ரங்கா VS ரங்கா
இரண்டாம் பாகம்
அத்தியாயம் 1
பெய்யுமாமுகில் போல்வண்ணா உன்றன்
பேச்சும்செய்கையும், எங்களை
மையலேற்றி மயக்கவுன்முகம்
மாயமந்திர தான்கொலோ
நொய்யர்பிள்ளைக ளேன்பதற்குன்னை
நோவநாங்க ளுரைக்கிலோம்,
செய்யதாமரைக் கண்ணினாயேங்கள்
சிற்றில் வந்து சிதையேலே
நாச்சியார் திருமொழி…
பாட்டி ரங்கா பூஜை அறையில் பாடலைப் படித்து முடித்து தீபாராதனை காட்டி, வணங்கிவிட்டு வெளியே வந்தாள். ஹாலில் குழந்தைகள் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்..
ரங்கா தனது அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டு இருந்தாள். “ஏய் பாவனா, நான்தான் முதல்ல போடுவேன். நீ அப்புறம்தான் போடணும்..”
“முடியாது போடா.. நானும்தான் ஸ்கூலுக்கு கிளம்புறேன்.. ஷூ, நான் தான் பர்ஸ்ட் போடுவேன். நீ தள்ளிக்கோ..” ஷூ ராக் அருகில் ஒரு சிறிய ஸ்டுல் இருந்தது. அதில் அமர்ந்து ஷூ போட்டு விடுவது வழக்கம். குழந்தைகளை கவனிக்கும் வேணி, “பாப்பா நீ உட்காரு. உனக்கு சாக்ஸ் போட்டுட்டு அண்ணாவுக்கு போடுவோம்..”
“இல்ல, எனக்கு முதல்ல போடுங்க ஆன்ட்டி..!” என்று பார்த்தா பிடிவாதம் பிடிக்க..
அங்கே வந்த பாட்டி, “வேணி நீ அவளுக்கு போடு.. நான் பார்த்தாவுக்கு போடுறேன்.. பார்த்தா நீ ஷூ சாக்ஸ் எடுத்துட்டு இங்கே வா, நாம கட்டில்ல வைத்து போடுவோம்..” என்று அவனை அழைத்துக்கொண்டு வந்து ஷூவை மாட்டி விட்டார்..
இருவரும் அருகிலுள்ள ஒரு பள்ளியில் சேர்ந்திருந்தனர்.. அதற்குள் உள்ளே இருந்து வந்த ரங்கா, இருவருக்கும் இட்டிலியை ஊட்டி விட ஆரம்பித்தாள்.. “ம்ம், குய்க். யார் ஃபர்ஸ்ட் சாப்பிடுறான்னு பார்ப்போம்..!”
“ நான்தான் பர்ஸ்ட்.. ஆ…” என்றது பாவனா..
“நான் இது சொல்லல, சாப்பிட்டு முடிக்கறதுல, யார் பர்ஸ்ட்டு சொன்னேன்..!” என்று சொன்னதுதான் தாமதம், இருவரும் மடமடவென்று மாறி, மாறி இட்டலியை வாங்கினர்.
“மெதுவா மென்று முழுங்கணும்.. அப்பதான் ஜீரணமாகும்..” பாட்டி கற்றுக் கொடுக்க, இருவரும் சமர்த்தாக தலையாட்டினர்.
“பாட்டி நீங்க கிளம்பலையா..?”
“இதோ கிளம்புறேன். நீ குழந்தைகளை ஸ்கூலில் கொண்டு போய் விட்டுட்டு வா. வாசு வர்றதுக்குள்ள நான் ரெடி ஆயிடுவேன்..”
அதற்குள் வாசு வந்துவிட, குழந்தைகள் மாமா, மாமா என்று குதித்தனர். “ஹாய் பார்த்தி, பாவனா கிளம்பியாச்சா.? மாமா கூட கார்ல வரீங்களா..? அம்மா கூட பைக்ல போறீங்களா..?”
“மாமா கூட கார்ல…!”
“வாசு நீ ரொம்ப குழந்தைகளைக் கெடுக்கிற..!”
“நான் என்ன கெடுக்கிறேன்..!”
“தினமும் கார்ல கூட்டிட்டு போனா, அதுவே அவர்களுக்கு பழகிடும்.. அப்புறம் கார் தான் வேணும்னு கேட்பாங்க..!”
“இருக்கட்டுமே.. டெய்லி நான் கொண்டு போய் விட்டுர்றேன்.. எப்படியும் அடுத்த வருஷம் ஹர்ஷாவை ஸ்கூல்ல விடனும்.. மூணு பேரையும் கூட்டிட்டு போய் விட்டா போச்சு..!”
“அப்புறம் கம்பெனிக்கு எப்ப போறது..?”
“அதெல்லாம் பார்த்துக்கலாம்.. ஒன்பது மணிக்கு ஸ்கூல் பத்து மணிக்கு ஆபீஸ் போய்ட மாட்டேன்.. அதெல்லாம் சரியா வரும்..!”
அதற்குள் குழந்தைகள் அவன் கையைப் பிடித்து தயாராக நின்றனர்.. “ஓகே நீங்க ரெண்டு பேரும் கிளம்பி இருங்க.. நான் போய் விட்டுட்டு வரேன்…” என்றவன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றான்..
அருகிலுள்ள ஆங்கில பள்ளியில் இருவரும் எல்கேஜி படிக்கின்றனர்… பெரிய ஸ்கூலில் முதலில் சேர்க்க வேண்டும் என்று ரங்கா முயற்சி செய்தாள். அது சரி வராது போகவே இந்த ஸ்கூலிலேயே சேர்த்துவிட்டாள்..
“ரெண்டு பேரும் கிளாஸ்ல சண்டை போடாம சமத்தா இருக்கணும். ஓகேவா… மிஸ் என்ன சொன்னாலும் கேட்டுக்கணும். அவங்க சொல்லித் தருவதை படிக்கணும்..”
“ஓகே அங்கிள்.. ஹர்ஷா எங்க கூட எப்போ ஸ்கூலுக்கு வருவான்..?”
“அடுத்த வருஷம். மூணு பேரும் ஒரே ஸ்கூல். ஓகேவா.!”
“ஓகே. டன். அதற்குள் ஸ்கூல் வந்துவிடவே இருவரையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்று எல்கேஜி வகுப்பில் விட்டு விட்டு வந்தான்..
வீட்டுக்கு வந்ததும் ரங்காவும் பாட்டியும் ரெடியாக இருக்க, “பாட்டி நீங்க சாப்டீங்களா..?”
“இல்ல. ரங்கா சாப்பிடல. அதான் நானும் சாப்பிடல..!”
“நான் சொன்னதை கேளு. சாப்பிடு, கேஸ் நீதானே ஆஜராக போறே..? ஏன் ரங்கா, டைரக்ட்டா பேசிப் பார்க்க வேண்டியது தானே.. எதுக்கு தேவை இல்லாம கேஸ்..? விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சிடும்..!”
“பேச முடியாது. அவரோட கோரிக்கை நான் ஏத்துக்க முடியாது.. அவர் விட்டுக் கொடுக்க மாட்டார். அப்ப கோர்ட்டில் தான் பார்க்கணும்..!”
“ என்ன பாட்டி இது..?’
“என்ன செய்யறது சொல்லு..? சில விஷயங்கள் இப்படித்தான் நடக்கணும்னு இருந்தா, அதை யாராலும் மாற்ற முடியாது.. சரி என்னதான் சொல்கிறார், என்று பார்ப்போம்..!”
வாசுவின் வற்புறுத்தலுக்கு இணங்கி இருவரும், பெயருக்கு சாப்பிட்டு எழுந்தனர். ரங்காவும் பாட்டியும் வந்ததும் அவர்களை அழைத்துக் கொண்டு கோர்ட்டுக்கு கிளம்பினான்..
இந்த இரண்டு வருடங்களில், ரங்கா ஓரளவு பிரபலமாக இருந்தாள். அவள் அட்டன்ட் செய்த கேஸ் அத்தனையும் தனித் தன்மையோடு வாதிட்டு அவளுக்கென்று ஒரு பெயர் இருந்தது..
அவள் பெயரில் வக்கீல் நோட்டீஸ் வந்ததும், அதை தனது சீனியர் ரங்கபாஷ்யத்திடம் காட்ட அவர், “இந்த கேசுக்கு நான் வேணா வாதாட வா..!” என்று கேட்டார்.
“இல்ல சார் நானே பாத்துக்கிறேன். உங்களுக்கு தெரியணும்னு தான் காட்டினேன்..!”
“ரங்கா, எதுக்கு கோர்ட் வர போகணும்..? எனக்கு அந்த பையனை நல்லா தெரியும்..! நான் சொன்னா கேட்பான். அவுட் ஆப் தி கோர்ட், பேசி பார்க்கலாம்..!”
“இல்ல சார். அவருக்கு என் மேல கோபம்.. நான் அவரை ஜெயிச்சுட்டேன்னு கோபம்.. அதனால என்னை அசிங்கப்படுத்துணும்னு தான் இந்தக் கேஸ் பைல் பண்ணியிருக்கார்..!”
அப்படினாலும் அவரும்தானேமா அசிங்கப்பட போறார்.. அப்படி எதுவும் இருக்காது.. என்ன கேட்டா நீ இந்த ப்ரொபோஸல ஒத்துக் கொள்வது நல்லது..!”
“இல்ல சார்… நான் பார்த்துக்கிறேன். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்..? இதற்கு அவர் என்ன பதில் சொல்றாருன்னு நான் கேட்கிறேன்..!”
இப்போது நேரடியாகவே அவனை சந்திக்க வேண்டும்.. நினைத்தாலே தீப்பற்றி எரிவது போலிருந்தது.. எவ்வளவு தைரியம்..? இந்த வார்த்தையை சொல்வதற்கு..? அப்படி என்றால் இத்தனை நாள் ஏன் காத்திருக்க வேண்டும்..? முதலிலேயே சொல்ல வேண்டியது தானே..? குழந்தைகளுக்கு இப்பொழுது மூன்றரை வயது ஆகிறது..!
இந்த மூன்றரை வருடங்கள் எங்கு சென்றான்..? இந்த ஊரில் தானே இருந்தான். இப்ப என்ன புதுசா..? எண்ணங்கள் தறிகெட்டு ஓட, அவனுடைய கேள்விகளுக்கு எந்த மாதிரியாக பதில் சொல்ல வேண்டும் என்று மனதுக்குள் பட்டியலிட்டுக்கொண்டே காரில் மவுனமாக வந்தாள்..
பாட்டிக்கு ஒன்றுமே ஓடவில்லை.. ‘இந்த பிரச்சனை எப்படி தீரும்..? ஏற்கனவே இந்த மூன்றரை வருடங்களாக நிறைய பிரச்சனைகளை சந்தித்து ஆயிற்று.. ஒவ்வொன்றிலிருந்தும் மீண்டு வந்து இப்பொழுதுதான் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து இருக்கிறது… இப்பொழுது அடுத்த பிரச்சினை…
இதிலிருந்து ரங்கா வெளியில் வந்து விடுவாளா..! பெருமாளே நீ தான் நல்ல வழிகாட்ட வேண்டும்…’ என்று மனதுக்குள் பெருமாளை பிரார்த்தித்துக் கொண்டே வந்தார்.
கோர்ட்டில் கார் பார்க்கிங்கில் வாசு கொண்டு போய் காரை நிறுத்தியதும், ரங்காவும் பாட்டியும் இறங்கினர்.. இவர்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டு நின்ற சரவணன், பாட்டி, ரங்காவை பார்த்ததும் அவர்கள் அருகில் வந்தான்.
“வாங்க பாட்டி..!”
“ நம்ம கேஸ் எத்தனை மணிக்கு சரவணன்..?”
“அனேகமாக பர்ஸ்ட் நம்ம கேசாதான் இருக்கும்..”
“எவ்வளவு நேரம் இருக்கு? ஜட்ஜ் எல்லாம் வந்தாச்சா..?”
“இன்னும் அரை மணி நேரம் இருக்கு..!”
“ ஆமா அங்க என்ன கூட்டம்..!”
“பிரஸ் மாதிரி தெரியுது. பிரஸ் பீப்பிள்க்கு எப்படி தெரிஞ்சதுன்னு தெரியல..!”
“ரெண்டு மூணு முக்கியமான பத்திரிக்கையிலிருந்து வந்துட்டாங்க..!” பேசிக்கொண்டே கோர்ட் வளாகத்திற்குள் வந்தனர்.
“ரங்கா நீ சீனியர் சேம்பர் போயிடு. ஜட்ஜ் வந்ததும் நான் வந்து கூப்பிடுறேன்..!”
“ம்ம்.. என்று கூறி விட்டு, பாட்டியை அழைத்துக் கொண்டு சேம்பரை நோக்கி நடந்தாள்.
எதிரில் உபேந்திரா. அவ்வப்போது கோர்ட்டில் ஏதோ ஒரு மூலையில் நிற்பதை பார்த்து இருந்தாலும், மிக அருகில் பார்ப்பது இன்று தான்..
கருப்பு கலர் பேண்ட்.. வைட் கலர் ஷர்ட்.. வக்கீலுக்கு உரிய தோரணையில் கண்களில் கூலருடன் நின்றவன், “ஹாய்..” என்றான்.
“வழியை விடுங்க, போகணும்..!”
“எப்படி போனாலும் வந்து தான் ஆகணும்..!”
“என்னது..?”
“இல்ல கேஸ் நடக்கிறப்ப, ஜட்ஜ் முன்னாடி வந்து தான் ஆகணும். அதை சொன்னேன்..!”
“அது எங்களுக்கு தெரியும், இப்ப வழி விடுங்க..” என்று சொல்லி ரங்கா நகர்ந்து விட..
பின்னல் வந்த பாட்டியிடம் “பாட்டி எப்படி இருக்கீங்க..? எங்க தாத்தா உங்களை ரொம்ப விசாரித்ததா சொல்ல சொன்னார்..!”
“நல்லா இருக்கேன்பா. அவர் எப்படி இருக்கிறார்..?”
“பைன் பாட்டி..!”
“பாட்டி இப்ப என் கூட வர போறீங்களா இல்லையா..?” என்று ரங்கா அதட்டவும், “நீங்க போங்க பாட்டி..” என்று கூறி வழி விட்டான்.
லெமன் எல்லோவில் கரு நீல கலர் பூக்கள் போட்ட காட்டன் சுடிதார் அணிந்து, நன்றாக வளர்ந்திருந்த கூந்தலை பின்னி, இடது கையில் கருப்பு கவுன் படுத்து கிடக்க நடந்து சென்றவளை உபேந்திராவின் கண்கள் பருகியது..
அதற்குள் அவனது ஜூனியஸ், “சார் பிரஸ்ல இருந்து வந்து இருக்காங்க.. உங்க கிட்ட கேள்வி கேட்கணுமாம்..!”
“இப்ப இல்ல, கேஸ் அட்டன்ட் பண்ணிட்டு வந்து பதில் சொல்றேன்னு சொல்லு..” என்று சொல்லி விட்டு, கேஸ் நடக்கும் இடம் நோக்கி சென்றான்..
“ரங்கா வா போவோம். கேஸ் ஆரம்பிக்க போகுது..” சரவணன் வந்து அழைக்க..
அவனுடன் நடந்து கொண்டே, “ஜட்ஜ் வந்தாச்சா..?”
“ஆமா. அவரோட சேம்பரில் வந்தாச்சு…”
வழக்கு நடக்கும் அறைக்குள் சென்று வக்கீல்கள் அமரும் இருப்பிடத்தில் அமர்ந்தாள்..
எதிரே நிமிர்ந்து பார்த்தபோது, உபேந்திரா இவளை பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது..
“பார்க்கிறதைப் பாரு, என்னமோ பொண்ணையே பார்க்காத மாதிரி பார்க்கிறான்… பேர்தான் பெரிய வக்கீல்.. பொறுக்கி ரேஞ்சுல இருக்கான்..” மனதுக்குள் குமுறிய கோபத்தினால், என்ன மாதிரி யோசிக்கிறோம் என்றே தெரியாமல், அவனை அர்ச்சித்துக் கொண்டிருந்தாள்..
ஜட்ஜ் வந்து அமர்ந்ததும், குமாஸ்தா எழுந்து கேஸ் பற்றிய அறிமுகம் சொல்ல.. ஜட்ஜ் அதைக் கேட்டுவிட்டு, “வாதி அவர் தரப்பை சொல்லலாம்…” என்றார்.
உபேந்திரா எழுந்து, “மை லார்ட், எனது குழந்தைகளை என்னிடம் நீங்கள் மீட்டுத்தர வேண்டும்..” என்று ஆரம்பித்தான்.
“மிஸ்டர் உபேந்திரா உங்க கேசுக்கு நீங்கதான் வாதாட போறீங்களா..?”
“எஸ் யுவர் ஆனர்..?”
“அப்ப கேஸ் என்னன்னு விளக்கமா சொல்லுங்க..!”
“யுவர் ஆனர் எனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது போன வாரம் தான் தெரிந்தது.. என்னுடைய குழந்தைகளிடம், ஒரு அப்பாவுக்கு உள்ள உரிமையை நீங்கள் எனக்கு பெற்று தர வேண்டும்..!”
“உங்களுக்கு குழந்தைகள் இருப்பது போன வாரம்தான் தெரிஞ்சுதா..?”
“ஆமா யுவர் ஆனர்..!”
“யார்கிட்ட இருக்குது. என்ன குழந்தைங்க..?”
“மிஸ் ரங்காவிடம் என்னுடைய குழந்தைகள் இருக்கிறது.. ஆண் ஒன்று,பெண் ஒன்று.” என்று உபேந்திரா சொன்னதும்
ரங்கா எழுந்து, “அப்ஜெக்சன் யுவர் ஆனர். அவைகள் என்னுடைய குழந்தைகள்..!” என்றாள்…
“வாட் இஸ் திஸ் மிஸ் ரங்கா..? இடையில என்ன இது..?”
“யுவர் ஆனர், இந்த கேசில் பிரதிவாதி நான்தான். எனக்காக நானேதான் ஆஜராக இருக்கேன். இவர் சொல்வது பொய். அவை என்னுடைய குழந்தைகள்..!”
“ரங்கா நீங்க சொல்ல வந்தது கூண்டில் ஏறி சொல்லுங்க..”
“எஸ் யுவர் ஆனர். மூன்றரை வருடங்களுக்கு முன்பு கல்யாண் மருத்துவமனையில் எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன…
அதற்கான பர்த் சர்டிபிகேட், மற்றும் டெலிவரி சம்பந்தமான பேப்பர்ஸ், எல்லாம் என்னிடம் உள்ளது.. அவர்கள் எனக்கு பிறந்தவர்கள். என்னுடைய குழந்தைகள். மிஸ்டர் உபேந்தரா, தொழில் முறையில் என் மேல் எழுந்த கோபத்தை, இந்த மாதிரி பொய் வழக்கிட்டு, என்னை அவமானப் படுத்துவதன் மூலம், அவர் என்னை பழிவாங்க நினைக்கிறார்…”
“அப்ஜெக்சன் யுவர் ஆனர், குழந்தைகள் ரங்காவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. எனக்கும் அவைதான் குழந்தைகள்..” என்று உபேந்திரா சொல்ல, ஜட்ஜ் தலையை பிடித்துக் கொண்டார்..
மிஸ்டர் உபேந்திரா, நீங்கள் மிகப்பெரிய வக்கீல். ரங்காவும் தொழிலில் நல்ல பெயர் பெற்றவர். இருவரும் இந்த நீதிமன்றத்தை, பொழுதுபோக்கு இடமாக நினைக்காமல், என்ன நடந்தது என்று கோர்வையாக சொல்லுங்கள்..
அப்போதுதான் வழக்கு என்னவென்று புரியும். இருவரும் தன்னுடைய குழந்தைகள் என்று சொல்வதில் ஒரே ஒரு அர்த்தம் தான் உண்டு.
குழந்தைகளுக்கு அம்மா ரங்கா.. அப்பா நீங்கள் என்று புரிகிறது.. ஆனால் எப்படி…? உங்கள் இருவருக்கும் எப்பொழுது திருமணம் ஆயிற்று…?”
“எங்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை…” உபேந்திரா பதில் கூற.. ஜட்ஜ் அருகிலிருந்த தண்ணீரை எடுத்து குடித்துவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தார்.. (என்னங்கடா இது என் வாழ்க்கையிலேயே நான் இப்படிப்பட்ட கேசு சந்தித்ததே இல்லை.)
“மிஸ் ரங்கா இவர்கள் உங்கள் குழந்தைகள் என்றால் எப்படி..?”
“யுவர் ஆனர் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், என்னுடைய பாட்டியின் அனுமதியின் பேரில் எனக்கென்று குழந்தை பெற்றுக்கொள்ள தீர்மானித்து, டாக்டர் மகாலட்சுமியிடம் டெஸ்ட் டியூப் மூலம் இந்த இரட்டை குழந்தைகளை, மூன்றரை வருடத்திற்கு முன்னால் பெற்றுக் கொண்டேன்.
இவர் இப்பொழுது திடீரென்று வந்து இவைகள் என்னுடைய குழந்தைகள் என்னிடம் கொடுத்துவிடு என்று கேட்கிறார். இது முடியாது..”
“உபேந்திரா உங்களுக்கு இவைகள் உங்களுடைய குழந்தைகள் தான் என்று உறுதியாக தெரியுமா..?”
“தெரியும் டாக்டர் ஆதாரம் இருக்கிறது..?”
“என்ன ஆதாரம்..?”
“யுவர் ஆனர் குழந்தை உருவாவதற்கு அல்லது பிறப்பதற்கு பெண் மட்டும் போதாது, ஆணும் தேவை. ஆதலால் தான் திருமணம் என்ற ஒரு சடங்கை ஏற்படுத்தி ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து இல்லற வாழ்க்கையை ஆரம்பித்து அடுத்த சந்ததியை உருவாக்குகின்றனர்..
ஆனால் நமது எதிர்க்கட்சி வக்கீல் ஆண்களே தேவையில்லை, அதாவது கணவனை தேவை இல்லை, ஆனால் குழந்தை மட்டும் வேண்டும் என்று புதிய புரட்சிக்கு வித்திட்டு, டெஸ்ட் டியூப் மூலம் குழந்தைகள் பெற்றுள்ளார்.
அந்த டெஸ்ட்டியூப் பேபிக்கு உபயோகப்படுத்திய ஆணின் விந்தணு என்னுடையதுதான். இதற்கான ஆதாரம் சாட்சி எல்லாம் என்னிடம் இருக்கிறது. ஆதலால் இந்த குழந்தைகள் எனக்கும் சொந்தம். அதாவது அப்பா நான்தான். ஆதலால் என்னுடைய குழந்தைகள் மேல் அப்பா என்ற உரிமை எனக்கு வேண்டும். இதுதான் என்னுடைய வழக்கு.
“இல்லை யுவர் ஆனர். இருக்கவே இருக்காது…!”
“மிஸ்டர் உபேந்திரா உங்களுடைய சாட்சிகளை கோர்ட்டில் ஆஜர் படுத்த முடியுமா..?”
“தாராளமாக, அடுத்த முறை இந்த கேஸ் நடைபெறும் போது எனது சாட்சிகளை இங்கு ஆஜர் படுத்துகிறேன்.
ஓகே.. மிஸ்.ரங்காவும், மிஸ்டர்.உபேந்திராவும் அடுத்த தடவை தங்களது சாட்சிகளை இங்கு ஆஜர் படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இந்த கேசை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கிறேன்..” என்று கூறி ஜட்ஜ் எழுந்து சென்று விட கோர்ட் கலைந்தது..
அவனை முறைத்தபடியே கருப்புக் கவுனை கழற்றி கையில் மடித்து தொங்கவிட்டு கொண்டு வெளியில் வந்தாள் ரங்கா..
இன்னொரு வாசல் வழியே உபேந்திராவும் வெளியே வர, வெளியில் காத்திருந்த பத்திரிக்கை நிருபர்கள் அனைவரும் இவர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டனர்..
“மேடம் அவங்க உங்க குழந்தைங்ன்னு நீங்க சொல்றீங்க..? உபேந்திரா தன்னுடைய குழந்தைகள் என்று சொல்கிறார்..? இதில் எது உண்மை..?”
“அவர்கள் என்னுடைய குழந்தைகள்..” இதுமட்டும் தான் என்னால் இப்பொழுது சொல்ல முடியும்.. நோ மோர் கொஸ்டீன்ஸ் ப்ளீஸ்..” அவர்களை விலக்கிக் கொண்டு நடக்க எத்தனிக்க, நகழ விடாமல் கூட்டம் அவளை நெருக்கி அடித்தது..
கோபத்தில் முகம் ஜிவு,ஜிவுக்க, “எல்லாம் இந்த பொறுக்கி யால் வந்தது.. என்னோட வாழ்க்கையை ஒரு ஓபன் பிச்சர் ஆகிட்டான்..‘ என்று பல்லைக் கடித்தாள். அந்தக் கூட்டத்தை தாண்டி வெளியேற முயற்சித்தாள்..
இன்னொரு வாசலில் அருகே நின்று பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்த உபேந்திரா, அவள் தத்தளிப்பதை அறிந்து, சத்தமாக” ஹாய் கைஸ், இங்க வாங்க நான் சொல்றேன்..” என்று சொல்லவும் இங்கிருந்த கூட்டம் திபுதிபுவென்று அவன் பக்கம் ஓடியது..
அவர்கள் சென்றதும் சரவணனும் வாசுவும் இவளை நெருங்க, “திமிர் பிடித்தவன். பாரேன், மெனக்கட்டு எல்லாரையும் கூப்பிட்டு பதில் சொல்கிறான்..” என்று திட்ட..
வாசுவும் சரவணனும், “பாட்டி கார்ல வெயிட் பண்றாங்க. வா ரங்கா…” என்று அவளை பிடிவாதமாக அழைத்துச் சென்றனர்..
அவளை வாசுவும், சரவணனும் பத்திரமாக அழைத்துச் சென்றதை கவனித்தவன் அடுத்த நொடி, “ஹாய் கைஸ். ஒரு ரிக்வெஸ்ட். நீங்க என்ன கேட்கணும்னாலும் என் கிட்ட கேளுங்க. நான் பதில் சொல்றேன்.. மிஸ்.ரங்காவை தொந்தரவு படுத்த வேண்டாம்..!”
“அது எப்படி சார்..? அவங்கதானே உங்களுக்கு எதிரா நிக்கிறாங்க..!”
“அப்கோர்ஸ், ஆனா அவங்க என் குழந்தைகளோட அம்மா.. சோ டோன்ட் டிஸ்டர்ப் ஹெர்..!” என்று அழுத்தமான குரலில் சொல்லியவன், “இன்னொரு ரெண்டு சிட்டிங்கில் இந்த கேஸ் முடிஞ்சிடும். கடைசி நாள் மொத்த ஸ்டோரியும் சொல்றேன் ஓகேவா..” என்றவன் அவர்களிடம் விடைபெற்று தனது காருக்குள் ஏறிக் கொண்டான்.
“என்ன ரங்கா என்ன ஆச்சு..?
“ஏன் பாட்டி..? நீங்க உள்ள வரலையா..?
“இல்ல ரொம்ப கூட்டமா இருக்கு. நீங்க வேண்டாம் இங்கேயே இருங்கன்னு வாசு சொல்லி விட்டான். அதான் கேட்கிறேன்..!”
“பாட்டி என் குழந்தைகளை அவன் அவன் குழந்தைகள் என்று சொல்றான் பாட்டி..!”
“அது எப்படி..?”
“அதான் பாட்டி எனக்கும் தெரியல. டெஸ்ட் ட்யூப்பேபிக்கு யூஸ் பண்ணிய டோனர் அவனோடது, அப்படின்னு சொல்றான்.. நம்ம டாக்டர் மஹாலக்ஷ்மியை போய் நாளைக்கு பார்க்கணும்..!”
“அப்படியா..?”
“அப்புறம் வேற என்ன சொன்னான்..?”
“அவனோட குழந்தைகளாம். அதனால அந்த குழந்தைகளோட அப்பாங்குற உரிமை அவனுக்கு வேண்டுமாம்..”
“நல்லது தானே, குழந்தைக்கு அம்மா மட்டும் இருந்தால் போதுமா..? அப்பாவும் வேணும் இல்லையா…!”
“பாட்டி..” என்று கத்தினாள் ரங்கா..
“என்ன ஆச்சு..? ஏன் கத்தறே?”
“அப்பா, நொப்பான்னு எவனும் வரக்கூடாதுன்னு தானே, நானே இப்படி ஒரு முடிவு எடுத்தேன்..!”
“என்ன செய்ய..? நீ என்ன முடிவு எடுத்தாலும் கிரகம் நம்மளை புடிச்சு ஆட்டுது..! என்றாள் பாட்டி..
“கிரகம் எல்லாம் இல்ல. எல்லாம் அந்த உபேந்திரா பார்க்கிற வேலை..”
“சரி ஏதோ ஒண்ணு… இப்ப என்ன பண்ண போற..?”
“கேஸ் இன்னும் முடியல பாட்டி.. ஒரு பொண்ணு குழந்தையை பத்து மாசம் வயித்துல சுமந்து அப்புறம் பெத்து, பாலூட்டி சீராட்டி மூணு வருஷம், நான் வளர்த்து வைத்திருப்பேன்.. இவன் அலுங்காமல், குலுங்காமல் வந்து என் பிள்ளைங்கன்னு கூட்டிட்டு போக விட்டுடுவேன். ஒரு கை பார்த்துவிட்டு தான் மறு வேலை…” என்று மங்கம்மாள் சபதம் போல், கைகளை தேய்த்த ரங்காவை வாசுவும், பாட்டியும் பார்த்திருந்தனர்..
வீட்டுக்கு சென்ற உபேந்திராவை சேதுராம் ஆவலோடு எதிர் கொண்டார்.. “என்னடா ஆச்சு..? கேஸ் நம்ம பக்கம் தீர்ப்பு ஆயிடுச்சா..?”
“இப்பதானே ஆரம்பிச்சிருக்கு.. இன்னும் ரெண்டு மூணு சிட்டிங் போகும்.. எப்படியும் ஜெயிச்சிடலாம்..!”
“டேய் இந்த கேஸ்ல நீ ஜெயிச்சு, என் பேரப் பிள்ளைகளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடணும்.. அப்பதான் நீ வக்கீல் படிச்சதுக்கு ஒரு மரியாதை..!”
“விடுங்க தாத்தா, நம்ம பசங்க நம்ம வீட்டுக்கு வந்திடுவாங்க. டோன்ட் வொரி..” என்றவன் விசிலடித்துக் கொண்டே மாடி ஏறி விட்டான்..
டாக்டர் மகாலட்சுமிக்கு அழைத்த சேதுராம் சில விஷயங்களை அவரிடம் சொல்லி, இந்த மாதிரியே பதில் சொல்லிடுங்க.. என்ன வந்தாலும் நான் பாத்துக்கறேன்..” என்று சொல்லிக் கொடுத்தார்.
தனது பி.ஏ பாபுவை அழைத்த உபேந்திரா மறுநாள் காலை என்ன செய்ய வேண்டும் என்பதை குறிப்பிட்டு, அது முடிந்தவுடன் எனக்கு தகவல் சொல்லு, என்று கூறி போனை வைத்தான்..
‘ரங்கா என்னையா ஜெயிச்ச நீ.. இந்த கேஸ்ல நான் ஜெயிச்சு உன்னை மண்ணை கவ்வ வைக்கிறது மட்டும் இல்லாம, என்னோட குழந்தைகளை நான் என்கிட்ட கொண்டு வர்றேன்னா இல்லையா பார்..‘ என்று தனக்குள் அவளுக்கு எதிராக சவால் விட்டவன், தான் அடுத்தடுத்து செய்ய வேண்டியவை மனதுக்குள் பட்டியலிட்டு விட்டு தூங்க சென்றான்..
அத்தியாயம் 2
ரங்காவும், வாசுவும் கல்யாண் மருத்துவமனைக்குள் நுழைந்தனர். ரிசப்சனில் “டாக்டர் மகாலட்சுமி மேடம் வந்திருக்காங்களா அவங்கள பாக்கணும்..?” என்று வாசு கேட்க..
“அவங்க லீவு மேடம்.. அவங்க சொந்த ஊர்ல விசேஷம் அதுக்கு போய் இருக்காங்க..”
“என்னைக்கு வருவாங்கன்னு தெரியுமா..?”
“தெரியலையே மேடம். ஒரு வார லீவு சொன்னாங்க. நேத்துதான் போயிருக்காங்க..”
“ஓ.. அப்படியா..” என்றவள் வாசுவை அழைத்து கொண்டு திரும்பினான்.
உண்மையில் ரங்காவுக்கு சேதுராமனின் பேரன்தான் உபேந்திரா என்பது தெரியாது.. ஆதலால் மருத்துவமனைக்கு உபேந்திரா எதற்கு வந்தான்..?
எப்படி தனக்கு டோனராக மாறினான் என்பது டாக்டர் மகாலட்சுமியிடம் விசாரித்தால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும், என்பதால் டாக்டரை பார்க்க இருவரும் வந்திருந்தனர்.
“ரங்கா எனக்கென்னமோ இதுல வேற விஷயம் ஏதோ இருக்கிற மாதிரி இருக்கு.?” என்று வாசு சொல்ல..
“என்ன விஷயம்..?
“இந்த ஹாஸ்பிடல் ஓனர் யார்..? இது நம்ம முதல்ல விசாரிப்போம். ஒருவேளை உபேந்திரா இதன் ஓனருக்கு மிகவும் வேண்டியவராக இருந்தால், இப்படி யோசி. ஏதோ ஒரு காரணத்திற்காக மருத்துவமனை வந்தபோது அவர் டோனராக மாறி இருக்க வாய்ப்பு இருக்கலாம் இல்லையா..!”
“அப்படின்னாலும் டோனர் கிட்ட விஷயம் சொல்ல கூடாது என்பது ஹாஸ்பிடல் ரூல்ஸ் அதை எப்படி இவங்க மீறலாம்…?..”
“உண்மைதான்.. ஆனால் இதில் எந்த அளவு உனக்கு சாதகமாக பதில் கிடைக்கும் என்று எனக்கு சந்தேகமாக இருக்குது..!
ஏன்னா, டாக்டர் மகாலட்சுமி ஒரு வாரம் லீவு.. அடுத்த வாரம் நம்ம கேஸ் ஹியரிங் இருக்கு.. நான் சந்தேகப் படுவது சரியா இருந்தா, டாக்டர் மகாலட்சுமி அவர்களுக்கு சாதகமாக தான் சாட்சி சொல்வார்கள்.
அவன் சொன்னதைக் கேட்டு தலையைப் பிடித்துக் கொண்ட, ரங்காவிடம், “ப்ளீஸ் அப்செட் ஆகாதே…!
“வாசு, அப்ப என் குழந்தைகளை என்கிட்ட இருந்து பிரிச்சுடுவாங்களா..?”
“ஏய், அதெல்லாம் நடக்காது.. நாங்க இல்ல அப்படி விட்ருவோமா…!’
“இல்ல வாசு எனக்கு பயமா இருக்கு… அந்த ஆளு என்ன வேணா செய்வான்.. அவனுக்கு என் மேல ரொம்ப கோபம்…!”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல ரங்கா. நீ வீணா கற்பனை பண்ணிக்காத. முதல்ல வீட்டுக்கு போய், நிதானமா யோசி..”
“என்ன யோசிக்க சொல்கிறே?”
“அவர்கிட்ட உன் குழந்தைகளை கொடுக்க வேண்டாம்.. ஆனால் அப்பாங்கிறே உரிமையை கேட்கும் போது, அதைக் கொடுக்கச் சொல்லி கோர்ட்டு உத்தரவு போட்டுச்சுன்னா, என்ன செய்யலாம்னு யோசி..!”
“நோ, நான் அதுக்கு சம்மதிக்க மாட்டேன்..! ரங்காவின் பிடிவாதம் வாசு அறிந்ததுதான்..
‘இப்போது இதை யோசிக்க மாட்டாள்.. தீர்ப்பு வரட்டும். அப்போது அவள் யோசனை செய்வாள்‘ என்று வாசுவுக்கு தோன்றியது.
வீடு வந்ததும் வாசுவுக்கும் முன்னால் விடுவிடுவென்று, வீட்டுக்குள் நுழைந்தவள் பாட்டியிடம் நேராக சென்று, “பாட்டி அந்த டாக்டர் பிராடு போல இருக்கு. நேத்துதான் கேஸ் கோர்ட்டுக்கு வந்து இருக்கு. இன்னைக்கி அங்கு ஊரிலேயே இல்ல..”
பாட்டிக்கு ஏதோ புரிவது போல் தோன்றியது. ஆனால் இப்போது அதை ரங்காவிடம் சொன்னால் கோபம் தன்மீது திரும்பிவிடும் என்று தெரிந்து அமைதி காத்தார்..
“சரி, ரிலாக்ஸா யோசிக்கலாம். பிள்ளைங்க அப்போதே இருந்து உன்னத் தேடிட்டு இருக்காங்க..!”
“எங்க அவங்க..?”
“பெட்ரூம்ல கீர்த்தி கூட மூணு பேரும் இருக்காங்க..!”
ரங்கா பெட் ரூமுக்குள் நுழையவும், அம்மா என்று முதலில் பாவனா வந்து காலை கட்டிக் கொள்ள, போட்டிக்கு என்று பார்த்தாவும், ஹர்ஷத்தும் வந்து கட்டிக் கொண்டனர்..
“எப்ப வந்தீங்க, ஸ்கூல்ல இருந்து..?”
“நாங்க அப்பவே வந்துட்டோம் மம்மி. உங்களைத்தான் காணோம். நீங்க இன்னைக்கு எங்கள கூப்பிட வரல. பாட்டி தான் ஆட்டோல வந்தாங்க..
“அம்மாக்கு வெளியில வேலை இருந்துச்சுடா கண்ணா..!”
“நான் என்ன சொல்லி இருக்ககேன். என்ன வேலை இருந்தாலும் நீங்க தான் எங்களை கூப்பிட வரணும்..!”
“ஓகே. சாரி, சாரி நாளைக்கு நான் வந்துடறேன்..”
“சாரி கேட்டதுனால, போனாப் போகுதுன்னு விடறோம் இல்லடா பார்த்தி..!” என்று பாவனா சொல்ல, ஆமாம் என்று பார்த்தி தலை அசைத்தான்..
இன்னைக்கு என்ன சொல்லிக் கொடுத்தாங்க ஸ்கூல்ல..? என்றதும் மடை திறந்த வெள்ளம் போல் குழந்தைகள் இருவரும் காலை முதல் மாலை வரை நடந்ததை அவளிடம் சொல்ல ஆரம்பித்தனர்..
ஹர்ஷத் இன்னும் பேச்சு வராததால், ‘ம்கூம்’ என்று சொல்லிக்கொண்டு பொம்மையை வைத்து அருகில் இருந்து விளையாடிக் கொண்டிருந்தது..
அதற்குள் உள்ளே சென்ற கீர்த்தி மூன்று குழந்தைகளுக்கும் சாப்பாடு எடுத்து வந்தாள்.
ரங்காவிடம் ஒரு தட்டை கொடுத்துவிட்டு இன்னொரு தட்டில் இருந்து ஹர்ஷத்துக்கு ஊட்ட ஆரம்பிக்க, ரங்காவும் குழந்தைகளிடம் பேசிக்கொண்டே ஊட்ட ஆரம்பித்தாள்..
உள்ளே இவர்களின் கவனம் குழந்தைகளிடம் இருப்பதைக் கண்ட வாசு, பாட்டியிடம் மெதுவாக, “உபேந்திரா சேதுராம் சார் பேரன்னு ரங்காவுக்கு தெரியுமா..?
“தெரியாது…”
“நீங்க சொன்னது இல்லையா..?”
“இல்ல, நான் சொன்னது கிடையாது.”
“அப்ப இது அவர் வேலையா இருக்குமா..?”
அப்படித்தான் நானும் நினைக்கிறேன். ஆனா என்கிட்ட இதைப் பற்றி அவர் எதுவும் சொல்லவே இல்லை..
“ஒருவேளை இது நன்மையா முடிஞ்சா கூட நல்லது தான்.. நாம கொஞ்சம் அமைதியாக இருப்போம்..” என்றான் வாசு பாட்டியிடம்..
நானும் அதை தான் நினைக்கிறேன்.. ஆனா அதை அவள் கிட்ட சொல்ல கூடாது.அதற்குள் ரங்காவும் குழந்தைகளும் வெளியில் வரும் சத்தம் கேட்டு இருவரும் அமைதி ஆகினர்.
போவோமா என்று கீர்த்தி கேட்டதும், வாசுவும் கீர்த்தியும் கிளம்பினர்..
சாப்பிட்டு போக வேண்டியது தானே என்று பாட்டியும் ரங்காவும் எவ்வளவோ சொல்லியும், “இல்ல அக்கா, அங்க மாவு மீதம் ஆயிடும். அடிக்கிற வெயிலுக்கு இவர் பழசு சாப்பிடவே மாட்டார்.. அங்க போய் சாப்பிடலாம்..” என்று கூறி விட்டு கிளம்பி விட்டனர்.
இரவு குழந்தைகள் தூங்கியதும், அருகில் படுத்திருந்த ரங்கா எழுந்து உட்கார்ந்து இருவரையும் பார்த்துக் கொண்டே இருந்தாள்..
தூக்கமே வரவில்லை.. மனதிற்குள் ஏதேதோ நினைவுகள் கற்பனைகள். ‘ஒருவேளை அப்பாவுக்குத்தான் அதிக உரிமை குழந்தைங்க அவங்ககிட்ட போய் விட்டால்..‘ நினைக்கையிலேயே தாங்க முடியவில்லை ரங்காவுக்கு…
‘கடவுளே நான் என்ன தப்பு செய்தேன்..! நான் பாட்டுக்கு நான் உண்டு என் குழந்தைங்க உண்டுன்னு தானே இருக்கேன்.. இவனுக்கு என்ன இந்த குழந்தைங்க விட்டா வேற குழந்தைகளே பெத்துக்க முடியாதா..?
ஆள ஜம்முனு ஹீரோ கணக்கா தான் இருக்கான்.. எவளையாவது கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்க வேண்டியதுதானே…?
ஐயோ எங்கிருந்துதான் வந்தானோ..? என் உயிர வாங்கண்ணே..?’ இருந்த பயத்திலும் கோபத்திலும் உபேந்திராவை முடிந்த அளவு திட்டி தீர்த்தாள்..
பாதித் தூக்கத்தில் புரண்டு படுத்த பாட்டி, ரங்கா தூங்காமல் முழித்துக் இருப்பதைப் பார்த்து, “என்ன ரங்கா தூங்கலையா..? தூங்கு பேசாமல், தூக்கம் இல்லேன்னா உடம்பை பாதிக்கும்…
“பாட்டி தூக்கம் வரமாட்டேங்குது.. பயமா இருக்கு என்னால இவங்கள விட்டுட்டு ஒரு நிமிஷம்கூட இருக்க முடியாது பாட்டி..!”
“அதெல்லாம் பயப்படாத.. இந்தப் பெருமாள் இருக்கிறார் எத்தனையோ கஷ்டத்தில் நமக்கு உதவலையா..? அதே மாதிரி இதுக்கும் ஒரு வழி வைத்திருப்பார்..!”
“என்ன வழி பாட்டி..? என்னால குழந்தைகளை விட்டுக் கொடுக்க முடியாது…!”
அவ்வளவுதானே விடு தீர்ப்பு வரட்டும். அதை வச்சு நாம யோசிப்போம்…!’ என்று பாட்டி பலவிதமாக சமாதானப் படுத்தி அவளை தூங்க வைத்தார்..
மறுநாள் குழந்தைகள் ஸ்கூலுக்கும், ரங்கா அலுவலகம் சென்றவுடன், ஒரு ஆட்டோ பிடித்த பாட்டி நேரே சென்ற இடம் சேதுராமனின் பங்களா.
“வா ரங்கா.. உன்னைத்தான் எதிர் பார்த்திட்டு இருக்கேன்..”
“அப்ப இப்ப நடக்கற விஷயத்துக்கு மூல காரணம் நீங்கதான்..!
“வந்த உடனே சண்டை ஆரம்பிக்கணுமா..? முதல்ல ஜூஸ் குடி.. அப்புறம் தெம்பா சண்டை போடு..!”
“ஏன் இப்படி பண்ணுறீங்க சேது..?
“எப்படி..?”
“உங்க பேரன் தான் டோனர் என்று எனக்கு தெரியாது. எதுக்காக இப்படி..?”
“ரங்கா நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன். அதுக்கு உண்மையான பதில் வேணும்..!”
“கேளுங்க..!”
“உன்னோட பேத்தி கல்யாணம் ஆகாம இப்படி குழந்தைகளை வச்சிட்டு, ஒரு சிக்கலான வாழ்க்கை வாழ்வது, உனக்கு சந்தோஷமா..?”
“இல்ல வருத்தமா தான் இருக்கு.. ஆனால் அவள் தேர்ந்தெடுத்த வாழ்க்கை. சம்மதம் வேற சொல்லி இருக்கேன். அப்புறம் அதை சகித்துக் கொண்டு தானே ஆகணும்..!”
“உன்னோட பேத்திக்கு கல்யாணம் ஆகி இதே குழந்தைகளோட வாழ்ந்தா சந்தோஷமா..?”
“அப்படி ஒன்று நடந்தால் என்னைவிட சந்தோஷப்படுவது வேற யாரும் இல்லை..!”
“அப்ப நடக்கிறது வேடிக்கை பாரு. நடக்கப் போவதையும் பாத்துக்கிட்டே இரு. எந்த பதிலும் சொல்லாதே மற்றதை நான் பாத்துக்குறேன்…!”
“நீங்க என்ன சொல்றீங்க எனக்கு புரியல..!”
“என்னோட பேரன் தான் உன் பேத்திக்கு மாப்பிள்ளை..!”
“உண்மையாவா சொல்றீங்க..?”
“ஆமா நடக்கும். நடத்தி காட்டுறேன்..!”
“ரெண்டும் முட்டிக்கிட்டு நிக்கிதுங்களே..!”
“அதுக்கு தானே இப்ப கோத்து விட்டிருக்கேன்..!”
“முட்டி மோதி வரட்டும்.. முந்தி அவங்க தனித்தனியாக நின்னாங்க.. ஆனா இப்ப அவங்களைக் இணைக்கிற சங்கிலியா ரெண்டு குழந்தைங்க இருக்குது.. கண்டிப்பா அவங்க மாறித்தான் ஆகணும்.. மாறுவாங்க..!
சில விஷயங்களை நீ எப்படி பேசணும்.. அப்படிங்கற அதையும் நான் சொல்லி தரேன்.. அது மாதிரி பேசு..!”
“நடக்குமா சேது..!”
“ரங்கா இந்த பிளான நான் இப்ப போடல.. நீ என்னைக்கு உன்னோட பேத்தி பிரச்சினையே என் முன்னால கொண்டு வந்தியோ, அன்னைக்கு நான் யோசிச்சு போட்ட ப்ளான் இது..!”
“அதனாலதான் உன்னோட பேரன் பேத்தி பங்ஷன்ல நான் ரொம்ப சந்தோஷமா கலந்துகிட்டேன். உனக்கு மட்டும் அவங்க பேரன் பேத்தி இல்ல. ரங்கா எனக்கும் அவங்கதான் பேரன் பேத்தி. நம்ம குழந்தைகளுக்காக நாம இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறோம்.. ஓகேவா..!”
“ரொம்ப தேங்க்ஸ் சேது.. என்னோட பேத்திக்கு ஒரு குடும்ப வாழ்க்கை கிடைக்கும் அப்படின்னா நான் எது செய்யவும் தயாரா இருக்கேன்..!”
“சரி கவலைப்படாதே..!” என்றவர் டிரைவரை அழைத்து ரங்காவை வீட்டுக்கு கொண்டு விட செய்தார்..
திங்கள் கிழமை கோர்ட்டுக்கு தான் வரவில்லை என்று பாட்டி கூறிவிட்டார்..
கேட்டதற்கு, “எனக்கு படபடன்னு இருக்கு.. உனக்கு துணைக்கு வாசு வருவான்.. எதுனாலும் டென்ஷன் ஆகாதே ரங்கா..” என்று சொல்லி வழியனுப்பி வைத்தார்..
வழக்கு நடக்கும் இடத்திற்கு செல்லும் முன், ரங்காவை சந்தித்த உபேந்திரா, “ஹாய், குட்டீஸ் நல்லா இருக்காங்களா..?” என்று கேட்க..
“ஹலோ அவங்க என்னோட பசங்க. அவங்கள பத்தி நீங்க கேட்க வேண்டிய அவசியம் இல்லை!” என்று பதில் கூறி அவனை உறுத்து விழிக்க,
இடதுகை பேன்ட் பாக்கெட்டுக்குள் இருக்க, வலது கையால் முகவாயை தடவிக்கொண்டே, “என்னோட பசங்க தான் வளராம, குட்டி பிள்ளையா இருப்பாங்கன்னு நெனச்சேன்.. ஆனா அவங்க மம்மியும் வளரவே இல்லை போல இருக்கே..” என்று மெதுவாக, ஆனால் நக்கல் தெறிக்கும் குரலில் கிசுகிசுத்தான்.
“என்ன கொழுப்பா…!”
“கொழுப்பு உனக்கா, எனக்கா நாலு பேருக்கு கேட்போமா..! தெளிவா சொல்லுவாங்க.. ஏன்னா நீ ஆல் ரெடி பண்ணி இருக்கிற காரியம் அப்படி..”
‘போடா டேய்‘ என்று வாய் வரை வந்த வார்த்தையை, தொண்டைக்குழிக்குள் விழுங்கியவள், அவனை ஒரு முறை முறைத்துவிட்டு உள்ளே சென்றாள்..
‘கியூட் பேபி ரொம்ப சூடா இருக்கு‘ மனசுக்குள் சொல்லிக் கொண்டவன் தனது சேம்பரை நோக்கி நடந்தான்..
அன்று விசாரணையில் டாக்டர் மகாலட்சுமி உபேந்திராவுக்கு ஆதரவாக சாட்சி சொன்னார்..
“டாக்டர் ரங்காவுக்கு டெஸ்ட் டியூப் பேபிக்கு நீங்க யூஸ் பண்ணிய டோனர் மிஸ்டர் உபேந்திராவோடதா…?”
“ஆமாம் யுவர் ஆனர்..!”
“ஹவ் இட் இஸ் பாசிபிள்..?”
“ஆக்சுவலாக, இப்ப எல்லாம் நிறைய அன் நோன் பிரக்னன்சி கேஸ் வருது. அதனால அது சம்பந்தமா ஒரு ஆராய்ச்சி நாங்க டாக்டர்ஸ் எல்லாரும் பண்ணிட்டு இருக் கோம். நிறைய இன்றைய கால இளைஞர்கள் ஸ்பெர்ம் எடுத்து அதனுடைய குவாலிட்டி கவுண்ட்ஸ் எல்லாம் செக் பண்ணினோம்..
அப்ப நிறைய பேர்கிட்ட கலெக்ட் பண்ணியதில் உபேந்திரா வும் ஒருவர்.. மிஸ்.ரங்கா ட்ரீட்மெண்ட் வந்தபோது அவங்க பாட்டி என்கிட்ட கேட்டது ஒரு நல்ல பையனோட குழந்தை என் பேத்திக்கு வேண்டும்…
எனக்கு அந்த மாதிரி யாரையும் தெரியாது . ஆனா மிஸ்டர்.உபேந்திராவை நல்லாவே தெரியும்.. சோ அவரோட குணநலன்கள் எனக்கு பெஸ்ட்டுன்னு தோணுச்சு.. அதனால அவரோடது யூஸ் பண்ணினேன்…!”
“ஓகே.. ஆனால் சட்டதிட்டத்தின்படி யாரோடது நீங்க யூஸ் பண்ணினாலும், அதை சம்பந்தப்பட்ட இருவருக்குமே தெரிவிக்கக் கூடாது இல்லையா..!”
“ஆமாம்…”
“அப்புறம் எப்படி தெரிஞ்சுது..?”
“நான் சொல்லல. ஆனா வேற வழியா தெரிஞ்சிடுச்சு.. எனக்கு அசிஸ்ட் பண்ணவங்க பேசிட்டு இருக்கேல சார் கேட்டுட்டாரு.. ஏன்னா எங்க ஹாஸ்பிட்டல் எம்.டி மிஸ்டர் உபேந்திரா தான்..!”
இதைக் கேட்டதும் எதிரில் இருந்த ரங்காவுக்கு எல்லா விஷயமும் புரிந்தது.. சொல்லி முடித்த மகாலட்சுமி அது சம்பந்தமாக எல்லாவித ரிப்போர்ட் பேப்பரும் குமாஸ்தாவிடம் கொடுக்க, அவர் நீதிபதியிடம் காண்பித்தார்.
மிஸ்.ரங்கா நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தாய் என்றால், மிஸ்டர். உபேந்திரா தான் தகப்பன் என்றாகிறது.. எனவே அவர் கூறியது போல் உங்கள் குழந்தைகளின் தகப்பன் என்ற உரிமையை நீங்கள் அளிக்க வேண்டும்…!”
“மிஸ்டர் உபேந்திரா நீங்கள் எந்தவிதமான உரிமையை எதிர்பார்க்கிறீர்கள்..?”
“என்னோட குழந்தைகள் என்னை அப்பா என்று அழைக்க வேண்டும். அவர்களை நான் வளர்க்க வேண்டும்..!”
“அப்ஜெக்சன் யுவர் ஆனர்.. இந்த மூன்று வருஷமா என்னுடைய குழந்தைகளுக்கு அப்பா என்ற ஒரு சொல்லே தெரியாது.. அவர்கள் இவரை அப்பா என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.. பழக மாட்டார்கள்..
அப்படி இருக்கையில் இவர் எதை வைத்து என்னுடைய குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்று சொல்கிறார்..!”
“குழந்தைகள் ஒருநாள் என்னுடன் பழகினால் போதும். அப்பா நான்தான் என்று புரிந்து கொள்வார்கள்..!”
“சாத்தியமே இல்லை அது எப்படி புரிந்துக் கொள்வார்கள் யுவர் ஆனர்..!”
“வேண்டுமானால் நான் நிரூபித்துக் காட்டுகிறேன்..!”
“எப்படி..?”
“ஏற்கனவே அவர்களை ஆளனுப்பி கூட்டி வர சொல்லி இருக்கிறேன்.. இப்போது வந்துவிடுவார்கள்.. வந்தது தெரியும்..”
“அது எப்படி குழந்தைகளை எனக்கு தெரியாமல் கூட்டி வர சொல்லலாம்..?”
“நான் நேராக கோர்ட் மூலமாக தான் ஏற்பாடு செய்து இருக்கிறேன்….!”
எந்த வகையிலும் அவனை குற்றம் சொல்ல முடியாமல் அவனது செய்கை இருக்க ரங்கா உண்மையில் தவித்துப் போனாள் .
வழக்கு நடந்து கொண்டிருக்கையில் குழந்தைகள் ஒரு பெண் காவலர் துணையுடன், வாசுவும் உடன் வர வந்தனர்..
கோர்ட்டில் உள்ள கூட்டத்தை பார்த்த குழந்தைகள் மிரண்டு போய் வாசுவிடம் ஒட்டிக்கொள்ள, அவன் இருவரையும் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்..
குழந்தைகளுக்காக கீழே இறங்கி வந்த ஜட்ஜ் “ஹாய் குட்டீஸ் இவங்க யாரு..? என்று ரங்காவை காட்டி கேட்க..
“இது கூட உங்களுக்கு தெரியாதா..? அது எங்க அம்மா..”
‘தேவைதான் எனக்கு..” என்ற ஜட்ஜ், “இது யாரு…?” என்று உபேந்திராவை காட்டி கேட்டார்.
அப்போதுதான் உபேந்திரா நிற்பதை பார்த்த குழந்தைகள், “ஹாய் அப்பா..” என்று அவனை நோக்கி ஓடினர்.
தன்னை நோக்கி ஓடிவந்த குழந்தைகளை தன் இரு கையிலும் வாரிக் கொண்டவன் நீதிபதியிடம் “யுவர் ஆனர் இவர்கள் இருவரும் எனக்கு இரண்டு நாள் தான் பழக்கம். ஆனால் என்னிடம் நன்கு ஒட்டிக் கொண்டனர்.. இதுதான் ரத்த பாசம் என்பது..!” என்றவன் ரங்காவை வெற்றியுடன் பார்வையிட்டான் .
நடப்பதை பார்த்த ரங்காவினால் அதை ஜீரணிக்க முடியவில்லை.. ஒரே நாள் பழக்கத்தில் குழந்தைகள் தன்னிடம் காட்டிய அதே பாசத்தை அவனிடம் காட்ட முடியுமா.. ?
அப்போ இது தான் அவன் சொன்ன ரத்தபாசமா..? பத்து மாதம் வயிற்றில் சுமந்து, பின்னர் பாலூட்டி, சீராட்டி வளர்த்த அன்னைக்கு நிகரான பாசத்தை இத்தனை நாள் முகமே அறியாத அவனிடம் அந்தக் குழந்தைகள் காட்ட வேண்டுமென்றால் அந்த பந்தத்தை என்னவென்று சொல்வது…?
“மிஸ்.ரங்கா இப்போது என்ன சொல்கிறீர்கள்..?” என்று நீதிபதி கேட்க அவள் பதில் சொல்ல முடியாமல் தயங்கி நின்றாள்..
“மிஸ்டர் உபேந்திரா உங்களது விருப்பம் என்ன..?”
“என்னதான் நான் தந்தை என்று நிலை நாட்டினாலும், மிஸ் ரங்கா இந்த குழந்தைகளை பெற்று வளர்த்து ஆளாக்க தனி ஒரு மனுஷியாக, இத்தனை வருடம் போராடியதை நான் மறுக்க இயலாது..
குழந்தைகள் அவருக்கும் சொந்தம். எனக்கும் சொந்தம். இந்த குழந்தைகளுக்கு சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் இருக்க வேண்டும் என்றால் குழந்தைகளின் இனிஷியலும், தந்தையின் கவனிப்பும் மிகவும் அவசியம்.. அதே போல் தாயின் கவனிப்பும் மிகவும் அவசியம் ..
ஆதலால் என்னுடைய வேண்டுகோள், குழந்தைகளுடன் அவர்களது அம்மாவும் எங்கள் வீட்டில் வந்து வசிக்கலாம். குழந்தைகளின் அம்மாவாக மட்டும், மற்றபடி எனக்கும் அவருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை..!”
“என்ன ரங்கா உங்களுக்கு சம்மதமா..?”
“நோ யுவர் ஆனர். என்னால் குழந்தைகளை விட்டுத்தர முடியாது. அவர் வீட்டில் சென்று வசிக்க முடியாது..!”
“ரங்கா நீங்கள் அப்படி சொல்ல முடியாது.. உங்களுக்கு எத்தனை உரிமை இந்த குழந்தைகள் மீது இருக்கிறதோ, அதே உரிமை குழந்தைகள் மீது உபேந்திராவுக்கும் இருக்கிறது..
அதனால் குழந்தைகளின் பொருட்டு நீங்கள் ஒரே வீட்டில் தான் வசிக்க வேண்டும்.. உங்களுக்கு அங்கு செல்ல விருப்பமில்லை என்றால் உங்கள் வீட்டில் அவரை ஒரு பேயிங் கெஸ்டாக வைத்துக் கொள்ளுங்கள்.. இதுதான் இந்தக் கோர்ட் வழங்கும் தீர்ப்பு…!” என்று நீதிபதி தன்னுடைய தீர்ப்பை வழங்கிவிட்டு சென்றார்.
தீர்ப்பைக் கேட்ட ரங்கா சிலையென நிக்க, குழந்தைகளை கைகளில் அள்ளிக் கொண்டே உபேந்திரா வழக்கு நடந்த அறையை விட்டு வெளியே வந்தான்..
அவன் வரவுக்காகக் காத்திருந்த அத்தனை பத்திரிகை நிருபர்களும் குழந்தைகளை அவன் கையில் வைத்திருக்கும் அழகை தங்களது கேமராவில் கிளிக்கி தள்ளினர்.
கேள்விக்கணைகள் உபேந்திராவை நோக்கிச் சீறிப் பாய, அவன் அதற்கு திறமையாக பதிலளித்தான்..
பதில் அளித்து முடித்ததும், தனது அருகில் நின்ற குழந்தைகளை பார்க்க, அத்தனை நேரம் தனது தந்தையை வேடிக்கை பார்த்த மக்கள், அப்பா, அம்மா எங்கே..?” என்று கேட்டேனர்.
உள்ள தான் இருப்பாங்க, வாங்க பார்க்கலாம்..!” என்று திரும்பவும் அதே அறைக்குள் செல்ல, அவன் எதிர்பார்த்தபடியே, பொதுமக்கள் உட்காரும் பெஞ்சில் ஒரு ஓரமாக ரங்கா அமர்ந்து, தலையை கவிழ்ந்து பெஞ்சில் சாய்ந்து இருந்தாள்..
“அதோ இருக்காங்க. போய் கூப்பிடுங்க..!” என்று அவர்களை ரங்காவின் பக்கம் அனுப்பி வைத்தான்..
குழந்தைகள் அவளருகில் வந்து, “அம்மா எழுந்திருங்க..” என்று அழைக்க, அவர்களின் குரலில் எழுந்தவள் இருக்கும் சூழலை புரிந்து “வாசு மாமா எங்கே..?” என்று கேட்டாள்.
“தெரியல..” என்று கைவிரித்தனர்..
அங்கு பத்திரிக்கையாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த வாசு, ரங்கா தேடுவதை அறிந்து உள்ளே வந்தான்..
“வா… ரங்கா கிளம்பலாம்..” என்று அவளையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வெளியே வர, “மிஸ்டர் வாசு ஒரு நிமிஷம்..” என்ற உபேந்திராவின் குரல் கேட்டது..
‘என்ன..?’ என்பது போல் வாசு அவனை பார்த்து நிற்க, ஜட்ஜ்மெண்ட் கேட்டீங்க இல்ல.. “நான் இன்னும் இரண்டு நாளில் அவங்க வீட்டுக்கு வந்து விடுவேன். எனக்கு ஒரு ரூம் தயார் பண்ணி வைக்க சொல்லுங்க..!”
“அதெல்லாம் முடியாது..!”
“அப்படின்னா அடுத்த கேஸ் போட்டு குழந்தைகளை, நான் மட்டும் வளர்க்கலாம்னு பெர்மிஷன் வாங்கிடுவேன்.. எதுனாலும் எனக்கு ஓகே..!” என்றவன் ஜட்ஜ்மேண்டின் ஒரு காப்பியை கையில் கொடுத்து விட்டுச் சென்றான்..
அவன் பேசி முடித்ததுமே குழந்தைகளை கையில் பிடித்துக்கொண்டு விடுவிடுவென்று காரை நோக்கி ரங்கா சென்று விட்டாள்.. அவள் செல்வதையே பார்த்துக்கொண்டு நின்ற உபேந்திராவிடம், “சார், நான் ஏற்பாடு பண்ணிட்டு உங்களுக்கு கால் பண்றேன்…” என்று கூறி விட்டு வாசு விரைந்து சென்றான்…
காரில் எதுவுமே பேசாமல் அமைதியாக வந்த ரங்காவை பார்த்தவன், “ரங்கா நீ இப்ப இருக்கிறது டபுள் பெட்ரூம் வீடு.. பேசாம ஒரு ட்ரிபிள் பெட்ரூம் பார்த்து விடுவோமா.. ஏன்னா ஒரு ரூம்ல நீ இருக்க.. இன்னொரு பெட்ரூம்ல பாட்டி இருக்காங்க.. அவர் வந்தா இடம் பத்தாது..”
“வரட்டும், வந்து ஹாலில் படுக்கட்டும்.. அப்ப தான் புத்தி வரும்..!” என்று கடுகடுத்தவளை, “ரங்கா கொஞ்சம் அமைதியா யோசிச்சு பாரு.. உனக்காக இல்லை உன்னுடைய குழந்தைகளுடைய நன்மைக்காக..!” என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் வீட்டிற்கு வண்டியை செலுத்தினான்.
அத்தியாயம் 3
கோர்ட்டிலிருந்து வந்ததிலிருந்து அழுது கொண்டு இருந்த பேத்தியை சமாதானப்படுத்த முடியாமல் பாட்டி தவித்துக் கொண்டிருந்தார்.. குழந்தைகளை வாசு தன் வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டான்..
“என்ன ஆச்சு ரங்கா தீர்ப்பு..?”
“அவனுக்கு சாதகமாக முடிஞ்சிருச்சு பாட்டி..”
“அப்ப குழந்தைகளை அவன் கூட அணுப்பனுமா..?”
“அது தேவையில்லையாம்.. அவன் குழந்தைகள் கூட இருக்கணுமாம்.. அதனால ஒண்ணு அவன் வீட்டுல நாம போய் இருக்கணும். அல்லது அவன் நம்ம வீட்டுல வந்து இருக்கணும்..!”
“நீ என்ன சொன்ன..?”
“நான் அங்க வர மாட்டேன்னு சொல்லிட்டேன்..!”
“அப்ப அந்த தம்பி இங்க வர போகுதம்மா..”
“ஆமா, இன்னும் ரெண்டு நாள்ல துரை வந்து விடுவாராம்..,,’
“சரி விடு.. வந்து ரெண்டு நாள் இருந்தா நம்ம வீட்டு வசதி பத்தாது. அவரே கிளம்பி போய்விடுவார்..” என்று பாட்டி பேத்தியை சமாதானப்படுத்தினார்.
“எனக்கு அதெல்லாம் கஷ்டமா தெரியல பாட்டி, கோர்ட்ல குழந்தைங்க அவனை பார்த்ததும் அப்பான்னு தாவிகிச்சு.. அதைதான் என்னால் தாங்க முடியலை.. மூணு வருஷம் வளர்த்த என்னை விட மூன்று மணி நேரம் கூட தெரியாத அந்த ஆள் பெரிசா போயிட்டான்…” பொருமினாள்.
“அவர்களுக்கு எப்படி தெரியும் இவனை..?”
“அதான்.. ஸ்கூல்ல போயி ஒக்காந்து அதுககிட்ட நான் தான் உங்க அப்பான்னு சொல்லி பழகி இருக்கான்..”
“அப்படியா.. முதல்ல ஸ்கூல மாத்து.. நம்ம பர்மிஷன் இல்லாம வெளி ஆளுங்ககிட்ட குழந்தையை எப்படி பழகவிடலாம்..?” என்று பாட்டி சத்தம் போட..
“ஒரே நாள்ல அவன் கிட்ட இப்படி ஒட்டிக்கிச்சே, நாளைக்கு என்ன விட்டுட்டு வான்னு கூப்பிட்டா, இதுக ரெண்டும் அவன் பின்னால போய் விடும் போல இருக்கு. அப்ப நான் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு வளர்த்தது எல்லாம் வீண் தானா..?”
“அதெல்லாம் எதுவும் கிடையாது.. குழந்தைகளுக்கு விபரம் புரியாது இல்லம்மா. அதனால அவங்க அப்பாவை பார்த்ததும், அவன் கூட ஒட்டிகிட்டாங்க.. அதுக்காக உன்ன விட்டு கொடுக்க மாட்டாங்க.. எந்த குழந்தைக்கும் தாய் தான் முதல்ல.. நீ கவலைப்படாத ரங்கா..!” என்று தேற்றினார்.
ஆனால் ரங்காவின் மனதில் பாட்டியிடம் கூட சொல்ல முடியாத வேதனை நெஞ்சுக்குள் இருந்தது.. வாசுவை தவிர யாரையும் அவள் வீட்டுக்குள் அனுமதித்ததே இல்லை..
அவன் இங்கு வந்து எப்படி இருப்பான் என்பதை விட, தான் அவன் முன்னால் எப்படி நடமாடுவது என்ற எண்ணமே அவளுக்கு அவமானமாக இருந்தது.. என்ன இருந்தாலும் அம்மா, அப்பா என்ற பந்தம் திருமணத்திற்குப் பின்னால், வந்து ஒருவேளை கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் பிடிக்கவில்லை என்றாலும் குழந்தைக்காக ஒரு வீட்டில் இருப்பது என்பது தவறாகாது..
ஆனால் எந்தவித பந்தமும் இல்லாமல் ஒரு ஆணை தங்களுடன் தங்க வைக்க அவளுக்கு மிகவும் அவமானமாகவும், வேதனையாகவும் உணர்ந்தாள். பாட்டியும் எதற்கு இப்படி சம்மதிக்கிறார் என்று புரியாமல் வேதனை அடைந்தாள்..
‘உன்னால்தான் பாட்டி சம்மதிக்கிறார் என்று மனசாட்சி அவளைக் குத்திக் கிழிக்க, அவளால் பாட்டியிடமும் கேள்வி கேட்க முடியாமல் போயிற்று.’ தான் இப்படி ஒரு காரியம் பண்ணாமல் இருந்தால், பாட்டி இந்த மாதிரி ஒரு செயலுக்கு ஒப்புக் கொள்ளவே மாட்டார், என்பது புரிந்துதான் இருந்தது அவளுக்கு..
தனியாக ஒரு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு இருப்பது என்பது வேறு.. அதே ஒரு ஆடவன் எந்தவிதமான பந்தமும் இன்றி ஒரு வீட்டில் ஒரு பெண்ணோடு இருப்பது என்பது வேறு.. இதற்கு என்னவெல்லாம் பேச்சு கிளம்புமோ..? என்னவெல்லாம் கேட்பார்களோ, என்று நினைக்கையிலேயே, பேசாமல் குழந்தைகளை அவனிடத்திலேயே கொடுத்து விடலாமா என்று ஒரு நொடி யோசித்தாள்..
ஆனால் அது தன்னால் முடியாது என்பதை விட, பாட்டி ஒருபோதும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்.. தன்னுடைய குழந்தைகள் மீது உயிரையே வைத்து இருப்பது அவளுக்கு நன்றாக தெரியும்.. அந்த குழந்தைகளுக்காக தான் தன்னுடைய பிடிவாதத்திற்கு பாட்டி சம்மதம் சொன்னது… கடவுளே நான் இன்னும் என்னவெல்லாம் சந்திக்க வேண்டுமோ..? என்று நினைத்துக் கொண்டே உட்கார்ந்து இருந்தாள்
“என்ன உபேந்திரா கேஸ் சக்சஸ் ஆயிடுச்சு போல இருக்கு..!” போனவுடன் தாத்தா கேட்ட முதல் கேள்வியே இதுதான்..
“யார் சொன்னா உங்களுக்கு..? பாபு போன் பண்ணி சொன்னானா..?”
“உன் முகத்துல எரிகிற தவுசண்ட் வாட்ஸ் பல்பு சொல்லுச்சு..” என்று சொன்னதும் “ஹா, ஹா, ஹா” என்று சிரித்தவன்,
“சக்சஸ், அந்த திமிர் பிடித்தவளுக்கு இது ஒரு பாடம்.. தாத்தா கோர்ட்டில் பிள்ளைக என்கிட்ட தாவினதும் அவள் முகம் போன போக்கைப் பார்க்கணுமே, ஹா, ஹா, ஹா” என்று சிரித்தவன், இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஆயிடுச்சு… ஏற்கனவே என் மேல சிவகாசி பட்டாசு மாதிரி வெடிக்கிறவ, ஆட்டம் பாம் மாதிரி, இனி வெடிப்பான்னு நினைக்கிறேன்.. ஐ வில் என்ஜாய்..!”
“என்ன நடந்தது சொல்லு..?” என்றதும் விளக்கமாய் சொன்னவன் தீர்ப்பை பற்றியும் கூறினான்..
“என்னடா இது நம்ம வீட்டுக்கு வர அந்த பொண்ணு சம்மதிச்சுட்டாளா..?”
“நீங்க வேற, அந்த ராங்கிக்காரி அதுக்கெல்லாம் சம்மதிப்பாளா என்ன..?”
“அப்புறம்..?”
“நான் அவங்க வீட்டுக்கு பேயிங் கெஸ்ட் ஆக போகப் போறேன்..”
“டேய், உனக்கு அங்க வசதி படுமா..?”
“அதெல்லாம் பார்த்துக்கலாம்.. முதல்ல அந்த வீட்டுக்குள் நுழைவோம்.. அப்புறம் நம்ம வசதியை கரெக்ட் பண்ணி விடலாம்..!”
“வீக்லி ஒரு நாள் நான் குழந்தைகளை இங்க கூட்டிட்டு வரேன்.. நாம ஜாலியா இருக்கலாம்..”
“குழந்தைகள் கிட்ட எப்படி பழகினே?”
“அது என்ன பெரிய கம்ப சூத்திரமா.. அவ குழந்தைகளை சேர்த்திருந்த ஸ்கூல் என் க்ளையன்ட்டோடது.. அப்புறம் என்ன மேட்டர் பினிஷ்ட்..”
“பாவம் அந்த பொண்ணு.. ரொம்ப படுத்திடாத..!”
“ஹலோ தாத்தா, எனக்கும் அவளுக்கும் எந்த பந்தமும் கிடையாது.. அப்புறம் ஏன் நான் அவளை படுத்தப் போறேன்.. எனக்கு வேண்டியது என்னோட பசங்க.. அவ்வளவுதான்..!”
‘போன பிறகு தானே உனக்கு தெரியும்..’ மனதுக்குள் தோன்றியதை சொல்லாமல், “ஆனாலும் இன்னொரு வீட்டில் இருக்க போறே.. உன்னால எந்த பிரச்சினையும் வராமல் பார்த்துக்கொள்..!” என்று பெரியவராய் அவனுக்கு அறிவுரை சொன்னார்..
“ஓகே தாத்தா நான் நாளைக்கு அங்க போய் விடலாம் இருக்கேன்.. ஆனா டெய்லி உங்களை வந்து பார்ப்பேன்.. ஒகே..” என்று கூறிவிட்டு சென்றான்..
அவன் வெளியே சென்றதும் ரங்காவுக்கு போன் செய்த சேதுராம், “ரங்கா நாளைக்கு உபேந்திரா உங்க வீட்டுக்கு வர்றான்.. ஏதாவது தெரியாமல் பேசினாலும் மனசில் வெச்சுகாதே.. முதல்ல ரெண்டு பேரும் முட்டிமோதி கட்டும்.. அப்புறம் எல்லாம் சரியா வரும்..”
“எனக்கு என்னமோ இது சரியா வரும்னு தோணலை.. வீணா ரங்காவோட பெயர் ரிப்பேர் ஆயிடும்னு தோணுது..!”
“உண்மைதான் நான் கூட ஜட்ஜ் இப்படி ஒரு தீர்ப்பு சொல்வாங்கன்னு எதிர்பார்க்கல.. சரி நம்மை மீறி நடக்குது.. நல்லதையே நினைப்போம்..” என்றவர் போனை வைத்தார்.
சனிக்கிழமை லீவு என்பதால் குழந்தைகளும் எழும்பவில்லை.. ரங்காவும் அன்று வேலைக்கு செல்ல வேண்டாம் என்று நினைத்து அவளும் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தாள்.. பாட்டி மட்டும் எழுந்து குளித்துவிட்டு பூஜை செய்து கொண்டிருந்தார்..
காலிங் பெல்லின் ஓசை கேட்டு இப்போது யார் வந்து இருப்பார் என்று யோசித்துக்கொண்டே பாட்டி வந்து கதவை திறக்க, “ஹாய் குட்மார்னிங் பாட்டி..” என்று சொல்லிக் கொண்டு நின்றான் உபேந்திரா..
அதிகாலையில் அவனை எதிர்பார்க்காததால், திகைத்து நின்று கொண்டிருந்த பாட்டியை, “கொஞ்சம் வழி விடுறீங்களா..!” என்று கேட்டு அவர் நகர்ந்ததும் உள்ளே நுழைந்து ஹாலை சுற்றிப் பார்த்தான்.. பின்னாலேயே வந்த டிரைவர் உபேந்திராவின் இரு பெட்டிகளை உள்ளே கொண்டு வந்து ஹாலில் வைக்க, “ பாட்டி அந்த ரூம் நான் எடுத்துக்கலாமா..! என்று திறந்திருந்த பெட்ரூம் கதவை காட்டி கேட்க, பாட்டி தலையசைக்க வேண்டியது ஆயிற்று.
“உள்ள கொண்டு போய் வச்சுட்டு, கீழே போய் நீ வெயிட் பண்ணு..” என டிரைவரை அனுப்பி விட்டு..
“ ப்ளீஸ் ஒரு கப் பில்டர் காபி கிடைக்குமா..?”
“ நேரம் தான்..” என்று தனக்குத்தானே முனங்கிக் கொண்டு உள்ளே சென்ற பாட்டி காபி கலந்து கொண்டு வந்து அவனிடம் கொடுத்தார்.. ரிமோட்டை எடுத்து ஆன் செய்து நியூஸ் சேனல் வைத்தவன் சவுண்ட் குறைத்து வைத்துக் கொண்டு காபியை குடிக்க ஆரம்பித்தான்..
பாட்டி உள்ளே சென்று தனது பூஜையை தொடர, காலிங் பெல் சத்தம் கேட்டு எழுந்த ரங்கா நேரே பாத்ரூம் சென்று பிரஷ் பண்ணி விட்டு வந்து பெட்ரூம் கதவை திறந்தாள்.. கதவு திறந்ததும் நேரெதிரே கால் மேல் கால் போட்டுக்கொண்டு காபியை குடித்துக் கொண்டிருந்த உபேந்திராவை பார்த்ததும், அவளுக்கு ஷாக் அடித்தது..
“ஹாய் குட்மார்னிங்.. பசங்க இன்னும் எந்திரிக்கலையா…?”
“காலையிலேயே உனக்கு யார் கதவை திறந்து விட்டது..?”
“உங்க பாட்டி தான்..!” என்றவன் சாவகாசமாக காலை நீட்டிக்கொண்டு டிவியை பார்க்க..
பிரிந்து கிடந்த கூந்தலை அள்ளி முடித்தவள், “பாட்டி, பாட்டி என்று கத்திக்கொண்டே, கிச்சனுக்கு அருகிலிருந்த பூஜை அறைக்கு செல்ல..
“எதுக்கு கத்துற ரங்கா..?”
“இந்த ஆளுக்கு கதவு திறந்து விட்டது நீங்களா..?’’
“ஆமா அதுக்கு என்ன இப்ப..?”
“ஏன் பாட்டி, ஒன்பது மணிக்கு மேல வான்னு சொல்ல வேண்டியதுதானே..!”
“இன்னைக்கு ஒருநாள் தானே அப்படி சொல்ல முடியும்.. நாளையிலிருந்து விடியறதே இங்க தானே..!”
“ஐயோ என்னோட ப்ரீடமே போச்சு..” என்றவள் கிச்சனுக்குள் நுழைந்து ஒரு கப் காப்பியை எடுத்து கொண்டு, ஹாலுக்கு வந்து டிவி ரிமோட்டை கையில் எடுத்து சேனலை மாற்றினாள்.. இதற்குள் தனது அறைக்குள் சென்றிருந்த உபேந்திரா, பேண்டை மாற்றிவிட்டு ஒரு டீ சர்ட், நைட் பேண்ட் சகிதம் வெளியில் வந்தான்.
நேராக குழந்தைகள் படுத்திருக்கும் அறைக்குள் சென்றவன், “ஹாய் குட்டீஸ் என்று சவுண்ட் கொடுக்க, முழித்த குழந்தைகள், “ஹாய் அப்பா..” என்று எழுந்து உட்கார்ந்து விட்டன..
அடுத்த அரை மணி நேரம் அந்த அறைக்குள் யாரும் செல்லவே முடியவில்லை.. இரண்டு குழந்தைகளும் மாறி, மாறி அவனிடம் விளையாடுவதும் பேசுவதுமாக இருக்க, அவனும் அவர்களுடன் ஒன்றிவிட்டான்..
பொறுத்துப், பொறுத்துப் பார்த்த ரங்கா, “ஏய் பார்த்தி பாவனா பிரஷ் பண்ண வேண்டாமா..? பால் குடிக்க வேண்டாமா..” என்ற அறை வாசலில் நின்று கத்த.
“போ மம்மி.. இன்ட்ரெஸ்ட்ஆ கதை போகுது.. அது அப்பா முடிச்ச உடனே நாங்க வரோம்..”
“ஹலோ அது என்னோட பெட் எந்திரிங்க..”
“அதான் ஒரே ஸ்மெல் தாங்கல..” என்றவன் உருண்டு அடுத்த பெட்டில் படுத்துக்கொண்டு “இங்க வாங்கடா குட்டீஸ்” என்று பாவனாவை நெஞ்சிலும், பார்த்தியை அருகில் வைத்துக்கொண்டு விட்ட கதையைத் தொடர்ந்தான்..
“யூ..யூ..” என்று பல்லைக் கடிக்க..
“பார்த்து, பல்லு உடைஞ்சிடப் போகுது.. அப்புறம் எல்லாரும் உன்னை பொக்கைவாய்னு சொல்லுவாங்க…” என்று சொல்ல..
குழந்தைகள், “பொக்கை வாய்னா என்னப்பா..?” என்றன.
“அதுவா, இப்போ உங்களுக்கெல்லாம் எத்தனை பல்லு இருக்கு..!”
“கவுண்ட் பண்ணலையே..!”
“அப்ப கவுண்ட் பண்ணலாமா..!”
“ம்ம், பண்ணலாம்..”
“பிரஸ் பண்ணிட்டே பண்ணலாம்.. பிரஸ் பண்ணும் போது எப்படி வாய் திறப்பீங்க..?”
“ஆ, ஆ,..”
“இப்படியே இந்த கையில பிரஷ் வச்சுகிட்டு, இப்படி தேய்க்கணும்.. சொல்லிக் கொடுத்தான்…”
“நாக்கு, நாக்கு என்றது பாவனா..!”
“உனக்குதான், இங்கே வா.” என்று அவளுக்கும் பிரஷ்ஷில் பேஸ்ட் வைத்து எப்படி பல் தேய்க்க வேண்டும், என்று விளக்கினான்..
பல் தேய்த்ததும் இருவரும் வாயை திறக்க சொல்லி பற்களை எண்ணி அவர்களிடம் சொல்லிவிட்டு “இந்த பல் எல்லாம் இல்லை என்றால் எப்படி இருக்கும் உங்க வாய்..?”
“பாட்டி வாய் மாதிரி இருக்கும்..” பார்த்தி ரகசியமாக சொன்னான்.
“டேய் பாட்டிக்கு பல் இருக்குடா..” அதைவிட ரகசியம் பேசினாள் பாவனா..
“ஐய அது டூப்ளிகேட்.. நீ பார்த்தது இல்லை.. பாட்டி கையில் எடுத்து வெச்சுப்பாங்க..” அவர்கள் இருவர் பேசியதையும் கேட்ட உபேந்திராவுக்கு சிரிப்பு அள்ளியது..
“ஓகே. ஓகே. புரிஞ்சிடுச்சு இல்ல. யார் கிட்டயும் சொல்லிடாதீங்க. பால் குடிக்கலாமா. உனக்கு என்ன போட்டு பால், வேணும்? உனக்கு..?” என்று இருவரிடமும் கேட்க..
“ஐ அம் எ காம்ப்ளான் பாய்..” இது பார்த்தி..
“நோ, பூஸ்ட் இஸ் சீக்ரெட் ஆப் எனர்ஜி,” இது பாவனா.. அவர்கள் இருவர் ஆக்ஷன் பார்த்து இருவரையும் அள்ளி கொண்டவன் வெளியில் வந்து பாட்டியிடம் “இரண்டு பேருக்கும் பால் கொடுங்க…” என்றான்.
“ஏய் பல் தேய்ச்சாச்சா இல்லையாடா..? பல் தேய்க்காமல் ஏமாத்திட்டு பால் குடிக்க போறியா..?”
“நோ மம்மி. நாங்க எல்லாம் பல் தேச்சாச்சு.. இல்லப்பா..” சாட்சிக்கு அழைத்தாள் பாவனா..
“அவங்க பல் தேச்சுட்டாங்க.. பால் கொடு.. நான் கீழே கிரவுண்ட்ல கூட்டிட்டு போய் கொஞ்ச நேரம் விளையாட்டு காட்டிட்டு வரேன்…” மொட்டையாக சுவரைப் பார்த்துக் கொண்டு கூறினான்..
பாட்டியும் ரங்காவும் ஆளுக்கு ஒரு டம்ளர் பாலை கொண்டு வந்து கொடுக்க, “எனக்கு வேண்டாம். பூஸ்ட் தானே நான் கேட்டேன்..” என்று அழ ஆரம்பித்தாள் பாவனா..
“பூஸ்ட் இல்லையா..?”
“ஒரு மாசம் பூஸ்ட். ஒரு மாசம் காம்ப்ளான் மாத்தி, மாத்தி வாங்குறது. கேப்பாங்க, குடிக்க மாட்டாங்க.. அது வேஸ்டாபோயிடும்.” பாட்டி விளக்கம் அளித்தார்.
“ஓகே அடுத்த மாசம் பூஸ்ட். நோ காம்ப்ளான்..” மகளை சமாதானம் செய்தான்..
“ஏன்பா இரண்டு வாங்கினால் என்ன..? இந்த பாட்டியும் அம்மாவும் இப்படித்தான்.. எதுவுமே வாங்க கூடாதுன்னு சொல்லிடுவாங்க..” அவனுக்கு புரிந்தது.. ‘அவர்களுடைய நிலையில் இருந்து பார்த்தால் அது சரியே… தேவை இல்லாமல் செலவழிக்க கூடாது என்ற மனப்பான்மை கொண்டவர்கள். இப்போது தான் வாங்கி கொடுப்பதாக சொன்னால் அவர்கள் செய்தது தவறு என்று குழந்தைகள் மனதில் பதிந்து விடும்.’ என்று யோசித்தான்..
“என்னப்பா பதிலே சொல்லல..?”
“பாட்டியும் அம்மாவும் எதுக்கு வாங்க கூடாதுன்னு சொன்னாங்க..?”
“வேஸ்டா போயிடும் சொல்றாங்க..?”
“அது உண்மைதானே நீங்க ஒழுங்கா குடிக்கலேன்னா ரெண்டு சீக்கிரம் வீணாப் போயிடும்.. அதனால சொல்லி இருப்பாங்க.. நீங்க இரண்டு நேரம் குடிக்கிறதா எனக்கு ப்ராமிஸ் பண்ணுங்க. நான் வாங்கித் தரச் சொல்லி ரெக்கமெண்ட் பண்றேன்..” என்று கூறி அவர்களை குடிக்க வைத்தான்..
கேட்டுக்கொண்டிருந்த பாட்டிக்கு மனது நிறைந்து போயிற்று.. தங்களுடைய மிடில் கிளாஸ் வாழ்க்கையை குறை சொல்லாமல், தான் பணக்காரன் என்ற பந்தா காட்டாமல், குழந்தைகளிடத்தில் தங்கள் இருவரையும் விட்டுக் கொடுக்காமல் அவன் பேசிய விதத்திலிருந்தே உபேந்திராவின் நல்ல குணத்தை பாட்டி ஒரு நொடியில் புரிந்து கொண்டார்..
ரங்காவுக்கும் அது புரிந்தாலும், காலையில் வந்ததில் இருந்து குழந்தைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்ட அவன் மேல் கடும் கோபத்தில் இருந்தாள்.. குடித்து முடித்தவுடன் இருவரும் பந்தை தூக்கிக்கொண்டு அப்பாவின் பின் செல்ல, “ஏய் பார்த்தி குளிக்க வேண்டாமா..?”
“அப்பா எங்களுக்கு பால் விளையாட சொல்லித் தரேன்னு சொல்லிருக்காங்க. நாங்க விளையாண்டுட்டு வந்து குளிப்போம்..” என்று சொல்லிவிட்டு உபேந்திராவின் பின்னால் இரண்டும் ஓடிவிட்டது..
அவர்கள் சென்றதும் உள்ளே வந்து பாட்டியிடம், “பாருங்க பாட்டி காலையில் இருந்து பிள்ளைகளை அவன் பக்கமே வச்சுக்கிட்டான். ஒரு நிமிஷம் கூட அவங்க என் பக்கம் வரவில்லை.. சொல்லும் போதே ரங்காவுக்கு கண் கலங்கிற்று..
“ரங்கா நான் ஒண்ணு சொல்லுவேன் தப்பா நினைக்காதே.. அந்த தம்பிக்கு இப்பதான் குழந்தைகளைப் பற்றி தெரிஞ்சிருக்கு.. பெத்த குழந்தைகளை இந்த மூணு வருஷமா, பார்க்கல, கொஞ்சலை, அந்த ஏக்கம் தீர ஒரு வாரம் கொஞ்சுவாரா, கொஞ்சி விட்டு போகட்டும்.. அப்புறம் தன்னால குறைந்துவிடும்… இப்ப உனக்கே ஒரு வருஷம் உன் பிள்ளைகளை பாக்கல என்றால் எப்படி இருக்கும்.? அப்படி நினைச்சுப் பாரு..”
“பெரிய பணக்காரன் திமிரு வேற..?”
“அப்படி என்ன திமிரா அவர் செய்தார்..?”
“அது என்ன பூஸ்ட் வாங்கலியான்னு நம்மக்கிடையே கேள்வி..?”
“அவன் பொண்ணு பூஸ்ட் வேணும்னு அவன் கிட்ட சொல்லி இருக்கா.. பூஸ்ட் இல்லையான்னு தானே கேட்டாரு. ஏன் வாங்கலைன்னு கேட்கலையே.. அதுக்கும் மேல நம்ம சொன்ன பதில் அந்த குழந்தைக்கு புரியிறமாதிரி எப்படி சொன்னார். அவன் நெனைச்சா நொடியில் எல்லாம் வாங்கலாம்..
ஆனா அப்படி செய்தால் குழந்தைக்கு நம்ம மேல மதிப்பு இல்லாமல் போய்விடும், மேலும் நம்முடைய சூழ்நிலையை அவர் சுட்டிக் காட்டியதா ஆயிடும்னு, அப்படி செய்யவில்லை.. இந்த பண்பு ஒன்னு போதும் ரங்கா.. நீ நினைக்கிற மாதிரி அந்த பையன் கெட்டவன் இல்லை.. ஒரு நல்லவன் தான் உன் குழந்தைகளுக்கு அப்பாங்கிறதே எனக்கு மிகப்பெரிய திருப்தி..” என்று சொல்லிவிட்டு பாட்டி அடுப்பறையில் சென்று காலை டிபன் வேலையை பார்க்க ஆரம்பித்தார்..
அபார்ட்மெண்ட் கீழே உள்ள இடத்தில் குழந்தைகளுடன் பால் விளையாட கற்றுக் கொடுத்தான்.. சற்று நேரம் அவர்களுக்கு எப்படி பந்தை எறிவது காலால் எற்றுவது எல்லாம் கற்றுக் கொடுத்து விளையாட வைத்து அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்தான்..
“போய் அம்மா கிட்ட சமத்தா குளிச்சிட்டு வாங்க சாப்பிடுவோம்..” என்று அவர்களை அனுப்பிவிட்டு போனை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தவன் போன் பேச ஆரம்பித்தான்..
அம்மா என்று வந்த பார்த்தியை, “ஏண்டா இப்ப தான் என்ன கண்ணு தெரியுதா..?”
“இல்லையம்மா எப்பவுமே தெரியுமே..” என்று குழந்தை எப்போதும் போல் பதில் சொல்ல,
‘அப்படியே அவன் புத்தி..’ என்று தன்னை அறியாமல் நினைப்பு ஓட, ‘இதுவரை இல்லாமல் இன்று ஏன் இந்த கம்பேரிசன்.’ என்று தனக்குத்தானே ஒரு கொட்டு வைத்துக்கொண்டாள்.
பாட்டி சொன்னது நினைவில் வர குழந்தைகளிடத்தில் வம்பு வைத்துக் கொள்ளாமல் அவர்களை அழைத்துச் சென்று குளிப்பாட்டி விட்டு உடை அணிவித்தாள்.. எப்போதும் சேட்டை பண்ணி குளிக்கும் குழந்தைகள், இன்று அப்பாவுடன் சாப்பிடும் ஆசையில் சமத்தாக குளித்துவிட்டு வந்து விட ரங்காவுக்கு ஆச்சரியமாக இருந்தது..
“அப்பா நாங்க ரெடி..? நீங்க ரெடியா..”
“அட ரெண்டு பேரு ரெடி ஆயாச்சா.. அப்ப நான் தான் லேட் போல.. ஜஸ்ட் பைவ் மினிட்ஸ். அப்பா இப்ப வந்துடுறேன் பார்..” என்று அவர்களிடத்தில் சொல்லிவிட்டு, தான் பாக் வைத்த அறைக்குள் சென்று நிமிடத்தில் குளித்துவிட்டு வந்தான்.
“சாப்பிட வாங்க..” என்று அழைத்த பாட்டி மூவருக்கும் தட்டு வைத்தார்.
“பசங்க சாப்பிடட்டும். நான் வெளியில் சாப்பிட்டுக்கிறேன். என்னால உங்களுக்கு எதுக்கு சிரமம்..?”
“ஏன் தம்பி. எங்க வீட்டிலேயே தங்க வந்து இருக்கீங்க.. அப்ப சாப்பிட்டா என்ன..? எங்களுக்கு உங்க வீடு மாதிரி விதவிதமா சமைக்க தெரியாது.. ஆனால் ஏதோ செய்வோம்.. சாப்பிடற மாதிரி இருக்கும். சாப்பிடுங்க…” என்று சொல்லவும் பாட்டியின் அன்பில் கனிந்தவன் சாப்பிட ஆரம்பித்தான்..
இரண்டு பேரும், சாப்பிட தெரியாமல் வைத்துக் கொண்டிருக்க அங்கு வந்த ரங்கா, பார்த்திக்கு ஊட்ட ஆரம்பித்தாள்..
“அம்மா நேக்கு நேக்கு..” என்று பாவனா கத்த ஆரம்பிக்க..
“ அண்ணாக்கு ஊட்டிட்டு வந்து உனக்கு ஊட்டறேன்..”
“நான் ஊட்டி விடவா..” என்று உபேந்திரா கேட்க, பாவனா தலையாட்டியது..
தன் கையை கழுவிவிட்டு வந்து குழந்தைக்கு ஊட்ட ஆரம்பித்தான்.. “நீங்க சாப்பிடுங்க ரங்கா பார்த்துப்பா….”
“இல்ல இருக்கட்டும்.. அவன் சாப்பிடும்போதே இவளும் சாப்பிடட்டும்..! என்று கூறி அவளுக்கு முழுவதும் ஊட்டிவிட்டு, தண்ணீர் கொடுத்து குடிக்க வைத்து வாயை துடைத்து விட்டான்..
அதற்குள் அவன் தட்டில் வைத்திருந்த தோசை ஆறி இருக்கவே, பாட்டி அதை எடுத்து விட்டு சூடாக அவனது தட்டில் வைத்தார்..
“வேண்டாம் வேஸ்டா போயிடும்..” தயங்கிக்கொண்டே உபேந்திரா சொல்ல..
“உங்கள் லெவலுக்கு ஆறின தோசை எல்லாம் கொடுக்கக் கூடாது.. இதெல்லாம் உங்களுக்கு வேஸ்ட்ன்னு ஒரு கணக்கா என்ன..?” அவனை வாரியவள், தனக்கு ஒரு தட்டு வைத்து சாப்பிட ஆரம்பித்தாள்..
எனக்கு இதெல்லாம் ஒரு கணக்கு கிடையாது.. என்னோட லெவலுக்கு நீ வரவும் முடியாது.. ஆனா உங்களுக்கு லெவெலுக்கு வேஸ்ட் வேண்டாம் என நான் நினைக்கிறேன்..” என்று அவள் மூக்கை உடைத்தவன், சாப்பிட்டு எழுந்து விட்டான்..
“பாட்டி நான் குழந்தைகளை கூட்டிட்டு கடைக்கு போயிட்டு வரட்டுமா..” என்று பாட்டியிடம் அனுமதி வேண்ட, ஊருக்கு முன்னால் கிளம்பி இருந்த குழந்தைகளை பார்த்த பாட்டி மறுப்பு சொல்லாமல் சம்மதித்தார்..
“குழந்தைகள் பத்திரம்..!”
“அவங்க என்னோட குழந்தைங்க.. கிரிமினல் லாயர் உபேந்திராவோட பிள்ளைகளை தொடுவதற்கு எவனுக்கும் தைரியம் கிடையாது..! என்றவன் அவ்வளவு அக்கறை உள்ளவ நீயும் வர வேண்டியது தானே..!” என்று அவளை பதிலுக்கு வார..
“இல்ல நான் வரலை.. மதியம் சாப்பிட குழந்தைகளை கூட்டிட்டு வந்துடுங்க.. வெளியில தேவையில்லாதது வாங்கிக் கொடுக்க வேண்டாம்.. அவங்களுக்கு சேராது..”
“எதுவும் சாப்பிடணும்னா, உன் கிட்ட பர்மிஷன் கேட்க சொல்றேன் போதுமா..?” என்றவன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு காரில் கிளம்பினான்..
பால்கனியில் நின்று அவர்கள் காரில் செல்வதை பார்த்திருந்த ரங்காவுக்கு தனது உயிரையே அவன் பிரித்துக் கொண்டு செல்வதுபோல் தோன்ற, பெருகிய கண்ணீரைத் துடைக்காமல் பார்த்தவண்ணம் நின்றாள்..
காரில் இருந்து எட்டிப் பார்த்த குழந்தைகள் மாடியில் அம்மா நிற்பதை பார்த்து, “அம்மா பை..” என்று கையை ஆட்டி விட்டு சென்றனர்..
அத்தியாயம் 4
இதுநாள் வரை குழந்தைகள் அவளை விட்டு தனியாக எங்கேயும் சென்றது இல்லை என்பதால், அவளால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை..
மனதுக்குள் ஏதேதோ எண்ணங்கள் தோன்ற, இங்கு இருந்தால் தனக்கு பைத்தியம் பிடித்து விடும் என்று நினைத்தவள் குளித்து உடைமாற்றிக் கொண்டு அலுவலகத்துக்கு கிளம்பினாள்..
“என்ன ரங்கா நீ எங்க கிளம்பிட்ட? ஆபீஸ் போக போறது இல்லன்னு சொன்னே..?”
“அப்படி தான் சொன்னேன்.. இங்கே இருந்தா சரி வராது பாட்டி. ஆபீஸ்க்கு போனாலாவது என்னோட மூடு கொஞ்சம் சரியாகும்..!” ரங்காவுக்கு பேத்தியின் மன நிலை நன்கு புரிந்தது.. அவள் வெளியே சென்று வரட்டும் என்று நினைத்தவர் “சரி போய்ட்டு வா. மதியம் சாப்பாட்டுக்கு வருவியா..”
“இல்ல பாட்டி வரல.. இட்லி இருக்கு இல்ல.. அதை எடுத்துட்டு போயிடறேன்..” என்று அதை ஒரு டப்பாவில் போட்டு எடுத்துக்கொண்டு கிளம்பினாள்…
“காலையில் சாப்பிடலை, அப்ப இந்த பாலாவது குடிச்சிட்டு போ..” என்று வலுக்கட்டாயமாக ஒரு டம்ளர் பாலை குடிக்க வைத்து அனுப்பினார்.. அவள் தனது ஸ்கூட்டியை எடுத்து கொண்டு கிளம்பும் வரை மாடி பால்கனியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த பாட்டி ஒரு பெருமூச்சுடன் வீட்டுக்குள் நுழைந்தார்..
சற்று நேரத்தில் அங்கு வந்த வாசு வீட்டில் ஒருவரையும் காணாமல், “என்ன பாட்டி குழந்தைங்க எங்க..?”
“அவங்க அப்பாவோட வெளியில போயிருக்காங்க..!”
“அப்பாவோடவா.. அப்ப உபேந்திரா வந்தாச்சா..?”
“ஆமா காலங்காத்தாலேயே வந்தாச்சு..!” என்ற பாட்டி அவன் வந்தது முதல் நடந்ததை விவரித்துவிட்டு, “ரங்கா ஒரே மூட் அவுட்.. என்னோட குழந்தைங்க அவன்கிட்ட ஒட்டிக்கிச்சு ஒரே புலம்பல்.. அதான் ஆபீசுக்கு போய் இருக்கா.. நானும் அங்க போய் கொஞ்ச நேரம் இருந்துட்டு வரட்டுமே சரின்னு சொல்லிட்டேன்..”
அவனுக்கும் ரங்காவின் மனநிலை புரிந்ததால், “இதுல யாரை குறை சொல்வது என்று தெரியல பாட்டி..? அவரைப் பொருத்தவரை அளவில் அவரோட ஆசையும் கரெக்டு தான். எந்த மனுஷனுக்கும் தன்னோட குழந்தைகளை பார்க்கணும், பேசணும், கொஞ்சணும்னு ஆசை இருக்காதா..? அதனால அவரை குறை சொல்ல முடியாது..
ரங்காவையும் குறை சொல்ல முடியாது.. கஷ்டப்பட்டு பெத்து இத்தனை காலம் வளர்த்த பசங்க, தன்னை விட அப்பா பெருசுன்னு சொல்லும்போது அவளுக்கு வலிக்குது.. குழந்தைகளையும் குறை சொல்ல முடியாது. அவங்களுக்கு அப்பா அம்மா ரெண்டு பேருமே தேவை.. எந்த குழந்தைக்கும் அம்மாவோட அன்பும், கவனிப்பும் ஒரு விதத்தில் தேவைன்னா, அப்பாவோட துணையும், ஆதரவும் ஒரு ஒருவிதத்தில் தேவை.. சின்ன குழந்தைங்க அவங்க புரிஞ்சுக்கிட்ட அளவுக்கு பெரியவங்க புரிஞ்சுக்கலன்னா என்ன பண்றது…?” வாசு புலம்பினான்..
“நீயும் நானும் புலம்பி ஒன்றும் ஆகப் போவதில்லை.. அவங்க ரெண்டு பேரும் புரிஞ்சுக்கணும். காலம் அவர்களுக்கு புரிய வைக்கும். ரங்கா விளையாட்டுத்தனமா ஒரு முடிவு எடுத்தா..! அது அவளை மட்டும் சார்ந்ததுன்னு அவ நினைச்சா. அது தப்புன்னு இப்பதான் புரிஞ்சிருக்கு.
இன்னும் அதனோட விளைவுகள் வேற மாதிரி வரும்னு இனிமேல் தான் புரியும். இவ்வளவு நாள் இல்லாத பேச்சு இனி அவளைப் பத்தி கிளம்பும். ஏற்கனவே ஒரு வாரமா பேப்பர்ல இவங்க ரெண்டு பேர் பற்றிய செய்திதான். அதை இன்னும் முழுசா வாசித்துப் பார்க்கல. இப்ப இத பாத்துட்டு, ரொம்ப தெரிஞ்சவங்க பேசினது பத்தாதுன்னு, இவளை தெரியாதவங்க, எல்லாருமே பேசுவாங்க.. அதையெல்லாம் தாங்கிக்கிற பக்குவம் இருந்தாலும், மனசு ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் விடும். எனக்கு அதுதான் கவலையா இருக்கு. எல்லாம் பெருமாள் செயல். ஹர்ஷத் என்ன பண்றான்..?”
“அதை சொல்ல தான் வந்தேன். ஹர்ஷத்துக்கு அந்த ஸ்கூல்ல இடம் கிடைச்சிருச்சு. நேத்துதான் தபால் அனுப்பி இருந்தாங்க..!”
“ஓ.. அப்படியா சந்தோஷம். இந்த குழந்தைகளுக்கு தான் சீட் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க.. உன்னோட குழந்தைக்காவது கொடுத்தாங்களே, அந்த மட்டும் சந்தோஷம்..”
“ஆனா எனக்குதான் கஷ்டமா இருக்கு.. நம்ம மூணு பேரும் தான் எல்லா குழந்தைகளுக்கும் சீட் கேட்டு அந்த ஸ்கூலுக்கு போனோம். ஆனால் பார்த்திக்கும், பாவனாவுக்கும் சீட்டு கிடையாதுன்னு சொல்லிட்டாங்க.. இப்ப ஹர்ஷத்தை மாத்திரம் எப்படி அங்க கொண்டு போய் சேர்கிறது..?”
“அதெல்லாம் நீ யோசிக்காதே.. நல்ல ஸ்கூல்ல சீட்டு கிடைச்சிருக்கு. அங்கேயே படிக்க வை. நீ எங்களை மட்டும் யோசிச்சேன்னா அது கீர்த்திக்கு மன சங்கடத்தை கொடுக்கும். எந்த உறவிலேயும் கொஞ்சம் இடைவெளி இருக்கிறது நல்லது. “பாட்டியின் வார்த்தைகள் வாசுவுக்கும் புரிந்தது..
ஸ்கூலில் சேரச் சொல்லி தபால் வந்ததிலிருந்து கீர்த்திக்கு மிகவும் சந்தோஷம். இப்போது வேண்டாம் என்று சொன்னால் அவள் மிகவும் வருத்தப்படுவாள்.. “சரி பாட்டி ஹர்ஷத்தை அங்கேயே சேர்த்து விடுகிறேன்..! என்றவன் வீட்டுக்கு கிளம்பினான்.
கோர்ட், கேஸ் என்று ஒரு வாரமாக ரங்கா அலுவலகம் வரவில்லை. சனிக்கிழமை கோர்ட் கிடையாது என்பதால் எல்லோருமே அலுவலகத்தில் தான் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். இவள் உள்ளே நுழைந்ததும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டு, கண்ணால் பேசியதை அறிந்தும் அறியாமலும், தன் இடத்திற்கு சென்று அமர்ந்தாள்.
சற்றுப் பொறுத்து உள்ளே வந்த சீனியர், ரங்காவை பார்த்ததும், “ரங்கா உள்ள வாம்மா….!” என்று கூறி விட்டு தனது அறைக்குள் சென்றார். பின்னாலேயே ரங்கா சென்றதும், “உட்கார்.” என்றவர் “என்ன ஆச்சு.? ஜட்ஜ்மென்ட் அவருக்கு சாதகமாக ஆச்சுன்னு தெரியும். நீ அப்ப அவங்க வீட்டுக்குப் போகப் போறியா..?”
“இல்ல சார். நான் போகல. ஆனா அவரே எங்க வீட்டுக்கு வந்துட்டாரா..?” என்று ரங்கா சொன்னதும் ஆச்சரியப்பட்ட பாஷ்யம், “கோடீஸ்வரன்மா, மல்டி மில்லியனர். அவன் உன் வீட்டில்..” என்று இழுத்தவர் “ஆச்சரியமா இருக்கு. உண்மையிலேயே அவருக்கு தன்னோட குழந்தைகள் மேல பிரியம் போல இருக்கு..” என்றார்.
“ஏன் அப்படி சொல்றீங்க..?”
“இல்ல, எனக்கு அவரைப் பற்றி ஓரளவு தெரியும்.. டெல்லியிலே இருந்தவர். மேல்தட்டு நாகரிகம். கல்யாணத்து மேல அவ்வளவு நம்பிக்கை கிடையாது.. அதனாலேயே தாத்தா கல்யாணம் பண்ண சொல்லியும் இவ்வளவு நாள் பண்ணவே இல்ல.. இப்படி குடும்பம் கல்யாணம் இதெல்லாம் நம்பிக்கை இல்லாதவருக்கு எப்படி குழந்தைகள் மேல ஒரு பிடிப்பு வந்தது எனக்கு ஆச்சரியமா இருக்கு..?” என்றார்..
‘அவனும் தன்னைப் போல தானா..?’ மின்னல் போல ஒரு எண்ணம் தோன்றி மறைய, ‘ச்ச நானும், அவனும் ஒண்ணா..?’ என்று நினைத்து தலையைக் குலுக்கிக் கொண்டாள்..
“என்னமா என்ன யோசனை..? அவனும் உன்னைப் போலத்தான் கல்யாணமே வேண்டாம்னு சொன்னான். இப்போ வகையா மாட்டிக்கிட்டான்..!” என்று தன் போக்கில் பாஷ்யம் சொல்ல ரங்கா திடுக்கிட்டாள்.
“ஆனா இது உனக்கு பிரச்சினையாகுமேம்மா..?”
“ஆமா அது தான் எனக்கும் யோசனையா இருக்கு.. ஆனால் அவரோட முடிவு ஒண்ணு குழந்தைகள் கூட நான் இருக்கணும். அல்லது குழந்தைகள் என்கிட்ட இருக்கணும், என்பதுதான். என்னால குழந்தைகளை விட்டு விட்டு எப்படி இருக்க முடியும்..? எனக்கு காலையில் இருந்து ஒண்ணுமே ஓடல. அதான் ஆபீசுக்கு கிளம்பி வந்துட்டேன்..” உண்மையை ஒளிக்காமல் சொன்னாள்.
“சரி வருத்தப்படாதம்மா. எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு. அது உனக்கும் கிடைக்கும். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையாக போ..!” என்றவர் சற்று நேரம் அலுவலக விஷயங்களை பேசி அவளை அனுப்பி வைத்தார்..
தன் இருப்பிடத்திற்கு வரவும் மதிய உணவு வேளைக்கு என்று மற்றவர்கள் வெளியில் சென்று இருக்க, காலையிலேயே சாப்பிடாததால் அவளுக்கும் பசித்தது. தன்னுடைய டிபன் பாக்ஸ் எடுத்துக்கொண்டு டைனிங் ஹால் நோக்கி சென்றவள், அங்கு காலியாக இருந்த ஒரு சேரில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
இவள் வரும்வரை ஜாலியாக பேசி அரட்டை அடித்துக் கொண்டிருந்தவர்கள், இவள் வந்ததும் அமைதியாக, அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ‘என்னவோ வேண்டுமென்றே அவர்கள் தன்னை இரிடேட் செய்வது போல் தோன்ற, வேகமாக உண்டு முடித்தவள், கையை கழுவிவிட்டு தனது இருப்பிடத்திற்கு வந்து உட்கார்ந்து வேலை செய்ய ஆரம்பித்தாள்.. அதன் பிறகு அவளது கவனம் முழுவதும் கம்ப்யூட்டரில் குறிப்புகள் எடுப்பதும், மற்றும் பைல்கள் பார்ப்பதும் என்று பொழுது ஓடிற்று..
மாலை ஆனதோ, மற்றவர்கள் எழுந்து சென்றதோ எதுவுமே கவனமில்லாமல், வெறித்தனமாக வேலையை மட்டும் கவனித்துக் கொண்டிருந்த அவளை மற்றவர்கள் கவனித்தாலும், அதை அவளிடம் அறிவுறுத்த யோசித்துக்கொண்டு, சனிக்கிழமை என்பதால் சீக்கிரமே சென்றுவிட்டனர்..
இரவு ஏழு மணி ஆகும் போதுதான் ரங்காவுக்கு தான் அதிக நேரம் சுற்றுப்புறத்தை கவனிக்காமல் இருப்பது புரிந்தது. நிமிர்ந்து பார்த்தாள், ஒருவரையும் காணவில்லை. காபி குடிக்காமல் இருந்தது தலைவலிக்க, கம்ப்யூட்டரை சட்டவுன் செய்து எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு கிளம்பினாள்..
அவளது இருப்பிடத்திற்கு செல்ல ஒரு மணி நேரம் ஆகும். வண்டி ஓட்டிக் கொண்டு செல்லும் மனநிலை இல்லாததால் பஸ்சில் சென்று விடலாம் என்று நினைத்துக் கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியே இறங்கினாள். அலுவலகத்தில் இருந்து சற்று தூரத்தில் பஸ் ஸ்டாப்.. அதற்கு நடக்க ஆரம்பிக்க ஒரு நூறு அடி தூரம் சென்றதும் அவளை உரசுவது போல் ஒரு கார் வந்து நிற்க, கதவு திறந்து வாசு, அவளிடம் “உள்ள ஏறு ரங்கா..” என்றான்.
அவள் மவுனமாக ஏறி அமர்ந்ததும் காரை செலுத்திக் கொண்டே, “எத்தனை தடவைதான் உனக்கு போன் பண்றது..? ஃபுல் ரிங்க் போகுது. நீ அட்டென்ட் பண்ணவே இல்ல.. போன எங்க வெச்ச..?” கோபத்துடன் கேட்டான்..
அப்பொழுதுதான் கைப்பையில் இருந்து செல்போனை எடுத்துப் பார்த்தவள் அதில் ஏகப்பட்ட மிஸ்டுகால் இருக்க, வேலை செய்வதற்காக தான் சைலன்ட்டில் போட்டது நினைவுக்கு வந்தது.
பாட்டியும், வாசுவும் மாறி, மாறி அழைத்து இருப்பது தெரிந்தது.. இடையில் இன்னொரு புதிய நம்பரும் தெரிய அது யாரோடது என்று யோசித்தாள்..
“சாரி வாசு. வேலைக்கு இடஞ்சலா இருக்கும்னு சைலன்ட்ல போட்டேன் கவனிக்கல. ஆனால் தேங்க்ஸ்டா. ஒரே தலை வலி. எப்படி வண்டி ஓட்டுவது நினைச்சேன்..! கரெக்டா நீ வந்துட்டே..!”
அவள் தலைவலி என்று சொன்னதும், ஹோட்டல் ஒன்றில் நிறுத்தி, “இறங்கு, காபி குடிச்சிட்டு போகலாம்..”
“ இல்லடா இப்போ பரவாயில்லை..”
“இந்த பார்.. கண்டிப்பா நீ சரியா சாப்பிட்டு இருக்க மாட்ட. உள்ள வா..” என்று வற்புறுத்தி அழைத்து சென்று காபி வாங்கிக் கொடுத்தான்..
காலையில் உபேந்திரா வந்ததிலிருந்து அவளது குழந்தைகள் அவளை விட்டு ஒதுங்கி போக, ஏதோ ஒரு தனிமை உணர்வு அவள் மனதை அழுத்த, அதை வாய்விட்டு யாரிடமும் சொல்ல முடியாமல் மனதுக்குள் மறுகிக் கொண்டு இருந்தவள், வாசுவின் அன்பில் உடைந்தாள்.
கண்ணீர் கரை கட்ட, ஹோட்டலில் நாலு பேர் பார்க்க அழுவது அசிங்கம் என்று, கண்ணை சிமிட்டி கண்ணீரை உள்ளே இழுத்துக்கொண்டு, காபியை குடித்தவளைப் பார்த்து முதன் முறையாக வாசுவுக்கும் கண்கலங்கிற்று.. அவன் அறிந்த ரங்கா எதற்கும் அழ மாட்டாள். அவளது தைரியமே அவளது அடையாளம், அவளது பலம்..
வைதேகியும் கேசவனும் அவளை ஒதுக்கி வைத்து வருஷங்கள் மூன்று ஆயிற்று. இன்று வரை அதற்காக அவள் ஒரு சொட்டு கண்ணீர் விட்டது இல்லை கலங்கியதும் இல்லை. பாட்டி மட்டுமே உலகம் என்றிருந்த ரங்காவுக்கு, குழந்தைகள் பிறந்ததும் குழந்தைகள் மட்டுமே உலகமாக இருந்தது. குழந்தைகளுடைய முழு அன்பும் அவளுக்கு கிடைத்தது..
அந்த ஒன்றிற்காக எத்தனையோ பேச்சுக்கள், பார்வைகள் அனைத்தையும் தாண்டி, அவர்களை பெற்றெடுத்து அவர்களுக்காகவே வாழ்ந்து கொண்டு இருப்பவள். திடீரென்று இன்னொருவர் வந்து குழந்தைகளுக்கு உரிமை கொண்டாடும் போது, அவளால் தாங்க முடியாது போயிற்று.
“ஏய் ரங்கா, நீ என்ன சின்ன குழந்தையா? இதைவிட எத்தனையோ பெரிய விஷயத்தை எல்லாம் தூசி மாதிரி தட்டி இருக்கே.. இதுவும் சரியாப் போகும்.. எத்தனை நாளைக்கு அவன் நம்ம வீட்டில் குப்பை கொட்ட முடியும்..? அவனால நம்ம மிடில் கிளாஸ் வாழ்க்கை எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போக முடியாது.. தன்னால் துண்டை காணோம் துணியை காணோம் கிளம்பிப் போவான்..” என்று அவளை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தான்..
வீட்டிற்குள் நுழையும் போது மணி ஒன்பது ஆயிற்று. மதியமே அந்த குழந்தைகள், சாயங்காலம் எப்பொழுதும் ரங்கா வரும் நேரம் தெரிந்து அவளைத் தேட ஆரம்பித்தனர். அதிலிருந்து நொடிக்கு ஒரு தடவை பாட்டியிடமும், அப்பாவிடமும் அம்மா எப்ப வருவாங்க? அம்மா எங்க பாட்டி? அம்மா எங்க அப்பா? என்ற கேள்விகளுக்கு பாட்டியும், உபேந்திராவும் பதில் சொல்லி களைத்து போயினர்..
பாவனா அழவே ஆரம்பித்து விட்டாள். இரண்டு குழந்தைகளும் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்க ஒருவழியாக உபேந்திரா அவர்களை தாஜா செய்து சாப்பிட வைத்தான். முதன் முறையாக அவனுக்கு ரங்கா மேல் கடுமையான கோபம் வந்தது.
என்னதான், தான் வந்தது பிடிக்காமல் இருக்கட்டுமே அதற்காக மூன்றரை வருடம் உயிராய் நினைத்த குழந்தைகளை, எண்ணிப் பார்க்காமல் தன் கோபமே பெரிது என்று வெளியே சென்ற ரங்காவை அவன் வெறுத்தான்..
“ பாட்டி எப்பவுமே கோபம் வந்தா இப்படித்தானா..?”
“இல்ல தம்பி. இப்படி ஒரு நாளும் நடந்துக்க மாட்டா. எங்க போனாலும் சொல்லிட்டு தான் போவா. இன்னைக்கு இத்தனை போன் பண்ணி பாத்துட்டேன்.. எடுக்க மாட்டேங்கறாளே..?” அவர் தன் பங்குக்கு புலம்ப..
“நீங்க அவளுக்கு அதிகமாக செல்லம் கொடுத்துட்டீங்க.. காலம் கெட்டு கிடக்கு. ராத்திரி பெண்கள் தனியா வர்றது அவ்வளவு சேப் இல்ல. இதெல்லாம் அவளுக்கு நீங்க சொல்லலையா..?” என்று வெளியுலகம் தெளிந்தவனாய் அவன் பாட்டியைச் சாட, அவன் கூற்றில் இருந்த உண்மை பாட்டியை மௌனமாக இருக்க செய்தது.
தற்செயலாக ரங்காவை பார்க்க வந்த வாசு நிலைமையைத் தெரிந்துகொண்டு உடனே அவளை அழைத்து வர கிளம்பிவிட்டான்..
உள்ளே வந்தவள் குழந்தைகள் தூங்கி விட்டதையும் பாட்டி கோபமாக இருப்பதையும் கவனித்து, “ஐ அம் சாரி பாட்டி. நீங்க போன் பண்ணப்ப நான் கவனிக்கல. போன் சைலன்ட்ல இருந்தது. குழந்தைங்க என்ன ரொம்ப தேடினாங்களா..?” என்று கேட்க..
“அவங்க குழந்தைங்க, தேடத்தான் செய்வாங்க. உன்னை மாதிரி வளர்ந்திருந்தா அவங்களுக்கும் ஈகோ வந்திருக்கும் அப்படி என்ன உனக்கு கோபம்..? எந்த விதத்திலாவது நான் உன்ன டிஸ்டர்ப் பண்ணிட்டேனா..? என்னோட குழந்தைகளோட கொஞ்ச நேரம் வெளியில் போயிட்டு வந்தேன். இது ஒரு இமாலய குத்தமா..? உன் கிட்ட சொல்லிட்டு தானே கூட்டிட்டு போனேன். மதியம் சாப்பிட வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருங்கன்னு, நீதான சொல்லி அனுப்பினே.. அப்புறம் மதியம் நீ வீட்ல இல்லாம எங்க போன..?” உபேந்திரா இருக்கிற கோபத்தில் அவளை குதறி எடுத்தான்.
மதியம் குழந்தைகள் வரும்போது நான் இல்லாதது தப்புதான்.. ஆனால் நான் எங்கே போகிறேன், எப்ப வாரேன், கேட்கிற அதிகாரம் உங்களுக்கு கிடையாது.. இனி இதுமாதிரி குழந்தைகள் விஷயத்தில் நான் தப்பு பண்ண மாட்டேன், அவ்வளவுதான்..” என்று மூஞ்சியில் அடித்த மாதிரி பதில் சொன்னவள் தனது அறைக்குள் சென்று விட்டாள்.
“பாத்தீங்களா பாட்டி.. எங்க போன? தனியா போயிட்டு வந்து இருக்கேயேன்னு ஒரு அக்கறையில கேட்டது தப்பா. உடம்புல புல்லா திமிரு. அதனாலதான் இப்படி இருக்கா..” என்று பாட்டியிடமே அவளைப் பற்றி கரித்தவன், தனது அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான்.
இவர்கள் இருவரும் தங்களது அறைக்குள் நுழைந்து கொண்டதும் தலையில் கை வைத்து கொண்டு உட்கார்ந்த பாட்டியிடம் வாசு, “நீங்க சாப்பிட்டு படுங்க.. இதுக்கெல்லாம் கவலைப் படாதீங்க.. நாரதர் கலகம் நன்மையில் தான் முடியும் என்கிற மாதிரி, இந்த உபேந்திராவோட கலகமும் ஒருவேளை நன்மையில் முடியலாம்…” என்று கூறி பாட்டியை வற்புறுத்தி சாப்பிட வைத்து, ஹாலில் படுக்க வசதி செய்து கொடுத்து விட்டு பின்னரே வாசு சென்றான்..
மறுநாள் காலை கண்விழித்ததுமே குழந்தைகள் இருவரும் தங்கள் பக்கத்தில் படுத்திருந்த அம்மாவை பார்த்துவிட்டு, “அம்மா..” என்று அழைத்தனர்..
அவர்களின் அழைப்பில் கண்விழித்த ரங்கா, “பார்த்தி, பாவனா..” என்று அணைத்துக் கொண்டாள்..
“எங்கம்மா போனீங்க..? எங்களுக்கு ரொம்ப பயமா இருந்தது..? எங்கள விட்டுட்டு ஏன் போனீங்க..?” என்று பாவனா மறுபடியும் அழ ஆரம்பிக்க..
“ஆபிசுக்கு தான் போயிருந்தேன். கொஞ்ச லேட் ஆயிடுச்சு உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன். அம் சாரி..”
“போங்கம்மா ஆபீஸ் போனா நீங்க சாயங்காலமே வந்துடுவீங்கல்ல. நேத்து ஏன் லேட்..?”
“அது அம்மாக்கு ஆபிஸ்ல நிறைய வேலை இருந்தது. அதான் சாரி சொல்லிட்டேன்ல.. இன்னைக்கு நம்ம எல்லாரும் விளையாடலாம் ஓகேவா..”
“ஓகே.. ஆனா அப்பா சேர்த்துக்கலாமா…” மெல்ல பார்த்தி கேட்டான்..
குழந்தைகள் இருவரும் தன் முகத்தையே பார்ப்பது அறிந்து, அரை மனதாக “ம்ம்..” என்று சொன்னாள்..
முதல்ல சமத்தா எந்திருந்துச்சு பல் துலக்கி பால் குடிச்சிட்டு, அப்புறம் விளையாடுறது பத்தி யோசிக்கணும்..” என்று கூறி அவர்களை பல் துலக்கி அப்படியே குளிக்க வைத்து டிரஸ் பண்ணி வெளியே அழைத்து வந்தாள்.
பெட்ரூமை விட்டு வெளியே வந்ததும் நேராக உபேந்திராவின் அறையைத் திறந்து கொண்டு உள்ளே சென்று அப்பாவை தேடின. அவனை அங்கு காணாததால் வெளியே வந்து பாட்டியிடம் “பாட்டி அப்பா எங்கே..?” என்று கேட்டது பாவனா..
“அப்பா வாக்கிங் போய் இருக்காங்க. இப்ப வந்துருவாங்க நீங்க சமத்தா பால் குடிங்க..” என்று கலந்து வைத்திருந்த பாலை குழந்தைகள் கையில் பாட்டி கொடுத்தார்.
வாங்கி கடகடவென்று குடித்துவிட்டு, கப்பை மேஜையில் வைத்துவிட்டு இரண்டும் பால்கனிக்கு சென்றேன் அப்பா வருகிறாரா என்று பார்த்தனர். “என்னடா இங்க வந்து நிக்கிறீங்க..?”
“இல்லம்மா, அப்பா வர்றாங்களான்னு இங்கே இருந்து பார்த்தால் தெரியும் இல்ல, அதுக்காக வந்தோம் ..? நேற்று இங்க நின்னுதாம்மா நீங்க வர்றீங்களான்னு பாத்திட்டே இருந்தோம்..” என்று பார்த்தி கூறினான்..
முதல் முறையாக குற்றம் செய்த உணர்வு ரங்காவுக்கு தோன்றிற்று. பேச்சை மாற்றி பிள்ளைகளை உள்ளே அழைத்து வந்து அவர்களுடன் தரையில் அமர்ந்து, விளையாட்டுச் சாமான்களை வைத்து விளையாட ஆரம்பித்தாள்..
சற்று நேரத்தில் வாக்கிங் போயிட்டு உள்ளே வந்த உபேந்திராவை பார்த்ததும் குழந்தைகள் ஆசையோடு அவன் பக்கம் ஓடினர். “அப்பா” என்று இரண்டும் காலை கட்ட, இருவரையும் இரண்டு கைகளில் தூக்கிக் கொண்டவன், “பார்த்தி, பாவனா குட்டி. ரெண்டு பேரும் இன்னைக்கு குளிச்சாச்சா, ப்ரெஷ்ஷா இருக்கீங்க..! அப்ப கொஞ்சம் கீழ இறங்குங்க.. அப்பா வாக்கிங் போயிட்டு வந்திருக்கேன். வியர்வை, பேட் ஸ்மெல் இருக்கும். நானும் குளிச்சிட்டு வரேன்..” என்று அவர்களைக் கீழே இறக்கி விட்டான்…
அதற்குள் பாட்டி காபி கொண்டு வந்து கொடுக்க, அதை வாங்கி குடித்துக்கொண்டே, டிவியில் ஹெட்லைன்ஸ் பார்க்க ஆரம்பித்தான்.. ரங்கா எழுந்து பாட்டிக்கு உதவியாக கிச்சனுக்குள் வேலை செய்யச் சென்றுவிட்டாள். குழந்தைகள் இருவரும் கீழே உட்கார்ந்து விளையாட ஆரம்பிக்க அவர்களிடம் பைவ் மினிட்ஸ் அப்பா வந்திடுவேன்..” என்று கூறி சொன்னது போல் ஐந்து நிமிடத்தில் குளித்துவிட்டு வந்தான்.
“அம்மா, அப்பாவும் வந்தாச்சு வாங்க விளையாடலாம்..” என்று பாவனா கிச்சனுக்குள் வந்து ரங்காவின் சுடிதாரை பிடித்து இழுக்க, “சாப்பிட்டு விளையாடலாம். எல்லாரும் டேபிளுக்கு வாங்க..” என்று அவளை அனுப்பி வைத்தாள்.
பாவனா உபேந்திராவிடம் சென்று, “வாங்கப்பா சாப்பிட்டுட்டு அம்மா விளையாடலாம்னு சொல்லி இருக்காங்க, வாங்க, பார்த்தி நீயும் வா” என்று இருவரையும் இழுத்துக் கொண்டு வந்து விட்டது ..
அடுத்த ஒரு மணி நேரம் இவர்கள் இருவரும் மாற்றி மாற்றி குழந்தைகள் இருவரும் என்ன சொன்னார்களோ அதை செய்ய என்று சலிக்காமல் அவர்களுடன் தங்கள் நேரத்தை செலவிட்டனர். இடையிடையே இருவருக்கும் ஏதாவது ஒரு பேச்சு வந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் முறைப்போடு ரங்கா ஒதுங்கிக் கொள்ள, ‘போடி பெரிய இவளா நீ..’ என்று உபேந்திராவும் அமைதியாக முறைத்தான்..
பதினோரு மணிவாக்கில் குழந்தைகளிடம் “அப்பா வெளியில போயிட்டு சாயங்காலமா வருவேன்.. நல்ல பசங்களா இருக்கணும் ஓகே வா..!” என்று அனுமதி வேண்ட..
“அப்பா எங்க போறீங்க..?”
“பாவனா போகும்போது எங்க போறீங்கன்னு கேட்கக் கூடாது..!” பாட்டி சொல்லிக் கொடுத்தார்..
“ஆபீஸ் வேலையா வெளிய போறேன். சாயந்தரம் வரும்போது சாக்லேட் வாங்கிட்டு வரேன். இப்ப என்னை விடுவீங்களா..?” என்று அவன் டீல் பேச..
“இப்பவே லஞ்சத்தை பழக்காதீங்க..!” சுள்ளென்று ரங்கா கூறினாள்.
“இதுக்கு பெயர் லஞ்சம் கிடையாது. அப்பா குழந்தை களுக்கு கொடுக்கிற பாசம், அன்பு. இந்த வேலையைச் செய்ய உனக்கு இது வாங்கி தரேன் சொன்னாதான் அதற்கு பெயர் லஞ்சம்..” என்று விளக்கம் அளித்தவன், “அவங்கள லஞ்சம் கொடுத்து கெடுக்கணும்னு எனக்கு அவசியம் இல்லை. என் குழந்தைகள் மேல எனக்கு அக்கறை இருக்கு..” என்று அவளுக்கு ஒரு கொட்டு வைத்து விட்டு வெளியில் சென்றான்.
அத்தியாயம் 5
திங்கட்கிழமை காலை குழந்தைகளை ரங்கா பள்ளிக்கு கிளப்பிக் கொண்டு இருந்தாள். வாக்கிங் போய்விட்டு திரும்பி வந்த உபேந்திரா, உடனே தானும் குளித்து தயாராகி குழந்தைகளுடன் சாப்பிட அமர்ந்தான்.
‘இவனும் சீக்கிரமே எங்கே கிளம்பிட்டான்..?’ கேள்வி மனதுக்குள் எழுந்தாலும், ‘இவன்கிட்ட போய் பேசவா’ என்ற எண்ணம் தலைதூக்க குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி கொண்டு இருந்தாள்.
“நீயும் சாப்பிடு.. ஸ்கூலுக்கு போயிட்டு வர நேரம் ஆகும்..!” என்று உபேந்திரா அவளைப் பார்த்து மொட்டையாக சொல்லவும், ‘அதிகாரத்தை பாரு.. என்னமோ கட்டுன புருஷன் மாதிரி..’ என்று உள்ளுக்குள்ளே கடிந்து கொண்டாள்.
“நான் ஸ்கூலுக்கு போயிட்டு வந்து தான் சாப்பிடுவேன்.. இப்ப நேரம் ஆயிடுச்சு. ஸ்கூல் ஆரம்பிச்சிடும்..” என்றாள் வேண்டுமென்றே..
“நம்ம டீசி தான் வாங்க போறோம்.. அதனால லேட் ஆனா பரவாயில்ல சாப்பிட்டுட்டு கிளம்பு..” என்றவனை அதிசயமாக பார்த்தாள்..
“ஹலோ என்ன அதிகாரம் தூள் பறக்குது..? கஷ்டப்பட்டு சீட்டு வாங்கி ஸ்கூல்ல சேர்த்து இருக்குது நானு. இன்னைக்கு வந்துட்டு நிமிஷமா டிசி வாங்க போறேன்னு, கூலா சொல்றீங்க..? என்ன நினைச்சுட்டு இருக்கீங்க மனசுல..?” என்றாள் கொதிப்புடன்.
“நான் சரியாதான் நினைச்சுட்டு இருக்கேன். உனக்கு தான் நான் யார் என்கிற நினைப்பு அப்பப்ப மறந்து போகுது.. இதைவிட நல்ல ஸ்கூல்ல அவங்க படிக்கிறதுக்கு நான் ஏற்பாடு பண்ணிட்டேன். இப்ப நீ வர்றியா அல்லது நானே கூட்டிட்டு போயி டிசி வாங்கி, அந்த ஸ்கூல்ல சேர்த்துடட்டுமா..?” என்று அவன் அலட்டிக் கொள்ளாமல் பதில் சொல்ல…
அவளுக்கு அப்போது தான் அவன் சொன்னதன் விளக்கம் புரிந்தது. “என் கிட்ட ஒரு வார்த்தை கேட்காமல் நீங்க எப்படி முடிவெடுக்கலாம்..?” என்று கடுப்புடன் ரங்கா கேட்டாள்.
“அதான் இப்ப சொல்லிட்டேனே..? நேரமாகுது கிளம்பு..” அவள் கிளம்பியாக வேண்டும் என்ற தொனி அதில் இருக்க, அந்தக் குரலை அலட்சியம் செய்ய முடியாமல் முணுமுணுத்துக் கொண்டே தனது அறைக்குள் சென்று கதவை ஓங்கி சாத்தினாள்..
கதவை ஓங்கி சாத்தியதும், அந்த சத்தத்தில் சற்றே முகம் சுளித்தவன், பார்த்தி அவனை “அப்பா..”என்று அழைக்க, அந்த குரலில் கலைந்தவன், “என்னடா, அப்பா உங்களை இதைவிட பெரிய ஸ்கூல்ல சேர்த்து விடுறேன். படிக்கிறீங்களா..?” என்று இருவரிடமும் கேட்க…
“அந்த ஸ்கூல்ல டீச்சர் அடிப்பாங்களா..?” என்று பாவனா கேட்டாள்..
குழந்தையை எடுத்து தன் மடிமேல் இருத்திக் கொண்டவன், “பாவனா குட்டிய யாருமே அடிக்க மாட்டாங்க. அங்க உள்ள டீச்சர் எல்லாருமே நல்லவங்க. நீங்க சமர்த்தா இருந்தா அவங்க உங்களுக்கு நிறைய பாடம் சொல்லிக் கொடுப்பாங்க. என்ன போகலாமா..?”
“போகலாம்பா..” என்று கோரசாக இருவரும் சொன்னனர்.. ஐந்தே நிமிடத்தில், வழக்கம்போல் கையில் கிடைத்த காட்டன் சுடிதாரை எடுத்து மாட்டிக்கொண்டு வந்தவளைப் பார்த்து, “என்ன இது.?” அவளது உடையை காட்டி நக்கலாக கேட்டான்..
“ஏன் பார்த்தா கண்ணு தெரியல, சுடிதார் தான் போட்டு இருக்கேன்.. என் டிரஸ் பற்றி நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டியது இல்லை..!” என்றாள் விரைப்பாக…
“உன்ன பாத்தா இந்த குழந்தைகளோட அம்மா மாதிரியா இருக்கு. ஆயா மாதிரி இருக்கு. போய் கொஞ்சம் நல்ல டிரஸ் பண்ணிட்டு வா..!” என்று அவன் கடுப்புடன் சொல்ல..
“என்னை யாரும் இதுவரை அந்த மாதிரி கேட்டது இல்லை..!” என்று பெருமையாக ரங்கா சொன்னாள்..
“உன்ன போய் புத்திசாலின்னு நினைச்சேனே. இதை யாராவது நேரடியா சொல்லிட்டு இருப்பாங்களா. மனசுக்குள்ள தான் நினைப்பாங்க.. நமக்குதான் தெரியணும். ஆள் பாதி ஆடை பாதின்னு கேள்விப் பட்டதில்லை.. அப்பான்னு நானும், அம்மான்னு நீயும் போய் இந்தக் கோலத்துல நின்னா, அவங்க என்ன நினைப்பாங்க..” என்று எரிச்சல் பட்டான்..
“ஓ.நீங்க அப்பாவாகவும், நான் அம்மாவாகவும் இருப்பதால் உங்களுக்கு சமமா நான் டிரஸ் பண்ணலேன்னா, உங்க பிரஸ்டீஜ் குறைந்து விடுமா என்ன..?” ரங்கா குத்தலாக வினவ..
“எனக்கு மட்டும் இல்ல.. என்னோட குழந்தைகளுக்கும் அது கவுரவக் குறைச்சல் தான்..!” என்றவன் நான் குழந்தைகளோட கீழ போறேன். பத்து நிமிஷத்துல கீழ வா..” என்று ஆர்டர் போட்டு விட்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்..
“பெரிய மகாராஜா உத்தரவு போடறான்…” பாட்டியிடம் பொருமிக் கொண்டே போய் டிரஸ் மாற்றி விட்டு வந்தாள். பார்த்துக் கொண்டிருந்த பாட்டி, ‘இவன்தான் சரி இவளுக்கு’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டார்.
குழந்தைகளும் இவளும் பின்பக்கம் ஏறிக்கொள்ள உபேந்திரா காரை எடுத்தான். பள்ளி மிக அருகில் இருந்ததால் பத்து நிமிடத்தில் அதை அடைந்து விட்டனர். நேராக பிரின்ஸ்பல் அறைக்கு குழந்தைகளுடன் சென்றவன், “எக்ஸ்கியூஸ் மீ மேடம். அம் எ பாதர் ஆப் பார்த்தா அன்ட் பாவனா..” என்று சொல்ல, பிரின்ஸ்பால் அவனை எதிரே இருந்த நாற்காலியில் அமரச் சொன்னார்.
“சொல்லுங்க சார்..”
“நீங்க தப்பா நினைக்கலேன்னா, குழந்தைகளோட டிசியை வாங்கிட்டு போக தான் நான் வந்திருக்கேன்…” என்று சொன்னவனை பிரின்சிபால் மேடம் பார்த்தார். அவன் தோரணையும், பேச்சும், உடையும் அவனது செல்வச் செழிப்பை பறைசாற்ற, அவர்கள் நிச்சயம் வேறு பள்ளியில் இந்த குழந்தைகளை சேர்க்க முடிவு செய்திருப்பார்கள் என்று புரிந்து கொண்டார்.
“குழந்தைகளை சேர்க்கும் போது அவங்க அம்மா உங்களை பத்தி எதுவும் சொல்லவே இல்லையே..!”
“எஸ் மேம். நீங்க சொல்றது கரெக்ட் தான். இப்பதான் எனக்கே தெரியும். அதைப்பத்தி நான் பேச விரும்பல. நீங்க பீஸ் எதுவும் ரிட்டன் தர வேண்டாம். டிசி மட்டும் கொடுத்தால் போதும்..!” அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் தெளிவாகப் பேசினான்.
இதற்கு மேல் இவனிடம் விஷயம் வாங்க முடியாது என்று தெரிந்து கொண்டவர், தனக்கு நஷ்டம் எதுவுமில்லை என்பதால் பத்து நிமிடங்களில் குழந்தைகளின் டிசியை கையில் தந்து விட்டார்.
அடுத்த அரை மணி நேரத்தில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவன் சென்ற இடம் முதன் முதலில் ரங்கா குழந்தைகளுக்காக இடம் கேட்ட பள்ளி. சென்னையிலேயே முக்கியமான பள்ளிகள் என்று குறிப்பிடப்பட்ட பள்ளிகளில் ஒன்றான, அந்தப் பள்ளியில் இவர்கள் நுழைந்த பத்து நிமிடத்தில் குழந்தைகள் சேர்க்கப்பட்டனர்..
“சாரி சார், உங்க குழந்தைங்கன்னு தெரியாது. மேடம் சொல்லவே இல்ல. சொல்லி இருந்தா நாங்க முதலிலேயே சீட்டு கொடுத்திருப்போம்..” அந்த பிரின்ஸ்பால் இவனிடம் குழைந்தார்.
அதற்கு பதில் சொல்லாமல் தன் காரியத்திலேயே கண்ணாக அப்ளிகேஷன் பார்மை ஃபில் செய்து, பெற்றோர் என்ற இடத்தில் கையெழுத்து போட்டு அவளிடம் கொடுத்து நீயும் போடு, என்று சொல்லி பிரின்ஸ்பால் கையில் கொடுத்தான்.
அடுத்த நிமிடம் அவர் மணி அடிக்க அங்கு வந்த கிளார்க்கிடம், இந்த குழந்தைகளுக்கு அட்மிஷன் போட்டு விடுங்க..” என்று கூறி அவனிடமிருந்து பணத்தை வாங்கி அவரிடம் கொடுத்தார்.
குழந்தைகளுக்கு வேண்டிய யூனிபார்ம், மற்றும் புத்தகங்கள் பற்றி விசாரித்து, புத்தகத்தை பள்ளியிலேயே வாங்கி கொண்டு நேராக கடைக்கு சென்றனர். யூனிஃபார்ம் எடுத்து தைக்க கொடுத்த பின்பே வீட்டுக்கு அவர்களை அழைத்து வந்தான்.
“அப்பா ஸ்கூலுக்கு போக வேண்டாமா..?” என்று குழந்தைகள் அவனிடம் கேட்டனர்.
“நாளையிலிருந்து போகலாம். இன்னைக்கு உங்களுக்கு யூனிஃபார்ம் ரெடியாயிடும். புக்ஸ் வாங்கிட்டு வந்தாச்சு. எல்லாம் அட்டை போட்டு நாளைக்கு நீங்க ஸ்கூலுக்கு போய் விடலாம்.. அப்பா இப்ப ஆபீஸ் போக போறேன். நீங்க ரெண்டு பேரும் சமத்தா பாட்டி கிட்ட இருங்க..”
“அப்ப, அம்மா வீட்ல இருப்பாங்களா..?” என்று பார்த்தா கேட்க, குழந்தைகளோடு சேர்த்து அவனும் அவள் முகம் பார்த்தான்.
“நானும் ஆபிஸ் போயிடுவேன். நீங்க ரெண்டு பேரும் இருங்க. அதான் வேணி ஆன்ட்டி வருவாங்கல்ல..”
“புக்ஸ் எப்பம்மா அட்டை போடுவது..?”
“நான் நைட் வந்து பண்ணி தரேன்டா செல்லம்..”
“தேவை இல்லை. என் கார்லதான இருக்கு போற வழியில அட்டை போடுறதுக்கு ஒரு கடை இருக்கு. போகேல கொடுத்து ஈவினிங் நான் வாங்கிட்டு வரேன்..” என்று பதில் அளித்தான்.
“ம்ம், பணத்திமிர்..” ரங்கா உதட்டை சுழித்தாள்.
“நீ வேலைக்கு போயிட்டு வந்து டயர்டா இருப்ப.. இத்தனை புக்ஸும் அட்டை போடணும்னா அதுக்கு நீ கஷ்டப் படணும். வேண்டாம் என்று தான் வெளியில் கொடுத்து வாங்கிட்டு வரேன்னு சொல்றேன். இதுல எங்க இருந்து பணத்திமிர் வந்தது..? எனக்கு அது ரொம்ப ஈஸியான விஷயம். ஒருத்தருக்கு கஷ்டமான விஷயம் இன்னொருத்தங்களுக்கு ஈசியா இருந்தா, அதை தப்பா நினைக்க கூடாது. அது அவங்க அவங்க கெப்பாசிட்டின்னு நினைக்கனும்..!” அவனது விளக்கம் மிகவும் சரியாக இருந்தது.
‘தங்களுடைய அனாவசிய செலவு, அவனுக்கு தேவையான செலவு..’ என்று அவன் சொல்வது புரிந்தது.
“நான் போகும்போது உன்னை சார் ஆஃபீஸ்ல இறக்கி விட்டு விடவா.. உன் ஆபீஸ் தாண்டி தான் என் ஆஃபீஸ்க்கு போகணும்..!”
“வேண்டாம் நானே போய்க்குவேன்..” என்றாள் வீம்பாக.
“உன்னோட வண்டி ஆபீஸ்ல தான் இருக்கு. அப்புறம் எப்படி போவ..?”
“நான் பஸ்ஸில் போய்க்கிறேன் நீங்க போங்க..” என்றவள் தனது அறைக்குள் போய் விட, தோள்களை குலுக்கி விட்டு பாட்டியிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.
‘சரியான சண்டிராணி, எதுக்காவது அடங்குறாளா, நான் என்ன இவளை கடிச்சா முழுங்கிடுவேன். ச்ச, என்னவும் செய்து தொலையட்டும். குழந்தைகளுக்காக பார்த்தா, என்னமோ பெரிய பிகு பண்ணிக்கிறா. இனி குழந்தைகளை மட்டும் கவனிச்சுக்கணும். இவள கண்டுக்கவே கூடாது..!’ தனக்குள் முடிவு எடுத்துக் கொண்டான்.
‘அவன் பணக்காரன்ன்னா அது அவனோட வச்சுக்கணும். நாம என்ன அவன் பணத்தை பார்த்து வாயை பிளந்தோமா. பெருசா வந்துட்டான் நான் கொண்டு போய் விடுவேன், டிரஸ்ஸ மாத்துன்னு, அச்சச்சோ தாங்க முடியல, இந்த லொள்ளெல்லாம் வேண்டாம்னு தானே கல்யாணம் பண்ணாம இருந்தேன். பண்ணலைன்னாலும் எங்க இருந்துடா வருவீங்க?’
மறுநாள் முதல் குழந்தைகளை அவனே காரில் ஸ்கூலுக்கு அழைத்து சென்றான். “அம்மா நீங்களும் வாங்கம்மா..” என்று குழந்தைகள் ஆசைப்பட முதல்நாள் அவர்களுடன் சென்றாள்.
“குழந்தைகளிடம் சாயங்காலம் அங்கிள் வருவாங்க..” என்று சொல்ல..
“எந்த அங்கிள்..?” புருவத்தை சுருக்கியபடி அவளிடம் கேட்டான்.
”வாசு, அவன் குழந்தையை கூப்பிட வரும்போது இவர்களையும் கூட்டிட்டு வந்துவிடுவான்.
“அதெல்லாம் தேவையில்லை. நானே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன். இல்லைன்னா என்னோட பிஏ பாபு வருவான்..” என்று சுருக்கமாய் முடித்துவிட, சுள்ளென்று கோபம் வந்தது ரங்காவுக்கு.
“அவன் ஏன் வரக்கூடாது. இந்த குழந்தைகளுக்கு அம்மா நான். இதுவரை இவங்கள உயிருக்கு உயிராக வளர்த்தது நான்தான். பாட்டியும், வாசுவும் இல்லைன்னா, இவர்களை இந்த அளவுக்கு ஆளாக்கி இருக்க முடியாது. இன்னைக்கு வந்துட்டு எல்லாத்தையும் மாத்தணும்னு நினைச்சா, நான் பொல்லாதவள் ஆயிடுவேன். வாசுவோட பையன் இந்த ஸ்கூல்ல தான் படிக்கிறான். வீணா பிரச்சனை பண்ணாதீங்க…” என்று அடக்கப்பட்ட கோபத்தோடு அவனிடம் சீறினாள்.
வெளியில் வைத்து வீண் தர்க்கம் வேண்டாம் என்பதால், பிறகு பார்த்துக் கொள்வோம் என்று நினைத்து, “சரி அவனே கூட்டிட்டு வரட்டும்..” என்று சொல்லிவிட்டான்.
அவன் சென்றதும் தனது ஆபீசுக்கு செல்லாமல் தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்த பேத்தியிடம், “என்ன ரங்கா ஆபீசுக்கு போகல..?”
“இல்ல பாட்டி.. எனக்கு போகவே பிடிக்கல. இவன் வந்ததிலிருந்து, குழந்தைகளோட விஷயம் எல்லாத்திலும் தலையிடறான். அது மட்டும் இல்லாமல் என்னை வேற அதிகம் அதிகாரம் பண்றான். எனக்கு பிடிக்கவே இல்லை..” என்றாள்.
“நீ முதல்ல அந்த ஸ்கூல்ல தானே குழந்தைகளை சேர்க்கணும்னு ஆசைப்பட்ட, அதுதான் பண்ணியிருக்கிறார். வேற எதுவும் செய்யலையே..” பாட்டி எடுத்துச் சொல்ல, அது உண்மையாக இருந்தாலும் ஒப்புக் கொள்ள அவளுக்கு மனதில்லை.
மனதுக்குள் அன்றைய நாள் நினைவுக்கு வந்தது. ரங்கா முதலிலேயே அந்த பள்ளியில் அப்ளிகேஷன் வாங்கி, குறிப்பிட்ட நாளில் அதை நிரப்பி அங்கிருந்த உதவியாளரிடம் கொடுத்தாள்.
“கொஞ்சம் உட்காருங்கம்மா, ஃபீஸ் எவ்வளவுன்னு சொல்றேன், கட்டிட்டு போயிடுங்க..!” என்று முதலில் சொன்ன உதவியாளர் சற்று நேரத்தில் அவளை அழைத்து, மேடம் பார்ம்ல அப்பா பெயர் எழுதலை..”
“ குழந்தைகளுக்கு அப்பா கிடையாது..”
“ஓ..சாரி மேம். ஆனா பெயர் உங்களுக்கு தெரியும்ல.. அதை நிரப்புங்க..”
“இல்லங்க தெரியாது.. குழந்தைகளுக்கு இன்ஷியலை என் பெயர் வைத்து தான் வச்சிருக்கேன்…” என்று அவள் சொல்ல, அவளை விநோதமாகப் பார்த்தார்.
“அது எப்படி மேடம் அப்பான்னு ஒருத்தர் இல்லாம குழந்தைங்க வரும்..”
“எக்ஸ்க்யூஸ் மீ, அப்பா பெயர் போடாமல் தான் அப்ளிகேஷன் தருவேன். உங்களுக்கு இங்கே என் பிள்ளைகளுக்கு சீட் கொடுக்க முடியுமா, முடியாதா..” என்று அவள் சத்தம் போட, அருகில் இருந்த ஒன்றிரண்டு பேர் திரும்பிப் பார்த்தனர்.
“கொஞ்சம் இருங்க மேடம். பிரின்ஸ்பால் கிட்ட கேட்டுட்டு வந்துடறேன்..” என்று அவர்களை அமர வைத்து விட்டு பிரின்ஸ்பால் அறைக்கு சென்றார்..
பிரின்ஸ்பால் வேறு இரண்டு பேருடன் பேசிக் கொண்டு இருக்க, இவர் சென்றதும் “ஒரு நிமிஷம்..” என்று கூறிவிட்டு இவரிடம் விவரம் என்னவென்று கேட்டார்.
இவர் விபரத்தை சொன்னதும், “சீட் தர முடியாதுன்னு சொல்லிடுங்க.. நம்ம ஸ்கூல் டிசிப்ளினுக்கு பெயர் போனது. இவங்கள மாதிரி ஒரு சிலரால் நம்ம பெயரை கெடுத்துக்க கூடாது..” நிர்தாட்சண்யமாக பிரின்சிபால் மறுத்துவிட, அதைக் கேட்டதும் கோபத்துடன் ரங்கா பிரின்ஸ்பல் அறைக்குள் நுழைந்தாள்.
“எக்ஸ்க்யூஸ் மீ மேடம், நீங்க எந்த காலத்துல இருக்கீங்க.. குழந்தைகளுக்கு கார்டியனாக யாராவது இருக்கணும்..! அம்மா நான் இருக்கேன். பீஸ் கட்ட போறேன். இதுக்கு மேல உங்களுக்கு என்ன வேணும்..? கவர்மெண்ட் கூட அம்மா பெயரின் முதல் எழுத்தை குழந்தைகளோட இன்சியல் ஆக வைத்துக் கொள்ளலாம்னு ரூல்ஸ் இருக்கு உங்களுக்கு தெரியுமா..?’’
“தெரியும் மேடம். இல்லைன்னு யார் சொன்னா..? அப்பா பெயரை சொல்லி ஏதோ ஒரு காரணத்தினால் அவர் இல்லாமலோ அல்லது பிரிந்து இருந்தாலோ, ஓகே.. ஆனா நீங்க சொல்ற காரணம் ரொம்ப வினோதமா இருக்கே.. அப்பா பெயரே தெரியாது அப்படின்னா.. எந்த மாதிரி எடுத்துக் கொள்வது..?” என்றார் நக்கலாக..
அவர் கேட்ட விதம், தொனி எல்லாமே குழந்தைகளின் பிறப்பைப் பற்றி அவளுக்கு கேவலமாக உணர்த்த, தன்னுடைய முடிவை அவரிடம் விளக்க முடியாமல் எதிரே வேறு இரண்டு பேர் இருக்க பதில் சொல்லாமல் கோபத்துடன் திரும்பினாள். திரும்பும் போது தற்செயலாக பார்க்கையில் எதிரே இருந்த இரண்டு பேரில் ஒருவன் உபேந்திரா..
அதன் பின்னர் தங்கள் வீட்டின் அருகில் உள்ள பள்ளியிலேயே பிள்ளைகளை சேர்த்து விட்டாள். இப்போது அது நினைவுக்கு வர ஒருவேளை அதன் காரணமாகவே உபேந்திராவுக்கு தன்னுடைய உண்மை தெரிந்திருக்குமோ என்று அவளுக்கு மனதுக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது.
“என்ன ரங்கா..?” என்று பாட்டி மீண்டும் கேட்க, அவள் கலைந்தாள்.
“பாட்டி எனக்கு ஒரு சந்தேகம். அந்த ஸ்கூல்ல அன்னைக்கு சீட் கேட்கும்போது அவன் அங்கே இருந்தான்னு சொன்னேன்ல, அதுல தான் அவனுக்கு விஷயம் ஏதோ தெரிஞ்சிருக்கணும்..”
“ நானும் அப்படிதான் நெனச்சேன்..” என்றார் பாட்டி.. மேலும் அவராகவே ஸ்கூல் பிரச்சினை தீர்ந்து போச்சு. ஆனா வேற விதமா பிரச்சனை ஆரம்பிச்சுருச்சு..!”
“என்ன பாட்டி..?”
“இல்ல நம்ம வேலைக்காரி சொர்ணம் இருக்கால்ல, அவ நேத்து வந்து ஒரு விஷயம் சொன்னா..!”
“என்ன சொன்னா..?”
“உபேந்திரா இங்கே வந்து நம்ம கூட தங்கி இருக்கிறதைப் பத்தி தப்பா பேசுறாங்களாம், நம்ம அப்பார்ட்மெண்ட் முழுவதும்..!”
“ஆமாம், ஆபீஸ்சிலேயும் இதுதான் ஓடிக்கிட்டு இருக்கு. இன்னும் என் முகத்துக்கு நேராக யாரும் கேட்கல..!”
“சரி பார்க்கலாம்.. நம்ம கிட்ட கேட்டா பதில் சொல்லிக்கலாம்..” என்று பாட்டி சொன்னாலும், அது தனக்காக பாட்டி சொல்கிறார் என்பது ரங்காவுக்கு புரிந்தது.
பள்ளி நாட்கள் விரைந்து சென்றது. அனேகமாக ஸ்கூலில் கொண்டு போய் விட்டு விட்டு, தனது ஆபிசுக்கு செல்பவன் இரவு ஒன்பது மணிக்கு சாப்பாடு முடித்துதான் வருவான். வந்ததும் குழந்தைகளுடன் அரை மணி நேரம் ஒரு மணி நேரம் விளையாடிவிட்டு, அவர்கள் தூங்கியதும் தானும் தூங்க சென்றுவிடுவான். அவனைப் பொறுத்தவரை இந்த வீடு ஒரு லாட்ஜ், அவ்வளவுதான். குழந்தைகள் அவனுடைய குழந்தைகள். வேறு எந்த விதத்திலும் அவன் மற்றவர்களை தொந்தரவு செய்யவில்லை. அவனது உடமைகளை கார் டிரைவர் எடுத்துக்கொண்டு போய், சலவை செய்து கொண்டு வந்து கொடுத்து விடுவார்.
காலை காபியும், டிபனும் மட்டும் தான் அவன் வீட்டில் சாப்பிடுவது.. அதனால் அவனை எந்த வகையிலும் குறை சொல்ல முடியவில்லை. ஆனால் எந்த உறவும் இல்லாத ஒரு ஆண்மகன் இங்கு தங்கி இருப்பது எல்லோர் கண்ணையும் உறுத்திற்று. தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தவர்கள், வெள்ளிக்கிழமை மாலை குழந்தைகள், ஸ்கூல் இன்னும் இரண்டு நாளில் லீவு என்பதால் கீழே உள்ள அப்பார்ட்மெண்ட் காம்பவுண்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்..
சற்று நேரத்தில் பார்த்தியும் பாவனாவும் அழுது கொண்டு வர, பாட்டி என்னவென்று விசாரித்தார். “பாட்டி கீழ பசங்க எல்லாரும் என் கூட விளையாட மாட்டேங்கிறாங்க..” இரண்டு குழந்தைகளும் அழுது கொண்டே சொல்ல..
“என்னடா பேசறாங்க..?”
“பாட்டி அவங்க எல்லாரும் எங்களை பார்த்து கேலி பேசறாங்க. கேட்டா தப்பு, தப்பா பேசறாங்க….” என்றான் பார்த்தி..
மேலும் அவனே “நம்ம வீட்ல இருக்குற அப்பா, எங்க அப்பா இல்லையாம். அவர் வேற யாரோவாம்.. அம்மா பொய் சொல்றாங்களாம்..!” அப்படின்னு அசோக் சொல்றான்..
“இல்ல அம்மா பொய் சொல்லல, அதுதான் எங்க அப்பான்னு நாங்க சொன்னோம்.. அதுக்கு அவன், ம்ம்.. ம்ம்..” என்று அழுதுகொண்டே, “உங்க அம்மா கெட்டவங்க.. அந்த ஆள வச்சி இருக்காங்க. உங்க அம்மாவும் பாட்டியும் ரொம்ப கெட்டவங்க.. அப்படின்னு சொல்றான்… ! என்று சொல்லிவிட்டு அழ கேட்ட பாட்டி உறைந்து போய் நின்று விட்டார்..
அப்போதுதான் அலுவலகத்திலிருந்து வந்த ரங்காவும் பார்த்தி சொல்வதைக் கேட்டுவிட்டு, அதிர்ச்சியில் வாசலிலே நின்றாள். அம்மாவை பார்த்த பாவனா ‘அம்மா’ என்று அழுது கொண்டே ஓடி வர பின்னாலேயே பார்த்தியும் வர, முட்டி போட்டு கீழே உட்கார்ந்து இரு குழந்தைகளையும் அணைத்துக்கொண்டாள்.
அவர்களின் முதுகை நீவி விட்டவள், கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. கண்ணீர் வழிய குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவள் இருந்த கோலம் பாட்டியின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது..
கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள், “நீங்க ரெண்டு பேரும் பாட்டிகிட்ட இருங்க அம்மா இப்ப வரேன்..” என்றவாறு செருப்பை மாட்டிக்கொண்டு அசோக்கின் வீட்டிற்கு சென்றாள்.
அங்கு சென்று காலிங் பெல் அடித்ததும் வெளியில் வந்தவர் அசோக்கின் அப்பா.. “என்ன வேணும்..?” என்று அவர் கேட்க..
“உங்க பையன் தேவை இல்லாம என் பிள்ளைங்க கிட்ட பேசறான் சார். கொஞ்சம் கண்டிச்சு வைங்க.” என்று கூறிக் கொண்டு இருக்கும் போது அசோக்கின் அம்மாவும் அசோக்கும் அங்கு வந்து விட்டனர்..
“என்ன பேசினான்..?” என்று அவர் கேட்க, சுருக்கமாக நடந்ததைக் கூறி “இந்த மாதிரி பேச்சு குழந்தைங்க கிட்ட வேண்டாம்ன்னு சொல்லுங்க..” என்று அவள் கூற..
அதற்கு அசோக்கின் அம்மா, “பெரியவங்க செய்யறத குழந்தைகள் சொல்லுது.. நீங்க ஒழுங்கா இருந்தா ஏன் மத்தவங்க பேச போறாங்க. நல்ல குடித்தனங்கள் இருக்கிற இடத்துல நீங்க இப்படி இருந்தா நல்லாவா இருக்கு..! தெரியாம இந்த அப்பார்ட்மெண்ட்ல வீடு வாங்கிட்டோம். என் பையன் பேசினதுல என்ன தப்பு..? என்னை கேட்டா என் பையன் உங்க குழந்தைங்க கிட்ட பேசுவதும், விளையாடுவதும் தப்புன்னு சொல்லுவேன்..!” என்று தன் இத்தனை நாள் ஆத்திரத்தை பொரிந்து தள்ளினார்.
“குழந்தைகள் இடத்தில் என்ன பேச வேண்டுமோ அதை மட்டும் பேசுங்க. மற்றதை என் கிட்ட பேசுங்க. நான் உண்மை எதையும் மறைத்து செய்யல. கோர்ட்ல கேஸ் நடந்து தீர்ப்பு இப்படி இருக்கறதுனால தான், அவங்க அப்பா இங்க வந்து இருக்கிறார். புரிஞ்சுக்கோங்க..”
“நாங்க எல்லாம் உன்ன மாதிரி மெத்தப்படித்த மேதாவிங்க கிடையாது. எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் கல்யாணம் ஆகி குழந்தை பிறந்தால் தான் பிள்ளைங்க அம்மா, அப்பா குடும்பம்னு இருப்பாங்க.. இந்த மாதிரி இரவில் அப்பா, குந்தி போல ஒரு அம்மா, இதெல்லாம் நாங்க கதையில்தான் படிச்சிருக்கோம். கதைங்கிறது, அதுல இருந்து நமக்கு உள்ள நீதிகளை கற்றுக் கொடுக்கத் தான்..
என்னதான் கர்ணன் கொடைவள்ளல் ஆக இருந்தாலும் ஊருக்கு தெரியாம பிள்ளை பெற்றுக் கொண்டதனால், அவன் சொந்த சகோதரன் கூடவும், தாய் கூடவும் இருக்க முடியாமல் அவச்சொல் கேட்டு தான் வாழ்ந்தான்.. அத மாதிரி தான் இருக்கு உன்னோட வாழ்க்கை. உன்னையும் உன் பிள்ளைகளையும், பார்த்து வளர்ந்தா எங்க பிள்ளைகளுக்கும் அந்த புத்தி வராது என்ன நிச்சயம். உங்க சங்காத்தமே வேண்டாம். டேய் அசோக் இனி அந்த பிள்ளைங்க கிட்ட பேசுவதை நான் பார்த்தேன் வாயில சூடு வச்சுருவேன். நீ போ முதல்ல வெளியில..!” என்றாள்.
ஒருவர் வெளியே போ, என்று சொன்ன பிறகும், நிற்பது நாகரீகம் இல்லை என்று வெளியே அவள் காலடி எடுத்து வைத்ததும், அடுத்த நொடி முகத்தில் அறைந்தாற்போல் அவர்களது வீட்டு கதவு அடைத்து சாத்தப்பட்டது..
அத்தியாயம் 6
இரவு பத்து மணிக்கு உபேந்திராவின் கார் அவனது பங்களாவிற்குள் நுழைந்தது. பொழுது போகாமல் டிவியை பார்த்துக் கொண்டிருந்த சேதுராம் காரின் சத்தமும் அதை தொடர்ந்து உபேந்திராவின் பேச்சும் வெளியில் கேட்க, ‘என்ன இன்னைக்கு இங்க வந்துட்டான்..?’ என்ற எண்ணம் ஓட உள்ளே வந்த பேரனை பார்த்தார்.
ஷர்ட் பட்டனை கழட்டி விட்டுக் கொண்டு அப்படியே ஹாலில் தளர்ந்து உட்கார்ந்த உபேந்திரா, “என்ன தாத்தா தூங்க போகலையா..?”
“தூக்கம் வரல. கொஞ்ச நேரம் உக்காந்து இருக்கலாம்னு இங்க வந்தேன். நீ சாப்டாச்சா..? இல்ல டைனிங் டேபிள்ல என்ன இருக்குன்னு போய் பாரு..”
“சாப்பிட்டாச்சு. இன்னைக்கு ஒரு பார்ட்டி. அதனாலதான் லேட்டாயிடும்னு நெனச்சு அங்க வரலைன்னு சொல்லிட்டேன். அப்புறம் பார்த்தா பார்ட்டி சீக்கிரம் முடிஞ்சுருச்சு.. ரெண்டு நாளா உங்களை பார்க்கலையே அதான் இங்க வந்துட்டேன்..”
“எப்படி இருக்காங்க பசங்க..?” என்ற தாத்தாவின் கேள்விக்கு அரை மணி நேரம் அமர்ந்து திறந்த வாயை மூடாமல் அவன் பிள்ளைகளை பற்றி அளந்தான். “இந்த சண்டே நான் இங்க கூட்டிட்டு வரேன் பாருங்க.. இரண்டும் க்யூட் தாத்தா..” அவனுக்கு பெருமை பிடிபடவில்லை..
“ஆமா எப்போதும் பார்ட்டின்னா, மிட்நைட் வேற மாதிரி வருவ..? இன்னைக்கு என்ன..?” தாத்தா வேண்டும் என்றே கேட்க..
அதை கண்டுகொள்ளாமல், “உண்மைதான். ஆனா இன்னைக்கு என்னமோ எனக்கு அது வேணுமின்னு தோணல. அது பக்கமே நான் போகல.. எப்படா பார்ட்டி முடியும் வீட்டுக்கு போகலாம் தோணுச்சு.. கிளம்பி வெளியில வந்துட்டேன்.. அப்புறம் பார்த்தா பத்து மணிக்கு மேல ஆயிடுச்சு.. வீடு வேற ரொம்ப தூரம். போக பதினோரு மணி ஆயிடும்.. ரங்கா பாட்டி பாவம் அவங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு வந்துட்டேன்.. ஓகே குட்நைட். நான் எர்லி மார்னிங் அங்க போயிடுவேன். சண்டே பாக்கலாம்..” என்றவன் இரண்டே தாவலில் மாடி ஏறினான்..
இந்த பத்து நாட்களாக தன் பேரனின் மாற்றத்தையும் உற்சாகத்தையும் பார்த்த சேதுராமனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவனுக்கு இந்த விஷயம் தெரிய வந்த நாளை நினைத்துப் பார்த்தார்..
ஒரு மாதத்திற்கு முன்னால் ஒரு நாள் நைட் சாப்பிடும் வேளையில் தற்செயலாக, தன்னுடைய வேலை சம்பந்தமாக தாத்தாவிடம் பேசிக்கொண்டு இருந்தான்.. “தாத்தா ஒரு விஷயம். இன்னைக்கு நான் உங்க பிரண்டோட பேத்தியை பார்த்தேன்..!” என்று உபேந்திரா சொல்ல..
ஒரு நொடி அவன் யாரை சொல்கிறான் என்று புரியாமல், “யாரோட பேத்தி..?” என்றார்.
“அதான். அந்த ராங்கிக்காரி.. சும்மா சொல்லக் கூடாது தாத்தா. உங்க ஃபிரண்டுக்கு அவங்க பேத்தியை பத்தி, பிறக்கிறதுக்கு முன்னாடியே நல்லா தெரிஞ்சிருக்கு.. அதனாலதான் ரங்கான்னு பேரு வச்சிருக்காங்க.. சரியான ராங்கி.. என்கிட்ட தான் அப்படின்னு பார்த்தா, எல்லா இடத்திலும் ராங் தான் போல இருக்கு…”
“என்ன சொல்ற…? புரியும்படியா சொல்லு…” என்று சேதுராமன் கேட்டதும்,
“தாத்தா, இன்னைக்கி ஒரு கேஸ் விஷயமா என் கிளையன்ட்ட கூட்டிட்டு அவரோட ஸ்கூலுக்குப் போயிருந்தேன். அங்க பிரின்சிபால் கிட்ட பேசிட்டு இருக்கும்போது, இந்த ராங்கிகாரி உள்ள திடுதிடுப்புன்னு வந்தா. பிரின்சிபால்கிட்ட, கவர்மெண்ட்டே அம்மா பெயரை இனிஷியலாக போடலாம்னு சொல்லி இருக்கு. அப்புறம் என்ன..? நான் பீஸ் கட்டுறேன். நீங்க சேர்த்துக்க வேண்டியதுதானே..? அப்படின்னு ஒரே சண்டை..
அதுக்கு அந்த பிரின்சிபால் மேடம், எங்க ஸ்கூல் டிசிப்ளினுக்கு பெயர் போனது. ஏதோ ஒரு காரணத்தினால் அப்பாவை பிரிஞ்சு இருந்தா பரவாயில்லை. ஆனா இன்னார் அப்பான்னு தெரிஞ்சு இருக்கணும். நீங்க இந்த குழந்தைகளுக்கு அப்பா யாருன்னே தெரியாதுன்னு சொல்றீங்க.. அப்ப என்ன அர்த்தம்..? அந்த மாதிரி குழந்தைகளை நான் என்னோட ஸ்கூல்ல சேர்த்துக்க முடியாதுன்னு, கட் அண்ட் ரைட்டா சொல்லி அனுப்பி விட்டாங்க..
தேவையா..? இதனால அந்த பாட்டிக்கும், அவர் குடும்பத்துக்கும் கெட்ட பெயர்.. எவனையாவது லவ் பண்ணி இந்த மாதிரி வந்திருந்தது என்றால் கூட, அவன் பெயர் கூடவா தெரியாமலா இருக்கும். அதை சொல்லித் தொலைய வேண்டியதுதானே. இல்லை முதலிலேயே அழித்து இருக்கணும்..
இப்ப இவ செஞ்ச காரியத்தாலே அந்த குழந்தைகளுக்கும் கெட்ட பெயர். நம்ம செய்ற காரியம் அடுத்தவங்களுக்கு இடைஞ்சலா எப்பவும் இருக்கக்கூடாது. அந்த குழந்தைகளோட எதிர்காலத்தை பாதிக்கும் படியான காரியத்தை ஏன் செய்யணும்? அதுக்கு அந்தப் பிள்ளைகளை இல்லாமலே ஆக்கி இருக்கலாம் இல்லையா..?” அவன் கோபத்தோடு பொரிந்துவிட்டு கை கழுவ எழுந்தான்..
“அந்த பொண்ணுக்கு கல்யாணமே பிடிக்காமல் வேற மாதிரி குழந்தை பெத்துருக்கலாம் இல்லையா..? அப்படின்னா குழந்தையோட தகப்பன் பெயர் உண்மையிலேயே அவளுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்..!” என்று சொல்லிக் கொண்டே பின்னாலேயே வந்து தாத்தாவும் கை கழுவினார்..
“என்ன சொல்றீங்க தாத்தா..?” என்று தாத்தா பின்னாலேயே வர, ஹாலுக்கு வந்து அமர்ந்தவர் “உட்கார். எனக்கு உன் கிட்ட பேசணும்..” என்றதும் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தான்.
“சொல்லுங்க தாத்தா..” என்றதும் தாத்தா அவனிடம், “எனக்கு ரங்காவை பத்தி எல்லாம் தெரியும். அந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக்க பிடிக்கல. அதனால பாட்டி கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்தும் போது, “உங்களுக்கு என்னோட குழந்தைகள் தானே வேணும். அதுக்கு கல்யாணம் பண்ணனும்னு அவசியம் இல்லை. நான் ஆண்களையே வெறுக்கிறேன். வேணும்னா டெஸ்ட் ட்யூப் மூலம் குழந்தை பெத்துக்கிறேன், நீங்க சம்மதிச்சா..” அப்படின்னு பாட்டி கிட்ட சொல்லி இருக்கா..
ரங்கா என்கிட்ட வந்து புலம்பி அழுதா. எனக்கு அப்புறம் என்னோட பேத்திக்கு யாருமே துணையில்லை. என்னோட மகனும், மருமகளும் எப்போதும் அவளை கண்டுக்கவே மாட்டாங்க. அவளுக்கு ஒரு பிடிப்பு வாழ்க்கையில வேண்டும் என்பதற்காக தான் அவளை கல்யாணம் பண்ணிக்க சொல்றேன். அடிச்சாலும் பிடிச்சாலும் புருஷன்னு ஒரு துணை இருக்கும்.. ஆனா அது அவளுக்கு புரிய மாட்டேங்குது..
இப்படி குழந்தை பெத்தா, ஊர் உலகம் என்ன சொல்லும்..? குலம், கோத்திரம் பார்த்து கல்யாணம் பண்றது எதுக்கு..? நல்ல குழந்தைகள் பிறக்கணும் அப்படிங்கறதுக்கு தானே.. இது புரியாமல் பேசுறா..? டெஸ்ட் ட்யூப் பேபிக்கு கொடுக்கிற டோனர் எப்படி இருப்பார்னு யாருக்குத் தெரியும்..? ஒரு கொலைகாரனா, ஒரு தெருப்பொறுக்கியா இருந்தா குழந்தைகள் எப்படி இருக்கும்..? என்று அவள் தன் கவலையை சொல்லி அழுதபோது, எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல..”
“ஏன் தாத்தா அவளுக்கு ஆண்கள் மேல அவ்வளவு வெறுப்பு..?”
“அதுக்கு அவளுடைய குடும்ப சூழ்நிலை ஒரு காரணம். அதுபோக அவருடைய வக்கீல் தொழிலில் பார்த்த கேஸ்கள் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஏதோ ஒரு விதத்தில் அவளுக்கு ஆண்கள் மேல் ஒரு வெறுப்பு. இதை காரணம் காட்டி அவள் கல்யாணத்தை மறுத்து இப்படி ஒரு முடிவு எடுத்தது, பாட்டி ரங்காவுக்கு ரொம்ப வேதனையாக இருந்தது.
நான் அவளுக்கு உதவி பண்ணுவதற்காக நம்ம ஹாஸ்பிட்டல்ல உள்ள டாக்டர் ஏற்பாடு பண்ணி டெஸ்ட் டியூப் பேபி நான்தான் வழி செய்தேன்..”
“என்னது நம்ம ஹாஸ்பிட்டல்ல நீங்கதான் ஏற்பாடு பண்ணீங்களா..? என்ன சொல்றீங்க..?”
“ஆமாம் பாட்டி ரங்கா கேட்டுக் கொண்டபடி, ஒரு நல்லவனோட விந்தணுவை தான் ரங்காவோட கேசுக்கு டோனர் ஆக யூஸ் பண்ண சொன்னேன்..”
“அப்போ உங்களுக்கு அந்த குழந்தைகளோட தகப்பன் யாருன்னு தெரியும் அப்படித்தானே..?”
“ஆமா தெரியும்..”
“அப்ப அவன் கிட்ட அதை சொல்லி அந்த குழந்தைகளுக்கு ஒரு கௌரவத்தை கொடுக்கலாமே..?”
“கொடுக்கலாம் தான். ஆனா அதுலயும் ஒரு சிக்கல் இருக்கு. ஏன்னா டோனர் என்கிறப்ப இந்த விஷயத்தை வெளியில் சொல்லக் கூடாது. இரண்டாவது அந்த தகப்பன் அந்த குழந்தைகளுக்கு உரிமையை கொடுப்பதற்கு விரும்பணும்..!”
“சொத்து எதுவும் வேண்டாம்.. ஒரு அடையாளம். ஒரு கௌரவம், இதுக்காகவாவது நாம அந்த டோனர் கிட்ட பேசி பார்க்கலாம்..”
“சம்மதிப்பாங்கிற..!”
“நான் பேசறேன் தாத்தா. சொத்து வேண்டாம்னு சொல்லி விட்டா கண்டிப்பா சம்மதிப்பான். வேற யாருக்கும் தெரியாம வச்சுக்கலாம்.. ஜஸ்ட் ஸ்கூல் சர்டிபிகேட், காலேஜ் அட்மிஷன் இந்த மாதிரியான முக்கியமான விஷயங்களுக்கு உதவும்..!”
“ஆமா, உனக்கு என்ன திடீர்னு அந்த குழந்தைங்க மேல இவ்வளவு அக்கறை..?”
அந்த குழந்தைகளை பார்த்தா, ஏதோ ஒரு உணர்வு, எனக்கு தோணுது. அந்த உணர்வு எனக்கு புதுசா இருந்தா கூட என்னால் அந்த குழந்தைகளை மறக்கவே முடியல. நான் இன்னைக்கு தான் முதன் முதலில் அந்த குழந்தைகளை பார்த்தேன். அவங்க பாட்டி கூட கொஞ்சம் தள்ளி ஒரு இடத்தில நின்னுகிட்டு இருந்தாங்க. வெரி க்யூட்.. எப்படித்தான் அவளுக்கு மனசு வந்ததோ..?”
“அவளை ஏன் குத்தம் சொல்ற..?”
“குற்றம் சொல்லாமல் ஒரு சில ஆண்களால ஒட்டுமொத்த ஆண் குலத்தையே தப்பா நினைச்சு, இந்த மாதிரி தப்பு பண்ணி இரண்டு குழந்தைகளோடு எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வைத்திருக்கிறாளே..? அவளை தப்பு சொல்லாம, அவளுக்கு கொடி பிடிக்க சொல்றீங்களா..!” என்று உபேந்திரா கோபத்தோடு கேட்க..
“சபாஷ், தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் சும்மாவா சொல்லி வச்சிருக்காங்க பெரியவங்க..!” என்று சேதுராமன் சொல்ல..
புரியாமல், “நான் ஒண்ணு சொன்னா நீங்க என்ன சொல்றீங்க என்ன தாத்தா..?” என்று எரிச்சலுடன் உபேந்திரா பேச…
“இவ்வளவு படிச்சிருக்கே, முக்கியமாக கிரிமினல் லாயரா இருக்க.. இரண்டும் இரண்டும் நாலு என்று கணக்கு போட தெரிய வேண்டாம். என்ன படித்து என்ன பிரயோஜனம்.? மனிதர்கள் மனதை படிக்க தெரியணும். அவர்கள் உன்னோட குழந்தைகளாய் இருந்தா..! அதைத்தான் நான் இப்ப பூடகமாய் சொன்னேன்..” என்றார் தாத்தா தெளிவாக..
“என்னது என்னுடைய குழந்தைகளா? வாட் நான்சென்ஸ்.. நான் எப்ப டோனர் ஆனேன்..? என்ன தாத்தா..? கனவு ஏதும் கண்டீர்களா..?”
“நல்ல ஞாபக படுத்தி பாரு.. நீ எப்ப டோனர் ஆனேன்னு உனக்கு புரியும்..!” என்று தாத்தா சிரித்துக்கொண்டே சொன்னதும் அவனுக்கு ஒரு விஷயம் ஞாபகம் வந்தது.
ஒரு தடவை மருத்துவமனையில் உள்ள லேபில் இருக்கும் ஒரு டாக்டர் இவனை சந்தித்து, சார் நிறைய ஆண்களுக்கு இப்ப விந்தணு குறைபாடு இருக்கு.. அத எதனால? இப்போ உள்ள உணவு, மற்றும் வேலை டென்ஷன், இதெல்லாம் ஆணின் ஆண்மையை எப்படி பாதிக்கிறது என்பது பற்றி ஒரு ரிசர்ச் நம்ம ஆஸ்பிட்டல்ல ஓடிட்டு இருக்கு.
அதுக்கு எல்லாவிதமான வேலையில் உள்ள ஆண்களின் ஸ்பெர்ம் எடுத்து நாங்கள் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கோம். நீங்களும் உங்களோடத கொடுத்து கொஞ்சம் உதவுங்க சார்.. என்று அவர் கேட்டதும் இவனும் கொடுத்ததும் ஞாபகம் வந்தது..
“அப்போ அந்த ஆராய்ச்சி..?” என்று கேள்வியாய் தாத்தாவை பார்க்க..
“அப்படி அவரை சொல்ல சொன்னதே நான்தான். உன்னோடதை ரங்காவோட கேசுக்கு டோனரா, நான் தான் மகாலட்சுமி கிட்ட சொல்லி யூஸ் பண்ண வச்சேன். இந்த விஷயம் எனக்கும், மகாலட்சுமிக்கு மட்டும்தான் தெரியும். இன்னும் பாட்டி ரங்காவுக்கு, பேத்திக்கு தெரியாது.. இதுதான் உண்மை..! இப்ப சொல்லு உன்னோட குழந்தைகளோட கௌரவத்தை நிலை நிறுத்துவதற்காக நீ உண்மையை சொல்லுவியா..?” என்று கேட்டார் தாத்தா..
“தாத்தா நீங்க இப்படி செய்வீங்க நான் எதிர்பார்க்கவே இல்லை..?” என்று உபேந்திரா கோபப்பட..
“என் மேல கோபப்படுவது எல்லாம் இருக்கட்டும். நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல். உன்னோட குழந்தைகள் இந்த மாதிரியான ஒரு அவசொல்லோட வாழறது உனக்கு விருப்பமா..?
இல்லேன்னா அவங்களுக்கு நான் தான் அப்பான்னு சொல்லி, அவங்களோட கவுரவத்தை நீ மீட்டுக் கொடுக்க போறியா, இதுக்கு மட்டும் பதில் சொல்லு..!”
“என்னை யாருன்னு நினைச்சீங்க.. கிரேட் சேதுராமன் பேரன். நான் ஆயிரம் தப்பு பண்ணி இருக்கலாம்.. அதெல்லாம் சின்ன சின்ன தப்பு.. குடும்ப கௌரவத்தை பறக்கவிடற மாதிரி நான் எந்த பெரிய தப்பும் பண்ணினதே இல்லை. என்னோட குழந்தைகள் இப்படி ஒரு அவமானச் சின்னத்துடன் வளரணுமா.? நெவர்.. என் குழந்தைகளை எனக்கு எப்படி வளர்க்கணும்னு எனக்கு தெரியும். நாளைக்கே பாருங்க..!”
“என்ன அவகிட்ட போய் குழந்தைகளை கேட்க போறியா..?”
“அதுக்கு வேற ஆளைப் பாருங்க. நான் போய் கேட்டாலும் அவ தரமாட்டான்னு எனக்கு தெரியும். இனி என்ன நடக்குதுன்னு வேடிக்கை பாருங்க..! இன்னும் பத்து நாள்ல என்னோட குழந்தைகள் என்கிட்ட..” என்று தாத்தாவிடம் பொரிந்து விட்டு, மாடி ஏறி சென்று விட்டான்.
“அப்பா இப்பத்தான் நிம்மதியா இருக்கு. இனிமே அவன் பாடு அவன் பிள்ளைங்க பாடு, அவ பாடு.. முட்டி மோதி ஒரு குடும்பமாக வாங்கடா..!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவர் நிம்மதியாக உறங்கச் சென்றார்.
ரங்கா தங்கள் வீட்டு பால்கனியில் அமர்ந்திருந்தாள். உபேந்திரா தற்செயலாக அன்று லேட்டாக வருவேன் என்று பாட்டிக்கு ஏற்கனவே போன் பண்ணி சொல்லி விட்டதால் குழந்தைகளை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தாள்..
சாப்பிடுவதற்கு அவர்கள் ஆயிரம் கேள்வி கேட்டனர். “அம்மா நீங்க கெட்டவங்களா..? கெட்டவங்கங்கனா என்ன..? நல்லவங்கன்னா என்ன..?”
பேத்தி பதில் சொல்லாமல் மவுனமாக இருக்க, “அம்மாவுக்கு ரொம்ப தலைவலியா இருக்காம், அதனால உங்க கேள்விக்கெல்லாம் நாளைக்கு பதில் சொல்வாங்க.. நீங்க சமத்தா சாப்பிட்டு தூங்குங்க..” பாட்டிதான் அவர்களுக்கு பதில் கூறினார்.
குழந்தைகளும் அம்மாவின் முகத்தை பார்த்துவிட்டு, அம்மாவின் முகம் எப்போதும் போல் இல்லாததால், அமைதியாக சாப்பிட்டு தூங்க சென்றுவிட்டனர்..
பாட்டியும் பேத்தியும் சாப்பிடவில்லை. பாட்டி தனது தள்ளாமை காரணமாக படுத்து விட்டார். ரங்காவுக்கு தூக்கமே வரவில்லை.
அசோக்கின் அம்மாவின் பேச்சைக் கேட்டதில் இருந்து, அவளுக்கு உலகமே இருண்டு விட்டது போலத் தோன்றியது. ரங்காவுக்கு எப்போதுமே நேர்மையான குணம். தன்னைப்பற்றி பற்றி வெளிப்படையாக எல்லாம் தெரிந்தும் அவர் பேசியது அவளுக்கு கோபத்தையும், மிகுந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியது.
அவளுடைய கேஸ் நடைபெற்றபோது எல்லா பத்திரிக்கைகளிலும் அவளை பற்றி எழுதியிருந்தது தெரியும். எல்லோரும் படிக்காமலா இருந்திருப்பார்கள்.. தெரிந்திருக்கும்.. ஆனாலும் மற்றவர்கள் மனதை வேண்டுமென்றே புண்படுத்த நினைப்பவர்களிடம் எது பேசினாலும் அது வேலைக்கு ஆகாது என்பது திண்ணம்.
இதுநாள் வரை இல்லாமல் இப்போது பிரச்சனை வர காரணம் ஒன்றே ஒன்றுதான். அது உபேந்திரா அங்கு இருப்பது. என்ன இருந்தாலும் திருமணமாகாமல், எந்த உறவும் இல்லாமல் அவன் இங்கு இருப்பது எல்லோருடைய பார்வையிலும் வித்தியாசமாக தெரிகிறது. ரங்காவுக்கு முதன்முறையாக அவமானத்திலும், வெட்கத்திலும் மிகுந்த அழுகை வந்தது. வெகு நேரம் அழுது கொண்டிருந்தவள் இதற்கு என்ன தீர்வு என்று யோசித்து, யோசித்து பார்த்தாள்.
ஒன்று, குழந்தைகள் அவளிடம் இருக்க வேண்டும் இல்லையெனில் அவனிடம் இருக்க வேண்டும். இதை தவிர வேறு எந்த தீர்வும் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது. அவன் இங்கு வந்து கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் தான் ஆகிறது. அதற்குள்ளே இத்தனை பிரச்சனை இன்னும் காலம் முழுவதும் இருப்பதாக இருந்தால், தனக்கு மட்டுமில்லாமல் குழந்தைகள் மனதிலும் எல்லோரும் நஞ்சை கலந்துவிடுவார்கள். அதன்பிறகு அவர்களுக்கு அம்மா என்றாலே பிடிக்காமல் போய்விடும். அதைவிட தான் விலகிக் கொள்வது மேல் என்று நினைத்தாள்..
தாயின் கவனிப்பு ஆரம்ப நிலையில் குழந்தைகளுக்கு கட்டாயமான ஒன்று. அந்தப் பருவத்தை அந்த குழந்தைகள் தாண்டிவிட்டன. இனி உபேந்திரா கூட ஏதாவது வேலை ஆள் போட்டு குழந்தைகளை பார்த்துக் கொள்ளலாம். தன்னால் இந்த மாதிரியான பேச்சுகளை நேரடியாக கேட்க முடியாது என்பது அவள் புரிந்து கொண்டாள்.
நான் என்ன தப்பு பண்ணினேன். அவளைப் பொறுத்தவரையில், தேவை இல்லாமல் யாரிடமும் பேசக் கூட மாட்டாள். அவள் உலகமே வீடும் ஆபிஸிசும்தான். சிறுவயதிலிருந்தே உழைக்க கற்றுக் கொண்டவள். தனக்கென்று எந்த விதமான சந்தோஷத்தையும் அனுபவித்து அறியாதவள். சுருங்கச் சொல்லப்போனால் அவளுக்கு சந்தோஷம் என்றாலே என்னவென்று தெரியாது. அதை அவளுக்கு உணர வைக்கும் சக்தி யாருக்கும் யாருக்கும் இல்லை என்பதுதான் உண்மை..
வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கும், மற்ற பொருளாதாரத்திற்கும் போராடிய வாழ்க்கையை நடத்தினார்கள் பாட்டியும் பேத்தியும். அதனாலேயே அவளுக்கு தன் வயது பெண்கள் அடைந்த சின்ன, சின்ன சந்தோஷங்கள் கூட கிடைக்கவே இல்லை..
பாட்டி மாதிரியே தன்னுடைய குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டதால், தன்னுடைய சம்பாத்தியம் தனக்கு மட்டும் இருந்தால் போதும் என்ற எண்ணம் இல்லை. கையில் கிடைக்கும் ஒவ்வொரு பைசாவும் அவளுக்கு அவள் தேவைகள் போக, குடும்பத் தேவைகளுக்கு உதவியாக இருந்தது. தன்னுடைய சந்தோஷத்தை ஒதுக்கிதான் அவள் குடும்பத்திற்கு உதவியாக இருந்தாள். இது தான் அவள் செய்த தவறு.
அவர்கள் அதை புரிந்து கொள்ளவும் இல்லை.. புரிந்துகொள்ளாவிட்டால் கூட பரவாயில்லை. அவளும் தங்கள் குடும்பத்தில் ஒருத்தி தான் என்ற எண்ணம் கூட அவர்களுக்கு இல்லை.
இரவு ஒரு மணிக்கு மேல் குழந்தைகள் அருகில் வந்து படுத்தவள் தன்னை அறியாமல் தூங்கி விட்டாள். அதிகாலையில் அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்டு, ரங்காவுக்கு முழிப்பு வந்தது.. தற்செயலாக மணியை பார்க்க எட்டு என்றது. எழுந்தவள் பாட்டி குளிக்கும் சத்தம் கேட்டு நானே கதவை திறக்க வாசலுக்கு சென்றாள்
வாசலில் உபேந்திரா.. ஒன்றும் சொல்லாமல் உள்ளே நுழைந்தவன், அவளது அறையை எட்டிப் பார்த்தான்.. “குழந்தைகள் இன்னும் எழுந்திருக்கவில்லையா….?”
பதிலே சொல்லாமல் அவள் உள்ளே சென்றாள். “உன் கிட்ட தான் கேட்டேன்..!” பின்னாலேயே வந்தவன் அவளிடம் கேட்க, அதற்கும் அவளிடம் பதிலில்லை.. நேராக பாத்ரூம் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.
“உடம்பு புல்லா திமிரு. கேட்ட கேள்விக்கு பதில் சொன்னா என்ன வாயிலிருந்த முத்தா கொட்டிடும்..” அவன் சத்தமாகவே சொன்னான்.
அதற்குள் அவனது சத்தம் கேட்டு குழந்தைகள் முழித்து விட்டனர்.. ‘அப்பா’ என்று இரண்டு பேரும் குரல் கொடுக்க, அவர்கள் அருகில் சென்றான்.. ‘அப்பா’ என்று இரண்டு குழந்தைகளும் அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டனர்..
“ஏம்பா நீங்க நேத்து ராத்திரி வரல..?”
“இல்லடா கண்ணா நேரமாயிடுச்சி. அதான் வரல..
“நீங்க வராததினால் அம்மா அழுதாங்க..” என்றது பாவனா.
“நான் வராததனால அம்மா அழுதாங்களா.. என்னடா..?”
“இல்லப்பா அதுக்கு அழல. கீழ் வீட்டு ஆன்ட்டி அவங்கள திட்டிட்டாங்க..” அதற்குள் பிரஷ் பண்ணிவிட்டு வெளியில் வந்தவள் “பார்த்தி, பாவனா பிரஷ் பண்ண வாங்க..” என்று அழைத்தாள்.
குழந்தைகளும் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. உடனே அவளிடம் வந்தனர். இருவரையும் பிரஷ் பண்ண வைத்து, வெளியில் அழைத்து வந்தவள், “வாங்க பால் குடிச்சிட்டு போங்க.” என்று கிச்சனுக்குள் அழைத்துச் சென்றாள்.
உபேந்திரா பின்னால் எழுந்து வந்தான். பாலை எடுத்துக் கொண்டு வந்து டைனிங் டேபிளுக்கு வந்தவள், பால் சூடு அதிகமாக இருக்க, அதை ஆற்ற ஆரம்பித்தாள்.. அழுது வீங்கியிருந்த கண் இமைகளும் வாடியிருந்த முகமும், ஏதோ நடந்திருக்கிறது என்பதை தெளிவாக காட்ட, ‘என்ன விஷயம் கேட்கலாமா வேண்டாமா’ என்று தனக்குள் குழம்பிக் கொண்டு அவளை பார்த்திருந்தான்..
பாட்டி பூஜை அறையில் இருந்தார். அதற்குள் ஹாலில் யாரோ நுழையும் சத்தமும், பேச்சுக் குரலும் கேட்க, யாராக இருக்கும் என்று உபேந்திரா யோசிப்பதற்குள், ரங்கா எழுந்து ஹாலுக்கு சென்றாள்..
அத்தியாயம் 7
“இதோ வந்துட்டாளே உங்க அருமை மகள்..? நம்ம வீட்டு மானத்தை ஏலம் போடுவதற்கென்றே பிறந்தவ. மூணு வருஷத்துக்கு முன்னாடியே எல்லார் மானத்தையும் வாங்கியாச்சு.. இப்பதான் அதை எல்லாரும் மறந்து கொஞ்சம் நிம்மதியாய் இருக்க ஆரம்பிச்சோம். அது பொறுக்கலையே உனக்கு. திரும்பவும் ஆரம்பிச்சுட்டியா..?”
“வாம்மா, இப்ப என்ன ஆச்சுன்னு, நீ இங்க வந்து சத்தம் போடுற..?” என்று ரங்கா கேட்க..
“இன்னும் என்ன ஆகணும்..? ஏண்டி நீ என்னதான் நினைச்சுட்டு இருக்க உன் மனசுல..? கல்யாணம் பண்ண மாட்டேன்ன..? தொலையுதுன்னு விட்டோம். ஆனா அப்படியே இருந்தியா..! புதுமை, புரட்சின்னு கல்யாணம் ஆகாமலே ஒண்ணுக்கு ரெண்டு புள்ளையை பெத்து கிட்ட, அதுக்கு உங்க பாட்டி வேற உனக்கு சப்போர்ட். ம்ம்..
ஆம்பள துணையே வேண்டாம். நானே தனியாய் இருந்து என் பிள்ளைகளை வளர்த்துக்கிடுவேன்னு சொல்லிதானே, பிள்ளை பெத்துகிட்ட. அப்புறம் என்னடி? அப்படியே இருந்து தொலைய வேண்டியதுதானே..?
இப்ப எதுக்கு புதுசா அப்பான்னு ஒருத்தன் வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்து வச்சு, கும்மி அடிக்கிற..! எங்க மானம் மரியாதை, கவுரவம் எல்லாம் போச்சு தலைநிமிர்ந்து நடக்க முடியல ரோட்டில. நீயும் உங்க பாட்டியும் எப்படித்தான் நடமாடுறீங்களோ..? வெக்கமாயில்ல..” வைதேகி கோபத்தில் உரத்துச் சப்தமிட்டாள்.
“அப்படி எல்லாம் எதுவும் இல்லமா.. அந்த குழந்தைகளோட அப்பா அவர்தான். அவர் குழந்தைகளை வந்து பார்த்துட்டு போய் விடுவார். நான் அவர் கிட்ட தேவையில்லாமல் பேசுவது கூட கிடையாதும்மா. என்னை பத்தி உனக்கு தெரியாதா..? நான் யார் கிட்டயும் பேசக்கூட மாட்டேன்மா, ப்ளீஸ் என்ன நம்பு..” என்று ரங்கா கெஞ்சிக் கொண்டு இருக்கையிலே, பாட்டியும் உபேந்திராவும் குழந்தைகளையும் கையில் பிடித்துக் கொண்டு அங்கு வந்தனர்..
“சபாஷ். உள்ள ஆள வச்சுகிட்டு தான் இவ்வளவு நாடகமும் போடுதியா..? ஏண்டி காலங்காத்தால இவனுக்கு உங்க வீட்ல என்ன வேலை?’
“இப்பதான் குழந்தைகளை பார்க்க வந்தார். கோர்ட் உத்தரவு. இல்லேன்னா நான் அனுமதிக்க மாட்டேன், இது தெரியாதா உனக்கு. அந்த உத்தரவை மீறினால் தப்புமா..”
“கோர்ட்டு உத்தரவு போட்டால் வாசலில் வைத்து, பார்க்க வைத்து அனுப்ப வேண்டியது தானே. எதுக்கு உள்ள விடறே..? ஏய் எல்லாம் கேள்விப்பட்டு தாண்டி வாரேன். இங்க இருக்கிறவங்க எனக்கு போன் பண்ணி கதை கதையாய் சொல்றாங்க..? நீயும் அவனும் போட்டி போட்டுக் கொண்டு குழந்தைகளை கூட்டிட்டு வெளியில போறதும், வாரதும், ராத்திரி அவன் இங்கே வருவதும் என்னடி நெனச்சிட்டு இருக்க..?
நீயே இப்படி இருந்தேன்னா.. உன்னோட குழந்தைகள் எந்த லட்சணத்துல வளரும்….? அதுகளும் உன்ன மாதிரி தட்டு கெட்டு, தட்டழிந்து தான் போகும். உங்க அப்பா உதவாக்கரை தான், சம்பாதிக்க துப்பில்லாதவர்தான். அதுக்காக நான் இப்படி அவரை விட்டுப் போயிருந்தேன் அப்படின்னா உங்க எல்லார் நிலைமையும் என்னவாயிருக்கும்..?
விதிப்படி வாழ்க்கை அமையும். அதை சகித்துக் கொண்டு வாழணும்.. அப்படி இல்லைன்னா கடைசிவரை கல்யாணம் பண்ணாம தனியா இருந்து வாழணும். இரண்டும் இல்லாமல், இரண்டும் கெட்டானா வாழ்ந்து எங்க உயிரை வாங்க கூடாது..!”
“போதும் நிறுத்து. அவ உன்னோட பொண்ணு வைதேகி.. பெத்த பொண்ணுகே இப்படி சாபம் கொடுப்பியா..? அவ பார்க்க தான் பலாப்பழம் மாதிரி முள்ளா தெரிவா. அவ மனசு பலாச்சுளை மாதிரி இனிப்பாய் இருக்கும். ரொம்ப மென்மையான மனசு அவளுக்கு. அந்த குழந்தையை திட்ட உனக்கு எப்படி மனசு வந்தது..?
அவளை கூட பரவாயில்லை. அவ பெத்த பிள்ளைகள் உனக்கு பேரக்குழந்தைகள். அவங்களை திட்டுவதற்கு யார் உனக்கு உரிமை கொடுத்தது..? ஒரு நாள் ஒரு பொழுது ஒரு நொடி அந்த குழந்தைகளை நீ தொட்டு பார்த்து இருப்பியா..? பிடிக்கலைன்னு மொத்தமா விலக்கி யாச்சு. அதுக்கப்புறம் வந்து எங்களை தொந்தரவு பண்ற..?”
“நாங்க எங்க தொந்தரவு பண்றோம்.. இங்க உள்ளவங்க போன் பண்ணியதால் தான் நாங்க வந்தோம்..!” என்று பதிலுக்கு வைதேகி கத்த, வாசலில் பார்த்தால் அப்பார்ட்மெண்டில் உள்ள பாதி பேர் அங்கு நின்று கொண்டிருந்தனர்..
அசோக்கின் அம்மா வைதேகியிடம் “நல்ல கேளுங்கம்மா.. இது என்ன குடித்தனக்காரர்கள் இருக்கிற வீடா, அல்லது வேறு எதுவுமா..? அப்படித்தான் நான் இருப்பேன் அப்படின்னா, தனியாக ஒரு வீடு எடுத்து என்னமோ செஞ்சு தொலைக்கணும். இப்படி மத்த குடித்தனக்காரர் களுக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது. இவன் ஒருத்தன் தான் வருவானா, அல்லது வேற யாரும் வராங்களான்னு யாருக்கு தெரியும். இவங்கள பார்த்து எங்க வீட்டுக்காரங்க எங்களை சந்தேகப்பட்டால், எங்க குழந்தைங்க தப்பா பேச ஆரம்பிச்சா…! என்று வாசலில் நின்றுகொண்டே அவள் பேச…
“நிறுத்துங்க எல்லாரும். இனி ஒரு வார்த்தை பேசினீங்க. நடக்குறதே வேற..” என்று உபேந்திரா கர்ஜித்தான். “பாட்டி குழந்தைகளை கூட்டிட்டு நீங்க உள்ள போங்க.” என்றவன் அவர்கள் சென்றதும் அந்த கதவை இழுத்து சாத்தினான்..
“என்ன கேட்டீங்க..? இவளை பாத்து என்ன கேட்டீங்க..? ஆள வச்சிருக்கியான்னா..? அதுவும் உங்க ஐந்து வயது பையன் கேட்பானா..? அதுக்கு அர்த்தம் தெரியுமா அவனுக்கு..? அப்படிப்பட்ட வார்த்தைகளை குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கிற நீங்க, மத்தவங்களோட ஒழுக்கத்தைப் பற்றி பேச வந்துட்டீங்க…
என்ன தெரியும் இவள பத்தி..? எனக்கு ஒரு வாரமா தான் இவளை தெரியும். அதுக்கு முன்னாடி தெரியாது. ஒரு வக்கீல் அது மட்டும்தான் தெரியும். இந்த ஒரு வாரத்துல நான் இவளை கவனிச்சதுல, இப்படிப்பட்ட ஒரு பொண்ண பார்த்ததே இல்லை. யாரையும் தப்பா நினைக்காத ஒரு குணமும், எல்லாருக்கும் உதவி பண்ற மனப்பான்மையும், ஆடம்பரம்னா என்னனு தெரியாத ஒரு வாழ்க்கை முறையும், ஆண்களை கண்டால் பேசாமல் ஒதுங்கி போற பண்பும், உங்க யாருக்குமே கிடையாது..
பொதுவாக இப்ப உள்ள பெண்கள் எல்லாருமே, பணக்காரனா ஒருவனை கண்டால் அவன் கிட்ட பேசற விதம், பழகும் விதமே தனி. ஆனால் பணத்துக்கு மதிப்பு கொடுக்காத பெண்ணை நான் முதல் முறையாக இப்பதான் பார்க்கேன். தன்னோட உழைப்பு மூலமே வாழணும் நினைக்கிற அந்தப் பண்பு நான் இப்பதான் பார்க்கேன்..
ஓசில கிடைச்சா என்ன வேணா வாங்கிகிற இந்த சமூகத்துல, சின்ன குழந்தையில் இருந்தே உழைத்து, தானே படிச்சு, தன் கால்ல நின்னு தன் குடும்பத்தை காப்பாத்தியவளுக்கு பெத்த அம்மா நீங்க குடுத்த பட்டம் போதும். யாராவது அவளை பத்தி ஒரு வார்த்தை சொன்னீங்க, இருந்த இடம் தெரியாம அழிச்சுருவேன். சந்தேகம் இருந்தால் திரும்பி பாருங்க..” என்று சொல்ல, அங்கே ஏசி மதிவாணன் நின்றிருந்தான்.. பாட்டி போன் பண்ணி வாசுவிடம் சொல்லிவிட, வாசுவும் அங்கு வந்து சேர்ந்தான்.
“என்ன பிரச்சினை மிஸ்டர்.உபேந்திரா..?”
“நானும் என் மனைவியும் இரு குழந்தைகளும் இருக்கிற வீட்ல, எங்கள பத்தி என்ன எதுன்னு தெரியாம, எங்களை தாறுமாறா பேசினதுக்காக நான் இவங்க மேல கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன். நீங்க இவங்க எல்லாத்தையும் அரெஸ்ட் பண்ணுங்க..” என்றான்.
அரஸ்ட் என்றதும், மற்ற குடித்தனக்காரர்கள் மெதுவாக கலைய ஆரம்பிக்க, அசோக்கின் அம்மாவையும் அப்பாவையும், மதிவாணன் தடுத்து நிறுத்தினார்.. “நீங்க இருங்க சார். எங்க போறீங்க..? உங்க மேல தான் சார் கம்ப்ளைன்ட் சொல்லிட்டு இருக்காரு.. இருந்து பதில் சொல்லிட்டு போங்க..
நீங்க யாரும்மா..? என்று வைதேகியும் கேசவனையும் அதட்ட ..
“நாங்க ரங்காவோட அம்மா அப்பா..?”
“ஏன்மா, பெத்த பொண்ண இப்படியா பேசுவீங்க..? சார் யார் தெரியுமா..? ஃபேமஸ் கிரிமினல் லாயர்.. உங்க மருமகனாக போறவர்.. அவர் நெனச்சா குடும்பத்தையே உள்ள தூக்கி வைக்க முடியும்..”
“மருமகனா..”
“பின்ன, அடுத்த வாரம் கல்யாணம் வச்சிருக்காங்க. குழந்தைங்க ரொம்ப தேடுறதுனால இங்க பிள்ளைகளை பார்க்க வந்து போயிட்டு இருக்கார். உங்க வீட்ல எல்லாம் ஆயிரம் ஓட்டை வெச்சுக்கிட்டு எதுக்கு அடுத்த வீட்டைப் பத்தி பேசுறீங்க. இப்ப வீட்டுக்கு வீடு காதல் கல்யாணம், ஓடிப் போவது எல்லாம் தான் நடக்குது. அதை இவங்க வந்து உங்க கிட்ட பேசிட்டு இருக்காங்களா..?” என்று போலீஸ் தோரணையில் அதட்டினான்.
அதற்குள் கதவு திறந்து பாட்டி ரங்கா வெளியே வந்தார்.. ஏசி மதிவாணனை பார்த்து எந்த பிரச்சனையும் வேண்டாம் சார். எல்லாரையும் வெளியில் போக சொல்லுங்க. தம்பி தப்பா நினைக்காதீங்க. நீங்களும் உங்க வீட்டுக்கே போயிடுங்க. அவ தாங்க மாட்டா தம்பி. எனக்கு என் குழந்தையை பற்றி நல்லா தெரியும்..
நீங்க போகும் போது உங்கள் குழந்தைகளை கூட அழைச்சிட்டு போயிடுங்க. நான் அவளை சமாதானப் படுத்திக்கிறேன். எனக்கு என் பேத்தி மட்டும் இருந்தால் போதும். இங்க பாருங்க சிலையாய் நிற்கிறதை. இத்தனை ஏச்சுக்கும், பேச்சுக்கும் அவள் எந்தவித பதிலும் சொல்லாமல் நிற்கிறாள் என்றால், ஏதோ தப்பா படுது தம்பி..” என்று பாட்டி சொல்லும் முன், வாசு அவள் அருகில் சென்று, “ரங்கா” என்று அழைக்க, அவள் புரியாது அவனைப் பார்த்தாள்.
“ரங்கா” என்று அழைத்து வாசு அவள் தோளை அசைக்க, வாசுவை மட்டும் தெரிந்து கொண்டவள், “வாசு, உனக்கு என்னை தெரியும்தானடா. நான் தப்பு பண்றவளா, நான் இவரை வச்சிருக்கேனாம், எல்லாரும் சொல்றாங்க.. என்னை பெத்தவளும் சொல்றா..? வச்சிருக்கேன் அப்படின்னா என்னடா அர்த்தம்..? எனக்கு இங்கே வலிக்குதுடா..” என்று நெஞ்சைத் தொட்டுக் காட்டியவள், “ஐயோ எனக்கு தாங்கவில்லையே, என்னமோ மாதிரி மூச்சு முட்டிகிட்டு வருது. கல்யாணம் வேண்டாம்னு சொன்ன நானா ஒரு ஆம்பள மேல ஆசைப்பட்டு இருப்பேன். ஐயோ எனக்கு என்னமோ பண்ணுதே..” என்றவள் அடுத்த நொடி மயங்கிச் சரிய, வாசு அவளை கையில் ஏந்திக் கொண்டான்.
குழந்தைகள் இருவரும் “அம்மா, அம்மா” என்று கதற, பாட்டி, “ரங்கா உனக்கு என்னம்மா செய்யுது..?” என்று கேட்டவர், தாங்கமாட்டாமல் மயங்கி விழுந்து விட்டார். என்ன செய்வது என்று புரியாமல் திகைத்த உபேந்திரா அடுத்த நிமிஷம் ஹாஸ்பிடலுக்கு அழைத்து, ஆம்புலன்ஸ் அனுப்பச் சொன்னான்.
உபேந்திரா பாட்டியை கொண்டு போய் கட்டிலில் கிடத்த, வாசு ரங்காவை ஒரு கட்டிலில் படுக்க வைத்தான். இருவருக்கும் தண்ணீர் தெளித்து பார்த்தனர். ஆனால் மயக்கம் தெரியவில்லை. அதற்குள் கதறிய குழந்தைகளை தன் இரு தோளிலும் தூக்கிய உபேந்திரா வாசுவிடம் “வாசு குழந்தைகளை உங்க வீட்ல கொண்டு போய் விட்டுட்டு வாங்க. குயிக், இப்ப ஆம்புலன்ஸ் வந்துடும். நம்ம இவர்களை ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிடலாம்..” என்று சொல்ல..
வேறு வழி இல்லாததால் குழந்தைகளை தன் வீட்டில் விட்டு விட்டு வந்தான். அடுத்த ஒரு மணி நேரத்தில் இருவரும் கல்யாண் ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்யப்பட்டனர். மதிவாணன் எல்லோரையும் எச்சரித்து அனுப்பி விட்டு, உபேந்திராவுக்கு போன் செய்தான்..
“இப்ப எப்படி இருக்காங்க ரெண்டு பேரும்..?”
“இன்னும் மயக்கம் தெளியவில்லை. ரெண்டு பேரும் கொஞ்சம் அனிமிக்கா இருக்காங்க.. மற்றபடி வேற ஒரு பிரச்சினையும் இல்லை..”
“மிஸ்டர் உபேந்திரா சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. மிஸ். ரங்கா என்னை பொருத்தவரை மிகவும் நல்ல பெண். நீங்க முடிஞ்சா அவங்களை நல்லா பார்த்துக்கோங்க. இல்லேன்னா ஒரேடியா விலகிடுங்க. அவங்க தனியா இருந்தா கூட நிம்மதியா இருப்பாங்க. ஏன்னா அவங்கள ஒரு அஞ்சாறு வருஷமா நானும் பார்த்துட்டு தான் இருக்கேன். இது என்னோட ரிக்வெஸ்ட்..” என்று போனை வைத்தான்.
விஷயம் தெரிந்து சேதுராமனும் ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தார். உபேந்திராவை பார்த்து “என்னடா என்ன ஆச்சு..?” என்று கேட்க..
உபேந்திரா நடந்ததைக் கூற, “இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் வரும்னு எனக்கு தெரியும்…” என்றவர் உள்ளே சென்று இருவரையும் பார்த்து வந்தார்..
வெளியில் கவலையாக ஒருபுறம் நின்ற வாசுவின் அருகில் சென்றவர், “கவலைப்படாதே எல்லாம் சரியாயிடும், நீ கொஞ்சம் என்னோட ரூமுக்கு வா. கொஞ்சம் உன்கிட்ட பேசணும்..” என்று அவனை மட்டும் அழைத்து சென்றார்..
சேதுராமன் அறைக்குள் சென்று பத்து நிமிஷம் ஆகியும் ஒன்றும் பேசாமல் தனக்குள் இருவரும் அவரவர் சிந்தனைகளில் மூழ்கி இருந்தனர்.
இந்த மாதிரி பிரச்சினை வெடிக்கும் என்று தெரிந்தாலும் இத்தனை சீக்கிரம் அது வெடிக்கும், அதனால் இருவருமே இந்த மாதிரி பாதிக்கப்படுவார்கள் என்று சேதுராமன் எதிர்பார்க்கவில்லை.
பிரச்சனைகள் லேசாக வரும்பொழுது தன்னிடம் ரங்கா அதை சொன்னால், தானே இருவரிடமும் பேசி திருமணத்துக்கு ஏற்பாடு செய்து விடலாம், என்பதுதான் அவரது எண்ணமாக இருந்தது..
ஆனால் வேறு மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
வாசுவும் அதே மாதிரி சிந்தனை ஓட்டத்திலேயே இருந்தான். உபேந்திரா ரங்காவின் வீட்டுக்கு வந்த நாள் முதல், தானும் சென்றால் பிரச்சினை வேறு மாதிரி திசை திரும்பி விடக்கூடாதே என்று அதிகமாக செல்லாமல் போன் மூலமாகவே எல்லாம் விசாரித்து அறிந்து கொண்டான்.
அதையும் மீறி பிரச்சனை வந்தால் ரங்காவிடம் பேசி இதற்கு தீர்வு காண வேண்டும் என்று நினைத்து இருக்கையிலேயே, காலையில் பாட்டி போன் பண்ணி விட்டார். எதற்கும் கலங்காத பாட்டி, “வாசு நீ உடனே வா. இங்க ஒரே பிரச்சினையா இருக்கு. வைதேகி வந்திருக்கிறாள்..” என்று சொன்னதுமே நிலமையை புரிந்து கொண்டு அடித்து பிடித்துக் கொண்டு வந்தான். அதற்குள் எல்லாமே கை மீறி போய்விட்டது..
“வாசு” என்று சேதுராமன் அழைப்பில் நிமிர்ந்தவன், என்ன என்பது போல் பார்க்க, “வருத்தப்படாதப்பா, எல்லாம் சரியாயிடும். இல்லேன்னா நாம சரியாக்கணும். அதுக்கு எனக்கு உன்னோட அனுமதி தேவை..!” என்று அன்புடன் சொன்னார்.
“ஐயோ என்ன சார் இது? பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு, எனக்கு ரங்காவோட வாழ்க்கை சீராகி, பாட்டியும் அவளும் நிம்மதியாய் இருந்தாலே போதும். குழந்தைகளோட அப்பா உங்க பேரன்னு ஆயிடுச்சு. யாருக்காக இல்லைனாலும் அந்த குழந்தைகளுக்காக ரங்கா உங்க பேரனை ஏத்துக்கிட்டு தான் ஆகணும். ஆனா அது இரண்டு பேரும் மனது ஒத்து போய் நடக்கணும். அதுதான் என்னோட வேண்டுதல்…!”
“புரியுதுப்பா நீ என்ன சொல்ல வரேன்னு..! இவனுக்கும் கல்யாணத்துல அவ்வளவு இன்ட்ரஸ்ட் இல்ல. அவளும் கல்யாணம் பண்ணிக்க பிரியப்படவில்லை.. இது தெரிஞ்சு தான் உபேந்திராவை டோனரா ரங்காவோட கேசுக்கு உபயோகப்படுத்தினேன்.
அதனால இப்ப அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பும் எனக்கு இருக்கு. நம்ம அவங்க ரெண்டு பேர்கிட்டயும் பேசி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கினால் மட்டும் போதும். அவங்களை சேர்த்து வைக்கிற வேலையை அவங்க குழந்தைங்க பார்த்துப்பாங்க. இதுதான் உண்மை..!”
“அது எப்படி சார்..?”
“அது அப்படித்தான். குழந்தைங்க தான் பெத்தவங்களோட நெருக்கத்தை இன்னும் அதிகப்படுத்துவது. அதை அவங்க அனுபவப்பூர்வமா புரிஞ்சுக்கிட்டாங்கன்னா தன்னால ஒன்று சேர்ந்துடுவாங்க.
நீ செய்யவேண்டியது ஒன்றுதான். எனக்காக ஒரு விசயம் பண்ணு. ரங்கா கண்ணு முழிச்சதும் கல்யாணத்துக்கு அவளோட சம்மதம் மட்டும் எனக்கு வாங்கி கொடு..” என்று வேண்டினார்.
“கண்டிப்பா வாங்கித் தரேன் சார்..! எனக்குமே அவ பட்ட கஷ்டத்துக்கு, இது ஒண்ணுதான் தீர்வுன்னு தோணுது..” என்றவன் அவரிடம் விடைபெற்று வெளியில் சென்றான்..
அவர்கள் இருவரும் கண்விழித்ததும் தன்னிடம் சொல்லுமாறு அங்கிருந்த செவிலி பெண்ணிடம் சொல்லிவிட்டு, தனது அறைக்கு வந்த உபேந்திரா யோசனையில் ஆழ்ந்தான்.
அவனுக்கு இன்று காலை முதல் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. முதலில் ரங்கா அவனை ஒரு பொருட்டாக நினைக்காதது, பேசாதது அதிர்ச்சியாக இருந்தது.
குழந்தைகளின் அப்பாவாக, உள்ள உரிமையை அவன் எடுத்தாலும், அதற்கு கோபப்பட்டாலும் கூட கேட்ட கேள்விக்கு எப்பொழுதும் பதில் சொல்லி விடுவாள். ஆனால் அன்று பேசாமல் முகம் திருப்பிக் கொண்டு போனது அவனுக்கு தன்னை இன்சல்ட் செய்ததாக தோன்றியது.
ஆனால் அடுத்த நிமிடம் முந்தைய நாள் நடந்த விஷயத்தைப் பற்றி சொல்லி அம்மா அழுததாக சொல்லவும், புதிதாக நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டான்.
இதை பற்றி கேட்டு, எதுவும் பிரச்சினை என்றால் தான் உதவி பண்ணலாம் என்று நினைக்கையிலேயே, வைதேகி வந்து கொட்டிய வார்த்தைகளை கேட்டு அவனுக்கு ஒரு நொடி சகலமும் அதிர்ந்து விட்டது.
அவன் வாழுகின்ற ஹைகிளாஸ் சொசைட்டியில் எப்படியாபட்ட அப்பட்டமான அவமானக் கேடு நடந்தாலும், முகத்திற்கு நேரே சம்பந்தப்பட்டவர்களிடம் தேனொழுக பேசுவர்.
பின்னால் அவர்களைப்பற்றி கழுவி, கழுவி ஊற்றினாலும், அவர்களுடைய பணமும் பதவியும் தங்களுக்கு எப்பொழுதும் வேண்டும் என்பதால் முகத்திற்கு நேரே அதை பேசவே மாட்டார்கள்..
அதே மாதிரி தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு தான், அவர்கள் வீட்டில் தங்குவதும் மூலம் என்ன பிரச்சனை பெரிதாக வந்துவிடும் என்று நினைத்து விட்டான்.
ஆனால் நடுத்தரக் குடும்பங்களில் எந்த ஒரு விஷயமும், மற்றவர்கள் கண் பார்வையில் தப்பாது என்பதும், அதை முகத்துக்கு நேராக பேசுவார்கள் என்பதும் அவன் அறிந்து கொள்ளாத ஒன்று.
மகன் சொன்னதுமே, தேவையில்லாத பேச்சு தன்னால் வந்துவிட்டதே என்று நினைத்து அவளிடம் எப்படி இதை விளக்குவது என்று நினைத்துக் கொண்டிருக்கையிலேயே, அவளது அம்மாவும் வந்து, தரக்குறைவாக பேச, அவனால் தாங்க முடியாது போயிற்று.
தன்னிடம் அவள் தேவையில்லாமல் பேசியதுகூட இல்லை. அது தெரியாமல் அவர்கள் பேசப் பேச, ஒரு உத்தமமான பெண்ணை இந்த மாதிரி பேசுகிறார்களே என்று கோபத்திலும், அவற்றைவிட தன்னுடைய குழந்தைகளின் அம்மா அவள், நம்முடைய குழந்தைகள் தனக்கு முக்கியம் என்றால் குழந்தைகளுக்கு அவள் முக்கியம் என்ற விதத்தில், தன்னை அறியாது உரிமை உணர்வு எழ கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், தன்னுடைய மனைவி ஆகப் போகிறவள் என்றும் அடுத்த வாரம் திருமணம் என்றும் சொல்லிவிட்டு வந்து விட்டான்..
இப்போது இதை அவள் ஏற்றுக் கொள்வாளா..? முதலில் தான் ஒரு குடும்ப பந்தத்தில் கட்டுப்பட்டு இருக்க முடியுமா..? அதிலும் ரங்காவின் சுய கவுரவம் பார்க்கும் குணம், அவர்கள் இருவருக்கும் ஒத்துப் போகுமா..?
குடும்ப வாழ்க்கை என்பது விட்டுக்கொடுத்தல் நிறைந்த ஒன்று. அதில் ஏட்டிக்குப் போட்டி கணவன், மனைவி இருவரில் யார் பண்ணினாலும் வாழ்க்கை நரகம் தான். அவர்கள் அம்மா, அப்பா வாழ்க்கையைப் பார்த்து அவர்களின் சண்டையை எப்பொழுதுமே பார்த்துக் கொண்டே இருந்த அவனுக்கு, இப்படி ஒரு வாழ்க்கை அமைந்து விட்டால் என்ன செய்வது என்ற பயத்திலேயே அவன் திருமணத்தை விரும்பவே இல்லை.
மேலும் பெண்களை அவன் அறியாதவன் அல்ல. அவனுடைய மேல்தட்டு நாகரீக வாழ்க்கை அதை அவனுக்கு எளிதில் கிடைக்கச் செய்ய, அவன் கல்யாண பந்தத்தில் சிக்க விரும்பவில்லை..
ஆனால் எதிர்பாராத விதமாக குழந்தைகள் பற்றிய செய்தி தெரிந்ததும், தன்னுடைய வம்சம், வாரிசு, தன்னுடைய இரத்தம் என்று அறிந்ததும், தன்னை அறியாமலேயே குழந்தைகள் மீது ஒரு பிடிப்பு வந்துவிட்டது.
அந்தக் குழந்தைகளை பார்க்காமலும், பேசாமலும் இனி அவனால் இருக்க முடியாது என்பது தெளிவாக தெரிந்து போயிற்று. யாருக்காகவும், எதற்காகவும் குழந்தைகளை அவனால் விட்டுக் கொடுக்க முடியாது..
இந்த சூழ்நிலையில் வைதேகியின் பேச்சு, அவனுக்குக் கோபத்தை உச்சகட்டத்தில் ஏற்றிவிட, அவன் ஏசி மதிவாணனை அழைத்துவிட்டான். அவனுக்கு இருந்த கோபத்தில் அவர்களை உள்ளே தள்ளி நாலு தட்டு தட்ட தான் ஆசை.
ஆனால் பாட்டி அதை விரும்பாததுதான் அவர்களை விட்டு விடும்படி ஆயிற்று. பாட்டியே குழந்தைகளை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் எனக்கு ரங்கா மட்டும் தான் முக்கியம் என்று சொல்ல, விழிப்பது இப்போது அவன் முறை ஆயிற்று.
என்னதான் குழந்தைகளை தான் வளர்த்தாலும், தாயில்லாமல் வளர்வதில் அவனுக்கு ஒப்புதல் இல்லை. எத்தனை கோடி பணமிருந்தாலும் தாயின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது..
சாதாரண தாய்க்கே இந்தச் சொல் பொருந்தும் எனில், அந்த குழந்தைகளுக்காக தன்னுடைய மானம், கௌரவம், வாழ்க்கை அத்தனையும் அடகு வைத்த ரங்காவின் செயல் அவனுக்கு பிரமிப்பில் ஆழ்த்தியது..
அத்தகைய பெண்ணிடமிருந்து அவள் குழந்தைகளைப் பிரித்து தான் மட்டும் வளர்ப்பது என்பது மனசாட்சிக்கு விரோதமான செயல். கடவுளுக்கு அது பொறுக்காது என்பதால், அவளை திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தான்.
ஆனால் இந்த திருமணத்திற்கு அவள் ஒத்துக் கொள்வாளா..? ஆண்கள் என்றாலே காத தூரம் விலகிச் செல்லும் அவளது குணத்தை மாற்றிக் கொள்வாளா..?
தன்னுடைய சுயத்தை விட்டுக் கொடுக்காமல் வாழும் வாழ்க்கை வேண்டும் என்பதற்காகவே, கல்யாணம் பண்ணாமல், தன்னுடைய சந்தோஷத்துக்காக மட்டும் குழந்தைகளை பெற்றெடுத்து, அவர்களை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ரங்கா, அவளும் குழந்தைகளும் இருக்கும் வாழ்க்கையில் என்னையும் இணைத்து கொள்வாளா..?
அப்படியே இணைத்துக் கொண்டாலும் எங்கள் இருவரின் எண்ணங்களும் ஒத்துப் போகுமா..? இல்லையென்றால் இருவரும் இரு திசையில் நிற்போமா?
அப்போது எங்கள் குழந்தைகளின் கதி..? என்று பலவிதமாக குழம்பியவன், பதில் தெரியாமல், சேரின் பின்னால் தலை சாய்த்து கண்களை மூடி, யோசித்து இருந்தான்.
அத்தியாயம் 8
முதலில் ரங்காவுக்கு தான் நினைவு வந்தது.. அவள் விழித்ததும், அங்கிருந்த செவிலிப் பெண், வெளியில் வந்து அங்கு காத்திருந்த வாசுவிடம் சொல்லி அவனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
“வாசு எனக்கு என்ன ஆச்சு..? பாட்டி எங்க..?
அவள் அருகில் வந்தவன், தலையை தடவிக் கொடுத்தான். “ஒண்ணும் இல்லடா டென்ஷன்ல கொஞ்சமா மயக்கம் ஆயிட்டே. இப்ப சரியா போச்சு. கொஞ்சம் எனர்ஜியா இருக்கும்னு ட்ரிப்ஸ் போட்டிருக்காங்க, அவ்வளவுதான்..” என்று ஆறுதலாக கூறினான்.
அவன் பேசியதற்கு மாறாக அவன் கண்களிலிருந்து இரண்டு சொட்டு கண்ணீர் அவள் மேல் விழுந்தது. அவனைப் பொறுத்தவரை மிகவும் தைரியமானவள் ரங்கா.
எந்த விஷயத்திற்கும் எதற்காகவும் அவள் கலங்கி அவன் பார்த்ததே இல்லை. வைரத்தைப் போல உறுதியான மனதை பெற்றிருந்தாலும், மலரைவிட மென்மையானவள் ரங்கா…
நட்புக்காகவும், பாசத்துக்காகவும், குடும்பத்திற்காகவும் எந்தவிதமான தியாகத்தையும் செய்யத் தயங்காதவள்.. ஆனால் அவள் எதிர்பார்க்கிற ஒரே விஷயம் நேர்மை.. நேர்மை தவறி அவளிடம் யார் நடந்தாலும் அதை அவளால் மன்னிக்கவே முடியாது.
அத்தகைய அவனது உடன்பிறவாச் சகோதரி, அவனது ஆருயிர் தோழி, மனதளவில் சோர்ந்து போய், வாடிய கொடியாய் பார்த்தவனுக்கு, உடன் வளர்ந்த பாசம், கண்களில் கண்ணீர் பெருகியது.
வாசுவின் கண்களில் கண்ணீரை பார்த்தவள், “ஏய் எதுக்குடா அழற, அதுதான் நான் முழிச்சிட்டேனே..? பாட்டி எங்க..?”
“பாட்டியும் அடுத்த ரூம்ல இருக்காங்க..?”
“ஏன்,அவங்களுக்கு என்ன ஆச்சு..?”
“நீ மயங்கி விழுந்ததை பார்த்ததும், அவங்களுக்கு ஒரு மாதிரி இருந்துச்சு. அதனால இங்க கொண்டு வந்து அட்மிட் பண்ணிட்டேன். தூக்கத்துக்கு ஊசி போட்டதுனால தூங்கிட்டு இருக்காங்க..!”
“குழந்தைங்க..”
“அவங்க என் வீட்ல கீர்த்தி கிட்ட இருக்காங்க..” என்று சொன்னதும், ஒரு பெருமூச்சுடன் கண்ணை மூடிக்கொண்டாள்.
“வாசு எனக்கு குழந்தைகளை பாக்கணும் போல இருக்கு. கூட்டிட்டு வரியா..?”
“ம்ம், டாக்டர் கிட்ட கேட்டுட்டு கூட்டிட்டு வரேன். ஆனா ஒரு கண்டிஷன் டாக்டர் என்ன சாப்பிட சொன்னாலும் அதை சாப்பிடணும்..”
“சரி நீ முதல்ல குழந்தைகளை கூட்டிட்டு வா..” என்றதும் அங்கு இருந்த ட்யூட்டி டாக்டரிடம் சென்று சாப்பிட கொடுக்கலாம் என்று கேட்டு கொண்டு கிளம்பினான்.
போவதற்கு முன் உபேந்திராவை பார்த்து, “நான் குழந்தைகளை கூட்டிட்டு வர போறேன். நீங்க கொஞ்சம் இங்க பார்த்துக்கோங்க..” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.
ரங்கா முழித்து விட்டதாக ஏற்கனவே ஒரு நர்ஸ் வந்து சொல்லி இருக்க, அவளைப் பார்க்க போகலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தவன், வாசு சொல்லவும், அவளைப் பார்க்க சென்றான்.
ரங்காவை தனி அறையில் தான் வைத்திருந்தனர். அவன் அறைக்குள் நுழையவும் அங்கிருந்த நர்ஸ் “சார் ஒரு அஞ்சு நிமிஷம் பாத்துக்கோங்க, நான் இப்ப வந்துடுறேன்..” என்று சொல்லி வெளியே சென்றாள்.
கதவுக்கு அருகிலேயே நின்று ரங்காவை பார்த்தவனுக்கு, பொலிவு இழந்த அவளது முகமும், வாடிய தோற்றமும் கண்ணில் பட, மனதுக்குள் ஒரு குற்ற உணர்வு எழுந்தது.. பார்த்த நாள் முதலாய் எப்பொழுதும் துருதுருவென்று இருப்பவள், இன்று நடந்த நிகழ்வுகள் அவள் மனதை பாதித்தது மட்டுமல்லாமல், உடலையும் பாதித்து இருப்பது தெரிந்தது..
தன்னை வைத்து அவளது கற்பும், மானமும் மற்றவர்களின் கேலிக்கும், பரிகாசத்திற்கும் காரணமாக அமைந்து விட, ‘ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்’ என்பதற்கிணங்க, சூழ இருந்தோரின் வார்த்தைகளும், பெற்ற தாயின் வார்த்தைகளும் அவளைக் கொல்லாமல் கொன்று இருக்கும், என்று தெரிந்ததால், அவளிடம் பேச வார்த்தை வராமல் நின்றான்..
ரங்கா விற்கும் அவனது முகத்தை பார்க்கும் தைரியம் இல்லை. தன்னை அனைவரும் கேவலமாக பேசிய போது, அதை தாங்க இயலாமல், மற்றவர்களிடம் அவன் கொதித்தது அவளது கண்ணில் நின்றது.. தான் அவனை எப்போதும் தப்பிதமாக நினைத்திருக்க, தன்னிடம் கோபமாக பேசினாலும், தன்னை பிடிக்காது இருந்தாலும், தன்னுடைய குணத்தை அவன் கணித்து இருந்த விதமும், தனக்காக அவன் மற்றவர்களிடம் வாதாடிய விதமும் அவளுக்கு அவன் மேல் ஒருவித மதிப்பை முதன்முதலாக ஏற்படுத்தியிருந்தது..
எப்படி இருந்தாலும், அவனை வைத்து தன்னுடைய நடத்தையை கேவலப்படுத்தியதன் காரணமாக, ‘என்னதான் ஆதரவாக வெளியில் பேசினாலும், மனதிற்குள் தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பான்’ என்ற எண்ணம் மேலோங்க, அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்தாள். அவன் உள்ளே வந்ததை உணர்ந்தும் கண்விழிக்காமல், அப்படியே படுத்து இருந்தாள்..
மெல்ல நடந்து அவள் அருகில் வந்தவன், ஏதோ ஒரு உணர்வு உந்த தன் வலது கையை அவளது நெற்றியில் வைத்தான். முதன்முதலாக ஒரு ஆணின் ஸ்பரிசம்.. அவனது உள்ளங்கை நெற்றியில் படிந்ததும், அவளது உடம்பில் ஒருவித நடுக்கம் ஓடி மறைந்தது. அவனது உள்ளங்கையில் இருந்த மெல்லிய சூடு அவள் நெற்றியில் தெரிய, தன் மனதில் அவள் மேல் தோன்றிய, பரிதாபத்தை அவன் தன் கைகளின் வழியே கடத்தியபோது, அவனுடைய கைவிரல்கள் அதை உணர்த்திய போது, ரங்கா அதை உணர்ந்தாள்.
அவள் முழித்து தான் இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன், “ இப்ப எப்படி இருக்கு..?” என்று மிருதுவாக கேட்டான்..
‘இத்தனை மென்மையாக இவனுக்கு பேச தெரியுமா?’ என்று ஆச்சரியப்பட்ட ரங்கா, ‘இம்’ என்று மென்மையாக முனங்கினாள்.
“அயம் சாரி..” உபேந்திராவின் அர்த்தம் நிறைந்த வார்த்தைகள் அவள் காதில் விழுந்ததும், கண்விழித்து அவன் முகத்தை பார்த்தாள்.
‘சொன்னது நீதானா?’ என்ற விதத்தில் அவள் பார்வை இருக்க, அதற்கு பதிலளிக்கும் விதமாக, “ஐ அம் ரியலி சாரி. எனக்கு இந்த மாதிரி நடக்கும் என்று சத்தியமா தெரியாது. நான் இருக்கிற சொசைட்டி வேற. நான் அந்த மாதிரி நெனச்சுட்டேன். ப்ளீஸ் மறந்திடு..?”
“எதை மறக்க சொல்றீங்க..?” என்று மெலிதாக பேசியவள், அதை மறக்க முடியாமல், திரும்பவும் கண்கலங்கினாள். “என் உயிர் உள்ளவரைக்கும் அந்த வார்த்தைகளை என்னால் மறக்க முடியாது..” அவளது வாய் வார்த்தைகளை உதிர்க்க, கண்கள் அதன் வேதனையை பிரதிபலிக்க, அவள் உள்ளம் ஊமையாய் அழுதது, அவனுக்கு தெரிந்தது..
‘உண்மைதானே, அந்த மாதிரி வார்த்தைகளை தானும் கேட்க நேர்ந்தால் இப்படித்தானே நினைப்போம்’ என்பதால் அவனால் அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை.
அதற்குள் வெளியே சென்ற நர்ஸ் திரும்பி வந்துவிட, அவளிடம், “பார்த்துக்கோங்க எதுவும் தேவைன்னா, என் கிட்ட சொல்லுங்க…” என்று சொல்லிவிட்டு சென்றான்.
ஒரு மணி நேரத்தில் வாசு குழந்தைகளை அழைத்துக்கொண்டு, ரங்காவுக்கு உணவு எடுத்துக்கொண்டு கீர்த்தியுடன் வந்து சேர்ந்தான். இரண்டு குழந்தைகளும் அம்மாவை பார்த்ததும், அவள் கட்டிலில் படுத்திருப்பதை கண்டு அழ ஆரம்பிக்க, ரங்கா அவர்களிடம், “பார்த்தி, பாவனா நீங்க ரெண்டு பேரும் சமத்து தானே, அப்ப அம்மா சொன்னதைக் கேக்கணும். எனக்கு ஒண்ணும் இல்ல. நாளைக்கு நான் வீட்டுக்கு வந்து விடுவேன். ரெண்டு பேரும் அழக்கூடாது..”
“எதுக்கும்மா உனக்கு ஊசி போட்டு வச்சுருக்காங்க.. எழுந்துருங்கம்மா, எனக்கு பயமா இருக்கு..” பாவனா பயப்பட, வாசு, கீர்த்தி இருவருமே அவர்களை சமாதானப் படுத்த முயன்று தோற்றனர்.
வேறு வழியில்லாமல் வாசு உபேந்திராவை அழைத்து விட, அவன் விரைந்து வந்தான். அவனைக் கண்டதும் குழந்தைகள் மேலும் அழ ஆரம்பித்தது மட்டுமல்லாமல், “அம்மாவை எழுந்து உட்கார சொல்லுங்க, எங்களுக்கு பயமா இருக்கு. எங்களுக்கு அம்மா வேணும்..” என்று அவன் கழுத்தை கட்டிக் கொண்டு அழ…
“ஒண்ணும் இல்ல. இன்னைக்கு நைட் வரதான் அம்மாவுக்கு ஊசி போட்டு இருப்பாங்க. நாளைக்கு காலைல நம்ம கூட வந்துடுவாங்க.. இப்ப நீங்க ரெண்டு பேரும் அழாம இருந்தா, அப்பா உங்களை வெளியில கூட்டிட்டு போயி பொம்மை வாங்கி கொடுத்து ஹோட்டல்ல சாப்பாடு வாங்கி கொடுப்பேன். நீங்க ரெண்டு பேர், ஹர்ஷா எல்லாரும் போலாமா..!” பேச்சை மாற்றினான்..
குழந்தைகளுக்கு ஆசை இருந்தாலும் அம்மாவை விட்டு விட்டு செல்ல மனமில்லை. நீங்களும் வாங்கம்மா, டாக்டர் கிட்ட கேட்டுட்டு நாம போகலாம்..?” என்று சொல்லிய பார்த்தா வெளியே குடுகுடுவென்று ஓடி டாக்டர் அறைக்கு சென்று அவரை கையோடு அழைத்து வந்து விட்டான்.
உபேந்திராவுக்கு மிகவும் நெருங்கியவர்கள் என்று தெரிந்ததால் டாக்டரும் அவன் உடனே வந்தார். “டாக்டர் எங்க அம்மா கையில உள்ள ஊசியை எடுத்து விடுங்க. அவங்க எங்க கூட வரட்டும்..” என்று பார்த்தி சொல்ல,
டாக்டர் அவனிடம். “யூ ஆர் எ குட் பாய். இன்னைக்கு ஒரு நாள் உங்க அம்மா ரெஸ்ட் எடுக்கட்டும். நீ வீட்டுக்கு போயிட்டு காலைல வா. உங்க அம்மா ஜம்முனு உன்கூட எழும்பி வந்துடுவாங்க. ஓகேவா…” என்று சொல்லி சமாதானப் படுத்தினார்.
எல்லோரிடமும் சொல்லிவிட்டு உபேந்திரா குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியே சென்றான். ‘ஹர்ஷா என்னை விட்டு இருக்க மாட்டான்’ என்று கீர்த்தி சொல்லிவிட்டதால் அவனை அழைத்து செல்லவில்லை..
கடைக்கு சென்று குழந்தைகள் விருப்பப்பட்ட விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து, பின்னர் வீட்டுக்கு அழைத்து வந்தான். வரும்போதே அவர்களுக்கு என்ன சாப்பாடு வேண்டும் என்று கேட்டு வீட்டில் உள்ள சமையல்காரருக்கு போன் பண்ணி அதை செய்ய சொல்லி இருந்தான்.
வீட்டை பார்த்ததும் குழந்தைகள் இருவருக்கும் உற்சாகம் தாளவில்லை. எவ்வளோ பெரிய வீடு. இது உங்க வீடா அப்பா..?” என்று குழந்தைகள் கேட்க, இனி இதுதான் நம்ம வீடு புரியுதா..? உபேந்திரா குழந்தைகளிடம் கூறினான்.
சேதுராம் குழந்தைகளைப் பார்த்ததும், கண்கள் பனிக்க அவர்களை அணைத்துக் கொண்டார்.. “அப்பா இந்த தாத்தா யாரு..?”
“இவங்க என்னோட தாத்தா..!”
“அப்படின்னா..”
“அங்க அந்த வீட்ல ஒரு பாட்டி இருந்தாங்கல்ல, அது யாரு..?”
“அது ரங்கா பாட்டி. எங்க அம்மாவோட பாட்டி..”
“அதே மாதிரி இது அப்பா தாத்தா. அப்பாவோட தாத்தா..” என்று குழந்தைகளுக்கு விளக்கினான்.
குழந்தைகளை மேல் கழுவ வைத்து, டிரஸ் மாற்றி சமையற்காரர் உதவியுடன் ஊட்டிவிட்டு, அவர்களுடன் விளையாடி, பின்னர் தனது அறையில் தனக்கு அருகில் இரண்டு பக்கமும் இருவரையும் படுக்க வைத்து தானும் படுத்தான். அவன் மேல் கால்களைப் போட்டுக் கொண்டு அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு இரண்டு குழந்தைகளும் தூங்கின.
முதன் முதலாக தன் குழந்தைகளுக்கு இடையில் படுத்திருந்த அந்த தந்தையின் உள்ளம் அந்த சந்தோஷத்தில், பெருமிதத்தில் தூக்கம் வராமல் தவித்தது.. இந்த சுகத்தை இந்த அன்பை அவளால் எப்படி விட்டுக் கொடுக்க முடியும்..? ரங்காவின் மனநிலையை அவனே எண்ணி பார்த்தான்.
மறுநாள் காலையிலேயே பாட்டிக்கும், ரங்காவுக்கும் சரியாகிவிட்டது. ரவுண்ட்ஸ் வந்த ட்யூட்டி டாக்டர், அவர்கள் வீட்டுக்குப் போகலாம் என்று சொல்லிவிட இருவரும் வாசுவுடன் கிளம்பினர். வாசு நேராக தங்கள் வீட்டுக்கு அவளை அழைத்துச் சென்றான்..
ஒரு பத்து நாள் இங்கேயே இரு ரங்கா. அதுக்கு அப்புறம் என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம். இனி நீங்க அந்த அபார்ட்மெண்ட் போக வேண்டாம்..” என்று தீர்மானமாக வாசு சொல்லியது அவர்களுக்கும் சரி என்று பட்டது..
“நான் போய் குழந்தைகளை அழைச்சிட்டு வரவா..?”
“வேண்டாம் வாசு..” என்றாள் ரங்கா..
“இன்னைக்கு மட்டும் வேண்டாமா அல்லது எப்பவுமே வேண்டாமா..?” என்ற வாசுவின் கேள்விக்கு,
அவனை திரும்பி தீர்க்கமாக பார்த்த ரங்கா, “எப்பவுமே வேண்டாம்.. இந்த ஏழை அம்மாகிட்ட இருப்பதைவிட, எல்லா வசதியும் நிறைந்த அந்த அப்பா கிட்ட இருக்கிறது தான் அந்த குழந்தைகளுக்கு சேப், கௌரவம் எல்லாம். நான் ஒரு பைத்தியக்காரி. என்ன மாதிரியே இந்த உலகமும் நேர்மையாக இருக்கும் நெனச்சிட்டேன். இல்லை, ‘பனை மரத்துக்கு அடியில் நின்று பாலைக் குடித்தாலும் அதுவும் கள்ளுதான் என்று சொல்லும் உலகம்’ என்று எனக்கு செருப்பால அடிச்ச மாதிரி புரிய வச்சிட்டாங்க..
இனி அந்த குழந்தைகளை நாம் வளர்ப்பது என்பது, அவர்களுடைய எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடும். அவங்க அப்பா கிட்ட இருந்தா அம்மாவை பத்தி கேட்டா இல்லைன்னு பொதுவா ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிடலாம். அதனால் அங்கேயே இருக்கட்டும்.. நானுமே இங்கே உள்ள வேலையை விட்டுட்டு வேற ஏதாவது ஒரு ஊருக்கு செல்லலாம் என்று யோசிச்சிட்டு இருக்கேன். பாட்டிய வேணா நீ வச்சுக்கோ. எனக்கு எப்பவாது உங்க எல்லாரையும் பார்க்கணும்னு தோன்றப்ப நான் வந்து உங்களை பார்த்துக்கிறேன்..” என்று அவள் முடிவை அறிவிக்க, பாட்டியும் வாசுவும் அதிர்ந்து போனார்கள்.
“சரி ரெஸ்ட் எடு..” என்று கூறி விட்டு வாசு அலுவலகத்திற்கு சென்று விட்டான். பத்து மணிக்கு மேல் ஹாஸ்பிடல் வந்து ரங்காவையும் பாட்டியையும் தேடிய உபேந்திரா, அவர்கள் இருவரும் டிஸ்சார்ஜ் ஆகி சென்று விட்டார்கள் என்றதும், கடும் கோபம் வந்தது.
“யார் டிஸ்சார்ஜ் பண்ணி அனுப்புனது..?” என்று கேட்க, அந்த டாக்டர் பதறியடித்துக் கொண்டு வந்தார்.
“டிஸ்சார்ஜ் பண்ணா எனக்கு ஒரு வார்த்தை சொல்லணும்னு உங்களுக்கு தெரியாதா..?”
“சாரி சார்..” என்று அவர் சொல்ல..
“அவங்க யாருன்னு நினைச்சீங்க.. என்னோட மிஸ்ர்ஸ் ஆகப் போறவங்க. இந்த ஹாஸ்பிடல் ஓனர். அந்த குழந்தைங்க என்னோட குழந்தைகள். அண்டர்ஸ்டாண்ட்.. இனியாவது பார்த்து நடந்துக்கோங்க..” என்றவன் அவர்கள் யாருடன் போனார்கள் என்பதை விசாரித்து அறிந்து கொண்டு நேராக வாசுவின் வீட்டுக்கு வந்தான்..
அவன் வரவை எதிர்பார்த்து இருந்த ரங்கா, ஒன்றும் சொல்லாமல் மௌனமாக அவனை ஏறிட்டாள். பாட்டியிடம் முதலில் “உங்க உடம்பு பரவாயில்லையா.?” என்று உபேந்திரா கேட்க..
“சரி ஆயிடுச்சுப்பா..” என்று கூறிய பாட்டி மேலும், “ரொம்ப தேங்க்ஸ்..” என்றார் உணர்வுபூர்வமாக..
“எதுக்கு தேங்க்ஸ்..?”
“இல்ல எங்கள பாத்து கிட்டதுக்கு, என்னோட பேத்திக்கு பரிஞ்சு பேசினதுக்கு..!”
“அது என்னோட கடமை. அதுக்கெல்லாம் நன்றி சொல்லாதீங்க. முதல்ல நீங்க எங்க தாத்தாவோட க்ளோஸ் ஃப்ரெண்ட். இரண்டாவது என் குழந்தைகளோட பாட்டி. அவ என் குழந்தைகளோட அம்மா. அப்ப எப்படி நான் உங்க எல்லாரையும் விட்டு கொடுப்பேன்..? எனக்கு என் குழந்தைகள் உயிர் என்றால், என் குழந்தைகளுக்கு அவர்களுடைய தாய் முக்கியம். அப்ப எனக்கும் அவள் முக்கியம். அவளுக்கு வேணா தெரியாம இருக்கலாம்.. ஆனா நான் அதை உணர்ந்து விட்டேன்..” என்றவன் ரங்காவை பார்த்து முறைத்தான்.
அவன் முறைப்பை கண்டாலும் சட்டை செய்யாது அமர்ந்திருந்தாள். “குழந்தைங்க அங்க நம்ம வீட்டில இருக்காங்க.. நீ எதுக்கு இங்க வந்து உட்கார்ந்து இருக்கே..?”
“அவங்க உங்க குழந்தைங்க.. உங்க வீட்டில இருக்காங்க.. அதுதான் நியாயம்.. அந்த நியாயத்துக்காக தானே நீங்க போராடிணீங்க..? அப்புறம் என்ன..?”
“நான் நடந்ததை பற்றி பேசலை. நடக்கப் போறதை பத்தி பேசுறேன். இனி உங்க ரெண்டு பேருக்கும் அதுதான் வீடு. வாசு உன்னோட சகோதரன் தான். இல்லைன்னு நான் சொல்லல. வந்து போய் இருக்கலாம் அவ்வளவுதான்.. உன்னோட வீடு அதுதான். உன்னோட குழந்தைகள் இருக்கக்கூடிய இடம் தான் உனக்கும், இதை ஞாபகம் வச்சுக்கோ..”
“இல்லை அது சரிவராது..?”
“சரி வந்தாலும் வராவிட்டாலும் அது தான். தெரிந்தோ தெரியாமலோ நீ ஒரு தப்பு பண்ணினே.. அதைமாதிரி நானும் ஒரு தப்பு பண்ணினேன். ஆனா இப்ப அந்த தப்பை திருத்தக்கூடிய நேரம் வந்தாச்சு. இனி குழந்தைகளுக்காக தான் நாம வாழணும். உன்னைவிட்டு, என்ன விட்டு, அவங்க இருக்க மாட்டாங்க. நம்மள்ல யாரோ ஒருத்தர் இல்லேன்னாலும் அவங்களை ஒரு நிறைவு பெற்ற மனிதர்களாக வளர்க்க முடியாது.
ஏதோ ஒரு குறை அவங்க மனதில் ஏற்பட்டதுன்னா, அந்தக்குறை அவங்க வாழ்க்கையில ஏதோ ஒரு இடத்தில் பிரதிபலிக்கும். அந்த மாதிரியான கஷ்டத்தை நான் அவர்களுக்கு கொடுக்க விரும்பல. என்னைவிட உனக்கு அதிக உரிமை உண்டு. உண்மையிலேயே கஷ்டப்பட்டு பெத்து இவ்வளவு நாள் வளர்த்த நீ, உன்னோட குழந்தைகள் எப்படியும் போகட்டும் நெனச்சேன்னா, நீ என்ன முடிவு எடுத்திருக்கியோ அதை செயல்படுத்து. இல்ல என்னுடைய குழந்தைகள் ஆரோக்கியமா, முழு நிறைவு பெற்ற குழந்தைகளா வரணும்னு நினைச்சேன்னா, நீயும் பாட்டியுமா அங்க வாங்க. என்ன முடிவுனாலும், இன்று மாலைக்குள் எனக்கு போன் பண்ணு. ஏன்னா குழந்தைகள் ஏற்கனவே உன்னை தேடி அழுதுட்டு இருக்காங்க. அவங்களை இன்னும் அழ வைக்க முடியாது.” என்றவன் தனது விசிட்டிங் கார்டை எடுத்து அவள் முன்னால் வைத்துவிட்டு வெளியே சென்று விட்டான்.
அவன் சென்றதும் சற்றுப் பொறுத்து அவள் அருகே வந்த பாட்டி, “ரங்கா உன் கூட நான் கொஞ்சம் பேசணும்..”
“என்ன பாட்டி நீங்களும் அதையே சொல்லப் போறீங்களா..?”
“இல்ல ரங்கா. இது வேற விஷயம். நானும் உன்னை மாதிரிதான் நெனச்சேன். குழந்தைகள் பிறக்கும் வரை கொஞ்சம் பிரச்சனை இருக்கும். அதுக்கப்புறம் காலப்போக்குல எல்லாரும் மறந்துடுவாங்க, அப்படின்னு. ஆனா பிரச்சனை இந்த மாதிரி வரும் நான் எதிர் பார்க்கவே இல்லை. கடைசிவரை குழந்தையோட அப்பா யாருன்னு தெரியாம அம்மாவா நீ வளர்த்திடுவேன்னு தான் நினைச்சேன். நான் ஒன்று நினைக்க கடவுள் ஒன்று நினைப்பார் என்கிறது, இப்பதான் புரியுது. என்ன மன்னிச்சுடுடா, கண்ணு..“ என்று சொன்ன பாட்டி அழ முற்பட..
“ஐயோ என்ன பாட்டி இது..? நீங்க எதுக்கு என்கிட்ட மன்னிப்பு கேட்கிறீங்க..? கல்யாணம் வேண்டாம்னா எதுவுமே வேண்டாம் இருந்திருக்கணும். அதை விட்டுட்டு தான் தோன்றித்தனமாக நான் எடுத்த முடிவுல, நம்ம குடும்பத்தில் உள்ள எல்லாருமே பாதிக்கப்பட்டுட்டாங்க. அம்மா என்னை திட்டினது எந்தவிதமான தப்பும் இல்ல பாட்டி. அவங்களுக்கு நான் உபயோகமாக தான் இருந்தேன்.
அதுக்காக அவங்களோட கவுரவத்தையும், மரியாதையையும் கெடுப்பதற்கு எனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு..? அவங்க பொண்ணுங்கற ஒரே காரணத்தினால், என்ன தப்பு செஞ்சாலும் அதை அவங்களையும் பாதிக்க தானே செய்து. அதை கொஞ்சம் நான் யோசிச்சு இருக்கணும். அப்ப யோசிக்காட்டாலும், இப்ப ஜட்ஜ்மெண்ட் வந்தப்ப யோசிச்சிருக்கணும். யோசித்து குழந்தைகளை அவங்ககிட்ட கொடுத்திருக்கணும். அதுதான் நான் செஞ்ச பெரிய தப்பு..
குழந்தைகளை முதலிலேயே அவர் கிட்ட கொடுத்து இருந்தால், இப்ப இவ்வளவு பெரிய பிரச்சினை வந்து இருக்காது இல்லையா. அவருக்கு இருக்கிற வசதிக்கு ஆள் வெச்சு குழந்தைகளை வளர்த்துக் கொள்வார். கொஞ்ச நாளைக்கு பிள்ளைங்க என்னே தேடுவாங்க. அப்புறம் மறந்துடுவாங்க..!”
“ குழந்தைகளை விட்டுவிட்டு நீ எப்படிமா இருப்பே..?”
“ வேற என்ன செய்யறது பாட்டி..?”
“ரங்கா வயசுலயும் அனுபவத்திலேயும் உன்னைவிட இரண்டு தலைமுறை மூத்தவங்கிற உரிமையில் சொல்றேன். நீ அந்த தம்பியை கல்யாணம் பண்ணிட்டு, இந்த குழந்தைகளை வளர்க்க வழியை பாரு..” ரங்கா ஏதோ பேச முற்பட..
“இரு நான் முழுசா சொல்லி முடிச்சிடறேன்..” என்ற பாட்டி மேலும் சொல்ல ஆரம்பித்தார். “உனக்கு கல்யாணம் என்கிற பந்தம் பிடிக்காமல் போனதற்கு, நானும் ஒரு வகை காரணம். நம்ம குடும்பத்தை நான் பார்த்ததோட இல்லாம, உன்னையும் அந்த பந்தத்துக்குள் இழுத்து விட்டுட்டேன். அதை நான் செஞ்சிருக்க கூடாது.. ஆரம்பத்திலேயே உனக்குன்னு ஒரு தனி வாழ்க்கை இருக்குங்கிறதை சொல்லி இருக்கணும். சொல்லாததுனால, நீ அதை பத்தி யோசிக்கவே இல்லை..
எல்லா ஆண்களும் கெட்டவங்க இல்ல ரங்கா. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் மனிதனை எல்லாவிதத்திலும் மாற்றுது.. படித்து முடித்து நல்ல வேலையில் இருக்கிற, அறிவுள்ள மாப்பிள்ளைன்னு நெனச்சு எத்தனையோ பேர் கல்யாணம் பண்றாங்க. ஆனா அவங்க எல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சுகிட்டு வாழ்க்கை நடத்துவார்களா என்பது சந்தேகம்தான்..
அறிவாளியான மாப்பிள்ளையை விட, புத்திசாலியான மாப்பிள்ளை தான் நல்லவனாக இருப்பான்.. அறிவுங்கிறது படிப்பினால் வருவது. புத்திங்கிறது பிறக்கும் போதே கடவுள் கொடுத்தது. இந்த பையன் கிட்ட புத்தியும் இருக்கு, எதையும் சீர்தூக்கிப் பார்க்கிற மனப்பான்மையும் இருக்கு. அதுக்கு காரணம் அந்த பாரம்பரியம் தான். எனக்கு என்ன தோணுதுன்னா இவரை கல்யாணம் பண்றதுனால உனக்கு எந்தவிதமான பிரச்சினையும் வராது.
உன்னோட சுயமரியாதையை மதிக்கிற மனுசனா தான் இவர் இருப்பார். அதை நீ முதல்ல புரிஞ்சுக்கணும். நீ எப்படி மத்தவங்க உணர்வுகளை புரிஞ்சு நடக்கிறாயோ அதே மாதிரி தான் அவரும் இருக்காரு. ஒருவேளை கடவுள் இவரைத்தான் உனக்கு இணைன்னு காட்டுவதற்காக தான் இத்தனை பிரச்சினை உண்டு பண்ணினாரோ என்னவோ, கொஞ்சம் யோசி..
அதையும் மீறி நீ நினைக்கிறது தான் செய்வேன் அப்படின்னா நான் உன்னை தடுக்கல. ஆனால் என்னையும் உன்கூட கூட்டிட்டு போயிரு ரங்கா, என்னால உன்னை விட்டு இருக்கவே முடியாது..” பாட்டியின் வார்த்தைகள், ரங்காவை யோசிக்க வைத்தது. அவளாக யோசித்து ஒரு முடிவுக்கு வரட்டும் என்று பாட்டி அவளைத் தனியே அந்த அறையில் விட்டுட்டு வெளியே சென்றார்.
அத்தியாயம் 9
திருப்பதியில் திருமணம் முடிந்தது. கீழ் திருப்பதியில் உள்ள திருச்சானூர் தலத்தில் பத்மாவதி அம்மையாரின் முன்னிலையில் ரங்காவின் கழுத்தில் தாலி கட்டி உபேந்திரா அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டான்.
ரங்கா சம்மதம் சொன்னதுமே, கல்யாண ஏற்பாடுகளை துரிதமாக செய்ய வேண்டும் என்று சேதுராமனும், பாட்டியும் சொல்லிவிட்டனர். பாட்டியின் விருப்பப்படி திருப்பதியில் திருமணத்தை சுருக்கமாக வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படியே உபேந்திரா எல்லா ஏற்பாடுகளையும் ஒரே நாளில் செய்து முடித்தான். கல்யாணம் முடியும் வரை பாட்டியும், ரங்காவும் வாசு வீட்டில் இருப்பது என்றும், குழந்தைகளும் அவர்களுடனே இருப்பது என்றும் தீர்மானித்தனர். இருவருக்கும் கல்யாணம் என்று கேள்விப்பட்டதும் குழந்தைகளோட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..
அவர்கள் இருவரும் கல்யாணம்னா என்ன..? எங்கு நடக்கும் எப்படி நடக்கும்? என்று கேள்விகளால் ரங்காவையும், பாட்டியையும் துளைத்து எடுத்து விட்டனர்..
ரங்கா பதில் சொல்ல சிரமப்படுவதை அறிந்து, பாட்டி அவர்களை அழைத்து தன்னிடம் வைத்துக்கொண்டு, கல்யாணத்தைப் பற்றி விரிவாகச் சொன்னார்.. “அப்படின்னா எங்களுக்கும் இந்த மாதிரி கல்யாணம் நடக்குமா..?” என்று அடுத்த கேள்வி அவர்களிடமிருந்து பிறந்தது.
“கண்டிப்பா நடக்கும். ஆனா இப்ப கிடையாது.. அம்மா மாதிரி பெரிய பெண் ஆன பிறகு..!”
“ஓ அப்ப எனக்கும் பாப்பா இருக்கும். என்னோட பாப்பாவுக்கு நான் என் கல்யாணத்தை காட்டுவேன்..” என்று பாவனா சொல்ல பாட்டிக்கு, குழந்தை சொன்னதைக் கேட்டு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்டு வளர்வதில்லை. நாம் செய்வதை பார்த்து வளர்க்கின்றனர். கேட்டுக்கொண்டிருந்த ரங்காவுக்கு தன்னுடைய தவறு இப்பொழுது பூதாகரமாக தெரிந்தது.
கேட்டுக்கொண்டிருந்த கீர்த்தி சிரித்து விட, “ பாட்டி அத்தை சிரிக்கிறாங்க.. என்னை கேலி பண்றாங்க..” என்று பாவனா ஓவென்று அழுதது..
அவளுக்கு தான் பேசும் போது யாரும் அவளைக் கிண்டல் செய்து சிரித்து விட கூடாது. பெரிய தன்மான பிரச்சனையாக தோன்றும்.. “இல்லம்மா நான் அதுக்கு சிரிக்கல..” என்று கீர்த்தி சொன்னாலும் அவள் சமாதானம் ஆகவில்லை. வாசு வந்ததும் முதல் வேலையாக அவனிடம் கம்ப்ளைன்ட் செய்து அவன் கீர்த்தியை பொய்யாக திட்டுவது போல் நடித்த பின்னரே அவள் சமாதானமானாள்.
“ நீங்க குட் மாமா. அத்தையை நலலா திட்டுங்க..” என்று வாசுவுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்து, தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டது குட்டி.
“அக்கா உங்க பொண்ணு சரியான ஆளு. யாரை வைத்து யாரை கவுக்கணும், யார் கிட்ட சொன்னா நமக்கு வேண்டியது நடக்கும். எல்லாம் தெளிவா தெரியுது. உண்மையிலேயே நீங்க அப்பாவி அக்கா..” என்று சிரித்துக் கொண்டே கூறினாள் கீர்த்தி. ரங்கா எதற்கும் பதில் சொல்லவில்லை. கல்யாணம் என்று முடிவு செய்ததிலிருந்து அவளுடைய பேச்சே குறைந்து விட்டது. எப்போதும் ஏதோ ஒரு சிந்தனை. வாசுவும், பாட்டியும் மாற்றி, மாற்றி பேசி அவள் மனதைக் கரைத்து இருந்தனர்.
இதோ திருமணம் முடிந்து, ஏழுமலையானை தரிசித்துவிட்டு, எல்லோரும் திரும்பிக் கொண்டு இருந்தனர். தனது செல்வாக்கால், வெங்கடாசல பெருமாள் சந்நிதியின் மிக அருகில் நின்று மாலை மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்திருந்தான். திருமணம் நடைபெற்றது கீழ்த் திருப்பதியில், ஆனாலும் பெருமாளின் சன்னதியில் மாலை மாற்றுவது விசேஷம் என்பதால் இந்த ஏற்பாடு..
காரில் கீழே வந்து, அங்கு தங்கியிருந்த ஹோட்டலில் டிரஸ் சேஞ்ச் பண்ணி விட்டு சாப்பிட்டு உடனே கிளம்பினர். டிரைவர், குழந்தைகள், ரங்கா, உபேந்திரா தாத்தா ஒரு காரிலும், வாசு, கீர்த்தி, பாட்டி, ஹர்ஷத் மற்றொரு காரிலும் கிளம்பினர். வரும்போது உபேந்திரா தனியாக முன்னாடியே வந்து விட்டான். தாத்தா முன்னாடி இருந்ததால் பின் சீட்டில் குழந்தைகள் நடுவில் இருக்க ரங்காவும், உபேந்திராவும் ஏறினர்.
சற்று தூரம் சென்றதுமே நடுவில் இருக்க குழந்தைகளுக்கு போரடித்தது. கொஞ்ச நேரம் பேசிக்கொண்டே வந்த பார்த்தி அம்மாவிடம், “அம்மா ப்ளீஸ் நான் ஜன்னலோரம், வெளிய பாக்கணும்..” என்று கேட்டு ஜன்னலோரம் சென்றுவிட்டான்.
அவன் சென்றதை பார்த்த பாவனாவும், அப்பாவின் ஜன்னலோரம் சென்று அவனை உள்ளே தள்ளினாள். வேறு வழியில்லாமல் இருவரும் நடுவில் உட்கார்ந்து கொண்டு குழந்தைகளை ஜன்னல் ஓரம் இருக்க செய்தனர். குழந்தைகள் அமைதியாக உட்காராமல் திரும்பவும், வெளியே பார்க்கவும் இவர்களிடம் பேசுவதற்கு வசதியாக, உள்ளே திரும்பவும் என்று மாறி மாறி சேட்டை செய்ததில் அவர்கள் பாதி இடத்தை அடைத்துக் கொள்ள, ரங்காவுக்கு ஒழுங்காகவே உட்கார முடியவில்லை..
உபேந்திரா அசைந்தான் இல்லை. அவன் நன்றாக உட்கார்ந்து கொண்டு வசதியாக பின்னால் சாய்ந்து கொண்டான். “ஏய் பார்த்தி ஒழுங்கா உட்கார்ந்து வா. இல்லேன்னா அம்மா அந்த பக்கம் வரேன். நீ நடுவுல வா..’
“அதெல்லாம் முடியாதும்மா, நடுவுல இருந்தா ஒண்ணுமே தெரியாது. பாவனா மட்டும் அந்த சைடு உட்கார்ந்து இருக்கா. அவளை ஏதாவது சொல்றீங்களா..? என்ன மட்டும் எப்ப பார்த்தாலும் திட்டிட்டு இருக்கீங்க..?” பாவனாவோடு அவன் போட்டி போட, “விடு, குழந்தைகள் அப்படித்தான் இருப்பாங்க…” என்றான் அலட்டிக்கொள்ளாமல்…
‘இவனுக்கு என்ன அசையாம அப்படியே சக்கு பிள்ளையார் மாதிரி உட்கார்ந்துட்டு, சொல்லுவான், எனக்கு எல்லாமே அவஸ்தையா இருக்கு.‘ மனதுக்குள் அவனுக்கு அர்ச்சனை செய்தாள். ஓரக்கண்ணால் அவளை பார்த்தவனுக்கு சிரிப்பு, வந்தது. சிரித்தால் கொன்றுவிடுவாள், முதல் நாளே சண்டை போட வேண்டாம் என்று நினைத்து வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கிக்கொண்டான்.
அவனது வட்டாரத்தில் ஆண் பெண் அருகில் உட்கார்வது, கைகுலுக்கி கொள்வது, கட்டிப் பிடித்துக் கொள்வது எல்லாம் சர்வ சாதாரணம் என்பதால் அவளது அருகாமை அவனை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. மிக சாதாரணமாக அமர்ந்திருந்தான்.
ஆனால் ரங்காவுடைய பழக்க வழக்கம் வேறு. அவனுக்கு வாசுவை தவிர வேறு யார் கூடவும் வெளியில் சென்று உட்கார்ந்து பழக்கமே கிடையாது. முதன்முதலில் ஒரு அந்நிய ஆணின் அருகாமை அவளுக்கு அன்ஈஸியாக இருந்தது.
அவன் சௌகரியமாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய வலது கையை சீட்டின் பின்னால் நீட்டி சாய்ந்து அமர்ந்து கொண்டான். அதுமட்டுமல்லாமல் இரண்டு நாள் அலைச்சல் அவனுக்கு தூக்கத்தை வரவழைக்க அவன் நிம்மதியாக தூங்க ஆரம்பித்தான்..
இவள் பின்னால் தலையை சாய்த்தால், தலையை நீட்டி இருக்கும் அவனது வலது கையில் தான் வைக்க வேண்டும். அதனால் சாயாமல் உட்கார்ந்து வந்தாள்.
பிருத்விதா இல்லம் வந்தவுடன் அவளுக்கு முதன் முதலில் அவனை அந்த பங்களாவில் சந்தித்தது நினைவுக்கு வந்தது.. வேலை பார்க்கும் ரஞ்சிதம்மாவும் கீர்த்தியும் சேர்ந்து ஆரத்தி எடுக்க இருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர்..
பாட்டி, வாசு, கீர்த்தி எல்லோரும் ஹாலில் அமர்ந்து விட உபேந்திரா மாடிக்கு தனது அறைக்கு சென்றான். குழந்தைகளுக்கு ஏற்கனவே பழக்கம் என்பதால் அவர்கள் ‘அப்பா’ என்று அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்று விட்டனர்.
என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு நின்ற ரங்காவிடம் சேதுராம் “மேல மாடிக்கு போம்மா. குழந்தைங்க அங்க தான் இருப்பாங்க..” என்று சொல்ல மெல்ல மாடி ஏறினாள்.
சினிமாவில் வருவது போல் மாடிப்படி முடிந்ததும் உள் பக்கமாக ஹாலின் எல்லா இடமும் தெரியுமாறு ஒரு பால்கனியும், அதன் பிறகு உள்ளே நுழைந்தால் எதிரெதிராக நான்கு அறைகளும் இருந்தன..
அந்த அறையில் அவர்கள் எதில் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் ஒரு நிமிடம் தயங்கி நின்றாள். அதற்குள் ஒரு அறை கதவை படாரென்று திறந்துகொண்டு பார்த்தி வெளியே வர, “அம்மா இங்க ஏன் நிக்கிறீங்க? வாங்க இதுதான் நம்ம ரூம்..” என்று அவளைக் கையைப் பிடித்து அழைத்து சென்றான்.
உள்ளே பாவனா கட்டிலில் உருண்டு கொண்டு இருந்தது.. அவர்களுக்கு என்று வாங்கிய விளையாட்டு சாமான்கள் கட்டிலிலும் கீழேயும் பரத்தி இருக்க, பாவனா அதன் நடுவில் உட்கார்ந்து இருந்தாள்.
“அம்மா, இது எப்படி விளையாடணும்னு சொல்லிக் கொடுங்க..” என்று ஒரு பொம்மையை எடுத்துக் காட்ட அதற்குக் கீ கொடுத்தவுடன் அது ஓடியது.
“இறங்கிப் போய் எடுத்துட்டு வா. இப்படி தான் கீ கொடுக்கணும். பார்த்தி இங்கே வா. விளையாட்டு சாமான் எல்லாத்தையும் ஒரு ஓரமாக எடுத்து வை.. “
“அம்மா, என்று சிணுங்கிய மகனிடம், இப்போ ஓரமா எடுத்து வச்சாதான் அடுத்து விளையாட எடுத்து தருவேன். இல்லை என்றால் இப்பவே எல்லாத்தையும் எடுத்து மேலே தூக்கி வெச்சுடுவேன்…” என்று அவள் அரட்டிய அரட்டலில் பார்த்தி முனங்கிக் கொண்டே எடுத்து வைத்தான்.
பாவனாவிடமும் அதே போல் அமைதியாக எடுத்துச் சொல்லி பொம்மைகள் அனைத்தையும் ஒரு இடமாக ஒதுக்க செய்தாள்.
அதற்குள் குளித்துவிட்டு, இடுப்பில் துண்டுடன் வெளியில் வந்தான் உபேந்திரா. சட்டென்று அவனை அப்படி பார்த்ததும், கூச்சமாகிவிட, முகத்தை திருப்பிக் கொண்டாள்..
அதை கவனித்தும் கவனிக்காதது போல், குழந்தைகளிடம் “டேய் என்னடா பண்றீங்க..?” என்றான்.
“அம்மா இதையெல்லாம் எடுத்து வைக்க சொல்லிட்டாங்க..” புகார் அளித்தனர்.
“ரங்கா பிள்ளைங்க விளையாடுவதற்கு தான் வாங்கி போட்டு இருக்கு. அதை எடுத்து எதுக்கு எடுத்து வைக்க சொல்கிறே?”
விளையாடட்டும். வேண்டாம்னு நான் சொல்லலை. அதுக்காக விளையாண்டு முடிஞ்சவுடனே அந்தந்த சாமான அந்தந்த இடத்தில் வைக்கணும்னு சொல்லிக் கொடுக்கிறேன். இப்பவே அது பழகலேனா நாளைக்கு அவங்களுடைய சாமான்களை அவங்களுக்கு பத்திரமா வைச்சுக்க தெரியாது..
அந்த பழக்கம் ரொம்ப அவசியம். இல்லேன்னா, எதுக்கெடுத்தாலும் யாரையாவது எதிர்பார்த்து தான் நிக்கணும் அவங்க. இங்கே தான் நிறைய கப்போர்டு இருக்குல்ல. அதுல ஒரு ஓரத்தில் வைத்துக்கட்டும் தேவையானதை எடுத்து விளையாடட்டும்..” அவனை நிமிர்ந்து பார்க்காமலே பதில் சொல்லி முடித்தாள்..
துண்டுடன் கண்ணாடி முன்னால் நின்று தலை சீவிக் கொண்டவன், அடுத்து உடலெங்கும் பவுடரை அள்ளித் தெளித்து கொண்டான்.
அவன் திரும்பி நின்றாலும் அவள் பக்கத்தில் இருந்த கண்ணாடியில், எதிர்ப்புறம் இருந்த கண்ணாடியில் அவன் டிரஸ் பண்ணுவது தெரிந்தது..
ஆறடிக்கு மேல் நன்கு உயரமும், நிறமும், சீரான உடற்பயிற்சியினால் ஏற்ப்பட்ட கட்டான உடலும், அடர்ந்த சிகையும், அடர்த்தியான மீசையும் அதற்குக் கீழ் அழுத்தமான உதடுகளும், நீண்ட முக வாயும் கூர்மையான கண்களும், ஒரு அழகான ஆண்மகனாக காட்ட, இத்தனை நெருக்கத்தில் யாரையும் பார்த்திராத அவளுக்கு, கூச்சம் பிடுங்கித் தின்றது.
வேறொரு பக்கம் முகத்தை திருப்பினாலும் அங்கும் அவனது பிம்பம் தெரிய “என்னங்கடா இது சுத்தி, சுத்தி கண்ணாடி போட்டு வச்சிருக்கானோ‘ பார்த்தால் லேமினேஷன் இல் அவனது உருவம் தெரிந்தது..
பேன்ட் டி-சர்ட் அணிந்து, வாட்சை எடுத்து கையில் கட்டிக் கொண்டவன், “ஓகே, பசங்களா அம்மாகிட்ட இருங்க. நான் கொஞ்சம் வெளியில போயிட்டு வரேன்..” என்று குழந்தைகளிடம் சொல்ல, அவர்கள் அவன் காலை கட்டிக்கொண்டனர்.
“அப்பா நாங்களும் வரட்டுமா..?” என்று பாவனா கேட்க,..
“நாளைக்கு நம்ம எல்லாரும் வெளியில் போகலாம். எனக்கு முக்கியமான வேலை ஒண்ணு இருக்கு. அதை முடித்து விட்டு நான் வந்துடறேன். ஒரு நாள் நீங்க அட் ஜஸ்ட் பண்ணிக்கணும்..” என்றவன் குறிப்பாக ரங்காவை பார்த்தான்.
“ரெண்டு பேரும் இங்க வாங்க. நம்ம கொஞ்ச நேரம் விளையாடலாம்..” என்று ரங்கா அழைத்ததும் குழந்தைகள் அவளிடம் ஓடி வந்தனர்.
“க்கூம்..” என்று தொண்டையைச் செருமினாள். திரும்பிப் பார்த்தவன் “என்ன..?” என்று கேட்க..
“முதல்ல உங்களை எப்படி கூப்பிடுவது என்று சொல்லுங்க..?”
“என் பெயர் உனக்கு தெரியும் தானே..? பேர் சொல்லி கூப்பிடு. இப்ப என்ன வேணும்..”
“எனக்கு டிரஸ் மாத்தணும். என்னோட பாக் எல்லாம் எங்க இருக்கு..?”
“டிரைவர் கொண்டு வந்து உள்ள வச்சிருப்பான். நான் ரஞ்சிதம்மாவை எடுத்து வர சொல்றேன். அப்புறம் ஒரு விஷயம் கேக்கணும். பாட்டி நம்ம கூடவே இருக்கட்டும். உங்க ரெண்டு பேர் டிரஸ் போக, வேற என்ன சாமான் வேணும்..?
இங்கே கொண்டு வந்து ஒரு ரூம்ல போடுவதைவிட வாசுக்கு தேவையானதை கொடுத்துட்டு, முக்கியமானது எடுத்துட்டு மிச்ச எல்லா சாமானும் டிஸ்போஸ் பண்ணிடலாம்.. என்ன சொல்ற..?”
“சரி, ஆனா பாட்டியை கூட்டிட்டு போய் அவர்களுக்கு தேவையானது எதுவும் இருந்ததனால் எடுத்துக்கொண்டு வந்துடுங்க.. எனக்கு என்னோட சர்டிபிகேட் என்னோட புக்ஸ் இதுதான் முக்கியம்.. வேற எதுவும் எனக்கு தேவையில்லை..” என்றாள்.
“நான் பாத்துக்குறேன். இன்னைக்கு நான் வர கொஞ்சம் லேட் ஆகும். குழந்தைகளை தூங்க வைச்சிடு..” என்றவன் கீழே சென்றான்.
வாசுவும் கீர்த்தியும் ஏற்கனவே போயிருக்க, பாட்டியிடம் வந்தவன், “பாட்டி நீங்க எங்க எங்க கூடவே இருங்க.. கீழ தாத்தாவுக்கு ஒரு ரூம் இருக்கு. அதுக்கு அடுத்த ரூம் உங்களுக்கு ஒதுக்கித் தர சொல்றேன். ரெண்டு பேருக்கும் பேச்சுத் துணையாக இருக்கும். எங்களுக்கும் நீங்க இருக்கிறது சந்தோஷமா இருக்கும்.
நான் இப்போ வாசு கிட்ட ரங்கா கூட ட்ரெஸ், பைல்ஸ் இதெல்லாம் எடுத்து வர சொல்ல போறேன். அதோட உங்களுக்கு என்ன தேவைன்னு வாசு கிட்ட சொல்லிடுங்க. அதை மட்டும் எடுத்துட்டு வாசுவுக்கு தேவையானதை கொடுத்துட்டு எல்லாத்தையும் டிஸ்போஸ் பண்ண சொல்லிடறேன். உங்களுக்கு சம்மதமா?” என்று பாட்டியிடம் கேட்க..
“ரங்கா என்ன சொன்னா..?” என்று கேட்டார் பாட்டி.
“ரங்கா ஓகேன்னு சொல்லிட்டா..”
“அவள் சொன்னபடியே செஞ்சுடுங்க.. நான் வாசு கிட்ட சொல்லிடறேன்..” என்றார் பாட்டி ரங்கா.
வாசுவை அழைத்து விவரத்தை சொன்னவன், நாளைக்கு ஒரு நாள் நீங்க இதை பண்ணி கொடுத்துடுங்க வாசு..” என்று உபேந்திரா கேட்க..
“நாளைக்கே நான் காலி பண்ணிடறேன்.. அப்புறம் வீட்டை பூட்டி போடவா..?”
“வேண்டாம் நீட்டா ஒயிட் வாஷ் பண்ணி வாடகைக்கு விடுங்க.. மாதா மாதம் வாடகை வாங்கி பாட்டி பெயரில் அக்கவுண்டில் போட்டுருங்க.. பாட்டிக்கு உதவும்..!”
“ஷ்யூர் அப்படியே பண்ணிடுறேன்..? என்று வாசு பதிலளித்தான். உபேந்திரா வெளியில் சென்று விட சற்று நேரத்தில் இவளது பையை மாடிக்கு கொண்டு வந்து ரஞ்சிதம்மா கொடுத்தார்..
“நீங்க இங்க என்னவா இருக்கீங்கம்மா..?”
“அம்மா நான் சுத்து வேலை பார்ப்பேன். அதுபோக சமையல் பண்றதுக்கு உதவியாக எல்லாம் வெட்டி கொடுத்து எல்லா வேலையும் பார்ப்பேன்..!”
“சமையலுக்கு.,.?”
“ரொம்ப நாளா சாமையான்னு ஒரு ஆளு இருக்காரு. சின்னையாவோட அப்பா காலத்திலிருந்து அவர்தான். அவருக்கு இப்ப கொஞ்சம் வயசானதனால கையாளு நானு..!”
“குழந்தைகளுக்கு கொஞ்சம் ஜூஸ் போட்டு வைங்க. நான் இப்ப கூட்டிட்டு வரேன்..” என்றவள் பையிலிருந்து சுடிதார் ஒன்றை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள்..
நிமிடத்தில் தானும் குளித்துவிட்டு குழந்தைகளுக்கும் டிரஸ் மாற்றி அவர்களை அழைத்துக் கொண்டு கீழே வந்தாள். பாட்டியும் அதற்குள் குளித்து டிரஸ் மாற்றி இருக்க, பாட்டி நீங்களும் தாத்தாவும் சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே..?”
“ஆமா நீ வரட்டும்னுதான் வெயிட்டிங். உபேந்திராவுக்கு வேலை இருக்குன்னு வெளியில போயிட்டான்..” என்று பதிலளித்தார் தாத்தா.
எல்லோரும் ஒன்றுபோல் சாப்பிட அமர்ந்தனர். குழந்தைகளுக்கு ஊட்டிக்கொண்டே பாட்டிக்கும் தாத்தாவுக்கும் பரிமாறிய ரங்கா, குழந்தைகள் சாப்பிட்ட பின்பு தானும் சாப்பிட்டு முடித்தாள்..
தாத்தாவும், பாட்டியும் ஒரு டம்ளர் பாலுடன் படுக்க சென்றுவிட்டனர். குழந்தைகள் வெயில் நேரம் என்பதால் பால் வேண்டாம் ஜூஸ்தான் வேண்டும் என்று கேட்டனர். அவர்களுக்கு ஜூஸ் கொடுத்து விட்டு தானும் ஒரு டம்ளர் பாலை குடித்துவிட்டு, ரஞ்சிதம்மாவை அழைத்து, நீங்க சாப்பிட்டு போய் படுங்க அம்மா..” என்றவள் மாடி ஏறி விட்டாள்..
இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் வந்த உபேந்திரா தனது அறைக்குள் வந்து விடிவிளக்கு எரிய விட்டான். கட்டிலின் ஒரு ஓரத்தில் ரங்காவும், இரண்டு குழந்தைகள் நடுவிலும் படுத்திருந்தனர். இன்னொரு ஓரத்தில் இரண்டு தலையணைகளை அடுக்கி குழந்தைகள் உருண்டு விடக்கூடாது என்று வைத்திருந்தாள்..
நைட் பேண்ட் மட்டும் அணிந்தவன், இருந்த அலுப்பில் தலையணைகளை நகர்த்திவிட்டு அப்படியே கட்டிலில் சரிந்தான்..
மறுநாள் காலை அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க ரங்காவுக்கு அதிகாலையிலேயே விழிப்பு வந்தது. எழுந்து பல் துலக்கி விட்டு பால்கனி கதவை திறந்து வெளியில் வந்தவள் வெளிச்சத்தில் சுற்றுப்புறத்தை நோக்கினாள்.
பங்களாவைச் சுற்றி மிகப் பெரிய தோட்டம் பரந்து விரிந்திருந்தது. விதவிதமான மரங்களும் செடிகளும் பூக்களும் தோட்டக்காரன் பராமரிப்பில் செழிப்பாக தெரிய அதற்கு நடுவில் ஒரு நீச்சல் குளமும், இன்னொரு ஓரத்தில் குட்டி பார்க் போன்று வடிவமைக்கப்பட்ட சீசா ஊஞ்சல், சறுக்கு போன்றவைகளும் இருந்தன..
பணம் இருந்தால் எல்லாவற்றையும் தங்கள் கைக்குள் அடக்கி விடலாம் என்பதற்கு உதாரணமாக அந்த பங்களா இருந்தது. குழந்தைகள் இதைப் பார்த்தால் மிகவும் சந்தோஷப்படுவார்கள், என்று நினைத்தவள் மெல்ல கீழிறங்கி தோட்டத்தைச் சுற்றி வரலானாள்.
விதவிதமான ரோஜாக்கள் பலவித கலரில் பூத்திருந்தன. அவன் பக்கத்தில் நின்று அந்த பூக்களை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த தோட்டக்காரன் அருகில் வந்து “ஏதாவது பூ பறித்து தரவா” என்று கேட்டான்.
“இல்ல, வேண்டாம்..” என்று கூறிவிட்டு வீட்டுக்குள் நுழைந்து டீப்பாயில் இருந்த பேப்பரை பார்த்தான். எல்லாவிதமான தமிழ் ஆங்கில தினசரிகள் மற்றும் வாரப் பத்திரிகைகளும் அங்கு இருந்தது. அனைத்திலும் அட்டைப்படமாக அல்லது பெரிய படமாக ரங்காவும் உபேந்திராவும் மாலையும் கழுத்துமாக சிரித்துக் கொண்டிருந்தனர்..
அதைப் பார்த்ததும் கோபம் பொசுக்கென்று எழுந்தது.. ‘இதுக்கு தான் ஐயா நேத்து ராத்திரி வெளியில போய் இருக்கார் போல இருக்கு. இப்ப எதுக்கு இவ்வளவு பெரிய விளம்பரம்..? நான் பெரிய தியாகின்னு காட்டிக்கவா..?’ சுர்ரென்று எழுந்த கோபத்துடன் பத்திரிக்கையை கையில் எடுத்துக்கொண்டு மாடியேறினாள். அப்பொழுதுதான் உபேந்திரா முழித்து இருக்க, அவன் முன்னால் இந்த பேப்பர்களை கொண்டு போய் பொத்தென்று போட்டாள்.
“என்ன இது..?”
“எங்கிட்ட கேட்டா? கொண்டு வந்த உனக்கு தெரியாதா, இது பேப்பர்னு..!
“நான் அத கேக்கல. இது எதுக்கு இத்தனை விளம்பரம் எல்லா பேப்பர்லயும், எங்க பாத்தாலும் நம்ம ரெண்டு பேர் முகமும் தான் தெரியுது..!” அதான் கேட்டேன்..
இது என்னமோ சொன்ன மாதிரி இருக்கே என்னோட கல்யாணம்..? கிராண்டா பண்ணல. இன்பர்மேசன் எல்லாருக்கும் தெரிய வைக்க வேண்டாமா.? விளம்பரம் கொடுத்தேன்.
“அதுதான் ஏன் என்கிறேன்..? ஒரு பேப்பரில் மட்டும் கொடுத்தால் போதாதா. நீங்க கொடுத்திருப்பதை பார்த்தா உங்களுக்கு சுயவிளம்பரம் தேடுகிற மாதிரி இருக்கு..!”
“என்னன்னு..?”
“ரெண்டு குழந்தையோட நான் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி இருக்கேன். நான் மிகப்பெரிய தியாகின்னு சொல்லாம சொல்ற மாதிரி இருக்கு..?”
“அப்புறம்..?”
“வேறென்ன..? அதான் சொல்லிட்டு தானே இருக்கேன்.. உங்களை உயர்த்தி காட்டுவதற்கு, என்னை இப்படி காட்டணுமா…?”
“இதை வாசித்து பாத்தியா நீ..? என்னை உயர்த்தி உன்னை தாழ்த்தியோ ஏதாவது விளம்பரம் வந்திருக்கா..?”
“அதான் படத்தைப் பார்த்தாலே தெரியுது. வாசித்து வேற பார்க்கணுமா. ஏற்கனவே நம்ம ரெண்டு பேர் படமும் இதுக்கு முன்னாடி வந்து இருக்கு. அப்புறம் என்ன..?” அவளது முகம் பழைய நினைவில் கோபத்தில் சுருங்கியது.
அருகில் வந்தவன் அவள் முகத்தை உற்றுப் பார்த்தான்.. “எதுவுமே பார்க்கிற பார்வையில் தான் இருக்கும்.. இனியாவது நீ நல்லவிதமா பார்த்து பழகு..”
“எதை நான் நல்லவிதமா பார்க்கல…!”
“உன் கூட இருக்கிறவங்கள, முக்கியமா ஆண்களை. இந்த விளம்பரம் கொடுத்ததற்கு முக்கிய காரணமே, இனி யாரும் நம்ம ரெண்டு பேரையும் பத்தி எந்த விதமான பேச்சும் பேசக் கூடாது என்கிறது தான்..
இதுநாள் வரை தனித் தனியா இருந்ததுனால, அவங்களால இஷ்டத்துக்கு பேச முடிந்தது. இனி இந்த உபேந்திராவோட முகமே வேற. ஹை கோர்ட் கிரிமினல் லாயர் உபேந்திரவின் மனைவி, மக்களைப் பற்றி பேசினால் என்ன ஆகும்னு அவங்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்க தான் இந்த விளம்பரமே..!
யாரும் நாக்கு மேல பல்லைப் போட்டு பேச மாட்டாங்க.. இத முக்கியமா நான் கொடுப்பதற்கு காரணமே நீ தான். என்னோட ஹைகிளாஸ் சொசைட்டில எனக்கு விமர்சனங்களும், என்னைப்பற்றி அபிப்பிராயங்களும் நான் பெருசா நினைச்சுக்கிட்டது இல்லை..
ஆனா இந்த ஒரு வாரமா உன்னோட முகத்தை நான் பார்த்துட்டுதான் இருந்தேன். பிறர் பேசினதுக்காக நீயும் பாட்டியும் வருத்தப்பட்டது தான் என்னால தாங்க முடியல. அதனாலதான் இந்த விளம்பரம்..
இதைத்தான் நான் நல்ல விதமாக பார்த்து பழகுன்னு சொன்னேன். பிடிக்குதோ, பிடிக்கலையோ நீ என்னோட மனைவி. நான் உன்னோட கணவன். நம்ம ரெண்டு பேரோட எண்ணங்கள் முழுவதும் ஒத்துப் போகணும் அவசியமில்லை.
ஆனா ஒருத்தரை ஒருத்தர் ஹர்ட் பண்ணாம இருக்க முதல்ல கத்துக்கணும்…! என்றவன் பாத்ரூமுக்குள் நுழைந்து விட்டான்.
அத்தியாயம் 10
குழந்தைகளுக்கு பாலும், உபேந்திராவுக்கு காபியும் எடுத்து வந்தவள், விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை அழைத்து “பாலை குடிச்சிட்டு விளையாடுங்க..” என்று சொல்லவும், அவர்கள் சமத்தாக குடித்து முடித்து விட்டு, “அப்பா தோட்டம் பெருசா இருக்கு கீழே போகலாமா..?” என்று கேட்டனர்..
“இன்னைக்கு வேண்டாம். நாளைக்கு போகலாம்.. இன்னைக்கு நிறைய பேர் நம்ம எல்லாரையும் பார்க்க வருவாங்க, அதனால குளிச்சிட்டு புது டிரஸ் போட்டு கீழே போய் தாத்தா கூட இருக்கணும்..!”
“புது டிரஸ், எங்க காட்டுங்க..?” என்று அவர்கள் கேட்டதும், தான் முந்திய இரவில் வாங்கி வந்திருந்த டிரஸ் எடுத்து காட்டினான். நிறைய டிரஸ் இருந்தது.
ரங்காவிடம் “இப்ப எனக்கு வேண்டிய டைலர் ஒருத்தர வர சொல்லி இருக்கேன். கீழேயே மிஷின் இருக்கு. சைஸ் கரெக்ட் பண்ணி கொடுத்திடுவார்..” என்றவன் இன்னொரு பையை எடுத்து கொடுத்தான். அவளுக்கும் அழகான சுடிதார் இரண்டு வாங்கியிருந்தான்..
ஒரு சுடிதாரின் விலை குறைந்தது பத்தாயிரமாவது இருக்கும். அத்தனை அழகாக இருந்தது. “இது உனக்கு போட்டுக்கோ..?
“நான் உங்க கிட்ட கேட்டேனா..?
“நீ கேட்டு வாங்கிக் கொடுக்கணும்னு அவசியமே இல்லை. இன்னைக்கு எனக்கு ரொம்ப நெருங்கினவங்க, நம்மள பார்த்து வாழ்த்து சொல்ல வருவாங்க. சாரி எடுத்தால் பிளவுஸ் தைக்க நேரமில்லை. அதனால சுடிதார் எடுத்தேன். இப்ப இதை போடுறதுல உனக்கு என்ன பிரச்சனை..?”
“எனக்கு ரொம்ப ஆடம்பரமாக டிரஸ் பண்ண பிடிக்காது..!”
“உன்னை எப்போதும் போட சொல்லலையே. இடத்துக்கு தகுந்த டிரஸ் பண்ணித்தான் ஆகணும். நானும் முதலிலேயே சொல்லிட்டேன். நம்ம விருப்பப்படி வாழ முடியாது. குழந்தைகளுக்காக அம்மா, அப்பா வேஷம் கட்டியாச்சு. அப்போ அதை தொடர்ந்து தான் ஆகணும்.. எனக்கும்தான் உங்க வீட்டில இருக்கும்போது சவுகரியங்கள் கம்மியா தான் இருந்தது. நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கல..”
“உங்களை யாரும எங்க வீட்டுக்கு வர சொன்னா..? வராமல் இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சனை இல்லை..!”
“உண்மைதான். நீயும் எங்க ஹாஸ்பிட்டல் வராம இருந்தா எந்த பிரச்சனையும் இல்லை..! அதுக்கு என்ன பண்றது. பழசை பேசாதேன்னு நான் சொல்லிட்டே இருக்கிறேன்..!” அவன் கோபத்தில் குரலை உயர்த்தவும், குழந்தைகள் மிரண்டு விழித்தன..
“ச்ச.. உனக்கு என்னடி பிரச்சனை..? நான்தான் படிச்சு, படிச்சு சொல்றேன்ல. அல்லது உன்ன வேற மாதிரி ஏதும் தொந்தரவு பண்ணினேனா..? இல்லைல்ல.. அவ்வளவு நான் விட்டுக் கொடுக்கும் போது நீ ஒரு சிலது விட்டுக் கொடுத்தால் என்ன..? உடனே பெமினிசம் பேசாதே. இதை கட்டிட்டு கீழே வரதா இருந்தா வா. இல்லையென்றால் மேலேயே இருந்துகோ. குழந்தைகளை மட்டும் அனுப்பு..” என்று சொல்லிவிட்டு அவன் குளித்து மிக அழகாக டிரஸ் பண்ணி கீழே சென்று விட்டான்..
குழந்தைகளை குளிக்க வைத்து டிரஸ் பண்ணி கீழே அனுப்பியவள் தானும் குளிக்க சென்றாள். அதற்குள் கீழே சில ஆட்கள் வந்து விடவே அவர்களிடம் குழந்தைகளை அறிமுகப்படுத்தி பேசிக்கொண்டிருந்தான். அவர்கள் எல்லோரும் சேதுராம் குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவர்கள்..
“ரங்கா எங்கே..? என்று தாத்தா கேட்க.. “தெரியல, குளிக்கப் போய் இருப்பான்னு நினைக்கிறேன்..” என்று முடித்துக் கொண்டான்.
தாத்தா ரஞ்சிதம்மாவிடம், ”மேல போயி ரங்காவை கூட்டிட்டு வாங்க” என்று சொல்லி அனுப்பி வைத்தார். ரஞ்சிதா மேலே சென்றதும் பாட்டியும் பின்னாலேயே மாடிக்கு சென்றார். ரஞ்சிதம்மா சென்று ரங்காவிடம், “அம்மா உங்களை பெரியய்யா வரச் சொன்னாங்க. ஐயாவுக்கு ரொம்ப வேண்டியவங்க வந்திருக்காங்க..” என்று சொல்ல பின்னாலேயே வந்த பாட்டி, “நீங்க கீழே இறங்குங்க, நான் வரச் சொல்றேன்..” என்றார்.
ரஞ்சிதம்மா சென்றதும் கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டவர், “என்ன ரங்கா குளிச்சிட்டு பேசாமல் உட்கார்ந்து இருக்கே..!”
“ஐயோ பாட்டி, ஒண்ணுமே பிடிக்கல. நான் சாதாரண சுடிதார் போடக் கூடாதுன்னு, புதுசா வாங்கி கொடுத்துட்டு இதைத்தான் போட்டுட்டு வரணும் அப்படின்னு ஆர்டர் போட்டு போயிருக்கிறான்..”
“ஏன் நல்லா இல்லையா..?”
“நல்லாத்தான் இருக்கு. அது பிரச்சனை இல்ல ரொம்ப காஸ்ட்லியா இருக்கு. நான் இப்படி எல்லாம் போட்டதே இல்லை..”
“உண்மைதான் ரங்கா, எல்லாத்துக்கும் நம்மளோட பழக்கவழக்கம் தான் காரணம். இத்தனை நாள் நம்மை மாத்திக்க வேண்டிய சூழ்நிலை இல்லை. ஆனா இப்ப மாத்திக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.. போட்டுக்கோ, நல்லாதான் இருக்கும். யாருக்காக இல்லேன்னாலும் எனக்காகவும் குழந்தைகளுக்காகவும் நீ கொஞ்சம் மாறிக்கோ..” என்று குழந்தைக்குச் சொல்வது போல் சொன்னதும் அதை போட்டுக் கொண்டு வந்தாள்..
அந்த டிரஸ் முற்றிலும் அவளது தோற்றத்தை வேறு மாதிரியாக காட்டியது. அவளுடைய நிறத்திற்கும் உயரத்திற்கும் அந்த உயர்ரக சில்க் காட்டன் பட்டு சுடிதார் மிகவும் பாந்தமாக பொருந்தி இருந்தது. நீலமும் பச்சையும் கலந்த அந்த சுடிதாருக்கு ஏற்ற வண்ணம் பாட்டி தனது கையில் வைத்திருந்த தனது பழைய கால அணிகலன்களை அவளுக்கு அணிவித்தார்..
“இதெல்லாம் எதுக்கு..?”
“மூச்… பேசப்படாதுன்னா பேசப்படாது.. ரங்கா எனக்காக நீ ஒரு வாக்கு தருவியா..?”
“என்ன பாட்டி..?”
“இந்த உலகத்திலேயே இனிமேல் உனக்கு முக்கியமான உறவு அப்படி என்றால் அது உபேந்திரா மட்டும்தான். குழந்தைகள் எல்லாம் இரண்டாம் பட்சம். அவர்களுக்காகத்தான் இந்த உறவு அப்படினா கூட, உன்னோட சொந்த சுய வெறுப்பு விருப்பு எல்லாத்தையும் கழட்டி வைத்துவிட்டு அவன் பக்கம் இருக்கிற நியாயத்தை மட்டும் பாரு. எதுவும் தப்பா தெரியாது. கொஞ்ச நாள்ல உனக்கே அவரோட அருமை புரியும். அவனும் உன்னை மாதிரி நல்லவன்தான். நீ வளர்ந்த சூழ்நிலை வேற, அவன் வளர்ந்த சூழ்நிலை வேற அவ்வளவுதான். யாராவது ஒருத்தர் தன்னுடையதை விட்டுக் கொடுக்கணும். நீ விட்டுக்கொடு எனக்காக..” என்று கண் கலங்க கையேந்தி பாட்டி கேட்க, அவளால் அதை மறுக்க முடியாது போயிற்று.
“சரி பாட்டி இனி எதுக்காகவும், அவர் சொன்னதை எதிர்த்து நான் எதுவும் செய்ய மாட்டேன்..” என்று பாட்டியின் கை மீது அடித்து சத்தியம் செய்தாள்.
ரஞ்சிதம்மா கொண்டு வந்து கொடுத்த பூவை, ரங்காவின் தலையில் வைத்துவிட்டு அவளை கையோடு அழைத்து கொண்டு கீழே வந்தார்..
மாடிப் படியில் இறங்கி வந்த ரங்காவின் தோற்றத்தை கண்ட அனைவரும் வைத்த விழி எடுக்காமல் பார்த்தனர். உபேந்திராவே அவளது தோற்றத்தைக் கண்டு, மயங்கி நின்றான். கிளிப் போட்டு இடை வரை பிரித்துவிட்ட கூந்தலும், அதில் தொங்கிய மல்லிகைச்சரமும், நல்ல உயரமும் அதற்கேற்ற உடல் அமைப்பும், வட்ட முகத்தில் நீள் விழிகள் நீந்த, ரூஜ் இல்லாமலே சிவந்த கன்னங்களும், கனிந்த அதரங்களுமாய் இறங்கி வந்தவளைப் பார்த்ததும், அனைவரும் ‘பொண்ணு நல்லாத்தான் இருக்கா’ என்று நினைத்தனர். அவளைக் கண்டதும் குழந்தைகள் அம்மா என்று அழைத்துக் கொண்டு ஓடிவந்தனர்.
அவர்களை இரு கைகளில் பிடித்துக்கொண்டு அங்கு வந்தாள். குழந்தைகள் அவர்களாகவே அவளை இழுத்துக்கொண்டு உபேந்திராவின் பக்கம் சென்றனர். “அப்பா அம்மாவுக்கும் ட்ரெஸ் சூப்பர்.” என்று அறிவித்தனர்.
தன்னையே பார்த்துக் கொண்டிருந்த உபேந்திராவை ஒரு வினாடி விழி உயர்த்தி பார்த்துவிட்டு, வந்தவர்களுக்கு பொத்தம் பொதுவாக ஒரு வணக்கம் வைத்தாள்.. சேதுராம் அவளைத் தன் பக்கம் அழைத்து, “ரங்கா இவர்களும் நானும் கிட்டத்தட்ட நாப்பது வருஷமா ஃபேமிலியா பழகிட்டு வரோம். இவர்கள் எல்லோருமே என் கூட வேலை பார்த்த டாக்டர்ஸ்..” என்று அறிமுகப்படுத்தி வைக்க, அவர்களுக்கு வணக்கம் செலுத்தினாள்..
அவர்கள் எல்லோரும் ஒருமித்த குரலில், “சேதுராம், பொண்ணு பார்க்க அழகா மட்டும் இல்லை குணமாவும் இருக்கு.. நீங்க கொடுத்து வச்சவர் தான்..” என்று சொல்லி அவளிடமும் “நல்லா இரும்மா..” என்று வாழ்த்தினர்.
வந்தவர்களுக்கு ஜூஸ் வகையறாக்களை, ரஞ்சிதம் எடுத்துக்கொண்டு வர, அவளிடமிருந்து ஒன்று ஒன்றாக எடுத்து எல்லோர் கையிலும் ரங்கா கொடுத்தது, தாத்தாவுக்கு மிகுந்த மன நிறைவாக இருந்தது. அவளுடைய செய்கை அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த உபேந்திராவுக்கு, மனசுக்குள் கோபமும் வெளியில் சிரித்த உதடுகளாகவும் இருந்தான்.
‘நான் சொன்னா, டிரஸ் போட மாட்டாளா…! அதே பாட்டி சொன்னா தான் செய்வாளா. நான் என் கூட கொஞ்சிக் குலவி, குடித்தனம் நடத்துன்னா சொல்றேன். நாம இருக்கிற இடத்துக்கு தகுந்த மாதிரி டிரஸ் போடுன்னு தானே சொல்றேன். இதே வாசு சொன்னா, பாட்டி சொன்னா கேட்க தெரியுது. அப்போ நான் யாரு..?’ மனதுக்குள் குமைந்து கொண்டிருந்தான்.
அடுத்து ஒவ்வொருத்தராக வர ஆரம்பிக்க எல்லோரையும் வரவேற்று அவர்கள் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டனர். இடையிடையே குழந்தைகளுக்கு சாப்பாடு என்று ஒரு பக்கம் அவர்கள் பின்னால் வேறு ஓட வேண்டியிருந்தது..
ஆட்கள் வரும்போது அவன் உள்ளே வந்து அழைக்க, வெளியில் சென்று அவர்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டு பின்னர் குழந்தைகள் பின்னால் ஓடி விடுவாள்..
ஒரு கட்டத்தில் எரிச்சலானாவன், “குழந்தைகளை ரஞ்சிதம்மா பொறுப்பில் விட்டுட்டு வா. கொஞ்ச நேரம் தொடர்ந்து இருக்க மாட்டியா..?” என்று மற்றவர்கள் அறியாது பல்லைக் கடித்தான்..
சிரித்த முகமாகவே அவனுக்கு அருகில் நின்று, “என்னமோ குழந்தைகளுக்காக தான் நான் சொன்னீங்க.. இப்ப என்ன புதுசா குழந்தைகளை வேற ஆள் பொறுப்பில் விட சொல்றீங்க..?” என்று பதிலுக்கு அவளும் அவனை வார, ‘சண்டி தான் இவ.. இவளுக்கு தார்க்குச்சி போடுறதுக்குள்ள நம்ம ஆயுசே தீர்ந்து விடும் போல இருக்கு…’ என்று நினைத்து முகத்தைத் திருப்பிக் கொண்டான்..
இவர்கள் இருவரையும் பேசுவதை கவனித்துக் கொண்டே இருந்த பாட்டி, “நீ போ ரங்கா. நான் பார்த்துகிறேன் பிள்ளைங்கள..” என்று பொறுப்பை தனதாக ஏற்றார்..
அதற்குள் ரங்கபாஷ்யம் தனது மனைவியுடன் வந்துவிட்டார். அவரைக் கண்டதும் மிக்க மகிழ்ச்சியுடன் பாட்டியும், ரங்காவும் வரவேற்ற்றனர்.
“தாத்தா லாயர் ரங்கபாஷ்யம் சார் அவங்க மனைவியோட வந்திருக்கார். இவங்க கிட்ட தான் ரங்கா வேலை பார்த்துட்டு இருக்கா..!” என்று அவர்களை தாத்தாவிடம் அழைத்து வந்தான்.
“ரொம்ப வருஷம் ஆச்சு உங்களைப் பார்த்து..” ன்று மகிழ்ச்ச்சியுடன் வரவேற்ற டாக்டர் சேதுராமனிடம், “ஆமா நானும் நினைப்பேன். ஆனால் சந்தர்ப்பம் அமையலை…” என்றவர் தொடர்ந்து..
“ரங்கா என் பொண்ணு மாதிரி, ரொம்ப நல்லவ, திறமைசாலி, எல்லாவற்றையும் விட சுயமரியாதை உள்ளவ, தேவையில்லாம யார்கிட்டயும் எதுவும் பேச மாட்டா. உங்க பேரனுக்கு அவ மனைவியா கிடைச்சது, உண்மையிலேயே சந்தோஷமான ஒரு விஷயம்..” என்று ரங்காவை புகழ்ந்தார்..
“தாத்தாவும், ஒரு வகையில் பாட்டி ரங்கா என்னோட பள்ளி தோழி. அவள மாதிரியே இருக்கிற பேத்தி ரங்காவை என் பேரனுக்கு மணமுடித்தது சந்தோஷம்தான்..” என்று கூறினார்.
இருவரும் அருகருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க இருவரின் காலிலும் பணிந்த ரங்கா “என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க.” என்று அவர்களிடம் கேட்க இருவரும் மனமார வாழ்த்தினர்.
“ஆன்ட்டி நீங்களும் ஆசிர்வாதம் பண்ணுங்க..” என்று மீனாவிடமும் காலில் விழுந்தாள். அதுவரை இருந்த கோபமும் வெறுப்பும் மீனாவுக்கும் அகல அவளும், “நல்லா இருக்குமா.. இனியாவது எந்த கஷ்டமும் இல்லாம நீ சந்தோஷமா இருக்கணும்..” என்று வாழ்த்தினாள்..
இதை கவனித்த உபேந்திரா, அவளை அதிசயமாக நோக்கினான்.. ‘ஏதேது இவளுக்கு இந்த அளவு பணிவு கூட உண்டு போல இருக்கு..’ என்று நினைத்தவன் தன் புருவத்தை ஏற்றி காட்டி அவளிடம் அதைச் சுட்டிக்காட்ட, ‘‘போடா, அவர் எங்க அப்பாவுக்கு சமம்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் அவனிடம் சொல்லவில்லை.
மாலை வரை, ஒவ்வொருத்தராக வந்து கொண்டிருக்க இருவருக்கும் அன்று முழுவதும் ஓய்வே இல்லை.. தாத்தா கூட அவனிடம் யாருமில்லாது இருக்கும்போது, “ஏன் உபேந்திரா பேசாம நீ ஒரு ரிசப்ஷன் வைத்திருக்கலாம்..!” என்று சொல்ல..
நேரடியாகவே அவரைப் பார்த்தவன், “வைத்திருக்கலாம் எனக்கு ஒண்ணும் இல்ல. ஆனா உங்க பேத்திக்கு பிடிக்கணும் இல்ல. அவளுக்காக தான் வைக்கல. இன்னைக்கு ஒருநாள் தானே முடிஞ்சிடுச்சு, இனிமே யாரும் வர மாட்டாங்க..” என்று சொல்லி சோம்பலுடன் கைகளை நெட்டி முறித்து, கால்களை நீட்டி தளர்வாக சோபாவில் அமர்ந்தான்..
“ரங்கா ப்ளீஸ் கொஞ்சம் தண்ணீர்..” என்று அவளிடம் கேட்க, யாருமறியாமல் முறைத்துக்கொண்டே, ஒரு கிளாஸில் சில் வாட்டரை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்..
அவள் கொடுத்ததும் வாங்கியவன், “ஆமா தண்ணி தான கேட்டேன். வேற ஏதோ முத்தம் கேட்ட மாதிரி, உன் கண்ணாலேயே எரிக்கிறே..” மற்றவர்கள் காதில் விழாமல் வேண்டுமென்றே அவளை எரிச்சலூட்ட..
“அதைக் கேட்டுத்தான் பாருங்களேன் என்ன நடக்குது அப்புறம் தெரியும்..!” என்றாள் துடுக்காக..
“போடி, அதுக்கு எல்லாம் எனக்கு வேற ஆள் இருக்கு..” என்றான் வேண்டுமென்றே.. அவனுக்கு அவளிடம் வார்த்தையாட மிகவும் பிடித்திருந்தது.
“அப்ப அவளைப் கூப்பிட்டு தண்ணி கேட்க வேண்டியதுதானே..” என்றாள் தன் உதட்டை சுழித்துக் கொண்டு..
“ம்ம்,என்ன செய்ய.. அதுக்கு வாய்ப்பு இல்லையே..!” என்று அவன் ஒரு மாதிரி குரலில் சொல்ல, இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாவிட்டாலும், ஏதோ அவனை எதிர்த்துப் பேசுகிறாள் என்பது புரிந்த பாட்டி “ரங்கா உள்ள போய் பிள்ளைங்க என்ன செய்றாங்கன்னு பாத்துட்டு கூட்டிட்டு வா..” என்று அவளை திசை திருப்பி விட்டார்.
“இன்னொரு நாள் உங்களுக்கு வச்சுக்கறேன் கச்சேரி..” என்று அதுக்கும், அவனுக்கு பதில் சொல்லிவிட்டு தான் நகர்ந்தாள். புன்னகையோடு அவளைப் பார்த்த அவனுக்கு, மனதில் சாரல் அடித்தது..
மற்ற பெண்களைப் போலல்லாமல், பார்க்க பார்க்கவும், பழக பழகவும் ரங்கா இனிமையானவளாக தெரிந்தாள். அவன் பார்த்து பழகிய பெண்கள் அனைவரும் அவனுடைய உயரத்திற்காகவே அவனிடம் போலியாக பழகினார். நட்பு பாராட்டினர். அதற்கு மேலும் சென்றனர். அவனை கைக்குள் போட்டுக் கொள்வதற்காக எந்த எல்லைக்கும் சென்ற பெண்களை அவனும் அறிவான்.. அவர்களை எல்லாம் எந்த எல்லையோடு நிறுத்த வேண்டும் என்று அவனுக்குத் தெரிந்திருந்தது..
அந்தப் பெண்களைப் போல இல்லாமல், முற்றிலும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரமாக, ஒரு ராங்கிக்ரியாக அவனுக்கு அறிமுகமான ரங்கா, இன்று காட்டியது வேறு ஒரு பரிணாமம்.. அதை அவன் மிகவும் ரசித்தான்..
ஏழு மணிக்கு மேல், எல்லோரும் டயர்டாகி விடவே, அவரவர் அறைக்கு சென்று விட்டனர். அதற்கு மேல் போன் பண்ணி அவர்களிடம், உபேந்திரா நாசுக்காக தவிர்த்து விட்டான்.. தனது அறைக்கு சென்று குளித்துவிட்டு, வெறும் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு குழந்தைகளுடன் விளையாட ஆரம்பித்தான்..
“அப்பா நாங்க சாயங்காலம் தோட்டம் பார்த்தோம். அதில் நீச்சல் குளம் இருக்கு. எங்களுக்கு அதுல குளிக்கணும்..” என்று பார்த்து சொல்ல..
“அங்கே எல்லாம் யார் துணையும் இல்லாமல் போக கூடாது. நான் நீச்சல் கற்றுக் கொடுக்க ஏற்பாடு பண்றேன். அதுக்கு அப்புறம் தான் நீங்க அங்க போகணும் சரியா. ஈவினிங் பார்க்ல அம்மாவாது, அப்பாவாவது இருக்கணும்.. மூவரும் பால்கனியில் உட்கார்ந்து விளையாடி கொண்டிருந்தனர். பால்கனி மிகவும் விஸ்தாரமாக இருந்ததால் அதில் ஊஞ்சல், சேர் எல்லாமே இருந்தது. வெளிக்காற்று வேண்டும் என்ற எண்ணத்தில், குழந்தைகளுக்கும் மெல்லிசாக ஒரு டிரஸ் அணிவித்துவிட்டு தானும் வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து மேல் சட்டை எதுவும் இல்லாமல் விச்ராந்தியாக உபேந்திரா அவர்களுடன் இருந்தான்..
குழந்தைகள் தங்களுடைய பொம்மைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்து வைத்து அவரிடம் கேட்டு, கேட்டு விளையாட ஆரம்பித்தன. அவர்கள் பேச்சுக்கு பதில் சொல்லிக்கொண்டு, அவர்களிடம் பேசிக் கொண்டு அந்த நிமிடங்களை ரசித்துக் கொண்டிருந்தவன், ஏதோ சத்தம் கேட்டு திரும்பி பார்க்க, ரங்கா அங்கு வந்து நின்றாள்…
“பார்த்தி பாவனா சாப்பிடலையா..” என்று கேட்டுக் கொண்டே திரும்பிப் பார்த்தவள், அவனுடைய அரைகுறை ஆடையை கண்டு, “என்ன இது கொஞ்சம் கூட டீசன்ஸி இல்லாமல்..?” என்று முகத்தைச் சுளித்தாள்..
“என்ன சொல்றே..! எனக்கு வீட்ல இப்படி இருந்துதான் பழக்கம். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரி பழக்கம். மற்ற யார் முன்னாடியுமா நான் இப்படி இருக்கேன். முந்தி, எங்க தாத்தா இருக்கும்போது, இப்ப என் பசங்க முன்னாடி. அப்புறம் நீ என்ன வேற்றாளா. என் வொயிப் தானே..” என்றான் கூலாக..
“ஆமா நான் இப்படி இருக்குறதுல உனக்கு என்ன பிரச்சனை..? சொல்லப்போனால் எனக்குதான் கூச்சமா இருக்கணும்.. எனக்கு இல்லப்பா. ஒருவேளை உனக்கு என்ன பாத்தா ரொமான்டிக் மூடு வருதோ..?” என்று கண்ணடித்து சிரிக்க..
“குழந்தைங்க முன்னாடி என்ன பேச்சு இது..?” என்று தன்னை அறியாமல் ஒரு தாயாக அவள் சொல்லிவிட..
“அப்ப தனியாய் இருக்கும் போது பேசலாம்கிறியா..?” என்றான் சிரித்துக்கொண்டே..
‘சரியான விடாக்கண்டனா இருக்கானே’ என்று மனதுக்குள் அர்ச்சித்தபடி, நான் உங்களை ரசிச்சா தானே, ரொமான்ஸ் எல்லாம் வரும். என்ன பொறுத்த அளவுல, உங்க வீட்ல நான் இருக்கேன், இந்த குழந்தைகளுக்கு அம்மா என்கிற பெயரில் அவ்வளவுதான். நீங்க எப்படியும் இருங்க..?” என்றாள் சிடுசிடுத்தபடி..
“ஓகே தேங்க்ஸ். நான் பிரியா இருக்கிற மாதிரி நீயும் வேணும்னா நைட்டி மட்டும் போட்டு அந்த ரூம்ல இருக்கலாம். இல்ல நைட் பேன்ட் கூட வாங்கித்தரேன்.. ஆனா ஒரு விஷயம் ஞாபகம் வச்சுக்கோ, நான் உன்னை என் குழந்தைகளோட அம்மாவா மட்டும் பார்க்கலை, என்னோட வொயிபாவும் தான் நெனச்சிருக்கேன்..” என்று சொல்லி அவள் பிபியை எகிற வைக்க..
“உங்க கிட்ட போய் பேச வந்தேனே..! என்னை சொல்லணும். வாங்கடா சாப்பிட போவோம்..” என்று அழைக்க..
“அம்மா இங்க கொண்டு வந்து ஊட்டி விடுங்களேன்..” என்றனர் கோரசாக..
“டேய் அதெல்லாம் நடக்குற காரியமா? நான் எத்தனை தடவை மாடி ஏறி இறங்குறது..” என்று சொல்ல..
“கவலைப்படாதே..” என்று இன்டர்காமில் சமையல்காரரை அழைத்து “குழந்தைகளுக்கு சாப்பாடு, எனக்கு சாப்பாடு எல்லாம் மாடிக்கு கொடுத்து அனுப்புங்க..” என்று சொல்லி, குழந்தைகளிடம் என்ன வேண்டும் என்று கேட்டு, அதை அனுப்பி விட சொன்னான்.
“நீயும் அவங்க கூட உட்கார்..” என்றவன் போனை எடுத்து தாத்தாவிடம் “தாத்தா நீங்க சாப்பிட்டு படுங்க. நாங்க மாடியிலேயே சாப்பிடுறோம்..” என்று அவர்களுக்கும் விஷயத்தை சொல்லி விட்டான்.
குழந்தைகள் அவள் கையைப் பிடித்து எடுத்து அருகில் உட்கார வைத்துக் கொண்டனர். வேறு வழி இல்லாமல் கீழே காலருகில் உட்கார்ந்தாள். அவன் சேரில் உட்கார்ந்து காலை நீட்டி, குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருக்க அவர்கள் மூவரும் கீழே உட்கார்ந்து இருக்கும் படி இருந்தது..
“அம்மா, அப்பா எங்களுக்கு நீச்சல் சொல்லித் தரேன் சொல்லிருக்காங்க..?”
“ம்ம்..”
“அப்புறம் நாங்க, லீவு நாள்ல ஈவினிங் தோட்டத்தில் விளையாடுவோம்.. அப்பாவும் வரேன்னு சொல்லி இருக்காங்க.. நீங்களும் வருவீங்கல்லாமா..!’
“நான் எதுக்கு அதான் உங்க அப்பா வரேன்னு சொல்லி இருக்கார்ல..!” என்றாள் கடுப்புடன்.. குழந்தைகளை வைத்து அவன் விளையாடுவது நன்றாக புரிய அவளுக்கு எரிச்சலாக வந்தது..
“ஆசையா கூப்பிடுதுங்க, அதை விட உனக்கு என்னடி வேலை. கிச்சன்ல வேலை செய்ய ஆள் இருக்கு, மற்ற எல்லாத்துக்குமே ஆள் இருக்கு. அப்புறம் குழந்தைங்க கூட விளையாட வேண்டியதுதானே..!”
“ஏன் என்னோட ஆபீஸ் வேலை இல்லையா..?”
“அத பத்தி நானே உன்கிட்ட பேசணும் நினைச்சேன். நானும் ரங்கபாஷ்யம் சாரும் பெரும்பாலும் எதிரெதிராகதான் மோதிக் கொள்வோம். சோ, அங்க நீ வேலை பார்க்கிறது சரிவராது. நீ பகல்ல குழந்தைங்க ஸ்கூலுக்கு போய் இருக்க நேரம் கொஞ்ச நேரம் நம்ம ஆபீஸ் மானேஜ் பண்ணு. ஈவினிங் குழந்தைகள ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வீட்டுக்கு வந்துரு. குழந்தைகளை கொண்டு போய் விடுவது நம்ம ரெண்டு பேருமே சேர்ந்தார் போல கொண்டு போய் விட்டுடலாம்.. மேடம் என்ன சொல்றீங்க..?” என்றான் கிண்டலாக..
“அதெப்படி அவர்கிட்ட பொசுக்குன்னு வேலைக்கு வரமாட்டேன்னு சொல்றது..”
“இந்த ஐடியாவே அவரோடதுதான். இன்னைக்கு வந்தவரு என்னை கூப்பிட்டு மெனக்கெட்டு சொல்லிட்டு போனார்.. நம்பிக்கை இல்லை போனை போட்டு கேளு..
“ரங்கா என்னோட ஆபீஸ்ல வேலை பார்க்கிறது அவ்வளவு நல்லா இருக்காது. நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க.. நீங்க அதுக்காக அவள வீட்டிலேயே வைச்சுராதீங்க.. அவ ரொம்ப எபிசியன்ட். அது தான் உங்களுக்கு தெரியுமே, ரெண்டு தடவை உங்களை ஜெயிச்சிருக்காளே.. அப்படின்னு ஒரே அட்வைஸ் மயம்..
நான்கூட அவர்கிட்ட “சார், குழந்தைகளைப் பார்க்க வேண்டாமா..? அப்படின்னு கேட்டதற்கு, “குழந்தைகள் ஸ்கூலுக்கு போய் இருக்க நேரம் உங்க ஆபீஸ்ல அவளை உட்கார வையுங்க, அப்படின்னு சொல்லிட்டு போயி இருக்காரு. பார்த்தியா என் நிலைமையை, தி பேமஸ் கிரேட் கிரிமினல் லாயர் உபேந்திரா செகண்டரி ஆயிட்டான்..” என்றான் சிரித்துக்கொண்டே..”
“இப்ப என்ன? நான் வேணா உங்க ஆபீஸ் மெயின்டேயின் பண்ணல. நீங்களே பாத்துக்கோங்க நான் வீட்ல இருக்கேன்..” என்று அவள் முறுக்கிக் கொள்ள..
“ச்ச, டேய், இந்தர் உன்னோட வொயிப் ரொம்ப சுயமரியாதை பார்க்கிறவங்க.. இது கூட உனக்கு தெரியாதாடா, வாயை கொடுத்துட்டு ஏண்டா வாங்கி கட்டற..?” என்று தனக்குத் தானே தன்னையே வடிவேலு பாணியில் சாடிக் கொள்ள, பார்த்த குழந்தைகள் இருவரும் கலகலவென்று வாய்விட்டு சிரித்தனர்.
அவளுக்கும் சிரிப்பு வந்தது அடக்கிக் கொண்டாள்.. “டேய், உங்க அம்மா சிரிச்சிட்டாடா..” என்று குழந்தைகளிடம் அவன் உரத்துச் சொல்ல அவர்கள் இன்னும் அம்மாவை பார்த்து நன்றாக சிரித்தனர்..
அதற்குள் ரஞ்சிதம்மா ஒரு ட்ரேயில் வைத்து எல்லாவற்றையும் கொண்டு வந்துவிட, அவனுக்கு ஒரு பிளேட் எடுத்துக் கொடுத்துவிட்டு குழந்தைகளுக்கு ஊட்ட ஆரம்பித்தாள். திரும்பவும் என்ன வேண்டும் என்று கேட்டு ரஞ்சித்ம்மா எல்லாவற்றையும் மாடிக்கு கொண்டு வந்து விட்டார்..
குழந்தைகளிடம் பேசி சிரித்துக் கொண்டே உண்டதில் நேரம் போனதே தெரியவில்லை. பதினோரு மணிக்கு மேல், எல்லாவற்றையும் டிரேயில் வைத்து மூடி வைத்துவிட்டு, அலுப்பு மிகுதியால் அனைவரும் படுத்து விட்டனர்.