in

நேசம் மறைத்த என் நெஞ்சம் (பாகம் 2)

அத்தியாயம் 11

ஸாகரி சென்ற பிறகு ஜெய் நிர்மலாவிடம், “நிலா என் கூட ரூமுக்கு வா, கொஞ்சம் பேசணும்!” என்றான்.

“ஸ்ரீ ஆன்ட்டி கட்டுப்பாட்டோட இருக்கணும்னு இப்போ தானே சொல்லிட்டு போனாங்க? நீங்க ரூம்ல பேசலாம்னு சொல்றீங்க, வாங்க தோட்டத்துக்கு போகலாம்” என்றாள்.

“தோட்டத்துக்கு போனா மட்டும் நான் உன்னை தொடாம இருப்பேனா? நான் உன்னை தோட்டத்துல தூக்கினதை பார்த்துட்டு தான் அம்மா என் கிட்ட நிர்மலாவை லவ் பண்றியான்னு கேட்டாங்க. அது தெரியுமா உனக்கு?” என்று கேட்டு சிரித்தான்.

“ஆன்ட்டி கேஷுவலா பேசினது கொஞ்சம் ரிலாக்ஸா இருந்தது ஸ்ரீ” என்றவளிடம்

“யாரும் பிரச்சனை பண்ணலை. நீ மட்டும் தான் எல்லாருக்கும் சேர்த்து வைச்சு பிரச்சனை பண்ணிட்டு இருக்க! நீ என்னை லவ் பண்றியா? இல்லையாடீ?” என்றவனை கெத்தாக பார்த்து, “நீங்களே கண்டுபிடிங்க ஜெய் ஸார்!” என்று சொல்லி விட்டு புன்னகையுடன் அவன் முன்பு நின்றாள் நிர்மலா.

தன் கோபத்தை அடக்க ஜெய் நந்தன் முயற்சி செய்து கொண்டிருந்த போது, “எதுக்கு என்னை கூப்பிட்டிங்க ஸ்ரீ?” என்றாள் நிர்மலா ஆர்வமாக.

“நீ என் பொண்டாட்டி ஆகப் போறவ நிலா, உன் சுயமரியாதையை நான் மதிக்கிறேன். ஆனால் நீ அம்மா கிட்ட பணம் வாங்கிக்க யோசிக்கிறது, அதை திரும்ப தந்திடுறேன்னு சொல்றது இதெல்லாம் அம்மாவுக்கும் எனக்கும் கஷ்டமா இருக்கு நிலா, உனக்கு அம்மா கிட்ட பணம் வாங்க தயக்கமா இருந்தா என்னோட சேலரியில இருந்து நான் தர்றேன். அதை நீ உரிமையோடு செலவு செய்யலாம். ஃப்யூச்சர்ல நீ வொர்க் பண்ணினா உன் சேலரியில ஒரு பகுதி அமௌண்ட்டை உதவி தேவைப்படுறவங்களுக்கு கொடு. சரியா?” என்று பிரச்சனைக்கு தீர்வு தந்தான் ஜெய்.

“ஸ்ரீ இந்த சொத்து உங்க அப்பா சம்பாதிச்சது; அப்போ இயல்பா உங்களுக்கு உரிமைப்பட்டது. ஆனா நீங்க இதை தொட விரும்பாம நீங்களா உங்க சுய அடையாளத்தை தேடிக்க நினைக்கிறீங்க! அதையே நான் செஞ்சா தப்பா ஸ்ரீ?” என்று கேட்டவளிடம் பதில் சொல்ல முடியாமல்  மாட்டிக் கொண்டு விழித்தான் ஜெய்.

“இங்க பாரு நிலா குட்டி, மாமா சொன்னா சரின்னு கேக்கணும். தேவையில்லாம ஆர்க்யூ பண்ணக்கூடாது. சரியா?” என்றான் ஜெய் கறாராக.

தலைசரித்து அவனைப் பார்த்து “உங்க கிட்ட நான் கேள்வி கேட்டா அதுக்கு பதிலை சொல்லணும். அதை விட்டுட்டு சமாளிபிகேஷன்ல இறங்க கூடாது. பதில் சொல்லுங்க ஸ்ரீ! ஏன் நீங்க உங்கப்பா ப்ராபர்ட்டீஸை பார்த்துக்கலை?” என்று அவன் கண்களை நேராக பார்த்து கேட்டவளிடம் “எனக்கு பயமாயிருக்கு நிலா, ஸாப்ட்வேர் டெவலப்பிங்ல எனக்கு ரொம்ப இன்ட்ரஸ்ட். ஆனா  எஸ்டேட்ல சார்ஜ் எடுத்துட்டா நான் என்னோட ஆம்பிஷனை மறந்துட வேண்டியது தான், கண்டிப்பா அம்மா ஒரு நாள் எல்லா பொறுப்பையும் என் கிட்ட ஒப்படைக்க போறாங்க. அது வரைக்கும் நான் என் மனசுக்கு பிடிச்ச வேலையை செய்வேன். அதுக்கு அப்புறம் செய்யற வேலையை மனசுக்கு பிடிச்சதா மாத்திப்பேன். எங்கப்பா கஷ்டப்பட்டு டெவலப் பண்ணியது. ஸோ இந்த சொத்தை பார்த்துக்கிற ரெஸ்பான்ஸிபிளிட்டியும்  எனக்கு இருக்கு” என்று பெருமூச்சுடன் முடித்தான்.

நிர்மலாவிற்கு அவன் நிலையைப் பார்த்து பாவமாக இருந்தது. இருந்தாலும் கடமைக்கு செய்வது வேறு; மனப்பூர்வமாக செய்வது என்பது வேறாயிற்றே?

“ஏன் ஸ்ரீ ஆன்ட்டி கிட்ட கேட்டு அவங்க பெர்மிஷன் வாங்கி இங்கே ஒரு ஸாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிக்கலாம்ல? உங்க ட்ரீமை நீங்க விட வேண்டாம் இல்லையா?” என்று கேட்டவளிடம் கையை உயர்த்தி கும்பிடு போட்டான் ஜெய் நந்தன்.

“நீ அம்மா கிட்ட பணம் கடனாகவே வாங்கிக்க தாயே, ஒரு கேள்வி கேட்டா அதோட நிறுத்துறியாடீ? நீ பாட்டுக்கு டெவலப் பண்ணிக்கிட்டு போயிட்டு இருக்க? இருக்குற கமிட்மெண்ட் போதும். நீ வேற புதுசா எதையும் இழுத்து வைக்காத. ஸாப்ட்வேர் கம்பெனி ரன் பண்ற அளவுக்கு எல்லாம் எனக்கு கேபபிளிட்டி இல்லை. என்ன வச்சு செஞ்சது போதும். வேலை இருக்கு. வா போகலாம்” என்று அவளை உள்ளே அழைத்துச் சென்றான். ஜெய் நந்தன் தன் வலியை மறைத்ததை நிர்மலா கவனித்தாள்.

ஜெய் நந்தன் சென்னை வந்து இரண்டு நாட்கள் ஆகி விட்டது. அன்று அலுவலகம் முடிந்து களைத்து தன் அபார்ட்மெண்டை அடைந்து வீட்டில் நுழைந்தவன் சோர்ந்து போய் அமர்ந்து இருந்தான். இனிமேல் வாரத்திற்கு ஒரு முறை ஊருக்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். இந்த முறை அவளுக்கு மொபைல் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். தன் அம்மாவிடம் பேசிய அவன் நிர்மலாவின் நலம் விசாரித்து கொண்டான். ஆனால் அவளிடம் பேச வேண்டும் என்று தன் அம்மாவிடம் கேட்க அவனுக்கு சங்கடமாக இருந்தது. “நீயாவது எனக்கு கூப்பிடலாம்ல பஞ்சு மூட்டை! பிசாசு என் மேல உனக்கு அக்கறையே இல்லடீ” என்று மொபைலில் ஸ்க்ரீன் ஸேவரில் அவள் புகைப்படத்துடன் பேசிக் கொண்டு இருந்தான்.

வீட்டில் லேண்ட்லைன் போனுக்கு கால் பண்ணினான். நிர்மலாவின் குரல் கேட்டதும் உற்சாகம் திரும்பியது. “ஏன் ஸ்ரீ என் கிட்ட இரண்டு நாளா பேசவே இல்லை?” என்று அவள் அலுத்துக் கொள்ளவும் ஜெய்க்கு அவளும் தன்னைப் போல் தவித்திருக்கிறாள் என்ற நினைப்பு மகிழ்ச்சியை தந்தது.

“ஸாரி நிலா, கொஞ்சம் வொர்க் ஹெவியா இருந்தது. ஆனா நீ கூட தான் என் கிட்ட பேசவே இல்லை” என்று அவனும் குறை கூறினான்.

“டைம் கிடைக்கலை ஸ்ரீ! அதுவும் இல்லாம இங்க ஹால்ல  நின்னுட்டு உங்ககிட்ட பேச ஒரு மாதிரி கம்பர்டபிளா இல்ல ஸ்ரீ!” என்று சொன்ன நிர்மலாவின் தவிப்பை புரிந்து கொண்டவன்,

“இன்னும் ஒரே ஒரு நாள் வெயிட் பண்ணு நிலா. நான் வரும் போது கண்டிப்பா உனக்கு இங்கே இருந்து மொபைல் வாங்கிட்டு வந்துடுறேன். எனக்கு உன் கூட நிறைய நேரம் பேசணும். ஸோஃபாவில் உட்கார்ந்து பேசு. நானா உன் கிட்ட பை சொன்னதுக்கு அப்புறம் தான் போனை வைக்கணும். இடையில யார் கூப்பிட்டாலும் முக்கியமான கால் கட் பண்ண முடியாதுன்னு சொல்லிடு. ஓகே?” என்று சொல்லி பேச ஆரம்பித்தவர்கள் பேசினார்கள். பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

நிர்மலா மெதுவாக அவனிடம், “ஸ்ரீ நீங்க இன்னும் பை சொல்லவேயில்லையே?” என்றாள் கேள்வியாக.

“என்னடா நிலா? அதுக்குள்ளயா பேசி முடிக்கணும்? இன்னும் கொஞ்ச நேரம் டீ ப்ளீஸ்” என்றவனிடம் “ஐயோ ஸ்ரீ டைம் என்னன்னு பாருங்க 8:30 இன்னும் 10 நிமிஷத்துல ஆன்ட்டி கீழே வருவாங்க” என்றவளிடம்

“சரி! அப்போ அம்மா வர்ற வரைக்கும் பேசு” என்று அவன் தொடரவும் நிர்மலா சிரித்துக் கொண்டு உரையாடலை தொடர்ந்தாள்.

ஜெய் கிளம்பிய அடுத்த நாள் அன்று காலையில் ஸாகரியும், நிர்மலாவும் தோட்டத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டு இருந்தனர். நிர்மலா வந்து ஒரு வாரத்திற்குள் அனைவரையும் கவர்ந்து விட்டாள். வேலைக்காரர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கினாள். தன்னால் இயன்ற வேலைகளை இழுத்து போட்டுக் கொண்டு செய்தாள். ஸாகரியின் அனுமதியோடு வீட்டின் அலங்காரப் பொருட்கள், தரை விரிப்புகள், ஸோஃபா, மெத்தை, தலையணை உறை, குஷன் உட்பட அனைத்து பொருட்களையும் கான்ட்ராஸ்ட் கலர்களில் மாற்றினாள். ஸாகரி மாற்றத்தை உணர்ந்து அழகாக இருப்பதாக நிர்மலாவைப் பாராட்டினார். மெலிதாக ஒரு புன்னகையுடன் ஏற்றுக் கொண்டாள் நிர்மலா.

நடந்து கொண்டு ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தவளை, “என்னடா நிர்மலா, என்ன யோசனை?” என்றவரிடம்

“ஆன்ட்டி, டெய்லி எவ்வளவு வெரைட்டியா பூ பூக்குது; அவ்வளவு பூவும் செடியில் இருந்து வீணா போறதை விட நம்ம டெகரேட்டர்ஸ், ப்ளாரிஸ்ட் கிட்ட விலைக்கு கொடுக்கலாம். இல்லையா ஆன்ட்டி?” என்று அபிப்பிராயம் கேட்டாள் ஸாகரியிடம்.

“என்னடா தோட்டத்திற்கு வர்றதே பூக்களை பார்த்து மனசு சந்தோஷமா இருக்கிறதுக்கு தானே? ஏன் அதை விக்கணும்னு சொல்ற? கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்குற பூ வேண்டாமா?” என்றவரிடம்

“ஆன்ட்டி நான் பூக்கள் வேண்டாம்னு சொல்லலை. ஆனா பூவெல்லாம் செடியிலிருந்து வாடி கீழே விழுறதுக்கு ஒரு முயற்சி செஞ்து பார்த்தா பூக்கள் பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறினாள் நிர்மலா.

இன்னும் ஸாகரியின் முகம் தெளியாததைக் கண்டு, “நானே உங்களுக்கு பிடிக்கிற மாதிரி தோட்டத்தில ஒரு பகுதியில் எல்லா பூச்செடியையும் அழகா ஆர்கனைஸ் பண்ணி தர்றேன் ஆன்ட்டி! அது உங்களுக்கு பிடிச்சிருக்கு ன்னா நம்ம அதை மாதிரி உங்களுக்கு தேவையான அளவிற்கு பூந்தோட்டம் வச்சுக்கலாம். மத்ததை நான் சொன்ன ஐடியா ஓகேன்னா செய்யலாம். டீலா?” என்றாள் கேள்வியாக.

புன்னகையுடன் “நீ செட் பண்ணி தர்ற பூந்தோட்டம் அழகா, மனசுக்கு நிறைவாக இருந்ததுன்னா கண்டிப்பா நீ சொன்ன மாதிரி செய்யலாம். சரியா?” என்று அவளை சந்தோஷப் படுத்தி விட்டுச் சென்றார் ஸாகரி.

ஸாகரி சம்மதம் சொன்னதும் வரிந்து கட்டிக் கொண்டு நிர்மலா வேலையை ஆரம்பித்து விட்டாள். அரை வட்ட வடிவத்தில் மரத்தில் படிக்கட்டுகளை உருவாக்க சொன்னாள். படிக்கட்டுக்களின் முன்னே இரும்புத் தாங்கிகளைப் பொருத்தி பூக்களை வானவில்லின் நிற வரிசையில் அடுக்கி வைத்தாள். கீழேயிருந்து மேல் படிக்கட்டு வரை இரண்டு பக்கங்களிலும் வெள்ளை பூக்கள் அணிவகுப்பு வானவில் தோட்டத்தை இன்னும் எடுப்பாக காட்டியது.

இரு தினங்களாக தன் முயற்சியில் ஈடுபட்டு அவற்றில் திருப்தியடைந்து ஸாகரியை அழைத்து வந்தாள். ஸாகரி நிர்மலா செய்து இருந்த ஏற்பாட்டை பார்த்து மலைத்தார்.

“ஆன்ட்டி, இனிமேல் நம்ம பூக்கள் பக்கத்தில் போய் உட்கார்ந்து ரிலாக்ஸ் பண்ணலாம். எப்படி ஆன்ட்டி இருக்கு ரெயின்போ கலெக்ஷன்?” என்று சிரித்தவளிடம்

“ரொம்ப அழகா இருக்கு நிர்மலா! நீ சொன்ன ஐடியாவுக்கு ஓகே சொல்றேன். ஹாப்பியா?” என்றார் ஸாகரி.

“தேங்க்யூ ஆன்ட்டி, உங்களுக்கு பிடிக்குமோ, பிடிக்காதோன்னு நினைச்சேன். உங்க முகத்தை பார்த்தேன். நீங்க சந்தோஷமா இருக்கிறதை பார்த்து நானும் எக்ஸைட் ஆகிட்டேன்” என்றாள் சிரிப்புடன்.

நான் பொக்கே ஷாப், டெக்கரேட்டர்ஸ் கிட்ட மாணிக்கத்தை விசாரிக்க சொல்றேன். ஆனால் அந்த கணக்கு எல்லாம் நீ தான் மெயின்டெய்ன் பண்ணனும். எப்படியும் உனக்கு இன்னொரு எக்ஸ்ட்ரா வொர்க். உன்னால செய்ய முடியுமா?” என்றார் ஸாகரி.

“கண்டிப்பா செய்ய முடியும் ஆன்ட்டி, நான் இதை கரெக்டா செய்வேன்!” என்றாள் நிர்மலா.

“நீ கரெக்டா செய்வ. எனக்கு தெரியும் நிர்மலா, ஆனால் வேலை செஞ்சிட்டு படிப்பை மறந்துடக்கூடாது. வர்ற புதன் கிழமை எம்.பி.ஏ ஜாயின் பண்ணிக்கலாமா? கரஸ்ல படிக்கிறோம்னு உனக்கு வருத்தமா இருக்கா நிர்மலா?” என்றார் அக்கறையாக.

“எனக்கு உங்க வீட்டுக்கு வந்ததுல இருந்து வருத்தம்னா எப்படி இருக்கும்ன்னே எனக்கு மறந்து போயிடுச்சு ஆன்ட்டி. கிச்சன்ல வேலை இருக்கு. நான் போய் பார்க்கிறேன். பை ஆன்ட்டி” என்று சமையல் அறைக்குள் நுழைந்தாள் நிர்மலா.

அத்தியாயம் 12

ஜெய் நந்தன் நாளை காலையில் வருகிறேன் என்று சொல்லி இருந்ததால் காலை உணவுடன் பால் போளிகளும், முறுக்குகளும் செய்து கவனமாக பாத்திரத்தில் வைத்து விட்டு படுக்கச் சென்றாள் நிர்மலா.

ஸ்ரீ வீட்டில் அனைத்து இடங்களையும் பார்த்து கண்களை ஆச்சரியமாக விரிக்க வேண்டும். கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் ஏதாவது ஒரு மாற்றம் செய்தாகி விட்டது என்று நினைத்துக் கொண்டாள் நிர்மலா.

அறைக்குச் சென்று படுத்தவளுக்கு உறக்கமே வரவில்லை. ஹாலுக்குள் பூனை நடை நடந்து ஜெய் நந்தனுக்கு போன் பண்ணினாள். ஒரே ரிங்கில் எடுத்தவன், “சொல்லுங்க நிலா மேடம், தூக்கம் வராமல் புரண்டு பார்த்துட்டு ஸ்ரீ கூட கதை பேச வந்துட்டீங்களா? இன்னும் இரண்டு,இரண்டரை மணி நேரத்தில் வீட்டில் இருப்பேன்!” என்றான்.

“என்ன ஸ்ரீ காலையில தானே வருவேன்னு சொன்னீங்க?” என்று அவள் ஹஸ்கி வாய்ஸில் பேசவும் ஜெய் நந்தனின் காதில் நுழைந்து அவள் குரல் அவன் உடம்பெங்கும் சிலிர்க்க வைத்தது.

“நிலா! ப்ளீஸ்டீ, நார்மலா பேசு. ஹால்ல  யாரும் இருக்காங்களா?” என்று கேட்டான் ஜெய்.

“இல்ல ஸ்ரீ! மாணிக்கம் அண்ணா ரூம்ல இன்னும் லைட் எரியுது. அதுனால தான்!” என்றாள் நிர்மலா.

“மாணிக்கம் அண்ணா தானே அவர் கண்டுக்க மாட்டார் விடு! அப்புறம் நான் ஏன் இப்போ வந்தேன்னா…… ஒரு பஞ்சு மூட்டை எனக்காக தூங்காம வெயிட் பண்ணிட்டு இருக்கும்னு தெரியும். அதனால தான் சீக்கிரம் கிளம்பிட்டேன்!” என்றான் புன்னகையுடன்.

“நான் ஒண்ணும் உங்களுக்காக எல்லாம் வெயிட் பண்ணலை. எனக்கு தூக்கம் வரலை. அதனால் தான் உங்க கூட பேசலாம்னு கூப்பிட்டேன்” என்றாள் நிர்மலா.

“நிலாக் குட்டி மூணு நாளா மாமாவை மிஸ் பண்ணியாடா? நான் இல்லாம உனக்கு பொழுது போகலையா? ” என்று அவளிடம் ஜெய் அக்கறையாக விசாரித்தான்.

“எனக்கு இங்கே பொழுது பத்தலை ஸ்ரீ, ரொம்ப ஜாலியா இருந்தேன். உங்க நியாபகமே எனக்கு வரலை!” என்றாள் நிர்மலா

“அப்படியா நிலா மேடம்! ஸ்ரீ நியாபகம் வராம தான் இப்போ ஃபோன் பண்ணி எங்கே இருக்கீங்க? எப்போ வருவீங்கன்னு கேட்டீங்களா ? ஏன் வீணா பொய் சொல்ல ட்ரை பண்றீங்க? உங்களுக்கு தான் வரலையே?” என்றான் சிறு முறுவலுடன்.

“அது வந்து….. உங்க கூட பேசணும் போல இருந்தது ஸ்ரீ!” என்று வெட்கப் புன்னகையுடன் சொன்னவளிடம்

“அப்படி வாங்க வழிக்கு!” என்று புன்னகைத்தான் ஜெய்.

“சரி போனை வைச்சிடவா? ட்ரைவ் பண்றப்போ போன் பேசினா கஷ்டம் இல்லையா ஸ்ரீ?” என்றவளிடம்

“உன்னை கூட்டிட்டு வரும் போது தான் தூங்கிட்ட! இப்பவாவது பேசு. நான் ப்ளூடூத் தான் யூஸ் பண்ணிட்டு இருக்கேன். அதனால ஒண்ணும் பிரச்சனை இல்ல! ” என்றவனிடம் மலையில் ஏற ஆரம்பித்ததும் வைத்து விட வேண்டும் என்று கண்டிஷன் போட்டு பேச ஆரம்பித்தாள் நிர்மலா.

ஆனால் அதெல்லாம் மறந்து ஜெய்யின் கார் மெயின் கேட்டை வந்து அடையும் வரை பேச்சு வார்த்தை தொடர்ந்தது.

காரின் ஹாரன் ஒலி கேட்டதும் தாயின் மடி தேடி ஓடும் கன்று போல் துள்ளி ஓடினாள் நிர்மலா. அவளைக் கண்டதும் முகம் மலர்ந்தவன், அவள் மூச்சிரைத்ததும் அவளைத் திட்டினான்.

“உள்ளே தானே நிலாம்மா வந்துட்டு இருக்கேன்? பத்து நிமிஷம் வெயிட் பண்ண மாட்டியா நீ? என்ன அவசரம்? ஏன் இப்படி ஓடி வர்ற? கீழே விழுந்துட்டா என்ன செய்றது?” என்று முறைத்தவனிடம்

“ம்! தூக்கிட்டு போய் மருந்து போட்டு விடுறது!” என்று முணங்கினாள்.

“கார்ல ஏறு!” என்று அவளை ஏற்றியவன், வீட்டின் முன்பு நிறுத்திய பின்னரும் கதவைத் திறக்காமல் யோசனையுடன் அமர்ந்து இருந்தான்.

“ஸ்ரீ கதவைத் திறங்க! இறங்கணும்” என்றவளிடம்

“நிலாக் குட்டி, அப்போ ஏன்டீ அப்படி பேசுன? இன்னும் ஒரு மாதிரி இருக்கு தெரியுமா?” என்று குறை கூறும் குரலில் கேட்டவனிடம்

“ஸ்ரீ நான் என்ன பேசினேன்? ஏதோ கம்ப்ளைண்ட் பண்ற மாதிரி சொல்றீங்க? ” என்று சிரித்தவளிடம் அவள் கையைப் பற்றி கன்னத்தில் உரசிக் கொண்டு ஜெய் அவள் பேசிய வார்த்தைகளை அவள் பேசியது போலவே ஹஸ்கி வாய்ஸில் பேசவும் நிர்மலா நிலை தடுமாறி கிறங்கிப் போய் அமர்ந்து இருந்தாள்.

அவள் முகத்தில் தன் விரல்களால் வருடி ரசித்தவன், “இதே மாதிரி தான் நிலாக் குட்டி ஸ்ரீக்கும் இருந்தது. ஸாகரி மேடம் கட்டுப்பாட்டோட இருக்கணும்னு சொன்னாங்க. பட் அப்பப்போ கொஞ்சம் ரூல்ஸ ப்ரேக் பண்ணிக்கலாம். தப்பில்லை!” என்று புன்னகையுடன் அமர்ந்து இருந்த நிர்மலாவின் இதழ்களை தன் இதழினால் அணைத்துக் கொண்டான் ஜெய்நந்தன்.

சில விநாடிகள் அவனை அனுமதித்து ரசித்தவள், பின்னர் கோபத்தில் அவன் மார்பினில் கை வைத்து அவனை தள்ளி விட்டாள். அவன் விடுவித்ததும் அவனிடம் பொரிந்தாள்.

“இது தப்பில்லையா ஸ்ரீ? ஆன்ட்டிக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க?” என்று கண்களில் வலியுடன் கேட்டாள் நிர்மலா.

“நான் ஒண்ணும் தப்பு செய்யலை நிலாம்மா. நீ பேசின மாதிரி நானும் பேசினா உன் ரியாக்க்ஷன் என்னவா இருக்கும்னு தெரிஞ்சுக்கணும்னு நினைச்சேன். என் விரலால வருடி விட்டப்போ கூட நீ அப்ஜெக்ட் பண்ணல. ஸோ கிஸ் பண்ணினேன். உன்னை கிஸ் பண்றதுக்கு பெர்மிஷன் கேட்டு வெயிட் பண்ணிட்டு இருக்க முடியாது. எனக்கு ஆசையா இருக்குன்னா கண்டிப்பா கிஸ் பண்ணுவேன். நீ உன் வாயை கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணி வை. தேவையில்லாம ரொம்ப பேசி என்னை டென்ஷன் பண்ணினா, நான் கார் டோரை இப்படி தான் க்ளோஸ் பண்ண வேண்டியது இருக்கும். கீழே விழுவாளாம், தூக்கிட்டு போய் மருந்து போட்டு விடணுமாம். திமிர்டீ உனக்கு!” என்று திட்டினான்.

“இப்போ என்னை கீழே இறக்கி விட முடியுமா? முடியாதா?” என்றாள் அவன் கண்களை நேராக பார்த்து.

“விட முடியாது! என்னடீ பண்ணுவ?” என்றான் ஜெய் திமிராக.

“எனக்கு தூக்கம் வருது ஸ்ரீ, விட்டுடுங்களேன்” என்று கெஞ்சியவளிடம்

“என் டையர்ட்னெஸ் பத்தி மைண்ட் பண்ணாம உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ண நினைச்சா உனக்கு தூக்கம் தான் பெரிசா போச்சா? போயிடு, போய் நல்லா தூங்கு. கிளம்பு” என்று அவளுக்கு கார் கதவைத் திறந்து விட்டவன் அவள் இறங்கியதும் காரை ஷெட்டில் விட்டு வந்து அவளைக் கண்டு கொள்ளாமல் தன்னறைக்குப் போனான்.

நிர்மலா தவித்துப் போனாள். “இரவில் வீட்டிற்கு வெளியே இவ்வளவு நேரம் இவருடன் பேசிக் கொண்டு இருப்பதைப் பார்த்தால் தவறாக நினைக்க மாட்டார்களா? எதைப் பற்றியும் பயமும், கவலையும் கிடையாது” என்று திட்டிக் கொண்டு லேண்ட் லைனில் இருந்து அவனுக்கு கூப்பிட்டாள்.

அவன் கட் செய்து வைக்கவும், “கோபமா இருந்தா அப்படியே இருந்துட்டு போங்க” என்று சொல்லி விட்டு போனை வைத்தாள்.

அத்தியாயம் 13

காலையில் எழுந்ததும் ஜெய் நந்தன் மொபைலை தான் முதலில் தேடினான். “நைட் ஒரு தடவை கூப்பிட்டா. கட் பண்ணினேன். அதுக்கு அப்புறம் கால் வரலையே? நான் கோபமா இருந்தா என்னை நீ சமாதானப் படுத்த மாட்டியா பஞ்சு மூட்டை? அப்படி என்னடீ என்னை விட உனக்கு தூக்கம் முக்கியமா போச்சு?” என்று அவள் புகைப்படத்துடன் பேசிக் கொண்டு இருந்தான்.

சமையல் அறையில் அவனுக்கு காஃபி யையும், சாலடையும் தயாரித்து நிர்மலா மல்லிகாவிடம், “ஜெய் ஸார் கிட்ட குடுத்துடுங்க அக்கா” என்று கொடுத்து அனுப்பினாள்.

அவர்கள் “என்ன நிர்மலா? நீ தானே தம்பிக்கு எப்பவும் கொண்டு போவ? இன்னிக்கு தம்பி கூட சண்டையா? ” என்று சிரித்தார்கள்.

“அக்கா ப்ளீஸ்!” என்றவளை அதற்கு மேல் கஷ்டப்படுத்தாமல் சென்றார்கள்.

ஜெய் நந்தன் காலையில் எழுந்ததும் தான் தன் அறைக்குள் இருந்த மாற்றங்களைக் கவனித்தான்.அறை எப்போதும் இருக்கும் சுத்தத்துடன் கலைநயமாக மாறியது போல் தோன்றியது. குழல் விளக்குகளின் அடியில் எல்லாம் அழகான வால் பேப்பர்களை பொருத்தி இருந்தாள். கண்டிப்பாக அவளின் கை வண்ணமாக தான் இருக்கும். பால்கனியில் பொருத்தி இருந்த மரக்கதவுகளை மாற்றி பூக்கள் போட்ட கண்ணாடி கதவினை பொருத்தி இருந்தாள். “மூணே நாள்ல இவ்வளவு வேலை செஞ்சுருக்காளே?” என்று ஆச்சரியத்துடன் ஹாலுக்குள் சென்றால் அங்கேயும் மாற்றம், அன்னையின் அறைக்கு சென்றால் அங்கேயும், தோட்டத்திற்கு சென்றால் அங்கேயும்!

“அட! நம்ம ஆளு வீட்டுல ஒரு இடத்தை கூட விட்டு வைக்கவில்லை போல? இதுக்கு தான் நேரம் போதலைன்னு சொன்னாளா? கலையுணர்ச்சி உடையவளா இருப்பா போல; ரொம்ப அழகா இருக்கு!” என்று நினைத்துக் கொண்டு இருந்தான்.

மல்லிகா வந்து காஃபி தட்டை டேபிளில் வைக்கவும் அவனுக்கு புரிந்து விட்டது. மேடம் புல்ஃபார்மில் இருக்கிறார்கள் என்று!

சிற்றுண்டி சாப்பிட ஸாகரி அமருகையில், நிர்மலா கேசரி கிளறிக் கொண்டு இருந்தாள். ஸாகரி அவளை அழைத்ததும், “இத செஞ்சு முடிச்சிட்டு வர்றேன் ஆன்ட்டி, நீங்க சாப்பிடுங்க!” என்றாள்.

ஜெய் சிரிக்கவும் ஸாகரி “உன் வேலை தானா?” என்று மகனை முறைத்தார்.

“இல்லம்மா! ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்……தட்ஸ் ஆல். சீக்கிரம் சரியாகிடும்!” என்று கூறி புன்னகைத்தான்.

“உங்க பர்ஸனல் மேட்டர்ல நான் தலையிட முடியாது. பிரச்சனையை நீங்களே சரி பண்ணிக்கோங்க” என்றார் ஸாகரி.

தாய் தன் பிரச்சனையை கேட்டு நிர்மலாவிடம் தனக்காக பேசுவார் என்று எதிர்பார்த்திருந்தான். ஆனால் தாய் தன் மனதில் நினைத்ததற்கு மாறாக சொல்லவும் அவனுக்கு தவிப்பாக இருந்தது.

ஜெய் நந்தனுக்கு இதுவரையில் யாரிடமும் கெஞ்சியோ, குழைந்தோ பழக்கமில்லை. தாயிடம் மட்டும் அவர் ஆழ்ந்த குரலில் பேச ஆரம்பித்தால் கொஞ்சம் பணிந்து போவான். ஆனால் நிர்மலாவிடம் பேசாமல் இருப்பது அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. தான் செய்தது தவறில்லை என்ற எண்ணமும் இருந்து மன்னிப்பு கேட்கவா, வேண்டாமா என்று அலைக்கழித்த மனநிலையுடன் இருந்தான் ஜெய்.

நிர்மலாவிற்கு அப்படி எல்லாம் ஒன்றுமே தோன்றவில்லை போலும். வழக்கமான உற்சாகத்துடன் வேலைகளை செய்தாள். கூட இருப்போரிடம் சிரித்து மகிழ்ந்தாள். செடிகளை ரசித்தாள். சக்தி, முத்துவிடம் விளையாடினாள். ஜெய் நந்தனை மட்டும் மவுனம் என்னும் மிகப் பெரிய ஆயுதத்தால் குத்திக் கிழித்துக் கொண்டு இருந்தாள்.

ஜெய் நந்தனின் பொறுமை படிப்படியாக குறைந்து கொண்டு இருந்தது. “ரொம்ப தான்டீ பண்ற! ஆனாலும் உனக்கு இவ்வளவு திமிர் ஆகாது!” என்று புன்னகையுடன் நினைத்துக் கொண்டவன் பூக்களை பார்த்துக் கொண்டு இருந்தவளிடம், “இன்னும் எவ்வளவு நேரம் இப்படி பேசாம இருக்குற மாதிரி ஐடியா?” என்றான் கோபமாக. அந்தப் பக்கம் இருந்து பதிலைக் காணவில்லை.

“நிலா நான் உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். கேக்குதா? இல்லையா?” என்றான்

அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு, “என் கிட்ட தான் பேசினிங்களா ஜெய் ஸார்? நான் கூட இந்த செடி கிட்ட தான் பேசிட்டு இருக்கீங்கன்னு நினைச்சேன்” என்றாள் சிரிப்புடன்.

ஜெய் நந்தனின் பொறுமை பறந்தது. “அதுங்க கிட்டயாவது ஃபீலிங்ஸை எதிர்பார்க்கலாம். ஆனா உன் கிட்ட என்னடீ ஃபீலிங் எதிர்பார்க்க முடியும்? இந்த வீட்ல எல்லாரையும் கவனிக்க உனக்கு நேரம் இருக்கு! ஆனா என் முகத்தை பார்க்க, என் கூட பேச மட்டும் உனக்கு நேரமும் இருக்காது. மனசும் இருக்காது. ராட்சஸி! உங்களை யாராச்சும் ஒரு பையன் லவ் பண்றேன்னு சொல்லிட்டா போதும். அவனை உங்க காலடியில் போட்டு உங்க அடிமை மாதிரி ட்ரீட் பண்ணனும். அப்ப தானே உங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்? அம்மா, அப்பான்னு ஃபேமிலி ரிலேஷன்ஸ் கூட பழகியிருந்தா தானே உங்கிட்ட ஃபேமிலி வேல்யூஸ் பத்தி எக்ஸ்பெக்ட் பண்ண முடியும்? இந்த பொண்ணுங்க எல்லாம் ஸாடிஸ்ட்ஸ்……..” என்று தன் மன்னிப்பை அவளிடம் கேட்க பிடிவாதமாக மறுத்து அவள் மேல் இல்லாத பழிச்சொற்களை அம்புகளாக தைத்துக் கொண்டு இருந்தான் ஜெய் நந்தன்.

ஆனால் நிர்மலாவின் மனதைப் பற்றி அவன் கொஞ்சமும் நினைக்கவில்லை. அவளின் நினைவு தெரிந்த நாளில் இருந்து அவள் சுமந்து வந்த அம்மா, அப்பா விட்டு சென்ற பெண்; அத்தை வீட்டில் ஓசியில் உண்ணுபவள் என்ற பழிச்சொற்கள் அழிந்து விட்டது. ஜெய் நந்தன், ஸாகரி என்று இரு புது சொந்தங்கள் கிடைத்தது. தலை நிமிர்ந்து நிற்க நேரம் வந்து விட்டது என்று புது உற்சாகத்துடன் வளைய வந்தவளை ஜெய் நந்தனின் வார்த்தைகள் அதல பாதாளத்தில் தள்ளியது. ஜெய் நந்தன் பால் கொண்ட நட்பு, ப்ரியம், நம்பிக்கை, நேசம் போன்ற உணர்வுகள் குழி தோண்டி புதைக்கப்பட்டன.

தன் கண்ணீரை அடக்க சிரமப்பட்டவள், ஜெய் நந்தனிடம் கையைக் காட்டி நிறுத்துமாறு சைகை செய்தாள். வசமிழந்த தன் குரலை செறுமிச் சமாளித்து

“போதும்……..நீங்க சொன்னதெல்லாம் போதும்!” என்றாள் நிர்மலா.

அவளது கம்மலான குரலில் ஜெய் நந்தன் ஒருவாறு இயல்பு நிலைக்கு வந்தான். பொதுவாக யாரும் அவன் பேச்சை மறுத்து பேசி அவனுக்கு பழக்கம் இல்லாததால், அவன் முத்தமிட்ட போது நிர்மலா அவனைப் புறக்கணித்ததையே அவனால் தாங்க முடியவில்லை. ஆனால் அவனுக்கே கை, கால்கள் உதறிய போது அவளுக்கும் கூச்சமாக இருந்திருக்கும்; அதனால் அவனை நிறுத்தி தள்ளி விட்டாள் என்று ஏற்றுக் கொண்டான். ஆனால் அவளுக்கு ஒரு பரிசு வாங்கி வந்து அவள் அதை காதில் வாங்கிக் கொள்ளாமலேயே தூக்கம் வருகிறது என்று சொல்லவும் அவனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.

நிர்மலா இருவரும் இரவில் தனித்து இருப்பதை தடுப்பதற்காக தான் அவ்வாறு சொன்னாள் என்று அவனுக்கும் புரியவில்லை. தன்னுடன் நேரம் செலவழிக்காமல், பேசாமல் இருந்ததில் எரிச்சல் பட்டு தன் தவறை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் தான் ஜெய் நந்தன் தன்னிடம் கடிந்து பேசினான் என நிர்மலாவிற்கும் புரியவில்லை.

நிர்மலாவின் ஆழ்ந்த குரலில் ஜெய் நந்தனுக்கு தான் தேவையில்லாமல் நிறைய உளறி விட்டோம் என்று தெரிந்தது. நான் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவன் பேசுவதற்குள்

“நான் தான் முதலிலேயே சொன்னேனே ஸார், உங்களுக்கு ஏத்த பொண்ணு நான் இல்லைன்னு; அப்பவே என்னை என் வழியில் விட்டிருந்தா எனக்கு இப்படி திட்டுக்களாவது கிடைக்காம இருந்திருக்குமே…….? எனக்கு குடும்ப உறவுகளைப் பத்தி தெரியாது, அதை நான் தெரிஞ்சுக்க இனிமேல் வாய்ப்பும் கிடையாது…..என்னை விட்டுடுங்க! ஐயோம்மா; என்னை ஏன் விட்டுட்டு போனீங்க?……உங்க கூடவே கூட்டிட்டு………” என்று கண்ணீருடன் அரற்றிக் கொண்டு இருந்தவள் திடீரென மயங்கி கீழே சரிந்தாள்.

அவள் விழும் முன் அவளை விரைந்து பற்றியவன்,”அம்ம்ம்ம்மா….ஆ” என்று அலறினான்.

அவன் சத்தத்தில் வீட்டிற்குள் இருந்து ஸாகரி, மாணிக்கம், மற்ற வேலையாட்கள் வெளியே வருவதற்குள் ஜெய் நந்தன் தோட்டத்தில் இருந்து நிர்மலாவை கைகளில் ஏந்தியவாறு வீட்டிற்குள் வந்து கொண்டு இருந்தான்.

அத்தியாயம் 14

நிர்மலாவின் மயங்கிய நிலையைக் கண்டதும் ஸாகரி ஜெய் நந்தனை ஒரு பார்வை பார்த்தார். குளுக்கோஸ் வாட்டர் எடுத்துட்டு வா, டவலை ஈரம் பண்ணி கொண்டு வா, ஃபேனை போடு, ஜன்னலை திறந்து வை என்று சுற்றியிருந்தவர்கள் அனைவருக்கும் ஒரு வேலை கொடுத்து விட்டு அவனிடம் வந்து நின்றார். பயத்தில் ஜெய்க்கு கை கால்கள் வியர்த்தது.

“என்னாச்சு?” என்று சுருங்க விசாரித்தவரிடம்,

“இல்லம்மா! …..சும்மா பேசிட்டு தான் இருந்தேன்…” என்று அவன் குரல் தேய்ந்து ஒலித்தது.

“வாயை மூடு ஜெய்!…… உன் கிட்ட முதல்ல இருந்து நான் சொல்லிட்டு இருக்கேன். இந்தப் பொண்ணுக்கு நம்மால எந்தப் பிரச்சினையும் வரக்கூடாதுன்னு! இப்போ நீ என்ன பண்ணி வைச்சு இருக்க? அவ சுய நினைவை இழக்கிற அளவுக்கு என்ன சொல்லி அவ மனசை கஷ்டப்படுத்தினன்னு எனக்கு தெரியல. இப்படி பண்ணிட்டியே ஜெய்மா?” என்று வருத்தத்துடன் முடித்தார்.

மருத்துவரை வரவழைத்துக் கொண்டு மாணிக்கம் வரவும், அவனை விட்டு அவர் அருகில் சென்றார் ஸாகரி. மருத்துவர், “அதிர்ச்சியில் வந்த மயக்கம் தான், பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை! கொஞ்சம் வீக்காக இருப்பது போல் தெரிகிறார்கள். சத்தான உணவு வகைகளை கொடுங்கள்” என்று சொல்லி விட்டு சென்றார்.

மருத்துவர் வெளியே சென்றதும் ஜெய் தன் அன்னையின் கைகளைப் பற்றிக் கொண்டு நடந்த அனைத்தையும் சொல்லி விட்டு, “என்னை மன்னிச்சிடுங்கம்மா” என்று அவர் கையை விட்டதும் பளாரென்று அவன் கன்னத்தில் அறை விழுந்திருந்தது.

“ஒரு சின்ன பொண்ணு மனசில ஆசையை உண்டாக்கிட்டு அதை நீயே அழிச்சதும் இல்லாம என்ன தைரியம் இருந்தா என் கிட்ட மன்னிப்பு வேற கேட்டுட்டு நிப்ப? உன்னை அவ மன்னிக்கிறாளோ இல்லையோ, நான் மன்னிக்க மாட்டேன். என் கண்ணு முன்னால நிக்காத, போயிடு!” என்று அறையின் வெளியே கையைக் காட்டினார் ஸாகரி.

தாயின் வார்த்தைக்கு மதிப்பு தந்து மறுபேச்சு பேசாமல் ஜெய் நந்தன் நிர்மலாவை ஒரு முறை பார்த்து விட்டு வெளியே சென்று விட்டான். தாயின் கோபத்தின் அளவு புரிந்ததும் தான் அவனுக்கு தான் செய்த தவறின் அளவு புரிந்தது.

பிறந்ததில் இருந்து அவன் தந்தையும், தாயும் அவனை கடிந்து பேசியதில்லை. பேசும் படி அவன் நடந்து கொண்டதும் இல்லை. இன்று அவன் அம்மா அவனை அடித்தது அவனுக்கு பெரிதாக வலிக்கவில்லை. தாயிடம் நன்மதிப்பையும், காதலியிடம் நம்பிக்கையையும் இழந்து விட்டோமே என்று தான் வருத்தப்பட்டான்.

நிர்மலா தன் காதலை தன்னிடம் தர மாட்டாளா என்று அவனுக்கு பயமாக இருந்தது. “பேசுவதையெல்லாம் பேசி விட்டு இன்னும் அவள் காதலை கேட்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்று மனம் அவனைக் கேள்வி கேட்டது.

நிர்மலாவிற்கு பத்து நிமிடங்களில் சுய உணர்வு வந்தது. எழுந்தவுடன் அவளுக்கு ஜெய் கூறிய வார்த்தைகள் நினைவிற்கு வந்து கண்களில் நீர் கோர்த்தது. அவள் சுயநினைவை அடையவும் நிம்மதியாக இருந்த ஸாகரி, அவள் அழுகையை ஆரம்பிக்கவும் கோபமானார். அவளின் பக்கத்தில் சென்று அவள் தலையை மெதுவாக வருடியவர், “நிர்மலாம்மா, உன்னோட மதிப்பு தெரியாதவங்க பேசுற பேச்சுக்கெல்லாம் நீ ஏன்டா ஃபீல் பண்ற? தப்பு பண்ணினவன் என் பையன்னு நான் அவனுக்கு எல்லாம் ஸப்போர்ட் பண்ண மாட்டேன். நீ எல்லார் கிட்டயும் பெரிசா சாதித்து காட்டணும். அதுக்கு முதல்ல தைரியமா இருக்கணும். எந்த சூழ்நிலையையும் துணிச்சலோட சந்திக்க பழகணும். சும்மா இப்படி எதுக்கெடுத்தாலும் கண்ணுல தண்ணி விடக் கூடாது. சரியா?” என்றார் புன்னகையுடன்.

“ஆன்ட்டி என்னால உங்களுக்கும் ஸாருக்கும் நடுவில் பிரச்சனை வர வேண்டாம். அவர் என்னை ஒண்ணும் தப்பா பேசிடலை ஆன்ட்டி, உனக்கு குடும்ப உறவுகளைப் பத்தி தெரியாதுன்னு தான் சொன்னார். எனக்கு தான் உண்மையிலேயே குடும்பம் இல்லையே ஆன்ட்டி? இருந்தது மாமா வீட்டில்; அதுவும் ஏன் இவ இங்கே இருக்கான்னு நினைக்கிற மாதிரி அவர்களுக்கு தொல்லை ஏற்படுத்திக்கிட்டு; அப்புறம் அவங்க கிட்ட எப்படி குடும்ப பற்று, பாசம் இதையெல்லாம் எதிர் பார்க்க முடியும்? நான் ஏதோ தப்பு பண்ணியிருக்கேன் ஆன்ட்டி, இல்லைன்னா உறவுன்னு சொல்லிக்க ஒருத்தர் கூட இல்லாம கஷ்டப்படட்டும்னு அந்த கடவுள் என்னை தண்டிச்சிருப்பாரா?” என்று தன்னையே நொந்து கொண்டு ஜெய் நந்தன் கூறிய வார்த்தைகளை மிகைப்படுத்தி காட்டாமல் முடிந்த அளவு தவிர்க்கப் பார்த்தாள் நிர்மலா.

“எவ்வளவு நல்ல பெண்; இவளை கண் கலங்க விடாமல் பத்திரமாய் பாதுகாக்க வேண்டும்!” என்று நினைத்து ஸாகரி அவளைத் தன் தோள்களில் தாங்கி கொண்டார்.

ஜெய் நந்தன் அன்னையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நிர்மலாவின் அறைக்குள் செல்லவில்லை. ஆனால் மாணிக்கத்திடம் அவள் என்ன செய்கிறாள்? கண் விழித்து விட்டாளா? அழுகிறாளா? வருத்தமாக இருக்கிறாளா? அம்மா அவளுக்கு ஆறுதல் சொல்கிறார்களா? என்று அவரை நூறு கேள்விகள் கேட்டு படுத்தி எடுத்து விட்டான். அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு நான்கு முறை சென்று வந்தவர், ஸாகரி அறைக்கதவை சாற்றிக் கொள்ளவும் அவனிடம் வந்து சொன்னார்.

இருப்புக் கொள்ளாமல் தவித்தவன், அன்னையின் சொல்லையும் மீறி நிர்மலாவின் அறைக்கதவை தட்டினான். நிர்மலாவிற்கு வந்திருப்பது யாரென்று சொல்லாமலே புரிந்தது. ஆனால் அதிகம் பேசி விட்டேன் என்று குற்றவுணர்வில் தவிப்பாரே? என்னைப் பார்த்தால் அவருக்கு வருத்தமாக இருக்குமே என்று நினைத்து ஸாகரியிடம், “நான் இப்போ என்ன செய்றது ஆன்ட்டி?” என்றாள். ” நீ அவனை மன்னிச்சுட்டியா நிர்மலா?” என்றார் ஸாகரி.

“ஸார் மேல எனக்கு கோபமே வரலை ஆன்ட்டி; அப்புறம் எதுக்கு மன்னிப்பு பத்தி எல்லாம் பேசிட்டு இருக்க?” என்றாள்.

“சரி இதுக்கு முன்னாடி உங்க ஸாரை வேற எப்படியோ கூப்பிட்டியே? இன்னிக்கு ஏன் உனக்கு அப்படி கூப்பிட தோணலை?” என்றார் அவளை உற்று நோக்கிய படி.

“ஸார் கிட்ட இனிமே எனக்கு எந்த உரிமையும் கிடையாது ஆன்ட்டி! அவருக்கு நீங்க வேற நல்ல பொண்ணு பார்த்து கல்யாணம் செய்து வைங்க! என்னை ஊருக்கு அனுப்பிடுங்க! நான் இங்கே இருந்தா அவர் வர்ற நேரம் இரண்டு பேருக்கும் சங்கடமா இருக்கும்ல ஆன்ட்டி?” என்றாள்.

“இதை அவன் கிட்ட சொல்ற தைரியம் உனக்கு இருக்கா நிர்மலா?” என்று கேட்ட ஸாகரியிடம்

ஆழ்ந்த மூச்சு எடுத்து விட்டு, ” சரி ஆன்ட்டி! நான் பேசிடுறேன். ஸார் புரிஞ்சுப்பார். அவர் வாழ்க்கைக்கு நான் எந்த விதத்திலும் இடைஞ்சலா இருக்கக் கூடாது. நான் அவர் கிட்ட பேசி அவரை வேற கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வைக்கிறேன் ஆன்ட்டி” என்றாள்.

மெல்லிய புன்னகையுடன் அவள் தலையில் வருடி விட்டு, “முயற்சி செஞ்சு பாரு!” என்று சொல்லி விட்டு கதவைத் திறந்தார் ஸாகரி.

“நிலா கிட்ட பேசணும்மா” என்றவனிடம் “அவளை வருத்தப்பட வைக்காதே, நீயும் வருத்தப்படாதே” என்று சொல்லி விட்டு சென்றார்.

உள்ளே சென்று கதவைத் தாழிட்டவனை நிர்மலா எந்த உணர்வுமின்றி பார்த்தாள் நிர்மலா.

” நிலா! ஐ’ம் ரியலி ஸாரிடா, நான் பேசினது உன்னை எவ்வளவு ஹர்ட் பண்ணுச்சுன்னு என்னால ஃபீல் பண்ண முடிஞ்சது. ஆனால் நீ என்னை அவாய்ட் பண்ணியதை தாங்க முடியாம, உன் கூட பேச முடியாம தான் நான் அப்படி கோபப்பட்டுட்டேன்டா. எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடு. ஆனா பேசாமல் இருக்காத. இரண்டு நாளா பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு. அம்மா என்னை அறைஞ்சது கூட வலிக்கவில்லை….. ஆனா நீ என்னை யாரோ மாதிரி பார்த்து பேசின பார்த்தியா?…….. என் கிட்ட இருந்து நீ விலக நினைக்கிற மாதிரி….. எனக்கு பயமாயிருக்கு நிலா! ரொம்ப பேசிட்டேன்; தப்பு தான், உன்னோட ஸ்ரீ தானே பேசினேன்? அம்மா மாதிரி நீயும் நாலு அடி கூட அடிச்சிடு. வாங்கிக்கறேன், ஆனா இதுக்கு மேலயும் பேசாமல் தண்டனை குடுக்காதடா நிலா” என்று அவள் கையைப் பிடித்தான் ஜெய் நந்தன்.

“உட்காருங்க ஸ்ரீ” என்று அவனை ஸோஃபாவில் அமர்த்தியவள் தானும் அவனுக்கு எதிராக ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

சற்று நேரம் இருவரும் தேர்விற்கு முன்பு மனதிற்குள் வினாக்களுக்கு விடைகளை தேடுவது போல் வார்த்தைகளை தேடிக் கொண்டு இருந்தனர்.

“ஸ்ரீ எனக்கு ஒரு சின்ன உதவி செய்யணுமே?” என்றவளிடம்

“சொல்லு நிலாம்மா; என்ன செய்யணும்?” என்றான் கனிவைத் தேக்கி.

“ஐந்து நிமிடம் நான் சொல்றதை பொறுமையா கேக்கணும். நடுவுல குறுக்க பேச முயற்சி செய்யக் கூடாது! சரியா ஸ்ரீ?” என்றாள்.

“ஏதோ தப்பா இருக்கே?” என்று நினைத்தவன், “சொல்லு” என்றான்.

“எனக்கு உங்களை முதன்முறையாக பார்த்தப்பவே, ரொம்ப பிடிச்சது ஸ்ரீ! நீங்க ஆன்ட்டியின் பையன்னு சொன்னதும் என்னை நானே சமாதானம் செய்துகிட்டேன். ஆனா நீங்களே வந்து என்னை விரும்புறேன்னு சொன்னப்போ எனக்கு பரவசமாக இருந்தது. அப்பவும் என்னோட வளர்ப்பு முறை, குடும்ப சூழ்நிலை, தகுதி இதெல்லாம் என்னை தடுத்தது. நீங்கள் என் மேல காட்டிய அக்கறை, உங்க குறும்பு, ஆர்ப்பாட்டம் எல்லாம் என்னை ரொம்ப ரசிக்க வைத்தது. அப்பப்போ மனசுல ஒரு கேள்வி வரும். உன் தகுதிக்கு ஸ்ரீ ஏத்தவர் தானா? நீ செய்யறது சரி தானான்னு. அப்பவும் ஸ்ரீ என்னை புரிஞ்சிக்கிட்டார். ஆன்ட்டி என்னை ஏத்துக்கிட்டாங்கன்னு என் மனசுக்கு நானே ஆறுதல் சொல்லிப்பேன்.

“உங்களை நானா அடிமை மாதிரி நடத்தினேன்? எப்படி ஸ்ரீ உங்களால இப்படி பேச முடிஞ்சது? நான் ஸாடிஸ்ட்ஸா? ஒரு வேளை நமக்கு கல்யாணம் ஆகி யாராவது என்னை குடும்ப உறவுகளைப் பத்தி தெரியாத பொண்ணுன்னு பேசியிருந்தா நீங்க என்னை விட்டுக் கொடுக்காம எனக்கு ஸப்போர்ட் பண்ணி இருப்பீங்கன்னு உங்க மேல நம்பிக்கை வச்சிருந்தேன் ஸ்ரீ! இந்த வீட்ல எனக்கு உரிமை இருக்குன்னு நினைச்சு தான் எல்லா வேலைகளையும் செஞ்சேன்.”

“என்னோட நம்பிக்கையை நீங்களே கொன்னுட்டு, உயிர் வரைக்கும் வலிக்கிறது மாதிரி பேசிட்டு இப்போ வந்து என்னை மன்னிச்சிடு; வேணும்னா என்னை நாலு அடி அடிச்சுக்கோன்னு சொல்றீங்க? இது சரியா ஸ்ரீ?” என்றாள் நிர்மலா கேள்வியாக.

தன் தாயாவது கன்னத்தில் ஒரு அடி தான் அடித்தார். ஆனால் இவள் நெஞ்சுக்குள் கத்தியை விட்டு திருகுவது போல் கேள்விகளால் வலியை கொடுக்கிறாளே? தான் தன் காதலை அவளிடத்தில் சொன்ன போது அவளும் பிடித்திருக்கிறது என்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் இவ்வளவு தூரம் வரை வந்திருக்காது. ஆனால் அதற்கும் தான் காரணங்களை அடுக்குகிறாளே?

“உன்னை நம்பியவளின் உணர்வை நீயே கொன்று விட்டாயே?” என்று அவன் மனசாட்சி அவனை சுட்டது. சரி குற்ற உணர்வில் உழன்றது போதும். வலியை அனுபவித்தவள் அதற்கு தண்டனையும் வழங்கட்டும், எப்பாடு பட்டாவது தன்னவளின் நம்பிக்கையை பெற்று ஆக வேண்டும் என்று எண்ணியவன்,

” சரி சொல்லு நிலா! நான் என்ன தப்பு செஞ்சேன்னு இவ்வளவு நேரம் பொறுமையா சொல்லிட்டியே? அதே மாதிரி எனக்கு என்ன தண்டனை வைச்சு இருக்கன்னு கூட நீயே சொல்லிடுமா” என்றான் பரிதாபமாக.

தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்தவள், “என்னை விட்டுடுங்க ஸ்ரீ! நான் போயிடுறேன்” என்றாள்.

கண்களை இடுக்கி அவளை நோக்கியவன், “புரியல” என்றான்.

“இந்த வீட்டை விட்டு, வேலையை விட்டு, ஊரை விட்டு, உங்க லைஃப்பை விட்டு நான் போயிடுறேன் ஸ்ரீ” என்றாள் கல் போல் உணர்ச்சியற்ற முகத்துடன்.

அவன் அம்மா சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உள் அர்த்தம் இருக்கும். நீயும் வருத்தப்படாதே என்றாரே? இது தான் அவனை வருத்தப்பட வைக்க போகும் முடிவா? இந்த லூசு என்ன சொன்னாலும் அவர்களும் சரி என்பதா? என்று தன் தாயின் மேல் அவனுக்கு கோபம் வந்தது.

ஒரு வாரத்தில் இவளை வேலையை விடச் சொல்ல வேண்டும்! அதற்கு பிறகு…..மளமளவென்று அவன் மனதிற்குள் ஒரு முழுத்திட்டம் வரைபடம் இன்றி தயாராக இருந்தது.

அத்தியாயம் 15

நிர்மலாவை பார்த்து புன்னகையுடன், “சரி நிர்மலா! என்னை விட்டு பிரியறது தான் உனக்கு இஷ்டம்னா உன்னை நான் தடுக்கலை. நீ ஊருக்கு கிளம்பு. பட் உன்னை நியாபகப்படுத்துற விஷயம் எதுவும் இந்த வீட்ல இருக்க கூடாது. எல்லாத்தையும் பழையபடி ஸெட் ரைட் பண்ணிட்டு கிளம்பு” என்றான் ஜெய் கறார் குரலில். 

“தோட்டத்தில பண்ணின செட்டப் ஆன்ட்டிக்கு ரொம்ப பிடிச்சது. அது மட்டுமாவது அப்படியே இருக்கட்டுமே ப்ளீஸ்!” என்று கெஞ்சியவளிடம்

“ம்ஹூம்! அதெல்லாம் வேண்டாம் நிர்மலா; நான் சொன்ன படி செய்; நெக்ஸ்ட் சண்டே நான் சென்னை போகும் போது நீயும் என் கூட வா! உன்னை ட்ராப் பண்ணிடறேன். ஒரு செண்ட் ஆஃப் குடுக்குற மாதிரி இருக்கட்டுமே; உனக்கு ஒண்ணும் கஷ்டமா இருக்காதுல்ல?” என்றான் ஜெய்.

இல்லை என்று வாயால் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினாள் நிர்மலா. கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

“அழுடி! நல்லா அழு, என்னை விட்டுட்டு போகணும்ன்னு நினைச்சல்ல, அதுக்கு உனக்கும், உன்னை கஷ்டப்படுத்தி அழ வச்சதுக்கு எனக்கும் இந்த இம்சை தான் ஒரு வாரமும்….” என்று மனதிற்குள் நினைத்தவன் அவளைப் பார்த்து,

“என்னாச்சு நிர்மலா? கொஞ்சம் டல் ஆகிட்ட?” என்றான் ஜெய்.

“ஒண்ணும் இல்லை ஸார்!” என்றாள் நிர்மலா.

“சொல்ல மறந்துட்டேன் நிர்மலா, நாளையில இருந்து ஒரு புது ப்ராஜெக்ட், கொஞ்சம் சேலன்ஜிங்கா  இருக்கும். பட் எனக்கு ரொம்ப எக்ஸைட்டிங்கா இருக்கு! எல்லா முடிவுகளும் நான் தான் எடுக்கணும். ஸோ கொஞ்சம் பயமா இருக்கு, அதனால எனக்கு ஒரு ஆல் தி பெஸ்ட் சொல்லலாமே?” என்றான் கையை நீட்டி

கண்களில் ஜீவனே இல்லாமல், “ஆல் தி பெஸ்ட் ஸார்! ” என்று அவன் கைகுலுக்கினாள் நிர்மலா.

“தேங்க்யூ நிர்மலா” என்று அவள் கன்னத்தில் தட்டியவன் உற்சாகமாக விசிலடித்து கொண்டே அறைக்கதவின் பக்கம் நின்று, “சண்டே ரெடியாயிரு” என்று சொல்லி விட்டு சென்றான்.

தன் அன்னையிடம் சென்றவன், “அம்மா நான் செஞ்சது தப்பு தான். ஆனா என்னால அதை சரி பண்ணிட முடியும். நிர்மலா நெக்ஸ்ட் சண்டே கிளம்பறேன்னு சொன்னா. அவ இங்கேயிருந்து கிளம்புற வரைக்கும் கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோங்க. உங்க மனசை கஷ்டப்படுத்தினதுக்கு என்னை மன்னிச்சிடுங்கம்மா. நான் ஊருக்கு கிளம்பறேன் அம்மா, போயிட்டு வர்றேன்” என்று அவர்கள் காலில் பணிந்தான்.

ஸாகரி குழம்பினார். “அவ பாட்டுக்கு ஊருக்கு கிளம்புகிறேங்குறா. இவன் தப்பை சரி செஞ்சுடுவேங்கிறான். இவ்வளவு தெளிவா வேற பேசுறான். ஒரு வேளை……” என்று தன் நினைப்பை தடை செய்த ஸாகரி

“ஜெய்மா, நீ என்ன முடிவெடுக்கப் போற? எனக்கு பயமாயிருக்கு” என்றவரிடம்

“எல்லாத்தையும் ஒன் வீக் கழிச்சு பார்த்துக்கலாம் அம்மா, நீங்க ரிலாக்ஸ்டா இருங்க, சரியா?” என்றான் புன்னகையுடன்.

“இவன் செய்றது எதுவும் சரியில்லையே?” என்று நினைத்து மாணிக்கத்தை அழைத்து “ஜெய்மாவை இந்த ஒரு வாரம் கொஞ்சம் வாட்ச் பண்ணு” என்று உத்தரவிட்டார்.

நிர்மலாவிற்கு மனது மிகவும் உளைந்தது. ” என்னை என் ஸ்ரீ உண்மையிலேயே விரும்பலையா? பொழுது போக பொம்மையை வைத்து சின்ன பிள்ளைங்க விளையாடறது போல் என்னை வச்சு விளையாடினாரா? அவரை ஆன்ட்டியை விட்டு போகணும்ன்னு நினைக்கிறது கூட வலிக்குது. நான் போயிடுறேன்னு சொன்னது ஸ்ரீயை எந்த விதத்திலயும் பாதிக்கவேயில்லை. அப்போ அவர் என்னை காதலிக்கிறேன்னு சொன்னது பொய்யா?” என்று நினைத்து தனக்குள் உழன்று கொண்டு இருந்தாள் நிர்மலா.

நான்கு நாட்கள் கஷ்டப்பட்டு அறை அலங்காரங்களை மாற்றியமைத்தாள். தொண்டைக்குழி மிகவும் சுருங்கி விட்டது போல் சாப்பிட்டேன் என்று பெயரில் அமர்ந்து எழுந்தாள். ஸாகரி அவளை தேற்றும் வழி தெரியாமல் பல வேளைகளில் மடியினில் சாய்த்துக் கொண்டார்.

அவளின் ஆழ்ந்த பார்வையையும், மௌன அழுகையையும் அவர் உணராமல் இல்லை. ஆனால் உணர வேண்டியவன் கல்லைப் போல் நின்றால் அவர் என்ன செய்வது?

ஞாயிற்றுக்கிழமை காலையில் விரைந்து எழுந்து தயாராகி பூந்தோட்டத்திற்கு சென்று அமர்ந்து விட்டாள் நிர்மலா. தன் வாழ்க்கை இனி என்னென்ன மாற்றங்களை சந்திக்க போகிறது என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் இனிமேல் தன் ஸ்ரீயை மிகவும் நினைத்து ஏங்க போகிறேன் என்று நினைத்தாள்.

“அவர் உன்னோட ஸ்ரீ கிடையாது” என்று நினைத்த தன் மனதிடம் சண்டை போட்டாள்.

“ஹாய் நிர்மலா, அதுக்குள்ள ரெடி ஆகிட்ட போல? லக்கேஜ் எங்க இருக்கு? நான் டிரைவர் கூட வந்தேன். நீ ரெடியா இருந்தன்னா நாம கிளம்பலாம்” என்றவனிடம்

“ஆன்ட்டி கிட்ட சொல்லிட்டு வந்திடறேன் ஸார்!” என்று மனதே இல்லாமல் ஒவ்வொரு படியாக ஏறியவளை பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்தது.

“ஒரே வாரத்துல உடம்பை என்ன பாடுபடுத்தி வைச்சிருக்கு பிசாசு!” என்று அவளை திட்டினான்.

அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு ஸாகரி ஆன்ட்டியின் கால்களில் பணிந்து வணங்கினாள் நிர்மலா.

“நீ நினைச்சது கண்டிப்பா உனக்கு கிடைக்கும் நிர்மலா. தைரியமா இருக்கணும். சரியா?” என்று அவளை வழியனுப்பி வைத்தார்.

சக்தியும், முத்துவும் வாலாட்டிய படி அவளருகில் அமர்ந்து கொண்டு நாவால் நக்கியதும் நிர்மலாவின் விம்மல் ஒலி கேட்டது.

“சக்தி, முத்து கெட் டவுன்” என்ற ஜெய் நந்தன் கட்டளையில் கீழிறங்கி கார் கதவில் கால்களை வைத்துக் கொண்டு நின்றன. ஜெய் வேலை ஆட்களை கூப்பிட்டு அவைகளை சிறிது நேரம் கட்டி வைக்க சொல்லி விட்டு அவள் அருகில் அமர்ந்தான்.

அவனை பார்த்தவளிடம், “கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணிக்க நிர்மலா, அதுக்கப்புறம் ஜெய் நந்தன் உன்னோட லவ்வர் கிடையாது” என்றான்.

“ஸ்ரீ ப்ளீஸ்!” என்று அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தவளை தன் அருகில் இழுத்து அணைத்து ஆறுதல் படுத்தி அவளை தன் மார்பில் சாய்த்துக் கொண்டான் ஜெய். இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவளை அணைத்திருக்க அவனும், அவன் அணைப்பில் கிடக்க அவளும் விரும்பினர்.

அரை மணி நேரம் கழித்து நிர்மலா ஜெய்யின் மடியில் படுத்து உறங்கி விட்டாள். “கொடுத்து வைச்ச பிறவி! எப்படி தூங்குறா பாரு; ஸாரி நிலாக் குட்டி, ஒரு வாரமா உன்னை ரொம்ப படுத்திட்டனா? அப்போ நான் உன் கிட்ட முழுசா சொல்லலைடா செல்லம்!ஊருக்கு போனவுடனே நான் உன் லவ்வர் கிடையாது. உன்னோட ஹஸ்பெண்ட்!” என்று புன்னகையுடன் அவளை வாகாக கையில் ஏந்திக் கொண்டான் அவள் மலை இறக்கங்களில் சரியாமல்!

மாலையில் சென்னையில் தன் நண்பன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான் ஜெய் நந்தன். தன் செல்போனை வீட்டில் விட்டுவிட்டு வந்திருந்தான். நிர்மலாவிற்கு வாங்கிய ஃபோனில் புதிய நம்பர் வாங்கி போட்டு வைத்து கொண்டான். தன் நண்பர்களிடம் சொல்லி திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய சொல்லி இருந்தான். அவனுக்கு நிர்மலாவிடம் உரிமையோடு கூடிய பந்தம் வேண்டும். அதனால் தான் கல்யாணம் செய்து கொள்வது என்று முடிவெடுத்து விட்டான். நிர்மலாவின் மாமாவிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டான். அவன் பொது தொலைபேசியில் இருந்து பேசியதால் ஸாகரியும், சபரீசனும் ஜெய்யை தொடர்பு கொள்ள முடியவில்லை.

நிர்மலாவின் உறக்கம் ஒரு வழியாக கலைந்ததும் அவள் தான் இருக்கும் இடத்தை புரிந்து கொள்ள முயற்சித்தாள்.

தன் அருகில் வந்து அமர்ந்தவனிடம், “ஜெய் ஸார்! இது எந்த இடம்? ஏன் இங்கே வந்திருக்கோம்? மாமா எதிர்பார்த்துட்டு இருப்பாங்களே?” என்றாள்.

அவன் அமர்ந்து இருந்த ஸோஃபாவில் சௌகரியமாக சாய்ந்து கொண்டு, “உனக்கு இந்த வீடு பிடிச்சிருக்கா?” என்றான். குழப்பமாக தலையாட்டினாள் நிர்மலா.

“பிடிச்சிருக்கோ, பிடிக்கலையோ இங்க தான் அடுத்த ஒரு மாசம் நீயும், நானும் இருக்கப் போறோம். நீ என்னடீ நினைச்சுட்டு இருக்க உன் மனசில? நான் தப்பு செஞ்சிட்டேன் தான். அதுக்காக உன் லைஃப்ல இருந்து போயிடுறேன்னு என் கையை உதறிட்டு கிளம்பிடுவியா? எனக்கு பயமாயிருக்கு. தியாகம் பண்றேன், என் வாழ்க்கைக்கு நல்லது செய்றேன்னு சொல்லி உன் ஊருக்கு போய் நீ வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் கல்யாணத்துக்கு வந்து உன்னை வாழ்த்திட்டு பந்தியில உட்கார்ந்து சாப்பிட்டு போவேன்னு நினைச்சியா நீ? உன்னை ரெண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்ல, அந்த ஸ்டேட்மெண்ட்டை நான் வாபஸ் வாங்கிக்கறேன். நாளைக்கு நமக்கு கல்யாணம். ஒரு மாசம் வெயிட் பண்ணி ரிஜிஸ்டர் மேரேஜ் முடிச்சிட்டு உன்னை மலைக்கு கூட்டிட்டு போறேன். நான் வழக்கம் போல வாரம் ஒரு தடவை வந்துட்டு போயிடுவேன். உனக்கு ரெண்டு வருஷம் டைம். அது வரைக்கும் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். அதுக்கப்புறம் நம்ம கல்யாண வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். இது தான் புது ப்ராஜெக்ட், நிறைய முடிவுகள் நானே எடுக்கணும்ன்னு உன் கிட்ட விஷஷ் கூட கேட்டேனே?” என்றான் சிரிப்புடன்.

நிர்மலா நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவள் பார்வையில் கோபமா, வருத்தமா, குழப்பமா, நிம்மதியா என்ன உணர்வு இருந்தது என்று அவனால் பிரித்தறிய முடியவில்லை.

“ஹலோ மேடம், கண்ணால பேசினா எனக்கு புரியலை. தயவு செய்து கொஞ்சம் வாயால பேசுங்க! உங்க மனசில என்ன இருக்கு, அதை சொல்லுங்க” என்றான் ஜெய்.

“ஸ்ரீ நீங்க ஊர்லயே என்னை கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணிட்டீங்களா? அதுனாலயா அவ்வளவு உற்சாகமா இருந்தீங்க? நான் உங்ககிட்ட இருந்து விலகிடுறேன்னு சொன்னதால தான் நீங்க ஹாப்பியா இருக்கீங்கன்னு நினைச்சேன் ஸ்ரீ” என்று கலங்கியவளிடம்

“குட் ஜோக்! உன்னை பிரிஞ்சு நான் ஹாப்பியா இருப்பேனா? ஒரு வாரம் உன் கிட்ட பேசாம நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும். போதும். இனிமேலும் கண்ணீர் வடிக்காத. எனக்கு கஷ்டமா இருக்கு! ” என்று அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான் ஜெய் நந்தன்.

“ஏன் ஸ்ரீ அப்படி பேசினீங்க?” என்றாள் நிர்மலா ஆதங்கத்துடன்

“நிலா! என்னை நந்தனா வைச்சிருக்கிறதும் நரசிம்மனா மாத்துறதும் உன் வாய் தான், இரண்டு நாளா என் கிட்ட மட்டும் நீ பேசல. சரி நாம போய் பேசுவோம்ன்னு பார்த்தா நீ கூடக் கொஞ்சம் கடுப்பு அடிச்சா நான் என்ன செய்றது? பேசின வரைக்கும் கூட எனக்கு ஒண்ணும் தோணலை. ஆனால் நீ வார்த்தை வராமல் சிரமப்பட்டு போதும்னு கையை காமிச்சு சொன்ன பாரு! அப்போ தான் என்னோட தப்பு புரிஞ்சது. அம்மா அறைஞ்சுட்டாங்க; நீ நான் பேசின வார்த்தைகளை மனசு வலிக்கிற அளவுக்கு திரும்ப பேசிட்ட! ஒரு வாரம் ரெண்டு பேரும் ரொம்ப பட்டாச்சு; இதுக்கு மேலயும் உன் ஸ்ரீயை உன்னால மன்னிக்க முடியாதா நிலாம்மா?” என்று பாவமாக கேட்டவனை இழுத்து அணைத்துக் கொண்டாள் நிர்மலா.

அவள் அணைப்பில் சில நிமிடங்கள் கட்டுண்டு கிடந்தவன், அவள் நெற்றியில் முத்தமிட்டு, “கல்யாணத்துக்கு சம்மதம் தானே?” என்று கேட்டான்.

சிறு புன்னகையுடன், “எனக்கு என்னைய கட்டிப் பிடிச்சுட்டு இருக்கிற  ஸ்ரீ ஜெய் நந்தனை ரொம்ப பிடிச்சிருக்கு. இவனைத் தவிர………..” என்று சொல்லி குறும்புடன் நிறுத்தியவளிடம்

“ஏய் என்னது………..இவனா? உனக்கு கொழுப்புடீ பஞ்சு மூட்டை; மிச்சத்தையும் சொல்லி முடி” என்றான் ஜெய் போலி கோபத்துடன்.

“இவரைத் தவிர வேற யாரும் எனக்கு மாப்பிள்ளையா வர வேண்டாம்!” என்று சிரித்தபடி சொல்லி முடித்தாள் நிர்மலா.

அத்தியாயம் 16

ஜெய் நந்தனுக்கு தன் பிரச்சனைக்கு சூமுகமாக தீர்வு கிடைத்ததை நினைத்து மன நிறைவு கிடைத்தது. நிர்மலாவின் முகத்திலும் மகிழ்ச்சியும், நிம்மதியும் தெரிந்தது கண்டு திருப்தி அடைந்தான்.

இதற்கு மேலும் தன் அன்னையை காத்திருக்க வைக்க வேண்டாம் என்று நினைத்து ஜெய் அவர்களை தன் புது எண்ணில் இருந்து அழைத்தான்.

அவர் யாரென்று கூட கேட்காமல் எடுத்தவுடன், “ஜெய்மா, நீ தானே கண்ணா?” என்று அழைத்ததில் அவன் மனம் உருகியது.

“நான் தான்மா! ஸாரிம்மா, நிர்மலாவை அவ மாமா கிட்ட நான் கொண்டு போய் விடல. அவர் உங்க கிட்ட பேசினாராம்மா?” என்றான்.

“நீ இப்படி தான் செய்வன்னு நான் எதிர்பார்த்தேன் கண்ணா. நிர்மலாவை நீ விட்டிருந்தா தான் நான் வருத்தப்பட்டிருப்பேன். அவளை வருத்தப்பட வைக்காதே ஜெய்மா, நீ தான் அவளை பத்திரமா பார்த்துக்கணும். சரியா?” என்றவரிடம்

“நிலாவை பார்த்துக்கிறது என்னோட பொறுப்பும்மா. உங்க மருமகளை சந்தோஷமா வச்சுக்க தான் முயற்சி பண்றேன். சில நேரங்களில் சொதப்பிடுது. இனிமேல் தப்பு நடக்காமல் பார்த்துக்கிறேன்மா!” என்று சொல்லி தன் திட்டங்களை அவரிடம் சொன்னதும் அது ஸாகரிக்கு அவ்வளவு உவப்பாக இல்லை. ஆனால் இப்பொழுது ஏதாவது சொன்னால் நிர்மலாவை பிரிக்க எண்ணுகிறேன் என்று தன் மகன் தவறாக புரிந்து கொண்டால் என்ன செய்வது? என்று தயங்கினார்.

அவர் அமைதியாக இருப்பதை கண்டு, “அம்மா என்ன யோசிக்கிறீங்க? நான் நிர்மலாவை கூட்டிட்டு மலைக்கு வரட்டுமா? கல்யாணத்தை அங்கே வச்சுக்கலாம். எனக்கு அவ என்னை பிரிஞ்சு இருந்தா தவிப்பான்னு அவளுக்கு உணர்த்த வேண்டி இருந்ததும்மா! அதனால தான் இவ்வளவும் செஞ்சேன். ஆனா இங்கே கல்யாணம் பண்ண எனக்கும் மனசே வரலை. எப்படியும் நீங்க பேசறப்ப க்ளியர் பண்ணிக்கலாம்னு நினைச்சேன். உங்களை விட்டுட்டு எப்படி நான் கல்யாணம் பண்ணிக்கிறது?…… ஏற்பாடுகளை நிறுத்த சொல்லிடலாமாம்மா?” என்றான் ஜெய்.

ஸாகரியின் மனம் குளிர்ந்தது. நான் ஒன்றும் பேசாமல் என் மகன் என் மனதின் கவலையை அப்படியே சொல்லி அதற்கு தீர்வும் சொல்லி விட்டானே என்று பெருமிதமாக இருந்தது அவருக்கு.

“ஜெய்மா, இன்னும் நாலு நாள் கழிச்சு வெள்ளிக்கிழமை உனக்கும் நிர்மலாவுக்கும் மலையில வைச்சு கல்யாணம். உங்க அப்பா இல்லைங்கிற குறையை தவிர வேற எந்த குறையும் இல்லாமல் உன் கல்யாணத்தை சிறப்பாக செஞ்சு வைக்க வேண்டியது அம்மா பொறுப்பு. இரண்டு நாளுக்குள்ள வேலையை முடிச்சிட்டு, பத்து நாள் லீவ் போட்டுட்டு மருமகளை கூட்டிட்டு புதன் கிழமை இங்கே வந்து சேருங்க. இன்னிக்கி ஈவ்னிங் நிர்மலாவை பீச் கூட்டிட்டு போய்ட்டு வா. அவ என்ஜாய் பண்ணுவா, நீ இருக்கிற வீட்ல இருந்து ஜஸ்ட் 10 நிமிஷம் தான் ஆகும்” என்று அவர் சிரிக்கவும் ஜெய் திகைத்துப் பின்னர் சிரித்தான்.

“மாணிக்கம் அண்ணா நம்ம கிட்ட வேலைக்கு வரலைன்னா, ஒரு நல்ல ஸ்பை ஆகியிருக்கலாம். மிஸ் பண்ணிட்டார், ஆனால் இந்த ஜேம்ஸ் பாண்ட் வொர்க் எல்லாம் எப்படிம்மா ப்ளான் பண்றீங்க?” என்றான் ஆச்சரியமாக.

“நான் உங்க அம்மா ஸார். நிறைய கல்யாண வேலை இருக்கு. பை!” என்று சொல்லி விட்டு போனை வைத்தார் ஸாகரி.

தன் நண்பர்களிடம் பேசி ஏற்பாடுகளை மாற்றம் செய்து விட்டு, தன் ஆபிஸில் பத்து நாட்கள் விடுமுறை சொல்லி விட்டு தன்னவளிடம் சென்றான் ஜெய். பால்கனியில் நின்று வானத்தை பார்த்து கொண்டிருந்தவளை பின்னிருந்து அணைத்தவாறு நின்று கொண்டான்.

“ஏய் பஞ்சு மூட்டை! உனக்கு கல்யாணத்துக்கு ஷாப்பிங்க்கு டைம் வேணும்ல? அதனால நம்ம மேரேஜ் வெள்ளிக்கிழமை தான்! நான் மறுபடியும் உன்னை மலைக்கு கடத்திட்டு போகணும். நம்ம கல்யாணம் எல்லார் ஆசிர்வாதத்துடன் நடக்கப் போகுது. சண்டை போட்டது எவ்வளவு நல்லதா போச்சு பார்த்தியா? இரண்டு வருஷம் வெயிட் பண்ணிட்டு இருக்காம இன்னும் நாலே நாள் தான் வெயிட் பண்ணனும். அதுக்கப்புறம் நீ எனக்கு பொண்டாட்டி ஆகிடுவ” என்றான் குதூகலத்துடன்.

“வா, வெளியே போய் டின்னர் சாப்பிட்டு வரலாம் ” என்று அழைத்தவனிடம்

“இங்கே தங்க போறோம்னு ப்ளான் பண்ணி இருந்தேன்னு சொன்னீங்க? சாமான் ஒண்ணுமே வாங்கலையா?” என்றாள் நிர்மலா.

“இது என் ப்ரெண்ட் யூஸ் பண்ணிட்டு இருந்த வீடு தான் நிலா; சாமான் இன்னும் 10 நாளைக்கு வர்ற மாதிரி இருக்குன்னு தான் சொன்னான். கொஞ்சம் வெஜிடபிள்ஸும் பாலும் வாங்கி வைக்க சொல்லிட்டேன். ஆனா உனக்கு டையர்டா இல்லயா?” என்றவனிடம் மறுப்பாக தலையசைத்து விட்டு சென்றாள் நிர்மலா.

சாப்பிட்டு முடித்த பிறகு சிறிது நேரம் கழித்து நிர்மலாவை கைகளில் தூக்கிக் கொண்டு படுக்கையில் கிடத்தினான் ஜெய்.

அவனை முறைத்தவளை, “ஏன் இப்படி முறைக்குறீங்க நிலா மேடம். நீங்க எனக்கு டின்னர் செஞ்சு குடுத்தீங்க; பதிலுக்கு நான் உங்களை ஹாலில் இருந்து பெட்ரூமுக்கு கொண்டு வந்து விட்டேன். காலையில் சீக்கிரம் வெளியே கிளம்பணும். நான் இன்னொரு பெட்ரூம்ல படுத்துக்கறேன். ஒரு வாரமா சரியான டென்ஷன். இன்னிக்கி நல்லா தூக்கம் வரும். குட் நைட்” என்று சொன்னவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு விட்டு படுக்கச் சென்றான்.

நிர்மலாவிற்கும் மனதை அரித்துக் கொண்டு இருந்த பாரங்கள் அனைத்தும் விலகி மனம் லேசாக இருந்தது போல் உணர்ந்தாள்.

அதிகாலையில் நிர்மலா விழிக்கையில் சிறு பறவைகளின் கீச்சுக்குரலும், தூரத்தில் இருந்து கேட்ட பாடல்களின் ஓசையும் மனதிற்குள் உற்சாகத்தை கிளப்பின.

குளித்து தயாராகி அவனுக்கு காஃபி தயாரித்து கொண்டு அவன் அறைக்குள் நுழைந்தாள் நிர்மலா.

வெற்று மார்புடன், சிறிய ஷார்ட்ஸ் மட்டும் போட்டுக் குப்புறப் படுத்து உறங்கிக் கொண்டு இருந்தவனை பெட் ஷீட் கொண்டு மூடி விட்டாள். “தூங்கும் போது இப்படியா தூங்குவீங்க? எனக்கு உங்களை இப்படி பார்க்க கூச்சமா இருக்கு! ” என்றாள் வெட்கத்துடன்.

“நந்து குட்டி, டைம் ஆச்சு, முழிச்சுக்கோங்க!” என்று அவனை உலுக்கினாள். அவன் முகத்தில் தெரிந்த புன்னகையில் மயங்கி அவன் நெற்றி வரை புரண்ட முடிச்சுருளை விலக்கி அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

ஜெய் நந்தன் தூக்கக் குரலில், “குட் மார்னிங் நிலாக்குட்டி, ஃப்ரெஷ்ஷா இருக்க! காலையிலேயே என்ன ஷாக் ட்ரீட்மெண்ட் எல்லாம் தர்ற; பட் எனக்கு எல்.கே.ஜி லெவல் எல்லாம் வேண்டாம். ஐ வான்ட் சம்திங் மோர்!” என்றவனிடம்

“காலையில மோர் குடிக்க வேண்டாம். காஃபி குடிங்க. எடுத்துட்டு வந்துருக்கேன்” என்றாள் நிர்மலா.

அவள் கண்களைப் பார்த்துக் கொண்டு இருந்தவன், “இப்போ கொஞ்சம் கட்டுப்பாட்டை மீறலாம்னு எனக்கு தோணுது, உனக்கு வசதி எப்படி? ” என்றான் குறும்பு சிரிப்புடன்.

“ம்ஹூம்! ஒழுங்கா ப்ரெஷ் பண்ணிட்டு காஃபி குடிங்க. எனக்கு கட்டுப்பாட்டை மீறுற மாதிரி எந்த ஐடியாவும் இல்லை;” என்றாள் நிர்மலா கறாராக.

“எனக்கு காலையில நாலு மணியில் இருந்து தூக்கம் வரலை. பிரச்சனையை ஸால்வ் பண்ணியாச்சு. மேரேஜ் நடக்கப் போகுது. லைஃப் லாங் உன் மேல இப்போ வைச்சு இருக்கிற காதல் அப்படியே இருக்கணும்னு தான் நினைச்சுட்டு இருந்தேன். அப்பவே எல்லா வேலைகளையும் முடிச்சு ப்ரெஷ் ஆகிட்டு சும்மா பெட்ல புரண்டுட்டு இருந்தேன். ஆனா அப்படியே தூங்கிட்டேன் போல, பெட்ஷீட் போட்டது உன் வேலை தானா?” என்றவனிடம் அவன் கண்களைப் பாராமல் தலை குனிந்து கொண்டாள் நிர்மலா.

“ப்ரெஷ் பண்ணிட்டீங்கன்னா, காஃபி……” என்றவள் வாயில் கை வைத்தான் ஜெய் நந்தன்.

“பர்ஸ்ட் நான் கேட்டதை எனக்கு குடு. அதுக்கு அப்புறம் நீ சொல்றதை நான் கேக்கறேன்.” என்றான் ஜெய்.

“ப்ச்! நேற்று நைட் சமர்த்தா இருந்தீங்கல்ல? காலையில ஏன் இப்படி என் உயிரை வாங்குறீங்க?” என்று கேட்டபடி எழப்போனவளை கையைப் பிடித்து இழுத்து அவன் உடம்பின் மேல் உருட்டி அவன் பக்கத்தில் படுக்க வைத்தான் ஜெய்.

“நாலு நாள் கழிச்சு கிஸ் கேட்டாலும், இப்படி தான் சொல்லுவியா?” என்று கேட்டவன் தன் ஒற்றை விரலால் அவள் இதழ்களில் வருடிக் கொண்டு இருந்தான்.

“ஸ்ரீ நீங்க எனக்கு இரண்டு வருஷம் டைம் குடுக்கறேன்னு ப்ராமிஸ் பண்ணி இருக்கீங்க? அதை மறந்துடலையே? கன்ட்ரோலா இருப்பீங்க தானே?” என்று சந்தேகமாக கேட்டவளிடம்

“உங்கிட்ட ஏன் அந்த மாதிரி ப்ராமிஸ் பண்ணினேன்னு ரொம்ப ஃபீல் பண்ணிட்டு இருக்கேன் நிலா! பார்க்கலாம்; நான் ப்ராமிஸ் கீப் அப் பண்றேனா, இல்லையான்னு” என்று சொல்லி விட்டு “அதுவரைக்கும் கொஞ்ச நேரம் உன் லிப்ஸை மட்டும் கடனா குடு!” என்று கேட்டு விட்டு அவள் இதழ்களில் தன் இதழினால் கதைகள் எழுதிக் கொண்டிருந்தான் ஜெய் நந்தன்!

அத்தியாயம் 17

கல்யாணத்துக்கு தேவையான பொருட்கள் வாங்க ஜெய் நந்தன் நிர்மலாவை ஷாப்பிங் அழைத்து சென்றான். “நிலா! அம்மா உனக்கு தேவையானது எல்லாம் ஏற்கனவே வாங்கி வைச்சிருக்காங்க. ஆனா உனக்கு என்ன பிடிக்கும், எது ஸீட் ஆகும் னு பார்த்து வாங்கினா நல்லா இருக்கும்ல; அதுதான் இப்போ கூட்டிட்டு வந்தேன். எனக்கு பிடிச்ச டிரஸ்ஸும் வாங்கி தர்றேன்.” என்று பேன்ஸி புடவைகள், பட்டுப் புடவைகள், சுடிதார், ஜீன்ஸ், டீ ஷர்ட்,சோளி என்று அவள் நிறத்திற்கு பொருந்தியது, அழகாக இருந்தது என்று பார்த்து பார்த்து வாங்கினான்.

“ஸ்ரீ போதும். எனக்கு ஜீன்ஸ், சோளியெல்லாம் போட்டு பழக்கமில்லை” என்றவளிடம்

“எதுக்கும் பர்ஸ்ட் டைம்ன்னு ஒண்ணு இருக்கும்ல…….நிலாம்மா! உன் ஸ்டரக்செருக்கு அதெல்லாம் நல்லா ஸீட் ஆகும். அப்பப்போ போட்டுக்கலாம் சரியா?” என்று கூறி அவள் வாயை அடைத்து விட்டான்.

அவன் பர்சேஸ் முடித்து பில் போட காத்திருக்கையில் நிர்மலா அவன் கைகளைச் சுரண்டினாள்.

“என்னடா?” என்றவனிடம் “ஸ்ரீ உங்களுக்கு ஒண்ணும் வாங்கவே இல்லையே?” என்றாள்.

“நிலா மேடம் செலக்ட் பண்ணி தந்தா வாங்கிக்கறேன். வர்றீங்களா? ” என்று புருவம் உயர்த்தினான் ஜெய்.

“கண்டிப்பா! பில் போட்டுட்டு உங்க செக்ஷனுக்கு தான் போகணும். ஃபைவ் மினிட்ஸ்ல வந்துடுறேன் ஸ்ரீ” என்று சென்றவள் ஒரு வெளிர் பச்சை நிற ஸாப்ட் ஸில்க் உடன் வந்தாள்.

“உங்க ஆன்ட்டிக்காக வாங்கினியா? அழகா இருக்கு. தேங்க்ஸ் நிலாம்மா;” என்றான் ஜெய்.

“உங்க வாய்ல சாப்பாடு எடுத்து வைக்கிற உங்க விரலுக்கு தேங்க்ஸ் சொல்வீங்களா ஸ்ரீ?” என்று தலை சரித்துக் கேட்டாள் நிர்மலா.

“ஆமால்ல, உனக்கு தேங்க்ஸ் சொல்லக் கூடாது. கட்டிப் பிடிச்சு கன்னத்தில ஒரு…..ஆ ஏன்டீ கிள்ளின? வலிக்குது!” என்று சலித்தபடி புஜங்களை தடவிக் கொண்டான் ஜெய்.

“ஓவரா வாய் பேசினா இப்படி தான் பனிஷ்மென்ட் குடுப்பேன். வாங்க உங்க செக்ஷனுக்கு போகலாம்” என்றாள் நிர்மலா.

“இருடீ! உன்னை வீட்ல போய் கவனிச்சுக்குறேன்” என்று அந்த தளத்தில் பில் செட்டில் பண்ணி விட்டு ஆண்கள் திருமண கோட் ஸீட், ஷெர்வானி இவைகளை தேர்ந்தெடுக்க அவளை அழைத்து சென்றான்.

அவள் தயங்கியபடி நிற்கவும், “என்ன விஷயம் நிலா? ஒரே யோசனை?” என்று கேட்ட ஜெய்யிடம்

“ஸ்ரீ உங்களுக்கு பட்டு வேஷ்டி, ஷர்ட் ரொம்ப அழகா இருக்கும்னு நினைக்கிறேன். கல்யாணத்துக்கு போட்டுக்க ஒரு செட் வாங்கிக்கறீங்களா?” என்றாள் கெஞ்சலுடன்.

“இதுக்கு தான் இவ்வளவு யோசிச்சியா? கண்டிப்பா எடுத்துக்கலாம். இனிமேல் என்னை ரசிக்கப் போறது நீ தானே? பட் கொஞ்ச நேரம் தான் வேஷ்டி கட்டியிருப்பேன். அப்புறம் வெட்டிங் ஸீட் போட்டுப்பேன். உனக்கு ஓகேவா?” என்றான்.

அவள் புன்னகையுடன் தலையாட்டவும் இருவரும் மீதி ஷாப்பிங்கை முடித்து கிளம்பிய போது ஒரு முதியவர் அவனருகில் வந்து, “நீ ஆனந்தன் பையன் தானப்பா?” என்று கேட்ட படி அவனை கட்டிக் கொண்டார்.

“ஆமா ஸார்! எங்க அப்பா பேரு ஆனந்தன் தான். நீங்க யாரு? உங்களுக்கு எப்படி என்னை தெரியும்? நீங்க எங்களுக்கு உறவுக்காரரா? என்ன உறவு?” என்றான் விசாரிக்கும் தோரணையோடு.

அவர் சிரித்துக் கொண்டு, “இதுக்கு தான் ஒரு விசேஷம், நல்லது, கெட்டதுக்கு வரணும். நீ இப்படி யாருமே வேண்டாம்னு இருந்தால் உறவுகளே தெரியாமலேயே போய்டுமே?” என்றார் வருத்தத்துடன்.

“என் பேரு பரமேஸ்வரன். நான் உங்கப்பாவின் தாய் மாமன். விழுப்புரத்தில் இருக்கேன். உனக்கு நான் தாத்தா முறை வேணும். அங்க நிக்கிறான் பாரு……அவன் என் பேரன் நவீன்! அவனுக்கு இப்போ சமீபத்தில் தான் கல்யாணம் நடந்தது. சென்னைக்கு ஒரு வேலை விஷயமா வந்தோம். ஜவுளிக் கடைக்கு வரணும்னு சொன்னான். இங்கே உன்னை பார்ப்பேன்னு நினைக்கலை. நீ அப்படியே உங்கப்பன் சாயல், அதனால எனக்கு உன்னை அடையாளம் தெரிஞ்சது! இந்த பொண்ணு தான் உன் வருங்கால மனைவியா?” என்று கேட்டவர் காலில் பணிந்தாள் நிர்மலா.

“சகல செல்வமும் பெற்று மகிழ்ச்சியாக வாழணும்மா!” என்று ஆசிர்வதித்தார்.

தன் பேரனை அருகில் அழைத்து அறிமுகம் செய்து வைத்தார். இருவரும் கை குலுக்கிக் கொண்டனர்.

பரமேஸ்வரன் அவர்களிடம், “நீங்க இரண்டு பேரும் மாப்பிள்ளை, மச்சான்! உங்க ரெண்டு பேருல யார் மூத்தவரோ அவனை இன்னொருத்தன் மச்சான்னு கூப்பிடுங்கள்.” என்று சொன்னார்.

தன் பேரன் கையில் இருந்த பார்சல்களில் தேடி ஒரு புடவையை எடுத்தவர், “உங்க ஜோடிப் பொருத்தம் நல்லா இருக்கு. இன்னிக்கி போல் என்னிக்குமே சந்தோஷமா இருக்கணும். வாங்கிக்கோம்மா ” என்றார் பரமேஸ்வரன்.

நிர்மலா தயங்கியபடி, “தாத்தா, கண்டிப்பா எனக்குன்னு நினைச்சு இந்த புடவையை நீங்க வாங்கியிருக்க மாட்டீங்க! இத நீங்க என் கிட்ட கொடுத்தா அவங்களுக்கு?” என்று கேட்டவளை பார்த்து புன்னகை சிந்தினார் பரமேஸ்வரன்.

“உன் பேரு என்னம்மா?” என்று கேட்டவரிடம் தன் பேரை சொன்னாள்.

“இங்க பாரும்மா நிர்மலா, இந்த புடவையை உன் பாட்டிக்கு தான் வாங்கினேன். இது வரைக்கும் நான் அவளுக்கு எடுத்து தந்ததை எல்லாம் அவ மகளுக்கு, பேத்திக்கு, மருமகளுக்கு தான் தூக்கி கொடுத்துடுவா, அதனால இப்போ எல்லாம் புடவை எடுக்கும் போதே ரெண்டு எடுக்கறேன். எப்பவும் அவ தானே யாருக்காவது புடவையை கொடுப்பா? இந்த தடவை என் பேத்திக்கு நான் குடுப்பேன். பூ, குங்குமம், புடவை இதெல்லாம் யார் குடுத்தாலும் வேண்டாம்னு சொல்லக் கூடாது. உன் பாட்டிக்கு வேற புடவையை கொடுக்கிறேன். நீ முதல்ல என் கிட்ட இருந்து வாங்கிக்கோ” என்றார்.

அப்போதும் நிர்மலா கேள்வியாக ஜெய் கண்களை சந்தித்தாள். அவன் சம்மத சிரிப்புடன் தலையாட்டவும், அவரை வணங்கி புடவையை பெற்றுக் கொண்டாள்.

ஜெய் நந்தன் அவரிடம், “வர்ற வெள்ளிக்கிழமை எங்களுக்கு கல்யாணம் தாத்தா, அம்மாவும் உங்க கிட்ட சொல்வாங்கன்னு நினைக்கிறேன். நீங்க உங்க குடும்பத்தோட கண்டிப்பா என் கல்யாணத்துக்கு வரணும். இவ்வளவு நாள் உறவுகள்னா வேண்டாத சுமைகள்ன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனால் அந்த எண்ணம் ரொம்ப தப்புன்னு இப்போ தான் புரியுது. உங்களுக்கு தெரிஞ்ச நம்ம ரிலேட்டிவ்ஸையும் கூட்டிட்டு வாங்க” என்றான் குற்ற உணர்வுடன்.

“கண்டிப்பா செய்றேன் கண்ணா, எங்க ஆனந்தோட பையன் கல்யாணம், அத தடபுடலா நடத்திடுவோம்!” என்று சொல்லி விட்டு கிளம்பினார்.

பரமேஸ்வரன் விழுப்புரம் சென்றதும் முதல் வேலையாக தன் அக்காள் மற்றும் அக்காளின் கணவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஜெய் நந்தனின் திருமணத்தை பற்றி விவரம் சொல்லி திருமணத்திற்கு அவர்களை அழைத்தார். ஸ்ரீ ரகுநாத பூபதி பண்ணையாரும், அவர் மனைவி ஜானகி தேவியும் எழுபத்தைந்து வயதைக் கடந்து அந்நியோன்யமாக குடும்பம் நடத்தும் தம்பதிகள். ஆரோக்கியமான உணவு, சரியான தூக்கம், மூச்சுப் பயிற்சி, நடைப்பயிற்சி, தியானம், யோகாசனம் ஆகியவற்றை முறையாக கடைபிடித்ததால் ரகுநாதர் இன்னும் தன் கம்பீரம் குறையாமல் இருந்தார். கொடைக்கானல் அருகில் பூம்பாறை எனும் ஊரில் தன் மனைவி, மகன், மருமகள், பேத்திகள், தன் பண்ணை வேலையாட்கள், அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் கிராம மக்கள் என்று கட்டுக்கோப்பான வாழ்வு வாழ்கின்ற ஒரு பெரிய வீட்டு பண்ணையார்.

“ஏலேய் ஈசு! நம்ம உறவே வேண்டாம்; என் பொஞ்சாதி தான் முக்கியம்ன்னு வெட்டிக்கிட்டு போய் நல்லாவா வாழ்ந்தான்? போய்ட்டான்ல…….இப்ப எதுக்கு அவன் மவன் புராணத்தை நீ இங்கன பேசிட்டு திரியுறவன்! போயி வேற சோலி இருந்தா பாருவே” என்று தன் மைத்துனனை தன் பாணியில் திட்டினார் ரகுநாதர்.

“மாமா உம்ம பரம்பரை ரத்தம், அப்படியே நம்ம ஆனந்து பயலே தான்! கம்பீரமா நின்னான். அவுக ஆத்தா எஸ்டேட்டை பார்த்துக்கிட்டாலும், புள்ள கம்ப்யூட்டர் படிப்பு தான் படிக்க பிடிக்கும்னுட்டு அங்கண சென்னையில தங்கி உத்யோகம் பாக்குதாம்! கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு கூட பதவிசான புள்ள தான் மாமா! உங்க புள்ள போனதுக்கு அப்புறம் கூட நீங்க இம்புட்டு கவுரவத்தையும், பிடி வாதத்தையும் வச்சிக்கிட்டு வன்மமா இருக்காதீரும்! எனக்கு உமக்கு புத்தி சொல்ற அளவுக்கு வயசில்லை. ஆனா நம்ம மருமவப் பொண்ணு நீங்க ஏத்துக்கிட்டேன்னு சொல்ற ஒத்தை வார்த்தைக்கு காத்திருக்கு! நியாயமா ஆனந்துப்பய போனப்பவே நீங்க இத செஞ்சிருக்கணும். இதே உங்க பொண்ணா இருந்திருந்தால இப்படி ஒத்தையில கிடந்து தவிக்கட்டும்ன்னு விட்டுருப்பிகளா? யோசிச்சிகிடும்” என்று தன்னால் முடிந்த அளவுக்கு தன் மாமனிடம் வாதாடி விட்டு போனை வைத்தார் பரமேஸ்வரன்.

சாய்வு நாற்காலியில் அமர்ந்து இருந்தவர் அருகில் சென்று, “காஃபித் தண்ணி கொண்டரவா?” என்று கேட்ட ஜானகி தேவியிடம்

“உம் பேரன் கல்யாணமாம். நீ என்னத்தா சொல்ற? உனக்கு போவணுமா? வேணாமா?” என்றார் ரகுநாதர்.

“நான் என்னிக்கி உங்க சொல்லுக்கு மறுப்பு சொல்லி இருக்கேன்? எல்லாம் உங்க முடிவு தான் ஐயா!” என்றார் ஜானகி தேவி. ஆனால் அவர் கண்களிலும் ஒரு அலைப்புறுதல் தெரிந்தது.

சற்று நேரம் யோசனையுடன் இருந்த ரகுநாதர் தன் மகன் ஜெயந்தனை கூப்பிட்டு, “உன் அண்ணாரு மவன் கல்யாணத்துக்கு போறோம். மருமவ, பேத்திங்க கிட்ட சொல்லிடு! வெள்ளிக்கிழமை அழகேசனை விரைசா வரச் சொல்லி முன்ன கூட்டி சொல்லி வைச்சிப்புடு!” என்றார்.

மிகவும் மகிழ்ச்சியுடன் தன் தந்தையிடம், “சரிங்கய்யா” என்று தலையாட்டி விட்டு தன் மனைவி பத்மா மற்றும் தன் இரட்டையர்கள் மீரா, கீதா ஆகியோரிடமும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மீராவும், கீதாவும் கல்லூரியின் மூன்றாமாண்டில் இருக்கிறார்கள். மீரா பி.பி.ஏ பயில்கிறாள். கீதா பி.எஸ்சி விஷ்யுவல் கம்யூனிகேஷன்!

“ஏன்ப்பா அண்ணா எங்க கூட நல்லா பேசுவாங்களா? இவ்ளோ நாள் டச்ல இல்லை! திடீர்ன்னு எங்களை அக்செப்ட் பண்ணிக்க கஷ்டமா இருக்கும்ல?” என்று கேட்ட மீராவிடம்

“ஏய் மீரு! ஏன்டீ பயப்படுற? நம்ம அண்ணா அப்படி எல்லாம் பண்ண மாட்டாங்க. ஆனா ஏன்ப்பா இவ்வளவு நாள் டச்ல இல்லாமல் இருந்தீங்க?” என்றாள் கீதா.

“தாத்தாவுக்கு பெரியப்பா, பெரியம்மா மேல கொஞ்சம் கோபம்டா, இப்போ தான் பார்க்க போறோமே? இனிமேல் எல்லாம் சரி ஆகிடும்” என்றார் பத்மா.

அதற்குள் பரமேஸ்வரன் ஸாகரியிடம் ஜெய் நந்தன் திருமண விஷயம் தனக்கும் தன் அக்காள் மற்றும் அக்காளின் கணவருக்கும் தெரிந்தது என்றார்.

“பெரியப்பா உங்களுக்கு எப்படி ஜெய் கல்யாண விஷயம் தெரிந்தது? கல்யாண பத்திரிகை இன்றைக்கு தான் ரெடி ஆனது. முதன் முதலா உங்க கிட்ட தான் எடுத்துட்டு வரணும்னு நினைச்சேன்.” என்ற ஸாகரியிடம்

“நீ நேரே பூம்பாறை போய் அக்கா, மாமாவை பத்திரிகை வைச்சு கல்யாணத்துக்கு கூப்பிடு. எனக்கு உன் பையன் தான் அவன் கல்யாணம்னு சொன்னான். அவனை சென்னையில் சந்தித்தேன்” என்றார்.

“நான் அத்தை, மாமாவை கண்டிப்பா நேர்ல போய் கூப்பிடுறேன் பெரியப்பா, நீங்க கல்யாணத்துக்கு அவசியம் வந்து பிள்ளைகள ஆசிர்வாதம் பண்ணனும்” என்றார் ஸாகரி.

“கண்டிப்பா! குடும்பத்தினருடன் வந்து கலந்துக்கறேன்” என்றதும் ஸாகரி சந்தோஷமாக அவரிடம் விடை பெற்றார்.

ஸாகரி தன் மருமகள் தன் வீட்டுக்கு வரும் சந்தோஷமான வேளை தன் ஆழ் மனதில் உறுத்திக் கொண்டிருந்த கவலை தீரப் போவது எண்ணி மகிழ்ச்சியடைந்தார்.

அத்தியாயம் 18

ஜெய் நந்தன் அன்று காலையில் சீக்கிரமே எழுந்து விட்டான். அவனுக்கு இந்த இரண்டு நாட்களாக சரியாக உறக்கமே வரவில்லை. இரவு முழுவதையும் அரை குறை உறக்கத்தில் கழிக்கும் படி தான் நிலைமை இருக்கிறது. தன் மனம் விரும்பிய பெண்ணுடன் தனியாக ஒரே வீட்டில் இருக்கிறோம் என்ற உணர்வா, இல்லை இடமாற்றமா, மனதில் எழும் வித விதமான ஆசைகளா? இவை அனைத்துமா? எல்லாம் சேர்ந்து ஜெய்யை படாத பாடு படுத்திக் கொண்டு இருந்தன.

“உன்னால சத்தியத்தை சத்தியமா காப்பாத்த முடியாது!” என்று அவன் இளமை உணர்வுகள் அவன் மனதிடம் சவால் விட்டுக் கொண்டிருந்தன.

தலையை உலுக்கிக் கொண்டு காலை வேலைகளை முடித்துக் கொண்டு வந்தான். மணி ஐந்தரை தான் ஆகியிருந்தது. என்ன செய்வது என்று யோசித்தவன், சமையலறைக்கு சென்றான். அரை மணி நேரம் கழித்து நிர்மலாவின் குரலில் நிமிர்ந்தான்.

“குட் மார்னிங் ஸ்ரீ! என்னப்பா காலையிலயே கிச்சன்ல நின்னுட்டு என்ன பண்றீங்க?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் நிர்மலா.

“தூக்கம் வரலை நிலாம்மா! அதுனால தான் காஃபி போடலாம்ன்னு நினைச்சேன். நீ ஃப்ரெஷ் ஆகிட்டு வா! வெஜ் புலாவ் கூட ரெடி ஆகிடுச்சு, இன்னிக்கு ப்ரேக் பாஸ்ட் அது தான். ஓகே தானே?” என்றான் சிரிப்புடன்.

“ஸ்ரீ இன்னும் மூணு நாள்ல கல்யாணம். இப்போ போய் கண்டிப்பா இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கணுமா?” என்று பயந்த பாவனை காட்டினாள் நிர்மலா.

“ஹலோ நிலா மேடம், உங்க உயிருக்கும், வயிறுக்கும் ஒண்ணும் ஆகாது. அதுக்கு நான் க்யாரண்டி! உனக்கு ஏதாவது செஞ்சு தரலாம்னு தோணுச்சு. பட் எனக்கு இது மட்டும் தான் செய்ய தெரியும். தோசை ட்ரை பண்ணியிருக்கலாம். ஆனா அதோட ஷேப்பை பார்த்து நீ சிரிச்சுடுவ. ஸோ புலாவ் செஞ்சேன். இந்தா காஃபி” என்று முகம் துடைத்து கொண்டு இருந்தவளிடம் நீட்டினான்.

அவள் அதை வாங்கி மேடையில் வைத்து விட்டு, அவனை இறுக அணைத்துக் கொண்டாள். “நீங்க எனக்காக செய்ய நினைச்சதே பெரிசு ஸ்ரீ! இது எப்படி இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிக்கும். தேங்க்ஸ் ஸ்ரீ” என்றதும் ஜெய் கடுப்பானான்.

“எப்போ பாரு ஏன் தேங்க்ஸ் சொல்லி இரிடேட் பண்ற நிலா? அதுக்கு பதிலா லவ் யூ சொல்லலாம்ல? இன்னும் நீ எனக்கு ப்ரப்போஸ் பண்ணவே இல்லை. அத எப்போ சொல்ல போற?” என்றான் கேள்வியாக.

அவனை ஆழ்ந்த பார்வை பார்த்தவள், “நான் தான் எங்க மாமா என்னை கூப்பிட்டா போய்டுவேன்னு சொன்னீங்க, அவர் பார்க்குற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிப்பேன். என் கல்யாணத்துக்கு நீங்க வரணும். பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டு போகணும்ன்னு சொன்னீங்க. இப்போ உங்க கிட்ட ப்ரப்போஸ் பண்ண சொல்றீங்க?” என்றாள் சற்று கோபத்துடன்.

“இங்கே பாரு நான் அப்படி எல்லாம் என்னால உன்னை விட்டுட முடியாதுன்னு தான் சொன்னேன்” என்றான் ஜெய்.

“நான் அப்படி செய்வேன்னு நீங்க நினைச்சீங்க! அதனால தானே அப்படி எல்லாம் பேசினீங்க?” என்றாள் காரம் சற்றும் குறையாமல்.

“ஐயோ! ஜெய், வாயை வச்சிட்டு சும்மா இல்லாம நிறைய குளறுபடி பண்ணி வைக்கிறியே? இப்போ உனக்கு செக் மேட்……. சரி ஏதாவது சமாளிக்க முயற்சி பண்ணுவோம்” என்று நினைத்தவன்

“இல்ல நிலாக் குட்டி, நீ அன்னைக்கு ஒரு நாள் என் கிட்ட நீ தான் சொன்ன…….உங்க மாமா பார்க்குற பையனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு! அதுனால தான்…….” என்று இழுத்தான் பேச்சை முடிக்க முடியாமல்.

“அப்போ நம்ம ப்ரெண்ட்ஸ் கூட இல்லை. இப்பவும் அப்படித்தானா ஸ்ரீ? நீங்க என்னை மாமா கிட்ட கொண்டு போய் விட்டிருந்தாலும் நான் உங்களை தான் கடைசி வரைக்கும் நினைச்சுட்டு இருந்திருப்பேன். இதை நீங்க நம்புறதும் இல்லை நம்பாததும் உங்க விருப்பம்” என்றாள் நிர்மலா.

“நீ என்னை எவ்வளவு விரும்புறன்னு எனக்கு தெரியும் நிலாக்குட்டி” என்றான் அவளை அணைத்துக் கொண்டு.

கண்களில் குறும்புடன், “ஓ….தெரியுமா ஸ்ரீ; அப்போ எங்கிட்ட கேக்காதீங்க!” என்று தன் காஃபியை எடுத்துக் கொண்டாள்.

“ஷப்பா………. உன்னை கட்டிக்கிட்டு நான் என்ன பாடுபடப் போறேனோ தெரியலைடீ பஞ்சு மூட்டை” என்று தன் தலையில் கை வைத்துக் கொண்டான் ஜெய்.

ஜெய் நந்தனும், நிர்மலாவும் தங்கள் இரண்டாவது நாள் கல்யாண ஷாப்பிங்கை முடித்து விட்டு காரில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தனர்.

நிர்மலா திடீரென்று “ஸ்ரீ நான் உங்க கிட்ட கேக்கவே மறந்துட்டேன். கண்டிப்பா அது வேணும்ப்பா!” என்றாள் ஒரு வித பதட்டத்துடன்.

அவள் முகத்தில் பதட்டத்தை காணவும் ஜெய்க்கு சிரிப்பு வந்தது. “அப்படி என்ன நிலா முக்கியமான பொருள்? சொல்லு கொஞ்சம் கேப்போம்” என்றான் குறும்புடன்.

“இப்போ தானே ஜ்வல்லரி போயிட்டு வந்தோம். ஆனா தாலி வாங்கவே இல்லையே? ஆன்ட்டி வாங்கிக்கறேன்னு சொல்லிட்டாங்களா?” என்றாள் பயம் கலந்த குரலில்.

தான் அவனுக்கு நியாபகப் படுத்தி இருக்க வேண்டுமே என்று குற்றம் செய்தவள் போல் தவித்தாள்.

நந்தனுக்கு அவள் முகத்தை பார்க்க பாவமாக இருந்தது. “காலையில என்ன சவுண்ட் விட்ட? இருடீ உன்னை அழ விடுறேன்” என்று நினைத்துக் கொண்டு “என்ன நிர்மலா கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம காலையில போறப்ப மறந்துட்ட; அம்மா கேட்டா என்ன பதில் சொல்றது? ஷார்ட் பீரியட் தான் இருக்கு; இப்போ என்ன பண்றது?” என்றான் குரலில் அழுத்தம் கூட்டி.

“இன்னும் ஒரு தடவை ஷாப்ல போய் வாங்கிட்டு வந்துடலாமா ஸ்ரீ!” என்றாள் குரல் கரகரத்தது.

“அம்மா ஏதோ நல்ல நேரம் பார்த்து காலையில போக சொன்னாங்க. அது இப்போ முடிஞ்சிடுச்சு. என்ன பண்றதுன்னு தெரியலை. நீ வேற தாலி கட்டாம நான் உன் பக்கத்தில படுத்தா முறைச்சு பார்ப்ப!” என்றான் சிரிப்புடன்.

“விளையாடாதீங்க ஸ்ரீ! நானே பயந்துட்டு இருக்கேன்!” என்றாள்.

“கூல் செல்லம்ஸ், நம்ம அரேன்ஜ் பண்ணிக்கலாம். ப்ரீயா விடு!” என்றான் புன்னகையுடன்.

“ஆன்ட்டி திட்ட மாட்டாங்களா ஸ்ரீ?” என்று பயந்தவளிடம்

“ம்ஹூம்! அம்மா தான் ஏற்கனவே ஒண்ணு வாங்கி வச்சிருக்காங்களே? அதனால பிரச்சனையில்லை” என்றவனை முறைத்தாள் நிர்மலா.

“நிலாம்மா; ட்ரைவ் பண்ணிட்டு இருக்கேன். நோ வன்முறை, ஒன்லி அஹிம்சை!” என்று அவன் சொன்னதும் சிரித்து விட்டாள்.

“இருங்க, ஊருக்கு போனவுடனே உங்களுக்கு ஆன்ட்டி கிட்ட உதை வாங்கி தர்றேன்!” என்றவளிடம்

“நிலாம்மா; ஸ்ரீ பாவம்! இன்னொரு தடவை அறை வாங்கறதுக்கு உடம்பில தெம்பு இல்லை!” என்றான் பரிதாபமாக.

அவன் மொபைலில் வானதி அழைத்தாள். “இந்தா, விழுப்புரத்து நதி பேசுறா!” என்று போனை அவளிடம் நீட்டினான்.

ஆசையுடன் எடுத்து “நதி; நல்லா இருக்கியாடீ?” என்று தன் தோழியை நலம் விசாரித்தாள் நிர்மலா.

“கொஞ்சாத நிம்மி. அப்பா, அம்மா மேல கோபப்பட்டா என் கூட பேச மாட்டியா?” என்றாள் கேள்வியாக.

“இல்லடா! பொழுது வேகமா போகுது. டைம் பத்தலை. மாமா கிட்ட ரெண்டு தடவை பேசினேன். அத்தைக்கு தெரிஞ்சா கோபப்படுவாங்க. அதனால தான் உன் கிட்ட பேச முடியலைடீ” என்றாள்.

“அதெல்லாம் விடு, உனக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணியிருக்காங்கன்னு அப்பா சொன்னாங்க. மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா? நீ ஒண்ணும் கட்டாயத்துக்காக அவரை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கலையே?” என்றாள் ஒரு அவசரத்துடன்.

தான் இதுவரை தங்கிய வீட்டில் தன் வாழ்வை பற்றி அக்கறையாக விசாரிக்க ஒருத்தி இருப்பது நிர்மலாவிற்கு மனதிற்கு இதமாக இருந்தது.

“ஆனால் கூட இவரும் இருக்கிறாரே? எப்படி தன் மனதில் இருப்பதை அவளுக்கு விளக்குவது?” என்று யோசித்தபடி வெறும் “ம்” என்று மட்டும் சொல்லிக்கொண்டு இருக்கையில்

“ஏய்! லூசு பிடிக்கும், பிடிக்காதுன்னு வாயை திறந்து சொல்லேன்டீ!” என்றவளிடம் “ஆமாடீ, ரொம்ப பிடிக்கும். நான் உனக்கு நைட் 9 மணிக்கு கூப்பிடுறேன். பேசுவோம். மாமா போனை கையில் வச்சுக்க. வீணா அத்தை கிட்ட திட்டு வாங்காத; பை” என்று பேசி வைத்து விட்டு அவனிடம் போனை நீட்டினாள்.

போனை வாங்கிக் கொண்டு “அவ உன் கிட்ட என்ன கேட்டா?” என்றான் ஜெய்.

“ப்ரெண்ட்ஸ் நாங்க ஏதாவது பேசுவோம். அது எதுக்கு உங்களுக்கு? பேசாமல் ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டுங்க ஜெய் ஸார்!” என்றதும் அவன் நிர்மலாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு வண்டியை இடது புறம் ஓரமாக ஒதுக்கி நிறுத்தினான்.

“என்னாச்சு ஸ்ரீ வீட்டுக்கு போயிட்டு ஊருக்கு கிளம்பணும்ல; கொஞ்சம் சீக்கிரம் கிளம்பினா நைட் ட்ரைவ் பண்ண தேவையில்லையே? வாங்க போகலாம்” என்றாள் அவன் புஜங்களை அசைத்தவாறு!

ஜெய் இரு கைகளையும் உயர்த்தி சீட்டின் பின்னால் கோர்த்துக் கொண்டான்.

“என்ன ஸ்ரீ இப்படி பண்றீங்க?” என்று கேட்டவளிடம்

“ஸாரி நிலா, ட்ரைவ் பண்ண மூடு இல்லை; நீ வேற நதி உங்கிட்ட என்ன பேசினான்னு சொல்ல மாட்டேன்கிற! அதுனால நான் ரொம்ப கவலையா இருக்கேன்!” என்று புன்னகையுடன் கூறினான்.

“கவலையா இருக்கும் போது இப்படித்தான் சிரிப்பீங்களா?” என்றாள் கேள்வியாக.

அவன் காதிலேயே வாங்காதது போல் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்து இருந்தான்.

“ஸ்ரீ…….ரொம்ப பண்ணாதீங்க!” என்று முறைத்தாள். அதற்கும் பதில் இல்லை.

“உங்களை பிடிச்சிருக்கான்னு கேட்டா; ஆமா பிடிச்சிருக்குன்னு சொன்னேன்” என்றாள் வெட்கத்துடன்.

“ஏய் பொய் சொல்லாதடீ! ரொம்ப பிடிக்கும்ன்னு தானே சொன்ன; என் கிட்ட மட்டும் சொல்ல மாட்டேன்கிற, அவ கிட்ட சொல்ற” என்று குறை கூறியவனிடம் “கார்ல ஏறுன உடனே நான் தூங்கிடுவேன். நான் ஜாலியா தூங்கிட்டு வர்றதை பார்த்து நீங்க புலம்பிட்டு வரணும். பார்த்துக்கோங்க” என்று அவனை மிரட்டிக் கொண்டு இருந்தாள்.

“கிளம்பிட்டேன்டீ பஞ்சு மூட்டை!” என்றான் ஜெய் பல்லைக் கடித்துக் கொண்டு!

அத்தியாயம் 19

ஜெய் நந்தன் தன் அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் பத்திரிக்கை கொடுத்து விட்டு தன் திருமணத்திற்கு விடுமுறையை முறையாக ஹெச்ஆரிடம் தெரிவித்து விட்டு நிர்மலாவுடன் விழுப்புரம் சென்றான்.

விழுப்புரத்தில் பரமேஸ்வரன் வீட்டிற்கு சென்று அவர்கள் குடும்பத்தினரை திருமணத்திற்கு அழைத்து விட்டு நிர்மலாவை அவளின் மாமா வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

சபரீசனும், வானதியும் இருவரையும் அன்புடன் வரவேற்றனர். ஸ்ரீமதி கடமைக்காக வெளியே வந்து வாருங்கள் என்று அழைத்து விட்டு உள்ளே சென்று விட்டார். நிர்மலா ஜெய்யிடம் “தப்பா எடுத்துக்காதீங்க ஸ்ரீ ப்ளீஸ்! அத்தை கொஞ்சம் அப்படி தான்” என்றாள்.

“நீ இங்கே வர்றதை அவங்க விரும்பலை. பிறகு ஏன் இங்கே வரணும் னு நினைச்ச? இனிமேல் உனக்கு உன் மாமாவை, வானதியை பார்க்க தோணுச்சுன்னா நம்ம வீட்டுக்கு அவங்களை கூப்பிடு. நம்ம இங்க வர வேண்டாம்!” என்றான் இறுகிய குரலில். அவள் தலையாட்டினாள்.

வானதி ஜெய்யிடம் உரிமையாக,  “அண்ணா, நிம்மியை பத்திரமா, சந்தோஷமா பார்த்துக்கோங்க. அவளுக்கு பிடிச்சதை அவ செய்துக்கிற சுதந்திரத்தை அவளுக்கு குடுங்க. இங்கே இருக்கும் வரை அது அவளுக்கு கிடைக்கவேயில்லை.” என்றாள் ஆதங்கத்துடன்.

“வானதி நிர்மலா இனிமேல் ஆனந்த ஸாகரம் எஸ்டேட்டோட சின்ன முதலாளியம்மா; என்னை கண்கலங்கலாம பார்த்துக்க சொல்லி அவங்க கிட்ட சொல்லணும். கொஞ்சம் எனக்காக ரெக்கமெண்ட் பண்ணும்மா!” என்று கெஞ்சல் குரலில் சொன்னவனை நிர்மலா முதுகில் குத்தினாள்.

“நீயே பாரு வானதி; நான் உன் கிட்ட தானே பேசிட்டு இருக்கேன், என்னை அடிக்கிறா பாரு; நான் உன் அண்ணா தானே? கம் ஆன் எனக்காக அவகிட்ட சண்டை போடு” என்றான் தீவிரமாக.

“ஏய், ஏன்டீ எங்க அண்ணனை அடிக்கிற? கேட்க ஆளில்லைன்னு நினைச்சியா? அவர் என்ன சொன்னாலும் கேட்கணும். ஒழுங்கா இல்லைன்னா உன்னை ஊருக்கு வந்து உதைப்பேன்.” என்று மிரட்டினாள்.

“அவர் சொல்றதை கேட்டுட்டு என்னை திட்டுறியா நீ? இரு உன்னை பார்த்துக்கறேன்” என்று நிர்மலா வானதியை துரத்தவும் வானதி வெளியே ஓடினாள்.

சிரித்தபடி நந்தன் தோள்களில் சாய்ந்து கொண்டவள் காதினில், “இந்த சிரிப்போட அப்படியே கிளம்பிடலாம் நிலாக்குட்டி!” என்று புன்னகையுடன் சொன்னான் ஜெய்.

ஆச்சரியமாக அவனை நிறுத்தி, “ஸ்ரீ எல்லாம் எனக்காகவா?” என்றாள் அவன் மார்பினில் இருந்து தலையை நிமிர்த்தி.

“உன் கண்ணு எனக்கு பிடிக்கும்ல; நமக்கு பிடிச்சவங்களை நம்ம வருத்தப்பட விடக்கூடாதுல்ல? எல்லாம் உன் கண்ணுக்குக்காக தான், உனக்காக ஒண்ணும் இல்லை!” என்று அவன் கெத்தாக அவளை பார்த்தான்.

அவனை பாவமாக நோக்கி,  “கல்யாணம் ஆகிட்டா சரியா போய்டும் ஸ்ரீ! ஒண்ணும் பயப்பட தேவையில்லை” என்றாள் குறும்புடன்.

“என்னடீ சரியா போயிடும்?எனக்கு புரியலை!” என்றான் குழப்பமாக.

“ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க ஸ்ரீ; கல்யாணம் பண்ணினா தெளியும்னு…………” என்று இழுத்தவளிடம்

“என்ன திமிர்டீ உனக்கு? என்னை பார்த்து பைத்தியம்ன்னு சொல்ற?” என்று கோபப்பட்டான்.

“நான் சொல்லலை. நீங்க தான் சொன்னீங்க” என்றாள் சிரிப்புடன்.

புன்னகையை அடக்கியவாறு அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

“நாங்கள் கிளம்புறோம் வானதி. கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும்” என்றான் ஜெய்.

“அண்ணா அப்பா உங்களுக்கு ஏதோ பொருளெல்லாம் வாங்கணும்ன்னு தான் வெளியே போயிருக்காங்க; சாப்பிட்டு போகலாம். வெயிட் பண்ணுங்க அண்ணா” என்றாள் அவசரத்துடன்.

“என் நிலாவை கஷ்டப்படுத்திய இந்த வீட்ல நான் சாப்பிடவா?” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு ஏளனமாக புன்னகைத்தான் ஜெய்.

“டைம் ஆகிடுச்சும்மா! இன்னொரு நாள் வந்தா…….கண்டிப்பா சாப்பிடுறோம்” என்றான். நிர்மலா சிரித்துக் கொண்டாள். மானசீகமாக தன் மாமா, அத்தையிடம் எனக்கு உரிமைப்பட்ட வீட்டில் சென்று வாழப்போகிறேன். போய் வருகிறேன்” என்று விடைபெற்றாள்.

ஜெய் நிர்மலாவிடம் கண்ணைக் காட்டி விட்டு முன்னால் போனான். “வர்றேன் நதி, மாமா, அத்தையை நல்லா பார்த்துக்க. உனக்கு கல்யாணம்ன்னா எனக்கு பத்திரிக்கை அனுப்பணும். நான் கண்டிப்பா வருவேன். பை” என்று தன் மாமன் மகளை அணைத்து விடை பெற்றாள் நிர்மலா.

காரில் ஏறி அவள் அருகில் அமர்ந்து சிலுமிஷங்கள் செய்தவனை பார்த்து, “இன்விடேஷன் கொடுத்து விட துரை அண்ணாவை ஏன் வரச் சொன்னீங்க? இப்படி சேட்டை பண்றதுக்கு தானா?” என்றாள் அவனை முறைத்தவாறு.

அவள் தோள்களில் சாய்ந்து கொண்டு,”நான் என்ன பண்ணட்டும் நிலாக் குட்டி? நீ ஸாரி கட்டினது தான் பிரச்சனை, ஒழுங்கா சுடிதார் போட்டு இருக்கலாம்ல? நான் சமர்த்து பையனா இருந்திருப்பேன்! என்றான் அவளை குறை கூறியவாறு.

“நிலாக்குட்டி நம்ம பர்ஸ்ட் மீட்ல நீ என்கிட்ட ஒரு கேள்வி கேட்ட.  உன் கிட்ட எனக்கு பிடிச்ச பத்து விஷயத்தை நான் இப்ப சொல்லட்டுமா? உன்னோட கண், ஸ்மைல், ஜிமிக்கி, லிப்ஸ், அடாப்டிங் காரெக்டர், நல்ல மனசு, அப்புறம்……..” என்று இழுத்து அவன் பார்வை மாறிய போது “நந்து குட்டி; இப்போதைக்கு இது போதும். நான் உங்க கிட்ட அப்புறம் கேட்டுக்கறேன்” என்று அவனை நிறுத்தினாள்.

“ம்ஹூம்! கண்டிப்பா நான் இப்பவே சொல்வேன். இன்கம்ப்ளீட்டா எப்படி விடுறது! பக்கத்தில வா, உன் காதில சொல்றேன்.” என்று அவளை ஒரு வழியாக்கினான் ஜெய்.

அதிகாலை ஆறு மணியளவில் எஸ்டேட் வந்து சேர்ந்தனர் ஜெய்யும் நிர்மலாவும்; மாணிக்கத்தை அழைத்தவன், “லக்கேஜ் நிறைய இருக்குண்ணா; இன்னும் ஒருத்தரை ஹெல்ப்க்கு கூப்பிட்டுக்கோங்க” என்றான். ஸாகரி இருவரும் ஜோடியாக நிற்பதை கண்டு மனம் மகிழ்ந்தார். மல்லிகா அவர்களுக்கு ஆரத்தி எடுத்தார். ஜெய் அவர்களிடம் ஒரு தொகையை கையில் கொடுத்து விட்டு தட்டை அவர்களிடம் இருந்து வாங்கினான்.

“வெல்கம் பேக் ஹோம் மை பிரின்சஸ்” என்று புன்னகையுடன் கூறி அவளின் நெற்றியில் பொட்டிட்டான்.

புன்னகையுடன் அவனை ரசித்தபடி நின்றவளிடம், ” லுக் விடுறதையெல்லாம் அப்புறம் வச்சுக்கலாம் நிலாக் குட்டி, மாமாவை வெல்கம் பண்ணு!” என்றான்.

சிரித்தபடி நின்றிருந்த ஸாகரி, “ஜெய்மா, நிர்மலா தான் நம்ம பேமிலிக்கு சந்தோஷத்தை கொடுக்க வந்திருக்கிற ஏஞ்சல், கல்யாண பொண்ணு. அவளுக்கு தான் எல்லாம் பண்ணனும். உனக்கு எதுக்கு?” என்று கேட்ட படி நிர்மலாவிடம் வந்தவர்

“என்னடா நிர்மலா, இந்த பையன் உன்னை ரொம்ப படுத்திட்டனா?” என்று அவளிடம் ஸாகரி நலம் விசாரிக்கையில் கையை கட்டிக் கொண்டு தூணில் சாய்ந்து இருவரையும் முறைத்தவாறு நின்று கொண்டு இருந்தான் ஜெய்.

நிர்மலாவின் காதில், “உன் ஆளு டென்ஷன் ஆகிட்டான் போலிருக்கே? எனக்கு வேற அவன் கிட்ட காரியம் ஆக வேண்டியிருக்கு. நான் அவனை கவனிச்சுக்குறேன். நீ அவனுக்கு காஃபி போடுறியா?” என்றார் ஸாகரி.

“சரி ஆன்ட்டி!” என்று விரைந்தவளை கையை பிடித்து நிறுத்தி, “இனிமேல் அத்தை ன்னு கூப்பிடணும் நிர்மலா!” என்றார் புன்னகையுடன். மகிழ்ச்சியுடன் தலையாட்டி விட்டு ஓடினாள் நிர்மலா.

“ஜெய்மா உள்ளே வராம ஏன் வெளியே நின்னுட்டு இருக்க?” என்று கேட்ட தன் அன்னையிடம்

“மருமகளை பார்த்தவுடனே உங்களுக்கு நான் கண்ணுக்கு தெரிய மாட்டேங்கிறேன். போங்கம்மா ” என்று சலித்துக் கொண்டவன் நெற்றியில் முத்தமிட்டார் ஸாகரி.

மலை மேல் ஏறி நின்றவன் ஒருவாறு சமதளத்திற்கு வந்தான். “நிலாவையும் கூப்பிடுங்க; அவ கிட்டயும் இதை மாதிரி வெல்கம் சிம்பள் வாங்கணுமே?” என்றான் கூச்சமே இல்லாமல்.

“ஆளை விடு ராசா, உங்க பஞ்சாயத்துக்கு என்னை நாட்டாமை ஆக்கிடாதீங்க. சீக்கிரம் குளிச்சுட்டு கிளம்பி வா, பூம்பாறைக்கு போகணும். எல்லா வேலைகளையும் கிட்டத்தட்ட முடிச்சாச்சு. நீ வந்தப்புறம் பார்த்துக்கலாம்ன்னு இது ஒண்ணு  மட்டும் நிறுத்தி வைச்சுட்டேன்” என்றார் ஸாகரி.

“உங்களுக்கு வேண்டாம்னா சொல்லுங்கம்மா! இப்போ கூட நம்ம அங்கே போற ப்ளானை ட்ராப் பண்ணிடலாம். உங்களை அவங்க ஏதாவது தரக்குறைவாக நடத்தினா ஜெய் நந்தனை வேற லெவல்ல பார்க்க வேண்டியது இருக்கும்” என்று ஆழ்ந்த குரலில் சொன்னான்.

“இல்ல ஜெய்மா, இவ்வளவு நாள் உங்கப்பாவின் வைராக்யத்தை காப்பாற்றியது தப்புன்னு எனக்கு மனசு உறுத்துது. தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி,அவங்க பிள்ளைகள் இவ்வளவு உறவுகளை வச்சிட்டு நாம ஏன் யாருமே இல்லாமல் வாழணும்? உங்கப்பாவை அவர் கிட்ட இருந்து பிரிச்சுட்டேன்னு தாத்தாவுக்கு என் மேல கோபம்; என்னை ஏத்துக்கலை! உன் அங்கீகாரத்தை உனக்கு குடுக்கலைன்னு அப்பாவுக்கு தாத்தா மேல கோபம், அப்பப்போ பேசினாலும் அப்பாவை இந்த விஷயத்தில் என்னால சம்மதிக்க வைக்க முடியலை. அவர் குடும்பத்தை பத்தி பேச்சு பேசவே விடாமல் தடுத்துட்டார். உன் கல்யாணத்தை காரணமா வைச்சு முறிந்த உறவு ஒண்ணா சேரணும் ஜெய்மா! உன் தாத்தா உன்னை அவர் பேரனா ஏத்துக்கணும். ஆனால் அது அவ்வளவு சுலபமான விஷயமான்னு எனக்கு தெரியலை” என்றார் பெருமூச்சுடன்.

“என் க்யூரியாசிட்டியை ரொம்ப தூண்டி விடுறீங்களே அம்மா, அவ்வளவு பெரிய அப்பாடக்கரா ஸ்ரீ ஸ்ரீரகுநாத பூபதி?” என்றான் கெத்தாக

புன்னகையுடன் “பார்க்க தானே போற! நீயே முடிவு பண்ணிக்க;” என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார் ஸாகரி.

“எங்கே நம்ம ப்ரெண்ட்ஸ காலையில வந்ததுல இருந்து சத்தத்தையே காணும்?” என்று நினைத்து விசிலடித்தான். அப்போதும் அவைகளை காணவில்லை. குழப்பத்தில் தோட்டத்திற்கு சென்றால் அங்கே நிர்மலாவிடம் கட்டிப் புரண்டு விளையாடிக் கொண்டு இருந்தன. யார் அவள் மடியில் படுத்துக் கொள்வது என்று சண்டை நடந்தது.

“என்ன மேஜிக் பண்றாளோ தெரியல, எல்லாரையும் மயக்கிடுறா! நான் வந்து நிக்கிறதை கூட கண்டுக்க மாட்டேன்கிறானுங்க! காலை உரசிட்டு வந்து நில்லுங்கடா; அப்போ பேசிக்கறேன்!” என்று பொருமியவன் அவளருகில் அமர்ந்தான்.

“நிலா இப்போ கொஞ்ச நேரத்தில் ஊருக்கு கிளம்பணும். நீ பரமேஸ்வரன் தாத்தா பேமிலி, அப்புறம் உங்க மாமா பேமிலி, அப்புறம் இன்னும் ஒரு 5,6 பேர் தங்கற மாதிரி ரூம்ஸ் மாடியில் ரெடியாயிருக்கான்னு செக் பண்ணிக்க. என்னோட ரூம் உள்ள யாரையும் விடக் கூடாது. நீயும் போகக்கூடாது” என்றான்.

“அத்தை ஏற்கனெவே சொல்லிட்டாங்க ஸ்ரீ! நீங்க சொன்ன வேலையை பார்த்துக்கறேன்” என்றாள்.

“அங்கே என்ன மாதிரி ட்ரீட் பண்ண போறாங்களோ….தெரியலை. பயமாயிருக்கு நிலாம்மா!” என்று அவளைக் கட்டிக் கொண்டான்.

“எதுக்கு ஸ்ரீ பயப்படணும்? அவர் உங்க தாத்தா தானே? அவர் பாசம் காட்டினா நீங்களும் காட்டுங்க! அவர் உங்க கிட்ட சவுண்ட் விட்டா பதிலுக்கு நீங்களும் சவுண்ட் விடுங்க, அவர் சின்னதா உங்களை பார்த்து சிரிச்சா நீங்க இனிமேல் எல்லாரும் ஒரே குடும்பமா இருக்கலாம் தாத்தான்னு சொல்லி கட்டிப் பிடிச்சுக்கோங்க. அவர் உங்களை ஏத்துக்கிட்டாலும், இல்லைன்னாலும் உங்களையே நினைச்சு உருகுற மாதிரி பேசிட்டு வாங்க, உங்களுக்கு பேச சொல்லியா குடுக்கணும்?” என்று அவன் நம்பிக்கை கொள்ளும் விதம் அவள் பேசவும் ஜெய் நந்தனின் மனநிலை வழக்கம் போல் குறும்பாக மாறியது.

“அட்வைஸ் எல்லாம் நல்லா தர்றீங்க நிலாக்குட்டி! அப்படியே மாமாவுக்கு கன்னத்துல ஒரு கிஸ் குடுங்க பார்ப்போம். இது வெல்கம் சிம்பளா கேக்கறது; நீ குடுக்கலைன்னா நான் வீட்டுக்குள்ள வர முடியாது” என்றவனிடம்

“அப்படியா?…….அப்போ நம்ம சக்தி, முத்து கூட படுத்துக்கங்க!” என்றாள் சிரிப்புடன்.

சக்தியும், முத்துவும் நிர்மலா தங்களது பெயர்களை சொன்னதும் அவன் முகத்தில் நாவால் தடவி காலில் உரசின.

“ஏன்டா நீங்க வேற கடுப்பை கிளப்புறீங்க? ஏய் நிலா……நில்லுடீ நான் கேட்டதை குடுத்துட்டு போ” என்றான் ஜெய்.

“அது தான் வாங்கிட்டீங்களே? பை ஸ்ரீ” என்று ஓட்டம் பிடித்தாள் நிர்மலா. ஜெய் நந்தன் தன் தாடையை தடவியவாறு தனக்குள் சிரித்துக் கொண்டான்.

அத்தியாயம் 20

பூம்பாறைக்கு சென்ற ஸாகரி மற்றும் ஜெய் நந்தனுக்கு வரவேற்பு நன்றாக இருந்தது. அனைவரும் அன்பை ஒவ்வொரு விதத்தில் வெளிப்படுத்தினர். ஜானகி தேவிக்கு அவர் பேரனைக் கண்டதும் மகனை சிறு வயதில் பார்த்தது போல் இருந்தது. சித்தப்பா, சித்தி மற்றும் தன் இரண்டு குட்டி தங்கைகளை கண்டதும், அவர்களும் ஸாகரி, ஜெய்யிடம் இயல்பாக பேசியதும் அவன் தன் இறுக்கமான மனநிலையை விட்டு சற்று இயல்பாக இருந்தான்.

ஜெயந்தன், ஜெய் நந்தனின் பெயரைக் கேட்டதும் கண்கலங்கி விட்டார். அவரை ஜெய் அணைத்துக் கொண்டான். கீதா, மீரா இருவரும் ஒரே ஜாடையில் இருப்பதைக் கண்டு அவர்களை இனம் காண முடியாமல் திணறினான். சிறிது நேரத்தில் இருவரும் இரு துருவங்கள் என்று புரிந்து விட்டது. அவர்கள் நிர்மலாவின் போட்டோவைக் கேட்டதும் மொபைலில் அவளது புகைப்படத்தை காட்ட அதை எடுத்தவன் கையில் இருந்து மொபைல் பிடுங்கப்பட்டதும் திகைத்தான். பின் அவனும் அவர்களுடன் விளையாட தொடங்கி விட்டான்.

ஸாகரி முறையாக பத்திரிக்கையை பெரியவர்களிடம் தந்து பேரன் திருமணத்திற்கு வந்து தலைமை தாங்கி நல்ல படியாக நடத்தி கொடுக்க வேண்டும் என்று சொல்லி வணங்கினார். தன் அன்னை கண்ணைக் காட்டவும் ஜெய் நந்தன் தன் தாத்தா, பாட்டியின் காலில் பணிந்து எழுந்தான்.

“சின்னவனே இங்கிட்டு வா” என்று ஜெயந்தனை அழைத்து ஏதோ சொன்னவர், அவர் செல்லவும் ஜெய் நந்தனின் அலுவலகப் பணிகள் பற்றி விசாரித்தார். ஜெய்க்கு ஆசிர்வாதம் செய்வாரா? மாட்டாரா? என்று குழப்பமாக இருந்தது. ஆனால் வயதில் பெரியவர் கேட்கிறார் என்று தன் பணியைப் பற்றி எளிமையான முறையில் அவரிடம் சொன்னான்.

திடீரென்று அவர், “ராசா நீ கட்டிக்கப் போற ராசாத்தியை உனக்கு பிடிச்சிருக்காவே?” என்றார் கேள்வியாக.

ஒரு கணம் திடுக்கிட்ட ஜெய் இயல்பு நிலைக்கு மீண்டு நிமிர்வுடன், “அவளைத் தவிர வேறு எந்தப் பொண்ணையும் என் மனைவியா மனசுல பொருத்தி பார்க்க முடியலை. அம்மாவுக்கு அடுத்து அவளுக்கு மட்டும் தான் என் மனசில இடம் உண்டு தாத்தா!” என்றான் கம்பீரமாக.

அவனை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தவர், “நீ ஆனந்துப்பய புள்ள தான்டா; உங்கொப்பனை மாதிரியே பேசுறவே!” என்று ஜெயந்தனிடம் ஒரு கனமான தங்க செயினை அணிவிக்கப் போகையில்,

“ஐயா, புள்ளைய கிழக்காம நிறுத்திபுட்டு கழுத்தில போடுங்க” என்றார் ஜானகி தேவி.

“இல்ல தாத்தா……இதெல்லாம்….” என்று ஜெய் மறுப்பாக தலையசைத்த போது கையமர்த்தி குறுக்கிட்டவர்

“உன்னை குழந்தையா இருக்கறப்ப கூட நான் பார்க்க வரலை ராசா! வீம்பு பிடிச்சு கவுரவம் பார்த்துட்டு இருந்தேமுல; உன் குழந்தைக்கு சங்கிலி போடுத பாக்யம் எனக்கு கிடைக்குமான்னு தெரியலவே! உங்கப்பாரு குடுத்தா போட்டுக்க மாட்டியா? அதை மாதிரி தாமுலே தாத்தா குடுத்தாலும் மறுக்காம வாங்கிப்புடணும். தீர்க்காயுசா இருக்கணும்” என்று தன் பேரன் தலையில் கை வைத்து வாழ்த்தி விட்டு அவன் கழுத்தில் செயினை அணிவித்தார்.

எதிர்பார்த்ததற்கும் மேலாக எல்லா விஷயங்களும் சுமூகமாக நடைபெற்றது கண்டு ஸாகரி நிம்மதி பெருமூச்சு விட்டார்.

வியாழனன்று காலையிலேயே ஸ்ரீ ரகுநாத பூபதி தன் குடும்பத்தார் அனைவருடனும் வந்து நின்றது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. ஸாகரி அனைவரிடமும் நிர்மலாவை அறிமுகப்படுத்தினார். நிர்மலா பெரியவர்களை வணங்கினாள். மீராவும், கீதாவும் நிர்மலாவை பிடித்துக் கொண்டனர். நிர்மலா அவர்களை விட ஒரு வயது தான் மூத்தவள் என்று தெரிந்ததும்

“உங்களை அண்ணின்னு கூப்பிட்டா கொஞ்சம் ஓவரா தெரியல? அக்கான்னு கூப்பிடவா?” என்றாள் மீரா.

“நான் ஷார்ட்டா நிருன்னு கூப்பிடவா?” என்றாள் கீதா.

பத்மா வந்து இரண்டு பேர் தலையிலும் தட்டி விட்டு, ” அண்ணி கிட்ட மரியாதையா பேசணும். அண்ணின்னு தான் கூப்பிடணும்.” என்றதும் இருவரும் தலையாட்டினர்.

சாப்பிடும் போது “அண்ணா, இங்கே வைஃபை இருக்கா? பாஸ்வேர்ட் சொல்லுங்களேன்” என்று மொபைலை பார்த்துக்கொண்டு இருந்த கீதாவிடம் செல்போனை பிடுங்கி தன் சித்தியிடம் கொடுத்தான் ஜெய் நந்தன்.

“அண்ணா, திஸ் இஸ் நாட் ஃபேர்” என்று சிணுங்கியவளிடம், “ரெண்டு நாள் நீயும், மீராவும் என் மேரேஜ்ல தான் கான்சென்ட்ரேட் பண்ணனும். அப்ப தான் உங்க ரெண்டு பேருக்கும் தனித்தனியா பெரிய கிப்ட் உண்டு. ஓகேவா? ” என்றான் கையை உயர்த்தி.

“டீல் ஓகேண்ணா!” என்று மீராவும், கீதாவும் அவனுக்கு ஹைபைவ் கொடுத்தனர்.

சாப்பிட்டு முடித்து தோட்டத்தை சுற்றி பார்த்த மீரா முத்து, சக்தியை பார்த்ததும் ஆச்சரியமடைந்தாள்.

“அண்ணா, ஜெர்மன் ஷெப்பர்ட் தானே? ஹை ப்ரீட் வெரைட்டில? குட்டில இருந்து வளர்க்குறீங்களா? இந்த வெரைட்டி கிடைச்சா எனக்கு ஒரு குட்டி வாங்கி தர்றீங்களா? ” என்றாள்.

“பெட்ஸ் பிடிக்குமாடா?” என்றான் சிரிப்புடன்.

“ஆமாண்ணா! எனக்கு ஒரு கிஃப்ட் தர்றேன்னு சொன்னீங்களே? பப்பியை கிப்ட்டா கொடுத்துடுங்க” என்றாள் கொஞ்சலுடன்.

சும்மா கேட்டாலே வாங்கி வந்து தந்திருப்பான். தன் தங்கை கொஞ்சலுடன் கேட்கவும் கண்டிப்பாக வாங்கி தருகிறேன் என்று கூறி முடித்தான். இவ்வளவு காலம் உறவுகளின் அருமை புரியவில்லையே என்று சிறிது வருத்தம் ஏற்பட்டது.

“தேங்க்ஸ் அண்ணா” என்று அவனை அணைத்துக் கொண்ட மீராவை பார்த்து “எதாவது வேணும்னா இப்போ ஒரு டைட் ஹக் குடுத்தியே……அத குடுத்துட்டு கேளு. எது வேணும்னாலும் அண்ணா வாங்கி தர்றேன்” என்றான் சிரிப்புடன்.

ஒரு மார்க்கமாக தலையாட்டி விட்டு சென்றாள் மீரா.

மதிய உணவு முடித்து விட்டு வரும் போது கீதா அவனை கட்டியணைத்து விட்டு, “உங்களுக்கு மீரா மட்டும் தான் கண்ணுக்கு தெரியுதா அண்ணா? நானும் உங்க தங்கச்சி தானே? மீருக்கு பப்பி வாங்கி தர்றேன்னு ப்ராமிஸ் பண்ணி இருக்கீங்களாம். எனக்கு ஒரு டாப்லெட் வேணும். வாங்கி தர முடியுமா? முடியாதா?” என்றாள் முறைத்தவாறு.

இப்படி செல்ல சண்டை போட ஆளில்லை என்று தானே ஜெய் நந்தன் இவ்வளவு நாள் ஏங்கி கொண்டு இருந்தான்? கண்டிப்பாக வாங்கி தருகிறேன் என்று கூறி தன் தங்கையை சமாதானம் செய்தான்.

சபரீசன், வானதி, பரமேஸ்வரன் குடும்பத்தினர் அனைவரும் வந்து விட முறைப்படி நிர்மலாவை அவளின் மாமாவின் அருகே நிற்க வைத்து கீதா, மீராவை ஆரத்தி எடுக்க வைத்து உள்ளே அழைத்தார் ஸாகரி.

தன்னுடைய நகைகளில் பிடித்ததை ஆரத்தி எடுத்ததற்காக வாங்கி கொள்ளுங்கள் என்று காட்டினார் ஸாகரி.

உதடு பிதுக்கி விட்டு சகோதரிகள்,  “அவுட் டேட்டடா இருக்கு பெரியம்மா!” என்று சொல்லி விட்டனர்.

நிர்மலா தன் அறைக்கு கூட்டி வந்து ஜெய் நந்தன் அவளுக்கு வாங்கிய நகைகளை காட்டி, ” இதுல ஏதாவது பிடிச்சிருக்கா பாருங்க! எடுத்துக்கோங்க” என்று புன்னகையுடன் சொன்னவளிடம்

“அண்ணி, இது அண்ணா உங்களுக்கு ஆசையா வாங்கி குடுத்தது. இத நாங்க எப்படி வாங்கிக்கறது? எடுத்து உள்ளே வைங்க” என்று திட்டினர்.

கடைசியில் நிச்சயதார்த்ததிற்கு உடைகளின் நிறத்திற்கேற்ப வெள்ளி நகை செட்டை மீராவும், கீதாவும் அணிந்து வந்த போது நிர்மலாவிற்கு சிரிப்பு வந்தது.

பல்வேறு எஸ்டேட் அதிபர்கள், சமூக நல அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள், வணிக நிறுவனங்களில் தொடர்புடைய டீலர்கள், ஆகியோரை ஸாகரி வரவேற்று பேசினார். ரகுநாதருக்கு தன் மருமகள் தொழிலையும், வாழ்வையும், பேரனையும் எவ்வளவு சீராக உருவாக்கி பராமரித்து வருகிறார் என்று ஸாகரியிடம் மதிப்பு கூடியது.

மாணிக்கம் அனைத்து வேலைகளையும் பொறுப்புடன் பார்த்து கொண்டார். ஜெயந்தனும் அனைத்து வேலைகளிலும் பொறுப்பெடுத்து கொண்டார்.

மெலிதான ஆரஞ்சு நிற புடவையில் நிர்மலா அருகில் வந்து நிற்கையில் ஜெய் நந்தனுக்கு பூந்தோட்டத்தின் நினைவு வந்தது. ப்ரவுன் நிற சஃபாரியில் அவனும் அவள் அழகிற்கு போட்டியாக நின்று கொண்டு இருந்தான். இருவர் வீட்டார் சார்பில் தட்டுகள் மாற்றியவுடன் ஜெய் நிர்மலாவிற்கு மோதிரம் அணிவித்தான். அவன் கண்கள் மோதிரத்தை, நிர்மலாவின் விரல்களை கூட பார்க்கவில்லை. நிர்மலாவின் கண்களை தான் தன் பார்வையினால் துளைத்துக் கொண்டு இருந்தான். நிர்மலா தன் கண்களை ஜெய்யின் கைகளில் இருந்து எடுக்கவில்லை. ஆனால் ஜெய்யின் பார்வை குறுகுறுப்பை அவளால் உணர முடிந்தது. சிறு தடுமாற்றத்துடன் ஜெய் நந்தன் கைகளில் மோதிரத்தை போட்டாள். பெருமூச்சு விட்டவளிடம்,  “ஏய்! பஞ்சு மூட்டை தப்பிச்சுட்டோம்ன்னு சந்தோஷமா பட்டுக்கிற? உனக்காக அழகா ட்ரெஸ் பண்ணிட்டு வந்தேன். ஒழுங்கா நிமிர்ந்து என்னைப் பாரு! இல்லைன்னா பின்னாடி ஃபீல் பண்ணுவ!” என்றான் ஒரு மாதிரியான குரலில்.

புன்னகையுடன் அவனை ஏறிட்டுப் பார்த்து அவன் புருவத்தூக்கலில் முகம் சிவந்தாள் நிர்மலா. தலை வாழை விருந்துடன் நிச்சயதார்த்தம் இனிதாக நிறைவுற்றது.

அன்று இரவு அறையில் வானதியுடன் படுத்திருந்த நிர்மலாவிற்கு நாளை திருமணம் என்று இனம் புரியாத ஒரு வகை பதட்டமும், பயமும், ஆனந்தமும் சேர்ந்து கலவையான ஒரு உணர்வு ஏற்பட்டது. ஜெய்யை நினைத்துக் கொண்டு புரண்டு கொண்டே படுத்திருந்தாள்.

“நிம்மி தூங்கலையாடீ?” என்ற வானதியின் கேள்விக்கு, “தூக்கம் வர மாட்டேங்குதே நதி!” என்றாள் சிரிப்புடன்.

“அண்ணாவை எழுப்பி விடு! உனக்கு உறக்கம் வரவில்லைன்னா அவர் மட்டும் எப்படி உறங்கலாம்?” என்றாள் தோழிக்கு பரிந்து கொண்டு!

“ஏய் நதி பாவம்டா, அவராவது உறங்கட்டும்!” என்று சொல்லி வாய் மூடுகையில் போன் அழைத்தது.

“இதோ வந்திடுச்சு, உனக்கே தூக்கம் வரலைன்னா அண்ணாவுக்கு எங்க தூக்கம் வர்றது? நான் அப்பா கூட போய் படுத்துக்கறேன். நீ பேசு. சீக்கிரம் தூங்கு, இல்லைன்னா காலையில டையர்டா இருக்கும்” என்று சொல்லி விட்டு சென்றாள் வானதி.

“சொல்லுங்க நந்து குட்டி!” என்றாள் உற்சாகமாக.

“என்ன நிலா மேடம், ரொம்ப நல்ல மூடுல இருக்கீங்க போல இருக்கு!” என்றான் ஜெய் உற்சாக குரலில்.

“ஸ்ரீ எனக்கு தூக்கமே வரலைப்பா; ஒரு மாதிரி……எனக்கு அந்த ஃபீலிங் ஐ வார்த்தையில சொல்ல தெரியலை ஸ்ரீ” என்று தவித்தாள்.

“ஆமா! நல்ல நாள்லயே உனக்கு ஒண்ணும் புரியாது. இன்னிக்கி ரொம்ப புரிஞ்சிடுமா? உனக்கு என்ன வேணும்னு எனக்கு புரியுது. நான் இப்ப உன் ரூமுக்கு வர்றேன். நதி தூங்கிட்டாளா?” என்றான்

“அவ மாமா கூட படுக்க போய்ட்டா. நான் தனியா தான் இருக்கேன் ஸ்ரீ” என்றாள் நிர்மலா.

மனதிற்குள் அவன் வர வேண்டும் என்ற ஆசையும், வந்தால் என்ன செய்வானோ என்ற பயமும் ஒருங்கே இணைந்தன.

அவனது மெல்லிய சுரண்டலில் கதவைத் திறந்தவள் அவனிடம், “ஏன் முத்து மாதிரி கதவை சுரண்டுறீங்க? தட்ட வேண்டியது தானே?” என்றாள்.

அவளை உள்ளே விட்டு அறைக்கதவை தாழிட்டவன், “ஏன்டீ பேச மாட்ட? வர வர என்னைப் பார்த்து நீ பயப்படறது போய் இப்போ உன்னை பார்த்து நான் பயப்பட வேண்டியதிருக்கு!” என்றான் சலிப்புடன்.

“என்னாச்சு ஸ்ரீ ஏன் இவ்வளவு சோகமா லுக் குடுக்கறீங்க, நல்லாவே இல்லை!” என்று சொல்லி அவனை அணைத்துக் கொள்ள வந்தாள் நிர்மலா.

சட்டென்று நின்ற இடத்தில் இருந்து விலகியவன் பெருமூச்சுடன் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

“உங்கிட்ட ப்ராமிஸ் பண்ணும் போது அதை காப்பாத்த நான் இவ்வளவு கஷ்டப்படுவேன்னு நினைக்கலை நிலா, இன்னிக்குல இருந்து நம்ம ரெண்டு பேருக்கு நடுவிலே எப்பவும் ரெண்டு அடி டிஸ்டென்ஸ் மெயின்டெய்ன் பண்ணனும். இதை எப்பவும் மறந்துடாதே. நாளைக்கு ஒரு கூலர்ஸ் வாங்கிடலாம். நம்ம ரூம்ல மட்டும் அதை போட்டுக்கோ. அப்புறம் கொஞ்ச நாளைக்கு ஸாரி கட்டுறது, ஜிமிக்கி போடுறது இதெல்லாம் கொஞ்சம் அவாய்ட் பண்றியா? நான் இனிமேல் மாசத்துக்கு ஒரு நாள் மட்டும் இங்க வந்துட்டு போறேன். ஆனா இவ்வளவு யோசிச்சாலும் ரொம்ப கஷ்டமா தான் இருக்கப் போகுது!” என்றான் சோகமாக.

கண்களில் சிரிப்புடன் அவனைப் பார்த்து அவனருகில் வந்து அமர்ந்தவள், “உங்க ரூல்ஸ் எல்லாம் கேட்டவுடனே எனக்கு இப்போ நல்லா தூக்கம் வருது. கிளம்புங்க. நான் தூங்கணும்” என்றாள் நிர்மலா.

“என்ன நிலா அவ்வளவு தானா?” என்று கண்களில் நிராசையுடன் பரிதவித்தான்.

“எப்பவுமே டிஸ்டென்ஸ் மெயின்டெய்ன் பண்ணனும்னு சொல்லிட்டீங்க, உங்களை கட்டிப் பிடிக்க கூட முடியாது போலிருக்கே? அப்புறம் என்ன பண்றது? தூங்க வேண்டியது தானே!” என்றாள் படுக்கையை தட்டிக் கொண்டு.

“நிலா! ப்ளீஸ்டீ, படுத்தாத; நீ மனசு வைச்சா தான் இரண்டு பேரும் ஹாப்பியா இருக்க முடியும். இல்லைன்னா ரெண்டு பேருக்குமே இம்சை தான்…….கொஞ்சம் கன்ஸிடர் பண்ணும்மா!” என்றான் கெஞ்சலுடன்.

அவனை அமர்த்தலான பார்வை பார்த்து விட்டு, “நீங்க இத்தனை கண்டிஷன் போட்டு நான் அதை பாஃலோ பண்ணி தான் இனிமேல் நான் லைஃப்ல சாதிக்கப் போறேனோ? எனக்கு உங்க கூட சந்தோஷமா வாழணும் ஸ்ரீ! அதனால நீங்க எனக்கு செஞ்சு குடுத்த ஒரு ஸ்டுபிட் ப்ராமிஸை நான் ப்ரேக் பண்றேன். ஆனா எனக்கு படிக்கணும். மேனேஜ்மெண்ட் கத்துக்கணும். அதுக்கு நீங்க அப்ஜெக்ட் பண்ணக் கூடாது. ஓகேவா?” என்றாள் ஒரு விரல் நீட்டி.

ஜெய் நந்தன் கண்களை மூடி புன்னகையுடன் அமர்ந்திருந்தான்.

“ஹலோ ஜெய் ஸார்! பேசினது காதுல விழுந்ததா, இல்லையா?” என்று அவனை உலுக்கியவளை இழுத்து அணைத்து அவள் முகமெங்கும் முத்தம் பதித்தான் ஜெய் நந்தன்.

“ஸ்ரீ எனக்கே என்னமோ பண்ணுது. நீங்க வேற……” என்று அவன் அணைப்பில் சிலிர்த்தாள் நிர்மலா.

“உன் தலைக்குள்ள இப்போ தான் விஷயம் கொஞ்சம் பிக்கப் ஆகி இருக்கு. நாளைக்கு ப்ரைட் ஆகிடுவ. ப்ரைட் ஆக்கிடலாம். டோண்ட் வொர்ரி! என்றவன் மறுபடியும்

“இனிமேல் வார்த்தைகளை பேசும் போது ரொம்ப கவனமா இருக்கணும் போல…..ஒரு சத்தியத்தை பண்ணிட்டு இத்தனை நாளா நான் பட்ட பாடு…..ச்ச்ச்சே! நேத்து பங்ஷன்ல குடுத்து இருக்க வேண்டிய கிஸ். இப்போ தான் குடுக்க முடியுது. நீங்க கண்டிப்பா படிக்கணும். நம்ம மேனேஜ்மென்ட் பார்த்துக்கணும் நிலா மேடம், என்னால தனியா எல்லா வேலைகளையும் பார்க்க முடியாது. நீங்களும் சப்போர்ட் பண்ணனும். ஓகே. சரி இப்போ யாரோ என்னை ஜெய் ஸார்ன்னு கூப்பிட்ட மாதிரி இருந்தது. அவங்களை நல்லா கவனிக்கணுமே?” என்றான் குறும்பு சிரிப்புடன்.

“ஸ்ரீ! போதும்; சொன்னா கேளுங்க, வேண்டாம்……கிட்ட வராதீங்க” என்று சொல்லி தள்ளிப் போனவளை பிடித்து நிறுத்தி

“எங்கே ஓடுற? எனக்கு நீ ஏற்கெனவே வெல்கம் கிஸ் கூட குடுக்கலை. ஒழுங்கா குடு. இல்லை நானே எடுத்துக்குறேன்!” என்றான் கறாராக.

அவனை முறைத்தவாறு “ரொம்ப பண்றீங்க மிஸ்டர் நந்தன்” என்றாள் சிரிப்புடன்.

“ம்ஹூம்! நீங்க என்னை ரொம்ப பண்ண வைக்கிறீங்க மிஸஸ் நந்தன்…….” என்று சொல்லி விட்டு நிர்மலாவின் செவ்விதழ் நோக்கி குனிந்தான் ஜெய் நந்தன்.

நெஞ்சம் நேசமது மறைக்கும்…….

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

8. நீ என் சினாமிகா

கோம்ஸ் – மழைக்காலம்(பாகம் 1) – மழை 16 – 20