in

சொ(பொ)ல்லாத ரகசியங்கள் 21-25

அத்தியாயம் 21

வீட்டு தோட்டத்தில் போனை கையில் பிடித்துக் கொண்டு இங்கும் நடந்து கொண்டிருந்தாள் ஷ்ராவ்யா. காதில் ஹெட்ஃபோனை மாட்டிக் கொண்டு அவள் நடக்க எதிரில் ஆதீரன் வந்தான்.

நேற்று சந்தானலட்சுமியின் முன் அவனிடம் பேசியது தான். அதன் பின் அவன் இருக்கும் பக்கம் கூட ஷ்ராவ்யா செல்லவில்லை. இப்போதும் கண்டுகொள்ளாமல் அவள் தொடர்ந்து நடக்க ஆதீரன் கை நீட்டி வழியை மறைத்தான்.

“ப்ச்ச்…” என்று சலித்துக் கொண்டவள் காதில் இருந்ததை கழட்டி விட்டு “என்ன?” என்று கேட்டாள்.

“பாட்டு கேட்குற நிறுத்திட்டு என் கூட வரீயா?”

“நான் பாட்டு கேட்குறேன் னு உங்க கிட்ட சொன்னனா? மீட்டிங் போயிட்டு இருக்கு. பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க” என்று கூறி விட்டு மீண்டும் காதில் மாட்டிக் கொண்டு நடந்தாள்.

ஆதீரன் தான் அவளது செய்கையை வித்தியாசமாக பார்த்தான். ஏனென்றால் அவள் ஒரு வார்த்தை கூட பேச வில்லை. அமைதியாகவே நடந்து கொண்டிருந்தாள். சில நிமிடங்கள் அவளை கவனித்து விட்டு அங்கிருந்த செடிகளை பார்க்க சென்று விட்டான். ஒன்பதாவது நிமிடம் மீட்டிங் முடிந்தது. ஷாயா காதில் இருந்ததை கழட்டி விட்டு யாரையோ அழைத்தாள்.

“எல்லாம் கேட்டுட்டேன். அங்க வந்ததும் பேசிக்கிறேன்” என்று கூறி விட்டு அழைப்பை துண்டித்து விட்டாள். நேராக ஆதீரனிடம் வந்து “என்ன விசயம்?” என்று கேட்டு கை கட்டிக் கொண்டு நின்றாள்.

“உண்மையாவே மீட்டிங் தானா? ஒரு வார்த்தை கூட நீ பேசலயே”

“இது வேற மாதிரி. பிரதாப் சார் போன் மூலமா கேட்டுட்டு இருந்தேன். நான் பேசவேண்டிய அவசியம் இல்ல”

“புரியல”

“அதாவது… வருசத்துல பல மாசம் கம்பெனிய விட்டு வெளிய தான் இருக்கேன். ஆபிஸ் ல என்ன நடக்குது னு எனக்கு தெரிய வேணாமா? சோ .. எந்த மீட்டிங் நடந்தாலும் பிரதாப் சார் எனக்கு போன் பண்ணிடுவார். நான் அங்க என்ன நடக்குது என்ன பேசிக்கிறாங்க னு சைலண்ட்டா கேட்ப்பேன்”

ஆதீரன் உண்மையில் இந்த விசயத்தில் ஈர்க்கப்பட்டான். ஷ்ராவ்யா தன் வேலையிலும் வேலை பார்க்கும் இடத்திலும் காட்டும் புத்தி கூர்மை அவனுக்கு பிடித்து இருந்தது.

“ஸ்மார்ட்… “

“சரி நீங்க எங்க கூப்பிட்டீங்க?”

“உள்ள வா”

இருவரும் உள்ளே சென்றனர். வீட்டில் வேலை நடக்காததால் யாருமே இல்லை. பொன்னாம்பாள் எதோ ஒரு யோசனையுடன் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தார்.

ஜெயபிரதாபன் நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருந்தார். வீட்டில் வேலை செய்பவர்களும் அங்கும் இங்கும் நடமாடாமல் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆதீரன் ஷ்ராவ்யாவை தனதறைக்கு அழைத்துச் சென்றான். கதவை பூட்டி விட்டு அவன் வர ஷ்ராவ்யா கேள்வியாக பார்த்தாள்.

தனது லாப்டாப்பை கையில் எடுத்தவன் “இத பாரு” என்று அவளிடம் நீட்டினான். அது மில்லில் பதிந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள்.

“புட்டேஜஸ்..? “

“ம்ம்..”

அங்கிருந்த டேபிளில் லாப்டாப்பை வைத்து அதன் முன் அமர்ந்து கொண்டாள். ஜெயபிரதாபனுடனே இருக்கும் அருணாச்சலம் மாடியேறி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

“இத பாரு. இவர் மேல போய் விழுற வரைக்கும் யாருமே மேல போகல. அவர் மட்டும் தான் மேல போயிருக்கார். அதுக்கு முன்னாடி போன எல்லாருமே இறங்கி வந்துட்டாங்க”

ஷ்ராவ்யாவிற்கு புரிந்தது.

‘அவங்க எதுக்கு படியேறி போகனும்? பறந்தே போயிட மாட்டாங்க’ என்று நினைத்துக் கொண்டு அடுத்ததை பார்த்தாள்.

“இது மாடியில எடுத்தது. ஆக்சுவலி அவர் நின்னு இருந்த இடத்துல கேமரா இல்ல. படி பக்கத்துல இருக்கதுல அவர தவிர யாருமே தெரியல”

தூரமாக அருணாச்சலம் இங்கும் அங்கும் ஓடுவது போல் தெரிந்தது. மீண்டும் மீண்டும் கீழே விழுந்து எழுந்தார். அதோடு வேகமாக திரும்பி மாடியிலிருந்து குதித்து விட்டார். கல் விழும் காட்சி தெளிவாக பதிவாகவில்லை.

“போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்துடுச்சா?”

“ம்ம்.. தற்கொலை தான் னு வந்து இருக்கு. வேற யாரும் தள்ளி விட்டா விழுறதுக்கும் அவரே குதிக்குறதுக்கும் வித்தியாசம் இருக்குல. இந்த ஃபுட்டேஜ்ஜ இப்போ தான் போலிஸ் எடுத்துட்டு போறாங்க. லாயர்க்கு குடுக்குறதுக்கு நான் ஒரு காபி எடுத்துக் கிட்டேன்”

‘சௌந்தர்யா நீங்க தான இத பண்ணது?” என்று ஷ்ராவ்யா மனதில் கேட்க காற்றில் இருந்த சௌந்தர்யா புன்னகைத்தார்.

” இதுல தான் அவரு குதிச்சது சரியா இருக்கே. அப்புறம் என்ன?”

“அவரு ஏன் தற்கொலை பண்ணிகிட்டார் னு தெரியனுமே. சும்மா மேல போனவர் திடீர் னு குதிச்சா சந்தேகமா இருக்காதா?”

“அத போலீஸ் தான் கண்டு பிடிக்கனும்” என்றவள் லாப்டாப்பை மூடி வைத்தாள்.

ஆதீரன் யோசனையுடன் நிற்க நிமிர்ந்து பார்த்தாள்.

“என்ன சாரே… பயங்கர யோசனையா இருக்கு?”

“இது அந்த ஆவிங்க பண்ணதா இருக்குமோ னு தோனுது”

‘அடப்பாவி… சரியா யோசிக்க ஆரம்பிக்குறானே… கூடாது… குழப்பி விடு ஷாயா’ என்று அவசரமாக யோசித்தவள் “ஆவிங்க தான் கேமரால போட்டோல கண்ணாடில எல்லாம் தெரியுமே சாரே. இங்க அப்படி எதுவும் தெரியலையே” என்றாள்.

“ப்ச்ச்… அதெல்லாம் படத்துல சொல்லுறது. நிஜம்மாவே அப்படி தான் தெரியும் னு நமக்கு என்ன தெரியும்?”

‘கரெக்ட் தான். அவங்க மூணு பேரும் என் கண்ணுக்கு நேரா தான தெரியுறாங்க. ‘ என்று நினைத்தவள் “யாருக்கு தெரியும்? அதுக்காக ஆவி மேல சந்தேகமா இருக்கு னு போலிஸ் கிட்டயா சொல்ல முடியும்? சிரிச்சுட மாட்டாங்க?” என்று கேட்டாள்.

“போலிஸ் கிட்ட சொல்ல முடியாது தான். ஆனா நாம கண்டு பிடிக்கலாம்ல?”

“எப்படி? வேணும் னா அந்த வீட்டுக்குள்ள போய் பேய் கிட்ட பேச்சு வார்த்தை நடத்தலாமா? நீங்க தான் இவர கொன்னிங்களா பேயே… அப்படி னா போலிஸ் கிட்ட வந்து சொல்லி சரண்டர் ஆகுங்க னு கேட்கலாம் வாங்க”

ஆதீரன் பதில் சொல்ல முடியாமல் அமைதியாகி விட்டான். அவன் பேயை பார்க்க கிளம்பினால் ஷாயா என்ன ஆண்டவனே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது.

‘இவரு பேய் தான் கொன்னுச்சு னு கண்டு பிடிக்க போனா பேய் இவரையும் சேர்த்துல கொன்னுடும்… அது புரியுதா இவருக்கு’ என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டு எழுந்தாள்.

“இந்த பேய் ஆராய்ச்சி பண்ணுறேன் னு எல்லாம் இறங்காதீங்க. அந்த ஆவி உங்கள கொல்ல ப்ளான் போட்டு இருக்கு. அதுல இருந்து தப்பிக்கிறத மட்டும் பாருங்க. மத்த விசயத்துல இறங்கி வீணா மாட்டிக்காதீங்க . அவ்வளவு தான் சொல்லுவேன்”

ஷாயா வேகமாக கதவை திறந்து வெளியேறி விட ஆதீரன் யோசனையுடனே அமர்ந்து இருந்தான்.

*.*.*.*.*.*.

இரவு அறையில் எதையோ ஷாயா தீவிரமாக எழுதிக் கொண்டிருக்க அவளது போன் இசைத்து கவனத்தை கலைத்தது. போனை எடுத்தவள் எண்ணை பார்க்காமலே காதில் வைத்தாள்.

“அக்கா….” என்று ஷிவானி கத்த வழக்கம் போல் காதை விட்டு எடுத்து விட்டாள்.

“கத்தாதடி … காது வலிக்குது. “

“உன் போன் வேலை செய்யுது னு சொல்ல மாட்டியா?”

“ஏன் ? என்ன ஆச்சு?”

“அம்மா எனக்கு போன போட்டு புலம்பிட்டே இருக்காங்க. மேகி கா தான் உன் போன் நல்லா இருக்கு னு சொன்னாங்க. எப்ப சரி பண்ண?”

“சரி எல்லாம் பண்ணல.. ஆன் ஆகாம இருந்தது. இப்ப அதுவே ஆன் ஆகிடுச்சு அவ்வளவு தான்.”

“அப்போ அம்மா கிட்ட பேசு”

“பேசுறேன்.‌இப்போ வேலை பார்த்துட்டு இருக்கேன். பை”

“பை பை”

ஷிவானி அழைப்பை துண்டித்ததும் அன்னையை அழைத்து பேசி விட்டு வேலையை பார்த்தாள். முழுதாக வேலையை முடித்து விட்டு மணியை பார்க்க மணி பதினொன்று என்று காட்டியது.

எல்லாவற்றையும் மூடி வைத்து விட்டு மெத்தையில் வந்து படுத்துக் கொண்டாள். கண்ணை மூடி தூங்க போகும் நேரம் எதோ உறுத்த பட்டென கண்ணை திறந்து பார்த்தாள்.

சௌந்தர்யா எதிரில் நின்று இருந்தார். அவரை பார்த்ததும் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தாள். “என்ன ? என்ன ஆச்சு?” என்று பதற “உன் கிட்ட உதவி கேட்க போறேன் னு சொல்லி இருந்தனே. அத சொல்ல தான் வந்தேன்” என்றார்.

“ஆமா.. ஆமா.. மறந்துட்டேன். என்ன ஹெல்ப்?”

“அந்த ஜெய பிரதாபன விட்டு ஆதீரன பிரிச்சு வேற எதாவது ஊருக்கு கூட்டிட்டு போகனும். இந்த தேனிய விட்டு தூரமா…”

“எத்தனை நாள்?”

“ரெண்டு நாள்”

“அந்த அருணாச்சலம் சூஸைட் கேஸ் போயிட்டு இருக்கு. அவர் ஊர விட்டு வருவாரா னு தெரியலயே”

“சந்தான லட்சுமி கிட்ட கேளு.”

“ம்ம்..” என்றவள் திடீரென எதோ நியாபகம் வர “அந்த அருணாச்சலத்த கொன்னது நீங்க தான?” என்று கேட்டாள்.

சௌந்தர்யா பதில் சொல்லாமல் புன்னகைக்க “அந்த வாட்ச்மேனயும் நீங்க தான் கொன்னு இருக்கனும்” என்றாள்.

மறுப்பாக தலையசைத்த சௌந்தர்யா “அவன கொன்னது தியா தான்” என்றார். 

‘ஆளுக்கு ஒரு கொலை. பேஸ்’ என்று நினைக்க அதை உணர்ந்த சௌந்தர்யா அவளை பார்த்து சிரித்தார். சிரிக்கும் போது தெரிந்த அவரது பல் வரிசையில் ஷாயா மயங்காத ஒன்று தான் குறை.

‘இவ்வளவு அழகா இருக்கவங்கள போய் அப்படி சிதைச்சு கொலை பண்ணுவாங்களா?’ என்று  மனதில் தோன்ற பெரு மூச்சு விட்டாள்

“இவங்கள எல்லாம் ஏன் கொல்லுறீங்க?”

“உன்னோட கடந்த காலம் உனக்கு நியாபகம் இருக்கா?”

“இல்ல. நியாக படுத்த ட்ரை பண்ணா மயங்கி விழுந்துடுறேன். இல்லனா காய்ச்சல் வந்துடுது. டாக்டர் யோசிக்க கூடாது னு சொல்லிட்டார்.”

“நீ நியாபக படுத்த வேணாம். நானே சொல்லுறேன்”

அவர் சொல்கிறேன் என்றதும் ஷ்ராவ்யா படபடக்கும் இதயத்தோடு அவரையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.

“நீ இந்த வீட்டுக்கு எதுக்கு வந்துருக்க?”

“வேலை பார்க்க தான்”

“நானும் உங்கம்மாவும் கூட இந்த வீட்டுல வேலை பார்த்தவங்க தான்”

“என்னது?” என்று அதிர்ந்து எழுப்போக “உட்காரு. சொல்லுறத எல்லாம் கேட்டு விழுகாம இருக்கனும் னா உட்கார்ந்து இருக்கது தான் நல்லது” என்றவர் தங்களது வரலாற்றை கூற ஆரம்பித்தார்.

*.*.*.*.*.*.*.*.

1982 , நவம்பர் மாதம்.

அதே முருகமலை ஊர். மக்கள் மட்டும் அதிகமாக இல்லை. அங்கு தெருவில் ஒரு ஓரமாக இருந்த ஓட்டு வீடு. பார்ப்பதற்கு மிகவும் சிறிய வீடு தான் . அந்த வீட்டின் முன்னால் ஆண்கள் அமர்ந்து இருக்க வீட்டுக்குள் பெண்கள் அழுது கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. வாசலில் யாரோ சண்டை போடுவது போல் இருக்க பச்சை முத்து வேட்டியை மடித்துக் கொண்டு உள்ளே புகுந்தார்.

“ஏய் … தள்ளுங்கடா அங்குட்டு.. என்னடா எழவு வீட்டுல வந்து பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்கீங்க?”

“பாடை கட்டுறவன் காசு பத்தல னு சொல்லிட்டு இருக்கான் முத்து அண்ணன்”

“ஏன்டா டேய்… இது ஒரு பிரச்சனையா? நான் தரேன். இப்போ போய் கட்டு. அப்புறமா வீட்டுல வந்து வாங்கிக்க போ” என்று பிடித்து தள்ளி விட அவனும் சென்று விட்டான்.

வீட்டில் பெண்கள் அழுகும் சத்தம் கேட்ட போதும் ஒரு குரலின் சத்தம் மட்டும் சற்று அதிகமாக கேட்டது. அந்த வீட்டில் இறந்து கிடந்தவர் ஒரு முதியவர். அந்த பெண்மணியின் அருகே அமர்ந்து அழுது கொண்டிருந்த அவரது பேத்தியின் குரல் தான் தனித்து தெரிந்தது.

விந்தியா… பெற்றோர்களை பற்றி அறியும் முன்னே அவர்களை பறி கொடுத்து விட்டாள். அவளது குடும்பம் என்றால் அது அவளது பாட்டி தான்.

ஊரின் பெரிய பணக்காரரான விஜயலிங்கத்தின் வீட்டில் சமையல் வேலை பார்த்து தான் அவளுடைய பாட்டி அவளை வளர்த்தார். இப்போது இருந்த ஒரே சொந்தமும் போய் விட அழுது கரைந்து கொண்டிருந்தாள்.

பெண்கள் எல்லாம் அவளை தேற்றி இறுதி காரியத்தை செய்ய வைத்தனர். ஊரில் பெரியவர் என்ற முறையில் விஜயலிங்கம் அந்த இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள வந்திருந்தார்.

அவரோடு அருள் மொழியும் வந்திருந்தான். பதினாறு வயது சிறுவன். நன்றாக சமையல் செய்து அவனது வயிற்றை பாதுகாப்பவர் இறந்து போனார். அவரை பார்க்க தந்தையோடு கிளம்பி விட்டான்.

இறுதி காரியம் நடக்கும் போது தான் விந்தியாவை கவனித்தான். சிறிய பெண் . கத்தி கத்தி அழுது கொண்டிருந்ததை பார்க்க அவனுக்கு பாவமாக இருந்தது.

அவளை நினைத்து வருத்தப்பட்ட அதே நேரம் ஊர் மக்கள் பேசுவதை வேறு கேட்டு விட்டான். இனி அவளுக்கென்று யாருமே இல்லை. அவளது சொந்த பந்தம் என்று யாராவது இருந்தாலாவது அவர்களிடம் அனுப்பி வைக்கலாம். அப்படி யாருமே இல்லை என்பதால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.

பெரியவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க “அப்பா.. நாம கூட்டிட்டு போகலாம் பா” என்று அருள்மொழி கூறினான். எல்லோரும் அவனை ஆச்சரியமாக பார்க்க “டேய் பெரியவங்க பேசிட்டு இருக்கோம் ல. போய் விளையாடு”  விஜயலிங்கம் அதட்டினார்.

“இல்ல பா. அந்த பாட்டி நம்ம வீட்டுல தான சமைச்சாங்க. அவங்க வேலைய இந்த பொண்ணு பார்க்கட்டுமே”

“டேய் அது சின்ன பிள்ளடா. சமைக்குற வேலைக்கு அது எப்படி சரி பட்டு வரும்?”

“வரலனா போகுது. நம்ம வீட்டுல இருக்க மத்தவங்க சமையல சொல்லி குடுக்கட்டும். இந்த பிள்ள கத்துக்கிட்டு சமைக்கட்டும்.”

“தம்பி நீ சொல்லுறது சரி தான். ஆனா அந்த பிள்ள எங்க தங்கும்?” என்று கூட்டத்தில் இருந்த ஒருவர் கேட்க “ஏன் எங்க வீட்டுல இடமா இல்ல… இல்லாட்டி எங்க மாட்டு கொட்டகை பக்கத்துல இருக்க இடத்துல இருக்கட்டும்” என்றான்.

அவர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அவனிடம் பதில் இருந்தது. அவளது வேலைக்கு சம்பளம் கொடுத்து, மூன்று வேலை உணவையும் கொடுப்பதாக கூறி விட்டு விந்தியாவை தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

பாட்டி இறந்த துக்கத்தோடு தெரியாதவர்கள் வீட்டில் இருக்கும் பயம் என விந்தியா ஒடுங்கிப்போனாள். அந்த வீட்டில் வேலை செய்யும் மற்றவர்கள் தான் அவளை தேற்றி பள்ளி அனுப்பினர். ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தவள் அதை நிறுத்த நினைக்க அருள்மொழி விடவில்லை.

படித்துக் கொண்டே வீட்டு வேலைகளையும் கற்றுக் கொண்டாள். அந்த வீட்டில் முழுவதுமாக ஒன்றிப்போக அவளுக்கு ஒராண்டுக்கு மேல் நேரம் தேவைப் பட்டது.

பள்ளி, வீட்டு வேலை, படிப்பு எதையும் குழப்பாமல் எல்லாவற்றிற்கும் நேரம் பிரித்து வேலை செய்ய கற்றுக் கொண்டாள்.

ஆனால் அதிகமாக பேச மாட்டாள். அவள் நன்றாக பேசும் ஒரே ஆள் அருள் மொழி மட்டுமே. அந்த வீட்டிற்கு வந்த சில நாட்களில் அருளை ஐயா என்று அழைத்து வைத்தாள்.

“ஐயா வா?” என்று கேட்டு அவளை மேலும் கீழும் பார்த்த அருள் “என்ன பார்த்தா கிழவன் மாதிரியா இருக்கு உனக்கு?” என்று அதட்டினான்.

விந்தியா பயந்து வேகமாக மறுப்பாக தலையாட்ட “அது… ஐயா குய்யா ன கொன்னுடுவேன். வேணும் னா அண்ணன் னு கூப்பிடு”  என்று மேலும் அதட்டினான். விந்தியா அதற்கும் மறுப்பாக தலையாட்டி வைக்க “அப்ப பேர சொல்லி கூப்பிட போறியா?” என்று கேட்டான்.

“அய்யய்யோ” என்று அலறி விந்தியா வாயை மூடிக் கொண்டாள்.

“ஐயா வேணாம் னு சொன்னதுக்கு அய்யய்யோ னா கூப்பிட போற.. இது அத விட ரொம்ப மோசமா இருக்கே”

விந்தியா விட்டால் அழும் நிலைக்கு சென்று விட அருள் சிரித்து விட்டான். விந்தியா உதட்டை பிதுக்கிக் கொண்டு நின்றிருந்தாள்.

“அண்ணன் னு கூப்பிடுறதுல என பிரச்சனை உனக்கு?”

“அப்படி கூப்பிட்டா பெரிய ஐயா கோச்சுக்குவாங்க”

“பெரிய்ய்ய்ய ஐயா வா? அது யாரு?”

“உங்க அப்பா”

“அவரா… அவரு கேட்டா நான் சொல்லிக்குறேன்.”

“ம்ஹும் வேணாம்” என்று வேகமாக சொன்னவள் மேலே பார்த்து எதையோ யோசித்தாள்.

“பார்த்து கழுத்து சுழுக்கிக்க போகுது” என்று அருள் கூற வேகமாக குனிந்து கொண்டாள்.

“நான் வேணா உங்கள அண்ணய்யா னு கூப்பிடட்டுமா? “

“என்னது…..?”

“ம்ம்‌… அண்ணனும் ஐயாவும் சேர்த்து அண்ணய்யா”

“பெரிய கண்டு பிடிப்பு தான் போ. அண்ணய்யா னா தெலுங்கு ல அண்ணன்னு தான் அர்த்தம். கூப்பிட்டுக்க”

“உங்களுக்கு தெலுங்கு எல்லாம் தெரியுமா?” என்று முட்டை விழியை விரித்து விந்தியா கேட்க அருள் மொழி சிரித்துக் கொண்டே “இல்ல. என் கூட படிக்குறவன் தெலுங்கு காரன்” என்று கூறி விட்டு சென்று விட்டான்.

அன்றிலிருந்து விந்தியா எதுவென்றாலும் தன் அண்ணய்யாவிடம் தான் கேட்பாள். சொல்லுவாள். அவனை தவிர வேறு யாரிடமும் அதிகமாக பேச்சு வைத்துக் கொள்ள மாட்டாள்.

இரண்டு வருடங்கள் எதுவும் மாறாமல் ஒரே நேர்க்கோட்டில் கடந்து விட்டது. அருள் பனிரெண்டாம் வகுப்பை வெற்றிகரமாக முடித்து விட்டு மேற்படிப்பிற்கு கேரளா சென்று விட்டான்.

தியா தனிமை பட்டுப்போனாள். அதோடு அவளது வேலை சுமை அதிகரித்தது. அந்த வீட்டின் மாட்டை கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் ஊரை விட்டு போய்விட அந்த வேலைக்கு ஆள் தேடிக் கொண்டிருந்தனர். தியா அந்த வேலைகளையும் சேர்த்தே பார்த்துக் கொண்டிருந்தாள்.

விடுமுறைக்கு வந்த அருள் அவள் மாட்டை கவனிப்பதை பார்த்து விட்டு அவளை அருகில் அழைத்தான்.

“நீ ஏன் இதெல்லாம் பார்க்குற?”

“அந்த தாத்தா வேலைய விட்டு போயிட்டாரு. பாவம் மாடு. ம்மா ம்மா னு கத்துச்சு. அதான்”

“அதுக்காக உன் வயசுக்கு அதிகமான வேலை எல்லாம் பார்க்காத . புரியுதா?”

“ஆனா மாடு…”

“அதுக்கு வேற ஆள போட சொல்லுறேன். சரி உன் சம்பள பணம் எல்லாம் எங்க?”

“உள்ள இருக்கு”

“போய் எடுத்துட்டு வா”

வேகமாக ஓடிச் சென்று எடுத்து வந்து கொடுத்தாள். அதை வாங்கி எண்ணி பார்த்தவன் அவளை கேள்வியாக பார்த்தான்.

“காசு குறையுதே… என்ன பண்ண மிச்சத்த?”

“நான் ஒன்னும் பண்ணல. நோட்டு பென்சில் பேனா மை அவ்வளவு தான் வாங்குவேன்”

அருள் யோசித்து விட்டு “இந்த மாசம் சம்பளம் குடுத்தாங்களா?” என்று கேட்டான்.

விந்தியா பதில் சொல்லாமல் திருதிருவென முழித்தாள். “சொல்லு” என்று அழுத்திக் கேட்க மறுப்பாக தலையசைத்தாள்.

“எப்ப இருந்து குடுக்கல?”

“நீங்க ஊருக்கு போனதுல இருந்து…” என்று இழுத்தவள் “ஆனா எனக்கு சம்பளம் எல்லாம் வேணாம் அண்ணய்யா.. நான் தான் நம்ம வீட்டுல தங்கி இருக்கனே. அதுக்கு சரியா போயிடும் தான” என்றாள்.

அருள் அவளை அனுப்பி விட்டு சற்று நேரம் யோசித்தான். பிறகு எழுந்து தந்தையிடம் சென்றான். விஜயலிங்கம் அவன் படிப்பை எல்லாம் விசாரித்து முடிக்க “ப்பா.. ரொம்ப தாங்க்ஸ் பா” என்றான்.

“எதுக்கு டா?”

“விந்தியா வ நம்ம வீட்டுல ஒருத்தியா நினைச்சதுக்கு”

“என்ன ஒளருற… அது நம்ம வீட்டுல வேலை பார்க்குற புள்ள. அது நம்ம வீட்டுல ஒரு புள்ளையா எப்படி ஆகும்?”

“விந்தியா தான் பா சொல்லுச்சு. சம்பள பணத்த என்ன பண்ண னு விசாரிச்சேன். யாராவது சொந்த வீட்டுல வேலை செய்ய சம்பளம் வாங்குவாங்களா னு கேட்டுச்சு. அப்புறம் தான் நீங்களே சம்பளம் குடுத்து வேற ஆளா நினைக்க வேணாம் னு சம்பளத்தை நிறுத்திட்டீங்க னு சொல்லுச்சு… அதுக்கு தான் தாங்க்ஸ் சொன்னேன்”

“டேய் அதெல்லாம் கிடையாது. சம்பளம் குடுக்குறப்போ அந்த பிள்ள பேரு விட்டு போயிருக்கும். அதுனால இருக்கலாம். நான் கணக்க பார்த்து மொத்தமா குடுக்க சொல்லுறேன். வீட்டுல ஒரு ஆளா எல்லாம் சேர்த்துக்க முடியாது” என்று கூறி விட்டு அவர் சென்று விட அருள் மர்மமாக புன்னகைத்துக் கொண்டான்.

அதன் பின் அவளது சம்பள பணம் அவள் கையில் மொத்தமாக வந்து சேர அதை அப்படியே அருளிடம் கொடுத்து விட்டாள். அவன் அதை ஏன் வாங்குகிறான்? என்ன செய்கிறான்? எதையுமே தியா கேட்டது இல்லை.

ஆனால் தன் செலவு போக பைசா குறையாமல் அவன் கேட்டதும் தூக்கி கொடுத்து விடுவாள். அருள் இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று கட்டளை வேறு விதித்து இருக்க அமைதியாக இருந்து விட்டாள்.

அங்கிருந்து கல்லூரிக்கு கிளம்பும் முன் அடுத்த வேலையை முடித்துக் கொண்டு கிளம்பினான். அது….

அத்தியாயம் 22

அதிகாலையில் அருள்மொழி எழுந்து வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தான். விந்தியா கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு மாட்டை கவனித்துக் கொண்டிருந்தாள். புத்தகத்தில் ஒரு பார்வையையும் மாட்டை ஒரு பார்வையும் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

வேறு யாரோ கூப்பிடவும் வேகமாக அங்கிருந்து ஓடி விட்டாள். புல்லை எடுத்து போட மறந்து அவள் ஓடி விட மாடு கத்த ஆரம்பித்தது. அங்கு வந்து நின்ற அருள்மொழி “மாடு ஏன் இப்படி கத்துது?” என்று சத்தம் போட்டான்.

வேலை செய்து கொண்டிருந்தவர்கள் திரும்பி பார்க்க “விந்தியா” என்று அழைத்தான். அவனது அழைப்பில் அவள் பதறி வேகமாக ஓடி வந்தாள்.

“இது தான் நீ மாட்ட பார்த்துக்குறதா? அது கத்திட்டே இருக்கு. இதுக்கு தான் வயசுக்கு தகுந்த வேலைய பார்க்கனும் னு சொல்லுறது. உன்ன எல்லாம் யாரு மாட பார்க்க விட்டது?”

அருள் திட்டிவிட விந்தியாவிற்கு கண்கலங்கி விட்டது. வேகமாக வேறு ஆளை கூப்பிட்டவன் மாட்டை கவனிக்க சொன்னான். அருளின் அன்னை வந்து அவனை சமாதானப் படுத்த “ம்மா… இந்த புள்ள எதுக்கு மாட்ட பார்த்துக்குது? ஏன் வேற ஆளே கிடைக்கலையா?” என்று கேட்டான்.

“அப்பாவும் அண்ணனும் தேடிட்டு இருக்காங்க”

“சீக்கிரமா போட சொல்லுங்க. அத விட வேற என்ன வேலை அண்ணனுக்கு? இனி சின்ன பிள்ளைய நம்பி மாட்ட விடாதீங்க” என்று கூறி விட்டு “உனக்கு எது வருமோ அத மட்டும் பாரு. புரியுதா?” என்று விந்தியாவை அதட்டினான்.

விந்தியா வேகமாக தலையாட்டினாள். கண்களில் திரண்டு இருந்த நீர் தலையாட்டலில் கன்னத்தில் வழிந்து ஓடியது. என்றுமே தன்னை திட்டாத அண்ணய்யா திட்டியதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“போ” என்று கூற வேகமாக அங்கிருந்து ஒடி விட்டாள்.

தனியாக அமர்ந்தவள் ஒரு மூச்சு அழுது ஓய்ந்து விட்டு தான் அடுத்த வேலையை பார்க்க சென்றாள். அடுத்த இரண்டு நாட்கள் விந்தியா அருள் இருக்கும் பக்கமே வராமல் ஓடி ஒளிந்து கொள்ள அடுத்த நாள் அருள் கேரளாவிற்கு கிளம்பினான்.

கேரளா போகும் முன் விந்தியாவை அழைத்தான். தலை குனிந்து கொண்டு வந்து நிற்க “இனிமே மாட்ட பார்க்குறேன் னு படிப்ப விட கூடாது.‌ புரியுதா?” என்று கேட்க தலையாட்டி வைத்தாள்.

“அடுத்த லீவ் எப்ப வரும் னு தெரியாது. நான் வந்து பார்க்க மாட்டேன் னு எதுவும் பண்ணிட கூடாது. ஒழுங்கா ஸ்கூல் வீடு னு மட்டும் தான் இருக்கனும். யாரு கிட்டயும் நின்னு பேச கூடாது. குடுத்த வேலைய ஒழுங்கா முடிக்குற. புரியுதா?”

அருள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவனது அன்னை வந்து விட அவனிடம் வேகமாக தலையாட்டி விட்டு ஓடி விட்டாள்.

அவனும் ஊருக்கு கிளம்பி சென்று விட்டான். முதலில் அருள் திட்டி விட்டான் என்று வருத்தப்பட்டவள் நாட்கள் கடக்க கடக்க அவனது செய்கைக்கு காரணத்தை புரிந்து கொண்டாள்.

அருள் அவளுக்கு ஆயிரம் கட்டளைகள் போட்டு விட்டு தான் சென்று இருந்தான். அவன் இல்லை என்பதற்காக அதை மீற விந்தியா துணிந்ததே இல்லை. வேலை முடித்து விட்டு பள்ளி செல்பவள் அங்கு யாருடனும் பேச மாட்டாள்.

படிப்பை மட்டும் பார்த்து விட்டு மீண்டும் நேராக வீட்டுக்கு வந்து விடுவாள். அவளது உலகம் அதோடு சுருங்கிப்போனாலும் அதை நினைத்து கவலை படவோ அக்கறை படவோ அவளுக்கு நேரம் இருந்தது இல்லை.

அருள் ஊருக்கு சென்று ஒரு வாரம் கழித்து மாடுகளை கவனித்துக் கொள்ள ஒருவரை வேலைக்கு வைத்தனர். வந்தவர் வயதானவராக இருக்க அவரிடம் தியா சற்று தயக்கமில்லாமல் பேசினாள்.

தனக்கு தெரிந்தவரை மாடுகளை பற்றி அவரிடம் கூற “என் பேத்தி மாதிரி நீயும் புத்திசாலியா இருக்கியே” என்றார் அவர்.

“உங்க பேத்தி யாரு?”

“எங்க வீட்டுல இருக்கு. ஒரு நாள் கூட்டிட்டு வரேன். ” என்றார்.

சொன்னது போல் இரண்டு நாட்கள் கழித்து அவருடன் அழகான சிறுமி ஒருத்தி பயந்த முகத்துடன் வந்து நின்றாள். பார்த்த முதல் பார்வையில் விந்தியாவிற்கு அவளை பிடித்து விட்டது.

“உன் பேரென்ன?”

“சௌந்தர்யா”

“என் பேரு விந்தியா”

“ம்ம்..”

சௌந்தர்யா அளவாக பேச தாத்தா அவர்களை சேர்ந்து விளையாட சொல்லி விட்டு வேலை பார்க்க சென்று விட்டார்.

சௌந்தர்யா… விந்தியாவை விட ஐந்து வயது சிறியவள். சென்ற மாதம் தான் அவளது அன்னையை பறி கொடுத்து விட்டு தாத்தாவுடன் இந்த ஊருக்கு வந்திருக்கிறாள்.

“எங்கம்மா நான் தாத்தா மட்டும் தான். அம்மா போன மாசம் என்ன விட்டு சாமி கிட்ட போயிட்டாங்க. தாத்தா அங்க இருந்த மாட்ட வித்துட்டார். அம்மா கடன் வாங்கி என்ன படிக்க வச்சாங்க. அந்த கடன அடச்சிட்டு தான் இந்த ஊருக்கு வந்தோம். இங்க இருக்க பள்ளிக்கூடத்துக்கு தான் நாளையில இருந்து போகனும்”

“நானும் அங்க தான் படிக்குறேன். நாம சேர்ந்தே போகலாம்” என்று விந்தியா நட்பு கரம் நீட்ட சௌந்தர்யா பற்றிக் கொண்டாள்.

ஐந்து வயது தன்னை விட சிறியவளாக இருந்த போதும் விந்தியாவிற்கு அவள் தான் முதல் தோழி. இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறினார்.

மீண்டும் விடுமுறைக்கு அருள் வந்து நிற்கும் போது விந்தியா சந்தோசமாக தன் தோழியை பற்றி கூறினாள்.

“உனக்கு ஃப்ரண்ட்டா?? யாரது?”

“அந்த தாத்தாவோட பேத்தி”

“ஓஹோ.. பேரென்ன?”

“சௌந்தர்யா… நாளைக்கு அவள விளையாட இங்க கூட்டிட்டு வந்து காட்டுறேன்” என்று விந்தியா சந்தேசமாக சொல்ல அருள் புன்னகைத்தான்.

“சரி உன் ஃப்ரண்ட்ட நான் பார்க்குறேன். நீ போய் உன் சம்பள பணத்த எடுத்துட்டு வா” என்று அனுப்பினான்.

அடுத்த நாள் மாலை அருள் தூங்கி எழுந்து வெளியே வர சௌந்தர்யாவும் விந்தியாவும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர். சௌந்தர்யாவை பார்த்ததும் விந்தியா சொன்ன பெண் இவள் தான் என்று அருள் கண்டு பிடித்து விட்டான்.

திடீரென புதியவனை பார்த்ததும் சௌந்தர்யா பயந்து ஒதுங்கினாள். விந்தியா அவளை பிடித்து இழுத்து வந்து “அண்ணய்யா நான் சொன்னேன்ல.. இவ தான் என் ஃப்ரண்ட்” என்றாள்.

“உன் ஃப்ரண்ட் உன்ன விட சின்ன பிள்ளையா இருக்கே.”

“ஆமா எங்க ஸ்கூல் ல தான் படிக்குறா.”

சௌந்தர்யாவிடம் திரும்பி “என்ன படிக்குற?” என்று கேட்க “அஞ்சாவது” என்றாள்.

“நல்லா படிக்கனும் சரியா? என்ன பார்த்தா இவ்வளவு பயப்படுற? விந்தியாக்கு ஃப்ரண்ட் னா எனக்கும் ஃப்ரண்ட் தான்”

அருள்மொழி பேசியதற்கெல்லாம் சௌந்தர்யா தலையை மட்டுமே ஆட்டி வைத்தாள்.

“நீயும் பத்திரமா இரு. இந்த புள்ளையையும் பத்திரமா பார்த்துக்க.” என்று விந்தியாவுக்கு கட்டளை போட வேகமாக சரியென்றாள்.

அதன் பிறகு ஊருக்கு வரும் போதெல்லாம் அவர்கள் படிப்பில் உதவி செய்வான். காலம்  தயங்கி நிற்காமல் காற்றைப்போல் கடந்து சென்று விட விந்தியா தனது பனிரெண்டாம் வகுப்பு பரிட்சையை வெற்றிகரமாக முடித்தாள்.

அருள் அவளுக்கு போட்டிருக்கும் மிகப்பெரிய கட்டளை மதிப்பெண் நிறைய எடுக்க வேண்டும் என்பது தான். அதை மனதில் வைத்து நன்றாக படித்து எழுதி முடித்தாள்.

இதற்கிடையில் ஜெய பிரதாபனுக்கு பொன்னாம்பாளுடன் திருமணம் முடிந்தது. சௌந்தர்யா அந்த ஊருக்கு வந்து ஒரு வருடத்தில் தான் ஜெயபிரதாபனின் திருமணம் முடிந்து பொன்னாம்பாள் வந்தார்.

பொன்னாம்பாள் வேறு ஒரு ஊரின் தலைவரின் மகள். அதனால் அவரது செல்வ செழிப்பில் ஈர்க்கப்பட்டு விஜயலிங்கம் தன் மகனுக்கு அவரை கட்டி வைத்தார். அவர்கள் வாழ்க்கையில் எல்லா சந்தோசமும் இருந்தது. குழந்தையை தவிர..

தியா பனிரெண்டாம் வகுப்பை முடித்த பின் அருள் விடுமுறைக்கு வந்து இருந்தான். “மேல என்ன படிக்க போற?” என்று அருள் கேட்க விந்தியா முழித்தாள்.

“என்ன முழிக்குற?”

“நான்‌ என்ன படிக்க?”

“கிழிஞ்சது..”

விந்தியாவிற்கு பதில் சொல்ல முடியவில்லை. ஒன்பதாம் வகுப்பிலிருந்தே அவள் வேறு ஊருக்கு சென்று தான் படித்தாள். இதற்கும் மேல் படிக்க வேண்டும் என்றால் பணம் எங்கிருந்து வரும்? அவளிடம் இப்போது ஐந்து ரூபாய் இருக்கிறது. அதை வைத்து படித்து விட முடியுமா?

“பேசாம என் கூட கேரளா வரியா? அங்க பொம்பள பிள்ளைங்க தங்க இடம் இருக்கு. நீயும் நல்லா படிக்கலாம்”

“அதுக்கு பணம் வேணும் அண்ணய்யா.. முக்கியமா பெரிய ஐயாவும் அம்மாவும் ஒத்துக்க மாட்டாங்க”

“எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன். நீ படிக்கிறியா? அத மட்டும் சொல்லு”

“ம்ம்‌.. ஆனா”

“ப்ச்ச்.. இந்த ஆனா ஆவன்னாவ விடுறியா. படிக்குறேன் னு சொல்லிட்டல. நான் பேசிக்குறேன். ரிசல்ட் வந்ததும் கிளம்பிடலாம்”

அருள் மறுநாளே அன்னையிடமும் தந்தையிடமும் விசயத்தை சொல்லி விட்டான்.

“டேய் அந்த பிள்ளைய படிக்க வைக்க போறியா? பைத்தியமா புடிச்சு இருக்கு உனக்கு?” – விஜயலிங்கம்

“அதான பொம்பள பிள்ளைக்கு எதுக்குடா படிப்பு?”

“நல்ல கேள்வி தான் மா. உன்ன பெத்தவங்க படிக்க வைக்கல னு ஊருல இருக்க எந்த பொண்ணும் படிக்க கூடாதா?”

“டேய் அதுக்கு இல்லடா… கல்யாணத்த பண்ணிட்டு அடுப்படிய பார்க்க போற புள்ளைக்கு எதுக்கு டா படிப்பு?”

“ஏன் படிச்சுட்டு ஆக்குனா சோறு வேகாதா? சரி உங்க இடத்துக்கே வரேன். அந்த பிள்ளைக்கு கல்யாணம் ஆகும் னு சொல்லுறீங்க. எப்படி ஆகும்? நீங்க நகை வச்சு இருக்கீங்களா? அஞ்சு பவுனு நகை நட்டு பத்தாயிரம் ரூபா ரொக்கம் னு போட்டு  கட்டி கொடுக்க நீங்க தயாரா?

அப்படி வச்சு இருக்கீங்கனா சொல்லுங்க. பதினேழு வயசாகிடுச்சு மாப்பிள்ளைய பார்த்து கட்டி குடுத்துடுவோம். பணம் நகை எல்லாம் இல்லாம எவனோ ஒருத்தனுக்கு கட்டி வச்சா… நாளைக்கு ஊரு இந்த வீட்டுல வளர்ந்த பிள்ளயோட வாழ்க்கைய அழிச்சுட்டோம் னு நம்மல தான் பேசும்”

விஜயலிங்கம் யோசித்தார். நான்கு வேலையாட்களோடு ஐந்தாவது வேலையாளாக அந்தப் பெண் இருக்கும் வரை அவருக்கு பெரிதாக நஷ்டம் எதுவும் இல்லை.

இப்போது திருமணம் என்று வந்தால் அவளை ஒரு நல்ல இடத்தில் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும். இல்லையென்றால் ஊருக்குள் அவரது பெயர் கெட்டு விடும்.

அதற்காக அந்த பெண்ணுக்கு பணத்தை வாரி இறைக்கும் அளவு அவர் தாராள மனம் படைத்தவர் இல்லை.

“சரி டா. இதுக்கும் அந்த ‌பிள்ளைய கேரளா கூட்டிட்டு போய் படிக்க வைக்குறதுக்கும் என்னடா சம்பந்தம்?”

“இருக்கே. பணம் போட்டு கல்யாணம் பண்ணி தான் கொடுக்க முடியாது. படிக்க வச்சுட்டோம் இனி அது வாழ்க்கைய அதுவே பார்த்துக்கும் னு முடிச்சடலாம். கேரளா கொண்டு போய் விட்டா படிச்சுட்டு அங்கயே வேற வேலைய தேடிக்கிட்டு இருந்துடட்டும். அந்த பிள்ளையே மாப்பிள்ளைய பார்த்து கல்யாணம் பண்ணிக்கும் போது ஓரமா நின்று வாழ்த்திட்டு வந்துடலாம். யாரும் கேட்டா .. அந்த பிள்ள ஆசை பட்டுச்சு கட்டி வச்சுட்டோம் னு சொல்லலாம். நாம நகை போடல பணம் குடுக்கல னு யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க”

“அப்ப படிக்க வைக்குறதுக்கு காசு?”

“அதோட சம்பள பணம் இருக்கும் ல அத வச்சு படிக்கட்டும். இல்லனா அங்க எதாச்சும் வேலை பார்த்துட்டே படிக்கட்டும். நம்ம வீட்டுல இருந்து எந்த பிரச்சனையும் இல்லாம அனுப்ப இதான் சிறந்த வழி.”

மகன் சொல்வதெல்லாம் சரி தான் என்றாலும் இது மட்டுமே காரணம் என்று நம்ப விஜயலிங்கம் முட்டாள் இல்லை. அவருக்கு தெரியும். அருள்மொழிக்கு அந்த பெண் மீது அக்கறை அதிகம். அந்த பெண்ணும் அண்ணய்யா என்று அழைப்பதை கேட்டிருக்கிறார்.

அருள் அவளை தங்கையாக நினைப்பதை உணர்ந்தும் அவர் வாயை திறந்து எதுவும் சொல்லவில்லை. எதாவது பேசி பெரிது படுத்த வேண்டாம் என்று நினைத்தவர் கவனிக்காதது போல் இருந்து விட்டார்.

அவளை படிக்க வைக்க தான் அருள் இவ்வளவு துடிக்கிறான். அதில் இவர்களுக்கும் லாபம் தான் என்பதால் சம்மதித்து விட்டார்.

“சரி படிக்கட்டும். ஆனா படிப்பு செலவுக்கு னு என் கிட்ட நயா பைசா கூட எதிர் பார்க்க கூடாது” என்று கூறி விட்டார்.

அருள்மொழிக்கு நிம்மதியாக இருந்தது. பணம் அவனுக்கு பிரச்சனையே இல்லை. கடந்து ஆறு வருடமாக விந்தியாவின் சம்பளப் பணம் முழுமையாக அவன் கையில் தானே வந்து சேருகிறது.

அதை அவள் பெயரில் தான் அஞ்சல் நிலையத்தில் போட்டு வைத்திருக்கிறான். பதினெட்டு வயதுக்கு பின் அவள் அந்த பணத்தை எடுத்து பயன் படுத்தலாம். இதை யாருக்குமே தெரியாமல் பாதுகாக்க காரணம் அவளது படிப்பிற்காக தான்.

தேர்வு முடிவுகள் வந்ததும் அவளை கிளம்பும் படி கூறி விட்டான்.

“அண்ணய்யா‌… பெரிய ஐயா…”

“அவரு சரி னு சொல்லிட்டாரு”

“அவங்க சரி னு சொல்லிட்டா போதுமா? பணம் காசு?”

“நீ கிளம்புறியா இல்லையா?… அங்க உனக்கு நான் வேலை வாங்கி தரேன். அத வச்சுட்டு படிச்சு முடி. இப்போ போய் காலேஜ்ல உனக்கு பிடிச்ச படிப்ப பார்த்துட்டு வேலைய தேடுவோம். வா”

இது விந்தியாவிற்கு பிடித்து இருந்தது. வேலை செய்து கொண்டே படிப்பதெல்லாம் அவளுக்கு கை வந்த கலையாயிற்றே. அதனால் அருளுடன் கிளம்பி விட்டாள். ஆனால் சௌந்தர்யாவை விட்டு செல்வது தான் அவளுக்கு வருத்தமாக இருந்தது.

சௌந்தர்யாவிற்கும் தன் தோழியை இழக்க பிடிக்கவில்லை. ஆனால் வேறு வழி இல்லை. அருள் விந்தியாவுடன் கேரளா நோக்கி பயணிக்க ஆரம்பித்தான். போகும் போதே அவள் பெயரில் இருந்த பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு தான் கிளம்பினான் அருள்.

கல்லூரியில் சேர்ந்து அந்த கல்லூரி நடத்தும் விடுதியிலும் சேர்த்து விட்டான். விடுதியில் உள்ள உணவகத்தில் அவளுக்கு வேலை வாங்கி கொடுத்தான். அவளை அங்கே விட்டு கிளம்பும் போது கையில் பணம் கொடுக்க “அய்யோ இதெல்லாம் வேணாம்” என்றாள்.

“அட இதெல்லாம் என் காசு னு நினைச்சியா? எல்லாம் உன்னோடது தான்”

“என்னதா?”

“பின்ன என்னதா? இது எல்லாம் உன் சம்பள பணம். ஆறு வருசமா எல்லாத்தையும் என் கிட்ட கொடுத்தியே நியாபகம் இருக்கா? அத தான் போஸ்ட் ஆபிஸ்ல போட்டு வச்சுருந்தேன். பிடி. பத்திரமா வச்சுக்க அளவா செலவு பண்ணு. எதுனாலும் என்ன கூப்பிடு. வரேன்”

அருள் அங்கிருந்து சென்று விட விந்தியா அந்த பணத்தை கண்கலங்க பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.

*.*.*.*.

கல்லூரி வாழ்க்கை ஆரம்பித்தது. புது ஊர் புது மக்கள் புது மொழி என்று எதோ புது உலகத்திற்கு வந்து விட்டது போல் இருந்தது தியாவிற்கு. ஆனால் அதை எல்லாம் ரசித்தாள். மலையாளம் கற்றுக்க கொள்ள முயற்சிக்கும் போது தான் ஒருவனை சந்தித்தாள்.

தனேஷ்வர். அவளுக்கு மலையாளம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர். அவளது குண்டு கண்களும் அதை உருட்டி அவள் பேசும் அழகும் தனேஷ்வரை ஈர்த்தது.

அவர்களுக்கு இடையில் பெயரில்லாத ஒரு உறவு உருவாக ஆரம்பித்தது. ஆர்வமாக மலையாளம் கற்றுக் கொள்பவள் வகுப்பு முடிந்ததும் தமிழில் பேச ஆரம்பித்து விடுவாள்.

“எந்தா சாரே.. தமிழ் என் தாய் மொழி சாரே. அத விட முடியுமா?”

“எந்தா சாரே மட்டும் கரெக்ட்டா வருது . மத்த எல்லாம் தப்பு தான்”

“அது அப்படி தான். உங்களுக்கு தான் தமிழ் தெரியுதே. அப்புறம் என்ன?”

“ஆனா நான் மலையாள டீச்சர்”

“விடுங்க சாரே.. இதெல்லாம் ஒரு பிரச்சனையா?” என்று கேட்டு விட்டு சென்று விடுவாள். மலையாளம் கற்றுக் கொண்டாலும் அவளால் தமிழை விட முடியவில்லை.

தனேஷ்வரின் மனதில் காதல் வந்து விட அதை வெளிப்படுத்தும் நாளை எதிர் நோக்கி காத்திருந்தான். அருளுக்கு படிப்பு முடிந்து விட வேலை கிடைத்தது. அதுவும் மும்பையில்.

அவன் கேரளாவிலிருந்து சென்று விடவும் விந்தியாவிற்கு வருத்தமாக இருந்தது. அந்த வருத்ததில் சில நாட்கள் அமைதியாக சுற்றிக் கொண்டிருந்தாள். அப்போது தான் தனேஷ்வர் தன் காதலை வெளி படுத்தினான்.

முதலில் என்ன பதில் சொல்வதென்று அவளுக்கு புரியவில்லை. பிறகு பொறுமையாக யோசித்து பார்த்தவள் “எனக்கு இந்த காதல் எல்லாம் தெரியாது சாரே. எனக்கு இப்ப இருக்க ஒரே உறவு அண்ணய்யா தான். அவரு கிட்ட பேசுங்க. அவர் சொல்லுற பதில் தான் என்னோடதும்” என்று முடித்து விட்டாள்.

தனேஷ்வருக்கு அருளை முதலிலே தெரியும் என்பதால் அவனது அலுவலக முகவரிக்கு கடிதம் எழுதி விட்டான். அதை படித்த அருள் அவசரமாக அங்கிருந்து கிளம்பி கேரளா வந்து சேர்ந்தான்.

முதலில் விந்தியாவை தான் சந்தித்தான். அவளிடம் நன்றாக பேசி பார்க்கவும் தான் புரிந்தது. அவளுக்கு விருப்பம் எதுவும் இல்லை. அருள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் நிலைமையில் இருந்தாள். பிறகு தனேஷ்வரை சந்தித்தான்.

“சார் நேரா விசயத்துக்கு வரேன். விந்தியாக்கு என்ன தவிர யாரும் கிடையாது. என் குடும்பத்துல இருக்கவங்க கூட அவளுக்கு ஆதரவா இருக்க மாட்டாங்க. நீங்க அவள காதலிக்குறேன் னு சொல்லுறீங்க. நல்லா யோசிச்சு சொல்லுங்க”

“எனக்கு எல்லாமே தெரியும் அருள். தியா எதையும் மறைச்சு பொய் சொன்னது இல்ல. உண்மைய சொல்லனும் னா எனக்கும் தியா நிலைமை தான். ஆனா நான் என் சித்தப்பா வீட்டுல இருக்கேன்.

நான் படிச்சு முடிக்கும் போது தான் எங்கம்மா இறந்தாங்க. அதுக்கப்புறம் நானும் தியா நிலைமைல தான் இருக்கேன். அதுனால அவளோட உணர்வ என்னால புரிஞ்சுக்க முடியும்”

“சரிங்க சார். அப்படினா இந்த காதல் வேணாம். நேரா அவள கல்யாணம் பண்ணிக்கோங்க. அவளோட சம்பள பணமும் படிப்பும் தான் இப்போதைக்கு அவளுக்கு இருக்க சொத்து. அத தவிர வேறு எதுவும் இல்ல”

“எனக்கு அதுவும் வேணாம் அருள். அவளோட மனசு போதும். எங்க குடும்பத்துல பேசிட்டு சொல்லுறேன்‌.‌ உன் வீட்டுல வந்து பேசனுமா?”

“வேணாம்‌ சார். கல்யாண தேதிய குறிச்சுட்டு சொன்னா நேரத்துக்கு வந்து நிப்பாங்க. அப்பவும் வெறுங்கையோட தான் வந்து தான் நிப்பாங்கனு நினைக்குறேன்”

“எனக்கு எதுவுமே வேணாம்.‌ இவ்வளவு நான் தியாவ பத்திரமா பாதுகாத்து எனக்கு குடுத்துருக்காங்க. அதுவே போதும்”

அருளுக்கு நிம்மதியாக இருந்தது. அதன் பின் வேலைகள் வேகமாக நடக்க தனேஷ்வரனின் குடும்பத்தில் சம்மதம் கிடைத்தது. அதை சொல்ல அருள்மொழி சொந்த ஊருக்கு வந்து இறங்கினான்.

அவனது அன்னை இறந்த பின் அடிக்கடி வருவதை நிறுத்திக் கொண்டான். விந்தியாவும் சௌந்தர்யாவை பார்க்க மட்டுமே வருவாள். இன்று அவளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்ததை சொல்ல வந்து சேர்ந்தான்.

விஜயலிங்கத்திடம் விசயத்தை சொல்ல “அதெல்லாம் இருக்கட்டும். உனக்கு ஒரு பொண்ண பார்த்து இருக்கேன். கையோட கல்யாணத்த முடிச்சுட்டு ஊருக்கு கிளம்பு ” என்று கட்டளையிட்டு விட்டார்.

முதலில் ஆயிரம் காரணம் சொல்லி தடுத்தவன் சந்தானலட்சுமியை பார்த்ததும் தொபுகடீரென விழுந்து விட்டான். அவளும் படித்தவள் தான். சென்னையில் படித்தவள். மதுரை சொந்த ஊர். அவனோடு வேறு மாநிலம் வரும் அளவு அவளுக்கு உலக அறிவும் இருந்தது.

எல்லாமே பொருந்தி வர, விட்டால் அடுத்த நாளே தாலி கட்டி அழைத்துப் போக அருள் தயாராக தான் இருந்தான். விஜயலிங்கமும் ஜெயபிரதாபனும் தான் அவனை தடுத்து பிடித்து வைத்தனர்.

நேரடியாக திருமணத்திற்கு நாள் குறிக்க விந்தியா உடனே கிளம்பி வந்து விட்டாள். அவளது பாசமிகு அண்ணய்யாவிற்கு கல்யாணம் என்றால் குதிக்க மாட்டாளா?

சந்தோசத்தில் தரையில் கால் பாவாமல் பறந்து கொண்டிருந்தாள். விந்தியாவின் திருமணம் அவளது படிப்பை முடித்ததும் வைத்துக் கொள்ளலாம் என்று தனேஷ்வர் சொல்ல அதுவே அருளுக்கும் சரியாக பட்டது.

அவர்கள் திருமணம் தள்ளி வைக்கப்பட்டு அருள்மொழி சந்தானலட்சுமியின் திருமணம் நடை பெற்றது. அவர்கள் மும்பை சென்று விட விந்தியா மீண்டும் படிக்க சென்று விட்டாள்.

அத்தியாயம் 23

விந்தியா படித்து முடித்ததுமே அவளை தேனிக்கு அனுப்பாமல் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து விட்டான் தனேஷ்வர். மும்பையிலிருந்து ஒரு மாதக்குழந்தையாக இருக்கும் ஆதீரனுடன் அருள்மொழியும் சந்தானலட்சுமியும் வந்து விட்டனர்.

விஜயலிங்கம் எதோ காரணம் சொல்லி திருமணத்திற்கு வர மறுத்து விட்டார். மற்றவர்களை அருள் மொழி கண்டுகொள்ளவில்லை. சௌந்தர்யாவை மட்டும் அவளது தாத்தாவின் அனுமதியோடு திருமணத்திற்கு அழைத்து வந்தான்.

கேரள முறைப்படி விந்தியாவின் திருமணம் கோலாகலமாக நடந்தது. அவளுக்கு திருமணம் முடிந்த பின் அருள்மொழியின் மனதில் இருந்த சுமைகள் எல்லாம் இறங்கி நிம்மதியடைந்தான். விந்தியாவை அவனது வீட்டிற்கு அழைத்து வரும் போதே மனதில் உறுதியெடுத்துக் கொண்டான்.

அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்கும் வரை ஓய கூடாது என்று. இன்று அவளுக்கு படிப்பு இருக்கிறது. படித்த பண்பான கணவன் இருக்கிறான். அவளது வாழ்வு இனி நிம்மதியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அங்கிருந்து கிளம்பி விட்டான்.

மும்பையில் இருந்து அவனது வேலை சிங்கப்பூருக்கு மாறியது. அவனது திறமைக்கு கிடைத்த பரிசை மனதார ஏற்றுக் கொண்டு ஆதீரன் சந்தானலட்சுமியுடன் வயிற்றில் கருவாக இருந்த ஜெயராமையும் அழைத்துக் கொண்டு சிங்கப்பூர் சென்று விட்டான்.

விந்தியா வின் திருமணம் முடிந்து அடுத்த வருடம் மதுரா ஸ்ரீ (ஷ்ராவ்யா) பிறந்தாள். அவளது பிறப்பிற்காக விந்தியா தேனி வந்து விட்டாள். அவளுக்கு பிறந்த வீடு இல்லை தான். ஆனால் சௌந்தர்யா இருக்கிறாளே. அவளுடன் இருக்க வேண்டும் என அவள் வந்து விட தனேஷ்வர் அவளை மறுக்கவில்லை.

மதுரா பிறந்து ஒரு வருடத்தில் சௌந்தர்யாவின் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்தது. நல்ல மதிப்பெண் தான் எடுத்து இருந்தாள். அதனால் விந்தியா அவளை கேரளாவிற்கு அழைத்தாள். அவளே படிக்க வைப்பதாக கூற சௌந்தர்யாவின் தாத்தா மறுத்து விட்டார்.

“பொம்பள பிள்ளைய படிக்க வச்சா அதுக்கு ஏத்த போல மாப்பிள்ளை தேடனும். நகை நட்டு வரதட்சணை னு கொடுக்கனும் . வேணாந்தாயி”

“அதுக்காக என்ன தாத்தா? நான் படிச்சேன். எனக்கு ஒருத்தர் அமையலயா? அது மாதிரி இவளுக்கும் அமையட்டும்”

“நீ நல்ல மனசு படைச்ச புள்ள தாயி. உன் நல்ல மனசுக்கு நீ இன்னும் நூறு வருசம் நல்லா இருக்கனும். ஆனா எல்லாருக்கும் ஒரே விதி அமைஞ்சுடுமா? படிக்க வைக்குற அளவு பணம் காசு இல்ல தாயி. நானும் கடைசி காலத்துல என் பேத்தி கூட இருந்துடுறனே”

விந்தியா எவ்வளவோ பேசி பார்த்தாள். தாத்தா கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை. அருள் மொழி இருந்தாலாவது பேச வைக்கலாம். அவனோ நாட்டை விட்டே வெளியே இருக்கிறான். சௌந்தர்யா தாத்தாவின் வாக்கு தான் வேதவாக்கு என்பது போல் ஒரு வார்த்தை கூட மறுத்து பேசவில்லை.

விந்தியா பேசி ஓய்ந்து மீண்டும் கேரளா சென்று விட்டாள். சௌந்தர்யா விற்கு உடனே திருமணம் செய்து வைக்க முயற்சித்து மாப்பிள்ளைகளை தேட ஆரம்பித்தார் அவளது தாத்தா.

அவளிடம் அழகு இருந்தாலும் வருபவர்களுக்கு பணம் தான் பெரிதாக பட்டது. பணத்தை பெரிதாக எடுக்கவில்லை என்றால் மாப்பிள்ளை என்று வந்து அமர்பவன் அயோக்கியனாக இருந்து வைத்தான்.

வருடங்கள் ஓடியதே தவிர சௌந்தர்யாவின் திருமணம் நடக்கவில்லை. விந்தியாவிற்கும் மதுரா ஸ்ரீக்கு பிறகு குழந்தை தங்கவில்லை. தனேஷ்வர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவனுக்கு விந்தியாவும் மதுராவும் மட்டுமே போதும்.

வருடத்திற்கு ஒரு முறை விந்தியா சௌந்தர்யாவை வந்து பார்ப்பாள். சிங்கப்பூர் சென்ற அருள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வந்து பார்த்து விட்டு உடனே சென்று விடுவான்.

மதுராவிற்கு எட்டு வயதாக இருக்கும் போது அருள் மொழி மட்டும் வந்து நின்றான். சந்தானலட்சுமிக்கு உடல் நிலை சரியில்லை. அதோடு ஆதீரன் ஜெயராமின் படிப்பை கெடுக்க வேண்டாம் என்று அவர்களையும் அழைத்து வரவில்லை.

அவர்களது சொந்த ஊரில் இடம் வாங்கி இரண்டு வீடு கட்ட வேண்டும் என்பது அருள்மொழியின் நீண்ட நாள் கனவு. வெளி நாட்டு வேலைக்கு போட்டிருந்த ஒப்பந்தம் சீக்கிரமே முடிவடைய இருக்கிறது.

சொந்த ஊருக்கே திரும்ப வந்துவிட நினைத்தான். ஊரில் இருக்கும் பேச்சுக்களும் அதற்கு காரணம். ஊரின் எல்லையில் இடத்தை வாங்கியவன் இரண்டு வீடுகள் அடுத்தடுத்து கட்ட ஏற்பாடு செய்தான்.

அதற்கான ஆரம்ப வேலைகளை எல்லாம் முடித்து விட்டு மற்ற பொறுப்பை ஜெயபிரதாபனிடம் கொடுத்தான். அருள் பணம் அனுப்ப ஜெயபிரதாபன் அந்த வீட்டை அவனின் விருப்பப்படியே கட்டி முடித்தார்.

வேலை முடிந்ததும் ஊருக்கு கிளம்பி வர அவர்கள் தயாராக இருக்க அதே நேரம் விந்தியாவை ஒரு துக்க செய்தி எட்டியது. சௌந்தர்யா வின் தாத்தா இறந்து போனார்.

*.*.*.*.*.*.

இவர்கள் வாழ்க்கை ஒரு பக்கம் நிம்மதியாக போய்க் கொண்டிருக்க ஜெயபிரதாபன் பொன்னாம்பாளின் வாழ்க்கை நரகத்தில் போனது. குழந்தை பிறக்கவில்லை என்றதும் ஊருக்குள் பல பேச்சுக்கள் வலம் வர ஆரம்பித்தது.

அவர்களுக்கு பிறகு திருமணம் செய்து கொண்ட அருள் மொழி இரண்டு மகன்களை பெற்று விட்டான். பொன்னாம்பாளும் ஜெயபிரதாபனும் ஒரு குழந்தையை கூட பெற்றெடுக்கவில்லை.

நாளுக்கு நாள் அதிகமான பேச்சுக்கள் இருவரையும் மனதளவில் பாதிக்க ஆரம்பித்தது. பொன்னாம்பாளுக்கு யாராவது குழந்தையை பற்றி பேசி விட கூடாது. அப்படி பேசி விட்டால் அன்று முழுவதும் யார் கண்ணில் பட்டாலும் வருத்தெடுத்து விடுவாள்.

அதை விட நிறைமாத கர்ப்பிணிகளை பார்த்து விட்டால் அன்று முழுவதும் அழுது கொண்டே இருப்பாள். யாராலுமே அவளை சமாதானம் செய்ய முடியவில்லை. பொன்னாம்பாள் இப்படி என்றால் ஜெய பிரதாபன் மது பழக்கத்திற்கு அடிமையானான்.

துக்கத்தை மறக்கவென்று எவனோ ஒருவன் கற்றுக் கொடுத்த பழக்கம். நாளுக்கு நாள் தீவிரமடைய ஆரம்பித்தது. விஜயலிங்கம் தடுக்கப்பார்த்தார். முடியவில்லை.

முழு நேரமும் மதுவின் பிடியில் இருக்க ஆரம்பித்தான். அது தான் பலர் வாழ்க்கையை நாசப்படுத்த காரணமாக அமைந்தது.

சௌந்தர்யா வின் தாத்தா சொந்த ஊரில் எதோ வேலை என்று கிளம்பினார். சௌந்தர்யாவை வீட்டில் தனியாக விட்டு செல்ல பயந்து விஜயலிங்கத்தின் வீட்டில் விட்டு விட்டு சென்றார்.

வேலை செய்பவர்கள் துணை இருப்பார்கள் என்று நம்பி விட்டுச் செல்ல அவர்கள் பக்கத்து ஊரில் எதோ கச்சேரி என்று கிளம்பி விட்டனர். சௌந்தர்யாவை அழைத்துப் போகவில்லை. காரணம் அவளது தாத்தா அவளை எங்கும் செல்ல அனுமதித்தது இல்லை.

அன்று நடக்கப்போகும் விபரீதம் தெரிந்தோ என்னவோ மழை கொட்டி தீர்த்துக் கொண்டிருந்தது. அந்த மழை கூட ஜெயபிரதாபனின் மது போதையை குறைக்க முடியவில்லை. மதுவின் பிடியில் வீட்டுக்கு வந்தவன் நேராக அறைக்குள் நுழைந்தான்.

அறையை கூட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தவள் மேல் தடுமாறி விழ அவனை பிடித்து தள்ளி விட்டு பின்னால் சென்றாள் சௌந்தர்யா. அவளை பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ வேகமாக கதவை அடைத்து தாளிட்டான்.

சௌந்தர்யா பதறிப்போய் கதவின் அருகில் வர ஜெயபிரதாபனிடம் பாவமாக சிக்கிக் கொண்டாள். உள்ளே சென்றிருந்த மதுவும் சற்று முன் கேட்க பட்டிருந்த “பிள்ள பெக்காத நீயெல்லாம் ஆம்பளையா?” என்ற கேள்வியும் அவனை முழு மிருகமாக மாற்றியது.

சௌந்தர்யா போராடி மயங்கி விழ ஜெயபிரதாபனின் வெறி அவளை அநியாயமாக வேட்டையாடியது. அவள் கத்தலும் கதறலும் யாருக்குமே கேட்கவில்லை. பொன்னாம்பாள் வீட்டில் இல்லை. வடபுதுப்பட்டிக்கு காலையில் தான் கிளம்பி சென்றிருந்தாள்.

காலமும் விதியும் சேர்ந்தே சதி செய்ய வானம் மட்டும் அவளுக்கு நடந்த கோரத்தை நினைத்து கதறி அழுதது. தான் இடிந்து ஜெயபிரதாபனின் தலையில் விழ முடியவில்லையே என்று.

மயக்கம் கலைந்து எழுந்தவள் தான் இருந்த நிலையை கண்டு அதிர்ந்து அங்கிருந்து வேகமாக வெளியே வந்தாள். புலராத காலையிலேயே வீட்டுக்கு வந்தவள் தனது கதியை நினைத்து கதறி அழுதாள்.

இதற்கு மேல் வாழ்ந்து என்ன செய்வது என்ற முடிவுக்கு வந்தவளுக்கு தன் தாத்தா அம்மாவோடு விந்தியாவின் நினைவும் வந்தது. அவர்களுக்கெல்லாம் நடந்ததை சொல்ல வேண்டும் என்று தோன்ற வேகமாக எல்லாவற்றையும் எழுதினாள்.

தான் செத்த பிறகு தன் மீது தவறான பழி போட ஊர் மக்கள் தயங்க மாட்டார்கள். ஏனென்றால் ஜெயபிரதாபன் பணக்கார வீட்டுப் பிள்ளை. அதனாலே எல்லாவற்றையும் தெளிவாக எழுதி வைத்தாள்.

பிறகு அவளது அன்னையின் படத்தை எடுத்து மனதில் அவரோடு பேசினாள். “உங்க கிட்ட வந்துடுறேன் மா. இங்க இனியும் இருந்தா தாத்தாக்கு நான் பாரம் தான்” என்றவள் அன்னையின் புடவையை எடுத்துக் கொண்டாள்.

நாற்காலியில் நின்று வீட்டின் மேல் இருந்த கட்டையில் புடவையை மாட்டி முடிச்சு போட்டாள். அதை கழுத்தில் மாட்டும் நேரம் கதவை திறந்து கொண்டு அவளது தாத்தா வந்து நின்றார்.

சௌந்தர்யா நின்றிருந்த கோலமே தாத்தாவின் பாதி உயிரை பறித்துக் கொண்டது. அவரை பார்த்ததும் சௌந்தர்யா வேகமாக இறங்கி வர கதவை அடைத்து விட்டு தாத்தாவும் அருகில் வந்தார். அவரிடம் அழுது கொண்டே விசயத்தை சொல்லி விட்டாள்.

அதை கேட்டவருக்கு வார்த்தை எதுவும் வரவில்லை. மூச்சு விடுவது சிரமமாக இருந்தது. தரையில் அமர்ந்து காலை கட்டிக் கொண்டு அழுது கொண்டிருந்த சௌந்தர்யாவை பார்த்தார். மெதுவாக அவளது தலையை தடவி கொடுத்தவர் வீட்டுக்கு வெளியே வந்தார்.

இதயம் எதோ இறுக்கி பிடிப்பது போல் இருந்தது. நெஞ்சை தடவிக் கொண்டே திண்ணையில் படுத்தவர் கண்ணை மூடி உயிரை துறந்து விட்டார்.

தெருவில் போய்க் கொண்டிருந்த ஒருவர் தாத்தாவிடம் பேச வந்து தொட அவர் தலை சரிந்து விழுந்தது. அவர் பயந்து அக்கம் இருப்பவர்களை அழைக்க எல்லோரும் கூடி விட்டனர்.

அழுது கொண்டிருந்த சௌந்தர்யா சத்தம் கேட்டு வெளியே வந்து பார்க்க உயிரற்ற தாத்தாவின் சடலம் தான் இருந்தது. மொத்த வாழ்க்கையையும் ஒரே நாளில் பறி கொடுத்து விட்டு அழத்தான் முடிந்தது அவளால்.

விந்தியாவிற்கு செய்தி அனுப்பினர். அடித்து பிடித்து அவளும் தனேஷ்வரும் வந்து விட்டனர். தனேஷ்வரே இறுதி காரியத்தை செய்தான். மற்றவர்கள் மறுத்த போதும் “அந்த பிள்ள எனக்கு தங்கச்சி போல தான். என் பொண்டாட்டி வேற சௌந்தர்யா வேற னு அவரு என்னைக்குமே நினைச்சது இல்ல. நான் அவரு பேரனா செய்யுறேன். என்ன செய்யனும் னு மட்டும் சொல்லுங்க” என்று திட்டவட்டமாக கூறி விட்டான்.

சௌந்தர்யா வின் அழுகையை விந்தியாவால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அவளும் சில வருடங்களுக்கு முன்பு இதே நிலையில் தானே இருந்தாள்.

இன்று தன் தோழியின் நிலைமையும் இப்படியா ஆக வேண்டும் என்று கண்ணீர் வடித்தாள். சௌந்தர்யா அவளை விட மோசமாக தன்னையே இழந்தது இன்னும் அவளுக்கு தெரியவில்லை.

இறுதி காரியம் முடிந்ததும் தனேஷ்வருக்கு வேலை வர மகளையும் மனைவியையும் விட்டு விட்டு கிளம்பிச் சென்றான். சௌந்தர்யாவை தேற்ற விந்தியா ரொம்பவும் போராட வேண்டி இருந்தது.

இரண்டு மாதம் கடந்தும் அவள் சாப்பிட மறுத்துக் கொண்டே இருந்தாள். விந்தியா திட்டி மதுரா பேசிய பின் தான் சாப்பிடுவாள். அப்போதும் கொறித்து விட்டு சென்று விடுவாள்.

இதில் ஜெய பிரதாபன் தான் செய்த தவறை மறந்து போனான். சௌந்தர்யா வேறு அந்த வீட்டு பக்கம் காலெடுத்தை வைக்கவில்லை. ஜெயபிரதாபன் வழக்கம் போல் குடித்துக் கொண்டே இருந்தான்.

நடந்ததை நினைத்து வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் சௌந்தர்யா போராடிக் கொண்டிருக்க ஒரு நாள் மயங்கி விழுந்தாள். அவளது முகம் உடல் நிலை எல்லாம் விந்தியாவிற்கு சந்தேகத்தை கிளப்ப மருத்துவரை அழைத்து சோதித்து பார்த்தாள்.

இரண்டு மாதக்கரு அவள் வயிற்றில் இருப்பது உறுதியாக விந்தியாவிற்கு உலகமே ஆட்டம் கண்டது. என்ன தான் சந்தேகமாக இருந்தாலும் தன் தோழியின் மேல் முழு நம்பிக்கை வைத்திருந்தாள். இப்போதும் எங்கோ எதோ தவறு நடந்திருக்கிறது என்று தான் தோன்றியது.

மருத்துவரிடம் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள அவர் கிளம்பி சென்று விட்டார். சௌந்தர்யா மயக்கம் தெளிந்து எழும் வரை விந்தியா அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.

அவள் எழுந்ததும் பாலை கொடுத்து குடிக்க வைத்தவள் “யாரு?” என்று கேட்டாள்.

சௌந்தர்யா அவளை புரியாமல் பார்க்க “உன் வயித்துல இருக்க பிள்ளைக்கு அப்பா யாரு?” என்று அழுத்திக் கேட்டாள்.

சௌந்தர்யா அதிர்ந்து போய் பார்த்தாள். “பிள்ளையா?” என்றவள் வயிற்றை பிடித்துக் கொண்டாள். இதை அவள் எதிர் பார்க்கவில்லை. அதிர்ச்சியில் பேச மறந்து அமர்ந்து இருக்க “சொல்லு சௌந்தர்யா. யாரு?” என்று விந்தியா மீண்டும் கேட்டாள்.

நடந்தவை எல்லாம் கண் முன்னால் வர அழுது கொண்டே எல்லாவற்றையும் கூறி விட்டாள். விந்தியா இடிந்து போனாள். இப்படி ஒரு கொடூரம் அவளது தோழிக்கு நடந்திருக்கிறது. அதை இத்தனை நாளாக அவள் உணரவே இல்லையே.

விந்தியாவிற்கும் முதலில் அழுகை தான் வந்தது. முடிந்த மட்டும் துக்கத்தை நினைத்து அழுதவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.

“இந்த பிள்ள உனக்கு வேணுமா வேணாமா?”

“தியா…”

“முடிவு பண்ணு. இந்த பிள்ள உனக்கு வேணுமா வேணாமா?”

சௌந்தர்யா கண்ணீரோடு “வேணும். எனக்கு னு இந்த உயிர கடவுள் குடுத்துருக்கார் னா… எனக்கு வேணும்” என்றாள்.

“அப்போ சரி. மதுவோட அப்பா அடுத்த வாரம் வருவார். நாம கிளம்பி போயிடலாம். அங்க என்ன சொல்லனும் னு அப்புறம் யோசிக்கலாம். இனி இந்த ஊரு உனக்கு வேணாம்”

விந்தியா முடிவெடுத்து விட்டாள். ஆனால் தனேஷ்வர் வரும் வரை தாமதித்தது தான் தவறாகி போனது. விசயம் சுலபமாக விஜயலிங்கத்தின் காதுக்கு எட்டியது.

மருத்துவர் எதை நினைத்து சொன்னாரோ ஆனால் அவரால் பல உயிர்கள் பலியாகிப் போனது. விஜயலிங்கத்துடன் ஜெயபிரதாபனும் இருந்தான். குழந்தை பற்றிய விசயம் என்றதும் அவனுக்கு தான் செய்த தவறுகள் எல்லாம் நியாபகம் வந்து விட்டது.

விஜயலிங்கம் திருமணமாகாமல் குழந்தை சுமப்பவளை ஊருக்கு நடுவில் வைத்து தண்டனை கொடுக்க நினைத்தார். அவர் நினைத்ததை மகனிடம் சொல்ல அவன் தான் செய்த தவறை கூறி விட்டான்.

“அப்பா‌.. அந்த குழந்தை என்னோடது பா”

“என்னடா உளறுர” என்று விஜயலிங்கம் அதிர ஜெயபிரதாபன் தவறை ஒப்புக் கொண்டான்.

“எனக்கு பிள்ள பிறக்கல. ஆம்பளையே இல்ல னு பேசுனாங்க பா. அதுக்கு இது தான் ஆதாரம். வேணும் னா அந்த பிள்ளைய வாங்கிக்கிட்டு அவள ஊர விட்டு அடிச்சு துரத்திடலாம்”

“உன்ன அறஞ்சேன் னு வை… புத்தி கித்தி கெட்டு போச்சா? முதல்ல நீ செஞ்சதே பெரிய தப்பு. இதுல உன் புள்ள ஒரு வேலைக்காரி வயித்துல இருக்கு. அசிங்கமா இல்ல. இதுல அந்த பிள்ளைய வச்சு இவன் ஆம்பள னு நிருபிக்க போறானாம். அப்ப உன் பொண்டாட்டிக்கு என்ன பதில் சொல்லுவ?

இப்படி நீ நடந்துருக்க விசயம் உன் பொண்டாட்டியோட பொறந்த வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் னு யோசிச்சியா? அதுக்கப்புறம் இந்த ஊருக்குள்ள மானம் மரியாதையோட வாழ முடியுமா? இங்க பாரு. இத இப்படியே மறந்துடு. என்ன செய்யனும் னு எனக்கு தெரியும். நீ உன் சோலிய பாரு”

விஜயலிங்கம் மகனை துரத்தி விட்டு அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தார். யோசனை ஒரே இடத்தில் வந்து தான் முடிந்தது. ஒன்று அந்த குழந்தையை அழிக்க வேண்டும். இல்லையென்றால் அவளையே அழிக்க வேண்டும்.

ஊரை விட்டு கிளம்ப முடிவு செய்ததும் விந்தியா தேவையானவைகளை எல்லாம் அப்போதே செய்ய ஆரம்பித்தாள். அவள் எல்லா வேலைகளையும் பார்க்க சௌந்தர்யா விதியை நொந்து கொண்டு அமர்ந்து இருந்தாள்.

மதுரா ஸ்ரீ மட்டுமே அவளது ஒரே ஆறுதல். அவள் பேசும் போது கவலை எல்லாம் மறந்து போவாள். இரண்டு மாதமாக சௌந்தர்யா விற்காக பள்ளிக்கு விடுப்பெடுத்து விட்டு இங்கு தங்கி இருக்கிறாள். அவளுடன் இருக்கும் போது மட்டுமே சௌந்தர்யா வாழ்ந்தாள். மற்ற நேரங்களில் நடைப்பிணம் தான்.

அதனால் விந்தியா மகளை அவள் கையில் ஒப்படைத்து விட்டாள். நாளை மறுநாள் தனேஷ்வர் வர இருக்க இன்று மதுராவிற்கு பிறந்த நாள். அவளுக்கு புது உடை எடுத்து அணிவித்து இருந்தனர்.

சௌந்தர்யா விடம் விந்தியா ஒரு சேலை கொடுத்தாள். கேரள மாநிலத்தின் அடையாளம். பால் வண்ண சேலை. தனக்கும் சௌந்தர்யா விற்கும் ஒன்றாக எடுத்து இருந்தாள். இடையில் வந்த தனேஷ்வர் அதை கொடுத்து விட்டு சென்று இருந்தான்.

அதை கொடுத்து கட்ட வைத்தாள். இருவரும் ஒரே மாதிரியாக சேலையை கட்டிக் கொண்டு கோவிலுக்கு சென்றனர். இனி வாழ்வில் நிம்மதி வர வேண்டும்  என்று வேண்டிக் கொள்ள… அன்று பிறந்தநாள் கொண்டாடும் மதுரா நன்றாக வாழ வேண்டும் என வேண்டிக் கொண்டனர்.

அவர்களது ஒரு பிரார்த்தனை கூட கடவுளை சென்று சேரவில்லை என்பதை அவர்கள் அறியவில்லை. அன்றைய நாள் சௌந்தர்யா விற்கு சற்று நிம்மதியாக சென்றது. அவளது அறையில் அவள் உறங்கி விட மதுராவுடன் விந்தியா வேறு அறைக்குள் உறங்கினாள்.

தீடீரென எதோ ஒன்று முகத்தில் அழுத்துவது போல் இருந்தது சௌந்தர்யா விற்கு. அவள் கண் விழித்து என்னவென்று பார்க்கும் முன்பே மயங்கி விட்டாள். அவளை சத்தமில்லாமல் இருவர் தூக்கிக் கொண்டு ஊரின் எல்லையில் இருக்கும் அந்த புது வீட்டிற்கு கொண்டு சென்றனர்.

அருள் மொழி வந்த பிறகு தான் அங்கு பால் காய்ச்ச வேண்டும் என்பதால் யாரும் அந்த வீட்டை பயன் படுத்தவில்லை. அந்த வீட்டிற்குள் கொண்டு சென்று தண்ணீர் தெளித்து எழுப்ப கண்விழித்து பார்த்தாள்.

ஜெயபிரதாபனும் பொன்னாம்பாளும் அவளை கொலை வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். சௌந்தர்யா பயந்து எழுந்து அமர பொன்னாம்பாள் அவளது முடியை கொத்தாக பிடித்து கன்னத்தில் அறைய ஆரம்பித்தாள்.

“ஏன் டி **** …. நான் இல்லாதப்போ என் புருஷன வளைச்சு போட்டு பிள்ளை பெத்துக்க போறியா?… உண்மைய சொல்லுடி… இது எவனுக்கு வந்த பிள்ள?? ” என்று கேட்டவள் காதில் கேட்க முடியாத வார்த்தைகளை எல்லாம் கொட்ட ஆரம்பித்தாள்.

சௌந்தர்யா வலி தாங்காமல் அழுதாள். எவ்வளவு போராடியும் பொன்னாம்பாளிடமிருந்து விடுபட முடியவில்லை.

“மரியாதையா இந்த பிள்ளைய களைச்சுட்டு இங்க இருந்து போயிடு. இல்ல உயிர் மிஞ்சாது” என்று ஜெயபிரதாபன் மிரட்ட சௌந்தர்யா பயந்து போனாள்.

அவளது உயிரை விட குழந்தையின் உயிர் பெரிதாக பட அங்கிருந்தவர்களை தள்ளி விட்டு வெளியே ஓடினாள். அவளை பொன்னாம்பாளுடன் மேலும் இருவர் துரத்தி வந்து பிடித்தனர். சௌந்தர்யா விடச் சொல்லி போராடிப் பார்த்தாள்.

மூவர் பலத்திற்கு அவளால் ஈடு கொடுக்க முடியவில்லை. அவளை மீண்டும் அந்த வீட்டுக்குள் தூக்கி வந்தனர். பொன்னாம்பாளுக்கு வெறியே வந்தது.

அவளால் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அவளது கணவனால் முடியும். இதை வைத்து அவளை வீட்டை விட்டு சுலபமாக துரத்தி விடலாம். அது நடக்க கூடாது. அதை விட சௌந்தர்யா வின் அழகு தான் தன் கணவனை ஈர்த்து இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள்.

அந்த வீட்டில் இருந்த கண்ணாடியை உடைத்து சௌந்தர்யா வின் முகத்தை கிழிக்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு கீறலுக்கும் அவள் அலறும் போது பொன்னாம்பாளின் வெறி அதிகமானது.

சௌந்தர்யா வின் முகத்தை உயிருடனே எவ்வளவு சிதைக்க முடியுமோ சிதைத்தாள். வலி பொறுக்க முடியாமல் சௌந்தர்யா மயங்கினாள். இரத்தம் வேறு ஆறாக ஓடியது. பொன்னாம்பாள் முகத்தை சிதைத்து விட்டு அவளை வெறித்து பார்த்துக் கொண்டிருக்க ஜெயபிரதாபன் கத்தி கொண்டு அவளது வயிற்றில் குத்தி விட்டான்.

சௌந்தர்யா பிழைத்தாலும் குழந்தை பிழைத்து விட கூடாது. அதனால் அவனது குழந்தையை அவனே கொன்றான். இரத்தம் நிறைய போக சௌந்தர்யாவின் உயிர் மெல்ல உடலை விட்டு பிரிந்தது.

சௌந்தர்யா இறந்து போனதும் அந்த வீட்டிற்கு பின்னாலே புதைத்து விட்டனர். அவளது ஆன்மா ஆயுள் முடியாமல் மேலோகம் போகவில்லை. அதே வீட்டில் தங்கி விட்டது.

அத்தியாயம் 24

ஷ்ராவ்யா வாயை மூடிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள். சௌந்தர்யாவிற்கு நடந்த கொடுமையை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதே நேரம் ஜெயபிரதாபனையும் பொன்னாம்பாளையும் கொன்று போடும் அளவு வெறி வந்தது. இப்போதே கீழிறங்கி சென்று அவர்கள் கழுத்தை அறுக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தாள்.

பால்கனியில் நின்று நிலவை வெறித்துக் கொண்டிருந்த சௌந்தர்யா “கழுத்த அறுத்துட்டா பத்து நிமிஷம் வலிக்கும். அப்புறம் செத்துடுவாங்க. அவ்வளவு சீக்கிரம் அவங்க சாக கூடாது. அன்னைக்கு என்ன கொன்னது நாலு பேர். அதுல ரெண்டு பேர் செத்துட்டாங்க. ஆனா மத்தவங்கள சுலபமா சாக விட மாட்டேன்.” என்றார்.

ஷ்ராவ்யா அவரை திரும்பி பார்க்க மீண்டும் உள்ளே வந்து நின்றார். “நான் எந்த தப்பும் பண்ணாம சித்திரவதை அனுபவிச்சு செத்தேன். செத்தும் கூட எனக்கு நிம்மதி கிடைக்கல. அது எல்லாத்துக்கும் காரணமான அவங்களும் இதே வலிய அனுபவிக்கனும்” என்று கூற ஷ்ராவ்யா கண்ணை துடைத்துக் கொண்டாள்.

“நிச்சயமா. நீங்க அனுபவிச்ச வலிய அவங்களும் அனுபவிக்கனும். அதுக்கு என்ன செய்யனுமோ நான் செய்வேன்”

“சின்ன உதவி தான். உன் ஆதீரன இங்க இருந்து கூட்டிட்டு போயிடு. அவன் இருந்தா அவங்கள நிச்சயமா காப்பாத்திடுவான். அத விட முக்கியம் தியா கண்ணுல அவன் படாம இருக்கது தான் நல்லது. ரெண்டு நாள் கழிச்சு இவங்க செத்துடுவாங்க. அப்புறம் திரும்ப வந்தா போதும்”

ஷ்ராவ்யாவிற்கு புரிந்தது. ஆனால் ஆதீரன் சம்மதிப்பானா என்று தான் தெரியவில்லை. அதை வைத்து தான் முடிவுக்கு வர வேண்டும்.

“இதுக்கு ஆதீ ஓகே சொல்லனுமே.”

“சந்தானலட்சுமி கிட்ட சொல்லு. உன்னோட குழு எல்லாம் ஊர் சுத்தி பார்க்க போறீங்க இல்லையா. அதுக்கு உன் ஆதீரனையும் கூட்டிட்டு போ”

“ம்ம்.. இது நல்ல ஐடியா. நான் பேசி பார்க்குறேன்”

“நன்றி” என்று கூறி விட்டு சௌந்தர்யா செல்ல பார்க்க “அப்போ அம்மா அப்பா எப்படி …?” என்று கேட்டு நிறுத்தினாள்.

“எனக்கு தெரியாது. நான் செத்து போனதும் அந்த வீட்டுக்குள்ள அடைஞ்சுட்டேன். தியா செத்தத நான்‌ பார்க்கல. பல வருசம் கழிச்சு கேசவன் கதவ திறக்கும் போது தான் நான் தியாவ பார்த்தேன். இப்பவும் தியா ஏன் செத்தா னு என் கிட்ட சொல்லல. நீ அவ கிட்டயே கேளு.”

“ம்ம்..” என்று கூறியதும் சௌந்தர்யா மறைந்து போனார்.

ஷ்ராவ்யா காலை கட்டிக் கொண்டு அமர்ந்தாள். சௌந்தர்யா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் காதில் மாறி மாறி ஒலித்துக் கொண்டே இருந்தது. திரும்பி மணியை பார்த்தாள்.

சௌந்தர்யா அறைக்குள் வந்ததும் நின்று போன கடிகாரம் இப்போது தான் ஓட ஆரம்பித்து இருந்தது. அதை பார்த்து பெரு மூச்சு விட்டவள் மெத்தையில் படுத்துக் கொண்டாள். தூக்கம் வரவில்லை‌. கண்ணீர் தான் வந்தது.

சௌந்தர்யாவையும் அவரது குழந்தையையும் அழித்த பாவிகள் கீழே நிம்மதியாக தூங்குவதை நினைத்தாலே அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது. தூங்க முடியாமல் இங்கும் அங்கும் நடந்தாள்.

விடியும் நேரம் தூங்கியவள் சீக்கிரமே எழுந்து விட்டாள். முதல் வேலையாக நண்பர்களை அழைத்து எதையோ கூறினாள். பிறகு பொறுமையாக குளித்து விட்டு பால்கனியில் வந்து நின்றாள்.

போனை கையில் எடுத்தவள் இந்திரஜித்தை அழைத்தாள். அவன் அழைப்பை ஏற்கவில்லை. அவனுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி விட்டு தன் குடும்பத்தினரிடம் பேசினாள். பேசி முடித்து விட்டு கீழே பார்க்க அவளது குழுவினர் வந்து விட்டனர்.

மேலிருந்தபடியே கையாட்டியவள் மெதுவாகவே கீழிறங்கி வந்தாள். அவளுக்கு காலை உணவை கொண்டு வந்திருந்தனர். இந்த வீட்டில் தங்கும் போதே சாப்பிட மறுத்து விட்டாள். நேற்று சௌந்தர்யா சொன்னதை கேட்ட பின்பு இந்த வீட்டில் தண்ணீர் குடிக்க கூட அவளுக்கு விருப்பம் இல்லை.

சாப்பிட்டு முடித்ததும் மேகலா பேச ஆரம்பித்தாள். “இங்க இருந்து கிளம்பி மதுரை அதிசயம் போறோம். அதோட ரெண்டு நாள் முழுசா மதுரைய சுத்திட்டு அப்புறம் தான் இந்த ஊருக்கு வரோம். ஓகே வா?” என்று கேட்க “ரெண்டு நாளா? என்னால முடியாது . நீங்க வேணா போயிட்டு வாங்க” என்றாள் ஷ்ராவ்யா.

“நாங்க மட்டுமா? என்ன விளையாடுறியா? நீ வரலனா நாங்களும் போக மாட்டோம் மரியாதையா கிளம்பு”

“நான் தான் முடியாது னு சொல்லுறேன்ல. நீங்க போங்க” என்றவள் அங்கிருந்து சென்று விட ஆதீரன் வந்தான். அவனை அழைத்து பஞ்சாயத்து வைத்து விட்டனர். ஆதீரன் தான் பேசி பார்ப்பதாக கூறி ஷாயாவிடம் வந்தான்.

“ஏன் அவங்க கூட போக மாட்டேன் னு சொல்லிட்ட?”

“ஓ.. உங்க கிட்ட கம்ப்ளையிண்ட் பண்ணிட்டாங்களா?”

“ஆமா. ஏன் னு சொல்லு?”

“எப்படி சாரே? உங்கள இங்க தனியா விட்டுட்டு நான் கிளம்புறதா? உங்கம்மா என்ன லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிடுவாங்க. என்னால முடியாது பா”

“அம்மா கிட்ட நான் பேசிக்குறேன்”

ஷ்ராவ்யா இரண்டு நிமிடம் யோசித்து விட்டு “அப்ப இப்பவே வந்து கேளுங்க வாங்க” என்று சந்தானலட்சுமியிடம் அழைத்துச் சென்றாள்.

சந்தானலட்சுமியின் வீட்டுக்கு சென்றவள் ஆதீரனயே சொல்ல சொன்னாள். அவன் சொல்லும் போதே ‘சம்மதிக்க வேண்டாம்’ என்று தலையை இடவலமாக ஆட்டினாள். அவளது குறிப்பை சந்தானலட்சுமி உடனே புரிந்து கொண்டார்.

“உங்களுக்கு ஓகே னா உங்க மகனாச்சு நீங்களாச்சு னு நானும் நிம்மதியா ஊர் சுத்த போவேன்” என்று ஷாயா தோளை குலுக்க “வேணாம். உன் இஷ்டத்துக்கு வீட்ட திறந்து ஆதி உயிரோட விளையாடி வச்சுருக்க. அவன முழுசா காப்பாத்தாம எங்கயும் நீ போக கூடாது” என்று கட்டளையாக கூறினார்.

“ம்மா.. அவங்க ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் பாவம் மா. இவங்க போகாம அவங்க யாரும் போக மாட்டாங்க”

“அதுக்கு ? உன் உயிரோட விளையாட சொல்லுறியா?”

“ரெண்டு நாள் தான?”

“ரெண்டு நிமிஷம் கூட அந்த பொண்ணு போக கூடாதுனு சொல்லுறேன். ரெண்டு நாள சொல்லுற?”

“ம்மா… “

“முடியாது ஆதி. நீயும் பார்த்தல. என்ன நடக்குது னு? பத்து மனுசங்க வந்தா எதிர்த்து போராடிட்டு வா னு நானே அனுப்புவேன். இது மனுசங்க இல்ல. சக்தி வாய்ந்த ஆன்மா. அது கிட்ட போராடு னு என் மகன தனியா விட என்னால முடியாது”

ஆதீரன் என்ன பேசுவதென்று புரியாமல் நெற்றியை தேய்த்துக் கொண்டான். சந்தானலட்சுமி சொல்வதில் இருக்கும் நியாயம் அவனுக்கு புரிய தான் செய்தது. ஆனால் அவர்களது சுயநலத்திற்காக மற்றவர்களது சந்தோசத்தை கெடுக்க வேண்டுமா?

ஷ்ராவ்யா முதலிலேயே சொல்லி இருக்கிறாள். இது போன்ற ஓய்வு அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று. அது தன்னால் கெட்டு போவது அவனுக்கு பிடிக்கவில்லை.

மீண்டும் அன்னையிடம் திரும்பியவன் “நான் ரெண்டு நாள் பத்திரமா இருப்பேன் மா” என்க “போதும் சாரே. ரெண்டு நாள் சந்தோசத்துக்காக ஒரு உயிருல விளையாட நானும் தயாரா இல்ல” என்றாள் ஷாயா.

ஆதீரன் நொந்து போக “வேணும் னா நீயும் இவங்களோட கிளம்பி போ. இந்த பொண்ணு உன் பக்கத்துல இருக்க வரை நீ எங்க இருந்தாலும் எனக்கு கவலை இல்ல” என்றார் சந்தானலட்சுமி.

“நானா? அந்த கணக்கு செத்து போன கேஸ் போயிட்டு இருக்குமா”

“போனா என்ன? உனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? உன் கிட்ட வேலை பார்த்தாரா? இல்ல உன் மில்லுல குதிச்சு செத்தாரா? அந்த குடும்பத்துக்கு தேவையானத செஞ்சியா.. அது நம்ம கடமை. அதுக்காக நீ அந்த கேஸ்ல நுழையனும் னு அவசியம் இல்ல.”

சந்தானலட்சுமி கூறுவதை ஷ்ராவ்யாவும் ஆதரித்தாள்.

“இது சூஸைட் கேஸ். இதுல சம்பந்தமில்லாம இன்வால்வ் ஆகாதீங்க சாரே. அது உங்களுக்கே பின்னாடி பிரச்சனையா வரும். அவர பத்தி உங்களுக்கு எதுவும் தெரியாது. போலிஸ் தான் ஃபுட்டேஜ் பார்த்துட்டாங்களே. அதுக்கும் மேல பேசனும் னா உங்க பெரியப்பா பேசட்டும்”

ஆதீரனுக்கு தன் பெரியப்பாவை தனியாக பிரச்சனையில் விட விருப்பம் இல்லை. அவனை பெற்ற பிள்ளையாக தானே பார்த்துக் கொண்டனர். இருந்தாலும் ஷாயாவின் குழுவினரின் மனதை உடைப்பது கூடாது என கிளம்பி விட்டான்.

இரண்டு நாட்கள் தானே. அதில் என்ன பெரிதாக நடந்து விடப் போகிறது. நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவும் இன்னும் நாட்கள் இருந்தது.

அதனால் உடனே மதுரை கிளம்பி விட்டனர்.  ஷாயா வெற்றிகரமாக ஆதீரனை தூரமாக அழைத்துச் சென்றாள்.

பகல் பனிரெண்டு மணி… தோப்பில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் சாப்பிட கிளம்பினர். எப்போதும் அருணாச்சலத்திடம் இந்த வேலையை கொடுத்து விட்டு வேறு வேலை பார்க்க சென்று விடுவார் ஜெயபிரதாபன்.

அருணாச்சலம் இல்லாததால் தோப்பில் இறக்கப்படும் தேங்காய்களை அவரே கவனித்துக் கொண்டிருந்தார். வேலை பாதி முடிந்து இருக்க எல்லோரும் அங்கிருந்து சென்று விட்டனர். குவிந்து கிடந்த தேங்காய்களை எண்ணி எழுதிக் கொண்டிருந்தார்.

திடீரென காற்று பலமாக வீச கையில் இருந்த நோட்டு கீழே விழுந்தது. கண்ணாடியை கழட்டி விட்டு குனிந்து எடுத்தார். நோட்டில் இருந்த தூசியை தட்டி விட்டு நிமிர இரத்தம் வடிந்த கோலத்தில் சௌந்தர்யா காற்றில் மிதந்து கொண்டு முன்னால் நின்றிருந்தார்.

கையிலிருந்த நோட்டு கீழே விழுந்து விட பயந்து போய் பார்த்தார். சௌந்தர்யா அவரது கழுத்தை பிடிக்க வர பின்னால் சென்று நாற்காலியில் மோதி கீழே விழுந்தார்.

“என்ன கொன்னுட்டு சந்தோசமா வாழ்ந்த போல?” என்று கேட்டுக் கொண்டே நெருங்கி வந்து கழுத்தை பிடிக்க “என்ன விடு… என்ன விடு ” என்று துடித்தார்.

“இப்படி தான நானும் கேட்டேன். குடிச்சுட்டு என் வாழ்க்கைய அழிச்சப்போ எவ்வளவு துடிச்சேன்… நீ என்ன விட்டியா?” என்று கேட்டவர் அவரை தூக்கி எறிய மரத்தில் மோதி கீழே விழுந்தார்.

சௌந்தர்யா, “சொல்லுடா நாயே… என்ன நீ விட்டியா? நான் மட்டும் எதுக்கு உன்ன விடனும்?” என்று அந்த தோப்பு முழுவதும் குரல் எதிரொலிக்கும் அளவு கேட்டார்.

ஜெய பிரதாபன் தடுமாறி எழுந்து நிற்க சௌந்தர்யா மீண்டும் தூக்கி மரத்தின் மேல் எறிந்தார். இம்முறை கை மரத்தில் பலமாக மோதியது. அவரது அலறல்கள் சௌந்தர்யா வின் கோபத்திற்கு தீனியாக மாற மேலும் அலற வைக்க தோன்றியது.

“வேணாம் என்ன விட்டுடு. தெரியாம பண்ணிட்டேன்” என்று ஜெயபிரதாபன் எழ முடியாமல் அமர்ந்த படி கேட்க சௌந்தர்யா ஓங்கி அறைந்தார்.

“தெரியாமலா? எத டா தெரியாம பண்ண? எல்லாத்தையும் தெரிஞ்சு தான் டா பண்ணீங்க” என்றவர் அவரை உதைக்க தரையில் உரசியபடி நான்கு அடி தள்ளிப்போய் விழுந்தார்.

சௌந்தர்யா அவரை முறைத்துக் கொண்டிருக்க தடுமாறி எழுந்து நின்றார். இரு கையையும் கூப்பி “என்ன மன்னிச்சுடு. நான் வேணும் னு பண்ணல” என்று வேண்ட “அப்ப நீ நல்லவன். உன்னால உயிருக்கு மேலான கற்ப இழந்து பிள்ளைய இழந்து உயிரையும் விட்ட நான் கெட்டவளா?” என்று கேட்டு அருகில் வந்து மீண்டும் அறைந்தார்.

ஜெயபிரதாபன் சுழன்று போய் மரத்தில் மோதினார். சௌந்தர்யா அவரை மேலும் முறைக்க நெற்றியில் வழிந்த இரத்தத்தை பிடித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தார். பின்னால் திரும்பி பார்த்துக் கொண்டே ஓட சௌந்தர்யா வரவில்லை.

சிறிது தூரம் ஓடியதும் சௌந்தர்யா சட்டென முன்னால் வந்து நிற்க பயந்து வேறு பக்கம் ஓடினார். அதே போல் சிறிது தூரம் ஓடிய பின்பு மீண்டும் சௌந்தர்யாவை பார்த்து‌ விட்டு பின்னால் ஓட ஆரம்பித்தார்.

எவ்வளவு ஓடினாலும் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்பது போல் தோன்றியது. சாதாரணமாக அந்த தோப்பில்‌ இருக்கும்‌ ஒவ்வொரு மரமும் அவருக்கு பரிச்சையமானது. ஆனால் இப்போது ஒன்றுமே விளங்கவில்லை.

மீண்டும்‌ மீண்டும் சௌந்தர்யா வந்து நிற்க ஓடிக் கொண்டே இருந்தார். நான்கு பக்கமும் சௌந்தர்யா சூழ்ந்து கொண்டது போல் தெரிய எந்த பக்கம் ஓடுவது என்று தெரியாமல் திகைத்து நின்றார்.

“ஓடு டா… ஓடு… என்ன ஓட விட்டல.. உன்‌ உயிர காப்பாத்திக்க ஓடு.. ஓடாம நின்னா சிதைச்சுடுவேன்”

சௌந்தர்யா வின்‌ குரல் நான்கு பக்கமும் எதிரொலித்தது. ஜெயபிரதாபனுக்கு கிலி பிடித்துக் கொண்டது. உயிரை கையில் பிடித்துக் கொண்டு மீண்டும் ஓட ஆரம்பித்தார். இம்முறை சௌந்தர்யா கண்ணிற்கு தென்படவில்லை.

ஆனால் போகும் பாதை எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தது. அந்த தோப்பை விட்டு அவரால் வெளியே வர முடியவில்லை. ஓடி முடிந்து இதற்கு மேல் ஓட முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டார்.

வலித்த கையை பிடித்துக் கொண்டு மெல்ல நடந்தவர் அவரது நாற்காலியும் நோட்டும் கிடந்த இடத்தில் வந்து தொப்பென விழுந்து மயங்கினார். உணவு நேரம் முடிந்து ஓய்வு நேரமும் முடிந்து தான் வேலை செய்பவர்கள் வந்தனர். வந்ததும் நாற்காலியின் கீழ் மயங்கி கிடந்தவரை பார்த்து பதறி தூக்கி தண்ணீரை தெளித்தனர்.

ஆதீரனை அழைத்து பார்த்தால் அழைப்பு செல்லவில்லை. வேறு வழியில்லாமல் அவர்களே வீட்டிற்கு தூக்கி வந்தனர். பொன்னாம்பாள் கணவர் இருந்த நிலைமையை பார்த்து பயந்து போனார். வேலை செய்பவர்கள் அவரை அங்கே விட்டு விட்டு சென்று விட்டனர்.

பொன்னாம்பாள் வேகமாக ஆதீரனை அழைக்கப்போக சந்தானலட்சுமி தடுத்து விட்டார். “ஆதி இப்போ ஊருல இல்ல. முக்கியமான விசயமா மதுரை வரைக்கும் அனுப்பி இருக்கேன். அவன கூப்பிடாதீங்க” என்றார்.

“என் புருஷன் இங்க மயங்கி கிடக்குறார். அத விட முக்கியமான வேலை என்ன அவனுக்கு இருக்கு?” என்று பொன்னாம்பாள் கத்த “உங்க புருஷனுக்கு நீங்க இல்லையா? நீங்க பாருங்க. எனக்கு என் மகன் தான் இருக்கான். அவன இழுத்துட்டு வந்து சாகடிச்சுடாதீங்க” என்று பட்டென கூறினார் சந்தானலட்சுமி.

பொன்னாம்பாள் அவளை அதிர்ச்சியும் கேள்வியுமாக பார்க்க “புரியலயா??? உங்க வீட்டுக்கார் எழுந்ததும் கேளுங்க. ஆதிய கூப்பிடாதீங்க. அவன் வர மாட்டான்.” என்று கூறி விட்டு வேகமாக வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

அவர் சென்ற திசையை பொன்னாம்பாள் வெறித்துக் கொண்டிருக்க ஜெயபிரதாபன் முழித்து விட்டார்.

முழித்ததுமே “வேணாம்.. வேணாம்” என்று அலற “என்ன வேணாம்…? என்னங்க என்ன ஆச்சு…? ஏன் இப்படி பயப்படுறீங்க?” என்று  கேட்டார் பொன்னாம்பாள்.

“அது .. அவ … அந்த பேய்…”

“பேயா?? யாரு உங்கள என்ன பண்ணது?”

“என்ன விட்டு போக சொல்லு.. போக சொல்லு” என்று பயத்தில் அலறினார். பொன்னாம்பாளுக்கு பயம் அதிகரித்தது. சந்தானலட்சுமியின் கட்டளையை மீறி ஆதீரனை அழைத்தார். ஆனால் அழைப்பு செல்லவில்லை.

பிறகு மருத்துவரை அழைத்து வீட்டுக்கு வர சொன்னார். அவர் வரும் நேரம் ஜெயபிரதாபன் மீண்டும் மயங்கி விட்டார். மயக்கத்திற்கான மருந்தை மட்டும் கொடுத்து விட்டு மருத்துவர் சென்று விட்டார்.

தேனியை விட்டு கிளம்பியதுமே ஷ்ராவ்யா தன் போனை அணைத்து போட்டாள்.

“என் போன் வொர்க் ஆகல. மேகி உன்னத கொடேன்”

“எனக்கு ரெண்டு முக்கியமான கால் வரும் டி”

“அப்போ ரமணி நீ குடு”

ரமணி கொடுத்து விட்டு “பேலன்ஸ் இல்ல. யூஸ் பண்ணிக்க” என்றாள்.

“கஞ்சம்” என்று அவள் மேலே தூக்கி எறிந்தாள்.

ஆதீரன் தனது போனை எடுத்து கொடுத்தான்.

“திரும்ப போற வரை யூஸ் பண்ணிக்க” என்று கூறி விட்டான்.

வாங்கியவள் அவனது எண்ணை அணைத்து விட்டு தனது சிம்கார்டை மட்டும் போட்டு வைத்தாள்.

“என்னோடதுல பேலன்ஸ் இல்ல . மதுரை போனதும் ரீச்சார்ஜ் பண்ணிடலாம்” என்றாள்.

இங்கிருந்தவர்கள் அழைத்த போது அதனால் தான் அழைப்பு செல்லவில்லை. மதுரையில் உள்ள அத்தனை இடத்துக்கும் சென்று சுற்றி பார்த்து விட்டனர்.

அதிசயத்தில் ஆரம்பித்து மீனாட்சியம்மன் கோவிலில் வந்து நிறுத்தினர். சாமி கும்பிடும் போது ஷ்ராவ்யாவின் வேண்டுதல் ஆதீரன் உயிருக்கு ஆபத்து வர கூடாது என்றே இருந்தது.

மதுரை சந்தானலட்சுமியின் பிறந்த ஊர். ஊர் சுற்றி முடித்து விட்டு அங்கிருந்த சந்தானலட்சுமியின் பெற்றேரின் வீட்டுக்கு சென்றனர். சந்தானலட்சுமிக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. அதனால் ஆதீரனும் ஜெயராமும் தான் அவர்களது பேரன்கள். பேரனை பார்த்ததும் அவர்கள் ஏகத்திற்கும் சந்தோசமடைந்தனர். 

அவர்களது வீடு பிரம்மாண்டமாக இருந்தது. ஷ்ராவ்யா அந்த வீட்டின் உள்ளமைப்பை பார்த்து வியந்து போனாள்.

ஆதீரனின் பாட்டி தாத்தா ஆதீரனோடு மற்றவர்களையும் ஆர்வமாக வரவேற்றனர். “ஆதி இங்க எப்ப வந்தாலும் ஒரு நேர சாப்பாட்டோட கிளம்பிடுவான். உங்க புண்ணியத்துல இங்க தங்க போறான்” என்று பாட்டி கூற ஷ்ராவ்யா ஆதீரனை கெத்தாக ஒரு பார்வை பார்த்து வைத்தாள்.

ஆதீரன் அவளை பார்த்து சிரித்து விட்டு “அதான் தங்குவேன் னு தெரியுதுல அம்மாச்சி. அதையே ஏன் பேசுறீங்க. உட்காருங்க. நான் போய் இவங்களுக்கு ரூம காட்டுறேன்” என்று பாட்டியை அமர வைத்து விட்டு மற்றவர்களை அழைத்து சென்றான்.

ஷ்ராவ்யா அவனோடு செல்லாமல் பாட்டியோடு அமர்ந்தாள். “நீயும் போடா மா. போய் முகத்த கழுவிட்டு வா. காபி போட்டு கொண்டு வர சொல்லுறேன்” என்று பாட்டி கூற “நான் ஒன்னு கேட்கனும் பாட்டி ” என்றாள்.

“ஆதி சொல்லுற மாதிரி அம்மாச்சி னு கூப்பிடலாம் ல?” என்று அந்த பாட்டி அவள் நாடி பிடித்து கேட்க “அப்படி கூப்பிட்டு பழக்கம் இல்லையே.. ” என்று நெளிந்தாள்.

பாட்டி சிரித்து விட்டு “சரி பாட்டினே கூப்பிடு” என்று கூறி விட்டார்.

“இந்த வீடு இவ்வளவு அழகா இருக்கே யாரு கட்டுனது?”

“ஆதியோட அப்பா தான்”

ஷ்ராவ்யா ஆச்சரியமாக பார்த்தாள். அவரா? அவர் கட்டிய வீடுகள் எல்லாம் அற்புதமாக இருக்கிறதே. அவளது ஆச்சரியத்தை பார்த்து பாட்டி புன்னகைக்க ஆதீரன் வந்து விட்டான்.

“ஷ்ராவ்யா.. நீங்க ஃப்ரஸாகலையா?”

“சாரே.. உங்க அப்பா என்ன வேலை பார்த்தார்? என்ன படிச்சார்?”

“ஏன் திடீர் னு கேட்குற?”

“சொல்லுங்க”

“அவர் ஆர்கிடெக் படிச்சவர்”

ஷ்ராவ்யா ஆச்சரியத்துடன் எழுந்து விட்டாள். 

“ரியலி… உங்க அந்த ரெண்டு வீடு… தோப்பு வீடு எல்லாமே அவர் கட்டுனது தானா?” என்று கேட்டாள்.

“ம்ம்.. ஏற்கனவே சொல்லிருக்கனே. இப்ப ஏன் திடீர் னு கேட்குற?”

“இந்த வீட்ட யாரு கட்டுனது னு கேட்டேன். உங்கப்பா னு சொன்னாங்க. நிஜம்மா.. உங்கப்பா பெரிய ஜீனியஸ்”

“அப்ப அவரோட பிள்ளை நான்?”

பதில் சொல்லாமல் தோளை குலுக்கியவள் “நான் ரூம்க்கு போறேன் பாட்டி” என்றாள்.

“ஓய்…” என்று ஆதீரன் அதட்ட திரும்பி பழிப்பு காட்டி விட்டு ஓடி விட்டாள்.

“ஓய்.. ஷ்ராவ்யா.. ஓய்…” என்று ஆதீரன் அழைக்க அழைக்க ஷ்ராவ்யா நிற்காமல் ஓடிவிட்டாள்.

அவள் மறைந்ததும் ஆதீரன் சிரித்து விட பாட்டி அவனையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்ன அம்மாச்சி?”

“அந்த பிள்ளைய பிடிச்சுருக்கா ஆதி?”

ஆதீரன் அதிர்ச்சி தாங்காமல் எழுந்து நின்று விட்டான்.

அத்தியாயம் 25

ஷ்ராவ்யா ஆதீரன் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓடி விட ஆதி தலை குனிந்து சிரித்தான். நிமிர்ந்து அவள் சென்ற திசையை பார்த்து விட்டு திரும்ப பாட்டி அவனை இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தார்.

“என்ன அம்மாச்சி?”

“அந்த பிள்ளைய பிடிச்சுருக்கா ஆதி?” என்று கேட்டு விட ஆதீரன் அதிர்ச்சியில் எழுந்து நின்று விட்டான். அவனை பாட்டி ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு “இப்ப எதுக்கு கரெண்ட் கம்பில கால வச்ச மாதிரி விரைச்சு போய் நிக்குற?” என்று கேட்டார்.

“அம்ம்மாச்ச்சி…” என்று ஆதீரன் பல்லை கடிக்க “சொல்லுடா பேராண்டி” என்றார்.

“இப்படி அந்த பொண்ணு முன்னாடி கேட்டு வச்சுராதீங்க”

“எனக்கென்ன கிறுக்கா பிடிச்சு இருக்கு? அந்த பிள்ள முன்னாடி கேட்க?‌ உனக்கு பிடிச்சுருக்கா னு உன் கிட்ட தான் கேட்டேன்”

“சந்தோசம். அந்த பொண்ணுக்கு ஆல்ரெடி மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சு”

ஆதீரன் பல்லை கடித்துக் கொண்டு கூற பாயாசத்தில் இருக்கும் ஏலக்காயை கடித்தது விட்டது போல் பாட்டி முழித்தார். ஆதீரன் எவ்வளவு அதிகமாக முறைக்க முடியுமோ அவ்வளவு அதிகமாக பாட்டியை முறைத்து பார்த்தான்.

தலையை சொறிந்து “ஹி.. ஹி..”என அவர் சிரிக்க ஆதீரன் பல்லை கடித்தான்.

“சரி சரி கோச்சுக்காத. நீ யாரு கிட்டையும் இப்படி சிரிச்ச முகத்தோட பேசுனது இல்லையா.. அதுனால கேட்டுட்டேன். ஆனா இது எல்லாம் உன் தப்பு தான் தெரியுமா?”

“என் தப்பா?”

“ஆமா… நீ மட்டும் கல்யாணம் பண்ணி இருந்தா இப்படி கேட்ருப்பனா?”

“நான் எப்ப கல்யாணம் வேணாம் சன்னியாசம் போறேன் னு சொன்னேன்? வீட்டு வேலை முடிஞ்சதும் கல்யாணத்த பத்தி பேசுங்கனு தான சொன்னேன்”

“சரி வீட்டு வேலை எப்ப முடியும்?”

“அது ஷ்ராவ்யாவுக்கு தான் தெரியும். வந்ததும் கேளுங்க. நான் போய் குளிச்சுட்டு வரேன்” என்று கூறி வேகமாக சென்று விட்டான்.

அவனுக்கென்று அந்த வீட்டில் தனி அறை உண்டு. அதில் அவனது உடைகள் எப்போதும் இருக்கும். மதுரை வரும் போதெல்லாம் இங்கு தான் வருவான். குளித்து சாப்பிட்டு விட்டு உடனே கிளம்பி விடுவான். பல வருடங்களுக்கு பிறகு இன்று தான் தங்கும் வாய்ப்பு அவனுக்கு கிடைத்து இருக்கிறது.

தனது உடையை எடுத்துக் கொண்டு சென்றவன் குளித்து விட்டு வந்தான். அறையை விட்டு அவன் வரும் போது ஷ்ராவ்யாவும் வந்தாள். அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு “நீங்க எதுவும் எடுத்துட்டு வந்த மாதிரி தெரியலயே?” என்று கேட்டாள்.

“இங்க என்னோட திங்க்ஸ் எப்பவுமே இருக்கும். ஜெயராமுக்கும் ஒரு ரூம் இருக்கு. அவன் தான் வேலை பார்க்க ஆரம்பிச்சதுல இருந்து இந்த பக்கம் எட்டி கூட பார்க்கல”

“ஓஓஓ…”

இருவரும் பேசிக் கொண்டே ஹாலுக்கு வந்தனர். மாலை முழுவதுமாக கடந்து விட்டதால் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலியே இருந்து விட்டனர்.

எல்லோரும் அமர்ந்து ஆதீரனின் தாத்தா பாட்டியிடம் கதை பேசிக் கொண்டிருக்க சந்தானலட்சுமி தாத்தாவிற்கு அழைப்பு விடுத்தார்.

அவர்‌பேசி விட்டு ஆதீரனிடம் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான்.

“ஆதி‌ உன் போன் எங்க?”

“ஷ்ராவ்யா கிட்ட இருக்குமா. அவங்க போன் வொர்க் ஆகல. அதுனால என்னோடத குடுத்துட்டேன்”

“சரி சரி. நாளைக்கு சுத்தி காட்டிட்டு அடுத்த நாள் கிளம்பி வாங்க”

“அப்படி தான் சொல்லி இருக்காங்க. சரி நீங்க எதுவும் போன் போட்டிங்களா? அங்க எதுவும் பிரச்சனை இல்லையே?”

“அத பத்தி எல்லாம் கவல படாத. இங்க இருக்க பிரச்சனைய அவங்கவங்க பார்த்துப்பாங்க. நீ அங்க பத்திரமா இரு போதும்”

“ம்ம்.. நான் பார்த்துக்குறேன். “

இருவரும் பேசி விட்டு அழைப்பை துண்டித்து விட்டனர். எல்லோரும் ஒன்றாக அரட்டை அடித்துக் கொண்டிருக்க ஆதீரனும் வந்து அமர்ந்தான். அவன் வந்ததும் பேச்சு அவன் பக்கம் திரும்பியது.

“எனக்கு ஒரே கவலை என் பேரனுக்கு கல்யாணம் பண்ணி பார்க்கனும் னு தான்” – பாட்டி

“ஏன் கல்யாணம் வேணாம் னு எதுவும் சொல்லிட்டாரா?” – மேகலா

“அப்படி எல்லாம் சொல்ல முடியுமா? இல்ல சொன்னா தான் விட்ருவாங்களா? எப்படியும் அந்த கிணத்துல என்னையும் பிடிச்சு தள்ளிட்டு தான் மறு வேலை பார்ப்பாங்க”  ஆதீரன் சலித்துக் கொண்டான்.

“ஏன் டா கல்யாணம் பண்ணுறது கிணத்துல விழுறதா?” என்று கேட்டு பாட்டி முறைக்க “பின்ன இல்லையா?” என்று கேள்வி கேட்டான்.

“டேய் இத பொம்பளைங்க சொன்னா ஒரு நியாயம் இருக்கு. நாங்க தான் பிறந்த வீட்ட விட்டுட்டு மாமியார் நாத்தனார் னு கொடுமைகள அனுபவிக்குறோம். உங்களுக்கு என்ன? மாப்பிள்ளை உபச்சாரம் தான நடக்கும்?”

“உங்களுக்கு வந்த இடத்துல தான் மாமியார் நாத்தனார் பிரச்சனை. எங்களுக்கு வர பொண்டாட்டியே பிரச்சனையாச்சே” என்று பதில் சொல்லிக் கொண்டே தாத்தா வந்து அமர ஆதீரன் சிரித்து விட்டான்.

“தாத்தா… செம்ம டைமிங்.” என்று கூறி அவன் சிரிக்க அருணும் குமாரும் கூட சிரித்தனர். பெண்கள் அனைவரும் அவர்களை மொத்தமாக முறைத்தனர்.

பாட்டி தாத்தாவை முறைக்க ஷ்ராவ்யா ஆதீரனை முறைத்தாள். மேகலா ரமணி சித்ரா மூவரும் அருணையும் குமாரையும் கொலை வெறியோடு பார்த்து வைத்தனர். ஆதீரன் கையை தூக்கி சரணடைந்தான்.

“எனக்கு இதுக்கும் சம்பந்தமில்ல. நான் சிங்கிள். தாத்தா தான் சொன்னார்”

“அப்ப செம்ம டைமிங் னு சொன்னது உங்க ஆவியா?”

“அய்யோ தெரியாம சொல்லிட்டேன். நீ எதுனாலும் தாத்தா கிட்ட பேசிக்க. என்ன விட்ரு” என்று ஜகா வாங்கினான். அவனை நன்றாக முறைத்து விட்டு திரும்பிக் கொண்டாள்.

பாட்டி, தாத்தாவுடன் வாதத்திற்கு ஆரம்பமாக எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். நேரம் சிட்டாக பறந்து விட இரவு உணவை முடித்துக் கொண்டு அறையில் சென்று முடங்கினர்.

ஷ்ராவ்யாவிற்கு தூக்கம் வரவில்லை. அங்கு என்ன நடந்திருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அவள் யோசிக்கும் அதே நேரம் தியாவும் சௌந்தர்யாவும் அந்த வீட்டுக்குள் நுழைந்தனர்.

திடீரென மின்சாரம் தடை பட்டு விட்டதில் பொன்னாம்பாள் முழித்து விட்டார். ஜெயபிரதாபனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்திருந்ததினால் அவர் எழ வில்லை.

“என்ன விட்ரு.. என்ன விட்ரு” என்று அலறிக் கொண்டே இருந்தவரை தூங்க வைக்க பொன்னாம்பாளுக்கும் வேறு வழி தெரியவில்லை. ஆதீரனை அழைக்க கூடாது என்று சந்தானலட்சுமி கூறி விட்டார். அதை மீறி அவனது தாத்தா பாட்டி வீட்டுக்கு அழைத்தால் சந்தானலட்சுமிக்கு கோபம் வந்து விடும்.

சாதாரணமாக சந்தானலட்சுமி பொறுமையானவர் தான். யாராவது அவரது கோபத்தை கிளறி விட்டால் சும்மா விட மாட்டார். அதனால் பொன்னாம்பாள் ஆதீரனை தொடர்புகொள்ள துணியவில்லை.

அந்த இருட்டில் மெழுகுவர்த்தியை தேடி எடுத்து ஏற்றினார். ஏற்றி விட்டு நிமிர சௌந்தர்யா அவரது முன்னால் இரத்தம் வடிந்த முகத்துடன் நின்று இருந்தார். பயந்து போய் பின்னால் நகர மெழுகுவர்த்தி அவரது கையை சுட்டு விட்டது.

வேகமாக கீழே போட்டு விட்டார். அது அணைந்து அணைந்து எறிய அந்த வெளிச்சத்தில் சௌந்தர்யா இருந்த இடத்தை பார்த்தார். இடம் வெறுமையாக இருந்தது.

இங்கும் அங்கும் திரும்பி பார்க்க அவரை தவிர அங்கு யாருமே இல்லை. வேகமாக குனிந்து மெழுகுவர்த்தியை எடுத்தவர் ஜெயபிரதாபனை எழுப்பினார். ஜெயபிரதாபன் அசையவே இல்லை.

“என்னங்க.. என்னங்க எந்திரிங்க.. ” என்று எழுப்பும் போதே எதோ உடையும் சத்தம் கேட்டது. பயந்து போய் நின்று விட்டார். கண்ணாடி பொருள்கள் சிதறும் சத்தம் கேட்டது.

“யாரு? யாரது? யாரு னு கேட்குறேன் ல” என்று சத்தம் கொடுத்தவர் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. எங்கிருந்தோ வந்த காற்று மெழுகுவர்த்தியை அணைத்து விட்டது. பொன்னாம்பாளின்‌ இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது.

“என்னங்க.. ” என்று‌ கணவரை எழுப்ப முயற்சித்தார். வார்த்தை வாயை விட்டு வரவில்லை. பயத்தில் வியர்த்து கொட்ட கதவில் மெல்லிய வெளிச்சம் வந்தது. அந்த வெளிச்சத்தை பார்த்து விட்டு‌ ஒரு அடி பின்னால் சென்றவர் “யாரு.. யா..‌யாரு அது?” என்று‌ கேட்டார்.

பதில் வரவில்லை. வெளிச்சம் மெல்ல மெல்ல அதிகரிக்க பயத்தில் இதயம் வெடித்து விடும் போல் இருந்தது. வேகமாக வேலை செய்பவர்களை எல்லாம் அழைத்து பார்த்தார். பயத்தில் குரல் எழும்பவில்லை.

வெளிச்சம் பெரிதாகி நின்று விட அந்த இடத்தில் ஒரு மயான அமைதி நிலவியது. பொன்னாம்பாளுக்கு அவரது இதய துடிப்பே காதில் கேட்டது.

மெதுவான கொலுசு சத்தத்துடன் சௌந்தர்யா உள்ளே வர பொன்னாம்பாளுக்கு உயிரே போய் விட்டது. “ஏய்… நீ.. நீ… ” என்றவருக்கு வார்த்தை வரவில்லை.

“நான் தான். என்ன நியாபகம் வச்சுருக்க போல?” என்று கேட்டுக் கொண்டே முன்னால் வந்தவர் அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தார்.

பொன்னாம்பாள் வெளிறிப்போய் நிற்க “என்ன பேரு மறந்து போச்சா? இந்த வீட்டுல வேலை பார்த்தவரோட பேத்தி சௌந்தர்யா தான் நான். நீ குத்தி கிழிச்சு கொன்னியே அதே சௌந்தர்யா” என்றார்.

அவரது குரலில் பொன்னாம்பாளுக்குள் இருந்த மொத்த தைரியமும் ஆட்டம் கண்டது.

“என்ன பொன்னாம்பாள் திகைச்சு போய் நிக்குற?” என்ற கேள்வி வேறு பக்கம் இருந்து வர திரும்பி பார்த்தார். வாசலில் விந்தியா நின்று கொண்டிருந்தார்.

இருவரையும் மாறி மாறி பார்த்தவர் பயத்தில் கத்த ஆரம்பித்தார்.

“ஏய் போங்க இங்க இருந்து. என்னங்க…  என்னங்க எந்திரிங்க… ஏய் சொல்லி கிட்டே இருக்கேன். போங்க இங்க இருந்து. இல்லனா என்ன செய்வேன் னு எனக்கே தெரியாது”

பொன்னாம்பாளின் கடைசி வார்த்தையில் சௌந்தர்யா சிரிக்க ஆரம்பித்து விட்டார்.

“அடடே‌… நீ பயமுறுத்துனதும் நாங்க ஓடி போயிடனும் இல்ல…” என்று தியா கேட்க பொன்னாம்பாளுக்கு உயிர் நடுங்கியது.

அவர் கணவரை எழுப்ப போராட “அவன் எந்திரிக்க மாட்டான். நீ செத்தா கூட எந்திரிக்க மாட்டான். வீணா முயற்சி பண்ணாத” என்றார் சௌந்தர்யா.

“உ… உங்களுக்கு என்ன வேணும்?”

“ஆவியா வந்து உன் சொத்தயா கேட்ப்போம்? உன் உயிரு தான் வேணும்” – தியா

“வேணாம் என்ன விட்ருங்க. நான் தெரியாம பண்ணிட்டேன். என்ன மன்னிச்சுடுங்க. உங்க கால்ல வேணா விழுறேன்”

“நான் விழுந்தப்போ நீ விடலையே பொன்னாம்பாள்” என்று கேட்ட சௌந்தர்யா அமர்ந்த நிலையில் இருந்து எழுந்து நின்றார்.

பொன்னாம்பாளுக்கு என்ன சொல்லி அவர்களை விரட்டுவது என்று புரியவில்லை. திகைத்து நிற்க “நீ செத்துட்டா நாங்க போயிடுறோம் . இல்லனா உன் புருஷன கொன்னுட்டு போறோம்” என்றார் தியா.

“அய்யோ வேணாம் வேணாம்” என்று பொன்னாம்பாள் அலற கீழே கிடந்த மெழுகு வர்த்தியை சௌந்தர்யா எடுத்தார்.

“அப்போ உன் புருஷனுக்காக உன் உயிர நீ குடுக்க போற?” என்று கேட்க பொன்னாம்பாளுக்கு மரண பீதியானது. 

“உன் கிட்ட தான் கேட்குறேன்” என்று சௌந்தர்யா அதட்ட அந்த குரலில் பொன்னாம்பாளின் உடல் நடுங்கியது.

“இவ்வளவு வயசாகியும் உனக்கு சாவு வருது னா இவ்வளவு பயப்படுறியே… எங்கள வாழ வேண்டிய வயசுல கொன்னுட்டியே டி பாவி” என்று கூறி தியா அவரை ஓங்கி அறைந்தார்.

பொன்னாம்பாள் சுருண்டு கீழே விழ “கர்ப்பிணி கூட பார்க்காம கொன்னியே… நீயெல்லாம் ஒரு பொம்பளையா? உன் குணம் தெரிஞ்சு தான் டி உனக்கு ஒரு புள்ளைய அந்த ஆண்டவன் கொடுக்கவே இல்ல” என்று கூறி கழுத்தை பிடித்து உயர தூக்கினார்.

பொன்னாம்பாள் கை காலை உதறி மூச்சு விட முடியாமல் போராடி இரும ஆரம்பித்தார். அதை சில நிமிடம் வெறித்து பார்த்து விட்டு தூக்கி கீழே போட்டார்.

“உன் சாவு ஒன்னும் இவ்வளவு சுலபமா இருக்காது. இந்த நிமிஷத்துல‌ இருந்து எப்ப சாவு வருமோ னு பயந்து பயந்தே நீ சாகனும். உன்ன கொன்னா தான் நாங்க நிம்மதியா மேல போக முடியும். உன் சாவு எங்க கையில தான்.” என்று கூறி சௌந்தர்யா உடைந்திருந்த கண்ணாடிகளை கீழே தூவி விட்டார்.

பொன்னாம்பாளை சுற்றி கண்ணாடி துகள்கள் சிதறிக் கிட்ட சற்று அசைந்தாலும் அவை அவர் உடலை பதம் பார்த்து விடும். அதனால் அவர் அசையாமல் கிடக்க “எந்திரி” என்று தியா சத்தம் போட்டார்.

சுற்றி இருந்த கண்ணாடியை பார்த்து விட்டு பொன்னாம்பாள் அசையாமல் இருக்க “எந்திரிக்கிரியா உன் புருஷன கொல்லட்டுமா?” என்று கூறி தியா ஜெயபிரதாபன் அருகில் செல்ல பொன்னாம்பாள் பதறி எழுந்தார்.

எழுவதற்காக கை ஊன்றிய போது கண்ணாடி துகள்கள் உள்ளங்கையில் சொருகியது. வலி பொறுக்க முடியாமல் அவர் அலற சௌந்தர்யா அவரை வெறித்து பார்த்தார்.

அவரும் தானே அலறினார். அப்போது இதே போல் தானே பொன்னாம்பாள் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். அதே நிலைமையில் இப்போது பொன்னாம்பாள் இருக்க சௌந்தர்யா வின் புண் பட்ட மனது சமாதானம் அடைந்தது.

காலில் இரத்தம் வடிய எழுந்து நின்ற பொன்னாம்பாளை குரோதத்துடன் பார்த்த சௌந்தர்யா “உன் உயிர் போற நேரத்த இப்போ இருந்து எண்ணிக்கோ” என்று கூறி விட்டு பறந்து விட்டார்.

தியா அவரையும் ஜெய பிரதாபனையும் ஒரு‌ பார்வை பார்த்து விட்டு காற்றில் கரைந்து போனார். அவர்கள் போன இரண்டாவது நொடி மின்சாரம் வந்து விட்டது. சுற்றி இருந்த கண்ணாடிகள் மாயமாய் மறைந்து போனது.

ஆனால் பொன்னாம்பாளின் கை காலில் வழிந்த இரத்தம் நிற்க வில்லை. அவசரமாக அதுக்கு அவரே மருந்து போட்டார். வேலை செய்பவர்களை உதவிக்கு அழைக்கலாம். ஆனால் அவர்களுக்கு விசயம் தெரிந்தால் ஊருக்கே தெரிந்து விடும். அதனால் வலியை பொறுத்துக் கொண்டு தன் காயத்திற்கு தானே மருந்து போட்டார்.

மருந்து போட்டு முடித்தவர் இந்த ஆவிகளிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்தார். என்று சாமியறை பூட்டிக் கொண்டு திறக்க மறுத்ததோ அன்றே எதோ தவறாக நடக்கப்போகிறது என்று கண்டு பிடித்து விட்டார்.

ஆனால் அந்த வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட ஆவிகள் வெளியே வந்து விடும் என்று அவர் நினைக்கவில்லை. யாரும் அந்த வீட்டுக்குள் போக முடியாது. போனாலும் உயிரோடு வெளியே வர முடியாது.

அப்படி தான் அந்த வீட்டில் ஆவிகளை அடைத்து வைத்தவர் கூறினார். இப்போது அவர் இருந்தாலும் தொடர்பு கொள்ளலாம். அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் இறந்து போனார். ஆனால் அவர் நடத்திய மாந்திரீக வேலை இன்னும் அவரது சிஷ்யர்களால் நடத்த படுகிறது.

அவர்களிடம் நாளை பேசி பார்த்தால் என்ன‌ என்று தோன்றியது. அது மட்டுமே சிறந்த வழி என்று தோன்ற விடிய விடிய அதை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார். பேய் பயம் வேறு தூங்க விடவில்லை.

இவரது யோசனையை கண்டு பிடித்த சௌந்தர்யா ஏளனமாக சிரித்தார். “உனக்கு அவ்வளவு இடம் கொடுப்பேன் னு வேற நினைப்பா?” என்று கேட்டவர் சிரித்துக் கொண்டார்.

காலை வரை முழித்து இருந்த பொன்னாம்பாள் எழுந்ததும் முதல் வேலையாக வேலை செய்பவர்களை எல்லாம் வீட்டை விட்டு அனுப்பினார். அந்த பூஜை பற்றி பேசும் போது யாரும் பக்கத்தில் இருந்து கேட்டு விட கூடாது.

எல்லோருக்கும் விடுப்பு கொடுத்து அனுப்பி விட்டார். மாந்திரீக தந்திரங்களை செய்பவரை தொடர்பு கொண்டார். அவர்களில் ஒருவரிடம் அரை மணி நேரமாக பேசினார்.

ஜெயபிரதாபனை அழைத்துக் கொண்டு கேரளா வர சொல்ல உடனே கிளம்பி விட்டார். ஜெய பிரதாபனுக்கு இன்னும்‌ பயம் போக வில்லை. எங்கு பார்த்தாலும் சௌந்தர்யா நிற்பது போன்ற‌ பிரம்மையில் பாதி பைத்தியமாகி விட்டார்.

அவரை எழுப்பி கிளப்பிக் கொண்டு போக மணி பனிரெண்டை தொட்டு விட்டது. உச்சி வெயில் நேரம். ஆட்கள்‌ நடமாட்டம் குறைந்து இருந்தது. ஓட்டுனரை காரை எடுக்க சொல்லி விட்டு ஜெய பிரதாபனை பார்த்துக் கொண்டு வந்தார்.

ஜெயபிரதாபன்‌ பயத்தில் புலம்புவதை தடுக்க போராடிக் கொண்டிருந்தவர் போகும் வழியை கவனிக்க வில்லை. திடீரென பார்க்க அந்த இரட்டை வீடுகளின் முன்னால் கார் நின்று விட்டது. வந்த இடத்தை பார்த்து அதிர்ந்தவர் திட்டுவதற்காக ஓட்டுனர் இருக்கையை பார்க்க அங்கு யாருமே இல்லை.

பொன்னாம்பாள் பயந்து போய் சுற்றி பார்க்க கார் கதவு தானாக திறந்தது. இருவரையும் எதோ பிடித்து வெளியே தள்ள பறந்து போய் தோப்பிற்குள் விழுந்தனர்.

பொன்னாம்பாள் மெல்ல நிமிர்ந்து பார்த்தார். சௌந்தர்யா வின் காலடியில் கிடப்பது புரிய வேகமாக எழுந்தார். சுற்றும் முற்றும் பார்க்க ஜெயபிரதாபனை காணவில்லை.

“புருஷன் மேல அவ்வளவு பாசம்… அந்த பாசத்துல தான அவன் பண்ண தப்புக்கு என்ன கொன்ன… இன்னைக்கு அவன எப்படி காப்பாத்துற னு நான் பார்த்துடுறேன்” என்ற சௌந்தர்யா பறந்து போக “ஏய் அவர விட்டுடு …” என்று கத்திக் கொண்டே பின்னால் ஓடினார்.

தூரத்தில் தீ பற்றி எறிந்து கொண்டிருந்தது.  அதற்கு நடுவில் ஜெய பிரதாபன் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தார். பொன்னாம்பாளால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

காற்றில் மிதந்து கொண்டிருந்த சௌந்தர்யா அவர்களை குரோதத்துடன் பார்த்து வைத்தார்.

“இப்படி தான் டா நானும் உன் கிட்ட இருந்து தப்பிக்க ஓடினேன். விட்டியா?” என்று கேட்டவர் தீக்கங்குகளை அள்ளி ஒவ்வொன்றாக ஜெயபிரதாபன் மேல் எறிந்தார்.

ஒவ்வொன்றும் அவர் மேல் விழ அலறினார். அந்த அலறலில் பொன்னாம்பாள் துடிக்க அதை வேடிக்கை பார்த்துக் கொண்டே சௌந்தர்யா மேலும் கங்குகளை அள்ளி வீசினார்.

அவர் உடையில் தீ பற்றி எரிய ஆரம்பிக்க “நீ தொட்டப்போ எனக்கு இப்படி தான் இருந்துச்சு . நல்லா பத்திக்கிட்டு எறியுதா?” என்று கேட்க சௌந்தர்யாவை பொன்னாம்பாள் தாக்க வந்தார்.

அவரை அடிக்க நினைத்து கீழே விழுந்து விட சௌந்தர்யா அவரை ஏளனமாக பார்த்து வைத்தார்.

“உன் புருஷன் மாதிரி உனக்கு சாதாரண சாவு எல்லாம் கிடையாது. ” என்றவர் கங்குகளை அள்ளி பொன்னாம்பாள் மேல் போட ஆரம்பித்தார். அவரது தோல்கள் வெந்து போக அதை மேலும் மேலும் காய படுத்தினார்.

பொன்னாம்பாள் சௌந்தர்யா விடம் கெஞ்ச அதை கண்டு கொள்ளவில்லை.

“என்ன கண்ணாடி வச்சு கிழிச்சு சிதச்சியே… எனக்கு வலிச்சப்போ கருணை காட்டுனியா? இல்லையே…” என்று கேட்டவர் மேலும் மேலும் கங்குகளை அள்ளி வீசினார்.

“நீ பேசுன வார்த்தை எல்லாம் இப்படி தான் தீய அள்ளி வீசுன மாதிரி இருந்துச்சு‌ எனக்கு.” என்றவர் மேலும் அவரை வதைத்தார்.

பொன்னாம்பாள் உடலில் பாதி எரிந்து விட‌ உயிர் மட்டும்‌‌ மிஞ்சியது.

“உன்ன‌ ஏன் அவன மாதிரி கொல்லல தெரியுமா? அவன கூட‌ ஒரு வகையில மன்னிச்சுடலாம். உன்ன‌ மன்னிக்க முடியாது. அவன் என்ன கொல்ல நினைக்கல. என் வயித்துல இருக்க பிள்ளைய வாங்கிக்க நினைச்சான். நீயும் அவன் அப்பனும் சேர்ந்து தான் அவன கொலைகாரனா மாத்துனது.

அவன் என்ன தொட்டதுக்கு தண்டனை அனுபவிச்சுட்டு செத்துட்டான். ஆனா நீ… நீ இன்னும் அனுபவிக்கனும். உனக்கு பிள்ளை பிறக்கலனா உலகத்துல யாருக்குமே பிறக்க கூடாதா? யாராவது கர்ப்பிணிய பார்த்துட்டா உன் மனசு எரியுமே… அதெல்லாம் தெரியாது னு நினைச்சியா?

பெண் ஜென்மத்துல தப்பி பிறந்த அரக்கி நீ. சந்தானலட்சுமி மட்டும் தமிழ்நாட்ட விட்டு வெளிய போகலனா அவரோட ரெண்டு பிள்ளையையும் நீ கொன்னுருப்ப. ஆனா அவனுங்க வளர்ந்ததும் பெத்தவ கிட்ட இருந்தே பிரிக்க பார்த்தல அதுக்கெல்லாம் உனக்கு மன்னிப்பே கிடையாது.

உன் புருஷனுக்கு அருள்மொழியோட பிள்ளை கொல்லி வைக்க கூடாது னு தான் நானே எரிச்சுட்டேன். உனக்கும் அவன கொல்லி வைக்க விட மாட்டேன். சந்தானலட்சுமி விட மாட்டாங்க. வாழு.. உன் தப்ப நினைச்சு வாழு… இந்த எரிஞ்சு போன உடம்போட கடைசி வர வாழு. உன் ஆயுள் சீக்கிரம் முடியனும் னு அந்த ஆண்டவன் கிட்ட வேண்டிக்கிட்டே வாழு. அது தான் உனக்கு தண்டனை”

பேசி முடித்து விட்டு சௌந்தர்யா பறந்து சென்று விட ஊர் மக்கள் ஓடி வந்தனர்

தொடரும்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Hani novels

Story MakerContent AuthorYears Of Membership

13 – கனவே கலைவதேனோ?

என் நித்திய சுவாசம் நீ 9