in

ஆல(ழ)கா(த)லன் – ருதி வெங்கட்

பார்ட் 1 ஆல(ழ)கா(த)லன் அத்தியாயம்  1-3

அத்தியாயம்1:

ஸ்ரீ ராம ராமேதி… ரமே ராமே.. மனோரமே..

சகஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வராணனே…

ஸ்ரீ ராமநாம வராணனோ நமயதி…

பிரம்மோ வாத்ச….

அந்த அதிகாலை வேளையில் தனது இனிய குரலில் பாடிக்கொண்டே பூஜை செய்து கொண்டிருந்தார் யவனி….  தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தனது கிளைகளை கொண்டு தானியங்கிக்கு தேவையான உதிரி பாகங்களை விற்பனை செய்வதில்… வழிவழியாக முதலிடத்தை கோலோச்சி கொண்டிருக்கும்…. நந்தன் குழுமத்தின் தலைவரும்…சென்னையில் விரல் விட்டு எண்ணக் கூடிய மாபெரும் தொழிலதிபர்களில் ஒருவராக அறியப்படும் யதுநந்தனின் மனைவி….

தொழிலில் சக்கரவர்த்தியானாலும்… மனைவிக்கும் தனது ஆசை மகளுக்கும் என்றும் உயிருக்கு உயிரான சேவகான இருப்பதில் யதுநந்தனுக்கு அலாதி இன்பம்… 

இதோ இப்பொழுதும் மனைவியின் இனிமையான குரலைக்கேட்டுக் கொண்டே… பூஜையறையின் வாயிலில் நின்று கொண்டு அவரது குரலில் லயித்திருந்தார்… தனது பூஜையை முடித்துக்கொண்டு திரும்பிய யவனி… கணவனது வழக்கமான செயலில் புன்னகைத்தவராக… ஆரத்தி தட்டை எடுத்துக்கொண்டு அவரை நோக்கி வந்தவர்….

“என்னங்க… பூஜையறைக்கு வந்தா உள்ளே வராம.. இதென்ன விளையாட்டு…. ??? கடவுளை பிடிக்காது… கடவுள்பாட்டு மட்டும் பிடிக்குமா…??” என்றவாறே நெற்றியில் திருநீரை கீற்றாக வைத்துவிட… மறுக்காமல் அதை வாங்கிக்கொண்டார்….

“என் கடவுள்தான்.. என் கண்ணு முன்னாடி நிக்குதே வனிம்மா…. அப்பறம் எதுக்கு இங்கே தனியா வேற கும்பிட சொல்ற… என் வீட்டு கிரகலஷ்மி நீயும்.. மகாலக்ஷ்மியா என் பொண்ணும் இருக்கறப்போ எனக்கென்ன கவலை….” என்றார். 

யவனிக்கு எவ்வளவுக்கு எவ்வளவு கடவுள் பக்தி அதிகமோ… அவ்வளவுக்கு அவ்வளவு யதுநந்தனுக்கு அவ்வளவிற்கு இதில் நம்பிக்கை இல்லை… செய்யும் தொழிலே தெய்வம்… குடும்பமே கோவில் என்பது அவரது கோட்பாடு. அதனால் இது வழக்கமான ஒன்றாக பழகி விட்டது யவனிக்கு.

“போதும்… இதக்கேட்டு கேட்டு எனக்கு மனப்பாடமே ஆயாச்சு… இதுல இப்ப உங்க பொண்ணும் கூட சேர்ந்துட்டால்ல.. கேக்கவா வேணும்… ” என்றவாறே தட்டை பூஜையறையில் வைத்தவர்… ஹாலில் அமர்ந்து தனக்கும் கணவருக்கும் காஃபியை கலந்தவாறே…

” இன்னும் நாலே நாள்ள கல்யாணத்த வச்சுகிட்டு..  உன்பேர்ல ஏற்பாடு பண்ணிருக்க பூஜைல வந்து கலந்துக்கோ மிஷ்டிமான்னா… அதான் எனக்கும் சேர்த்து நீ கும்பிடறியே வனிமம்மின்னு சொல்லிட்டு…ஆபீஸ் மீட்டிங்கறா… தோழிகளோட ஷாப்பிங் போறா… எல்லாம் நீங்க பண்ணி வைக்கறதுதான் நந்து…” அவர் ஆற்றாமையோடு பேசுகிறார் என்பதை “நந்து” என்கிற அவரது அழைப்பே காட்டிக்கொடுக்க….

 கையில் வைத்திருந்த காஃபி கோப்பையை கீழே வைத்த நந்தன் மனைவியின் தோள்மீது தட்டிக்கொடுத்தவாறே…..” நீ ஏன் வீணா மனசைப்போட்டு குழப்பிக்கிற வனி… அவளுக்கு என்ன பிடிக்குதோ செய்ய விடுடா… நாளைக்கு எனக்கப்பறம்… எல்லா பொறுப்புகளையும் ஏற்று நடத்தப்போற பொண்ணை நீ.. இப்படி பூஜை புனஸ்காரம்னு சொல்லி திசை திருப்பாத…..

என்னதான் நமக்கு வரப்போற மாப்பிள்ளை எல்லாம் பார்த்துகிட்டாலும்… நம்ம பொண்ணுக்கும் அந்த பொறுப்பு வரனும்… அதுவரைக்கும் வாழ்க்கையை கொண்டாடட்டும் வனிம்மா…” அவரது கூற்றில் சற்று மனம் சமாதானமடைந்தாலும்…..

“நம்ம பொண்ணு நல்லாயிருந்தா அது போதுங்க எனக்கு… ” என்றவாறே அவரது தோளில் சாய்ந்து கொள்ள….

” நம்ம பொண்ணுக்கு என்ன… ராணி மாதிரி வச்சு கொண்டாட போற மாப்பிள்ளைய பாத்திருக்கேன்… அவள் ரொம்ப சந்தோஷமா இருப்பா வனிம்மா…

என்ன…. புருஷனும் கொஞ்சம் நல்லா இருக்கட்டுன்னு அப்பப்ப மேடம் என்னையும் கவனிச்சிங்கன்னா நல்லாருக்கும்…” என்றவாறே நந்தன் மனைவியை பற்றியவாறே அணைப்பை இறுக்க….

“ம்ஹீம்… நினைப்புதான்… பேரன்பேத்தி எடுக்கறபோற வயசுல… உங்களுக்கு தனி கவனிப்பு வேணுமா…” சிரித்துக்கொண்டே கணவனின் அணைப்பிலிருந்து விலகியவர்…

“ரெடியாகுங்க.. நந்து… இன்னைக்கு தொழில்துறை மந்திரியோட கூட்டம் இருக்குன்னு சொன்னிங்களே…” என்று ஞாபகப்படுத்த… 

“கெட்டிக்காரிடி நீ…. பேச்சை மாத்திறியா…” என்றவாறே அவள் அருகே வர…

“இல்லைங்க… இன்னைக்கு முக்கியமான சில வேலைகள் இருக்கு… மிஷ்டிய கூட்டிட்டுப் போய் பண்ண வேண்டிய வேலைகள் எல்லாம் இன்னைக்கு முடிச்சிடலாம்னு இருக்கேன்… இன்னும் சில புடவைங்க மட்டும் இருக்கு… அப்பறம் ஐயர் வந்து நாளைக்கு முகூர்த்த காப்பு கட்டிட்டா.. அவளை வெளிய அழைச்சுட்டு போக முடியாது…” என்று சற்று தீவிரமாகவே பேச….

“சொன்னா… புடவை நகைங்கள்ளாம் வீட்டிற்கே கொண்டு வருவாங்கள்ள… அப்பறம் என்ன பிரச்சனை வனி…?” நந்தனின் கேள்விக்கு

“உங்க மகளுக்கு கடைக்கு போய்தான் எடுக்கனுமாம்… என்னவோ தெரியல.. இந்த இரண்டு நாளாவே அவ ஏதோ குழப்பத்துல இருக்கற மாதிரி இருக்குங்க…” வனி பதில் கூற…

” நம்மள பிரியப்போற வருத்தமா இருக்கும் வனி… எதுக்கும் மிஷ்டிகிட்ட நான் பேசிப்பார்க்கிறேன்..” தான் பார்த்துக் கொள்வதாக மனைவியின் மனப்பாரத்தை குறைத்துவிட்டார் நந்தன்.

ஆனால் நாயகியான மிஷ்டியோ.. அந்த அதிகாலையில்.. என்றுமில்லாத பழக்கமாக…. தூக்கத்தை தொடராது…..விட்டத்தை வெறித்தவாறே… காய்ச்சலால் போர்வைக்குள் நடுங்கிக் கொண்டு… படுத்திருந்தாள்….

ஒரு வாரத்திற்கு முன்பான மிஷ்டியாக இருந்திருந்தால்… இந்நேரம் இடி விழுந்தால்கூட அவளது காதில் விழுந்திருக்காது… அப்படி ஒரு தூக்கத்தை தினமும் தூங்குபவள். 

இதில் மகள்மீது யவனிக்கு ஒரு செல்லக்கோபம் கூட உண்டு… என்ன சொன்னாலும் கேட்காமல்… காலை எட்டு மணி வரை தூங்குகிறாளே என்று.

வீட்டில் எத்தனை வேலையாட்கள் இருந்தாலும்… கணவனுக்கும் மகளுக்கும் தேவையானவற்றை தானே தான் செய்வாள் யவனி. அதில் மற்றவர்களின் தலையீடு அவளுக்கு பிடிக்காது. அன்றும் அவ்வாறே கணவனுக்கு தேவையானவற்றை செய்துவிட்டு மகளின் அறைக்கு அவளை எழுப்புவதற்காக வந்தவர்…

“மிஷ்டி…” என்று அழைத்துக் கொண்டே கதவை திறந்து கொண்டு வர….

அப்பொழுதுதான் சற்று சோர்வில் கண்ணயர்ந்தவள் மெதுவாக கண்ணை திறந்து பார்க்க….

” எழுந்திருடா செல்லம்… இன்னைக்கு எல்லா வேலையும் முடிச்சிட்டு வந்துரலாம்..” என்றவாறே மகளின் அருகில் வர….

அன்னையின் ” செல்லம்” என்ற அழைப்பில் தூக்கிவாறிப்போட எழுந்து அமர்ந்தாள் மிஷ்டி. அவளது நடவடிக்கையைப்பார்த்து பயந்தவறாக.. யவனி வேகமாக மகள் அருகே வந்து.. அவளை பிடித்துக்கொள்ள… அப்பொழுதுதான் அவளது உடல் சூட்டையும்… காய்ச்சலையும் உணர்ந்தார்.

” மிஷ்டி என்னடா..?? என்னாச்சு…??? ஏன் இப்படி உடம்பெல்லாம் கொதிக்குது…??” என்றவாறே மகளைப்பிடித்து தோளில் சாய்த்துக் கொள்ள…. 

ஆனால் அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் அவள் இருந்தால்தானே….???

அவளது காதுகளில் திரும்ப..திரும்ப… “ஓகேயா செல்லம்…” என்ற அவனது வார்த்தைகளே திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டிருந்தன.

“அவனுக்கு என்ன வேண்டும்..?? ஏன் இப்படி என்னை மிரட்டுகிறான்….??? என்னை என்னவெல்லாம் செய்து விட்டான்… அவன் நிமிர்ந்து நின்றால் அந்த அறையே சின்னதாக தெரிந்தது வேறு நினைவில் தோன்றி… அவளை நடுங்க வைத்தது… ”  தனது யோசனையிலேயே சுழல….

“மிஷ்டி… மிஷ்டி..பேபிம்மா…”என்று அவளது கன்னத்தில் தட்டினார் யவனி. 

அன்னையின் ஸ்பரிசத்தில் சுயநினைவு அடைந்தவளாக…..

“ஹான்.. மம்மி… ” என்றவாறே அன்னையை இறுக்கி அணைத்துக் கொள்ள… 

“என்னம்மா இப்படி உடம்பு காய்ச்சல்ல கொதிக்குது.. எப்ப இருந்து இப்படி இருக்கு…??” மகளின் தலையை வருடியவாறே யவனி கேட்க…

மிஷ்டி தன்னைத்தானே சமாளித்துக்கொண்டு அன்னையின் பதற்றத்தை குறைக்க முயன்றளவாக “நேற்று இரவிலிருந்து இப்படிதான் மம்மி இருக்கு… கொஞ்சம் ஐஸ்கிரீம் நிறைய எடுத்துக்கிட்டேன்.. ஷாப்பிங் போனப்போ அதான்…” என்றவாறே அன்னையின் கழுத்தில் முகம் புதைந்து கொள்ள…

மகளின் பேச்சில் அதுவரை இருந்த பதட்டம் குறைந்தவராக…. அணைத்திருந்த மகளின் முதுகில் ஒரு அடி வைத்தார் யவனி.

“அய்யோ…ம்மா…. ” என்றவாறே மிஷ்டி அன்னையின் அணைப்பில் இருந்து விலகி தனது முதுகைத்தேய்த்துக்கொண்டே கத்த…

“குட்டி கழுதை… கழுதை வயசாச்சு… இன்னும் புத்தி வளர்ந்துருக்காடி உனக்கு…?? கல்யாணத்தை பக்கத்துல வச்சுகிட்டு என்ன வேலைல்லாம் பண்ற நீ…?? ஏன் மிஷ்டிமா இப்படி நடந்துக்கிற…??” யவனி ஆதங்கப்பட்டவாறே மகளை படுக்கையில் படுக்க வைத்தவர்….

“கொஞ்சநேரம் படுத்துக்கோ.. அம்மா உனக்கு பாலும் மாத்திரையும் எடுத்துட்டு வரேன்… காய்ச்சல் குறையலன்னா.. நம்ம முகுந்தன் அன்கிள்க்கு (குடும்ப மருத்துவர்)           கூப்பிட்டுக் கலாம்…” மகளுக்கு போர்த்தி விட்டு கீழே இறங்கி சென்றார் யவனி.

அன்னை கீழே இறங்கி சென்றதும்…. விட்டிருந்த பயம் மீண்டும் வந்து அவளை தொற்றிக்கொண்டது.

அவனை முதலில் பார்த்ததும் ஆணழகனாகவே அவளது கண்களுக்கு தெரிந்தான். ஆனால் அவன் அடுத்து நடந்து கொண்ட விதமோ.. உயிர் ஒருமுறை போய் திரும்ப வந்தது போல் இருந்தது.

ஷாப்பிங் போன இடத்தில் அவள் தோழியின் கேள்விக்கு தனது அனுமானத்தைக்கூறிய… ஆணழகனைப்போல் தெரிந்தவனாலேயே  கடத்தப்படுவாள் என்று அவள் என்ன கனவா கண்டாள்…..

அப்பொழுதும் அவனது கண்களை கூலர்ஸ் மறைத்திருந்ததால் தன்னால் கவனிக்க இயலவில்லையோ…???

எந்தவித உணர்ச்சியும் இல்லாது… சாதாரண ஒரு அசைவுகூட இல்லாமல் அமர்ந்திருந்தானே…

அந்த காப்புசினோ அறையில் இருந்த அனைவரது கண்களும் அவனை சுற்றி இருந்தாலும்…

மிஷ்டியின் கண்களுக்கு தவறாமல் பட்டதோ… ஓங்கி உயர்ந்த கருங்குன்றுகளை போல்.. ஆஜானுபாகுவாக நின்றிருந்த அவனது பாதுகாவலர்களும்தான்…

அதன்பிறகு தோழியை அனுப்பிவிட்டு… கார்பார்க்கிங் ஏரியாவிற்கு வந்தது மட்டுமே அவளுக்கு நினைவிருக்கிறது….

கண்விழித்தால்…

“இ..வ்வ..னாஆஆஆ.. இவன் எப்படி எங்கே…???” என்று மயக்கம் தெளிந்து யோசிக்கும்போதே….

“என்னடா ஆள் பார்க்க மட்டும்தான் நல்லாருக்கான்… ஆனால் இவனோட பாதுகாவலர்கள் இல்லாம இவனால ஒருவேளையும் செய்ய முடியாதுன்னு.. நினைச்ச இவனா … நம்மள தூக்கிட்டு வந்துட்டான்னு இருக்கான்னு இருக்கா செல்லம்…???”

“தான் நினைத்ததை அப்படியே பேசுகிறானே” என்று நினைக்க மட்டும்தான் முடிந்தது அவளால்….

“இந்த விதுரனுக்கு எதையும் செய்து முடித்துதான் வழக்கம் செல்லம்… என் செயலுக்கு நீ ஒத்துழைத்துதான் ஆக வேண்டும்…..

அப்படி இல்லாவிட்டால் “ஏன் உயிர் வாழ்கிறோம்..??” என்று நீ வருத்தப்படும் அளவிற்கு சென்று விடும்… 

இந்த அழகிக்கு அவ்வளவு வேதனை தேவையில்லை… அதனால் சொன்னதை செய்துவிடு செல்லம்….”….

அவனது இவ்வளவு பேச்சிற்கும் ஆவேசமாக பதில் கூட கூற முடியாது… வெறும் ஒற்றைப்போர்வையை மட்டுமே ஆடையாகக்கொண்டு அமர்ந்திருக்கும் தனது நிலையை எண்ணி… உள்ளுக்குள்…. கடும் வெயிலில் துடித்துக் கொண்டிருக்கும் புழுவைப்போல் துடித்துக் கொண்டிருந்தாள் மிஷ்டி.

இருந்தும் அவன் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே செல்லும் போது.. அடக்கமாட்டாது கேட்டே விட்டாள் ….

“நில்.. யாரென்றே அறியாத ஒரு இளம்பெண்ணை கடத்தி வந்து.. இப்படி ஒரு தகாத காரியத்தை செய்து.. நீ சொல்லும் காரியத்தை செய்யச்சொல்கிறாயே.. நீ மனிதனல்ல மிருகம்…

என் அப்பா யதுநந்தனிற்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தது… உன் உடம்பில் உயிர் இருக்காது… 

அதைவிட யாரை அவமானப்படுத்த நீ இப்படி செய்யச்சொல்கிறாயோ.. அந்த அன்ஷூமன்னுக்கு தெரிந்தால்… உன்னை உருத்தெரியாமல் அழித்து விடுவார்… ” பொங்கி வரும் கண்ணீரை துடைத்துக் கொண்டே பேச…..

அவள் பேசியதைக் கேட்டு சிவந்த அவன் கண்களோடு… அவளை நோக்கி நடந்து வர….அவனது ஒவ்வொரு காலடி ஓசையிலும்… இதயம் வெளியே வந்து விடுவது போல் துடிக்க ஆரம்பித்தது மிஷ்டிக்கு. அவளருகே வந்தவன்….

“எந்த கொம்பனாலும்… என் விரலைக்கூட அசைக்க முடியாது பெண்ணே… 

நான் சொன்னதைப்போல் செய்யாவிட்டால்.. உன் பெற்றோரை பிணமாகத்தான் பார்க்க வேண்டும்…. 

செய்யமாட்டேன் என்று மட்டும் நினைத்துவிடாதே…

இதோ பார்… என்று தனது அலைப்பேசியை உயிர்ப்பித்துக்காண்பிக்க… 

அதில் ஒரு பக்க காணொளியில்.. யதுநந்தனது மீட்டிங் ஹாலில்.. கூட்டம் நடந்தகொண்டிருக்க… அதில் அமர்ந்திருந்த ஒருவரின் மேஜைக்கு அடியில் இருந்த கையில் துப்பாக்கி இருந்தது. அவனது பார்வை இங்கிருப்பதை வைத்தே.. நேரலையாக இதை காண்பிக்கின்றான் என்பது தெள்ளத்தெளிவானது….

மற்றோரு காணொளியில்… யவனி படுத்திருக்க.. வீட்டில் அவளுக்கு ஃபேஷியல் செய்து கொண்டிருந்த பெண்ணின் கையில் விஷ ஊசி இருந்தது…அதுவும் நேரலையாக அனுப்பிக்கொண்டுருந்தார்கள்…”

அதிர்ச்சியில் வாய் பிளந்து அழுது கொண்டே பார்த்திருந்தாள் மிஷ்டி.

“என்ன இந்த காணொளி போதுமா.. இப்பொழுது உன் முழு குடும்பமும் எனது பிடியில்…” என்று உரைக்க….

“நான் வேண்டுமானால்.. இந்த திருமணத்தை இப்போதே நிறுத்தி விட்டு… உங்களையே திருமணம் செய்து கொள்கிறேன்….என் பெற்றோரை விட்டு விடுங்கள்…” என்று கெஞ்ச ஆரம்பிக்க…

“முடியாது பெண்ணே… நான் சொன்னவாறு தான் நீ செய்ய வேண்டும்… அனைவரின் முன்னும் மணமேடையில் இருந்து எழுந்து…

அந்த அன்ஷுமனைபார்த்து… ” இவன் ஆண்மகனே அல்ல.. எனக்கு இவனை கல்யாணம் செய்வதில் விருப்பம் இல்லை… இவனை நான் மனதார வெறுக்கிறேன் என்று கூறிவிட்டு..மாலையைக்கழட்டி தூர எறிந்துவிட்டு… இவரைத்தான் மணப்பேன் என்று என்னை கைகாட்ட வேண்டும்…”

“நீங்கள் செய்வது அநியாயம்…” மிஷ்டி பெருங்குரலெடுத்து அழ…

“நான் செய்வதுதான் நியாயம் பெண்ணே…. பாரத விதுரன் அல்ல நான்.. வெறும் நீதி போதனை மட்டும் செய்து கொண்டிருக்க… செயலிலும் உணர்த்துபவன்…” என்று சூழுரைக்க…

“உங்கள் நியாயம் உங்களோடு…?? அதற்கு நான் ஏன் உடன்பட வேண்டும்… இதனால் என் பெற்றோருக்கும் அவமானம் ஏற்படும்….” முதன்முறையாக அவனை எதிர்த்து பேச….

மெதுவாக அவளது காதருகே குனிந்தவன்..” ஏனென்றால் நீதானே அவனது காதலி… எனக்கு அவன் எல்லோர் முன்பும் அவமானப்பட வேண்டும்.. அதை நீதான் செய்ய வேண்டும்… உன் பெற்றோரை பற்றி நீ கவலைப்பட தேவையில்லை…” மறுமொழி பேச அவள் வாய் திறக்கும் முன்பே… அவளது உதட்டின் மீது விரல் வைத்தவன்….

“உடலால் நீ எனது மனைவியாகி அரைநாள் கடந்து விட்டது… சொல்வதை செய்து… உறவாலும் என் மனைவியாகிவிட்டால் உனக்கு நல்லது..

இல்லாவிட்டால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல…

உனது உடைகள்… அந்த சுவரை ஒட்டிய அறையில் இருக்கின்றன…

நாளைமாலை ஆறுமணிக்கு உன்னை ஜவுளிக்கடையில் சந்திக்கிறேன்…

நான் எடுத்துக்கொடுக்கும் முகூர்த்தப்புடவையைதான் நீ கட்ட வேண்டும்….

நாளை உன்னை சந்திக்கிறேன்… மிஸஸ்.விகர்ண விதுரன்…..” என்று கூறிவிட்டு கதவை நோக்கி செல்ல ஆரம்பிக்க… மிஷ்டியின் மெல்லிய முணுமுணுப்பு அவனது நடையை நிறுத்தியது.

“விகர்ண விதுரன்… வி.வி.என் குழுமம்… வசுதேவ் அன்கிள்….” என்று முணுமுணுக்க…

“அதே… வசுதேவின் மகன்தான் நான்….உன்னால் எதுவும் செய்ய முடியாது…”  விதுரன் கூறி சிரிக்க…

“அன்கிள் அப்பாவோட நெருங்கிய தோழர்… அவரோட மகனா இருந்துட்டு.. ஏன் இப்படி நடந்துகிட்டிங்க.. ஒரு பெண்ணோட அனுமதியில்லாம பலவந்தப்படுத்தறது மிருகத்தின் செயல்…. ” அவள்..வசுதேவை பார்த்திருக்கிறாள்… மிகவும் நல்ல மனிதர்….இவனை இப்பொழுதுதான் பார்க்கிறாள்.

“நான் எதுவாகவும் இருந்து விட்டுப் போகிறேன்….அது உனக்கு தேவையில்லாதது… வரப்போகற மருமகனுக்கு முதல் பத்திரிக்கை வச்சு கூப்பிட்டு அந்த மரியாதையையும் ஒழுங்கா செஞ்சுட்டார் உங்க அப்பா… நாளைக்கு பார்ப்போம்…ஓகேயா செல்லம்…..” அவனது வேகநடையில் சென்றும் விட்டான்.

பின்பு அவள் வீடு வந்து சேர்ந்ததிலிருந்து… காய்ச்சலால் கொதிக்க ஆரம்பித்த உடம்பின் சூடு இன்னும் குறையவில்லை. 

அவளது அயர்ந்த தோற்றத்தை பார்த்து அன்னை கேட்ட கேள்விக்கும் அவள் மழுப்பலாக பதில் சொல்லி சமாளித்து விட்டாள்.

அடுத்துவந்த யதுநந்தன் அவளது அறையில் எட்டிப்பார்த்த போதும் தூங்குவதைப்போல பாசாங்கு செய்து சமாளித்து விட்டாள்.

“அவன் சொல்வதை செய்தால்… நடக்கப்போகும் விபரிதங்களை நினைக்க நினைக்க… பித்து பிடித்தாற் போல் ஆனது மிஷ்டிக்கு…”.

ஒரேநாளில்.. சூறைக்காற்றில் சிக்கிய கொடியாக மாறிவிட்ட தனது வாழ்வில் அடுத்து என்ன செய்வதென்றே அறியாது ஜூர மயக்கத்தில் விழுந்தாள் மிஷ்டி.

அத்தியாயம்2:

வி.வி.என் குழுமம் கால் பதிக்காத தொழில்துறைகளே இல்லை என்னும் அளவிற்கு உலகப்பிரசித்தி பெற்றது. அக்குழுமத்தின் தலைவர் வசுதேவின் ஒரே மகன் விகர்ண விதுரன். வசுதேவனின் மனைவி யசோதா.. ஒரு கார் விபத்தில் இறந்து விட்டார். அதே கார்விபத்தில் தான் வசுதேவின் வலதுகாலிலும் அடிபட்டு ஊனமாகியது.

இப்பொழுது பெருமளவு சரியாகி விட்டாலும்.. சற்று கவனித்து பார்த்தால்.. அவர் தனது காலை விந்தி நடப்பது நன்றாகவே தெரியும்.

தொழில்முறை எதிரிகளால்… பாதிக்கப்பட்ட அவர்.. தனது மகனை அதன் பிறகு இந்தியாவில் தங்க வைக்காமல்… பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே தனது மகனின் கல்வி… தொழில் கற்கும் முறைகள் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளை பார்த்துக்கொண்டார்.

வசுதேவின் கல்லூரிகால நண்பர் யதுநந்தன். இருவரது நட்பும் கல்லூரிகாலத்திலிருந்து இப்பொழுது வரை தொடர்ந்து வருகிறது.

உயிர்நண்பர்களாக இல்லாவிட்டாலும்… ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் நன்மதிப்பும், மரியாதையும், தொழில்முறை உறவும் இன்றும் நல்லவிதமாகவே தொடர்ந்து வருகிறது. தொழில்துறை சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களை கூட ஒருவருக்காக ஒருவர் விட்டுக்கொடுக்கும் அளவிற்கு… யதுநந்தனுக்கும் வசுதேவிற்கும் இடையே ஆரோக்கியமான நட்புறவு நிலவி வந்தது.

பெரும்பாலான தொழிலீலாட்டாளர்களுடன் நட்புறவுடனே பழகி வரும் வசுதேவனை பிடிக்காத நபரும் ஒருவர் என்றால்…  கே.எம் குழுமத்தின் நிறுவனர் கார்மேகம் மட்டுமே. கண்டவரை கண்ட நொடியில் வசிகரிக்கும் வசுதேவனை கண்டால் அவர் மனதில்தோன்றும் பொறாமை இன்றும் எரிமலை போல் கனன்று கொண்டே இருக்கின்றுது. அதை அவரே இன்னும்  தனது தீய எண்ணங்களால்… கொதிநிலையில் வைத்திருக்கிறார் என்பது வேறுவிஷயம்…. 

தனது ஆரம்பகால கட்டங்களில் மிக சாதாரண ஒரு நடுத்தரவர்க்கத்தை சேர்ந்தவராகவே வாழ்க்கையை தொடங்கிய கார்மேகத்திற்கு… சிறுவயது முதலே எப்பொழுதும் பணத்தின் மீதும் கோடிஸ்வர வாழ்க்கையின் மீதும் கண்மண் தெரியாத வெறியே இருந்துது. ஆனால் அதை எப்பொழுதும் தனது செயல்பாடுகளில் அவர் வெளிகாட்டியதில்லை. ஊருக்குள் அவரைப்பற்றி யார் கேட்டாலும் மிக நல்லமனிதன் என்றே சொல்லும் அளவிற்கு… தனது நடிப்புத்திறமையால் தன்னை பெற்றவர்களையே ஏமாற்றுபவருக்கு… ஊர்மக்கள் எம்மாத்திரம். தனது நிர்வாக மேலாண்மை படிப்பை முடித்த கையோடு… அவர் யாரை…. இவள் தான் என் மனைவி என முடிவு செய்து காத்திருந்தாரோ…  அவளுடைய அலுவலகத்திலேயே வேலைக்கு சேர்ந்து…அவர்களது நன்மதிப்பையும் பெற்று… வெற்றிகரமாக வர்ஷினியையும் கைபிடித்த கனவான். ஆம்… இப்பொழுது அவர் நிர்வகிக்கும்… பெருக்கிக்கொண்டிருக்கும்  சொத்துக்கள் அத்தனையும்… மனைவி வர்ஷினியுடையதே.

இவர்களுக்கு இரண்டு மகன்கள்… அன்ஷூமன்… ஆஷிஷ். தொழிலில் எவ்வளவு உயரத்தை அடைந்தாலும்… வசுதேவனை தன்னால் தோற்கடிக்க முடியாதது… கார்மேகத்திற்கு இன்றுவரை சவாலாகவே இருந்தது. அதுமட்டுமல்லாது பரம்பரை பரம்பரையாக தனவந்தராக தொழில்துறையில் அவர்களது குடும்பமே கோலோச்சிக்கொண்டிருப்பதை எவ்வளவோ குறுக்கு வழிகளில் முயன்றும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.அவர் செய்த அத்தனை முயற்சிகளையும் எளிதாக சமாளித்தார் வசுதேவன்.

வசுதேவனை எப்படியாவது வீழ்த்திட வேண்டும் என்று அல்லும் பகலும் அதே சிந்தனையாக இருந்தவருக்கு… மிகப்பெரும் வாய்ப்பாக அமைந்தது யதுநந்தனின் நட்பு. எப்பேர்பட்ட நபரையும் சரியாக கணிக்கும் யதுநந்தனே ஏமாறும் அளவிற்கு இருந்தது கார்மேகத்தின் செயல்திறனும். விளைவு..கார்மேகத்தின் நட்பெனும் சூழ்ச்சி வலையில் தானாகவே சிக்கினார் யதுநந்தன். 

தொழில்துறையில் மற்ற அனைவரையும் தனக்கு சாதகமாக மாற்ற முடிந்தாலும்… எப்பொழுதும் நடுநிலை வகிக்கும் யதுநந்தனின் ஆதரவிருந்தால்… தொழிற்குழும பேரமைப்பின் தலைமைப்பதவி தன்னை தேடிவரும் என்பதில் அவருக்கு முழு நம்பிக்கை இருந்தது.

அதற்காகவே அவரோடு நட்புறவை ஏற்படுத்தி தனது மகன் அன்ஷூமனையும் அவருக்கு அறிமுகப்படுத்தினார். ஏனென்றால் அன்ஷூமனின் வளர்ச்சி..அவரிடம் தனக்கான மதிப்பை அதிகரிக்கும் என்பது அவரது கணக்கீடு.

கார்மேகமே தற்போதைய நிலையை விட முன்னூறு மடங்கு குயுக்தியோடும்.. வினையோடும்  பிறந்திருந்தால் எப்படி இருப்பாரோ… அச்சு பிசகாமல் இருப்பவன் அன்ஷூமன். தந்தை மற்றவர்களின் வயிற்றில் அடித்தால்.. அவர்களின் குலத்தையே அழிக்கும் அளவிற்கு இருக்கும் அன்ஷூமனின் செயல்பாடு.

ஆனால் வர்ஷினிக்கோ கணவனும் மகனும் தொழில்துறையில் எதையும் சாதிக்கும் வல்லவர்கள்… நேர்மையாளர்கள். அந்த அளவிற்கு தங்களது வாழ்வின் இருண்ட பக்கங்களை மறைப்பதில் கைதேர்ந்தவர்களாக விளங்கினர் தந்தையும்-மகனும். இவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கே இவர்களைப் பற்றிய உண்மைகள் அனைத்தும் தெரியும். அப்படி உண்மை அறிந்தவர்கள் இப்பொழுது உயிரோடும் இல்லை. அதிலும் விலவிலக்காக உயிர்தப்பியிருந்தார் வசுதேவன்.

ஆம்…கார்மேகத்தின் சூழ்ச்சியில் வெற்றிகரமாக உயிர் தப்பினார் வசுதேவன். அவரது அடுத்த குறி தனது மகனுக்குதான் என்பதையும் நன்கு அறிந்தும் வைத்திருந்தார்.

தனது மகன் விகர்ண விதுரனின் வரவிற்கு பின்… அவர் திட்டமிட்டிருந்த திட்டங்களை செயல்படுத்தி கார்மேகத்தின் கொட்டங்களை அடக்க வேண்டும் என… அவர் பொறுமைகாக்க… நியுயார்க்கில் தனது தொழிற்மேலாண்மை படிப்பை முடித்து… வெற்றிகரமாக அங்கு தனக்கென தொழில் நிறுவனங்களையும் நிறுவி.. தந்தையின் பெயரை அங்கும் நிலைநாட்டி தாய் நாட்டிற்கு திரும்பிய விதுரனுக்கும்… தந்தையின் நிலை அதிர்ச்சியே அளித்தது.

அவன் திரும்பி வரும்போது… தனது நண்பன் யதுநந்தனை எப்படி இச்சிக்கலில் இருந்து மீளச்செய்வது என்று அறியாமல் தன்னைத்தானே நொந்தவராக சிந்தனைவயப்பட்டிருந்தார் வசுதேவன்.

ஏனென்றால்…”நீ புள்ளியில் கால் வைத்தால்.. நான் நடு கோலத்திலேயே கால் வைப்பேன் என்பது போல்…. யதுநந்தனின் மகள் மிஷ்டியை தனது மகன் அன்ஷூமனுக்கு மணம் பேசி முடித்திருந்தார் கார்மேகம்”…..

யதுநந்தனிடம் ஜாடைமாடையாக வசுதேவன் பேச்செடுத்த போது.. நந்தன் அன்ஷூமனின் புகழ்பாட… கார்மேகத்தின் சூழ்ச்சி எங்கு வரை பாய்ந்திருக்கிறதென்று நன்றாக புரிந்து கொண்டவராக.. திருமண ஏற்பாட்டிற்கு தான் அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக வாக்களித்தவர்… 

“நீ சொல்றதெல்லாம் சரி நந்தா…. கல்யாணத்திற்கே இன்னும் ஒருவாரம்தான் இருக்கு… நிச்சயத்தை தனியா வைக்க வேண்டாம்… ஏன் சொல்றேன்னா… நம்ம அடுத்து தொடங்கபோற பகல்பூர் புது யூனிட்டை வந்து பாக்குறதுக்கு ஃபாரின் என்சினியர்ஸ் வந்து பாக்க வர்றாங்க.. கண்டிப்பா நாம அங்கு இருந்துட்டு… எல்லா விபரங்களையும் பேசி முடிச்சிட்டு வர மூணுநாள் ஆகிடும்… 

அப்பறம் நீ வந்து இங்க சரி பண்றதுக்குள்ள கொஞ்சம் டைம் எடுக்கும்…

கல்யாணத்தைதான் கார்மேகம் அவசரப்படறான்னு சீக்கிரம் வைக்கிற….

அதனால் நாம நம்ம பொண்ணுக்கு ரிஷெசப்ஷன இந்த தமிழ்நாடே திரும்பி பார்க்குற அளவிற்கு வைக்க வேண்டாமா….??” என்ற கேள்வியை எழுப்ப… யதுநந்தனும் நடப்பு சிக்கல்களை புரிந்து கொண்டவராக… தனது ஒரே ஆசைமகளின் ரிஷெப்ஷனை தனது விருப்பப்படி செய்ய வேண்டும் என்று ஆசை கொண்டார். கார்மேகம் நந்தனை எதுவும் கலந்துகொள்ளாது கல்யாண ஏற்பாடுகள் அனைத்தும் அவருடைய பொறுப்பு என்று கூறியதால் ஏற்பட்ட நெருடலும் மறைந்தே போனது வசுதேவனின் யோசனையால். ஆச்சரியப்படும் விதமாக கார்மேகமும் இதற்கு ஒத்துக்கொள்ள… அப்போதைக்கு சமாளிக்க முடிந்ததே என்ற சிறு திருப்தியோடு கிளம்பி வீடு வந்து சேர்ந்தார் வசுதேவன்.

இந்த நேரத்தில் தான் தாயகம் திரும்பினான் விகர்ணன். எப்பொழுதும் தன்னை வரவேற்க விமானநிலையத்திற்கே வரும் தந்தை.. இந்த முறை வராமல் தனது காரை மட்டும் அனுப்பி வைத்திருந்தது ஏதோ சரியில்லை என்பதை நன்கு உணர்த்தியது.

விமானநிலையத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பும்போதே… காரில் அமர்ந்தவாறே அவன் முதலில் கண்டது… வாசலில் ஆரத்தி தட்டுடன் நின்றிருந்த வீட்டின் தலைமை பணியாளர்… தாயில்லாத நேரத்தில் தன்னை தாய்க்கு தாயாக அரவணைத்த அன்னலக்ஷியம்மாவையே. அவரைக்கண்டதும் அவனது முகத்தில் தானாகவே மலர்ந்த புன்னகை ஒன்று மலர்ந்தது. அதை தன் முன்னாடி இருக்கும் கண்ணாடியில் கண்ட டிரைவர் பொன்னுவின் முகத்திலும் தனது எஜமானனின் மகிழ்ச்சியை கண்டு புன்சிரிப்பு ஒன்று விரிந்தது. அவ்வளவு சீக்கிரம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துபவபரல்ல என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். அதற்காக யாரிடமும் முகம் கொடுத்து பேசாமல் அலட்சியம் காட்டுபவனல்ல அவன். ஆட்களைப்பார்த்து பேசும் பார்வையிலேயே அவர்களுக்குரிய மரியாதையை கண்களில் பிரதிபலிப்பவன் விதுரன்.

அன்னலக்ஷியம்மாவின் மேல் முதலாளி குடும்பத்தினர் வைத்திருக்கும் மரியாதை அனைவரும் அறிந்த விஷயமே. 

கார் போர்டிகோவை நெருங்கி நிற்க…

“பொன்னுரங்கம்…” என்ற கம்பீரமான தனது சின்ன முதலாளியின் குரலில் சட்டென்று திரும்பி பார்த்தார் காரோட்டி.

“லக்கேஜ் எடுக்கும்போது… சிகப்பு சூட்கேஸ மட்டும் எடுத்து லக்ஷ்மிமா அறைல வச்சிடுங்க… ” என்று கூறியவன் இறங்க எத்தனிக்கும் முன்பு…

“சரிங்க சார்” பதில் சொன்ன கையோடு…அவன் பக்க கதவையும் திறந்து வைத்திருந்தான் பொன்னு.

அவனின் செயலை மெச்சியவாறே சிறு புன்னகையோடு அன்னம்மாவை நோக்கி படிகளில் ஏறினான்.. ம்ஹூம்… தாவினான் என்பதே சரியாக… அவரை நோக்கி விரைந்து சென்றான் அவன்.

“லக்ஷ்மிம்மா…” என்றவாறே அருகில் வர…

“ம்ஹூம் விதுதம்பி…அப்படியே நில்லுங்க… ஆரத்தி மட்டும் எடுத்துடறேன்…” என்றவாறே ஆரத்தியை சுற்றினார்.

எடுத்த ஆரத்தியை அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த தோட்டக்கார ராஜனின் கைகளில் குடுத்து வாசலில் கொட்டச்சொல்லி திரும்பும் முன்னரே… அவரை ஆரத்தழுவி கொண்டான் விதுரன்.

“லக்ஷ்மிமா எப்படி இருக்கிங்க….???” 

“ரொம்ப நல்லாருக்கேன் விதுதம்பி…”கலங்கிய கண்களை வெளிக்காட்டாது பதில் கூறினார் அன்னலக்ஷ்மி.

அவரை சற்று தள்ளி நிறுத்தியவன்… அவரது முகத்தை பார்த்தவாறே…

“என்ன புதுசா விதுதம்பி… எனக்குதா தம்பின்னு யாரும் இல்லையே லக்ஷ்மிமா… விதுகண்ணானுதான் நீங்க கூப்பிடனும்…” என்றவாறே அவரின் கையை பிடித்துக்கொண்டே உள்ளே வர… அவனின் இந்த உரிமைப் பேச்சில் பிறந்த பயனை அடைந்தார் போன்று மகிழ்ந்து போனார் அன்னலக்ஷ்மி.

குஜராத்தில் நடந்த பூகம்பத்தில் அன்னலக்ஷ்மி தனது மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்திருந்தபோது..  அங்கு உதவி செய்வதற்காக கேம்ப் சென்ற யசோதாதான் அன்னலக்ஷ்மிக்கு ஆறுதல் கூறிய கையோடு… தன்னுடைய வீட்டிற்கும் அழைத்து வந்துவிட்டார்.

வீட்டுப்பொறுப்புகளை நிர்வாகிக்கும் பணி அவருடையது. யசோதையின் விதுகண்ணா… அன்னலக்ஷ்மிக்கும் அந்த கண்ணனாகவே தெரிய.. சிறுவயதிலேயே அவரிடம் நன்றாக ஒட்டிக்கொண்டான். 

யசோதாவின் மறைவிற்கு பிறகு வசுதேவரால் குடும்பத்தை சரிவிலிருந்து மீட்க முடிந்ததென்றால்… அதற்கு முழுக்க முழுக்க அன்னலக்ஷ்மியின் அர்ப்பணிப்பே பலமாக அமைந்தது. உடன்பிறவா சகோதரியாக தன்னையும் தன் மகனையும் சூழ்நிலையிலிருந்து மீட்டுக் கொண்டு வந்த அன்னலக்ஷ்மி… வசுதேவனின் கண்களுக்கு தெய்வமாகவே தெரிந்தார்.

“அன்னைக்கு நீங்க சின்னபையன் தம்பி.. அதனால அப்படி கூப்பிட்டா நல்லார்ந்தது… இப்போ யுவராஜன போல வளர்ந்து நிற்கிறவரை அப்படி கூப்பிட்டா மரியாதையா இருக்காது…” சற்று அண்ணாந்து அவனது முகத்தை பார்த்து… கண்களில் வாத்சல்யத்துடன் கூறினார் அன்னம்மா.

“நீங்க சொன்னா சரிதான் லக்ஷ்மி மா… ஆனால் விதுகண்ணாதான் எனக்கு ஸ்பெஷல்…” பேசிக்கொண்டே படிகளில் ஏறியவன்..

“டாட்.. அவரோட ரூம்ல இருக்காரா.. இல்ல ஆஃபிஸ்ரூம்லயா….” என்று கேட்க…

“காலையிலிருந்தே சார்..அங்கதான் இருக்காங்க தம்பி.. இன்னைக்கு மீட்டிங் எல்லாத்தையும் கூட கேன்சல் பண்ண சொல்லிட்டாங்க…”

“ஓகே… அப்போ ரெண்டு லெமன்டீ மட்டும் அனுப்பிவிடுங்க அங்க…” என்றவன்.. விறுவிறுவென்று படிகளில் ஏறியவன்.. தந்தையின் அலுவலக அறையில் நுழைய… அங்கு அவன் கண்டது…. தன்வரவை கூட உணராது.. சிந்தனையில் மூழ்கியிருக்கும் தந்தையின் முகமே.

“டாட்…” அவன் சற்று உரக்க அழைக்க…

விகர்ணணை கண்ட வசுதேவருக்கு… தனது உலகமே ஒராயிரம் சூரியகதிர்களின் ஒளிவீச்சில் ஒளிர்வது போல் இருக்க….

“கர்ணா வந்துட்டியா ராஜா..” தனது ஊனத்தையும் பொருட்படுத்தாது….தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து வேகமாய் எழுந்து வந்து அணைத்துக் கொள்ள…

தந்தையின் அணைப்பில் ஒரு நிமிடம் மூழ்கியவன்….

“என்ன டாட்.. நான் இன்னைக்கு வரேன்னு உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருந்தும்… நான் சர்ப்ரைஸா வந்த மாதிரி ரியாக்ஷன் குடுக்கிறிங்க…” என்று கேட்க…

மகனிடம் இருந்து விலகியவர்.. அவனது கைகளை பிடித்து முதலில் அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தவர்…

“இங்க நிலைமை என்னை விட்டு கைமீறி போயிடுச்சு கர்ணா… இந்த யோசனையிலேயே உழண்டுகிட்டு இருக்கேன்.. அதனாலதான் உன்னை ரிசீவ் பண்ண வரலை…

உன்னைப் பார்த்ததும் எதையும் சமாளிச்சுடலாங்கற தெம்பு வந்துடுச்சுடா ராஜா… அதனாலதான் அப்படி கேட்டேன்…” என்றவர் மகனை மீண்டுமொரு முறை அணைத்து விடுவித்து…ஆசுவாசப்பெருமூச்சு விட… 

“டாட்.. நீங்க விஷயம் கைமீறிப்போயிடுச்சுன்னு சொல்றது கார்மேகம் விஷயத்தையா…” நேராக விஷயத்திற்கு வர…

மகனின் புத்திகூர்மையை மெச்சியவராக…

“ஆமா.. அவன நான் கொஞ்சம் விட்டுப்புடிக்கனும்னு நினைச்சது தப்பாயிடுச்சு… அவனுடைய இப்போதைய குறி யதுநந்தன்.. ” வசுதேவன் கூற…

“கவலைப்பட்டா மாறிடுமா டாட்… “என்று கேட்ட மகனை.. வசுதேவன் முகத்தில் சிரிப்போடு நோக்க.. அவருக்கு தானே தெரியும்..மகன் இப்படி கேட்டால் என்ன நடக்குமென்று…. 

“எஸ் டாட்.. இனி கார்மேகத்தோட பொறுப்பு.. என் பொறுப்பு… யதுநந்தன் அன்கிள்கு ஒன்னும் ஆகாது… “அவரின் கைமீது கைவைக்க.. யானைபலம் பெற்றவராக… மகனின் ஆறடியையும் மீறிய உயரத்திற்கு ஈடுகொடுக்கும் விதமாக… நிமிர்ந்து நின்றார் அவர்.

“நாம முதல்ல என்ன திட்டம் போட்டோமோ அதுதான் இப்பவும் நடக்கபோகுது…. ” என்று கூற…

“நாளைக்கு நந்தன் நமக்கு முதல் பத்திரிகை வைக்க வரான்” 

“வரட்டும் டாட்.. மருமகனுக்கு தான் அவர் முதல் பத்திரிகை வைக்கனும்..” என்றவனின் பதிலில் வசுதேவருக்கு நிலைகொள்ள முடியாத ஆச்சரியம். திருமணமே வேண்டாம் என்று இருந்தவன் ஆயிற்றே.

யதுநந்தனின் மகளை இவன் பார்த்தது கூட இல்லையே. அவளை நினைக்கும்போதே… அவளின் துறுதுறுப்பும் சந்தோஷசிரிப்பும் , நிர்வாகத்தை நடத்தும் ஆளுமைத்திறமையும் ஞாபகம் வரப்பெற்றவராக… 

“நல்ல குணவதியான பெண்தான்…” என்று மனதிற்குள் நினைத்து கொண்டார் அவர்.

ஆனால் விதுரனுக்கோ….இந்த வார்த்தையை கூறும்போதே… அவனது மனம் அவனையும் மீறி விம்மியது…”ஷம்மு”…..

ஆனாலும் வழக்கம்போல் வெளியில் புன்னகைத்தவனாக…

“ஓகே டாட்… நான் கொஞ்சம் ரெஃப்ரெஷ் ஆகி வர்ரேன்… நம்ம நீச்சல்குளத்துல மீட் பண்ணலாம்…” என்று பேசியவாறே அவரை மீண்டும் ஒரு முறை அணைத்து விடுவித்தவன்… தனது அறையை நோக்கி சென்றுவிட்டான்.

மகன் தனது மனதை சமாதானப்படுத்தவே நீச்சல் அடிக்க விரும்புவதை அறிந்தவராக … தானும் தனது அறைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தவர்…திரும்பி வந்து…ஹாலில் அமர்ந்து அவனுக்காக காத்து கொண்டிருந்தார்.

அப்போது அன்னம்மாவும் விதுரனுக்கு பிடித்த லெமன்டீயுடன் வர… அவனும் தனது அறையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தான். 

வசுதேவன் டீயை எடுத்து அருந்த… தானும் ஒரு டீகப்பை எடுத்து கொண்டு அமர்ந்தான்.

“லக்ஷ்மிமா டீ சூப்பர்…”என்றவாறே சுற்றிலும் தன் பார்வையை ஓட்ட… 

அன்னம்மாவோ… அங்கு துப்புறவு செய்து கொண்டிருந்த வள்ளியையும், பூச்சாடிகளில் பூ மாற்றிக்கொண்டிருந்த ராணியையும் பார்த்து…” ராணி, வள்ளி நீங்க ரெண்டு பேரும் தோட்டத்துல காய்கறி பறிச்சுட்டு , அதை அப்படியே பின்னாடி அடுக்களைக்கு எடுத்துட்டு போய் கழுவிவைங்க…” என்று உத்தரவிட்டவர்… 

“நன்றி தம்பி..” என்ற ஒற்றை வார்த்தையுடன் அடுக்களையை நோக்கி நடந்துவிட்டார்.

பார்வையாலேயே விதுரனுக்கு தேவையான விஷயத்தை புரிந்து கொண்டு… அதை… நடத்தியும் காட்டி சென்றுவிட்ட அன்னலக்ஷ்மியின் நடவடிக்கையை மனதிற்குள்ளேயே மெச்சி கொண்டார் வசுதேவன்.

“மருமகள எதுவும் கஷ்டப்படுத்திடாத கர்ணா….” என்று பேச்சை ஆரம்பிக்க….

“அது ரொம்ப கஷ்டம் டாட்…” என்று கூறியவாறே… அவன் லெமன்டீயை ரசித்து அருந்த….

“அவ ரொம்ப நல்ல பொண்ணுடா ராஜா…” விடாது வசுதேவன் வலியுறுத்த….

“நல்லவதான்… அந்த ரோக் அன்ஷூமனை லவ் பண்றாளா…???” மகனின் எதிர்கேள்விக்கு ஒருநிமிடம் என்ன பதில் சொல்வதென்றே தெரியாது வாயடைத்துப்போயிற்று தந்தைக்கு.

“இத நான் எதிர்பாக்கலடா கர்ணா….” வசுதேவன் ஆச்சரியத்தோடே பேச

“ஆனால் நடந்துருக்கே டாட்.. அதுவுமில்லாம… அவங்க லவ் பண்ணத வெளிய காட்டிக்காம… முழுக்க அரேன்ஜ்ட் மேரேஜாவே காட்டிருக்காங்க…மிஷ்டி மேடம்…” 

வந்த சிலமணி நேரத்திற்குள் இவ்வளவு தகவலை தந்த மகனை நினைத்து பெருமைப்படுவதா… இல்லை நண்பனையும் நண்பன் மகளையும் நினைத்து வருத்தப்படுவதா என்று இருதலைகொல்லி எறும்பு நிலையானது வசுதேவனுக்கு.

“அப்போ… இதுக்கு முடிவு…” என்று கேட்க….

நிதானமாக ரசித்து குடித்து முடித்தவன்….

“இப்பவும் அவதான் என் பொண்டாட்டி டாட்…. மை டைக்ரஸ்…நடக்கபோகிற எல்லாத்தையும் ஃபேஸ் பண்ண ரெடியாகட்டும்…” என்றவனின் பதிலில் குழப்பம் ஏற்பட்டாலும்… எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கை மேலோங்கி…வசுதேவனின் முகத்தில் புன்னகையே தவழ்ந்தது.

அத்தியாயம்3:

ஜவுளிக்கடை அல்ல அது… கடல்….  காண்போரை எல்லாம் தமது கண்கள் முன்பு ஏதும் வானவில் மழை பொழிவது போன்ற வியப்பை ஏற்படுத்தும் வண்ணம்.. புடவை வண்ணங்களால் அந்த இடத்தையே வர்ணஜாலமாக்கி கொண்டிருந்தது. மிகவும் கைராசியான கடை என்று சென்னை மாநகரத்து மக்கள் அனைவராலும் அறியப்பட்ட “சந்திரமதி” டெக்ஸ்டைல்ஸ். வசுதேவனின் அத்தை கவிதாவிற்கு சொந்தமான கடை. அவருக்கு பட்டுஉற்பத்தியிலும் பட்டுசேலைகளின் மீதும் அலாதி பிரியம். 

ஆனால் அவரது பிள்ளைகள் சித்தேஷ்வர், வேதபுரி இருவருக்கும் நவீன தொழில்நுட்பத்தில் தான் அதிக நாட்டம் இருந்ததால்… அவர்கள் கணிணி சம்பந்தப்பட்ட மென்துறை நிறுவனங்களை ஆரம்பித்து அதில் லாபம் பார்க்க ஆரம்பிக்க.. பெற்றோர்களையும் அவர்கள் தங்களுடனேயே அழைத்துக்கொள்ள விரும்ப…. வசுதேவனின் அத்தை அவரது பெயருக்கே இதை விற்றுவிட்டு கணவர் ,மகன்களுடன் நியூயார்க் நகரத்திலேயே செட்டிலாகி விட்டார்.

அவருக்கு நன்றாக தெரியும் நமது பாரம்பரியங்களிலும், கலாச்சாரத்திலும் வசுதேவனுக்கு இருக்கும் ஈடுபாடு. விதுரனோ அசகாயசூரன்…. அவன் கைகளுக்கு அடுத்து தொழில் செல்லும்போது இன்னும் நன்றாக வளர்ச்சியே காணும். தன் மனதுக்கு பிடித்த தொழிலுக்கு மென்மேலும் வளர்ச்சியே என்ற நிம்மதி ஏற்பட, அதனால் நிம்மதியாக அவருக்கே விற்றுவிட்டு குடும்பத்தோடு நியூயார்க்கிற்கே சென்றுவிட்டார்.

தன் முன்னால் பரப்பட்டிருந்த புடவைகளை ‘தேமே…’ என்று பார்த்துக்கொண்டிருந்தாள் மிஷ்டி. யவனி வரிசையாக புடவைகளை எடுத்து போட சொல்லிக் கொண்டிருக்க… மிஷ்டியின் நினைவுகளோ மாலையில் நடந்த உரையாடலிலேயே இருந்தது.

அவர்கள் குடும்பநல மருத்துவர் வந்து அவளை காய்ச்சலுக்கு பரிசோதித்து.. ஊசி போட்டுவிட்டு… வெறும் ஜூரமயக்கயம் தான் என்று கூறிவிட்டு சென்றுவிட… யவனிக்கு சற்று நிம்மதி ஆனது. 

“குட்டிகழுதை… கொஞ்சநேரத்துல பயமுறுத்திட்டா… இன்னும் சேட்டை குறையாம இருக்காளே…” மகளின் நெற்றியை தடவியவர்.. காய்ச்சல் நன்றாகவே குறைந்ததை உணர்ந்தவராக.. மருத்துவரின் ஆலோசனைப்படி கஞ்சி தயாரித்து குடுப்பதற்காக கீழே இறங்கி சென்றவர்… கணவருக்கு அழைத்து ஜூரத்தை பற்றி கூற…

“நான் இன்னும் கொஞ்சநேரத்துல கிளம்பி வர்றே வனி… மிஷ்டிபேபி கண் முழிச்சதும் எனக்கு கால் அடி… நான் அவகிட்ட பேசிட்டு கிளம்பி வந்துடறேன்… “

“ஜூரம் நல்லா குறைஞ்சுடுச்சுங்க… செக் பண்ணிட்டு தான் வர்றேன்… இருந்தாலும் உங்களால் முடிஞ்ச அளவு சீக்கிரம் வாங்க…” என்று கூறிவிட்டு வைத்துவிட…

நண்பனது முகத்தில் குழப்பத்தை கண்ட வசுதேவன் நந்தனிடம் என்னவென்று விசாரிக்க… அதை தப்பாமல் கார்மேகமும் பார்த்துக்கொண்டிருந்தார். மந்திரியுடனான மீட்டிங் என்பதால் பெரும்பாலான தொழிலதிபர்கள் அங்கு இருக்க… இவர்கள் இருவர் பேசுவதையும் பார்த்தவாறே சற்று தள்ளி அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார் கார்மேகம். அன்ஷூமன் அன்று மதியம் தான் லண்டனிலிருந்து வந்திருந்ததால் அவன் ஓய்வெடுப்பதாக சொல்லிவிட… இவர் மட்டும் வந்திருந்தார்.

“மிஷ்டிக்கு காய்ச்சலா இருக்கு வசு… நேத்து நைட்ல இருந்தே அவ முகம் கொஞ்சம் சரியில்ல….” என்று கூற… வந்த புன்னகையை சமாளிக்க பெரும்பாடு பட்டார் வசுதேவன். 

சின்னபெண்ணை நினைத்து கவலை ஏற்பட்டாலும்.. தன் மகனது வேலைதான் என்று நன்றாக தெரிந்தது.

“எப்படியோ என் கர்ணன்.. அந்த கண்ணன் அளவிற்கு இல்லன்னாலும்… குடும்பஸ்தனா ஆனாலே போதும் ” மனதிற்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டார். 

அவருக்கு தெரியும் மகன் எதையோ மனதில் வைத்துக்கொண்டுதான்…. பெண்கள் சகவாசத்தையே தவிர்த்து கொண்டிருப்பதும்… எத்தனை முறை கேட்டாலும் திருமணத்திற்கு மறுப்பதிற்கு பின்னால் வலுவான காரணம் இருக்கிறதென்றும். அவரும் எவ்வளவோ முயன்று பார்த்துவிட்டார்… இன்று வரை விதுரனின் வாயிலிருந்து ஒரு வார்த்தை என்ன… ஓரெழுத்தை கூட பெற முடியவில்லை.

தனக்காக தனது நண்பனை காக்கவே… இந்த திருமணத்தையும் செய்யப்போகிறான் என்றும் நன்றாகவே அறிந்தும் வைத்திருந்தார். ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. விதுரன் ஒரு செயலில் இறங்கிவிட்டால் அதிலிருந்து பின்வாங்க மாட்டான்… அவ்வாறே மகனது இல்வாழ்வும் மலர்ந்து விடும் என்றே சந்தோஷப்பட்டார் அந்த பாசக்கார தந்தை.

தன் நினைவிலிருந்து வெளிவந்தராக….” சாப்பிட்டதுல ஏதும் சேராம… இன்ஃபெக்ஷன் ஆகிருக்கும் யது… இப்போ எப்படி இருக்கு..??” என்று கேட்க…

“முகுந்த் தான் வந்து பாத்துட்டு போயிருக்கான்.. நீ சொன்ன மாதிரி அலர்ஜிதான்… கொஞ்சம் சீக்கிரம் முடிச்சிட்டா கிளம்பலான்னு பார்க்கிறேன்…”

“இப்பதான் முதல்கட்ட மீட்டிங்கே முடிஞ்சுருக்கு யது… எப்படியும் இரண்டாவது முடிய எட்டுமணி ஆகிடுமே.. நீ எதுக்கும் தங்கச்சிக்கு கால் பண்ணி கொஞ்சம் கவனமா பாத்துக்க சொல்லு.. நான் வேணும்னா அன்னம்மாவ அங்க அனுப்பி வைக்கட்டுமா…” என்று கேட்டிருக்கும் போதே.. தனது சீட்டிலிருந்து எழுந்து..  இவர்களை நோக்கி வந்த கார்மேகம்…

“என்ன சம்பந்தி … ஏதும் சீரியசான விஷயமா…??” என்று கேட்க….

” ஆமா..சம்பந்தி.. பாப்பாக்கு உடம்பு கொஞ்சம் சரியில்ல…காய்ச்சலடிக்குது.. ஆனால் இப்போ கொஞ்சம் பரவாயில்லை….” யதுநந்தன் சங்கடத்துடன் பதிலளிக்க.. இன்னும் இரண்டு நாட்களில் திருமணத்தை வைத்துக்கொண்டு இப்பொழுது பார்த்து மகளுக்கு உடம்பு சரியில்லையே என்ற கவலை அவருக்கு….

“என்ன என் மருமகளுக்கு முடியலயா… கண்ட கண்ணும் படறதால தான் இப்படியெல்லாம் நடக்குது… (வசுதேவனை பார்த்துக்கொண்டே கூறியவர்..)வாங்க நாம உடனே  வீட்டிற்கு கிளம்பலாம்…” என்றவாறே எழ.. 

“என்ன இவர் புரிந்துதான் பேசுகிறாரா..?? ” ஒரு அதிருப்தி கலந்த பார்வையை  நந்தன் பார்த்து வைக்க… 

“டேய் ஆயிரம் ருபாய்க்கு நடிக்கறதுக்கு.. லட்சத்துக்கு நடிக்கிறியேடா பாவி..” வசுதேவன் மனதுக்குள் சிரித்தவாறே….

“மிஸ்டர் கார்மேகம்.. உங்க மருமகமேல உங்க அக்கறை புரியுது… பட் நாம இங்க கலந்துகிட்டிருக்கிறது.. மந்திரியோட தொழில்துறை மீட்டிங்ல.. பாதில போனா.. அவங்களை அவமதிக்கறதா ஆயிடும்..  அதனால் நீங்க கவலைப்படாம உங்க சீட்ல உட்காருங்க.. “நமுட்டுச்சிரிப்புடன் கூற… யதுநந்தனும் அதையே ஆமோதிக்க…. வசுதேவனின் வார்த்தைகளால் ஏற்பட்ட கோபத்தை அடக்கிக்கொண்டவராக… தனது இருக்கையில் சென்று அமர்ந்தார் கார்மேகம்.

அவர் அங்கு நகர்ந்ததும்… மிஷ்டியிடமிருந்து கால் வர… உடனே அழைப்பை எடுத்தார் நந்தன். 

“ப்பா… “மகளின் குரல் சோர்வாகவே வர…

“பேபி இப்போ காய்ச்சல் குறைஞ்சுடுச்சாரா…??”குரலில் மகளை  உடனே பார்க்கும் வேகம் இருந்தாலும்… சூழ்நிலை அவ்வாறு இல்லையே…

” அதெல்லாம் போயே போச்சுப்பா… இப்ப கடைக்கு போகலாம் சொன்னா வனிம்மா ஒத்துக்க மாட்டேங்கறப்பா…”.. என்று புகார் கூற… 

“குடுடி எங்கிட்ட…” சத்தம் போட்டுக்கொண்டே யவனி அலைபேசியை வாங்குவது கேட்க.. நந்தனுக்கு சற்று நிம்மதியாக உணர்ந்தார்.

“நந்து… இப்பதான் கொஞ்சம் உடம்பு சரியாகிருக்கு.. கடைக்கு போகனும்னு துள்ளுறா.. அதெல்லாம் முடியாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லுங்க…” யவனி நந்தனிடம் பொறிந்து தள்ள.. முகத்தில் கலவரத்தை காட்டாமல் அமர்ந்திருந்தாள் மிஷ்டி.

காய்ச்சல் சற்று குறைந்து… கஞ்சி எடுத்துக்கொண்டு யவனி மேலே வரும்போது கண்விழித்திருந்தாள் மிஷ்டி. அன்னையை பார்த்து முறுவலிக்க… 

“மிஷ்டிமா இந்த கஞ்சி கொஞ்சம் குடி..” யவனி புகட்ட… குடித்த பிறகு சற்று தெம்பாக உணர்ந்தாள். சற்று தலையணையில் அவள் தலை சாய்த்து அமரவும்.. அவளறையில் உள்ள கடிகாரத்தின் குயில் ஐந்து முறை கூவியது.

“என்னது மணி ஐந்தா…!!!” மனதுக்குள் அலறியவள்… கஞ்சி கிண்ணங்களை பணியாளிடம் எடுத்துக்குடுத்து கொண்டிருந்த தாயிடம்….

“ம்மா… மணி அஞ்சாச்சு… கடைக்கு கிளம்பலாம்மா..”என்றவாறே கட்டிலை விட்டு இறங்க எத்தனிக்க…

“என்ன விளையாடிறியா மிஷ்டி.. இப்பதான் உடம்பு கொஞ்சம் சரியாயிருக்கு… அதெல்லாம் ஒண்ணும் போக வேண்டாம்…தேவையானதை வரவச்சுக்கலாம் ” யவனி மகளை சத்தமிட…..

உடனே தந்தைக்கு அழைத்து விட்டாள் மிஷ்டி. யவனியோ…” நீ என்ன பண்ணாலும் கூட்டிபோகமாட்டேன்..” என்றவாறு அமர்ந்திருக்க…

மகளோ நேரடியாக தந்தையிடம் கோரிக்கை வைத்தாள். நந்தனுக்கோ மகளின் ஆசையை என்றுமே மறுத்ததில்லை.. ஆனால் மனைவியும் சரியாகத்தான் சொல்கிறாள். இன்னும் ஐந்து நிமிடத்தில் மீட்டிங் ஆரம்பித்துவிடும். 

நண்பனது முகத்தை பார்த்துக்கொண்டே இருந்த வசுதேவன்… பார்வையாலேயே என்னவென்று கேட்க.. சுருக்கமாக விஷயத்தை சொன்னார் நந்தன்.

அலைபேசியை தன்னிடம் தருமாறு கூற.. சிரித்துக்கொண்டே வசுதேவனிடம் கொடுக்க…” யவனிம்மா.. நான் வசுதேவன் பேசறேன்மா…”…. என்று ஆரம்பிக்க…

“வசுண்ணா… நல்லாருக்கிங்களா… ??” யவனி அனைவரின் நலனையும் விசாரித்தாள்.

“பாப்பா ஆசைப்படறான்னா… நம்ம கடைக்கு கூட்டிட்டுப்போம்மா… வீட்டுக்கும் பக்கம்தான… அலைச்சலும் இருக்காது.. நான் கர்ணாவ அனுப்பறேன் உங்கள கவனிச்சுக்க…”….

“என்னன்னா சொல்றிங்க… விது வந்தாச்சா… சின்னபையனா பார்த்தது… சரிங்கண்ணா நான் இவளை அங்கேயே கூட்டிட்டு போறேன்…” என்று கூறி வைத்துவிட்டார்.

நண்பர்களின் சம்பாக்ஷணையையும் சிரிப்பையும் காணாது கண்டுகொண்டிருந்த கார்மேகம் விட்ட அனல் மூச்சில்… குளிரூட்டப்பட்ட அந்த ஏசி அறைகூட தகித்துக் கொண்டிருந்தது.

உடனடியாக அன்ஷூமனுக்கு அழைக்க… அவனோ தனக்கென்றே வரவழைக்கப்பட்டிருந்த உல்லாச அழகியுடன் அந்த பிற்பகல் பொழுதை சல்லாபப்பொழுதாக கொண்டாடிக் கொண்டிருந்தான். தந்தை மீண்டும் மீண்டும் அழைப்பெடுக்கவும்.. அவளிடமிருந்து தன்னை பிய்த்துக்கொண்டு வந்தவன்….

“வாட் டாட்… இப்பதான் லண்டன் டீல முடிச்சுட்டு வந்து கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு வந்தேன்… ???  ரொம்ப ஏதும் எமர்ஜென்சியா…???”…. என்று சீற…

மகனின் சீற்றம் தந்தைக்கும் சீற்றத்தை அதிகரிக்க…..

” அந்த ஸ்டெல்லா எப்பன்னாலும் வருவா…?? ஆனா மிஷ்டிய மிஸ் பண்ணா… என் சொத்தயெல்லாம் அனாதை ஆசிரமத்துக்குதான் எழுதிவைக்கப்போறேன்… அன்ஷூமன்…” ஆத்திரத்தை அவனிடம் இறக்க…..

“அப்பா… முதல்ல.. என்ன நடந்ததுன்னு சொல்லுங்க…??”…

நடந்ததை சுருக்கமாக அவர் விவரிக்க…

“இந்த கிழவன் வசுதேவனுக்கு எப்பவும் எங்க வழில குறுக்கிடறதே வேலை…”மனதிற்குள் அர்ச்சித்தவன்…..

“நான் பார்த்துக்கறேன்ப்பா… இப்ப மிஷ்டிய பார்க்கதான் கிளம்புறேன்… ” என்ற மகனின் பதிலில் சற்று குளிர்ந்தவராக…

“அதைச்செய் முதல்ல… ” என்று வைத்துவிட்டார் கார்மேகம்.

மிஷ்டி தயாராகிக் கொண்டிருக்கும்போதே… அன்ஷூமனிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது. அழைப்பை எடுத்தவள்… 

“அன்ஷூ… ” என்று அழைக்கும் போதே… அந்த பக்கமிருந்து அவன் முத்தமழை பொழிய…

“போதும்..போதும்..அன்ஷூ” 

“லண்டன்ல இருந்து வந்துட்டிங்களா…??” மிஷ்டியின் சந்தோஷக்குரலில் சற்று பெருமூச்சு விட்டான் அன்ஷூமன்.

“ஹே..டார்லிங்… நம்ம இப்ப உடனே மீட் பண்ணனுமே.??”  அவனது கோரிக்கையில் சற்று விழி பிதுங்கியது மிஷ்டிக்கு. இவனிடம் உண்மையை சொல்லிவிடலாமா என்று கூட யோசித்தாள். 

எதிர்முனையிலருந்து பதில் வராமல் இருக்க…

“ஹே..டார்லிங்.. ” அன்ஷூமனின் அழைப்பில் சுயநினைவிற்கு வந்தவள்… உண்மையை சொன்னால் பெற்றோரின் உயிருக்கு ஆபத்து என்பதை நினைவுறுத்தியவளாக… 

“இல்லை அன்ஷூ.. இன்னைக்கு பட்டுச்சேலை ஷாப்பிங் பண்ணபோறேன்…” என்று சமாளிக்க…

அவளது பதிலில் சற்று குழப்பமடைந்தவனாக… 

“ஹே…ஆர் யூ க்ரேஸி… நமக்கு டிசைன் பண்ண டிசைனர்ஸே இருக்குறாங்க.. நம்ம அப்பாங்க ரெண்டு பேருக்கும் சொந்தமா டெக்ஸ்டைல்ஸே இருக்கும்போது… சேரி எடுக்கப்போறியா….?? ஜோக் ஆஃப் தி இயர் பேபி… ” என்று கிண்டலடிக்க…

அதற்குள் மணி ஐந்தரை ஆகிவிட்டதை பார்த்தவள்… அப்போதைக்கு சமாளிக்கும் விதமாக…

“இது என்னோட ஃப்ரெண்ட்ஸ்க்கு கிஃப்ட் பண்ண அன்ஷூ… எனக்கு நேரமாச்சு.. நான் கிளம்பறேன்… ” என்று வைத்து விட்டாள்.

“ஏதோ சரியில்லை..” கோபத்தில் அன்ஷுமன் மொபைலை தூக்கி எறிய… அதன் நல்ல நேரம்… சோஃபாவில் விழுந்து உயிர்பிழைத்தது.

“இப்பவே உன்னைபார்க்க வர்றேன்டி…” அவனது கண்களின் வெறியில்… அவனை பார்த்துக் கொண்டிருந்த…ஸ்டெல்லாவிற்கு உதறலெடுத்தது.

இங்கு பட்டுப்புடவை கடையில் மிஷ்டி காத்துக் கொண்டிருக்க.. நேரம் ஐந்தே முக்காலென்று காண்பிக்க… உயிரை கையில் பிடித்துக்கொண்டு..அமர்ந்திருந்தாள் மிஷ்டி.

ஆனால் வரச்சொன்னவனோ.. மந்திரியின் செயலாளர் இரண்டாம் கட்ட மீட்டிங்கை நடத்திக் கொண்டிருக்கும் போது… சரியாக ஐந்து மணிக்கு….மந்திரியுடன் சரிக்கு சரியாக பேசி சிரித்துக்கொண்டு… அந்த அறையில் இருக்கும் அனைவரும் நிமிர்ந்து பார்க்கும் வண்ணம்… மீட்டிங் ஹாலின் உள்ளே நுழைந்தான் விதுரன். அனைவரும் அவனையே பார்த்துக்கொண்டிருக்க… கார்மேகத்தின் சிந்தனை மட்டும்…

“இவன் எப்ப திரும்பி வந்தான்..??” என்றிருந்தது.

நந்தன் வசுதேவனிடம் “விதுவா..??” பார்வையால் மெச்சியவாறே கேட்க…

வசுதேவன்”ஆம்..”என்று தலையசத்தவர்…”நீ பத்திரிகை வைக்க வரும்போது கொஞ்சம் முக்கியமான வேலையா வெளிய போயிருந்தான்” என்று கூறிக்கொண்டிருக்கும்போதே…

மந்திரி வந்ததால் அவருக்கு மரியாதை தெரிவிக்கும் விதமாக அனைவரும் நின்று கொண்டிருக்க… விதுரன் மந்திரியிடம் விடைபெற்று… நேராக இவர்களை நோக்கி வந்தவன்…

“ஹலோ… அன்கிள்..” நந்தனை நோக்கி கைநீட்ட… பதிலுக்கு நந்தனும் அவனுடன் கைகுலுக்க… “ரொம்ப நாள் அப்பறம் பார்க்கறேன் விதுகண்ணா…” என்றவாறே அணைத்துக் கொள்ள…

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கார்மேகத்திற்கு எப்பொழுதடா இந்த இடத்தை விட்டு செல்வோம் என்றிருந்தது.

“வசுதேவன் ஏதோ திட்டம் செய்துவிட்டான்” என்று அவரது உள்மனம் கட்டியம் கட்டி கூற… உடனே வெளியே சென்றால்தான் கார்மேகத்தால் என்னவென்று அறிந்துகொள்ள முடியும்.

“எஸ்..அன்கிள்… ” என்றவாறே அவரை அணைத்துக் கொண்டவன்… தனது தந்தையை பார்த்து…

“டாட்.. நீங்க இந்த மீட்டிங்க ப்ரொசீட் பண்ணுங்க… எனக்கு இன்னொரு அப்பாயின்மெண்ட் இருக்கு… மந்திரியோட பிஏகிட்ட நம்ம ப்ரபோசல்ஸயும் குடுத்துட்டேன்…” பேசிய கையோடு நந்தனிடமும் கூறிக்கொண்டு விடைபெற்று கிளம்பிவிட்டான்.

இங்கே கடையிலோ ஒவ்வொரு புடவையாக எடுத்து பார்த்துக்கொண்டிருந்த யவனி மகளை கவனித்தவர்…

“என்னடி புடவை எடுக்கனும்னு சொல்லிட்டு புடவைய எடுத்து பார்க்காம.. கடிகாரத்தயே பார்த்துட்டுருக்க…??” என்று உலுக்க…

சிந்தனையிலிருந்து வெளியே வந்தவள்…

“ஒன்னும் பிடிக்கலம்மா…” என்று கூற…

“பார்த்தாதானடி பிடிக்கும்… நீதான் பார்க்கவே இல்லையே…”மகளை கடிந்துகொண்டவர்…

“இவ்வளவு டையர்ட்னஸோட வந்தா இப்படிதான் ஆகும்…” என்றுவேறு அலுத்துக்கொள்ள…

முதலாளிக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்று கூறியதால்… இவர்களை நோக்கி வந்த மேனேஜர்… இவர்களது உரையாடலை கவனித்தவராக…

“மேம்… நான் வேணும்னா.. எங்க டிசைனர்ஸ வரச்சொல்லி உங்களுக்கு பிடிச்ச டிசைன்ல குடுக்க சொல்லட்டுமா…” என்று கேட்க… அனைத்தையும் கேட்டு மனதிற்குள் நொந்தவளாக.. கடை வாயிலை பார்க்க….

சரியாக  ஐந்து ஐம்பத்தைந்திற்கு நுழைந்தவனைப்பார்த்து மிஷ்டியின் இதயம் தொண்டையில் வந்து துடித்தது…

ஏனென்றால் வந்தது “அன்ஷூமன்”…

அன்ஷூமனைப்பார்த்த யவனி… மகள் மாப்பிள்ளைக்காகதான் இவ்வளவு நேரம் கடிகாரத்தையே பார்த்துட்டுருந்தாளா… இந்த காலத்து பிள்ளைங்களே இப்படித்தான்… என்று சிரித்துக்கொண்டவராக…

“வாங்க மாப்பிள்ளை..” என்று வரவேற்றவராக அன்ஷூமனை நோக்கி நடக்க…  அப்பொழுது பார்த்து முக்கியமான கால் ஒன்று வர… அன்ஷூமன் அதை எடுத்து பேச ஆரம்பிக்க… 

சரியாக யவனி அழைத்த நேரம்… அவன் பின்னால் …ஆறு மணிக்கு உள்ளே நுழைந்த விதுரன்… மிஷ்டியை பார்த்து கண்ணால் சிரித்துக்கொண்டே…

“வந்துட்டேன் அத்தை…” என்றழைத்தவாறே யவனியை நோக்கி வர… 

முதலில் அடையாளம் தெரியாமல் இருந்தவர்… பின்பு வசுதேவன் கூறியது நினைவு வந்தவராக… 

“விது கண்ணா…”என்றவாறே அவனை நோக்கி நடக்க… சட்டென்று அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான் விதுரன்.அதில் மகிழ்ந்தவராக அவனை அணைத்துக்கொள்ள…

“விது கண்ணா நல்லாருக்கியா…??” யவனியின் கேள்விக்கு.. அவரது தோள்வளைவில் குனிந்திருந்தவன்…

“ரொம்ப நல்லாருக்கேன் அத்தை…” பதில் கொடுத்தவாறே மிஷ்டியை பார்த்து கண்ணடிக்க… 

அன்ஷூமனும் கால் பேசி விட்டு அவர்களை நோக்கிவர… இருவரையும் ஒரு சேர பார்த்த மிஷ்டிக்கு.. காய்ச்சலுக்கு பதில் ஜன்னியே வந்துவிடுமோ என்ற சந்தேகம் வர… நின்றவாறே தனது பக்கத்திலிருந்த இருக்கையை இறுக்க பிடித்துக்கொண்டாள் நந்தனின் பெண்ணரசி.

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 11 சராசரி: 3.8]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Expert

Written by Ruthivenkat

 

About Author:

 

                  வாசகர்களுக்கு வணக்கம். நான் ருதி வெங்கட். இது எனது புனைப்பெயர். உண்மையான பெயர் உதயா வெங்கட்ரமேஷ். முதுகலை பட்டதாரி, இல்லத்தரசி. கதை படிப்பது மிகவும் பிடித்த விஷயம். அதுவே கதை எழுத ஊக்கசக்தியாக அமைந்து விட்டது. போட்டிக்கதையின் மூலம் எழுத்துப்பயணமும் தொடங்கியது. இதுவரை நான்கு கதைகள் எழுதி முடித்துள்ளேன். முதல்கதை புத்தகமாக  AD பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது. முகநூலில் ஓரளவு வாசகர்களுக்கு முகமறிந்த நபர்தான் . எனது கதைகளை தொடர்ந்து படிக்க Ruthivenkat (ருதிவெங்கட்)என்கிற எனது பெயரை FOLLOW செய்யுங்கள். கதைகளை பற்றிய அறிவிப்புகள் உங்களுக்கு வந்துவிடும்.

               வாசகர்களின் ஆதரவிலும், உற்சாகமூட்டலிலும்தான் கடந்த ஒருவருடத்தில் நான்கு கதைகளை வேகமாக முடிக்க முடிந்தது. உங்களது ஆதரவுகளை தொடர்ந்து வழங்குங்கள். 

 

        நன்றி

Story MakerContent Author

எனை சாய்த்தானே(ளே)!!! 💞 – 10

3. அற்றைத் திங்களில்