in , , ,

ஆம்பலரியைத் தீண்டிய செம்புனலே-7

  செம்புனல்-7

நேராக வருணியின் வீட்டின் முன்பு நின்ற நரயட்சினி அதே உருவத்தோடு உள்ளே நுழைய முயன்றாள். ஆனால் அவளால் உள்ளே நுழைய முடியவில்லை. ஏதோ ஒரு உந்து சக்தி அவளை உள்ளே நுழைய விடாமல் தடுத்துக் கொண்டிருக்க என்ன செய்வது என்று ஒரு நிமிடம் யோசித்தவள் விழிகளை நாலாபுறமும் சுழல விட்டு யாராவது கண்ணில் தென்படுகிறார்களா என்று தேடிட, தூரத்தில் வெள்ளை நிறப் பூனை ஒன்று மெதுவாக மதிலின் மீது ஏறி சென்று கொண்டிருந்தது.‌ அதைக் கண்டு இதழோரம்‌ மர்மப் புன்னகையைச் சிந்தியவள் நொடியும் தாமதிக்காமல் பாய்ந்தோடிச் சென்று அப்பூனையை இழுத்து வந்தாள்.‌ பூனை அவள் கையில் அகப்பட்ட மறுநிமிடமே தன் சுய உருவைப் பெற்றவள் வேகமாக வருணியின் வீட்டு கேட்டின் முன்னால் நின்று ஏதேதோ மந்திரங்களை உச்சரித்து பூனையின் தலையை திருகிட அதன் கழுத்துப் பகுதி உடைந்து அதிலிருந்து உதிரம் பொத பொதவென்று வழிந்தோடியது.  கொட்டும் உதிரத்தை அவர்கள் வீட்டை நோக்கி தெளித்தாள்.  அவ்வுதிரமானது நாலாபுறமும் சீறிப் பாய்ந்து சென்ற மறுகணம் எந்தவித தடங்கலுமின்றி சுலபமாக வருணியின் வீட்டுக்குள் பிரவேசித்தாள் நர யட்சினியவள்.

வருணியின் தந்தை திவ்யேந்திரன் அந்த இரவு நேரத்திலும் எதையோ சிந்தித்தவாறு நாவல் எழுதுவதில் மூழ்கிப் போயிருந்தார். யட்சினி கதவின் பக்கம் வந்து நின்ற மறுநிமிடம் தாழிடப்பட்டிருந்த கதவு தானாகத் திறந்துகொள்ள எந்த விதத் தயக்கமுமின்றி, தடையுமின்றி ஆணவ செருக்கோடு உள்ளே நுழைந்தாள். உள்ளே நுழைந்த மறுகணம் திவ்யேந்திரனின் உடல் ஒருமுறை அதிர்வுக்கு உட்பட்டு மறுமுறை சலனமாகிட எதையோ உணர்ந்துக் கொண்டவர் போல் கண்களை இறுக மூடி திறந்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டவர், கையிலிருந்த புத்தகத்தில் பதித்திருந்த விழிகளை சற்றே மேலே உயர்த்தி நரயட்சினியைக் கண்டு விட்டு மீண்டும்  நாவல் புத்தகத்தில் விழிகளைப் பதித்தார்.

தான் வந்ததை கண்டு கொண்டதோடு இகழ்ச்சியான புன்னகையோடு சற்றும் பயமின்றி தன்னைப் பார்த்து விட்டு தலைகுனிந்து தன் வேலையில் கவனமான திவ்யேந்திரனை யோசனை சுமந்த முகத்தோடு கண்டவள்,
“எனைக் கண்ட பின்பும் சிறிதும் அச்சம் இல்லாமல் இருப்பதற்கு காரணம் என்ன?” என்று தன் கொடூரமான குரலில் கட்டளை போல அவள் வினவிட.

“நீ வந்தது தெரிந்ததும் பயந்து போவதற்கோ அல்லது மிரண்டு போவதற்கோ நான் ஒன்றும் சிறிய பாலகன் அன்று நரயட்சினி.  உன்னைப் பற்றியும், உனக்கு ஏற்படப்போகும் இன்னல்கள் பற்றியும்,  எவரால் உனது இந்த  ஜென்மம் முடியப் போகிறது என்பது பற்றியும் நான் அறிவேன் ஆனால் இவற்றையெல்லாம் அறிந்த  என்னை யாரென்று நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை” என்று அழகாக தமிழில் அவளைப் போன்றே உரைத்த திவ்யேந்திரன் தன் கைகளில் இருந்த புத்தகத்தை மடித்து அதன் இடத்தில் வைத்து, அதன் மீது சிறிய சிவப்பு நிற துணியை மூடி பார்சல் செய்தவர் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு சிறிய கடிதத்தை எடுத்து அதன் மீது  வைத்து மேலே சிறிய துணி கொண்டு முற்றிலும் மூடிவிட்டு அதை தனது உடைகளுக்குள் பத்திரப்படுத்தினார்.  இதை அனைத்தையும் கண் இமைக்கும் நொடிகளுக்குள்  செய்து முடித்தார். நரயட்சினியோ அவரது வார்த்தைகளில் குழம்பிப்போய் இருந்தவள் அவரது செயல்களை கவனிக்க தவறி இருந்தாள். 

தான் செய்யவேண்டியதை செய்து முடித்தவர் மனதில் இறைவனை பிரார்த்தனை செய்தவாறு,
“இப்ப நீ எதுக்கு வந்துருக்கன்னு  எனக்கு தெரியும்.‌ ஆனா  நீ நெனச்சது நடக்க போறதும்  இல்லை, அதை நான் நடக்கவும் விடமாட்டேன். ஆனா நான் என்ன செய்யப்போறேன்னு  உனக்கு தெரிய வாய்ப்பில்லை”.

“என்னை பார்த்ததுக்கு அப்புறமும் கொஞ்சங்கூட  பயம் இல்லாம நீ பேசும் போதே  எனக்கு தெரிஞ்சுடுச்சு   நீ சாதாரணமானவன் தான் ஆனா உனக்கு எதுவோ தெரிஞ்சுருக்குதுன்னு, சொல்லு உனக்கு என்ன தெரியும்?”

“எனக்கு என்ன தெரியும், என்ன தெரியாதுங்குறத  உங்கிட்ட சொல்லணும்னு எனக்கு  அவசியம் இல்லை. என்னை கொலை பண்ண தானே வந்த  உன்னால முடிஞ்சா உன் கையால என் உயிரை எடுத்துரு பார்க்கலாம்” என்றார் நிமிர்வோடு. 

அவரின் வார்த்தையைக் கேட்டு உள்ளுக்குள் அதிர்ந்தாலும் வெளியே ஆணவச் சிரிப்பு சிரித்து வைத்தவள், “கிட்டத்தட்ட பிரம்ம யட்சினி தேவியின் அதிக சக்திகளைப் பெற்றவள், தேவியின் தீவிர பக்தை  என்னை பாத்து நீ இவ்வளவு இளக்காரமா திமிரா பேசுறல்ல,  இதுக்கு மேல நீ உயிரோட இருக்கவே கூடாது.  உயிரோடு இருந்தா  தானே மகளுக்குப் பாதுகாப்பா எதையாவது பண்ணி உதவி  செய்வ  நீயே இல்லனா உன் மகளை ஈஸியா என்னால  வசப்படுத்த முடியும்”  என்றவள் திடீரென அவரை  நெருங்க முயல,

அவரோ நிமிர்வாக  அதே இடத்தில் தைரியத்துடன் நின்றவர் விழிகளை மூடி எதையோ உச்சரித்தார். மறுநிமிடம் அவரைச்சுற்றி ஏதோ மாற்றம் நிகழ்வது போல, நரயட்சினி உணர்ந்தாள்.  அவள் என்னவென்று கணிக்கும் முன்பே அவரது தேகம் மெழுகைப் போல் மெல்ல மெல்ல உருக துவங்கியது. நரயட்சினியோ  நடப்பதை அதிர்ச்சியோடு கண்டு கொண்டிருக்க, வெகு விரைவாகவே அவரது முழு உடலும் உருகி சட்டென்று அங்கிருந்து மறைந்தும் போனது. அவர் உயிரை இவள் எடுக்க வர இவளுக்கு அந்த வேலையை வைக்காமல் தானே ஜீவ சமாதி ஆவதற்கு அனைத்தையும் செய்து முடித்திருந்தார் திவ்யேந்திரன்.

இப்படி ஆகிவிட்டதே என்ற யோசனையோடு அவள் அங்கிருந்து சென்றும் விட்டாள். ஆனால் திவ்யேந்திரன் எதையோ தன்னிடமிருந்து மறைத்ததோடு, தனக்கு ஏதோ குறிப்பும் கொடுத்து விட்டு சென்றதாகவோ எண்ணினாள். தன் இடத்திற்கு வந்தவள், தலைகீழாக அமர்ந்து பிரம்ம யட்சினி தேவியை வணங்கத் துவங்கினாள். சற்று நேரத்திற்கு பிறகு அவள் உணர்வுகள் எதையோ உணர்த்திட, விழிகளைத் திறந்தவளின் முன்பு பிணந்தின்னிகளின் கைசிறையில் அகப்பட்டிருந்த சிறு பெண்ணின் முகம் தெரிந்தது. கூடவே அம்முகத்தினைக் கண்டவளது கொடூர முகம் வெற்றிக்களிப்பில் மிளிர்ந்தது. 

 இங்கே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வருணியின் சிந்தையில் ஒலித்தது அந்தக் குரல் ‌.

“மித்ரா குட்டி நீ என் செல்ல பொண்ணு தானே!   அப்பா சொல்றதை நல்லா கவனமா கேட்டுக்கடா செல்லம். உனக்கு எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலையாவது அப்பாவோட உதவி தேவை. நம்மளால இந்த  சூழ்நிலையை சமாளிக்க முடியல அப்படிங்கிற ஒரு நிலைமை வருதோ அப்ப என்னோட உடமைகள் அடங்கி இருக்க கப்போர்டுல என்னோட துணிகளுக்கு கீழே  உனக்காக ஒன்ன அப்பா வச்சிருக்கேன். அப்ப அதை எடுத்து பாரு,  ஆனால் ஒரு விடயத்தை மறந்துறாதமா  மத்த நேரத்துல அதை எடுத்தீன்னா கண்டிப்பா உனக்கு அதுல எதுவுமே  கிடைக்காது. ரொம்ப முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரத்தில உனக்கு தடுமாற்றம் வந்தா  மட்டும்தான் அது உன் கைக்கு கிடைக்கும், உனக்கு உதவியும் செய்யும்.‌ 

அது மட்டுமில்ல வாழ்க்கையில என்னைக்குமே நாம யார் மேலயாவது நம்பிக்கை வைக்கிறோம்னா அந்த நம்பிக்கைய முழுமையா கடைசி வரைக்கும் வச்சிருக்கணும், இடையில ஆயிரம் பேர் 1,000 பிரச்சனைகளை கொண்டு வந்தாலும் நம்ம வச்ச நம்பிக்கையில நாம  உறுதியா இருக்கணும்,‌ உறவுகளை எவ்வளவு கஷ்டப்பட்டு நம்மளோட இணைக்கிறமோ, அதை விட சீக்கிரமே அது உடைஞ்சுடும் போயிடும்மா.  உறவுகளை தன்னோட இணைச்சுக்கிறத விட அவ்வுறவுகளை ஆயுளுக்கும் நம்மோட தக்க வச்சு கட்டிக்காப்பது,  இணைபிரியாம ஒற்றுமையா வச்சுருக்குறதுல தான் நம்மளோட திறமையே இருக்குது. என்னடா இதெல்லாம் அப்பா இங்கு வந்து சொல்லிட்டு இருக்கேன்னு பாக்குறியா செல்லம். அது வேற ஒன்னும் இல்லமா நீ கண்ண முழிச்சு பார்க்கும்போது அப்பா இருக்கனோ இல்லையோ? தெரியல செல்லம்.  ஒருவேளை அப்பா இல்லன்னா நீ அழக்கூடாது தைரியமா எதையும் பேஸ் பண்ணனும்,  அப்பா எங்க போயிருக்கேன், எதுக்காக போயிருக்கேங்கிறதை வார்த்தையால  சொல்லாட்டியும் ஏதோ ஒரு விதத்தில  அறிவுறுத்தி இருப்பேன்மா அதை நீ சரியா புரிஞ்சுக்கணும். என் பொண்ணு புத்திசாலின்னு தெரியும், அதே  மாதிரி அவ அன்பானவளும் கூட, முடிஞ்சவரைக்கும் துலா தம்பியோட குடும்பத்தை பத்திரமா பாத்துக்கமா கூடவே வினோ, வைஷீ அவங்களையும் பாத்துக்கமா.  அப்பா உன்னோட தான் எப்பவுமே இருப்பேன் பத்திரமா இருந்துக்க  மித்ரா குட்டி” என்றதோடு அக்குரல் நின்றுவிட. ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வருணி திடுக்கிட்டு எழுத்து அமர்ந்தாள்.‌

 திடீரென்று ஏன் இவ்வாறெல்லாம் தோன்றுகிறது. இதெல்லாம் கனவா? அல்லது உண்மையா? என்று யோசனையோடு அவள்  கடிகாரத்தை பார்க்க மணி ஐந்து என்று இருந்தது.‌ விடியலில் வேறு இப்படி ஒன்று நித்திரையில் வந்திருக்கிறது இது நல்லதுக்கா? கெட்டதுக்கா? என்ற யோசனையோடு எழுந்து குளித்து முடித்து துவைத்து காய வைத்திருந்த உடையை உடுத்திக் கொண்டு வருணி கீழே வரும்போது ஒவ்வொருவராக எழுந்து இருந்தனர். அதிலும் கற்பகாம்பாள் எழுந்து அமர்ந்திருப்பதைக் கண்டவள் வேகமாக டீ போட்டு கொண்டு வந்து அவரிடம் கொடுத்துவிட்டு, ‘அம்மா வீடு வரைக்கும் போயிட்டு வரட்டுமா?’ என்று கேட்கத்தான் முயன்றாள் ஆனால் அதற்குள் வேகமாக கீழே இறங்கி வந்தாள் வினோ.  வினோவைப் பின்தொடர்ந்து வைஷ்ணவியும் வர முதலில் இவர்களை பார்க்கலாம் என்று வேகமாக வினோவின் அருகில் சென்றவள் அக்கா தங்கை இருவரையும் மெதுவாக இருக்கையில் அமர வைத்து தானும் அவர்கள் அருகில் அமர்ந்தவள், பொறுமையாக நேற்று நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.  வினோ கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணவில்லை, ஆனால் விழிகளில் கண்ணீர் கசிந்துக் கொண்டே இருந்தது. வைஷ்ணவியோ தேம்பித் தேம்பி அழ ஆரம்பிக்க. ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் அழுவதைத் தாங்க இயலாமல் இருவரையும் சட்டென்று அதட்டிய வருணி.

“இங்க பாரு வினோ நீ ஒன்னும் சின்ன பொண்ணு இல்லடி எல்லாத்துக்கும் அழறதுக்கு. வைஷீமா கொஞ்சம் நேரம் அழாம நான் சொல்றதைக் கேளுடா. நீங்க ரெண்டு பேரும் அழறதுனால நடந்ததை மாத்திடலாம்னா சொல்லுங்க உங்களோட சேர்ந்து நானும் அழுறேன். இல்ல அழறதால எதையும் மாத்த முடியாதுன்னா  இந்த நிமிஷமே நீங்க ரெண்டு பேரும் அழற நிறுத்தனும்.‌ கடவுள் நமக்காக அவங்களைப் படைத்து அவங்க மூலமா நம்மளை இந்த உலகத்துக்கு கொண்டு வந்து இருக்காங்கனா அதுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்க தானே செய்யும்.‌ அதே மாதிரி இவ்வளவு சீக்கிரம் அவங்களை இங்கிருந்து கூப்பிட்டுக்குட்டாருன்னா அதுக்கும் ஏதாவது ஒரு காரணம் இருக்கும் தானே! அதனால  நடந்ததை பத்தி யாரும் இனிமே நினைக்க கூடாது. என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருந்தா நடந்ததை மறக்க முயற்சி பண்ணிக்கிட்டு  என்கூடவே இருங்க.  இல்லையா அதுக்கு மேல உங்க விருப்பம்.  ஆனா ஒன்னே ஒன்னு தான் சொல்லுவேன் இறந்து போயிட்டாங்க இறந்து போயிட்டாங்கன்னு நெனச்சு அழுது வடியிறத விட இவ்வளவு நாள் கண்ணுக்கு தெரிஞ்சவங்க, இனிமே  என்னை கண்ணுக்கு தெரியாம நம்ம கூட இருக்க போறாங்க அப்படிங்கறத மட்டும் மனசுல பதிய வைச்சுக்கோங்க. போங்க ரெண்டு பேரும் போய் குளிச்சிட்டு வாங்க. காஃபி கொடுக்குறேன்” என்றவள் அனைவருக்கும் காபி போடுவதற்காக  கிச்சனுக்குள் நுழைந்தாள்.  அதே நேரம் குளித்து முடித்து கீழே வருவதற்காக படிகளில் நின்றிருந்த துலாவும், அவனுக்குப் பின்னால் நின்றிருந்த சக்தியும் இவளது வார்த்தைகளைக் கேட்டு ஒரு நிமிடம் அதிசயித்துப் போனார்கள்.‌ அவர்கள் இவளை சிறு பெண் என்று எண்ணியிருக்க, அவளோ பெரிய மனுஷி போல பேசியதைக் கண்டு வியந்து போனார்கள்.‌ ‘அவள் உரைத்த ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மைதானே! எப்படியெல்லாம் பேசி அவர்களை துக்கத்திலிருந்து வெளிக்கொண்டுவர முயல்கிறாள்’ என்று நினைத்தவர்களுக்கு தெரியவில்லை இன்னும் சற்று நேரத்தில் இப்படி பேசியவள்  இன்னும் இன்னுமே அவர்களுக்கு அதிசயமானவளாகத் தெரிய போகிறாளென்று.

அவர்களும் வந்து அமர‍, சிறிது நேரத்தில் பெண்கள் இருவரும் குளித்து முடித்து வந்தார்கள்.  குளித்து முடித்து வந்தார்களே தவிர அவர்கள் முகம் சோகத்தில் லயித்திருந்தது.  அனைவருக்கும் டீ பால், காபி என  தேவையானதைக் கொடுத்தவள் மெதுவாக,
“நான் வீடு வரைக்கும் போயிட்டு வரட்டுமா அம்மா இன்னும் அப்பா எழுந்து  வரல.‌ எனக்கு காலையில இருந்தே ஒரு மாதிரியா இருக்கு” என்று  வருணி சொன்ன போதே, யாரோ ஒருவர் வேகமாக அவர்கள் வீட்டுக்குள் வருவது தெரிந்தது.

 அனைவரும் அவரது பதற்றத்தைக் கண்டு தாங்களும்  பதற்றம்  கொண்டார்கள். “என்ன ஆச்சு ராமண்ணா எதுக்கு இவ்வளவு பதட்டமா ஓடி வர்றீங்க? யாருக்கு என்னாச்சு?” என்றாள் வருணி பதறியவாறு.

கற்பகாம்பாளைக் கலக்கத்தோடு பார்த்து விட்டு  வருணியைப் பார்த்தவர், “அப்பா அப்பா..” என்று வார்த்தைகளை சொல்ல முடியாமல் திணற. ஒரு நிமிடம் அவளது இதயம் துடிப்பதை நிறுத்தியது, மறுநிமிடமே தைரியம் வரப்பெற்றவளாய்,
“எதுவா  இருந்தாலும் சொல்லுங்க அண்ணா” என்று பயத்தை மறைத்துக் கொண்டு கேட்க.

“அப்பா உங்க வீட்டு வாசலுல விழுந்து கிடக்கிறாரும்மா.  எந்த அடியும் படல ஆனா மூச்சுப் பேச்சில்லை, ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போலாம்னு கிட்ட போய் பாத்தோம் ஆனா.. ஆனா உயிர் போயிடுச்சும்மா” என்றார் கலங்கிய குரலில்.

கண்களில் பொங்கி வந்த கண்ணீரை கண்களைச் சிமிட்டி சரிசெய்தவள், தனக்கு வந்த கனவும் இப்போது தந்தையின் பிரிவும் எதையோ உணர்த்த தன் மனதினை தைரியப்படுத்திக் கொண்டவள் கற்பகாம்பாளைப் பார்த்து,
“மத்த காரியங்களை செய்யனும் கொஞ்சம் கூட வர்றீங்களா அம்மா” என்றாள். அவள் அழுவாள் தாங்கள் தான் சமாதானப்படுத்த வேண்டும் என்று ஒவ்வொருவரும் எண்ணியிருக்க. அவளோ அழாமல்  இப்படி  சொன்னதில் அனைவரும் அதிசயித்து போனார்கள்.  அதிலும் துலோவோ  ஒருபடி மேலே சென்று
‘தன்  தந்தையின் இறப்பிற்குப் பிறகு கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் தானே  இன்று வரையிலுமே அதிலிருந்து மீள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்க. அவளோ  அடுத்த இரண்டு நிமிடத்தில் தன்னை மீட்டுக் கொண்டு அனைத்தையும் செய்ய முன்வருகிறாளே?  இவ்வளவு  தைரியமும், மனோதிடமும் கொண்டவளா என் வருணி’ என்று எண்ணினான்.

 வினோவோ தன் தோழியை பற்றி அறிந்ததால் அருகில் வந்தவள்.
“உண்மையாவே  எந்த ஒரு சூழ்நிலையையும் நீ ஈசியா ஹேண்டில் பண்ணுவேன்னு ஏற்கனவே எனக்கு தெரியும் மித்ரா.  ஆனா இந்த அளவுக்கு மெச்சூர்டா இருப்பேன்னு நான் நெனச்சு பாக்கலைடி சொல்லப்போனா உங்கிட்ட நாங்க எவ்வளவோ கத்துக்கணும் போல. நானும் கூட வர்றேன் வா போலாம்” என்று சொல்ல.  அனைவரும் அவளின் வீட்டிற்கு சென்றார்கள்.

அங்கு அவள் வீட்டு வாசலின் முன்பு அனைவரும் கூடி இருந்தனர்.  மெதுவாக உள்ளே நுழைந்தவள் சலனமின்றி உறங்குவது போல் படுத்திருந்த தன் தந்தையை தான் விழியகலாது  பார்த்திருந்தாள். அவர் இதழ்களில் உறைந்திருந்த புன்னகையே சொல்லாமல் சொல்லியது அவர் எந்த வலியையும், வேதனையையும் ஏற்காமல் நல்ல முறையில் தன் மரணத்தை ஏற்று இருக்கிறார் என்று.  அதன் பிறகு திவ்யேந்திரனின் இறுதி சடங்கிற்கான வேலைகள் துவங்கிட ஆயத்தமாயின. அனைத்தையும் முன்னின்று செய்தாள் வருணி. அனைவருமே வருணியை அதிசயமாகத்தான் பார்த்தார்கள்.  அழுது மூலையில் சாய்ந்து அமராமல் மகன் ஸ்தானத்தில் இருந்து அனைத்தையும் செய்பவளைக் கண்டு அதிசயித்து போனார்கள். கடைசியாக அவரது இறுதிச் சடங்கை நடத்துவதற்கு முன்பு வீட்டிற்குள் நுழைந்த வருணி வீடு ஏதோ அசாத்திய நிலைமையில் இருப்பதை உணர்ந்தாள்.  இருந்தாலும் தைரியமாக உள்ளே நுழைந்தவள் அவர் எப்போதும் அமர்ந்து நாவல் எழுதும் நாற்காலியின் அருகில் சென்று எதையோ தேடிப்பார்த்தாள்.  அதில் சிறு சிறு மண் துகள்கள் ஒட்டி இருப்பதை கண்டவளுக்கு ஏதோ தோன்றியது.’ தனது உடலை எரியூட்டிட வேண்டாம். புதைக்க வேண்டும்’ என்று தன் தந்தை விரும்புகிறாரோ?  என்ற எண்ணி அதையே செயலாற்றினாள்.  அதேபோல் திவ்யேந்திரனின் உடலானது  வீட்டை விட்டு எடுத்துச் செல்லப்பட்டது. மயானத்திற்கு கொண்டு செல்லலாம் என்று சொல்ல, துலா அதை மறுத்து.
“இந்த தோட்டத்திலேயே இவ்வளவு நாள் இருந்தவர்.  சொல்லப்போனா இதோட பார்ட்னரும் கூட அவருக்கு இப்படி ஒரு நிலைமை வரதுக்கு நான் விடமாட்டேன்.‌ நம்ம தோட்டத்துல மூளையில கொஞ்சம் காலியிடம் இருக்கு இல்ல, அதுல அப்பாவுக்காக நான் மணிமண்டபம் எடுக்கலாம்னு இருக்கேன், இப்ப அங்கயே அங்கிளையும் அடக்கம்  பண்ணிடலாம்.  ரெண்டு பேருக்குமே சேர்ந்து மணிமண்டபம்  எடுத்துடலாமே அம்மா” என்றான். அவரும் சரி என்று தலையசைத்திட.

வருணியோ அதை  மறுத்தாள். “அப்பாவோட உடல் இடுகாட்டிற்கு போகட்டும் ஆனா அங்க மணிமண்டபத்தை மட்டும் எழுப்பிக்கலாம். அவரோட உடல் அங்க வர வேண்டாம்” என்றாள். ஏன் என்று கேட்க வந்த துலாவை விழிகளால் எதுவும் சொல்லாதே என்று கற்பகாம்பாள் சொன்னார். ஏனெனில் வருணியின் முகத்தில் ஏதோ சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது அதை அவருமே கவனித்தார் தான்.
திவ்யேந்திரனின் உடல் இடுக்காட்டில் புதைக்கப்பட்ட மறுகணம் அங்கிருந்து மறைந்து போனது. 

அவரது இறுதிச் சடங்குகள் அனைத்தும் நடந்து முடிந்து இரு தினங்கள் வேகமாக கடந்து சென்று இருந்தன. இந்த இரு தினங்களிலும் எதுவும் நடவாததுபோல் இயல்பாகவே இருந்தாள் வருணி. ஆனால் இரவில் உறங்கும் போது மட்டும் வெகுநேரம் உறக்கத்தை மறந்து விழிகளில் கண்ணீர் கசிய விட்டத்தையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருப்பாள். தோட்டத்திற்கு சென்று மூன்று நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் அனைவரும் அவளைக் காணாது வருந்தினார்கள். எனவே அங்கே வேலை செய்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து துலாவின் வீட்டிற்கு  வந்திருந்தனர். அனைவரும் கற்பகாம்பாளிடம் விஷயத்தை சொல்ல,  அப்போ தான் அவர் ஒரு விஷயத்தை உணர்ந்தார்.

‘வருணி இங்கு  ஒரு தொழிலாளியாக வேலை செய்யாமல் அவர்களுடன் ஒரு உறவாக பழகி இருப்பதால்தான் அனைவரும் அவளை இந்த அளவிற்கு தங்கள் வீட்டில் ஒருத்தியாக எண்ணுகிறார்கள்’ என்று நினைத்தவர்  வருணியை அருகில் அழைத்தார்.

“ சொல்லுங்கம்மா” என்று கேட்டவளிடம்,
“தோட்டத்துக்கு போயிட்டு வாம்மா. நீ வரலைன்னு  எல்லாரும் எவ்ளோ கவலைப்படுறாங்க பாரு”

“போய் தானே ஆகணும்மா  எவ்வளவு நாள் தான் நானும் இப்படியே இருப்பேன்.‌ அப்பாவுக்கும். வினோவோட அப்பா அம்மாவுக்கும்   16வது நாள் காரியத்தை முடிச்சிட்டு போகலாம்னு நினைச்சேன்”

“அது ஒன்னும் பிரச்சனை இல்ல மா அதுக்கு ஒரு வாரத்துக்கு மேல  இருக்குல்ல  செஞ்சுக்கலாம் நீ கிளம்புமா ”என்று சொல்ல சரி என்று தலை அசைத்தவள்.  மறக்காமல் வினோவையும் இழுத்துக் கொண்டு தோட்டத்திற்கு கிளம்பினாள். அதட்டி உருட்டி வைஷீவையும் பள்ளிக்கு அனுப்பி வைத்தாள். 

வருணி தோட்டத்திற்குள்ளே நுழைந்தபோது அங்கிருந்த தன்  தந்தையுடனான நினைவுகள் யாவம் முன்வர அவள் அழும்போதெல்லாம் வினோ தோழியாய் துணை நிற்க. வினோ தன் பெற்றோரின் நினைவில் தவித்து கலங்கி நிற்கும் போதெல்லாம் தான் அவளுக்கு துணையாக மாறியிருந்தாள் வருணி.  இருவரும் ஒருவரது வேதனைக்கு  மற்றொருவர் மருந்தாகிப் போனார்கள்.

அன்று அனைத்து வேலையையும் முடித்துக்கொண்டு ஒருமுறை துலாவின்  வீட்டிற்கு செல்லும் முன் தன் வீட்டை சென்று பார்த்து விட்டு வரலாம் என்று அங்கு போனாள்.‌ ஆனால்  அவளுக்கு முன்னால் அங்கே  நின்று அவளை வரவேற்றான் துலா.‌ அவனைக் கண்டு மெலிதாக அதிர்ந்தவள்,
“இங்க என்ன சார் பண்றீங்க?” என்றாள்.

 அவள் சார் என்று அழைத்ததும் முறைத்தவன், “ என்னது  சாரா?”, என்று கேட்க. அவளோ கண்களால் வினோவை காட்டிட.

“பரவால்ல இனிமே நீ மத்தவங்க முன்னாடியும்  என்னை சுகீன்னே கூப்பிடலாம் வருணிமா” என்றான் விஷமமாக.  அதைக் கேட்டு வினோ ஆச்சரியமாக வருணியைப் பார்க்க.  வருணியோ  தயக்கத்தோடு எதுவும் பேசாமல் அவனையும் வினோவையும் மாறி மாறி பார்த்தவள், “வினோ வைஷீ  ஸ்கூல் விட்டு வர டைம் ஆச்சு நீ வீட்டுக்கு போ நான் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்” என்று சொல்லி வினோவை  அனுப்பி வைத்தவள்,

“ஏன் இப்படி பேசுறீங்க அவ நம்மள பத்தி என்ன நினைப்பா?” என்று சொன்னவாறு வீட்டை திறந்து உள்ளே நுழைந்தாள்.

“வேற என்ன நினைப்பா கட்டிக்கப் போறவங்க இப்படித்தான் செல்லப் பெயர் வச்சு கூப்பிடுவாங்க போலன்னு நெனப்பா” என்று சொன்னவாறு அவனும் உள்ளே நுழைந்தான். 

 அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்து வேகமாக அவன் புறம் திரும்பிய வருணி.
“என்ன காமெடி பண்ணிட்டு இருக்கீங்களா?  நீங்க என்னை சொல்றீங்கன்னு புருஞ்சுதா  சொல்றீங்களா? இல்ல தெரியாம   வாய் தவறி சொல்லிட்டீங்களா?”
என்று அவள் சந்தேகத்தோடு கேட்க.

 கதவை சாத்தியவன் அவள் அருகில் நெருங்கி நின்று அவள் இடையில் கையிட்டு தன்னோடு சேர்த்து அணைத்தவாறு,
“இவ்வளவு நெருக்கத்துல இவ்வளவு உரிமையா உன்னைத் தொடுற ஒரே ஆள் நானா தான் இருக்கனும், அதுவும்  உன் புருஷங்கிற உரிமையில எப்பவுமே உனக்கு உரிமையானவனா, உடைமையானவனா இருக்கனும்னு தோணுதுடி. நான் மட்டுமே உன்னை பத்திரமா பாத்துக்குறவனா மாறனும்னு தோணுதுடி. நீ அழுதா தோள் சாய்த்து ஆறுதல் சொல்லனும்னு தோணுடி, நீ சிரிக்கையில சேர்ந்து சிரிச்சு உன்னை கண் கலங்காம பார்த்துக்கனும்னு தோணுதுடி. இன்னும் இன்னும் நெறையா தோணுடி. நான் தெரிஞ்சு, புரிஞ்சு தான் சொன்னேன் வாய் தவறியெல்லாம் சொல்லல.‌ எனக்கு உன்ன ரொம்பபிடிச்சிருக்கு வருணிமா நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றான். 

இதோ கேட்டுவிட்டான் நான்கு நாட்களாக மண்டைக்குள் இப்போது சொல்லலாமா? அப்போது சொல்லலாமா? என்று உறுத்திக் கொண்டிருந்த விஷயத்தை பட்டென்று போட்டு உடைத்து விட்டான்.

அன்று அவள் தந்தையை இடுகாட்டுக்கு கொண்டு சென்றதற்கு பிறகு வெகு நேரம் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான் துலா அவரும் அவனுக்கு பிடித்தமானவர் தானே! அதனால் தான் உறக்கத்தை தொலைத்திருந்தான். வராண்டாவில் நடை பயின்றுக் கொண்டிருந்தவன் ஏதோ தோன்ற, மெதுவாக அவள் அறைக் கதவைத் திறந்து பார்க்க விழிகளில் வழியும் கண்ணீரோடு விட்டத்தை வெறித்துக் கொண்டு படுத்திருந்தாள் வருணி. அதைக் கண்டவனுக்கு வேகமாக அவள் அருகில் சென்று அவளை நெஞ்சோடு அணைத்து கண்ணீரை துடைத்து, ‘அழாதடி இனிமே ஆயுளுக்கும் துணையா  உனக்கு நான் இருக்கேன்.  உனக்கு எல்லாமுமா  நான் இருப்பேன்டி’ என்று ஆறுதல் சொல்லத் துடித்த மனதை சிரமப்பட்டு அடக்கினான்.
 ஆனால் அதன் பிறகே அவளிடம் அவ்வளவு நெருக்கத்தை காண்பிப்பதற்கு தனக்கு என்ன உரிமை இருக்கிறது என்று தனக்குள்ளே கேள்வி கேட்டவனிடம் அவன் மனசாட்சி பதில் உரைத்தது.
‘அவ உனக்கானவள், அப்ப உனக்கு மட்டும் தானே அந்த உரிமை இருக்கு’ என்று கேட்டதும், துலாவுக்கு  தன்மனம் தெளிவாக புரிந்து போனது.

‘எனக்கு அவளைப் புடிச்சுருக்கு, நான் வருணிய விரும்புறேன் சொல்லப் போனா தாலி கட்டாமையே  அவளை என் மனைவியா நினைக்க ஆரம்பிச்சுட்டேன். அடியே என் ஆசைப் பொண்டாட்டி  இதோ வரேன்டி உங்கிட்ட என் நேசத்தை சொல்லி, உன் சம்மதத்தை வாங்கி சீக்கிரமே உன்னை  கல்யாணம் பண்ணிக்கிறேன்டி’ என்று நினைத்தவன் மூன்று நாட்களாக அவளிடம் பேச முயல்கிறான்.  ஆனால் அவளோ அவன் கண்ணில் சிக்கினாலும் எப்போதும் வினோ உடனே சுற்றிக்கொண்டிருக்க,  இன்று அதற்கான தனிமையை எதிர்பார்த்திருந்தான்.  எப்படியும்  அவள் இங்கு வருவாள் என்று அவன் மனம் சொல்ல,  அவளுக்கு முன்பே  இங்கு வந்து காத்திருந்தான். அவளும்  வர இதோ தன் மனதில் இருப்பதையும் தெரிவித்து விட்டான்.

கோதையவளோ அவன் சொன்ன வார்த்தைகளில் அதிர்ந்து, தான் காண்பது கனவா? நினைவா? என்று தெரியாமல் குழம்பி நின்றிருக்க.  ஆடவனோ அவளிடையில் பதித்திருத்த கையில் இறுக்கத்தை கூட்டி அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு, அவள் நெஞ்சு பகுதியிலும் முத்தமிட்டு நிமிர்ந்தவன், “ நீ காண்பது கனவு இல்ல வருணிமா நிஜம்தான்  இப்ப நம்புறியா!” என்று சொல்லி குறும்பாக புன்னகைத்திட. 

அவளுக்கோ அவன் செயலில் உடல் கூசிட வேகமாக அவனிடமிருந்து தன்னை விலக்கிக் கொண்டு இரண்டடி தள்ளி நின்றவள்,
“நீங்க.. நீங்க.. என்ன  பேசுறீங்க சார் இதெல்லாம் நமக்குள்ள செட்டாகாது.  நீங்க எதோ தப்பா புரிஞ்சுகிட்டு எங்கிட்ட இந்த மாதிரி நடந்துக்கிறீங்களோன்னு தோணுது” என்றவள் வேகவேகமாக அவனை கடந்து செல்ல முயல, அடுத்த நிமிடம் அவனது இறுகிய அணைப்பில் பேதையவளின் மலர் தேகம் நசுங்கிக் கொண்டிருக்க, இதழ்களும் கூட அவன் இதழெனும் சிறைக்குள் கைதாக்கப்பட்டிருந்தன.

இமை தாழ்த்தாது 
விழிப் பாவையை 
உலாவிட பணித்தேனடி,
என் மனக்கூண்டில் 
அகப்பட்ட பாவையவளின்
வெண்மதி வதனத்தை 
ரசித்திடவே!!

ஓய்வின்றி இதழிரண்டை
இணைந்திருக்க
முறையிட்டேனடி 
என்னை கவர்ந்திழுந்த 
கன்னிகையவளின் 
அல்லி இதழின் சுவைதனை
அறிந்திடவே!!

நீண்டிருந்த கரமதில்
வலி கண்ட பின்பும்
பொறுத்துக் கொள்ள
பாவித்தேனடி
என் பாவையவளின் 
பால்வண்ண 
மேனியினை
தழுவிக் கொண்டு
எந்தன் பலகால 
தேக தவத்தினை 
கலைப்பதற்காகவே!!

– இனியும் தீண்டும் செம்புனல்

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 2 சராசரி: 4.5]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Ramyachandran

சருகாக மாறிடும் இலைகளைப் போன்று மாறிடாமல்,  மண்ணில் முட்டி மோதி , எதிர்வரும் சூழல்களை சமாளித்து துளிர்த்து வேர் விட்டு தழைத்து செழித்தோங்கிடும் விதைகளைப் போல் தன்னம்பிக்கையோடு போராரிட முனைந்திடும் பாவையிவள்....

Story MakerContent AuthorYears Of Membership

14 – 🖤 உறங்காத நேரமும் உன் கனா

20 நினைவைத் தேடும் நிலவே