in

21 இடைவெளி குறையுமா?

என்னதான் சக்தி உடனான காதலை முறித்துக் கொள்வதற்கு மாயா ரெடியாக இருந்தாலும், சக்தியுடன் பேசாமல் இருக்க முடியவில்லை என்பது தான் நிதர்சனம்… ஆனாலும் தன் தந்தைக்காக சக்தியைப் பிரிவது என்று முதலில் எண்ணியவள், இப்போது தனது நலனுக்காகவும் என்று எண்ணத் தொடங்கி விட்டாள். எப்பொழுது சக்தியின் அப்பாவைக் கண்டாளோ, அன்றிலிருந்தே இனி, தான் சக்தியின் வீட்டிற்குச் சென்றால், தன்னால் முன்போல ஈசியாக பழக முடியுமா? தன்னால் நன்றாக வாழ முடியுமா? என்ற எண்ணம் வந்துவிட்டது. எல்லாவற்றையும் விட, தன்னை ஒருவன் கடத்தினால், அவன் நிச்சயமாக நல்லவனாக இருக்க முடியாது… ஒரு கெட்டவன் வீட்டில் நாம் ஏன் வாழ வேண்டும் என்ற எண்ணமும் மாயாவுக்கு வந்துவிட்டது. அதனால் மாயாவும், சக்தியைப் பற்றிய எண்ணம் வரும்போதெல்லாம், சக்தியின் தந்தை கெட்டவர் என்கிற எண்ணத்தை, மனதில் நன்றாகப் பதித்து வைத்துக் கொண்டாள்.

மாயாவின் நிலை ஒருபுறமிருக்க, சக்தியின் நிலையோ அதைவிட மோசமாக இருந்தது. சக்திக்கு எப்போது, எங்கு, எதைப் பார்த்தாலும், மாயா தான்… எங்கும் மாயா, எதிலும் மாயா… 

“மாயா மாயா மாயா 

நீ உண்மையிலே மாயமானவள் தான்” என்று அடிக்கடி நினைத்துக் கொண்டான். 

“ஏன் மாயமாகிப் போனாய் 

என் மாயாவே!”

 என்று கவிதை எழுத ஆரம்பித்து விட்டான். மிகவும் வருத்தத்தினாலும் மன அழுத்தத்தினாலும் உடைந்து விட்டான் சக்தி.

‘உடைந்த உள்ளத்தை மறுபடி ஒட்ட வைப்பது இயலாத காரியம்… வேறொரு இதயம்தான் வேண்டும்… ஒட்ட வைப்பது எல்லாம் முடியாது… அவள் புதிதாக மாறி வந்தாலொழிய, தன்னால் அவளுடன் இணைய முடியாது… தங்களுக்குள் இருக்கும் இடைவெளி அதுவரை குறையாது’ என்பதை நன்கு உணர்ந்து கொண்டான் சக்தி… அவன் வளர்ந்த சூழலும், அவனது முதிர்ச்சியும் அவனுக்கு சொல்லிக் காட்டியது மாயாவின் முடிவை. அதனால் மாயாவின் முன் வருவதையே தவிர்த்தான்.

தனது வகுப்பிற்கு வருகிறவன், வெளியே செல்லும்போது மாயாவின் வகுப்புக்கு முன் வருவதை தவிர்த்தான். காலை நேரம் மாயாவின் முன் போவதைத் தவிர்த்தான். எல்லாவற்றையும் தவிர்த்தான். இன்னும் சொல்லப்போனால், பழைய சக்தி வருவானா? என்று அனைவரும் ஏங்க ஆரம்பித்தனர்… அந்த அளவிற்கு மாற்றம் இருந்தது. 

சக்தியின் உடலிலும் பலவித மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது. சக்தின் களையான முகமும் மாறி விட்டது. அவள் முன் வந்து விடக்கூடாதே என்ற பதைபதைப்பு சக்தியின் அந்த வசீகரத்தை எடுத்து விட்டது என்றே சொல்லலாம். சக்தியின் முகம் இப்போது ஒரு முதிர்ச்சியான முகமாக இருந்தது. பழைய வசீகரிக்கும் முகம் எல்லாம் அவனிடம் இல்லை. எப்போதும் போல் விஜய் நவீன் இவர்கள் இருவரும் மட்டுமே அவன் கண்களுக்குத் தெரிபவர்கள். வேறு யாரிடமும் எதையும் பேசவும் மாட்டான், செயல்படவும் மாட்டான். 

ஆனாலும் படிப்பில் முதல் மாணவனாகவே இருந்தான் சக்தி. வேடிக்கையான விஷயம் என்னவென்றால், மாயாவுமே படிப்பில் முதன்மையானவளாக இருந்தாள். இதற்கு முன் படித்த கல்லூரியில் கூட, மாயா நன்றாக படிப்பவள் என்ற இடத்தில் தான் இருந்தாள். ஆனால் இப்போது இந்த கல்லூரியில் மாயா முதல் மாணவி என்ற இடத்தை எப்போதுமே தக்க வைத்துக் கொண்டாள். 

இவர்கள் இருவரும் கண்ணாமூச்சி ஆட்டம் நன்றாகவே ஆடிக்கொண்டிருந்தனர். இதுவரை அவர்கள் பார்க்கவே இல்லை என்ற சூழல் வந்து விட்டது. அது போக அந்த செமஸ்டர் முடிந்து அடுத்த செமஸ்டர் ஆரம்பித்ததால், சக்தியுமே ப்ராஜெக்ட் ப்ராஜெக்ட் ப்ராஜெக்ட் வொர்க் என்று வெளியே செல்ல ஆரம்பித்ததால் அவர்கள் சந்திப்பு முழுவதுமாக தடைபட்டது. 

இருவருமே தாங்கள் ஒருவரை ஒருவர் மறந்து விட்டோம் என்ற நினைப்பிலிருந்து கொண்டே, அவரது மற்றவர்களை நினைத்துக் கொண்டுதான் இருந்தனர். ‘நான் மாயாவை மறந்துவிட்டேன்’ என்று 24 மணி நேரமும், மாயாவை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தான் சக்தி. ‘சக்தியின் ஞாபகமே எனக்கு இல்லை’ என்று எண்ணிக் கொண்டே இருந்தாள் மாயா.

இவர்கள் இருவரின் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, HoD இருவரையும் அழைத்து விட்டிருந்தார். மாயா தன்னை மட்டுமே அழைப்பதாக நினைத்து, அவள் மட்டும் செல்ல, அதேபோல சக்தி தன்னை அழைப்பதாக நினைத்து அவனும் செல்ல, அவர்கள் இருவருமே ஹெச்ஓடியின் முன் நின்றனர்

அவர்கள் இருவரிடமும் அவர் பேச ஆரம்பித்தார். வருகின்ற ஃபேர்வல் பங்ஷனுக்கு இருவரும் பார்ட்டிசிபேட் பண்ண வேண்டும் என்பதும், இது தனது நெடுநாளைய ஆசை என்பதையும் குறிப்பிட்டார். இருவரும் தடுமாறி நின்று கொண்டிருக்கையில், 

“எனக்கு தமிழ் மீது அலாதி பிரியம். உங்கள் ரெண்டு பேரோட கவிதைகளும் அன்றைய நாளில் என்னைக் கவர்ந்தன. உங்க தமிழ்ல கண்டிப்பா ஏதாச்சும் ஒரு ப்ரோக்ராம் வைக்கணும். நீங்க கண்டிப்பா பார்ட்டிசிபேட் பண்றிங்க. இது என்னோட ஆர்டர். சக்தி, நீ வர வர ஏன் இப்படி பிஹேவ் பண்றனு தெரியல… நீ பழைய சக்தியா கிடையாது… யார்கிட்டயும் பேச மாட்ற. எதையோ இழந்த மாதிரி இருக்குற! ஆனால் இதுதான் உனக்கு இங்க கடைசி ஃபங்ஷன். சோ இது ஒரு தடவை, எனக்காக நீ ட்ரை பண்ணு, இந்த பொண்ணு கூட சேர்ந்து… உங்க ரெண்டு பேருக்கும் நிறைய திறமை இருக்கிறது” என்று ஹெச்ஓடி கூறவும், இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க “நீங்கள்போகலாம்” என அனுப்பி வைத்தார் ஹெச்ஓடி. 

இருவருமே வெளியே வந்தவர்கள், ஒருவர் முகத்தை ஒருவர் ஏறிட்டுப் பார்த்தனர். சக்தியின் கண்களில் குளம் கட்டியது… “இன்னுமா நான் இவள நேசிக்கிறேன்! இவளைப் பார்த்ததும் எனக்கு ஏன் இப்படி அழுகை வருது?” தன்னை அறியாமல் தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டான். 

“ஐயோ பாவம்! இவன மாதிரி யாருமே என்னை உண்மையாக நேசிக்க முடியாது! என்னை நேசிக்கிற ஒரு உயிரை நான் கஷ்டப்படுத்திட்டு இருக்கேன். அவன் மட்டுமா என்னை நேசிக்கிறான்? எனக்கும் தான் அவன ரொம்ப பிடிக்கும்… ஏன் என் நிலமை இப்படி ஆகிவிட்டதுனே தெரியல… என்னால சக்தியை ஃபேஸ் பண்ணவே முடியல. சாரி சக்தி” என்று மனதில் நினைத்துக் கொண்டு வேக வேகமாக தனது வகுப்புக்கு நடந்து சென்றாள் மாயா. 

மாயா வேகமாக நடப்பதை கண்டவன், “இவளால் எப்படி என்னை ஈஸியா மறக்க முடிந்தது? அவ கண்ல கூட நான் லவ்வ பார்க்கிறேன்… நான் என்னையே நான் ஏமாற்றுகிறேனோ?! அவளுக்கு என் மேல எந்த ஃபீலிங்யும் இல்லையோ?” என்று குழம்பி, அவனும் தனது வகுப்பிற்கு நடந்து சென்றான். இருவருமே இது ஒரு பெரிய விஷயமாக கருதாததால், ஹெச்ஓடி பேசிய இந்த விஷயத்தை அப்படியே மறந்தனர்… 

ஃபேர்வெலும் வந்துவிட்டது, டிபார்ட்மெண்டில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் வைத்திருந்தனர். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க,  மாயா மட்டும் எதிலும் கலந்து கொள்ளாமல், ஓரமாக அமர்ந்து இருந்தாள். மாயாவின் அமைதி, சக்திக்குப் புரியாத புதிராக இருந்தது. “நான் இருப்பதால்தான் இவ்வாறு அன்கம்பார்டேபிலா ஃபீல் பண்றா போல” என்று எண்ணி, அவன் எழுந்து வெளியே சென்றான். 

ஆனாலும் மாயா அவள் இருந்த அந்த இடத்தை விட்டு, வெளியே வரவே இல்லை. ஏனெனில் அவள் மனது சக்திக்காக துடிக்க ஆரம்பித்து இருந்தது. ‘இன்னும் சில நாட்களில் நீ சக்தியை பார்க்கப்போவது இல்லை’ என்ற உண்மை சுட்டது. என்னதான் இதுவரை பார்க்காமல் இருந்தாலும், சக்தி இதே கல்லூரியில் தான் இருக்கிறான் என்ற எண்ணம், அவளுக்குள்  இருந்தது. ஆனால் இப்போது இனி அவனைப் பார்க்கவே முடியாது என்ற எண்ணம் வலுவாக மனதில் உதித்து விட்டது. “அவ்வளவுதானா! இனி அவனை எப்படிப் பார்ப்பது?” என்று அவள் மனதை குடைந்து கொண்டே இருந்தது. கடைசியாக, அவனோடு சிறிது நேரம் பேசலாமா? என்று கூடத் தோன்றியது. தனது மனம் வெகுவாக சக்தியின் பால் சென்று கொண்டிருப்பதை அறிந்தவள், அமைதியாக அமர்ந்து விட்டாள். எதைப் பற்றியும் நினைக்க கூடாது என்று தன் மனதிற்கு அவளே கட்டளை கொடுக்க, அவளது மனமும் சக்தி சக்தி சக்தி என்று சக்தியைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தது. 

“ஒருவேளை இதுதான் காதலோ! அவனை நான் காதலிப்பதை விட்டு விட்டேன்…  அவனை நான் மறந்துவிட்டேன் என்று நான் எண்ணிக் கொண்டே இருக்க, இன்னும் அவனைப் பற்றி மட்டுமே நினைக்கிறேனே! அதுவும் அவனைப் பார்க்க முடியாது என்று தெரிந்ததும், என்னால் நார்மலாக இருக்க முடியவில்லையே! ஒருவேளை நான் காதலிக்கிறேனோ! இன்னும் நான் உன்னை காதலிக்கிறேனா?” என்று தனக்குள்ளாகவே மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டாள் மாயா… முடிவுதான் அவளுக்கு தெரியவில்லை. 

அவளது தடுமாற்றங்களைக் கண்ட சக்தி, தான் இருப்பது அவளுக்கு அன்கம்ஃபார்ட்டபிள் ஆக உள்ளது என்று எண்ணி, வெளியே செல்லவும், “ஐயோ … இன்னைக்கு ஒரு நாள் தான் அவனைப் பாக்க முடியும்… இப்பவும் போறானே” என்று துடித்துக் கொண்டிருந்தாள். 

விக்ஸிடம் பேசியவள், “உங்க சக்தியண்ணாவை உள்ள வந்து உட்கார சொல்லு… எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல! அதனால தான் இப்படி இருக்கேன் சொல்லு” என்று சொல்லி விக்ஸை அனுப்பி சக்தியை மீண்டும் உள்ளே வர வைத்துவிட்டாள். 

சக்திக்கு மனதின் ஓரத்தில் ஒரு சந்தேகம் வந்தது. ஒரு வேளை தன்னைப் பார்ப்பதற்காக தான் வர சொல்லி இருப்பாளோ? என்று. எனவே அவள் நன்கு பார்க்கும் இடத்தில் முன்னாக வந்து அமர்ந்தான், மீண்டும் ஆக தனது போனை எடுத்து செல்ஃபி  எடுக்கிற மாதிரி பார்த்தான்.  அவளும் இவனைத் தான் பார்த்துக்கொண்டிருந்தாள். முதல் செல்ஃபி ஞாபகம் வந்தது… அந்த தருணமும் ஞாபகம் வந்து சக்தியின் இதயத்தை அடைத்தது. ‘ஐயோ! இந்த அருமையான கல்லூரி வாழ்க்கையை மிஸ் பண்ணுகிறேன்’ என்று வருந்திக் கொண்டிருந்தான்… அனேக செல்ஃபிகள் மாயாவுக்குத் தெரியாமல் எடுத்துக்கொண்டு இருந்தான். இது எதுவும் தெரியாமல் மாயாவும் அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள். 

அதேநேரம் ஸ்டேஜில் எச்ஓடி மேடம் கூப்பிட ஆரம்பித்தார்… “இந்த ஒரு ப்ரோக்ராம் நான் அரேஞ்ச் பண்ணது… மாயா அன்ட் சக்தி இப்போ தூய தமிழ்ல பேச போறாங்க… ஒரு தமிழனா, தமிழச்சியா இந்த தருணம் எனக்கு ரொம்ப பிடிச்ச தருணம்… இதுக்கு முன்னாடி அவங்க ரெண்டு பேரும் ஸ்டேஜ்ல சொன்ன கவிதைல நான் ரொம்ப மயங்கிப் போயிட்டேன்னு கூட சொல்லலாம். சக்தியோட கடைசி ஃபங்ஷன் இது. சோ சக்தி வாய்ஸ்ல அண்ட் மாயா வாய்ஸ்ல கவிதை கேட்கலாம். இது நான் அரேஞ்ச் பண்ணுனது… எனக்காக நடைபெறப் போகிற பங்க்ஷன்” என்று அறிவித்தார். மாயாவும் சக்தியும் திடுக்கிட்டனர்.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 0 சராசரி: 0]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Mentor

Written by ஷமினா சாரா

எழுத முயற்சித்துக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண பெண்🙏🏻😍

Story MakerContent Author

பழைய வீடு

அழகிய அசுரா 46