in , , , ,

12 நினைவைத் தேடும் நிலவே

பதிவு 12

           ” லூசாடா நீ? என் அண்ணன கடத்திட்டு போய் கட்டி வச்சு கொல்லப்போறேன்னு சொல்லிட்டு இருக்க? வீட்டுக்கு போகவேண்டிய புள்ளய இழுத்துட்டு வந்து எங்கயோ வச்சுட்டு மெரட்டிட்டு இருக்க, எங்கம்மா இந்நேரத்துக்கு என்ன காணோம்னு வாசல வாசல பாத்துட்டு இருப்பாங்க தெரியுமா.. எங்கப்பா வரவும் லேட் ஆகும்.. எனக்கு வேற அஞ்சு மணியானாலே பசிச்சுடும்… இத்தன பிரச்சனைய எனக்கு குடுத்துட்டு ஏன் அழுகுறன்னு கேட்குற வெண்ணவெட்டி… ஒழுங்கு மரியாதையா என் அண்ணன விட்டுட்டு, என்னயும் எந்த எடத்துல ஏத்திக்கிட்டியோ அதே எடத்துல எறக்கிவிடுற… ஏன்டா இப்ப சிரிக்கிற?…” என்று அவள் பொறிய அவனுக்கு அவளை ரொம்பவே பிடித்துதான் போனது…

             அவனுடைய மண்ணில் எப்பேற்பட்ட லாடுலபக்குதாஸாக இருந்தாலும் அவனை பார்த்தால் பம்மிக்கொண்டு பேச, இவள் என்னவென்றால் பார்த்த நொடிதனில் இருந்தே அவனை போடா வாடா என்று வார்த்தையாலே வறுத்தெடுத்துக்கொண்டிருக்கிறாள்… யோசிக்காது அவனை அடிக்கவும் செய்துவிட்டு பட்டப்பெயரையும் வைத்து அழைத்துக்கொண்டிருக்கிறாள்… விளையாட்டிற்கு தான் அவளிடம் புருஷன் என்று சொல்லிக் கொண்டது… ஆனால் இப்பொழுது உண்மைக்குமே அப்படியானால் என்ன? என்ற ஆசை மனதில் தோன்ற, தன் எண்ணம் தவறென்று தலையை அசைத்துக்கொண்டாலும் ஆசைப்பட்டதை அடைந்தே பழக்கப்பட்டவன் நிலாவையும் தன்னவளாகவே ஆக்கிக்கொள்ள ஆசைப்பட்டான்… 

  

          ‘டேய் சித்.. உன் தங்கச்சியோட வாழ்க்கைக்காக வந்தாயா இல்லை…’ என்று நக்கலாக கேட்ட மனதிடம் போராடி ஒருவழியாக அதன் போக்கிலேயே தங்கைக்காக தான் என்ற தீர்மானத்தோடு அவளைப் பார்க்க, நிலா இன்னமும் புலம்பியபடியே தான் இருந்தாள்…

“ஏய் பானிபூரி. நீயென்ன கண்ண தொறந்துட்டே கனவு கண்டுட்டு இருக்கியா? நான் என் அம்மாட்ட போணும், எனக்கு அஞ்சு மணி ஆனாலே பசி வந்துடும். ஏய்ய்ய் இங்க பாரு, அடிங்க் சொல்லிட்டே இருக்கேன் இவன் என்னப்பண்றான் இப்போ! ஒருவேளை தூங்கிட்டானா?…” என்று கேட்க அவனிடம் இருந்து சட்டென்று பதில் வந்தது…

             “அப்பப்பா என்னமா கத்துற நீ? காது அடைக்குது…” அவன் சொல்ல நிலாவிற்கு அவன் மீது இருக்க இருக்க கோபம்  அதிகமாகிக்கொண்டே போனது…

             “என்ன கத்துறேனா! டேய் உனக்கே நியாயமா இருக்கா? நாலறை ஆனா டான்னு வீட்டுக்கு போற புள்ளய, சாக்கே இல்லாம கடத்திட்டு வந்துட்டு கத்துறேன்னா சொல்லுற? எனக்கு நேரம் ஆகிட்டே இருக்கு. எங்கம்மா தேடுவாங்க. எனக்கு வேற…” எனும்போழுதே அவன் சொன்னான்…

            “அஞ்சு மணியான பசி வந்துடும்… அதானே?…”

           “கிண்டலா பண்ணுற? உன்ன….” என்றவள் அமர்ந்த இடத்தில் இருந்தே எதையோ தேட, கைக்கு கிடைத்த அதே வாட்டர் பாட்டிலை எடுத்து மறுபடியும் அவன் தலையில் நங்குநங்கென்று அடிக்க, அவனுக்கு அது வலித்தால் தானே! சிரித்தபடியே கேட்டான்…

            “இப்ப ஒனக்கு என்ன தான் வேணும்? அஞ்சு மணியானா பசிச்சுடும் அவ்ளோ தானே. வா பக்கத்துல இருக்க ஹோட்டலுக்கு போயி சாப்பிடலாம்…”

           “அதலாம் எனக்கு ஒன்னும் தேவயில்ல… ஒருநாள் சாப்பிடாம இருந்தா ஒன்னும் செத்துட மாட்டேன். எனக்கு என் அண்ணன் வேணும்… அவன் எனக்கு பத்திரமா கெடைக்கணும்.. உன்னப்பாத்தாலும் அவ்வளவு கெட்டவன் மாதிரி தெரியல, என் அண்ணன விட்டுடே ப்ளிஸ்…” அவள் சொல்லிக்கொண்டே போக அவன் விழிகள் அவளுடைய உதட்டசைவையே பார்த்துக்கொண்டு இருந்தது… கண்கள் பார்த்து ரசித்ததை உதடுகள் சொல்லத்தான் வேண்டுமா! அவளைப்பற்றி பார்த்த சற்றுநேரத்திலே தெரிந்தும் உச்சரித்தது…

            “க்யூட்…” என்று… அதனை கேட்ட பிறகும் நிலா சும்மா இருப்பாளா! வேப்பிலை அடிக்காமலேயே ஆடித்தீர்த்துவிட்டாள்… 

           “ஏது க்யூட்டா! டேய் லூசுப்பயலாடா நீ! நான் இந்த கத்து கத்திட்டு இருக்கேன் நீ க்யூட்ன்னு சொல்லுற.. இங்கப்பாரு என் அண்ணன விட்டுட்டு என்னையும் நீ எந்த எடத்துல இருந்து இழுத்துட்டு வந்தியோ அதே எடத்துல இறக்கி விடுற… பாவம்டா எங்கம்மா… அதுட்டு போனுல வேற காசு இல்ல.. இன்னைக்கு தான் வீட்டுக்கு போற வழியில பண்ணுவோம்னு காலையில அதுட்ட இருந்த காச ஆட்டைய போட்டுட்டு வந்தேன்… படுபாவி காதுல வாங்குறானானே தெரியலையே… எனக்கு வேற நேரம் ஆக ஆக பசி அதிகம் ஆகுதே…” என்று கத்த அவன் தன்னுடைய ஒரு காதிற்குள் ஒற்றை விரலை விட்டு குடைந்துவிட்டு தொடர்ந்தான்…

             “ரத்தம் வந்துடுச்சோன்னு பயந்துட்டேன்… நல்லவேளை வரல… இப்ப என்ன? உன் அண்ணன விட்டுட்டு உன்னையும் எங்க இருந்து தள்ளிட்டு வந்தேனோ அதே எடத்துல விடணும்… அவ்ளோ தானே!…” 

             “அப்பா தெய்வமே… உனக்கு கோடானகோடி நன்றி… தயவுசெஞ்சு அதப்பண்ணு… நான் எப்பாடுபட்டாவது உன் தொங்கச்சிய லவ் பண்ண வேணாம்னு என் அண்ணன்ட சொல்லுறேன் சரியா?…” என்றவளின் கேள்விக்கு அறைகுறையாக தலையை அசைத்தவன், காரை ஸ்டார்ட் செய்ய நிலாவிற்கு இப்பொழுது தான் கொஞ்சம் நிம்மதியாகவே இருந்தது…

              அடுத்த ஒரு இரண்டு நிமிடங்களுக்கு இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவே இல்லை… அவன் தன் காரை ஓட்டுவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்க இவள் தன் போனில் ஏதோ ஒரு பாடலை போட்டு ஹெட்செட்டில் மாட்டி கேட்டுக்கொண்டே ஓரக்கண்ணால் அவனை பார்த்தபடியே வந்தாள்… டப்பிங் சீரியல்களில் வரும் ஹீரோக்களைப் போலவே இருந்த அவனை பார்க்க பிடித்து தான் இருந்தது…நெற்றியில் சரிந்துவிழும் முடியை அடிக்கடி கைகளால் ஒதுக்கி ஒதுக்கியே அவனுக்கு கைகள் வலிக்குமோ! என்று ஒரு நிமிடம் தோன்ற போனில் பார்வையை ஓட்டியபடியே தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள்…

           ‘ம்ம்ம்… ஹேண்ட்சம் தான்…’ என்று… அடுத்த முறை இன்னுமொரு பாடலை ஓடவிட்டு முன்பைப் போலவே ஓரக்கண்ணால் நோக்கும் போது அவனும் அவளை திரும்பி பார்க்க… ஏதோ எதேச்சையாக பேச வந்தவளைப் போல சொன்னாள்…

            “ஆமா உன் பேரு என்ன சொன்ன?…” என்று கேட்டவளை வினோதமாக பார்த்தவன் அவள் கேட்டதற்கு பதிலை சொன்னான்…

            “அதுக்குள்ள மறந்துட்டியா! என்ன பேபி நீ புருசன் பேரையே மறக்குற? சரி சரி முறைக்காத சொல்லுறேன்…”

            “நீ ஒரு ஆணியும் புடுங்க வேணாம்… உன்கிட்ட போய் கேட்டேன் பாரு என்ன சொல்லணும்…”

           “கோவிச்சுட்டியா பேபி… சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்.. நீ தான் இப்போ என் கட்சி ஆகிட்டியே. வீ ஆர் ப்ரண்ட்ஸ் ஓகே?…” என்று அவன் ஒரு கையால் காரை ஓட்டியபடி இன்னொரு கையை அவளிடம் நீட்ட சட்டென்று தட்டிவிட்டாள்…

  

           “யாருக்கு வேணும் உன் ப்ரண்ட்ஷிப்… என் அண்ணனை கொன்னுடுவேன்னு மெரட்டிட்டு இப்ப ப்ரண்ட்ஸாம் ப்ரண்ட்ஸ்…மண்ட பத்தரம், ஒழுங்கா வாய மூடிக்கிட்டு வா…” என்று அவள் முகத்தை திருப்பிக்கொள்ள, அவன் குறும்புப்புன்னகையுடனே காரை ஓட்டவதில் கவனத்தை திருப்பினான்.. இவள் பழைய மாதிரியே போனை வைத்துக்கொண்டு ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டு இருந்தாள். அதிலேயே மூழ்கியவள் கார் போன திசையைக் பார்க்கவே இல்லை. திடுமென ஏதோ ஒரு நினைவு வந்து வெளியே பார்த்த பிறகுதான் அவளுக்கு தோன்றியது. அந்த வழி அவருடைய வீட்டிற்கு செல்லும் வழி… 

           ‘இவனை யார் இந்த வழியில வர சொன்னது? என்னை ஏத்திக்கிட்டு வந்த இடத்துல தானே இவனை விட சொன்னேன். இப்போ எதுக்கு இந்த வழியா வந்துட்டு இருக்கான்?’ மனதில் தோன்றிய கேள்வியுடனே அவனை அவள் பார்க்க, அவனோ சற்றும் கண்டுகொள்ளாமல் கார் ஓட்டுவதிலேயே கவனமாக இருந்தான்… ‘தெரிந்துதான் செய்கிறானா? இல்லை, தெரியாமலேயே இந்த வழியாக வந்துவிட்டானா ?’ என்று தற்பொழுது தோன்றிய கேள்வியை அவனிடத்திலேயே கேட்டுவிட்டாள்…

            “ஹேய் சிந்துபாத்… இந்த வழியில உன்னை யார் வர சொன்னது?…” அவளின் கேள்விக்கு அவனிடம் இருந்து ஒரே ஒரு பதில் மட்டும் தான் கேள்வியாக வந்தது…

           ” ஏன்?…” என்று கேட்டவனை முறைத்து பார்த்தவள் பரபரப்பாக சொன்னாள்…

           “என்ன ஏன்? உனக்கு தெரியுமா தெரியாதா? என்வீடு இந்த பக்கம் தான் இருக்கு…”அவள் பதற்றத்துடன் சொல்ல அவனிடமிருந்து ரொம்பவும் சாதாரணமாக அந்த பதில் வந்தது…

           “ம்ம்ம், தெரியும்…”

           “வாட் தெரியுமா? தெரிஞ்சும் அப்புறம் ஏன் இந்த வழியில வந்துட்டு இருக்க? யாராவது பாத்துட்டா என்ன ஆகுறது? என் அம்மா மட்டும் உன் கூட வச்சு என்ன பார்க்கட்டும் அப்புறம் அவ்வளவுதான்… அச்சச்சோ அதே வழியில… நிறுத்தாத, நிறுத்தாத, நிறுத்தாத… போச்சு நிறுத்திட்டான்… இனி வெளங்குன மாதிரி தான்…” என்று பம்மிக்கொண்டு அவள் கத்த வாசலிலேயே இவளை காணாது பதற்றத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த அவளுடைய தாய் வள்ளி, மகளின் குரலைக் கேட்டே வாசலில் நின்ற விலையுயர்ந்த காரை பார்த்துவிட்டார்… அவர் வெளியே வரும் நேரத்திற்குள் அவனோ அவளை பார்த்து புருவம் உயர்த்தி சிரிக்க தலையில் அடித்துக்கொண்டான்…

            “சொல்லுற பேச்சே கேட்கமாட்டியா நீ? போச்சு என் அம்மா பாத்துடுச்சு.. இன்னைக்கு எனக்கு சங்கு தான்…” என்று அவள் எச்சில் விழுங்கியபடியே புலம்ப சிரித்தவன் கேட்டான்…

            “பார்றா… நீ பயப்புடவெல்லாம் செய்வியா?…”என்றவனிடம் உறுமினாள்…

           “என் அம்மாவுக்கு மட்டும். ஒருநாள் வள்ளி கையால தொடப்பக்கட்டைல அடிவாங்கிப்பாரு அப்ப தெரியும்… இதுக்கு மேல நான் இங்க இருந்தேன் செவுலு திரும்பிடும்…” என்றபடியே அவள் இறங்க, இவன் அவளுக்கு மட்டுமே கேட்கும்படி கேட்டான்…

                 “ஏய்ய்ய்… வீட்டுக்கு வந்தவன வாசல்லயே நிக்கவச்சு பேசுறியே உள்ள கூப்பிட மாட்டியா?…”

             “எனக்கு மொத்தமா சங்கு ஊத ரெடியாகுறான்… எங்கம்மா வந்து கேட்குறதுக்குள்ள நீயே கிளம்பிடு… இனிமேல் என் மூச்சில நீயும் முழிக்காத நானும்…” எனும்பொழுதே அவள் தாய் வந்துவிட, ஏதோ கால் டாக்ஸியில் வந்தவளைப் போல சாதாரணமாக இறங்கி அவள் வர நிலாவை பார்த்தபடியே வள்ளி காரை பார்க்க, காருக்குள் இருந்தவன் இறங்கியே விட்டான்…

             நிலா எதுவுமே பேசாமல் சமத்து பிள்ளையாக உள்ளே செல்ல யத்தனிக்கும் பொழுதே அவள் முதுகிற்கு பின்னே இருந்து சத்தமாக அவன் குரல் கேட்டு வைத்தது…

            “வணக்கம் ஆன்ட்டி…” அவ்வளவு தான்.. இவள் திருதிருவென விழித்தபடியே அவனை திரும்பி பார்க்க, வள்ளி புருவம் சுருக்கி நிலாவை பார்த்தபடியே சித்தார்த்தை பார்த்தார்…

           “தம்பி நீங்க?…”அவர் கேட்க இவன் வாயை திறக்கும் முன்பே நிலா படபடத்தாள்…

           “என் ப்ரண்ட்ம்மா.. இல்ல இல்ல என் ப்ரண்ட் ரேவதி இருக்காள்ள அவ அண்ணன்…” ஏதோ சமாளித்துவிட்ட நினைப்பில் அவள் இருக்க அவள் தாய் வள்ளியா கொக்கா.. கிடுக்குப்பிடி கேள்விகளை கேட்டார்… ப்பா இந்த அம்மாக்களை சமாளிக்க ஒவ்வொரு பொண்ணும் படுறபாடு இருக்கே… அப்பப்பப்பா…

           “உனக்கு தான் ரேவதின்னு ப்ரண்டே  கிடையாதே…”என்க திருதிருவென விழித்தவள் அடுத்த நொடியிலேயே சொன்னாள்…

          “புது ப்ரண்ட்ம்மா… ஒனக்கு அவ்வளவா தெரியாது.. அப்பா அப்பா பார்த்திருக்கார்” என சொல்ல வள்ளி ஒரு நிமிடம் அமைதியாக, சித் அவளை பார்த்து அப்படியா என தலையை அசைத்து கேட்க,  இவள் கொன்னுடுவேன் என்று தாய் அறியாமல் சைகையில் சொல்ல வள்ளி அடுத்த கேள்வியை கேட்டார்…

           “அதெல்லாம் இருக்கட்டும்.. ஏன் இன்னைக்கு லேட்?…” எனும் பொழுதே அவன் சொன்னான்…

           “சாரி ஆன்ட்டி என்னால தான் அவ லேட்டா வந்துட்டா… ஏதுனாலும் உள்ள போய் பேசிக்கலாமே…” என்று சொல்ல வள்ளியும் தலையசைக்க நிலா வேகமாக சொன்னாள்…

           “நாங்க உள்ள போய் பேசிக்கிறோம்… உங்களுக்கு ஏன் வீண் செரமம்.. நீங்க வேணா போய்ட்டு அப்புறம் வாங்கலே… இல்லையாமா?… ” என அவனை துரத்துவதிலேயே மும்முரமாய் இருக்க, மகளை நினைத்து தாய்க்கு தான் கொஞ்சம் அசிங்கமாக போனது… 

           “நிலா… வீட்டுக்கு வந்தவங்கள விரட்டுறது என்ன பழக்கம்? அவள மன்னிச்சுடுங்க தம்பி.. அவளுக்கு வாய்த்துடுக்கு கொஞ்சம் அதிகம்…” அவர் சொல்ல

         ‘கொஞ்சம் மட்டுமா அதிகம்’ என மனதில் ஒன்றை நினைத்தவன் அதனை வெளிப்படுத்தாமல் பெருந்தன்மையாக சொன்னான்…

           “பரவாயில்லை ஆன்ட்டி…”என்று,

                அடுத்ததாக நிலா மனதிற்குள்ளேயே புலம்புவது புரியாமல், வள்ளி அவனை அழைத்து வந்து உள்ளே அமர வைத்துவிட்டு, அவனுக்கு குடிப்பதற்காக காபி எடுக்க செல்ல இவள் பொறிந்துவிட்டாள்…

            “டேய் பானிபூரி… ஒழுங்கு மரியாதையா ஓடிப்போயிடு… என் அம்மாவுக்கு மட்டும் நீ யாருன்னு தெரிஞ்சது…”

            “அது தெரியும் போது பாத்துக்கலாம் பேபி.. ஆமா ஆன்ட்டியை பத்தி என்னென்னமோ சொன்ன ஸ்வீட்டா தானே இருக்காங்க…” 

   

            “ம்ம்ம்ம், இருப்பாங்க. நீ என் அண்ணன பண்ணி வச்ச கொடுமை மட்டும் தெரியட்டும், கொள்ளிக்கட்டையாலே உன் வாய பொசுக்கிடுவாங்க…”

            “ஏன் பேபி சத்தம் போட்டு காட்டிக்குடுக்குற? நான் தான் நீ சொன்னதுமே விட்டுட்டேனே..”

            “வாயப்புடுங்காத.. இப்பவே சொல்லிட்டேன் கெளம்பிடு…” எனும்பொழுதே வள்ளி காபியோடும் கேள்வியோடும் வந்தார்…

           “என்ன? என்ன கிளம்பணும்?…” என கேட்க அவன் சொல்வதற்குள் அந்த கேடியிடம் இருந்து பதில் பாய்ந்து வந்தது…

           “சாருக்கு லேட் ஆகுதாம்மா.. கிளம்புறேன் கிளம்புறேன்னு சொல்லிட்டே இருக்கார்… இல்லையா சார்?…” என பல்லைக் கடித்தபடியே கேட்க அவன் சட்டென்று சொல்லிவிட்டான் இல்லை என்று….

          ‘அட நாசமத்து போற நாதாரியே… ஏன்டா என்ன படுத்துற? என்னப்பெத்த ஆத்தா கொஞ்சநேரம் தான்டா அமைதியா இருக்கும்.. என்ன இழிப்பு வேண்டிக்கெடக்கு.. குடிச்சுட்டு கெளம்புடா.. இவன் போறதுக்குள்ள என் உசுரு போயிடும் போலயே…’ என நினைத்த நிமிடம் வள்ளி கொடுத்த காபியை நிலாவை பார்த்தபடியே உறிஞ்சியவன், அவள் முகம் போன போக்கை பார்த்துவிட்டு சொன்னான்…

            “ஆன்ட்டி… உங்க பொண்ணு சொன்னமாதிரி நான் ஒன்னும் அவ ப்ரண்டோட அண்ணன் இல்ல…” என சொல்ல நிலா அதிர்ச்சியோடு ‘போட்டுக்குடுத்துட்டானே’ என்றபடி பார்க்க, வள்ளியோ ‘யாருடி இவன்னு’ நிலாவை முறைக்க, அவன் இன்னும் இன்னும் எரிக்கின்ற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றினான்…

             “சாரி ஆன்ட்டி, அங்கிள் வந்ததுக்கு அப்புறம் தான் சொல்லாம்னு பார்த்தேன்… பட் நீங்க ரொம்பவே நல்லவங்களா இருக்கிங்களா அதான் இப்பவே சொல்லிடலாம்ன்னு…” என்று இழுத்தவன் நிலாவையே பார்க்க, நிலா அவன் என்ன சொல்லப்போகிறானோ அண்ணனின் காதலை பற்றி சொல்லி பூகம்பத்தை கிளப்பப்போகிறானோ என்று அதிர்ச்சியோடு நோக்க, அவன் வள்ளியை பார்த்துவிட்டு இயல்பாக சொன்னான்…

             “அவ சொன்னது போல நான் அவ ப்ரண்டோட அண்ணன் இல்ல.. நானும் உங்க பொண்ணு நிலாவும் இரண்டு வருசமா லவ் பண்ணுறோம்.. என் சொந்த ஊரு பெங்களூர். பேஸ்புக் காதல் தான்.. எப்போ எல்லாம் நான் சென்னை வாரேன்னோ அப்போவெல்லாம் நிலாவை கூட்டிட்டு வெளியில போயிட்டு வருவேன்.. எப்பவும் அவ காலேஜ் விட்டு வீட்டுக்கு வர்ற டைம்க்கு கரெக்டா கொண்டு வந்து விட்டுடுவேன்.. இன்னைக்கு தான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு, அதான்…” என்று அவன் ஏதேதோ சொல்லிக்கொண்டு போக நிலாவிற்கு கைகால்கள் எல்லாம் வெலவெலத்துப்போய் ஆட்டம் கண்டது…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 5 சராசரி: 5]

2 Comments

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

போவதெங்கே பொன்நிலாவே

தவறிய பனிமலர் 20