in , ,

உள்ளம் கொள்ளை போன தருணம்..23

            தருணம்-23

வீட்டிற்கு வந்த  அநேஷ்வியா தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு தன்வியைத் தேடிச் சென்றாள். தன்வியோ  தனது அறையில் அமர்ந்து ஏதோ தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்க அவள் அருகில் அமர்ந்து,

“ என்ன ஆச்சு தன்வி  இன்னைக்கு காலேஜூக்கும்  வரலைன்னு சொல்லிட்ட அடிபட்ட காயம் ஏதாவது ரொம்ப வலிக்குதா? என்ன ” என்றிட.

“ இல்ல அதெல்லாம் வலிக்கல அநேஷ்வி உங்கிட்ட ஒன்னு கேட்கணும் கேட்கவா?”

“ என்ன என்கிட்ட  பேசுதுக்கு பர்மிஷன் எல்லாம் கேட்கிற என்ன கேக்கனுமோ கேளு தன்வி” என்றவாறு அவள் கைகளை பிடித்துக் கொள்ள.

இன்று நாள் முழுவதும் தனது மனதை அலசி ஆராய்ந்து எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தவித்தவள், கடைசியாக மனதில் உள்ளதை தன் தோழியிடம் சொல்ல நினைத்தாள்.“  மனசு ஒரு நிலையில் இல்லை இயா எதை எதையோ நெனச்சு ரொம்ப டிஸ்டர்ப்பா இருக்குது.  உங்கிட்ட இதை எப்படி சொல்றதுன்னு தெரியல,  மத்தவங்க கிட்ட சொல்லவும்  எனக்கு தோணலை அதனாலதான் உங்கிட்ட சொல்றேன்”  என்றவள் அதற்கு மேல்  சொல்லத் தயங்கி பின் தன்னை நிதானித்துக் கொண்டு,

“ இயா  மித்ரனோட பிரண்ட்  வருண் இருக்காருல்ல அவரப்பத்தி நீ என்ன நெனைக்கிற?”

“ அவரைப் பத்தி நெனைக்க என்ன இருக்கு.  ஏ அண்ணன பத்தி தப்பா சொல்றதுக்கு எதுவுமே இல்ல நல்லவரு, எல்லாரு மேலேயும்  ரொம்ப பாசமா இருக்கவரு, யாரையும் கஷ்டப்படுத்த நெனைக்காதவரு மொத்தத்துல ஏ அண்ணன்  ஒரு ஜென்டில்மேன்.  இரு இரு  ஆமா  அவரப்பத்தி  நீ எதுக்கு இவ்வளவு டீடைல்டா  கேக்குற”  என்றவளின் பார்வை தன்வி மீது  சந்தேகமாய் படர்ந்திட.

தன்வியோ எச்சிலைக் கூட்டி விளங்கியவாறே“ அது ..அது.. ஒன்னும் இல்ல சும்மா தெரிஞ்சுக்க தான் கேட்டேன் வேற ஒன்னும் இல்ல ” என்று மழுப்பலாகப் பதில்  சொல்ல. அநேஷ்வியோ அவளை நம்பாதப் பார்வை பார்த்து வைத்திட, தன்வியோ அவளை சமாளிக்க முடியாமல் திணறினாள். அப்போது கீழிருந்து மதன் அவர்கள் இருவரையும் அழைக்கும் சத்தம் கேட்டதும், அவர்களது பேச்சை முடித்துக் கொண்டு இருவரும் கீழே வந்தனர்.

சோபாவில் அயர்வாக அமர்ந்திருந்த மதன் அவர்கள் இருவரையும் பார்த்து அருகில் வந்து அமர சொன்னார்.  இருவரும் அமர்ந்ததும் அவர்களிடம் எதுவும் பேசாமல் இரண்டு கவர்களை அவர்களிடம்  கொடுத்தார்‌.  இருவரும் ஆச்சரியத்தோடும்  என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்போடும் அதைப் பிரித்துப்பார்க்க வெகுவாக அதிர்ந்து போனார்கள். 

இருவரது கையிலிருந்த கவரிலும் மாப்பிள்ளையின்  போட்டோக்கள் இருந்தன. இருவரும் அதைப் பார்த்து அதிர்ந்தவாறே  மதனைப் பார்க்க அவரோ இதழில் தோன்ற புன்னகையோடு “ நீங்க ரெண்டு பேரும் எப்புடியும் இன்னும் கொஞ்ச நாள்ல  படிப்ப  முடிக்கப் போறீங்க தானே, அதான் இப்பவே  மாப்பிள்ள பாக்க ஆரம்பிச்சுட்டேன்” என்றார்

அவர் அவ்வாறு சொன்னதும் இருவரும் திருதிருவென்று முழித்தனர் இருவரது மனதிலும் அவரவர் துணைகளின்  முகம் வந்து செல்ல, என்ன செய்வது?  என்று தெரியாமல் இருவரும் திருதிருவென்று விழித்தனர்.பின்பு ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அநேஷ்விதான் 

“  சாரி அங்கிள் உங்கள மறுத்துப் பேசுறன்னோ?  இல்ல. உங்க  முடிவுக்கு எதிரா  பேசறன்னோ தப்பா நெனைக்காதீங்க. நான் இனிமே தான் வாழ்க்கையில  நிறைய சாதிக்கனும் அங்கிள். இப்பதான் படிப்பு முடிய போகுது,  அடுத்த மேல படிச்சுக்கிட்டே ஒரு நல்ல லீடிங் லாயர்ட்ட அசிஸ்டன்ட்டா சேரனும்.ஒரு நல்ல லாயரா நல்ல பொஸிஷனுக்கு வந்தததுக்கப்புறம் தான்  என்னால எதைப் பத்தியும் யோசிக்க முடியும், இப்போதைக்கு இதெல்லாம்  வேணாமே அங்கிள்” என்று தயங்கியவாறே சொல்ல.

“ ஆமா  அப்பா அவ சொல்றதும்  கரெக்ட்டு தான் எனக்கும் அவ கூட சேர்ந்து எதாவது அச்சிவ்  பண்ணனும்னு ஆசையா இருக்குதுப்பா.  அது மட்டுமில்லாம இப்ப என்னப்பா கல்யாணத்துக்கு அவசரம் எங்களுக்கு முன்னாடி அண்ணன்  இருக்கும் போது நீங்க எங்களோட கல்யாணத்தை பத்தி பேசுறது நல்லால்ல.  அவன் வீட்டுல  இல்லனாலும் அவனுக்கு எந்த நல்லதும் நடக்காம  எனக்கு எதுவும் நடக்கக்கூடாது,  இதுல நா உறுதியா இருக்கேன்”  என்று சொன்ன தன் மகளை பெருமை பொங்க பார்த்தார் மதன்.

“ அடுத்து நீங்க என்ன பண்ணப் போறீங்கன்னு தெரிஞ்சுக்கத்தான்  இப்படி பண்ணுனேன். இந்த போட்டோஸ் எல்லாம் சும்மா காட்டுனேன் அவ்ளோ தான்.  உங்க முடிவு தான் என்னோட முடிவும் இதுக்கு மேல நீங்க என்ன சொல்றீங்களோ அது படித்தான் எதுவுமே நடக்கும் ” என்று சொன்னபோதுதான் மெதுவாக வாகனத்தை உள்ளே கொண்டுவந்து நிறுத்தி விட்டு மெல்ல வீட்டிற்குள் நுழைந்தார் பிரபாகரன். அவரது உடல்நிலை அதற்கு ஒத்து வராது போல் சற்று தளர்வாக உள்ளே நுழைந்தவர், மகளைப் பார்த்து புன்னகைத்தவாறு அவளது அருகில் வந்து நின்று

“ இப்போ உடம்பு எப்படி இருக்குது மா” என்று கேட்டார்.

“ எனக்கு இப்போ உடம்பு நல்லா இருக்குதுப்பா.  ஆமா  நீங்க ஏன்?  ஒரு மாதிரி டல்லா இருக்கீங்க”

“ தெரியலமா  ஒருமாதிரி அசதியா  இருக்குது,  ரொம்ப தளர்வாவும் இருக்குது”  என்று பேசிக் கொண்டிருந்தவர் திடீரென்று மயக்கமாக சோபாவில் விழா நால்வரும் பதறிவிட்டனர்.  வேகமாக உள்ளே ஓடிய  தன்வி தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கி பிரபாவின் முகத்தில் தெளித்தார் மதன். சிறிது நேரத்தில் கண் விழித்தவர் அயர்வாகவே எல்லாரையும் பார்த்து புன்னகைத்து

“ எனக்கு ஒன்னு இல்ல கொஞ்சம் வீக்கா இருக்கேன் போல அவ்வளவு தான்” என்று சொல்ல. உடனடியாக அவருக்கு ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள், ‌அநேஷ்வியா‌.

அந்த ஜூஸை வாங்கி மெதுவாக பிரபாவை தன் தோளில் சாய்த்துக்கொண்டு அவருக்குப் புகட்டினார் மதன். சற்று கிரக்கத்திலிருந்து தெளிவுற்ற பிரபாகரன் நன்றாக நிமிர்ந்து அமர்ந்தவர்…

“வேற ஒன்னும் இல்ல சார் கொஞ்சம் அதிகமான அலைச்சல் அதனால தான்”  என்று சொல்ல

 “சரி நீ அங்க போகாத பிரபா இங்க  இருக்க ரூம்லயே  ரெஸ்ட் எடு” என்று மதன் சொல்ல.

“ இல்ல சார் நா  அங்கயே போறேன்” என்று சொல்லிவிட்டு தட்டுத்தடுமாறி தங்களது வீட்டிற்கு வந்து சேர்ந்தார். ஏனோ அவரை தனியாக அனுப்ப மனமின்றி தானும் தன் தந்தையோடு வந்தவள், இருவருக்கும் பூரணி அனுப்பி வைத்த உணவை உண்டு விட்டு தன் தந்தையோடு சிறிதுநேரம்  ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள்.

அவரது தோள் சாய்ந்தவாறே  தன் வாழ்வில் எதையெல்லாம் சாதிக்க வேண்டுமென திட்டமிட்டு இருக்கிறேன் என்பதை எல்லாம் சொன்னாள். மகளின் பேச்சை காது கொடுத்து கேட்டவாறே  அமர்ந்திருந்த அவருக்கு ஏதோ கண்ணைச் சுழற்றிக் கொண்டு வர,

“ எனக்கு தூக்கம் வருது மா நீ நெனச்சதெல்லாம் கண்டிப்பா நடக்கும்டா. அதுக்கு என்னைக்குமே  நா  துணையா இருப்பேன்டா.. என்னை விட மதன் சார் உம்மேல அதிக பாசம்  வச்சுருக்காரு  கண்டிப்பா அவரு நீ நெனைச்சதை எல்லாம் நடத்திக் காட்டுவாருன்னு  எனக்கு நம்பிக்கை இருக்கு டா”   என்று சொல்லி விட்டு தன் அறைக்கு சென்று படுக்கையில் விழுந்தார்.  இவளும் வெகு நாட்களுக்கு பிறகு தனது அறைக்குள் நுழைந்து உறக்கத்தில் மூழ்கிப்போனாள்.   அவள் இல்லாவிட்டாலும் எப்போதும் அவள் அறை சுத்தமாகவே இருக்கும்.  வாரம்  இருமுறை இங்கு வந்து அனைத்தையும்  பூரணியே சுத்தம் பண்ணி வைத்து விடுவார்.

அதிகாலைச் சூரியனவன் தன் பொற்கரங்களால் அனைவரையும் வாழ்த்தி வணங்கி, இதோ  அனைவரது வாழ்விலும் ஒரு திருப்புமுனையை தன்னுள் வைத்தவாறு மலை முகட்டிலிருந்து  வெளிப்பட்டான்.  காலையிலேயே எழுந்து அவரவர் தங்களது  வேலையை செய்து கொண்டு இருந்தனர்.  எப்போதும் போல் அலுவலகம் செல்வதற்கு முன்பு செய்யும் தன் வேலையை செய்தவாறே  சோபாவில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார், மதன்.ஏனோ அன்று  அவருக்குள் ஏதோ ஒரு நெருடல் இருந்து கொண்டே இருக்க‘ என்னன்னு தெரியலையே’ என்று நினைத்தவாறு தன் வேலையை கவனித்தார்.

பூரணி தீவிரமாக சமையலைக் கவனித்துக் கொண்டிருந்தார். தன்வியோ கல்லூரி செல்வதற்காக குளித்து முடித்துத் தயாராகி கீழே வந்தாள்.

இருவருக்கும் உணவை வைத்துக்கொண்டிருந்த பூரணி அவ்வபோது வாயிலைப் பார்த்தவாறே இருக்க. அவரது எண்ணத்தினை அறிந்திருந்த தன்வி

“ என்னம்மா உங்க செல்ல மருமக வருவான்னு  எதிர் பாக்குறீங்களா?” என்று கிண்டலாகக் கேட்க.

“ ஏய் வாயாடி‌.. அதான் தெரியுதுல்ல அப்புறம் என்ன! இன்னும் வரக்காணாமே, எந்திரிச்சாளா? இல்லையா?  என்ன ஆச்சுன்னு தெரியலையே” என்றபோது அரக்கப் பறக்க ஓடி வந்தாள் அநேஷ்வியா. அதுவும் இரவு உடையில் அவள் அவ்வாறு வந்து நிற்கவும் மூவரும் பதறி என்னவென்று கேட்க.

“ அது‌.அது.. அப்பா ..அப்பா..  நான்  இப்போதான் எழுந்தேன் அத்த.  காபி போட்டுட்டு அப்பாவை எழுப்ப போனேன், அப்பாகிட்ட எந்த அசைவும் இல்ல.  அவரு உடம்பு வேற ஜில்லிட்ட  மாதிரி இருக்குது பயமா இருக்குஅத்த ” என்று சொல்லி  அழுதாள்.அவள் சொன்னதைக் கேட்டு மூவரும் பதறியவாறு  வேகமாக பிரபாகரன் இருந்த அறையை நோக்கி ஓடினார்கள்.  அங்கே  பிரபாகரன் படுத்த நிலையிலேயே எந்த சலனமும் இல்லாமல் கிடந்தார்.உறக்கத்திலேயே அவரது  உயிர் பிரிந்திருந்தது.சட்டென்று நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மதனுக்கு கண்ணில் நீர் கோர்த்தது.  தன் நண்பனின் பிரிவை விட, அநேஷ்வியாவை எப்படி தேற்றப் போகிறோம் என்ற கவலையும்  அவருக்குப் பிறந்தது.

 தந்தை இறந்து விட்டார் என்ற தகவல் அவளது  மூளையை அடைந்த மறு நிமிடம் அங்கேயே அமர்ந்து கலங்கி தவித்தவளை  தன் தோள் சாய்த்துக் கொண்ட பூரணி அவளை சமாதானப்படுத்தும் வழியறியாது   தானும் கலங்கிக் கொண்டிருந்தார். தன்வி  ஒரு பக்கம் அழுது அரற்றிக் கொண்டிருக்க, விஷியமறிந்து  தருணும் வந்து சேர்ந்தான். அனைத்து சடங்குகளையும் தருணை  முன்னிருத்தி  நடத்தினார் மதன். துக்கம் தொண்டையை அடைத்தது, இருந்தும் தன் நண்பனுக்காக தானே  அனைத்தையும்  செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் துக்கத்தை தொண்டைக் குழிக்குள் விழுங்கிக் கொண்டு அனைத்தையும் கவனித்தார்.

அநேஷ்வியாவின் சொந்த ஊரில் இருக்கும் சொந்தப்பந்தத்திற்கு விஷியத்தைத் தெரிவிக்கலாம் என்று மதன் சொல்ல. அநேஷ்வியா  வேண்டாம் என்று மறுத்து விட்டாள்,“ இவ்வளவு நாட்கள் நாங்கள் இருக்கமா?  இல்லையான்னு கூட கேட்கதாவங்களுக்கு இப்ப மட்டும் ஏன் சொல்லனும். அவங்க யாரும் வர வேணாம்”  என்று சொல்லிவிட்டாள்.

அவளே  சொன்னதற்குப் பிறகு தான் எதையும் செய்ய வேண்டாம் என்று தன்னுடைய குடும்பத்தாருக்கு மட்டும் சொல்லி அனுப்பினார் மதன். மதனின்  தாய் தந்தை,  தம்பி, தம்பியின் குடும்பம் என  அனைவரும் பிரபாவின்  இறப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.அதிலும் அநேஷ்வியாவைப் பார்த்து மனம் பூரித்துப் போன, கீதாதனது மகன் அகிலுக்கு அநேஷ்வியா  பொருத்தமாக இருப்பாள் என்று மனதில் எண்ணியவாறு அதையே பூரணியிடமும்  சொல்ல. பூரணியோ  அவளது எண்ணங்களையும் எதிர்கால லட்சியத்தையும்  சொல்ல வேறு வழியில்லாமல் தொங்கப்போட்டு முகத்தோடு தான் கீதா அமர்ந்திருந்தார்.

மதனின் தம்பி  வேல்ராஜ் அவரது மனைவி கீதா, மற்றும் மதன் ராஜின் தங்கை கிருஷ்ணவேணி, அவரது கணவன் செல்வம்  என  அனைவரும் அன்றிரவே ஊருக்கு கிளம்பினார்கள். இதில் பிரபாகரனின் இறப்புச் செய்தியைக் கேட்டு மதன்ராஜின் பெற்றோரான ராமசுப்பு, விசாலாட்சி இருவருமே அதிகளவு  வருத்தம் அடைந்தனர்.‘என்னதான் இருந்தாலும் தங்கள் ஊர்க்காரன் அல்லவா!  நல்ல பையன்‌ வேறு  இப்படி அல்பாயுசில் போய்விட்டானே,  அதுவும்  ஒற்றை மகளுக்கு திருமணம் கூட செய்து வைத்து அழகு பார்க்காமல் பெற்றோர்  இருவருமே  போய்விட்டார்களே’  என்று வருத்தத்தோடு தான் அனைத்து செய்முறைச் சடங்குகளையும் முடித்துவிட்டு ஊருக்கு கிளம்பினார்கள்.

தாய் தந்தையரை இழந்து விட்டு நிராதரவாக நின்ற அநேஷ்வியாவை அரவணைத்துக் கொண்டது மதன் ராஜின் குடும்பம்.  இதற்குமேல் தனக்கு யாருமில்லை என்று எண்ணி  கண்ணீர் விட்டாள், அநேஷ்வி‌ ‘தனக்கு யாரும் இல்லை, தான் அநாதை ’ என்று மனம் வருந்தியவளை தாயாய் தாங்கினார் பூரணி, தந்தையாய் இருந்து அவளுக்கு உறுதுணையாக நின்றார் மதன்,  தோழியாய் மட்டுமின்றி அநேஷ்வியாவிற்கு  எல்லாமுமாய் இருந்தாள் தன்விகா.

ஏனோ காரணமே இன்றி அந்நிலையிலும் அவளது ஆழ்மனமானது மித்ரனின் அருகாமையைத்  தேடியது தான் இதில் வியப்பிலும் வியப்பு.

பிரபாகரன் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டது. ஏனோ அவரது இறப்பு இயற்கை மரணம் என்றே அனைவரும் எண்ணினார்கள்.  பிரபாகரனின் பூத உடலில் இருந்து பிரிந்த அவரது ஆன்மாவானது தனதுஉடலுக்கு நடந்துக் கொண்டிருக்கும்  சடங்குகளை கவனித்துக் கொண்டிருக்க, அவரை அழைத்துச் செல்வதற்கு வந்த இயலாம்பிகை தாரகை  தன் கணவரது ஆத்மாவை அவரது உண்மையான உடலுடன் சேர்த்து கியூமுலோஸோ லோகத்திற்கு அழைத்துச் சென்றார். இங்கிருந்து கிளம்பும் முன் இருவரும் தங்கள் மகளை கண்குளிரக் கண்டவாறு இங்கிருந்து சென்றனர்.தன் மனைவியிடம்“ நமது மகளையும் இங்கிருந்து  அழைத்துச் செல்லலாமே ” என்று அனலாற்றி( பிரபா) வினவிட.

“ அவளது வாழ்வு இங்கேயே அமைய வேண்டும் என்பது தான்  அவளது முடிவாகும், ஆதலால் நாம் அவளை இங்கு விடுத்துச் செல்வதே நலம்”   என்று மறைமுகமாக அவளது எண்ணத்தை கணவனுக்கு தெரிவித்து விட்டு தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார் இயலாம்பிகை தாரகை.

சடங்குகள்  அனைத்தையும் முடித்துவிட்டு வீடு கழுவித் துடைத்து பிரபாகரனின் படத்திற்கு மாலையிப்பட்டது. அவர் படத்திற்கு மாலையிட்டு  ஹாலில்  வைக்கப் பட்டிருக்க அதன் கீழே அழுதழுது அயர்வோடு  சுருண்டு படுத்துக் கிடந்தாள் அநேஷ்வியா. அவளது நிலை கண்டு அனைவருக்கும் உள்ளம் கலங்கித் தவித்தது.இதற்கு மேல் விட்டால் பிள்ளை துவண்டு போய் விடுவாள் என்று நினைத்த பூரணி ஒரு வழியாக தன்னை சமாளித்துக் கொண்டு எழுந்து கிச்சனுக்கு சென்று இருந்த தோசை மாவை வைத்து தோசை ஊற்றி எடுத்துக் கொண்டு அவளிடம் வந்தார்.

அவளை எழுந்து உணவு உண்ணசொல்ல, அவளோ முடியாது என்றாள். வலுக்கட்டாயமாக அவளை எழுந்து அமர வைத்து ஒரு வாய் தோசையை  ஊட்டமுயல  அவள் முடியாது என்று மறுப்பு தெரிவித்தாள்.

“ இப்ப நீ சாப்பிட்டு தான் ஆகனும்  அநேஷ்வி  இல்லன்னா நா  என்ன பண்ணுவேன்னு எனக்கே  தெரியாது”  என்று அதட்டி மிரட்டி உருட்டி ஒரு தோசையை  சாப்பிட வைத்தவர், துவண்டு போயிருந்தவளைத்  தன் மடிமீது தங்கிக் கொண்டார்.‘ தன் தாயவளின்  இறப்பிற்கு பின் தாய்க்கு தாயாக இருந்து, தந்தைக்கு தந்தையாக இருந்து ஒரு குறையும் இல்லாமல் தன்னை வளர்த்த  தன் தந்தை இப்போது தன்னுடன்  இல்லையே’  என்று எண்ணி அழுது புரண்டு ஒருவழியாக பூரணியின் மடியிலேயே உறங்கி விட்டாள் அநேஷ்வியா.

தாமதமாக உறங்கியதாலோ?  என்னவோ?  காலையில் சற்று தாமதமாகத்தான் விழித்திறந்தாள்‍ அநேஷ்வி. இறப்பு நிகழ்விற்கு வந்த மதன்குமாரின் பெற்றோர்களும் மற்றவர்களும் இரவோடு இரவாக கிளம்பி சென்று இருந்தனர்.  ஏனெனில் மறுநாள் கதிர் அறுப்பு  இருப்பதால் கண்டிப்பாக தாங்கள் அங்கு  இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பிவிட்டார்கள்.

ஏனோ காலையில் எழுந்தவள் அமர்ந்தவாறு உறங்கிக் கொண்டிருக்கும் பூரணியை ஒரு பார்வை பார்த்துவிட்டு மெல்ல எழுந்து தன் வீட்டை நோக்கி நடந்தாள்.  கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்ததும் பிரபாகரனின்  நினைவு அதிகமாக வர ஹாலில் மாட்டப்பட்டு இருந்த அவரது புகைப்படத்தை பார்த்தவாறு ஹாலில் இருந்த  சோபாவில் அமர்ந்து விட்டாள்.

முதல் நாள் இரவு அவள் இங்கே தூங்கியதால் அவளது உடமைகளும் இங்கே தான் இருந்தன.  அப்போதுதான் அவள் அலைபேசி அவளது அறையில் இசைப்பது காதில் விழுந்தது. ஏதோ ஆர்வம் இல்லாதவள் போல் மெதுவாக தனது அறைக்குள் நுழைந்து அலைபேசி எடுக்கும் நேரத்தில் அது துண்டிக்கப்பட்டது.

அலைபேசியைக்  கையோடு எடுத்துக் கொண்டு அவள் கீழே வர மீண்டும் அலைபேசி இசைத்தது. புது  எண்ணாக இருக்க யாராயிருக்கும் என்ற யோசனையோடு அழைப்பை ஏற்று காதில் பொருத்தினாள்,அந்தப் பக்கம் யாரோ சிரிக்கும் சத்தம் கேட்டதும்‘  நேரங்காலம் தெரியாமயாருடா  இப்படி போன் பண்ணி சிரிக்கிறது’  என்று நினைத்தவள் எரிச்சலுடன்,

“ ஹலோ யாருங்க நீங்க எதுக்கு தேவையில்லாம காலையிலையே  போன் பண்ணி கேனத்தனமா சிரிச்சிட்டு இருக்கீங்க” என்றாள்.

“பாருடா என்னோட சிரிப்பக் கூட உன்னால கண்டுபிடிக்க முடியலையா அநேஷ்வி. மை  ஸ்வீட் டார்லிங் நான் தான் பிரகாஷ் பேசுறேன்” என்றான்.

“டேய் பொறுக்கி நாயே எதுக்குடா நீ காலையிலேயே எனக்கு போன் பண்ணியிருக்க நா ஏற்கனவே ரொம்ப மன வருத்தத்தோட இருக்கேன் தேவையில்லாம ஏதாவது பேசி என்கிட்ட வாங்கி கட்டிக்காத ”  என்றவள் அழைப்பைத் துண்டிக்கப் பார்க்க பதிலுக்கு அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் எழுந்து நின்றவளது கையில் இருந்த போன்  நழுவிக் கீழே விழுந்து உடைந்து சிதறியது.

மதனுக்கு பக்கத் துணையாய் மித்திரன் ஸ்தானத்திலும் அதேநேரம் அநேஷ்வியின்  அண்ணன்  என்று முறையில் பிரபாகரன் உடலை தகனம் செய்யும் வரை கூட இருந்த வருண் இரவு தாமதமாகத் தான் வீட்டிற்கு சென்றான். ஏனோ  அநேஷ்வியாவின் அழுத முகமே அவனது நினைவில் வந்து இம்சிக்க  காலையிலேயே எழுந்து கிளம்பி வந்து விட்டான்.  நேராக அங்கே சென்றவன்  அங்கு அநேஷ்வி இல்லை என்றதும் அவளை தேடி அவளது வீட்டிற்கு வந்தான்.

அவன் உள்ளே நுழைந்த நேரம் தான் அவளின் போன் கீழே விழுந்து உடைந்தது.  மேலும் அவள் அதிர்ந்து நிற்பதை கண்டவனுக்கு ஏதோ அபாயம்  என்று உரைக்க வேகமாக அவள் அருகில் சென்று அவளை உலுக்கி நிதானத்திற்கு  கொண்டு வந்தவன்,

“ என்னாச்சும்மா எதுக்காக  இவ்வளவு ஷாக்காகி நிக்கிற. எதுக்குமா போனை கீழே  நழுவ விட்ட எதாவது பிரச்சனையா?” என்றான்.

அண்ணனைக் கண்டதும் பொத்துக் கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அவனது தோளில் சாய்ந்தவள்“ அண்ணா அந்த.. அந்த பிரகாஷ் தான்  ஃபோன் பண்ணான்,  அவன் தான்ணா அப்பாவ பிளான் பண்ணி  கொன்னுருக்கான்” என்று சொல்லி அழுதவளைத் தேற்றாது,  அவள் சொன்ன செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீளத் தெரியாமல் நின்றிருந்த வருணுக்கு ஆத்திரம் எல்லையைக் கடந்தது.

‘கொலை செய்யும்  அளவுக்கு போய்ட்டானா? இனிமேலும் இவன சும்மா விடக்கூடாது ’ என்று முடிவு செய்தவன் தன் தோளில் சாய்ந்திருந்தவளை  நிமிர்த்தி, அவளது  கண்ணீரை துடைத்து விட்டான்.

“ இங்க பாரு  அநேஷ்வி  நான் சொல்றதக் கவனமா கேளு இறந்துப் போனவங்க  திரும்பி வர மாட்டாங்கடா.  ஆனா என்னைக்குமே அவங்க தெய்வமா நம்மக்கூட வாழ்ந்துட்டு தான்  இருப்பாங்க.  பிரகாஷ் பண்ணுன தப்புக்கு கண்டிப்பா அவனுக்குத்  தண்டனை கெடைக்கும்.  ஆனா அதுக்கு நமக்கு ஆதாரம் தேவை இல்லையாடா,  அவனுக்கு  சட்டப்படி தண்டனை வாங்கித்தர்றதுக்கான  எல்லா வேலையையும் நான் பாத்துக்குறேன்,  அப்படி முடியாம போச்சுன்னா அவனை என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் சரியா!  இதைப் பத்தி நீ கவலைப்படாத  அண்ணன‌ நம்பறதானே”என்றதும்.

“உங்களை நம்பாம  வேற யாரண்ணா  நம்ம போறேன். அவன் பண்ணின தப்புக்கு அவனுக்கு தண்டனை கண்டிப்பா கிடைக்கனும்  என்ன பழி வாங்குறதுக்காக  அநியாயமா எங்க அப்பாவை கொன்னுட்டான்ணா  கண்டிப்பா இவனுக்குத் தண்டனைக் கெடைக்கனும்  அதுவும்  நியாயப்படி”என்று நிமிர்வோடு  சொன்னவளை மெச்சுதல் பார்வை பார்த்தவன்,

“ சரிடா இத நா  பாத்துக்கிறேன்   எதை நெனச்சும் நீ  கவலைப் படக்கூடாது,  நீ ஒரு மாதிரியா  இருக்கன்னு  வீட்ல எல்லாரும் ரொம்ப  பீல் பண்றாங்கடா.  கொஞ்சம் முகத்தை நல்ல முறையா வச்சுக்க சரியா ” என்று சொல்ல சரி என்றவள் மித்ரனின்  வீட்டுக்குச் சென்றாள்.

அவளை மித்ரனின்  வீட்டுக்கு அனுப்பிய வருண் தான் செய்ய வேண்டிய அனைத்தையும் கச்சிதமாக செய்து முடித்துவிட்டு‍, பிரகாஷை  வேறு வழியில் சந்திப்பதற்கான ஏற்பாட்டையும் கையோடு பார்த்துவிட்டு தான் அலுவலகம் சென்றான்.

அன்றே கல்லூரி செல்ல விரும்பாமல்  பெண்கள் இருவரும் விடுமுறை எடுத்துக் கொள்ள, மதன் தான் தன் நண்பனின் இழப்பில் இருந்து மீள முடியாமல் துவண்டு போனார். அவரது மனமாறுதலுக்காகவே  வருண் விரைவாக  மதனின்  கம்பெனியில் ஜாயின்ட் செய்வதற்கான வேலைகள் அனைத்தையும் செய்து முடித்திட்டான்.

ஐந்து  நாட்கள்  கடந்திருந்தன.  அன்றுதான் கல்லூரி செல்வதற்காக ஏனோதானோவென்று கிளம்பி வந்தாள் அநேஷ்வியா.  அவளுக்கு முன்பாக கிளம்பி வந்து நின்றிருந்தான் வருண்.  கூடவே தன் கையிலிருந்த செய்தித்தாளை அவளிடம் நீட்ட வாங்கிப் பிரித்துப் பார்த்தவளின் கண்கள் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் மின்னியது. 

அந்த செய்தித்தாளின் முதல் பக்கத்தில்‘  பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனரான அருணாச்சலத்தின் ஒரே மகனின் ஒரே வாரிசான திரு பிரகாஷ் அவர்கள் குடிபோதையில் வாகனத்தை செலுத்தியதால் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மகனின் இறப்புச் செய்தி கேட்டு அவரது தந்தைக்கு மனப்பிறழ்வு ஏற்பட,  பேரனும் மகனும் இந்நிலைக்கு ஆளானதைக் கேட்டு அருணாசலம் மாரடைப்பால் இறந்துபோனார். இந்த துக்க நிகழ்வால் அவர்களது குடும்பமே அல்லாடிக் கொண்டிருக்கிறது.  மேலும் அவர்கள் சமூகத்தில் ஒரு பெரிய அந்தஸ்தான பொறுப்பில் இருப்பவர்கள் என்பதால் மேலும் எந்த சம்பவங்களும் நடக்காமல் இருப்பதற்காக ஆங்காங்கே காவலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர்’ என்ற செய்தி கொட்டை எழுத்தில் போடப்பட்டிருக்க  அநேஷ்வியாவோடு  சேர்த்து மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. இது எப்படி?  என்றும் மதன் முதற்கொண்டு அனைவரும் கேட்க மர்மமாக புன்னகைத்த வருண்,

“ ஒரு நல்ல விஷயம் நடந்தா அத சந்தோசமா அனுபவிக்கனும், ஆராயவோ?  எப்புடி  இப்படி எல்லாம் நடந்துச்சுன்னு   கேக்க கூடாது சரியா! நீங்க ரெண்டுபேரும்  காலேஜுக்கு கெளம்புங்க உங்கள நா ட்ராப் பண்ணிட்டு கிளம்பறேன்”  என்று வருண் சொல்ல.

“ இன்னைக்கு தான் அங்க உனக்கு கடைசி நாள் அதனால  நீ ஆபீசுக்கு கிளம்பு வருண்,  நா  இவங்கள டிராப் பண்ணிடுறேன்” என்று சொன்ன மதன் பெண்கள் இருவரையும் கல்லூரியில் இறக்கிவிட்டு விட்டு தன் அலுவலகம் சென்று சேர்ந்தார். இப்போதெல்லாம் அநேஷ்வியை ஸ்கூட்டியில் செல்ல மதன் அனுமதிப்பதில்லை. தனக்கு வேலை இருந்து அவரால் வரமுடியாத போது மட்டுமே அவளை ஸ்கூட்டியில் செல்ல அனுமதிக்கிறார்.

இன்று தான் கடைசி நாள் என்பதால் வருண் ரிலீவ் ஆவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மதன் வாயிலாக நடந்து கொண்டிருக்க. தான்  செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடித்துவிட்டு மாலை ஆனதும் மகிழ்ச்சியாகவே அந்த அலுவலகத்தை விட்டு  வெளியேறினான்  வருண். இனி தினமும் தன்னவளைப்  பார்க்க போகிறோம் என்ற எண்ணமோ?  இல்லை தன் மாமனாருக்கு தானே உதவி செய்யப் போகிறோம் என்ற எண்ணமோ?  அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

கல்லூரிக்குச் சென்ற அநேஷ்வியாவிடம் அவளின் தந்தையினது   இறப்பு செய்திக் கேட்டு அனைவரும் விசாரித்தனர்.‌ மேலும் தேர்வு நெருங்கி கொண்டிருந்தது,  இன்னும் ஒரு மாதத்தில் தேர்வும் அதற்குப் பிறகு சிறிய அளவில் பிராஜக்டும்  ஒப்படைக்க வேண்டும் என்பதால் பெண்கள் இருவரும் அதிலே தங்களது கவனத்தைச்  செலுத்தினர்.

மறுநாள் காலை எப்போதும் போல் டிப்டாப்பாக கிளம்பிய தன் மகனை வருணின் தாய் தந்தை இருவரும் வித்தியாசமாக பார்க்க அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று பூஜை அறையில் நிற்க வைத்தவன் அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று, தான் எந்த கம்பெனியில் பொறுப்பு ஏற்க போகிறோம் என்பதை சொல்ல அவர்கள் இருவரும் ஆச்சரியத்தில்  விழிவிரித்து  மகிழ்ச்சியாகவே ஆசிர்வதித்து அனுப்பினார்.பெண்கள் இருவரும் கல்லூரி கிளம்புவதற்கு முன்பே கிளம்பி மித்ரனின்  வீட்டிற்கு வந்தான். அவன் உள்ளே நுழையவும் தன்வி  கீழே இறங்கி வரவும் சரியாக இருந்தது.

இளமஞ்சள் நிறத்தில் ஆங்காங்கே சிவப்பு நிறப்பூக்கள் பதிக்கப்பட்டிருந்த சுடிதாரில் அழகான  தங்கப்பதுமையென கீழே இறங்கி வந்தவளை  இமைக் கொட்டாது பார்த்திருந்தான் வருண். அனைவரும் இருக்க அவன் இப்படிப் பார்ப்பான் என்று அவள் எண்ணியிருக்கவில்லை,‌ அதேபோல் ஒயிட் கலர் ஃபுல் ஹேன்ட் சர்ட்டில்  டக் இன் செய்து பக்கா  பார்மலாக  அம்சமாய்  வந்து நிற்பவனை விழியகலாது அவளும் பார்த்திருந்தாள்.

அந்த நேரத்தில்தான் தன்விக்கு பின்னால் கீழிறங்கி வந்த அநேஷ்வி வருண், தன்வி இருவரும் விழிகளாலேயே ஒருவரை ஒருவர் விழுங்குவதைக் கண்டு தனக்குள்ளே புன்னகைத்துக் கொண்டவள் தன்வியின் அருகில் வந்து  லேசாக அவளது தோளை இடிக்க அதில் தன்னுணர்வு பெற்ற தன்வி  தன் கண்களை சிமிட்டி தன்னை சமன்படுத்திக் கொண்டு அங்கிருந்து நகர முயன்றாள். வருண்  அப்போதும் விடாது அவளை பார்வையால் பின் தொடர்ந்தவன் ஹாலுக்கு வந்து நின்று,

“ சார் நா கெளம்பி வந்துட்டேன்”  என்றான்.

“ இங்க பாரு வருண்  இவ்வளவு நாளும் அங்கிள்னு தானே கூப்புட்ட இன்னைக்கு என்ன   சார்ன்னு கூப்பிடுற?  எப்பவும் போல அங்கிள்னு  கூப்பிடு ப்பா” என்றார்.

“ இவ்வளவு நாள் நீங்க என்னோட பிரண்டோடு  அப்பா அதனால அங்கிள்னு கூப்டேன். ஆனா  இப்ப என்னோட பாஸ் இல்லையா!  சோ நா  சார்ன்னே  கூப்பிடுறேன், அது தான் கரெக்டா இருக்கும்  வீட்ல வேணா அங்கிள்னு  கூப்டுறேன், ஆபீஸ்ல சார்னு  தான் கூப்பிடுவேன். ஓகே அங்கிள்  நீங்க சாப்பிட்டு வாங்க நான் வேணும்னா வெளியில் வெயிட் பண்றேன்?” என்றான்.

“  இல்ல வருண் ஹால்லயே இரு  அவ்ளோதான் சாப்பிட்டு முடிச்சிட்டேன்  ரெண்டு பேரும் சேர்ந்தே போலாம்,  டேபிள்ல சில ஃபைல்ஸ் இருக்கு அதெல்லாம் கரெக்டா இருக்கான்னு  பாரு” என்றிட. 

வருணும்  அந்த பைலை எடுத்து சரி பார்க்க ஆரம்பித்தான்.அவனுக்கு நேர் எதிராக இருந்த டேபிளில் அமர்ந்து உணவு உண்ணத் தொடங்கினாள் தன்வி.  அவ்வப்போது அவளது பார்வை வருணைத் தீண்டிடவும்  மறக்கவில்லை. அவனும் ஓரவிழியால்  அவளைத்தான் பார்த்திருந்தான்.

மற்ற  இருவரும் உணவில் கவனமாக இருக்க,  அவர்களுக்கு பரிமாறுவதில் தன் கவனத்தை பதித்திருந்தார் பூரணி.  அப்போது தட்டில் வைத்த இட்லியை வாய் அருகே கொண்டு சென்றவள் அதை உண்ணாமல் அருணை  வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் தன்வி. ஏனோ இன்று அவன் படிய வாரியிருந்த   கேசமும் கூட அவனது முகத்தின் வசீகரத்தை கூட்டியது.  ஃபைலினை   பார்த்துக் கொண்டிருக்கும் போது அவன் புருவ மத்தியின் சுளிப்பும்,  எதையோ  சிந்திக்கும் போது அவன் இதழ் சுழிப்பும் இன்னும்  இன்னுமே அவனை வசீகரமாய் காட்ட விழி அகலாது அவனையே  பார்த்தாள் தன்வி.ஏதோ ஒன்று தன்னைத்  துளைப்பது  போல் உணர்ந்த வருண் சட்டென்று நிமிர்ந்து அவளது நேர்கொண்டப் பார்வை சந்தித்தவன் ஒரு நிமிடம் திணறித்தான் போனான்.

அவளது துளைக்கும் பார்வையினை எதிர் கொள்ள முடியாமல் திணறி மூச்சு முட்டுவது போல் உணர்ந்தவன் அவளை விழியசைவில் என்னவென்று கேட்க அவளோ ஒன்றும் இல்லை என்று தலையசைத்துக் குனிந்து கொண்டாள். நொடிகள் கழித்து  மீண்டும் அவள் நிமிர்ந்து பார்க்க இப்போது அவன் அவளை விடாது பார்த்திருந்தான்.

ஒரு வழியாக அவர்கள் மூவரும் சாப்பிட்டு விட்டு வந்ததும் வருணும்  அவர்களோடு கிளம்பினான்.  அனைவரும் வாசலுக்கு வந்தபோது திடீரென்று மதனுக்கு ஒரு அழைப்பு வர ஓரமாக சென்று பேசிவிட்டு வந்த அவரது முகம் சட்டென்று பதற்றம் அடைந்திருந்தது.வருண்  என்னவென்று கேட்க,

“ வருண்  எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு,  எப்போதும் இதையெல்லாம்  பிரபா தான் எனக்கு ஞாபகப் படுத்துவான்,  இன்னைக்கு அவன் இல்லாம  ரொம்ப கஷ்டப்படுறேன்.  ஆனா இனிமே நீ இருக்கியே அதனால எனக்கு கவலையும் இல்ல.   சரி நீ ஆபீசுக்கு போ நான் போய் என்னன்னு பார்த்துட்டு வர்றேன். மீட்டிங் நம்ம ஆபீஸ்லயா இருந்தா கூட பரவால்ல, வெளியில, சோ  அதை நா முடிச்சுட்டு எப்படியும்  சீக்கிரமே வந்துடுவேன் அதுவரைக்கும் நீ மேனேஜ் பண்ணிக்க ”  என்று சொன்னவர் தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

வருணும் அவர்கள் இருவரையும் தானே  கல்லூரியில் விட்டுவிட்டு அலுவலம் செல்கிறேன் என்று சொல்ல.

“ இல்ல நாங்க ரெண்டு பேரும்  ஸ்கூட்டிலையே   போய்டுறோம் ”  என்றாள் அநேஷ்வியா. ஆனால் அப்போது தான் வருண் விழிகளாலேயே  அவளிடம் கெஞ்சலாக ஏதோ சொல்ல முனைவதைக் கண்ட அநேஷ்வியா  ஏதோ நினைவு வந்தவளாக,

“ தன்வி  நீ அண்ணா கூட காலேஜ் வந்துடு எனக்கு கொஞ்சம் முக்கியமான ஒர்க் இருக்கு,  நான் வர லேட் ஆயிடுச்சுன்னா  என்ன பண்றது அதான்.‌ நீ எனக்காக  ஒன் அவர் பர்மிஷன் கேட்டுடு, இல்லன்னா பர்ஸ்ட் ஹவர்  நானு லீவ்னு  சொல்லிடு ” என்று சொல்ல.தன்வி தலையாட்டலோடு முன்புறம் ஏறிக்கொள்ள அவளறியாமல்  அநேஷ்விக்கு  நன்றி சொல்லிவிட்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான் வருண்.

அவர்கள் இருவரையும் பார்த்ததும் ஏனோ தானும் மித்ரனும் இது போல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருள் எழுவதை அவளால் தடுக்க முடியவில்லை.  எனவே முயன்று அந்த எண்ணைத்தை ஒதுக்கித் தள்ளியவள் தன் இரு சக்கர வாகனத்தில் கல்லூரிக்கு கிளம்பினாள்.

கண்ணில் தென்படும் 

ஆடவர்  எவரும் 

நீயாகிப்போனாயடா.!!

விழிகள் சந்திக்கும் 

ஒவ்வொரு காட்சியும்

என்னோடு உனை 

இணைத்தே

நிஜமாகிடாதா?

 

உடல் தீண்டும் 

குளிர்காற்றும் 

ஏனோ? 

உனை தீண்டி 

எனை சேராதா?

வழிப்பாதை யாவும்

 உன் தடத்தை 

எனக்காய் 

பரிசளிக்காதா? 

நகர்ந்தேறும் 

வாகனம்  யாவும் 

உனை சுமந்து 

எனைச் 

சேர்ந்திடாதா?

புலர்ந்திட்ட விடியல் யாவும் உன் வரவை அறிவித்து என் தவிப்பை நீக்கிடாதா? 

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by Ramyachandran

சருகாக மாறிடும் இலைகளைப் போன்று மாறிடாமல்,  மண்ணில் முட்டி மோதி , எதிர்வரும் சூழல்களை சமாளித்து துளிர்த்து வேர் விட்டு தழைத்து செழித்தோங்கிடும் விதைகளைப் போல் தன்னம்பிக்கையோடு போராரிட முனைந்திடும் பாவையிவள்....

Story MakerContent Author

தென்றலே என்னை தீண்டிடு 19-21

விழிகளிலே ஒரு கவிதை 48