in , , , , ,

2. உனது விழிகளின் வழியே எனது தேடல்…!

சரியாக ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு:

“அடே… தீவிட்டி தடியா… உன்ன என்ன பண்ண சொன்னா… நீ என்னடா பண்ணிட்டு இருக்க… சாவடிக்க போறேன் பாரு உன்ன… போடா போய் ஃபேன தொடை போ…” மிளிர் தான் கத்திக் கொண்டிருந்தாள் அவள் தம்பியிடம்…

அவனோ நீ என்ன சொல்வது நான் என்ன செய்வது என்பதைப் போல… அவளை ஒரு அலட்சிய பார்வை பார்த்துவிட்டு… மீண்டும் முகம் முழுவதும் ஏதோ ஒரு கலவையை போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தவளிடம் கடலை வறுக்க தொடங்கி விட்டான்…

அதைக் கண்டு கொதித்தெழுந்தவள்… “சூரி…” என கத்தியத்தில்… பதறடியடித்து முன்னே வந்து அவன் நின்றிருப்பான் என நீங்கள் நினைத்தால் அது தான் தவறு…

அவள் நாலைந்து முறை சூரியை ஏலம் விட்டபிறகு எத்தனை பொறுமையாய் முடியுமோ அத்தனை பொறுமையாய் சுண்டு விரலால் கதை குடைந்தபடியே மிளிரின் முன் வந்து நின்றாள் அவள்… ஆம் அந்த சூரி அவளே தான்…

“ஏன்டீ உன்ன எத்தன தடவ கூப்பிடறேன்… நீ என்னமோ ஆடி அசைஞ்சு திருவாரூர் தேர் மாதிரி வர…”

“ஏன்க்கா… நான் உங்ககிட்ட எத்தன தடவ சொல்லறேன்… ஒன்னு சூர்யானு கூப்பிடுங்க… இல்ல பிரபானு கூப்பிடுங்கனு… நீங்க மட்டும் அத கேக்கறீங்களா…”

“இப்போ இப்படி கூப்பிட்டதால என்ன குடியா முழ்கி போச்சு…”

“சூர்யாபிரபா என என்னை ஈன்றெடுத்த சிவகாமி தேவியார் அதி அற்புதமாய் ஒரு திருநாமத்தை சூட்டி இருக்கும் போது… தாங்கள் சூரி… பூரி என்று அழைப்பது தாங்களுக்கு  கொஞ்சமாவது நியாயமாக படுகிறதா…” சூர்யாவின் தாயின் பெயர் சிவகாமி தான்…

“ஆரம்பிச்சுட்டீயா உன் தமிழ் புலமையை…” 

“சும்மா… தேவையில்லாம பேசிட்டு இருக்காதீங்க… எதுக்கு கூப்டீங்க… முதல்ல அத சொல்லுங்க… நான் போய் இன்னொரு பொண்ணுக்கு கோல்டன் பேசியல் போடனும்… அந்த பெண்ணுக்கு அடுத்த வாரம் கல்யாணமாம்…”

“அதெல்லாம் பொறுமையா போடலாம்… முதல இவன அடிச்சு வெளிய தொரத்து…”

யாரை என்பது போல் திரும்பி பார்த்தவள் அங்கே யாழினியன் கால்மேல் கால் போட்டபடியே முகத்தில் பேசியல் செய்திருத்த ஒரு பெண்ணிடம் அதி தீவிரமாக எதையோ விவாதிப்பதை பார்த்ததும் மிளிரை நோக்கி திரும்பியவள் தலைக்கு மேல் கைகளை சேர்த்து வைத்து பெரிதாக ஒரு கும்பிடு போட்டாள்…

“போதும்டா சாமி… உங்க அக்கா தம்பி பஞ்சாயத்துக்கு நான் வரல… என்ன ஆள விடுங்க…” என்றாள்…

“இப்போ நீ போய் அவன இங்கிருந்து போக சொல்ல போறீயா இல்லையா…”

“நானா அவன என் அரும தம்பி… தங்க கம்பினு இங்க கூட்டுட்டு வந்தேன்… நீங்க தானே கூட்டிட்டு வந்தீங்க… நீங்களே போய் போக சொல்லுங்க… நான் போய் சொன்னா… இது என் அக்கா கடை… நான் போக முடியாதுனு சட்டமா நாலு பக்கத்துக்கு வசனம் பேசி அந்த பொண்ணு முன்னாடி சீன் கிரியேட் பண்ணுவான்… தேவையா இது எனக்கு…”

“அவன் பக்கம் பக்கமா பேசறானோ இல்லையோ… ஒரு வேலை சொன்னா அத செய்ய முடியாதுனு சொல்லறதுக்கு நீ நாலு பக்கம் மூச்சு விடுமா பேசற… இங்க நீ முதலாளியா இல்ல நான் முதலாளியானே தெரியல… இருடீ உன் சீட்ட கிழிக்கறேன்…”

“முதல நீங்க கடைய தொறங்க முதலாளி அம்மா… அப்புறம் என் சீட்ட கிழிக்கறத பத்தி யோசிப்போம்…” என்றவள் தான் பாதியில் விட்டு வந்த வேலையை செய்ய சென்றுவிட்டாள்…

“இம்சடா இதுங்க கூட…” என வாய்விட்டு புலம்பியபடியே யாழியனின் அருகில் வந்தவள் அவன் இடது காதை பிடித்து திருக… வலித்தாலும் குரல் கொடுக்காது அமர்ந்திருந்தான் அவன்…

“ஜெய்ட்… ஒன் மினிட் பேபி… என் சிஸ்டர் கூப்பிடறா… இதோ வந்துடறேன்…” என்றவன் மிளிரிடமிருந்து வலுக்கட்டாயமாக தனது காதை பறித்துக் கொண்டு அவளை கொஞ்சம் தள்ளி இழுத்து வந்தான்…

“ஏன்டீ… உனக்கு மேனர்ஸ் இல்ல… இரண்டு பேரு பர்சனலா பேசிட்டு இருக்கும் போது இப்படி டிஸ்டர்ப் பண்ணற…”

“யாரு எனக்கு மேனர்ஸ் இல்லையா… உனக்கு தான்டா தடிமாடு அது இல்ல… உன்ன இங்க எதுக்கு கூட்டிட்டு வந்தா… நீ என்ன பண்ணிட்டு இருக்க…”

“ஏன் என்ன பண்ணிட்டு இருக்கேன்…” என திரும்பி அவளிடமே கேட்டான் அவன்… 

அவனின் கேள்வியில் அவள் அவனை முறைத்து பார்க்க… அதற்குள் அங்கே அமர்ந்திருந்தவள்… “கம் பாஸ்ட் பேபி…” என குரல் கொடுக்க… “ஜெஸ்ட் ஒன் மினிட் பேபி…” என இங்கிருந்தே குரல் கொடுத்தான் அவன்…

“இருடா தடிமாடு… நீ இங்க பண்ணறதெல்லாம் அம்மாட்ட போட்டு குடுத்து நாட்டம படத்துல வர மாதிரி அன்னம் தண்ணீ ஆகாரம் இல்லாம… உன்ன வீட்டவிட்டு பத்து வருஷத்துக்கு தள்ளி வைக்கல…” என்றவளை இடைமறித்து…

“இப்போ நான் என்ன சொல்லிட்டேனு… நீ இவ்வளவு ஆவேசமா சபதம் எல்லாம் எடுக்கற… போய் தொடைடா தடுமாடுனு பாசம சொன்னா… தொடைக்க போறேன்… இதுக்கு போயி…” என்றான் இனியன் பதறிக்கொண்டு… பின்னே தன் அக்கா சொல்வதை வேதாவாக்காக ஏற்று அவனை இருபது வருடம் கூட தள்ளி வைக்க அஞ்சாதவர் அவனின் அன்னை என்று அவன் அறியாததா என்ன…

“அது…” என கொத்தாக சொன்னவள்… “அப்படியே அந்த ஜன்னல எல்லாம் தண்ணி தொட்டு தொடைச்சு… சந்தணம் குங்குமம் எல்லாம் வச்சு பக்காவ ரெடி பண்ணிடு… நாளைக்கு பாக்க… அப்படியே புதுக்கடை மாதிரி பளபளனு மின்னனும் புரியுதா…”

“அதுக்கு நீ இத இடிச்சுட்டு புதுசாதான் கடைய கட்டனும்…”

“என்ன சொன்ன…”

“ஒன்னுமில்ல… இதோ போறேனு சொன்னேன்…” என்றவன்… “ஒரு சின்ன ஓர்க் பேபி… சீக்கரமே வந்துடுவேன்…” என அவளுக்கு குரல் கொடுக்கவும் மறக்கவில்லை…

செல்லும் அவனையே புன்முறுவளோடு இமைக்காது பார்த்திருந்தாள் அவள்… இந்த ஒன்றரை வருடங்களில் அவளின் வாழ்க்கை எப்படி எப்படியோ மாறிப் போய்விட்டது… 

தன்னையே அடையாளம் தெரியாத நிலையில் கண்விழித்தவளுக்கு அவளின் மொத்த குடும்பமுமே பக்க பலமாய் உறுதுணையாக துணை நின்றது… எல்லாவற்றையும் ஓரம் ஒதுக்கிவிட்டு இந்த உலகிலேயே அவள் ஒருத்தி தான் தங்களுக்கு முக்கியம் என்பது போல தான் இருந்தது அவர்கள் மூவரின் செயலும்… 

எழுந்து நடக்கவே தடுமாறியவளை நடக்க பழகி… உணவூட்டி… என சிறு குழந்தையை பராமரிப்பது போல தான் பார்த்துக் கொண்டது அவளின் மொத்தக் குடும்பமுமே… தில்லைநாதரும் வசுமதிக்கும் மகளின் நிலை மனதை பாரமாக அழுத்தினால் ஒரே போதும் அதை அவளிடம் வெளிப்படித்தியதே இல்லை…

ஆரம்பத்தில் அவர்கள் யார் என்றே தெரியாது இவள் தடுமாறி நிற்கும் போதெல்லாம் அவளின் மனதிற்கு ஆறுதல் சொல்லி தெம்பூட்டி அவளை மீட்டு வர பெரும்பாடு பட்டனர் அவர்கள்… சில தினங்களில் எழுந்து வரும் போது மீண்டும் அவளுக்கு அவர்கள் யாரென்று மறந்துப் போயிருக்கும்… ஒரு சிறு குழந்தைக்கு முகம் சுழிக்காது சொல்லி கொடுப்பதுப் போல தான் அவள் ஆயிரம் முறை மறந்தாலும் முகம் சுழிக்காது ஒருவர் மாற்றி ஒருவர் அவளுக்கு நினைவூட்டினர்…

எத்தனை தான் தன்னை தேற்றி நன்றாக கவனித்துக் கொண்டாலும் ஒரு குழப்பத்துனும் சோகத்துடனுமே சுற்றிக் கொண்டிருந்தவளை தன்னியல்புக்கு மீட்டு வர இனியன் எடுத்துக் கொண்ட முயற்சிகள் ஏராளம்…

தன் தமக்கை சிரிக்க வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் கோமாளியாக கூட மாறி போவான் அவன்… அவளை விட இரண்டு வயது சின்னவனாலும் தொடர் உடற்பயிற்சியால் அவளுக்கு அண்ணனை போன்றே தோற்றமளிப்பான்… எப்போதும் அவளை அவன் எடுத்தெறிந்து பேசுவது போலவே  தோன்றினாலும் அவள் வார்த்தையை அவன் தட்டியதே இல்லை… ஒரு சகோதரனாய்… நண்பனாய்… ஆசானாய்… எல்லாமுமாய் அவன் அவளுக்கு மாறிப் போனான் என்பதே உண்மை…

வீட்டிற்குள்ளேயே இருந்தால் பழையதை திரும்ப திரும்ப நினைவுக்கு கொண்டுவர முயன்று தன்னையே வருத்திக் கொள்கிறாள் தமக்கை என்பதை கண்டுக் கொண்டவன்… ஆறு மாத அழகு கலைப் பயிற்சி வகுப்பில் அவளை கட்டாயப் படுத்தி சேர்த்துவிட… ஆரம்பத்தில் ஆர்வமில்லை என்றாலும் நாளாக நாளாக வெளியாட்களுடன் பழகுவது அவளுக்கு ஒரு உற்சாகத்தையே தந்தது… அப்படி அவள் பயிற்சி வகுப்பிற்கு சென்ற சமயம் அறிமுகம் ஆனவள் தான் சூர்யா… ஏனோ பார்த்தவுடனே நீண்ட நாட்கள் பழகியதைப் போல மிளிரிடம் அவளே தேடி தேடி வந்து பேச… முதலில் தடுமாறினாலும் விரைவிலேயே அவளின் நட்பை ஏற்றுக் கொண்டாள் மிளிர்…

வகுப்புகள் முடிந்த சிலமாதங்கள் தன் கற்றவரிடமே உதவியாளராக பணிபுரிய… அந்த சமயத்தில் தான் இந்த கடையை மூடப் போவதாக அவளுக்கு தகவல் வந்தது… அதை தான் எடுத்து நடத்தினால் என்ன எண்ணம் தோன்ற அதை தன் தந்தையிடம் சொல்ல… மகளின் விருப்பம் எப்படியோ… அப்படியே என்று விட்டார்…

நாளைக்கு தான் கடைதிறப்பு விழா என்ற நிலையில் இன்று வந்து அதற்கான மீதமிருந்த ஆயத்த வேலைகளில் ஈடுபட்டிருந்தனர் அவர்கள்…  அதற்கு உதவி செய்ய தான் இனியனை அழைத்து வந்திருந்தாள்… ஆனால் இன்றும் இருவர் அவசரம் என பேசியல் செய்ய வந்துவிட வாடிக்கையாளரை இழக்க கூடாது என்ற எண்ணத்தில் அவளும் செய்ய… அவனோ வந்த வேலையை விட்டுவிட்டு அவர்களிடம் கடலை வருத்துக் கொண்டிருந்தான்…

ஒரு வழியாக எல்லா வேலைகளையும் முடித்து கிளம்ப இரவு எட்டானது… இடையில் தில்லைநாதரும் ஒரு முறை வந்து பார்த்துவிட்டே சென்றார்… நாளை ஒரு கணபதி ஹோமமும்… குபேர பூஜையும் செய்துவிட்டு கடையை ஆரம்பிப்பதற்கான அனைத்து வேலைகளும் சரியாக முடித்துவிட்டு… சூர்யாவையும் அனுப்பி வைத்துவிட்டு… அக்காவும் தம்பியும் தங்கள் இல்லம் கிளம்பினார்கள்… 

தனது ஸ்கூட்டியை மிளிர் எடுக்க பின்னால் அமர்ந்துக் கொண்டான் இனியன்… எந்த காரணம் கொண்டும் இதை செய்ய வேண்டாம்… அதை செய்ய வேண்டாம் என அவளை யாருமே தடுப்பதில்லை… அதனால் அவளின் தன்னம்பிக்கை குறைந்து உள்ளுக்குள்ளேயே முடங்கி போவாள் என்று ஆரம்பத்தில் மறுத்த தனது பெற்றோரை சமாதானப் படுத்தி எல்லாவற்றிற்கும் சம்மதிக்க வைத்ததே இனியன் தான்…

நகரிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருந்த அவர்கள் வீட்டிற்கு செல்ல அது ஒன்றுதான் வழி… அத்தனை நேரம் சதாரணமாக வந்ததவள் உள்ளுணர்வின் உந்துதலாலோ என்னவோ அந்த இடத்தை கடக்கும் போது எதனிடமிருந்தோ தப்பிப்பதைப் போல அத்தனை வேகமாக ஓட்டினாள்… சரியாக அந்த மின்கம்பத்தில் ஒரு நொடி பார்வை பதித்தவள் அடுத்த நொடியே பார்வையை திருப்பிக் கொண்டு வேகமாக சென்றுவிட்டாள்… அந்த இடத்தை பற்றி எவரும் அவளுக்கு கூறவில்லை என்றாலும் அவளின் உணர்வு உணர்த்தியதை புரிந்துக் கொண்டு ஆதரவை தோளை அழுத்திக் கொடுத்தான் இனியன்… நாங்கள் இருக்கிறோம் என்பதை போல…

இதைவரை மிளிருக்கு பழய விடயங்கள் எதுவும் நினைவிற்கு வரவில்லை… மற்றவர்களும் அதை நினைவுபடுத்த முயலவில்லை… பெரும்பாலும் அவளைப் பற்றி தெரிந்தவர்களும் அதை அவளுக்கு நினைவுபடுத்த முயலவில்லை… எங்கொன்றும் இங்கொன்றுமாக எப்போதாவது ஏதாவது நினைவுக்கு வர அதைப்பற்றி யோசிக்கும் போது தலைவலியே மிஞ்ச… ஒரு கட்டத்தில் தலைவெடித்து விடுவதைப் போன்ற வலியுடன் அவள் மயங்கி சரிய… அவர்களின் மூவரின் பயத்தை அறிந்தவள் பின்பு எதைப்பற்றியும் சிந்திப்பதை அடியோடு நிறுத்தி விட்டிருத்தாள்… அதற்கு பயந்தே தன்னை ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுத்திக் கொண்டும் சுற்றியும் ஆட்கள் இருப்பதைப் போலவும் எப்போதும் பார்த்துக் கொண்டாள்… ஆனால் வாழ்நாளெல்லாம் இப்படியே கடத்திவிட முடியாதே…

இல்லம் வந்தவள் உணவருந்தி விட்டு இனியனுடனும் பெற்றோருடன் கொஞ்ச நேரம் அளவளாவி விட்டு… நாளை கடை திறப்பை பற்றியும் விவாதிவிட்டு… உறக்கம் வந்த பிறகே தனது அறைக்கு சென்றாள் மிளிர்… கண்களை மூடிய சில நிமிடங்களிலேயே நிம்மதியான உறக்கம் அவளை தழுவிக் கொண்டது…

ஆள் அரவமற்ற அந்த சாலையில் இவள் மட்டுமே தனித்து நிற்கிறாள்… இரவின் இருள் சூழ்ந்த அந்த இடத்தில் அமைதியை தவிர வேறொன்றும் இல்லை… மாயான அமைதி என்பார்களே… அப்படி ஒரு அமைதி… உள்ளுக்குள் குளிரெடுக்க வைக்கும் அமைதி… அவள் மூச்சுக் காற்றின் ஓசை அவளையே தீண்டி செல்லும் அளவிற்கு அமைதி… தாறுமாறாக துடிக்கும் அவள் இதயத்தின் துடிப்பை அவள் செவிகள் உணரும் அளவிற்கான அமைதி… அந்த சூழலே அவளுக்கு அதிகமான பயத்தை கொடுக்க… உடலில் உதறல் எடுக்க ஆரம்பித்திருந்தது…

உடலெங்கும் வியர்வை ஆறாய் வழிந்தோட… பயத்தை உள்ளுக்குள்ளையே புதைத்துக் கொண்டு… முயன்று வரவைத்துக் கொண்ட தைரியத்தோடு கண்களை கொஞ்சம் கொஞ்சமாய் சுழல விட்டவளுக்கு தன்னை சுற்றி எவரும் இருப்பதாய் தெரியவில்லை… ஒரு எல்லைக்கு மேல் பார்வையை விரிவு படுத்த முயலாமல்… வேறுன்றி நின்றிருந்த கால்களை வெகு சிரமப்பட்டு நகர்த்தியவளுக்கு… இரண்டடி வைப்பதற்குள் மூச்சு முட்டுவதை போல இருந்தது…

நீண்ட மூச்சுகளை எடுத்து தன்னை சமன் செய்துக் கொண்டவள் இன்னும் கொஞ்சம் நேரம் நடந்திருப்பாள் அவ்வளவே… பயங்கரமாக குறைத்தபடி அந்த இருளில் சற்றும் தெரியாத கரிய நிறத்தில் அவள் மீது ஒரு நாய் பாய… பதறி பின்னால் நகர்ந்தவள் எதிலோ தடுமாறி கீழே விழுந்தாள்…

காதின் அருகே கேட்ட அந்த நாயின் குறைப்பு சத்தமும்… தோளில் பதிந்த அதன் ஒரு பாதமும் அவளுள் இன்னும் இன்னும் பயத்தை கூட்டி இருந்தது… வெளியே வந்து விழுந்து விடுவேன் என்னும் அளவிற்கு வேகமாக துடித்த இதயத்தை ஒரு கையால் பற்றிக் கொண்டு… சுற்றும் முற்றும் பார்வை சுழற்ற இப்போது அந்த நாயும் இல்லை குறைப்பு சத்தமும் இல்லை… 

உடலெங்கும் வெள்ளம் வழிந்தோட பதற்றத்தில் எழ முயன்றவளால் அது முடியாமல் போனது… அதே சமயம் அழுத்தமான காலடி ஓசை ஒன்று கேட்க… அந்த இருளை ஊடுறுவி கூர்ந்து கவனிக்க… தூரத்தில் யாரோ ஒருவர் அவளை நோக்கி வருவது நிழல் உருவமாக தெரிந்தது…

பயத்துடன் அமர்ந்த வாக்கிலேயே அவள் பின்னோக்கி நகர… அழுத்தமான காலடி எட்டுகளுடன் அவளை நெருங்கிக் கொண்டிருந்தது அந்த உருவம்… எழுந்து ஓடு என மூளை இட்ட கட்டளையை ஏற்க மறுத்து அங்கேயே வேறுன்றி இருந்தது அவள் கால்கள்… அந்த உருவம் அவளை நெருங்க நெருங்க… இதயத் துடிப்பே நின்றுவிடும் போலிருந்தது அவளுக்கு… அருகில் வரவர அது ஒரு ஆடவன் என்பதை அவளால் உணர்ந்துக் கொள்ள முடிந்தது… அவன் உருவம் மனதில் பதியவில்லை… அந்த முகம் அதுவும் தெரியவில்லை… ஆனால் இருளிலும் ஒளி வெள்ளமாக மின்னிய அந்த கண்கள்… அடர்ந்த மரகத பச்சை நிறத்தில் கருமணிகள்… அதை சுற்றி கொஞ்சம் மங்கிய பஞ்சை நிறத்தில் கருவிழிகள்… எவரையும் தன்னுள் ஈர்க்கும் ஆற்றல் கொண்ட அந்த விழிகளில் தெறிந்த கொலைவெறியில் பயந்து நடுங்கி தான் போனாள் அவள்…

அதே அழுத்த எட்டுகளுடன் அவன் அவளை இன்னும் நெருங்கி வர… “அம்மா…” என்ற அலறலுடன் எழுந்து அமர்ந்தவளுக்கு தான் கண்டது கனவு என உரைக்கவே நீண்ட நேரமாகியது… நேரமோ நல்லிரவு இரண்டரை என்றது… வியர்வையில் நனைந்துவிட்ட உடலில் இன்னும் நடுக்கம் மிச்சமிருந்தது… நல்ல வேளையாக அறை கதவு சாற்றி இருந்ததாலும் மற்றவர்கள் நல்ல உறக்கத்தில் இருந்ததாலும் அவளின் அலறல் அவர்களுக்கு கேட்கவில்லை… அருகே இருந்த ஜாக்கில் இருந்த நீர் முழுவதையும் பருகிய பின்னும் படபடப்பு நீங்கவில்லை… எத்தனை முயன்றும் அந்த கண்களையும் அதில் தெறிந்த வெறியையும் அவளால் ஒதுக்க முடியவில்லை… மீண்டும் மீண்டும் அதுவே அவள் நினைவுகளில் தோன்றி இம்சித்தது… உறக்கம் எங்கோ தொலை தூரத்திற்கு சென்றுவிட… நீண்ட நேரம் அதையே நினைத்திருந்ததில் தலைவலியே மிஞ்சியது… அதற்கு மேலும் கட்டுபடுத்த முடியாது என்று எண்ணியவள் எப்போதாவது முடியாத நேரத்தில் மட்டும் பயன்படுத்த சொல்லி கொடுத்த தூக்க மாத்திரை ஒன்றை அவசரமாய் விழுங்கி விட்டு… இனி அந்த கனவு வரக்கூடாது என இஷ்ட தெய்வத்திற்கு அவசரமாக ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு… இறுக கண்களை மூடிக் கொண்டவளுக்கு எப்போது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை… 

                      – தேடல் தொடரும்…

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 3 சராசரி: 5]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

என் வாழ்வின் வசந்தம் நீ – 6

நான் ரொம்ப கஷ்டம் சேட்டா ! (ஏட்டா !) – 2