in

சொ(பொ)ல்லாத ரகசியங்கள் 6-10

அத்தியாயம் 6

கண் முன் உணவுகள் பரப்பப்பட்டு இருக்க மேகலா யாரையும் சாப்பிட விடாமல் அடம் பிடித்துக் கொண்டிருந்தாள். “என்ன ஏன் அடிச்சா னு காரணம் தெரியாத வர யாரும் சாப்பாட்டுல கை வைக்க கூடாது” என்று பிடித்துக் கொண்டாள்.

அவளது சேட்டையை பொறுக்க முடியாமல் “நான் சொல்லுறேன் காரணத்த… நீ வந்து குதிக்கும் போது எதோ திருடன் நினைச்சு மொத்தி இருப்பா.. இதெல்லாம் ஒரு விசயமா?” என்று ரமணி கூறி விட்டு சாப்பாட்டில் கை வைத்தாள். வாய்க்கு எடுத்து போகும் போது அவள் கையை பிடித்துக் கொண்டாள்.

“அய்யோ… பசியில இவ வேற பாடா படுத்துறாளே… என்ன விடு கார ஓட்டிட்டு வந்த பிரதாப் சாரும் குமாரும் பாவம். அவங்களயாவது சாப்ட விட்டு தொலையேன்” என்றாள்.

மேகலா எதற்கும் அசைவதாக இல்லை. ஷாயா குளியலறையில் இருந்து வெளியே வந்தாள். “அம்மா பரதேவதையே… இவளுக்கு காரணத்த சொல்லி எங்கள காப்பாத்துமா” என்று கூறி அருண் தலைக்கு மேல் கும்பிடு போட ஷாயா அவர்கள் முன்னால் வந்து அமர்ந்தாள்.

அவளறைக்கு தான் உணவுகளை வரவைத்து இருந்தனர். “முதல்ல சாப்டுங்க சொல்லுறேன்” என்று கூறினாள். விசயத்தை கூறிய பின் யாரும் சாப்பிட மாட்டார்களே…

“நோ சொல்லிட்டு சோத்துல கைய வைங்க” என்று மேகலா விடாமல் போராட கையை முறுக்கி காட்டிய ஷாயா “இப்ப சாப்ட விடல எல்லாரும் சேர்ந்து மொத்துவோம் . எப்படி வசதி?” என்று கேட்டாள்.

மேகலா வாயை மூடிக் கொண்டாலும் முறைத்து தள்ள மற்றவர்கள் சிரிப்போடு சாப்பிட்டு முடித்தனர்.  ஷாயா சாப்பிட்டு முடித்தவர்களை ஒன்றாக அமர வைத்தாள். எல்லோரும் அவளையே பார்த்திருக்க இரண்டு நாட்களாக அவளுக்கு நடந்த அனுபவங்களை எல்லாம் வரிசையாக கூறினாள்‌.

கடைசியாக சன்னலில் தெரிந்த உருவத்தையும் கூறி முடிக்க எல்லோருடைய பார்வையும் ஒரு முறை சன்னலை பயத்துடன் தொட்டு‌ மீண்டது.

இதே விசயத்தை வேறு யாரும் சொல்லி இருந்தால் கை கொட்டி சிரித்து இருப்பார்கள். மொத்தமும் பொய் என்று கூறி விட்டு சென்று இருப்பார்கள். அப்படி செய்ய முடியாமல் எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ஷாயா இதில் விளையாட மாட்டாள். முக்கியமாக அவள் பொய் சொல்ல மாட்டாள். பிரதாப்பிற்கு ஷாயாவை நினைத்து கவலை வந்தது. இந்தனை அமானுஷ்யங்களை அனுபவித்துக் கொண்டு அவள் இங்கு இருக்க வேண்டுமா என்று தோன்றியது.

“இப்படி பயந்து போய் நிக்கும் போது தான் சர்ப்ரைஸ் னு நீ வந்து குதிச்ச. இருந்த பயத்துல யாரு இது நேரங்காலம் தெரியாம விளையாடுறது னு தான் அடிச்சுட்டேன். கோச்சுக்காத சாரி. ” என்று கூறி மேகலாவின் தோளில் கை போட்டுக் கொண்டாள்.

மேகலா அதை எல்லாம் மறந்து விட்டு இந்த பேய் கதைக்கு வந்து இருந்தாள். “இது எல்லாம் இந்திரஜித் சார்க்கு தெரியுமா?” என்று கேட்க “இல்ல” என்றாள்.

மேகலாவும் ரமணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ‘ இதெல்லாம் தெரியாதப்போவே அவ்வளவு ஃபீல் பண்ணார். தெரிஞ்சா என்ன ஆகுமோ?’ என்று நினைத்துக் கொண்டு ஷாயாவை பார்த்தாள்.

“பேசாம நீ இங்க இருந்து கிளம்பிடு ஷாயா. நாங்க தான் வந்துட்டோம் ல. வேலைய நாங்க நல்லபடியா முடிச்சுட்டு வரோம்” என்று ரமணி கூற பிரதாப் அதை ஆமோதித்தான்.

“நாங்க பார்த்துக்குறோம். இவ்வளவு பிரச்சனைக்கு அப்புறமும் நீ இங்க இருக்கனுமா?” என்று பிரதாப் கேட்க ஷாயா மறுப்பாக தலையசைத்தாள்.

“என்னால இங்க இருந்து போக முடியாது பிரதாப் சார். இது எல்லாம் என்ன? ஏன் நடக்குது னு தெரியாம ஓடி போக முடியாது. அத விட வேலைய முடிக்குறேன் னு காண்ட்ராக்ட் போட்டுட்டு அத அம்போ னு விட சொல்லுறீங்க. “

“ஷாயா இங்க நடக்குறது எதுவும் நல்லா இல்ல… அத போய் ஆராயுறேன் னு சொல்லுற?”

“சார்… இதெல்லாம் உங்க கிட்ட சொன்னதுக்கு காரணம் உங்கள பயமுறுத்த இல்ல. என்னோட ஃப்ரண்ட்ஸ் னு சேர் பண்ணிக்கிட்டேன். நீங்க என்னனா என்ன துரத்தி விட பார்க்குறீங்க. அது உண்மையாவே பேயா இருந்தாலும் என்ன என்ன பண்ணிடும் னு பார்த்துடுறேன். நான் பயப்படுறேன் தான் இல்ல னு சொல்லல. அதுக்காக அந்த பேய பார்த்துட்டு வந்த வேலைய விட்டு ஓட முடியாது.”

“நீ பேய நேரா சந்திப்ப … ஆனா இந்திரஜித் சாருக்கு யார் பதில் சொல்லுறது?” என்று மேகலா கேட்டாள்.

“அவனுக்கு என்ன பதில் சொல்லனும்?”

“அவருக்கு நாங்க பதில் சொல்லி தான் ஆகனும். நாளைக்கு நைட் கிளம்பி அடுத்த நாள் காலையில வர வேண்டிய நாங்க இன்னைக்கு நைட்டே இங்க வந்து உட்கார்ந்து இருக்கோம் னா… காரணம் யாரு னு நினைச்ச? எல்லாம் உன் ஜித்து பண்ணது தான்.

இன்னைக்கு காலையிலயே போன் பண்ணி அங்க ஷாயா தனியா இருக்கா.. நீங்க இங்க என்ன பண்ணுறீங்க? கிளம்புங்க னு அடிச்சு துரத்தி விட்டாரு. உனக்கு இங்க எதாவது நடந்தா நாங்க தான் பொறுப்பு.”

“எஸ்.. உன்னோட பாதுகாப்புக்கு நாங்க தான் பொறுப்பு னு சொல்லி அனுப்பி இருக்கார். நீ பாட்டு பேயோட விளையாடுறேன் னு கிளம்புற?” என்று ரமணி கூற ஷாயா யோசித்தாள்.

“பைன். நான் அவன் கிட்ட பேசிக்குறேன்” என்று ஷாயா கூற மேகலா உடனே இந்திரஜித்திற்கு அழைத்தாள்.

“ஷாயா.. என்ன இந்த. நேரத்துல போன் பண்ணி இருக்க?” என்று இந்திரஜித் கேட்க “ஷாயா இல்ல சார் மேகலா பேசுறேன். உங்க ஷாயா இங்க ரொம்ப அநியாயம் பண்ணிட்டு இருக்கா. விளக்கத்த இப்பவே கேட்டு ஒரு முடிவுக்கு வாங்க” என்று கூறி போனை ஷாயாவிடம் கொடுத்தாள்.

ஷாயா வாங்கி பேச ஆரம்பிக்க மற்றவர்கள் தங்களுக்குள் பேச ஆரம்பித்து விட்டனர். முழு கதையையும் பொறுமையாக கேட்க இந்திரஜித் “சோ அந்த வீட்டுக்கும் உன் பாஸ்ட்க்கும் சம்பந்தம் இருக்கு னு நினைக்குற?” என்று கேட்டான்.

“அதே தான். நிச்சயமா எதோ இருக்கு. என்ன தேடி வந்த உருவம் எனக்கு கெட்டது செய்யுமா நல்லது செய்யுமா னு தெரியல. பட் ஏன் வந்துருக்கு னு எனக்கு தெரியனும்.”

“உனக்கு பிடிச்சத பண்ணு… ஆனா நீ முழுசா இங்க திரும்பி வரனும். அத மனசுல வச்சுக்கிட்டு எதையும் செய்” என்று இந்திரஜித் அனுமதி கொடுத்தான்.

“நான் வந்துடுவேன் னு சொன்னேன் ல… அப்புறம் ஏன் அதையே திரும்ப சொல்லிக்கிட்டு இருக்க?” என்று ஷ்ராவ்யா சினுங்க இந்திரஜித் “உன் பேய் ஆர்வத்துல என்ன மறந்துட கூடாதே அதுக்கு தான். ” என்ற சலிப்பாக கூறினான்.

“மறக்கல மறக்கல அழுகாத”

“சேட்டை… ஆமா அந்த ஆதீரன் பத்தி எதுவும் கெஸ்?”

“இதுவரை இல்ல”

“சரி எல்லாத்தையும் கவனமா பாரு. எதுலையும் உனக்கு பிரச்சனை வந்தா அடுத்த செகண்ட் அங்க வந்துடுவேன்”

“அள்ளி விடாத… மும்பையில இருந்து சென்னைக்கு ஒரு மணி நேரத்துல வந்து சேரு. அப்புறம் இங்க ஒரு செகண்ட் ல வர்ரத பார்க்கலாம்”

“ஏன் பேச மாட்ட? சரி ஒழுங்கா கதவை எல்லாம் க்ளோஸ் பண்ணிட்டு தூங்கு. உன்ன பார்த்துக்க சொல்லி உன் டீம் மொத்தத்தையும் அனுப்புனேன். இனி அவங்கள தான் பேயிட்ட இருந்து காப்பனும் போல”

“ஹா ஹா.. பாவம். எல்லாம் கதைய கேட்டு பயந்து போய் உட்கார்ந்து இருக்குங்க. இதுல என்ன வேற கிளம்ப சொல்லுதுங்க”

“நீ அப்படியே கிளம்பிட்டு தான் மறு வேலை பார்ப்ப? ரெண்டு வாரமா போராடியே உன் கிட்ட காரியம் சாதிக்க முடியல. இப்ப மட்டும் கிளம்பிடவா போற?”

“உனக்கு தெரியுது. அதுங்களுக்கு தெரியலையே.. சரி பை. தூங்குறேன். நாளைக்கு நிறைய வேலை இருக்கு” என்று பேசி முடித்து அழைப்பை துண்டித்து விட்டாள்.

அறைக்குள் வந்தவள் “ஜித்து கிட்ட நான் பேசிட்டேன். அவன் உங்கள திட்ட மாட்டான். நீங்க பயப்படாதீங்க. ” என்றாள். எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்களே தவிர வாயை திறக்கவில்லை.

“சரி… உங்கள கொண்டு வர சொன்னத எல்லாம் கொண்டு வந்துட்டீங்களா?”

“ம்ம். ஆமா அது எதுக்கு?”

“நாம அந்த ஊருல தான் தங்க போறோம். சோ அங்க நாம யூஸ் பண்ண தான் இது எல்லாம்”

“என்னது?” என்று அதிர்ந்து எல்லோரும் எழுந்து விட்டனர்.

“ஏன் சாக்காகுறீங்க? எப்பவும் வேலை னு வந்தா அந்த ஊருல தங்கி தான முடிப்போம்?”

“அது மத்த ஊருக்கு… இது பேய் ஊர். இங்க தங்குற நினைப்பே வேணாம்.”

ரமணி திட்டவட்டமாக கூற “நல்லா கேட்டுக்க… பேய் ஊருல போய் தங்குறேன் னு சொல்லுறியே.. உனக்கு மூளை கெட்டு போச்சா? ஹோட்டல் வேணாம் னா தேனியில தங்கலாம்.  ” என்றாள் மேகலா.

“அதெல்லாம் சரி பட்டு வராது. ஊருல நான் வீடு பார்த்துட்டேன்”

“எது அந்த பேய் பங்களாவா?”

“அது இல்ல… வேற தோப்பு வீடு. ஆதீரன் சார் அந்த வீட்டுல தங்கிக்கோங்க னு சொல்லிட்டார்”

“உனக்கு உண்மையிலயே பைத்தியம் பிடிச்சுருச்சா ஷாயா?”

“இது வரைக்கும் இல்ல. இப்போ எல்லாரும் போய் தூங்குங்க. நாளைக்கு காலையில ரூம காலி பண்ணிட்டு கிளம்பனும். ” என்று கூறி எல்லோரையும் பிடித்து வெளியே தள்ளினாள்.

கடைசியாக சென்ற பிரதாப் “கண்டிப்பா அந்த ஊருக்கு போயே ஆகனுமா?” என்று கேட்டான்.

“நிச்சயமா” என்று அவள் அழுத்தம் திருத்தமாக கூற “ஓகே.. உன் விருப்பம். குட் நைட்” என்று கூறி விட்டு சென்றான்.

கதவை அடைத்தவள் மீண்டும் ஒரு முறை சன்னலை பார்த்து விட்டு படுத்துக் கொண்டாள்.

வழக்கமான கனவு வந்தது. ஆனால் இம்முறை சற்று வித்தியாசமாக வந்தது. அழுது கொண்டே நடந்த சிறுமியை அணைத்தது ஒரு பெண் கரம். வளையல்கள் அணிந்த பெண் கரம். ஆதீரனின் முகம் எப்போதும் கொடூரமான பார்வையோடு வரும். இன்று அந்த முகத்தில் இரத்த திட்டுக்கள் இருந்தது.

யாரோ அந்த குழந்தையின் மூக்கில் எதையோ வைத்து அமுக்கினர். இங்கு ஷ்ராவ்யா விற்கு மூச்சு திணறியது. தலையை தலையணையில் புரட்டியவள் தன் மீது கிடந்த போர்வையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

அந்த குழந்தை மயங்கி விட ஷாயா பதறி எழுந்தாள். இன்று கண்ணீர் வரவில்லை. அதற்கு பதில் உடல் பயத்தில் உதறியது. விட்டு விட்டு வந்த கனவில் எதையும் கோர்த்து பார்க்க முடியவில்லை.

யார் அந்த குழந்தை? ஏன் அழுகிறது? ஷாயா அந்த குழந்தையை பின்னால் தான் பார்த்து இருக்கிறாள். முகத்தை இது வரை பார்த்தது இல்லை. பார்க்க முயற்சி செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். ஆனால் ஆதீரனின் முகம் அவளுக்கு தெளிவாக தெரிந்தது.

இப்போது இரத்தத்தோடு பார்த்தது ரொம்பவுமே குழப்பியது. கடந்த பத்து வருடமாக வந்து கொண்டிருந்த ஒரே கனவு இன்று மாறியிருக்கிறது. ஏன்?

அந்த அமானுஷ்யத்திற்கும் கனவுக்கும் சம்பந்தம் இருக்குமா? அப்படியானால் பதில் அந்த வீட்டில் தான் கிடைக்கும். பல வருடமாக பூட்டியிருக்கும் அந்த வீட்டில் என்ன இருக்கிறது?

ஆதீரன் சொன்னது போல் மூன்று ஆன்மாக்கள் உண்மையிலேயே இருக்கிறதா? அப்படியிருந்தால் அவர்களுக்கும் ஷாயாவிற்கும் என்ன சம்பந்தம்?

கேள்விகள் வரிசையாக படையெடுக்க தலையை பிடித்துக் கொண்டாள். முடிகளை அழுத்தமாக பிடித்துக் கொண்டு கண்ணை மூடியவள் என்ன நடக்கிறது தன்னை சுற்றி என்று குழம்பிப்போனாள்.

கனவு பற்றி ஆராய கிளம்பி எதிலோ மாட்டிக் கொண்டோம் என்று புரிந்தது. அதற்காக பாதியில் ஓடி விட அவளுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை.

மெத்தையை விட்டு இறங்கியவள் இங்கும் அங்குமாக நடக்க ஆரம்பித்தாள். அறையில் இருந்த ஏசியை அணைத்து விட்டு பால்கனி பக்கம் சென்றாள்.

காற்று எப்போதும் போல் ஈரப்பதத்துடன் அவளை தொட்டு சென்றது. டிசம்பர் மாத குளிர் அவளது உடலை தாக்க மனதில் இருந்த குழப்பம் விலகி ஓடியது. கைகளை கட்டிக் கொண்டு சில நிமிடங்கள் நின்று இருந்தாள்.

எதை யோசித்தாலும் கடைசியில் அந்த இரண்டாவது பங்களாவிடமே வந்து நின்றது. பதில் அந்த வீட்டில் நுழைந்தால் மட்டுமே கிடைக்கும் என்று தெளிவாக புரிந்தது. எப்படி நுழைவது? அந்த வீட்டின் உரிமையாளனே அந்த வீட்டை பார்த்தது இல்லை என்கிறான்.

இவள் எப்படி உள்ளே செல்வது? யோசித்துக் கொண்டே நின்றிருந்தவளுக்கு கொட்டாவி வந்தது. தூக்க கலக்கத்தோடு திரும்பி அறைக்குள் வந்தவள் கதவை அடைக்காமல் தூங்கி விட்டாள்.

கதவின் வழியாக காற்றை போல வந்த எதோ ஒன்று அவள் அருகில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தது. பிறகு அவளை மெல்ல தீண்டி விட்டு காற்றோடு கரைந்து போனது.

காலை வழக்கமான தெளிவான முகத்துடன் எழுந்தவள் தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு முருகமலை நகருக்கு கிளம்பி விட்டாள். ஊரின் அழகை ரசிக்க விடாமல் ஷாயா சொன்ன கதையை நினைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தனர் அவளது நண்பர்கள்.

நேராக ஆதீரன் வீட்டுக்கு சென்று நின்றாள்.  அவர்களை உள்ளே அழைத்து செல்லாமல் ஆதீரனை போனில் வெளியே வருமாறு அழைத்தாள். அவன் வெளியே வர அவர்கள் தங்கும் வீட்டிற்கு சென்று இறங்கினர். சாவியை அவர்களிடம் ஆதீ கொடுத்து விட “தாங்க்யூ சாரே” என்று வாங்கிக் கொண்டாள்.

“கரெண்ட் நாளைக்கு வந்துடும். இன்னைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க” என்று கூறி விட்டு கிளம்பி விட்டான். அந்த வீட்டை சுத்தம் செய்து தங்களுக்கு ஏற்ற போல் மாற்றிக் கொண்டனர்.

வேலை ஆரம்பித்ததும் பிரதாப் இங்கிருந்து கிளம்பி விடுவான். தேனியில் அவர்கள் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்திருக்கும் வேலையாட்களை இங்கே அழைத்து வருவது தான் அவனது வேலை. அதை முடித்து வேலை ஆரம்பித்து விட்டால் அவனுக்கு இங்கு வேலை கிடையாது.

அவர்கள் நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டிருக்கும் பெயிண்ட் நிறுவனம் கட்டிட வேலை செய்பவர்கள் பர்னிச்சர் நிறுவனங்கள் என அத்தனை பேரையும் பார்க்க பிரதாப் சென்று விட மற்றவர்கள் தான் வீட்டை பார்த்தனர்.

ஆண்களுக்கு ஒரு அறை. பெண்களுக்கு ஒரு அறை என முடிவு செய்து கொண்டனர். மூன்றாவது அறையை அவர்கள் வேலையை பற்றி பேசுவதற்கு ஏற்றபடி மாற்றினர். வேலையெல்லாம் முடிந்து அமர சிந்தாமணி வந்து வந்து நின்றாள்.

“ஹே சிந்தாமணி.. வா வா” என்று ஷாயா அழைக்க “உங்களுக்கு சாப்பாடு கொண்டு வந்து இருக்கேன் கா” என்று கூறி கையிலிருந்த கூடையை நீட்டினாள். அவளோடு ஒரு சிறுவனும் இருந்தான்.

“அப்படியா.. தாங்க்யூ.. ஆமா இந்த பையன் யாரு?” என்று கேட்க “இவன் என் தம்பி வீரன். கூட கூட்டியாந்தேன்” என்றாள்.

“வீரன் ரொம்ப வீரமானவரா?” என்று கேட்டு அவனிடம் குமாரும் அருணும் பேச ஆரம்பித்து விட்டனர்.

“இவங்க எல்லாம் உங்க கூட வேல பாக்க வந்தவகளா?”

“ஆமா சிந்தாமணி.. நீ சாப்ட்டியா?”

“சாப்ட்டனே… உங்களுக்கு பெரியம்மா தான் சாப்பாடு எடுத்துட்டு போக சொன்னாக. ஆதி ஐயா போன் பண்ணி சொன்னார்”

“ஓஹோ.. நாளையில இருந்து இங்கயே சமைக்கலாம் னு இருக்கோம். இவளுக்கு தேவையானத எல்லாம் எங்க கிடைக்கும் னு சொல்லிடு” என்று ரமணியை கை காட்டினாள்.

“ஓ… இந்த அக்கா சமைப்பாகளா?” என்று கேட்க “இந்த அக்கா எல்லாம் சமைக்காது அந்த அக்கா தான் நல்லா சமைக்கும்” என்று சித்ராவை காட்டினாள்.

எல்லோரும் சாப்பிட அமர்ந்து விட சிந்தாமணி பரிமாறினாள். காய்கறி பால் என்று எல்லாம் எங்கு கிடைக்கும் என்று கேட்டுக் கொண்டனர்.

சிந்தாமணியின் வட்டார பேச்சு அவர்களுக்கு புதுமையாக இருந்தாலும் அவளை அவர்களுக்கு ரொம்பவும் பிடித்து போனது. வீட்டில் மின்சாரமில்லாததால் வாசலில் ஆண்கள் படுத்துக் கொள்ள ஹாலில் பெண்கள் படுத்து உறங்கி விட்டனர்.

மீண்டும் கனவு வந்தது. ஆனால் இம்முறை குழந்தையும் இல்லை. ஆதீரனும் இல்லை. வேறு எதோ ஒரு பெண். உயிரை பிடித்துக் கொண்டு ஓடுகிறாள். பின்னால் யாரோ துரத்துகிறார்கள். அவளை பிடித்து இழுத்துக் கொண்டு வந்தவரின்‌ முகம் அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அதுவும் வளையல்கள் கொண்ட கரம் தான்.

தலைமுடியை பிடித்து இழுத்துக் கொண்டு அவர் செல்ல அந்த பெண் கதறினாள். கதறிய கதறலை பொருட் படுத்தாது இழுத்து வந்து கொண்டிருந்ததை தூரத்தில் ஒளிந்து இருந்தவர்கள் பார்த்து கொண்டிருந்தனர்.

அங்கு ஒளிந்து இருந்தவர்களின் முகம் வானில் வெட்டிய மின்னலில் தெளிவாக தெரிய அதிர்ந்து எழுந்து அமர்ந்து விட்டாள். பதறிப்போய் அவள் எழுந்து விட மேகலா முழித்து பார்த்தாள்.

“ஷாயா… என்ன ? என்னாச்சு?” என்று அவள் பதற மறுப்பாக தலையசைத்த ஷாயா “தூங்கு.. நான் வாஸ் ரூம் போய்ட்டு வரேன்” என்று கூறி விட்டு எழுந்தாள்.

மேகலாவிற்கு தூக்கம் வரவில்லை. ஷாயா திரும்பி வரும் வரை முழித்து அமர்ந்து இருந்தாள். முகத்தை கழுவி விட்டு வெளியே வந்தவளுக்கு இன்னும் நம்ப முடியவில்லை.

தூரத்தில் சிறு குழந்தையாக அமர்ந்து ஷாயா தான் அந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள். கூடவே யாரோ அவளது வாயை அழுக விடாமல் பொத்தி வைத்திருந்தனர்.

அந்த முகத்தை அவள் பார்க்கும் முன்னே கனவு கலைந்து எழுந்து விட்டாள். அவளுக்கு பயம் அதிகரித்தது. நாளுக்கு நாள் மாறும் கனவில் அவளது மனம் ஆட்டம் கண்டிருந்தது.

இத்தனை வருடமாக யார் அந்த குழந்தை என்று தெரியாமல் இருந்தது. ஆனால் இன்று அந்த குழந்தை தான் தான் என்று தெரிய இதற்கு என்ன உணர்ச்சியை வெளிப்படுத்துவது என்று புரியாமல் குழம்பி விட்டாள்.

மேகலா தூங்காமல் அமர்ந்து இருப்பதை பார்த்தவள் “தூங்கு மேகி. நான் வாசல் ல தான் இருப்பேன் பயப்படாத” என்று கூறி விட்டு வாசலுக்கு போக மேகலா எழுந்து விட்டாள்.

“இட்ஸ் ஓகே. நானும் வரேன்” என்று கூறி அவளோடு வெளியே வந்தாள். வெளியில் மரத்துக்கடியில் அருண் ,பிரதாப் ,குமார் மூவரும் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

ஷாயா சால்வையை இழுத்து போர்த்திக் கொண்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தாள். இங்கும் அங்கும் அவள் நடக்க மேகலாவும் அவளோடு நடந்தாள். வாயை திறந்து எதுவும் கேட்கவில்லை என்றாலும் அவளுக்கு துணையாக நடந்து கொண்டிருந்தாள். ஷாயா அதையெல்லாம் கவனிக்காமல் தன் கனவை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள்.

அத்தியாயம் 7

நள்ளிரவின் அமைதியும் சுற்றி இருந்த இருட்டும் ஷாயாவின் கருத்தில் பதியவில்லை. அவளது கனவில் இருபத்தைந்து சதவீதம் விளங்கி விட்டது. அவளுடைய முன்காலம் இந்த ஊரோடு பினைந்து இருக்க வேண்டும் என்று நினைத்தாள். அது இப்போது தெளிவாகி விட்டது.

சுற்றிலும் இருந்த முகங்களை தான் அவளால் சரியாக கண்டு பிடிக்க முடியவில்லை. ஆதீரன் முகத்தை தவிர. அவனது முகம் பத்து வருடங்களாக அவள் கனவில் வருகிறது. ஏன்? எதற்கு? என்று தெரிந்தால் பாதிக்கும் மேல் விசயம் தெரிந்து விடும்.

அதை தெரிந்து கொள்ள அந்த வீட்டிற்குள் போக வேண்டும். ஆதீரனை அழைத்துச் சொல்லலாம். ஆனால் அவனே உள்ளே சென்று பார்த்தது இல்லை என்கிறான். அந்த வீட்டிற்குள் போக வேண்டும் என்றால் அதற்கு சந்தானலட்சுமியின் உதவி தேவை. அதை பெறுவது கனவிலும் நடக்காது.

பெற்ற மகனையே அனுமதிக்காதவர் எங்கோ இருந்து வந்த அவளை அனுமதிப்பாரா? இந்த ஊரில் அவள் இருப்பதே அவருக்கு பிடிக்கவில்லை. அவளை துரத்த தான் பார்ப்பாரே தவிர வீட்டிற்குள் விட மாட்டார்.

ஷாயாவிற்கு அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. நாளை காலை வேலையை தொடங்கி விடுவார்கள். அதன் பின் அவளுக்கு நிற்க கூட நேரம் கிடைக்காது. அதற்கு முன் எப்படியாவது அந்த வீட்டை திறந்து பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.

முழுதாக முடிவுக்கு வந்த பின்னே சுற்றுச்சூழலை கவனித்தாள். தன்னோடு நடந்து கொண்டிருந்த மேகலாவை ஆச்சரியமாக பார்க்க “என்ன லுக்கு?” என்றாள் மேகலா.

“நீயேன் டி நடக்குற?”

“அப்படி ஒரு வேண்டுதல் . நடு ராத்திரியில பேய் ஊருல நீ தனியா நடக்க கிளம்புனது அதிசயம் இல்ல… உன்ன பேய் புடிச்சா கையில கால்ல விழுந்தாச்சு உன்ன காப்பாத்தனும் னு உன் கூட நடக்குறேன்ல அது அதிசயம் தான்”

ஷாயா சிரித்து விட்டாள். அவளது சிரிப்பை பார்த்து விட்டு மேகலா பதறினாள்.

“ஹே நைட் நேரத்துல சிரிச்சு எல்லாரையும் பயமுறுத்தாத”

“போதும் போதும் வா. தூங்கலாம். தூக்கம் வருது” என்று ஷாயா அவளை இழுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

காலை எழுந்து சித்ரா சமைக்க அவளுக்கு ரமணியும் மேகலாவும் உதவிக் கொண்டிருந்தனர். குமாரும் அருணும் வீட்டை சுத்தப்படுத்த ஷாயா போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள். பிரதாப்பும் இன்று வேலை ஆரம்பிக்க வேண்டி இருப்பதால் வேலை செய்பவர்களை அனுப்ப சொல்லிக் கொண்டிருந்தான்.

சமையல் வேலை முடிந்து எல்லோரும் சாப்பிட அமர ஆதீரன் வந்து நின்றான். “வாங்க சாரே‌. என்ன காலையிலயே இந்த பக்கம்?” என்று ஷாயா கேட்க “வேலைய ஆரம்பிக்கிறேன் னு சொல்லிட்டியே.. அங்க இருக்கவங்கள என்ன செய்றதா இருக்க னு கேட்க வந்தேன்” என்றான்.

“நீங்க எல்லாம் அங்கயே இருக்கலாம். பிரச்சனை வராம முடிக்க வேண்டியது என் பொறுப்பு.”

“ஓகே. இது இன்னொரு வீட்டு சாவி. அங்கயும் வேலைய ஸ்டார்ட் பண்ணிடுங்க” என்று கூறி சாவியை கொடுத்தான். அதை கையில் வாங்கியவளுக்குள் திடீரென யோசனை உதித்தது.

இரண்டு வீடுகளும் ஒரே மாதிரி தான் இருக்கின்றன. அப்படியானால் சாவியும் ஒன்றாக இருக்கலாம் அல்லவா? இதை வைத்து திறந்து பார்த்தால் என்ன என்ற விபரீத யோசனையை சாதாரணமாக யோசித்தாள்.

ஆதீரன் சாவியை கொடுத்து விட்டு கொடைக்கானல் செல்வதாக கூறி கிளம்பி சென்று விட்டான். ஷாயா அந்த சாவியை தூக்கி போட்டு பிடித்தாள். 

‘இந்த சாவி மட்டும் செட் ஆகிடுச்சு… பல பிரச்சனை முடிஞ்சுடும்’ என்று நினைத்துக் கொண்டாள்.

சாப்பிட்டு முடித்ததும் மதியத்திற்கும் சேர்த்து சமைத்து எடுத்துக் கொண்டனர். நேராக ஆதீரன் வீட்டில் போய் இறங்க ஜெயபிரதாபன் வெளியே அமர்ந்து இருந்தார்.

ஷாயாவின் குழுவை பார்த்ததும் யாரென்று புரிந்து கொண்டார். அவரிடம் பேசி விட்டு வேலைகளை பிரித்து செய்ய ஆரம்பித்தனர்.

“ரமணி, அருண். என் கூட வாங்க. அந்த வீட்ட பார்த்துட்டு வந்துடலாம். இங்க மத்தவங்க வேலைய பாருங்க” என்று கூறி விட்டு அந்த வீட்டை நோக்கி கிளம்பினாள்.

“ஏய் அது பக்கத்துல தான பேய் வீடு இருக்கு? அவசியமா அங்க போயே ஆகனுமா?” என்று ரமணி கேட்க “கண்டிப்பா போய் தான் ஆகனும். அத விட பேய் ஒரு மணிக்கு மேல தான் வரும். இப்போ மணி பத்து தான். இப்போ போய்ட்டு ஒரு மணிக்கு திரும்பி வந்துடலாம்” என்று கூறி விட்டாள்.

ரமணிக்கும் அருணுக்கும் பயம் இருந்த போதும் ஷாயாவை தனியாக விட முடியாததால் கிளம்பி வந்தனர். அந்த வீட்டில் என்ன இருக்கும் என்ற ஆர்வம் ஷாயாவிற்கு அதிகரித்துக் கொண்டே போனது. அருண் காரை செலுத்த அவள் பரபரப்போடு அமர்ந்து இருந்தாள்.

வழியை சொல்லிக் கொண்டு அமர்ந்து இருந்தவள் தூரத்தில் தெரிந்த அந்த வீட்டை ஆர்வமாக பார்த்தாள். கார் அந்த வீட்டின் முன் சென்று நின்றது. இருவரும் இறங்கி விட ஷாயா வீட்டை அன்னாந்து பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.

“இதுல எது ஷாயா பேய் வீடு?” என்று அருண் கேட்க ஷாயா பதில் சொல்லவில்லை. “ஏய் உன்ன தான் டி… எது பேய் வீடு?” என்று ரமணி கத்த அப்போது தான் ஷாயா நினைவுக்கு வந்தாள்.

“ஹான்.. அது .. இரு” என்று பதில் சொல்லாமல் இருண்டு கிடந்த வீட்டை நோக்கி சென்றாள். அவள் பின்னாலே இருவரும் சென்றனர். சாவியை எடுத்த ஷாயா ‘இந்த பூட்டுக்கு சாவி செட்டாகுமா னு தெரியலையே’ என்று யோசித்தாள்.

ஆனாலும் எதோ ஒரு நம்பிக்கையில் சாவியை நுழைத்து திருக பூட்டு உடனே திறந்து கொண்டது. அருணும் ரமணியும் அது தான் நல்ல வீடு போலும் என்று நினைத்துக் கொண்டனர். பக்கத்திலிருந்த வீடு தான் பேய் வீடு என்று நினைத்து விட்டு அதை பயத்துடன் திரும்பி பார்த்துக் கொண்டனர்.

ஷாயா அவர்களை எல்லாம் கவனிக்கவே இல்லை. பூட்டு திறந்ததை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தாள். ‘இந்த சாவி ரெண்டு வீட்டுக்கும் பொருந்தும் னா ஆதீரன் ஏன் இன்னொரு சாவி கேட்டு அவங்க அம்மா கிட்ட அடம் பிடிக்கனும்?’ என்ற கேள்வி மனதில் எழுந்தது.

‘ஒரு வேளை ரெண்டு வீட்டுக்கும் ஒரே சாவி னு அவனுக்கு தெரியாம இருந்துருக்கலாம்’ என்று அவளாகவே ஒரு பதிலை கண்டு பிடித்துக் கொண்டாள். பூட்டை கையில் எடுத்து ரமணியிடம் கொடுத்து விட்டு இரும்புக் கதவை திறந்தாள்.

கதவை திறந்து கொண்டு அவள் உள்ளே காலெடுத்து வைக்க திடீரென பலமான காற்று வீச ஆரம்பித்து விட்டது. அதை பொருட் படுத்தாமல் ஷாயா உள்ளே நுழைந்து விட அருணாலும் ரமணியாலும் உள்ளே வர முடியவில்லை. காற்று மணலை அள்ளி அவர்கள் கண்ணில் போட்டது.

இருவரும் கண்ணை கசக்கிக் கொண்டிருக்க காற்றே அவர்களை பின்னால் தள்ளிச் சென்று விட்டது. இருவரும் ஷாயாவை தான் அழைத்தனர். கண்ணை திறந்து பார்க்க முடியாமல் கண்ணை கசக்கிக் கொண்டே கத்த ஷாயாவிற்கு அது கேட்கவில்லை.

எதோ ஒரு உந்து விசையில் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தாள். காற்று அவளை பலமாக மோதிய போதும் கண்ணில் தூசி விழவிடவில்லை. அந்த வீட்டின் கதவையே பார்த்துக் கொண்டு சென்று கொண்டிருந்தாள்.

வீட்டின் அருகில் செல்ல செல்ல அவளது கனவு காட்சிகள் விரிந்தது. ஆதீரனின் முகம். அந்த குழந்தையின் அழுகை. அதற்கு மூச்சு திணறிய தருணம். யாரோ ஒரு பெண்ணின் கதறல். யாரோ துரத்த அவள் ஓடும் ஓட்டம். ஓடிக் கொண்டிருந்தவளை யாரோ பிடித்து இழுக்கும் காட்சி.

தன்னையறியாமல் ஷாயா அந்த பெண்ணை காப்பாற்ற கை நீட்டினாள். பிடிக்க முடியவில்லை. தூரமாக இருக்க அதை நோக்கி நடந்தாள். தூரம் போய்க்கொண்டே இருக்க ஷாயாவும் அருகே சென்று கொண்டிருந்தாள்.

கடைசியாக அந்த வீட்டின் கதவின் மேல் கை வைக்க போக யாரோ அவளை பிடித்து பின்னால் இழுத்து விட்டனர். ஷாயாவிற்கு அந்த பெண்ணை காப்பாற்ற வேண்டும் என்ற வேகம் வந்தது. கையை உதறிவிட்டு மீண்டும் அதன் அருகில் செல்ல பார்த்தாள்.

மீண்டும் பின்னால் இழுக்கப்பட திரும்பி பார்த்தாள். ஆதீரன் அவளை எதோ திட்டிக் கொண்டிருந்தான். அவள் அதை உணரவில்லை. கனவில் வந்த ஆதீரனின் கொடூர முகம் தான் அவளுக்கு தெரிந்தது.

அவன் கையை பலமாக உதறிவிட்டு வீட்டை நோக்கி போக முயற்சித்தாள். முடியவில்லை. மீண்டும் அவன் அவளை பிடித்துக் கொண்டான்.

“ஏய் சொல்லி கிட்டே இருக்கேன். வீட்டுக்குள்ள போக நினைச்ச கொன்னுடுவேன்” என்று மிரட்டி திட்டினான். சட்டென அவன் பக்கம் திரும்பியவள் அவனை முறைத்தாள்.

ஷாயாவின் முறைப்பை பார்த்தவன் அதிர்ந்தான். அது ஷாயாவைப் போன்று இல்லை. வேறு யாரோ ஒருவர் அவனை முறைப்பது போல் இருந்தது. ஷாயாவின் முறைப்பை அவன் பார்த்து இருக்கிறான். இமை சுருக்கி பல்லைக் கடித்துக் கொண்டு அவள் பார்த்த பார்வை சத்தியமாக அது ஷ்ராவ்யாவே இல்லை.

அவனது ஒரு நொடி தடுமாற்றத்தை பயன்படுத்தி ஷாயா அவனை உதறி விட்டு கதவை தொட்டு விட்டாள். இழுத்துச் சென்ற பெண்ணை அந்த வீட்டுக்குள் அடைத்து வைத்திருப்பது போல் தோன்றியது. அவசரமாக சாவியை தேடி எடுத்து திறக்கப்போக பின்னாலிருந்து ஆதீரன் அவள் கழுத்தை வளைத்துப் பிடித்தான்.

அதில் அவள் திணற சாவியை பறித்துக் கொண்டான். ஆதீரனின் கையை எடுக்க அவள் போராட அவன் கொஞ்சமும் அசையவில்லை. அவளை அப்படியே இழுத்துக் கொண்டு பின்னால் நடக்க ஷாயா கை நீட்டி அந்த வீட்டை தொட முயற்சித்தாள்.

அவளது முயற்சியை கண்டு கொள்ளாமல் தரதரவென இழுத்துக் கொண்டு வந்து விட்டான். வீட்டை விட்டு வெளியே வந்ததும் அவளை பிடித்து காரின் மேல் தள்ளினான்.

“அம்மா..” என்று விழுந்த வேகத்தில் அவள் முனங்க அந்த இரும்பு கதவை இழுத்து அடைத்தான். இத்தனையும் நடந்து முடிந்த பிறகே காற்றின் வேகம் குறைந்தது.

காரின் மேல் கிடந்தவள் வலித்த கையை தேய்த்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள். “உனக்கு மூளை கெட்டு போச்சா? யார கேட்டு இந்த வீட்டுக்குள்ள போன?” என்று ஆதீரன் சீறினான்.

கை முட்டியை தேய்த்துக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து அவனை முறைத்தாள். இந்த முறைப்பில் ஷாயாவிடம் மாற்றம் எதுவும் தெரியவில்லை. இயல்புக்கு வந்து விட்டாள் என்று உணர்ந்த பிறகே ஆதீரனுக்கு மூச்சு வந்தது.

“அதுக்காக இப்படி தான் பிடிச்சு தள்ளுவீங்களா…? கை கால் கால் உடஞ்சா என் அப்பா அம்மாவுக்கு நீங்க தான் பதில் சொல்லனும்” என்று பதிலுக்கு சீறினாள்.

“அந்த நினைப்பு இருக்கப்போய் தான் வெளிய இழுத்துட்டு வந்தேன். நீ பாட்டுக்கு இந்த வீட்டுக்குள்ள போயிட்டு இருக்க? வீட்டுக்கு சொந்தகாரன் நானே சொல்லுறேன் இந்த வீடு சரி இல்ல னு . அத கேட்காம நீ பாட்டுக்கு போயிட்டு இருக்கியே.. உனக்கு எதுவும் ஆச்சுனா நான் தான் பதில் சொல்லனும்.”

ஆதீரன் கோபம் குறையாமல் பேசிக் கொண்டிருக்க ஷாயா முகத்தை தூக்கிக் கொண்டு கையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளருகில் வேகமாக வந்தவன் கையை ஆராய்ந்தான். காரில் இடித்ததில் சிவந்து இருந்தது.

மருந்தை எடுக்க அவன் கார் கதவை திறக்க அப்போது தான் ஷாயாவிற்கு தன் நண்பர்களின் நியாபகம் வந்தது. “அய்யோ இதுங்க எங்க போச்சுங்க?” என்று தேட ஆரம்பித்தாள். சற்று தள்ளி இருவரும் நின்று கொண்டிருந்தாள்.

ஷ்ராவ்யா அவர்களை கத்தி அழைக்க இருவரும் திரும்பி பார்த்து விட்டு இவளிடம் வந்தனர். ஆதீரன் அவளது கையை துடைத்து விட்டு மருந்து போட ஆரம்பித்தான்.

ஷாயா அவனது செய்கையை கவனித்தாலும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நின்றாள். “நீங்க ஏன் அங்க போய் நிக்குறீங்க?” என்று கேட்க “கண்ணுல தூசி விழுந்துடுச்சு. ரெண்டு பேராலயும் கண்ண திறக்க முடியல . கண்ண கசக்கிட்டு இருக்கும் போது தான் ஆதீரன் சார் வந்து பார்த்துட்டு தண்ணி எடுத்து குடுத்தார். கழுவிட்டு வரோம்” என்றனர்.

கொடைக்கானலுக்கு கிளம்பிச் சென்றவன் பாதியில் வேலை ரத்தாகி விட திரும்பி வந்தான். அந்த வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஷ்ராவ்யா இந்த வீட்டிற்கு வந்து விட்டதாக கூறினார்கள்.

உடனே இங்கு கிளம்பி வந்து விட்டான். வந்து பார்த்தால் அருணும் மேகலாவும் மட்டும் கண்ணை தேய்த்துக் கொண்டு நிற்க ஷாயாவை காணவில்லை. அவர்களுக்கு தண்ணீரை கொடுத்து விட்டு வினவ “இந்த வீட்டுக்குள்ள தான் போனா சார்” என்றாள் ரமணி.

அதிர்ந்து உள்ளே ஓடி வந்தவன் கதவை நோக்கி சென்று கொண்டிருந்தவளை பிடித்து திட்டி இழுத்து வந்து விட்டான். ஆனால் ஷ்ராவ்யாவின் வித்தியாசமான பார்வையும் முறைப்பும் அவனுக்கு திகிலை ஏற்படுத்தி இருந்தது.

“இந்த வீட்டுக்குள்ள போக உனக்கு யாரு பர்மிஸன் குடுத்தது? அதுவும் தனியா போயிட்டு இருக்க?” என்று அவளை கேள்வி கேட்டுக் கொண்டே மருந்தை போட்டு முடித்தான்.

ஷ்ராவ்யா பதில் சொல்லாமல் நிற்க ரமணி குழப்பமாக பார்த்தாள். “இந்த வீட்ட தான மாத்தனும்?” என்று கேட்க “அந்த வீட்ட தான் மாத்த சாவி குடுத்தேன்” என்று பக்கத்து வீட்டை கை காட்டினான் ஆதீரன்.

அருணுக்கும் ரமணிக்கும் புரிந்து விட்டது. சற்று முன் ஷாயா நுழைந்தது தான் பேய் வீடு என்று. இருவரும் சேர்ந்து அவளை முறைக்க அவள் யாரையுமே மதிக்கவில்லை.

“நீங்க கிளம்புங்க. இவள நான் வேற இடத்துக்கு கூட்டிட்டு போய்ட்டு வரேன்” என்று கூறி ரமணியையும் அருணையும் அனுப்பி விட்டான். “நானும் போறேன்” என்ற ஷாயாவை முறைத்து தள்ளி நிறுத்தி வைத்தான்.

அவர்கள் கிளம்பியதும் “இந்த வீட்டுக்குள்ள‌ எப்படி‌ போன நீ?” என்று‌ கேட்டான்.

“சாவியால தான். ரெண்டு வீட்டோட சாவியும்‌ ஒன்னா இருக்குமோ னு சந்தேகப்பட்டு ஓபன் பண்ண போனேன்”

“வீட்டு சாவி சரி. பூட்டு எப்படி ஓபன் ஆச்சு?”

“இந்த சாவி வச்சு தான்” என்று சாவியை நீட்டினாள்.

“ரெண்டு வீட்டுக்கும் ஒரே பூட்டு தான் போட்ருக்கீங்க. ” என்று அவள் கூற ஆதீரன் அவளை பிடித்து இழுத்துக் கொண்டு பக்கத்து வீட்டுக்கு சென்றான்.

“இந்த பூட்ட கொஞ்சம் பாரு. இதுவும் அதுவும் ஒன்னா?” என்று காட்ட ஷாயா அதிர்ந்து போனாள். முதன் முறையாக இங்கே வரும் போது ஆதீரன் தான் பூட்டை திறந்தான். அதனால் அவள் பூட்டை பார்க்கவில்லை.

இரண்டு வீட்டுக்கும் போடப்பட்டு இருந்த பூட்டுக்கள் வெவ்வேறு. ஆனால் சாவியை அவள் நுழைத்து திருகிறதும் எப்படி திறந்தது?. இருவருமே அதிர்ச்சியோடு இருண்ட வீட்டை ஒரு முறை பார்த்துக் கொண்டனர்.

“ஷ்ராவ்யா கிளம்பு” என்று அவளை இழுத்துக் கொண்டு வந்து காரில் ஏற்றினான். ஷ்ராவ்யா விழி சிமிட்டாமல் அந்த வீட்டையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

‘யாரு இருக்கீங்க இந்த வீட்டுக்குள்ள? ஏன் இப்படி எல்லாம் நடக்குது? என்ன தான் வேணும் உங்களுக்கு?’ என்று மனதில் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க ஆதீரன் காரை எடுத்து விட்டான். வீடு மெல்ல அவள் கண்ணை விட்டு மறைந்தது.

ஏனென்று தெரியாமல் உடல் களைத்து போக இருக்கையில் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டாள். ஆதீரன் அவளை கவலையோடு பார்த்தான். அவள் பாட்டுக்கு வேலையை பார்த்து விட்டு சென்றிருப்பாள். பேய் இருக்கிறது என்று கூறி அவளது ஆர்வத்தை தூண்டி விட்டது தன் தவறு என்று தன்னையே திட்டிக் கொண்டான்.

ஆர்வத்தில் உள்ளே சென்று அவள் எதிலும் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது என்ற கவலை வந்தது. சாவி வேறு எப்படி திறந்தது என்று புரியவில்லை. அவன் யோசித்துக் கொண்டே வர ஷாயா கண்ணை திறக்கவில்லை.

பயணம் நீண்டு கொண்டே போனதில் ஷ்ராவ்யா விழி திறந்து பார்த்தாள். பாதை புதியதாக இருந்தது. “எங்க போறோம்?” என்று கேட்க “என் மாமா ஊருக்கு” என்றான்.

“அங்க எதுக்கு?”

“எனக்கு அவர் கிட்ட ஒரு வேலை இருக்கு. உனக்கு இருக்க ஸ்ட்ரஸ்க்கு அந்த ஊரு அழகா இருக்கும். ரிலாக்ஸா ஃபீல் பண்ணுவ”

“ஓஓஓ…”

அதற்குமேல் இருவரும் பேசவில்லை. கார் நேராக வடபுதுப்பட்டியில் சென்று நின்றது. நான்கு பக்கமும் மலை சூழ்ந்து இருந்த இடத்தை பார்க்க ஷ்ராவ்யாவிற்கு ரொம்பவும் பிடித்து விட்டது.

காரை நிறுத்தி விட்டு வாழைத்தோப்பிற்கு அழைத்து சென்றான். ஷ்ராவ்யா எல்லாவற்றையும் மறந்து விட்டு அந்த தோப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டு வர ஆதீரன் போனில் பேசிக் கொண்டு வந்தான். தூரத்தில் ஒருவர் இவர்களை பார்த்து விட்டு வேகமாக வந்தார்.

“வா ஆதி… இப்ப தான் மச்சான் போன் பண்ணார். நீ வந்துட்ட.. ஆமா இந்த பொண்ணு….?” என்று அவர் இழுக்க “என் ஃப்ரண்ட் மாமா” என்றான்.

“அப்படியா .. சரி சரி வாமா.. வா ஆதீ.. வீட்டுல தான் கணக்கு இருக்கு. ஒன்னாவே போகலாம்” என்று அழைத்தார். மூவரும் காரில் ஏறி விட ஷாயா பின்னால் அமர்ந்து கொண்டு அந்த ஊரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஊரை விட்டு தள்ளி மலைக்கு அடியில் கட்டப்பட்டிருந்த வீட்டின் முன் கார் நின்றது. மூவரும் இறங்கி நிற்க உள்ளேயிருந்து வேகமாக ஒரு பெண் ஓடி வந்தாள்.

“அமுதா…” என்று ஆதீரனின் மாமாவின் அழைப்புக்கு அவள் ஓடி வந்து நிற்க ஷாயா அவளை நன்றாக பார்த்தாள். முகத்தில் படித்த கலை இருந்தது. ஆனால் சற்று வெட்கமும் இருந்தது. ஆதீரனை கடைக்கண்ணால் அவள் பார்த்த பார்வையில் வெட்கம் ஏன் வந்தது என்று ஷாயாவிற்கு புரிந்து விட்டது. அவள் முகத்தில் இளநகை பரவியது.

அதை கவனித்த ஆதீரன் “இந்த இடம் புடிச்சு இருக்கா?” என்று கேட்டான். “ஆமா.. செம்மயா இருக்கு… அதென்ன?” என்று மலை மேல் இருந்த கட்டிடத்தை காட்ட “அது காலேஜ் . ஸ்கூல் ஹாஸ்டல் எல்லாமே அங்க இருக்கு. பட் ஒன்லி கேர்ள்ஸ்” என்றான்.

“சூப்பர்ல… பட் இந்த க்ளைமேட்க்கு எப்படி படிக்க தோனும்? மணி பன்னிரண்டு. வெயில் இவ்வளவு அடிச்சாலும் குளு குளு னு இருக்கே. தூக்கம் தான் வரும்”

“அத நீ அமுதா கிட்ட தான் கேட்கனும். அவ அங்க தான் படிக்குறா”

இருவரும் பேசிக் கொண்டே உள்ளே வர அமுதா ஷாயாவை வெறித்து பார்த்தாள். அவளது ஆதீரன் மாமாவிடம் இவ்வளவு உரிமையாக பேசுகிறாளே…

“ஏன் அமுதா காலேஜ் போகல?” என்று ஆதீரன் கேட்க “ஸ்டெடி ஹாலிடே மாமா” என்றாள். பதில் ஆதீரனிடம் இருந்தாலும் பார்வை ஷாயாவிடம் இருந்தது.

பளிச்சென்ற முகமும் சற்று அதிகப்படியான நாகரீகம் தெரிந்த அவளது செய்கையும் அமுதாவை கடுப்பாக்கியது. “இவங்க என் ஃப்ரண்ட் . ஷ்ராவ்யா” என்று ஆதீரன் கூற “ஹாய்” என்றாள் ஷாயா.

பதிலுக்கு “ஹாய்” என்றாலும் அமுதாவிற்கு அவளை பிடிக்கவில்லை. அமுதாவின் தந்தை சேகர் “ரெண்டு பேருக்கும் காபி கொண்டு வா மா” என்று கட்டளை போட உள்ளே சென்று விட்டாள்.

ஆதீரனும் சேகரும் வேலையை பற்றி பேச ஷ்ராவ்யா வீட்டை சுற்றி பார்த்து விட்டு மீண்டும் வெளியே வந்தாள். அமுதாவின் அன்னை அவளிடம் பேச்சு கொடுக்க வெளியே நின்றபடி சுவாரசியமாக பேச ஆரம்பித்து விட்டாள்.

அத்தியாயம் 8

அமுதாவின் அன்னை மீனாட்சியிடம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருக்க அமுதா வெளியே வந்தாள். “ம்மா அடுப்புல வச்ச சாம்பார என்ன னு பாருங்க” என்க மீனாட்சி வேகமாக உள்ளே சென்று விட்டார்.

ஷ்ராவ்யா அமுதாவை பார்த்து புன்னகைத்தாள். அமுதா கடமைக்காக உதட்டை இழுத்து வைத்தாள். “இந்த காலேஜ் ல தான் படிக்கிறியாமே.. என்ன படிக்கிற?” என்று ஷாயா கேட்க “எம். எஸ். ஸி . ” என்றாள்.

“என்ன மேஜர்?”

“ஐடி”

“ஓஓ.. நைஸ்” என்றவள் அதோடு பேச்சை நிறுத்திக் கொண்டாள். அமுதா பட்டும் படாமல் பேசுவது போல் அவளுக்கு தோன்றியது. அதனால் அமைதியாக சுற்றி வேடிக்கை பார்க்க அமுதா, “உங்களுக்கு எப்படி மாமாவ தெரியும்?” என்று கேட்டாள்..

“மாமா வா?”

“ஆதீ மாமா”

அமுதா அவளை முறைத்துக் கொண்டிருப்பதற்கு காரணம் விளங்கி விட சிரிப்பு வந்தது. அதை அடக்கிக் கொண்டு “அவரோட வீட்டுல தான் வேலை பார்க்கிறேன்” என்றாள்.

“என்ன ?? அந்த வீட்டுல தான் தங்கி இருக்கீங்களா?”

“இல்ல இல்ல. வேற வீட்டுல தான் தங்க சொல்லி இருக்காங்க உன் அத்தை”

“ஓஹோ… எப்ப வேலை முடியும்?”

“ரெண்டு மாசத்துல முடிஞ்சுடும்”

அமுதாவிற்கு நிம்மதி வந்தது. வேலை பார்க்க வந்தவள் . இரண்டு மாதத்தில் கிளம்பி விடுவாள். அதுவே அவளுக்கு போதுமானதாக இருக்க துள்ளி குதித்து உள்ளே ஓடி விட்டாள்.

அவளது துள்ளலை பார்த்து ஷாயா புன்னகைத்துக் கொண்டாள். அந்த சூழலை ரசித்த படி ஷாயா இங்கும் அங்கும் நடந்து கொண்டிருக்க அவளை தேடி ஆதீரன் வந்து நின்றான்.

“என்ன சாரே… வேலை எல்லாம் முடிஞ்சதா? கிளம்பலாமா?”

“வேலை முடிஞ்சது. ஆனா சாப்புடுற நேரத்துல வந்துட்டு அப்படியே கிளம்ப முடியாது. வா சாப்ட கூப்பிடுறாங்க”

“சாப்டவா? அங்க சித்ரா சமைச்சது இருக்கே?”

“அதை எல்லாரையும் சேர் பண்ணிக்க சொல்லு. நீ வா” என்று அழைத்து சென்று விட்டான்.

சாப்பாடு உண்மையில் நன்றாகவே இருந்தது. வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு கிளம்பினர்.

காரில் செல்லும் போது “ஹப்பா.. இப்படி ஒரு ப்ளேஸ் இப்படி ஒரு சாப்பாடு கிடைச்சா நிம்மதியா வாழலாம்” என்று ஷாயா கூற “ஏன் நீ போகாத பார்க்காத ஊரா?” என்று கேட்டான்.

“ஆமா தான்… எல்லா இடத்துலயும் ஒரு அழகு இருக்கு. ஆனா எல்லா இடத்திலயும் நின்னு ரசிக்க தான் முடியும். அது கூடவே வாழ முடியாது”

ஆதீரன் அவளை திரும்பி பார்த்து விட்டு ஒன்றும் பேசாமல் சாலையில் கவனமானான். மீண்டும் வீடு வந்து சேர வீட்டில் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. ஷாயாவும் அதில் இணைந்து கொண்டாள்.

வீட்டின் பழைய பெயிண்ட்கள் சுரண்டப்பட்டு கொண்டிருக்க ஒரு பக்கம் புதிதாக கட்டும் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர். பொன்னாம்பாள் சாமி அறையில் வைக்க வேண்டிய படங்களை காட்டிக் கொண்டிருந்தார். மேகலாவும் சித்ராவும் அதை வாங்கி வைத்துக் கொண்டிருக்க ஷ்ராவ்யா அவர்களிடம் பேசிக் கொண்டே வேறு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆதீரன் மாடியிலிருந்து எதோ இரண்டு படங்களை எடுத்துக் கொண்டு வந்தான். அதை ஷாயாவிடம் கொடுத்து “இதையும் சாமி ரூம் ல மாட்டனும். பெருசா தான மாத்த போறீங்க. சோ பெரியம்மா ரூம் ல இருந்தத சாமி ரூம் ல மாட்டலாம் னு கொண்டு வந்துட்டேன்” என்றான்.

ஷாயா அதில் சுற்றி இருந்த செய்தி தாள்களை நீக்கினாள். அதில் ஆதீரன் சிரித்துக் கொண்டு இருந்தான். “இதுல போட சந்தன மாலை நாளைக்கு வாங்கிட்டு வந்துடுறேன்” என்று கூறி இரண்டு படங்களையும் தூக்கிச் சென்று ரமணியிடம் கொடுத்தான்.

ரமணி அதை பார்த்து விட்டு “சார்.. உங்க போட்டோவ ஏன் குடுக்குறீங்க?” என்று கேட்க “தன்னை தானே கடவுள் னு சொல்லிக்கிற சாமியாருங்களா மாறிட்டீங்களோ?” என்று மேகலா உள்ளே நுழைந்தாள்.

“உன் மொக்கய தூக்கிட்டு ஓடிப்போயிடு . வேலை டென்சன்ல எதையாவது திட்டிருவேன்” என்று சித்ரா பாய்ந்தாள்.

இவர்கள் சண்டையை எல்லாம் கவனிக்காமல் ஷாயா அந்த படத்தை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எப்பா… உங்க சண்டைய தனியா வச்சுக்கோங்க பா. அது நான் இல்ல. என் தாத்தா. நல்லா பாருங்க.. அதுல மீசை நரைச்சு இருக்கும். திருநீறு எல்லாம் வச்சு இருப்பார்” என்று சொன்னதும் ரமணி உற்று பார்த்தாள்.

ஷாயாவும் அதை காதில் வாங்கிய பின்னே நினைவுக்கு வந்தாள். அந்த முகம் தான் கனவில் வந்தது. அப்படியென்றால் ஆதீரனின் தாத்தாவிடம் எதோ ரகசியம் ஒளிந்து இருக்க வேண்டும். அவரது கொடூர முகத்தை இப்போது நினைத்தாலும் ஷாயாவிற்கு உடல் சிலிர்க்கும்.

உடனே போனை கையில் எடுத்தவள் இந்திரஜித்தை அழைத்து பேசிக் கொண்டே வெளியே சென்று விட்டாள்.

*.*.*.*.

அடுத்த ஒரு வாரம் வேகமாக கழிந்தது. வீட்டின் வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருக்க ஷாயாவின் கனவுகள் நின்றபாடில்லை. ஆனால் அந்த வீட்டிற்குள் மீண்டும் செல்ல முடியாமல் போனது. ஆதீரன் அவளிடம் சாவியை கொடுப்பதில்லை. அவளது நண்பர்கள் அதை வாங்கிக் கொண்டு அவளை விட்டு விட்டு சென்று விடுகின்றனர்.

அவளும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதது போல் நடித்துக் கொண்டிருந்தாள். அன்று சனிக்கிழமை. வேலையை முடித்து மாலை வீட்டிற்கு வந்தனர். ஷாயா கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு வெளியே கிளம்பினாள்.

மற்றவர்கள் வேலை செய்த கலைப்பில் படுத்து தூங்கி விட இவள் மட்டும் ஊருக்குள் நடந்து வந்தாள். சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டே கோவிலுக்கு சென்று சேர்ந்தாள்.

சாமி கும்பிட்டு விட்டு வெளியே வர ஒருவர் மீது மோதிக் கொண்டாள்.

“சாரி சாரி” என்று அவள் அவசரமாக மன்னிப்பை வேண்ட “இருக்கட்டும்மா.. நானும் பார்க்கல” என்றார் அவர்.

ஷாயா புன்னகைக்க “எதுக்கும் கொஞ்சம் உட்கார்ந்துட்டு போ மா” என்று கூறி அமர வைத்தார்.

“நீ அந்த பெரிய வீட்டுல வேலை செய்யுற பொண்ணு தான?” என்று கேட்க “ஆமாங்க . என்ன எப்படி தெரியும்?” என்று கேட்டாள்.

“சிந்தாமணிக்கு நான் சித்தி. அடிக்கடி உன்ன பத்தி பேசுவா. ரெண்டு தடவ பார்த்து இருக்கேன்”

“ஓஓஓ… என் பேரு ஷ்ராவ்யா” என்று தன்னை அறிமுகபடுத்திக் கொண்டாள். அவரும் சற்று சகஜமாக பேசினார். இருவரும் பேசிக் கொண்டே கோவிலை விட்டு வெளியே வந்தனர்.

அவரது வீடு வரை பேசிக் கொண்டே வந்தவள் விடை பெற போக “வீட்டுக்கு வந்துட்டு போமா” என்று அழைத்தார்.

“இல்ல இருக்கட்டும் கா” என்று அவள் மறுக்க “பரவாயில்ல வா. வந்து ஒரு காபி சாப்டு. வா” என்று கையை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே சென்றார். சற்று நேரம் பேசினாலும் சிந்தாமணி சொல்லியதில் தன்னை முழுதாக நம்பி இருக்கிறார். வீடு வரை அழைத்து வந்த அவரது நம்பிக்கை அவளை நெகிழச் செய்தது.

உள்ளே சென்று பார்க்க வீடு அழகாகவே இருந்தது‌. “வீட சூப்பரா வச்சுருக்கீங்க கா” என்று பாராட்ட அவர் புன்னகைத்தார். ஹாலின் ஓரம் கட்டிலில் படுத்திருந்தவரை ஷாயா கேள்வியாக பார்க்க “எங்கப்பா… பத்து வருசமா இப்படி தான் இருக்காங்க. நடமாட்டம் எதுவும் இல்ல. படுத்த படுக்கை தான். ஆனா பேசுனா புரிஞ்சுக்குவாங்க. இங்க வா” என்று அழைத்தார்.

அவள் அருகில் செல்ல “ப்பா… ப்பா.. இங்க பாருங்க. பெரிய ஐயா வீட்டுல வேலை பார்க்குற பொண்ணு.. நம்ம சிந்தாக்கு சிநேகித பொண்ணு” என்று கூறி அறிமுக படுத்தி விட்டு “இரு உனக்கு காபி எடுத்துட்டு வரேன்” என்று உள்ளே சென்று விட்டார்.

ஷாயா அவருக்கு அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். சற்று நேரம் அந்த பெரியவரின் பார்வை ஷாயாவின் முகத்தில் நிலைத்து இருந்தது. பிறகு கையை ஆட்டி எதோ கூற வந்தார்.

ஷாயா அவரது செய்கையில் வேகமாக எழுந்தாள். “ஐயா‌.. என்ன ஆச்சு..? எதுவும் வேணுமா? தண்ணி கொண்டு வரவா?” என்று கேட்க அவர் வாயை திறந்து எதோ சொல்ல வந்தார். ஆனால் சொல்ல முடியவில்லை. எந்த சத்தமும் வாயிலிருந்து வெளி வரவில்லை.

ஷாயா சுற்றி பார்த்தாள். தண்ணீர் இருந்தது. அதை வேகமாக எடுத்துக் கொண்டு வந்து புகட்டினாள். தண்ணீரை குடித்தவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

“ஏ.. ஏன் அழுகுறீங்க? எங்கயாவது வலிக்குதா? ” என்று கேட்டவள் “அக்கா… இங்க வாங்க” என்று குரல் கொடுத்தாள்.

“இந்தா வந்துட்டேன் மா” என்று வெளியே வந்தவர் காபியை நுரை பொங்க ஆற்றி மேசையில் வைத்தார். “அக்கா காபிய விடுங்க.. இங்க பாருங்க.. உங்க அப்பா..” என்று ஷாயா முடிக்காமல் விட அவர் வேகமாக வந்தார்.

“ப்பா.. என்ன ப்பா.. என்ன ஆச்சு?” என்று ஓடி வந்து பார்த்தார். பத்து வருடமாக விரலை கூட அசைக்காமல் இருந்தவர் இன்று கையை ஆட்டி வாயை திறந்து ஷ்ராவ்யாவிடம் பேச முயற்சித்துக் கொண்டிருந்தார்.

பச்சை முத்துவின் மகள் மணிமாலாவின் கண்ணில் கண்ணீர் வந்தது. அசையாமல் கிடப்பவர் திடீரென அசையவும் சந்தோசத்தில் மணிமாலாவிற்கு கண்ணீர் தான் முதலில் வந்தது.

“ப்பா.. ” என்று அவர் கண்ணீர் வடிக்க அவரோ ஷாயாவை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார்.

“உ… உ… ” என்று எதோ சொல்ல வர “என்னப்பா.. என்ன சொல்லனும்?” என்று கேட்டார் மணிமாலா. ” உ.. உ…” என்பதற்கு மேல் எதுவுமே அவரால் சொல்ல முடியவில்லை.

“அக்கா.. டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகலாமா?” என்று ஷாயா கேட்க அவரிடம் மறுப்பு தெரிந்தது. அதை மணிமாலா புரிந்து கொண்டார்.

“என்ன செய்யனும்? ப்பா.. சொல்லுங்க என்ன செய்யனும்?” என்று கேட்க கண்ணால் எதோ சொல்ல முயற்சித்தார். மணி மாலாவிற்கு அது புரியவில்லை.

தன் இயலாமையில் நொந்து சில நிமிடங்கள் அமைதியாகி விட்டார். மணிமாலா விடாமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்.

“அக்கா.. என்ன ஆச்சு? எதோ சொல்ல வராங்க?” என்று ஷாயா கேட்க “ஊருக்கு வெளிய தென்னந்தோப்பு பக்கத்துல ரெண்டு வீடு இருக்குல. அந்த வீட்டுல இருந்த பேய் தான் எங்கப்பாவயும் எங்கண்ணனயும் அடிச்சு போட்ருச்சு. பத்து வருசத்துக்கு முன்னாடி நடந்தது. எந்த டாக்டரும் அவர சரி பண்ணல. ஜடமா கிடந்தாங்க. இன்னைக்கு … இன்னைக்கு பேசுறாங்க…” என்று கூறிக் கொண்டே வந்தவருக்கு தொண்டை அடைத்தது.

ஷாயாவிற்கு திக்கென்றது. இவர் ஆதீரன் சொன்ன இருவரில் ஒருவர். இவருக்கு எதோ தெரிந்திருக்க வேண்டும். சந்தேகம் தோன்றியதும் அவரை உற்று பார்த்தாள். அவர் எதோ அவளிடம் சொல்ல முயற்சித்துக் கொண்டிருந்தார்.

“என் கிட்ட எதுவும் சொல்லனுமா?” என்று அவள் கேட்டதும் அவர் கண்கள் பளிச்சிட்டது. மீண்டும் “உ.. உ.. ” என்றாரே தவிர வார்த்தை வரவில்லை.

“பொறுங்க” என்று அவரிடம் கூறியவள் எதையோ யோசித்தாள் . சில நிமிட யோசனைக்கு பின் “உங்க கூட அன்னைக்கு இருந்தாரே அவர போய் நான் பார்க்கட்டுமா?” என்று கேட்டாள்.

அதில் பிச்சை முத்து பலமாக தலையாட்டினார். மணிமாலா தன் சந்தோசத்தில் இருந்து வெளியே வந்து அவர்கள் பேசிக் கொள்வதை அப்போது தான் கவனித்தார்.

“என்ன சொல்லுறார்?” என்று கேட்க “இவங்க கூட இன்னொருத்தருக்கும் இப்படி ஆயிடுச்சு இல்லையா?” என்று கேட்டாள்.

“ஆமா எங்க அண்ணன். கேசவன்”

“அவர நான் பார்க்கனும்”

“அவரையா?”‌என்று கேட்டவர் தன் தந்தையை பார்த்தார். அவர் பலமாக தலையாட்ட “ஆமா. அவர பார்க்கனும். வாங்க போகலாம்” என்று கூறினாள்.

தந்தையை கவனித்துக் கொள்ள சொல்லி மணிமலா தன் மகன் வீரனை விட்டு விட்டு ஷாயாவுடன் கிளம்பி விட்டார். அடுத்த தெருவில் தான் கேசவன் வீடு இருந்தது.

“தாமரை… தாமரை..” என்று மணிமாலா அழைத்துக் கொண்டே வீட்டிற்குள் செல்ல ஷாயா பின்னாலே சென்றாள். சமையல் வேலை செய்து கொண்டிருந்த தாமரை கை கழுவிவிட்டு சேலையில் துடைத்துக் கொண்டே வெளியே வந்தாள்.

“அண்ணன் எங்க?” என்று கேட்க “உள்ள தான் இருக்கார். ஆமா இது யாரு?” என்று கேட்டாள் தாமரை. “சொல்லுறேன். உள்ள வா. நீயும் வாமா” என்று அழைத்துக் கொண்டு அறைக்குள் செனறார்.

கட்டிலில் பச்சை முத்துவை போலவே கேசவனும் படுத்து இருந்தார். ஷாயா அவரை கூர்ந்து பார்த்துக் கொண்டு நின்றாள்.

“அண்ணே… இங்க பாரு.. யாரு வந்துருக்காக பாரு” என்று மணிமாலா காட்ட பார்வையை திருப்பி பார்த்தார்.

“என்ன மதினி..? யாரு இவக..?” என்று தாமரை கேட்க “பொறு தாமரை. அண்ணன் பார்க்கட்டும்” என்று கூறி அடக்கினார்.

பச்சை முத்துவை போல் கேசவனுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. அவர் உடனே கண்டு பிடித்து விட்டார். திடீரென அவர் உடலில் பரபரப்பு வர தாமரை பதறினாள். மணிமாலா அவளை அடக்க ஷாயா அருகில் சென்றாள்.

“என்ன உங்களுக்கு தெரியுமா? ” என்று மெல்ல கேட்க கேசவன் எதோ சொல்ல வாயை திறந்தார். முடியவில்லை.

“பொறுங்க.. இப்போ உங்களால பேச முடியாது. இவ்வளவு நாள் பேசாம இருந்துட்டு திடீர் னு வராது. நான் இங்க தான் இருப்பேன். இந்த ஊருல. நீங்க சரியானதும் என் கிட்ட சொல்லுங்க. இப்போ ரெஸ்ட் எடுங்க” என்று கூறி விட்டு நகர்ந்து கொண்டாள்.

கேசவன் விடாமல் எதோ பேச வர “நான் இந்த ஊர விட்டு போக மாட்டேன். நீங்க ரெஸ்ட் எடுங்க. என்ன பத்தி கவல படாதீங்க” என்று கூறினாள்.

தாமரை தன் கணவன் சரியானதை நம்ப முடியாமல் திகைத்து போய் நின்று விட்டாள். மணிமாலாவிடம் திரும்பியவள் “கிளம்பலாம் கா. சாரிங்க . உங்க ஹஸ்பண்ட் இனிமே சரியாகிடுவாங்க. நீங்க பேசுங்க . நாங்க கிளம்புறோம்” என்று கூறிவிட்டு வெளியே வந்து விட்டாள்.

வாசலுக்கு வந்ததும் “யாரு மா நீ?” என்று மணிமாலா கேட்டார்.

“தெரியல கா”

“அவங்க என்ன சொல்ல வந்தாங்க?”

“தெரியல கா”

“என்ன நடக்குது?”

“தெரியல கா”

மணிமாலா அடுத்த வார்த்தை வராமல் தடுமாற “ஆனா எல்லாமே நல்லதா நடக்கும் கா. இவங்களோட நிலமைக்கும் நானும் ஒரு காரணமோ னு தோனுது” என்று வருத்தத்தோடு கூறினாள்.

“நீ இந்த ஊருக்கு முன்னாடி வந்து இருக்கியா?”

“இல்ல கா. இப்ப தான் முதல் தடவ வரேன்.”

மணிமாலா ஒன்றும் புரியாமல் நின்று இருந்தார். ஒரு பெரு மூச்சை வெளி விட்ட ஷாயா “இவங்க சரியான விசயத்தை ஊருக்குள்ள சொல்லாதீங்க. ரகசியமா இருக்கது தான் இப்போதைக்கு நல்லது. சீக்கிரமே முழுசா சரியாகிடுவாங்க னு எனக்கு தோனுது. அதுக்கப்புறம் வந்து நான் கேட்டுக்குறேன். ” என்று கூறியவள் தன் எண்ணை கொடுத்தாள்.

“நான் கிளம்புறேன். லேட்டாகிடுச்சு ஃப்ரண்ட்ஸ் தேடுவாங்க” என்று கூறி விட்டு நடக்க ஆரம்பித்து விட்டாள். மணிமாலா அவள் சென்ற திசையை பார்த்துக் கொண்டே நின்றார்.

*.*.*.*.*.*.

தாமதமாக வீடு வந்த சேர்ந்த ஷாயாவை மேகலா முறைத்துக் கொண்டிருந்தாள்.

“என்ன வாசல் ல நிக்குற?”

“தெருவுல நிக்காம இங்க நிக்கிறேன் னு சந்தோச படு. கோவிலுக்கு தான போன.. அங்க இருந்து இங்க வரதுக்கு இவ்வளவு நேரமா?”

“உள்ள வா சொல்லுறேன்.”

உள்ளே வந்ததும் எல்லோரும் சாப்பிட அமர்ந்து இருந்ததை பார்த்தாள். அவளுக்காக தான் காத்துக் கொண்டு இருந்தனர். கை கால் கழுவி விட்டு அவளும் சாப்பிட அமர்ந்து விட்டாள்.

சாப்பிடும் போதே மேகலா நச்சரிக்க நடந்ததை சுருக்கமாக கூறி முடித்தாள். எல்லோரும் சாப்பிட மறந்து ஒருவரை ஒருவர் பார்க்க “சாப்ட்டு முடிங்க நாளைக்கு வேலைய பத்தி பேசனும்” என்று அழுத்தமாக கூறினாள்.

பயத்தோடு சாப்பாட்டை விழுங்கி விட்டு வேலையை பற்றி பேச அறைக்குள் வந்து அமர்ந்தனர். லாப்டாப்பை எடுத்து வைத்தவள் மளமளவென விசயத்தை கூற ஆரம்பித்தாள். அதை குறிப்பெடுத்து முடித்ததும் “ஓகே. நாளைக்கு நான் அந்த வீட்ட பார்க்க வரேன். எனக்கும் ரமணிக்கும் நாளைக்கு அங்க தான் வேலை” என்றாள்.

“என்னது…?” என்று ரமணி அலற “நோ வே.. நானும் ரமணியும் போறோம். நீ இங்கயே இரு” என்று கூறி விட்டாள் மேகலா.

“முடிவ நான் சொல்லிட்டேன். என் கூட யாரும் வரலனா கூட நோ ப்ராப்ளம். நான் தனியா போய்க்குறேன்”

ஷாயா திட்டவட்டமாக கூற ரமணிக்கு கோபம் வந்தது.

“ஏன் டி இப்படி அடம் பிடிக்குற? சொல்லுறத கேட்டா இருக்க அஞ்சரை அடில ஒரு அடி கொறஞ்சா போயிடுவ?” என்று ரமணி கத்தாத குறையாக கேட்க அதை கேட்க வேண்டியவள் லாப்டாப்பை குடைந்து கொண்டிருந்தாள்.

“அவ திருந்த மாட்டா… எக்கேடோ கெட்டு போ னு விடாம இவ பின்னாடி இங்க வர வந்து நின்னு தொலைச்சுருக்கோம் பாரு நம்மல தான் டி செருப்பால அடிச்சுக்கனும்” என்று மேகலா பல்லை கடித்துக் கொண்டு புலம்பினாள்.

லாப்டாப்பிலிருந்து தலையை உயர்த்தாமல் ஷாயா அறையின் கோடியை கை காட்டினாள். அங்கு செருப்புகள் வரிசையாக கிடந்தது. அவள் கை காட்டிய திசையை பார்த்தவர்கள் “பே” வென முழிக்க குமார் குபீரென சிரித்து விட்டான்.

இப்போது லாப்டாப்பிலிருந்து தலையை உயர்த்தி தன் நண்பர்களை பார்த்து கண் சிமிட்டி விட்டு மீண்டும் குனிந்து கொண்டாள்.

“எவ்வளவு கொழுப்பு டி உனக்கு… செருப்பையா காட்டுற?” என்று கேட்டு மேகலா தலையணையை எடுத்து மொத்த தொடங்கி விட சிரிப்போடு அவளும் ஒரு தலையணையை எடுத்து சண்டை போட ஆரம்பித்தாள்.

சில நிமிடங்கள் சண்டைக்கு பிறகு எல்லோரும் ஓய்ந்து போய் அமர “ஓகே.. எல்லாரும் தூங்குங்க.. நாளைக்கு நிறைய வேலை இருக்கு” என்று கூறி விட்டு சென்று விட்டாள்.

அத்தியாயம் 9

காலையில் வீட்டிற்குள் நுழைந்த ஆதீரன் வீட்டில் நடக்கும் வேலைகளை ஆராய்ந்து கொண்டிருந்தான். அவன் இந்த வீட்டில் தங்குவது இல்லை. அவனுடைய அன்னை சந்தானலட்சுமியுடன் தான் இருப்பான். வேலையை மேற்பார்வை பார்க்க மட்டும் காலை கிளம்பி வந்து விடுவான்.

சந்தானலட்சுமி அந்த வீட்டுக்கு ஒரு சில நாட்கள் மட்டுமே வந்து சென்றார். வந்தாலும் ஷ்ராவ்யாவிடம் பேச மாட்டார். அவருடைய அறைக்கு சென்று விட்டு மீண்டும் கிளம்பி விடுவார்.

ஜெயபிரதாபன் ஹாலில் அமர்ந்து இருந்தார். அந்த ஹாலை முழுமையாக மாற்றி விட்டனர். இப்போது அறையை மாற்றிக் கொண்டிருந்தனர். அதனால் ஹாலில் யாரும் இல்லை. ஷ்ராவ்யா மட்டும் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தாள்.

அவளிடம் என்றும் இல்லாத பரபரப்பு இருந்தது. எதோ வேலைகளை பேசிக் கொண்டிருந்தாலும் அவளது கவனம் ஆதீரனிடம் இருப்பது போல் அவனுக்கு தோன்றியது. ஆனால் ஏன் ? ஆதீரன் அவளை ஆராய்ச்சியாக பார்த்து விட்டு ஜெய பிரதாபனிடம் பேச அமர்ந்தான்.

அவர் வரிசையாக எதோ சொத்து விவரங்களை கேட்க அவனும் ஷ்ராவ்யாவை கவனித்துக் கொண்டே பதில் சொல்லிக் கொண்டு இருந்தான்.

“இன்னைக்கு மதுரைக்கு போகனும் ல?”

“ஆமா பெரியப்பா”

“சரி போயிட்டு வந்து என்ன பாரு” என்று கூறி விட்டு அவர் எழுந்து கொண்டார். ஆதீரன் ஷ்ராவ்யாவையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆதீரன் மதுரை சென்று விடுவான் என்பதில் அவளுக்கு அவ்வளவு சந்தோசம். அதை முகத்தில் காட்டி விட ஆதீரனுக்கு எதுவும் புரியவில்லை.

‘திடீர் னு எதுக்கு இவ்வளவு சந்தோசம்?’ என்று யோசித்துக் கொண்டே அறைக்குள் சென்றான். “அருண் சாவி” என்று இன்னொரு வீட்டு சாவியை கொடுக்க “தாங்க்யூ சார்” என்று வாங்கிக் கொண்டான் அவன்.

ஆதி திரும்பி நடக்க மேகலா கையாட்டினாள். ‘என்ன?’ என்பது போல் பார்வையை உயர்த்த சாவியை கை காட்டினாள். ‘சாவிக்கு என்ன?’ என்று யோசிக்க ஷ்ராவ்யாவை கை காட்டினாள்.

“வேண்டாம்” என்பது போல் இரண்டு கையையும் ஆட்டியவள் ஷ்ராவ்யா வரவும் அங்கிருந்து ஓடிவிட்டாள். ஆதீரன் ஒன்றும் புரியாமல் குழம்பி நின்றான்.

“மார்னிங் சாரே” என்று ஷ்ராவ்யா சாதாரணமாக கூற “மார்னிங்” என்றான். மணிக்கட்டை திருப்பி மணி பார்த்தவன் “ஓகே . நீங்க வேலைய பாருங்க. நான் கிளம்புறேன்” என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான்.

வாசல் நோக்கி நடந்தவன் மேகலா சொல்ல வந்ததை யோசித்துக் கொண்டே நடந்தான். ஷ்ராவ்யாவின் பரபரப்பும் மேகலாவின் செய்கையும் வித்தியாசமாக இருப்பது போல் தோன்றியது.

‘சாவிக்கும் இதுக்கும் என்ன சம்பந்த…….’ யோசித்துக் கொண்டே வந்தவன் சட்டென நின்று விட்டான். ‘சோ நான் அந்த பக்கம் போனதும் மேடம் இந்த பக்கம் கிளம்ப ப்ளான் போட்ருக்காங்க… தேவை தான். சும்மா இருந்தவ கிட்ட மூணு பேய் னு கதை சொன்னேன் ல. இது தேவை தான்’ என்று நினைத்துக் கொண்டான். மீண்டும் அறைக்குள் வந்தவன் அருணிடம் இருந்த சாவியை வாங்கிக் கொண்டான்.

“ஷ்ராவ்யா” என்று ஆதி அழைக்க திரும்பி பார்த்தாள். ‘வா’ என்பது போல் கையாட்டி விட்டு முன்னால் நடந்தான். ஷ்ராவ்யா அவன் பின்னால் செல்ல கார் பக்கத்தில் சென்று நின்றான்.

“ஏறு”

“எங்க?”

“ஏறு சொல்லுறேன்” என்று கூறி விட்டு அவன் காரில் ஏறி அமர்ந்து கொண்டான். வேறு வழியில்லாமல் அவளும் அமர ஒன்றும் பேசாமல் கிளம்பி விட்டான்.

ஆதியிடம் பேச வந்த பொன்னாம்பாள் அவர்கள் இருவரும் ஒன்றாக செல்வதை யோசனையுடன் பார்த்துக் கொண்டு நின்று இருந்தார்.

காரில் சென்று கொண்டிருந்த ஷாயா “எங்க போறோம்?” என்று கேட்டாள். 

“அம்மா உன்ன பார்க்கனும் னு சொன்னாங்க”

“என்னது?? என்ன பார்க்கனும் னு சொன்னாங்களா?”

“ஆமா. உன்ன அங்க விட்டுட்டு நான் ஊருக்கு போகனும். அப்புறம் இன்னைக்கு அந்த தென்னந்தோப்பு வீட்டுல வேலை பார்க்க வேணாம். “

“ஏன் ஏன்?” என்று ஷாயா பதட்டமாக கேட்க அவளை திரும்பி பார்த்தான். “அம்மா கிட்ட கேட்டுக்க” என்று கூறி விட்டு அமைதியாகி விட்டான்.

ஷாயாவிற்கு புரிந்து விட்டது. தனது திட்டத்தை யாரோ இவனிடம் கூறி விட்டார்கள் என்று. மனதிற்குள் எல்லோரையும் வருத்தெடுத்துக் கொண்டு அமர்ந்து இருக்க ஆதீரன் அமைதியாகவே இருந்தான்.

வீட்டில் எதோ வேலையாக இருந்த சந்தானலட்சுமி ஆதீரன் கதவை தட்டவும் திறந்தார். பின்னால் எங்கோ பார்த்துக் கொண்டு நின்றிருந்த ஷ்ராவ்யாவை அவர் கேள்வியாக பார்க்க “இவங்க பண்ணுற காரியத்துக்கு நீங்க தான் இப்ப முடிவு சொல்லனும்” என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டான்.

“உள்ள வா” என்று சந்தானலட்சுமி அழைக்க வேண்டா வெறுப்பாக ஷாயாவும் உள்ளே நுழைந்தாள்.

“என்ன ஆதி?”

“இவங்களுக்கு அந்த வீட்டுக்குள்ள போகனுமாம். அதான் இப்ப பிரச்சனை. நான் அன்னைக்கு இடையில வந்து தடுத்ததால இன்னைக்கு நான் ஊருக்கு கிளம்புனதும் போக ப்ளான் போட்ருக்காங்க.

நீங்க அந்த வீட்டுக்குள்ள நுழைய கூடாது னு சொல்லிட்டீங்க. நான் போகல. இவங்க போறாங்க. அத நீங்களே பேசி தடுங்க. எனக்கு வேலை இருக்கு” என்று அன்னையிடம் படபடவென பேசியவன் ஷாயாவை பார்த்தான்.

“அம்மா தாயே… அன்னைக்கு உன்ன பயமுறுத்தி பார்க்கனும் னு ஆசையில பேய் கதை எல்லாத்தையும் சொன்னேன். அத ஆராய்ச்சி பண்ண கிளம்பாத. இப்படி ஆராய்ச்சி பண்ணுவ னு தெரிஞ்சு இருந்தா சொல்லியே இருக்க மாட்டேன். இதோட இத விடு”

பேசி முடித்தவன் வீட்டு சாவியை டேபிளில் வைத்து விட்டு விறுவிறுவென வெளியேறினான்.

இருவரும் அவனை அழைத்து பார்க்க திரும்பாமல் சென்று விட்டான். சந்தானலட்சுமி ஷாயாவை அழுத்தமாக பார்த்தார்.

“நீ எதுக்கு அந்த வீட்டுக்குள்ள போற?”

“…..”

“உன் கிட்ட தான் பேசுறேன்”

“அது எதுக்கு உங்களுக்கு?”

“அந்த வீட்டுக்கு சொந்தகாரி நான். என் வீட்டுக்குள்ள நுழையுறனா எனக்கு காரணம் தெரிய வேணாமா?”

“நிச்சயமா திருட போகல”

பட்டென வந்த பதிலில் சந்தானலட்சுமியின் உதட்டோரம் புன்னகை வந்தது.

“அதே மாதிரி ஆதீ சொன்ன பேய் ஆராய்ச்சிக்கும் நீ போகல.”

“….”

“சொல்லு . ஏன் போற?”

“இங்க பாருங்க. எனக்கு நிறைய காரணம் இருக்கு. அதை எல்லாம் உங்க கிட்ட சொல்ல முடியாது”

“காரணத்த தைரியமா சொல்ல முடியாத ஒரு செயல செய்யுறது பெரிய தப்பு. தெரியுமா உனக்கு?”

“நான் தப்பா எதுவும் செய்யல”

“அப்ப காரணம் சொல்லு”

ஷ்ராவ்யா பதில் பேசவில்லை. காரணம் சொல்லலாம் தான் . ஆனால் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும். இது வரை இந்திரஜித்தை தவிர வேறு யாரிடமும் எதையும் அவள் சொன்னதில்லை.

இப்போது மட்டும் சொல்லிவிட முடியுமா? வாயை இறுக்கமாக மூடிக் கொண்டாள். அவளது அமைதியை பார்த்த சந்தானலட்சுமி குனிந்து சாவியை எடுத்துக் கொண்டார்.

“அந்த வீட்டுக்குள்ள போக யாருக்கும் உரிமை கிடையாது. நீயும் போக கூடாது” என்று அழுத்தமாக கூறினார்.

“நான் நினைச்சா எப்பவேனா அந்த வீட்டுக்குள்ள போக முடியும்” என்று ஷாயாவும் அழுத்தமாக கூற “அப்ப இவ்வளவு நாள் ஏன் போக முடியல?” என்று கேலியாக கேட்டார்.

அவர் முகத்தில் இருந்த சிரிப்பு ஷாயாவிற்கு கோபத்தை கிளறி விட்டது. அவள் பல்லை கடித்து அதை அடக்க “நீ செய்ய போறது பெரிய தப்பு. முதல்லையே சொல்லுறேன் . மாத்திக்க. செஞ்சுட்டு வருத்தப்படாத” என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

ஷாயாவிற்கு புரியவில்லை. அந்த வீட்டில் ஆவிகள் அமானுஷ்யங்கள் இருக்கின்றன என்று சந்தானலட்சுமி கூறவில்லை. அவள் அந்த வீட்டிற்குள் செல்வது தவறு என்று மட்டுமே கூறுகிறார். இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று யோசித்துக் கொண்டு வெளியே வந்தாள்.

தன் யோசனையில் கால் போன போக்கில் நடக்க போன் சத்தமிட்டு அவளது கவனத்தை திருப்பியது. இந்திரஜித் அழைத்தான்.

“ஜித்து” என்றவளின் குரலில் அப்பட்டமான சோர்வு தெரிந்தது. “என்ன ஷாயா.. ஏன் ஒரு மாதிரி பேசுற?” என்று கேட்டான்.

“இங்க எல்லாமே குழப்புது. யோசிச்சு யோசிச்சு தலை வெடிச்சுடும் போல இருக்கு”

“எதையும் ஏன் யோசிக்குற? எத்தனை தடவ சொல்லி இருக்கேன். எதையும் டீப்பா யோசிக்காம போற போக்குல விடு னு?”

இந்திரஜித் கடிந்து கொள்ள ஷாயா பதில் சொல்லவில்லை.

“இப்ப என்ன நடந்துச்சு?” என்று கேட்க எதையும் விடாமல் மொத்தமாக சொல்லி விட்டாள். இந்திரஜித் அமைதியாக சில நிமிடங்கள் யோசித்தான். ஷாயா அழைப்பை துண்டிக்கவில்லை. அவளும் அமைதியாக இருக்க “இனி இத பத்தி யோசிக்காத. நீ உன் வேலைய பாரு. உனக்காக எல்லாத்தையும் யோசிச்சு நான் ஒரு முடிவ சொல்லுறேன். அத செய் போதும்” என்றான்.

“ஓகே டா. இனி இந்த மூளைய ரெஸ்ட் எடுக்க விட்ரேன்”

“உனக்கு மூளை எல்லாம் இருக்கா? எங்க இருக்கு ? “

“இந்த மேகலா கூட பேசாத பேசாத னு சொன்னேன். கேட்டியா … பாரு அவள போல மொக்க போட ஆரம்பிச்சுட்ட”

“ஹா.. ஹா… பட் மேகலா குட் கேர்ள். உன்ன பத்தி டெய்லி கரெக்ட்டா ரிப்போர்ட் பண்ணிடுவா”

“ஸ்பையா?? இருக்கு அவளுக்கு இன்னைக்கு… அவ தான் ஆதீரன் சார் கிட்டயும் போட்டு குடுத்துருக்கனும். இன்னைக்கு மொத்துற மொத்துல வாய திறக்க கூடாது”

“உன்ன பாதுக்காக்க அனுப்புனா நீ அவங்கள கொன்னுடுவ போலயே.. பார்த்து வெளியே‌ சேதாரம் தெரியாம அடி”

“பார்க்கலாம் பார்க்கலாம்”

பேசிக் கொண்டே வீட்டை நோக்கி நடந்தாள். வீடு வந்து சேரும் வரை பேசி விட்டு “ஓகே.. வேலை இருக்கு.. நீயும் போய் உன் பேஷண்ட்ட கவனி” என்றாள்.

“இப்ப கூட பேஷண்ட் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் . நீயும் என் பேஷண்ட் தான?”

“ஜித்து….”

“ஹா ஹா.. ஓகே ஓகே.. நான் வைக்கிறேன்”

அழைப்பை துண்டித்து விட்டு உள்ளே வந்தவள் சற்று தெளிந்து இருந்தாள். எல்லாவற்றையும் தூக்கி போட்டு விட்டு நேராக வேலையை கவனிக்க சென்று விட்டாள்.

*.*.*.*.*.*.

இரண்டு நாட்கள் அமைதியாக கடந்தது. ஆதீரனிடம் ஷ்ராவ்யா பேசவில்லை. வேலை என்று அவன் பல ஊர்களுக்கு சென்று கொண்டிருந்தான். நின்று பேச நேரமில்லாமல் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்திரஜித் ஷாயாவை அந்த பேய் வீட்டுக்குள் செல்ல வேண்டாம் என்று கூறி விட்டான். காரணம் கேட்ட போது “முதல்ல உடம்பு சரியில்லாம படுத்து இருந்தாங்களே அவங்க சரியாகட்டும். அவங்க என்ன சொல்லுறாங்க னு கேளு. கேட்டுட்டு அப்புறம் அந்த வீட்டுக்குள்ள போறதா வேணாமா னு முடிவு பண்ணிக்கலாம்” என்று கூறினான்.

ஷ்ராவ்யா அந்த வீட்டிற்கு செல்லும் முயற்சியை கை விட்டு விட அவளது நண்பர்களுக்கு தான் நிம்மதியாக இருந்தது. இரண்டு வீடுகளிலும் வேலை மும்முரமாக நடக்க நாட்கள் பறந்தது. அவள் இந்த ஊருக்குள் வந்து மூன்று வாரம் கடந்து விட்டது.

அன்று ஷ்ராவ்யாவிற்கு அழைப்பு வந்தது. மணிமாலா தான் அழைத்து இருந்தார். “உன் கிட்ட அப்பா பேசனும் னு சொல்லுறார் மா. வரீயா?” என்று கேட்க உடனே கிளம்பி விட்டாள். வேலையை முடித்து விட்டு மற்றவர்களை வீட்டுக்கு செல்ல சொல்லி விட்டு பச்சை முத்துவை பார்க்க கிளம்பினாள்.

அவள் செய்த ஒரே தவறு… ஆதீரனின் வீட்டிலிருந்து நேராக கிளம்பியது தான். அவள் தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்று விட்டு கிளம்பியிருக்கலாம். யாருக்குமே சில இடங்களில் சறுக்க தான் செய்யும். ஷாயா முதலில் சறுக்கிய இடம் இதுவே.

காரை விட்டு விட்டு நடந்தே சென்றாள். பச்சை முத்துவின் வீட்டிற்குள் நுழைந்து “அக்கா” என்று சத்தம் கொடுக்க மணிமாலா வேகமாக வந்தார்.

“வா மா… வா வா” என்று அழைத்துச்சென்றார். வாசல் கதவை பூட்டி விட்டு ஷ்ராவ்யாவை தந்தையிடம் கொண்டு சென்று நிறுத்தினார்.

பச்சை முத்து இப்போதும் படுத்து தான் இருந்தார். அவரால் எழுந்து அமர முடியவில்லை. ஆனால் உடல் தேறியிருந்தது. அவளை பார்த்து மெதுவாக புன்னகைக்க “இப்போ எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?” என்று நலம் விசாரித்தாள்.

அவளது கேள்விக்கு பதிலாக அவரிடம் தலையசைப்பு மட்டுமே கிடைத்தது. ஷ்ராவ்யாவிற்கு மணிமாலா காபி கொண்டு வந்து கொடுக்க மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.

“உன் கிட்ட எதோ சொல்லனும் னு சொன்னார்” என்று மணிமாலா கூற ஷ்ராவ்யா பச்சை முத்துவை திரும்பி பார்த்தாள்.

“ஊர… ஊர..” என்றதும் ஷ்ராவ்யா மணிமாலாவை பார்த்தார். அவர் தந்தையின் பிச்சு போட்ட பேச்சிலிருந்து வார்த்தைகளை கோர்த்தார்.

“இந்த ஊர சொல்லுறீங்களாபா?” என்று கேட்க பச்சை முத்து தலையாட்டினார்.

“நான் இந்த ஊர விட்டு போயிடனும் னு சொல்லுறீங்களா?” என்று ஷ்ராவ்யா கேட்க மறுப்பாக தலையசைத்தார்.

“போ..வ.. த.. உ… அம்…” என்றவர் அதற்கு மேல் முடியாமல் இரும ஆரம்பித்தார். மணிமாலா அவரது நெஞ்சை தடவி கொடுத்து தண்ணீர் கொடுக்க குடித்து விட்டு அமைதியானார்.

“என் அம்மா அப்பா இந்த ஊரு தான் இல்லையா?” என்று கேட்கும் போது ஷ்ராவ்யாவிற்கு தொண்டை அடைத்தது. செறுமிக் கொண்டு பச்சை முத்துவை பார்க்க இமை மூடி ஆமோதித்தார்.

“செத்து… செத்துட்டாங்களா?” என்று கேட்கும் போது ஷ்ராவ்யாவின் கண்ணில் கண்ணீர் வழிந்தது. மணிமாலா அவளை அதிர்ச்சியாக பார்த்தார்.

பச்சை முத்து அவளை பாவமாக பார்க்க ஷ்ராவ்யா கண்ணை துடைத்துக் கொண்டாள்.

“ஷ்ராவ்யா” என்று மணிமாலா எதோ சொல்ல வர “எனக்கு இது முதல்ல தெரியாது கா. ஏன் என்ன பெத்த அம்மா அப்பா யாரு னு கூட எனக்கு தெரியாது. இந்த ஊர பத்தியும் தெரியாது.

நான் அநாதையா இருந்தப்போ என்ன தத்தெடுத்தாங்க. இப்போ என்னோட அம்மாவும் அப்பாவும் கோடீஸ்வர குடும்பம். என்ன தத்ததெடுத்தத அவங்க மறைக்கல. அவங்களுக்கு ஒரு மகள் இருந்தும் என்ன தத்தெடுத்து வளர்த்துட்டு இருக்காங்க.

நான் கண்ணால பார்த்த தெய்வம் அவங்க. ஆனா … என் கடந்த காலத்துல என்ன நடந்துச்சு னு எனக்கு தெரியல. எல்லாத்தையும் மறந்துட்டேன். அவங்கள பத்தி இப்போ இருக்க என் அம்மா அப்பா கிட்ட கேட்க பயம்.

அவங்கள நோகடிச்சுட்டா வருத்தப்படுவாங்க னு. யாருமே சொல்லாத  பதில உங்கப்பா தான் எனக்கு சொல்லனும்” கண்ணீரை துடைத்துக் கொண்டு உறுதியோடு பேசினாள்.

மணிமாலாவிற்கு வார்த்தை வரவில்லை. அவளை தோளோடு அணைத்து தட்டிக் கொடுத்தார். சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய “என் அம்மா அப்பா.. ரெண்டு பேருமே செத்துட்டாங்களா?” என்று பச்சை முத்துவிடம் கேட்டாள்.

அவர் ‘ஆமாம்’ என்பது போல் தலையாட்ட “ம்ம்… எப்படி ? என்னாச்சு?” என்று கேட்டாள். பச்சை முத்துவால் அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. இருமலும் மூச்சு திணறலும் வர அவரை அமைதியாக இருக்க சொல்லி விட்டாள்.

“உங்க அண்ணன் இப்போ எப்படி இருக்கார்?” என்று கேட்க “அவரும் இப்படி தான் இருக்கார். பேச்சு வரலனாலும் எழுந்து உட்காருற அளவு மாறிட்டார்” என்றார்.

“தாங்க் காட். நான் ஊர விட்டு போறதா வேணாமா னு யோசிச்சுட்டு இருந்தேன். இப்போ அதுக்கு பதில் கிடச்சுடுச்சு ‌. இப்போதைக்கு வேற எதுவும் எனக்கு தெரிய வேணாம். என் வேலை முடிய இன்னும் ஒரு மாசம் ஆகும். அதுக்கு அப்புறம் எதையும் செய்யலாம் னு அமைதியா இருக்க போறேன்”

ஷ்ராவ்யா திட்டவட்டமாக கூறி விட்டு மணிமாலா கொடுத்த காபியை குடித்து முடித்தாள். அவரிடம் சற்று நேரம் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்தவள் மெத்தையில் படுத்துக் கொண்டாள். எல்லோரும் அறையை விட்டு வெளியே இருக்க கதவை அடைத்துக் கொண்டாள்.

அழுகை வந்தது. அவள் தத்து பிள்ளை என்று தெரியும். முதலில் தன்னை வேண்டா வெறுப்பாக தூக்கி போட்டிருப்பார்கள் என்று நினைத்து அவர்கள் மீது வெறுப்பை வரவழைத்துக் கொண்டிருந்தாள். பத்து வருடத்திற்கு முன் வந்த கனவு தான் அவளை வேறு மாதிரி சிந்திக்க வைத்தது.

அதற்கு முழு காரணம் இந்திரஜித் மட்டுமே. எதோ இருக்க வேண்டும் என்று யோசித்து மூளையை குடைந்து கொண்டிருந்தாள். பதில் இங்கு கிடைக்கலாம் என்று கிளம்பி வந்து பார்த்தால் அதிர்ச்சி தான் இருக்கிறது.

எப்படியும் எதோ ஒரு வலையில் மாட்டிக் கொள்வோம் என்று அவள் ஆழ்மனம் சொல்லிக் கொண்டே தான் இருந்தது. அதையும் தாண்டி கிளம்பி வந்து சேர்ந்தாள். பெற்றோர்கள் முடிவை ஒருவாறு எதிர் பார்த்து இருந்தாள் தான். ஆனால் அதை காதில் கேட்கும் போது உடைந்து போனாள்.

இறந்து போன அவளது பெற்றோர்களின் முகம் கூட அவளுக்கு நியாபகம் இல்லை. ஆனால் அவர்களை நினைத்ததும் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

அத்தியாயம் 10

ஷாயா அறையில் அடைந்து கொள்ள மற்றவர்கள் குழம்பி விட்டனர். எங்கோ கிளம்பி சென்றவள் திரும்பி வந்ததும் இப்படி இருந்தால் யார் தான் குழம்ப மாட்டார்கள். ரமணி கதவை தட்ட போக சித்ரா தடுத்து விட்டாள்.

“அவளா வெளிய வரட்டும். நாம சமைக்குற வேலைய‌ பார்க்கலாம்” என்று எல்லோரையும் இழுத்து சென்று விட்டாள்.

ஷாயா முகம் அறியாத பெற்றவர்களை நினைத்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க தலை வலிக்க ஆரம்பித்தது. இன்னும் சற்று நேரம் அழுதால் மயங்கி விழுவது உறுதி. தன்னை தானே தேற்றிக் கொண்டு கண்ணை துடைத்துக் கொண்டாள்.

கதவை திறந்து வெளியே வந்தவள் முகத்தை கழுவி விட்டு நேராக சென்று மரத்திற்கு அடியில் அமர்ந்து கொண்டாள். போனை எடுத்து அன்னையை அழைத்தாள்.

“ஷாயா…”

“ம்மா.. “

“என்னடா.. டையர்ட்டா இருக்கியா?”

“ம்ம்… வேலை நிறைய இருக்கு இன்னும்”

“எல்லாத்தையும் உன் தலையில கட்டிட்டாளுங்களா உன் ஃப்ரண்ட்ஸ்?”

“அவங்க என்ன விட அதிகமா பார்க்குறாங்க”

“இப்ப என்ன பண்ணுறாங்க?”

“சமைச்சுட்டு இருக்காங்க . டின்னர்”

“சமையலா… தப்பி தவறி கூட நீ அந்த பக்கம் போயிடாத…”

“ம்மா…..” என்று ஷாயா பல்லை கடிக்க அந்த பக்கம் சிரிப்பு சத்தம் கேட்டது.

“அம்மா தான் டா கண்ணு. தெரியாம கூட கிட்சன் பக்கம் போயிடாத. எல்லாம் உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன்”

“அம்ம்ம்ம்மா….. இப்படியே பேசிட்டு இருந்தீங்க ஒரு நாள் நான் சமைச்சு அத உங்கள சாப்ட வச்சுடுவேன்”

“அந்த விச பரிட்சை எல்லாம் உங்க அப்பாவோட வச்சுக்க. என் மகளுங்கள போல உண்டா னு பேசிட்டு இருக்கார் ல. நீங்க ரெண்டு பேரும் சமைச்சு போடுங்க. அவர் அடுத்து வாய திறக்குறாரா னு பார்க்குறேன்”

“என்னோட சேர்த்து ஷிவானியையும் இன்ஸல்ட் பண்ணுறீங்களா… இருங்க அவளுக்கு போன போட்டு வத்தி வைக்குறேன்”

“அய்யோ அவளா… சும்மாவே பேச்ச நிறுத்த மாட்டா. நீ வேற சொல்லி வைக்காத”

“நெவர். அவ தான் உங்களுக்கு லாயக்கு. எங்க சமையல குறை சொன்னா இதான் பனிஸ்மண்ட்”

சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்ததில் ஷாயாவின் மனம் இலகுவானது. சிரித்து சந்தோசமாக பேசி விட்டு வைக்கும் போது “என்ன பிரச்சனை னு நீ சொல்லல. நானும் கேட்கல. ஆனா எது நடந்தாலும் உன் அம்மா இங்க இருக்கேன். உன் கூட எப்பவும் இருப்பேன்” என்று கூற ஷாயாவிற்கு கண் கலங்கியது.

இமை சிமிட்டி அதை சரி செய்தவள் “ஓகே மா. நான் வச்சுடுறேன்” என்று அழைப்பை துண்டித்து விட்டாள். அவ்வளவு தான். என்றும் அவர்களிடம் தன்னை பற்றி ஷாயா கூறியது இல்லை. அவர்களும் அவளை தோண்டி துருவி கேட்க மாட்டார்கள்.

அழைப்பை துண்டித்து விட்டு எழ சித்ரா வந்து நின்றாள். அவளது கலங்கிய முகம் சித்ராவை வருத்தப்படுத்தியது. தோளில் தட்டியவள் “சாப்டலாம் வா” என்று அழைத்துச் சென்றாள்.

ஷ்ராவ்யாவிடம் கேள்வி எதுவும் கேட்காமல் வேறு விசயங்களை பேசிக் கொண்டே சாப்பிட்டு எழுந்தனர். நாளை செய்ய வேண்டிய வேலைகளை பற்றி பேச எல்லோரும் ஒன்றாக அமர “நீ சொல்லு ரமணி. எனக்கு டயர்டா இருக்கு” என்று கூறி ஓரமாக அமர்ந்து கொண்டாள்.

வேலைகளை பிரித்து விட்டு வந்து படுத்துக் கொண்டனர். எல்லோரும் தூங்கி விட ஷாயாவிற்கு வழக்கமான கனவும் வந்தது. அவள் கனவில் வித்தியாசம் எதுவும் இல்லை. அவளுடன் இருப்பவர்களின் முகத்தை பார்க்க முடியாமல் இன்றும் எழுந்து விட்டாள்.

கண்ணை கடந்து காதோரம் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்து நடக்க ஆரம்பித்தாள். மேகலா அவளது செய்கையை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தாள். மீண்டும் ஷாயா உறங்கும் போது தான் அவளும் உறங்கினாள்.

*.*.*.*.*.*.

ஷ்ராவ்யா எதோ நோட்டில் எழுதிக் கொண்டிருக்க “ஷாயா.. அவங்க அனுப்புன பர்னிச்சர் சைஸ் மாறி இருக்கு” என்று மேகலா வந்து நின்றாள்.

“ஏன் மாத்தி அனுப்பியிருக்காங்க?”

“தெரியல. இத பாரு. நாம கேட்டது ஒன்னு இவங்க அனுப்புனது ஒன்னு. இது அந்த ரூம்க்கு செட்டே ஆகாது”

“மத்த எல்லாம் செக் பண்ணிட்டியா?”

“பண்ணிட்டேன். கிட்சன் ஐட்டம் தான் பண்ணனும்”

ஷாயா சுற்றும் முற்றும் பார்த்தாள். சிந்தாமணி அங்கு வர “சிந்தாமணி.. இங்க வா” என்று அழைத்தாள். அவள் ஓடி வர “சமையல் கட்டுல வைக்க வேண்டிய எல்லாம் வந்து இருக்கு. இவ கூட போய் அதெல்லாம் சரியா இருக்குமா னு பார்க்குறியா? ” என்று கேட்டாள்.

“பார்க்குறேனே…” என்று சிந்தாமணி துள்ள  “எதாவது சரி வராது னு தோனுச்சு னா இவ கிட்ட சொல்லு. மாத்திடலாம்” என்று கூறினாள்.

சிந்தாமணி துள்ளி குதித்து முன்னால் ஓடி விட “அப்புறம் இன்னொரு விசயம்..” என்று மேகலா ஆரம்பிக்க ஆதீரன் வந்து நின்றான்.

“ரொம்ப சீரியஸா வேலை பார்க்குறீங்க போல?” என்று ஆதி கேட்க “நீங்க சின்சியரா வேடிக்கை பார்க்குறீங்க போல?”  என்று பதிலுக்கு மேகலா கேட்டாள்.

ஆதி அவளை முறைக்க ஷாயா சிரிப்பை அடக்கினாள். “வம்பா வந்து மொக்க வாங்குனா நானா பொறுப்பு” என்று கேட்டு விட்டு மேகலா சென்று விட “எல்லா ஒரே மாதிரி இருக்கீங்களே” என்று முணுமுணுத்தான்.

ஷாயா அவனை கண்டு கொள்ளாமல் போனை கையிலெடுத்து காதில் வைத்தாள். அழைப்பு செல்லவில்லை போலும். மீண்டும் முயற்சித்தாள். அப்போதும் அழைப்பு செல்லாமல் இருக்க “அடச்சே” என்றாள்.

“என்ன டென்ஷன்?” என்று அதீரன் வினவ “பர்னிச்சர் எல்லாம் மாறி இருக்கு. போன் போட்டா போக மாட்டிது” என்று கூறி விட்டு பிரதாப்பை அழைத்து விசயத்தை கூறினாள். அவன் பேசுவதாக கூறிவிட அழைப்பை துண்டித்தாள்.

“மேடம்க்கு என் மேல கோபமோ?” என்று கேட்டவன் அங்கிருந்த டேபிளில் ஏறி அமர்ந்து கொண்டான்.

“ஆமா சாரே.. உங்க அம்மா காய்ச்சு காய்ச்சு னு காய்ச்சுராங்க. நீங்க நல்லா என்ன மாட்டி விட்டுட்டு எஸ்கேப் ஆகிட்டீங்க” என்று கூறி முறைத்து பார்த்தாள்.

“நான் சொன்னா தான் நீ கேட்க மாட்டுறியே. அன்னைக்கே போகாத னு சொன்னேன். கேட்கல. நான் போனதும் கிளம்ப ப்ளான் போட்ட. அது தப்பு தான?”

“அது தப்பாவே இருக்கட்டும். எனக்கு வேலை இருக்கு” என்று முறைத்து விட்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள். ஆதீரன் அந்த வீட்டை சுற்றி பார்த்தான். முதலில் இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் தெரிந்தது.

வீட்டின் முற்றம் பெரிய வரவேற்பு அறையாக மாறியிருந்து. சாப்பாட்டு மேசையுடன் சாப்பிடும் அறை உருவாகி இருந்தது. சோபாக்களை கொண்டு வந்து வைத்துக் கொண்டிருந்தனர். மாடியில் இன்னும் வேலைகள் இருந்தது. அதை பார்க்க மேலே ஏறி சென்று விட்டான்.

அதே நேரம் வீட்டின் முன் ஒருவன் வந்து நின்றான். அவனது உடமைகளை அந்த வீட்டில் வேலை செய்பவர் எடுத்து வர வீட்டிற்குள் நுழைந்தான்.

“ஹலோ… இது எங்க வீடு தான? தப்பா எதுவும் கூட்டிட்டு வந்துட்டீங்களா?” என்று சந்தேகமாக கேட்க “போங்கய்யா உங்களுக்கு எப்புவும் சோக்கு பண்ணுறதே வேலையா போச்சு. பெரியய்யா காலையில கிளம்பி போயிட்டாக. அம்மா உள்ள தான் இருக்காக . போய் பாருங்க” என்று கூறி விட்டு வேலை செய்பவன் அகன்று சென்றான்.

“பெரியம்மா…” என்று அழைத்துக் கொண்டே அவன் உள்ளே வர பொன்னாம்பாள் வேகமாக அவனிடம் வந்தார்.

“ஜெய்… என்னடா இது சொல்லாம கொள்ளாம வந்து நிக்குற? வா வா… நல்லா இருக்கியா?” என்று அவன் முகத்தை தொட்டு பேச அவரின் கையை பிடித்துக் கொண்டான்.

“நல்லா இருக்கேன் பெரியம்மா. எல்லாம் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் குடுக்கலாம் னு தான் கிளம்பி வந்தேன். அம்மா எங்க?” என்று கேட்டான்.

“உங்கம்மா என்னைக்கு இங்க தங்கி இருக்கா. அந்த வீட்டுல தான் இருக்கா. இன்னும் கொஞ்ச நேரத்துல வருவா. நீ வா . கை கால கழுவிட்டு சாப்டு”

“வெயிட் வெயிட். அம்மாவும் வரட்டும். நான் போய் அண்ணன பார்த்துட்டு வரேன்” என்று கூறி விட்டு வெளியே வந்தான்.

ஆதீரனை தேடிக் கொண்டே தன் அறைக்குள் சென்றான். கதவு பாதி திறந்து இருந்தது.

“நம்ம ரூம்ல யாரு இருக்கா?” என்று கதவை திறக்க அங்கே அழகு பதுமையாக ஷ்ராவ்யா அமர்ந்து இருந்தாள். சுடிதார் அணிந்து துப்பட்டாவை தோளில் போட்டிருக்க அது காற்றில் பறந்து கொண்டிருந்தது.

கதவில் சாய்ந்து கொண்டவன் ‘யாருடா இது? இவ்வளவு அழகான பொண்ணும் இந்த ஊருல இருக்காங்களா என்ன?’ என்று நினைத்துக் கொண்டான்.

அங்கு வைக்கப்பட்டிருந்த கட்டில் மேசை நாற்காலி என்று எல்லாவற்றையும் பார்த்து குறிப்பெடுத்து விட்டு நிமிர்ந்தவள் யாரோ ஒருவன் வாசலில் நிற்பதை பார்த்து விட்டு அதிர்ந்தாள். அவனும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க வேகமாக எழுந்து நின்றாள்.

“நீங்க…?” என்று முழுதாக கேட்காமல் அவள் இழுக்க அவன் உள்ளே நுழைந்தான். ஷாயா அவனை கேள்வியாக பார்க்க “ஹாய் ஐம் ஜெயராம்” என்றான்.

“ஓஓ…” என்றவள் யார் இவன் என்று யோசித்தாள். அவள் எதுவும் சொல்லாமல் நிற்க “இந்த ரூம் என்னோடது தான்” என்றான்.

இப்போது ஷாயாவிற்கு புரிந்து விட்டது. இவன் ஆதீரனின் தம்பி. அவளுக்கு புரிந்த அதே நேரம் ஆதீரன் அந்த அறைக்குள் நுழைந்தான்.

“என்னடா இங்க வந்து நிக்குற? வழி மாறி வந்துட்டியா என்ன?” என்று கேட்டுக் கொண்டே வந்து ஜெயராமனை அணைத்துக் கொண்டான்.

“தூக்க கலக்கத்துல பஸ் ஏறினேன் ஆதீ. அது என்னடானா இங்க கொண்டு வந்து விட்ருச்சு”

“அதான பார்த்தேன். ஊரு சுத்த ஆயிரம் ஊரு இருக்கும் போது இங்க எப்படி வந்தான் னு”

“எல்லா ஊரையும் சுத்தியாச்சு. பிறந்த ஊரையும் சுத்தி பார்ப்போம் னு கிளம்பி வந்துட்டேன்”

இருவரும் பேசிக் கொண்டிருக்க ஷாயா அங்கிருந்து செல்ல பார்த்தாள். அதை கவனித்த ஆதீ “முன்னாடியே இண்ட்ரடியூஸ் ஆகிட்டீங்களா?” என்று கேட்டான்.

“இல்ல. நான் தான் பேசுனேன். அந்த பக்கம் இருந்து பேரு கூட வரல” என்றான் ஜெயராம்.

“சொல்லிட்டா போச்சு. இவங்க ஷ்ராவ்யா. இந்த வீட்ட டோட்டலா மாத்தினது இவங்க தான்”

“ரியலி… என் ரூம்மையும் நீங்க தான் மாத்துனீங்களா? தாங்க்யூ” என்று கூற “இருக்கட்டும் சார். அதுக்கு தான் சம்பளம் வாங்குறேன்” என்று கூறி விட்டு ஆதீரன் ஒரு தலையசைப்புடன் வெளியே சென்று விட்டாள்.

“இந்த ஊருல இப்படி பட்ட பொண்ணுங்களும் இருக்காங்க னு தெரிஞ்சா எப்பவோ வந்து இருப்பனே” என்று கூறி ஜெயராம் கண்ணடிக்க “டேய்…” என்று ஆதீரன் முறைத்தான்.

ஜெயராம் அவனது முறைப்பை கணக்கில் கொள்ளாமல் மெத்தையில் சென்று விழுந்தான்.

“அப்புறம் ஷ்ராவ்யா இந்த ஊரு கிடையாது. அடுத்த மாசம் வேலைய முடிச்சுட்டு கிளம்பிடுவாங்க”

“அடடா.. கண்ணுக்கு அழகா ஒரு பொண்ணு இருந்தா சைட்டடிக்க முடியுதா? ச்சே ச்சே”

“ரொம்ப ஃபீல் பண்ணுறியே.. பசங்க காலேஜ்ல வேலை பார்த்தா இப்படி தான். அந்த வேலைய விட்டுட்டு கோ எட் ல சேர்ந்துடேன்”

“ஆசை தான். பட் இங்க கிடைக்குற ஃப்ரீடம் அங்க கிடைக்காது. எங்க காலேஜ் ப்ரின்ஸி வேற … ஜெயராம் சார்… உங்களால தான் இந்த காலேஜ் நிமிர்ந்து நிக்குது னு சொல்லி சொல்லியே பிடிச்சு வச்சுருக்கார்”

“சரி சரி புலம்புனது போதும். போய் குளிச்சுட்டு சாப்டு. நான் கிளம்புறேன். வேலை இருக்கு” என்று கூறி விட்டு அவன் வெளியே வர சந்தானலட்சுமி வந்து விட்டார். அவரை ஜெயராமிடம் பேச சொல்லி விட்டு ஷாயாவை தேடிச் சென்றான்.

இப்போது ஆதீரனின் அறையில் இருந்தாள். அவனது அறைக்கென வந்த பர்னிச்சர்களை பார்த்துக் கொண்டு இருக்க “என் தம்பி எதுவும் சொன்னானா என்ன?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான்.

“இல்லையே ஏன்?”

“அவன வித்தியாசமா ஒரு பார்வை பார்த்துட்டு பட்டுனு பேசுனியே அதான் கேட்டேன்”

“திடீர் னு ரூம்க்குள்ள வந்து சைட்டடிச்சுட்டு நின்னா கோபம் வரத்தான் செய்யும் சாரே..”

“சைட் டா.. அதுவும் உன்ன போயா?” என்று ஆதீரன் ஏகத்துக்கும் ஆச்சரியமாக கேட்க கையிலிருந்த நோட்டை ஓங்கினாள்.

“ஓடிப்போயிடுங்க.. இல்ல தலை தப்பாது”

“இப்பவும் என்ன துரத்திட்டு அந்த வீட்டுக்கு போக ப்ளான் போட்டியா என்ன?”

“நாராயணா…. ” என்றவள் அவனை பிடித்து அறையை விட்டு வெளியே தள்ளினாள்.

“போங்க சாரே.. போய் பொழப்ப பாருங்க” என்று கூறி விட்டு அவள் உள்ளே சென்று விட ஆதீரன் சிரிப்போடு படிகளில் இறங்கி சென்று விட்டான்.

*.*.*.*.*.*.

இரவு ஷ்ராவ்யா லாப்டாப்பை குடைந்து கொண்டு பிரதாப்பிடம் எதையோ பேசிக் கொண்டிருந்தாள். போனை ஸ்பீக்கரில் போட்டு விட்டு அவனிடம் எதையோ தீவிரமாக விவாதித்துக் கொண்டிருக்க ரமணி வந்து நின்றாள்.

“என்ன?”

“பிரதாப் சாரா?”

“ஆமா”

“சார் சார்.. உங்க கிட்ட ஒரு முக்கியமான விசயம் கேட்கனும்”

“என்ன மிஸ் ரகசியம் கேளுங்க”

“நியூ இயர் போனஸ் எப்ப சார் வரும்?”

அவள் கேட்ட கேள்வியில் ஷாயா தலையிலடித்துக் கொண்டாள்.

“இப்ப இது முக்கியமா? வேலைய பத்தி பேசிட்டு இருக்கேன் ல? போடி அங்குட்டு”

“இதான் டி முக்கியம். வேலை பார்க்குறதே சம்பளத்துக்கு தான்” என்றவள் கத்தி வீட்டின் உள்ளே இருந்தவர்களை வெளியே அழைத்தாள்.

எல்லோரும் பிரதாப்பை பிடித்துக் கொள்ள “ஜனவரி ஒன்னு டான் னு உங்களுக்கு பணம் வந்துடும். போதுமா?” என்று கேட்டான்.

“சார் நியூ இயர் பார்ட்டிய மிஸ் பண்ணுறதுக்கும் சேர்த்து பணம் அனுப்புங்களேன்” என்று மேகலா கேட்க ஷ்ராவ்யா சிரித்தாள்.

“இது நல்ல ஐடியா… பிரதாப் சார்… அனுப்புறீங்களா?” என்று ஷாயா கேட்க “இங்க நெட்வொர்க் பிரச்சனையா இருக்கு. நான் வச்சுடுறேன்” என்று அழைப்பை துண்டித்து விட்டான்.

“பாவம் நல்ல மனுசன அலறி ஓட வச்சுட்டீங்களே”

“போனஸ் தான கேட்டோம்” என்று எல்லோரும் ஒரே குரலில் கூறி விட்டு உள்ளே செல்ல ரமணி அங்கேயே அமர்ந்து கொண்டாள்.

“இப்ப என்ன?”

“ஆதீரன் சார் தம்பி வந்துருந்தாங்க போல”

“ஆமா.. அதுக்கு என்ன?”

“நீ ஆதீரன் சார பிடிச்சு தள்ளுனத அவர் வேடிக்கை பார்த்துட்டு இருந்தார்”

“இதுல என்னடி இருக்கு? ஆதீரன் சார் என்ன கிண்டல் பண்ணிட்டு இருந்தார். போங்க சார் வேலைய பாருங்க னு விளையாட்டா தான் பிடிச்சு வெளிய தள்ளுனேன். அவரே அத சீரியஸா எடுத்துக்கல. அவர் தம்பி ஏன் அத வேடிக்கை பார்க்கனும். நீ ஏன் அத என் கிட்ட இப்ப சொல்லனும்?”

“நீ தள்ளுனது தப்பு இல்ல. ஒரு வீட்டுல பசங்களோட ஒன்னா தான் இருக்கோம். ஆதீரன் சார் உனக்கு ஃப்ரண்ட். இது எங்களுக்கு தெரியும். எல்லாருக்கும் தெரியுமா?”

“என்ன சொல்ல வர?”

“நீ பிடிச்சு தள்ளி அவர் சிரிச்சுட்டே போயிட்டார். ஆனா அத பார்த்த ஜெயராம் சார் அவங்க அம்மா கிட்ட இந்த பொண்ணுக்கும் ஆதிக்கும் என்ன சம்பந்தம் னு கேட்குறார்”

“ஒட்டுக் கேட்டியா?”

“இல்ல. உன்ன பார்க்க மேல ஏறி நான் வரும் போது தான் இத பார்த்தேன். ஆதீரன் சார் ரூம்க்குள்ள நுழையும் போது பக்கத்து ரூம்ல அவர் கேள்வி கேட்டது காதுல விழுந்துச்சு. பட் அவங்க அம்மா என்ன பதில் சொன்னாங்க னு நின்னு கேட்கல. என்ன சொல்லி இருந்தாலும் எனக்கு கவல இல்ல. என் கவல உன் கேரக்டர் பத்தி அவங்க பேசிட கூடாது னு தான்”

ரமணி சொல்வதும் ஷாயாவிற்கு சரியாக தான் தோன்றியது. ஆதீரனின் அம்மாவிற்கு முதலிலேயே அவளை பிடிக்காது. இப்படி ஒருவர் எடுத்துக் கொடுத்தால் கேட்கவே வேண்டாம். அவளது நிலமை படுமோசம் தான்.

“நான் பார்த்துக்குறேன். நீ போ” என்று கூறி விட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தாள். ரமணி சென்று விட ஷாயா தீவிரமாக யோசித்தாள். இனி சற்று கவனத்துடனே ஆதீரனிடம் பேச வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள்.

அந்த ஜெயராமை பற்றிய கவலை எல்லாம் அவளுக்கு இல்லை. சந்தானலட்சுமி மனசு வைத்தால் மட்டுமே அந்த பேய் வீட்டுக்குள் அவள் நுழைய முடியும். அந்த ஒரு காரணத்திற்காக அடக்கி வாசிக்க நினைத்தாள்.

நாளை இருவரின் அறைகளுமே தயாராகிவிடும். அடுத்து மாடியில் புதிய அறைகள் கட்டும் வேலை தான். அதில் ஷாயாவிற்கு வேலை இல்லை. அதனால் சுலபமாக அவர்களை தவிர்த்து விடலாம் என்று நினைக்க விதி வேறு கணக்கை போட்டு வைத்திருந்தது.

அதன் முதல் படியாக அமுதா வந்து இறங்கினாள். பரிட்சை முடிந்து விடுமுறையை கொண்டாட…

தொடரும்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Expert

Written by Hani novels

வணக்கம். நான் ஹனி. கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதில் வரலாற்று கதைகள் என்றால் ரொம்பவுமே பிடிக்கும். "பொன்னியின் செல்வன்" படித்த பிறகு கதைகளின் மீதும் நாவல்களின் மீதும் வந்த ஆர்வம். ஒரு கட்டத்தில் எழுத ஆரம்பித்து விட்டேன். சாதாரண குடும்ப கதைகளும் காதல் கதைகளுமே எனக்கு எழுத தெரியும். அதையே இங்கும் பதிவிடுகிறேன். நன்றி.

Story MakerContent AuthorYears Of Membership

27. உனது விழிகளின் வழியே எனது தேடல்..!

உன் காதல் என் காவியம் (பாகம் 2)-அத்தியாயம் 6