in , , , ,

21 நினைவைத் தேடும் நிலவே

பதிவு 21

     

            அந்த பெட்டிக்குள்ளே ஒரு கவருக்குள் சிவப்பு நிறத்தில் மஞ்சள் கற்கள் பதித்து தங்கநிற ஜரிகையிட்டு பளிச்சென்று இருந்தது அந்த உடை… சித்தார்த் அபிமன்யுவின் குடும்பத்தின் பாரம்பரிய உடை போல… அதனை கைகளில் எடுத்து பார்த்தவளின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது… நாடகங்களிலும், திரைப்படங்களிலும் மட்டுமே பார்த்த ஒரு உடைதனை அவள் அணியப்போகிறாளா என்று ஆச்சர்யத்தோடு ஆசையாசையாக தடவிப்பார்க்க அவன் கேட்டான்…

             “உனக்கு பிடிச்சுருக்கா பேபி?…” என்க அவள் தலையசைத்தபடியே சொன்னாள்…

           “பிடிச்சிருக்காவா ரொம்பவே பிடிச்சிருக்கு.. இத நான் ஒரு முறை பிரிச்சி பாக்கலாமா?…”என்று கேட்டவளித்தில் அவனும் அவளுடைய தோரணையில் சொன்னான்..

          “பிரித்துப் பார்க்கலாமாவா? போட்டே பார்க்கலாம்… உன்ன நான் இங்க கூட்டிட்டு வந்ததே அதற்குத்தான்…”

          “உண்மையாவா சொல்ற! நான் இப்போ இத போட்டா ஏதும் ப்ராப்ளம் இல்லையே!…”

          “எந்த ப்ராப்ளமும் இல்ல… நீ போட்டு பார்த்தா தானே சைஸ் எல்லாம் சரியா இருக்கான்னு தெரியும்.. இப்போ நமக்கு நேரமில்லை சீக்கிரமா போய் போட்டு பார்த்துட்டு வா…” என்று டிரெஸ்ஸிங் ரூம் இருந்த திசைபக்கமாக அவன் கையை காட்ட, நிலா அந்த உடையை தூக்கிக் கொண்டு ஓடினாள்…

            புதிதாக எதையாவது குழந்தைகளிடத்தில் வாங்கிக்கொடுத்தால் எவ்வளவு உற்சாகம் இருக்குமோ! அதனைப் போலவே தான் நிலாவும் சந்தோசமாக அவளுடைய திருமண உடையை போட்டுபார்க்க ஆவலாக ஓடிவந்தாள்.. ட்ரஸ்ஸிங் ரூமில் நுழைந்து, சுற்றும்முற்றும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அவளுக்கு கொஞ்சம் திருப்தி ஏற்பட்டவுடன் தான் அவள் அணிந்திருந்ததை அவிழ்க்கவே செய்தாள்.. காஃக்ரா சோலி போல இருந்தது அவளின் திருமண உடை.. மேல் சட்டை இடுப்பிற்கு சற்று மேலே அதாவது நாம் போடும் ப்ளவுசை விட இறக்கம் வைத்து பின்னால் கொக்கிகள் வைத்து இருந்து வைத்தது.. முதலில் அத்தனை பெரிய பாவாடையை கஷ்டப்பட்டு தூக்கி இடுப்பில் கட்டிய பிறகு மேல்சட்டையை போட, குறிப்பிட்ட இடத்திற்கு மேலே கொக்கிகளை போடமுடியாமல் கைவலித்தது… அவளுக்கு கொஞ்சம் எரிச்சல் தான்…

           “அடங்கொய்யால, நமக்கெல்லாம் அவசரத்துல கைய விட்டாலே அண்டாக்குள்ள போகாது.. இது வேற, எவன் அவன் இந்த ட்ரஸ தச்சது? அழகா ஜிப்ப வச்சு தைக்காம கொக்கிய வச்சு.. இப்ப இந்த மூணு கொக்கியையும் நான் எப்படி மாட்டுவேன்?…”என்று சுற்றிசுற்றி வந்து மாட்டிப்பார்த்தவள் கைவலி வந்து அப்படியே சாய்ந்தபடி நின்றுவிட்டாள்…

             இருக்க இருக்க நேரமாகிக்கொண்டே இருந்தது… பத்து நிமிடத்திற்கு மேல் போயிருக்கயில் அறைக்கதவை யாரோ தட்டும் ஓசை கேட்க இவள் இங்கிருந்தபடியே குரல் கொடுத்தாள்…

           “ஹூ இஸ் திஸ்?…”என்று, அவள் கேட்டதுமே வெளிப்புறம் இருந்து அவனின் குரல் கேட்டது…

            “ஹேய் பேபி, நான்தான் சித்தார்த்.. வாட் ஹேப்பன்? இன்னும் போட்டுபார்க்கலையா?…” என்று கேட்க சிறிது தயங்கியவள் யோசனையுடனே சொன்னாள்…

           “இல்ல ஒரு ப்ராப்ளம்…”

          “என்ன ப்ராப்ளம்?…”

          “அது அது வந்து…”என்று நிறுத்திவிட்டு தாவணிப்போல இருந்த துணியால் முழுவதுமாக சுற்றிக்கொண்டு, கொஞ்சமாக கதவை திறந்து தலையை மட்டும் வெளியே அவனை பார்த்தாள்…

          “என்ன பேபி? என்னாச்சு?  எல்லாம் சரியா தானே இருக்கு?..”என்று கேட்க அவனை ஒருமாதிரி தயக்கத்துடன் பார்த்துவிட்டு சொன்னாள்…

           “கொக்கிமாட்டணும்…”

           “ன்ன???…”

           “அடிங்கொய்யால, பின்னாடி கொக்கிமாட்டணும்டா.. கை எட்டல…”என்க, அவன் சிரித்தபடியே கேட்டான்..

           “லேடிஸ் யாரையாவது வர சொல்லட்டா?…” என்று… அதற்கு அவளோ சிறிதும் யோசிக்காமலேயே அவனை வரசொன்னாள்…

           “அதெல்லா ஒன்னும் வேணாம்.. நீயே வந்து போட்டுவிடு…”என்று சொல்லிவிட்டு அவள் உள்ளே செல்ல, அதுநேரம் வரைக்கும் அத்தனை தைரியமாய் நின்றவனுக்கு கைகால்களெல்லாம் கொஞ்சம் நடுங்கத்தான் செய்தது…

            அவள் உண்மையாகவே அப்படி தான் சொன்னாளா? இல்லை தனக்கு தான் காதில் தவறுதலாக விழுந்துவிட்டதா என்று தயக்கத்துடனே நின்றான்.. ஆனால் அவளோ திரும்பவும் தலையை வெளியே நீட்டி அவனை அழைத்தாள்..

           “வான்னு சொன்னா வரமாட்டியா? உன்ன என்ன வெத்தலபாக்கு வச்சா வரவேற்கணும்.. சீக்கிரம் வா…”என்றுவிட்டு உள்ளே செல்ல இவனும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.. அப்படி உள்ளே சென்று அவளை பார்த்தவனுக்கு சப்பென்றானது… 

            பலகற்பனைகளில் மிதந்தபடி உள்ளே சென்றவனுக்கு உடம்பெல்லாம் துணியை சுற்றிக்கொண்டு நின்றவளை பார்த்தால் அப்படி தானே இருக்கும்… 

        “என்ன பேபி இப்புடி நிக்குற?…”

         “வேற எப்புடி அவுத்து போட்டுட்டு நிக்க சொல்லுறியா? அப்படியே வாய ஒடச்சுடுவேன்… ஒழுங்கா நான் துணிய ரிமூவ் பண்ணுற எடத்துட்ட மட்டும் இருக்குற கொக்கிய போட்டுட்டு கெளம்பு…” என்று சொன்னபடியே அவள் ஒவ்வொரு இடத்திலும் கொஞ்சம் அந்த மேலாடையை நகர்ந்த அவனும் சமத்து பிள்ளையாக போட்டுவிட்டுவிட்டு கேட்டான்…

            “என்ன பேபி? அவ்ளோ தானா?…”

             “வேற என்ன பண்ணனும்னு நெனைக்குற? நீ வந்த வேல முடிஞ்சுடுச்சு மூடிக்கிட்டு வெளில போ.. நான் இத கட்டிக்கிட்டு வர்றேன்…”

            “உனக்கு இதெல்லாம் கட்டவாரது பேபி, நான் வேணா ஹெல்ப் பண்ணுறேனே…”என்றவாறு நெருங்கிவந்தவனின் வயிற்றில் ஒரு குத்துவிழுந்தது…

           “நான் சொன்னத மட்டும் செய்.. ஆளயும் மண்டயையும் பாரு.. ரொமான்ஸ் பண்ண கெளம்பி வந்துட்டான்.. ஓட்றாங்குறேன்…”என்று அவன் முதுகில் விடாமல் நாலைந்து அடியை போட்டு அனுப்பி வைக்க அவனோ சிரித்தபடியே வெளியே வந்துவிட்டான்… அவனை அனுப்பியபிறகு அவளுக்கு தெரிந்தவரையில்  ஏனோதானோவென்று சுற்றி முக்காடிட்டு வெளியே வந்து நின்றவளை அப்படியே அள்ளிக்கொள்ளவேண்டும் போலிருந்தது…

               அச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு இப்படியெல்லாம் ஏதேனும் ஒன்றை சுமந்து கொண்டு அன்னநடையிட்டு வருவாளென வெளியே அவன் காத்திருக்க, அதிக கனம் உள்ள லெஹங்காவை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு டக்டக்கென்று குதித்தபடி அவள் வெளியே வர, அவன் கனவு கோட்டை கண்டபடி விழுந்து நொறுங்கியது.. என்னதான் இருந்தாலும் அவள் எல்லா உடைகளிலுமே அழகு தான்… க்யூட் என்று அவன் உள்ளம் சொல்ல அதே சமயம் இவனை நோக்கிவந்தவள் ஏதோ குழந்தை போல பாவாடையை சுற்றிகாட்டி எப்படி என்று புருவம் உயர்த்தி கேட்க, இவன் சைகையாலேயே பிரமாதம் என்று சொல்லிவிட்டு அவளருகில் வந்து நின்றான்…

             “நான் ஒன்னு கேட்டா தப்பா நெனச்சுக்க மாட்டியே பேபி…”

             “பார்றா.. தப்பா தான் நெனப்பேன்…”

            “நான் தான் இன்னும் கேட்கவே இல்லையே..”

           “கேட்டாலும் என் பதில் இதே தான்…” என்றுவிட்டு அவள் சுற்றி சுற்றி காட்ட அவளுடைய செயலை தன் போனில் போட்டோ பிடித்துக்கொண்டான்…

             “சரிவா பேபி.. நேரமாகுது… ஈவ்னிங் ஃபங்சனுக்கு ரெடியாகணும்ல…”என்று சொல்ல அவளும் தலையை தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்று இவனை கத்தி அழைத்தாள்…

             “டேய்… பானிபூரி இங்க வா…”ஏதோ சிறுகுழந்தையை அழைப்பவளை போல அழைத்து வைக்க இவனும் போனான்… 

             “என்ன பேபி?…”

             “என்ன நொன்ன பேபி? கொக்கியை யாரு கழட்டி விடுறது? கழட்டு…” என்று எதுவும் யோசிக்காமல் அவள் திரும்பி நிற்க அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.. ஆனால் இந்தமுறை அவன் முன்னே எதிர்பார்த்துவந்தது கிடைத்துவிட்டது…

             ஆமாம், அவள் முன்னே தன்னை துணியால் சுற்றிக்கொண்டதை போல சுற்றிக்கொள்ளவில்லை, அநேகமாக கிளம்பவேண்டும் என்ற அவசரத்தில் மறந்திருப்பாளோ என்னவோ!! இவனும் எதுவும் சொல்லாமலேயே ஒன்று இரண்டுயென அத்தனையையும் கழட்டிவிட அதன்பிறகு தான் அவளுக்கு நினைவே வந்தது… அச்சச்சோ என்று அவசரமாக துணியை இழுத்து போர்த்திக்கொள்ள, அவன் தான் பார்த்துவிட்டானே! குறும்பு சிரிப்பு சிரித்தபடியே அவன் வெளியேற, எப்பொழுதும் தோன்றா நாணம் அவளை வந்து கொஞ்சம் தொட்டுசென்றது…

              “இடியட், இடியட்…”என்று தன் வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி திட்டிதீர்த்துவிட்டு, உடையை மாற்றிக்கொண்டு வெளியேவந்தாள்… 

             அவள் தன்னை பார்த்துவிடக்கூடாதே என்று சித்தார்த்தும் தனது போனை எடுத்து பார்த்தபடியே அமர்ந்திருக்க, வந்தவள் அவனை பார்த்து முறைத்தபடியே அங்கிருந்த சேல்ஸ்மேனிடம் அவள் உடையை கொடுத்துவிட்டு மடித்துவாங்கினாள்.. அதன்பிறகு இருவருமே கிளம்பி வெளியே வருகையில் அவர்களுக்காக அவனுடைய காரும் காத்திருக்க அதே மூன்றாமவன் வந்து அவனுக்கு காரை திறந்துவிட்டான்.. இருவருமாக ஒருபக்கமாகவே ஏறி அமரவும் கார் ஹெஸ்ட்ஹவுசை நோக்கி புறப்பட்டது…

                 ஹெஸ்ட்ஹவுசிற்குள் நுழைந்தததுமே அவன் அவளை கண்டுகொள்ளாமலேயே அனைவரிடமும் சொல்லிவிட்டு புறப்பட்டு செல்ல “என்ன டிசைன்டா இவன்னு..” வாய்விட்டு சொன்னபடியே அறைக்குள் வந்துவிட்டாள்…

               ப்ரஷாவோடு சிறிதுநேரம் அவர்கள் போன இடத்தை பற்றியும் அவளுடைய உடையை பற்றியும் பிரம்மிப்பு மாறாமல் சொல்லிவிட்டு போனில் எதையோ நோண்டிக்கொண்டிருக்கையில் அவனிடம் இருந்து மெசேஜ் வந்திருந்தது.. திருமண உடையில்  அவள் சுற்றி காட்டியபோது போட்டோ எடுத்தானே அதைத்தான் அனுப்பியிருந்தான்.. அந்த போட்டோவை பார்த்து ரசித்தவளுக்கு தன்னை இத்தனை ரசனையோடு படம் பிடித்தவனின் நினைவு வர அவனுக்கு நன்றி சொல்லும் விதமாக தேங்க்ஸ் என்ற மெசேஜை மட்டும் டைப்பித்து அனுப்பிவிட்டு அவனிடம் இருந்து பதில் வருமா என்று காத்திருக்க ஆரம்பித்தாள்.. ஆனால் வரவேண்டுமே… அவன் அவளுடைய மெசேஜை பார்த்தபிறகும் எதுவும் அனுப்பாமலேயே இருக்க திரும்பவும் கோபம் வந்தது…

            “ஆளும் மண்டையும்.. பானிபூரி பானிபூரி..”என்று அவன் ப்ரொபைலில் இருந்த போட்டோவை பார்த்து திட்டிவிட்டு அவன் தலையிலேயே திரும்ப திரும்ப விரல்களால் சுண்டிவிட்டு அமர்ந்திருக்க வெளியே அவளுடைய சித்திகளின்  குரல் கேட்டது…

             நிலா எழுந்து போய் வெளியே பார்க்க சற்றுநேரம் முன்னர் வரைக்கும் துடைத்து வைத்தாற் போல இருந்த ஹால் இப்பொழுது வேறுமாதிரியாக இருந்தது…  வட்டவட்டமாக சிறிய அளவில் மேடைகள் அமைத்து அதன்மேல் பஞ்சுமெத்தைகள் போட்டு அலங்கரித்து இருக்க, எங்கும் அடர்சிவப்பு நிறத்தில் திரைகள் தொங்கவிடப்பட்டு அதன்மேலே வெண்மைநிறத்தில் சம்பங்கி பூக்கள் வரிசைவரிசையாக தொங்கவிடப்பட்டிருந்தன… வட்ட வட்டமாக இருக்கைகள் போடப்பட்டிருப்பதை பார்த்தவர்கள் தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டனர்…

             “அட இது என்னடி இது? பெரிய கூத்தாவுல்ல இருக்கு… மருதாணி வைக்க இவ்வளவு செலவு பண்ணனுமாக்கும்?…” வேறு யார் மாரியம்மாளின் சந்தேகம் தான் இது…

            “அதேங்க்கா.. ஒருத்திக்கு மருதாணி வைக்க என்னவெல்லாம் பண்ணுறாங்க பாரேன் இந்த ஊரு ஆளுங்க…”இது தேவி

            “யக்கா, மெஹந்தி பங்சனுன்னா கல்யாணப்பொண்ணுக்கு மட்டும் மருதாணி வைக்கமாட்டாவளாம்… எல்லாருக்கும்தேன் வச்சுவிடுவாய்ங்களாம்…”இது விஜயா

             மூவரின் பேச்சையும் ஒருபக்கம் காதுகொடுத்து கேட்டு கொண்டிருந்தவள் விழிகள் மட்டுமே நடக்கும் வேலைகளையே பார்த்துக் கொண்டிருந்தது.. பணம் இருக்கிறது என்பதற்காக இத்தனை ஆடம்பரங்கள் தேவைதானா? என்ற கேள்வியுடனும் அதனை செய்பவனின் குடும்பசூழலும் தன் குடும்பசூழலும் ஒத்துப்போகுமா? என சிந்தித்தபடியே நின்றாள்… 

                  நேரம் ஓடிக்கொண்டே இருக்க விக்ரம் வந்து நிலாவையும் ப்ரஷாவையும் சீக்கிரமாகவே சாப்பிட்டுவிடும்படி சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.. முறைப்படி மணமகள் மருதாணி வைத்து காய்ந்த பிறகு தான் சாப்பிடவே வேண்டுமாம்.. சாதாரணமாகவே பசி பொறுக்காத தங்கையை எப்படி அவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருக்கவைக்கமுடியும் என்று நினைத்து எப்போதும் நிலாவுடனே ஒட்டிக்கொண்டு சுற்றும் ப்ரஷாவும் இதனால் சாப்பிட தாமதமாகும் என்று தங்கைகளை மட்டும் அழைத்து சொல்லிவிட்டு செல்ல இருவருமே சாப்பிட சென்றனர்…

              கிட்சனுக்கு சென்று உணவு கேட்டு சாப்பிட அமரும் பொழுது தான், சித்தார்த்துடனே சுற்றும் அவனுடைய பிஏ ஹெஸ்ட்ஹவுசில் மெஹந்தி விழாவிற்கான வேலைகளை மேற்பார்வையிட வந்தான்.. எதார்த்தமாக அவன் டைனிங் அறைக்குள் நுழையும்பொழுது நிலா சாப்பாட்டோடு செல்வதை பார்த்ததும் திக்கென்று இருந்தது… மேடம் மேடம் என்று உடனே சென்று தடுத்தவன் நிலாவை சாப்பிட வேண்டாம் என்று சொல்ல அவளுக்கு கோபம் வந்துவிட்டது.. கைக்கு எட்டியதை வாய்க்கு எட்டவிடாமல் செய்தால் வேறு என்ன வரும்?…

              “ஏய் நீ அந்த பானிபூரி கூட இருக்கவன் தானே.. இங்க என்ன பன்ற? நான் ஏன் சாப்பிட கூடாது?” என்று கேட்க அவன் பதில் சொன்னான்…

            “இல்லே மேடம், சித்தார்த் சாப் ஃபேமிலி முறைப்படி மெஹந்தி ஃபங்சன் அப்போ வெறும் வயிறோட தான் மெஹந்தி போட்டுக்கணும்னு சொல்லுவாங்க.. அப்படி நீங்க விரதம் இருந்து மெஹந்தி போட்டு அது நல்லா செவந்துச்சுன்னா சித்தார்த் சாப்போட ஆயுள் நீடிக்கும்னு கேள்விபட்டிருக்கேன்.. அதுவுமில்லாம சாப் உங்க மேல எந்த அளவுக்கு லவ் அன்ட் கேரிங் வச்சுருக்குறாருன்னும் இதுல தெரியும்னு சொல்லுவாங்க…” என்று சொல்லிக்கொண்டே போக என்ன நினைத்தாளோ! ப்ரஷாவை மட்டும் சாப்பிடும்படி சொல்லிவிட்டு எழுந்துவிட்டாள்.. அவள் கோபத்தோடு இருக்கிறாளோ என்று ராபின் பயந்து போய் அவளிடத்தில் மன்னிப்பு கேட்க போக அதற்கும் ஒரு பதில் சொன்னாள்…

               “அதெல்லாம் ஒன்னுமில்ல, ஏதோ அவனுக்கு ஆயுள் நீடிக்கும்னு வேற சொல்லுறியா? அதான் நம்மாள எதுக்கு ஒரு பச்சப்புள்ள ஆயுள் கொறையணும்னு தான் சாப்பிடாம எழுந்தேன்.. அதோட ஏதோ அந்த பானிபூரி என்மேல லவ்வு  கேரிங்கெல்லாம் வச்சா தெரியும்னு சொன்னியே, அத தெரிஞ்சுக்கவும் தான்.. பாக்கலாம் உன் சாப் எந்த அளவுக்கு என்மேல கேரிங்கா இருக்காருன்னு…” என்று சொல்லிவிட்டு செல்ல ராபின் இதழ்களில் புன்னகை குடிகொண்டது…

             அடுத்து ஒரு அரைமணி நேரத்தில் ஹெஸ்ட்ஹவுஸ் முழுக்க கூட்டம் கூட ஆரம்பித்தது… இன்று சித்தார்த் குடும்பத்தில் உள்ள அத்தனை பேருமே அங்கு வந்திருந்தனர்… சோனாலிக்கு உள்ளுக்குள் விருப்பம் இல்லையென்றாலும் நிலாவை பார்க்க கொஞ்சம் ஆவலாக தான் இருந்தது.. சித்தார்த் ஏதோ காரணம் காரணம் என்று சொல்கிறானே? ஒருவேளை அந்த பெண்ணை இவன் ஏதும் செய்துவிட்டானா? இல்லை அந்த பெண் தான் சொத்திற்காக ஆசைப்பட்டு தன் மகனை மயக்கி அவள் மோகவலையில் விழ வைத்துவிட்டாளா? இப்படி கண்டபடி எதையெதையோ நினைத்து ஒருவழியாக கிளம்பி வந்துவிட்டார்…

               அவருடனேயே விசாகாவும் அவளை பெற்ற அபயும், யசோதாவும் வந்திருந்தனர்.. நிலாவின் குடும்பத்தினர்களை காட்டி இவர்களென்ன இப்படி அப்படியென்று எதையெதையோ சொல்லி முணுமுணுத்தபடியே அபய் அமர்ந்திருக்க, இந்திரஜித், சித்ரஞ்சன் இருவரும் நிலாவின் குடும்பத்தினர்களோடு அலவாளாவிக்கொண்டிருந்தனர்… சோனாலிக்கு கொஞ்சம் பற்றிக்கொண்டு தான் இருந்தது.. தகுதி தராதரம் பார்க்காமல் ஒரு இடத்தில் போய் விழுந்தால் இப்படி தான் இருக்கும் என்று ஒருபுறம் மனதை தேற்றிக்கொள்ள, ஷிவானி ஓடியாடி வேலைசெய்வதை பார்த்து உள்ளம் எரிந்தது.. இன்னும் சித்தார்த் அங்கு வரவில்லை… 

               இவர்கள் நுழைந்ததுமே ஷிவானி தாங்கள் கொண்டு வந்த உடையை நிலாவிடம் கொண்டு சென்று கொடுக்க, அவள் குளித்துமுடித்து அவள் கொடுத்த உடையையும், நகைகளையும் போட்டுக்கொண்டு நின்றாள்… வெண்மை நிற லெஹங்கா தான் அது.. அடர்சிவப்பு நிறத்தில் பூக்களும், அதன்நடுநடுவே கண்ணாடிகற்களும் ஒட்டபட்டு அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது… முதல்நாளைப் போல் அல்லாமல் இன்னும் பளிச்சென்று தயாராகி நின்றாள்.. தலைமுடியை ஒற்றை பின்னலாக போட்டு மல்லியை பின்னலை சுற்றி வைத்து, லெஹங்கா போல் அல்லாமல் தாவணி போல போட்டுக்கொண்டு அவள் வர அத்தனை பேரின் கண்களும் அவள் மீதினிலேயே இருந்தது.. உண்மைக்குமே அவள் வெண்ணிலவே தான்…

                நேராக வந்தவளை ஷிவானி ஒவ்வொருவருக்காக அறிமுகப்படுத்தினாள்.. நிச்சயதார்த்தத்தின் பொழுது அவள் ஷிவானியை தவிர வேறு எவரையும் தெரிந்துகொள்ளவில்லை.. அன்றைய மனநிலையில் அவளால் யாரையும் கவனிக்கமுடியவில்லை அப்படியிருக்க தாத்தாவை மட்டும் பார்த்துவிடுவாளா?.. இன்று தான் அவனின் சொந்தங்களை எல்லாம் முதல்முறையாக பார்த்தாள்.. தாத்தாவின் காலில் விழுந்து ஆசி வாங்கியவள், இந்திரஜித், சோனாலி, அபய், யசோதா என அனைவரிடமும் ஆசிவாங்கிகொண்டாள்… உண்மையில் முழுமனதாக ஆசி வழங்கியவர்கள் இருவரே, அவர்கள் யாரென்று விளக்க தேவையில்லை.. மற்ற மூவரும் மனதில் ஒன்றை நினைத்து வெறுமனே நல்லாயிரு என்று வாழ்த்த, விசாகாவை அறிமுகப்படுத்தும்பொழுது நிலா சிநேகமாய் சிரித்ததில் விசாகாவிற்கு ஒருமாதிரியாக தான் இருந்தது.. அடுத்த சிறிது நேரத்தில் விழா ஆரம்பமானது…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 6 சராசரி: 4]

One Comment

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

20 நினைவைத் தேடும் நிலவே

22 நினைவைத் தேடும் நிலவே