in , , , ,

11 நினைவைத் தேடும் நிலவே

பதிவு 11

           அருகே அமர்ந்திருந்த அந்த பானிபூரி சொன்னதை எல்லாம் ஆச்சரியமாக கேட்டுக் கொண்டே இருந்தவள், நம்ப முடியா பார்வையோடு விழிவிரித்து பார்த்தாள்… இவன் யாரென்றே தெரியாது, இவன் சொல்வதை எல்லாம் வைத்து சொந்த அண்ணனையே சந்தேகிக்க முடியுமா? அதுமட்டுமில்லாமல் விக்ரமை பற்றி அவள் அறியாததா!… அவன் விஷயத்தில் சிறியதாக எது செய்தாலும் கூட தங்கையிடம் ஆலோசிப்பவன், காதல் என்ற பெரிய விஷயத்தை அவளிடம் சொல்லாமல் செய்வானா? என்ற எண்ணத்துடனே  அருகில் அமர்ந்திருந்தவனை துளைக்கும் விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தாள்… அவனை நம்பாமல் முறைத்துக் கொண்டிருந்தவளை பார்த்து விட்டு அவனே தொடர்ந்தான்…

          “இங்க பாரு இப்படியே பார்த்துட்டு இருக்குறதுனால எதுவும் ஆகப்போறதில்லை… எல்லாமே கையை மீறி போயிடுச்சு.. மயிலே மயிலே இறகு போடுன்னா அது போடுமா? தானா உட்கார்ந்து புடுங்க தான் வேணும்னு உன் அண்ணன் எனக்கு பாடம் கற்றுக்கொடுத்துட்டான்…”அவன் இப்படி பேசிக்கொண்டே போக, நிலா அவனை ஒரு மாதிரி பார்த்துவிட்டு சொன்னாள்..

           “யாருக்கிட்ட காது குத்துற? என் அண்ணன் உன் தங்கச்சிய லவ் பண்றானா? இங்க பாரு அவன் எல்லாம் ஒரு பொண்ணு தானா வந்து பேசினாலே ஓடி ஒளிஞ்சிருக்க கேரக்டர்.. அவன் ஒரு பொண்ண போயி… 

லவ் பண்ணி… நம்புற மாதிரி கதை சொல்லு என்ன? பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்…” என்று சொல்லிவிட்டு கூலாக அவள் அமர்ந்துகொள்ள, அவன் தலையை இடதும் வலதுமாக அசைத்துவிட்டு சொன்னான்…

           “ம்கூம்… இது சரிப்பட்டு வராது. பாவம் அண்ணனுக்காக பார்த்து ஏதாவது பண்ணுவன்னு தேடிவந்தேன்.. ஓக்கே.. நோ ப்ராப்ளம்… அவனுக்கு கொடுத்த கடைசி சான்ஸ மறந்துட வேண்டியதுதான்…” என்றவாறே அவனுடைய போனை எடுத்து ஒரு நம்பருக்கு டயல் செய்தான்.. அந்தப்புறம் இருந்து என்ன குரல் கேட்டதோ! இல்லை அவர்கள் எடுத்து பேசுவதற்கு முன்னதாகவே இவன் கடகடவென்று பேச ஆரம்பித்து விட்டான்…

          “ம்ம்ம்ம்… அவ தங்கச்சி அந்த விஷயத்துக்கு சரி பட்டு வரமாட்ட போல.. என் தங்கச்சியும் சொல்ற பேச்சு கேக்குற மாதிரி இல்ல… இந்த தங்கச்சிங்க எல்லாம் ஏன்டா எப்படி இருக்காங்க? எனிவே ஒன்னும் பண்ணுறதுக்கு இல்ல.. அவன முடிச்சிட சொல்லிடு…”என்று சொல்லிவிட்டு போனை வைத்தவன் இவள் புறம் திரும்பி கண்களை சிமிட்ட விழிவிரித்து பார்த்தபடியே கேட்டாள்…

            “நீ என்கிட்ட விளையாட தானே செய்யுற? ஏதும் பிராங்க் எதுவும் பண்றீங்களா?…”என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னே, காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தியவன் அவளை ஒரு மாதிரி பார்த்து சிரித்தான்…

           “என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது? வேலை வெட்டி எதுவும்  இல்லாம பொழுதுபோக்குக்காக கண்டதையும் பண்ணிட்டு சுத்திட்டு இருக்கேன்னு நினைக்கிறியா? உன் அண்ணன முடிச்சுட சொல்லிட்டேன்… என் தங்கச்சி கிட்ட போய் உன் அண்ணன் அவ வேணாம்னு சொல்லி காச வாங்கிட்டு ஓடி போயிட்டான்னு சொல்லிடுவேன்… இனி நீயும் எனக்கு தேவையே இல்லை…” என்றவாறே அவன் பேச்சை நிறுத்த, இவளுக்கு கதிகலங்கி போய்விட்டது…

              ஒருவேளை அவன் சொல்வதிலும் உண்மை இருக்குமோ! அப்படியெனில் அவளுடைய அண்ணன்? உண்மையாகவே அண்ணனை அவன் கொலை செய்ய சொல்லிவிட்டானா? நடுங்கிய உடலோடு வியர்வை வழிய அவள் பார்க்க, அவனோ தன் இருக்கையிலேயே நன்றாக அமர்ந்தபடி ஒரு வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை முக்கால்வாசிக்கும் மேல் அவன் வயிற்றுக்குள் சரித்துவிட்டு மீதியை அவளிடம் நீட்டினான்… அப்போதைக்கு இருந்த மனநிலையில் சந்தோகமாய் அவனை பார்த்து வைத்தாள்… அவள் பார்வையில் இருந்த அர்த்தத்தை உணர்ந்தவன் உதட்டை சுழித்தபடியே சொன்னான்…

             “இந்தத் தண்ணியில ஏதாவது கலந்து இருப்பானோன்னு பயப்புடுறியா? இல்ல நிஜமாவே உன் அண்ணனை கொல்லப்போறேனோன்னு பயப்படுறியா? ஜில் அவுட் பேபி. உன் அண்ணனை காப்பாற்ற உன்கிட்ட ஒரு கோல்டன் டிக்கெட்ட நான் தர்றேன்…” அவன் சொல்ல இவள் யோசிக்காமலேயே கேட்டுவிட்டாள்

               “என்ன?…” என்று. அவளுடய அந்த கேள்வியையே தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டவன். ஒருவித புன்னகையோடு அவனுடைய போனை அவளிடம் கொடுக்க திருதிருவென்று விழித்தபடியே அதனை வாங்கினாள்…

               “அந்த போன்ல மிஸ்டர்.ராபின்னு

ஒரு நம்பர் சேவ் ஆகிருக்கும். அந்த நம்பருக்கு கால் பண்ணி, நான் மிஸஸ்.சித்தார்த் அபிமன்யு பேசுறேன்னு சொல்லி, என்ன பேபி முழிக்குற? சொன்னத செஞ்சா உன் அண்ணன நீ உயிரோட பார்க்கலாம்…”அவன் மிரட்டலோடு சொல்ல இவள் வேகமாக அவளுடைய போனை அவன் புறம் தூக்கி வீசினாள்…

              “அடிங்க் கொய்யால… உன் மனசுல நீ என்னடா நெனச்சுட்டு இருக்க? எவன்டா அவன் சித்தார்த் அபிசேக்கு? ஆளும் மண்டையும் பாரு! மாமா வேல பாக்க தான் இந்த உறுட்டலும் மெரட்டலுமா! சொல்லி வை அவன்கிட்ட வாயை ஒடச்சுடுவேன்னு.. கிறுக்குபயபுள்ள எங்கயோ போக வேண்டியவள எங்கயோ கூட்டிக்கிட்டு வந்து வச்சுட்டு பேசுற பேச்ச பாரேன்…” என்ற நொடி அவள்புறம் அவன் போனை காட்டியவன் அதில் தெரிந்த வீடியோவை சுட்டிக்காட்டி சிரித்தான்… நேரடி ஒலிபரப்பாக வீடியோ காலில் அவளுடைய அண்ணனை காட்டிக்கொண்டிருந்தான் அவன்… மயங்கிய நிலையில் இருந்தவனின் முன்னே ஒருவன் துப்பாக்கியை பிடித்தபடி நிற்க இந்த பானிபூரியோ மேலும் சொன்னான்…

            “அச்சோ சோ சேட்… உனக்கு குடுத்த கோல்டன் டிக்கெட் வேல்யூ புரியாம பெனாத்துறியே செல்லம்… ராபின்… இன்னுமா முடிக்கல நீ…” இவன் சொல்ல அடுத்த நிமிடம் நிலா எதைப்பற்றியுமே யோசிக்காதவளாக கத்திவிட்டாள்?..

             “நோ.. நோ.. என் அண்ணன விட்டுடு… அவன் பாவம்… டேய் அண்ணா.. விக்ரம்… தடிமாடு எழுத்தரிடா… அய்யோ அவன விட்டுடுங்க… டேய் பஞ்சுமிட்டாய் மண்டையா என் அண்ணன எதுவும் பண்ணாதடா.. நான் நான் டேய் நாந்தான் அந்த எடுபட்டபய பேரு நியாபகம் வரமாட்டுதே… ஹான்… மிஸஸ்.சித்தார்த் பேசுறேன்…” என்க அந்த பஞ்சுமிட்டாய் தலையன் சிரித்துவிட்டு போனை கட் செய்ய இந்த பானிபூரியும் சிரித்தபடியே கட்செய்தான்…

               பதற்றத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லிவிட்டு இருந்தவள் மூச்சுவாங்கி அவன் மிச்சம் வைத்த தண்ணீரை மடமடவென்று வயிற்றுக்குள் சாய்த்துவிட்டு அவனைப்பார்க்க, அவனோ ஒருமாதிரி நக்கலாக சிரித்தபடியே அமர்ந்திருந்தான்…

             “ஏய்ய்ய்… ன்னா? பல்லப்பல்ல காட்டிட்டு இருக்க? நீ சொன்னமாதிரியே சொல்லிட்டேன்ல அந்த ஆளு என் அண்ணன விட்டுருவானா?….”

             “விடாம? நீ தான் கோல்டன் டிக்கெட்ட யூஸ் பண்ணிருக்கியே!…”

             “என்ன எழவோ! ஆமா எவன் அவன்? சிந்துபாத் அக்பரலி?…” என்று அவள் கேட்ட தோரணையில் கடுகடுவென இருந்தவனுக்கும் கொஞ்சம் சிரிப்பு எட்டிப்பார்த்துவிட்டது தான்…

              “என்ன? என்ன சொன்ன? சிந்துபாத் அக்பரலியா! அது சித்தார்த் அபிமன்யு…”

             “என்னவா இருந்த எனக்கென்ன? யாரு அவன்?” என்ற அவளின் கேள்விக்கு திரும்பவும் பழைய கரகரப்பான குரல் தான் எட்டிப்பார்த்தது…

            “நான் தான்…” என்று… அவன் அப்படி சொன்னதை கேட்டவளுக்கு முன்பு குடித்த தண்ணீர் இப்பொழுது புரையேற, ஒருவழியாக தன்னை சமாதானம் செய்துகொண்டு அவனை பார்த்தநொடி அவன் முகத்தில் எந்த ஒரு உணர்வுமே இல்லை…

            “நீ.. நீயா?…”

           “நானே தான்… சரி ஓகே… இப்போ உன் அண்ணனை விடு.. நம்மள பத்தி பேசுவோம்…” என்று அவன் திரும்ப கையில் காலியாகி இருந்த வாட்டர் பாட்டிலை ஆயுதம் போல ஏந்திக்கொண்டு அமர்ந்திருந்தாள்…

            “டேய் டேய்… என்னடா நடக்குது இங்க? யாருடா நீ.. நம்மள பத்தி பேச என்னடா இருக்கு?…”

            “புருசன போடா வாடான்னு பேசலாமா பேபி?…” என்று அவன் கேட்க அந்த வாட்டர் பாட்டிலாலே அவன் தலையில் நங்குநங்கென்று அடித்துவிட்டு கத்தினாள்…

             “ஏது? புருசனா! யாரு யாருக்குடா புருசன்? என் அண்ணன வச்சு ப்ளாக்மெயிலா பண்ணுற? இரு உனக்கு இருக்கு…” என்றவாறே அவளுடைய போனைத் தேடி அவளுடைய அண்ணன் நம்பருக்கு போனைப்போட, இந்தமுறை சட்டென்று அவன் போன் ரிங்கானது.. ஆனால் அதனை எடுத்தது தான் விக்ரம் இல்லை…

       “டேய் விக்ரம். தடிமாட்டு தண்டவராயா அங்க என்னடா பண்ணிட்டு இருக்க? வேலைக்கு போன இடத்துல உனக்கு என்னடா லவ் வேண்டிக்கிடக்கு… இந்த நாசமா போற நாதாரி என்னை கடத்திட்டு வந்து பிளாக்மெயில் பண்ணிக்கிட்டு இருக்கான் டா. ஏன்டா எருமை சிரிக்கிற? விக்ரம்.. விக்ரம்.. டேய் அண்ணா…” என்று இவள் கத்த அந்தப்புறம் கெக்கபுக்கவென சிரிப்பொலி மட்டும் தான் பதிலுக்கு கேட்டது.. அந்த சிரிப்பொலியிலேயே போனை எடுத்தது விக்ரம் இல்லை என்பதை அறிந்தவள், மறுபடியும் அருகே இருந்தவனை பார்த்து முறைக்க, அவனோ கூலாக சொன்னான்…

            “என்ன பேபி லூசுத்தனமா பிஹேவ் பண்ணிட்டு இருக்க? உன் அண்ணன்தான் அங்க மயக்கத்துல கிடக்குறானே.. அவன் எப்படி போனை அட்டென்ட் பண்ணி பேசுவான்? உன்கிட்ட பேசினது ராபின்…” என்க இவளுக்கு மொத்த நம்பிக்கையுமே வடிந்துவிட்டது… 

              என்னசெய்வதென்று புரியாமல் தலையை குனிந்தபடியே அவள் அமர்ந்திருக்க, அவள் அறியாமலேயே விழிகளிலிருந்து கண்ணீர் திரண்டு வர ஆரம்பித்தது. அவன் சொன்னதை முதலில் அவள் நம்பாமல் இருந்தாலும், அவளுடைய அண்ணனை வீடியோ காலில் பார்த்த பிறகு நம்பாமல் இருக்கவே முடியவில்லை. எல்லாம் கைமீறி போவது போலவே தோன்றியது. யாரிவன்? சற்று நேரத்திற்கு முன்பு வரை எந்த ஒரு கவலையும் இல்லாமல் பட்டாம்பூச்சியாய் சுற்றி வந்தவள், தன் சிறகு திடுமென முறிக்கபட்டது போல அமர்ந்திருந்தாள்.. 

            சொட்டு சொட்டாக வடிந்த கண்ணீர் துளிகள் அவள் கைகளில் பட்டு தெரித்தது.. சற்றுநேரம் வரைக்கும் அவளையே அமைதியாக பார்த்தவன் என்ன நினைத்தானோ! தொண்டையை செருமிக்கொள்ள, அவன் ஏதோ பேச வருவது புரிந்து  அவனை நிமிர்ந்து பார்த்தாள்… ப்பாஆஆ அந்த பார்வையில் தான் எத்தனை எத்தனை வேதனைகள், உணர்வுகள், வலிகள்… அவளுடைய அண்ணனுக்கு ஆபத்தாம்… இப்படித்தானே தன் தங்கையும் தன்னைப்பற்றி யோசிப்பாள்.. அவளுக்காக தன் கௌரவத்தை சற்று இறக்கிக் கொள்வதில் தவறில்லையே என்று தன் தங்கை ஷிவானியின் நினைவு வந்தவனாக நிலாவை பார்த்தான்…

             “இப்ப எதுக்கு நீ அழுதுட்டு இருக்க?” என்று கேட்டது தான் தாமதம்… அவனை எரித்துவிடுவது போல பார்த்தவள் பழைய மாதிரியே பொறிய ஆரம்பித்துவிட்டாள்…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 5 சராசரி: 5]

2 Comments

Leave a Reply
  1. பாப்பா. சூப்பர். நான் தான் சித்தப்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

10 நினைவைத் தேடும் நிலவே

Vaazhaipoo Vadai / வாழைப்பூ வடை