in

சொ(பொ)ல்லாத ரகசியங்கள் 11-15

அத்தியாயம் 11

காலையிலேயே அமுதா வந்து நின்று விட்டாள். வீட்டிற்கு வெளியே போனை பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருந்த ஜெயராம் அவளை பார்த்ததும் “ஹாய் அமுதா” என்றான்.

“ஹாய் மாமா”

“என்ன ஒரு சர்ப்ரைஸ்… இங்க வந்து இருக்க?”

“ஹலோ மாமா.. அத நான் தான் உங்க கிட்ட கேட்கனும். நீங்க தான் அதிசயமா வந்து இருக்கிங்க. நான் எல்லா லீவுக்கும் இங்க தான் வருவேன்”

“ரியலி… ஓகே.. உள்ள வா” என்று உள்ளே அழைத்து சென்றான். ஹாலில் சிந்தாமணியிடம் வேலை வாங்கிக் கொண்டு இருந்த பொன்னாம்பாள் அமுதாவை திரும்பி பார்த்தார்.

“அமுதா. வா வா.. நேத்து தான் நினைச்சுட்டு இருந்தேன். பரிட்ச்சை எல்லாம் முடிஞ்சு இருக்குமே னு. “

“முடிஞ்சது அத்தை”

“ஹேய் நீ என்ன படிக்கிற?” – ஜெயராம்

“எம்.எஸ்.சி ஐடி”

“பார்ரா… எப்படி பண்ண எக்ஸாம்?”

“நல்லா தான் பண்ணேன்”

அமுதா பதிலை ஜெயராமிற்கு சொன்னாலும் ஆதீரனை தான் தேடிக் கொண்டிருந்தாள். அதே நேரம் வீட்டின் மாற்றம் அவளை பிரம்மிக்க வைத்தது.

“என்ன தேடுற?” என்று ஜெயராம் கேட்க “எங்க அத்த வீடு இங்க தான இருந்துச்சு. அத தான் எங்க காணோம் னு தேடுறேன்” என்றாள்.

“வந்ததும் நானும் இப்படி தான் தேடுனேன்” என்றான்.

“இதெல்லாம் யார் பண்ணது?” என்று ஒன்றும் அறியாதது போல் அமுதா கேட்க “ஆதி தான் அமுதா. ஒன்னு ஒன்னா சொல்லி சொல்லி மாத்த வச்சான்” என்று பொன்னாம்பாள் கூறினார்.

வீட்டில் குடும்பத்தினரை தவிர யாரும் இல்லாததால் ஹாலில் அமர்ந்து பேச ஆரம்பித்து விட்டனர்.

“ஃபர்னிச்சர் பத்தி சொன்னியே மாறிடுச்சா?”

“ம்ம்.. இன்னைக்கு வந்து எடுத்துக்குறதா சொல்லி இருக்காங்க.”

“நாளைக்கு வேலை மாடி ரூம்ஸ்ல தான?”

“ஆமா.. ஆனா அது கட்டி முடிக்க லேட் ஆகும். நெக்ஸ்ட் மன்த் தான் அதுக்கு தேவையான பொருள ஆர்டர் கொடுக்கலாம் னு இருக்கேன்”

இப்படி பேசிக் கொண்டே ஆதீரனும் ஷ்ராவ்யாவும் ஒன்றாக வீட்டிற்குள் நுழைந்தனர். ஷ்ராவ்யா கையில் வைத்திருந்த டேப்பில் எதையோ பார்த்துக் கொண்டே பேசினாள்.

இருவரும் ஒன்றாக உள்ளே வர சோபாவில் அமர்ந்து இருந்த அமுதா எழுந்து விட்டாள். தங்கள் வேலையில் கவனமாக இருந்தவர்கள் அங்கிருந்தவர்களை கவனிக்கவில்லை.

பேசிக் கொண்டே அந்த இடத்தை கடந்து போக “மாமா” என்று அமுதா சற்று அழுத்தமாக அழைத்தாள். அதில் பேச்சு தடைபட இருவரும் நின்று திரும்பி பார்த்தனர்.

“அமுதா… எப்ப வந்த ? எக்ஸாம் முடிஞ்சதா?” என்று ஆதீரன் கேட்க ஷாயாவை முறைத்து விட்டு “முடிஞ்சது மாமா. காலையில தான் வந்தேன்” என்றாள்.

“எப்படி பண்ணிருக்க?”

“நல்லா பண்ணியிருக்கேன்”

அதற்கு பதிலாக தலையை ஆட்டியவன் ஷாயாவிடம் திரும்பி “லன்ச் க்கு வந்துடுவேன்‌. வந்ததும் மத்தத சொல்லுறேன் “என்றான்.

ஷாயா தலையாட்டி விட்டு தன் வேலையை பார்க்க “சாப்ட்டு ரெஸ்ட் எடு அமுதா. வெளிய கிளம்புறேன். வரேன் பெரியம்மா.. பை டா” என்று எல்லோரிடமும் கூறினான்.

ஷாயாவை பார்த்து எதுவும் சொல்லாமல் தலையசைப்பில் விடை பெற்றான். ஷாயாவுள் தலையசைத்து வைக்க அமுதாவிற்குள் பொறாமை தீ பற்றிக் கொண்டது.

அவர்களிடம் அவன் பேசியதற்கும் ஷ்ராவ்யாவிடம் பேசியதற்கும் மலையளவு வித்தியாசம் இருந்தது. ஜெயராம் அதை யோசனையாக பார்க்க அமுதா எரிச்சலோடு பார்த்தாள்.

ஷாயாவோ இவர்களை கண்டு கொள்ளாமல் மாடியேறி சென்றுவிட்டாள். அவளது சொந்த வீடு போல் நடந்து கொள்வது அமுதாவிற்கு பிடிக்காமல் போக “என்ன அத்த.. இவங்க பாட்டு மேல ஏறி போறாங்க?” என்று கேட்டாள்.

“மேல தான் வேலை இருக்கு. அதுக்கு தான் போகுது அந்த பொண்ணு. நீ வா ” என்று பொன்னாம்பாள் அழைத்துச் சென்று விட்டார்.

வேலை செய்பவர்கள் யாரும் வந்து சேரவில்லை. ஷாயா மட்டும் தான் வந்திருந்தாள். அவளிடம் பேசலாம் என்று ஜெயராம் படியேற அதற்குள் வாசலில் ஷாயாவின் நண்பர்கள் வரும் சத்தம் கேட்டது.

ஷாயாவை பார்க்கும் எண்ணத்தை கை விட்டு அறைக்கு சென்று விட்டான். மற்றவர்கள் மேலேறி சென்று வேலையை தொடர்ந்தனர்.

*.*.*.*.*.*.

இரண்டு நாட்களுக்கு பின் காலையில் ஷாயா தூங்கிக் கொண்டிருக்க சித்ரா தனியாக சமைத்துக் கொண்டிருந்தாள். மற்றவர்கள் எல்லோரும் வேலையை கவனிக்க காலையிலேயே கிளம்பி விட்டனர்.

லாப்டாப் திறந்து கிடக்க அமர்ந்த நிலையில் தூங்கிக் கொண்டிருந்தாள். சில நிமிடங்களில் வாசலில் ரமணி வந்து நின்றாள்.

“என்னடி?” – சித்ரா

“ஷாயா எங்க?”

“தூங்குறா”

“அப்போ வெளிய வா”

ரமணி கதவை அடைத்து விட்டு சித்ராவை இழுத்துக் கொண்டு தூரமாக சென்றாள்.

“என்ன?”

“அந்த பேய் வீட்டுல… யாரோ இருக்காங்க டி”

“எரும அதுவே பேய் வீடு னு சொல்லியாச்சு. யாரோ இருக்காங்கனா? பேய் தான் டி இருக்கும்”

“ஆமா பேய் தான். பேயே தான். இங்க பாரு” என்று தன் போனை நீட்டினாள். வீட்டின் வெளி வேலைகள் முடிந்ததும் அதை படம் பிடித்துக் கொண்டிருந்தவள் போனை திருப்பி பக்கத்து வீட்டையும் படம் பிடித்தாள்.

அதன் மாடியில் யாரோ நின்றிருப்பது போல் படத்தில் வந்திருந்தது. அதுவும் அந்த உருவத்திற்கு பின் இன்னொரு உருவம் தெரிந்தது‌. அது இரண்டு தலைகள் இருப்பது போல் தெரிய ரமணி அலறி விட்டாள்.

அவள் அலறியதில் மேகலாவும் அருணும் ஓடி வந்தனர். அவர்களது போனில் படம் எடுத்தால் எதுவும் வரவில்லை. ரமணி போனை வாங்கி எடுக்கும் போது மட்டும் அந்த உருவம் தெரிந்தது. பயத்தில் அவள் மயங்கி விழாதது ஒன்றே குறை.

அவசரமாக அவளை கிளப்பி அனுப்பி விட்டார்கள். வேலைகளை கூடவே இருந்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் அருணாலும் மேகலாவாலும் அங்கிருந்த அகல முடியவில்லை.

பயந்து வெளிறி போய் சொல்லிக் கொண்டிருந்த ரமணி அப்படியே அமர்ந்து விட்டாள். சித்ரா அவளை பாவமாக பார்த்து விட்டு மீண்டும் வீட்டிற்குள் சென்றாள்.

அவள் தண்ணீர் எடுத்துக் கொண்டு வர ஷாயா முழித்து விட்டாள். அவளை பின் தொடர்ந்து வர ரமணி நடுக்கத்துடன் அமர்ந்து இருப்பதை பார்த்தாள்.

“என்னடி இங்க இருக்க? வேலைய பார்க்கல?” என்று கேட்டுக் கொண்டே வர “ஹா… இல்.. இல்லயே… அது.. வேல.. மேகி … மேகி பார்த்துப்பா” என்று உளறி கொட்டினாள்.

“ஓய்… என்ன ? என்னத்த பார்த்து பயந்த?”

“பயந்தனா…. நானா.. இல்லயே.. இல்லயே”

“நீ உளறுறதே போதும். என்ன னு சொல்லித்தொல”

ஷாயா அவள் பக்கத்தில் அமர்ந்து கொள்ள ரமணி தயங்கினாள். சித்ரா அவளது போனை பறித்து ஷாயாவிடம் கொடுத்து விட்டாள். நடந்ததை கூற ஷாயா சாதாரணமாக போனை திருப்பி கொடுத்தாள்.

“உனக்கு போன் ல தான் தெரியுது. எனக்கு சும்மாவே தெரியும். நான் அந்த வீட்டுக்கு போக மாட்டேன். பயப்படாத. நான் போகாத வர‌ எதுவும் நடக்காது. சரியா.. சித்து.. இவளுக்கு எதையாவது சாப்ட குடு. சாப்ட்டு தூங்கு. சரியாகிடும்”

ஷாயா விசயத்தை சாதாரணமாக கையாள சித்ரா எழுந்து சென்று விட்டாள். ரமணிக்கு நடுக்கம் குறையவில்லை. கதைகளில் படங்களில் தான் இப்படி பட்ட விசயங்களை பார்த்து இருக்கிறாள். நிஜ அனுபவம் அவளை நடுங்க வைத்து இருந்தது. ஷாயா அவள் தோளில் கை போட்டு அனைத்துக் கொண்டாள்.

“உனக்கு ஒரு உண்மைய சொல்லட்டுமா?” என்று கேட்க ரமணி‌ அவளை திரும்பி பார்த்தாள்.

“என்ன பெத்த அம்மா அப்பா இந்த ஊரு தான். இப்ப உயிரோட இல்ல. மே பி அந்த வீட்டுல இருக்க ஆன்மா என்னோட அம்மா அப்பாவோடதா இருக்கலாம்”

ஷாயா சொன்னதும் ரமணி பதறிப்போய் எழுந்தாள். அதிர்ச்சியில் அவளுக்கு முதலில் எந்த வார்த்தையும் வரவில்லை. சில நொடிகள் தடுமாறியவள் “அப்போ ஆண்ட்டி?” என்று கேட்டாள்.

“அவங்களும் என் அப்பா அம்மா தான். பட் என்ன பெக்காத அம்மா அப்பா”

ஷ்ராவ்யாவின் வார்த்தை ரமணியை பலமாக பாதித்தது. வாயடைத்து போய் அமர்ந்து இருக்க சித்ரா எதோ கொண்டு வந்து சாப்பிட கொடுத்தாள். பல நிமிடங்கள் அங்கு மௌனத்திலேயே கழிந்தது.

சித்ரா பேயை பார்த்து பயந்து அமைதியாக இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டாள். சாப்பிட்டு முடித்ததும் சித்ராவை ஓய்வெடுக்க சொல்லி விட்டு மற்ற இருவரும் வீட்டு வேலைகளை முடித்தனர்.

வீட்டை சுத்தபடுத்தி விட்டு இருவரும் வெளியே நடந்தனர்.

“இது உனக்கு எப்படி தெரியும்?”

“மணிமாலா அக்காவோட அப்பாவ பார்த்தேன். அவர் தான் சொன்னார்”

“ஓஓஓ.. வேற என்னலாம் தெரியும்?”

“எதுவுமே தெரியாது. பட் தெரிஞ்சுக்கனும். கேசவன் சார இன்னைக்கு போய் பார்க்கனும். அவர் எதாச்சும் சொன்னா எல்லாம் க்ளியராகும் னு நினைக்குறேன்..”

“ம்ம்..”

“இத உன் கிட்ட சொன்னதுக்கு ரீசன் பயப்படாம இருக்க தான். அப்புறம் யாருக்கும் சொல்லாத. முடிஞ்ச வரை இந்த விசயம் ரகசியமா இருக்கது தான் நல்லது”

“கண்டிப்பா யாருக்கும் சொல்ல மாட்டேன்” என்று ரமணி வாக்கு கொடுத்தாள்.

*.*.*.*.

மாலை ஷாயா வெளியே கிளம்பி சென்ற பின்னே மற்றவர்கள் வந்து சேர்ந்தனர். “எங்க ஷாயா?” என்று கேட்க “கோவிலுக்கு போறேன் னு போனா..” என்று ரமணி கூறி விட யாரும் அதற்கு மேல் விசாரிக்கவில்லை.

ஷாயா நேராக கேசவன் வீட்டில் வந்து நின்றாள். கதவை தட்டி விட்டு காத்திருக்க தாமரை வந்து கதவை திறந்தாள்.

“நீங்களா? வாங்க வாங்க” என்று அழைக்க “பேர சொல்லியே கூப்பிடலாமே.. இந்த மரியாதை எல்லாம் வேணாம்” என்றாள் ஷாயா.

“சரி சரி.. அப்படியே இருக்கட்டும்.. என்ன சாப்டுற? காபி.. டீ?”

“அதெல்லாம் எதுவும் வேணாம். நான் உங்க ஹஸ்பண்ட்ட பார்க்கலாமா?”

“உள்ள தான் இருக்கார் . வா.” என்று தாமரை அழைத்துச் சென்றாள்.

கேசவன் எழுந்து அமர்ந்து இருந்தார். அவரின் இரு பக்கமும் இரண்டு பிள்ளைகள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஷாயாவை பார்த்ததும் எழுந்து விட “எங்க பசங்க” என்றாள் தாமரை.

“என்ன படிக்கிறீங்க?”

“நான் டென்த்.. இவன் எயிட்த்” என்று தாமரையின் மகள் கூறினாள்.

“நல்லா படிப்பீங்களா?” என்று கேட்க வேகமாக தலையாட்டினர்.

“எங்கம்மா சொல்லி கொடுப்பாங்களே” என்று சிறுவன் கூற ஷாயா புன்னகைத்தாள். தாமரை ஒரு பள்ளி ஆசிரியை. பத்து வருடத்திற்கு முன் கேசவன் முடங்கி இருக்கிறார் என்றால் குழந்தைகள் ஐந்து வயதிலும் மூன்று வயதிலும் இருந்திருக்க வேண்டும்.

தனி ஒரு பெண்ணாக குழந்தைகளை வளர்த்து கணவனையும் கவனித்து இருக்கிறாள். ஷாயாவிற்கு அவளை நினைத்து பெருமையாக இருந்தது. அதே நேரம் வருத்தமாகவும் இருந்தது.

பிள்ளைகளை படிக்க அனுப்பி விட்டு தாமரையும் ஷாயாவும் அமர்ந்தனர்.

“எப்படி இருக்கீங்க? இப்போ பரவாயில்லையா?”

ஷாயாவின் கேள்விக்கு கேசவனிடம் தலையாட்டல் பதிலாக வந்தது.

“அன்னைக்கு என்ன நடந்துச்சு? நீங்களும் மணிமாலாக்காவோட அப்பாவும் ஏன் இப்படி ஆனீங்க?”

கேசவன் ஏதோ சொல்ல முயற்சிக்க, வார்த்தை தொண்டையிலிருந்து வெளிவராமல் தடுமாறினார்.

“ரிலாக்ஸ் ரிலாக்ஸ்… ரிஸ்க் எடுக்காதீங்க. சைகைல சொல்லுங்களேன். புரியுதா னு பார்க்குறோம்”

கேசவனின் சைகை ஷாயாவிற்கு புரியவில்லை. ஆனால் தாமரைக்கு புரிந்தது.

“அன்னைக்கு யாரோ அழுதுருக்காங்க ” என்று தாமரை கூற ஷாயா பரபரப்பானாள். 

“யாரு? யாரு அழுதா? என் அம்மா வா அப்பாவா?” என்று கேட்க தெரியாது என்ற பதில் தான் கிடைத்தது.

“ஆனா யாரோ அழுதுருக்காங்க. அது மட்டும் சரி இல்லயா?” என்று தாமரை கேட்க ஆமோதித்தார். அடுத்து சைகை செய்ய தாமரை உன்னிப்பாக கவனித்து விளக்க ஆரம்பித்தாள்.

“அது யாரு னு பார்க்க இவங்க.. இல்ல இவர் மட்டும் போயிருக்கார்.. மாமா இவர பிடிச்சு இழுக்க… சத்தம்.. அழுக சத்தம் நின்னுடுச்சு… அப்புறம் உள்ள இருந்து யாரோ வந்து இருக்காங்க. இவங்கள தூக்கி போட்டதும் மழை வந்து இருக்கு. “

“அப்போ என்ன எப்படி உங்களுக்கு தெரியும்?” என்று ஷாயா கேட்க அவர் பதில் சொல்லவில்லை.

கண்ணை மூடிக்கொண்டு எதோ ஒரு வேதனையில் மூழ்கினார். ஷாயாவும் தாமரையும் புரியாமல் பார்த்தனர். ஷாயா சில நிமிடங்கள் யோசித்து விட்டு இந்திரஜித்தை அழைத்து எல்லாவற்றையும் கூறிக் கொண்டிருக்க சிந்தாமணி வந்தாள்.

“அக்கா… இங்க எப்படி வந்தீங்க? வீட்டு பக்கம் வரவே இல்ல. உங்கள காணோம் னு எல்லாரு கிட்டயும் கேட்டேன் தெரியுமா?” என்று கூற “கோவிலுக்கு வந்தேன். அப்படியே பேசிட்டே இங்க வர வந்துட்டோம் .” என்றாள்.

சிந்தாமணி அடுத்து எதோ கேட்க வர “சிந்தா… போய் அதுங்க படிக்குதுங்களா னு முதல்ல பாரு… போ” என்று தாமரை விரட்டி விட்டாள். சிந்தாமணி எதுவும் யோசிக்காமல் குதித்து ஓடி விட்டாள்.

கதவை பூட்டி விட்டு அமர்ந்தனர். ஷாயா மீண்டும் இந்திரஜித்தை அழைத்தாள். அவன் ஒவ்வொரு கேள்வியாக கேட்க அந்த கேள்வியை கேசவனிடம் கேட்டாள்.

“என் அம்மாவுக்கும் ஆதீரன் குடும்பத்துக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா?”

கேசவனின் பதில் உடனே ஆம் என்று வந்தது.

“என் அப்பாவுக்கும் இந்த குடும்பத்துக்கும் ?”

இல்லை என்று வந்தது.

“எப்படி சம்பந்தம்?” என்று கேட்க கேசவனால் அதை விளக்க முடியவில்லை. தாமரையிடம் திரும்பியவள் “உங்களுக்கு அந்த குடும்பத்த பத்தி தெரியுமா?” என்று கேட்டாள்.

“ம்ம்.. ஓரளவு தெரியும். அண்ணன் தம்பி. ரெண்டு பேரு தான். மூத்தவர் ஜெயபிரதாபனுக்கு கல்யாணம் ஆனதும் அவங்கம்மா இறந்துட்டாங்க. சின்னவர் அருள்மொழி. மூத்தவருக்கு பிள்ளைங்க எதுவும் இல்ல. சின்னவர் பசங்க தான் ஆதீரனும் ஜெயராமும்.”

“ஆதீரன் அப்பா ஏன் செத்தார் னு தெரியுமா?”

“முடக்குவாதம் வந்து ஒரு வருசத்துல செத்துட்டதா சொல்லுறாங்க”

“என் அம்மா அப்பாவ உங்களுக்கு தெரியுமா?”

“இல்லயே மா. நான் கல்யாணம் பண்ணி வந்து ரெண்டு வருசத்துக்கு அப்புறம் தான் ஊர பத்தி நல்லா தெரிஞ்சுக்கிட்டேன். “

“அப்போ அந்த வீட்டு பேய்க்கதை?”

“அது பத்தி எனக்கு தெளிவா தெரியாது.. ஆளாளுக்கு ஒரு கதை சொல்லிட்டு இருப்பாங்க”

ஷாயாவிற்கு அடுத்து என்ன என்று புரியவில்லை. இந்திரஜித் எல்லாவற்றையும் போனின் வழியாக கேட்டுக் கொண்டு தான் இருந்தான்.

“எங்க போனாலும் முட்டிக்கிறேன். ஒரு வழி கூட கிடைக்க மாட்டிது” என்று ஷாயா கூற “பொறு பொறு… உன் அம்மா அப்பா எப்போ செத்தாங்க னு கேளு” என்றான் அவன்.

ஷாயா கேசவனை பார்த்தாள். அவர் எதோ சைகை செய்ய இம்முறை தாமரைக்கும் விளங்கவில்லை.

“இருக்கட்டும் கா. கொஞ்சம் பொறுமையாவே தெரிஞ்சுக்குறேன்” என்றவள் தலையை பிடிக்க தாமரை அவளுக்கு வேகமாக காபி கலந்து கொடுத்தாள்.

அதை குடித்து விட்டு கிளம்ப வாசலில் யாரோ ஒருவன் வந்து நின்றான். ஷாயா திரும்பி பார்த்தாள். முதன்முதலில் இந்த ஊருக்குள் நுழையும் பேசியவன். அவனை கண்டு கொள்ளலாம் “கிளம்புறேன்.” என்று கூறி விடை பெற்றாள்.

“ஹலோ… என்னங்க பார்த்தும் பார்க்காத மாதிரி போறீங்க?” என்று அவன் வழி மறிக்க “யார் நீங்க?” என்று கேட்டாள்.

அவன் பதில் சொல்ல முடியாது தடுமாறினான். இப்படி ஒரு கேள்வியை அவன் எதிர் பார்க்கவில்லை. உள்ளே இருந்து சிந்தாமணி ஓடி வந்தாள்.

அவளிடம் “யார் இது?” என்று கேட்க “என் அண்ணன் தான். என் கூட பிறந்த குரங்கு” என்றாள்.

அவளது பதிலில் சிரிப்பு வர பார்க்க அதை அடக்கிக் கொண்டு “ஓஹோ.. சரி நான் கிளம்புறேன். பை” என்று கூறி விட்டு நடந்து விட்டாள்.

“நான் குரங்கா… அப்ப நீ யாரு?” என்று அவன் எகிற “அடங்குடா டேய். என்ன கூப்பிட தான வந்த.. அந்த வேலைய மட்டும் கவனி” என்று கூறி விட்டு சிந்தாமணியும் சென்று விட்டாள்.

“அப்படி என்ன பண்ணிட்டேன் னு ரெண்டு பேரும் இப்படி போகுதுங்க?” என்று கேட்டு முழித்துக் கொண்டு நிற்க “என்ன பராக்கு பார்த்துட்டு இருக்க… சிந்தா அப்பவே கிளம்பிட்டாளே” என்று கூறி தாமரை அவனை துரத்தினாள்.

‘நேரமே சரியில்ல’ என்று நினைத்துக் கொண்டு சிந்தாமணியை நோக்கி ஓடினான்.

“ஏய் நில்லு… உன்ன கூப்பிட வந்தா நீ எனக்கு முன்னாடி போற?”

“ஆமா உனக்கு ஷாயா அக்காக்கும் என்ன தகராறு?”

“என்னது அக்காவா??”

“ஆமா எனக்கு அக்கா.. உனக்கு தங்கச்சி. அத மனசுல வச்சுக்கிட்டு மேல சொல்லு”

‘என்னத்த சொல்ல அதான் முடிச்சுட்டியே’ என்று நினைத்து நொந்து போக “அடேய் கதிரவாஆஆஆஆஆ…..” என்று சிந்தாமணி காதில் கத்தினாள்.

“அம்மா…. ஏய்… குரங்கு … எதுக்கு கத்தி தொலைக்குற?”

“வீட்டு வாசல் ல நின்னுகிட்டு கனவு கண்டா கத்தாம .. உள்ள வந்து தொல” என்று கூறி விட்டு உள்ளே சென்று மறைந்தாள்.

அத்தியாயம் 12

ஷாயா வேலைகளை மற்றவர்களிடம் விட்டு விட்டு வீட்டிலேயே இருக்க அமுதாவிற்கு பரம நிம்மதியாக இருந்தது. அவள் வராமல் மற்றவர்களிடம் ஆதீரன் பேசினால் அவளுக்கு கோபம் வருவதில்லை. நிம்மதியாக விடுமுறையை கழித்தாள்.

ஜெயராம் தான் ஏன் அவள் வரவில்லை என்று கேட்க முடியாமல் சுற்றிக் கொண்டிருந்தான். ஆதீரனை கவனித்தால் அவன் அந்த விசயத்தை பற்றி கவலை பட்டதாக தெரியவில்லை.

காலையில் வந்து நடக்கும் வேலைகளை பார்த்து விட்டு தன் வேலையை கவனிக்க செல்பவன் மீண்டும் மாலை வந்து முடிந்த வேலைகளை பார்ப்பான்.

அருணிடமும் மேகலாவிடமும் மட்டுமே கேள்வி கேட்டு விட்டு மீண்டும் கிளம்பி விடுவான். அதிகமாக அவர்கள் வேலையில் தொல்லை கொடுக்காமல் ஒதுங்கி இருந்தான். அவனது செய்கையில் ஜெயராமிற்கு குழப்பம் தான் மிஞ்சியது.

ஆதீரன் அத்தனை சுலபமாக பெண்களிடம் நட்பு பாராட்டிவிட மாட்டான். சொந்த பந்தத்தில் இருக்கும் பெண்களை தவிர வேறு எந்த பெண்ணிடமும் அவன் நின்று பேசி ஜெயராம் பார்த்தது இல்லை.

அவன் ஷ்ராவ்யாவிடம் பழகுவது அவன் கண்ணுக்கு வித்தியாசமாக தான் தெரிந்தது. சந்தானலட்சுமி எதுவுமே இல்லை என்று கூறி விட்டார்.

அந்த பெண் வேலை முடிந்ததுமே இடத்தை காலி செய்து விடுவாள் என்று அவர் கூறி இருக்க ஜெயராமிற்கு அந்த நம்பிக்கை இல்லை. ஆனால் ஆதீரன் இப்போது அவளை கண்டு கொள்ளாமல் இருப்பது யோசனையை தூண்டியது.

அமுதாவிற்கும் ஜெயராமிற்கும் தெரியாத விசயம் ஆதீரன் வேலைக்கு போகும் முன் ஷ்ராவ்யாவை வீட்டிலேயே போய் சந்திப்பது தான். அமுதாவிற்கு ஷ்ராவ்யா இந்த ஊரில் இருக்கிறாள் என்று மட்டுமே தெரியும். எங்கு இருக்கிறாள் என்று தெரியாது.

ஜெயராமிற்கு அதுவும் தெரியாது. அவள் வேறு எதோ ஊரில் இருந்து வருகிறாள் என்று நினைத்துக் கொண்டான். மற்றவர்கள் யாரும் வேலை நேரத்தில் சொந்த விசயங்களை பேச மாட்டார்கள். அதனாலே அவனுக்கு தெரியாமல் நான்கு நாட்கள் கடந்து விட்டது.

அன்று வழக்கம் போல் ஆதீரனிடம் ஷாயா பேசிக் கொண்டிருந்தாள். வீட்டின் வாசலில் அமர்ந்து கொண்டு இருவரும் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருக்க பிரதாப் அழைத்தான்.

“ஹலோ சார்”

“போனஸ் நாளைக்கே போட போறேன் ஷாயா. எல்லாருகிட்டையும் சொல்லி செக் பண்ண சொல்லிடு?”

“ஏன் திடீர் னு?”

“நிரஞ்சன் சார் ஃபேமிலியோட வெளிய போறாங்களாம். இப்பவே வேலைய முடிச்சுட்டா ஈசியா இருக்கும்”

“அப்ப செலிப்ரேசன்?”

“இந்த வருசம் இல்ல “

“வெரி பேட். வருசம் வருசம் கொண்டாடுவோம் தான?… இந்த வருசம் ஸ்கிப் பண்ணா என்ன அர்த்தம்? அன்னைக்கு குடுக்க ரெடி பண்ண ப்ரைஸ் ஷீல்ட் கிஃப்ட்ட எல்லாம் என்ன பண்ணுறது?”

“அத இன்னொரு பங்சன் வச்சு குடுக்கலாம் னு சொல்லுறார்”

“லூசா அவரு?”

“கிட்டத்தட்ட… சரி ஆபிஸ் ல தான் இருக்கேன். அப்புறம் பேசுறேன். “

பிரதாப் அழைப்பை துண்டித்ததும் “என்ன காரசாரமா பேசுற?” என்று ஆதீரன் கேட்டான்.

“ஆபிஸ் பிரச்சனை தான்”

“என்ன பிரச்சனை?”

“நியூ இயர் செலிப்ரேட் பண்ணுவோம் . எல்லா வருசமும் பண்ணுறத இந்த வருசம் கேன்சல் பண்ணிட்டாங்க.”

“ரியலி? ஏன்? அப்படி என்ன செலிப்ரேஷன்?”

“இந்த வருசம் முழுக்க வேலை பார்த்ததுல நிறைய கேட்டகிரி செலக்ட் பண்ணி அவார்ட் அது இது னு நிறைய குடுப்போம். சில விசயங்கள் காமெடியாவும் இருக்கும். பிரதாப் சார் கிட்ட அதிகமா திட்டு வாங்குனதுக்கு ஒரு அவார்ட்… என் கூட வேலை பார்த்து திட்டே வாங்காதவங்க…

அதிகமா ஆபிஸ்ல தூங்குனவங்க… கேண்டின் பில் கணக்கு… நிறைய லீவ் போட்டதுக்கு கூட ஒரு ப்ரைஸ் குடுப்போம். இதெல்லாம் ஜாலியான விசயங்கள்.

அதே நேரம் நல்லா வேலை பார்த்தவங்க புதுசா வந்தவங்க னு அவங்களுக்கும் நிறைய குடுப்போம். அந்த அவார்ட் அடுத்த ஒரு வருசத்துக்கு அவங்கள என்க்ரேஜ் பண்ணும். புது வருசம் ஆரம்பம் னா சும்மா இல்லையே.

அந்த பங்சன போய் இன்னொரு நாள் வச்சுக்கலாம் னு சொன்னா எப்படி இருக்கும்? செம்மயா கோவம் வருது எனக்கு”

ஷ்ராவ்யா சொன்னதை சிரிப்போடு கேட்டுக் கொண்டிருந்தான் ஆதீரன்.

“இவ்வளவு தானா?”

“இல்ல விதவிதமா சாப்பாடு.. பிடிச்ச பாட்டு பாடுறது னு கேம்ஸ் எல்லாம் இருக்கும்”

“இந்த வருசம் அந்த பங்சன நீ மிஸ் பண்ணிட்ட”

“நான் மட்டும் இல்ல..‌இப்ப மொத்த கம்பெனியே மிஸ் பண்ணிடுச்சு” என்று சோகமாக கூறினாள்.

“ஒரு வேலை ஷ்ராவ்யா மேடம் இல்ல னு உங்க எம்.டி கேன்சல் பண்ணிட்டாரோ ?” என்று ஆதீரன் கேட்ட ‘அப்படி தான் பண்ணி இருப்பான்’ என்று நினைத்துக் கொண்டாள்.

ஆனால் வெளியில் “ஷ்ராவ்யா அவ்வளவு பெரிய பிஸ்தா எல்லாம் இல்ல. ” என்றாள்.

“நம்பிட்டேன்… அங்க செலிப்ரேட் பண்ணலனா என்ன? இங்க பண்ணலாம்… “

“இங்கயா?”

“ஆமா.. பட் சரக்கு எல்லாம் கேட்க கூடாது”

ஷாயா கையிலிருந்த பேனாவை தூக்கி அவன் மேல் எறிய அதை அவசரமாக பிடித்தான்.

“என்ன பார்த்தா சரக்கு அடிக்கிற குடிகாரி மாதிரியா தெரியுது? “

“இல்ல ஸ்கின்க்கு நல்லது இப்ப பல பொண்ணுங்க ஒயின் சாப்டுறதா கேள்வி பட்டேன்”

“அதுக்கு ? நானும் குடிக்கனுமா?? உங்களுக்கு ஆசை இருந்தா வாங்கி குடிங்க சாரே.. எங்க பேர சொல்லி குடிக்க வேணாம்”

ஷாயா அவனை முறைத்துக் கொண்டே கூற “எனக்கு அந்த ஆசை எல்லாம் இல்ல. என் அப்பாவுக்கு எந்த பேட் ஹேபிட்டும் கிடையாது. அத சொல்லி சொல்லியே எங்கம்மா எங்க ரெண்டு பேரையும் நல்ல பிள்ளையா வளர்த்துட்டாங்க” என்று காலரை தூக்கி விட்டான்.

“பெருமை தான் போங்க… ” ஷாயா தலையை சிலுப்பிக் கொண்டு கூறினாள். சிரித்து விட்டு ஆதீரன் கிளம்பி விட்டான்.

சொன்னது போல் டிசம்பர் முப்பத்தி ஒன்றாம் தேதி மாலை கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து விட்டான். அவர்கள் வீடு இருக்கும் தோட்டத்தில் வேலை செய்பவர்களை வைத்து ஒரு இடத்தை சுத்த படுத்தினர்.

நாற்காலிகளை வட்டமாக போட்டு விட்டு அதை சுற்றி நான்கு பக்கமும் மேசைகளை போட்டனர். ஆதீரன் உணவுகளை வரவழைத்து இருந்தான். அது வந்ததும் எல்லோரும் சேர்ந்து அடுக்கி வைக்க வேலை முடிந்தது.

சாப்பாட்டு பொறுப்பை சித்ரா பார்த்துக் கொண்டு இருக்க ஷாயா போன் இசைக்கவும் எடுத்துக் கொண்டு தனியாக வந்தாள்.

“சொல்லுங்க சார்”

“ஹாப்பி நியூ இயர் ஷாயா” – நிரஞ்சன்

“சேம் டூ யூ சார்”

“நியூ இயர் செலிப்ரேசன் இங்க இல்ல. நீங்க வந்ததும் வச்சுக்கலாம் னு சொல்லிட்டேன்”

“ஓஹோ… சரிங்க சார்… பட் இங்க செலிப்ரேட் பண்ணுறோம். கூப்பிடுறாங்க. வச்சுடுறேன்” என்று வேகமாக அழைப்பை துண்டித்து விட்டாள்.

புது வருடத்தை கொண்டாட ஜெயராம், அமுதாவையும் ஆதீரன் அழைத்து வந்திருந்தான். அமுதாவை பத்து மணிக்கு வீட்டில் கொண்டு வந்து விட்டு விட வேண்டும் என்று கட்டளை போட்டிருந்தார் பொன்னாம்பாள். அதற்கு சம்மதித்து அழைத்து வந்திருந்தனர்.

அவர்கள் எல்லாம் மொத்தமாக நிற்க ஆதீரன் ஷாயாவை தேடி வந்தான். அவள் கோபத்தோடு குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள்.

“டிசம்பர் குளிர்லயும் அனல் பறக்குது… என்ன கோபம்?” என்று ஆதீரன் கேட்க நடப்பதை நிறுத்தி விட்டு “ஒன்னும் இல்ல சாரே” என்றாள்.

“அப்புறம் என்ன விட்டு தள்ளு… ” என்று இலகுவாக கூறினான். அதில் சற்று தெளிந்தவள் “ஏன் சாரே.. நியூ இயர் க்கு ஆளோட அவுட்டிங் போவீங்க னு நினைச்சேன். இங்க வந்து நிக்கிறீங்க?” என்று கேட்டாள்.

“ஆளு இருந்தா போகலாம்… நான் தான் சிங்கிள் ஆச்சே”

“அள்ளி விடாதீங்க… உங்க மாமா மக மரிக்கொழுந்து இத கேட்டா ரொம்ப வருத்த படும்”

“மரிக்கொழுந்தா?? எனக்கு தெரியாம யாரு அந்த கொழுந்து.. ?”

ஆதீரன் போலி ஆர்வத்தோடு கேட்க “அது ரைமிங்க்கு சொன்னது …” என்று அவளும் போலியாக முறைத்தாள்.

“அதான.. எனக்கெல்லாம் ஒரு லவ் கிடச்சுட்டாலும்…”

“ஏன் இல்ல.. அதான் அமுதா இருக்காளே. “

“அமுதாவா?? ஒ அதான் மாமா மக‌ னு சொன்னியா?? அவ என்னோட சொந்த மாமா மக இல்ல. பெரியம்மாவோட தம்பி மக.”

“அதுவும் நல்லது தான். சொந்தத்துல கல்யாணம் பண்ணா தான் பிரச்சனை. இவங்க தூரம் தான? “

“வெயிட்… அமுதாவ ஏன் இப்போ இழுக்குற? அத முதல்ல சொல்லு”

“ஏன்னா.. அமுதாவுக்கு உங்கள பிடிச்சுருக்கே… ஆதீ மாமானா உருகிப்போறா.. நீங்க ஏன் அவ லவ்வ கன்ஸிடர் பண்ண கூடாது?”

ஆதீரன் அவளை ஆச்சரியமாக பார்த்தான்.

“என்ன ?”

“அமுதா லவ் பண்ணுறா னு உனக்கு எப்படி தெரியும்?”

“அவ உங்கள பார்க்குறதே போதும். ஈசியா கண்டு பிடிச்சுடலாம். ஏன் உங்களுக்கு தெரியாதா?”

“இது வர நான்‌ அப்படி நினைச்சதே இல்லயே”

“அப்போ இனிமே கன்சிடர் பண்ணுங்க”

“அப்படியா சொல்லுற?”

“ஆமா சாரே… ஜித்து அடிக்கடி சொல்லுவான். நாம லவ் பண்ணுறவங்க குட் சாய்ஸ் னா… நம்மல லவ் பண்ணுறவங்க பெஸ்ட் சாய்ஸ் .”

“ஜித்துவா?”

ஷாயா பதில் சொல்ல வாய் திறக்க அவளது நண்பர்கள் அவளை அழைத்தனர். திரும்பி பார்த்தவள் ஆதீரனோடு அவர்களிடம் சென்று நின்றாள்.

அமுதாவோ ஆதீரனுடன் தனியாக பேசிக் கொண்டிருந்த ஷாயாவை முறைத்துக் கொண்டிருந்தாள். அவர்கள் அருகில் வரவும் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

சுற்றி இருந்த நாற்காலிகளில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து கொண்டனர். ஆதீரன் அமர்ந்தால் அவன் அருகில் அமர வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தாள் அமுதா.

அவனோ எங்கும் அமராமல் ஷ்ராவ்யா பக்கத்தில் இருந்த மரத்தில் சாய்ந்து நின்று கொண்டான். சுற்றியும் விளக்கு வெளிச்சம் மெல்லிய கோடாய் பரவியிருக்க காற்று இதமாக வீசிக் கொண்டிருந்தது.

சூரியன் மறைந்து சில நிமிடங்கள் தான் கடந்து இருந்தது. எல்லோரும் பக்கத்திலிருந்தவர்களோடு சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். பிறகு ஒவ்வொருவராக பாட ஆரம்பித்தனர்.

ஷாயாவும் நான்கு பாடல்களை பாடினாள். அமுதா அந்த பாடல்களை கேட்க பிடிக்காமல் எழுந்து சென்று விட்டாள். சில நிமிடங்கள் கழித்து அவள் வர எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர்.

“எல்லாரும் மொத்தமா பேசுனா எப்படி? எதாச்சு ஒரு விசயத்த பத்தி பேசலாம் உங்கள பத்தி எல்லாம் எனக்கு தெரியாது. சோ உங்கள பத்தி சொல்லுங்களேன். ஃபர்ஸ்ட் நானே ஆரம்பிக்குறேன்” என்று கூறிய ஜெயராம் எழுந்து நின்றான்.

“என் பெயர் ஜெயராம்”

“எனக்கு இன்னொரு பெயர் இருக்கு … ராம் ஜெய பாட்சா … அதான?” என்று மேகலா கேட்க ஷாயாவிற்கு சிரிப்பு வந்து விட்டது. அவள் வாயை இறுக்கமாக மூடிக் கொள்ள “இதென்ன ஸ்கூல் பசங்க போல சொல்லிட்டு. கேசுவலா பேசுங்க சார்” என்றாள் மேகலா.

“ஓகே.. என் குடும்பம் அம்மா அண்ணா பெரியம்மா பெரியப்பா தான். அப்பா சின்ன வயசுலயே இறந்துட்டாங்க”

“அப்போ எப்படி சார் நீங்க பிறந்தீங்க?” – மேகலா

“என்னோட சின்ன வயசுல” என்று ஜெயராம் பல்லை கடிக்க “அப்படி தெளிவா சொல்லனும்” என்றாள்.

ஷாயாவிற்கு சிரிப்பு தான் வந்தது. வந்ததிலிருந்து ஜெயராம் அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தது அவளுக்கு பிடிக்கவில்லை. அவன் மேகலாவிடம் மொக்கை வாங்கும் போது ஆனந்தமாக இருந்தது.

“அண்ணா படிச்சுட்டு இந்த ஊருக்கு வந்து செட்டிலாகிட்டார்” – ஜெயராம்

“அப்படியா ஆதீரன் சார். என்ன படிச்சுருக்கீங்க?” – மேகலா

“எம்.இ” – ஆதீரன்

“சூப்பர் சார்.. எங்க படிச்சீங்க?” என்று ஆதீரனிடம் கேள்வி கேட்க ஆரம்பித்து விட ஜெயராமிற்கு தான் நிற்பது கஷ்டமாக இருந்தது. ஒரு வழியாக ஆதீரனிடம் கேள்வியை முடித்து விட்டு எல்லோரும் ஜெயராமை கவனிக்க அவன் அந்த இடத்தில் இல்லை.

வழக்கம் போல் மேகலா அவனையும் துரத்தி இருந்தாள். ஷாயா அவன் சென்று விட்டதும் நிம்மதியாக சாய்ந்து அமர்ந்தாள்.

“எங்க இவர காணோம்..? சரி விடுங்க.. ஆதீரன் சார் நீங்களே உங்க பேமிலி பத்தி சொல்லுங்க” என்று அவனிடமே விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

பிறகு மற்றவர்கள் எழுந்து சொல்ல ஆரம்பிக்க ஜெயராம் வந்து சேர்ந்தான். ஆனால் அந்த கூட்டத்தோடு அமராமல் ஆதீரனை போல் ஒரு மரத்தில் சாய்ந்து நின்று கொண்டான்.

யார் என்ன பேசினாலும் மேகலாவும் ரமணியும் எதையாவது பேசி சிரிக்க வைத்துக் கொண்டிருந்தனர். இறுதியாக அமுதாவும் ஷ்ராவ்யாவும் மிஞ்சினர்.

“நீங்க சொல்லுங்க அமுதா. இவள பத்தி தான் எங்களுக்கு தெரியுமே” என்று ரமணி கூற “ஆனா எங்களுக்கு தெரியாதே ” என்றான் ஜெயராம்.

“நானே சொல்லுறேன். எங்க குடும்பம் அம்மா அப்பா நான் என் தங்கச்சி. அப்பா கர்னாட்டிக் சிங்கர். அம்மா வீட்டுத்தலைவி”

“ஓஓ… அதான் உனக்கு ஷ்ராவ்யா னு பேரு வச்சுருக்காரா?” என்று‌ ஆதீரன் கேட்க “ஆமா சாரே. நான் மும்பையில இன்டீரியர் டிசைனிங் படிச்சுட்டு அங்கயே ஒருவருசம் வேலை பார்த்தேன். அப்புறம் பெங்களூர் மாறி இப்போ சென்னைக்கு வந்து இருக்கேன்.” என்றாள்.

“மும்பை போனதோட எஃபக்ட் தான் இந்த இந்தி பாட்டு ?” – ஆதீரன்.

“அதே அதே.. படிக்கும் போது இந்தி தேவை பட்டுச்சு. கத்துக்கிட்டேன்”

“அப்புறம் உன் தங்கச்சி?”

“தங்கச்சி ஷிவானி. டெல்லில படிச்சுட்டு இருக்கா. எம்.பி.பி.எஸ் முடிச்சுட்டு எம்.டி பண்ணிட்டு இருக்கா”

“டாக்டரா.. குட்.. ஆமா அப்ப அந்த ஜித்து யாரு?” என்று கேட்டான்.

ஷாயா திரும்பி பதில் சொல்லும் முன் “ஃபியான்ஸி….” என்று அவளது நண்பர்கள் அனைவரும் ஒரே குரலில் கத்தி இருந்தனர்.

ஷாயா சிரித்து விட்டு “அதுக்கு கத்த சொன்னாங்களா?? ” என்று போலியாக முறைத்தாள்.

“பின்ன? இந்திரஜித் சார பத்தில பேசுறோம்” என்று கூறி மேகலா அவள் தோளில் இடித்தாள்.

“சரி சரி.. இடிக்காத வலிக்குது” என்று அவளை பிடித்து தள்ளி விட்டு விட்டு “ஜித்து முழு பேர் இந்திரஜித். ” என்றாள்.

“என்ன பண்ணுறாங்க?” என்று ஜெயராம் ஆதீரனை பார்த்துக் கொண்டே கேட்டான். ஆதீரனிடம் எந்த அசைவும் இல்லை. மெல்லிய இருளில் அவன் முகத்தை ஜெயராமால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் உடலில் எந்த மாற்றமும் இல்லை. எப்படி சாய்ந்து நின்று இருந்தானோ அப்படியே நின்று கொண்டிருந்தான்.

“அவன் சைக்காட்ரிஸ்ட் டாக்டர். கடந்த எட்டு வருசமா அவன எனக்கு தெரியும்”

“அது மட்டும் பத்தாது. முக்கியமான விசயத்தை சொல்லு… அடுத்த மாசம் எண்ட்ல இவளுக்கும் இந்திரஜித் சாருக்கும் மேரேஜ் பண்ணுறதா இருக்காங்க” என்று ரமணி கூறினாள்.

“ஆமா ஆமா. எப்படா இங்க இருக்க வேலை முடியும் கிளம்பி ஓடலாம் னு இருக்கா” என்று மேகலா கூற ஷாயா அவள் தலையில் கொட்டு வைத்தாள்.

“இதுக்கு ஏன் டி கொட்டுற.. உண்மைய தான சொன்னேன். இந்திரஜித் சாருக்கு ஷாயா தான் ஃப்ரஸ்ட். இவ எதையாச்சு பண்ணா இவள திட்ட மாட்டார். எங்கள போன போட்டு காய்ச்சி எடுத்துடுவார்.

இங்க வந்தப்பவும் இவள முன்னாடி அனுப்பிட்டு பின்னாடியே எங்கள துரத்தி விட்டார். இவளால எங்க லீவ் தான் வேஸ்ட்டாகி போச்சு.”

மேகலா வரிசையாக பேசிக் கொண்டே வர ஷாயா பதில் எதுவும் பேசாமல் புன்னகையுடன் அமர்ந்து இருந்தாள். ஆதீரன்‌ அமைதியாக கேட்டுக் கொண்டிருக்க ஜெயராம் குழம்பி விட்டான். இந்த விசயத்தில் முழுமையாக சந்தோசப்பட்டது அமுதா மட்டுமே.

தனக்கு வில்லியாக ஷ்ராவ்யா வர மாட்டாள் என்பதே அவளுக்கு போதுமானதாக இருந்தது. நாளை மறுநாள் ஊருக்கு கிளம்ப வேண்டும். மீண்டும் கல்லூரிக்கு செல்ல வேண்டும். இங்கே ஷ்ராவ்யா இருக்கும் போது எப்படி போவது என்று தவித்துக் கொண்டிருந்தாள்.

அந்த கவலை இப்போது விடு பட்டுச் சென்று விட நிம்மதியாக உணர்ந்தாள். எல்லோரும் இந்திரஜித்தை பற்றியே பேசிக் கொண்டிருக்க “போதுமே… அவன பத்தி புராணம் பாடவா இங்க உட்கார்ந்து இருக்கோம்? நிறுத்துங்க. அமுதா .. நீ சொல்லு உன்ன பத்தி?” என்று கேட்டாள் ஷாயா.

மனதில் இருந்த கவலைகள் நீங்கி விட அழுதா அவர்களோடு குதூகலமாக கலந்து கொண்டாள். பத்து மணிக்கு ஜெயராமுடன் கிளம்பி சென்றவள் நிம்மதியாக தூங்கி விட்டாள்.

மற்றவர்கள் பனிரெண்டு மணி வரையிலும் பேசி விட்டு சாப்பிட்டு கொண்டிருந்தனர். புதுவருடம் பிறக்க வானவேடிக்கை மத்தாப்புகளை கொளுத்தினர்.

ஆதீரன் எல்லாவற்றையும் எடுத்து கொடுத்து விட்டு தூரமாக நின்று வேடிக்கை பார்க்க “என்ன சாரே.. நீங்க மட்டும் அங்க நின்னா எப்படி? இங்க வாங்க” என்று ஷாயா இழுத்துச் சென்று அவர்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வைத்தாள்.

விளையாடி முடிக்க மணி ஒன்றை தாண்டியது. ஆதீரன் “போதும்.. இதுக்கு மேல முழிச்சு இருக்க வேணாம். தூங்குங்க” என்று கூறி அனுப்பி விட்டு ஜெயராமுடன் கிளம்பி விட்டான்.

ஷாயா படுக்கும் முன் இந்திரஜித்தை அழைத்தாள். சில நிமிடங்கள் அவனிடம் பேசி விட்டு விடியல் நல்லபடியாக அமைய வேண்டும் என்ற வேண்டுதலோடு உறங்கி விட்டாள்.

நல்லபடியாக தான் விடிந்தது. அவள் அந்த அமானுஷ்ய வீட்டிற்குள் காலெடுத்து வைக்கும் வரை…

அத்தியாயம் 13

2016 ஜன, 1

காலை ஐந்து மணி….

ஷ்ராவ்யா எழுந்து குளித்து விட்டு கோவிலுக்கு கிளம்பி விட்டாள். நேற்று இரவு தாமதமாக உறங்கியதால் யாரும் எழுந்திருக்கவில்லை. அவள் மட்டும் எழுந்து அங்கிருந்து கோவிலுக்கு நடந்து வந்தாள்.

வாசல் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள். கோவிலுக்குள் மணிமாலாவும் நின்று இருந்தார். அவரை பார்த்து புன்னகைத்து விட்டு அவரருகில் நின்று கொண்டாள்.

சாமி கும்பிட்டு முடித்து விட்டு மணிமாலா வீட்டுக்கு அழைக்க “இன்னொரு நாள் வரேன் கா. இப்போ வேணாம்” என்று மறுத்து விட்டாள். அங்கிருந்து கிளம்பியவள் வேகமாக நடந்தாள். அந்த பேய் பங்களாவை நோக்கி… 

சுற்றி எதையும் பார்க்காமல் வேகமாக நடந்து கொண்டே இருந்தாள். காரில் வந்தால் சீக்கிரம் வந்து விடலாம் தான். ஆனால் காரை எடுத்து அவளது நண்பர்களை எழுப்பி விட அவளுக்கு விருப்பம் இல்லை.

அதனாலே நடக்க தீர்மானித்து இருந்தாள். வேக நடையில் மூச்சு வாங்கி வியர்வை வந்த போதும் அதை கவனிக்க வில்லை. மனமெல்லாம் அந்த வீட்டை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தது.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்து சேர்ந்தாள். வீட்டை நிமிர்ந்து பார்த்தாள். இப்போதும் அந்த வீடு அவளை அழைப்பது போல் தான் இருந்தது.

ஒரு பெருமூச்சை வெளிவிட்டு விட்டு சாவியை எடுத்தாள். நேற்று வேலை முடிந்ததும் நேராக வீட்டிற்கு வந்து விட்டதால் சாவியை ஆதீரனிடம் கொடுக்க தவறிவிட்டனர் அவளது நண்பர்கள். ஆதீரனும் கொண்டாட்டத்தில் இதை மறந்து விட்டான். இரவே சாவியை எடுத்து பத்திர படுத்தி விட்டாள் ஷ்ராவ்யா.

அதை கையில் எடுத்துக் கொண்டு பூட்டை பார்த்தாள். வேறு பூட்டு தான். அதை அவள் திறக்க முயற்சிக்க உடனே திறந்து கொண்டது.

பயப்படாமல் தைரியமாகவே உள்ளே சென்றாள். உள்ளே நுழையும் போது வானம் இருள ஆரம்பித்து விட்டது. திடீரென அந்த இடம் இருண்டு போய் காற்று பலமாக வீச ஆரம்பிக்க நிமிர்ந்து பார்த்தாள்.

சற்று நேரத்திற்கு முன்னால் பளிச்சென இருந்த வானமா இது ? அவள் வானத்தை பார்த்துக் கொண்டிருக்க யாரோ அவளை உற்று பார்ப்பது போல் தோன்றியது.

சுற்றியும் பார்த்தாள். யாரும் இல்லை. எல்லா பக்கமும் இருந்து யாரோ பார்ப்பது போல் தோன்றியது. திரும்பி திரும்பி பார்த்தாள். எங்கும் யாருமே இல்லை. வேகமாக நடந்து வந்ததில் தொண்டை வரண்டு போயிருந்தது.‌

எச்சிலை விழுங்கி பார்த்தாள். தொண்டை வரட்சி போகவில்லை. பார்வையை நான்கு பக்கமும் செலுத்தி பார்த்து விட்டு கதவை நோக்கி நடந்தாள்.

வானம் மேலும் அதிகமாக கருத்தது. கதவருகில் சென்று நிற்க இடி இடித்தது. அந்த இடி சத்தத்தில் உடல் தூக்கிப்போட திரும்பி பார்த்தாள்.

மழை வந்து விடுமோ என்று தோன்றியது. உள்ளே வரும் போது இருந்த தைரியம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போனது. நடுங்கும் கரத்துடன் சாவியை எடுத்தாள்.

கதவில் பூட்டு எதுவும் தொங்க வில்லை. கதவில் சாவி ஓட்டை எதுவும் இருக்கிறதா என்று பார்த்தாள். பக்கத்து வீட்டை விட அந்த வீட்டின் கதவு வித்தியாசமாக இருந்தது.

சாவி பொருந்துமா ? என்று யோசிக்க வாசலில் திறந்த பூட்டின் நியாபகம் வந்தது. வீசிக் கொண்டிருந்த காற்றை பொருட்படுத்தாமல் சாவியை உள்ளை நுழைத்து திருகிவிட்டாள்.

திடீரென காற்று நின்று மயான அமைதி உருவானது. கதவை திறக்காமல் கையை எடுத்து திரும்பி பார்த்தாள். யாரோ அவளை சுற்றி நிற்பது போல் தோன்றியது. இருட்டில் எதையும் அவளால் பார்க்க முடியவில்லை.

கதவு தானாக திறக்கும் சத்தம் கேட்டது பயத்துடன் ஒரு அடி பின்னால் எடுத்து வைத்து நின்றாள். மெல்ல கதவு திறக்க உள்ளே எதுவும் தெரியவில்லை. வெளியே இருந்ததை விட உள்ளே அதிக இருட்டாக இருந்தது.

உள்ளே எதாவது தெரிகிறதா என்று பார்க்க முயற்சித்தாள். அதே நேரம் எதோ ஒன்று அவளது முகத்தை மோதிவிட்டு பறக்க அலறி அப்படியே அமர்ந்து விட்டாள்.

காதை அடைத்து கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்டு அமர்ந்து இருந்தாள். சில நிமிடங்கள் எதுவுமே நிகழவில்லை. அமைதி மட்டுமே இருந்தது . நிமிர்ந்து இரண்டு‌ பக்கமும் பார்த்தாள்.

எதுவும் மாறவில்லை என்று புரிந்ததும் தடுமாறி எழுந்து நின்றாள். மீண்டும் உள்ளே பார்த்தாள். இருட்டில் எதுவும் தெரியவில்லை என்றாலும் “ம்மா…” என்று மெல்லிய குரலில் அழைத்தாள்.

எந்த மாற்றமும் இல்லை. மீண்டும் “ம்மா…” என்றாள். எதோ உள்ளே அசைவது போலிருந்தது. இம்முறை மொத்த சக்தியையும் ஒன்று சேர்த்து “ம்மா…” என்று சத்தமாக அழைத்தாள்.

அங்கேயே நிற்க முடியாமல் எதோ ஒன்று உள்ளே இழுக்க வீட்டின் நிலைப்படியில் காலை எடுத்து வைத்தாள். உள்ளே இருந்து எதுவோ அவளை பிடித்து வெளியே தள்ளி விட்டது.

நிற்க முடியாமல் தடுமாறியவள் கதவில் மோதி மயங்கி விழுந்தாள். அவள் விழுந்ததும் காற்று மீண்டும் வீச ஆரம்பித்தது. உள்ளிருந்து வந்து எதோ இரண்டு ஒளி அவளை சுற்றி வட்டமிட்டது. ஒன்று அவளை தழுவ இன்னொன்று அவள் உடலுக்குள் புகும் மார்க்கத்தை யோசித்துக் கொண்டிருந்தது.

*.*.*.*.

ஆதீரனின் போன் இசைத்தது. அப்போது தான் குளித்து விட்டு வெளியே வந்தவன் எடுத்து காதில் வைத்தான்.

“என்ன ராஜா?” என்று கேட்க “சார் இங்க மில் வாட்ச்மேன் தலையில மரம் ஒடிஞ்சு விழுந்தடுச்சு சார்” என்று ராஜா பதறினான்.

செய்தியை கேட்டதும் ஆதீரனுக்கும் பதட்டம் தொற்றிக் கொண்டது.

“ஏய் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ.. நான் உடனே வரேன்” என்று பேசிக் கொண்டே உடைகளை எடுத்து அணிய ஆரம்பித்தான்.

“கூட்டிட்டு போயிட்டு இருக்கேன் சார். நீங்க வந்துடுங்க” என்று கூறி விட்டு அவன் அழைப்பை துண்டிக்க ஆதீரன் வேகமாக அறையை விட்டு வெளியே வந்தான். சந்தானலட்சுமி கோவிலிலிருந்து வந்து அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்தார்.

“ம்மா… மில்லு வாட்ச்மேன் தலையில மரம் விழுந்துடுச்சாம். நான் உடனே கிளம்புறேன்” என்று கூற சந்தானலட்சுமி அவனை பிடித்து நிறுத்தினார்.

அவன் என்னவென்று பார்க்க விபூதியை அவன் நெற்றியில் வைத்து விட்டார்.

“ப்ச்ச் ம்மா…”

“ஸ்ஸ்… அழிக்க கூடாது. போயிட்டு வா” என்றார்.

அதற்கு மேல் எதுவும் பேசாமல் காரை எடுத்துக் கொண்டு கிளம்பியவன் மீண்டும் அந்த ராஜாவை அழைத்தான்.

“எங்க கூட்டிட்டு போயிருக்க?”

“கானாவிளக்கு ஹாஸ்பிடல் சார்”

“ஓகே நான் வரேன்” என்று அழைப்பை துண்டித்து விட்டு காரை ஓட்ட தூரத்தில் அந்த வீட்டின் கதவு திறந்து இருப்பது தெரிந்தது. அவசரமாக காரை நிறுத்தி விட்டான்.

“இந்த வீட்டு கதவு ஏன் திறந்து கிடக்கு?” என்று புரியாமல் பார்த்தவன் இறங்கி அந்த வீட்டின் அருகே ஓடினான். உள்ளே ஷ்ராவ்யா மயங்கி கிடந்தாள். வீட்டின் கதவு பூட்டி தான் இருந்தது.

“இவளா…?” என்று பதறி உள்ளே ஓடினான். தரையில் முழு மயக்கத்தில் படுத்திருந்தவளை தூக்கி மடியில் போட்டுக் கொண்டான்.

“ஷ்ராவ்யா… ஷ்ராவ்யா கண்ண திற ” என்று கன்னத்தை தட்ட அவள் எழுவதாக இல்லை. கீழே கிடந்த சாவியை எடுத்துக் கொண்டான். வீட்டை திரும்பி பார்க்க வீடு பழையபடி பூட்டி தான் இருந்தது.

ஷ்ராவ்யா அசையாமல் கிடக்க அவளை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தான். இரும்புக்கதவை தாண்டி வர ஷ்ராவ்யா அசைந்தாள்.

வேகமாக காருக்கு கொண்டு சென்று படுக்க வைத்து தண்ணீர் பாட்டிலை எடுத்து முகத்தில் தெளித்தான். கண் திறக்காமல் இருக்க மீண்டும் தெளித்தான்.

ஷ்ராவ்யா அசையவும் தண்ணீரை குடிக்க வைத்து “ஷ்ராவ்யா.. ஷ்ராவ்யா..” என்று அழைக்க முழுவதுமாக கண்ணை திறந்து பார்த்தாள்.

ஆதீரன் அவளை பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருக்க ஷ்ராவ்யா பதறி வேகமாக எழுந்து அமர்ந்தாள். பயத்துடன் காருக்குள் இருந்த இருக்கையில் பல்லி போல் ஒட்டிக் கொண்டாள்.

அவளது பார்வை ஆதீரனை வெறித்துக் கொண்டிருக்க வாய் மட்டும் “விஜயலிங்கம்” என்று முணுமுணுத்தது. ஆதீரனுக்கு அவள் என்ன சொல்கிறாள் என்று தெளிவாக விளங்கவில்லை.

“என்ன சொல்லுற? முதல்ல நீ ஏன் இங்க வந்த?” என்று கேட்க ஷ்ராவ்யா பதில் சொல்லவில்லை. ஆதீரன் திரும்பவும். கேட்க தலையை பிடித்துக் கொண்டாள்.

அதில் கேள்வியை கை விட்டவன் “கிளம்பு ஹாஸ்பிடல் போகலாம்” என்று கூறினான். உடனே பதறி “வேணாம்… வேணாம்” என்க “சரி வீட்டுக்கே போகலாம்” என்று கூறி காரை திருப்பினான்.

ஷ்ராவ்யா பின்னால் படுத்துக் கொண்டாள். முகத்தை மறைத்து கையை வைத்துக் கொண்டவள் தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள். கார் நின்றதும் அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு உள்ளே சென்றான் ஆதீரன்.

“காலையில கோவிலுக்கு போறேன் னு சொல்லிட்டு போனவ இவ்வளவு நேரம் கழிச்சு வர? எங்கடி போன?” என்று கேட்டுக் கொண்டே மேகலா முன்னால் வர “பொறு டி… கத்தாத.. சார் நீங்க சொல்லுங்க” என்று சித்ரா ஆதீரனிடம் கேட்டாள்.

அவர்கள் கேட்டுக் கொண்டிருந்ததை கவனிக்காமல் ஷாயா விறுவிறுவென ஒரு அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள். அறையை சுற்றி பார்த்தாள். பெண்கள் பயன்படுத்தும் உடைகள் தான் இருந்தது.

பக்கத்திலிருந்த கண்ணாடியின் முன் வந்து நின்றாள். அதில் தெரிந்த முகத்தை ரசனையுடன் பார்த்தாள். அது ஷ்ராவ்யா அல்ல. ஷ்ராவ்யாவை விட அழகான ஒரு பெண்ணின் உருவம் தெரிந்தது.

அதை பார்த்து புன்னகைத்தவள் தலையை ஒரு பக்கம் சாய்த்து பார்த்தாள். பிறகு மறுபக்கமும் சாய்த்து பார்த்து விட்டு முழுமையாக ஒருமுறை தன்னை பார்த்துக் கொண்டாள்.

பாலாடை நிற கேரள புடவையில் தேவதையாக இருந்தாள். புன்னைகையுடன் அதை பார்த்துக் கொண்டே இருக்க வாயில் இருந்து இரத்தம் வடிய ஆரம்பித்தது. அந்த இரத்தம் சேலையில் விழுந்து சேலையை நனைக்க ஆரம்பிக்க தலையின் ஓரத்தில் கீறல் விழுந்தது.

கீறலிலும் இரத்தம் சொட்ட முகம் கொடூரமாக மாற ஆரம்பித்தது. கன்னத்தில் அடிவாங்கிய தடம் வந்தது. புடவை முழுவதும் இரத்ததில் நனைந்து போக ஆரம்பித்தது.

அந்த முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு கோபம் அதிகமாகியது. சுற்றியும் எதாவது கிடைக்குமா என்று பார்த்தாள். அந்த கண்ணாடியை உடைத்து போடும் வேகத்தோடு அவள் தேடிக் கொண்டிருக்க கண்ணாடியில் தெரிந்த உருவம் மேலும் கொடூரமானது.

கண்ணாடி துண்டால் அவளது அழகிய கன்னங்கள் கிழிக்கப்பட ஆவேசம் அதிகமாகியது. தேடி பிடித்து அங்கிருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து விட்டாள். முகத்தில் நக கீறலுடன் கண்ணாடியின் கீறல்களும் சேர்ந்து கொடூரமாக தெரிந்த முகத்தை வெறித்தாள். பிறகு அந்த கண்ணாடியை உடைக்க முயல கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

சட்டென ஓடிச்சென்று அங்கிருந்த தலையணையில் படுத்துக் கொண்டாள். யார் வருகிறார்கள் என்று பார்ப்பதற்கு ஏற்ற போல் கையை வைத்து கண்ணை மறைத்துக் கொண்டாள்.

“பாய் கூட விரிக்காம அப்படியே படுத்துருக்கா பாரு” என்று மேகலா திட்ட ரமணி ஷ்ராவ்யாவின் அருகில் வந்து அமர்ந்தாள்.

“என்னடி ஆச்சு? ஏன் அந்த வீட்டுக்கு போன? தலையில என்ன காயம்?” என்று ரமணி கேட்க ஷ்ராவ்யா பதறி விட்டாள். கண்ணாடியில் பார்த்த காயம் தான் இருக்கிறதோ என்று தொட்டு பார்க்க இரத்தம் எதுவும் வரவில்லை.

லேசாக வீங்கி தான் இருந்தது. அதில் அவள் நிம்மதி பெருமூச்சு விட “பதில் சொல்லு.. கேட்குறாள?” என்று மேகலா கேட்டாள்.

“ப்ச்ச்.. அவள திட்டிக்கிட்டே இருக்கனுமா? போய் சாப்பாடு எதாவது கொண்டுவா. சாப்டட்டும். அப்பறம் வந்து திட்டு” என்று ரமணி மேகலாவை துரத்த ஷ்ராவ்யாவை முறைத்துக் கொண்டே சென்று விட்டாள்.

ரமணி மருந்தை எடுத்து காயத்திற்கு தடவி விட்டாள். ஷாயா எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருப்பதை பார்க்க ரமணிக்கு வருத்தமாக இருந்தது.

அவளது அம்மா அப்பா அங்கே இருக்கலாம் என்று கூறியிருந்ததால் அவள் ஏன் அங்கு சென்றிருப்பாள் என்று ரமணியால் புரிந்து கொள்ள முடிந்தது.

அதனால் கேள்வி கேட்காமல் மருந்தை தடவி விட்டாள். மேகலா உணவை கொண்டு வந்து கொடுக்க சாப்பிட்டு முடித்தாள்.

“இன்னைக்கு ரெண்டு மணி நேரம் தான் வேலை. நாங்க திரும்பி வர வர ஒழுங்கா இங்கயே இருக்குற. அத விட்டுட்டு அந்த வீட்டு பக்கம் போன ?”

மேகலா மிரட்ட ஷாயா “எங்க வேலை பார்க்குற…? அது வந்து… எங்க வேலை …” என்று திணற “நிச்சயமா அந்த பேய் வீட்டுல இல்ல” என்று பட்டென கூறினாள்.

ஷாயா எப்படி கேட்பது என்று புரியாமல் தடுமாற “ஆதீரன் சார் வீட்டுல தான் வேலை. அவருக்கு வேற அவசர வேலை வந்துடுச்சாம். உன்ன விட்டுட்டு கிளம்பிட்டார். அதுனால இந்த வீட்டுல மட்டும் பார்த்துட்டு வந்துடுறோம். நீ எங்கயும் போகாம பத்திரமா தூங்கி எந்திரி” என்று ரமணி பதில் சொன்னாள்.

ஷாயா எதோ யோசனையோடு அமர்ந்து விட ரமணி மேகலாவை அழைத்துக் கொண்டு சென்று சென்று விட்டாள். எல்லோரும் கிளம்பும் போது ஷாயா தூங்குவது போல் நடிக்க வீட்டை பூட்டி விட்டு எல்லோரும் சென்று விட்டனர்.

படுத்திருந்தவளின் உடலில் இருந்த மற்றொரு ஆன்மா அவளை விட்டு பிரிந்து எதிரில் நின்றது. ஷாயாவின் ஆன்மா முழித்துக் கொள்ள கண்ணை திறந்து பார்த்தாள்.

தலை வலி உயிர் போவது போல் இருந்தது. இரண்டு கையாலும் தலையை பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள். பார்வை வேறு கலங்கலாக தெரிய கண்ணை மூடிக்கொண்டு சில நிமிடங்கள் அமர்ந்து இருந்தாள்.

எதோ ஒவ்வாத உணர்வு உடலில் தோன்றியது. தாங்க முடியாமல் வயிற்றை பிடித்துக் கொண்டு சுருண்டு படுத்தாள். இப்போது பார்வை சரியாக, இருக்கும் இடத்தை கவனித்தாள்.

அந்த வீட்டுக்கு போனவள் எப்போது இங்கு வந்தாள் என்று நியாபகம் வரவில்லை. திரும்பி படுத்தவள் எதிரில் யாரோ நின்றிருந்ததை பார்த்து விட்டு பதறி எழுந்தாள்.

“யாரு… யாரு ‌நீங்க?” என்று பதற எதிரில் நின்றிருந்த அருவமோ அவளை பார்த்து புன்னகைத்தது.

“ஸ்ரீ….” என்று அந்த அருவம் அழைக்க “ஸ்ரீ யா? யாரு ஸ்ரீ? நீங்க யாரு னு சொல்லுங்க?” என்று கேட்டாள்.

அமர்ந்து இருந்த இடத்தை விட்டு எழ முயற்சிக்க உடல் ஒத்துழைக்கவில்லை. சுவற்றில் சாய்ந்து அமர்ந்தவளுக்கு இதயம் படுவேகமாக துடித்தது. எதிரில் நின்றிருந்த பெண் அருவத்திடமிருந்து ஒரு புதுவிதமான மணம் அந்த அறையை நிரப்பிக் கொண்டிருந்தது.

அவளை நோக்கி கை நீட்டிய அருவம் “ஸ்ரீ… என்னோட ஸ்ரீ” என்று கூறியது. ஷ்ராவ்யாவிற்கு எதுவும் புரியவில்லை. “நான் ஸ்ரீ இல்ல… ஷ்ராவ்யா” என்றாள்.

அதை கேட்டு அந்த அருவம் புன்னகைத்தது. இத்தனை அழகாக ஒரு அருவம் இருக்க முடியுமா என்று ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் ஷாயா. அதன் புன்னகை ஆளை மயக்கியது. புடவையில் பந்தமாக இருந்த அருவத்தை ஆராய்ச்சியாக பார்த்தாள்.

“நீங்க யாரு னு சொல்லலையே?” என்று தைரியத்தை கூட்டி கேள்வி கேட்க பதில் சொல்லாமல் புன்னகையுடனே நின்றிருந்தது.

“எ.. எதுக்கு வந்துருக்கீங்க? என்ன வேணும்?” என்று கேட்டாள்.

“ஒரு உதவி”

“என்ன உதவி?”

“ஜெயபிரதாபன நான் பார்க்கனும்”

“ஜெயபிரதாபனா?? அது ஆதியோட பெரியப்பா தானே ?”

“அப்படியா?” என்று ஆச்சரியமாக கேட்டது.

“ஆமா… அவர ஏன் நீங்க பார்க்கனும்? முதல்ல நீங்க யாரு‌னு சொல்லுங்க. இல்லனா வெளிய போங்க. என் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் வந்துடுவாங்க”

“நான் போகனும் தான். போற காலம் நெருங்கிடுச்சு. அதுக்கு முன்னாடி சில விசயங்கள முடிக்கனும். ஜெயபிரதாபன காட்டலனாலும் அருள்மொழிய காட்டுறியா?”

“அருள் மொழி ஆதிக்கு அப்பா… அவங்க ரெண்டு பேரையும் பார்க்க நான்‌ ஏன் உதவி பண்ணனும்? எனக்கு வேற வேலை இல்லையா? முதல்ல வெளிய போங்க”

ஷாயா சத்தம் போட்டாள்.

“சத்தமா பேசினா உன் நண்பர்கள் எல்லாம் வருவாங்கனு நினைக்கிறியா? யாரும்‌ வீட்டுல இல்ல. வேலை பார்க்க போயிட்டாங்க”

தனியாக மாட்டிக் கொண்டோம் என்று புரிய ஷாயாவின் பயம் அதிகரித்தது. அவசரமாக போனை தேடினாள். ஓரமாக இருக்க அதை கையில் எடுத்துக் கொண்டாள்.

அவளை தடுக்காமல் அருவம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. போனை எடுத்தவள் இந்திரஜித்தை அழைத்தாள்.

“ஷாயா… அந்த வீட்டுக்கு போனியே… என்ன ஆச்சு…?”

“ஜித்து… ஜித்து.. இங்க …”

“அங்க.. அங்க என்ன?”

“இங்க யாரோ இருக்காங்க.. எனக்கு பயமா இருக்கு” என்று அழுதாள்.

“ஷாயா.. ஷாயா அழுகாத.. யாரு இருக்கா என்ன விசயம் சொல்லு” என்று அவன் பொறுமையாக கேட்க அழைப்பை துண்டித்து விட்டு விடியோ கால் போட்டாள்.

“இங்க பாரு… இது தான்.. இங்க தான்..” என்று ஷாயா கை காட்ட அந்த இடத்தில் இந்திரஜித்திற்கு எதுவுமே தெரியவில்லை.

“உன்ன தவிர இன்னும் இரண்டு பேர் தான் என்ன பார்க்க முடியும் ஸ்ரீ… வீணா முயற்சிக்காத” என்று அந்த அருவம் கூற அரண்டே போனாள்.

“வேணா.. வேணா ப்ளீஸ்.. தெரியாம அந்த வீட்டுக்குள்ள வந்துட்டேன். போயிரு இங்க இருந்து.. ப்ளீஸ்.. என்ன விட்ரு” என்று கெஞ்சினாள்.

அருவம் அவளது அழுகையை கவலையோடு பார்த்து விட்டு “போயிடுறேன். ஆனா நான் கேட்ட உதவிய செய்வேன் னு வாக்கு கொடு” என்று கேட்டது.

“எப்படி? எப்படி பண்ணுறது?” என்று அவள் பரபரப்பாக கேட்க “இந்த வீட்டுல இருந்து ஜெயபிராதபன் அருள்மொழி இருக்க வீட்டுக்கு என்ன கூட்டிட்டு போ. ” என்றது.

“அது நீயா போயிக்கலாமே… வீட்டு அட்ரஸ் நான் தாரேன்”

“அட பைத்தியமே… அந்த வீட்டுக்குள்ள நான் நுழையனும் னா. நீ அந்த வீட்டுல தங்கனும். “

“அது முடியாது. ஆதி அம்மா விட மாட்டாங்க.”

“சந்தானலட்சுமிய சொல்லுறியா?”

“ஆமா…”

“அவங்கள சமாளிக்க வேண்டியது உன் பொறுப்பு. நாளைக்குள்ள என்ன அந்த வீட்டுக்குள்ள கூட்டிட்டு போயிட்டா உன்ன எதுவும் செய்ய மாட்டேன். இல்லனா… உன் உடம்புல நான் தங்குற நிலைமை வரலாம்”

“வேணாம் வேணாம்… நான் நான் கூட்டிட்டு போறேன். நான் கூட்டிட்டு போயிடுறேன். என் உடம்புல தங்க வேணாம் ப்ளீஸ்”

ஷ்ராவ்யா கையெடுத்து கும்பிட அந்த அருவம் அவளை பார்த்து புன்னகைத்து விட்டு மறைந்தது. இந்திரஜித்திற்கு அருவம் தெரியவில்லை என்றாலும் ஷ்ராவ்யா பேசுவதை கேட்டுக் கொண்டு தான் இருந்தான்.

“ஜித்து…”

“அது போயிடுச்சா?”

“ம்ம்… தப்பு பண்ணிட்டனா? என் அம்மா அப்பா வ பார்க்க ஆசை பட்டு எதுலயோ மாட்டிக்கிட்டனா? இவங்க யாருனே எனக்கு தெரியல ஜித்து.”

“நான் கிளம்பி வரேன்”

“வேணாம்”

“ஏன்?”

“நான் ஆரம்பிச்சு வச்சது நானே முடிக்குறேன். நான் திரும்பி வருவேன் னு வாக்கு குடுத்துருக்கேன். திரும்பி வருவேன். இந்த பேய் என்ன எதுவும் பண்ணாது னு நம்பிக்கை இருக்கு. “

“நிச்சயமா நான் வர வேணாமா?”

ஷாயா மறுப்பாக தலையசைக்க மனமே இல்லாமல் இந்திரஜித் சம்மதித்தான்.

அத்தியாயம் 14

வீட்டின் முன்னால் இருந்த மரத்துக்கு அடியில் ஷாயா அமர்ந்து இருந்தாள். அந்த அருவம் வந்து சென்ற பின் அவளுக்கு தனியாக வீட்டில் இருக்கவே பயமாக இருந்தது. மரத்தில் சாய்ந்து கண்ணை மூடிக் கொள்ள அந்த அருவம் பேசியதெல்லாம் நியாபகம் வந்தது.

தன்னை ஸ்ரீ என்று அழைத்ததற்கு என்ன காரணமாக இருக்கும்? யோசித்து பார்த்து தலையை பிய்த்துக் கொண்டாள். அவளுக்கு கடந்தகால நியாபகங்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை.

கனவில் கண்ட காட்சிகள் மட்டுமே அவளது நினைவில் இருக்கிறது. அதில் யாருடைய முகத்தையும் அவளால் தெளிவாக பார்க்க முடியவில்லை. ஆதீரனின் தாத்தாவை தவிர.

அவர் உயிரோடு இருந்தாலாவது கேட்கலாம். இறந்து போனவரிடம் எதை கேட்பது?

அதையெல்லாம் விட அந்த அருவம் அவளுக்கு யார்? அவர் முகத்தை பார்த்த நியாபகமே அவளுக்கு வரவில்லை. ஆனால் உரிமையாக ஸ்ரீ என்று அழைக்கிறதே…

ஒரு வேளை ஸ்ரீ அவளது முன்னால் பெயராக இருக்காலாமோ? விழுக்கென நிமிர்ந்து அமர்ந்தவள் போனை கையில் எடுத்து இந்திரஜித்தை அழைத்தாள். அவன் அழைப்பை எடுக்கவில்லை. அப்போது தான் அவனுக்கு வேலை இருப்பது நியாபகம் வர போனை கீழே வைத்து விட்டாள்.

எழுந்து குறுக்கும் நெடுக்கும் நடந்தாள். ஸ்ரீ அவளது பேராக இருக்கும் பட்சத்தில் அது தான் முழு பெயரா? இல்லை அதோடு வேறு பெயர் சேர்ந்து இருக்கிறதா?

அவளை பார்த்து என்னுடைய ஸ்ரீ என்று சொன்னது அல்லவா? அப்படி என்றால் அவர் அவளின் அன்னையாக இருக்குமா? ஆனால் அவரை பார்த்து போல் ஷ்ராவ்யாவிற்கு நியாபகமே இல்லையே.

அந்த அருவத்திடம் கேட்டு விடலாமா? அது தான் ஆதீரன் வீட்டிற்குள் அழைத்து செல்ல கூறியிருக்கிறதே. அப்படி என்றால் அது திரும்பவும் அவளை தேடி வரும். அப்போது கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

ஷாயா யோசனையோடு இங்கும் அங்கும் நடந்து கொண்டிருக்க வேலை முடித்து மற்றவர்கள் வந்து சேர்ந்தனர்.

“இங்க என்னடி பண்ணிட்டு இருக்க? ” என்று கேட்டுக் கொண்டே மேகலா வர “பேய் கூட மீட்டிங் போட்டுட்டு இருக்கேன். போய் வேலை எதாவது இருந்தா பாரு” என்று பட்டென கூறினாள்.

“அப்பாடா… அமைதி ஷாயா காணாம போயிட்டா.. அது வர சந்தோசம்” என்று கூறி விட்டு மேகலா உள்ளே சென்று விட்டாள்.

மற்றவர்கள் தங்களது வேலையை பார்க்க இந்திரஜித் அழைத்தான். போனை எடுத்துக் கொண்டு தூரமாக வந்தாள்.

தன் சந்தேகங்களை சொல்ல “இருக்கலாம். அந்த பேர எங்கயாவது கேட்ட மாதிரி இருக்கா?” என்று கேட்டான்.

“இல்லையே…”

“சரி.. நியாபகம் வரலனா விடு. நீ அந்த வீட்டுக்கு போகனும் தான?”

“அதுவும் அந்த பேய கூட்டிட்டு போகனும்”

“ம்ம்.. என்ன யோசிச்சு இருக்க?”

“எதுவுமே தோணல… சாதாரணமா போறதா இருந்தா அதுவே யோயிடும். போக முடியல னு தான் என்ன கூப்பிடுது … என்ன தான் பண்ணுறது?”

“நிறைய திங்க் பண்ணாத ஷாயா.. உன் ஹெல்த் தான் பாதிக்கும்”

“அதுக்காக யோசிக்காம இருக்க முடியல”

“ரொம்ப யோசிக்க என்ன இருக்கு? மொக்கயா ஒரு ஐடியா சொல்லுறேன் கேளு. நாளைக்கு வேலைக்கு போறல… வேலைய முடிச்சு கிளம்பும் போது மயங்கி விழுந்துடு. உன்ன அந்த வீட்டுல இருந்து திரும்ப அனுப்ப மாட்டாங்க. எப்படி ஐடியா?”

“இதுக்கு தான் டா மேகலா ஃப்ரண்ட்ஸிப்ப கட் பண்ண சொன்னேன்… அவள மாதிரியே மொக்க போடுற பாரு” என்று தலையிலடித்துக் கொண்டாள்.

“இந்த ஐடியாக்கு என்னடி குறச்சல்?” என்று இந்திரஜித் போலியாக சண்டைக்கு வர “மெண்டல் மெண்டல்… அப்படி நான் மயங்கி விழுந்து அவங்க தங்க வைக்க நினைச்சாலும் என் கூட இருக்கதுங்க விடுங்களா? தண்ணிய தெளிச்சு திரும்ப கூட்டிட்டு வந்துடாதுங்க?” என்று கேட்டாள்.

“ஆமால… அதுக்காக இதுங்கள ப்ளான்ல சேர்த்தா சொதப்பிடுங்களே”

“தெரியுதுல… அதான் பிரச்சனை. இவங்களையும் சமாளிக்கனும். ஆதீயோட அம்மாவையும் சமாளிக்கனும்”

“அந்த பேய் கிட்ட முன் ஜென்மத்துல கடன் எதுவும் வாங்கி வச்சியா? ரிஸ்க்கான வேலைய உன் தலையில கட்டியிருக்கு… ஆக்சுவலி அது பேய் தானா? பேயால முடியாதது எதுவுமே இல்ல னு கேள்வி பட்டேன்”

“ஆதீ அம்மாவ சமாளிக்குறது ஆண்டவனாலயே முடியாது.. பாவம் அந்த பேய் என்ன பண்ணும்?”

“அம்புட்டு டெரர்ரா அவங்க?”

“ஷார்ப்… பயங்கர ஷார்ப்… என் கெஸ் கரெக்ட் னா… அவங்களுக்கு நான் யாரு னு நல்லா தெரியும். விட்டா என்ன இந்த ஊர விட்டே துரத்திடுவாங்க. ஆதி சமாளிச்சு வச்சுருக்கார். வேகமா வேலைய முடிச்சுட்டு இந்த ஊர விட்டு ஓடுனா போதும் னு இருக்கு”

“பேசாம அவங்க கிட்ட நேரா கேட்டுறேன். குழப்பிக்கிட்டே இருக்க வேணாம் ல”

“சொல்ல மாட்டங்க ஜித்து… சொல்லுறதா இருந்தா என்ன பார்த்த அன்னைக்கே சொல்லி இருக்க மாட்டாங்களா?”

“அப்ப அந்த வீட்டுல நீ எப்படி தான் தங்குறது?”

“எல்லாத்துக்கும் வழி கிடச்ச மாதிரி அதுக்கும் கிடைக்கும். பார்க்கலாம்”

“நான் வேணா கிளம்பி வரட்டா? இங்க இருந்து கவல பட்டுட்டே இருக்க வேண்டியதா இருக்கு”

“வேணாம் டா. அங்க இருக்க வேலையெல்லாம் கெட்டு போகும். உன் பேஷண்ட் எல்லாம் பாவம். இங்க தான் என் கூட உன் உளவு படை இருக்கே. அதுங்க பார்த்துக்குங்க”

ஷாயா இந்திரஜித்தை சமாளித்து விட்டு வைத்தாள்.

மாலை நேரம் நண்பர்கள் மொத்தமாக அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்க ஷாயா சற்றுத் தள்ளி அமர்ந்து இருந்தாள். டேப்பில் எதையோ பார்த்துக் கொண்டு இருக்க மேகலா அருகில் வந்தாள்.

“அந்த வீட்டுக்கு ஏன் போன?” என்று நேரடியாக கேள்விக்கு வர “காரணமா தான்” என்றாள்.

“அப்படி என்ன காரணம்? பேய் ஆராய்ச்சி பண்ண கிளம்பிருக்கியே அறிவே இல்லையா?”

ஷாயா பதில் சொல்லவில்லை. காதில் விழுகாதது போல் அவள் அமர்ந்து இருக்க “வந்தமா வந்த வேலைய பார்த்தோமா கிளம்புனோமா னு இருக்கனும் னு நீ தான் சொல்லுவ… இப்ப நீயே கண்டத பண்ணிட்டு இருக்க… உனக்கு எதாவது ஆச்சுனா இந்திரஜித் சார் எங்கள தான் கேட்பார்” என்று மேகலா பல்லை கடித்துக் கொண்டு கூறினாள்.

“மேகி உனக்கு என் மேல அக்கறை இருக்கு . அது எனக்கும் தெரியும். பட் இப்போ எல்லாத்துக்கும் என்னால காரணம் சொல்ல முடியாது. நேரம் வரும்போது எல்லாத்தையும் சொல்லுறேன். கோவ படாம வேலைய பாரு “

” உனக்கு பேய் வீட்ட நினைச்சு பயமாவே இல்லையா?”

“இல்ல னு யாரு சொன்னது? நிறைய இருக்கு. பேய பார்த்தா ஹார்ட் வெடிச்சுடுற அளவு பயம் இருக்கு. அதுக்காக எடுத்த காரியத்த முடிக்காம விட முடியாதே. தண்ணிய பார்த்து பயந்துட்டே இருந்தா நீச்சல் எப்ப கத்துக்குறது?”

“உதாரணம் ரொம்ப பழசா இருக்கு டி”

“அப்ப ரத்தத்த பார்த்து பயந்தா கொலை எப்படி பண்ணுறது?… இது கரெக்ட்டா இருக்கா?”

“உன்னோட பெரிய கொடுமை டி. இனி நீ அந்த வீட்டுக்கு போக கூடாது. அவ்வளவு தான் சொல்லுவேன்”

“போவேன். ஆதீரன் சார தவிர யாராலையும் அத தடுக்க முடியாது. யு நோ.. எங்க ரெண்டு பேரால மட்டும் தான் அந்த வீட்டுக்குள்ள காலெடுத்து வைக்கவே முடியும். அவர் இல்லாத வர நான் அந்த வீட்டுக்குள்ள ஈசியா போகலாம்”

மேகலா வாயை திறந்து திட்ட ஆரம்பிக்கும் முன் வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ஆதீரன் ஷாயாவை தேடி வந்திருந்தான்.

மேகலா அவனை பார்த்ததும் யோசனையோடு நின்று விட ஷாயா அவனிடம் சென்றாள்.

“இப்ப எப்படி இருக்கு?” என்று அவன் கேட்க “என்ன இது? என்ன ஆச்சு?” என்று ஷாயா பதறினாள்.

ஆதீரன் உள்ளங்கையில் கட்டு இருந்தது. அதை பார்த்து விட்டு தான் பதறினாள்.

“ஒரு ஆக்ஸிடென்ட். ஒரு செகண்ட் கேப்ல தப்புச்சுட்டேன். “

“எங்க போயிருந்தீங்க?”

“மில் வாட்ச்மேன் தலையில மரம் ஒடிஞ்சு விழுந்துடுச்சு. அவர பார்க்க தான் காலையில கிளம்பி வந்தேன். அப்ப தான் நீ அந்த வீட்டுக்குள்ள மயங்கி கிடந்தத பார்த்தேன். உன்ன கூட்டிட்டு வந்து இங்க விட்டுட்டு திரும்ப போனேன். அவர பார்த்துட்டு வாசலுக்கு வரும் போது தான் இப்படி.

ரிப்பேர் ஆகி நிறுத்தி இருந்த கார்… டயர் ல கல்லு வச்சுருந்துருப்பாங்க போல. அத யாரோ தட்டி விட்டு என்ன இடிக்க வந்துச்சு”

“என்னது?? அப்புறம் என்ன பண்ணீங்க?”

“சுத்தி இருக்கவங்க சத்தம் குடுத்ததால தள்ளிட்டேன். ஆனா நிக்க முடியாம கீழ விழுந்து கல்லு குத்திடுச்சு”

“நாராயணா… பார்த்து இருங்க சாரே… டாக்டர் என்ன சொன்னாங்க?”

“சரியா போயிடும் னு சொல்லி இருக்காங்க. காயம் ஆறுற வர கைய யூஸ் பண்ண முடியாது”

ஷாயா அந்த கையை பார்த்து விட்டு தலையாட்ட “என்ன விடு.. நீ ஏன் அங்க போன?” என்று கேட்டான்.

“போகனும் னு தோனுச்சு”

“இப்படி எல்லாம் பதில் சொல்லி என் கிட்ட தப்பிக்க முடியாது… ஏன் போன ? காரணம் தெளிவா வரனும்”

‘ப்ச்ச்.. சொல்லுறதா இருந்தா சொல்லிடுவேன் சாரே… ‘ என்று நினைத்துக் கொண்டவள் பதில் பேசவில்லை.

“நீ அங்க போக மாட்டேன் னு தான சொல்லி இருந்த? திடீர் னு போயிருக்க னா எதோ இருக்கு… “

“ஆமா சாரே… ஜித்து தான் போ னு சொன்னான். போனேன். காரணம் கேட்காதீங்க. இப்போதைக்கு என்னால சொல்ல முடியாது. நேரம் வந்தப்போ நானே சொல்லுவேன்”

ஷாயா படபடவென பேசி விட்டு அமைதியாக ஆதீரன் அவளை கூர்ந்து பார்த்தானே தவிர பதில் எதுவும் சொல்லவில்லை. ஷாயாவின் நண்பர்கள் அங்கு வந்து விட எல்லோரும் ஆதியின் காயத்தை பற்றி விசாரித்தனர்.

எல்லோரிடம் பேசி விட்டு ஷாயாவிடம் சொல்லிக் கொள்ளாமலே கிளம்பி சென்று விட்டான். அவனது கோபத்தை வேண்டுமென்றே கிளறி விட்டு விட்டு அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ஷாயா.

அவன் அவளை விட்டு தள்ளி இருந்தால் தான் அவளால் நிம்மதியாக எதையும் செய்ய முடியும் என்று நினைத்துக் கொண்டாள். நாம் நினைப்பதை காலம் என்று தான் நடத்தி இருக்கிறது? ஷாயா போட்ட கணக்கை சந்தானலட்சுமி முறியடிப்பார் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை . ஆனால் அது தான் நடந்தது.

அன்றைய நாளை யோசனையிலேயே கடந்து விட்டு அடுத்த நாள் வேலையை கவனிக்க கிளம்பி சென்றாள். மாடியில் வேலைகள் எல்லாம் கிட்டதட்ட முடிந்து விட்டது. பேய் வீட்டின் அருகில் உள்ள வீட்டில் வேலைகள் முடிந்து விட எல்லோரும் ஆதீரனின் வீட்டில் தான் இருந்தனர்.

ஜெயராம் கல்லூரிக்கு கிளம்பி சென்று விட ஷாயாவிற்கு நிம்மதியாக இருந்தது. வீட்டில் எல்லோரும் வேலை செய்து கொண்டிருக்க ஜெயபிரதாபன் பொன்னாம்பாள் இருவரும் அமுதாவை அழைத்துக் கொண்டு எதோ வேலையாக கிளம்பிச் சென்று விட்டனர்.

ஆதீரன் காலையிலிருந்து கண்ணிலே படவில்லை. சந்தானலட்சுமி தான் வீட்டு ஆளாக அமர்ந்து அவர்களை கண்காணித்துக் கொண்டிருந்தார்.

ஷாயா சிந்தாமணியுடன் பேசிக் கொண்டே சமையலறையை பார்த்தாள். முன்பு நிற்பதற்கு கூட இடமில்லாமல் இருந்த இடம் இப்போது பெரிதாகவும் அழகாகவும் மாறி இருந்தது.

“அக்கா.. இங்க என்ன கட்டுறாங்க? கேட்டா யாருமே பதில் சொல்லல… நீங்களும் வரல” என்று சிந்தாமணி காட்டிய இடத்தில் ஷாயா வந்து நின்றாள்.

சமையலறைக்கு அருகில் இருந்த வீட்டின் பின் பாதையை பெரிதாக்கி போர்டிக்கோ போல் அமைத்து இருந்தனர்.

“உன்னோட முற்றம் போகுது னு கவல பட்டியே… அதுக்கு தான் இது. இங்க உட்கார்ந்து நீ சமையல் வேலைய பார்க்கலாம். மழை வந்தா ரசிக்கலாம். நிலாவ பார்க்கலாம். என்ன வேணா பண்ணலாம்.

இங்க பெயிண்ட் அடிச்சு முடிச்சதும் ஒரு டேபிள் ரெண்டு சேர் போட சொல்லி இருக்கேன். ஃப்ரியா காத்து வாங்கிட்டே உன் நிலாவ ரசிச்சுக்கோ”

சிந்தாமணிக்கு சந்தோசத்தில் பேச்சே வரவில்லை. தூண்களோடு பார்க்க அந்த இடம் அத்தனை அழகாக இருந்தது.

“இத ஏன் இங்க வச்சேன் தெரியுமா? வீட்டு முன்னாடி இருக்கப்போ யாராவது வந்து உன்ன டிஸ்டர்ப் பண்ணிட்டே இருப்பாங்க. இங்கனா யாரும் உன்ன எதுவும் சொல்ல முடியாது. இங்க உட்கார்ந்து நிம்மதியா எவ்வளவு நேரம் வேணும்னாலும் படிக்கலாம்”

சிந்தாமணி அவள் கையை பிடித்துக் கொண்டு குதித்தாள்.

“தாங்க் யூ கா… அய்யோ நிஜம்மாவே இப்படி ஒரு இடத்த கட்டுவீங்க னு எதிர்பார்க்கவே இல்ல”

“நான் சொன்னா அத செய்வேன். இது தனி செலவெல்லாம் கிடையாது. வீட்டுக்கு ஆகுற செலவுல மிச்சமானது வச்சு தான் பண்ணிருக்கேன். யாரும் கேள்வி கேட்க முடியாது”

ஷாயாவின் இந்த செயல் சிந்தாமணிக்கு அவ்வளவு பிடித்து போனது. அந்த வீட்டில் சிந்தாமணி வேலை செய்பவள் தான். ஆனால் முழு நேர பணியாள் இல்லை. அவளது படிப்பு செலவில் பாதியை ஆதீரன் தான் கவனித்துக் கொள்கிறான்.

கதிரவனின் தங்கை என்பதால் வந்த அக்கறை அது. அவளுக்கு தான் உதவியை சும்மாவே இருந்து பெற்றுக் கொள்ள பிடிக்கவில்லை. வேலை செய்வேன் என்று கூறி விட்டாள்.

கதிரவனும் ஆதீரனும் மறுத்தும் கூட அவள் கேட்கவில்லை. இங்கு அவளது அத்தை சமையல் வேலை செய்வதால் அவருக்கு உதவுகிறேன் என்று கிளம்பி வந்து விடுவாள்.

ஆதீரன் மேல் அவளுக்கு கடல் அளவு மரியாதையும் பக்தியும் உள்ளது. இப்போது ஷாயாவும் அதே இடத்திற்கு வந்து விட்டாள். வேலை செய்பவள் ஒன்றை கேட்டு அதை செய்து கொடுக்க வேண்டும் என்றால் ஷாயாவின் குணம் எப்படி பட்டதாக இருக்க வேண்டும்.

கண்கள் பனிக்க நன்றி கூறி விட்டு அந்த இடத்தையே சுற்றி வந்தாள். ஷாயா அவளை அங்கே விட்டு விட்டு வீட்டின் பின்னால் வைக்கப்படும் செடிகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

மாடியில் வைக்கப்படும் செடிகளை எடுத்து போக சொல்லி விட்டு நோட்டில் எதையோ எழுதிக் கொண்டிருந்தாள். சந்தானலட்சுமி அங்கு வர அவள் அதை கவனிக்கவில்லை.

தன் வேலையில் தீவிரமாக இருந்தவள் எல்லோரிடமும் வேலை சொல்லிக் கொண்டிருந்தாள்.

“இங்க ஏன் இத்தனை தொட்டி இருக்கு? “

“இது மொட்ட மாடியில வைக்குறதுக்கு மேடம்”

“எத்தனை இருக்கு?”

“இருபது”

“அத மேல எடுத்துட்டு போக சொல்லுங்க . இங்க வைக்குற ஐம்பது தொட்டி எங்க?”

“அங்க இருக்கு மேடம்”

“ஓகே” என்று கூறி நோட்டில் எதையோ குறித்துக் கொண்டாள்.

பிறகு அங்கிருந்தவர்களை அழைத்து செடிகளை எப்படி நடவேண்டும் என்று கூறினாள். அவர்கள் கேட்டுக் கொண்டு அங்கிருந்து சென்று விட ஆதீரன் அவன் அன்னையை தேடி அங்கு வந்தான்.

ஷாயா அவன் வருவதை கவனித்தாலும் எழுதுவது போல் குனிந்து கொண்டாள். அவனும் அவளிடம் நிற்காமல் நேராக அன்னையிடம் சென்றான். அவரிடம் எதையோ பேசிவிட்டு திரும்பி வந்தவன் ஷாயாவை பார்த்துக் கொண்டே அவள் அருகில் வந்தான்.

ஷாயாவோ அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. தீவிரமாக எழுதுவது போல் நடித்துக் கொண்டிருந்தாள். அவளருகில் வந்தவன் ஒன்றுமே பேசாமல் அவளை கடந்து நடக்க இழுத்து பிடித்த மூச்சை அப்போது தான் வெளி விட்டாள்.

அவளை கடந்து விட்ட சந்தோசத்தில் திரும்பி பார்த்தாள். ஆதீரன் நடந்து கொண்டிருக்க மாடியில் அடுக்கிக் கொண்டிருந்த பூ தொட்டி கீழே விழ ஆரம்பித்தது.

கீழே விழப்போகிறது என்று அங்கு வேலை செய்பவன் கத்தினான். அது ஆதீரன் காதில் விழவில்லை. அவனது எண்ணத்தில் ஷாயா தான் சுழன்று கொண்டிருந்தாள். அவளை பற்றியே நினைத்துக் கொண்டு நடந்தவன் சுற்றுபுறத்தை கவனிக்கவில்லை.

வேலை செய்பவன் கத்தியதை ஷாயா சந்தானலட்சுமி இருவருமே கவனித்து விட்டனர். சந்தானலட்சுமி வரும் முன் ஷாயா வேகமாக ஓடிச் சென்று ஆதீரனை தன் பக்கம் இழுத்துக் கொண்டு சென்று விட , ஆதீ நடந்த இடத்தில் பத்து தொட்டிகள் மொத்தமாக விழுந்து சிதறியது.

சிதறிய துண்டு கன்னத்தில் பட்டு கிழித்ததை கூட உணராமல் ஷாயா அதிர்ந்து போய் நின்று இருந்தாள்.

ஆதீரனின் கை அவளை வளைத்து பிடித்து இருக்க பயத்தில் அவனோடு ஒட்டி நின்றாள். பத்து தொட்டிகளும் மண் நிரப்பப்படாமல் வைக்கப்பட்டிருந்தது.

அதனால் விழுந்த தொட்டிகள் அந்த இடத்தில் சிதறிக் கிடந்தது. சந்தானலட்சுமி வேகமாக அவர்கள் அருகில் வந்து நின்றார்.

“ரெண்டு பேருக்கும் அடி படலயே?” என்று கேட்டவர் ஷாயாவின் கன்னத்தின் காயத்தை பார்த்தார். ஆதீரன் முழுதாக சுய உணர்வுக்கு வந்து ஷ்ராவ்யா விட்டு தள்ளி நின்றான்.

“மருந்து எடுத்துட்டு வா ஆதி?” என்று கூற அங்கிருந்து வேகமாக சென்று விட்டான்.

ஷாயா அந்த தொட்டிகளையே பார்த்துக் கொண்டு நிற்க சந்தானலட்சுமி, “அந்த வீட்டு கதவ திறந்திட்டியா?” என்று கேட்டார்.

ஷாயா அதிர்ந்து போய் திரும்பி பார்த்தாள். அவளை தீர்க்கமாக பார்த்த சந்தானலட்சுமி “சொல்லு.. திறந்திட்டியா?” என்று அழுத்தமாக கேட்டார்.

ஷாயா பயத்துடன் அதிர்ச்சியுடனும் “ஆமா” என்றாள். அவள் வார்த்தையை முடிப்பதற்குள் பளாரென கன்னத்தில் அறைந்து விட்டார்.

அடிவாங்கிய கன்னத்தை பிடித்து கொண்டு ஷாயா அதிர்ந்து போய் நின்றாள்.

“பைத்தியமா நீ? என்ன காரியம் பண்ணி வச்சுருக்க தெரியுமா?” என்று கேட்டு அவள் தோள்களை பிடித்து குலுக்கினார். முதலில் தொட்டிகள் விழுந்த அதிர்ச்சி… அடுத்து அறை வாங்கிய அதிர்ச்சி என்று அவள் உறைந்து போய் நிற்க… கன்னத்தில் வழிந்த இரத்தமோ… சந்தானலட்சுமி குலுக்கியதால் வலித்த தோளோ அவள் கருத்தில் பதியவே இல்லை.

சந்தானலட்சுமி அவளை கோபத்தில் பிடித்து தள்ள தடுமாறி நின்றாள். அறை வாங்கிய ஒரு கன்னம் சிவந்து போயிருக்க மறு கன்னம் இரத்த துளிகளால் சிவந்து கிடந்தது.

அவளை விட்டு விட்டு சந்தானலட்சுமி குறுக்கும் நெடுக்கும் நடந்தார். அவர் தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டிருக்க ஷாயா கண்கலங்கி தலை குனிந்து நின்றாள்.

நடந்து தொண்டிருந்தவர் அவள் முன்னால் வந்து நின்று “இங்க பார். இனிமே நீ ஆதிய விட்டு ஒரு அடி கூட நகர கூடாது. இருபத்தி நாலு மணி நேரமும் அவன் கூட தான் இருக்குற. புரியுதா?” என்று கேட்டார்.

“ஆன்..?” என்றவளுக்கு தன் காதின் மீது சந்தேகம் வந்தது. ‘அடி வாங்குனதுல காதுல எதுவும் பிரச்சனை வந்துடுச்சா?’ என்று யோசித்தாள்.

“புரியுதா இல்லையா?” என்று அழுத்தி கேட்க ஷாயா திருதிருவென முழித்தாள். ஆதீரனோடு ஷாயாவின் நண்பர்களும் வேகமாக அங்கு வர சந்தானலட்சுமி பேசுவதை விட்டு விட்டு அவளை முறைத்துக் கொண்டிருந்தார். ஷாயா உலகம் தலை கீழாக சுற்றுகிறதா என்ற சந்தேகத்தோடு அவரை பார்த்து முழித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

அத்தியாயம் 15

ஆதீரனுடன் வந்த ஷாயாவின் நண்பர்கள் அவளது கன்னத்தை பார்த்து பதறினர்.

“ரெண்டு கன்னமும் சிவந்து போய் கிடக்கு” என்று மேகலா தொட வர ஷாயா அவளது கையை பிடித்து தடுத்து விட்டாள். ரமணி இரத்தம் வழிந்த கன்னத்திற்கு மருந்து போட்டு விட்டாள்.

ஆதீரன் எதுவுமே பேசவில்லை. எங்கோ பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். சந்தானலட்சுமி தீவிரமான யோசனையில் இருந்தார்.

ரமணி இரத்தம் வழிந்த கன்னத்தை விட்டு மறு கன்னத்திற்கு மருந்து போட போக அவளையும் ஷாயா தடுத்து விட்டாள்.

“இதுவும் ஏன் இப்படி வீங்கி இருக்கு?” என்று கேட்க ஷாயாவிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை.

“நீ மருந்த குடுமா. நான் பார்த்துக்குறேன். நீங்க எல்லாம் போய் வேலை பாருங்க” என்று சந்தானலட்சுமி கூற “நான் இருக்கனே” என்றாள் மேகலா.

“பரவாயில்ல. நான் பார்த்துக்கிறேன். வேலைய பாருங்க. ஏன் தொட்டி கீழ விழுந்துச்சு னு பாருங்க. சிந்தாமணி கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா” என்று எல்லோருக்கும் ஒரு வேலையை கொடுத்தார்.

மற்றவர்களுக்கு ஷாயாவை விட்டு செல்ல மனமில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் அங்கிருந்து அகன்றனர். சிந்தாமணி தண்ணீரை கொடுக்க வாங்கி குடித்து விட்டு அமைதியாகவே அமர்ந்து இருந்தாள் ஷாயா.

எல்லோரும் சென்று விட ஷாயா சந்தானலட்சுமி ஆதீரன் ,மூவர் மட்டுமே அந்த இடத்தில் இருந்தனர். 

“ஆதி தேனி தான போற?”

“ஆமா மா”

“இந்த பொண்ணயும் கூட கூட்டிட்டு போ”

“வாட்? என்ன சொன்னீங்க?”

ஆதீரன் அன்னையிடம் கேள்வி கேட்டு விட்டு ஷாயாவை திரும்பி பார்த்தான். அவளோ ஜடமாக அமர்ந்து இருந்தாள். அடுத்தடுத்து நடந்த நிகழ்ச்சிகளில் அவள் உணர்வுகள் மரத்து போயிருந்தது. அசையாமல் பிடித்து வைத்த சிலையாய் அமர்ந்து விட்டாள்.

“கூட்டிட்டு போ. டாக்டர் கிட்ட காட்டி ஊசி எதாவது போட்டு கூட்டிட்டு வா”

“ம்மா..”

“செய்வியா மாட்டியா?”

“ப்ச்ச்.. வர சொல்லுங்க” என்று கூறிவிட்டு அவன் நடக்க சந்தானலட்சுமி தன் மகனை ஒரு முறை திரும்பி பார்த்தார். பிறகு ஷாயாவை பார்த்து “கிளம்பு” என்றார்.

அவள் நிமிர்ந்து அவரை கேள்வியாக பார்க்க ‘போ’ என்பது போல் தலையசைத்தார். ஷ்ராவ்யா போனை எடுத்துக் கொண்டு ஆதீரனை பின் தொடர்ந்து நடந்தாள்.

ஆதீரன் காரில் அமர்ந்து அவளுக்காக காத்திருக்க நேராக வந்தவள் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டாள். ஆதீரனின் கோபம் நன்றாகவே எண்ணெய் ஊற்றி வளர்க்கப்பட்டது.

“இவ பேசுனதுக்கு நான் தான் கோவ படனும். என்னமோ நான் தப்பு பண்ண மாதிரி பிகேவ் பண்ணுறத பாரேன்”என்று கடுப்பாக நினைத்துக் கொண்டு காரை எடுத்தான்.

மருத்துவமனை சென்று சிகிச்சை பார்க்கும் வரையிலும் கூட அவன் எதுவுமே பேசவில்லை. அவளுக்கு சிகிச்சை அளிக்கும் போது ஆதீரனும் உடன் வர ஷாயா மறுத்து விட்டாள்.

“வெயிட். நான் பார்த்துக்குறேன்” என்று அவன் முகத்தை பார்க்காமல் கூறி விட்டு சென்று விட்டாள்.

அவனும் இருந்த கோபத்தில் திரும்பி சென்று விட்டான். நேற்று அடிபட்டவரை பார்த்து விட்டு வர…

உள்ளே இருந்த மருத்துவர் பார்த்த உடனே அடி வாங்கியதை கண்டு பிடித்து விட்டார்.

“இதென்ன கன்னத்துல அடி வாங்குன தடம்? யாரு அடிச்சது? இப்ப போனாரே அவரா?” என்று அவர் கேட்க ஷாயாவின் முகத்தில் புன்னகை வந்தது.

வேகமாக இல்லை என்று தலையாட்டினாள். அந்த தலையாட்டலும் சிரிப்பும் தவறாக எதுவும் இல்லை என்பதை உணர்த்தி விட அந்த பெண் மருத்துவர் தன் கோபத்தை கை விட்டார்.

மருத்துவம் பார்த்து விட்டு வெளியே வரும் வரையிலுமே ஷாயாவின் புன்னகை குறையவில்லை. அவள் தன் யோசனையில் வர‌ அவளை விசித்திரமாக பார்த்துக் கொண்டு ஆதீரன் வந்து நின்றான்.

“என்ன சொன்னாங்க?” என்று கேட்க மருந்தை காட்டி‌ மருத்துவர்‌ கூறியதை கூறினாள்.

“சரி போகலாமா?” என்று கேட்டு வெளியே அழைத்து வந்தான்.

“சாப்ட்டு போகலாமா?”

“வேணாம். நான் அங்க போயே சாப்ட்டுக்குறேன்”

அதற்கு மேல் ஆதி எதுவும் கேட்கவில்லை. மீண்டும் அமைதியான பயணம். இம்முறையும் பின்னால் தான் அமர்ந்து கொண்டாள். மனம் சற்று தெளிந்து இருக்க நடந்தவைகளை பற்றி சிந்திக்க தனிமை தேவை பட்டது.

கண்ணை மூடி ஒவ்வொன்றாக யோசித்து பார்த்தாள். சந்தானலட்சுமி அடித்ததில் நியாயம் இருப்பது போல் தான் அவளுக்கு தோன்றியது.

அவளை யாரும் கை நீட்டி அடித்தது இல்லை. முதல் அறை இவரிடம் தான் வாங்கி இருக்கிறாள். அதில் அவளுக்கு கோபம் எல்லாம் இல்லை. செய்ய கூடாத தவறை செய்தது போல் முதலிலேயே மனம் உறுத்திக் கொண்டு தான் இருந்தது.

சந்தானலட்சுமியின் கோபம் குற்ற உணர்வில் தவித்த அவளது மனதை சற்று சாந்தப் படுத்தியது என்பது தான் உண்மை. இத்தனை வருடங்களில் ஆதீரனை அந்த வீட்டிற்குள் அனுப்பாமல் பூட்டி வைத்திருப்பதை பற்றி அவள் முதலிலேயே யோசிக்காமல் விட்டு விட்டாள்.

அந்த வீடு திறக்கப்பட்டால் ஆதீரனுக்கு தான் ஆபத்து என்று அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். நேற்று காரில் அடிபட இருந்தான். இன்று பூந்தொட்டிகள் விழுந்து விட்டது.

எந்த அன்னை தான் தன் மகனின் உயிரை பணயம் வைத்தவளை சும்மா விடுவார்கள்?.

ஆனால் உண்மையில் அந்த அருவத்தினால் ஆதீரனுக்கு ஆபத்து வருமா? அது அவளிடம் பேசும் போது ஆதீரனை பற்றி கேட்கவே இல்லையே. அப்புறம் எதற்கு ஆதியின் பின்னால் சுற்ற வேண்டும்?

அப்படியே கொல்ல வேண்டும் என்றால்… ஷாயாவின் உடலில் புகுந்துமே ஆதீரன் தான் முதலில் அதை சந்தித்தான். அங்கு அந்த வீட்டிலேயே வைத்து கொன்று இருக்கலாம் அல்லவா?

அதை விட்டு விட்டு இப்போது ஏன் துரத்த வேண்டும்? ஆதீரனை கொல்வதால் அதற்கு என்ன லாபம்?

ஒரு படத்தில் வருவது போல் அந்த வீட்டின் உரிமையாளர்களை எல்லாம் இந்த பெண் ஆவி கொல்ல நினைக்கிறதா என்ன?

எல்லாவற்றையும் குழப்பி யோசித்துக் கொண்டே இருந்தவள் ஒரு கட்டத்தில் தூங்கி விட்டாள். ஆதீரன் அவள் தூக்கம் கலையா வண்ணம் சீராகவே காரை ஓட்டினான்.

வீட்டுக்கு வந்து இறங்கும் போது எல்லோரும் சாப்பிட்டு முடித்து மீண்டும் வேலை செய்ய ஆரம்பித்து இருந்தனர். காரை நிறுத்தியவன் பின்னால் கதவை திறந்து ஷாயாவை எழுப்ப, அவளோ அவன் மேல் சாய்ந்து தூக்கத்தை தொடர்ந்தாள்.

ஆதீரன் தான் அதிர்ந்து என்ன செய்வது என்று புரியாமல் அப்படியே‌ நின்று விட்டான். நல்ல வேளையாக அங்கு யாரும் இல்லை. இருந்து இதை பார்த்தால் என்ன நினைப்பார்கள்?

தன் மேல் சாய்ந்து இருந்தவளை தூக்கம் கலையாமல் மீண்டும் காரிலேயே படுக்க வைத்தான். ஆனால் ஷாயாவிற்கு முழிப்பு வந்து விட்டது.

“ஷ்ராவ்யா… எந்திரி.. ” என்க நன்றாக விழித்து எழுந்து விட்டாள். தூக்கத்தில் அவள் செய்த காரியத்தை அறியாமல் ஆதீரனிடம் கோபம் போல் இறங்கி உள்ளே சென்று விட்டாள்.

மாலை வேலை முடிந்து எல்லோரும் கிளம்பும் போது “நீ எங்க கிளம்புற?” என்று சந்தானலட்சுமி ஷாயாவிடம் கேட்டார்.

“வீட்டுக்கு….”

“வேணாம். இங்கயே இரு”

“என்னது??”

ஷ்ராவ்யா அதிர்ந்து தான் போனாள். அவள் இந்த வீட்டில் தங்குவதா? கதவை திறந்ததற்கே பளாரென அறை விழுந்தது. அவள் இங்கு தங்கி அந்த அருவத்தை வீட்டுக்குள் அழைத்து வந்து விட்டால் கொலையே செய்து விட மாட்டாரா?

“வேணாம். அங்க இருந்தா தான் அடுத்த வேலைய பத்தி பேச முடியும்”

“நீ பண்ணிருக்க வேலைக்கு உன்ன இன்னும் எதாவது பண்ணனும் னு தோனுது… நீ உன் வேலைய பத்தி பேசிட்டு இருக்க”

“அதுக்கு தான வந்துருக்கேன்”

“அப்ப அத மட்டும் செய்ய வேண்டியது தான?”

ஷாயா வாயை மூடிக் கொண்டாள். இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாதே…

“உன் ஃப்ரண்ட்ஸ் கிட்ட சொல்லு. இங்க தான் தங்க போற னு. அவங்கள எப்படி சமாளிப்ப னு எல்லாம் எனக்கு தெரியாது. ஆதி இங்க தான் இருக்க போறான். நீயும் இங்க தான் இருக்கனும். அவனுக்கு மட்டும் எதாவது ஆச்சு… ” என்று சுட்டு விரல் நீட்டி எச்சரித்தார்.

‘ஓ மை நாராயணா… எங்க வந்து மாட்டி விட்டு வேடிக்கை பார்க்குறீங்க? ப்ளீஸ் சேவ் மீ’ என்று வேண்டிக் கொண்டாள்.

அவளது நண்பர்கள் வந்து அவளை அழைக்க “நான் இனிமே இந்த வீட்டுலயே இருக்கலாம் னு நினைக்குறேன். கடைசி நேர வேலை எல்லாத்தையும் பார்க்க சரியா இருக்கும்” என்று வாய்க்கு வந்ததை உளறினாள்.

“சரி இரு… உன் திங்க்ஸ் எல்லாம் நாங்க பேக் பண்ணி அனுப்புறோம். எதுனாலும் போன்ல பேசிக்கலாம்” என்று மேகலா உடனே சம்மதித்தாள்.

ஷ்ராவ்யாவிற்கு இப்போது சந்தேகம் உறுதியாகி போனது. ‘நம்ம காதுல நிச்சயமா எதோ பிரச்சனை இருக்கு’ என்று நினைத்துக் கொண்டாள்.

மற்றவர்கள் எதோ சொல்ல வர மேகலா அவர்களை பேசவிடாமல் அழைத்துச் சென்று விட்டாள்.

வேலை முடிந்து எல்லோரும் சென்றிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் வீட்டுக்கு வந்த ஆதீரன் ஷாயாவை பார்த்து விட்டு குழம்பினான்.

“கிளம்பல?”

“இனிமே இந்த பொண்ணு இங்க தான் இருப்பா” என்று சந்தானலட்சுமி கூறினார்.

“என்னது?? ஏன்??”

“நான் இருக்க சொல்லி இருக்கேன்”

“ம்மா… இவங்க ஏன் இங்க இருக்கனும்? முக்கியமா இவங்க ஃப்ரண்ட்ஸ் ஒத்துக்க மாட்டாங்க”

“அவங்க கிட்டலாம் சொல்லியாச்சு. அவங்களும் கிளம்பி போயாச்சு. மேல இருக்க ஒரு ரூம்ல தங்கட்டும்.”

ஆதீரனுக்கு இது பிடிக்கவில்லை. அவன் இரண்டு நாட்களாக தான் இந்த வீட்டில் தங்குகிறான். ஷாயாவும் இந்த வீட்டில் தங்க போகிறாளா?.

அவன் அன்னையோடு இருக்கும் போது ஷாயா இங்கு தங்கி இருந்தால் அவன் அதை நினைத்து கவலை பட்டு இருக்க மாட்டான்.

அவளோடு நட்பாக இருக்கும் போது தங்கி இருந்தாலும் பாதகமில்லை. ஆனால் இப்போது நிலைமையே வேறாக இருக்கிறதே. இருவரும் கோபத்துடன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருக்க ஒருவர் மற்றவர் கண் முன் நடமாடுவது எப்படி?

ஆதீரன் வேகமாக வெளியேற மேகலா அவனை போனில் அழைத்தாள். எடுத்து காதில் வைத்தான். சில நிமிடங்களில் உள்ளே வந்தவன் ஷ்ராவ்யாவை முறைத்துக் கொண்டே படியேறி அறைக்குள் சென்று மறைந்தான்.

‘இப்ப எதுக்கு இந்த முறைப்பு?’ என்று யோசித்தாலும் அமைதியாக அமர்ந்து இருந்தாள். அவளது உடைமைகளை அருண் கொண்டு வந்து கொடுக்க அவளுக்கான அறைக்குள் சென்று அடைந்தாள்.

இரவு எட்டு மணி…

ஷாயா அறையில் அமர்ந்து தீவிரமாக எதையோ எழுதிக் கொண்டிருந்தாள். ஆதீரன் கதவை தட்டி விட்டு உள்ளே வந்தான். அவன் உள்ளே வரும் அதே நேரம் ஷாயாவின் போன் இசைத்தது. அதை எடுத்து காதில் வைத்தவள் ஆதீரனை அமரும் படி சைகை காட்டி விட்டு பேச ஆரம்பித்தாள்.

ஆதீரன் உட்காரவில்லை. நாற்காலியில் கையை வைத்துக் கொண்டு அவளை தான் வேடிக்கை பார்த்தான். பேசி முடித்தவள் போனை மேசையில் வைத்து விட்டு எழுதிக் கொண்டிருந்ததை மூடி வைத்தாள்.

“சொல்லுங்க என்ன விசயம்?”

“நீ தான் சொல்லனும். இங்க ஏன் தங்கி இருக்க னு?”

“உங்க அம்மா தான் தங்க சொன்னாங்க. அவங்க கிட்ட கேட்டுக்கோங்க”

“அது எனக்கு தெரியும். நீ ஏன் தங்கின னு காரணம் சொல்லு”

“அவங்க சொன்னாங்க னு இருக்குறேன்”

அவளை நெருங்கி வந்தவன் “இத அப்படியே நான் நம்பிடனும் இல்லையா?” என்று கேட்டான்.

ஷாயா பதில் சொல்லாமல் வேறு பக்கம் பார்த்தாள்.

“இங்க இருக்கேன். இங்க பாரு” என்று கூறி அவள் கண் முன்னால் சொடக்கிட்டான். அவனை திரும்பி பார்க்காமல் அங்கிருந்து அகல பார்த்தாள்.

அவளுக்கு பின்னால் இருந்த மேசையில் இரண்டு கையையும் அடித்து ஊன்றினான் ஆதீரன். அவன் அடித்த அடியில் மேசை ஒரு நொடி ஆடி அடங்கியது. அந்த சத்தத்தில் ஷாயா கண்ணை மூடித் திறந்தாள்.

அவனது இரண்டு கைகளுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு நிற்பது வேறு அவஸ்தையாக இருந்தது. இப்படி அருகில் நின்று கொண்டு கேள்வி கேட்டால் எப்படி பொய் சொல்வது?

“அந்த வீட்டுக்கு ஏன் போன னு கேட்டேன்… காரணம் சொல்லாம இந்திரஜித் மேல பழிய போட்ட. இப்போ இங்க நீ இருக்கதுக்கு காரணம் கேட்டா… அம்மா மேல பழிய போடுற…

இப்ப எல்லாம் உன் நடவடிக்கை ரொம்ப மாறி இருக்கு… என்ன காரணம் னு எனக்கு தெரிஞ்சாகனும்”

ஆதீரனின் கேள்வி நேராக அவளது காதுக்குள் நுழைந்து மூளை இதயம் இரண்டையும் குடைந்தது. அவன் முகத்தை அருகில் பார்த்துக் கொண்டு அவளால் சமாளிக்க முடியாது.

உடனே பின்னால் இருந்த மேசையில் ஏறி அமர்ந்து இருவருக்குமான இடைவெளியை அதிகரித்தாள். அவனை விட்டு தள்ளிய பிறகே அவளுக்கு நிதானம் வந்தது.

நேராக முகத்தை பார்த்தவள் “உங்க வீட்டுல வேலை பார்க்க தான் சாரே வந்தேன். அத பத்தி கேளுங்க பதில் சொல்லுறேன். எங்க போறேன் எங்க வரேன் எதுக்கு தங்குறேன் னு ஆராய்ச்சி பண்ணாதீங்க. அந்த வீட்டுக்கு போக சொன்னது ஜித்து தான். இந்த வீட்டுல இருக்க சொன்னது உங்க அம்மா தான். இத மட்டும் தான் என்னால இப்போதைக்கு சொல்ல முடியும்.

ரொம்ப டீப்பா இறங்காதீங்க. தெரிய வேண்டிய நேரத்துல உங்க அம்மாவே எல்லாம் சொல்லுவாங்க. அது வர என் விசயத்துல தலையிடுறத நிறுத்திடுங்க ப்ளீஸ்” என்று முகம் மாறாமல் பேசி விட்டாள்.

ஆதீரனுக்கு இப்போது கோபம் அதிகமாகவே வந்தது. இவள் சொல்லும் அந்த இருவரிடமும் அவனால் கேள்வி கேட்க முடியாது. இவளிடம் கேட்டால் வாயை திறக்க முடியாது என்று மறுக்கிறாள்.

அவளை நோக்கி குனிந்து எதோ கோபமாக திட்ட வர கதவு திறக்கும் சத்தம் கேட்டது. இருந்த இடத்தை விட்டு இம்மியும் அசையாமல் இருவரும் திரும்பி பார்த்தனர். அமுதா அதிர்ச்சியோடு நின்று இருந்தாள்.

பலமான அதிர்ச்சியிலும் ஏமாற்றத்திலும் அவள் கண்கள் கலங்கி இருந்தது. ஷ்ராவ்யா அவளது உணர்வை தெளிவாக புரிந்து கொண்டாள். அந்த இடத்தை விட்டு அவளால் அசைய முடியாது. அப்படி இறங்க முயற்சி செய்தால் ஆதீரன் மீது மோதிக் கொள்வாள்.

அது இருக்கும் நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும். அவள் அசையாமல் இருக்க ஆதீரனும் நகர்ந்தான் இல்லை. அமுதாவை பார்த்து விட்டு உடனே திரும்பி ஷ்ராவ்யாவை பார்த்தான்.

அவன் தன்னை பார்ப்பதை உணர்ந்து ஷ்ராவ்யாவும் திரும்பினாள். எப்படி நின்றிருந்தானோ அப்படியே சில நொடிகள் நின்று அவளை கூறு போடுவது போல் பார்த்து வைத்தான்.

பயத்தில் எச்சிலை விழுங்க தோன்றினாலும் தொண்டை அசைவில் அவன் கண்டு பிடித்துக் கூடாது என்று பல்லை கடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள் ஷாயா.

“அப்புறம் இருக்கு உனக்கு” என்று மெல்லிய குரலில் கூறி விட்டு நிமிர்ந்தவன் வேகமாக அறையை விட்டு வெளியேறி விட்டான்.

அமுதாவை அவன் கண்டு கொள்ளவில்லை. அமுதாவோ உடைந்த மனதை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் நின்று இருந்தாள்.

“என்ன அமுதா?” என்று ஷாயா கேட்க நிமிர்ந்து பார்த்தவள் “உங்க ஃப்ரண்ட்ஸ் வந்து இருக்காங்க” என்றாள்.

ஷாயா பதில் சொல்லும் முன் அமுதா வெளியே சென்று விட்டாள். ஷாயாவிற்கு வருத்தமாக இருந்தது.

“பாவம்” என்று வாய்விட்டே கூறி விட்டு கீழே வந்தாள். அருணும் குமாரும் அவளுக்கு உணவு கொண்டு வந்திருந்தனர். அதை வாங்கிக் கொண்டு அவர்களை அனுப்புவதை ஆதீரன் பார்த்து விட்டான்.

ஷாயா அவனிடம் பேசாமல் நகர “ம்மா…” என்று அழுத்தமாக அழைத்தான். அந்த அழைப்பு அவளுக்கும் சேர்த்து தான் என்று புரிய நின்று விட்டாள்.

“என்ன இது?” என்று அவள் கையிலிருந்ததை காட்டி கேட்க “அந்த பொண்ணு இங்க இருந்தாலும் சாப்பாடு ஃப்ரண்ட்ஸ் கொண்டு வந்து தான் தருவாங்க னு சொல்லி இருக்கா. அதுனால தான்” என்று சந்தானலட்சுமி பதில் கூறினார்.

“அவ்வளவு கஷ்டப்பட்டு இவங்க இங்க இருக்க வேண்டிய அவசியம் இல்லையே”

“அத பத்தி நீங்க கவலப்படாதீங்க சாரே… உங்களுக்கு நான் தொல்ல கொடுத்தா மட்டும் கேளுங்க” – ஷ்ராவ்யா

“இந்த வீட்டுல தங்குவீங்க… ஆனா இங்க சாப்ட‌மாட்டீங்க… இல்லையா?”

“அது என் இஷ்டம்.”

“இங்க வேலை பார்க்குறதுக்காக தான் சம்பளம் வாங்குறீங்க. அந்த சம்பளம் தான சாப்பாடாவும் வருது?”

அவளை காயப்படுத்தி விடும் நோக்கில் ஆதீரன் கேட்க ஷாயா அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தாள். அந்த பார்வையில் பேசியது தவறு என்று நெற்றியில் அறைந்தது போல் புரிந்து விட்டது.

“ரொம்ப சாரிங்க மிஸ்டர். ஆதீரன். இந்த வீட்ட மட்டும் இல்ல பல ஸ்டார் ஹோட்டல்ஸ கூட நான் டெக்கரேட் பண்ணி இருக்கேன். உங்க பணம் நான் வேலை பார்க்குற கம்பனிக்கு தான் போகும். நான் செய்யுற வேலைக்கு என் முதலாளி தான் சம்பளம் குடுக்குறார். நீங்க இல்ல.”

ஷ்ராவ்யாவின் கோபம் வார்த்தைகளில் அப்பட்டமாக தெரிந்தது. ஆதீரன் மன்னிப்பு கேட்க வாயை திறக்க அதை நின்று கேட்காமல் வேகமாக உள்ளே சென்று விட்டாள்.

ஆதீரன் தலையிலடித்துக் கொள்ள “உங்களுக்குள்ள என்ன பிரச்சனை?”என்று சந்தானலட்சுமி வினவினார். ஆதீரன் இடவலமாக தலையசைத்து விட்டு அவனும் அறைக்குள் சென்று விட்டான்.

சந்தானலட்சுமி அவர்களை பார்த்து பெரு மூச்சு விட்டு விட்டு அங்கிருந்து கிளம்பி தன் வீட்டை நோக்கி சென்று விட்டார். மன ஆறுதலுக்காக வெளியே நடந்து கொண்டிருந்த அமுதா இவர்கள் பேசிக் கொள்வதை கேட்டு விட்டாள்.

சற்று முன் பார்த்த காட்சி முழுவதும் இப்போது பொய்யாக தெரிந்தது. ஷாயா வேறு ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்டவள். அவள் எப்படி ஆதீரனுடன் நெருக்கமாக இருக்கலாம் என்று குமுறிக் கொண்டிருந்தாள்.

ஆனால் இவர்கள் என்னவென்றால் எதிரும் புதிருமாக சண்டை போடுகின்றனர். கண்ணால் பார்த்ததை நம்புவதா? இல்லை காதால் கேட்பதை நம்புவதா? இந்த வீட்டில் தங்க போகிறாள் ஆனால் இந்த வீட்டில் சாப்பிட மாட்டாள். இதை எப்படி புரிந்து கொள்வது என்று‌ அமுதாவிற்கு புரியவில்லை. அதே குழப்பத்துடன் மறுநாள் காலை ஊருக்கு கிளம்பி சென்று விட்டாள்

தொடரும்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Expert

Written by Hani novels

வணக்கம். நான் ஹனி. கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதில் வரலாற்று கதைகள் என்றால் ரொம்பவுமே பிடிக்கும். "பொன்னியின் செல்வன்" படித்த பிறகு கதைகளின் மீதும் நாவல்களின் மீதும் வந்த ஆர்வம். ஒரு கட்டத்தில் எழுத ஆரம்பித்து விட்டேன். சாதாரண குடும்ப கதைகளும் காதல் கதைகளுமே எனக்கு எழுத தெரியும். அதையே இங்கும் பதிவிடுகிறேன். நன்றி.

Story MakerContent AuthorYears Of Membership

Punjabi Samosa

நெஞ்சாங்குழி ஏங்குதடி 11