ஓட்டு” என்று கூறி விட்டு தூங்க ஆரம்பித்தான்.

அத்தியாயம் 33

2016 , ஜீன் , 5

முன்னால் இருந்த பெண்ணை முறைக்க முடியாமல் தன் கையிலிருந்த கோப்பை பட்டென மேசையின் மீது வைத்தாள் ஷ்ராவ்யா. இதோடு இரண்டாவது முறையாக அந்த பெண் தவறாக வேலையை முடித்து இருக்கிறாள்.

முதல் முறை ஷ்ராவ்யா மன்னித்து விட்டாள். இப்போது கோபம் வந்தது. வேகமாக யாரையோ அழைத்து விட்டு கணினியில் பார்வையை பதித்தாள்.

முன்னால் நின்றிருந்த பெண் கையை பிசைந்து கொண்டு நிற்க மேகலா வேகமாக உள்ளே வந்தாள்.

அவளிடம் கோப்பை கை காட்டி விட்டு “எடுத்துட்டு வெளிய போ” என்றாள். அவளது கோபம் பற்றி தெளிவாக தெரிந்த மேகலா அந்த கோப்போடு அந்த பெண்ணையும் இழுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

தனதறைக்கு சென்று சரி பார்த்த மேகலா அந்த பெண்ணை திட்டி விட்டாள். அந்த பெண் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு தன் இடத்தில் சென்று அமர அவளது தோழி விசாரித்தாள்.

“ஷாயா மேடம் கொஞ்சம் ஓவரா தான் போறாங்க. தப்புனா நேரா சொல்ல வேண்டியது தான… அதென்ன அவங்க ஃப்ரண்ட்ட கூப்பிட்டு சொல்லி திட்ட விடுறது”

“அவங்க திட்டுனா ஒரு வாரத்துக்கு அழுவடி… அவங்க ஃப்ரண்ட் திட்டுனாங்க னு சந்தோச படு. ஒழுங்கா வேலை பாரு. இந்த தடவ தப்புச்சுட்ட. அடுத்த தடவ தப்பா இருந்தா ஷாயா மேடமே திட்டுவாங்க. அப்புறம் ரொம்ப மோசமாகிடும்”

தன் தோழி சொன்னதை கேட்டாலும் அந்த பெண் முகத்தை சுழித்து ஷாயாவை மனதிற்குள் திட்டிக் கொண்டு தான் இருந்தாள்.

தன்னை பற்றி பேசுவதை எல்லாம் கண்டு கொள்ளாமல் ஷாயா தன் வேலையில் மும்முரமாக இருந்தாள். அதை முழுதாக முடித்து விட்டு நிமிர மணி மூன்று என்று காட்டியது.

வேலையை மூடி வைத்து விட்டு அவள் எழுந்திரிக்க போன் இசைத்தது. பெயரை பார்த்தவள் எடுத்து காதில் வைத்தாள்.

“ஹலோ.. ஷாயா மா…”

“சொல்லுங்க மா”

“நாளைக்கு வர தான?”

“இதோட இருபத்தி ஒரு தடவ கேட்டீங்க . வரேன் மா. “

“ஆமா அஞ்சு மாசமா இந்த பக்கமே எட்டி பார்க்காம இருந்துட்டு என்ன சொல்லு”

“நான் என்னமா பண்ண? இங்க வேலை பிடிச்சுகிச்சு… “

“என்ன பெரிய வேலை…? அம்மாவ பார்க்க கூட முடியாத வேலை”

“பிரதாப் சார் மேரேஜ் தான் உங்களுக்கு தெரியும்ல. இப்ப அவர் வந்துட்டார். நான் ஃப்ரி ஆனதும் உடனே கிளம்பி வரேன் . “

“ஆனாலும் நம்பிக்கை இல்ல. நாளைக்கு போன் பண்ணி அவசரமா வேலை வந்துடுச்சு னு சொல்லாத வர சந்தோசம்”

ஷாயா சிரித்துக் கொண்டே காரில் ஏறி அமர்ந்தாள்.

“கண்டிப்பா நாளைக்கு வரேன். இப்ப வீட்டுக்கு கிளம்பிட்டேன். ட்ரையின் ஏறிட்டு பேசுறேன்” என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டு காரை எடுத்தாள்.

தேனியிலிருந்து வந்த பின் ஷாயாவுக்கு அம்மாவை பார்க்க செல்ல நேரமே கிடைக்கவில்லை. பிரதாபிற்கு திருமணம் நிச்சயமாகி விட அவன் வேலை எல்லாம் ஷாயாவின் தலையில் விழுந்தது.

அதை பார்த்து முடித்தால் பிரச்சனைகள் வரிசையாக வந்து நின்றது. அதனால் சென்னையில் இருந்து அவளால் எங்கும் அசைய முடியவில்லை.

அவளது குழு அவள் இல்லாமலே தனியாக வெளியே சென்று வேலை பார்த்தனர். இப்போது தான் வேலைகளை எல்லாம் செய்து முடித்து விடுமுறை எடுத்து இருக்கிறாள்.

அதனால் முதல் வேலையாக திருநெல்வேலி கிளம்ப முடிவு செய்தாள். அன்று மாலையே இரயிலில் இந்திரஜித்தோடு கிளம்பியவள் மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கு ஊரில் காலை வைத்தாள்.

அவளை அழைத்து செல்ல கார் வந்து இருந்தது. அதே போல் இந்திரஜித்தையும் அழைத்துச் செல்ல வந்திருந்தனர். இந்திரஜித் அவனது குடும்பத்தை பார்க்க கிளம்பி விட ஷாயா தன் வீட்டிற்கு கிளம்பினாள்.

காரை நிறுத்தியதும் வேகமாக இறங்கி வீட்டை நிமிர்ந்து பார்த்தாள். நான்கு தளங்கள் கொண்ட பிரம்மாண்டமான வீடு அது. அந்த வீட்டில் அவளுக்கு கிடைத்த அன்பு அந்த வீட்டை விட பெரியது.

தரை தளத்தில் மட்டுமே ஆறு அறைகள் கொண்ட அந்த பிரம்மாண்டமான வீட்டுக்குள் நுழைந்தவள் தன்னை வரவேற்க்க நின்றிருந்தவர்களை பார்த்து ஆச்சரியத்துடன் நின்று விட்டாள்.

செந்தூரா மட்டுமே இருப்பார் என்று நினைத்து வர வரதராஜன் நின்று இருந்தார்.

“ப்பா…” என்று ஆனந்தமாக அவள் உள்ளே வர திடீரென யாரோ வந்து அவள் மீது மோதினர்.

“அக்கா… ” என்று ஷிவானி சந்தோச கூச்சலிட ஷ்ராவ்யா ஆச்சரியம் தாங்காமல் தன்னை கட்டிக் கொண்டு நின்று இருந்தவளை பார்த்தாள்.

“ஷிவானி செல்லக்குட்டி… நீ எப்ப டி வந்த? அப்பா நீங்களும் வரீங்கனு சொல்லவே இல்ல” என்றவள் ஷிவானியை இழுத்துக் கொண்டு உள்ளே வந்தாள்.

“சர்ப்ரைஸ் … எப்படி? நல்லா இருக்கா?” என்று ஷிவானி கேட்க “இவ தான் சொல்ல வேணாம். அக்கா நேரா வந்து பார்க்கட்டும் னு சொல்லிட்டா” என்றார் செந்தூரா.

“நிஜம்மாவே சாக் ஆகிட்டேன் தான். நீங்க எப்ப மும்பையில இருந்து வந்தீங்க?” என்று தந்தையிடம் கேட்க “ரெண்டு நாள் ஆகுது. சொல்லனும் னு தான் நினைச்சேன். ஷிவானி தான் நானும் வந்த பிறகு சொல்லிக்கோங்க னு சொல்லிட்டா” என்றார்.

“அப்போ நீ எப்ப வந்த?”

“நேத்து தான். “

“ட்ரைனிங் அது இது னு சொன்ன?”

“எல்லாம் சும்மா… “

“ஃப்ராடு” என்று அவள் தலையில் தட்டி விட்டு தோளில் கை போட்டுக் கொண்டாள்.

“நீ மட்டும் வந்துருக்க.. இந்திரஜித் எங்க?” என்று செந்தூரா வினவ “அவன் வீட்டுக்கு போயிட்டான். நாளைக்கு லன்ச்க்கு வருவான்” என்று பதில் கூறி விட்டு தங்கையுடன் பேச ஆரம்பித்து விட்டாள்.

செந்தூராவிற்கு இப்போது தான் மனம் நிறைந்து இருந்தது. குடும்பத்தில் இருப்பவர்கள் நான்கு பேர் தான். அவர்களும் ஆளுக்கொரு திசையில் இருந்தனர்.

மகள்களோடு நேரத்தை செலவழித்தவர் சமைக்க செல்ல ஷ்ராவ்யாவும் ஷிவானியும் ஒன்றாக சமையலறைக்குள் நுழைந்தனர்.

“அம்மா… ” என்று இருவரும் ஒரே குரலில் பாசமாக அழைக்க “என்ன வேணும் உங்களுக்கு?” என்று எதையோ கிண்டிக் கொண்டே கேட்டார் செந்தூரா.

ஷாயாவும் ஷிவானியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டு “நாங்க ஹெல்ப் பண்ணவா மா?” என்று சேர்ந்தே கேட்டனர்.

செந்தூர கையிலிருந்த கரண்டியை கீழே போட்டு விட்டார். அவர் பயந்து போய் திரும்ப இருவரும் பல்லை காட்டிக் கொண்டு நின்று இருந்தனர்.

“ஏம்மா.. ஏன்… உங்களுக்கு சமைக்க ஆசையா இருந்தா உங்கப்பா கிட்ட புதுசா கிட்சன் கட்ட சொல்லி அதுல பழகுங்க ராசாத்திங்களா… என் கிட்சன விட்ருங்க” என்று பெரிய கும்பிடு போட்டார்.

இருவரும் உதட்டை பிதுக்கி முகத்தை சுருக்க “இதுக்கெல்லாம் நான் அசர மாட்டேன். மரியாதையா வெளிய போங்க” என்று இருவரையும் பிடித்து வெளியே தள்ளி விட்டார்.

வெளியில் வந்து நின்ற ஷாயாவும் ஷிவானியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“நாம நல்லா சமைச்சுடுவோம் னு அம்மாக்கு பொறாமை கா”

“ஆமா நாம சமைச்சு.. அப்பா பாராட்டிட்டா?”

“உடனே அம்மா சமையல நினைச்சு பார்த்து பிடிக்காம அவங்கள டைவர்ஸ் பண்ணிட்டா?”

“டைவர்ஸ்க்கு அப்புறம் அம்மாவுக்கு போக இடமில்லாம போயிட்டா?”

“அதான் அவங்க அண்ணன் வீடு இருக்குல… அங்க போயிட்டா?”

“அங்க தான் அவங்க அண்ணி இருக்கே.. அது அம்மாவ துரத்தி விட்டுட்டா?”

“உடனே அம்மா கோச்சுட்டு காசி இராமேஸ்வரம் னு போயிட்டா?”

“அப்போ நம்ம அப்பா?”

“அவருக்கு இன்னொரு அழகான பொண்ணா பார்த்து கட்டி வைப்போம்”

“இது நல்ல ஐடியா.. இப்பவே மேட்ரிமோனில பொண்ண தேடுறேன்”

ஷாயா போனை கையில் எடுக்க ஒரு தட்டு பறந்து வந்து காலுக்கடியில் விழுந்தது. அதை பார்த்து விட்டு இருவரும் மௌனமாக சிரிக்க “போயிட்டா வந்துட்டா னு கண்டத பேசுனீங்க… பெத்த பிள்ளைங்க னு கூட பார்க்க மாட்டேன். என் வீட்டுக்காருக்கு பொண்ணு பார்க்குறேன் னு எவளாவது வாங்க… அரிவாள் எடுத்து ஒரே போடா போடுறேன்” என்று சத்தம் வந்தது.

இருவரும் வாயை மூடிக் கொண்டு சிரிக்க வரதராஜன் வந்தார்.

“பாருங்க பா.. அக்கா உங்களுக்கு ஒரு அழகான பொண்ண பார்க்குறேன் சொல்லுது. அம்மா விட மாட்ராங்க”

“ஆமா பா.. போரடிக்குது வாங்க பொண்ணு பார்க்கலாம்”

“நான் பெத்த செல்வங்களா… உங்களுக்கு போரடிக்குதா னு சொல்லுங்க… ரெண்டு பையன பார்த்து உங்கள அவங்க தலையில கட்டி வைக்குறேன். போரடிக்காம வாழ்க்கை போகும். அத விட்டுட்டு என் குடும்பத்துல கும்மி அடிக்காதீங்க தாயிங்களா”

வரதராஜன் அழாத குறையாக கேட்க ஷிவானியும் ஷாயாவுமும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

“குடும்பமாம்” என்று ஒரே குரலில் கூறி விட்டு ஒன்றாக கழுத்தை வெட்டினர்.

“நாங்களும் உங்க குடும்பத்துல இருக்கோம் பா… நியாபகம் இருக்கா?”

“எங்கள விட்டுட்டு தனியா நீங்க மட்டும் குடும்பம் னு முடிவு பண்ணிட்டீங்களா? இத நான் சும்மா விட மாட்டேன்”

“ஆமா கா.. வா கேஸ் போடுவோம்”

“அது கிட்சன்ல இருக்கே”

“அப்ப அங்கயே போவோம் வா”

“உள்ள கால வச்சிங்க நறுக்கிடுவேன்” என்று செந்தூரா சத்தம் கொடுக்க “அட போங்க பா.. நாங்க போய் டீவிய பார்க்குறோம்” என்று வெற்றிகரமாக பின் வாங்கி விட்டனர் சகோதரிகள்.

மறு நாள் காலை வரை இதே போல் கலாட்டாக்களுடன் குடும்பத்துடன் நிம்மதியாக கழித்தாள் ஷாயா. காலையில் யாரோ வந்திருப்பதாக ஷிவானி கூற வேகமாக கீழிறங்கி வந்து பார்த்தாள்.

பார்த்தவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சந்தானலட்சுமி தன் இரண்டு மகன்களோடு வந்து இருந்தார். முதலில் சந்தானலட்சுமியை வரவேற்றவள் ஆதீரனிடம் “ஹாய்” என்றாள்.

ஜெயராமிடமும் “ஹாய்” என்றதோடு நிறுத்தாமல் அவன் உடல் நிலையை விசாரித்தாள். அதற்கு மேல் என்ன பேசுவது என்று புரியாமல் அவள் அமர்ந்து விட செந்தூரா அவர்களிடம் பேசினார்.

எல்லோரும் மொத்தமாக பேசிக் கொண்டிருக்க ஷிவானி ஷாயாவின் கையை சுரண்டினாள்.

“என்ன டி?”

“இதுல யாரு ஆதீரன்?”

“ரெட் சர்ட் “

“அப்போ இன்னொரு ஆளு?”

“அவரோட தம்பி. ஜெயராம். ப்ரஃபஸர்”

“ஓஹோ…”

ஷிவானி அவர்களை குறுகுறுவென பார்த்து விட்டு ஷாயாவின் காதில் எதையோ முணுமுணுத்தாள்.

ஷாயா அவளது கையை நறுக்கென கிள்ளி விட ஷிவானி கத்தி விட்டாள். ஆதீரனும் ஜெயராமும் திரும்பி பார்க்க அவர்கள் முன்னால் அக்காவை முறைக்க முடியாமல் பல்லை கடித்து வைத்தாள்.

அவளை விட அதிகமாக ஷாயா முறைக்க “உனக்கு இருக்கு அப்புறம்” என்று முணுமுணுத்து விட்டு “ஆமா இதுல ஆதீரன் யாரு?” என்று ஷிவானி அவர்களிடமே கேட்டு வைத்தாள்.

ஆதீரன் “நான் தான் ஏன்?” என்று கேட்க “ஓஓஓ…” என்று இழுத்தாள் ஷிவானி. ஷாயா அவளை எரித்து விடுவது போல் பார்த்தாள்.

“இல்ல எங்க அக்கா உங்கள பத்தி நிறைய சொல்லி இருக்கா… அதான் ரெண்டு பேர்ல யாரு னு கேட்டேன்”

“அப்படி என்ன சொன்னாங்க”

“அது வந்து….”

” ஷிவானி… உன் போன மேலயே விட்டுட்டு வந்துட்ட.. வா போய் எடுத்துட்டு வரலாம்” என்று கூறி அவளது கையை பிடித்து இழுத்தாள்.

“இல்ல கா…” என்று எதோ ஷிவானி சொல்ல வர அவளை பேச விடாமல் இழுத்துச் சென்று விட்டாள்.

“அஞ்சு மாசமா ஊருக்கு வராம இருந்து காப்பாத்துனத ஒரே நிமிஷத்துல கெடுத்துடுவ போலயே… வாடி” என்று இழுத்து செல்ல ஷிவானி பதிலுக்கு எதையோ சொல்லிக் கொண்டே சென்று விட்டாள்.

மதிய உணவு தயாராக எல்லோரும் சாப்பிட அமர்ந்தனர். ஷிவானியும் ஷாயாவும் ஒன்றாக அமர்ந்து கொள்ள ஆதீரனும் ஜெயராமும் எதிரில் அமர்ந்தனர்.

அதே நேரம் வந்து சேர்ந்தான் இந்திரஜித். அங்கிருந்தவர்களை அவனும் எதிர் பார்க்கவில்லை. ஷாயாவை பார்த்து புருவத்தை உயர்த்த அவள் தோளை குலுக்கினாள்.

மற்றவர்களுக்கு இந்திஜித்தை அறிமுகப்படுத்தினர். அவனையும் சாப்பிட அமர சொல்ல அவன் ஆதீரன் பக்கம் சென்றான். ஷாயா வேகமாக “ஜித்து.. இங்க வா” என்று அழைத்து வைத்தாள்.

இந்திரஜித் அவளை முறைத்து பார்த்தாலும் மறுக்க முடியாமல் ஷிவானியின் பக்கத்தில் அமர்ந்து விட்டான்.

பெண்கள் எல்லோரும் பேசிக் கொண்டே சாப்பிட ஆண்கள் ஆளுக்கொரு யோசனையுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

ஷாயாவும் ஷிவானியும் சலசலவென்று பேசிக் கொண்டிருக்க “சாப்டும் போது கூட வாய மூடி இருக்க மாட்டீங்களா?” என்று கேட்டு வைத்தான் இந்திரஜித்.

“வாய மூடிட்டு எப்படி சாப்டுறது னு டாக்டர் டெமோ காட்டுங்களேன்” – ஷிவானி

ஷாயா வாயை மூடிக் கொண்டு சிரிக்க இந்திரஜித் ஷிவானியை விட்டு விட்டு ஷாயாவை முறைத்தான்.

“ஹலோ.. கேட்டது நானு.. அக்காவ என்ன முறைப்பு? ஓவரா முறைச்சீங்க.. சொல்ல வேண்டிய ஆளு கிட்ட போட்டு கொடுத்துடுவேன்”

“யாரு?”

“என் அக்காவோட வருங்கால மாமியார் கிட்ட”

“ஓஹோ…”

“என்ன ஓஹோ… டெமோ காட்டுங்க”

“நான் பேசாம சாப்ட சொன்னேன்”

“நீங்களே இவ்வளவு நேரம் பேசிட்டு தான இருக்கீங்க?”

இப்போது ஷாயா மீண்டும் சிரித்து வைக்க “உனக்கு இருக்கு” என்று ஷாயாவிடம் கூறி விட்டு திரும்பிக் கொண்டான்.

“ஹா… யாரு கிட்ட..” என்ற ஷிவானி மீண்டும் ஷாயாவிடம் பேச ஆரம்பித்து விட்டாள்.

சாப்பிட்டு முடித்து பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க ஷிவானி ஆதீரனை ஷாயாவின் அறைக்கு அழைத்து வந்தாள்.

“என்ன?”

“உன் கிட்ட எதோ பேசனுமாம் கா. அதான் கூட்டிட்டு வந்தேன்”

“வாங்க உள்ள வாங்க”

“நீங்க பேசுங்க. எனக்கு முக்கியமான வேலை இருக்கு” என்று ஷிவானி ஓடி விட்டாள்.

ஆதீரன் ஷ்ராவ்யாவின் அறையை சுற்றி பார்த்தான். ஷாயா தன் நண்பர்களுடன் அவனது ஊரில் தங்கி இருந்த அறையை விட மூன்று மடங்கு பெரிய அறையாக இருந்தது.

ஒரு பக்கம் முழுவதும் பால்கனி தான் இருந்தது. அது முழுவதுமே வித விதமான மலர் செடிகள் அலங்கரித்து இருந்தது. மற்ற படி அறையில் எந்த தேவையில்லாத பொருட்களும் இல்லை.

அங்கிருந்த ஒற்றை சோபாவில் ஆதீரன் அமர்ந்து கொள்ள ஷாயா மேசையின் முன்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

“என்ன விசயம் சாரே?”

“இங்க எதுக்கு வந்துருக்கோம் னு தெரியுமா?”

“தெரியல.. யாரும் என் கிட்ட சொல்லலையே”

“நான் உன் கிட்ட ஒன்னு சொல்லனும்”

“சொல்லுங்க”

ஆதீரன் எழுந்து அவளருகில் வந்து நின்றான். ஷாயா அவனை நிமிர்ந்து பார்க்க “என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா மது?” என்று கேட்டு விட்டான்.

ஷாயா அதிர்ந்து எழப்போக அவளது கையை பிடித்து அமர வைத்தான். 

“நான் சொல்லுறத முழுசா கேளு… உன் மேல எப்போ எப்படி காதல் வந்துச்சு னு கேட்டா எனக்கு தெரியாது… உனக்கு ஏற்கனவே வேற ஒருத்தர் கூட நிச்சயமாகி இருக்கு னு சொன்னப்போ கூட நான் எதுவுமே ஃபீல் பண்ணல.

எப்போ எனக்காக கைய கட் பண்ணியோ அப்ப தான் எல்லாமே புரிஞ்சது. உன் மேல எனக்கு இருக்க உணர்வு நட்ப தாண்டிருச்சு னு. நீ என்ன ஃப்ரண்டா நினைச்சியா இல்ல துரோகி வீட்டு பிள்ள னு நினைச்சியா னு எனக்கு தெரியல.

ஆனா என்னோட உணர்வுகள்ல மாற்றம் இல்ல. நீ கிளம்பி வந்தப்புறம் உன்ன மறக்க எவ்வளவோ ட்ரை பண்ணேன். ஆனா முடியல. இன்னேரம் உனக்கும் இந்திரஜித்துக்கும் கல்யாணம் ஆகி இருக்கும் னு நினைச்சு மனச மாத்திக்க ட்ரை பண்ணேன்.

லாஸ்ட் வீக் தான் தெரிஞ்சது.. உங்க கல்யாண பேச்சே எடுக்கல னு. மேகலா தான் இத சொன்னாங்க. நீ இங்க வந்ததுக்கு அப்புறம் என் கிட்ட பேசவே‌ இல்ல.

என்ன மறந்துருப்ப கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இருப்ப னு நினைச்சேன். ஆனா உனக்கு கல்யாணமாகல னு தெரிஞ்சதும் அம்மா தான் உடனே கிளம்பி வந்துட்டாங்க.

உன் கிட்ட கேட்பாங்க. அவங்க கேட்குறதுக்கு முன்னாடி நான் என்னோட உணர்வு பத்தி சொல்லனும் னு தோனுச்சு. அதான் சொல்லிட்டேன். முடிவு உன் கையில.”

ஆதீரன் பேசியதை எல்லாம் கேட்டவள் ஒன்றும் பேசாமல் கையை பார்த்துக் கொண்டிருக்க “ஓகே.. நான் கீழ போறேன்” என்று கதவை திறந்தான். பிறகு ஒரு நொடி நின்று “உன் பதிலுக்கு வெயிட் பண்ணுவேன்” என்று கூறி விட்டு சென்று விட்டான்.

*.*.*.*.*.*.

அதே நேரம் போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த இந்திரஜித்தின் அருகில் ஷிவானி வந்து நின்றாள்.

போனை அணைத்து விட்டு “என்ன?”‌என்று கேட்க “இங்க என்ன நடக்குது னு தெரியுமா?” என்று கேட்டாள்.

“என்ன நடக்குது?”

“எங்க அக்காவ ஆதீரனுக்கு பொண்ணு கேட்குறாங்க”

“சோ…?”

ஷிவானி அவனை முறைத்து விட்டு தலையில் அடித்துக் கொண்டு சென்று விட்டாள். அவள் அங்கிருந்து சென்றதும் இந்திரஜித் தேனியிலிருந்து வந்த ஒரு மாதத்தில் நடந்ததை நினைத்து பார்த்தான்.

ஷாயா என்றுமே வீட்டில் சமைத்து சாப்பிட மாட்டாள். இந்திரஜித் சென்னையில் இருந்தால் ஞாயிற்றுக்கிழமை அவன் தான் அவளது வீட்டில் வந்து சமைப்பான்.

ஒரு மாதமாக வேலையில் கழித்து விட்டு அன்று அவளை பார்க்க வந்திருந்தான். அப்படி சமைக்கும் போது ஷ்ராவ்யா அவனுக்கு உதவிக் கொண்டே பேசிக் கொண்டிருந்தாள்.

“ஏன் ஷாயா என் வேலைய பத்தி என்ன நினைக்குற?”

“நல்ல வேலை தான். எனக்காக சமைச்சு குடுக்குறியே”

“நான்‌ டாக்டர வேலைய சொன்னேன்”

“அதுவா … அதுவும் நல்ல வேலை தான்”

“ம்ம்.. புதுசா ஒரு ப்ராஜெக்ட் பண்ணலாம் னு இருக்கேன்”

“எத பத்தி?”

“காதல பத்தி… “

“லவ்வா???”

“ஆமா… காதல எப்படி எல்லாம் மறைக்கலாம் னு ஒருத்தி கிட்ட கேட்க போறேன்… பயங்கர எக்ஸ்பர்ட்டா இருக்கா”

குனிந்து வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்த ஷாயாவின் முகத்தில் சிரிப்பு வந்தது.

அவள் பதில் சொல்லாமல் இருக்க “சொல்லு… பண்ணட்டா?” என்று கேட்டான்.

வெங்காயத்தை நறுக்கி அவனிடம் நீட்டியவள் கை கழவி துடைத்துக் கொண்டாள்.

இந்திரஜித் சமையலை முடித்து விட்டு மீன் பொறிக்க தயரானான். அங்கிருந்த மேடையில் ஏறி அமர்ந்து கொண்ட ஷாயா “பண்ணேன்” என்றாள்.

அவன் அவளை திரும்பி பார்த்து விட்டு “பண்ணிட்டா போச்சு ” என்றான்.

“கூடவே இன்னொரு லவ் பத்தியும் பண்ணு”

“இன்னொன்னா?”

“ஆமா … ஒரு டாக்டரோட காதல்… இன்னைக்கு நேத்து இல்ல… வருசக்கணக்குல மறைச்சு வச்ச காதல பத்தி”

மீனை கையில் எடுத்து எண்ணைக்குள் போட போனவன் கை அப்படியே நின்றது. அவனது கையை பார்த்து விட்டு ஷாயா தனக்குள் சிரித்தாள்.

“என்ன ஜித்து? பண்ணுறியா? மறைக்குறதுல பொண்ணுங்கள விட பசங்க எக்ஸ்பர்ட்… நான் வேணா அவன் கிட்ட டீடையில் வாங்கி குடுக்கட்டுமா?”

இந்திரஜித் பட்டென மீன் இருந்த பாத்திரத்தை கீழே வைத்தான். ஷாயா அவனை முறைத்து பார்க்க பதிலுக்கு அவனும் அவளை முறைத்தான்.

“முறைச்சா? இல்ல னு ஆகிடுமா?” என்று கேட்டவளின் குரலில் அப்பட்டமான கோபம் வெளிப்பட்டது. வேகமாக கை கழுவிட்டு “எப்ப தெரியும் ?” என்று இந்திரஜித் கேட்டான்.

“நீ இன்னும் எத்தனை வருசத்துக்கு மறைக்கலாம் னு இருந்த?” என்று ஷாயாவும் பதிலுக்கு கேட்டு வைத்தாள்.

இந்திரஜித் வேகமாக வெளியே போக பார்க்க இறங்கி அவன் கையை பிடித்துக் கொண்டாள்.

“இப்படியே போனா எப்படி? லன்ச்க்கு ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் வருவாங்க. முழுசா பொறிச்சு சாப்ட்டு போ. ” என்று கூறி விட்டு அவள் வேகமாக வெளியே சென்று விட்டாள்.

அதன் பிறகு இந்திரஜித் அவள் வீட்டிற்கு செல்லவில்லை. இங்கு கிளம்பி வரும் போது தான் மீண்டும் நேரில் சந்தித்தனர். ஆனால் போனில் பேசிக் கொள்ள இருவருமே மறந்தது இல்லை.

நடந்து காரின் அருகே சென்றவன் ஷிவானியை அழைத்தான். அவள் அழைப்பை எடுத்ததும் “கார் கிட்ட வா” என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டான்.

அவள் வேகமாக ஓடி வந்து மூச்சு வாங்கினாள்.

“என்ன விசயம்?”

இந்திரஜித் காரில் இருந்து எதையோ எடுத்து அவள் கையில் கொடுத்தான்.

“கிஃப்ட்டா?”

“ஆமா பிரி”

உடனே பிரித்து பார்த்தவள் அதிர்ந்து போனாள். அதற்கு பிறகு இந்திரஜித் பேசியதிலும் செய்த காரியத்திலும் அவளது கண்கள் கலங்கி போனது.

அத்தியாயம் 34

அறையில் தீவிர யோசனையுடன் மெதுவாக நடந்து கொண்டிருந்தாள் ஷ்ராவ்யா. யாரோ கதவை தட்ட தன் யோசனையை தூரம் தள்ளி விட்டு கதவை திறந்தாள்.

வெளியில் சந்தானலட்சுமி நின்று இருக்க வேகமாக உள்ளே அழைத்தாள். அவரோடு ஜெயராமும் வந்தான். அவன் கையிலிருந்த பெட்டியை வைத்து விட்டு “நான் கீழ இருக்கேன்” என்று கூறி‌சென்று விட்டான்.

ஷாயா அந்த பெட்டியை பார்த்து விட்டு “என்ன இது?” என்று கேட்டாள்.

“உனக்கு தான். பாரு”

“எனக்கா?”‌ என்று ஆச்சரியமாக கேட்டவள் வேகமாக பெட்டியை திறந்தாள். உள்ளே சில ஆல்பங்களும் நகை பெட்டிகளும் இருந்தது.

“இது எல்லாம் தியா கல்யாண ஆல்பம். அவளோட நகை. “

ஷ்ராவ்யா வேகமாக எல்லாவற்றையும் திறந்து பார்த்தாள். மணக்கோலத்தில் இருந்த பெற்றோர்களை பார்த்ததும் அவளுக்கு கண் கலங்கியது.

ஆல்பம் நகை என்று எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எடுத்து பார்த்துக் கொண்டிருக்க சந்தானலட்சுமி பேசினார்.

“எப்ப உங்க அம்மா உயிரோ இல்ல னு தெரிஞ்சதோ ஆதியோட அப்பா உங்க வீட்ட காலி பண்ண சொல்லிட்டார். கேரளா ஆயுர்வேத ட்ரீட்மெண்ட் பத்தி பார்க்க போறதா சொல்லிட்டு கேரளா கிளம்பி போனேன். அங்க உங்க வீட்ட காலி பண்ணிட்டு இத மட்டும் தான் எடுத்துட்டு வந்தேன்.

மதுரா ஸ்ரீ உயிரோட தான் இருக்கா . என்னைக்காவது அவள பார்த்தா இத எல்லாம் கொடுத்து நடந்தத சொல்லிடு னு அவர் சொல்லி இருந்தார்.”

“ஆமா.. உங்க கிட்ட கேட்கனும் னு இருந்தேன். என்ன எப்படி கண்டு பிடிச்சீங்க? ஆதீ என்ன பார்த்ததே இல்ல சரி. ஆனா அவரோட பெரியப்பா பெரியம்மா எல்லாரும் என்ன பார்த்து இருப்பாங்க தான? அவங்க ஏன் கண்டு பிடிக்கல?”

“அந்த ஆல்பத்துல பாரு… நீ உன் அம்மா அப்பா மாதிரி இல்ல. பாட்டி மாதிரி… ஆனா உன் பாட்டி ரொம்ப வருசத்துக்கு முன்னாடியே இறந்துட்டாங்க.

தியா கல்யாணத்துக்கு நாங்க சௌந்தர்யாவ மட்டும் தான் கூட்டிட்டு போயிருந்தோம். மத்தவங்க யாரும் வரல. அங்க தங்கி இருக்கும் போது தான் உன் அப்பாவோட அம்மா பத்தி தெரிஞ்சது. ஒரே ஒரு ப்ளாக் அண்ட் வொயிட் போட்டோ இருந்துச்சு.

நீ முழுக்க முழுக்க அவங்கள மாதிரி இல்ல. ஆனா கொஞ்சம் அவங்க சாயல்ல இருக்க. அதான் கண்டு பிடிச்சுட்டேன்.”

“என்ன தெரிஞ்ச மாதிரி நீங்க காட்டிக்கவே இல்லையே?”

“அப்படி நான் காட்டி இருந்தா உன் உயிர எடுத்துட்டு தான் மறு வேலை பார்த்து இருப்பாங்க. உன்ன ஊர விட்டு துரத்தலாம் னு தான் இருந்தேன். ஆனா முடியல”

ஷாயா புன்னகைத்து விட்டு ஆல்பத்தில் இருந்த படங்களை புரட்டினாள். ஒவ்வொருவராக சந்தானலட்சுமி கூற அனைத்தையும் கேட்டுக் கொண்டாள். மறந்த எதுவும் அவளுக்கு நியாபகம் வரவில்லை.

அதை பற்றி அவள் கவலைபடவுமில்லை. இனி அது அவளுக்கு தேவையுமில்லை. இருக்கும் வாழ்க்கையே நிறைவாக தான் இருக்கிறது. இதை பார்த்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தாள்.

படங்களை பார்த்து முடித்தவள் திடீரென எதோ தோன்ற “ஆமா இத இத்தனை காலமா எங்க வச்சு இருந்தீங்க?” என்று கேட்டாள்.

“வேற எங்க? வீட்டுல தான்.”

“நீங்க இருந்த வீட்டுலயா?”

“இல்ல… ஆதியோட தாத்தா வீட்டுல.”

ஷாயா அதிர்ச்சியாக பார்த்தாள்.

“அந்த வீட்டுலயா?”

“ம்ம்… அந்த வீட்டுல இருக்க என்னோட ரூம்க்கு யாரும் போக மாட்டாங்க னு தெரியும்ல. அதுல தான் வச்சு இருந்தேன்.”

“ஆமா… ஆமா… அந்த ரூம் கதவுக்கு புதுசா பெயிண்ட் கூட அடிக்கல விடல உங்க மகன்”

“அதே தான். அந்த ரூம் முழுக்க ஆதியோட அப்பா படங்கள் தான் இருக்கும். நான் யாரையும் உள்ள விட மாட்டேன். நானே சுத்தம் பண்ணுவேன். அங்க தான் அவரோட உயிர் போச்சு. அந்த இடம் எனக்கு அவ்வளவு முக்கியம். இதையும் அங்கயே வச்சுட்டேன். அவங்களுக்கு என் மேல சந்தேகம் இல்லாததால தேடி பார்க்கல.”

ஷாயாவிற்கு சந்தானலட்சுமியின் மேல் மதிப்பு இருந்தது. அது இப்போது அதிகமாக உயர்ந்தது. அவள் நகைகளை எடுத்து பார்க்க செந்தூரா வந்தார்.

“ம்மா… இங்க பாருங்களேன்” என்று அவரை அழைத்து ஷாயா படங்களையும் நகைகளையும் காட்டினாள்.

அதை எல்லாம் பார்த்த செந்தூரா தியாவின் நகைகளை ஷாயாவிற்கு மாட்டி விட்டு அழகு பார்த்தார். சற்று நேரம் பேசி விட்டு அவர்கள் இறங்கி சென்று விட ஷாயா அந்த நகைகளை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.

*.*.*.*.

வீட்டுக்குள் வந்த ஷிவானியை இந்திரஜித் அழைக்க வேகமாக வெளியே ஓடினாள். அவனது கார் நிறுத்தி இருக்கும் இடத்தில் வந்து நின்றவள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினாள். வாயை குவித்து காற்றி வெளியேற்றியவள் “என்ன விசயம்?” என்றாள்.

காருக்குள் இருந்து ஒரு பரிசுப்பெட்டியை எடுத்து நீட்டினான்.

“கிஃப்ட்டா? அக்காவுக்கா?”

“உனக்கு”

“எனக்கா?”

“ஆமா பிரிச்சு பாரு”

“எனக்கு எல்லாம் வாங்க மாட்டீங்களே” என்று அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு பிரிக்க ஆரம்பித்தாள். அவள் பிரிக்கும் வரை கை கட்டிக் கொண்டு நின்று இருந்தான்.

உள்ளே இருந்த பெட்டியை திறந்தவள் அதிர்ச்சியில் விழியகல பார்த்தாள்.

“ஸ்டெத்தா…? உங்களுக்கு நியாபகம் எல்லாம் இருக்கா?” என்று அதிர்ச்சி குறையாமல் கேட்க “சொன்ன சொல்ல நிச்சயமா காப்பாத்துவேன்” என்றான்.

ஷிவானி அந்த ஸ்டெத்தஸ்கோப்பை பார்த்துக் கொண்டே நிற்க இந்திரஜித் அதை கையில் எடுத்தான்.

“நீ முழுசா டாக்டர் ஆனதும் ஸ்டெத் வாங்கி தரேன் னு சொல்லி இருந்தேன். இப்ப மேடம் ஸ்பெஷலிஸ்ட்… நானும் சொன்ன சொல்ல காப்பாத்தனும்ல?” என்று கேட்டவன் அதை அவளது காதில் மாட்டி விட்டான்.

அவள் கையிலிருந்த பெட்டியை வாங்கி காரின் மேல் வைத்து விட்டு அவளை பார்த்தான். இன்னும் ஷிவானி நம்ப முடியாமல் நின்று இருந்தாள்.

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளின் காதில் திடீரென இதய துடிப்பு கேட்க வேகமாக குனிந்து பார்த்தாள். இந்திரஜித் தன் இதயத்தின் மேல் வைத்து பிடித்து இருக்க ஷிவானியின் காதில் தெளிவாக இதய துடிப்பு கேட்டது.

அதிர்ச்சி தாங்காமல் இரண்டு கையையும் கொண்டு வாயை மூடிக் கொண்டாள். சந்தோசத்தில் கண் கலங்க ஆரம்பிக்க அதே நேரம் மனக்கண்ணில் பதினேழு வயது ஷிவானி தோன்றினாள்.

இருபத்தி மூன்று வயது இந்திரஜித் தோன்றினான். அவனிடம் ஷிவானி தன் காதலை சொன்ன நிமிடங்கள் தோன்றியது.

அன்று… பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருவதற்கு முதல் நாள்… ஷ்ராவ்யாவை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு சென்றிருந்தாள்.

அவளது மனநல சிகிச்சைக்காக அனுப்பி விட்டு ஷிவானி இந்திரஜித்தின் அறையில் அமர்ந்து இருந்தாள். இந்திரஜித் சிகிச்சை முடிந்து வர “இன்னும் அக்காவுக்கு எவ்வளவு நாள் தான் ட்ரீட்மெண்ட் தருவீங்க?” என்று சலிப்பாக கேட்டாள்.

அவள் முன்னால் அமர்ந்த இந்திரஜித் “எப்போ உன் அக்கா பழசெல்லாம் தேவையில்ல னு நினைக்கிறாளோ அது வரை… எப்ப கனவ கடந்து வாழுறாளோ அது வரை… ” என்று கூறி விட்டு எதோ எழுதினான்.

ஷிவானி தலையில் கை வைத்துக் கொண்டாள்.

“அதெல்லாம் நீங்க தான மாத்தனும்.. அவளா மாறுறதுக்கு உங்களுக்கு எதுக்கு தண்டமா ஃபீஸ் வேற கட்டனும்?”

இந்திரஜித் சிரித்து விட்டு “நாளைக்கு ரிசல்ட் வருதுல? என்ன படிக்க போற?” என்று கேட்டு பேச்சை மாற்றினான்.

“டாக்டருக்கு தான் படிக்க போறேன். டாக்டர் ஷிவானி”

ஷிவானி சுடிதார் கழுத்து பட்டியை தூக்கி விட்டு பெருமையாக சொல்ல “அப்படி நீ படிச்சு முடிச்சுட்டா நான் உனக்கு ஸ்டெத் வாங்கி தரேன். ஆல் தி பெஸ்ட்.” என்று வாழ்த்தினான்.

அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்த ஷிவானி “ஏன் ? என்னால ஸ்டெத்த வாங்க முடியாதாமா? இல்ல படிக்கும் போது அத யூஸ் பண்ண மாட்டனா?” என்று கேட்டு வைத்தாள்.

“ஸ்டெத் எவ்வளவு முக்கியம் னு நீ படிச்சு முடிச்சதும் புரியும். முக்கியமா நீ படிக்குறதுக்கு யூஸ் பண்ணுறதும்… ஒரு முழு டாக்டரானதும் வர கிஃப்ட்டும் ஒன்னு கிடையாது. இன்னும் நீ வளரனும்”

“வளர்ந்ததெல்லாம் போதும். நீங்க வாங்கி குடுக்க மறக்காம இருந்தா சரி” என்று கூறும் போதே ஷ்ராவ்யா வந்து விட அன்று கிளம்பி விட்டாள்.

தேர்வு முடிவு வந்த அடுத்த மாதம் மீண்டும் ஷ்ராவ்யாவுடன் சிகிச்சைக்கு சென்றவள் அதே போல் இந்திரஜித் வந்து அமர “நான் இங்க இருந்து கிளம்பிட்டா அக்கா தனியா தான் வருவா. பார்த்துக்கோங்க புரியுதா?” என்று கட்டளை போட்டாள்.

“சரிங்க பாட்டிமா… நீங்க ஒழுங்கா படிங்க அது போதும். இவள நான் பார்த்துக்கிறேன்”

“அது…” என்றவள் சிறிது இடைவெளி விட்டு “நான் ஏன் டாக்டர் படிப்ப செலக்ட் பண்ணேன் னு கேட்க மாட்டீங்களா?” என்று கேட்டாள்.

“சொல்லு ஏன் பண்ண?”

“உங்களால தான். டாக்டருக்கு டாக்டர் தான பர்ஃபெக்ட் மேட்ச்?”

இந்திரஜித் சட்டென நிமிர்ந்து பார்த்தான். ஷிவானி விளையாடவில்லை. தீவிரமாக பேசினாள். முதல் முறையாக அன்று தான் என்ன பேசுவது என்று தெரியாமல் இந்திரஜித் முழித்தான்.

அவளது வார்த்தைக்கான அர்த்தம் விளங்காத அளவு அவன் முட்டாள் கிடையாது. ஆனால் இப்படி ஒன்றை இதற்கு முன் கையாளாததால் குழம்பிப் போனான்.

“என்ன டாக்டர்? பதில் சொல்ல மாட்ரீங்க? பட் நான் உங்கள போல சைக்காலஜி படிக்க மாட்டேன். எனக்கு கைனகாலஜி தான் வேணும்”

இந்திரஜித் சற்று தெளிவடைந்து விட்டான்.

“லுக் ஷிவானி…” என்று ஆரம்பிக்கும் போதே ஷிவானி பெரிய கும்பிடு போட்டாள்.

“இந்த அட்வைஸ் பண்ணுறது… மனச மாத்துறது எல்லாம் அக்காவோடயே வச்சுக்கோங்க. என் கிட்ட வேலைக்கு ஆகாது”

மீண்டும் எதோ இந்திரஜித் சொல்ல வர ஷிவானி இடையில் புகுந்தாள்.

“இந்த டீன் ஏஜ்ல வரதெல்லாம் லவ் இல்ல.. மறந்துடு.. படி… அதான? ” என்று கேட்க இந்திரஜித்திற்கு சிரிப்பு வந்து விட்டது. அவன் அதை சொல்ல தான் வாயை திறந்தான்.

“இது டீன் ஏஜ் லவ் தான். பட் என் லவ் ஸ்ட்ராங்… அத நான் ப்ரூஃப் பண்ணி காட்டுறேன். இன்னையில இருந்து உங்க கிட்ட பேச மாட்டேன். உங்கள பார்க்கவும் ட்ரை பண்ண‌மாட்டேன்.

தூரமா இருந்தா காதல் மறஞ்சுடாது.. அத உங்களுக்கு புரிய வைக்கிறேன். முழுசா கைனகாலஜி ஸ்பெஷலிஸ்ட் ஆகிட்டு தான் உங்க முன்னாடி வந்து நிற்ப்பேன். அதுக்கு இடையில எது நடந்தாலும் வர மாட்டேன். சத்தியமா…”

ஷிவானி இப்படி‌ ஒரு சபதம் எடுப்பாள் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை அவன். அவனை ஒரு வார்த்தை கூட மறுத்து பேச முடியாமல் செய்து விட்டு தைரியமாக அமர்ந்து இருந்தாள்.

‘லவ் பண்ணுறேன் னு சொல்லிட்டு கொஞ்சமாச்சும் வெட்க படுறாளா பாரேன்’ என்று நினைத்தவனுக்கு அவளது தைரியம் தான் ரொம்பவும் பிடித்து இருந்தது.

“சோ… சொன்ன சொல்ல காப்பாத்துவ?”

“நிச்சயமா…. நீங்களும் எனக்கு ஸ்டெத் வாங்க ரெடியா இருங்க”

“யாருக்கு ஸ்டெத்?” என்று கேட்டுக் கொண்டே ஷ்ராவ்யா வர “உங்க பாடிகார்ட் எனக்கு வாங்கி தருவாராம். நல்ல க்ரேட்ல காலேஜ்ஜ முடிச்சா…” என்றாள்.

“ஓஹோ… அப்ப ஒன்னு பண்ணு… வருசத்துக்கு ஒன்னு வாங்கு… என் தங்கச்சி எல்லா வருசமும் பெஸ்ட்டா தான் மார்க் வாங்குவா”

“என் ஸ்வீட் அக்கா… ” என்று ஷ்ராவ்யாவை கொஞ்சியவள் “கேட்டுக்கோங்க.. வாங்கி வைங்க.. வந்து.. வாங்கிக்கிறேன்” என்று கூறி விட்டு ஷ்ராவ்யாவோடு வெளியே சென்று விட்டாள்.

அது தான் இந்திரஜித் ஷிவானியை கடைசியாக பார்த்தது. அதன் பின் இன்று தான்‌ இருவருமே பார்த்துக் கொள்கின்றனர்.

ஊருக்கு பெற்றவர்களை பார்க்க வந்தாலும் இந்திரஜித்தை சந்திக்கவோ பேசவோ முயற்சி செய்ய மாட்டாள். அவனுக்கும் அதே நேரம் வேறு எதாவது வேலை வந்து விடும்.

இன்று ஷிவானி வந்து விட்டாள் என்று ஷ்ராவ்யா சொன்னதும் அவளுக்கு வாங்கி தருவதாக சொன்னதை எடுத்து வந்து விட்டான்.

ஷிவானி பழைய நினைவுகளிலிருந்து வெளிவந்து கண்ணீரை துடைக்க “இப்ப நான் உன லவ் பண்ணுறேன் னு சொன்னா நீயே அத நம்ப மாட்ட… ஆனா இதுக்கும் மேல உன் லவ்வ சோதிக்க எனக்கு ஆசை இல்ல. ” என்றான்.

ஷிவானி சிரிப்பும் அழுகையுமாக அவனை பார்த்தாள். இத்தனை வருடம் யாருக்கும் தெரியாமல் அவள் மனதில் புதைத்து வைத்த விதை இன்று உயிர் பெற்று விட்டது.

அவன் முகத்தை பார்க்காமல் இருக்கும் நிமிடங்கள் எல்லாம் கொடுமையாக இருக்கும். அதுவும் இந்த ஊருக்கு வந்து விட்டும் கூட அவனை பார்க்காமல் இருப்பதெல்லாம் அவளுக்கு பெரிய வேதனையாக இருந்தது.

பல நாட்கள் மௌனமாக அழுதிருக்கிறாள். ஆனாலும் யாரிடமும் சொல்லவில்லை. தன் வாக்கை உடைக்க முயற்சிக்கவும் இல்லை. அத்தனை வலிகளுக்கும் இன்று மொத்தமாக மருந்து கிடைக்க சந்தோசத்தை முந்திக் கொண்டு அழுகை வந்தது.

அவளது கண்ணீரை துடைத்து விட்டவன் காதில் இருந்த ஸ்டெத்தஸ்கோப்பை எடுத்து விட்டான். பிறகு அதை அவள் கழுத்தில் போட்டு விட இப்போது ஷிவானி சிரித்து விட்டாள்.

“ஏன் சிரிக்கிற?”

“சொன்னா அடிக்க கூடாது”

“சரி சொல்லு”

“நீங்களும் டாக்டர் தான… ஸ்டெத் தான் டாக்டருக்கு முதல் தாலி மாதிரி னு கேள்வி பட்டு இருப்பீங்க தான?”

அவள் புருவம் உயர்த்தி கேட்க இந்திரஜித் அவள் தலையில் கொட்ட கை ஓங்கி விட்டு அவனும் சிரித்து விட்டான்.

“ஹே… சீரியஸா சொல்லுறேன். காலேஜ்ல யாரையும் என் கழுத்துல போட விட மாட்டேன். நானும் யாருக்கும் போட்டு விட மாட்டேன். எவ்வளவு அவசரமா இருந்தாலும் கையில தான் வாங்கிப்பேன். நீங்க வேற வாங்கி தரேன் சொல்லி இருந்தீங்களா.. சோ…..”

ஷிவானி முடிக்காமல் நிறுத்த இந்திரஜித் அவளை இமைக்காமல் பார்த்தான். பிறகு “சாரி” என்க “மன்னிச்சுட்டேன். இதுக்காகவே” என்று கழுத்தில் இருந்ததை தொட்டு காட்டினாள்.

“சரி பாக்ஸ்ல வை. ” என்று எடுத்து கொடுக்க ஷிவானி பத்திர படுத்தினாள்.

“ஷாயா கிட்ட எப்போ சொன்ன?”

“அக்கா ஆதீரன் பத்தி சொல்லும் போது நான் இத சொன்னேன்”

“எப்போ?”

“அக்கா தேனியில இருந்து வந்ததும்”

“எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பேசுனது தெரியுமா ? தெரியாதா?”

“தெரியுமே…”

இந்திரஜித் அவளை ஆச்சரியமாக பார்க்க ஷிவானி சிரித்தாள்.

“அதாவது பாடிகார்ட் சார்… நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை நாய்க்கு தான் கிடைக்கும் னா.. அத யாராலையும் மாத்த முடியாது” என்றாள்.

“அப்ப நீ நான் நாய் னு அக்சப்ட் பண்ணிக்குற?”

இந்திரஜித்தை முறைத்தவள் உடனே கண்ணை மூடி கோபத்தை விரட்டினாள்.

“இன்னைக்கு நல்ல மூட்ல இருக்கேன். இப்படியே ஓடி போயிடுங்க. அதான் உங்களுக்கு நல்லது” என்று விட்டு “இத போய் அக்கா கிட்ட காட்ட போறேன்” என்று கூறி விட்டு ஓடினாள்.

இந்திரஜித் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். அவளது காதலன்… அவனுக்காக என்று அவனையே பார்க்காமல் தவம் இருப்பவள்… அவனை அவளுடைய அக்காவிற்கு திருமணம் செய்து வைப்பதாக பேசும் போது கூட அவள் வாய் திறக்கவில்லை.

இத்தனைக்கும் ஷ்ராவ்யா அவளுடன் பிறந்தவள் அல்ல. அவள் தன் காதலனை எடுத்துக் கொள்வாள் என்ற பயமே ஷிவானிக்கு வரவில்லை என்றால்?

ஷிவானிக்கு அவளது காதல் மீது இருக்கும் நம்பிக்கையை நினைத்து அவனுக்கு மெய் சிலிர்த்தது. என்ன நடந்தாலும் காதலை விட்டு கொடுக்காமல் சிறு சந்தேகம் கூட இல்லாமல் இருக்கும் அவளது காதலை பெற அவன் என்ன‌ புண்ணியம் செய்தானோ?

உயிர் மூச்சு இருக்கும் வரை ஷிவானியின் காதலை போற்றி பாதுக்காக வேண்டும்‌ என்ற‌ முடிவுக்கு வந்தான்.

ஷிவானி நேராக ஷ்ராவ்யாவின் அறைக்கு ஓடினாள். படியேறி மூச்சு வாங்கி வந்து கதவை தட்ட “பார்த்து‌டி… ஏன் இப்படி ஓடி வர?” என்று கேட்டாள்.

“உன் கிட்ட ஒன்னு காட்ட வந்தேன்”

“நானும் உன் கிட்ட ஒன்னு காட்டனும் வா”

இருவரும் தங்களுக்கு கிடைத்த பொக்கிஷங்களை மற்றவருக்கு காட்டினர்.

*.*.*.*.*.*.

மாலை ஆதீரனிடம் வந்தாள் ஷ்ராவ்யா. அவன் அவளை பார்த்து விட்டு எழ “வாங்களேன்… கார்டன காட்டுறேன்” என்று அழைத்துச் சென்றாள்.

இருவரும் மெல்ல நடக்க “உங்க மேல எனக்கு எந்த உணர்வும் இல்ல னு பொய் சொல்ல மாட்டேன். ஆனா அது நிஜமான உணர்வுகள் தானா னு கண்டு பிடிக்க தான் உங்க கிட்ட நான் இந்த அஞ்சு மாசமா பேசவே இல்ல. நீங்க என்ன தேடி வருவீங்க னு எல்லாம் எதிர் பார்க்கல. என்னோட உணர்வுகள் எல்லாம் சரி னு தோனுச்சுனா வீட்டுல சொல்லு னு ஜித்து சொன்னான். நானும் சொல்லுறதுக்கான நேரத்த எதிர் பார்த்துட்டு இருந்தேன்.

இப்போ நீங்க வந்து பேசுனதும் எல்லாமே கன்ஃபார்ம் ஆகிடுச்சு. இப்பவும் சொல்லுறேன். என்னோட உணர்வுகள் சரி தான். உங்கள எனக்கு பிடிக்கும் தான். ஆனா எங்க வீட்டுல சரி னு சொன்னா தான் கல்யாணம் பண்ணிக்குவேன். அவங்க கிட்ட பேசிட்டு அப்புறமா முடிவுக்கு வரலாம்”

ஷ்ராவ்யா தேங்காய் உடைப்பது போல் பட்டென விசயத்தை உடைத்தாள். அவளது தயக்கமில்லா பேச்சு எப்போதுமே ஆதீரனுக்கு பிடிக்கும். இன்றும் அதை ரசித்தான்.

“உங்க வீட்டு முழு சம்மதத்தோட தான் நம்ம கல்யாணம் நடக்கும்” என்று வாக்கு கொடுத்தான்.

ஆனால் அந்த கல்யாணத்திற்கு செந்தூரா ஒரு கட்டளை போட்டார்.

அத்தியாயம் 35

யாருடனோ பேசிக் கொண்டே நடந்து கொண்டிருந்த இந்திரஜித் தன்னை தொடர்ந்து வந்த கொலுசு சத்தத்தில் நின்று விட்டான். பேசிக் கொண்டிருந்தவரை அனுப்பி விட்டு திரும்பி முறைத்தான்.

அவனை பார்த்த ஷிவானி அவனை விட அதிகமாக முறைத்தாள். “என்ன உனக்கு பிரச்சனை?” என்று கேட்க “எனக்கொன்னும் பிரச்சனை இல்ல. அக்கா உங்கள கால் பண்ண சொன்னா. அத சொல்ல தான் வந்தேன். ” என்று கடுப்பாக கூறினாள்.

அவன் அவளை நம்பாமல் பார்க்க தோளை குலுக்கியவள் “நம்பலனா போங்க எனக்கென்ன போச்சு?” என்று கேட்டு விட்டு “பெரிய இவரு…. இவர் மேல ஆசை பட்டு பின்னாடி வந்த மாதிரி சீன பாரு” என்று முணுமுணுத்துக் கொண்டே அவனை இடித்து விட்டு சென்றாள்.

அவள் கடந்ததும் போனை கையில் எடுத்தான். உண்மையில் ஷ்ராவ்யா அழைத்து இருந்தாள். வேகமாக அவளை அழைத்தான்.

“என்ன ஷாயா?”

“ஜித்து … ஆதி கிட்ட போன குடேன். ப்ளீஸ்”

“எதுக்கு? அவருக்கே கால் பண்ண வேண்டியது தான?”

“அவர் எடுக்கல டா. போய் குடு”

“வெயிட்”

இந்திரஜித் ஆதீரன் இருந்த இடத்திற்கு சென்றான். அறைக்கு வெளியே நின்று ஆதீரன் யாரோ ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தான். இந்திரஜித் அவனை தனியாக அழைத்து போனை கொடுத்தான்.

“என்ன மது?”

“எனக்கு இப்பவே சொல்லுங்க… தலை வெடிச்சுரும் போல இருக்கு”

ஆதீரன் அவளது புலம்பலில் சிரித்தான்.

“அட ஊருக்கு போனதும் தெரிஞ்சுட போகுது.. அது வரை பொறுக்க மாட்டியா?”

“மாட்டேன். இப்பவே எனக்கு தெரிஞ்சாகனும். என்ன சர்ப்ரைஸ்?”

“சொல்லிட்டா அது சர்ப்ரைஸ் இல்ல மது”

“அப்புறம் ஏன் முன்னாடியே எனக்கு சர்ப்ரைஸ் னு சொன்னீங்க?”

“ஆபிஸ்ல உன் பேரு சார்ப் ஷ்ராவ்யா னு மேகலா சொன்னாங்க. சோ கண்டு பிடிப்ப னு நினைச்சு சொன்னேன்… நீ என்னடானா மக்கு மதுவா இருக்க.”

“நான் மக்கா? மேகி சொன்னாளாக்கும் ?அவ கிடக்குறா பேக்கு. எனக்கு நீங்க இப்பவே சொல்லுங்க”

“கல்யாணம் முடியட்டும் சொல்லுறேன்”

“நோ.. அதுக்கு நாளைக்கு காலையில வரை வெயிட் பண்ணனும்”

“பண்ணு மது.. இப்போ கூப்பிடுறாங்க. பை”

ஆதீரன் அழைப்பை துண்டித்து விட ஷ்ராவ்யா தலையை பிய்த்து கொள்ளாத குறையாக அமர்ந்து விட்டாள்.

நாளை காலை ஆதீரனுக்கும் ஷ்ராவ்யா என்கிற மதுராஸ்ரீக்கும் திருமணம். சந்தானலட்சுமி தன் மகனுக்காக ஷ்ராவ்யாவை பெண் கேட்ட போது செந்தூரா அவர்களிடம் ஒரு கட்டளை விதித்தார்.

அது … ஜெயபிரதாபன் பொன்னாம்பாளின் குடும்பத்திற்கும் ஆதீரனின் குடும்பத்திற்கும் இனி எந்த சம்பந்தமும் இருக்க கூடாது. பிற்காலத்தில் ஷ்ராவ்யா பொன்னாம்பாளை சந்திக்க மாட்டாள்.

அவளது உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த குடும்பத்துடன் இருக்கும் அத்தனை உறவையும் துண்டித்து விட வேண்டும் .

அவர் சொன்ன வார்த்தைகள் எல்லாமே ஷ்ராவ்யாவின் நிம்மதியை பொருத்தே அமைந்திருந்தது. அதில் சந்தானலட்சுமிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லாததால் உடனே சம்மதித்து விட்டார்.

இன்னும் பொன்னாம்பாளின் உயிர் பிரியவில்லை. செய்த பாவத்திற்கு தண்டனை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறார்.

அவரை கவனித்துக் கொண்டிருந்த அமுதாவிற்கு திருமணம் முடிந்து விட்டது. அமுதாவின் படிப்பு முடிந்ததும் திருமணம் பற்றி பேசினர்.

அவள் ஆதீரன் பக்கம் கை காட்ட அவன் மறுத்து விட்டான். உடனே வேறு வரனை பார்த்து திருமணம் செய்து வைத்து விட்டனர்.

இப்போது பொன்னாம்பாளை முழுவதுமாக கவனித்துக் கொள்வது அமுதாவின் அப்பாவும் அம்மாவும் தான். ஆதீரன் இன்று வரை எட்டி கூட பார்க்கவில்லை.

செந்தூரா சொல்லி விட்ட பிறகு அவர் இறந்தாலும் ஆதீரனுக்கு சம்பந்தம் இருக்காது.

நிச்சயதார்த்தம் முடிந்த பின் ஷ்ராவ்யாவிடம் “உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வீட்டுல வெயிட் பண்ணிட்டு இருக்கு” என்று கூறி வைத்தான்.

அப்போதிருந்து என்னவென்று தெரியாமல் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறாள். மறுநாள் காலை மணமேடையில் அமர்ந்த பின்னும் ஆதீரனிடம் ஷாயா கேட்டுக் கொண்டே இருந்தாள்.

இவர்கள் ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்க ஷிவானி இந்திரஜித் எங்கிருந்தாலும் வந்து இடித்து விட்டு சென்றாள். யாருடனாவது அவன் நின்று பேசிக் கொண்டிருந்தால் அங்கு வேண்டுமென்றே வந்து அவனை இடித்து விட்டு செல்வாள்.

தன் மீது மோதி விட்டு தன்னையே முறைத்து பார்ப்பவளை இந்திரஜித்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தாலியை எல்லோரிடமும் கொடுத்து ஆசி வாங்கி விட்டு மேடைக்கு வந்தாள் ஷிவானி.

மேடைக்கு கீழ் இந்திரஜித் நிற்க அட்சதை தட்டை அவனிடம் நீட்டினாள். அவன் எடுத்துக் கொண்டு அவளை முறைக்க “இப்ப எதுக்கு முறைக்கிறீங்க?” என்று ஒன்றும் தெரியாத அப்பாவியாக கேட்டாள்.

“என்ன கொழுப்பா? அப்ப இருந்து பார்க்குறேன். நீ இடிச்சுட்டு என்ன‌ முறைக்குற?”

“நான் கேட்டதுக்கு நீங்க சரி‌ னு சொன்னா நான் ஏன் இப்படி பண்ண போறேன்?‌இப்ப கூட இதோ தாலி இருக்கு. எடுத்து கட்டிருங்க… பிரச்சனை முடிஞ்சது..”

“மேடையில உட்கார்ந்து இருக்கவங்க கேனைங்களா?”

“அவங்க பிரச்சனைய அவங்க பார்த்துப்பாங்க. நீங்க எனக்கு பதில சொல்லுங்க”

இருவரும் பேசிக் கொண்டிருக்க ஐயர் தாலியை கேட்டார். இந்திரஜித் அங்கிருந்து அகல பார்க்க அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டே ஷிவானி மேடையேறினாள்.

சுற்றியும் ஆதீரனின் சொந்த பந்தங்கள் ஷ்ராவ்யாவின் சொந்த பந்தங்கள் என அந்த திருமண மஹாலை நிறைத்து இருந்தனர்.

மணிமாலாவும் தாமரையும் குடும்பத்துடன் வந்து இருந்தனர். ஆதீரன் அவர்களை வரவழைத்து இருந்தான். சிந்தாமணி முன்னால் அமர்ந்து கொண்டு ஷ்ராவ்யாவை பார்த்துக் கொண்டே இருந்தாள். அவளது அண்ணன் ஆதீரனுக்கு துணையாக மேடையில் நின்று இருந்தான்.

ஜெயராமும் அவர்களோடு நிற்ப்பதும் வேலை வந்தால் இறங்கி விடுவதுமாக இருந்தான். ஷ்ராவ்யாவின் குடும்பம் ஒரு பக்கம் நிற்க சந்தானலட்சுமி ஒரு பக்கம் நின்று இருந்தார்.

ஆதீரனின் தாத்தா பாட்டி எல்லோரையும் விரட்டி வேலை வாங்கி விட்டு கடைசியாக மேடையேறினர். பாட்டி தான் தாலி எடுத்து கொடுக்க வேண்டும் என்று ஷ்ராவ்யா கூறியிருந்தாள். அதனால் அவர்களை மேடைக்கு அழைத்தனர்.

தாலியை ஐயரிடம் ஒப்படைத்து விட்டு ஷிவானி இந்திரஜித்தின் கையை பிடித்துக் கொண்டாள்.

“ஏய்.. கைய விடு” என்று இந்திரஜித் மெல்லிய குரலில் கூற “முடியாது.. என்ன கல்யாணம் பண்ணிக்குறேன் னு சொல்லுங்க” என்றாள்.

“முதல்ல நீ உன் கரியர்ர பாரு”

“அத விட இது முக்கியம்… இப்ப அக்சப்ட் பண்ண போறிங்களா இல்லையா?”

ஷிவானி இந்திரஜித்தின் முகத்தையே பார்த்துக கொண்டிருக்க “சரி… திரும்பு” என்று அவள் முகத்தை பிடித்து திருப்பி விட்டான்.

“ஹை… அப்ப ஓகே வா?” என்று மீண்டும் அவன் முகத்தை பார்த்து கேட்க “ஓகே… திரும்பி இந்த கல்யாணத்த பாரு” என்று மீண்டும் திருப்பி விட்டான்.

ஷ்ராவ்யா ஷிவானியை திரும்பி பார்க்க ஷிவானி கட்டை விரலை உயர்த்தி காட்டினாள். ஷ்ராவ்யாவும் அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்து விட்டு ஆதீரனிடம் கூறினாள்.

இந்திரஜித் நேராக நின்று இருக்க ஷிவானி மட்டும் இந்திரஜித்தை நிமிர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தாள்.

“கழுத்து வலிக்க போது ஷிவா… திரும்பு” என்று அவன் அவள் முகத்தை பிடித்து திருப்பி விட ரப்பர் பந்தாய் மீண்டும் அவள் பார்வை அவனின் மீதே வந்து விழுந்தது.

அவள் பார்த்துக் கொண்டே இருப்பதை ஆதீரன் கவனித்து சிரிக்க இந்திரஜித் நொந்து போனான்.

“ஷிவா திரும்ப போறியா இல்லையா?”

“மாட்டேன்”

“திரும்பு னு சொன்னேன்”

“முடியாது”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே பாட்டி தாலியை எடுத்துக் கொடுக்க எல்லோருடைய கவனமும் மணமக்கள் மீது சென்றது. அப்போதும் ஷிவானி திரும்பாமல் இருக்க அவள் முகத்தை பிடித்து திருப்பியவன் குனிந்து கன்னத்தில் முத்தம் பதித்தான்.

அழுத்தமாக உரசிச் சென்ற மீசையில் ஷிவானி அதிர்ந்து போய் நின்று விட ஆதீரன் ஷ்ராவ்யாவின் கழுத்தில் மங்களநாணை அணிவித்தான்.

எல்லோரும் அட்சதை தூவ ஷிவானி அசையாமல் நின்று இருந்தாள். அவளது கையை பிடித்து இந்திரஜித் அட்சதையை தூவ அப்போது தான் அவளுக்கு உயிர் வந்தது.

வேகமாக அங்கிருந்து அவள் ஓட பார்க்க இப்போது இந்திரஜித் விடவில்லை. ஷிவானியின் கை அவனிடம் மாட்டி இருந்தது. ஷிவானி விடுவிக்க போராட இந்திரஜித் அசையாமல் நின்றான்.

“சாரி சாரி சாரி.. இனிமே அப்படி பண்ண மாட்டேன்..‌ப்ளீஸ்” என்று ஷிவானி கெஞ்ச “அப்படி வா வழிக்கு” என்று கூறி கையை விட்டு விட்டான்.

விட்டால் போதுமென ஷிவானி அங்கிருந்து ஓடி விட ஆதீரனும் ஷ்ராவ்யாவும் அக்னியை வலம் வந்தனர். அன்றைய இரவு ஷ்ராவ்யாவின் வீட்டில் கழித்து விட்டு மறுநாள் ஆதீரனின் ஊருக்கு கிளம்பி விட்டனர்.

முதலில் விஜயலிங்கத்தின் வீட்டிற்கு தான் அழைத்து சென்றனர். ஷ்ராவ்யா அங்கு செல்ல மறுக்க “அந்த வீடு ஆதியோட தாத்தாவுக்கும் பெரியப்பாவுக்கும் மட்டும் சொந்தம் இல்ல ஷ்ராவ்யா… இது ஆதியோட கொள்ளு தாத்தா கட்டுன வீடு. இடையில தேவையானத மாத்தினாலும் நீ வந்து தான் வீட்ட முழுசா மாத்துன. நீ மாத்துன வீட்டுல அவங்க வாழல. அதுனால இந்த வீட்ட ஒதுக்காத. பூர்வீக வீடு ரொம்ப முக்கியம்” என்று சந்தானலட்சுமி கூறினார்.

அதற்கு மேல் ஷ்ராவ்யா வாதிடவில்லை. அந்த வீட்டிற்கு சென்றவள் நேராக சென்று சாமியறையை திறந்தாள். அவள் திறந்ததும் கதவு எந்த பிரச்சனையும் இல்லாமல் திறந்து கொண்டது.

உள்ளே பூட்டி வைத்திருந்த பெட்டியை எடுத்து திறந்து பார்த்தாள். அவள் வைத்த சிலை இன்னும் அப்படியே இருந்தது. அதை எடுத்து துடைத்து வைத்தாள். விளக்கை ஏற்றியவள் மனதில் வேண்டிக் கொள்ள ஆரம்பித்தாள்.

‘நான் எதாவது தப்பு பண்ணி இருந்தா என்ன மன்னிச்சுடுங்க. இதே வீட்டுக்கு வாழ வருவேன் னு நான் நினைக்கல. ஆனா உங்க சித்தம் இது தான் னா … எல்லாத்தையும் மறந்து நிம்மதியான ஒரு வாழ்க்கைய குடுங்க’

ஷ்ராவ்யாவும் ஆதீரனும் சாமி கும்பிட்டு முடித்ததும் சில நிமிடங்கள் கழித்து மீண்டும் கிளம்பினர்.

“எங்க போறோம்?”

“அந்த ட்வின் வீட்டுக்கு”

ஆதீரன் அதற்கு மேல் எதுவும் சொல்ல வில்லை. ஆதீரன் காரை ஓட்ட ஷ்ராவ்யா அருகில் அமர்ந்து இருந்தாள். மற்றவர்கள் வேறு காரில் வந்தனர். அந்த வீட்டை நெருங்க நெருங்க ஷ்ராவ்யாவின் இதயம் படபடத்தது. கடைசியாக ஆதீரனை காப்பாற்றி அழைத்து வரும் போது தான் அந்த வீட்டை பார்த்தாள்.

இப்போது மீண்டும் பார்க்க போகிறோம் என்றதும் சந்தோசமும் எதிர்பார்ப்பும் போட்டி போட கண்ணாடியை இறக்கி விட்டு எட்டி பார்த்தாள்.

வீட்டில் இருந்த அலங்காரம் அவளை பிரம்மிக்க வைத்தது. முதல் முறை அந்த வீட்டை பார்த்து அடைந்த பிரம்மிப்பை விட பல மடங்கு அதிகமாக ஆச்சரியமடைந்தாள்.

எதோ இரண்டு அரண்மணை அவளது வருகைக்காக காத்திருப்பது போல் தோன்றியது. அத்தனை அழகாக அந்த வீட்டை அலங்கரித்து இருந்தனர்.

இருண்டு கிடந்த வீடுகள் இப்போது ஒளி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்க ஷ்ராவ்யா விற்கு தன் கண்ணயே நம்ப முடியவில்லை. அந்த வீட்டை புதுப்பித்து இருப்பார்கள் என்று தெரியும். ஆனால் இவ்வளவு அழகாக இருக்கும் என்று நினைக்கவில்லை.

காரை விட்டு இறங்கி ஆதீரன் அவளை உள்ளே அழைத்துச் சென்றான். அந்த வீட்டில் அவளுக்கு இருந்த கசப்பான நினைவுகள் எல்லாம் கண் முன் வந்து போயின. அந்த வீட்டின் அலங்காரங்களை எல்லாம் கண்ணீர் மறைக்க ஆதீரன் அவளை பிடித்து அழைத்துச் சென்று ஒரு இடத்தில் நிறுத்தினான்.

கலங்கிய கண்ணீருக்கு இடையில் விந்தியாவும் தனேஷ்வரும் சௌந்தர்யா வும் தெரிந்தனர். அவசரமாக கண்ணீரை துடைத்து விட்டு பார்த்தாள். மூவரின் படமும் அந்த ஹால் முழுவதையும் மறைத்து இருந்தது.

மாலையுடன் இருந்த படங்களை பார்த்துக் கொண்டு அவள் நிற்க சந்தானலட்சுமி அந்த படத்தின் முன்னால் இருந்த விளக்கை ஏற்ற சொன்னார்.

விளக்கை ஏற்றியவள் மனதில் நிம்மதி வந்தது. எந்த இடத்தில் அவளது பெற்றோர்களும் சௌந்தர்யா வும் கொடுமையை அனுபவித்தார்களோ அதே இடத்தில் அவர்களை ஆதீரன் கௌரவ படுத்தி இருந்தான்.

ஊருக்குள் இருந்த அத்தனை பேருக்கும் விசயம் தெரிவிக்க பட்டிருந்தது. ஊரில் உள்ள அத்தனை பேரும் பொன்னாம்பாளையும் அவரது குடும்பத்தையும் வெறுத்து ஒதுக்கி விட்டனர்.

“இந்த வீட்டுல தான் நாம இனிமே இருக்க போறோம்” என்று ஆதீரன் கூற ஷ்ராவ்யா ஆச்சரியமாக பார்த்தாள்.

“நிஜம்மாவா?” என்று குதூகலமாக கேட்க “நிஜம்மா தான்.. உன் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் பார்த்து பார்த்து அலங்கரிச்சுருக்காங்க உனக்காக” என்றான்.

அன்று மாலை அவர்களின் திருமண வரவேற்பு முடிய அப்போதே ஷ்ராவ்யாவின் நண்பர்கள் எல்லோரும் கிளம்பி விட்டனர். சொந்த பந்தங்கள் எல்லோரும் கிளம்பி விட இரவு ஷ்ராவ்யாவை ஷிவானி தான் அலங்கரித்தாள்.

“ஏய்.. போதும் டி.. இவ்வளவு அலங்காரமா?”

“நானும் அதான் கா கேட்டேன். ஆனா அம்மா வாயிலயே அடிச்சுட்டாங்க”

ஷிவானி உதட்டை பிதுக்க “நீ கேட்ட லட்சணம் அந்த மாதிரி இருந்துருக்கும்” என்றாள் ஷ்ராவ்யா.

“விடு கா… நீ கிளம்பு …” என்று எழுப்பி நிறுத்தியவள் “ஆமா எதோ சொல்லுவாங்களாமே… ஃபர்ஸ்ட் நைட் ரூம்முக்குள்ள போறதுக்கு முன்னாடி… அத நானும் சொல்லனுமே… எனக்கு இப்ப தெரியாதே” என்று கையை உதறினாள்.

அவள் கையில் ஒரு அடி போட்டவள் “நீ ஒன்னையும் சொல்லி கிழிக்க வேணாம்” என்று கூறி விட்டு முன்னால் நடந்தாள்.

“அய்யோ அக்கா நான் தான் உன்ன கொண்டு போய் விடனும்… நீயா போக கூடாது…” என்று ஓடி வந்து கையை பிடித்தாள்.

“சுத்தம்… வாய மூடு டி . கத்தி மானத்த வாங்குறா”

“அக்கா… இதுக்காக எவ்வளவு போராடுனேன் தெரியுமா? அம்மா அத்தை பாட்டி னு அத்தனை பேரையும் துரத்தி விட்டு நான் தான் எல்லாம் பண்ணுவேன் னு அடம்பிடிச்சு பண்ணிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு போற”

“இப்ப என்ன பண்ணனுங்குற?”

“நீ வெட்கப்பட்டுட்டே வா.. நான் கூட்டிட்டு போறேன்”

மாடியில் இருந்த ஒரு அறை முன்னால் நிறுத்தியவள் “இங்க பாரு கா.. இன்னைல இருந்து பத்தாவது மாசம் நான் தான் உனக்கு டெலிவரி பார்ப்பேன். ரெடியாகிடு. ஆல் தி பெஸ்ட்” என்று கூறி அறை பக்கம் கை காட்ட ஷ்ராவ்யா அவளை முறைத்து விட்டு உள்ளே நடந்தாள்.

கதவை தாண்டியதும் “அக்கா ஆல் தி பெஸ்ட்” மீண்டும் கத்தினாள். ஷாயா அவளை திரும்பி முறைக்க உடனே பல்லை காட்டியவள் அவளை உள்ளே அனுப்பி கதவை அடைத்தாள்.

வெளியில் கதவை அடைத்து விட்டு நடந்த ஷிவானிக்கு திடீரென சந்தேகம் வந்தது.

“ஆமா … நாம படத்துல வர மாதிரி பால் செம்பு எதுவும் குடுக்கலையே… டெலிவரி டிலே ஆயிடுமோ ??? ஆக்சுவலா பால் எதுக்கு? குடிச்சா தூக்கம் தான வரும்?” என்று தனக்கு தானே பேசிக் கொண்டு ஷிவானி நடக்க திடீரென இந்திரஜித் முன்னால் வந்து நின்றான்.

“ஹேய்…நீங்க இன்னும் தூங்கல?”

“ஈவ்னிங் என்ன சொன்ன?”

“ஈவ்னிங்கா…” என்று யோசித்தவளுக்கு அப்போது தான் நியாபகம் வந்தது. வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க பிடிக்காமல் ஆதீரனின் அறையை அலங்கரிக்கும் போது ஒன்று கேட்டு வைத்தாள்.

“டாக்டர் .. எனக்கொரு டவுட்டு”

“என்னது?”

“இந்த ரூம்ம ஏன் பூவால அலங்கரிக்கனும்? அதுல பாருங்க… இத்தன லைட் இருந்தும்… மெழுகுவர்த்தி வேற வைக்க சொல்லுறீங்க. கண்டிப்பா இதெல்லாம் தேவை தான?”

“ஷிவா… என் கிட்ட வாங்க போற… ஒழுங்கா வேலைய பாரு”

“இல்ல டாக்டர்… இதெல்லாம் எதுக்கு னு கேட்குறேன்… ஆக்சுவலி….” என்று ஆரம்பித்து உதட்டசைவில் எதையோ கேட்க அவசரமாக இந்திரஜித் அவள் வாயை மூடினான்.

ஷிவானியின் தலையில் ஒரு கொட்டு வைத்தவன் “மரியாதையா வெளிய போயிடு… இல்ல பிச்சுடுவேன்” என்று துரத்தி விட்டான்.

இப்போது ஷிவானி தன் முன்னால் நின்றிருந்த இந்திரஜித்தை பார்த்தாள். சட்டையை கை மூட்டி வரை மடக்கி விட்டு அவளையே பார்த்துக் கொண்டு அவன் நிற்க உடனே முப்பத்திரண்டு பல்லையும் காட்டினாள்.

“நியாபகம் இல்லையே.. எனக்கு தூக்கம் வருது” என்று ஓட பார்க்க வழியை மறித்து நின்றான்.

“எங்க ஓடுற…? அப்ப பூ எதுக்கு னு கேட்ட.. இப்ப பால் எதுக்கா? நான் வேணா எதுக்கு னு சொல்லட்டுமா?”

“வேணாம் வேணாம் வேணாம்…. நானே கைனி தான்… எனக்கே தெரியும்.. “

“அப்புறம் ஏன் கேட்ட?”

“தெரியாம கேட்டேன் சாமி… மன்னிச்சுடுங்க” என்றவள் அவன் கையில் சிக்காமல் வேகமாக ஓடி விட இந்திரஜித் சிரித்துக் கொண்டே அவள் பின்னால் சென்றான்.

அறைக்குள் நுழைந்த ஷ்ராவ்யா சுற்றியும் பார்த்தாள். அறை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆதீரனை காணவில்லை.

“எங்க ஆள காணோம்?” என்று ஷ்ராவ்யா தனக்கு தானே கேட்க “இங்க இருக்கேன்” என்று பின்னால் இருந்து சத்தம் வந்தது.

“கதவு கிட்ட நின்னு என்ன பண்ணுறீங்க?”

“யோசிச்சுட்டு இருந்தேன்”

“எத பத்தி?”

“இப்போ ஷிவானி சொன்னத பத்தி… இன்னையில இருந்து பத்தாவது மாசம் டெலிவரிக்கு டேட் பிக்ஸ் பண்ணி இருக்கு உன் தங்கச்சி. அதான் ஒரே யோசனை… ஆமா உனக்கெப்புடி? டேட் ஓகே வா?”

ஷ்ராவ்யாவிற்கு அவன் கேட்ட கேள்வியில் புதிதாய் வெட்கம் வந்து ஒட்டிக் கொள்ள முகத்தை திருப்பிக் கொண்டு சிரித்தாள். முதல் முதலாக பார்த்த அவளது வெட்கத்தை ஆதீரன் ரசித்து சிரித்தான்.

“சரி என் கூட வா ” என்று அழைத்துச் சென்றவன் அந்த அறைக்குள் இருந்த மற்றொரு அறைக்குள் நுழைந்தான். அங்கிருந்த விளக்குகளை போட அந்த அறை முழுவதும் ஷ்ராவ்யாவின் சிறு வயது படங்கள் இருந்தது.

ஷாயா ஆச்சரியமாக பார்க்க “இதெல்லாம் கேரளா போய் கலெக்ட் பண்ணேன். இது எல்லாம் அம்மா வச்சுருந்தாங்க. அத்தை மாமா கல்யாண ஆல்பம் தான் உன் கிட்ட கொடுத்தோம். உன்னோட ஆல்பம் என் கிட்ட தான் இருந்துச்சு. கல்யாணத்துக்கு நீ சம்மதிக்கலனா இத உன் கிட்ட சும்மாவே கொடுத்து இருப்பேன். நீ சம்மதிச்சதால தான் இப்படி” என்று அங்கிருந்த படங்களை காட்டி கூறினான்.

“ஸ்கூல் போட்டோஸ்?”

“உன் கூட படிச்சவங்கள பிடிச்சு வாங்குனேன். ஸ்கூல்ல நீ பயங்கர சேட்டை பண்ணுவியாம்”

“பொய்”

“நம்பலனா வா.. கேரளா போய் அவங்க கிட்ட கேட்ப்போம்”

ஷ்ராவ்யா சிரித்து விட்டு “பரவாயில்ல பரவாயில்ல.. ஒன்னும் தேவையில்ல” என்றாள்.

அவள் படங்களை எல்லாம் பார்க்க “பிடிச்சுருக்கா?” என்று கேட்டான்.

“ரொம்ப‌…. தாங்க்யூ” என்றவள் அவனை வேகமாக அணைத்துக் கொள்ள அவனும் கட்டிக் கொண்டான்.

முற்றும்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Hani novels

Story MakerContent AuthorYears Of Membership

22 நினைவைத் தேடும் நிலவே

இன்று அன்றி(ல்)லை 15