in ,

என் திமிரழகி 1-16

அத்தியாயம் 1:

“எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை அடியேன் எத்தனை செயினும்

பெற்றவன் நீ குரு பொறுப்பதுன் கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவளாமே

பிள்ளையென்றென்பாய் பிரியமளித்து

மைந்தனென் மீதுன் மனமகிழ்ந்தருளி

தஞ்சம் என்றடியார் தழைத்திட வருள் செய்”

சஷ்டி கவசம் வரவேற்பரையில்  ஓடிக்கொண்டிருக்க , அந்த காலை வேளையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த மகளிர் விடுதி.

“ஹேய்.. பூஜா கொஞ்சம் சீக்கிரம் வாயேன்டி…பாத்ரூம்லயே தூங்கிட்டியா??”

“மனு என் பென்டிரைவ் உன்கிட்டதான்யா குடுத்தேன்.. நல்லா தேடிப்பாரு…”

“போச்சுடி.. இன்னைக்கும் அதே சேமியா உப்மாதான்.. சீக்கிரம் போய் அத சூடாவே முழுங்கிடு.. இல்லன்னா வாய்ல வைக்க முடியாது.. ” அங்கிருந்த அனைத்து அறைகளில் இருந்தும் பலகலவையான குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது.

அந்த விடுதியை நிர்வகிக்கும் மத்திய வயது பெண்மணியான வார்டன் பிருந்தா அத்தனை குரல் ஓசைகளையும் கேட்டுக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தார்.

பிருந்தாவின் கணவர் அரசாங்கத்தில் பணிபுரியும் உயர் அதிகாரி. கண்ணுக்கு அழகான இரண்டு பெண் செல்வங்கள் இவர்களுக்கு. தேவைக்கு அதிகமான வசதி இருந்த போதும், தன்னால் முடிந்த உதவிகளை கஷ்டப்படும் பெண்களுக்கு செய்ய வேண்டும் என்பதற்காகவே குறைந்த கட்டணத்தில் இந்த ” பாரதி” மகளிர் விடுதியை நடத்தி வருகிறார். சென்னை மாநகரின் மத்தியில் நல்ல தரத்தோடும் பெயரோடும் அமைந்திருப்பதால், இந்த விடுதியில் தங்குவதற்கு வேலைக்குப்போகும் பெண்களிடையே எப்பொழுதும் போட்டி இருக்கும்.

அந்த அளவிற்கு திறம்பட நடத்திக்கொண்டிருந்தார் அவர். கஷ்டம் என்று வந்தால் எவ்வளவு உதவிகள் வேண்டுமானாலும் செய்பவர், தங்கியிருப்பவர்களின் நடவடிக்கைகளில் சிறிதளவு திருப்தி இல்லாமல் போனாலும், தயவுதாட்சண்யம் இல்லாது வெளியே அனுப்பி விடுவார். ஐம்பதிற்கும் அதிகமான அறைகளைக்கொண்டு, நூற்றுக்கும் மேற்பட்ட பணிபுரியும் பெண்கள் தங்கியிருக்க, அனைவரையும் ஒற்றை ஆளாக மேற்பாவையிட்டு, திறம்பட நடத்துவதில் அவருக்கு நிகர் அவரே.

இதோ இப்பொழுது இரண்டாவது தளத்தில் தங்கியிருக்கும் ஸ்ரீனிகாவை பார்க்க முதன்முறையாக ஒரு பார்வையாளர் வந்திருப்பதால், சற்று ஆச்சரியத்துடனே அவளது அறைக்கு தெரிவிக்க சென்று கொண்டிருந்தார். ஆம், அவரே நேரில் சென்று அழைப்பது இதுவே முதல்முறை. ஸ்ரீனியின் மேல் அவருக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. அனாதைப்பெண்ணாக ஆசிரமத்தில் வளர்ந்து,நன்றாக படித்து,அநாவசிய அலட்டலோ, தனது அழகைப்பற்றிய பெருமையோ அல்லாது, வார்த்தைகளை அளந்து பேசுபவள். வம்பு பேச்சுக்களுக்கு பதிலடி கொடுப்பதிலும் சளைத்தவள் அல்ல.

தொழில்நுட்ப துறையில் பணி செய்துகொண்டு,தன்னால் முயன்ற அளவு பத்து குழந்தைகளின் படிப்புக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டு, தன்னைத்தானே உருவாக்கி உயர்ந்து நிற்கும் அவளின் மீது மரியாதை தானாக வந்திருந்தது அவருக்கு.

பரபரப்புடனே வேலைக்குச் செல்ல தயாராகி கொண்டிருந்த பெண்கள், தங்களது வார்டனே ஸ்ரீனிகாவை அழைக்கச்செல்வது கண்டு தங்களுக்குள்ளே கிசுகிசுத்துக்கொண்டவர்கள், அங்கு குப்பையை கூட்டி பெருக்கிக்கொண்டிருந்த தங்கம்மாவை அழைத்தனர்.

“தங்கம்மா இங்க கொஞ்சம் வாங்க..” நேரமாவதையும் மறந்து , அங்கு தங்கியிருக்கும் பெண்களில் ஒருத்தியான பூஜா அவரை அழைத்தாள்.

“இன்னாம்மா..??” வேலையை விடாது அங்கிருந்தே பதில் கேள்வி கேட்டார் அவர்.

பிருந்தா மேம் சற்று தூரத்தில் தான் இருப்பதால், அந்த பெண்மணி வேலையை விட்டு வரமாட்டார் என்பதை உணர்ந்து கொண்டாள். ஒரு முடிவுக்கு வந்தவளாய், தானே அவரிடம் சென்று,

“என்ன தங்கமக்கா.. மேடமே அவளை கூப்பிட போய்கிட்டுருக்காங்க?? என்ன விஷயம்??” அவரது காதில் மட்டும் விழுமாறு மெதுவாக பேசினாள்.

தங்கம்மா தூரத்தில் போய்க்கொண்டிருக்கும், பிருந்தாவின் மேல் ஒரு கண் வைத்துக்கொண்டவராக,

“என்னிக்கும் இல்லாத திருநாளா, அந்த பாப்பாவ பாக்க, ஷோக்கா ஒரு வக்கீல் வந்து இம்மாநேரமா உக்காந்துகினுக்காருமா… அதான் விஷயம்” அவளை விட மெதுவான குரலில் பதிலளித்தார் அந்த ஐம்பது வயது பெண்மணி.

“நிஜமாதான் சொல்றியா???” பூஜா ஆச்சிரியத்துடனே வினவினாள்.ஸ்ரீனிகா ஆண்கள் சகவாசத்தை அதிகமாக விரும்பாதவள் என்பது அங்கிருந்த அனைவரும் அறிந்த விஷயம்.

“அட… மெய்யாலுமே மா… அளவுன்னா (அழகு) அளவு அப்படி ஒரு அளவு… மகராசன் கணக்கா உக்காந்துக்குது. நம்ம மேடம் கூட நாஷ்டா துன்ன சொல்லி கேட்டுச்சு, வேணாண்டாப்ல. பாக்க பெரிய இடத்து ஆளு மாறிகீதுமா” என்று கூறியவர், அந்த இடத்தை விட்டு நகன்றுவிட்டார். பின்னே வேலை பார்க்காது வாய்பேசிக்கொண்டிருந்தால், அடுத்த நொடி தனக்கு இந்த வேலை இருக்காது என்று தெரிந்தவராயிற்றே. பூஜாவின் மூலமாக விஷயம் மற்ற பெண்களுக்கும் பரவ, விளைவு, பார்வையாளர்கள் அறையில் அமர்ந்திருந்த நரேந்திரசேனாவை பார்க்க அந்த அறையை சுற்றி வலம் வந்தது பெண்கள் கூட்டம். உணவுகூடம் அதை ஒட்டியே அமைந்திருந்ததால் வசதியாக போயிற்று அவர்களுக்கு.

இங்கு பிருந்தா ஸ்ரீனிகாவின் அறையைத்தட்ட, அவளுடன் தங்கியிருக்கும் ரஞ்சனா கதவை திறந்தாள். மேடமே அறைவாயிலில் நின்றிருப்பதை பார்த்து வியந்து, ஆச்சரியப்பார்வையுடனே,

“உள்ளே வாங்க மேடம்” என்றழைத்தாள். அவளது குரலில் அதுவரை தனக்கு தேவையான பொருட்களை தனது கைப்பையில் எடுத்து வைத்துக்கொண்டிருந்த ஸ்ரீனிகா முன்னே வந்தவள்,

“குட்மார்னிங் மேம். என்னாச்சு நீங்களே ரூம்க்கு வந்துருக்கிங்க??” நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

அவளது கேள்வியில் பெருமை கொண்டவராக ,‌சிநேகப்புன்னகை ஒன்றை உதிர்த்தவர்,

“மார்னிங் ஸ்ரீனிகா. உன்னைப் பார்க்க ஒரு வக்கீல் வந்துருக்காரும்மா. எனக்கு தெரிஞ்சு உனக்கு சொந்தபந்தம் யாரும் கிடையாது. ஆனால் வந்திருக்கிறவர், உன் அப்பாவோட சொத்தை உன்கிட்ட ஒப்படைக்க வந்திருக்கிறதா சொல்றார்” வந்த விஷயத்தை தெளிவுபடுத்தினார் அவர்.

அவரது பேச்சில் அவளின் புருவம் யோசனையில் சுருங்க, ரஞ்சனாவின் விழிகள் வியப்பில் விரிந்தன. ரஞ்சனா அவளுடனே அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள். அவளை விட இருவயது சிறிய பெண். தன்னைச் சுற்றி யாரையும் அண்ட விடாது வட்டம் போட்டு வைத்திருக்கும் ஸ்ரீனிகாவையே, தனது தூய அன்பினால் தனக்கும் அவளது வட்டத்தில் ஒரு இடத்தை ஏற்படுத்திக்கொண்டவள். ஸ்ரீனிகா என்றால் கொள்ளை பிரியம் அவளுக்கு. “அக்கா” என்று அவள் பின்னோடே சுற்றுபவள். அவளுடனே இருக்க வேண்டும் என்பதற்காகவே தானும் தொழில்நுட்ப துறையையே தேர்ந்தெடுத்து அவளது துறையிலேயே வேலைக்கும் சேர்ந்து, அவளுடன் இங்கேயே தங்கியும்விட்டாள். அவளுடைய மெய்யன்பை ஏனோ, ஸ்ரீனிகாவால் மறுக்க முடியவில்லை.

“யாருமில்லாத அக்காவிற்கு உறவுகள் இருக்கிறதா??”என்று நினைத்து சந்தோஷப்பட்டாள் ரஞ்சு. இவள் எண்ணவோட்டத்தில் மூழ்கியிருக்க, ஸ்ரீனிகாவோ மறுத்து பேசிக்கொண்டிருந்தாள்.

“கரெக்ட்மேம். எனக்கு எந்த சொந்தபந்தமும் கிடையாது. நான் யாரையும் பார்க்க விரும்பலை. அதனால அவரை திரும்ப போக சொல்லிடுங்க மேம்” என்று பதில் கூறிக்கொண்டிருந்தாள். ஆனால் அவளது பதிலில் பிருந்தாவிற்கு ஏனோ சம்மதம் ஏற்படவில்லை. இருந்தாலும்,

“சரி. அப்போ நீ எதுக்கும் வந்திருக்கரவற நேர்ல ஒருதடவை பார்த்துட்டு, நீயே அனுப்பிடு” என்று கூற,

“ஓகே மேம். கொஞ்சம் பொருட்களை மட்டும் எடுத்து வச்சுட்டு ஒரு ஐந்து நிமிஷத்தில் நான் வரேன்” என்று சம்மதித்து விட்டாள் அவள். அவளது பதிலில் திருப்தியுற்றவராக, முன்னே நடந்து சென்றுவிட்டார் பிருந்தா.

“ரஞ்சு.. ரஞ்சு” ஸ்ரீனி அவளைப்பிடித்து உலுக்கிக்கொண்டிருந்தாள்.

“அ…அக்கா… ” ரஞ்சு விழிக்க…

“என்னடி நின்னுகிட்டே கனவு கண்டுகிட்டிருக்க???  நானும் அப்போதிருந்து கேட்டுகிட்டிருக்கேன், லிஸ்ட் ரெடியான்னு?? ஒண்ணும் பதில்பேசாம செவர பாத்துகிட்டிருக்க??? என்னாச்சு உனக்கு?? “

“அ..அது ஒண்ணுமில்லைக்கா. உங்களுக்கு அப்பா அம்மா கிடைச்சா நல்லாருக்கும்னு யோசிச்சுகிட்டிருந்தேன்” என்றவளின் வெகுளித்தனமான பதிலில் கடுப்பானது அவளுக்கு.

“இன்னும் இப்படி பித்துக்குளியாவே இருக்கியே ரஞ்சு” மானசீகமாக தலையில் கை வைத்துக்கொண்டாள்.

“நான் பிறந்ததே நம்ம ஆசிரமத்துலதான். இறக்குற நேரத்துல கூட அம்மா, அவரைப்பத்தி பேச எனக்கு விருப்பமில்லைன்னு சொல்லிட்டு தான் இறந்திருக்காங்க. அப்ப இருந்து இப்ப வரைக்கும் என்னை பத்தி எதுவும் தெரிஞ்சுக்காத அப்பா, இப்ப திடீர்னு வானத்துல இருந்து குதிச்சாரா??

நம்ம ஆசிரமத்துல எவ்வளவு கஷ்டப்பட்டோங்கறத மறந்துட்டியா?? அவ்வளவு கஷ்டத்திலயும் மதர் நம்மள எப்படி பாத்துகிட்டாங்க, என்னை பொறுத்தவரைக்கும் என்னோட உண்மையான அப்பா-அம்மா அவங்கதான். வீணா கற்பனைய வளர்த்துக்காம பேக் பண்ணி முடிச்சுட்டு வா. யாரால இன்னிக்கு வர முடியாது?? லிஸ்ட் முதல்ல குடு” என்றவள் ரஞ்சுவிடம் இருந்த லிஸ்டை வாங்கி சரிபார்க்க ஆரம்பித்தாள்.

ஸ்ரீனிகாவின் பதிலில் மனம் சுணக்கமுற்றாலும், நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டவளாக, ரஞ்சுவும் தனது வேலைகளை முடித்தாள். இன்று அவர்களது அலுவல் நேரம் அரைநாள் மட்டுமே. இவர்களது அலுவலக குழுவில் உளவாரப்பணிக்காக இவர்களது குழு செல்ல வேண்டிய முறை இன்று.

“என்ன ரஞ்சு?? நாலு பேருக்கு மேல வரமுடியாதுன்னு மார்க் பண்ணிருக்க?? எப்படி சமாளிப்ப??” ஸ்ரீனிகாவின் வேலை மேற்பார்வை மட்டுமே.

“ஆமாக்கா.. கடைசி நிமிஷத்துல முடியாது சொல்லிட்டாங்க. பரவால்லை நான் சமாளிச்சுக்குவேன். நீங்க எனக்கு ஆர்டர் மட்டும் சைன் பண்ணி வாங்கி குடுத்துட்டு போயிடுங்க” என்றாள் ரஞ்சனா.

“முட்டாள் மாதிரி பேசாத ரஞ்சு. அங்க எவ்வளவு கூட்டம் தெரியுமா?? சமாளிக்க முடியாது. இன்னைக்கு நான் எனக்கும் ட்யூட்டி போட்டுக்கேறேன். உன் ஃப்ரெண்ட் அபர்ணா ஃப்ரீயா இருந்தா அவளையும் கூப்பிடு, அப்பதான் சமாளிக்க முடியும். கேட்டு சொல்லு நான் அவ பேரையும் சேர்த்துக்குடுத்துடறேன்”

“ம்ம்.. சரிக்கா.. நான் பார்த்துக்கறேன். நீங்க வந்துருக்க அந்த கெஸ்ட பாருங்க” அவளை அனுப்பி விட்டாள் ரஞ்சு.

தன் மனம் கவர்ந்தவளை காண, இங்கு அறைவாயிலை பார்த்த வண்ணம்அமர்ந்திருந்தான் நரேன். புகைப்படத்தில் பார்த்தவளை நேரில் பார்க்க மாட்டோமா?? என்று அவனது மனம் துடித்துக் கொண்டிருந்தது. ஆனால் அவனது கண்களின் அலைப்புறுதலை மறைக்கும் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தது அவன் அணிந்திருந்த உயர்ரக கண்ணாடி.

தலைமுறை தலைமுறையாக வழக்கறிஞர் தொழிலில் முடிசூடா மன்னர்களாக கோலோச்சி வருபவர்கள் சேனா குடும்பத்தினர். அவர்களில் கடைசி தலைமுறையான இந்திரசேனாவின் ஒரே வாரிசு நரேந்திரன் இங்கு வந்து ஸ்ரீனிகாவிற்காக காத்திருப்பது பிருந்தாவிற்கு சற்று வியப்பாக தான் இருந்தது. காரணமும் சிறிது வலுவாகவே இருக்கக்கூடும் என்பதை ஊகித்ததாலேயே, அவனைப்பார்க்க மறுத்தவளை, நேரில் வந்து சொல்லிவிட்டு போகுமாறு வலியுறுத்தி விட்டு வந்தார்.

இருவரின் சிந்தனையையும் கலைத்தது ஸ்ரீனிகாவின் வருகை. அறைவாயிற் கதவை தட்டியவள்,

“மேம்… ” என்று குரல் கொடுக்க,

“உள்ளவாம்மா…இவர்தான் நரேந்திரசேனா” என்றழைத்தவர்,

“மிஸ்டர்.சேனா” அவர் அழைக்கும் முன்பே வைத்த கண் வாங்காது அவளையேதான் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

“இவங்கதான் நீங்க பார்க்கவந்த ஸ்ரீனிகா” இருவரையும் அறிமுகப்படுத்தியவர்,

“நீங்க பேச வந்தத பேசலாம் சார், நான் வெளிய வெயிட் பண்றேன்மா” என்றவர் வெளியே சென்றுவிட்டார்.

அவனுக்கு எதிரே போட்டிருந்த சேரில் அமர்ந்தாள் ஸ்ரீனிகா.

“சொல்லுங்க சார்.. என்ன விஷயமா என்ன பார்க்க வந்துருக்கீங்க???”  அவளது குரல், கீர்த்தனையாக பொழிந்தது அவனது காதுகளில். ஆனாலும் நிர்சலனமற்ற அவளது நேர்கொண்ட பார்வையில் சற்றே அவனது மனம் சுணங்கியது. தன்னைக் காணும் பெண்களெல்லாம், தன் அழகை கண்டு மயங்கி நிற்பதில் ஆணழகனான அவனுக்கு சற்று பெருமை உண்டு.

ஆனால் ஸ்ரீனிகாவின் எந்தவித உணர்ச்சியுமற்ற பார்வை அவனை ஏதோ செய்தது. முயன்று தன்னை சமாளித்துக்கொண்டவன்,

“மிஸ். ஸ்ரீனிகா.. மைசெல்ஃப் நரேந்திரசேனா, உங்க அப்பா இறக்கறதுக்கு முன்னாடி சில சொத்துக்களை உங்க பேர்ல எழுதி வச்சுட்டு இறந்துபோயிட்டார். முறைப்படி உங்ககிட்ட அதை சேர்க்கதான் நான் இங்க வந்தது” விஷயத்தை சொல்லி முடித்தான்.

“ஓ.. ஆனால் நான் ஒரு அனாதை சார். எனக்கு அப்பான்னு யாரும் கிடையாது. நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் ஆசிரமத்தில்தான். திடீர்னு ஒரு புது சொந்தத்தயோ, இல்லை அவங்க மூலமா வர்ற எதையும் ஏத்துக்கற மனநிலை எனக்கு இப்ப இல்லை, எப்பவும் வராது. அதனாலநீங்க அவங்க சம்பந்தபட்டவங்ககிட்டயே திரும்ப ஒப்படைச்சுடுங்க” என்றவள் எழுந்து கொண்டாள்.

அவளது பேச்சில் அயர்ந்து நின்றான் நரேன். அவள் மறுக்கும் சொத்துக்கள் பலகோடி மதிப்புடையவை. அதை அவள் மறுத்தவிதம் சிலிர்ப்பைக்கூட  ஏற்படுத்தியது. அவள் பேச பேச, அவளது குரல் கொடுத்த மயக்கம் அவனை எங்கோ இழுத்து சென்று கொண்டிருந்தது.

” நீங்க நல்லா யோசிச்சுதான் பேசறிங்களா ஸ்ரீனிகா?? சொத்து விபரங்களை பார்க்கக்கூட நீங்க விரும்பலயா?? அதைவிட இத்தனைநாள் அனாதையாக அடையாளம் காணப்பட்ட நீங்க, இன்னார் மகள்னு புது அடையாளத்தோட காணப்படுவீங்க, உங்க உரிமை உங்களுக்கு திரும்ப கிடைக்குது, அதையும் நீங்க யோசிச்சுப் பார்க்கலாமே” அவளை எப்படியாவது தன்னோடு அழைத்துச்சென்று விடும் நோக்குடன், தனது வக்கீல் மூளையை காட்டினான்.

“என்ன வக்கீல் மூளையை காட்டறிங்களா? எனக்கு விருப்பமில்லாதத நான் ஏத்துக்க போறதில்ல. யாரும் என்னை நிர்பந்திக்க முடியாது. அனாதைன்னு அடையாளம் காணப்படுறதுல எனக்கு எந்த அசௌகரியமும் இல்லை. நீங்க என்மேல அக்கறைப்பட தேவையும் இல்லை. இதுக்கு மேல இதைப்பத்தி நான் பேசவும் விரும்பல, அதனால நீங்க கிளம்பலாம்”என்றவள் அறைவாயிலை நோக்கி நடந்துவிட்டாள்.

“மிஸ்…கொஞ்சம் நில்லுங்க..” அவனது வார்த்தையில் அவளது வேகம் சற்று மட்டுப்பட்டது.

அவளெதிரே வந்து நின்றவன், ” உங்களோட கசப்பான அனுபவங்கள் இப்படி பேச வைக்குதுன்னு நினைக்கிறேன். கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க. இதனால் இன்னும் நன்மைகள் நடக்கலாம். இது என்னோட கார்ட். நீங்க நிதானமா யோசிச்சு, தீர்க்கமா முடிவெடுத்துட்டிங்கன்னா எனக்கு சொல்லுங்க” பேச்சுக்கொடுத்தவாறே அவளிடம் தனது விலாசம் அடங்கிய அட்டையை கொடுத்தான்.

அதை வாங்கி ஒரு முறை பார்த்தவள், ” மிஸ்டர்.நரேந்திரன், என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்ல. இது எனக்கு தேவையுமில்லை” கார்டை அவனது கைகளில் திணித்தவள் தனது அறைக்கு சென்றுவிட்டாள். அவளது ஸ்பரிசம் பட்ட மென்மையில் உறைந்த மனதை, கட்டுக்குள் கொண்டு வந்தவன்,

“உன் சொத்த உன்கிட்ட சேர்த்து, உன்னையும் எனக்கு சொந்தமாக்குவேன் ஹனி” செல்லும் அவளை கண்களில் நிரப்பிக்கொண்டு நின்றிருந்தான் நரேன்.

அவள் சென்றதும், பிருந்தா உள்ளே வர, அவரைப்பார்த்து புன்னகைத்தான். ஸ்ரீனிகாவின் பதில் வெளியறை வரை கேட்டுக்கொண்டுதான் இருந்தது.

பிருந்தா பதிலுக்கு அவனைப் பார்த்து சங்கடத்துடன் புன்னகைக்க,

“அவபட்ட கஷ்டங்கள் அவளை அப்படி பேசவைக்குது சார். உங்களை புண்படுத்தனும்னு அவ பேசலை” சமாதான தொனிக்கு மாறியிருந்தது அவரது பேச்சு.

“இல்லை மேடம். நான் எதையும் தப்பா எடுத்துக்கல. அவங்களோட மனக்கஷ்டம் தெரியுது. உங்களால முடிஞ்சா நீங்களும் கொஞ்சம் அவங்களுக்கு எடுத்து சொல்லுங்க” என்றவன்,

“இது என்னோட கார்ட். எந்த உதவின்னாலும் நீங்க என்கிட்ட கேட்கலாம்” அவரது கைகளில் கொடுத்தவன், விடைபெற்று சென்று விட்டான்.

ஆயிற்று இதோடு ஒருமாதம் ஆயிற்று, இன்னும் அவளிடமிருந்து எந்த பதிலும் வராதது கண்டு சலிப்பாக இருந்தாலும், அவளறியாது அவளை கண்டு ரசிப்பதும் சந்தோஷமாக இருந்தது நரேனுக்கு. இதோ இன்று அவள் மாதாந்திர உளவாரப்பணிக்கு வரும்நாள் என்று,  ரஞ்சனாவின் மூலம் அறிந்து வைத்திருந்தான். இத்தனை நாட்களில் ரஞ்சனாவின் சிநேகிதத்தை பிடித்திருந்தான். அக்காவிற்கு நன்மை செய்ய நினைக்கும், அண்ணாவை ரஞ்சனாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. இன்றும் அவளுக்காக அங்கு காத்திருந்தான். அன்று விஷேஷ தினம் என்பதால் சற்று கூட்டம் அதிகமாகவே இருந்தது.

அவர்களும் சுத்தப்படுத்திக் கொண்டே இருந்தார்கள்… ஆனால் பக்தர்கள் கூட்டம்தான் குறைந்தபாடில்லை. பச்சிளம்குழந்தையிலிருந்து பாட்டிவரை அனைவரும் சுவாமி  தரிசனத்திற்காக  போடப்பட்டிருந்த தடுப்புகளில் மெதுவாக ஊர்ந்து கொண்டே காத்துக் கொண்டிருந்தனர்.

காத்திருக்கும் நேரத்தில் நின்று கொண்டிருப்பவர்கள் கொண்டுவந்த பொருட்களை உண்டுவிட்டு…. அவர்கள் நின்றிருந்த இடத்திலேயே தூக்கிப்போட்டு கொண்டிருக்க… அதை எல்லாம் சேகரித்து சுத்தப்படுத்திக்கொண்டே இருந்தனர் இவர்களின் குழு. வரிசைகளுக்கு நடுவிலேயே வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டிகளோ.. யாரும் கேட்பாரற்ற அனாதையாக கிடந்தது.

சிறிது நேரம் பொறுமையாக சேகரித்துகொண்டே வந்தவள்… ஒரு இளம்தாய் தன் குழந்தைக்கு பாதி உணவை ஊட்டிவிட்டு மீதி உணவை குப்பைத்தொட்டியில் போடாது.. நின்றிருந்த இடத்திற்கருகிலேயே குப்பையைக் கொட்ட போக…

“ஏம்மா.. அறிவிருக்கா?? இப்ப இங்க இதை போட்டன்னா.. உனக்கு பின்னாடி வர்றவங்க அதமிதிச்சு நடந்து வருவாங்களே..?? அவங்களை யோசிச்சியா??” என்று கேட்டே விட்டாள்.

“கொட்டினா என்ன??? அதை சுத்தம்பண்ணதான நீங்க இருக்கிங்க??” விட்டேற்றியாகப்பேசினார் அந்த பெண்ணின் தாயார். பதிலுக்கு சத்தம்போட போனவளின் கையை பிடித்து அழுத்திய அவள்.. அந்த பெண்மணியை ஒரு முறை முறைக்க…

“அது ரொம்பதூரம் இருக்குகா. அதுவரைக்கும் குழந்தையும் வச்சிகிட்டு என்னால் இதையும் பிடிச்சுகிட்டு போக முடியாது” சற்று தன்மையாகவே பேசினாள் பிள்ளையை வைத்திருந்தவள்.

“சரிம்மா.. அப்ப இதை இவகிட்ட குடு.. எங்க வேலை சுத்தம் பண்றது தான்… நாங்க இதை தொண்டா செய்றோம்…. ஆனா எதுக்கும் ஒரு அளவிருக்கு…” அந்த பெண்மணியை மீண்டும் ஒரு முறை முறைத்தவள்..

“வாங்கி குப்பைல போட்டுட்டு.. தட்டை அந்த பொண்ணு கைல குடு ரஞ்சு…” என்று நகர்ந்துவிட்டாள் அவள்.

கூட்டமெல்லாம் ஓய்ந்து களைத்து போய் தெருவிளக்கின் ஒளியில் தலையைப்பிடித்துக் கொண்டு  அமர்ந்திருந்தாள்.அவளது களைப்பை உணர்ந்த ரஞ்சு… சாப்பாடு எடுத்து வந்து… அவளுக்கு ஊட்ட வர…

“ப்ச்… நான்தான் பசிக்கல சொன்னேன்ல… “

“சாப்பிடலனா இன்னும் களைப்பாகிடுவீங்க அக்கா…”அவளது கரிசனையில் எரிச்சல் வந்தது அவளுக்கு.

“சொன்னா கேட்க மாட்டியா???”

“ப்ளீஸ்கா.. கொஞ்சம் சாப்பிடுங்க” என்று கெஞ்ச…

“குடு.. ” என்றவள் உணவை வாங்கி மளமளவென சாப்பிட்டு முடித்தாள்.

அவள் சாப்பிட்டு முடித்ததும் ரஞ்சு எழுந்து கொள்ள போக..

“ஏய் நில்லுடி??” என்றவளின் குரலில் கிலியானது ரஞ்சுவிற்கு.

“எ..என்னக்கா???” என்றவள் திரும்பிபார்க்க… அவளோ தனது பர்சிலிருந்து பணமெடுத்துக்கொண்டிருந்தாள்.

பணத்தை பார்த்த ரஞ்சுவிற்கு…” போச்சு இன்னைக்கு நான் செத்தேன்” சொர்க்கவாசல் அவள் கண்முன்னாடி தெரிந்தது.

“இத அந்த கடன்காரன்கிட்ட குடுத்துடு…” அவள் பணத்தை நீட்ட…

“க்கா… ” முழித்தாள் ரஞ்சு.

“எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா?? இந்த ஒருவேளை சாப்பாடு கூட கிடைக்காம எத்தனை பேரு கஷ்டப்படுறாங்கன்னு எனக்கு தெரியும். அதனால சாப்பிட்டேன். ஆனால் இன்னொரு தடவை இப்படி நடந்தது…” பேசிக்கொண்டே தனக்கருகில் கிடந்த கல்லை எடுத்தவள்… சற்று தூரத்தில் காரில் அமர்ந்து தங்களை பார்த்துக்கொண்டிருப்பவனின் கார்கண்ணாடியை நோக்கி எறிய… தவறாது அதுவும்… அவன் அமர்ந்திருந்த கண்ணாடியின் பின்னிருந்த கண்ணாடியை உடைத்து நொறுக்கியது. அதில் அமர்ந்திருந்தவன்  அவள் ஏதோ அவனைப் பார்த்து சிரித்ததை போல..அவளைப்பார்த்து சிரித்துக்கொண்டே இறங்கி நின்றான்.

“போ…போய் அவன்கிட்ட சொல்லு.. என்மேல கோபப்படுறவங்கள கூட நான் ஏத்துக்குவேன். பரிதாதப்படுறவங்கள பார்க்ககூட நான் விரும்பமாட்டேன்னு” என்றவள் எழுந்துகொள்ள போக…

“அக்கா … வக்கீல் சார் என்னதான் சொல்ல வர்றாருன்னு..??” பேசி முடிக்கும் முன்பே தீயாய் எரிந்தது ரஞ்சுவின் கன்னம்.

“என்ன?? நீ கொடுத்த சாப்பாட சாப்பிட்டேன்னு பேச தைரியம் வந்துடுச்சா??” என்றவள் முன்னே நடந்து சென்று விட்டாள்.

அவளை வழி மறித்தவன்… “உன் நல்லதுக்குதான அந்த பொண்ணு சொல்லுச்சு…”என்றவன் அவளது அழகில் இப்பொழுதும் மயங்கியவனாக பாதியிலேயே பேச்சை விட…

“என்ன பாதியிலியே நிப்பாட்டிட்ட… அவ சொல்ல வர்றத புரிஞ்சுக்காம.. திமிரா நடந்துக்குறேன்னு தான சொல்லவந்த. ஆமா நான் திமிரு பிடிச்சவதான். போய்யா உன் வேலையை பார்த்துக்கிட்டு” அவனை சுற்றிக்கொண்டு நடந்து போய்விட்டாள்.

*************************************

தொழிற்சாலையின் இயந்திரங்களின் பேரிரைச்சலையும் மீறிய இரைச்சலுடன் இருந்த மனதின் உளைச்சலை வெளியே காட்டாது, தன்னருகே அமரந்திருந்த ஆடிட்டரிடம் சிரித்துப்பேசிக்கொண்டே, அடுத்த தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கான ஆயத்தங்களை கலந்துரையாடிக்கொண்டிருந்தான் அவன்.

“நீங்க சொன்ன மாதிரியே கட்டமைப்பு கொண்டு வரதுக்கு ஏத்த இடம் உங்ககிட்டயே இருக்கு என்.ஜே.பி சார்” ஆடிட்டரின் ஆலோசனையில் அவரை கேள்வியாகப்பார்த்தான், தொழில் வல்லுனர்கள் அனைவரும் அனறாடம் தவறாது உச்சரிக்கும் என்.ஜே.பி என்ற பட்டப்பெயருக்கு சொந்தக்காரனான, நூவன் ஜெயப்பிரகாஷ்.

“உங்க அத்தையோட நிலம்தான் சார். இப்போ கடைசியா உங்க மாமா இறந்தப்பறம் உங்க அத்தைக்கு வந்துருக்குமில்லையா?? ” என்றவரின் ஆலோசனையில் சிறு மின்னல் வந்து போக, கூடவே அத்தையின் பேச்சுக்களும் ஞாபகம் வந்து சற்று யோசிக்க வைத்தது.

“ஆனால் இன்னும் கொஞ்சம் அவகாசம் இருக்கு. அதுக்குள்ள முடிச்சிடலாம்” என்று மனக்கணக்கிட்டவனாக,

“எதுன்னு தெரிஞ்சுடுச்சு. அதையே ஃபிக்ஸ் பண்ணிடலாம்” என்றவனின் பதிலில் மகிழ்ந்தவராக, அவனிடம் கைக்குலுக்கி விடைபெற்றார் ஆடிட்டர்.

அவர் எழுந்து செல்லவும், அவனது அலைபேசிக்கு செய்திவரவும் சரியாக இருந்தது.

அதைப்பார்த்து அவனது முகம் மாற, அதுவரை அமைதியாக சகோதரனோடு அமர்ந்து புள்ளிவிவரங்களை சரிபார்த்துக்கொண்டிருந்த ஹர்ஷத்,

“என்னாச்சு அண்ணா??” அவனது முகமாற்றத்திற்கான காரணத்தை கேட்டான்.

“இடம் பார்டிகிட்ட குடுக்க முயற்சி பண்ணிருக்காங்க” தாடையை தடவிக்கொண்டே யோசனையுடன் அமர்ந்தான் அவன்.

“எப்படி அண்ணா??” ஹர்ஷத் பதற்றத்தோடு கேட்க,

“அத்தை தான். பத்திரம் இப்போ சேனா கிட்ட”

“நம்ம கொஞ்சம் கவனமில்லாம விட்டுட்டோமோண்ணா??” இன்னும் நடந்ததை நம்ப முடியவில்லை ஹர்ஷத்தினால்.

“இல்லைடா. இவ்வளவு சீக்கிரம் நானே எதிர்பார்க்கல” நூவனின் பதிலில் ஆச்சரியப்பட்டான் அவனது தமையன்.

“பார்ட்டி ஓகே சொல்லியாச்சா அண்ணா???” தனயனது கேள்வியில் சிரித்தவன்,

“வேணாம்னு சொல்லிட்டாங்களாம்” என்றான்‌.

“அவ்வளவு பெரிய ஆளாண்ணா அவன்??”

“அவன் இல்லை அவள்”

“என்னது பொண்ணா???” அமர்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்திருந்தான் ஹர்ஷத்.

“அதுக்கு ஏன்டா இவ்வளவு ஆச்சரியம்?? இதோ இவதான்” என்றவன் அலைபேசியை எடுத்து அவனிடம் நீட்ட….

“வாவ்.. செம அழகு. அப்படியே நம்ம மாமா மாதிரியே இருக்காண்ணா” புகைப்படத்தையே திரும்ப திரும்ப பார்த்தான்.

“அழகு மட்டுமில்ல. திமிரும் கூட” அவளது புகைப்படத்தை பார்த்துக் கொண்டே கூறும் தமையனை வித்தியாசமாகப்பார்த்தான் ஹர்ஷத்.

“இங்க வந்துடுவாளாண்ணா??”

“சேனா எப்படியும் வரவைப்பான்”

“அப்போ இதுக்கு முடிவு??” ஹர்ஷத்தின் கேள்விக்கு பதில் கூறாமல் சிறிது நேரம் ஜன்னலின் வெளியே வெறித்துக் கொண்டிருந்தவன்,

“வரட்டும் பார்த்துக்கலாம்” என்று முடித்துவிட்டான்.

காய்ந்தாலும் மணக்கும் ரோஜா இதழ் இவள்….

திமிராகும்…..

அத்தியாயம்-2:

தென்னகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாநகரம். அந்த இரவு நேரத்திலும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது அங்கமைந்திருந்த ஜே.பி சாஃப்ட்வேர் சல்யூசன்ஸ்.சாமத்தை தாண்டிய அந்த நேரத்தில் உள்ளே நுழைந்த சேர்மன் ஜெயப்பிரகாஷை கண்டு, அங்கு இரவுபணி செய்து கொண்டிருந்த அனைவரும் ஆச்சரியத்துடனே எழுந்து நின்று தங்களது வணக்கங்களை தெரிவித்தனர்.

கோவையின் மிதமான தட்பவெட்ப நிலையிலும், இன்னும் சற்றுநேரம் சென்றால், குளிரால் உடல் விரைத்து விடும் என்பதையும் தாண்டி பலத்த சிந்தனையில் இருந்தான் நூவன்ஜெயப்ரகாஷ். பிரசித்திபெற்ற ஜே.பி. குழுமத்தின் தலைவர் ஜெயப்பிரகாஷ்- உஷாந்தினி இவர்களின் மூத்த வாரிசு நூவன், இளையவன் ஹர்ஷத். ஆட்டோமொபைல், கட்டுமானம் மற்றும் தொழில்நுட்பத்துறையில் சாதனைகள் பல புரிந்து கொண்டிருப்பவன்.

தொழில்நுட்பதுறையே என்றாலும் அவன் இரவு அலுவலகத்தில் தங்கியதில்லை. பெரும்பாலும் அவனது ஆட்டோமொபைல் தொழிற்சாலையில்தான் அவனது நேரங்கள் செலவழியும்.

எம்‌டியின் அறைக்குள் நுழைந்த  ஜெயப்ரகாஷ், மகனின் சிந்தனையை கண்ணுற்றவராக, முதல் வேலையாக அங்கு இயங்கிக்கொண்டிருந்த ஏசியை அணைத்து வைத்தார்.தந்தையின் இந்நேர வரவை கண்டு முதலில் வியந்தவன், தனது அலைபேசியை அணைத்துவைத்த மடத்தனத்தை நொந்து கொண்டவனாக, அவரை வரவேற்கும் விதமாக எழுந்து நின்றவன், அலைபேசியைப்பார்த்து தலையை கோதிக்கொண்டே,

“சாரி டாட்” வார்த்தைகள் அவனது வாயிலிருந்து தானாகவே உதிர்ந்தது.

“பரவாயில்லை உட்காருடா” என்றவர் தானும் அவன் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

“இது என்ன என்.ஜே புதுப்பழக்கம்?? இந்த யூனிட்ல இருக்க??ஆட்டோமொபைல் யூனிட் போயிட்டு இங்க வந்துருக்கேன். ஃபோனையும் சுவிட்ச்ஆஃப் பண்ணி வச்சுருக்க?? அங்க உன் அம்மா என்னை ஒரு வழி ஆக்கிட்டுருக்கா??முதல்ல அவளுக்கு ஃபோன் பண்ணி பேசு” சற்று கோபம் தெறித்தது அவரது குரலில்‌.

“அச்சோ இப்ப பேசுனா அம்மா எனக்கு பூஜை போட்டுருவாங்க. நான் வீட்டுக்கு வந்து சமாதானப்படுத்திக்கிறேன்” என்றான் மகன்.

“சரி விடு. உன்னை இங்க பார்த்ததுமே அவளுக்கு கால் பண்ணி பேசிட்டுதான் உள்ள நுழைஞ்சேன்”

“கொஞ்சம் தனிமை தேவைப்பட்டது டாட். அதான் இங்க வந்தேன். ஹர்ஷத் சொல்லலியா உங்ககிட்ட??”

“யாரு உன்தம்பிதான?? அவனுக்கு தான் ஃப்ரெண்ட்ஸ் வந்துட்டாலே, நம்மள எல்லாரையும் மறந்துடுவான்னு உனக்கு தெரியாதா?? அவன் ஃப்ரெண்ட் ஒருத்தன் மேரேஜ்கு, பேச்சலர் பார்ட்டி குடுக்கறான்னு ஆஃபிஸ்லருந்தே கிளம்பிபோயிட்டான். அவனோட பி.ஏ.தான் எங்களுக்கு தகவலே கொடுத்தான்” இரண்டாவது மகனது நடவடிக்கைகளில் திருப்தி இல்லாத அலுப்புடன் வெளிவந்தது அவரது குரல்.

“கொஞ்சநாள் டாட். அப்பறம் அவனே நினைச்சாலும் டைம் கிடைக்காது. இப்பவே அவன் பாதி யூனிட்க்கு மேல எனக்கு உதவியாதா இருக்கான். என்ஜாய் பண்ணட்டும் விடுங்க”

“சரி. நீ எனக்கு காரணத்தை சொல்லு?? என்னாச்சுன்னு இங்க வந்து உட்கார்ந்துருக்க?? மேனேஜ்மென்ட்ல ஏதும் பிரச்சனையா??” சமீபத்தில் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஜே.பி பொறுப்புகளை எல்லாம் மகன்களின் வசம் ஒப்படைந்திருந்தார். மூத்தமகனின் திறமை மீது அவருக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை. சொல்லப்போனால் நூவனின் தலையெடுப்புக்கு பிறகே தொழில்கள் மும்மடங்கு வளர்ச்சி கண்டன. இளையமகனும் திறமையானவனே, ஆனால் விளையாட்டுகுணம் அவனிடம் அதிகம்.

“இன்னைக்கு மனசு கொஞ்சம் ஒரு மாதிரியா இருந்ததுப்பா. சந்தோஷம்னும் சொல்ல முடியாம கஷ்டம்னு சொல்ல முடியாம ஒரு இனம் புரியாத உணர்வு” மகனின் முகத்தில் குழப்பரேகைகள் கண்டவர் முகத்திலும் , சிந்தனையின் ரேகைகள் படரத்தொடங்கின.

“விஷயத்துக்கு வா நூவா, சுத்தி வளைக்காதே” தீர்வுகாணும் தீவிரம் அவரது குரலில்.

“அத்தைதான்பா” அவனது குரல் மென்மையாகவே ஒலித்தது.

“நிவேதாவா?? என்ன செஞ்சா??” ஜெயப்ரகாஷின் ஒரே தங்கை நிவேதாவைப்பற்றிய அக்கறையே அவரது குரலில் அதிகம் தொனித்தது.

“சொத்துக்களை முழுமனசோட குடுக்கறதா சேனாகிட்ட பத்திரங்களை ஒப்படைச்சுருக்காங்க” விஷயத்தை போட்டுடைத்தான்.

“உண்மைதானா?? அவ என்கிட்ட கூட ஒருவார்த்தை சொல்லலயேடா??அவ உரிமையை அவளே விட்டுக்கொடுத்துட்டாளா??  ” ஆதங்கத்துடன் பேசினார் ஜே.பி.

“ஹ்ம்ம். ஆமாப்பா. நம்ம யாருகிட்டயும் கலந்துக்க கூட இல்லை. அதான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு”

“சரிதான். அவ நியாயகுணம் நமக்குதான் தெரிஞ்ச விஷயமாச்சே. அவ சின்னதுலர்ந்தே அப்படித்தான்டா. எதையும் சுயமா முடிவெடுத்தே பழக்கப்பட்டவ. இல்லைன்னா அந்த ஸ்ரீனிவாசன கல்யாணம் பண்ணிருப்பாளா?? இன்னைக்கு இப்படி ஒரு நிலைமையும் அவளுக்கு வந்திருக்குமா??” தங்கையின் நிலை அவரது மனதை மேலும் வருந்தச்செய்தது.

“இருந்தாலும் அத்தை நம்மகிட்ட ஒரு வார்த்தையாச்சும் சொல்லியிருக்கனும் டாட். அவசரப்பட்டுட்டாங்களோன்னு எனக்கு தோணுது”

“ம்ம்.. நீ சொல்றதும் சரிதான்” மகனின் கருத்தை ஆமோதித்தார் அவர்.

“அவங்க சொல்லலனாலும், விஷயம் இப்ப நமக்கு தெரிஞ்சுட்டதால, அவங்ககிட்ட கேட்டுதான் ஆகனும். எதுக்காக இந்த முடிவ இவ்வளவு சீக்கிரம் ‌எடுத்துருக்காங்கன்னு?அதுமட்டுமில்லாம இதுல கிரியோட சம்மதம் இருக்கா இல்லையான்னு கூட தெரியல??” மகனது பேச்சில் சர்வமும் தெளிவானது தந்தைக்கு.

“நூவா அந்த இடத்துக்கு ஏதும் ப்ளான் வச்சுருக்கியா??” அவனது தந்தை என்று நிரூபித்தார் அவர்.

“எஸ் டாட். என்னோட கனவு தொழிற்சாலை வரப்போற இடம். அதுதான் இப்போ அந்த பொண்ணுக்கு போகப்போகுது”

“அந்த பொண்ணு ஏத்துகிட்டாளா??”

“இல்லை. வேண்டான்னு சொல்லிட்டாளாம். நம்பத்தகுந்த இடத்திலிருந்து தகவல் வந்திருக்கு”

“மதிப்பு தெரியாம வேணான்னு சொல்றாளோ?? “

“சொத்தும் வேணாம், அதோட வர சொந்தமும் வேண்டாமாம்”

“வாட்??”

“எஸ் டாட். வந்திருக்குற தகவலை பார்த்தா, இவளை சமாளிக்கறது ரொம்பவே கஷ்டம்னு தோணுது. அதான் அத்தை பிடிவாதமா, மாமா ஆசையை நிறைவேற்றனும்னு இதை செஞ்சுருக்காங்க.நமக்கு கூட தகவல் சொல்லாம”

“சொன்னா குடுன்னு தான சொல்லப்போறோம்” தங்கைக்கு தான் எதையும் மறுக்கப்போவதில்லை என்ற சிந்தனையுடன் பேசினார் அவர்.

“இல்லை டாட். நான் மறுத்துருப்பேன். எனக்கு அந்த இடம் வேணும். எங்க நான் கேட்டு, அத்தை மறுக்குற மாதிரி வந்துடுமோன்னு தான் இதை இவ்வளவு அவசரமா செஞ்சுருக்காங்க. அதுவும் தெளிவா இந்திரசேனா சார்கிட்ட ஒப்படைச்சுருக்காங்க”

“நீ இதைப்பத்தி நிவிகிட்ட ஏற்கனவே பேசினியா?? “

“ஆமா. மாமா இறக்கறதுக்கு முன்னாடி”

“ஓஹோ..”

“இந்த விஷயம் கிரிக்கும் தெரியும். அவனுக்கு இதுல முழு சம்மதம். அதான் இப்ப அவன் அட்டப்பாடி போயிருக்க சமயமா பார்த்து அத்தை இதை செஞ்சுருக்காங்க. இது என்னோட அனுமானம் தான்” நிவேதாவின் ஒரே பிள்ளை கிரிவாசன்.

“உன் அனுமானம் என்றைக்கு பொய் ஆகியிருக்கு??”

“பார்க்கலாம் டாட்”மகனின் பிடிகொடுக்காத பேச்சில், இன்னும் ஏதோ விஷயம் ஒளிந்திருப்பதை உணர்ந்தவராக,

“சரி.அந்த பொண்ணு எப்படி??”

“எந்த பொண்ணு டாட்??”

“ஸ்ரீனிகா”

“…”

“உன்கிட்ட தான் கேட்கறேன் நூவா.பதில் சொல்லு.என் மகன் முகம், இவ்வளவு யோசனையிலும், பளிச்சுன்னு இருக்கே. அதான் யோசிக்க வைக்குது”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை டாட். அழகா இருக்கா அவ்வளவுதான்”

“பார்த்தா அப்படி தெரியலையே. ஃபோனை ஆன் பண்ணதிலிருந்து, எனக்கு தேவையான பதில சொல்லிகிட்டே, உன் கண்ணு நொடிக்கொரு தடவை ஸ்கிரீனையே பார்க்குதே” மகனை வைத்தகண் வாங்காது கேள்வி கேட்டார் ஜே.பி.

“ரொம்ப பேசுனிங்க உஷாந்திகிட்ட சொல்லிக்குடுத்துருவேன்” குரலில் குறும்புடனேயே பேச்சை மாற்றினான்.

“டேய். அம்மாவையே பேர் சொல்லி கூப்பிடறயா?? “

“என் டார்லிங்மம்மிய நான் எப்படினாலும் கூப்பிடுவேன் மிஸ்டர் ஜே.பி” அவரையும் வம்பிழுத்தவன், தந்தையின் கைக்கு அகப்படாது இருக்கையை விட்டு எழுந்து கொண்டான்.

“ராஸ்கல். என்னையுமா பேர் சொல்லி கூப்பிடற??” வயதையும் மீறி எழுந்து மகனை துரத்தினார் அவர். வெற்றிகரமாக தந்தையின் கவனத்தை திசை திருப்பிவிட்டு, தானும் ஓட ஆரம்பித்தான் அவன். சற்று நேரம் ஓடி களைத்தவர் அமர்ந்து விட்டார். தானும் அவரருகில் அமர்ந்தவன், புன்னகை முகத்துடனே தந்தையை பார்க்க,

“என் மருமகளை எப்ப நான் பார்க்கிறது??” சற்று மூச்சு வாங்கிக்கொண்டே பேசினார் ஜே.பி.

“டாட். இன்னும் நான் பார்க்க கூட இல்லை. அதுக்குள்ள அப்படியெல்லாம் முடிவு பண்ணாதிங்க?”

“சரி. அப்போ உன் தலையெழுத்து அந்த பீட்சா தான் போல” அடக்கமாட்டாது சிரித்தார் அவர்.

“இது அந்த ப்ரிஷா காதுல விழுந்தது, அம்மாகிட்ட அவ போடற பிட்டுல,  நீங்க பீட்சா ஆகிடுவீங்க” அவனும் தந்தையுடன் சேர்ந்து நகைத்தான். ப்ரிஷா உஷாந்தினியின் அண்ணன் மகள்.

“அதெல்லாம் இருக்கட்டும். மருமகளை பத்தின விவரத்தை சொல்லு” தோழனாக மகனிடம் வம்பிழுக்க,

“இதுல நிறைய சிக்கல் இருக்கு டாட். அத்தையை பற்றி யோசிக்காம நீங்க பேசறிங்க. சொத்த வேணா குடுக்கலாம். ஆனால் மூத்த தாரத்து பொண்ணை எப்படி ஏத்துப்பாங்கன்னு என்னால ஒரு முடிவுக்கு வர முடியல. அதுக்கு மேல அம்மாவோட விருப்பமும் எனக்கு முக்கியம்” தன்னால் இயன்ற வரை மழுப்பலான பதிலை,  மிகத்தெளிவாக பேசினான் அவன்.

ஜே.பி மகனையே கூர்ந்து பார்த்தவர்,

“அவ்வளவு நல்லவனாடா நீ??” (என்கிட்ட தப்பமுடியாது மகனே)  அவரது பார்வை அவனிடம் சொல்லாமல் சொல்லியது.

“அப்பா…ஆ”முதன்முறையாக நூவனின் முகத்தில் சற்றே வெட்கத்தின் சாயல்.

“அப்பான்னு கூப்பிட்டு ப்ராக்டிஸ் பண்ணதெல்லாம் போதும். என் மகனை  பத்தி எனக்கு தெரியாதா?? இத்தனை வருஷமா எந்த பொண்ணும் ஈர்க்காத உன் கவனத்தை, வெறும் ஃபோட்டோவிலேயே இந்த பொண்ணு உன்னை பார்க்க வச்சுருக்கான்னா, இவ கொஞ்சம் ஸ்பெஷல்தான்” என்றவர், அவன் எதிர்பாராத விதமாக மேஜையில் இருந்த அவனது அலைபேசியை எடுத்து பார்க்க, அவரது எண்ணம் தவறாது ஸ்கிரீனில்  தரிசனம் தந்தது ஸ்ரீனிகாவின் புகைப்படமே தான். லாவண்டர் நிற புடவையில் சிரித்துக் கொண்டிருந்தாள்.

“ஹ்ம்ம். பார்க்க அழகுன்னு சாதாரணமா சொன்ன, மகாலட்சுமி மாதிரி இருக்காளேடா. அப்போ பொய் சொல்ல ஆரம்பிச்சு, காதலோட முதல்படில வெற்றிகரமா காலெடுத்து வச்சுருக்க மகனே, வாழ்த்துக்கள்” கேலி செய்துகொண்டே, தனது மறைமுக சம்மதத்தை தெளிவுபடுத்தினார் அவர்.

“குடுங்கப்பா….” அலைபேசியை அவரது கையில் இருந்து பிடுங்கி தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டவன்,

“டைம் ஆச்சு. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க. நான் காலைல வந்து அம்மாகிட்ட பேசிக்கிறேன்” தெளிவாக பேச்சை திசைமாற்றினான்.

“ம்ம்.. சரி. ஆனால் இப்ப நான் வீட்டுக்கு கிளம்பல. கெஸ்ட்ரும் சாவி குடு, அங்க தங்கிக்கிறேன். காலைல நாம சேர்ந்தே போயிடலாம்” சோர்வுடன் வந்த கொட்டாவியை அடக்கிக்கொண்டு பேசினார்.

“அதும் நல்லதுதான். நீங்க அங்க ரெஸ்ட் எடுங்கப்பா. ரெண்டு ஃபாரின் கான்ஃப்ரன்ஸ் கால் பேச வேண்டியிருக்கு. அதை முடிச்சிட்டு நானும் அங்க வந்துடறேன்” என்றவன் சாவியை எடுத்து அவரிடம் கொடுத்தான்.

ஜே.பி பாதி தூரம் சென்றவர், மீண்டும் வேகமாக மகனிடமே வந்து நின்றார்.

“ஹேய்.. நூவா.. நீ  அந்த இடத்துக்காக ஒன்னும் அந்த பொண்ணை பார்க்கலியே??” நினைத்ததை முடிக்க , மகன் எதையும் கையிலெடுப்பான் என்பதை புரிந்தவராக  கேள்வி கேட்டார் அவர்.

“இந்த கேள்விக்கு இப்போ என்னிடம் பதில் இல்லை டாட்” மகனின் சிரிப்பில், அவரது தூக்கம் பறந்தது.

“சரி. உன் விருப்பம்” என்றவர் விருந்தினர் அறைக்கு சென்று விட்டார்.

பின்பு கான்ஃபரன்ஸ் கால்களை பேசி‌முடித்தவன், அலைபேசியை பார்க்க, அழகாக அதில் சிரித்து அவனை வசீகரித்துக்கொண்டிருந்தாள் ஸ்ரீனிகா.

“சீக்கிரம் உன்னை என் சொத்தாக்கி, சொந்தமாக்குறேன் பேபி” புகைப்படத்தை பார்த்து கண்ணடித்தவன் நிம்மதியாக உறங்கிப்போனான், இங்கு நரேந்திர சேனா தனது முயற்சியில் வெற்றிகரமாக முதற்படியை எட்டிவிட்டதை அறியாது.

****************************************

“நீங்க நகருங்க அக்கா. நான் தூக்கி வைக்கிறேன்” அநாயாசமாக அந்த பழப்பெட்டியை தூக்கி அடுக்கினாள் ஸ்ரீனிகா. அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல ஐம்பது பழப்பெட்டிகளை மிக நேர்த்தியாக அங்கிருந்த ஹாலின் மூலையில் அடுக்கி முடித்திருந்தாள். அவள் அடுக்கி முடிக்கவும்,

“குட் ஜாப் மை சைல்ட்” என்ற இனிமையான குரல் கேட்கவும் சரியாக இருந்தது.

“மதர்” திரும்பி அவரை கட்டிக்கொண்டாள், அவரை கண்ட சந்தோஷம், அவளது உடலின் ஒவ்வொரு அணுவிலும் பிரதிபலித்தது.

“நீங்க போகலாம் லலிதா. பசங்களுக்கு மதிய சாப்பாட்டுக்கு ரெடி பண்ணுங்க” அந்த அனாதை ஆஸ்ரமத்தின் மேற்பார்வையாளராக பணியாற்றிக்கொண்டிருக்கும் அவரை அனுப்பி வைத்தார். பின்பு ஸ்ரீனியின் புறம் திரும்பியவர்,

“எப்பம்மா வந்தே?? இன்னைக்கு பெரும்புள்ளி ஒருத்தவங்க டொனேஷன் கொடுக்கறேன்னு சொல்லியிருந்தாங்க. அவங்க அப்பாயின்மெண்ட் காலைலதான் கிடைச்சது. அதான் போய் பார்த்துட்டு வந்தேன்” பேசிக்கொண்டே இருவரும் மதரின் அறையை அடைந்திருந்தனர்.

“உட்காரு ஸ்ரீனி” அவளை அமரச்சொன்னவர், தானும் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

“எப்பவும் நான் குடுக்குற பணத்தை குடுக்க வந்தேன் மதர்” என்றவள், தனது கைப்பையில் வைத்திருந்த பணக்கவரை எடுத்து அவரிடம் கொடுத்தாள்.

“ரொம்ப நன்றி மை சைல்ட். காட் ப்ளெஸ் யூ” அவளை ஆசிர்வதித்து பெற்று கொண்டார்.

“ஆனால் நீ பணத்தை மட்டும் கொடுக்க வந்த மாதிரி தெரியலயே, உன் முகம் ரொம்ப யோசனையை காட்டுது. வேற ஏதும் பிரச்சனையா ஸ்ரீனிகா??” தான் பார்த்து வளர்ந்த பெண்ணின் முகமாற்றத்தை நொடியில் கண்டுகொண்டார்.

“ம்ம்.. ஆமா மதர். எனக்கு உங்க ஆலோசனை தேவைப்படுது”

“தாராளமா சொல்றேன். என்ன விஷயமென்று சொல்லு?? கண்டிப்பா என்னால் முடிந்த உதவி செய்றேன்” அவரது வார்த்தைகள், சொல்ல இயலாத புத்துணர்வை தோற்றுவித்தது அவளுள்.

நரேந்திர சேனாவின் வருகையைப்பற்றி சுருக்கமாக சொல்லி முடித்தவள், அதை ஏற்றுக்கொள்ள முடியாத அவளது மனநிலையையும் எடுத்துரைத்தாள்.

“உன் மனநிலை எனக்கு புரியது ஸ்ரீனி. இன்னும் சில விஷயங்களை உனக்கு நான் தெளிவா சொல்லலை. சொல்ல வேண்டிய நேரமும் இப்ப இல்லை. ஆனால் இந்த சொத்துக்களை ஏற்றுகிட்டு, உன் சொந்தங்களோட சேர்றது நல்லதுன்னு தான் எனக்கு தோணுதும்மா” அவளின் மீதான அக்கறை அப்பட்டமாக வெளிப்பட்டது அவரது பதிலில்.

“என்ன சொல்றிங்க மதர்???” அவளது கேள்வி சொல்லாமல் சொல்லியது இந்த பதிலை அவரிடம் எதிர்பார்க்கவில்லை என்று.

“சீரியஸா தான் சொல்றேன் மை சைல்ட். நீயா எதையும் தேடி போகலை?? உனக்கான உரிமைகள் உன்னைத்தேடி வர்றப்போ அதை ஏத்துக்கிறதுல தப்பே இல்லை. மன்னிப்பு இல்லாத தவறே கிடையாது. அது நம்ம மனசுல தான் இருக்கு. அவங்க எல்லாரையும் உன்னோட உறவுகளா ஏத்துக்க தான உனக்கு தயக்கம்?? உறவுகளா பார்க்காம சக மனுஷங்களா பாரு… பிரச்சனை முடிஞ்சிடும்.உனக்கு புது அனுபவமாகவும் இருக்கும் ” அவரது இந்த பதிலில் மனம் சமாதானமடைந்தாலும், ஏதோ முரண்பாடு அவளது மனதை உறுத்திக் கொண்டிருந்தது.

“இதையேதான் பிருந்தா மேமும் எனக்கு அட்வைஸ் பண்ணாங்க மதர். உனக்கான உரிமைகளை நீ ஏன் விட்டுக்கொடுக்கனும்?? நல்லா யோசிச்சு முடிவெடுன்னு சொன்னாங்க”

“பிருந்தா அவ்வளவு சீக்கிரம் யார் விஷயத்திலும் தலையிட மாட்டான்னு உனக்கே தெரியும். அவளே கூப்பிட்டு உனக்கு சொல்லியிருக்கான்னா, இதுல நீ நல்லா யோசிச்சு முடிவெடு மை சைல்ட்” என்றவரின் விளக்கத்தில் சற்று தெளிவானது அவளது உள்ளம்.

“இதில் உனக்கு அதிக நன்மைகள் கிடைக்கக்கூட வாய்ப்பிருக்கு” நரேந்திரன் கூறிய அதே வார்த்தைகள் இப்பொழுது அவளது காதுகளில் எதிரொலித்தன.

“என்னதா ஆகும்னு  பார்த்துடலாமே??” அவளது மனசாட்சியும் குரல் கொடுக்க, ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள்.

“இப்போ கொஞ்சம் சஞ்சலம் இல்லாம இருக்கு மதர். அப்படி என்னதான் விஷயம்னு தெரிஞ்சுக்க தான் போறேன். இன்னைக்கே மிஸ்டர் சேனாவ மீட் பண்றேன்” சந்தோஷ மனநிலையுடனே மதரிடம் கூறினாள்.

அவரும் அவளது முடிவில் மகிழ்ந்தவராக,” நல்லதே நடக்கும் ஸ்ரீனிகா. ஆமா எங்க உன்கூட சுத்திட்டிருக்கிற குட்டிவால காணோம்” ரஞ்சனியின் நலம் விசாரித்தார்.

“அவளுக்கு இப்போ  பகல் ஷிஃப்ட் மதர். ஞாயிற்றுக்கிழமை வரதா சொன்னா” என்றவள் தெளிவான மனநிலையுடனேயே விடைபெற்றாள்.

இங்கு தன்னெதிரே அமர்ந்திருக்கும் தன் மனம் கவர்ந்தவளை, இமைக்க மறந்து ரசித்து கொண்டிருந்தான் நரேந்திரசேனா.

உறவுகள் விளங்குமா?? விலங்காகுமா??

திமிராகும்….

அத்தியாயம்-3:

சேனா அவளது கைகளை, தனது கைகளுக்குள் பொதித்துக்கொண்டவன் “உன்னை ஃபோட்டோவில் பார்த்த மறுநிமிஷமே  எப்ப பார்ப்பேன்னு துடிச்சுகிட்டுருந்தேன் ஹனி. எத்தனையோ பெண்களிடம் தோணாத ஒரு உணர்வு உன்னை பார்த்ததுமே தோன்றியது.  நீ இல்லாத ஒரு வாழ்க்கை வாழ்க்கையே இல்லைன்னு நினைக்க வைச்சது.

விழி வீச்சில் உண்மையை வீசி வசீகரிக்கும் உனது முகமும், முறைப்பாலே மூழ்கடிக்கும் உனது விழிகளும், சுழித்து சுழலில் சிக்க வைக்கும் உன் உதடுகளும், நேர்மையை உடல்மொழியாக கொண்ட உனது நடையும், இன்னும் இன்னும் உன்னைப் பத்தி பேச வைச்சு என்னை காதல்பித்தனாக்குகிறது கண்மணி .

ஐ லவ் யூ ஹனி….

வில் யூ மேரி மீ….” என்றவன் காதல் பித்தேறி அவளை அணைத்துக்கொள்ள அருகில் வர, அதுவரை அவன் பேசுவதை சிறிது வெட்கத்துடனும், சிரிப்புடனும் கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரீனிகா, அவன் அருகே வந்ததும் சட்டென மறைந்துவிட்டாள். அவள் மறைந்துவிடும், அவனது அலுவலகத்தில் அவன் அமர்ந்திருந்த அறைக்கதவு தட்டப்படவும் சரியாக இருந்தது.

அறைவாயிலின் சப்தத்தில், தனது பகற்கனவிலிருந்து விழித்துக்கொண்டவன், அருகிலிருந்த ஃபோட்டோ பிரேமில் சிரித்துக்கொண்டு இருந்தவளைப்பார்த்து அசடு வழிய சிரித்துக் கொண்டான்.

“ச்ச.. கனவா?? (ஆமாம் தம்பி கனவு மட்டுந்தான் உனக்கு… ஜோடிக்கு வேற ஆள் இருக்கு… ரைட்டர் பேச்ச கேக்கமாட்றானே) வர வர என்னை பைத்தியமாக்குற ஹனி. சீக்கிரமே என் காதலை உனக்கு புரிய வைக்கனும்” தன்னைத்தானே ஊக்கப்படுத்திக்கொண்டவன்,

“எஸ்.கமின்” அறைவாயிலில் நின்று கொண்டிருந்த தனது செகரட்டரியை உள்ளே அழைத்தான்.

“சார் இதுல நீங்க சைன் பண்ணி குடுக்க வேண்டிய டாக்குமெண்ட்ஸ் எல்லாம் டைப்பாகி வந்துருக்கு. இரண்டு கிளையண்ட் மீட்டிங்க, தள்ளி வைக்க நாள் கேட்டுருக்காங்க. வேற ஒரு செட்டியூல்ல மாட்டிக்கிட்டாங்களாம்” வந்த வேலையை இடைவிடாது ஒப்புவித்தான் செகரட்டரி.

“ஓகே ஆல்பர்ட். நான் ஒருதடவை சரிபார்த்துட்டு சைன் பண்ணிடறேன். க்ளையண்ட் இந்த வாரம் முடியாதுன்னு சொல்லியிருக்காங்களா??”

“ஆமா சார். இன்னும் இரண்டு வாரம் முடியாதுன்னு சொல்லியிருக்காங்க. அடுத்த மாசம் முதல் வாரம் கேட்டுருக்காங்க.  ஆனால் அப்போ அந்த தேதிக்கு ஏற்கனவே மூணு க்ளையன்ட்ஸ் அப்பாயின்ட்மெண்ட் வாங்கியிருக்காங்க. அதுதான் இப்போ சிக்கலாகுது. இப்போ தேதி மாத்தி கேட்கற க்ளையண்டஸ், பெரியசார் அப்பாயின்மெண்ட் கூட  வேண்டான்னு சொல்றாங்க சார். உங்க அப்பாயின்ட்மெண்ட்தான் வேணுன்னு பிடிவாதமா இருக்காங்க சார்” எதிர்பாராது வந்த சிக்கலில் முழி பிதுங்கியது ஆல்பட்டிற்கு.

அவனது முறையீட்டில் சிரித்தவன், ” ரிலாக்ஸ் ஆல்பர்ட். இதுக்கு ஏன் இவ்வளவு பதட்டம்?? நிதானமா நாம யோசிச்சா எளிமையான வழியே உண்டு. அவங்க கேட்க்கற நாளை ஒதுக்கி குடு. ஆனால் நேரத்தை மட்டும், நான் சொல்ற நேரத்தை ஃபிக்ஸ் பண்ணு, சரியா??” என்றவனின் முகத்தில் புன்னைகை இன்னும் மாறாமல் இருந்தது. பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிட்ட நிம்மதியில், ஆல்பர்ட்டின் முகமும் சந்தோஷத்தையே பிரதிபலித்தது.

சரியாக அந்நேரம், நரேனின் மேஜையில் இருந்த, தொலைபேசி ஒலிக்க, அருகில் ஆல்பர்ட் நின்றிருந்ததால் அவனையே எடுக்குமாறு கூறிவிட்டு கோப்புகளில் ஆழ்ந்தான் சேனா.

“ஹலோ”

“ம்ம்.. எஸ்… ஓகே நான் சொல்லிடறேன். ம்ம்.. எவ்வளவு நேரம்னா?? ம்ம்.. கேட்டுச்சொல்றேன் தாரிகா” என்று வைத்துவிட்டான் ஆல்பர்ட்.

“என்ன ஆல்பர்ட்??” தலையை நிமிர்த்தமாலேயே கோப்புகளை வாசித்து கையெழுத்திட்டு கொண்டிருந்தான்.

“ரிசெப்ஷன்ல இருந்து சார். உங்களைப்பார்க்க யாரோ ஸ்ரீனிகான்னு ஒரு பொண்ணு வந்திருக்காங்களாம்.ஒருவேளை நீங்க பிஸியா இருந்தா அப்பாயின்ட்மெண்ட் கிடைக்குமா?? எவ்வளவு நேரம் காத்திருக்கனும்னு கேட்டுகிட்டு இருக்காங்களாம்” என்றவன்கூறி முடிக்குமுன்பே, எழுந்து வெளியே சென்றிருந்தான் சேனா.

வழக்கறிஞரின் அலுவலகம் போல் அல்லாது, குட்டி மாளிகையைப்போல் காட்சியளித்த அந்த இரண்டடுக்கு வீட்டை சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீனிகா. வரவேற்பறையில் நரேந்திர சேனாவின் கார்டை காண்பித்தவள், “சாரை பார்க்கனும். சாரி நான் முதல்லயே அப்பாயின்ட்மெண்ட் வாங்கலை” சற்று சங்கடத்துடனே கூற, ரிசெப்ஷனிஸ்டோ அவளை அமரச்சொல்லிவிட்டு ,உடனே கேட்டுச்சொல்வதாக கூறியவள், அவள் பருக பழரசத்தையும் வைத்துவிட்டு சென்றாள். பிருந்தாவின் உதவியால் சேனாவின் கார்ட் அவளது கைக்கு வந்திருந்தது, அதன் மதிப்பையும் காட்டியது.

“நீங்க உட்கார்ந்து ஜூஸ் குடிங்க மேடம்” என்று உபசரிக்க,

“இல்லை. பரவாயில்லை. நான் கொஞ்சம் அந்தப்பக்கம் நடந்துகிட்டுருக்கேன். நீங்க கொஞ்சம் கேட்டு மட்டும் சொல்லுங்க” என்றவள் அலுவலகத்தை சுற்றிப்பார்க்க ஆரம்பித்து விட்டாள். ஒவ்வொரு அறையும், தேவையான அனைத்து தொழில்நுட்ப சாதனங்களுடன் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது.

முதலில் அவளது மனம் அதன் கட்டமைப்பை ரசித்தாலும், சற்று நேரத்திற்கெல்லாம்

“பணக்கார க்ளையன்ட்களுக்கு ஏற்ற பகட்டான அலுவலகம்” அவள் மனம் எள்ளி நகையாடியது.

சற்று நடந்து முன்னேவர, அந்த தளத்தின் முகப்பிலேயே,  அழகான வயதான தம்பதிகளின் வரையப்பட்ட ஓவியமொன்று பெரிதாக மாட்டப்பட்டிருந்தது. அந்த ஓவியத்தில் இருந்த ஆணின் முகம் , யாரையோ நினைவுப்படுத்த, ஆச்சரியத்தில்

“அட, மிஸ்டர்.சேனா, அவங்க தாத்தாவைப்போல இருக்காரே” என்று வாய்விட்டு கூறிவிட்டாள்.

“தாத்தாவைப்போல தானே இருக்கேன். தாத்தாவா இல்லையே???” பின்னால் கேட்ட குரலில், சட்டென திரும்பிபார்க்க, சற்றே மூச்சு வாங்க, தனது வழக்கமான புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான் சேனா.

அவனது சாதாரண கேலிக்கு கூட அவளிடம் பதிலில்லாது,அவனது அருகாமையை தவிர்த்து, அமைதியாகவே அவனை விட்டு சற்று தள்ளி நின்று கொண்டு அவள் பார்த்திருக்க, சிறிது மனதளவில் சோர்ந்துபோனான்‌.

“என்னங்க பேச்சையே காணோம்?? தனியாதான் பேசுவிங்களா?? நான் வேணுன்னா கீழே போயிடட்டுமா??” விடாக்கண்டனாய் முயற்சிக்க, அதற்கு பலனும் கிடைத்தது.

“தனியா பேச , நான் எதுக்கு இங்க வந்து நின்னுகிட்டு பேசனும் மிஸ்டர்.நரேந்திரசேனா?? உங்ககிட்ட பேசதான் நான் வந்தது” அப்பொழுதும் இறுக்கமான பதிலே வந்தது அவளிடம்.

“எதுக்கு நரேந்திரசேனான்னு நீட்டி முழக்கிட்டுருக்கீங்க மிஸ். ஸ்ரீனி. கால் மீ நரேன். என்கிட்ட பேசத்தானே வந்துருக்கிங்க, வாங்க நாம கீழபோய்,  என்னோட அலுவல் அறையில் உட்கார்ந்து பேசலாம்” என்றவன் முன்னே நடந்து படிகளில் இறங்கத் தொடங்கினான்.

“ஒரு நிமிஷம். யாருடைய பெயரையும் சுருக்கி நான் கூப்பிடறதில்லை, என் பெயரையும் சுருக்கி கூப்பிட அனுமதிக்கிறதில்லை வக்கீல்சார். இது கொஞ்சம் மரியாதையாகவும் இருக்கும், உங்களுக்கும் புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்” என்று பேசியவள், அவனை முந்திக்கொண்டு இறங்கி சென்றுவிட்டாள். அவளது பதிலில், திருவிழாவில் எதையோ தொலைத்துவிட்டு நின்றிருக்கும் குழந்தையை போல் முழித்துக்கொண்டிருந்தான் அவன்.

“சேனா.. இப்படி போட்டு தாக்கறாளே?? எப்படி இவளை வழிக்கு கொண்டுவரப்போற?? உன்பாடு கொஞ்சம் கஷ்டம்தான்” பரிதாபப்பட்டுக்கொண்டிருந்த அவனது மனசாட்சியுடன் பேசிக்கொண்டே கீழே இறங்கி சென்றான். மாடிப்படிகளின் முடிவில் அவனுக்காக காத்துக்கொண்டிருந்தவளை பார்த்ததும், நம்பிக்கையின் கீற்று, எங்கோ ஓர் மூலையில் ஒளிர்ந்து, தொலைந்த புன்னகையை மீண்டும் அவனது முகத்தில் ஒளிரச்செய்தது.

“வாங்க போகலாம் ஸ்ரீனிகா” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு தனது அறைக்கு சென்றான். அறைக்கதவை அவளுக்காக அவன் திறந்து விடுவதை, ஆல்பர்ட், தாரிகாவுடன் சேர்ந்து அங்கு வேலைப்பார்த்து கொண்டிருந்த அலுவலர்களும் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“உட்காருங்க மிஸ்” என்றவன் தானும் தனது இருக்கையில் அமர்ந்து கொள்ள, அவன் சுட்டிய  இருக்கையில் அமரும் முன்பு, தனது கைப்பையில் இருந்த பணக்கட்டை அவனது மேஜையில் எடுத்து வைத்தாள்.

“எதுக்கு இந்த பணம் ஸ்ரீனிகா??” நரேனின் விழிகள் குழப்பத்துடன் அவளை பார்த்தது.

“உங்க கார் கண்ணாடியை உடைச்சதுக்கு” அவளது பதிலில், அவனுக்கு கோபம் வந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

“அதுக்கு சிம்பிளா சாரி சொல்லிடலாமே??”அவனது உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு பேசினான்.

“நான் எதுக்கு சாரி சொல்லனும் வக்கீல் சார்??”

“கண்ணாடியை உடைச்சதுக்குதான்” விடவில்லை சேனா.

“என்னைப்பொறுத்தவரைக்கும் அது தப்பில்லை. நீங்க யாரு எனக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்க?? நீங்க பார்க்கற எல்லாருக்கும் இப்படித்தான் வாங்கிக்கொடுப்பீங்களா??” அனல் தெறித்தது அவளது வார்த்தைகளில்.

“நீங்க செஞ்சது சரிதான்னா எதுக்கு இந்த பணம்??” காயப்பட்ட மனம், வலியை காயம் கொடுத்தவளிடமே காட்டியது.

“என் எதிர்ப்பை காட்டினேன். ஆனால் அதுக்கு உங்க பொருளை சேதப்படுத்தியது தவறு, அதுக்குதான் இந்த பணம். இதை எடுத்துக்கிட்டிங்கன்னா, நீங்க சொல்லிட்டு போன விஷயத்தை பத்தி பேசலாம்” பணத்தை எடுத்துக்கொள்ளாவிட்டால் மேற்கொண்டு எதுவும் பேசப்போவதில்லை என்ற மறைமுக எச்சரிக்கை அதில் ஒளிந்திருந்ததில், வியந்துதான் போனான்.

“நன்றி” பணத்தை எடுத்து மேஜை டிராயரில் போட்டவன்,

“சொல்லுங்க.. என்ன முடிவு பண்ணியிருக்கிங்க??” நேரே விஷயத்திற்கு வந்தான்.

“ஏத்துக்கலான்னு முடிவு பண்ணியிருக்கேன்” அவளிடமிருந்து சுருக்கமான பதிலே வந்தது.

“எதை ஏத்துக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கிங்க” அவனது விஷமமான கேள்வியில், முறைக்க ஆரம்பித்தாள் அவள்.

“நீங்க விளையாடறதுக்கு நான் ஆள் இல்லை? நான் கிளம்புறேன் வக்கீல் சார்” என்றவள் எழுந்து கொண்டாள்.

“வெயிட்.. வெயிட் மிஸ். ஸ்ரீனிகா. ப்ளீஸ் வந்து உட்காருங்க” அவனது கெஞ்சல் குரலில் திருப்தியுற்றவளாக மீண்டும் வந்தமர்ந்தாள்.

“இனி நான் அநாவசியமாக பேசமாட்டேன் மிஸ்.ஸ்ரீனிகா. உங்களோட கடந்தகாலத்துல என்ன நடந்ததென்று எனக்கு தெரியாது. உங்ககிட்ட எப்பவும் ஒரு இறுக்கம் இருந்துகிட்டே இருக்கு. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணதான் நான் அப்படி பேசினேன்.

ஏனென்றால் நீங்க இப்போ எடுக்கப்போற முடிவு கொஞ்சம் முக்கியமானது. உங்க நண்பனா என்னை நினைச்சுகிட்டு, உங்க மனசுல இருக்கிறதை தைரியமா சொல்லலாம். நான் உங்களுக்கு உறுதி கொடுக்கிறேன், ஒரு நல்ல நண்பனா எல்லா விதத்திலும் உதவி செய்றதுக்கு( ஆண்டவா.. முதல்ல ஃப்ரெண்டாவாச்சும் என்னை ஏத்துக்க வை) ” மனதில் வேண்டுதலுடனே பேசி முடித்தான்.

அவனது பேச்சில் முதலில் மனம் சற்று இளகினாலும், வக்கீல் வேலையை காட்டுகிறானோ என்ற சந்தேகமும் ஒருங்கே எழுந்தது அவளுக்கு. இருந்தாலும் தான் எடுக்க போகும் முடிவில், தனக்கு தெரிந்த ஒரே நபராக தன்னுடன் நிற்கப்போவது இவன்தான் என்ற நிதர்சனத்தையும் உணர்ந்து கொண்டாள். தன்னுடைய ஒவ்வாமையை புரிந்துகொண்டு அவன் அவளிடம் நடந்து கொண்ட விதமும் அவன்மீதான நன்மதிப்பை அதிகரித்தது. சற்றே சங்கடத்துடன்

“ம்ம்… ஓகே வக்கீல்சார். நண்பனா உங்களை ஏத்துக்கிறதுல எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் கொஞ்சம் வரம்பு மீறினாலும் என்னுடைய எதிர்வினை வேறமாதிரி இருக்கும். அதனால்தான் பெரும்பாலும் ஆண்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளாமல் தவிர்த்து விடுவது” ஒருவரது துணையும் இல்லாது, தன்னுடைய அலுவலகத்திற்கே வந்து, எச்சரிக்கும் தொனியில் பேசியவளின் தைரியத்தை கண்டு மனதிற்குள் மெச்சிக்கொண்டான்.

“ஷ்யூர் மிஸ்.ஸ்ரீனிகா. உங்களோட நம்பிக்கை வீண் போகாது. இப்போ நாம விஷயம் என்னன்னு பார்க்கலாமா??” நரேனின் கேள்விக்கு,

“ம்ம். ஓகே”அவளது தலை சம்மதமாக அசைந்தது.

‘இப்படியே நான் சொல்றதுக்கெல்லாம் சீக்கிரம் தலையாட்டு ஹனி’ மனதிற்குள் மகிழ்ச்சியுடனே பேச ஆரம்பித்தான்.

தனது மேஜையின் டிராயரில் இருந்து பத்திரங்களை எடுத்து அவளது கைகளில் கொடுத்தான்.

“நான் சொல்லப்போற விவரங்களை கவனமா கேட்டுக்கோங்க. கோவையில் பிரசித்தி பெற்ற வாசன் குழுமத்தின் ஒரே ஆண்வாரிசு உங்க அப்பா ஸ்ரீனிவாசன், உங்க பங்கா கோவையில் எழுதிக்கொடுத்திருக்கிற சொத்து பத்திரம் இது. கிட்டதட்ட இருநூறு ஏக்கர் நிலமும், ஒரு வீடும் உங்க பெயருக்குன்னு உயில் எழுதியிருக்கார். அந்த இடத்தோட பத்திரமும், வீட்டோட பத்திரமும் தான் இது.

உங்க அம்மாவ அவர் காதல் மணம் செஞ்சுகிட்டதா பேச்சு. மூணுமாசத்துல என்ன காரணமென்று  சொல்லாம இரண்டு பேரும் பிரிஞ்சுட்டதாவும் சொல்லியிருக்கார். இவங்களோட கல்யாணம் கோவில்ல நடந்துருக்கு. முறைப்படி பதிவு பண்ணப்படலை.

அதற்கப்புறம் முறைப்படி உங்க அப்பா கல்யாணம் பண்ணிகிட்டவங்கதான் நிவேதா. இவங்களுக்கு பிறந்த ஒரே ஆண்வாரிசு கிரிவாசன். அதாவது இப்போ உங்களுக்கு ஒரு சித்தியும், சகோதரனும் இருக்காங்க. அவருக்கும் உங்க வயதுதான்.

இதைசொல்ல எனக்கே கஷ்டமா இருக்கு. உங்கம்மா முதல் மனைவியா இருந்தாலும், சட்டப்படி திருமணம் பண்ணிகிட்டது, நிவேதா மேடம்கிறதால அவங்கதான் சட்டப்பூர்வமான மனைவியாகுறாங்க. ஆனால் கணவனோட விருப்பம்தான் முக்கியம்னு, அவரோட விருப்பப்படி, இந்த சொத்துக்களை அந்த பொண்ணு கிட்ட சேர்த்துடுங்கன்னு முதல்ல எங்ககிட்ட ஒப்படைச்சது அவங்கதான்.

இதுல முக்கியமான ஒரு நிபந்தனையும் இருக்கு” என்றவன் அவளது முகத்தைப்பாரக்க,முகத்தில்  எந்த சலனமும் இல்லாது, சற்றே கலங்கிய விழிகளுடன் அவனைத்தான் பார்த்து கொண்டிருந்தாள்.

“என்ன நிபந்தனை??” அவ்வளவு கலக்கத்திலும் , அவளிடமிருந்து அச்சரசுத்தமாக வந்தன வார்த்தைகள்.

“நீங்க அந்த வீட்டில் ஆறுமாசம் தங்கியிருக்கனும். அதுக்கப்பறம் சொத்துக்களை நீங்க‌ என்ன வேணுன்னாலும் பண்ணிக்கலாம்னு உங்க அப்பா ஒரு நிபந்தனை வச்சுருக்கார், இந்த நிபந்தனையை உங்களால முடிக்க முடியலைன்னா, திரும்ப சொத்துக்கள் அவங்க கஸ்டடிக்கே போயிடும்” நிபந்தனையை சொன்ன பிறகு, அவளது முகம் அதிருப்தியை அப்பட்டமாக காட்டியது. சற்று நேரம் அங்கு அமைதி மட்டுமே நிலவியது.

அந்த அமைதியை முதலில் கலைத்தான் சேனா.

“உங்க நிலைமை எனக்கு புரியுது ஸ்ரீனி.. சாரி ஸ்ரீனிகா. இதை நீங்க ஏத்துகிட்டா இன்னும் சில விஷயங்களையும் ஏத்ததுகிட்டு தான் ஆகனும். உங்க அம்மாவை பத்தி அந்த ஊர்மக்கள் தப்பா கூட பேச வாய்ப்பிருக்கு. புது உறவுகள் மத்தியிலும் எந்த அளவிற்கு உங்களுக்கு மதிப்பிருக்கும்னு தெரியல.

அதுமட்டுமில்லாம நிவேதா மேடம் ஜேபி குடும்பத்தை சேர்ந்தவங்க. ஜெயப்பிரகாஷ் சாரோட ஒரே தங்கச்சி. அவங்க பக்க உறவுகள்தான் அங்க அதிகம். அவங்க கல்யாணம் செஞ்சுக்கிட்டு போன உங்க அப்பாவோட வாசன் குடும்பம், அவங்கள விட செல்வாக்கானவங்களா இருந்தாலும், இப்போ ஜேபி சார் மகன் என்.ஜே யோட தலையெடுப்புக்குப்பிறகு ஜேபி செல்வாக்கு அங்க அதிகம் ஆகிடுச்சு. இந்த இடம் உங்க கைக்கு கிடைக்கறதிலயும் சிக்கல் உண்டாக்க கூடியவங்களும் அவங்கதான். அதனால்தான் அவங்ககிட்ட கூட கலந்துக்காம சொத்து பத்திரங்களை உங்ககிட்ட முதல்ல ஒப்படைக்க சொல்லி, எங்ககிட்ட ஒப்படைச்சுட்டாங்க. இப்போ உங்க முடிவு என்னன்னு நீங்க தெளிவா சொன்னாதான் நான் மேற்கொண்டு வேலையை ஆரம்பிக்க முடியும்” என்றவன் பதிலுக்காக அவளது முகத்தை பார்க்க, அப்பொழுதும் எந்த சலனமுமில்லாமல் இருந்தது அவளது முகம்.

“அப்போ இந்த சொத்துக்களை நான் வேற ஏதாவது காரியத்திற்கு உபயோகப்படுத்தனுன்னா கூட, ஆறு மாசம்  அங்க தங்கினாதான் முடியும் இல்லையா??” அவளது பதில், சிப்பி வாயைத்திறந்து பேசியதைப்போல் இருந்தது சேனாவிற்கு.

“ஆமாம்”மிகவும் மென்மையாக ஒலித்தது அவனது குரல்.

“ஓ… அங்க தங்கனுன்னா, அவங்க கூட அதாவது அந்த லேடி அண்ட் சன்… அவங்கூடவா தங்கனும்??” அடுத்த சந்தேகத்தை கேட்டு முடித்தாள்.

“தேவையில்லை. அவங்க கூட தங்கனும்னு சொல்லல. உங்க பேருக்கு வந்திருக்கிற வீட்டிலேயே நீங்க தங்கலாம்” என்றவனின் பதிலில், அவளது முகம் திருப்தி பாவத்தை காட்டியது.

“ம்ம். அப்போ சரி. மேற்கொண்டு ஆக வேண்டிய வேலைகளை நீங்க கவனிங்க வக்கீல்சார்” என்றுவிட்டு விடைபெற எழுந்தவள், எதையோ யோசித்தவாறு,

“நீங்க அப்பப்போ நான் கூப்பிடறப்போ கொஞ்சம் உதவி செய்ய முடியுமா?? முடிந்தவரை நான் சமாளிச்சுக்குவேன். உங்கள ரொம்ப தொந்தரவு செய்ய மாட்டேன்” யாரிடமும் உதவி கேட்டதில்லை என்பது அவளது முகத்தில் எதிரொலித்த சங்கடத்தில்  நன்றாகவே தெரிந்தது.

‘இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்’ சேனாவின் மனம் துள்ளாட்டம் போட்டது. இருந்தாலும் அதை வெளியில் காண்பித்துக் கொள்ளாது,

“ஓகே. மிஸ்.ஸ்ரீனிகா.கண்டிப்பா நான் உதவுறேன்” என்றதோடு முடித்துக்கொண்டான். குரலில் சிறிது சந்தோஷத்தை காண்பித்தாலும், பழைய நிலைக்கு வந்துவிடுவாளென்ற எச்சரிக்கை உணர்வு, அவனை அவ்வாறு பேசச்செய்தது.

அவனது பதிலில் திருப்தியுற்றவளாக “சரி. அப்போ நான் கிளம்புறேன் சார். இந்த வேலைகள் இன்னும் ஒருவாரமாவது ஆகுமில்லையா?? அதுக்குள்ள எனக்கு கோவைக்கு வேலை மாற்றம் பண்ணிடுவேன்” நேரம் கிடைக்குமா என்ற சந்தேகம் அவளது விழிகளில் தொக்கி நின்றது.

‘நீ ஆசைப்பட்டா ஒருவாரம் என்ன?? ஒருமாசம் கூட ஆக்கிடறேன் ஹனி” மனதிற்குள் வழிந்தவன்,

“தாராளமா. ஒருவாரம் ஆகும் மிஸ்.ஸ்ரீனிகா. நீங்க செய்ய வேண்டிய வேலையெல்லாம் செஞ்சு முடிச்சுக்கோங்க” குரலிலியே அவளுக்கு தெம்பூட்டினான்.

“ம்ம்.சரி” என்றவள் அதன்பின் , அவனைத்திரும்பி கூட பாராது சென்றுவிட்டாள்.

அவளது வேகநடையை கண்ணெடுக்காது பார்த்துக்கொண்டிருந்தவன் “ஹ்ம்ம்… உன் வாயால எப்படி ‘ஐ லவ் யூ’ சொல்ல வைக்கப்போறேன்னு தெரியலையே ஹனி??” சற்றே சுணக்கமுற்றவன், மறுநொடியே வீறுகொண்ட வேங்கையாக,

“சொல்ல வைப்பான் இந்த சேனா. நீ எனக்கு தான் ஹனி” தன்னைத்தானே ஊக்கப்படுத்திக்கொண்டவன், ஆகவேண்டிய அடுத்த கட்ட வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.

“யாரைக்கேட்டும்மா இவ்வளவு அவசரமா இந்த வேலையை பண்ணிங்க???” அன்னையின் துக்கத்தையும் மீறி, அவரிடம் கொதித்துக் கொண்டிருந்தான் கிரிவாசன்.

“வேற எந்த அவசியமும் வந்துடக்கூடாதுன்னு தான் இவ்வளவு அவசரம் கிரி” அண்ணன்மகனின் குரலில் திரும்பி அவனைப் பார்த்து தனது வழக்கமான மென்னகையை உதிர்த்தார் நிவேதா.

“வா… என்.ஜே” அவனது வார்த்தைகளுக்கு எந்த வினையும் இல்லாது, மருமகனை உள்ளே அழைத்துக்கொண்டிருந்த அன்னையைக்கண்டு கிரியின் இரத்த அழுத்தம் எகிற ஆரம்பித்தது.

கவிதைக்கு முன் வரும் கற்பனை ஊற்று, உன்னைக் காணும் போதெல்லாம் தாலாட்டுகிறது காதல் பூங்காற்று……

திமிராகும்…..

அத்தியாயம்-4:

அத்தையின் வரவேற்பில் அவரை பார்த்து புன்னகைத்தவன், அருகில் நின்று கொண்டிருந்த கிரியின் தோளில் கையை போட்டுகொண்டு,

“கூல் மச்சி. எதுக்கு இப்படி கத்திகிட்டுருக்க??” அவனோடு நடந்துகொண்டே ஹாலில் வந்தமர்ந்தனர் இருவரும்.

“நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டிருங்க. நான் சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன்” என்றுவிட்டு உள்ளே சென்றார் நிவேதா.

செல்லும் அன்னையை முறைத்துக்கொண்டே அமர்ந்திருந்தான் கிரி.

“டேய்.. எதுக்குடா இவ்வளவு டென்ஷன் ஆகுற???” என்ஜே அவனை ஆறுதல் படுத்த முனைய,

“தெரியாத மாதிரி பேசாதடா. உனக்காகத்தானே நான் இவ்வளவு டென்ஷன் ஆகுறதே. உன்கிட்ட அந்த நூறு ஏக்கர் நிலத்தை உனக்கு குடுக்கறதா தானே சொல்லியிருந்தேன். இப்போ அந்த பொண்ணுக்கு அம்மா சட்டுன்னு எப்படி தூக்கிக் கொடுக்கலாம்?? தெரிஞ்சே இப்படி செஞ்சா எப்படி மச்சி??” கிரியின் ஆதங்கம் நியாயமாகவேபட்டது.

“சொத்து குடுக்கறது கூட பிரச்சனையே இல்லை மச்சான். எனக்கு வரப்போற சொத்துல கால்பங்கு கூட அது கிடையாது. ஆனால் உனக்கு குடுக்கறதா நான் கொடுத்த வாக்கை இப்ப எப்படி காப்பாத்தறது?? அம்மாகிட்டயும் இதைப்பற்றி முன்னமே நீ பேசிட்டதானே?? அப்பறமும் எப்படி இவங்க சட்டுன்னு இப்படி செஞ்சாங்க??” புலம்பித் தீர்த்து விட்டான்.

“நீ சொல்றதெல்லாம் சரிதான் மச்சி. அத்தை அவசரப்பட்டாங்கன்னா அதுக்கு ஏதாச்சும் காரணம் கண்டிப்பா இருக்கும். அதுமட்டுமில்லாம நிலத்தை பத்தி அத்தைகிட்ட நான் என்னோட அபிப்ராயத்தை சொன்னேன், அவங்களும் கேட்டுகிட்டாங்க. தரேன்னுலாம் அவங்க சொல்லல. அப்ப மாமா இருந்தாரு, அதனால அன்னைக்கு சூழ்நிலை வேற. இப்போ இருக்குற சூழ்நிலை வேற. முதல்ல நீ சாந்தமா அடுத்தடுத்த நடக்க வேண்டிய வேலைகளை பாரு.

இப்போ அத்தைக்கு நீதான் எல்லா வேலைகள்ளயும் கூட இருக்கனும், எடுத்து செய்யனும்” பொறுப்பாக எடுத்துக்கூறும் மருமகனின் செயல்களை மனதிற்குள் மெச்சியவராக, உணவுப்பதார்த்தங்களை அவர்கள்முன் வைத்தார்.

“நல்லா சொல்லு நூவா. என்மேல கோபப்படுறதிலேயே தான் இருக்கானே தவிர, அம்மா செஞ்சா அதில் ஒரு நியாயம் இருக்கும்னு யோசிக்க மாட்டேங்கறான்” அண்ணன் மகனை துணைக்கழைக்க, தட்டிலிருந்த காஃபியை எடுத்து அருந்தியவன்,

“எல்லாம் சரிதான் அத்தை. அப்பாகிட்டயாவது நீங்க ஒருவார்த்தை கலந்து பேசியிருக்கலாம்” இடைச்சொருகலை மிக அழகாக பேச்சில் செருகினான் என்ஜே.

அவனது வார்த்தைகள் சொல்லாமல் சொல்லியது, வயதில்  சிறியவர்களை கலந்துகொள்ள தேவையில்லை. ஆனால் அவளை விட மூத்தவரிடம் ஒரு வார்த்தை கலந்தாலோசித்து இருக்கலாமென்று.

மருமகனின் புத்திசாலித்தனமான பதிலை மெச்சிக்கொண்டவர், தனக்கும் ஒரு காஃபிகோப்பையை எடுத்து கொண்டு,

“ம்ம். நீ சொல்றது சரிதான் மருமகனே. ஆனால் என் புருஷன் சொத்தை நான் கொடுக்கறதுக்கு யாரையும் கலந்தாலோசிக்க தேவையில்லைன்னு நினைக்கிறேன்” உன் உடம்பில் ஓடும் அதே ப்ரகாஷ் குடும்பத்தின் இரத்தம் என்னுடம்பிலும் ஓடுகிறது என்று சொல்லாமல் சொல்லியது அவரது பதில்.

“இதோ இவனோட  பாட்டி சொத்தும், பரம்பரை சொத்தும் அவங்க பேரனுக்கு தான். ஆனால் என் புருஷன் சுய சம்பாத்தியமா சம்பாரிச்ச இந்த சொத்த, அவரோட சுயவிருப்பத்தோட யாருக்கு கொடுக்கனும்னு நினைச்சாரோ அவங்களுக்குதான மருமகனே கொடுக்கனும்” என்னிடமே நியாயம் பேசுகிறாயா என்று சொல்லாமல் சொல்லியது அவரது வார்த்தைகள்.

அத்தையின் பதில் எவ்வாறு இருக்குமென்று, எதிர்பார்த்து வந்தாலும், இந்த பதில் நூவனையும் அசர வைத்தது. இப்பொழுது பேசினால், இன்னும் சிக்கலாகும் என்பதை உணர்ந்தவனாக,

“நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் அத்தை. அந்த பொண்ண இங்க கூட்டிட்டு வரப்போறிங்களா??”அடுத்த அஸ்திரத்தை வீச, அது தவறாமல் வேலையும் செய்தது.

“இல்லை. அவ எதுக்கு இங்க வரனும்?? ” வந்த கோபத்தை முயன்று அடக்கினார் நிவேதா.

“அப்போ அந்த ஆறுமாத நிபந்தனை??”

“என்னம்மா ஆறுமாத நிபந்தனை??”கிரியும் கேள்விகேட்டான்.

“அது அந்த பத்திரத்தில் உங்க அப்பா போட்டுருக்க நிபந்தனை. சொத்தை ஏத்துகிட்டா அவ இந்த ஊரில் ஆறு மாசம் தங்கனும். அதுக்கப்பறம் தான் அவளால் இந்த சொத்துக்களை உபயோகப்படுத்த முடியும்” மகனுக்கு விளக்கியவர், 

மருமகனிடமும் “அதுக்குதான் அவளுக்குன்னு கொடுத்த வீடு இருக்கே அங்கே தங்கிக்கட்டும்” அசட்டையாக, இதோடு நிப்பாட்டினால் தேவலை என்ற குரலில் பதில் சொன்னார்.

“என்ன அத்தை?? அந்த வீடு ஊர் எல்லையில் இருக்கு. வயசுப்பொண்ணு எப்படி அங்க தனியா இருப்பா?? சொத்த கொடுத்த நீங்கதான பாதுகாப்பும் கொடுக்கனும்” எப்படியும் உண்மையை வரவழைக்கும் வேகம் நூவனின் கேள்விகளில்.

“என்ன பேசற நூவா?? சொத்த குடுத்தா அந்தப் பொண்ண நான் ஏத்துக்கிட்டதா அர்த்தமா?? இந்தப்பொண்ணுன்னு இல்லை, என் கணவர் சொத்தை யாருக்கு குடுக்க சொன்னாலும் நான் கொடுத்துருப்பேன். என் கணவர் மேல் நான் கொண்ட அன்பு அப்படி. இந்த மாதிரி இனி அனர்த்தமா பேசாதே” நீர் துளிர்த்து விட்டது அவரது கண்களில்.

சற்று அவசரப்பட்டுவிட்டதை நினைத்துக்கொண்டவனாக அத்தையை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினான் நூவன்.

“அத்தை நான் தெரியாம கேட்டுட்டேன். என்னை மன்னிச்சுடுங்க” உணர்ந்தே மன்னிப்பு கேட்டான்.

“மாமாவ இழந்து நான் என்ன மனநிலைல இருப்பேன்னு புரிஞ்சுக்காம இப்படி பேசறியே நூவா?? இதை நான் உன்கிட்ட எதிர்பார்க்கவே இல்லை. யார்கிட்டயும் எதையும் மறைக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. எனக்கான நியாயங்கள் என்னோடு”தன்னைத்தானே சமன்படுத்திக்கொண்டு பேசினார்.

“உங்களைத்தெரியாமலா அத்தை?? இதுவுமே உங்க மேல இருக்குற அக்கறைல கேட்ட விஷயங்கள்தான்” ஏற்பட்டு விட்ட முரணை முறிக்கும் முயற்சி அவனிடம்.

“சரி விடு. கிரி ஐயரை பார்த்து பேசிட்டியா?? முப்பதாவது நாள் பூஜைக்கு என்னென்ன வேணுன்னு கொஞ்சம் பார்த்து செஞ்சுடு. எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்படுது. நீ இருந்து சாப்பிட்டு போ நூவா. நீயும் கூட கொஞ்சம் ஓய்வெடுக்கறதுன்னா எடுத்துக்கோ” என்றவர் அவனது பதிலுக்காக காத்து நின்றார்.

“பரவாயில்லை அத்தை. நான் வீட்டுக்கு கிளம்பறேன். நேத்து நைட்டும் வீட்டுக்கு போகலை. கிரி வந்துட்டேன்னு சொன்னதால அவனையும் உங்களையும் பார்த்துட்டு போக வந்தேன். நீங்க ஓய்வெடுக்க போங்க அத்தை. நான் கிளம்புறேன்” அவனது பதிலைக்கேட்டவர், மகனிடம் ஏதும் பேசாது தனது அறைக்கு சென்றுவிட்டார்.

தளர்ந்த நடையுடன் செல்லும் அன்னையைக்கண்டு கிரியின் முகம் வேதனையை பிரதிபலிக்க,

“கவலைப்படாதே மச்சி. எல்லாம் சரி ஆகிடும்” அவனை ஆறுதல்படுத்தினான் என்ஜே.

“அப்பா இல்லாம ரொம்ப கஷ்டப்படறாங்க மச்சி. எனக்கும் புரியுது. ஆனால் புதுசா முளைச்சிருக்கிற இந்த உறவு சிக்கல் ரொம்பவே சோர்வுற வைக்குது” எப்படி சமாளிக்கவென்ற சோர்வு தொனிக்க பேசினான்.

“தீர்வு இல்லாத பிரச்சனையே கிடையாது. அந்த பொண்ணு கூட சொத்து வேணான்னு தான் சொல்லியிருக்கா” தனக்கு கிடைத்த தகவலை கூறினான்.

“நிஜமாதான் சொல்றியா??” சந்தாஷமாகவே கேட்டான் கிரி.

“ஆமா. பட் சேனா மேல எனக்கு நம்பிக்கையில்லை. எப்படியும் ஒத்துக்க வைச்சு அழைச்சுட்டு வந்துடுவான். அதுதான் இப்போ சிக்கல்”

“இந்த அம்மாவ ” கிரி பல்லைக்கடித்தவன்,

“அவன்கிட்ட எதுக்கு குடுத்தாங்க மச்சி?? அவன் சரியான விடாக்கண்டன்” கோபத்தை அடக்கிக்கொண்டு பேசினான்.

நூவன் அதற்கு பதில் சொல்ல வரும்போதே, அவனது அலைபேசி ஒலித்தது.

“ஹலோ”

…….

“எஸ். என்ஜே ஹியர்”

…….

“ஓ நீங்களா?? என்ன சார் இது புது நம்பரா இருக்கு??? டவர் ப்ராப்ளமா?? ம்ம்.. ஆமா சொல்லுங்க.

எப்போ???

இப்ப ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியா??

ம்ம்.. சரி…

ஓஹோ.. ஒத்துக்கிட்டாச்சா???

ம்ம்… இப்போதானா??

சரி.. ம்ம்.. இல்ல வேண்டாம். இனி நான் பார்த்துக்கிறேன். பணம் இன்னும் ஒருமணிநேரத்துல கிரெடிட் ஆகிடும். நீங்க ஊருக்கு கிளம்பிடுங்க” உரையாடலை முடித்துக்கொண்டான்‌.

“என்ன விஷயம் நூவா??”

“அந்த பொண்ணு சொத்துக்களை ஏத்துக்கிட்டதா தகவல்”

“வாட்?? இப்போதான் வேண்டான்னு சொல்லிட்டான்னு சொன்ன??”

“ஆனால் இப்போ ஏத்துக்கிட்டாளே” சந்தோஷத்துடன் பேசிய நூவனை,

“உனக்கு ஏதும் பைத்தியம் பிடிச்சுருச்சா மச்சி??” கிரியின் கேள்வி மேலும் வாய்விட்டு சிரிக்க வைத்தது.

“ஆமா கிரி. ஒரு ஹாஸ்பிடல் ஆரம்பி அதுல நானே முதல் பேஷன்டா சேர்ந்துக்கிறேன்”

“என்ன நக்கலா??”கிரி அவனது தோளில் குத்த,

“இல்லடா கிண்டலு” பதிலுக்கு அவனது தோளில் இவன் குத்தினான்.

“விளையாடத என்ஜே, விஷயத்துக்கு வா” தீவிரமாக பேசினான் கிரி.

“சும்மா கலாட்டா பண்ணேன்டா. வரட்டும் அவளை ஒருவழி ஆக்கிடலாம். ஆனால் உன் சகோதரின்னு என்கூட நீ சண்டைக்கு வராம இருந்தா சரி”

“யாருக்கு யார்டா சகோதரி?? என்ன சீண்டி பார்க்குறியா மச்சி??” கோபத்துடன் அவன் திரும்பி வீட்டிற்குள் செல்ல,அவனது கைகளை தடுத்து நிறுத்தினான் என்ஜே.

“என்ன இருந்தாலும், அவளும் வாசன் மாமாவோட பொண்ணுதான்டா” அவனது நியாயப்பேச்சில் தலைக்கேறிய கோபத்தை முயன்று அடக்கினான் கிரி.

“வேண்டாம் மச்சான். இனி இந்த பேச்ச எடுக்காதே. கேட்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று அவனது முகத்தை பார்க்க,

“தப்பா எடுத்துக்காதே கிரி. நிதர்சனத்தை சொன்னேன் அவ்வளவுதான். உன்னை வருத்தனுங்கிறது என்னோட நோக்கம் கிடையாது” நண்பனின் கைகளை கோர்த்துக் கொண்டான்.

“நீ என் மச்சான் முறைங்கிறத விட, நம்ம நட்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு நமக்கு தெரியாதா?? சில முன்னேற்பாடுகளை செஞ்சுருக்கேன். பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு. இதுக்கும் மேல நான் இங்க இருந்தா என் டார்லிங் உஷா, என்னை வீட்டுக்குள்ளேயே விடமாட்டாங்க. கிளம்புறேன்டா” சற்றே தெளிந்த முகத்துடன் நின்றிருந்த கிரியிடம் சந்தோஷமாகவே விடைபெற்றான்.

“அக்கா எத்தனை தடவை கேட்டுட்டேன்? சரின்னு சொல்லுங்க” ஹாஸ்டலிற்குள் நுழைந்ததிலிருந்து,  ஸ்ரீனிகாவை நச்சரித்துக்கொண்டிருந்தாள் ரஞ்சனா.

“வேண்டாம் ரஞ்சு சொன்னாக்கேளேன். அங்க எப்படி சூழ்நிலையோ, எப்படிப்பட்ட மனுஷங்களோ எதுவுமே எனக்குத்தெரியாது. அப்படிப்பட்ட இடத்திற்கு உன்னையும் எப்படி அழைச்சுட்டு போறது?? இதுக்கே மிஸ்டர் சேனாவை தொந்தரவு படுத்தனுமேன்னு எனக்கு சங்கடமா இருக்கு” பேசிக்கொண்டே துணிகளை எடுத்துவைத்துக்கொண்டிருந்த பெட்டியை பார்க்க, அது காலியாக இருந்தது. துணிகள் அதனிடத்திலேயே மீண்டும் வைக்கப்பட்டிருந்தன.

“ரஞ்சு… உன் வேலைதானா இது??” அவள் ஒவ்வொன்றாக எடுத்து வந்த போது, இவள் திரும்ப அதை எடுத்து கொண்டுபோய் அலமாரியிலேயே சேர்த்திருந்தாள். பேச்சு மும்மரத்தில் ஸ்ரீனிகா இதை கவனிக்கவில்லை.

“ஆமா. நான் கூட வந்தா நீங்களும் போகலாம். இல்லைன்னா வேண்டாம். நேத்தே நானும் கோவைக்கு மாற்றல் கடிதம் எழுதிக் கொடுத்துட்டேன்” அசராது வெடிகுண்டைபோட்டுடைத்தாள் ரஞ்சு.

“யாரைக் கேட்டு இந்த வேலையை பண்ண நீ?? என்கிட்ட சொல்லாமலேயே ஏன் பண்ண??” கோபத்தில் அவளது காதுகளை பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தாள் அவள்.

“நீங்க மட்டும் என்கிட்ட சொல்லிட்டா ஊருக்கு போறதா முடிவு பண்ணிங்க?? நாங்களும் லெட்டர் வச்சுருக்கோம், நாங்களும் மெயில் பண்ணுவோம், எங்களுக்கும் சேனா அண்ணா ஹெல்ப் பண்ணுவாராக்கும்” நாக்கைத்துறுத்திக்கொண்டு, பிரபல நகைச்சுவை நடிகரைப்போல பேசியவளின் குரலில், தன்னை மறந்து சிரித்தாள் ஸ்ரீனிகா.

“வாலு. வர வர உன் சேட்டையெல்லாம் அளவு மீறி போகுது”அவளது தலையில் மெதுவாக கொட்டியவள்,

“சரி உனக்கும் சேர்த்து பேக் பண்ணு. ஆனால் இனிமேல் சேனாசாரை அதிகம் தொந்தரவு பண்ணாத. நமக்கு அவர் உதவி பண்ண வரை போதும். புரிஞ்சதா???” சம்மதம் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் அனைத்து பக்கமும் தலையாட்டினாள் ரஞ்சு.

“அதுக்கு முன்னாடி உனக்கு நான் சில விஷயங்களை சொல்லியாகனும். இப்படி வந்து உட்காரு” கட்டிலில் அமர்ந்தவளைப்பார்த்தவாறு, தானும் அமர்ந்து கொண்டாள் ரஞ்சனா.

சுருக்கமாக தனது தந்தை தனக்கு கொடுத்துள்ள சொத்துக்களை பற்றியும், தனது அன்னையைப்பற்றி தெரிந்த விபரங்களைப்பற்றியும், அவரின் இன்னொரு குடும்பத்தை பற்றியும், ஜேபி குடும்பத்தாரை பற்றியும், எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களைப்பற்றியும், தெளிவாகவே எடுத்துரைத்தாள்.ரஞ்சுவிடம் பகிர்ந்து கொண்டதில், அவளது மனபாரம் சற்றே குறைந்தாற் போலிருந்தது.

ஆனால் இளகியமனம் கொண்ட ரஞ்சனாவிற்கு மனப்பாரம் ஏறிவிட, அது அழுகையாக வெளிப்பட்டது.

“அக்கா என்ன காரணத்துக்காக உங்க அப்பா அம்மாவை பிரிஞ்சாங்க?? அதுவும் உங்க வயசுலயே ஒரு பையன்னா, அப்போ அம்மாவை பிரிஞ்ச துக்கம் கொஞ்சம் கூட இல்லையா?? இப்படிப்பட்டவர் எதுக்கு உங்களுக்கு சொத்த இப்ப எழுதி குடுக்கனும்?? நீங்க வக்கீல் அண்ணாகிட்ட வேண்டான்னே சொல்லிடுங்கக்கா. நாம அங்க போக வேண்டாம். இவ்வளவு விஷயத்தை கேள்விபட்டும் எப்படி உங்களால அழாம இருக்க முடியுது?” கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டு அழுபவளை சிறிது நேரம் அழ விட்டவள்,

“அழுதா எல்லாம் மாறிடுமா ரஞ்சு?” அவளது குரலில் இருந்த இறுக்கம் ரஞ்சனாவை நிமிர்ந்து பார்க்க வைத்தது.

“சொல்லு… அழுதா மாறிடும் சொல்லு, இன்னைக்கு முழுசும் கூட உட்கார்ந்து அழ நான் தயார். ஆனால் அது நடக்காது. நாம வாழற வாழ்க்கையின் அடுத்த நொடி நமக்கு சொந்தமில்லைங்கறப்போ, நடந்து முடிஞ்ச விஷயத்தை நினைச்சு அழுதுகிட்டுருக்கிறது முட்டாள்தனம். நான் ஒண்ணும் எனக்கு சொந்தங்கள் கிடைக்குதுன்னு அங்க போகல. எனக்கு கிடைக்கப்போற சொத்துக்களை ஆசிரமத்துக்கு கொடுக்க போறேன். அதுக்காகதான் இந்த நிபந்தனையை நான் ஏத்துக்கிட்டது. தானா கிடைக்கப்போகிற நன்மையை எதுக்காக விடனும். என்னைப்பெத்தவங்க செஞ்ச தப்புக்கு , என்னை நல்லா பார்த்துகிட்டது நம்ம வளர்ந்த ஆசிரமம் தான்.கேட்டதுக்கே நீ அழ ஆரம்பிச்சுட்ட, அதனால்தான் உன்னை வர வேணான்னு சொல்றேன். புரிஞ்சுக்கோ, இப்ப கூட ஒண்ணும் கெட்டுப்போகலை, டிரான்ஸ்ஃபர் ஆர்டர நான் கேன்சல் பண்ண சொல்றேன். இங்க நிம்மதியா இரு” ரஞ்சுவின் கைகளை பிடித்துக்கொண்டு, ஆறுதல் பெற வேண்டியவளே ஆறுதல் கூறினாள்.

“ம்ஹூம் அதெல்லாம் முடியாது. இனி நான் அழமாட்டேன். எல்லாத்தையும் இப்ப இருந்தே கொஞ்சம் கொஞ்சமா எடுத்து வைக்கிறேன். அப்பதான் கிளம்பறப்போ சரியா இருக்கும்” கைகளை கட்டிக்கொண்டு எழுந்தவள்,

“நீங்க போய் பிருந்தா மேம பார்த்துட்டு வாங்கக்கா. அப்பறம் நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிட போகலாம்” அவளை எழுப்பி, முதுகில் கை வைத்து தள்ளிவிட்டாள்.

அவளது சின்னபிள்ளைதனமான செயலில் மனது லேசாக, முகத்தில் மெல்லிய புன்னகையுடனே பிருந்தாவை காணச் சென்றாள்.

காலையிலிருந்து அலைபேசிக்கு அன்னையிடமிருந்து எந்த அழைப்பும் இல்லாமல் இருப்பதிலேயே, அவரது கோபத்தின் அளவை புரிந்து கொண்டவனாக வீட்டிற்கு வேகமாக காரை விரட்டினான் நூவன்.

போர்டிகோவில் காரை நிப்பாட்டி விட்டு வேகநடையுடன் உள்ளே நுழைந்தவனை, நிலைவாயிலிலேயே ,

“வந்துட்டீங்களா மாம்ஸ்…” கூவலுடன் அவனது கழுத்தில் தனது கைகளை மாலையாக்கி தொங்கினாள் ப்ரிஷா.

அந்த அதிர்ச்சியிலும் ஒரு கணம், அவளது முகம் ஸ்ரீனிகாவின் முகமாக தெரிய, தன்னை மறந்து அவளைப் பார்த்து முதன்முறையாக புன்னகைத்தான்.

அவனது சிரிப்பில் மகிழ்ந்தவளாக,” ஹே.. மாம்ஸ் என்னைப்பார்த்து சிரிச்சுட்டாங்க” அவள் தனக்குத்தானே அழகான சிரிப்பு என்று கருதும் செயற்கையான சிரிப்பை ப்ரிஷா சிரித்து வைக்க, அதில் அவனது நினைவு கலைந்து நிதர்சனத்தை உணர்த்தியது. அவளை பிடித்து கீழே தள்ளியவன்,

“உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் பீட்சா, இப்படி தொங்காதேன்னு” நன்றாக முறைத்து வைத்தான்.

அதில் அவள் அழுது ஒப்பாரி வைக்க,

“நீ அழாதடா ரிஷீம்மா” அண்ணன்மகளை சமாதானப்படுத்தியவர்,

“எங்கயோ இருக்கற கோபத்தை எதுக்குடா என் மருமக மேல காட்டுற???” மகனை கடிந்து கொண்டே வாயிலுக்கு வந்தார் உஷாந்தினி.

அன்னை யாரை குறிப்பிடுகிறார் என்பதை உணர்ந்து கொண்டவனாக,

“என்ன மதிய வெயில்ல உஷாந்தினி தேவியார் ரொம்ப ஹாட்டா இருக்கற மாதிரி இருக்கே” என்றவன் அன்னையைக்கட்டிக்கொண்டு, அவரது தோளில் முகம் புதைத்துக் கொண்டான்.

“படவா.. இப்படி கட்டிப்பிடிச்சே என்னை மயக்கிடற டா” கோபத்தின் சாயலென்றால் என்ன என்று கேட்குமளவிற்கு, அவரது குரல் குழைந்திருந்தது.

“மாம்… எனக்கு ரொம்ப பசிக்குது. அத்தை கம்பெல் பண்ணிகூட சாப்பிடாம என் டார்லிங்க பாக்க ஓடி வந்துட்டேன். பிரன்ச்சாவே எடுத்துக்குறேன். கொஞ்சம் ஹெவியா குடுங்கம்மா” அன்னையின் கைகளை பிடித்து ஆட்டிக்கொண்டே உள்ளே வந்து சேர்ந்தான்.

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ப்ரிஷாவிற்கு,அசாதத்திய உயரமும், கோதுமை நிற ஆணழகனும், தொழில்துறையின் முடிசூடா மன்னனாக வலம் வரும் மாமனின் கவனம், சற்று கூட தன் பக்கம் திரும்பாததை கண்டு வயிறு பற்றி எறிந்தது.

“என்னைப்பிடிச்சு தள்ளிவிட்டு , கண்டுக்காமலா போற?? உன்னையே கல்யாணம் பண்ணி, உன்னை எனக்கு சேவகம் பண்ண வைக்கறேன் நூவன் மாமா” வெஞ்சினத்தை வஞ்சகமாக மனதுக்குள் ஒளித்தவள்,

“அத்தை, மாம்ஸ பார்த்ததும் என்னைமறந்துட்டிங்களே?? “தாய்க்கும் மகனுக்கும் இடையில் புகுந்து, உஷாவின் கைவளைவுக்குள் தனது கையை நுழைத்துக்கொண்டாள் ப்ரிஷா.

“உன்னை மறப்பேனாடா செல்லம்?? என்கூட சேர்ந்து நீயும் சாப்பாடு எடுத்து வை வா. இந்த வீட்டு மருமகளா வரப்போற நீ எல்லாத்தையும் கத்துக்கனும்” மருமகள் என்றதும் அவனது நினைவு தானாக, ஸ்ரீனிகாவிடம் சென்றது.

“இந்த ஊருக்கு வந்ததும் முதல் ஆளாக உன்னை வரவேற்கப் போறது நான்தான் மை நிகா பேபி” நினைக்கையிலேயே ஒருவித இனிமையான உணர்வு அவனது நாடி நரம்பெங்கும் பரவியது.  ஒரு மார்க்கமாக சிரிக்கும் அத்தை மகனை கண்டுகொண்ட ப்ரிஷாவின் முகம் யோசனையை தத்தெடுத்தது.

உன் ஒற்றை காதல் பார்வையையும், கற்றை புன்னகையையும் பரிசாகப்பெற காத்திருக்கிறேன் என் திமிரழகி….

திமிராகும்…….

அத்தியாயம்-5:

தன் முன்னால் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் க்ளையன்டை கொல்லும் வாய்ப்பு மட்டும் கிடைத்தால், உடனே கொன்றுவிடும் கோபத்தை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான் சேனா. ஆனால் அப்படி ஏதும் செய்துவிட முடியாத அளவிற்கு அரசியல் செல்வாக்கு நிறைந்த பெரும்புள்ளி அவர்.

அவனது சிந்தனை முழுவதும் ஸ்ரீனிகாவின் கோவை பயணத்திலேயே இருந்தது. எப்படியாவது அவளுடனே கோவைக்கு தான் உடன்செல்லும் படி பயணத்திட்டத்தை மிக கச்சிதமாக போட்டு வைத்திருந்தான். ஆனால் அதற்கு முதல் முற்றுப்புள்ளியை வைத்தார் அவரது தந்தை.

முதல் நாள் மாலை, அவளின் விடுதிக்கே சென்று சந்தித்தவனை முதலில் வரவேற்றது பிருந்தா தான், பரஸ்பர நலவிசாரிப்பிற்கு பின், தன்னவளின் தரிசனுமும் கிடைத்தது.

அன்று பார்த்து, அவள் அவனைப் பார்த்து சிநேகப்புன்னகை ஒன்றை உதிர்க்க, சேனா அமர்ந்திருந்த இருக்கை, மேலே பறப்பது போல் இருந்தது அவனுக்கு.

“வாங்க வக்கீல்சார். என்ன விஷயம்??” அவளது ரத்தினசுருக்கமான கேள்வியில், எட்டிப்பார்த்த கோபத்தை அழுத்தி வைத்தான் சேனா.

‘ஏன் நான் சும்மா பார்க்க வரக்கூடாதா?? பார்த்தா கூட குத்தம் ஆகிடுமா’ மனதின் குடைசலை புறம்தள்ளியவனாக,

“எப்போ கிளம்புறிங்கன்னு கேட்கலான்னு வந்தேன் ஸ்ரீனிகா??” கேட்க வேண்டுமென்று ஒரு கேள்வியை கேட்டு வைத்தான். அவனுக்குத்தான் அவளது பயணத்திட்டம் முன்னமே தெரியுமே.

“எனக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வந்துருச்சு சார். ரஞ்சனாக்குதான் ஒருவாரம் லேட்டுன்னு முகத்தை தூக்கி வச்சு உட்கார்ந்துருக்கா. நாளைக்கு மார்னிங் ஃப்ளைட்ல கிளம்பறேன். இன்னைக்கு காலைல உங்க ஆஃபிஸ்ல சொன்னேனே?? உங்ககிட்ட தகவல் சொல்லலியா??” தெரிந்த விஷயத்தை மீண்டும் கேட்க வந்தாயா , என்று சொல்லாமல் சொல்லியது அவளது பதில்.

“ரஞ்சனாக்கு லேட் பண்ணதே நான்தானே ஹனி”மனதிற்குள் சந்தோஷப்பட்டு கொண்டாலும் , சேனா தனது கெத்தை விடாது,” அதெல்லாம் சொல்லிட்டாங்க ஸ்ரீனிகா. இருந்தாலும் உங்ககிட்டயும் கன்ஃபார்ம் பண்ணிக்கனும் இல்லையா?? அதுமட்டுமில்லாம” என்றவன் தனதருகில் வைத்திருந்த ஃபைலை எடுத்து அவளிடம் கொடுத்தவன்,” இதுல பத்திரங்களோட நகல் மற்றும் வீட்டுச் சாவி இருக்கு. நீங்க இதை எடுத்துக்கிட்டு கிளம்பினா சரியா இருக்கும். அதுக்காகதான் வந்தேன். நீங்க முன்னாடி கிளம்புங்க. உங்க ஃப்ளைட்லயே ஒரு டிக்கட் எனக்கும் புக் ஆகியிருக்கு. முடிந்தால் நான் அதுலயே வந்துடுவேன். இல்லைன்னா அடுத்த ஃப்ளைட்ல வருவேன். சில முன்னேற்பாடுகளை பத்தி நான் நிவேதா மேடம் கிட்ட பேசனும்” தெளிவாக பேசியவன், அடுத்து அவள் கேள்வி எழுப்பும் முன்பே விடைபெற்று வந்துவிட்டான். எங்கே அவளுடன் தான் செலவிடப்போகும் ஒருவார பயணத்திட்டத்தின் சந்தோஷத்தை தன்னையறியாது வெளிப்படுத்தி விடுவோமோ என்று நினைத்தவனாக, முயன்ற அளவில் சீக்கிரம் கிளம்பி விட்டான்.

ஆனால் அலுவலகத்திற்கு  வந்த பின்பு தான் தெரிந்தது, முக்கியமான பெரும்புள்ளி ஒருவரின் அழைப்பும், அவர் இன்றே மும்பையில் தன்னை காண விரும்புவதையும், தனது எண்ணிற்கு முயற்சித்து கிடைக்காமல், அவனது தந்தைக்கு அழைத்து விஷயத்தை தெரிவித்திருந்தார் என்பதும். தந்தையின் அவசரக்குறிப்போடு ஆல்பர்ட் அடுத்த விமானத்திற்கான பயணச்சீட்டுடன் காத்திருந்தான். மறுக்க முடியாத நிலையில்,

“எத்தனை மணி ஃப்ளைட் ஆல்பர்ட்??”  என்று கேட்டான்.

“நான்கு மணிக்கு சார். இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு. இரண்டு நாள் கூட ஆகலான்னு பெரியசார் சொன்னாரு”  அந்நபரை சந்திப்பது பாக்கியமாக கருதும் நபர்களுக்கு  மத்தியில், குழப்ப முகத்துடன் யோசித்துக்கொண்டிருப்பவனை பார்க்க அவனுக்கு வியப்பாக இருந்தது.

“வீட்ல இருந்து லக்கேஜ் வந்துடுச்சா?” தனது அலைப்பேசியில் தந்தைக்கு அழைப்பெடுத்துக்கொண்டே கேள்வி கேட்டவனுக்கு,

“ஆம்” என்று தலையசைத்தான் ஆல்பர்ட். தந்தையிடம் என்ன செய்ய வேண்டுமென்று விபரங்களை கேட்டறிந்தவன், தன்னுடைய சில பொருட்களையும் விமான நிலையத்திற்கு வீட்டிலிருக்கும் தனது ஓட்டுநரிடம்  கொடுத்து விடுமாறு கூறினான். நேரத்தைப் பார்க்க, கால் மணிநேரம் கடந்திருந்தது. சட்டென்று ஒரு யோசனை தோன்ற, ஸ்ரீனிகாவிற்கு அழைத்தான்.

“ஹலோ.. சொல்லுங்க சார்” அவன் கொடுத்துச்சென்றிருந்த பத்திரங்களை பெட்டிக்குள் வைத்து பூட்டிக்கொண்டிருந்தாள்.

“மிஸ்.ஸ்ரீனிகா, உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல??”பீடிகையுடனேயே ஆரம்பித்தான்.

“பரவாயில்லை சொல்லுங்க சார்” பெட்டியை தூக்கி ஓரத்தில் வைத்தவள் பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து அருந்தினாள்.

“இப்போ அவசரமா நான் மும்பை கிளம்பறேன். தவிர்க்க முடியாத பயணம். நாளைக்கு உங்களுக்கு உதவிக்கு வரமுடியாது. அதனால நீங்க உங்க பயணத்தை கொஞ்சம் தள்ளிப்போட முடியுமா?” சரியென்று சொல்லிவிடு, மனதில்  எதிர்பார்ப்புடனே பேசினான்.

“அதனாலென்ன சார்?? ஒன்னும் பிரச்சனையில்லை, நான் மேனேஜ் பண்ணிக்குவேன்” அவனது திட்டத்தில் முதல் இடியை சுலபமாக இறக்கினாள்.

மனதிற்குள் தன்னைத்தானே நொந்து கொண்டான் சேனா.

“தப்பு பண்ணிட்டேனே. ரஞ்சனாவயும் உன்கூட வரவிடாம பண்ணிட்டேனே” அவனது மனசாட்சி அவனை குடைய ஆரம்பித்தது. இறுதி முயற்சியாக,

“அந்த வீடு கொஞ்சம் மராமத்து வேலையெல்லாம் பண்ண வேண்டியிருக்கும் ஸ்ரீனிகா. ஏற்கனவே அங்க ஆளுங்களுக்கு சொல்லி வச்சுருக்கேன். ஆனாலும் தனியாளாக அங்க சமாளிக்கிறது கொஞ்சம் கஷ்டம். அதனால்தான் சொல்றேன்” சரியான காரணத்தை எடுத்து வைத்தான்.

“ஓ..”

அவளது ‘ஓ’வில் சேனாவின் மனம் துள்ளியது‌.

“இருக்கட்டும் சார். நான் பார்த்துக்கறேன். அங்க போனதும் உங்க அலுவலகத்துக்கே தகவல் குடுத்துடறேன். உங்கள தொந்தரவு பண்ண மாட்டேன்” அவளது வழக்கம் மாறாது பதில் கொடுத்தாள்.

அவளது இந்த பதிலில்”என்கிட்ட சொல்லமாட்டாளாமா??”  என்று  கோபம் வந்தது சேனாவிற்கு.

“சரி ஸ்ரீனிகா பார்த்துக்கோங்க. நான் மும்பை கிளம்பறேன் பை” அவளின் பதிலை கூட எதிர்பாராது வைத்து விட்டான்.

“ரொம்ப அவசரம் போல இருக்கு” என்று நினைத்தவளாக அவளும் வைத்துவிட்டு திரும்ப,  திரும்பியவளை பார்த்து முகத்தை திருப்பி கொண்டாள் ரஞ்சு.

“ஹேய்.. தயவுசெஞ்சு இப்படி மூஞ்ச வைக்காத, எனக்கு சிரிப்பு வருதுடி” அவளது கன்னத்தை பிடித்து ஆட்டினாள் ஸ்ரீனி.

ரஞ்சனா அவளது கையை தட்டிவிட்டவள், ” நீ பேசாதக்கா. அந்த மேக்கப்மூஞ்சிகிட்ட பேசு, பேசுன்னு உனக்கு எத்தனை தடவை சைகை பண்ணேன். கடைசில அது என்ன பார்த்து ‘ வெளில போ லூசுன்னு’ திட்டிருச்சு. உன்கிட்ட சொன்னதுக்கு பதிலா, ஒரு மேக்கப் கிட் வாங்கிக்குடுத்துருந்தேன்னா வேலை சீக்கிரம் முடிஞ்சுருக்கும். ஹூம்…” அவர்களது மேலதிகாரியை பற்றிய புலம்பலில் வாய்விட்டு சிரித்தாள் ஸ்ரீனிகா.

“ரொம்ப சிரிக்காதக்கா. இப்பவும் ஒரு மேக்கப் கிட் கிஃப்ட் குடுத்துட்டுதான் வந்துருக்கேன். இரண்டுநாள் இருந்து எல்லாத்தையும் சர்வர்ல லோட் பண்ணிட்டு லீவ் போட்டு நீ கிளம்பிடு. டிரான்ஸ்ஃபர் ஆர்டர் நான் நேரடியாக அந்த ப்ரான்ச்சுக்கு அனுப்பிடறேன்னு சொல்லிடுச்சு” என்றவள் அவளது கழுத்தை கட்டிக்கொள்ள,

“நீ ரொம்பத்தான் சமத்துடி” தானும் அவளது கைகளை பிடித்துகொண்டாள் ஸ்ரீனி.

“சரி வா சாப்பிட போகலாம்” ஸ்ரீனி சாப்பிட அழைக்க,

“ம்ம். போலாம். பிருந்தா மேம் கிட்ட எல்லா விஷயமும் பேசிட்டிங்களாக்கா??” முக்கியமான விஷயத்திற்கு வந்தாள் ரஞ்சு.

“ம்ம். சொல்லிட்டேன்டா. அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். நம்ம ரூம்க்கு வாடகையும் ஆறுமாசத்துக்கு குடுத்தடறேன்னு சொல்லி, யாருக்கும் ஒதுக்க வேணான்னு சொல்லிட்டேன்” அவளது பதிலில் சந்தோஷம் இருமடங்கானது ரஞ்சுவிற்கு.

“இருந்தாலும் நீங்க அங்க தனியா போறது கஷ்டமா இருக்குக்கா. சேனா சாரும் இருக்க மாட்டாரு, நானும் இருக்க மாட்டேன். நீங்க ரெண்டு நாளைக்கு அப்பறம் போகலாமில்ல” அக்கறையை விட கவலையே அதிகமாக தெரிந்தது அவளது முகத்தில்.

“ஹே.. நான் என்ன தனித்தீவுக்கா போறேன்?? அதுவுமில்லாம நான் என்ன சின்ன குழந்தையா ரஞ்சு, எங்க போனாலும் துணைக்கு ஆள் பிடிச்சுகிட்டு போக?? நான் சமாளிச்சுக்குவேன்டா. நீ வேலையை ஒழுங்கா முடி. அவங்க மெமோ குடுத்துட்டா பிரச்சனையாகிடும். நமக்கு வேலை ரொம்ப முக்கியம். அதுமட்டுமில்லாம தன்னம்பிக்கையும் , தைரியமும் தான் நம்ம முதல் சொத்து. இதை எப்பவும் ஞாபகம் வச்சுக்கோ. இப்ப வா சாப்பிட போகலாம். எனக்கு ரொம்ப பசிக்குது” பேச்சை முடித்தவளாக அவளை இழுத்துக்கொண்டு சாப்பிட சென்றுவிட்டாள். சாப்பிட்டுவிட்டு வந்து தூங்கிய போதும், பின்பு அவள் பிரயாணத்திற்கு கிளம்பும்போதும், நல்லவிதமாகவே வழியனுப்பி வைத்தாள் ரஞ்சனா.

காலையில் எழுந்ததிலிருந்து பரபரப்பாக தயாராகிக்கொண்டிருக்கும் மகனை வித்தியாசமாக பார்த்தார் ப்ரகாஷ்.

“என்னடா எப்பவும் முகத்துக்கு மட்டுமில்லாம, உள்ளயும் கஞ்சிய ஊத்திடக்கிட்ட மாதிரி, ஃபுல் சூட்டோடயும், ஒரு கெத்தோடயும் கிளம்புவ. இன்னைக்கு என்ன கௌல் டிஷர்ட், ஜுன்னு சும்மா அசத்துற” உணவுண்ணும் மேஜையில் அமர்ந்து கொண்டு, தன்னை கேள்வி கேட்கும் தந்தை, நூவனின் கண்களிற்கு உச்சியில் கொண்டையுடன் , வீணையை க்ராஸ்பேகாக மாட்டிக்கொண்டிருக்கும் நாரதராக தெரிந்தார்.

“அப்பா, இப்ப ஏன் காலங்கார்த்தாலயே உங்க கலகத்தை ஆரம்பிக்குறிங்க??” அடித்தொண்டையில் சீறினான் என்ஜே.

“அடேய் மகனே, நீ என்ன பண்றன்னு, நீ ‘குடியிருந்த கோயில்’ க்கு தெரிய வேண்டாமா??” ஆரஞ்சு ஜூஸை மிடறு விழுங்கி மிகவும் ரசித்து அருந்த ஆரம்பித்தார்.

“குடியிருந்த கோயிலா?? என்னப்பா சொல்றிங்க??” தானும் எலுமிச்சை பழஜூஸை எடுத்து ஆரம்பித்தான் என்ஜே.

“உங்கம்மாதான்டா, நீ குடியிருந்த கோயிலு, என்ன இப்ப தஞ்சை பெரிய கோயில் அளவுக்கு பெரிசாகிட்டா” அவர் சிரிக்காமல் சொல்ல, சிரிப்பில் நூவனுக்கு புரையேறி விட்டது.

அவனது தலையில் தட்டியவர் ” என்னதான் ஜூஸ் நல்லால்லன்னாலும் இப்படி நடுவீட்டுல துப்புறது தப்புடா மகனே. மை பொண்டாட்டி பாவம். அவ சின்ன மனசு உடைஞ்சு போயிடும்” என்று பேச,

“அப்பா. போதும்ப்பா என்னால முடியல” தந்தையின் கைகளை பிடித்துக்கொண்டான் நூவன்.

“என்ன காலையிலேயே அப்பாவும், மகனும் குஷியா இருக்கிங்க?” என்றவாறே சமையல்காரம்மாவின் உதவியுடன் சமைத்த பதார்த்தங்களை எடுத்து வந்தார் உஷாந்தினி‌‌.

“சரியா சொன்னிங்கமா. டாடியும், அண்ணாவும் கூட்டணி போடறாங்கன்னா ஏதோ பெரிய விஷயம்தான். விடாதிங்க கேளுங்க” அலுவலகம் செல்வதற்கு தயாராகி வந்திருந்த ஹர்ஷத்தும் அவர்களுடன் இணைந்து கொண்டான்.

உஷாந்தினி சின்ன மகனின் பேச்சை கேட்டு சிரித்தவர்,” நூவா இன்னைக்கு ஏதும் ஃப்ரெண்ட்ஸோட வெளிய போறியாடா?? ரொம்ப நாளைக்கு அப்பறம் கேஷூவல்ஸ்ல இருக்குற?? ரொம்ப அழகா இருக்கடா, என் கண்ணே பட்டுடும் போல இருக்கு” மகனை நெட்டிமுறித்தார்.

“ஆமா அத்தை. மாம்ஸ் ரொம்ப அழகா இருக்காரு” அவரின் கருத்தை ஆமோதித்தாள் அப்பொழுது தான் எழுந்து வந்திருந்த ப்ரிஷா.

“வந்துட்டாளா?? ஏண்டி பல்லை இப்பத்தான் விளக்கிட்டு வந்தியா?? அண்ணன பார்த்து அவ்வளவு பல்லையும் காமிக்கற??” ஹர்ஷத் ப்ரிஷாவை கலாய்க்க, அதில் மகிழ்ந்து தம்பிக்கு  ஹைஃபை கொடுத்தான் என்ஜே.

“அத்தை , பாருங்கத்தை ரெண்டு பேரும் கிண்டல் பண்றதை” வீட்டின் ஆணிவேரை கையில் பிடித்தாள் அவள்.

அவளது நடிப்பை புரிந்து கொள்ளாது அவரும்” டேய் ரெண்டு பேரும் சும்மா இருங்கடா. எப்பப்பாரு அவளை கிண்டல் பண்ணிகிட்டு”  அவளை அமரவைத்து அவளுக்கும் பரிமாற ஆரம்பித்தார். அப்பொழுதுதான் கணவனது கையில் இருந்த ஜூஸை கண்டவர்,

“அச்சச்சோ ” என்று கத்த, அனைவரும் திரும்பி பார்த்தனர்.

“என்னாச்சும்மா??” ப்ரகாஷ் தானே வலிய வந்து மாட்டினார்.

“மாமா என்னதிது??” அவரருகே வந்து அவரது கையில் இருந்த ஜூஸை பிடுங்கியவர்,

“டாக்டர் உங்களை அருகம்புல் ஜூஸதான குடிக்க சொல்லியிருக்கார். எப்படி நீங்க ஆரஞ்சு ஜூஸ் எடுத்திங்க??” என்றவர் கையிலுருந்ததை பிடுங்கிக்கொண்டு போய் சமையலறையில் வைத்து விட்டு, அருகம்புல் ஜூஸை எடுத்து வந்தார்.

“இதை குடிச்சு முடிச்சாதான் இன்னைக்கு உங்களுக்கு சாப்பாடு” அவரது தோளில் இடித்து விட்டு மகன்களுக்கு பரிமாற ஆரம்பித்தார்.

நூவன் தந்தையின் புறம் லேசாக சாய்ந்தவன் ” அப்போ காலைல போட்ட பிட்டெல்லாம், என் கவனத்தை திசை திருப்பி, இந்த ஜூஸை குடிக்க தானாப்பா” என்று கலாய்த்து வைத்தான்.

மகனை ஒரு பார்வை பார்த்தவர், ” நீ சொன்னா குடிக்காம இருப்பேனா செல்லம், ஓடி வந்த டையர்ட்ல, ரெண்டு கலரும் ஒரு மாதிரி தெரிஞ்சது உஷாகுட்டி” மனைவியை சமாதானப்படுத்திய கையோடு,

“ஆமா உஷாம்மா, நூவன் எங்க போறான்னு கேட்டுகிட்டு இருந்தல்ல?? அதுக்கு இன்னும் அவன் பதில் சொல்லல, என்னன்னு கேளு??” மகனையும் கோர்த்து விட மறக்கவில்லை அவர்.

அதில் மீண்டும் அவனுக்கு புரையேற, மகனது தலையை இப்பொழுது தட்டுவது தாயின் முறையாயிற்று.

“என்னடா காலைலருந்து உனக்கு புரையேறிகிட்டு இருக்கு. யாரோ உன்னை ரொம்ப நினைக்கிறாங்கடா நூவா. சரி அதை விடு, என்ன விஷயம்னு நீ சொல்லவேயில்லையே?” அதுவரை உணவை ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்த ப்ரிஷா, இப்பொழுது கவனமாக இவர்களது பேச்சை கவனிக்க ஆரம்பித்தாள்.

“இன்னைக்கு நம்ம மாமாவோட பூர்விக வீட்டுக்கு போறேன். அவரோட பொண்ணு அங்க வர்றாங்க. மராமத்து வேலைகளை மேற்பார்வை பார்க்குற ஆளுங்கள மட்டும் ஒரு பார்வை பார்த்து அவங்களுக்கு அறிமுகப்படுத்த சொல்லி இந்திரசேனா சார் என்கிட்ட கேட்டுக்கிட்டாரு” விஷயத்தை போட்டுடைத்தான்.

எதிர்பார்த்ததை போல உஷாந்தினியின் முகம் கோபத்தால் சிவந்திருந்தது.

“இந்த வேலையை செய்ய நீதான் போகனுமா??” அடக்கப்பட்ட ஆத்திரம் அதில் நன்றாகவே தெரிந்தது.

“இந்திரசேனா கேட்டுக்கிட்டதால கூட….”ப்ரகாஷ் ஆரம்பித்தவர், மனைவியின் ஒற்றை முறைப்பில் அவரது வார்த்தை அடங்கி விட்டது.

“சொல்லு நூவா, உன்னைத்தான் கேட்கிறேன்” மீண்டும் நூவனிடமே கேள்வி வந்து நின்றது. ஹர்ஷத்திற்கும் இதில் ஆச்சர்யமே ஏற்பட்டது. இந்த சின்ன வேலைக்காகவா அண்ணன், இன்றைய முக்கிய வேலைகள் அனைத்தையும் நிப்பாட்டி வைத்திருக்கிறான்.

“யார் அந்த மேனாமினுக்கி?? மாம்ஸே அவளுக்காக கிளம்புறாரு??” மனிதிற்குள் தாளித்துக்கொண்டிருந்தாள் ப்ரிஷா.

அனைவரது எண்ணப்போக்கையும் உடைத்தது நூவனின் பதில்.

“நான் இந்த வேலையை செய்ய வேண்டியதில்லை மாம். இது அவருடைய மகன் ஒத்துக்கிட்ட வேலை. உங்களுக்கே தெரியுமில்லம்மா, அத்தை சேனாகிட்ட தான் பத்திரத்தையும், பொறுப்பையும் ஒப்படைச்சுருக்காங்க” என்றவனை இடையிட்டார் உஷா.

“ஹான்.. தெரியும் தெரியும். ஏன் தெரியாம?? உனக்கு குடுக்கக்கூடாதுன்னு தான அவசர அவசரமா பத்திரத்தை தூக்கி குடுத்துட்டா?? நான் அவளை நியாயவாதின்னு நினைச்சன்டா?? என் எண்ணத்தை பொய்யாக்கிட்டா” நாத்தனாரை  குற்றம் சாட்டுகிறாரா, இல்லை பாராட்டுகிறாரா என்று குழம்பிப்போயினர் அனைவரும்.

“அம்மா நான் சொல்ல வர்றதை கேளுங்க. அத்தை விஷயத்துக்காகவும் நான், நான் அங்க போறது. கிரி மறுபடியும் ஊருக்கு போயிருக்கான். அதனால் தான் சேனா சார் எங்கிட்ட உதவி கேட்டது. இல்லைன்னா அவன் போயிருப்பான். அத்தை இவ்வளவு அவசரமா முடிவெடுத்தெடுத்து இருக்காங்கன்னா அவங்களே அதுக்கான காரணத்தையும் சொல்வாங்க. அதுமட்டுமில்லாம, அந்த பொண்ணுக்கு ஆட்கள அறிமுகப்படுத்திட்டு, நான் குழந்தை பிறந்திருக்கிற என் நெருங்கிய நண்பன் வீட்டுக்கும் போறேன்.எனக்கே ஒரு மாறுதல் தேவைப்பட்டது அதனாலதான். இப்பகூட நீங்க சொன்னா போறேன், இல்லைன்னா வேண்டாம்” என்றவனின் கடைசி வரியில் விழுந்து விட்டார் உஷாந்தினி.  மகனது முகத்தை பார்க்க , அவனும் அனுமதிக்காக அவரது முகத்தை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

“சரி, சரி போய்ட்டு வா. வர்ற பொண்ணு எப்படின்னு நம்மளும் தெரிஞ்சுக்கனுல்ல. நீ சொல்லிட்டு உடனே கிளம்பிடு நூவா” மறைமுகமாக தனது சம்மதத்தை கொடுத்து விட்டார்.

“மாம்… அந்த..” அந்த பொண்ணு ஃபோட்டோவே இருக்கு என்று சொல்லவந்தவன், பார்வையாலேயே அமைதியாக இருக்குமாறு, தம்பிக்கு கண்ஜாடை காட்டிய என்ஜேவை கண்டு வாயை மூடிக்கொண்டான்.

“என்னடா அந்த…??” உஷாவின் கேள்விக்கு,

“அந்த சட்னி கொடுங்கமா” என்று பேச்சை மாற்றிவிட்டான் ஹர்ஷத்.

ஆனால் இதையெல்லாம் தவறாது நோட்டமிட்டுக்கொண்டிருந்த ப்ரிஷாவிற்கு ஏதோ பெரிய விஷயத்தை மறைக்கிறார்கள் என்பது நன்றாக புரிந்தது.

அன்னையின் அனுமதியோடு சந்தோஷமாகவே கிளம்பி வந்தான் என்ஜே.

ஆனால் தன்னவளை கண்டபோதோ, நனைந்த உடையுடன் அழகு எழில் கோலங்கள் அழகை மேலும் உயர்த்திக்காட்ட, தன் முன்னால் மூர்ச்சையுற்று படுத்திருந்த தனக்குரியவளை கண்டபோது, ரசிக்கும் சூழல் அல்லாது , அவளது உயிரோடு அவனது உயிரையும் பிடித்துக்கொண்டு, வாயோடு வாய் வைத்து, தனது உயிர் மூச்சால் அவளுக்கு உயிர்காற்றை நிரப்பி, முதலுதவி செய்து கொண்டிருந்தான் நூவன்.

“நிகா பேபி, எழுந்திருடி, என்னைப்பாருடி” என்ற கேவலோடு.

உன் இதழ்ரேகையில் தேடித்தவிக்கிறேன் , என் ஆயுள்ரேகயை எனதழகி……

திமிராகும்…..

அத்தியாயம்-6:

கோவை செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்தவளுக்கு, முதல்முறையாக நெஞ்சை ஏதோ பிசைவதை போன்ற உணர்வு. விமானப் பயணம் அவளுக்கொன்றும் புதிதல்ல. ஆனால் இப்படி தன்னைச் சார்ந்த ரத்த உறவுகளை எதிர்கொள்வது இதுவே முதல் முறை ஆதலால், சற்று அவளது கட்டுப்பாடுகள் தளர்ந்து உணர்ச்சிகளின் பிடியில் தான் இருந்தாள். அதிலிருந்தும் முயன்று தன்னை சமன்படுத்திக்கொண்டு, வெற்றிகரமாக கோவைக்கு வந்தும் இறங்கினாள். விமானநிலையத்திலிருந்து வெளியே வந்து, அலைப்பேசியை உயிர்ப்பித்ததுமே, முதலில் வந்தது ரஞ்சனாவின் அழைப்பு.

அவள் எடுத்து, “ஹலோ ” என்று சொல்லுமுன்பே,

“கோவை வந்தாச்சாக்கா?? பத்திரமா போயிடுங்க?? நீங்க டிராவல்ல இருப்பிங்கன்னு, சேனா அண்ணா எனக்கு கால் பண்ணி, உங்ககிட்ட விமானநிலையத்திலிருந்து நீங்க போகற இடத்துக்கு, டேக்ஸி பேசி போக சொன்னாங்க. கொஞ்சம் ஊர் எல்லைங்கறதால, டேக்ஸி தான் பெட்டராம். முடிஞ்சா ஊருக்குள்ள போகும்போதே சாப்பாடும் வாங்கிக்க சொன்னாங்க” கடகடவென்று சொல்லி முடித்தாள்.

அவளது பேச்சில் சிரிப்பு வந்தாலும், அதை அடக்கிக்கொண்டவள்”ஏண்டி, ஏன் பின்னாடி ஏதும் ஆள் செட் பண்ணி வச்சுருக்காரா அந்த சேனா?? கரெக்டா ஏர்போர்ட் வாசல்ல கால் வைக்கும்போது ஃபோன் பண்ற??” சொல்லி கேலி செய்துவிட்டு,

“இதுமட்டுந்தான் சொன்னாரா?? இல்ல வேற ஏதும் சொன்னாரா??” கவனத்தை சுமந்திருந்தது அவளது குரல்.

“ஷ்.. ஹ்ம்… ஆமாக்கா. அங்க ராமுன்னு ஒரு தாத்தா காவலுக்கு வர்றதா சொல்லியிருந்தாராம். அவர் நேத்தே வந்துட்டாராம். வீட்டோட பின்பகுதி சாவிங்கள்ளாம் அவர்கிட்ட இருக்காம். அவர்தான் அப்பப்ப வந்து தோட்டவேலையெல்லாம் செஞ்சு குடுப்பாராம். இதையும் சொன்னார்” அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவர்களது தலைமை அதிகாரியின் குரல் பின்னால் கேட்க,

” சரி அக்கா. அந்த மேக்கப்மூஞ்சி வருது. நான் ஃப்ரீ ஆகிட்டு திரும்ப கால் பண்றேன். நீங்க மறக்காம சேனா சார்கிட்ட பேசிடுங்க. பை” என்று வைத்து விட்டாள்.

ரஞ்சனாவின் பேச்சை கவனத்தில் கொண்டவளாக, வெளியே வந்து அங்கிருந்த டேக்ஸி ஓட்டுனர்களிடம் விசாரிக்க அவர்களும் சேனாவின் கருத்தையே பிரதிபலித்தார்கள்.

டேக்ஸி புக் செய்து ஏறிக்கொண்டவள், சேனாவுக்கு அழைப்பெடுக்க, அவனது நெட்வொர்க் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளது என்ற செய்திதான் கிடைத்தது.

ஊருக்குள் நுழையும் போதே, தனக்கு தேவையான உணவுப்பொருட்களை வாங்கிக்கொண்டவள், வீட்டைச்சேரும்போது நண்பகல் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. வண்டியில் பயணம் செய்தபோது எதிர்ப்பட்ட இயற்கை அழகும், அது தந்த குளுமையும், மக்கள் இன்னும் அங்கு இயற்கையின் மிச்சத்தை சற்று தாராளமாகவே விட்டு வைத்திருக்கிறார்கள் என்பதை பறைசாற்றியது.

வீடு என்றார்கள், ஆனால் அது தற்கால நாகரிக சாயல் அல்லாது,   அந்த காலத்து பங்களாவைப்போல தோற்றமளித்தது. சுற்றிலும் தோட்டங்களும், வயல்வெளிகளுமாக இருக்க, அங்கு அந்த வீடும், அருகே சின்ன குடிசைகள் சிலவும் இருந்தன.

ஓட்டுனரின் உதவியுடன் தனது பொருட்களை எடுத்துக்கொண்டிருக்கும் போதே, ராமு வந்துவிட்டார்.

“அம்மா, நீங்கதான் வக்கீல் அய்யா சொன்னவங்களாமா??” அவளது நாகரிகத்தோற்றத்தை அவர் சரியாகவே அனுமானித்தார்.

“ஆமாங்க தாத்தா. நான்தான் அந்த பொண்ணு” என்று சிரித்தவள், டேக்ஸிக்கு கணக்கு முடித்து அனுப்பி வைத்தாள்.

அவள் திரும்பும்முன்பே அவளது பைகளை தூக்கியிருந்தார் ராமு.

“அச்சோ, தாத்தா, இதை நீங்க தூக்க வேண்டாம். நானே தள்ளிகிட்டு வந்துடுவேன். பெட்டிக்கு கீழ சக்கரம் இருக்கு பாருங்க”, குறைந்தது எழுபது வயதாவது இருக்க கூடும், மிக லாவகமாக பெட்டியை கையில் பிடித்திருந்தார் அவர்.

“நான் இருக்கும்போது நீங்க தூக்கறதா?? பரவாயில்லைம்மா நான் கொண்டு வரேன். நீங்க வர்றதுக்கு முன்னாடியே நான் இங்க இருந்துருக்கனும். வந்த பயலுகள உட்கார வச்சுட்டு, ஆத்துக்கு குளிக்க போனேன். அங்கன இருந்து திரும்பி வர்றதுக்குள்ள, நேரமாயிடுச்சுங்கம்மா” பக்குவமான அவர் பேச்சும், அவர் கொடுத்த மரியாதையும்,  ஏதோ ஒரு புதுவித உணர்வை தோற்றுவிக்க,முயன்று மனதை திசை திருப்பினாள்.

“தாத்தா நீங்க என்னை பேர் சொல்லியே கூப்பிடுங்க. என் பேரு ஸ்ரீனிகா. ஆளுங்கன்னா, வீட்டு வேலை பார்க்க வந்துருக்குற  ஆளுங்களா தாத்தா??” வீடு வரை செல்லும் பாதையில் பேசிக்கொண்டே நடந்தார்கள். ஆளுயரத்திற்கு உயர்ந்து நிற்கும், கோரைப் புற்கள், பாதையின் இரண்டு புறமும் ஓங்கி நின்று, காற்றுக்கு அசைவது, பார்க்க அவ்வளவு ரம்மியமாக இருந்தது.

“அச்சச்சோ, எங்க அய்யா பேரை, நாங்க எப்படி சொல்லி கூப்பிடறது? அதுமட்டுமில்லாம நீங்க பார்க்க அப்படியே முதலாளி மாதிரியே இருக்கிங்கம்மா. என்னால முடியாது”என்று அவர் சொல்லவும், வீட்டு வாயிலை நெருங்கவும் சரியாக இருந்தது. அங்கு ஆணும், பெண்ணுமாக நடுத்தர வயதுடன் சிலர் அமர்ந்திருந்தனர்‌. அவர்களுக்கு தேவையான பொருட்களும் ஒரு ஓரத்தில் அடுக்கி வைத்திருந்தனர்.

வீட்டை அருகில் பார்க்கும்போதுதான் அதன் அழகு தெரிந்தது‌. மராமத்து செய்யாமலேயே அவ்வளவு கம்பீரமாக உயர்ந்து நின்றது.பார்த்த உடனேயே அனுமானிக்க முடிந்தது, இது வழிவழியாக கொடுக்கப்பட்டு வரும் பரம்பரைச் சொத்து என்று.

“இதை எப்படி தனக்கு கொடுத்தார்கள்?? இதை விட்டுக்கொடுக்க எப்படி அவர்களுக்கு மனது வந்தது?? இதில் ஏதும் சூழ்ச்சி இருக்கிறதா?? ” என்று அவள் மனது யோசிக்க ஆரம்பித்தது. வீட்டின் இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை, வயல்வெளிகளும், தோட்டங்களும், மலைகளுமாக இருந்தது. பார்க்கவே மனதிற்கு அவ்வளவு இதமாக இருந்தது. வாழ்க்கையில் முதன் முறையாக, சுற்றுப்புறத்தை மறந்து, மெய்மறந்து நின்றிருந்தாள் ஸ்ரீனிகா.

புதிதாக வந்த அழகியை மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தது அங்கிருந்த ஆண்கள் கூட்டம், மாறாக பெண்களிடமோ சலசலப்பும் பேச்சுசத்தங்களும் அதிகமாக ஆரம்பித்தது.

அவர்களின் சத்தம் அதிகமாகவும், அவளது கவனம் திசை திரும்ப, தன்னிலை மீட்டெடுத்துக்கொண்டாள்.

“சின்னம்மா, கதைவை திறந்து விட்டிங்கன்னா, இவங்க வேலையை ஆரம்பிச்சுடுவாங்க. இன்னும் ரெண்டு நாளைக்குள்ள முடிஞ்சிடும்” ராமுதாத்தா தற்போதைய அவசியத்தை நாசூக்காக தனது பேச்சில் உணர்த்தினார்.

“சரி” என்று தலையசைத்தவள், கதவை திறக்க, வீட்டின் உள்ளே அவ்வளவு தூசியாக இருந்தது. அதன் விளைவாக அவள் தும்ம, பதறிப்போன முதியவர்,

“கொஞ்சம் நேரம் இங்கன உட்கார்ந்துக்குங்க சின்னம்மா. நான் இப்போ சுத்தம் பண்ணி முடிச்சிட சொல்லிடறேன்” என்றவர் அங்கிருந்த நாற்காலிகளில் ஒன்றை உடனடியாக சுத்தம் செய்து வந்து போட, அதை வேண்டாமென்று மறுத்தாள் அவள்.

“இருக்கட்டும் தாத்தா. நீங்க சுத்தம் பண்ணி முடிக்க எப்படியும் இன்னும் ஒருமணிநேரமாவது ஆகுமில்லையா?? அதனால நான் கொஞ்சம் அந்தப் பக்கம் நடந்துட்டு வர்றேன்” தூரத்தில் தெரிந்த மலைபகுதிகளை சுட்டிகாண்பித்தாள்‌.

“அச்சோ இப்பதான் அவ்வளவு தூரம் பயணம் பண்ணி வந்துருக்கிங்கம்மா, பார்க்க வேணும்ன்னா அந்த இடம் கிட்ட தெரியும்,ஆனால் ரொம்பதூரம்மா அது. நீங்க வேணுன்னா இந்த ஒத்தையடி பாதைல போனிங்கன்னா, கொஞ்ச தூரத்துல ஆற்றங்கரை வந்துடும்மா, அங்க உட்கார்ந்துக்குங்க, நல்லா குளுமையான இடமா நல்லாருக்கும். ஆனால் தப்பித்தவறி கூட ஆத்துல இறங்கிடாதிங்க, சமீபமா விழுந்த மழையால சுழல் வரவும் போகவுமா இருக்கும்மா” என்றவர், கட்டட வேலை பார்க்க வந்தவர்களில் ஒருவரை அழைத்தார்.

“டேய் தம்பி, சின்னம்மாக்கு வழி காட்டிட்டு வா” அவனிடம் பேசியவர் அவளிடம்,

“இவன்கூட போங்க சின்னம்மா.  ஆனால் ஆற்றங்கரைல  கொஞ்சம் தள்ளியே நடங்கம்மா” மீண்டும் எச்சரிக்க தவறவில்லை அவர்.

அவர் சொன்னதற்கு ‘சரி’ எனும் விதத்தில் தலையை அசைத்தவள், அவர் அனுப்பிய ஆளை பின்தொடர்ந்து சென்றாள்.

அங்கு சென்றபின்பு, ஏதோ ஒரு தனி உலகத்திற்கு வந்தது போலிருந்தது அவளுக்கு. நகரத்தின் பரபரப்பும், சுறுசுறுப்பும், எப்பொழுதும் இருக்கும் ஒருவித இறுக்கமும் சட்டென மறைந்தது போலிருந்தது.

“இதுதான் தாத்தா சொன்ன இடங்கம்மா. திரும்ப வரும்போது இந்த பாதைலயே நடந்து வந்துடலாம்” அவளை அழைத்துக்கொண்டு வந்தவன், அவளின் பதிலை கூட எதிர்பாராது விறுவிறுவென்று  சென்று விட்டான்.அவன் நடந்துகொண்ட விதம் வித்தியாசமாக தெரிந்தது அவளுக்கு. ஆனால் மற்றதை யோசித்து அங்கிருக்கும் ரம்மியமான சூழ்நிலையை கெடுத்துக்கொள்ள அவள் விரும்பவில்லை.

சற்று நேரம் காலாற நடந்தவளுக்கு, ஏனோ அன்னையின் நினைவு வந்து போனது. புகைப்படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறாள். அவள் பிறந்த ஐந்தாவது நாளே ஜன்னி கண்டு இறந்துவிட்டதாக மதர் சொல்லியிருந்தார்.

மூன்றே மாதத்தில் அன்னையின் காதல் முறிந்துவிட்டது என்பது நம்பும் செய்தியாகவும் இல்லை. ஆனால் மதர் அப்படித்தான் என்று கூறினார். அதனால் அதை சந்தேகப்படவும் முடியவில்லை.

கோவைப்பயணத்திற்கு முன்பு மதரே அவளை அழைத்து, சில விஷயங்களையும் கூறியிருந்தார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவளது அன்னை நவிகா, ஸ்ரீனிவாசனை காதலித்தது வாசனின் அன்னைக்கு தெரிந்த பிறகுதான் பல மாற்றங்கள் அவளது வாழ்வில் வந்ததென்றும், அதுவரை அவர்கள் இருவரும் ஈருயிர் ஓருடலாக தங்களது காதல் திருமணத்தை நன்றாக வாழ்ந்துவந்தனர் என்றும் கூறினார்.

நவிகாவின் தந்தை  மதரின் ஆசிரமத்திற்கு கணக்கு வழக்குகளை பார்த்து கொடுக்கும் வேலையை இலவசமாகவே செய்து வந்தவர். அதனால் அவருக்கு நவிகாவையும் நன்றாக தெரியும். அவளது அன்னை அவளது பதினைந்தாவது வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். மதரிடம் தன் அன்னையை கண்டவள் அவரோடு நன்றாக பழகிவந்தாள்.காதல் மணம் புரிந்துகொண்ட போது கூட நல்ல மனதாகவே ஏற்றுக்கொண்டனர் அவளது தந்தையும்,மதரும். வாசனின் குணநலன்களிலும் எவ்வித குறைபாடும் அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் அவன் வசதியான குடும்பத்தை சேர்ந்தவன் என்பது மட்டும் சற்று நெருடலாக இருந்தது நவிகாவின் தந்தைக்கு. அதைப்பற்றி அவர் ஸ்ரீனிவாசனிடம் நேரடியாகவே கேட்க,

“அம்மாவிற்கு இன்னும் தெரியாது மாமா. நான் எடுத்துச்சொன்னால் கட்டாயம் புரிந்து கொள்வார்கள். அவர்களுக்கு சற்று உடல்நிலை சரியில்லை. அதனால் ஒருமாதம் கழித்து அவர்களிடம் எடுத்துச்சொல்லிவிட்டு இவளை அழைத்துப் போவேன்”  என்று உறுதியளிக்க சலனப்பட்ட தந்தையின்  மனதிற்கு சற்றே நிம்மதியாக போயிற்று.

ஆனால் ஒருமாதம் கழிந்து,நவிகா” இனிமேல் எனக்கு கணவனே கிடையாது, நான் இப்படியேதான் தனியாக வாழ போகிறேனென்று வந்து நின்றபோது” அவள் நிலையைக்கேட்க கூட முடியாது அவளது தந்தையின் இதயம் அதன் துடிப்பை நிறுத்திக் கொண்டது. மதர் எவ்வளவோ வற்புறுத்தியும் என்ன நடந்ததென்று அவள் உண்மையை சொல்லவில்லை. சரி, போகட்டும் ஓரிரு மாதங்களில் சரியாகிவிடும், என்று பொறுத்திருக்க, அடுத்த அதிர்ச்சியாக நவிகா கருவுற்றுரிந்தாள்.

இப்பொழுது இந்த விஷயத்தை வாசனுக்கு தெரிவித்ததாக வேண்டும் என்று அவர் வற்புறுத்தியும் அவள் கேட்கவில்லை. அவளது பேச்சை கேட்காது, மதர் அவரது வீட்டிற்கே அழைப்பெடுக்க, வாசனிடம் பேசவும் முடியவில்லை. சரி, நேரிலேயே சென்று பார்க்க வேண்டியதுதான், என்று மதர் முடிவெடுத்து சென்று பார்க்க, வேறு திருமணம் முடித்திருந்த வாசன், புது மனைவியுடன் வெளிநாட்டிற்கு தேன்நிலவிற்கு சென்ற தகவல் கிடைக்க, பொறுமையின் எல்லையான அவருக்கே கோபம் வந்து திரும்பி வந்துவிட்டார். ஸ்ரீனிகாவின் பிறப்பை கூட தெரிவிக்க கூடாதென்று  சொல்லிவிட்டு, நவிகாவின் உயிரும் அவளை விட்டு பிரிந்து விட்டது.

‘தந்தையின் மீது இவ்வளவு வெறுப்பு கொள்ளும் அளவிற்கு என்ன நடந்திருக்கும்??’

‘வெறுப்பையும் மீறி, அவர்கள் இருவரது பெயரையும் சேர்த்து , சாகும் தருவாயில் அன்னை, தனக்கு இந்த பெயரை ஏன் சூட்டினார்??’

‘மூன்று மாதங்களிலேயே அன்னையை விட்டுச்சென்ற தந்தை, ஏமாற்றிவிட்டுத்தான் சென்றாரா??’

‘இத்தனை வருடங்களில் இப்படி ஒரு பெண்பிள்ளை இருப்பது எப்படி அவருக்கு தெரிந்தது??’

‘தெரிந்தபிறகு ஏன் தன்னை பார்க்க ஒருமுறை கூட முயற்சிக்கவில்லை??’

‘எல்லாவற்றிற்கும் மேலாக தந்தையின் இரண்டாவது மனைவியின் செயல், கணவருக்கு செய்த நியாயமா?? ‘ கேள்விகளுக்கு மேல் கேள்வியாக மனதை குடைந்து கொண்டிருக்க, யோசித்துக்கொண்டே நடந்தவள், தன்னையும் அறியாது ஆற்றில் இறங்கி இருந்தாள். காலில் பரவிய குளுமை சுயநினைவிற்கு இழுத்து வர, அப்பொழுது தான் கவனித்து பார்த்தாள். நடந்து கொண்டே ஆற்றின் நடுவிற்கு வந்திருந்தாள். தண்ணீரைப்பார்த்ததும் அதில் நனைய ஆசை வர, சிறிதுநேரம் அதில் நனைந்தவள், கரைக்கு செல்ல திரும்பும் வேளையில், எங்கிருந்தோ வந்த சுழல் வேகமெடுத்தது. நீரின் வேகத்தில் அவளால் தாக்கு பிடிக்க முடியவில்லை. சிறிது சிறிதாக நீரில் மூழ்க ஆரம்பித்தாள் ஸ்ரீனிகா.

இங்கு ராமுதாத்தாவின் அலைபேசி விடாது ஒலித்துக் கொண்டிருந்தது. பழைய மாடல் நோக்கியா அலைபேசியில் வரும் சத்தம், அங்கு வேலைபார்த்து கொண்டிருந்தவர்களின்  பேச்சு சப்தத்தில் சரியாக அவருக்கு கேட்கவில்லை. சற்று உட்கார்ந்து வேலை பார்க்கலாம் என்று அவர் மேஜையின் அருகே வர, அவரது அலைபேசி மீண்டும் அடித்தது. அழைப்பது முதலாளியம்மா என்பதை பார்த்தவர் உடனடியாக அழைப்பை எடுத்து பேசினார்.

“ராமு எங்க போனிங்க?? இவ்வளவு நேரம் என்ன பண்ணிங்க??” கோபமாக ஒலித்தது நிவேதாவின் குரல்.

“அய்யோ மன்னிச்சுக்குங்கம்மா. இங்க வேலை நடக்குற சத்தத்துல சரியா கேட்கலைம்மா. அதான் எடுக்கலம்மா. அவங்க வந்துட்டாங்கம்மா. காலாற நடந்து வரேன்னு போயிருக்காங்கம்மா” தாமதத்திற்கு மன்னிப்பும், அவளுக்கு வேண்டிய தகவலையும் சேர்த்தே சொன்னார்.

“ஓ அப்போ சரி…” என்றவள் வைக்கப்போக,

“ராமுதாத்தா” என்ற நூவனின் குரல் வெளியே கேட்டது, இங்கு அலைபேசியிலும் நிவேதாவிற்கு கேட்டது.

“இவன் எதுக்கு வந்திருக்கான்?? நான்தான் ராமுதாத்தா பார்த்துக்குவாருன்னு காலைல அவன் கிளம்பும் முன்னரே தகவல் குடுத்துட்டேனே” மனதில் நினைத்தாலும், அதை வெளிக்காட்டி கொள்ளாது,

“நூவன் அங்க வந்துருக்கானா??” என்று மட்டும்‌ கேட்டார்.

“ஆமாம்மா” பதிலளித்தார் முதியவர்.

“ஓ சரி, நீங்க அங்க வேலையைப் பார்த்துக்கோங்க. நான் அப்பறம் பேசறேன்” என்று வைத்துவிட்டாள்.

அதற்குள் வீட்டின் உள்புறத்திற்கு வந்திருந்தான் நூவன்.

“வாங்க தம்பி” சற்று பதட்டத்துடனே அவனை அணுகினார் ராமு.

“உள்ள வேலை நடக்கறதால அந்த சத்தத்துல கேட்கல தம்பி” என்று விளக்கமும் அளித்தார்.

“பரவாயில்லை தாத்தா. வீடு திறந்திருக்கேன்னுதான் வேகமா வந்தேன். அந்த பொண்ணு வந்தாச்சா??” கேள்வி அவரிடமும், பார்வை அறையையும் வட்டுமிட்டுக்கொண்டுமிருந்தது.

“வந்துட்டாங்க சின்னய்யா..‌இல்ல இல்ல தம்பி. கொஞ்சம் காலாற நடக்கனும் சொன்னாங்க. அதான் ஆத்துகிட்ட அனுப்பி வச்சேன் தம்பி” அவரது விளக்கத்தில் அவளை  உடனே பார்க்க முடியாத கோபம் தலைக்கேற,

“ஏன் தாத்தா?? என்ன தம்பின்னு கூப்பிடறதுல அப்படி என்ன சிரமம்?? அதுசரி புதுசா நம்ம ஊர் பக்கம் வந்தவங்கள எதுக்கு ஆத்துபக்கம் அனுப்பி வச்சுருக்கிங்க??” முகத்தில் கோபத்தை காட்டாது கேட்பதற்குள் ஒருவழியாகி விட்டான்.

“நான் சொன்னேனுங்க தம்பி. சின்னம்மாதான் இங்க வேலை முடியற நேரம் வரைக்கும் கொஞ்சம் அங்கிட்டு போய்ட்டு வர்றேன்னு ஆசைப்பட்டாங்க. ஆத்துல சுழல் வேற வந்து போகுதுன்னு சொல்லியும் தான் அனுப்பினேன்” என்றவரின் பதில் ஏதோ அபாயத்தை உணர்த்தியது.

“போய் எவ்வளவு நேரம் ஆச்சு??” நூவனின் கேள்வியில் யோசித்தவர்,

“ஒரு‌ அரைமணிநேரம் இருக்கும் தம்பி” அவரது முழு பதிலை கேட்குமுன்பே அங்கிருந்து சென்றிருந்தான் என்ஜே.

அவளுக்கு ஏதோ ஆபத்து என்று அவனது உள்ளுணர்வு அவனை உந்த, ஆற்றங்கரையை நோக்கி வேகமாக நடந்தான்.

ஆற்றுப்பகுதியை நெருங்க, நெருங்க இதயம் சற்று வேகத்துடனே துடிக்க ஆரம்பித்தது.

“தன் மனம் கவர்ந்த வளை முதன்முதலாக பரிட்சயப்படுத்திக்கொள்ள போகும் பதட்டமா, இல்லை அவளுக்கு ஏதோ ஆபத்து என்ற உணர்வா??” என்ன நிலை என்பதை அவனால் கணிக்க இயலவில்லை.

ஆனால் அந்த இடத்தை அடைந்த போதோ இரண்டாவது கணிப்பே உண்மையாகியது. அவன் சென்றபோது, ஒரு கையை மட்டும் வெளியில் நீட்டிக்கொண்டு, சுழலில் இருந்து போராடிக்கொண்டிருந்தாள் அவள்.

சிறிதும் யோசிக்காது, தன்னவளை மீட்க தண்ணீருக்குள் குதித்தான் என்ஜே. நீச்சலில் நன்கு தேர்ச்சி பெற்றதாலும், அவன் ஊரில் உள்ள நீர்நிலைகள் அவனுக்கு வெகு பரிட்சயம் என்பதாலும்,சுழலிலும் அவளை நோக்கி முன்னேறினான்.

ஒருவழியாக அவளது கைகளை பிடித்து இழுத்தவன், பிடித்த கைகளை விடாது கரைக்கும் வந்துவிட்டான்.

ஆனால் அவளைத்தான் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. மூர்ச்சையுற்று கிடப்பவளை காண, அவளுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாதென்று மனம் பிரார்த்தனை செய்தது.

உணர்ச்சிகளை ஒத்தி வைத்தவன், முதலுதவி செய்யத்துவங்கினான். கைகால்களை நன்றாக தேய்த்தவன், வயிற்றில் கைகளை வைத்து அழுத்த, தண்ணீர் வாய்வழியாக வந்தது. இருந்தாலும் கண்விழிக்கவில்லை. மீண்டும் ஒருமுறை அதேபோல் முயற்சிக்க, அவளிடம் எந்த அசைவுமில்லை.

இனி வாய் மூலம் மூச்சுக்காற்றை அவளுக்கு அனுப்புவது தவிர வேறுவழியில்லை என்பதை உணர்ந்தவன், வேறுவழியில்லாது அவளின் இதழடைத்து தனது மூச்சுக்காற்றை செலுத்தினான். அவனது இந்த முயற்சிக்கு பலன் கிடைத்தது.ஆனாலும் அவள் கண்விழிக்காமல் இருக்க,

“நிகா.. நிகாபேபி எழுந்திருடி” அவளது கன்னங்களில் தட்டினான்.

சற்று நேரத்தில் ஆழ்ந்த மூச்சுக்காற்றை உள்வாங்கியவள், கமறிய தொண்டைக்குழியிலிருந்து செரும ஆரம்பித்தாள். உயிரைக் கையில் பிடித்து கொண்டு காத்திருந்தவனின் மனக்குரல் அவளுக்கும் கேட்டு விட்டது போல, விழுங்கிய நீரை ஓங்கரித்தவள், மெதுவாக கண்விழித்து பார்த்தாள்.கலங்கலான உருவமாக அருகில் தெரிய, கண்களை நன்றாக நன்றாக துடைத்துக்கொண்டு, எழ முயற்சிக்க, அவள் எழுந்து அமர உதவி செய்தான் நூவன்.

இப்பொழுது சற்று தெளிவானவளாக, அவனைப்பார்த்தவள்,

“என்.ஜே..” என உச்சரித்து விலகி அமர, அவளுக்கு தன்னை தெரிந்ததில் ஒருபுறம் சந்தோஷமாகவும், மறுபுறம் அதிர்ச்சியாகவும் இருந்தது அவனுக்கு.

‘அன்றைக்கு என்னை கவனிக்கலைன்னு நினைச்சேனே??’ தனக்கு தானே கேள்வி கேட்டுக்கொண்டாலும், அவளது முகம் சிறிது சிறிதாக கோபத்தை தத்தெடுப்பதை கண்ணுற்றவன்,

“எஸ். அதே என்.ஜே தான். ஆமா என்ன லிப்க்ளாஸ் போட்டுருக்க  நிகா பேபி?? இவ்வளவு தண்ணீல முங்கியும், ஃப்ளேவர் செமையா இருக்கு” தனது இதழ்களை மீண்டும் ஒருமுறை ஈரப்படுத்திக்கொண்டே அவளை வம்பிழுத்தான்.

அவனது கிண்டலில், சற்று சோர்வுடனே அவனை  நிமிர்ந்து முறைத்துப்பார்த்தவள், அவனே எதிர்பாராத நேரம், தனது கைகளை பொதிந்திருந்த ஆற்றுமணலை கையோடு அள்ளி அவனது முகத்தில் விட்டெறிய, மணல் கண்களில் பட்டு, நூவனின் கண்கள் எறிய ஆரம்பித்தன.

இங்கு தனது கைகளில் இருந்த பத்திரங்களையே பார்த்துக்கொண்டிருந்த நிவேதா” ஆறுமாசம் நிபந்தனை சேர்த்திருக்க  கூடாதோ???” என யோசித்துக் கொண்டிருந்தார்.

இரும்பு இறக்கைகளால் என்னை விரட்டி அடித்தாலும், நான் பிடிக்க ஆசைப்படும் பட்டாம்பூச்சி நீதானடி என் கண்ணே……

திமிராகும்……..

 

அத்தியாயம்-7:

ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு அந்த அறை அவ்வளவு நிசப்தமாக இருந்தது.ஆனால் அங்கிருந்த சூழ்நிலைக்கு மாறாக மகிழ்ச்சியோடு அமர்ந்திருந்தான் சேனா. பின்னே மூன்று நாட்களில் முடிக்க வேண்டிய வேலையை ஒரே நாளில் முடித்திருக்கின்றானே.

“மிஸ்டர் சேனா, பரவாயில்லை நான்கூட இன்னும் ஒருவாரம் ஆகுன்னு நினைச்சேன். ஆனால் புலிக்கு பிறந்தது பூனையாகாதுன்னு நிருபிச்சிட்டிங்க” மனதார பாராட்டிய அப்பெரும்புள்ளியின் பாராட்டை விட, ஸ்ரீனிகாவை சந்திக்கப் போகிறோம் என்கிற உணர்வு, நாடி நரம்பெங்கும் வியாபித்து புத்துணர்ச்சியை மேலும் அதிகப்படுத்தியது சேனாவிற்கு.  இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாது,

“உங்க வாயால பாராட்டு கிடைக்க நான் கொடுத்து வச்சுருக்கனும் சார்” அவரது வாழ்த்தை பணிவாகவே ஏற்றுக்கொண்டான்.

கையெழுத்திட்டு முடித்தவர் ” வேலைதான் முடிஞ்சிடுச்சே, நாளைக்கு நேபாளத்துல ஒரு முக்கியமான கூட்டம் இருக்கு. அது முடிஞ்சிட்டா, அடுத்த ரெண்டு நாள் அங்க சுத்தி பார்க்கற வேலைதான். உங்களுக்கு விருப்பமிருந்தா, நீங்களும் என்கூட ஜாயின் பண்ணிக்கிறிங்களா??” அவனது கனவை இலகுவாக தகர்க்கும் வேலையை ஆண்டவன் அப்பெரும்புள்ளியின் மூலமாக அனுப்பி வைக்க,  அது இக்கட்டான சூழ்நிலையாக அமைந்தது.

“உங்க கூட இருக்குற வாய்ப்பை யாராவது மிஸ் பண்ண விரும்புவாங்களா சார்?? இருந்தாலும் ஏற்கனவே ஒத்துகிட்ட ஒரு முக்கியமான கேஸ பார்க்க போயாகனும். கிட்டதட்ட முடியுற நிலையில் இருக்கு. நீங்களே என்ன பண்ணலாம்னு சொல்லுங்க?? அப்படியே செஞ்சுடறேன்” ஒருவார்த்தை தவறாகப்பட்டாலும், அவரது நன்மதிப்பை இழக்க நேரிடும் என்பதால் சற்று தணிவாகவே பேசி, முடிவை அவரிடமே ஒப்படைத்தான்.

அவனது நேரமும் நன்றாக இருக்க,

“கிட்டதட்ட முடியற நிலைல இருக்குன்னா, நீங்க போய்தான் ஆகனும். ஓகே அப்போ நீங்க கிளம்பலாம்” என்றவர் எழுந்து விடைகொடுக்க, மனதில் பூத்த மத்தாப்பூக்கள் அவனது முகத்தில் ஒளிர்ந்தது.

சந்தோஷத்துடன் அவன் கதவைத்திறந்து கொண்டு வெளியே கிளம்ப,

“யார் அந்த லக்கி கேர்ள் சேனா??” அவரின் குரல் இடைமறித்தது.

“சா..சார்” விழித்துப் பார்த்தான் சேனா, அவரிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை அவன் எதிர்பார்க்கவுமில்லை, அவர் அப்படி இலகுவாக பேசும் ஆளும் இல்லை. ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால், சேனாவை அவருக்கு பிடித்துபோக, அவரது அனுபவத்தின் கணிப்பில் தன்னையுமறியாது கேட்டிருந்தார்.

“அது வந்து… இன்னும் நான் அவகிட்ட சொல்லல சார்” நாசூக்கான பதிலை கொடுத்தான்.

அவனின் பதிலில் சிரித்துக்கொண்டே அருகில் வந்தவர், அவனது தோளை தட்டி,” ஓகே.. ஆல் தி பெஸ்ட் யங்மேன். எந்த உதவின்னாலும் கேட்க தயங்க வேண்டாம்” பிரியத்துடனே விடை கொடுத்து, வழியனுப்பி வைத்தார்.

“தாங்க்யூ சார். இது நான் செய்த பாக்கியம்”  நடையில் ஒரு துள்ளலுடனே கிளம்பியவன், அடுத்த இரண்டு மணிநேரத்தில் சென்னைக்கான அடுத்த விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தான்.

“ஹனி. நாளைக்கு உன் முன்னாடி இருப்பேன்” தன் மனம்கவர்ந்தவளை நினைத்துக்கொண்டே, கிளம்பி வந்து கொண்டிருந்தான்.

“ஹே… ராட்சசி, உதவி பண்ணவன் முகத்துல இப்படியா மண்ணள்ளி போடுவ?? ஹா..அய்யோ எரியுதே” முகத்தில் அப்பியிருந்த மண்துகள்களை துடைத்தாலும், கண்ணில் பட்டிருந்ததால், அவனால் கண்ணை திறந்து பார்க்க முடியவில்லை.

கைகளை நீட்டிக்கொண்டே அவன் ஆற்றை நோக்கி செல்ல ஆரம்பிக்க, அதுவரை அவனது செய்கைகளை பார்த்துக்கொண்டிருந்தவளின் மனமோ,

“கொஞ்சம் ஓவரா தான் பண்ணிட்டோம். அய்யோ இப்ப ஆத்துகிட்ட போறானே. இவன் தண்ணிக்குள்ள விழுந்தா ??? யாரு காப்பாத்தறது??” கணநேரத்தில் முடிவெடுத்தவளாக, அவனது கைகளை பிடித்தாள்.

பட்டுக்கரம் பட்ட நூவனின் மனமோ , அந்த ரணகளத்திலும் குதூகலமாக,

“இதை இதைத்தான் எதிர்பார்த்தேன். இப்படியே பிடிச்ச கையை கடைசி வரைக்கும் விடாம என்னை படுத்தி எடுடி நிகா பேபி. இதுக்காக ஒரு மூட்டை மண்ணகூட மூஞ்சில கொட்டிக்கிறேன்” நேரம் காலம் பார்க்காமல் ஜொள்ள, அகத்தின் மகிழ்ச்சி முகத்திலும் சிரிப்பாக மலர்ந்தது.

அவன் சிரிப்பதை அவள் பார்த்து விட,

“ஹே… நடிக்கிறியா நீ??” சட்டென்று அவனது கைகளை விட்டுவிட்டாள்.

“சொல்லி இரண்டு நிமிஷம் கூட ஆகலை, அதுக்குள்ள கைவிட்டுட்டாளே… இவள….”மனதிற்குள் பல்லைக்கடித்தவன்,

“கொஞ்சம் கூட இரக்கமில்லயா உனக்கு?? எரியுதுன்னு துடிச்சிட்டுருக்கேன், நடிக்கறேன்னு சொல்ற, நானே போயிக்கிறேன்” என்றவன் வீராப்பாக நடந்து செல்ல, மண்துகள்கள் கண்களில் நமைச்சல் கொடுக்க ஆரம்பித்தது.

அவனது பேச்சில் மனம் குழம்ப,

“நம்ம முன்னாடி தான் இவன் சிரிச்சான்‌. இப்ப இப்படி சொல்றான்??” என்று குழம்பியவள், அவனிடம் கேட்கவும் செய்தாள்.

“நீ இப்போ சிரிச்சே, அதான் அப்படி சொன்னேன். சொல்லு சிரிச்ச தான??” என்று கேட்க,

“வலில ஏதாச்சும் பண்ணிருப்பேன்” என்றவன் தொடர்ந்து ஆற்றை நோக்கி முன்னேற, அவனது கைகளை பிடித்து தடுத்தாள் அவள்.

“சரி, நானே கூட்டிட்டுப்போறேன். ஆனா ஏதாச்சும் வம்பா பேசுன, அப்படியே ஆத்துக்குள்ள தள்ளி விட்டுடுவேன்” என்ற எச்சரிக்கையோடு அழைத்துச் சென்றாள்.

“சிரிச்சு காரியத்தை கெடுத்துடாதடா நூவா” மனசாட்சி குரல் கொடுத்து எச்சரிக்க, சிரிக்காமல் இதுதான் சாக்கென்று அவள் கைகளை கெட்டியாக பிடித்துக்கொண்டான்.

இருவரும் ஆற்றை நெருங்க, அவனிடம்

” நீங்க இப்படியே நில்லுங்க. நான் கொஞ்சம் தண்ணிய எடுத்து முகத்தில தெளிக்கிறேன். அப்பறமா குனிஞ்சு கண்ணை கழுவுங்க” என்றவள், சொன்னவாறே செய்தாள்.

பின்பு அவன் குனிய உதவி செய்தவள், சற்று விலகி நின்று கொண்டாள். இரண்டு, மூன்று முறை கண்களை நன்றாக கழுவியவன், நிமிர்ந்து பார்க்க, அங்கே வளர்ந்து நின்ற புற்கள் தான் இருந்தன.

இவளைத்தேட, சற்று தூரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தாள் அவள்.

“என்ன பார்த்து ஒன்னுமே தோணலயாடி உனக்கு?? நூவா நீ அவ்வளவு மொக்கபீஸாவா இருக்க???விட்டுருவேனா, இதோ வரேன்” என்றவன் வேக எட்டு எடுத்துவைத்து அவளை நெருங்கி விட்டான்.

“உன்னை காப்பாத்தனதுக்கு நன்றி கூட சொல்லாம இப்படியா போவ??” தனக்கருகே கேட்ட அவனது குரலில் எரிச்சலானது நிகாவிற்கு.

“நீ செஞ்ச உதவிக்கு தான் பதிலுதவி நான் செஞ்சுட்டேனே?? எல்லாம் சரியா போச்சு” என்றவள் இன்னும் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

அவளுக்கு சரிக்கு சரியாக நடந்தவன்,” அதெப்படி சரியாகும். நான் உனக்கு பண்ணது உதவி. நீ எனக்கு பண்ணது, நீ நடந்துகிட்ட விதத்துக்கு பிராயச்சித்தம்” என்றவனின் பதிலில் நின்றுவிட்டாள் அவள்.

அவனையே ஒருநிமிடம் பார்த்தவள்,” நன்றி. இப்ப வழிய விடறிங்களா” ஈரம் குறையாத உடையுடன், அவள் எடுத்துவைத்த வேக எட்டுக்கள் ஒவ்வொன்றிலும், அவனது இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது.

“நில்லு நிகா” , அவளுக்கு‌ முன்னே ஓடி, அவளை வழிமறித்தான்.

அவன் நடந்துகொள்ளும் விதத்தில் அவனை முறைத்துக்கொண்டு அவள் நிற்க,

“நான்தான் என்.ஜேன்னு உனக்கு எப்படி தெரியும்?? அன்னைக்கு அந்த சம்பவம் நடந்தப்போ, நான் காருக்குள்ள தான இருந்தேன். நீ எப்போ என்னை பார்த்த?? ” பதில் சொல்லாவிட்டால், அவனை தாண்டி போக முடியாது என்பதைப்போல நின்றிருந்தான்.

சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் , அன்றும் வழக்கம்போல் மதரிடம் பணம் கொடுக்க வந்தவளை வரவேற்க அவர் அங்கு இல்லை.

என்னவென்று அங்கு வேலை செய்து கொண்டிருந்தவரிடம் விசாரிக்க, அனாதைப்பிள்ளைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க, அரசாங்கம் தேர்ந்தெடுத்த, நான்கு ஆசிரமங்களில் இந்த ஆசிரமும் உள்ளதால், இன்று அதற்கான விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால், சில குழந்தைகளை மட்டும் , முக்கிய விருந்தினரை வரவேற்க, தன்னுடன் அழைத்துக்கொண்டு , மதர் சென்றிருப்பதாக கூறினாள்.

“ச்ச, மதர் ஏற்கனவே சொல்லியிருந்தாங்களே, வேலை மும்மரத்துல மறந்துட்டேனே” தன்னைத்தானே கடிந்து கொண்டவள், வண்டியை விழா நடக்கும் இடத்திற்கு திருப்பினாள்.

பிரபல மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்திருந்ததால் பிள்ளைகள் அனைவரும், கைகளில் பூங்கொத்துக்களுடன் வெளியே நின்றிருந்தனர்.

குறிப்பிட்ட நேரத்தில் அவ்விடத்தை அடைந்தவள், மதரைப்பார்த்து பணத்தை அவர் கைகளில் கொடுக்க, மகிழ்ச்சியுடனே அவர் வாங்கிக்கொண்டனர்.

அவள் திரும்பும் நேரம், அங்கு நின்றிருந்த ஆசிரமத்து பிள்ளை ஒன்று மயக்கம் போட்டு விழுந்தது.

அனைவரும் பதறியடித்துக்கொண்டு ஓடி வர, வெயிலின் தாக்கத்தால் குழந்தை மயங்கியிருந்தது.

அங்கு நின்றிருந்த பாதுகாவலர்களோ, ” மினிஸ்டர் வர்ற டைம் ஆச்சு, சீக்கிரம் அந்தப்பக்கம் தூக்கிட்டு போங்க” என்று கத்தவும், இந்த திட்டத்திற்கு அதிகளவில் நன்கொடை கொடுத்த, என்.ஜேவின் வாகனம் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

அந்த பாதுகாவலரின் பொறுப்பற்ற பேச்சில் கொதித்து விட்டாள் ஸ்ரீனிகா.

“எப்ப சார் வர்றாரு உங்க மினிஸ்டர்?? மூணு மணி நேரமா குழந்தைகளை வெயில்ல நிக்க வச்சுருக்கிங்க?? இன்னும் உங்க மினிஸ்டர் வரலை?? கொஞ்சம் கூட இரக்கமில்லாம தூக்கி அந்த பக்கம் போட சொல்றிங்க??” அவளது கேள்வியில், வாயடைத்து நின்றார் அந்த காவலர். அவரருகே இருந்த மற்றொரு பாதுகாவலர்,

“மேடம், மினிஸ்டர் வர்ற டைம் இது ப்ளீஸ் அவர் ஏதோ தெரியாம சொல்லிட்டார்” என்று மன்னிப்பு வேண்ட,

“உங்களுக்கெல்லாம் மனித உயிர்னா அவ்வளவு கேவலமா போச்சுல்ல?? அதோ இவ்வளவு நடந்தும், காரை விட்டு கீழ இறங்காத இந்த மாதிரி விஐபிங்களுக்கெல்லாம், உயிரோட அருமை எப்படி புரியும்??” அவள் வழிமறித்து நின்றிருந்ததால் அவனது வாகனம் அங்கேயே நின்றிருந்தது. காரில் இருந்து இறங்க முற்பட்டவனை, பாதுகாவலர் தடுத்து விட்டார்.

“சார், இப்ப நீங்க இறங்கினா, சமாளிக்க முடியாது” என்று தடுத்து விட்டனர்.

“சரி. முதல்ல மெடிக்கல் டீம கூப்பிட்டு அந்த குழந்தையை பார்க்க சொல்லுங்க” சமயோஜிதமாக உத்தரவிட, அவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த, மருத்துவக் குழு, வேகமாக வந்து , அதன் தலைமை மருத்துவர் வந்து பிள்ளையை தூக்கிச் சென்றார்.

நிலைமை சற்று சீராக, ஸ்ரீனிகாவிற்கு புரிந்தது , அந்த காருக்குள் அமர்ந்திருந்தவனின் உத்தரவில் தான் இந்த வேலை நடக்கிறதென்று, அவன் வாகனத்தில் இருந்து பேசிய பாதுகாவலர் சொன்னபிறகுதான்  என்று உணர்ந்து கொண்டாள்.

ஆனால் மறுநிமிடமே, “அதை இந்த துரை, இறங்கிவந்து சொல்லமாட்டாரா???” மனதில் பொரிந்து தள்ளியவளாக, சிலுப்பிக் கொள்ள அது அவளது முகத்திலும் பிரதிபலித்தது.

அவளது பாவனைகள் நூவனின் கவனத்தை ஈர்க்க, காரில் இருந்து இறங்கி அவள் முன் நிற்கும் வேகம் வந்தது.

“என்னடா இது?? பார்த்த முதல் பார்வையிலேயே காதல் வருமா??” தன்னைத்தானே சிலாகித்துக்கொண்டவன், அவளின் செயல்களையே கவனிக்க ஆரம்பித்தான்.

அநியாயத்தை தட்டிக்கேட்டு, முகத்தில் நொடிக்கொரு பாவனையை கொடுத்துக்கொண்டிருந்தவளை காண தெவிட்டவில்லை.

அதைவிட முதலில் அவள் கொதித்து கொண்டிருந்ததும், பின்பு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதும், அடுத்த நொடி நடந்ததை அனுமானித்து அவளின் பார்வை தனது வாகனத்தை உறுத்ததும், அவளின் அறிவைக்கண்டு அசந்திருந்தான்.

குழந்தை நல்லபடியாக சரியாகிவிட, நூவனின் காரும் நகர்ந்து சென்றுவிட்டது. அவளும் மதரிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டாள்.

“அப்பறம் எப்படி என்னை பார்த்தா??” இந்த கேள்வியைத் தான் அவளிடம் கேட்டுக்கொண்டிருந்தான்.

“நான் திரும்பவும் அங்க வந்தேன். மதர் கிட்ட பணத்தை குடுத்துட்டு, அங்க விஷயம் சரியாகி திரும்பும்போது தான் ஞாபகம் வந்தது, பர்ச மாத்தி அவங்ககிட்ட குடுத்தது. உடனே திரும்பி வந்தப்போ, அப்பதான் நீங்க கார்ல இருந்து இறங்கிட்டிருந்திங்க. உங்களை நல்லாவே பார்க்க முடிந்தது. மதரும் நீங்கதான் என்.ஜே ன்னு சொன்னாங்க. அதனால உங்கள தெரியும்” சொல்லிட்டேன், வழியைவிடு என்ற தோரணையில் இருந்தது அவளது பதில்.

“ஓ.. அப்படியா??” என்றவன் யோசிப்பதற்குள் அவள் விலகி அவனைச் சுற்றி நடக்க ஆரம்பிக்க, யோசனையிலிருந்து மீண்டவன் அவளோடு நடந்து கொண்டே,

“நல்லதுதான பண்ணியிருக்கேன். அப்பறம் எதுக்கு என்மேல கோபம் நிகா??” நூவன் பேச்சு கொடுக்க, அப்பொழுதுதான் அவன் தனது பெயரை சுருக்கி கூப்பிடுவதை உணர்ந்தாள்.

“ஹலோ மிஸ்டர். எதுக்கு என்னை நிகான்னு கூப்பிடறிங்க?? நீங்க முதல்ல யாரு?? என்னை கேள்வி மேல் கேள்வி கேட்டுகிட்டிருக்கிங்க?? வழியை விடறிங்களா இல்ல கத்தி ஆளுங்கள கூப்பிடவா???” அவளது பேச்சில் அனல் தெறிக்க ஆரம்பித்தது.

“அட… எதுக்கெடுத்தாலும் இப்படி கொதிச்சா எப்படி??? நான் என்.ஜேன்னு உனக்கு தெரியுமே?? அது போதாதா?? இப்ப கேட்ட கேள்வி கூட சாதாரண ஒரு கேள்வி தான்?? நல்லது செஞ்சும் உனக்கு என்மேல எதுக்கு கோபம் வருதுன்னுதான கேட்டேன்?? அதுமட்டுமில்லாம இப்போ உறவு முறைல உனக்கு மாமா பையன் பேபி. அதனாலதான் எனக்கு பிடிச்ச மாதிரி நிகான்னு கூப்பிட்டேன்” அவனது பதிலில் அவளே ஒருநிமிடம் அமர்ந்து விட்டாள்.

“அப்போ நீதான்… ஜே‌.பி பையனா???” அவளது கேள்வியில் அவனுக்கு கோபம் வந்தது.

“எல்லாரையும் இப்படி மரியாதை இல்லாமல்தான் பேசுவியா?? ஜே.பி என்னோட அப்பா. உனக்கு மாமா. மரியாதையா பேசு” கடுமையாகவே பேசினான்.

“நீங்கள்ளாம் யாரா வேணா இருந்துட்டு போங்க, எனக்கு அது தேவையில்லாதது மிஸ்டர் என்.ஜே. நான் இங்க ஆறு மாசம் தங்க வந்துருக்கேன். அப்பறம் நான் கிளம்பி போயிகிட்டே இருப்பேன். எனக்கு இந்த சொந்தங்கள்ளாம் தேவையில்லை” என்றவள் விறுவிறுவென்று முன்னே நடந்து விட்டாள்.

அவள் கூறிய பதிலில் அவனுக்கு கோபம் வந்தாலும்,

“அது எப்படி நிகா பேபி, உன்னை அவ்வளவு சீக்கிரம் போக விட்டுடுவேனா??? ” மனதிற்குள் சொல்லிக்கொண்டவன் அவளை பின்தொடர்ந்தான்.

“சரி… அதெல்லாம் இருக்கட்டும். நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு??” விடாக்கண்டனாய் அவளை பேச வைக்க , பதில் சொல்லாமல் இவன் விடமாட்டான் என்பதை புரிந்துகொண்டாள்.

“காருக்குள்ள இருந்து உத்தரவு போட்ட நீங்க, இறங்கி வந்து ஏன் அந்த குழந்தையை பார்க்கல??? அனாதை குழந்தைகள்னா அவ்வளவு மட்டமா போச்சான்னு கோபம் வந்தது” நேருக்கு நேராக அவனது முகத்தை பார்த்து பதில் கொடுத்தாள்.

“ஓ… அன்னைக்கு நான் கீழ இறங்கினா பாதுகாப்பு சிக்கலாகும், மினிஸ்டரும் பின்னாடி வர்றதால இப்ப இறங்காதிங்க சார்னு, என்னோட பாதுகாவலர்கள் என்னை தடுத்துட்டாங்க நிகா. அதான் நான் கீழ இறங்கல. வசதி இருக்கற எல்லாரும் கெட்டவங்களாவே, மனிதநேயம் இல்லாம இருப்பாங்கன்னு நினைச்சுட்டுருக்கியா?” அவனது பதிலும் உண்மையாக இருக்கவே, செய்வதறியாது நின்றிருந்தாள்.

“சரி சார். தப்பு என்மேலேயே இருக்கட்டும். உங்களுக்கு தேவையான விளக்கமும் நான் கொடுத்துட்டேன். இனி என்னை தொந்தரவு பண்ணாதிங்க. என் பேரையும் சுருக்கி கூப்பிடாதிங்க. அந்த அளவுக்கு உரிமைய நான் யாருக்கும் கொடுக்கறதில்லை. இத்தனைநாளா இல்லாத சொந்தம் இப்போ எனக்கு தேவையில்லை” பேசிக்கொண்டே நடந்தவர்கள் வீட்டை நெருங்கியிருந்தார்கள்.

அவளை ஊடுருவும் பார்வை ஒன்றை பார்த்தவன், ” நீ சொல்ற எதுவும் இனி நடக்காது. நீயே விலகிப் போனாலும் நாங்க உன்னை விடமாட்டோம். நீ ஒத்துக்கிட்டாலும், ஒத்துக்கலனாலும் நீ எங்க வீட்டுப் பொண்ணு. இந்த மாமன உன்னால தவிர்க்கவே முடியாது.இனி ஒவ்வொருநாளும் என்னை நீ பார்த்துதான் ஆகனும். ஏத்துக்கப்பழகிக்கோ நிகாபேபி” என்றவன் அவளின் கன்னத்தை தட்டிவிட்டு முன்னே நடந்துவிட்டான்.

அவனது பதிலில் வெகுண்டெழுந்தவள், பதில் பேசும் முன்பே, ராமுதாத்தாவிடம்‌ சென்று பேசிக்கொண்டிருந்தான்.

அவர்களின் அருகே அவளும் செல்ல,

“வேலை முடிஞ்சதில்லையா?? உங்க பேத்தியை கூட்டி வந்து இங்க இவங்களுக்கு துணைக்கு வைங்க தாத்தா” அவளைக்காட்டி பேசியவன்,

அவளிடமும்,” நிகா பக்கத்துல இருக்குற ஓட்டுவீடுலதான் இப்போ தாத்தா தங்கப்போறாரு. எந்த உதவி வேணுன்னாலும் தாத்தாகிட்ட கேட்டுக்கலாம். அவர் உடனே எனக்கு தகவல் சொல்லிடுவாரு. அப்பறம் இரவு நேரத்துல வாக்கிங் போயிடாத, பூச்சி நடமாட்டம் இருக்கு. வீடு கொஞ்சம் செட் ஆகறவரைக்கும், தாத்தாவோட பேத்தியே உனக்கு சமைச்சு கொடுத்துடுவாங்க” என்றவன் அவளது பதிலை எதிர்பாராமலேயே,

“பார்த்துக்கோங்க தாத்தா. பை நிகாபேபி” காரில் ஏறி சென்றுவிட்டான். மழையடித்து ஓய்ந்தது போல் இருந்தது அவளுக்கு.

“இவன் என்னடா புது தலைவலி??” என்று நினைத்துக்கொண்டவள், நிஜமாகவே தலையைப் பிடித்துக்கொண்டாள்.

“எங்க தம்பி ரொம்ப நல்லவரு சின்னம்மா. இப்படித்தான் வாயத்திறந்து கேட்காமலேயே நமக்கு தேவையானதையெல்லாம் செஞ்சு முடிச்சிடுவாரு”ராமுதாத்தா பேசியவர், அப்பொழுததான் அவள் தலையைப்பிடித்துக்கொண்டிருப்பதை பார்த்தவராக,

“அச்சோ சின்னம்மா!!! தலைவலிக்குதுங்களா??” பெரியவர் பதற ஆரம்பிக்க,

“அதெல்லாம் இல்ல தாத்தா. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும். வேலையெல்லாம் முடிஞ்சதா?? இப்ப உள்ள போகலாமா?? ” அவரின் பதற்றத்தை காண இயலாது, பேச்சை மாற்றிவிட்டாள்.

“அதெல்லாம் முடிஞ்சதும்மா. இப்போ தாராளமா போகலாம்” என்று கூற, இருவரும் உள்ளே சென்றனர்.

வீட்டிற்குள் சென்றவளுக்கு, இதுவரை நடந்ததெல்லாம் மறந்து போகும் அளவிற்கு, புனரமைக்கப்பட்ட இடம் அவ்வளவு அழகாக காட்சியளித்தது.

“இதை சுத்திப்பார்க்கவே ஆறு மாசம் ஆகிடும் போலவே?? அதுமட்டுமில்லாது இவ்வளவு பெரிய வீட்டில் தான் மட்டும் தனியாக இருப்பது சரியாக இருக்காது ” என்பதையும் புரிந்து கொண்டாள். அவளையும் அறியாது அவள் மனம், தன்னுடன் இன்னொரு பெண்ணையும் தங்குவதற்கு ஏற்பாடு செய்துவிட்டு சென்றிருந்த, நூவனை நினைத்தது.

“இந்த அறைலதான்மா உங்க பெட்டியை‌ வச்சுருக்கேன்” ராமுதாத்தாவின் குரலில் தன்னிலை மீண்டாள் அவள்.

நான்குபேர் ஓடி விளையாடும் அளவிற்கு பெரியதாக இருந்தது அந்த அறை.ஆனால் சோர்வாக இருந்ததால் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று படுத்து உறங்கிவிட்டாள். இரவுதான் எழுந்திருக்க, கையில் உணவோடு தாத்தாவின் பேத்தி ஆனந்தியும் வந்திருந்தாள். சாப்பிட்டுவிட்டு சிறிதுநேரம் ரஞ்சனாவுடன் பேசியவள், மீண்டும் உறங்கிவிட்டாள்.

மறுநாள் மதியம் நூவன் அவளை பார்க்க வர, அங்கு கண்ட காட்சியில் அவன் நாடி நரம்பெல்லாம் கோபத்தால் துடிக்க ஆரம்பித்தது.

ஏனென்றால் வீட்டின் வெளிவராண்டாவில் ஸ்ரீனிகாவின் இடுப்பை பிடித்து தாங்கிக்கொண்டு, அவளிடம் குனிந்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான் நரேந்திர சேனா.

உன்னுடன் நான் இருக்க விரும்புவது இரண்டே பொழுதுதான்….. இப்பொழுதும் எப்பொழுதும்……..

திமிராகும்…..

அத்தியாயம்-8:

மறுநாள் காலையில் நிகாவை எழுப்பியதே ரஞ்சனாவின் அழைப்புதான். மகிழ்ச்சியுடனே அழைப்பை எடுத்து பேசினாள்.

“சொல்லு ரஞ்சு” தூக்கக் கலக்கத்தை சோம்பல் முறித்து துரத்திக்கொண்டிருக்க,

“குட்மார்னிங்கா… புது இடம் எப்படி இருக்கு??? நல்லா தூக்கம் வந்ததா??”கைப்பையில் தேவையானவற்றை எடுத்து வைத்துக்கொண்டே பேசினாள் ரஞ்சு.

“ஹ்ம்… பரவாயில்லை ரஞ்சு. அசதியா இருந்ததால நல்லா தூங்கிட்டேன்”,எழுந்து ஜன்னலை விரித்து விட, இயற்கையோடு இணைந்த காலைக்காட்சி பார்க்க அவ்வளவு  அழகாக இருந்தது.

“நாளைக்கு ஈவினிங் விமானடிக்கெட் கிடைச்சுருக்குக்கா, இந்த ரெண்டு நாள் மேடம் என்னை அவ்வளவு வேலையும் பார்க்க வச்சு ஒல்லியாக்கம விடாது” அவளது பேச்சில் சிரிப்பு வர,

“அப்பறம் ஏண்டி அவ்வளவு அவசரமா கிளம்பி வர?? ஒருநாள் ஓய்வெடுத்துட்டுக்கூட கிளம்பலாமில்லை, அதுக்குள்ள ஏன் டிக்கெட் போட்ட??” நிகாவின் பேச்சிலும் அவளுக்கான அக்கறையே தெரிந்தது.

“அய்யோ, நான் மட்டும் லேட்டா கிளம்புனே, மேடம் ஆர்டர கேன்சல் பண்ணி, என்னை வச்சு செய்ய‌ ஆரம்பிச்சுடும்கா. அதனால உடனே கிளம்பிடுறது தான் வசதி. அதுமில்லாம நீங்க அங்க தனியா வேற இருப்பிங்க, அதனால் நான் சீக்கிரம் வந்தே தீருவேன்” என்றும் போல் அவளது அக்கறை இன்றும் மனதை தொட்டது நிகாவிற்கு.

“நீ இருக்கியே, திருந்தவே மாட்டடி. சரி பார்த்துமட்டும் கிளம்பிவா. நீ பயப்படற அளவுக்கு நான் தனியாலாம் இல்லை. ராமுதாத்தாவோட பேத்தி என்கூட தான் இருக்காங்க. அதனால பிரச்சனையில்லை. நீ நாளைக்கு கிளம்பி வரன்னா, நானும் உன்கூடவே ஜாயினிங் லெட்டர் இங்க குடுத்துக்கறேன்” என்று கூற, அவளது பதிலில் குஷியாகி விட்டாள் ரஞ்சனா.

” இப்போ தான் நீங்க இந்த ரஞ்சுவுக்கு அக்காவா கரெக்டா பேசியிருக்கிங்க. ராமுதாத்தா பேத்திய சேனா அண்ணா அனுப்புனாராக்கா??”  அவளது கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை நிகாவிற்கு. ஏனென்றால் என்.ஜே வை பற்றி எதுவும் ரஞ்சுவிடம் அவள் சொல்லவில்லை. என்ன காரணமென்றே புரியாது அவளிடம் பேசும்போது, அவனைப்பற்றிய விஷயத்தை ஒதுக்கிவிட்டாள்.

“இல்லடா. இங்க தெரிஞ்சவங்க சொல்லிட்டுப்போனாங்க” அதற்குள் ரஞ்சுவிற்கு வேறோரு அழைப்பு வர,

“அக்கா, இன்னொரு கால் வருது. டைமும் ஆகுது. கால் பேசிட்டு அப்படியே நான் ஆஃபிஸீக்கு கிளம்பறேன்.பைக்கா” என்று வைத்து விட்டாள்.

“ஓகேடா.. பாத்து கிளம்பு.பை” நிகாவும் வைத்துவிட்டு, எழுந்து சென்று வெளியில் பார்க்க, சீதோஷ்ண நிலை அவ்வளவு குழுமையாகவும், இயற்கை சூழல் ரம்மியமாகவும் இருந்தது.

தாத்தாவின் பேத்தி ஆனந்தியும்  காலைகாஃபியுடன் வந்துவிட, இருவரும் பேசிக்கொண்டே ரசித்து அருந்தினார்கள்.

நடையில் ஒருவித துள்ளலுடன் வீட்டிற்குள் நுழைந்தவனை, வரவேற்றது இந்திரசேனா. என்றுமில்லாத அதிசயமாய் தந்தை இந்த நேரத்தில் வீட்டில் இருப்பது ஆச்சர்யத்தை கொடுத்தது நரேனுக்கு.

“ஏதும் உடம்பு சரியில்லயா???” மனதிற்குள் நினைத்தவன், அதை கேட்கவும் செய்தான்.

“டாட், ஆர் யூ ஓகே??” என்று கேட்ட மகனைப்பார்த்து சந்தோஷமாக இருந்தது அவருக்கு.

“இல்ல நரேன், உனக்காகதான் காத்திட்டிருக்கேன்” என்றவர் பதில் முடியும் முன்பே,

“ஆமா உனக்காக ஒரு சர்ப்ரைஸ் வச்சுருக்கோம்” மகனை நோக்கி வந்தார் அவனது தாய் கௌசல்யா.

தாயை அணைத்துக்கொண்டவன், தந்தையிடம் ” அப்படி என்ன சர்ப்ரைஸ் டாட்??” என்று கேட்க தவறவும் இல்லை. ஏனென்றால் இந்திரசேனா ஒரு விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றால் அதில் பணம் மட்டுமே பிரதானமாக இருக்கும். கௌசல்யாவிற்கு கணவன் சொல்லே வேதவாக்கு.

பெற்றவர்களிடம் பேசிக்கொண்டே வந்தமர்ந்தவனிடம்,

“பிரிச்சுபார் புரியும்”

என்று ஒரு கோப்பை நீட்டினார் அவனது தந்தை.

கோப்பை பிரித்து பார்த்தால், அதில் அழகான ஒரு பெண்ணின் படமும், அவளது சொத்து மதிப்புகளும், குடும்ப பாரம்பரியத்தை பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

“உனக்காக நாங்க பார்த்திருக்கிற பொண்ணுடா??” என்ற கௌசல்யாவின் குரலில் இரத்த அழுத்தம் எகிறியது சேனாவிற்கு.

“அதான் இந்த கேஸ் ஃபைல பார்த்தாலே தெரியுதே” தாயிடம் கோபமாகவே பேசினான்.

கௌசல்யா அதிர்ந்து பார்க்க,” பொண்ணு பார்க்கறத கூட கேஸா காமிச்ச ஒரே ஆள் நீங்கதான்பா” தந்தைக்கும் காட்டமாகவே பதில் கொடுத்தான்.

“நரேன் அவளோட வேல்யூ தெரியாம பேசாதே?? எக்ஸ் கவர்னரோட ஒரே பொண்ணு” என்ற தந்தையின் பேச்சில் எரிச்சல் மிக,

“எதுவும் பேசாதிங்கப்பா. உங்களுக்கு வேணும்னா அவளோட ப்ராப்பர்டி பெரிசா தெரியலாம். எனக்கு என் வாழ்க்கைதான் முக்கியம். நான் ஒருத்தியை காதலிக்கிறேன்” அவரது தொல்லை தாங்காது விஷயத்தை போட்டுடைத்தான்.

“யாரு அந்த அனாதைக்கழுதையவா???” அசராமல் மகனது நாடியைப்பிடித்து, அவனது தந்தை என நிரூபித்தார் அவர்.

“ஓ… அப்போ உங்களுக்கு என் விருப்பம் தெரிஞ்சும், இந்த ஏற்பாட பண்ணிருக்கிங்க??” அவரருகே நின்று கேள்வி கேட்ட மகன் சற்று புதிதாக தெரிந்தான் அவருக்கு.

“ஆமா. தெரிஞ்சுதான் இந்த ஏற்பாடு பண்ணியிருக்கேன். அடுத்த வாரம் நிச்சயத்திற்கும் பேசி முடிக்க போறோம்” அவர் பேசிக்கொண்டே போக,

“யாருக்கு உங்களுக்கா??” மகனின் கேள்வியில் அவனை அறைந்திருந்தார் கௌசல்யா.

“என்ன பேச்சு பேசற நரேன்? எங்க இப்படி மரியாதை இல்லாம பேச கத்துகிட்ட? நான் உன்னை அப்படி வளர்க்கலியே?” உடைந்தழ ஆரம்பித்தார்.

“நீங்க அழுதாலும், அவர் என்னை வற்புறுத்தினாலும், எனக்கு அவதான் வேணும். இல்லைன்னா உங்களுக்கு ஒரு மகன் இருக்கறதையே மறந்திடுங்க” அவனது வாதத்தில் பிடிவாதமாக நின்றான் சேனா.

“நீ காதலிக்கறது அந்த பொண்ணுக்கு தெரியுமா? ” அவ்வளவு கலவரமான சூழலிலும் நிதானமாக கேள்வி கேட்டார் அவனது தந்தை.

அவரது கேள்வியில் கௌசல்யாவும் மகனை பார்க்க, அவர்களது முகத்தை பார்க்க முடியாது, ” இன்னும் சொல்லலை. ஆனால் சம்மதிக்க வச்சுடுவேன்” சுவற்றைப்பார்த்து பதில் சொன்ன மகனை விசித்திரமாக பார்த்தார் கௌசல்யா. ஆனால் இந்திரசேனாவோ இதை எதிர்பார்த்தவராக மென்னகை ஒன்றை உதிர்த்தவர்,

“சொல்லாத காதல், பொல்லாத காதல் நரேன். இன்னும் மூணு மாதம் தான் உனக்கு அவகாசம். அதுக்குள்ள உன் காதலுக்கு சம்மதம் சொல்லி, அந்த பொண்ணே என்கிட்ட வந்து உன்னை கட்டிக்க சம்மதம் சொல்லனும். அப்போ உனக்கு அவளையே கல்யாணம் செய்து வைக்கிறேன். ஆனால் அவளை நீ எந்த விதத்திலும் நிர்பந்திக்க கூடாது. அவளோட முழு மனசோட இதுக்கு ஒத்துக்கனும். அப்ப நானே நிவேதா கிட்ட பேசி எல்லா ஏற்பாடும் செய்து, நல்ல விதமா இந்த கல்யாணத்தை முடிச்சு வைக்கிறேன்” என்ற தந்தையின் பேச்சில், தாவி அவரை அணைத்துக்கொண்டான் நரேந்திரசேனா.

“லவ் யூ டாட். மூணுமாசத்துக்குள்ள வெற்றியோட திரும்பி வரேன்” அவரது கைகளை பிடித்துக்கொண்டு பேச, மகனது தோள்களில் தட்டிக்கொடுத்தார் அவர்.

“எங்களுக்கும் உன் சந்தோஷம் தான் முக்கியம் நரேன். யோசிக்காம எடுத்தெறிஞ்சு பேசாதே, உன்னை நாங்க எப்பவும் விட்டுக்கொடுக்க மாட்டோங்கற நம்பிக்கை உனக்கு எப்பவும் இருக்கனும்” பேசிக்கொண்டே வந்தவர், மனைவியை கண்ஜாடையில் காண்பிக்க, பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டே, அழுது வீங்கிய கண்களோடு, முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார் கௌசல்யா.

“ம்மா…” என்றவன் அவரருகே அமர்ந்து மடியில் முகம் புதைத்துக்கொள்ள, அப்பொழுதும் அமைதியாகவே அமர்ந்திருந்தார் அவர்.

“சரி. தெரியாம பேசிட்டேன், மன்னிச்சுடுங்கம்மா” என்றவனின் கோரிக்கையில் சற்று மனம் சமனப்பட்டாலும்,

“எங்கள விட நேத்து வந்த அவ உனக்கு முக்கியமா போயிட்டாள்ளடா?? இப்ப மட்டும் எதுக்கு என்னை சமாதானப்படுத்தற??” கோபத்துடன் தான் பேசினார்.

“அச்சோ பேபிமா, என்ன இப்படி பேசற நீ??” எழுந்து அவரது தாடையை பிடித்து செல்லம் கொஞ்சியவனின்  கைகளை தட்டிவிட்டார் அவர்.

“போடா, உனக்கு அவதான் முக்கியம். இத்தனை வருஷமா ஒருதடவை கூட என்னை எதிர்த்துப் பேசாத நீ, இன்னைக்கு பேசியிருக்கன்னா, எங்களவிட உனக்கு அவதான முக்கியம்?” சரியாக கேள்விகேட்க,

“பேபிமா, இந்த பெரிய லாயரோட சேர்ந்து நீயும் கெட்டுப்போயிட்ட.இப்படி கேட்டா நான் என்ன பண்ணுவேன். மீ பாவம்” என்றவரை பிடித்துக்கொண்டு சமாதானப்படுத்தும் முயற்சியில் விடாது இறங்கியவன்,

“எனக்கு நீங்கதான் முக்கியம். அவ கிடைச்சா நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன் பேபிமா. அவ ஒத்துக்குவாளான்னு தான் தெரியல??? நீதான் அவளை எனக்கு கட்டி வைக்கனும்” ஆட்சேபிப்பவரின் கையிலேயே பொறுப்பை ஒப்படைக்கும் மகனின் புத்திசாதுர்யத்தை மனதில் மெச்சிக்கொண்டார் இந்திரசேனா.

“என் மகனை எப்படிடா அவளுக்கு பிடிக்காம போகும்? அதெல்லாம் வெற்றி உனக்குத்தான்” மகனது கவலையில் சிலிர்த்தெழுந்து, வசமாக மாட்டிக்கொண்டார் கௌசல்யா.

“உங்களுக்காகவே அவளை கட்டி இந்த வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு வரேன் பேபிமா” சபதம், சல்லாபமாக ஒலித்த மகனது குரலை வைத்து அவனை இனம் கண்டுகொண்டவர், அவனது காதை பிடித்து திருகிக்கொண்டே,

“படவா, உன் காரியத்தை நடத்திக்கிட்டல்ல” அவனது முதுகில் போலியாக இரண்டு அடியும் வைத்தார். கலகத்தில் பிறந்த நன்மையாக, சற்று முன்பு இருந்த சூழல் மாறி அங்கு கலகலப்பு மீண்டும் திரும்பியது.

“சரி. அப்போ நான் கிளம்பறேன். இன்னும் ஒரு மணிநேரத்தில கோவை விமானத்தை பிடிக்கனும்மா” அன்னையை ஆரத்தழுவிக்கொண்டு விட்டவன், பயணத்திற்கு தயாராவதற்கு தனது அறைக்கு சென்றுவிட்டான்.

தனது வழக்கம்போல வீட்டைச்சுற்றி ஜாகிங் சென்றுகொண்டிருந்தான் நூவன். வியர்வை ஆறுவதற்காக ஊஞ்சலில் அமர்ந்தவனை, அப்பொழுதுதான் எழுந்துவந்து ஜாகிங் செய்து கொண்டிருந்த ஹர்ஷத்தும் சேர்ந்து கொண்டான்.

“என்னண்ணா??இப்பல்லாம் உன் முகத்துல தனி தேஜஸ் தெரியுதே” அமர்ந்தவாக்கிலியே கைகால்களுக்கு அசைவுகொடுத்து பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த நூவனின் கைகள், தமையனின் பின்னைங்கழுத்தை பிடித்து ஆட்டியது.

“என்னடா, காலங்கார்த்தாலேயே வம்பிழுக்கிறியா?? எப்பவும் இந்த வேலையை அப்பா செய்வாரு?? இப்ப நீ ஆரம்பிச்சுட்டியா??” சிரித்துக்கொண்டே அவனது தோளில் இடித்தான் என்ஜே.

“அதெல்லாம் இல்லண்ணா. நேத்து ஆத்துக்குள்ள யாரோ புதையல் எடுத்ததா கேள்விபட்டேன். பார்த்தா அந்த புதையல நீதான் தூக்கினியாமே. அதான் என்ஜே முகத்துல ஜேஜேன்னு ஒளி வீசுதோன்னு ஒரு சந்தேகம்”சொல்லிவிட்டு எழுந்து நின்று கொண்டான் ஹர்ஷத்.

“புதையல்தான், ஆனால் எனக்கு சொந்தமாக்கிக்கிறது பெரிய வேலையா இருக்கும்னு நினைக்கிறேன்டா” தான் கேலி செய்ததற்கு, தன்னை துரத்திக்கொண்டு வருவான் என்று எதிர்பார்த்து எழுந்து நின்றவனுக்கு, தமையனின் தீவிர குரலில் அவனது முகம் யோசனையை தத்தெடுத்தது.

“என்னண்ணா திடீர்னு சீரியஸா பேசுற??” மீண்டும் அவனருகில் அமர்ந்தான் ஹர்ஷத்.

“நிஜமாதான் சொல்றேன். நிகா வாழ்க்கைல ஏதோ மர்மம் ஒளிஞ்சுருக்குன்னு நான் உணர்றேன்டா”

“மர்மமா?? என்னண்ணா சொல்ற??” ஹர்ஷத்தால் இதை நம்ப முடியவில்லை.

“எனக்கு தோணாம சொல்லுவனா?? ” பேசிக்கொண்டே நிதானமாக தனது கையில் மாட்டியிருந்த ஸ்போர்ட்ஸ் க்ளவுசை கழட்டினான் என்ஜே.

“அப்படி என்னண்ணா மர்மம்? “

“சில யூகங்கள் இருக்கு. பார்க்கலாம்” என்றவன் அத்தோடு பேச்சை முடிக்க,

“சரி. இதெல்லாம் யோசிச்சா என் மண்டைல ஒரு முடி கூட இருக்காது. நீ விஷயத்துக்கு வா. எனக்கு அண்ணி அந்த பீட்சாவா இல்ல பியூட்டியா?” மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியிருந்தான் ஹர்ஷத்.

“ஏண்டா?? உன் கவலை உனக்கு??”

“ஆமாண்ணா. இந்த பீட்சா வந்தா நம்ம வீட்டையே நாறடிச்சுடுவா. அதனால மொபைல் ப்யூட்டி தான் எனக்கு அண்ணியா வரனும்னு  அதர்வண அஞ்சவேதத்துல சொல்லியிருக்காங்க” தனது காரியத்தில் கண்ணாக பேசினான் அவன்.

“டேய்.. நீ இருக்கியே” அவனது தலையை பிடித்து ஆட்டிய நூவன்,

“ப்யூட்டிதான்டா உன் அண்ணி. பீட்சா இல்ல, இப்போ திருப்தியா?” அவனை குனிய வைத்து முதுகில் குத்திகொண்டே பேசினான்.

அவனது பிடியையும் மீறி துள்ளிய ஹர்ஷத்,

“ஹூர்ரே. இத இதைத்தான் எதிர்பார்த்தேன் ப்ரோ”  சந்தோஷத்தில் துள்ளினான் அவன்.

“ரொம்ப துள்ளாதடா, இது அவ்வளவு சீக்கிரம் நடக்கற காரியமில்லை. உங்க அண்ணி என்னை விட ஒரு பங்கு கெட்டி. அவ்வளவு சீக்கிரம் வளைய மாட்டா, நீ இவ்வளவு ஆடி அவ கண்ணுல பட்டன்னா, உனக்கும் சேர்த்து இரண்டு விழும். எப்படியோ என் கண்ணை காப்பாத்திட்டு வந்துட்டேன்” நொடி நேரத்தில் அவள் மணலெறிந்த காட்சி கண்முன்னே வந்து போனது அவனுக்கு.

“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.  எப்ப அண்ணியை நான் நேர்ல பார்க்குறது?? இன்னைக்கே போயி பார்க்கட்டுமா?? கூடவே அந்த பீட்சாவயும் கூட்டிப் போய் காமிச்சு, இவங்கதான் என் வருங்கால அண்ணி, அதனால நீ இப்பவே இடத்தை காலி பண்ணிடுன்னு சொல்லிடவாண்ணா??” அடுத்தடுத்து திட்டமிட்டுக்கொண்டே போனவனின் மண்டை வலியில் அதிர்ந்தது. என்ஜே தான் அவனது தலையில் கொட்டியிருந்தான்‌.

“கெடுத்தியே காரியத்தை!! அவ முன்னாடி மட்டும் நீ இப்படி பேசுன, உயிரோட திரும்ப மாட்டடா” என்றவனின் குரலில் சற்று நிதானித்தான் ஹர்ஷத்.

“நிசமாத்தான் சொல்றியா??” சந்தேகக்கண்ணோடு உடன்பிறந்தவனை பார்க்க,

“நீ அடங்கமாட்ட” என்றவன், அவள் அவனது கண்ணில் மண்ணெறிந்த சம்பவத்தை கூறினான்.

“…” சற்று நேரத்திற்கு அவனிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லாது போக,

“ஹேய்..” அவனை பிடித்து உலுக்கினான் நூவன்.

“இது எத்தனை சொல்லு?? ” தனது விரல்களை அவன்முன் நீட்ட,

“எழுபத்திரண்டு” அவனது விரல்களை மடக்கி பிடித்தான் அவன்.

“ஆஆஆஆஆஆ….” ஹர்ஷத் வலியில் அலற, சிறிதுநேரம் பிடித்த பின்பே விடுவித்தான்.

“உனக்கெல்லாம் அசுர வைத்தியம்தான் கரெக்ட். அண்ணி தான் ரைட்” என்றவன் இருகட்டை விரல்களையும் உயர்த்தி காண்பிக்க, தோள்களை தழுவிக் கொண்டனர் இரு சகோதரர்களும்.

“வெற்றி உனக்குத்தான் அண்ணா. அது எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி” தனயனின் வார்த்தையில், யானைபலம் அடைந்தது போலிருந்தது நூவனுக்கு. பின்பு இருவரும் பேசிக்கொண்டே வீட்டிற்குள் நுழைய, அவர்களின் பாசப்பிணைப்பை  தனது பால்கனியில் நின்று எரிச்சலோடு பார்த்துக்கொண்டிருந்தாள் ப்ரிஷா.

“ரொம்ப ஓவராத்தான் சீன் போடுறானுங்க? எத்தனை நாளுக்குன்னு நானும் பார்க்கறேன். டேய் ஹர்ஷத், இந்த வீட்டுக்கு மருமகளா வந்ததும், முதல்ல உன்னைத்தான் வீட்டை விட்டு துரத்துவேன்” என்றவள் பால்கனி கதவை அறைந்து சாத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

இங்கு உற்சாகத்துடன்  கிளம்பிய சேனாவிற்கு சந்தோஷமாகவே விடைகொடுத்தனர் அவனது பெற்றோரும். சேனா வெளியேறவும் இந்திர சேனாவின் அலைபேசி ஒலித்தது.

கௌசல்யா உள்ளே வீட்டிற்குள் திரும்ப,

“சொல்லும்மா நிவேதா” பேசிக்கொண்டே அவர் வெளியிலேயே நின்று விட்டார்.

“என்னண்ணா, பேசினிங்களா? நரேனுக்கு சம்மதமா? ” சற்று பதட்டத்துடனே ஒலித்தது அவரது குரல்.

“எதுக்கும்மா  இவ்வளவு பதட்டம்? அவனுக்கு ஏற்கனவே பிடிச்சு தான் இருக்கு. ஆனால் அந்த பொண்ணு மனச மாத்தறது கஷ்டம்னு சொன்னதால, அதுக்குரிய வேகத்தை அவனுக்கு குடுக்குற மாதிரி, ஒரு விஷயத்தை செஞ்சுதான் அனுப்பியிருக்கேன். அதெல்லாம் வெற்றியோட தான் திரும்புவான்” மிகுந்த நம்பிக்கையுடன் பேசினார் அவர்.

“சரிங்கண்ணா, நீங்க செஞ்சா சரியாத்தான் இருக்கும். நூவனோட கண்ணு அவமேல முழுசா பதியறதுக்குள்ள, இந்த கல்யாணம் நிச்சயமாகிட்டா நல்லாயிருக்கும்” சீக்கிரம் கல்யாணத்தை முடிந்துவிடும் வேகம் அவரிடம்.

“என்னம்மா சொல்ற?? என்ஜே கவனிக்கறானா?? எப்ப இருந்து??” என்று கேட்டார் இந்திரசேனா. அவரின் கேள்விக்கு சுருக்கமாக நடந்த விஷயத்தை கூறினார் நிவேதா.

“இவ்வளவுதானம்மா?இதுக்கு ஏன் இவ்வளவு வருத்தப்படுற? முறைன்னு‌ பார்த்தா நூவனுக்குதான் உரிமை அதிகம். சொந்தமா நினைச்சு கூட பேசியிருக்கலாமில்லையா?” என்றார் அவர்.

“சொந்தம்னு பேசினா பிரச்சனையில்லை, சொந்தமாக்கிக்கனும் நினைச்சுட்டா தான் பிரச்சனை. அதனாலதான் நான் அவசரப்படறேன்” நிவேதா தன்வாதத்தை வைத்தார்.

“சரி, நீ கவலைப்பட வேண்டாம் நிவேதா. நரேனுக்கு அவளை ரொம்ப பிடிச்சுருக்கு. சீக்கிரம் கல்யாண சேதியோட வந்து அவளை அங்கிருந்து இங்க கூட்டிட்டு வந்துடுவான். நீ கவலைப்படாம, ஆக வேண்டிய மத்த காரியங்களை பாரு” அவரது பேச்சில் சமாதானமடைந்தவள்,

“ம்ம்..சரி, நான் வைக்கறேன் இந்தரண்ணா” சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.

கோவை விமானநிலையத்தில் வந்திறங்கிய சேனாவிற்கு, நிகாவையே அடைந்துவிட்டதை போன்றதொரு உணர்வு. மனமெங்கும் உற்சாக ஊற்று பொங்கிப்பெருக அங்கிருந்து வெளியேறிவன் கிடைத்த டாக்ஸியில் முதலில் ஏறி, நிகாவின் வீட்டிற்குத்தான் சென்றான். ஏனென்றால் அவனது பயணத்திட்டப்படி முதலில் நிவேதாவை சென்று சந்திப்பதாகத்தான் ஏற்பாடு. ஆனாலும் அவளை முதலில் காண வேண்டும்‌ என்ற வேகம், அனைத்தையும் புறந்தள்ளியது.

கைகளில் வேகத்துடனும், ஒரு லாவகத்துடனும் புற்களை பிடுங்கிக்கொண்டிருந்தவளை பார்க்க வியப்பாக இருந்தது நிகாவிற்கு. காலை உணவை முடித்துவிட்டு அமர்ந்தவளிடம், ஆனந்தி தான் தோட்டத்தில் புற்களை ஒழுங்குபடுத்த போவதாக கூற, தானும் உடன் வருவதாக கிளம்பினாள் அவள்.

வீட்டிற்கு முன்பு வைக்கப்பட்டிருந்த செடிகளின் ஊடே இருந்த புற்களை அவள் சேகரிக்க ஆரம்பிக்க, தானும் உதவுவதாக சொன்னாள் ஸ்ரீனிகா‌.

“அச்சோ அக்கா, இது உங்க டவுன் தோட்டம் மாதிரி இல்ல,  விஷப்பூச்சிங்கல்லாம் நிறைய இருக்கும். அதனால வேணாம்க்கா” மறுத்தவள், தனது வேலையை தொடர ஆரம்பித்தாள்.

“சரி, நீ என்ன படிச்சுருக்க??” அவளின் கேள்விக்கு, ஆனந்தியின் முகத்தில் அசடு வழிந்தது.

“படிப்பு மட்டும் என் மண்டைல ஏறவே இல்லைக்கா. பனிரெண்டாவது பரீட்சைல ஃபெயில் ஆயிட்டேன்” அதையும் மகிழ்ச்சியுடனேயே சொன்னவளைக்கண்டு சிரிப்புதான் வந்தது.

“ஃபெயில்ங்கறத ரொம்ப சந்தோஷமா சொல்ற மாதிரி இருக்கே?”

“ஹி..ஹி.. ஆமாக்கா, இல்லைன்னா தாத்தா மேல படிக்க வைக்கப்போறேன்னு சொன்னத செஞ்சுரும், என்னால தாத்தாவ விட்டு இருக்க முடியாதுக்கா” வெள்ளைமனத்துடன் அவள் கூறிய பதில் நிகாவை சற்று அசைத்து பார்த்தது.

“தாத்தான்னா அவ்வளவு பிடிக்குமா??”

“ம்ம்.. ஆமாக்கா, அப்பா அம்மா இருந்தப்பவே தாத்தாவ ரொம்ப பிடிக்கும், அதனாலாதான் அவங்க ஒன்னா கடவுள்கிட்ட போன பிறகும் என்னால இங்க இருக்க முடியுது” அவளது பெற்றோர் விபத்து ஒன்றில், ஒன்றாகவே உயிர்பிரிந்திருந்தனர்.

“ம்ம், சரிதான். இருந்தாலும் உனக்குன்னு நீ ஏதாச்சும் சம்பாத்தியம் பண்ணலாமில்லயா?? ஏன் இந்த தோட்டவேலையவே எடுத்துக்கயேன், அங்க சென்னைலலாம், இப்படி தனியா தோட்ட பராமரிப்பு, தோட்டம் உருவாக்கி கொடுக்கறதுக்கெல்லாம் தெரிஞ்சவங்க ஒரு குழுவா சேர்ந்து, காண்ட்ராக்ட் எடுத்து பண்ணுவாங்க. அந்த மாதிரி இந்த ஊர்லயும், நீ எடுத்து பண்ணலாமே ஆனந்தி?? எப்பவும் பெண்கள் தங்களோட சுயமா எதையாச்சும் செய்து, சம்பாதிக்கறது ரொம்பவே நல்லது” தனது யோசனையை முன்வைத்தாள் அவள்.

அவளது யோசனையில் ஆனந்தியின் மனம் சற்று யோசிக்க ஆரம்பித்தது.

“இப்படியெல்லாம் செய்வாங்களா அக்கா??”

“செய்றாங்க, செஞ்சுகிட்டும் இருக்காங்க. இதை முடிச்சிட்டு நீ உள்ள வா, இது சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்று காமிக்கறேன். என் தோழிங்க சிலபேர் இந்த வேலை பார்க்கறவங்களும் இருக்காங்க. அவங்க அனுப்பிச்சதுதான் அது” என்றவள் எழுந்து உள்ளே சென்று தனது மொபைலில் பாட்டுக்கேட்டுக்கொண்டு தோட்டத்தை ஒட்டியிருந்த வராண்டாவிலேயே நடந்து கொண்டிருந்தாள்.

நிகாவின் வீட்டை அடைந்த சேனா, பெட்டிகளை ஓட்டுனரிடம் விட்டுவிட்டு, அவளைப் பார்க்க விரைந்து வந்தான். அவனது விருப்பப்படியே வந்தவன் கண்களுக்கு முதலில் பட்டது, அலைபேசியில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரீனிகாவே பட, வேகமாக அவளை நோக்கி சென்றான்.

ஸ்ரீனிகா திரும்பி நின்றிருந்ததால், சேனாவின் வரவை அவள் உணரவில்லை. பாட்டு கேட்டுக்கொண்டே சரியாக அவள் அடுத்த அடி எடுத்து வைக்கும் நேரம், பூனைக்குட்டி ஒன்று அவளது வழியில் குறுக்கே ஓட, அதன்மீது கால் வைக்காமல் பின்னே வைக்கப்போனவளின் கால் தடுமாறி, பின்னே விழப்போக, அதைப்பார்த்துக்கொண்ட வந்த சேனா அவளை பிடித்துக்கொண்டான்.

விழப்போகிறோமென்று, கண்களை மூடியிருந்தவள், விழாமல் வேறுகைகளில் பிடிபட்டுருப்பதை உணர்ந்த கணம், கண்விழித்து பார்க்க,

“ஒன்னும் ஆகலை ஸ்ரீனிகா, நான் பிடிச்சுட்டேன். யூ ஆர் ஓகே” சேனா அவளிடம் பேசிக்கொண்டிருந்தான்.

காதுகளில் ஹெட்செட் போட்டிருந்ததால், அவன் பேசுவது கேட்காமல், அவன் முகத்தை உற்று பார்க்க, அவளின் அந்த பார்வைக்கே சேனாவின் புன்னகை விரிய, நிகா தன்னைத்தானே சுதாரித்தவளாக, தனது ஹெட்செட்டை கழற்ற முயன்று, நிமிர முயன்றாள். ஆனால் நிமிர வேண்டுமென்றால் , சேனாவின் தோளை பிடித்து தான் நிமிர வேண்டும் என்பதால், மீண்டும் அவனை பார்க்க, அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

இந்த காட்சி அப்பொழுதுதான் அங்கு வந்திருந்த, நூவனின் கண்களுக்கும் தவறாமல் பட்டது. கோபத்தில் தன்னையுமறியாது,

“நிகாஆஆஆஆஆ… ” என்று கத்தினான் என்ஜே.

அவன் கத்தியதில் அவள் அவசரமாக விலக முயன்று, மீண்டும் விழப்போக,

“ரிலாக்ஸ், ஸ்ரீனிகா” சேனா அவளை ஆசுவாசப்படுத்தியவன், அவளது கையை பிடித்து நிற்க வைத்தான். அவள் நிற்கவும் நூவனும் அவளருகே வந்திருந்தான்.

“ஆர் யூ கே??” நூவனும், சேனாவும் ஒருமித்த குரலில் கேட்க, வாழ்க்கையில் முதன்முறையாக விழித்துநின்றாள் அவள்.

இருந்தாலும் தன்னை காட்டிக்கொள்ளாது, “நான் நல்லாதான் இருக்கேன்” பொதுவாக தோட்டத்தைப் பார்த்து சொன்னவளை கண்டு, நூவனுக்கு கோபம் வர, சேனாவிற்கோ வருத்தமானது.

“ஸ்ரீனிகா குடிக்க கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?” சேனா அவளுடன் பேச்சை தொடர ஆசைப்பட,

“உட்காருங்க சார். இதோ எடுத்துட்டு வரேன்” என்று உபசரித்தவள், மறந்தும் நூவனின் புறம் திரும்பி பார்க்கவில்லை.

“ஆனந்தி கொஞ்சம் உள்ள வாம்மா” என்று அவளையும் அழைத்துச் சென்றாள்.

உள்ளே செல்பவளை பார்த்துக்கொண்டே சேனா அங்கிருந்த நாற்காலியில் அமர, என்ஜேவும் அவனுக்கெதிரே அமர்ந்தவன்,

“என்ன சேனா திடீர்னு இந்த பக்கம்??”  சேனாவின் கவனத்தை தன்புறம் திருப்பினான்.

“அதை நான்தான் கேட்கனும் என்ஜே?? நீங்க எப்படி இங்க??  மிஸ்.ஸ்ரீனிகா இப்போ என்னுடைய கிளையண்ட் அதனால நான் பார்க்க வந்தேன்” என்று கேள்வியையும், விளக்கத்தையும் ஒருங்கே பதிலளித்தான் சேனா.

“ராமுதாத்தாக்கு பணம் கொடுக்க வேண்டியிருந்தது. அப்படியே எங்க மாமா பொண்ண பார்த்துட்டு , அவளுக்கு வசதி குறைவு எதும் இருக்கான்னு விசாரிச்சுட்டு போக தான் வந்தேன். ஏன்னா கிரி பொறுப்பை என்கிட்ட ஒப்படைச்சுருக்கான் இல்லையா??” தனது சொந்தத்தை சற்று வலுவாகவே வலியுறுத்தினான் அவன்.

அவனது பேச்சில் யோசனையை தத்தெடுத்தது சேனாவின் முகம். தனது யோசனையை கைவிடாது, மேலும் என்ஜேவிடம் பேச்சுக்கொடுத்தான்.

“ஓ.. அப்படியா?? என் வேலையைதான் அப்பா கிரியை பார்க்க சொல்லியிருந்தார். நைஸ் டு மீட் யூ என்ஜே. நீங்க எவ்வளவு பிசியான ஆள்னு எனக்கு தெரியும். எனக்காக இவ்வளவு சிரமம் எடுத்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி. இனி நான் பார்த்துக்குவேன், எந்த சிரமும் இல்லை” சேனாவின் தன்மையான பேச்சில் நூவனுக்கு சிரிப்புதான் வந்தது.

“டேய் வக்கீல் என்கிட்டயே உன் வேலையை காண்பிக்கிறியா?? உன் வேலை முடிஞ்சது , நீ கிளம்பலான்னு மறைமுகமா சொன்னா, நான் கிளம்பிடுவேனா??” மனதிற்குள் நினைத்தவன்,

“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனையில்லை சேனா. எங்க வீட்டு பொண்ண நாங்க பார்த்துக்க மாட்டோமா? இப்ப கூட நிகா சில பொருட்கள்ளாம் வாங்கனும்னு சொல்லியிருந்தா, கூட்டிட்டு போகத்தான் வந்துருக்கேன். என்ன நிகா?” ஆனந்தியுடன் காஃபி கோப்பைகளை எடுத்து வந்தவளை பார்த்து கேட்க, அவனை முறைத்தாள் அவள். ஏனென்றால் அவள் உதவி கேட்டது ராமுதாத்தாவிடம். மறுத்து பேச அவள் வாயை திறக்கும் முன்பே,

“டைம் ஆச்சு நிகா. கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வரியா?? வக்கீல் சாரும் அத்தையை பார்க்க இப்போ கிளம்பிடுவாரு. இருட்டியாச்சுன்னா கொஞ்சம் கஷ்டம்” சரியாக அந்நேரம் தாத்தாவும் அங்கு வந்தவர்,

“ஆமாங்க சின்னம்மா. நீங்க தம்பிகூட போய்ட்டு வாங்க. இருட்டியாச்சுன்னா, இந்த பக்கம் நடமாட முடியாது” என்ஜேவின் கருத்தை ஆமோதிக்க, வேறுவழியில்லாது அவனுடன் செல்ல, தலையை ஆட்டினாள்.

தன் கண்முன்னே தன்னவளை அழைத்துச்செல்லும் என்ஜேவை கண்டு கோபம் வந்தாலும், அதற்கு மேல் அங்கு இருக்க முடியாது,

“ஓகே அப்போ நான் கிளம்புறேன் ஸ்ரீனிகா. நாளைக்கு வந்து உங்களை பார்க்கறேன்” விடைபெற அவனது கையை நீட்ட, அவள் கை நீட்டுமுன்பே,

“நாளைக்கு பார்க்கலாம் சேனா” அவனது கைகளை பிடித்து குலுக்கி, விடை கொடுத்து அனுப்பினான் என்ஜே. நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஆனந்திக்கு நன்றாகவே புரிந்தது, நிகா தான் தனது வருங்கால எஜமானி என்று.

சேனா விடைபெற்று சென்றுவிட,

“ஆனந்தி இந்த கப்பையெல்லாம் எடுத்துட்டு போம்மா” என்ஜே அவளை உள்ளே அனுப்பியவன், நிகாவை பார்த்து கண்ணடித்து வைத்தான்.

அவனது செயலில் கோபம் கொண்டவள்,

“உங்க மனசுல என்னதான் நினைச்சுட்டுருக்கிங்க?” என்று கொதிக்க,

“உன்னைத்தான் நினைச்சுகிட்டிருக்கேன் நிகாபேபி” அசராது அவள் மனதை தகர்க்கும் முயற்சியில் இறங்கினான் அவன்.

“எனக்குத்தான் உங்க யாரையும் பிடிக்கலைன்னு சொல்றேன், அப்புறமும் ஏன் இப்படி தொந்தரவு பண்றிங்க??” எரிச்சலாக பேசியவளைக்கண்டும்,அவனது முகத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

“உனக்கு பிடிக்கலை, ஆனால் எனக்கு பிடிச்சுருக்கு நிகா டார்லிங். வாதம் செய்யாம கிளம்பி வா, தேவையான பொருட்கள வாங்கிட்டு வந்துடலாம்” அவள்  பேசியதை ஒருபொருட்டாக கூட மதிக்காதவனை கண்டு, அவளது ஆத்திரம் அதிகரித்தது.

“எனக்கு எதுவும் தேவையில்லை, நீங்க கிளம்பலாம்” அவனுடன் வர மறுத்துவிட்டாள்.

“ஓ… அப்போ சரி, நாளைக்கு போகலாம். அந்த வாட்ச்மேனை நாளைக்கும் வரவேணான்னு சொல்லிடு” என்று திட்டமிட்டவனை கண்டுகொள்ளாமல், உள்ளே செல்ல முயற்சித்தவளை, முந்திக்கொண்டு அவளது வழியை மறித்திருந்தான்.

“இதென்ன பேசிக்கிட்டுருக்கும்போதே, மரியாதை இல்லாம உள்ளே போற பழக்கம் நிகா? என்னைப்பார்த்து பயமா என்ன?” கண்ணோடு கண் சேர, அவளது பார்வையை சிறை செய்தவனை கண்டு, உண்மையாகவே பயம்தான் வந்தது அவளுக்கு.

“எங்கே தன்னையறியாமல் இவன்பால் மனம் சாய்ந்து விடுமோ என்று??” நினைத்தவளின் கண்கள் சற்றே கலங்கியது.

அமைதியாக அவனது பார்வையோடு பார்வை கலந்து, கண்களில் சற்றே நீர்கோர்க்க நின்றிருந்த அவளது கோலம் அவனை என்னவோ செய்ய, சட்டென்று விலகியவன்,

“நாளை சந்திப்போம் நிகா” அவளது பதிலை எதிர்பாராமலேயே கிளம்பி சென்றுவிட்டான்

நீர் நிறைந்த உனது நயனங்களில், நான் நிறைந்திருப்பதை உணரும் நாள் வர வேண்டும் கண்மணி………

திமிராகும்……

அத்தியாயம்-9:

நிகாவின் வீட்டிலிருந்து புறப்பட்ட சேனாவின் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது.

“எங்க இருந்து வந்தான் இந்த என்ஜே?? சொந்தத்தை சொல்லி என்னை தள்ளி நிறுத்த பார்க்குறானா?? இத்தனைநாள் கண்ணுக்கு படாத சொந்தம் இப்ப மட்டும் இவன் கண்ணுக்கு படுதாமா?? ராஸ்கல் எவ்வளவு தைரியம் இருந்தா என் முன்னாடியே ஸ்ரீனிய கூட்டிப்போவேன்னு சொல்லுவான்?? இந்த சேனா யாருன்னு உனக்கு காண்பிக்கிறேன்டா” மனதிற்குள் அவன் சபதம் எடுத்து முடிக்கும் வேளையில்  ,நிவேதாவின் வீட்டின் முன் கார் நின்றிருந்தது.

ஓட்டுனருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து கொண்டிருந்தவனை, வாசலுக்கே வந்து வரவேற்றார் நிவேதா.

“வாங்க சேனா. ப்ரயாணமெல்லாம் சௌகரியமா இருந்ததா?” அவனை நலம் விசாரித்தவரின் கண்ணசைவிலேயே, அவனது லக்கேஜை உள்ளே எடுத்து சென்றிருந்தனர் வேலைக்காரர்கள்.

“ஆன்ட்டி, உங்ககிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன்??எதுக்கு இந்த மரியாதையெல்லாம்?? சின்ன வயசுல கூப்பிட்ட மாதிரி நரேன்னே கூப்பிடுங்க”என்றவன் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவும் தவறவில்லை.

அதில் நிவேதாவின் நெஞ்சமும் குளிர்ந்து போனது.

“உன்னுடைய இனியமையான இந்த குணம் எப்பவும் மாறாம, சந்தோஷமா இருக்கனும் நரேன், எழுந்திரு” என்றவர், வீட்டினுள் அழைத்துச்சென்றார்.

உள்ளே வந்தமர்ந்தவனை உபசரித்தவர், பொதுவிஷயங்களை பேசினார்.

பின்பு சேனாவே ஸ்ரீனிகாவை பற்றிய பேச்சை ஆரம்பித்தான்.

“நான் வரும்போது முதல்ல மிஸ்.ஸ்ரீனிகாவைதான் முதல்ல பார்த்துட்டு வர்றேன் ஆன்ட்டி”

“ஓ….” என்ற சப்தம் மட்டுமே அவரது வாயிலிருந்து வந்தது. அவனும் அவரிடம் அவளுக்கான பிரியத்தையெல்லாம் எதிர்பார்க்கவில்லை.

“அங்கே தங்குறதுக்கு பிரச்சனையில்லை. வீடு நல்லா மாராமத்து வேலை பார்த்துருக்காங்க” கூடுதல் தகவலை கூறினான். அதையும் ஒரு சிறு தலையுருட்டலுடன் அவர் ஏற்றுக்கொள்ள,

“அதோட மிஸ்ட்ர்.என்ஜே வையும் அங்க பார்த்தேன் ஆன்ட்டி” இந்த தகவலில் அவரது முகம் சுருங்க, சேனாவிற்கு திருப்தியாக இருந்தது.

“அவர்தான் பொறுப்பா பார்த்துக்கிட்டார் போல? கிரி எப்ப சென்னையிலிருந்து திரும்புறான் ஆன்ட்டி?” திரியை தூண்டிவிட்டு, அடுத்த பேச்சிற்கு அவன்தாவ,

“என்ஜேவை எப்போ பார்த்த நரேன்?” மகனைப் பற்றிய கேள்விக்கு கூட பதிலளிக்காது, விஷயத்திற்கு வந்தார் நிவேதா.

“நான் வந்தப்பறம்தான் அவர் வந்தார். எங்க மாமாபொண்ண ஷாப்பிங் கூப்பிட்டுகிட்டு போக வந்துருக்கேன்னு சொன்னார். இந்த அளவுக்கு நீங்க எல்லாரும் ஸ்ரீனிகாவை உங்க வீட்டு பொண்ணா பார்க்கறது சந்தோஷமாதான் இருக்கு ஆன்ட்டி” அவனது பேச்சில், என்ஜேவின் கண் அவள்மேல் பதிந்து விட்டதை நன்றாகவே உணர்ந்தார் அவர்.

“போதும் நரேன். அவளை நாங்க எப்ப எங்க குடும்பத்துல சேர்த்துகிட்டோம்?? உனக்கு நல்லாவே ஞாபகம் இருக்குமென்று நினைக்கிறேன். வாசன்மாமாவோட கடைசி ஆசையை நிறைவேற்ற மட்டுமே இதை நான் செய்றேன்னு உன்கிட்ட சொல்லித்தான் இந்த பொறுப்பை உன்கிட்ட ஒப்படைச்சேன். கடைசியா நம்ம சேர்த்த அந்த ஆறுமாத நிபந்தனைகூட, சொத்திற்கு தகுதியானவளா இருக்காளான்னு தெரிஞ்சுக்கதான்.இதுல சொந்தம் எங்க இருந்து வந்தது? கிரி முன்னாடி தப்பித்தவறி கூட இப்படி பேசிடாத, நூவனை நான் பார்த்துக்குவேன். நீ கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுக்குறியா?? இல்லை வேறெதுவும் அப்பாயின்மெண்ட் இருக்கா?” படபடவென அவர் பேசிய பேச்சில், தனக்கு சாதகமான விஷயமும் நடந்துவிடும் சந்தோஷம் அவனது முகத்தை பிரகாசிக்க செய்தது.

“ஆமா ஆன்ட்டி, சிட்டிக்குள்ள இருக்குற மிஸ்டர்.தீனதயாளனோட ஆடிட்டிங், லீகல் வெரிஃபிகேஷன் இருக்கு. அதுக்காகத்தான் இங்க ஒருமாதம் தங்கபோறேன். அவர் எல்லாத்தையும் புதுசா மாத்தி தர சொல்லியிருக்காரு. நாளைஞ்சு பேர வச்சு பார்த்தா ஒருவாரத்துல வேலை முடிஞ்சுடும். ஆனால் அவர் நம்பிக்கையான ஆட்களை மட்டுமே வச்சு வேலை பார்க்கனும்னு சொன்னதால, கிட்டதட்ட நானே எல்லாம் செய்ய வேண்டியிருக்கும். தினமும் அங்க போயிட்டு திரும்ப வேண்டியிருக்கும்” என்று விளக்கம் அளிக்க முற்பட,

“இவ்வளவு விளக்கம் சொல்ல வேண்டியதில்லை நரேன். இதுவும் உன் வீடுதான். நீ எவ்வளவு நாள் வேணுன்னாலும் இருந்து நிதானமா வேலையை முடி. கிரிக்கு நாளைக்கு ஈவினிங் சென்னையிலிருந்து ஃப்ளைட், வந்ததும் உனக்கு தேவையான உதவியும் செஞ்சு கொடுப்பான்” அதற்கான அவசியமேயில்லை என்று முடித்துவிட்டார் நிவேதா. பின்பு அவன் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து விட்டு , சற்று ஓய்வாக அமர்ந்தவருக்கு

“இவன் எதுக்கு இப்போ தேவையில்லாம மூக்கை நுழைக்கிறான்?”,என்று நூவன் மேல் ஆத்திரமாக வந்தது. அவனை வழியை விட்டு அகற்றும் வழியை முடிவு செய்த பின்பே, நிம்மதியாக உறங்க சென்றார்.

இங்கு என்றுமில்லாத வழக்கமாக மகனுக்கு பத்து முறைக்கு மேல் அலைபேசியில் அழைப்பு விடுத்திருந்தார் உஷாந்தினி.

தொழிற்சாலையில் மேற்பார்வை பார்த்து முடித்தவன், தனது அறைக்கு வந்து சற்று ஓய்வெடுக்கும் போது, அலைபேசியை எடுத்து பார்க்க, அன்னையிடமிருந்து பத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள்.

அநாவசியமாக உஷாந்தினி இவ்வளவு அழைப்பெடுக்க மாட்டார் என்பதை அறிந்தவனாக அன்னைக்கு அழைப்பெடுக்க,

“ஹலோ என்னம்மா?இத்தனை…” தடவை கூப்பிட்டிருக்கிங்க, என்று கேட்கும் முன்பே,

“நூவா எங்க இருந்தாலும் வீட்டுக்கு கிளம்பி வா” அவனது பதிலை கேளாமலேயே அழைப்பை துண்டித்து விட்டார். அன்னையின் குரலில் அவரது கோபத்தை அறிந்தவன், விரைந்து வீட்டிற்கும் கிளம்பி சென்றான்.

வீட்டினுள் நுழைந்தவன், முதலில் கண்டது அவனது தந்தையை, மிக மும்முரமாக ஷேர் மார்க்கெட் நிலவரங்களை பார்த்துக்கொண்டிருந்தார் ஜேபி.

அவரது அருகில் சென்று அமர, இவ்வளவு சீக்கிரமாக வீடு திரும்பியிருக்கும் மகனை அதிசயமாக பார்த்தார் ஜேபி.

“என்னடா நூவா, உன் ஆளு கூட எங்கயும் வெளிய போறியா?? இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்ட?? இன்னைக்கு எங்கடா ஜலக்கிரீடை நடத்தப்போறிங்க??” வழக்கமான குறும்புடன் பேசும் தந்தையை நன்றாகவே முறைத்தான் அவன்.

அவனது முறைப்பில் சுதாரித்தவர்,

“சாரி மை சன். சூழ்நிலை தெரியாம பேசிட்டனோ?? என்னாச்சு இந்த நேரத்தில வீட்டுக்கு??” தோழனாக அக்கறையோடு கேட்ட தந்தையை மிகவும் பிடித்தது. அந்த மகிழ்ச்சியுடனேயே,

“என்னைக் கூப்பிட்டது என் ஆளு இல்லப்பா. உங்காளு!! அதுவும் அவங்க எடுத்த காலுக்கு, ஃபோனே அலற்ர அளவுக்கு” என்றுரைக்க,

“என்னடா சொல்ற? உஷாவ பண்ணது?? எதுக்குடா?” சற்று பரபரப்பானார் ஜேபி.

“எனக்கும் தெரியலைப்பா. எங்க இருந்தாலும் உடனே வீட்டுக்கு வான்னு சொல்லிட்டு அம்மா வச்சுட்டாங்க. வீட்டுக்கு யாரும் வந்தாங்களாப்பா??” காரணத்தை அறிந்து கொள்ள முற்பட்டான்.

“இல்லையேடா. ஒரு மூணு மணி போல நிவிதான் கால் பண்ணியிருந்தா. அடுத்த வாரம் வாசனோட முப்பதாவது நாள் சடங்கு கும்பிடனுல்ல, அதை எனக்கு சொல்லிட்டு, உங்கம்மா கிட்ட அவதான் கொஞ்சநேரம் பேசிகிட்டுருந்தா” என்றவரின் பேச்சில், விஷயம் விளங்கியது நூவனுக்கு.

“அத்தை ஆரம்பிச்சுட்டாங்களா??” என்றவன் கூற,

“என்னடா சொல்ற??”

“ஆமாப்பா. சேனா இங்க வந்தாச்சு. இன்னைக்கு நான் நிகாவ பார்க்க போனப்ப, அவனும் அங்கதான் இருந்தான்” என்றவன் நடந்ததை சுருக்கமாக விவரித்தான்.

“சரி. இதுல நிவிக்கு என்னடா சம்பந்தம்?? “

“அத்தைக்கு நான் நிகாவை பார்க்கிறது பிடிக்கலப்பா” என்றான் அவன்.

“ஏன்டா, ஒருவேளை மூத்த தாரத்து பொண்ணு நம்ம குடும்பத்துக்கு வேண்டான்னு நினைக்கிறாளோ?” அப்பொழுதும் தங்கையின் மேல் எந்த சந்தேகமும் வரவில்லை அவருக்கு.

“இல்லைப்பா. அத்தை சேனாவுக்கு நிகாவை முடிக்கனுன்னு பார்க்குறாங்க. நான் இந்த விஷயத்துக்குள்ள வர்றது அவங்களுக்கு பிடிக்கலை” என்றான் என்ஜே.

“என்ஜே.. என்ன பேச்சு பேசுறன்னு தெரிஞ்சுதான் பேசுறியா?? உன்னை தூக்கி வளர்த்தவடா அவ… கிரியைவிட உன்மேலதான் அவளுக்கு பாசம் அதிகம்” ஆதங்கத்துடன் பேசிய தந்தைக்கு எப்படி புரிய வைப்பதென்று யோசிக்க ஆரம்பித்தான் அவன்.

“அப்பா, அத்தைக்கு என்மேல பிரியமில்லைன்னு நான் எப்ப சொன்னேன்? நிகா விஷயத்துல நான் தலையிடறது பிடிக்கலைன்னு தான் சொன்னேன். அவளை பற்றிய ஏதோ ஒரு விஷயத்தை நம்மகிட்ட அத்தை மறைக்கிறாங்கப்பா” மகன் பேசிய கோணத்தில் தந்தையின் முகம் தெளிவடைந்தது.

“எனக்கு இந்த சந்தேகம் இருக்கு என்ஜே. ஆனால் இப்ப இருந்து இல்ல, கிட்டதட்ட ஒரு வருஷத்துக்கு முன்ன இருந்தே?? அதாவது அவ மாமியார் இறந்தப்ப இருந்தே, கொஞ்சம் சந்தேகமாத்தான் இருக்கு. நான் எவ்வளவோ கேட்டும் அவ எதுவுமே சொல்லலை. அப்படி என்னதான் வாசன்மேல காதலோ?? எவ்வளவு சொல்லியும் கேட்காமதான அவனை கல்யாணம் பண்ணா??” இன்றும் அந்த வருத்தம் குறையாமல் இருந்தது அவருக்கு.

தந்தையின் பேச்சை கவனித்து கொண்டிருக்கும்போதே, ப்ரிஷாவுடன் உள்ளே நுழைந்தார் உஷாந்தி.

அவருக்கு இன்றிருந்த மன உளைச்சலில் வெளியே வர விரும்பவில்லை என்று கூறியும், வற்புறுத்தி அவரை ஷாப்பிங்கிற்கு அழைத்துச்சென்றிருந்தாள் ப்ரிஷா.

வெளியே சென்று திரும்பியதில் அவரது இயல்புக்கு சற்றே திரும்பியிருந்தவருக்கு, மகனை கண்டதும் மீண்டும் கோபம் தலைதூக்கியது.

சிரிப்புடனே உள்ளே நுழைந்த அன்னையின் முகமாற்றத்தை கவனித்தாலும், தந்தையிடமிருந்து எழுந்து வந்து அவரது முகத்தை இருகைகளாலும் பிடித்தான் நூவன்.

மகனது செயலில், சமாளித்து விடுவான் என்று நிம்மதி தோன்ற, மீண்டும் தளர்வாக அமர்ந்து கொண்டார் ஜேபி.

“என்னாச்சு ம்மீ , உடனே என்னை பார்க்கனுங்கற அளவுக்கு?” வெகு அபூர்வமான சமயங்களில் மட்டுமே வரும் நூவனின் இந்த அழைப்பு, அவரது கோபத்தை உருக வைத்தாலும், அதை குறையாமல் இருக்க சரியாக அந்த நேரத்தில் பேச ஆரம்பித்தாள்  ப்ரிஷா.

“ஏன் மாம்ஸ் அத்தைக்கு பிடிக்காத வேலையெல்லாம் செய்றிங்க? அவங்கள சமாதானப்படுத்தி இப்பதான் சரிப்படுத்தியிருக்கேன். இனி அவங்களுக்கு பிடிக்காத வேலையெல்லாம் செய்யாதிங்க மாம்ஸ்” ஒருமுறைக்கு இருமுறை நடந்த விஷயத்தை மறக்காதவாறு உஷாந்தினிக்கு ஞாபகபடுத்தும் வேலையை செவ்வனே செய்தாள்.

“சரிங்க பீட்சா. ரொம்ப தடவாம அம்மாகிட்ட என்னை பேசவிடறியா??” என்றவன்,

“என்னம்மா விஷயம்??” என்று அன்னையிடம் கேட்க,

“உனக்கு அந்த சென்னைக்கார பொண்ணுகிட்ட என்ன வேலை?? நான் சொல்லாமலேயே நூவன் அவளுக்கு தேவையானதை செஞ்சு, நல்லபடியா கவனிச்சுக்கறான் அண்ணின்னு , உங்க அத்தை நன்றி சொல்றா?? என்ன நடக்குது இங்க?? அன்றைக்கு ஒருநாள் உதவி பண்ண சரி. இன்றைக்கும் உனக்கு அங்க என்ன வேலை நூவா?” அன்னையின் அடுத்தடுத்த கேள்விகளில் முகம்மாறாமல் காக்க சற்று சிரமமாக தான் இருந்தது நூவனுக்கு. ஆனாலும் தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் ப்ரிஷாவை கவனித்தவன், முதலில் அவளை அவ்விடத்தை விட்டு அகற்றும் வண்ணம்,

“ப்ரிஷா கொஞ்சம் அம்மாக்கு ஃப்ரெஷ் ஜூஸ் எடுத்துட்டு வர்றியா?? நீயே செஞ்சு கொண்டுவா” என்றுமில்லாத திருநாளாய் அவளிடம் உதவி கேட்க, தன்னை அவ்விடத்தை விட்டு அகற்றவை இவ்வாறு செய்கிறான் என்று தெரிந்தாலும், அத்தையின் முன் தன் மதிப்பை கூட்டும்பொருட்டு,

“இதோ உடனே கொண்டு வரேன்” என்று நடந்தவளிடம் வேகம் பேச்சில் மட்டுமே இருந்தது.

மெதுவாக அவள் நடந்து உள்ளே செல்லும் வரை நூவன் எதுவும் பேசாது, அன்னையை அழைத்து வந்து சோஃபாவில் அமர வைத்தான்.

“நீங்க கோபப்படற அளவுக்கு நான் என்னைக்கும் நடந்ததில்லம்மா. நேற்றைக்கு நான் போனது கிரிக்கு உதவி பண்ண தான். இன்றைக்கு நான் போனது, ராமுதாத்தாவ பார்த்து சில விவரங்களை கேட்டுக்கதான். உங்களுக்கு பிடிக்கலன்னா இனி நான் அந்த பக்கமே போகலை. அந்த பொண்ணுக்கும் நம்ம வீட்டு ஆளுங்க யாரும் அவளுக்கு உதவுறது பிடிக்கலைன்னு நேரடியாவே சொல்லிட்டா” அவனது கடைசி வாக்கியம், உஷாந்தியை ஆச்சர்யப்பட வைத்தது. அதை கேட்கவும் செய்தார்.

“என்னடா சொல்ற? அவ்வளவு பெரிய ஆளா அவ? “

“ஆமாம்மா. என் உயரத்துக்கு வளர்ந்துருக்கா” நூவன் கிண்டல் செய்ய,

“படவா. நான் என்ன கேட்டா நீ என்ன பேசற?” அவனது தலையில் வலிக்காது கொட்டியவர்,

“நீ சொல்றத பார்த்தா, ரொம்ப சுயமரியாதை பார்க்குற பொண்ணா இருப்பாளோ?”

“அதெல்லாமில்லைம்மா. அவளுக்கு ரொம்ப திமிரு, அவளே படிச்சு, அவளுக்கான எல்லா தேவைகளையும் அவளே பார்த்துக்கிட்டு , நல்ல வேலையும் வச்சுகிட்டு, தனியா சமுதாயத்தில வாழ்ந்து காட்டுறாங்கற திமிரும்மா” மூச்சு வாங்க அவன் சொல்லி முடிக்க, அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஜேபி,

“நீ பேசறதை பார்த்தா அவளை திட்டற மாதிரி தெரியலையே மகனே. அவளோட பெருமையை விட்டா பாட்டா பாடிடுவ போலருக்கே” தனது நாரதர் கலகத்தை ஆரம்பித்து, மனைவி மகன் இருவரது முறைப்பையும் ஒருங்கே பெற்றார்.

அதிலும் உஷாந்தி ” என்னது? என் பையன் அவ புகழ் பாடனுமா?? வரவர உங்களுக்கு அறிவு குறைஞ்சுகிட்டே போகுது போல?” பேச்சில் அனல் தெறிக்க விட, நூவனும் தன் பங்குக்கு,

“இதை சீக்கிரம் சரி பண்ணிடலாம் ம்மீ. அருகம்புல் ஜூஸை இனி மூணு வேளையும் குடுங்க, டாடி அறிவு வளர்ந்துரும்” என்று சொல்லிவிட்டு உதட்டோரம் துடித்த சிரிப்பை அடக்கிக்கொண்டு நின்றான்.

சரியாக அந்நேரம் ப்ரிஷா ஜூஸ் எடுத்துக்கொண்டு வர, உஷாந்தி அதை எடுத்துக்கொண்டவர்,

“ரிஷாம்மா உனக்கு அத்தை ஒரு புது பொறுப்பு குடுக்கப்போறேன். நாளைலருந்து மாமாக்கு மூணு நேரமும் அருகம்புல் ஜூஸ் நீ குடுக்கணும், அவர் குடிச்சு முடிச்ச பிறகுதான் அந்த இடத்தை விட்டு நகரனும் சரியா?”  தன்னை எப்பொழுதும் சீண்டும் மாமாவை படுத்தும் வாய்ப்பை நழுவ விடுவாளா அவள்.

“டபிள் ஓகே அத்தை” என்று கையை உயர்த்த, அத்தையும் மருமகளும் ஹைஃபை கொடுத்துக்கொண்டனர்.

“அய்யோ உஷா இது அநியாயம்” ஜேபியின் பேச்சை அலட்சியப்படுத்தியவர்,

“சரி நூவா நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு ராஜா” மகன்மீது அக்கறை காட்ட,

“இல்லம்மா. புது யூனிட்ல இன்னும் வேலை முடியல. ஹர்ஷத்தான் பார்த்துக்கிட்டுருக்கான். நான் போய் தான் அவனை அனுப்பனும். நான் கிளம்புறேன்” என்றவன் வெளியேற, உஷாந்தி

“நூவா” மகனை மீண்டும் அழைத்தவர்,

“இனி நான் உன்னை அந்த பக்கம் பார்க்க கூடாது” மகனது கண்களை பார்க்க, அன்னையின் கண்களை பார்த்தவன்,

“ஓகேம்மா…” அவருக்கு பதில் கொடுத்தவன்,

“இனி நான் போகப்போறதில்லம்மா, அவ என்கூடவேதான் இருக்க போறா” மனதிற்குள் தனது அடுத்த திட்டத்தை நினைத்து மகிழ்ந்தவன், சந்தோஷத்துடனே விடைபெற்றான்.

மறுநாள் பொழுது அழகாக விடிய, வேலை பார்த்துக்கொண்டிருந்ததில் மாலையை நோக்கி நேரமும் வேகமாக நகர்ந்திருக்க, இன்னும் விமானத்திற்கு அரைமணிநேரமே இருக்க, கைகளில் இரு லக்கேஜ் ட்ராலிகளையும் இழுத்துக்கொண்டு விமானநிலையத்திற்குள்  நுழைந்தவள், வந்த வேகத்தில் எதிரே வந்துகொண்டிருந்தவர்களின் மோதாமல் சமாளித்து, லக்கேஜை ஒருவழியாக ஒப்படைத்துவிட்டு, செக்கிங் கவுன்டரில் திரும்பும் வேளையில் எதிரே வந்தவரின் மீது மோதி சமாளித்து நின்ற ரஞ்சு,

“சா….”சாரி சார் என்று சொல்லுவதற்கு முன்பே,

“ஹே.. அறிவில்லை உனக்கு இப்படியா வந்து இடிப்ப??” என்ற வார்த்தைகள் அவளை நிமிர்ந்து பார்க்க வைக்க, முகத்தில் எரிச்சலுடன் அவளை பார்த்துக்கொண்டிருந்தான் கிரி.

அவனது பார்வை அவளுக்கும் கோபத்தை வரவழைக்க “ஆமா மிஸ்டர் அறிவில்லைதான்,உங்களை இடிக்காம,இப்படி தள்ளி விட்டுருக்கனும்” என்றவள் அவன் எதிர்பாராத விதமாக வழியிலிருந்த அவனை தள்ளிவிட்டவள்,

“இதுக்கும் சேர்த்து டபிள் சாரி” என்றவள் உள்ளே ஓடிச்சென்று விட, கடைசி நேரத்தில் கீழேவிழாமல் சமாளித்து நின்ற கிரியின் முகத்தில் கோபத்திற்கு பதிலாக , இப்பொழுது புன்னகை நிறைந்திருந்தது.

தீ பட்ட நாவும் பின் தித்திக்கும்

தீயாய் நீ சுடுவாயெனில்……..

திமிராகும்……

அத்தியாயம்-10:

விமானம் புறப்படுவதற்கு தயாராக இருக்க, ஒருவழியாக அவளது இருக்கையில் வந்தமர்ந்தாள் ரஞ்சு. அமர்ந்த பிறகே ஆசுவாசமாக மூச்சு விட்டவளுக்கு, தன்பின்னேயே வந்து தன்னருகே உள்ள மற்றொரு இருக்கையில் அமர்ந்தவனை பார்த்தவளுக்கு, இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது.

அவளை பார்த்து முறைத்துக் கொண்டேதான் அவளருகே அமர்ந்தான் கிரி.

“அய்யோ இப்படி மாட்டிகிட்டனே?? நானாச்சும் இவன தரைலதான் தள்ளிவிட்டே.. இவன் ஃப்ளைட்ல இருந்து என்னை தள்ளிவிடப்போறமாதிரி முறைச்சுக்கிட்டே உட்கார்ரானே?? ” விமானத்தின் கண்ணாடி சாளரத்தை எட்டிபார்த்தவள்,

“யய்யாடி, இங்க இருந்து தள்ளிவிட்டான்னா, எலும்பு துண்டு கூட மிஞ்சாதே. வான்டடா ஏழரைய இழுத்துருக்கியே ரஞ்சு” பல பாவங்களை காட்டிக்கொண்டிருந்தவளின் முகத்தில் வியர்வை பூக்கள் பூத்திருக்க, அவளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கிரிக்கு சிரிப்பை அடக்குவது பெரும்பாடாக இருந்தது.

“எதுக்கும் சமாதானக்கொடியை நம்மளே முதல்ல பறக்க விடுவோம்” அவசர முடிவெடுத்தவளாக, அவனை பார்த்து திரும்ப, அதுவரை அவளது செயல்களை ரசித்து கொண்டிருந்தவன், முறைத்துப்பார்க்க ஆரம்பித்தான்.

“ஹி..ஹி.. அது வந்து சார், நீங்க கோபப்பட்டிங்க, பதிலுக்கு நானும் கோபப்பட்டேன். கோபத்துக்கு கோபம் சரியாப்போச்சு, உங்களை தள்ளி விட்டுருக்க கூடாதுதான், எங்க ஃப்ளைட்ட விட்டுருவனோங்கற அவசரத்துல அப்படி பண்ணிட்டேன் சார். அதனால என்னை மன்னிச்சுடுங்க சார்” இப்பொழுது மட்டும் வார்த்தைக்கு வார்த்தை சார் போட்டு பேசுபவளை, பார்க்க மிகவும் வேடிக்கையாக இருந்தாலும், அதை காட்டிக்கொள்ளாதவன்,

“அதுக்காக இப்படி தள்ளி விடுவியா?? திரும்ப நான் உன்னை தள்ளிவிட எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்? முன்னபின்ன தெரியாதவங்ககிட்ட இப்படிதான் நடந்துப்பியா?” என்றவனின் வார்த்தைகள் நிதர்சனத்தை எடுத்துரைத்தது அவளுக்கு.

“அய்யோ!! அப்படி இவன் தள்ளி விட்டிருந்தா?” என்று நினைத்தவளுக்கு, கற்பனையும் விரிய, அக்காட்சியில் அவள் கீழே விழுந்து, அங்கிருந்த கம்பியில் சிக்கி அவளது சல்வாரும் கிழிந்திருந்தது.

“ஓ மை காட். நல்லவேளை சார் நீங்க என்ன தள்ளிவிடல!!! இல்லைன்னா நான் ஆசையா தச்ச இந்த போட்நெக் சுடி கிழிஞ்சு போயிருக்கும்” என்று வருத்தப்பட்டவளை பார்த்து அடக்கமாட்டாது சிரித்து விட்டான் அவன்.

“ஹப்பாடி சிரிச்சுட்டிங்க, அப்ப கோபம் போயிடுச்சா சார்?? ஆனால் என் சுடிய பத்தி சொன்னதும் ஏன் சிரிச்சிங்க??” என்று கேள்வி கேட்டவள்,

“ஹான்.. புரிஞ்சுடுச்சு, என்ன சார் பண்றது?? நயன்தாரா போட்டுருக்க மாதிரி தைக்க சொன்னா, அவன் நயனுக்கு  ஆன்ட்டி போடற மாதிரி தச்சு வச்சுருக்கான், அதுக்கு நான் சத்தம் போட்டப்ப கூட,  கரெக்டுதான்மா நீயும் ஆன்ட்டி மாதிரி தான் இருக்கன்னு சொல்லிட்டான் சார். விடுவேனா??பக்கத்துல அவன் வச்சிருந்த ஊசிய எடுத்து அவன் கைல குத்திட்டு ஓடி வந்துட்டேன்.இந்த கலவரத்துல தான் சார், ஃப்ளைட்டுக்கு வர தாமதாயிடுச்சு ” என்று தன்னிலை விளக்கத்தையும் , பதிலையும் அவளே சொல்லிக்கொண்டுமிருந்தாள்.

“ஹே..வெயிட் வெயிட். போதும் . என்னால சிரிக்க முடியலை, எல்லாரும் நம்மளதான் பார்க்குறாங்க, முதல்ல சீட்பெல்டை போடு”, என்றவன் தானும் போட்டுக்கொண்டான்.

“ஹ்ம்… போட்டுட்டேன் சார்” என்றவள் “மைசெல்ஃப் ரஞ்சனி” என்று கைநீட்ட,

“கிரி” பதிலுக்கு அவனும் கைகுலுக்கினான்.

“எங்க வேலை பார்க்குறிங்க?” கிரியின் கேள்விக்கு,

“டெக்னால (‘Technaa’) வேலைபார்க்குறேன் சார். சிஸ்டம் அனலிஸ்ட்.இப்போ கோவைக்கு டிரான்ஸ்ஃபர்” என்று பதிலளித்தாள்.

“ஹோ நானும் கோவைதான். இது என்னோட கார்ட். என்ன உதவி வேணுன்னாலும் கேளுங்க” என்றவன் தனது கார்ட்டை அளித்துவிட்டு, அமைதியாக கண்ணைமூடி அமர்ந்திருக்க, கார்டை பார்த்தவளுக்கு அதிர்ச்சி.

“கிரி வாசன். வாசன் குரூப் சேர்மேன்”  என்று போட்டிருக்க, ஸ்ரீனிகாவின் அம்மாவிற்கு அநியாயம் செய்த குடும்பத்தின் வாரிசு என்று தெரிந்ததும் ஆத்திரமாக வர, அவ்வளவு நேரம் இவனிடம் பேசிய தனது மடத்தனத்தை நொந்து கொண்டவளாக, அவளும் அமைதியாக கண்களை மூடிக்கொண்டாள்.

“மறந்தும் இனி இவன்கிட்ட பேசிடக்கூடாது ரஞ்சு” என்று தனக்குத்தானே எச்சரிக்கையும் செய்து கொண்டவள்,  கண்களை திறக்காது அமைதியாக இருக்கையில் சாய்ந்துகொண்டாள்.

இந்த முறை ராமுதாத்தாவிடம் உதவி கேட்காது, தானே டாக்ஸி புக் செய்து வெளியே கிளம்புவதற்கு தயாராக வாசலில் நின்றிருந்தாள் நிகா.மாலை நெருங்கும் வேளையிலும் வெயில் அன்று உரக்க அடித்துக் கொண்டிருந்தது.

அதிகம் காக்க வைக்காது ஒரு வாகனமும் உள்ளே வர, வந்தது சேனா. அவன் வண்டியை விட்டு இறக்கவும், அவள் பதிவு செய்த வாகனமும் பின்னோடே வந்து நின்றிருந்தது.

சேனா இறங்கியவன், பின்னால் வந்த வாகனத்தை பார்த்தவன்,

“வெளிய கிளம்பறிங்களா ஸ்ரீனிகா?? தொல்லை குடுக்குற மாதிரி வந்துட்டேனோ??” சங்கடத்துடன் அவளைப்பார்த்து கேட்க,

“ச்ச..ச்ச.. அதெல்லாம் இல்லை சார். கொஞ்சம் பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது. நேத்தும் போக முடியலை” என்றவளின் வார்த்தைகள் மதுரமாக அவனது காதுகளில் விழுந்தது.

“ஹனி.. அப்போ நேத்து அவன்கூட நீ போகலையா?? இப்போவே உனக்கு ஏதாவது வாங்கிக்கொடுக்கனும் போல இருக்கே?” மனதிற்குள் நினைத்தவன்,

“ஓ.. அப்ப எனக்கும் கொஞ்சம் பொருட்கள் வாங்க வேண்டியிருக்கு. நானும் உங்ககூட வரலாமா?” அவளிடம் அனுமதி வேண்டி நிற்க, ஸ்ரீனிகாவிற்கு அவனது அனுமதி விகற்பமாக படாததால் ‘சரி’ என்று தலையசைத்தாள்.

“அப்ப டாக்ஸிய திருப்பி அனுப்பிடவா ஸ்ரீனிகா??” என்றுவிட்டு திரும்ப,

“இல்லை சார். நான் புக் செய்த டாக்ஸியிலேயே போகலாம். உங்க வண்டியை நீங்க இங்க நிப்பாட்டிக்கோங்க. திரும்பி போக உங்களுக்கு வசதியா இருக்கும்” அவளின் உத்தியை அப்படியே செயல்படுத்தியவன்,

“வாங்க போகலாம் ” என்று அவளுடனே கிளம்பிச் சென்றான்.

ஸ்ரீனிகா வழக்கம்போல் அமைதியாக வர, அவளுடன் ஒன்றாக பயணிக்கும் ஏகாந்தத்தை அனுபவித்தவனாக சேனாவும் அமைதியாகவே அமர்ந்திருந்தான்.

நாகரிக உடையை கூட மிக நேர்த்தியாக அவள் அணிந்திருந்த விதமும், அவள் உபயோகத்திருந்த வாசனைத்திரவியத்தின் மணமும் மனதை என்னவோ செய்ய, இதற்கு மேலும் அமைதியாக இருந்தால் தன்னைமீறி உள்ளக்காதலை வெளிப்படுத்தி, முளைவிட்டிருக்கும் நட்பிழையை கெடுத்துக்கொள்ள கூடாது என்று நினைத்தவனாக தானே அவளிடம் பேச ஆரம்பித்தான்.

“என்ன மிஸ்.ஸ்ரீனிகா இந்த ஊர் கிளைமேட் செட் ஆகுதா? இப்ப தங்கியிருக்கிற வீட்டில் உங்களுக்கு வசதி குறைவு ஏதுமில்லையே?  அப்படி ஏதும் பிரச்சனையா இருந்தா தயங்காம கேளுங்க சரி பண்ணிடலாம்” அவளது நலனில் அக்கறை காட்டி பேசினான்.

“கிளைமேட் எனக்கு பிரச்சனையில்லை சார். வீடும் இன்னும் கொஞ்சநாள்ள பழகிடும். இப்ப அவசரத்துக்கு கொஞ்சம் மாராமத்து பார்த்திருந்தாலும், மழை அதிகமா விழுந்தா, பின்கட்டு பகுதி தாங்குமான்னு எனக்கு சந்தேகமாக இருந்தது, அதை நான் வேலை பார்த்தவங்ககிட்ட கேட்கவும் செஞ்சேன், அதுக்கு அவங்க அதை இப்ப தொட்டா இன்னும் தண்ணீர் உள்ள இறங்கிடும், வெயில்காலத்துல தான் எடுத்து செய்யனும்னு சொன்னாங்க. மத்தபடி எல்லாம் ஓகேதான்” அவள் கூறிய விரிவான பதிலே அவ்வளவு மகிழ்ச்சியை தர, அதை முகத்தில் காட்டி கொள்ளாது,

“சரி பண்ணிடலாம் ஸ்ரீனிகா. மறுபடியும் அந்த ஆட்களை கூப்பிடட்டுமா?” என்று கேட்க,

“இல்லை வேண்டாம் சார். ஒரு ஆறுமாதத்துக்குதான? என்னால சமாளிக்க முடியும்” என்று மறுத்துவிட்டார்.

“ஆறு மாசம் நீ கஷ்டப்பட தேவையில்லை ஹனி. மூணு மாசத்துலயே உன்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவேன்” மனதில் நினைத்தவனுக்கு  தெரியவில்லை, இன்னும் ஒரு மாதத்திற்குள் அவள் திருமதி.நூவன் ஆகப்போவது.

“சா.‌சார்.. நீங்களா?? ” எப்பொழுதும் ஹர்ஷத் மேற்கொள்ளும் மேற்பார்வைக்கு இன்று நூவன் வந்திருக்க, ஆச்சரியமாக இருந்தது அந்த தளத்தில் அமைந்துள்ள கடையின் முதலாளிக்கு.

கோவை மாநகரின் மையத்தில் அமைந்துள்ள, அந்த வணிகவளாகம் நூவனுக்கு சொந்தமானது. குத்தகை முறையில் அங்கிருக்கும் கடைகள் அமைந்திருக்க, அதை மாதம் ஒருமுறை மேற்பார்வை பார்க்கும் பொறுப்பை ஹர்ஷத்திடம் விட்டிருந்தான்.

ஆனால் இன்று நிகா இங்கு வரும் தகவல் அவனுக்கு முன்பே தெரிவிக்கபட்டுவிட, அவளோடு செலவழிக்கப்போகும் நேரத்தை முன்பே திட்டமிட்டிருந்தவன், அவளுக்கு முன்பே இங்கு வந்திருந்தான்.

அனைத்து பொருட்களும் உள்ளடங்கிய சூப்பர்மார்க்கெட்டின் உரிமையாளர்தான் நூவனைக்கண்டு ஆச்சரியமடைந்தது. குத்தகை பத்திரத்தில் கையொப்பமிடும் போது பார்த்தது, அதன்பின்பு அவர் முயற்சி செய்தும், அவனைப்பார்க்க முடியவில்லை, ஆனால் என்ன தேவைக்காக செல்கிறோமோ, சம்பந்தப்பட்ட பணியை  ஆட்கள் வந்து செய்து கொடுத்து விடுவார்கள்.

“இன்னைக்கு கொஞ்சம் ஃப்ரீ டைம் கிடைச்சது, அதான் இன்னைக்கு நான் வந்துருக்கேன் சார்” வயதுக்கு மரியாதை கொடுத்து பேசும் நூவனின் மேல் இன்னும் மதிப்பு ஏறியது அந்த உரிமை‌யாளருக்கு.

“உட்காருங்க சார். வராதவர் வந்துருக்கிங்க, எங்களுக்காக நீங்க ஏதாவது சாப்பிட்டே ஆகனும்” என்று உபசரிக்க,

“பரவாயில்லை இருக்கட்டும் சார். இந்த கூல்ட்ரிங் மட்டும் எடுத்துக்கறேன், அப்படியே ஒரு ரவுண்டும் முடிச்சிடுவேன், மிட்ச எல்லாரையும் பார்க்கனுமில்லையா? இப்ப ரவுண்ட்ஸ் போலாமா??” என்று கேட்க,

“சார் கட்டடமே உங்களுடையது. தாராளமா பார்க்கலாம் சார். நானும் வரேன்” என்று அவரும் உடன் வர எத்தனிக்க,

“பரவாயில்லை நான் பார்த்துக்கிறேன். நீங்க கஸ்டமர்ஸ கவனிங்க” என்றவன் வேகநடையில் முன்னே சென்று, மேற்பார்வையை முடித்தவன், அடுத்த தளத்தில் நிகாவிற்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

“டேய் நூவா,என்னமோ உன்னை பார்த்த உடனே, ஓடி வந்து “நூவி டார்லிங்னு ” அவ கட்டிப்பிடிக்க போறமாதிரி வெயிட் பண்றியேடா, எப்படியும் நாலு கவுன்டரும், நல்லா முறைச்சுட்டும் கிளம்புவா. அதுக்காக வேலையெல்லாம் விட்டுட்டு வந்து இப்படி வெயிட் பண்றது உனக்கே ஓவரா இல்லை” மனசாட்சி கேலி செய்ய, எதையும் சட்டை செய்யாது காத்திருந்தான்.

வணிக வளாகமும் வந்துவிட, டாக்ஸியை வெயிட்டிங்கில் போட்டுவிட்டு, இருவரும் உள்ளே சென்றனர்.

நிகா சூப்பர்மார்க்கெட்டின் வழியை தேர்ந்தெடுத்தவள், “நான் அந்த சூப்பர் மார்க்கெட் போறேன். கொஞ்சம் சமையல்பொருள் வாங்கனும், நீங்க உங்களுக்கு தேவையானது பார்க்குறதுன்னா பாருங்க சார்” என்று கூற,

“ஓகே ஸ்ரீனிகா. நான் கீழ புக்ஸ்டோர் இருக்கு அங்க கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ணிட்டு இருக்கேன். நீங்க முடிஞ்சதும் கீழ தரைதளத்துல இருக்குற கார்டன் ஏரியாவுல வந்து வெயிட் பண்ணுங்க. அங்கேயே ஃபுட்கோர்ட் இருக்கு.  முடிஞ்சா டின்னரை அங்கேயே முடிச்சிட்டு கிளம்பிடலாம்” அவனது ஆலோசனையும் அவளுக்கு ஏற்புடையதாக இருக்க,

“ஓகே சார்” என்றவள், புன்னகை முகமாகவே விடைபெற்றாள்.

அவர்கள் இருவரும் பேசுவதும், பின்பு நிகா சிரித்துக்கொண்டே விடைபெறுவதும் நூவன் பார்த்துக்கொண்டு தான் நின்றிருந்தான்.

“என்னைப்பார்த்தா மட்டும் முறைச்சுத்தள்ளுடி. அந்த வாட்ச்மேனைப்பார்த்தா மட்டும், சிரிப்பு வருதோ?” மனதிற்குள் அர்ச்சனை நடத்திக் கொண்டிருக்க, அதற்குள் சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்திருந்தாள் அவள்.

தேவையானதை வாங்கிக்கொண்டு அவள் வெளியே வரும் வரை காத்திருந்தவன், அவள் தரைதளத்தை நோக்கி செல்வதை பார்த்தவன்,

“ஓ மேடம் கார்டனிங் ஏரியாக்கு போறிங்களா? இதோ வர்றேன்” அவளுக்கு முன்பே அங்கு சென்றுவிட்டான்.

சிறிது நேரத்தில் நிகாவும் அங்கு வந்தவள், கையில் இருந்த பொருட்களை வைத்துவிட்டு, அங்கு போடப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்க, அவளருகே சத்தமில்லாமல் வந்தமர்ந்தான்.

“என்ன நிகாபேபி, மாமா உதவி இல்லாமலேயே ஷாப்பிங் வேலையெல்லாம் முடிச்சிட்ட போல?” தனதருகே கேட்ட குரலில் அதிர்ந்து பார்க்க, அவனது வழக்கமாக அவளைப் பார்த்து கண்ணடித்தான் நூவன்.  அதில் கோபமுற்றவள், அவனிடம் பதில் ஏதும் பேசாது முகத்தை திருப்பிக் கொண்டாள். ஆனால் இதையெல்லாம் சட்டைசெய்தால் நூவனில்லையே,

” எங்க உன் பின்னாடியே சுத்திட்டுருக்கிற வாட்ச்மேன காணோம்??” நூவனின் கிண்டலில் முறைத்துப்பார்த்தாள் அவள்.

“வாட்ச்மேன் இல்லை வக்கீல்” கடுப்புடனே பதிலளித்தாள்.

“அவனைத்தான் கேட்டேன்” கேலி நகையுடனே அவள் முகத்தை பார்க்க,

“இன்னொரு வாட்ச்மேன் வந்துட்டதால அவர் போயிட்டார்” என்றவளின் பதிலில்,

“அது யாருடா இன்னொருத்தன்?” என்று யோசிக்க ஆரம்பித்தான்.

“என்ன யாருன்னு தெரியலையா?” அவளின் கேள்விக்கு பதில் பேசாது அவளது முகத்தைப்பார்த்து கொண்டு நின்றிருந்தான் என்ஜே. ஆனால் அவன் எதிர்பார்த்த எந்த பாவனையும் அவளது முகம் பிரதிபலிக்கவில்லை.

“நீதான் அது” சட்டென அவளது பேச்சு ஒருமைக்கு தாவியிருந்தது.

அவளது பதிலில் கோபப்படாமல், மீண்டும் ஒரு ஆழ்ந்தபார்வையை அவளை பார்த்து வைத்தான் என்ஜே. அவனது பார்வை வட்டத்தில் அவளது முகத்தை வேறுபுறமாக திருப்பி கொள்ள,

“பதில் நல்லாத்தான் இருக்கு. ஆனால் மரியாதைதான் கொடுக்க தெரியலை” மீண்டும் பேச்சை அவனே ஆரம்பித்து வைத்தான். அவளும் அதைத்தான் யோசித்துக்கொண்டிருந்தாள், இவனிடம் மட்டும் தனது கட்டுப்பாடு தளர்ந்து போவதை.

“தேவையில்லாம பொண்ணு பின்னாடி சுத்தறவங்களுக்கல்லாம் மரியாதை கொடுக்க முடியாது” தன்னைக்கட்டுப்படுத்தி கொள்ள முடியாத இயலாமையில் பதில் சற்று சூடாகவே கொடுத்தாள்.

“நான் தேவையோடதான் சுத்துறேன். அதுவும் ஒரே ஒருத்தி பின்னாடிதான்” மென்மையான குரலில் அவளது காதுருகே வந்து பேச,

“அறிவில்லை உனக்கு. இப்ப எதுக்கு என் பக்கத்துல வந்த நீ??”  அவனைப்பிடித்து தள்ளி விட்டவள், தானும் தள்ளி எழுந்து  நின்று கொண்டாள்.

“நீ ரொம்ப திமிரா பேசற நிகா?” அவளின் நிராகரிப்பில் ஏற்பட்ட கோபம் அவளிடமே திரும்பியது.

“நீ செஞ்ச  தப்பைச்சொன்னா நான் திமிரா பேசறேன்னு அர்த்தமா?? வரம்பு மீறினது நீதான் நானில்லை?எதுக்கு என் பின்னாடியே சுத்துற?? நீ என்னை காதலிக்கிறியா என்ன??” அவளின் கொதிப்பில், அவனது கோபம் மட்டுப்பட்டது.

உள்ளத்தில் ஏற்பட்ட உவகையை மறைத்தவன்,

“நான் எதுக்குடி உன்னை காதலிக்கனும்??(காதலா ?? கல்யாணமே பண்ண தயாரா இருக்கேன் நிகா பேபி… அவனது மனசாட்சி ஒரு ஓரத்தில் ஜொள்ளியது)” அவனது உரிமை பேச்சில் அவளது கோபம் மேலும் ஏற,

“டி போட்டு பேசின, பல்லை உடைச்சு கைல கொடுத்துருவேன்டா” உடைத்து கையில் கொடுக்கும் வேகம் அவளிடம்.

“நீ உடைச்சு கைல குடுக்கற வரைக்கும் நான் காட்டிக்கிட்டு இருக்க , என்னை என்ன உன் புருஷன்னு நினைச்சியா??” அவனது பேச்சில் அதிர்ச்சியானவளாக ஸ்தம்பித்து நின்றாள் ஸ்ரீனிகா.

“உரிமை இருக்குற இடத்துல தான் கோபப்பட முடியும் நிகா. நல்லா யோசி” என்றவன், அருகில் அமைந்திருந்த கார் பார்க்கிங் ஏரியாவை நோக்கி கைகாண்பிக்க, அவனது காரை எடுத்துக்கொண்டு வந்தவனிடம் சாவியை வாங்கிக்கொண்டவன், அதிர்வுடன் நின்றவளை பார்த்து,

“அப்படி நினைச்சாலும் தப்பில்லை. அதை இந்த மாமன் உடனே நிறைவேத்திடறேன் நிகாபேபி” அவளது கன்னத்தில் தட்டிவிட்டு காரில் ஏரி சென்றுவிட்டான்.

சேனா திரும்பி வந்தவன் பார்க்கும்போது, முதலில் இருந்த நிகாவின் முகம் சோர்வாக தெரிய,

“சாரி மிஸ்.ஸ்ரீனிகா. ஒரு முக்கியமான ஃபோன் கால் வந்துடுச்சு. பேசிட்டிருந்ததுல அதிக நேரமாயிடுச்சு. அதிக நேரம் உங்களை காக்க வச்சுட்டனா?? முகம் ரொம்ப சோர்வாக தெரியுதே??” என்று கேட்டான்.

தன்னை முயன்று சமாளித்தவள்,”இல்லை சார். பட் சாப்பிடற மூடில்லை. பார்சல் வாங்கிட்டு வீட்டுக்கு கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு போனா நல்லாருக்கும்” என்றவளின் பதிலில் குழம்பினான் சேனா.

விமானம் தரையிரங்கியதும், இருள் சூழ ஆரம்பித்த நேரமாகிவிட்டதால், ரஞ்சனியையும் தன்னுடன் அழைத்துச்சென்று அவள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி விடலாம் என்று முடிவெடுத்தவனாக, லக்கேஜை பெற்றுக்கொண்டவன், அவளிடம் பேச திரும்ப, அவனுக்கு முன்பே வேகமாக வாயிலை நோக்கி சென்று கொண்டிருந்தாள் ரஞ்சனி.

“மிஸ்.ரஞ்சனி ” என்று அவன் உரக்க அழைக்க, ஒருநிமிடம் நின்றவள், நடந்து சென்றுவிட்டாள்.

“என்ன ஆச்சு இவளுக்கு? வரும்போது அவ்வளவு வளவளன்னு பேசிட்டு வந்தா?இப்ப கண்டுக்காம போறாளே?” யோசனையில் நின்றிருந்தான் கிரி.

பிடிவாதம் தடைபோட்டாலும் வேலி தாண்ட துடிக்கறதடா காதல் உள்ளம்……

திமிராகும்……

அத்தியாயம்-11:

டாக்ஸியில் பயணித்துக்கொண்டிருந்த ரஞ்சுவின் மனம் ஒரு நிலையில் இல்லாது தவித்துக் கொண்டிருந்தது. ஒரு குடும்பத்தையே ஒன்றுமில்லாது செய்துவிட்ட கிரியின் குடும்பத்தை பற்றி தெரிந்தும் , இருக்குமிடம் கருதி அவனை ஒன்றும் திட்டாமல் வந்தது அவளுக்கு மனதில் பெரும் பாரம் ஏறியதைப்போல இருக்க, புறப்பட்டு வரும்போது இருந்த சந்தோஷம் இப்பொழுது எங்கோ காணாமல் போயிருந்தது.

“ச்ச, நல்லா நாலு வார்த்தை நாக்கை பிடுங்கிக்கற மாதிரி கேக்காம வந்துட்டனே?? அம்மா  அப்பா இல்லாம, அக்கா எவ்வளவு கஷ்டப்பட்டாங்க?” தன்னையுமறியாது கண்ணில் நீர் துளிர்க்க, வண்டி ஓட்டுபவர் தன்னை கவனிப்பதை பார்த்துவிட்டு கண்களை துடைத்துக் கொண்டாள்.

ஒருவழியாக சேரும் இடத்தை அடைந்ததும், வண்டியிலிருந்து இறங்கியவளின் கண்களில் பட்டது, வீட்டு வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்த ஸ்ரீனிகாவும் சேனாவும் தான்.

“ஹை… சேனா அண்ணா” என்றவள் வண்டியிலிருந்து குதித்து இறங்கி ஓடிவர, அவளைக்கண்ட இருவரின் முகத்திலும் புன்னகை விரிந்தது.

“ஹே ரஞ்சு… ” நிகாவும் அவளை வந்து அணைத்துக்கொள்ள,

“நீ வரேன்னு சொல்லவேயில்லை வாலு” சேனாவும் அவளது வரவில் மகிழ்ச்சி தெரிவித்தான்.

“நீங்க வரேன்னு கூடத்தான் என்கிட்ட சொல்லல சேனாண்ணா” அவனுக்கு பதில் கொடுத்தவள்,

“அக்கா வெஜ்ரைஸ் வாடை வருதே… ம்ம்” என்று மோப்பம் பிடிக்க,

“போன ஜென்மத்துல நாய்க்குட்டியா பொறந்துருப்படி, வா உள்ளே போகலாம். வாங்க சேனா சார், ரொம்ப டைம் ஆகிடுச்சு, நீங்களும் சாப்பிட்டு கிளம்பனுல்ல” என்றவளின் பேச்சிலேயே வயிறு நிறைந்தது போலானது சேனாவிற்கு. அதை அவன் முகமும் பிரிதிபலிக்க, நிகா உள்ளே சென்றிருந்தாள்.

“சேனா அண்ணாஆஆஆஆஆ…”ரஞ்சு அவனது காதில் கத்தவும் , சுயநினைவிற்கு வர,

“என்ன நின்னுகிட்டே கனவு காணறிங்களா? உள்ளவாங்க, அப்பறம் உங்களுக்கு ஒரு பருக்கை கூட இருக்காது. செம பசியில இருக்கேன்” என்றவள் அவனையும் அழைத்துக்கொண்டே உள்ளே சென்றாள்.

மூவரும்  பேசி சிரித்துக்கொண்டே உணவுண்டு முடிக்க, மூவருக்கும் முதலில் இருந்த மனநிலை மாறி, அவ்விடத்தில் சந்தோஷம் மீண்டிருந்தது. சேனாவும் விடைபெற்றுக்கிளம்ப,பெண்கள்   இருவரும் பேசிக்கொண்டே உள்ளே சென்றனர்.

நிகா படுக்கை விரிப்பை சரி செய்து கொண்டிருக்க, ரஞ்சு விமானநிலையத்தில் நடந்ததை பற்றி சுருக்கமாக எடுத்து கூறினாள்.

“எனக்கு அவனை எதுவும் கேட்காம வந்தது ஒருமாதிரி கஷ்டமா இருக்குக்கா??” என்று வருந்தினாள்.

“லூசாடி நீ. அங்க நீ என்ன பண்ணாலும், மித்தவங்களுக்கு அது வேடிக்கையாகியிருக்கும். அதுமில்லாம, முடிஞ்சுபோன விஷயத்தை ஏன் பேசனும் நினைக்கிற? அவங்கள விட்டு தள்ளி இருக்கும்போது, எதுக்கு வலிய போய் சண்டை போடனும்? மித்த மூணாவது மனுஷங்க மாதிரிதான் அவங்களும். இனி இந்த மாதிரி பேசி வீணா வம்பிழுத்து வைக்காத ரஞ்சு. ஆறுமாசத்தை முடிச்சிட்டு கிளம்பும்போது நமக்கும் இந்த ஊருக்கும் எந்த சம்பந்தமும் இருக்க போறதில்லை. அதனால இதெல்லாம் தேவையில்லாத வீண் வேலை. ஏற்கனவே சொந்தக்காரன்னு சொல்லிட்டு ஒருத்தன் இம்சை குடுத்துட்டுருக்கான்” என்றவள் படுக்கையில் அமர்ந்து கொண்டாள்.

“இம்சை கொடுக்கறாங்காளா?? இந்த ஊர்ல நம்மள யாருக்குமே தெரியாதேக்கா?? என்னக்கா சொல்றிங்க?? யாரது??” ரஞ்சனி முகத்தில் ஆச்சரியத்தின் ரேகைகள்.

“என்ஜேபி தான் அந்த இம்சைப்புடிச்சவன். மாமன்னு நொடிக்கொரு தடவை சொல்லி என் உயிரை வாங்குறான்டி. என்னோட பாதுகாப்புக்கு ராமுதாத்தா, ஆனந்தி இவங்க ரெண்டு பேரையும் வேலைக்கு வச்சதும் அவன்தான்” கடைசி வரியை சொல்லும் போது குரலில் இருக்கும் எரிச்சல் அவளது முகத்தில் இல்லாததை கவனித்தாள் ரஞ்சு.

“என்.ஜே.பி.  ஜேபி குரூப் ஓனர் உங்க மாமாவா?” வியப்புடன் கேட்டாள் அவள்.

“பிரச்சனை குடுத்தா இவங்கதான் குடுப்பாங்கன்னு சேனா சார் சொன்னதை உங்கிட்ட சொன்னனே மறந்துட்டியா மக்கு?”

“ம்ம். இப்ப ஞாபகம் வந்துருச்சு. அவர் எதுக்குக்கா உங்களுக்கு தொந்தரவு குடுக்கனும்?  என்ன காரணம்னு தெரிஞ்சுகிட்டிங்களா?” விஷயத்தை அறிந்துகொண்டால் தான் சமாளிக்க முடியும் என்று தோன்றியது ரஞ்சுவிற்கு.

“ப்ச்.. தெரியலை ரஞ்சு” என்றவள், ஆற்றங்கரையில் ஆரம்பித்து நேற்று வணிகவளாகத்தில் நடந்த விஷயம் வரை அவளிடம் விலாவாரியாக சொல்லி முடித்தாள் நிகா.

“ஏன்க்கா நீங்க என்கிட்ட முதல்லயே சொல்லலை?? நான் உடனே கிளம்பி வந்துருப்பேன்ல?? தனியா இருந்ததால் தான உங்ககிட்ட இப்படி நடந்துருக்காரு?” ஆச்சரியத்தையும் ஆதங்கத்தையும் ஒருங்கே வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.

“நானே சமாளிச்சுடலாம்னு நினைச்சதால உன்கிட்ட சொல்லல ரஞ்சு. விடு பார்த்துக்கலாம்” மனதில் இருந்ததை கொட்டிவிட்டதால் மனம் இலகுவாக படுக்கையில் நன்றாக சாய்ந்து கொண்டாள் நிகா.

ரஞ்சனி தானும் சாய்ந்து கொண்டவள் மெதுவாக அவளிடம்” ஆனால் நீங்க சொன்னதை வச்சு பார்த்தா, அவர் உங்களை விடறவர் மாதிரி தெரியலைக்கா” இரவுநேர நிசப்தத்தில் அவளது வார்த்தைகள் எதிரொலிக்க, சட்டென எழுந்தமர்ந்தாள் நிகா.

அவள் அப்படி எழுந்ததும் “என்னாச்சுக்கா? உடம்புக்கு ஒன்னுமில்லையே? நான் எதுவும் தப்பா சொல்லிட்டனா? அதுக்குள்ள முகமெல்லாம் இப்படி வேர்த்துடுச்சே?” பதற்றமுற்றாள் ரஞ்சு.

“ப்ச்… ரஞ்சு எதுவுமில்லை. நான் நல்லாருக்கேன். எதிர்பாராத விஷயங்கள் நடக்கறதுதான் வாழ்க்கை. நீ படு. நாளைக்கு நாம அலுவலகத்துக்கு போய் ஜாயினிங் லெட்டர் கொடுக்கனும்.நான் கொஞ்சம் வெளிய காற்றாட நின்னுட்டு வரேன்” என்றவள் எழுந்து சென்றுவிட்டாள்.

அவள் செல்வதை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தவள்” நான்கூட நினைச்சேன் சேனா தான் எனக்கு மாமாவா வரப்போறாருன்னு, ஆனா எதிர்பாராத விதமாக உங்க சொந்தமாமா தான் மாமாவா வரப்போறாரு போலயேக்கா?? உங்க சொந்தபந்தங்களோட நீங்க வாழனும்னு நான் ஆசைப்பட்ட மாதிரியே நடக்கப்போகுது போலயே. முதல்ல நாளைக்கு காலைல  எழுந்ததும் என்ஜே எப்படி இருப்பார்னு பார்க்கனும்” என்றவள் மகிழ்ச்சியுடனே உறங்கிப்போனாள். நிகாவும் சிறிதுநேரம் உலாவியவள், யாரை மறக்க நினைத்து நடந்தாளோ, அவனது வார்த்தைகளே மீண்டும் மீண்டும் காதுகளில் ரீங்காரமிட,

“ம்ஹூம்… இது வேலைக்காகாது” என்று நினைத்தவள்  உள்ளே வந்து ரஞ்சுவின் அருகில் படுத்து, தூங்க முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டாள்.

இவ்வளவு காலையிலேயே தன்னை காண அனுமதி வாங்கியிருக்கும் ஆடிட்டரை நினைத்து யோசனையாக இருந்தது நூவனுக்கு. அலுவலகத்தில் நுழைந்ததும் அவனுடைய உதவியாளர் கூறிய வேலைகளில் , முதல் சந்திப்பு அனுமதி வேண்டி ஆடிட்டர் பதிவு செய்திருந்தார்.

வந்து அவனது அறையில் அமர்ந்திருந்தவன், அவரை உள்ளே அனுமதிக்க சொல்லி உத்தரவு கொடுத்தான்.

“குட்மார்னிங் என்ஜே” வணக்கத்துடன் உள்ளே நுழைந்தவருக்கு,

“மார்னிங்” பதில் வணக்கத்துடன் வரவேற்றான்.

“என்னாச்சு ஆடிட்டர் சார்? இவ்வளவு காலையிலேயே பார்க்க வந்துருக்கிங்க? உங்களுக்கு ஏதும் உதவி தேவைப்படுதா இல்லை ஏதும் எமர்ஜென்சியா?”  என்று கேட்டான்‌.

“ச்ச… ச்ச அப்படியெல்லாம் இல்லை சார். உங்க தயவில் நான் ரொம்ப நல்லாவே இருக்கேன். இப்ப நான் வந்தது நம்ம கம்பெனி விஷயத்தை பத்தி பேச?” என்று பதிலுரைத்தார் அவர்.

“ம்ம்.. சொல்லுங்க” இந்த ஒற்றை வார்த்தை அவருக்கு போதுமானதாக இருக்க,

“சார் நீங்க கட்டப்போற பெரிய தொழிற்சாலைக்காக, நாம ஒரு இத்தாலியன் இஞ்சினியர்ஸ் குழுவ ஏற்பாடும் செய்திருந்தோமில்லையா அதுல சில சிக்கல்கள் வந்துருக்கு” ஒருவாறு விஷயத்தை அவர் சொல்ல ஆரம்பிக்க,

“ஹ்ம்.. அதுல என்ன சிக்கல்? நாமதான் ஒருமாதத்துக்கு தேவையான அட்வான்ஸ் குடுத்துதான அவங்கள ஒப்பந்தம் பண்ணியிருக்கோம்”

“அவங்க இங்க இந்திய பொருளாதார நிலைமைகளை கவனிச்சுகிட்டு தான் இருக்காங்க. பணவீக்கம் இங்க அதிகமாகிட்டே இருக்குறதால , அவங்க அங்க இருந்து இறக்குமதி செய்யப்போற பொருட்களோடு விலை மும்மடங்கா கொடுக்க வேண்டியிருக்குமோன்னு யோசிக்கிறாங்க?” என்று கூற,

“பொருளாதார சீர்குலைவு நம்ம கைல இல்லை ஆடிட்டர் சார். ஒருவேளை அவங்க அப்படி அதிகமா செலவாகுன்னு கவலைப்பட்டா, அதுக்குரிய மாற்று ஏற்பாட்டையும் நான் செஞ்சு வச்சுருக்கேன். இதைப்பத்தி அவங்க இனி கவலைப்பட தேவையில்லை?? வேற என்ன பிரச்சனை?” இதுதான் நூவன், அவனுக்கு தெரியும் பிரச்சனையின் மூலம் இதுவல்ல வேறு, அதை சொல்ல ஆடிட்டர் தயங்குகிறார் என்று.

“அது வந்து சார்…” ஆடிட்டர் தயங்க,

“தயங்காம சொல்லுங்க”மிக நிதானமாக வந்த அவனது வார்த்தையில் அவருக்கு வியர்க்க ஆரம்பித்தது.

“நிலமே உங்களுக்கு சொந்தமாகப்போறதில்லைன்னும், உங்க அத்தை அதை உங்களுக்கு கொடுக்க போறதில்லைங்கற தகவலும் அவங்களுக்கு போயிருக்கு சார். அதான் இப்ப பிரச்சனை சார்?” ஒருவாறு சொல்லி விட்டார்.

“சொன்னது யாருன்னு தகவல் தெரிஞ்சதா?”

“… ” அவர் அமைதியாக அமர்ந்திருக்க,

“பதில் சொல்லுங்க” கட்டளைத்தொனியில் ஒலித்த குரலுக்கு பதில் பேசாது இருக்கமுடியாது என்பதை உணர்ந்தவராக,

“சே..சேனா சார்” சொல்லி முடிப்பதற்குள் மூச்சு வாங்கியது அவருக்கு.

“ஓ… “என்று மட்டுமே சொன்னவன், தனது இருக்கையில் இருந்து எழுந்து,

“ஒரு ஐந்து நிமிடம் உட்கார்ந்துருங்க சார். இதோ வரேன்” என்றவன் , அவனது அறையை ஒட்டிய மற்றொரு சிறிய அறைக்குச்சென்றான்.

ஐந்து நிமிடங்களிலேயே திரும்பியவன், கையில் ஒரு ஃபைலோடு வந்தான்.

“இதை பிரிச்சு படிச்சு பாருங்க” என்றவன் , கோப்பை அவரது கையில் கொடுத்தான்.

அதை நிதானமாக படித்து பார்த்தவர்,

“சார் ரொம்ப பர்ஃபெக்டா இருக்கு. அப்ப இவங்கதான்” ஆர்வக்கோளாறில் கேட்டுவிட்டு நாக்கை கடிக்க,

“எஸ்‌. என் வருங்கால சகதர்மினி மிஸஸ்.ஸ்ரீனிகா என்ஜேபி” அவன் சொன்ன சேதியில் மகிழ்ந்தவர்,

“சார் இன்னும் ஒரு சந்தேகம்” என்று கேட்க,

“கேளுங்க… “

“இல்லை சொத்துக்காக இவங்களை கல்யாணம் பண்ணிப் போறிங்களா?? ” அவர் கேட்ட கேள்வியில் ஒருநிமிடம் அவ்வளவு நிசப்தாமாக இருந்தது அந்த அறை.

“நிச்சயமா இல்லை. என் வாழ்க்கையே இவதான். அவளா சொத்தான்னு வந்தா , நிச்சயம் நான் என் நிகாபேபி தான் வேணுன்னு சொல்வேன். ஆனால் என் காதலி, என் சரிபாதி என்னைப்புரிஞ்சுக்குவாங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு. நாம குறிப்பிட்ட நேரத்துலயே வேலையை என் பொண்டாட்டியே ஆரம்பிச்சு வைப்பா” அவனது பேச்சில் மிகுந்த மகிழ்ச்சியாக உணர்ந்தார் ஆடிட்டர்.

நூவன் அவரிடம் ஒப்படைத்த கோப்பில் இருந்தது, சட்டப்படி நிகாவிற்கு தந்தை வழியிலிருந்து ஒப்படைக்கப்போகும் நிலத்தின் ஒரு பங்கில் அவள் பெயரிலேயே அமையப் போகும், அவனது கனவு தொழிற்சாலைக்கான ஒப்பந்தப்பத்திரமும், வரைபடத்திற்கான பதிவுமாகும்.

மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தவரிடம் இன்னொரு கோப்பையும் நீட்டினான் நூவன்‌.

அதில் ஒருவேளை நிகா இதற்கு மறுத்துவிட்டாலோ அல்லது அவள் வேறு ஏதும் திட்டங்கள் அவள் நினைத்திருந்தாலோ செயல்படுத்துவதற்கான மாற்று இடமும், வரைபடமும் முறையாக திட்டமிடப்பட்டு இருக்க, அதைப்பார்த்து வியந்து போனார்.

“சார் மேடம் ரொம்ப கொடுத்து வச்சவங்க” அதை மனதார பாராட்டவும் செய்தார்.

“நான்தான் கொடுத்து வச்சவன். அதை நீங்க கண்ணால பார்ப்பிங்க. இப்போ சந்தேகமெல்லாம் தீர்ந்ததா??” என்று கேட்க,

“தீர்ந்தது சார். இனி நான் பார்த்துக்குவேன்” என்றவர் விடைபெற எழுந்து நிற்க,

“ஆடிட்டர் சார், எப்படி நீங்க நம்ம கம்பெனியோட ரகசிய நிதி ஆலோசகர்ங்கறது யாருக்கும் தெரியாம இந்த இருபத்தைந்து வருஷமா பாதுகாத்துட்டு வர்றிங்களோ , அதைப்போல இப்போ பகிர்ந்துகிட்ட விஷயங்களும் பாதுகாக்கப்படனும். சமயம் வரும்போது நானே இதை அறிவிச்சுடுவேன்” என்ற வேண்டுகோளுடன் விடைகொடுத்தான்.

“நிச்சயமா சார். கண்டிப்பா காப்பாத்துவேன்” என்று வாக்களித்து விட்டு விடைபெற்றார்.

சற்று ஆசுவாச மூச்சு விட்டு அமர்ந்தவன்,” நீ என்ன புரிஞ்சுப்பியா நிகாபேபி” தனது மொபைல் டிபியில் சிரித்துக்கொண்டிருந்தவளை பார்த்துக்கேட்க, அழகாக சிரித்துக்கொண்டிருக்கும் அவளை உடனே அடையும் வேகம் இருமடங்கானது நூவனுக்கு.

காலை வேளையில் மிகவும் பரபரப்புடன் கிளம்பிக்கொண்டிருந்தனர் நிகாவும், ரஞ்சனியும். இன்று அவர்கள் இங்கிருக்கும் அலுவலகத்தில் நேரத்திற்கு சென்று சேர வேண்டும்.

முதல் நாள் மாலை, வர தாமதமாகும் என்று நிகா சொல்லியிருந்ததால், ஆனந்தியும் ராமுதாத்தாவும் அவர்கள் வீட்டிலேயே தங்கி விட்டனர்.

அதிகாலையில் எப்பொழுதும் போல் பாலை வாங்கிக்கொண்டு ஆனந்தி உள்ளே வந்தவள், காஃபி போட்டு எடுத்துக்கொண்டு நிகாவின் அறைக்கு சென்றாள்.

நிகாவென்று நினைத்து போர்வையை இழுக்க, தூக்கம் கலைந்து விழித்து எழுந்தாள் ரஞ்சனி.

“அடடே இந்த அக்கா யாருன்னு தெரியலயே? தெரியாம போர்வைய இழுத்துட்டனே திட்டுவாங்களோ”என்று விழித்து பார்த்துக்கொண்டிருந்தாள் ஆனந்தி. பாவாடை சட்டை போட்டுக்கொண்டு தன்னையே வைத்த கண் வாங்காது பார்த்துக்கொண்டிருந்தவளை பார்த்து சிரிப்பு வர, சிரித்துவிட்டாள் ரஞ்சு.

“ஹே பாப்பா ?? என்ன இப்படி பார்த்துட்டிருக்க?? நீதானே ஆனந்தி??” என்று கேட்க, சிநேகமாக பேசியவளிடம் பயம் அகன்றது ஆனந்திக்கு‌.

“ஆமாக்கா. நான் நிகாக்கான்னு நினைச்சு போர்வைய இழுத்துட்டேன். மன்னிச்சுடுங்கக்கா” என்றவள் காஃபியை அருகில் இருந்த மேஜைமீது வைக்க, அவளது அடர்ந்த கூந்தல் அவளது பின்னங்காலில் இடித்து விலகியது.

“வாவ்.எவ்வவளவு அழகான முடி” என்று வாயைப் பிளந்தவள், அவளது முடியை தொட்டும் பார்த்து விட்டு,

“டீ பாப்பு முடிக்குன்னு ஏதும் காம்ப்ளான் ஆயில் தடவறியா?? இவ்வளவு நீளமா வளர்த்துருக்க?? “அதிசயித்து கேட்க, அவளது கேள்வியில் அடக்கமாட்டாது சிரித்தாள் ஆனந்தி.

குளித்து முடித்த நிகா, குளியலறையில் இருந்து வெளியே வர, சிரித்துக் கொண்டிருந்தாள்  ஆனந்தி.

“காலங்கார்த்தாலயே ஆரம்பிச்சுட்டாளா??? உங்க ரெண்டு பேருக்கும் அறிமுகமே தேவையில்லை” என்றவள் தலையை துவட்டிக்கொண்டு அவர்களோடு அமர்ந்தாள்.

ஆனந்தி நிகாவின் அருகே வந்தவள், ” அக்கா எனக்கு இந்த அக்காவ ரொம்ப பிடிச்சு இருக்கு” சந்தோஷத்துடன் கூற,

“எனக்கும் உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு காம்ப்ளான் ஹேய்” அவளை தோளோடு அணைத்துக்கொண்டாள் ரஞ்சனி.

“சரி சரி.. விட்டா ரெண்டு பேரும் பேசிக்கிட்டே இருப்பிங்க. இன்னைக்கு சீக்கிரமா போகனும். ஆனந்திம்மா இன்னைக்கு சமையல் நீயே பண்ணுடா. நாளைலருந்து நான் உதவி பண்றேன். மதியத்துக்கு எதுவும் வேண்டாம். நாங்க சீக்கிரம் கிளம்பிடுவோம். வீடு திரும்பவும் லேட்டாகும். நீ காலைல வேலை முடிச்சிட்டு தாத்தாவோட போய் இருந்துக்கோ சரியா?”  என்றவள் முடியை காய வைத்துக்கொண்டே தேவையான பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பிக்க, அதன்பிறகு கிளம்பவே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது.

டாக்ஸி புக் செய்து அவர்கள் அடைய வேண்டிய இடத்தை அரைமணிநேரம் முன்னதாகவே அடைந்தவர்கள் எம்.டியை பார்ப்பதற்காக அமர வைக்கப்பட்டிருந்தார்கள்.

பத்து நிமிடங்கள் கடந்து உள்ளே சென்றவர்களை , முறையாக வரவேற்றார் நடுத்தர வயதுள்ள கோவை ‘டெக்னா’ வின் எம்.டி.

“வெல்கம் டூ கோவை … கேர்ள்ஸ்” என்று புன்னகைத்தவர்,

“நீங்க ரெண்டு பேரும் வெரிகுட் வொர்க்கர்ஸ்னு உங்க மேடம் நேத்துகூட என்கிட்ட பேசினாங்க. என்கிட்டயும் நீங்க அந்த பேரை வாங்கனும் சரியா?” என்றவருக்கு, இருவரும் ஒருங்கே தலையாட்டினர்.

“நீங்க இப்ப வொர்க் பண்ணபோறது பெரிய புராஜெக்ட்ல லேடீஸ். நீங்க ரெண்டு பேரும் அனலிஸ்ட்ங்கறதால குவாலிட்டி டெஸ்டிங்கும் நீங்கதான் பண்ணப்போறிங்க. டிசைனிங் வொர்க்கும் சேர்த்து பண்ண வேண்டியிருக்கும். அண்ட் இந்த புராஜெக்ட நாங்க ஜே.பி சாஃப்ட்வேர் சல்யூஷன்ஸோட சேர்ந்து எடுத்துருக்கோம். நம்ம பார்ட் வொர்க் இங்க போயிட்டிருக்கு. அதனால நம்ம கம்பெனி சார்பா இரண்டு மாசம் நீங்க வேலை பார்க்க போறது ஜே.பி சல்யூசன்ஸ்லதான். மிஸ்டர்.நூவன் கிட்ட நான் எல்லாம் பேசிட்டேன். உங்களுக்காக அவங்க ஆஃபிஸ் வண்டியும் அனுப்பிட்டாரு. நீங்க அங்க வொர்க் முடிச்சிட்டு டெய்லி எனக்கு ரிப்போர்ட் மெயில் பண்ணா போதும்.  விஷ் யூ ஆல் தி வெரி பெஸ்ட். இப்போ நீங்க கிளம்பலாம். உங்களுக்காக வண்டி காத்திட்டிருக்கு” என்றவர் அவர்களோடு எழுந்து வந்து வாயில் வரை விடை கொடுக்க, அதிரிச்சியுடன் இருவரும் வண்டியில் ஏறினர்.

நிகாவிற்கு நேற்று ரஞ்சனி சொன்ன  “நீங்க சொன்னதை வச்சு பார்த்தா, அவர் உங்களை விடறவர் மாதிரி தெரியலைக்கா” என்ற வார்த்தைகள் காதுகளில் எதிரொலித்தது.

ரஞ்சனியோ “அடடா மாம்ஸ் ரொம்ப அதிரடி போலவே. இருக்கு இன்னைக்கு தரமான எண்டெர்டெய்ன்மென்ட் இருக்குடி ரஞ்சு” மனதிற்குள் சிரித்தவள், முகத்தில் ஒருவித உணர்வையும் காட்டாது நிகாவின் கைகோர்த்து அமர்ந்திருந்தாள்.

ஜே.பி சல்யூஷன்ஸை அடைந்த பத்தாவது நிமிடத்திற்குள் எம்.டியின் அறையில் இருந்தனர் இருவரும்.

நூவனின் முன்னால் நின்றிருந்தவர்களின் ஆர்டர்களை வாங்கி கையெழுத்திட்டவன்,

“வெல்கம் ஹோம்” என்று நிகாவைப்பார்த்து கூற, நடப்பதை சுவாரசியமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் ரஞ்சனி.

உலகம் உறங்கினாலும் உனைச்சேரும் உயிர் விழித்திருக்கிறது உறங்கா உன் நினைவுகளால்……

திமிராகும்….

அத்தியாயம்-12:

“வெல்கம் ஹோம்” என்ற வார்த்தையில் கடுப்பானவள், அவளது வழக்காமாக அவனை முறைத்துப் பார்த்தாள்.

அவளது முறைப்பில் இன்னும் தளர்வாக இருக்கையில் தளர்ந்து அமர்ந்தவன், தங்களை சுவாரசியமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ரஞ்சனியைப்பார்த்து,

“நீங்க மிஸ்.ரஞ்சனி ரைட்?” என்று கேட்க,

“எஸ் சார்” என்று அவள் பதில் கூறினாள்.

“ரஞ்சனி இந்த அலுவலகம் வேலைபார்க்குற ஊழியர்களுக்கு சொந்தவீடு மாதிரி, எந்த வித அசௌகரியமும் இருக்காது. நிர்வாகத்துக்கு அவங்களோட நன்மையும், அவங்களுக்கு நிர்வாகத்துடைய நன்மையும் மேம்பட மாதிரி வேலைகள் நடக்கனும். அதனால முதன்முதலா இங்க வந்து சேர்கிற எல்லா ஊழியர்களுக்கும் “வெல்கம் ஹோம்” சொல்லி வரவேற்கிறது தான் வழக்கம்” ரஞ்சனியிடம் ஆரம்பித்து நிகாவிடம் முடிக்க,

“இது ரொம்ப நல்ல விஷயம் சார்” ரஞ்சனி மனதார பாராட்டினாள்.

நிகாவோ அதை கண்டு கொள்ளாது “சார் எங்க வொர்க் எங்க? எந்த டீம் லீட்க்கு உதவி பண்ணனும்?”வேலையைப் பற்றி பேசினாள்.

“முதல்ல உட்காரு நிகா. நீங்களும் உட்காருங்க ரஞ்சனி” என்றவன், தனது காரியதரிசியை அழைத்து ஏதோ பேச, அவனும் கைகளில் சில ஃபைல்களை எடுத்து வந்தான்.

“ஓகே வேற எதுவும் தேவைன்னா கூப்பிடறேன்” என்றவன் அவரை அனுப்பிவிட்டு, தனது மடிக்கணினியை உயிரிப்பித்து, இதுவரை நடந்த விஷயங்களையும், மேற்கொண்ட வேலைகளையும் விளக்கினான். கிட்டதட்ட காற்பங்கு வேலைதான் முடிந்திருந்தது.

“ஹ்ம்ம், இதுவரைக்கும் சரியா போய்கிட்டிருக்கு. ஆனால் எனக்கு என்னமோ இந்த டீம் வேலையில் கொஞ்சம் மந்தமா செயல்படுறாங்களோன்னு ஒரு சந்தேகம் இருக்கு? அவங்களை ஊக்கப்படுத்தி வேலையை முடிச்சு உங்க கைக்கு கொண்ட வர்றதையும் நீங்க ரெண்டு பேரும் சேர்த்து பார்க்க வேண்டியிருக்கும். மித்தபடி வொர்க்கர்ஸ் நல்ல வேலை பார்க்குறவங்க தான்.இதுல அவங்கள பத்தின விவரங்கள், ப்ரொஜெக்ட்டோட விவரங்களும் இருக்கு” என்றவன்,

“ரஞ்சனி இங்க இருந்து வெளியே போனிங்கன்னா, இமிடியேட் லெஃப்ட்ல தான் உங்க டீம் இருப்பாங்க, நீங்க முதல்ல அங்க போங்க. இன்னும் சில விவரங்கள் மிஸ்.ஸ்ரீனிகாகிட்ட கேட்க வேண்டியிருக்கு. அவங்க ஒரு அரைமணி நேரத்துல அங்க வந்துடுவாங்க” என்றவன் எழுந்து கொள்ள, ரஞ்சனி நிகாவைப்பாரத்து விழித்தவள், உதட்டோர சிரிப்பை அடக்கிக்கொண்டு, நிகாவைப்பார்த்து தலையசைத்தவள், நூவனிடமிருந்து விடைபெற்று வெளியே சென்றாள்.

அவள் கதவை திறந்து கொண்டு செல்லவும், மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்தவன், நிகாவையே வைத்தகண் வாங்காமல் பார்க்க, அவனது பார்வைக்கு சிக்காது, முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டாள். மீண்டும் அங்கு மௌனமே ஆட்சி செய்ய, அவன் பார்வை தன்னை துளைப்பதை தாங்கமாட்டாது,

“சார் என்னமோ பேசனும் சொன்னிங்க?” வேலையை ஞாபகப்படுத்தினாள்.

“பேசறதுக்கு நிறைய இருக்கு நிகாபேபி” என்று வம்பிழுக்க,

“ஆரம்பிச்சுட்டானா?” மானசீகமாக தலையில் கை வைத்தவள்,

“ஏன் இப்படி பண்றிங்க? உங்க யாரையுமே எனக்கு பிடிக்கலைன்னு சொல்லிட்டேன்ல. அப்பறமும் ஏன் என்னை தொந்தரவு பண்றிங்க?” அவனது கண்களை பார்த்து இந்த முறை அவளால் சொல்ல இயலவில்லை.

“யாரை வேணுன்னாலும் உனக்கு பிடிக்காம போகலாம். அதைப்பத்தி எனக்கு கவலையில்லை. ஆனால் என்னைப்பிடிக்கலைன்னு சொல்றபாரு அதான்டி வலிக்குது” என்று பேசியவனை நிமிர்ந்து பார்த்தவள், அவளது கண்கள் காட்டிய காதலில் ஸ்தம்பித்து விட்டாள்.

அவளின் வலப்புறம் வந்து அவள் அமர்ந்திருந்த சுழல் நாற்காலியை தன்புறம் திருப்பியவன்,

“சொல்லு உன் பின்னாடியே அலைஞ்சு திரிஞ்சு, பார்க் பீச்னு சுத்திட்டு, கேன்டில் லைட் டின்னர் வைச்சு, ரொமான்டிக் மியூசிக் போட்டு “ஐ லவ் யூ ” சொன்னா ஒத்துப்பியா?” என்று கேட்க, அவன் சொன்ன காட்சிகள் அனைத்தும் கற்பனையாய் விரிய, அந்நினைவிவிருந்து வெளிவர தலையை உலுக்கிக்கொண்டாள் அவள்.

“என்ன நிகாபேபி நினைச்சுப் பார்க்கவே நல்லாருக்குல்ல? அப்படியே செஞ்சுடுவோமா?” அவள் முகம் நோக்கி குனிந்து கண்ணில் எதிர்பார்ப்புடன் கேட்க, அவன் பார்வையின் அழுத்தத்தை தாளாது அவனை தள்ளிவிட்டவள் எழுந்து நின்று கொண்டாள்.

“இது என்ன வேலை பார்க்கற இடமா? இல்ல லவ்வர்ஸ் பார்க்கா? என்ன தைரியத்துல நீங்க என்கிட்ட இப்படி நடந்துக்குறிங்க மிஸ்டர். என்ஜே? ஒழுங்கா வேலையை மட்டும் பார்க்க விடுங்க. இல்லைன்னா நான் ரிசைன் பண்ணிட்டு போயிடுவேன்” என்று கொதித்து பேசியவள், கதவை திறக்க முற்பட, அது ரிமோட்டால் லாக் செய்யப்பட்டிருந்தது.

அவனை நிமிர்ந்து பார்க்க ” நான்தான் நிகாபேபி தப்பித்தவறி கூட யாரும் நம்மள தொந்தரவு பண்ணிட கூடாதுன்னு லாக் பண்ணேன்” அவளருகே வந்து நின்று கொண்டவன்,

“அப்பறம் என்ன சொன்ன? ஒழுங்கா வேலை பார்க்கனுமா. மகாராணி உத்தரவு, அதை நான் மீறமாட்டேன். ஆனால் இதே வார்த்தைகளை என் பொண்டாட்டியா உரிமையோட என்னை திட்டுனா இன்னும் கிக்கா இருக்கும் நிகாபேபி” என்றவனின் பேச்சில் பொறுமை பறக்க, அவனிடமிருந்து நகர்ந்தவள்,ஆத்திரத்தில் அந்த அறையின் மூலையில் வைத்திருந்த பூச்சாடியை அவனை நோக்கி எறிந்தாள். மயிரிழையில் தப்பியவன், அதை கைகளில் லாவகமாக பிடித்திருந்தான்.

“நிகாபேபி நீ கோப்படு, ஆனால் மாமனுக்கு சேதாரம் ஆகாம கோபப்படு. இன்னைக்கு கோட்டாக்கு இது போதும்.நாளைக்கு மிச்ச விளையாட்டை விளையாடலாம்” என்றவன் அவளருகே சென்று , பூச்சாடியை மீண்டும் அதனிடத்தில் வைத்தவன், அவளைச் சுற்றி வந்து மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்தவன், கதவின் பூட்டுகளை ரிமோட்டால் எடுத்து விட்டான்.

“கொஞ்சம் வந்து உட்காரு நிகா” என்றழைக்க, அசையாது‌ அங்கேயே நின்றிருந்தாள்.

“வா விளையாட மாட்டேன். கிண்டல் செய்ய மாட்டேன். வந்து உட்காரு. இல்லை நானே உன்னை கூட்டிட்டு வரவா?” என்றவன் மீண்டும் இருக்கையிலிருந்து எழுவது போல் செய்ய,‌அவன் முன்னால் இருந்த இருக்கையில் அமரந்திருந்தாள் அவள்.

“ஓகே. இப்போ நான் சீரியஸாவே பேசறேன். எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு நிகா. இங்க நீ என்கூட இருக்கப் போற இந்தநாட்கள்ள உனக்கும் என்னைப்பிடிக்கும்னு நான் நம்பறேன். உன் கண்ணுல எனக்கான உணர்வுகளை பார்க்கும்போது, நிச்சயமா நான் என் காதலை சொல்லுவேன். அன்றைக்கு முழுமனசோட நீ என்காதலஷ ஏத்துக்கனுங்கற நாளுக்காக நான் காத்திருக்கப்போறேன். ஆனால் என்னால உன்னை பார்க்காம இருக்க முடியாது, பேசாம இருக்க‌ முடியாது. என்னுடைய சீண்டலுக்கு நீ கொடுக்கும் எதிர்வினையெல்லாம் பொக்கிஷமா என் நெஞ்சில் பதிந்திருக்கு. என்னை நீ  உணர்ந்து கொள்ளும் நாளும் வரும். இதுக்கு மேல நான் உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன். ஆனால் நான் உனக்காக காத்திருக்கேங்கறதை உணர்த்திக்கிட்டே இருப்பேன்.  இப்ப நீ போகலாம், ரஞ்சனியோட போய் டீம்ல சேர்ந்துக்கோ. நான் குடுக்க வேண்டிய இன்ஸ்ட்ரக்ஷன்ஸ்லாம் முதல்லயே கொடுத்துட்டேன்” என்றவன் எழுந்து நின்று கை நீட்ட, அதிசயமாக அவனது பேச்சிற்கு எந்த எதிர்பேச்சும் பேசாது வெளியேறிச்சென்று விட்டாள்.

அவ்வளவு பேச்சிலும் அவள் கை கொடுக்காது சென்றதை கண்டு மென்னகை பூத்தவன் “இன்னைக்கு முழுதும் நான் மட்டுமே உன் நினைவில் இருப்பேன் நிகாபேபி” தன்னவளை அருகில் கொண்டுவந்து விட்ட களிப்பை ஆழ்ந்து அனுபவித்தான்.

வந்ததிலிருந்து தன்புறமே திரும்பாது வேலையில் மட்டுமே ஆழ்ந்திருந்தவளை, வியப்பாக பார்த்தாள் ரஞ்சனி. ஸ்ரீனிகா வரும்போது அவளும் பார்த்துக்கொண்டு தான் இருந்தாள். முகத்தில் பலவித யோசனையை சுமந்துகொண்டு வந்தவளிடம், இரண்டொருமுறை ரஞ்சனி பேச முயன்ற போதும் அவள் பிடி கொடுக்கவில்லை. மற்ற டீம் மெம்பர்களுக்கான வேலைகளை பார்வையிட்டவள், தனது வேலைகளில் மூழ்கிவிட்டாள்.

இடையில் மதிய உணவிற்கு கிளம்பும்போதுதான் ரஞ்சனியின் முகத்தை பார்த்து சிரித்தாள். அதில் அவளுக்கு கோபம் வந்து முன்னே நடந்து செல்ல,

“ஹே ரஞ்சு நில்லு” அவள் பின்னால் வந்தவள் ஓடி வர, ரஞ்சுவும் அவள் நடையின் வேகத்தை அதிகரித்தாள்.

கீழே இறங்கும் வளைவில் இறங்கியவளை பிடிக்க கையை நீட்டியவள், நிலை தடுமாறி விட , அவளின் கைகளை வலுவாக பிடித்தது நூவனின் கைகள்.

“பார்த்து சிஸ்டர்”என்றவன் அவள் நிற்க உதவிசெய்ய,

“தாங்க்யூ சார்” என்றவள், அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்.

முன்னாடி நின்றிருந்த ரஞ்சனியின் தலையில் தட்டியவள்,

“எருமை எல்லாம் உன்னாலதான்” என்று கோபப்பட, அவளோ அவனை இங்கு பார்த்த திகைப்பில் நின்றிருந்தாள்.

“ஹே.. என்ன ஆச்சுடி??” என்று அவளைப்பிடித்து உலுக்க, தன்நினைவிற்கு திரும்பியவள்,

“அக்கா.. கிரி..”என்று அவனை நோக்கி விரலை சுட்ட, என்ன சொல்வதென்றே தெரியாது நின்றான் நிகா.

தன்னை நோக்கி பேசும் ரஞ்சுவையும், தனது தந்தையின் சாயலை உறித்து வைத்திருக்கும் நிகாவையும், கிரி புரியாமல் பார்த்துக்கொண்டிருக்க, ரஞ்சனி ஏன் அவ்வாறு ஓடினாள் என்ற குழப்பமும் சேர்ந்து மண்டையைக்குடைந்தது.

சரியாக நூவனும் அந்நேரம் அங்கு வர, அவனைப் பார்த்த நிகா, ரஞ்சுவின் கைகளைப் பிடித்து தரதரவென்று இழுத்து சென்றுவிட்டாள்.

நூவன் அதைப்பார்த்துக்கொண்டே வந்தவன், “என்ன மச்சி இங்க நிக்கிற? எப்போ வந்த?” என்று விசாரித்தான்.

“நான் நேத்து வந்தேன்டா” என்றவன் நடந்ததை கூற,

“பாருடா பாசமலர காப்பாத்தறதுக்காகவே பறந்து வந்தியா? ” என்று கிண்டலடித்தான் நூவன்.

“நீ ..நீ …என்ன சொல்ற??” கிரி கேட்க,

“அப்படியே நம்ம‌ வாசன்மாமா மாதிரி இருக்கற முகத்தை பார்த்துமா உன்னால கண்டுபிடிக்க முடியலை?” நண்பனை நேரம் காலம் தொரியாது‌ வாற, கிரிக்கு கோபம் வந்தது.

“ஆமா இவ யாருன்னு கண்டுபிடிக்கறதுதான் என் வேலையா?? ” இருக்குமிடத்தை கருதி தன்மையாக பேசினான்.

“சரி கேபின்கு வா மச்சி” என்றவன் தனது அறைக்கு அழைத்துச் சென்றான் நூவன்.

உள்ளே நுழைந்ததுமே, ” என்ன என்ஜே இது? இவ எப்படி இங்க வந்தா? கூட இருக்க அந்த ரஞ்சனி பொண்ணு அவளுக்கு என்ன வேணும்?” கேள்விமேல் கேள்விகேட்க ஆரம்பித்தான்.

“ரிலாக்ஸ். எல்லாம் தெரிஞ்சுக்க தான் போற? ” என்றவன் தண்ணீரை எடுத்து நீட்ட, அதை அருந்தினான் கிரி.

“நிகாவை இங்க நான்தான் ஜாயின் பண்ணேன். ரஞ்சனி அவகூட ஆசிரமத்துல வளர்ந்த பொண்ணு. அதுமட்டுமில்லாம நிகாவை நான் விரும்பறேன் மச்சி” உண்மையை போட்டுடைத்தான்.

“என்ன சொல்ற மச்சி? இதை நான் உன்கிட்ட எதிர்பார்க்கவேயில்லை? இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்” உறவு முறையை விட, உயிர் நண்பனாக பழகியவனின் இந்த எதிர்ப்பு நூவனுக்கு கஷ்டமாக இருந்தது.

இருந்தாலும் அவனுக்கு புரிய வைக்க நினைத்தவன் “நான் என்ன சொல்ல வர்றேன்னு புரிஞ்சுக்க முயற்சி பண்ணு மச்சி” என்று கோரிக்கை வைத்தான்.

“என்னடா புரிஞ்சுக்கனும்? அப்படி என்ன இருக்கு ..” இவகிட்ட என்று சொல்ல வந்தவனுக்கு, ஏதோ உறைக்க,

“அந்த நிலத்துக்காகவாடா?? “என்று கேட்டதில் மனதில் பெருத்த அடி விழுந்தது நூவனுக்கு. அதில் அயர்ந்து அவன் இருக்கையில் அமர, கிரிக்கே தான் இப்படி கேட்டிருக்க்கூடாதோ என்று சிந்திக்க ஆரம்பித்தான்.

“என்ஜே…” அவன் பேச ஆரம்பிக்க, ” போதும்” என்று கையை காண்பித்தான் நூவன்.

“இதைப்பத்தி நாம அப்பறம் பேசலாம். இப்ப நீ வந்த விஷயத்தை சொல்லு” விஷயத்தை திசைதிருப்பினான்.

“நான் என்னோட ஃப்ளாப்பி உன்கிட்ட இருக்கறத வாங்கிட்டு உன்னை பார்த்துட்டு  போக வந்தேன். அது கிடக்கட்டும். நீ முதல்ல இதுக்கு பதில் சொல்லு? இவள எப்படி நீ முடிவு பண்ண? ஏன்? நம்ம வீட்டில யாருமே இதுக்கு ஒத்துக்க மாட்டாங்களே? இவ நல்லவன்னு என்ன நிச்சயம்? ” சந்தேகத்தின் ஆதிக்கத்திலிருந்து அவனால் வெளிவர முடியவில்லை.

“சொல்றேன் எல்லாத்துக்கும் காரணம் சொல்றேன். அதுக்கு முன்னாடி நீ தெரிஞ்சுக்க வேண்டிய ஒரு உண்மை இருக்கு. இதை தெரிஞ்சுக்க வேண்டியவனும் நீதான்” என்றவன் தான் அறிந்த விஷயத்தை கூற, கிரிக்கு அது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

“கிரி.. கிரி..” என்று அவனது கன்னத்தில் அடித்து சுயநினைவை வரச்செய்தான்.

“மச்சி… இது உண்மையா?? “

“இன்னும் என்னை நம்பலயாடா?? வா என்கூட” என்றவன் ஓரிடத்திற்கு அழைத்துச்சென்றான்.

தேவதைப்பெண்ணாக வலம் வந்துகொண்டிருந்த பெண், கடந்த சிலநாட்களாக இப்படி எதையோ பறிகொடுத்தது போல் ஒரே வீடியோவையே திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டிருக்கும் மகளை காண மனதிற்கு கஷ்டமாக இருந்தது உள்துறை அமைச்சர் தயானந்திற்கு.

சேனா உள்ளே வந்து அமர்வதும் தனது தந்தையுடன் பேசுவதும், உணவு உட்கொள்வதும், சிரித்துப் பேசிக்கொண்டே அவர்களது கார்டனில் நடந்து போவதையும் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள் ரூபாலி.

“ரூபி… ” சத்தமாக கூப்பிட்டால் கூட மகளுக்கு வலிக்குமோவென்று மெதுவாக கூப்பிடார் தயானந்த்.

“பாபா” என்று திரும்பியவள், வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு அவரது தோளில் சாய்ந்து கொண்டாள்.

ரூபாலி ஐந்தரை அடி உயர அழகுச்சிலை. தமிழக தந்தைக்கும் வட இந்திய தாய்க்கும் பிறந்த அழகுச்சிலை. தாயின் வார்ப்பாக, மென்மைக்கு மறுபெயர் அவள்தான் என்று சொல்லும் அளவிற்கு நாற்வகை நற்பண்பும், மென்மையும் ஒருங்கே பெற்றவள்.

இரண்டு வருடத்திற்கு முன்பு, தயானந்தை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அன்னையை பறிகொடுத்தவளின் முகத்தில் சந்தோஷமும் தொலைந்து போனது. அவ்வாறு இருந்தவள், தொழில்துறை சார்பில் அனைத்து மந்திரிகளும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்ட கூட்டத்தில், சேனாவை பார்த்த முதல் நொடியிலே , தனது இதயத்தையும் அவனிடம் தொலைத்திருந்தாள்.

மகளின் ஆசையை புரிந்துகொண்ட தந்தையும், சேனாவைப்பற்றி தெரிந்து கொள்ளத்தான் அவனை நேரிலேயே வரவழைத்து மூன்று நாள் வேலையையும் கொடுக்க, அதை ஒரேநாளில் முடித்து , அவரது நன்மதிப்பையும் பெற்றான். மகளின் தேர்வு சோடை போகாது என்பதில் மகிழ்ந்தவர், அவன் மனதிலும் யாரும் இருக்கக்கூடாது என்ற நினைவுடன், அவன் அவசரமாக கிளம்புவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளும் நோக்குடன்,

“யார் அந்த லக்கி கேர்ள் சேனா? ” என்று கேட்டு, “அப்படி யாரும் இல்லை சார்” என்று சொல்வான் என்று எதிர்பார்க்க, அவனது முகத்தில் அதிகரித்த பூரிப்பு, வேறு சேதி சொல்லியது.

மகளிடம் விஷயத்தை பகிர்ந்து கொண்டவர், அவள் முகவாட்டத்தை காண இயலாது,

“நீ மட்டும் சரின்னு சொல்லும்மா. நான் இப்பவே இந்தரசேனாகிட்ட பேசி நாளைக்கே கல்யாணத்தை முடிச்சிடறேன். அப்பறம் உங்க வாழ்க்கையில் யாரும் குறுக்கே வரமுடியாது” என்று கூற, அன்று அவரை அவள் பார்த்த பார்வையை இன்றும் அவரால் மறக்க முடியாது.

“நீங்க மட்டும் எனக்கு போதும்பா. அவர் சந்தோஷமா இருக்கனும் நான் ஆசைப்படறேன். இது தான் அவர்மீது நான் வச்சிருக்கும் காதலுக்கு மரியாதை” என்று முடித்துவிட்டாள். இன்றுவரை அதுவே தொடர்ந்து கொண்டிருக்க, மகளுக்கு ஆறுதலாக அவளை தோளில் தட்டி தூங்க வைத்தார் தயானந்த்.

இங்கு நூவன் கூட்டி வந்த இடத்தில் உண்மைகளை அறிந்த கிரி, வெளியே வந்து தனது உயிர் நண்பனின் கைகளை பிடித்துக்கொண்டவன்,

“மச்சி நீ நிகாவை கல்யாணம் செய்துக்கறதுல எனக்கு முழு சம்மதம். இதுல உனக்கு முழு ஆதரவாக நான் நிற்பேன். இந்த விஷயம் என்னைத்தவிர வேறு யார்கிட்டயும் போகாது” என்று உறுதி கொடுக்க, நண்பனை ஆரத்தழுவி கொண்டான் நூவன்.

மழைக்கால அணையின் நீர்மட்டமாய் உயர்ந்து கொண்டே போகிறது, நித்தம் நிந்திக்கும் நின் காதல் உணர்வுகள்……..

திமிராகும்…..

அத்தியாயம்-13:

மதிய உணவுவேளையில் கேண்டினில் அமர்ந்து, உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர் நிகாவும், ரஞ்சனியும்.

முதலில் சாப்பிட மறுத்து, வெறும் ஜூஸை மட்டும் எடுத்தவளை வற்புறுத்தி சாப்பிட வைத்துக்கொண்டிருந்தாள் ரஞ்சனி.

“அக்கா, எதை நினைச்சும் மனச போட்டு குழப்பிக்க வேண்டாம். சாப்பிடுங்க” தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டிருந்தவளுக்காக, உணவை கொறித்துக்கொண்டிருந்தாள்.

“ப்ச்… இவங்களை எல்லாம் பார்க்கற முன்னாடி வரைக்கும் கஷ்டமாயில்லை ரஞ்சு. ஆனால் இப்ப என்னவோ, ஏத்துக்க மனசு ரொம்ப கஷ்டப்படுது. அந்த கிரியை பார்த்து கோபம் வர்றதுக்கு பதிலா, மனசு கஷ்டப்படுது. என்னன்னே புரியல?… சொத்தும் வேணாம் ஒண்ணும் வேணாம்னு சொல்லிட்டு கிளம்பிடலான்னு பார்க்கறேன்”  என்று கூறியவளின் கூற்றில் நியாயமிருந்தாலும், மறுப்பாக தலையசைத்தாள் ரஞ்சனி‌.

“எதையும் தைரியமா எதிர்நோக்குற உங்களோட மனதைரியம் எங்க போச்சுக்கா? இதெல்லாம் ஒரு விஷயமா? உங்களுக்கு பிடிச்சா அவங்களோட பேசுங்க இல்லையா விட்டுத்தள்ளுங்க. அதுமட்டுமில்லாம, உங்க அம்மாக்கு செஞ்ச அநியாயத்திற்குரிய, குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூடவா இல்லாம போகும்.எதையும் வற்புறுத்தி ஒட்ட வைக்க முடியாதுங்கறது அவங்களுக்கும் தெரியும். உங்களுக்கு தேவையில்லைன்னு நினைக்கும்போது எதுக்கு அவங்கள பார்த்து சஞ்சலப்படுறிங்க?” ரஞ்சுவின் விளக்கம் அவளின் மனதை ஓரளவு சமன் செய்தது.

இருந்தாலும் அவள் மனசாட்சி” சஞ்சலப்படலை ரஞ்சு, அந்த நூவனைப்பார்த்து சலனப்பட ஆரம்பிக்கிறேன்” எடுத்துக்கூற,  உடனே அவளால் வேறெதுவும் பேச முடியவில்லை.

முயன்று சமாளித்தவள், “ம்ம்… இனி நிதானமா இருக்க முயற்சி செய்யறேன்” என்றவள் உணவை இப்பொழுது நன்றாக உண்ண ஆரம்பித்தாள்.

சாப்பிட்டு முடிக்கும்போது, நிகாவிற்கு சேனாவிடமிருந்து அழைப்பு வர, அவள் வாஷ்ரூம் சென்றிருந்தாள்.

ரஞ்சனி அழைப்பையெடுத்தவள்,” ஹலோ, சேனா அண்ணா” என்று கூற,

“ஹாய் ரஞ்சனிம்மா, என்ன புது அலுவலகத்துல எல்லாம் சௌகரியமா இருக்கா? ஸ்ரீனிகா எங்கயும் வெளிய போயிருக்காளா?” என்று கேட்டான்.

“ஆமாண்ணா வாஷ்ரும் போயிருக்காங்க. புது அலுவலகம் ரொம்பவே நல்லாயிருக்கு. நூவன் சார் வித்தியாசமான ஆளா இருக்காரு” என்ற விவரத்தையும் கூடுதலாக சேர்த்து கூறினாள்.

“வாட்?? நூவனா?? நீங்க டெக்னால தான ஜாயின் பண்ண போறதா சொன்னிங்க?” அதிர்ச்சியில் எழுந்து  நிவேதாவின் வீட்டிலிருந்து வாயிலுக்கு வந்திருந்தான்.

“ஆமாண்ணா, டெக்னாலதான் ஜாயினிங். பட் வொர்க் இங்க நடக்குது” என்றவள் கூட்டுணர்வு ஒப்பந்தத்தை பற்றி கூறி, ப்ரொஜெக்ட் நடந்து கொண்டிருக்கும் விவரங்களையும் கூறினாள்.

“ஓஹோ… வேறெதுவும் அங்க தொந்தரவு இல்லையே?” என்று கேட்க,

“இல்லண்ணா. இதோ அக்காவே வந்துட்டாங்க” என்றவள் அவளிடம் அலைபேசியைக்கொடுக்க,

“சொல்லுங்க சார். என்ன விஷயம்?” என்று கேட்டாள்.

“மிஸ்.ஸ்ரீனிகா அங்க உங்களுக்கு எந்த தொந்தரவும் இல்லையே? “ரஞ்சனியிடம் கேட்ட அதே கேள்வியை , அவளிடமும் கேட்க, உடனடியாக இல்லை என்று அவளால் சொல்ல முடியவில்லை.

அந்த ஒருநிமிட தாமதம், சேனாவிற்கு விஷயத்தை விளங்க வைக்க, “என்ஜே என் ஹனிய நீ தூக்கிட்டு போக பார்க்குறியா?? நான் இருக்குற வரைக்கும் அது நடக்காது. உன்னை நான் பாதுகாப்பேன் ஹனி. நீ எனக்கு மட்டுந்தான்” என்று உறுதிமொழிந்தவனாக, முதலில் அவளை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வழியை யோசித்து, அதை மறைமுகமாக சொல்லவும் செய்தான்.

“இப்பவே உங்களுக்கு நான் டெக்னாக்கு மறுபடியும் மூவ்மென்ட் ஆர்டர் வாங்கிக்குடுக்கவா மிஸ். ஸ்ரீனிகா” என்று கேட்க, அவனது அக்கறையில் சுதாரித்தாள் நிகா.

ஏனோ மனம் ” இவனுமா??”  என்று நினைப்பதை தவிர்க்க இயலவில்லை.

“எதுக்கு சார்?” என்று நிதானமாக கேட்டாள் நிகா. அவளது குரலை அவள் பழைய நிலைக்கு திரும்பி விட்டாள் என்பதை எடுத்துரைக்க,

“நீங்க பதில் சொல்ல தாமதாகும்போதே, உங்களுக்கு அங்க பிரச்சனை இருக்குன்னு நினைச்சேன் ஸ்ரீனிகா. அதான் அப்படி கேட்டேன்” சேனாவும் தயங்காது பதிலளித்தான்.

“பிரச்சனை இல்லாத இடமென்று எதுவும் இல்லை சார். உங்க அக்கறைக்கு நன்றி. இன்னும் நீங்க எதுக்காக ஃபோன் செய்திங்கன்னு சொல்லவேயில்லை??” விஷயத்திற்கு வந்தவளை எண்ணி, சேனாவிற்கு கோபம் வந்தாலும், முயன்று அடக்கிக்கொண்டான்.

“நான் மிஸ்டர்.தீனதாயாளன் வீட்டுல வேலை பார்த்துக்குடுத்துட்டுருக்கேன் இல்லையா? அங்க எனக்கு கொஞ்சம் சிஸ்டம் அரேன்ஜ்மெண்ட்ஸ் பண்ணிக்குடுக்கனும் மிஸ்.ஸ்ரீனிகா? உதவ முடியுமா?” இந்த முறை உனக்கு என் காதலை புரிய வைக்கப்போறேன் ஹனி, மனதில் ஒரு திட்டத்துடனே கேட்பதை அறியாது சம்மதித்து விட்டாள் அவள்.

“இவ்வளவுதானா? அதுக்கென்ன சார் ? பண்ணிட்டா போச்சு? ஆனால் வேலை நாட்கள்ள முடியாது, வார இறுதில வரட்டுமா? என்ன செட்டப் கேட்குறாங்க சார்? ” என்று விவரம் கேட்டு கொண்டே லிஃப்டில் ஏறியவள், பின்னாடி ரஞ்சனி மற்றொரு ஊழியருடன் பேசிக்கொண்டிருப்பதை கவனிக்க தவறியவளாக, நான்காம் தளத்து பட்டனை அழுத்தினாள்.

இந்த பக்கம் சேனா விவரங்கள் சொல்ல” ஓ.. இந்த வேலை எப்படியும் ஒருவாரம் இருக்குமே?? சரி நான் முதல்ல லிஸ்ட் ரெடி பண்ணிக் குடுக்கறேன். பொருட்களை சரிபார்த்து வாங்கி வச்சுடுங்க. அதுக்கப்பறம் வேலையை ஆரம்பிச்சுக்கலாம் சேனாசார். லைன் கட் ஆகுது.. நான் வைக்கிறேன் சார்” என்றவள் பேசிவிட்டு அணைத்து எதிரில் இருந்த கண்ணாடியில் பார்க்க, உள்ளே நின்றிருந்தான்  நூவன். லிஃப்டில் இவர்கள் இருவரும் மட்டுமே இருந்தனர்.

ஸ்ரீனிகா ஒத்துக்கொண்ட மகிழ்ச்சியில், ” ஹனி.. இந்த முறை உன் மனசை ஜெயித்தே தீருவேன்” என்று உற்சாகத்தில் சபதமிட்டுக்கொண்டிருந்தான் சேனா.

சோர்வுடன் உள்ளே நுழைந்த மகனை கண்ட நிவேதாவிற்கு வருத்தமாக இருந்தது‌. அவன் ஒற்றையாளாக அனைத்து பொறுப்புகளையும் ஏற்றிருப்பது, மனதை வருத்தச்செய்து கணவனது வெற்றிடத்தினையும் ஞாபகப்படுத்தியது.

“ஏன் கண்ணா, வந்த உடனே வெளிய போய் அலைஞ்சுட்டு வரனுமா??” அக்கறையுடன் மகனை கையை பிடித்து உள்ளே அழைத்து வந்தார்.

“இல்லம்மா, எல்லாம் சரியா முடிச்சாகனுமில்லயா?? மாமாக்கு சொல்லிட்டிங்களா?? நான் என்ஜேவைப்பார்த்து சொல்லிட்டுதான் வரேன். மித்த சொந்தக்காரங்களுக்கு அவன் சொல்லிக்கிறேன் சொல்லிட்டான். சம்பந்த சாப்பாடு மேற்பார்வையெல்லாம் அவன் பார்த்துக்கறேன் சொல்லிட்டான்மா” என்றவன் சட்டை பொத்தான்களை விடுவித்து விட்டு சோஃபாவில் அயர்ந்து அமர,

“இரு. நான் போய் ஃப்ரெஷ் ஜூஸ் எடுத்துட்டு வரேன்” என்று உள்ளே திரும்பியவரின் கைகளை செல்ல விடாது பற்றியிருந்தான் கிரி.

“என்னடா? கையை பிடிச்சு நிப்பாட்டுற? ஏதும் முக்கியமான விஷயமா கண்ணா?? ” மகனருகே அமர்ந்து, அவனது தலையை தோளில் சாய்த்துக்கொண்டார் நிவேதா.

சிறிது நேரம் தாயின் தோளில் இளைப்பாறியவன், மெதுவாக தலையை உயர்த்தி, அவரது கண்களை பார்த்தவன்,

“முப்பதாம் நாள் விஷேஷத்துக்கு ஸ்ரீனிகாவயும் கூப்பிடலாம்னு இருக்கேன்மா” என்று கூற, நிவேதாவின் முகம் அதிர்ச்சியை காட்டியது.

“எ..என்னடா சொல்ற?” நாக்கு குழறியது அவருக்கு. தன்மகனா பேசுவதென்று அவரது காதுகளை அவராலேயே நம்ப முடியவில்லை.

“ஆமாம்மா தீவிரமாதான் சொல்றேன். என்னாதான் இருந்தாலும், அவளும் நம்ம அப்பாக்கு பொறந்த பொண்ணுதானே? அவளும் கலந்துகிட்டா நல்லதுன்னு சொல்றாங்க” என்று கூற,

“யாரு நூவனா?” என்று எதிர்கேள்வி கேட்டார் நிவேதா.

“அவன் எதுக்கும்மா சொல்லனும்?” தாய் கோலத்தில் புகுந்தால், மகன் புள்ளியில் புகுந்தான்.

“அ…அதுவந்து, இல்லை உனக்கு முக்கியமான ஆலோசனையெல்லாம் அவன்தான சொல்லுவான். அதான் அப்படி கேட்டேன்” முகத்தில்  வியர்வை முத்துக்கள் வடிய பேசிய தாயை , பரிதாபமாக பார்த்தான் கிரி.

“இல்லைம்மா. இது நான் எடுத்த முடிவு. இந்த ஒருதடவை அவ வரட்டும்மா” என்று கிரி காரியத்தில் கண்ணாக பேசினான்.

மகனை சிறிது நேரம் உற்று பார்த்தவர்,

“போனவாரம் இந்நேரம் அவ பேரை கூட எடுக்கக்கூடாதுன்னு சண்டை போட்டுட்டு இப்ப என்னடா திடீர்னு அவளை கூப்பிடனும் சொல்ற?” என்று கேட்டவரின் பார்வை மகனை சல்லடையாக துளைத்தது.

பதிலுக்கு எந்தவித உணர்வையும் முகத்தில் காட்டாது அவரை சாதுவாக ஒரு பார்வை பார்த்தவன்,

“ஐயர் சொன்னதுக்காக மட்டுமாதான்மா. நம்ம குடும்பத்துக்கு நல்லதுன்னா செய்யறதுல தப்பில்லை?  நீங்கதான் அவளை கூப்பிடனும்” என்ற கோரிக்கையும் சேர்த்து வைத்தான்.

“இல்லை என்னால முடியாது” என்று மறுத்தார் நிவேதா.

“என்னம்மா இது?? ” மகனின் பார்வை என்னவோ செய்ய,

“சரி.நான் கூப்பிடமாட்டேன். நீ வேணுனா கூப்பிட்டுக்கோ. வர்ற சொந்தக்காரங்க முக்கு சமாளிக்கறதுக்கும் தயாரா இரு” என்று மறைமுகமாக அனுமதி கொடுத்துவிட்டார்.

“சரி.. நாளைக்கும் என்ஜேவை பார்க்க போவேன், அப்ப சொல்லிடறேன் மா” என்றவன் எழுந்து கொள்ள போக,அவனது கையை பிடித்து தடுத்தவர்,

“நூவனை பார்க்கும்போதா?? என்ன சொல்ற நீ?” என்று கேட்டார்.

“இப்போ நூவன் ப்ரொஜெக்ட்லதான் அவ வேலை பார்த்துட்டுருக்காம்மா. இன்னைக்கு நான் பார்த்தப்போ தெரிஞ்சுக்கிட்டேன்” என்றவன், சற்றுநேரம் ஓய்வெடுக்க வென்று மாடியிலிருக்கும் தனது அறைக்கு சென்றுவிட்டான்.

“நூவா என் எண்ணம் தெரிஞ்சும், என் பொறுமையை சோதிக்கிறியேடா??” கேள்விபட்ட விஷயத்தை தாளமாட்டாதவறாக, இங்குமங்கும் நடந்தவருக்கு, புது யோசனை ஒன்று உதிக்க, அதை உடனே செயல்படுத்தும் வேலையில் இறங்கினார்.

லிஃப்ட்டில் நூவனிடம் தனியாக மாட்டிக்கொண்டதை தாமதமாக உணர்ந்தவள், அதை காட்டிக்கொள்ளாது, அவன்புறம் திரும்பியும்பாராது அப்படியே நின்றிருந்தாள்.

அவளது உடல் மொழியை கவனித்தவன்,

“திமிரு பிடிச்சவ, திரும்பி பார்க்கமாட்டா” மனதிற்குள் அர்ச்சித்தவன்,சன்னமாக விசிலடிக்க ஆரம்பித்தான்.

அதற்கும் அசையாது நின்றவளை கவனித்தவன்,

“யாரு ஃபோன்ல வாட்ச்மேனா??”  அவளை வம்பிழுத்தான்.

அதற்கும் அவள் பதிலளிக்காது, எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாது நின்று கொண்டிருந்தாள்.

“அடி என் மாமன்மகளே, இந்தா வரேன்” ஒரு முடிவெடுத்தவனாக, அவளருகே வந்தவன், ஒரு கையால் தன்புறம் திருப்பியவன், லிஃப்டில் உள்ள ஹோல்ட் பட்டனை அழுத்தி நிறுத்திவிட்டான்.

நொடிக்கும் குறைவான நிகழ்வில் , நிகா திகைத்து நிற்க, இருவருது முகமும் அருகருகே இருந்தது.

முதலில் அதிர்ச்சியில் இருந்தவள், பின்பு அவனது செயலில் இருந்து மீண்டு வந்தவள்,

“என்ன பண்ணறிங்க நூவி?” பதற்றத்தில் தன்னையறியுமாது உள்ளத்து உணர்வை போட்டுடைத்தாள். கடந்த சில நாட்களாகவே அவனது நினைவிலியே உழன்றவளுக்கு, அவளது மனம் அவளையுமறியாது , அவன்பால் சாய்ந்திருந்தது, அவளது வார்த்தைகளிலும் வெளிவந்திருந்தது.

தன்னவளின் வாய்மொழியாக தனக்கான செல்ல அழைப்பை கேட்டு இன்பமாக அதிர்ந்தவன், “நூவிதான் நிகாபேபி”  அவளது கண்களை பார்த்து சொன்னவன், அடுத்த நொடியே  நிகாவின் இதழ்களை சிறைசெய்திருந்தான்.

இங்கு நிவேதா ராமுதாத்தாவிற்கு அழைத்தவர், ” ராமுண்ணா, ஸ்ரீனிகா இங்க வீட்டுக்கு விஷேஷத்திற்கு வந்திருக்கும்போது,  சீரமைக்காம விட்டிருக்கிற பின்கட்டு பகுதி முழுதும் இடிஞ்சு விழுந்திருக்கனும். அவளை இங்க என் வீட்டுல கொண்டு வந்து தங்க வைக்க வேண்டியது உங்க பொறுப்பு” என்று கூற,

“நீங்க சொல்றபடியே செய்யுறேன்மா” என்று உறுதியளித்தார் ராமுதாத்தா.

என்னுள் புகும் காற்றும் வியந்து போகும், உயிர்மூச்சாக நீ நிரம்பியிருப்பதை காணும்போது, என் திமிரழகி…..

திமிராகும்…..

அத்தியாயம்-14:

“இதுல எந்த சொதப்பலும் இருக்கக்கூடாது? ” என்று மீண்டும் வலியுறுத்தினார் நிவேதா.

“நிச்சயங்கம்மா. என்னால முடிஞ்ச அளவு கச்சிதமா செஞ்சுடறேன். ஆனாலும் ஒரு சின்னசிக்கல் இருக்குதேங்கம்மா” என்றவர், முகத்தில் தெரிந்த அசதியை ,தோளில் போட்டிருந்த  துண்டை வைத்து துடைத்து துரத்த முயன்றார்.

“என்ன சிக்கல் வரும் ராமுண்ணா?”

“நூவன் தம்பி அப்பப்ப இங்க நிலவரங்களை கேட்டுக்கிறாரு. இப்படி நடக்கும்போது, அவரு சொல்வாருன்னு தெரியலயேமா? ”  தனது ஐயப்பாட்டை எடுத்துக்கூறினார்.

“அது ஒண்ணும் பிரச்சனையில்லை. அன்னைக்கு கிரியும் பக்கத்துல இருப்பான். அவன்கிட்ட நீங்க எடுத்துச்சொன்னா போதும், அவன் இங்க கூட்டிட்டு வந்துடுவான். அவளுக்கு எதும் அடிபட்டுடாம பார்த்துக்குங்க. நீங்களும் பத்திரமா இருங்க” என்றவர் அழைப்பை வைத்துவிட, ராமுதாத்தா விஷயத்தை செயல்படுத்துவதற்கான முறைகளை யோசிக்க ஆரம்பித்தார். யோசனையின் முடிவில் அவருக்கு விடையும் கிடைத்தது.

இதழ்களில் மூழ்கியவனுக்கு, அதை விடுதலை செய்யும் நோக்கம் இல்லாது போக, மூச்சுக்காற்றுக்கு திணறிய நிகா முதலில் சுதாரித்தவளாக, அவனை தள்ள முயன்றாள். ஆனால் அவனது பிடியோ மேலும் இறுக ஆரம்பித்தது. முயன்று அவனை மெதுவாக அழுத்தி நிறுத்த முயற்சி செய்து கொண்டே, அவனது கால்களை ஓங்கி மிதித்துவிட்டாள். ஷு அணிந்திருந்த கால்களையும் மீறி, அவள் அணிந்திருந்த ஹூல்ஸ் அது வேலையை காட்ட, வலியால் துடித்து விலகினான் நூவன்.

“ஆ.. பாவி ராட்சசி.. இப்படியாடி மிதிப்ப?? ஆ..அய்யோ” ஒரு காலை தூக்கி வலியில் உதறிக்கொண்டிருந்தவனை பார்த்து சிரித்தாள் நிகா.

“வலிக்கட்டும் நல்லா வலிக்கட்டும், என்ன தைரியமிருந்தா இப்படி பண்ணுவிங்க? ம்ம்… ” இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு, ஒய்யாரமாக பார்த்தளை, தன் வலியையும் மறந்து அவளை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தவனை பார்க்க அவளுக்கு எரிச்சலாக வந்தது.

“எப்பபாரு திட்டினாகூட, என்னவோ இவன்கிட்ட நான் காதல்வசனம் பேசிகிட்டுருக்கற மாதிரியே பார்க்குறான்” மனதிற்குள் அவனை அர்ச்சித்தவள்,

“இன்னொரு தடவை இப்படி ஏதாச்சும் பண்ணிங்க, உங்க மேல போலிஸ்ல கம்ப்ளெய்ன்ட் பண்ணிட்டு, உங்க ஊரும் வேணாம் சொத்தும் வேணாம்னு கிளம்பி போய்கிட்டே இருப்பேன்” கண்களில் அனல் தெறிக்க பேசியவள் , ஆழ்ந்த மூச்செடுத்துக்கொண்டாள்.

கோபப்பட்டு பேசியவளையும் நிதானமாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்த நூவனை பார்த்து எரிச்சல் மீதுற, முகத்தை திருப்பியவள், லிஃப்டின் ஹோல்ட் பட்டனை எடுத்துவிட்டு, அடுத்து வந்து நின்ற தளத்திலேயே இறங்கிக்கொண்டவள், அவனை திரும்பியும் பாராது சென்றுவிட்டாள்.

பின்னால் “நிகா …நில்லு” என்று அவன் கத்துவது கேட்டாலும் நிற்காமல் வேகமாக நடந்து , அவர்கள் வேலைபார்க்கும் அறைக்கு வந்து சேர்ந்து விட்டாள்.

தனக்கு முன்னால் கிளம்பியவள்,தாமதமாக வந்ததோடு அல்லாது, அவளது முகமும் சிகப்பேறியிருக்க, அவளருகே வேகமாக வந்தாள் ரஞ்சனி.

“அக்கா என்னாச்சு காய்ச்சல் ஏதும் அடிக்குதா?? சாப்பிடும்போது நல்லாதானே இருந்திங்க? ? இப்ப என்னாச்சு??” என்றவள் நெற்றி, கழுத்தில் கை வைத்துபார்க்க, உடற்சூடு கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ரஞ்சனியின் சத்தத்தால் குழுவில் இருந்து மற்றவர்களும் வந்து பார்க்க, அவர்கள் அனைவரையும் பார்த்தவள்,

“நான் நல்லாதான் இருக்கேன். நீங்கள்ளாம் வேலையைப்பார்க்க ஆரம்பிங்க” அவர்களை முதலில் அனுப்பி வைத்தாள். அருகில் நின்றிருந்த ரஞ்சுவை பார்த்தவள்,

“ரஞ்சு எனக்கு பாட்டில்ல தண்ணீர் எடுத்துக்கிட்டு, நம்ம கேபின்கு வா” என்றவள் அங்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றிருந்தாள்.

நிகாவிற்கு தண்ணீர் எடுத்துக்கொண்டவள், உள்ளே சென்று பார்க்க, அவளது இருக்கையில் சாய்ந்து கண்களை மூடி அமர்ந்திருந்தாள். இப்பொழுது முகச்சிவப்பு பெருமளவு குறைந்திருந்தது. தெளிவான முகத்தில் அவளது இதழின்  இடதோர இடத்தில் கசிந்து கொண்டிருந்த இரத்தமும் கண்களில் பட, விஷயம் விளங்க ஆரம்பித்தது ரஞ்சனிக்கு.

நிகாவும், ரஞ்சனியும் லிஃப்டை நெருங்கும் தருவாயில், அவர்களுடைய குழுவில் இருக்கும் பெண் வந்து, அவளுடன் சென்னையில் வேலை பார்த்த மற்றொரு தோழியின் விபரத்தை இவளிடம் கேட்க, இவளும் கூறிவிட்டு அவளுக்கு அலைபேசி எண்ணையும் கொடுத்தாள். எண் கொடுத்துக்கொண்டிருக்கும் போது, நிகா பேசிக்கொண்டே லிஃப்டில் ஏறுவதை கவனித்திருந்தாள்.

பின்பு அந்த பெண்ணிடம் ஐந்து நிமிடங்கள் பேசியவள், நிகா ஏறிய லிஃப்டை நோக்கி போக, அவளது கையை பிடித்து தடுத்தாள் அந்த பெண்.

“அச்சோ அக்கா, உங்களுக்கு தெரியாதில்ல? அது எம்.டி மட்டும் உபயோகப்படுத்துற லிஃப்ட், நமக்கு இந்த மூலைல இடதுபக்கம் இருக்குற  லிஃப்ட்” என்று கூறினாள்.

பின்பு தனது தளத்தை வந்து அடைந்தவள் ஆச்சர்யப்படும் விதமாக, நிகா வந்து சேரவில்லை. அவளது அலைபேசி எண்ணுக்கு முயற்சிக்க, எண்ணும் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக வந்தது. அவள் வரும்வரை பொறுமையாக காத்திருந்தாள்.

ஆனால் வந்தவளின் கோலத்தை காண அதிர்ச்சியாக இருந்தது ரஞ்சுவிற்கு. மெதுவாக அவளை உலுக்கியவள்,

“அக்கா தண்ணீ குடிங்க” என்று கொடுக்க, அதை வாங்கி எப்பொழுதும் போல் அவள் குடிக்க, தண்ணீர் உதட்டில் பட்டு எரிச்சலை கொடுத்தது.

“ஸ்… ஆஆ” என்று வலியில் முகம் சுழித்தவளை பார்க்க கஷ்டமாக இருந்தது.

இருந்தாலும் மெல்லிய குரலில்,

“அக்கா நீங்க ஏறுன லிஃப்ட் நூவன் சார் உபயோகப்படுத்தறதாம். நீங்க ஏறுனப்ப உள்ள அவர் இருந்தாராக்கா?” என்று கேட்க,

“ஓ.. அதான் எங்களை தவிர யாரும் இல்லையா? அதனால்தான் லிஃப்ட் நிறுத்தப்பட்டப்பவும் யாரும் கண்டுக்கலையா?” என்று யோசித்தவள்,

“ஆமா ரஞ்சு. நான்தான் சேனா சார்கிட்ட பேசிகிட்டிருந்ததால அதை கவனிக்காம மாத்தி ஏறிட்டேன்” என்று பதிலளித்தாள்.

“நூவன்சார் உங்ககிட்ட ஏதும் தப்பா நடந்துகிட்டாராக்கா?” சரியாக விஷயத்தை ஊகித்து கேட்டாள் அவள்.

அவளது கேள்வி சரியாக இருந்தாலும், தன்னையுமறியாது” ச்ச.. ச்ச இல்லை ரஞ்சு. வழக்கம்போல வம்பிழுத்தாரு. அவ்வளவுதான்” என்றவள், அவன்செய்த அத்துமீறலை ஏனோ ரஞ்சுவிடம் கூட சொல்ல அவளுக்கு மனம் முரண்ட, மனதிற்குள் குழம்பிக்கொண்டிருந்தாள் நிகா.

“அப்பறம் ஏன்கா உதட்டுல ரத்தம் வருது?” அடுத்த கேள்வியை கேட்டவளை நிமிர்ந்து அவளால் பார்க்க முடியவில்லை. எதிர்பாராத இதழ் முற்றுகை என்றாலும், தன்னை மீறி வெளிவந்த அந்த ஒற்றை அழைப்புதானே அவனது உணர்வுகளை சீண்டி, வெளிப்படுத்தியிருந்தது. தன் அனுமதி இல்லாமலேயே நடக்கும் செயலுக்கு, ஒத்துழைத்த உடல்மொழியை நினைத்தவளுக்கு, மனம் ஒரு நிலையில் இல்லாது அல்லாடியது. இருந்தாலும் தன்னைத்தானே தேற்றிக்கொண்டவளாக,

“அவர் பேசுனதுல கடுப்பாகி, நான்தான் ரஞ்சு உதட்டை அழுத்தி கடிச்சுட்டேன்” என்று அவளிடம் சமாளித்தாள்.

“அக்கா என்கிட்டயே பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டிங்களா? மாம்ஸ் பெரிய ஆளுதான், உங்களையே மாத்திட்டாரே” மனதிற்குள் ஆச்சர்யப்பட்டாலும், வெளியே காட்டிக்கொள்ளாது,

“ம்ம்..சரிக்கா, அப்படி என்ன பேசுனாரு?” என்று அடுத்த கேள்வியை கேட்டவளை சலிப்பான ஒரு பார்வை பார்த்தாள் நிகா.

அவளது பார்வையை புரிந்து கொண்டாலும், “ம்ம்.. சொல்லுங்கக்கா” அவளருகே இருந்த இன்னொரு இருக்கையை போட்டுக்கொண்டு அமர்ந்தாள்.

அருகில் அமர்ந்தவளின் காதை எட்டி பிடித்தவள், “நாம என்ன இங்க வேலை பார்க்க வந்தோமா? இல்லை கதை பேச வந்தோமா?” வலிக்காது திருகினாள் நிகா.

“க்கா.. வலிக்குதுக்கா. நான் எதுவுமே கேட்கலை விடுங்க” கெஞ்சியபிறகுதான் அவளது காதுகளுக்கு விடுதலை கிடைத்தது.

“எழுந்து நீ போ. நான் ஒரு இரண்டு நிமிஷத்துல வர்றேன். அந்த ஹரீஷ சிஸ்டத்தை ரீபூட் பண்ணி தயாரா வைக்க சொல்லு” அடுத்தடுத்த வேலைகளைப்பற்றி பேச்சை மாற்றி அவளை அனுப்பிவைத்தாள்.

ரஞ்சு கதவு வரை சென்றவள், “எல்லாம் சரிதான்க்கா. ஆனால் ஒரே ஒரு சந்தேகம்மட்டும்தா?” என்று நிறுத்த, அவளை கேள்வியாக பார்த்தாள் நிகா.

“இல்ல…… உதட்டை கடிச்சிங்க சரி. கடிக்கும் போது நூவன்சார் பல்செட்டை போட்டுகிட்டிங்களோ” அவளது கிண்டலில் நிகா அதிர்ச்சியாக அவளை பார்க்க, அதிலிருந்து மீண்டு வருவதற்குள், அங்கிருந்து ஓடிவிட்டாள் ரஞ்சு.

பின்பு ஒருவழியாக அலுவல்களை முடித்து விட்டு, கிளம்பியவர்கள் ஒருவழியாக வீடு வந்து சேர, இரவு உணவுநேரம் வந்திருந்தது.

நல்லவேளையாக, ஆனந்தி அவர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை சமைத்து வைத்திருக்க, மற்றதெல்லாம் மறந்து வயிறார உண்ட பிறகே, இருவரும் மற்றவர் முகங்களை பார்த்தனர்.

“என்னக்கா இன்னைக்கு நிறைய வேலையா? ரொம்ப பசியா சாப்பிட்டிடங்க? ” தானும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டே அவர்களிடம் பேசினாள் ஆனந்தி.

“ஆமாம்மா. கொஞ்சம் வேலை ஜாஸ்திதான். அதனால இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமா தூங்கனும்” என்றவள்,

“ஹேய் வாயடிக்காம வந்து சேருடி. ஆனந்தி நீயும் போய் ரெஸ்ட் எடுடா. இவ பேசுனா பேசிகிட்டே இருப்பா. இன்னைக்கு எல்லா வேலையும் நீதான் பார்ததுருக்க. என்னால உதவ கூட முடியலை. அதிகமா வேலை பார்த்துகிட்டே இருக்காம, சீக்கிரம் வீட்டுக்கு போ” என்றவள் தனது படுக்கயறைக்கு சென்றுவிட்டாள்.

நிகாவின் எச்சரிக்கையையும் மீறி, ரஞ்சனி சிறிது நேரம் அவளோடு பேசியவள், வந்த கொட்டாவியை அடக்கிக்கொண்டே,

“ஓகே காம்பாளான் பேபி. இன்னைக்கு கதை போதும். நாளைக்கு மிச்சத்தை பேசுவோம். குட்நைட்” சொல்லிவிட்டு தூங்குவதற்கு வந்தவளை, நிகா பார்த்துக்கொண்டே இருக்க,

“என்னக்கா இன்னும் நீங்க தூங்கலையா? இந்நேரம் நல்லா தூங்ககிருப்பிங்கன்னு நினைச்சேன்” என்றவள் விரிப்பை சரிசெய்து படுத்துக்கொண்டாள்.

நிகா அவளது கையில் கிள்ளியவள்,

“ஏண்டி பிசாசே, வாயடிக்காம வந்து படுன்னு சொன்னேன்ல” திட்டினாள்.

“அக்கா அந்த காம்ப்ளான் பேபிய பார்த்தா பேசாம வர முடியலைக்கா. ரொம்ப க்யூட்டா இருக்கா. உங்களுக்கு என்ன? கண்ண மூடுனா கனவுல நூவன் சார் வந்துடுவாரு. நமக்கு தான் ஒண்ணும் சிக்கலையே? “என்றவளின் பேச்சு, ஏனோ அந்நேரத்தில் கிரியை நினைத்தது.

நிகா அருகில் இருந்த தலையணையை எடுத்து அவளை மொத்தியவள், ” வரவர உனக்கு வாய்கொழுப்பு கூடிப்போச்சுடி. எதை வச்சு இப்படிலாம் பேசுற நீ? ” அடித்ததில் மூச்சு வாங்கியது அவளுக்கு.

“எல்லாம் மதியம் லிஃப்ட்ல நடந்த சம்பவத்தை வச்சு தான். பழைய அக்காவா இருந்தா இந்நேரம் முகத்துக்கு நேரா, அப்படியெல்லாம் எதுவுமில்லைன்னு சொல்லியிருப்பிங்க? ஆனால் இப்ப, ஏன் இப்படி பேசறனு தான் கேட்குறிங்க? நானும் வளர்ந்துட்டேன்கா, உங்க உயரத்துக்கு இல்லைன்னாலும், ஆனந்தியை விட நான் கூட தான் வளர்ந்துருக்கேனாக்கும்” இரவுஉடையின் காலரை தூக்கி விட்டவளை கண்டு சிரிப்பு வந்தாலும், தன்னை சரியாக கணித்தவளின் அன்பு அவளை மெய்சிலிர்க்க செய்ய, அவளை கட்டிக்கொண்டாள் நிகா.

அவளது அணைப்பு உண்மையை இப்பொழுது தெளிவுபடுத்த, “நூவன்சார் நல்ல சாய்ஸ்கா. நான்கூட சேனாசார் உங்களை அவர்பக்கம் திருப்பிடுவாருன்னு நினைச்சேன்” என்றவளின் பேச்சில் நிமிர்ந்தவள்,

“ஹ்ம்ம்… அவரோட சில செயல்கள்ள எனக்கும் புரிஞ்சுது ரஞ்சு. ஆனால் சேனாசாரை என்னால அப்படி நினைச்சுகூட பார்க்க முடியலை. நல்ல நட்பாதான் பார்க்க முடிஞ்சது. அதனாலதான் அவர் சிலசமயங்கள்ள கொஞ்சம் உரிமை எடுத்து பேசும்போது கூட, அதை தெரியாத மாதிரியே தவிர்த்திடுவேன். ஆனால் நூவன் என்கிட்ட அத்துமீறி நடக்கும் போது கூட, என்னால தடுக்க முடியாம போகுது ரஞ்சு” என்றவள் மதியம் லிஃப்டில் நடந்த விஷயத்தை கூறினாள்.

“ம்ம்… மாம்ஸ்  கிடைக்கற கேப்ல எல்லாம் காதலை சொல்லிகிட்டே இருக்காரு. செம வேகம் தான். ஒத்துக்கறதுல உங்களுக்கு என்னக்கா தயக்கம்? “

“எனக்கு அவரை பிடிச்சிருக்கு. ஆனால் காதலான்னு சொல்ல தெரியலை ரஞ்சு. அதுமில்லாம இந்த ஊருக்கு வந்தது இருந்தே இருக்குற ஒரு மனசஞ்சலம் இன்னும் குறையலை. ஏதோ நான் தெரிஞ்சுக்கனும்னு என் உள்ளுணர்வு சொல்லுது. அதுவரைக்கும் என்னால தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியாது” என்றவளின் மனக்குழப்பம் அவளுக்கும் புரிந்தது.

“எப்படியோ நீங்க நல்லா சந்தோஷமா இருக்கனும்கா. நூவன் சார் உங்களை நல்லா பார்த்துப்பாருங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு”என்றவளின் பேச்சில் நிகாவும் சந்தோஷமாக, இருவரும் சிறிதுநேரம் வேறுவிஷயங்களை பேசிக்கொண்டே தூங்கினர்.

தீனதயாளனின் வீட்டில் வேலைகளை முடித்துவிட்டு, நிவேதாவின் வீட்டிற்கு திரும்பினான் சேனா. ஹாலில் அமர்ந்து தொழிற்சாலையில் அடுத்து தான் புதிதாக மேற்கொள்ளப்போகும் திட்டங்களுக்கான வரைமுறைகளை திட்டமிட்டுக்கொண்டிருந்த கிரிக்கு, இந்நேரத்தில் சேனாவின் வரவு ஆச்சர்யமாக இருந்தது. ஏனென்றால், சேனா இங்குதான் தங்கியிருக்கிறான் என்று இன்னும் மகனிடம் சொல்லாமலிருந்தார் நிவேதா. அது என்னவோ, சிறுவயதிலிருந்தே சேனா குடும்பத்தின் அந்த அளவிற்கு ஒட்டுதல் வரவில்லை அவனுக்கு. சிலரை காரணமில்லாமலேயே பிடிக்காமல் போவதுபோல, புகழ்பெற்ற குடும்பம் என்றாலும் அவர்களோடு அன்னையளவு ஒட்டாது ஒதுங்கி நின்று விடுவான்.

கிரி தன்னை பார்ப்பதை பார்த்து சேனா புன்னகைக்க, வேறுவழியில்லாது தானும் புன்னகைத்தான்.

“என்ன மிஸ்டர் சேனா இந்நேரம் இந்தப்பக்கம்?” என்று கேட்டவனுக்கு பதிலை அவனது அன்னை கூறினார்.

“சேனா இங்கதான் தங்கியிருக்கான் தம்பி. நீ ஊர்ல இருந்ததால உனக்கு சொல்ல மறந்துட்டேன்” இரவு உணவை எடுத்து வைத்துவிட்டு மகனை சாப்பிட அழைக்க வந்தவர் கூறிய பதிலில், கிரிக்கு எரிச்சல் வந்தது.

இருந்தாலும் அவனது முன்னால் எதையும் பேச முடியாது என்பதை கருத்தில் கொண்டவனாக,

“ஓ சாரி சேனா. நீங்க இங்க தங்கியிருக்கிறது எனக்கு தெரியாது. அதனாலதான் நான் அப்படி கேட்டேன்?”

“பரவாயில்லை கிரி. எப்படி போகுது தொழிலெல்லாம்?? பரம்பரை பரம்பரையா உங்க முன்னோர்கள் பார்த்துட்டு வர விவசாயத்தை இன்னும் அதோட தரம் குறையாம பார்த்துக்குற உங்களோட கடும் உழைப்பு பாராட்டுக்குறியது” மனதார பாராட்டியவனை  கண்டு  முகம் திருப்ப அவனால் முடியவில்லை.

“மித்த தொழில்கள் பார்த்தாலும், இதுல கிடைக்கற ஆத்ம திருப்தியே தனி. ஆனால் பார்க்குற வேற தொழில்கள் தான் இதுல நஷ்டம் முதலீடு செய்றதுக்கு உதவியாக இருக்கு. இதை ஒவ்வொரு விவசாயியும் புரிஞ்சுகிட்டா நிச்சயம், இயற்கை ஏற்படுத்துற நஷ்டத்துல இருந்து தப்பிக்க முடியும், விவசாயத்தையும் தரமா செய்ய முடியும். விவசாயத்தை மட்டும் பிரதான தொழிலா பார்க்காம வருமானம் வர்ற மாதிரி, சின்ன சின்ன தொழில்களையும் அவங்க கைவசம் வச்சுக்கிட்டா, பயிர் நஷ்டம்னு கையேந்தி நிக்க வேண்டிய  நிலை வராது. இயற்கையை நம்மாள கட்டுப்படுத்த முடியாது. ஆனால் நாம மேற்கொள்ளும் எந்த விஷயமும், நம்ம கட்டுக்குள்ள வச்சுக்க முடியும்”கிரியின் நீண்ட விளக்கத்தில் , சேனாவின் பார்வையில் மெச்சுதல் கூடியது.

“கண்டிப்பா இதை புரிஞ்சுகிட்டா எல்லாராலயும் விவசாயம் பண்ண முடியும். எவ்வளவு சம்பாத்தியம் பண்ணாலும் சாப்பாடு தான் சாப்பிட முடியும்? பணத்தையா சாப்பிட முடியும்?” என்றவன் பதிலில், சிரித்தான் கிரி.

“வக்கீல் பழக்கம் எது மட்டும்னு தெரியல?? ஆனால் நல்லா பேசறிங்க சேனா” இருவர் பேசுவதையும் நிவேதா சிறிது நேரம் ரசித்துக்கொண்டிருந்தவர்,

“சரி வாங்க இரண்டு பேரும் சாப்பிடலாம்” அழைத்து அமர வைத்தவர், உணவை பரிமாற, அதன்பின்பு பொதுப்படையான பேச்சுக்களில் உணவை முடித்தார்கள். சேனாவும் , அன்னையும் தங்களது அறைக்கு ஓய்வெடுக்க சென்றுவிட,எவ்வளவு தான் இன்று நன்றாக பேசினாலும் கிரியின் மனது மட்டும் , “காரணமில்லாது சேனாவின் வரவு இருக்காது ” அடித்துச் சொல்லியது.

மறுநாள் பொழுது எப்பொழுதும் போல் விடிய, இன்று ரஞ்சனி எழுந்திருக்கும் போதே , சமையலறையில் ஆனந்திக்கு உதவிக்கொண்டிருந்தாள் நிகா.

பரபரப்பாக சமையல் செய்து கொண்டிருந்தவர்களை பார்த்தவள்,

“க்கா… என்னையும் எழுப்பிருக்கலாமில்லையா? நானும் உதவி பண்ணிருப்பேன்” தூக்கக்கலக்கத்துடன் உள்ளே நுழைந்தாள்.

“நீயும் உதவி பண்ணித்தான் ஆகனும் ரஞ்சு. சமையல்காரன் முடிஞ்சிருக்கு. நான் போய் குளிச்சுட்டு வர்றதுக்குள்ள, மதிய சாப்பாடு கட்டிட்டு, ஒதுங்க வச்சு, சுத்தம் பண்ணிக்குடு ஆனந்திக்கு” என்றவள் குளிக்க சென்றுவிட்டாள்.

“க்கா‌…. நீங்க ஒண்ணும் பண்ண வேண்டாம். நான் பார்த்துக்குறேன். நீங்களும் போய் ரெடி ஆகுங்க” ஆனந்தி அவள்மீது அக்கறை காட்டி பேச,

“ச்சோ…  காம்ப்ளான் பேபி, அநியாயத்துக்கு நல்ல புள்ளையா இருக்கியே, உன் லவ் டார்ச்சர் தாங்க முடியலை. இன்னைக்கு நான்தான் வேலை பார்ப்பேன். நீ உன் முடியை மட்டும் என் கண்ணுல படாம இந்த பேக்குள்ள ஒளிச்சு வச்சுக்கோ” என்றவள், அருகிலிருந்த துணிப்பையை குடுக்க, வெடித்து சிரித்தாள் ஆனந்தி.

“போங்கக்கா, எப்ப பார்த்தாலும் கலாட்டா பண்ணி சிரிக்க வச்சுடுறிங்க?” என்றவள், அவள் மறுத்தாலும் கூட இருந்து உதவி செய்துவிட்டு தான் சென்றாள்.

ஒருவழியாக அலுவலகத்துக்கு கிளம்பி சென்றவர்களுக்கு, அன்று காலை  முழுவதும் வேலை சரியாக இருந்தது.

இடையில் நிகா”ரஞ்சு இந்த ப்ராஜெக்டோட இன்னொரு காப்பி எம்.டி கிட்ட இருக்கும் , வாங்கிட்டு வந்துடுறியா? நான் இப்ப நகர முடியாது. கோடிங் ஓடிட்டுருக்கு”என்று அனுப்பி வைத்தாள்.

நூவனின் அறைக்கு சென்று கதவை தட்டிய வள், அனுமதிக்காக காத்திருந்தாள். பத்து நிமிடங்கள் வரை எந்தவித சத்தமும் இல்லாது போக,  கதவை திறந்து உள்ளே சென்றாள். அதேநேரம் நூவனின் மற்றொரு அறை வாயிலாக உள்ளே வந்திருந்தான் கிரி.

நூவனைப்பார்க்க வந்தவளுக்கு, கிரியைப்பார்தது அதிர்ச்சியாக, வந்த வழியே திரும்ப போனவளை இடைமறித்தது கிரியின் குரல்.

“நில்லு ரஞ்சனி. எதுக்கு என்னைப்பார்த்து ஓடிக்கிட்டே இருக்க?” அவனது கேள்வியில் தானாக திரும்பிப்பார்த்தாள் ரஞ்சனி.

முத்தெடுத்த பின்பு மூழ்குகிறேன் உலராத முதல் முற்றுகையால்..‌..

திமிராகும்…..

அத்தியாயம்-15

அவனது கேள்வியில் திரும்பியவள், நிதானமாக அவனை நோக்கி நடந்து வந்தாள்.

“உங்களை பார்த்து நான் ஓடறேனா?? நீங்க என்ன சிங்கமா புலியா? உங்களை பார்த்து நான் பயந்து ஓட? நான் ஒதுங்கிதான் போனேன்” என்றவள் கையில் இருந்த மொபைல் பவுச்சை பார்த்தவள், மொபைலை எடுத்துவிட்டு எதையோ அதில் தேடியவள், விமானத்தில் அவன் கொடுத்த கார்டை எடுத்து அவன்முன்னே தூக்கியெறிந்தாள்.

அவளது செயல்களை அமைதியாக கவனித்துக்கொண்டிருந்தவன், ” சரி நான் கேட்டது தப்புதான். இப்ப மாத்தி கேக்கறேன்? விமானநிலையத்தில என்கூட நல்லா பேசிட்டு வந்துட்டு, திரும்ப நான் கூப்பிட்டப்போ எதுக்கு கண்டுக்காம போன?இடைப்பட்ட  பயண நேரத்துல அப்படி என்ன நடந்தது? “துடுக்காக பேசியும்,  நிதானமாக கேள்விகேட்டவனை பார்க்க வியப்பாக இருந்தது.

“ஓகே தெரிஞ்சுக்கங்க. நீங்க கொடுத்த விசிட்டிங் கார்ட பார்த்து நீங்க வாசன் குடும்பத்தை சேர்ந்தவர்னு தெரிஞ்சுகிட்டேன். ஸ்ரீனிகா அக்காவிற்கும்  அவங்க அம்மாவிற்கும் அநியாயம் செஞ்ச உங்களோட எனக்கு பேச விருப்பமில்லை. அதனாலதான் உங்களை கண்டுக்காம திரும்பி வந்தேன்” என்றவளின் விளக்கத்தில் கிரியின் முகம் வாடியது. இருந்தாலும் தன்பக்க விளக்கத்தை கொடுக்க விரும்பியவனாக,

“ஓ… இதுதான் காரணமா?  நீ சொல்றதெல்லாம் நியாயம் தான் ரஞ்சனி. ஆனால் பெரியவங்க செஞ்ச தப்புக்கு நான் எப்படி பொறுப்பாவேன்?” என்று கேட்டான்.

“நீங்கதான் பொறுப்பு. உங்க அம்மாவாலதான் இன்னைக்கு அக்கா அனாதையா நிக்குறாங்க. இப்பவும் கூட சொத்த கொடுக்க கூப்பிட்டிருக்கிங்களே தவிர, நீங்க செஞ்ச தப்புக்கு மன்னிப்பா கேட்டிங்க? ஏன் உங்க அப்பாக்கு கூடவா அந்த பாசமில்லாம போச்சு? இத்தனை வருஷத்துல ஒருதடவை கூட அக்காவ பார்க்கனும்னு முயற்சி செய்யலயே? சாகும் போது மட்டும் எப்படி சொத்து கொடுக்க மனசு வந்தது? சொத்து கொடுத்துட்டா எல்லாம் சரியா போயிடுமா? ” படபடவென்று பேசிய நியாயம் பேசிய ரஞ்சனி கிரியின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தாள்.

மெதுவாக நடந்து அவளருகே வந்த கிரி, நூவனின் மேஜையில் இருந்த தண்ணீர் பாட்டிலை அவளது கையில் திணித்தான்.  அவளுக்கு அப்பொழுது தண்ணீரும் தேவைப்பட, வேகமாக அதை திறந்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்தாள்.

அந்த நிலையிலும் அவளது செய்கையை பார்த்து அவனுக்கு சிரிப்பு வர, முயன்று அடக்கினான்.

“என்ன எல்லாம் கேட்டு முடிச்சுட்டியா? நீ சொல்றது எல்லாமே நியாயம்தான். தப்பு எங்க மேலயும் தான். ஆனால் எல்லாமே உடனே சரி செய்யவும் முடியாது. வெளிய இருந்து பார்க்கும் போது, இது உறவுகள் சம்பந்தப்பட்ட விஷயமா தோணலாம்.

ஆனால் இது எல்லாருடைய உணர்வுகளும் சம்பந்தப்பட்ட விஷயமும் கூட, எடுத்தோம் கவிழ்த்தோம்னு எந்த முடிவும் எடுக்க முடியாது. சரி செய்ய முயற்சி பண்ணாகூட, அதுக்கும் கால அவகாசம் நிறையவே தேவைப்படும். இந்த விஷயத்துல நான் சில முடிவுகள் பண்ணியிருக்கேன். அதுக்கு உன்னோட உதவியும் தேவை ரஞ்சனி” என்று கோரிக்கை வைத்தவனை, விசித்திரமாக பார்த்தாள் அவள்.

“இ..இதுல நான் என்ன உதவி  செய்ய முடியும்? ” அரைநம்பிக்கையுடனே அவனிடம் கேட்க,

“உன்னால் மட்டுந்தான் முடியும்” என்றவன் ஸ்ரீனிகாவை , தந்தையின் சடங்கிற்கு அழைக்கும் முடிவை பற்றி கூறினான்.

“நிஜமாத்தான் சொல்றிங்களா?” இன்னும் நம்ப முடியவில்லை அவளால்.

“உண்மையாதான் சொல்றேன். அவ சீக்கிரமே எங்க குடும்பத்துல ஒருத்தியாவும் ஆகப்போறா” என்றவன் நூவனின் காதலை பற்றி கூறினான்.

“ஹா.. இவ்வளவுதானா? இந்த விஷயம் எனக்கு ஏற்கனவே தெரியுமே… நூவன் மாம்ஸ் அதிரடியாக இருக்காரு” என்றவளின் முகத்தில் சந்தோஷம் குமிழிட, கிரியின் முகம் யோசனையானது. அவனை கவனிக்காது மேலும் பேசிக்கொண்டே போனாள் ரஞ்சனி.

“மாம்ஸ பார்த்தாலே தெரியுது எத்தனைபேர்னாலும் சமாளிச்சுடுவாருன்னு. அக்கா மனசையே ஜெயிச்சுருவாரு போலயே?” என்று சிலாகிக்க ஆரம்பித்தவளை இடைமறித்தான் கிரி.

“போதும் நிறுத்து. அவனை மாமா சொல்லாத அண்ணான்னு சொல்லு” எரிச்சல் மிகுந்த அவன் முகத்தை பார்த்தவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.

“ஏன் நான் என் இஷ்டப்படி தான் கூப்பிடுவேன்” மல்லுக்கு நின்றவளை பார்த்தவன்,

“அதெல்லாம் முடியாது. நீ அண்ணான்னு கூப்பிட்டாதான், நான் அவங்க காதலுக்கு ஆதரவு குடுப்பேன். இல்லன்னா எதிர்த்து நிப்பேன். நான் சொன்னா நூவன் கேட்பான்” என்று பேசியவனின், தலைமுடியை பிய்த்து ஆட்டும் வேகம் வந்தது ரஞ்சனிக்கு.

“என்ன முடிய பிடிச்சு ஆட்டலாம்னு யோசிக்கிறியா ? நான் ரெடி. ஆனால் நான் சொன்னதை கேட்டாதான்” என்று நிபந்தனை விதித்தான்.

முகத்தை அஷ்டகோணலாக்கியவள் “ம்ம்.சரி” என்று ஒப்புக்கொண்டாள்.

அவளது சம்மதம் மனதை இறக்கைகட்டி பறக்க வைக்க, “ம்ம்..அப்பறம் உனக்கு அடிக்கடி ஃபோன் பண்ண வேண்டியிருக்கும். அதனால் உன் நம்பர் குடு, சேவ் பண்ணிக்கிறேன்”உல்லாசமாக கேட்ட அவனது குரலில், அவனை முறைத்துப்பார்த்தாள் அவள்.

“அதெல்லாம் எதுக்கு? நீ இங்க வர்றப்போ சொல்லுங்க போதும்” என்றாள்.

“ஓ..அம்மணிய பார்க்க, நான் இங்க வரனுமோ ? அதெல்லாம் முடியாது. இனி நீ நான் கூப்பிடற இடத்துக்கெல்லாம் வரனும், நான் ஃபோன் பண்றப்ப எல்லாம் பேசனும். ஸ்ரீனிகாக்காக இதை கூட செய்ய மாட்டியா? இல்லை என்னைப்பார்த்தா பொறுக்கி மாதிரி தெரியுதா? ” சற்று காட்டமாகவே வந்த பதிலடியில் தானாகவே முன்வந்து எண்ணைக் கொடுத்தவள்,

“இப்ப நான் போகலாமா?” முகத்தை சோகமாக வைத்துக்கொண்டவளை காண ஒருமாதிரி இருக்க,

“ம்ம்.. போலாம். போறதுக்கு முன்னாடி இந்த மாமாவுக்கு முத்தம் கொடுத்துட்டு போ” என்றவனை பார்த்து பேந்த விழித்தாள் ரஞ்சனி.

“என்ன முழிக்கற? என்ஜேக்கு தங்கச்சி எனக்கு கட்டிக்கற முறைதான்… அதனால முத்தம் கொடுக்கலாம் தப்பில்லை” அருகில் நின்று  சிரித்தவனை பார்த்து வெட்கம் வர,

“ரொம்ப ஓவராத்தான் போறிங்க” என்றவள், அவன் சுதாரிப்பதற்கு முன் தள்ளிவிட்டு ஓடிவிட்டாள்.

அப்பொழுததான் அந்த தளத்திற்கு வந்து கொண்டிருந்த நூவன், தனது அறையிலிருந்து ஓடிக்கொண்டிருந்தவளை பார்த்தவன் ” ரஞ்சனி” என்று கூப்பிட்டும் அவள் காதில் விழாமல் போக ஓடிவிட்டாள்.

அறையை திறக்க, கையில் வைத்திருந்த ஃப்ளாப்பியை அதன் உறைக்குள் வைத்துக்கொண்டிருந்தான் கிரி.

“ஹே.. என்ன மச்சி பண்ண, ரஞ்சனி இந்த ஓட்டம் ஓடறா? என்னடா ஆச்சு?”

“ஒண்ணும் ஆகலை. அவளை கொஞ்சம் வம்பிழுத்தேன்” என்றவன், பொருளை தனது பைக்குள் வைத்தவன், நடந்த விஷயத்தை கூற,

“என்ன, அப்ப நிகாவுக்கும் என்னைப்பிடிச்சிருக்குடா மச்சி” என்றவன் நண்பனை தழுவிக் கொண்டான்.

“டேய் உனக்கு எப்பவும் உன் காரியம்தான்டா முக்கியம். நான் என் ஆள பத்தி சொன்னா, நீ உன் ஆள நினைச்சு சந்தோஷப்படற..  நல்லா வருவடா” கிரி உணர்த்த தவறவில்லை.

அவனை விடுவித்தவன் ” ரஞ்சு ஸ்வீட் கேர்ள்டா. நிகான்னா அவளுக்கு உயிர்” என்று கூறியவன்,

“உன்னையும் உயிரா பார்த்துப்பா. வாழ்த்துக்கள் ” ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர் இருவரும், இருவரது தாய்மார்களும் வெவ்வேறு திட்டங்களில் இருப்பதை அறியாது.

உஷாந்தினியின் முந்தானையைப்பிடித்து சுற்றிக்கொண்டிருந்தாள் ப்ரிஷா.

“அத்தை , அந்த வைர கண்காட்சிக்கு நேரமாச்சு. வாங்க கிளம்பலாம்” ஞாபகப்படுத்திக்கொண்டு அவர் பின்னோடே அலைந்து கொண்டிருந்தாள்.

ப்ரிஷாவின் தந்தையும் வசதிமிக்கவர் என்றாலும், தங்கையின் தற்போதைய செல்வநிலைக்கு, அவர்களுடைய வசதிவாய்ப்புகள் குறைவே.

ப்ரிஷாவிற்கு நகைகளின் மீது தீராத காதல். அதற்காகவே உஷாந்தினியின் பின்னேயே திரிந்து தனது காரியத்தை சாதித்துக் கொள்வாள். ஜெயப்பிரகாஷிற்கு இந்த விஷயம் தெரிந்தாலும், சின்னப்பெண் ஆசைப்படுகிறாள் ன்று விட்டுவிடுவார். ஆனால் நூவனின் கைகளுக்கு பொறுப்புகள் மாறிய பிறகு, முதலில் எண்ணியதை எல்லாம் வாங்கியவளால், தற்போது வாங்க முடியவில்லை.

உஷாந்தினியின் கிரெடிட், டெபிட் கார்ட் முதற்கொண்டு அவளது கைகளில்தான் இருந்தது. இஷ்டத்திற்கு செலவு செய்தவளை, நூவன் மறைமுகமாக கண்டித்துவிட, அதன்பிறகு, அவர்கள் ஷாப்பிங் செய்யும் பில் கம்பெனியின் பொறுப்பில் நூவனின் கண்காணிப்பிற்கு சென்றுவிடும்.

இன்று அவள் வாங்க ஆசைப்படும் வைரமோ, பல கோடி மதிப்புடையது. எப்படியாவது உஷாந்தினியின் அண்ணன் மகள் பாசத்தை வைத்து, இன்று அந்த நகையை வாங்கி விட வேண்டுமென்று முடிவு செய்திருந்தாள்.

ஹர்ஷத் அதிசயமாக சற்று நேரம் வீட்டிற்கு ஓய்வெடுக்க வந்தவன், அன்னையின் பின்னாடியே சுற்றிக்கொண்டிருந்தவளை கண்டு எரிச்சல் வரப்பெற்றவனாக,

“ஹேய்…பீட்சா .எதுக்கு இப்படி ஒட்டுப்புல்லு மாதிரி அம்மா பின்னாடியே சுத்திட்டுருக்க?” என்று கேள்வி கேட்க, அவனைப் பார்த்து முறைத்தவள், தனது அத்தையிடம்,

“அத்தை பாருங்க இந்த ஹர்ஷத் என்னை ஒட்டுப்புல்லுன்னு சொல்லுது” வராத அழுகையை வரவைத்தாள் அவள்.

“யப்பா.. உலக நடிப்புடா ….” ஹர்ஷத் அவளை கிண்டலடிக்க,

“ஏன்டா அவளை வம்பிழுத்துக்கிட்டே இருக்க. உன்னைவிட ஒரு வயசு பெரியவ, உனக்கு அண்ணியா வரப்போறவளுக்கு மரியாதை கொடுத்து பேசு” கண்டித்தார் உஷாந்தி.

“அடப்போங்கம்மா. உங்க கஜானாவ காலி பண்ணாம இவ கிளம்ப மாட்டா போலவே”

“என்னடா சொல்ற? “மகனுக்கு சாப்பிட சிற்றுண்டி எடுத்து வந்து வைத்தார் அவர்.

“அவ கேக்குற வைர ஆரம் இரண்டரை கோடிம்மா” உண்மையை போட்டுடைத்தான் அவன்.

“என்ன ரிஷா? தம்பி சொல்றது உண்மையா? நீ என்கிட்ட பொய் சொன்னியா?” அண்ணன் மகளை பார்த்து கேட்க, அவள் தலையை குனிந்து கொண்டாள்.

“நினைச்சேன் இவ பொய்தான் சொல்லியிருப்பான்னு? என்ன இருபது லட்சம்னு சொன்னாளாம்மா?” சரியாக கணித்து கேட்ட மகனை மனது மெச்சினாலும், அண்ணன் மகளது தற்போதைய செயல்கள் அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்த ஆரம்பத்திருந்தது.

“எவ்வளவு சரியா சொல்றான் பார்த்தியா ரிஷீம்மா? அத்தை நீ கேட்டதெல்லாம் செய்றேன்தானே? ஏன் பொய் சொன்ன?” உஷாந்தினியிடம் பொய் சொன்னால் மட்டும் தப்பிக்கவே முடியாது.

அதற்கும் அமைதியாக அவள் நின்றிருக்க,

“சொல்லு கேக்கறேன்ல? ஏன் இப்படி நடந்துக்கற?” இந்த கேள்வியில் ப்ரிஷாவின் மனம் சுதாரித்தது.

இப்படி கேள்வி கேட்கும் அத்தை அவளுக்கு புதிது, அவளது சமீப கால நடத்தைகளை வைத்துதான் இந்த கேள்விகளை கேட்கிறார் என்பதை புரிந்து கொண்டாள்.

இப்பொழுது அவரை சாந்தப்படுத்துவதே முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டவள், கண்களில் கண்ணீர் விட்டபடியே ,

“எனக்கு ரொம்ப ஆசையா இருந்தது அத்தை. அதனாலதான் அப்படி சொல்லிட்டேன். எனக்கு அது வேண்டாம். என்னை மன்னிச்சுடுங்க” என்று கூற, அதற்கு மேலும் உஷாந்தியின் கோபம் தாக்குப்பிடிக்குமா??

அவளின் கண்ணீரில் அவரது கோபம் சென்றுவிட, அவளை அழைத்து தன்னருகே அமர வைத்தவர்,

“இனி இப்படி செய்யக்கூடாது?  சரியா ரிஷூம்மா?” என்றவரின் தோளில் சாய்ந்து கொண்டவள், சிறிது நேரம் கழித்து,

“என்னை பொய் சொல்லக்கூடாது சொல்றிங்கள்ள அத்தை? நூவன்மாமா மட்டும் அந்த பொண்ணை பார்க்க மாட்டேன் சொல்லிட்டு, இப்ப அவரோட ஆஃபிஸ்கே கூப்பிட்டு வச்சுருக்காரு” சிறுபிள்ளை முகத்துடன் புகாரளித்தவளை கொல்லும் வெறி வந்தது ஹர்ஷத்திற்கு.

திரும்பி தனது அன்னையின் முகத்தை பார்க்க, எதிரே இருந்த சுவற்றை வெறித்துக்கொண்டிருந்தது உஷாந்தினியின் விழிகள்.

காலையிலிருந்து நிகாவை பார்க்காமல் இருந்தவனுக்கு, இப்பொழுது கிரிமியன் மூலம் அறிந்த விஷயத்தால், உடனே காணவேண்டுமென்ற ஆவல் மேலோங்க, நேரம் என்னவென்று தனது கடிகாரத்தை திருப்பி பார்த்தவனின் கண்கள், காலையிலேயே நிகாவிடம் சேர்க்க சொன்ன ப்ரொஜெக்டின் மற்றொரு காப்பி, அவனது மேஜையில் இருந்து அவளை அங்கு வரவைப்பதற்கான வழியை காட்டியது.

ரஞ்சனி அவசரமாக ஓடிவந்தவள், தனது இருக்கையில் அமர்ந்து கொள்ள, ஆழ்ந்த மூச்செடுத்து சுற்றும் முற்றும் பார்க்க, அவளுக்கு சில நிமிடங்கள் எடுத்தது.

நிகாவைப்பார்க்க, சரியாக அந்நேரம் அவளும் ரஞ்சுவைப்பார்த்தவள், “ஃபைலை குடுடி” என்று கையை நீட்டினாள்.

“அக்கா எம்.டி ரூம்ல இல்லக்கா. கிரி சார் தான் இருந்தாரு. அதனால நான் வந்துட்டேன்” தட்டுத்தடுமாறிய கூறியவளின் பேச்சை இப்பொழுது கவனித்தாள் நிகா.

“அப்போ இவ்வளவு நேரம்… “அங்க என்ன பண்ணிட்டிருந்த என்று கேட்டு முடிப்பதற்குள், அவளின் அலைபேசி ஒலிக்க, நூவன்தான் அழைத்துக் கொண்டிருந்தான்.

“இவனுக்கு மூக்குல வேர்த்துடுமே?” திட்டிக்கொண்டே அழைப்பை எடுத்தாள் அவள்.

“என்ன மிஸ்.நிகா காலையிலேயே எடுத்துக்க சொன்ன ஃபைலை இன்னும் எடுக்காம இருக்கிங்க? உடனடியா என் கேபின்கு வாங்க” என்றுவிட்டு வைத்துவிட்டான். ரஞ்சுவை ஒரு பார்வை பார்த்தவள் நூவனின் அறைக்கு எழுந்து சென்றாள்.

விடைபெறும் வேளையெல்லாம் பரிசாய் பெறுகிறேன் பொக்கிஷமான தருணங்களை……..

திமிராகும்……

அத்தியாயம்-16:

“நான் சொல்றது உண்மை அத்தை. இந்த விஷயத்தை இப்ப நம்ம ஊர்ல இருக்க எல்லாரும் பேசிக்கிறாங்க. மாமா அந்த பொண்ணை தண்ணீல விழுந்தப்போ கூட இருந்து காப்பாத்தியிருக்காரு. இந்த விஷயமும் உங்களுக்கு தெரியாது” அவள் சொல்ல சொல்ல, உஷாவிடம் எந்த எதிர்வினையும் இல்லாது இருக்க, ஹர்ஷத்திற்கு பதட்டமானது.

“ஹேய்… சொன்ன வரைக்கும் போதும் நீ முதல்ல எந்திரிச்சு உள்ள போறியா? ” அவளை அந்த இடத்திலிருந்து அப்புறபடுத்த முயன்றவனை பார்த்து ஏளனமாக ஒரு புன்னைகையை உதிர்த்தவள், மேலும் தொடர்ந்தாள்.

“இதெல்லாம் கேட்டதுலருந்து மனசுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா அத்தை? மாமா மேல நான் எவ்வளவு ஆசை வச்சுருக்கேன்னு உங்களுக்கு தெரியுல்ல?” என்றவள் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்.

உஷாந்தி இளைய மகனை பார்த்தவர்,

“இவ சொல்றது உண்மையா? அவள காப்பாத்தனது எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் அவங்க நூவன்கிட்டயா வேலை பார்க்குறாங்க? ” என்று கேட்டார்.

சூழ்நிலையை உணர்ந்து, அன்னையிடம் உண்மையை சொல்லிவிடுவதே மேல் என்று நினைத்த ஹர்ஷத், “ஆமாம்மா. இங்க வேலை பார்க்குறாங்க. ஆனா அவங்க முதல்ல வேலை பார்த்த டெக்னா நம்ம கூட பார்க்கற ப்ரொஜெக்ட்டுக்கு இங்க முடிச்சுக்குடுக்க வந்துருக்காங்க. வேலை முடிஞ்சதும் திரும்ப “டெக்னா”க்கே போயிடுவாங்க. இதுக்கும் அண்ணாக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றவனின் பதில் அவரது மனதை குளிரச்செய்து விட்டது.

அதுவரை அவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்த ப்ரிஷா, உஷா அவள் புறம் திரும்பவும், வராத கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.

அவளின் செய்கைகளை கவனித்தவர்,

“இந்த விஷயம் உனக்கு எத்தனை நாளா தெரியும் ப்ரிஷா?” விட்ட அம்பு அவள்புறமே திரும்புமென்று அவள் நினைக்கவில்லை.

“அ..அதுவந்து..அத்தை” வார்த்தைகளை மென்று முழுங்கினாள்.

“எனக்கு தேவை உண்மையான பதில்” உண்மை என்பதில் அழுத்தம் கொடுத்து கேட்டவரிடம், பொய் சொல்ல முடியாது என்பதை உணர்ந்து கொண்டாள்.

“நடந்த அன்னைக்கே தெரியும்” உண்மையை கூறினாள்.

“அப்ப ஏன் நீ என்கிட்ட நடந்த அன்னைக்கே சொல்லல?” அவரது அடுத்த கேள்வியில் ப்ரிஷா முழிக்க, ஹர்ஷத்துக்கு குஷியானது.

“சொல்லு.. அன்னைக்கே ஏன் சொல்லலை? என் பிள்ளை மேல ப்ரியம் இருக்கறவன்னா, அன்னைக்கே வந்து சொல்லியிருக்கனுமில்லையா? இல்லை அவன் மேல நம்பிக்கை இருக்கு, யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டேன்னு சொல்லியிருந்தா, எங்க வீட்டு பொண்ணு மாதிரி யாருமில்லைன்னு, நானும் பெருமைபட்டிருப்பேன்.

ஆனால் இப்ப நீ பேசுனது, விஷயத்தை தெரிஞ்சு வச்சுகிட்டு, தேவைப்படற நேரம் உபயோகப்படுத்திக்கலான்னு பேசற மாதிரி இருக்கு. இதுதானா என் பையன் மேல நீ வச்சுருக்கிற மதிப்பு?

என் பிறந்த வீட்டு மேல எனக்கு பாசம் அதிகம்தான். ஆனால் என்பிள்ளைங்களுக்கு முன்னாடி எல்லாரும் ஒருபடி கம்மிதான். இதை நல்லா தெரிஞ்சுகிட்டு நீ நடந்துக்கறதா இருந்தா இங்க இரு. இல்லன்னா சொல்லு, எங்களை விட இன்னும் உயர்வான ஒரு இடத்துல பார்த்து , இரண்டு மடங்கு சீர் செஞ்சு உன்னை கல்யாணம் பண்ணி அனுப்பி வைக்கிறேன்” ஆழ்ந்த குரலில் நிதானமாக பேசிய அன்னையின் பேச்சிற்கு, கை தட்ட வேண்டும் போலிருந்தது ஹர்ஷத்திற்கு. ஆனால் இப்போது எப்படி நடந்து கொண்டாலும், எதிர்வினை எப்படி  இருக்குமென்று புரியாததால் அமைதியாக அமர்ந்திருந்தான்.

அத்தையின் இந்த புதிய அவதாரம், உட்சபட்ச அதிர்ச்சியாக இருக்க, இப்பொழுது உண்மையாகவே கண்ணீர் வழிந்தது அவளது கண்களில்.

“அ..அத்தை” என்று பேச முயன்றவளை, கை நீட்டி தடுத்தவர்,

“இத்தனை நாள் நீ சின்னபிள்ளைதனமா நடந்துக்கறன்னு நினைச்சேன். ஆனால் இன்னைக்கு நீ சின்னபிள்ளை இல்லைன்னு நிரூபிச்சுட்ட? என் மதிப்புல ஒருபடி கீழே இறங்கிட்ட ப்ரிஷா. போ.. கொஞ்சநேரம் போய் உன் ரூம்ல உட்கார்ந்து நீ பண்ண தப்பு என்னன்னு யோசி” என்றவர் அவரது அறைக்கு எழுந்து சென்றுவிட்டார். அன்னையின் இந்த புதுஅவதாரத்தில், மழை பெய்ந்து ஓய்ந்தது போல் இருந்தது ஹர்ஷத்திற்கு.

நூவனின் அறைக்கதவை தட்டியவள், பதிலுக்காக வாயிலில் காத்திருந்தாள். இரண்டு நிமிட தாமதத்திற்கு பிறகு,

“உள்ள வாங்க நிகா” என்ற நூவனின் குரல் கேட்க, அறையில் மற்றொருவரும் அவனுடன் அமர்ந்திருந்தார்.

அவளை அமருமாறு சைகை செய்தவன் , ” இந்த காலாண்டு அறிக்கை , இதை சரிபார்த்துட்டு தினசரில வர்றதுக்கு ஏற்பாடு பண்ணுங்க ஆடிட்டர் சார்” அவன் கொடுத்த பேப்பர்களை தனது கோப்பில் அடக்கியவர், நிகாவையும் பார்த்து மென்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு சென்றார்.

“இது யாரு?? நம்மள பார்த்து சிரிச்சுட்டு போறாரு?”  என்று அவள் நினைக்க,

“நம்ம கம்பெனி ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தி சார். இருபத்தைந்து வருஷமா இங்க வேலை பார்க்குறார். யாரையுமே புன்னகை முகத்தோட எதிர்நோக்கறது அவரது வழக்கம்” அவள் பார்வை மாற்றத்தை புரிந்து கொண்டு  நீண்ட விளக்கமளித்தான் நூவன்.

அவனது பதிலை சிறிதும் கண்டுகொள்ளாதவள், “ஃபைல் சார்” என்று கையை நீட்டினாள்.

அவனும் ஒன்றும் பேசாது , தனது மேஜையில் இருந்த ஃபைலை எடுத்துக்கொடுக்க, வாங்கிக்கொண்டவள் தன்புறம் இழுக்க, நூவன் அவன்புறம் இழுத்தான்.

“ஆரம்பிச்சுட்டான் இவன் வேலையை” சலித்த உணர்வை முகத்தில் காட்டியவளின் மனமோ, அடுத்து என்ன செய்யப்போகிறானென்று எதிர்பார்க்க ஆரம்பித்தது.

இருவரும் இழுக்க, அவன் விடமாட்டான் என்பதை உணர்ந்தவள், அவன் எதிர்பாராத நேரத்தில் அதை விட்டுவிட, ஃபைலோடு பின்னால் சாய்ந்தவன், கடைசி நிமிடத்தில் சுழல்நாற்காலியோடு கீழே விழாது தப்பித்தான்.

“ஏண்டி எப்பபாரு மாமனுக்கு ஏதாவது சேதாரம்  ஆகுறமாதிரியே பண்ணுவியா?” மீண்டும் வம்பிழுக்க ஆரம்பித்தான்.

“நீங்க நடந்துக்கறத பார்த்தா இது ஆஃபிஸ் மாதிரி இல்ல சார்? கொஞ்சம் நிம்மதியா வேலை பார்க்க விடமாட்டிங்களா?”

“இப்பவே சொல்லு இதை தாஜ்மஹால் ஆக்கிடறேன் நிகாபேபி” அவள் கேட்ட கேள்விக்கு சம்பந்தமில்லாது பேசுபவனை கண்டு , விந்தையாக இருந்தது. சற்றுமுன்பு ஆடிட்டரிடம் அவன் காட்டிய தோரணைக்கும், இப்பொழுது அவளிடம் நடந்து கொள்ளும் முறைக்கும் முற்றிலும் முரணாகபட்டது அவளுக்கு.

“ஏன் என்னை கொல்லப்போறிங்களா?” அவள் கேட்க,

“எதுக்கு கொல்லனும்?” எதற்கு இப்படி பேசுகிறாள் என்று தெரிந்தே பேச்சை வளர்த்தான்‌.

“மும்தாஜ் செத்த பிறகு தான ஷாஜகான் தாஜ்மஹால் கட்டுனாரு. அதான் சொன்னேன்” பதில் பேசியவளின் கண்களை காதலோடு பார்த்தவன்,

“ஓ.. அப்ப என் காதலின்னு ஒத்துக்கிறியா நிகாபேபி” என்று கேட்க, அவனது குறும்பு பேச்சு சிரிப்பை வரவைத்தாலும், வெளிக்காட்டாது பேசினாள்.

“உதாரணத்துக்கு சொன்னா அது உண்மையாகிடுமா சார்?”

“உண்மையாக்கி காட்டுறேன் மேடம்” ஆராயும் பார்வை பார்த்தவளை, “என் காதல் உண்மைன்னு” எழுந்து அவளருகே வந்து இடை வரை குனிந்து நிமிர்ந்தவனின் அருகாமை , அவனது வாசத்தையும் காற்றில் உணர வைக்க, புது உணர்வாக இருந்தது நிகாவிற்கு.

நிமிர்ந்து அவளது முகமாற்றத்தை கவனித்தவன் , விளையாட்டாக அவள் முன் விரல்களால் சுடுக்கிட, அருகே கேட்ட சத்தத்தில் விழித்து பார்த்தாள் அவள்.

அதற்குமேல் அவளை சோதிக்க விரும்பாது” ஃபைல் பேபி” அவளது கைகளில் அதை திணிக்க, மௌனமான  தலையுருட்டலுடன் அவனிடம் விடைபெற்று சென்றுவிட்டாள்.தன்னவளை கண்களில் நிறைத்துக்கொண்டவன், அவளுடன் கைகோர்க்கும் நாளுக்கான ஆயத்தங்களை சீக்கிரம் மேற்கொள்ள முடிவெடுத்து, அதை செயல்படுத்தவும் ஆரம்பித்தான்.

சேனாவின் மனம் உலைக்களமாக கொதித்துக்கொண்டிருந்தது. சமீபமாக அவன் கேள்விப்படும் விஷயங்களை அவனாலேயே நம்ப முடியாத அளவிற்கு இருந்தது. இதை அவன் எதிர்ப்பார்க்கவுமில்லை. பல நேரங்களில் அவனது அனுபவத்தில்,  ஸ்ரீனிகாவை இரும்பு மனம் படைத்தவள் என்றே எண்ணியிருக்கிறான்.

யாரும் புகமுடியாத இரும்புக்கோட்டைக்குள் நுழைந்து காதல்மன்னனாக முடிசூடி தன்னவளை காதலால் திக்குமுக்காட செய்யப்போகும் கனங்களை எண்ணி காதல் சொல்வதற்காக காத்திருப்பவனுக்கு, நாளுக்கு நாள் கேள்விப்படும் நூவனின் நடவடிக்கைகள் எரிச்சலைக் கொடுத்தது. அதற்குமேல் விந்தையாக இருந்தது ஸ்ரீனிகாவின் நடவடிக்கைகள்.

யார் கட்டுக்குள்ளும் அடங்காத, நேர்மையுடன் சுயமரியாதை அதிகம் பார்க்கும் அவளது குணத்திற்கு, நூவனின் சீண்டல்களுக்கு, அவளது எதிர்வினையாக இந்நேரம் அவள் அந்த இடத்தை விட்டு வந்திருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு அங்கு‌ வேலை பார்ப்பதும், தான் உதவி செய்கிறேன் என்று போதும் நாசூக்காக மறுத்துவிட்டதும் மனம் நோகச்செய்திருந்தது அவனுக்கு.

இந்தச்சிந்தனையில் தீனதயாளனின் வீட்டிற்கு கூட இன்று அவன் செல்லவில்லை. தான் சற்று கோட்டைவிட்டு விட்டோமோ என்று நினைத்தவனுக்கு, முதலில் நொந்தவனின் மனம், இப்பொழுது அவளை அடைந்தே தீர வேண்டுமென்ற வெறிபிடிக்க ஆரம்பித்தது.

வெகுநேரம் யோசித்துக்கொண்டே இருந்தவனுக்கு அப்பொழுதுதான் , சொத்துக்களை ஏற்றுக்கொள்வதாக ஸ்ரீனிகா வந்த தினத்தன்று அவள் பேசிய பேச்சுக்கள் நினைவு வந்து , மூளையில் பொறி தட்ட ஆரம்பித்தது.

அவள் பேசிய பேச்சுக்கள் அத்தனையையும் ஒன்றுவிடாமல் நினைவு கூர்ந்தவனுக்கு, “அப்போ இந்த சொத்துக்களை நான் வேற ஏதாவது காரியத்திற்கு உபயோகப்படுத்தனுன்னா கூட, ஆறு மாசம்  அங்க தங்கினாதான் முடியும் இல்லையா??”  இந்த கேள்வியில்    ஸ்ரீனிகாவின்  தற்போதைய செயல்களுக்கான விளக்கம் கிடைத்தது.

“சொத்துக்களை ஏதோ நல்லமுறையில் உபயோகப்படுத்த நினைக்கிறாள் ” என்ற காரணம் கிடைக்கவும் மனம் சற்று நிம்மதியானது.

ஆனாலும் இனியும் தாமதித்தால்,எங்கே அவளை அடையமுடியாது போய்விடுமோ, உள்ளுணர்வு உந்த ஆரம்பிக்க, யோசிக்க ஆரம்பித்தவனின் கண்களுக்கு நாட்காட்டியில் மறுநாள் சனிக்கிழமை என்பது கண்களில்பட, நாளையதினம் ஸ்ரீனிகா தனக்கு உதவுவதாக வாக்களித்ததும் நினைவு வந்தது. நாளைய தினத்திற்கு சில ஏற்பாடுகளை செய்தவன், எதிர்பார்ப்புகளேடனே உறங்கச்சென்றான்.

வெற்றியை மட்டுமே யோசித்த சேனா, ஒன்றை மறந்துவிட்டான், வற்புறுத்தி காதலை வரவைக்க முடியாது என்பதை. அவனை ஆராதிக்கும் மங்கையரை மட்டுமே பார்த்து வளர்ந்தவனுக்கு, ஸ்ரீனிகாவின் அலட்சியம் அவள்மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது என்பதை யோசிக்க தவறியவனுக்கு, மறுநாளைய பொழுது மறக்க முடியாத பொழுதாக அமைந்தது.

“தயவுசெஞ்சு இந்த உண்மை மட்டும் தெரிய வேண்டாம் நிவேதா…” இந்த வாக்கியமே தன்னைச் சுற்றி எதிரொலித்துக்கொண்டே இருக்க, இரவின் நிசப்தத்தில் அலறி எழுந்தார் நிவேதா.

அப்பொழுதுதான் குளித்து வந்தது போல், உடல் முழுவதும் வியர்வை ஊற்றாய்ப்பெருக்கெடுக்க, சுற்றுப்புறம் உணர்வதற்கு அவருக்கு சிறிது நேரம் ஆனது, மூச்சுவிட முடியாமல் காற்றுக்கு திணற ஆரம்பித்ததை உணர்ந்தவர், மெதுவாக எழுந்து பால்கனியை திறந்துவிட்டு, சற்றுநேரம் குளிர்காற்றில் நின்றவருக்கு சற்று ஆசுவசமாக இருந்தது.

பின்பு உள்ளே வந்து தண்ணீர் எடுத்து அருந்தியவர், மீண்டும் கட்டிலில் வந்து அமர, தூக்கம் வரவில்லை, மாறாக கண்ணீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது.

எதிரே சுவற்றில்  பார்க்க வாசனின் புகைப்படம், பெரிதாக்கப்பட்டு, மாலை போடப்பட்டிருந்தது.

“உங்க மேல நான் ஆசைப்பட்டது ரொம்ப தப்பு மாமா. நீங்களும் நிம்மதிஇல்லாம வாழ்ந்து, நானும் ஒவ்வொரு நாளும் போராடிக்கிட்டுருக்கேன்” புகைப்படத்தின் முன்பு கண்ணீர்வடித்தவருக்கு, வெகுநேரம் அழுதும் மனபாரம் ஏனோ குறையவில்லை.

“யார் பேச்சையும் கேட்காம நான் எடுத்த முடிவ நினைச்சு நான் வருத்தப்படாத நாளில்லை” வாசனின் புகைப்படத்தின் முன்பு புலம்பியவருக்கு, அன்றைய இரவும் தூங்கா இரவாகவே அமைந்தது.

பல மாற்றங்களை உள்ளடக்கிய விடியலாக, மறுநாளைய பொழுது சோம்பலாக விடிந்தது. சற்று தாமதமாகவே விழித்தனர் ரஞ்சனியும் நிகாவும். நன்றாக அயர்ந்து உறங்குபவர்களை எந்தவித தொந்தரவும் செய்யாது, சமையலுக்கான வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு , சுறுசுறுப்பாக தோட்டவேலைகளை பார்த்து கொண்டிருந்தாள் ஆனந்தி.

முதலில் எழுந்துவந்த நிகாவிற்கு, அவளது சுறுசுறுப்பை பார்த்து மனதிற்குள் மகிழ்ச்சியாக இருந்தது. வந்த இத்தனை நாட்களில் ஒருநாள் கூட, வேலை பார்க்க வேண்டுமே என அவள் முகம் சுணங்கியதில்லை. சோம்பி அமர்ந்தும் பார்த்ததுமில்லை. அவளின் விருப்பபடியே தோட்டக்கலை சம்பந்தப்பட்ட தொழிலை அமைத்துக் கொடுத்தால், அதில் பிரகாசித்து காட்டுவாளென்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க, அவளுக்காக தொழில் தொடங்கி கொடுத்து உதவ வேண்டும் என்று அந்த க்ஷ்ணம் முடிவெடுத்தாள்.

கையில் காஃபியுடன் தன்னருகே வந்தமர்ந்தவளை, பார்த்து ஆனந்தி புன்னைகைத்தவள்,

“ரொம்ப அசந்து தெரியுறிங்களேக்கா. இன்னும் கொஞ்சம் நேரம் கூட தூங்கியிருக்காம்ல. ஆனால் ஒண்ணுக்கா, அந்த குட்டிப்பெட்டியை (லேப்டாப்பை சொன்னவள்) பார்த்துக்கிட்டே இருந்தீங்க, எப்படிப்பட்டவங்களும் களைப்பாகாம இருக்க முடியாது. இதே பாருங்க காலைல இருந்து தூங்கற வரைக்கும் தோட்டத்தில வேலை பார்த்துக்கிட்டே இருந்தா கூட களைப்பே வராது” வயதுக்கு மீறிய அவளது பேச்சில் சிரிப்பு வந்தது நிகாவிற்கு.

“சரிதான் பாட்டியக்கா. இயற்கைக்கு ஈடு இணை கிடையாதுதான்” அவளிடம் பேசிவிட்டு, தொட்டிகளை மாற்றிவைத்து அவளுக்கு உதவ ஆரம்பித்தாள்.

எடுத்து வைத்து கொண்டிருந்தவளின் கால்கள் சற்று வழுக்க,

“அக்கா பார்த்து நடங்க.நேத்து இராவெல்லாம் நல்ல மழை. அதான் மண்ணு இவ்வளவு ஈரமா இருக்கு” அவளின் எச்சரிப்பை காதில் வாங்கிக்கொண்டவளுக்கு, மழை பெய்தைதை கூட உணராது தூங்கியதை நினைத்து கூச்சமாக இருந்தது.

“ஆமாங்க சின்னம்மா. மழை பெய்ஞ்சதால பின்கட்டு சுவரும், விட்டமும் இறங்க ஆரம்பிச்சுடுங்க. அந்த பகுதியை புளங்குறப்போ கொஞ்சம் கவனமா இருங்கம்மா” மதிய சமையலுக்கு தேவையான காய்கறிகளுடன் வந்தார் ராமு தாத்தா.

“வாங்க தாத்தா. உங்களை இந்த இரண்டு மூணு நாளா பார்க்கவே முடியலையே” அவரின் கைகளில் இருந்த பையை வாங்கிக்கொண்டு அவருடன் நடந்துகொண்டே விசாரித்தாள் நிகா.

“ஊருக்குள்ள கொஞ்சம் வேலைங்கம்மா. அதான் போய்ட்டும் வந்துட்டும் இருந்தேன். புது இடத்துல வேலையெல்லாம் சௌகரியமா இருக்குதா சின்னம்மா?” பதிலுக்கு அவளின் நலம்  விசாரித்தார் பெரியவர்.

“ம்ம்… நல்லா போகுது” பதில் சொல்லும் போதே நூவனின் நினைவு வர,  மென்னகையில் முகமும் மலர்ந்தது.

“ஸ்ரீனி அக்கா..‌அக்காஆஆஆ” கத்திக்கொண்டே வெளியே வந்தாள் ரஞ்சனி.

“எதுக்குடி இப்படி கத்திக்கிட்டு வர? “

“சேனாண்ணாகிட்ட இருந்து இதோட பத்து கால் வந்துடுச்சுக்கா. நீங்க ஏதோ லிஸ்ட் குடுத்துட்டு அவருக்கு உதவுறதா சொல்லியிருந்தாங்களாமே.கனவுல யாரோ பாட்டு பாடறமாதிரி இருந்ததுன்னு நானும் முதல்ல கண்டுக்கலைக்கா. அப்பறம் இப்பதான் பார்த்தேன், சேனாண்ணா தான் பேசினாரு. இப்ப கூட லைன்ல தான் இருக்காரு” என்றவள், அவளது கையில் அலைபேசியை திணித்துவிட்டு , தூக்கத்தை தொடர சென்றுவிட்டாள்.

“ரஞ்சனிக்கா.. போதும் போதும் தூங்குனது” அவள் பின்னூடே ஆனந்தி ஓட, அதை பார்த்து சிரித்துக்கொண்டே சேனாவிடம் பேசினாள் நிகா‌.

“சொல்லுங்க சார்” முதல்முறையாக தன்னிடம் சிரித்துக்கொண்டே பேசுபவளை காண, மனம் துள்ளியது.

“மிஸ்.ஸ்ரீனிகா. மெட்டீரியல் டீடெய்ல்ஸோட என்கூட வாங்கிக்கொடுக்கறதுக்கும் வரமுடியுமா? இன்னைக்கே வேலையை முடிச்சுடலான்னு பார்க்கறேன்” என்று கூறினான்.

“நீங்க தான் கால அவகாசம் நிறைய இருக்குன்னு சொன்னிங்களே சார்? ரொம்ப அவசரமா என்ன? இல்லை, ஏன் சொல்றேன்னா டீடெய்ல்ஸ் குடுக்கறதுக்கே அரைநாள் ஆயிடும். அதுக்கு மேல பர்ச்சேசிங் போனாலும் இன்னைக்குள்ள முடிக்க முடியாது” விபரங்களை எடுத்துக்கூறினாள்.

“முடிஞ்ச அளவு பண்ணிட்டு வந்துடலாம் ஸ்ரீனிகா. உங்களால முடியாதுன்னா இன்னொரு நாள் பார்த்துக்கலாம்” அவசரமென்று கூறிவிட்டு இப்படி பேசியவன், புதிராக தெரிந்தான் நிகாவிற்கு.

“எனக்காக நீங்க வேலையை கெடுத்துக்க வேணாம் சார். நான் வரேன்” மனதில் ஒரு முடிவுடனே அவனுடனான இந்த சந்திப்பை ஏற்றுக்கொண்டாள்.

எழுந்து உள்ளே சென்று ரஞ்சனியிடமும், ஆனந்தியிடமும் விவரத்தை கூறியவள், வீடு திரும்புவதற்கு இரவு நெருங்கிவிடுமென்று கூறியவள், காலை உணவை முடித்துக்கொண்டு கிளம்பி விட்டாள்.

காதல் அம்புகளால் களவாட நினைக்கிறாய், விரும்பாத இதயத்தை…..

திமிராகும்……

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 12 சராசரி: 4.4]

4 Comments

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Expert

Written by Ruthivenkat

 

About Author:

 

                  வாசகர்களுக்கு வணக்கம். நான் ருதி வெங்கட். இது எனது புனைப்பெயர். உண்மையான பெயர் உதயா வெங்கட்ரமேஷ். முதுகலை பட்டதாரி, இல்லத்தரசி. கதை படிப்பது மிகவும் பிடித்த விஷயம். அதுவே கதை எழுத ஊக்கசக்தியாக அமைந்து விட்டது. போட்டிக்கதையின் மூலம் எழுத்துப்பயணமும் தொடங்கியது. இதுவரை நான்கு கதைகள் எழுதி முடித்துள்ளேன். முதல்கதை புத்தகமாக  AD பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது. முகநூலில் ஓரளவு வாசகர்களுக்கு முகமறிந்த நபர்தான் . எனது கதைகளை தொடர்ந்து படிக்க Ruthivenkat (ருதிவெங்கட்)என்கிற எனது பெயரை FOLLOW செய்யுங்கள். கதைகளை பற்றிய அறிவிப்புகள் உங்களுக்கு வந்துவிடும்.

               வாசகர்களின் ஆதரவிலும், உற்சாகமூட்டலிலும்தான் கடந்த ஒருவருடத்தில் நான்கு கதைகளை வேகமாக முடிக்க முடிந்தது. உங்களது ஆதரவுகளை தொடர்ந்து வழங்குங்கள். 

 

        நன்றி

Story MakerContent Author

நயனமே நாணமேனடி 14-26

புதிய தோரணங்கள் -2