in , , , , , , ,

அடேய் விநாயகா..! 8

அடேய் விநாயகா..!

அத்தியாயம் 8

சிவகாமி, “நந்தினி, எங்க விஷ்வா சொல்றதை விடு. உனக்கு அவனைப் பிடிக்குமா? பிடிக்காதா?”, எனக் கேட்க

அதற்கு நந்தினி சைகையில், “பிடிக்கும்! ரொம்பவே பிடிக்கும்.”, எனச் சொன்னாள்.

சிவகாமி, “உங்க அப்பா, அம்மா, சொந்தம், பந்தம் என யாராவது இருக்காங்களா?”, எனக் கேட்டார்.

நந்தினி அதே சைகையில், “இல்ல”, எனச் சொல்ல

விஷ்வா, “அண்ணி அவளுக்கு நா இருக்கேன். நமக்கு நம்ம குடும்பமே இருக்கு. நீங்க தான் எங்க விஷயம் அண்ணா, அம்மாவிடம் பேசி கல்யாணத்துக்குச் சம்மதம் வாங்கித் தரணும். பிளீஸ்!”, எனக் கெஞ்சி கேட்டார்.

ஆனால் நந்தினி, “வேண்டாம்! வேண்டாம்! கல்யாணம் வேண்டாம்!”, எனச் சைகையில் சொல்லி கை அசைக்க

வினய், “சித்தப்பா, சித்திக்குக் கல்யாணத்தில் விருப்பம் இல்ல போல. நீங்க பேசாமல் வெளிநாட்டுக் கலாச்சாரம் ஃபாலோ பண்ணி ஒரே வீட்டில் வாழுங்க.”, எனச் சொல்லி அவன் அம்மாவிடம் கொட்டு வாங்கினான்.

சிவகாமி, “விநாயக்! இதுக்கு மேல் ஒரு வார்த்தை பேசினே செம அடிவாங்க போற. யோசனை சொல்றான் பார்! யோசனை! கல்யாணத்துக்கு முன்னாடியே சேர்ந்து வாழ சொல்லி. ஐந்து வயசு பையன் மாதிரியா பேசுற. எங்கிருந்து டா இதெல்லாம் தெரிந்து வச்சிருக்கே?”, எனக் கோபத்தில் கேட்க

வினய், “போங்க மா! என்னை ரொம்பவே புகழ்ந்து பேசுறீங்க.”, என வெட்கப்பட்டுச் சொன்னான்.

சிவகாமி, “புகழ்ச்சி வேண்டாமா? அப்போ சரி வா. அம்மா உன் பேச்சுக்கு பரிசா நாலைந்து அறை கன்னத்தில் வைக்கிறேன்.”, எனச் சொல்லி அவனை நெருங்க

வினய் ரெண்டடி பின் நோக்கி சென்று, “எதுக்கு? எதுக்குன்னு கேட்கிறேன்? நீ பேசிட்டு இருக்காங்க. நா ஆஷா, அவ அம்மா கூடப் போய்ப் பேசிக்கிட்டு இருக்கேன்.”, என ஓடி விட்டான்.

தன்னருகே ஓடி வந்தவனைப் பார்த்த ஆஷா, “வினய், என்னடா ஆச்சு? யார் அந்த அங்கிள்? ஆன்ட்டி?”, எனக் கேட்டாள்.

வினய், “ஓ! உனக்குத் தெரியாதுல? அவர் என் சித்தப்பா. அவங்க பக்கத்தில் இருக்கிற ஆன்ட்டி அவங்க லவ்வர். இன்னும் கொஞ்ச நாளில் அவரைத் தான் என் சித்தப்பா கல்யாணம் பண்ணிக்கப் போறார். அப்போ, அவங்க என்னோட சித்தி.”, எனச் சொல்லி சிரித்தான்.

ஆஷா, “அப்படியா? லவ், லவ்வர், கேர்ள் ஃபிரண்ட், பாய் ஃபிரண்ட் இதெல்லாம் என்ன? படத்தில் அடிக்கடி சொல்றதை கேட்டு இருக்கேன்.”, எனக் கேட்டாள்.

வினய், “லவ், லவ்வர் எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிற முறை. கேர்ள் பிரெண்ட், பாய் ஃபிரண்ட் என்றால் பெஸ்ட் பிரெண்ட் மாதிரி. நான் பாய், நீ கேர்ள். நா உனக்குப் பாய் ஃபிரண்ட், நீ எனக்குக் கேர்ள் பிரெண்ட்.”, என விளக்கம் கொடுத்தான்.

ஆஷா, “ஓ! அப்போ ப்ரீத்திக்கும் நீ பாய் ஃபிரண்ட். சரியா?”, எனக் கேட்டாள்.

வினய், “ஆமா! ஆமா! அவளும் என் ப்ரெண்ட் தான்.”, என்றான்.

நிஷா (ஆஷாவின் அம்மா), ‘இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு விளையாட்டு ஓவரா போச்சு. இந்த வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தம் இன்னும் கொஞ்ச வருசத்துல தெரிஞ்சுப்பங்க. அதுவரை அதற்கான அர்த்தம் சொல்லு குழந்தைகளின் மனசை குழப்ப வேண்டாம்.’, என நினைத்து அமைதி காத்தார்.

சிவகாமி தன் மகன் வினய்யை அவன் சித்தப்பாவோடு பைக்கில் வர சொன்னவர் நந்தினியை தங்களோடு வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார்.

வீட்டுக்கு வரும் வழியில் தன் சித்தப்பாவோடு பேசிக்கொண்டு வந்த வினய், “ஏன் சித்தப்பா சோகமாக இருக்கீங்க? அம்மா என்னைக் கொட்டிய மாதிரி உங்களின் கொட்டிட்டாங்களா?”, எனக் கேட்டான்.

விஷ்வா, “ச்சே! ச்சே! இல்லடா குட்டி. உன் நந்தினி சித்தியை உங்க பாட்டி ஏற்றுக்கொள்ள வேண்டுமே பயம்.”, எனச் சொன்னவர் ஒரு வலி நிறைந்த சிரிப்பு சிரித்தார்.

வினய், “ஏன் பாட்டி வேண்டாம் சொல்ல போறாங்க? சித்தி பார்க்க சினிமா நடிகை மாதிரி நல்லா தான் இருக்காங்க. உங்க ஜோடி பொருத்தம் கூடச் சூப்பர்.”, என்றான்.

விஷ்வா, “உனக்குப் புரியாது டா குட்டி. இது பெரியவங்க விஷயம்.”, என்றார்.

வினய், “யாருக்கு புரியாது? எனக்கு ஐந்து வயசு ஆச்சு. கார்த்திப் பிறந்த போதே அப்பாவும், அம்மாவும் சொன்னாங்க. ‘விநாயக் செல்லம், நீ பெரிய பையன் டா. இனி உன் தம்பியை நீ தான் நல்லா பார்த்துக்கணும்’, என்றெல்லாம் சொன்னாங்க. அதனால் நீங்க உங்க பிராப்ளம் என்னன்னு சொல்லுங்க சித்தப்பா. நா தீர்த்து வைக்கிறேன்.”, என்றான்.

விஷ்வா, “சரிடா பெரிய மனுஷா, சொல்றேன். உங்க நந்தினி சித்திக்குச் சொந்தம் சொல்ல யாருமே இல்ல குட்டி. அவங்க நம்ம சூப்பர் மார்கெட் ல வேலை செய்யும் சாதாரணப் பொண்ணு, வாய் பேச வராத குறை வேற இருக்கா? அதெல்லாம் காரணமாக வைத்து உங்க பாட்டி இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்ல மாட்டாங்களோ? ஒரு சின்னப் பயம்.”, என்றார்.

வினய், “சித்தப்பா, நீயே அவங்க குறை குறையாகப் பார்க்கும் போது. பாட்டி பார்த்தால் தப்பு இல்லயே?”, எனச் சொல்லி கோபத்தில் அவன் சித்தப்பாவின் முதுகை கிள்ளினான்.

விஷ்வா, “குறை சொல்லல டா குட்டி. என் நந்தினி என் உயிர் டா. அவ எப்படி இருந்தாலும் உன் சித்தப்பாவுக்கு ஓகே தான். இந்தக் காதலில் குறை எல்லாமே நிறை தான், உண்மையா இருக்கும் வரை.”, என்றார்.

வினய், “அது என்ன காதலோ? ஃப்ரெண்ட்ஷிப் விட அது சூப்பரா?”, எனச் சந்தேகம் கேட்டான்.

விஷ்வா, “இந்தக் காதல் கூட ஒரு விதத்தில் ஃப்ரெண்ட்ஷிப் தான் குட்டி. எங்க உறவுக்கு நட்பே முதல் அடித்தளம். அப்பறம் தான் அவ குணத்தில் இன்னும் பிடித்துப் போய்க் காதலிக்க ஆரம்பித்தேன்.”, என்றார்.

அதற்கு மேல் அவர்கள் எதுவும் வீட்டுக்கு போகும் வரை பேசிக்கொள்ள வில்லை. விஷ்வாவிற்குத் தன் அம்மா நந்தினியை பார்த்து என்ன சொல்வார்களோ? என்ற பயத்தில் இருந்தார். வினயோ தன்னால் ஏதாவது உதவி செய்ய முடியுமா? என்கிற யோசனையில் இருந்தான்.

                      ****************

ஹிந்து கடவுள் கிரகத்தில்…

சக்தி, “சுவாமி, அந்த நந்தினி பெண்ணின் விதி தான் என்ன? இந்தப் பிறவியில் இவள் ஊமையாக இருப்பதற்கும், இவளின் முன் ஜென்ம செயலுக்கும் ஏதாவது சம்மந்தம் உள்ளதா?”, எனக் கேட்டார்.

சிவன், “இருக்கு சக்தி. இவளின் முன்ஜென்மத்தில் சிறு குழந்தைகள் எனக் கூடப் பார்க்காமல் நாக்கை வெட்டி, அந்தக் குழந்தைகளை ஊமையாக்கி பிச்சை எடுக்க வைத்தாள். அதன் பலன் தான் இப்போ இவள் பிறவி ஊமையாக இருப்பது.”, என்றார்.

சக்தி, “இப்படிப்பட்ட பெண்ணுக்கு என் மகன் உதவுவதா..? கூடாது! நீங்க ஏதாவது செய்து அவனைத் தடுக்க வேண்டும் சுவாமி. ஒருவேளை அவளின் விதியை மாற்ற நமது விநாயகன் அவளுக்குப் பேசும் திறனை கொடுத்து விட்டால்? கூடவே கூடாது”, எனச் சினத்தில் கத்தினார்.

சிவன், “நாம் கையில் எதுவும் இல்லயே சக்தி. இனி விநாயகன் முடிவு தான் எல்லாமே உள்ளது. என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதனை முன்கூட்டியே முடிவு செய்து தான் பிறந்துள்ளான். அவன் எடுத்த முடிவை ஈசன் என்னால் கூட மாற்ற இயலாது.”, என்றார்.

                           **************

விஷ்வாவும் வினய்யும் அவர்கள் வீட்டை நெருக்கும் நேரத்தில் பிரீத்தியும் மேரியும் அவர்களின் வீட்டுக்கு வெளியே பயத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.

தன் சித்தப்பாவை வீட்டுக்குப் போகச் சொன்னவன் ஆஷாவோடு ப்ரீத்தியை நோக்கி சென்றான்.

வினய், “ப்ரீத்தி என்ன ஆச்சு?”, எனக் கேட்க

ப்ரீத்தி, “எங்க வீட்டில் எலி ஒண்ணு புந்து தொல்லை பண்ணுது. எலி பொறி வச்சு கூட அது மாட்டால.”, என்றாள்.

வினய், “அப்படியா? சரி. நா போய்ப் பிடிச்சுட்டு வரேன்.”, என்றவன் தன் கூடவே ஆஷாவையும் கூட்டி கொண்டு அந்த வீட்டுக்குள் சென்றான்.

அடுத்த அரைமணி நேரத்தில் சில பல போராட்டத்துக்குப் பிறகு அந்த எலியை பிடித்து ஒரு எலி பொறியில் அடைத்தார்கள்.

வினய், “ரொம்பவே ஆடிட்டே எலி. இரு! இரு உன்னை எங்க ஏரியா பூனைக்குத் தினியா போடுறோம்.”, எனச் சொல்லி மிரட்டினான்.

ஆஷா, “ஆமா! ஆமா! போடுறோம்.”, என்றாள்.

மேரி கடமைக்கு அவர்கள் இருவருக்கும் “நன்றி” எனச் சொல்லி விட்டு வீட்டுக்குள் செல்ல

ப்ரீத்தி அவர்களிடம் வந்து, “இதை என்ன பண்ண போறீங்க?”, எனக் கேட்டாள்.

வினய், “நானே என் செல்ல பிராணியாக வளர்க்க போற.”, என்றான்.

அவன் தோழி இருவருமே அதற்கு என்ன பெயர் வைக்கப் போவதாகக் கேட்டனர்.

அதற்கு வினய், “எலியன்”, என்றான்.

                   *************

விநாயகருக்கு எலி வாகனம் ஆனது எப்படி எனத் தெரியுமா?

கந்தர்வர்களின் மன்னன் பெயர் கிரவுஞ்சன். விநாயகரின் பக்தனும் கூட! கந்தவர்கள், நினைத்த மாத்திரத்தில் ஆகாய மார்க்கமாக எங்கு வேண்டுமானாலும் செல்லும் திறனுடையவர்கள். அதன்படி ஒருநாள் இமயமலைச்சாரல் வழியாக ஆகாய மார்க்கத்தில் சென்று கொண்டிருந்தான் கிரவுஞ்சன்.

 திடீரென்று பூமியில் ஓரிடத்தில் ஏதோ ஒன்று அவனது கண்களை வசீகரிக்க. அப்படியே நின்றான். அந்த இடத்தை நோக்கிப் பார்வையைச் செலுத்தினான்.

“ஆஹா… என்னவொரு அழகு?’ என்று தன்னை அறியாமலேயே புகழ்ந்தான். அவன் புகழ்ந்தது ஓர்அழகான இளம் பெண்ணை. அதுவும், ஒரு ரிஷி பத்தினியை…! அவள் பெயர் மனோரமை. சவுபரி என்ற முனிவரின் மனைவியான அவள் மிகவும் பேரழகி.

எவ்வளவு பேரழகியாக இருந்தாலும், எளிமையாக இறைபக்தியோடு வாழ்ந்து வந்தாள் அவள்.

தனது குடிலில், செடியில் இருந்து பறித்த பூக்களை அவள் மாலையாகத் தொடுத்துக் கொண்டிருந்த போதுதான் கிரவுஞ்சன் பார்வையில் சிக்கிவிட்டாள்.

அவளது அழகில் மயங்கிய அவன் அவளது குடிலுக்கு வந்தான். அவனைப் பார்த்த மாத்திரத்தில் சட்டென்று எழுந்து விட்டாள் மனோரமை.

எதிரில் வருவது யார்? என்பது தெரியாததால் குழப்பமான பார்வையை அவன் மீது வீசினாள்.

ஆனால், அவனோ போதை தலைக்கேறியவன்போல் அவளது அழகை ரசித்தபடியே நெருங்கினான்.

இப்போது அவளை மிகவும் அருகில் நெருங்கி விட்டான். ரிஷி பத்தினிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

மனோரமை, “தாங்கள் யார் என்று தெரியவில்லை. என் கணவரும் இப்போது இங்கே இல்லை. தங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டாள்.

அவளிடம் பதில் சொல்லும் நிலைமையிலா இருந்தான் கிரவுஞ்சன்? அவளது அழகைப் பருகிய மாத்திரத்தில் போதையில் அல்லவா திளைத்துக் கொண்டிருந்தான்?

மனோரமை கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வதற்குப் பதிலாக, பார்வையாலேயே தின்று விடுவதுபோல் அப்படியொரு பார்வை பார்த்தான்.

கூனிக் குருகி, லேசாகத் தலை குனிந்து நின்றிருந்தாள் மனோரமை. பருவச்செழிப்பு அவளது மேனியில் நிறையவே கொட்டிக் கிடந்தது. அவளது மீனைப் போன்ற விழிகளும், சிவந்த கன்னங்களும், சிறுத்த இடுப்பும், வாழைத்தண்டுக் கால்களும் அவனை என்னமோ செய்தன.

வேகமாக அவளது கையைப் பற்றியவன், தன் மார்போடு இறுக அணைத்தான்.

இதைச் சிறிதும் எதிர்பார்க்காத மனோரமை அவன் பிடியில் இருந்து விடுபடத் திமிறினாள்.

மனோரமை, ‘உதவி… உதவி…’ எனக் கத்தினாள்.

குடிலை நெருங்கிக் கொண்டிருந்த சவுபரி முனிவர், தனது பத்தினி மனைவியின் அலறல் கேட்டு அங்கே வேகமாக ஓடி வந்தார்.

தனது மனைவியை ஒரு கந்தர்வன் கவர முயன்று கொண்டிருப்பதைக் கண்ட அவர் கோபத்தில் பொங்கியெழுந்தார்.

சவுபரி முனிவர், “அடே கந்தர்வா…” என்றவரின் கொந்தளிப்பான குரலில் திடுக்கிட்டு நின்றான் கிரவுஞ்சன். அப்போதுதான் அவனுக்குச் செய்த தவறு நினைவுக்கு வந்தது.

மனோரமையைத் தனது பிடியில் இருந்து விட்டுவிட்டு முனிவர் பக்கம் திரும்பினான்.

முனிவரின் கண்கள் கோபத்தில் கொப்பளித்துக் கொண்டிருந்தன. அடுத்த நொடியே அந்த முனிவர், “எந்த ஆடவனையும் ஏறெடுத்துப் பார்க்காத என் தர்ம பத்தினியின் கையைப் பிடித்து இழுத்து, அவளை அடைய முயன்ற உன்னை மன்னிக்கவே முடியாது. இப்போதே நீ, மண்ணைத் தோண்டி வளையில் ஒளியும் பெருச்சாளியாக மாறுவாயாக…” எனச் சபித்தார்.

கிரவுஞ்சனுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. தான் செய்த தவறை உணர்ந்து, “என்னை மன்னித்து விடுங்கள் முனிவரே! தங்கள் தர்ம பத்தினியின் பேரழகு என் கண்களை மறைத்து விட்டது. அவளது அழகில் மங்கி, இப்படியொரு தவற்றைச் செய்யத் துணிந்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு அளித்த சாபத்தைத் திரும்பப் பெறுங்கள்…” என்றபடி அந்த முனிவரின் காலில் விழுந்து கண்ணீர் விட்டு அழுதான்.

முனிவர், “தவறு செய்தவன் தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும். ஆனாலும், உன் மேல் எனக்கு இரக்கம் ஏற்படுகிறது. கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெற முடியாது. நிச்சயம் நீ பெருச்சாளியாக மாறித்தான் ஆக வேண்டும்”, என்றார்.

கிரவுஞ்சன், “அப்படியென்றால், எனக்குப் பாவ விமோசனமே கிடையாதா?”, எனக் கேட்க

முனிவர், “கண்டிப்பாக உண்டு. அந்த விநாயகப் பெருமான் உன்னைக் காப்பாற்றுவார்.” என்றார்.

அடுத்தநொடியே மிகப்பெரிய பெருச்சாளியாக மாறிய கிரவுஞ்சன் காட்டுக்குள் ஓடினான்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன.

அதே பகுதியில் புத்திர பாக்கியம் வேண்டி தவம் இருந்த ஒரு மகாராணிக்கு ஐங்கரனாக அவதாரம் பிறந்த விநாயகரும் அவதரித்தார்.

ஒருநாள் பெருத்த அட்டகாசத்தில் ஈடுபட்ட கிரவுஞ்ச பெருச்சாளி மீது தனது பாசக்கயிற்றை வீசினார் விநாயகர். அதில் சிக்கிக்கொண்ட பெருச்சாளியால் தப்பிக்க முடியவில்லை. அப்போதுதான் அதற்கு, தன் மீது பாசக்கயிற்றை வீசியது விநாயகர் என்பது புரிந்தது. தனது செயலுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டது.

கருணையே வடிவான விநாயகர் கிரவுஞ்ச பெருச்சாளியை மன்னித்தார். பின் அதைத் தனது வாகனமாகவும் ஏற்றுக் கொண்டு அருள் வழங்கினார்.

இப்படித்தான் விநாயகப் பெருமானுக்கு எலி வாகனமானது.

                      ****************

வினய் வைத்த பெயர் கேட்க நன்றாக இருப்பதாகச் சொன்ன அவன் தோழிகள் அதற்குப் பெயர் சூட்டு விழாவை எளிமையாக நடத்தினர்.

“எலியன்.. எலியன்.. எலியன்..” என மூன்று முறை அதன் பொறி அருகே குனிந்து சொல்லி பெயர் சூட்டி முடித்தனர்.

ப்ரீத்தியின் அம்மா அவளைச் சாப்பிட அழைத்துக் கொண்டு போக, ஆஷா தன் வீட்டுக்கு சென்று சாப்பிட்டு வரேன் சொல்லிட்டு போக, வினய் அந்த எலி பொறியோடு வீட்டுக்குள் செல்லும் நேரத்தில் அந்த எலியே பேச ஆரம்பித்தது.

எலியன், “சுவாமி, என் வணக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். நான் தான் உங்க மூசிகன், தங்களின் வாகனம். இப்பிறவியில் எப்படியோ தங்களிடம் வந்து சேர்ந்து விட்டேன். நான் வந்தவுடன் தங்கள் வாயால் எலியன் என்ற பெயரும் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி சுவாமி! மிக்க மகிழ்ச்சி”, என்றது.

ஓர் எலி தன்னிடம் பேசுவதைப் பார்த்து நம்ப முடியாமல் பார்த்தவன், “அடேய் விநாயகா..!”, எனத் தன் அதிர்ச்சியே எப்போதும் போல அவன் வெறுக்கும் கடவுள் விநாயகனை திட்டும் வாக்கியத்தில் முடித்தான்.

இப்படிக்கு,

உங்கள் நண்பன்,

🏹விஜயன்🏹

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

காதல்

தவறிய பனிமலர் 28