காலையிலேயே இந்த அம்மாக்கு வேலை இல்லை…..பாரு ஆறு மணி தான் ஆகுது அதுக்குள்ள போன் பண்ணிவிட்டார்…..என எண்ணியபடி தனது உறக்கத்தை கெடுத்த அம்மாவை மனதினுள் திட்டி கொண்டு வந்த போனை கட் செய்து விட்டு மீண்டும் உறங்க ஆரம்பித்தான் செந்தில்……
மீண்டும் பத்து நிமிடத்தில் போன் வர…..மீண்டும் அதேபோல கட் செய்துவிட்டு உறங்கினான்…..
அடுத்த பத்தாவது நிமிடம் மீண்டும் போன் வர…. அதை எரிச்சலுடன் அட்டன் செய்தவன்….” என்னமா காலையிலேயே இப்படி பண்றீங்க…..” என கோவமாக கேட்க….
“தம்பி செந்திலு நீ தான ராசா காலையில வேலை இருக்கு….சீக்கிரமாக போகணும்னு சொன்ன…..அதான் உன்னை எழுப்பி விட்டேன்…..” என கனிவாக கூற….
அவனுக்கு அந்த நாளின் முக்கியத்துவம் நினைவுக்கு வந்ததும் அவரிடம் சரி மா…..என கூறி விட்டு படுக்கையை விட்டு எழ….மறுபக்கம் தன் மனைவியை கண்டான்…..நிம்மதியாக உறங்கி கொண்டு இருந்தாள்…..
எதுவும் பேசாமல் தன் வேலையை பார்க்க கிளம்பி சென்றான்….
அன்று முழுதும் ரொம்ப பிஸி…..இரவு வீட்டிற்கு வர தாமதம் ஆனது…..பதினொரு மணியளவில் மீண்டும் தாயிடம் இருந்து போன் வந்தது…..பசியினால் அவரிடம் பேசாமல் சாப்பிட அமர்ந்தான்…..டேபிளில் இட்லி தொட்டு கொள்ள மிளகாய் பொடி அவனை பார்த்து சிரித்தது…..
பசியினால் கண்கள் இருட்ட தொடங்கியது…..தண்ணீர் விட்டு இரண்டு இட்லிகளை உள்ளே தள்ளி விட்டு உறங்க சென்றான்….
படுத்ததும் மீண்டும் போன் வர…..எரிச்சலுடன்….” சொல்லு மா….” என கூற…
” ஐயா ராசா…..சாப்டியா….” என்று கேட்ட குரலில் மனதில் ஏதோ ஒருவித நெருடல்…..
அவரிடம் கோபத்தை காண்பிக்க மனது வரவில்லை….” நான் சாப்பிட்டு விட்டேன் மா….” என கூறினான்….
” மருமவ சூடா பண்ணி குடுத்தாளா….”
” ஆமாம் அம்மா…..நீங்க படுங்க நேரம் ஆயிடுச்சு….” என உறங்க சென்றான்….
இப்படியே அடுத்த அடுத்த நாட்களில் அவரது போன் கால் அடிக்கடி தொடர….ஒரு கட்டத்தில் அவர் போன் வரவில்லை எனில் இவன் சாப்பிட கூட மறந்து தன் வேலையை பார்த்துக்கொண்டு இருக்க ஆரம்பித்தான்….
தனது மனைவி கடமைக்கு ஏதோ சமைத்து வைத்து விட்டு வேலைக்குச் சென்று விடுவாள்…..
ஒரு மாதம் கழித்து வேலை நிமித்தமாக தனது சொந்த ஊருக்கு சென்ற அவனை இரவு ஒரு மணி அளவில் சுட சுட உணவோடு வரவேற்றார் அவனின் அன்னை…..
மிகவும் நெகிழ்ந்து போனான் அவன்….
ஆறு மாதத்திற்கு பிறகு தனது அன்னையின் இறப்பிற்குப் பிறகு வேலைக்கு சென்ற செந்தில் உணவை மறந்து போனவனாய் வேலை செய்து கொண்டிருந்தான்…..
திடீரென சாப்பிட போயா செந்திலு….. சாப்பிட்டு வேலையை செய்…..என தன் அன்னை கூறுவதுபோல் இருக்க……அவர் இருக்கும்போது புரியாத ஒன்று இறந்த பின்பு அவனுக்கு புரிந்தது…..
அன்பு அன்பு ஒன்றுதான் அவனிடம் அவர் எதிர்பார்த்தது…. ஆனால் அதைக் கூட அவன் அவருக்கு தந்ததில்லை…..
நிறைய மனிதர்கள் இப்படித்தான் ஒருவர் இருக்கும்போது அவரின் அருமை புரியாமல் நடந்து கொள்வோம்….. அவரின் இறப்புக்கு பின்னால் தான் ஒவ்வொரு விஷயத்திலும் அவர் இருந்தால் இப்படி இருக்குமா என யோசித்து அவரின் அருமையை புரிந்து கொள்கிறோம்…..
இருக்கும்போதே நம்மால் முடிந்த அளவு நம் பெற்றோர்களை புரிந்து கொண்டு நடந்தால் அவர்களும் சந்தோஷப்படுவார்கள் அல்லவா….. இனியாவது முயற்சி செய்யலாம்……