in

13.கொள்ளை போன இதயம்

இதயம் 13

இதயம் தொட்ட காதல்                        —கவியச்செல்வி

இறுதி அத்தியாயம்

மிச்சம் உயிர் என் உடலில் ஊசலாடி கொண்டிருக்கிறது. அவன் யார்? எதற்காக என்னை இவ்வளவு கொடூரமாக கொலை செய்ய வேண்டும்? அவன் ஏன் அழுகிறான்? இதெல்லாம் என் மனதில் கேள்வியாய் எழுகின்றதே..!! ஒரு முறை உன் முகம் காட்டு என்ற கோரிக்கையை கூட உன் முன் வைக்க என்னால் பேச முடியாதவாறு என் வாயை தைத்து விட்டாயே ! 

அவன் குலுங்கி குலுங்கி அழுவது அவளுக்கு இன்னும் ஆர்வத்தை சாகும் தருவாயில் கூட்டியது.

இப்பொழுது அவன் தன் இரத்த பிசுபிசுப்பான கைகளினால் தன் முகமூடியை கழட்டினான்.

“சார்..எனக்கும் காண்பிச்சு படிங்க..” என்று பிரபு கனகவேலிடம் கேட்க..

அவனை ஒரு நொடி பார்த்த கனகவேல் “கண்டிப்பா யாரோ காவியாவோட இ மெயில் ஐடியை யூஸ் பண்ணிருக்காங்க..உடனே சைபர் க்ரைம்ல இந்த காவியாவோட ஐடியை எந்த போன்ல யூஸ் பண்றாங்க அதோட லொகேஷன் டீடைல்ஸ் வேணும் சீக்கிரம்” என்று கனகவேல் கூறிவிட்டு படிக்க ஆரம்பித்தான்.

அதை பார்த்த பிரபு..எங்ககிட்டயும் போன் இருக்கு நாங்களும் படிப்போம் என்ற தோரணையில் அவனது போனை எடுத்தான்.

வேக வேகமாக தொடுத்திரையை அழுத்தி கதையை படிக்க ஆரம்பித்தான்.

*************

அங்கே மயக்க நிலையில் இருந்த மாலதி விழித்தாள். தலையில் காயங்கள் இருக்க வலியின் உணர்வு இப்பொழுது அவளைத் தொற்றிக் கொண்டது. அவளது கையை பின் புறமாகக் கட்டப்பட்டிருந்தது. அவளது இரு கால்களுக்கும் விதி விலக்கு இல்லை. அருகில் ஒரு குரல் மெல்லியதாக கேட்க 

திரும்பி பார்த்தாள். பயத்தில் நடுங்கி இருந்த ஷிவாணியின் குரல். அவளின் வயது 5. வாயில் துணியால் கட்டியிருந்த போதும் அந்த குழந்தையின் கண்களில் பயம் குடி கொண்டிருந்தது.

“ஷிவாணி?” மனதினுள் கேட்டுக்கொண்டாள். ஏனெனில் மாலதியின் வாயும் விதிவிலக்கு இல்லை.. 

அங்கு உள்ள நிலைமையை மாலதி கவனிக்க ஆரம்பித்தாள். ஒரே அழுக்கு படிந்த இடம்..சுவரில் இரத்த கறைகள். அருகே ஜன்னலும் இருந்தது. கீழே போதை பாட்டில்களும் பீங்கான்களும் இருந்தன. மாலதி மனதில் அதைப் பார்த்ததும் யோசனை உதிர்த்தது..

***********************

மருத்துவமனையில்..

ராஜேந்திரன் அறைக்குள் ஒருவன் வந்தான். அவனைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியில் புன்னகைத்தான்.”மனோகர்…உங்களால தான் என்னை காப்பாத்த முடியும்..ஹரிஷ கடத்தி டார்ச்சர் பண்ணிருக்கேன்..அவ்வளவு தான் என் மேல உள்ள கேஸ்..இதுல இருந்து நீங்க தான் என்னை காப்பத்தணும்..”

“இந்த கேஸ்லாம் ஒன்னும் இல்லை..உங்களுக்கு ஜாமீன்க்கு ஏற்பாடு பண்ணிட்டேன்..” மனோகரின் நம்பிக்கை குரல்..

******************

“என்னை இப்படி பண்ண வச்சிட்டியே செல்வி” என்று கூறி அவன் முகமூடியை கழட்டினான். 

அது இளங்கோ…

சற்றும் எதிர்பார்க்கவில்லை..

நீ ஏன் இப்படி செய்ய வேண்டும்? 

அவன் பேச ஆரம்பித்தான் “இதுக்கு தான் என்கிட்ட கத்தியை கொடுத்து உன்னை கொல்ல சொன்னியா? உனக்கும் பரத்க்கும் தொடர்பு இருக்குனு தெரிஞ்சிகிட்டு நான் விலகி போகலாம்னு பார்த்தேன் என்னால முடியல..என்னை மன்னித்து விடு…”

பாவி இதான் காரணமா? எங்கள் இருவருக்கும் நடுவே எதுவும் இல்லை..உன்னை காதலிக்கேன் என்று சொன்னவுடன் உன் நண்பன் விலகிவிட்டான்..”என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

அப்போது அங்கு இன்னொருவர் வந்தார் அது என் அப்பா.. என்னை அந்த கோலத்தில் பார்த்ததும் அதிர்ந்து போவார் என்று எண்ணினேன். ஆனால் அவரின் முகம் அதிர்ச்சி அலைகளைப் பரப்பாமல் க்ரோத அலைகளைப் பரப்பியது.

“என் பொண்ணா இருந்தாலும் அவள் உனக்கு இந்த துரோகத்தைப் பண்ணிருக்கக் கூடாது..இந்த மாதிரி வாழ்றதுக்கு சாவதே மேல்” என்று அவள் தந்தை இளங்கோவிடம் சொன்னார்.

கவலையுடன் இளங்கோ அந்த அறையை விட்டு வெளியே சென்றான். நெஞ்சில் இரத்தத்துடன் அங்கே நான் கிடந்தேன்.. என் அப்பா என்னை நோக்கி கீழே குனிந்தார்.

“என்னோட எண்ணத்தை எந்த காலத்திலையும் நான் மாத்தமாட்டேன் செல்வி..நான் தான் இளங்கோவுக்கு உனக்கும் பரத்க்கும் தொடர்பு இருக்குனு ஒரு தீப்பொறியை பத்த வச்சேன் அது இப்போ கொழுந்து விட்டு எரியுது..இது பத்தி வாக்கு வாதம் உங்ககுக்குள்ள வந்து நீ உண்மையை சொல்லிட கூடாதுனு நான் தான் உன் வாயை தைத்தேன்..கவலை படாத உன்னை கொலை செஞ்சேன்னு இளங்கோவை என்கெளன்ட்டர் பண்ணிடுறேன் மேலே போய் சந்தோசமா வாழுங்க..” 

உங்களின் மகளுக்காக உங்களின் தவறான எண்ணத்தை மாற்றாமல் இருப்பது எனக்கு வருத்தம் தான். ஆனால் இளங்கோவிற்கு நீங்கள் செய்தி சதி தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..அவன் மனம் வேதனை படாமல் இருக்க வேண்டும்.. ஒரு தோட்டாவினால் அவனை என்னை மாதிரி துடிதுடிக்க விடாமல் என்னிடம் அனுப்பி வையுங்கள் அப்பா..நான் காத்திருப்பேன் அவனுக்காக..

இதயம் தொலைத்த இதயம் தொட்ட காதல் இதுவோ!!

நிறைவு..

இதைப் படித்த கனகவேலும் பிரபுவும் அதிர்ந்தார்கள். போலீஸ் நிலையம் வந்தது.பிரபு பேசத் தொடங்கினான்.”சார் இப்போ அந்த கொலையாளி வைபவ் மேல இருந்து காவியா அப்பா மேல திசை திருப்பி விடுறானு நினைக்கேன் சார்..” 

“இருக்கலாம்..நான் உன்னை ஒரு விஷயம் பண்ண சொன்னேனே என்னாச்சு?’

“சொல்லிட்டேன் சார்..இன்னும் கொஞ்ச நேரத்துல நமக்கு யார் இதை அனுப்பிருப்பாங்கன்னு தெரிஞ்சிடும்”

அப்போது பிரேமா அங்கு வந்தாள். கோவிந்தன் அவளை நோக்கி “என்ன கம்பலைன்ட்மா?” என்று கேட்டான்.

“நான் பிரேமா சார்..கனகவேல் சார் என்னை பார்க்கணும்னு விமல்கிட்ட சொல்லிருக்காங்க..அதான் வந்தேன்” என்றாள் அந்த பெண்.

இதை கேட்ட கனகவேல் பிரேமாவை ஏறிட்டான்.

**********************

மாலதி அங்கு கிடக்கும் பீங்கான் துண்டுகளைப் பார்த்து தன் மனதில் யோசனை வர. அதை நோக்கி தரையில் ஊர்ந்த வண்ணம் சென்றாள். 

ஷிவாணிக்கு ஒன்றும் புரியாமல் மாலதியை பார்த்துக் கொண்டிருந்தாள்.

கை கால்களைக் கட்டப்பட்டிருந்த நிலையில் மாலதி கொஞ்சம் கொஞ்சமாக அந்த பீங்கான் துண்டுகளை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்தாள்.

அப்போது ஷிவாணி வாயை மூடியபடியே சத்தம் எழுப்பினாள். அவளைப் பார்த்த மாலதி சத்தம் போடாதே என்று தன் கண்ணை உயர்த்தியபடி அவளுக்கு சைகை காட்டிவிட்டு தன் வேலையை தொடர்ந்தாள்.

கடைசியாக பீங்கான் துண்டுகள் கிடந்த இடத்தை அடைந்தாள். அவள் மகிழ்ச்சி கொள்ளும் அந்த நொடியில் அவளுக்கு ஒரு அதிர்ச்சியும் காத்திருந்தது. ஒரு இரண்டு அடி தூரத்தில் ஒருவனது கால் அவளுக்கு தெரிந்தது.

அதிர்ச்சி கலந்த பார்வையால் மாலதி தன் தலையை தூக்கி மேலே பார்த்தாள். ஒருவன் முகத்தை மறைத்தபடி நின்று கொண்டிருந்தான்.

இவன் தான் தன்னை அந்த இரவு தாக்கினான் என்பதை மாலதிக்கு நியாபகம் வர..

அந்த மர்ம நபர் மாலதியின் முகத்தை அந்த பீங்கான் துண்டுகளோடு சேர்த்து மிதித்தான். 

மாலதியின் முகம் அந்த பீங்கான் துண்டுகளால் கீறப்பட்டது. வலியால் வாய்விட்டு கூட அழமுடியாமல் கதறினாள்.

இதைப் பார்த்த ஷிவாணி அரண்டு அங்கேயே தவித்து இருந்தாள்.

**********************

“காவியாவுக்கு நடந்த சம்பவம் எதிர் பாராத ஒன்னு..இப்போதான் விமல் உங்களை சந்திக்கணும்னு சொன்னாரு..வீட்டுக்கு கிளம்பிட்டு இருந்தேன் அப்படியே இங்க வந்து பார்த்திடலாம்னு வந்துட்டேன்”

“ம்ம்..விமல் உன்னை காதலிக்குறதுக்கு முன்னாடி காவியாவை காதலிச்சானா?”

இந்த கேள்வியை எதிர் பார்க்காத பிரேமா அதிர்ந்தாள். பின்பு தன்னிலைக்கு வந்து “இல்லையே சார்..அப்படிலாம் இல்லை..”

“சரி..காவியாவை பத்தி சொல்லுங்க.. அவளுக்கு ஏதாச்சும் எதிரிங்க இருக்காங்கலா?”

“சார்..நான் இந்த வங்கில ஒரு வருஷமா தான் வேலை பார்க்குறேன்..அப்போ காவியா ஏதோ பறிகொடுத்தவள் மாதிரி இருப்பா..என்னால முடிஞ்ச அளவு அவளை சந்தோஷப்படித்துவேன்.. அப்போதா கதை எழுத ஆரம்பிச்சா..அவளுக்கு அதான் சந்தோசமே.. அப்புறம் கொஞ்ச மாசம் கழிச்சு ஹரிஷ் எங்ககூட விமல் மூலமா பழகினான். ஹரிஷ் காவியாவை உயிருக்கு உயிரா காதலிச்சது காவியாவுக்கு தெரிஞ்சாலும் அவனை கண்டுகிடவே மாட்டாள்..போன மாசம் தான் ஹரிஷ் காதலை ஒத்துகிட்டா..”

“நீங்க காவியா கிட்ட ஏன் கவலையா இருக்கனு கேட்க மாட்டீங்களா?”

“கேட்பேன் சார்..அவளோட மாமா தான் தொல்லை கொடுக்குறாருனு சொல்லுவா..”

அப்போது கனகவேல் போன் சிணுங்க..அதை எடுத்துப் பார்த்தான் அது சைபர் க்ரைம் பிரான்ச் சேகர். தொடுத்திரையில் பச்சை வட்டத்தை ஒரு ஓரத்திற்கு தள்ளி விட்டு போனை காதிற்கு ஒத்தினான்.

“எஸ் சேகர்..”

“சார்..பிரதிலிபி கிட்ட இருந்து அந்த பொண்ணோட மெயில் ஐடி யை வாங்கிட்டோம். அது மூலமா அந்த மெயில் ஐடி வேற ஒரு போன்ல லாகின் ஆகிருக்கு”

“இவ்வளவு வேகமாவா பிரமாதம் சேகர்..”

“உங்க கேஸ் ஆச்சே..அதான்..”

“சரி..அந்த போனை வச்சி அதோட லொகேஷன ஈசியா கண்டுபிடிச்சிடலாமே”

“கண்டுபுடிச்சாச்சு..ஆனா அதுல ஒரு குழப்பம் சார்..”

“குழப்பமா என்ன அது?”

“அந்த லொகேஷன் தெற்கு காவல் நிலையத்தை காண்பிக்கு சார்…அந்த மெயில் ஐடி லாகின் ஆன அந்த போன் உங்க ஸ்டேஷன்லயோ இல்லை உங்க ஸ்டேஷன சுத்தியோ தான் இருக்கு”

இதைக் கேட்டுவிட்டு கனகவேல் போனை அணைத்துவிட்டு இப்பொழுது சந்தேகப் பார்வையில் பிரேமாவை ஏறிட்டான்.

தொடரும்…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 1 சராசரி: 5]

2 Comments

Leave a Reply
  1. சூப்பர் சூப்பர். முடிவை நெருங்கியாச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Veteran

Written by Thangam 916

பிரதிலிபியில் இரு தொடர்கதைகளை எழுதியிருக்கிறேன்.மூன்றாவது கதையை இந்த தளத்தில் எழுதுவது மகிழ்ச்சி

Story MakerContent Author

கோம்ஸ் – மழைக்காலம்(பாகம் 1) – மழை 16 – 20

நீயே என் முதல் குழந்தை 33