in ,

என் திமிரழகி 17-32(Epilogue)

அத்தியாயம்-17:

“என்னக்கா இப்படி தூங்குனா என்ன அர்த்தம்? ” மீண்டும் உள்ளே வந்து தலை முதல் கால் வரை போர்த்திக்கொண்டு தூங்கியவளை, எழுப்பிக்கொண்டிருந்தாள் ரஞ்சனி.

“காம்பளான் பேபி, நான்தான் காலைல சாப்பாட்டையும் முடிச்சுட்டு வந்துதான தூங்கறேன். கொஞ்சநேரம் தூங்கவிட்றா….” போர்வைக்குள்ளிருந்து பதில் சொன்னவளிடமிருந்து, போர்வையை வெற்றிகரமாக இழுத்துவிட்டாள் ஆனந்தி.

பரிதாபமாக எழுந்தமர்ந்தாள் ரஞ்சனி.

“தெரியாம இவகிட்ட, உடம்பை கொஞ்சம் குறைக்கனும். நானே தூங்கினாலும், என்னை எழுப்பிவிட்டு ஆற்றங்கரையோரம் வாக்கிங் கூட்டிட்டு போக வேண்டியது உன் பொறுப்புன்னு சொல்லிட்டேன்” தான் கூறியதை நினைத்து தன்னைத்தானே நொந்து கொண்டாள்.

இயற்கையாகவே பூசிய உடல்வாகு கொண்டவள், கடந்த சிலமாதங்களாக உடம்பை கவனியாது சற்று அதிகமாகவே எடை ஏறிவிட, அது அவளது மாதவிடாய் சுழற்சியை பாதித்திருந்தது. அதற்காக இடையில் அவதிப்பட்டவளை, பரிசோதனைக்கு அழைத்துச்சென்றிருந்த ஸ்ரீனிகாவிடம் நன்றாகவே அன்று முழுவதும் வாங்கி கட்டி கொண்டாள். இடையில் உடற்பயிற்சியை ஒழுங்காக செய்தவள், இங்கு வந்த பிறகு மீண்டும் அதை தொடர சோம்பேறித்தனப்பட, மீண்டும் ஸ்ரீனிகாவின் முறைப்பில், அவசரமாக ஆனந்தியிடம் செய்துகொண்ட ஒப்பந்தம் தான் அது.

“வேறவழியே இல்லையா ஆனந்தி??” என்று பரிதாபமாக கேட்டவளை பார்த்து சிரித்தவள்,

“ஆத்தங்கரை வேணான்னா, ஊரைச்சுத்தி ஓடலாமாக்கா?” என்று நக்கலாக கேட்டவளை, எழுந்து துரத்திக்கொண்டு ஓடினாள் ரஞ்சனி.

பின்பு இருவரும் ஒருவழியாக ஆற்றங்கரையோரம் சிறிதுநேரம் நடந்துவிட்டு வர, உடனே படுக்கச்சென்றவளை பிடித்து, அவளது  கையில் எலுமிச்சை ஜூஸை திணித்தாள் ஆனந்தி. இருவரும் அதை அருந்திக்கொண்டு அமர்ந்திருக்க, ரஞ்சனியின் அலைபேசி அழைத்தது.

எடுத்துப் பார்த்தவளுக்கு, இன்பமான அதிர்ச்சி. அதுவும் அடுத்த நிமிடத்திலேயே,

“வேலைன்னாதானே ஃபோன் பண்ணுவேன்னு சொன்னான். என்ன விஷயம் சொல்லப்போறான்னு தெரியல? ” என்ற நினைப்புடனே அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ…” என்றவளுக்கு,

“ஹலோ டார்லிங்” என்ற பதில் வர, தனது கையில் இருந்த அலைபேசியில் எண்ணை சரிபார்த்தவள், அது கிரியின் எண்தான் என்பதை உறுதி செய்து கொண்டாள்.

“ஹலோ.. என்ன பேசறிங்கன்னு தெரிஞ்சுதான் பேசறிங்களா?” என்று எகிறியவளிடம்,

“ஹான்.. இப்பதான் கரெக்டா இருக்கு.  நல்ல பவ்யமான பொண்ணு குரல் மாதிரி  கேட்டுச்சா? எனக்கே ஒருநிமிஷம் சந்தேகம் வந்துருச்சு? ரஞ்சனி கிட்ட தான் பேசறோமான்னு ? அதான் கொஞ்சம் டெஸ்ட் பண்ணி பார்த்தேன்” என்றவனின் பேச்சில் கோபம் வர,

“நீங்க டெஸ்ட் பண்றதுக்கு நான் ஆளில்லை. நான் வைக்கிறேன்” என்று வைக்கப்போனவளை,

“வச்சுக்கோ. நான் என் மச்சான் நூவன்கிட்ட பேசிக்கிறேன்” என்றதும் இந்தப்பக்கம் அமைதி நிலவியது.

“என்ன அம்மணி பேச்சைக்காணோம்?”

“அதான் வகையா மாட்டிக்கிட்டேனே. நீங்க பேசுங்க நான் கேக்குறேன்” ஸ்ருதி இறங்கி பேசியவளின் குரல், அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது. அருகில் அரவம் ஏதும் இல்லாமல் திரும்பி பார்க்க, ஆனந்தி எழுந்து உள்ளே சென்றிருந்தாள்.

“ஸ்ரீனிகா இருக்காளா? இன்னைக்கு ஏதும் வெளிய போகற ப்ளான் வச்சுருக்கிங்களா? ” அதிகம் அவளிடம் விளையாடாது விஷயத்திற்கு வந்தான்.

“ப்ளான் ஏதும் போடலை. ஆனால் அக்கா சேனாண்ணாவ பார்க்க கிளம்பி போய்ட்டாங்க. ஏன் என்ன விஷயம் ??” தகவல் கூறியவளை, முழுவதுமாக பேசும்முன்பே இடைமறித்தவன்,

“என்னது சேனாவோடவா? எதுக்கு?” அவன் குரல் கோபமாக ஒலித்ததோ என்ற சந்தேகம் நொடியில் தோன்றி மறைந்தது அவளுக்கு.

“ஆமா.. சேனாண்ணா ஏதோ உதவி கேட்டுருந்தாரு. அக்கா செஞ்சு குடுக்கறேன் சொல்லிருந்தாங்க. அதான் கிளம்பி போயிருக்காங்க. எப்படியும் வீடு திரும்ப இரவு ஆயிடும்னு சொல்லிட்டு தான் போனாங்க” என்றவளின் பதில், ஏதோ அபாயத்தை அறிவிக்க, சற்று பதட்டமானது கிரிக்கு.

“நீ ஏன் கூட போகலை ரஞ்சனி?” என்று கேட்டவனை,

“சேனாண்ணா என்னைக்கூப்பிடலை” என்று மட்டும் சொன்னாள்.

“அதுல உங்களுக்கு வருத்தமோ ??” இப்பொழுது கோபமாகவே பேசினான்.

“ஏன் இப்படி கோபப்படிறிங்க? நான் அவர் கூப்பிடலைன்னு தான சொன்னேன்? இப்பவரைக்கும் நீங்க எதுக்கு ஃபோன் பண்ணிங்கன்னு சொல்லவேயில்லை?” விட்டாள் அழுதுவிடுபவளை போல பேசினாள்.

அவளின் இந்த பேச்சு அவனது பதற்றத்தை குறைக்க,” அப்பாவோட விஷேஷத்திற்கு இன்னைக்கு கூப்பிடவரலான்னு தான் கால் பண்ணேன்”

“அச்சோ…இப்ப அக்கா இல்லையே??என்ன பண்றது??”

“நாளைக்குத்தான் வரனும்” என்றான் கிரி.

“ம்ம்….”

“நீ என்ன பண்ணிட்டிருக்க?” பேச்சை அவன் வளர்ப்பது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

“நீங்க கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிட்டிருக்கேன்”

“மொக்கை போடறியா??”

“நானா நீங்களா??”

“விமானநிலையத்துல மட்டும் அவ்வளவு வளவளன்னு பேசுன, இப்ப மொக்கை போட மட்டும்தான் வருதா?”

“என்ன பேசனும் சொல்லுங்க பேசறேன்” அவளது குரலில் உயிர்ப்பில்லாத தன்மையை உணர்ந்தவன்,

“என்னனப்பார்த்தாலே வெறுப்பா இருக்கா ரஞ்சனி” மாயவனின் இந்தக்குரல் ஏனோ உயிரை உருக்கியது.

“ஏ..ஏன் இப்படி கேக்குறிங்க??” அவளது குரலிலும் சற்று தடுமாற்றம்.

“என்கிட்ட பேசவே பிடிக்காத மாதிரி பேசறியே?? அதனால கேட்டேன்”

“ம்ம்…”

“என்ன வெறும் ம்ம்..?? நான் யாருன்னே தெரியாதப்ப என்கிட்ட படபடன்னு பேசுன அந்த ரனுவ நான் ரொம்ப மிஸ் பண்றேன்” அவன் பேசிய விதமே, உண்மையைதான் பேசுகிறான் என்பதை உணர வைத்தது.

பொதுவாக கிரிக்கு நண்பர்கள் வட்டம் அதிகமாக கிடையாது. செல்வாக்கு மிகுந்த குடும்பத்தில் பிறந்தாலும், கண்ணசைவிலேயே அவன் ஆசைப்படும் அத்தனை விஷயங்களும் நடந்தாலும் சிறுவயதிலிருந்தே அவனிடம் ஆர்ப்பாட்டம் அதிகம் இருக்காது. ஒருவித அமைதியுடன் இருப்பவனுக்கு, கடந்த சில நாட்களாக ஆர்ப்பரிக்கும் அலையாய் மனது அலைபாய்வதை தடுக்கும் வழியறியாது நாட்களை கடந்துகொண்டிருந்தவனை, ரஞ்சனியுடனான சந்திப்பு அனைத்தையும் மறக்க செய்ய, அவளுடன் பேசிய சிறிது நிமிடங்களிலேயே விமானத்தில்  தன்னை மறந்து தூங்கினான். அதன்பிறகு அவளுடன் பேசிய போதெல்லாம் மனம் ஒரு நிலையில் இருப்பதை உணர்ந்தவனுக்கு, அவளே தனது சரிபாதி என்பதை அறிந்து மகிழ்ச்சியில் இருந்தவனுக்கு, ரஞ்சனியின் ஒதுக்கமான பேச்சு, ஒருவித தனிமை உணர்வை ஏற்படுத்த, அதை அவளிடம் சொல்லியும் விட்டான்.

இருந்தாலும் ஏதோ ஒருவித பயம் அவளது மனதை சூழ, அவன்புறம் சாயாது மனதை பிடித்து இழுப்பதிலேயே முனைப்பாக இருந்தாள் அவள்.

“எனக்கு கொஞ்சம் டைம் ஆகும்.உங்ககிட்ட சரளமாக பேச .. அது வந்து … நீங்க புரிஞ்சுக்குவிங்கன்னு நினைக்கிறேன்” அப்போதைக்கு அவனது மனதை நோகடிக்காமல் சமாளித்தாள்.

“என்னை சுத்தமா பிடிக்கலையா ரஞ்சனி? என்கூட பேசவே உனக்கு வெறுப்பா இருக்கா? நான்தான் உன்னை என்கூட பேச வற்புறுத்தறனா?” அவனது கேள்வியில் பதறியவள்,

“அச்சோ.. என்ன இப்படில்லாம் பேசறிங்க? அதெல்லாம் இல்லை.. உங்ககூட பிடிச்சுதான் பேசறேன்” என்று அவசரமாக சொல்லிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டாள்.

அவளது வார்த்தைகள் கொடுத்த இதம், மனதை குளிரச்செய்ய,

“நிஜமாவா ரஞ்சனி?” கிரியின் குரலில் பழைய உற்சாகம் மீண்டிருந்தது.

“நிஜம்ம்மாஆஆஆ…..”தடுமாற்றத்துடன் பேசியவளின் வெட்கத்தை இங்கு அவனால் உணர முடிந்தது.

” அப்போ உன்னை பார்க்க இப்ப கிளம்பி வரட்டுமா?”

“ம்ஹூம்… இப்ப வேண்டாம்” நிஜத்தில் அவன் நேரில் வந்தால், தன்னை மீறி தன் மனது அவனுக்கு காட்டிக்கொடுத்து விடும் என்பதால் அவ்வாறு பேசினாள்.

“அப்போ அப்பறமா பார்க்கலாமா?” விடவிவ்லை கிரி.

“நான் எப்ப அப்படி சொன்னேன்?”

” இப்ப வேணான்னு சொன்னா, அப்பறமா வச்சுக்கலான்னு தானே அர்த்தம்” அவன் சொன்ன பின்புதான் தான் பேசிய வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது அவளுக்கு.

“ம்ம்… ரொம்ப தெளிவு தான். அதான் எப்படியும் நாளைக்கு உங்க சகோதரிய பார்க்க வருவிங்கள்ள?” பேச்சை நிகாவிற்கு மாற்றிவிட்டாள்.

“ம்ம் சரி.. அவளை ஞாபகப்படுத்தி பேச்சை மாத்தறியா? சரி நாளைக்கே வரேன். அவளை மட்டுமில்ல, உன்னையும் பார்க்க, நாளைக்கு முழுக்க அங்கதான்” என்றவன் அவள் பதில் பேசும் முன்பே வைத்து விட்டான். அடுத்த அழைப்பை நூவனுக்கு எடுத்தவன், சொல்ல வேண்டிய விஷயங்களை சொன்னபின்புதான் அடுத்த வேலையை கவனிக்க சென்றான்.

ஆனால் அவன் பேசிய தாக்கத்திலிருந்து அவள் வெளிவர சிறிதுநேரம் ஆனது. கன்னக்கதுப்புகள் இன்னும் சூடாக இருப்பதை உணர்ந்தவள், ஓடிச்சென்று கண்ணாடி முன் நின்று பார்க்க, இன்றுமட்டும் ஏனோ அவளது முகம் மிகவும் அழகாக இருப்பதை போல் இருந்தது.

சேனா சொன்ன இடத்தில் அவன் அனுப்பிய வாகனத்தில் தீனதயாளனின் வீட்டிற்கு வந்து இறங்கினாள் ஸ்ரீனிகா.

வாயிலிலியே அவளுக்காக காத்திருந்தவன், டிரைவரை அனுப்பிவிட்டு உள்ளே அழைத்துச் சென்றான்.

சேனாவின் தோற்றத்தில் அவன் அதீத கவனம் எடுத்திருப்பது , ஸ்ரீனிகாவின் கண்களுக்கு தவறாமல் பட்டது.

“இங்க உட்காருங்க மிஸ்.ஸ்ரீனிகா. இதோ வந்துடறேன்” என்றவன், உள்ளே சென்று தனக்கும் அவளுக்கும் குளிர்பானங்கள் எடுத்து வந்தான். அவனது நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

“வீக்கென்ட்ல கூட உங்களுக்கு தொந்தரவு கொடுக்கறேன்ல?” தனது கையில் வைத்திருந்த குளிர்பானத்தை அருந்தி கொண்டே பேச,

“அதனாலென்ன சார். பரவாயில்லை” பட்டும்படாமலே பேசியவள், தனது கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்துவிட்டு,

“முதல்ல லிஸ்ட் ரெடி பண்ணிடலாமா சார்? ” என்று கேட்டாள்.

“ஓ… ஷ்யூர்” என்றவன் தனது அலைபேசியை எடுத்து எண்களை அழுத்தியவன், “மிஸ்டர்.ப்ரதாப்‌. நாம பண்ணப்போற செட்டப்கு போட்ட ப்ளூப்ரிண்ட் காப்பி எடுத்துட்டு இங்க கொஞ்சம் வாங்க” சொல்லிவிட்டு வைத்தான்.

“அவர்தான் இங்க இந்த செட்டப்போட கன்ட்ரோல் வச்சுக்கப்போறவர். இங்க வேலை பார்க்குற சீஃப் என்ஜினியர்” ப்ரதாப்பை பற்றிய விளக்கத்தையும் பேசினான். அதற்கும் அவளிடம் மெல்லிய தலையாட்டலே பதிலாக வந்தது.

சற்று நேரத்தில் ப்ரதாப்பும் வர, அவனும் ஸ்ரீனிகாவும் தேவையான உபகரணங்களை பற்றி பேச ஆரம்பித்தார்கள்.

அவள் சொல்ல சொல்ல ப்ரதாப் லிஸ்ட்டை குறித்துக்கொண்டிருக்க, அவளின் அசைவுகளையும் இதழோடு பேசும் கண்களையும் பார்த்துக்கொண்டிருந்தான் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தான் சேனா.

“இன்னைக்கு எப்படியாவது என் மனசை உனக்கு புரிய வச்சுடுவேன் ஹனி. அப்பறம் மூணுமாசம் என்ன? மூணு நிமிஷம்கூட யாரும் உன்னை என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது?” அகத்தின் மகிழ்ச்சி முகத்திலும் பிரதிபலிக்க, தன்னை மறந்து அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனது பார்வை தன்னைத்துளைப்பதை, உள்ளுணர்வு உணர்த்த சட்டென நிமிர்ந்து பார்த்தாள் ஸ்ரீனிகா. எப்பொழுதும் நேருக்கு நேராக அவள் பார்க்கும்போது அவள் பார்வையை தவிர்த்து விடுபவன், அவள் பார்வையை தாங்கி நிற்க, இன்று அவன் ஒரு முடிவோடு இருப்பது அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

தன் பார்வையை விலக்கிக்கொண்டு ப்ரதாப்பை பார்த்து,

“எங்க செட் பண்ணப்போறிங்கன்னு காமிச்சிங்கன்னா?? இன்டீரியர் இன்னும் ஒழுங்கா வரும். அந்த அறையை பார்த்துடலாமா??” என்றவள் எழுந்துகொள்ள, தானும் உடன் எழுந்தான் சேனா.

“நான் காட்டறேன் ஸ்ரீனிகா” என்றவன் , ப்ரதாப் முன்னே செல்ல, இவன் அவளுடன் இணைந்து நடந்தான்.

“இன்னைக்கு பார்க்க நான் எப்படி இருக்கேன் ஸ்ரீனிகா?” பேச்சை ஆரம்பித்து வைத்தான்.

“ம்ம்.. நல்லா இருக்கிங்க சார். எதுவும் விசேஷமா??” மிக இயல்பாகவே பதிலளித்தாள். அவளை தான் எந்த விதத்தாலும் பாதிக்காதது இப்பொழுதும் அவனது மனதை உறுத்தத்தான் செய்தது. இருந்தாலும் தனது முயற்சியில் சற்றும் தளராது,

“விசேஷம் வைக்கனும்ங்கறதுக்கு தான் நானும் முயற்சி பண்ணிட்டிருக்கேன். நடந்துருங்கற நம்பிக்கையும் இருக்கு” என்றவனின் பதிலில் தொனித்த நம்பிக்கை விசித்தரமாக பட்டது அவளுக்கு.

அதற்குள் அவர்கள் பார்வையிட வேண்டிய அறையும் வந்துவிட, மூவரும் அதை பார்வையிட்டு முடிக்கவும், அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டிய ஆயத்தங்களையும், அதற்கான உபகரணங்களையும், பட்டியலிட்டு, சரிபார்த்து, அதற்கான விலைபட்டியலையும் தேர்ந்தெடுத்து சரிபார்த்து முடிக்கும்போது, நேரம் அந்தி மாலையை கடந்திருந்தது.

சற்று களைப்பாக உணர்ந்தாலும், சரிபார்க்கும் வேலை இன்று முடிந்து விட்டதில் ப்ரதாப்பிற்கு திருப்தியாக இருந்தது.

“நீங்க ரொம்ப திறமைசாலி மேடம். யாராலயும் இவ்வளவு சரியா கணிக்க முடியாது” மனதார வியந்தவனுக்கு, அவளிடமிருந்து மெலிதான புன்னகை மட்டுமே கிடைத்தது.

“ஓகே சார். இதுதான் ஃபைனல் லிஸ்ட். நான் வீட்டுக்கு கிளம்பறேன்” லிஸ்டை சேனாவிடம் கொடுத்துவிட்டு கிளம்பியவன், இருவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினான்.

“பர்ச்சேஸிங் ஆரம்பிக்கலாமா ஸ்ரீனிகா??” அவளது களைப்பையும் பொருட்படுத்தாது சேனா கேட்க, நிகாவும்  சரியென்றாள்.

இருவரும் காரில் ஏறி அமர்ந்ததும், என்றுமில்லாத வழக்கமாக பாடல்களை ஒலிக்க விட, சித் ஸ்ரீராமின் “தள்ளிப்போகாதே” பாடல் உச்சஸ்தாதியில் ஒலித்தது.

ஏனோ வானிலை மாறுதே…

மணித்துளி போகுதே…

மார்பின் வேகம் கூடுதே…

மனமோ ஏதோ சொல்ல

வார்த்தை தேடுதே…

கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய்…

விழியின் மேல் நான் கோபம் கொண்டேன்…

இமை மூடிடு என்றேன்…

கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றேனே

கை நீட்டி உன்னை தீண்டவே பார்த்தேன்

ஏன் அதில் தோற்றேன்

தள்ளிப் போகாதே…

எனையும் தள்ளிப் போகச்

சொல்லாதே…

இருவர் இதழும்

மலர் எனும் முள்தானே…

பாடல் முழுவதும் பாடி முடியும் வரை, காரின் ஜன்னல்புறத்திலிருந்து பார்வையை திருப்பவில்லை அவள். சரியாக பாட்டும் முடிய அவர்கள் வந்து சேர வேண்டிய இடமும் வந்தது.

அவன் இறங்கி வந்து அவள்பக்க கதவை திறப்பதற்குள் இறங்கி நின்றிருந்தாள் நிகா.

“போலாமா??” என்று மட்டும் அவள் கேட்க, அவளது மனோதிடம் சேனாவை சற்று அசைத்து பார்த்தது.

“போலாம்..” அவளுடன் சேர்ந்து முன்னே நடந்தான்.

அங்கு அவர்களுக்கு அதிக வேலை இருக்கவில்லை. பொருட்களின் விலைக்குறிப்பை மட்டும் சரிபார்க்கும் வேலை இருந்தது. அதில் சிலமணிநேரங்கள் கடந்திருக்க, பொருட்களை அவர்களே டோர் டெலிவரி செய்து விடுவதாக கூறிவிட, சேனா தீனதயாளனுக்கு அழைத்து விவரங்களை பகிர்ந்து கொண்டவன், அதற்கான பணத்தை செலுத்திவிட்டு வெளியே வந்தனர்.

“ரொம்ப நன்றி ஸ்ரீனிகா. களைப்பா தெரியுறிங்க, வாங்க டின்னர் மட்டும் சாப்பிட்டு கிளம்பலாம்”என்று கோரிக்கை வைக்க, அதை அவள் மறுத்து பேச வாயெடுக்கும் முன்பே,

“ப்ளீஸ் வேண்டான்னு சொல்லிடாத ஸ்ரீனிகா” கோரிக்கை வைத்தவை பார்த்து சிரித்தவள்,

“ஏன் சார் இவ்வளவு டென்ஷன்? போகலாம். ஆனால் கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு போயிட்டா நல்லாயிருக்கும்” என்றவளின் பதிலில், சேனாவிற்கு இப்பொழுதே அவளது சம்மதத்தை பெற்றுவிட்ட உணர்வு.

“கண்டிப்பா ஹ.. ஸ்ரீனிகா” இருவரும் அமர்ந்து கொள்ள , வேகமெடுத்தது அவனது வாகனம்.

கோவை மாநகரின் பிரபல நட்சத்திர விடுதியில் வண்டியை நிறுத்தியவன், அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

இப்பொழுது நிகாவிற்கு அவனது திட்டங்கள் சற்று புரிய ஆரம்பித்தது. அந்த நேரத்தில் நூவனின் பேச்சுக்களும் காதில் எதிரொலித்தது.

“சொல்லு உன் பின்னாடியே அலைஞ்சு திரிஞ்சு, பார்க் பீச்னு சுத்திட்டு, கேன்டில் லைட் டின்னர் வைச்சு, ரொமான்டிக் மியூசிக் போட்டு “ஐ லவ் யூ ” சொன்னா ஒத்துப்பியா?” அதை நினைத்து அவளது முகத்தில் இப்பொழுது நன்றாகவே சிரிப்பின் சாயல் தெரிந்தது.

“இந்த ஆம்பளைங்க எல்லாம் ஒரே மாதிரிதான் யோசிப்பாங்க போல? ” மனதில் நினைத்துக்கொண்டே புன்னகயுடனே உள்ளே நுழைந்தாள்.

அவள் எதை நினைத்து புன்னகைக்கிறார் என்றறியாது, புன்னகை முகத்துடன் உள்ளே நுழைபவளை கண்ட சேனாவின் உள்ளமோ, இப்பொழுதே அவளுடன் கைகோர்த்து உரிமையுடன் பதிவு செய்திருந்த மேஜைக்கு அழைத்துச்செல்ல விளைந்தது.

உள்ளே சென்ற பின்புதான் கவனித்தாள், அவர்கள் மட்டுமே அங்கு இருப்பதை. சுற்றி இருந்த மெழுகுவர்த்தி வெளிச்சமும், மேஜையில் செய்யப்பட்டிருந்த பூக்களின் அலங்காரமும், அலங்கார வேலைப்பாடு கொண்டு பளபளக்கும் துணியால் போர்த்தப்பட்டிருந்த உணவு வகைகளும், நடக்கப்போகும் விஷயத்தை தெளிவாக உரைத்தது. இன்னும் இசைக்கும் இசைக்கலைஞர்கள் மட்டுமே மீதமிருந்தனர்.

மானசீகமாக தலையில் கை வைத்துக்கொண்டவளுக்கு, ஏனோ சேனாவின் மனதை நோகடித்து அசிங்கப்படுத்த கஷ்டமாக இருந்தது.

முதல்முறையாக அங்கிருந்த மௌனத்தை கலைத்தவள்,

“மிஸ்டர் சேனா…” என்று மெதுவாக அழைக்க, அங்கிருந்த ஏற்பாட்டாளரிடம் பேசிக்கொண்டிருந்தவன் திரும்பி பார்த்தான்.

அவளது முகத்தில் இப்பொழுது சங்கடத்தின் ரேகைகள் மட்டுமே நிலவுவதை மட்டுமே உணர்ந்தவன்,

“என்னாச்சு ஹனி?” தன்னை மீறி அவனது அழைப்பில் அப்பட்டமாக அவன் மனதை காட்ட,இப்பொழுது எரிச்சலானது ஸ்ரீனிகாவிற்கு.

இருந்தாலும் முயன்று பொறுமையுடன், அவனது‌ அழைப்பை புறக்கணித்து,”சார்.. என்ன நடக்குது இங்க? ” என்று கேட்க,

“உனக்கு இதெல்லாம் பிடிக்கலையா ஹனி? என் மனச திறந்து உன்கிட்ட என் காதலை சொல்ல தான் இந்த ஏற்பாடெல்லாம்” என்றவன், அவள் முன் மண்டியிடப்போக,

“நோ..ஓஓஓஓ… சேனா ” என்று கத்தியிருந்தாள். கைகளை இறுகமூடி அவள் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு நிற்பதை கண்டவன்,

“ஹனி…..” என அதிர்ந்து பார்க்க,

“ப்ளீஸ்.. இதெல்லாம் எனக்கு பிடிக்கலை. எனக்கு உங்க மேல அப்படிப்பட்ட அபிப்ராயமே கிடையாது”

“ஹனி.. என்னைப்புரிஞ்சுக்க கொஞ்ச டைம் வேணுன்னாலும் ….” என்று பேசவந்தவனை,

“அதான் பிடிக்கலை சொல்லிட்டாள்ள.. அப்புறமும் என்ன ஹனி? டாபர்னுட்டு” இடைமறித்தது நூவனின் குரல்.

“இவன் எப்படி இங்கு வந்தான்?” இருவரும் அதிர்ந்து பார்க்க, நூவனுக்கு கோபம் வந்தது.

“அவன்தான் நான் எப்படி வந்தேன்னு பார்க்கறான் சரி?? இவ பின்னாடியே தான் நான் சுத்திட்டுருக்கேன்னு இவளுக்கு நல்லா தெரியும்?? நீயும் ஏண்டி இப்படி பார்க்குற?” மனதிற்குள் அவளை திட்டியவன்,

“கிளம்பு நிகா. போகலாம்” என்றவன் அவளை அழைக்க,

“நூவன் தேவையில்லாம நீ இந்த விஷயத்தில் தலையிடற?” சேனா கோபத்துடன் அவனை எச்சரிக்க, இருவரும் ஒருவரை ஒருவர் சளைக்காது முறைத்துக் கொண்டு நிற்க, இது கைகலப்பில் கூட முடியும் என்பதை உணர்ந்தவளாக,

“சேனா சார், நான்தான் என் முடிவை சொல்லிட்டனே. புரிஞ்சுகிட்டு இங்க இருந்து கிளம்புங்க” அவனை முதலில் அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்கினாள்.

“ஹனி… நீ இவனுக்காக பயப்பட வேண்டாம். நீ வா, நான் உன்னை வீட்டுல விட்டுட்டு கிளம்பறேன்” நூவன் வந்ததால் தான், அவ்வாறு பேசுகிறாளென்று தவறாக கணித்தான் சேனா. அவள் மனதை வென்றாக வேண்டுமென்கிற வெறி, அவன் கண்ணை மறைத்திருந்தது.

சேனாவின் பிதற்றலில் , அவனை இப்பொழுது முறைத்துப்பார்த்தாள் நிகா.

“நீ சொன்னாலும் புரிஞ்சுக்கற நிலைமைல அவன் இல்லை”‌ நூவன் அவளை எச்சரித்தவன்,

“வா போகலாம்” என்றவன் அவளை கையோடு அழைத்துச்சென்று விட்டான்.

தன்கண்முன்னேயே நூவன் அழைத்துச் செல்வதை, சேனாவை கொதி நிலைக்கு இட்டுச்செல்ல, வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பியவன் , அடுத்து நின்றது நிவேதாவின் அறையில்தான்.

தன் அறைமுன்பு ஆவேசத்துடன் நின்ற சேனாவைக்கண்டு நிவேதா குழம்பி நின்றார்.

“சேனா.. தம்பி என்னாச்சு?? உடம்புக்கு ஏதும் செய்யுதா??” அவனை விசாரித்தவர், தண்ணீர் கொடுத்து,முதலில் அங்கிருந்த இருக்கையில் அமரவைத்தார்.

சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டவன், “ஆன்ட்டி நான் ஸ்ரீனிகாவை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்?? எனக்கு அவளை நீங்க கட்டி வைக்கனும்?? இந்த விஷயம் எங்க அப்பாக்கு கூட தெரியக்கூடாது. எனக்கு அவ வேணும்” நேருக்கு நேராக கேட்டவனை, ஆச்சர்யமாக பார்த்தார் அவர்.

மேலும் அவனே பேசினான், “எனக்கு தெரியும் அவளோட எந்த விஷயத்திலும் நீங்க தலையிடறதில்லை. ஆனால் எனக்காக, இதை நீங்க நடத்திக்கொடுக்கனும்”

அவன் இவ்வளவு பேசிய பிறகு, நிவேதா அவனிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டார்.

“நீ அவளை உண்மையா விரும்புறியா? “

“ஆமா” அடுத்த வினாடியே தயங்காது பதில் வந்தது.

“இதை நான் முடிச்சுக்கொடுக்கிறேன்” அவனுக்கு வாக்களித்தார் நிவேதா.

இங்கு அருகில் அமர்ந்திருந்த நிகாவை ” ஏண்டி என்னை மட்டும் தான் கண்ணுல மண்ண போட்டு, கை காலை எல்லாம் உடைப்பியா?? அவன் அவ்வளவு பேசறான், ஒரு அறை விடறதுக்கு என்ன??” என்று கத்திக்கொண்டிருந்தான் நூவன்.

ஊடலும் உவப்பானது உன்னில் என்னைத்தேட…..

திமிராகும்…..

அத்தியாயம்-18:

“இன்னைக்கு ஏதாச்சும் நடந்ததா சேனா?” முழு விஷயத்தை தெரிந்து கொண்டால் மட்டுமே, காரியத்தில் வெற்றி கிட்டும் என்பதை உணர்ந்தவராக , தற்பொழுது சற்று ஆசுவாசமாக அமர்ந்திருந்தவனிடம் கேள்வி கேட்டார் நிவேதா.

ஸ்ரீனிகா தனக்கு கிடைக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தவனும், அவளது புகைப்படத்தை பார்த்து ஆசைப்பட்டது முதல், அன்று மாலை நூவனோடு நடந்த தகராறு வரை  சொல்லி முடித்தான்.

நூவனின் மனது தெளிவாகவே புரிந்தது நிவேதாவிற்கு. ஆனால் ஸ்ரீனிகாவை அவரால் கணிக்க முடியவில்லை.

தன் மனதில் எழுந்த சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ள விரும்பியவராக,

“அந்த பொண்ணுக்கு நூவன்மேல ஏதும் விருப்பம்??” என்று அவர் கேட்டு கூட முடிக்கவில்லை, நிர்தாட்சண்யமாக மறுத்தான் சேனா.

“இல்லை. அவன் ஏதோ அவளை கார்னர் பண்ற மாதிரிதான் எனக்கு தோணுது. அதை மீறி ஸ்ரீனிகாக்கு பிடிச்சுருந்தாலும், அவ என் முகத்துக்கு நேரா சொல்லியிருப்பா, அவளுக்கு அவனைத்தான் பிடிச்சுருக்குன்னு” சேனா சொல்வதும் சரியாக பட்டது அவருக்கு.

“ம்ம்.. சரி. இவ்வளவு தூரம் உறுதியாக இருக்கும்போது, நான் பார்த்துக்கிறேன். நீ கவலைப்படாம கொஞ்சநாள் உன் வேலைகளை மட்டும் கவனி சேனா. நீ சொன்னதற்கான ஏற்பாடுகளை செஞ்சுட்டு நான் கூப்பிடும்போது நீ வந்தா போதும்” அவரது பேச்சின் மூலமாக பெருமளவு நம்பிக்கையளிக்க, சற்று நிம்மதியுடன் தன் அறைக்கு ஓய்வெடுக்க சென்றான்.

“எதுக்கு அவரை அறையனும்?? அவர் என்ன உங்களை மாதிரி தொட்டு தொட்டு பேசினாரா?? இல்லை மாமன் உறவு சொல்லி நச்சரிச்சுட்டுருக்காரா?? நீங்க மட்டும் இடையில் வரலைன்னா, எனக்கு அவர்மேல சுத்தமா அவர் விருப்பபடற மாதிரியான எண்ணங்கள் இல்லவே இல்லைன்னு அவருக்கு நல்லா புரியறமாதிரி சொல்லிட்டு வந்துருப்பேன். அவர் ஒண்ணும் கெட்டவர் கிடையாது, சொன்னா புரிஞ்சுக்ககூடிய நண்பர்தான். உங்களாலதான் இப்ப எல்லாமே கெட்டுப்போச்சு” நூவனது பந்தை அவனுக்கே திருப்பியடித்தாள் அவனது அழகி.

அவள் பேசிய வேகத்தில், அவனுக்கு கோபம் வந்து திட்டுவான் என்று எதிர்பார்க்க, அவனது முகமோ ஆழ்ந்த அமைதியில் இருந்தது.

அவனது அமைதியை கவனித்தவளாக அவளும் அமைதியாக வர, எதிர்பாராத இடத்தில் காரை சட்டென்று நிறுத்தினான் நூவன்.

சாலையோர மரத்தின் கீழ் நிறுத்தியிருந்ததால், இரவு விளக்குகளின் வெளிச்சம் நிகாவின் முகத்தில் மட்டும் பட்டு, வரி ஓவியமாக தெரிய, நூவனது முகத்தை அவளால் காண இயலவில்லை.

“என்னாச்சு மிஸ்டர்.என்ஜே?? ஏன் இப்படி கார் திடீர்னு நின்னுடுச்சு??” இருளின் நிசப்தத்தை கிழித்தது அவளது மென்குரல்.

அவளது கேள்விக்கு பிறகு, தனது முகத்தையும் அரைகுறையாக தெரிந்த ஒளிவட்டத்திற்குள் கொண்டுவந்தவன், அவளது கண்களை பார்த்து ,

“ஒண்ணும் ஆகலை நிகாபேபி. திடீர்னு ஒரு சந்தேகம்? அதை கேட்க தான் நிப்பாட்டினேன்” என்று கூற, அவளது விழிகள் இன்னும் அகல விரிந்தது. நொடிநேரத்திற்கும் குறைவாக அவனது விழிவீச்சில் கட்டுண்டவள், சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டாள்.

“சந்தேகம் கேட்கற இடமா இது?? முதல்ல வண்டியை எடுக்குறிங்களா ? இல்லை இறங்கி நான் நடந்து போகட்டுமா??” அவனது காதல் பார்வையை அலட்சியப்படுத்தி பேசினாள்.

“இல்லை எனக்கு இப்ப கேட்டே ஆகனும்” பிடிவாதத்தில் உனக்கு நான் சளைத்தவனல்ல என்று காட்டினான்.

அவளிடமிருந்து அமைதி மட்டுமே பதிலாக வர, அதையே தனக்கான சம்மதமாக எடுத்துக்கொண்டவனுக்கு ஏனோ, இன்று தன்னவளின் அருகாமை இதமாய் இம்சிக்க, வரமாய் கிடைத்த தனிமையில், இத்தனை நாள் நிழற்படமாய் பார்த்து ரசித்தவளை, நேரில் மொய்த்தெடுக்க ஆரம்பித்தது காதல் ரசமீதுறிய கண்கள்.

அளவான வட்டம முகமும், மிதமான காற்றில் அசைந்தாடும் கார்குழலும், நீளமும் அல்லாது குட்டையாகவும் அல்லாது, அடர்த்தியான அளவான நீளத்தில், தொலைந்தால் வெளிவர இயலாத இருள்சூழ்ந்த குட்டி கானகத்தை நினைவுபடுத்தியது.

தன்னை சிறிதும் சட்டை செய்யாது, நேர்நோக்கிய விழிகள், தெருவிளக்கின் ஒளியில் மேலும் மின்ன, கண்ணோடு கண்கோர்த்தால் ஊடுருவும் அதன் வெம்மையில் இதயம் உருகும் அந்த நொடி, நினைக்கவே ரம்மியமாக இருந்தது.

சீராக ஏறி இறங்கும் மூச்சுக்கள், அபாயகரமான கொண்டை ஊசி திருப்பங்களையும் சேர்த்து காட்சிப்படுத்த, கிடைத்த அருகாமையில் கண்ணுற்ற போதுதான் இரு கண்கள் போதாதென்பதை கட்டியம் கூற, சட்டென திரும்பிப் பார்த்தாள் நிகா.

சந்தேகம் கேட்க வேண்டுமென்றவனிடமிருந்து, எந்த வித பேச்சும் இல்லாது போக, இனம்விளங்கா அவன் பார்வையிலிருந்து, முதலில் ஒன்றும் புரியாதிருக்க, சற்று யோசிக்க அவனது பார்வையின் வீரியம் புரிந்தது.

“இதுதான் நீங்க சந்தேகம் கேட்கற லட்சணமா??” என்றவள் காரின் கதவை திறக்க முற்பட, அது லாக் செய்யப்பட்டிருந்தது.

“உன்னைப் பத்தி எனக்கு தெரியாத நிகாபேபி? உனக்கிருக்கிற தைரியத்துக்கு நீ ஓடற கார்லயே குதிக்கறவ? அந்த ரிஸ்க்கெல்லாம் மாமா உன்னை எடுக்க விட்டுருவனா?”  அவனது  பெருமை பேச்சில், தலைவலி வர, தலையில் கை வைத்துக்கொண்டாள்.

“ரொம்ப தலைவலிக்குதா?? நம்ம வீட்டுக்கு வேணா கூட்டிட்டு போகட்டுமா?? அம்மா கையால காஃபி குடிச்சா எப்படி தலைவலியும் போயிடும்” என்றவனின் உரிமை பேச்சில் அவளது கொஞ்சநஞ்ச பொறுமையும் பறக்க, தன்முன்னால் இருந்த டிஷ்யூ பாக்ஸை அவன் மீது விட்டெறிந்தாள் அவள்.

“ஏன் இப்படி என் பொறுமையை சோதிக்கிறிங்க?? ஏற்கனவை சேனா பண்ண கூத்துல எனக்கு தலைவலி வந்துருச்சு. நீங்க இன்னும் அதிகமாக்குறிங்க. முதல்ல வண்டியை எடுங்க” வலியால் சிவந்த அவளது முகத்தை பார்த்தவன், சட்டென்று தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

எதிர்பாராத இந்த அணைப்பில் திகைத்தாலும், அந்தநேரத்தில் அவளுக்கு அந்த இதம் அவளுக்கு தேவைப்பட, தன்னை மீறி அவன் நெஞ்சில் சாய்ந்தாள் நிகா.

இரண்டு நிமிடங்களுக்கு மேல் , அந்த ஆண்டவனுக்கே பொறுக்கவில்லை போலும், ரஞ்சனிக்குரிய பாட்டோடு, நிகாவின் அலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது.

சட்டென்று அவனது அணைப்பிலிருந்து விலகியவள், அழைப்பை எடுத்து பேசினாள்.

“ஹலோ ரஞ்சு…”

“அக்கா.. என்னாச்சு? இவ்வளவு நேரம் ஆளகாணோமேன்னு கால் பண்ணேன். வர இன்னும் நேரமாகுமாக்கா?? எந்த இடம்னு சொல்லுங்க நானும் வேணுன்னா கிளம்பி வரேன்” இரவு உணவு நேரமும் கடந்திருந்ததால் பதற்றத்துடன் ஒலித்தது ரஞ்சனியின் குரல்.

“எனக்கு ஒண்ணுமில்லை.வீட்டுக்குதான்டா வந்துட்டுருக்கேன். இன்னும் பத்துநிமிஷத்துல வந்துடுவேன்” அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே, நூவன் அவளது அலைபேசியை பிடுங்கிக்கொள்ள, முறைத்தாள் நிகா.

“ரஞ்சனி நான் நூவன் பேசறேன். நிகா என்கூட தான் இருக்கா. நீங்க சாப்பிட்டு முடிச்சாச்சா??” என்று கேட்டான்.

“நூவன் சார்… அண்ணா” என்று ரஞ்சனி குழப்பியடித்தாள். பார்க்கபோனது சேனாவை, வருவது நூவனுடன் என்றால், அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“அண்ணான்னே கூப்பிடு ரஞ்சனி”

“ஹான்.. இன்னும் இல்லண்ணா” என்றாள்.

“அப்ப நீயும், ஆனந்தியும் கிளம்பி ரெடியா இருங்க. நாம வெளில டின்னர் போகலாம். நாங்க இன்னும் ஒரு கால்மணி நேரத்துல அங்க இருப்பேன்” என்று கூற,

“டபிள் டன் அண்ணா” என்றவளின் குதூகலக்குரல்  அவனது முகத்தில்  புன்னகையை வரவழைத்தது.

பேசி முடித்தவன், அவளது கைகளில் அலைபேசியை திணிக்க,அதை வாங்கிக்கொண்டவள்

“என்ன நினைச்சு இப்படியெல்லாம் பண்ணறிங்க?? உங்க கூட நான் எங்கேயும் வரமாட்டேன்” என்றாள்.

“எல்லா இடத்துக்கும் இனி நீதான் கூட வரப்போற. இப்பவே பழக ஆரம்பி நிகாபேபி. ஒரு சேன்ஞ் ஆஃப் மூட்குதான் கூப்பிடறேன்” என்றவன், வண்டியை ஸ்டார்ட் செய்து, ஓட்ட ஆரம்பித்தான்.

“நீங்க உங்க லிமிட் தாண்டி பேசறிங்க??” என்று எச்சரித்தவளின் குரலை, அவன் பொருட்படுத்தவில்லை.

“உன்கிட்ட லிமிட் வச்சுக்க நான் ஒண்ணும் உன் நண்பன் சேனா கிடையாது. சேனாக்கு சொல்லி புரிய வச்சுருப்பேன் சொன்னியே??? என்னை பிடிக்கலன்னா எனக்கும் சொல்லி நீ புரிய வச்சுருக்கலாமே நிகாபேபி. அதை ஏன் நீ செய்யல? இதுதான் நான் கேட்க நினைத்த சந்தேகம்” என்றவனின் கேள்வி, அவளது மனநிலையை அவளுக்கு தெளிவாக புரிய வைத்தது‌.

தெரிந்தாலும் அதை மறைத்தவள் “நீ என்ன பேசவிட்டாதானடா?? “என்று முணுமுணுத்தாள்.

“இது டூ மச். நான் என்ன ஒண்ண பேசவிடாம, எல்லா நேரமும் லிப்லாக் பண்ணிடற மாதிரியே… ஐ மீன் வாய மூட வைக்கற மாதிரியே பேசற மாதிரி பேசக்கூடாது பேபி” பேசிக்கொண்டே அவள்புறம் திரும்பி பார்க்க, அனல் தெறித்தது அவளது பார்வையில்.

“ஷ்..ஷப்பா.. ஏசியை இன்னும் கூட வைக்கறேன்… நீ ரொம்ப ஹாட்” இப்பொழுதும் இரட்டை அர்த்தத்தில் பேசியவனை, கன்னத்தில் அறையும் வேகம் வந்தது அவளுக்கு.

அதை கவனிக்காது அவன்பாட்டிற்கு” ஹ்ம்ம்… ஏதோ தண்ணீல விழுந்தப்ப கொஞ்சம், லிஃப்ட்ல கொஞ்சம்னு கிடைச்சது. அடுத்த சான்ஸ் எப்பவோ?”என்று புலம்பியவனை, தனது கைகளால் வாயை பொத்தியிருந்தாள் நிகா.

“கொஞ்சம் நேரம் வாயை மூடிட்டு வாங்க. இல்ல காரை  உடைச்சுடுவேன்” அவளது வார்த்தைகளுக்கு சம்மதமென்று அவனது இமைகளை மூடித்திறக்க, சட்டென்று கையை விடுவித்துக்கொண்டாள். அவன் மூச்சுக்காற்று பட்ட கைகள் குறுகுறுக்க ஆரம்பித்தது.

அதற்குமேலும் அவளை சோதனைக்குள்ளாக்காது வீடும் வந்திருக்க, நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

இவர்களுக்காக வாசலிலேயே காத்துக்கொண்டிருந்தனர் ரஞ்சனியும் , ஆனந்தியும்.

நூவன் முதலில் இறங்கியவன், “நீ ரெஃப்ரெஷ் ஆகிட்டு வா நிகா” என்றவன், அவர்களுடன் சென்று பேச ஆரம்பித்தான்.

“வாங்கய்யா” ஆனந்தி அங்கிருந்த சேரை அவனுக்காக எடுத்து போட,

“வாங்கண்ணா” ரஞ்சனியும் அவனை உள்ளே அழைத்தாள்.

இருக்கையில் அமர்ந்தவன், “ஆனந்தி உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். அய்யான்னு கூப்பிடாத அண்ணான்னு கூப்பிடுன்னு” அவளிடம் கூறிக்கொண்டே, ரஞ்சனி கொண்டு வந்திருந்த தண்ணீரை அருந்தினான்‌.

“ம்ம்..சரிங்கண்ணா” நொடியில் ஒப்புக்கொண்டாள் ஆனந்தி.

ரஞ்சனி அமைதியாக நின்றிருக்க, ” என்ன ரஞ்சனி பேச்செல்லாம் கிரிக்கிட்ட மட்டுந்தானா?? எங்ககிட்டல்லாம் பேசமாட்டிங்களா??” என்று அவளை வம்பிழுக்க,

“அச்சோ அண்ணா. இந்தக்கா பேசுனா பேசிகிட்டே தான் இருப்பாங்க. இவங்க பேச பேச சிரிப்பா வரும்” உடனடியாக பதில் வந்தது ஆனந்தியிடமிருந்து.

“அடடே அப்படியா ரஞ்சனி?? ” நூவன் சகஜமாக பேச்சிழுக்க,

“இல்ல சார்… ச்ச.. அண்ணா… இந்த காம்ப்ளான் பேபி பொய் சொல்லுது” தன்னைத்தானே காட்டிக்கொடுத்து விட்டு நாக்கை கடிக்க,

“என்ன காம்ப்ளான் பேபியா? ” நூவன் சிரிக்க ஆரம்பித்தான்.

“அது நாந்தாண்ணா… அந்த அக்கால்ல… ” என்று ஆனந்தி விளக்க ஆரம்பிக்க, உள்ளே நிகாவிடம் ஓடிவந்தாள் ரஞ்சனி.

குளியலறையிலிருந்து முகம் துடைத்துவிட்டு வந்தவளின் மேல் மோதிக்கொள்ள,

“ஹேய்… மெதுவா வாடி” அவளை பிடித்து உட்கார வைத்தாள் நிகா.

“நான் உட்கார்றது இருக்கட்டும். நீங்க என்ன சேனாசார பார்க்கப்போயிட்டு, இவரோட திரும்பி வந்துருக்கிங்க?? அதைச்சொல்லுங்க முதல்ல??” ஆள்மாறாட்ட சூட்சமத்தை உடனே அறிந்துகொள்ளும் ஆவல் அவளிடம்.

நடந்த விஷயத்தை சுருக்கமாக உரைத்தாள் நிகா.

“என்னக்கா சேனாண்ணா இவ்வளவு தீவிரமா இருக்காரு? நீங்க சொல்றத பார்த்தா இன்னும் அவர் சரியா புரிஞ்சுக்கலை போலிருக்கே?” ரஞ்சனி சொல்வதும் சரிதான் என்று பட்டது அவளுக்கு.

“ம்ம்… ஆமா. ஆனால் இவன் எப்படி அங்க வந்தான்??” கேட்டுவிட்டு  யோசித்தாள் நிகா.

ரஞ்சனியும் யோசித்தவள், ” ம்ம்.. அக்கா…  நீங்க போனப்பறம் கிரி ஃபோன் பண்ணாரு. நான் ஏற்கனவே சொல்லியிருந்தேனில்லையா? உங்க அப்பா விஷேஷத்துக்கு கூப்பிடனும்னு சொல்லியிருக்காங்கன்னு?? அப்ப நீங்க வெளிய சேனாசாரை பார்க்க போனதை சொன்னேன். அவர் என்ஜேயண்ணாகிட்ட சொல்லியிருக்கலாம்” என்றாள்.

“ஓ.. இது வேறயா?? எப்ப வர்றாராம்? நீ ஏன் எல்லாத்தையும் அவர்கிட்ட சொல்லிக்கிட்டிருக்க??” அடுத்த தொல்லையா என்றிருந்தது அவளுக்கு.

“இல்லக்கா அவர்கிட்ட சொன்னதாலதான என்ஜேயண்ணா அங்க வந்தாரு? இல்லன்னா சேனா சார சமாளிக்கறது உங்களுக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருந்துருக்கும்” என்றவளின் பேச்சும் சரியாக இருக்க,

“ம்ம்.. அதுவும் சரிதான்” என்றாள்.

மேலும் பேசியவள், கொஞ்சம் யோசிச்சு பாருங்கக்கா,”அவருக்கு அப்பான்னா?? உங்களுக்கும் அப்பாதானேக்கா?? தேடிவரவங்களை கொஞ்சம் அனுசரிச்சு போனா நல்லதுதான்” என்றவளின் பேச்சு, நிகாவின் முறைப்பில் அடங்கியது.

“நிகா, ரஞ்சனி  நேரமாச்சு கிளம்பலாமா??” நூவன் வெளியில் இருந்து குரல் கொடுக்க, மற்றவற்றை ஒத்திவைத்து இருவரும் கிளம்பினர்.

இருவரும் கிளம்பிவர, பிரபல விடுதிக்கு அழைத்துச்சென்று இரவு உணவை முடிக்க வைத்தவன், மாலையில் இருந்த சங்கட்டமான சூழ்நிலையிலிருந்து அவளை வெளிவரவைத்து, நிகாவின் மனநிலையை இலகுவாக்கியிருந்தான் நூவன். யாருக்காகவும் காத்திருக்காமல் மறுநாளைய பொழுதும் விடிந்தது உயிரை உலுக்கும் அதிர்ச்சி தரும் விஷயங்களுடன்.

மறுநாள் கிரி வந்து இவர்களை அழைக்கும் வரை எல்லாம் சரியாக சென்று கொண்டிருக்க, அவன் கிளம்பும் நேரம், வீட்டின் பின்கட்டோடு, நடு உத்திரமும் சரிந்து விழுந்திருந்தது. நடுவில் நின்று பேசிக்கொண்டிருந்த நிகாவிற்கும், ஆனந்திக்கும் என்ன கதி ஆனதென அதிர்ச்சியில் உறைந்தனர் ரஞ்சனியும், கிரியும்.

இறந்தகாலத்தை மறக்கவைக்கும்

என் எதிர்காலம் நீ…….

திமிராகும்……

அத்தியாயம்-19:

“நிகா என்னைப்பாரேன்.. திரும்புடி.. ” நூவனின் குரல் கேட்டாலும், அசையாது நின்றிருந்தாள்.

நின்றிருந்தவளின் மேல் அவன் கைகளின் அழுத்தத்தை உணர்ந்தவள், அப்பொழுதும் அசையாமல் நின்றிருக்க,வேகமாக அவன் இழுத்த இழுப்பில் அவன்மீது மோதி நின்றவளின் முகம் முழுவதும் முத்தகோலமிட்டுக்கொண்டிருந்தான் அவன்.

“ச்சோ.. விடுங்க…” அவனைத் தள்ளி விட்டு விலகி நின்றவள், விலகிய வேகத்தில் பிடிமானம் இல்லாது கீழே விழ, நச்சென்று தலை மேல் ஏதோ இடித்தது.

எழுந்து கண்விழித்து பார்க்க, கனவில் உருண்டு கீழே விழுந்தது தெரிந்தது.

“ச்ச..‌ கனவா?? ” நன்றாக வியர்த்திருந்தததால் முகத்தை துடைத்துக்கொண்டவள், தன்னை மீறி, மெலிதாக சிரித்தாள்.

“கனவுலயும் இம்சை பண்றான்…” அதன்பிறகு தான் சுற்றுப்புறத்தை கவனித்தவளுக்கு, மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

ஜன்னலை சற்று திறந்து வைக்க, ஓங்கியடிக்கும் காற்றுடன் பெருமழை பெய்து கொண்டிருந்தது. மழை விழுவதையே சிறிது நேரம் பாரத்துக்கொண்டிருந்தவளுக்கு, சற்றுமுன் இருந்த இதம் மாறி, மனதில் ஏதோ ஓர் அசாத்திய உணர்வு ஏற்பட்டது.

“எனக்கு புரியுது, இந்த ஊருக்கு நான் வந்ததிலிருந்தே நான் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் ஏதோ இருக்குன்னு, என் உள்ளுணர்வு சொல்லுது. ஆனால் எந்த விஷயத்தையும் நான் தெரிஞ்சுக்க வழியில்லையே??” அவளது மனதில் ஒருபுறம் சிந்தனை செய்ய ஆரம்பித்தது.

முயன்று அதை புறம்தள்ளியவள், மழையின் சாரல் அதிகமாக இருக்க,ஈரக்காற்று முகத்தில் மோத, ஜன்னலை சாற்றிவிட்டு படுக்க சென்றாள்.

இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பிய மகனுக்காக காத்திருந்தார் உஷாந்தி. இது வழக்கமான செயலல்ல, நூவனின் பணிச்சுமை தெரியுமாகையால் தனக்காக அவர் காத்துக்கொண்டிருப்பதை அவன் விரும்பமாட்டான் என்பதால், அவரது வழக்கமான நேரத்திற்கு ஓய்வெடுக்க சென்றுவிடுவார்.

ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக, வீட்டினுள் நுழையும்போதே, அன்னை தனக்காக காத்துக் கொண்டிருந்தது, விசித்திரமாக இருந்தது நூவனுக்கு.

ஆராய்ச்சி பார்வையுடன் உள்ளே நுழைந்தவன், அன்னையின் அருகோ புன்னகை முகமாகவே நெருங்கினான்.

“என்னாச்சு ம்மீ… இவ்வளவு நேரம் முழிச்சு உட்கார்ந்திருக்கிங்க?? தூக்கம் வரலையா??” என்று கேட்டவாறு, அன்னையின் மடியில் சாய்ந்து கொண்டான்.

மகனின் விரல்களை தன் கைகளில்  பிடித்துக்கொண்டவர்,

“ஆமா கண்ணா. தூக்கம் வரலை. நிறைய விஷயங்கள் என் கையை மீறி நடக்குதோன்னு கவலையா இருக்கு?” சுழி போட்டவரின் சுழலில் சிக்காமல் பதில் சொல்ல தயாரானவன், எழுந்து அவரது முகத்தை பார்த்தவாறு அமர்ந்து கொண்டான்.

“என்ன சொல்ல வர்றிங்கம்மா?? தெளிவா பேசுங்க?? எனக்கு புரியலை??” அவனது தெளிவான கேள்விகளில் சிரித்தவர்,

“டேய் படவா. நான் உனக்கு அம்மாடா. புரியலயா?? இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியா??” நூவனின் சிகை, உஷாந்தினியின் கையில் இழுபட்டுக்கொண்டிருந்தது.

“ஷ்..ம்மா… என்ன விஷயம்னு சொல்லாம இப்படி கேட்டிங்கன்னா எனக்கு என்ன தெரியும்??” ஒருவழியாக அவரது கையில் இருந்து சிகையை விடுவித்துக்கொண்டவன், மீண்டும் அவரது மடியில் தலை சாய்த்து கொண்டான்.

“அப்ப எனக்கு தெரியாம நிறைய விஷயம் பண்ணிருக்க போல?? ” இந்த கேள்விக்கு எந்த பதிலும் பேசாமல் அமைதியாக இருந்தான் அவன்.

“பதில் பேச மாட்டியே!!… சரி… உனக்கும் உங்க அத்தைக்கும் நடுவுல என்னடா நடக்குது??” விஷயத்தை போட்டுடைத்தார் உஷாந்தி.

“ம்மா…” நூவனுக்கே விந்தையாக இருந்தது அன்னை இதைப்பற்றி கேட்டது. அவர் ஆரம்பித்த தோரணையில், ஸ்ரீனிகாவை பற்றிய விஷயமாக தான் ஏதோ கேட்கப்போகிறார் என்று நினைத்தவனுக்கு, அன்னையின் இந்த புதிய பரிமாணம் வியக்கவைத்தது.

“உனக்கு முன்னாடி இந்த உலகத்தை பார்த்தவடா?? என் கண்ணுக்கு எப்படி தப்பும்?? எனக்கு உன்னைப் பற்றியும் தெரியும். நிவேதாவைப்பற்றியும் தெரியும்.என்ன விஷயமா ரெண்டு பேரும் எதிரும் புதிருமா நிற்கறிங்க??”

“அது…‌” ஏதோ சமாதானமாக பேச வந்தவனை கைநீட்டி தடுத்து விட்டார்.

“நீ என்மடில வளர்ந்ததை விட, உங்கத்தை மடில வளர்ந்தது தான் அதிகம். நான் சொன்னாகூட யோசிக்கற நீ, உங்கத்தை சொன்னா செஞ்சு முடிச்சுட்டு வந்து நிற்கறவன். கிரியை விட உன்மேல தான் அவளுக்கு பாசம் அதிகம்.

வெறும் இந்த நிலத்தை உனக்கு கொடுக்கறதுல அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லைங்கறதும் எனக்கு தெரியும். அவ சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு விஷயம் உனக்கு தெரிஞ்சுருக்கு. அதுல நீ தலையிடறது அவளுக்கு பிடிக்கலைங்கறதும்  என் கவனத்துக்கு எப்பவோ வந்துடுச்சு. இப்ப சொல்லு?? எனக்கு தேவை உண்மை?? நிவேதா உன்னை அவ்வளவு சீக்கிரம் எதுலயும் ஒதுக்கற ஆள் கிடையாது. அவளே வேண்டாங்கற மாதிரி நடக்குறான்னா?? அப்படி என்ன விஷயம்??”

இத்தனை சரியாக கணித்திருந்த அன்னையின் கேள்விகளுக்கு, இப்பொழுது பதிலளித்தாலும் , அது எந்த அளவிற்கு சரியாக வருமென்று யோசனையுடன் அமைதியாக அமர்ந்திருந்தான் நூவன்.

“சொல்லுடா?? என்கிட்ட சொல்றதுல உனக்கு ஏன் இவ்வளவு தயக்கம்?? அன்னைக்குதான் அவ எங்க பேச்சகேட்காம வாசன் அண்ணாவை பிடிவாதமா கல்யாணம் பண்ணிகிட்டு போயி சிக்கல்ல மாட்டுனா?? இப்ப நீ நடந்துக்கறத பார்த்தா, சிக்கல் இன்னும் பெருசா இருக்கும் போலவே?? இதை நேரடியா அவகிட்ட உங்கப்பாவ விட்டே கேட்க விட்டிருப்பேன்? ஆனால் அவர் இப்ப இருக்குற உடல்நிலைல அது மேலும் பிரச்சனையாகிடும்? வாசன் அண்ணாவை கல்யாணம் பண்ணனும் ஆசைப்பட்ட அந்த ஒரு விஷயத்தை ஒதுக்கிட்டு பார்த்தா அவ ரொம்ப நல்லவடா. கூட இருந்து பழகின எனக்கு தெரியும். உங்கப்பாக்கு கூட அவமேல மனஸ்தாபம் உண்டு. ஆனால் எனக்கு எப்பவுமே அவமேல மனஸ்தாபமே கிடையாது. இப்ப என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுகிட்டா, என்னாலயும் உனக்கு உதவ முடியும். நிவேதா மனசு நோகாமவும் பார்த்துக்க முடியும்” இவ்வளவு நீண்ட விளக்கத்திற்கு பிறகும், அவனால் அவன் அறிந்த உண்மையை கூறாமல் இருக்க முடியவில்லை.

“…..” உண்மையறிந்த பிறகு, அன்னையிடம் எந்த எதிர்வினையும் இல்லாதிருக்க, எழுந்து சென்று தண்ணீர் எடுத்து வந்து அவர் கைகளில் கொடுத்து அருந்தச் செய்தான்.

சற்று ஆசுவாசமானவர், ” இதெல்லாம் உண்மையா?” என்று மட்டும் கேட்டார்.

“ஆமாம்மா…” கைக்கு கிடைத்த ஆதாரங்களை பற்றியும் கூறினான்.

“நிம்மதியாவே இருக்கக்கூடாதுன்னு வரம் வாங்கிட்டு வந்துருக்கா போலடா??” பரிதாதப்பட மட்டுமே அவரால் முடிந்தது.

“முடிஞ்ச அளவு சரி செய்ய முயற்சி எடுத்துருக்கேன்மா.. பார்க்கலாம்??” அவனது மனதிலும் இதை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியுமாவென்ற ஐயம் அவ்வப்போது மனதில் உறுத்திக்கொண்டு தான் இருந்தது.

“ம்ம்… உன்னால முடியும்டா. என்ன?? கையாள்றது மட்டும் கொஞ்சம் கவனமா செய்யனும்?? உன் கையை மீறி ஏதும் போறமாதிரி இருந்ததுன்னா சொல்லு, நிவேதாவை நான் சமாளிச்சுக்குறேன்” அன்னையின் உறுதியில் , எதிராளியின் பாதி பலத்தை பெற்ற வாலியைப்போல், அவனது பலம் மீண்டு புத்துணர்வாக இருந்தது.

“ம்மீ… யூ ஆர் ச்சோ சுவீட்” என்றவன் எழுந்து அவரை அணைத்துக்கொள்ள,

“அதெல்லாம் இருக்கட்டும், ஆத்தங்கரை பக்கம் உன் ஆஃபிஸ எப்போ மாத்துன??” இந்த கேள்வியில் அவரிடம் வசமாக சிக்கினான் அருந்தவ புதல்வன்.

“ச்ச..ச்ச.. இல்லையேம்மா. சும்மா காத்து வாங்கதான் போனேன்” முடிந்தவரை சமாளித்தான்.

“அப்படியே புதையலையும் அள்ளுனியாக்கும்” இப்பொழுது அவனது காது அவரது கை இழுத்த இழுப்பிற்கு சென்றது.

“ம்ம்..ஆமா…ம்மா…வலிக்குது” வலியில் போலியாக அலறினான்.

“எங்கண்ணன் மகளுக்கு நான் என்னடா பதில் சொல்றது?? ” கண்களில் ஈரத்தோடு, கமறலாக ஒலித்தது அவரது குரல்.

“ம்மாஆஆஆ… ” அவரது கண்களை துடைத்தவன்,

“அவளை பார்த்த மறு நொடியே உள்ள இறங்கிட்டாம்மா. ப்ரிஷா எங்க கூடவே வளர்ந்ததால என்னவோ, அவள்மேல வேற எந்த உணர்வும் எனக்கு வந்ததில்லை. உங்க ஆசைன்னாலுமே , நான் கொஞ்சம் யோசிச்சு முடிவேடுங்கம்மான்னு தான் சொல்லியிருப்பேன்” என்றவன், எழுந்து அவனது அறைக்கு சென்று, கையில் ஒரு கவரோடு திரும்பி வந்தான்.

அதை அவரது கையில் கொடுத்து பிரித்து பார்க்க சொல்ல, அதில் அவளுக்கு அவன் பார்த்த மாப்பிள்ளையின் புகைப்படம் இருந்தது. கண்களில் கேள்வியுடன் அவனை பார்க்க,

“பையன் பேரு கிருபாகரன். நம்ம **** இன்டஸ்ட்ரீஸின் ஓனரோட ஒரே பையன். ரொம்ப நல்ல குடும்பம். இவள வச்சு சமாளிக்க சரியான ஆளு. பொண்ண நல்லபடியா பார்த்துப்பாங்க”

“ப்ரிஷா முன்னாடி இந்த பையனயும் என்னையும் நிக்க வச்சா?? அவ இவனைதான் தேர்ந்தெடுப்பா. அவளுக்கு நம்ம குடும்பத்துல இப்ப வந்துருக்கற இந்த செல்வநிலைல ஒரு பிரம்மை அவ்வளவுதான்மா. அதுக்காக நீங்க உங்க அண்ணன் மகளுக்கு செய்றதை நான் வேணான்னு தடுக்கல. இங்க போய்  வாழ்ந்தா நல்லாயிருப்பா. ஒரு நல்லநாள் பார்த்து, மாமாகிட்ட இது விஷயமா நீங்கதான் பேசனும். நானோ, அப்பாவோ பேசுனா மாமா தப்பா எடுத்துக்க நிறைய வாய்ப்பிருக்கு” முடித்தவனின் முடிவுரையில் அன்னையின் முகத்திலும் திருப்தி மீண்டிருந்தது.

“ம்ம்…எல்லாம் சரிதான்…  ப்ரிஷாவுக்கு இந்த பையன்னா?? அய்யாவுக்கு யாரை பார்த்திருக்கிங்க??”  பதில் தெரிந்தே கேள்வி கேட்டவரைப்பார்த்து, நூவன் அசட்டு சிரிப்பு சிரித்து வைக்க, அவனது பாவனையில் நன்றாகவே சிரித்தார் உஷா.

“மருமகளை எப்படா நான் பார்க்கறது??” என்றதும், உடனே அலைபேசியை எடுத்து அவளது புகைப்படத்தை காட்டினான்.

“அட திருட்டுப்பயலே, கூடவே வச்சுட்டுதான் பின்னாடி சுத்தறியா??”  அவரது முகத்தில் தெரிந்த உண்மையான மகிழ்ச்சியில், அன்னையை மீண்டும் கட்டிக்கொண்டான்.

“எனக்கு ஸ்ரீனிகாவை ரொம்ப பிடிச்சுருக்கும்மா. அவளுக்கும் என்னை பிடிச்சுருக்கு, ஆனா திமிரு பிடிச்சவ ஒத்துக்க மாட்டேங்கறா” என்று கவலைப்பட,

“ஏன்டா?? உனக்கு பிடிச்சா உடனே அவளும் ஒத்துக்கனுமா?? பொண்ணுங்கன்னா உங்களுக்கு அவ்வளவு ஈஸியா போச்சா?? உன்னை சுத்தல்ல விட்டுருக்கான்னா, அப்ப இந்த வீட்டுக்கு ஏத்தவ தான்” என்றுவிட்டு எழுந்தவர்,

“கனவு கண்டுகிட்டுருக்காம, சீக்கிரம் போய் தூங்கு” என்றுவிட்டு போக, இப்பொழுது வாயடைத்து நிற்பது நூவனின் முறையாயிற்று.

முதல்நாள் பெய்த மழையில், தோட்டமெங்கும் ஈரப்பதத்துடன் பசுமையாக இருக்க, அந்த காலைச்சூழல்  காண்பதற்கு அவ்வளவு ரம்மியமாக இருந்தது.

சிறிது நேரம் ஆனந்தியும், நிகாவும் தங்களது வழக்கமாக தோட்ட வேலை செய்தவர்கள், காலை காஃபியை சேர்ந்து அருந்தி விட்டு, குளித்து சமையலையும் முடித்துக்கொண்டிருக்க, அதுவரை அவளை எழுப்புவதற்கான ஆனந்தியின் அத்தனை பிரம்ம பிரயத்தனத்தையும் முறியடித்து தூங்கி கொண்டிருந்தாள் ரஞ்சனி.

காலை உணவையும் முடித்துவிட்டு, அவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த நேரம், கிரியின் வாகனம் உள்ளே நுழைந்தது.

பார்த்தும் அதை கிரியின் வாகனம் என்பதை கண்டு கொண்ட ஆனந்தி அதை நிகாவிடம் சொல்ல, பிடிக்காத  என்பதை விட எதிர்கொள்ள விரும்பாத உறவுகளின் வருகையென்றாலும், ரஞ்சனியின் வலியுறுத்தலால் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்திற்கு வந்திருந்தாள் அவள்.  அதுமட்டுமில்லாது இங்கு வந்ததிலிருந்து  அவளது மனதை உறுத்திக்கொண்டிருக்கும் சில கேள்விகளுக்கு, அவள் பதில் கொடுத்தாக வேண்டுமே??? தன்பக்கத்து ஆட்கள் யாருமில்லாத போது, சம்பந்தபட்ட மற்ற ஆட்களிடம் தான் கேட்க வேண்டும் என்பதையும் யோசித்து வைத்திருந்தாள்.

கிரி வண்டியிலிருந்து இறங்க,

“அடடே.. வாங்க தம்பி” அவரது வயதையும் மீறிய ஓட்டமும் நடையுமாக வந்து வரவேற்றார் ராமு தாத்தா. ஆனந்தியும் அவனை பார்த்து புன்னகைக்க, நிகாவிற்கு அவனிடம் பேசுவதில் ஒருவித தயக்கமாக இருந்தது.

ஆனால் கிரிக்கு அந்த தயக்கமேதும் இல்லை போலும், ராமு தாத்தாவிற்கு தலையசைவை பதிலாக கொடுத்தவன், “ஹாய் ஸ்ரீனிகா. நான் கிரி” என்று அறிமுகப்படுத்திக்கொண்டான்.

“நல்லாயிருக்கியா ஆனந்தி?? தோட்ட வேலை எல்லாம் நல்லா போகுதா??” என்று கேட்க,

“நல்லா போகுதுண்ணா” என்று பதிலளித்தவள், நிகாவின் பார்வையில் அவனுக்கு குடிப்பதற்கு எடுத்துவருவதற்காக உள்ளே சென்றாள்.

“உட்காருங்க” வெளியில் போடப்பட்டிருந்த இருக்கையில் நிகா அவனை அமரச்சொல்ல,

“நீங்களும் உட்காருங்க ” மற்றொரு இருக்கையை அவளுக்கு காட்டிவிட்டு அமர்ந்து கொண்டான்.

சற்றுநேரம் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள, இருவருக்குமே பேச்செடுக்க இப்பொழுது தயக்கமாக இருந்தது.

அந்த அமைதியை முதலில் கலைத்தவன்,

“அப்பாவோட விஷேஷத்துக்கு நீயும் கலந்துக்கனும். ரெண்டு பேருக்கும் ஒரே வயசுங்கறதால ஒருமை அழைக்கறதுல உனக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லையே?” என்ன மாயமென்றறியாது கிரியின் குரலுக்கு கட்டுப்பட்டவளாக, தலையசைத்தாள் நிகா. மேலும் அவனே தொடர்ந்து பேசினான்.

“பெரியவங்க செஞ்ச தப்புக்கு நாம ஒண்ணும் செய்ய முடியாது. அதுக்காக உடனே எல்லாம் சரியாயிடும்னும் எதிர்பார்க்க முடியாது” சூழ்நிலையை அவன் சகஜமாக்க முயல்வது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

“ம்ம்.. நீங்க.. சொல்றதும் சரிதான் கிரி. எனக்கும் இந்த உறவுச்சிக்கல்கள் எல்லாம் எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய விஷயங்களாதான் முதல்ல இருந்தது. ஆனால் இப்போ சில விஷயங்கள் மாற ஆரம்பிச்சுருக்கு. என்னை எதற்கும் வற்புறுத்தாத வரைக்கும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அங்க உங்க உறவுக்காரங்கல்லாம் என்னைப்பத்தியோ, இல்லை என் பின்புலத்தை பத்தியோ ஏதாவது பேச ஆரம்பிச்சா, நான் அந்த இடத்தை விட்டு வந்துகிட்டே இருப்பேன்” அவளது பேசும் பாவனை கூட, தன் தந்தையை போலவே இருக்க, எல்லாவற்றிற்கும் சரி என்று தலையசைத்தான் கிரி.

“அச்சோ…அக்கா.. இது நான் வெளிய எடுத்துட்டு போறேன்…  உங்களுக்கு காலைல லெமன் ஜூஸ்தான் அக்கா குடுக்க சொல்லியிருக்காங்க”

“அதெல்லாம் அக்காவ நான் சமாளிச்சுக்கறேன். நீ காஃபியை குடு காம்ப்ளேன் பேபி”அப்பொழுதான் எழுந்து குளித்து முடித்துவிட்டு வந்து, ஆனந்தியிடம் வம்பிழுத்துக்கொண்டே வாயிலுக்கு வந்திருந்தாள் ரஞ்சனி‌.

ரஞ்சனியின் பேச்சுக்குரலில் இருவரும் திரும்பிப் பார்த்தனர். வாயிலுக்கு வந்திருந்தவளும் அவர்களை கவனித்துவிட, நிகா அவளை முறைத்துக் கொண்டும், கிரி சுவாரஸ்ய பார்வையும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

காஃபி கோப்பையை கையில் வைத்துக்கொண்டு விழித்து கொண்டிருந்தவளை பார்த்து,

“கொடு, வேண்டாம்” கிரியும், நிகாவும் ஒன்றாக கூற, சட்டென்று சிரித்து விட்டாள் ரஞ்சனி.

“சகோதரனும், சகோதரியும் ரொம்ப ஒற்றுமை தான்” பேசிக்கொண்டு அங்குவர,

“நீங்க இதைக்குடிங்க தம்பி” இளநீருடன் வந்திருந்த ராமுதாத்தா அதை கிரியின் கையில் கொடுத்தார்.

“உங்களுக்கும் கொடுக்கவா சின்னம்மா??” என்று கேட்டவருக்கு, இப்பொழுதுதான் உணவுண்டதால் வேண்டாமென்று மறுத்துவிட்டாள் நிகா.

“எனக்கு கொடுங்க தாத்தா. இந்தா உன் காஃபியை நீயே வச்சுக்கோ” என்று ஆனந்தியின் கையில் திணிக்க போக,

“காஃபியை வேஸ்ட் பண்ணாத ரஞ்சு” நிகாவின் குரலில் அமைதியாக அங்கமர்ந்து அதை குடிக்க ஆரம்பித்தாள். ஆனால் பார்வை மட்டும் கிரியின் மீது அவ்வப்போது படிந்து மீள, அதே வேலையை தான் அவனும் செய்து கொண்டிருந்தான்.

நிகா அவர்களின் பார்வை பரிமாற்றத்தை கண்டும் காணாதது போல் இருந்தவள்,

“ம்க்கும்…” என்று தொண்டையை செரும, ரஞ்சனி அவள்புறம் திரும்பி விட்டாள்.

“நான் வர முயற்சிக்கிறேன் கிரி” நிகா முயல்வதாக சொல்லிவிட,

“நீயும் வந்து கலந்துகிட்டா உனக்கும் நல்லதுன்னு சொன்னதால தான் கூப்பிடுறேன் ஸ்ரீனிகா. நாளைக்கு ஒரு ஒருமணிநேரம்தான்” எடுத்துபேசியவனுக்காக ,

“ஓகே. நான் வரேன்” வருவதாக ஒப்புக்கொண்டாள்.

விடைபெறும் நோக்கில் கிரி மனமே இல்லாமல் எழுந்திருக்க, ரஞ்சனியும் செய்வதறியாது அவனைப்பார்த்துக்கொண்டே  நிகாவின் பின்னால் நின்றிருந்தாள்.

கிரி எழுவதை பார்த்து, இளநீர் தேங்காய்களை உள்ளே வைத்துவிட்டு வந்த, ராமுதாத்தா,

“தம்பி இவ்வளவு தூரம் வந்துட்டு இங்க சாப்பிடாம போறதா?? சாப்பாடு வேளையும் நெருங்கிடுச்சு. உங்களுக்கு பிடிச்ச ஆத்துமீன் குழம்பு வைக்க சொல்லியிருக்கேன் பாப்பாகிட்ட, வச்சுகிட்டுருக்கு” அவனை வற்புறுத்த,

“ஆமா.. இருந்து சாப்பிட்டு போங்க” தன்னை எக்கிக்கொண்டு பேசிய ரஞ்சனியை வித்தியாசமாக பார்த்தாள் நிகா.

இருந்தாலும் கிரி நிகாவின் முகத்தை பார்க்க,

“சாப்பிட்டு போங்க ப்ரோ” என்று விட்டாள்.

சந்தோஷத்தில் குதித்துக்கொண்டு உள்ளே செல்லப்போன, ரஞ்சனியை கையை பிடித்து நிறுத்தியவள்,

“நீ எங்க உள்ள போற?? காலைல எழுந்ததும் லேட்டு. ஒழுங்கா தோட்டத்தை சுத்தி இருபத்தைந்து ரவுண்டு நட, அப்பத்தான் உனக்கு சாப்பாடு” அவளது தலையில் வலிக்காது ஒரு கொட்டு கொட்டியவள்,

“நீங்க உள்ள வாங்க ப்ரோ. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க” என்றழைத்தாள்.

ரஞ்சனியின் முகம் சுருங்கினாலும், அவள் நடக்க ஆரம்பித்தாள். இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட விரும்பாத கிரி, நிகாவிடம்

“பரவாயில்லை ஸ்ரீனிகா. நான் இங்க இந்த மேகஸின்ஸ் பார்த்துட்டு உட்கார்ந்துருக்கேன். நீ போய் பார்க்குற வேலையை பாரு” என்றவன், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள, நிகா உள்ளே சென்று விட்டாள்.

அவள் உள்ளே செல்லும் வரை அமர்ந்திருந்தவன், முதல் ரவுண்டை முடித்துவிட்டு வந்த ரஞ்சனியுடன் இணைந்து கொண்டான்.

“என்ன ரனு  டார்லிங்?? வாக்கிங்லாம் பலமா இருக்கு??” என்று பேச்சுக்கொடுக்க,

மூச்சு வாங்கிக்கொண்டே,” வ…வம்பிழுக்காம போ…போங்க” நடந்துகொண்டே பதிலளித்தாள்.

“நீ நடக்கறது நல்லாதான் இருக்கு.. ஆனால் துப்பட்டா போடாம நடக்குறது இன்னும் நல்லாருக்கு” என்றவனின் பேச்சில் நின்றுவிட்டாள்‌.

அவனது பார்வை இன்னும் அவளை ஆர்வமாக பார்க்க, கன்னங்கள் சூடாவதை உணர்ந்தவள் , சட்டென்று தனது கைகளால் அவனது கண்களை மூடினாள்.

“ரொம்ப பேசறிங்க?? இப்படில்லாம் பேசனிங்க நான் உள்ள ஓடிருவேன்” கைகளை எடுக்காமல் மிரட்டவும் செய்தாள்.

“கைய எடுறா ரனு. உன்னைப் பார்த்துட்டே இருக்கேன். வேற எதுவும் வம்பிழுக்க மாட்டேன். ஆனால் இன்னும் ஒன்னே ஒன்னு சொல்லிக்கவா??”என்று கோரிக்கை வைக்க, நிச்சயம் வில்லங்கமாகதான் ஏதோ பேசபோகிறான் என்று அவளுக்கு எச்சரிக்கை மணி அடித்தது.

“….”அவள் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருக்க, அதையே சம்மதமாக எடுத்துக்கொண்டவன்,

“நயன்தாரா நெக்க விட, இந்த லோநெக் தான் சரியா இருக்கு. அந்த டெய்லருக்கு நம்ம பரிசு வாங்கி கொடுத்துடலாம்” என்றவனின் பேச்சில் சட்டென்று கைகளை விட்டவள், திரும்பி நின்று கொண்டாள்.

கிரி இன்னும் நகராமல் நிற்பவதை உணர்ந்தவள்,” நீங்க ஒழுங்கா போய் அங்க உட்காருங்க. இல்லன்னா அக்காவை கூப்பிடுவேன்” தடுமாற்றத்துடன் பேசியவளின் பேச்சில் சத்தமாக சிரித்தான் அவன்.

“பார்றா.. நீ வெட்கப்படறியா ரனு… ” சொல்லிவிட்டு மீண்டும் சிரிக்க, இவ்வளவுநேரம் கேலியா செய்தானென்று அவன் மீது கோபத்துடன் திரும்பி நின்றாள் ரஞ்சனி.

“என் உணர்வுகள் இவனுக்கு விளையாட்டா போச்சா??” என்றவள் அவனை முறைக்க , அவன் உதடுகள் சிரித்தாலும், கண்கள் வேறுமொழி பேசியது.

அவனது விழிவீச்சில் கட்டுண்டவளாக, அவள் அப்படியே உறைந்து நிற்க, “ரனு” மென்குரலில் அவளை நெருங்கும்போது,

“ஆனந்தி இங்க வாயேன். என் குர்தி இந்த ஆணில மாட்டிக்கிச்சு” என்ற நிகாவின் குரல் கேட்க,”இதோ வந்துட்டேன்கா”என்ற ஆனந்தியின் பதிலும் கேட்டது.

அப்பொழுதுதான் இருவரும் அருகருகே வாயிலை விட்டு சற்றுதள்ளி நின்றிருப்பது தெரிய, நிகாவின் பார்வையில் பட்டுவிடுமென்று, “நான் உள்ளே போறேன்” என்றவள் வேகமாக உள்ளே ஓட, அவளது கையை பிடித்து தடுத்திருந்தான் கிரி.

அவள் இங்கு திரும்பி பார்க்கவும், பேரிடி விழுந்ததைப்போன்ற சத்தத்துடன், சட சடவென உத்திரம் உடைந்து விழுந்த சத்தமும்,

“ம்மா…”என்று ஆனந்தி அலறும் சத்தமும் கேட்கவும் உறைந்து நின்றனர் இருவரும்.

கிரி நொடியில் மீண்டவன் , வேகமாக உள்ளே போக, “அய்யோ சின்னம்மா, ஆனந்தி” என்ற அலறலுடன் ஓடி வந்தார் ராமுதாத்தா.

மூவரும் ஓடிச்சென்று உள்ளே பார்க்க, சிறிது நேரம் தூசிப்புழுதியில் ஒன்றும் தெரியவில்லை அவர்களுக்கு.

கண்களில் கண்ணீருடன்  உயிரை தேக்கிக்கொண்டு ரஞ்சனி கிரியை பார்க்க, அவளை தனது தோள்வளைவில் வைத்துக்கொள்ள, ராமுதாத்தா மெதுவாக உள்ளே சென்றிருந்தார்.

அந்த ஹாலின் வடக்கு மூலையில் ஆனந்தியை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் நிகா‌‌.

பின்கட்டோடு நடு உத்திரமே விழுந்திருந்ததால் , அவர்களுக்கு எந்த அடியும் விழாது தப்பித்தார்கள்.

ரஞ்சனி கிரியின் தோளை உதறிக்கொண்டு அந்த இடிபாடுகளில் ஏறி, நிகாவை கட்டிக்கொள்ள, மெதுவாக எழுந்து நின்றாள். ஆனந்தி இன்னும் அதிர்ச்சியிலிருந்து விலகாதிருக்க,

“உனக்கு ஒண்ணுமில்லை காம்ப்ளான்பேபி” அவளை தன்னுடன் இறுக்கிக் கொண்டாள் ரஞ்சனி.

மூவரும் வெளிவருவதற்கு கிரியும், தாத்தாவும் சேர்ந்து கற்களை அகற்றியிருக்க, பத்திரமாக அனைவரும் வெளியே வந்திருந்தனர்.

சற்றுநேரம் அவர்களுக்கு தண்ணீர் எடுத்துக்கொடுத்து ஆசுவாசப்படுத்திய கிரி,

“இனி நீங்க இங்க இருக்க வேணாம். அங்க நம்ம வீட்டுக்கே வந்துடுங்க” என்று கூற, ஒருவரை ஒருவர் பார்த்து திகைத்து விழித்தனர் நிகாவும் , ரஞ்சனியும்.

“இல்ல சரிபட்டு வராது. வீடு சரியாக வரைக்கும் நாங்க ஏதாச்சும் ஹோட்டல்ல தங்கிக்கறோம்” என்றாள் நிகா.

“தம்பிதான் அவ்வளவுதூரம் சொல்றாருல்லம்மா, அவர்கூட கிளம்புங்க சின்னம்மா” என்றார் ராமுதாத்தாவும்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்க, மற்றுமொரு புழுதிப்புயலை கிளப்பிய வண்ணம் உள்ளே நுழைந்தது நூவனின் வாகனம். மற்ற இருவரின் முகத்திலும் புன்னகை மலர,

“இவன் வந்தா இவன் சொல்றததான சாதிப்பான்” என்ற யோசனைக்கு சென்றாள் நிகா.

விடுதலையில்லா சட்டம் வேண்டும்….

உன் காதல் பிடிக்குள்

அகப்பட்டுக்கிடக்க…!

திமிராகும்…..

அத்தியாயம்-20:

வார இறுதி நாள் என்றாலும் அன்று ஏனோ, வேலை நெட்டி முறித்தது நூவனுக்கு. ஆட்டோமொபைல் தொழிற்சாலையில் முக்கியமான இயந்திரமொன்றின் பாகம் பழுதடைந்துவிட, அதன் உதிரிபாகங்களை உடனடியாக தருவிக்க இயலாத நிலைமை.

அந்த இயந்திரம் இயங்காவிட்டால், அந்த யூனிட் முழுவதையும் நிறுத்திவைத்தால் தான் வேலை பார்க்க முடியுமென்று மேற்பார்வையாளர் கூறிவிட்டதால், இன்றைக்குள் பாகங்களை கொண்டுவரும் முயற்சியில் இருந்தவனுக்கு மற்ற எந்த விஷயங்களையும் கருத்தில் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. மாற்றி மாற்றி அனைத்து தயாரிப்பு நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருந்தவனுக்கு, கிரியின் அழைப்புகள் வெயிட்டிங்கில் வந்ததை கவனிக்க முடியவில்லை.

ஒருவழியாக அனைவரது முயற்சியின் பயனாக, மறுநாள் காலைக்குள் பாகங்களை கொண்டு வருவதாக, ஒரு நிறுவனம் ஒப்புக்கொண்ட பிறகு தான், அவனால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

இங்கு அனைவரும் வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, ராமு தாத்தாவை அழைத்து, அன்று மராமத்து பணி பார்த்தவர்களின் எண்களை வாங்கிக்கொண்டிருந்தான் கிரி.

“இது என்ன புது கான்டராக்ட் நம்பரா இருக்கு தாத்தா?”

“அவசரமா வேலை பார்க்கனுங்கறதால, நம்ம பழைய கான்ட்ராக்ட்காரவங்கள பிடிக்க முடியலை தம்பி. அவங்கதான் இவங்களையும் அனுப்பினாங்க”

“ஓ அப்ப சரி. நான் அவங்ககிட்ட பேசிக்கிறேன்” என்றவன், பழைய காண்ட்ராக்ட் நம்பருக்கு அழைத்துகொண்டிருக்க, வெயிட்டிங்கில் நூவனின் அலைபைசி எண்ணும் ஒளிர்ந்தது.

அழைப்பை ஏற்றவனுக்கு “இங்க தொழிற்சாலைல கொஞ்சம் வேலை மச்சி ”  நூவன் அவ்விடத்து சூழ்நிலையை கூற,

கிரியும்”மச்சி இங்க வீட்ல..” என்றவன் நடந்த விவரங்களை சொன்னவன், மூவரும் நலம் என்பதையும் சேர்த்து சொன்னான்.

“ஆனால் ஸ்ரீனிகா அங்க வீட்டுக்கு வர ஒத்துக்கமாட்டேங்கறா.  அதுவுமில்லாம அம்மாகிட்டயும் இன்னும் இதைப்பத்தி நான் பேசலை, ஆனால் இப்போதைக்கு வேற வழியில்லை. இவங்க ரெண்டு பேரும் வெளிய வேற தங்கறோன்னு சொல்றாங்க. எனக்கு நீ ஒரு உதவி பண்ணனும். நமக்கு பார்க்கற அந்த பழைய கான்ட்ராக்ட்காரவங்ககிட்ட பேசி, கொஞ்சம் இங்க வந்து என்ன கண்டிஷன்னு பார்த்து சொல்லனும். நீ வேலை இருந்ததன்னா அங்க பாரு. அடுத்து நான் அம்மாகிட்ட பேசனும்” என்று கூற,

“எனக்கு வேலை முடிஞ்சது. நான் அங்க வரேன். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா அவங்ககூடவே இரு. நிகா என்ன பண்றா??” என்று கேட்க, கிரி திரும்பி பார்த்தவன்,

“ஆனந்தி கைல கொஞ்சம் சிராய்ப்பு ஏற்பட்டு , ரத்தம் வருது, அவ கைலயும் , உடைஞ்சு தெறிச்ச கல் பட்டு, வீங்கி இருக்கு. வேற ஒண்ணும் இல்லை. கார்ல இருந்த முதலுதவி பெட்டிய எடுத்து மருந்து போட்டுட்டுருக்காங்க” தற்போதைய நிலைமையை கூறினான்.

“அப்ப இன்னும் கொஞ்ச நேரத்துல நான் அங்க வரேன். நீ அத்தைகிட்ட பேசு” என்று வைத்துவிட்டான்.

சொன்னபடியே  நூவனின் வாகனம்  சற்று நேரத்திற்கெல்லாம் வீட்டிற்குள் நுழைந்தது.

“அம்மா, நீங்க சொன்ன மாதிரி செஞ்சேன். ஆனால் ஒரு தப்பு நடந்துடுச்சுங்கம்மா” தூரத்தில் அமர்ந்திருந்தவர்களின் மேல் ஒரு கண்ணை வைத்துக்கொண்டு பதற்றத்துடன் பேசிய ராமுதாத்தாவின் குரலில், நிவேதாவிற்கு பதட்டமானது.

“என்னாச்சு யாருக்கும் ஏதும் ஆகலையே?” உயிரை குரலில் தேக்கி கேட்க,

“ஆண்டவன் புண்ணியத்துல சின்னம்மாவும், என் பேத்தியும் தப்பிச்சுட்டாங்க” என்றவர், தான் சற்று இடித்து தளர்த்திவிட்ட பின்கட்டு, எதிர்பாராத விதமாக நடுஉத்திரத்துடன் சரிந்ததையும், ஆனந்தியும், நிகாவும் மாட்டிக்கொண்டதையும் கூறியவர், கடைசி நிமிடத்தில் தப்பி விட்டதையும் கூறினார்.

சற்று நேரத்திற்கு மறுமுனையில் எந்த பேச்சுசப்தமும் இல்லாது போக,

“அம்மா…அம்மா…” பதறிவிட்டார் அவர்.

“ஒண்ணும் இல்லை ராமுண்ணா. நான் நல்லாதான் இருக்கேன். நீங்க அவங்கள பாதுகாப்பா இங்க கிரிகூட அனுப்பி வச்சுடுங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கிரியின் அழைப்பு வெயிட்டிங்கில் வந்தது.

“கிரி கூப்பிடறான். நான் வைக்கிறேன்” என்றவர் அழைப்பை துண்டித்துவிட்டு, அவனது அழைப்பை ஏற்றார்.

“ஹலோ ம்மா… “

“ம்ம்.. சொல்லு கிரி..”

“யார் கூட பேசிட்டிருந்திங்கம்மா??” கிரியின் கேள்விக்கு,

“ஏதோ ராங்நம்பர்டா. சொல்லிட்டு இப்பதான் வச்சேன்” என்றுவிட்டார்.

“ஓ சரிம்மா.. இங்க நம்ம வீடு உத்திரம் இடிஞ்சு விழுந்திடுச்சு” நடந்த சம்பவத்தை கூறினான்.

“நல்லவேளை, யாருக்கும் ஏதும் ஆகலை” நிம்மதியுடன் பேசிய அவரது குரலில், கிரிக்கு சற்று நம்பிக்கை அதிகரித்தது. அதே நம்பிக்கையுடனே,

“இப்ப அவங்கள தங்க வைக்க நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரலான்னு இருக்கேன்மா” கூறிவிட்டான்.

“முடிவே பண்ணிட்டியா??” ஒப்புதலுக்கு பதிலாக தாயிடமிருந்து  எதிர்கேள்விதான் வந்தது.

“அச்சோ பதட்டத்துல அப்படி கேட்டுட்டேன்மா. உங்க அனுமதி இல்லாம நான் எதுவும் செய்யப்போவதில்லை” உண்மையில் பதற்றத்தில் தான் அவன் அவ்வாறு பேசியிருந்தான்.

“கொஞ்சநாளைக்குதான்மா. அதுக்கப்பறம் நாம வேற ஏற்பாடு பண்ணிக்கலாம்” வேதனையுடன் பேசிய மகனின் குரலில் யோசித்தார் நிவேதா.

“கூட்டிட்டு வா கிரி. அவுட்ஹவுச சுத்தம் பண்ணி வைக்க சொல்றேன்” என்றவரின் பதிலில் நிம்மதியடைந்தவனுக்கு, “இதுக்கு ஸ்ரீனிகாவை ஒத்துக்க வைக்கனுமே??” அடுத்த கவலை தொற்றிக்கொண்டது.

அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, நூவன் அவர்களது குடும்ப மருத்துவருடன் உள்ளே நடந்து வந்து கொண்டிருந்தான். எப்போதும் போல் அவனது செயலை மெச்சினாலும்,

“ஏன்டா அங்க அவ்வளவு அவசரமா வேலை நடந்துட்டுருக்கு? இவ்வளவு அவசரமா நீ கிளம்பி வரனுமா? நான்தான் யாருக்கும் எதுவும் ஆகலை சொன்னேன்ல, டாக்டரை மட்டும் அனுப்பி வச்சுருந்தா போதாதா?” கடிந்து கொள்ளவும் தவறவில்லை.

“வேலை முடியாம நீ எவ்வளவு அவசரமா கூப்பிட்டிருந்தாலும், நான் வந்திருக்கமாட்டேன் மச்சி? முடிஞ்சதனால தான் வந்தேன்” என்றவன்,

“சார் அவங்களுக்குதான் அடிபட்டிருக்கு ” அமர்ந்திருந்த பெண்கள் இருவரையும்  சுட்டியவனின் பார்வை, தன்னவளை மட்டும் தலை முதல் கால் வரை ஆராய்ந்தது. ஆனந்தியை மறைத்துக்கொண்டதால், உடைந்து விழுந்த கல்பட்டு கையில் மட்டும் மெலிதாக வீங்கியிருந்தது நன்றாகவே தெரிந்தது.

நிகாவும் அவனது ஆராய்ச்சி பார்வையையும், பின்பு அவனது கண்கள் தனது கையில் நிலைத்ததையும் கண்டவள், அவனது பார்வை தனது முகத்திற்கு திரும்பவும் காணாதது போல் திரும்பிக் கொண்டாள்.

அவளது செயலை கண்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டவன், மருத்துவர் பரிசோதித்துக் கொண்டிருக்க,

“ஆனந்தி வேற எங்கேயும் அடிபட்டுருக்கா? இல்ல வலி ஏதும் இருந்தாலும் டாக்டர்கிட்ட சொல்லுடா?” பேசிக்கொண்டே நிகாவின் அருகில் வந்தவன், அவளது முகவாயைப்பற்றி தூக்கி,

“டாக்டர், இவங்க கன்னத்துல ஏதோ கல்பட்டு வீங்கியிருக்கமாதிரி இருக்கே?” அவளை முகத்தை நிமிர்த்தி, தனது முகத்தை இப்பொழுது நேருக்கு நேராக பார்க்க வைக்க, “அதெல்லாம் அங்க ஒண்ணுமில்லை” அவனை முறைத்தவள் அவனது  கைகளை தட்டிவிட்டாள்‌.

ரஞ்சனி இதை பார்த்து சிரிக்க, அவளுக்கும் ஒரு முறைப்பு பரிசாக கிடைத்தது.

அவளது சிரிப்பில் அவளது புறம் திரும்பியவன்,

“உனக்கு ஒண்ணுமில்லையே ரஞ்சனி?” என்று கேட்க,

“இல்லை மா…. மாம்ஸ் “என்று சொல்ல வந்தவள் கிரியின் முறைப்பில்,

“இல்லண்ணா” மாற்றி தப்பித்தாள்.

அவர்களை பரிசோதித்த மருத்துவர், நிகாவின் கைகளுக்கு மட்டும் ஸ்கேன் பரிசோதனை ஒன்று செய்துகொண்டால் நல்லது என்றவர், ஆனந்திக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிவிட்டு விடைபெற்றுக்கொண்டார்.

பின்பு அனைவரும் அமர்ந்து நூவன் கொண்டு வந்த உணவை சாப்பிட்டுவிட்டு , சிறிது நேரம் ராமுதாத்தாவின் வீட்டில் ஓய்வெடுத்தனர்.

“ஸ்ரீனிகா நீயும் ரஞ்சனியும் எங்க வீட்டுக்கு வந்து தங்கறதுக்கு அம்மாகிட்ட அனுமதி வாங்கிட்டேன். இப்ப அவங்க பக்கம் இருந்தும் எந்த பிரச்சனையும் இல்லை. கொஞ்சநாள் நீ அங்க வந்து தங்கியிருந்தா நல்லதுன்னு நான் நினைக்கிறேன்” கிரி மீண்டும் அவளை வற்புறுத்தினான்.

“இல்ல..நாங்க…” என்று மீண்டும் அவள் ஆட்சேபனை குரல் எழுப்ப,

“அதெல்லாம் அவங்க தங்க வருவாங்க. நீ ஆகவேண்டிய ஏற்பாட்ட பாரு மச்சி” அது அவளை கொதி நிலைக்கு இட்டு செல்லும் என்று தெரிந்தே, இடையிட்டான் நூவன்.

“நீ யாரு எங்க விஷயத்துல தலையிட??” ஏனோ அவளது கட்டுப்பாட்டுகள் அவனிடம் தளர்ந்து போகும் ஆத்திரம், அவனிடமே விடிந்தது.

நூவன் எழுந்த வேகத்தில் அவன் அமர்ந்திருந்த நாற்காலி, தூரத்தில் சென்று விழ, அவன் கோபத்தை அடக்க முயற்சி செய்வது, இறுக மூடிய அவன் கைகளில் தெரிந்தது.

“மச்சி, அவசரப்படாத நான் அவகிட்ட பேசறேன். ஸ்ரீனிகா நீ வார்த்தையை விடாத” இருவருக்கும் இடையில் கிரி சமாதானத்திற்கு வர,ரஞ்சனியும் நிகாவின் கைகளை இறுக பிடித்திருந்தாள்.

“அக்கா கொஞ்சம் அமைதியா பேசுங்க” ரஞ்சனியின் சமாதானம் அவளிடம் எடுபடவில்லை.

“நீ முதல்ல கையை விடு ரஞ்சு” என்றவள்,

“கேட்டுக்கோ கிரி. நான் அங்க வந்து தங்கமாட்டேன். இதுதான் என்னோட இறுதி முடிவு” முகத்திற்கு நேராக பார்த்து கூறியவளை பார்த்து ஸ்தம்பித்து நின்றான் கிரி.

“அங்க போகறதுல உனக்கு அப்படி என்ன கஷ்டம் ?” அழுத்தத்துடன் வெளிவந்த நூவனின் குரல், இதை அவ்வளவு சீக்கிரம் இவனும் விடப்போவதில்லையென்று கட்டியம் கூறியது.

“நான் என்ன நினைக்கிறேன்னு எல்லாருக்கும் விவரம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை” உன்னைவிட நான் அழுத்தத்தில் குறைந்தவள்ள என்று காட்டியது அவளது பதில்.

“ஓஹோ… ” என்றவன் அவளதருகில் வர, இரண்டெட்டு பின்வாங்கினாள் நிகா.

“நீ யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதை நான் கேட்க போறதுமில்லை. ஆனால் எங்க வீட்டு பொண்ணுங்களை, வெளிய தங்க வைக்கற அளவுக்கு நாங்க மோசமானவங்க இல்லை” அவளது கண்களை பார்த்து மெதுவான குரலில் கூற, அவனது இந்த மென்மையான அழுத்தம் அவளை அசைத்துப்பார்த்தது.

“இத்தனை வருஷமா வராத கவலை இப்ப மட்டும் பொங்கிட்டு வருது?” அலட்சியமாக வந்தது அவளது பதில்.

அவளது எதிர்கேள்வியில் தன்னை மீறி சிரித்தவன், ” கண்ணுக்கு தெரியாத வரை எப்படியோ?? ஆனா கண்ணுல பட்டப்பறம் விடற மாதிரி இல்லை” பனிக்காலத்து குளிர் ஊசியாய் அவளது மனதை குத்தியது அவனது பதில்.

“நீங்க சொன்னா நான் கேட்க மாட்டேன்” பன்மைக்கு தாவி மெலிந்து ஒலித்த குரல் வேறுசேதி சொல்ல,

“அப்ப கிரி சொல்றத கேளு”

“அதுவும் முடியாது” என்றாள்.

பெரிய சண்டையாகப்போகிறதென்று பயந்து பார்த்துக்கொண்டிருந்த கிரியும், ரஞ்சனியும் சட்டென்று மாறிய இருவரது குரல் வேற்றுமையில், ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தனர்.

“ப்ளீஸ் நிகா. உன்னோட பாதுகாப்புக்காகதான்” மாதவன் பூங்குழலின் மந்திர கீதமாய், காதல் மீதூறிய குரலில் பேசியவனின் குரலுக்கு, தானாக சரியென்று தலையசைத்தாள் நிகா. அவளது இந்த பாவனையில், இருவர் நின்று தங்களை கவனித்துக்கொண்டிருப்பதையும் மறந்து, நூவன் அவளை மேலும் நெருங்க, சட்டென்று அவனை தள்ளிவிட்டாள்.

கீழே விழப்போனவனை கிரி பிடித்து நிறுத்த, ரஞ்சனியும் நிகாவும் ஒன்றாக சிரித்தனர். அவர்களது சிரிப்புச்சத்தத்தில் உள்ளறையில் தூங்கிக்கொண்டிருந்த ஆனந்தியும் தூக்கம் கலைந்து வெளியே‌வந்து பார்க்க, நன்றாக தெளிந்திருந்த அவளது முகம், அதிர்ச்சியிலிருந்து சிறிது மீண்டிருப்பதை காட்டியது.

“வா ரஞ்சு கொஞ்சம் முயற்சிபண்ணி நம்ம லக்கேஜை எடுக்க முடியமான்னு பார்க்கலாம்” என்றவள்,

“ராமுதாத்தா” உதவிக்கு அவரையும் அழைத்தாள்.

“உங்களோடது எடுத்துக்கங்கக்கா. நான் இங்க காம்ப்ளான் பேபியோடவே இருக்கேன்” ரஞ்சனி புது குண்டை போட, கிரியின் முகம் யோசனையானது.

“ஹேய்.. என்னடி லூசு மாதிரி உளர்ற?” நிகா கேட்க,

“அடி உனக்கு பட்டு, மூளை இவளுக்கு கலங்கிருச்சு போல ” கோபமாக வெளிவந்த கிரியின்  குரலில், ரஞ்சனிக்கு சங்கடமானது.

நிகாவிற்கு தங்குவதென்றால், அது அவளுடைய சொந்தபந்தங்களின் இடமாகிவிடும். முதலில் யாரும் பேசினாலும், பின்னாளில் சரியாகிவிடும். ஆனால் தான் அங்கு செல்வது, நிகாவிற்கு உபத்திரவமாக இருக்கக்கூடாதென்று நினைத்தாள் ரஞ்சனி. அவளை பிரிவது கஷ்டமாக இருந்தாலும், அவள் நல்வாழ்வு வாழ வேண்டுமென்று விரும்புவளாயிற்றே, அதனாலேயே இந்த முடிவெடுத்திருந்தாள்.

கிரியின் குரலில் தலைநிமிராது இருக்க,

“எங்களுக்கு நிகா வேற, நீ வேற இல்லம்மா. இதுல நீ சங்கடப்பட ஒன்றுமேயில்லை” சமாதானப்படுத்தினான் நூவன்.

“நீ வரலன்னா நானும் போகப்போறதில்லை” என்று மீண்டும் நிகா ஆரம்பிக்க,

“இங்கபாரு மறுபடியும்  ஆரம்பிச்சுட்டா. சரின்னு சொல்லிடு ரஞ்சனி” நூவன் விளையாட்டாக பேச, சரியென்று சம்மதித்தாள் அவள்.

முடிந்த அளவு தங்களது பொருட்களை எடுத்துக்கொண்டவர்கள், ஆனந்தியிடமும், ராமுதாத்தாவிடமும் விடைபெற்றனர்.

“காம்ப்ளான் பேபி உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன். வார இறுதில உன்னை பார்க்க கண்டிப்பா வருவேன்” ரஞ்சனி கூற,

“நானும்தான்கா” என்றவள் அவளை அணைத்துக் கொள்ள, தானும் அணைத்து அவளுக்கு முத்தமிட்டாள் ரஞ்சனி.

அவளை அணைக்கும் போது முதுகை துளைக்கும் பார்வையை உணர்ந்து திரும்பிப்பார்க்க, அவளை அழைத்துச்செல்ல பின்னால் நின்றிருந்தான் கிரி. நிகா பெட்டியை காரில் ஏற்றிக்கொண்டிருக்க, நூவன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்தான்.

அவனது பார்வை புரிந்தாலும் கண்டு கொள்ளாது நடந்தவளுடன், சேர்ந்து நெருங்கி நடந்தவன் ,

“முத்தமெல்லாம் காம்ப்ளான் பேபிக்கு தானா?? காம்ப்ளான் பாய்க்கு கிடைக்காதா?? ” கிரி ரகசியம் பேச, வெட்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

“நீ வரலன்னு‌சொன்னா நான் விட்டிருப்பேனா?? உன்னை தூக்கிட்டு போயிருப்பேன் ரனு. இனி ஒவ்வொருநாளும் உன்கூடவே இருக்கப் போறேன். என்ன பண்ணுவ??” என்றவன் அவளது கைகளை பிடித்துக்கொள்ள, வெட்கத்துடன் கைகளை உருவிக்கொண்டு , ஓடி விட்டாள் ரஞ்சனி.

பின்னால் அமைதியாக அமர்ந்திருந்த நிகாவைப்பார்த்து திரும்பிய நூவன்,

“நிவேதா அத்தையை பார்க்கறத தவிர்க்கனுங்கறதுக்காக தான வரமாட்டேன்னு சொன்ன நிகாபேபி?” என்று கேட்க, அவனது கேள்வியில் பாறைக்கு வியர்த்திருந்தது. ஆம், நிகாவின் கண்களில் இருந்து முதன்முறையாக கண்ணீர் சொட்டுகள் உருண்டோட, துடைக்க நீண்ட அவனது கைகளை தடுத்திருந்தாள் அவள்.

என் மௌனத்தை திறக்கும் சாவி உன்னிடம்…. என் ஆயுள் தீரும் வரை மாறாது உன் இடம்….

திமிராகும்……

அத்தியாயம்-21:

அவனது கைகளை தட்டிவிட்டவளின் செய்கையில் , அவளது வேதனையின் அளவு புரிந்ததால், அதன்பின்பு எதுவும் பேசி அவளை தொந்தரவு செய்யாது, அமைதியாக அமர்ந்து கொண்டான் நூவன்.

பின்பு ரஞ்சனியும், கிரியும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள, அருகில் அமர்ந்திருந்த நிகா எதுவும் பேசாது இறுகிய முகத்துடன் வருவதை பார்த்து கொண்டு வர மட்டுமே ரஞ்சனியால் முடிந்தது.

அவளுக்கு நன்றாகவே புரிந்தது, நிகாவின் தாய்க்கு துரோகம் இழைத்தவர்களின் வீட்டில் அவளால் எப்படி ஒன்ற முடியுமென்று. அவளது தர்மசங்கடமான நிலையை புரிந்து கொண்டவளாக, அவளது கைகளை பிடித்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.

எந்த ஒரு சந்தர்ப்பத்தை தான் எதிர்கொள்ள கூடாதென்று நினைத்திருந்தாளோ, அந்த சந்தர்ப்பம் வலிய தன்னை தேடி வருவதை நினைத்து, ஆதங்கத்துடன் அந்த பயணத்தை எதிர்கொண்டாள் நிகா.

நால்வரின் எண்ணங்களும் வெவ்வேறு திசையில் பயணிக்க, நேரத்தே நிவேதாவின் வீடும் வந்து சேர்ந்தது.

வீடுவந்து இறங்கியவர்களை வரவேற்க யாருமில்லை, அதை அவர்கள் எதிர்பார்க்கவுமில்லை. ஆனால் வேலையாட்கள் கூட இல்லாமல் நிசப்தமாக இருந்தது, கிரிக்கு சங்கடமாக இருந்தது.

“இது நம்ம வீடுதானா??” என்றுகூட நினைத்தான். அவனது சங்கடத்தை போக்கவென்றே, அவர்கள் வீட்டு சமையல்காரர் அங்கு வர,

“வேலண்ணா, இங்க வாங்க” என்றழைக்க, வேகநடை போட்டு வந்தார் அந்த மத்திமவயது சமையல்காரர்.

“இந்த பெட்டிங்களை எடுத்துட்டு போய், நம்ம அவுட்டசில வச்சுடுங்க. எங்க மற்ற வேலைக்காரங்களை காணோம்??” பெட்டியை எடுத்து கொண்டிருந்தவரிடம் கேட்டான்.

“இன்னைக்கு நம்ம வயல்வெளில அறுவடை பூஜை நடக்கறத மறந்துட்டியா கிரி?” என்றவாறு நடந்து வந்தார் நிவேதா. அவரது பார்வையில் பெட்டியை எடுத்துக்கொண்டு , அங்கிருந்து நகர்ந்துவிட்டார் வேலு.

அதுவரை அவர்களுடன் நின்று கொண்டிருந்தவன், வேகமாக அன்னையின் அருகில் செல்ல, நூவனும் அவன் பின்னோடு சென்றான்.

நூவனைப்பார்த்தவர் “அடடே நீயும் வந்திருக்கியா? வா நூவா” இருவரையும் உள்ளே அழைத்தவர், மறந்தும் பெண்களின் புறம் திரும்பிப்பார்க்கவில்லை.

“அத்தை நான்மட்டுந்தான் உங்க கண்ணுக்கு தெரியறேன் போலயே?”  அவனது கேள்வியில் கிரி சிரிக்க, நூவனின் காதுகள் நிவேதாவின் கைகளில் அகப்பட்டுக்கொண்டிருந்தது.

“வர வர ரொம்ப பேசறடா நீ?? சரி நானும் தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளையாச்சேன்னு, கொஞ்சம் உன்னை பேசவிட்டா நீ என்னையே கேள்விகேக்கற?” அவர் திருகிய திருகலில் நிஜமாகவே வலித்தது நூவனுக்கு.

ரஞ்சனிதான் நிவேதாவை பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தாள். ஒரு அலங்காரமும் இல்லாது, இந்த வயதிலும் தூசு தட்டிய கற்சிற்பமாக இத்தனை லட்சணத்துடனும், மிடுக்குடனும் இருந்தவரை பார்த்து மரியாதை தானாகவே, எவர் மனதிலும் தோன்றும்படி இருக்கும் இவர், இன்னொரு பெண்ணின் வாழ்வை தட்டி பறித்தவரென்று, சத்தியம் செய்து  சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள்.

நிவேதாவின் முகத்தை கூட பார்க்காது, அவரது குரலால் ஏற்படும் ஒருவித அசௌகரிய உணர்வையும் தவிர்க்க இயலாது, தனது கவனத்தை முயன்று, அந்த வீட்டின் உள்நுழைவில் வைக்கப்பட்டிருந்த, செயற்கை நீருற்றை பார்வையிட்டுக்கொண்டிருந்தவளை, மெதுவாக சுரண்டினாள் ரஞ்சனி.

அதை கண்டுகொள்ளாது அவள் நின்றிருக்க,

“அக்கா…” மெதுவாக அழைத்தாள்.

“ப்ச் என்னடி??” இவள்வேறு நேரம்காலம் புரியாது என்று நினைத்தவளாக, ஒரு முறைப்புடனே அவளை பார்த்தாள்.

“இன்னைக்கு நடந்த சம்பவத்துல நினைவில்லாம போயிடுச்சும்மா” கிரி அன்னைக்கு பதிலளித்து கொண்டிருக்க, நூவனின் காதுகள் இன்னும் விடுபடாதிருந்தது.

“அக்கா, இவங்கதான் உங்க குடும்பத்தோட அழிவுக்கே காரணுன்னு சொன்னா யாராச்சும் நம்புவாங்க??” ரஞ்சனியின் கேள்வியில், நிகா திகைத்து நின்றாள்.

அவளது திகைப்பிற்கும் காரணமிருந்தது. ரஞ்சனியின் நினைவில் செயலில் என அனைத்திலும் நிகாவைப்பற்றிய நலனும், அவள் மீதான அன்பும் மட்டுமே எப்பொழுதும் நிறைந்திருக்கும். அவளது வாய்மொழியாக இத்தகைய பேச்சை கேட்க, ஒருபுறம் திகைப்பாகவும் மற்றொருபுறம் கஷ்டமாகவும் இருந்தது.

ரஞ்சனிக்கும் பேசிய பின்பே தான் செய்த தவறு புரிய,

“அச்சோ அக்கா.. சா…”சாரி என்று கேட்டுமுடிக்கும் முன்பே ,

“வேண்டாம் ரஞ்சு”என்றுவிட்டாள் நிகா.

“இப்ப இருந்தே மாமியார பிடிச்சா நல்லதுதான்” என்றும் சேர்த்துக்கூற, கண்களில் நீர்கோர்த்துவிட்டது ரஞ்சனிக்கு.

“அய்யோ அக்கா..” அவள் மேலும் பேசவர, வாய்மீது விரல் வைத்தவள்,

“நாம அப்பறமா பேசிக்கலாம். அவங்க இங்க வராங்க பாரு” என்று கூற, நிவேதா அவர்களின் அருகே வந்தவர்,

“நீங்க ரெண்டு பேரும் அங்க தங்கிக்கங்கம்மா. வேற ஏதும் உதவி வேணுன்னா, கிரிகிட்ட சொல்லுங்க” ஏதோ வந்தவர்களை கூப்பிட வேண்டுமே என்கிற தொனியில் பேசிய நிவேதாவின் பார்வை ஒருநிமிடம் நிகாவின் மேல் அழுத்தமாக பதிந்து மீள, அவளும் சலிக்காது அந்த பார்வையை எதிர்கொண்டவள், ரஞ்சனியின் கையை இறுகபிடித்து தன்னை சமநிலையில் வைத்துக்கொண்டாள்.

அடுத்த நிமிடம் சரியென்று மட்டும் தலையாட்டியவர்களை , காணகூட நிவேதா அங்கு நிற்காது , உள்ளே சென்றிருந்தார். ரஞ்சனியின் கைகளை விட்டுவிட்டு நிகா முன்னே நடந்து சென்று விட்டாள்.

“அக்கா..” பின்னோடு ரஞ்சனியும் ஓட முயற்சிக்க, அவளது கையை பிடித்து தடுத்திருந்தான் கிரி. அவனை கேள்வியாக பார்த்தவளை, அவளுக்கு முன்னால் சென்றிருந்த நூவனை காட்டினான்.

“அவர் போனாலும் பரவாயில்லை. என் கையை விடுங்க. இப்போ அக்கா இருக்குற மனநிலைல நூவன் அண்ணா பேசினாலும் பிரச்சனைதான் ஆகும்” துடித்தவளை பார்த்தவன், அவளது கைகளை விட்ட மறுநொடி, அவள் சென்ற திசையில் ஓடினாள் ரஞ்சனி.

கிரியும் சென்று பார்க்க, நிகா அங்கு இல்லாது தேடிக்கொண்டிருந்தாள் அவள். அவனும் தேட, பக்கவாட்டு தோட்டக்கதவு திறந்திருக்க, நிகா அங்கு அமர்ந்திருப்பதும், நூவன் அவளருகே அமர்வதும் தெரிந்தது. ரஞ்சனி பதற்றத்துடன் அங்கு பார்த்துக்கொண்டிருக்க, அவளை தொந்தரவு செய்யாது அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டான்.

“அந்த ஊருக்கு போனதிலிருந்தே இந்த நரேன் என்னை மறந்துட்டாங்க??” மகனின் பிரிவில், அங்கலாய்த்தார் கௌசல்யா.

அவரது கூற்றில் இந்திரசேனா சிரித்தவர்,

“இப்பவே மருமகப்பொண்ணு மேல ரொம்ப பொறாமை வருது போலவே கௌசி??” என்று கேலி செய்ய, அவரது கையில் வைத்திருந்த கோப்பை பிடுங்கி மேஜையில் போட்டார் அவரது சகதர்மினி.

“நான் என்ன பேசறேன்?? நீங்க எதை இழுக்கிறிங்க??”

” அவளைப்பார்க்க மட்டும் போல கௌசி. தீனதயாளனோட ஆடிட்டிங் முழுசா இவன்தான் பார்த்துக்கொடுக்கனும். நிச்சயம் அந்த வேலையை அவன் முழுசா செஞ்சு முடிக்கவே , ஒருமாதம் ஆகும். வேலை பிஸில தான் இருப்பான்” என்று சமாதானப்படுத்தி கொண்டிருக்கும் வேளையில், அவரது பி.ஏ கதவை தட்டவிட்டு அனுமதிக்காக காத்திருக்க, உள்ளே வரச்சொன்னார் அவர்.மிக அவசரமான நேரத்தை தவிர, வீட்டிலிருக்கும் அலுவலகத்திற்கு இந்திரசேனாவின் பி.ஏ வரமாட்டார்.

“அப்படி என்ன முக்கியமான விஷயம்??” என்ற யோசனைக்கு சென்றார் கௌசல்யா.

“சார். உள்துறை அமைச்சர் தயானந்த் உங்கள இன்னைக்கு பார்க்கனுன்னு அப்பாயின்மென்ட் கேக்குறாரு சார். இங்க சென்னைல தான் இருக்காராம்” வேகமாக தகவல் கூற,

“அவர்கொடுத்த வேலை முடிஞ்சதுதானே?? நரேன்தான முடிச்சிட்டு வந்தான்” மனதில் நினைத்தாலும்,

“கண்டிப்பா உடனே பார்க்கலாம். எங்க வரனுன்னு கேளுங்க??” என்று கூறினார்.

“இல்லை சார். அவர் உங்க வீட்டுக்கு வரேன்னு சொல்லியிருக்கார். நீங்க அனுமதி கொடுத்தா, இன்னுமொரு பத்து நிமிடத்தில் வந்துருவேன் சொல்லியிருக்காரு. இந்த மீட்டிங்க பற்றி வெளிய தெரியாம, அன்ஆஃபிஷியலா மீட் பண்ணனும்னு கேட்டுருக்காரு சார்” இந்த தகவலில், விஷயம் வேறு என்பதை புரிந்து கொண்டவராக, சரியென்று சம்மதித்தவர், அவரை வரவேற்க தயாரானார்.

“நிகா… ” நூவனின் மென்மையான குரல், அங்கு நிலவிய அமைதியில் அபஸ்வரமாக ஒலித்தது.

“இப்ப எதுக்கு இங்க வந்திங்க?” கோபத்தை முயன்று‌ அடக்கி , அவள் பேசுவது நன்றாகவே புரிந்தது.

இருந்தாலும் “என்னால புரிஞ்சுக்க முடியுது நிகா” அவளை சமன்படுத்தும் முயற்சியில் இறங்க,

“என்ன புரியும் உங்களுக்கு?? இல்ல… என்ன புரியுதுன்னு கேக்கறேன்?? தாய்-தந்தை இல்லாம வாழ்றது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா? அதுவும் தனியா ஒரு பொண்ணு இந்த சமூகத்துல வாழ்ந்து காட்டறது எவ்வளவு சவாலான விஷயன்னு உங்களுக்கு தெரியுமா நூவி?”

“எங்கம்மாக்கு என்ன நடந்ததுன்னு என்னால தட்டிக்கேட்க கூட முடியலை?? இதுக்கெல்லாம் காரணகர்த்தாவா இருந்த அப்பா உயிரோடவே இல்லை? சரி, நமக்கு அடைக்கலம் கொடுத்த இடத்துக்கு நல்லது செய்யலான்னு இங்க வந்தா, இந்த உறவுத்தொல்லைகளை தாங்கிக்கவே முடியலை?? மதர் கற்றுக்கொடுத்த அவ்வளவு சகிப்புத்தன்மையும் மீறி நான் இங்க வந்ததுல இருந்து ரொம்பவே உணர்ச்சி வசப்படறேன்? ஏன்னு என்னால புரிஞ்சுக்கவே முடியலை?”

“எல்லாத்துக்கும் மேல, இப்ப இங்க வந்து நான் தங்க வேண்டிய சூழ்நிலை. இதை என்னன்னு சொல்றது??

‘கொடிது கொடிது வறுமை கொடிது..‌ அதனினும் கொடிது… அன்பிலா பெண்டிர் கையால் அறுசுவை உணவு உண்பது’ னு ஒளவையார் எனக்காகவே பாடியிருக்காங்க போல, நான் நேரடியாக அந்த அனுபவத்தை உணரனுன்னு. என்னை பிடிக்கறதுக்கான எந்தவித சாத்தியக்கூறும் இல்லாத ஒரு இடத்துல இருக்கனுங்கறது எவ்வளவு கொடுமை. பிடிக்காதவங்களால உபசரிக்கப்படறது , நினைக்கவே அருவெறுப்பாயிருக்கு ” இவ்வளவு வேதனையிலும், பேசியவளின் கண்கள் கலங்கியிருந்தே தவிர, கண்ணீர் துளிகளை வெளியிடாது கண்களை பெரிதாக்கிக் கொண்டு அமர்ந்திருந்தவளை, காண கழிவிரக்கம் மேலோங்கியது நூவனுக்கு.

“உங்கம்மா பட்ட கஷ்டத்துக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் நிகா” என்றவன் அவளை இழுத்து அணைத்து ஆறுதல்படுத்த வர, அவனது கையை தட்டிவிட்டவளின் கை, அவனது கன்னத்தில் இறங்கியிருந்தது.

நொடிக்கும் குறைவாக நடந்து விட்ட செயலில், அதிர்ந்தவன், அடுத்த நொடி, கோபத்தில் அவளது பின்னந்தலையை பிடித்து முகத்தை நிமிர்த்தியிருக்க, சூழல் விபரீதமாவதை கண்டு, கத்தப்போன ரஞ்சனியின் வாயை மூடியிருந்தான் கிரி.

“இவன் எப்போ எழுந்து வந்தான்?” கண்களில் கேள்வியுடன் அவனை பார்க்க,

“காதலர்களுக்குள்ள வர பிரச்சனைக்கு அவங்களே தீர்வும் கண்டுபிடிப்பாங்க. அங்க உட்கார்ந்து உன்னைதான் கவனிச்சுட்டுருந்தேன். நீ கத்தப்போறங்கற என் அனுமானம் பொய்யாகலை, அதான் வந்து உன்னை நிப்பாட்டினேன். கொஞ்சம் பொறுமையா அங்க கவனி” என்றவன் அவளை திருப்பவிட்டு அங்கு கவனிக்க சொன்னான்.

நிமிடத்திற்கும் குறைவாகவே நூவனின் கோப முகம் வந்து போக, அடுத்த அவளது முகத்தை தனது நெஞ்சில் அழுத்தியிருந்தான் அவன்.

அத்தனை நாள் அழுத்திக்கொண்டிருந்த மனப்புழுக்கமும், வேதனைகளும் அவனது அந்த அழுத்தத்தில் காணாமல் போவதைப்போல உணர, தயங்காது அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டவளின் கண்களிலிருந்து கண்ணீர் குளமாய் உடைப்பெடுக்க, நிகாவும் பதிலுக்கு அவனை அணைத்துக்கொண்டதை பார்த்த ரஞ்சனி, அதற்கு மேல் அங்கு நிற்காது, சற்று முன்பு கிரி அமர்ந்திருந்த இடத்தில் வந்து அமர்ந்துகொண்டாள்.

கிரி இப்பொழுது அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே அவளருகில் வந்து அமர, தள்ளி அமர்ந்து கொண்டவளை பார்த்து சிரிப்பை அடக்க முடியாது, கைகளால் வாய் மூடி சிரித்துக்கொண்டிருந்தான்.

“வாங்க சார்… உங்களை பார்த்ததுல ரொம்பவே சந்தோஷம்” அவசரமாக தருவிக்கப்பட்ட பூங்கொத்துடன் தம்பதியாக தயானந்தை வரவேற்றனர் இந்திரசேனாவும், கௌசல்யாவும்.

சிறு புன்னகையுடன் அவர்களது வரவேற்பை ஏற்றுக்கொண்ட தயானந்திற்கு, மனம் சற்று முரண்டினாலும், மகளுக்காகவென்று  மனதை தேற்றிக்கொண்டவர், புன்னகை முகமாகவே வீட்டிற்குள் சென்றார்.

சிறிதுநேரம் வழக்கமான உபசாரங்களில் கழிய, சற்று தயக்கத்துடனே இந்திரசேனாவின் முகத்தை பார்ப்பதும், தயங்குவதுமாக இருந்தவரை கண்டு ஆச்சரியமாக இருந்தது இருவருக்கும்.

கௌசல்யா அதை உணர்ந்தவராக,

“என்னங்க, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க பேசுங்க” என்றவர், இருவரிடமும் விடைபெற்று எழப்போக,

“இல்லை நீங்களும் இருங்க. இதுக்குமேலயும் விஷயத்தை தள்ளிப்போட நான் விரும்பல” அவசரமாக இடைமறித்தார் தயானந்த்.

சேனாவும் “உட்காரு கெளசல்யா” அவரை அமரச்சொன்னவர்,

” நீங்க தயங்காம சொல்லுங்க சார்” விஷயத்தை ஓரளவு ஊகித்திவாறே பேசினார் இந்திரசேனா.

“எனக்கு இருக்குறது ஒரே பொண்ணு. பெயர் ரூபாலி” என்றவர் அவளது புகைப்படத்தை எடுத்து கௌசல்யாவிடம் கொடுத்தவர், சேனாவை சந்தித்ததிலிருந்து நடந்த அனைத்தையும் கூறினார்.

“நாளுக்குநாள் அவ உங்க பையன் நினைவிலேயே உருகிப்போறது, என்னால தாங்கிக்க முடியலை சார். அவ அழகுக்கும் குணத்திற்கும், எப்படியெல்லாம் வாழப்போறான்னு கனவு கண்டேனோ, எல்லாம் கானலா போயிடுமோன்னு பயமா இருக்கு. கடைசி வரைக்கும் உங்க பையனை நினைச்சுக்கிட்டே வாழ்ந்துடறேன்னு சொல்றா” ஜுவனில்லாத அவரது பேச்சில், என்ன இது தர்மசங்கடமென்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் இருவரும். ஏனோ கௌசல்யாவிற்கு மட்டும், ரூபாலி பற்றி கேள்விப்பட்டதிலேயே மனதிற்கு மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் அதை காட்டிக்கொள்ளவில்லை.

“தப்பா எடுத்துக்காதிங்க சார். நரேன் வேற ஒரு பொண்ண விரும்பறதா சொல்றான். அவங்க கொஞ்சம் வேண்டப்பட்ட குடும்பமும் கூட, இதுல உங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை?” என்றார் இந்திரசேனா‌.

“அவர் காதலைப்பற்றி எனக்கும் தெரியும் சார். இருந்தாலும் ஆயிரத்தில் ஒரு வாய்ப்பாக, நீங்க எடுத்துச்சொல்லி உங்க மகனை ஒத்துக்க வைக்க, எதுவும் வாய்ப்பிருக்கான்னு தெரிஞ்சுக்க வந்தேன் சார்” இதை கேட்கும்போதே அவர் மிகவும் சங்கடமுறுவதை நன்றாகவே உணர முடிந்தது. மகள் மீதான அவரது பாசமும் புரிந்தது. அவர் நிலையில் இருந்து பார்க்கும்போது அவர் எடுக்கும் முடிவுகள் சரியாக இருந்தாலும், சேனா இதற்கு சம்மதிப்பானென்று அவருக்கு தோணவில்லை.

“இல்…”இல்லையென்று மறுத்து பேசவந்தவரை தடுத்த கௌசல்யா,

“இதுக்கு காலம்தான் பதில் சொல்லனும் சார். ஒருவேளை அப்படி ஏதும் சந்தர்ப்பம் கிடைச்சா, கண்டிப்பா நான் நரேன்கிட்ட பேசிப்பார்க்கறேன்” என்று கூறிவிட்டார். அவர் கொடுத்த அந்த அரை சதவிகித நம்பிக்கையிலேயே, தயானந்தின் முகம் மலர்ந்து விட, சந்தோஷத்துடனே அவர்களிடம் விடைபெற்றார்.

அவர் கிளம்பிச்சென்றதும்,” உனக்கென்ன கிறுக்கு பிடிச்சிருச்சா கௌசி? அவருக்கு ஏன் இப்படி பொய்நம்பிக்கை கொடுத்த?” கடிந்து கொண்டார் அவர்.

“நான் வேணும்ன்னு அப்படி செய்யலங்க. அவர் சொன்னதை கேட்டே எனக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிச்சு போச்சு. பாவம், எவ்வளவு மனக்கஷ்டத்தோட வந்து சொல்லிட்டு போறாரு. ஒருவார்த்தை அவருக்கு சாதகமாக சொன்னா குறைஞ்சா போயிடும்? அதான் அப்படி சொன்னேன். அதுவுமில்லாம மந்திரிய எதுக்கு பகைச்சுக்கனும்? நம்மால முடியலன்னு அப்பறமா கூட சொல்லிக்கிடலாம். நம்ம வீட்டுக்கு வந்தவரை சந்தோஷமா அனுப்பி வச்சோங்கிற நிம்மதியும் இருக்கும்” நீளமாக நீட்டி முழக்கிய மனைவியை பார்த்து சிரித்தவர்,

“நல்லாதான்டி பேசுற??”  என்று கிண்டலடிக்க,

“ம்ம்.. வக்கீல் பொண்டாட்டி இந்தளவுக்கு கூட பேசமாட்டேனா என்ன??”  கௌசல்யாவும் பதில் கொடுக்க தயங்கவில்லை.

அவளாக அழுது ஓயும் வரை, அவளை நெஞ்சை விட்டு நகற்றவில்லை நூவன். சற்று நேரத்திற்கெல்லாம் அவளிடம் அசைவில்லாது போக, குனிந்து பார்த்தவன் சிரித்து விட்டான். அழுது ஓய்ந்தவள், அவனது சட்டையை இறுக பற்றிக்கொண்டு அப்படியே தூங்கியிருந்தாள். அவளை மெதுவாக விலக்கியவன், கவனமாக தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் சென்றான்.

“நான் உன்னைக் கல்யாணம் செய்துகிட்டாலும் அது பொம்மைக்கல்யாணமா தான் இருக்கும் நிவேதா”  ஸ்ரீனிகாவின் முகத்தை பார்த்த அந்த நொடியிலிருந்து, பழைய நினைவுகள் மேலேழும்ப ஆரம்பிக்க, ஸ்ரீனிவாசனின் குரல்  திரும்ப திரும்ப மனதிற்குள் எதிரொலித்து நிவேதாவை நிலைகுலையச்செய்தது.

என்னைச்சூழ்ந்து மூழ்கடிக்கும்  வேதனை ஆழி…….

உன்னுயிர் காதலால் ஆனது நீர்குமிழி……

திமிராகும்……

அத்தியாயம்-22:

“பரவாயில்லை வாசுமாமா, நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றியாகனும். இந்த கல்யாணம் எப்படி நடந்தாலும், வாழ்க்கை எப்படி இருந்தாலும் எனக்கு சம்மதம்தான்” நிவேதாவின் பதிலில் , இருந்த கடைசி வழியும் அடைபட்டுப்போக, கொந்தளித்தார் வாசன்.

“படிச்ச பொண்ணு தான நீ?? உன் மேல எவ்வளவு மதிப்பு வச்சுருக்கேன். “அறிவாளிய சத்தியத்தால கட்டிப்போடனும்”னு என்னைக்கோ நம்ம  முன்னோர்கள் சொன்னது, உன் விஷயத்துல கண்ணாற பார்க்க வைக்கறியே நிவேதா? என் சரிபாதியா இன்னொருத்தி இருக்கா அதை புரிஞ்சுக்கோ. அவளை நான் அங்க விட்டு அவசரமா ஓடிவந்தது தான் இப்ப தப்பா போச்சு. எப்படி உன்னால இதுக்கு சம்மதிக்க முடியுது?? ஒரு தனி தொழில் சாம்ராஜ்யத்தையே உருவாக்கி காட்டியவன்னு, உன்னை பார்த்து எனக்கு உன்மேல வந்த மரியாதையை நீயே கெடுத்துக்கப்பார்க்குறியே? ஜெயப்பிரகாஷூக்கும் (ஜேபி) இந்த திருமணத்துல துளியளவும் இஷ்டம் கிடையாது. தங்கையை  எப்படியெல்லாம் வாழ வைக்கனும்னு அவன் ஆசைப்பட்டிருப்பான். கொஞ்சம் யோசிச்சுப்பாரு. உனக்கும் இதில் இஷ்டமில்லைன்னு ஒரு வார்த்தை சொல்லு போதும். அம்மா அடுத்து உன்னை வற்புறுத்த மாட்டாங்க. எனக்கும் நிம்மதியா இருக்கும்” தன் காதலுக்காக மன்றாடினார் ஸ்ரீனிவாசன்.

“என்னால முடியாது வாசு. நீங்க யார்கூட வேணுன்னாலும் வாழுங்க. ஆனால் நானும் உங்க பொண்டாட்டிங்கற நினைவோடயே வாழ்ந்துடுவேன்” திட்டவட்டமாக பேசிய நிவேதாவை கொல்லும் ஆத்திரம் வந்தாலும், அவளது நிழலை கூட தொட பிடிக்காதவராக,

“ச்சை…” என்ற ஒற்றை வார்த்தையில் வெறுப்பை காட்டிவிட்டு வெளியேறிவிட்டார் வாசன்‌.

அவர் அப்பொழுது ஒலித்த அந்த ஒற்றைச் சொல், இப்பொழுதும் ஒலித்து , நிவேதாவை நினைவுக்கு மீட்டு வந்தது.

“நீங்க அவ்வளவு பேசியும் கேட்காதது என் தப்புதான் வாசு” காலங்கடந்த மன்னிப்பு  அவரை சேரப்போவதில்லை, என்பதை அறிந்தாலும், மனதார மீண்டும் மன்னிப்பு கேட்டார் அவர்.

“அச்சோ அக்காக்கு என்னாச்சு? மச்சி என்னாச்சுடா??”  பதறியவர்களை பார்த்து, அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான்‌.

“ரஞ்சனி நீ போய் படுக்கைய மட்டும் கொஞ்சம் சரி பண்ணி வை” அவன் சொல்லி முடிக்கும்போது ஓடியிருந்தாள் அவள்.

“மச்சி டாக்டரை கூப்பிடவா? மயக்கம் போட்டாளாடா?அவளுக்கு விருப்பமில்லாம இங்க கூட்டிட்டு வந்ததுதான்டா தப்பு” படுக்கையில் அவளை கிடத்திவிட்டு திரும்பியவனிடம் படபடத்துக் கொண்டிருந்தான் கிரி.

“ஷ்… ” அவனது வாயில் கை வைத்து, அவனை வெளியே இழுத்து வந்தவன்,

“அவ தூங்குறா மச்சி. மனசு விட்டு அழுது பேசுனதால, அவளோட அழுத்தமெல்லாம் குறைஞ்சு தூங்கிட்டாடா. திரும்ப அவ எழுத்துக்கும் போது, டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகலாம். எப்படியும் அவளோட கைக்கு ஸ்கேன் எடுக்க சொல்லியிருக்காங்க, அப்ப கூட்டிட்டு போயிடலாம்” சற்று தளர்வாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான். ரஞ்சனி உள்ளறையில் அவளுடன் தான் இருந்தாள்.

“நானும் யோசிக்காம பேசிட்டேன்கா. என் மனசுல யார் இருக்காங்க முதற்கொண்டு தெரிஞ்சு வச்சுருக்கிங்க. நான் உங்க அளவுக்கு, புரிஞ்சு நடக்காம போயிட்டேனே” அவளருகே சற்று நேரம் அமர்ந்தவள், வெளியில் வந்து பார்க்க, கிரியும் நூவனும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

ரஞ்சனி வந்ததை கவனித்த கிரி, ” சாப்பாடு தண்ணீரெல்லாம் அங்க இருந்து வேலண்ணா கிட்ட குடுத்து விடறேன் ரஞ்சனி. இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் நல்லா ரெஸ்ட் எடுங்க. நாளைக்கு காலைல ஐயர் வந்து அங்க அப்பாக்கு வேண்டிய சடங்கெல்லாம் செய்ய ஆரம்பிச்சுடுவாரு. அவ எழுந்த பிறகு அவளுக்கு ஞாபகம் மட்டும் படுத்திடிறியா??” உதவியாக கேட்பவனிடம், மறுத்தா பேச முடியாமல், சரியென்று தலையசைத்தாள்.

ஆனால் நூவனோ, “வேண்டாம்டா அவ இப்ப இருக்குற கண்டிஷனுக்கு, வர்ற சொந்தக்காரங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அதுமில்லாம அவளும் கலந்துகிட்டா, ஆற்றங்கரை மண்டபத்துக்கு வர்ற மாதிரி ஆகும். கொஞ்சம் நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்” அவளது உடல்நலனில் அக்கறை காட்டி பேச,

“எனக்கு மட்டும் அவமேல அக்கறை இல்லையா? அவளும் எங்கப்பாக்கு பொண்ணு தான்டா. உறவுக்காரங்க தெரிஞ்சுக்க  இதை விட நல்ல சந்தர்ப்பம் அமையாது. அதை கூட விடு, இதுல கலந்துகிட்டா அவளுக்கும் ரொம்ப நல்லதுன்னு சொன்னால்தான் அவளை கலந்துக்க சொன்னேன்” கிரி எதிர்வாதம் செய்ய, வேறுவழியில்லாது நூவன் தான் விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று.

“சரி, அப்ப நான் கிளம்பறேன் ரஞ்சனி” என்றவன் முன்னே நடந்துவிட, கிரி பின்தங்கியவன்,

“கவலைப்படாத ரனு. சீக்கிரம் எல்லாம் சரியாகிடும். ஸ்ரீனிகாவை நான் கஷ்டப்பட விடமாட்டேன். நாளைக்கு நீயும் வர இல்லையா?” என்று கேட்டான்.

“அதுவந்து .. நாளைக்கு நான் டெக்னால ரிப்போர்ட் குடுக்கனும்… அதனால மதியத்துக்கு மேலதான் வரமுடியும்” ஒருவழியாக சொல்லிவிட்டாள். அவளை ஒரு பார்வை பார்த்தவன், அமைதியாக திரும்பி செல்ல, அந்த அமைதி அவளை ஏதோ செய்ய,

“கொஞ்சம் நில்லுங்க. நான் வேணுன்னுலாம் இப்படி செய்யல. இது முதல்லயே ஒத்துகிட்ட வேலை அதுதான்” அவன் பின்னால் ஓடிவந்து சொன்னவளை, பார்த்து அவன் புன்னகைக்க, தலையை குனிந்து கொண்டாள் ரஞ்சனி.

அவள் அருகே வந்து அவளது கைகளை பிடித்துக்கொண்டவன்,” எனக்காக இவ்வளவு யோசிக்கிறியா ரனு? இதுவே எனக்கு போதுன்டா. நீ வர வரைக்கும் நான் சாப்பிடாம காத்திருப்பேன்” அவளது சம்மதித்திற்காக, அவளது முகத்தை பார்க்க, வெறும் தலையுருட்டலே பதிலாக வந்தது.

“என் முகம் அவ்வளவு அசிங்கமாவா இருக்கு? நிமிர்ந்து பார்க்கவே மாட்டேங்கிற ரனு? இந்த வெட்கப்படற ரஞ்சனியை விட, டெய்லரை ஊசியால குத்துன வீராங்கனையை தான் எனக்கு பிடிச்சுருக்கு” அவளை வம்பிழுக்க, அது வேலையும் செய்தது.

“ரொம்பதான் உங்களுக்கு. நான் அக்காகிட்ட போறேன் போங்க” கோபமாக பதிலளித்துவிட்டு, முன்னே நகரத்தான் அவளால் முடியவில்லை. இன்னமும் கிரியின் கைகளுக்குள் தான் அவளது கைகள் பொதிந்திருந்தன.

“இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். அவளை பார்த்துக்கோ ரஞ்சனி. நான் தேவையானதெல்லாம் கொடுத்து விடறேன். எந்த விஷயன்னாலும் என் நம்பருக்கு கால் பண்ணு. இப்ப நீங்க ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுங்க. காலைல நான் வந்து ஸ்ரீனிகாவை கூட்டிட்டு போறேன். இப்போ வரட்டுமா? ” அவளின் அனுமதி வேண்டி நிற்க, சந்தோஷமாக விடைகொடுத்தாள் ரஞ்சனி.

“பாபா ஏன் இப்படி செஞ்சிங்க? ” முதன்முறையாக கோபப்படும் மகளின் கோபத்தில் செய்வதறியாது நின்றிருந்தார் தயானந்த்.

பின்பு ஒருவாறு மனதை தேற்றி கொண்டவராக  “நீ இப்படி இருக்கறத என்னால பார்க்க முடியல ரூபிம்மா. அதனால்தான் கேட்டு போனேன்”

“அவர் மனசுல இன்னொரு பொண்ணிருக்கான்னு தெரிஞ்சும் நீங்க செஞ்சது தப்புப்பா” உடைந்தழுதாள் ரூபாலி.

“அதுக்காக, உன்னை இப்படியே விட சொல்றியா? அப்போ நான் அவங்கள தொந்தரவு பண்ணல. நீ வேற யாரயாச்சும்  கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு. இதோட இந்த விஷயத்தை விட்டுடறேன். எனக்கு என் பொண்ணு வாழ்க்கை முக்கியம்”  மிக உறுதியாக பேசினார் தயானந்த்.

இரவு உணவுநேரத்திற்குதான் நிகாவிற்கு விழிப்பு தட்டியது. இருக்கும் இடத்தை உணர்ந்து கொள்ளவே, ஒரு நொடி எடுத்துக்கொண்டவளுக்கு, உடம்பெல்லாம் அடித்து போட்டார் போன்று இருந்த அசதியெல்லாம் தொலைந்ததை போல் உணர்ந்தாள்.

மெதுவாக எழுந்து ஹாலுக்கு வர, தனது மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனி. நிகாவைப் பார்த்ததும், ரஞ்சு எழ, அமருமாறு சைகை செய்தவள் அவளருகே வந்து அமர்ந்து கொண்டாள்.

“இப்ப பரவாயில்லையாக்கா?”

“ம்ம்.. அடிச்சு போட்ட மாதிரி தூங்கிட்டேன்டி”

“நான் பயந்துட்டேன்கா. நான் என்ன பேசியிருந்தாலும் மன்னிச்சுடுங்க” ரஞ்சு குற்றவுணர்வுடன் பேச,

“ச்சீ.. லூசு.. நீ என்னை என்ன வேணாலும் பேசுடா. உன் அன்புக்கு யாரும் இணையாக முடியாது. ரொம்ப பசிக்குது. சாப்பிட வெளிய போகலமா?” என்றாள் நிகா.

“மணி என்னன்னு பார்த்திங்களாக்கா?? பத்தரையாச்சு, சாப்பாடு கிரி கொடுத்தனுப்பிட்டாரு. கிட்சனையும் செட் பண்ணி கொடுத்துருக்காங்க. ஆனால் முடிந்த அளவு சமைக்க வேணாம், அங்க இருந்து குடுத்து விடறத எனக்காக சாப்பிடுங்கன்னு, கோரிக்கை வச்சுட்டு தான் போயிருக்காரு. அப்பறம் நாளைக்கு பூஜைக்கு கூப்பிட அவரே வரேன்னு சொன்னாருக்கா” விவரங்களை சொல்லி முடித்தாள்.

அவள் சொன்னதை கேட்டுக்கொண்டாள் “நான் எப்படி அங்க வந்தேன். நீ கூட்டிட்டு வந்தியா?” தூங்கிவிட்டதால் அதன்பின்பு நடந்தது அவளுக்கு தெரியவில்லை.

ரஞ்சனி இந்த கேள்வியில் சிரிக்க ஆரம்பிக்க,

“இப்ப ஒழுங்கா சொல்றியா? இல்லை?” அவளது தொடையில் கிள்ளியிருந்தாள்.

“ஆ… ” என்று அலறியவள்,

“அதை ஏன் கேக்கறிங்க?

‘கையில் மிதக்கும் காற்றா நீ’ ன்னு அப்படியே பூப்போல தூக்கிட்டு வந்தது நூவன் அண்ணா தான். ஏன்னா நீங்க அவர்மேலயே தூங்கிட்டிங்க?” அவள் சொல்ல, சங்கட்டமானது நிகாவிற்கு. தனது மடத்தனத்தை நினைத்து நொந்து கொண்டவள், தலையில் கை வைக்க,

“அக்கா..வாங்கக்கா. எனக்கு பசிக்குது.. நானும் சாப்பிடலை, சேர்ந்து சாப்பிடலாம்” அதற்கு மேல் சிந்திக்க விடாது சாப்பிட அழைத்துச்சென்றுவிட்டாள்.

மறுநாள் காலையில் வாசனுக்குரிய பூஜைகள் ஆரம்பிக்க, சொன்னபடி அத்தனை வேலைகளுக்கு நடுவிலும் கிரி வந்து நிகாவை அழைத்துச்சென்றான்.

அவளது வருகையில், வந்திருந்த உறவினர்கள் அனைவரும் சலசலக்க எதையும் கண்டுகொள்ளாது, குடும்பமாக செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முடித்தனர்.

நூவனின் பக்கத்தில் அமர்ந்திருந்த உஷா,” மருமக சூப்பரா இருக்காடா. ஒரு அலங்காரமும் இல்லாம எப்படி இருக்கா பாரு?”

“ம்ம்.. பார்த்துக்கிட்டேதான்மா இருக்கேன்” அவளை விட்டு பார்வையை அகற்றாது பதிலளித்தான் நூவன்.

“போதுன்டா நீ விடுற ஜொள்ளுல, ஐயர் ஹோமம் அணைஞ்சுட போது?” என்று கலாய்க்க,

“ம்மீ…” கண்டனபார்வை பார்த்தான் அவன்.

“அம்மா ஒருத்தி பக்கத்துல இருக்கேன்னு இப்பவாச்சும் உன் கண்ணுக்கு தெரியுதே? அங்க பாரு உங்க அப்பாவும் அவளைதான்டா பார்த்துட்டுருக்காரு?” என்று கூற, ஜேபியும் ஸ்ரீனிவாசனின் வார்ப்பாய் இருந்தவளை தான் பார்த்துக்கொண்டிருந்தார்.

தாயும் மகனும் பேசிக்கொள்வதை பார்த்து, வயிற்றெரிச்சலில் அமர்ந்திருந்தாள் ப்ரிஷா. அன்றைய சம்பவத்திற்கு பிறகு, உஷா அவளிடம் பாராமுகம் காட்டாவிட்டாலும், கண்டிப்பு காட்ட ஆரம்பித்திருந்தார். அது அவளுக்கு மிகுந்த எரிச்சலை கொடுக்க ஆரம்பித்திருந்தது. அதுவுமில்லாது, இங்கு வந்ததிலிருந்து, நூவனின் பார்வை நிகாவையே சுற்றி வட்டமிட்டு கொண்டிருந்ததை பார்த்தவளுக்கு அவளை கொல்லும் ஆத்திரம் வந்தாலும் அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். ஏனென்றால் இன்று இரவு நடக்கும் விருந்திற்கு, அவளது பெற்றோர் வந்து அத்தையிடம் சம்பந்தம் பற்றி பேசப்போவதாக சொல்லியிருந்தனர்.

“பார்க்கறேன் மாம்ஸ், அதுக்கப்பறம் நீங்க என்ன பண்ணறிங்கன்னு ?” மனதிற்குள் வக்கறித்தவளாக அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

பூஜை முடிந்ததுமே, கிரி நிகாவை அவுட்டவுசிற்கு அனுப்பி விட்டான். அன்று மாலை தங்களது குடும்பத்தின் சார்பாக, வயல் விளைச்சலை கொண்டாடும்  விதமாக, ஊர்மக்களுக்கு வைக்கப்படும் விருந்திற்கு மட்டும் கலந்து கொள்ளுமாறு, அழைத்தவனின் அழைப்பை ஏனோ அவளுக்கு மறுக்க தோணவில்லை, சரியென்று சம்மதித்தாள்.

ஊர்மக்களுக்கு தனியாக உபசரிப்பு நடந்து கொண்டிருக்க, உறவினர்களுக்கு வீட்டில் விருந்து உபசாரம் நடந்து கொண்டிருந்தது.

உள்ளே நடந்து கொண்டிருக்கும் விருந்துபச்சார சூழலை விரும்பாதவளாக.. தோட்டத்தின் குழுமையை கண்களால் ரசித்து கொண்டிருந்தாள் நிகா. ரஞ்சனி இன்னும் வரவில்லை. அவள் வந்த பிறகு வருவதாக கூறியவளை, வற்புறுத்தி அழைத்து வந்திருந்தான் கிரி.

“உன்னை யார் இந்த விருந்துக்கு அழைச்சது??” அந்த குரலில் அலுப்புற்றவளாக.. திரும்பி பார்க்காமல் நின்றிருந்தாள்.

“எனக்கு தேவை பதில்…” பதில் சொல்லாமல் இவன் நகரமாட்டான் என்பதை உணர்ந்தவள்… அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு.. உள்ளே நின்று உபசரித்துக்கொண்டிருந்த அவனது அன்னையயும் அருகில் இருந்த கிரியையும் பார்க்க… அந்த பார்வை சொல்லாமல் சொல்லியது.. அழைத்தது யாரென்று.

“அம்மாவா?? கிரியா??… .” அவன் மறுபடியும் பேச்சை ஆரம்பிக்கும் முன்பே..

“மாம்ஸ்….இங்க என்ன பண்றிங்க??” கொஞ்சுங்கிளியாக மிழற்றி கொண்டு அவனது தோளை பற்றி திருப்பினாள் ப்ரிஷா.

அவனை பின்னாலிருந்து பார்த்ததால்… காரிடரின் மூலையை ஒட்டி நின்றிருந்தவளை அவள் கவனிக்கவில்லை. முன்னால் வரவும் அவள் நின்றிருப்பது தெரிய…

“ஹேய்… நீ எதுக்கு இங்க நிற்கிற???”… அவளிடம் சண்டைக்கு வர…. அவளது கேள்வியில் சிரித்தவள்…

“கரெக்டு ரொம்ப நேரமா நிக்கிறேன். எங்க குடு குடுன்னு ஓடிப்போய் உட்கார்றதுக்கு சேர் எடுத்துட்டு வா பாப்போம்..” ப்ரிஷா அவளது நக்கலில் கோபமைடந்தவளாக முகத்தை திருப்பி கொண்டாள்.

“மாம்ஸ்.. உங்க பக்கத்துல நிக்க கூட இவளுக்கு தகுதியில்லை… இங்க ஏன் நிற்கிறிங்க?? வாங்க போகலாம்” அவனது கையை பிடித்து இழுத்தாள் ப்ரிஷா.

அவளது பாவனைப்பேச்சில் மேலும் சிரித்தவள்…

“சீக்கரம் கூட்டிட்டு போயி மாமாவ கவனி கண்ணு… இல்லன்னா கொத்திட்டு போயிடுவேன்”ப்ரிஷாவின் அன்னை போலவே பேசி, நாக்கை துருத்தி கிண்டல் செய்தாள் அவள்.

அவளது கேலியில் மற்றவள் முறைக்க.. அதுவரை அவளது செயல்களை ரசித்துக்கொண்டிருந்தவனின் கண்களில் ரகசிய மின்னல் வந்து போனது. அதைக்கண்டு அவளது முகத்தில் கடுமை குடியேற, அத்தை மகளின் இழுப்பிற்கு நடந்து கொண்டிருந்தவன், அவளை விடாது பார்த்துக்கொண்டே உள்ளே செல்ல, அவனது பார்வை வட்டத்தில் சிக்காது,  இப்பொழுது முகத்தை திருப்பி கொள்வது இவளது முறையாயிற்று.

“போடா…போ … உன் அத்தைமக ரத்தினத்தை கொஞ்சு போ” ப்ரிஷாவை பார்த்த மாத்திரத்திலிருந்து, எரிச்சல் அதிகரிக்க, அவளது நடவடிக்கைகள் தலைவலியை வரவழைத்தது.

அதற்கு மேல் அங்கு இருக்க மாட்டாதவளாக, தோட்டத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

“இங்க எப்ப வந்த ஸ்ஸ்ரீனிகா?” சேனாவின் குரலில் திரும்பிப்பார்க்க, தீனதயாளனின் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து வேலையை முடித்தவனுக்கு, பின்புதான் நிகாவின் வீட்டில் நடந்த விஷயம் தெரிய, நிவேதாவின் வீட்டிற்கு வேகமாக கிளம்பி வந்தவனுக்கு, தோட்டத்தில் இறங்கி சென்று கொண்டிருந்த நிகா கண்களில்பட, நேராக அவளிடம் வந்து நின்றிருந்தான்.

உள்ளே இருந்து கொண்டே நிகாவின் மேல் ஒரு கண் வைத்திருந்த, நூவனுக்கு சேனாவின் வருகை, எரிச்சலை தந்ததென்றால், அவனை நகரவிடாது செய்து கொண்டிருந்த, ப்ரிஷாவின் செய்கைகள் மேலும் எரிச்சலை அதிகரித்தது.

நிகா பதிலளிக்க வாயை திறக்க,”ஹலோ மிஸ்டர் சேனா? உங்களை பார்த்து ரொம்ப நாளாச்சு?” அவனது கையை பிடித்து குலுக்கினான் ஹர்ஷத், நிகாவிடமும் திரும்பி,

“ஹாய் அண்ணி” என்று  புன்னகைக்க, அவனது விளிப்பில் முறைத்தான் சேனா.

“என்ன அண்ணி அப்படி பார்க்குறிங்க? ஓ.. நான் என்ஜே தம்பி ஹர்ஷத். முறைல உங்கள அண்ணிதான் கூப்பிடனும், அதான் அப்படி கூப்பிட்டேன்” சேனாவின் கைகளை விடாது பிடித்துக்கொண்டவன்,

“நீங்க போங்க. நான் சேனா சார்கிட்ட கொஞ்சம் பேசனும்” அவளை அந்த இடத்திலிருந்து வெற்றிகரமாக அனுப்பி விட்டான்.

விடுவிக்க முயன்றும் தோற்றுப்போகிறேன்….

உன் பார்வை  பிடியிலிருந்து……

திமிராகும்……

அத்தியாயம்23:

அன்றைய விருந்துக்கு சற்று தாமதாக வந்திருந்தான் ஹர்ஷத். அவனுக்கு கலந்து கொள்ளும் விருப்பத்தில் இல்லையென்றாலும், ப்ரிஷாவின் அப்பாவும், அவனது தாய்மாமனுமாகிய கருணாகரன், தனது அன்னையிடம், சம்பந்தப்பேச்சை எடுப்பதற்காகவே, அங்கு வந்திருக்கும் சேதியை அறிந்தவுடன், நண்பர்களுடனான கேளிக்கை விருந்திலிருந்து வேகமாக கிளம்பி வந்திருந்தான். அண்ணனது விஷயத்தில் உஷாந்தி என்ன முடிவெடுப்பாரோவென்று சற்று பதட்டமாக தான் இருந்தது அவனுக்கு. அண்ணனின் மனதில் நிகா இருப்பதை சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அதையும் தைரியமாக தனது பெற்றோரிடம் சொல்லிவிட வேண்டுமென்ற சிந்தனையோடு, நிவேதாவின் வீடு வந்து சேர்ந்தவனுக்கு, சேனா வேகமாக தோட்டத்தை நோக்கி நகர்வது தான் முதலில் கண்களுக்கு பட்டது.

“இவன் எதுக்கு இவ்வளவு அவசரமா போறான்?” காரை அப்படியே நிப்பாட்டி விட்டு செல்வதிற்குள், நிகாவிடம் பேச ஆரம்பித்திருந்தான் சேனா. சற்று அருகில் சென்று பார்க்கும்போது தான் அவள் அங்கு நின்றிருப்பது கண்ணுக்கு தெரிய, அங்கிருந்து திரும்பி பார்த்தவனுக்கு, சற்று தொலைவில் நூவனும் இங்கேயே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. அண்ணனின் பார்வையை புரிந்து கொண்டவனாக, முதலில் நிகாவை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தும்  முயற்சியில் இறங்கினான். அவனது முயற்சி பலிக்கவும் செய்தது.

ஹர்ஷத்தின் வார்த்தைகளில் நிகா அந்த இடத்தை விட்டு நகர்ந்ததை கண்டு, கோபமாக வந்தது சேனாவிற்கு. ஆனால் உண்மையில் நிகாவிற்கு அப்போதைய சூழலில் யாருக்கும் பதிலளிக்க மனமில்லாமல் தான் நகர்ந்திருந்தாள்.

“நில்லு ஸ்ரீ…. ஸ்ரீனிகா. ” அவன் முடிப்பதற்குள்ளாகவே, அந்த இடத்தை விட்டு சென்றிருந்தாள்.

கடுப்புடன் திரும்பியவனின் கைகளை இப்பொழுதுதான் விட்டிருந்தான் ஹர்ஷத். அவன் முறைப்பதை கண்டு கொள்ளாது,

“என்ன சேனா சார் இவ்வளவு தூரம் வந்திருக்கிங்க? நம்ம வீட்டுக்கு வரவே இல்லையே? தீனதயாளன் வீட்டுல வேலையெல்லாம் எப்படி போகுது? ஏதும் உதவி வேணுன்னா சொல்லுங்க சார், கண்டிப்பா செய்யறேன்” பேச்சுக்கொடுத்தான் அவன்.

சேனா தற்பொழுது  சற்று மீண்டவனாக,”தேவைப்படும் போது கண்டிப்பா கேட்கறேன் ஹர்ஷத்” புன்னகை முகமாகவே பதிலளித்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான். ஹர்ஷத் அங்கிருந்தே கைகளை உயர்த்தி காண்பிக்க, நூவனின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.

இன்னும் ரஞ்சனி வீடு திரும்பாதது கண்டு கஷ்டமாக இருந்தது கிரிக்கு. மதியமே வருவதாக சொன்னவள் இன்னும் வீடு திரும்பவில்லை.

விருந்துபச்சாரங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், வந்தவர்களை கவனித்துக்கொண்டிருந்தவனின் மனமோ, உலைக்களமாக கொதித்துக்கொண்டிருந்தது. மதியமே வருவதாக சொன்ன ரஞ்சனி இன்னும் வரவில்லை. வீட்டிலிருந்து கார் அனுப்பியும் கூட வேலை இருப்பதாக திருப்பி அனுப்பி விட்டாள்.

“இவள…. ” கிரியால் ஆதங்கப்பட மட்டுமே முடிந்தது.

“என்ன நிவேதா வந்தவங்களுக்கு சாப்பாடு பந்தி முடிஞ்சதா? இல்லன்னா இன்னும் ஏற்பாடு பண்ணனுன்னா சொல்லு ??” ஜெயப்பிராகஷ் தங்கைக்கு உதவ வர,

“இல்லண்ணா. முக்கால்வாசி முடிஞ்சது. வர முடியாதவர்களுக்கு எடுத்துட்டு போகவும் சொல்லிட்டேன்” என்று பதிலளித்தார் நிவேதா.

“சரி அப்ப நீ போய் கொஞ்சம் ஓய்வெடு நிவி. நான் கூட இங்க கவனிச்சுக்கிறேன். நம்ம வீட்டு ஆளுங்களுக்கு எல்லாம் முடிஞ்சது” உஷாந்தினி கூற, அவசரமாக தடுத்தார் கருணாகரன்.

“உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசனும் உஷா. கொஞ்சம் வீடு வரைக்கும் போய்ட்டு வந்துடலாம்” என்றார்.

“மாமா சொல்றாருல்ல அண்ணி. நீங்க கூட கிளம்புங்க. இங்க முடிஞ்சது. இனி சுத்தப்படுத்துற வேலையெல்லாம் வேலையாட்கள் பார்த்துப்பாங்க. எனக்கு ஒரு வேலையும் இல்லை” என்றுவிட்டார் நிவேதா.

“அடடே வாடா சின்ன மாப்பிள்ளை” உள்ளே நுழைந்த ஹர்ஷத்தை ஆர்ப்பாட்டமாக வரவேற்றார் கருணா.

“வாங்க மாமா” அவருக்கு புன்னகை முகமாகவே பதிலளித்தான்.

“சாரி அத்தை . லேட் ஆயிடுச்சு” நிவேதாவிடமும் மன்னிப்பு வேண்ட,

“டேய். இதுல என்ன இருக்கு? நீ வரமாட்ட ஃப்ரெண்ட்ஸ் கூட இருப்பபன்னு நினைச்சன்டா. வா முதல்ல வந்து சாப்பிடு ” சாப்பிட அழைத்து சென்றுவிட்டார் நிவேதா.

“அத்தை மாம்ஸ பார்த்திங்களா? ” என்றவாறு தந்தையின் அருகில் வந்து நின்றாள் ப்ரிஷா.

“தெரியலயேம்மா” என்றவாறு அவரும் சுற்றும் முற்றும் பார்க்க, நூவனை காணவில்லை. சேனா தான் உள்ளே வந்து கொண்டிருந்தான்.

உள்ளே வந்தவன்,” ஹலோ சார்” என்று ஜேபியிடம் வந்து நின்றான்.

“ஹலோ சேனா”  பதிலுக்கு அவரும் கைகுலுக்கினார்.

“தீனாதயாளன் வேலையெல்லாம் எப்படி போயிட்டுருக்கு?”

“அது இன்னும் ஒரு மாசம் ஆகும் சார்” என்றான் சேனா. பின்பு சிறிது நேரம் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை பேசிகொண்டிருக்க, நிவேதா வந்து அவனையும் உண்ண அழைத்துச்சென்றார்.

தொலைக்காட்சி அதுபாட்டிற்கு ஓடிக்கொண்டிருக்க, நிகாவின் சிந்தனை முழுவதும் இன்று நிவேதாவின் செயல்களிலேயே இருந்தது.

அவளது உள்ளுணர்வு அவளை உற்று பார்த்து கொண்டிருப்பதை போலவே இருந்தது. ஆனால் சட்டென்று திரும்பிப் பார்த்தால் அவர் வேறு யாரிடமோ நின்று பேசிக்கொண்டிருந்தார். அதனாலேயே சாப்பிட்டு முடித்தவுடன் தோட்டத்திற்கு வந்துவிட்டார்.

அங்கு சேனாவை கண்டபிறகு தான், அவனும் இங்கு தங்கியிருப்பது ஞாபகம் வந்தது.

“இனி இவனையும் வேற சமாளிக்கனுமா??” என்ற நினைவே, அதீத தலைவலியை கொடுத்தது.

தலையில் கைவைத்து அமர்ந்திருந்தவளின் தலையை இருகைகள் அழுந்த பிடிக்க, அதிர்ச்சியில் திரும்பி பார்த்தால், நூவன் நின்றிருந்தான்.

“ப்ச்…‌இப்ப நீங்க எதுக்கு இங்க வந்திங்க??” எரிந்து விழுந்தவளை பார்த்து, தனது வழக்கமான புன்னகையை சிந்தினான் அவன்.

“சிரிக்கல்லாம் வேண்டாம். முதல்ல இங்கிருந்து கிளம்புங்க?” சுவற்றை‌ பார்த்து பேசினாள்.

“கிளம்பறதா?? உன்னை பார்க்க தான் இன்னைக்கு விஷேஷத்துலயே கலந்துகிட்டேன். போக சொல்றியே நிகா பேபி”

“பாருடா. என்னைப் பார்க்க மாமா பொண்ணோட தான் கிளம்பி வருவிங்களா? சொல்லப்போனா அவதான் உங்க பேபி. இடுப்புல தூக்கி வச்சுக்க சரியா இருக்கும். சும்மா உதார் விடாம, கிளம்புங்க சார் முதல்ல” நக்கலடித்தவளின் உதடுகளை பிடித்து இழுக்கும் வேகம் அவனிடம். அதை அவனது பார்வையில் உணர்ந்து கொண்டவள், முகத்தை திருப்பி கொண்டாள்.

” என்ன கேக்கறது இருக்கட்டும். அந்த வாட்ச்மேன் உன்னை மறுபடியும் ஏதும் தொந்தரவு பண்ணானா??” தான் பேசுவதற்கு சம்பந்தமில்லாது பதில் கேள்வி கேட்பவனைக்கண்டு கோபம் இன்னும் அதிகரிக்கத்தான் செய்தது.

விளைவு, “என்னை கேள்வி கேட்க நீங்க யாரு? ” அவனிடமே விடிந்தது.

“இதே கேள்வியை நான் திரும்ப கேட்டா??” அவனது கேள்வி சொல்லாமல் உணர்த்தியது, அவள் அவனிடம் எடுத்துக்கொள்ளும் உரிமையை.

அதில் அவள் மௌனத்தை கடைபிடிக்க,

“யோசி நிகாபேபி. இப்ப நீ என்கிட்ட கோபப்பட்டதை , உனக்கு ஏற்பட்ட பொறாமை உணர்வுன்னு எடுத்துக்கலாமா? நான் உனக்கு ஒண்ணும் இல்லன்னா?? நான் எது செஞ்சாலும் அது உன்னை பாதிக்காதே” அதற்கும் அவள் மௌனமாகவே இருக்க, சிறிது நேரம் அப்படியே நின்றிருந்தான்.

“இல்ல.. நீ” என்று அவள் பேசி ஆரம்பிக்க, அவளது அதரங்களில் விரலை வைத்து பேச்சை நிறுத்தியவன்,

“நீயே உன் மனசுல இருக்குறத சொல்லுவ நிகா. அதுவரைக்கும் நான் காத்திருக்கேன்” என்றவன் அந்த இடத்தை சென்றுவிட்டான்.

வாயில் வரை சென்றவன், மீண்டும் திரும்பி வேகமாக உள்ளே வந்தவன்,

“அடிக்கடி தலைவலி வர வச்சுக்காத பேபி. உன்னை சுத்தி நடக்கற எல்லாத்தையும் கொஞ்சநாள் வேடிக்கை மட்டும் பாரு. உனக்கு எல்லா விஷயங்களும் புரிய வரும். அதனால் தெரியாததை நினைச்சு மனச போட்டு குழப்பிக்காத” என்றவன் வெளியே சென்றுவிட்டான்.

நிகாவின் மனமும், “ம்ம்… எப்படி நான் இங்கு வந்து சேர்ந்தேனோ?? அதைப்போலவே நான் நினைக்குற விஷயங்களுக்கான விடையும் கிடைக்கும்” நினைத்தவளுக்கு, தலைவலி எங்கோ தூர சென்றிருந்தது, போகச்செய்தவனின் நினைவில் முகத்தில் புன்முறுவலும் பூத்தது.

நிகா தங்கியிருக்கும் இடத்திலிருந்து, புன்னகையுடன் வெளியே வந்த நூவனைக்கண்டு துணுக்குற்றது சேனாவின் மனம்.

“கரைப்பார் கரைக்க கல்லும் கரையுமென்பதை போல, ஸ்ரீனிகாவின் மனதில் இவன் இடம்பிடித்துவிட்டானா?” என்ற நினைவே கசந்தது அவனுக்கு. அவனது பார்வையில் நூவனின் செயல்கள் அனைத்தும், நிகாவின் பெயரில் இருக்கும் அந்த நிலத்திற்காக செய்வதாகத்தான் பட்டது. இந்த உண்மை மட்டும் அவளுக்கு தெரிய படுத்தி விட்டால், அவளிடம் அவனது மதிப்பு கீழிறங்கி விடுமென்பது நிச்சயம். ஆனால் இதை வைத்து நிகாவின் மனதில் இடம்பிடிப்பது, தனது ஆண்மைக்கு இழுக்காக அவன் நினைக்க, அவன் எடுத்த முடிவின் விளைவு விபரீதமாக முடிந்தது.

“அடடே மாப்பிள்ளை இங்க வந்ததிலிருந்து உங்களை பார்க்க முடியலையே?” பெற்றோரை அழைத்துச் செல்வதற்காக  உள்ளே நுழைந்தவனை பிடித்துக்கொண்டார் கருணா.

“சும்மா வெளிய நின்னுட்டுருந்தேன் மாமா. அம்மா கிளம்பலாமா?? ” என்றவன் கிளம்புவதில் முனைப்பாக இருக்க, நிவேதாவிடமும் கிரியிடமும்  சொல்லிவிட்டு அனைவரும் விடைபெற்று வீட்டிற்கு சென்றனர்.

“பாபா நான் இன்னொருத்தரை கல்யாணம் பண்ண சம்மதிக்கிறேன்” ரூபாலியின் உயிரற்ற குரலில் கிடைத்த சம்மதத்தில் , திருப்தி ஏற்படவில்லை தயானந்திற்கு.

அதனால் எந்த எதிர்வினையும் இல்லாது அமைதியாக அவர் அமர்ந்திருக்க,

“ஆனால் நீங்க அவரை ஒண்ணும் பண்ணக்கூடாது. அவரோட நல்வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் குறுக்க நிற்ககூடாது. அதனால நரேனோட கல்யாணம் முடிஞ்சதும், நானும் முடிச்சிக்கிறேன்” என்று கூறியவளை , அவர் கூர்மையான பார்வை பார்க்க, அவளின் தலை தானாக குனிந்தது.

“என்ன உன் வாழ்க்கையை முடிச்சிக்க போறியா” மனதில் முடிவு செய்ததை தந்தை சரியாக கேட்க, கண்ணீரை அடக்க பெரும்பாடு பட்டாள்.

“இங்க வா ரூபிம்மா” அவளை அழைக்க, அவரருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

“நீ என் பொண்ணுடா, நீ என்ன நினைப்பன்னு எனக்கு தெரியாதா? நரேந்திர சேனாவை நான் ஒண்ணும் பண்ண மாட்டேன் போதுமா?” என்று கூறியரை, அணைத்துக்கொண்டாள் அவள்.

“அதே சமயம். இந்த அப்பாவுக்காக ஒண்ணு செய். மனதை மாத்திக்க கொஞ்சம் முயற்சி பண்ணு” என்றவருக்கு பதில் பேச வந்தவளை நிறுத்தியவர்,

“அப்பாக்காக முயற்சி பண்ணுடா. காலம் எல்லாதுக்கும் சிறந்த மருந்து. மனசை சந்தோஷமா வச்சுக்க முயற்சி பண்ணு. நீ சந்தோஷமா இருக்கும்போது, உன்னைச்சுத்தி இருக்குற சந்தோஷ அலைகள், நல்லதை உன்கிட்ட அதுவே கொண்டு வந்து சேர்க்கும்” தன் முகத்தையே பார்த்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்த மகளை பார்த்துக்கொண்டிருக்கும்போது, அவள் பிறந்த போது, முதன் முதலில் கையில் ஏந்திய  குழந்தையாகவே இன்றும் தெரிய,

“உன்னால முடியும் ரூபிம்மா. நீ சந்தோஷமா இருந்தாலே அப்பாக்கு போதும்”அவரின் அப்பழுக்கற்ற அன்பில், அவளது தலை தானாக சரியென்று அசைந்தது.

இன்று ஒரு முடிவோடு கிளம்பி வந்திருக்கும் அண்ணனின் செயலை யோசித்துக்கொண்டே, வீட்டிற்கு வந்திறங்கினார் உஷாந்தினி.

தந்தையுடன் ஒட்டிக்கொண்டே உள்ளே நுழைந்த ப்ரிஷாவை காண கடுப்பாக இருந்தது ஹர்ஷத்திற்கு.

“மவளே.. இன்னைக்கு உன்ன பேக் பண்ணி அனுப்புற வேலைதான்டி” மனதில் திட்டிக்கொண்டை அவனும் அங்கு ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.

உஷாவும் சற்று ஆசுவாசமாக அமர்ந்தவர், ஓய்வெடுக்க, அவனது அறைக்கு படிக்கட்டுகளில் ஏறப்போன நூவனை பிடித்து நிறுத்தினார்.

“நூவா.. கொஞ்சநேரம் இங்க உட்கார்ந்துட்டு போ கண்ணா” காரணமில்லாமல் அன்னை அழைக்கமாட்டார் என்பதால், அவனும் அங்கு‌ வந்து அமர்ந்து கொண்டான்.நிவேதா வீட்டு விருந்தால் கலந்து கொள்ள வரும் போதே, நிச்சயத்தை பற்றிய பேச்சை பற்றி கலந்தாலோசிக்க போவதாக, உஷாவிடம் அலைபேசியில் பேசும் போதே, சொல்லிவிட்டு தான் கிளம்பி வந்திருந்தார் அவர். ஜெயப்பிரகாஷிடம் இது பற்றி உஷா கேட்க, விருந்து முடிந்து வீடு திரும்பும் வரை எதுவும் பேச வேண்டாம் என்று விட்டார். கருணாகரனின் மனைவி பத்மா, அவரது‌ தம்பி மகளிற்கு குழந்தை பிறந்ததை பார்க்க லண்டனிற்கு சென்றவர், இன்னும் தாயகத்திற்கு  திரும்பவில்லை. அவர் வரும் வரை பார்த்துக்கொள்ள தான் , ப்ரிஷாவை அவர் இங்கு அனுப்பியது. விருந்தின் போது கூட, நிவேதாவிடமும் அனைவரிடமும், வீடியோ காலில் பேசியவர்,

“மாமாவ பார்த்துக்கோ கண்ணு” என்றவரின் குழைவில், ப்ரிஷா அவளது அன்னையின் வார்ப்பு என்று புரிந்தது நிகாவிற்கு, அவளது அலட்டலில் எரிச்சலும் வந்தது. அதை உஷாந்தினியும் கவனித்தார்

“எப்போ நூவனுக்கும் ப்ரிஷாவிற்கும் நிச்சயம் வச்சுக்கலாம் மாமா?” கருணாவின் குரலில் நிகழ்காலத்திற்கு வந்தார் அவர்.

அனைவரும் இதை ஓரளவு எதிர்பார்த்திருந்தாலும், உடனடியாக அவர்களால் பதில் கொடுக்க முடியாமல் அமைதியாயிருக்க, அந்த அமைதி கருணாவை கலவரப்படுத்தியது.

“என்ன எல்லாரும் இவ்வளவு அமைதியா இருக்கிங்க? என்ன உஷா நீயும் அமைதியாயிருக்க?” என்று கேட்டார்.

“அது வந்துண்ணா… ” என்ற உஷாவின் குரலில், ஏதோ ஒன்று உள்ளே உதைத்தது ப்ராஷாவிற்கு.

“என்னம்மா… எதையும் சொன்னாதான எனக்கு புரியும்” பொறுமையிழக்க ஆரம்பித்தார் அவர்.

“நேரா விஷயத்துக்கே வரேன் மச்சான். நூவனுக்கு இந்த நிச்சயத்துல இஷ்டமில்லை” விஷயத்தை போட்டுடைத்தார் ஜேபி.

“என்ன மச்சான் பேசுறிங்க? ” அவருக்கு இது உட்சபட்ச அதிர்ச்சி.

“ஆமாம் மச்சான். தெளிவாதான் சொல்றேன்” என்றார் ஜேபி.

“அப்போ வேற பொண்ணு பார்த்துட்டிங்களா?” அந்த கலவரத்திலும் அடுத்த விஷயத்திற்கு மாறியவரை காண வியப்பாக தான் இருந்தது அவருக்கு.

“இன்னுமில்லை. ஆனால் இந்த நிச்சயம் வேண்டான்னு முடிவு பண்ணியாச்சு” சற்று கறாராக தான் பேசினார் ஜேபி.

அதன்பிறகு விடுவாரா கருணா?? சற்று நேரம் ஒருத்தர் மாற்றி ஒருவர் பேசவென்று ஒரே கலவரமாக இருந்தது அங்கு.

வார்த்தைகளும், நிலைமையும் கைமீறி போவதை உணர்ந்தவனாக,

“எனக்கு ப்ரிஷாவை கட்டிக்க இஷ்டமில்லை மாமா. என்னை மன்னிச்சுடுங்க” என்று தெளிவான குரலில் உரைக்க, உடைந்தழுக ஆரம்பித்தாள் ப்ரிஷா‌. எதிர்த்து பேசுபவரிடம் சண்டையிட முடியும். மன்னிப்பு கேட்பவனிடம் எப்படி சண்டையிடுவது??

உஷா எழுந்து வந்து அவளை சாமாதானப்படுத்த, நூவன் கருணாவிடம் சென்று , அவரது கைகளை பிடித்து மீண்டுமொரு முறை பிடித்து மன்னிப்பு கேட்டவன், அவர்கள் பார்த்து வைத்த மற்றோரு சம்பந்தத்தை பற்றி அவருக்கு விளக்க, ப்ரிஷாவின் அழுகை கொஞ்சம் குறைந்தது. மகளின் அழுகை நிற்பதை கவனித்த கருணா, மேலும் விபரங்கள் கேட்க, தான் பார்த்து வைத்த விபரங்களை சொன்னவன், பையனின் ஃபோட்டாவையும் காண்பிக்க, கருணாவின் கோபம் சற்று குறைய ஆரம்பித்திருந்தது. மகளை ஒரு பார்வை பார்க்க, அவளது அழுகை முற்றிலும் குறைந்திருந்தது.

“இங்க போனாலும், நீ நம்ம வீட்டுல இருக்குற மாதிரி சந்தோஷமா இருப்படா ரிஷா” உஷா உறுதி கொடுத்தார்.

“சரி நான் யோசிச்சு முடிவெடுக்கிறேன்” என்ற விடைபெற எழ, ப்ரிஷாவும் அவருடன் எழுந்தாள்.

“நானும் உங்ககூட நம்ம வீட்டுக்கு வர்றேன்பா” நொடியில் மாறிய அவளது செய்கையில், உஷாவின் மனம் அடிவாங்கியது. மகனது கணிப்பு மெய்யானதில் ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும், மற்றொருபுறம் வருத்தமாக இருந்தது.

நடப்பதை நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தான் ஹர்ஷத். அண்ணனின் புறம் குனிந்தவன் மெதுவாக,

“அண்ணா என் கையை கிள்ளு. நெசமாவே இந்த பீட்சா வீட்ட விட்டு போறாளா?”அவனது காதை கடிக்க, நூவனின் முறைப்பில், நல்ல பிள்ளையாக நின்று கொண்டான்.ஒருவழியாக கருணாகரனும், ப்ரிஷாவும் விடைபெற்று கிளம்பிவிட்டனர், அடுத்த வாரமே அவர்களுக்கு கல்யாண பத்திரிக்கையை அனுப்பும் முடிவோடு.

மிகுந்த சோர்வுடன் நிவேதாவின் வீட்டிற்கு வந்திறங்கினாள் ரஞ்சனி. அவளுக்காக கிரி வாசலிலேயே காத்திருக்க, அவனைப்பார்த்துதும் சந்தோஷமாக இருந்தாலும், நிவேதாவின் முகமும் சேர்ந்து ஞாபகத்திற்கு வர, முதல் நாள் இரவு தான் பார்த்த காட்சியும் ஞாபகத்திற்கு வந்து காய்ச்சலில் மயங்கி விழுந்தாள் ரஞ்சனி.

சுழற்றும் சூறாவளியிலும் நிலையாக

நிற்கும் நான்

உன் நினைவுத்தீண்டலில்

தடுமாறிப்போகின்றேன்……..

திமிராகும்…..

அத்தியாயம்-24:

தன் கண்முன்னே மயங்கி விழுந்த தன்னவளை கண்டு ஒருநிமிடம் துடித்துப்போனான் கிரி.

பின்பு சுதாரித்தவனாக, கீழே விழுந்தவளை தூக்க, உடல் அனலாக கொதித்தது. தூக்கிக்கொண்டு வேகமாக வீட்டிற்குள்ளே ஓட, எதிரே வந்த நிவேதாவிற்கு ரஞ்சனியை தூக்கிக்கொண்டு ஓடும் மகனது தவிப்பில், விஷயத்தின் வீரியம் புரிந்தது. இருந்தாலும்,

“கிரி நில்லுடா. ஏன் இப்படி தூக்கிட்டு  ஓடுற? என்னாச்சு அவளுக்கு?” என்றவாறே அவளை அங்கிருந்த சோஃபாவில் கிடத்திக்கொண்டிருந்தவனின் அருகே வந்து கேட்க ஆரம்பித்தார்.

“அம்மா… இவளுக்கு காய்ச்சல் நெருப்பா கொதிக்குது. கேட்லயே மயங்கி விழுந்துட்டா. சீக்கிரம் டாக்டருக்கு ஃபோன் பண்ணுங்க” அன்னைக்கு பதில் கொடுத்தவாறே, ரஞ்சனியின் கன்னத்தில் தட்டி எழுப்ப முயற்சித்துப் கொண்டிருந்தான் அவன்.

“ரனு.. ரனு… கண்ணைத்திற” அவளது கன்னத்தில் தட்டிக்கொண்டிருந்த மகனது கைகளை பிடித்து தடுத்தவர்,

“தள்ளு… நான் பார்க்கிறேன்” நிவேதா கைவைத்து பார்க்க, காய்ச்சல் அதிகமாக இருந்தது.

“இதை பிடி. டாக்டருக்கு கால் பண்ணு” தனது அலைபேசியை அவனிடம் கொடுத்தவர்,

“வேலண்ணா கொஞ்சம் மிதமான வென்னியும், சுத்தமான துணியும் கொண்டு வாங்க” சமையல்காரருக்கு குரல் கொடுத்து , கொண்டுவர வைத்தார்.

அவர் கொண்டு வந்ததும், துணியால் அவளது முகத்தை அழுந்த துடைத்து விட்டு, நெற்றியில் துணியை வைத்து சூட்டை குறைக்க முயற்சிக்க, ரஞ்சனி அனற்ற ஆரம்பித்தாள்.

அவளது அனற்றலில், கிரி டாக்டருக்கு பேசிவிட்டு வேகமாக அவளருகே வந்து , கவலையோடு பார்த்தவன், அவளது கைகளை பிடித்துக்கொண்டான்.

“ஒண்ணுமில்லை கிரி. காய்ச்சல் வேகம், அதான் அனத்த ஆரம்பிச்சுட்டா. டாக்டர் என்ன சொன்னாரு?” நிவேதா மகனை ஆறுதல்படுத்தினார்.

“இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல வந்து பார்க்குறேன் சொல்லியிருக்காரும்மா” அன்னையும் மகனும் பேசிக்கொண்டிருக்க, வாயிற்காவலன் கொண்டு வந்து கொடுத்ததாக, ரஞ்சனியின் அலைபேசியையும், கைப்பையையும் கொண்டு வந்து கொடுத்தார் வேலண்ணா.

கிரி அதை கையில் வாங்கும் போதே, அலைபேசி ஒலிக்க ஆரம்பிக்க, நிகாதான் அழைத்துக்கொண்டிருந்தாள்.

அழைப்பை ஏற்றதுமே, “எருமை எவ்வளவு நேரம் ஆச்சு?? இன்னும் என்னடி அங்க பண்ற?? ” முதலில் பொரிய ஆரம்பித்தவள், அடுத்த நொடியே,

“ஏதும் பிரச்சனையா ரஞ்சு? நான் வேணும்ன்னா கிளம்பி வரவா?” அக்கறைப்பட்டு கேட்க ஆரம்பித்தாள்.

“ஸ்ரீனிகா. நான் கிரி பேசறேன். ரஞ்சனி இங்கதான் இருக்கா. நீ இங்க வீட்டுக்கு வா” என்று கிரி பேச, பதற்றமானது அவளுக்கு.

“கிரி என்ன…என்னாச்சு அவளுக்கு?”

“கிளம்பி இங்க வா. அவளுக்கு காய்ச்சல் ” கூறிவிட்டு வைத்து விட்டான்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் நிகா அங்கிருக்க, வேகமாக ரஞ்சனியை வந்து தொட்டு பார்த்தாள். அவள் ஓடி வந்ததையும், ரஞ்சனியை கண்டு பதறியதையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தார் நிவேதா.

“இப்படி கொதிக்குதே கிரி. நேத்து வரைக்கும் நல்லாதான இருந்தா??” பதட்டத்தோடு  பேசியவள், திரும்பிப்பார்க்க எந்தவித உணர்ச்சியும் முகத்தில் காட்டாது அவளைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார் நிவேதா. அவரது சலனமற்ற முகத்தில் எரிச்சலடைந்தவளாக,

“கொஞ்சம் ஹெல்ப் பண்ணு கிரி. இவளை தூக்கிட்டு அவுட்ஹவுஸ் போயிடலாம்” என்று கூறினாள்.

“இருக்கட்டும் கிரி. இப்ப டாக்டர் வந்ததும் செக் பண்ணிட்டு கூட்டிட்டு போகலாம்” அவள் இங்கு வந்ததிலிருந்து முதன்முறையாக கிரியை இடையில் வைத்து பேசினார் நிவேதா.

அவர் பேசிய தோரணையில் அவளுக்கு கோபம் வர, தண்ணீர் எடுக்க தனது அறையில் இருந்து வெளியில் வந்த சேனாவின் கண்களில் இந்த காட்சி பட்டதும், வேகமாக கீழிறங்கி வந்தான்.

“என்னாச்சு ரஞ்சனிக்கு?” நிகாவிடம் கேட்க, இவன் எதுக்கு இப்போ வந்தானென்ற பார்வையை பார்த்து வைத்தான் கிரி.

ஆனால் நிகாவோ, ” சேனா சார். ரஞ்சனிக்கு ரொம்ப காய்ச்சல் அடிக்குது. கொஞ்சம் அவளை அவுட்ஹவுசுக்கு தூக்கிட்டு போக உதவி பண்ணுங்க” அன்றைய நாளைக்கு பிறகு இப்பொழுதுதான் தன்னிடம் பேசும் தன்னவளின் கோரிக்கையை நிராகரிக்க முடியாமல் சேனா அவளை தூக்க முயற்சிக்க,

“நானே தூக்கறேன்”  அவனது கைகளை விலக்கிவிட்டு கிரி தூக்க முயலும் போதே, மருத்துவர் வந்துவிட்டார். சற்று ஆசுவாசமானது கிரிக்கு. உடல்நிலை சரியில்லாதவளை அலைக்கழிக்க அவன் விரும்பவில்லை.

“வாங்க டாக்டர் சார். காய்ச்சல்ல மயங்கி விழுந்துட்டா” என்றவன் அவருக்கு வழிவிட்டு விலகி நிற்க, மருத்துவர் பரிசோதித்துவிட்டு, சாதாரண காய்ச்சல்தான், உடல் அயர்வால் இல்லை ஏதாவது அதிர்ச்சியால் தான் மயக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கூறியவர், ஊசி மருந்தை அவளுக்கு செலுத்த, ரஞ்சனியின் அனற்றல் குறைய ஆரம்பித்தது.

“நாளைக்கு காய்ச்சல் குறைஞ்சதுன்னா பிரச்சனையில்லை. ஆனால் அதிகமாயிடுச்சுனா உடனே மருத்துவமனைக்கு கூட்டிட்டு வந்துடுங்க. இல்லன்னா ஜன்னில கொண்டு வந்துடும். இப்போ சீதோஷ்ண நிலை ரொம்ப மோசமாயிருக்கு” சில அறிவுரைகளையும் சேர்த்து கூறியவர், எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளை எழுதி கொடுத்துவிட்டு சென்றார்.

ரஞ்சனியின் அருகில் அமர்ந்த நிகா, அவளது தலையை கோதிவிட, அசையாது படுத்திருந்தவளை காண கஷ்டமாக இருந்தது. அயர்வுடன் விழித்துப்பார்க்க முயற்சித்த ரஞ்சு, நிகாவைப்பார்த்தவள்  மீண்டும் தூங்க ஆரம்பித்தாள்.

“வேலண்ணா கொஞ்சம் கஞ்சி எடுத்துட்டு வாங்க. கொடுத்துட்டு மாத்திரை கொடுக்கட்டும்” நிவேதாவின் உத்தரவில், அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கஞ்சியுடன்  வந்து நின்றார் வேலண்ணா.

அதை கையில் வாங்கியவள், அவளை எழ வைக்க முயற்சிக்க, கிரி அவளை தூக்கி அமர வைத்தான். நிகா ஊட்ட, அரைதூக்கத்திலேயே கஞ்சியை உண்டவள், மீண்டும் தூக்கத்திற்கு சென்றுவிட்டாள்.

“மருந்துச்சீட்டை கொடு ஸ்ரீனிகா. நான் போய் வாங்கிட்டு வந்துடறேன்”சேனா வாங்கிக்கொண்டு வெளியே சென்றான்.

“இந்த நேரம் எங்க மெடிக்கல் ஷாப் திறந்திருக்குன்னு உங்களுக்கு தெரியுமா??”  நிகாவின் கேள்வியில் , தன்மேல் உள்ள அக்கறையினால்தான் கேட்கிறாளென்று குதூகலமானது அவனது மனம்.

“ஒரு பிரச்சனையும் இல்லை. நான் வாங்கிட்டு வந்துடுவேன்” நடையில் ஒரு துள்ளலுடன் கிளம்பி சென்றவனை பார்த்து மனதிற்குள் சிரித்துக் கொண்டார் நிவேதா.

நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் கிரி. அவனது கவனம் முழுவதும் ரஞ்சனி யின் மீதிருந்தததால் சேனாவை அவன் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

சிறிது நேரத்தில் சற்று காய்ச்சல் குறைய, நிகாவின் ஆலோசனைப்படி அவளை அவுட்அவுசிற்கு அழைத்துச்சென்று படுக்க வைத்தான் கிரி.

சேனாவும் மருந்துகளோடு உள்ளே வந்தவன், அதை நிகாவின் கைகளில் கொடுத்தான்.

“நன்றி சார்” என்றவள் அதை வாங்கிக்கெண்டு உள்ளே திரும்ப,

“ஸ்ரீனிகா நான் வேணுன்னா இங்கேயே இருக்கட்டுமா?? இடைப்பட்ட வேளைல ஏதும் உதவி தேவைப்பட்டா, ஒரு ஆள் கூட இருக்குறது நல்லது” ரஞ்சனிக்கு வெந்நீர் எடுத்து வந்து கொண்டிருந்த கிரியின் காதுகளிலும் சேனாவின் பேச்சு விழுந்தது.

“இருக்கட்டும் சேனா. நீங்க வேலை பார்த்துட்டு வந்து களைப்பா இருப்பீங்க. நான் இவங்க கூட இங்க தங்க போறேன். எனக்கு ஒரு போர்வை மட்டும் எடுத்துட்டு வா ஸ்ரீனிகா, நான் இங்க ஹால்ல படுத்துப்பேன்” நாசூக்காக கிரி சேனாவை வெளியேற்றும் வழியை காண்பிக்க, நிகாவும் அதை புரிந்து கொண்டாள்.

“ஆமா சேனா சார். கிரி இருப்பாரு. நீங்க கேட்டதுக்கு ரொம்ப நன்றி. நீங்க போய் ஓய்வெடுங்க” என்று விடை கொடுக்க, வேறுவழியில்லாது ஏமாற்றத்துடன் கிளம்பினான் சேனா.

தனது அறையில் யோசனையோடு அமர்ந்திருந்தார் நிவேதா. ரஞ்சனி காய்ச்சலில் பிதற்றிய வார்த்தைகள், அவரை கலவரப்படுத்தியிருந்தது.

“இந்த பொண்ணுக்கு எப்படி தெரிஞ்சது?? எப்படி பார்த்திருப்பா?” நினைக்க நினைக்க வியர்வை ஊற்றாக பெருக ஆரம்பிக்க, மனப்புழுக்கம் தாங்க இயலாது கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார்.

சேனாவும் அந்நேரம் அவரது அறையை கடக்க முயல,

“இப்ப அந்த பொண்ணுக்கு பரவாயில்லையா சேனா??” அவளின் நலம் விசாரித்தார்.

“ம்ம்… பரவாயில்லை ஆன்ட்டி. மருந்து வாங்கியும் கொடுத்துட்டேன். கிரி கூட இருந்து பார்த்துக்கறேன் சொல்லிட்டாரு” கடைசி வரியை சொல்லும்போது மட்டும், அவனது குரல் சற்று கவலையாக ஒலித்தது. அது நிவேதாவின் கவனத்திற்கும் தப்பவில்லை.

“அவன் விரும்புற பொண்ணை பக்கத்துல இருந்து பார்த்துக்கனும் ஆசைப்படறான். நீ விரும்புற பொண்ணையும் பார்த்துக்குற நாள் வரும்” விஷயத்தை மறைமுகமாக அவனுக்கு உணர்த்தினார்.

“என்ன ஆன்ட்டி சொல்றிங்க?? கிரி ரஞ்சனியை விரும்புறானா??” மகிழ்ச்சியுடன் ஒலித்தது அவனது குரல். அதில் நிவேதாவிற்கும் மகிழ்ச்சியே.

“என் பையன் எதை விரும்புவான்னு என்னால நிச்சயம் கணிக்க முடியும் சேனா”

“ரஞ்சனி ரொம்ப நல்ல பொண்ணு ஆன்ட்டி. அவ இருக்குற இடம் ரொம்ப லைவ்லியா இருக்கும்” உண்மையான மனதுடன் கூறினான்.

“ம்ம்..பார்க்கலாம்” என்றார் அவர்.

“அப்பறம் ஆன்ட்டி.. நான் ஒரு முடிவெடுத்திருக்கேன்” பீடிகையுடன் ஆர்ம்பித்தான் சேனா.

“என்ன முடிவு சேனா??”

“அப்பாவை ஸ்ரீனிகாவை பொண்ணு பார்க்க வர வைக்கப்போறேன். நூவனோட தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகமாகுது. இனி போராடிக்கிட்டே இருந்தா அது சரிபட்டு வராது. எப்படியாவது நீங்க ஸ்ரீனிகாவை அப்பா முன்னாடி சம்மதம் சொல்ல வச்சுட்டா போதும். அடுத்தடுத்து நடக்க வேண்டிய வேலைகளை நான் பார்த்துக்குவேன்” திட்டத்தை போட்டுடைக்க, நிவேதா அவனிடம் இதை எதிர்பார்க்கவில்லை என்பதை அவரது முகமே உணர்த்தியது.

“புரியுது ஆன்ட்டி நீங்க என்ன நினைக்கிறிங்கன்னு?? நானும் அவ மனசுல இடம்பிடிச்சு தான் அவ கை பிடிக்கனும்னு நினைச்சேன். ஆனால் இங்க நடக்குற விஷயங்களும் சூழ்நிலைகளும் என்னை ரொம்பவே தடுமாற வைக்குது. ஸ்ரீனிகா சம்மதம் மட்டும் கிடைச்சுட்டா, அவளை ராணி மாதிரி தாங்கறதை தவிர இந்த உலகத்துல எனக்கு வேற வேலை கிடையாது. எனக்கு என் ஹனி கிடைச்சா போதும்” உண்மையான காதலோடு பேசியவனின் காதல், அவருக்கு புரிந்தாலும், இதில் தான் எப்படி நேரடியாக இறங்குவது என்று யோசிக்க ஆரம்பித்தார். சேனா அவரது முகத்தையே சம்மதித்திற்காக பார்த்துக்கொண்டு நிற்க, அவருக்கு ஒரு வழியும் கிடைத்தது. தற்போதைய நூவனின் நடவடிக்கைகளால், அதை செயல்படுத்தவும் முடிவெடுத்தவராக,

“சரி நான் சம்மதிக்க வைக்கிறேன் சேனா. ஒரு ரெண்டு நாள் போகட்டும். எங்க தொழிற்சாலையோட எழுபத்தைந்தாவது ஆண்டுவிழா இன்னும் ரெண்டு நாள்ல வருது. அதுக்கு நான் இந்தர் அண்ணாவை இன்வைட் பண்றேன்‌. அப்படியே உனக்கான நிச்சயத்தையும் ஏற்பாடு பண்ணிடறேன்” என்று கூறியவரின் கைகளை, பிடித்துக்கொண்டவன்,

“தாங்க் யூ.. தாங்கள் யூ சோ மச் ஆன்ட்டி” என்றவன் உற்சாகத்துடன் உறங்க சென்றுவிட்டான்.

அவனது மகிழ்ச்சியில் சிரித்தவராக “இதுக்கு மேல இதை தள்ளிப்போடவும் முடியாது. நல்ல நேரத்துல நல்ல யோசனை சொன்ன. என்னை மன்னிச்சுடு நூவா” மனதில் பல அலைப்புறுதல்களுடன், உறங்கச்சென்றவருக்கு, அன்றைய இரவும் உறங்கா இரவாகவே விடிய ஆரம்பித்தது.

“வாழ்த்துக்கள் அண்ணா‌. உங்க ரூட் கிளியர் ஆயிடுச்சு. அண்ணிய சீக்கிரம் இங்க கூட்டிட்டு வந்துடுங்க” ப்ரிஷா வெளியேறிய மகிழ்ச்சியில் , அண்ணனுடன் வம்பிழுத்துக்கொண்டே வந்தான் ஹர்ஷத்‌.

“டேய் சும்மா இரு” என்றவனுக்கும், நிகாவின் நினைவுகள் மேலோங்க ஆரம்பித்தது.

“பார்றா.. சும்மா இருக்குறவர்தான். அவுட்ஹவுசில அரைமணிநேரம் பேசிட்டு வந்திங்களா??”

“எப்படிடா கவனிச்ச??” நூவனுக்கு ஆச்சரியம், அவன் யார் கண்களுக்கும் சிக்காமல் தானே நழுவியிருந்தான்.

“எங்க கண்ணுக்கு தப்புமா? இல்லை கருணா மாமாவ சமாளிச்சுருக்க முடியுமா?” ஹர்ஷத்தின் பதிலில் அவனை அணைத்துக் கொண்டான்.

“ம்ம்.. சரி சரி.. அண்ணிக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்கண்ணா” என்று அவனை தள்ளிவிட்டவன்,

“என்சாய் நிகாண்ணி  நைட்…வித் ஆத்து மண்ணு ட்ரீம்ஸ்” என்றுவிட்டு தனது அறைக்குள் ஓடிவிட்டான்.

அவனது கேலியில் சிரித்தவனின் மனதில், ஏனோ இனியும் அவளை கரம்பிடிப்பது தாமதாக கூடாதென்று வலுவாக அவனது உள்ளுணர்வு உணர்த்தியது.

“என்னை பாடாபடுத்துறடி நிகாபேபி” தனது அலைபேசியில் இருக்கும் அவளது புகைப்படத்தை பார்த்து பேசியவன், இலகுவான மனதுடன்  நித்திரையில் ஆழ்ந்தான்.

மறுநாளைய பொழுதில் ரஞ்சனியில் காய்ச்சல் நன்றாகவே குறைந்திருந்தது. ஆனால் உடலில் ஏற்பட்ட அசதியால், கண் விழித்தவள் அசையாது படுத்திருந்தாள். மீண்டும் தான் கண்ட சம்பவம், கண்களில் தண்ணீர் ஆறாய் பெருகியது. முழுதாக விஷயத்தை தெரிந்து கொள்ளாமல் அவளால் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லவும் முடியாது.

முயன்று மெதுவாக எழுந்து அமர, குளித்துவிட்டு உள்ளே நுழைந்தாள் நிகா.

அவள் எழுந்து அமர்ந்திருப்பதை பார்த்து சந்தோஷமடைந்தவள்,

“ஹப்பா. பயமுறுத்திட்டடி ரஞ்சு. உன்னை இப்படி பார்க்காம என்னால தூங்கவே முடியலை” அருகில் வந்து அவளது நெற்றியில் கை வைத்து பார்க்க, காய்ச்சல் குறைந்திருந்தது. அருகில் வந்தவளின் வயிற்றில் முகம் புதைத்துக்கொண்டாள் ரஞ்சு.

“ஹேய்.. இங்க பாரு… என்னைப்பாரு ரஞ்சு. நேத்திலருந்தே நீ சரியில்ல. என்னாச்சு உனக்கு?” உள்ளே கேட்ட பெண்களின் பேச்சு குரலில், எழுந்து வந்தான் கிரி.

அவன் அறைவாயிலில் வந்து நிற்க, நிகா அரவத்தை உணர்ந்தவளாக திரும்பி பார்த்தாள். ஆனால் ரஞ்சனி முகத்தை நிமிர்த்தவில்லை.

கிரி அவளையே பார்த்துக்கொண்டிருக்க,

“காய்ச்சல் குறைஞ்சுடுச்சு கிரி. நீயும் கொஞ்சம் ரெஃப்ரெஷ் ஆகிட்டு அப்பறமா வா” கண்ஜாடையில் தான் பார்த்துக் கொள்வதாக கூறி அவனை அனுப்பி வைத்தாள்.

“ரஞ்சு என்னை நிமிர்ந்து பாருடா?? கிரி போயாச்சு” அவளை நிமிர்த்த, நிமிர்ந்து அவளை கண்ணீருடன் பார்த்தாள் அவள்.

“ஏய்..ஏன்டி அழுகற??” அவளின் கண்ணீரில் பதற்றமானது நிகாவிற்கு.

“அக்கா நாம இந்த ஊரை விட்டு போயிடலாம்க்கா” என்று கூறி அதிர வைத்தாள் ரஞ்சனி.

“ஹேய் காய்ச்சல்ல உனக்கு மூளை ஏதும் குழம்பிடுச்சா?? இல்லை என்ன நடந்ததுன்னு சொல்லுடா?? ” நிகா அவளை வெளிக்கொணர முயற்சிக்க, முயற்சி தான் பலனளிக்கவில்லை. எவ்வளவு கேட்டும் சொல்ல மறுத்து விட்டாள் அவள்.

“சரி போகலாம். முதல்ல உன் உடம்பு கொஞ்சம் சரி ஆகட்டும்” என்று சமாதானப்படுத்தி உணவு உண்ண வைத்து படுக்க வைத்தாள். எல்லாம் சரியாக சென்றது மறுநாள் நிவேதா வந்து ரஞ்சனியிடம் கேள்வி கேட்கும் வரை.

“அன்றைக்கு நீ என்ன பார்த்த ரஞ்சனி?” அவர் கேட்க,

“இவருக்கு எப்படி தெரிந்தது?” என்ற யோசனையுடனும், அவரை பார்த்து பதற்றத்துடனும் பதிலேதும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் அவள்.

“நீ பார்த்த விஷயம் துளியளவு வெளிய தெரிஞ்சாலும், ஸ்ரீனிகாவின் உயிருக்கு நான் பொறுப்பாக இருக்க முடியாது ரஞ்சனி” என்ற எச்சரிக்கையோடு சென்றுவிட்டார் நிவேதா. ஆனால் அவரின் மிரட்டலில், வாடிய கொடியாக மீண்டும் அதீத காய்ச்சலில் விழுந்தாள் அவள்.

தாழ் கொண்டு திறவாயோ காதல் கொண்ட நெஞ்சத்தை!

அள்ளிக்கொண்டு வெல்ல வேண்டும் நம்முள் நடக்கும் நாடகத்தை!

திமிராகும்…..

அத்தியாயம் -25:

இன்னும் தூக்கத்தில்தான் இருந்தாள் ரஞ்சனி.

” எனக்காக கிளம்பி வந்து  இப்படி நீயும் கஷ்டப்படுறியே ரஞ்சனி?” மனதிற்கு கவலையாக இருந்தது அவளுக்கு. அலுவலகத்திற்கு செல்ல வேண்டாமென்று அமர்ந்திருந்தாள்.

“ஸ்ரீனிகா….” வெளியில் இருந்து கிரியின் குரல் கேட்க, எழுந்து வந்து பார்த்தாள்.

கையில் சில பாத்திரங்களுடன் நின்றிருந்தான் அவன்.

“இதுல கஞ்சி இருக்கு ரஞ்சனிக்கு. உனக்கு டிபனும் எடுத்துட்டு வந்துட்டேன். இப்போ அவளுக்கு பரவாயில்லையா?” பேசிக்கொண்டே உள்ளே நுழைந்தவனிடம் இருந்து, பொருட்களை வாங்கி வைத்தாள் அவள்.

“காய்ச்சல் குறைஞ்சுடுச்சு கிரி. ஆனால் ரொம்ப அசதியா தெரியறா?? எதையோ மனசுல போட்டு குழப்பிக்கிறா? என்னன்னு தான் சொல்ல மாட்டேங்கிறா. இனி இங்க இருக்க வேண்டாம்னு சொல்றா, அதான் எனக்கு ஒன்னும் புரியலை. அதான் இன்னைக்கு லீவ் போட்டு வீட்டுல இவகூடவே இருக்கலான்னு இருக்கேன்” அவளும் குழப்பத்தில் இருப்பது நன்றாகவே புரிந்தது கிரிக்கு.

“சரி அவ கொஞ்சம் சரி ஆகுற வரைக்கும் பொறுத்திருப்போம். நீ முதல்ல சாப்பிடு. நான் அவ கூட இருக்கேன்” என்றவன், ரஞ்சனியின் அறைக்கு சென்றான்.

தீனதயாளனின் வீட்டில் அமைக்கப்பட்ட சிஸ்டத்தில் ஏதோ கோளாறென்று, அலைபேசியில் நிகாவிடம் ரஞ்சனியின் நலனை விசாரித்து விட்டு, காலையிலேயே புறப்பட்டு சென்று விட்டான் சேனா.

அவள் சாப்பிட்டு எழுந்திருக்க, நிகாவின் அலைபேசி ஒலித்தது. எடுத்து பார்த்தால் நூவன்தான் அழைத்து கொண்டிருந்தான்.

“ஹலோ…‌”

“ரஞ்சனிக்கு என்ன ஆச்சு நிகா?” இப்பதான் கிரி விஷயத்தை சொன்னான். சுருக்கமாக அவனிடம் விஷயத்தை கூறியவள், அவனிடம் தான் இன்று அலுவலகத்திற்கு வர முடியாதொன்பதையும் கூறினாள்.

“அதான் கிரிகூட இருக்கான்ல, நீ வந்துட்டு அரைநாள்ள கூட கிளம்பு நிகா” அவனுக்கு அவளை பார்க்க வேண்டும் போலிருந்தது.

“என்ன விளையாடுறிங்களா?? அதெல்லாம் முடியாது. லீவ அக்செப்ட் பண்ணிக்கோங்க” திமிரு பிடிச்சவ, எல்லாத்தையும் ஆர்டராதான் சொல்லுவா? மனதிற்குள் அவளை அர்ச்சித்தவன்,

“சரி ஒரு ஒருமணிநேரம் வந்து, எனக்கு டேட்டா காப்பி மட்டும் பண்ணிக்கொடுத்துட்டு வந்துடு. மற்ற வேலைகளை உன் டீம்ல  இருக்கற ஆளுங்ககிட்ட குடுத்துடறேன்” என்று கூற,

“நான் கிரிகிட்ட கேட்டுட்டு சொல்றேன்” என்று அவள் வைக்கப்போக,

“அதெல்லாம் அவன் ஒத்துப்பான். ஆல்ரெடி அவனோட அப்பாயின்மென்ட் எல்லாத்தையும் சார் நேத்தே கேன்சல் பண்ணியாச்சு. நான் இன்னும் கொஞ்சநேரத்தில அங்க வரேன். ரஞ்சனிய பார்த்துட்டு நாம கிளம்பலாம். நீ கிளம்பி ரெடியா இரு” என்றவன் வாகனத்தை கிளப்பும் சத்தம் அவளுக்கு அலைபேசியில் கேட்டது.

“யாருக்கும் கட்டுப்படாத என்னை இவன் என்னமோ பண்றான்?” மனதிற்குள் நினைத்தவளாக, உள்ளே சென்று ரஞ்சனியை பார்த்தாள். அரை தூக்கத்திலேயே கிரி அவளுக்கு கஞ்சியை ஊட்டிக்கொண்டிருந்தான்.

“மாத்திரை குடுக்கனுல்ல?? அதான்” என்றவன், அவளது வாயை துணியால் துடைத்து விட்டு எழுந்து வந்தான்.

“கிரி ஒரு ஒரு மணிநேரம் ஆஃபிஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு. இங்க கொஞ்சம் பார்த்துக்க முடியுமா?” இது என்ன கேள்வி என்பதைப் போல் ஒரு பார்வையை பார்த்து வைத்தான் அவன்.

“இதை நீ சொல்ல வேண்டியதே இல்லை ஸ்ரீனிகா. ரஞ்சனி என் மனைவியாகப்போறவ, அவளை நான் நல்லாவே பார்த்துப்பேன். நூவன் வர்றேன்னு சொல்லயிருக்கானா?” அவளைப்பார்த்து கேட்க, அவனை முறைத்தாள் அவள்.

அவளது முறைப்பில் அவளை பார்த்து அவன் சிரிக்க, ” ரெண்டு பேரும் பேசி வைச்சுகிட்டு பண்றிங்கள்ள?” நிகாவின் கேள்வியில் மாட்டிக்கொண்ட சிறுபிள்ளையாக முழித்தான் கிரி.

“ஹி..ஹி.. இல்லம்மா. நேத்து ஒரு முக்கியமான விஷயம் நடந்திருக்கு. அதான் இன்னைக்கு உன்னை பார்த்தே ஆகனும்னு கிளம்பி வர்றான்” என்றவன், ப்ரிஷாவிற்கு பேசிய சம்பந்த பேச்சுக்களை பற்றிய விளக்கத்தை கூறினான்.

“சும்மாவே இவனை பிடிக்க முடியாது. இவன் வேற ஏதோ ப்ளான் பண்ணிட்டு வரான். கூட போகாம இருந்துக்கலாமா?” என்று யோசிக்க ஆரம்பித்தாள் அவள்.

அப்புறமும், ” ச்ச..ச்ச.. இவனுக்கு நாம பயப்படறதா?” முன்முடியை சிலுப்பிக்கொண்டவளாக நிமிர்ந்து நின்றவள், தயாராவதற்கு சென்றாள். அவளது முகபாவனைகளை கவனித்துக்கொண்டிருந்த கிரிக்கு, அவளது செய்கையில் மேலும் சிரிப்பு வந்தது.

தனது கைப்பையை உலர்த்தி காய வைத்திருந்தவள், அதை எடுக்க தோட்டத்திற்கு போக, வேலண்ணா வந்து அவளை அழைத்தார்.

“அம்மா, ரஞ்சனியம்மா பை அங்க வீட்ல இருக்குதும்மா. அதை உங்களை வந்து எடுத்துக்க சொல்லி முதலாளியம்மா சொன்னாங்க” என்று கூற, நேற்றைய அவசரத்தில் மறந்து போனது, அவளுக்கு இப்போது ஞாபகம் வந்தது.

“நீங்க போங்க நான் வர்றேன்” என்றவள் அவரை பின் தொடர்ந்து சென்றாள்.  ஹாலில்தான் ரஞ்சினியின் பொருட்கள் இருந்தன. கூட வந்த வேலண்ணா அதன்பின்பு கண்களில் படவேயில்லை. எடுத்துக்கொண்டவள் திரும்ப எத்தனிக்க,

“கொஞ்சம் நில்லு. உன்கிட்ட பேசனும்” நிவேதாவின் குரலில் அவளது நடை தானாக நின்றது. ஆனால் அவள் திரும்பவில்லை.

அவளருகே அவர் நடந்து வரும் காலடி ஓசைகள் கேட்க, அசௌகரியமான உணர்வுகள் அவளை ஆக்கிரமிக்க, முயன்று கட்டுப்படுத்தி கொண்டு நின்றிருந்தாள். ஏனோ கிரியிடம் இயல்பாக பேச முடிந்த அவளால், நிவேதாவை காணும் போதெல்லாம் ஒருவித உணர்வு ஆட்கொண்டு அவரை விட்டு விலகிப்போக வைத்தது.

“என்னைத் திரும்பிப் பாரு ஸ்ரீனிகா” என்றவரிடம் வார்த்தைகள் கொடுத்த அழுத்தத்தில் , அவளுக்கு எரிச்சலாக, அதே எரிச்சலுடன் திரும்பி அவரைப்பார்த்தாள்.

“என்ன விஷயம் பேசணும்?” தைரியமாக அவர் கண்களை பார்த்து கேட்டவளின் பாவனையில் அவரது பார்வையில் மெச்சுதல் வந்தது.

“சேனாவை கல்யாணம் பண்ணிக்க நீ சம்மதம் சொல்லனும்” இது அவளுக்கு அதிர்ச்சியான விஷயம்.

“மிஸஸ். ஸ்ரீனிவாசன் நீங்க யாரு என் விஷயத்துல முடிவெடுக்க?? நான் நினைச்சா இப்ப கூட இந்த சொத்துக்கள்ளாம் வேணாம்னு முடிவு பண்ணிட்டு, கிளம்பி போய்கிட்டே இருப்பேன். யாரை நம்பியும் நான் இல்லை. என்னுடைய தேவைகளை என்னால கவனிச்சுக்க முடியும்” என்றவள், அதற்குமேல் அவரிடம் பேச விரும்பாது, வேகமாக வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

“அப்ப மதருக்கு ஹெல்ப் பண்றேன்னு சொன்ன வாக்க காத்துல பறக்க விடப்போறியா?? நான் நினைச்சா இப்பகூட இந்த சொத்துக்களை உனக்கு வரவிடாம பண்ண முடியுங்கறது உனக்கு தெரியுமில்லையா?? அதுமட்டுமில்லாம உன் தோழிக்கு ரஞ்சனி நல்லபடியா இங்க வாழனுன்னு நினைக்கிறியா இல்ல அவளையும் உன்கூடவே கூட்டிக்கிட்டு போகப்போறியா??” அம்புமழையாய் பொழிந்த அத்தனை கேள்விகளும், பெண்ணவளின் இதயத்தை சரியாக துளைத்தது.

“நீங்க ரெண்டு பேரும் இங்க வந்த பிறகு, இனி எதுவும் உங்க கையில் இல்லை ஸ்ரீனிகா. உயில்ல அந்த ஆறுமாத நிபந்தனையை சேர்ந்ததே நான்தான். என் விருப்பப்படி தான் இப்ப வரைக்கும் எல்லா விஷயங்களும் நடந்துக்கிட்டு இருக்கு. வீடு உடைஞ்சு விழுந்தது உட்பட” என்று கூறிவிட்டு அவளது முகத்தை பார்க்க, கோபத்தால் அவளது முகம் சிவக்க ஆரம்பித்தது.

“இப்போ நான் என்ன செய்யனும்?” நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

“உன்னைச்சுத்தியிருக்கறவங்களுக்கும் உனக்கும்,  உன் தோழிக்கும் நல்லது நடக்கனுன்னா, சேனாவை கல்யாணம் பண்ணிக்க நீ சம்மதம் சொல்லனும்” காயத்தில் கத்தியை இன்னும் ஆழமாக செருகினார் நிவேதா.

“இதுல உங்களுக்கென்ன லாபம்?” நிகாவின் இந்த தைரியம் அவருக்கே ஆச்சர்யமாக தான் இருந்தது.

“ஹா..ஹா… புத்திசாலிதான். நீ இந்த ஊரை விட்டே என் கண்ணை விட்டு போயிடுவ. அதுபோதும் எனக்கு. ரஞ்சனியை என் கட்டுக்குள்ள கொண்டு வர்றது சுலபமான விஷயந்தான்” என்றவரின் வார்த்தையில் பொறிதட்டியது அவளுக்கு.

“அப்போ ரஞ்சனியோட இந்த நிலைமை?”.. அவள் முடிப்பதற்கு முன்பே,

“ரொம்பவே புத்திசாலிதான் நீ. அதுக்கும் நான்தான் காரணம்” என்று கூறினார் அவர்.

“ச்ச.. நீங்கள்லாம் ஒரு மனுஷியா?” ஆத்திரத்தில் கத்தினாள் நிகா.

“ஷ்… ” வாயில் விரல் வைத்து அவளை அமைதியாக இருக்கும்படி கூறியவர்,

“உன் பாராட்டுப்பத்திரம் எனக்கு தேவையில்லை பெண்ணே? எனக்கு தேவை உன் சம்மதம்” மீண்டும் விஷயத்தில் வந்து நின்றார் அவர்.

“கழுத்தில் கத்தி வைத்து சம்மதமான்னு கேக்க அவசியமில்லை?” அவளுக்கு சளைக்காது பதில் கொடுத்தாள்.

“அப்ப சரி. இதையே உன் சம்மதமா எடுத்துக்கறேன்‌. நாளையே உனக்கு சேனாவுடனான  நிச்சயத்தை ஏற்பாடு பண்ணிடறேன். நீ ரெடியாகி வந்தா போதும். இப்ப நீ போகலாம்” என்றவர் அவளின் பதிலை கூட எதிர்பாராது உள்ளே சென்று விட்டார்.

ரஞ்சனியின் பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தவள், நிவேதாவின் வார்த்தைகளிலிருந்து ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள இயலாதவளாக இயந்திரம் போல் தயாராகினாள்.

அவளது முகம் களையிழந்து இருக்க, ரஞ்சனியின் நிலைமை தான் காரணமென்று தவறாக நினைத்துக்கொண்டான் கிரி.

சிறிது நேரம் சென்று, நூவன் வீட்டிற்கு வந்தவன் நேராக ரஞ்சனியை சென்று பார்க்க, எழுந்து அமர்ந்திருந்தாள் அவள்.

“உடம்பு இப்போ எப்படி இருக்கும்மா?”

“ம்ம்.. பரவாயில்லை அண்ணா” பதில் கூறியவள் கவனமாக கிரியின் முகத்தை பார்ப்பதை தவிர்த்தாள். அவளது தவிர்த்தலை கிரி கண்ஜாடை காட்ட, நூவனும் அவளை கவனித்தான். நிகா தயாராகி வந்தவள் அங்கு வர, மூவரின் கவனமும் அவளிடம் திரும்பியது.

ரஞ்சனி எழுந்தமர்ந்திருப்பதை பார்த்தவள்,

“ஹப்பாடி எழுந்துட்டியாடி? ” ஓடி வந்து அவளை கட்டிக்கொள்ள, பதிலுக்கு அவளும் கட்டிக்கொள்ள, ஆண்கள் இருவரின் காதுகளிலும் புகை வந்தது.

“தாங்கு தாங்குன்னு தாங்கினாலும் நம்மள கண்டுக்காம, இவளுங்க கட்டிப்பிடிச்சிக்கிறத பார்த்தியா மச்சி?” கிரி ஆதங்கத்துடன் நூவனின் காதுகளை கடிக்க,

“ஆமாம் மச்சி. உன் ஆளாச்சும் பரவாயில்லை. உன்னைப்பார்த்து கொஞ்சம் வெட்கமாச்சும் படுது. ஆனால இவ இருக்காளே, ஒன்னு முறைப்பா, இல்ல அடிப்பா. ஏதாவது கேள்வி கேட்டா, எதிர்கேள்வி தான் பதிலா வரும்” நூவனின் ஆதங்கத்தில், கிரிக்கு அவன் நிலையே பரவாயில்லையென்று தோன்றியது.

“ஹி…ஹி.. எங்க வீட்டு இரத்தம் கொஞ்சம் அப்படித்தான் மச்சி” கிரி சொல்ல, அவனை முறைத்தான் நூவன்‌.

“ஓ… பாசமலருக்கு சப்போர்ட்டா நீங்க? நல்லா வருவடா நீ?” நிகா எழுந்திருக்கவும், அவர்களது கவனம் அவளிடம் திரும்ப, ரஞ்சனி அவள் கைகளை பிடித்து தடுத்துக் கொண்டிருந்தாள்.

“நானும் உங்க கூடவே ஆஃபிஸ்க்கு வரேன்கா” என்று வாதிட்டு கொண்டிருந்தாள்.

“விளையாடாத ரஞ்சு. இப்பதான் உடம்பு கொஞ்சம் சரியாயிருக்கு. ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வா. நானும் இன்னைக்கு லீவ்தான் கேட்டேன். ஆனால் அந்த கஞ்சபிசுனாரி எம்.டி லீவ் குடுக்கனும்னா ஒரு மணிநேரமாவது வந்துட்டு போகனும்னு சொல்லிடுச்சு” மறைமுகமாக எரிச்சலை அவன்மீது காட்ட, வாயைப் பொத்தி சிரித்தான் கிரி. ரஞ்சனிக்கும் சிரிப்பு வர அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

“சரி சரி நேரமாச்சு வா கிளம்பலாம்.ரஞ்சு உடம்பை பார்த்துக்கமா ” என்றவன், கிரியை ஒரு பார்வை பார்த்து விட்டு கிளம்பிவிட்டான்.

காரில் அவன் ஏறி அமர, பின்சீட்டின் கதவை திறந்தவளை பார்த்தவன்,

“அப்பறம் நானும் பின்சீட்டிலயே வந்து உட்கார்ந்துக்குவேன். எனக்கும் உன்கூட பேசிகிட்டே உட்காரனும் போல இருக்கு. எப்படி வசதி?” என்று கேட்க, கதவை ஓங்கி அறைந்து விட்டு , முன்சீட்டில் வந்தமர்ந்தாள் நிகா.

நூவனின் கார் வந்ததையும், நிகாவை அழைத்துச்சென்றதையும் மாடியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார் நிவேதா.

“இனி அவ உனக்கு கிடையாது. என்னை மன்னிச்சுடு நூவா” மனதிற்குள் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் அவர்.

ஆரம்பத்தில் வேகமெடுத்தாலும், நிகாவின் உயிரற்ற முகத்தில் காரின் வேகத்தை குறைத்தான் நூவன்.

“என்னாச்சு நிகா? ஏன் ஒருமாதிரி இருக்க?” என்று கேட்டான்.

பதிலேதும் பேசாது அவள் அமைதியாக வர,

” கேட்டா பதில் சொல்லு பேபி. என்ன பிரச்சனை? உன் முகமே சரியில்லை?” மீண்டும் கேட்க, கிணற்றில் போட்ட கல்லாக, அவனது முயற்சி வீணாகத்தான் போனது.

ஒரு கட்டத்தில் அவன் வாகனத்தை நிறுத்தி விட,

“இப்ப நாம ஆஃபிஸ் போறமா இல்லையா சார்?” என்றவளின் ஒட்டாத பேச்சில் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது அவனுக்கு.

முயன்று தன்னை கட்டுப்படுத்திய வராக,

“என்னச்சு சொல்லு நிகா?” என்றவன், அவளது கைகளை பிடித்து இழுக்க, எப்பொழுதும்  எது செய்தாலும், எதிர்த்து வலு கொடுப்பவள், இன்று அவன் முதல் இழுப்பிலேயே அவன் மீது விழுந்து விட்டாள்.

நூவனுக்கு சொல்லவா வேண்டும்? அவளது நடவடிக்கையில் மாற்றம் இருந்தாலும், காதல் கொண்ட மனது, அறிவை வென்றது. தன் மீது விழுந்து அதிர்ந்து பார்த்தவளின் விழிகளில் தொலைந்தவனாக,

“நிகா மை லவ்…” முனகியவன், இதழ்களை முற்றுகையிட, இம்முறை தன்னவளிடம் இருந்து கிடைத்த ஒத்துழைப்பில், முற்றுகை அடுத்த கட்டத்திற்கு இழுத்து செல்ல, அத்துமீறலுக்கு அடித்தளமிட்டது அவனது கைகள். வலியை கொடுப்பவனிடமே மருந்தை பெறுபவளாக நிகாவும் அவனை இறுக்கி கொள்ள, பின்னால் ஒலித்த மற்றொரு வாகனத்தின்  ஹாரன் ஒலியில், சுயநினைவு பெற்றவளாக, அவனை தள்ளிவிட்டாள் அவள்.

தன் செயலில் நாணியவளாக, “ச்ச இந்த அளவுக்கா என் மனது பலகீனமாகிட்டது?” தனக்கு தானே பேசிக்கொண்டு தலையில் அடிக்க போனவளின் கைகளை தடுத்திருந்தான் நூவன்.

“விடு நூவி. என்னைத் தொடாதே. என்னை விட்டு விலகிப்போயிடு” என்றவள், கதவை திறந்து கொண்டு வெளியே நடக்க ஆரம்பித்தாள்.

இன்னும் வேகம் குறையாது, தனக்கான காதல் பரிமளித்த அவனது கண்கள், அவளது மனக்கண்ணில் தோன்றி அவளை இம்சை செய்தது.

“நிகா நில்லு. நில்லுடி” என்றவன், தனது முழு வலிமையுடன் அவளை பிடித்து இழுக்க, அவனது பிடியில் இருந்து விடுபட போராடினாள் அவள்.

“பேபி என்னதிது?? நடுரோட்டுல வச்சுகிட்டு, நீ முதல்ல காருக்கு வா” அப்பொழுதும் பொறுமையாக விளக்கியவனை காண, மனம் அவனுக்காக ஏங்க ஆரம்பிக்க, நிவேதாவின் வார்த்தைகளும் அவளது காதுகளில் ரீங்காரமிட,

“போடா. நீ எனக்கு வேண்டாம். என்னை விட்டுப்போயிடு” கண்ணீருடன் அவனது கைகளில் குத்த ஆரம்பித்தாள். அவளது வேகம் சற்று குறைய, சட்டென்று அவளை கைகளில் அள்ளிக்கொண்டவன், அவளது துள்ளலை பொருட்படுத்தாது, காரின் பின்பகுதியில் விட்டவன், தானும் ஏறி அமர்ந்து, காரின் கதவுகளை முதல் வேலையாக லாக் செய்தான்.

“என்னாச்சுடா? ஏன் இவ்வளவு ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க பேபி? ” அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

“ப்ளீஸ் என்னை விட்டுடு நூவி. நீ எனக்கு வேண்டாம்” அதே வார்த்தைகளை திரும்ப கூறினாள்.

“பேபி இங்க பாரு என்னை பாரு. அத்தை ஏதும் சொன்னாங்களா?” விஷயத்தை நொடியில் ஊகித்தவனை கண்டு, மனம் கர்வப்பட்டாலும், ஏதும் பேசாது அமைதியாகி விட்டாள்.

அவளது அமைதியே அவர்தான் என்று சொல்லாமல் சொல்ல , நிச்சயம் தனக்கும் சேர்த்துதான் அவர் ஏதோ திட்டத்தை  செயல்படுத்த முடிவெடுத்திருப்பார் என்பதை உணர்ந்து கொண்டான் அவன்‌.

“சரி பேபி. நீ எதுவும் சொல்ல வேண்டாம். நான் உன்னை தொந்தரவு பண்ணலை. இப்ப உன்னை திரும்ப வீட்டுக்கே கொண்டு விடறேன். ஆனால் எனக்காக ஒன்னே ஒன்னு செய்வியா? “

“என்ன?..” என்பதைப் போல் பார்த்தவளிடம்,

“நாளைக்கு என்ன நடந்தாலும் தப்பான முடிவுக்கு போக கூடாது” என்று கேட்க, சரியென்று தலையசைத்தாள் அவள்.

“அப்படியே நீயா எனக்கு ஒரு மருத்துவ முத்தம் குடுத்தன்னா, மாமா ரெஃப்ரெஷ் ஆயிடுவேன். யானைபலம் திரும்ப கிடைச்ச மாதிரி இருக்கும்” அவளை சீண்ட,

“நான் ஒரு உதை உதைக்கறேன். யானை மிதிச்ச மாதிரி இருக்கும்” அவனது சீண்டலில்  தன்னிலைக்கு மீண்டிருந்தாள் அவள்.

“உன்னை என்னடி கேக்கறது?” என்றவன் இம்முறை மிக அழுத்தமாக இதழ்களில்  முத்திரை பதிக்க, நிகாவின் எதிர்ப்புகள் எடுபடவில்லை.

அவன் விடுவித்தும், அவள் சரமாரியாக அவனை அடிக்க,

“உனக்கு கொஞ்சம் கூட நான் கொடுத்த முத்திரையோட பாதிப்பே இல்லையாடி? நான் இன்னும் நிறையா உழைக்கனும் போலயே? இந்த ஸ்டராபெர்ரி லிப்பாமும் நல்லாதான் இருக்கு. எனக்காகவே தேடி கண்டுபிடிப்பியோ?” மீண்டும் அவளை வம்பிழுத்து, இன்னும் சில அடிகளை பரிசாக பெற்றுக்கொண்டான்.

“போதும் பேபி. இதுக்கு மேல போச்சுன்னா? நடக்கறதுக்கு நான் பொறுப்பாக முடியாது. அப்பறம் குடும்பமா தான் காரை விட்டு இறங்குவோம்.  அவ்வளவு சிக்கனம் நமக்கு தேவையில்லை. அதுக்கெல்லாம் வேற லெவல்ல யோசிச்சு வச்சுருக்கேன்” என்று கூற, அவனது கைகளில் இருந்த சாவியை பிடுங்கியவள், தானே லாக்கை எடுத்து விட்டு , முன்சீட்டில் சென்று அமர்ந்து கொண்டாள். ஏனோ அவ்வளவு நேரம் மனதை அழுத்திய பாரங்கள் குறைந்ததை போல் இருந்தது அவளுக்கு. நிவேதா பேசியதை அவனிடம் சொல்லி விடலாமா என்று கூட யோசித்தாள். ஆனாலும் ரஞ்சனியை நிலைப்பாட்டை நினைத்து அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

நொடிக்கொரு பாவனை காட்டிக் கொண்டிருந்த முகத்தை பாராது பார்த்து கொண்டிருந்தவன், மீண்டும் அவளை வீட்டிற்கு கொண்டு வந்து விட்டான்.

“பேபி.. போய் நல்லா ரெஸ்ட் எடு. கண்டதையும் நினைச்சு குழம்பாத” அவளுக்கு விடை கொடுத்து கிளம்பி சென்றவன், வீட்டிற்கு சென்றதும் முதல் வேலையாக கிரிக்கு அழைத்தான்.

“மச்சி நாளைக்கு விழாவுக்கு இந்திரசேனா வர்றாரா?” என்று கேட்க,

“ஆமாண்டா. சேனா குடும்பம் மொத்தமும் வராங்க” என்ற தகவலில் , விஷயம் தெளிவாக விளங்கியது அவனுக்கு.

கண்களுக்கு முன்னால் அழகாக வடிவமைக்கப்பட்ட, ‘செக் டேம்’ களில் இருந்து வழிந்து கொண்டிருந்த தண்ணீரை கண்கொட்டாது பார்த்துக்கொண்டிருந்தாள் ரஞ்சனி.

“கொஞ்சநேரம் எனக்கு வெளிய நடக்கனும் போல இருக்கு” அவன் வந்ததிலிருந்து பேசாமல் அமைதியாக இருந்தவள், இப்பொழுது தானாகவே கேட்க,

“சரி வா. உன்னை ஒரு இடத்துக்கு அழைச்சுட்டு போறேன். நடக்க முடியுமா?” என்று கிரி கேட்க, சரியென்று தலையசைத்தாள்.

அவன் அழைத்துச்சென்று அவர்களது வயவ்வெளியை காண்பிக்க, கண்களுக்கும் மனதிற்கும் அவ்வளவு குழுமையாக இருந்தது.

அப்பொழுதுதான் அங்கு வித்தியாசமாக அமைக்கப்பட்டிருந்த குட்டி அணைகளை பார்க்க, அதன் பெயர் “செக் டேம்” என்றான் கிரி.

தற்போதைய கால சூழ்நிலையில்  பருவமழை அடிக்கடி பொய்த்து போகிறது. சில ஆண்டுகளில் எதிர்பார்த்ததை விட மழை கூடுதலாக பெய்வதுண்டு. கிடைக்கும் மழைநீரை முழுமையாக சேமித்தால், மழையில்லாத போது தண்ணீர் பிரச்னை இருக்காது. விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவதில், பிற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர். தோட்டத்தை சுற்றிலும் வரப்பு அமைத்து, எந்த பகுதி தாழ்வாக உள்ளதோ, அங்கு, சிமெண்ட் அல்லது கற்களை கொண்டு, கட்டடத்தை எழுப்பியுள்ளனர்.குறிப்பிட்ட அளவு நீர், தோட்டங்களில் தேங்கியதும், உபரி நீர் வெளியேறும் வகையில் “செக்டேம்’ போன்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இது, பார்ப்பதற்கு ஒருமினி குளம் போலவே காட்சியளிக்கும்.இதன் மூலம், மழை காலங்களில் பெய்யும் அதிகப்படியான மழை நீர், நிலத்தில் தேங்கி, நிலத்தடி நீர் மட்டம் உயர வழி வகுக்கும். “மழைநீரை சேமிக்க வேண்டும் என்ற அக்கறை, பலருக்கும் உள்ளது. ஆனால், விவசாயிகளின் பொருளாதாரம் இடம் கொடுப்பதில்லை. மழை நீர் கட்டமைப்பை ஏற்படுத்த அதிக செலவாகிறது. இதை அனைவராலும் செயல்படுத்த முடிவதில்லை.எனவே, குடி மராமத்து திட்டத்தின் கீழ், மழைநீர் சேமிக்கும் திட்டத்தை ஏற்படுத்தி, அனைத்து விவசாய நிலங்களிலும் செயல்படுத்த உதவ வேண் டும். இதனால், மழை பொய்க்கும் காலங்களில், தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பாதிக் கும் என்ற பிரச்னை இருக்காது என்ற நீண்ட விளக்கமும் அளித்தான்‌.

“ம்ம் செம ஐடியாங்க…” மனதார அவள் பாராட்ட,

“பிடிச்சுருக்கா ரனு?” என்று கேட்க, அவனை திரும்பிப்பார்த்தவள், அவனது பார்வையை சந்திக்க இயலாதவளாக, தலையை குனிந்து கொண்டாள்.

“ரனு…” என்றவன் அவளை நெருங்கினான்.

அந்த நேரத்தில் “கிரி…‌” அவனது அன்னையின் குரல் ஓங்கி ஒலிக்க, மேனேஜர் உன்கிட்ட பேசனுமாம், உன்னோடது அவருக்கு ரீச் ஆகலை, சீக்கிரம் வா வென்று அழைத்துக்கொண்டிருந்தார்.

நிவேதாவின் குரலில் தூக்கி வாரிப்போட்டாலும், முயன்று தன்னை கட்டுப்படுத்தி நின்றாள் ரஞ்சு.

“இதோ வந்துடறேன் ரனு” என்றவன் அன்னையை நோக்கி சென்று விட்டான். நிவேதாவும் சென்று விடுவார் என்று பார்க்க, அவளை நோக்கி வந்து கொண்டிருந்தார். அதில் சற்று கலவரமடைந்தாலும் வேடிக்கை பார்ப்பதில் தனது கவனத்தை திருப்பினாள்.

அருகில் வந்தவர், தூரத்தில் மகன் பேசிக்கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டவராக,

“அன்னைக்கு இரவு நீ என்ன பார்த்த ரஞ்சனி?” என்று கேட்க, அவளது முகம் வெளிற ஆரம்பித்தது. அதை தனக்கு சாதகமாக்கிக்கொண்டவர், விஷயம் வெளியே வரக்கூடாதென்று மிரட்ட, அவரது மிரட்டலில் ஆழ்ந்த மயக்கத்திற்கு சென்றாள் அவள்.

கிரி வந்து பார்க்கும் போது, அவள் எழுப்ப முயற்சித்துப் கொண்டிருக்க,

“என்னாச்சு மாம்?” பதற்றத்துடன் கேட்க,

“தெரியலடா. நின்னுட்டருந்தவ மயக்கம் போட்டுட்டா” என்றவர், அதன்பின்பு முதல் வேலையாக அவளை மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார். அப்பொழுதுதான் நாளைய வேலை சரியாக நடக்குமென்று முடிவு செய்தபடி செயல்படுத்தினார்.

காதல் பிடிக்குள் சிக்கி காற்றும் திணறுகிறது

கொஞ்சம் இடைவெளிவிடு பிழைத்துப்போகட்டும்…

திமிராகும்…..

அத்தியாயம்-26:

“எத்தனை தடவை சொல்லியாச்சுண்ணா?? இந்த தடவை ரூபியை நான் என்கூட கூட்டிட்டு போயே தீருவேன்” தயானந்தின் ஒரே உடன்பிறந்த தங்கை அவருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். கோவையில் பிரபல தொழிலபதிருக்கு அவரை கட்டிக்கொடுத்திருந்தார் தயானந்த். தங்கையை நல்ல விதமாக வைத்து நிறைவாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் மச்சானின் மீது அவருக்கு என்றும் தனி மதிப்பு உண்டு. தயானந்த் சற்று தாமதமாக திருமணம் செய்து கொண்டதால், ரூபாலி அவரின் மகனுக்கு மிகவும் சின்ன பெண்ணாக போய் விட்டாள். இல்லையன்றால் தங்கை மகனுக்கு தான் மகளை திருமணம் செய்திருப்பார்.

“இதே அண்ணி இருந்திருந்தா நான் கூட்டிட்டு வரேன்னு முதல் ஆளா கிளம்பியிருப்பாங்க?” உண்மையான வருத்தத்துடன் அவரின் தங்கை கண்களை துடைத்துக்கொண்டார்.

“அழாதிங்க அத்தை ” ரூபியின் சமாதானம் அவரிடம் எடுபடவில்லை.

“தங்க விக்ரஹம் மாதிரி இருக்கடி. அண்ணி இருந்தா உன்னை இவ்வளவு நாள் கல்யாணம் பண்ணி கொடுக்காம வச்சுருப்பாங்களா?? அப்பவே கேட்டேன், உன்னை நான் வளர்த்துக்கறன்னு, அப்பவும் இந்த அண்ணா விடலை. சரி அண்ணி போன வருத்தத்துல இருக்கிங்க, நாளாக நாளாக சரியாயிடுன்னு நினைச்சேன். அதுக்கப்பறம் எத்தனை விஷேஷங்களுக்கு வந்து கூப்பிட்டேன். எதுலயும் வந்து கலந்துக்கவுமில்லை, உன்னையும் கலந்துக்க விடலை. சரி, மந்திரிங்கறதால அதுக்குரிய வேலைங்க இருக்கும்னு நாங்களும் புரிஞ்சுகிட்டோம். இந்த முறை அப்படி விட முடியாது, நீ நம்ம குலதெய்வம் கோவில்ல நடக்கப்போற விழாவுல கலந்துகிட்டே ஆகனும். அப்பதான் அடுத்த வருஷம் உனக்கும் கல்யாணம் ஆகி, சந்தோஷமா இருப்படா ரூபி செல்லம். அத்தை என் பசங்களுக்கு பண்ணி முடிக்க வேண்டிய பொறுப்புகளையெல்லாம் முடிச்சிட்டேன். இனி நீ மட்டுந்தான் மிச்சம். உன்னையும் நல்லவனா பார்த்து ஒருத்தன் கையில் பிடிச்சுக்கொடுத்துட்டா ரொம்ப நிம்மிதியா இருக்கும்” அவர் பேசபேச மனது மிகவும் கனக்க ஆரம்பித்தது ரூபாலிக்கு. தன்மீதுள்ள அக்கறையில்தான் பேசுகிறார் என்பது புரிந்தாலும், சேனாவை  மறப்பது அவளால் முடியுமென்று தோன்றவில்லை. மகளின் முகம் வாடுவதை கண்ட தயானந்த்,

“மானசா எதுக்கு அவளை வற்புறுத்தற? அவளை விட்டுடு, அவ எங்கயும் வரமாட்டா. எங்களுக்கும் சேர்த்து நீயே வேண்டிக்கோ” சற்று கடுமையாக பேசிவிட, அவரின் முகம் களையிழந்து விட்டது.

தனக்காக பேசிய அத்தையின் முகவாட்டத்தை பொறுக்க இயலாதவளாக,

“நான் உங்ககூட கோவைக்கு  வரேன் அத்தை” என்று சம்மதித்து விட்டாள் ரூபாலி. ஆம், கோவையில் தான் அவர்களது பூர்விகக்குலதெய்வ கோவில் அமைந்திருந்தது. அதனால் தான் முடிந்த அளவு மறுத்து பார்த்தாள்.

தயானந்த் மகளை ஆச்சரியமாக பார்க்க,

“பாபா. நான் அத்தை கூட போயிட்டு வரேன். ஒருவாரம் தானே, ஒண்ணும் பிரச்சனையில்லை” என்றும் சேர்த்துக்கூற, மகளுக்கு நல்லகாலம் பிறந்துவிட்டதாகவே நினைத்து மகிழ்ந்து போனார் அவர்.

“எல்லாம் சரிம்மா. ஆனால் இப்ப உனக்கு பாதுகாப்பு குடுக்கறதுல கொஞ்சம் சிக்கல் இருக்கு. ஒரு டீம் டெல்லி போயிருக்காங்க” என்று அவர் யோசிக்க,

“அதெல்லாம் வேண்டாம்ப்பா. நான் முடிந்த அளவு பாதுகாப்பா இருந்துக்கறேன்” தந்தைக்காக பேசியவளை, கண்டு மனம் நிறைந்து போனது.

“சரிம்மா. நீ போய் தேவையான பொருளையெல்லாம் எடுத்து வை. நான் செய்ய  வேண்டிய ஏற்பாடெல்லாம் செய்து வைக்கிறேன்” மகளை அனுப்பி வைத்தார் அவர்.

அவர் உள்ளே செல்வதை பார்த்து உறுதி படுத்திக்கொண்டவர், தங்கையின் கைகளை பிடித்துக்கொண்டு,

“மனும்மா உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலடா”  என்றவர் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

“ச்ச.. ச்ச… என்னண்ணா இது? சின்னப்பிள்ளை மாதிரி கண்கலங்கிகிட்டு? அவ எனக்கும் பொண்ணுதான். நான் பார்த்துக்கறேன் விடுங்க. அவ மனசை மாத்த வேண்டியது என் பொறுப்பு. நான் நல்லா பார்ததுக்கறேன். முதல்ல அவ கொஞ்சநாள் வெளி உலகத்தை பார்க்கட்டும். எல்லாம் தானா சரியாகும்” அவர் அளித்த உறுதியில், தொலைந்த சந்தோஷம் மீண்டு வந்ததைப் போல் உணர்ந்தார் தயா.

“சரிம்மா. கொஞ்சம் கவனமா பார்த்துக்கோ. யார் கஷ்டப்படாலும் அவளால தாங்கிக்க முடியாது. அது அவ இயல்பாகவே ஆயிடுச்சு” என்றவர், பயணிச்சீட்டுகளுக்கான ஏற்பாடு செய்தவர், அவளது வாழ்வு சீராக வேண்டுமென்ற வேண்டுதலோடு, மகளை பத்திரமாக கோவைக்கு வழியனுப்பி வைத்தார்.

ஒரே நாளில் சுழற்காற்றில் சேதமடைந்த கொடியைப்போல் துவண்டு கிடப்பவளை கண்களால் காண முடியவில்லை.

“கொஞ்சம் பார்த்துக்கங்க சார். இந்த ட்ரிப்ஸ் முடிஞ்சதும் என்னைக் கூப்பிடுங்க” அங்கிருந்த செவிலிப்பெண், கிரியிடம் கூறிவிட்டு செல்ல, மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்தார் நிவேதா.

“அப்படி என்னடி ஆச்சு? உன்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததுல இருந்து இப்படி ஆயிடுச்சே? உனக்கு நான் இருக்கேன் ரனு” என்றவன் அவளது கையை தனது கைகளுக்குள் பொதிந்து கொள்ள, அவளின் விழி இமைகள் அசைந்தாலும், கண்களை திறக்கவில்லை.

“இரத்த பரிசோதனை முடிவு இன்னைக்கு மாலை வரும் மேடம். வந்ததும் என்ன காய்ச்சல்னு தெரியும். இப்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இவங்க கொஞ்சம் வீக்கா இருக்காங்க, அதான் இந்த மயக்கம். காய்ச்சலும் கொஞ்சம் குறைஞ்சுருக்கு” இருவரும் பேசிக்கொண்டே உள்ளே வந்தனர்.

அவளது ட்ரிப்ஸீம் முடிந்திருக்க, செவிலியரை அழைக்க எழுந்து வந்தான் கிரி. அவனது காதுகளிலும் இவர்களது பேச்சு விழ, ஆபத்தில்லை என்பது சற்று ஆறுதலாக தான் இருந்தது.

“அப்போ என்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டுப் போறது டாக்டர்?” என்று கேட்டான்.

“நோ..நோ…கிரி. கண்டிப்பா இரண்டுநாளாச்சும் இங்க இருக்கனும்.அதுக்கப்பறம் தான் எதுனாலும் சொல்ல முடியும்” என்று கூறிவிட, சோர்வுடன் தாயைப் பார்த்தான்  அவன்.

“நீ வேணும்னா வீட்டுக்குப் போயிட்டு வாடா. நான் இங்க இவகூட இருக்கேன்” நிவேதா கூற, ஆச்சரியமாக பார்த்தான் கிரி.

“என்னடா அப்படி பார்க்கற? என் மகன் மனசு எனக்கு தெரியாதா என்ன? மருமகளை நான் பார்த்துக்கிறேன். நீ வீட்டுக்குப் போயிட்டு, வேலண்ணா கிட்ட சொல்லி, நான் சொல்ற பொருளெல்லாம் எடுத்துட்டு வா. எப்படியும் இரவில் நீதான் தங்கனும்” தாயின் நேரடியான சம்மதத்தில், மகிழ்ந்தவன் அவரை அணைத்துக்கொண்டான்‌.

“நீங்க ஒத்துக்க மாட்டிங்களோன்னு ரொம்ப பயமா இருந்ததும்மா?” உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினான்.

“காதல் தோல்வி ரொம்ப கொடூரமானது கண்ணா. அதை எல்லாராலயும் தாங்கிக்க முடியாது. உன்னை அப்படி வருத்தப்பட விட்டுருவேனா?” உள்ளிலிருந்து வந்த வார்த்தைகள், அவரது வாழ்வின் அனுபவமாக வெளிப்பட்டது.

“காலைல இருந்தே மனசே சரியில்லாத மாதிரி இருக்குமா? இன்னும் அந்த உணர்வு குறையவே இல்லை” தாயிடம் கூறியவனின் முகம் இன்னும் சோர்வாகத்தான் இருந்தது. அது எதனாலென்று தெரிந்தாலும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார் நிவேதா.

“சரி நீ கிளம்பு. கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு வா” என்று அனுப்பி வைத்தார்.

அவன் வீட்டிற்கு வந்திறங்கியதுமே, அவனைத்தேடி வந்தாள் ஸ்ரீனிகா.

“கிரி ரஞ்சனி எங்க? நானும் வந்ததிலிருந்து தேடிக்கிட்டுருக்கேன். உனக்கு கால் அடிச்சாலும் எடுக்கல? அவளோட அலைபேசியும் இங்கதான் இருக்கு” பதற்றத்துடன் கேட்டாள்.

“அவளுக்கு காய்ச்சல் ரொம்ப அதிகமாயி மறுபடியும் மயக்கம்‌ போட்டு விழுந்துட்டா ஸ்ரீனிகா. ரொம்ப புழுக்கமா இருக்கு, வெளில நடக்கனும் சொன்னா. நானும் கூட்டிட்டு போனேன், அம்மாவும் கூடத்தான் நின்னுருந்தாங்க, திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டா. அதனால ********** மருத்துவமனைல சேர்த்திருக்கோம். இப்பகூட அம்மாவை அவளுக்கு துணைக்கு விட்டுட்டு தான் வந்திருக்கேன்” கடைசியாக அவன் கூறிய தகவலில் சினம் மூண்டது அவளுக்கு.

“சரி உடனே என்னை அங்க கூட்டிட்டு போ” என்றவள் அவனை துரிதப்படுத்த,

“அம்மா கொஞ்சம் பொருள் கேட்டுருக்காங்க. இரு வேலண்ணா கிட்ட சொல்லி வாங்கிட்டு மட்டும் வந்துடறேன் ” என்றவன் உள்ளே சென்று விட்டான். அடுத்த கடந்த சில நிமிடங்களில் அவனிடம் உண்மையை சொல்லவும் முடியாமல், ரஞ்சனியை பார்க்கவும் முடியாமல் தவித்துப்போனாள் அவள்.

“போகலாம் ” என்றவன் வாகனத்தில் ஏறி அமர, அவளை காணும் வரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் அவள்.

“டாக்டர் ஒண்ணுமில்லை சொல்லிடாங்கடா. ஏன் இவ்வளவு பதட்டப்படுற?” அவளை சமாதானப்படுத்த முயன்றான் கிரி.

“இல்லை கிரி. காலைல இருந்து மனசே சரியில்லாத மாதிரி இருக்கு. இன்னும் அந்த உணர்வு குறையவேயில்லை” என்று அவள் கூற, அவளது வார்த்தைகளின் வேதனையின் அளவைப்புரிந்து கொண்டவனாக, சீக்கிரமே மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றான்.

மருத்துவமனை வந்ததும் இறங்கி ஓடியவள், முதலில் எதிர்கொண்டது நிவேதாவை. அவளைப்பாரத்து அவர் புன்னகைக்க, அவரது புன்னகையில் எரிச்சல் வந்தது அவளுக்கு.

“என்னை நோகடிக்க எதுக்கு ரஞ்சனியை கஷ்டப்படுத்திறிங்க?” என்றவள் அவர் மீது எரிந்து விழுந்தாள்.

“ஷ்…”, வாய் மீது விரல் வைத்தவர்,

“,இது மருத்துவமனை ” அமைதியாப்பேசும்மா என்றார்.

“என்ன கேட்ட? நான் நோகடிக்கறேனா? உன் நல்லதுக்கு தான் செய்றேன். அதை நீ புரிஞ்சுக்க கூடிய நாள் கண்டிப்பா வரும். இப்ப நான் கிளம்புறேன். நாளைக்கு காலையில் மிதமான அலங்காரத்தோட  ரெடியாகி வீட்டுக்கு வந்துடு. கிரிகிட்டயோ, நூவன்கிட்டமோ  எதுவும் சொல்ல முயற்சி செஞ்சா, அப்பறம் உன் தோழி உனக்கில்லைங்கறத மறந்துடாத. நாளைக்கு பார்க்கலாம்” என்றவர் முன்னே நடந்து விட்டார்.

இயலாமையில் அவள் அப்படியே உறைந்து நிற்க, கிரி வந்து அவளை உலுக்கினான்.

“ஸ்ரீ… என்னாச்சு?? ” என்று கேட்டவனுக்கு , ஒண்ணுமில்லையென்று தலையசைத்தாள்.

“அம்மா வீட்டுக்கு போயிட்டாங்க. வா நாம போகலாம்” என்றவன் ரஞ்சனியை பார்க்க அழைத்துச்சென்றான்.

ஒரேநாளில் இளைத்துப்போய் இருந்தவளை காண மனம் வெம்பியது. நல்ல வேளையாக காய்ச்சல் நன்றாகவே குறைந்திருக்க, அடுத்து வந்த இரத்தப்பரிசோதனையிலும் எந்தவித நோய் தொற்றுமில்லை என்று முடிவு வந்துவிட சற்று நிம்மதியாக இருந்தது அவளுக்கு. காய்ச்சல் குறைந்தாலும், ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருந்தாள் அவள். அவர்கள் கொண்டு வந்த உணவை கூட, தூக்கத்திலேயே செவிலிப்பெண் புகட்டி விட்டார்.

“நீ வேணுன்னா கிளம்பு கிரி. நான் பார்த்துக்கிறேன்” அவளுக்கு சற்று தனிமை தேவைப்பட்டது.

“இருக்கட்டும் ஸ்ரீ.. நானும் இங்கயே இருக்கேன்” என்றவன் அமர, அடுத்தடுத்து அவனது அலைபேசியில் அழைப்பு வந்து கொண்டே இருந்தது. மேனேஜரின் அழைப்பை ஏற்று பேசிய பிறகுதான் மறுநாளைய விஷேஷத்தின் முக்கியத்துவம் புரிந்தது.

நிகா அவனைப் பார்த்து கொண்டிருக்க,

“நாளைக்கு நம்ம இரும்பு தொழிற்சாலையோட எழுபத்ததைந்தாவது ஆண்டு விழா ஸ்ரீ. எல்லாருக்கும் அழைப்பு கொடுத்தாச்சு. நீயும் காலைலயே வீட்டுக்கு வந்துடு. எங்ககூட சேர்ந்து நீயும் வரனும். ரஞ்சனிக்கு இப்படி ஆனதுல சொல்ல மறந்து போயிட்டேன்”

“இப்ப இருக்கற சூழல்ல இது ரொம்பவே முக்கியம்” மனதில் மட்டுமே அவளால் நினைக்க முடிந்தது. கிரிக்கு சரியென்று மட்டும் தலையாட்டி வைத்தாள்.

மீண்டும் அழைப்புகள் வந்த வண்ணமிருக்க,

“நீ வேணுன்னா உன் வேலைகளை முடிச்சுட்டு வா கிரி. அப்படியே வீட்டில் இருக்குற ஃப்ளாஸ்க்ல கொஞ்சம் வெந்நீரும் கொண்டு வந்தா கொஞ்சம் நல்லாயிருக்கும்” என்று கூற, கிளம்பிச் சென்றான் அவன்.

அவன் நகரும் வரை மட்டுமே அவளால் தாக்குப்பிடிக்க முடிந்தது. பின்பு ரஞ்சனியின் கைகளை பிடித்துக்கொண்டவள்,

“நீ சொன்னப்பவே கிளம்பியிருக்கனும் ரஞ்சு. தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சுடுடா” கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு பேச, தூங்கிக்கொண்டிருந்தவளின் கண்களில் இருந்தும் கண்ணீர் வடிய ஆரம்பித்தது.

வீட்டிற்கு சென்று கொண்டிருந்த கிரிக்கு, மீண்டும் நூவனிடம் இருந்து அழைப்பு வந்தது. காரை நிறுத்தி விட்டு அவன் அழைப்பையெடுக்க,

“என்னடா ஆச்சு ரஞ்சனிக்கு? இப்பதான் கேள்விப்பட்டேன், அவள ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்கறதா?”

“ஆமா மச்சி. காய்ச்சல் அதிகமாகி மயக்கம் போட்டுட்டா, ஆனால் இப்ப பரவாயில்லை. காய்ச்சல் குறைஞ்சுடுச்சு. இரத்தப்பரிசோதனை முடிவிலயும் ஒண்ணுமில்லை சொல்லிட்டாங்க. ஸ்ரீ அங்க இருக்கா, நான் வீட்டுக்குப்போயிட்டு திரும்ப போகனும். என்ன விஷயம் சொல்லு மச்சி?” விஷயத்திற்கு வந்தான் கிரி.

“அத்தை விழாவுக்கு கூப்பிட்டதோட, நாளைக்கு நம்ம வீட்டுல இன்னொரு விஷேஷமும் இருக்கு. அதனால காலைல நம்ம வீட்டுக்கு வர சொல்லி கூப்பிட்டுருக்காங்க அம்மாகிட்ட, அநேகமா சேனாவுக்கு நிகாவை நிச்சயம் பண்ண முடிவு பண்ணியிருக்காங்கன்னு நினைக்கிறேன்” அவனது கணிப்பை சொன்னதில், கிரிக்கு தலை சுற்றியது. அடுத்தடுத்து நடக்கும் பிரச்சனைகளும் விஷயங்களும் அவனை மிகவும் கலவரப்படுத்தியிருந்தன.

“என்னடா சொல்ற? அம்மா என்கிட்ட ஒருவார்த்தை கூட சொல்லலை? அதுமில்லாம ஸ்ரீ விஷயத்துல இவங்க எப்படி முடிவெடுக்க முடியும்? எல்லார் முன்னாடியும் அவ வேண்டான்னு சொல்லி இவங்களாவே அசிங்கப்பட போறாங்களா?” படபடத்தான் அவன்.

” இல்லை மச்சி. நிகாவை ஒத்துக்கவச்சுட்டாங்கன்னு தான் நினைக்கிறேன்” இந்த விஷயம் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“எப்படி சொல்ற?”

அன்று காலையில் நடந்த விஷயத்தை சொன்னான் நூவன்.

“ஓ.. அதான் பார்க்க ரொம்பவே டல்லா தெரிஞ்சாளா?”  சோர்வான அவளது முகம் வந்து போனது கிரிக்கு.

“இப்ப என்ன பண்றது மச்சி? நான் வேணுன்னா அம்மாகிட்ட வேண்டான்னு சண்டை போடவா?” எது நடந்தாலும் நல்லதாக நடக்கப்போவதில்லை என்பதால், விஷயத்தை தான் கையிலெடுக்க முடிவெடுத்தான் அவன்.

“அத்தை தான் இந்த விஷயம்னு உன்கிட்ட சொல்லவேயில்லையே எதை வைச்சு சண்டை போடுவ? என் அனுமானப்படி அவங்க நாளைக்கு காலைல தான் உனக்கு சொல்லுவாங்க. அதனால் நீ நடக்கறத அப்படியே நடக்கட்டும்னு விடு” அவன் கூறிய ஆலோசனையில் மொத்தமும் குழம்பி போனது கிரிக்கு. அதனால் கோபமும் வர,

“அந்த சேனாவை எல்லாம் மச்சானா என்னால ஏத்துக்க முடியாது?” என்று கொதித்தான். அவன் கூறிய பாவனையில் சிரிப்பு வந்தது நூவனுக்கு.  இன்னும் சிறு வயது கிரியாகவே தெரிந்தான்.

“உன் மச்சான் நான்தான்டா. நான் அப்பா-அம்மாகிட்ட பேசிட்டேன். நாளைக்கு நடக்கப்போறது எங்க நிச்சயம்தான்” என்று கூற, இத்தனை நேரமிருந்த அலைப்புறுதல் எல்லாம் துணிகொண்டு துடைத்தாற் போலானது அவனுக்கு.

“ரொம்ப சந்தோஷம் மச்சி” என்றவன் மறுநிமிடமே “ப்ச்…” என,

“என்னாச்சுடா? என்றான் நூவன்.

“இல்லைடா ரஞ்சனி இருந்தா சந்தோஷப்படுவா” அவனது கவலை அவனுக்கு.

“டேய்.. நாளைக்கு அப்பா எல்லாம் சரியா பேசி முடிக்கனும்னு நானே டென்சன்ல இருக்கேன். உன் கவலை உனக்கு. விடு, அவளுக்காக இன்னொரு நிச்சயம் செஞ்சுடறேன். நீ மட்டும் கொஞ்சம் தைரியமா சூழ்நிலையை சமாளி மச்சி. அப்பா  பேசுனா மட்டுந்தான் அத்தை எதுவும் பேசமாட்டாங்க‌, ஆனால் அந்த கோபத்தை உன்கிட்ட மட்டுந்தான் காட்டுவாங்க, கொஞ்சம் பொறுத்துக்கோ” உற்ற நண்பனாக அவனுக்கு எடுத்துரைக்க, தனக்காக யோசித்து செயல்படும் நூவனை என்றும் போல் இன்றும் மிகவும் பிடித்தது கிரிக்கு.

“சரி‌ மச்சி. பார்த்துக்கறேன்” என்றவன் அழைப்பை துண்டித்து விட்டு வீட்டிற்கு சென்றான்.

வீட்டிற்கு சென்றால், அம்மா யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாமென்று கூறிவிட்டதாக கூறி ஓய்வெடுக்க சென்று விட்டதாக வேலண்ணா கூற, ஒன்றும் காட்டாக்கொள்ளாது, நிகா கேட்டதை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு மீண்டும் சென்றவன்,  இரவு தான் பார்த்துக்கொள்வதாக சொன்னவளை, வற்புறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.

மறுநாளைய பொழுதும் யாருக்காகவும் காத்திருக்காமல் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமாக விடிந்தது.

காலையில் எழுந்திருக்கும் போதே மிகவும் உற்சாகமாக உணர்ந்தான் சேனா. முந்தைய நாள் மாலை  நிவேதா அவனிடம்  நிகா சம்மதித்து விட்டாள் என்று கூறியபொழுது, வானம் வசப்பட்ட உணர்வு அவனுக்கு.  அவனின் பெற்றொருக்கு முதலில் அழைத்து விஷயத்தை கூறுமாறு செய்தவர், தானும் சேனாவின் குடும்பத்திற்கு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

உடனடியாக அவளை பார்க்க விடாமல் வேலை அவனை தடுத்தது.  வெகுநேரம் சென்று வீடு திரும்பியவன், நிகாவிற்கு அழைப்பெடுக்க, அவள் ஏற்கவில்லை. அதன்பிறகே மணியைப்பார்க்க பின்னிரவு தாண்டியிருந்தது. ஆர்வக்கோளாறில் அழைப்பெடுத்த தனது அசட்டுத்தனத்தை நினைத்து சிரித்தவனாக சந்தோஷமாகவே உறங்கச்சென்றான்.

காலையிலேயே சொந்தபந்தங்களால் வீடு நிரம்பியிருக்க, அனைவரையும் வரவேற்று உபசரித்துக்கொண்டிருந்தான் கிரி.

நிவேதா மகனின் அருகே வந்தவர், “கிரி இன்னைக்கு சர்ப்ரைஸா இன்னொரு விஷேஷமும் நம்ம வீட்டுல நடக்கப்போகுது” என்று கூறினார்.

அவர்புறம் திரும்பி பார்த்தவன், ” ம்.. சரிம்மா” என்றதோடு உள்ளே சென்று விட்டான். அவனது கோபம் அதில் வெளிப்பட, சமாளித்துக்கொள்ளலாம் என்ற முடிவுடன் விருந்தினர்களை நோக்கி சென்றார் அவர்.

சேனா அங்கு அமர்ந்திருக்க, ஜேபி அவனுடன் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தார்.

நூவன் மும்முரமாக அலைபேசியில் எதையோ பார்த்துக்கொண்டிருக்க, மிதமான ஒப்பனையில் நிகாவும் அங்கு வந்தமர்ந்தாள்.

அவள் அங்கு வந்தமர்ந்துமே, இரு ஆடவர்களின் பார்வையும் அவள்புறம் திரும்பியது. சேனாவின் கவனம் கலைந்ததில் ஜேபி திரும்பி பார்க்க, அவன் பார்வை சென்ற திக்கில்  நிகா அமர்ந்திருந்தாள்.

இங்கு நிவேதாவின் முறைப்பையும் மீறி, நூவன் அவளை இப்பொழுதே தூக்கிக்கொண்டு செல்பவனைப்போல் பார்த்துக்கொண்டிருக்க, அவனின் தொடையில் கிள்ளினார் உஷா.

“மகனே உன் வாட்டர்ஃபால்ஸ நிறுத்து? உங்க அத்தை முறைக்கறா” என்றார்.

“விடு ம்மீ.. அத்தைக்கு இப்ப சமீபமாக முறைக்கற வியாதி பிடிச்சிருக்கு. போகப்போக சரியாயிடும்” என்றவன் அப்பொழுதும் பார்வையை அவளிடம் இருந்து திருப்பவில்லை.

இது சேனாவின் கண்களுக்கும் தப்பவில்லை, அவன் நிவேதாவை பார்க்க,

“ம்க்கும்…” என்று தொண்டையை செருமினார் அவர்.

“உங்களை எல்லாம் ஏன் இன்னைக்கு காலைலையே வரச்சொன்னனேனா?? நம்ம ஸ்ரீனிகாவை சேனாவுக்கு சம்பந்தம் பேசி முடிக்கலாம்னு இருக்கோம்” என்று கூற, உறவினர்களிடேயே சற்று சலசலப்பு ஏற்பட்டது.

“அம்மா.. அவளோட விருப்பம் இல்லாம நீங்க இப்படி கேக்கறது சரியில்ல??” அன்னையின் பார்வையை தயங்காது தாங்கி நின்றான் கிரி.

ஆனால் அதையெல்லாம் கண்டுகொண்டால் அவர் நிவேதா அல்லவே, “நீ சொல்ல வர்றது சரிதான் கிரி. அவளுடைய விஷயத்தில் தலையிடற உரிமை நமக்கு இல்லைதான். இதை நான் ஒரு பொண்ணோட நல்வாழ்க்கைக்கான உதவியாதான் செய்றேன். அவளுக்கும் இதில் விருப்பம்தான்” என்றவர் ஸ்ரீனிகாவை பார்க்க, அவள் மறுக்கவும் இல்லை, சரியென்று தலையாட்டவும் இல்லை. உயிரோட்டமுள்ள சிற்பமாக நின்றிருந்தாள்.

கிரி நூவனையும், நிகாவையும் மாறி மாறி பார்க்க, இருவரின் அமைதியும் அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. காய்ச்சல் குணமாகாமல் இன்னும் ரஞ்சனி வீடு திரும்பாததும் சேர்ந்து அவனது நிதானத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க செய்து கொண்டிருந்தது.

நடப்பதை அமைதியாக கவனித்து கொண்டு அவள் மீது வைத்த கண்ணை அகற்றாது அமர்ந்திருந்தான் நூவன். அவளது முகபாவத்திலிருந்து எதையும் கணிக்க இயலவில்லை. அவளது இயல்பும் இதுவல்ல, எப்பொழுதும் நேர்பார்வையோடு நோக்கும் தன்னவளின் இந்த அமைதியை அனுமானிக்க முடியவில்லை அவனால்.

ஆனால் சேனாவோ மிகுந்த மகிழ்ச்சியோடு அமர்ந்திருந்தான். எது நடக்க வேண்டுமென்று அவன் நினைத்தானோ அது இன்னும் சற்று நேரத்தில் நடக்க போகிறது. இன்னும் சற்று நேரத்தில் அவனது பெற்றோர்களும் வந்துவிடுவார்கள்.

“நிவி, இந்தர் எப்ப வர்றதா சொன்னான்?” ஸ்ரீனிகாவின் முகத்தை பார்த்துக்கொண்டே கேட்டார் ஜேபி. அவளது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவருக்கு, சற்றே அவளது முகம் அதிருப்தியின்மையை காட்டியதோ, இல்லை தனது பிரம்மையா? என்ற சந்தேகம் தோன்றியது.

“வந்துட்டே இருக்காங்கண்ணா, பத்து நிமிஷத்துல வந்துடுவாங்க” என்று பதில் கூற,

“சரி வா நிவேதா. நாம போய் தட்டுமாத்த வேண்டிய பொருளை எடுத்து வச்சுடலாம்” உஷாந்தி பொம்மை போல் அமர்ந்திருந்த ஸ்ரீனிகாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, தட்டை எடுக்க சென்றுவிட்டார்.

அடுத்த ஐந்து நிமிடங்களில், சேனாவின் குடும்பமும் வந்துவிட,வேகமாக வந்து ஆர்ப்பாட்டமாக அவர்களை வரவேற்றார் நிவேதா.

“வாங்க.. வாங்க இந்தர் அண்ணா.. கௌசல்யா அண்ணி”

சேனா அன்னையை வந்து கட்டிக்கொள்ள,

“சாதிச்சுட்டியே படவா?” மகனை நெட்டிமுறித்தார் கௌசல்யா.

அவர்களது ஊரின் வழக்கப்படி , பெண்ணை நிச்சயம்‌ செய்பவர்கள், முதலில் பூ வைத்து உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு தான் ஊரறிய நிச்சயம் செய்து முடிப்பார்கள்.

பூ வைக்கும் வைபவத்தையே சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் நிவேதா. அவர்கள் குறித்திருந்த நல்லநேரமும் நெருங்கிவிட, நிகாவிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லாது போக, எழுந்து நின்றான் நூவன்.

சம்பந்தமில்லாது அவன் எழுந்து நிற்க, சேனாவின் முகம் எரிச்சலை தத்தெடுத்தது.

“எழுந்திரு நிகா” அவள் கையை பிடித்து எழுப்பியவன், அவன் பிடித்த பிடி வலிக்க, பொறுத்துக்கொண்டு எழுந்து நின்றாள் அவள்.

“நீங்களும் வந்த பிறகு இந்த விஷயத்தை சொல்லனும்னுதான் இவ்வளவு நேரம் காத்திருந்தேன்” என்ற பீடிகையுடன் ஆரம்பிக்க,  இந்திரசேனாவின் முகத்தில் குழப்பத்தின் ரேகைகள் முளைத்தது.

“நானும் நிகாவும் ஒருத்தரை ஒருத்தர் மனப்பூர்வமா விரும்பறோம்” கேள்வி சுமந்த அவளது பார்வைக்கு, கண்களை மூடி திறந்தவனின் கண்ணசைவில் சரியென்று சொல் என்கிற அர்த்தம் பொதிந்திருந்தது.

“அதெல்லாம் இல்லை. இவன் பொய் சொல்றான்??” முதல் ஆளாக மறுத்து பேசினார் நிவேதா.

“ஆமா பொய் சொல்றான் டாட்” சேனாவும் தன் பங்குக்கு மறுத்து பேச,

“நான் சொல்றது உண்மைதான். சரிதானே நிகா?” நொடிப்பொழுதில் அவள் சரியென்று தலையாட்டிவிட, அதிர்ந்து நின்றான் சேனா.

நொடியில் மீண்டும் தன்னை சுதாரித்து கொண்டவன், ” ஹனி. உன்னை காதலிக்கற மாதிரி நடிச்சு உன்னை இவன் ஏமாத்துறான். அவனுடைய கனவு தொழிற்சாலைக்கு உன் பேர்ல இருக்குற நிலம் அவனுக்கு வேணும். அதுக்காகதான் உன்னை காதலிக்கற மாதிரி நடிச்சுகிட்டிருக்கான்” எப்படியாவது அவளை தன்வசமாக்க, சேனா இறுதிவரை போராட, இப்பொழுது நிகாவின் பார்வை நூவனை துளைத்தெடுத்தது.

அவளது பார்வை மாற்றத்தில், சேனா நூவனை பார்த்து சிரிக்க,

“என் பையனுக்கு அந்த சொத்து வந்துதான் எல்லாம் நடக்கனுங்கற அவசியமில்லை நரேன்” ஜேபியின் பேச்சு சூழ்நிலையை வேறுவிதமாக மாற்றியது.

“நிவேதா ….. இவ்வளவு தூரம் நடந்த பிறகு, அவ எங்க வீட்டு மருமகதான். ஸ்ரீனிகாவை நான் என் பையனுக்கு நிச்சயம் பண்றேன். உஷாந்தி பூவெடுத்து மருமகளுக்கு வை” அவரிடம் வெறும் தகவலாக சொல்லிவிட்டு, விஷயம் விபரீதமாக மாறும் முன், நிலைமையை கையில் எடுத்து தனது அனுபவத்தால் ,மகனது காதலை வெற்றிபாதைக்கு திருப்பி விட்டார் ஜேபி.

ஜேபி எழுந்து பேசிய போதும், நிவேதா ஆட்சேபிக்க குரலெடுக்க,

“இந்த தடவையாவது என் பேச்சை கேளு நிவி” என்ற பார்வையை அவர் பார்க்க, உஷாந்தி பூவெடுத்து நிகாவிற்கு வைக்க, அமைதியாக பின் நகர்ந்து விட்டார் நிவேதா.

இவ்வளவு பேசிய பின்பும் அமைதியாக  நின்றிருந்த ஸ்ரீனிகாவின் புறக்கணிப்பில், முகத்தில் அறைந்தார் போன்ற உண்மை உரைக்க,சேனாவின் மனம் துடித்தாலும், அவளது சந்தோஷமே முக்கியம் என்பதை உணர்ந்தவனாக,

“வாழ்த்துக்கள் நூவன், ஸ்ரீனிகா” பரஸ்பரம் இருவரிடமும் வாழ்த்துக்கள் கூறியவன், அதற்கு மேலும்‌ அங்கு தாமதிக்க முடியாது, வெளியேறி விட்டான்.

சேனாவின் பின்னேயே அவனது பெற்றோரும் சொல்லிக்கொண்டு விடைபெற்று சென்று விட்டனர்.

தங்களுக்காக காரில் அமர்ந்திருந்த மகனின் வலி சுமந்த முகத்தை பார்த்த இந்திர சேனா, அப்போதைக்கு ஏதும் பேசாது, தீனதயாளனின் வீட்டிற்கு , வண்டியை கொண்டு போகச்சொல்ல உத்தரவிட்டார்.

உஷாந்தி நிகாவிற்கு பூ வைத்தவர், தன் கழுத்தில் அணிந்திருந்த ஆரத்தையும் அவள் கழுத்தில் அணிவிக்க, நடப்பதை பார்க்க பொறுக்காது அங்கிருந்து செல்ல முயன்றார் நிவேதா.

அதை கவனித்த உஷா, ” இங்க வா நிவி” என்றழைக்க, அண்ணியின் அழைப்பில் வேறுவழியில்லாது அங்கு வந்தார் அவர்.

“தட்டைப்பிடி. பொண்ணுக்கு அம்மாவா இருந்து இனி நீதான் எல்லாம் செய்யனும்” அனைவரின் முன்பும் கூற, மறுத்து பேச இயலவில்லை அவரால்.

“உங்க தட்டை எடுத்து கொடு கிரி” உஷாவின் ஆணைப்படி சந்தோஷமாக அத்தையின் கைகளில் கொடுத்தான் அவன்.

“வர்ற முதல் முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வச்சுக்கலாமா நிவி. இன்னும் நாலு நாள் இருக்கு” என்றார் ஜேபி.

“நாலே நாள்ளயா? அதுக்குள்ள எப்படிண்ணா?” என்றார் நிவேதா. நடப்பது எதுவும் அவருக்கு உவப்பாக இல்லையென்று அவருடைய பதிலில் தெரிந்தது.

“நாலு நாள் இருக்குடா. உன் கல்யாணத்தை இந்த அண்ணன் ஒரே நாள்ல நடத்தினேன்கிறத மறந்துட்டியா?” என்றதில் பழைய நினைவுகளில் என்னவோ போலாகி விட்டது அவருக்கு.

“எல்லாம் உங்க விருப்பம்” என்றவர் அதன்பிறகு அங்கு இருக்கவில்லை.

“என்ன நிகாபேபி இப்போ சந்தோஷமா??” கிடைத்த இடைவெளியில் அவளிடம் வம்பிழுத்தான் நூவன்.

அதற்கும் அவள் முறைக்க, ” ஷ் ஷப்பா.. ரொம்ப ஹாட்டா இருக்க. நம்ம வேணுன்னா தோட்டத்துக்கு போயிடுவோமாடா?” என்று கேட்க,

“எல்லார் முன்னாடியும் என்கிட்ட அறை வாங்கனுன்னு உனக்கு ஆசையாயிருக்கா?” முயன்று சிரிப்பை வரவழைத்துக்கொண்டு அவள் பேச,

“அச்சோ எதுன்னாலும் இனி நம்ம ரூமுக்குள்ள வச்சுக்கோ பேபி. மாமா பாவம். அப்பறம் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் ஒன்னு சொல்லனும்” என்று பீடிகை போட, ஏதோ வில்லங்கமாக தான் கேட்கப்போகிறானென்று நிச்சயமாக தெரிந்தது அவளுக்கு.

பதிலேதும் சொல்லாமல் வழக்கம்போல் அவள் அமைதியாக இருக்க,

“நம்ம கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு. அதனால இனி எதைப் பத்தியும் கவலைப்படாம, சந்தோஷமா இரு. நல்லா சாப்பிடு, ஏன்னா முதமுதல்ல உன்னை தண்ணீல இருந்து தூக்கினப்ப இருந்த குட்டித்தொப்பை மிஸ்ஸிங்” என்று கூற, அவனது தலையில் கொட்டும் வேகம் வந்தது அவளுக்கு. அனைவரும் சற்று தூரத்தில் நின்று தான் பேசிக்கொண்டிருந்தனர். எது செய்தாலும் அவர்களது கண்களில் படுமென்று தெரிந்து வேண்டுமென்றே செய்கிறான் என்பதை புரிந்து கொண்டு, எந்த எதிர்வினையும் இல்லாது நின்றாள் அவள்.

“என்ன பேபி ஏதும் பேசமாட்டேங்கிற? சீரியசா சொல்றேன்டி. நேத்து  கார்ல எவ்வளவு ஆசையா தேடுனேன், ” ப்ச்‌..” தொப்பை மிஸ்ஸிங். கிக்கே போச்சு. அப்பறம் பக்கத்துல இருந்த மச்சத்த வச்சுதான்” அதற்குமேல் பேசப்போனவனின் வாயை மூடியிருந்தாள் அவள். அவளது உள்ளங்கையில் அவன் முத்திரையை அழுத்தமாக பதிக்க, அவளுக்குள் ஏதோ தடம்புரளும் உணர்வு.

“நூவா…” நல்லவேளையாக, உஷா அதற்குள் அழைத்து விட்டார். அதன்பின்பு அனைவரும் சொல்லிக்கொண்டு விடைபெற,

“வாழ்த்துக்கள் அண்ணி” சந்தோஷமாக பேசிய ஹர்ஷத்தை மிகவும் பிடித்தது நிகாவிற்கு. சிரித்த முகமாக அவள் கொடுக்க,   நூவன் அதைப்பார்த்து விட்டு ,

“எல்லாரைப்பார்த்தும் சிரிக்கிற? என்னைப்பார்த்து மட்டும் ஏண்டி முறைக்கிற?” என்று கேட்டுவிட்டு அவளுடனே நிற்க, அதற்கும் முறைப்புதான் அவனுக்கு பரிசாக கிடைத்தது.

அதற்குள் உஷா மீண்டும், ” நேரமாச்சு நூவா” என்றழைக்க, சுற்றும்முற்றும் பார்த்தவன், அவளது இடுப்பில் கிள்ளிவிட்டு ,

“இப்போ நல்லா முறைச்சுக்கோ ” என்று ஓடிவிட்டான்.

“நிச்சயத்திற்கே இந்த பாடு படுத்துகிறான்‌. கல்யாணம் செய்து எப்படி சமாளிக்க?” என்ற யோசனையில் ஆழ்ந்தாள் அவள். அவளது யோசனையை கலைத்தது கிரியின் குரல்,

“நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு ஸ்ரீ. நான் ரஞ்சனியை பார்த்துட்டு வரேன்” அவளிடம் சொல்லிவிட்டு கிளம்ப, அவனை தடுத்தாள் அவள்‌.

“வேண்டாம் நீ விழா வேலையை பாரு. தொழிலாளர்கள்ளாம் வந்தாச்சு. நான் போய் ரஞ்சனி கூட இருக்கேன். அவகிட்ட நடந்த விஷயத்தையும் சொல்லனும்” என்றவள் மருத்துவமனைக்கு , தான் கிளம்பிச்சென்றாள்.

அதன்பின்பு நடந்த விழாவில், இயந்திரத்தனமாக கலந்து கொண்டிருந்த அனையைக்காண, ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும், நேர இருந்த பிழையிலிருந்து அன்னையைக்காத்து விட்ட நிம்மதி இருந்தது கிரிக்கு‌.

வீட்டிற்குத்திரும்பியதும், தனது அறையில் அவர் முடங்கிவிட, கிரியும் அவரை தொந்தரவு செய்யாது மீண்டு வர இடம் கொடுத்து அமைதியாக இருந்து கொண்டான்.

வாசனின் புகைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்த நிவேதாவிற்கு, அண்ணனின் வார்த்தைகள் காதுகளில் ரீங்காரமிட்டன.

“உன் கல்யாணத்தை ஒருநாள்ல நடத்தினேன் மறந்துட்டியா நிவி?” கூடவே தனது மாமியார் அலமேலுவின் கம்பீரக்குரலும் அவரது காதுகளில் ஒலிக்க ஆரம்பித்தது.

“இந்த வீட்டுக்கு மருமகன்னா அது நீ தான் நிவிம்மா. எனக்கு அப்பறம் இந்த ராஜ்ஜியத்தை நீதான் பார்த்துக்கனும்”…..

விட்டுச்சென்ற

இடத்திலேயே

நிலைத்துவிட்டேன்

உன் நினைவுகளிலிருந்து

விடுபடமுடியாமல்…

திமிராகும்……

அத்தியாயம்-27:

சப்தகிரிவாசன் வாசன் குழுமத்தின் ஏகாதிபத்திய வாரிசு. அவரின் மனைவி அலமேலு, இவர்களின் ஒரே அருந்தவப்புதல்வன் ஸ்ரீனிவாசன். இதுவரை வாசன் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக ஒற்றை ஆண்வாரிசே இருந்து வருகிறது. அதனால் அவ்வீட்டு ஆண்பிள்ளைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சற்று அதிகமாகவே இருக்கும். வாசன் குழுமம் கோவை மாநகரின் பிரசித்திபெற்ற குழுமம். தொழில்களில் எத்தனையோ முன்னேற்றங்கள் கண்டிருந்தாலும் இதுவரை அவர்களது கையில் இருக்கும் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விவசாயப்பண்ணையும் , அதன் விளைபொருட்களின் ராஜாவாக கோலோச்சி வரும் அவ்வீட்டு மக்களின் மீது, அவ்வூர் மக்களிடம் மட்டுமல்லாது, சுற்றியுள்ள ஊர்மக்களுக்கும் அவர்களின் மீதும் அக்குடும்பத்தின் மீதும் பெரும்மதிப்பை ஈட்டியிருந்தது. பஞ்சமென்ற வார்த்தையை அவர்கள் வரவிட்டதேயில்லை. அவ்வாறான நேரங்களில் தங்களது பண்ணையில் இலவசமாக ஊர்மக்களுக்கு தேவையான பொருட்களை வாரி வழங்குவார் கிரி வாசன். அலமேலு ஏதும் பேசினால் கூட,

“நம்ம தேவைக்கு போகதான குடுக்கறோம். விடு அலமேலு. சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் சகமனுஷன சந்தோஷப்படுத்தி பார்க்கறதுதான்” என்று விடுவார்.

அதே ஊரில் வளர்ந்து வரும் தொழிலதிபராக அடையாளம் காணப்பட்டார் ஜெயப்பிரகாஷ். ஒருவகையில் வாசன் குடும்பத்திற்கு உறவுமுறை என்றாலும், அவர்களின் செல்வநிலை இடையில் தாழ்ந்து ஊரைவிட்டு வெளியேறியவர்கள், மீண்டும் அதே நிலைக்கு திரும்பிய பின்புதான் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியிருந்தனர்.

அதுவும் பிரகாஷின் வெற்றிக்கு நிவேதா பெருங்காரணம் என்பதையும் அறிந்து வைத்ததில் அவள்மீது அலமேலு அம்மாவிற்கு தனி மதிப்பு ஏற்பட்டிருந்தது.

அவளுடையது தோஷ ஜாதகம் என்பதால் திருமணம் தள்ளிப்போக, பெற்றோருடனும் அண்ணனிடமும் வாதாடி முதலில் அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்ததும் அவளே என்பதை கேள்விப்பட்டு, அவ்வூரில் அவளை பாராட்டதவர்கள் யாருமில்லை.  எதிர்பாராத விபத்தில் அவர்களது பெற்றோர் காலமாக, சொந்தபந்தங்களோடு இருப்பது மனதுக்கு மாற்றம் தருமென்று தங்கையோடு குடும்பத்தை கோவைக்கு அழைத்து வந்தார் ஜெயப்பிரகாஷ். நூவனை மடியில் விட்டு இறக்கமாட்டாள் நிவேதா. அந்த அளவிற்கு மருமகனின் மீது கொள்ளை பிரியம்.

ஆரம்பத்தில் நட்பாக ஆரம்பித்த அலமேலு அம்மாவுடனான பழக்கம், ஒரே சொந்தமென்பதால், நிவேதா தான் தனது மருமகள் என்று சொல்லுமளவிற்கு, அலமேலு அம்மாவிற்கு அவளை மிகவும் பிடித்து போனது. அவளது நேர்மையும், அழகும், கொடுத்த வாக்கை உறுதியாக நின்று காப்பாற்றும் பண்பும் மிகவும் பிடித்துப்போனது. அவளது பலமே பலவீனமும் என்பதை நிவேதா ஏனோ அன்று அறியவில்லை.

ஸ்ரீனிவாசனின் ஜாதகமும் தோஷ ஜாதகம் என்பதால், நன்றாகவே பொருந்தி வர, மகனை ஆலோசிக்கமாலேயே அடுத்த கட்டத்திற்கு பேச்சை எடுத்துக்கொண்டு போய், நிச்சயம் வரை தேதியை முடிவு செய்தார் அலமேலு.

ஸ்ரீனிவாசனை நேரில் பார்க்கவில்லை என்றாலும், அலமேலு அம்மாவின் தொடர்ந்த பேச்சிலும், அவ்வப்போது ஊருக்கு வரும்போது காண்பதை  வைத்தும் ஒருதலையாக அவரை காதலிக்க ஆரம்பித்தார் நிவேதா.

ஸ்ரீனிவாசன் சென்னையில் சட்டமேற்படிப்பு படிப்பதாக சென்னையில் தங்கியிருந்தார். குறிப்பிட்டு சென்னையை தேர்ந்தெடுக்க காரணம் அவர் இளங்கலை பயிலும் போது உடன் பயின்ற நவிகாவின் மீது ஏற்பட்ட காதலேயாகும்.

நவிகாவிற்கு தந்தை மட்டுமே. தாய் அவளது சிறிய வயதிலியே நோய் வாய்ப்பட்டு இறந்து விட, தந்தை உதவி செய்து வந்த மதரின் கவனிப்பில் வளர்ந்து வந்தாள். அவள் வளர்ந்த சூழல், இயல்பாகவே அவளுள் இருந்த கருணையையும், மனித நேயத்தையும் நல்லவிதத்தில் உபயோகப்படுத்த செய்தது. அனைவரிடமும்  அன்பு காட்டி, அதிர்ந்து பேசாது, மென்மையே வடிவாக அழகாக இருக்கும் நவிகாவை கல்லூரியில் விரும்பாத ஆண்கள் கிடையாது. யார் மனதையும் புண்படுத்தாது, தவிர்த்து வந்தவளால், ஸ்ரீனிவாசனை தவிர்க்க முடியவில்லை.

காதலித்த பின்போ அவர்கள் இருவருக்குமான அந்தஸ்து பேதம் அவளை மிரளச்செய்தது தான் அதிகம்.

“வாசு, எனக்கு என்னமோ ரொம்ப பயமா இருக்கு? உங்க வீட்ல என்னை ஏத்துப்பாங்களான்னு? எவ்வளவு பாரம்பரியமானது உங்க குடும்பம்” தனிமையில் சந்தித்து பேசிக்கொண்டிருந்த காதலினிடம் கவலைப்பட்டாள் அவள்.

” டாலிமா என்னடா  இப்படி பேசுற? என்னை நம்பலியா நீ? அப்படியே எங்க குடும்பத்துல ஏத்துக்கலனாலும், நாம கல்யாணம் செய்துகிட்டு தனியா நம்ம வாழ்க்கையை ஆரம்பிச்சுடலாம்” நிவேதாவைப்பற்றி அடிக்கடி பேசும் அன்னையைப்பற்றி புரிந்து கொண்டதால், முதலில் மறுத்து பார்த்து விட்டு, முடியாதென்றால் பெற்றோரை பிரிந்து  தனித்து வந்து விடுவது என்ற முடிவில்தான் அவரும் இருந்தார்.

நிவேதாவின் குணநலன்களின் மீதும், அவளைப்பற்றி கேள்விப்பட்ட விஷயங்களில் இருந்தும் , அவள் மீது வாசனுக்கு மரியாதை இருந்தது. ஆனால் அன்னையின் பேச்சு வேறு திசையில் திரும்ப, அதை கத்தரிக்கும் முயற்சியில் இருந்தான் அவன்.

“என்ன சொல்றிங்க வாசு? அப்போ நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கமாட்டாங்களா?” மீண்டும் அதே பல்லவியை ஆரம்பிக்க,

“அவ்வளவு கவலையா இருந்தா. வா இப்பவே இந்த அஷ்டலட்சுமி கோவில்ல வைச்சு உனக்கு தாலி கட்டிடறேன் டாலிமா. உடனடியா ஒரு முதலிரவு கொண்டாடினா நல்லாதான் இருக்கும்” வாசு பேச்சை மாற்ற, அதன் பலனும் கிடைத்தது.

“பச்…. எப்பபாரு இதே பேச்சுதானா? ரொம்ப மோசம் நீ வாசு?” அவனது முதுகில் மொத்தியவள் எழுந்து நடந்து சென்றுவிட்டாள்.

அவளுடன் பின்னேயே நடந்து சென்றவன்,

“நிஜமாதான் சொல்றேன் டாலிமா… சீக்கிரமே நாம கல்யாணம் செய்துக்கனும். முடிஞ்சா இந்த வாரமே நான் உங்கப்பாகிட்டயும் மதர்கிட்டயும் வந்து பேசறேன்” உறுதியாக கூற, நவிகாவிற்கு ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும், முழுதிருப்தி வரவில்லை. அதை அவள் முகமும் பிரதிபலிக்க,

“என்னை நம்பு நவி. எத்தனை ஜென்மம் வந்தாலும் நீ மட்டுந்தான் என் பொண்டாட்டியா இருக்க முடியும். நம்ம காதல் தோத்துப்போக நான் விடமாட்டேன்” என்றவரின் பேச்சில் தானாக வாசுவின் தோள்மீது சாய்ந்து கொண்டு நிம்மதி பெருமூச்சு விட்டாள் அவள்.

சொன்னபடியே அதற்கு அடுத்த வாரமே நவிகாவின் தந்தையைப்பார்த்து பேசி, மதரிடமும் சம்மதம் பெற்றுவிட்டு தான், தனது வழக்கம்போல் அந்த மாத விடுமுறைக்கு  ஊருக்கு கிளம்பினான் வாசு.

வந்து இறங்கியபின்புதான், அலமேலு அம்மாள் நிச்சயத்திற்கு  ஏற்பாடு செய்து இருப்பது தெரிய வந்தது. ஓரளவு யூகித்த விஷயமென்றாலும், உடனடியாக அதை ஜூரணிக்க அவருக்கு சில நிமிடங்கள் ஆனது.

“யாரைக் கேட்டு முடிவு பண்ணிங்கம்மா?” அன்னையிடம் சண்டையிட்டார்.

“என்ன கண்ணா பேசற? அம்மா உனக்கு நல்லபொண்ணாதான பார்ப்பேன். அதுவும் நிவேதா மாதிரி பொண்ணு தேடினாலும் கிடைக்கமாட்டா” மகனுக்கு புரிய வைக்க முயன்றார் அவர்.

“எனக்கு இதுல இஷ்டம் இல்லை? இப்போதைக்கு கல்யாணம் செய்துக்கற எண்ணமும் இல்லை” பிடிவாதமாக மறுத்தார் வாசன்.

“நிச்சயத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டேன் கண்ணா. இப்போ எப்படி நிறுத்த முடியும்? நிச்சயத்தை முதல்ல முடிச்சுக்கலாம். அதுக்கப்பறம் என்னன்னாலும் பேசி முடிவு பண்ணிக்கலாம்” எப்படியாவது காரியத்தை சாதிக்க முயன்றார் அவர்‌.

அவரை பொருட்படுத்தாது, ஸ்ரீனி ஜெயப்பிரகாஷிற்கு தொலைபேசியில் அழைத்து ,

“என்னை மன்னிச்சுடுங்க.இந்த நிச்சயம் நடக்காது சார். எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை‌” என்று கூறி விட்டான். கணவன் வெளிநாடு சென்றிருக்கும் நேரத்தில் நிச்சயத்தை வைத்த தனது மடத்தனத்தை நொந்து கொண்டார் அலமேலு. அவர் இருந்திருந்தால் எப்படியாவது ஸ்ரீனியை சமாளித்திருப்பார்.

“அது ஊருக்கு சொல்றதுக்கு முன்னாடி உங்களுக்கு தெரியலையா?” ஜெயப்பிரகாஷ் சும்மா விடவில்லை.

“எனக்கு தெரியாம நிச்சயத்தை ஏற்பாடு பண்ணிட்டாங்க சார். அதுதான் இப்ப பிரச்சனை ஆயிடுச்சு. என் மனசுல இன்னொரு பொண்ணு இருக்கா. இந்த விஷயத்தை உங்களை நம்பி சொல்றேன். எங்கம்மாவை சம்மதிக்க வைக்க கொஞ்சநாள் ஆகும். இப்போ புரிஞ்சுப்பிங்கன்னு நினைக்கிறேன். உங்க தங்கச்சி வாழ்க்கை பாழாகக்கூடாதுன்னு தான் இந்த விளக்கமெல்லாம் உங்களுக்கு சொல்றேன்”  என்றுவிட்டு வைத்து விட்டான்.

அதன்பின்பு ஜெயப்பிரகாஷ் நேரடியாகவே இந்த நிச்சயம் நடக்காதென்று சொல்லிவிட, ஏற்கனவே இருதய நோயாளியான அலமேலு நெஞ்சு வலியால் விழுந்தார்.

மறுநாள் நிச்சயமென்ற நிலையில், வருங்கால கணவனென்று வரித்து வைத்த வாசன் தனக்கில்லையென்றதும் மனதளவில் நொடிந்து போனாள் நிவேதா. அதுவும் அவரது மனதில் வேறோரு பெண்ணிருப்பதாக அண்ணன் கூறி அதைகேட்ட பின்பு ஏற்பட்ட வலி, மாறாத வடுவாக நெஞ்சில் ஆழமாக பதிந்து விட்டது.

அலமேலுவை சம்பிரதாயத்திற்கு மருத்துவமனைக்கு சென்று பார்த்து வந்தார்கள் ஜேபி குடும்பத்தினர்.

அவர்கள் ஸ்ரீனியுடன் நின்று பேசிக்கொண்டிருக்க, நிவேதா அவன்புறம் திரும்பியும் பாராது, அலமேலுவிடம் மெதுவாக நலம் விசாரித்தாள்.

அவள் கிளம்பும் நேரம் அவளை அழைத்த அவர்,

“நிவேதா நான் உனக்கு கெடுதல் பண்ணலன்னு நீ என்னை நம்புறியா? ” என்று கேட்க,

“அச்சோ அத்தை என்ன இப்படி பேசறிங்க? இப்ப நீங்க இருக்கற நிலைமைல எதையும் யோசிக்காதிங்க? நான் உங்களை நம்பறேன்” அவரை ஆசுவாசப்படுத்த முயன்றாள் அவள்.

“அப்போ எனக்கு ஒரு சத்தியம் பண்ணிகொடு” அவருக்கு தெரியும் அவள் ஒரு வாக்கு கொடுத்து விட்டால் அதிலிருந்து பின்வாங்க மாட்டாள். அது அவளது‌ பலமாகவும், பலவீனமாகவும் இருக்க ,அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தினார் அலமேலு.

“செய்றேன் அத்தை. சொல்லுங்க” நோயாளியை கஷ்டப்படுத்த விரும்பாத நிவேதா, அவரின் வலையில் வசமாக விழுந்தாள்.

அவளது கையை தனது கையில் வைத்து அழுத்தியவர்,

“எப்படி சூழ்நிலையிலையும் ஸ்ரீனியை நீ கல்யாணம் செய்துப்பேன்னு சத்தியம் பண்ணிக்கொடு” என்று கேட்க,

“அத்தை…. “என்று அதிர்ந்து பார்த்தாள் அவள்.

“அவன் யாரை வேணுனால்லும் விரும்பட்டும். என் மருமக நீதான். இதை நம்பினா எனக்கு சத்தியம் பண்ணிகொடு” என்று கேட்க, காதல் கொண்ட மனது, நூற்றில் ஒரு வாய்ப்பாக அப்படி அமைந்து விடாதா என்று ஆசைப்பட, அந்த நொடி நேர சலனத்தில் சத்தியம் செய்து கொடுத்து விட்டாள் அவள்.

சிறிது நாட்களில் அலமேலுவின் உடல்நலம் தேற, வீட்டில் அவரை விட்டு விட்டு சென்னைக்கு கிளம்பி‌விட்டான் ஸ்ரீனிவாசன். அடிக்கடி‌வந்து‌ பார்த்துக்கொள்வதாக அன்னையை சமாதானப்படுத்தி விட்டு கிளம்பினான்.அவனது தந்தை உடனடியாக வெளிநாட்டிலிருந்து திரும்ப முடியாது, அங்கு ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தால் அவரது பயணம் இன்னும் இரண்டு மாதங்கள் தள்ளிப்போனது.

இன்னும் சற்று உடல்நலம் சரியானதும், மகனைப்பிடித்திருக்கும் அந்த பெண்ணை துரத்தி விட்டு, கணவர் திரும்பியதும், நிவேதாவுடன் வாசனின் திருமணத்தை செய்து வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார் அலமேலு.

ஆனால் சென்னை வந்த வாசன் , முதல் வேலையாக, நவிகாவை திருமணம் செய்து கொண்டார். முறைப்படி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டவர், சட்டப்படி பதிவு செய்தால் அன்னைக்கு உடனே விஷயம் தெரிந்து அவரது உடல்நிலை மோசமாகிவிடும் என்று நினைத்து இரண்டு மாதங்கள் கழித்து தந்தை வந்ததும், மனைவியோடு ஊருக்கு சென்று, ஊரறிய திருமணத்தை பதிவு செய்யலாமென்று முடிவு செய்தார். ஆனால் அவரது இந்த முடிவு, நவிகாவிற்கான இடத்தையே பிற்காலத்தில் கேள்விக்குறியாக்கியது.

“மாப்பிள்ளை என் பொண்ணு தாயில்லாம வளர்ந்த பொண்ணு, என் உலகமே அவதான். இப்ப உங்க அம்மா அப்பா சம்மதம் இல்லாம கல்யாணம் செய்தது கொஞ்சம் உறுத்தலாக இருந்தாலும், உங்க காதலை நீங்க காப்பாத்த நினைக்கற ஒரே காரணத்துக்காக, இந்த கல்யாணத்தை முடிச்சு வச்சுட்டேன். நல்லபடியா பார்த்துக்கோங்க” நவிகாவின் தந்தை மகளைப் பற்றி கவலைப்பட, வாசனுக்கும் அந்த சூழ்நிலையை கடக்க சற்று கடினமாக தான் இருந்தது.

“நான் பார்த்துக்கறேன் மாமா. நீங்களும் எங்ககூட இருக்கலாமில்லையா? ” புதிதாக திருமணமான ஜோடிகளுக்கு தனிமை கொடுக்க விரும்பி, மதரின் ஆசிரமத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார் அவர்.

“ஒரு மாசம் தான மாப்பிள்ளை. அதுக்குப்பறம் எப்படியும் பாப்பாக்கு துணைக்கு இருக்கனும்” என்றவர், அடுத்து நடக்க வேண்டிய சடங்குகளுக்கான ஏற்பாட்டை அவரது வீட்டில் செய்துவிட்டு, தனிமை கொடுத்து விட்டு விலகினார்.

பின்பு மதர் வந்து பேசியவர்,”திரும்ப திரும்ப சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதிங்க வாசு. உங்க திருமண விஷயத்தை நீங்க சீக்கிரமே உங்கம்மா கிட்ட சொல்லிடுங்க. அதுதான் எங்களுக்கு வேண்டியது” மீண்டும் அறிவுறுத்திவிட்டு, நவிகாவிற்கும் சில அறிவுரைகள் கூறிவிட்டு வாழ்த்து தெரிவித்து விட்டு சென்று விட்டார்.

வருடக்கணக்கில் காத்திருந்த தனிமை கிடைக்க, அன்றைய நாளின் ஏகாந்தமும் சேர்ந்து மனதை மயக்க, தங்களது மனதில் ஏற்பட்ட சின்னஞ்சிறு சஞ்சலங்களையும் கூடலில் தொலைத்து, ஈருயிர் ஓருடலாக மாறினர் காதற்பறைவைகள்.

“குட்டிமா தூங்கிட்டியாடா? ” தன்னவளின் கூந்தல் காட்டில் வாசம்பிடித்துக்கொண்டே மீண்டும் அவளை தன்னுள் இறுக்க, பிரயத்தனம் செய்து கண்களை திறந்தவளின் கண்கள் சிவந்திருக்க, அந்த நேரத்திலும் காதல் சிந்திய அக்கண்களின் வசீகரத்தில் மயங்கிப்போனான் வாசு.

“என்ன டாலி குட்டிமா ஆயிடுச்சு வாசு? ” தூக்கத்தை விரட்டிக்கொண்டு பேசியவளை காண தெவிட்டவில்லை வாசுவிற்கு.

“என் பொண்டாட்டிய நான் என்ன வேணுன்னாலும் சொல்லி கூப்பிடுவேன்” அவள் நெற்றியில் தனது நெற்றியால் மோதினான்.

“இந்த சந்தோஷத்திற்காக எத்தனை நாள் காத்திருந்தேன் தெரியுமா? இப்படியே செத்துப்போய்ட்டா கூட சந்தோஷமா போவேன் நவி” என்ற  வாசுவின் வாயில் அடித்தாள் அவள்.

“எந்த நேரத்துல என்ன பேசுறிங்க வாசு? வாழ்க்கையை சந்தோஷமா ஆரம்பிச்ச நேரத்துல இப்படிதான் பேசுவாங்களா?” என்றவள் கோபத்தில் திரும்பிப்படுத்துக்கொண்டாள்.

“டேய் குட்டிமா, நெருப்புன்னா சொன்னா வாய் வெந்துடுமா? அவ்வளவு சந்தோஷமா இருக்கேங்கறத தான் அப்படி சொன்னேன். இங்க பாரு” என்று கூறியும் அவள் திரும்பாமல் இருக்க,

” சரி தப்புதான் இனி இப்படி பேச மாட்டேன்” சமாதானத்திற்கு இறங்கி வர, அவ்வளவு‌நேரம் முயன்று அடக்கி வைத்த சிரிப்பை அவனை பார்த்து சிரித்தாள் அவள்.

“சிரிக்கறியாடி நீ? கொஞ்ச நேரத்துல எப்படி பயமுறுத்திட்ட? ம்ம்.. இதுக்கு டபிள் தண்டனை. நான் கேட்கறதெல்லாம் நீ செய்யனும்” என்று பேரம் பேச, அதன்பின்பு அங்கு வார்த்தைகள் பேசவில்லை.

அதன்பின்பு அவர்களது வாழ்க்கை ரம்மியமாக செல்ல, அவர்களைப்பிரித்த அந்த நாளும் வந்தது சேர்ந்தது.

அன்று காலையிலேயே கூடலுக்கு அடிபோட்ட கணவனின் கைகளை தட்டிவிட்டாள் “விளையாடாதிங்க வாசு? எப்ப என்ன உங்க ஊருக்கு கூட்டிட்டு போகப்போறிங்க? ” நவிகாவின் கேள்வியில் அதுவரை மேலோங்கியிருந்த காதலுணர்வு வடிந்து போக, அவளை விட்டு விலகியமர்ந்தார் வாசன்.

“என்னாச்சு வாசு? என்னை மன்னிச்சுடுங்க? நான் வேணுன்னா இனி இந்த மாதிரி கேட்கலை?” அவள் படபடக்க, மனைவியின் நொடி நேர முகவாட்டத்தை கூட பொறுக்க முடியாது அவளை தன் கைவளைவுக்குள் மீண்டும் கொண்டு வந்தார் வாசன்.

“நீ சரியாதான் டாலிமா கேட்கற ? நமக்கும் கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் ஆச்சு. அம்மாவும் இப்போ நெஞ்சுவலியிலிருந்து மீண்டு வந்துருக்காங்க. சொல்ல வேண்டிய நேரம்தான். முறைப்படி உன்னை சீக்கிரமே ஊருக்கு கூட்டிட்டு போகனும். அவங்களுக்கு நிவேதாவை மருமகளா ஆக்கிக்கனும் ரொம்பவே ஆசை. நான் நிச்சயம் வேண்டான்னு சொல்லியும், வேற எந்த பொண்ணையும் பார்க்காம, என் மனசு மாறும்னு காத்திருக்காங்க. அப்படி நினைச்சுட்டுருக்கறவங்களுக்கு நம்ம கல்யாணம் அதிர்ச்சியா இருக்கும். அதனால்தான் நான் உடனே சொல்லலை. இன்னும் ஒரு வாரத்தில் ஊருக்கு போயிதான் ஆகனும். வயல்விளைச்சலை ரொம்ப விமரிசையா நம்ம வீட்டுல கொண்டாடுவாங்க. கொஞ்சம் முன்னாடியே கிளம்பி போனா, அம்மாவை சமாதானப்படுத்திட்டு, உறவுக்காரங்க, ஊர்மக்கள் முன்னாடி உன்னை அறிமுகப்படுத்த வசதியா இருக்கும்” என்றவரின் பேச்சில் மகிழ்ந்தவள், அவரது கன்னத்தில் முத்திரை பதிக்க, அதன்பின்பு புதுமணத்தம்பதியர்களுக்கே உரிய நேரமாக அவர்களது நேரம் கழிந்தது.

ஒவ்வொரு நொடிப்பபொழுதையும் மகளுக்காகவே கழிக்கும், மருமகனை கண்டு உள்ளம் நிறைந்திருந்தது நவிகாவின் தந்தைக்கு. அவளது அன்னையின் மறைவுக்கு முன் சந்தோஷமாக வலம் வந்த மகளாக கண்ணுக்கு தெரிந்த மகளின் சந்தோஷத்தில் பூரித்து போனார் அவர்.

திருமணம் முடிந்த பிறகும், மாதத்திற்கு ஒரு முறை தவறாது ஊருக்கு சென்று அன்னையை  பார்த்து வந்தான் வாசன். முதல் மாதம் சென்று வந்தவன், அடுத்த மாதமும் ஊருக்கு தனியாக கிளம்ப, அந்த முறை ஏனோ மிகவும் தவிப்பாக இருந்தது நவிகாவிற்கு.

“வாசு நானும் உன்கூடவே வந்திடவா? அத்தை என்ன திட்டுனாலும் நான் பொறுத்துக்கறேன். அவங்களுக்கு தெரியாம மறைச்சு, என்னவோ திருட்டுக்கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி ஒரு குற்ற உணர்வு இருந்துகிட்டே இருக்கு. எதுனாலும் சமாளிக்கலாம், இந்த முறை உங்களை தனியா அனுப்ப, எனக்கென்னவோ கஷ்டமாயிருக்கு” என்றாள் அவள்.

“ஆமாம் மாப்பிள்ளை‌. நானும் உங்கூட வரேன். நாம எடுத்துச்சொல்லி புரிய வைக்க முயற்சி செய்யலாம்” நவிகாவின் தந்தையும் வற்புறுத்தினார்.

அவர்களது பேச்சில் சற்று யோசித்த வாசனுக்கும் என்ன தோன்றியதோ,

“சரி மாமா. இந்த முறை கண்டிப்பா நான் அம்மாகிட்ட பேசிடறேன். ஒரு ஒரு வாரத்துக்கு நான் அங்கேயே தங்கிடறேன். சரியா ஒரு வாரத்துக்கு அப்பறம் உங்களுக்கு தகவல் சொல்றேன். நீங்க கிளம்பி வாங்க” என்றவன் மனைவியிடம் விடைபெற்று விட்டு கிளம்பினான். அதன்பின்பு நவிகா அவனை பார்க்க சென்றபோதோ, நிவேதாவின் கணவனாக தான் பார்க்க நேர்ந்தது.

“த்தை.. த்தை” இரண்டு வயது நூவன், விளையாட்டுப்பொம்மைகளை எடுத்து அவள் மடியில் தூக்கி எறிந்து விளையாண்டு கொண்டிருக்க, அதில் கூட கவனமில்லாது சுவற்றை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்  நிவேதா.

குழந்தையை கவனிப்பதற்காக உஷா உள்ளே வந்தவர், அவளின் நிலையை பார்த்து விட்டு, நூவனை தூக்கி மடியில் வைத்து கொண்டவர்,

” நிவி.. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி உட்கார்ந்துருக்க போற? முடிஞ்ச விஷயத்தை நினைச்சு வருத்தப்படாத” அவளின் கூகளை பிடித்து ஆறுதல் கூறினார்.

அவரது ஆறுதல் மனதுக்கு இதமாக இருந்தாலும்,

” என்னால அவரை மறக்க முடியலை அண்ணி. ஆனால் இன்னொரு பொண்ணு வாழ்க்கைக்கு நான் எப்பவும் குறுக்க நிற்கவும் மாட்டேன். நான் இனி கல்யாணம் செய்துக்க போறதும் இல்லை‌. நூவனை மட்டும் எனக்கு கொடுத்துடுங்க அண்ணி” என்றவள் பிள்ளையை தூக்கிக்கொஞ்ச ஆரம்பிக்க, அவளது பேச்சை கேட்க கஷ்டமாக இருந்தது உஷாவிற்கு.

அதன்பின்பு ஜேபியும் எத்தனையோ வரன்கள், கொண்டுவர, நிவேதாவை அவர்களால் சம்மதிக்க வைக்க முடியவில்லை.

ஊருக்கு வந்த மகனை, நன்றாக கவனித்தார் அலமேலு.

“வாசு.. அதான் மேற்படிப்பு முடியப்போகுதே..இங்க வந்து தங்கிடலாமே கண்ணா?” அன்னையின் பேச்சை புரிந்து கொண்டு சிரித்தான் அவன்.

“அப்பா எப்பம்மா வர்றாரு?” அன்னையின் பேச்சை வேறுதிசைக்கு மாற்றினான்.

“இன்னைக்கு நைட் ஃப்ளைட்டுன்னு சொன்னாரு. நாளைக்கு காலைல விமானநிலையத்திற்கு வண்டி அனுப்பனும்”

“ஓ.. அப்ப காலைல நானே போய் அப்பாவ கூட்டிட்டு வந்துடறேன்” இந்த முறை அன்னையிடம் பேசாது, தந்தையிடம் திருமண விஷயத்தை பேசிவிட முடிவு செய்தான் அவன். கிரியிடம் அலமேலுவின் பேச்சு எடுபடாது என்பது அவருக்கு தெரியும். தந்தை நியாயத்தின் பக்கம் நிற்பவர், மறுநாள் அந்த தந்தை இல்லாமல் போகப்போவதை அறியாமல், உறங்கச்சென்றவனுக்கு, மறுநாளைய செய்தி இடியாக வந்து விழுந்தது.

கிரி வந்திருந்த விமானம் விபத்துக்குள்ளாக, திடீரென ஏற்பட்ட இழப்பில் , என்ன செய்வதென்பதை அறியாது உறைந்து போனான் வாசு.

ஒரு வாரத்திற்கு பின்பு தானே அழைப்பதாக கூறியிருந்ததால், நவிகாவும் வாசனை தொந்தரவு செய்யவில்லை. ஆனால் மனம் மட்டும் பதற்றமாகவே இருந்தது. இடையில் இரண்டு முறை தலையை சுற்றிக்கொண்டு மயக்கம் வேறு வர, பதற்றம் என்று முதலில் ஒதுக்கியவள், உணவும் சாப்பிட இயலாமல் போக, மருத்துவரிடம் தனியாகவே சென்றாள். தந்தையிடம் சொன்னால், ஏற்கனவே மாப்பிள்ளையிடமிருந்து தகவல் எப்படி வருமோவென்ற பதட்டத்தில் இருப்பவர், இன்னும் பயந்து விடுவார் என்பதால் தனியாகவே சென்றாள்.

அவளை பரிசோதித்த மருத்துவர், ” கல்யாணமாகி எத்தனை மாதமாச்சும்மா? கடைசியா எப்ப டேட் வந்தது?” என்று கேட்க, அப்பொழுது தான் புத்திக்கு உரைக்க, அவ்வளவு நேர பதற்றம் போய், வெட்கமும், சந்தோஷமும் ஒருங்கே தோன்றியது மனதில்.

“இரண்டு மாதம் ஆச்சு டாக்டர். கடைசியா போனமாதம் வந்தது. இந்தமாதம் இன்னுமில்லை” என்று பதில் கூற, அவளுக்கு சில பரிசோதனைகளை எழுதிக் கொடுத்தார் அவர்.

பரிசோதனையின் முடிவு குழந்தை என்பதை உறுதிப்படுத்த,”வாழ்ததுக்கள்மா. ஒருமாதம் ஆயிடுச்சு. அறுபது நாள் முடிஞ்சதுக்கப்பறம் ஸ்கேனுக்கு வரலாம். அப்ப உங்ககூட வீட்டுல இருக்க, பெரியவங்க இல்லை உங்க ஹஸ்பெண்டை கூட கூட்டிட்டு வாங்க” என்றவர் சில அறிவுரைகளையும், தேவையான மருந்துகளையும் கொடுத்தனுப்பினார்.

வாசன் வரும் வரை சொல்லாமலிருக்க அவளால் முடியவில்லை, அதனால் அவனது எண்ணுக்கு அழைக்க, அழைப்பு ஏற்கப்படவில்லை.

“ச்ச.. இப்பகூட ஃபோன் எடுக்க மாட்டேங்கிறியே வாசு?” அவள் மனத்தாங்கல் பட, அங்கு தந்தைக்கு இறுதிகாரியங்கள் செய்துகொண்டிருந்தான் அவன். வாசன் வந்த பிறகு முதலில் அவனிடம் இந்த சந்தோஷ செய்தியை கூறிவிட்டு தான் மற்றவர்களிடம் சொல்ல வேண்டுமென்று முடிவு செய்து கொண்டாள் நவிகா.

காரியம் முடிந்து நான்கு நாட்களுக்கு மேல் ஆகியிருக்க, மெதுவாக மகனிடம் கல்யாணப்பேச்சை எடுத்தார் அலமேலு.

“அம்மா.. என்ன பேசறிங்க? அப்பா இறந்த துக்கம் கூட இல்லையா உங்களுக்கு?” மனம் வெறுத்து பேசினான் அவன்.

அவனது பதிலில் கொதித்துவிட்டார் அலமேலு, “என்ன பேச்சுடா பேசுற? துக்கம் நடந்த வீட்டுல ஏதாவது விஷேஷம் நடந்தா நல்லதுன்னு சொந்தக்காரங்க பேசிட்டு போறாங்க, அதுமட்டுமில்லாம அவ்வளவு திடமான உங்கப்பாவை ஆண்டவன் இவ்வளவு சீக்கிரம் கூட்டிகிட்டு போயிட்டாரு, இருதய நோயாளியான நானும் போயிட்டா, நீ என்ன பண்ணுவ கண்ணா? அன்னைக்கே நீ நிவிய கல்யாணம் பண்ண சம்மதிச்சுருந்தா, இந்நேரம் உன் கல்யாணத்தையாவது அப்பா பார்த்திருப்பாரு. அதையும் இல்லாம செஞ்சுட்ட, இப்ப நானும் உனக்கு வேண்டாமாடா?” நெஞ்சில் அடித்துக்கொண்டு அழ, சங்கடமாகிப்போனது அவனுக்கு.

ஓய்ந்து அமர்ந்திருந்தவரின் கைகளை பிடித்தவன் “அம்மா ப்ளீஸ் இப்படில்லாம் பேசாதம்மா, நான் ஒரு பொண்ணை…. ” கல்யாணம் செய்துட்டேன் என்று சொல்வதற்கு முன்பே மயங்கி சரிந்திருந்தார் அவர்.

 உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓட, மன உளைச்சல் அவருக்கு மற்றொருமொரு முறை இருதய வலியை ஏற்படுத்தியிருந்தது.

“என்ன வாசன் இது? ஏற்கனவே அட்டாக் வந்தவங்க கவனமா பார்த்துக்க மாட்டிங்களா?  இன்னொரு அட்டாக் வந்தா இவங்க உயிரோட இருக்க மாட்டாங்க இல்லன்னா வாதம் வந்து கை,கால் செயலிழந்து போயிடுவாங்க. இனி எந்த அதிர்ச்சியும் இல்லாம கவனமா பார்த்துக்கோங்க. இன்னும் மூணுநாள் பெட்லயே தான் இருக்கனும். அதுக்கப்பறம் டிஸ்சார்ஜ் பண்ணிக்கோங்க” என்று எச்சரித்து இருந்தார் அவர்.

சிறிது நேரம் கழித்து வாசன் அவரை சென்று பார்க்க, கந்தல் துணியாக கிடந்த அன்னையு காண அழுகையாக வந்தது. அப்பொழுதுதான் ஏற்பட்ட தந்தையின் இழப்பும், மனதை வாட்டியது .

கண்முழித்தவரை  பார்த்து” அம்மா.. ” என்றழைத்து அருகே செல்ல, அவனைப்பார்த்து முகத்தை திருப்பிக்கொண்டார் அவர்.

அதில் அவன் மனம் அடிபட்டு போக, “எனக்கு ஒரு உதவி பண்ணனும், நிவேதாவை நான் பார்க்கனும்” சுவற்றைப்பார்த்து கொண்டு கூறினார் அவர்.

“நிவேதாவாஆ…. அம்மா.. இப்ப எந்த…” முடிவும் எடுக்க வேண்டாம் என்று சொல்ல வருவதற்கு முன்பே,

“நீ எதுவும் பேச வேண்டாம் ஸ்ரீனி. நான் சொன்னதை மட்டும் செய்” என்று கட்டளையிட்டார் அவர்.

வேறுவழியில்லாது அவன் ஜெயப்பிரகாஷிற்கு அழைத்து விபரத்தை சொல்ல, ஓடோடி வந்தாள் நிவேதா.

வந்தவள் வாசனை கண்டு கொள்ளாது நேராக உள்ளே செல்ல, ஜேபி அவனிடம் நடந்ததை விசாரித்துக் கொண்டிருந்தார்.

உள்ளே நுழைந்தவளை “வாம்மா.. ” அவர் சிரமப்பட்டு அழைக்க,

“அச்சோ.. அத்தை ஏன் இப்படி உடம்ப போட்டு அலட்டிக்கிறிங்க? “அவரது கையை பிடித்துக்கொண்டாள் அவள்.

“நீ எனக்கு பண்ணிக்கொடுத்த சத்தியம் ஞாபகம் இருக்கா?” சோர்வையும் மீறி, முயன்று பேசினார் அவர்.

“ம்ம்.. ஞாபகம் இருக்கு. ஆனா.. இப்போ…” அவள் இழுக்க,

“ஆமா இப்பவே நிறைவேற்றிக்குடு. உனக்கும் வாசனுக்கும் நாளைக்கே கல்யாணம்” அவர்கூறிய விஷயத்தில் நிதானமாக இருக்கும் நிவேதாவிற்கே விஷயத்ததை கிரகிக்க சற்றுநேரம் ஆனது.

” எ…ன்னன..என்ன பேசறிங்க அத்தை? நான் எப்படி??.. அவர் மனசுல இன்னொரு பொண்ணு இருக்கா? வேண்டாம் ” என்று மறுத்தாள் நிவேதா.

“அப்போ சொன்ன வாங்க நிறைவேத்த மாட்ட?”

“என்னத்தை இப்படி கேட்கறிங்க?”

“வேற என்ன பேசச்சொல்ற? எவ்ளோ ஊர் பேர் தெரியாதவள என்னால மருமகளா ஏத்துக்க முடியாது. நீதான் என் மருமகள். எனக்கு அப்பறம் நீதான் இந்த ராஜியத்தை பார்த்துக்கணும்” ஆம் அவருக்கு ஏற்கனவே வாசன் திருமணம் செய்துகொண்ட விஷயமும் தெரிந்திருந்தது. தெளிவாக அதை நிவேதாவிடம் சொல்லாமல் அப்போதைக்கு மறைத்துவிட்டார்.அவர் பேசிய தோரணையே அவளுக்கு குளிரெடுக்க செய்தது.

அதில் தானாகவே சரியென்று தலையசைக்க, அலமேலுவின் முகத்தில் ஏற்பட்ட வெற்றிக்களிப்பின் பிரகாசத்தை இன்றும் அவளால் மறக்க முடியாது.

“ஆனால் அண்ணாக்கு இதில் இஷ்டமில்லை அத்தை” தயங்கி மெதுவாக பேசியவளின் அடுத்த சிக்கலை எப்படி சமாளிப்பதென்ற யோசனை ஓடியது. காதல் கொண்ட மனம் எதையும் செய்ய துணிந்தது.

“அதை நான் பார்த்துக்கிறேன்” என்றவர் வாசனையும் ஜேபியையும் உள்ளே அழைத்தார்.

உள்ளே நுழைந்த மகனை கண்டுகொள்ளாது,” ஜேபி நம்ம நிவேதாவை வாசனுக்கு கல்யாணம் செய்து வைக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்” தடாலடியாக அறிவித்தார் அவர்.

ஜேபி அதிர்ந்து தங்கையின் முகத்தை பார்க்க, தலையை குனிந்து கொண்டாள் நிவேதா.

“அம்மா… ” வாசன் குரலை ஓங்க,

அதற்கும் ஓங்கி பேசியவர், ” நீ எதுவும் பேசிடாத ஸ்ரீனி. அதுக்கு மீறி ஏதாவது பேசனுன்னா என்னையும் இங்கயே அடக்கம் பண்ணிட்டு, உன் இஷ்டத்துக்கு என்ன வேணுன்னாலும் செஞ்சுக்கோ” அவனது வாயை அடைத்தவர், ஜேபியின் முகத்தை பார்க்க, தங்கையை முறைத்துக்கொண்டு நின்றிருந்தான் அவன்.

“ஒரு நாள் தான் டைம் இருக்கு. கல்யாண ஏற்பாடுகளை நீதான் பார்த்துக்கணும் பிரகாஷ்” அலமேலு அடுத்த கட்ட பேச்சுக்களுக்கு தாவினார். ஆனால் ஜேபி அதில் சிக்காது,

“நான் வீட்டுல கலந்து பேசிட்டு முடிவை சொல்றேன்மா. கிளம்பு நிவேதா” என்றவன் முன்னே நடந்து சென்று விட, வாசன் தன்னை முறைத்துக்கொண்டிருப்பது புரிந்தாலும், குனிந்த தலை நிமிராமல் சென்று விட்டாள் அவள்.

வீட்டிற்கு வந்த அண்ணனுக்கும் தங்கைக்கும் குருஷேத்திர போரே நடந்தது.

“உனக்கென்ன பைத்தியமா நிவி? வாசகனுக்கு உன்னை பிடிக்கலைன்னு தெரிஞ்சும், எப்படி இந்த கல்யாணம் பண்ணனும் நிற்கிற?” கொதித்தான் அவன்.

“கொஞ்சம் யோசி நிவிம்மா” உஷாவும் அவளது மனதை மாற்ற எவ்வளவோ முயன்றார்.

ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரே பதிலாக நிவேதா,

“நான் வாசுமாமாவதான் கல்யாணம் செய்துப்பேன். அவர் என்னை விரும்பினாலும் அவருக்கும் சேர்த்து நான் அவரை விரும்பிட்டு போறேன். அத்தைக்கும் நான் வாக்கு கொடுத்துட்டேன். இதுவரைக்கும் நான் எதையும் ஆசைப்பட்டு உன்கிட்ட கேட்டதில்லை அண்ணா, எனக்காக இந்த கல்யாணத்தை செய்து முடி” ஒரே போடாக போட, செய்வதறியாது திகைத்தனர் இருவரும்.

“உன்தலைல மண்ணை வாரி என்னையே போட சொல்றியா?” கடைசி நிமிடம் வரை தங்கையிடம் போராடினார் ஜேபி‌‌.

“வாழப்போறது நான். இனி இதுல நான் பின்வாங்கும் போறதில்லை ” கூறிவிட்டு சென்று விட்டாள் அவள்.

பிரகாஷ் இடிந்து போய் அமர, உஷாவிற்கு அவருக்கு எப்படி ஆறுதல் கூறவென்றே தெரியவில்லை.

அந்த நேரத்தில் தான் புயலென வீட்டிற்குள் நுழைந்தான் வாசன். நேராக ஜேபியிடம் வந்தவன்,

“நான் உங்க தங்கச்சிக்கிட்ட பேசனும்” என்று கேட்டான்.

“உங்களால முடியுன்னா, இந்த கல்யாணம் வேண்டாம்னு அவ வாயால சொல்ல வையுங்க. காலத்துக்கும் உங்களுக்கு நன்றியோட இருப்பேன்” என்ற ஜேபி, மாடிப்படிகளை கை காண்பித்தார்.

அவளது  அறைக்கதவை திறக்க, அழுதுகொண்டு அமர்ந்திருந்தாள் அவள்.

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்?” வாசனின் வரவு அவள் எதிர்பாராதது.

அவள் அமைதியாக அழுதுகொண்டு நிற்க,

“உன்னை மாதிரி ஒரு பொண்ணை நான் பார்த்ததில்லை நிவேதா. உன் குணநலன்களை கேள்விப்பட்டு, உன் மேல எவ்வளவு மரியாதை வச்சிருந்தனோ? எல்லாத்தையும் தரைமட்டமாக்கிட்ட? என் மனசுல இன்னொரு பொண்ணு இருக்கான்னு தெரிஞ்சும் உன்னால எப்படி இதுக்கு சம்மதிக்க முடியுது? உன்‌ மனசு என்ன கல்லா? இந்த கலியுகத்திலயும் சத்தியத்தை காப்பாத்தறேன்னு நீ சொன்னா நான் நம்ப மாட்டேன்” என்று கூறியவரின் பேச்சில் நிமிர்ந்து அவனை பார்த்தாள் அவள்.

” அம்மா உன்கிட்ட சத்தியம் வாங்கினது எனக்கு தெரிஞ்சுடுச்சு நிவேதா? அதுக்காகல்லாம் நீ கல்யாணத்தை ஒத்துக்காத. இப்ப நீ வேண்டான்னு சொன்னாலும் இந்த கல்யாணத்தை நிறுத்திடுவாங்க” தன் காதலுக்கான மன்றாடலில் முடித்தான் அவன்.

“என்ன நடந்தாலும் நான் உங்களைதான் கட்டிப்பேன் வாசுமாமா. நானும் உங்க பொண்டாட்டிங்கற பேர் மட்டும் எனக்கு போதும். அந்த ஒரு தகுதியே என் வாழ்க்கை முழுதுக்கும் சந்தோஷத்தை கொடுக்கும்” என்றவளை கொல்லும் வெறி வந்தது அவனுக்கு.

“ஹேய் முட்டாள்பெண்ணே… நான் ஏற்கனவே என் குட்டிமாவை கல்யாணம் செய்துட்டேன். இப்ப இந்த விஷயத்தை சொன்னா அதிர்ச்சியில் அம்மா செத்துப்போயிடுவாங்க. கடைசி முறையா சொல்றேன் நீயே இந்த கல்யாணத்தை நிறுத்திடு”என்றவன் அதற்குப் பின் ஒருநிமிடம் கூட தாமதிக்காது வெளியே சென்றுவிட்டான்.

கல்யாணமே ஆகிவிட்தென்ற செய்தியில் உடைந்து போனாள் நிவேதா. ஆனாலும் ஆசை கொண்ட மனதோ,  ” இப்பொழுது வாசனை வேண்டாமென்று சொன்னால், அதன்பின்பு எப்படியும் வேறு ஒருவருக்கு தன்னை மணம் முடிக்க முடிவு செய்வார்கள். அதற்கு பதில் அவரையே திருமணம் செய்து விலகி விட்டால், தனது மீதி காலத்தை அவரது நினைவிலேயே கழிக்க, தன்னை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்” என்று தவறாக முடிவெடுத்தாள்.

சிறிது நேரத்திற்கு பின் ஜேபி தங்கையின் நிலையை பற்றிக்கேட்க,

“இன்னும் ஒரே நாள்ள எங்க கல்யாணத்தை முடிச்சிடுங்கண்ணா” என்றுவிட்டு கதவை சாத்தியவளை, பின்பு மணவறையில் தான் காண முடிந்தது.

இடையில் நிவேதா வாசனிடம் பேச முயல , அவன் அவளது அழைப்பை ஏற்கவுமில்லை, மணவறையிலும் கற்பாறையாக அமர்ந்திருந்தவனை காண, குற்ற உணர்ச்சி அதிகமாகிக்கொண்டே போனது அவளுக்கு.

கல்யாணத்தில் மகிழ்ச்சியாக இருந்தது அலமேலு மட்டுமே. அத்தையிடம் தாவ முயன்ற நூவனை கூட அவளிடம் விடாது பிடித்திருந்தாள் உஷா.

இவ்வளவு செய்த மறக்காமல் இன்னொரு விஷயத்தையும் செய்தார்.

தனது கணக்குப்பிள்ளையை விட்டு நவிகாவிற்கு அழைத்து , உடனே வந்து வாசனை பார்க்குமாறு, அவளுக்கு தகவல் சொல்லியனுப்பினார்.

நவிகாவின் தந்தையும், ஆசிரமத்திற்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்ய,பக்கத்து ஊருக்கு சென்றிருக்க, வாசனை உடனே பார்க்க வேண்டுமென்ற ஆசையில் மதரிடம் சொல்லி விட்டு தான் மட்டும் தனியாக கிளம்பிச் சென்றாள் அவள்.

ஊரெங்கும் மாவிலைத்தோரணங்களும், வாழைமரப்பந்தல்களும் வரவேற்க, ஏதோ திருவிழா நடக்கிறதென்று, வாசனின் விலாசத்திற்கு வந்து சேர்ந்தவளை வரவேற்றது, வாசனின் திருமண வைபவம்.

நவிகா வந்து நிற்க, “கெட்டிமேளம்..‌” முழங்க, அழகுச்சிலையென அமர்ந்திருந்த நிவேதாவின் கழுத்தில் தாலி கட்டிக்கொண்டிருந்தார் வாசன்.

“என்னடி பொண்ணு? என் மகனை மயக்க பார்த்த , ஆனால் இன்னும் என் பையன் என் கைலதான் பார்த்தியா? விக்ரஹம் மாதிரி இருக்கற என் மருமகளை பார்த்தியா? இனி எப்பவும் என் மகன் வாழ்க்கைல திரும்ப வரனுன்னு நினைக்காத” கைம்பெண் என்பதால் தனித்து நின்றிருந்த அலமேலுவின் கண்களில் நவிகா பட, வார்த்தை அம்புகளால் கிழித்து விட்டார் அவர்.  அலமேலுவை அதிர்ந்து பார்த்தவள், அவர் பேசிய வார்த்தைகளில் அவர்தான் வாசனின் அன்னை என்பதை உணர்ந்தவளாக

“அ..அத்தை..” என்று அழ ஆரம்பிக்க,

“ச்சீ…யாருக்கு யாரு அத்தை? மரியாதையா இந்த ஊரை விட்டு போயிடு. இல்லை, அடிச்சு துரத்தி விட வைச்சுடுவேன்”  என்று மிரட்டி அனுப்ப, கண்முன்னே காதல் பொய்த்ததில் நடைபிணமாக ஊருக்கு திரும்பினாள் நவிகா.

புதுமணப்பெண்கள் நாணத்துடன் நுழையும் முதலிரவு அறைக்குள் ஒருவித பயத்துடன் நுழைந்தாள் நிவேதா.

அறையைத் திறந்து பார்க்க, சுவற்றின் புறம் திரும்பி நின்றிருந்தான் வாசன்.

“வா.. ” வாசுமாமா என்றழைப்பதற்குள்ளாகவே அங்கிருந்த பூச்சாடியை தள்ளிவிட்டு உடைத்தான் அவன்.

சுக்கலாக நொறுங்கிய சாடியை பார்த்து மிடறு விழுங்கியவள், முயன்று தைரியத்தை வரவழைத்து,

“வாசுமாமா.. நான்…” என்ன சொல்ல வர்றேனா என்று ஆரம்பிப்பதற்குள்ளாகவே, மேஜையில் வைத்திருந்த பழத்தட்டை தூக்கி எறிய, சுவற்றில் மோதி பறந்த தட்டு,  அவளின் நெற்றியை பதம் பார்த்தது.

“ஸ்ஸ்ஸ்….. ஆஆஆஆ” அந்த வலி இப்பொழுதும் அந்த தழும்பில் சுண்டி இழுக்க, வியர்த்து விறுவிறுத்து கண்விழித்து, அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்தமர்ந்தார் நிவேதா.

உள்ளத்தின் வண்ணமது தெரிவதில்லை

உடைத்து சொல்லும் வரை புரிவதில்லை

திமிராகும்…..

அத்தியாயம்-28:

“கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்தறுக்காகவே இந்த நிவேதா இப்படி பண்ணலாடா?” விமானநிலையத்தில் அனைவரும் அவர்களையே பார்த்துக்கொண்டிருப்பதை கூட பொருட்படுத்தாது கத்திக்கொண்டிருந்தார் கௌசல்யா.

“கௌசி.. அமைதியா இரு. முதல்ல நரேனை கவனி” இந்திர சேனாவின் வார்த்தைகள் அவளது காதுகளில் விழுந்தது போலவே தெரியவில்லை.

“என்ன தைரியம்? என் பையன் அவ்வளவு பேசறான்? ஊமை மாதிரி நின்னாளே அந்த ஸ்ரீனிகா. பிடிக்கலைன்னா முதல்லயே சொல்லாம, கூப்பிட்டு வச்சு இப்படி கேவலப்படுத்தி அனுப்பிட்டா” இவ்வளவு பேச்சிற்கும் அமைதியாக தான் அமர்ந்திருந்தான் சேனா. அவன் அவசரப்படதன் விளைவுதானே நடந்த சம்பவங்களுக்கு காரணமாக அமைந்தது.

“அம்மா…விடுங்க ப்ளீஸ்” சேனா பேசிய பின்பு அமைதியானவர், அவனை முறைத்த முறைப்பில் அவரை சமாதானப்படுத்துவது மிகவும் கஷ்டமென்று புரிந்தது.

“போதும் நரேன்.. நீ கொஞ்சநாள் அங்க வந்து மும்பைல எங்ககூட இருந்துட்டு வா”என்றழைத்தார் இந்திரசேனா.

“இல்ல டாட்.. நான் இருந்து வேலையை முடிச்சிட்டு வரேன்” நிகாவின் மனது நூவனிடம் சாய்ந்திருந்தாலும், இன்னும் சில விஷயங்களை தெளிந்து கொள்ள வேண்டியிருந்தது அவனுக்கு.

“சரி அப்புறம் உன் இஷ்டம். ஆனால் இனி அந்த பொண்ணு உனக்கு வேண்டாம்” இதை உன் மனசுல நல்லா பதிய வச்சுக்கோ நரேன் என்றார் அவர்.

இருவரும் பேசிக்கொண்டிருக்க, அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த கௌசல்யா,

“என்னங்க அங்க பாருங்க, அது தயா சார் பொண்ணு ரூபாலி தான?” அன்னையின் உற்சாகத்தில் வியப்பாக திரும்பி பார்த்தான் சேனா.

அவன் பார்த்த திசையில், அங்கு நின்றிருக்கும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துக்கொண்டு, அழகு பதுமையாக ஆர்ப்பாட்டமில்லாத நடையுடன் நடந்து வந்து கொண்டிருந்தாள் ரூபாலி.

ஏதோ ஒரு உத்வேகத்தில் வேகமாக எழுந்து சென்று அவளருகே சென்றார் கௌசல்யா. அவர் தன்னை நோக்கி வருவதை அவளும் பார்த்துக்கொண்டு தான் நடந்து வந்தாள். அவளது அத்தை மானசா, லக்கேஜ் எடுக்க சென்றிருக்க, இவள் மட்டும் நடந்து வந்தாள். ஆனால் அங்கு சேனாவையும், அவனது குடும்பத்தினரையும் பார்த்ததை அவளது கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை. அதுவும் கௌசல்யா தன்னை நோக்கி வேகமாக வர, அவரை பார்த்து புன்னகைத்தாள்.

கௌசல்யாவிற்கும் அவளது அருகில் சென்ற பிறகுதான் புத்திக்கு உரைத்தது, இதுவரை தான் அவளுக்கு பரிச்சயமில்லாத நபர் என்று. அருகில் சென்றதும் ஏற்பட்ட சங்கடம், அவளது புன்னகையில் மறைந்து போனது.

” நீ..நீ தயா சார் பொண்ணு ரூபா தானேம்மா?” அவளது புன்னைகையில் தைரியம் வரப்பெற்று தயக்கமில்லாது பேசினார் அவர்.

“ஆமா ஆன்ட்டி” இவ்வளவு இனிமையான குரலில் ஒரு பதிலை இதுவரை அவர் கேட்டதில்லை.

அதன்பின்பு அவர் பேச தயங்க” நீங்க சேனா சார் அம்மாதான? நான் உங்களை பார்த்திருக்கேன் ஆன்ட்டி” கர்வமில்லாத அவளது பேச்சில் , அவள் தான் தனது மருமகளென்று அக்கணமே முடிவு செய்தார் அவர்.

அப்பொழுது இந்திரசேனாவும் அவர்களது அருகில் வர,” ஹலோ அன்கிள்” தானே முன்வந்து பேசியவள், நரேனைப்பார்த்ததும் சுணக்கமுற்ற மனத்தை முகத்தில் காட்டாது பிரயத்தனம் செய்தவள்,

“நல்லாருக்கிங்களா நரேன் சார்?” என்று கேட்டாள்.

சேனாவிற்கும் அவளை ஞாபகம் இருந்ததால், ” நல்லாருக்கேன் மிஸ்.ரூபாலி” என்றதோடு முடித்துக்கொண்டான்.

அதற்கு அவளது அத்தையும் வந்து சேர,

“யாரம்மா இவங்கள்ளாம்? உனக்கு தெரிஞ்சவங்களா?” என்று கேட்டார்.

அவரது கேள்வியில் சேனாவின் குடும்பத்தை முறைப்படி அறிமுகப்படுத்த,

“சாரி இந்தர் சார். உங்களை பத்தி கேள்விப்பட்டிருக்கேன். இப்பதான் உங்களை நேரில் பார்க்கறேன். வாங்க நம்ம வீட்டுக்கு வந்துட்டு போகலாம்” என்றழைத்தார்.

“இல்லம்மா நாங்க மும்பை திரும்பறோம்” சோர்வுடன் கூறினார் கௌசல்யா. அதில் ரூபிக்கும் சேனாவை இப்பொழுது மட்டும்தான் பார்க்க முடியுமென்பது மனதிற்கு கஷ்டமாக இருந்தது.

“அச்சோ என்னாச்சு இவ்வளவு சோர்வா பேசறிங்க? ஏதும் பிரச்சனையா?” மானசா கேட்க, மடைதிறந்த வெள்ளமாக,

“கௌசி.‌. ” இடையில் குறுக்கிட்ட கணவனையும் மீறி, நிகாவை பெண்பார்க்க சென்ற சம்பவத்தை , ரூபாலியின் முகத்திலும் ஒரு கண்ணை வைத்துக்கொண்டே கூறி முடித்தார் அவர்.

“ஏதோ நடந்தது நடந்துடுச்சு ? முடிஞ்சத நினைச்சு வருத்தப்படாதிங்க” ஆறுதல் கூறினார் மானசா. ரூபாலியோ உயிருள்ள சிலையாக நின்றிருந்தாள்.

“தோற்றுப்போன சேனாவின் காதலுக்காக வருத்தப்படுவதா? இல்லை சேனாவின் வாழ்வில் தனக்கான இடம் இன்னும் இருக்கிறதென்று நினைத்து சந்தோஷப்படுவதா?” என்ன நினைக்கவென்று குழம்பியவள், அவனின் சோர்ந்த முகத்தை பார்த்து தெளிந்தாள்.

“நான் உங்களை வருத்தப்பட விட மாட்டேன் ” என்று நினைத்தவளின் முகத்தில் நாணத்தின் ரேகைகள். அதுவரை மானசாவுடன் பேசிக்கொண்டு, அவளை கவனித்துக்கொண்டிருந்த கௌசல்யாவிற்கும் திருப்தியாக இருந்தது. கிடைத்த சந்தர்ப்பத்தை சமயோஜிதமாக உபயோகித்திருந்தார் அவர்.

“ஆண்டவா என் பையன் வாழ்க்கையை சரி பண்ணிடு” அவசர வேண்டுதலும் வைத்தது தாய்மனம்.

அது ஆண்டவனுக்கு  உடனே கேட்டுவிட்டது போலும், ” மிஸ்டர் சேனா, எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா? நான் இங்கிருக்கற வரைக்கும் உங்களோட ஃப்ரீ டைம்ல இந்த ஊர்ல உள்ள இடங்களை சுத்தி பார்க்க எனக்கு உதவமுடியுமா? அத்தையை சிரமப்படுத்த வேண்டாம்னு நினைக்கிறேன்” என்று கேட்டாள் ரூபாலி.

“தன் அண்ணன் மகளா பேசுவது? ” மானசா அவளை வியந்து பார்க்க, மருமகளின் கெட்டிக்கார தனத்தில் சொக்கிப்போனார் கௌசல்யா.

“நீ கேட்டு அவன் இல்லைன்னு சொல்லிடுவானா? செய்வல்ல நரேன்” அன்னையின் குரலில், செய்யென்ற மறைமுக கட்டளை ஒளிந்திருக்க, அப்போதைக்கு அவரை சமாதானப்படுத்தும் முதல் வாய்ப்பை பற்றிக் கொண்டான் சேனா.

“ம்ம்.. செய்றேன்மா. கண்டிப்பா மிஸ்.ரூபாலி” அவளுக்கு உறுதிகொடுத்தான்.

“மந்திரியின் மகள் கேட்டு மறுக்க முடியுமா என்ன?” அந்த நினைவும் அவனுள் ஓடிக்கொண்டிருந்தது. நடக்கும் அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்தார் இந்திரசேனா.

“மனைவி ஏதோ முடிவு செய்து களமிறங்கியிருப்பது நன்றாகவே புரிந்தது. மகனின் வாழ்வு சீராவதை எந்த தந்தைதான் விரும்ப மாட்டார்?”

அதற்குள் அவர்களுக்கான விமான அறிவிப்பு வர, கிளம்ப தயாராயினர் இந்தரும், கௌசல்யாவும்.

இப்படி ஒரு சூழலில், மகனை விட்டுச் செல்வது கஷ்டமாக இருந்தாலும், அவன் மீண்டு வருவான் என்ற மன உறுதியோடு விடைபெற்றனர் அவனது பெற்றோர்.

சேனாவும்  வெளியே வந்திருக்க, அவனது முகத்தை பார்த்தவள், தனது அத்தையிடம்,

“அத்தை அவரை நம்ம வீட்டுக்கு இப்ப சாப்பிட கூப்பிடலாமா?” என்று கேட்டாள்.

அவள் மனதை புரிந்து கொண்ட மனுவும்,

“நீ கேட்டு நான் இல்லன்னு சொல்வேனா செல்லம். வா, நானே கூப்பிடறேன்” என்றவர், வெளியே சென்று கொண்டிருந்த சேனாவை அழைத்தார் அவர்.

“தம்பி கொஞ்சம் நில்லுங்க” அவரது குரலில் அவன் திரும்பி பார்க்க,

“இவ்வளவு தூரம் வந்தாச்சு. பாவம் உங்க அப்பா-அம்மாவால தான் எங்க வீட்டுக்கு வர முடியலை. நீங்களாவது வரலாமே? வந்து எங்ககூட சாப்பிட்டு போனா உங்களுக்கும் ஒரு மனமாற்றமாயிருக்கும்” என்று கூறினார்.

தனது அன்னை பேசியதில் இவ்வாறு பேசுகிறார் என்பதை புரிந்து கொண்டவன்,

“பரவாயில்லை ஆன்ட்டி.நான் இன்னொரு நாள் வரேன்” என்று‌ மறுத்தான்.

“ஆன்ட்டில்லாம் வேண்டாம். அம்மான்னே கூப்பிடுங்க. இன்னொரு நாள் எதுக்கு? இன்னைக்கே நாள் நல்லாதான் இருக்கு” என்று அவர் வற்புறுத்த, ரூபாலியின் கண்களிலும் ஒருவித எதிர்பார்ப்பு இருப்பதை அப்பொழுதுதான் கவனித்தான் சேனா.

அவன் பார்த்ததும், அவளது முகம் சிவந்துவிட, இவ்வளவு மென்மையான பெண்ணின் சுபாவம், அவனையும் அறியாமல் அவனது மனதை இலகுவாக்கிய விந்தையை வியந்து யோசித்தவன்,

“சரி. வாங்கம்மா போகலாம்” என்று அவர்களுடன் கிளம்பினான்.

“எழுந்திரு ரஞ்சனி? இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி தூங்கற மாதிரி நடிச்சுட்டே இருக்கப்போற?” கிரியின் அதட்டலுக்கும் அசையாது படுத்திருந்தாள் அவள்.

முதல் நாள் நிகா அவளை பார்க்க சென்றபோது, அவ்வளவு நேரம் விழித்து தன்னுடன் பேசிவிட்டு, அப்பொழுதுதான் கண்ணயர்ந்தாக கூறிவிட, இரண்டு‌ முறை அவள் எழுப்பியபோதும் அவள் எழுந்திருக்கவில்லை என்பதால் , ஏமாற்றத்துடன் திரும்பினாள் அவள்.

வீடு திரும்பியவளை சந்தித்து கிரி ரஞ்சனியின் நலம் விசாரிக்க,

“நல்லா தூங்கிட்டுருந்தா கிரி. இன்னைக்கும் அவகிட்ட பேசமுடியலை” நடந்ததை கூறி , சோர்வுடன் கூறிவிட்டு சென்றுவிட்டள் அவள்.

ஏதோ அசாரணமாக பட்டது கிரிக்கு. அதனால் முதல் வேலையாக இரவோடு இரவாக அவளை பார்க்க மருத்துவமனைக்கு கிளம்பி வந்திருந்தான் அவன்.

“ஓ.. வாயோடு வாய் வைத்து இறுக்கமா ஒரு உம்மா குடுத்தா தான் எழுந்துப்பியா ரனும்மா?” காதோரம் கேட்ட குரலில் தூக்கிவாரிப்போட்டு எழுந்தமர்ந்தாள் ரஞ்சனி.

“நான் முழிச்சிட்டேன்” என்ற அறிவிப்போடு.

அவளது காதை பிடித்தவன்,” இரண்டு நாள்கள் எவ்வளவு பயமுறுத்திட்டடி?” என்றவன் திருகியதில் வலித்தது அவளுக்கு.

“ஆஆஆஆ… வலிக்குது சது” என்று அலறிவிட்டு, நாக்கை கடித்துக்கொண்டாள்.

“என்னது சதுவா?” இன்பமாக அதிர்ந்தான் கிரி.

“ம்ம்… உங்க முழுபெயர் சப்தகிரிவாசன் தான?” அவனைப் பார்க்காது பேசியவளின் கன்னத்தில் கிள்ளினான் அவன்.

“ஏண்டி இவ்வளவு ஆசை என்மேல வச்சுகிட்டு மறைச்சுட்டியே? இரண்டுநாள் வீணாயிடுச்சே?” அவனது வருத்தத்தில் அவளுக்கு சிரிப்பு வந்தது.

அவளது முகத்தை கைகளில் ஏந்தியவன்,” இப்ப சொல்லு ரனு? உனக்கு நான் இருக்கேன் தைரியமா சொல்லு? உனக்கு எதனால் காய்ச்சல் வந்தது? என்ன நடந்தது?” என்றவனின் கேள்வியில், அவளது முகம் மீண்டும் கலவரமானது.

“ப்ளீஸ் என்னை நம்பி சொல்லு ரனு?” அவனது கெஞ்சலில், அவளது வாய்ப்பூட்டு மெதுவாக தளர்ந்தது.

“அ..அது..அதுவந்து”….

“ம்ம்… சொல்லுடா….” விஷயத்தை சொல்லுமாறு ஊக்கினான் கிரி.

“நான் அன்னைக்கு ராத்திரி தூக்கம் வராம எழுந்து தோட்டத்து பக்கம் போனப்போ…”

“போனப்போ….”

“உங்க அம்மாவோட ரூம்ல விளக்கு எரிஞ்சது. அப்போ அவங்க… தோட்டத்துக்கு வர பெரிய ஃப்ரெஞ்ச் விண்டோவை திறந்து வச்சிருந்தாங்க. நான் ஒரு ஆர்வத்துல, அங்க எட்டிப்பார்த்தேன்” என்று சொல்லும்போதே, அவள் கண்கள் குளமாக, அவளது கண்களை துடைத்து விட்டான் கிரி.

முதன்முறையாக அவனை தானாகவே அணைத்துக்கொண்டு, அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டு அவனது முகம் பார்த்து,

“அவங்க ஸ்ரீனிகா அக்காவோட ஃபோட்டோ வச்சு….” அடுத்து அவள் கூறிய செய்தியில் அவளை தன்னுள் புதைத்துக் கொண்டு ஆறுதல்படுத்தியவன், அடுத்து தான் செய்ய வேண்டிய காரியத்தை உறுதி செய்தான்.

சற்று நேரம் அவளது முதுகில் தடவிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தியவன்,

“ரனு.. என்னைப்பாரு..” அவளது முகத்தை நிமிர்த்த, அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

“நீ பயப்படற மாதிரி ஒண்ணுமில்லை. இனி இந்த விஷயத்தை பத்தி யார்கிட்டேயும் பேசாதே? ஸ்ரீகிட்ட கூட, சரியா? இன்னும் கொஞ்ச நாள்ல இதுக்கான விளக்கங்கள்ளாம் நானே உனக்கு சொல்லுவேன். அதுவரைக்கும் எதுக்காகவும் நீ பயப்படக்கூடாது” என்றுரைக்க, சரியென்று தலையசைத்தாள் அவள்.

“ஸ்ரீ இனி என் பொறுப்பு. என்னைக்கவனிக்க வேண்டியது உன் பொறுப்பு” என்றவனின் குரலில் இருந்த வித்தியாசத்தை அப்பொழுதுதான் உணர்ந்தவள், சட்டென அவனிடமிருந்து விலகி அமர, அவன் கையை பிடித்திழுத்த இழுப்பில் மீண்டும் அவன் மீது மோதினாள் அவள்.

“நிகாவுக்கும் நூவனுக்கும் நிச்சயம் ஆயிடுச்சு. நம்ம நிச்சயத்தை நாளைக்கே வச்சுடவா” கிசுகிசுப்பான குரலில் பேச,

“வாவ்.. அக்காக்கு நிச்சயம் ஆயிடுச்சா?” அவனது காலிலேயே குதிக்க, வலி தாளாது கத்தினான் அவன்.

“அதுக்கு இப்படியாடி  குதிப்ப?  இரண்டாவதா ஒன்னு கேட்டேனே அது உன் காதுல விழலயா?” அவளை பார்த்து முறைத்தான் கிரி.

“ச்சோ.. சாரி சது” அருகே வந்தவளின் கன்னத்தில் அச்சாரம் பதித்திருந்தான் அவன்.

நொடியில் நடந்து விட்ட செயலில் அவள் திகைத்து நிற்க, அவளது மற்றொரு கன்னத்திலும் கிரியின் இதழ்கள் பதிந்தன.

இதில் சுதாரித்தவள் அவனை தள்ளிவிட, சமாளித்து நின்றவன்,

“நாளைக்கு கிளம்பி ரெடியா இரு. நம்ம வீட்டுக்கு போகனும். நீ தைரியமா முதல்லயே சொல்லியிருந்தா இந்நேரம் ஸ்ரீ நிச்சயம் இன்னும் களை கட்டியிருக்கும். பரவாயில்லை பார்த்துக்கலாம். இதுக்குமேல நான் இங்க இருந்தா என்னால் என்னை கட்டுப்படுத்திக்க முடியாதுடி? அதனால் இன்னைக்கு ஒருநாள் பத்திரமா இருந்துக்கோ” என்றவன் விடைபெற்றுச்சென்றான்.

இரவு பன்னிரெண்டு மணிக்கு விடாது ஒலித்துக் கொண்டிருந்த அலைபேசியின் ஒலியில் தூக்கம் களைந்தது நிகாவிற்கு. ரஞ்சனியும் அருகில் இல்லாததால் அப்பொழுதுதான் கண்ணயர்ந்தவளுக்கு, கண்ணைத் திறக்கவே கஷ்டமாக இருந்தது.

அரைத்தூக்கத்திலேயே அழைப்பை ஏற்று காதில் வைக்க,

“தூங்கிட்டியாடி பொண்டாட்டி?” என்ற நூவனின் குரலில் ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்சநஞ்ச தூக்கமும் ஓடியது அவளுக்கு.

“இல்ல ஓடியாடி விளையாடிட்டுருக்கேன்” எரிச்சலாக பதில் கூற,

“அதான தப்பித்தவறி என்னைக்கனவுல கூட வர விடமாட்டியே?” வம்பிழுக்கவே இப்படி செய்கிறான் என்பதை புரிந்து கொண்டாள் அவள்.

“இங்கிருந்து ஃபோன தூக்கி எறிஞ்சா, உன் மண்டைல வந்து விழுகாதுங்குற தைரியத்துல பேசுறியா?” என்று கூறியவளின் கூற்றை கற்பனை செய்து சிரித்தான் அவன்.

“தூக்கி எறி பேபி. வாசல்ல தான் நிக்கிறேன்” என்றவனின் குதூகல குரலில், கட்டிலிலிருந்து வேகமாக எழுந்து அமர்ந்தாள் நிகா.

மனக்கடலில் நீ குதிக்க

மூழ்கிப்போனேன் நான்……

திமிராகும்…..

அத்தியாயம்-29:

“நடுநிசியில் இங்கு வந்து நிற்கிறானா? நிஜமாகத்தானா?” யோசனையில் அவள் அமைதியாக இருக்க, அவளது யோசனையை கலைத்தது நூவனின் குரல்.

“தோட்டத்துல தான் நிற்கிறேன் நிகா. உன்கிட்ட சில விஷயங்கள் பேசுனும்? வெளிய வா” என்றழைத்தான் அவன்.

“இப்பல்லாம் என்னால வர முடியாது. எதுவாக இருந்தாலும் காலைல பேசிக்கலாம். நீங்க வந்த வழியே திரும்பி போங்க” என்றவள் அலைபேசியை வைக்கப்போக,

“ஹே..ஹே.. இரு. இப்ப நீ வெளிய வரலன்னா நான் உள்ள வரேன்” அவனது குரலில் இன்றே பேசிவிடும் வேகம் தெரிந்தது.

“வேண்டாம். அதான் நீ நினைச்ச மாதிரிதான் எல்லாம் நடக்குதே. அப்புறம் என்ன? சொத்துக்காகதானே இதெல்லாம் பண்ண? அதுக்கப்பறம் என்னவோ உண்மைகாதல் மாதிரி எதுக்கு இந்த சீனெல்லாம்” அனல்தெறிக்கும் கங்குளாக அவளிடமிருந்து வந்து விழுந்தன வார்த்தைகள்.

ஒருநிமிடம் மறுபுறமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. லைனில் தான் இருக்கிறானாவென்று அலைபேசியை பார்க்க, லைனில்தான் இருந்தான். அவளும் அமைதியாகவே இருக்க,

“பேசி முடிச்சிட்டியா? இப்ப உன் மனசுல இருக்கறதெல்லாம் கொட்டி முடிச்சிட்டியா? ” அறையில் கேட்ட குரலில் அதிர்ந்து எழுந்து நின்றாள் அவள்.

“இப்ப எதுக்கு உள்ள வந்திங்க?” நொடிக்கும் குறைவான நேரத்தில் அதிர்ச்சியிலிருந்து மீண்டு விட்ட, அவளது மனோதிடம் இப்பொழுதும் அவனை  வியக்கவைத்தது.

“நான் கூப்பிட்டேன் நீ வரல? அதனால நானே வந்துட்டேன்” என்றவன் அவளது கட்டிலில் சட்டமாக அமர்ந்து கொண்டான்.

“மரியாதையா வெளிய போங்க நூவன். என்ன இது விளையாட்டு?” அடக்கப்பட்ட ஆத்திரம் அவளது குரலில்.

” நான் பேச வந்தத பேசிட்டு போயிடறேன். அதுவுமில்லாம கொஞ்சநேரத்துக்கு முன்னாடி நீ கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லனுன்னா, உன் முகத்தை நேர்ல பார்த்து பேசினால்தான் சரியா இருக்கும்”  என்றவன் வந்த கொட்டாவியை அடக்கி தூக்கத்தை துரத்தினான்.

நிகா இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருக்க, அவனே பேச ஆரம்பித்தான்.

“என்ன கேட்ட? சொத்துக்காக தான் உன்னை கல்யாணம் பண்றேன்னா? ” அவளது கண்களை நேருக்கு நேராக பார்த்தவன்,

“உன்னை கல்யாணம் பண்ணா மட்டும்தான் சொத்து வருமா? உன்னை கொன்றாலும் வரும் . சொத்துக்காக எதையும் செய்யத்துணியற கேவலமான ஆளா நான்? ” என்றவனின் பதிலில், அவள் முறைத்துப்பார்க்க,

“கொன்னுடுவேன்னு சொன்னாலும் முறைச்சு பார்க்கற பார், இந்த தைரியந்தான்டி உன்னை திரும்பி பார்க்க வைச்சது” என்றவன் எழுந்து வந்து, எங்கோ சுவற்றை நோக்கி முகத்தை திருப்பியவளின் கன்னத்தை அழுந்த பிடித்து தன்னை நோக்கி திருப்பியவன்,

“உன்னை பார்த்த நொடியிலிருந்து இப்போ இந்த நிமிஷம் வரைக்கும், உயிரா காதலிக்கிறேன்னு சொன்னாலும் நீ நம்ப மாட்ட? ஆனால் நீயே புரிஞ்சுக்கற நாளும் வரும். அதுக்காக என்னால வருஷக்கணக்கா எல்லாம் உன்னை பார்த்துக்கிட்டே சும்மா இருக்க முடியாது. அதனாலதான் இந்த கல்யாண ஏற்பாட்டை உடனடியா பண்ண சொன்னேன்” அவன் பேசுவதை கேட்டாலும், அவன் கையை விலக்குவதிலேயே முனைப்பாக இருந்தவளை பார்த்து சிரித்தவன்,

“உன் எனர்ஜியை வீணாக்காதே நிகாபேபி” தானே அவளை விடுவித்தான். வலியை போக்க,  அவள் தனது கன்னக்கதுப்புகளை தேய்த்துக்கொள்ள, நூவனின் கண்கள் அவளது கன்னங்களை தான் மொய்த்துக்கொண்டிருந்தது.

அவன் தன்னை பார்க்கும் பார்வையை உணர்ந்தவள்,

“சொல்ல வேண்டியதை சொல்லிட்டங்கள்ள? அப்போ கிளம்புங்க” என்றவள் வாசலை நோக்கி கையை நீட்டினாள்.

அவளது பேச்சை கண்டுகொள்ளாதவனாக,

“நான் உன்னை கொஞ்சம்கூட பாதிக்கலையா நிகாபேபி” இப்படி பேசுபவனின் வசீகர குரலின் மென்மையில் இப்பொழுது நிகாவின் உறுதி சற்று தளரத்தான் செய்தது.

அவள் அமைதியாகவே நின்றிருக்க,

“இந்த கேள்விக்கு பதில் கிடைக்காம நான் இந்த இடத்தை விட்டு போகமாட்டேன்?” பிடிவாதக்குழந்தையாய் அமர்ந்திருந்தவனின் முகத்தைக்கண்டவளின் மனமோ , அணைத்து அரவணைக்க துடிக்க, மனதை அடக்க பெரும்பாடு பட்டாள் அவள்.

“இப்படி மிரட்டிக்கேட்டா, ஆமான்னு சொல்றத தவிர வேற என்ன சொல்ல முடியும்?” கேட்டவளின் புத்திசாலித்தனத்தை கண்டு முதல்முறையாக கோபம் வந்தது நூவனுக்கு.

“திமிரு புடிச்சவ, லேசுல ஒத்துக்க மாட்டாளே? உன் பாடு ரொம்ப கஷ்டம் போலவே நூவா?” மனசாட்சி வேறு , ஒருபுறம் காலை வாரிக் கொண்டிருந்தது.

“நீ எப்படி வேணுன்னாலும் கேள்வி கேட்டுக்கோ? ஆனால் நான் உன்னை கொஞ்சம்கூட பாதிக்கலைன்னு என் தலைமேல சத்தியம் பண்ணு நான் இப்பவே கிளம்பிடறேன்” விரைத்துக்கொண்டு, தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றவனை காண சிரிப்பு தான் வந்தது அவளுக்கு.

அதன்விளைவாக அவளது முகத்தில் மெல்லிய புன்னகையும் படற,

“நிகா பேபி” அதைக்கண்டு வேகமாக அவளருகே  வந்தான் நூவன். அவளது வேகத்தில் அவள் இரண்டெட்டு பின்னால் எடுத்து வைக்க, அதற்கு முன்பே அவளை தன் கைவளைவிற்குள் கொண்டு வந்திருந்தான் அவன்.

இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் தங்களுக்குள் இழுக்க முயற்சிக்க, அவனது விழி வீச்சில் தன்னை மறந்தவளாக,

“எனக்கு உங்களை பிடிக்கும் நூவி” என, இரவின் நிசப்தத்தில் எதிரொலித்த அந்த வார்த்தைகள், அவனின் காதுகளில் பூமாரி பொழிய, அவளை அணைத்துக் கொண்டான்.

ரஞ்சனியும் அருகில்லாது, இங்கு வந்ததிலிருந்து ஏதோ ஒருவித அசாதாரண உணர்வு தன்னை ஆட்கொள்வதைப்போல்  ஏற்பட்ட உணர்வு,  நூவனின் அருகாமையில் மட்டும் மறைந்து போவதை தன் மனதார உணர்ந்தாள் நிகா. தானும் அவனை அணைத்துக்கொள்ள, ஏகாந்த இரவில் யாருமற்ற தனிமையில் கூட, அங்கு காதலே மேலோங்கியிருந்தது.

அவளது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவன்,

“இது போதும் நிகா. என்னை உனக்கு பிடிச்சிருக்கில்ல? எங்க உன்னை வற்புறுத்தி கல்யாணம் பண்ண வைக்கறனோன்னு எனக்கு மனசை உறுத்திக்கிட்டே இருந்தது. இப்போ அந்த கவலை இல்லை” என்றவன் அவளை தன் நெஞ்சுக்குள் அழுத்திக்கொள்ள, தானும் சுகமாக அவனது மார்பில் புதைந்து கொண்டாள் நிகா.

சிறிதுநேரம் கழித்து அவளை விடுவித்தவன்,

“இப்படியே நம்ம வீட்டுக்கு வந்துடறியா?” என்று கேட்க, அவனது நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்டாள் அவள்.

“எப்பவும் உங்களுக்கு உங்க விஷயந்தான் முக்கியம்?” என்றவள் அவனைப்பார்த்து சிரிக்க,

“சிரிடி நல்லா சிரி. இன்னும் இரண்டு நாள்ள எல்லாத்தையும் மொத்தமா வச்சுக்கறேன். ஆனா அதுவரைக்கும் தாங்கற மாதிரி” என்றவன் உதடுகளை குவித்து காண்பித்தான்.

அவனது செய்கையில் வெட்கம் வந்தாலும், நடந்து சென்று தனது கைபையை எடுத்து வந்தவள், தனது பையிலிருந்த லிப்பாம்மை எடுத்து அவன் கையில் கொடுத்தாள்.

அதில் அவன்” ஙே….” என்று முழிக்க,

“வச்சு போட்டுக்கங்க.. எப்பவும் உங்க உதட்டிலேயே ஃப்ளேவர் இருக்கும்” என்று கூற, அவளது நக்கலில் சிரித்தவன், அவள் எதிர்பாராத வண்ணம் அவளின் அதரங்களை சிறைசெய்திருந்தான்.

நிகா அவளது தோள்களில் குத்த, அதையெல்லாம்  கண்டுகொள்ளாமல், காரியத்தில் கண்ணாக இறங்கினான். சற்றுநேரம் கழித்து மூச்சு வாங்க அவளை விடுவித்தவன்,

“இப்பல்லாம் ஃப்ளேவர் இல்லாத உதடுதான் பிடிக்கும். அதனால எனக்கு தேவைன்னா உனக்கு போட்டுவிடறேன். அதுவரைக்கும் இது என்கிட்டயே இருக்கட்டும்” என்று கூற, கையில் வைத்திருந்த பையை அவன்மீது ஓங்கியடித்தாள் அவள்.அதிலிருந்து அவன் லாவகமாக விலகி நிற்க, முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“பேபி.. இங்க என்னை பாரு?” அவளது முகத்தை திருப்பியவன்,

“இனி எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன். ரஞ்சனியும் இனி நம்ம பொறுப்புதான். எதை நினைச்சும் நீ மனச போட்டு குழப்பிக்காம, நடக்க போற நம்ம கல்யாணத்தை சந்தோஷமா ஏத்துக்கோ. நீ தேடுற எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். நானே உனக்கு எல்லாத்தையும் சொல்வேன்” மென்குரலில் ஆறுதல் கூறியவனின் வார்த்தைகள் மனதை ஊடுருவி செல்ல, அவளது தலை தானாக சரியென்று அசைந்தது.

“சரி நீ கதவை நல்லா லாக் பண்ணிட்டு பத்திரமா படுத்து தூங்கு. நாளைக்கு அம்மா புடவை நகை எல்லாத்தையும் அனுப்புவாங்க. அப்படியே ரஞ்சினிக்கும் சேர்த்து எடு” என்று கூறியவன் விடைபெற்று சென்றுவிட்டான். ஏனோ வெகுநாட்களுக்கு பிறகு, மனதில் ஓர் இதம் பரவ, அன்று நிம்மதியாக தூங்கினாள் அவள்.

“அம்மா..‌அம்மா…” நிவேதாவின்  அறைக்கதவை ஓங்கி தட்டிக்கொண்டிருந்தான் கிரி.காலையில் ரஞ்சனியை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து விட்டு , வீட்டிற்கு கொண்டு வந்து விட்டுவிட்டு, அன்னையை தேடி வர, நண்பகல் ஆகியிருந்தது அவனுக்கு.

அவன் உள்ளே நுழையவுமே, வேலண்ணா,

“தம்பி அம்மா காலைல சாப்பிட கூட கீழ இறங்கி வரல, இப்போ மதியமும் வந்துடுச்சு” என்று கூற, வேகமாக மேலேறிச்சென்று பார்க்க, அன்னையின் அறைக்கதவு பூட்டியிருந்தது.

தனது அலைபேசியை எடுத்து அவருக்கு அழைக்க, அலைபேசி  அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கூற, கதவை தட்டி அழைத்தான்.

ஐந்து நிமிடங்களுக்கு மேல்  தட்டிய பிறகும் கதவை திறக்காமல் இருக்க, ஓங்கித்தட்ட ஆரம்பித்தான் கிரி

நெடிய பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு, கதவை திறந்தார் அவர்.

“அம்மா என்னாச்சு? ஏன் கதவை திறக்க இவ்வளவு நேரம்” அன்னையை அணைத்துக்கொண்டான் கிரி.

“கொஞ்சம் நல்லா தூங்கிட்டேன்டா. வேற‌ ஒண்ணுமில்லை‌” மகனை ஆசுவாசப்படுத்தினார் நிவேதா.

“உடம்புக்கு ஒண்ணும் செய்யலயேம்மா? ” அவரை அமரவைத்து நெற்றியில் கைவைத்து பார்க்க, அவரது உடல் வழக்கமான சூட்டில் தான் இருந்தது.

சற்றே நிம்மதியடைந்தவன், ” நீங்க வேணுன்னா ரெஸ்ட் எடுங்கம்மா? நான் போய் சாப்பாடு எடுத்துட்டு வந்துடறேன்” என்றவன் கீழிறங்குப்போக, அவனது கையைப்பிடித்து தடுத்தார் அவர்.

“வேண்டாம் கிரி‌. நான் இன்னும் கொஞ்சநேரத்துல ரெடியாகி, கீழ வந்து சாப்பிட்டுக்கிறேன். நீ இந்த இரண்டுநாளா வேற எந்த வேலையும் பார்க்கல, முதல்ல போய் உன் வேலையை கவனி”  அவனை வேலைகளின் புறம் திசைதிருப்ப,

“எப்படிம்மா முடியும்? இன்னைக்கு மாமா பத்திரிக்கையும், அத்தை புடவை நகைங்களை எல்லாம் எடுத்துட்டு வர்றதா சொல்லியிருக்காங்க. காலைல உங்களுக்கு கால் பண்ணா, எடுக்கலன்னு எனக்கு பண்ணாங்க. ரஞ்சனியும் டிஸ்சார்ஜ் பண்ணிட்டு, வந்து பார்த்தா உங்க ரூம் திறக்கவே இல்லைன்னு சொன்னதும் ரொம்ப பயந்துட்டேன்” அவரருகே ஆசுவாசமாக அமர, ஒற்றைபிள்ளையாக அலைந்து கொண்டிருக்கும் கிரியைப்பார்க்க, கஷ்டமாக இருந்தது அவருக்கு.

“ரஞ்சனி வந்தாச்சா? இப்ப அவளுக்கு ஒண்ணுமில்லையே?” அவளின் நலவிசாரிப்பில் சிரித்தவன்,

“நல்லாயிட்டாமா” என்று முடித்துக்கொண்டான்.

“மண்டபம் நம்ம சொந்த மண்டபம்ங்கறதால பிரச்சனையாகலை. நமக்கு முதல் பத்திரிக்கை கொடுத்துட்டு, நெருங்குன சொந்தங்கள் எல்லாருக்கும் இன்னைக்குள்ள குடுக்கனுன்னு மாமா சொன்னாரும்மா” தனது கல்யாணத்திற்கும் அண்ணனிற்கு ஒருநாள் மட்டுமே கால அவகாசம் இருந்ததை நினைத்து, மனம் கசந்தது அவருக்கு.

“சரி வர்றவங்களை நீ கவனி கிரி. என்னால இயல்பா இதுல கலந்துக்க முடியலை” மனம் திறந்து பேசிய தாயை வியப்பாக பார்த்தான் அவன்.

“எதுவும் நினைக்காதிங்கம்மா. எல்லாம் நல்லதே நடக்கும்” ஆறுதல் கூறிய மகனை நினைத்து மெச்சியவராக, மென்னகை புரிந்தார் நிவேதா.

“எனக்கு இனி நல்லது நடக்க வாய்ப்பில்லை கிரி. நீங்களாவது நல்லா இருந்தா சரி. நான் பண்ணிய தப்பிற்கு நிறையவே அனுபவிச்சுட்டேன். இனி என் கைல எதுவும் இல்லை”  என்றுமில்லாது இன்று மிகுந்த வருத்ததத்துடன் பேசிய அன்னைக்கு, என்ன ஆறுதல் சொல்வதென்று புரியாது அவரையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“உணர்ந்துதான் சொல்றேன் கிரி. கல்யாணத்தை நல்லபடியா நடத்து. அடுத்து வர முகூர்த்தத்துல உனக்கும் ரஞ்சனிக்கும் கல்யாணம் செய்துவைக்கலான்னு முடிவு பண்ணியிருக்கேன்”

“என்னம்மா இவ்வளவு அவசரம்?” என்றான் கிரி.ஒரு சில நாட்களுக்குள் அவனும்தான் எத்தனை அதிர்ச்சிகளை தாங்குவான்?

“ஆமா. அடுத்து உன் கல்யாணம் நம்ம வீட்டுல நடந்தே ஆகனும்” ஒரு உறுதியுடன் பேசினார் அவர். தந்தையின் மறைவுக்குப் பிறகு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசும் அன்னையை இன்றுதான் பார்க்கிறான்.

“எதுவாக இருந்தாலும் பார்த்துக்கலாம்மா. நீங்க முதல்ல சாப்பிட்டு  ரெஸ்ட் எடுங்க. நான் ஆக வேண்டிய அடுத்த வேலைகளை பார்க்கறேன்” என்றவன், அவருக்கு தேவையானவற்றை கவனித்து விட்டு தான் அடுத்த வேலைகளை கவனிக்க சென்றான்.

“ஹேய்..‌பேசுடி. நானும் வந்ததுல இருந்து பார்த்துட்டுருக்கேன். இப்படி உம்முன்னு உட்கார்ந்திருந்தா என்ன அர்த்தம்?” ரஞ்சனியை பேச வைக்க முயற்சி செய்தாள் அவள்.

“நம்புடா ரஞ்சு. நானே எதிர்பார்க்காம நடந்ததுடா இந்த நிச்சயம். சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நான் முடிவு எடுக்க வேண்டியிருந்தது? அதனால சரி சொல்லிட்டேன். நீ இல்லாம என்னுடைய வாழ்க்கைல நடக்கற முக்கிய விஷயத்தை நடக்க விடுவேனா?” அதற்கும் அவள் உம்மென்று இருக்க, நிகாவின் முகமும் வாடிப்போனது. அவளும் அருகிலிருந்த சேரில் அமர்ந்து கொள்ள,

“உங்க நிச்சய ஃபோட்டோல நான் ஒரு ஃபோட்டால கூட இல்லை. அந்த வளர்ந்த மண்டையன் தான் இருக்கான். உங்க சகோதரன்னதும் அவனை மட்டும் வச்சு நிச்சயம் பண்ணிட்டிங்கக்கா? இதை நான் வன்மையா கண்டிக்கிறேன்” அன்று காலையே நிச்சயவிழா புகைப்படங்களை கொண்டு வந்து கொடுத்திருந்தான் கிரி. அதைப் பார்த்துவிட்டு தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தாள் ரஞ்சனி.

“உன்னை யாருடி காய்ச்சல்ல விழச்சொன்னா? இப்ப வந்து புகார் வாசிக்கற? நீ கூட இல்லன்னு நான் எவ்வளவு வருத்தப்பட்டேன் தெரியுமா?” நிகாவும் ஆதங்கத்துடன் பேச, ஓடி வந்து அவளை கட்டிக்கொண்டாள் ரஞ்சனி.

“அதான் எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டிங்கள்ள? இப்ப எல்லாம் சரி ஆயிடும்.நான் இல்லன்னா என்ன? அதான் அண்ணா இருந்துருக்காரே? சும்மாவே அவரைப்பிடிக்க முடியாது? என்னக்கா நேத்து ஒரே லவ்ஸா?” பேசிக்கொண்டே கிச்சுகிச்சு மூட்ட நிகாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

அவளது கைகளை தட்டி விட்டவள் ” போடி லூசு. அதெல்லாம் ஒண்ணுமில்லை” எழுந்து செல்ல போனவளை பிடித்துக்கொண்டாள் ரஞ்சனி.

“நிஜமாவே ரொம்ப சந்தோஷமா இருக்குக்கா. நூவன் அண்ணா ரொம்ப நல்லவரு. உங்களுக்கு சரியான பொருத்தம். அப்பறம் சேனா சார் உங்ககிட்ட பேசலையாக்கா?” அப்பொழுதுதான் சேனாவின் ஞாபகமே வந்தது அவளுக்கு.

“இந்த இடம் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கில்ல நந்து” மேட்டுப்பாளையம் வியூ பாயின்டிற்கு வந்திருந்தனர் இருவரும். முதல்நாள் இரவு வீட்டிற்கு வந்து சேனா உணவருந்தும்போதே, மறுநாள் காலை தன்னை மேட்டுப்பாளையம் வியூ பாயின்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டாள் ரூபாலி‌.

சேனா யோசிக்க, ” அரைநாள் தான் ஆகும் நந்து. ப்ளீஸ் கூட்டிட்டு போங்களேன்” இத்தனை நாள் மும்பையில் வீட்டிற்குள்ளேயே இருந்ததால் ஆசைப்படுகிறாளென்ற எண்ணத்தில் சரியென்றான் அவன். அதன்படி அவளை அழைத்துக்கொண்டு வந்திருந்தான்.

மலை முகடுகளை மூடியிருப்பது பனிப்போர்வையா? முகில் போர்வையா? என்றரியா வண்ணம், வெண்முகில் கூட்டமும் பனிமூட்டமும் பிணைந்திருந்த அக்காலை காட்சி அவ்வளவு ரம்மியமாக இருந்தது.

ரூபாலி அவ்வியற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டிருக்க, அவற்றை வெறித்துக்கொண்டு நின்றிருந்தான் சேனா.

” என்னாச்சு நந்து? ஏன் இப்படி நிற்கறிங்க?” அவளின் குரலில் சுயநினைவிற்கு வந்தவன்,

“பார்த்தாச்சா? போகலாமா?” என்றான் அவன்.

“முடிஞ்ச விஷயத்தை நினைச்சு நீங்க கவலைப்படறிங்கன்னு புரியுது நந்து. நடந்ததை மறக்க முயற்சி பண்ணுங்க, உங்களால முடியும்” என்று பேசிக்கொண்டே போக,

“ஸ்டாப் இட் ரூபாலி” அவனது கத்தலில் அதிர்ந்து நின்றாள் அவள்.

“எதுக்கு மறக்கனும்? என் மனசுல எப்பவும் இருக்க போறது ஸ்ரீனிகா தான்.இதில எந்த மாற்றமும் இல்லை” என்றவன் காரை நோக்கி நடந்து விட, வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு அவனை பின்தொடர்ந்தவள், காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

சற்றுநேரம் காரில் அமைதி மட்டுமே நிலவ, காலையில் இருந்து தன்னுடன் சலசலத்துக் கொண்டிருந்தவளின் அமைதி, சேனாவிற்கு குற்றவுணர்வாக உறுத்த ஆரம்பித்தது.

“என்னை மன்னிச்சுடுங்க ரூபாலி” தான் சற்று அதிகமாகத்தான் பேசிவிட்டோமோவென்று நினைத்தவன் அவளிடம் மன்னிப்பு கேட்க தயங்கவில்லை.

“எதுக்கு இப்படி என் பேரை நீட்டி முழக்கிறிங்க நந்து? காலைலயே உங்ககிட்ட நான் சொன்னேனா இல்லையா? என்னை ரூபின்னு கூப்பிடுங்கன்னு? இல்லை ஒருவேளை நரேந்திரன நந்துன்னு கூப்பிட்டது உங்களுக்கு பிடிக்கலையா? அப்போ நானும் இனி உங்களை மிஸ்டர். நரேந்திர சேனான்னே கூப்பிடறேன்” அவள் முறுக்கிக்கொள்ள, தான் கேட்டதென்ன இந்தப் பெண் பேசுவதென்ன என்று குழம்பிப்போனான் சேனா.

அவனது குழப்பத்தை சிறிது நேரம் கண்டு ரசித்தவள்,

“இதுதான் எனக்கு வேணும். நீங்க இப்படி குழம்பினாதான் சீக்கிரம் தெளிவும் ஆவிங்க” மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.

“நீங்க இவ்வளவு பேசுவிங்கன்னு நான் நினைக்கவே இல்லை ரூபாலி.. ” என்றவன் அவளது பார்வையில், ” சாரி.. ரூபி”என்று மாற்றிக்கொண்டான்.

“நான் இவ்வளவு பேசுவேன்னு நானும் தான் நினைக்கலை நந்து. ஏதோ ஒரு வேகம் உங்களோட தவிப்பிலிருந்து உங்களை மீட்டெடுக்கனுன்னு என் மனசு தவிக்குது” மனதிற்குள் பேசியவள், மென்னகை பூத்துக்கொண்டே

“எனக்கும்தான் ஆச்சரியமா இருக்கு நந்து. நான் இவ்வளவு பேசறது” அதன்பிறகு பேசிக்கொண்டே வந்தவர்களுக்கு, நேரம் போனதே தெரியவில்லை. அவனறியாமல் அவனது மனப்பளுவை குறைத்திருந்தாள் ரூபாலி.

“வாங்க மாமா… ” ஜெயப்பிரகாஷை கிரி வந்து வரவேற்க, தங்கையை தேடின அவரது கண்கள்.

பின்னோடு உஷாவும் வர, அவர்களை அழைத்து அமர வைத்து உபசரித்தவன், அவர்களோடு அமர்ந்து பேச,

“நிவி எங்க கிரி?” என்றார் உஷா.

“அம்மாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல அத்தை. சாப்பிட்டு தூங்குறாங்க. வந்ததும் உங்களை கவனிக்க சொல்லிட்டு தான் படுத்தாங்க” என்று விளக்கமளிக்க, நிவேதாவின் அறைக்கு சென்று உஷா பார்க்க, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் அவர்.

மாடிப்படிகளில் இறங்கி வரும் போதே உஷாவின் முகத்தையே பாரத்துக்கொண்டிருந்த ஜேபிக்கு, எல்லாம் நலம் என்று கண்களாலேயே சமிக்ஞை செய்தார் அவர்.

“சரி கிரி. நேரம் ரொம்ப கொஞ்சமா இருக்கு. அதனால பத்திரிக்கையை நீயே வாங்கி பூஜை அறையில் வச்சுடு” உஷாவின் விருப்பப்படியே பத்திரிக்கையே வாங்கிக்கொண்டான் கிரி.

“இந்த தட்டில் ஸ்ரீனிகாக்கு நகை புடவை எல்லாம் இருக்கு‌. இதையும் அங்க வச்சுடு. நாளை காலைல நான் வந்து அவளுக்கு எடுத்து குடுத்தடறேன். மீதி சடங்குகளுக்கு நேரமில்லை. அதனால நலங்கையும் கல்யாணத்தன்னைக்கு காலைலயே வச்சு முடிச்சுடலான்னு இருக்கேன் கிரி” விபரங்கள் அனைத்தையும் அவனிடமே சொல்ல,விழி பிதுங்கியது அவனுக்கு.

அனைத்திற்கும் ” சரி அத்தை” என்று தலையாட்ட, சிரித்து விட்டார் உஷா.

“கவலைப்படாத கிரி.எல்லாம் நான் பார்த்துக்குவேன். ஆனால் பொண்ணு வீடா நீங்கதான் நிற்கனும்”என்று மட்டும் கூற, நிம்மதி பெருமூச்சு விட்டான் அவன்.

உஷாவின் கலகலப்பிற்கு நேர்மாறாக, அமைதியுடன் நொடிக்கொரு முறை மாடியறையை தழுவி மீண்டது ஜெயப்பிரகாஷின் பார்வை. கணவனது மனப்போக்கை புரிந்து கொண்டவராக,

“சரி. நாங்க கிளம்புறோம் கிரி. நிவேதாக்கிட்டயும் சொல்லிடு”என்றுவிட்டு உறவுகளை அழைத்துக்கொண்டு விடைபெற்று கிளம்பினார் உஷா.

அடுத்ததாக கல்யாண வேலைகளும் மளமளவென்று நடக்க, கல்யாண நாளும் இனிதே விடிந்தது. கல்யாணத்திற்கு சேனாவையும் அழைத்திருந்தார் ஜேபி. தீனதயாளனுக்கு அழைப்பு விடுத்தவர், அங்கிருந்த சேனாவிற்கும் வைத்திருந்தார்.

நிகாவிற்கு நலங்கு வைக்க, கர்ப்பிணிப்பெண் ஒருத்தியும் வந்திருக்க, வைத்துவிட்டு திரும்பியவள், அங்கிருந்த எண்ணெய் வழுக்கி விழப்போக, சுதாரிக்க முடியாமல் ” அம்மா… ஆஆஆஆ ” என்று அலறினாள். ஆனால் அதற்குள் அங்கிருந்தவர்கள் அவளைத்தாங்கி பிடித்துவிட, அவளது அலறலை நேரில் கண்ட நிவேதாவிற்கு, உடலெல்லாம் நடுங்க,

“அம்மா…..ஆஆஆஆ…” எட்டு மாத கர்ப்பிணியாக, மாடிப்படிக்கட்டுகளில் உருண்டு, தான் எதிர்நோக்கிய அந்த சம்பவமும் நினைவுக்கு வந்து தடுமாறியவருக்கு, பழைய நினைவுகள் மேலோங்கி மூச்சடைக்க செய்தது.

உன்னுடன் பேசிய நாட்களை விட!   தனிமையில் உன் நினைவுகளுடன் பேசிய  நாட்களே அதிகம்!!!…..

திமிராகும்…..

அத்தியாயம்-30:

வலியில் அலறியவளை கண்டுகொள்ளாது , கதவை திறந்து கொண்டு வெளியே இருக்கும் மற்றொரு அறையில் சென்று படுத்துக் கொண்டார் வாசன். நிவேதா தன்னுடைய காயத்தை சுத்தப்படுத்தி கொண்டு வந்தவளுக்கு , சந்தோஷத்துடன் தொலைக்க வேண்டிய இரவுப்பொழுது அழுகையுடன் கரைந்தது.

எப்படி ஊருக்கு வந்து சேர்ந்தாளென்பதை அவளே அறியாமல் குற்றுயிராக சென்னைக்கு  வந்து சேர்ந்திருந்தாள் நவிகா.

ஆளில்லாத வீட்டில் அழுது கரைந்தவளுக்கு, மீண்டும் மீண்டும் கண்முன் வாசன் நிவேதாவிற்கு தாலிகட்டும் நிகழ்வு கண்முன் வந்து, உயிர்வதையை ஏற்படுத்தியது.

இன்னும் ஏன் தான் உயிருடன் இருக்கவேண்டுமென்று, மனதில் நினைத்தவளாக தற்கொலைக்கு முயற்சிக்க, சரியாக அந்நேரத்திற்கு வந்து கதவை தட்டினார் மதர்.

பக்கத்து வீட்டிலிருந்த பெண்மணி அழுதுகொண்டே வந்தவளை பார்த்துவிட்டு, நவிகாவின் தந்தைக்கு அழைத்துச்சொல்ல ஆசிரமத்திற்கு அழைத்திருந்தார். அன்று இரவு திரும்ப வேண்டியவரின் பயணம், மறுநாள் வரை தள்ளிப்போனதால், அவர் இன்னும் வரவில்லை.

மதர் அழைப்பை ஏற்க, விஷயத்தை கேள்விப்பட்டவர், விரைந்து வீட்டிற்கு கிளம்பி வந்தார். கதவை திறந்ததும் உள்ளே வந்தவரின் கண்களில் அழுதகரைந்தவளின் வீங்கிய முகமும், சோர்ந்த தோற்றமும் விஷயம் ஏதோ விபரீதமென்று உணர்த்த,

“என்ன ஆச்சு நவிம்மா? ஏன் இப்படி இருக்க? ” மதர் அவளது தலையை கோதி அருகில் அமர, அவரது அருகாமையில் அதுவரை கட்டுப்படுத்தியிருந்த அழுகை கட்டுக்கடங்காது வெளியேற, அழுது கரைந்தாள் அவள்.

சிறிதுநேரம் பொறுத்தவர், ” இப்படி அழுதுட்டே இருந்தா என்ன அர்த்தம்? முதல்ல எழுந்து கண்ணைத்துடை. என்ன நடந்ததுன்னு சொல்லும்மா?” என்று கேட்க,

“என்னை எதுவும் கேட்காதிங்க மதர்? என் வாழ்க்கையே முடிஞ்சுபோச்சு? இனி எனக்குன்னு யாருமில்லை” உதடுகள் துடிக்க பேசியவளை , கண்கொண்டு அவரால் காண முடியவில்லை.

“என்ன உளர்ற நவி? ஏன் இப்படியெல்லாம் பேசற? முதல்ல என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லு?” கேட்டவருக்கு பதிலாக, அவளது அழுகையே கிடைத்தது.

சிறிதுநேரம் முயன்று பார்த்தவர், அவளை வற்புறுத்தி உண்ண வைக்க, அனைத்தையும் வாந்தி எடுத்தாள். பிரச்சனையில் இப்படி உணவு செல்லவில்லை என்று நினைத்தவர், வற்புறுத்தி பாலை மட்டும் புகட்டினார். அழுது ஓய்ந்தவள், அவளாகவே தூங்கிவிட, ஆசிரமத்திற்கு அழைத்து அங்கு  இருக்கும் தன்னுடைய உதவிப் பெண்ணை அன்று ஒருநாள் மட்டும் கவனித்துக்கொள்ள சொன்னவர், நவிகாவின் தந்தை வந்ததும் நேராக இங்கு அனுப்ப சொல்லி தகவல் சொல்லிவிட்டு வைத்தார்.

மறுநாளைய பொழுதும் விடிய, நவிகாவை எழுப்பி முகம் கைகால் கழுவி வர பணித்தவர், அவளது கையில் சத்துமாவு கஞ்சியை கொடுத்து வற்புறுத்தி குடிக்கச்சொல்ல, ஒரு மடக்கு மட்டுமே அருந்தியவள், வாந்தி எடுத்துவிட்டு உடல்பாரம் தாள இயலாது, சுருண்டு மயங்கி விழுந்துவிட்டாள்.

பக்கத்துவீட்டு பெண்மணியின் உதவியுடன் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார் மதர். அங்கு சென்றபின்பு தான் நவிகா ஒருமாத கர்ப்பம் என்பது தெரியவந்தது.

மருத்துவரின் அறிவுரைகளை கேட்டுவிட்டு, வீடு திரும்ப, அவர்களுக்காக பதற்றத்துடன் காத்திருந்தார் நவிகாவின் தந்தை.

“குட்டிமா என்னடா என்னாச்சு?” மகளின் ஓய்ந்த தோற்றத்தை பார்த்து அவளருகே வர, தந்தையை கண்டதும் பாரம்கொண்ட மனது உடைந்து அழுகையாக வெடிக்க ஆரம்பித்தது.

“நவி அழாத? முதல்ல அழுகையை நிப்பாட்டு. இப்படித்தான் சார் கோவைக்கு போயிட்டு வந்ததிலிருந்து அழுதுகிட்டே இருக்கா. குழந்தை உண்டாயிருக்கிற நேரத்துல இப்படி அழக்கூடாதுன்னு டாக்டர் திட்டி அனுப்பியிருக்காங்க” மதர் சொன்ன செய்தியில் சந்தோஷப்படுவதா, மகளின் நிலைகண்டு வருத்தப்படுவதா என்றறியாது விழித்து நின்றார் நவிகாவின் தந்தை.

ஓய்ந்து அமர்ந்திருந்த மகளின் அருகே வந்தவர், ” மாப்பிள்ளையை பார்த்தியாமா? உனக்கும் அவருக்கும் சண்டையாடா?” மகளை ஆறுதல்படுத்திக்கொண்டே மெதுவாக கேட்டார் அவர்.

இருவருக்கும் ஏதோ ஊடலென்று நினைக்கும் தந்தையின் வெகுளித்தனத்தை நினைத்து கசந்த முறுவலொன்றை உதிர்த்தவள், உயிரை குரலில் தேக்கி,

“உங்க மாப்பிள்ளையை இன்னொருத்தருக்கு மாப்பிள்ளையா பார்த்தேன்பா” என்று கூற,

“நவி… ” அதிர்ச்சியில் கத்தினார் அவர்.

“உண்மைதான்பா. உங்க மாப்பிள்ளையோட கல்யாணத்தை கண்குளிர பார்த்துட்டு வந்துருக்கேன்”

“அய்யோ ஆண்டவா.. என் பொண்ணுக்கு துரோகம் பண்ண அவருக்கு எப்படி மனசு வந்தது?” அவரால் இன்னும் இப்படி நடந்தை நம்ப முடியவில்லை.

மதருக்கும் இது அதிர்ச்சியே, வாசன் இப்படி செய்திருப்பானென்று அவராலும் நம்ப இயலவில்லை. எப்படி நடந்தது , என்ன நடந்ததென்று கேட்க, அதற்கு மேல் அவள் பதிலேதும் சொல்லவில்லை.

“சரி, நான் வாசன் கிட்டயே பேசறேன். நீ கர்ப்பமாக இருக்குற விஷயம் கண்டிப்பா அவருக்கு தெரிஞ்சாகனும்” மதர் உறுதியுடன் பேச, அதில் கோபம் வரப்பெற்றவள்,

“இனிமேல் எனக்கு கணவனே கிடையாது, நான் இப்படியேதான் தனியாக வாழ போகிறேன். என் குழந்தைக்கு நான் மட்டுமே பொறுப்பு. என் வாழ்வு முழுமைக்கும் என் குழந்தை மட்டும் போதும்” என்று கூறிவிட, அவள் நிலையைக்கேட்க கூட முடியாது அவளது தந்தையின் இதயம் அதன் துடிப்பை நிறுத்திக் கொண்டது.

முதல்இரவு அறையை விட்டு நெற்றியில் காயத்துடன் வந்த மருமகளை கண்டு , துடித்தது அலமேலுவின் மனம். அவருக்கு தெரியும் , மகன் அவ்வளவு சீக்கிரத்தில் நிவேதாவை ஏற்றுக்கொள்ள மாட்டானென்று. அவ்வளவு நலுங்கிய தோற்றத்திலும், குத்துவிளக்காக ஜொலித்த நவிகாவின் முகம் அவரது நினைவில் வந்தது.

“மறக்கக்கூடிய முகமா அது?” என்று நினைத்தவர், அவரது நெருங்கிய தோழியை சந்தித்த நாளை நினைவு கூர்ந்தார்.

“என்னடி உன் மகன் வாசனுக்கு கல்யாணம் பண்ணிருக்க? என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை? சும்மா சொல்ல கூடாது, சூப்பரான மருமகளாதான் செலக்ட் பண்ணியிருக்க, ஜோடி பொருத்தம் அவ்வளவு நல்லாயிருக்கு” என்று கூற, உடனடியாக சென்னை புறப்பட்டு சென்றார் அவர்.

அங்கு மகன், அவளை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தும் விஷயத்தை கண்கூடாக பார்க்க, கொதித்தது தாய்மனம்.

“என் மகனை எனக்கு தெரியாம திருமணம் செய்துக்கற அளவுக்கு அப்படி நீ என்னை விட முக்கியமா? உன்னை அவன்கிட்ட இருந்து பிரிச்சு காட்டறேன்டி” மனதிற்குள் முடிவெடுத்தவர், தோழியிடம் அவள் அவனுடைய தோழி என்று சமாளித்தவர், விரைவில் அவனது திருமண பத்திரிக்கையை அனுப்புவதாக சொல்லிவிட்டு வந்தவர், சொன்னபடி அவனது திருமணத்தையும் முடித்திருந்தார்.

ஜீவனற்ற முகத்துடன் வந்த மருமகளை பார்த்தவர் ,

“குளிச்சுட்டு வந்துட்டியாடா நிவி? வந்து பூஜையறையில் விளக்கேற்று” என்று பணித்தவர், அவளுடன் சிறிதுநேரம் இறைவனை பிரார்த்திவிட்டு , அவளது கையை பிடித்து ஒரு கவரை கொடுத்தார்.

“பிரிச்சு பாரும்மா” என, அதைப்பிரித்து பார்த்தவளுக்கு சங்கடமாகிப்போனது. சுவிட்சர்லாந்து செல்வதற்கான தேநிலவு பயண டிக்கெட்டுகள் அதில் இருந்தன.

“அத்தை இது இப்போ தேவையா?நிச்சயம் வாசுமாமா இதுக்கு ஒத்துக்க மாட்டாரு. அதுவும் ஒருமாதம்” நேரடியாக கேட்டுவிட்டாள் அவள்.

“எனக்கு புரியுதும்மா. நிச்சயம் இதுக்கு வாசன் சம்மதிக்க மாட்டான். ஒருமாதம் இல்லைன்னாலும் ஒருவாரமாவது இருந்துட்டு வாங்க. சூழ்நிலை மாறினா மனதும் மாற வாய்ப்பிருக்கு. கவலைப்படாத, நம்ம வீட்டுக்கு வாரிசு தரப்போறவ நீதான்”  என்று வாழ்த்தி அனுப்ப, வேறுவழியில்லாது வாசனிடம் வந்து நின்றாள் அவள்.

முயன்று தைரியத்தை வரவழைத்து, அவனது அறைக்குள் வந்தாள் அவள். அறையின் வாசலிலேயே அவளை நிறுத்தியவன்,

“இப்ப எதுக்கு உள்ள வந்த? அதான் உன் ஆசைப்படி கல்யாணம் முடிச்சிட்டுச்சே?”  அவளது முகத்தை கூட பார்க்க விரும்பாது எரிந்து விழுந்த வாசனை கண்டு மனம் வலித்தாலும், வாசனின் அன்னை அலமேலுவின் வற்புறுத்தலை நினைவில் வைத்து அமைதியாக நின்றிருந்தாள் நிவேதா. பின்பு முயன்று வரவழைத்த குரலில்,

“தப்பா எடுத்துக்காதிங்க வாசுமாமா. அத்தை நம்ம தேநிலவிற்கு எல்லா ஆயத்தங்களும் பண்ணியிருக்காங்க. என்னால அவங்க பேச்சை தவிர்க்க முடியல, அதனால பயணத்தை ஒருவாரமா ஏதேதோ காரணம் சொல்லி குறைச்சிருக்கேன்” என்றவளின் பேச்சில் அவளை கொன்று விடும் ஆத்திரம் வந்தது வாசனுக்கு.

“எங்க அம்மா முன்னாடி உன்னை கொல்ல முடியாதுன்னு இவ்வளவு தைரியமா பேசுறியா நிவேதா?” வாசனின் அழுத்தமான குரலில் முதுகுத்தண்டு சிலிர்த்தது நிவேதாவிற்கு.

“நம்ம  மறுத்தாலும் அவங்க விடப்போவதில்லை” சின்னகுரலில் கூறியவளின் கூற்று உண்மையாக பட,

“எப்ப கிளம்பனும்?” என்று கேட்க,

“இன்னும் ஒரு மணிநேரத்தில்” என்று கூற, அன்னையின் சதியை புரிந்து கொள்ள அதிகநேரம் தேவைப்படவில்லை அவனுக்கு.

நிவேதாவை பார்த்து முறைத்தவர்,

“உங்க ஆட்டமெல்லாம் ரொம்ப நாள் செல்லாது நிவேதா. எப்படியோ இன்னும் ஒரு வாரத்துல நான் என் டாலிகிட்ட போயிடுவேன். அதுக்கப்பறம் நீ செத்தா கூட உன் முகத்தை நான் பார்க்க விரும்பலை நிவேதா. உன் அத்தைய சமாளிக்க வேண்டியது என் பொறுப்பு. அவளை கூட்டிட்டு இந்த ஊரறிய என் பொண்டாட்டியா அறிமுகப்படுத்தும் போது, உன் அத்தையை வைச்சு ஆரத்தி எடுக்க வச்சுட்டு, நீ இந்த வீட்டை விட்டு வெளியேறிடு. அதுக்கப்பறம் எக்காரணம் கொண்டும் என் வாழ்க்கையில் நீ திரும்பி வந்துடாத” என்று கூறிய வாசனுக்கு அப்பொழுது தெரியவில்லை, கடைசி வரை நவிகாவின் முகத்தை பார்க்க கூட இயலாது நிவேதாவுடனேயே தன் காலம் கழியப்போவதை.

அவனது வார்த்தையில் இன்னும் தான் உயிருடன் இருப்பதை நினைத்து வருந்தியவள்,

“நிச்சயமா வாசுமாமா. நீங்க தாராளமா உங்க மனசுக்கு பட்டதை செய்ங்க. நான் அன்னைக்கு சொன்னதை தான் இன்னைக்கும் சொல்றேன். எனக்கு உங்க பொண்டாட்டிங்கற அடையாளம் போதும்” என்று கூற,

“அதுக்காக இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை அழிப்பியா நீ? என்ன ஒரு சுயநலம் உனக்கு? நீ தெரிஞ்சே செஞ்ச இந்த தப்புக்கு, காலம் முழுதும் தண்டனை அனுபவிப்ப நிவேதா” என்றவன், அன்னையின் ஆணைப்படி பயணத்திற்கு கிளம்ப தயாரானான்.

நவிகாவின் தந்தையின் இறப்பை பற்றி கூற, மதர் வாசனின் வீட்டிற்கு அழைத்தார். துரதிஷ்டவசமாக, அலமேலு அந்த அழைப்பை ஏற்க,

“ஹலோ.. நான் மதர் கிறிஸ்டி சென்னையிலிருந்து  பேசறேன். வாசன் அங்க இருக்காரா? அவர்கிட்ட பேசனும்” என்று கேட்க,

“வாசன்னு இங்க யாரும் கிடையாது. ராங் நம்பர்ங்க ” என்று வைத்தவர், ரீசவரை அதன் தாங்கியிலிருந்து எடுத்து வைத்து விட்டார்.

இங்கு வாசன் விடாது, ஆசிரமத்து நம்பருக்கு முயற்சிக்க, அங்கு இணைப்பு பழுதடைந்திருந்ததால் இணைப்பு கிடைக்கவில்லை. பக்கத்து வீட்டு பெண்மணியின் வீட்டிற்கு அடிக்க, அவர் நவிகாவின் வீட்டிலிருந்ததால் அங்கும் அழைப்பு எடுக்கப்படவில்லை.  விமான நிலையம் செல்லும் வழியிலாவது , நவிகாவுடன் பேசிவிட வேண்டும் என்று முடிவெடுத்தவனாக, பயணத்திற்கு புறப்பட்டான் அவன். ஆனால் அதன்பின்பு அவனால் எவ்வளவு முயன்றும் அவர்களை தொடர்புகொள்ள முடியாத அளவிற்கு, விதி அவர்களை நிரந்தரமாக பிரிக்க முடிவு செய்திருப்பதை ஏனோ அவன் அறியவில்லை.

இங்கு மதர் ஒரு முடிவெடுத்தவராக, நவிகாவை மற்றொருவரின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு, இறுதிச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, கோவைக்கு நேரில் புறப்பட்டார்.

கோவை வந்திறங்கியவருக்கு, வாசன் தேநிலவுப்பயணமாக சுவிட்சர்லாந்து சென்றுவிட்ட தகவல் கிடைக்க,

“ச்சீ இவனும் ஒரு மனிதனா?” என்று நினைத்தவருக்கு,மனம் வெறுத்துப் போக, சென்னை திரும்பிவிட்டார் அவர்.

எத்தனையோ அனாதைக்குழந்தைகளை பேணி வளர்த்தாலும், மதருக்கு நவிகாவின் மேல் தனி ஒட்டுதல் எப்பொழுதுமே உண்டு.

இப்படி தன் குழந்தை கண்முன்னேயே கஷ்டப்படுவதை கண்டு அவர் கர்த்தரை ஜபித்துக்கொண்டிருந்தார்.

இதோடு சுவிட்சர்லாந்து வந்திறங்கி நான்கு நாட்கள் கடந்திருந்தன. வாசன் காலையில் வெளியே செல்பவர், இரவு ரூமிற்கு எப்பொழுது வந்து படுத்தார் என்பதே அறியாத அளவிற்கு குடித்துவிட்டு வந்தார். அவரும் நவிகாவிடம் பேச எவ்வளவோ முயற்சிக்க, அவளுடன் பேசத்தான் முடியவில்லை. ஒவ்வொருநாளும் அவளது நினைவு மேலோங்க, இரண்டு நாட்கள் பொறுத்தவர், மூன்றாம் நாள் மதுவின் துணையை நாடினான்.நான்காவது நாள் நிதானம் தெரியாத அளவிற்கு குடித்துவிட்டு வர, அவரது நடவடிக்கையை கண்டும் காணாதது போல்தான் இருந்தாள் நிவேதா.

ஏனென்றால் ஒருவார்த்தை பேசினாலும், வாசனை அடுத்து அந்த நாள் முழுதும் காண முடியாது. வந்த முதல்நாள் அப்படித்தான் ஆனது. அடுத்தநாள் அவள் இருந்த இடம் தெரியாமல் இருக்க, அறைக்கு வந்து படுத்துக்கொண்டான்.

இப்படியே நாட்கள் செல்ல, ஊருக்குக்கிளம்புவதற்கு முதல்நாள் முழுவதும் குடித்துவிட்டு, சோஃபாவில் கால் தடுக்கி நிலைதடுமாறி கீழே விழுந்தான்.

அதில் நிவேதாவின் தூக்கம் கலைந்து விளக்குகளை போட, நிலைகுலைந்து விழுந்த வாசனை கண்டு பதறி, தூக்க முயற்சித்தாள் அவள்.

அவளைக்கண்டு,” ஏய்..‌என்ன தொடாதடி? என் டாலிய என்கிட்ட இருந்து பிரிச்சு பேய் நீ…? ” அவ்வளவு போதையிலும் குளரலாக அனல் கங்குகளாய் அவனிடமிருந்து வந்து   விழுந்தன வார்த்தைகள்.

“ஆமாம் மாமா. நான் பேய்தான்.என்னை மன்னிச்சுடுங்க. தயவுசெஞ்சு எழுந்து வந்து சோஃபாவில் படுங்க” அவனை முயன்று தூக்க, பாதி எழுந்தவன் மீண்டும் நிலைதடுமாறி, பிடித்தவளோடு சேர்ந்து அருகிலிருந்த கட்டிலின் மீது விழுந்தான்.

விழுந்தவனுக்கு அவளின் மென்மைகள் கிளர்ச்சியூட்ட, நவிகாவின் பிரிவும் சேர்ந்து கொள்ள, போதை சித்தத்தை கலங்க செய்திருக்க, விதி அபஸ்வரமாய் அங்கொரு சங்கமத்திற்கான வழியை வகுத்தது.

முதலில் நிவேதா அதை உணராதவள், பின்பு அவனது அத்துமீறல்களில், பயந்தவளாக அவனை விலக்க முயற்சிக்க, அவளால் அவனை விலக்க முடியவில்லை. அவள் பேசியிருந்தால் நிச்சயம் அவளது குரலில் சுதாரித்திருப்பான் வாசன்.

ஆனால் அவளது காதல்கொண்ட மனமோ சுயநலமாய் எதிர்பாராது கிடைத்த பொக்கிஷத்தை உணரத்துடிக்க, அமைதியாக அவனுடனான உறவை ஏற்க ஆரம்பித்தாள்.

விடிந்து தன் நிலையை கண்ட வாசகனுக்கு, நடந்த சம்பவம் முகத்தில் அடித்தாற் போல் உரைக்க,

“தப்பு பண்ணிட்டேனே டாலிமா” முகத்தில் மாற்றி மாற்றி அறைந்து கொண்டான் அவன்.

அவனது அலறலில் பயந்து , நிவேதா விலகி அமர்ந்து கொள்ள,

“ச்சீ.. நீ பெண்ணே கிடையாது. என் வாழ்க்கையையே குழிதோண்டி புதைச்ச பேய் நீ. முதலில் ஊருக்கு கிளம்பு. இதுதான் நான் உன்னை கடைசியாக பார்க்கற நாள்” எரிந்து விழுந்தவன் வெளியே சென்றுவிட்டான்‌. அவனது வார்த்தைகளில் நிவேதா அழுது கரைந்தவள், தானும் ஊருக்குச்சென்றதும் முதலில் இவனை விட்டு பிரிந்து விட முடிவு செய்தாள்.

இருவரும் ஒருவழியாக ஊருக்கு வந்திறங்க, அன்று தான் வாசனை நிவேதா பார்த்தது, பின்பு ஒருமாதம் கழித்து முழுதாடியில் முகத்தை மறைத்திருந்த வாசனை கண்டபோது உயிர்குலை நடுங்கியது அவளுக்கு.

ஊரிலிருந்து திரும்பிய வாசன், முதல் வேலையாக தனது மாமனாரின் வீட்டிற்குதான் சென்றான்.

அங்கு அவரது வீடு பூட்டியிருக்க, பக்கத்து வீட்டு அவனை பார்த்தவர் முகத்தை திருப்பிக்கொண்டு செல்ல, அவரின் முன்னால் ஓடி சென்று நின்றான்.

“அம்மா.. இங்க இருந்த என் பொண்டாட்டியும், மாமானாரும் எங்க போயிருக்காங்க?” என்றீ கேட்க, அதில் அவர் கொதித்தெழுந்தவர்,

“ஏன் தம்பி ஒரு புருஷன் கேட்கற கேள்வியா இது? அந்த மனுஷன் செத்தப்போ கூட நீ வரலயை? என்ன மனுஷன்யா நீ? பிள்ளைத்தாச்சி பொண்ண இப்படி தனியா அல்லாட விட்டியே? ஏதோ அந்த மதர் இருந்ததால எல்லாம் பார்த்துக்கிட்டாங்க. உங்களுக்கெல்லாம் எதுக்குடா கல்யாணம் குடும்பமெல்லாம்”  நன்றாக திட்டிவிட்டு, கதவை முகத்தில் அடித்தாற்போல் சாத்திவிட்டு சென்றுவிட்டார்.

கேட்ட விஷயங்களில் வாசன் உறைந்து நின்றவன், நேராக மதரைப்பார்க்க சென்றான்.

அங்கு அவனைப் பார்த்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி, ” நீங்க யாரு? உங்களுக்கு யாரைபார்க்கனும்?”

“மதர் நான் வாசன். என்னை தெரியலியா? என் குட்டிமா எங்க? மாமாக்கு என்ன ஆச்சு? ப்ளீஸ் சொல்லுங்க மதர்” அவரது கெஞ்சலெல்லாம் நடிப்பாக தான் பட்டது அவருக்கு.

“அது எதுக்கு சார் உங்களுக்கு? புது பொண்டாட்டியோட தேநிலவு நல்லபடியா முடிஞ்சதா?” என்று கேட்க, அவனது முகம் விழுந்து விட்டது.

“மதர் என்னோட சூழ்நிலையால…..” அவசரமாக தன்னிலை விளக்கம் கொடுக்க, அவனை தடுத்துவிட்டார் மதர்.

“நீங்க எதுவும் சொல்ல தேவையில்லை சார். எல்லாம் என் கண்ணாலயே பார்த்து தெரிஞ்சுகிட்டு தான் வந்தேன். நவிகா இனி உங்களை எப்பவும் பார்க்க விருப்பப்படலை. நீங்க கிளம்பலாம்” என்று வாயிலை காட்ட,

“நான் அவளை பார்க்கனும்” என்றவர் ஆசிரமத்திற்குள் நுழையப்போக,

“அவள் இங்க இல்லை. நீங்க நினைச்சாலும் அவளை பார்க்க முடியாது. இனியாவது அவளும் குழந்தைக்கும் நிம்மதியா இருக்கட்டும். இரட்டைக்குழந்தைங்கறதால அவளுக்கு மனநிம்மதி ரொம்பவே முக்கியம்.அவளா நினைச்சு உங்களை மன்னிச்சாதான் உண்டு. அதனால இப்படியே விட்டுடுங்க. மூணு உயிரை காப்பாற்றிய புண்ணியம் உங்களை சேரட்டும்” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டார். மதருக்கு நெருங்கிய நண்பர் சிம்லா ராணுவத்தில் பணிபுரிய, அவர்களின் உதவியுடன் நவிகாவை அங்கு தங்க வைத்து பார்த்துக்கொண்டார் அவர். இங்கிருந்தால் அவள் நடந்ததை நினைத்து தன்னைத்தானே வருத்திக்கொள்வதால், மாற்று ஏற்பாடாக அதை செய்திருந்தார் அவர்.

வாசனும் விடாமுயற்சியாக, சென்னை முழுவதும் அலசினான். ஆனால் நவிகாவைப் பற்றிய எந்த விபரமும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அலைந்து ஓய்ந்து முடித்தவன், இந்தியா முழுவதும் தேட முடிவெடுத்தவனாக, பண ஏற்பாடுகள் செய்ய வீட்டுக்கு வந்தபோது தான் நிவேதா அவனைப்பார்த்தாள்.

அலமேலு ஓடி வந்து மகனை அணைத்துக்கொண்டார், அவனது தோற்றத்தில் அரண்டவராக,

“என்னடா இது? இப்படியிருக்க? ஒரு பிள்ளைக்கு தகப்பனாகப்போற நீ ராஜா மாதிரி இருக்க வேண்டாமா?” கேட்ட செய்தியில் அவன் நிவேதாவை பார்த்த பார்வையில் அரண்டு தூணின் பின்னால் நின்று கொண்டாள் அவள்.

“என்னம்மா சொல்றிங்க?”

“ஆமாண்டா கண்ணா. உன் பொண்டாட்டி உண்டாகியிருக்காடா. நம்ம குலம் தழைச்சுடுச்சு” சந்தோஷமாக சொல்ல,

“நம்ம குலம் தழைச்சு ஏற்கனவே இரண்டு மாசம் ஆகிடுச்சுமா” கசந்த குரலில் கூறிய மகனை வியப்பாய் பார்த்தார் அவர்.

“என்னடா சொல்ற ? கல்யாணம் முடிஞ்சே ஒரு மாசம் தான ஆகுது”  என்று குழம்ப,

“என் மனைவி. என் காதல் மனைவிக்கு இதோட இரண்டு மாசமாச்சுமா. நீங்க எங்களை பிரிச்சு இரண்டு மாசமாச்சு. நான் என் குழந்தைங்களை பிரிஞ்சு இரண்டு மாசமாச்சு” புலம்பி அழுதவரை, அணைத்துக்கொண்டவர் மனதிலும்,

“அய்யோ.. அந்தப்பெண்  மாசமா இருந்தாளா” சற்றே குற்றவுணர்வு எட்டிப்பார்த்தது‌. மறுநிமிடமே அவரது கௌரவம் தலைதூக்க,

“போதும் ஸ்ரீனி. போனவளை நினைச்சு ஏன் உன்னை வருத்திக்கற? அவளை துரத்தி விட்டதே நான்தான். நம்ம குடும்பத்துக்கு ஏத்த மருமக அவ இல்லைடா. யாரோ பஞ்சபரதேசிய எப்படி நம்ம வீட்டு மருமகளா சொல்ல முடியும்?” தாயின் வார்த்தைகள் ஈசனின் மூன்றாம் கண் கங்குகளாய் நெஞ்சை சுட்டெரிக்க, நவிகாவின் மாயத்திற்கான உண்மை விளங்கியது வாசனுக்கு.

“எவ்வளவு பெரிய பாவம் பண்ணிட்டிங்கம்மா? உங்களால ஒரு உயிர் போச்சு தெரியுமா? அப்ப எனக்கு கல்யாணம் ஆனதும் தெரிஞ்சேதான் இவளை எனக்கு கல்யாணம் செய்து வச்சிங்களா? உங்க உயிரைக் காப்பாத்த போராடின எனக்கு, என் உயிரை இல்லாம பண்ணிட்டிங்க. ச்ச.. நீங்களும் பெண்தானா? நீங்க பார்த்து வச்ச அவளும் அப்படித்தான இருப்பா? போதும் இதோட என்னை விட்டுருங்க? இனி நான் இந்த வீட்டுக்குள்ள கால் எடுத்து வைக்க மாட்டேன். என் நவிகாவை தேடி கண்டுபிடிக்காம விடமாட்டேன்” என்று கொந்தளிக்க,

“கண்ணா நான் செஞ்சது தப்புதான். அதுக்காக வீட்ட விட்டு வெளியபோகாதடா. நீ போனா என் உயிர் இருக்காது” மகனிடம் மன்றாடினார் அவர்.

நிவேதா சத்தமில்லாது கண்ணீர் வடிக்க, வாசன் சற்று யோசித்தவர்,

“நீங்க சொல்றதும் சரிதான். இந்த வீட்டுலயே இருந்து என் குட்டிமாவ கூட்டிவந்து இங்க உங்க கண்முன்னாடியே வாழ்ந்து காட்டனும்” என்றவர் அன்றிலிருந்து அவுட்ஹவுசில் தான் தங்கினார்.

காலமும் நேரமும் யாருக்காகவும் நிற்பதில்லை என்பதைப்போல, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இரு தாய்மார்களின் வயிற்றிலும் வாரிசுகள் வளர ஆரம்பித்தன. மருமகளை தங்கத்தட்டில் வைத்து தாங்கினார் அலமேலு. குழந்தைக்காக தான் பிரியும் முடிவை தள்ளிப்போட்டிருந்தாள் நிவேதா. வாசனின் ஜாடையில் ஒரு பெண்குழந்தையை நினைத்து பார்த்தவளுக்கு மனதிற்குள் விண்ணைத்தொட்டு விட்ட நிறைவு. அடிக்கடி வாசனின் சிறுவயது புகைப்படத்தை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளது ஏழாவது மாதத்திலேயே வளைகாப்பை வெகுவிமரிசையாக நடத்தினார் அலமேலு.

“என்னடி பொண்ணுங்களா?? இன்னும் எவ்வளவு நேரம் அலங்காரம் பண்ணுவிங்க? நீங்க அடிக்கற பேச்சலயே என் மருமக களைப்பாயிடுவா போலயே? சீக்கிரம் மனைக்கு கூட்டிட்டு வாங்க” அலமேலுவின் உத்தரவில் அமைதியான பெண்கள், வளைகாப்பிற்கு நிவேதாவை வேகமாக தயார்படுத்தினர்.

அனைவரும் வெளியே சென்றுவிட, நிவேதாவின் நெருங்கிய தோழி மட்டும் அவளுடன் இருந்தவள்,

“என்னடி உன் மாமியார் இவ்வளவு உத்தரவு போடறாங்க?? குழந்தை பிறந்ததுக்கு அப்பறமாவது எல்லாத்தையும் உன் கைக்குள்ள கொண்டு வந்துருடி. அப்பதான் உனக்கு நல்லது” என்று கூற, அவளின் பேச்சில் சிரித்தாள் நிவேதா.

“எவ்வளவு தீவிரமாக சொல்றேன். நீ சிரிக்கிற?” சரியென்று சொல்லும் வரை அவள் விடமாட்டாள் என்பதை புரிந்து கொண்டவளாக,

“எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்டி. இனி எல்லாம் என் கைலதான்” தோழிக்கு பதிலளித்தாள். இந்த பேச்சு நிவேதாவிற்காக பரம்பரை நகையை எடுத்து வந்த அலமேலுவின் காதிலும் விழுந்தது. மருமகளின் மீது கட்டிவைத்திருந்த மனக்கோட்டையும் சரிந்தது.

“நிவேதாவா இப்படி பேசியது?” விஷயத்தை கிரகிக்கவே அவருக்கு சற்றுநேரம் எடுத்தது.

இருந்தாலும் அந்தநேரத்திற்கு சமாளித்தவர் வளைகாப்பை நல்லபடியாக நடத்தி முடித்தார். ஆனால் அதன்பின்பு அவரது நடவடிக்கைகளிலும், சற்று மாறுதல் தெரிய, நிவேதாவின் பாடு இன்னும் மோசமானது. அழைக்க வந்த ஜெயப்பிரகாஷிடமும் அலமேலுவின் ஒற்றைப்பார்வையில் இங்கேயே பிரசவம் பார்க்கப்போவதாக கூறி, செல்ல மறுத்துவிட்டாள்.

அடுத்த ஒரு மாதமும் கடந்திருக்க, தனக்கும் இந்த வீட்டிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாதது போல்தான் இருந்து வந்தார் வாசன். நவிகாவை தேடும் முயற்சியையும் கைவிடவில்லை.

இங்கு பிரசவத்திற்கான நேரம் நெருங்க, ஒன்பதாம் மாத நிறைவில் நவிகாவை சென்னைக்கு அழைத்து வந்தார் மதர்.

“தாங்க்யூ மதர், என்னதான் அவங்க என்னை நல்லபடியா கவனிச்சுக்கிட்டாலும், உங்களை நான் ரொம்பவே மிஸ் பண்ணேன்” சோர்வுடன் பேசினாள் நவிகா.

“எனக்கு தெரியும் நவிம்மா. அதனால்தான் உன்னை இங்க கூட்டி வந்தேன். சிம்பிளா ஒரு வளைகாப்புக்கும் ஏற்பாடு பண்ணியிருக்கேன்”  என்று கூற, அவரை அணைத்துக்கொண்டு கண்ணீர் விட்டாள் அவள்.

“வேற எதுவும் உனக்கு ஆசை இருந்தாலும் சொல்லும்மா?” என்று கேட்க, மிகவும் தயக்கத்துடன் அவரது முகத்தை பார்த்தாள் அவள்.

“என்ன தயங்காம சொல்லு?”

“ஒரே ஒரு தடவை அவரை பார்க்கனும் மதர். பிரசவத்துக்கு அப்பறம் நான் உயிரோட இருப்பேனா இல்லையான்னு தெரியாது. நான் மட்டும்தான் அவரை பார்க்கனும். அவர் என்னை பார்க்க வேண்டாம்” கேட்டு முடிக்கும்முன்பே வியர்த்து வழிந்தது அவளுக்கு.

“பதற்றப்படாதே நவி. அப்படில்லாம் எதுவும் நடக்காது. கண்டிப்பா வாசனை பார்க்கலாம். நான் உன்னை கூட்டிப்போறேன். நாளைக்கு கோவில்ல வச்சு நம்ம பொன்னம்மா உனக்கு வளைகாப்பு செஞ்சு கூட்டிட்டு வந்ததும், நான் கூட்டிட்டுப்போறேன்” ஆறுதல் படுத்தி உறங்க வைத்தார் அவர். வாசனை சந்திக்க சென்றால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்தார் அவர்.

இங்கு வாசனுக்கு, நவிகாவை மும்பையில் பார்த்தாக ஒருவர் தகவல் கூற, அவசரமாக மும்பைக்கு புறப்பட்டான்.

“கண்ணா, என்னடா இது? அவளுக்கு எட்டுமாசம் முடியப்போதுடா. பிரசவம் எப்ப வேணுனாலும் நடக்கலாம். எங்களை மன்னிக்கவே மாட்டியா? இப்ப இந்த பயணத்தை தள்ளிபோடக்கூடாதா? ” அலமேலு மகனிடம் வேண்டுகோள் வைக்க, நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டு மும்பை கிளம்பி சென்றுவிட்டான் வாசன்.

மறுநாள் தங்களது வேலைகளை முடித்துக்கொண்டு, மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுவிட்டு நவிகாவை அழைத்துக்கொண்டு புறப்பட்டார் மதர். இன்னும் நாட்கள் இருப்பதால், சற்று தைரியமாகவே அழைத்துச்சென்றார்.

மாலை விளக்கேற்றும் நேரம் என்பதால், தனது அறையில் இருந்து வெளிவந்த நிவேதா, மெதுவாக இறங்கி வர, மாடியிலிருந்து இறங்கியவளை கண்டு கொள்ளவில்லை அலமேலு. அவரின் அலட்சியத்தில் கண்ணீர் கண்ணை மறைக்க, மெதுவாக இறங்கியவள், கால் தவறி இரண்டு படி தாண்டி காலை வைத்துவிட,

“அய்யோ.. அம்மாஆஆஆஆ” என்ற அலறலுடன் விழுந்து உருள, பதற்றத்துடன் ஓடிவந்தார் அலமேலு.

இங்கு ஊர் எல்லையில் காரில் நுழையும் போதே, பிரசவ வலி விட்டுவிட்டு எடுக்க ஆரம்பிக்க, ஆரம்பத்தில் அதை புறந்தள்ளியவள், வலி அதிகமாக,

“மதர்.. வலி எடுக்க ஆரம்பிச்சுடுச்சு” நவிகாவின் முனகலில், அவர் அதிர்ந்து பார்க்க, பனிக்குடமும் உடைய ஆரம்பித்திருந்தது.

உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு காரை திருப்பச்சொல்லி அங்கு நவிகாவை சேர்த்தார் அவர். அதே மருத்துவமனைக்கு தான் நிவேதாவையும் வேலைக்காரர்களின் உதவியுடன் தூக்கி வந்திருந்தார் அலமேலு.

இங்கு மதர் வாசனின் எண்ணுக்கு, அழைப்பெடுக்க, அழைப்பு செல்லவில்லை.

நிவேதாவின் குழந்தை உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட, அலமேலு அதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அவளை அறுவைசிகிச்சை அறைக்கு அனுப்பிவிட்டு ஆசுவாசமாக அமர்ந்தவருக்கு, அப்பொழுதுதான் நிவேதாவை தூக்கி வரும்போது, வலியில் அலறிக்கொண்டு வந்த,மற்றொரு பெண்ணின் முகம் ஞாபகம் வந்தது.

“அது.. நவிகா….” யோசனை செய்தவராக, ரிசப்ஷனில் விசாரிக்க, அருகிலிருக்கும் பிரசவ அறையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. மருந்துகள் வாங்கி வர, மதர் சென்றிருக்க, நிவேதாவின் அறையிலிருந்து வெளிவந்த மருத்துவர், பெண்குழந்தை  பிறந்து இறந்துவிட்டதாகவும், அன்னையை மட்டுமே காப்பாற்ற முடிந்ததுமென்று கூறிவிட, இடிந்தமரந்தார் அவர்.

அப்பொழுது பிரசவ அறையில் இருந்து வெளிவந்த செவிலிப்பெண்,

“இங்க இந்த பொண்ணோட வந்தவங்க எங்க இருக்கிங்கம்மா?” என்று கேட்க, வேகமாக எழுந்து சென்றார் அலமேலு.

“சொல்லும்மா.. ” என்று கூற, அவள் புதிதாக வேலைக்கு சேர்ந்தவள் என்பதால், அலமேலுவை தெரியாது,

“உங்களுக்கு பேரனும், பேத்தியும் பிறந்திருக்காங்கம்மா” என்று கூற மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனவர், கழுத்தில் அணிந்திருந்த வைர அட்டிகையை அவளிடம் கழற்றி கொடுக்க, அவளுக்கு மயக்கம் வராத குறை.

“பொண்ணு எனக்கு ஒரு உதவி செய்வியா? டாக்டரை கூப்பிடு நான் கொஞ்சம் பேசணும். அப்படியே அந்த ஆண்குழந்தையும் தூக்கிட்டு வா” என்று கூற, மருத்துவருடனும் குழந்தையுடனும் வெளியே வந்தாள் அவள்.

தலைமை மருத்துவரான அவருக்கு அலமேலுவை தெரியுமென்பதால்,

“என்னம்மா நீங்க இங்க?” என்று கேட்க, நடந்ததை கூறி, குழந்தையை மாற்றி தருமாறு கேட்டார் அலமேலு.

” அம்மா… இது வெளிய தெரிஞ்சா நான் ஜெயிலுக்கு தான் போகனும்” என்று மருத்துவர் மறுக்க, பேசி ஒருவழியாக சம்மதிக்க வைத்தவர், குழந்தையை வெற்றிகரமாக மாற்றி விட்டார்.

அதன்பின்பு மதர் அங்கு வந்து சேர, நவிகாவின் ஒரு குழந்தையை தான் காப்பாற்ற முடிந்தது என்று கூறிவிட்டனர் மருத்துவர்கள். ஊருக்குள் சென்ற மதர், வாசன் மும்பை சென்ற தகவல் அறிந்து மனதொடிந்தவராக மருந்துகளை வாங்கிக்கொண்டு திரும்பி வந்திருந்தார். மேலும் அதிர்ச்சியாக ஒரு  குழந்தை இறந்த விவரம் தெரிய, நவிகாவை தேற்றி ஒருவழியாக ஊருக்கு கிளம்பினார் அவர்.

வந்த இரண்டு நாட்களிலேயே, ஜன்னி கண்டு அவள் உயிருக்கு போராட,

“என்னவோ தெரியல நானும் அவரும் பிரிஞ்சிருக்கனும்ங்கறதுதான் ஆண்டவனோட கிருபைன்னு நினைக்கிறேன். அதனால் இனி என் பொண்ணுக்கும் அந்த குடும்பத்தோட தொடர்பு வேண்டாம்.அவளாவது நிம்மதியா வளரட்டும். நானும் அவரும் ஆசைப்பட்டபடியே ஸ்ரீனிகா ன்னு பெயர் வைக்கிறேன் இவளுக்கு” குழந்தையை கொஞ்சியவள்,

“நல்ல தைரியமான பொண்ணா நீ வளரனும்” குழந்தையை  ஆசிர்வதித்தவளின் கண்கள் தானாக மூடியது.

இங்கு பேரனை அழைத்துவந்தவருக்கு , அந்த சந்தோஷத்தை ஒருநாள் கூட முழுதாக அனுபவிக்க இயலாமல் , இடையில் ஏற்பட்ட அதீத இரத்த அழுத்தத்தால், பக்கவாதம் வந்து படுக்கையில் விழுந்தார் அலமேலு. பிள்ளைகளை பற்றிய உண்மையும் அவர் சாகும் வரை நிவேதாவிற்கு தெரியாமல் போனது. சாகும் தருவாயிலும் தன் வேலையை காட்டிவிட்டு தான் சென்றார் அவர், அதன் பலனை இன்னும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார் நிவேதா.

“கெட்டிமேளம்… கெட்டிமேளம்” மேளச்சத்தத்தில் அவரது நினைவு கலைய, முகம் முழுதும் பூரிப்புடன், நிகாவின் கழுத்தில் தாலிக்கட்டிக்கொண்டிருந்தான் அவன். மணமக்களை அட்சதை தூவி வாழ்த்தியவர், தன்னை நிலைப்படுத்திக்கொள்ள அறைக்கு சென்றுவிட்டார்.

தாலி கட்டும் வரை முன்னிருக்கையில்  அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த சேனாவை காண ஆச்சர்யமாக இருந்தது நிகாவிற்கு.

“பேபி உன் புருஷன் நான் இங்க இருக்கேன்” நூவனின் குரல் காதருகே கேட்க, திரும்பி பார்த்தவளின் நெற்றியில் குங்குமிட்டான் நூவன்.

“நில்லு… எங்க ஓடி ஒளிஞ்சுட்டுருக்க?”  ரஞ்சுவின் கைகளை பிடித்து மணமகன் அறைக்குள் இழுத்திருந்தான் கிரி.

“என்ன பண்றிங்க? இத்தனை பேர் வெளியே இருக்காங்க?” அவனது அருகாமையில் முகம் பார்க்க வெட்கப்பட்டுக்கொண்டே அவள் பேச,

“என்னைப்பாரு ரனு. எதுக்கு அம்மாவை பார்த்து ஓடிகிட்டே இருக்க? ” என்றவனின் குரலில் பயந்து விழித்தாள் அவள்.

“இல்லை அவங்க நிகா அக்காவை ஏதாச்சும் பண்ணிடுவாங்களோன்னு பயமா இருக்கு?” மனதில் இருப்பதை கூறிவிட்டாள் அவள்.

“அவங்க அப்படி ஏதாச்சும் பண்றதா இருந்தா? என்னதான் பண்ணியிருக்கனும்?” என கூற,

“என்ன… ???” ரஞ்சனி அவனை குழப்பமாக பார்த்தாள்.

“ஆமாம். ஸ்ரீனிகா என்னோட ஒட்டிப்பிறந்த சகோதரி. நாங்க இரண்டுபேரும் இரட்டையர்கள்,  தோற்றம் மட்டும்‌ ஒத்திருக்காது” என்று கூற, அதிர்ச்சியில் அலறப்போனவளின் அதரங்களை தன் அதரங்களால் பூட்டியிருந்தான் கிரி.

இதயம் ஒரு ரகசிய சுரங்கம்…

துடிக்கும்போதெல்லாம் உன் காதல் முழங்கும்…..

திமிராகும்…..

அத்தியாயம்-31:

“கத்தி காரியத்தை கெடுக்க பார்த்தியே?” தன் நெஞ்சின் மீது சாய்ந்திருந்தவளின் தலையை கோதிக்கொண்டு பேசினான் கிரி.

“பின்ன? இவ்வளவு அதிர்ச்சியான விஷயத்தை இவ்வளவு காசுவலா சொன்னா நான் எப்படி எடுத்துப்பேன்?” என்றவள் அவனிடமிருந்து விலகி நின்று,

“ஆமா என் வாயை கையால அடைச்சுருக்கலாமில்ல? எதுக்கு இப்படி பண்ணிக்க?” இடுப்பில் கையை வைத்துக்கொண்டு முறைத்து நின்றவளை பார்க்க தெவிட்டவில்லை கிரிக்கு.

“இங்க வா முதல்ல” அருகே இழுத்தவன்,

“நானே முதல் அச்சாரம் இப்படி அவசரமா கொடுத்துட்டேனேன்னு ஃபீல் பண்ணிட்டுருக்கேன்” என்றவளை அணைத்துக்கொள்ள, அவனது நெஞ்சில் முகம் புதைத்துக்கொண்டவளை கலைத்தது கதவை தட்டும்‌ சத்தம்.

“அச்சோ ஆள் வந்துட்டாங்க? ” ரஞ்சனி பதற, அமைதியாக இருக்குமாரு சைகை செய்தான் அவன். யாரோ குழந்தைகள் வந்து தட்டிவிட்டு போய்விட, ஆசுவாசமடைந்தனர் இருவரும்.

“சரி..இந்த உண்மையை தெரிஞ்சும் எப்படி உங்களால இயல்பா இருக்க முடியுது? எப்படி உங்களுக்கு இந்த விஷயம் தெரியும். உங்களுக்கு யார் சொன்னா?” அடுத்தடுத்த கேள்விகள் கேட்டவளை பார்த்து சிரித்தான் அவன்.

“உனக்குள்ள இவ்வளவு மூளையா?” கேட்ட கேள்விக்கு பதிலளிக்காயல் வம்பிழுக்க, முறைத்தாள் அவள்.

“எல்லாத்துக்கும் பதில் சொல்றேன். இன்னைக்கு நைட் நம்ம வீட்டு தோட்டத்துக்கு வந்துடு ரனு” கடைசி வரியை மட்டும் மெல்லிய குரலில் பேச, அவனை நம்பாத பார்வை பார்த்தாள் ரஞ்சனி.

“நிஜம்மா…. மம்மீஈ… ப்ராமிஸ். விஷயத்தை சொல்லதான் கூப்பிடறேன்” அவன் பேசிய அழகில் இருந்த கொஞ்ச நம்பிக்கையும் போய்விட்டது அவளுக்கு.

“எப்படி வர்றது? ஸ்ரீக்கா விட மாட்டாங்களே?” யோசிக்காமல் பேசியவளை பார்த்து உரக்க சிரித்தான் அவன்.

“மக்கு.. அவ அவங்க வீட்டுக்கு போயிடுவா இன்னைக்கு” என்று கூற, அன்றைய இரவின் சடங்கை நினைத்து முகம் சிவந்தது அவளுக்கு.

அவளது வெட்க முகத்தை கண்டு அருகில் நெருங்கியவனை தள்ளிவிட்டவள்,

“இதுக்கு மேல நான் இங்க நின்னா உங்களை அடக்க முடியாது. நைட் பார்க்கலாம்”  என்றுவிட்டு கதவை திறந்து கொண்டு ஓடிவிட்டாள் ரஞ்சனி.

அதன்பின்பு கல்யாண சடங்குகளில் அனைவரும் கலந்து கொண்டிருக்க, ஸ்ரீனிகாவின் அன்னை வீட்டு சார்பாக அனைத்து சடங்குகளையும் சிறப்பாக முன்னின்று செய்தான் கிரி.

ரஞ்சனிக்கு தான் இனி ஸ்ரீனிகா தன்னுடன் இருக்கமாட்டாள் என்பது, மிகவும் கனமான உணர்வாக இருந்தது. அதை முகத்தில் காட்டாமல் நடமாடிக்கொண்டிருந்தவளை அழைத்து,

“நீயும் என்கூட வந்துடு ரஞ்சு” அனைவரின் முன்னிலையிலும் நிகா அவளை உடன் அழைக்க, அவர்களது நட்பு புரிந்தாலும், அனைவரும் அவர்களை கண்டு சிரித்தனர்.

ஆனாலும் ” ஆமா. நீயும் அங்க வந்துகூட தங்கிக்கோ ரஞ்சனி” மனைவிக்காக பூவன் அவளை அழைக்க, மற்றொரு சிரிப்பலை அங்கே பரவியது.

“புழைச்சுக்குவடா மாப்பிள்ளை” நண்பர்வட்டம் அவனை கேலி செய்ய, கிரி சூழலை தன் கையில் எடுத்தவன்,

“நான் அவளை நல்லபடியா பார்த்துக்கறேன் ஸ்ரீ. கொஞ்சநாள் போகட்டும், அதுக்கப்பறம் என்ன பண்ணலாம்னு நாம முடிவு பண்ணலாம்” என்று உறுதியளிக்க, ஓரமாக நின்று அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த நிவேதாவின் இனம்விளங்கா பார்வையில் நிம்மதியாக இதற்கு சம்மதிக்க முடியாவிட்டாலும், அப்போதைக்கு வேறுவழியில்லாத காரணத்தால் , சரியென்று தலையாட்டினாள் அவள்.

ரஞ்சனியும்” நான் பார்த்துக்குவேன்கா. நீங்க சந்தோஷமா உங்க வாழ்க்கையை ஆரம்பிங்க. நீங்க நினைச்சாலே நான் உங்களை பார்க்க ஓடி வந்துடுவேன்”  என்று கூற, உண்மையில் அவளை பிரிய கஷ்டமாக இருந்தாலும் , பெயருக்கு சிரித்து வைத்தாள் அவள். அவளது வார்த்தையில் அனைவரது முகமும் மலர, சந்தோஷமாகவே புகுந்த வீட்டில் காலடி எடுத்தாள் ஸ்ரீனிகா.

“ஏன் அண்ணி உங்களுக்கு தூரத்து உறவுல யாரும் தங்கச்சிங்க இருக்காங்க?” வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து, கொழுந்தனும் அண்ணியும் வாயடித்துக்கொண்டிருக்க, ஏதாவது ஒரு சாக்கை வைத்து, ஓய்வெடுக்காமல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான் நூவன்.

“இல்லையே ஹர்ஷத்” நிகா வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு பதிலளிக்க,

“ச்ச…போங்க அண்ணி. உங்க ஃப்ரெண்டு போண்டா அந்த ரஞ்சனி கூட கொஞ்சம் சுமார்தான். அதையும் அந்த கிரி கரெக்ட் பண்ணிட்டான். கடைசி வரைக்கும் என்னை முரட்டு சிங்கிளாவே இருக்க விட்டுருவானுங்க போலயே” ஹர்ஷத்தின்  கவலையில் பொங்கிச்சிரித்தாள் நிகா.

உஷா அதைப்பார்த்துக்கொண்டே வந்தவர், “டேய் கொஞ்சநேரம் அவளை ரெஸ்ட் எடுக்க விடாம, இதென்னடா வம்பிழுத்துட்டுருக்க” அவனது காதை பிடித்து திருகியவர்,

” அங்க பாரு உங்கண்ணன் காதுல புகை வர்றத” அதுவரை அங்கு நடந்து கொண்டிருந்த நூவன் மாடிப்படிகளில் ஏறுவது போல நடக்க,

“அண்ணா நீ எத்தனை தடவை அதே இரண்டு படிதான் ஏறுவபோலயே, நானும் பார்த்துட்டுருக்கேன் ஒரு பதினைஞ்சு நிமிஷமா அதே படியிலயே நிற்கிற” ஹர்ஷத் அவனையும் வம்பிழுத்தான்.

” போடா டேய் போடா” சற்றே அசடு வழிந்தவன், மேலேறி சென்று விட்டான்.

” நிகா நீயும் வாம்மா . இப்போதைக்கு  நீ என் ரும்ல வந்து ரெஸ்ட் எடு. அதுக்கப்பறம் குளிச்சுட்டு, காலைல விளக்கேத்துனல்ல அங்க மறுபடியும் விளக்கேத்திட்டு ரெடியாகனும்” என்று கூற, அன்றைய நாளின் சடங்கும் நினைவு வர, மனதில் குழப்பத்துடனே உஷாவுடன் சென்றாள் அவள்.

கல்யாண அசதியில் நன்றாக தூங்கிவிட்டாள் அவள். உஷா வந்து எழுப்பிய பிறகு தான் எழுந்துகொண்டவளுக்கு, புதிய இடமென்று அதன்பின்பு தான் புரிந்தது.

“நீ குளிச்சுட்டு வந்துடு நிகா. வந்து காஃபி சாப்பிடு. காஃபி பிடிக்குமா?” அக்கறையுடன் பேசிய  உஷா, மதரைப்போல் தெரிய, அவரின் ஞாபகமும் வந்தது, கல்யாணத்திற்கு வர முடியாமல் வெளியூரில் இருந்ததால் அலைபேசியில்  வாழ்த்து தெரிவித்திருந்தார் அவர்.

தன் நினைவுகளில் மூழ்கியிருந்தவளை,

“நிகா… ” மீண்டும் அழைத்த உஷாவின் குரல் கலைத்தது.

அவசரமாக “பிடிக்கும் ஆண்ட்டி” என்று கூற,

“சரிடா. அழகா அத்தைன்னு கூப்பிடு என்ன?” அன்பொழுக வந்த குரலை மறுக்கவா முடியும்? அவளது தலை சரியென்று தானாக அசைந்தது.

“இந்த புடவை நகை எல்லாம் போட்டுகிட்டு ரெடியாகி வா” அவளது கைகளில் கொடுத்துவிட்டு  வெளியே செல்ல, தயாராகி வெளியே வந்தவள், உஷாந்தி சொல்ல சொல்ல பூஜையறையில் செய்ய வேண்டியதை செய்து முடித்தாள்.

முன்னறையில் அமர்ந்திருந்த ஜேபி அவளை பார்த்து புன்னகைக்க, பதிலுக்கு புன்னகைத்தாள் நிகா.

“எங்க வீடு பிடிச்சிருக்காம்மா?”

“ஏன் பிடிக்கலைன்னா வேற வீடு வாங்கித்தர போறிங்களா?” தந்தை அமர்ந்திருந்த சோஃபாவின் விளிம்பில் வந்தமர்ந்தான் ஹர்ஷத்.

“அண்ணி இதான் சான்ஸூ.. இதைவிட பெரிய மாளிகையா கேளுங்க”

“உன் வாய் மட்டும் குறையவே மாட்டிங்குதடா” என்றவனின் கைகளை பிடித்து கிள்ளினார்  அவர்.

சின்னமகனுக்கு பதிலளித்து விட்டு, மருமகளிடம் திரும்பியவர்,

“இது உனக்கு நாங்க வாங்கி வைச்ச பரிசும்மா” என்று ஒரு பெட்டியை அவளது கைகளில் தர, அதை பிரத்து பார்த்தவளுக்கு அதன் விலைமதிப்பை கணக்கிட முடியாது என்றுமட்டும் புரிந்தது. அழகுற வேலைப்பாடு செய்யப்பட்ட வைர ப்ரேஸ்லட் அதில் இருந்தது.

“இது எனக்கு வேண்டாம் சார்” என்று கூறிவிட்டு நாக்கை கடித்தாள் அவள்.

“சார் இல்லம்மா மாமா. ஏன்மா டிசைன் உனக்கு பிடிக்கலையா?” என்று கேட்க,

“இல்ல மாமா. இப்போ இது வேண்டாம். உங்ககிட்டயே இருக்கட்டும். இன்னொருநாள் வாங்கிக்கறேன்” நேரடியான அவளது பதிலில் அனைவரின் முகமும் மலர்ந்தது.

“சரிம்மா. உனக்கு பிடிக்கறப்போ போட்டுக்கோ” அவளது போக்கிற்கே விட்டுவிட்டார் ஜேபி.

“நூவன் எப்ப வர்றான்?”

“ஒன்பதரை -பத்து நேரம் குறிச்சுருக்காங்கங்க.. இன்னும் கொஞ்சநேரத்துல வந்துடுவான்” உஷா பதில் கூறியவர், மணியைப்பார்த்து விட்டு அனைவரையும் சாப்பிட அழைத்தார்.

ஹர்ஷத் மட்டும் வெளியே கிளம்ப,

“டேய் நீ எங்க போற? “

“ஃப்ரெண்ட்ஸோட ஒரு சின்ன பார்ட்டிமா… பை” என்றுவிட்டு ஓடிவிட்டான்.

நல்லநேரம் தொடங்கிவிட, நிகாவை அழைத்துச்சென்று நூவனின் அறையில் விட்டார் உஷா.

அனைத்தையும் குறுகிய காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய மனநிலையில் உள்ளே நுழைந்தவளுக்கு,

“பூத்திடல் எதுலயும் நுழைஞ்சுட்டோமா??” இருந்த மனநிலையில் மேலும் எரிச்சலூட்டியது, அங்கு கமழ்ந்து கொண்டிருந்த சுகந்தமும், அலங்காரமும்.

அதுவும் கட்டிலில் அவளுக்கு பிடித்த வெள்ளை ஆர்கிட் மலர்களால் செய்யப்பட்டிருந்த அலங்காரத்தை கண்டவளுக்கு நூவனின் மேல் ஆத்திரம் பொங்கியது.

“இது நிச்சயம் இவன் வேலைதான்?? என்னவோ காவியக்காதல் மாதிரி ஓவர் பில்டப் பண்றானே?? என்னதான் நினைச்சுட்டுருக்கான் அவன் மனசுல??” என்றவள் வேகமாக அந்த அலங்காரத்தை கலைக்க போக,

“அதெல்லாம் கலைக்கக்கூடாது நிகா டார்லிங்” நூவனின் குரல் அறைவாயிலில் கேட்டது. புரிந்து கொள்ள இயலாத முகபாவத்துடன் நின்றிருவந்தனை கண்டு  ஆத்திரம் வந்தாலும்,

“சரிதான். அப்ப நீயே வந்து இதையெல்லாம் க்ளீன் பண்ணு” கைகளை கட்டிக்கொண்டு அவள் ஆணையிட்ட தோரணையும், அவளது அலங்காரமும் கண்டு அவனது மூளை வேலைநிறுத்தம் செய்ய, பதில் ஏதும் பேசாது அப்படியே பார்த்துக்கொண்டிருந்தான் நூவன்.

அவனது பார்வை மாற்றத்தை இப்பொழுது கண்டுகொண்டவள், அதற்கு மேல் தாமதியாது கட்டில்விரிப்பை சுருட்டி அவன்மேல் தூக்கி எறிய, நூவன் விலகிக்கொள்ளவும், கல்யாணத்தின் போது கட்டிய கங்கணத்தை  கழட்டாமல் வந்துவிட்ட மகனது கங்கணத்தை வாங்கிச்செல்ல மகனின் பின்னோடு மேலே வந்த உஷாந்தினியின் முகத்தில் விழவும் சரியாக இருந்தது.

“அ.. அம்மா..அத்தை ” இருவரின் குரலும் ஒரே நேரத்தில் ஒலிக்க,

“நூவா கொஞ்சம் வெளிய வா” என்றுவிட்டு முன்னே நடந்து விட்டார் உஷா.

“அம்மா.. அவ ஏதோ விளையாட்டுக்கு… ” நூவன் சமாளிக்க, பக்கென்று சிரித்துவிட்டார் அவர்.

“டேய் மகனே.. உன் நிலைமையை நினைச்சா என்னால முடியலடா. எதுக்கும் காலைல நம்ம ஃபேமிலி டாக்டரை வரச்சொல்லிடவா?” சொல்லிவிட்டு அடக்கமாட்டாமல் சிரிக்க, அவரது பேச்சு உள்ளேயும் கேட்க, நிகாவும் சிரித்து கொண்டிருந்தாள்.

“ம்மீஈஈஈஈஈ…….” நூவன் பல்லைக்கடிக்க,

“சரி..சரி அந்த கங்கணத்தை மட்டும் கழட்டிக் குடு” என்றவர் அவனது கையிலிருந்த கங்கணத்தை தானே கழட்டிவிட்டு சிரித்துக்கொண்டே கீழே  சென்றுவிட்டார்.

உள்ளே நுழைந்தவன் அவளை நோக்கி நடந்து வர, சிரிப்பை அடக்கிக்கொண்டு நின்றிருந்தாள் அவள்.

“சிரிச்சுக்கிட்டுருக்குற நீ?” என்றவன் ஆசையுடன் அவளை நெருங்கிவர,

“அங்கேயே நில்லுங்க” என்று தடுத்தவளின் குரலில் தேங்கி நின்றான் அவன். அவன் நின்றுவிட்டதில் நிம்மதி அடைந்தவள்,

“இடத்துக்காக தானே இந்த கல்யாணம்? அப்பறம் ஏன் என்னை உயிருக்கு உயிரா காதலிக்கற மாதிரி நடிக்கிறிங்க??”நூவன் அவளை சலிப்பான பார்வை பார்க்க, முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“இதைப்பத்தின விளக்கம் கல்யாணத்துக்கு முன்னமே கொடுத்துட்டதா ஞாபகம்??” அப்பொழுதும் பொறுமையாக பதில் சொன்னான்.

“நான் நம்ப மாட்டேன். நீங்க திட்டம் போட்டு அந்த இடத்துக்காக தான் என்னை கல்யாணம் செய்துகிட்டிங்க??” கோபாவேசத்தில் அவள் பேச பேச, அவள் காதில் அணிந்திருந்த ஜிமிக்கிகளும் அசைந்தாட, நூவனின் பார்வை சுவாரஸ்யமாக அதில் பதிந்தது.

அவனது பார்வையை கண்டு கொண்டவள், “நான் என்ன பேசிக்கிட்டிருக்கேன்? நீங்க என்ன வேடிக்கை பார்த்துக்கிட்டுருக்கிங்க?” என்று அதற்கும் கோபப்பட்டாள்.

“ஷ்..ஷப்பா.. ஆமாண்டி இடத்துக்காகதான், உன் மனசுல பிடிக்கப்போகற இடத்துக்காகத்தான்னு சொன்னா நீ நம்பவா போற??” வேட்டியை மடித்துக்கொண்டு பேசியவன் இப்பொழுது வித்தியாசமாக தெரிந்தான்.

“என்ன டக்குன்னு வித்தியாசமா பேசறான்” அவள் ஆராய்ச்சி பார்வை பார்க்க,

“முதலிரவும் அதுவுமா சண்டை போடனுன்னு முடிவுகட்டிட்டு நீ பேசுற பேச்சுக்கெல்லாம் என்னால விளக்கம் குடுக்க முடியாது” என்றவனின் பேச்சில், திகைத்து விழிப்பாள் என எதிர்பார்க்க,அவளோ அன்றைய நாளின் அசதியில் கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தாள்.

பின்பு நூவனை பார்த்தவள், ” சரி அப்ப இன்னக்கு சண்டை போட வேண்டாம். நாளைக்கு போட்டுக்கலாம். நான் தூங்கறேன், நானா எழுந்துக்கற வரைக்கும் என்னை தொந்தரவு பண்ண வேணாம். அந்த ரூம் நான் உபயோகப்படுத்திக்கிறேன்” என்றவள் தெனாவெட்டாக அவனை கடந்து, அவனது அறையை ஒட்டிய மற்றொரு அறையை நோக்கி நகர, ஒரு நிமிடம் நூவனுக்கு எதுவும் ஓடவில்லை.

அடுத்த நிமிடம் அவனது மனசாட்சி “டேய் நூவா, எவ்வளவு அசால்ட்டா உன்னை ஒரு பொருட்டாவே மதிக்காம கடந்து போறா?? இன்னைக்கு இவள விடக்கூடாது?” என்றவன் வேகமாக அவள் முன்னால் சென்று வழிமறித்து நிற்க,

“என்னதிது? தள்ளி நில்லுங்க என்ஜே.. நான் தூங்கனும்” என்றவள் இமைத்து முடித்த மறுநொடி, அவனது தோளில் தொங்கிக்கொண்டிருந்தாள்.

“ஏய்…என்ன பண்ற?? என்னை இறக்கி விடுடா.. ” அவனது தோளில் குத்த,

“எனக்கு தொந்தரவு பண்ணாதான் தூக்கம் வரும்” என்றவன் கட்டிலை நோக்கி நடந்தான்.

ஆக்டோபஸின் கைகளில் அடைபட்டுவிட்ட உணர்வுடன் திமிறிக்கொண்டிருந்தாள் நிகா. எந்தப்பறமும் திரும்ப விடாது அவளை சிறைபிடித்திருந்தவனின் தோள்களின் மேல் அவளது பார்வை ஒரு கணம் படிந்து மீள,

“என்ன பேபி? ஜிம்பாடியை சைட் அடிக்கிறியா?” அவளை தனது கட்டுக்குள் பொதித்துக்கொண்டே கேட்க,

“நூவி நீங்க ரொம்ப அவசரப்படுறிங்க. எனக்கு இப்போ இதுலல்லாம் இஷ்டமில்லை”  முடிந்த அளவு அவனை தள்ள முயற்சித்தாள் அவள்.

“இதுல அவசரப்படலன்னா தான் தப்பு நிகாபேபி” என்றவன்,

“லவ் யூ மை டார்லிங்” அவனைத்தள்ளி கொண்டிருந்த கைகறைப்பற்றி முத்தமிட, அவனது பார்வை சிறைக்குள் வசமாக சிக்கியது பெண்ணவளின் மனமும்.

அதன்பிறகு அவன் போராட தேவையில்லாமல் , “நிகா.. பேபி” என்று அறையை நிறைத்த அந்த மென்குரல் மட்டுமே அவர்களது ஏகாந்த உலகில் அவளது சுயநினைவில் பதிந்தது. இலாவகமாக இல்லற வீணையை மீட்ட முயற்சித்த அவளது ராமன் தடுமாறிய இடங்களிலெல்லாம் லயம் சேர்த்து அவனிடம் சரணடைந்து, உயிர்பெறச்செய்தாள் அவனது சீதை. சம்சார சாகரத்தில் மூழ்கியவனுக்கு , கரைசேரும் ஆசை விடியலை தோற்கடித்த பின்பே அடங்கியது. அரங்கேறிய அழகிய சங்கமத்தின் சுகத்தில் இனிதே கண்ணயர்ந்தன காதற்பறவைகள்.

காதல் கவியெழுத‌‌…. கலவி நாமெழுத….

விளையாட வேண்டும் கண்ணே……

விடிவெள்ளி அயரும் முன்னே……

திமிராகும்…..

அத்தியாயம்-32:

அடிமேல் அடி வைத்து தோட்டத்திற்குள் நுழைந்தவளின் கண்களை பின்னால் இருந்து தனது கைகளால் பொத்தியிருந்தான்  கிரி. அதற்கு அவள் கத்தப்போக,

“ஹேய் கத்திடாதடி நான்தான்” அவனின் குரலில் ஆசுவாசமடைந்தவள், அவனது கைகளை விலக்கிவிட்டு,

“எதுக்கு இப்படி என்னை பயமுறுத்திட்டே இருக்கிங்க? வர வர உங்க சேட்டை கூடிகிட்டே போகுது” செல்லச்சிணுங்கலுடன் அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தவளின் அருகே தானும் வந்தமர்ந்து கொண்டான்.

“என்னவோ தெரியல? உன்னை பார்த்தாலே உன்கூட விளையடானும் தோணுது. இன்னும் என்னென்னவோ பண்ணனும் தோணுது ரனு” என்றவன் இன்னும் நெருங்கி அமர்ந்தான்.

“நீங்க இப்படியே பேசிக்கிட்டு இருந்தா, நான் எந்திரிச்சு போயிடுவேன். என்ன நடந்ததன்னு தெரிஞ்சுக்காம  என் மண்டை காயுது. ஸ்ரீனிக்கா உங்க சகோதரின்னு தெரிஞ்சும் உண்மையை ஏன் இன்னும் சொல்லாம இருக்கிங்க? இந்த விஷயமெல்லாம் உங்கம்மாக்கும் தெரியுமா? உங்களுக்கு யார் சொன்னா?சீக்கிரம் சொல்லுங்க ப்ளீஸ்” என்றவள் பதிலுக்காக அவனது முகத்தை ஆவலோடு பார்த்திருக்க, ஏனோ அப்பொழுதும் அவளது முகத்தை அருகில் பார்த்ததும் பேசும் அவளது இதழ்களை சிறைபிடிக்கத்தான் முதலில் தோன்றியது.

அவனது பார்வை பேசும் மொழியை அறிந்த பாவையோ, ” ஹ்ஹீம்.. நீங்க சரியில்லை. நான் கிளம்புறேன். உண்மையை நான் தெரிஞ்சுக்கறப்போ தெரிஞ்சுக்கறேன்.  இப்போதைக்கு அக்காக்கு எந்த ஆபத்தும் இல்லைங்கறதே எனக்கு போதும்” என்றவள் எழுந்து கொள்ள போக, அவளது கையை பிடித்து அவசரமாக தடுத்தான் கிரி.

“இப்படி அவசரப்பட்டா எப்படிடா ரனு. சரி இப்போ கண்டிப்பா எல்லா விஷயங்களையும் சமந்தா சொல்லிடறேன். சொல்லி முடிச்சா நான் கேட்கறத நீ கொடுக்கனும்” என்று ஒப்பந்தம் பேச, அவனை குறும்பு பார்வை பார்த்தவள்,

” ம்ம்.. பார்க்கலாம். முதல்ல சொல்லுங்க” கன்னத்தில் கைவைத்து ஆவலுடன் அவன் முகம் பார்த்து அமர்ந்து கொண்டாள்.

முதலில் தனது தந்தையும் , தாயும் காதலித்து மணந்து கொண்டதை கூறியவன், தனது பாட்டி அலமேலு அன்னையை பிரித்து தற்போதைய அன்னையார் நிவேதாவிற்கு மணமுடித்த கதையையும் கூறினான். பின்பு இருவரும் கருவுற்ற விஷயங்களை கூறியவன், அவள் முகம் பார்க்க, கண்ணீர் வழிய,

“இந்த நிவேதா ஆன்ட்டி இவ்வளவு சுயநலமாவா நடந்துகிட்டாங்க? இவங்க ஒருத்தரோட ஒருதலை காதலுக்கு எத்தனை உயிர் பலி ஆகிடுச்சு” கூறியவளை எப்படி ஆறுதல்படுத்தவென்று திணறினான் கிரி.

“ப்ளீஸ் அழாத ரனு” அவளது கண்ணீரை துடைத்து விட்டான்.

“ஹ்ம்ம்.. சொல்லுங்க அப்பறம் என்ன ஆச்சு?”

“அப்பா அதுக்கப்பறம் எங்கம்மாவை தேட எவ்வளவோ முயற்சி செஞ்சும் கண்டுபிடிக்க முடியலை. கடைசியாக எங்கம்மா அவரை பார்க்க ஆசைப்பட்டபவும், அவங்களால பார்க்க முடியாம அப்பா மும்பைல அம்மாவை தேடி போயிருந்தாரு” பின்பு இருவருக்கும் பிரசவம் நடந்த கதையையும், அலமேலு குழந்தைகளை மாற்றிய கதையையும் கூறியவன், அன்றைய அலமேலு அம்மாள் பக்கவாதத்தில் விழுந்த கதையையும் கூறினான்.

“ஹ்ம்ம்.. அப்பறம்??”

“நான் நவிகாம்மாவுடைய பையன்னு தெரியாமலேயே அம்மா என்னை வளர்க்க ஆரம்பிச்சாங்க. பாட்டியை நல்லபடியாவும் பார்த்துக்கிட்டாங்க”

“ம்ம்….”

“அப்பா என்னை நிவேதா அம்மா பையன்னு  அப்பல்லாம் சரியாகவே என்கூட  பேசமாட்டாரு ரனு. நான் பிறந்ததுக்கு பிறகு அவர் அதிகமா இங்க வந்ததில்லை. தாத்தா லண்டன்ல ஆரம்பிச்சு வச்ச இரும்பு தொழிற்சாலையை பார்த்துக்கிட்டு அங்கயேதான் இருந்தாரு. பாட்டிக்கும் இப்படி ஆகிட்டதால தொழிலெல்லாம்  அம்மாதான் பார்த்துக்கிட்டாங்க. சின்ன வயசுல நான் கேட்கும் போதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி என் நினைப்பை அம்மா திசை திருப்பிடுவாங்க. கொஞ்சம் வளர்ந்த பிறகு நானை அம்மா அப்பாக்குள்ள ஏதோ பிரச்சனைன்னு புரிஞ்சுகிட்டேன். அது பத்தி அவர்கிட்ட பேச ஆரம்பிச்சப்போ கூட, அதுக்கு பதில் பேசாம, வேற ஏதாவது பேச்ச மாத்தி ரத்தினசுருக்கமா பதில் சொல்லிட்டு போயிடுவாரு. எத்தனையோ தடவை இங்க வந்து தங்குங்கன்னு கூப்பிட்டப்பவும், வர முடியாதுன்னு சொல்லிட்டாரு” வருத்ததத்துடன் பேசிய கிரியின் கைகளை தனது கைகளுக்கு பொதித்துக்கொண்டாள் ரஞ்சனி.

 “ரொம்ப கஷ்டமாக இருக்கும் ரனு. அதனாலேயே அம்மாதான் எல்லான்னு ஆயிட்டாங்க. அம்மா அவருக்கு ஒருபடி மேல, எந்த விஷயத்தையும் அவங்கிட்ட இருந்து அவ்வளவு சீக்கிரம் வாங்க முடியாது. அப்பாவோட மரணத்துக்கு முதல் நாள் தான் என்கூட நல்லா பேசுனாரு. அப்ப கூட சந்தோஷப்பட்டேன் குடும்பம் இனி சரியாகப் போகுதுன்னு.. ப்ச்… ” என்றவன் உடைந்த குரலில் நிறுத்தி பெருமூச்சு விட்டவன்,

“அம்மா அப்பாவோட பழைய வாழ்க்கையை பத்தி எனக்கு சொன்னது நூவன்தான்” என்றான்.

“என்ன சொல்றிங்க அண்ணாக்கு எப்படி தெரியும்?” வியப்புடன் கேட்டாள் ரஞ்சனி.

“அப்பா மூலமாதான்” என்றான் கிரி.

“பாட்டி ரொம்ப சீரியசா இருக்கும்போது தான் இந்த ஊருக்கு திரும்பி வந்தார் அப்பா. அப்போ அப்பாகூட அவனுடைய நிவி அத்தை வாழ்க்கைக்காக சண்டைபோட்டுருக்கான். அப்பதான் அப்பா தன்னுடைய கடந்தகாலத்தையும், அம்மாவைப்பத்தியும் குழந்தைங்களை பத்தியும் சொல்லியிருக்காரு. ஆனால் அப்பவும் அவருக்கு குழந்தைங்க மாறின விஷயம் தெரியாது” என்றான் அவன்.

“பின்னர்  அவருக்கு எப்படி தெரிஞ்சது?” ரஞ்சனிக்கு பதற்றமாக இருந்தது.

“ராமுதாத்தா சொல்லியிருக்காரு”

“அவருக்கு எப்படி? உங்க பாட்டி சொன்னாங்களா? அவங்களுக்கு உடம்பு சரியாகலைன்னு சொன்னிங்களே” என்றாள் ரஞ்சனி.

“அம்மாவோட கவனிப்புல பாட்டியோட வாய் கொஞ்சம் சரியாகியிருந்தது. உடம்பு வாதம் மட்டும் சரியாகலை. அவங்க சீரியசா இருந்த அந்த நாள் அன்னைக்கு அம்மாகிட்ட மன்னிப்பு கேட்டாங்களாம்”

அதேநேரம் தன்னறையில் தூக்கம் வராமல் நடந்து கொண்டிருந்த நிவேதாவும், தன் கையில் வைத்திருந்த வாசனின் சிறுவயது புகைப்படத்தை பார்த்து அழுதவர், இத்தனைக்கும் காரணமான அலமேலுவைத்தான் நினைத்து கொண்டிருந்தார்.

“உங்களுக்கு பண்ணிக்கொடுத்த சத்தியத்தால அனுதினமும் செத்துகிட்டுருக்கேன் அத்தை” அழுதவருக்கு, கடைசியாக உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அலமேலு பேசிய தினம் ஞாபகம் வந்தது.

“என்னை மன்னிச்சுடு நிவேதாம்மா. வளைகாப்பு அன்றைக்கு நீ பேசுனத வச்சு நான் உன்னை தப்பா புரிஞ்சுகிட்டேன்” வார்த்தைகளை மெதுவாக கோர்த்து வலியையும் பொறுத்துக்கொண்டு பேசினார் அலமேலு.

“அய்யோ அத்தை. இதுக்காகவா என்ன தப்பா நினைச்சிங்க? அன்றைக்கு பேசின என் தோழி என்ன சொன்னாலும் அவ சொல்றதுதான் சரின்னு சாதிப்பா. அன்றைக்கு நேரமானதால அவ பேசுறதுக்கு தகுந்த மாதிரி பேசி சமாளிச்சேன்” வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு பேசினாள் நிவேதா.

“அழாதம்மா. உனக்கு தெரியாம நான் இன்னொரு விஷயத்தையும் பண்ணியிருக்கேன். அதையும் நீ மன்னிக்கவும்” என்று பீடிகை போட, மௌனமாக தலையசைத்தாள் அவள்.

“அன்னைக்கு பிரசவத்தப்போ”  நடந்ததை கூறியவர்,

“குழந்தைங்களை மாத்திட்டேன். நவிகா குழந்தை தான் கிரி. அவளுக்கு பிறந்த இரட்டைக்குழந்தைங்கள்ள ஒருத்தன்” என்று கூற, பிரளயத்தில் சிக்கிய உயிராக அவரது உயிர் துடிக்க,

“எனக்கு பிறந்த குழந்தை முகத்தை பார்க்க கூட விடாம? ஏன் இப்படி பண்ணிட்டிங்க அத்தை” வீறிட்டாள் அவள்.

“வேற வழி தெரியலம்மா. அடிபட்டதுல அறுவைசிகிச்சை பண்றப்போ உன் கருப்பையும் சேர்ந்து எடுக்க தான் அவங்க  என்கிட்ட கையெழுத்து வாங்கினாங்க. எனக்கு வேறவழி தெரியலை. அதனாலதான் உனக்கு இறந்து பிறந்த பெண்குழந்தையை மாத்திட்டு, அவளுக்கு பிறந்த ஆண்குழந்தையை மாத்தி வச்சிட்டேன். இது எனக்கும் அந்த டாக்டருக்கும் நர்சுக்கும் மட்டுந்தான் தெரியும்”  என்று கூற, தரையில் மடிந்தமர்ந்தாள் அவள்.

வாசனின் ஜாடையில் கற்பனை செய்து பார்த்த பெண்குழந்தை முகம் வந்து போனது. கருவுற்றிருக்கும் போது சிறுவயதில் வாசனுக்கு பெண்பிள்ளை வேடம் போட்டு எடுத்த புகைப்படத்தை பார்த்து பார்த்து பூரித்ததும் ஞாபகம் வந்து, உயிர்வதையை ஏற்படுத்தியது அவளுக்கு.

“நிவேதா..நி..வே..” குளறிய குரலில் அலமேலு அவளை முயன்று கூப்பிட, அந்த வேதனையிலும் அவருக்காக பரிதாபப்பட்டு, எழுந்து வந்தாள் அவள்.

“என் உயிர் பிரிய போகுது.எனக்காக ஒரு விஷயம் செய்.. செய்தியா?” குரல்வளையில் உயிரை தேக்கிக்கொண்டு பேச, மரணவாயிலில் இருந்தவருக்காக சரியென்றாள் அவள்.

“அவளுக்கு பிறந்த பொண்ணுக்கும் நம்ம சொத்துல கொஞ்சம் எழுதிருக்கேன். வாசன் கொடுக்கற மாதிரி ரெடி பண்ணியிருக்கேன். பவர் உனக்கு எழுதியிருக்கேன். அவளை நல்ல இடத்துல கல்யாணம் மட்டும் செய்து கொடுத்துடும்மா. இது அந்த நவிகா பொண்ணுக்கு மட்டும்தான். அவளுக்கு இல்லை, அவளை என்னைக்குமே நான் மருமகளா ஏத்துக்க மாட்டேன். அதே மாதிரி அந்த பெண்பிள்ளையையும் நல்ல குடும்பமா பார்த்து, கண்ணுக்கு படாத தூரத்துல கட்டிக்கொடுத்து அனுப்பி வச்சுடு. அவ இந்த ஊர்ல இருக்கக்கூடாது. இருந்தா வாசன் மனசு‌ மாறிடும். நம்ம குடும்ப மானமே போயிடும். நம்ம குடும்ப கௌவரவத்தை காப்பாற்றுவேன்னு சத்தியம் பண்ணிகொடு” நவிகா இறந்ததை கூட அறியாது, தான் செய்தே சரியென்று இரக்கமில்லாமல் , சாகும் தருவாயிலும்  தன்னிலை மாறாது பேசினார் அலமேலு. மீண்டும் ஒரு சத்தியமாவென்று தயங்கினாள் நிவேதா.

“சாகப்போறவளோட கடைசி ஆசை நிவேதா. எனக்காக செய்” உயிரைப் பிடித்துக்கொண்டு போராடிய அலமேலுவிற்காக சரியென்று சத்தியம் செய்து கொடுத்தாள்.

“இந்த உண்மை வாசனுக்கு தெரிய வேண்டாம். ஏற்கனவே அவன் என்னை வெறுத்துட்டான். இது தெரிஞ்சா எனக்கு கொல்லி கூட வைக்கமாட்டான். அவனை கூப்பிடு, நான் பார்க்கனும்” என்று கூற, சரியென்று தலையாட்டினாள். செய்த சத்தியத்திற்காக தன் வாழ்வே சூன்யமாகிவிட்டதை நினைத்து கண்ணீர்விட்டார் அவர்.

வாசனும்  அன்னையின் அறையை நோக்கி தான் வந்து கொண்டிருந்தார்.வேகமாக வந்தவரின் மேல், ராமுதாத்தா மோதிவிட , கீழே விழாது பிடித்து நிறுத்தினார் அவர்.

“என்ன ராமு.. டாக்டர் பையை எடுத்துட்டு வர இவ்வளவு நேரமா?” என்று கேட்க, உடம்பெல்லாம் வியர்த்து வழிந்திருந்தது அவருக்கு.

” என்னாச்சு ராமு? ஏன் இப்படி இருக்கிங்க? ” என்று கேட்க,

“ஒன்னுமில்லை எஜமான்” என்று கூற, அவரை நம்பவில்லை வாசன்.

” என்னமோ நடந்துருக்கு? என்னாச்சு சொல்லு? உன்னை யாரும் ஏதும் சொன்னாங்களா? “

“அய்யோ.. அப்படில்லாம் இல்லை எஜமான்” ராமுதாத்தா தான் கேட்ட விஷயத்தை கூறாமல் மழுப்ப முயற்சித்தார்.

” அப்பறம் ஏன் நீ இப்படி இருக்க? பையையும் எடுத்துட்டு வரலை? சரி, நானே போய் அவங்ககிட்ட கேட்கிறேன்” என்றவர் ஆவேசமாக கிளம்ப, அவரை தடுத்து பையெடுக்க சென்றபோது, அலமேலு அம்மாள் நிவேதாவிடம் பேசிக்கொண்டிருந்த விஷயத்தை கூறிவிட்டார் அவர்.

அப்பொழுதே நெஞ்சில் சுருக்கென்று தைத்தது அவருக்கு, நெஞ்சைப்பிடித்துக்கொண்டு அவர் அமர,

“அய்யோ எஜமான். நான் போய் டாக்டரை கூப்பிடறேங்க. இந்த விஷயம் என்னை மீறி வெளிய போகாதுங்க” என்று கீழே செல்லப் போக, அவரது கையைப்பிடித்து தடுத்தார் அவர்.

” எனக்கு ஒண்ணுமில்லை. நான் கீழ போறேன். நீ பையை எடுத்துட்டு வா. அம்மா கேட்டா, நான் அவங்களைப் பார்க்க விரும்பலைன்னு சொல்லிடு” என்றவர் கீழே இறங்கி சென்றுவிட்டார்.

அதன்பின்பு அலமேலுவின் உயிர் வாசனைப் பார்க்க முடியாமலேயை பிரிந்தது. தாயின் கணிப்பு பொய்யாகமல், அவருக்கு கொல்லியை கூட கிரியை வைக்க சொல்லி விட்டு ஒதுங்கிக்கொண்டார் வாசன். வாசனுக்கு உண்மை தெரிந்தது நிவேதாவிற்கு அவரது மரணத்திற்கு பின்புதான் தெரிந்தது.

இப்படி முழுவதும் குடும்பத்திலிருந்து ஒதுங்கி நின்றவரைக்கண்டு கோபம் வந்தவனாக அவரிடம் சண்டையிட்டான் நூவன்.

“ஏன் மாமா இப்படி இருக்கிங்க? அத்தையை மன்னிக்கவே மாட்டிங்களா? சரி அத்தையை விடுங்க, கிரி என்ன பாவம் பண்ணான்?” அமைதியாக இருளை வெறித்து அமர்ந்திருந்தவர், அவனது கேள்விகளால் பாதிக்கப்படாமல் அமைதியாக எழுந்து நின்றார்‌ வாசன்.

“எனக்கு ஒரு உதவி பண்ணுவியா நூவா?” தான் பேசிய பேச்சிற்கு சம்பந்தமில்லாது பேசுபவரின் மீது கோபம் வந்தாலும், சரியென்று தலையசைத்தான்.

“என் கடந்தகாலத்தை கொஞ்சம் பொறுமையா கேளு” என்றவர் நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்க, அத்தையின் தவறு நன்றாகவே புரிந்தது அவனுக்கு. கூடவே அவரை அலமேலு நன்றாக உபயோகப்படுத்திக்கொண்டார் என்பதும் விளங்கியது.

“இப்போ நீ எனக்கு நவிகாவையும் என் பொண்ணையும் கண்டுபிடிச்சு குடுக்கனும். நானும் எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன். மதர் கிட்ட என்னால விஷயத்தை வாங்க முடியலை. அவங்களை கண்டுபிடிச்சு குடு. அதுக்கப்பறம் என் மனசு மாறுதான்னு பார்க்கலாம்” ஒருவித எதிர்பார்ப்புடன் அவனை பார்க்க, நூவனும் களத்தில் இறங்கினான்.

தங்களது பிள்ளை என்று தெரிந்ததும் கிரியை அழைத்தவர், ” கிரி அப்பா உன்கிட்ட சரியா நடந்துக்காம இருந்ததுக்கு மன்னிச்சுடுப்பா” என்று மன்னிப்பு கேட்டவர், அப்பொழுதுதான் அவனது முகத்தை நன்றாக பார்த்தார்.

நிவேதாவிற்கு முகத்தில் முன்தாடை சற்று ஏறியிருக்கும், அதேபோல் கிரிக்கும் இருந்ததால் அவனது முகத்தை முன்பு சரியாக கவனிக்கவில்லை அவர். ஆனால் இப்பொழுது நன்றாக அவரது மாமனார், நவிகாவின் தந்தைக்கும் அப்படித்தான் தாடை இருக்குமென்பது நினைவு வந்தது. அவரது சாயலில் இருந்தான் அவன்.

“அச்சோ என்னப்பா மன்னிப்பெல்லாம் கேட்டுட்டு” அவரது கைகளை பிடித்துக்கொண்டவன்,

“சீக்கிரம் நம்ம குடும்பம் ஒண்ணா சந்தோஷமா இருந்தா  போதும்பா” என்று கூறினான்.

“அது நடக்கத்தான் போகுது கிரி. நம்ம குடும்பத்தோட ஒண்ணாதான் இருக்கப்போறோம்” என்று கூறினார். அதுதான் அவனிடம் அவர் கடைசியாக பேசிய வார்த்தைகள்.

ஏனென்றால் நூவன் நவிகாவைப்பற்றி கூறிய செய்தியில் அவரது இதயம் துடிப்பதை நிறுத்தியிருந்தது.

“மாமா.. ஒருவழியா விஷயத்தை கண்டுபிடிச்சிட்டேன். உங்க பொண்ணு ஸ்ரீனிகா இங்க சென்னைலதான் இருக்கா” என்று கூற,

“என் குட்டிமா என்னை மறக்கல. நாங்க முடிவு பண்ண பேரதான் வச்சுருக்கா” என்று மகிழ்ந்தார்.

“நவிகா எப்படி இருக்கா நூவா?” என்று கேட்க,

“அது..அதுவந்து.. மாமா.. ” இழுத்தான் நூவன்.

“என்ன என்னாச்சு? ” என்று பதற்றப்பட,

“அவங்க உயிரோட இல்லை. பிரசவம் முடிஞ்சு ஐந்துநாள்ளயே இறந்துட்டாங்க” சொல்லி முடிப்பதற்குள் மிகவும் கஷ்டமாக போனது அவனுக்கு.

“அப்ப இத்தனை நாள் நான் யாருக்காக காத்திருந்தேன்?” என்றவரின் இதயம் வலிக்க ஆரம்பித்தது. எதிர்முனை அமைதியாக இருக்க,

“மாமா.. மாமா” என்று பதறினான் அவன்.

“ஒ..ஒண்ணுமில்லை நூவா. நீ கிளம்பி வா” என்றுவிட்டு வைத்துவிட்டார் அவர்.

பின்பு தங்களது குடும்ப‌ வக்கீலுக்கு அழைத்தவர், பரம்பரை சொத்துக்களை கிரிக்கு மாற்ற சொல்லிவிட்டு, அவர் கூறிய விவரங்களில் அன்னை எழுதிய சொத்துக்களுடன், தான் சுயமாக வாங்கிய இடத்தையும், பாரம்பரிய வீட்டையும் ஸ்ரீனிகாவின் பெயரில் எழுதியவரின் உயிர் அன்று இரவே பிரிந்திருந்தது.

பின்பு நிவேதாவிற்கு விஷயம் தெரிய வர, நவிகாவின் இறப்பை பற்றி தெரிந்ததும் பிரிந்த அவரது உயிர், சொல்லாமல் சொல்லியது அவரது காதலின் ஆழத்தை.

நூவன் நிவேதாவிடம் மன்னிப்பு வேண்ட,

“விடு என்ஜே. நீ என் நல்லதுக்காகதான முயற்சி செஞ்ச” என்றதோடு நிறுத்திவிட்டார்.

“இதுதான் நடந்தது ரஞ்சனி” அனைத்தையும் கிரி கூறி முடிக்க, உறைந்து போய் அமர்ந்திருந்தாள் அவள்.

வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டவள்,” ஓ அப்போ அன்றைக்கு நைட் எதேர்ஞ்சயா தோட்டத்துக்கு போனப்போ, நிவேதா ஆன்ட்டி கைல வச்சுருந்த ஃபோட்டோ வாசன் சாரோட சின்ன வயசு ஃபோட்டாவா? அதான் நீ ஏன் எனக்கு கிடைக்கல.. போ…போயிடுன்னு சொல்லி அழுதாங்களா?நான்தான் அவங்க அக்காவை ஏதோ பண்ணப்போறாங்கன்னு பயந்துட்டேன். சாரி சது” என்று கூற, அதை ஆமோதிக்கும் விதமாக தலையாட்டினான் அவன்.

” சரி இன்னும் ஏன் நீங்க அக்காவோட கூட பிறந்தவர்ங்கறத சொல்லாம இருக்கிங்க?” என்று கேட்டாள்.

” ஏன்னா நூவன்தான் அவனா சொல்ற வரைக்கும், இந்த விஷயத்தை ஸ்ரீனிகாகிட்ட சொல்ல வேண்டான்னு சொல்லியிருக்கான்” என்று கூறினான்.

“இதை சொல்றதுல என்ன ஆகப்போகுது?”

“இதே கேள்வியை நானும் கேட்டேன். எனக்காக கொஞ்சநாள் பொறுத்துக்கோ மச்சி. நானா சொல்ற வரைக்கும், நீ வாய திறக்கக் கூடாதுன்னு சொல்லிட்டான்”கிரியின் பேச்சில் சற்று யோசித்தவளாக,

“நூவன் அண்ணா சொன்னா அதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கும். இனி அக்கா அவர் பொறுப்புங்கறதால ஒரு பிரச்சனையும் இல்லை ” என்று கூறினாள்.

“ரஞ்சனி நான்தான் எல்லாத்தையும் சொல்லிட்டேனே? உன் மடியில் கொஞ்சநேரம் படுத்துக்கட்டுமா?” என்று கேட்க, தயங்காது அவனை மடிசாய்த்துக்கொண்டாள் அவள்.

“மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு ரனு. இவ்வளவு நடந்ததும் தெரிஞ்சும், என்னால நிவேதாம்மாவை வெறுக்க முடியலை. ஆனால் முன்னைப்போல் இருந்த ஒரு ஒட்டுதல் இல்லாம, யாருமே இல்லாத மாதிரி தோணுது” மடியில் முகம் புதைத்தவனின் முதுகை ஆறுதலாக வருடினாள் அவள்.

“ஏன்  இப்படில்லாம் சொல்றிங்க? எல்லா பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வரும். நம்ம எல்லாரும் சந்தோஷமா இருப்போம். எனக்கு நிவேதா ஆன்ட்டி பண்ண  தப்புக்கு , அவங்க குழந்தையைப் பற்றி கூட தெரியாம, ஆண்டவனே அவங்களுக்கு தண்டனை கொடுத்துட்டான். உங்க பாட்டி ரொம்பவே மோசம்”  தான் உணர்ந்ததை கூறினாள் அவள்.

“ஹ்ம்ம்.. ஆமா ரனு” எழுந்து கொண்டவன்,

“ரொம்ப நேரமாச்சு. வா வீட்டுக்குள்ள போகலாம். நாளைக்கு ஸ்ரீனிகாவை மறுவீட்டுக்கு அழைக்க போகனும்” என்று கூறிவிட்டு வீட்டை நோக்கி நடந்தான்.

“ஹை.. அப்போ அக்கா நாளைக்கு இங்கயே இருப்பாங்களா?” ரஞ்சனி சந்தோஷப்பட,

“இல்லை. சம்பிரதாயத்துக்கு மட்டும் வந்து போறதா நூவன் சொல்லிட்டான்” என்றவனின் பேச்சில், அவளது முகம் வாடிவிட்டது.

“கவலைப்படாதே ரனு. சீக்கிரமே நாம எல்லாரும் ஒண்ணா சந்தோஷமா இருக்கற நாள் வரும்” அவளின் வார்த்தைகளை திரும்ப கூறி, அவளையும் தேற்றி தன்னையும் தேற்றிக்கொண்டான் கிரி.

மறுநாள் கிரி அழைக்க வந்த போது, சாப்பாடு மேஜையில் பாதி உணவு உண்ட கையோடு, நூவன் மீது தூங்கி விழுந்து கொண்டிருந்த நிகாவை கண்டு , மற்றவர்களோடு சேர்ந்து தானும் மனதார சிரித்துக்கொண்டிருந்தான் அவன்.

சாரல் மழை சரிவுபோல என் அககண்ணாடியில் தினம் ஒருமுறை வழுக்கி செல்கிறது…. உன் நினைவுகள்……

திமிராகும்…..

அத்தியாயம்-33:

இனிமையான நினைவுகளின் சுகத்துடன், இரவின் ஏகாந்தம் இன்னும் குறையாமல் இருக்க, கண்விழிக்காமலேயே தன்னவளை அருகில் தேடிய நூவனுக்கு தலையணை தான் அருகில் கிடைத்தது.

சட்டென்று கண்விழித்து பார்க்க, கடிகாரத்தில் மணி பதினொன்றை கடந்திருந்தது. எழுந்து சோம்பல் முறித்தவன், அறையில் அவளது நடமாட்டம் தென்படுகிறதா என்று கண்களால் துழாவ,எங்கும் அவளின் பிம்பம் தென்படவில்லை. அவளது வாசம் அவனது உடலில் இருந்து இன்னும் இம்சித்துக்கொண்டிருந்தது.

“ஏன்டா நூவ்? கல்யாணம் ஆன உடனே கொஞ்சம் அதிகமாத்தான் எதிர்பார்க்கறமோ?” அவனது மனம் குரல் கொடுக்க,

“ம்ம்..அதுல தப்பென்ன? ” அவனது மற்றொரு மனக்குரல் வாதிட்டது.

“இந்த சினிமா கதைல வர மாதிரி, பக்கத்துல தான் கட்டிப்பிடிச்சு தூங்கலை, நம்ம ஊர் பொண்ணுங்க மாதிரி, குளிச்சு முடிச்சு புருஷனுக்கு காஃபியாவது கொண்டு வருவாளா பார்ப்போம்” மனதில் ஒரு எதிர்பார்ப்புடன் குளிக்கச்சென்றான் அவன்.

“ம்ஹீம்… ” அவன் தயாராகி கீழே வரும் வரை, நிகாவின் நிழல் கூட கண்ணில் படவில்லை.

“திமிரு பிடிச்சவ, நம்ம பின்னாடியேதான சுத்தப்போறான்னு அலட்சியம் இவளுக்கு. இவ்வளவு நான் தேடறேனே கொஞ்சமாச்சும் அவளுக்கு அந்த நினைப்பு இருக்கா?” மனதிற்குள் அர்ச்சித்துக்கொண்டே, மாடிப்படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தான்.

ஹாலிலும் அவள் இல்லை. ” என்னடா இது? நமக்கே ஆட்டம் காமிக்கிறா?” என்ற நினைவுடன் இறங்கி வந்தவனை, அப்பொழுதுதான் தயாராகி வந்த ஜேபி எதிர்கொண்டார்.

கல்யாண அசதியில் அனைவருக்கும் தாமதமாக தான் விடிந்திருந்தது அன்றைய காலைப்பொழுது.

“அச்சோ இவர்கிட்ட மாட்டினா வச்சு செய்வாரே?” தந்தையை எதிர்கொண்டான் அவன்.

“மார்னிங் டாட்” என,

“வெரி குட்மார்னிங் மகனே. என்ன காலைலயே கண்ண உருட்டுற எக்சர்சைஸா? ” மகனின் சிவந்த கண்களும், அலைபாயும் பார்வையும் விஷயத்தை பிரகடனப்படுத்த, சந்தோஷத்துடன் அவனை கலாய்க்க ஆரம்பித்தார் அவர்.

“ப்பா..‌ ஏன்ப்பா??” அசட்டு சிரிப்பை உதிர்த்துக் கொண்டே, அருகமர்ந்தவனைக் கண்டு பூரித்தது தந்தையின் மனம்.

“சரி விடு. இன்னைக்கு வேணாம். நாளைக்கு வச்சுக்கலாம்” என்று பேசும்போதே, நிகாவின் சிரிப்பு சத்தம், சமையலறையில்  இருந்து கேட்டது‌, கூடவே ஹர்ஷத்தின் சத்தமும் கேட்க, கடுப்பானான் அவன்.

“இவன் எப்பப்பா வந்தான்? நண்பர்களோட கெட்டுகேதர் சொன்னானே?”

“தெரியலையே மகனே. நானும் லேட்டாதான் எழுந்து வந்தேன். என் ஆளையும் உன் ஆளையும் உள்ள பிடிச்சு வச்சு சிரிக்க வச்சுட்டுருக்கான். இன்னைக்கு நமக்கு பூவா கிடைக்குமா? அந்த ஸ்வீட் பாக்ஸ இங்க தள்ளேன்” தனது காரியத்தில் கண்ணாக பேசிய தந்தையை முறைத்தான் அவன்.

“ஸ்வீட் கேட்டது ஒரு குத்தமாடா? சரி பாக்ஸ் வோணாம். ஒரு ஸ்வீட்ட மட்டும் இப்படி தள்ளு” என்று கூற,

“ம்மீ… அப்பாக்கு ஸ்வீட் வேணுமாம். கொடுக்கட்டுமா?” நூவன் கத்தியது வீடெங்கும் எதிரொலித்தது.

அதில் உஷா சமையலறையில் இருந்து வேகமாக வெளியே வர, பின்னோடு உணவுப்பதார்த்தங்களை எடுத்துக்கொண்டு, பேசி சிரித்துக்கொண்டே வந்தனர் ஹர்ஷத்தும், நிகாவும்.

“நான் சொன்னேன்ல அண்ணி. பார்த்திங்களா? அதே கேசரியதான் அம்மா இன்னைக்கும் செஞ்சுருக்காங்க” என்று சொல்லி சிரிக்க, சிரித்துக்கொண்டே வந்த மனைவியை கண்களில் நிரப்பிக்கொண்டு அமர்ந்திருந்தான் அவன்.

“டேய் நூவ் நீ கோபமா இருந்தடா?” மனசாட்சி குரல் எழுப்ப,

“ச்சீ..பே … அந்த பக்கம்” அதை விரட்டியடித்து விட்டான்.

“என்னண்ணி அண்ணன் பார்வையே வித்தியாசமா இருக்கே? இதான் காதல்ல பொங்குறதா?” ஹர்ஷத் கலாய்க்க, சத்தமாக சிரித்தாள் நிகா.

“டேய் போதும்டா. நீ முதல்ல இங்க வா” ஹர்ஷத்தை அவன் அழைக்க,

“நான் அண்ணிகூட தான் உட்கார்ந்து இன்னைக்கு சாப்பிட போறேண்ணா. அப்பா உனக்கு கம்பெனி குடுப்பாரு” உஷாவிடம் திட்டு வாங்கி விட்டு, அருகம்புல் ஜூஸை குடித்துக் கொண்டிருந்த  ஜேபி பார்த்த பார்வையில் , கொலைவெறி மிகுந்திருந்தது.

“ஆமா நிகாம்மா. நீ ஹர்ஷத் பக்கத்துல உட்காரு. உஷா டார்லிங் நீ என்கிட்ட வாடா” ஒரு இனிப்புக்காக போட்டுக் கொடுத்த மகனை பார்த்து , நம்பியாரை போல் கையசைத்ததை பார்த்த உஷாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“போதும் சும்மா இருங்க” கணவனின் தோளில் தட்டியவர்,

“நிகாம்மா, வந்து நூவன் பக்கத்துல உட்காருடா” கணவனது காதல் பார்வையை உள்வாங்கிக் கொண்டு, அவனைப் பார்த்து மென்னைகை புரிந்து கொண்டே வந்தமர்ந்தாள் அவள்.

உஷா பரிமாற ஆரம்பிக்க, அனைவரையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டவன், அவர்களது கவனம் இங்கில்லை என்பதை உறுதி செய்து கொண்டு,

“ஏண்டி சீக்கிரம் எழுந்து வந்த? ” அடிக்குரலில் சீறினான்.

“பின்ன அங்கேயேவா இருக்க முடியும். எனக்கு பசிக்க ஆரம்பிச்சுடுச்சு. நானும் இப்போ ஒரு அரைமணி நேரத்துக்கு முன்னதான் வந்தேன். அத்தை எல்லாத்தையும் தயார் பண்ணி வச்சுருந்தாங்க” சிரித்துக்கொண்டே கூறியவளின் அதரங்களை இம்சை பண்ண தோன்றியது அவனுக்கு.

அவனது பார்வை மாற்றத்தை கண்டு கொண்டவள், வேறுபுறம் திரும்ப,” இனி காலைல எழுந்திருக்கும் போது என்கூடவே இரு பேபி” என்று கூறியவனின் காதல் வார்த்தைகளில் உருகியவளாக அவள் திரும்பி பார்க்க, உதடுகளை குவித்தான் அவன்.

அதற்கும் அவள் சிரிக்க,” ஏண்டி நீ வெட்கமே படமாட்டியா” ஆசையாக கேட்டவனை முறைத்தாள் அவள்.

“எங்க வச்சு என்ன பேசுற நூவி?” இவர்களை கண்டுகொள்ளாது பேசிக்கொண்டிருந்த மற்ற குடும்ப உறுப்பினர்களை சங்கட்டமாக பார்த்தாள்.

அவளது பார்வை செல்லும் திக்கை கண்டவன்,” அதெல்லாம் அவங்க கண்டுக்க மாட்டாங்க. பதில் சொல்லு பேபி” என்றான்.

பதில் சொல்லாமல் விடமாட்டான் என்பதை உணர்ந்தவளாக, ” நேத்து என்னை வெட்கப்பட விட்டியா நீ? இன்னைக்கு எதுக்கு இந்த தேவையில்லாத ஆராய்ச்சி?” என்று கேட்க, அவளை அவன் பார்த்த பார்வையில் நிகாதான் முகத்தை திருப்பிக்கொள்ள வேண்டியதாயிற்று.

“ம்க்கும்…..” ஜேபியின் செருமலில் இருவரும் அவரவரது உணவில் கவனம் செலுத்தினர்.

சற்று நேரம் அங்கு அமைதியாக அனைவரும் உணவருந்திக்கொண்டிருக்க, நிகாவைப்பார்த்த ஜேபி சிரித்துவிட்டார்.

அவரது சிரிப்பில் நூவன் நிமிர, அவளை நெருங்கி அமர்ந்திருந்ததால், அவனது தோளில் கண்ணயர்ந்திருந்தாள் அவனது காதல் கண்ணாட்டி.

“டேய் அண்ணா.. ஒரு முரட்டு சிங்கிள் இப்படில்லாம் நடந்தா அவன் மனசு என்ன வேதனைப்படும்?” ஹர்ஷத் அவன் பங்கிற்கு சொல்லிவிட்டு சிரிக்க, நன்றாக அவனது தோளில் இன்னும் முகம் புதைத்தாள் நிகா. அதில் உஷாவும் வாயை மூடிக்கொண்டு சிரிக்க,

“டேய் சின்னமகனே, சாப்பிட்டன்னா இடத்தை காலி பண்ணு” அவனை அந்த இடத்தை விட்டு விரட்டிய உஷா,

“வாங்க கை கழுவ போகலாம்” ஜேபியை அழைத்தார்.

“நீ மருமகளுக்கு இங்க ப்ளேட்டிலேயே கைகழுவி விடு நூவா” அக்கறைத் தொனியில் கிண்டலடிக்க,

“நீங்க முதல்ல வாங்க” அவரை இழுத்துக்கொண்டு சென்றார் உஷா.

அனைவரும் சென்றுவிட, தோளில் முகம் புதைத்திருந்த மனைவியை பார்க்க, களைப்பு அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அப்பொழுதுதான் உள்ளே நுழைந்தான் கிரி. மற்றவர்களும் அங்கு வர, அங்கு கண்ட காட்சியில் அவனும் சிரிக்க ஆரம்பித்தான். நூவன் முகத்தில் முதன்முறையாக வெட்கப்புன்னகை பூத்தது.

மெதுவாக நிகாவின் கன்னத்தில் தட்ட, கண்களை சிரமப்பட்டு திறந்தவளுக்கு, சுற்றி நின்று சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தவர்களை பார்த்து, விழித்தாள் அவள். அதன்பின்பு தான் புரிந்தது நூவனின் தோளை பிடித்து தூங்கியிருப்பது.

சங்கடத்துடன் வேகமாக எழுந்து சமையலறைக்குள் சென்றுவிட்டாள் அவள்.

“வா மச்சி..” அனைவரும் கிரியை வரவேற்க, சந்தோஷத்துடன் நூவனை கட்டிக்கொண்டான் கிரி.

“உன்னை இப்படி பார்க்க சந்தோஷமா இருக்கு மச்சி”

“எது உன் சகோதரி என் தோள்ள தூங்குனதுலயா? ரொம்பத்தான்டா”  நூவன் அவன் பாணியில் கலாய்க்க,

“பாவம்டா. கல்யாண அசதியில் தூங்கியிருப்பா” நிகாவிற்கு வக்காலத்து வாங்கினான் கிரி.

“வா கிரி” நிகாவும் அப்போது அங்கு வந்து வரவேற்றவளால் , ஏனோ நூவனின் பார்வையை அவளால் சந்திக்க முடியவில்லை.

“சாப்பிடு கிரி” உஷா வற்புறுத்தினார்.

“அத்தை சாப்பிட்டு தான் வந்தேன். இன்னொருநாள் வந்து நல்லா சாப்பிடறேன். உங்க ஸ்பெஷல் ஜூஸ மட்டும் கொடுங்க” என்று கூற, அவனுக்கு ஜீஸ் எடுத்து வர சென்றார் நிகா.

“ஏன்பா மருமகனே.. அருகம்புல் ஜீஸ் உனக்கு அவ்வளவு பிடிக்குமா என்ன?” ஜேபியின் கேள்வியில் விழித்தான் கிரி. 

“கொஞ்சநேரம் சும்மா இருக்க மாட்டிங்களா?” ஆரஞ்சுபழச்சாறை உஷா நீட்ட , போன உயிர் திரும்பி வந்தது அவனுக்கு.

“நிவேதாக்கு இப்போ உடம்பு பரவாயில்லையா?” என்று கேட்க, நன்றாக இருப்பதாக பதில் கூறினான்.

கல்யாணத்தன்று உடல்நிலை படுத்துகிறது என்று சொல்லி மண்டபத்தை விட்டு சீக்கிரமே வீடு திரும்பிவிட்டார் அவர்.

“மறுவீடு கிளம்பலாமா ஸ்ரீ” கிரி அவளிடம் கேட்க,

“அப்ப நான் வரத்தேவையில்லையா மச்சி?” என்றான் நூவன்.

“டேய் ஏன்டா அவனை படுத்துறிங்க? போய் சீக்கிரம் ரெடியாகி வாங்க. நிகா நீ மறுவீட்டு புடவையை கட்டிட்டு வாம்மா” உஷா அவர்களை மேலே அனுப்பி வைத்தார்.

நிகாவின் பின்னோடு நூவன் வேகமாக படிகளில் ஏற, ” டேய் மச்சி சீக்கிரம் வந்துடு” என்ற கிரியின் குரல் அவன் காதுகளில் விழவே இல்லை.

“இந்த கார்டன் பார்க்கும்போதே மனசுக்கு இதமா இருக்குல்ல?” ரூபியின் குரலுக்கு,

“ம்ம்..” என்று பதிலளித்தான் சேனா.

“நந்து உங்க நிலைமை எனக்கு புரியுது. ஆனால் இவங்களுக்கு இவங்கதான்னு கடவுள் எழுதிவச்சதை நாம மாத்த முடியாது” தன்னவனின் முகவாட்டத்தை காண முடியாது மனம் துடித்தாலும், அதை பொறுத்துக்கொண்டு அவனை தேற்றுவதில் முனைப்பாக இருந்தாள் அவள்.

அதிலும் தான் விரும்புவனின் இதயம் மற்றொரு பெண்ணுக்காக வருத்தப்படுவதை காண அவளுக்கும் வேதனையாகத்தான் இருந்தது. ஆனாலும் நடந்து முடிந்ததை மாற்ற முடியாதென்ற நிதர்சனத்தை புரிந்து கொண்டவளாக, தனது காதலை மெய்ப்பிக்கும் முயற்சியில் இருந்தாள் ரூபாலி.

“எஸ்.. நானும் அதை புரிஞ்சுகிட்டேன் ரூபி. அவளை ரொம்பவே பிடிச்சுருந்தது. ஆனால் இப்ப இந்த கல்யாணத்துக்குப்பிறகு, நானும் அடுத்தவன் மனைவியை பற்றி நினைக்க போறதில்லை. இனி ஸ்ரீனிகா எனக்கு நல்ல ஒரு தோழமையாதான் இருப்பாங்கிறத, என் மனசு எனக்கு அறிவுறுத்திட்டு தான் இருக்கு” அதுவரை பூக்களை பார்த்து பேசிக்கொண்டிருந்தவன், நேருக்கு நேராக அவளின் கண்களை பார்க்க, அந்த க்ஷண நேர பார்வையை கூட தாங்க இயலாது, அங்கிருக்கும் ரோஜாக்களுக்கு போட்டியாக சிவந்திருந்தது ரூபாலியின் முகம். அது சேனாவின் கண்களுக்கும் தப்பவில்லை.

“இவள் என்னை விரும்புகிறாளா? நொடிநேரம் என்றாலும் அதில் தெரிந்த காதல் பொய்யில்லை” யோசிக்க ஆரம்பித்தவனாக முன்னே நடக்க, சற்றுநேரம் பொறுத்து விட்டு அவனை பின் தொடர்ந்தாள் அவள்.

“நாம இதுக்கு முன்னாடி எத்தனை தடவை சந்திச்சிருக்கிறோம் ரூபி? அதாவது இங்க கோவைக்கு வர்றதுக்கு முன்னாடி?” பேசிக்கொண்டே நடந்தான் சேனா.

” நீங்களும் நானும் பார்த்துக்கிட்டது ஒருமுறைதான். ஆனால் நான் உங்களை தினமும் பார்த்துக்கிட்டு தான் இருக்கேன் நந்து” அவளின் பதிலில் திகைத்து திரும்பினான் அவன்.

“வாட்?? என்ன சொல்றிங்க?”

“இதுக்கு மேலேயும் என்னால சொல்லாம இருக்க முடியாது நந்து. நீங்க படுற வேதனையை என்னால தாங்கிக்க முடியலை‌. உங்களை பார்த்து நாளிலிருந்து உங்களை மனசுல சுமந்திட்டுருக்கேன். இடையில் நீங்க வேற ஒருத்திய விரும்பறிங்கன்னு தெரிஞ்சப்போ, கல்யாணமே வேண்டாம், உங்க நினைவாகவே வாழ்ந்துடலான்னு நான் முடிவு பண்ணப்போ தான், ஆண்டவனா பார்த்து உங்களை திரும்ப சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்காரு. இந்த சந்தர்ப்பத்தில் நான் என் மனசுல இருக்கிறதை சொல்லியே ஆகனும்” என்றவள்,

“ஐ லவ் யூ.. லவ் யூ லாட் நந்து” தன் மனதை திறந்து விட்டு, கதறி அழ, உறைந்து போய் நின்றிருந்தான் சேனா.

சிறிது நேரம் அவளை ஒன்றும் சொல்லாதவன், தன் கேட்ட விஷயங்களில் இருந்து தன்னை நிதானப்படுத்திக்கொண்டு, அவளை பிடித்து எழுப்பியவன்,

“அழாதே ரூபி” அவளது கண்களை துடைத்து விட்டான்.

“உன்னுடைய உண்மைக்காதல் எனக்கு புரியுது. எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் கொடு. எனக்காக என்னை ஒருத்தி நேசிக்கறாங்கறத நினைக்கும்போது ரொம்பவே மனசுக்கு இதமா இருக்கு. ஆனால் ஸ்ரீனிகாவோட வாழ்க்கை இன்னும் சரியாகலை.

நூவன் எதையோ இன்னும் எல்லார்கிட்டயும் இருந்து மறைக்கிறான்னு எனக்கு சந்தேகமா இருக்கு, அதேமாதிரி அந்த இடத்தை ஸ்ரீனிகா என்ன செய்யப்போறான்னு தெரியலை. அதுவரைக்கும் இருக்கனும்னு தான் நான் இங்க இருக்கேன்.

ஒருவேளை என் மனசு மாறி உன்னை ஏத்துககிட்டாலும், எந்தவித உறுத்தலும் இல்லாம, உன்னை கரம்பிடிக்கனும்னு நினைக்கிறேன் ரூபி” என்று கூறியவனின் வார்த்தைகளில், அந்த பளிங்கு சிலை உயிர்பெற்றிருந்தது.

” நி..நிஜமாதான் சொல்றிங்களா? என்னை திருமணம் செய்துக்க போறிங்களா?” தான்  கேட்டவற்றை அவனிடமே தெளிவுபடுத்த துடித்தாள் அவள்.

“காதலைப்பத்தி என்னால பேசமுடியுமா தெரியல ரூபி? ஆனால் வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்கு எல்லாரும் போய்தான் ஆகனுங்கற நிதர்சனம் புரிந்தவன் தான் நான். அதனால நான் உண்மையாதான் சொன்னேன் உன்னை கரம்பிடிக்கிறேன்னு. ஆனால் அது காதலோடு அமையுமா? இல்ல மற்ற திருமணங்களை போல நம்ம திருமணமும் இருக்குமாங்கிறதுக்கு காலம்தான் பதில் சொல்லனும்” என்று கூற, அவனை அணைத்துக்கொண்டாள் ரூபி.

அவளது செயலில் சங்கட்டமாக உணர்ந்தாலும், அந்நேரத்து ஆறுதலை அவளுக்கு வழங்க தயங்கவில்லை அவன். அந்த சிறு அணைப்பே ரூபாலியை திடம் கொள்ள செய்து விட, சேனாவை விட்டு விலகியவள்,

“உங்க மனசு மாற காத்திருப்பேன் நந்து” காதலோடு கூறியவளின் வார்த்தையில் புன்னகைத்தான் சேனா‌.

” அப்படி நடந்தா எனக்கும் சந்தோஷம்தான் ரூபி” என்றவனின் பதிலில் விண்சொர்க்கம் பொய்யாகி, கண்முன் சொர்க்கத்தின் வாசல் திறந்தைப்போல் உணர்ந்தாள் அவள்.

” நேரமாச்சு வா போகலாம்” சேனா முன்னே நடக்க, யாருடைய காலடிகளை காலம் முழவதும் பின்பற்றி நடக்க ஆசைப்பட்டாளோ, அவனது காலடி தடத்தில் முதல் அடியை வெற்றிகரமாக பதித்தாள் அவள்.

கதவை திறந்து உள்ளே நுழைந்தவளை அடுத்த நொடியே பின்னோடு அணைத்திருந்தான் நூவன்.

“லவ் யூ நிகாபேபி” காதல் சொட்டும் குரலோடு. அவனது அணைப்பில் சற்றே நெளிந்தவள்,

“நேத்துல இருந்து நொடிக்கொரு முறை சொல்லிக்கிட்டிருக்க நூவி? மறந்து போயிடுன்னு மனப்பாடம் செய்றியா?” அலட்டாது கேட்டவளின் கேள்வியில், அவளை தன்புறம் திருப்பினான் அவன்.

” ஏய் பொண்டாட்டி, நேத்துல இருந்து எத்தனை தடவை சொல்றேன். ஒரு தடவையாவது நீ ” லவ் யூ நூவி” சொன்னியா? நீ சொல்ற வரைக்கும் சொல்லிக்கிட்டே இருப்பேன்” என்றவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டான்.

” அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன். நீ சொன்னா நானும் சொல்லனுமா புருஷா?” என்றவளின் பதிலில் அவளை நிமிர்ந்து பார்க்க, முகத்தில் உறைந்த புன்னகையுடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

“திமிரு பிடிச்சவடி நீ? அப்ப நீ லவ் யூ சொல்லமாட்ட? ” அவளது கண்களோடு கண்களை கலக்க விட,

“ம்ஹீம்.. மாட்டேன்” தெளிவாக பதில் கூறினாள் அவள்.

” நான் சொல்ல வைக்கிறேன் பாரு” என்றவன் அவளை நோக்கி குனிய,

“நூவா லேட்டாகுது. நல்லநேரம் முடியறதுக்குள்ள கிளம்பனும். சீக்கிரம் கிளம்பி வாங்க” கீழிருந்து குரல் கொடுத்தார் உஷா.

அன்னையின் குரலில் கலைந்தவனை தள்ளிவிட்டு, உடைமாற்றும் அறைக்குள் புகுந்து கொண்டாள் நிகா.

” ம்மீ…. ” பல்லைக்கடித்தவன், ” இன்னும் ஒரு அஞ்சுநிமிஷம்மா” பதிலளிக்க இருவரும் தயாராகி கிரியுடன் மறுவீட்டிற்கு கிளம்பி சென்றனர்.

மறுவீட்டிற்கு வந்தவர்களை சம்பிரதாயத்திற்கு வரவேற்றுவிட்டு, நிவேதா சென்றுவிட்டார்.

நிகாவைக்கண்ட ரஞ்சனி, ” அக்கா.. ” ஓடிவந்து கட்டிக்கொண்டாள்.

“ரஞ்சு” பதிலுக்கு நிகாவும் கட்டிக்கொண்டாள்.

” என்னவோ வருஷக்கணக்கா பார்க்காத மாதிரி சீன் போடறாளுங்க மச்சி?” கிரியின் காதில் புகை வராத குறையாக பேச,

” ஆமா மச்சி” நூவனும் அதை ஆமோதித்தான்.

” என்ன கிட்டவே விட மாட்டிங்கிறாடா? அவளை மட்டும் எப்படி பிடிச்சுருக்கா பாரு?” தோழிகள் இருவரும் பேசிக்கொண்டிருக்க, கிரியின் பார்வையில் பொறாமை அப்பட்டமாக தெரிந்தது.

“நீயாவது பரவாயில்லை மச்சி? தாலியே கட்டிட்டேன். என்னை அவபின்னாடியே சுத்த விடறாளே தவிர, கண்டுக்கவே மாட்டிங்கறா” நூவனின் பார்வையும், ரஞ்சனியின் இடுப்பை கட்டிக் கொண்டிருந்த நிகாவின் கைகளில் தான் இருந்தது.

இந்த நேரம் பார்த்து, நிவேதா கீழே வந்தவர், ரஞ்சனியும் அங்கிருப்பதை பார்த்து விட்டு,

“விருந்து நல்லாருந்ததா நூவா?” என்று அவனிடம் விசாரித்தார்.

“நம்ம வீட்டு சாப்பாடு சொல்லவா வேணும் அத்தை? உங்க உடம்பு இப்ப பரவாயில்லையா?” நலம் விசாரித்தான் அவன்.

“ம்ம்… பரவாயில்லை” பதில் அவனுக்கு கொடுத்தாலும், பார்வை இப்பொழுது நிகாவிடம் இருந்தது நிவேதாவிற்கு.

“நூவா கிரி கல்யாணத்தை வர்ற முகூர்த்தத்துலயே செஞ்சுடலான்னு பார்க்கறேன்” கல்யாணத்தை சீக்கிரம் முடிந்துவிடும் உறுதி அவரது குரலில் இருந்தது.

“ஏன் அத்தை இவ்வளவு அவசரம்?” கிரியும் அதே கேள்வியை கேட்க வந்தவன், பதிலுக்காக அன்னையை பார்த்தான்.

“எனக்கு உடல்நிலை சரியில்லடா. இந்த வீட்டு மருமக வந்துட்டா, அவ கையில் பொறுப்பை ஒப்படைச்சுட்டு நான் நிம்மதியா இருப்பேன்” ஏதோ சிறையில் இருந்து மீள்பவரைப்போல விசித்திரமாக பேசிய அன்னையை புரியாது பார்த்தான் கிரி.

“ரஞ்சனி…” நிவேதாவின் அழைப்பில் அவளது உடல் தூக்கி வாரி போட்டது.

“உனக்கு இப்ப கல்யாணம் வைக்கறதுல எந்த பிரச்சனையும் இல்லையே?” அவரின் நேரடியான இந்த கேள்வியில் மிரண்டு விழித்தாள் அவள்.

கிரிக்கு அவளை பார்த்து சிரிப்பு வர, நிகாதான் ” தயங்காம பதில் சொல்லு ரஞ்சு”  அவளது கையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.

அதில் சற்று தைரியம் வரப்பெற்றவளாக, சரியென்று தலையசைக்க, கிரியின் முகம் பிரகாசமானது.

“அப்பறம் என்ன நூவா? அண்ணன்கிட்ட நான் கலந்து பேசிட்டு வேலையை ஆரம்பிக்கிறேன். அடுத்த மாசத்துல  ஒரு முகூர்த்தம் இருக்கு.  நீங்க தேநிலவு போயிட்டு வந்ததும் வேலையை ஆரம்பிச்சுடலாம். ரஞ்சனி சார்பா உன் பொண்டாட்டியும் நீயும் தான் எல்லா செய்யனும்” மறைமுகமாக நிகாவிற்கு வேலையை ஒதுக்கியவர்,  அடுத்தடுத்து வேலைகளை சொல்லி வைத்தார்.

“சரி அத்தை பார்த்துக்கலாம். நீங்க எங்களை ஆசிர்வாதம் பண்ணி அனுப்புங்க” என்று கூற, பூஜையறைக்கு சென்றவரை பின்தொடர்ந்தனர் இருவரும்.

விழுந்து வணங்கியவர்களை ஆசிர்வதித்தவர், ” ஒரு நகை பெட்டியை நூவனின் கைகளில் கொடுக்க” அதில் அழகிய வேலைப்பாடுடன் அமைந்த நெக்லஸ் இருந்தது.

“நான் நெக்லஸ் எல்லாம் போடறதில்லையே அத்தை?” நூவன் சொல்லி சிரிக்க,

“படவா… ” அவனது காதை பிடித்து திருகியவர்,

“இது உன் மனைவிக்கு” என்று கூற,

“அப்ப பிடி” நிகா மறுத்துப்பேசும் முன்பே,  அவளது கைகளில் திணித்திருந்தான் நூவன்.

“இது உனக்கு… ” மற்றொரு பெட்டியை கொடுக்க, அவனுக்கு பிடித்த பிராண்டட் வாட்ச் இருந்தது.

அதன்பின்பு சிறிதுநேரம் பேசிவிட்டு , இருவரும் விடைபெற்றுச்சென்றனர். பின்பு ஏதோ வேலையாக பூஜையறைக்குள் சென்ற நிவேதாவை பார்த்து சிரித்தது, நிகாவிற்கு அவர் பரிசாக அளித்த நகைப்பெட்டி. நிகாவை அழைத்துக்கொண்டு பாரிசிற்கு தேநிலவிற்கு பறந்திருந்தான்  நூவன்.

விடுதலை

கொடுத்தேன்

வளையல்களும்

தலைக் கவிழ்ந்தது…..

திமிராகும்…..

 அத்தியாயம்-34:

மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது அந்த கல்யாண மண்டபம்.  மணமகள் அறையிலிருந்து தாம்பூலத்தட்டை எடுத்துக்கொண்டு வந்தவளை, அருகிலிருந்த மணமகன் அறைக்குள் இழுத்தன இரு வலிய கரங்கள்.

கணவனின் ஸ்பரிசத்திலேயே அவனை உணர்ந்து கொண்டவள், “நூவி என்னை விடு. ஏன் இப்படி விளையாடுற?” ஒருமாத திருமண வாழ்க்கையின் முன்னேற்றமாக,  அதட்டலிலிருந்து சற்றே சிணுங்கலுக்கு மாறியிருந்தது நிகாவின் குரல்.

“என்ன பேபி? காலையிலிருந்து நீ என்னை கண்டுக்கவே இல்லை. வேலை பார்க்க நீ மட்டுந்தான் இருக்கியா? அதான் எல்லாத்துக்கும் ஆள் போட்டேன்ல? நீ ஏன் இதெல்லாம் பார்க்குற?” பேசிக்கொண்டே தனது கைவளைவிற்குள் கொண்டு வர, கையில் வைத்திருந்த தட்டு அவனது வயிற்றில் இடித்தது.

“இதை ஏண்டி இன்னும் கைல வச்சுருக்க?” என்று எரிச்சல்பட,

“பின்ன உன் தலைலயா வைக்குறது?” என்று சொல்லி சிரித்தவளின் கன்னத்தில் கிள்ளினான் அவன்.

“ஆ..வலிக்குது. ஏன்டா இப்படி பண்ண?” கன்னத்தை தேய்த்துக் கொள்ள,

“பின்ன கொஞ்சமாச்சும் உனக்கு எம்மேல லவ் இருக்காடி? இல்ல நம்ம போய்ட்டு வந்த தேநிலவோட எஃபெக்ட்டாச்சும் இருக்கா?”  என்று பேசியவனை முறைத்து பார்த்தாள் அவள்.

“இவனுக்கு ஏதாச்சும் சொல்லி என்கூட சண்டை போட்டுக்கிட்டு, பேசிகிட்டு என்கூடவே இருக்கனும். ” ஐ லவ் யூ” சொல்ற வரைக்கும் விடமாட்டான்” மனதிற்குள் செல்லமாக சலித்துக்கொண்டவள் வெளியே முறைத்துக்கொண்டிருந்தாள்.

“இந்த முறைக்கறது மட்டும் மாறவேயில்லடி? “

“நீங்க மட்டும் மாறிட்டிங்களா? ஹனிமுன் முடிஞ்சு வந்ததும், ஆஃபிஸ்குள்ள நுழைஞ்சவர்தான், இப்பதான் உங்க முகத்தையே நல்லா பார்க்கறேன். எல்லா வேலையும்  நானும் அத்தையும் தான் பார்த்துக்ககிட்டோம்” அவளது முறைப்பிற்கு இப்பொழுது காரணம் புரிய, அசட்டு சிரிப்பை உதிர்த்தான் அவன்.

“அது நிறைய வர்க் முடிக்க வேண்டியது இருந்ததுடா, அதான் இப்ப ஃப்ரீ ஆகிட்டேனே” என்றவனை தள்ளிவிட்டு, விலகிச் சென்று விட்டாள் அவள்.

“ரனு என்னை நிமிர்ந்து பாரேன்” அருகமர்ந்திருந்தவளின் முகத்தை பார்க்க பிரயத்தனம் செய்து கொண்டிருந்தவனை, நிமிர்ந்து பார்க்கவே இல்லை அவள்.

“ஏய் போண்டா நிமிர்ந்து பாரேன். இவன் விடுற ஜொள்ளுல ஹோமம் கொஞ்சகொஞ்சமா  அணைஞ்சிட்டுருக்கு” ஹர்ஷத்தின் கிண்டலில்,

“போடா எருமை” தன்னை மீறி திட்டினாள் ரஞ்சனி. இவ்வளவு நாட்களில் ரஞ்சனிக்கு நல்ல தோழன் ஆகி விட்டிருந்தான் ஹர்ஷத்.

அதன்பிறகு தான் சூழலை கவனித்தவள், கிரியை பார்க்க, சிரிப்பை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான் அவன்.

அதில் அவள் தலையை நன்றாக குனிந்து கொள்ள,

“ரனு டார்லிங் . அவன் எருமையே தான்டா” என்று கூற, ஹைஃபை கொடுக்க கையை நீட்டியவளை  ஐயர் விசித்திரமாக பார்க்க,

“அது  அப்படிதான் ஐயரே. கொஞ்சம் கழண்ட கேஸூ” ஹர்ஷத் மீண்டும் கலாய்க்க,  

“டேய் நீ முதல்ல இங்க இருந்து கிளம்பு” அவனை விரட்டினான் கிரி.

“ஹலோ பாஸ், என் கைய, கால பிராண்டி துணை மாப்பிள்ளையா நீதான் வரனுன்னு , கூட்டிட்டு வந்துட்டு, கழட்டி விட பார்க்கிறிங்களா? ” கிரியிடம் வம்பிழுத்துக்கொண்டிருந்தவனை கலைத்தது ரஞ்சனியின் குரல்.

“ஹே.. காம்ப்ளான் பேபி” என்று கத்தியவளை பார்த்து இப்பொழுது மந்திரம் ஓதிக்கொண்டிருந்தவர் ஒரு முடிவுக்கு வந்துவிட, அடக்கமாட்டாது சிரித்தான் ஹர்ஷத்.

“யார் கிரி இது? கரெக்டா காம்ப்ளான் டப்பி சைஸ் இருக்கா?” ஆர்வத்துடன் வந்தவளின் மீது படிந்தது ஹர்ஷத்தின் பார்வை.

“நம்ம ராமுதாத்தா பேத்தி ஆனந்திடா. அதிகம் பார்த்துருக்க மாட்ட, அங்க அவர் வீட்டுல தான் இருக்கா” என்றான் கிரி.

அதேநேரம்” இந்த ஓட்டடப்பாதான் நம்ம ஐயாவோட தம்பியாக்கா?” ரஞ்சனியிடம் அவனை திட்டிக்கொண்டிருந்தாள் ஆனந்தி. அவளது உயரத்தை பற்றி கிண்டல் செய்ததால் அவளுக்கு கோபம் வந்திருந்தது.

“தம்பி இங்க பார்த்து மந்திரத்தை சொல்லுங்கோ. முகூர்த்த புடவையை எடுத்துட்டு வாங்கோ” அவர் குரல் கொடுக்க, நிகா புடவைத்தட்டை எடுத்து வந்து கொண்டிருக்க, அவள் பின்னோடு இறங்கி வந்து கொண்டிருந்தான் நூவன்.

“அங்க பார்த்திங்களா? அய்யர் புடவைதான கேட்டாரு? இலவசமா எங்கண்ணனும் கூட வர்றான்” என்றதில் சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டான் கிரி.

நூவன் நேரே வந்தவன் ஹர்ஷத்தின் பின்னங்கழுத்தை பிடித்து அழுத்த,

“ஐயோ அண்ணா விடு‌‌. உன் பெருமையைதான் இவ்வளவு நேரம் பேசுனேன்” என்று கூற, அனைவரும் அவர்களது சம்பாக்ஷணையை சுவாரசியமாக பார்த்துக்கொண்டிருந்தனர்.

“இல்ல ஐயா, இவர் பொய் சொல்றாரு. உங்களை கிண்டல் பண்ணாரு” என்றாள் ஆனந்தி.

“ஏய் ஆனந்தி நீ எப்போ வந்த?” நிகாவும் , நூவனும் ஒன்றாக கேட்க, இப்போதுதான் என்று பதிலளித்தாள் அவள்.

“பார்றா இந்த காம்ப்ளான் டப்பாவ நமக்கு மட்டுந்தா தெரியலையா? நீங்க கூட சொல்லலயே அண்ணியாரே? உங்க எஸ்டிடில இவ பகுதி மட்டும் எனக்கு எப்படி மிஸ் ஆச்சு” வாலில்லாமல் சேட்டை செய்து கொண்டிருந்த கொழுந்தினை பார்த்து சிரித்துவிட்டு, ரஞ்சனியை புடவை மாற்ற அழைத்துச் சென்றாள் நிகா. உடன் ஆனந்தியையும் அழைத்துச்செல்ல ஹர்ஷத்தின் பார்வை அவளை பின்தொடர ஆரம்பித்தது.

“நந்து கிளம்பலாமா?” தேவதையென தயாராகி வந்திருந்த ரூபாலியை பார்த்து ஒருநிமிடம் அயர்ந்து நின்றான் சேனா.

இந்த ஒருமாத காலத்தில் அவர்களுக்குள் நிறைய புரிதல் ஏற்பட்டிருந்தது. இடையில் கௌசல்யாவும் ரூபாலியின் தந்தை வந்து பேசிய விஷயத்தையும் அவளுக்காக அவள் காத்திருந்ததையும் எடுத்துக்கூற, சிறிது சிறிதாக அவள்புறம் சாயத்தொடாங்கியிருந்தது அவனது மனம்.

அவனும் இந்த ஒருமாத காலமும் கவனித்துபார்த்து விட்டான், நூவன் தனது கனவு தொழிற்சாலைக்கான திட்டத்தை தொடங்கவும் இல்லை. அதன் தொடார்பாக எந்த விஷயமும் அவனது காதுகளுக்கு வரவும் இல்லை.

இடையில் எதேர்ச்சையாக, வணிக வளாகத்தில் அவர்களை சந்தித்த போது கூட மிகவும் சந்தோஷத்துடனே பேசினாள் நிகா. பார்த்த மாத்திரத்திலேயே, அவளும் ரூபாலியும் தோழிகளாகி விட, இதோ கிரியின்  கல்யாணத்திற்கும் அவள்தான் இவர்கள் இருவருக்கும் அழைப்பு விடுத்திருந்தாள்.

“ரொம்ப அழகா இருக்க ரூபி” முதன்முதலாக அவனிடம் இருந்து வந்த பாராட்டில் அவள் அணிந்திருந்த சிகப்பு நிற லெஹங்கவிற்கு போட்டியாக சிவந்திருந்தது அவளது முகம்.

அவளது பளிங்கு நிறத்தில் தனியாக தெரிந்த சிகப்பில் ஈர்க்கப்பட்டவனாக,

“என்ன உனக்கு இப்படி அடிக்கடி சிவக்குது” அவளது கன்னங்களை தொட, கண்களை இறுக மூடிக்கொண்டாள் அவள்.

“கண்ணைத்திற ரூபி” சேனாவின் மென்குரலில், அவள் கண்களை திறக்க, காந்தமாக அவனை சுருட்டி இழுத்தது அவளது பார்வை. அதற்குமேல் கட்டுப்படுத்த முடியாது, அவளது கன்னங்களை அவனது இதழ்கள் சுவைக்க, பற்றுகோலாக அவனையே பற்றிக்கொண்டாள் அவள்.

கடிகாரச்சத்தத்தில் அவர்களது கவனம் கலைய, தனது செயலில் வியந்தவனாக விலகி நின்றான் சேனா.

“இன்று என்னவாயிற்று எனக்கு?” அவனது தலையை கோதி கொள்ள, இன்னும் சற்றுமுன் கிடைத்த தன்னவனின் அருகாமையிலிருந்து வெளிவர முடியாது, தன்னை முயன்று சமன்படுத்திக் கொண்டிருந்தாள் ரூபாலி.

“சா.. ” சாரி என்று சொல்ல வந்தவனின் இதழ்களை சிறைசெய்திருந்தாள் அவள்.

நடந்து முடிந்த செயலில் அவன் திளைத்திருக்க, ” நடந்த எல்லாமே நமது காதலின் வெளிப்பாடுதான். சாரி கேட்டு , அதை கொச்சைப்படுத்திடாதிங்க நந்து” என்றவள் முன்னே நடந்து சென்று காரில் ஏறிக் கொண்டாள். அவளது பேச்சில் மகிழ்ந்தவனாக, தானும் காரில் ஏறி அமர்ந்தவன், அவளது கைகளை தன் நெஞ்சோடு ஒருமுறை அழுத்திக் கொண்டவன், மண்டபத்தை நோக்கி ஓட்டினான் அவன்.

இங்கு பார்லரிலிருந்து வந்தவர்களுடன் சேர்ந்து ரஞ்சனிக்கு சேலை கட்டி முடித்திருந்தாள் நிகா.

“நீங்க போய் முதல்ல  சாப்பிட்டுடுங்க..” உதவிப்பெண்களை உபசரித்து ஆனந்தியிடம் அவர்களை கவனிக்க சொல்லி  அனுப்பி வைத்தாள்.

“ரொம்ப அழகா இருக்கே ரஞ்சு. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு” அவளை உச்சிமுகர, நாணத்துடன் சிரித்தாள் ரஞ்சு.

” மதர் வந்துட்டாங்களா அக்கா?”

“இந்நேரம் வந்துருக்கனும். என் கல்யாணத்துக்கு தான் வரலை. உன் கல்யாணத்துக்கு கண்டிப்பா வரனும் சொல்லிட்டுதான் வந்தேன்” பேசிக்கொண்டே வந்தவள், சட்டென்று பிடிமானமில்லாது தள்ளாடினாள்.

அவளை பிடித்து அங்கிருந்த சேரில் அமர வைத்த ரஞ்சனி” அக்கா என்னாச்சு?” என்று பதறியவள், அருகிருந்த தண்ணீரை நிகாவின் முகத்தில் தெளித்தாள்.

தண்ணீரை வாங்கி பருகியவளுக்கு அதுவும் முடியாமல் வாந்தி வருவது போல இருக்க, முகத்தை சுளித்தாள் நிகா.

அவளையே பார்த்துக்கொண்டு இருந்த ரஞ்சனி” அக்கா நான் வேணுன்னா என்ஜேயண்ணாவ கூப்பிடட்டுமா?” என்று பதற,

“ஒண்ணுமில்லை ரஞ்சு. நான் நல்லாருக்கேன். இந்த நாலஞ்சு நாளாவே என்னால சரியா சாப்பிட முடியலை. தண்ணி குடிச்சா கூட வாந்தி வர மாதிரி இருக்கு” சற்று அயர்ந்தவளாக கூற, விஷயத்தை ஊகித்து விட்டாள் ரஞ்சனி.

“அக்கா..‌ஆஆ” சந்தோஷத்துடன் அவளை கட்டிக்கொள்ள,

“ஹேய்.. சேலை மேக்கப் கலைய போகுதுடி. குதிக்காத” அவளை அடக்கினாள் நிகா.

“அட போங்கக்கா. ஜூனியர் என்ஜே வரப்போற சந்தோஷத்த விட இதுவா முக்கியம்” என்று கூற, அவள் கூறிய விஷயத்தில் மீண்டும் ஒரு முறை தலை சுற்றியது அவளுக்கு.

“யாருமில்லாத அனாதைன்னு எத்தனை நாள் வருத்தப்பட்டிருப்போம். நம்ம சொந்தங்கள், நமக்கு பிள்ளைங்கக்கா” மேலும் பேசிக்கொண்டே போனவளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு, தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டாள் நிகா.

“சரி வா நேரமாச்சு. இதை அப்பறமா நான் டாக்டர்கிட்ட பரிசோதனை பண்ணிட்டு முடிவு பண்ணிக்கிறேன். நீ இதே சந்தோஷத்தோட வா” என்றவள் ரஞ்சனியை மணவறைக்கு அழைத்துச்சென்றாள்.

அங்கு சேனாவும் ரூபாலியும் வந்திருக்க, அவர்களிடமும் நின்று பேசியவர்கள், மணவறையில் ஏறினர்.

அனைவரின் ஆசியையும் ஏற்றுக்கொண்டு, அட்சதை மழை பொழிய, ரஞ்சினியின் கழுத்தில் மங்களநாணை பூட்டினான் கிரி. முதல் இருக்கையில் அமர்ந்து , அனைத்தையும் கண்கலங்க பார்த்துக்கொண்டிருந்தார் நிவேதா.

“நான் நாளைக்கு ஊருக்கு கிளம்பறேன் ஸ்ரீனிகா” விடைபெறும் போது அவளிடம் கூறினான் சேனா.

“வந்த வேலையெல்லாம் முடிஞ்சதா சார்? சீக்கிரம் உங்க கல்யாண பத்திரிக்கையும் அனுப்புங்க” அருகில் நின்றிருந்த ரூபாலியை பார்த்து கண்ணடித்துக்கொண்டே கேட்க, நாணப்புன்முறுவல் பூத்தாள் அவள்.

“அது உன்கைல தான் இருக்கு ஸ்ரீனிகா” என்றான் சேனா.

“நானா? நான் என்ன பண்ண? எந்த உதவின்னாலும் தயங்காம கேளுங்க சார்?” என்றாள் அவள்.

“இன்னும் உன்பேர்ல இருக்குற இடத்தை பற்றி முடிவெடுக்காம இருக்குற  உன் கணவன் மேல எனக்கு நம்பிக்கை வரலை ஸ்ரீனிகா. அந்த விஷயம் தெளிவாகும் வரைக்கும் நான் கல்யாணம் செய்துக்க போறதில்லை. ஒரு தோழனாக உனக்கு தோள் கொடுக்க வேண்டிய தருணம் வந்தா, அதுக்கு தடையா எந்த நிர்பந்தமும் உறவும் எனக்கு இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்” அதில் ரூபாலியின் முகம் வாட, அவனது பேச்சில் கோபம் வரப்பெற்றவளாக,

“போதும் சார். உங்க லிமிட் தான்டி பேசறிங்க. என் கணவருக்கு நான்தான் முக்கியம். இதுக்காக நீங்க உங்க வாழ்க்கையை தியாகம் செய்ய வேண்டிய தேவையில்லை? இதை நாளைக்கே உங்களுக்கு நிரூபிச்சு காண்பிக்கறேன்” என்றவள் திரும்பி சென்று விட்டாள்.

அனைத்தையும் தூரத்திலிருந்து கவனித்துக்கொண்டு தான் இருந்தான் நூவன்.

அதன்பின்பு மணமக்களுக்கு தேவையான சடங்குகளை முடித்து அனுப்பி வைத்தவர்கள், வீடு திரும்ப நள்ளிரவு ஆகியிருந்தது.

வந்ததும் களைப்பில் உறங்கிவிட, சேனா கூறிய விஷயம் மனதை அரித்தாலும் அதை ஒத்தி வைத்தவள், அசதியில் உறங்கி விட்டாள்.

காலையில் எழுந்தவளுக்கு முதல் வேலையாக சேனா பேசியது ஞாபகம் வர, குளித்து முடித்து தயாரானவள், ரஞ்சனியிடம் பேசிவிட்டு கணவனுக்காக தங்களது அறையில் காத்திருந்தாள்.

உணவை முடித்தவன் மேலே ஏறிவர, வெளியே செல்ல தயாராக இருந்த மனைவியை பார்த்து யோசனையானான்.

இருந்தாலும் மனைவியருகே அமர்ந்தவன், ” நிகாபேபி   சூப்பரா இருக்கடி. முதல் பகல் கொண்டாடிடுவோமா?” வழக்கம்போல் அவளை சீண்ட, அவனை அவள் தள்ளிவிட, அவளையும் இழுத்துக்கொண்டு கட்டிலில் சரிந்தவனை  விலக்கி எழுந்தமர்ந்தாள் நிகா.

“என்னாச்சு நிகா? ஏன் டென்ஷனா இருக்கடா?” என்று கேட்க, சேனாவுடன் நேற்று நடந்த உரையாடலை சொன்னாள் அவள்.

“ஓ…‌” என்றுமட்டும் கூறிவிட்டு அவன் எழுந்திருக்க,

“இன்னைக்கு இந்த விஷயத்துக்கு எனக்கு பதில் தெரிஞ்சாகனும்” உறுதியுடன் அவளும் எழுந்து நின்றாள். அதில் அவனுக்கு கோபம் வர,

“எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு புரியாதாடி??” கோபத்தில் அவளது கைகளை பிடித்த பிடியில் எலும்பு உடைந்து நொறுங்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது நிகாவிற்கு. வலியை காட்டிக்கொண்டால் அது ஸ்ரீனிகா இல்லையே, பல்லைக்கடித்து பொறுத்துக்கொண்டவள்,

“உன்னை எதுக்கு நான் புரிஞ்சுக்கனும்??” அவனது அருகாமையும், அவனது வாசமும் அவளை உள்ளூர இம்சித்து கொண்டிருந்தது.

“உனக்கு ஸ்ரீனி பேரு வச்சதுக்கு பதிலா ராங்கின்னு பேரு வச்சுருக்கனுன்டி” அவ்வளவு நேரம் இருந்த கோபம் மாறி மனைவியின் அருகாமை, அவனையும் என்னவோ செய்தது.

“ஆமா நீதான் என்னை பெத்த பாரு ?? மாத்தி மாத்தி பேரு வைக்க?? உன்கூட பேச எனக்கு இப்ப நேரமில்லை?? நான் வக்கீல்சார பார்க்க போய் ஆகனும்”  தனது கைகளை விடுவித்துக்கொள்ள முயற்சி செய்தாள்.

அவளது முயற்சியை நொடியில் முறியடித்து, தனது மார்போடு அவளது முகத்தை அழுத்தியவன்,

“சொன்னா கேளுடி” கணவனது இறங்கிய குரல் அவள் உயிரை உருக்க, இருந்தாலும் அவன் அன்று பேசியதற்காக, வீம்புடன் தலையை விலக்கியவள், அவனை விட்டு விலகி நின்று கொண்டாள்.

உண்மையை சொல்ல வேண்டிய தருணம் வந்துவிட்டதை உணர்ந்து கொண்டவனாக,

“சரி சொல்றேன். வா இங்க வந்து முதல்ல உட்காரு” என்று கூற, அவனருகே வந்தமர்ந்தாள் அவள்.

ஆதி முதல் அந்தம் வரை அவளது பெற்றோர் விஷயத்தில் நடந்த அனைத்தையும் கூறினான் அவன். வாசன் மாமாக்காக தேட வந்து,

“உன்னை பார்த்த முதல் நொடியே உன்மீது காதல் கொண்டு மணந்தவன்டி. என்மேல உன்னால எப்படி சந்தேகப்பட முடியது?” என்று கேட்க, கண்ணீருடன் அவனை கட்டிக்கொண்டாள் அவள்.

“இன்னொரு விஷயத்தையும் நீ அவசியம் தெரிஞ்சுக்கனும். இது சம்பந்தப்பட்டவங்க வாய்மூலமா வரனுன்னுதான் நான் இன்னும் யார்கிட்டயும் சொல்லலை. உன்னைப்பற்றிய உண்மையை கிரியையும் சொல்ல விடலை” என்றவன் உண்மையை கூற, திகைத்து அமர்ந்திருந்தாள் அவள்.

எழுந்து சென்று அவளுக்கு தண்ணீர் எடுத்து வந்தவன், கையில் சில கோப்புகளையும் எடுத்து வந்தான். அதில் அவளது சொத்துக்களுக்கு இரண்டு மடங்காக , முழு திட்ட வரைவுகளுடன் ஆசிரமத்திற்கான அனைத்து திட்டங்களும் அடங்கியிருந்தது.

“உனக்கு பிடிச்சா நீ இதை ஓத்துக்கிட்டு எனக்கு நிலத்தை கொடு. இல்லை உன் சொத்தை நீ தாராளமா ஆசிரமத்துக்கு எழுதிவை. உன் கையால ஆரம்பிச்சாதான் என் கனவுத்தொழிற்சாலை உருவாகும். இல்லைன்னா அந்த திட்டத்தை கைவிடலான்னு நான் முடிவு பண்ணிட்டேன். எல்லாம் தெளிவாயிடுச்சா?” அவளது கன்னத்தை பிடித்து நீர் புகட்டிக்கொண்டே அனைத்தையும் சொல்லி முடித்திருந்தான்.

இத்தனை காரியங்களையும் செய்துவிட்டு, அமைதியாக அமர்ந்திருந்த கணவனின் முகம் முழுவதும் முத்தமிட்டவள்,

“ஐ லவ் யூ.. லவ் யூ நூவி” மனதார தன் காதலை அவன் முன் ஒப்புக்கொள்ள, அவளை இறுகக்கட்டிக்கொண்டு தன் நெஞ்சிற்குள் பொதிந்து கொண்டான்.

சற்றுநேரம் அவனது அன்பில் இளைப்பாறியவள், “சீக்கிரம் டாக்குமென்ட்ஸ் ரெடி பண்ணுங்க. நம்ம தொழிற்சாலையை ஆரம்பிக்க, நான்தான் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைப்பேன்” என்று கூற, அவள் கூறிய வார்த்தையில் ,

“என் நிகா” என்று கட்டிக்கொண்டான் அவன்.

சற்றுநேரம் அவர்களது உலகில் அவர்கள் சங்கமித்திருக்க, மீண்டும் தயாராகி வந்தவள்,

“சரி நான் சேனா சாரை பார்த்து விஷயத்தை சொல்லிட்டு வரேன்” என்று கிளம்ப,

“இப்போ வேண்டாம் பேபி. இன்னொரு நாள் சேனாவை பார்த்து நானே பேசறேன்” என்று தடுத்தான் நூவன்.

“இல்லை நூவி இதை நான்தான் சொல்லியாகனும். என் கணவரை பத்தி அவர் இனி அப்படி பேசகூடாது” என்று கூற,

“சரி எல்லா விஷயத்துக்கும் முடிவு பண்ணிட்ட, விடுபட்ட மற்றொரு விஷயத்துக்கு என்ன முடிவு?” என்று கேட்க,

“அவங்க யாராயிருந்தாலும் நான் மன்னிக்க தயாராக இல்லை” என்றவளின் வார்த்தையில், அவளது உணர்வுகளை புரிந்து கொண்டவனாக எழுந்து வந்தான் அவன்.

“நிகா…”

“வேண்டாம் நூவி. இந்த விஷயத்தை இப்போ பேசாதிங்க”என்றவள் அவனை ஒருமுறை  அணைத்து விடுவித்து விட்டு கிளம்ப,

“கண்டிப்பா இப்போ போய் ஆகனுமா?” மீண்டும் கேட்க,

“நான் போயே தீருவேன்” அவன் சுதாரிக்கும்முன்பே அறையை விட்டு வெளியேறியிருந்தாள்.

தனியாக காரை ஓட்டிச் சென்றாலும், சற்றுநேரமே லயித்திருந்த கணவனது மார்பில் ஒட்டியிருந்த வியர்வையின் வாசம் அவனும் உடனிருப்பதை போல புதுதெம்பளிப்பது, வியப்பாக இருந்தது அவளுக்கு.

சேனாவிடம் அவள் விஷயத்தை தெளிவுபடுத்தும் முன்பே, அவளது கார் விபத்துக்குள்ளாகி , மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக செய்தி வர, அங்கு குடும்பமே அவளது உயிருக்காக பிரார்த்தித்துக்கொண்டிருந்தது.

நீங்காத இரவொன்று

வேண்டும்….அதில்

நிலையான கனவாக

நீ நிலைக்க வேண்டும்

திமிராகும்…..

அத்தியாயம்-35:

அந்த ஐசியூவின் வாயிலில் நின்று அழுது கொண்டிருந்தனர் உஷாந்தினியும், ரஞ்சனியும். முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது கரும்பாறையாக இறுகி அமர்ந்திருந்தான் நூவன்.

மருத்துவர்கள் கேட்கும் பொருட்களை எல்லாம் வாங்கிக்கொடுத்து அலைந்து கொண்டிருந்தான் ஹர்ஷத். அனைவரும் நிகாவிற்காக பிரார்த்திக்கொண்டிருக்க, அமர்ந்திருந்த நூவனின் கன்னத்தில் ஓங்கி அறைய வந்தவனின் கையை பிடித்து தடுத்திருந்தார் ஜேபி.

“விடுங்க இவன கொல்லாம நான் விடமாட்டேன். ஸ்ரீனிகாவோட இந்த நிலைமைக்கு இவன்தான் காரணம்” அவனை அடிக்க வந்த சேனாவை ரூபாலியும், ஹர்ஷத்தும் பிடித்து தடுத்துக் கொண்டிருந்தனர்.

“சேனா அவசரப்படாத…. சொல்றத கேளு” ஜேபி சமாதானப்படுத்த முயற்சிக்க,

“உங்க அருமை மகனை கேளுங்க சார். இந்த விபத்து ஏற்படுத்துனதே அவன்தான்” அவர்களது கையை மீறி துள்ளிக்கொண்டிருந்தவனை பார்த்து அவனருகே எழுந்து வந்தான் நூவன்.

பின்பு அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன்,

“ஆமாண்டா. நான் தான் செஞ்சேன். இப்ப என்ன அதுக்கு?” அவனது வார்த்தைகள் கொடுத்த காயத்தில் அனைவரும் திகைத்து நின்றனர்.

இந்த வாக்குவாதங்கள் மருத்துவர் அங்கு வந்தவர்,

“சாரி சார் அவங்க உயிருக்கு போராடிக்கிட்டு இருக்காங்க. இனி அவங்களை காப்பாத்தறது கஷ்டம்தான்‌‌. இந்த ஃபார்ம்ல நீங்க சைன் பண்ணுங்க நூவன்” தலைமை மருத்துவர் அவனிடம் கையெழுத்து வாங்க நீட்ட, அதிர்ச்சியில் அருகில் இருந்த இருக்கையில் பிடிமானம் இல்லாது விழுந்தான் நூவன்.

“அக்கா…ஆஆஆ” ரஞ்சனியின் வீறலில் மருத்துவமனையே அதிர்ந்தது.

“ரனு.. ரனு… இங்க பாரு.. கன்ட்ரோலா இரு” கிரி சமாதானப்படுத்த,

“எப்படி மாமா முடியும்?? அக்கா கர்ப்பமா வேற இருந்தாங்க மாமா” கிரியை பற்றிக்கொண்டு அவள் கூறிய புதிய விபரத்தில் மூச்சடைத்தது நூவனுக்கு. ஏனெனில் இந்த விபரம் அவனுக்குமே புதிது.

அவன் யோசித்துக்கொண்டிருக்கும் போதே, அவனது கன்னத்தில் இடியாக இறங்கியது நிவேதாவின் கைகள்.

“பாவி… என் பொண்ணை கொல்றதுக்காகவாடா கல்யாணம் செய்துகிட்ட?” மாற்றி மாற்றி  அவனை அறைந்துவிட்டு கதறி அழ, அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

உஷா முதலில் சுதாரித்தவர், ” நிவி எழுந்திரு… என்ன சொல்ற நீ? ஸ்ரீனிகா உன் பொண்ணா? நவிகாக்கு பிறந்த பொண்ணில்லயா? அவனும் கிரியும் இரட்டைப்பிள்ளைங்கன்னு சொன்னானே? உன் குழந்தை இறந்துட்டதுல்ல? நீ என்ன இப்படி சொல்ற?” என்று கேட்க, பொங்கி அழுதார் நிவேதா.

“இல்லை அண்ணி. என் குழந்தை சாகலை. என் பொண்ணுதான் அவ” என்றவர் ,

“என் மாமியார் செத்துட்டதா நினைச்சு மாத்தி வைச்ச குழந்தை சாகலை அண்ணி. கொஞ்சநேரம் கழிச்சு அழுததா அன்னைக்கு குழந்தைங்களை மாத்தி வச்சப்போ இருந்த நர்ஸ் எனக்கு சொன்னாங்க. நவிகாவிற்கு பிறந்த பெண்குழந்தை தான் ஜன்னி கண்டு இறந்துடுச்சு. கிரி அவங்க குழந்தை . ஸ்ரீனிகா என் பொண்ணு” முகத்தில் அடித்து அழ,

“அப்பறம் ஏன் இந்த உண்மையை யாருக்கும் சொல்லல? உன் பொண்ணுன்னு சொல்றதுல உனக்கு என்ன தயக்கம்? பெத்த பிள்ளையை உன்னால எப்படி ஒதுக்கி வைக்க முடிந்தது?”

“நான் செஞ்சு கொடுத்த சத்தியம் தான் அண்ணி. மரணபடுக்கைல அத்தை கேட்டதுக்கப்பறம் அதை தட்டிக் கழிக்க முடியலை. அதுமட்டுமில்லாம எனக்கு அவங்க மூலமா  உண்மை தெரிஞ்சு,  இதை நான் விசாரிக்க போனப்பதான்  அந்த நர்ஸ் உண்மையை சொன்னாங்க. எனக்கு எப்படி நடந்துக்கறதுன்னே தெரியலை? உடனே என் பொண்ண பார்க்கனும் போல இருந்தது. சத்தியத்தை மீறி அவளை கூட்டி வரலான்னு நினைச்சப்போ, வாசுமாமா இறந்துட்டாரு. சத்தியத்தை மீறினா வேற எதுவும் நடந்துடுமோன்னு பயமாயிடுச்சு. அதுமட்டுமில்லாம என் கிரி என்னை விட்டு விலகிடுவானோன்னு , என்னால தாங்கிக்கவே முடியல அண்ணி. நான் பெத்த பிள்ளையை விட, உயிருக்குயிரா வளர்த்த பிள்ளைதான் பெரிதா தெரிஞ்சான். அதனாலதான் சேனாவோட விருப்பத்தை தெரிஞ்சுகிட்டு, அவனுக்கு ஸ்ரீனிகாவை கல்யாணம் செய்து வைக்கறதுன்னு முடிவு பண்ணி எல்லாம் செஞ்சேன். ஆனால் இந்த உண்மையை எப்படியோ நூவன் தெரிஞ்சுகிட்டான்” என்று கூறி கதறி அழ, இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று திகைத்து நின்றனர் சேனாவும் ரூபாலியும். சேனாவிற்கு நூவனின் செயல்களுக்கான காரணமும் புரிய ஆரம்பித்தது. அவன் மீது இருந்த சந்தேகமும் விலக ஆரம்பித்தது.

“ஆகமொத்தம் உங்க உருப்படாத சத்தியத்தால மூணு உயிரும் போய் , நீங்களும் நிம்மதி இல்லாம ஆனதுதான் மிச்சம்” நிகாவின் குரலில் அனைவரும் திரும்பி பார்க்க, ஓடிவந்து அவளை கட்டிக்கொண்டாள் ரஞ்சனி.

“ஸ்ரீனிகா.. ” நிவேதா அவளருகே வர, கையை நீட்டி தடுத்து விட்டாள் அவள். கிரி அவரை பரிதாபமாக பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். வளர்த்த பாசம் அன்னையின் துடிப்பை உணர்ந்து கண்ணீர் வடிக்க செய்தது.

“எல்லாம் உங்க வேலை தானா? நல்ல வேலை கார் எடுத்து கொஞ்ச தூரத்துல மயக்கம் வர மாதிரி இருந்ததால நான் காரை நிப்பாட்டினேன் ” நூவனை முறைத்துக் கொண்டு கேட்க, அனைவரும் கண்களில் கொலைவெறியுடன் அவனை பார்த்தனர்.

“ரிலாக்ஸ்… அத்தையை வெளிப்படுத்த எனக்கு வேற வழி தெரியலை? உயிரே போனாலும் அவங்க சத்தியத்தை மீறமாட்டாங்க. அவங்களை வெளிவர வைக்க எனக்கு வேற வழி தெரியலை? அதான் இப்படி ஒரு ஏற்பாடு செஞ்சேன். தண்ணீல ஒரு மயக்க மருந்துதான் கலந்தேன் பேபி. நம்ம பேபிக்கு எதுவும் ஆகியிருக்காதுல்ல?” கவலையுடன் கேட்டு அருகே வர, விலகி நின்று கொண்டாள் ரஞ்சனி.

“நான்தான் இவங்களை எப்பவும் மன்னிக்க போறதில்லை. எனக்கு அம்மா நவிகாதான்னு சொன்னேன்ல உங்ககிட்ட. அப்பறமும் ஏன் இப்படி செஞ்சிங்க? ” அவனை அடிக்க ஆரம்பித்தாள் நிகா.

“உன் பின்னாடியே நானும் வந்துட்டேன் பேபி. உன்னை இங்க கொண்டுவந்து விட்டுட்டு, டாக்ட்ர்கிட்ட எல்லாம் பேசிட்டு, நான்தான் இவங்களுக்கு தகவலே சொன்னேன்” அவளை தனது கைவளைவில் வைத்துக்கொண்டவன்,

“அத்தைக்கு விஷயத்தை சொன்ன அதே நர்ஸ், நிகா இங்க வந்தப்பறம் இங்க மறுபடியும் அத்தைகிட்ட அவங்க பையன் படிப்புக்கு உதவிக்கேட்டு  வந்திருந்தாங்க. அப்பதான் அவங்க யாருன்னு நான் வச்சிருந்த ஆட்கள் மூலமா அவங்க யாருன்னு தெரிஞ்சுகிட்டேன். அலமேலு பாட்டி கௌரவ விளையாட்டுக்கு, அத்தை வாழ்க்கையும், வாசு மாமாவும் பலியானதையும் புரிஞ்சுகிட்டேன். நிகாவை அத்தையோட சேர்த்து வைக்க முயற்சி பண்ணேன். ஆனால் அவ அவங்களை மன்னிக்க மாட்டேனு சொல்லிட்டா” சற்று வருத்தத்துடன் , தான் அறிந்த உண்மைகளை விளக்கினான் நூவன்.

அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, மூக்கில் இரத்தம் வழிய மயங்கி விழுந்தார் நிவேதா. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

உடனடியாக அவரை பரிசோதிக்க, உயர் இரத்த அழுத்தத்தால் , அவரது இருதய குழாய்கள் வெடிக்க ஆரம்பித்திருந்தன. காப்பாற்றும் நிலையை கடந்து விட்டார் என்று மருத்துவர்கள் கைவிரித்து விட, ஸ்ரீனிகாவையும் கிரியையும் பார்க்க ஆசைப்பட்டார் அவர்.

பார்க்க மறுத்த நிகாவை வற்புறுத்தி அழைத்து வர, கிரி அவரருகே அழுது கொண்டிருந்தான். வளர்த்த பாசத்தால் அவரை மன்னித்திருந்தான் அவன். ஆனால் நிகாவால் அவரது செயலை ஏற்க முடியவில்லை.

“என் சுயநலவாதக்காதலால் நீங்க ரெண்டு பேரும் ரொம்பவே கஷ்டப்பட்டுடிங்க. தாயிருந்தும் என் மகள் அனாதையாக வளர்ந்த தண்டனையை விட பெரிய தண்டனை எனக்கு கிடையாது.என்னை மன்னிச்சுடுங்க இரண்டு பேரும். கிரி கண்ணா என்னை மன்னிச்சுடு. மன்னிச்சுடு ஸ்ரீனிகா…” என்று கூறி முடிக்கும்முன்பே அவரது உயிர் கூட்டை விட்டு பிரிந்திருந்தது. அனைத்திற்கும் மூலமாக அமைந்த அவரது சுயநலவாதக்காதல் எல்லோருக்கும் பாடமாக அமைந்தது.

நிவேதாவின் மறுபக்கம் புரிந்தாலும் மனதளவில் அவரை நிகாவால் ஏற்றுக்கொள்ளவும் மன்னிக்கவும் முடியவில்லை.ஆனால் கிரி அவருக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை முறையாகச்செய்ய, தமையனுக்கு துணை நிற்க தவறவில்லை அவள்.

அனைத்து வாழ்க்கைப் பாடங்களுக்கும் மருந்தாக இருக்கும் காலம், அவர்கள் அனைவரின் மனதிலும் மாற்றத்தை சிறிது சிறிதாக ஏற்படுத்திக்கொண்டிருந்தது.

முதன் முதலாக தன்னவளை  அண்மையில் பார்த்த ஆற்றங்கரையில், தன்னுடன் நிறைமாத வயிற்றை தள்ளிக்கொண்டு, கலர் வளையல்கள் கைகளில் மின்ன,  தேர்போல அசைந்து வந்த மனைவியை கண்களால் நிரப்பிக்கொண்டு நடந்து கொண்டிருந்தான்  நூவன்.

“நூவி உன்னை இப்படி குறுகுறுன்னு என்னை பார்க்காதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்” கணவனது பார்வையின் வேகம் தாளாது அவள் கடிந்து கொள்ள,

“நான் அப்படித்தான் பார்ப்பேன். உன்னை பார்க்கறதவிட எனக்கு வேற என்ன வேலை நிகாபேபி?” நூவன் மனைவியின் இடையை வளைத்துக் கொண்டு நடையை நிறுத்தினான்.

“அதான அடங்குவியா நீ? ” என்றவள் காற்றில் பறந்து கொண்டிருந்த அவனது தலைமுடியை கோதி விட்டாள்.

“அடக்கமா? அடங்கினா உன் புருஷனா இருக்க முடியுமா நிகாபேபி?” என்றவன் வழக்கம்போல் வம்பிழுக்க, அவனது ஆசைப்படி நிகாவின் முறைப்பும் பரிசாக கிடைத்தது.

“இப்பதான் பேபி ரொம்ப அழகா இருக்க” என்றவன் கன்னத்தோடு கன்னம் இழைய,

“போதும் வாங்க. வீட்டுக்கு போகலாம். எனக்கு களைப்பா இருக்கு” களைப்புடன் பேசியவளை ,

“இதுக்குதான் நான் நம்ம வீட்டிலேயே‌ வாக்கிங் போலான்னு சொன்னேன் கேட்டியா?” நூவன் பதற்றமாக,

“ப்ச்.. இப்ப ஏன் இவ்வளவு பதறுறிங்க? நான் உங்களை முதன்முதல்ல சந்திச்ச இந்த இடத்தை பார்க்கனும் போல இருந்தது நூவி. அதான் இங்க கூட்டிட்டு வரச்சொன்னேன்” தன்னைப்போலவே மனைவியும் நினைத்திருப்பதை உணர்ந்து, உணர்ச்சிவசத்தில் அவளை கட்டிக்கொண்டவன் , வயிறு இடித்த பின்பு அசடு வழிய விலகி நிற்க, கணவனை பார்த்து கலகலத்துச்சிரித்தாள் நிகா.

வீட்டிற்கு வந்தவள் சிறிதுநேரம் ஓய்வெடுத்து விட்டு கீழே இறங்கி வர, மனைவியின் மீது முழுபார்வையும் வைத்திருந்தான் நூவன். மருத்துவர் பிரசவகாலம் நெருங்கிவிட்டதற்கான அறிகுறிகளை சொல்லியிருக்க, அன்றிலிருந்து அவனது பார்வை வட்டத்தை விட்டு அவளை நகர விடவில்லை அவன்.

“டேய் அண்ணா, கல்யாணம் ஆகி இத்தனை மாசம் முடிஞ்சுது. இன்னும் அண்ணியை சைட் அடிக்கறதை நிறுத்த மாட்டிங்கிறியே?”எதிரே அமர்ந்திருந்த  ஹர்ஷத் அவனை வம்பிழுத்தான்.

நூவன் அவனை பார்த்து  பல்லைக்கடிக்க, “தம்பி… ” நிகாவின் ஒற்றை அதட்டலில் ,

“உங்க வீட்டுக்காரரை நான் ஒண்ணும் சொல்லலை அண்ணி” அமைதியாக அமர்ந்து கொண்டான் ஹர்ஷத். இப்பொழுது நிகாவின் செல்லப்பிள்ளையாக மாறிப்போயிருந்த தம்பியை நினைத்து சிரித்தான் நூவன்.

வந்தவள் கணவனருகே அமர்ந்து அவனது தோள் சாய்ந்து கொள்ள, அத்தருணத்தை அழகாக புகைப்படமாக்கியது ஹர்ஷத்தின் அலைபேசி.

அடுத்தநாளே அவளுக்கு வலியெடுக்க, மருத்துவமனையை ஒருவழியாக்கினர் அண்ணனும், தம்பியும்.

“நான்தான் சொன்னேன்ல அந்த பொம்பளைய பார்த்தாலே டாக்டர் மாதிரி இல்லண்ணா? பாட்டி மாதிரி இருக்குன்னு?” அவர்களது குடும்ப மருத்துவரை பேசியவனின் கைகளில் கிள்ளினார் அவர்.

“அவன் சொல்றதுல என்ன தப்பு ஆன்ட்டி? அஞ்சு மணி நேரம் ஆச்சு? என் பேபி பெயின்ல துடிக்கறா?” நூவனும் அவரை வெறுப்பேத்த,

“ஆமாம் மச்சி. வா நாம வேற ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம்” அவனுக்கும் ஒரு பங்கு மேலே பேசினான் கிரி.

“உஷா இந்த மூணு தடியன்களையும் வெளிய கூட்டிட்டு போனாதான் உன் மருமகளுக்கு நான் நிம்மதியா பிரசவம் பார்க்க முடியும்” அவரது எச்சரிக்கையில் , உஷா ஜேபியை ஒரு பார்வை பார்க்க, மூவரையும் இழுத்துக்கொண்டு ஒரு ஓரத்தில் அமர வைத்தார்.

ஒன்பது மணிநேர போராட்டத்திற்கு பிறகு, சுகப் பிரசவத்தில் நூவனின் மகன் இவ்வுலகில் காலடி எடுத்து வைக்க, குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது. குழந்தையை கூட பார்க்காது, மனைவியை தேடி சென்ற மகனது செயலில் உஷாவின் மனம் நிறைந்தது.

மனைவியைப்பார்க்க அவன் காத்திருக்க, சாதாரண அறைக்கு மாற்றிவிட்டு , அவனுக்கு தகவல் தெரிவிக்க, தன்னைப் பார்த்து புன்னகைத்த அந்த சோர்விலும் தெரிந்த அவளது கம்பீரத்தில் இன்றும் மயங்கிப் போனான் அவன்.

“ஐ லவ் யூ நிகாபேபி” என்றவன் நெற்றியில் முத்தமிட,

“லவ் யூ டூ நூவி” உயிர் உருக்கிய அந்த வார்த்தைகளில் இன்னொரு முறை புதிதாக பிறந்தான் அந்த அருமைக் காதலன்.

 உன்னை நினைத்து

 என்னை மறப்பதுதான்

காதலென்றால்

ஆயுள் முழுதும்

வாழ்வேன்

எனை மறந்து என் திமிரழகி……

மூன்று வருடங்களுக்கு பிறகு,

மிகவும் கோலாகலமாக அமைக்கப்பட்டிருந்தது அந்த தோரண வாயில்.  இயந்திர உலகமொன்று தனியாக உருவாகி விட்டதோ வென்று வியக்கும் வண்ணம், பாதி ஊரை வளைத்திருந்தது நூவனின் கனவு தொழிற்சாலை.

” என்.எஸ்.கே இண்டஸ்ட்ரீஸ்” பெயர்ப்பலகை மட்டும் எந்த திக்கிலும் இருந்தாலும் தெரியும் வண்ணம் உயர்ந்திருக்க, அதை உருவாக்கியவனோ தனது மகளின் கையில் கழுத்தைக் கொடுத்து கொண்டு அமர்ந்திருந்தான்.

“தாட்… டீ” அவளது அழுத்தமான குரல் அவளது அன்னையை பிரதிபலிக்க,

“கோணல சதி..(ரி) பண்ணிட்டே” டையை சரிசெய்துவிட்டு , அவனது கைகளுக்குள் இருந்து இறங்கி ஓடினாள் அவனது அருமை மகள் கமலிகா. ஒவ்வொரு செயலிலும் மனைவியை நினைவுபடுத்தும் மகளென்றால் உயிர் அவனுக்கு.

“அடியே மகளே எங்க ஓடற? உங்கப்பாக்கு மட்டுந்தான் டைய சரி பண்ணுவியா? இந்த சித்துக்கு யாரு பண்றது?” ஹர்ஷத் கமலிகாவை தூக்கிக் கொள்ள, அவனது கைகளில் துள்ளாமல் நின்று கொண்டவள்,

“உனக்கு சித்தி போதுவா.. சித்து” என்று கூற,அவளில் பதிலில் சிரித்தவன்,

“எப்படின்னா இப்படி பக்காவா அண்ணியாரை ஜெராக்ஸ் போட்டுருக்க?” அவள் பின்னால் வந்துகொண்டிருந்த நூவனை கேட்க, தலையிலடித்து கொண்டான் அவன்.

“சித்தியை யாரும் எனக்கு கட்டி வைக்க மாட்டேங்கறங்கடா பேபி? அதனால நீதான் போடனும்” என்று போலியாக கண்ணீர் விட, அவனது கன்னத்தில் முத்தமிட்டவள்,

“அழாத சித்து. வா நான் உனக்கு சித்தி வாங்கித்ததே” என்ற மகளின் பேச்சில் முகம் முழுவதும் முத்தமிட்டான் அவளது சித்து.

“நல்லா இருக்கு நீங்க குழந்தைகிட்ட பேசறது?” என்றவாறு ஆனந்தி அங்கு வர,

“ஆஹா.. வந்துட்டாயா வந்துட்டா.. அவ வச்சுருக்குற செடித்தொட்டில இருந்து எட்டிப்பார்க்க என் டார்லிங் வந்துட்டா” ஹர்ஷத் ஆனந்தியை கலாய்த்தான்.

“இவன் வாய் மட்டும் அடங்கவே மாட்டிங்குது  ஆனந்திம்மா. பாப்பாவ கூட்டிட்டு நான் போறேன். இவன நல்லா கவனிச்சு கூட்டிட்டு வா” கையை அவனுக்கு பின்னால் உயர்த்தி முதுகில் நான்கு அடி போடு என்று கூறிவிட்டு சென்றான்.

“ஃப்பூ…ஃப்பூ.. இந்த காம்ப்ளான் பேபிய அடக்க எனக்கு இந்த சின்ன டப்பியே போதும்” என்று அண்ணனிடம்  காலரைத்தூக்கி காண்பிக்க, ஆனந்தியிடம் வெற்றி உனக்கே என்று சைகை செய்துவிட்டு சென்றான் நூவன்.

நூவன் அவ்வாறு செய்யவும், அவனது மகளும் கையை தூக்க,

“டீ பாப்பூ.. உன் சித்துவ அடிக்க நீயுமா கைய தூக்குற?” நெஞ்சு வலித்தவன் போல் அவன் கட்டிலில் சாய கதவை பூட்டிக்கொண்டு உள்ளே வந்தாள் ஆனந்தி.

உள்ளே வந்தவள் அவனை சுற்றி சுற்றி வந்து பார்க்க, “என்ன டார்லிங் வரப்போற கணவனே கண்கண்ட தெய்வம்னு சுத்தி வர்றியா?” என்று கேட்டான்.

அவனை பார்த்து நமுட்டுச்சிரிப்பை உதிர்த்தவள்,

“இல்லை உங்க வாலை எங்க ஒளிச்சு வச்சுருங்கிங்க பார்த்தேன். மித்த அம்சமெல்லாம் கரெக்டா இருக்கு, வாலு மட்டுந்தான் காணோம்” என்று கூற,

“என்னையாடி குரங்குன்னு சொல்ற?” அவளை பிடித்து இழுக்க, பிடிமானம் இல்லாது அவனோடு கட்டிலில் சரிந்தாள் ஆனந்தி.

“என்ன இது விடுங்க மாமா” அவள் விலக முயற்சித்தாள்.

“அதெல்லாம் முடியாது , மூணு வருஷத்துக்குப்பிறகு இப்பதான் உன்னை கிட்டவே பார்க்குறேன்டி செல்லோ” அவள் கன்னங்களில் மாற்றி மாற்றி தன் முத்திரையை பதித்தான்.

அதை சுகமாக உள்வாங்கிக்கொண்டவள்,

“போதும். இவ்வளவு ஏங்குறவரு அப்பறம் ஏன் என்னை படிக்க அனுப்பிச்சிங்க? எனக்கு தான் தோட்டக்கலை தான் நல்லாவே தெரியுமே?” அலுத்துக்கொண்டவளை, பார்த்து சிரித்தான் அவன்.

” அடி என் மக்கு டப்பி. உன் பெயர்ல சொந்தமா தோட்டக்கலை பயிற்சிபள்ளி ஆரம்பிக்கறதுக்கு அந்த படிப்பு நல்லதுடி. இப்ப உன்கிட்டயும் நூறு பேரு வந்து படிக்கறாங்கன்னா எல்லாம் அதாலதான். அது வந்ததால் தான் உன்னால காண்ட்ராக்ட் எடுத்து செய்ய முடியுது. என் வருங்கால பொண்டாட்டி ஜனாபதி கையால் விருது வாங்கினவன்னு சொல்றது எனக்கும் பெருமைதான்” என்றவன் காலரை தூக்கிவிட்டுக்கொள்ள, தன்னை முன்னேற்றமடையச்செய்து அழகு பார்க்கும் காதலனை தன் கண்களில் நிரப்பிக்கொண்டாள் ஆனந்தி.

சிறந்த தோட்டக்கலை நிபுணருக்கான ஜனாதிபதி விருது இந்த வருடம் அவளுக்கு கிடைத்திருந்தது. இதன் மூலக்காரணம் நிகாதான், அவர்களது காதலை அறிந்த பின்பு, ஹர்ஷத்திடம் ஆனந்தியின் திறமையை எடுத்துக்கூற ,தன்னவளை மேம்படுத்தி பார்க்க அவனும் ஆசை கொண்டவனாக, ஆனந்திக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்திருந்தான். அடுத்த வாரம் அவர்களது திருமணமும் நடக்கவிருக்கிறது. இவ்வளவு நடந்தும் தனது ராமு தாத்தாவின் எதிர்பாராத மறைவு அவளை சற்று கவலைகொள்ளத்தான் செய்தது. ஆனால் அவளுக்கு தனிமை உணர்வே ஏற்படுத்தாத வண்ணம், அவள் வளர்த்து வைத்த தொழில் அவளை வேறு எதுவும் எண்ண வைக்காது மூழ்கடித்துக் கொண்டிருந்ததால் அவளால் அந்த இழப்பிலிருந்து  மீண்டும் வர முடிந்தது. அனைத்திற்கும் காரணமானவனை காதலாக அவள் பார்க்க,

“பார்வையெல்லாம் பலமா இருக்கே செல்லக்குட்டி. நீ இவ்வளவு ஆசையா பார்க்குறத பார்த்தா, நம்ம வேணுன்னா முதல்ல ஹனிமூன் போயிட்டு வந்துட்டு, அப்பறமா கல்யாணம் பண்ணிப்போமா டி என் சிட்டுக்குட்டி. அதான் இன்னும் ஒருவாரம் இருக்கே?” என்றவனின் கைகளில் அவளது அங்கங்கள் புதியாய் பிறந்து வர, தன்னையறியாது அவனது வித்தைக்கு சிறிது நேரம் ஒத்துழைத்தவள்,   சட்டென்று சுதாரித்தவளாக அவனை தள்ளிவிட்டாள்.

“ச்ச.. கைக்கு எட்டுனது….” என்று பேச வந்தவனின் வாயை பொத்தியவள்,

“போதும் இதுக்கு மேல ஏதாச்சும் பேசுனிங்க. கடிச்சு வச்சுடுவேன் ” ஒற்றைவிரல் நீட்டி எச்சரிக்க, சரியென்று தலையாட்டினான் அவன்.

“அது… ” என்றவள் திரும்பிப்பார்க்க, கண்ணாடியில் அவள் கட்டியிருந்த காட்டன் புடவை , கசங்கி சுருங்கி சற்றுமுன் நடந்ததை நினைவுபடுத்தி பல்லிளித்தது. அவனும் அதைப்பார்த்து தான் சிரித்துக் கொண்டிருந்தான்.

“எல்லாம் உங்களாலதான். இப்ப எப்படி நான் திறப்பு விழாவிற்கு வர்றது? வீட்டுக்கு போயிட்டு மாத்திட்டு வர்றதுக்குள்ள நேரமாயிடும்” விட்டால் அழுது விடுபவளை போல் பேசினாள் ஆனந்தி.

“டேய் காம்பி. என்னடா இது சின்னபுள்ள மாதிரி? அந்த கப்போர்டை திற. அது முழுசும் உனக்கு புடவைதான் வாங்கி வச்சுருக்கேன்” என்றவனின் பார்வையில் கப்போர்டை திறக்க, அவன் சொன்னதுபோல் புடவையாக இருந்தது.

“எல்லாம் உனக்குத்தான். கல்யாணத்துக்கப்பறம் சர்ப்ரைசா குடுக்கனும் நினைச்சேன்” என்றவன்,

“நீ புடவை மாத்திட்டு வா. நான் வெளியே வெயிட் பண்றேன்”  என்று வெளியேறப்போனவனின் கைகளை ” ஐ லவ் யூ ” சொல்ல  அவள் பிடிக்க,

“நான் வேணும்னா கட்டிவிடவாடி செல்லோ ” என்று கூறியவனை  பார்த்து தலையிலடித்துக்கொண்டாள் அவள்.

“உங்களை திருத்தவே முடியாது போங்க” அவனது முதுகைப்பிடித்து வெளியே தள்ள,கதவருகே சென்று மீண்டும் எட்டிப்பார்த்தவன்,

“ஐ லவ் யூ டூ டி காம்ப்பி” இதச்சொல்லதான பிடிச்ச , என்றுவிட்டு ஓடிவிட்டான்.

“சமர் என்னதிது? இதை போட்டுக்கடா? ” மகனிடம் போராடிக்கொண்டிருந்தாள் நிகா.

“நோ ம்மீ.. எனக்கு அந்த பூட்தான் வேணும்” என்று அடம்பிடிக்க அவனை முறைத்தாள் அவள். அதற்கு அவன் அனைத்துபற்களையும் காட்டி சிரிக்க,

“அப்படியே அப்பனை மாதிரி வந்து பிறந்துருக்கடா” என்று முணுமுணுக்க, சரியாக உள்ளே வந்தனர் நூவனும், கமலிகாவும்.

“வாவ்.. கூல் டாட்.. நீங்களும் நானும் ஒரே மாதிரி சூட்” என்றவன் ஓடிவந்து தந்தையை கட்டிக்கொள்ள, கமலை அவளிடம் தந்துவிட்டு மகனை கட்டிக்கொண்டான் அவன்.

“எஸ்..மை சன்” என்றவன்,

“ஏன் நிகாபேபி அப்பனை மாதிரி பிள்ளைன்னு வாய் மட்டுந்தான் சலிக்குது. முகத்துல அப்படி தெரியலயே” என்றவன் அருகே வர, நிகாவின் தோளில் முகம் புதைத்துக்கொண்டு அவளது ஹேர் கிளிப்பை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள் கமலிகா.

“ஆரம்பிச்சுட்டிங்களா? அத்தை அங்க போய் அரைமணிநேரம் ஆச்சு. இதோட பத்து தடவை கால் பண்ணிட்டாங்க. நீங்களும் உங்க பிள்ளைங்களும் அவ்வளவு சீக்கிரம் நகர மாட்டிங்கிறிங்க?” என்றவள் தனது சேலை கொசுவத்தை சரி செய்து கொண்டே பேச,

“ண்ணா.. நீ இது போத்துக்கோ” நிகாவின் தோளில் இருந்து கமலி கைகாட்டிய ஷீவை எடுத்து வந்தான் சமர்.

“ஓகே கமல்” என்றவன் அதை அணிந்துகொள்ள, அதிசயமாக பார்த்தாள் அவள்.

“டேய்.. இவ்வளவு நேரம் நானும் அதைத்தானடா போட சொன்னேன்” என்று அடிக்க வர, கமலியும் அவள் தோளில் இருந்து இறங்கியவள், அன்னை அடிக்கும்முன்பே அங்கிருந்து அண்ணனை இழுத்துக்கொண்டு ஓடியிருந்தாள்.

“இரண்டும் அறுந்தவாலுங்க” திட்டிக்கொண்டே அவள் திரும்பும் முன்பே ,”நிகா மை லவ்” , என்றவாறே அவளை தனது கைச்சிறைக்கு மாற்றியிருந்தான் நூவன்.

அவனது அருகாமையில் மற்றதெல்லாம் மறந்து போக,  தன்னை மறந்து அவள் “லவ் யூ நூவி”என்றும் கூற, சந்தோஷத்தில் திக்குமுக்காடியது அவனுக்கு.

“இப்பதான் பேபி முழுசா என் பொண்டாட்டியா மாறியிருக்க” அவளை வம்பிழுக்க,

“கொஞ்சம் இடம் குடுத்தா போதுமே பேச ஆரம்பிச்சுடுவிங்க? அண்ணனுக்கும் தம்பிக்கும் உலகவாய்” அவனது உதட்டில் அடித்தாள் அவள்.

“கொஞ்ச இடமா நிறைய இடம் குடுத்துருக்கடி பேபி. என் கனவை நனவாக்க வந்த என் தேவதைப்பெண்” அவளது நெற்றியில் முட்டியவன்,

“ஆமா? அதென்ன அந்த அறுந்தவாலு உன்  கொழுந்தன புருஷனோட சேர்த்துச்சொல்ற? நான் ரொம்ப சமத்துப்பையனாக்கும்” சற்றுமுன் கமல் செய்தவாறு அவளது தோளில் முகம் புதைத்து அவளது வாசம் பிடித்தவனை, இழுத்து நிறுத்துவதற்குள் போதுமென்றாகியது அவளுக்கு.

“கிளம்புங்க நூவி. இன்னைக்கு சீக்கிரம் போனாதான் மதரையும், வார்டன் மேடத்தையும் பார்க்க முடியும்” என்ற மனைவியை பார்த்தவன்,

“சரிடா. வா கிளம்பலாம். ஆனால் இதுக்கெல்லாம் டபிளா திருப்பி கவனிக்கனும் சரியா?” அந்த நேரத்திலும் டீல் பேசியவனின் கைகளில் கிள்ளினாள் அவள்.

“பிசினஸ் புத்தி போகுதா பாரு? பார்க்கலாம்” அமர்த்தலாக கூறியவளிடம் அன்றுபோல் இன்றும் மயங்கியது மனம்.

பிள்ளைகளை அழைத்துக்கொண்டு காரை நோக்கி நடக்கும்போது,நிகாவின் அலைபேசி ஒலிக்க,

“அக்கா என்ன இன்னுமா கிளம்பல?” அங்கு ஒலித்துக்கொண்டிருந்த மேளங்களை மீறி கத்தினாள் ரஞ்சனி.

“ஆன் த வே ரஞ்சு. வந்துட்டோம்”  என்று கூறிக்கொண்டிருக்கும்போது ஹர்ஷத்தும் ஆனந்தியும் அங்கு வந்து சேர்ந்தனர்.

“ஆனந்திம்மா” நிகா வந்து அவளை கட்டிக்கொள்ள,

“ம்ம்.. ஹீம்… டைம் ஆச்சு. எல்லாரும் வண்டியில் ஏறுங்க. மற்றதை அப்புறம் பார்த்துக்கலாம்” நூவன் அவசரப்படுத்த, அனைவரும் வண்டியில் ஏறி புறப்பட்டனர்.

மகளை வரவேற்க விமானநிலையத்திற்கே வந்து காத்திருந்தார் தயானந்த். அவளை கண்ணாற பார்த்தே வருடக்கணக்கில் ஆகி விட்டது அவருக்கு. அந்த அளவிற்கு அவரது மருமகன் சேனா தன் மனைவியுடன் உலகச்சுற்றுலாவுடன் தனது தேநிலவையும் கொண்டாடிக்கொண்டிருக்க குளிர்ந்து போனது பெற்றவரின் மனம்.

தனது தோளின் மீது சாய்ந்திருந்த ரோஜாமலரை மெதுவாக எழுப்பினான் சேனா.

“பிங்கி டால். லேண்ட் ஆகப்போகுது” என்று அவளது காதுகளில் மெதுவாக கூற, வழக்கம்போல் அவளது கன்னக்கதுப்புகள் சிவந்து நின்றன. அந்த சிவப்பில் பித்தேறியவனாக கள்ளூறும் பார்வை பார்த்த கணவனின் கன்னத்தை பிடித்து தள்ளியவள்,

“நந்..தூ.. ” என்று சிணுங்க, அதை ரசித்தபடி அவளது கைகளை பிடித்துக்கொண்டு இறங்கினான் சேனா.

அனைத்து பிரச்சனைகளும் முடிந்த பிறகு, ஒரு வருடம் முழுவதும் தனக்காக காத்திருந்த தேவதையை காதலித்து கரம்பிடித்தான் சேனா. தன்னவனின் மனம் முழுவதும் தான் நிறைந்த பின்பே தன்னை மணம் முடித்தவனின் உயரிய பண்பில் பெருமை கொண்டாள் ரூபாலி.

முதலிரவன்று” டார்லிங். என்னை பார்த்தாலே  சிவக்குற இந்த கன்னக்கதுப்புகள் உனக்கு தனி அழகை கொடுக்குது. என் செல்ல பிங்கிடால்” என்று கொஞ்ச அன்றுமுதல் கணவனது பிரத்தியேக அழைப்பாக மாறிப்போனது.

“இன்னும் இரண்டு வருஷத்துக்குப்பிறகு தான் குழந்தையெல்லாம். அதுவரைக்கும் என் பிங்கிடால திகட்ட திகட்ட காதலிக்கறதுதான் என் முழுநேர வேலையும்” என்றவனின் காதலில் ஜென்மசாதுல்யம் அடைந்து விட்டதாக உருகிப்போனாள் ரூபாலி. அவளது உண்மையான காதலுக்கு விலைமதிப்பில்லாத அன்பை சிந்தி தங்கள் காதலுக்கு மகுடம் சூட்டியிருந்தான் சேனா.

இதோ இப்பொழுதும் நிகாநூவன் அழைப்பில் தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு  வருகை தந்தனர் தம்பதியர் இருவரும்‌.

“பாபா… ” ஓடிவந்து கட்டிக்கொண்ட மகளை கண்ணில் நிறைத்துக்கொண்டார் தயானந்த்.

“மாமா…” சேனா அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்.

“எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கனும் மாப்பிள்ளை” என்று வாழ்த்தினார் அவர்.

சற்றுநேரம் தந்தையும் மகளும் உரையாட,

“கௌசல்யாவை எவ்வளவோ கூப்பிட்டும் வரமுடியாது  சொல்லிட்டா மாப்பிள்ளை” சற்று சங்கடத்துடன் கூறினார் அவர்.

“இதில் சங்கடப்பட ஒண்ணுமில்லை மாமா. நிகா மேல அவங்களுக்கு கோபம் அதான். பரவாயில்லை நேத்து ரூபிகிட்டயும் சொல்லத்தான் செய்தாங்க. என் பொண்டாட்டிக்கு என்னைப் பத்தி தெரியும்” என்றதோடு அவன் முடித்துவிட, தனது கணவனின் கைகளை கோர்த்துக் கொண்டு விழா நடக்குமிடத்திற்கு சென்றாள் ரூபாலி.

” ஏய் மினிபோண்டா ஏண்டி இப்படி துள்ளுற? என்னைக்கட்டிக்கிறேன்னு சொல்லு விட்டுடறேன்” ரஞ்சனியின் ஒன்றரை வயது மகளை ஒருவழியாக்கிக்கொண்டிருந்தான் ஹர்ஷத்.

“போதா.. நீ மாமா வேணா…. ” கத்திக் கொண்டிருந்தாள் அவள்.

“டேய் எருமை அவளை விடு. காம்ப்ளான் பேபி இதெல்லாம் சரியில்ல சொல்லிட்டேன். இவனை கொஞ்சம் கண்டிச்சு வை” ஆனந்தியிடம் புகார் அளிக்க, மத்தாப்பாக வெடித்துச்சிரித்தாள் ஆனந்தி.

“சும்மாவே நீ என்ன சொன்னாலும் சிரிப்பா? இப்ப சொல்லவா வேணும்” என்றவாறே அங்கு வந்தான் கிரி.

“டேய் மச்சான் ஏண்டா? காலாகாலத்துல கல்யாணம் பண்ணு. எதுக்கு என் பொண்ண வம்பிழுக்குற” என்றவன் அவனிடமிருந்து மகளை வாங்கிக்கொள்ள அதுவரை வீறிட்டுக்கொண்டிருந்தவள், தகப்பனின் கையில் சமர்த்தாக இருந்துகொண்டாள்.

“பார்த்தியா இந்த மினி போண்டாவ? ரொம்பத்தான்டி உனக்கு” அவளது கன்னத்தில் மீண்டும் கிள்ளியவன்,

“ஹலோ பாஸ். தேநிலவுங்கற பேர்ல மூணுமாசம் டேராபோட்ட சீனியர்ங்கற மமதைல பேசறிங்களா? எல்லா ரெக்கார்டையும் நாங்க முறியடிக்கப்போறோம். இன்னைக்கே என் காம்ப்பி கூட ஹனிமுன் கிளம்பறேன். தெரியுமா?” என்று காலரை தூக்கிவிட்டவனின் தலை வலியில் அதிர்ந்தது.

“வாங்க அத்தை” கிரி அழைக்க, திரும்பி பார்த்தால் உஷா நின்றிருந்தார்.

“நம்ம தொழிற்சாலை திறந்ததும் முதல் வேலை உன் வாய்க்கு ஜிப் போடறதுதான். அம்மாடி மருமவளே ஒருவாரத்துக்கு இவன் கண்ணுலயே படாத” ஆனந்தியிடம் பேசியவர், அவனை இழுத்துக்கொண்டு சென்றார்.

அவர் சென்று விட, கிரியும் ஆனந்தியும் திரும்பிப்பார்க்க ரஞ்சனி அங்கு இல்லை.‌ சற்றுதூரத்தில் மதரிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.

“எங்களை பார்க்க உங்களுக்கு இவ்வளவுநாளா மதர்? நாங்க வர்றப்பவும் நீங்க ஊரில் இல்லை. அக்கா கல்யாணத்திற்கும் வரலை , என் கல்யாணத்திற்கும் வரலை” என்று சண்டை போட்டிக்கொண்டிருந்தவளை பார்த்து மென்னகை பூத்துக்கொண்டிருந்தார் அவர்.

“உங்க கல்யாணமெல்லாம் நடந்துட்டிருந்தப்போ ஆசிரமத்துக்கு பசங்க ரெண்டு பேர் உயிருக்கு போராடிட்டுருந்தாங்க ரஞ்சனிம்மா. நூவன் உதவியால அவங்களுக்கு வெளிநாட்டில் ட்ரீட்மென்ட்டிற்கு  கூட்டிட்டு‌போயிட்டேன். அதேபோல் சுனாமில குடும்பத்தை இழந்த பசங்க நிறைய பேரை நேரில் சந்திச்சு நம்ம ஆசிரமத்தில் சேர்த்துருக்கேன். நூவன் உதவியால இப்ப நம்ம ஆசிரமத்தின் கிளைகள் தமிழ்நாடு முழுவதும் உருவாக்கியாச்சு. அதுக்கு நல்ல உள்ளங்களை மேற்பார்வையாளர்களாகவும் அமைக்க வேண்டியிருந்தது. வாய்ப்பு கிடைக்கும் போது என் பிள்ளைங்களுக்கு கிடைக்கற நல்லதை நான் விடுவேனா? அதனால தான் மித்த ரெண்டு பிள்ளைங்க சந்தோஷத்தில் கலந்துக்க முடியலை. அதான் இப்போ முழு மனநிறைவோட என் குழந்தைங்களை பார்க்க வந்துட்டேன்” என்று கூற, பழைய ஞாபகங்கள் மேலோங்க கண்ணீருடன் அவரை கட்டிக்கொண்டாள் ரஞ்சனி.

“காட் ப்ளெஸ் யூ‌ மை சைல்ட்” தான் கட்டிக்கொண்டிருக்க, யாரை ஆசிர்வதிக்கிறார் என்று பார்க்க, நிகா அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டிருந்தாள்.

“அக்கா.. ” அவளையும் இழுத்து ரஞ்சனி கட்டிக்கொள்ள , தன் இருபிள்ளைகளின் சந்தோஷத்தில் மிகுந்த சந்தோஷமடைந்தார் அவர்.

“ஹலோ மேடம். பார்த்து எவ்வளவு நாளாச்சு?” சேனாவின் குரலில் அவனை பார்த்து எழுந்து நின்றார் பிருந்தா.

“வாட் அ சர்ப்ரைஸ் சேனா சார். நைஸ் டூ மீட் யூ” என்று கைகுழுக்க, சந்தோஷமாக அவரைப் பார்த்து புன்னகைத்தான் அவன்.

தூரத்தில் ரூபாலியும் நிகாவும் பேசிக்கொண்டிருக்க,அவர்களைப் பார்த்தவர்,

“ஸ்ரீனி தான் உங்க சாய்ஸ் நினைச்சேன்” மனதை மறைக்காது அவர் கூற,

“இன்னும் பெட்டர்சாய்ஸா என் ரூபிய குடுத்துட்டாரு கடவுள். அதனால ஸ்ரீனிகா தோழியாவே நின்னுட்டா” என பதிலளித்தான் சேனா.

“வக்கீல்சாருக்கு பேச சொல்லியா குடுக்கனும்? எஸ் உங்க ரூபிதான் பெஸ்ட் சாய்ஸ். ஸ்ரீனிகூட பேசிட்டிருந்தாலும் அவங்க கவனமெல்லாம் உங்கமேலதான் இருக்கு. ரொம்ப சந்தோஷமாகவும் இருக்கு” கருத்துக்களை மறைக்காது பகிர்ந்துகொண்டு தனது நற்பண்பை காண்பித்தார் பிருந்தா.

” இட்ஸ் மை ப்ளஷர் மேம்” சேனா கூறிக்கொண்டிருக்கும் போதே , பிரதமர் வந்துவிட்டதாக அறிவிப்பு வர, அவரது முன்னிலையில் கம்பீரமாக நடந்து வந்து, அவரை வரவேற்று , தொடக்க உரையாற்றி , தொழிற்சாலையை தொடங்கி வைத்தாள் ஸ்ரீனிகா.

முன்னிருக்கையில் அமர்ந்து அதைப்பார்த்து கொண்டிருந்த ஜேபிக்கு தனது தங்கை நிவேதாவின் ஞாபகம் வந்தது.

“இப்படியிருக்க வேண்டியவடா நிவி நீ? பொல்லாத காதலால் உன்னுடைய உயர்பண்புகள்ளாம் ஒன்னுமில்லாம போயிடுச்சே” தங்கைக்காக வருத்தப்பட்டது அவரது மனம்.

கணவனது வருத்தத்தை புரிந்தவராக உஷா அவர் கைமீது வைத்தவர்,

“முடிஞ்சு போனதை நினைக்காதிங்க. இனி நம்ம பிள்ளைங்க எல்லாரும் சந்தோஷமா நிம்மதியா இருப்பாங்க” என்று பேசியவரின் வார்த்தையில் ஜேபியின் முகம் தானாக மலர்ந்தது.

“சொன்ன மாதிரியே உங்க நம்பிக்கை ஜெயிச்சுடுச்சு சார். வாழ்த்துக்கள்” வாழ்த்தினார் கிருஷ்ணமூர்த்தி.

“என் நம்பிக்கையை ஜெயிக்க வச்சது என்நிகா தான் ஆடிட்டர் சார்” மனைவியின் தோள்மீது கையை போட்டுக்கொண்டவன், ” அவளுடைய பார்வைல நான் கொஞ்சம் தவறியிருந்தாலும் என் திமிரழகி வச்சு செஞ்சுருப்பா” என்று கூற,

“ஆமாமா உங்களை வச்சு சிலை செய்யனும்னு வேற ஆசையிருக்கா? ”  பதிலடி கொடுத்தாள் நிகா.

“நீங்க இப்படியே குடும்பமா எப்பவும் சந்தோஷமா வாழனும் மேடம்” என்றவர் விடைபெற்றுக்கொள்ள, அன்பை கொடுத்து அன்பை பெற்றுக்கொண்ட சந்தோஷசாரலில் நனைந்து கொண்டிருக்கும், அவர்களின் சந்தோஷநினைவுகளோடு நாமும் விடைபெறுவோம்.

****நன்றி****

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 12 சராசரி: 4.3]

8 Comments

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Expert

Written by Ruthivenkat

 

About Author:

 

                  வாசகர்களுக்கு வணக்கம். நான் ருதி வெங்கட். இது எனது புனைப்பெயர். உண்மையான பெயர் உதயா வெங்கட்ரமேஷ். முதுகலை பட்டதாரி, இல்லத்தரசி. கதை படிப்பது மிகவும் பிடித்த விஷயம். அதுவே கதை எழுத ஊக்கசக்தியாக அமைந்து விட்டது. போட்டிக்கதையின் மூலம் எழுத்துப்பயணமும் தொடங்கியது. இதுவரை நான்கு கதைகள் எழுதி முடித்துள்ளேன். முதல்கதை புத்தகமாக  AD பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது. முகநூலில் ஓரளவு வாசகர்களுக்கு முகமறிந்த நபர்தான் . எனது கதைகளை தொடர்ந்து படிக்க Ruthivenkat (ருதிவெங்கட்)என்கிற எனது பெயரை FOLLOW செய்யுங்கள். கதைகளை பற்றிய அறிவிப்புகள் உங்களுக்கு வந்துவிடும்.

               வாசகர்களின் ஆதரவிலும், உற்சாகமூட்டலிலும்தான் கடந்த ஒருவருடத்தில் நான்கு கதைகளை வேகமாக முடிக்க முடிந்தது. உங்களது ஆதரவுகளை தொடர்ந்து வழங்குங்கள். 

 

        நன்றி

Story MakerContent Author

சிந்து பைரவி -1

உன்னில் மயங்குகிறேன் (1-5)-SahanaHH