in

விண்ணைத்தாண்டி வந்தேனே – ருதி வெங்கட்

விண்ணைத்தாண்டி வந்தேனே

அத்தியாயம்-1:

குரு பிரம்மா

குரு விஷ்ணு

குரு தேவோ மகேஷ்வர

குரு ஷாட்சாத் பரப்ரம்மா

தஸ்மை ஸ்ரீ குரவே நமக

ஜோசியர் பூஜையறையில் தனது பூஜையை முடித்துக்கொண்டிருக்க…அவரது அலுவலக அறையில் அமர்ந்திருந்த மகேஷ்வரன்-பார்வதி முகத்திலோ ஒரு எதிர்பார்ப்புடன் கூடிய சிந்தனை.ஆம்.. அவர்களின் செல்வமகள் சைரந்திரிக்கு இன்னும் திருமண யோகம் கூடிவரவில்லை.மகேஷ்வரன் சென்னை மாநகரில் அமைந்திருக்கும் பிரபல வங்கியின் மேலதிகாரி.. பார்வதி கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். நிறைவான இல்வாழ்க்கையில் பரிசாக இவர்களின் ஒரே செல்வமகள் சைரந்திரி.பேரழகியல்ல ஆனால் காண்போரை வசீகரிக்கும் நவநாகரீக யுவதி.சென்னையின் பல லட்சம் மாணவர்கள் படிக்க ஏங்கும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பிடெக் ஜெனிடிக் என்ஜுனியரிங் முடிக்கும் தருவாயிலியே பிரசித்திபெற்ற ஆராய்ச்சி நிறுவனமாக சென்னையில் அமைந்திருக்கும் இந்திய-ஜெர்மனி ஒப்பந்த நிறுவனமான ஜெனிடிகாவில்  முக்கிய ஆராய்ச்சியாளினியாக பணி அமர்த்தப்பட்ட கெட்டிக்கார சுட்டி பெண். ஆம் படுசுட்டி இல்லையென்றால் பார்வதி வீசும் கல்யாணவலையில் என்றோ சிக்கியிருப்பாள். நேற்றுதான் வெற்றிகரமாக ஐந்தாவது மாப்பிள்ளையும் துரத்திவிட்டாள். அதன் வெளிப்பாடே அவளைப் பெற்றவர்களின் இந்த ஜோதிட விஜயம்.

“என்னங்க இந்த தடவை ரெண்டுல ஒண்ணு பாத்தே ஆகனும்? குருஜி என்ன பூஜை செய்ய சொன்னாலும் செஞ்சுடலாம்”

” பார்வதி நம்ம பொண்ணு கல்யாணம் வேண்டாம்னு சொல்லவே இல்லையே..பின்ன ஏன் இவ்வளோ கவலைப்படுற”

“ஆமா உங்க பொண்ணுதான.. அவ தெளிவாதா இருக்கா..

 நா என்ன மாப்பிளைய பிடிக்கலன்னா சொல்றேன் பிடிச்சா நல்லா இருக்கும்னுதான சொல்றேன் பாருபேபின்னு சொல்லுவா..

எல்லாம் நீங்க குடுக்கற செல்லம்தான்” பார்வதி கவலையோடு கூற..

மகேந்திரன் முகத்திலோ புன்சிரிப்பு

“என் பொண்ணு என்ன மாதிரி அறிவாளியா இருக்கான்னு உனக்கு பொறாமைடி”

“ஆமாமா பொறாமைதா… உங்க பொண்ணுக்கு மாப்பிள்ளையா வானத்துல இருந்து இளவரசர் குதிக்கப்போறாரு.. அதைப்பார்த்து நா பொறாமைப்படறேன்” என்று முகவாயை தோள்பட்டையில் இடித்துக்கொள்ள மகேந்திரன்  இப்பொழுது நன்றாகவே சிரித்தார்.

“சிரிங்க சிரிங்க நல்லா சிரிங்க… அதுவும் அந்த அஞ்சாவது பையன் கிட்ட என்னதான் சொன்னாலோ.. அந்த பிள்ளையாண்டான் முகத்த பார்த்தப்போ எனக்கு மனசே ஆறல”

“ஹா…ஹா..இங்க பாரு… நீயே திரும்ப திரும்ப ஞாபகப்படுத்தி சிரிக்க வைக்காதே… எனக்கு மட்டும் அந்த கவலையில்லையா என்ன?அவளோட ஆசை நியாயமா இருந்தாலும்..ஒரே பொண்ண எப்படி பிரிஞ்சு இருக்கமுடியும்? அதனாலதான் நானும் பொறுமையா இருக்கேன்”என்றார் மகேஷ்வரன் ஆற்றாமையுடன்.

இவ்வளவுக்கும் காரணமான நம் நாயகியோ சந்தோஷமாக தனது  ஐந்தாவது வெற்றியை அவள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நிறுவனத்தின் கேண்டினில்அமர்ந்து மேங்கோ மில்க் ஷேக்கை ரசித்து கொண்டாடிக்கொண்டிருந்தாள் தனது தோழி சௌம்யாவுடன்.

“ஹே…சைரா பாவம்டி.. பாரு மாமி….. எவ்வளவு நாள் தான் மாமியும் பொறுமையா இருப்பாங்க”அவளுக்கு பிடித்த லிச்சி மில்க் ஷேக்கை உறிஞ்சுக்கொண்டே பரிதாபப்பட்டாள் சௌமி.

“இன்னொரு ஷேக் வேணும்னா கேட்டு வாங்கி சாப்பிடு சௌமி.இப்படியெல்லாம் பேசி எனக்கு மயக்கம் வர வைக்காதே….

நானும் எத்தனையோ தடவை சொல்லிட்டேன். இந்த ஒரு ஆராய்ச்சி குறிப்ப மட்டும் முடிச்சிட்டு நான் நீங்க சொல்றதயெல்லாம் கேட்டுக்குறேப்பான்னு.

அமெரிக்க ஆராய்ச்சி தலைமையகத்துல மட்டும் சேர்ந்துட்டேன்னா ஒரு ஆறே மாசத்துல என்னோட இறுதிகட்ட வேலையெல்லாம் முடிஞ்சிடும். ஏன்தான் ஒத்துக்க மாட்டிங்கறாங்கனு எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு.

அதும் மகிடாலிங் இப்படி சொல்றதுதான் ஆச்சர்யம்.ஏன்னா எதுக்குமே மறுப்பு சொல்லாத அப்பா இப்போ மறுக்கறதுதா கஷ்டமா இருக்கு.”

“சரி விடு சைரா நமக்கு ரொம்ப நல்லபுள்ளயா யோசிக்கறதல்லாம் ஒத்து வராது. பேசாம நாம ரெண்டு பேரும் அவங்களுக்கு தெரியாம ஜூட் விட்ருவோமா? பாருமாமி சமாளிச்சுப்பாங்க. மகி மாமுவ பலி ஆடா விட்டுட்டு போறதுதான் கஷ்டமா இருக்குடி”

“அடிங்க எங்க அப்பாவையே சைட் அடிக்கிறியா நீ? இரு உன்னை..” வெளியே கார்டெனிங்க் ஏரியாவை நோக்கி ஓடிய சௌமியை துரத்திக்கொண்டு ஓடினாள் சைரா.

ஜோதிடர் அவர்களை வரவேற்கும் விதமாக  புன்னகைக்க தம்பதிகளும் தங்கள் வணக்கத்தை தெரிவித்தனர்.

இப்போ “என்னென்ன கேட்கணுமோ கேளு பார்வதிம்மா?”

 அவர் அப்படி கேட்டதும் பார்வதி முகத்தில் நம்பிக்கையின் ரேகைகள் அதிகமாகவே படர்ந்தன. சைரா பிறந்து ஜாதகம் எழுதியதிலிருந்து வீட்டில் நடந்த அத்தனை மங்களகாரியங்களும் நல்ல முறையில் செய்து கொடுத்தவராயிற்றே.

“சுவாமி இனிமேலாவது என் பொண்ணுக்கு நல்ல புத்தி வருமா?”பார்வதி.

“பார்வதி புத்திசாலி பிள்ளைய வச்சுட்டு இப்படி கேக்கலாமா?” சிரித்துக்கொண்டார் ஜோசியர்.

“அப்புறம் ஏன் கல்யாணத்த தள்ளி போடுறா சுவாமி”

‘ஆசை அவள துரத்துது பார்வதி”

“இதுக்கு வேற வழியே இல்லியா?”

அவளுக்கு நடக்க வேண்டிய நேரத்துல கல்யாணம் நடந்தே தீரும்.நீங்க கவலைப்பட வேண்டிய அளவுக்கு அவளோட ஜாதகத்துல எந்த குழப்பமும் இல்லை. கொஞ்சம் விட்டுப்பிடிங்கோ. ஆனால் இப்போதைக்கு வெளிநாட்டுப்பயணம் மட்டும் வேண்டாம்.

“அத சொன்னால் கேட்கமாட்றாளே சுவாமி”

இனி அவ கேட்பா.நல்லதே நடக்கும். உங்க பொண்ணு கல்யாணத்துக்கு நானே வந்து நடத்தி குடுப்பேன்.

“சுவாமி ஏதும் பரிகார பூஜை பண்றதுனாலும் பண்ணிடலாம்”.

“பார்வதி அவ பிறந்து ஜாதகம் எழுதனதிலிருந்து இப்போ அவளோட கல்யாணத்துக்கு முகூர்த்தம் குறிக்கிறது வரைக்கும் என் பொறுப்பு. கொஞ்ச நாள் நீங்க வரன் பார்க்கறத மட்டும் நிறுத்தி வைங்கோ. உங்க மாப்பிள்ளை உங்களை தேடி வருவான்” இப்போ சந்தோஷமா கிளம்புங்கோ.

பார்வதி எழும்போது ஜோதிடரின் பார்வை “மகேந்திரன் மீதிருந்ததோ?”.. என்ற சந்தேகம் தோன்றி திரும்பி பார்க்க இருவரும் சகஜமாக சிரித்து கொண்டிருந்தனர்.மகேந்திரன் தம்பதி ஜோதிடரிடமும் அவரது மனைவியிடமும் சொல்லிக்கொண்டு விடைபெற.

“பொண்ணு மேல ரொம்ப பாசம் இல்லன்னா?”

“ஆமா வைதேகி”

ஜோசிரியரின் முகத்திலும் பலத்த யோசனையைக் கண்ட வைதேகி

“என்னன்னா இவ்வளோ யோசிக்கிறேளே? சாதராணமா பொண்ண பெத்தவா ஆசைப்படற மாதிரிதானே இவாளும் ஆசைப்படறா?”

“இல்லை வைதேகி… இந்த பொண்ணு பெத்தவாளுக்கு இல்லனு சொல்லுது அவளோட ஜாதகம்”

“அச்சோ.. அப்போ ஆயுளுக்கு பங்கமான்னா??” வைதேகி அதிர்ச்சியோடு கேட்க..

“இல்லை வைதேகி.. அவளோட ஆயுளுக்கு பங்கமில்ல…  ஆனால் இனி வரப்போற ஒருமாத காலத்தை இந்த பொண்ணு வெற்றிகரமாக கடந்து வந்துட்டான்னா…. அவள் ஆசைப்பட்ட எல்லாத்தையும் செய்து முடிச்சு ருவா…. இல்லற வாழ்க்கையும் நல்ல விதமாக அமையும்… ஆனால் ஏதோ ஒரு சக்தி என்னை குழப்புது” சிறிது கவலையின் சாயல் அவரது முகத்தில்.

“ஆனானப்பட்ட ரகுராமன் கையாலயே முடியலன்னா… அப்படி என்னன்னா நடக்கப்போறது” மாமியின் முகத்தில் விஷயத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம்.

“இதுதான் சாக்குன்னுட்டு ஏன் பேர சொல்றியா வைதேகி?” என்று நமுட்டுச்சிரிப்புடன் ஜோசியர் கேட்க  ….. “சொல்ல மாட்டாளே” சலித்துக்கொண்டே சென்று விட்டாள் மாமி. அவளுக்கு தெரியும் அவருடைய நேர்மையும் ஜோதிடக்கலைக்கு அவர் குடுக்கும் மதிப்பும்.

ஜோசிரியரின் வார்த்தை குடுத்த ஆறுதலால் பெற்றவர்களின் மனதில் சற்று நிம்மதி ஏற்பட்டதோ உண்மை. ஆனாலும் மகேந்திரனின் முகத்தில் தெளிவில்லாததை கண்டும் காணாதது போலவே அவர்களது வாகனத்தை நோக்கி நடந்தார் பார்வதி.

இது ஒன்றும் புதிதல்ல அவருக்கு.. எப்பொழுது மகேந்திரனின் நெருங்கிய நண்பரான அபரஜித்துக்கு பிரச்சனை ஏற்பட்டதோ அப்போதிருந்தே இப்படித்தான். இருந்தாலும் “அபிண்ணா இப்போ இருந்திருந்தா?” என்ற எண்ணம் எழத்தான் செய்தது பார்வதிக்கு. “எப்படியாச்சும் பேசி இந்த குட்டிக்கழுதைய வழிக்கு கொண்டு வந்திருப்பார்.. ஹூம்ம்”.. பெருமூச்சு மட்டுமே விடமுடிந்தது பார்வதியால். பின்னே வடநாடுகளுக்கு இந்த முறை யாத்திரை சென்ற அபரஜித்  மலையேற்றம் முடிந்துதான் திரும்புவதாக ஏற்பாடு.

இங்கே இப்படியிருக்க..அங்கே செளமியை துரத்தி ஓடிக்கொண்டிருந்த சைராவின் மீது ஏதோ பலத்த காற்று முகத்தில் மோதியது போல் இருந்தது.. ஆனால் நடந்ததோ.. சைராதான் ஒரு ஆடவனின் மீது மோதியிருந்தாள்.. கண்களை திறந்து பார்க்கும் போது ஆண்மகன் தான் நின்றிருந்தான்…

“ஏய்..ஹூமா… உனக்கு ஏதும் ஆகலையே?”பின்னால் அவன் நண்பன் கத்துவது இவளது காதுகளில் தெளிவாகவே விழுந்தது.. சௌமியும் பக்கத்தில் வந்து தோழியை பிடித்துக்கொள்ள..

“சைரா நீ கீழ ஒன்னும் விழலயே?”..

அப்பொழுது அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஆர் யூ ஓகே மிஸ்??”

தோழி அவன் கேட்கும்  கேள்விக்கு பதில் கூறாமல் ஆவென்று பார்த்திருக்க..அவளது கைகளில் நறுக்கென்று கிள்ளினாள் சௌமி.

“டீ.. பிசாசே..ஏன்டி கிள்ளுன?”

“அவரு உன்ன ஓகேயானு கேட்டுட்டுருக்காரு.. நீ லூசு மாதிரி பாத்துக்கிட்டே நின்னுகிட்டு இருந்தடி..அதான் கிள்ளுனேன்” சௌமி தோழியின் காதில் கிசுகிசுக்க அது அவனின் காதில் நன்றாகவே விழுந்தது.

“நம்ம நிஜமாவே இந்த ஆள் மேலதான் மோதுனோமா? ஏதோ பலத்தகாத்துல மோதுன மாதிரி இருந்ததே?”

அவன் தங்களையே பார்த்துக்கொண்டிருந்ததை கவனித்த சைரா..

“அவன்கூட ஏதோ பேர் சொல்லி கூப்பிட்டானே?.. ஹான் ஞாபகம் வந்துருச்சு”…

கைகளில் ஒட்டியிருந்த மண்ணை தட்டி உதறிவாறே சற்றே குறும்புடன்

“என்ன மன்னிருச்சுங்க உப்மா….ப்ஸ்.. சாரி சாரி ஹூமா தெரியாம இடிச்சுட்டேன்”..என்றதும் கலகலவென சிரிக்க ஆரம்பித்துவிட்டனர் ஹூமாவும் அவன் நண்பன் விக்ரமும்.

“மச்சி.. உன்னோட பேர இதுக்குமேல யாரும் கேவலப்படுத்த முடியாதுடா…அதும் உப்மாவாம்..” என்று விக்ரம் கண்ணில்நீர் வர சிரிக்க

தோழிகள் முகத்தில் சிரிப்பும் சங்கடமும் எழுவதை உணர்ந்தவன்

“என்னுடைய முழுப்பெயர் ஹூமேஷிங்க” அவளின் பெயரையும் அறிந்து கொள்ள ஆவலுடன் கைநீட்ட..

சைராவும் தயங்காமல் அவனின் கைகளை குலுக்கி “நான் சைரந்திரி” என்று புன்னகையோடே கூற செளமியாவும் பரஸ்பர அறிமுகம் செய்து கொண்டாள் விக்ரமுடனும் ஹூமேஷியுடனும்.

“நீங்க என்ன விஷயமா இங்க வந்திருக்கிங்க மிஸ்டர் ஹூமேஷி?”

“நான் இங்க புதுசா பிரமோட் ஆயிருக்கிற சீனியர் சைன்டிஸ்ட் மிஸ்.சைரா” என்க.. சைராவின் முகத்திலோ ஆச்சர்யம் “இவ்வளவு சின்ன வயதிலேயே இத்தகைய பதவியடைந்திருக்கானே” என்று.

“என்ன மிஸ்.சைரா சைலன்ட் ஆகிட்டிங்க?”

அங்கே விக்ரம் சௌமியா நிலைமையும் அதேதான்.

சட்டென்று சுதாரித்தது விக்ரம்தான் “மச்சி அவ்ளோ நேரம் என்கூட பேசிக்கிட்டே வந்தப்பவும் நீ சைன்டிஸ்ட்ங்கறத சொல்லவே இல்லை” என

“அப்போ நீங்க ரெண்டு பேரும் ஏற்கனவே தெரிஞ்சுகிட்ட நண்பர்கள் இல்லையா”சௌமியா.

“இல்ல மிஸ்.சௌமியா நாங்க ரெண்டு பேரும் ப்ளேன்லதா அறிமுகம் ஆனோம். நீங்க போற அதே ஏரியாவுல நான் ஜாயின் பண்ணப்போறேனு சொன்னப்போ கூட நான் இதை எதிர்பார்க்கவில்லை சார்”

விக்ரம் மும்பை கிளையில் இருந்து மாற்றமாகி வந்திருக்கும் ஜூனியர் சைன்டிஸ்ட். சக பயணியாக உடன் பயணித்த ஹூமேஷியின் மீது காலம் காலமாக கண்ட நண்பனை போன்று நட்புணர்வு தோன்றியது அவனுக்கும் வியப்பை ஏற்படுத்தியதென்னவோ உண்மை.

ஆனால் பேசி பழகிய சிறிது நேரத்திலேயே ஹுமாவின் ஆர்ப்பாட்டமில்லாத பேச்சும் பழகும் தன்மையும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. 

மூவரின் முகத்திலும் ஒரு பணிவு வருவதை விரும்பாத ஹுமேஷி

“ஹேய்..என்ன இது.. இவ்வளோ ஷாக் ஆகவேண்டிய அவசியமில்ல..  விக்ரம் நீ என்கிட்ட என்ன வேலைனு கேட்டப்போ நான் சொல்லாம பேச்சை மாத்தியதுக்கு காரணமும் இதுதான். என்ன உங்க சக நண்பனா பாருங்க அது போதும்”

“ப்ளீஸ்‌…டோன்ட் எம்பாரஸ் மீ” என..

விக்ரமும் சௌமியாவும் சந்தோஷப்பட்டாலும் சைராவின் முகத்தில் குழப்பமே.

“சரி நாம நம்மோட செக்ஷனுக்கு போகலாமா” அவன் முன்னே விக்ரமுடன் முன்னே நடக்க.. சைராவும் சௌமியும் பின்தொடர்ந்தனர்.

“என்னடி உலக அதிசயமா அமைதியா வர?” சௌமியா கேட்க…. சைராவிடம் அமைதி மட்டுமே.

“ஹேய்..சைரா என்னாச்சு உனக்கு?”

“ஒன்றுமில்லை நீ அமைதியா வா சௌமியா”

“ஹ்ம்ம்..சரி..” தோழி எதையோ தீவிரமாக சிந்தித்துக் கொண்டே வருகிறாள் என்பதில் ஆச்சர்யமான சௌமியா அமைதியாகவே அவர்களை பின்தொடர்ந்தாள்.

அவர்களுடைய ஆராய்ச்சிகூடத்தில் இவர்களுடைய தனிப்பிரிவில் நுழையும் போதுதான் தெரிந்தது அவன் தங்களுடைய பிரிவுக்குதான் சீனியராக வந்துள்ளான் என்பது.

இவனுக்காக அங்கே முதன்மை ஆராய்ச்சியாளர் பார்த்திபனும் இருந்தது இன்னும் ஆச்சர்யத்தையே ஏற்படுத்தியது.

 ஏனெனில் ஜெர்மனியில் தனியார் நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஜெனிடிகா வை இந்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்ய வைத்து முதன்மை ஆராய்ச்சி நிறுவனமாக ஆக்கிய பெருமை இவரையே சாரும். அவர் வந்து இன்னொரு நபரை வரவேற்க காத்திருப்பது இதுவே முதல் முறை. முதலில் அவர்கள் அவருக்கு மரியாதையுடன் தங்களது வணக்கங்களை செய்ய ஒரு சிறு தலையாட்டலுடன் அதை ஆமோதித்தவர்.

“லிசன்… கைய்ஸ்.. இவர்தான் உங்களுக்கு ஹெட்டா நான் அப்பாயின்ட் பண்ணியிருக்கிற மிஸ்டர்.ஹூமேஷி. நான் இங்க இவருக்காக வெய்ட் பண்ண காரணம் இவருடைய திறமைக்காக.நம்ம ஜெர்மனி கிளையின் புதிய கண்டுபிடிப்பான ஜெனிடி திரவத்தை உருவாக்கி தாவரங்களை பாதுகாக்கறதுல ஒரு மைல்கல்லயே உருவாக்கியிருக்கிற இவர்தான் அந்த விஞ்ஞானி. ஆனால் இவருடைய பெயர் வெளிய தெரியரத விரும்பாததால் கம்பெனிக்கே பேடென்ட் பண்ணி குடுத்துட்டாரு. நாம இப்ப எடுத்துருக்குற ஆராய்ச்சி ரொம்பவே முக்கியமான கட்டத்துல இருக்குறதால இவரோட உதவி நமக்கு ரொம்பவே முக்கியம்”.

“ஹூமேஷி.. இவங்க மூன்று பேரும் உங்களுக்கு கீழ உதவிக்கு இருக்க போறாங்க. விக்ரம், சௌமியா, சைரந்திரி. திறமையான உதவியாளர்கள். இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் படித்த மாணவர்கள்.இதில் ஜூனியர் சைன்டிஸடான விக்ரம மட்டும் மும்பைல இருந்து இங்க மாத்திருக்கோம் உங்களுடைய உதவிக்காக “.

ஹூமேஷியும் புரிந்து கொண்டு மற்ற மூவரையும் பார்த்து தலையசைக்க

“ஓகே சார் இனி நீங்க பார்த்துக்கோங்க… கொஞ்சம் வேலைல சேர்ந்ததற்கான பேப்பர்வொர்க் முடிச்சிட்டு..உங்க ரெட்டினா சாம்பிள் ரெஜிஷ்ட்ரேஷனயும் என்கூட முடிச்சிட்டு மட்டும் வந்துருங்க.விக்ரம் நீங்களும் சாம்பிள் வந்து குடுத்துருங்க. அப்போதான் இனி நீங்க ரெண்டு பேரும் ஆராய்ச்சிகூடத்துக்குள்ள போக முடியும்”

என்று பார்த்திபன் கதவை திறந்து கூறிக்கொண்டே விடைபெற ஹூமேஷியும் விக்ரமும் இவர்களிடம் தலையாட்டலோடு விடைபெற்றனர்.

அவர்கள் வெளியே செல்லவும் “ரெட்டினா..எஸ்… அதே பச்சை நிற கண்கள்”.. என்று கத்தினாள் சைரா திடீரென உற்சாகமாக…..

“ஹே.. என்ன பச்சனு உளற்ற சைரா?”அவள் முகத்தை பார்த்துக்கொண்டே கேட்க…..

ஏனெனில் முதலில் சைராவின் முகத்தில் இருந்த குழப்பம் தற்போது இல்லை.

“பச்சையா…போ சௌமி.. நான் பச்சைனு சொல்லையே..மார்னிங் எடுத்த பச்சை பர்ஸ எங்கயோ வச்சுட்டேனு சொன்னேன்” என்று புத்திசாலிதனமாக சமாளிக்க

“என்னவோ நீ இன்னைக்கு ஒரு மார்க்கமாதா இருக்க” அதற்கு மேல் தோழியை துருவவில்லை செளமி.அவர்களின் கவனம் வேலையில் திரும்பியது.

இங்கே ஹூமேஷியின் சிந்தனை முழுவதும் சைரா மட்டுமே. என்னை பார்த்ததிலிருந்து என்னமோ யோசிச்சுகிட்டே இருந்தாளே. என்னவா இருக்கும். “இருந்தாலும் இந்த குறும்புக்காரிய எனக்கு பிடிச்சுருக்கு….”

“ரொம்ப யோசிக்காதே சரா டார்லிங்.. நீ என்னை கண்டுபிடிக்கற அளவுக்கு நா வச்சுக்கமாட்டேன்”…..

 “ம்ஹூம்” இது நல்லதுக்கில்ல. வந்த வேலையவே மறக்க வச்சுருவா போலயே… முயன்று தனது வேலையில் கவனம் செலுத்தினான் ஹூமேஷி.

அங்கே நாயகியின் சிந்தனையிலும் நாயகனின் நினைவே. அவனோட கண்ணு என்கிட்ட என்னமோ சொல்லுதே….

” டீ சரா அவன் கோதுமை நிறத்துல மயங்கிட்டியோ” அவளது மனசாட்சி கேட்க

” ச்ச..ச்ச.. இதெல்லாம் ஒரு விஷயமா”

“அப்ப அவன் உயரமோ”

“ஆமால்ல.. ஆனா அவன் ரொம்ப உயராமாவும் இல்லாமதானே இருந்தான்..சரியா ஆறடி இருப்பான் போல”

“அப்போ அந்த ஆரஞ்சு உதடா இருக்குமோ” மனசாட்சி சற்று வில்லங்கமான பக்கமாக யோசிக்க ஆரம்பிக்க உடனே ஒரு டாட்டா காட்டிவிட்டாள்.

அவள் மனசாட்சியோடு பேசும் போது ஆரஞ்சு என்று சத்தமாக பேசிவிட ஆள் அரவமற்ற அந்த சோதனைக்கூட அறையில் உடனிருந்த சௌமியின் காதுகளில் நன்றாகவே விழுந்தது.

“என்னடி காலைலருந்து கலர் கலரா சொல்லிட்டிருக்க பச்சை ஆரஞ்சுன்னுட்டு… எதும் கலர் ஆவி அடிச்சுருச்சோ”

சைரா அவளைப் பார்த்து முறைக்க “ஏண்டி..நீ லூசு மாதிரி உளிரிட்டு என்னைய முறைக்கிற” ……

“சௌமி கடுப்ப கிளப்பாத”  சைரா முறைக்க…

” ஏன் சைரு.. ஒரு வேளை நீ அந்த அஞ்சாவது மாப்பிள்ளைய துரத்தி விட்டியே அவன் சாபம் எதும் விட்டுருப்பானோ” என்றாள் சௌமி.

“ஆமா…சௌமியா..சாபம் தான் விட்டுருக்கான் போல”

சௌமியா கவனமாக “என்னடா இவ இப்படி பேசறா” என யோசிக்க…..

“இன்னைக்கு என் கையால சௌமியானு பேர் இருக்குற ஒருத்தியை கொலை பண்ணுவேன்னு” சைரா சிரிக்காமல் சொல்ல…..

“அய்யய்யோ ஒரு கொலைகாரிகிட்ட மாட்டிக்கிட்டேனே” கத்திக்கொண்டே சைராவை கட்டிக்கொண்டாள் சௌமி. அவளது உயிர்தோழியை பற்றி அவளுக்கு தெரியாதா என்ன?… பின்பு ஞாபகம் வந்தவளாக

“சைரா.. நீ அந்த ஹூமேஷி சார பார்த்ததலிருந்தே ஒரு மாதிரியா யோசிச்சுகிட்டே இருக்கியே? என்னாச்சு?” சௌமியா கேட்டவள்… தொடர்ந்து பேசினாள்….

கண்டதும் காதல்னு நான் சொல்ல மாட்டேன்.. ஏன்னா எனக்கு தெரியும் உன்னோட வெற்றிக்காக நீ எவ்வளவு தூரம் உழைச்சுட்ருக்கன்னு. அதையும் மீறி யோசிச்சு கிட்டு இருக்கேன்னா ஏதோ இருக்குன்னு தான அர்த்தம் சைரா.

“ஆமா..சௌமி ஒரு சின்ன சந்தேகம்”

“ஆனால்… எனக்கே உண்மை என்னன்னு உறுதியா தெரியாம உனக்கு சொன்னாலும் புரியாதுடி”

“அவ்வளவு முக்கியமான விஷயமாடி” செளமி வியப்புடனே கேட்டாள்.

 எவ்வளவு இறுக்கமான சூழ்நிலையையும் இலகுவாகவே கையாளும் தோழி இவ்வளவு யோசித்து இன்றுதான் பார்க்கிறாள். அந்த ஒரு நாளைத்தவிர.அவளது சிறு வயதிலிருந்தே உடன்படித்த தோழியாயிற்றே.சௌமியின் முகத்திலும் சிந்தனை ரேகைகள் ஏறியது.

அதை கவனித்த சைரா சூழ்நிலையை இலகுவாக்க ” சரி வா சௌமி.. நம்ம குட்டி செல்லங்களை பார்த்துட்டு வரலாம்”

அந்த குட்டிச்செல்லங்கள் வேறு யாருமில்லை. அவளுடைய ஆராய்ச்சியால் அவள் உருவாக்கி வைத்திருக்கும் தாவர கூட்டங்களே. ஆம் சைரா தன்னுடைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருப்பது ஜெனிடிக் என்ஜினியரிங் பிரிவில் ஒரு பிரிவான தாவரங்களில் மேற்கொள்ளும் ஆராய்ச்சியே.

அவள் சௌமியை இழுத்துக்கொண்டு செல்வதை மிகுந்த கூர்மையோடு பார்த்துக் கொண்டிருந்தன பச்சை நிற கண்கள்.

 

அத்தியாயம்-2 :                                       

ஜோசியரை பார்த்து விட்டு வீட்டிற்கு வந்ததிலிருந்து மகேந்திரன் பலத்த சிந்தனையில் இருப்பது சற்று நெருடலாக இருந்தது பார்வதிக்கு. இவ்வாறு அவர் சிந்திப்பது சகஜம் என்றாலும், சற்று நேரத்தில் அவரே கலகலப்பாக சூழ்நிலையை மாற்றி விடுவார். எதையோ மனதுக்குள் வைத்துக்கொண்டு அவர் மருகுவது போல் தோன்ற, அவரிடம் கேட்டே விட்டார் பார்வதி

“என்ன ரொம்ப யோசித்து கொண்டே இருக்கீங்க?”….

‘ஒன்னுமில்ல பார்வதி’ என்றார் மகேஸ்வரன்.

“அப்போ கண்டிப்பா ஏதோ இருக்கு” பார்வதி.

“இல்லை நம்ம பொண்ணுக்கு எப்படி கல்யாணம் பண்ணி வைக்கிறதுதான் யோசனை”என்று மகேஸ்வரன் கூற….

ஜோசியர் தான் நல்லதே நடக்கும்னு சொல்லிட்டாரே.”கவலைபட்டு மனச போட்டு குழப்பிக்காதிங்க…”என்றார் பார்வதி.

“ஹ்ம்ம் சரி பார்வதி…நம்ம பொண்ணுக்கு நல்லதுதான் நடக்கும்” என்று கூறிய மகேஸ்வரன்…. குருஜி கூறிய விஷயத்தை நினைத்துப்பார்த்தார்.

பார்வதி வைதேகியிடம் பேசிக்கொண்டிருக்கும்போது குருஜி தனியாக இவரிடம்…

“மகேஸ்வரன் சைராவுக்கு அடுத்து வரப்போற நாட்கள்… அதாவது அடுத்து வரும் ஒரு மாத காலமும் ரொம்ப சவாலாக இருக்க கூடிய நாட்களாக இருக்கிறது. அதாவது அவள் எடுக்க போகும் முடிவு மிக சக்தி வாய்ந்த முடிவாக இருக்கும்… இந்த உலகத்தில் இருக்கலாமா…?? வேண்டாமா…??” என்பதை போன்ற முடிவு…..

“குருஜி…” மகேஷ்வரன் அதிர்ந்து பார்க்க….

“நீங்க பயப்படும் அளவிற்கு அவளது ஆயுளிற்கு எந்த குறைவும் இல்லை…. தீர்க்கமான ஆயுள் அவளுக்கு… இருந்தாலும் பொண்ண கவனமா பார்த்துக்கோங்க…

ஆனால் இதைத்தாண்டிட்டான்னா…. அடுத்து உங்க வீட்டில் மேளச்சத்தம்தான்…. அவளது வாழ்வும் மகிழ்ச்சியாக இருக்கும்….” என்று விஷயத்தை அவரிடம் மட்டும் கூறி அனுப்பி வைத்தார்.

தன் நினைவுகளில் இருந்து வெளியே வந்தவர்….. இதற்கு மேலும் யோசித்துக் கொண்டிருந்தால்  பார்வதி கேள்விகளால் துளைக்க ஆரம்பித்து விடுவார் என்பதால், பேச்சை மாற்றும் பொருட்டு

“ஆமா… எப்ப வர்றானாம் உன் உடன்பிறவாத பாசமலர்?” என்று சற்று கிண்டலோடு கேட்க…..

“ரொம்பத்தான்… உங்க உயிர்நண்பர் எப்ப வருவார்னு கேட்க மாட்டீங்களா?” என்றார் பார்வதி.

“நான் கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு பார்வதி” என்று மகேஸ்வரன் கோபமாக பதில் சொல்ல….

“அப்பப்பா…. அவர் மேல ஏன் இவ்வளவு கோபப்படுறீங்க?அபிண்ணா என்ன பண்ணாலும் நல்லதுக்குத்தான் பண்ணுவாரு” என்று அபரஜித்துக்கு ஆதரவாக பேச

“அப்போ என்மேலதான் தப்புன்னு சொல்றியா பார்வதி” என்று மகேஸ்வரன் ஆதங்கப்பட்டுக் கொண்டே பேசினார்…..

“இந்த வயசுல அவன் தனியா கஷ்டப்படனுமா? சொல்லு பார்வதி…. பக்கத்து பக்கத்திலேயே வீட்டை வைத்து விட்டு, ஊரு ஊரா யாத்திரை போய்க்கிட்டு இருக்கான், அவனுக்காக நாம எதுவும் செய்யக் கூடாதா? “என்று கோபமாகவே பேச…..

“அவரோட கஷ்டம் தெரிந்தும் இப்படி பேசுறீங்களே?” என்று இடைமறித்தாள் பார்வதி.

“அவனோட கஷ்டம் நமக்கு கஷ்டம் இல்லையா பார்வதி?” என்று மகேஸ்வரன் நேராக விஷயத்துக்கு வர

“இல்லைங்க… அண்ணா ஏதோ முடிவு பண்ணிட்டு தான் இப்படி நடந்துக்கறாரு….. கண்டிப்பா இதுக்கு பின்னாடி வலுவான காரணம் ஏதாவது இருக்கும்” என்று அபரஜித்துக்கு ஆதரவாகவே பேச….

“அதுக்காக இப்படி அவனுடைய வேலையை விட்டு, ஆசையா கட்டின வீட்டைவிட்டு நண்பர்கள் எல்லாரையும் விட்டுட்டு இருக்கணுமா?” என்றார்  மகேஸ்வரன்.

“அதான் அடுத்த மாசம் அபிண்ணா திரும்பி வரப்போறதா சொல்லியிருக்காங்களே…. நீங்க வேணாபாருங்க இந்த தடவை அவரே சொல்லுவாரு.. இனி எங்கயும் போகப்போறதில்லைன்னு….

அதுவும் இல்லாம நம்ம வீட்டு குட்டிரவுடிக்கு பிறந்தநாள் வேற வருது… அவர் வரலைனாலும் இவளே இழுத்துட்டு வந்துரமாட்டாளா?…” என்றார் பார்வதி.

மகளின் பேச்சை எடுத்ததும் மகேஸ்வரன் முகத்திலிருந்த வேதனையின்  சாயல் எங்கு தான் மறைந்தோ தெரியவில்லை.

“ஹேய்…. என் பேபிமாவ ரவுடின்னு சொல்றியா?….. என் இளவரசிக்கு என்னடி..அவள் எதையும் சாதிச்சு காமிப்பா”… மகேஸ்வரன் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம்.

“ஆமாமா… உங்க இளவரசியை நீங்கதான் மெச்சிக்கனும்…இப்படியே செல்லம் கொடுத்துக் கொடுத்து தான் அவள் ஆட்டம் ரொம்ப ஓவரா போகுது” என்றார் பார்வதி.

“நீ மட்டும் அவளை கண்டிக்கிற மாதிரி பேசாத டியர்… அவ “பாருபேபி”ன்னு ஒரு வார்த்தை உன்னை சொல்லிட்டா போதும் அம்மணி மொத்தமாக விழுந்துடுவீங்கன்னு எனக்கு தெரியாதா?” என்று மகேஸ்வரன் பார்வதியை தனது கைவளைவில் இழுத்துக் கொண்டே பேச…. அவரின் கைகளை தட்டி விட்டார் பார்வதி.

“மகள்புராணம் போதும்…..மதியத்துக்கு சமைக்கணும்…. நான் போய் வேலையைப் பார்க்கிறேன்” பார்வதி எழ முயற்சித்தார்.

ஏனென்றால் மகேஸ்வரன் நெகிழ்வான தருணங்களில் மட்டுமே…. பார்வதியை டியர் என்று அழைப்பார்.

“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்…. இப்ப நீ உட்கார்…..மதியம் நாம ரெண்டு பேரும் மால்ல ஒரு சுற்று சுற்றிவிட்டு…. உனக்கு பிடித்த மூவி பார்த்துட்டு வரலாம்” மகேஸ்வரன் அசால்டாக சொல்ல

“என்னங்க திடீர்னு..!! ஏதும் விசேஷம் கூட இல்லையே?? ஆச்சரியமாக கணவனை ஏறிட்டு பார்த்தார் பார்வதி. 

“விசேஷம் இருந்தாதான் போகனும்மா என்ன?” நம்மள மாதிரி வேலைக்கு போறவங்களுக்கு எப்போதாவது ஒருமுறைதான் இந்த மாதிரி சந்தர்ப்பம் கிடைக்கும்.ஜோசியரை பாக்கணும்னு முடிவு பண்ண போதே.. நான் பிளான் பண்ணிட்டேன்…

சொல்லப்போனா நம்ம பொண்ணு முதலிலேயே டிக்கெட் எடுத்து வைத்து விட்டாள் நமக்கு.

“மகிடார்லிங் எப்படியும் நம்ம ரகுராம் (ஜோசியர்)அங்கிள  பாத்துட்டு வந்ததும் நம்ம பாரு பேபி முகத்துல தனி பல்பு எரியும்.அதே சந்தோஷத்தோட இரண்டு பேரும் இந்த நாள என்ஜாய் பண்ணுங்கப்பான்னு சொல்லிட்டு தான் கிளம்பினாள்” என்று மகேஸ்வரன் கூற,

“ஓஹோ!அப்பாவும் பொண்ணும் முதலிலேயே பிளான் பண்ணிட்டிங்களா….அப்ப நான் வரலை” என்று பார்வதி சிலிர்த்துக்கொள்ள…

“பாருடியர், உன் பொண்ணுக்காக அல்ல….. பொண்ணப்பரிசாக கொடுத்த அப்பாவுக்காக வருவியாம்….” என்று கொஞ்ச ஆரம்பித்தார் மகேஸ்வரன்.

அதற்கு மேலும் நிற்குமா பார்வதியின் பொய்க்கோபம்…”எனக்கும் தெரியும்ங்க,  சைரு  மெசேஜ் பண்ணிட்டா காலையிலேயே எனக்கு… ” என்று கூற

“அடிப்பாவி தெரிஞ்சுகிட்டேதான் என்கிட்ட விளையாண்டியா நீ… வர வர உன் பொண்ணுக்கூட சேர்ந்துகிட்டு நீயும் வாலுத்தனம் பண்ண ஆரம்பிச்சுட்டியே பார்வதி” மகேஸ்வரன் அங்கலாய்க்கும் குரலில் பேச,

“ஹ்ம்ஹூம்… அது என்ன சேட்டை பண்ணா என் பொண்ணு….. சமத்தா இருந்தா உங்க பொண்ணா..?? என்று பார்வதி நியாயம் கேட்க ஆரம்பிக்க,

“ஹி..ஹி…சும்மா உங்கிட்ட விளையாண்டு பார்த்தேன் பாருடியர்” என்று மகேஸ்வரன் ஒருவழியாக சமாளித்தார்.

“சரி வாங்க கிளம்பலாம்…. இப்பவே நேரம் ஆயிடுச்சு, கொஞ்சம் முன்னாடி போனாத்தான் வண்டியை நிப்பாட்டுறதுக்கு இடம் முன்னாடியே கிடைக்கும்…வரும்போது அவளுக்கு பிடிச்ச டின்னரையும்வாங்கிட்டு வர சொல்லி இருக்கா…” என்று பேசியவாறே பார்வதி வீட்டை விட்டு வெளியே வர, இருவரும் வீட்டை பூட்டிக்கொண்டு மால்லுக்கு கிளம்பினர்.

அங்கே ஜெனிடிகாவின் பின்புறம் அமைந்துள்ள தோட்டத்தில் தன் செல்லக் குழந்தைகளை (தாவரங்களை) பார்க்கச் சென்ற சைராவின் முகத்தில் மகிழ்ச்சியும் ஏமாற்றமும் ஒருங்கே சேர்ந்து தோன்றியது.

“ச்சே…… நானும் எத்தனையோ தடவை முயற்சி பண்றேன். இந்த ரெண்டு தாவர மாதிரிகள் மட்டும் மொட்டிலேயே பட்டுப் போகுதே” என்று சைரா கவலைப்பட….

“எனக்கென்னமோ,  நீ மாற்றிக் கொடுத்த டிஎன்ஏ இன்னும் பொருந்தலனு என்று தான் தோணுது சைரா” என்றாள் சௌமி.

“இல்லை சௌமி…. இந்த தடவை நான் திசுக்கல்ச்சர்  குடுக்குறதுக்கு முன்னாடி டீடிஎன்ஏவில் (மாற்றியமைக்கப்பட்ட dna மாதிரியின் வளர்ச்சியை கண்காணிப்பது) ஒரு தப்பும் இல்லாமல் பார்த்துக் கொண்டேன்” என்றாள் சைரா.

“அப்போ செல் பெருக்கம் மறுபடியும் உருவாகறதில்தான் பிரச்சனை மிஸ்.சைரந்தரி. அதனால்தான் மொட்டு விட்டு பட்டு போகுது…”என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தான் ஹூமேஷி.

பார்வை முழுவதும் சைரந்தரியின் மீது வைத்தவாறே வந்தவன்….பின்பு அங்கு நின்றிருந்த சௌமியாவைப்பார்த்து புன்னகைத்தான்…. அவளும் பதிலுக்கு புன்னகைக்க…

“மிஸ்.சௌமியா… எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா??” என்று ஹூமேஷி சௌமியாவை பார்த்துக் கைட்க,

“சொல்லுங்க சார்… செய்யறேன்” என்றாள் சௌமியா.

“எனக்கு குடுத்துருக்கிற சில டாக்குமெண்ட்ஸ் நான் அங்க பார்த்திபன் சார் கிட்ட விட்டுட்டு வந்துட்டேன்… எனக்காக நீங்க அதை எடுத்துக் கொண்டுவந்து கொடுக்க முடியுமா??..” என்று வினவ.

தனக்கு மேல் சீனியர் சைன்டிஸ்டாக இருப்பவன் சொல்லும்போது  சௌமியாவால் எப்படி மறுக்க முடியும்??… “பயபுள்ள நம்மள மட்டும் தனியா கழட்டிவிட ப்ளான் பண்ற மாதிரி இருக்கே….”என்று மனதுக்குள் யோசித்தாலும்…

“ஓகே சார் நான் எடுத்துட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு சைராவிடம் தலையசைத்து விட்டு கிளம்பினாள் சௌமி.

ஹூமேஷி சௌமியாவிடம் பேச ஆரம்பிக்கவும்… சைராவின் கவனம் மறுபடியும் தாவரங்களின் புறம் திரும்பி இருந்தது…

சௌமியாவை அனுப்பி விட்டு ஹூமேஷி சைராவின் புறம் திரும்ப… அவனை பார்த்த சைரா…

“செல் உருவாகறதுலதான் பிரச்சனைன்னு எப்படி சொல்றீங்க சார்?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

“எளிமையான விஷயம் சைரந்தரி…    ஒன்றுசேர்ந்த செல்கூட்டம்  அத்தனையும் பெருகாமல் இருக்கும்போதுதான்…. இப்படி மொட்டிலேயே பட்டு போய் தாவரம் உயிர்தன்மையை இழந்துவிடும்… நீங்க மாற்றியமைக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகளை இன்னொரு முறை பரிசோதித்து பார்த்திங்கன்னா தெரிஞ்சுடும்” என்று ஹூமேஷியின் கண்களோ…. தாவரத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் சைராவின் ஒவ்வொரு அசைவையும் மனதுக்குள் படம் பிடித்துக் கொண்டிருந்தது.

அவன் சொன்ன காரணம் ஏற்புடையதாக இருக்கவே “ஹ்ம்ம் ஓகே  சார். நான் மறுபடியும் திருத்தி அமைக்க முயற்சி பண்றேன்” என்று கூறிய சைரா…. அடுத்த மாதிரிகளை நோக்கி திரும்பி நடக்க ஆரம்பிக்க,

அவளுக்கு சற்று அருகே வந்த ஹூமேஷி, அவனது ஆழ்ந்த குரலில்…

“என் பெயர் அவ்வளவு மோசமா இருக்கா சைரா?”என்று கேட்டது… அவளது நடையை அப்படியே நிறுத்தியது.

“என்ன திடீர்ன்னு இப்படிக் கேட்கிறான்?” சைராவின் மனசாட்சி குரல் கொடுக்க வாய் அவனிடம் வேறு ஒரு பதில் சொல்லியது.

அவனைப்பார்த்து திரும்பிய சைரா “ச்ச..ச்ச!!… இல்ல சார்! வித்தியாசமான பெயர்தான் நல்லா இருக்கு” என்று கூற…

“இல்ல… உப்புமான்னு கிண்டல் பண்ணியே! நீ வேணும்னுதானே சொன்ன” தாடையை தடவிக்கொண்டே  கண்களில் குறும்புடன் ஹூமேஷி வினவ…

“டீ… சைரா..!!.. கண்டுபிடிச்சிட்டானே… விளையாட்டு இப்படி தான் வினை ஆகுது பார்த்தியா…” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டவள்…

சிரித்துக்கொண்டே ஹூமேஷியின் புறம் முழுதாக திரும்பியவள் ” ஹி..ஹி…இல்ல சார்..! சும்மா விளையாட்டுக்கு சொன்னதுதான்”என்று சமாளிக்க….

“ம்ம்..நம்பிட்டேன் சைரா…”என்று ஹூமேஷி நம்பாதகுரலில் கூற,

“நிஜம்மா…நான் கிண்டல் பண்றமாதிரி சொல்லல சார்” என்று சிறு பதட்டத்தோடு கூற,

அவளின் பதட்டத்தை விரும்பாதவன் “ஒன்னும் பிரச்சனையில்லை…இனிமேல் நீ என்னை ஹூமேஷ்னு கூப்பிடு சைரா…” என்றவனின் உள் மனமோ காதலோடு “என் சரா” என்று சொல்லிக்கொண்டது.

“ஹ்ம்ம் ! ஓகே சார் !அப்படி கூப்பிட்டா பிரச்சனை இல்லேன்னா கூப்பிடுறேன்….” என்று சைரா சிரித்துக்கொண்டே கூற ஹூமேஷியின் முகத்திலும் சந்தோஷ புன்னகை.

“உங்களோட ஃபார்மாலிட்டி எல்லாம் முடிச்சிட்டீங்களா சார்?…ப்ச்!..ஹூமேஷ்” என்று சைரா கேட்க,

“ஹ்ம்ம்…முடிஞ்சது சைரா…தனி அறை  குடுக்க மட்டும் இரண்டு நாள் அவகாசம் கேட்டு இருக்காங்க”… பதில் சைராவிடம் சொன்னாலும் ஹூமேஷியின் கண்கள் வெளியே எட்டிப்பார்த்தது.

சைரா “அதென்ன!  உங்க பெயர்  ஹூமேஷி…?? இப்ப இருக்க வழக்கம் போல அப்பா அம்மா பெயரை சேர்த்து வச்சதா??…” என்று கேட்க

“உனக்கும் ஒரு ஐந்து வருடத்துக்கு முன்னாடி உலகத்தை பாத்திருந்தாலும்….அப்பவும் அதுதான் வழக்கம் போல…”ஹூமேஷி சிரித்துக் கொண்டே கூற…

“அப்போ நிஜமாகவே அப்படித்தானா? ” சைராவும் அவனுடன் சேர்ந்து சிரித்துக் கொண்டிருக்கும் போதே சௌமியாவும் வந்துவிட்டாள்.

இருவரும் பேசி சிரித்துக்கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டே வந்தவள் ” ஓஹோ..அந்த பச்சை ஆவி இதுதானா… அநியாயத்துக்கு வெறும் அவிச்சத சாப்பிடற சாலட் பார்ட்டிகிட்ட விழுறியேடி சைரு..” என்று மனதுக்குள் அவளை கலாய்த்தவள், வெளியே சிரிக்காமல் முகத்தை வைத்துக்கொண்டு

“சார் ! உங்களோட டாக்குமெண்ட்ஸ்” என்று பவ்யமாக சௌமியா நீட்ட அதை பெற்றுக் கொண்டான் ஹூமேஷி.

“ரொம்ப நன்றி மிஸ் சௌம்யா” என்று கூற….

“வேற எதும் உதவி வேணுன்னா சொல்லுங்க சார் உடனே ஓடிடறேன்…..” சௌமியாவின் பேச்சில் நன்றாகவே சிரித்த ஹூமேஷி…

“இனி உங்ககிட்ட கேட்கமாட்டேன் மிஸ்.சௌமியா… பட் யூ ஆர் வெரி ஹியூமரஸ்….” என்று பாராட்டினான்.

சௌமியும் புன்னகத்தைவாறே

“எங்க சார் உங்க கூட வந்த விக்ரம் சார காணலயே?..” என்று கேட்க…

அவன் புதுசா பார்த்திருக்க அப்பார்ட்மென்ட்டோட ஃப்ளாட் ஓனர் கிட்ட இருந்து கால் வந்தது. அதனால அவன் ஃபார்மாலிட்டிஸ் மட்டும் முடிச்சிட்டு கிளம்பி போய்ட்டான். அவளுக்கு பதில் கூறிக்கொண்டே தனது கைக்கடிகாரத்தில் நேரத்தைப்பார்த்தவன்… நேரமாவதை உணர்ந்துகொண்டு…..

“ஓகே லேடீஸ் ! நாளைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு அங்கே சந்திக்கலாம்” என்ற ஹூமேஷியின் சொற்கள் சௌமியாவிடமும்…… கண்கள் சைராவிடமும் விடைபெற்றன.

“ஓகே சார்… நாளைக்கு பார்க்கலாம்” இருவரும் விடைகொடுத்தனர் ஹூமேஷிக்கு.

அவன் சென்றதும் சைராவின் புறம் திரும்பிய சௌமி ” என்னடீ… சார் உன்கிட்ட என்னமோ சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு இருந்த மாதிரி தெரிஞ்சது” என்று கேட்க

“ம்ம் ! ஆமா சௌமியா…. எல்லாம் நான் கீழ விழுந்து எழுந்தப்போ அவரோட பெயரை வச்சு நான் கிண்டல் செய்தேனில்லையா…???? அதை வச்சுத்தான்” என்று தாங்கள் பேசியதை கூற சௌமியாவிற்க்கு சிறிது வியப்பு ஏற்ப்பட்டாலும்……. அதை அவள் வெளிகாட்டிக்கொள்ளவில்லை.

ஏனென்றால் அறிமுகம் ஆன முதல் நாளிலேயே சைராவின் மீது பதியும் ஹூமேஷியின் பார்வை “இவள் என்னவள்” என்று அப்பட்டமாக காட்டியது அவனது கண்களில்.

கண்டதும் காதல் என்பதிலெல்லாம் அவளுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் பார்த்த சில மணி நேரங்களிலேயே சைராவை மட்டுமே வட்டமிடும் பார்வை வியப்பை அளித்தது. அதற்காக அவன் தவறான பார்வையும் பார்க்கவில்லை…. இது காதலாக இருக்குமோ…?? என்ற சந்தேகம் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாது சைராவிடம் வம்பிழுக்க ஆரம்பித்தாள்.

“பாவம்…நீ ஒரு சாப்பாட்டுராமின்னு அவருக்கு எப்படி தெரியும்…” என்று சௌமி தோழியை கிண்டலடிக்க

“அதை நீ சொல்ற பாருடி…என்னால அததான் தாங்க முடியலை சௌமி..” சைராவும் தோழியை வார…..

“தாங்க முடியலனா.. இறக்கி விடவேண்டியதுதான… உன்ன யாரு தூக்கி வச்சுக்க சொன்னா…. அதும் இவ்வளவு மேன்லியா இருக்கறவற பார்த்து… அதும் போயும் போயும் உப்மானு கூப்பிட்டுருக்க பாரு… ” என்ற சௌமியா சிரித்துக் கொண்டே

“இதை விட அவரை யாரும் அசிங்கப்படுத்த முடியாது…” என்று கூறி நன்றாக சிரிக்க ஆரம்பிக்க…

“ரொம்ப கிண்டல் பண்ணாதடி… ஏதோ ஒரு ஃப்ளோவுல வந்துடுச்சு..” என்று சைரா கூற….

“ஃப்ளோவுல கூட உனக்கு நல்ல டிஷ் வராதா… பாவத்த…”என்று மேலும் கலாய்க்க..

“இப்போ நீ நிறுத்தல நான் இங்க இருந்து கிளம்பி போய்கிட்டே இருப்பேன்… உனக்கு சாக்லேட்டும் கட்” என்று செல்ல மிரட்டல் விட‌..

“யாருப்பா அது…??? எங்க சைருவ கலாய்க்கறது..” சௌமியா ஆளே இல்லாத பக்கம் பார்த்து பேசியவள்….

“துரத்தி விட்டேன் சைரு.. நீ சாக்லேட்ல மட்டும் கை வைக்காதடி….” என்று சமாதானமாகி விட்டாள்.

பின்பு தோழிகள் இருவரும் பேசிக்கொண்டே தங்களது வேலையை முடித்து விட்டு கிளம்பினர்.

 

அத்தியாயம் 3:                                                     

குளிரூட்டப்பட்ட அந்த மீட்டிங் ஹாலில் கூட வியர்வை பூக்கள் பூத்திருந்தன சைராவின் முகத்தில்…..மற்றொரு புறம் தன் முன்னால் இருக்கும் மானிட்டரில் உள்ள ப்ராஜெக்ட் பற்றி தீவிரமாக விளக்கிக் கொண்டிருந்தார் பார்த்திபன்.

சைரா, சௌமியா,  விக்ரம் அருகருகே அமர்ந்திருக்க….. ஹூமேஷியும் சில  அரசாங்க அதிகாரிகளும் அவர்களுக்கு எதிரே அமர்ந்து இருந்தனர்.

இந்த முக்கியமான ப்ராஜெக்ட்க்குகாகத்தான் ஹூமேஷியையும் ,விக்ரமையும் தன்னுடைய முழு அதிகாரத்தை பயன்படுத்தி இங்கே வரவழைத்திருந்தார் பார்த்திபன். ஏனென்றால் விஷயம் அவ்வளவு முக்கியமானது.

மலட்டுத் தன்மை உடைய நிலங்களைக்கூட பயிர் செய்யும் நிலங்களாக மாற்றி விடக்கூடிய தாவர கட்டமைப்பை அவர்கள் கண்டுபிடித்திருந்தனர். ஆனால் விதையின் வீரியம் அவர்கள் எதிர்பார்த்திருந்த முடிவை அளிக்கவில்லை .

பார்த்திபனுக்கு மிகவும் நெருங்கிய நேர்மையான அரசியல் நண்பரின் முயற்சி இது.விரல் விட்டு எண்ணக்கூடிய நேர்மையான அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர்.

கண்முன்னே வேதனைப்படும் விவசாயிகளின் துயர் போக்க,அவர் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சி.அவரது வேண்டுகோளின்படி தாவரங்களின் உண்மைத்தன்மையை அதிகம் மாற்றாது மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் அதிகம் தண்ணீரை உள்வாங்காத தன்மை உடைய மாற்று விதைகளையும், நிலத்தையும் பண்படுத்தக் கூடிய தாவர விதைகளுக்காகவும் இந்த ப்ராஜெக்ட்டை பார்த்திபனிடம் ஒப்படைத்தார்.

முதற்கட்டமாக தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட மாவட்டங்களில் செயல்படுத்தி ஒரு பசுமைப் புரட்சியை உருவாக்கும் கனவோடு காத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் இந்த ஆராய்ச்சின் முடிவோ பார்பத்தினுக்கு சாதகமாக அமையவில்லை. நண்பர் கொடுத்த கால அவகாசமும் முடியும் தருவாயை நெருங்கி கொண்டிருந்தது. கொடுத்த மூன்று வருட கால அவகாசத்தில் இரண்டு வருடங்கள் கடந்திருந்தன.

ஏற்கனவே நண்பனை…. எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் நல்லது செய்கிறேன் பேர்வழி என்று வீணாக பணத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறான்.. எப்படியும் ஆராய்ச்சியின் முடிவு தோல்வியில் முடிந்து விட்டது என்று கூறி.. முழு பணத்தையும் இவனே சுருட்டிக் கொள்ளப்போகிறான் என்று தேவையில்லாத வதந்திகளை பரப்பி விட்டனர்.

அதனால் நண்பனுக்கு எந்த ஒரு அவதூறும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் முனைப்புடன் இருந்தார் பார்த்திபன்.

சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் அவரது இந்த முயற்சிக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நபர் யார் என்பதையும் அறிந்து கொண்டார்.

அதனால் இம்முறை இறுதிகட்ட பணிகளை முடிக்கும் முழு பொறுப்பையும் தன்னுடைய முழு அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தவர் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே முடிக்கும் திறனுள்ள நபர்களையும் தேர்ந்தெடுக்க முயற்சித்துக்கொண்டு, பலத்த யோசனையில் இருந்த போதுதான்…..

ஜெர்மனியின் தலைமை அலுவலகத்தில் இருக்கும் பார்த்திபனின் மற்றொரு நண்பர் ஹூமேஷியின் கண்டுபிடிப்புகளை எடுத்துக் கூறி அவனது பெயரை சிபாரிசு செய்தார்.

இதோ இப்பொழுது நடைபெறும் கூட்டமும் வந்திருக்கும் அதிகாரிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இதுவரை செய்து முடித்திருக்கும் ஆராய்ச்சிகளின்   சாதகமான முடிவுகளை எடுத்து உரைப்பதற்காகவே நடந்துகொண்டிருக்கிறது.

அதிகாரியின் முகத்தில் திருப்தி ஏற்படும் வரை பார்த்துக் கொண்டே தனது விளக்க உரையை முடித்தார் பார்த்திபன்….

“வெல்! இவ்வளவு தூரம் முடிந்திருக்கின்ற பணிகள் ஓரளவு சரியாக அமைந்து விட்டாலும்…… முடிவை மிகவும் திருப்திகரமாக தரவேண்டும் என்பதற்காக முழு உழைப்பை  கொடுத்துக் கொண்டிருக்கிறோம்..”

“அதற்காகவே ஜெர்மனியில் இருக்கும் நமது  தலைமை அலுவலகத்தில் இருந்து இந்த விஞ்ஞானியை அழைத்து   வந்திருக்கிறேன்.

இவர்தான்( Mr.ojo humeshi) ”   மிஸ்டர்.ஓஜோஹூமேஷி..” என்று ஹூமேஷியின் புறம் கை நீட்ட…. ஹூமேஷியும் எழுந்து நின்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

அனைவரின் பார்வையும் அவன் மீது இருந்தாலும்…. சைராவின் சிந்தனை நேற்று மாலை வீட்டில் நடந்த உரையாடலின் பக்கமே இருந்தது.

நேற்று அலுவல் முடிந்து வீட்டுக்கு திரும்பிய சைராவின் கண்களில் பட்டது சோபாவில் அமர்ந்து…. நிம்மதியாக சிரித்து பேசிக்கொண்டிருந்த பெற்றோரின் முகமே.

“சைராகுட்டி! வாடா…என்ன இன்னைக்கு கொஞ்சம் லேட்டா வந்திருக்க..?” என்று கூறிக் கொண்டே மகேஸ்வரன் சோபாவில் நகர்ந்து தன் மகளுக்கு இடம் விட்டவாறே அழைக்க, சைரவோ பார்வதியை இடித்துக்கொண்டே அமர்ந்தாள்.

“இப்படி இடிச்சுக்கிட்டே உட்காரக்கூடாது என்று உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன் சைரூ… “என்ற பார்வதியின் குரல் மகளைத் திட்டி கொண்டிருந்தாலும் கைகள் அவளின் தலையை கோதிவிட்டது. பார்வதியை இன்னும் நன்றாக இடித்துக்கொண்டு அமர்ந்தவள்…. அப்பாவின் மடியில் காலை நீட்டியவாறே….

“பாருபேபி…என்ன இன்னைக்கு முகத்தில் கொஞ்சம் அதிகமாகவே பல்பு எரியுது. என் தொல்லை இல்லாம ரெண்டு பேரும் ஜாலியா மால்ல சுத்திக்கிட்டு வந்ததாலயா?” என்று சைரா கேட்க

அவள் கேட்ட கேள்விக்கு பார்வதியிடம் இருந்து செல்ல குட்டு ஒன்று அவளது மண்டையில் விழுந்தது.

“அம்மா….ஏம்மா..” என்னவோ வலிப்பது  போல் சைரா நடிக்க….

“ரொம்ப நடிக்காதடி…..ஆஸ்கர் அவார்டு கொடுத்துட போறாங்க… ஆமா ஏன் லேட்?” என்று பார்வதி கேட்க,

இன்னிக்கு எங்க டீமுக்கு புதுசா ரெண்டு பேரு வந்திருந்தாங்க. ஒருத்தர் எனக்கு அடுத்த ரேங்கில் இருக்கும் ஜூனியர் சைன்டிஸ்ட்…. பெயர் விக்ரம்.. மும்பைலர்ந்து வந்திருக்காரு….இன்னொருத்தர் சீனியர்சயின்டிஸ்ட்…பெயர் ஹூமேஷி…. என்று சைரா கூற….

“அதனாலென்ன?” என்றார் பார்வதி.

“அவங்களுக்கு சில வேலைகள் செய்து கொடுக்க வேண்டியது இருந்தது பேபி…அதான் லேட்”  என்று பதில் பார்வதியிடம் கூறிக்கொண்டே தந்தையிடம் திரும்பி…

“அப்பா! இன்னைக்கு வந்திருந்த சீனியர் சயின்டிஸ்ட் ஹூமேஷிய பார்க்கும் போது அப்படியே நம்ம சஷிக்காவ பார்க்கிற மாதிரியே இருந்தது” என்று கூற மகேந்திரன் முகத்திலோ இன்ப அதிர்ச்சி.

“நிஜமாகத்தான் சொல்கிறாயா சைரா?…”  மகேந்திரன் வினவ…..

“ஆமாப்பா! முகத்தை பார்த்ததும் தெரிஞ்சாலும் அப்படியே நம்ம சஷிக்காவோட பச்சை கண்ணுப்பா” என்று சைரா கூற…

“ஆண்டவா! நம்ம நினைக்கிற மாதிரியே இருக்கணும்…” அவசரமாக வேண்டுதல் வைத்தார் பார்வதி.

” இருந்தாலும் என்னால உறுதியா சொல்ல முடியலயப்பா…ஏதோ உறுத்தலா இருக்கு….” என்று சைரா கூற மகளை கவனித்துப் பார்த்தார் மகேந்திரன்.

“ப்ச்ச்! என்னவோ தெரியலைப்பா?ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வாய் இருக்கு..” மகளின் கவலையை உணர்ந்து கொண்டார் மகேஸ்வரன்…. சஷியக்கா என்று அவள் பின்னாடியே சுற்றிக் கொண்டு இருந்தவள் ஆயிற்றே….

அவரது மனமும் சஷிக்குட்டிமாவை பற்றி நினைக்க ஆரம்பித்தது…. காதல் திருமணம் செய்து கொண்டு போய் விட்டாள் என்று மட்டுமே தெரியும்… அவர் அவளை கடைசியாக பார்த்தது கல்லூரி படிப்பை முடிக்க போவதால் ஜூனியர் மாணவர்களின் சார்பாக நடத்தவிருக்கும் பிரிவுபச்சார விழாவிற்கு சேலை கட்டி கொண்டு தேவதையை போல் வந்து நின்று….. மகேஸ்வரன் பார்வதி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு சிரித்துக்கொண்டே விடைபெற்ற சஷிகுட்டிம்மாவைத்தான்.

நண்பன் அபரஜித்தும் உண்மையில் என்ன நடந்தது என்பதை சொல்லாமல் ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறான். பெற்ற தகப்பனுக்கு மகளைப் பற்றிய கவலை கூடவா இல்லாமல் போகும். எத்தனை சீராட்டி வளர்த்தோம்… எங்களை கூடவா மறந்து விட்டாய் சஷி… வெளியில் எங்கு சென்றாலும் எங்காவது அவளைப் பார்த்து விடமாட்டோமா என்று அலைபாயும் பார்வதியின் கண்கள்… தேடுதல் தோல்வியில் முடியும் போது கண்ணீரில் பளபளக்கும் அவளது கண்கள்… நண்பனின் மகள் என்றாலும் எங்கள் மகளாகத்தானே வளர்த்தோம்.

தாயில்லாத பிள்ளைக்கு இன்னொரு தாயாக இருந்து தாங்கினாளே பார்வதி… அவளிடம் கூட சொல்லிக்கொண்டு செல்லவில்லையே அவள்…. அவளைத்தேடி சிறுபிள்ளையான சைராவுக்கு ஜன்னி கண்ட போது கூட இந்த அபரஜித் வாயை திறக்க மாட்டேன் என்று சபதம் செய்தது போல் அமைதியாக கண்ணீர் வடித்தது….இன்றும் மறக்க முடியாத நிகழ்வு.

மகேஸ்வரன் பேச்சை மாற்றும் விதமாக சைராவை  பார்த்து” விடுமா! மெதுவா பார்த்துக்கலாம்.. உறுதியாக தெரியாம நீயா எதையும் நினைச்சு குழப்பிக்கதாடா” என்று கூற அப்போதைக்கு மனது சமாதானம் ஆனது சைராவிற்கு.

“ஜோசியர் அன்கிள் என்னப்பா சொன்னாரு?… பாருபேபி ரொம்ப நிம்மதியா சுத்திகிட்டுருக்க மாதிரி இருக்கே…” வழக்கம்போல பார்வதியை சீண்ட….

“நீ எவ்வளவு தடுத்தாலும்.. உன் கல்யாணம் இந்த வருஷம் நடந்தே தீரும்னு சொன்னாருடி குட்டிக்கழுதை…அதும் அவர் குறிச்சு குடுக்குற முகூர்த்தத்துல பேஷா நடக்கும்னு சொன்னார்…” என்று பார்வதியும் மகளை போட்டுத்தாக்க…

“என்னது… அப்படியா சொன்னார்.. வரட்டும் அடுத்த தடவை வீட்டுக்கு வரும் போது அவர் குடுமியை கட் பண்ணி விட்டுடறேன்… வைதேகி மாமி என்னை துரத்தி துரத்தி அடிச்சாலும் பரவாயில்லை…” என்று அவசர சபதம் எடுக்க…

அவள் காதை பிடித்துத்திருகிய பார்வதி “கல்யாணம் பண்ணிக்கறதுல அப்படி என்னடி கஷ்டம் உனக்கு?..” என்று கேட்க…

“எனக்கு பிடிச்சமாதிரி வில்லன்மூஞ்சியா நீ கூட்டிட்டு வரல பாருபேபி…. அதுமில்லாம எங்கப்பா படற கஷ்டத்த பாத்துட்டு எனக்கு ஆண்குலத்தை கஷ்டப்படுத்த பாவமா இருக்கு… ‘ஆண்பாவம் பொல்லாதது’ பாருபேபி” என்று டைலாக் அடிக்க வயிற்றைப்பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டார் மகேஸ்வரன்.

பார்வதியும் சிரித்துக்கொண்டே ” வர வர உன் வாய் ரொம்ப நீண்டுகிட்டே போகுது… நீ என்ன பண்ணாலும் உனக்கு இந்த வருஷம் கல்யாணத்தை பண்ணியே தீருவேன்” என்று உறுதியாக கூறியவர்….

“ஒரு கல்யாணத்தை பண்ணிகிட்டு நீ அமெரிக்கா போனாலும் சரி… ஆப்ரிக்கா போனாலும் சரி… அது உன்பாடு எங்க மருமகன்பாடு…” என்று அசராமல் கூற…

சைராவின் முகமோ கூம்பி விட்டது.. “அப்பா…பார்த்திங்களாப்பா இந்த பாருபேபிய… எப்படா என்னை பேக் பண்ணி அனுப்பலாம்னு இருக்குப்பா… ” என்று சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு தந்தையிடம் மாட்டிவிட….

மகேஸ்வரனும் “பார்வதி அவளுக்கு கல்யாணம் நடந்தே தீரனும்னு இருந்தா நடக்கத்தான் போகுது.. அதுக்குள்ள ஏன் இப்படியெல்லாம் பேசி பிள்ளையை இப்படி வருத்தப்பட வைக்கிற…??” என்று மறைகுமாக மனைவிக்கு ஆதரவாக பேச, பார்வதியும் நமுட்டுச்சிரிப்பு சிரித்துக்கொண்டே மகளை பார்த்தார்.

அவரது பார்வையோ “பெரிய்யயய…. சப்போர்ட்டு….ஃபூ…ஃபூ” என்று ஊதித்தள்ளியது.

தந்தையின் வார்த்தையில் உள்ளுக்குள் கொதித்த சைரா…

“நம்ம சோகமா நடிச்சும் வேலைக்கு ஆகலையே….!!” என்று மனதுக்குள் நினைத்தவள்….

“மகிடார்லி…ங்ங்..” என்று பல்லைக்கடித்து கொண்டே தந்தையை ஒரு முறை முறைக்க

மகளின் முறைப்பை பார்த்து சிரித்த மகேஸ்வரன் “சைருகுட்டி அப்பா உன்நல்லதுக்குதான்டா சொல்லுவேன்… இதுல நான் அம்மா பக்கம்தான்… நீ நல்லா வாழ்றத பார்க்கறதவிட சந்தோஷம்…. வேறேதும் எங்களுக்கு தர முடியாதுடா சைருக்குட்டி… புரிஞ்சு நடந்துக்கோ” என்று மகளை இழுத்து மடி சாய்த்துக்கொள்ள… தனது தந்தையின் இடுப்பை கட்டிக்கொண்டாள் சைரா.

“அப்பாவும் மகளும் கொஞ்சுனதெல்லாம் போதும்…..எழுந்து வாங்க சாப்பிடலாம்…உனக்கு பிடித்த டின்னர்தான் வாங்கி வைத்திருக்கேன் சைரு.. வா..வா..பசிக்குது” பார்வதி கூறிக்கொண்டே உணவுமேஜையை நோக்கி நடக்க ஆரம்பிக்க….பெற்றோரோடு சாப்பிட தானும் கூட எழுந்து சென்றாள் சைரா.

அரட்டை அடித்துக்கொண்டே ஒருவழியாக சாப்பிட்டு முடித்து பெற்றோர் தங்களது அறைக்கு உறங்கச்செல்ல சைராவும் தன் அறைக்கு தூங்கச் சென்றாள்.

இரவு தண்ணீர் தாகம் எடுத்து சைரா தண்ணீர் குடிக்க சமையலறை நோக்கி போக பெற்றோரின் அறையில் இன்னும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது அவளுக்கு வியப்பை அளித்தது…. ” என்ன இப்ப வரைக்கும் பேசிட்டு இருக்காங்க?”  என்று சைரா அவர்களது அறையை நோக்கி செல்லும் போது அவர்களது பேச்சு அவளுக்கு நன்றாகவே கேட்டது.

“ஏங்க ஒருவேளை அந்த பையன் நம்ம சாக்ஷிக்கு சொந்தக்கார பையனா இருப்பானோ…?”

“தெரியலயே பார்வதி”…

“ஓரு வேளை சாக்ஷி அம்மா…. அனுவோட அண்ணன் பையனா இருப்பானோ? அனு என்கிட்ட சொல்லிருக்காங்க….

அவளுக்கு ஒரு பெரியப்பா பையனோட மகன் இருந்ததாவும்… இவளுக்கு 5வயசா இருக்கும்போதே அவர் காதல் திருமணம் செஞ்சுக்கிட்டு போய்ட்டதாவும்…. இவன்னா அவருக்கு ரொம்ப பிரியம்னும்… அவர் போனப்பிறகுதான் அவள் சித்தப்பா ரொம்ப கஷ்டப்படுத்தியதாகவும் ஒரு தடவை நாங்க கோவில்ல உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கும்போது என்கிட்ட சொன்னாங்க….

அப்பறம் அபிண்ணா கோவிலுக்குள் வரவும் பேச்சை நிப்பாட்டிட்டாங்க… இதெல்லாம் தெரிஞ்சா அவர் மனசு ரொம்ப கஷ்டப்படுவார் அண்ணின்னு பேச்சை முடிச்சுட்டாங்க….” ஞாபகப்படுத்தி கூறினார் பார்வதி.

“அனுவைத்தேடி யாரும் வந்ததில்லையே பார்வதி… நான் அவளோட சொந்தங்களை அதிகம் பார்த்ததில்லையே…அவளை வளர்த்த சித்தப்பாவ மட்டும்தான் பார்த்துருக்கேன்……” என்று மகேஸ்வரன் கூற…

“ஒரே குழப்பமா இருக்கேங்க… அபிண்ணாவும் ஒன்னும் பிடிகுடுக்க மாட்டேங்கறாரு…..”

“அவன் வாயைத்திறந்து விஷயத்தை சொல்லிருந்தா…இவ்வளவு நாள் குட்டிமாவ விட்டுருப்போமா பார்வதி…????”

“அதுவும் சரிதான்…. சாக்ஷிய பத்தி தெரிஞ்சாலும் அபி சந்தோஷப்பட மாட்டான்னு தெரிஞ்சா நம்ம சைரா ரொம்ப மனசு வருத்தப்படுவா” என்று பார்வதியிடம் மகேஸ்வரன் கூற,

“அதுக்காக இப்படியே விட்டுவிட முடியுமா?”

“ஒருநாள் இல்ல ஒருநாள் சைருக்கு உண்மை தெரிஞ்சுதான ஆகனும்” என்றார் பார்வதி.

“எதுக்கும் அபி அண்ணாகிட்ட ஒரு தடவை பேசிப் பார்க்கலாம். இப்போ எதையும் போட்டு குழப்பிக்காம நிம்மதியா படுங்க…” என்று பார்வதி கூறிக் கொண்டே விளக்கை அணைப்பது தெரிய…. சத்தமில்லாமல் தனது அறைக்குள் சென்று விட்டாள் சைரா.

 

அத்தியாயம்-4 :                                                  

கூட்டம் வெற்றிகரமாக முடிய அனைவரும் தங்களுக்கு உரிய பணிகளை விரைவில் முடிக்க வேண்டியதன் அவசியத்தையும் தங்களுடைய இலக்கை முடிக்க சிறிது காலமே மீதமிருப்பதையும் நன்கு உணர்ந்து கொண்டனர். பார்த்திபனின் முகத்தில் நம்பிக்கையின் ரேகைகள் அதிகமாகவே தெரிந்தன. வந்திருந்த அதிகாரிகளின் முகத்தில் நிலவிய திருப்தி அவர் மிகவும் எதிர்பார்த்த ஒன்று.. ஏனென்றால் அவர்கள் மத்திய அரசாங்கத்தால் அனுப்பப்பட்டவர்கள்… அவர்களுக்கு திருப்தி ஏற்படுவது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல.

இப்பொழுது நடைபெற்ற கூட்டத்தில் சொல்லப்பட்ட முக்கிய பணிகளின் அம்சங்களை நாளை பத்திரிக்கைகளிலும் வருமாறு ஏற்பாடும் செய்து விட்டார். தேவையில்லாமல் பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த ஏற்பாடும். முதல்முறை தவற விட்டதுபோல் அல்லாது இந்த முறை அனைத்தையும் மிக தெளிவாக திட்டமிட்டு… அதை செயல்படுத்தியும் காட்டிவிட்டார் பார்த்திபன்.

பின்பு ஹூமேஷியையும் விக்ரமையும் வைத்துக்கொண்டு சிறிது நேரம் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களை விட்டே பதிலளிக்க செய்தவர் நல்ல முறையில் அவர்களுக்கான உபச்சாரத்தையும் செய்து முடித்து அனுப்பினார்.

அதிகாரிகள் கிளம்பிச்செல்லவும் மற்றவர்களும் பார்த்திபனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்களது பிரிவை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

தங்களின் அருகே நடந்து வந்து கொண்டிருந்த விக்ரமை பார்த்து…சௌமியா…

“என்ன விக்ரம்சார்…. நேத்து ஃபார்மாலிட்டீஸ் முடித்துவிட்டு வரேன்னு போனவர் தான் அதுக்கப்புறம் ஆளையே காணோமே?”என்று வினவ

“இல்லை மிஸ்.சௌமியா நேத்து பார்த்திபன் சார் கிட்ட ஃபார்மாலிட்டிஸ் முடிச்சு குடுத்துட்டு திரும்பும்போதே, என்னுடைய மும்பை வீட்டு பொருளெல்லாம் நான் புதுசா பார்த்திருக்கிற என்னுடைய அப்பார்ட்மெண்ட் முன்னாடி வந்து வண்டியில் எனக்காக நின்னுட்டுருக்குன்னு  சொல்லி ஓனர் ஃபோன் பண்ணிட்டார்.

நான் போய் கையெழுத்தை போட்டு மிச்ச பணத்தையும் குடுத்தாதான் பொருட்களை பிரிச்சு அடுக்குவாங்க… அதான் பார்த்திபன் சார் கிட்ட மட்டும் ஒரு வார்த்தை சொல்லிட்டு நான் உடனே கிளம்பி விட்டேன்” என்று விக்ரம் பதில் கூற….

“ஓஹோ அப்படியா சார்….ஹூமேஷி சார் இருந்தாரு நீங்க இல்லையேன்னு கேட்டேன்” என்றாள் சௌமியா.

“உங்க அப்பா அம்மாவும் வந்திருக்காங்களா சார்…?” சௌமியா விக்ரமை பார்த்து கேட்க…

“இல்லை சௌமியா… என்னோட பெற்றோர் ஒரு விபத்துல காலமாகிட்டாங்க… எனக்கு ஒரே ஒரு அக்கா மட்டும் தான்… முதல்ல நாங்க சென்னைல தான் குடியிருந்தோம்… அக்காவை மும்பைல கல்யாணம் பண்ணிக்குடுத்து ஒரு ஆறுமாசத்துல அம்மா-அப்பாக்கு இப்படி ஆயிடுச்சு… தனியா இங்க இருக்க பிடிக்காம நான் சென்னைல பார்த்துட்டுருந்த வேலையை ராஜினாமா பண்ணிட்டு மும்பை ஜெனிடிகாவில் வேலைக்கு சேர்ந்தேன்… இப்போ மறுபடியும் சொந்த ஊருக்கே திரும்பி வர மாதிரி ஆய்டுச்சு…” என்று சிறிது வருத்தத்துடன் கூற..

அவன் பெற்றோரை நினைத்து வருந்துவதை உணர்ந்து கொண்ட சௌமியாவோ… ” என்னை மன்னிச்சுடுங்க சார்… உங்க பெற்றோருக்கு நடந்ததை திரும்ப நீங்க சொல்லும்படி ஆகிடுச்சு” என்று சிறிது சங்கடத்துடன் கூற

விக்ரமோ ” இதுல வருத்தப்பட ஒன்னுமில்லை மிஸ்.சௌமியா… சாதாரணமா எல்லோரும் கேட்கிற கேள்விகளை தான் நீங்க கேட்டிங்க… இதில் நீங்க சங்கடப்பட தேவையில்லை… எனக்கும் ரொம்ப நாளைக்கு அப்புறம் சொந்த ஊருக்கே திரும்ப வந்தது நிறைவாத்தான் இருக்கு….” என்று புன்னகைமுகமாகவே கூற…. சௌமியாவின் மனதில் ஏற்பட்ட சங்கடம் நீங்கி அவளும் பதிலுக்கு விக்ரமை பார்த்து புன்னகைத்தாள்.

இருவரும் சிரித்துக்கொண்டே திரும்பிப்பார்க்க… சைரா இப்பொழுது வரை ஏதோ சிந்தனையில் அமைதியாக நடந்து வருவதும் அவளுக்கு சற்று முன்னால் கைப்பேசியில் எதையோ பார்த்துக்கொண்டு ஹூமேஷி முன்னால் நடந்து செல்வதும் தெரிந்தது.

ஹூமேஷியைப்பார்த்த சௌமியா விக்ரமிடம் திரும்பி ” விக்ரம் சார்… ஹூமேஷி சாரோட குடும்பமும் இங்கே வரப்போறாங்களா…??” என்று கேட்க

“அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னு சொன்னாரு சௌமியா…” என்று சம்பந்தமில்லாமல் விக்ரம் பதில் கூற…

“ஹய்யோ..சார் நான் குடும்பம்னு அவரோட பெற்றோரை பற்றி கேட்டேன்…” என்று பதில் கூற

“அவரோட பெற்றோர் இப்போ டெல்லில அவங்க பாட்டியோட பூர்விக வீட்டில தங்கியிருக்காங்கன்னும்… சென்னைக்கு மாற்றல் வந்ததால அப்பப்ப வந்து பார்த்துட்டு போவாங்க… இல்லன்னா அவரே டெல்லிக்கு போய் பார்த்துட்டு வருவேன்னும் சொன்னாரு.. சௌமியா…” என்று பதிலளித்தான் விக்ரம்.

இவ்வளவு உரையாடல்களுக்கும் தோழி அமைதியாகவே வருவதை கண்டு, “என்ன சைரா நியுயார்க் சிட்டில பர்ச்சேஸிங்கலாம்  முடிச்சிட்டியா?” என்று தோழியை உலுக்கிக்கொண்டே வினவ….

“என்னது நியுயார்க்கா…?” என்று சைரா திகைக்க….

“ஹேய்…ரிலாக்ஸ்… என்ன ஆச்சுடி உனக்கு மீட்டிங் நடந்தப்பவும் அமைதியாவே உட்கார்ந்திருந்த…? சரி உட்கார்ந்து கிட்டே  தூங்குறன்னு நினைச்சேன்…. பார்த்தா இன்னும் தூக்கம் விடல போல… தூக்கத்துலயே நடக்குறியோ… உனக்கு தூக்கத்துல நடக்குற வியாதில்லாம் இல்லையே..” என்று இந்த முறை யோசிப்பது போன்ற பாவனையுடன் சௌமியா கலாய்க்க…. விக்ரம் சத்தமாக  சிரிக்க ஆரம்பிக்க…சைராவின் பதில் குரலில்….. முன்னால் சென்று கொண்டிருந்த ஹூமேஷியின் கால்கள் தானாக நின்றது.

‌”நிறுத்துடீ! கொஞ்சம் விட்டா ஓவரா கலாய்ப்பியே…. விக்ரம் சார் நீங்களுமா சிரிக்கிறிங்க..??? இந்த மொக்கைக்கல்லாம் நீங்க சிரிச்சீங்கன்னு வைங்க..அப்புறம் இவளை பிடிக்க முடியாது….” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு சைரா வினவ

“அடிப்பாவி…நல்லா தூங்கிட்டு இப்ப அப்பாவி புள்ள மாதிரி சீன் போடுறியே…” விடவில்லை சௌமியா‌.

“விடுங்க சௌமியா! அவங்க முகத்தை பார்த்தாலே பாவமா இருக்கு” சொன்னது விக்ரம் அல்ல, சாட்சாத் ஹூமேஷியே தான்.

மூவரின் பார்வையும் அவன் புறம் திரும்ப, சௌமியா துடுக்குத்தனமாக ,

“சார்! இன்னைக்கு பார்த்திபன் சார் அறிமுகப்படுத்தும் போது ஓஜோஹூமேஷி  சொன்னாரே, நீங்க முழு ஜெர்மன்காரா…!!! நீங்க சரளமாக தமிழ் பேசுவதை பார்த்து நீங்க நம்ம நாட்டுக்காரர்னு சந்தோஷமா நினைச்சேன்”என்று போலியாக வருத்தப்பட

சைரா முகத்திலும் சிறு ஆர்வம் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது…” இவன் பெற்றோரைப் பற்றி சொல்வானா?” ஒரு எதிர்பார்ப்புடன் அவன் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தாள்.

“நான் சாட்சாத் இந்தியாகாரனே தான் மிஸ்.செளமியா…. என்னுடைய அப்பா வட இந்தியர் அம்மா தென்னிந்தியர்…. காதல் திருமணம்… அப்பா பேரு ஹேமானாந்த் அம்மா பேரு ‘சா’……. ஷில்பா….நான் பிறந்த பிறகுதான் அப்பாவுக்கு ஜெர்மனியில் வேலை கிடைச்சு அப்பாவோட அம்மாவும் சமாதானமாகி எங்களோட சேர்ந்து விட்டார்.

என் பாட்டிக்கு என் தாத்தாவோட பேரான ஹூமேஷ்னு…. எனக்கு வைக்கணும் ஆசை. ஆனா அப்பாவுக்கு அம்மாவோட பேரில் வர ஒரு பேர் வைக்கணும்னு ஆசைப்பட்டாரு. அதனால ஹூமேஷினு முடிவு பண்ணாங்க.

பக்கத்து வீட்டு ஜெர்மன் ஆன்டி என்னை “ஓஜோ பேபி”ன்னு தூக்கிக் கொஞ்சுவாங்களாம். அம்மா அவங்க கிட்ட அதுக்கு அர்த்தம் கேட்க…. உங்க பையனுக்கு அழகான பச்சை நிற கண்கள் அதனால்தான் சொன்னேன். ஏன்னா ஓஜோன்னா பச்சை என்று அர்த்தம்னு….

அம்மாவிற்கு அப்படி கூப்பிடுவது பிடித்துவிட பள்ளியில் சேர்க்கும்போது என்னோட பெயரை “ஓஜோஹூமேஷி”ன்னே குடுத்துட்டாங்க.

“போதுமா என்னோட பெயர் விளக்கம் மிஸ் சௌமியா..”என்று சிரித்துக் கொண்டே வினவ,

“இவ்வளவு பெரிய வரலாறா சார் உங்க பெயருக்கு….” என்று சிரிக்க விக்ரமும் சைராவும் சேர்ந்து சிரித்தாலும், சைராவின் கண்களில் ஏமாற்றத்தின் வலி பரவுவதை உணர்ந்து கொண்டாலும்…. அவர்களோடு சேர்ந்து சிரித்தான் ஹூமேஷி.

“சரி போகலாம் வாங்க…இனிமேல்தான் வேலையை ஆரம்பிக்க போறோம்…எல்லா டிஎன்ஏ மாதிரிகளையும் மாற்றி அமைக்க வேண்டியிருக்கும்…”என்று ஹூமேஷி கூறிக்கொண்டே முன்னே நடக்க,

“சார்! ஸ்டீபன் சார் எழுபத்தைந்து சதவீத வேலையை முடிச்சிருந்ததையா….!!! முழுசா மாத்த சொல்றீங்க??..” சைரா திகைப்புடனே வினவினாள்.

“அவர் பார்த்தததினால் தான் பிரச்சனையே… என்ன நடந்தததுன்னு சொல்றேன்….வாங்க  நம்ம லேப் யூனிட்டுக்குள்ளே போகலாம்”  ஹூமேஷியின் குரல் கட்டளையிடும் தொனியில் வர மூவரும் அமைதியாக பின் தொடர்ந்தனர்.

அங்கு சென்றதும் மூவரையும் அங்கு போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமருமாறு பணித்தவன்.. அங்கு நடந்த குளறுபடிகளையும் அவர்கள் கொடுத்த மாதிரிகளின் அமைப்பை ஸ்டீபன் எப்படியெல்லாம் சந்தேகமே வராத அளவிற்கு மாற்றியமைத்திருக்கிறார் என்பதை எடுத்துரைத்தவன்…..

தன் கைகளில் பார்த்திபனால் கொடுக்கப்பட்டு…. ஸ்டீபன் செய்த தவறுகளுக்கு ஆதாரமாக இருக்கும் கோப்புகளையும் அவர்கள் மூவரையும் பார்வையிடுமாறு கூறினான்.

கோப்புகளை பார்த்த மூவருக்கும் அதிர்ச்சியே… அதிலும் சைராவும் சௌமியாவும் மிகவும் அதிர்ந்தனர்.. அதிகம் பாதிக்கப்பட்டது அவர்கள்தானே… ஏனென்றால் அவர்செய்து வைத்திருக்கும் வேலையின் மீது சந்தேகம் ஏற்பட்டால் முதலில் இவர்கள் மீதுதான் குற்றச்சாட்டு வரும்…

அதிலும் ஆரம்பக்கட்ட பணிகளை முழுக்க முழுக்க வடிவமைத்தது சைராவேதான்… இத்தனை நடந்தும் பார்த்திபன் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல்… பொறுமையாக காத்திருந்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்திருக்கிறார் என்றால்.. அவரது தலைமைப் பண்பை நினைத்து பெருமை கொள்ள வைத்தது. சைராவின் மனமோ இப்படி யோசித்துக் கொண்டிருக்க….

சௌமியாவோ ஸ்டீபனை கெட்ட கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்துக்கொண்டிருந்தாள்…..

“பாவி…பாவி.. என்னை லன்ச் கூட சாப்பிட விடாம எப்படியெல்லாம் திட்டிகிட்டே திசு கல்ச்சர் ரேட்டிங்க திரும்ப திரும்ப கணினியில் ஏற்ற வச்சுக்கிட்டே இருந்தானே… அன்னைக்குன்னு பார்த்து இந்த சைரா பிசாசு மீன்குழம்பு கொண்டு வந்து என் முன்னாடியே உட்கார்ந்து சப்புக்கொட்டிகிட்டு சாப்பிட்டாளே… மறக்குமா எனக்கு…????

அந்த ஆத்திரத்துல அந்த கீபோர்ட தட்டி உடைக்க எவ்வளவு முயற்சி செஞ்சேன்.. சொரணை கெட்ட கீபோர்ட் உடையவே இல்லையே… ச்ச…”

பல முகபாவங்களை காட்டிக்கொண்டிருந்த தோழியைப்பிடித்து உலுக்கிய சைரா..” சௌமி என்னடி ஆச்சு… ” என்று கேட்க…

“நீதான் எனக்கு ஒரு பீஸுகூட குடுக்காம சாப்டியே… அதான் நடந்துச்சு…” என்று தனது நினைவடுக்குகளில் இருந்து வெளிவராது… சம்பந்தமில்லாமல் பதில் கொடுக்க….

விக்ரமும் ஹூமேஷியும் சிரிப்பை வாயிலேயே அடக்கிக் கொண்டிருக்க….

சங்கடமுற்ற சைரா… சௌமியை நன்றாக பிடித்து உலுக்கி..இருவரையும் கண்களால் காமிக்க… சற்று சுதாரித்துக்கொண்ட சௌமி அசடு வழியும் புன்னகை ஒன்றை உதிர்க்க….

தற்போது முக்கியமாக பணியாற்றும் நேரம் என்பதால் சௌமியாவின் சிறு பிள்ளைதனத்தை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசினான் ஹூமேஷி.

இப்பொழுது மூவரையும் பார்த்து” இப்போ நல்லாத் தெரிஞ்சுருக்கும்… நீங்க மூனு பேரும் செய்ய வேண்டிய வேலை என்னன்னு…??” ஹூமேஷி கேட்க…

“மறுபடியும் முதல்ல இருந்தா…???” என்று சௌமியா தீவிரக்குரலில் கேட்பதாக நினைத்து மீண்டும் சிரிப்பை மூட்ட… அவளின் தொடையில் நறுக்கென்று கிள்ளினாள் சைரா.

“எவ்வளவு முக்கியமான விஷயம் பேசிகிட்டிருக்கோம்… நீ காமெடி பண்ணிட்டிருக்க…??” என்று மெதுவான குரலில் தோழியை கண்டிக்க, அமைதியாக நல்லபிள்ளையை போல் அமர்ந்து கொண்டாள் சௌமியா.

ஹூமேஷியும் சௌமியாவிடம்” எல்லாமே முதல்ல இருந்து ஆரம்பிக்க தேவையில்லை மிஸ்.சௌமியா… ஸ்டீபன் மாத்தின விஷயங்களை கண்டுபிடிச்சு சரி செய்யனும்… அதுக்கு முதல்ல பண்ணியிருந்த வேலைகளோட ஒப்பிட்டு பார்த்து சரி பண்ணனும்… அது கொஞ்சம் கஷ்டமான வேலைதான்… “

“நீங்க ரெண்டு பேரும் உங்க வேலையை சரிபார்த்து முடிச்சாதான்… விக்ரமும் நானும் அடுத்தகட்ட வேலைக்கு நகர முடியும்…” என்று பேச்சை முடித்துக்கொண்டவன்….

“இன்னைக்கே ஆரம்பிச்சாகனும்… நீங்க ரெண்டு பேரும் உங்க கணினியின் முன்னால் உட்காருங்க…. முதல்ல நீங்க குடுத்துருக்குற பாஸ்வேர்ட மாத்துங்க…” என்று கூறிக்கொண்டே விக்ரமை அழைத்தவன்….

“நாம ரெண்டு பேரும் பார்த்திபன் சார்கிட்ட இருக்குற ஃப்ளாஷ்ட்ரைவ வாங்கிட்டு வந்துடலாம்” விக்ரமை அழைத்துக்கொண்டு பார்த்திபனின் அறைக்குச் சென்று விட்டான்.

அவர்கள் செல்லவும் சௌமியா சைராவிடம் “டீ சைரா… எனக்கு ஒரு சந்தேகம்.?? இவ்வளவு பித்தலாட்டம் பண்ணி வைச்சுருக்காரே இந்த ஸ்டீபன் சார்… ஏன் இன்னும் அவர்மேல நடவடிக்கை எடுக்கல??…இன்னைக்கு மீட்டிங்க்ல கூட அவர் உட்கார்ந்து இருந்தாரே…???” என்று கேட்க..

“எனக்கும் அதுதான் சந்தேகமா இருந்தது சௌமி..” சைரா பதிலளிக்க…

“நீ ஒரு அறிவாளின்னு… உன்கிட்ட போய் கேட்டேன் பாரு…இதுக்கு நான் கேட்காமலேயே இருந்திருக்கலாம்…”என்று தனது வழக்கமான கிண்டல்தொனிக்கு மாற…

அவளை முறைத்த சைரா” ஒழுங்கா கொஞ்சநேரம் உன்னால பேசமுடியாதாடி எருமை…” என்று தோழியின் தோள்களில் இடிக்க…

“பார்த்தியா… என்னை எருமைன்னு சொல்லிட்டு நீதான் இடிச்சுகிட்டுருக்க… ” என்று தோழியை மேலும் கலாய்க்க…

பதில் எதுவும் பேசாமல் அவளை முறைத்துக் கொண்டே தனது கணினியில் பாஸ்வேர்டை மாற்றத்தொடங்கினாள் சைரா…

இருந்தாலும் சௌமியா விடாது..” ஹேய் சைரு… இன்னைக்கு மீட்டிங்ல என்னடி யோசிச்சுகிட்டே உட்கார்ந்திருந்த… சுத்தி நடந்த எதையும் நீ கவனிச்ச மாதிரியே தெரியல.. எதுவும் பிரச்சனையாடி…” என்று கேட்க…

அதற்கும் ஒரு முறைப்பையே சைரா பதிலாக கொடுக்க….

இதற்கு மேலும் அவளை கடுப்பேற்றினாலும் கேள்வி கேட்டாலும் தோழியை சமாதானப்படுத்துவது கஷ்டமாகி விடும் என்பதால்….

சௌமியாவும் தனது வேலையை ஆரம்பிக்க… ஃப்ளாஷ் டிரைவை வாங்கிக்கொண்டு ஹூமேஷியும் விக்ரமும் திரும்பினர்….

ஹூமேஷி அதை அவர்கள் இருவரிடமும் கொடுத்து காப்பி செய்து கொள்ளச்சொல்ல…. விக்ரமும் அங்கேயே அமர்ந்து கோப்புகளை சரிபார்த்துக் கொண்டிருக்க…

சைராவின் அருகில் தனது இருக்கையை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தான் ஹூமேஷி… சைராவின் கவனமோ மாதிரிகளை சரிபார்ப்பதிலேயே இருந்ததால் அவள் அதை கவனிக்கவில்லை… ஆனால் சௌமியாவின் கண்களுக்கு இது தப்பவில்லை…

அவன் மிக இயல்பாகத்தான் அமர்ந்தான்….. ஆனால் சௌமியாவிற்கு ஹூமேஷியின் செயல்கள் ஒவ்வொன்றும் சுவாராஸ்யமாக இருந்தது…. இன்றைய மீட்டிங்கிலும் அவனது பார்வை சைராவை விட்டு அங்கும் இங்கும் அசையவில்லை… யாரும் பார்த்தாலும் எனக்கு கவலையில்லை என்பது போலவே அமர்ந்திருந்தான்…. சௌமியாவுக்கு சற்று வியப்பாக இருந்தாலும்… அவனது தைரியத்தை கண்டு சுவாரஸ்யமாக இருந்தது….

இப்பொழுது அவளருகில் அமர்வது ஒன்றும் அவள் பார்க்காத ஒன்றும் அல்ல‌… ஆனால் ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு செயல்படுவது போல இருந்தது… அது சைராவின் மீது கொண்ட காதலா என்றும் குழப்பமாக இருந்தது…

சைரா வரிசையாக சரிபார்த்துக்கொண்டே வரும்போது “சைரா.. நிறுத்திப்பாரு…. மூன்றாவது மாதிரியில் இருக்கிறதை மாற்று…” என்ற ஹூமேஷியின் குரல் சைராவின் அருகே கேட்டது.

சைரா திரும்பி பார்க்க அவளைப்பார்த்து புன்னகைத்தான்… ” சார்… “என்று பதிலுக்கு புன்னகைத்து.. “நீங்க ஏன் சார் இதைப்பார்த்துகிட்டு… நான் சரி பண்ணிடுவேன்…” என்று கூற..

“எனக்குத்தெரியும் சைரா… நான் கொண்டு வந்த டேட்டா எல்லாம் லோட் ஆகிட்டிருக்கு… எப்படியும் நான் இதையும் சேர்த்துத்தான் பார்த்தாகனும்… நீங்க சரிபண்ணுங்க… நானும் உதவி பண்றேன்…” என்று கூற…

சைராவும் புன்னகைத்துக்கொண்டு தலையாட்டினாள்… சீனியர் சைன்டிஸ்ட் என்கிற பந்தா இல்லாமல் உதவி செய்கிறானே… என்று சந்தோஷமாக இருந்தது.

அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த சௌமியா இப்பொழுது ” அது எப்படிப்பா ஹுரோயின்க்கு உதவி பண்றதுக்குன்னு மட்டுமே இந்த ஹூரோக்கள்லாம் வருவார்களா…??? இந்த ஹூரோயின் தோழியெல்லாம் இவங்க கண்ணுக்கு தெரியவே மாட்டாங்களா…” என்று மனதிற்குள் நொந்து கொள்ள…‌

அவளது முகபாவங்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தனர் ஹூமேஷியும் சைராவும்… சைரா அவளைப்பார்த்து சிரிக்க ஆரம்பிக்க ஹூமேஷியும் புன்னகைத்தான்…

“இதுங்க ரெண்டும் எதுக்கு சிரிக்குதுங்க… ஒருவேளை மைன்ட்வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசிட்டோமோ” என்று சௌமியா மனதுக்குள் நினைத்தவாறே

“சைரு…நான் எதுவும் இப்ப பேசினேன்…??” என்று அவளிடம் கேட்டு வைக்க…

இப்பொழுது நன்றாகவே சிரிக்க ஆரம்பித்தாள் சைரா…. ஆனால் சிரித்துக்கொண்டே பதில் கூறினான் ஹூமேஷி

“அதெல்லாம் ஒன்னும் கேட்கல மிஸ்.சௌமியா… ஆனா வெறும் டேட்டாவை டெலிட் பண்றதுக்கெல்லாம் உதவி பண்ணணும்னு நினைச்சா கொஞ்சம் ஓவரா இல்லை…” என்று ஒரு சொட்டு வைக்க…”ச்ச…கண்டுபிடிச்சிட்டாரே…வெளிய வரைக்கும் கேட்டுருக்கே… இந்த மானங்கெட்ட மைன்ட் வாய்ஸூ… “என்று அதற்கும் மனசாட்சியை திட்டியவள்..

ஹூமேஷியை பார்த்து” கொஞ்சம் ஓவர்தான் சார்‌… என் வேலையை நானே பாத்துக்குறேன்…” என்று பதில் கூறிவிட்டு தோழியையும்…… அறையின் மூலையில் இருக்கும் கணினியில் அமர்ந்து தன்னை சுற்றி நடக்கும் உரையாடல்களை கேட்டுக்கொண்டு மெல்லிய புன்னகையுடன் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் விக்ரமையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு….

“பெரிய கடமை கண்ணாயிரம்…” என்று விக்ரமை பார்த்து முனுமுனுத்துக் கொண்டே தனது வேலையை பார்க்க ஆரம்பிக்க… அதன்பின்பு அங்கு அவர்கள் வேலைகளை படுவேகமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.டேட்டா லோட் ஆகி முடிந்தும் சைராவின் அருகாமையில் அமர்ந்திருப்பதால் கிடைக்கும் ஏகாந்த மனநிலையை கெடுத்துக்கொள்ள விரும்பாத ஹூமேஷி மட்டும்… வேலை பார்ப்பது போல் சைராவை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தான்..…

 

அத்தியாயம் 5:                                                    

சற்று சோர்வுடனே வீட்டிற்குத் திரும்பினாள் சைரா.‌இத்தனைக்கும் அவர்கள் பார்க்க வேண்டிய வேலையில் ஒரு சதவீத வேலைதான் முடிந்திருந்தது. ஹூமேஷியின் அறிவுரையை பின்பற்றினால் கணக்கிட்ட நேரத்தை விட  இன்னும் சீக்கிரமாகவே முடித்து விடலாம் என்றாலும்… நினைத்துப் பார்க்கும்போது மலைப்பாகவே இருந்தது…. பெற்றோர் இன்னும் வீட்டுக்குத் திரும்பவில்லை….ஆனால் மகேந்திரன் வரும் நேரம் தான்.பார்வதி வரத்தான் சற்று நேரம் ஆகும்.

இன்று சௌமியாவின் கேள்விக்கு ஹூமேஷி பதில் கூறும் போது.. ஒரு நிமிடம் இதயம் நின்று துடிப்பது போல் இருந்தது சைராவுக்கு‌… மனதின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் கண்களில் தேக்கி அவன் தனது தாயின் பெயரென்று சஷியக்காவின் பேரை சொல்லுவானோ என்று எதிர்பார்த்தாள்…. ஆனால் ஒரு விஷயத்தை அவள் யோசிக்க மறந்து விட்டாள்… சஷியின் பிள்ளையாக ஹூமேஷி இருந்திருந்தால்…?? அவன் எப்படி சைராவைவிட பெரியவனாக இருக்க முடியும்…?? என்பதை யோசிக்க மறந்தாள்…

ஆனால் மகேந்திரன் அப்படி நினைக்கவில்லை…. ஹூமேஷியை அனுவின் உறவினர்களில் ஒருவனாக இருப்பானோ.. என்றுதான் சந்ததேகப்பட்டார்… ஏனென்றால் சாக்ஷி தோற்றத்தில் தன் அன்னையைத்தான் கொண்டிருந்தாள்… சைராவை குழப்பிய பச்சை நிற கண்கள் கூட அனுவிற்கு உள்ளது போலவே தான் சாக்ஷிக்கும் இருந்தது… ஆனால் செய்யும் செயல்கள் அனைத்தும் அபரஜித்தை போலவே செய்வாள்…. தந்தையை போலவே இடதுகை பழக்கம் உடையவள்….

ஹூமேஷியைப்பற்றி தெரிந்தால் சாக்ஷியை பற்றிய விபரங்கள் தெரியக்கூடும் என்றுதான் பார்வதி மிகவும் சந்தோஷப்பட்டார். இப்பொழுது வரை மகேஸ்வரன்-பார்வதிக்கு அந்த நம்பிக்கை இருந்து வருகிறது… ஏனென்றால் அவர்களுக்கு சாக்ஷி தனது தாய் வழி உறவினர்களுடன் இருப்பாளோ என்ற சந்தேகம் மனதை குடைந்து கொண்டே இருந்தது.

ஆயிரத்தில் ஒரு வாய்ப்பாக அப்படி அமைந்து விடாதா என்ற ஏக்கமும் அவர்களது பிரார்த்தனையாக கூட இருந்தது. அந்த அளவுக்கு மகேஸ்வரனின் குடும்பத்தினர் சாக்ஷியின் மேல் அன்பு வைத்திருந்தனர்.

இதையறியாத சைராவோ தனது அனுமானம் தந்த குழப்பத்திலேயே உழன்று கொண்டிருந்தாள்.

சரி போய் முகம் கழுவி விட்டு வரலாம் என்று தனது அறைக்கு செல்ல எத்தனிக்க காலிங் பெல் ஒலிக்க ஆரம்பித்தது.

“அப்பாவாத்தான் இருக்கும்” என்று நினைத்துக்கொண்டே கதவை திறக்க மகேஸ்வரன்தான் நின்றிருந்தார். மகளை பார்த்ததும் ஒரு எதிர்பார்ப்பு அவரது முகத்தில் தோன்றினாலும்…

“என்னம்மா… ரொம்ப சோர்வா தெரியுற…” என்று தன் மகளிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே உள்ளே வந்து கைப்பையை வைத்து விட்டு சோஃபாவில் அமர்ந்தார் மகேஸ்வரன்.

சைராவும் தந்தையின் அருகில் அமர்ந்து கொண்டே பதிலளித்தாள்…

“ஆமாப்பா! அந்த ஹூமேஷி எல்லா வேலைகளையும் மறுபடியும் முதல்ல இருந்து பண்ண சொல்லிட்டான்” என்று சோர்வுடன் கூறியவள்…..ஸ்டீபன் செய்து வைத்திருக்கும் பித்தலாட்டங்களையும் சேர்த்தே கூறினாள்.

“இப்படி நடக்கிறது சகஜம் தானம்மா… நல்லது செய்தறுக்கு யாரும் முன்வரவில்லை என்றாலும்… நல்லது செய்யாவிடாம தடுப்பதற்கும்… நடக்கவிடாமல் செய்றதுக்கும் இந்த மாதிரி புல்லுருவிகள் எல்லா இடத்துலயும் இருக்கத்தான் செய்றாங்கடா குட்டிமா.. எப்படியோ பாதி தூரத்திலேயே பார்த்திபன் கண்டுபிடிச்சுட்டாரு… ஆதாரத்தை திரட்டறதுக்காக அந்த ஆளையும் உள்ள வச்சுகிட்டே வேலைகளை செயல்படுத்தறது ரொம்பவே சவாலான விஷயம்…” என்று மகேஸ்வரன் கூற…

“ஆமாம்ப்பா அவர் மேல எந்த சந்தேகமும் வராத அளவுக்கு ஸ்டீபன் சார் எல்லாத்தையும் செஞ்சிருக்காரு… எங்களோட அத்தனை உழைப்பையும் வீணடிக்க நினைச்சதை என்னால ஏத்துக்கொள்ளவே முடியலப்பா…” என்று ஆதங்கத்துடனும் சோர்வுடனும் பேச…

மகளின் சோர்வை கண்ணுற்ற மகேஸ்வரன்….

“நீ முதல்ல உட்காரு அப்பா உனக்கு பால் கலந்து எடுத்துட்டு வரேன்” என்று சொல்லி நகரப்போக….

“மகிடார்லிங்” என்ற மகளின் குரல் அவரை நிறுத்தியது. மிகவும் சந்தோஷமாக இருந்தாலோ அல்லது கஷ்டமாக இருந்தாலோ மட்டுமே மகள் அப்படி அழைப்பாள் என்பதால்,

“என்ன ஆச்சுடா சைரு?” என்று மகேந்திரன் மகளை மடிசாய்த்துக் கொண்டே வினவ,

“மகி டார்லிங்! ஹூமேஷி அம்மா பெயர் ஷில்பா வாம்” என்று கவலையுடன் கூறினாள். அவருக்கும் வருத்தமே ஏனென்றால் மகள் சஷியின் மீது எவ்வளவு பிரியம் வைத்திருந்தாள் என்பது அவருக்குத் தெரியுமே. இருந்தாலும் அதை குரலில் காட்டாதவாறு

“பரவாயில்லை விடுடாம்மா…இதுக்கெல்லாம் போய் வருத்தப்படாதே… நம்ம சஷிகுட்டிமா எங்க இருந்தாலும் நல்லா இருப்பா..” என்று ஆறுதல் கூற

“ஹ்ம்ம்! இன்னிக்கி வேலை பார்த்ததை விட அக்காவை பத்தி தெரிஞ்சுக்க முடியாம போனது ரொம்ப கஷ்டமா போச்சுப்பா…”

“விடுடா…அவ எங்க இருந்தாலும் நல்லா இருப்பா என்று மறுபடியும் கூறியவர்… ” மகள் நல்ல குழப்பத்தில் இருப்பதையும் குறித்துக்கொண்டவர்…..

“சைருக்குட்டி நீ ரொம்ப குழப்பத்துல இருக்கியாம்மா….???”… என்று மெதுவாக மகளின் தலையை தடவிக்கொண்டே கேட்க….

“ஏன்ப்பா இப்படி கேக்கறிங்க…?? அப்படில்லாம் ஒன்னும் இல்லையே….!!” என்று தனது சிந்தனையிலேயே பதில் கூற….

“ஒரு சின்ன விஷயத்தை கவனிக்காம விட்டியேடா குட்டிமா… அதை மட்டும் கவனிச்சுருந்தேன்னா… இவ்வளவு குழப்பமும் வந்துருக்காது… வருத்தப்படவும் தேவையிருக்காது….!!” என்று கூற…

தந்தையின் பேச்சில் எதையோ உணர்ந்தவளாக எழுந்து அமர்ந்தாள் சைரா.

“என்னப்பா சொல்ல வர்றிங்க…??” என்று மகேஸ்வரனை பார்த்து கேட்க….

“ஹூமேஷி கண்டிப்பா நம்ம சஷியோட பையனா இருக்க முடியாது….” என்று உறுதியாக கூற….

“எப்படிப்பா சொல்றிங்க…?? அதுவுமில்லாம சஷியக்கா சாயல் இருந்ததேப்பா….” என்று தந்தையை கவனித்துக்கொண்டே கேட்க…

“சஷியோட சாயல் இருந்தா அவள் பிள்ளையாகிட முடியுமா….??? இன்னொரு விஷயத்தையும் நல்லா யோசிச்சு பாரு சைரும்மா…” என்று மகளை யோசிக்க விட்டார்…

“என்னவாக இருக்கும் என்று நினைத்தாலும் யோசிக்க மனம் சோர்வுற….எனக்கு குழப்பமா இருக்குப்பா…” என்று கூறினாள் சைரா…

“இந்த விஷயத்த நல்லா கவனிச்சுக்கோ… சஷியோட பையனா இருந்தா.. உன்னை விட வயதுல பெரியவனா இருக்க முடியாது… ஹூமேஷியோ உனக்கும் மேலே சீனியர் சைன்டிஸ்ட்… இப்போ புரிஞ்சுதா…???” என்று கேட்க….

சைரா எப்படி உணர்ந்தாள் என்பதை…. அவளால் வார்த்தைகளால் உரைக்க இயலவில்லை…

“மகிடார்லிங்…”என்று தந்தையை அணைத்துக்கொண்டவள்….

“எனக்கு அப்பாவா இருந்துட்டு…. நீ எப்டிப்பா இவ்வளோ அறிவாளியா இருக்க…” கண்களால் சிரித்துக்கொண்டே கேட்க…

மகேஸ்வரனும் சிரித்துக்கொண்டே” நானும் முதல்ல மக்கா நல்ல புள்ளயாதான்டா இருந்தேன் சைருகுட்டி…. எல்லாம் சகவாச தோஷம்தான் இப்படி கெட்டுபோய்ட்டேன்” என்று கூற….

“சகவாசமா… யாருப்பா அது…???”.. என்று சுவாரஸ்யமாக கேட்க….

“எல்லாம் உங்க அம்மாதான்…” என்று சிரிக்காமல் கூற… சைரா வயிற்றைப்பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

“பாருபேபி வரட்டும் சொல்லித்தரேன் மகிடார்லிங்” என்று செல்ல மிரட்டல்விட….

அதற்கெல்லாம் அசருபவரா… மகேஸ்வரன்…

“எல்லாம் அவ வர நேரம் தான்…வந்ததும் பேசிக்கலாம்……எழுந்து ஃப்ரெஷ் ஆகுடா…. அம்மா வந்ததும் சாப்பிட்டுட்டு நல்லா ஒரு தூக்கத்தை போட்டு எழுந்திரு… ” என்று அவளை அனுப்பி வைத்தார் மகேந்திரன்.

பின்  பார்வதி வந்ததும் சைரா கூறிய விஷயங்களை அவளிடம் கூறினார் மகேஸ்வரன்.பார்வதி கேட்டுக்கொண்டே சிந்தித்தவர்… இத்தனை வருடங்களுக்கு பிறகு சாக்ஷியை காணும் வழி தானாகவே அமைவதை நினைத்து உற்சாகமடைந்தார். கலகலப்பாக பேசி சிரித்து சிறிது நேரம் ஓடியது. இரவு உணவை முடித்து விட்டு மூவரும் உறங்கச் சென்றனர்.

அறைக்கு வந்த சைரா ஏதோ ஒரு வேறுபாடு இருப்பதை உணர்ந்தாள். என்னவாக இருக்கும் என்று அறையை சுற்றி நோட்டமிட்டு… என்னவென்று  யோசிக்கும்போதே சௌமியாவிடம் இருந்து கால் வந்தது. தோழியின் அழைப்பை ஏற்று காதில் வைத்தவள்…

“சொல்லுடி…” என்று கொட்டாவி விட்டுக்கொண்டே பேச…

“என்னடி என்ன பண்ணிட்டு இருக்க?”சௌமி

“ஹ்ம்ம், ஃபுட்பால் விளையாடிகிட்டு இருக்கேன். ஏண்டி…. தூங்கப் போற நேரத்துல ஃபோன் பண்ணிட்டு என்ன கேள்வி கேக்குற? லூசாடி நீ…” சைரா திட்ட

“மாமி சமையல நல்லா ஃபுல் கட்டு கட்டிட்டு உனக்கு தூக்கம் வரலனா தான் ஆச்சரியம்…”

“ஹேய்… நிஜமாவே நல்ல தூக்கம் வருது சௌமி… இன்னைக்கு சரியான வேலை… நீயும்தான பார்த்த… ” என்று சைரா தூக்கக்குரலலியே பேச….

“அதான் கால எடுத்ததுமே கொட்டாவி விட்டுக்காமிச்சிங்களே மேடம்…. தனியா ஒண்ணும் சொல்லத் தேவையில்லை…”

“ஹேய்…மொக்கை போடாதடி…” என்று சைரா தூக்கத்தை விரட்டியபடியே பேச..

“சரி! சரி! விடு நேரா விசயத்துக்கே வர்றேன்”

“என்ன விஷயம்?” சைரா

“நம்ம ஹூமேஷி சார் பார்வையெப்பவும் உன்னையே சுத்துதே அதுதான் விஷயம்…” என்று விஷயத்தை போட்டுடைத்தாள் சௌமியா.

“ஹேய் உனக்கு கலாய்க்க நேரங்காலமே கிடையாதாடி? “என்று சைரா சலிப்புடனேயே கேட்க,

“இல்லடி சைரா!  நான் சீரியசா தான் பேசுறேன். இன்னிக்கி மீட்டிங்ல அவர் உன்னையேதான் பாத்துட்டு இருந்தாரு. ஆனால் பேக்கு மாதிரி நீ எதையோ யோசித்துட்டு இருந்த…” என்றாள் சௌமி.

“ஹேய்! அவருக்கு எதிர்ல தான் நான் உட்கார்ந்துட்டு இருந்தேன். அதனால உனக்கு அப்படி தெரிஞ்சிருக்கும்” என்றாள் சைரா.

“இல்ல சைரு! நான் நிச்சயமாக சொல்கிறேன் நம்ம சீனியர் உனக்கு…”ஐ லவ் யூ”… சொல்லப்போற நாள் வெகு தூரத்தில் இல்லை… ஏன்னா அத்தனை பேர் உட்கார்ந்திருக்கும் போதும் அவர் உன்னையேதான் பார்த்துட்டிருந்தாரு…” சௌமியா சொல்லி சிரிக்க…

சைராவுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை…. ஹூமேஷியின் விஷயத்தை தோழி தேவையில்லாமல் இழுப்பது போல் தோன்றியது….

“உனக்கு கிறுக்குதான் பிடிச்சுருச்சு சௌமி… அவ்வளவு முக்கியமான மீட்டிங் போயிட்ருக்கப்போ….அதுவும் அத்தனை பேர் கூடியிருந்த மீட்டிங்க்ல அவர் என்னை மட்டுமே பார்த்துட்டுருந்தாரு… அதை நீ பார்த்த… இதை நான் நம்பனும்….உனக்கு போர் அடிச்சா கிளம்பி வீட்டுக்கு கூட வா… ரெண்டு பேரும் விடிய விடிய பேசுவோம்… அதை விட்டுட்டு எதுக்கு ஹூமேஷிசார இழுக்கற…” என்று கூற

சௌமியாவோ” பாருடா சார பத்தி பேசினா மேடம்க்கு கோபல்லாம் வருது…” என்று விளையாட்டாகவே பேச…

சைரா அமைதியாய் இருக்க,

“ஹேய்! சைரா லைன்ல இருக்கியா?  இல்ல கனவுக்கு போயிட்டியா?”  என்று சௌமி மேலும் கலாய்க்க,

“விளையாடுறதுக்கும் ஒரு அளவு இருக்கு சௌமி…. உனக்கு வேற வேலையே இல்லையா…??எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லை…வைடி ஃபோனை” என்று திட்ட

“இப்படி சொல்றவளுக  தாண்டி முதல்ல காதலுக்கு ஓகே சொல்லுவாங்க” என்று தோழியை மேலும் வாற,

“போன வைக்கிறியா… இல்ல உன் மண்டையை உடைக்கவா…”என்று திட்டியபடியே சைரா ஃபோனை கட் செய்தாலும்…. அவளின் முகம் சூடாவதை அவளால் உணர முடிந்தது….

ஹூமேஷியை பார்த்ததும் ஏதோ ஒரு உணர்வு தோன்றியது நிஜம் என்றாலும்…. நிச்சயம் அது காதல்உணர்வு என்று ஏனோ அவள் மனம் ஒத்துக் கொள்ள மறுத்தது.

இன்று தந்தையிடம் பேசிய பிறகு மனதிலிருந்து பெரியபாரம் குறைந்தார்போல் இருந்தது… எப்படியும் சாக்ஷிக்காவைப்பற்றி கண்டுபிடித்து விடலாம் என்று குதூகலமாக இருந்தது….

ஹூமேஷிசாரும் நல்ல விதமாகத்தான் பழகுகிறார். எப்படியாவது அவரிடம் பேசி அவரிடம் விஷயத்தை சொல்லாமலேயே அவர் சஷிக்காவின் உறவினரா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டாள் சைரா.

ஆனால் ஹூமேஷி அவள் வாயாலேயே அவளது காதலை சொல்ல வைப்பான் என்று தெரிந்து இருந்தால் முதலிலேயே சுதாரித்து இருந்திருப்பாள்.

 அத்தியாயம்-6:                                                      

மறுநாள் வீட்டையே தலைகீழாக புரட்டிக்கொண்டிருந்தார் பார்வதி. எப்பொழுதும் ஞாயிற்றுக்கிழமையில் சற்று தாமதமாகவே எழுந்து….மெதுவாக அனைத்து வேலையும் செய்து குடும்பமாக எங்காவது சென்று சுற்றி விட்டு வருவதோ அல்லது பக்கத்தில் இருக்கும் பூங்காவில் சென்ற அமர்ந்து அக்கம்பக்கத்தினரை பார்த்து பேசி சிறிது நேரம் நடந்து விட்டு வருவதோ அவர்களது வழக்கம்.

சைராவும் அன்னை தந்தையோடு செலவழிக்கும் இந்த நாளை எப்பொழுதும் ஆவலுடன் எதிர்பார்ப்பாள். அன்று முழுவதும் பெற்றோரிடமும் அரட்டை அடித்துக்கொண்டு பிடித்த நேரத்தில் பிடித்த வேலையை செய்து கொண்டு… நேரம் கிடைத்தால் சைரா தன் பெற்றோரை அமர வைத்து அவர்களுடன் ஒரு லாங்டிரைவ் செய்வதை மிகவும் விரும்புவாள்.

பெரும்பாலும் அன்றைய பொழுது குடும்பத்தினருக்கே உரிய மூவரின் பொழுதாகவே கழியும்‌.

ஆனால் பார்வதி வழக்கத்திற்கு மாறாக இன்று நேரமே எழுந்து அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருப்பதே காலையில் எழுந்து வந்த சைராவின் கண்களில் முதலில் பட்டது.

தூக்கக்கலக்கத்தோடே கீழே இறங்கி வந்தவள்….

“ஒரு வேளை இன்னைக்கும் வேலைநாள்னு நினைச்சு பாருபேபி வேலை பார்த்துட்டுருக்கோ… ஓவரா… கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு இருந்தாலே இப்படித்தான்…. ஒருவேளை பாருபேபிக்கு வயசாட்டாகிதால இன்னைக்கு லீவுங்கிறத மறந்துட்டாங்களோ…???…” என்று அவளது மனத்துடன் பேசிக்கொண்டே மாடிப்படி இறங்கி வந்தவள்…

“டீ..சைரு… பாருபேபிக்கு வயசாருச்சுன்னு மட்டும் நீ சொல்லிருந்த…??? இன்னைக்கு சாப்பாட்டுக்கு கோவிந்தா தான்… நல்லவேளை ஏதும் சொல்லாம தப்பிச்சேன்…. ஞாயிற்றுக்கிழமை மட்டன் பிரியாணியை மறந்துட்டு இப்படி பேசிட்டியேடி சைரு…

ஹி…ஹி.. சாப்பிட்டா சரியாயிடும்…” என்று நினைத்துக்கொண்டவளாக…. மும்மரமாக வேலை செய்து கொண்டிருந்த தாயைப் பார்த்து….

“அம்மா என்ன காலையிலேயே எல்லா வேலைகளையும் செய்துகிட்டு இருக்கீங்க….!”  மகளைக் கண்டதும் பார்வதியின் முகத்தில் அப்படி ஒரு புன்னகை.

“அடியே சைரா….அபி மாமா வராருடி….நாளைக்கு சாயங்காலம் இங்கே வந்துடுவேன்னு இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கால் பண்ணி… அபிண்ணா சொன்னாங்க குட்டிம்மா….”என்று,  சைராவின் கைகளை பிடித்துக் கொண்டே கூற, துள்ளிகுதித்தாள் சைரா‌.

“அம்மா நிஜமாவாம்மா?…. போன தடவை வர்றேன்னு சொல்லிட்டு வராமல் இருந்ததுக்கு இந்த தடவை ரெண்டு மடங்கா வசூல் பண்ணி விடுவேன்… மாலுக்கு கூட்டிட்டு போய் எவ்ளோ பில் போட்டு கூட்டிட்டு வர்றேன் என்று மட்டும் பாரு…”என் பாருபேபி என்று குதூகலித்தாள் சைரா.

அப்பொழுதுதான் எழுந்து வந்த மகேஸ்வரனின் கண்களுக்குப்பட்டது….. தாயும் மகளும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கும் காட்சியே.

“என்ன அம்மாவும் பொண்ணும் காலையிலேயே ஒன்றுகூடி பிளான் போட்டுட்டு  இருக்கீங்க?”  

“அதுவும் இவ்வளவு சந்தோஷமா?..” என்ற கேள்வி மகளிடமும், பார்வையை மனைவியிடமும் வைத்தவாறே மகேஸ்வரன்  கேட்க..

“மகி டார்லிங்! அபிமாமா ஆன் தி வே டு சென்னை…” என்று உற்சாகமாக கூறிக்கொண்டே அவரது கழுத்தை பிடித்து தொங்கிக் கொள்ள

“அப்படியா பார்வதி!” என்று சந்தோஷத்துடன் மகேஸ்வரன் கேட்டாலும்,  “எப்படி வர்றானம் ? உன் அபிர‌ஜித் அண்ணன்” என்று முகத்தை உடனே தூக்கி வைத்துக் கொண்டு கேட்க,

“ஹப்பா! என்னவோ நண்பன் மேல ரொம்ப கோவமா இருக்குற மாதிரி தான் நடிக்கிறீங்க… விமானத்துல தான் வர்றாரு….  நாளைக்கு சாயங்காலம் நம்ம வீட்ல இருப்பேன் என்று சொல்லி இருக்காங்க” என்றார் பார்வதி

“அப்போ நாளைக்கு லீவு எடுக்கணுமா பார்வதி ? சமைக்க தேவையான காய்கறி எல்லாம் போய் வாங்கிட்டு வந்திரலாமா?”  (இவர் கோபமாக இருக்கிறாராம்)

“இல்லைங்க கொஞ்சம் பழங்கள் மட்டும் வாங்கிட்டு வந்தா போதும். நான் லீவுக்கு சொல்லிடறேன். நீங்க வேண்டாம் எப்படியும் அண்ணன் வருவதற்கு ஆறு மணி மேல் ஆகிடும்…” என்றார் பார்வதி.

“ஹ்ம்ம்!  அப்ப சரி! குட்டிமா நீயும் நாளைக்கு லீவு போடறியாடா?”என்று மகேந்திரன் மகளை கேட்க

“ஆ…………..என்று சொல்ல வந்த அவள் என்ன நினைத்தாளோ…. இல்லப்பா முக்கியமான ப்ராஜெக்ட் ஓடிட்டு இருக்கு லீவு எடுக்க முடியாது, ஆனால் சீக்கிரம் வந்துடுவேன்” என்று பதிலளித்தாள் சைரா.

“அப்ப சரி… இந்தா காபியை பிடி… என்னங்க நீங்களும் எடுத்துக்கோங்க…” பார்வதி இருவருக்கும் காபி கோப்பையை எடுத்துக்கொடுத்தவர் தானும் ஒன்றை எடுத்துக்கொண்டு அமர்ந்தார்.

“சைரா..உன்கிட்ட கேட்கனும் நினைச்சேன்… சௌமியா அப்பா துபாயில் இருந்து எப்போ ஊருக்கு திரும்பி வருவார்னு சொன்னாராடா…?” காபியை குடித்துக்கொண்டே கேட்டார் பார்வதி.

“ஏன்மா… திடீர்னு கேக்கறிங்க…??” சைரா கேட்க…

“இல்லடா… நேத்து கோவில்ல செளமி அம்மா… நம்ம லஷ்மி அண்ணிய பார்த்தேன்…. அடிக்கடி உடம்பு முடியாம போகுது… அவர் வந்துட்டா நல்லார்க்கும்னு சொன்னாங்க… அவங்களவிட்டு கைவிட்டு போன சொத்துக்கள் எல்லாத்தையும் மீட்டுட்டாங்களாம்…

ஆனால் உடனே வர முடியாம… அவருடைய ஒப்பந்த காலம் இன்னும் ஒரு வருடத்திற்கு இருக்குன்னு சொல்லிக் கவலைப்பட்டாங்க…”

சௌமியின் தந்தை ராமச்சந்திரனின் குடும்பத்து சொந்தக்காரர்கள்… பணக்காரரான அவரது அப்பாவை ஏமாற்றி சொத்தை பிடுங்கிக்கொண்டு அதை குறைந்த விலைக்கு விற்றுவிட்டு சென்றுவிட்டனர். மிகுந்த ஏழ்மை நிலையில் அவதிப்பட்ட அவரது தந்தை… அதை தாங்க முடியாது… இறக்கும் தருவாயில் தனது ஒரே வாரிசான தனது மகன் ராமச்சந்திரனுக்கு அனாதைப்பெண்ணான லஷ்மியை திருமணம் செய்து வைத்தவர்… சொத்துக்களை நீங்கள் தான் மீட்க வேண்டும் என்று சத்தியம் வாங்கிக்கொண்டு இறந்துவிட்டார்.

அன்றிலிருத்து இன்று வரை அயராது உழைத்து… துபாயில் இருந்து கொண்டே அனைத்து சொத்துக்களையும் மீட்டு விட்டார் ராமச்சந்திரன். மனைவி மகள் இருவரும் உயிர்மூச்சு அவருக்கு.

இத்தனை நாள் லஷ்மிம்மாவிற்கு துணையாக… தாய்க்குத்தாயாக பார்த்துக்கொண்டார் ராமச்சந்திரனின் தாயார். இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் இறந்து விட்ட பிறகு… இப்பொழுதெல்லாம் கணவனின் அருமைக்காக ஏங்கத்தொடங்கி விட்டார் லஷ்மியம்மாள். தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கும் மகளுக்கு சீக்கிரம் ஒரு திருமணத்தை செய்து விட ஆசைப்பட்டார்.

“இன்னும் ஒரு ரெண்டு மாசத்துல வந்துட்டு… ஒரு மாதம் தங்கிட்டுதான் போவாருன்னு சௌமியா சொன்னாம்மா…” என்று பதிலளித்தவள்….

“என்னென்ன லிஸ்ட் வேணும்னு எழுதி வைங்கம்மா… அப்பாவை கிரிக்கெட் கிளப்ல விட்டுட்டு நம்ம ரெண்டு பேரும் தேவையான பொருளை வாங்கிட்டு வந்துடலாம்… உங்களுக்கு என்ன வாங்கனும்ப்பா…??” திரும்பி தந்தையிடம் கேட்க….

“எனக்கு லென்ஸ் கிளினர் சொலுய்சன் வாங்கிட்டு வாடா சைருகுட்டி… நீ வண்டி ஓட்ட வேண்டாம்… டிரைவரை வரச்சொல்றேன்.. பார்வதி நீ என் கார்ட எடுத்துக்கோம்மா…” என்று கூற…

“அப்பா… நான் கார் ஓட்டறேன்ப்பா…” சைரா அடம்பிடிக்க…

“அப்பா சொன்னாக்கேளுடா குட்டிம்மா… ஷாப்பிங் பண்ணி டையர்ட் ஆகிடுவ…” மகேஷ்வரன் சமாதானப்படுத்தியும் முகத்தை தூக்கி வைத்து அமர்ந்திருந்தாள் சைரா.

பார்வதி அவளின் முதுகில் செல்லமாக ஒரு அடி வைத்து…” அதான் இவ்வளவு தூரம் அப்பா சொல்றாங்கள்ள… எழுந்திருடி ரவுடி… போ…போய் தயாராகிட்டு வா…எப்பப்பாரு கால்ல சக்கரத்தை கட்டின மாதிரி சுத்திக்கிட்டே திரியறது…” செல்லமாக கடிந்து கொண்டே மகளை எழுப்பி படிக்கட்டின்புறம் திருப்பி விட… மகேஷ்வரனின் உதடுகள் அடக்கிய சிரிப்பில் துடித்துக் கொண்டிருந்தன.

அதை கவனித்தவள்… மகேஸ்வரனை முறைத்துக் கொண்டே… கால்களை தரையில் ஓங்கி மிதித்தவள்… சத்தம் எழுப்பியவாறே… வெளியே கிளம்ப தயாராவதற்கு படிக்கட்டுகளில் ஏறிச்செல்ல….

மகளின் செய்கையில் சிரித்துக்கொண்டனர் மகேஷ்வரனும்-பார்வதியும்.

மிகுந்த உற்சாகத்துடன் அபிரஜித்தின்  வருகைக்காக தயாரானது மகேஷ்வரனின் குடும்பம்.

பரபரப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்தது அந்த தில்லி விமான நிலையம். அடுத்தடுத்த விமானத்திற்கான அறிவிப்புகள் வந்து கொண்டிருக்க… சென்னை செல்லும் விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக வரும் என்ற அறிவிப்பு வந்தது.

இருக்கும் பிரச்சனையில் இதுவேறு….என்று நொந்து கொண்டார் அபரஜித். அவர் திட்டமிட்டபடி கிளம்புவதற்கு இன்னும் மூன்று நாட்கள் இருந்தன.

அவசரமாக கிளம்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டதால்… கிடைத்த டிக்கெட்டை பெற்றுக்கொண்டு விமான நிலையத்திற்கு வந்து விட்டார்.

இந்த அவசர பயணத்திற்கு காரணமான அவனை நினைக்கும்போதே இரத்த அழுத்தம் எகிறியது அவருக்கு.

நேற்று காலை சக யாத்திரிகர்களுடன் மலையேற்றத்திற்கு சென்று விட்டு வந்த களைப்பினால்… அன்று முழுவதும் தனக்கு கொடுக்கப்பட்ட விடுதி அறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார் அபரஜித்.

அப்பொழுது அவரது கதவை தட்டிய… அங்கு வேலை செய்யும் விடுதிக்கார பையன்… அவரைப்பார்க்க அவரின் பெயரை சொல்லி யாரோ ஒருவர் வந்திருப்பதாக சொல்ல… “இங்கு யார் தன்னை தேடி வந்திருப்பது…??” என்று நினைத்தவர்… பின்பு யாரென்று பார்க்கலாம் என்று நினைத்தவராக அனுப்பி வைக்க சொன்னார் அபரஜித்.

அந்த புதியவனும் அறைக்கதவை தட்டிவிட்டு… கதவை திறந்து கொண்டு உள்ளே வர… கால்வலியால் படுத்துக்கொண்டிருந்தவர்… அந்த புதியவனைப்பார்த்த அதிர்ச்சியில் கட்டிலில் இருந்து எழுந்து விட்டார்.

“நீ….நீ…நீ…எங்க இங்க வந்த…??” பதற்றத்துடன் கேட்க…

“நான் இங்க வரக்கூடாதா அங்கிள்…??” அந்தப் புதியவன் கேட்க..

“நீ எங்கயும் எப்பவும் என்னைப் பார்க்க வரக்கூடாதுன்னு… நான் ஏற்கனவே உன்கிட்ட சொன்னதா ஞாபகம்…” இப்பொழுது அபரஜித் சற்று தன்னை சுதாரித்தவர்… அருகிருலிருந்த நாற்காலியில் மெதுவாக நகர்ந்து அமர்ந்து கொண்டார்.

“என்னை உட்கார சொல்ல மாட்டிங்களா அங்கிள்…???” அந்தப் புதியவன் பேச்சை மாற்ற…

“எங்கேயும் என்னை நிம்மதியா இருக்க விட மாட்டிங்களா…?? உங்களையெல்லாம் எப்பவும் பார்க்க கூடாதுன்னு தானே… என் வீட்டை விட்டு, என் நண்பனை விட்டு, எனது அடையாளத்தையே தொலைத்துக்கொண்டு…. ஊர்ஊரா சுத்திக்கிட்டு இருக்கேன்…. இங்கயும் வந்து எதற்காக என்னை தொந்தரவு படுத்தற…?? முதல்ல இங்கிருந்து வெளியே போ…. ” என்று கத்த ஆரம்பித்தார் அபரஜித்.

“ரிலாக்ஸ் அங்கிள்…. வயசான காலத்துல ஏன் இப்படி கத்தி உங்க சக்தியை குறைச்சுகிறிங்க…..??? எனக்கு தேவையான பொருள் உங்ககிட்ட இருக்கும்போது…..நான் உங்களைத்தான் தேடி வர முடியும்.

நீங்க பண்றது நியாயமான்னு நீங்களே யோசிச்சு பாருங்க…. பல உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்துல உங்க பிடிவாதத்தை காண்பிக்கிறிர்களே…?? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க அங்கிள்…” அந்தப்புதியவன் தன்மையாக பேச…..

அபரஜித்திற்கோ அவன் பேசுவதை கேட்க கேட்க இரத்தம் கொதிநிலையை அடைந்தது. “நீங்க பண்றதல்லாம் பண்ணிட்டு…. இப்படி உன்னோட காரியம்தான் முக்கியம்னு வந்து நிற்கிற…. உன்னைப்பார்க்கவே எனக்கு பிடிக்கல… நீ எவ்வளவு என்னை துரத்தினாலும் என்னுடைய பதில் “முடியாது” தான்…

என்னுடைய சம்மதம் இல்லாமல் உன்னால் எதுவும் செய்ய முடியாது. நீ எவ்வளவு சக்தி வாய்ந்தவனா இருந்தாலும்… நல்லவனாக இருந்தாலும்… உனக்கு நான் அந்த பொருளை தரமாட்டேன்…” சூடாகவே பதில் கொடுத்தார் அபரஜித்.

“நாங்கள் செஞ்சது உங்களை பொறுத்தவரை தப்பாகவே இருந்தாலும்…. நாணயத்திற்கு இரண்டு பக்கம் என்பதை போல… எங்கள் பக்க நியாயத்தையும் நீங்க ஒருமுறை யோசிச்சுப்பாருங்க அங்கிள்…???” அவருக்கு புரிய வைக்கும் நோக்குடன் தன்மையாக பேச….

அபரஜித்தின் பொறுமை காற்றில் பறக்க ஆரம்பிக்க….

” நீ என்ன பேசினாலும்….நான் பொருளை உன்கிட்ட ஒப்படைக்க மாட்டேன்… என்கிட்ட வீணா பேசிக்கிட்டு இருக்காம உன் வேலையைப்போய் பாரு…. முதல்ல நீ இங்கிருந்து வெளியே போ…” கதவை நோக்கி கையை நீட்ட…

அமைதியாக அவரைப்பார்த்து நின்று கொண்டிருந்தவன்… அவரைப்பார்த்து ஒரு மர்மப்புன்னகையை சிந்தியவன்…. தனது கைவிரலை சொடுக்க…

அபரஜித் அமர்ந்திருந்த இருக்கையின் அருகே இருந்த இன்னொரு இருக்கை…. அவனருகே தானாக நகர்ந்து வந்தது. அவனின் செய்கையில் அபரஜித்தின் தொண்டைக்குழி ஏறி இறங்கியது…

அவர் முன்னே கால்மேல்கால் போட்டு… அந்த இருக்கையில் அமர்ந்தவன்….

“நீங்க நான் யாருங்கிறத மறந்துட்டு பேசுறிங்க அங்கிள்….. எனது தாயின் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு உங்களிடம் நான் தன்மையாக பேசிக்கொண்டிருப்பதை நீங்கள் அலட்சியமாக நினைக்கிறிர்கள்…. எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு…” எச்சரிக்கும் தொனியில் பேச…

அபரஜித்தோ அவனைப்பார்த்து அலட்சியமாக சிரித்தவாறே…” நீ இப்படி மிரட்டுனா நான் பயந்துடுவேன்னு நினைக்கிறியா….??? என் உயிரே போனாலும் நீ நினைக்கிறது நடக்காது… என்கையால் அந்தப்பொருள் உன் கையில் கிடைப்பது…. இந்த ஜென்மத்தில் நடக்காது… அதனால் நீ வந்த வழியே திரும்பி போகலாம்…” அருகில் இருந்த மேஜையில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து பருகியவர்…

” உன்னை கிளம்பச்சொன்னேன்….” மீண்டும் கதவை நோக்கி கையை நீட்ட…

அந்த புதியவன் எழுந்த வேகத்தில்……அவன் அமர்ந்திருந்த இருக்கை…. அறையின் மூலைக்கு சென்று விழுந்தது.

தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றவன்… ” உங்க உயிரைப்பற்றி உங்களுக்கு கவலை கிடையாது அங்கிள்….

ஆனால்…!!!” என்று நிறுத்த…

அபரஜித்திற்கு குளிரூட்டப்பட்ட அந்த அறையிலும் வியர்ப்பதை போல் இருந்தது.

“நீங்க பெறாத மகள்… ஆசை மகள்… சைரந்திரியை பற்றிய கவலை கூடவா இல்லை…????” என்று கேட்டுவிட்டு கதவை திறந்து கொண்டு புயலாக வெளியேறி சென்று விட்டான்.

அவன் சென்றதைக்கூட அறியாமல் அபரஜித் தான் அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவர்…. சிறிதுநேரம் கழித்தே சுயநினைவுக்கு திரும்பினார்.

எழுந்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிக்கொண்டு வந்தவர்….. செய்த முதல் வேலை பார்வதிக்கு அழைப்பெடுத்ததுதான்….

பார்வதிக்கு அழைத்தவர்… தான் உடனே கிளம்பி சென்னைக்கு வருவதாக தகவல் கூறிவிட்டு… சைராவைப்பற்றி விசாரிக்க… அவள் தூங்கிக்கொண்டிருப்பதாக பார்வதி கூறவும்… நிம்மதியுடன் ஃபோனை வைத்தவர்… அடுத்து சென்னைக்கு கிளம்ப இருக்கும் விமான டிக்கெட்டையும் பதிந்து விட்டு… விடுதி அறையை காலி செய்துகொண்டும் கிளம்பி விட்டார்.

சைரந்திரியை உடனே காண வேண்டும் என்கிற உத்வேகத்துடன் விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தார் அபரஜித்.

 அத்தியாயம் 7:                                               

மறுநாள் ஆராய்ச்சிக் கூடத்திற்குள் நுழையும் போதே சௌமியாவின் வார்த்தைகளே எதிரொலித்துக் கொண்டிருந்தன சைராவின் காதுகளில்.

“அவன் நம்மளையேவா பாத்துகிட்டு இருந்தான்….” என்று நினைத்துக்கொண்டு தானியங்கியின் சுவற்றில் மோதப்போகும் போது வலிமையான இரு கரங்களால் இழுக்கப்பட்டாள் சைரா‌.

கண்ணைத் திறந்து பார்த்தால் எண்ணத்தின் நாயகனே நேரில் நின்றிருந்தான்.

“என்ன சைரா?லிப்ட் சுவத்துல மோதனும்னு ஏதும் வேண்டுதலா?..” என்று முகத்துக்கு அருகில் சொல்லி சிரிக்க

“இவன் வேற கண்ணை காமிக்கேறானே…”  சைராவின் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது.

“நோ…ஹூமேஷ்… யோசிச்சுகிட்டே வந்ததால கவனிக்கல” கைகளை விலக்கிக் கொண்டே அவனிடமிருந்து விலகி நின்றாள் சைரா.

“பார்த்து கவனமாக வாங்க  சைரா” என்று ஹூமேஷி கூற, “உன்னை பார்த்ததுலதாண்டா என் கவனமே போச்சு” சைராவின் மனம் கவுன்டர் கொடுத்தது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு

“கண்டிப்பா சார்! இனிமேல் கவனமாக நடந்துக்கிறேன்” என்று சைரா கூற,

“ஹூமேஷ் போய்… சார்… வந்திருச்சா..??ஏன் இந்த குழப்பம் சைரா..” என்று ஹூமேஷி கேட்க..

“இல்லை சார் ! என்ன இருந்தாலும்  நீங்க எனக்கு சீனியர் அப்படி கூப்பிட்டா மரியாதையா  இருக்காது…”என்று சைரா மழுப்ப,

“ஏதோ நீ மனசுக்குள்ள போட்டு குழப்பிக்குற  பரவாயில்ல… வா நம்ம செக்ஷன்க்கு  போகலாம்,”‌ என்று கூறி ஹூமேஷி முன்னே நடக்க

“இல்லை சார்….. நான் சௌமி வந்ததும் வரேன். இன்னும் டைம் இருக்கே” என்று கூற… அவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவன்.

“‌சரி! கவனமாக வா சரா” என்று விடைபெற அப்போதுதான் கவனித்தாள் அவன் தன்னை சரா என்று அழைப்பதை…

“இவன் எப்பருந்து சரான்னு கூப்பிட ஆரம்பிச்சான்.. சும்மாவே இந்த சௌமியா ஆடுவா… அவன் முன்னாடி இவன் இப்படி கூப்பிட்டு வச்சான்… வேற வினையே வேண்டாம்…”

“அந்த எருமை இன்னுமா வரலை…” அவளை திட்டிக்கொண்டே…

சௌமிக்கு போன் செய்து…. அவள் வர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்கலாம் என டயல் செய்து கொண்டே திரும்ப….

சௌமியாவே எதிரே நடந்து வந்து கொண்டிருந்தாள்.

சௌமியா கையசைத்து சிரித்துக்கொண்டே சைராவை நோக்கி வர முகத்தை திருப்பிக் கொண்டாள் சைரா.

சைரா அருகே வந்த சௌமியா…. சைராவின் தோளைத் தொட்டு திருப்ப…. அவள் இப்பொழுது சௌமியாவை நன்றாகவே முறைத்தாள்.

“சைரு பேபி….என்ன காலையிலேயே ரொம்ப சந்தோசமான மூட்ல இருக்கே போல….” என்று வழக்கமான தனது பாணியில் தோழியை வார….

“பிசாசே! என்னைப் பார்த்தா சந்தோஷமா இருக்கிற மாதிரி இருக்கு….?? எல்லாத்துக்கும் காரணம் நீதான்…. ” அவள் முதுகில் இரண்டு அடி வைத்தாள் சைரா.

“ஹான்… நான் என்னடி பண்ணேன்? என்ன பண்ணாலும் இப்படியா அடிப்ப?…” சௌமி முதுகை தேய்த்துக் கொண்டே, வராத கண்ணீரைத் துடைக்க…

“எல்லாம் உன்னாலதான்…..நீ தான் சும்மா இல்லாம நேத்து கால் பண்ணி  ஹூமேஷி சார பத்தி பேசின, அதைபத்தி யோசிச்சுகிட்டே வந்ததால தான் இன்னிக்கு லிஃப்டோட சுவத்தல மோத போயிட்டேன்.”

“அச்சச்சோ…அப்புறம் என்ன ஆச்சு… ?” சௌமியா சீரியஸான தொனியில் கேட்க,

“ஹூமேஷிசார்! வந்து காப்பாத்திட்டாரு…!!!”…சைரா வருத்தத்தோடு கூற…

“ச்சே!ஒரு நல்ல ரொமான்டிக் சீன மிஸ் பண்ணிட்டேனே…” என சௌமி சிரிக்காமல் கூற சைராவுக்கு அவளைக் கொன்று விடும் அளவுக்கு  ஆத்திரம் வந்தது‌. அதை உணர்ந்து கொண்ட சௌமியா.

“ஹி…ஹி! சரி…. விடு சைரு…. உன் ஹீரோ தான உன்னை காப்பாத்தினாரு….  நடக்க வேண்டியது தான நடந்துருக்கு…” சொல்லிவிட்டு ஓட….. அவளைத் துரத்திக் கொண்டு ஓடினாள் சைரா.

“மிஸ் சைரா….இந்த சாம்பிள்ஸ மாத்தி மேட்ச் பண்ணுங்க…” ஹூமேஷி கூற,

இந்த உலகத்தில் தனக்கு துணையாக தன் முன்னால் பார்த்துக் கொண்டிருந்த கணினியை தவிர வேறு ஒன்றும் இல்லை என்பது போல அதிலேயே பார்வையை பதித்து இருந்தாள் சைரா.

காலையில் நடந்த நிகழ்வுக்கு பிறகு அவள் ஹூமேஷியின் புறம் திரும்பவேயில்லை…. சௌமியாவிடமும் பேசவில்லை.

“சரா….நான் பேசுறத கவனிக்கிறீங்களா…கையில் பேப்பர்ஸ வச்சுக்கிட்டு நான் நின்னுகிட்டே இருக்கேன்…. நீங்களும் வாங்கிப்பிங்கன்னு…. உங்க கிட்ட இருந்து பதிலே இல்லை..” என்று ஹூமேஷி கேட்க

 

“சாரி சார்! இதோ இப்போ மாத்தி மேட்ச் பண்ணிடுறேன்..” என்று அவசரமாக அவன் கையில் இருந்த தாள்களை வாங்கி கொண்டாள் சைரா.

தீவிரமாக அவள் வேலை பார்த்துக்கொண்டு இருக்க அதற்கப்புறம் தான் உணர்ந்தாள், அங்கே தானும் ஹூமேஷியும் மட்டுமே இருப்பதை….ஹூமேஷியின்  கண்கள் மாற்றியமைக்கப்பட்ட டிஎன்ஏகளை கணினியில் சரி செய்து கொண்டு இருக்க…. அப்போதுதான்,அவனை நன்றாக கவனித்துப் பார்த்தாள் சைரா.

காண்பவர் எல்லோரையும் வசீகரிக்கும் தோற்றத்துடனும், ஆண்மையின் மிடுக்குடனும், அமர்ந்திருந்தவனை காண திகட்டவில்லை.

“இவன் என்னையே பாத்திட்டுருக்கானாம்… சொல்லுது அந்த அரை லூசு…பக்கத்துலயே உட்காந்துட்ருக்கேன்… இங்க ஒரு ஆள் உட்காந்து இருக்கேன்கறது கூட கவனிக்காம அவன்பாட்டுக்கு வேலை பார்த்துக்கிட்டு இருக்கறவனைப்போய் என்னைய சைட் அடிக்கறான்னு சொல்லியா ஓட்டுன….  இருடி…. மவளே சௌமி…இன்னைக்கு முழுசும் பேசாமல் உன்னை நான் டீல்ல விடல…”என்று சைரா சபதம் எடுத்துக் கொண்டிருக்க….

அவளது சபதத்தை எப்படி முறியடிப்பது என்று தெரியாதவளா சௌமியா.. காலையில் முறுக்கிக் கொண்டு போன தோழியை சமாதானப்படுத்த…. உடனே நிறுவனத்தின் பக்கத்திலிருக்கும் தோழிக்கு ஃபோன் செய்து சைராவிற்க்கு பிடித்த கேக்கை வாங்கி வரச்செய்துவிட்டாள்.

சபதம் எடுக்கும்போதுதான் தோழியின் ஞாபகம் வந்தவளாய் “ஆமால்ல…இந்த சௌமியா எங்க போய் தொலைஞ்சா.. இவ்வளவு நேரம் நம்மள பாக்காம இருக்க மாட்டாளே…” என்று சௌமியின் டேபிளை நோக்கி திரும்ப, அப்பொழுது இடையிட்டது ஹூமேஷியின் குரல்

“என்ன சைரா… நீ பார்க்கற அளவுக்காவது நான் இருக்கேனா?”..என்று அமைதியான குரலில் ஹூமேஷி வினவ

“சார்! என்று திரும்பிப் பார்த்தாள்” சைரா

அவன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஏ….. என்ன சொல்றீங்க?”..

சைரா வினவ “ஹ்ம்ம்!  இவ்வளவு நேரம் என்னையே பார்த்துகிட்டு இருந்தீங்களே மேடம் அதை தான் சொன்னேன்…” ஹூமேஷி கூற

“அது வந்து…வந்து! என்று சைரா திணற

“இன்னும்வரலேயே…வந்தா நல்லாத்தான் இருக்கும்…”ஹூமேஷி ஏக்கப் பெருமூச்சு விட,

“ஹூமேஷ்! நீங்க என்ன பேசுறீங்க?” சைராவுக்கு மூச்சடைப்பது போல் இருந்தது.

“ஒரு உப்மால நான்  விழுந்துட்டேன்….!!! மை பேபிடால்”  நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்தே….பெற்றோரின் எச்சரிக்கையையும் மீறி தன் காதலை சொல்லி விட்டான். ஹூமேஷி!”

சென்னை நகருக்கு சற்று ஒதுக்குப்புறமாக இருந்தது அந்தச் சிறிய பங்களா போன்ற அமைப்பை கொண்ட வீடு. ஹூமேஷிக்காக ஜெனிடிக்கா நிறுவனத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வேலைக்குச் சேர்ந்த மறுநாள்…தன் வீட்டிற்குள் நுழையும் பொழுதே உணர்ந்து விட்டான். தனக்காக யார் உள்ளே காத்திருக்கிறார்கள் என்று..

“மாம் ” என்று அழைத்தவாறே உள்ளே நுழைய, 

அவனின் தாயின் பார்வையோ அவனை தள்ளி நிறித்தியது.

“ஹூமேஷி…நீ வந்த வேலையை விட்டுட்டு என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?…”என்று நேரடியாக விஷயத்துக்கு வர

“மாம்….நான்….அது வந்து…”முதல் முறையாக  தடுமாற்றம் அவனது கண்களில்..

“ஓஜோ பேபி…. நீ இங்கே வர்றேன் என்று சொல்லும் போதே… நான் உனக்கு எச்சரிக்கை செய்து தான் அனுப்பினேன்.அதையும்மீறி உன்னோட கட்டுப்பாடை இழக்கிறது‌….. எனக்கு நல்ல விதமா படல…. உன் அப்பா செய்த தவறை நீயும் செய்யாதே ஓஜோ பேபி…. ” சிறிது தவிப்புடன் கூற, ஹூமேஷி ஏதும் சொல்லாமல் சோஃபாவில் சோர்ந்து அமர்ந்தான்.

“க்கும்…” என்று தொண்டையை செருமும் குரல் கேட்க, தனது தந்தையின் குரலை கண்டு கொண்டவனின் முகத்தில் அப்படியொரு பிரகாசம்.

“ஹூமேஷி நான் செய்ததிலேயே ரொம்ப சரியான விஷயம் என்னோட ராணிய நான் காதலித்து கரம்பிடித்தது தான்” என்று அவர் கூற….

“அதில் இருக்கும் ஆபத்து தெரிந்தே… நீங்களும் அவனுக்கு ஊக்கம் குடுக்கீறீங்களே…” என்று அவள் குறைபட…

“சஷி……அப்போ என் காதல் பொய்னு நீ சொல்ல வர்றியா?…” என்று சற்று குரலை உயர்த்த…. அதன் பிறகும் பேச சஷி என்ன முட்டாளா?.. ஆனாலும் மகனிடம் தனது எதிர்ப்பைத் தெரிவித்ததில் சற்று நிம்மதி அவளுக்கு.

“ஹூமேஷ் நீ இங்கே வந்த வேலையை முடிக்க உனக்கு அரை நாள் கூட அதிகம் என்கிறது எனக்கு நல்லாவே தெரியும். இருந்தும் நீ தாமதப்படுத்தும் போதே நான் புரிஞ்சுகிட்டேன். காதலுக்கு இடம் பொருள் ஏவல் கிடையாது. ‌இப்படித்தான் வரும் என்று சொல்லவும் முடியாது.

ஆனால் உன் விஷயத்துல சைரா முழு உண்மையும் தெரிஞ்சு உன்னை ஏத்துக்கனும். அது உனக்கு பெரிய சவால். உன் அம்மா எனக்காக செய்ததை அவளால் எளிதில் செய்யவும் முடியாது ஏற்றுக் கொள்ளவும் முடியாது. அதையும் மீறி நீ உன்னுடைய குறிக்கோளை அடையவே முதலில் இங்கு வந்தாய் என்று தெரிந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்து பார்க்க கூட விபரிதமாகவே படுகிறது” என்று சொல்லிவிட்டு அவர் திரும்பிவிட…. ஏதோ சொல்ல வந்த சஷியும் சோபாவில் அமர்ந்திருந்த மகனின் சிந்தனையை கலைக்க விரும்பாது அமைதியாகவே திரும்பி விட்டார்.

என்ன நடந்தாலும் சைராவை விட முடியாது  என ஹூமேஷியின் உள்ளம் அடித்துக் கூறியது. அதே சமயம் தனது குறிக்கோளையும் கைவிட முடியாது என்பதையும் அறிவு எடுத்துரைத்தது.  ஆனால் ஹூமேஷியின் மனமோ அறிவை வென்றது. மற்றும் அவன் அவசரமாக செயல்பட வேண்டியும் வந்தது அபரஜித்தின் வரவால்.

அவரது வரவை அறிந்த பின்னும் தன்னால் பொறுமையாக காத்திருக்க முடியாது என்பது மட்டும் நன்றாகவே தெரிந்தது.

அன்று இரவே அவன் முடிவெடுத்து விட்டான் சைராவை தன்னவளாக்கியே தீருவது அதற்காக எதையும் எதிர்த்து போராடுவதென்று.

“சரா டார்லிங் நீ எனக்குதான். எனக்குமட்டும்தான்”.

அதன் வெளிப்பாடே தான் பணிபுரியும் இடமென்றும் பாராமல் சைராவிடம் தன் காதலை வெளிப்படுத்த துணிந்து விட்டான் ஹுமேஷி.

“என்ன சரா டார்லிங் இன்னுமா உனக்கு புரியல?” என்று அவளருகே வர…

“ஹூமேஷ் நீங்க அவசரப்படுறிங்கனு நினைக்கிறேன்” சிறிது கலக்கத்துடனேயே கூற,

இல்லை சரா… உன்னை பார்த்த நாள் முதலாய் உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீ நினைக்கலாம் இது வெறும் இனக்கவர்ச்சியாக இருக்குமோன்னு… ஆனால் உன்னை பிரிஞ்சு ஒவ்வொருநாளும் இங்கே இருந்து வெளிய போகும் போது…. மறுநாள் உன்னை பார்க்கும் வரைக்கும் உன் நினைவுகள் மட்டுமே என்னை ஆக்ரமிக்குது. இந்த காதல் உணர்வு என்னை மிகவும் உயிர்ப்போட வைக்குது.

“என் வாழ்நாள் முழுவதும் என்கூட நீ வரனும்….

என் காதலியாக என் மனைவியாக…

சட்டென்று அவள் முன் மண்டியிட்டு “ஐ லவ் யூ சராபேபி… வில் யூ மேரி மீ?” என்று கேட்க….

சராவுக்கு உலகம் தனது சுழற்சியை சட்டென்று நிறுத்தியது போல் இருந்தது.

“நோ ஹூமேஷ். என்னால உங்க காதலை ஏத்துக்க முடியாது” அவன் எதை கேட்கூடாது என்று நினைத்தானோ… அதை அவள் வாயாலேயே கேட்க நேர்ந்தது.

“ஏன் சரா என்னை உனக்கு பிடிக்கலையா?” பிடிச்சுருக்குன்னு சொல்லிவிடேன் என்ற தொனியில் கேட்க…..

“எனக்கு உங்களை பிடிக்கும் ஹூமேஷ். ஆனால் அதுக்கு பெயர் காதல் இல்லை. நான் வியந்து பார்க்ககூடிய ஒரு திறமையான விஞ்ஞானியா எனக்கு பிடிக்கும்” என்று சைரா கூற

“…..” ஹூமேஷி அமைதியாக அவளை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்க…. அவன் பார்வை அவளை என்னமோ செய்தது.

“அதுமட்டுமில்ல என்னோட ட்ரீம் ப்ரொஜக்ட் முடியற வரைக்கும் நான் எந்த கமிட்மென்ட்டும் வச்சுக்க போறதில்ல” கண்களில் சிறிய எதிர்பார்ப்புடன் அவனது முகத்தை பார்க்க….

“எனக்கு தெரியும் சரா. உன்னுடைய முழு முயற்சியும் எதுக்காக நீ குடுத்துட்டுருக்கனு” அசராமல் கூறினான் ஹூமேஷி.

“நம்ம யார்கிட்டேயும் சொல்லையே ? இவருக்கு எப்படி தெரியும்னு சொல்றாரு? இந்த சௌமி லூசு ஏதும் உளறிட்டாளோ? அவகிட்ட கூட நான் முழுசா ஏதும் சொல்லையே?” சைரா தனது சிந்தனையில் இருக்க…. இடையிட்டது ஹூமேஷியின் குரல்….

தாய்ப்பாலுக்கு நிகரான சத்தை குடுக்கவல்ல…. முக்கியமாக ஆறு மாதத்திற்கு உட்பட்ட  குழந்தைகள் உட்கொள்ளக்கூடிய…. தாவரவகையை நீ கண்டுபிடித்திருக்கிறாய்.  ஆனால் அதை முழுவதும் திரவ வடிவாக மாற்றக்கூடிய செயலாக்க பிரிவு அமெரிக்க தலைமையகத்தில் தான் உள்ளது. அங்குதான் நீ எளிதாக காப்புரிமை பெறவும் முடியும். ஏழை தாய்மார்களுக்கும் இங்கு எளிதாக கிடைக்க வழி செய்ய முடியும். கிட்டதட்ட தொன்னூற்று ஒன்பது சதவிகித வேலை முடிந்து விட்ட நிலையில் இதற்குரிய திரவ மாதிரியை அங்கு மட்டுமே உருவாக்க முடியும். உன் பெற்றோரின் சம்மதத்திற்காக நீ உன் பயணத்தை தள்ளி போட்டுக் கொண்டிருக்கிறாய்.

“சரியா பேபி?” என ஹூமேஷி கேட்க…..

அதிர்ச்சியில் வாய் பிளந்தவாறே கேட்டுக் கொண்டிருந்தாள் சரா. வெகுநேரம் அவள் அப்படியை நிற்கவும்….

“சரா…சரா மை பேபி டால்..வேக்அப்” என்று அவளைப் பிடித்து உலுக்க…. அப்பொழுதுதான் அதை உணர்ந்தாள் சைரா. “இந்த வாசனை” என அவள் உதடுகள் முனுமுனுக்க….

“எஸ் பேபி. அன்னைக்கு நைட் உன் ரூமுக்கு வந்ததும் நான்தான்” ஹூமேஷி அவசரப்பட்டு உளற… பிடித்திருந்த ஹூமேஷின் கையை உதறிவிட்டவள்… அவனை விட்டு விலகி நிற்க… என்ன இப்படி செய்கிறாள் என ஹூமேஷி சைராவையே பார்த்துக் கொண்டிருக்க…

நிசப்தமான அந்த அறையில் அடுத்த நொடி “பளார்” என்று கன்னத்தில் அறையும் சத்தமே கேட்டது.

ஆம் ஹுமேஷியின் கன்னத்தில் அறைந்திருந்தாள் சரா.

 

 அத்தியாயம்-8 :                                                                                                               

சைரா அதிர்ச்சியாவாள் என்பது தெரிந்தாலும் …. தன் மீது கை ஓங்கி விடுவாள் என்பதை ஹூமேஷி சற்றும் எதிர்பார்க்கவில்லை. இப்பொழுது அதிர்ச்சியில் உறைந்து நிற்பது ஹூமேஷியின் முறையாயிற்று.

“நிறுத்துங்க மிஸ்டர்.ஹூமேஷி… நீங்க பாட்டுக்கு பேசிக்கிட்டே போறிங்களே? ஒரு பெண்ணின் அறைக்கு அவளோட அனுமதி இல்லாம வந்துட்டு போறத ஏதோ சாதனைய போல பேசிட்டுருக்கிங்க?

அன்னைக்கு நான் அந்த வித்தியாசமான வாசனை திரவியத்தோட வாசனைய உணரத்தான் செய்தேன். இருந்தாலும் சௌமியாவோட கால் வந்ததால என்னோட கவனம் திரும்பிருச்சு…” சைரா கொந்தளித்து பேச…

“சரா நீ என்னை தப்பா புரிஞ்சுக்காத. ப்ளீஸ் நான் சொல்றதை கொஞ்சம் கேளு” ஹூமேஷி கெஞ்ச…. அவள் அமைதியாகவே இருந்தாள்..

அவள் அமைதியை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட ஹூமேஷி பேச ஆரம்பித்தான்… “அன்றைக்கு நான் என் அம்மா அப்பாவ பத்தி சொல்லிகிட்டு இருக்கும்போது நீ எதையோ என்கிட்ட எதிர்பார்த்து ஏமாந்த மாதிரி இருந்தது.

வீட்டில் இருக்கும் போதும் உன் நினைப்பாவே இருந்தது. நானும் ஒரு வேகத்துல கிளம்பி வந்துட்டேன். அப்புறமா தான் தெரிஞ்சது… மணி பத்திற்கு மேல் ஆகிவிட்டது. இருந்தாலும் உன்னை பாக்காம  இருக்க முடியாமல்…. உன் பால்கனியில் உள்ள குதிச்சுட்டேன்.

அப்பதான் நீயும் சாப்பிட்டு முடிச்சிட்டு உன்னுடைய ரூம்குள்ள வந்த சரி உன்னை பார்த்ததும் ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு…. அலமாரி பின்னால் இருந்து வெளிய வரலாம் அப்படின்னு நினைக்கும்போதுதான்….. சௌமியாவோட போன் கால் வந்தது….  நீயும் சந்தோஷமா சிரிச்சு பேச ஆரம்பிச்சிட்டே…  அப்பதான் உன் டைரி கையில் கிடைத்தது.

உன் டைரியிலிருந்து தான் உன்னோட ஆசையையும், இலட்சியத்தையும் தெரிஞ்சுக்கிட்டேன். அடுத்து நீ தூங்க தயாராகும் போது உனக்கு தெரியாம வந்த வழியே திரும்பிப் போயிட்டேன்…”

இவ்வளவுதான் நடந்தது சரா….  வேறு எந்த தப்பான எண்ணத்திலும் நான் வரல… உன்னை பார்க்கணும் என்ற எண்ணம் மட்டுமே பிரதானமாக இருந்தது.

ஹூமேஷி தன்னிலை விளக்கம் அளிக்க…. சராவால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“எவ்வளவுதான் நீங்க என் மேல அக்கறை வைத்திருந்தாலும்….என்னை காதலித்து இருந்தாலும்…. நீங்க பண்ணது தப்பு மிஸ்டர் ஹூமேஷி. என்னோட அனுமதி இல்லாம… என்னோட ரூமுக்கு வந்ததும்… என் டைரியை எடுத்து படித்ததும் ரொம்ப தப்பு. இதை நான் உங்ககிட்ட எதிர்பார்க்கல.நான் உங்க மேல ரொம்ப மதிப்பு வைத்திருந்தேன்… இன்னைக்கு அது பொய் ஆயிடுச்சு”…..

“என்னோட டைரி உங்ககிட்டதான் இருக்கா?” என்று சைரா கேட்க..

“ஆமா” தவறு செய்த சிறு குழந்தையின் பாவனையை சுமந்திருந்தது ஹூமேஷியின் முகம். எதையும் நினைத்த மாத்திரத்தில் செய்து பழக்கப்பட்டவனுக்கு பொறுமையாக செய்ய வேண்டிய விஷயத்தில் அவசரப்பட்டதன் விளைவு நன்றாகவே தெரிந்தது.

“நாளைக்குள்ள என்கிட்ட சேர்த்துடுங்க சார். உடனே கொடுக்கனும்னு மறுபடியும் வீட்டுக்குள்ள குதிக்க வேண்டாம். நாளைக்கு நான் இங்க வந்தே வாங்கிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டாள் சரா.

 சென்ற பிறகு தான் சௌமியாவின் ஞாபகம் வந்தது. “இந்த சௌமியா லூசு எங்க போய் தொலைஞ்சா தெரியலையே?”. அப்புறம் தான் ஞாபகம் வந்தது இன்றைக்கு சௌமியாவுக்கு திசு கல்ச்சர் டிபார்ட்மென்டில் டியூட்டி என்று. அவளுக்குத் தான் உதவி செய்வதாக சொன்னதும் சேர்ந்தே ஞாபகம் வந்தது. திசு கல்ச்சர்  பிரிவை நோக்கி விரைந்து சென்றாள் சரா.

அங்கே கண்ட காட்சியில் சைராவின் எரிச்சல் அதிகமானதுதான் மிச்சம். ஏனெனில் விக்ரமுடன் சேர்ந்து பேசி சிரித்துக்கொண்டே கல்ச்சர் ரேட்டிங்கை குறித்துக்கொண்டிருந்தாள் சௌமி. இவள் வந்தது கூட தெரியாமல் இருவரும் பேசிக்கொண்டிருக்க,

“சௌமியா” என்று குரல் கொடுத்தாள் சைரா.

“என்ன மேடம் கோபமெல்லாம் போயாச்சா?” “ஹாய் சைரந்திரி” என்று விக்ரமும் சௌமியும் ஒரே நேரத்தில் பேச, அதைப்பார்த்து அவர்கள் சிரித்துக் கொண்டனர்.

“ஹாய் விக்ரம் சார். இன்னைக்கு நீங்க ஏர்போர்ட் போய் கண்டெய்னர்ல வந்த ஆராய்ச்சி உபகரணங்களை வாங்கிட்டு வரதாத்தானே செட்டியூல்ல போட்டுருந்தது.” விக்ரமிடம் நேரடியாக விஷயத்துக்கு வர

“ஆமா சைரா.. அது மிட்நைட்ல கலெக்ட் பண்ண வேண்டியிருந்தது.. கலெக்ட் பண்ணி இங்க காலைலயே பார்த்திபன்சார்கிட்ட ஒப்படைச்சிட்டேன்” விக்ரம் பதில் கூற

“என்னடி நம்மளவிட ஒரு ஸ்டெப் கூட இருக்குற நம்ம விக்ரம் சாரயே நிக்க வச்சு கேள்வி கேக்கற?? அதுவும் ஜூனியர் சைன்டிஸ்ட பார்த்து… வாட் ஈஸ்…தீஸ் “என்று வடிவேலு கிண்டல் தொனியில் சௌமி கேட்க…

“சௌமி ஏன் இப்படி கேக்றிங்க? சைரா சாதாரணமா தானே கேட்டாங்க.. இதுக்கும் கிண்டல் பண்றிங்களே” என சிரித்துக் கொண்டே  கூற,

சைரா விக்ரமை பார்த்து ஒரு நன்றி பார்வை செலுத்திவிட்டு…. சௌமியின் புறம் திரும்பி “எல்லா ரேட்டிங்கயும் என்டர் பண்ணிட்டியா ?” என கேட்க….

“நாங்களும் கைவசம் சைன்டிஸ்ட் வச்சுருக்கோம்ல…விக்ரம் சார் சொன்ன ஒரு சின்ன ஐடியா வச்சுகிட்டே …. முழு டேட்டாவும் என்டர் பண்ணிட்டேன் சைரு” என்று சின்னப்பிள்ளை போல் குதூகலிக்க….

“சரி அப்போ நான் கிளம்புறேன்” என்று விக்ரமிடம் சொல்லிக்கொண்டு விடைபெற….

“சைரா.. சைரா நில்லுடி” சௌமி அழைத்தும் காதில் விழாதது போல முன்னே நடந்து செல்ல ஆரம்பிக்க….

“விக்ரம் சார். நான் என்டர் பண்ண டேட்டாவ கொஞ்சம் சேவ் பண்ணி மட்டும் வைச்சுருங்க ப்ளீஸ். நான் என்னாச்சுன்னு மட்டும் அவகிட்ட கேட்டுட்டு‌ வந்துடறேன்” விக்ரம் தலையசைக்க சைராவின் பின்னால் ஓடினாள் சௌமியா.

அதற்குள் பாதிதூரம் சென்று விட்டாள் சைரா. “சைரா நில்லுனு சொல்றேன்ல” ஆராய்ச்சிக் கூடத்தை கடந்து வெளியே செல்லும் வரைக்கும் அவளால் சத்தமாக கூப்பிட முடியாது.

சௌமி ஹூமேஷி-சைரா வேலை பார்த்துக்கொண்டிருந்த பிரிவை கடந்து செல்லும்போது, “மிஸ்.சௌமியா” ஹூமேஷி அழைக்கும் சத்தம் கேட்டது.

“சார்” என்று செளமி உள்ளே நுழைய , சௌமிவியாவின் கைகளில் சைராவின் டைரியை குடுத்து….

“இத சராகிட்ட குடுத்துடுங்க. நான் இனி அவங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்னு சொல்லிடுங்க” என்று கூறி விட்டு தனது கணினியின் முன்னால் சென்று அமர்ந்து விட்டான்.

என்ன நடந்நதிருக்கும் என்று சௌமியாவால் ஊகிக்க முடியாமல் அவள் அப்படியே நின்று கொண்டிருக்க ….. ஹூமேஷி அவள்புறம் திரும்பி “இப்போ நீங்க போகலாம் சௌமியா உங்க தோழி காத்துகிட்டு இருப்பாங்க” என்று சொல்லவும்….  “ஓகே சார்” என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள் சௌமியா.

“இவ டைரி எப்படி அவர்கிட்ட வந்தது?” என்று யோசித்துக் கொண்டே கேன்டினை நோக்கி நடந்தாள் சௌமி. ஆனால் சைரா அங்கு இல்லை.

“எங்கே போயிருப்பா?… எஸ்.. கண்டிப்பா மேடம் ஃபார்மிங் ஏரியாலதான் இருப்பா”

அங்கு சென்று பார்த்தால் தவறாமல் அங்குதான் இருந்தாள் சைரா.

“சைரு.. ” சௌமி அவளின் தோளை தொட்டு திருப்ப, அழுது முடித்த கண்களோடு திரும்பினாள் சைரா.

“சைரு அழுகிறியா?” தோழி அழும் அளவிற்கு என்ன நடந்திருக்கும் என புரியாமல் கேள்வி கேட்க,சைரா முதலில் என்ன சொல்வது என்றே புரியாமல் முழித்தாள். சஷியக்காவை இனி பார்க்க முடியாது என்று சிறுவயதில் அழுத காட்சியை சௌமியாவால் மறக்க முடியாது. அதற்குப்பிறகு இன்று தான் தோழியின் முகம்… அழுகையால் வீங்கி சிவந்திருப்பதை பார்க்கிறாள்.

“என்ன நடந்தது சொல்லு சைரா??  ஆமா உன் டைரி எப்படி ஹூமேஷி சார்கிட்ட வந்தது??” என்று டைரியை காண்பித்து கேட்க,

“அப்போ டைரியை வச்சுகிட்டேதான் என்கிட்ட பேசிட்டுருந்தாரா?” சைரா சொல்ல

“என்ன பேசினாரு சைரு? அதுவும் நீ அழும் அளவிற்கு” சௌமியா கேட்டுக் கொண்டே இருக்க, நடந்தது அனைத்தையும் ஹூமேஷியைப் பார்த்த அன்று தோன்றிய சந்தேகத்திலிருந்து இன்று நடந்தது வரை அனைத்தையும் கூற சௌமியாவுக்கு ஹூமேஷி இப்படி எல்லாம் நடந்து கொள்வாரா என்று ஆச்சர்யமாக இருந்தது.

வந்த மூன்று நாட்களிலேயே சைராவின் மீது பதியும் ஹூமேஷியின் ஆர்வம் கலந்த காதல் பார்வையை சௌமியா கவனித்து தான் இருந்தாள். நம் சைராவிற்கென்றே பிறந்தவர் போல இருக்கிறாரே என்று சந்தோஷப்பட்டாள் என்றே சொல்லலாம்.

விக்ரமிடம் பேசி அறிந்ததிலிருந்து அவர்கள் குடும்பத்தை பற்றியும் பொதுவான விஷயங்களே தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் இப்படி அவளது அறைக்கே சென்று அவளைப் பார்க்க துடிக்கும் விடலைப் பையன் போல நடந்து கொண்டிருப்பார் என்பது ஒரு புறம்  வியப்பையும் மறுபுறம் சிரிப்பையும் அளித்தது.

எப்பொழுதும் பிரச்சனையை தள்ளி நின்று பார்வையாளராக கவனிக்கும் போது தான் அது கவனம் செலுத்தி தீர்க்க கூடியதா அல்லது தீர்வும் அந்த பிரச்சனையிலேயே இருக்கிறதா என்று நன்றாக தெரியும்.

சௌமிக்கும் பிரச்சனை என்ன என்பது நன்றாகவே புரிந்தது. ஹூமேஷி சார் தான் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டார் என்றே நினைத்தாள்.

“அதும் போயும் போயும் சுத்தி லேப் நாற்றத்தோட நாலு டப்பா சிஸ்டத்தையும் வைச்சுகிட்டு…. ஆல்ரெடி நான் கடுப்பேத்துன எஃபெக்ட் குறையாம சிஸ்டத்தை உடைச்சுகிட்டுருந்தவகிட்டபோய் காதல் சொல்லிருக்காரே… நம்ம ஜெர்மன் தக்காளி.. ஹி..ஹி..பங்காளி.

 சரி காதல்னு வந்துட்டா எப்படிப்பட்ட அறிவாளியும் முட்டாள் ஆயிடுவாங்க போல. இல்லைன்னா இன்னைக்கு ஒழுங்கா மேக்கப் கூட போடாம வந்துருக்கு.  இந்த மூஞ்சிய பாத்து எப்படி லப் யூ சொன்னாரு?” என்று தீவிரமாக சிந்திக்க….

தோழியிடம் மனதில் இருந்ததை சொல்லி விட்டதாலோ என்னமோ சற்று இலகுவான சைரா செளமியிடம் ” விடு சௌமி.. கவலைப்படாதே நான் இப்ப கொஞ்சம் சரி ஆகிட்டேன்” என்று கூற, தனது யோசனையில் உழன்று கொண்டிருந்த சௌமியாவோ சைரா கூறியதை கவனிக்காமலேயே….

“டீ சைரா…  ஒரு வேளை ஜெர்மன்ல அழகு அழகான பொண்ணுங்களா பாத்து சலிச்சு போய் சுமார் மூஞ்சு குமரியான உன்னை நம்ம சாருக்கு பிடிச்சுருச்சோ?” என்று மிகவும் சீரியசாக கேட்ட பிறகுதான் புத்திக்கு உரைத்தது.‌…

சைராவின் மனநிலை இப்படி இருக்கும் போது இப்படி கேட்டுட்டோமே….. நாக்கை கடித்தவாறே அரைக்கண்ணால் சைராவை பார்க்க….. அவள் எதிர்பார்த்த மாதிரியே கையில் பெரிய கல்லுடன் நின்றிருந்தாள் சௌமியா.

“அச்சோ சௌமியா இன்னைக்குத்தான் உனக்கு கடைசி நாள் போலயே” என்று அவளது மனசாட்சி தவறான நேரத்தில் குரல் கொடுக்க, “ஹ்ம்ம்.. எப்படிபட்ட சூழ்நிலையும் சமாளிப்பா இந்த சௌமி.. நீ கொஞ்சம் அந்தப்பக்கம் நகரறியா? என்று மனசாட்சியை விரட்டிவிட்டு….

“சைரு செல்லம்… கல்லை வச்சு விளையாடற வயசாடா நமக்கு? எங்க சமத்தா தூக்கி அந்த பக்கம் போடு பார்க்கலாம்.. நானும் சீரியசா பேச எவ்வளவோ ட்ரை பண்றேன்.. ஆனா வரலயே… அதனால் கீழ போட்டுடு செல்லம்… ” என்று கெஞ்ச… மனமிரங்கிய சைராவும் கல்லை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டாள். இப்பொழுது சற்று சீரியசாகவே பேச ஆரம்பித்தாள் சௌமியா.

சைரா ஹூமேஷி சார் உன்னை ரொம்பவே சீரியசா காதலிக்கறாருன்னு நினைக்கிறேன். அதோட வெளிப்பாடுதான் இது. அவர் வாழ்ந்து பழகிய சூழலே வேற.

அதனால்தான் சட்டுன்னு உன்கிட்ட தன்னோட உணர்வுகளை வெளிப்படுத்திட்டாரு. அதுக்காக நான் அவர் செஞ்சது சரின்னு சொல்லமாட்டேன்.

ஆனால் காதல்னு வந்துட்டா செய்ற தப்பு கூட காதலர்களுக்கு சரியாத்தான் தெரியும். நீ உன்னோட குறிக்கோளுக்கும் ஹூமேஷி சார் மேல ஏற்படற பிடித்தத்துக்கும் நடுவுல போராடுறன்னு நல்லாவே தெரியுது.

அதுக்காகதான் எதுக்குமே உன்னைப் பெற்றவர்களோட மனச கஷ்டப்படுத்தாத நீ உன் கல்யாண விஷயத்தை தள்ளி போட்டு அவங்களயும் கஷ்டப்படுத்தி உன்னையும் கஷ்டப்படுத்திக்கிறன்னும் எனக்கு தெரியும். எப்படியும் ஒருநாள் உனக்கு கல்யாணம் செய்து வைக்கத்தான் போறாங்க.

 அப்படி கல்யாணம் பண்ணும்போது முகம் தெரியாத ஒருத்தரை பண்றதுக்கு உன்னைப்பிடிச்சுருக்கு உன் குறிக்கோளுக்கு துணை நிற்பேன்னு சொல்ற உனக்கும் பிடிச்ச, பிடிக்கலன்னு சொல்லாத நான் நம்ப மாட்டேன், ஹூமேஷி சார நீ ஏன் தேர்ந்தெடுக்கக்கூடாது.

எனக்கும் அவரைப்பத்தி அதிகமா தெரியாது. ஆனாலும் நீ அவரை கட்டிக்கிட்டா நல்லா இருப்பேன்னு மனசுக்கு தோணுதுடி சைரு.

நல்லா யோசிச்சு முடிவு பண்ணு. பிடிக்கலன்னாலும் கவலையே இல்லை…. மனச சரி செஞ்சுக்கிட்டு நடந்த விஷயங்களை மறந்து வெளிய வந்துரு. சௌமியாவின் பேச்சு மனதுக்கு சற்று இதமளிக்கும் விதமாக இருக்க சைராவின் முகம் சற்றே தெரிந்தது.

“சரி சௌமி.. நான் இந்த விஷயத்துல கொஞ்சம் நிதானமா யோசிச்சு முடிவு எடுக்கனும்னு ஆசைப்படறேன்” என்று கூற, தோழியின் முகத்தில் கவலையின் சாயல் இல்லாததை கண்ட சௌமிக்கும் மகிழ்ச்சியே.

” நீ என்ன வேணும்னாலும் முடிவு பண்ணு தாயே… பேசி பேசி எனக்கு பசிக்குது…  வா நம்ம போய் கருப்புகாட போய் ஒரு வெட்டு வெட்டு வோம்….. ” என்றாள் சௌமி.

“கருப்புகாடா அப்படி ஒரு டிஷ்ஷா?” சைரா முழிக்க

“ஹி..ஹி.. உனக்கு பிடிச்ச ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்கதான்டி அப்படி சொன்னேன்” என்று அசராமல் கூறிவிட்டு ஓட….

“உன்னை இன்னைக்கு கொல்லாம விடமாட்டேன்” என்று திட்டிக்கொண்டே துரத்தினாள் சைரா.

சற்று தூரத்திற்கு பின் ஓட முடியவில்லை சௌமியாவால். மூச்சிரைத்துக் கொண்டே ” நீ என்கிட்ட காலைல பேசாம போகவும் அந்த சிடுமூஞ்சி நிரல்யாவ…கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சி அவளுக்கு ஒரு வைட்ஃபாரெஸ்ட் லஞ்சம் வேற குடுத்து வாங்கி வர வைச்சேன் தெரியுமா?” என்று பரிதாபமாக கூற ….. தோழியின் சுவையான பேச்சு மனதிற்குள் மகிழ்ச்சியை உண்டாக்க அடிப்பதுபோல வந்து…. கட்டிப்பிடித்து சௌமியின் கன்னத்தில் முத்தமிட்டாள் சைரா.

“இந்த வாய்தான்டி உன்னை காப்பாத்துது. இன்னைக்கு ஏற்பட்ட பிரச்சனை எல்லாத்துக்கும்…. பிள்ளையார் சுழி போட்டவளே நீதான். ஆனால் நீயே சமாதானப்படுத்தி உன்னை கட்டிப்பிடிக்கவும் வச்சுட்ட பாரு. சரியான கேடிடி நீ. சரி வா சாப்பிட போகலாம்” என்று பேசிக்கொண்டே சாப்பிட சென்றனர்.

மதிய உணவை முடித்து விட்டு வந்த ஹூமேஷியின் கண்களில் பட்டது தோழிகள் இருவரும் கேக் ஊட்டிக்கொண்டு சாப்பிடும் காட்சியே. “அடிப்பாவி என்கிட்ட பேசிட்டு போன பேச்சுக்கு முகத்தை தூக்கி வச்சுட்டு உட்கார்ந்துருப்பான்னு பார்த்தா கேக் சாப்பிட்டுட்டு இருக்காளே”

“தப்பு பண்ணிட்டியே ஹூமேஷி… காதல் சொல்றதுக்கு முன்னாடி அவளுக்கு பிடிச்ச கேக்கோட சொல்லியிருக்கலாமே… அவளும் ஓகே சொல்லியிருப்பா”

“இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்?” மகிழ்ச்சியுடன் சாப்பிடும் காதலியின் முகத்தை பார்த்து சந்தோஷப்பட்டவாறே அந்த இடத்தை விட்டு நகரப்போனான் ஹூமேஷி.

அப்பொழுது தான் அந்த விஷயத்தை சொன்னாள் சைரா…. சௌமியிடம் “ஹேய்.. சௌமி… இன்னிக்கு அபிமாமா வீட்டுக்கு வர்றாரு.சொல்ல மறந்துட்டேன்…”என்று கூற…

“ஹை அபி அன்கிளா.. அப்போ கண்டிப்பா நானும் உன்கூட வீட்டுக்கு வரேன்” துள்ளிக்கொண்டு எழுந்தாள் சௌமியா.

“சரி..சரி..போறப்ப கூட்டிட்டு போறேன்.. இப்பவே குதிக்காத… ஃபோன் குடு லட்சுமிம்மாகிட்ட (சௌமியின் அம்மா)  நான் இப்பவே சொல்லிடறேன்….நீ என்கூட வீட்டுக்கு வர்றேன்னு” ஃபோனை எடுத்துக்கொண்ட சைரா வெளியே வர…

கேட்ட செய்தி உவப்பாக இல்லை என்றாலும் சைராவின் கண்களில் படாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் ஹூமேஷி.

அத்தியாயம்-9:                                         

வீட்டிற்குள் நுழையும்போதே மாமா… என்று கத்திக்கொண்டே நுழைந்தாள் சைரா. அபரஜித்தும் ஹாலில் உள்ள சோபாவில் தான் அமர்ந்திருந்தார்.சைராவை பார்த்ததும் அவருக்கு அத்தனை மகிழ்ச்சி.மகேஸ்வரனும் பார்வதியும் கூட அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தாலும்  முதலில் சைராவை கவனித்தது அவளது மாமா தான்.

“அடடே வாடா குட்டிமா உன்னை பார்த்து எவ்வளவு நாளாச்சு”.சைரா துள்ளிக் குதித்துக் கொண்டு முன்னே ஓட அவளை பின் தொடர்ந்தாள்சௌமியா.

” மாமா ஐ மிஸ் யூ… ஐ மிஸ் யூ லாட்.போன பர்த்டேக்கு ஏன் இங்க வரலை? ….நான் உங்கள ரொம்ப மிஸ் பண்ணேன். இனிமேல் நீங்க இந்த யாத்திரை எல்லாம் போக வேண்டாம் எங்க கூடவே இருந்துருங்க” என்றாள் சைரா.

அதான் இந்த தடவை வந்துட்டேன்டா குட்டிமா. இந்த தடவை உன்னோட பர்த்டே நல்லபடியா கொண்டாடிட்டு தான் கிளம்புவேன்.

” அப்போ மறுபடியும் போறீங்களா?” இல்ல நீங்க எங்கயும் போகக்கூடாது. எங்க கூடவே இருங்க மாமா என வாதிட….

அவளை இடித்துக் கொண்டு முன்னே வந்த சௌமியா “ஹேய் கொஞ்சம் தள்ளி நில்லுடி .வந்ததுல இருந்து நீ தான் பேசிகிட்டு இருக்க. கொஞ்சம் அபி அங்கிள நானும் பார்க்கிறேன்.

மகி டார்லிங் பாரு மாமி நீங்க கூட என்ன வரவேற்கல.. நான் கோபமா கிளம்புறேன் என்று செளமியா தனது பாணியில் தன் வரவை உணர்த்த”…பார்வதி தான் முதலில் வந்தார்…

“ஹேய் வாலு வீட்டுக்கு வர உனக்கு இப்பதான் நல்ல நேரம் கிடைச்சதா? இப்ப எல்லாம் அதிகமா இங்க வரதே இல்ல? மேடம் அவ்ளோ பிஸியா ஆயிட்டீங்களா? உன்ன தனியா வரவேற்க வேண்டுமா? எங்களுக்கு சைரா எப்படியோ நீயும் அப்படித்தான் சௌமிகுட்டி”என்று பார்வதி பேச….

“வாம்மா சௌமி.. உன்ன பாத்து ரொம்ப நாளாச்சு .நல்லா இருக்கியா?வீட்ல அம்மா அப்பா எல்லாரும் சௌக்கியமா இருக்காங்களா? “என்று அபரஜித் தன் பங்குக்கு நலம் விசாரிக்க…

அப்பொழுது முன்னே வந்த மகேஸ்வரன் “நான் உன் கூட பேச மாட்டேன் டாலி பேபி… மகி டார்லிங்னு கொஞ்சறதெல்லாம் வெறும் பேச்சுதான்” என்று பார்வதியை பார்த்து கண்ணடித்து கொண்டே பேச….

” போதும் போதும் எல்லாரும் நல்லா இருக்காங்க…. ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் அபி அங்கிள். அப்பறம் மகி டாலிங் பேசறது எங்கிட்ட…. கண்டிக்கிறது பாருமாமியவா?” என்று கூறிக்கொண்டே அவள் சென்று நேராக அமர்ந்த இடமோ டைனிங் டேபிளில்.

அனைவரும் அவளைப் பார்த்து சிரிக்க ஆரம்பிக்க அதையெல்லாம் கண்டு கொள்ள அவள் சௌமியாவே இல்லையே.

அவளைப்பார்த்து சிரித்துக் கொண்டே முன்னே வந்த சைரா “அதான வந்ததும் உன் வேலைய பார்க்க உட்காந்திருவியே” என்று கிண்டலடிக்க…

“பாருமாமி இவ என்னை ரொம்ப கிண்டல் பண்றா… அப்பறம் கோபப்பட்டு முழு கோழி பிரியாணியும் நான் ஒரு ஆளே சாப்பிடுருவேன்” என்று சௌமி தனது காரியத்தை நோக்கிக்கோபப்பட..

“ஆமா நான்தான் உனக்கு மெனுவே சொல்லலியே… அப்புறம் எப்படி கோழி பிரியாணினு இவ்வளவு கரெக்டா சொல்ற?” சைரா கேட்க…

“நான் வீட்டுக்குள்ள நுழையும் போதே வாடை பிடிச்சுட்டேனே… மாமியின் பிரியாணிக்கு இந்த சௌமியின் நாக்கு அடிமை என் தோழியே…” என்று நீளமாக செந்தமிழில் வசனம் பேச…கண்ணில் நீர் வர சிரித்தனர்.

இவ்வளவு பேச்சுக்கு நடுவிலும் செய்து வைத்த பதார்த்தங்கள் அனைத்தையும் மேசையில் அடுக்கி விட்டார் பார்வதி.

“எல்லாரும் கை கழுவிட்டு வாங்க சாப்பிடலாம்” என்று பார்வதி கூற கை கழுவிவிட்டு அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்.

அபரஜித்தின் அருகில் மகேஸ்வரன் அமர்ந்தாலும் அவரிடம் அதிகம் பேசவில்லை. அபரஜித் வந்த போது அவரை வரவேற்றதோடு சரி. பார்வதி தான் அவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

சைருவும் சௌமியும் பிரியாணியை சாப்பிட்டு முடிக்க அடுத்ததாக அவர்களுக்கு சைவ சாப்பாடு பரிமாற பார்வதி சௌமியின் அருகே வந்து, அவளது தட்டில் சாப்பாடை வைக்க போக,

“அச்சோ மாமி வேணாம்”…

“ஏன் சௌமி கொஞ்சம் சைவம் வச்சுக்கம்மா” என்று கூற….

“மாமி நான் சைவம் சாப்பிடறதுல இருந்து சின்ன வயசுலயே ரிடையர்ட் ஆயிட்டேன்” என்று சிரிக்காமல் கூறினாள் சௌமியா.

அதைக்கேட்டு அபரஜித் சிரித்த சிரிப்பில் அவருக்கு புரையேறி இரும ஆரம்பித்துவிட்டார். அருகில் அமர்ந்திருந்த மகேஸ்வரன் அவரது தலையில் தட்டி “அச்சோ அபி…பார்த்து டா.. கொஞ்சம் தண்ணீரை குடி” என்று அவரே புகட்ட ஆரம்பிக்க… கண்கள் நிஜமாகவே கலங்கியது அபரஜித்துக்கு.

“அபிமாமா உங்களுக்கு ஒண்ணும் இல்லையே?” …. “அண்ணா கொஞ்சம் மோர் வேணுனா குடுக்கவா.. தொண்டைக்கு இதமா இருக்கும்” என்று சைராவும் பார்வதியும் கவலைப்பட….

சௌமியாவோ தன்னால்தான் இப்படி ஆனது என்ற சங்கடத்துடன் அமர்ந்திருந்தாள்.

சௌமியாவைப் பார்த்த அபரஜித்  “சௌமிம்மா ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் இன்னைக்கு தான்டா சந்தோஷமா சிரிச்சுகிட்டே சாப்பிட்டேன். ரொம்ப நன்றி குட்டிமா. நீ சங்கடப்பட ஒன்னும் இல்லை” என்று அவளைப் பார்த்து சந்தோஷ சிரிப்புடனே கூறினார்.

“அடடே.. ஹேய் ரெட்டவாலு நீ ஏன் இப்படி சீரியசா முகத்தை வச்சுருக்க?” ஒருவேளை நிஜமாகவே சங்கடப்பட்டு விட்டாளோ… என்று நினைத்து பார்வதி …. அவளது மனநிலையை மாற்றும் வகையில் பேச….நமட்டுச்சிரிப்புடன் அமர்ந்திருந்தாள் சைரா.

அவளது தோழியை பற்றி அவளுக்கு நன்றாக தெரியுமே… சாப்பாடு விஷயத்தை தவிர சௌமியா இவ்வளவு தீவிரமாக யோசிக்க மாட்டாள் என்று….. அதை நிருபித்தாள் சௌமி தனது பதிலில்…

“அது வந்து மாமி… அடுத்த கரண்டி பிரியாணிக்கு கோழி குருமா ஊத்திக்கலாமா இல்ல ராய்தாவும் சேத்துக்கலாமானு யோசிச்சுகிட்டு இருந்தேன். இப்ப குருமான்னே முடிவு பண்ணிட்டேன்”என்று கூற….. சிரித்துக் கொண்டே அவளது தட்டில் பிரியாணியை வைத்து விட்டு நகர்ந்தார் பார்வதி.

இப்படியே பேச்சும் சிரிப்புமாக உணவுப்பொழுது இனிமையாக கழிந்தது. சிறிது நேரம் அமர்ந்து பேசி விட்டு அவர்களிடமிருந்து விடைபெற தயாரானாள் சௌமியா.

அபரஜித் சௌமிக்கென்று வாங்கி வந்திருந்த முற்றிலும் கைவேலைப்பாட்டில் செய்யப்பட்டு முத்து வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட  நகைகள் வைக்கும் பெட்டியை அன்புப்பரிசாக கொடுக்க… ஆவலுடன் அதை பிரித்து பார்த்தனர்  சைராவும் சௌமியும்.

அதைப்பார்த்து விட்டு அதன் அழகில் சைரா “ரொம்ப அழகா இருக்கு மாமா… ” என்று பாராட்ட… சௌமியாவோ…” வட போச்சே…” என்பது போல் உட்கார்ந்திருந்தாள்.

சௌமியாவின் முகத்தை பார்த்த சைராவோ பக்கென்று சிரித்து வைக்க…என்னவென்று தெரியாமலேயே மகேஸ்வரன் பார்வதியும் சேர்ந்து சிரித்து வைத்தனர்.

அபரஜித்தோ”சௌமிம்மா… என்னடா பிடிக்கலையா??” என்று அக்கறையாக கேட்க..

“பிடிச்சுருக்கு அங்கிள்… இருந்தாலும்…..” என்று இழுக்க..

பார்வதியும் சிரிப்பதை நிறுத்தி விட்டு சுவாரஸ்யமாக சௌமியாவை நோக்கி” இருந்தாலும்.. என்ன சௌமி..??” என்று கேட்க…

சைராவோ வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள்… அவளுக்கு தெரியாதா தோழி என்ன நினைத்திருப்பாள் என்று….

“இல்லை பார்சல் பெரிசா இருந்தததா… நீங்களும் டெல்லில இருந்துதான் திரும்பினீங்களா… டெல்லி ஸ்வீட்ஸ் வேற ரொம்ப டேஸ்ட்டா இருக்குமா… நான் ஸ்வீட்டுடப்பா தான் இருக்கும்னு நினைச்சேன்… ” என்று அசடு வழிந்து கொண்டே கூற… அபரஜித் அவள் சொன்ன பதிலைக்கேட்டு அடக்க முடியாமல் சிரிக்க… எல்லோரும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தனர்.

சிரித்துக்கொண்டே தான் பின்னால் ஒளித்து வைத்திருந்த இனிப்புகள் அடங்கிய பெரிய பெட்டியை எடுத்து அவள் கைகளில் கொடுத்தாள் சைரா.

“எருமை இதை முதல்லயே என்கிட்ட குடுத்துருக்கலாமில்ல..??” என்று தோழியை கடிந்து கொண்டே இனிப்பு பெட்டியை வாங்கி ஆவலோடு திறந்து பார்க்க… அவளுக்கு பிடித்த இனிப்பு வகைகளே இருந்தது. அதில் ஒன்றை எடுத்து அவள் அபரஜித்துக்கு ஊட்டிவிட அந்த சின்னப் பெண்ணின் உருவத்தில் தன் மகளை கண்ட அபரஜித் மறுக்காமல் வாங்கிக்கொண்டதை…. 

மகேஸ்வரனும் பார்வதியும் வியப்புடன் பார்க்க.. சைராவோ அந்த அழகான நிகழ்வை தனது அலைபேசியில் புகைப்படம் எடுத்து சேமித்து வைத்துக்கொண்டாள்.

“அங்கிள் இனிமேல் நீங்க ஸ்வீட்பாக்ஸ் வாங்கிட்டு வந்தா அதைத்தான் என்கிட்ட முதல்ல கொடுக்கனும்” என்று  அன்பு கோரிக்கை வேறு வைக்க… அபரஜித்தின் தலை தானாகவே ஆடியது. இப்படியே பேச்சும் சிரிப்புமாக நேரம் செல்ல சௌமியா வீட்டிற்கு கிளம்பும் நேரமும் வந்தது.

கிளம்பும்போது சௌமியா “அங்கிள் நீங்க கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரனும்..” என்று அழைப்பு விடுக்க…

அபரஜித்தும் “கண்டிப்பா வரேன் சௌமிம்மா…” என்று வாக்களிக்க,

சௌமியாவோ தனது வழக்கமான துடுக்குத்தனத்துடன்” போங்க அங்கிள்… போனதடவையும் நீங்க இப்படித்தான் வரேன்னு சொன்னிங்க… ஆனா வரவேயில்லை… கடைசி நிமிஷத்துல ஃபோன் பண்ணி வரமாட்டேன்னு சொல்லிட்டு… டெல்லிக்கு போய் சாமி கும்பிட போய்ட்டிங்க… என்னவோ உள்ளூர்ல இருக்கற சாமிங்கல்லாம் லீவுக்கு போய்ட்டமாதிரி…”என்று அவளது பாணியில் வருத்தப்பட…

“இந்த முறை கண்டிப்பா உங்க வீட்டிற்கு வருவேன் சௌமிம்மா…” என்று மகிழ்ச்சியுடன் கூற…. சௌமியாவும் மகிழ்ச்சியுடனேயே அனைவரிடமும் விடைபெற்றாள்.

பின்பு  அனைவரும் உரையாடிவிட்டு அவரவர் அறைக்கு உறங்க சென்றனர். அபரஜித்தின் அறையில் விளக்கு இன்னும் எரிந்து கொண்டிருப்பதை பார்த்து பார்வதி…

“என்னங்க.. அண்ணா இன்னும் தூங்கல போல.. கொஞ்சம் நேரம் போய் அவர்கிட்ட பேசுங்களேன். சும்மா கோபப்படும் மாதிரி நடிக்காதிங்க. எனக்கு தெரியும்…. உங்களோட ஆதங்கத்தை கோபமா காமிச்சுகிரிங்க… மனசு விட்டு பேசுனா எப்பேர்பட்ட பிரச்சனையும் முடிவுக்கு வந்துடும்” என்று கூற…

“நீ சொல்றதும் சரிதான். அவன் சொல்லலனாலும் பரவாயில்லை… இனிமேல் பேசாமல் இருந்து அவன் மனசு வருத்தப்பட விடமாட்டேன் பார்வதி. நீ படுத்து தூங்கு. நான் கொஞ்சநேரம் அவன்கிட்ட உட்கார்ந்து பேசிட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு அபரஜித்தின் அறையை நோக்கி சென்றார்.

அங்கு வழக்கம்போல் தனது மகளின் புகைப்படத்தை பார்த்துக்கொண்டும் எதையோ சிந்தித்துக் கொண்டும் அமர்ந்திருந்தார் அபரஜித்.

“இவ்வளவு பாசத்தை வச்சுகிட்டு ஏன்தான் இப்படி குட்டிமாவ பிரிஞ்சு இவனையும் வருத்திக்கிட்டு இருக்கானோ….” என்று மனதுக்குள் நினைத்த மகேஸ்வரன்

அறையின் கதவை தட்டி” உள்ளே வரலாமா அபி…” என்று கேட்க

அவரை உணர்ச்சியற்ற ஒரு பார்வையை பார்த்த அபரஜித்…” ஏன் மகேஷ் இப்படி பண்ற… உன் வீட்டுக்கு வந்து நான் உட்காந்துருக்கேன்… நீ உள்ள வர்றதுக்கு அனுமதி கேட்கறியா…??” என்று நண்பனை பார்த்து கூற…

அபரஜித்தை முறைத்துக் கொண்டே உள்ளே வந்த மகேஸ்வரன் “இந்த தடவை எத்தனை நாளைக்கு இருக்கப் போற..??” என்று நேரடியாக விஷயத்துக்கு வர…

அபரஜித்தோ” நீ முதல்ல உட்காரு மகேஷ்..” என்று தான் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே இருந்த நாற்காலியை காட்ட… மகேஸ்வரனும் அவரை முறைத்துக் கொண்டே அதில் அமர்ந்தார்.

உட்கார்ந்தவரிடம் அபரஜித் “இந்த புகைப்படத்தை இன்னும் ஏன் தூக்கிடப்போடாமா வச்சுருக்க…?” என்று மகேஸ்வரன் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் வேறொரு கேள்வியை கேட்க.. மகேஷ்வரனின் கோபம் இன்னும் அதிகமாகியது…

எனவே சற்று சூடாகவே பதிலளித்தார் “என் பொண்ணு ஃபோட்டோவைதான் நான் வச்சுருக்கேன்.. பெற்றது நீங்களா இருந்தாலும் எங்க பொண்ணாதானடா வளர்த்தோம்….”

“திரும்ப திரும்ப அவளை ஞாபகப்படுத்தாதே…” என்று அபரஜித் வெகுநாட்களுக்கு பிறகு கோபப்பட… நண்பன் கூட்டுக்குள் இருந்து வெளியே வர ஆரம்பிக்கிறான் என்பதை உணர்ந்த மகேஸ்வரன் மேலும் அவரைத் தூண்டி விடும் விதமாகவே பேசினார்.

“அனு இருந்தா நீ இப்படி பேச முடியுமா அபி..?? பெற்ற மகள் மேல உனக்கு இருக்குற பாசம் இவ்வளவுதானா…??? நீ இவ்வளவு சுயநலமா மாறிப்போய்டுவன்னு நான் கனவுலயும் நினைச்சுப்பார்க்கல அபி…” என்று கோபத்தில் ஆரம்பித்து ஆதங்கத்துடன் பேச்சை முடிக்க…

நண்பனின் கோபத்தை உணர்ந்தாலும், மகேஸ்வரன் எந்த வார்த்தைகளை கேட்க விரும்ப மாட்டாரோ, அதே வார்த்தைகளை மீண்டும் சொன்னார் அபரஜித்…

“என்னைப் பொறுத்த வரைக்கும் என் மகள் என்னை விட்டு இந்த உலகத்தை விட்டுப் போய் எவ்வளவோ நாளாச்சு..” எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாது கூற,

அடுத்த நிமிடம் அவரது சட்டையை பிடித்திருந்தார் மகேஸ்வரன்… நண்பனை கொன்று விடும் ஆத்திரம் அவரது முகத்தில்…. ஆனாலும் அபரஜித்தின் முகத்தைப்பார்க்கும் போது கோபத்தை இழுத்து பிடிக்க இயலவில்லை…

ஏனெனில் அத்தனை வேதனையை சுமந்திருந்தது அவரது முகம்… இந்த உலகத்தையே வெறுப்பது போன்ற தோற்றம்….

“உனக்கு சாக்ஷியின் மேல் எவ்வளவு கோபம் இருந்தாலும் சரி… இப்படி வார்த்தைகளை விட்டு உன்னையும் கஷ்படுத்தி..எங்களையும் நோகடிக்காதே அபி… நம்ம பொண்ணு எங்க இருந்தாலும் நல்லா இருப்பா…” என்று தணிவாகவே பேசி அவரது கைகளை பிடித்துக்கொள்ள…

நண்பனின் வார்த்தைகளில் நெகிழ்ந்தாலும் மனதைக்கட்டுப்படுத்திக் கொண்ட அபரஜித் “நடந்ததை நினைச்சு வருத்தப்படறதை விடு மகேஷ்… இப்ப உங்க எல்லாரையும் பார்த்ததுல என் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு..” என்று பேச்சை மாற்ற

நண்பன் பேச்சை மாற்றுவதை புரிந்து கொண்டாலும், பொறுமையை விடாது தன் மனதை இத்தனை நாட்களாக அரித்துக் கொண்டிருந்த கேள்வியை கேட்டுவிட்டார் மகேஷ்வரன்.

“சரி..அபி.. நான் சஷிக்குட்டிமா பற்றி எதுமே பேசல.. ஆனால் நான் கேட்கற ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு… காதல் திருமணம் செய்துகிட்ட நீயே எதுக்காக சஷியோட காதல் திருமணத்தை ஏத்துக்கல… அவள் யாரை திருமணம் செய்துகிட்டான்னு கூட ஏன் சொல்ல மாட்டேங்கிற.. அதுதான் புரியாத புதிரா இருக்கு…”

“நம்ம ரெண்டு குடும்பமும் எவ்வளவு சந்தோஷமா வாழ்ந்த குடும்பம்… கொஞ்சம் பழசை நினைச்சுப் பாருடா… அப்படி ஒன்னும் அவ மன்னிக்க முடியாத குற்றத்தையும் செய்துடல்ல… ” என்று நண்பனின் வார்த்தைகள் காதுகளில் விழுந்தாலும்… நினைவுகளைத் தாங்க முடியாமல் அருகிலிருந்த நாற்காலியில் சரிந்து விழுந்துவிட்டார் அபரஜித்.

நண்பனின் நிலையை கண்டு பதற்றமடைந்த ” அபி..அபி.. என்று… அவரது கன்னத்தில் தட்டியவாறே..  கூப்பிட …” அபரஜித் கண்ணைத் திறந்து பார்க்க… அவருக்கு தண்ணீரை புகட்டியவர்…

“என்னை மன்னிச்சுக்க அபி… உன்னை இவ்வளவு கஷ்டப்படுத்திட்டேன்.. நான் எந்த கேள்வியும் கேட்கலைடா… நீ எங்க கூட இரு எங்களுக்கு அதுவே போதும்..” என்று நண்பனை தழுவிக்கொள்ள….

பதிலுக்கு அபரஜித்தும் நண்பனை தழுவிக் கொண்டவர் ” மகேஷ் நீ என்மேல் இருக்கற அக்கறையில் தான் இப்படியெல்லாம் பேசின…. நான் எதையும் தப்பா எடுத்துக்கலடா… எனக்கு கொஞ்சம் கால அவகாசம் மட்டும் கொடு… நேரம் வரும் போது நானே எல்லா உண்மையும் சொல்றேன்…” என்று மகேஸ்வரனை சமாதானப்படுத்த

அபரஜித் இந்த அளவுக்கு இறங்கி வந்து பேசியது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது மகேஸ்வரனுக்கு… “ஹ்ம்ம்…சரி அபி.. இனிமேல் இந்த விஷயமா நான் தொந்தரவு பண்ண மாட்டேன்…. ” என்று கூற

“சரி நீ போய் தூங்குடா…பார்வதி உனக்காக முழிச்சுட்டுருப்பா…” என்று அபரஜித் கூற…

மகேஸ்வரன் சிரித்துக்கொண்டே ” யாரு உன் தங்கச்சிதான… இந்நேரம் ஆழ்ந்த நித்திரையில இருப்பாங்க மேடம்.. நான் உன்கூட பேசப்போறேன்னு சொன்னதும் அப்படி ஒரு சந்தோஷம் அவளுக்கு… ரொம்ப நாளைக்கு அப்புறம் நிம்மதியா தூங்கறா…” என்று கூறிக்கொண்டே அருகில் இருந்த இன்னொரு கட்டிலில் படுத்துக்கொண்டவர்…

“நீயும் தூங்கு அபி… நான் இங்கேயே படுத்துக்கிறேன்” என்று கூற…

அபரஜித்தும் விளக்கை அணைத்துவிட்டு அவரது கட்டிலில் படுத்து விட்டார்.  சிறிது நேரத்திலேயே மகேஸ்வரன் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றுவிட… அபரஜித்தின் நினைவுகளோ தங்களது இளமைக்கால வாழ்க்கையை நினைத்து பின்னோக்கி சென்றது.

 அத்தியாயம்-10:                                        

அபரஜித்….. மகேஸ்வரனின் பால்ய நண்பர். இவர்கள் இருவரது தந்தையும் ஒரே இடத்தில் வேலை பார்த்ததால் இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டு ஒரே இனப்பிரிவை சார்ந்தவர்களாகவும் அமைந்து விட்டதால் இவர்களது நட்பு மிகவும் உறுதியாக…. அருகருகே வீட்டை வாங்கி போட்டு பக்கத்திலியே குடியிருக்கும் அளவுக்கு வளர்ந்தது.

இருவரின் தந்தைக்கும் மகேஸ்வரனும் அபரஜித்தும் ஒரே ஆண்பிள்ளையாக மட்டுமே அமைந்து இருந்ததால்.. இருவரும் உயிர் தோழர்களாக தங்கள் நட்பை வளர்த்துக் கொண்டனர். பள்ளி கல்லூரியிலும் ஒன்றாகவே படித்தனர்.

மகேஸ்வரனுக்கு வங்கி அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை இருந்ததால் அவர் இளங்கலை அறிவியல் பிரிவில் வணிகவியலை தேர்ந்தெடுக்க, சிறு வயதிலியே விஞ்ஞானி ஆக ஆசைப்பட்ட அபரஜித் உயிரித்தொழில்நுட்பத்தில்(பி.டெக்) ஜெனிடிக் என்ஜினியரிங்கை தேர்ந்தெடுத்தார்.

ஒரே வளாகத்தில் கலைக்கல்லூரியும் பொறியியல் கல்லூரியும் ஒன்றாக அமைந்திருந்ததால் நண்பர்கள் இருவரும் ஒன்றாகவே சென்று வந்தனர். மகேஸ்வரன் தன்னுடைய மேற்படிப்புக்காக சேர்ந்திருந்த சமயம் , அபரஜித் தனது திறமையால் கேம்பஸிலேயே முதல் மாணவனாக தேர்வாகி இந்திய தொழில் நுட்பக்கழகத்தோடு இணைந்து பணிபுரியும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.

அங்குதான் அவர் அனாக்ஷியை முதலில் சந்தித்தது. அமைதியான குடும்பப்பாங்காக இருந்த சக ஊழியையான அவளை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.ஆரம்பத்தில் நட்பாக தொடங்கிய பழக்கம் காதலில் வந்து முடிந்தது.

அனாக்ஷியின் பெற்றோர் ஏற்கனவே ஒரு விபத்தில் இறந்து விட்டதால் அவள் சித்தப்பாவிடம் வளர்ந்து வந்தாள். அவர்கள் வெறும் பாதுகாப்பு மட்டுமே இவளுக்கு.

 இவளின் படிப்புச் செலவை அனாக்ஷியின் பெற்றோர் விட்டுச் சென்ற சொத்தை விற்று பேருக்கு இவளை படிக்க வைத்துவிட்டு மீதி பணத்தை அவர்களே எடுத்துக்கொண்டனர்.

இவள் காதல் என்று அபரஜித்தின் கையை பிடித்து நிற்கவும் இதுதான் சாக்கு என்று, “மானத்தை வாங்கி விட்டாய் குடும்பத்தின் பெயரை கெடுத்துவிட்டாய்”….. என்று கண்டபடி பேசி அவளை வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டனர்.

அபரஜித்தின் வீட்டில் அந்த மாதிரி ஏதும் பிரச்சனை ஏற்படவில்லை. அவரின் பெற்றோருக்கு தங்கள் ஒரே மகனின் விருப்பமே அவர்களின் விருப்பமும். மகேஸ்வரனும் தன்னுடைய தோழன் கல்யாணம் செய்து கொண்டு குடும்பஸ்தன் ஆகப்போவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியே.

ஒரு சுபயோக சுபதினத்தில் அபரஜித்-அனாக்ஷி திருமணத்தை மிக விமரிசையாக நடத்தி முடித்து விட்டனர் இரு பெற்றோரும். அபரஜித் காதல் வாழ்க்கையும் இனிதே ஆரம்பித்தது. திருமணம் முடிந்து ஒரு வருடம் முடியும் முன்பே தங்களது காதல் வாழ்க்கையின் உன்னத பரிசாக ஒரு அழகிய பெண் மகவை ஈன்றெடுத்தாள் அனாக்ஷி.

அபரஜித்தின் வாழ்க்கை வண்ணமயமாகியது. குழந்தைக்கு சாக்ஷி எனப் பெயரிட்டு கொஞ்சி மகிழ்ந்தனர்.

மகேஸ்வரனும் தனது மேற்படிப்பை முடித்து விட்டு வங்கி தேர்வுக்கு தயாரானார். நண்பனின் மகளானாலும் சாக்ஷியை தன் மகளாகவே நினைத்து கொஞ்சி மகிழ்ந்தார் மகேஸ்வரன். போட்டித்தேர்வில் எத்தனை முறை தோல்வியுற்றாலும் சாக்ஷியின் பிஞ்சு முகத்தை பார்க்கும் போது அவரது சோர்வெல்லாம் பறந்து ஓடி விடும்.

அதுவும் அவளின் “மக்குமாமா” என்ற அழைப்பு மற்றவர்கள் சிரித்தாலும் மகேஸ்வரனுக்கு நெஞ்சமெல்லாம் குளிர்ந்து விடும்.அனாக்ஷி ஒரு முறை மகிமாமா கூப்பிடு செல்லம் என்று சொல்லிக்குடுக்க… அவள் உச்சரித்ததோ மக்குமாமாதான்.

மூன்று வருடங்கள் கடந்து தன்னுடைய விடா முயற்சியால் வங்கிதேர்வில் வெற்றி பெற்றார் மகேஸ்வரன். அதே மூன்று வருடங்களில் அபரஜித்தின் வளர்ச்சியோ அபரிதமாக இருந்தது. அவர் புகழ்பெற்ற விஞ்ஞானியாக அறியப்பட்டார். அவருடைய கண்டுபிடிப்புகளுக்காக பல தனியார் நிறுவனங்கள் போட்டியிட்டு தங்களது நிறுவனத்துக்கே அழைத்தன. ஆனாலும் அபரஜித் தனது பணியை அரசாங்கத்துடனே தொடர்ந்தார்.

மகேஸ்வரனுக்கு வேலை கிடைத்ததுமே அவரது பெற்றோர் அவருக்கு பெண் பார்க்க ஆரம்பித்தனர். ஒரு வருட தேடலுக்கு பிறகு பார்வதியை அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.

மகேஸ்வரன் பார்வதி திருமணமும் இனிதே நடந்தது. திருமணம் முடிந்து எட்டு வருடங்களாகியும் பார்வதிக்கு குழந்தை உண்டாகாமல் இருக்க கவலையுற்ற மகேஸ்வரனின் பெற்றோர் வடக்கே இருக்கும் கோவிலுக்கு சென்று வந்தால் நிச்சயம் குலம் தழைக்கும் என்று வேண்டிக்கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய…

பார்வதி எனக்கும் பொண்ணு மாதிரிதான் என்று அபரஜித்தின் பெற்றோரும் யாத்திரைக்கு கிளம்பினர். அன்றுதான் அவர்களை கடைசியாக பார்த்தது. ஏனென்றால் இரு பெற்றொரும் சென்ற குளிரூட்டப்பட்ட கம்பார்ட்மென்ட்டில் தீ பிடித்து எறிந்து விட , பெற்றோரின் உடல்கள் கூட கிடைக்கவில்லை இருவருக்கும்.

தங்கள் பெற்றோருக்கு நேர்ந்த துக்கத்தில் இருந்து மீள்வதற்கு பெரும்பாடு பட்டார்கள் இருவரும். அந்த நேரத்திலும் அவர்களின் ஒரே ஆறுதலாக இருந்தது சாக்ஷி மட்டுமே.

13 வயதே ஆன சிறுமிக்கு தனது தாத்தா பாட்டியின் இழப்பு புரிந்தாலும்… அவர்கள் இனி வரமாட்டார்கள் என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தாத்தா பாட்டி வேண்டுமென்று அடம்பிடிக்க ஆரம்பிக்க அவளை சமாதானப்படுத்துவதிலேயே பொழுது ஓடியது இருவருக்கும்.

ஏனென்றால் அபரஜித்தின் பெற்றோரை விட மகேஸ்வரனின் பெற்றோரிடம் சாக்ஷிக்கு ஒட்டுதல் அதிகம்.அதனால் அவளை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

சரியாக ஒரு வருடம் கழிந்து கருவுற்றார் பார்வதி. சந்தோஷ அலை வீச ஆரம்பித்தது மகேஸ்வரனின் வீட்டில். அனைத்து வேலைகளையும் தான் செய்து கொடுத்து பார்வதியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டாள் அனாக்ஷி.

பிரசவத்திற்கு கூட அவளது தாயாரின் வீட்டிற்கு அனுப்ப ஒப்புக்கொள்ளவில்லை மகேஸ்வரன். வேறு வழியில்லாமல் பார்வதியின் பெற்றோர் இங்கு தங்கியிருந்து அவளை பார்த்துக்கொண்டனர். தன்னை தாய்ப்போல பார்த்துக்கொண்ட பார்வதியை அனாக்ஷி கையில் வைத்து தாங்கினாள்.

ஒரு அழகான விடியலின் தருவாயில் மகேஸ்வரனின் செல்வமகள் பிறந்தாள். தனது தாயே மகளின் உருவில் வந்திருப்பதை எண்ணி பூரித்துப் போனார் மகேஸ்வரன். தனது நண்பனின் சந்தோஷத்தை கண்ட அபரஜித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக மகேஸ்வரனை கட்டித் தழுவிக் கொண்டார். சாக்ஷி குட்டி பாப்பாவை பார்த்து கொஞ்சி மகிழ்ந்தாள். அவளைத் தவிர வேறு யாரையும் தொடக்கூட அனுமதிக்கவில்லை. பார்வதியிடமே அவள்….

“அத்தை இந்த பாப்பா ரொம்ப அழகா இருக்கு… எனக்கே குடுத்துருங்க அத்தை” என்று கூற‌..

“உனக்கில்லாததடா சஷிமா… நீயே அத்தை வீட்டுக்கு வந்து பத்திரமா பாத்துக்கோ” என்று கூறிக்கொண்டே…

“அபிண்ணா என் மருமகளுக்கு கூட விளையாட குட்டிப்பாப்பா மட்டும் போதுமா? அவளுக்கு ஒரு தம்பிபாப்பாவயும் சேர்த்து குடுத்தா நல்லா இருக்கும்” என்று கேலி செய்ய… அனாக்ஷியின் முகம் சிவந்து விட்டது.

“சும்மா இருங்க அண்ணி.. இந்த ஒரு வாலையே என்னால சமாளிக்க முடியல” என்று சலித்துக்கொள்ள…

“நோ..நோ.. அனு செல்லம்.. என் தங்கச்சியே வாய்விட்டு கேட்டுட்டா… அதெல்லாம் முடியாது.. எனக்கு மகன் வேணும்” என்று அபரஜித்தும் கேலி செய்ய…

“ஆமா.. மம்மி.. எனக்கு தம்பிபாப்பா வேணும்” என்று தந்தையுடன் சேர்ந்து கொள்ள “உங்கள….” என்று அபரஜித்தின் தோளில் ஒரு அடியை வைத்து விட்டு… வெட்கப்பட்டு கொண்டே வெளியே சென்று விட்டாள் அனு.

“ஹேய்..அண்ணி.. நில்லு.. என் கண்ணு முன்னாடியே‌ எங்க அண்ணனை அடிச்சுட்டு ஓடறியா?” என்ற பார்வதியின் குரல் காற்றில் தோய்ந்து மறைந்தது.

ஒரு நல்ல நாளில் மகேஸ்வரன்-பார்வதி தம்பதியினர் தங்கள் செல்வ மகளுக்கு “சைரந்திரி” என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். எப்பொழுதும் சைரந்திரியை தூக்கிக்கொண்டே திரிந்தாள் சாக்ஷி.

பூவைப் போன்று மென்மையாக இருந்த குழந்தையின் கன்னத்தை வருடுவதில் அவளுக்கு அலாதி இன்பம்.இரு நண்பர்களுக்கும் வாழ்க்கை இப்படியே சந்தோஷமாக சென்று கொண்டிருந்தது.

அபரஜத்தின் வாழ்க்கையில் அன்று மிகவும் முக்கியமான நாள்… மகளின் குழந்தைத்தனமான பேச்சு அவருடைய ஆராய்ச்சியில் ஒரு புது யுக்தியை உதயமாக்க… அதை அவர் செயலாக்கத்திற்கு கொண்டு வந்து அதில் வெற்றியும் பெற்று விட்டார்.

சாக்ஷிக்கு ஐந்து வயதாக இருக்கும் போது ஒரு நாள் வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த சாக்ஷி… மண்ணைத் தோண்டி அதனுள் எதையோ புதைத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது அங்கு எதேச்சையாக அங்கு வந்த அபரஜித் மெதுவாக நடந்து சென்று மகளின் பின்னால் நின்று எட்டிப்பார்க்க, அவள் புதைத்து வைத்துக் கொண்டிருந்தது உலோகத்தினால் செய்யப்பட்ட காலி சாக்லேட் டப்பாவை.

“சஷிகுட்டி.. ” என்று அழைக்க, குட்டிச்செல்லமும் திரும்பி பார்த்தது… உடையெல்லாம் மண்ணை அப்பிக் கொண்டு குட்டி தேவதையாக நின்று கொண்டிருந்த மகளை காண இரண்டு கண்கள் போதவில்லை அபரஜித்துக்கு.

அப்படியே அவளை தூக்கி முத்தமிட்டவர்…” என்னடா குட்டிமா பண்ணிகிட்டு இருக்கீங்க?”… என்று வினவ

“அதுப்பா… நீ அன்னிக்கு தாட்சை(திராட்சை) சாப்ட்டு அதோட வதையெல்லா(விதையெல்லாம்) இங்க குழி போட்டு மூடி வச்சாமண்ணு அத சாப்ட்டு தாட்சசெடி(திராட்சை செடி) தரு சொன்னல்ல, என் சாக்கி தீர்ந்து போச்சா அதான் சாக்கிடப்பா போட்டுவைச்சா மண்ணு அத சாப்ட்டு எனக்கு சாக்கிடப்பா தருல்ல… அதான்பா குழி போட்டு மூடி வச்சேன்” என்று கூற, ஒரு முறை பார்த்த விஷயத்தை மகள் எப்படியெல்லாம் சம்பந்தப்படுத்தி பார்க்கிறாள் என்று பெருமையாகதான் இருந்தது அந்த தந்தைக்கு.

ஒரு முறை அவர்களது துறை சார்பாக கண்காட்சி ஏற்பாடு செய்திருந்த போது மனைவி மகளையும் அங்கு அழைத்துச் சென்றிருந்தார் அபரஜித். மகளை அங்கிருக்கும் பயிர்மாற்றங்கள் செய்து விதைக்கப்ட இருக்கும் துறைசார்ந்த தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு பிரித்துச் சேர்த்த விதை மாதிரிகளை இவ்வாறு பயிர் செய்து கொண்டிருந்ததை பார்த்த சாக்ஷி, வீட்டிற்கு வந்த பிறகு தானும் அதே மாதிரி செய்ய வேண்டும் என்று அடம்பிடிக்க… வேறு வழியில்லாமல் வீட்டில் இருந்த திராட்சை பழங்களில் உள்ள விதைகளை எடுத்து அவள் கண்முன்னயே புதைத்து வைத்து தண்ணீரை ஊற்றினார்.

“செடி நாளைக்கு வளர்ந்துருமாப்பா?”… என்று அதிமுக்கியமான சந்தேகத்தை கேட்க… உதடு வரை வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கினார் அபரஜித்.

“நாளைக்கே வளராது குட்டிமா…மண்ணு அதை சாப்பிட்டு புது செடி குடுக்கும்..அதுக்கு கொஞ்சம் டைம் ஆகும்டா”.

“ம்ம்… ஓகேப்பா.. அதுக்கு அடுத்த நாள் வந்து பாத்துக்கிறேன்” என்று கூற மகளின் மழலைப் பேச்சில் மயங்கித்தான் போனார் அபரஜித். அவளின் ஆசைப்படியே எதேர்ச்சையாக போட்ட விதைகள் முளைக்க ஆரம்பித்தது. சாக்ஷியின் சந்தோஷத்திற்கு சொல்லவா வேண்டும்.

அதன் பிறகு அவள் எந்த செடியெல்லாம் வளர வேண்டும் என்று ஆசைப்பட்டாளோ அத்தனையும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டது தனி வரலாறு.

அவ்வாறு இப்பொழுதும் செய்து கொண்டிருந்த போதுதான் அபரஜித் அவளை கவனித்து பார்த்தது.

மகளை தூக்கி கொஞ்சியவர் ” உலோகம் மண்ணில் மக்காது செல்லக்குட்டி” என்று கூற

“ஏன் அது மக்காப்பா…” என்று கேட்க

அபரஜித் சிரித்துக் கொண்டே “ஆமாடா அது மக்கு தான்… அது உனக்கு சாக்கிடப்பா தராது செல்லம்… அப்பா உனக்கு வேற சாக்கிடப்பா வாங்கித்தறேன் குட்டிமா…” என்று கூறியும் சாக்ஷியின் முகம் கூம்பிப் போனது.

பின்பு ஏக்கம் நிரம்பிய குரலில் ” நிஜமாவே சாக்கி வராதாப்பா…”என்று ஏக்கத்தோடு கேட்க அவளின் ஏக்கக்குரல் ஏதோ செய்தாலும் அன்று இந்திய அரசாங்கத்தின் மூலமாக தொழில்நுட்பக் கழகத்தின் விஞ்ஞானிகளுக்கு வைக்கப்பட்ட கோரிக்கையும் நினைவு வந்தது.

அப்போதைக்கு மகளை சமாதானப்படுத்தி அழைத்துச்சென்று விட்டார். அவளுக்கு பிடித்த பொம்மையை குடுக்கவும் அவளது கவனம் திரும்பியது. அப்பொழுதுதான் அவருக்கு ஒரு புதிய யுக்தி ஒன்று தோன்றி மூளையை குடைந்து கொண்டிருந்தது.

சிறிது நாட்களுக்கு முன்பு இந்திய அரசாங்கத்தின் சார்பாக தொழில்நுட்ப்க்கழகத்தின் கூட்டத்தில் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலம் ராஜஸ்தான். ஆனால் பாலைவனத்தையும் விவசாயம் செய்வதற்கு ஏற்பில்லாத வறண்ட நிலங்களையும் கொண்டது. அங்குள்ள மக்களுக்கு விவசாயம் செய்வதென்பது நினைத்தும் பார்க்க முடியாத விஷயம். அங்குள்ள மக்கள் உணவுப்பொருட்களுக்காகவும் குறைவான தண்ணீர் வளத்தாலும், எந்த வித முன்னேற்றமும் காண முடியாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

பாலைவனத்தில் காணப்படும் மணல் துகள்கள் தண்ணீரை உள்வாங்கி சேமித்து வைக்க முடியாத அளவு இறுக்கமற்ற தன்மை கொண்டது. மற்றொரு புறம் காணப்படும் வறண்ட நிலங்களில் அரசாங்கம் தேர்ந்தேடுத்த பகுதி உலோகத்தன்மை அதிகம் கொண்ட மண்ணாக இருந்தது.

பெருகி வரும் மக்கள் தொகையையும், அதிகரித்துக் கொண்டே போகும் உணவுத்தட்டுப்பாடையும் சமாளிக்க பாலைவனத்திலும் விவசாயத்தை மேம்படுத்த இந்திய அரசாங்கம் பெரு முயற்சி செய்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் இஸ்ரேல் செய்து காண்பித்த சாதனையும் அதற்கு சிறந்த முன்னுதாரணமாக அமைந்தது. அதற்கான ஆதாரங்களையும் விஞ்ஞானிகளிடம் சமர்ப்பித்தது அரசாங்கம்.

நவீனகால இஸ்ரேலில் உள்ள விவசாயம், பாலைவன வேளாண்மைக்கு பல நுட்பங்களை முன்னெடுத்து வருகிறது. சிபா பஸ்ஸின் சொட்டு நீர்ப் பாசன கண்டுபிடிப்பு வறண்ட பகுதிகளிலுள்ள வேளாண்மையை பெரிய அளவில் விரிவுபடுத்தியது, பல இடங்களில் சொட்டு நீர்ப்பாசனம் நடைமுறை நீர்ப்பாசன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

ஆய்வுகள் தொடர்ந்து நீர்ப்பாசனம் அல்லது மண்வளத்துடன் பெரிய நீர் பயன்பாட்டு குறைப்பைக் காட்டியுள்ளன, ஒரு ஆய்வு 80% தண்ணீரின் பயன்பாட்டின் குறைவு மற்றும் பயிர் விளைச்சலில் 100% அதிகரிப்பு  ஆகியவற்றைக் கொண்டு திரும்பியது. அதே ஆய்வு (ஒரு துணை சஹாரா ஆப்பிரிக்க கிராமத்தில் நடத்தப்பட்டது) இது 80% கிராமத்திலுள்ள வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றத்தை விளைவித்ததாகக் கண்டறிந்தது.1948 இல் நாட்டின் சுதந்திரம் முதல் இஸ்ரேலின் விவசாய உற்பத்தி ஏழு மடங்கு அதிகரித்துள்ளது, மொத்த பண்ணை விவசாய நிலங்கள் 165,000 ஹெக்டேர் நிலத்தில் இருந்து 420,000 ஹெக்டேர் வரை அதிகரித்துள்ளது. நாட்டின் சொந்த உணவில் 70% உற்பத்தி செய்கிறது.

இப்பொழுது அரசாங்கம் ராஜஸ்தானில் தேர்ந்தெடுத்த… பாதிக்கும் மேற்பட்ட வறண்ட நிலங்களில் இஸ்ரேலில் கையாளப்பட்ட நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டு ஓரளவு நல்ல தீர்வு கிட்டினாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு பகுதியில் உலோகத்தன்மை நிறைந்த மணலின் தன்மையை மாற்ற இயலவில்லை.

எடுத்த அனைத்து முயற்சிகளையும் கைவிடும் சூழல் வந்தது.இருந்தாலும் கடைசி முயற்சியாக முக்கிய விஞ்ஞானிகளின் கலந்துரையாடல் கூட்டத்தில் இதற்கு என்ன தீர்வு காண முடியும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. அபரஜித்தும் வந்திருந்த முக்கியமான விஞ்ஞானிகளில் ஒருவராக அமர்ந்திருந்தார்.

அரசாங்கம் இதை விஞ்ஞானிகள் வசமே ஒப்படைப்பதாகவும் அதற்கான கால அவகாசம் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் முயற்சி செய்ய விரும்புபவர்கள் தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம் என்றும் கூறியது.

அபரஜித் தனது பெயரை குடுக்கவில்லை. இதை ஒரு சவாலாக தனிப்பட்ட முறையில் ஆராய்ச்சி செய்து பார்க்க விரும்பினார்.(இதனால் தனது வாழ்க்கையில் எப்பேர்பட்ட சிக்கலுக்கு ஆளாகப்போகிறோம் என்பதை அவர் அறியவில்லை).

தனது மற்றொரு விஞ்ஞானி நண்பரின் உதவியால் மண் மாதிரிகளை சேகரித்தவர் அதன் தன்மையை ஆராயும்போது அது அவருக்கு பெரும் சவாலாக அமைந்தது. அவரது முயற்சிகள் எழுபத்தைந்து சதவிகிதம் வெற்றி பெற்றும் இறுதியில் தோல்வி அடைவதுமாக இருந்தது.

அப்பொழுதுதான் மகளின் பேச்சு அவருக்கு புதிய யுக்தியை தோற்றுவித்தது. “உலோகத்தன்மையை பிரித்துத் தானே எடுக்க முடியாது மக்கச்செய்வதற்கு முயற்சி செய்யலாமே…. மக்கிப்போன மண்ணை உயிர்ப்புள்ளதாக மாற்ற கூடிய ஒரு அரிய தாவர வகையை அவர் ஏற்கனவே கண்டுபிடுத்திருந்தார். அதனால் கிடைக்கும் திரவம் எப்பேற்பட்ட மக்கிய மண் தன்மையையும் உயிர்ப்புள்ளதாக மாற்றி விடும். அவரது முயற்சியும் கை கூடியது புதிய திரவ வகை ஒன்றை உருவாக்கி அதன் தன்மையை மக்கச்செய்து விட்டார். அதைப்போன்றே ராஜஸ்தானில் அந்த ஒரு இடம் மட்டும் அப்படி ஆனதற்கு காரணம் சூரியகாந்தப்புயலின் தாக்கமே என்கிற உண்மையையும் கண்டறிந்தார்.

அதன் மூலக்கூறுகளை கணிணியில் அச்செடுத்து அதற்கான வேலைகளை இன்று அவர் முடித்தாக வேண்டும்‌. ஆனால் அவரது வெற்றியின் களிப்பை அனுபவிக்க இயலாதவாறு… எதிர்பாராத விதமாக நிகழ்ந்தது… அனாக்ஷியின் மரணம்.

 

அத்தியாயம்-11:                                                          

தான் கண்டுபிடித்த விவரங்களை கணினியில் பதிவேற்ற அபரஜித் கிளம்பி கொண்டு இருந்தபோதுதான் அனாக்ஷி வீட்டற்கருகில் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

அன்று வெள்ளிக்கிழமையாதலால் காலையிலேயே கோவிலுக்கு சென்று விட்டு வந்து கொண்டிருந்தாள் அனாக்ஷி. கணவனை பார்த்து சிரித்துக்கொண்டே உள்ளே நுழைய , காலையிலேயே புத்தம் புது மலராக ஒரு குழந்தைக்கு தாய் என்று அடித்துச் சொன்னாலும் நம்ப முடியாத அளவுக்கு, முதன் முதலில் அவளைப்பார்த்த போது எப்படி இருந்தாளோ அப்படியே இன்றும் இருக்கும் மனைவியை காணும்போது…. தான் இன்று செய்யவிருக்கும் முக்கியமான வேலை கூட மறந்து போனது அபரஜித்துக்கு.

கண்களில் காதலோடு தன்னை பார்த்துக் கொண்டு வரும் மனைவியை பதிலுக்கு காதல் பார்வை பார்த்துக்கொண்டே… மனைவியை நெருங்கினார் அபரஜித்.

அனாக்ஷி திருநீறு எடுத்து அபரஜித்தின் நெற்றியில் இட்டுவிட்டு அவர் கிளம்பி தயாராக இருப்பதை பார்த்து…

“அச்சோ… அஜூ லேட் ஆயிடுச்சா?.. கொஞ்சம் இருங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று நகர எத்தனிக்க…

நகரப்போன மனைவியை இருகைகளாலும் வளைத்துப் பிடித்தவன் ” ஆமா… ஆமா…ரொம்ப லேட் ஆயிடுச்சு அனு டார்லிங்…  சஷிக்குட்டிக்கு தம்பி பாப்பா குடுக்கறதுக்கு” என்று கொஞ்சி பேசியவாறே அவளது கழுத்தில் முகம் புதைக்க,

“ஆமாமா.. வயசுக்கு வரப்போற வயசுல பொண்ண வச்சுகிட்டு மகன் வேணுமா உங்களுக்கு.. “என்று கூறிக்கொண்டே விலக எத்தனிக்க…

அவளை இன்னும் இறுக்கிப்பிடித்தவன் “இப்போதான்டி பெத்துக்கனும் பொண்டாட்டி.. அப்பதான் மகன என் மகள் பாத்துக்குவாள்… நீ என்னை பாத்துக்கலாம்” என்று அடுத்த ஆட்டத்திற்கு அடிபோட,

“முதல்ல தள்ளுங்க… பாப்பா வேற வீட்ல இருக்கா.. இன்னிக்கு அவங்க பள்ளியில் ஏதோ சாக்கடை பிரச்சனையாயிடுச்சு, அதனால பசங்களுக்கு தொற்று எதுவும் வந்துடக்கூடாதுன்னு லீவ் விட்டுருக்காங்க” என்று சொல்லிக்கொண்டே விலக….

“இதெல்லாம் அநியாயம்டி அனு… வர வர நீ என்ன கிட்டவே விடமாட்டிங்கற… “என்று வருத்தப்பட…

“என்னவோ ஒண்ணும்பண்ணாத மாதிரிதான்… காலங்கார்த்தால இது என்ன பேச்சு.. நான் எங்கயும் போக மாட்டேன் இங்கதான் இருப்பேன்… நீங்க சீக்கிரம் கிளம்புங்க.. ” என்று கூற… 

“இது அநியாயம்.. ஒரு வாரம் கழிச்சு நேத்து நைட்டுதான் நீ நம்ம ரூம்க்கு வந்த அனுடார்லிங்.. அதுவும் விடிஞ்சதும் நீ கோவிலுக்கு போகனும்னு அவசரமா எழுந்து குளிக்கப்போய்ட்ட … ” என்று குற்றப்பத்திரிக்கை வாசிக்க….

“விவஸ்தை கெட்ட மனுஷன்.. விடியற வரைக்கும் தூங்க விடாம பண்ணிட்டு பேசற பேச்சைப் பாரு” என்று முணுமுணுக்க…

அபரஜித் அனுவின் இடுப்பில் சொருகியிருந்த சேலை நுனியை எடுத்து கையில் சுற்றி இழுத்துக்கொண்டே அனுவை இழுக்க,

“அம்மா….” என்ற மகளின் குரலில் சட்டென விலகி நின்றனர் இருவரும்….

“குட்டிமா…இங்க வாங்கடா…” உணவு மேஜையில் அமர்ந்து கொண்டே சாக்ஷியை அழைத்த அபரஜித் மகளை தன்னருகில் அமர்த்திக் கொண்டார்.

இப்பொழுதே தன் தோளை நெருங்கும் அளவு வளர்ந்திருந்த தன் மகளை கண்ட அபரஜித்துக்கு மனைவி கூறியது போல மகள் பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டாள் என்பது புத்திக்குள் நன்றாக உரைத்தது.

தந்தையின் அருகில் அமர்ந்து அவரது தோளில் சாய்ந்து கொண்ட சாக்ஷி ” அப்பா… இன்னைக்கு அம்மாவ என்னை மாலுக்கு கூட்டிட்டு போக சொல்லுங்கப்பா… ” (விதி அன்று மகளின் உருவில் விளையாடியதோ….) என்று கேட்க…

அனு” அதெல்லாம் முடியாதுடா குட்டிமா..அம்மா இன்னைக்கு சைரா பாப்பாக்கு தடுப்பூசி போட பார்வதி அத்தை கூட மருத்துவமனைக்கு போகனும்டா…”

சாக்ஷியோ அடம்பிடிக்க ஆரம்பித்தாள்.. “ம்மா… பாப்பாக்கு ஊசில்லாம் போட வேண்டாம்… அவளையும் அத்தையையும் கூட்டிகிட்டு நாம மாலுக்கு போகலாம்மா.. அங்கே புதுசா வந்துருக்குற தியேட்டர்ல எனக்கு பிடிச்ச அனிமேட்டட் மூவி போட்டுருக்காங்கப்பா….நான் அதை பார்க்கனும்பா… கூட்டிட்டு போக சொல்லுங்கப்பா….” என்று தாயிடம் ஆரம்பித்து தந்தையிடம் முடித்தாள் சாக்ஷி.

அனுவோ” குட்டிமா.. என்ன இது சின்னபொண்ணு மாதிரி அடம்பிடிச்சுட்டுருக்க…” சாக்ஷியை கண்டிக்க ஆரம்பிக்க…

அபரஜித்தின் குரல் இடையிட்டது, சாக்ஷியின் புறம் திரும்பி “குட்டிமா அடம்பிடிக்காம ஒரு இடத்துல உட்காரு” என்று கூறிவிட்டு மனைவியின் புறம் திரும்பியவர்… “அனு இன்னைக்கு ஒரு நாள்தான கேட்கறா… நீ கூட்டிட்டு போ.. பார்வதிகிட்ட நான் சொல்லிக்கிறேன்…” என்று கூற…

அனு” என்னங்க…. அண்ணி முதல்லயே தனியா போயிக்கிறேன்னுதான் சொன்னாங்க..நான்தான் கண்டிப்பா நான் கூட வருவேன்னு சொன்னேன்.. ஏன்னா நேத்து மகேஸ்வரன் அண்ணா நேற்று நம்ம வீட்டுக்கு வந்து தங்கச்சி நாளைக்கு  எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு… ஆனால் சைருபாப்பாக்கு தடுப்பூசி போட்டே ஆகனும்….பார்வதி தனியாதான் போகனும்….அதனால பார்வதி கூட நீ நாளைக்கு போய் பாப்பாக்கு ஊசி போட்டு வந்துடுறிங்களான்னு சொல்லிட்டு போயிருக்கார்.. நானும் சரின்னு சொல்லிட்டேன்”என்றாள்.

அபரஜித்தோ” பார்வதிய நான் போறப்போ  கூட்டிட்டு போய் மருத்துவமனையில் இறக்கி விட்டுக்குறேன். திரும்ப டிரைவரோட வண்டிய அனுப்பி வீட்டுக்கு கொண்டு வந்து விட சொல்லிக்கிறேன்….நீ குட்டிமாவ கூட்டிகிட்டு மாலுக்கு போய்ட்டு வா.. மகேஷ் கிட்ட நான் சொல்லிக்கிறேன்… இன்னொரு கார்ல நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க..” என்று முடித்து விட்டார்.

அனுவும் சரி என்று சம்மதித்து விட…. கிளம்புவதற்கு தயாராக துள்ளிக்குதித்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள் சாக்ஷி.

மகளைப் பார்த்து சிரித்துக் கொண்டே திரும்பிய அனுவின் இதழ்கள் அபரஜித்தின் இதழோடு சேர்ந்திருந்தது. மகள் எப்போது வேண்டுமானாலும் வந்து விடலாம் என்பதால் அனுவின் இதழை அவசரமாக சிறை செய்தார் அபரஜித்.

முத்தமிட்டுக்கொண்டே கைவளைவுக்குள் அனுவை கொண்டு வந்து , ” என்னோட ரெண்டு செல்லங்களும் பார்த்து பத்திரமா போய்ட்டு வாங்க சரியா.. என்று கூறி தன்னுடைய டெபிட் கார்டையும் அனுவின் கைகளில் கொடுத்தார்”.

“ஹ்ம்ம்…சரி..அஜூ” அனுவின் முகத்திலோ வெட்கம் கலந்த நிறைவான புன்னகை.

“நீ இப்படி பார்த்தேன்னா நான் எப்படி கிளம்புறது அனு டார்லிங்… நானும் லீவ் போட்டுட்டு உங்க கூடவே இருந்திடவா‌..” என்று கேட்க…

“என்னங்க இது விளையாட்டுத்தனம் பண்ணிகிட்டு… பார்வதி அண்ணி கிளம்பி இருப்பாங்க… சீக்கிரம் போனாதான் கொஞ்சம் சீக்கிரமா அவங்களால திரும்ப முடியும்” என்று கூறி அபரஜித்தை ஒரு வழியாக கிளப்பி அனுப்பி விட்டாள் அனு.

சிறிது நேரம் கழித்து மகள் தயாராகி வர இருவரும் காலை உணவை முடித்து விட்டு மாலுக்கு கிளம்பினர். அனு காரில் ஏறி ஸ்டார்ட் செய்ய கார் கிளம்பவில்லை. அப்பொழுதுதான் கவனித்தார் பெட்ரோல் குறைவாக இருப்பதை. சாக்ஷியும் அதை பார்த்து “அச்சோ … பெட்ரொல் இல்லையே ம்மா…”என்று வருத்தப்பட்டவள், பின்பு ஒரு யோசனை தோன்ற…

“ம்மா…பின்னாடி நிப்பாட்டி வச்சுருக்குற ஸ்கூட்டில போலாம்மா….” என்று கூற

“சரி வா ஸ்கூட்டிலயே போலாம்”என்று தனது இரு சக்கர வாகனத்தை எடுத்து வர இருவரும் மாலுக்கு கிளம்பினர்.

அவர்கள் மாலில் இறங்கவும் அபரஜித் அழைப்பெடுக்கவும் சரியாக இருந்தது. ஃபோனை எடுத்து இயக்கிய அனுவிடம் ” என்னடா ரெண்டு பேரும் மாலுக்கு வந்துட்டிங்களா…”என்று கேட்க,

“ஹ்ம்ம்..வந்தாச்சு அஜூ.. குட்டிமா கவுன்டர்ல நிக்கறா… கார்ல பெட்ரோல் இல்லை… அதனால் ஸ்கூட்டியை தான் எடுத்துட்டு வந்தேன்” என்று கூற….

“எவ்வளவு தூரமா வண்டில வந்துருக்கீங்க ரெண்டு பேரும்… கால் டாக்சி பிடிச்சு வந்துருக்கலாம் இல்லை” என்று அபரஜித் கடிந்து கொள்ள….

“இல்லை அஜூ… நாங்க கிளம்பும் போதே லேட் ஆகிடுச்சு… அதுக்கப்பறம் கிளம்பினா திரும்ப வீட்டுக்கு வர ரொம்ப நேரம் ஆயிடும்”என்று சமாதானப்படுத்த…

“ம்ம்..சரி.. பார்த்து கவனமா வாங்க” என்றவரிடம்…

“அண்ணி எங்கங்க… ” என்று கேட்க,

“தங்கச்சி இப்போதான் பாப்பாவ தூக்கிட்டு உள்ள போனா… என்னை கிளம்ப சொன்னா…  நான் இருந்து டிரைவர் கூட அவளை வீட்டுக்கு அனுப்பிட்டு நான் ஆட்டோவில் போய்க்கிறேன்.. சரி வைக்கிறேன் அனு… லேப்ல இருந்து கால் வருது” என்று வைத்து விட்டார்.

படம் பார்த்துவிட்டு நன்றாக மாலில் சுற்றி விட்டு இருவரும் கிளம்பி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.வீட்டிற்கு கிளம்புகிறோம் என்று சொல்வதற்காக இடையில் இருமுறை அபரஜித்துக்கு அழைத்து விட்டாள் அனு.

ஆனால் முக்கியமான வேலையாக ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட அனைத்து முடிவுகளையும் சரிபார்த்துக்கொண்டும் கணிணியில் ஏற்றிக்கொண்டும் அச்செடுத்துக் கொண்டும் இருந்ததால் அழைப்பை அவர் கவனிக்கவில்லை.

வானம் இருட்டிக்கொண்டு வேறு வந்ததால் சற்று வேகமாக ஓட்டிக்கொண்டு வந்தாள் அனு. வீட்டிற்குத் திரும்பும் சாலையில் ஹாரன் அடித்துக்கொண்டே வண்டியை திருப்பும்போதுதான் அந்த கோர நிகழ்வு ஏற்பட்டது.

எதிரே வந்த சாலையில் மூச்சு முட்டும் அளவுக்கு குடித்துவிட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு வந்த லாரி டிரைவர் லாரியை கண்மண் தெரியாமல் ஓட்டி  அனுவின் வண்டியை இடித்து தள்ளினான்.

தள்ளிய வேகத்தில் தூக்கி எறியப்பட்ட சாக்ஷி பக்கத்திலுள்ள குப்பை மேட்டில் யாரோ எறிந்து விட்டு போன பிய்ந்து போன மெத்தையில் விழுந்து, விழுந்த வேகத்தில் “ம்மா…” என்று கத்திக்கொண்டே மயக்கமுற, லாரியின் சக்கரம் முழுதாக அனுவின் மீது ஏறியிருந்தது.

ஆள் அரவமற்ற சாலையாதலால் லாரியை ஓட்டிக்கொண்டு வந்தவன் இறங்கி ஓடி விட்டான். சிறிது நேரம் கழித்தே அந்த பக்கம் வந்த சில நல்ல மனிதர்கள் உடனடியாக ஆம்புலன்சிற்கு ஃபோன் செய்ய, அருகில் ஆட்கள் தன்னை தூக்க வரவும் அது வரை தன் உயிரை பிடித்து வைத்திருந்த அனு” சாக்ஷி …” என்று அவள் விழுந்த இடத்தை நோக்கி கையை உயர்த்தியவாறே உயிரை விட்டாள்.

அந்த ஆட்கள் சாக்ஷியை தேடி ஓட , அங்கு கூட்டத்தில் நின்றிருந்த இன்னொருவர் அவர்களது ஃபோன் எதுவும் அருகில் கிடக்கிறதா என்று தேடிப்பார்த்தார். அதிர்ஷ்டவசமாக லாரியின் இன்னொரு புறம் கிடந்த கைப்பையில் ஃபோன் ஒலித்துக்கொண்டிருந்தது.

அபரஜித்தான் கால் செய்து கொண்டிருந்தார். வேலையை முடித்து கிடைத்த இடைவேளையில் மனைவிக்கு அழைப்பெடுக்க ஆரம்பித்தார். அழைப்பு எடுக்கப்பட்டு “ஹலோ…” என்ற ஆண்குரல் கேட்கவும் “ஹலோ.. யார் சார் பேசறிங்க.. இது..அனுவோட ஃபோன் ஆச்சே..” என்று பதட்டமாக பேச,

அந்த முகம் தெரியாத மனிதர் என்ன நினைத்தாரோ” சார் கொஞ்சம் பதட்டமில்லாம நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க… அனுங்கறது உங்க மனைவியா சார்… அவங்களுக்கு ஆக்சிடென்ட் ஆகி இங்க இறந்து கிடக்காங்க.. கொஞ்சம் தூரத்துல ஒரு சின்ன பொண்ணும் மயக்கம் போட்டு விழுந்து கிடக்கு… போலிஸ் வந்துட்டாங்க… ஆம்புலன்ஸீக்கும் சொல்லியாச்சு… நீங்க கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வாங்க..என்று விபத்து நடந்த இடத்தை கூறி வைத்துவிட…. உலகமே இருண்டது போல் ஆனது அபரஜித்துக்கு.

அக்கம்பக்கத்தில் விஷயம் தெரிந்ததும் மகேஸ்வரனின் காதுக்கும் விஷயம் சென்று… பார்வதியை அழைத்து விஷயத்தை கூறியவர், குழந்தையை பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் கொடுத்துவிட்டு சாக்ஷியிடம் விரைந்து செல்லுமாறு கூறினார்.

பார்வதி சென்று பார்க்கும்போது அனு பிரேதமாக கிடக்க, சற்று தூரத்தில் கிடந்த சாக்ஷியை தூக்கிக்கொண்டு வந்து மயக்கம் தெளிய வைத்துக் கொண்டிருந்தனர்.

“அய்யோ அனு.. அபிண்ணாக்கு என்ன பதில் சொல்லுவேன்… இப்படி கிடக்கிறியே..” என்று கதறி அழ….

சாக்ஷிக்கு மயக்கம் தெளிய…அருகில் இருந்த காவலர் பார்வதியை அழைத்து “அந்த பொண்ணுக்கு மயக்கம் தெளிஞ்சுடுச்சு இங்க வந்து பாருங்கம்மா” என்று அழைக்க, அழக்கூட முடியாமல் சாக்ஷியை நோக்கி விரைந்தார் பார்வதி.

பார்வதியை பார்த்ததும் சாக்ஷி அழுதுகொண்டே “அத்தை…அம்மா ” என்று அழைத்தவாறே எழ ஆரம்பிக்க அவளால் எழ முடியவில்லை. கை கால்களில் முறிவு ஏற்பட்டிருந்தது.

“அத்தை.. நான் அம்மாவ பார்க்கனும்” என்று அனுவை “ம்மா…” என்று தேட ஆரம்பிக்க

“வேண்டாம்டா குட்டிமா” உடம்பை அலட்டிக்காதே என்று அணைத்துக்கொண்டவள் “அம்மாவை அப்பறமா பார்க்கலாம்… இப்ப உனக்கு அடிபட்டுருக்கு.. அப்பாவும் மாமாவும் இப்போ வந்துடுவாங்க… நாம ஆஸ்பத்திரிக்கு போயிடலாம்” என்று சமாதானப்படுத்த,

“இல்லை நான் அம்மாவை பார்க்கனும்” என்று அடம்பிடிக்க

“அம்மாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிட்டாங்க குட்டிமா” என்ற மகேஸ்வரன் கூறவும் மற்றொரு ஆம்புலன்ஸ் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

அனுவின் சடலத்தை பார்க்க விடாமல் சாக்ஷியை ஆம்புலன்சில் ஏற்றி விட்டனர். அபரஜித் வருவதற்காக காவலர்கள் காத்துக் கொண்டிருக்க, நண்பனுக்கு திரும்ப திரும்ப அழைப்பெடுத்து சோர்ந்து போய் மகேஸ்வரனும் நண்பனின் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தார்.

எப்படியோ வண்டியை ஓட்டிக்கொண்டு வந்து சேர்ந்துவிட்டார் அபரஜித். காலையில் சிரித்து பேசிய மனைவி இப்போது உயிருடன் இல்லையென்றால் யாரால் தாங்கிக் கொள்ள முடியும். மனைவியைக் கட்டிக் கொண்டு அவர் அழுத அழுகையை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாது. சாக்ஷி “என்னாலதான் அம்மா சாமிகிட்ட போய்ட்டாங்க” என்று அழ ஆரம்பிக்க கைகால் முறிவு ஏற்பட்ட அவளது உடலை அசைக்க விடாமல் அவளை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தார் பார்வதி.

முடிந்தது இதோடு அனாக்ஷி இறந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. இந்த இரண்டு மாதங்களும் மகேஸ்வரனும் பார்வதியும் மட்டும் சரியாக கவனித்துக் கொள்ளா விட்டால்… மீண்டும் ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கும் அபரஜித்தின் வீட்டில். அந்த அளவுக்கு தந்தையும் மகளும் தங்களது கூட்டுக்குள்ளேயே சுருண்டு விட்டனர்.

 தனது செல்ல மகளை பற்றிய நினைவு கூட இல்லாமல் அபி இருக்க, சாக்ஷியோ அன்னையை எண்ணி அழுது கரைந்தாள்.

அழும் அவளை அதட்டி மிரட்டி சைராவை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அவளிடம் ஒப்படைத்தார் பார்வதி. சாக்ஷியை கொஞ்சம் கொஞ்சமாக துக்கத்திலிருந்து மீட்டு வந்தது சைராவின் மழலைப் பேச்சும் செயல்களும். மகேஷ்வரனும் அபரஜித்தை தனியாக விடவில்லை. நண்பனோடே தனது பொழுதுகளை பெரும்பாலும் கழித்தார்.

இவையனைத்தையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது சாக்ஷி பூப்பெய்திய நிகழ்வு. அன்று பார்த்து பார்வதியும் ஏதோ முக்கியமான வேலையாக வெளியில் சென்றிருக்க அன்று விடுமுறை நாளாகையால் சைராவுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.

“சஷிக்கா நா ஒன்ன பிதிச்சிட்டேன்” என்று கத்திக்கொண்டே சைரா ஓடிவர அப்பொழுதுதான் தனது உடம்பில் ஏற்பட்ட இயற்கையின் மாற்றத்தை உணர்ந்தாள் சாக்ஷி.

தாயில்லாத பெண் என்பதால் பார்வதி ஏற்கனவே இதைப்பற்றி மேலோட்டமாக சாக்ஷியிடம் சொல்லி வைத்திருந்தார். வீட்டில் இம்மாதிரி ஏற்பட்டால் தன்னிடம் சொல்லுமாறும், பள்ளியில் ஏற்பட்டால் அவளது வகுப்பாசிரியையிடம் கூறி தனக்கு அழைக்குமாறும் கூறியிருந்தார்.

இப்பொழுது வீட்டில் இருப்பது சாக்ஷிக்கு சந்தோஷமாக இருந்தாலும் அன்னையின் அருகாமைக்காக ஏங்கத்தொடங்கியது மனது. சைராக்குட்டியை தூக்கிக்கொண்டு உள்ளே சென்று அவளுக்கு பிடித்த பொம்மையை எடுத்துக்கொடுத்து ஒரு சாக்லேட்டை உரித்து அவள் கையில் கொடுக்க குழந்தை சமத்தாக விளையாட ஆரம்பித்தாள்.

குழந்தை உட்கார்ந்து விளையாடத் தொடங்கியதும் அன்னையின் அறையை நோக்கிச்சென்றாள். அன்னை அங்கு இல்லை என்றாலும் அங்கு சென்று அமர்ந்தால் மனத்துக்கு நிம்மதியாக இருக்கும்போல தோன்றியது. ஆனால் எதிர்பாராதவிதமாக அபரஜித்தும் அங்கேதான் அமர்ந்திருந்தார்.

அன்னை இறந்தபின் அப்பாவை அதிகம் நெருங்கவில்லை என்றாலும் தந்தையின் உருவில் தாயை கண்டவள் அப்பா என்று ஓடிச்சென்று அணைத்துக்கொண்டாள் சாக்ஷி.

இத்தனை நாட்களுக்கு பிறகு இப்பொழுதுதான் தனது செல்ல மகளின் ஞாபகமே வந்தது அவருக்கு. “அப்பா என்னை மன்னிச்சுடுங்கப்பா… நான் அடம்பிடிச்சு அம்மாவை மாலுக்கு கூட்டிட்டு போனது தப்புதான்ப்பா… அதுக்காக என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதிங்கப்பா ” என்று கூறி அழ ஆரம்பிக்க, மனைவியின் நினைவில் மகளை கவனிக்காமல் விட்ட மடத்தனத்தை எண்ணி தன்னைத்தானே நொந்து கொண்டார் அபரஜித்.

தற்போது மகளை தேற்றுவது முக்கியமாகப்பட “குட்டிமா.. அப்பாக்கு உன்மேல எந்த கோபமும் இல்லடா… ” என்று சமாதானப்படுத்த, சாக்ஷியின் அழுகையோ குறையவில்லை. அழுது கொண்டே ” அப்பா நீங்க பார்வதி அத்தைக்கு கால் பண்ணி கூப்பிடுங்கப்பா” என்று கூற….

அப்பொழுதுதான் மகளை ஊன்றி கவனித்தவர் அவளது ஆடைகளில் ஏற்பட்டிருந்த திட்டுக்கரைகளையும் கவனித்தார்.

மகள் பூப்பெய்து விட்டாள் என்று புரிந்தாலும் அவளை எப்படி கையாள்வது என்று புரியவில்லை. ” குட்டிமா.. நீ இந்த ஓரமா இருக்குற சேர்ல உட்காருடா” என்று மகளை உட்கார சொல்லி தந்தையின் உடல் மொழியிலேயே அவர் புரிந்து கொண்டார் என்பதை உணர்ந்த சாக்ஷியின் மனதில் நிம்மதி ஏற்பட்டது.

“சைருகுட்டி எங்கடா இருக்கா…?” என்று வினவ…

“அவளை என் ரூம்ல விளையாட விட்டுருக்கேன்பா” என்றாள் சாக்ஷி.

“சரி‌…ஒரு ஐந்து நிமிடம் இங்கேயே உட்கார்ந்துக்கோடா குட்டிமா… அப்பா இதோ வந்துடறேன்” அவருக்கு தெரியும் பார்வதி சற்று தூரத்தில் இருக்கும் கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றிருக்கிறாள். உடனே கிளம்பி வந்தாலும் வருவதற்கு அரை மணி நேரமாவது ஆகும். வாயில் வரை வந்தவர் பின்பு வேகமாக மகளை நோக்கி மறுபடியும் செல்ல ” குட்டிமா… பசிக்குதாடா.. அப்பா சாப்பாடு வேணும்னா ஊட்டிவிட்டு போகவா…” என்று கேட்க..

“இல்லை…” என்று தலையை மட்டும் அசைத்தாள் சாக்ஷி… மகளின் நிலை புரிய, வேகமாக சென்று பக்கத்து வீட்டு பெண்மணியிடம் விஷயத்தைக் கூறி மகளுக்கு துணை இருக்குமாறு கூறிவிட்டு , தான் கடைக்கு சென்று சில பொருட்கள் மட்டும் வாங்கி வருவதாக கூறி சென்றார்.

செல்லும் வழியிலேயே பார்வதிக்கு கால் செய்து விஷயத்தைக் கூறி சென்றவர் மகளுக்கு தேவையான பொருட்களை தானே வாங்கினார். பார்வதியும் வீட்டிற்கு பாதி வழியில் வந்து கொண்டிருந்ததால் அபரஜித் உள்ளே நுழையும் நேரம் பார்வதியும் வீட்டு வாசலில் இறங்கிக் கொண்டிருந்தாள்.

அபரஜித்தின் முகத்தை பார்த்தவள் ” அபிண்ணா நான் பார்த்துக்கறேன் குட்டிமாவ” என்று தைரியம் கூற, புரிந்து கொண்ட அபரஜித்….அவளுக்கு இப்போ தேவையான பொருள் எல்லாம் வாங்கிருக்கேன்மா.. “வேற ஏதும் வாங்கனும்னாலும் சொல்லு தங்கச்சி…” என்று கூறிவிட்டு வெளியில் வந்து அமர்ந்து கொண்டார்.

பார்வதி வருவதற்குள் பக்கத்து வீட்டு பெண்மணி சாக்ஷியிடம் பேசிக்கொண்டிருந்தார். பார்வதி வந்ததும் “அத்தை” என்று ஓடி வந்து கட்டிக்கொண்டாள் சாக்ஷி.

“பயப்பட ஒண்ணுமில்லை குட்டிமா.. அழக்கூடாது சரியா?? ” என்று தேற்ற சாக்ஷியின் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியது. பேச்சை மாற்றும் பொருட்டு பார்வதி…

“குட்டிமாக்கு உங்க அப்பா என்ன வாங்கிட்டு வந்துருக்காரு பார்க்கலாமா?” என்று அபரஜித் வாங்கி வந்த பையை பிரிக்க அதில் சாக்ஷிக்கு சாக்லேட்டும் , பழங்களும், சானிட்டரி நாப்கின்களும் சேர்ந்து இருந்தது. பார்வதிக்கு அபரஜித்தை நினைத்து பெருமையாக இருந்தது.

திருமணமாகி இத்தனை வருடங்கள் ஆகியிருந்தாலும்  முடியாத நேரங்களில் மகேஸ்வரனிடம் நாப்கின் வாங்கி வர சொன்னால் ” நான் எப்படி போய் வாங்குறது பார்வதி? ” என்ற கேள்வி தான் முதலில் வரும். ஆனால் அபரஜித் சொல்லாமலேயே வாங்கி வந்தது சாக்ஷிக்கு தாயுமானவனாக தன் அண்ணன் பார்த்துக் கொள்வார் என்று மனம் பூரிப்படைந்தது.

அதன்பின் காரியங்கள் மளமளவென்று நடக்க நல்ல முறையில் சடங்கு ஏற்பாடுகளை கவனித்து முன்னின்று நடத்தினார் அபரஜித். பார்வதி பெண்குழந்தைகள் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று சாக்ஷிக்கு வழிநடத்த… தந்தை அபரஜித்துக்கு மகள் மட்டுமே வாழ்க்கையாகிப்போனாள்.

அதற்காக அவர் செய்த முதல் காரியம் தான் பார்த்துக் கொண்டிருந்த ஆராய்ச்சி பணியை ராஜினாமா செய்துவிட்டு பிரபல பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்து விட்டார்.

அவர் கடைசியாக முயற்சி செய்த பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய உலோகத்தன்மையையும்… கெட்டுப்போன மண்வளத்தை உயிர்ப்புள்ளதாக மாற்றும் திரவ மாதிரிகளை அது சம்பந்தப்பட்ட கோப்புகள் அனைத்தையும் அழித்து விட்டார்(இதுவே அவரது வாழ்க்கையில் எடுத்த முற்றிலும் சுயநலமான முடிவு). ஏனென்றால் அன்று அனுவின் ஃபோன்காலை எடுக்கவிடாமல் செய்த இந்த வேலையின் மீது அவ்வளவு வெறுப்பு ஏற்பட்டது. கடைசி முறையாக என் அனுவிடம் பேச கூட முடியாமல் செய்து விட்ட இந்த வேலையே தனக்கு வேண்டாம் என்று முடிவு செய்து தான் ராஜினாமா செய்தார்.

“ஆனால் அவரும் அறியாமல்…..அவர் உருவாக்கிய திரவங்களின் மூலக்கூறுகளின் மாதிரியின்…ஒரு அச்சு….அவரது கணிணியின் மெமரிசிப்பில் பதிவாகி இருந்தது. கூடவே இன்னும் பல பிரச்சனைகளையும் உருவாக்கியது….”.

அதன்பின்பு வாழ்க்கை தெளிந்த நீரோடையாக செல்ல… சாக்ஷி தனது கல்லூரி வாழ்க்கையில் நுழைந்தாள்… சைராவுக்கு சாக்ஷி என்றால் உயிர்… “சஷிக்கா..” என்று கூறிக்கொண்டு அவள் பின்னாலேயே சுற்றுவாள்… சாக்ஷிக்கும் ஒருநாள் கூட சைருக்குட்டியை பார்க்காமல் இருக்க முடியாது… இப்படி வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருந்த போதுதான் சாக்ஷியின் வாழ்க்கையில் காதல் நுழைந்தது… கூடவே கனவிலும் நினைத்து பார்க்க முடியாத பிரச்சனைகளையும் இழுத்து வந்தது…

காதல் திருமணம் செய்து கொண்ட அபரஜித்தே சாக்ஷியின் காதலை முழுமனதாக எதிர்த்தார்….

“ஏனென்றால் மகள் காதலித்தவன் வேற்று இனத்தவன் அல்ல…

வேற்றுகிரகவாசியை..!!!”….

இந்த உண்மை இன்று வரை மகேஸ்வரன் குடும்பத்திற்கும் இந்த உலகத்திற்கும் தெரியாமல் பாதுகாத்து வருகிறார் அபரஜித்….

மறுநாள் அவரது கல்லூரிகாலத்து நண்பர் ஒருவருக்கு… அரிய வகை ரத்தமான பி-நெகட்டிவ் ரத்தம் தேவைப்பட… மறுநாள் அறுவை சிகிச்சை என்ற நிலையில்… அதே ரத்த வகையை சேர்ந்த அபரஜித்துக்கு தகவல் வர… உடனடியாக பெங்களுரூ புறப்பட்டு சென்றார் அவர்.

 அத்தியாயம்-12 :                                         

ஆயிற்று இதோடு ஒரு வாரம் ஆயிற்று,ஹுமேஷி சைரவாவை பார்த்து பேசி…. சைராவுக்கும் இது கஷ்டமாகத்தான் இருந்தது. அரசாங்கத்துடன் போடப்பட்ட ஒப்பந்தந்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே அனைத்து சாம்ப்பிள்களையும் தயார் செய்து அமைச்சரின் பாராட்டையும் பெற்று கொடுத்துவிட்டான் ஹுமேஷி. தாவரங்களின் வளர்ச்சியும் அற்புதமாக இருந்தது.

கடந்த ஒரு வாரமும் அனைவரையும் விடாது வேலை வாங்கி சாதித்து காட்டினான். டிஎன்ஏக்களை மாற்றி அமைத்து இத்தனை நாட்களாக எதிர் கட்சியின் கை கூலியாக இருந்து வேலையை இழுத்தடித்த ஸ்டீபன் சாரயும் கையும் களவுமாக பிடித்து அனைவரின் முன்பும் அவரது முகத்திரையையும் கிழித்து எறிந்து விட்டான்.

அனைத்தையும் செய்தாலும் சைராவிடம் மட்டும் அவன் ஒரு வார்த்தை கூட பேச முற்படவில்லை. இனி அவளாக அவளது விருப்பத்தோடு மட்டுமே தன்னிடம் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான் ஹுமேஷி. நடப்பது அனைத்தும் ஏற்கனவே ஹுமேஷியின் புறம் சாய தொடங்கியிருந்த சைராவின் மனதை… முற்றிலும் அவன்பால் சாய வைத்தது.

“பெரிய இவன் ஒரு தடவை வேணாம்னு சொல்லிட்டா திரும்பியே பார்க்கமாட்டாறாமா?…. அவனவன் காதலுக்காக என்னென்ன பண்ணிகிட்டுருக்கான்….???இவர் என்னடான்னா விட்டா போதும்னு இருக்காரு. அன்றைக்கு காதல சொன்னது கூட ஏதொ ஆக்சிடென்டா நடந்துருக்கும்னு நினைக்கிறேன்…”

இவ்வளவையும் மனதிற்குள் பேசுவதாக நினைத்து கொண்டு பக்கத்தில் அமர்ந்திருக்கும் சௌமியையும் மறந்து சத்தமகாவே பேசி விட்டாள் சைரா.

“ஹேய் சைரூ…. கள்ளி …..என்னடி சொல்ற ? இந்த பூனையும் பால் குடிக்குமாங்கற மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு இப்பொ பீரே அடிக்கும்னு நிருபிசுட்டியேடி…” என்று குதூகலிக்க…

இவர்கள் பேசிய அனைத்தும் ஹுமேஷியின் காதுகளில் நன்றாகவே விழுந்தது. ஏனென்றால் இவர்களுக்கு முன்னால் இருந்த வரிசையில் தான் அவன் அமர்ந்திருந்தான்.

பார்த்திபனின் அரசியல் நண்பர் ப்ராஜெக்டின் வெற்றியை கொண்டாடும் விதமாக பிரபல நட்சத்திர ஹோட்டலில் இவர்களது குழுவிற்க்கு  விருந்து ஏற்பாடு செய்திருந்தார். முதலில் மரியாதை நிமித்தமாக அமைச்சர்  பார்த்திபனையும் ஹுமேஷியையும் பாராட்டி பேசி விட்டு அமர்ந்து விட அடுத்து பார்த்திபன் பேசும் போதுதான் …. தனக்கு முன்னிருக்கையிவ் அமர்ந்திருந்த ஹுமேஷியையே பார்த்துக்கொண்டிருந்த சைரா…. உளற ஆரம்பித்தாள்.

அவள் பேசியதை கேட்ட ஹுமேஷிக்கு வானத்தில் பறப்பது போல் இருந்தது. எங்கே அவள் தன் காதலை ஒதுக்கொள்ளவே மாட்டாளோ என்ற பயத்திலையே உழன்றவனுக்கு… சைரா தன் மீது உரிமையாக பேசியது வானை நோக்கி சிறகடிக்க வைத்தது.

“பாவி இத்தனை பேர் இருக்கற இடத்துல சொல்ராளே….இத தனியா மட்டும் சொல்லி இருந்தா இன்னேரம் என் மடில வச்சு கொஞ்சிட்டுருப்பேனே” என்று நினைத்தவன்….சைராவின் புறம் திரும்பி பரிதாபமாக ஒரு பார்வையையை பார்த்து வைக்க அவனது பார்வை புரியாமல் முழித்தாள் சைரா.

புரிந்து கொண்ட சௌமிக்கோ சிரிப்பை அடக்குவது பெரும்பாடாக ஆயிற்று.  அவளின் சிரிப்பை அறிந்து கொண்ட சைராவோ “லூசு இப்போ ஏண்டி சிரிக்கிற?” என்று அவள் தொடையில் கிள்ள…..

“ஒருத்தர் லேப்ல காதலை சொன்னாரு… இன்னொருத்தி ஒரு நூறு பேரை சுத்தி வச்சுகிட்டு தனக்கு தானே காதலை சொல்றா… இதுங்க ரெண்டும் காதலிச்சு உருப்பட்ட மாதிரிதான்” தனது பாணியில் கலாய்க்க, சிரிப்பதிற்க்கு பதிலாக சைராவின் முகம் சிவக்க ஆரம்பித்தது.

 “ஹேய் சைரு வெட்கப்படுறியாடி? கன்னம் எப்படி சிவந்துருச்சு பாரேன்….. எதுனாலும் சொல்லிட்டு செய்டி…… எனக்கு நெஞ்சே வலிக்கற மாதிரி இருக்கு” என்ற சௌமியின் வியப்பில் ….தன்னை அடக்க முடியாமல் திரும்பி …..சைராவின் முகத்தை பார்த்தான் ஹுமேஷி.

அவன் தன்னை பார்த்ததும் சைரா மேலும் வெட்கப்பட்டு தலை குனிந்து கொள்ள, ஹுமேஷியால் பேசாமல் இருக்க முடியவில்லை. “ஸை…” ரு என்று அவன் அழைக்கும் முன்….. அவன் அருகில் அமர்ந்திருந்த விக்ரம் “சார் … அடுத்து உங்களதான் கூப்பிட போறாங்க” என எச்சரிக்க , நிமிர்ந்து அமர்ந்தான் ஹுமேஷி.

சௌமியாவின் புறம் திரும்பிய விக்ரம்..” ஹேய்.. ஓட்ட டப்பா கொஞ்ச நேரம் வாய மூடிகிட்டு சும்மா இருக்க மாட்டியா?” என்று கூறி விட்டு…..

சைராவிடம் “ சாரி சைரா.. அடுத்து நம்ம சார் தான் பேசனும் அதனால தான் அவரை இந்த பக்கம் திருப்பினேன் “ என்று கூறி கொண்டு இருக்கும் போதே…. ஹுமேஷியை அழைத்துவிட்டார் பார்த்திபன்.

எப்பொழுதும் மிடுக்குடன் நடக்கும் ஹுமேஷியின் நடையில் இன்று மேலும் அழகு கூடியது போல் இருந்தது சைராவிற்கு. முழு வெள்ளை நிற ப்ளேசர் அணிந்திருந்தான். மேடையில் அவன் நின்றிருக்கும் போது மேடை சிறியதாக தெரிந்தது சைராவுக்கு.

“அனைவருக்கும் வணக்கம்” தெளிவான தமிழில் அவன் ஆரம்பித்தது மட்டுமே சைராவுக்கு தெரியும். அதன் பின் அவன் என்ன பேசினான் என்பதே அவளுக்கு தெரியாது. அவள் தான் அவனுடன் தனி உலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தாளே, அப்போது சௌமியா அவளை இடித்து…..

“சைரு.. “

“ஹ்ம்ம்”

“சைரு… “

“சொல்லுடி”

“ நம்ம வேணுனா சேர் மேல ஏறி உட்கார்ந்துகலாமா?” சௌமி கேட்க

“எதுக்குடி” சைரா அவளை சந்தேகமாக பார்க்க

“இல்ல நீ விட்ட ஜொள்ளுல இப்போவே சேர் கால் வரைக்கும் தண்ணி வந்துருச்சு… முழுசா வர்றதுக்குள்ள தப்பிச்சுடலாமேன்னுதான்” என்று சிரிக்காமல் கூற….

முன்னால் அமர்ந்திருந்த விக்ரம்… “ இதை கேட்டு சிரிப்பை அடக்க முடியாமல்… ” கைகுட்டையால் வாயை மூடிக்கொண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.

சௌமியாவை சைரா பார்த்த பார்வையில் அவள் பார்வைக்கு மட்டும் எறிக்கும் சக்தி இருந்திருந்தால் தன் பார்வையாலேயே எரித்திருப்பாள் சைரா.

இது அனைத்தையும் மேடையிலிருந்து தன் காதலியை பார்த்தவாறே பேசிக்கொண்டிருந்தான் ஹூமேஷி. சௌமியா ஏதோ சொல்லி கலாய்த்துக் கொண்டிருப்பது நன்றாகவே தெரிந்தது.

ஹூமேஷியின் பார்வை இங்கேயே இருப்பதை பார்த்த சௌமி……                               ” டீ..சரா..மேடையும் சேர்ந்து தான்டி மிதக்குது.. அங்க பாரு…. சார் பார்வையும் இங்கதான் இருக்கு” என்று சொல்லி சிரித்துக் கொண்டே இருக்க…கடுப்பான சைராவோ….”சௌமி நான் கொஞ்சம் ரெஸ்ட்ரூம் வரைக்கும் போய்ட்டு வர்றேன்” என்றவாறே எழ…

“ஏன் மாப் எடுத்துட்டு வந்து துடைக்க போறியா??…” என்று சௌமி மேலும் வாற, இருக்கையில் இருந்து எழுந்து சென்று விட்டாள்.

“‌ஹேய் இருடி நானும் வரேன்” என்று சௌமியாவும் எழ ஆரம்பித்தாள்.

“பரவாயில்லை சௌமி..நீ உட்காரு… சைரா பார்த்த பார்வையில் மகளே.. நீ அங்க வந்த சட்னி தான் ” என்ற சேதி இருந்தது. அதன் பிறகும் அவள் பின்னால் செல்ல சௌமியாக்கு தைரியம் வரவில்லை.

“கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டமோ…?” மனதுக்குள் சொல்வதாக நினைத்து… வாய்விட்டு சொல்லிவிட… அவள் பேச்சை கேட்டு நன்றாகவே சிரிக்க ஆரம்பித்தான் விக்ரம்….

சைரா செல்லவும் ஹூமேஷி மேடையை விட்டு இறங்கவும் சரியாக இருந்தது. அனைவரும் கலைந்து சென்று உணவுக்கூடத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். சைரா வருவதற்காக விக்ரமும் சௌமியாவும் பேசிக்கொண்டு காத்திருக்க ஆரம்பித்தனர்.

நேராக அவர்கள் இருக்குமிடம் நோக்கி வந்தவன் ” மிஸ்.சௌமியா சரா எங்க போயிருக்கா?” என்று கேட்க….

“உங்க சரா முக்கியமான வேலையா போயிருக்கா சார்” சிரித்துக்கொண்டே கூற…

“சௌமி… ஒழுங்கா பதில் சொல்ல மாட்டியா?” என்று கடிந்து கொண்ட விக்ரம்….

 “ஹூமா.. அவங்க ரெஸ்ட்ரூம் தான் போய்ருக்காங்க.. இப்போ வந்துடுவாங்க” என்று விக்ரம் கூறி முடிக்குமுன்னயே வெளியே சென்று விட்டான் ஹூமேஷி.

“சரி.. வாங்க விக்ரம் சார்… நம்ம போய் சாப்பிடலாம்.. எப்படியும் அவங்க இனி ஜோடியா வந்துதான் சாப்பிடுவாங்க..தந்தூரி சிக்கன் வாடை எனக்கு இங்க வரைக்கும் வருது” என்று கூறிவிட்டு முன்னே பஃபேயை நோக்கி நடக்க….

“சரியான சாப்பாடு ராமி..”என்று தலையில் அடித்துக்கொண்டே அவளோடு சென்றான் விக்ரம்.

அங்கு சைரா ஹோட்டலின் பின்புறம் இருந்த தோட்டத்தின் அழகில் மயங்கி நின்றிருந்தாள். அவளுடைய மனநிலையும் மிகவும் மகிழ்ச்சியோடு இருந்ததாலோ என்னவோ சாதாரணமாக அமைக்கப்பட்டிருந்த தோட்டமே வெகு அழகாக தெரிந்தது அவளது கண்களுக்கு.

“சரா…” என்று ஹூமேஷியின் குரல் சற்று தூரத்தில் கேட்க, அவனை உடனே எதிர்கொள்ள முடியாது…. ஓடிச்சென்று மரத்தின் பின்னால் ஒளிந்து நின்று கொண்டாள் சைரா.

“பேபிடால்…” மரத்திற்கு அருகில் அவனது குரல் கேட்டது. சைராவிற்கு இதயம் தொண்டைக்குழியில் சிக்கிக்கொண்டது போன்ற உணர்வு.

“சரா என்கிட்ட பேசமாட்டியா?” ஹூமேஷியின் குரல் அத்தனை மென்மையாக ஒலித்தது.

“….” சைரா அமைதியாகவே நின்றிருந்தாள்.

“சௌமியாகிட்ட பேசினதை என்கிட்ட பேசமாட்டியா பேபிடால்…” என்று வினவ

அதற்கும் மௌனமே பதிலாக கிடைத்தது. நீ இங்கதான் நின்னுட்டுருக்கனு எனக்கு தெரியும் சரா. இங்கபாரேன் உன்னோட ஷால் காத்துல பறந்து என் மேல மோதுது.

“பேசு பேபி டால்…என்மேல உனக்கு இன்னும் கோபம் போகலையா?.. தெரியாம செஞ்சிட்டேன்.. என்னை மன்னிச்சுக்கோ பேபிடால்… இனிமேல் உன்னோட அனுமதி இல்லாம உன்னோட ரூம்க்கு வர மாட்டேன்… அனுமதி கேட்டே வரேன் சரா…” என்றுகூற…

“எப்படி பேசறான் பாரு.. அப்ப கூட வராம இருக்கமாட்டானாமா…?? அனுமதி கேட்டு வருவானாம்….” மனதிற்குள் நினைத்து சிரித்துக்கொண்ட சராவுக்கு அவனுக்கு பதில் கொடுக்க வெட்கமாக வந்தது…

அவளிடம் இருந்து மௌனமே பதிலாக வர…

“ஏதோ தெரியாமல் தோழியிடம் உளறிவிட்டாள்.. அவளுக்கு இன்னும் தன்மேல் கோபம் குறையாததினால் பேச மறுக்கிறாள்..” என்று நினைத்த ஹூமேஷியோ….

“என்னை மன்னிச்சுக்கோ சரா.. நீ அமைதியா இருக்கும் போதே புரியுது.. உனக்கு என்மேல இன்னும் கோபம் குறையலனு.. நான்தான் உனக்கு கால அவகாசம் குடுக்காம வழக்கம்போல அவசரப்பட்டுட்டேன்…

ஒரு வாரத்துக்கு மேல என்னால தாக்கு பிடிக்க முடியலை… உன்ன பக்கத்துல வச்சுகிட்டே பேசாம இருக்கறது ரொம்ப கொடுமையா இருக்கு… உன்னை தொந்தரவு பண்ணல… நான் கிளம்புறேன்” என்று ஏக்கத்தோடு மரத்தை பார்த்துவிட்டு நடக்க ஆரம்பிக்க….

அவன் செல்லப்போகிறான் என்று தெரிந்ததும் சைராவின் கால்களுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு வலு வந்ததோ… அவன் பின்னேயே சென்று

“அச்சோ.. ஓஜோ நில்லுங்க…” என்று கூற, இன்பமாக அதிர்ந்தான் ஹூமேஷி.

அவன் தன்னை பார்த்ததும் வெட்கம் வர, தலையை குனிந்து கொண்டவாறே….

“நான் ஒண்ணும் உளறல…உண்மையாதான் கேட்டேன்.. நானும் உங்களை காதலிக்கிறேன்…” என்று கூற, எந்த உரிமையை அவள் கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்தானோ அதை அவள் வாயால் கேட்டே விட….

“சரா மை பேபிடால்” பொது இடம் என்றும் பாராமல் சைராவை இறுக்கி  அணைத்துக்கொண்டான் ஹூமேஷி. சைராவுக்கும் இப்பொழுது மனதில் எந்த சலனமும் இல்லை. அவளும் அவனை அணைத்துக்கொண்டாள்.

“சரா என் காதல ஏத்துகிட்டியா ..என்னை நீ வெறுத்திட்டியோன்னு நான் ரொம்ப மனசு கஷ்டப்பட்டேன்” என்று கூற…

“மனசு கஷ்டப்படறவர்தான் என்கிட்ட ஒருவாரமா பேசாம இருந்தீங்களா?” என்று கேட்க…

அவளுடைய இந்த வார்த்தைகள் அவனுக்கு எவ்வளவு நிம்மதி அளித்தது என்பதை அளவிட முடியாது என்பதை… அவன் உணர்ந்தே இருந்தான்.

“உனக்காகத்தான்… உன்னை கஷ்டப்படுத்திட்டோமேன்னுதான் பேபிடால் பேசாம இருந்தேன்” என

“ஹ்ம்ம்.. இதெல்லாம் ச்சும்மா என்மேல அவ்வளவு காதல் இருந்திருந்தா உங்களால பேசாம இருந்திருக்க முடியாது… ” என்று கூறி வேண்டுமென்றே வம்பிழுக்க

“ஹேய்… இது அநியாயம் பேபிடால் நீதான கோபிச்சுகிட்டு என்கூட பேசாம வெளியபோன?.. உனக்கு நான் பேசுனது பிடிக்கலன்னுதான்… நான் அமைதியா இருந்தேன்… அதுவும் எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா??”…..

தனக்காகவா அவன் இவ்வளவு வருந்தினான்….. சைராவின் மனத்தில் சொல்லணா உணர்வு தோன்றி மறைந்தது. அவன் மனதை மாற்றும் பொருட்டு அவள் பேச்சை மாற்றினாள்.

“அதென்ன என்னை பேபிடால் கூப்பிடுறிங்க?” நான் டால் மாதிரியா இருக்கேன்..

“இல்லடா பேபி… ” சைரா அவனைப் பார்த்து முறைக்க…

“நீ டால்ல விட அழகா இருக்க சொல்ல வந்தேன்” என்று ஹூமேஷி கூற…அவனது நெஞ்சில் நன்றாக சாய்ந்து கொண்டே…

“வழியுது துடைச்சுக்கோங்க” என்று சைரா கிண்டலடிக்க…

“எங்க துடைக்கனும் சொல்லு பேபிடால்” என்று ஹூமேஷி காரியத்தில் கண்ணாக கேட்க….

“டீ சைரா… ஒண்ணும் தெரியாதப்பவே ரூம்குள்ள வந்துட்டு போனவன்.. இவன்கிட்ட நீ கொஞ்சம் ஜாக்கிரதையாதான் பேசனும்” என்று மனசாட்சி எடுத்துரைக்க….

“அதெல்லாம் ஒண்ணும் துடைக்க வேணாம்” என்று விலக எத்தனிக்க….

“சரி பேபிடால் நான் துடைக்க மாட்டேன்.. நீ இப்படியே நின்னுக்கோ” என்று சரணடைய

“நான் பேபிடாலா.. நீங்க தான் பூனைக்கண்ணு வச்சுகிட்டு டால் மாதிரி ஹேன்ட்சமா டாலா  இருக்கீங்க” என்று கூற, ஹூமேஷிக்கு அவளை இப்பொழுதே முத்தமிடும் ஆவல் வந்தது. அதை அவன் சைராவிடம் கேட்கவும் செய்தான்,

“பேபிடால் ஒரே ஒரு கிஸ் பண்ணிக்கலாமா?” என்று ஆசையோடு கேட்க, விஷயம் விபரீதமாவதை உணர்ந்த சைரா

“ஓஜோ பேபி… இப்போ வேண்டாமே..இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்” என்று கூற…

ஹூமேஷியோ “கன்னத்துலயாவது கொடுக்க விடேன் பேபிடால் ப்ளீஸ்டா” என…

“அடப்பாவி அப்போ முதல்ல எங்க கிஸ் குடுக்க நினைச்சீங்க?” ஹூமேஷி தன் இதழ்களை காமிக்க…

“ஓஜோ பேபி… சரியான ஃப்ராடு நீங்க” அவன் அணைப்பில் இருந்தவாறே விடுபட துள்ள ஆரம்பிக்க….

“லவ் யூ பேபிடால்” என்றவாறே தன் காதலியின் இதழ்களை சிறை செய்தான் ஹூமேஷி.

எவ்வளவு நேரம் நீடித்ததோ..”சைரா” என்ற சௌமியின் குரலில்…. இதழ்சாகரத்திலிருந்து வெளியே வந்து பிரிந்து நின்றனர் இருவரும். முதலில் சுதாரித்த சைரா தடித்திருந்த இதழ்களை சரி படுத்தியவாறே…

“இதோ வரேன்டி” என்று குரல் கொடுக்க ….

சைராவின் குரல் கேட்டதும்….இங்கிதம் கருதி சற்று தூரமாக அங்கேயே நின்று விட்டாள் சௌமி.

“சௌமி அங்கேயே நின்னுட்டா. நீ கொஞ்சம் நேரம் இரு சரா” என்று ஹூமேஷி கையைப்பிடித்து இழுக்க….

“உதை வாங்கப்போறிங்க.. எல்லாரும் தேட ஆரம்பிச்சுடுவாங்க… வாங்க போகலாம்” சைரா கிளம்ப எத்தனித்தாள்.

“என்னைவிட உனக்கு அவங்கதான் முக்கியமா?” ஹூமேஷி மூஞ்சியை தூக்கி வைத்துக் கொள்ள…

“ஓஜோ பேபி… நாம வந்து ஒரு மணி நேரத்துக்கும் மேல ஆச்சு.. எனக்கு பசிக்குதுங்க…. வாங்க சாப்பிட போகலாம்” என்று சாமர்த்தியமாக பேச்சை மாற்ற…. சைராவின் அந்த யுத்தி நன்றாகவே வேலை செய்தது.

அவளுக்கு பசி என்றதும் அனைத்தும் மறந்து போனது ஹூமேஷிக்கு.

“வா சரா நாம சாப்பிட போகலாம்” என்று அவளை இழுத்துக் கொண்டு சௌமியா நின்றிருந்த இடத்திற்கே அழைத்து வந்து விட்டான்.

“சாரி சார்.. நீங்க ரெண்டு பேரும் வந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சு. பார்த்திபன் சார் வேற உங்களை தேடிக்கிட்டு இருந்தார். அதான் நான் இங்கே வந்தேன்” என்று சௌமியா கூற,

“அதனால ஒண்ணும் பிரச்சனையில்லை….ரொம்ப நன்றி சௌமியா..” என்று அவளுக்கு நன்றி உரைத்து விட்டு….

சைராவின் புறம் திரும்பிய ஹூமேஷி….

“அப்போ நான் முன்னே அங்க போகட்டுமா சரா? நீ சௌமி கூட வர்றியா?” என்று அவளது அனுமதிக்காக காத்திருக்க….

சைராவும் “ம்ம்… “என்று தலையசைக்க, அவளிடம் விடைபெற்ற ஹூமேஷி தனது வேகநடையுடன் முன்னே செல்ல, நடப்பதை பார்த்த சௌமியாவிற்கு பேச்சே வரவில்லை.

சைரா ஹூமேஷி செல்வதையே பார்த்து கொண்டிருக்க அவளது கையில் நறுக்கென்று கிள்ளினாள் சௌமியா.

“டீ பிசாசே… ஏன்டி இப்போ என் கையில கிள்ளுன?” என்று சௌமியை முறைக்க….

“நான் பார்த்தது கனவா நனவான்னு கிள்ளி பாத்தேன்டி”

“அதுக்கு உன் கைல கிள்ள வேண்டியதுதான … என் கைல ஏன்டி கிள்ளுன?” சைரா கேட்க

“ஹூமேஷி சார் உன் உதட்டுலயே கிள்ளிருக்காரு… நா கைலதானடி கிள்ளுனேன்” என்று சொல்லி விட்டு சௌமி ஓட ஆரம்பிக்க… அவளை துரத்திக்கொண்டு ஓடினாள் சைரா.

ஓடிக்கொண்டே அவர்கள் உணவுக்கூடத்தை அடைந்துவிட பார்த்திபனுடன் பேசிக் கொண்டே சாப்பிட்டுக்கொண்டு இருந்தான் ஹூமேஷி. பேச்சு அவரிடம் பேசினாலும் கண்கள் உள்ளே நுழைந்த சைராவையே வட்டமிட்டது.

சைரா‌உள்ளே நுழைந்ததுமே, “மேடம் “என்று பஃபேயில் நின்றிருந்த ஒருவன் அழகான மூடி கொண்டு மூடப்பட்ட ஒரு தட்டை அவளிடம் நீட்டினான். ஓஜோ சார் குடுக்க சொன்னாரு….

சைரா அதை திறந்து பார்க்க ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் உள்ளே இருந்தது. சைரா நிமிர்ந்து ஹூமேஷியை பார்க்க அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். கண்களாலேயே உனக்காகத்தான் என்ற சேதி சொல்ல… கேக்கின் இனிப்பு உள்ளத்திலும் சேர்ந்து பரவியது.

அத்தியாயம்-13 :                                                

அமைச்சரின் விருந்தில் கலந்து கொண்டு வந்திருந்த மறுநாள் சைராவிற்கு ஆசையும் எதிர்பார்ப்போடும் கலந்த ஒரு நாளாக விடிந்தது. படுக்கையை விட்டு எழுந்ததும் ஹூமேஷியின் நினைவுதான்.அவனை பார்த்தால் மட்டும் முகத்தில் தானாக வந்து ஒட்டிகொள்ளும் வெட்கத்தை எப்படி அடக்குவது என்று புரியாமல் இருந்தாலும் மனதிற்குள் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு வாரத்திற்கு முன்பு இருந்த மனநிலை எப்படி இவ்வாறு மாறியது என்று அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.

எப்பொழுதும் எழுந்ததில்  இருந்து சக்கரமாய் சுற்றி கொண்டு ஆர்ப்பாட்டமாக கிளம்பும் மகள்….. மிகவும் அமைதியாகவும் ஏதோ ஒரு பாடலை முனுமுனுத்துக் கொண்டே கிளம்புவது…. சமைலறையில் வேலை பார்த்து கொண்டிருந்த பார்வதிக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

“சூரியன் ஏதும் மேற்கே உதித்து விட்டதா?” பார்வதி வேகமாக சாளரத்தின் திரைச்சீலைகளை விலக்கி பார்க்க….

அன்னையை கவனித்த சைரா “என்னம்மா…. என்ன எட்டி பார்த்துட்ருக்கீங்க?” என்று கேட்க

“சூரியன் மேற்க உதிச்சுடுச்சோன்னு பார்த்தேன்டா குட்டிமா…” என்று சிரித்துக் கொண்டே கூற

அன்னையின் சிரிப்பில் ஏதொ உணர்ந்து கொண்டவள்,”பாரு பேபி… என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே?” அன்னையின் கழுத்தில் தொங்கியவாறே கேட்க….

“கையை எடுடி சின்னபுள்ள மாதிரி தொங்கிகிட்டு ….” மகளை முன்னால் இழுத்த பார்வதி….

அவளது தாடைய பிடித்து ஆட்டிக்கொண்டே “எங்க வீட்டு குட்டி கழுதை ஆர்ப்பாட்டமில்லாமல் வேலைக்கு கிளம்புதே அதனால்தான் மேற்க சூரியன் உதிச்சுட்டதோன்னு எட்டிப்பார்த்தேன்…” பார்வதி சைராவை வம்பிழுக்க…

“ம்மா….” என்று பார்வதியின் தோளில் சைரா தனது முகத்தை புதைத்துக்கொள்ள….

பார்வதிக்கோ மகளின் நடவடிக்கைகள் வித்தியாசமாக பட்டாலும்…

“அச்சச்சோ என்னங்க…என்னங்க ” என்று மகேஸ்வரனை கூப்பிட….

“பாருபேபி….இப்போ அப்பாவை ஏன் கூப்பிடற” என்று சைரா கேட்டு முடிக்கும் முன்பே ஓடி வந்திருந்தார் மகேஸ்வரன்.

அவரை பார்த்ததும் இருவராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை… ஏனென்றால் பார்வதி இரண்டு முறை அழைத்ததும் பதட்டத்தில் முகத்திற்கு ஷேவிங் கிரீம் போட்டுக் கொண்டு ஷேவ் செய்து கொண்டிருந்த மகேஸ்வரன்…பாதி ஷேவ் செய்த கையோடு  அப்படியே வந்திருந்தார்.

“என்னங்க… இப்படி வந்து நிக்கறீங்க..??” பார்வதிதான் முதலில் சிரிப்பதை நிறுத்திவிட்டு கேட்டார்.

“என்ன ரெண்டு பேரும் விளையாடுறிங்களா…?? ” என்ற மகேஸ்வரன் சற்று கோபத்துடனே பேசினார்…

“நீ ரெண்டு தடவை கூப்பிட்டதும் என்னமோ ஏதோன்னு ஓடி வந்து நின்னா அம்மாவும் பொண்ணும் விளையாடுறிங்களா…??”

பார்வதியிடம் கலாட்டா செய்து பார்க்க விரும்பிய சைரா… மகேஸ்வரனின் அருகில் வந்தவள்.. அவரின் இடது கையில் தனது வலது கையை நுழைத்துக் கொண்டு…

“அப்பா… நான் நீங்க பிஸியா கிளம்பிட்டுருப்பிங்க வேணான்னுதான் சொன்னேன்பா… ஆனால் இந்த பாருபேபி தான் சும்மா இல்லாம… அதெல்லாம் உங்கப்பா பிஸிலாம் ஒண்ணுமில்லை… நாம அவர்கூட கூப்பிட்டு விளையாடற விளையாட்டு விளையாடலாம்னு சொன்னாங்கப்பா…” என்று கூற… மகளின் விளையாட்டை புரிந்துகொண்டவர்… அவரும் மகளுடன் சேர்ந்து…

“அப்படியா பார்வதி…???” உள்ளூற ஒரு உதறல் எடுத்தாலும்.. என்று கேட்டுவைக்க…

பொங்கி விட்டார் பார்வதி…

“என்னைப்பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது… என்னைக்கும் இல்லாத திருநாளா உங்க மகள் இன்னைக்கு அமைதியா கிளம்புறாளே… உங்ககிட்ட கூப்பிட்டு சொல்லலும்னு பார்த்தா… என்னையவே அப்பாவும் மகளும் சேர்ந்துகிட்டு கலாய்க்கிறிங்களா…?? இன்னைக்கு உங்க ரெண்டு பேருக்கும் மதிய சாப்பாடு கிடையாது… கேண்டின்ல போய் கொட்டிக்கங்க…” என்று கூறிவிட்டு அடுக்களையை நோக்கி நகர்ந்தவர்…

திரும்பி சைராவை பார்த்து…

” உனக்கு இன்னைக்கு கருகினதோசை தான் மகளே…” என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார்.

“அய்யோ.. பாருபேபிக்கு நிஜமாவே கோபம் வந்துருச்சுப்பா‌.. ” என்று அமைதியாக நின்றிருக்கும் தந்தையை உலுக்க…

“சைருக்குட்டி … இன்னைக்கு நண்டு குழம்பு பண்ணனும்னு நேத்து நைட்டே சொன்னாடா… என்று நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டே மகேஸ்வரன் மெதுவான குரலில் சொல்ல…”

“ஓ.. அப்போ விடக்கூடாதுப்பா.. நம்மள விட்டு பாரு பேபி சோலோவா குழம்ப அடிச்சுர்னும்னு பிளான் பண்ணிட்டாங்கப்பா…. ” சைரா கத்த…

“கொஞ்சம் மெதுவா பேசு சைருகுட்டி…”மகேஸ்வரன் எச்சரித்தார்.

“அம்மா.. அடுக்களைக்குள்ள போய்ட்டாங்கப்பா” சைரா இப்போது கிசுகிசுக்க…

“உங்கம்மாக்கு பாம்பு காது மகளே…” மகேஸ்வரன் கூற.. வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள் சைரா…

“விடக்கூடாதுப்பா… மிஷன் சமாதானத்தை உடனே ஆரம்பிங்கப்பா…எனக்கு நண்டு குழம்பு வேணும் ” சைரா மகேஸ்வரனை தூண்டிவிட…

உள்ளே குழம்பிற்காக மிக்ஸியில் மசாலா அரைத்துக் கொண்டிருந்தார் பார்வதி.

“மசாலா வாடையே சூப்பரா இருக்குப்பா.. எப்படியாச்சும் கரெக்ட் பண்ணுங்கப்பா…” என்று அவரை முன்னே தள்ளி கட்டைவிரலை உயர்த்திக் காண்பித்து அவர் பின்னால் நின்று கொள்ள…

” பாரு டியர்..”…. மகேஸ்வரன் அழைக்க…

“….” எந்த எதிர்வினையும் இல்லை பார்வதியிடம்…

“மை டியர் பாரு….. இங்க பாரு….” என்று பார்வதியின் தோளைத்திருப்ப…

அடக்கிவைத்த சிரிப்பை அடக்க முடியாமல் கணவனின் முகத்தை பார்த்து சிரித்துவிட்டார் பார்வதி.

” ஹப்பாடி… எங்க நீ ரொம்ப கோபமா இருக்கிறியோன்னுட்டு பயந்துட்டேன் பார்வதி…” என்று கூறிக்கொண்டே மகள் இருப்பதை மறந்து பார்வதியை அணைக்க வர…

ஆனால் மகளை கவனித்திருந்த பார்வதியோ ” அய்ய.. முகத்துல கிரீமோட கிட்ட வராதிங்க…” என்று நகர்ந்து நின்று கொள்ள…

பார்வதியின் கண்கள் சேதி சொல்வதை உணர்ந்த மகேஸ்வரன் மகள் பின்னால் இருப்பதை புரிந்து கொண்டார்.

“பாருபேபி கோபம் போய்ருச்சா..”சைரா அன்னையை வந்து தொற்றிக்கொண்டாள்.

பார்வதியோ” போனாபோகுதுன்னு இன்னைக்கு ஒரு நாள் மன்னிச்சு விடறேன்… அதுவும் என் வீட்டுக்காரர்க்காக… உனக்காக இல்லை” என்று கூற…

விடுபவளா சைரா…” நீ என்மேல கோபமா இருந்தாலும் பரவாயில்லை பேபி… ” என்று இழுத்து அன்னையின் கன்னத்தில் முத்தமிட…

“குட்டி கழுதை…” மகளின் முத்தத்தில் மனம் நெகிழ்ந்து அணைத்துக்கொண்டார் பார்வதி.

“அது எப்படிப்பா உங்கள பார்த்தா மட்டும் பாருபேபி கோபம் செகன்ட்ல ஓடிருது… நீங்க இல்லேன்னா.. எவ்வளவு  சோப் போட்டாலும் பார்வதி மாதா கோபம் இறங்கவே மாட்டிங்குதே” என்று யோசிப்பதுபோல் பாவனை செய்ய…

யோசிக்கும்போதே சைராவின் மண்டை அதிர்ந்தது… பார்வதிதான் சைராவின் மண்டையில் கொட்டியிருந்தார்…

“ஏம்மா‌…” சைரா தலையைத்தேய்த்துக்கொள்ள….

“போதும்…போதும் ரெண்டும் பேரும் அரட்டை அடிச்சது.. போய் கிளம்புங்க.. இப்போவே நேரமாயிடுச்சு… ” என்று கூற…

“சரி வாங்கப்பா…இன்னைக்கு நான் உங்களுக்கு ஷேவ் பண்ணி விடறேன்..” என்று மகஸ்வரனை இழுத்துக்கொண்டு போனாள் சைரா…

“அப்பாக்கு உதவி பண்ற மாதிரி அம்மாக்கும் சமையல்ல உதவி பண்ணலாம்லடா… ” என்று மகேஸ்வரன் கூற…

“அச்சோ…ஏன்ப்பா இந்த விபரீத யோசனை உங்களுக்கு.. நம்ம நல்லாருக்குறது உங்களுக்கு பிடிக்கலயா…?? என்னுடைய சோதனைகளை நான் வளர்க்குற தாவரங்களே தாங்க மாட்டிங்குது… உங்களோட சின்ன வயிறு வெடிச்சுரும்ப்பா…” என்று சிரித்துக்கொண்டே அவரை நாற்காலியில் அமர வைத்தவள்..

காய்ந்த கிரீமை எடுத்துவிட்டு புது கிரீமை போட்டு ஷேவ் செய்து விட தயார் செய்ய…

” உனக்கு நேரமாகலையா…சைருக்குட்டி… ” விடுமுறை நாட்களில் மகள் செய்துவிடுவாள் என்றாலும் … இன்று நேரமாகிறதே…

“அதெல்லாம் ஒண்ணுமில்லை…  நீங்க ஆடாம உட்காருங்கப்பா…” என்று கூறியவள் அழகாக  ஷேவ் செய்து விட்டாள்.

சின்ன வயதில் விளையாட்டுக்காக செய்ய ஆரம்பித்த செயலை …. இன்றுவரை  மகள் விரும்பியே செய்வது மகேஸ்வரனுக்கு மகளை நினைத்து அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.

இங்கு தனது அறைக்கு வந்த சைராவுக்கு அன்று என்ன உடை உடுத்துவது என்று மனதுக்குள் போராட்டமாக இருந்தது.

அவள் வழக்கமாக அணியும் உடைகள் எல்லாம்… இன்று ஏனோ அவளுக்கு திருப்தியாக இல்லை… அவள் அணியும் உடைகள் பெரும்பாலும் ப்ளாசோ பேண்டும் ஒரு டியுனிக் டாப்பாகத்தான் இருக்கும்…

பார்வதி கூட எவ்வளவோ சொல்லிப் பார்த்து அலுத்து விட்டார்… ” ஏன்டி.. வித விதமா எவ்வளவு அழகான சுரிதார்… லாங் ஸ்கர்ட்…புடவைன்னு வாங்கி வச்சுருக்கேன்… எப்ப பார்த்தாலும் இந்த தொள தொள பேன்டும்… சாயம் போன சட்டையுமா போட்டுகிட்டு திரியனுமா…” என்று சாம தான பேத வழிகளில் சொல்லிப்பார்த்தும், சைராவின் ஒரே பதில்….

” பாருபேபி…எனக்கு இதுதான் போட்டுக்க கம்ஃபார்ட்டா இருக்கு…” என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுவாள்.

அந்த மட்டிலும் அவள் தலைமுடியை எதுவும் செய்யாததை நினைத்து திருப்தி பட்டுக்கொண்டார் பார்வதி. சைராவும் நீளமாகவும் இல்லாமல் குட்டையாகவும் இல்லாமல் அடர்த்தியாக அளவான நீளத்தில் வைத்திருந்தாள்.

எங்கே இவள் ஆண்பிள்ளைகளை போன்று முடியை வெட்டி விடுவாளோ என்று பயந்து மகேஸ்வரனிடம் இது பற்றி ஒருநாள் பேசிய போது… அவர் சொன்ன பதிலை பார்வதியால் மறக்கவே முடியாது.

” அப்படி வெட்டிக்கிட்டா என்னடி…??? என் மகள் பிரின்ஸஸ் டையானா மாதிரி இருப்பாளாக்கும்…” என்று பெருமையோடு காலரை தூக்கி விட்டுக்கொள்ள…

“ஷ்….ஷப்பா… இதுங்க பண்ற அலப்பறை தாங்க முடியலை…” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவர்… மகேஸ்வரனை ஒரு முறை முறைத்துக் கொண்டே

“உங்க மக டையானா மாதிரிதான் இருப்பா… ஆனா பிரின்ஸ் சார்லஸ் மட்டும் கிடைக்கமாட்டாரு…”  என்று கூறிவிட்டு எழுந்து சென்று விட… பார்வதியை சமாதானப்படுத்துவதற்குள் ஒரு வழியாகி விட்டார் மகேஸ்வரன்.

இன்று அதே உடைகளே சைராவிக்கு அணிந்து செல்ல பிடிக்கவில்லை. ஹூமேஷியை இன்று பார்க்கும் போது தான் அழகாக இருக்க வேண்டும் என்று மனது ஆசைப்பட்டது.

ஒருவழியாக உடையை தேர்ந்தெடுத்து விட்டாள். வெளிர் பச்சை நிறத்தில் கைகளால் நூல்வேலை செய்த டாப்பும் ஆலிவ் பச்சையில் கால்களில் முடிவில் வேலைப்பாடுகள் கொண்ட அந்த சுரிதார் போன பிறந்ததநாளுக்கு அபரஜித் அவளுக்கு அனுப்பி வைத்த பரிசு.

போன பிறந்தநாளுக்கு அவர் வராததால் அவர் மேல் எழுந்த கோபத்தில் அவர் அனுப்பிய பரிசை அப்படியே தூக்கி உள்ளே வைத்துவிட்டாள். அவர் கால் செய்த போதும் அவரிடம் பேசவில்லை. மகேஸ்வரனும் பார்வதியும் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அன்று முழுவதும் அவரிடம் பேசவில்லை. அதனால்தான் இந்த முறை ஒழுங்காக நேரில் வந்து சேர்ந்திருக்கிறார் என்று மனதுக்குள் நினைத்து சந்தோஷப்பட்டாள்‌.

அபரஜித்தை பற்றி நினைத்ததும் தான் ஞாபகம் வந்தது. நேற்றே பெங்களுரு சென்றிருப்பாரே… இன்னும் கால் செய்யாமல் இருக்கிறாரே என்று நினைத்தவள்…

“சரி குளிக்கப்போறதுக்கு முன்னாடி ஒரு தடவை கால் செஞ்சு பார்க்கலாம்….” என்று ஃபோனை தேட….

சரியாக அவள் ஃபோனும் ஒலித்தது…தலையணையின் அடியில் இருந்து…

“அபிமாமா தான் கால் பண்றாங்க போலயே…” என்று சந்தோஷமாக எடுத்துப்பாரக்க அழைத்ததோ சௌமியா…. அழைப்பை எடுத்து காதில் வைத்து

“ஹலோ… சொல்லுடி…” என்க…

“ஹலோ… மிஸ்.சரா இருக்காங்களா…” என்றாள் சௌமியா…

” ஓய்…கொழுப்பாடி… ” சைரா சிரிக்க….

” கொழுப்பு உனக்குதாண்டி இருக்கும்… கேக்க முழுசா மொக்குனது நீ தான்…. கூடவே நின்றிருந்தேனே…. இந்த செவ்வாழைக்கு…. கேக் மேல இருந்த செர்ரிபழத்தையாச்சும் எனக்கு குடுத்தியா… உன் ஆளு குடுத்த கேக்குன்னதும்… கழுதை மாதிரி கேக் ராப்பரையும் சேர்த்துதானடி சாப்பிட்ட…. நான்தான் பாவமே… நம்ம  போடற மொக்கையும் கேக்கறதுக்கு ஒரு ஆள் வேணுமேன்னு கடைசி நிமிஷத்துல ராப்பர பிடுங்கி குப்பையில போட்டேன்….” என்று பொரிந்துதள்ள…..

சைரா மெத்தையில் விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்… சிரித்துக்கொண்டே

“ஏன்டி ஒரு கேக்குக்காகவா… காலங்கார்த்தால ஃபோன் பண்ணி பஞ்சாயத்து வைக்கிற…. ”  என்று கேட்க…

“இனி பஞ்சாயத்து வச்சு என்ன ஆகப்போகுது…. அதான் முழுங்கிட்டியே…” சௌமியா கூற…

சைரா “விடுடி உனக்கு ஒரு கேக் என்ன…. பத்து கேக் வாங்கித் தரேன்… இப்போ என்ன விஷயமா கால் பண்ண… அதைச்சொல்லு… நான் இன்னும் கிளம்பவே ஆரம்பிக்கல… அப்புறம் ரொம்ப லேட் ஆகிடும்…. “

“எதுக்கு லேட் ஆகும்… ஹூமேஷி சார பார்க்கவா…??? ” என்று கிண்டலடிக்க…

வெட்கத்தில் சிவந்த முகத்தை எதிரே இருந்த கண்ணாடியில் பார்த்து ரசித்தாள் சைரா. அதை காட்டிக்கொள்ளாது…. தோழி இப்போதைக்கு பேச்சை விடமாட்டாள் என்பதால்….

“நீ இப்படியே பேசிக்கிட்டு இரு… நான் ஃபோன வைக்கிறேன்…” என்று சைரா ஃபோனை வைக்க போக…

“ஹேய்..ஹேய்… முக்கியமான விஷயமாதான்டி கால் பண்ணேன்….வச்சுடாதடி…” சௌமி ஃபோனிலேயே கத்த…

” நீ இன்னும் என்ன விஷயம்னு சொல்லவே இல்லை சௌமி….'” என்றாள் சைரா.

“மாமி இன்னைக்கு நண்டு குழம்பு வைக்கிறேன்… உனக்கும் குடுத்து விடறேன் சௌமிம்மா… நேத்தே ஃபோன் பண்ணி சொல்லிட்டாங்க… மறக்காம என்னோட லன்ச் பாக்ஸையும் சேர்த்து எடுத்துட்டு வந்துரு… இதை சொல்லத்தான் ஃபோன் பண்ணேன்…” என்று கூற‌…

“சௌமீ..ஈஈஈஈஈஈ…. ” என்று சைரு பல்லைக்கடிப்பது இந்தப்பக்கம் சௌமியின் மனக்கண்ணில் தெரிந்தது.

“கூல்… சைரு… மறக்காம லன்ச் எடுத்துட்டு வந்துடு செல்லம்…. ” என்று ஃபோனை வைத்துவிட்டாள்.

“இவளை…..”என்று…..சைரா சிரித்தவள்….

“வர வர இந்த சௌமியும் பாருபேபியும் பண்ற சேட்டை ஓவரா போகுது…” என்று சிரித்துக்கொண்டே குளியலறைக்குச்செல்ல திரும்ப… அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது.

” அச்சோ..‌அபிமாமாக்கு கால் பண்ணலயே…” என்று அவசரமாக ஃபோனை எடுத்து அபரஜித்திற்கு அழைப்பெடுக்க ….. அது தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதாக கூறியது. மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பார்த்தவள் அப்பொழுதும் அதே பதிலே கிடைக்க….

“சரி..‌ஒரு வேளை மருத்துவமனைக்குள்ள அவரோட நண்பர் வீட்டு ஆளுங்கள பார்த்து  பேசிக்கிட்டு இருக்காரோ என்னவோ…‌ அதனால்தான் இணைப்பு கிடைக்க மாட்டேங்குது” என்று தனக்கு தானே பேசிக்கொள்ள…

” சைரா சாப்பிட கீழ வாடா… ” என்ற அன்னையின் குரலில்…. வேகமாக குளிக்க சென்றாள் சைரா.

குளித்து முடித்து சுரிதாரை அணிந்து சிறிது அலங்காரத்தையும் முடித்து கண்ணாடியில் தன்னை பார்த்த போது அது தான் தானா என்று அவளுக்கே சந்தேகமாக இருந்தது.

” டீ…சைரா…பரவாயில்ல… நீயும் பார்க்கற மாதிரிதான்டி இருக்க…” என்று மனதிற்குள் மெச்சிக்கொண்டவள்… ஹுமேஷி தன்னை பார்க்கும் பார்வையையும் நினைத்துப் பார்த்தாள்.

“எப்பப்பாரு… அந்த பச்சைகலர் பூனைக்கண்ணை வச்சுகிட்டு… இன்னைக்கு விட்டா நாளைக்கு பார்க்க முடியாதுங்கற மாதிரியே பார்ப்பான் பாரு…  ப்பா.. எனக்குத்தான் மூச்சு வாங்கும் ” என்று செல்லமாக மனதிற்குள் வைது கொண்டு…. தனது கைப்பையையும் கைப்பையையும் எடுத்துக்கொண்டே  கீழே இறங்கினாள்.

அப்பொழுதுதான் நினைத்தாள்…நேத்து அவ்வளவு சேட்டை பண்ணிட்டு இன்னைக்கு ஒரு கால் கூட பண்ணலயே இந்த “ஓஜோபேபி”….

என்னை நினைச்சுகிட்டே கனவு கண்டுகிட்டு விடிஞ்சுதான் தூங்கிருப்பான் அந்த “உப்மா”… என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டே உணவு மேசைக்கு வர , மகேஸ்வரனும் பார்வதியும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

சைராவைப்பார்த்த பார்வதிக்கு புரையேறியது… பின்னே எப்பொழுதும் உடம்பிலும் காலிலும் தலையணை உரையை போல் எதையோ மாட்டிக்கொண்டு வரும் மகள்… இன்று அழகாக ஆடை உடுத்திக்கொண்டிருக்கிறாளே என்று ஆச்சரியப்பட்டாலும் …. ஏதோ இருக்கிறது என்பதையும் மனதில் குறித்துக்கொண்டாள்.

ஆனால் மகேஸ்வரனோ மகளின் அழகை கண்டு பூரித்துப்போனார்.

” சைருக்குட்டி இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கியேடா குட்டிமா… ஏதும் ஃப்ரெண்ட்ஸோட அவுட்டிங் போறிங்களடா…” என்று சந்தோஷமாக கேட்க…

பார்வதியோ..” அச்சச்சோ… இது வேற யாரோ பொண்ணுங்க… நம்ம பொண்ணு சைரா எங்கன்னு கேளுங்க….” என்று கூறிய விதத்தில் மகேஸ்வரனுக்கு சந்தேகமே வந்து விட்டது.

அவர் அவசரமாக கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டு பார்க்க… சைராவும் பார்வதியும் அடக்கமாட்டாமல் சிரித்தனர்.

“மகிடார்லிங்… என்னதிது….!!! பாரு பேபி என்னை கிண்டல் பண்ணதுப்பா… ” என்று புகார் வாசித்தவள்…

” நீங்களும் உடனே கண்ணாடில்லாம் எடுத்து போட்டு பார்க்குறிங்க…” என்று சிணுங்கிக்கொண்டே தந்தையின் அருகில் அமர…

” அது ச்சும்மா… உல்லல்லாய்க்குடா சைருக்குட்டி…” என்று மகளை சமாதானப்படுத்தியவர்…

” நீங்க எங்கம்மாவையும் உங்கம்மாவையும் சேர்த்து வச்ச அழகியாக இருக்கேன்னு உங்கம்மாக்கு பொறாமைடா…” என்று கூறிக்கொண்டே அவளுக்கு பறிமாறினார்.

சைராவும் சாப்பிட ஆரம்பிக்க… சாப்பிட்டுக்கொண்டிருந்த பார்வதி…” இன்னைக்கு ஏதும் முக்கியமான மீட் இருக்கா அம்மு… இப்படியே நிதமும் ட்ரெஸ் பண்ணுடா…” என்று கூற…

“பாருபேபி… இது அபிமாமா போன பிறந்தநாளுக்கு பரிசாக குடுத்தது…இப்போ அவர் வந்துருக்கறதால எடுத்து பிரிச்சுபார்த்தேன்… ரொம்ப அழகா இருந்தது… அதனால் ஒரு சேன்ஜீக்கு போட்டுகிட்டேன்… தினமும் முடியுமா தெரியல…'” என்று சமாளித்தவள்… சீக்கிரமாக சாப்பிட்டு எழுந்து விட்டாள்.

மனதின் உற்சாகத்தை மறைத்துக்கொண்டு வீட்டு வாயில் வரை வந்து…. பெற்றோரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பியவள்… குதூகலமாகவே தனது ஸ்கூட்டியை கிளப்பினாள் தன் மனதிற்கினிய ” ஓஜோபேபி” யை பார்ப்பதற்காக…..

ஆனால் அங்கு சென்ற போதோ… ஹூமேஷி அன்று ஜெனிடிகாவிற்கு வரவும் இல்லை… ஏனென்ற காரணமும் யாருக்கும் தெரியவில்லை.

அத்தியாயம்-14 :                                    

வழக்கம் போல தனது ஸ்கூட்டியை பார்க்கிங்லாட்டில் நிறுத்தி விட்டு சைரா தனது பிரிவிற்குட்பட்ட தனிப் பகுதிக்குள் நுழையும்போது அரைமணிநேரம் தாமதமாகி இருந்தது. ஆட்கள் யாருமின்றி அமைதியாக இருந்தது. எப்பொழுதும் நேரத்திற்கு வரும்போது உடன் பணிபுரிவோரில் பாதிபேரை பார்த்து சிரித்துப்பேசி அங்கேயே ஒரு நிமிடம் பேசி விட்டு தான் செல்வாள்.

சௌமியாவும் கூட இருந்தால் சொல்லவே வேண்டாம் நேரமாவதற்குள் இவள்தான் அவளை இழுத்து செல்ல வேண்டியிருக்கும். இன்று அரைமணிநேரத்திற்கும் மேல் தாமதமாகி இருந்ததால்…. யாரையும் பார்க்க முடியவில்லை.

சௌமியா வந்துவிட்டாளா…. என்று அவளுடைய பார்க்கிங் ஸ்பேஸில் பார்க்க அவளுடைய வண்டி நின்றிருந்தது.

“சரி… அங்கே போய் பார்த்துக்கலாம்….” என்று தன் பிரிவை நோக்கி நடக்க துவங்கினாள் சைரா.

மனம் நிறைய எதிர்பார்ப்பும் சந்தோஷமாக தனது பிரிவில் அமைந்துள்ள…. விரல் ரேகையை பதிய வைத்தால் மட்டுமே…. உள்ளே செல்ல அனுமதிக்கும்  கதவில் தனது கைவிரல்களின் ரேகையை பதிய வைத்தாள். கதவுகள் திறந்துகொண்டதும் கண்களால் அலசிக்கொண்டே முதல் மூன்று அறைகளை கடந்து தான் வேலை செய்து கொண்டிருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.

உள்ளே நுழையும் போதே மனம் லேசாக படபடத்தது…..

“இன்னைக்கு பார்த்ததும் ஒஜோகிட்ட என்ன பேசுறது…??? வாயை திறந்தால் வெறும் காற்றுதான் வருமோ…???”  என்று ஆவலாக சிந்தித்தவாறு…சற்று நாணத்துடனே உள்ளே எட்டிப்பார்க்க அறையோ ஒருவரும் இல்லாமல் காலியாக இருந்தது….  யாரும் வந்து சென்றதற்கான அறிகுறி கூட தென்படவில்லை….

ஹூமேஷியைப்பார்க்காமல் மனம் என்னவோ போல் இருந்தது.

” இந்த சௌமியக்கூட காணலயே…??” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவள்…

சரி எதற்கும் செட்டியூலிங் டேபிள பார்த்துட்டு வந்துறலாம்… என்று முன்னறையை நோக்கி நடந்தாள்.

அங்கே இவர்களது பிரிவின் வரவேற்பறையில் ஒட்டியிருந்த செட்டியூலை பார்த்தால்… ஹுமேஷி விக்ரமிற்கு இவர்களது அறையிலும்… சௌமியாவிற்கு மாதிரிகளின் வளர்ச்சிப்பெருக்கத்தை கண்காணித்து கணக்கிடும் அறையில் போட்டிருந்தது.

இந்த வேலை… மற்றும்  திசு கல்ச்சர் ரேட்டிங்கை கணினியில் ஏற்றும் வேலை… இந்த இரண்டு வேலையும் கண்டாலே…தலை தெறிக்க ஓடுவாள் சௌமியா. இன்று அவளுக்கு அந்த பணிதான் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தோழியை நினைத்து சிரித்துக்கொண்டவள்… தங்களது அறையில்தான் வேலை என்றாலும் ஹூமேஷி ஏன் அங்கு வரவில்லை என்பதை தெரிந்து கொள்ள அவனது எண்ணுக்கு கால் செய்தாள்‌…. ரிங் சென்று கொண்டிருந்ததே தவிர அழைப்பு ஏற்கப்படவில்லை… மறுமுறையும் முயற்சித்து பார்க்க…… இம்முறையும் அழைப்பு ஏற்கப்படாததால்… சோர்ந்து போனாள் சைரா….

“நேத்து காதலை ஒத்துகிட்டதுதான் தப்பு… அதான் என் கண்ணு முன்னாடி வராம என்னை கடுப்பேத்துற… உன்னை கொஞ்சநாள் சுத்தல்ல விட்டிருக்கனும் ஓஜோபேபி… அப்பதான் என்னோட அருமை புரிஞ்சுருக்கும்… போடா… நீயா வந்து பேசற வரைக்கும் பேச மாட்டேன்…” சிறுபிள்ளையை போல் தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தாள் சைரா.

பின்பு சுதாரித்து சுற்றும் முற்றும் பார்த்தவள்….

” ஹப்பாடி ஒருத்தரும் இல்லை… டீ சைரா உனக்கு ஓஜோ பைத்தியம் முத்திடுச்சு…” என்று தன்னை தானே நொந்து கொண்டவள்…

” இப்படி என்னை தனியா புலம்பவச்சுட்டான் அந்த உப்மா…. வரட்டும் வந்து தனியா என்கிட்ட மாட்டட்டும் அப்ப இருக்கு அவனுக்கு…” என்று சல்வாரில் இல்லாத காலரை தூக்கி விட்டவள் … நம்ம வேலைய வந்து பார்க்கலாம்….

” இப்போ போய் என் ஆருயிர் தோழி… சௌமிசெல்லத்தை பார்ப்போம்… எப்படியும் நண்டுகுழ்பை நினைச்சுதான் கனவு கண்டுட்டிருப்பா… “

“அவ எங்க டிஎன்ஏவை கண்காணிச்சு மாற்றத்தை குறிச்சு வைச்சு… இந்த வாரம் முழுக்க குடுத்தாலும் முடிக்க மாட்டாள்…” என்று தோழியை நினைத்துக் கொண்டே… அடுத்த கட்டிடத்தில் இருக்கும் கண்காணிக்கும் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

சைரா நினைத்து வந்தது போலவே கணினியுடன் பேசிக்கொண்டிருந்தாள் சௌமியா.

மாற்றியமைக்கப்பட்ட டிடிஎன்ஏ மாதிரிகள் ஒழுங்காக அமைக்கப்பட்டு இருக்கிறதா என்பதை கணினியின் உதவியோடு அவள் பரிசோதித்து பார்த்து அதன் முடிவுகளை குறித்து வைக்க வேண்டும். ஆனால் அவள் செய்து கொண்டிருந்தோ…. சைரா நினைத்து வந்ததை தான்….

“ஹேய்… கம்ப்யூட்டர் உன் மனசு என்ன கல்லா…. ???அப்போழுதிருந்து நானும் பரிசோதனைக்கு குடுத்துட்டுருக்கேன்… ஒரு முடிவ கூட காமிக்க மாட்டிங்கிறியே… அந்த கடமை கண்ணாயிரம் (விக்ரம தாங்க….)வேற… இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான சொல்லிக்கொடுத்தேன்… அதுக்குள்ள மறந்துட்டியானு கேட்டு என்னை அசிங்கப்படுத்திட்டான்….செஞ்சு முடி… நான் வந்து பார்க்கறேன்னு வேற சொல்லிட்டு போயிருக்கான்…” என்று அலுத்துக் கொண்டவள்…..

“நீயே சொல்லு …அவன் எப்படி என்னை அறிவாளின்னு… நான் புரிஞ்சுக்குவேன்னு நினைக்கலாம்…??? ஒரு அக்மார்க் மக்கு பிள்ளைய பார்த்து இப்படி சொல்லிட்டானே… இந்த சௌமியாவோட வரலாற்றுல இப்படி ஒரு கருப்புநாள் வந்துருச்சே…” என்று புலம்பித்தீர்க்க…

அவள் பேசியதைக் கேட்டு அடக்கமாட்டாமல் சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தாள் சைரா.

தோழியை பார்த்த சௌமியாவோ…” ஹே.. சைரு… நிஜமாவே நீதானாடி… ??? இம்புட்டு அழகா வந்துருக்கே…??? இன்னைக்கு ஏதும் நல்லா தேய்ச்சுக் குளிச்சுட்டியா… ??? இல்லையே நீ தீபாவளி பொங்கல்க்கு தான குளிப்ப…??” என்று வாயடிக்க…

உள்ளே அவளருகே வந்த சைரா… முதலில் அவளின் வாயை தன் கைகளால் மூடினாள்.

“ஷப்பப்பா… என்ன வாய்டி உன் வாய்… பட பட பட்டாசா பொறிஞ்சு தள்ளுற… கொஞ்சம் கேப் விட்டு பேசுடி… நாக்குல சுளுக்கு வந்துற போது… ” என்று கலாய்த்துக்கொண்டே அவளது வாயிலிருந்து கையை எடுக்க…

” ஏண்டி பேசமாட்ட… உன்கூடவே இருக்கனுங்கிறதுக்காகவும்… சரி நமக்கும் இந்த செடி கொடிகள்லாம் பிடிக்குமே படிப்போமேன்னு படிச்சு இங்க வேலைக்கு வந்தா… அம்மணி என்னை கண்டுக்காம நல்லா அலங்காரம் பண்ணிகிட்டு காலையிலேயே ஜாலியா உங்க ஆளோட டூயட் பாடிட்டு… ஆடி அசைஞ்சு வர்றீங்க…???” என்று அங்கலாய்த்தாள் சௌமியா.

காலையிலிருந்து ஹூமேஷியை பார்க்காத சைராவுக்கோ சௌமியின் பேச்சில் கோபம்தான் வந்தது. கோபத்தில்  அவள் சௌமியாவின் கன்னத்தை கிள்ளி வைக்க….

“பிசாசே…எதுக்குடி இப்போ என்னை கிள்ளின…?” என்று சௌமியா கன்னத்தை தேய்த்துக்கொண்டே கேட்க…

” பின்ன… நீ நடக்காத விஷயத்தை எல்லாம் பேசினா… எனக்கு கோபம் வராதா…???” என்று குரலில் வருத்தத்தோடு பேசினாள் சைரா.

தோழியின் வருத்தத்தை கவனித்த சௌமியா..” என்ன சைரு சொல்ற… நேத்து பார்ட்டில ஹூமேஷி சார் உன்னை தாங்குனது பார்த்து.. நீங்க ரெண்டு பேரும் இன்னைக்கே வெட்டிங்கார்டோட வந்து நிப்பிங்கன்னு நினைச்சேன்… நீ என்னடான்னா இப்படி பேசற… சரி வா… நம்ம  நம்மளோட பிரிவுக்கு போகலாம்… சார் அங்கதான் இருப்பாரு…” என்று கையைப்பிடித்து எழ ஆரம்பிக்க..

அவளைப்பிடித்து உட்கார வைத்தாள் சைரா.

” நான் நம்ம பிரிவுல இருக்கற எல்லா இடத்துலயும் பார்த்துட்டேன்… கால் பண்ணா காலயும் எடுக்கல…” என்று கூற…

” என்னடா இது… ஏன் சைரு…??  உன்கூட ஹைட் அண்ட் சீக் விளையாடுறாரோ…??” என்று ரணகளத்திலும் குதூகலமாய் சௌமியா பேச…

” ஆமா.. அதான் நான் இங்க வந்து ஒழிஞ்சுருக்கேன்… போய் நீ போய் அவர்கிட்ட சொல்லிக்குடுத்துட்டு வா… போ…” என்று அவளைத்தள்ளி விட…

“ஹி…ஹி‌…. மன்னிச்சூ சைராக்குட்டி…  இப்போ என்ன…??? உனக்கு ஹூமேஷி சார் எங்க இருக்கார்னு தெரியனும்… அவ்வளவுதான…??? கண்டிப்பா குருவிக்கு தெரியாமல் இருக்காது… வா …. அவளை போய் பிடிப்போம்..” என்று அவளை இழுத்துக்கொண்டு கிளம்பினாள் சௌமியா.

குருவி வேறு யாருமல்ல.. பார்த்திபனின் காரியதரிசி ஷிவானிதான்… அவளுக்கு சுருட்டையாக அடர்த்தியான கூந்தல் கழுத்து வரைக்கும் மட்டுமே இருக்கும்… தூரத்தில் இருந்து பார்க்கும் போது … அது குருவியின் கூட்டைப்போல் இருக்கிறது என்று சௌமியா கிண்டல் செய்யாத நாளே இல்லை.  அவளுக்கு குருவி என்று பட்டப்பெயரும் வைத்துவிட்டாள்.

பார்த்திபனின் காரியதரிசி என்பதால் அவளுக்கு எந்த விஷயமும் தெரியாமல் இருக்காது. அதனால்தான் அவளுக்கு கண்டிப்பாக தெரியுமென்று சைராவை இழுத்துக்கொண்டு போனாள் சௌமியா.

இவர்களது மனக்குரல் ஷிவானிக்கும் கேட்டிருக்கும் போலும்… அவர்களது பிரிவில் அமைந்துள்ள பார்த்திபனின் அறைக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போதே தனது அறையை திறந்து கொண்டு வந்தாள் ஷிவானி…. பார்த்திபனின் அறைக்கு எதிர் அறைதான் ஷிவானியின் அலுவல் அறை….

ஷிவானி இவர்களைப்பார்த்து புன்னகைக்க.. ” ஹை மேம்… ” என்று சௌமியா கையசத்துக்கொண்டே அவளருகே வர.. சைராவும் ஷிவானியைப்பார்த்து புன்னகைத்தாள்.

” என்ன கைய்ஸ்… இங்க….?? பார்த்திபன் சார பார்க்க வந்திங்களா…???” என்று கேட்டாள் ஷிவானி.

” எஸ்…மேம்…” சட்டென்று பதில் கூறினாள் சௌமியா. சைராவின் முகத்திலோ குழப்பம்…..

” இன்னைக்கு இவ நம்மள மாட்டிவிடாம இருக்க மாட்டா போலவே…??” மனசாட்சியோடு பேசிக் கொண்டிருக்க…

சௌமியாவோ மேலும் தகவல் கூறினாள் ஷிவானிக்கு… அதில் கலைந்தவள் தோழியின் பேச்சில் கவனத்தை திருப்பினாள்….

” பார்ட்டி முடிஞ்ச அன்றைக்கு …. கடைசியா நாங்க பார்த்த ரிப்போர்ட்ஸ் எல்லாத்தையும் பார்த்திபன் சார் கேட்டுருந்தாரு… நான் அது எல்லாத்தையும் என்னோட பென்டிரைவ்ல காப்பி பண்ணிருந்தேன்…

ஹூமேஷி சார்…. அவரோட ரிப்போர்ட்டும் அதுல இருந்ததால் நான் காப்பி செஞ்சுட்டு குடுக்கறேன்னு வாங்கிட்டுப் போனாரு… இன்றைக்கு காலைல இருந்தே அவர பார்க்க முடியல… எப்படியும் பார்த்திபன் சார் அறைல இருந்தா பார்த்து வாங்கிடலாம்… இல்லையெனறால் அவர்கிட்டவே சொல்லிடலாம்னு வந்தோம்..” என்று உண்மையும் பொய்யும் பாதியும் கலந்து கூறினால் சௌமியா.

பார்த்திபன் அவளிடம் ரிப்போர்ட்டுகளை கேட்டிருந்தார்…. ஆனால் உடனடியாக தருமாறு கேட்கவில்லை… அதற்கு இன்னும் கால அவகாசம் இருந்தது. ஆனால் ஹூமேஷி அவளிடம் பென்டிரைவ் வாங்கவில்லை… அப்படி பொய் கூறினால் தான் ஹூமேஷியைப்பற்றி தெரிந்து கொள்ள முடியும் என்பதால் துணிந்து பொய் கூறலானாள் சௌமியா.

சைரா தோழியின் சாமர்த்தியத்தை மனதில் மெச்சிக்கொண்டாலும்… மாட்டிக்கொள்வோமோ என்று உள்ளூர உதறல் எடுக்க ஆரம்பித்தது.

ஆனால் ஷிவானி சிரித்த முகமாகவே பதில் கூறினாள்..” ஓ..அப்படியா சௌமி… ஆனால் இன்றைக்கு ஹூமேஷி சார் வரலயே… நேத்து பார்ட்டில சாப்பிட்ட சாப்பாடு அவருக்கு அலர்ஜி ஆய்டுச்சுன்னு.. பார்த்திபன்‌சார் அவரை மருத்துவமனைக்கு கூப்பிட்டப்போ அவர்… இல்லை சார் இது சரி ஆய்டும்.. எனக்கு காளான் கொஞ்சம் ஒவ்வாமையை ஏற்படுத்தும்… அதுக்குரிய மருந்தும் நான் வச்சிருக்கேன்னு சொல்லிட்டாராம்.. நீங்க பார்த்திபன் சார்கிட்ட நாளைக்கு குடுக்கறேன்னு சொல்லிடுங்க சௌமியா… ” என்று கூறிவிட்டு நகர்ந்து விட்டாள் ஷிவானி.

சௌமியாவோ ஹூமேஷியைப்பற்றிய தகவல் கிடைத்துவிட்டதில் குஷியாகி சைராவை நோக்கி திரும்ப… சைராவோ அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தாள்… சௌமியா சைராவின்‌ தோளில் தட்ட … அவளது நினைவு நேற்று நடந்த சம்பவத்திலேயே இருந்தது….

ஏனென்றால் பார்ட்டியில் யாரும் அறியாதவாறு ஹூமேஷிக்கு காளான் சூப்பை ஊட்டியது அவள்தான்.

” காளான் ஒத்துக்காதுன்னு தெரிஞ்சும் நான் ஊட்டிவிடறேன்னு வாங்கிக்கிட்டானா…???? “

“ஓஜோ பேபி …” உதடுகள் அவளையும் அறியாமல் முனுமுனுக்க…

சைராவின் தோளை உலுக்கிக் கொண்டிருந்த சௌமியாவின் காதில் நன்றாகவே விழுந்தது.

“அடிங்க…இவளுக்காக நான் எவ்வளவு பெரிய துப்பறியும் வேலை பாத்துக்குடுத்துருக்கேன்… என்னை பாராட்டாம… இவ ஆளோட ட்ரீமுக்கு போயிட்டாளே…??? அடியே சைரு….” என்று பலமாக அவளை உலுக்க…

சைராவோ..” நான் இந்த லோகத்தில் தான் இருக்கிறேனா என்பது போல் ஒரு பார்வையை சௌமியாவை பார்த்துவைக்க…”

இது வேலைக்காகாது என்று உணர்ந்த சௌமியா…” சரா டார்லிங்ங்ங…” என்று சைராவின் காதில் பலமாக கத்த…

” டீ…பிசாசே…எதுக்கு இந்த கத்து கத்துற… உன்னை சரான்னு கூப்பிடாதடின்னு ஏற்கனவே சொன்னேன்ல…” என்று தோழியை கடிந்து கொள்ள…

“ஏன்டி நான் இவ்வளவு நேரம் பேசுனதெல்லாம் உன் காதுல விழுகல… ஆனால் நான் சரான்னு கூப்பிட்டது மட்டும் விழுந்துச்சாக்கும்…” என்று கோபப்பட…

” ஹே…சாரி சௌமி… அவருக்கு அலர்ஜின்னு சொன்னுதும்… எனக்கு ஒரு மாதிரி ஆய்டுச்சு…” என்று வருத்தப்பட…

“சாதாரண ஃபுட் அலர்ஜி தான்டி…. சரி ஆய்டும்… என்னமோ நீயே ஊட்டிவிட்ட மாதிரி வருத்தப்படற… தெரிஞ்சே அவர் சாப்பிட்டுருக்காருன்னா… ருசியா இருக்குன்னு சாப்பிட்டுருப்பாரு… ஆனால் அந்த அளவுக்கு அது ருசியாவும் இல்லை… நான்தான் சாப்பிட்டு பார்த்தேனே…

 சுமாரா இருந்ததால ரெண்டுகப்தான் சாப்பிட்டேன்….”  சௌமியாவின் மனமோ நேற்று சாப்பிட்ட உணவுவகைகளை ஆராய்ந்து கொண்டே தோழிக்கு பதில் கூறியது.

“நீ வேறடி… அவருக்கு நான்தான் ஊட்டிவிட்டேன்…” சைரா ஆதங்கத்தில் உளறிவிட்டு நாக்கை கடித்துக்கொள்ள…

” என்னதூஊஊஊ…… ஊட்டினியா….??? இது எப்படி நடந்துச்சு…??? நான் உன்கூடவேதானடி இருந்தேன்….” அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை சௌமியால்…..

” ஹி…ஹி… அது நீ… ஐஸ்கிரீம் இன்னோரு கப் எடுக்கப்போனல்ல அப்போதான் சௌமி…” என்று வெட்கப்பட்டுக்கொண்டே கூறியவளின் மனம்…. நடந்ததை நினைத்துப்பார்த்தது….

தனது காதலை ஒப்புக்கொண்ட பிறகு ஹூமேஷியின் பார்வை  நிழலைப்போல் சைராவையே பின் தொடர்ந்து கொண்டிருந்தது. சைரா சாப்பிட்டுக்கொண்டிருக்க … அவளைப்பார்த்துக்கொண்டிருந்த ஹூமேஷி சைகையால் தனக்கு அவள் கையில் இருக்கும் உணவை ஊட்டி விடுமாறு கேட்க… சௌமியா பக்கத்தில் இருப்பதை கண்களால் சுட்டிக்காட்டி மறுத்தாள் சைரா. அதுவுமில்லாமல் அத்தனை பேர் சாப்பிட்டுக்கொண்டிருப்பதையும் கண்களாலையே ஜாடை செய்ய… ஒத்துக்கொள்ளவில்லை ஹூமேஷி.

கண்களாலேயே வெளிச்சம் சற்று குறைவாகவும் கண்ணாடி கதவுகளின் வழியாக தோட்டத்தை காண்பித்துக் கொண்டிருக்கும் அந்த பார்ட்டி ஹாலின் மூலையை சுட்டிக்காமிக்க….

” முடியாது” என்று நிர்தாட்சண்யமாக மறுத்தாள் சைரா… அவனைப் பார்க்க பார்க்க வேறு வெட்கத்தால் முகம் சிவக்க ஆரம்பித்தது…

சௌமியா தனது கையில் வைத்திருந்த ஐஸ்கிரீமில் மூழ்கியிருக்க…. அவள் கவனிப்பதற்குள் சைகையாலேயே பேசி முடித்திருந்தனர் காதலர்கள் இருவரும்.

“சைரு என்னோட ஐஸ்கிரீம் தீர்ந்திடுச்சு நீ போய் எடுத்துட்டு வாடி…” என்று சைராவை சுரண்ட…

” ஏன்டி இப்பதான ரெண்டாவது பாக்ஸ் காலிபண்ண… ஜலதோஷம் பிடிச்சுக்க போகுது சௌமி” என்று அக்கறையோடு கூற…

“இதுக்கு நீ… தூரமா இருக்கு… நான் போய் எடுத்துவர முடியாதுன்னே சொல்லியிருக்கலாம்டி… ” என்று தோழியை கலாய்த்தவள்…

“ஹூமேஷிசார விட்டு நகர மாட்டிங்களோ மேடம்… ம்ம்… நடத்து நடத்து… நான் போய் எடுத்துட்டு வரேன்…” என்று எழுந்து செல்ல….

அவனைப் பார்த்துக்கொண்டே தன் கையில் இருந்த சூப்பை அளைந்து கொண்டிருந்தாள் சைரா. ஹூமேஷி அவளை ஒரு கூர்மையான பார்வை பார்த்துவிட்டு தான் பேசிக்கொண்டிருந்த நபரிடம் ஏதோ கூறி விட்டு அந்த இடத்தை நோக்கி செல்ல ஆரம்பிக்க…

சைராவுக்கோஅவன் கோபித்துக்கொண்டானோ என்று பதற்றமானது. ஒரு முடிவெடுத்தளாக கையில் இருக்கும் சூப் கிண்ணத்தை கூட வைக்காமல் அவன் பின்னே யாரும் அறியாதவண்ணம் சென்றாள் சைரா.

தோட்டத்தை பார்த்தவாறு நின்று கொண்டிருந்த ஹூமேஷியை பார்த்தவள்… அவனின் பின்புறம் நின்று கொண்டு தொண்டையை செரும…

தன்னவளின் குரலை கேட்ட ஹூமேஷி  “பேபிடால்… ” என்று சந்தோஷத்துடன் சைராவின் அருகே வர….

சுற்றி நிற்பவர்களை கருத்தில் கொண்டு… சைரா அவனிடம் இருந்து இரண்டடி தள்ளி நிற்க…. அப்பொழுதுதான் தாங்கள் இருக்கும் இடத்தை கவனித்து….அசடு வழிய தன் சிகையை ஹூமேஷி கோதி கொள்ள…  வாய்வரை வந்த சிரிப்பை தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டாள் சைரா.

“பேபிடால் உன்னைப்பார்த்துட்டா எனக்கு சுத்தி இருக்கிற இடமே மறந்துபோகுது…” என்று கூற…

சைராவின் முகத்தில் வெட்கம் மேலும் கூட… அவளின் அமைதியை கவனித்தவன்… அவள் கையில் இருந்த சூப் கிண்ணத்தை பார்த்ததும் ….

” ஹ்ம்ம்‌… கமான் சரா.. ஊட்டி விடு.. எனக்காகதானே சூப் கிண்ணத்தை கையோட எடுத்துவந்துருக்க… ” என்று அவள் அருகே வர…  சைராவுக்கு பதற்றமானது…

என்னதான் சற்று வெளிச்சம் குறைவாக இருந்தாலும் இருவர் நின்று பேசினால்…. அனைவரும் பார்க்கும் இடமாகத்தான் அது இருந்தது. அதுவுமில்லாமல் இப்பொழுது வரை…. இருவரும் பேசிக்கொண்டு இருப்பதை போல தெரியும் நிகழ்வு… அவள் அவனுக்கு ஊட்டிவிட்டால்… நிச்சயம் சிலர் வம்பு பேச வாய்ப்பாக அமையும்.

அமைச்சரும் அதிகாரிகளும் இருக்கும் இடத்தில்….. அது அநாகரிகமான செயலாக தோன்றக்கூட வாய்ப்புண்டு என்பதை உணர்ந்து கொண்ட சரா… முடியாது என்பதை போல தலையசைக்க….

ஹூமேஷியின் பொறுமை காற்றில் பறக்க ஆரம்பித்தது. சுற்றிலும் பார்க்க பார்த்திபன் அமைச்சருடன் சென்று விட்டார். மேடையின்‌ அருகே இருந்த இடத்தை ஒட்டி தான் நிறையபேர் பேசிக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். இவர்களை யாரும் கவனித்ததைப்போல் தெரியவில்லை.

அவர்கள் நின்றிருந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்களும் சென்றுவிட…. தானாகவே அமையும் சந்தர்ப்பத்தை விட தயாராக இல்லை ஹூமேஷி.

சாராவின் கையை பிடித்தவன்… தானே அவள் கையை உயர்த்தி சூப் கிண்ணத்தோடு இருந்த ஸ்பூனை எடுத்து அருகில் இருந்த டேபிளில் வைத்தவன்…. அப்படியே கிண்ணத்தோடடு அவள் வாயில்  வைத்து ஊட்டியவன்… அவள் ஒரு மிடறு விழுங்கியவுடன்‌..

அவளது எச்சில் பட்ட கிண்ணத்தை அவளின் கைகளாலேயே தன் வாயிலும் சூப்பை வைத்து ரசித்து சாப்பிட…. சராவோ கண்இமைக்கும் முன் நடந்த அந்நிகழ்வில் உறைந்து போய் நின்று விட்டாள்.

அவளது எச்சில் பட்ட சூப்பை ஏதோ அமிர்தம் உண்பது போல ஹூமேஷி ரசித்துக்கொண்டே சாப்பிட… சைராவோ வெட்கத்துடன் தலைகுனிந்தாள்.

” இப்போ இதை கையில் வச்சுக்கோ பேபிடால்…” என்று அவள் கையில் காலி கிண்ணத்தை குடுத்து அவளைப்பார்த்து கண்ணை சிமிட்ட… தன் கைகளை பிடித்துக்கொண்டிருக்கும் அவன் கையில் நறுக்கென்று கிள்ளினாள் சைரா.

ஹூமேஷியோ” கைல கிள்ளாதே சரா.. இங்கே கிள்ளு… இல்ல கடிக்கவும் செய்யலாம்… உன்னோட சூப்ப நான் சாப்பிட்டதுக்கு அதுதான் சரியான தண்டனை…” என்று தன் உதடுகளை நாவால் வருடி காமிக்க…

” என்னோட சூப்ப பிடுங்கி குடிச்சதும் இல்லாம… சேட்டை வேற பண்றிங்களா…??? யாராவது பார்த்தா என்ன ஆகிறது…??” என்று சைரா செல்ல சண்டை இட…

” பார்த்தா என்ன…?? நீ என் காதலி… நீ எனக்கு ஊட்டிவிடறத யாரும் எதும் கேட்க முடியாது…” என்று பேசினான் ஹூமேஷி.

” அதெ….” என்று சைரா பேச ஆரம்பிக்கும்போதே சௌமியா இன்னும் இரண்டு கப் ஐஸ்கிரீம் எடுத்து தாங்கள் அமர்ந்திருந்த மேஜைக்கு அருகே வருவதை கவனித்துவிட்ட சைரா…

” ஓஜோபேபி… சௌமி வந்துட்டா… நான் உங்ககிட்ட நின்னுகிட்டு இருக்கிறதை பார்த்தா… என்ன பேசினிங்கன்னு கலாட்டா பண்ணி…. என்னை ஒரு வழியா ஆக்கிடுவா…” என்றவாறே ஹூமேஷியின் கைகளில் இருந்து கைகளை விடுவித்துக்கொண்டு நகரப்போக….

அவளை நகரவிடாமல் தன் பக்கம் இழுத்து தங்களின் புறம் இருந்த திரைச்சீலையின் மறைவில் இழுத்தவன்… அவளின் கன்னத்தை அழுந்த பிடித்து தன்புறம் இழுக்க… கண்களை இறுக மூடிக்கொண்டாள் சைரா…

சைராவின் கன்னத்தில் தன் கன்னத்தை அழுந்த தேய்த்தவன்… அவளின் முகத்தை பார்த்தாவாறே… மேலும் இரண்டு முறை கன்னத்தால் கன்னத்தை அழுந்த தேய்க்க…

கண்களை முழித்து பார்த்த சைரா… “ஙே…” என்று விழிக்க…

ஹூமேஷியோ” காலையில் இருந்து இந்த மாம்பழக்கன்னம் என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்துச்சு பேபி டால்… அதோட மென்மையை உணர்ந்தே ஆகனும்னு ஒரு வெறியே வந்துடுச்சு… இப்போதான் நிம்மதியா இருக்கு…”  என்று அவளின் தலையை கோதிக்கொண்டே பேசியவன்…

அவள் முழிப்பதை பார்த்து…” என்னாச்சு சரா… ஏன் இப்படி முழிக்கற…??” என்று வேறு கேட்டு வைக்க…

“செய்றதெல்லாம் செஞ்சுட்டு என்னாச்சுன்னு கேட்கறான் பாரு…” சைரா மனதுக்குள் பேசியவள்….

” ஒ…ஒண்ணுமில்லை… ” என்று மழுப்ப

” அப்போ கண்டிப்பா ஏதோ இருக்கு… ” என்று யோசித்தவன்…

” ஓ… அப்போ நீ கிஸ்ஸ எதிர்பார்த்தியா பேபிடால்… ச்ச… நல்ல சான்ஸ மிஸ் பண்ணிட்டினே… சரி வா உடனே போகலாம் சரா… இங்க விட தோட்டம்தான் செமையா இருக்கும்…” என்றவாறே அவளை இழுக்க….

” உங்கள….” சைரா ஹூமேஷியின் நெஞ்சில் கையை வைத்து சுவற்றில் தள்ளிவிட்டு ….

” கண்டிக்க ஆள் இல்லாமதான் இப்படி செய்றிங்க…” என்று கூறியவள்… அவள் செல்வதால் அவன் முகம் வாடுவதை பொறுக்காது… அவன் கையில் முத்தமிட்டு விட்டு…

” லவ் யூ… ஓஜோபேபி…” என்று கூறிவிட்டு சௌமியா இருக்கும் இடத்திற்கு ஓடிவிட்டாள்.

நல்லவேளை சௌமியா தன்னுடன் பணிபுரியும் சக ஊழியை நிரல்யாவுடன் பேசிக்கொண்டிருந்தாள். அவள் வரும் முன்பே தனது இருக்கைக்கு சென்று அமர்ந்த சைரா… ஹூமேஷியைப்பார்த்து பறக்கும்முத்தம் ஒன்றையும் அனுப்பி வைக்க…

 அதில் சொக்கிப் போனவனாக …..கண்களை மூடி அந்த நொடிகளை சேமித்துக்கொண்ட ஹூமேஷி… மனம் முழுவதும் சைராவின் நினைவுகளுடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

தன் நினைவுகளில் இருந்து மீண்ட சைரா… ” என் மேல இருக்கற காதல்ல இப்படி பண்ணிட்டிங்களே ஓஜோ பேபி… எனக்கு உங்களை உடனே பார்க்கனும் போல் இருக்கே…”  மனதுக்குள் ஏக்கம் ஏற்பட…

” அடிப்பாவி ஒரு சின்ன கேப்ல  ஊட்டியேவிட்டியா நீ…??? ஒரு பச்சமண்ண எப்படில்லாம் ஏமாத்திருக்கடி…” என்ற சௌமியாவின் ஆதங்கக்குரல் சைராவை நனவுக்கு இழுத்து வந்தது.

“ஹே… சும்மா இருடி… ” என்று சைரா சௌமியாவை அடக்க….

விடுபவளா சௌமியா…. ” ஆனாலும் சும்மா சொல்லக்கூடாதுடி சைரு… உன்னை ஊட்டச்சொன்ன ஒரே பாவத்துக்காக … சரியா அவருக்கு சேராத சூப்பா பார்த்து ஊட்டிருக்க பார்… அங்க நிக்குறடி நீ…” சொல்லி சிரிக்க ஆரம்பித்தாள் சௌமியா.

கோபம் வந்த சைரா… சௌமியாவின் காதுகளை பிடித்து திருகிக்கொண்டே…” இன்னைக்கு உனக்கு கொண்டு வந்த லன்ச்ச கீழதான் போடபோறேன்…” என்றுகூற…

” சைரு வலிக்குது சைரு…வேண்டாம்டி” என்று கெஞ்சவும்… நிஜமாகவே காது வலித்து விட்டதோ என்று வேகமாக விட்ட சைரா…

” ரொம்ப வலிக்குதா சௌமி…” என்று கேட்க…

” ஆமாடி ரொம்ப வலிக்குது… நீ லன்ச் தரமாட்டேன் சொன்னதும் என் வயிறு ரொம்ப வலிக்குது…” என்று கூறிக்கொண்டே சௌமியா ஓட‌ ஆரம்பிக்க…

” நீயெல்லாம் திருந்தவே மாட்ட… உன்னை கொல்லாம விடமாட்டேன் … நில்லுடி…” அவளை துரத்திப்பிடித்தும்விட்டாள்  சைரா.

“வேண்டாம் சைரு… ஒரு பிள்ளைப்பூச்சியை கொன்ன பாவம் உனக்கு வேணாம்… என்னை கொன்னுட்டு ஜெயிலுக்கு போய்ட்டேன்னா‌… ஹூமேஷி சார யார் பார்த்துக்குவா…??” என்று கூற …சிரித்து விட்டாள் சைரா.

தோழியின் சிரிப்பு கண்களை எட்டாததை கவனித்த சௌமியா…” சாருக்கு சரி ஆகிடும்… கவலைப்படாதே சைரு… நாம வேணுனா இன்னைக்கு வேலை முடிந்ததும்… சாயங்காலம் அவர பார்க்க போகலாம்..” என்று ஆறுதல் கூறினாள்.

” இல்லை சௌமி… மனசு கேக்கல… நான் இப்பவே லீவ் எடுத்துட்டு போகலாம்னு இருக்கேன்” என்று கூற…

” அப்போ இரு நானும்‌ சொல்லிட்டு வரேன்…” என்று சௌமியாவும் கிளம்ப..

“வேண்டாம் சௌமி… இன்னைக்கு நீ உன் வேலையை முடிச்சே ஆகனும்… அதனால் நீ இரு… ” சைரா ஆட்சேபிக்க…”இல்லை சைரு… நீ மட்டும் தனியா போக வேண்டாம்..” என்று எவ்வளவோ எடுத்துக்கூறியும்… தனியாகவே கிளம்பினாள் சைரா. ஹூமேஷி வேண்டுமேன்றேதான் அவ்வாறு செய்து ….. அவளை வரவழைக்கிறான் என்பதை அறியாது.

 

அத்தியாயம்-15 :                                   

அந்த பெரிய வீட்டின் முன் தனது ஸ்கூட்டியை நிப்பாட்டினாள் சைரா. “இவ்வளவு பெரிய வீடா… கம்பெனி சார்பா குடுத்துருக்காங்க…” என்று ஒரு நிமிடம் மலைத்தாலும் வீட்டின் வெளிப்புறத்தோற்றத்து அழகில் மயங்கித்தான் போனாள் சைரா.

“இந்த சௌமி பேச்சு கேட்டுருந்தா இந்த வீட்டை இன்னைக்கு பார்த்திருக்க முடியுமா…???” என்று தனக்குத்தானே பேசிக்கொண்டவளின் காதுகளில் தோழியின் குரலும் சேர்ந்தே ஒலித்தது.

சைரா ஒரேபிடியாக தான் மட்டும் கிளம்பப்போவதாக கூறிவிட… அதற்கு மேல் அவளை வற்புறுத்தவில்லை சௌமியா. ஏனென்றால் அவளுக்கு நன்றாகவே தெரியும்.. சைரா ஒரு முடிவெடுத்து விட்டால் என்றால் மாற்றுவது மிக கடினம்.

இருந்தாலும் அவள் விடுப்பு எடுத்துக்கொண்டு கிளம்பும்போது அவள் கூடவே வந்தவள்…

” சைரு அவங்க‌ குடுத்துருக்க விலாசம் ரொம்ப தூரமா இருக்கு… பார்த்து பத்திரமா போய்ட்டு வரனும்…  எனக்கு உன்னைப் பத்தி நல்லா தெரியும்… ஹூமேஷி சார் மேலயும் நம்பிக்கை இருக்கு… இருந்தாலும் போனாமா… பார்த்தமா… பேசினமான்ட்டு  கிளம்பிடுடி…. ” என்று மறைமுகமாக தோழியை எச்சரிக்க…

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை புரிந்து கொண்ட சைராவும்… ” என்னை நம்பு சௌமி… நான் அவர பார்த்து இரண்டு வார்த்தை பேசிட்டு உடனே கிளம்பிருவேன். சரியா…?? வீட்டுலயும் இந்த  விஷயத்தை சீக்கிரம் சொல்லிடலாம்னு இருக்கேன். அதைப்பற்றி கேட்கத்தான் இன்னைக்கு அவர பார்த்துப் பேச போறேன். நாளைக்கு என்னோட பிறந்தநாள் இல்லையா…

அதுக்கும் அவருக்கு அழைப்பு குடுக்கனும்… ” என்று கண்களில் கனவு மின்ன கூறும் தோழியைப்பார்த்து சந்தோஷமாகவே இருந்தது சௌமிக்கு.

சைரா தனது காதல் விஷயத்தை தனது பெற்றோரிடம் சொல்லப்போகிறேன் என்று கூறியதும் அவ்வளவு நிம்மதியாக உணர்ந்தாள் சௌமியா.

 ஏனென்றால் சாக்ஷி அக்காவின் காதலால் அவர்களது குடும்பத்தில் ஏற்பட்ட வடுக்கள் இன்றும் மாறாமல் இருக்கிறது. அதற்கு உயிர்ப்பில்லாது மகளை பிரிந்து நடமாடிக் கொண்டிருக்கும் அபரஜித்தின் நிலைமையே காரணம்.

மகேஸ்வரன்மாமா- பார்வதிமாமி காதலை எதிர்ப்பவர்கள் இல்லையென்றாலும்… மகளின் காதல் விஷயம் சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கும் அவர்களுக்கு. திருமணமே வேண்டாம்… இலட்சியமே முக்கியம் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் மகள் திடீரென்று….காதல் கொண்டு விட்டாள் என்பதை உடனே எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

இருந்தாலும் அவர்கள் அறிந்து கொண்டால் சந்தோஷமே படுவார்கள் என்பது ஒரு புறம் இருந்தாலும்… எதிலும் பெற்றோரை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் சைரா.. தனது காதல் விஷயத்தை சீக்கிரமே அவர்களிடம் சொல்லிவிடுவதே அவர்களுக்கு நிம்மதியை கொடுக்கும் என்று உறுதியாக நம்பினாள் சௌமியா.

தானே சொல்லலாம் என்று நினைத்த விஷயத்தை சைராவே கூறவும்… தோழியின் குணத்தை எண்ணி பெருமிதமாகவே இருந்தது சௌமிக்கு.

தோழிக்கு சந்தோஷமாகவே விடைகொடுத்தவள்…” பார்த்துட்டு நேரத்துக்கு வீட்டுக்கு போயிடு சைரு…” என்று கூறிவிட்டு உள்ளே செல்ல எத்தனித்து படிக்கட்டுகளில் காலை வைக்க….. சைராவும் வண்டியை கிளப்பும்போது…. அவளது அலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது.

எடுத்து பார்க்க.. ஹூமேஷிதான் அழைத்துக் கொண்டிருந்தான். தோழியின் முகம் பிரகாசமாவதை உணர்ந்த சௌமியாவும் புரிந்து கொண்டாள்….. அழைப்பு ஹூமேஷியிடமிருந்து என்று. படிக்கட்டில் நின்றவாறே எடுத்து பேசுமாறு சைகை செய்ய… அலைபேசியை உயிர்ப்பித்தவள்

“ஹலோ…” என்று கூற..

” பேபிடால்…” என்ற அவனது குரல்… மயக்கும் தொனியில் வந்தது.

” உங்களுக்கு இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு ஹூமேஷ்…” சௌமியா நின்று கொண்டிருந்ததால் நேரடியாக அவனது நலனைப்பற்றி விசாரிக்க…

” சரா பேபி… உனக்கு எப்படி தெரிஞ்சது… தெரிஞ்சா நீ மனசு வருத்தப்படுவன்னு…. நான் யார்கிட்டேயும் சொல்ல வேண்டாம் என்று பார்த்திசார் கிட்ட சொன்னேனேடா…” ஹூமேஷி கூற…

” அது எப்படி நீங்க அப்படி சொல்லலாம்… உங்களுக்கு காளான் சேராதுன்னு தெரிஞ்சும் ஏன் அப்படி பண்ணிங்க…” என்று வருத்தத்தோடு கேட்க….

“உன் கையால் குடுத்தா விஷமே சாப்பிடுவேன்… வெறும் காளான்தான பேபிடால்… நான்தான் வீட்டுக்கு வந்த உடனே மருந்து எடுத்துகிட்டேனே… இப்போ என் உடம்புக்கு ஒன்னும் இல்லைடி பேபிடால்…” என்று செல்லம்கொஞ்ச ஆரம்பிக்க…

“ஓஜோபேபி…” என்று அவன் கூறிய வார்த்தைகளால் உணர்ச்சி வசப்பட்டு கரகரத்த குரலில் கூறிய பின்பே …

அச்சோ சௌமி நிற்கறாளே.. என்றவாறே சற்று தூரத்தில் பார்க்க… அவள் தூரத்தில் நடந்து சென்று அங்குள்ள மரத்தின் கீழ் அமர்வது நன்றாகவே தெரிந்தது.இங்கிதம் கருதி தோழி சென்று விட்டதை உணர்ந்த சைராவுக்கு அவளை நினைத்து பெருமையாக இருந்தது. இப்பொழுது தடையின்றி பேச ஆரம்பித்தாள் சைரா.

” அதுக்காக இப்படியெல்லாம் பண்ணுவிங்களா…??? இப்படியெல்லாம் பேசினிங்க… நானே உங்கள கொன்றுவேன்… பார்த்துக்கோங்க…”  என்று எச்சரிக்க…

” உன் கையால என்னை கொல்லாம உதட்டால கொல்லு பேபிடால்…” ஹூமேஷி காதல்வசனம் பேசி…. பேச்சை மாற்ற…

” ம்ம்…நினைப்புதான்…” சைரா உதட்டை சுழிப்பது ஹூமேஷியின் மனக்கண்ணில் தெரிய…  அதை தாங்கமாட்டாதவனாக…

” பேபிடால் நீ உதட்டை தான சுழிச்ச.. நான் அதை பார்த்தே ஆகனும்… நான் இப்பவே கிளம்பி வரேன்… ” என்று கூறி ஃபோனை வைக்கப்போக…

” அம்மாடி இவன் ரொம்ப வேகமா இருக்கானே…” என்று மனதுக்குள் நினைத்தவள்… அவனை வரவிடாது தடுக்கவும் செய்தாள்….

” ஓஜோபேபி… வெய்ட்…. வெய்ட்…என்று கத்தியவள்… ஓவர் வேகம் உடம்புக்கு ஆகாது மிஸ்டர்.உப்மா….” என்று அவனது கவனத்தை வெற்றிகரமாக திசைதிருப்ப….

” நான் உனக்கு உப்மாவாடி…” என்று ஹூமேஷி ஆதங்கத்துடன் கேட்க…

” ஆமா நீங்க உப்மாதான்” என்று சொல்ல வந்தவள்…. அப்பொழுதுதான் அவன் “டி” போட்டு பேசுவதை கவனித்தாள் சைரா..

” என்னது டியா… ” சைரா நமட்டுச்சிரிப்புடனே கேட்க…

“ஆமாடி… என் செல்ல பேபிடால்… ” என்று மேலும் கொஞ்ச…

இவன் விட்டா பேசிகிட்டே இருப்பான் என்று நினைத்தவளாக

” எல்லாம் சரிதான்.. போங்க போய் படுத்து ஓய்வெடுங்க… இப்போ ஓய்வு ரொம்ப முக்கியம் ஓஜோகுட்டி…” என்று அவனை ஓய்வெடுக்க வற்புறுத்த….

” இன்னும் கொஞ்சம் நேரம் பேசேன் பேபிடால்…” என்ற ஹூமேஷியின் கெஞ்சலுக்கு இசையவில்லை சைரா… கண்டிப்பாக அவன் ஓய்வெடுக்க வேண்டும் என்று வற்புறுத்திவள்….

” சௌமியா வந்துட்டா… நான் ஃபோனை வைக்கிறேன் ஓஜோபேபி” என்று அவன் பதிலை எதிர்பாராது கட் செய்தும் விட்டாள்.

ஆனால் உண்மையில் சௌமியா அவளை நோக்கித்தான் வந்து கொண்டிருந்தாள்.

வந்தவள் ” என்னடி ஹூமேஷி சாருக்கு பிரச்சனை ஏதும் இல்லையே…??” என்று கேட்க…

“ஆமா..சௌமி‌… அவர் இப்போ நல்லாதான் இருக்காராம்… ” என்று உற்சாகத்துடனே பதில் கூறினாள் சைரா.

” அப்போ லீவ கேன்சல் பண்ணப்போறியாடி” சௌமி…

” இல்லைடி… அவரப்போய் பார்க்க போறேன்…” என்றாள் சைரா.

” அவர்கிட்ட வர்ரேன்னு சொல்லிட்டியா சைரு…” சௌமி…

“இல்லை சௌமி… சர்ப்ரைஸா தான் போறேன்.. நாளைக்கு பிறந்தநாள்க்கு அழைப்பு குடுக்கனும் சொன்னேன் இல்லையா… அப்படியே அப்பா அம்மா மாமாக்கு அறிமுகப்படுத்தியும் வைக்கப்போறேன்… ” என்று கூற…

” பாருடா…அப்போ நாளைக்கு இரட்டை விருந்தா… பிறந்தநாள் விருந்தோட… மாப்பிள்ளைக்கும் சேர்த்து விருந்தா…??” சௌமியா சொல்வதை நினைத்துப் பார்க்கும் போதே அவ்வளவு சந்தோஷமாக இருந்தது சைராவிற்கு. பாருபேபிய கைல பிடிக்க முடியாது … தன் பெற்றோரின் ஆசை நிறைவேறுவது கண்டு மகிழ்ச்சியில் குதூகலித்தது சைராவின் மனம்.

“ஆமா சௌமி….” என்று சிவந்த கன்னங்களோடு பதில் கூற… தோழியின் மகிழ்ச்சியை கண்ட சௌமியாவுக்கும் நாளைய தினம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

“சரி… உன் ஆள கூப்பிடறதுக்கு முன்னாடி… ஒரு முக்கியமான விஐபிய கூப்பிடனும்னு தோணுச்சா உனக்கு….???” சௌமியா வம்பிழுக்க…

” அது யாருடி விஐபி…??” தோழி என்ன சொல்ல வருகிறாள் என்பதை தெரிந்து கொண்டே கேட்டாள் சைரா.

” அடிப்பாவி… உன்கூடயே சுத்திட்டு இருக்கேன்ல… அதனால உனக்கு இந்த விஐபியோட மகிமை தெரியாம போச்சு… எனக்கு முறைப்படி ஒரு கிலோ கத்லியோட அழைப்பு வந்தால்தான்… உங்க வீட்டு முதல்படில காலையே வைப்பா இந்த சௌமி…” என்று சௌமியா கத்லிக்கு அடிபோட….

” ஓ… உங்களை முறையா கூப்டலனா வரமாட்டிங்க மேடம்….. மவளே… நாளைக்கு வந்து எல்லா வேலையும்  நீ பார்க்கல…. உன் வீட்டு வாசல் முன்னாடி நின்னு… எல்லா கெட்ட வார்த்தையாலயும் உன்னை திட்டி… தர தரன்னு அங்கிருந்து இழுத்துட்டு வருவேன்… எப்படி வசதி…???” சைரா சூழுரைக்க…

“ரொம்ப சூடாயிட்டாளோ… ஒரு மரியாதை கேட்டது தப்பாயா… ”  என்று மனதுக்குள் நினைத்தவள்….

” ஹி…ஹி… சைருக்குட்டி… சும்மா உல்லலாய்க்குடா செல்லோ… நாளைக்கு நம்ம பாருமாமிக்கு முதல் ஆளா நான்தான் பிரியாணி அண்டாவ கழுவி குடுப்பேன்… சரியா….??? இப்போ நீ கிளம்பு தாயி… உன் ஆள மட்டும் வெத்தளைபாக்கு வச்சு அழைச்சுட்டு வாம்மா… போம்மா….போ…” என்று தோழியை வழியனுப்பி வைத்தாள் சௌமியா.

இதோ வெற்றிகரமாக ஹூமேஷியின் வீட்டிற்கும் வந்து விட்டாள் சைரா‌. வீட்டின் வெளிப்புற அழகை சிறிதுநேரம் ரசித்தவள்… வண்டியை நிறுத்திவிட்டு வீட்டிற்கு செல்லும் வழிப்பாதையில் நடக்க ஆரம்பித்தாள்.

அப்பொழுது தான் கவனித்தாள் அந்த இடத்தை சுற்றி ஆள் அரவமே இல்லாது இருப்பதை பற்றி… அக்கம்பக்கத்தில் ஒன்றிரண்டு வீடுகள் இருந்தாலும் மனிதர்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாமல் இருந்தது. ஆனால் அங்கு அமைக்கப்பட்டிருந்த தோட்டங்கள் கண்களுக்கு மிகவும் குளிர்ச்சியாக பார்க்க மிக நன்றாக இருந்தது.

பராமரிக்கப்பட்ட விதமே சொல்லாமல் சொல்லியது அங்கு வசிப்பவர்கள் மேல்தட்டு வர்க்கத்தினர் மக்கள் என்பதை.

வீட்டின் முன் நின்று அழைப்பு மணியை அழுத்தும்போது வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது சைராவிற்கு.

” சைரு தில்லா கிளம்பி வந்துட்ட… ஃபோன்லயை அந்த கொஞ்சு கொஞ்சினான்… நேர்ல எப்படி சமாளிக்கப்போறியோ….??? பேபிடால்ல கவுந்துடாதிடி…” என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டு கதவு திறப்பதற்காக காத்துக்கொண்டிருந்தாள்.

கதவு திறக்காமல் இருக்கவும்….” ஒரு வேளை தூங்குறானோ… எதுக்கும் இன்னொரு தடவை அடிச்சு பார்க்கலாம் ” என்று அழைப்புமணியை இன்னொரு முறை அடிக்க கையை தூக்கவும் கதவு திறக்கவும் சரியாக இருந்தது.

கதவை திறந்த ஹூமேஷியோ நிற்பவளை பார்த்ததும்…. “பேபிடால் ” என்று கூவிக்கொண்டே வெளிவாசல் என்றும் பாராமல் தாவி அணைத்துக்கொள்ள மூச்சடைத்துப்போயிற்று சைராவிற்கு.

அவன் அணைத்ததால் அல்ல… அடர்ந்த ரோமங்கள் கொண்ட வெற்று மார்போடு அவளை  அணைத்துக் கொண்டதால்…. அவனின் ஆண்மை நிறைந்த வாசனை மனதை ஏதோ செய்ய… சற்றே சுதாரித்தவள்…

“ஹே… உப்மா… என்ன விடுங்க… மூச்சு முட்டுது….”  அவன் மார்பில் இருந்து எக்கிக்கொண்டே குரல் கொடுக்க…

” ஷ்… கொஞ்சநேரம் பேபிடால்… சும்மா இரு…” என்று மேலும் இறுக்கிக்கொள்ள…

அவனது அணைப்பில் சுகமாக நசுங்கியவாறே….

” எவ்வளவு நேரம்னாலும் இப்படி நிற்கிறேன்… ஆனால் முதல்ல என்னை உள்ள கூட்டிபோங்க… அதுக்கும் முன்னாடி ஒரு ஷர்ட்ட எடுத்தும் போடுங்க… ப்ளீஸ் ஓஜோபேபி…” அவனது அணைப்பில் மகிழ்ந்தாலும்… சங்கடத்தோடு அவள் நெளிவதை கண்டவன்… அவளை விடுவித்து அவளது முகத்தை பார்க்க…. அந்திவானமாக சிவந்திருந்தது சைராவின் முகம்.

அவன் பார்ப்பதை பார்த்ததும்… வெட்கத்தால் அவள் தலையை குனிந்து கொள்ள…. அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டே வீட்டினுள்ளே அழைத்துச்சென்றான் ஹூமேஷி.

வீட்டிற்குள் நுழைந்த சைராவின் கண்கள் ஆச்சரிய்த்தால் விரிந்தன. ஏனென்றால் வீடு அவ்வளவு சுத்தமாக இருந்தது.

“பாரு பேபி இதை பார்த்தாங்களோ நம்ம கதி அதோகதிதான்… ” என்று மனதுக்குள் நினைத்து சிரித்து கொண்டே உள்ளே வந்து சோஃபாவில் அமர்ந்தாள் சைரா.

“பேபிடால் கண்டிப்பா ஷர்ட் போடனுமா…???” ஹூமேஷி அவள் மன ஓட்டத்தில் இடையிட்டவாரே அவள் அருகே அமர வர…..

” இப்போ நீங்க ஷர்ட் போட்டு வரலன்னா‌… நான் இப்படியே கிளம்பிடுவேன் ஓஜோபேபி….” என்று சைரா எந்திரிக்கவும்தான் …..

முகத்தை தூக்கிக்கொண்டே “சரி..சரி… நான்போய் ஷர்ட் போட்டு வரேன்… நீ போயிடாத… இங்கேயே உட்கார்ந்திட்டுரு… நான் இதோ வந்துருவேன்…” ஒரு வேகத்துடனே உள்ளே சென்றான் ஹூமேஷி.

அவனைப் பார்த்து சிரித்தவள்… அப்பொழுதுதான் கவனித்தாள் அவனது முதுகு கை முகம் கை அனைத்திலும் சிறு சிறு கொப்புளங்கள் சிவந்து இருப்பதை… தன்னால்தானே என்ற கழிவிரக்கம் மிக… தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்டவள்… மனதை மாற்றும் விதமாக… சோஃபாவில் இருந்து எழுந்து வீட்டை சுற்றி பார்க்க ஆரம்பித்தாள்.

பெரிய ஹாலும் ….அதற்குரிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டு… அங்கிருந்து சமையலறைக்கு ஒரு பாதையும்… கீழேயே இரண்டு படுக்கையறைக்கும் செல்ல தனி பாதையும் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இதே போன்ற அமைப்பை மேலே அமைந்துள்ள இன்னொரு தளமும் கொண்டுள்ளது என்பது கீழே இருந்து பார்க்கும்போதே தெரிந்தது.

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு வரும்போது தான்… ஒரு வித்தியாசமான பொருள் சைராவின் கண்களில்பட்டது. கருநீல நிறத்தில் ஒரு நாய் பொம்மையை போல் இருந்தது… ஆனால் நாயைப் போன்ற உடலமைப்பு இல்லாது… உடற்பகுதி மட்டும் வட்டமாக இருந்தது…. நான்கு கால்களும் அந்த வட்டத்தில் செருகி வைத்ததை போல் இருந்தது.

அதுவுமில்லாமல் அது சைராவையே பார்த்துக்கொண்டிருந்தது. அதை உற்றுப்பார்க்கும் போது பொம்மை போல அல்லாது உயிர்ப்புத்தன்மையுடன் இருப்பது போல் இருந்தது.

தனது அகன்ற விழிகளால் அவளையே அது பார்த்துக்கொண்டிருக்க… அதைப்பார்க்க பார்க்க என்னவோ செய்தது சைராவுக்கு. ஒரு உந்துதலில் அதன் அருகே அவள் செல்லவும்… ஹூமேஷி அவளை அழைக்கவும் சரியாக இருந்தது.

“இந்த ஷர்ட் ஓகேயா பேபி டால்….” என்று கேட்டுக்கொண்டே வர…அவள் ஹூமேஷியை திரும்பிப்பார்க்க… சிரிப்புதான் வந்தது சைராவுக்கு. ஏனென்றால் அந்த சட்டை ஏதோ கொசுவலை பின்னலைப்போல் இருந்தது‌. அவள் சிரித்துக்கொண்டே…

“இதுக்கு நீங்க இதை போடாமலேயே இருக்கலாம்….” என்று சொல்லி சிரிக்க…

“அப்போ கழட்டிடறேன்…சரா…” என்றவாறே அதை கழட்டப்போக… அவசரமாக அவனை தடுத்தாள் சைரா…

“வேண்டாம்…வேண்டாம்… போட்டுக்கங்க ஓஜோபேபி…” அவனை கழட்ட விடாது செய்து விட்டாள்.

அவளருகே வந்தவன்…” முதுகு உடம்பெல்லாம் கொப்புளங்கள் இன்னும் குறையவில்லை பேபிடால்…. அதனாலதான் இத எடுத்து போட்டு கிட்டேன்…”சைராவின் கைகளை பிடித்துக்கொள்ள….

“எல்லாம் என்னாலதான்… என்னை மன்னிச்சிடுங்க ஓஜோபேபி….” என்று வருத்தப்பட…

அவளின் தாடையை பிடித்து உயர்த்தியவன்…

” நீ நல்லதுதான் பண்ணிருக்க பேபி டால்… இல்லைன்னா என்ன பார்க்க இங்க வந்திருப்பியா….” என்று அவளை நோக்கி குனிய…

“ம்ம்…” என்ற சைராவின் ஒற்றை பதிலை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டவன்… அவளின் கன்னத்தின் மீது தன் கன்னத்தை வைத்து இழைய…

அன்றைய தினம் ஷேவ் செய்யாததால் அவனது கன்னத்தின் சின்னசின்ன ரோமங்கள் சைராவின் கன்னத்தில் ஒரு இன்பமான வலியை ஏற்படுத்தியது. அந்த வலியை அனுபவித்துக்கொண்டே…

” இந்த வீடு ரொம்ப அழகா இருக்குல்ல ஓஜோ…” சைரா மெதுவான குரலில் கேட்க…

“ம்ம்…” என்ற பதில் மட்டுமே வந்தது ஹூமேஷியிடமிருந்து…

“அது என்ன பொம்மை ஓஜோ…” சைரா மீண்டும் கேள்வி கேட்க… கன்னத்தில் கன்னம் வைத்து கண்மூடி அவளின் குரலை ரசித்துக்கொண்டிருந்தவன் சட்டென்று சைராவை விலக்கி பொம்மையை பார்க்க….

சைராவும் அந்த பொம்மையை தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“இது எனக்கு எங்க அப்பா குடுத்த பரிசு பேபி டால்… ஒரு முறை எங்கேயோ வெளியூர் போயிருந்தப்போ எனக்கு பிறந்தநாள் பரிசா வாங்கிட்டு வந்தார்… அதை தொட்டு பார்த்தா நிஜமாகவே ஒரு நாய்க்குட்டியை தொட்டுப் பார்க்கற மாதிரியே இருக்கும்…”

“வா வந்து கையில் எடுத்துப் பாரு….” அவளின் கைகளில் அதை எடுத்துக் கொடுக்க… அதை தொட்டும் பார்க்க… நிஜமான நாயைப் போல் இருந்தது.

“வாவ்.. ரொம்ப அழகா இருக்கு ஓஜோ… ” சைரா அதற்கு முத்தமிட… அப்பொழுது நாயின் கண்கள் அசைந்ததை போல் இருந்தது சைராவிற்கு… அதிர்ச்சியுடன் அதை தூக்கிப்பிடிக்க…

“என்னாச்சு சரா…??” என்ற ஓஜோவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அதையே உற்றுப்பார்த்துக்கொண்டிருக்க…

“பேபி டால்…” அவளது தோளை தொட்டு ஹூமேஷி திருப்ப…

“ஓஜோ இதோட கண்ணு அசையற மாதிரி இருக்கு… “என்று கூற… சத்தமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டான் ஹூமேஷி.

“சராடார்லிங் அது வெறும் பொம்மைடா …. அது கண்ணு எப்படி அசையும்….” என்று சொல்லி சிரிக்க…  ஒரு வேளை தனது பிரம்மையோ என்று நினைத்தவள் அவளும் புன்னகைத்துக் கொண்டே ஹூமேஷியைப்பார்க்க….

“இந்த சிரியஸ்ஸ முதல் தடவை பார்க்குற எல்லாரும் இப்படி கேட்டுருக்காங்கடா பேபி டால்… நீயாச்சும் பரவால்ல… நிறைய பேர் இது உயிரோடுதான் இருக்குன்னு சண்டையே போட்டுருக்காங்க….” என்று கூறினான் ஹூமேஷி.

“சிரியஸ் இந்த நாய்க்குட்டி பேரா….??? பொம்மைக்கு பேரெல்லாம் வச்சுருக்கிங்க ஓஜோபேபி…” என்று புன்னகைக்க… அவளின் ஓஜோபேபியில் அவள் சகஜமாகிவிட்டதை உணர்ந்து கொண்டவன்….

“எனக்கு இந்த நாய்க்குட்டியை ரொம்ப பிடிக்கும்….” என்றவாறே அவளிடம் இருந்து நாய்க்குட்டியை  தன் கைகளுக்கு மாற்றிக்கொண்டவன்….அதைக் கொஞ்சியவாறே…

“சிரியஸ் என்னோட காவல்வீரன்….என்னோட லக்கிசார்ம்…”  என்று கூற… பேசும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் சைரா.

“போதும் சரா… இவனைப்பற்றி பேசறது… முதல் தடவை வீட்டுக்கு வந்துருக்க என்ன சாப்பிடுற…. “

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… இந்த கொப்புளங்கள் எப்போ சரியாகும் ஓஜோ….???” என்று கவலையுடன் கேட்க…

“நாளைக்கே சரியாயிடும் சரா… இன்னைக்கே பாதி குறைஞ்சுடுச்சுடா….” என்றவாறே அவள் தலையை கோதியவன்… தன் நெஞ்சின் மீது சாய்த்துக்கொள்ள ….

சிரியஸின் கழுத்துப் பட்டையின் டாலரில்… சைரா கழுத்தில் இருக்கும் பென்டண்டின் உருவம் தெரிந்தது.

சட்டென்று ஹூமேஷி பலமாக இரும… பதறிக்கொண்டு எழுந்தாள் சைரா.

“என்னாச்சு ஓஜோ…??'”பதறியவாறே கேட்க…

“எனக்கு கொஞ்சம் தண்ணி வேண்டும் சாரா… நீ போய் எடுத்துட்டு வர்றியா…?? உன்னோட வலது பக்கம் தான் சமையலறை…” என்று அவளை அனுப்பி வைத்தான் ஹூமேஷி. அவள் அந்தப்பக்கம் நகர்ந்ததும்….

அவன் கண்களால் சைகை செய்ய ஓடி வந்து அவனது மடியில் அமர்ந்தது சிரியஸ்.

” இளவரசே… இவங்கதான் எங்க இளையராணியா….” சிரியஸ் கேட்க…

“கொஞ்சநேரம் அமைதியா இரு சிரியஸ்… நீ கிரகித்த விஷயங்கள் சரிதானா…??” என்று கேட்க…

“ஆமாம் இளவரசே… அந்த பெண்டன்டில்தான் உள்ளது… அரசர் டெமிட்ரியஸ் குடுத்த தகவல்கள் உண்மையே…” என்று உறுதிபடுத்த…

“அவள் இங்கிருந்து செல்லும் வரை நீ முன்பை போலவே அமைதியாக போய் உட்காரு சிரியஸ்… மற்ற விஷயங்களை நான் பார்த்துக்கொள்கிறேன்…” என்று உத்தரவிட… அவன் அவ்வாறு உத்தரவிடும் தருணங்கள் அரிது என்பதால்…. அமைதியாக அதன் இடத்திற்கு சென்று அமர்ந்து கொண்டது சிரியஸ்.

சைராவும் தண்ணீர் எடுத்து கொண்டு வந்துவிட சோஃபாவில் நன்கு சாய்ந்து அமர்ந்து கொண்டான் ஹூமேஷி.

” இப்போ இருமல் நின்னுடுச்சே… கொஞ்ச நேரத்துலு பயமுறுத்திட்டிங்க ஓஜோ… ” என்றவாறே தண்ணீர் குவளையை அவனது கைகளில் கொடுத்தாள் சைரா.

ஹூமேஷி தண்ணீர் குடிக்க… அவனது பக்கத்தில் சைரா அமர… தண்ணீர் குடித்துவிட்டு வைப்பதுபோல் மேஜை மீது குவளையை வைத்தவன்‌.. அங்கே வைத்திருந்த சராவின் கீவேலட்டை  தவறி தட்டி விட்டது போல் தட்டிவிட… அதை குனிந்து எடுக்க சைரா குனிய… தன் கையில் வைத்திருந்த சிறிய உருளை வடிவத்தில் உள்ள சாதனத்தை ஒரு அழுத்து அழுத்தினான் ஹூமேஷி.

குனிந்தது குனிந்தவாறே உறைந்திருந்தாள் சைரா. ஹூமேஷி குனிந்து அவள் கழுத்தை பார்க்க அந்த பெண்டன்ட் அவளது செயினில் இருந்தது.

சாதாரணமாக பார்க்கும்போது அது கண்களுக்கு தெரியாத வண்ணம் நிறமற்றதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. கழுத்தில் அணிந்திருக்கும் போது செயின் மட்டுமே கண்களுக்கு தெரியும். இதை உடைத்தால் மட்டுமே அந்த பொருளை எடுக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டான் ஹூமேஷி.

மீண்டும் அந்த சாதனத்தின் விசையை ஒரு அழுத்து அழுத்த.. கீவேலட்டை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தாள் சைரா. நடந்தது அவளுக்கு தெரியாத வண்ணம் செய்து முடித்து விட்டான் ஹூமேஷி.

கீவேலட்டை எடுத்து பைக்குள் வைத்துக்கொண்ட சைரா… “ஓஜோபேபி… நாளைக்கு என்னோட பிறந்தநாள்… நீங்க கண்டிப்பா வீட்டிற்கு வரனும்… நம்மளோட காதலைப்பற்றி என்னோட பெற்றோர் கிட்ட நாளைக்கு சொல்லலாம்னு நினைக்கிறேன்… அதுக்கு முன்னாடி அவங்களுக்கு உங்களை  அறிமுகப்படுத்தனும்னு ஆசைப்படறேன்… என்னோட குறிக்கோள் முடிஞ்சப்பறம்தான் நம்ம கல்யாணம்னு சொல்லப்போறேன்… நீங்க என்ன சொல்றிங்க…??” என்று கண்களில் எதிர்பார்ப்போடு கேட்க…

அவளை இழுத்து அணைத்து… தன் கைகளில் வைத்துக்கொண்டவன்… அவள் கன்னத்தில் முத்தமிட்டவாறே…” என் பேபிடால் கேட்டு நான் ஏதாவது வேணாம் என்று சொல்வேனா..?? அதும் பர்த்டேபேபி ஆசையை நிறைவேற்றியே ஆகனும்…” என்று கூற…

“ஐ லவ் யூ… லவ் யூ லாட்….ஓஜோ பேபி…” முதல்முறையாக தானாகவே ஹூமேஷியை கட்டியணைத்துக்கொண்டு அவன் முகம் முழுவதும் முத்தமிட்டாள் சைரா.

அவளது முத்தத்தில் மயங்கிப் போன ஹூமேஷியோ…” இப்போதான் பேபி அலர்ஜிக்கு சரியான மருந்து குடுத்துருக்க… ” என்று  அவளைப் பார்த்து கண்ணடிக்க..

“போதும் தள்ளுங்க…” என்று எழுந்து விட்டாள் சைரா. நாளைக்கு கண்டிப்பா வந்துருங்க ஓஜோக்குட்டி…

 அவன் கைகளை பிடித்து எழுப்பிக் கைகளை கோர்த்துக்கொண்டே வாசல் வரை நடக்க… அவள் இழுத்த இழுப்பிற்கு கூடவே சென்றான் ஹூமேஷி.

அப்போழுதுதான் அவளுக்கு இன்னொரு விஷயமும் ஞாபகம் வர…

“அச்சோ… நான் ஒரு விஷயத்தை மறந்துட்டேனே ஹூமேஷ்…”

“என்ன சரா…?” அவள் கை விரல்களை தடவிக்கொண்டே கேட்க…

“உங்க அப்பா-அம்மா நம்ம காதலுக்கு சம்மதிப்பாங்களா…??” என்று கவலையுடன் அவனது முகத்தை பார்க்க…

நிச்சயமா எங்கம்மா சம்மதிக்க மாட்டாங்க என்று மனதிற்குள் நினைத்தவன்….

“என்னோட விருப்பம்தான் என் பெற்றோரோட விருப்பமும்… நீ எதைப்பத்தியும் கவலைப்படாதே…எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் பேபிடால்…” என்று அவளை ஒரு முறை மீண்டும் இறுக அணைத்து விடுவித்தவன்…

“பத்திரமா போய்ட்டுவா பேபி டால்… நாளைக்கு நான் அங்க கண்டிப்பா வருவேன்..” என்று அவளுக்கு விடை கொடுக்க…

” நீங்களும் உடம்பை பார்த்துக்கோங்க ஓஜோ பேபி… பை…” என்றவள்…தனது ஸ்கூட்டியை கிளப்பி சந்தோஷமாக அவனிடம் இருந்து விடைபெற்றாள்.

அவள் சென்றதும் கதவைப்பூட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தவனது வெற்றிச்சிரிப்பில் அந்த கட்டிடமே அதிர்ந்தது.

” நீங்க எது உங்களால செய்ய முடியாதுன்னு சொன்னிங்களோ… அதை உங்க கையாலேயே செய்ய வைக்கப்போறேன் மிஸ்டர்.அபரஜித். என்னோட வரவ நாளைக்கு நீங்க எப்படி சமாளிக்கறிங்கன்னு பாக்கறேன் ” … என்ற ஹூமேஷியின் பலத்த குரலில்…. சிரியஸ் சோஃபாவிற்கு அடியில் பதுங்கிக் கொண்டது.

 அத்தியாயம்-16  :                                      

சைராவின் பிறந்தநாளும் இனிதே விடிந்தது.  இரவு பன்னிரண்டு மணிக்கு எப்பொழுதும் சௌமியாவின் வாழ்த்துதான் முதல் வாழ்த்தாக வரும். ஆனால் இந்த முறை முந்திக்கொண்டதோ ஹூமேஷி… சரியாக மணி பன்னிரெண்டு அடிக்கவும் அவனது அழைப்பு வரவும் சரியாக இருந்தது. 

உற்சாகத்தோடு  அவள் அழைப்பை ஏற்க..

“ஹலோ…” என்று சொல்லுமுன்பே முத்தமாரி பொழிந்து விட்டான் அவளது அன்புக்காதலன்.

“ஓஜோபேபி… போதும் போதும்…ஃபோன் வழியா வெள்ளம் வந்துறபோகுது…” சைரா கிண்டல் செய்ய…

“ஹேய்… இப்படி பேசினா பால்கனி வழியா உள்ள குதிச்சுருவேன்டி… ஏற்கனவே வந்த எனக்கு….இப்ப வழி நல்லாவே தெரியும்…”  என்று கூற… அவசரமாக பால்கனியை எட்டிபார்த்தாள் சைரா… ஒருவேளை வந்துவிட்டானோ என்று…

“என்ன பேபிடால் பால்கனிய எட்டிப்பார்க்கிறியா…??” ஹூமேஷி கேட்க…

“எப்படி இவ்வளவு சரியா சொல்றிங்க…???” வியப்புடன் கேட்டாள் சைரா.

ஒருவேளை வந்துட்டானோ… வந்துட்டு அன்னைக்கு மாதிரி ஒளிஞ்சு நின்னுகிட்டு பார்த்துகிட்டு இருக்கானோ என்று நினைத்தது அவளது மனம்.

“நீ நினைக்கிற மாதிரி நான் அங்க வரலை சரா டார்லிங்… நான் வரனும்னு என் பேபி ஆசைப்படுறமாதிரி இருக்கே….” அவள் கூப்பிட்டால் இப்பொழுதே கிளம்பத்தயாராக இருப்பதை பிரதிபலித்தது….. அவனது குரல்.

” வேண்டாம் ஓஜோகுட்டி… அதான் காலைல வரப்போறிங்கள்ள அப்பவே பார்க்கலாம்…” நாளைய தினத்தின் மகிழ்ச்சியை நினைத்து குதூகலித்தது அவளது மனம். அது அவளது குரலிலும் எதிரொலிக்கவே…

” இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேபிடால்… என் சராடார்லிங் ஆசைப்பட்டது எல்லாத்தையும் நான் செஞ்சு குடுப்பேன்… உனக்கு என்ன பரிசு வேணும் … சொல்லு பேபி டால்…” ஹூமேஷி ஆர்வத்தோடு கேட்க…

“நீங்க தான் எனக்கு இந்த வருஷ பிறந்தநாளுக்கு கிடைச்ச மிகப்பெரிய பரிசு… நாளைக்கு உங்கள பார்த்தாலே நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்…எனக்கு அதுதான் வேணும்…” என்று கூற..

“நாளைக்கு என் மாமா-மாமியப்பார்க்க நான் கண்டிப்பா வருவேன் சராடார்லிங்… வந்து அவங்ககிட்ட சொல்லிட்டு…. என் பேபிடால எனக்கு குடுத்துடுங்கன்னு கேட்டு தூக்கிட்டு வந்துட வேண்டியதுதான்…. என்னால் இதுக்கு மேல எல்லாம் பொறுமையா இருக்க முடியாது…” சிரிக்காமல் கூறினான் ஹூமேஷி.

“ஹான்…ஆச… தோச… நீங்க வந்து கேட்டதும் தூக்கி குடுத்துடுவாங்களா…??? முதல்ல உங்களை எங்க அபிமாமாக்கு பிடிக்கனும்…”

“….”

அபரஜித்தை பற்றி பேசியதும்… சாக்ஷியின் நினைவு வந்தவளாக…. அவனிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தவள்… அவளது நிபந்தனைக்கு…. அவனிடம் பதில் இல்லாததை அப்பொழுதுதான் கவனித்தாள்…

“ஓஜோபேபி என்ன பதிலையே காணோம்…”

” உங்க அபிமாமா என்ன…?? உனக்கு யாரெல்லாம் பிடிக்குமோ அவங்க எல்லாருக்கும் என்னையவும் பிடிக்க வச்சுடலாம் சராபேபி…” என்றவனின் குரலில் நிம்மதியடைந்தாள் சைரா.

“ஓஜோக்குட்டி நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டிங்களே….???” சைரா பீடிகையுடன் ஆரம்பிக்க….

அவனுக்கா தெரியாது அவள் என்ன கேட்க போகிறாள் என்று…..இருந்தாலும்

“நீ என்ன கேட்டாலும் நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்…” என்றான் ஹூமேஷி.

“உங்களுக்கு சாக்ஷின்னு யாராவது உறவினர் இருக்காங்களா” என்று கேட்க…

“சாக்ஷியா… அப்படி யாரும் இல்லையேடா… யாரு அந்த சாக்ஷி…” என்று கேட்டு வைக்க… சைராவின் மனமோ வேதனையடைந்தது. ஆனாலும் அவனிடம் அதை காட்டிக்கொள்ள விரும்பாதவள்….

“எங்களுக்குத்தெரிஞ்சவங்க… அவங்க காணாமல் போய்ட்டாங்க….நீங்க அவங்க சாயல்லயும் இருந்திங்களா… ஒரு வேளை உங்களுக்கு உறவினரா இருப்பாங்களோன்னு கேட்டேன் ஓஜோபேபி…” என்று சமாளித்தாள். நடந்த விஷயங்களை இப்பொழுது எடுத்துக் கூறி அவனையும் சேர்த்து கஷ்டப்படுத்த விரும்பவில்லை அவள்.

“ஓ…அப்படியா…நீ ஆசைப்பட்டா அவங்களையும் கண்டுபிடிச்சடலாம்டா ” என்று ஆறுதல் கூறியவன்…. அவள் மனதை மாற்றும் பொருட்டு….

“எத்தனை கிஸ் குடுத்தேன்டி… ஒன்றாவது திருப்பிக்கொடுத்தாயா….??? ” என்று கேட்டு வைக்க….

“இவ்வளவு தானே… இதோ வாங்கிக்கோங்க….” பதிலுக்கு அவளும் முத்தமழை பொழிய….. அப்படியே அதை கண்மூடி அனுபவித்தவன்…

“ஓகே பேபி டால்… இப்போ நீ தூங்கு…. காலையில் முதல் ஆளாக வந்துடுவேன்…” என்று கூறி ஃபோனை வைக்க…

அடுத்த நொடியே ஃபோன் ஒலிக்க ஆரம்பித்தது…சௌமியா தான் அழைத்தாள். இவ்வளவு நேரமா கால் வெயிட்டிங்க்ல இருந்தது.. என்று நினைத்துக்கொண்டே அழைப்பை எடுக்க….

“ஹலோ… சௌமி…” என்று பேசும் முன்பே வாழ்த்தினாள் அவளது ஆருயிர் தோழி.

“சைரு… இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்டி செல்லம்… இந்த பிறந்தநாள் மாதிரியே எல்லா பிறந்தநாளுக்கும் எனக்கு விருந்து வைச்சு… உன் புண்ணியத்தை பெருக்கிக்கோ சைருக்குட்டி….” என்று வாழ்த்த….

“ஏன்டி வாழ்த்தும் போது கூட உனக்கு சாப்பாடுதான் முக்கியமா…???” சைரா சிரித்துக்கொண்டே கேட்க….

“நமக்கு எப்பவும் சாப்பாடுதான்பா முக்கியம்… நாளைக்கு மெனுல பாருமாமி எனக்கே எனக்காக… காலாஜாமூன் செஞ்சு வைக்கறேன்னு சொல்லிருக்காங்களாக்கும்…  இது எங்க ரெண்டு பேருக்குள்ள போட்டுகிட்ட ரகசிய உடன்படிக்கை‌…ஏதோ நீ என் ஃப்ரெண்டா போய்ட்டதால உனக்கும் கிடைக்கும்னு நினைக்கிறேன்…”சௌமி

“அடிப்பாவி பிறந்தநாள் எனக்கா இல்ல உனக்கா… இதெல்லாம் அநியாயம் சௌமியா..” சைரா பல்லைக்கடிக்க…

“கண்ணு வைக்காதடி… அப்பறம் சரியா சாப்பிட முடியாது… ஆமா இவ்வளவு நேரம் கால் வெய்ட்டிங்லயே இருந்துச்சே… உன் பச்சமச்சான் என்னை முந்திகிட்டாராக்கும்….” அங்கே அவள் நொடித்துக் கொள்வது இங்கே தெரிந்தது சைராவிற்கு…

“ஆமா சௌமி…” வெட்கத்தோடு கூற…

“பார்த்துடிம்மா… நீ அங்க வெக்கப்படுறது எனக்கு இங்க தெரியுது….” சௌமி கேலி செய்ய….

“போடி…எனக்கு தூக்கம் வருது… நீ சீக்கிரம் வந்துருடி…” சைரா தூங்கிக்கொண்டே பேச

” அதெல்லாம் நாங்க சரியா நேரத்துக்கு வந்துருவோம்… நீ கனவு கண்டுகிட்டே உன் ஆள பார்க்க… பால்கனில இருந்து குதிச்சுறாத… ” என்று மேலும் அவளை ஓட்டிவிட்டே ஃபோனை வைத்தாள் சௌமியா. மனதுக்கு பிடித்தவர்களின் வாழ்த்தில் நிம்மதியாக கண் அயர்ந்தாள் சைரா.

காலை எழும்போதே பெற்றவர்களின் வாழ்த்தோடுதான் எழுந்தாள்…. சைரா தனது படுக்கையறையில்…

“ஹாப்பி பேர்த்டேடா சைருக்குட்டி” பெற்றவர்களின் ஒருமித்த வாழ்த்தில்தான் கண்விழித்தாள்.

மகேஸ்வரன் மகளை மடி மீது தாங்கிக்கொள்ள அவளின் மற்றொருபுறம் அமர்ந்தார் பார்வதி. இருவரையும் கைபோட்டு அணைத்துக்கொண்டவள்…

“லவ் யூ ப்பா… லப் யூ பாரு பேபி… ” என்று பார்வதியின் கன்னத்தில் முத்தமிட… மகளை கட்டிக்கொண்டார் பார்வதி.

“எங்கே பாருபேபி என்னோட பிறந்தநாள் பரிசு….???” என்று தாயிடம் செல்லங்கொஞ்ச…

” உனக்கு பிடிச்சதுதான்டா வாங்கி வச்சுருக்கேன்.. கீழ வந்து பிரிச்சு பாரு…” பேசிக்கொண்டிருக்கும் போதே…

“ஹ்ம்க்கும்…..”

அறையின் வாயிலில் நின்று தனது தொண்டையை செருமினார் அபரஜித். அவரைப்பார்த்ததும் சைரா…

” அபிமாமா…” என்று துள்ளி குதித்துக்கொண்டு அவரிடம் ஓட…

“ஹாப்பி பேர்த்டே டா சைராக்குட்டிமா…” என்று அவரும் அவளை அணைத்துக்கொண்டார்.

“நீங்க எப்போ வந்திங்க மாமா…??உங்க ஃப்ரெண்டுக்கு உடம்பு சரி ஆய்டுச்சா… ??  ஏன் நீங்க என் ஃபோனை எடுக்கவே இல்லை…??? ” என்று கேள்விக்கணைகளை தொடுக்க… அமைதியாக சிரித்துக் கொண்டும் அவளது பேச்சை ரசித்துக்கொண்டும் நின்றிருந்தார் அபரஜித்.

“நான் இவ்வளவு கேட்கிறேன் நீங்க சிரிக்கறிங்களா மாமா…?? இந்த பர்த்டேக்கும் நீங்க என்கூட இருக்க மாட்டிங்களோனு மனசுக்கு கஷ்டமா போச்சு…” என்று குறைபட…

” இல்லைடா குட்டிமா… அவனுக்கும் எனக்கும் ஒரே ரத்தபிரிவு அதான் அங்கேயே தங்கியிருந்து ரத்தம் குடுத்துட்டு வந்தேன். அதான் வர தாமதமாயிடுச்சு. இப்போ அவன் நல்லா இருக்கான்….” என்று அவளை சமாதானப்படுத்த…

பார்வதியோ சைராவின் காதை பிடித்தவர்…” ஹேய்‌ வாலு…. உனக்காக அபிண்ணா ஓய்வெடுக்க கூட இல்லாம… இன்னைக்கு அதிகாலைல வந்து இறங்கினாரு… அவர நிற்க வச்சு கேள்வி கேட்டுடருக்க நீ…?? முதல்ல அவருக்கு வழிவிடு.. அவர் போய் கொஞ்சநேரம் ஓய்வெடுக்கட்டும்…” என்று அவளை அபரஜித்திடம் இருந்து பிரித்து நிப்பாட்ட…

“ஏன் தங்கச்சி.. பிறந்தநாள் அதுவுமா.. பிள்ளைய இப்படி சொல்ற…??” பார்வதியை கடிந்து கொண்டவர்.. சைராவின் புறம் திரும்பி…

“நீ என்ன வேணும்னாலும் கேளுடா குட்டிமா… மாமா பதில் சொல்றேன்…” என்று அவளுக்கு பரிந்து பேச…. சைராவை கேட்கவா வேண்டும்… பார்வதியை பார்த்து தனது இரவு உடையில் இல்லாத காலரை தூக்கிவிட்டுக் காண்பித்தவள்… அபரஜித்திடம்….

” நீங்க இங்க இருக்கிறதே ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமா….. பாரு பேபி சொன்ன மாதிரி நீங்க முதல்ல ஓய்வெடுங்க…. அதுக்கப்பறம் இன்னைக்கு முழுசும் நீங்க என்கூடவேதான் இருக்கனும்…” என்று அன்பு கட்டளை விதித்து அவரை ஓய்வெடுக்க அனுப்பி வைத்தாள். அபரஜித் ஓய்வெடுக்க அவரது அறைக்கு செல்ல…

பார்வதி மகளை தன்புறம் திருப்பியவர்

“சரி… குளிச்சிட்டு ரெடியாகி கீழ இறங்கி வாடா சைரு….” என்று அவளின் கையில் புத்தம்புது ஆடையை குடுக்க… மகேஸ்வரன் மகளின் கையில் தான் வாங்கி வந்த பிளாட்டினம் செயின் அடங்கிய பெட்டியை  கொடுத்தார்.

அன்னை குடுத்த ஆடைப்பெட்டியை பிரித்து பார்த்த சைரா ….அதில் இருந்த சேலையின் நிறத்தையும் கண்டு அசந்து விட்டாள். தும்பைப் பூவின் வெண்மையும்.. சிறிது சந்தனமும் கலந்த வெள்ளை நிறத்தில் இருந்த அந்த சேலையும் அதற்கு பொருத்தமான டிசைனர் ரவிக்கையும் கண்களை கவர்ந்தது. மகேஸ்வரன் கொடுத்த பெட்டியை திறந்து பார்க்க அதில் அழகான பிளாட்டினம் செயினும்… அதன் லாக்கெட்டில்… மகேஸ்வரனும் பார்வதியும் ஒரு வயது சைராவை கொஞ்சும் படமும் பொருத்தப்பட்டிருந்தது.

பெற்றோரை ஒன்றாக அணைத்துக்கொண்டு…” மகிடாலிங்… பாரு பேபி… ரெண்டுமே ரொம்ப அழகா இருக்கு…” என்று சிறுபிள்ளையை போல் குதூகலிக்க…

“இன்னைக்கு போலவே எப்பவும் சந்தோஷமா இருக்கனும்டா சைராக்குட்டி…” மகேஸ்வரன் மகளை அணைத்துக்கொள்ள..

“க்கும்.. போதும்..அப்பா மகள் கொஞ்சினதெல்லாம்… இன்னைக்காவது காக்காகுளியல் போடாம ஒழுங்கா குளிச்சுட்டு வாடா சைரு…” சிரிக்காமல் கூறிவிட்டு அறைக்கதவை திறந்து வெளியேறினார் பார்வதி.

“பாரு பேபி…ஈஈஈஈ…” மகள் பல்லை கடிப்பதை மனக்கண்ணில் பார்த்து சிரித்துக்கொண்டே கீழே இறங்கி விட்டார்.

” அவ கிடக்கா.. நீ குளிச்சுட்டு வாடா குட்டிமா….” மகேஸ்வரன் மகளின் தலையை கோதி விட்டு கீழே இறங்கி சென்றார்.

சைரா தயாராகி மாடிப்படிக்கட்டுகளில் இறங்கும்போது முதலில் கேட்டது செளமியாவின் குரலே… அவளது அன்னை பார்வதியும் வந்திருந்தார்‌.

“அது எப்படி மாமி நீங்க சமைக்கும் போது மட்டும் இந்த கடாய்ல இருந்து ருசியான பிரியாணி வாசம் வருது… நான் பண்ணா மட்டும் தீஞ்ச வாசம் தான் வருது… ஒருவேளை… நீயெல்லாம் சமைக்க வந்துட்டன்னு… கடாய் காறிதுப்புதோ…. அதான் இப்படி கெட்ட வாடையா வருதோ… இருந்தாலும் இந்த கடாய்க்கு ரொம்பதான் ஓரவஞ்சனை…” அவ்விடத்தில் சிரிப்பிற்கு கேட்கவா வேண்டும்….

“வாயாடி….” அவளது அன்னை அவளது காதைப்பிடித்துத்திருக… பார்வதியோ சிரித்துக்கொண்டே…

” சௌமிக்குட்டி இந்த விஷப்பரிட்சைலாம் நீ பண்ணாதடா…. சரி போ… மேல போய் சைருவ கூட்டிட்டு வா…” என்று கூற…

” நான் அவளைப்போய் பாக்க மாட்டேன்…”என்றாள் சௌமி.

“ஏண்டி….??” கேட்டது அவளது அன்னை. பார்வதி இன்னும் சிரித்துக்கொண்டிருந்தார். அவருக்கு தெரியாதா தோழிகள் இருவரும்….ஒருவரை ஒருவர் எப்படி கலாய்ப்பார்கள் என்று…

“அவ என்னை அண்டா கழுவ சொல்லிட்டாம்மா… என்னைப்பார்த்து அப்படி சொல்லிட்டா மாமி…” என்று மூக்கை சிந்துவது போல் நடிக்க…

எதிர் சோஃபாவில் அமர்ந்திருந்த மகேஸ்வரனும் அபரஜித்தும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தனர்.

“உன்னை உறுப்படியா ஒரு வேலை பார்க்க சொல்லிருக்காளேன்னு சந்தோஷப்படு… இங்க அண்டா கழுவிட்டு நம்ம வீட்டுக்கு வந்ததும் பாத்திரம் தேய்க்கனும்…மகளே” தனக்கு பார்க்க வேண்டிய வேலையும் சேர்த்து சொன்னார் அவளது அன்னை லஷ்மி.

இவர்கள் பேசி முடிக்கவும் சைரா சிரித்துக்கொண்டே கீழே இறங்கவும் சரியாக இருந்தது. பெற்றோரின் கண்கள் தேவதையைப்போல் இறங்கி வரும் மகளைக்கண்டு சந்தோஷப்பட…  அபரஜித்தும் மகேஸ்வரனும் ஒருமித்த குரலில்…

“அம்மா சாயல்ல அப்படியே இருக்காள்ள மகேஷ் .. அபி… ” ஒரேநேரத்தில் கூறிக்கொண்டு கைகளை அடித்துக் கொண்டனர் அபரஜித்தும் மகேஷ்வரனும்.சைரா புடவை கட்டியதும் அவளது பாட்டியின் சாயல் நன்றாகவே தெரிந்தது. மகேஸ்வரனின் தாயார் அவ்வளவு முக லட்சணத்துடன் அழகாக இருப்பார்.

” ப்பா….மாமா… அப்போ என்ன பாட்டின்னு சொல்றிங்களா…. ??? பாரு பேபி எனக்கு பாட்டிசேலையைவா எடுத்துக்குடுத்துருக்க….” என்று சிணுங்க…

“அப்படில்லாம் இல்லடா குட்டிமா…” அபரஜித்தும் மகேஸ்வரனும்  அவசரமாக மறுக்க…

பார்வதியோ..” உங்க அப்பாதான் சைரு இந்த சேலையை தேர்ந்தெடுத்தார்…” என்று தன் பங்குக்கு கோர்த்துவிட…

இடைபுகுந்தாள் சௌமியா…” பாருமாமி.. நீங்க பேசறது அநியாயம்… பாட்டிக்கு பாட்டிசேலை எடுக்காம வேற என்ன சேலை எடுப்பாங்களாம்…??? மகிடாலிங் உங்க செலக்ஷன் சூப்பர்..” ஒரு பறக்கும் முத்தத்தை அவருக்கு அனுப்பியவள்…. சைராவின் புறம் திரும்பி….

“நீங்க அழகாகத்தான் இருக்கிங்க பாட்டிக்கா… ” என்ற சௌமியாவின் பேச்சில் அனைவரும் சிரிக்க…

“ஓவரா பேசறடி பிசாசே….” சைரா அவளது கன்னத்தில் வலிக்க கிள்ளியவள் , அவளது தாயாரையும் வரவேற்க தவறவில்லை…

“வாங்க லஷ்மிம்மா… “அவரருகே சென்று அவரது கைகளை பிடித்துக்கொள்ள.. லஷ்மி அவளது கன்னத்தில் முத்தமிட்டவர்…

” இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா சைரந்திரி…” வாழ்த்தியபடியே அவளுக்கான பரிசுப்பொருளையும் கையில் கொடுத்தார்.

சைரா பரிசுப்பெட்டியை பிரிக்க போக.. அவளிடம் இருந்து பிடுங்கிக்கொண்டாள் சௌமியா.

“ஹேய்… ஒழுங்கா குடுடி…” சைரா அதை வாங்க வர…

“அதெல்லாம் மெதுவா பிரிச்சுக்கலாம்… வந்து முதல்ல கேக்கை வெட்டுடி… அப்போதிருந்தே அட்டைப்பெட்டிக்குள்ள இருந்து என்னையே ஏக்கமா பார்த்துகிட்டிருக்கு….” என்று கூற… அவளை பக்கத்தில் இழுத்து அவளது காதில் “இன்னும் ஹூமேஷ் வரலைடி…” மெதுவாக கூறினாள் சைரா.

ஆனால் இதை அறியாத பார்வதி…” ஆமா சௌமி…” என்று சௌமியின் பேச்சை ஆமோதித்தவர்…

“வந்து கேக் கட் பண்ணுடா சைரு…” என்று அழைக்க.. பெற்றோரிடம் உடன் பணிபுரியும் சிலரையும் அழைத்திருக்கிறேன் என்று பொத்தாம் பொதுவாக கூறிய தனது மடத்தனத்தை நொந்து கொண்டவள்… கேக் வைத்திருக்கும் மேஜையை நோக்கி நகர்ந்தாள்.

அபரஜித் அட்டைப் பெட்டியை பிரித்து கேக்கை எடுத்து வைக்கும் போது… வீட்டின் அழைப்பு மணி அடிக்க… அனைவரும் திரும்பிப்பார்த்தனர்.

அங்கே ஆண்மைக்குரிய மிடுக்கோடும் ஆகாயவண்ண நிற முழு சூட்டில்… கைகள் கொள்ளா அளவிற்கு சிவப்பு நிற பூச்செண்டை கையில் பிடித்துக்கொண்டு, ஆளை அசத்தும் சிரிப்போடு நின்று கொண்டிருந்தான் ஹூமேஷி.

அனைவரும் வந்திருக்கும் விருந்தினரை வரவேற்கும் புன்னகைய சிந்திக்கொண்டே முன்னே நடந்து செல்ல….. அபரஜித்தின் முகம் வெளிறியது…. அவரது உதடுகள் தானாகவே முனுமுனுத்தன…” ஹுமி”……

 

 அத்தியாயம்-17 :                                   

ஹூமேஷியைப்பார்த்த மாத்திரத்தில் சைராவுக்கு வெட்கத்தில் கால்கள் நகர மறுத்தன. அவன் கூலர்ஸ் அணிந்திருந்தாலும் அதையும் மீறி அவனது பார்வை அவளையே மொய்த்துக்கொண்டிருப்பதை நன்றாகவே உணர்ந்தாள். இருந்தாலும் தன்னை சமாளிக்க அவள் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கும் போதே… தோழியின் நிலைமையை கண்டு சுதாரித்த சௌமியா முதலில் சென்று…

“வாங்க….வாங்க ஹூமேஷி சார்…” என்று வரவேற்க…

லஷ்மியம்மாள் வரவேற்கும் விதமாக புன்னகைக்க… மகேஸ்வரன் பார்வதிக்கு அவன் முகத்தில் இருந்து கண்களை எடுக்க முடியவில்லை.

சாகஷியின் பெருமளவு சாயலை கொண்டிருந்தான் ஹூமேஷி. ஆனால் உதடுகளும் நாசியும் இவனுக்கு பெரிதாக இருந்தன. தங்களது மகளுக்கு ஏற்பட்ட குழப்பம் ஏற்படாமல் இருந்தால்தான் ஆச்சரியம்… என்று நினைத்துக்கொண்ட இருவரும் ஒருவரை ஒருவர் பார்ததுக்கொண்டாலும்…

“உள்ளே வாங்க சார்…” என்று வரவேற்றனர்.  அபரஜித் தான் நின்ற இடத்திலேயே அசையாமல் நின்றிருந்தார். அவருக்கு தன்னை சமாளித்துக்கொள்ள சிறிது நேரம் தேவைப்பட்டது.

உள்ளே வந்த ஹூமேஷி…தனது கூலர்ஸை கழட்டிவிட்டு ” ஹாய்… அன்கிள்… ஹாய் ஆன்ட்டி…” என்று கூறி தனது கையை அவர்களோடு குலுக்கியவன்…

“மைசெல்ஃப் ஹூமேஷி… நான் சராவோட வேலை பார்க்குற சீனியர் சைன்டிஸ்ட்…சாரி என்னோட வேலை பார்க்குற இன்னொரு சைன்டிஸ்ட் விக்ரமோட அக்காவிற்கு குழந்தை பிறந்திருக்குன்னு… அவசரமா மும்பை கிளம்பி போயிருக்கான்…” ஹூமேஷி விக்ரமுக்காக தன்னிலை விளக்கம் குடுக்க…

“பரவாயில்லை…அதனால் ஒண்ணுமில்லை சார்… வாங்க வந்து உட்காருங்க…” என்று பார்வதி உபசரித்தார்.

அவர் காட்டிய இருக்கையில் அமர்ந்து கொண்டே “அச்சோ ஆன்ட்டி என்னை சார்னுலாம் கூப்பிட வேண்டாம். ஹூமேஷ்னே கூப்பிடுங்க…” பவ்யமாக பதில் கூற பெற்றோரிடம் பேசிக்கொண்டிருக்கும் அவனையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் சைரா.

மகளின் உறைந்த நிலையை காணாதது போல் கண்டுகொண்ட பார்வதி… அவளை நோக்கி…”சைரு… என்னடா அங்கேயே நின்னுட்ட… உங்க சார் வந்துருக்காரு… வா… வந்து அவருக்கு ஜூஸ் எடுத்துட்டு வந்து கொடு…” என்று கூற…

சைராவும் பிரம்மபிரயத்தனம் செய்து தனது முகத்தில் வெட்கத்தின் சாயல் தெரியவிடாமல் சமாளித்துக்கொண்டே…

பார்வதியின் அருகே நின்று…” வாங்க சார்…” என்று வரவேற்க… ஒரு புன்சிரிப்போடு அவளது வரவேற்பை ஏற்றுக்கொண்டவன்….

தான் அமர்ந்திருந்த ஒற்றை சோஃபாவில் இருந்து எழுந்து… “மெனி மெனி ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே சரா” என்று வாழ்த்தி அவளது கைகளில் தான் வாங்கி வந்த பூச்செண்டை கொடுக்க…

அதை  பெற்றுக்கொள்ள சைரா கையை நீட்டும்போது அவளது கைகளை பிடித்து ஒரு அழுத்து அழுத்தியே கொடுத்தான் ஹூமேஷி. இப்பொழுது எவ்வளவு தடுத்தும் சைராவால் தனது முகம் சிவப்பதை தடுக்க முடியவில்லை. இது மகேஸ்வரன் பார்வதியின் கண்களுக்கும் தப்பவில்லை‌.

அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்த அபரஜித்துக்கு ஹூமேஷியின் செயல்களைப்பார்த்து கோபம் தலைக்கேறியது.

“சைரா…. ” என்று அவர் கத்த…

அனைவரும் அதிர்ந்து திரும்பி பார்த்தனர். அபரஜித் எப்பொழுதும் தன் குரலை உயர்த்தி பேச மாட்டார். இன்று அவர் குரல் ஓங்கி ஒலிக்க… என்னாயிற்று என்ற பதட்டத்துடன் திரும்பி பார்க்க… சைராவோ அதிர்ச்சியில் பூங்கொத்தை நழுவ விட்டாள். அபரஜித் சைராவின் அருகே வந்தவர்….

“சாரிடா குட்டிமா.. என்னையறியாமலே குரல் உயர்ந்திடுச்சு… வா..வா..கேக் கட் பண்ண நேரம் ஆச்சு…” என்று அவள் தோள் மீது கை வைத்து அழைத்துச்செல்ல… அவரின் விளக்கத்தில் ஆசுவாசப்பட்ட அனைவரும் முன்னே செல்ல… கீழே விழுந்த பூங்கொத்தை கைகளில் எடுத்துக்கொண்ட ஹூமேஷி… சைராவைப் பார்த்துக்கொண்டே நிற்க… அவன் பின்னால் நின்றிருந்த அவனது தோள்களில் தட்டி…

“நீங்க ஏன் தம்பி இங்கேயே நிற்கிறிங்க…???? வாங்க கேக் கட் பண்ண…” என்று தன்னுடனேயே…. கேக் வைத்திருந்த மேசையை நோக்கி அழைத்துச்சென்றார் மகேஸ்வரன்.

மகளின் வெட்கமும் பார்வைகளுமே சொல்லாமல் சொல்லியதே மகளின் தேர்வு இவன்தான் …. என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டவர்… எப்படியும் சைரா இவனை விரும்புவதை இன்று அல்லது நாளையே சொல்லி விடுவாள் என்பதை சரியாக ஊகித்தார். அவருக்குமே சாக்ஷியின் சாயலில் இருக்கும் அவனை மிகவும் பிடித்திருந்தது.

கணவர் …தானே…. ஹூமேஷியை அழைத்து வருவதைக் கண்ட பார்வதி அப்பொழுதே முடிவெடுத்து விட்டார் இவன்தான் தங்கள் வருங்கால மாப்பிள்ளை என்று. தங்களது மகளின் சந்தோஷத்தை விட வேறோன்றும் பெரிதில்லை அவர்களுக்கு.

இருவரும் அருகே வரவும்.. அனைவரும் “ஹாப்பி பர்த்டே” பாட…தனது வேண்டுதலை மனதில் நினைத்துக்கொண்டே மெழுகுவர்த்தியை ஊதி அணைத்தாள் சைரா.

கேக்கை கட் செய்து முதலில் தனது பெற்றோருக்கு ஊட்டியவள்… பின்பு அபரஜித், சௌமியா, லஷ்மிம்மா அனைவருக்கும் ஊட்ட…. அவர்களும் பதிலுக்கு ஊட்டினர்.

பின்பு வெட்டப்பட்ட மற்றொரு துண்டை தட்டில் வைத்து அவனிடம் நீட்ட… ஆட்சேபனை பார்வையை பார்த்தான் ஹூமேஷி. சைராவிற்கோ சங்கடமாக இருந்தது.

இன்னும் பெற்றோரிடம் சொல்லாமல் எப்படி இவனுக்கு எல்லோர் முன்னிலையிலையிலும் வைத்து ஊட்டுவதாம்…. கேக்கை எடுத்துக்கொள்ளுமாறு ஒரு இறைஞ்சல் பார்வையை பார்த்து வைக்க… காதலியை சங்கடப்படுத்தாமல் கையில் வாங்கிக்கொண்டான் ஹூமேஷி.

மற்றவர்கள் அனைவரும் சென்று சோஃபாவில் அமர்ந்திருக்க… சைராவின் அருகில் இருந்த சௌமியாவிற்கு இவர்களது நாடகத்தை காண குதூகலமாக இருந்தது. உதடு வரை வந்த சிரிப்பை வாய்க்குள்ளேயே அமிழ்த்துக்கொண்டாலும்… உதடுகள் துடிக்கத் தான் செய்தன.

கேக்கை வாங்கிக்கொண்டு ஹூமேஷி நகர்ந்து விட… நடப்பது அனைத்தையும் இருக்கையில் அமர்ந்தவாறே பார்த்துக்கொண்டிருந்த அபரஜித்துக்கு இரத்த அழுத்தம் எகிறியது. எது நடக்கக்கூடாது என்று அவர் நினைத்தாரோ …. அது அவர் கண்முன்னாடியே நடக்கிறதே… இருதலை கொள்ளி எறும்பு போல் தவித்துக்கொண்டிருந்தார்.

நண்பனது முகத்தில் திடீரென வியர்த்துக்கொட்டுவதை கவனித்த மகேஸ்வரன்… ” என்னாச்சு அபி..இப்படி திடீரென வேர்த்துக்கொட்டுது…??? இன்னும் பயணக்களைப்பு போகலையா…???” என்று தனது கைக்குட்டையை எடுத்து நண்பனது முகத்தை துடைத்தவாறே கேட்க…

அவரது கையை எடுத்துவிட்டு அபரஜித்…” ஆமா மகேஷ்… கொஞ்சம் களைப்பாதான் இருக்கு… இந்த பரிச சைருகிட்ட குடு… நான் அறைக்கு போய் கொஞ்சம் ஓய்வெடுக்கிறேன்…” என்று எழுந்து செல்ல…

ஹூமேஷிக்கும் சௌமியாவுக்கும் ஜூஸ் எடுத்து வந்து கொண்டிருந்த பார்வதி… இதை கவனித்து விட்டு வேகமாக அபரஜித் அருகே செல்ல எத்தனிக்க… அதற்குள் மாடியேறி சென்று விட்டார் அவர்.

“என்னாச்சுங்க…?? அண்ணா எதுவுமே சாப்பிடாம மேலே ஏறிப்போறாரு… ” என்ற பார்வதியின் குரலில் சௌமியாவை அருகில் வைத்துக்கொண்டு கண்களாலேயே பேசிக் கொண்டிருந்த சைராவும் ஹூமேஷியும் கூட திரும்பி பார்த்தனர்.

பார்வதியை‌ நிறுத்திய மகேஸ்வரன்…

“அவனுக்கு ரொம்ப களைப்பா இருக்குன்னு தான் ஓய்வெடுக்க போறான் பார்வதி… நீ பதட்டப்படாதே… “

” இல்லைங்க இன்னும் டிபன் கூட சாப்பிடலை….” என்று பார்வதி கவலைப்பட…

“இரவு முழுக்க பிரயாணம் செஞ்சு வந்துருக்கான்… அதான் ஒரு மாதிரி இருந்துருக்கும்… நீ போய் வந்தவர்களை கவனி.. நானும் எதும் உதவி செய்யவா பார்வதி..???” என்று கேட்க…

“இல்லைங்க… நான் பார்த்துக்கிறேன்… நான் சாப்பாடு எடுத்து வச்சு குடுத்து விடறேன்.. நீங்க அண்ணாவோட அறைக்கு போய் குடுத்துட்டு வந்துருங்க…” என்று கூறிவிட்டு … ஜூஸை எடுத்து எல்லோருக்கும் குடுத்துவிட்டு உணவுபதார்த்தங்களை எடுத்து வைக்க சமையலறைக்குள் சென்றுவிட்டார்.

அதன்பிறகு அனைவரையும் அமர வைத்து பார்வதி பரிமாறுவதற்காக நிற்க…. அவரது கையில் இருந்த கிண்ணத்தை வாங்கிய சைரா…

“பாரு பேபி இன்னைக்கு நான் பரிமாறுகிறேன் எல்லாருக்கும்…”  மகளின் நடவடிக்கையில் தன் கையில் தானே கிள்ளிக் கொண்டார் பார்வதி. வலிக்கிறதே… அப்போ இது கனவில்ல நிஜம்தான்…என்று வாய்விட்டுக்கூறிவிட… பார்வதியின் கன்னத்தில் கடித்தாள் சைரா.

அனைவரும் சிரிக்க…” இப்போ நிஜம்னு புரியுதா பாரு பேபி…????” என்று கேட்டு வைத்தாள் சைரா.

மகளை முறைத்தவர்…” அதுக்கு இப்படியாடி கடிப்ப… வலிக்குது தெரியுமா…” அழுவதுபோல் முகத்தை வைத்து கன்னத்தை தேய்த்துக்கொள்ள…

“சைரு…உங்கம்மா நடிக்கறாடா… நீ நம்பாத….” மனைவியின் குட்டை போட்டுடைத்தார் மகேஸ்வரன்.

இப்பொழுது பார்வதி மகேஸ்வரனை முறைக்க…” சீக்கிரம் வா பார்வதி… பசிக்குதும்மா…” எதைச்சொன்னால் மனைவியின் கவனம் திரும்புமோ அதைச் சொன்னார் மகேஷ்வரன்.

“வாங்க மாமி… பசிக்குது… இன்னைக்கு ஒருநாள் இவளை நாம நல்லபுள்ளயா நினைச்சுக்குவோம்…

சைருக்குட்டி எனக்கு நிறையல்லாம் வேண்டாம்… கொஞ்சமா இந்த தட்டு நிறைய கேசரி வை…

அவள் காண்பித்ததோ… சாப்பாடு சாப்பிடும் தட்டு…

ஹுமேஷி சாருக்கு இந்த கிண்ணம் நிறைய வை… அதுவோ மிகச்சிறிய சாம்பார் கிண்ணம்…”  சௌமி தன் விளையாட்டை ஆரம்பிக்க

“சும்மா இருடி அரட்டை…” என்று சௌமியாவின் தோளில் தட்டிவிட்டு கணவனின் அருகில் வந்து அமர்ந்தார் பார்வதி.

இதையெல்லாம் சுவாரசியமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் ஹூமேஷி. மகேஷ்வரனுக்கு அருகில் அமர்ந்திருந்தான் அவன்.

சைரா அனைவருக்கும் பரிமாறியவள்… அபரஜித்திற்கும் தனியாக சாப்பாட்டை எடுத்து வைத்தவள்…

“ம்மா.. மாமாக்கு நான் போய் சாப்பாடு கொடுத்துட்டு வந்துடறேன்…” என்று கிளம்ப…..

சாப்பிட்டு முடித்திருந்த மகேஸ்வரனோ…” நீ பரிமாறி முடிச்சாச்சுன்னா…  உட்கார்ந்து சாப்பிடு குட்டிமா… நான் போய் அவனுக்கு குடுத்துட்டு வர்றேன்…நண்பனுக்கு ஏன் திடீரென இவ்வளவு அயர்வு… நிஜமாகவே களைப்பா… அல்லது வேறு எதையும் போட்டுக்குழப்பி கொள்கிறானா….??? என்று அவருக்கு தெரிய வேண்டியிருந்தது….” அதனால் அவரே சைராவிடம் இருந்து சாப்பாட்டை வாங்கிக் கொண்டு அபரஜித்தின் அறைக்கு எடுத்துச் சென்றார்.

அவர் சென்றதும்… பார்வதி மகளைப் பார்த்து…”சைரு வாடா… அம்மாகிட்ட உட்கார்ந்து சாப்பிடு…. வேணும்னாலும் அவங்கவங்க எடுத்துக்கலாம்…” அழைக்க…

சாப்பிட்டுக்கொண்டிருந்த ஹூமேஷியின் கண்கள் சைராவைப்பார்த்து காதல்கணைகளை வாரி இறைத்தது. ஏனென்றால் சைரா பார்வதி பக்கத்தில் அமர்ந்தால் ஹூமேஷிக்கு அருகிலேயும் தானே அமர வேண்டும்.

அவனது பார்வை வீச்சை தாங்க முடியாமல் சைரா தயங்கியவாறே… அவனருகில் வர… அவளின் சேலை முந்தானையை கைகளில் பிடித்து யாரும் அறியாதவாறு இழுத்தான் ஹூமேஷி. நெஞ்சம் பட படக்க சைரா சட்டென்று நாற்காலியில் அமர….

“மெதுவா உட்காரு சைரு…” பார்வதி மகளை கடிந்துகொண்டே மகளின் தட்டில் பரிமாறியவர்… ஹூமேஷிக்கும் என்ன வேண்டுமென்று கேட்டு பரிமாறினார்.

எல்லாம் அவளுக்கு மிகவும் பிடித்த பதார்த்தங்களே… ஆனால் அவனருகே அமர்ந்த பிறகு… அவளால் எச்சிலை கூட விழுங்க முடியாது தொண்டைக்குழியில் சிக்கிக்கொண்டது.

“என்னடா சாப்பிடாம இருக்கே… நேரமாச்சுடா சைரு… சாப்பிடு…” என்றவாறே பார்வதி கைகழுவ எழுந்து செல்ல….. லஷ்மிம்மாவும் எழுந்து விட்டார்.

அமர்ந்திருந்தது சௌமி, ஹூமேஷி, சைரா மட்டுமே… அவர்கள் சென்று விட்டதை உறுதி படுத்திக்கொண்ட ஹூமேஷி…. சைரா சாப்பாட்டுத்தட்டையே குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுக்கொண்டிருப்பதை பார்த்தவன்… சௌமியாவையும் ஒரு பார்வை பார்க்க ரசித்து ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் சௌமியா.

நேரம் தனக்கு சாதகமாக இருப்பதை உணர்ந்து கொண்டவன்.. சேலை கட்டியதால் தெரிந்த….சைராவின் இடுப்பில் கிள்ளி வைக்க… துள்ளிக்கொண்டு எழுந்து நின்றாள் சைரா.

அவள்‌ எழுந்த விதத்தைப்பார்த்த சௌமியா….” என்னாச்சு சைரா…??” என்று கேட்க…

சைராவோ சௌமியா வின் கேள்விக்கு பதில் கூறாமல் ஹூமேஷியை முறைத்துக்கொண்டிருந்தாள்.

“ஆஹா…பச்சமச்சான் வேலையை ஆரம்பிச்சிட்டாரு போலவே…. நம்ம மம்மி மாமியும் எங்க காணோம்… எதுக்கும் நம்ம முன்னாடியே அவர் ஏதும் பண்றதுக்குள்ள… நாம கிளம்புவோம்…” நினைத்தவளாக சௌமியா எழுந்து நிற்க…

சைரா அவளைக் கவனித்தவள்…” எங்கடி போற…?? நீ இன்னும் சாப்பிட்டு முடிக்கலைல… உட்காரு… நான் உன் பக்கத்துல வந்து உட்காந்துக்கிறேன்….” தட்டை எடுத்துக்கொண்டு நகர்ந்தவளை.. முறைப்பது இப்போது ஹூமேஷியின் முறையாயிற்று.

“இந்த கொதி கொதிக்கறாளே… அப்போ ஹூமேஷிசார் ஏதோ ஏடாகூடாம பண்ணிருக்காரு போலயே….” மனதுக்குள் பேசினாலும் வெளியே ஏதும் சொல்லாமல் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள் சௌமி.

சைரா அவனுக்கு எதிரே சௌமியின் பக்கத்தில் அமர… அப்பொழுதும் ஹூமேஷி அவளையே பார்த்துக்கொண்டிருக்க…

“கண்ணை நோண்டிடுவேன்” என்பது போல் சைரா சைகை செய்ய…

அதற்கு அசராமல் அவளைப் பார்த்து கண்ணடித்து வைத்தான் அவன்… பரிசாக உதடுகளை குவித்து பறக்கும் முத்தத்தையும் அனுப்பி வைத்தான்.

இதையெல்லாம் கண்டும் காணாதது போல் அமர்ந்திருந்த சௌமியா…” ஒரு பச்சமண்ணை வச்சுகிட்டு இப்படி காதல் விளையாட்டு விளையாடறாங்களே… முருகா… காப்பாத்துப்பா… அவசர வேண்டுதல் வைக்க…” அது அவர் காதில் விழுந்துவிட்டது போலும்….

பார்வதியும் லஷ்மிம்மாவும் பேசிக்கொண்டே உணவு மேஜைக்கு அருகே வந்து கொண்டிருக்க… சாப்பிட்டு முடித்த ஹூமேஷி எழுந்து விட்டான்.

“அச்சோ… என்ன தம்பி அதுக்குள்ள எழுந்துட்டிங்க… இன்னும் ரெண்டு பூரி வைக்கறேன்” என்று வேகமாக கையில் இருந்த பூரித்தட்டோடு வர….

“அய்யோ… போதும் ஆன்ட்டி… நான் நல்லா சாப்பிட்டேன்…ரொம்ப டேஸ்டியா இருந்தது…” என்று பாராட்டிவிட்டு கைகழுவ சென்று விட்டான்.

பார்வதிக்கு தன் சமையலை பாராட்டியதும் அவ்வளவு மகிழ்ச்சி. மகிழ்ச்சியோடு லஷ்மியம்மாவிடம் தான் பேசிக்கொண்டிருந்த பேச்சைத் தொடர்ந்தார்.

“இந்த உளுந்து உருண்டை இடுப்பு வலிக்கு ரொம்ப நல்லது அண்ணி.. சாப்பிட்டு பாருங்க கண்டிப்பா வலி குறையும்…. அப்பறம் அண்ணாவுக்கும் அனுப்பி வைக்கலாம்..” என்று பார்வதி கூறிக்கொண்டிருக்கும் போதே சைராவிற்கு புரையேறியது.

“ஹே..பாத்து…பாத்துடி… “என்று தண்ணியை தோழியின் வாயில் புகட்டிய சௌமியா… 

“அப்போ…மச்சான் இடுப்புல தான் சடுகுடு விளையாண்டாறா…?? அதுக்குதான் அப்படி எந்திருச்சு நின்னியா சைரு…” தோழியின் காதில் மெதுவாக கேட்க…

அவளின் தொடையில் நறுக்கென்று கிள்ளிய சைரா… ” வாயை மூடிட்டு சும்மா இருடி குரங்கே…வா…எந்திரிக்கலாம்..” சௌமியையும் கிளப்பிக்கொண்டு கை கழுவ இழுத்துச்சென்று விட்டாள்.

அப்பொழுது மகேஸ்வரன் மேலிருந்து கீழே இறங்கி வர… லஷ்மிம்மாவிடம் பேச்சை நிப்பாட்டிய பார்வதி… கணவன் கையில் கொண்டு வந்த பாத்திரங்களை வாங்கிக்கொண்டே…”என்னங்க … என்னாச்சு ….??? அண்ணாவுக்கு… இப்போ கொஞ்சம் பரவாயில்லையா…???” என்று கேட்க…

“கொஞ்சம் பரவாயில்லை பார்வதி… கேட்டாலும் அவன் எதுவும் சொல்லலை… ரொம்ப களைப்பா இருக்குன்னு சொல்லிட்டான்… அவனை வற்புறுத்தி சாப்பிட வச்சுட்டு வந்துருக்கேன்…” என்றார் மகேஷ்வரன்.

இங்கே இவர்கள் பேசிக்கொண்டிருக்க… கை கழுவிவிட்டு அவளுக்காகவே சமையலறையில் இருந்து தோட்டத்திற்குள் செல்லும் வழியில் நின்று கொண்டிருந்தான் ஹூமேஷி.

அவனைப் பார்த்ததும் சைராவைப்பார்த்து சௌமியா நமுட்டுச் சிரிப்பு சிரிக்க… தோழியை தடுக்க முடியாமல் திணறினாள் சைரா.

“சைரு உனக்கு பிரத்யேக பிறந்துநாள் பரிசு குடுக்கறதுக்காக… சார் நின்னுகிட்டு இருக்காருடி… ம்ம்.. நடத்து… நடத்து…” கை கழுவியவள் சைராவின் பதிலை எதிர்பாராமல்… அறையின் ஆரம்பவாசலில் சென்று நின்று கொண்டாள்.

கை கழுவி விட்டு தோட்டத்தில் நின்று கொண்டிருந்த ஹூமேஷியின் அருகே சென்றாள் சைரா. இப்பொழுது அவனாகவே அவளின் இடுப்பை வளைத்து இழுத்துக்கொண்டவன்…. அவள் சுதாரிக்கும் முன்பே …. அவளது இதழ் தேனை முற்றுகையிட்டுருந்தான்.

சிறிது நேரம் கழித்தே விடுவித்தவன்… அவள் கண்ணை திறக்கும் போது… “லவ் யூ பேபி டால்….” என்றவாறே அவளது கை விரலில் மோதிரத்தை அணிவித்துக் கொண்டிருந்தான்.

மிக அபூர்வமான பச்சைவைரக்கல் பதித்த பிளாட்டினத்தால் செய்யப்பட்ட மோதிரம் அது.

“ஓஜோபேபி… என்னதிது…???” சைராவினால் பிரம்மிப்பிலிருந்து வெளியே வர சற்று நேரம் பிடித்தது.

“என் பேபிடாலுக்கு நான் குடுக்குற பிறந்தநாள் பரிசு… இது என் அம்மாவின் மோதிரம் பேபிடால்… நம்ம கல்யாணத்தப்போ உனக்கு போடனும் நினைச்சேன்… ஆனால் இப்போவே உனக்கு குடுக்க ஆசையா இருந்தது. இதை நீ பத்திரமா வச்சிருந்து நம்ம கல்யாணத்தப்ப என்கிட்ட குடு… ஊரறிய நான் உனக்கு இதை போட்டு விடறேன்….” கூறிவிட்டு அவளை அணைத்துக்கொண்டான் ஹூமேஷி.

சைராவுக்கோ மிகவும் சந்தோஷமாக இருந்தது. குடும்ப மோதிரத்தை அவளது கையில் அணிவித்து… நீதான் எங்கள் வீட்டு மருமகள் என்று சொல்லாமல் சொல்லி…. அதை பாதுகாக்கும் பொறுப்பையும் ஒப்படைத்து விட்டானே என்று.

அவளும் அவனை இறுக அணைத்துக் கொள்ள  காதலியின் நெகிழ்ந்த நிலையை உணர்ந்து கொண்டவன்…

“பேபி டால்… நாம இப்போ வீட்டிற்குள் போகலாமா… ??? உன் தாயார் எந்நேரமும் இங்கே வந்துவிட வாய்ப்புண்டு …” அந்த மோனநிலையை கலைக்க….

“போகலாம் ஓஜோபேபி… அதுக்கு முன்னாடி…” என்று இழுத்தவள்…

அவனது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டுவிட்டு….. “ஐ லவ் யூ… லவ் யூ மோர்தேன் எனிதிங்…ஓஜோபேபி…” கத்திவிட்டு உள்ளே ஓடிவிட்டாள் சைரா.

இதை மேலே பால்கனியில் நின்று பார்த்துக்கொண்டிருந்த அபரஜித்துக்கோ அப்போதே ஹூமேஷியை கொன்றுவிடும் அளவிற்கு ஆத்திரம் வந்தது.

சிரித்துக்கொண்டே அவளை பின் தொடர்ந்த ஹூமேஷி… முன்னே சௌமியுடன் சென்று கொண்டிருந்த சைராவை விட்டு ஒதுங்கி நடந்து முன்னே சென்று… கைக்குட்டையால் முகத்தை துடைத்தவாறே மகேஸ்வரனின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

மகேஸ்வரன் அவன் அருகில் அமர்ந்ததும் அவனது பெற்றோர் குடும்பம் பற்றி அறிந்து கொண்டவர்… சாக்ஷியைப் பற்றியும் கூறி வைத்து …. அவனுக்கு தெரிந்தால்… தகவல் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ள….

“தன்னால் முடிந்த உதவியை தான் நிச்சயம் செய்வதாக…” வாக்களித்தான் ஹூமேஷி.

பின்பு சிறிதுநேரம் பேசியிருந்து விட்டு அவன் கிளம்ப… கண்களாலேயே அவனுக்கு விடைகொடுத்தாள் சைரா. அதன் பிறகு சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்த சௌமியாவும் லஷ்மிம்மாவும் மாலையில் கிளம்பிச் சென்றனர்.

மற்ற முவரும் சிறிது நேரம் ஓய்வெடுக்க.. இரவு உணவிற்குதான் கீழே இறங்கி வந்தார் அபரஜித்.

“இப்போ உடம்புக்கு பரவாயில்லையா மாமா…” என்ற சைராவின் கேள்விக்கு புன்னகைத்தவர்… அவள் தலையை கோதி விட்டு… சாப்பிட்டுவிட்டு எழுந்து சென்று விட்டார்.

ரொம்பவும் களைப்பாக உணர்கிறார் போல… என்று நினைத்துக்கொண்ட மூவரும் இரவு உணவை முடித்துக்கொண்டு தங்களது அறைக்குத் தூங்கச்சென்றனர்.

நள்ளிரவில் தண்ணீர் தாகம் எடுக்க…. பாட்டிலில் தண்ணீர் இல்லாததால் தண்ணீர் எடுக்க கீழே போக … சைரா அவளது அறைக்கதவை திறந்து வெளியே வர….

அங்கு அவள் கண்ட காட்சி……..

அவள் இதயத்துடிப்பையே ஒரு நொடி நிறுத்தி துடிக்க வைத்தது…

அங்கே… எதிரே இருந்த அபரஜித்தின் அறையின் மூடிய கதவை ஊடுருவி வெளியே வந்து கொண்டிருந்தான் ஹூமேஷி கதவை திறக்காமலேயே….

பிரம்மையோ என்று சைரா கண்களை கசக்கி பார்க்க… இப்பொழுது அவள் முன்னால் நின்றருந்தான் ஹூமேஷி.

காதலாக பார்த்த கண்களால் பயமாய் அவனை பார்த்த சைரா….

“பே….பேய்ய்……” என்று கத்தப்போக….

அவள் கத்துவதற்குள் அவளின் வாயைப் பொத்தி … அவளின் அறைக்கு இழுத்துச்சென்றான் ஹூமேஷி.

அவளை கட்டிலில் தள்ளி விட்டு அறைக்கதவை சாத்த… பயத்தில் கட்டிலின் ஓரத்தில் சாய்ந்து கொண்டாள்.

அவளின் பயத்தால் வேதனையுற்றவன்… கண்களில் காட்டிக்கொள்ளாது….

“நீ நினைப்பது போல் நான் பேய் அல்ல சைரா….” என்று கூற….

“அ….அப்…..அப்போ… நீங்க யாரு…” முயன்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டாள் சைரா.

” நான் ஒரு வேற்றுகிரகவாசி சைரந்திரி…”

“ஓஜோ கிரகத்தின் இளவரசன் ….. ஓஜோ ஹூமேஷி….” கம்பீரமாக சொல்லியவன்…  தான் யார்… எதற்காக பூமிக்கு வந்தேன் என்பதை உரைக்க…

அதே ஓஜோ ஹூமேஷியையும் அவனது குறிக்கோளையும்தான் நினைத்துக்கொண்டிருந்தார்…..தனது தலையை கைகளில் தாங்கிப்பிடித்துக்கொண்டு பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த அபரஜித்தும்.

அத்தியாயம்-18 :

13வருடங்களுக்கு முன்பு….

கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சாக்ஷிக்கு அன்று கல்லூரிக்குச்செல்ல நேரம் ஆகிவிட்டது.

“ச்ச…முக்கியமான நாள்ளதான் இப்படி நடக்கும்… ” என்று புலம்பியவாறே கிளம்பிக்கொண்டிருந்தாள்.

பார்வதி அவளை சாப்பிட வருமாறு அழைக்க…” அத்தை இன்னைக்கு ஒரு நாள் கேண்டின்ல சாப்பிட்டுக்கிறேனே… ரொம்ப நேரம் ஆய்டுச்சு….” சாக்ஷி சாப்பிட மறுக்க…

“குட்டிமா உதை வாங்கப்போற… நானும் பார்த்துகிட்டே இருக்கேன்… வர வர ஒழுங்கா சாப்பிடறதே இல்லை… கொஞ்சம் முன்ன எழுந்திருச்சா இவ்வளவு அவசரமா கிளம்ப வேண்டிய அவசியம் இல்லைல….  அந்த குட்டி கழுதை உன்னையும் சேர்த்து கெடுத்து வைக்கிறா….

பாரு…இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு ஸ்கூலுக்கு கிளம்ப… இப்பதான் பாத்ரூம்குள்ளயே நுழைஞ்சிருக்கா…. ” மகளை திட்டிக்கொண்டே தான் பெறாத மகளுக்காக தட்டில் உணவை எடுத்துக்கொண்டு வந்து ஊட்ட வர…

அத்தையின் அன்பில் மனம் நெகிழ்ந்தது சாக்ஷிக்கு…ஏனென்றால் அவரும்தான் பேராசிரியை ஆக பணிபுரிகிறார்… கல்லூரிக்கும் கிளம்ப வேண்டும்… வீட்டு வேலைகளையும் அவர்தான் பார்க்கிறார்…. எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு தன்மீது அவர்காட்டும் அன்பு விலைமதிக்க முடியாதது….. ” ஒருவாய் அவரது கையால் வாங்கியவள்…. குடுங்கத்தை நான் சாப்பிட்டுக்கிறேன்… நீங்க போய் ரெடி ஆகுங்க….சைருக்குட்டிய நான் கிளப்பறேன்..”சாப்பிட்டுக்கொண்டே பேச…

பார்வதியோ…”ஏற்கனவே நேரமாச்சுன்னு சொல்ற… வேண்டாம் குட்டிமா… நான் அந்த குட்டிபிசாச கிளப்பி கீழ அனுப்புறேன்… நீ இட்லி மட்டும் எடுத்து வைடா அவளுக்கு…” என்று பேசிக்கொண்டிருக்க…

அப்பொழுதுதான் குளித்து வந்திருந்த மகேஷ்வரன் காதுகளில் பார்வதி பேசியது விழ…” சஷிகுட்டிமா… நீ சாப்பிட்றா…

என் செல்லத்தை திட்டாம உனக்கு பொழுதே விடியாதே பார்வதி….

அவ வந்தா நான் டிபன் குடுத்துக்கறேன்… நீ போய் கிளம்புற வேலையைப்பாரு… ” என்றவாறே சாப்பிட அமர்ந்தார்.

பெரிய பொறுப்பை கணவன் எடுத்துக்கொண்டதில் நிம்மதி அடைந்தவராக… தயாராவதற்கு மேலே ஏறி சென்றார் பார்வதி.

“இன்னொன்னு வச்சுக்க குட்டிமா…” மகேஷ்வரன் சாக்ஷியின் தட்டில் இன்னொரு இட்லியை வைக்கபோக…

“அச்சோ மாமா… போதும் மாமா… நான் நல்லா சாப்பிட்டேன்….நேரமாகிட்டே இருக்கு… இன்னைக்கு பிராக்டிகல்ஸ் இருக்கு… புது பேராசிரியர் வேற வரப்போறதா சொன்னாங்க… முதல் வகுப்பே அவரோடதுதான்… நான் சீக்கிரம் கிளம்பனும் மாமா…” என்றவாறே எழுந்தவளை பிடித்து மீண்டும் அமர வைத்தவர்….

அவளது தட்டில் இட்லியை வைத்துக்கொண்டே…” அதெல்லாம் ஒண்ணும் நேரமாகாது… உங்கப்பன் இன்னைக்கு ஒருநாள் சீக்கிரம் போய்ட்டு… இதோட பத்து தடவை ஃபோன் பேசிட்டான் …. நீ ஒழுங்கா சாப்பிட்டியான்னு….??? உட்கார்ந்து நல்லா சாப்பிடுடா…..உன்னை காலேஜ்ல விட்டுட்டு மாமா லேட்டா போய்க்கிறேன்… “என்று முடித்துவிட…

நிமிடத்தில் மனபாரத்தை குறைத்துவிட்ட மாமனின் செய்கையில் மனம் குளிர்ந்தவளாக நன்றாக அமர்ந்துகொண்டு சாப்பிட்டாள் சாக்ஷி.

இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது… சைரா கத்தும் சத்தம் கேட்டது…

“ம்மா… இந்த ரிப்பன் கோணலா கட்டி விட்டுருக்கிங்கமா…” மகளுக்கு தலை சீவி முடித்துவிட்டு சேலையை சரி செய்து கொண்டிருந்த பார்வதியிடம் சைரா கத்த…

அதைக்கேட்டு இருவரும் சிரித்துக்கொண்டனர்.

“அதுக்கு ஏண்டி பிசாசு மாதிரி கத்துற… ஒன்பது மணி ஸ்கூலுக்கு எட்டுமணிக்கு எந்திரிச்சுட்டு… இப்ப கத்து….” அதட்டிக்கொண்டே கிட்டேவந்து பார்த்த பார்வதியின் கண்களுக்கு…. ரிப்பன் சரியாகத்தான் இருந்தது.

“ஹேய்… சரியாத்தான்டி இருக்கு… “

“இல்லம்மா கண்ணாடில பாரு ….”  சைரா கண்ணாடி முன்னேயே நிற்க… மகள் எதற்காக இப்படி சொல்கிறாள் என்பதை கண்டுபிடித்து விட்டார் பார்வதி. இன்று கடந்தமாதம் நடந்து முடிந்த பரிட்சை விடைத்தாள்களை தருவார்கள்.

கணக்கை தவிர மற்ற அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண் வாங்குவாள் மகள். ஏனென்றால் கணக்குப்பாடம் அவளுக்கு பிடிக்காது. இத்தனைக்கும் பார்வதி கணக்கு பேராசிரியை. அப்படியே அவங்கப்பாவை மாதிரி என்று நினைத்து சிரித்துக்கொண்டவராக…..

“சைரு… நீ எதுக்கு நேரமாக்குறன்னு எனக்கு தெரியும்… இன்னைக்கு நீ எவ்வளவு நேரமாக்கினாலும்… உன்னை ஸ்கூல்ல விட்டுதான் அம்மா கிளம்புவேன்… சாயங்காலம் எல்லா பரிட்சை முடிவு விடைத்தாளும் என் கைக்கு வந்துருக்கனும்… நேத்தே உங்க வகுப்பாசிரியை எனக்கு சொல்லிட்டாங்க….”  என்று கூறிவிட்டு நகர்ந்து விட்டார்.

“அந்த லூசு லிஸ்ஸி சொல்லிருச்சா…” வகுப்பாசிரியையை மனதுக்குள் அர்ச்சித்தாள் சைரா.

இனி அன்னையிடம்…. தான் என்ன செய்தாலும்  செல்லுபடியாகாது என்று புரிந்து  கொண்டவள்… சோகமாக முகத்தை வைத்துக் கொண்டே தனது ஸ்கூல்பேகை எடுத்து மாட்டிக்கொண்டு கீழே இறங்கி வர…

அவ்வளவு நேரம் இவர்களது சம்பாக்ஷணையை கேட்டுக்கொண்டிருந்த மகேஷ்வரனும் சாக்ஷியும்சைருவை பார்த்து சிரிக்க….

“சஷிக்கா…” ஓடிவந்து கட்டிக்கொண்டாள் சைரா.

பதிலுக்கு சாக்ஷியும் “என் செல்லக்குட்டி” என்று அணைத்துக் கொள்ள…

“சஷிக்கா இந்த பாரு பேபி… எப்பபாரு என்னை திட்டிட்டே இருக்கு… இந்த அப்பாவும் மம்மி கிட்ட போய் கேக்க சொன்னா… மம்மி பேச ஆரம்பிச்சதும் “சரி..சரி” ன்னு தலையாட்டிட்டு வந்துடுறாரு…” என்று பெற்றோர் மீது புகார் வாசிக்க…. சாக்ஷிக்கோ அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது.

“அதெல்லாம் இருக்கட்டும்…வந்து சாப்பிடுடா சைருக்குட்டி…” மகேஷ்வரன் மகளை உண்ண வைப்பதில் குறியாக இருக்க…

“போப்பா… இன்னைக்கு கணக்கு பேப்பர் குடுப்பாங்க..‌ நீ மம்மிக்கு தெரியாம ஒளிச்சு வைக்கறேன்னு சொல்லு… அப்பதான் சாப்பிடுவேன்…” என்று அடம்பிடிக்க…மகேஷ்வரனுக்கு முழி பிதுங்கியது.

ஆபத்பாந்தவனாக எதிரில் அமர்ந்திருந்த சாக்ஷியை அவர் ஒரு இரைஞ்சல் பார்வையை பார்க்க… மாமனை புரிந்து கொண்டவள்… நான் பார்த்துக்கிறேன் என்பது போல் சாக்ஷி கண்ணை மூடி திறக்க…. மகள் கேட்ட கேள்விக்கு பதில் கூறாது ஆசுவாசமானார் மகேஷ்வரன்.

“சைருக்குட்டி சாயங்காலம் நீ ஸ்கூல்ல இருந்து வந்ததும் நாம அப்பாவோட பார்க்குக்கு போகலாம்…இப்ப நீ சமத்தா சாப்பிடுவியாம்… என் கண்ணுல்ல…” என்று அவளது தட்டில் இட்லியை வைக்க…

“ஹைய்யா….அபிமாமா சொன்னா கூட்டிட்டுப் போவாரு… நான் சாப்பிடறேன் சஷிக்கா…” என்று சமத்தாக சாப்பிட….தானும் தயாராவதற்காக எழுந்து சென்றார் மகேஷ்வரன்.

சைரா சாப்பிட்டு முடித்ததும் அவளுக்கு எப்போதும் தான் கொடுக்கும் சாக்லேட்டை சாக்ஷி குடுக்க… மகிழ்ச்சியுடன் அதை பெற்றுக்கொண்டவள்… சாக்ஷியை முத்தமிட்டு கட்டிக்கொண்டாள். சைராவின் இந்த ஒரு செய்கைக்காகவே தினமும் அவளுக்கு ஒரு சாக்லேட் கொடுப்பாள் சாக்ஷி.

மகேஸ்வரனும் பார்வதியும் தயாராகி கீழே இறங்கி வர… அனைவரும் ஒன்றாக கிளம்பினார். மகளை பள்ளியில் இறக்கிவிட்டு.. மனைவியை கல்லூரி‌பேருந்து வரும் இடத்தில் விட்டுவிட்டு… சாக்ஷியை கல்லூரியில் இறக்கி விட்டார் மகேஸ்வரன்.

கல்லூரிக்குள் நேரத்தில் நுழைந்துவிட்டாள் சாக்ஷி. வகுப்பில் அமர்ந்து தோழிகளிடம் பேசிக்கொண்டிருக்க…… அவர்களில் ஒருத்தி….

“ஹே… இன்னைக்கு வர சார் பார்க்க செம ஹேண்ட்சம்மாம்… ஆனால் சரியான‌ டெரர் பீஸாம்….” என்று கூற…

“எப்படிப்பட்ட பீஸானாலும் நம்ம ஓட்டி ஒரு வழி ஆக்கிருவோம்டி…” என்று கூறி கலாய்த்தாள் மற்றொரு தோழி.

இவ்வாறு அவர்கள் பேசிக்கொண்டிருக்க.. புதியவனும் வகுப்பறைக்குள் நுழைந்தான். அவன் நுழைந்ததும் அனைவரும் எழுந்து நிற்க…. முதல் பென்ச்சில் அமர்ந்திருந்த சாக்ஷியை பார்த்து அவன்தான் மனதுக்குள் அதிர்ந்து போனான்.

இருந்தாலும் அதை வெளிக்காட்டாதவாறு

“வணக்கம் மாணவர்களே… நான்தான் உங்களுக்காக புதிதாக நிர்மனம் செய்யப்பட்டிருக்கும் கணினி பேராசிரியர் டெமெட்ரியஸ்….” என்று அறிமுகம் செய்து கொள்ள…

முதல் பார்வையிலேயே சாக்ஷியின் மனதை கொள்ளை கொண்டான் டெமெட்ரியஸ்.

முதல் வகுப்பு சுமூகமாகவே செல்ல…. அவளது பெயரையும் அறிந்து கொண்டான் டெமெட்ரியஸ்.

அவன் வகுப்பு எடுக்கும் விதம், நடை, உடை, பெண்களிடம் அவன் காட்டும் கண்ணியம், கெட்ட நோக்கத்தோடு பழக வருபவர்களை பார்வையாலேயே தூர நிறுத்தும் அவனது கூர்மையான பார்வை… அனைத்தும் சாக்ஷியை அவன்மேல் பித்தாக்கியது.

சாக்ஷியின் ஆர்வப்பார்வையை தெரிந்துகொண்டாலும்…. டெமெட்ரியஸ் அவளிடம் சற்று கடுமையாகவே நடந்து கொண்டான்.

ஆனால் அவன் அவ்வாறு நடந்து கொள்வது சாக்ஷியை அவன்பால் மேலும் ஈர்த்தது.

ஆரம்பத்தில் அவளும்…. இது வெறும் ஈர்ப்பு மட்டுமே என்று நினைத்திருந்தாள். ஆனால் அவனது கண்ணியமும், நேர்மையும் மற்றவர்களோடு பழகும் விதமும்… இன்னதென்று இனம்புரியாத ஒரு காரணத்தோடு… அவன்மேல் ஏற்படுவது காதல் உணர்வே என்று அவளது உள்ளுணர்வு அடித்துக்கூறியது.

நாட்கள் அதன்போக்கில் நகர சாக்ஷி அவளது காதலை அவனிடம் சொல்லும் நாளும் வந்தது.

டெமெட்ரியஸின் மனமோ தவித்துக் கொண்டிருந்தது. மனதிற்கு பிடித்தவளின் சாயலில் சாக்ஷி இருப்பதும்…. அவள் தன்னையே சுற்றி சுற்றி வருவதும் இன்ப அவஸ்தையை ஏற்படுத்தியது. அதுவுமல்லாது தான் இப்போது இருக்கும் சூழலில் எந்த ஒரு திடமான முடிவும் எடுக்க முடியாத சூழ்நிலை கைதியாக இருந்தான்.

சிறு பெண்ணின் மனதில் சலனத்தை ஏற்படுத்தக்கூடாது என்ற முடிவை எடுத்தவனாக… அவளை விட்டு ஒதுங்கிச்செல்ல செல்ல… அவனை மேலும் நெருங்கினாள் சாக்ஷி.

பாடத்தில் சந்தேகம் கேட்பது போல் அவனருகிலேயே நிற்பதும்… அவன் எங்கு சென்றாலும் அவன் பின்னேயே செல்வதும்… நூலகத்துக்கு சென்றால் அவனருகே அமர்வதும்… கேன்டினுக்கு சென்றால் அவன் எதிரே அவனைப்பார்த்துக்கொண்டே அமர்ந்திருப்பதுமாக… அவனை ஒரு வழி ஆக்கினாள் சாக்ஷி. அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது…. தானா இப்படி ஒரு ஆண்மகனின் பின்னால் துரத்திக்கொண்டிருக்கிறோம் என்று.

ஒருநாள் டெமெட்ரியஸ் கல்லூரி விட்ட மாலை வேளையில் மரத்தின் கீழ் அமர்ந்து ஒரு புத்தகத்தை பார்த்துக்கொண்டிருக்க…. கடைசி செமஸ்டர் ஆரம்பித்து விட்டதால் நூலகத்தில் புத்தகங்களை ஒப்படைத்து விட்டு… சரி பார்த்து கையெழுத்திட்டு வந்த சாக்ஷியின் கண்களில் பட்டான் டெமெட்ரியஸ்.

ஒரு முடிவெடுத்தவளாக அவனை நோக்கி நடந்து சென்றாள் சாக்ஷி…  அவன் அருகே சென்று தனது தொண்டையை செரும…

“ஹ்ம்க்கும்….”

அவளின் வரவை உணர்ந்து கொண்டாலும்..  நிமிர்ந்து பார்க்காமல் அமர்ந்திருந்தான் டெமெட்ரியஸ்.

“சார்…” என்று சாக்ஷி அழைக்க….

இது வேலைக்காகாது என்று நினைத்தவன்…அவளை பார்க்காது.. எழுந்து நடக்க ஆரம்பித்தான்.

ஆனால் சாக்ஷியோ அவனின் வழியை மறித்து நின்றாள். டெமெட்ரியஸ் இப்பொழுது நேருக்கு நேர் அவளைப்பார்க்க… சாக்ஷியும் கண்களில் காதலோடு அவன் பார்வையை தாங்கி நின்றாள். சிறிது நேரம் மௌனமே அங்கே ஆட்சி செய்ய… முதலில் அதை கலைத்த சாக்ஷி…

“ஏன் சார்… என்னைப்பார்த்தாலே ஒதுங்கிப்போறிங்க…??” என்று கேட்க….

“…” டெமெட்ரியஸ் அமைதியாகவே நின்றிருந்தான்.

“பதில் சொல்லுங்க சார்… “என்று அவனருகே வர… ஓரடி பின்னாடி தள்ளி நின்றான் அவன்.

“என் கண்ணுல உங்களுக்கான காதல் தெரியலயா…?? டெமி…. ஒவ்வொரு தடவையும் நான் உங்ககிட்ட பேசி பழக முயற்சி செய்யும் போதெல்லாம் ஏன் விலகி விலகி போறிங்க….??? உங்கள பார்த்த முதல் நாளிலிருந்து என்ன காரணம்னே தெரியாம பித்து பிடிச்சு உங்க பின்னாடியே சுத்துறேனே… ஏன் என்னைப்புரிஞ்சுக்க மாட்டேங்கிறிங்க…. ஒரு வேளை… ஒரு பொண்ணு அவளே வந்து காதலை சொல்றதால என்னை மட்டமா நினைக்கிறிங்களா டெமி… ” உடைந்து அழ ஆரம்பிக்க…

அவளது அழுகையை தாங்க இயலாது வாயைத்திறந்த டெமெட்ரியஸ்…

“முதலில் அழுகையை நிறுத்து சாக்ஷி… ” என்று சத்தமிட… அவளின் அழுகை தானாக நின்றது.

“படிக்க வயசுற என்ன இந்த காதல் கத்திரிக்காயெல்லாம்…??? சின்னபொண்ணு மனசு சஞ்சலப்பட கூடாதுன்னுதான்…நான் விலகிப் போனேன். இப்பவும் சொல்றேன் நீ படிக்கற வேலையை மட்டும் பாரும்மா. படிச்சு முடிச்சு செட்டில் ஆகிட்டு… பெற்றோர் பார்த்து வைக்கிற பையனைப் பார்த்து கல்யாணம் பண்ணிகிட்டு நல்ல விதமா வாழப்பார்…” அவளுக்கு அறிவுரை கூறிவிட்டு நகரப்போக…

“ஒரு நிமிஷம் நில்லுங்க டெமி…..” என்ற சாக்ஷியின் குரல் அவனது நடையை நிறுத்தியது.

“இந்த ஜென்மத்துல உங்களைத்தவிர வேற யாரையும் என்னால மனசார நினைச்சுப்பார்க்க கூட முடியாது. யாரோடும் வாழவும் முடியாது. ” ஐ லவ் யூ டெமி… லவ் யூ ஆல் மை லைஃப்….” என்று உணர்ச்சிவசப்பட்டு கூறியவள்… நீங்க இல்லாத வாழ்க்கையை நான் வாழ மாட்டேன்….” என்று கூறியவள்…

கல்லூரிக்கு பின்னால் அமைந்திருக்கும் பராமரிக்கப்படாத பாழுங்கிணற்றை நோக்கி ஓட…. அவள் பேசிய வார்த்தைகளில் உறைந்து நின்றிருந்தவனும் நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்தவனாக அவள் பின்னே ஓடினான்.

அவள் குதிக்கப் போகும் கடைசி நிமிடத்தில் அவளை விழ விடாமல் காப்பாற்றியவன்… அவள் சுதாரித்து நிற்கும் முன்பே அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் டெமெட்ரியஸ்.

“யாரைக் கேட்டு நீ சாகலாம்னு நினைச்சடி… ??? ஏற்கனவே ஒரு தடவை என்னை விட்டுப் போனது போதாதா…???” என்று கேட்டு வைக்க குழம்பிப்போனாள் சாக்ஷி.

“என்னைப்பற்றிய உண்மைகள் தெரிஞ்சா …. உன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது…. இங்கிருந்து போயிடு…என்னை விட்டுப் போயிடு சகி…” என்று கத்த….

ஓடிவந்து அவனை அணைத்துக்கொண்டாள் சாக்ஷி. உணர்ச்சிவசப்பட்டு பேசும்… அவனின் தலையை தன் மடி மீது சாய்த்துக் கொண்டவள்… அவனது முதுகில் தடவி கொடுக்க.. சிறிது நேரம் பலத்த மெளனமே அங்கே ஆட்சி செய்தது.

அவனது தலையை கோதியவாறே மெதுவாக..” என்னை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா டெமி… ஆனால் நான் இதுக்கு முன்னாடி உங்கள பார்த்ததேயில்லையே…???” என்று கேட்க…. உண்மையை கூறும் நேரம் வந்து விட்டதை உணர்ந்து கொண்டவன்….

சாக்ஷியை விட்டு நகர்ந்து அமர்ந்தான். அவளது முகத்தை நேருக்கு நேர் பார்த்தவன்…

“முதலில் நான் சொல்வதை கவனமாக கேள் சகி. அதற்கு அப்புறம் முடிவெடு நீ என்னுடன் வாழ்வதா…?? வேண்டாமா…??  ” என்ற பீடிகையுடன் ஆரம்பிக்க…

மனதுக்குள் சிறு சலனம் தோன்றினாலும் உடனடியாக மறுத்து பேசினாள் சாக்ஷி…”நீங்க யாரா இருந்தாலும்… நான் உங்களைத்தான் காதலிக்கிறேன்… உங்களைத்தான் கல்யாணம் செய்துப்பேன்….” கள்ளங்கபடமற்ற பிள்ளைத்தனமான காதலே அதில் தெரிந்தது.

டெமெட்ரியஸ் மனதுக்குள் சிரித்துக்கொண்டவன்…. தன்னைப்பற்றிய உண்மைகளை சொல்லத் தொடங்கினான்.

“நீ நினைப்பது போல் நான் உங்கள் இனத்தவன் அல்ல சகி….” டெமெட்ரியஸ் ஆரம்பிக்கும்போதே இடைமறித்தாள் சாக்ஷி…

“எனக்கு தெரியுமே… நீங்க கிறிஸ்தவ இனத்தை சேர்ந்தவர்னு… அதனால் நம்ம காதலுக்கு எதிர்ப்பு வரும்னு நினைக்கிறிங்களா…??? எங்கப்பா மதமெல்லாம் பார்க்க மாட்டாரு டெமி… அவருக்கு என்னோட விருப்பம்தான் முக்கியம். நான் என்ன கேட்டாலும் மறுக்க மாட்டாரு….!!! எங்க அப்பா-அம்மா கூட காதல் திருமணம் செய்துகிட்டவங்கதான்…” சந்தோஷமாக கூற…

முதலில் நான் சொல்வதை பொறுமையாக கேளு சகி… அப்பறமா பேசு… என்றான் டெமெட்ரியஸ். சாக்ஷி அமைதியாகி விட…

“நான் உங்கள் இனத்தவனை சேர்ந்தவன் அல்ல என்று சொன்னது.. மதத்தை அல்ல… நான் மனித இனத்தை சேர்ந்தவன்  அல்ல… நான் ஒரு வேற்றுகிரகவாசி…” என்று கூற… அதிர்ந்து அவனைப் பார்த்தாள் சாக்ஷி. அவளின் பார்வையை புரிந்துகொண்டவன்…

“வேற்றுகிரக வாசிகளிலேயே … மனிதர்களைப் போன்ற உருவத்தை கொண்டவர்கள் நாங்கள்…. ” என்று கூற… அதிர்ச்சியில் எச்சில் விழுங்கினாள் சாக்ஷி.

“நான் ஓஜோ கிரகத்தின் பிரஜை டெமெட்ரியஸ்… எங்களது மதிப்பிற்குரிய அரசர் ஹெம்ஷே…அரசி ஷினூரி…..

எங்களது கிரகம் உங்களது பூமி கிரகத்திலிருந்து பல மில்லியன் தொலைவில் உள்ளது…. அனைத்து வளங்களும் இருந்தாலும்… பூமியைப்போன்ற செழுமை எங்களுக்கு குறைவு…

ஆனாலும் எங்களது கிரகத்திலும் இரண்டு முக்கிய தாவரங்கள் வளர்கின்றன… ஒன்று எங்கள் கிரகவாசிகளுக்கு உயிர் மூச்சை வழங்குகின்றது… மற்றொன்று விஷத்தாவரம்… அதன் பச்சையான விஷம் மட்டுமே எங்களை கொல்லும் சக்தி உடையது… ஆனாலும் அதன் மாற்றியமைக்கப்பட்ட மாதிரிகள் எங்களின் மருத்துவத்திற்கு நன்கு பயன்பட்டது.

சந்தோஷமாக நாங்கள் வாழ்ந்து வந்த போதுதான் எங்களது நிலையை தலை கீழாக்கிய அந்த ஒரு நாளும் வந்தது.

ஆம்… எங்களது கிரகம் மிகப்பெரிய சூரியகாந்தப்புயலால் தாக்கப்பட்டது… பலர் தப்பினாலும்… உயிர் பலிகளும் ஏற்பட்டன…

சேதாரங்களை சரிபடுத்தி… நிர்வாகங்களை சரி செய்யும் வரை… எஞ்சியிருந்தவர்களை பூமிக்குச்சென்று மனிதர்களோடு மனிதர்களாக வாழுமாறு அனுப்பி வைத்தார் அரசர் ஹெம்ஷே…

எங்களது அடுத்த அரசரான…. இளவரசர் ஓஜோ ஹூமேஷியையும் …. அவரது மெய்காப்பாளரான எங்களுடன் அனுப்பி வைத்தார். நான் எவ்வளவோ மறுத்தும் என்னை அவருடன் இருக்கவிடாமல் இளவரசரோடு என்னையும் பூமிக்கு அனுப்பிவிட்டார். அதுதான் அவர் செய்த மிகப்பெரிய தவறு‌.

நாங்கள் பூமிக்கு வருவது மிகவும் சகஜமான ஒரு விஷயம். எங்கள் இனத்தவர்கள் மனிதர்களோடு மனிதர்களாக வாழ்ந்துகொண்டும் இருக்கிறார்கள். சில மனிதர்களின் கெட்ட நோக்கத்திலிருந்து தப்பிக்க மட்டும் தான் நாங்கள் போராட வேண்டியிருந்துது. அப்படி யாரும் மாட்டிக்கொண்டாலும் கிரகத்திற்கு மீண்டும் திரும்பி‌விடுவார்கள்.

நிர்வாகத்தையும்  சேதாரத்தையும் அரசர் சரி செய்து விட… எங்களது பிரஜைகள் பாதிக்குமேல் திரும்பி விட்டனர்.

அப்போழுதுதான் எங்களுக்குள்ளே இருந்த சில எதிரிகள்… இளவரசர் இங்கே பூமியில் இருக்கும் நேரம் பார்த்து அரசனுக்கும் அரசிக்கும் விஷ மருந்தை கொடுத்து விட்டனர்.

ஹாலுசினேஷன் தொழில்நுட்பத்தின் மூலம் அரசர் சாகும் போது என்னிடம் யார் என்ற உண்மையை சொல்லிவிட்டு தான் இறந்தார். ஹூமேஷியை அழைத்துக்கொண்டு உடனடியாக கிரகத்துக்கு திரும்பியதும் நாங்கள் அந்த துரோகியை அழித்து விட்டோம்.

சவமாக கிடந்த என்னவளை பார்க்கும்போது…. நானும் அங்கேயே இறந்துவிடக்கூடாதா என்று தோன்றியது.

சாக்ஷி அவனை நிமிர்ந்து பார்க்க….

“ஆம்… இளவரசி ஷினூரியை நான் ஒருதலையாக காதலித்தேன்…. ஆனால் அரசர் எனக்கு முன்பு அவளிடம் தனது காதலை கூறி…திருமணம் செய்து கொண்டார். அவர்களின் அன்பின் பரிசு தான் ஹூமேஷி. தனது கணவரின் பெயரையும் தனது பெயரையும் சேர்த்து ஆசையாக பெயர் வைத்தாள்.

நீ பார்ப்பதற்கு அரசி ஷினூரியைப்போல் இருக்கிறாய் சாக்ஷி. அதனால்தான் உன்னை முதன்முதலில் பார்க்கும்போது நான் அதிர்ந்து நின்றேன். உன்னை தவிர்க்கவும் செய்தேன்.

தாய்-தந்தை இல்லாத கிரகத்தில்… தான் சிறிது காலம் இருக்க விரும்பவில்லை … பூமிக்கு சென்றால்தான் என்னால் நிம்மதியாக இருக்க முடியும்….என்று ஹூமேஷி கூறிவிட… இளவரசரின்  ஆணைப்படி நானும் இன்னும் சில பிரஜைகளும் இங்கே தங்கியிருக்கிறோம்….

எங்களுக்கு பூமியில் வாழ்வது சாத்தியம் என்றாலும்… எங்களது கிரகத்தொடர்பை எங்களால் விட முடியாது… அதனால்தான் என்னவளாக… நீ திரும்ப எனக்கு கிடைத்த போதும்… உன்னை உதாசீனப்படுத்தினேன்… உன் காதலை மறுத்தேன்… “

“இப்பொழுது சொல் சகி… நீ என்னை இன்னும் விரும்புகிறாயா…?? என்னை மணந்து கொண்டு எங்களது கிரகத்திற்கு வர சம்மதமா…?? ஏனென்றால் இளவரசரின் பொறுப்பை நான் ஏற்றிருக்கிறேன்….. உன்னை சுலபமாக எங்களது கிரகத்திற்கு அழைத்துச்செல்ல முடியும்… தொழில்நுட்பத்தில் கரைகண்டவர்கள் நாங்கள்… மனிதர்களால் எங்களை நெருங்ககூட முடியாது.. “

அவனுக்கு அப்போது தெரியவில்லை மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொருளுக்காக அவன் பூமிக்கு வந்து தவம் கிடக்கப்போகிறானென்று……

டெமெட்ரியஸ் ஆர்வத்தோடு அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க… அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அவனையேப்பார்த்துக் கொண்டிருந்தாள் சாக்ஷி.

 

அத்தியாயம்-19 :                                       

சாக்ஷியிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போக…..

அவளை பிடித்து “சாக்ஷி…சாக்ஷி…” என்று அவளது கன்னத்தில் தட்டினான் டெமெட்ரியஸ்.

“ஹான்…..” ஒருவாறு அதிர்ச்சியில் இருந்து மீண்டவள்… கேட்டாளே ஒரு கேள்வி…

“நீங்க சொன்னதெல்லாம் கதையில்லையே டெமி….??? நான் உங்களை காதல் செய்ய கூடாதுன்னு இப்படியெல்லாம் சொல்றிங்களா….??” சாக்ஷி கேட்க… என்ன சொல்வதென்று புரியாமல் முழிப்பது இப்போது டெமெட்ரியஸின் முறை ஆயிற்று.

இருந்தாலும் தன்னைத்தானே சமாளித்துக்கொண்டவன்….

“நான் சொல்வது அத்தனையும்… நான் ஒரு வேற்றுகிரகவாசி என்பதை சில செயல்களால் நிருபிக்க முடியும்… அங்கே பார்.. அங்கே கீழே சாக்ஷி கையில் வைத்திருந்த புத்தகங்கள் கீழே கிடந்தன… டெமெட்ரியஸ் தன் கண்களை வைத்து அப்புதகங்களை உற்றுப்பார்க்க… புத்தகங்கள் அந்தரத்தில் பறந்து வந்து சாக்ஷியின் மடியில் வந்து விழுந்தன….”

சாக்ஷி உறைந்து போய் அதைப்பார்த்திருக்க…

“இப்போதாவது நம்புகிறாயா…??? ” என்று கேட்டான் டெமெட்ரியஸ்.

அவளால் உண்மையை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை… டெமெட்ரியஸை விட்டு பிரிந்து இருக்க முடியும் என்றும் தோணவில்லை. அறிவை மனமும்…. மனதில் வேரூன்றிய காதலும் வென்றது. தனது முடிவில் திடமானவளாக…. டெமெட்ரியஸின் கண்களை நேராகப் பார்த்தவள்…

“எனக்கு சம்மதம்…” என்று கூறியதுதான் தாமதம் … காற்று புகாத அளவிற்கு அணைத்துக்கொண்டவன்… அவளின் இதழ்களை தனது இதழ்களுக்குள் நிரப்பிக்கொண்டான். அவனது கைகளும் அவளது அங்கங்களில் எல்லை மீறத்தொடங்க… கூச்சத்தில் நெளிய ஆரம்பித்தாள் சாக்ஷி.

அவள் விலக ஆரம்பிப்பதை உணர்ந்து கொண்டவன்… அவளை மெதுவாக அணைத்தவாறே தன் தோள் வளைவில் நிறுத்தியவன்… கவிழ்ந்திருந்த அவளது முகத்தை நிமிர்த்தி பார்க்க… அந்த அந்திவேளையின் சிகப்பை தோற்கடித்தது அவளது முகத்தின் வெட்கச்சிகப்பு.

அவளது முகத்தைப்பார்த்தவாறே பேசத்தொடங்கினான் டெமி…” நீ எவ்வளவு பெரிய முடிவை ரொம்ப சாதாரணமா எடுத்துருக்கேன்னு உனக்கு தெரியாது சகிபேபி…. ஆனாலும் எனக்காகவும்…நம்ம காதலுக்காகவும் நீ எடுத்துருக்கிற முடிவுக்கு நான் உறுதுணையா இருப்பேன்… என் கடமைகளை முடிச்சிட்டு நாம் நீ ஆசைப்படுவது போல பூமியிலேயே வாழலாம்…” என்று கூறி அவளை மீண்டும் அணைத்துக்கொண்டவன்… அப்பொழுதுதான் நேரத்தை கவனித்தான்.

“சகிபேபி… நேரமாகிட்டதேடா… வீட்டில் தேடப்போறாங்க…” அவன் கவலைப்பட

“இல்லை டெமி… இன்றைக்கு நூலகத்துக்கு போயிட்டு வர நேரமாகும்… நான் கொஞ்சம் லேட்டாதான் வருவேன்னு அப்பாகிட்டயும் அத்தைகிட்டயும் சொல்லிட்டுதான் வந்தேன்…” என்று கூறினாள்.

“ஏண்டா அத்தைன்னு சொல்ற…??? அம்மா என்ன ஆனாங்க…???”  டெமி கேட்க….

தனது தாய் மறைந்துவிட்டதையும்… தனது குடும்ப சூழலையும் சுருக்கமாக கூறினாள் சாக்ஷி. வரிக்கு வரி வந்து போனது சைரா என்கிற பெயர்தான்… பார்வதியின் மகள்… அவள் என்றால் இவளுக்கு உயிர் என்றும் தெரிந்து கொண்டான்.அவள் குறும்புத்தனத்தை கேள்விபட்டபோது அவளைப் பார்க்கும் ஆர்வமும் வந்தது… கூடவே ஹூமேஷியின் நினைவும் வந்தது.

அனைத்தையும் கேட்டுக்கொண்டே வந்தவன்….சாக்ஷியின் மீது மீண்டும் தனது அத்துமீறலை ஆரம்பிக்க… அவனது கைகளை தடுத்தாள் சாக்ஷி.

அவனது ஆட்சேபனை பார்வையை அவள் கண்டு கொள்ளவில்லை…. “இன்னும் கொஞ்சநேரம் சகிபேபி…. அதான் இன்னும் நேரம் நிறையா இருக்கே… ” என்று கண்களில் தாபத்தோடு பேச…

“ம்ஹூம்… இது சரிபட்டு வராது… முதல்ல எழுந்திருங்க… உங்க இளவரசரைப்பார்க்க என்னை கூட்டிப் போங்க….” எழுந்து நின்று கொண்டு கேட்க… கண்கள் கலங்கி விட்டன டெமிக்கு.

ஏனென்றால் ஹூமேஷியின் மீது அவனைப் பெற்ற அரசரை விட… அதிக பாசம் வைத்திருந்தான் டெமி…

ஷினூரியின் சாயலில் இருக்கும் அவன் என்றால்… டெமிக்கு உயிர்.

டெமி உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்க…. அடுத்து பேசிய சாக்ஷியின் பேச்சு அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது.

“ஹான்… இன்னொரு விஷயம்… இனிமேல் உங்க வாயில் இருந்து ஷினூரிங்கற பேரே வரக்கூடாது புரிஞ்சுதா… அவங்க உங்களோட ராணி… அவ்வளவுதான்…” கட்டளையிடும் தொனியில் கூற…

“சரிங்க மகாராணி…” அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தான் டெமெட்ரியஸ்.

அவனின் செய்கையில் சங்கடமுற்றவள்….

“என்ன பண்றிங்க… எழுந்திறிங்க டெமி…” என்று கூற…

அவளின் கைகளை பிடித்துக்கொண்டவன்…

“நான் உன்னை மனப்பூர்வமாக விரும்புகிறேன்… என் காதலை ஏற்று என்னை மணந்து கொள்வாயா கண்மணி…” என்று கேட்க…

கண்களில் நீரோடு “சரி..” என்று தலையாட்டினாள் சாக்ஷி.

பின்பு அவளை ஊருக்கு வெளியே அமைந்திருக்கும் தனது இல்லத்திற்கு தனது காரில் அழைத்துச் சென்றான் டெமெட்ரியஸ்.

வீட்டிற்குள்ளே நுழையும் போதே… ஹாலில் தனது நாய்க்குட்டி சிரியஸை துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தான் ஹூமேஷி.பார்ப்பதற்கு உருண்டை வடிவ உடம்புடன் மிகவும் வித்தியாசமாக இருந்தது அது.

“ஓடாதே சிஸி… நில்லு… என்னோட பாக்ஸ குடு… “என்று ஓடி வந்தவன் சாக்ஷியின் மேல் இடித்துக்கொள்ள…

யாரது புதிதாக என்று நிமிர்ந்து பார்த்துவிட்டு…

“மோமின்…” என்று கட்டிக்கொண்டான்.

சாக்ஷி புரியாமல் முழிக்க… “எங்களது கிரகத்தில் தாயை இப்படித்தான் அழைப்பார்கள்…” என்று கூற…

அவ்வளவு தூரமா உருவ ஒற்றுமை இருக்கிறது என்று ஆச்சரியப்பட்டுப்போனாள் சாக்ஷி.

டெமெட்ரியஸ் ஹூமேஷியை விலக்கியவன்.. “ஹூமி இளவரசே இவங்க அரசி கிடையாது… இவங்க பெயர் சாக்ஷி… உங்களைப் பார்க்க வந்துருக்காங்க… ” என்று கூற… ஹூமேஷியின் முகம் விழுந்து விட்டது. பார்ப்பதற்கு 14வயது சிறுவனைப்போல் இருந்தான் அவன். இந்த சின்ன வயதில் எவ்வளவு கஷ்டம் அவனுக்கு.

அவன் கஷ்டப்படுவதை தாங்க முடியாத சாக்ஷி…தானே முன்வந்து அவனை அணைத்துக்கொண்டவள்…”ஹூமி கண்ணா… நீங்க என்னை மோமின்னே கூப்பிடலாம்… ஆனால் ஒரே ஒரு நிபந்தனை… நான் உங்களுக்கு அம்மான்னா இவர்தான் உங்களுக்கு அப்பா… என்று டெமியை கைகாட்ட….” தனக்கு தாய்-தந்தை மீண்டும் கிடைத்ததில் சந்தோஷப்பட்டான் ஹூமேஷி.

ஓடிவந்து “பாபா-மோமின்” என்று இருவரையும் சேர்த்து அணைத்துக்கொள்ள… சாக்ஷி டெமியின் கண்களுக்கு தேவதையாகவே தெரிந்தாள்.

புதிதாக கிடைத்த தாயை விட மனமே இல்லை ஹூமேஷிக்கு… இருந்தாலும்  நேரமாவதால் பிரியா விடைபெற்றுக்கொண்டு கிளம்பினாள் சாக்ஷி.

இப்படியே தங்கள் காதலுடனும்…. ஹூமேஷியுடனும் மகிழ்ச்சியோடு நாட்களை கழித்த டெமி-சாக்ஷி… கல்லூரி பிரிவுபச்சார விழா நெருங்குவதை உணர்ந்து கொண்டவர்கள்…. கல்லூரியிலிருந்து வெளியேறி விட்டால் சாக்ஷியால் டெமியையும் ஹூமேஷியையும் காண முடியாது என்பதை உணர்ந்து கொண்டார்கள்.

அன்று கல்லூரி முடிந்து வழக்கமாக சந்திக்கும் பார்க்கில் சாக்ஷிக்காக காத்திருந்தான் டெமெட்ரியஸ். மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்த டெமியைப்பார்த்து புன்னகைத்துக் கொண்டே வர…. எப்பொழுதும் அவள் தூரத்தில் வரும்போதே அவளைப் பார்த்து கையசைப்பவன்… இன்று அமைதியாக நின்றிருந்தான்.

அவன் அருகில் வந்து அமர்ந்த சாக்ஷி..” என்னாச்சு டெமி… ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கிங்க… ” என்று அவனது கைகளுக்குள் கைகளை நுழைத்தவாறே கேட்க…

அவளது கைகளை இறுக பற்றிக்கொண்டவன்…” இதுக்கு மேல தள்ளி போட முடியாது… நாளைக்கு கல்லூரி பிரிவுபச்சார விழாவோட கல்லூரி முடியுது… அடுத்து உன்னை பார்க்கவும் முடியாது… தேர்வுகள் ஆரம்பிச்சுடும் சகிபேபி… உங்கப்பா கிட்ட நம்ம காதல் விஷயத்தை இன்னைக்கு பேசிடு… நாளைக்கு விழா முடிஞ்சு நானும் உன்கூட வரேன்….” என்று முடிவெடுத்தவனாக பேசினான் டெமெட்ரியஸ்.

சாக்ஷியும் சூழ்நிலையின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டவளாக…… வேறு ஏதும் பேசாமல்…. சரி என்று தலையாட்டிவிட்டு… அவனது கன்னத்தில் முத்தமிட்டவள்…..

“நான் இன்னைக்கு பேசிடறேன் டெமி… நாளைக்கு நீங்களும் ஹூமியும் எங்க வீட்டுக்கு வாங்க….” ஒருபக்கம் மகிழ்ச்சியாகவும், அப்பா எதிர்க்ககூடாது என்ற பயத்துடனும் எழுந்து சென்றாள்.

அன்று இரவு அபரஜித் மதிப்பெண்களின் பட்டியலை….தனது மடிக்கணினியில் தயாரித்துக் கொண்டிருந்தவர்… அருகில் புத்தகத்தை தலைகீழாக பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்கும் மகளைப்பார்த்தார்.

வெகுநேரமாக அவள் ஏதோ பேச வருவதையும்… பின்பு தனக்கு தானே தலையை ஆட்டிக் கொள்வதையும் கவனித்தவர்… மடிக்கணினியை மூடி வைத்து விட்டு மகளின் புறம் திரும்பி அமர்ந்தார்.

அவளின் தலையை கோதியவாறே….

“என்னடா வேணும் குட்டிமா உங்களுக்கு…??? என்னன்னு சொன்னாத்தானே அப்பாக்கு புரியும்…‌எதுனாலும் தயங்காமல் சொல்லுடா குட்டிமா…” மகளைப் பேசுமாறு உந்த…

“அப்படில்லாம் ஒன்னுமில்லைப்பா…” மறுத்தாள் சாக்ஷி.

“நீ புத்தகத்தை தலைகீழா பிடிச்சுருக்கிறதிலேயே தெரியுது… நீ ஏதோ தீவிரமாக சிந்திச்சுகிட்டுருக்க… எப்படி சொல்றதுன்னு… ஒண்ணும் பிரச்சனையில்லை… நீ என்ன சொன்னாலும் அப்பா கேட்பேன்…. ” அபரஜித் மகளுக்கு நம்பிக்கை ஊட்ட…

அதில் சற்று தெளிந்தவள், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு…

“ப்பா… “

‘ஹ்ம்…” சொல்லுடா

“நான் ஒருத்தரை காதலிக்கறேன்ப்பா… அவரும் என்னை உயிருக்குயிரா காதலிக்கறாருப்பா….” மகளின் பேச்சை கேட்டு சற்று அதிர்ந்தாலும்… தானும் காதல் திருமணம் செய்து கொண்டவன்தானே என்று நினைத்து ஆசுவாசப்பட்டவராக……

“யாரும்மா அது… ??? என்ன பண்ணிட்டிருக்காரு… இந்த ஊரா…? வெளியூரா டா…” என்று கேட்க….

” இந்த ஊர்தான்பா… என்னோட பேராசிரியர்…. என்னைவிட 5வயது மூத்தவர்…. “

“என்ன பேரும்மா…???”

“பேரு டெமெட்ரியஸ் ப்பா….”

“கிறிஸ்தவராமா…..” அபரஜித்கேட்க

“ஆம்…” என்று தலையாட்டினாள் சாக்ஷி. அவனைப்பற்றிய உண்மையை சொல்லாமல் விட்டு விட்டாள்… அதுதான் அவள் செய்த தவறு.

அபரஜித் சிறிது நேரம் அமைதியாக யோசித்தவர்… ” இவ்வளவு தானே குட்டிமா… அவர் நல்லவரா இருந்து… என் குட்டிமாவை சந்தோஷமா வச்சு பார்த்துக்கிறவரா இருந்தா போதும்டா… எனக்கு முழு சம்மதம்… நாளைக்கே அப்பா அவரை வந்து பார்க்கிறேன்” என்று கூற… சந்தோஷத்தில் அவரை கட்டிக்கொண்டாள் சாக்ஷி.

“அவரே நாளைக்கு வரேன்னு சொல்லியிருக்காருப்பா… நாளைக்கு ஃபேர்வெல் முடிஞ்சதும் என்கூட நம்ம வீட்டுக்கு வர்றேன்னு சொல்லியிருக்காருப்பா…” குதூகலத்துடன் கூறினாள் சாக்ஷி.

“அவங்க அம்மா-அப்பா என்ன பண்றாங்க குட்டிமா…” மகளின் விரல்களை தடவிக்கொண்டே கேட்க…

“அவரோட பெற்றவங்க ஒரு விபத்துல இறந்துட்டாங்கப்பா…” கவலையுடன் கூற…

அபரஜித்தின் மனம் இளகி விட்டது. அவருக்கு மகள் காதல் திருமணம் செய்து கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. யாரென்று முதலில் பார்த்துவிட்டு பின்பு முடிவு செய்து விட்டு… மகேஷ்-பார்வதியிடம் சொல்லிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்.

பின்பு தந்தையும் மகளும் சந்தோஷமாக பேசி சிரித்தவாறே இரவு உணவை உண்டனர். அதுதான் அவர்கள் இருவரும் ஒன்றாக சந்தோஷமாக இருந்த தினம்.

மறுநாள் பொழுதும் விடிந்தது. ஃபேர்வெல்லுக்காக நன்கு அலங்கரித்துக்கொண்ட சாக்ஷி… மகேஷ்வரன்-பார்வதியிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டு… தந்தையிடம் சொல்லிக்கொண்டு கல்லூரிக்கு கிளம்பி விட்டாள்.

அபரஜித்தும் டெமெட்ரியஸை வரவேற்க மதியமே வந்துவிடுவதாக மகளுக்கு வாக்களித்தார்.

கல்லூரிக்கு வந்த சாக்ஷியின் மீதிருந்து கண்களை எடுக்க முடியவில்லை டெமெட்ரியஸால். அவளை எப்போது தனிமையில் சந்திப்போம் என்று நினைத்துக்கொண்டிருந்தவன்… தனிமை கிடைத்ததும் முத்தமழை பொழிந்துவிட்டான்.

“என்ன டெமி இது…?? பாருங்க சேலை கசங்கிடுச்சு… ” சாக்ஷி செல்லமாக கடிந்து கொள்ள…

“சகிபேபி… உன்ன அப்படியே… ” என்று மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க…

“போதும்…போதும் நேரமாச்சு … நமக்காக அப்பா காத்துட்டுருப்பாங்க… வாங்க கிளம்பலாம்…” என்று இழுத்துக்கொண்டு சென்றாள் சாக்ஷி.

போகும்பொழுது ஹூமேஷியையும் கூட அழைத்துக் கொண்டு சென்றனர்.

வீட்டிற்குள் நுழைந்த மகளையும்… வருங்கால மாப்பிள்ளையையும்… நன்றாகவே வரவேற்றார் அபரஜித்.  ஹூமேஷி அவர்களோடு இறங்கும்போதே வீட்டிலுள்ள தோட்டத்தின் அழகில் கவரப்பட்டவனாக தோட்டத்திற்குள் ஓடிவிட்டான்.

” ரொம்ப சுட்டிப்பையனா இருக்கானே.. உங்க சொந்தக்காரப்பையனா…?? ” என்று டெமியிடம் அபரஜித் கேட்க…

“ஆமா…சார்.. சொந்தக்கார பையன்…” என்றான் டெமி.

தோட்டத்திற்குள் சென்ற ஹூமேஷி முதலில் கண்டது மரத்தில் ஏறி மாங்காய்களை பறித்து போட்டுக்கொண்டிருந்த சைராவைத்தான்.

அவள் மாங்காயை பறித்துப்போட்டுக்கொண்டிருக்க.. கீழே அதை பிடித்துக்கொண்டிருந்தாள் சௌமியா.

நீண்ட முடியை இழுத்து போடப்பட்ட குதிரைவாலும்… குண்டு கன்னங்களும், பெரிய விழிகளும், கையில்லா சட்டையும் ஷார்டஸூம் அணிந்து கொண்டு அவள் மரத்தில் நின்றிருந்த விதமே மனதை கொள்ளை கொண்டது.

தன்னையுமறியாமல்…” பேபிடால்…” என்று முனுமுனத்தன அவனது உதடுகள்.

தன்னையுமறியாமல் அவன் அவளை நோக்கி பாதங்களை எடுத்து வைக்கவும்…

“வெளியே போடா…” என்று அபரஜித் கத்தவும் சரியாக இருந்தது.

வேகமாக வீட்டை நோக்கி நடந்து சென்றான்.

முதலில் எல்லாம் சுமுகமாக தான் பேசிக்கொண்டிருந்தனர் அபரஜித்தும் டெமெட்ரியஸூம்…. டெமெட்ரியஸ் அவனைப்பற்றிய உண்மைகளை சொல்லும்வரை. அதில் அதிர்ச்சியுற்றவர் மகளை தன் புறம் இழுத்துக்கொண்டவர்…அவனைப் பார்த்து….

“வெளியே போடா…” என்று கத்தினார்.

“அப்பா… அவரில்லாம என்னால இருக்க முடியாதுப்பா… ” என்று சாக்ஷி அலற…

“குட்டிமா…வேண்டாம்டா… மனிதர்களுக்கும் வேற்றுகிரகவாசிகளுக்கும் சம்பந்தம் ஏற்படவே முடியாதுடா… இவனோட நீ வாழுற வாழ்க்கை நரகமாத்தான் இருக்கும்… மனிதர்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா… இவனோட சேர்த்து உன்னையும் சோதனைப் பொருள் ஆக்கிடுவாங்கடா… வேண்டாம்டா…” மகளிடம் கெஞ்சினார் அபரஜித்.

ஆனால் சாக்ஷியோ உறுதியாக தான் டெமியைத்தான் மணம் செய்து கொள்வேன் என்று பேசி அடம்பிடிக்க… ஆத்திரத்தில் மகளை ஓங்கி அறைந்துவிட்டார் அபரஜித்.

அவள் டெமியின் அருகே சுருண்டு விழவும்….ஹூமேஷி அதைப்பார்க்கவும் சரியாக இருந்தது.

“மாம்…” என்று அழைத்தவாறே அவன் ஓடிவர…

“எனக்கொன்னுமில்லை…ஹூமி கண்ணா”  அவனைப்பற்றிக்கொண்டு எழுந்தமர்ந்தாள் சாக்ஷி.

ஹூமேஷியை டெமியின் மகன்.. என்று நினைத்து விட்டார் அபரஜித். அப்படியானால் அவனும் ஒரு வேற்றுலகவாசி என்பதை புரிந்து கொண்டவர்… ஏற்கனவே மணம்புரிந்த ஒருவனை மகள் விரும்புகிறாள் என்பதையறிந்து நொந்து போனார்.

அதன்பிறகு எவ்வளவோ கெஞ்சியும் மகள் தனது பிடியில் உறுதியாக நிற்க… மனதளவில் உடைந்து போனார் அபரஜித். அதன் விளைவாக பேசக்கூடாத வார்த்தைகளை பேசினார் அபரஜித்…

“மிஸ்டர்.டெமெட்ரியஸ்… உங்க காதலியை நீங்கள் கூட்டிகிட்டு போகலாம்.. என்னைப்பொறுத்தவரை என் மகள் இறந்துட்டாள். இனி என் கண் முன்னாடி நீங்க யாரும் வரக்கூடாது. இப்பவே இங்கிருந்து எல்லாரும் போங்க…

நான் செத்தாலும் என்னைப்பார்க்க வரக்கூடாது…” என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்று…. கதவை அடைத்துக்கொண்டார்.

சாக்ஷியும் அழுதுகொண்டே டெமெட்ரியஸூடன் சென்று விட்டாள். தங்கள் வளர்ப்பு மகளை காணாது தவித்த மகேஷ்வரன்-பார்வதியிடம் தான் மறுத்ததால் மகள் காதலித்தவனுடன் ஓடிவிட்டாள். என்னைப்பொறுத்தவரை அவள் இறந்துவிட்டாள் என்று முடித்துவிட்டார்.

சாக்ஷியைக்காண வேண்டும் என்று அடம்பிடித்து காய்ச்சலில் விழுந்த சைருவுக்காக கூட அவர் தன்னிலையில் இருந்து மாறவில்லை. மகளால் அவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படக்கூடாது என்று நினைத்து உண்மையை மறைந்துவிட்டார்.

வருடங்கள் கடந்தன… தனது வாழ்க்கையில் பிடிப்பில்லாது ஊர் ஊராக கோவில் கோவிலாக …. வெறுத்து ஒதுக்கிய… மகளின் நலனுக்காக அலைந்தார்  அபரஜித்.

சாக்ஷியும் ஒருநாள் அவள்முன் வந்து நின்றாள்.  முக்கியமான உதவி ஒன்றை கேட்டு தந்தையிடம் வந்து நின்றாள்… ஹூமேஷியோடு. அன்று தனது மனைவியின் நினைவு நாளாதலால் வீட்டிலிருந்தார் அபரஜித்.

மகேஸ்வரனும் பார்வதியும் அருகிலுள்ள கோவிலுக்கு சென்றிருந்தனர். சைரா கல்லூரிக்கு சென்றிருந்தாள்.

அவர் ஓய்வாக படுத்திருந்த போது கதவு தட்டப்பட்டது. கதவை திறந்தவர் இப்பொழுது அதிர்ந்து நின்றார். கோபத்தில் அவர்களை வரவேற்காமல் உள்ளே சென்று அமர்ந்து கொண்டார்.

முதலில் அவரருகில் சென்றது ஹூமேஷிதான். இப்போது வாலிபனாக இளவரசனின் மிடுக்கோடு நின்றிருந்தான்.

“அன்கிள்… முக்கியமான ஒரு உதவி கேட்டு உங்ககிட்ட வந்திருக்கேன்… ” என்று கூற…

சாக்ஷியோ வெகுநாள் கழித்து தான் பார்க்கும் தந்தையை கண்களில் நிரப்பிக்கொண்டு நின்றிருந்தாள். கண்களில் கண்ணீர்… இப்போது விழவா… என்றவாறு நின்றிருந்தது.

“…” அமைதியாகவே இருந்தார் அபரஜித்.

தொடர்ந்து பேசிய ஹூமேஷி… ” சூரிய காந்தப்புயலால் தாக்கப்பட்டதால் எங்கள் கிரகத்திற்கு உயிர் மூச்சைக் கொடுக்கும் செடிகளின் தன்மையும் மண்ணின் தன்மையும் கெட்டுவிட்டது. அதை சரிபடுத்த நீங்கள் கண்டுபிடித்த திரவத்தால் மட்டுமே முடியும். இப்பொழுதே எங்கள் பிரஜைகள் மூச்சுகாற்றிற்க்கு சிரமப்பட ஆரம்பித்துவிட்டார்கள். தாங்கள்தான் பெரியமனது வைத்து அதன் மாதிரியை எங்களுக்கு கொடுக்க வேண்டும். ஏனென்றால்  எங்கள் கிரகம் பாதிக்கப்பட்டது போலவே… இங்கே பூமியிலும் ராஜஸ்தான் என்கிற பகுதி பாதிக்கப்பட்ட போது… அதற்கான தீர்வை நீங்கள் வெற்றிகரமாக கண்டுபிடித்துவிட்டீர்கள் என்று அம்மா சொன்னார்கள்”… என்று கூற….

கோபத்தில் கொதிநிலைக்கு சென்றார் அபரஜித். திரும்பி சாக்ஷியை ஒரு முறை முறைத்தவர்….

” தம்பி.. அது எந்த சூழ்நிலையில் நடந்தது என்பதையும் சொல்லியிருப்பாளே… என் மனைவியை காவு வாங்கிய விஷயம் அது… மனிதர்களின் உணர்ச்சி உங்களுக்கு புரியாது…. அதுவுமில்லாமல் அது சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் நான் அழித்து விட்டேன்…” என்று கூற…

“இல்லை அங்கிள்… அதன் மாதிரி அச்சு அடங்கிய மெமரி சிப் உங்களது கணினியில் உள்ளது… அதை நாங்கள் உறுதி செய்துவிட்டோம்….” என்று கூற…

அவனை ஒரு பார்வை பார்த்தவர்… இவ்வளவு தூரம் தொழில்நுட்பத்தில் முன்னேறியிருக்கும் நீங்களே அதை கண்டுபிடித்துக்கொள்ளலாமே என்று பேசியவர்… தனக்கே தெரியாமல் கணிணியில் இருக்கும் அந்த மெமரிசிப்பை எடுத்து வைக்க வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டார். மகள் தன்னிடமே திரும்ப வந்துவிடும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று.

“முதன் முறையாக இந்த தோல்வியை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம் மாமா…..” என்று பேசியது ஹூமேஷி அல்ல… அப்பொழுதுதான் உள்ளே நுழைந்த டெமெட்ரியஸ்.

“சகிபேபி… ஏன் நின்னுகிட்டு இருக்க… உட்கார்…” என்று அவளை அமரவைத்தவன்…

“எங்கள் கிரகத்தை காப்பாற்ற வேறு வழி இல்லை மாமா… நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்…” என்று தன்மையாகவே கேட்டுக்கொள்ள…

முடியாதென்று நிர்தாட்சண்யமாக மறுத்தார் அபரஜித்.

“அப்படியென்றால் நாங்களே எடுத்துக்கொள்வோம்…” ஹூமேஷி கூற…

வெகுண்டு விட்டார் அபரஜித்.

“சாக்ஷி-டெமெட்ரியஸ்…இதுவரை நான் உங்களிடம் எதுவும் கேட்கவில்லை… என் ஒரே மகளைக்கூட உனக்காக கொடுத்துவிட்டேன்…. என் மீது ஆணை.. எனது அனுமதியில்லாமல் சிப்பை எடுக்க யாரும் முயற்சி செய்யகூடாது….. நானே விருப்பப்பட்டு கொடுத்தால் ஒழிய… அதை எடுக்க மாட்டோம்… என்று சத்தியம் செய்யுங்கள்…” என்று சத்தியம் கேட்க…

ஹூமேஷி தன் வளர்ப்புப்பெற்றோரைப்பார்த்து  வேண்டாம் என்று மறுக்க…

அவரின் மனதை மாற்றிவிடலாம் என்று நினைத்த டெமியும்சாக்ஷியும் அவருக்கு சத்தியம் செய்து கொடுத்தனர். சாக்ஷி அழுது கொண்டே நிற்க மறந்தும் அவளிடம் வேறேதும் பேசவில்லை அபரஜித். அவளின் நலனைக்கூட கேட்கவில்லை. ஆனால் டெமியின் அக்கறையில்…

அவரின் மனசாட்சிக்கு.. அவன் அவரது மகளை ராணியைப்போல் வைத்திருக்கிறான் என்று புரிந்து நிம்மதியாக இருந்தது. பெற்ற மனம் அதை அளவெடுக்க தவறவில்லை.

ஆனால் சாக்ஷியோ… திரும்பி நின்றிருந்த தந்தையை பின்னால் இருந்தவாறே ஒரு முறை அணைத்து விடுவித்தவள்…..

“சீக்கிரமே எங்களை மன்னிச்சு ஏத்துக்கங்கப்பா…. உங்களுக்கு ரெண்டு பேரப்பசங்க கூட இருக்காங்கப்பா… நீங்க பயப்படுற மாதிரி எதுவுமே இல்லை… டெமி என்னை ரொம்ப நல்லா வச்சுருக்காருப்பா… இளவரசனாக இருந்தும் இப்ப வரைக்கும் என் மகனா இருந்து என்னைப் பார்த்துக்கிறான்ப்பா ஹூமேஷி….. நீங்க என் பக்கத்துல இல்லைங்கற குறையைத்தவிர… எனக்கு வேற எந்த குறையும் இல்லப்பா… என்கிட்ட பேசுங்கப்பா….” என்று கெஞ்சியும் அவர் அசையவில்லை.

அவர்கள் சென்றுவிட ஹூமேஷி அவரிடம் வந்தவன்… ” உங்க கையாலேயே அதை கொடுக்க வைப்பேன் அன்கிள். அதுவரைக்கும் இந்த பூமியிலேயே தான் இருப்பேன். என்னுடைய மனைவியா (மனைவி என்று சொல்லும்போதே அவன் மனம் அவனது பேபிடாலை நினைத்தது… இப்போ எப்படி இருப்பாள்…??? என்று நினைத்துக்கொண்டான்)…. என் தாயைப்போலவே குணவதியான பூமிப்பெண்ணையே மணப்பேன்” என்று கூறி சென்று விட்டான்.

அவர்கள் சென்றதும் சிப்பை தனது பழைய கணிணியில் இருந்து வெளியே எடுத்தவர் அது பாதிக்கப்படாதவாறு… தனது நண்பனின் உதவியால் நிறமில்லாத பெண்டன் ஒன்றை செய்து வாங்கியவர்… அதை உருக்கி ஊற்றி‌ காய வைக்கும் போது நண்பர் அறியாமல் இந்த சிப்பை உள்ளே வைத்து விட்டார்.

கல்லூரியில் முதல் மாணவியாக சைரா தேர்ச்சி பெறும் போது அதை அவளுக்கு தங்க செயினில் கோர்த்து அணிவித்து விட்டவர்… எந்த சூழ்நிலையிலும் அதை கழட்டக்கூடாது… யாருக்கும் கொடுக்கக்கூடாது… என்று கூறிவிட்டார்.

தன் நினைவுகளில் இருந்து வெளியே வந்த அபரஜித்… மணியைப் பார்க்க … மணி அதிகாலை நான்கு காண்பித்தது. இந்நேரம் சைராவிடம் உண்மையை சொல்லிவிட்டு ..‌ அவளை விட்டு விட்டு சிப்பை எடுத்துக்கொண்டு சென்றிருப்பான்…

சைராவை சமாதானப்படுத்துவோம் என்று நினைத்தவறாக… எழுந்து சென்று அவளது அறைக்கதவை திறக்க… அங்கே யாருமே இல்லை.

சைரந்திரி வீட்டில் எங்குமே இல்லை.

அத்தியாயம்-20:                                                                                           

சைராவிடம் அனைத்து உண்மைகளையும் கூறிய ஹூமேஷி… 

அவள் முகத்தையே பார்க்க….

சைராவோ அதிர்ச்சியில் உறைந்தவளாக அமர்ந்திருந்தாள். அவளது மனமோ

“சஷிக்கா வேற்றுகிரகவாசியையா மணந்து கொண்டார்கள்….??? இந்த உண்மை தெரிந்தால்  தங்கள் பெற்றோரால் இயல்பாக இருந்திருக்க முடியாது. அதனால் தான் மாமா எவ்வளவு கேட்டும் உண்மையை சொல்லவில்லையா….???? “… என்று நினைக்க…

மற்றொரு மனமோ…” அப்போ இவன் சிப்காக தான் என் பின்னாடி திரிஞ்சுருக்கான்… ஊசிப்போன உப்மா…. அப்போ என்னை காதலிச்சதெல்லாம் நடிப்பு… பொய்… இப்போ இந்த பெண்டன்ட இவன் கைல குடுத்ததும்… இளவரசர் அவங்க மக்களை காப்பாற்ற ஒடிடுவாரு… அப்போ என்னோட மனச இவன் உடைக்கிறது இவனுக்கு விளையாட்டா போயிடுச்சா..???? பேபி டால்… பேபிடால்ன்னு கூப்பிட்டு என்னை பொம்மையாகவே நினைச்சு விளையாண்டு பார்த்தானா…???” என்று கொதித்தெழுந்தளாக.. ஹூமேஷியை பார்த்து…

“அதான் நீங்க தேடி வந்த பொருள் கிடைச்சுருச்சே… இதுக்காக தானே என்னுடைய அறைக்கு அன்றைக்கு வந்திங்க…?? என்னை காதலிக்கிற மாதிரி நடிச்சிங்க… உங்களுக்கு நான் ஒரு விளையாட்டு பொம்மை மாதிரி தெரிஞ்சுருக்கேன்…. உணர்வும் உயிரும் உள்ள மனுஷியா தெரியலை இல்லை… மனுஷனா இருந்தா தானே உங்களுக்கு என் உணர்வுகள் புரியும்… இந்தாங்க எடுத்துட்டு போங்க…” தனது கழுத்தில் இருந்த செயினை கழற்றி அவனை நோக்கி தூக்கி எறிய.. அது அவன்மேல் மோதி கீழே விழுந்தது. அதை எறிந்து விட்டு … முட்டிக்கால்களை கட்டி கொண்டு தேம்பி அழ ஆரம்பித்தாள் சைரா.

அதுவரை அவள் பேசியதைக்கேட்டு கோபத்தில் கொதிநிலைக்கு சென்ற ஹூமேஷி….

“ஹேய்.. முதல்ல அழுகையை நிறுத்துடி… ” என்று அந்த அறையே அதிரும் அளவு கத்த…

சைராவுக்கு அதிர்ச்சியில் அழுகை தானாக நின்றது‌. அதிர்ச்சியுடன் அவளை நிமிர்ந்து பார்த்தாள் சைரா.

அவள் அருகே வந்தவன் அவளது கூந்தலை பிடித்து பின்னே இழுத்தவன் அவளது கண்களை பார்த்தவாறே “‌நானாடி காதலிக்கிற மாதிரி நடிச்சேன்… 13 வருஷ காதல்டி என்னோட காதல்…

உன்கிட்ட இந்த சிப்பை வாங்க மட்டும் வந்திருந்தா அதை நிமிஷத்தில் முடிக்க என்னால் முடியும்… அதுக்கு ஏண்டி இவ்வளவு நாள் போராடனும்… உன்னைப் பார்க்காமல் இருக்க முடியாமல் தான்டி அன்றைக்கு உன் அறைக்கும் வந்தேன்….

உனக்காக… உனக்காகத்தான்டி என் மக்களை இந்த பூமியில் மாற்றி இருக்க வச்சுருக்கேன்…. உன் அபிமாமா உணர்வை மதிச்சு தான்டி அவர் கையால அவர் விருப்பத்தோட சிப்பை வாங்கிக்கனும்னு தான்டி இவ்வளவு நாள் காத்திருக்கேன்…” என்று அவளது கன்னத்தை தனது வலது கையால் பிடித்து அழுத்தியவன்…

“இப்ப சொல்லுடி என் காதல் பொய்ன்னு…??? என் முகத்தை பார்த்து சொல்லுடி… ” என்று அவளை உலுக்க….

சைரா திகைப்புடன் அவனைப்பார்க்க….

“நம்ப  முடியல இல்லை…..  13வருஷ காதலான்னு…. அதையும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ….”

அவளை சந்திக்க நேர்ந்த தினத்தையும் கூறினான்.

“நான் முதல்ல உன்னைப்பார்த்தப்ப மரத்துல நின்னுகிட்டு இருந்த சரா டார்லிங்….

மாங்காய் பறிச்சு போட்டுகிட்டுருந்த உன் தோழிக்கு… உன்கிட்ட அப்பவே பேசனும்னு ஆசையா உன்னை நோக்கி வந்தப்போ சூழ்நிலையே மாறிடுச்சு….

அதுக்கப்பறம் உன்னைப் பார்க்க பல வருடம் கழிச்சு தான் வந்தேன்…. பார்த்த முதல் பார்வையிலேயே நீதான்னு கண்டுபிடிச்சிட்டேன்…..

அப்போ காலேஜ்ல இருந்து நீ உன் பைக்ல வீட்டிற்கு திரும்பி வந்துட்டுருந்த…

திரும்ப உனக்காகவே தான் இந்த வேலைக்கு வந்தேன்…. ஆனால் நான் செய்த ஒரே தவறு…

உன்னோட அபிமாமா டெல்லியில் இருந்தப்போ அந்த மெமரிசிப்பை திரும்ப கேட்டுப் பார்த்தேன்… ஆனால் அவர் தர முடியாதுன்னு மறுத்தார்… பல உயிர்கள் அதுக்காக போராடிக்கிட்டு இருக்குன்னு கெஞ்சினேன்….

என் உயிருக்குயிரான மகளையே கூட்டிகிட்டு போய்ட்டிங்க… எந்த உயிர் போனா எனக்கென்ன..?? என்று விரக்தியின் உச்சத்தில் பேசினார்…

உங்க சைரந்திரிக்கு ஆபத்துன்னா கூடவா?????  என்று கேட்டபின்புதான் அவர் அமைதியானார்.

சிப் எங்க இருக்குன்னு எனக்கு தெரியும்…. ஆனால் அம்மா செய்து குடுத்த சத்தியத்திற்காக நான் அமைதியா போறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்….

ஆனால் அவர் என்னவோ நான் உன்னை ஏதோ செய்யப்போவதாக…. நினைத்துக்கொண்டு …. உடனே இங்கே கிளம்பி வந்துவிட்டார்.

அப்பொழுதுதான் புரிந்து கொண்டேன்… அவர் உன்மீது வைத்திருக்கும் அன்பை…

சரி…அதை வைத்து விளையாடினால் அவர் கொஞ்சம் இறங்கி வருவார்… நமக்கும் ஒரு கல்லில் இரண்டு மாங்காயாக என் காதலியை பார்த்த மாதிரியும் இருக்கும்… என் லட்சியத்தை அடைந்த மாதிரியும் இருக்கும் என்று நினைத்தால்….

அவர் இன்று என்ன சொன்னார் தெரியுமா….???” ஹூமேஷியின் கண்கள் சிவக்க ஆரம்பித்தன.

“எ…என்ன…சொ…சொன்னார்….” அவன் பிடித்து அழுத்தியதில் கன்னம் வலித்தது அவளுக்கு.

“இப்ப மட்டும் வாயைத் திறந்து பேசுடி…. மாமன்மேல அவ்வளவு பாசம்….” என்று கேட்க…. முகத்தை திருப்பி கொண்டாள் சைரா.

“இங்க என்னைப்பாருடி…. “அவளது முகத்தை தன்புறம் திருப்பியவன்….

“அவர் அவரோட விருப்பத்தோட சிப்பை எனக்கு குடுத்துடறாராம்… ஆனால் அதுக்கு பதிலா நான் உன்னை விட்டு போயிடனுமாம்… அதுவும் நீயே என்னை வெறுத்து ஒதுக்கிடற அளவிற்கு நடந்துக்கனுமாம்….

அப்படின்னா தாராளமா நான் உன்கிட்ட இருந்து  சிப்பை எடுத்துக்கிட்டு போகலாமாம்…. உன் அருமை‌ அபிமாமா உணர்வுகளுக்கு குடுக்கும் முக்கியத்துவத்தை பார்த்தியா….????

கொஞ்சநாள் நீ வருத்தப்பட்டுட்டு… அப்பறமா அவர் எடுத்து சொன்னா நீ புரிஞ்சுப்பியாம்….. அவர் சொல்ற மாப்பிள்ளையை நீ கட்டிக்குவியாம்….”. எனக்கும் அதுதான் இப்போ தோணுது…..

“அவர் சொல்றதுதான் உண்மையோ….??” என்று தாடையைத்தடவி யோசிக்க….

அதுவரை ஒரு வித ஆற்றாமையுடனே….. அவன் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தவள்… அவன் கேட்ட கேள்வியில் அவனது சட்டையை பிடித்திருந்தாள்.

“என்னைப்பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது மிஸ்டர்…??? ஒருத்தரை காதல் பண்ணிட்டு இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணுன்னா நினைச்சிங்க…????” அவனது சட்டையை பிடித்து உலுக்க…

அசரவில்லை ஹூமேஷி..” நீ தானடி என்னைப்பார்த்து பயந்த…??? பே…பேய்ன்னு கத்துன… அவளது குரலிலேயே சொல்லிக்காண்பிக்க….” அவளிடம் பேசிக்கொண்டே அவளை தனது கைவளைவுக்குள் கொண்டு வந்திருந்தான்…

ஆனால் அதை உணர்ந்து கொள்ளும் நிலையில் இல்லாத சைராவோ… அவனது கேள்விக்கு பதில் கொடுத்தாள்….

“நீங்க கதவ ஊடுருவி வெளிய வந்தா… அதைப்பார்த்து கைகொட்டி சிரிக்க நான் என்ன சின்னபாப்பாவா…??? அப்ப கூட நான் பிரம்மைன்னு தான் முதல்ல நினைச்சேன்… ஆனால் நீங்க என் முன்னாடி வந்து நின்னப்போ…!! என்னால அந்த அதிர்ச்சியை தாங்கிக்க முடியலை…” தேம்பி அழ ஆரம்பிக்க…..

அவளை தனது நெஞ்சில் சாய்த்துக் கொண்டவன்…” அழாதே பேபி டால்… தப்பு என்மேல தான்… என்னைப்பற்றிய உண்மைகளை நீ எப்படி …?? உடனே ஏற்றுக்கொள்ள முடியும்னு யோசிக்காமல்… உடனே என்னை வெளிப்படுத்திகிட்டது தான் தவறு.. மெதுவா உனக்கு சொல்லி புரிய வச்சிருந்தா… நீ என்னை புரிந்து கொள்ள வாய்ப்பிருந்திருக்கும்….” அவளை ஆறுதல்படுத்த….

“ம்…ம்..” என்றவாறே அவன் மார்பில் மேலும் புதைக்க…

“பேபிடால்…”

“ம்ம்….”

“நான் வேற்றுகிரகவாசின்னு என்னை ஒதுக்கி வச்சுடுவியா…?? என் காதலை நிராகரிச்சுடுவியா சரா” ஹூமேஷி ஆழ்ந்த குரலில் கேட்க….

அப்பொழுதுதான் அவனது கையணைப்பில் நின்று கொண்டு… தான் பேசிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள் சைரா.

கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்கள் எல்லாம் நடந்துருக்கின்றன…. இவனோ ஒரு வேற்றுகிரகவாசி…. ஆனாலும் என் மனம் இவனிடமே சரணடைகிறதே…??? இவனை பிரிந்து என்னால் இருக்க முடியுமா…???

“ம்ஹூம்….” என்று அவள் வேகமாக  தலையசைக்க….

“சரா.. நிஜமாகவா….. ” ஹூமேஷி அவளது முகத்தை நிமிர்த்திப்பார்த்து கேட்க…

வெட்கத்துடன் அவனது தோள்வளைவில் புதைந்து கொள்ள…

“சரா மை லவ்….” என்று இறுக அணைத்துக்கொண்டான் ஹூமேஷி. சைராவும் பதிலுக்கு அணைத்துக்கொள்ள… காதலியின் முழு சரணாகதியை உணர்ந்து கொண்டு….. அவளது முகத்தை நிமிர்த்தியவன்… அவளது இதழ்களுக்குள் தொலைந்து போக… கைகள் காதலியின் மென்மைகளில் ஊர்கோலம் போனது.

ஒரு கட்டத்தில் சைராவிற்கு மூச்சு வாங்கவே… அவளை விடுவித்தவன்…  தன்மேல் சாய்த்துக்கொண்டு ஆசுவாசப்படுத்த… அதில் சற்று இளைப்பாற்றியவள்…

“நீங்க ரொம்ப மோசம் ஓஜோபேபி….” என்று அவனது மார்பில் குத்த ஆரம்பிக்க…

அவளது கையைப்பிடித்து நிறுத்தியவன் இன்பமாக அதிர்ந்தான்… ஏனென்றால் சைராவின் விரல்களில் அவன் அணிவித்த மோதிரம் இருந்தது.

“இதை நீ இன்னும் கழட்டாம போட்டுருக்கியா பேபிடால்….???” அவனது வழக்கமாக அவளின் கன்னத்தோடு கன்னத்தை இழைந்தவாறே பேச….

“அம்மா பார்த்தா கேட்பாங்களேன்னு கழட்டி வச்சுட்டேன் ஓஜோபேபி… திரும்ப தூங்கும்போது எடுத்து போட்டு பார்த்தேன்…. பார்த்துட்டு இருந்தேனா… மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அப்படியே தூங்கிட்டேன். திரும்ப தண்ணீர் குடிக்கலாம்னு எழுந்து வந்தப்பதான் நடந்தது உங்களுக்கு தெரியுமே….” சொல்லும்போதே அவளது உடல் லேசாக நடுங்கியது.

அவளது நடுக்கத்தை உணர்ந்து கொண்டவன்…” பயப்படாதே சரா… நாங்களும் உங்களைப்போன்ற உயிரினங்கள்தான்…. இயற்கை அன்னை எங்களுக்கு கொடுத்த கொடை தான் எங்களுக்கு இருக்கும் சக்திகள்…. இதுவரை அதை நல்லவிதமாகத்தான் நாங்கள் பயன்படுத்திவருகிறோம்…. மனிதர்களின் ஆசைதான் பிரச்சனைகளை உருவாக்குகின்றது….” பெருமூச்சு விட்டவாறே அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்.

அவனது அணைப்பில் சந்தோஷமடைந்தவள்…. ” எனக்கு சஷிக்காவ பார்க்கனும் ஓஜோபேபி….”

இந்த வார்த்தைகளை அவள் சொன்னதும் அவளைப் பிடித்து முத்தமழை பொழிந்தான் ஹூமேஷி.

“போதும் போதும்… விடுங்க…” மூச்சிறைத்தவாறே அவனைத் தள்ளி விட்டாள் சைரா. அவள் தள்ளியதும் கட்டிலில் விழுந்தவன் அவளையும் சேர்த்து இழுக்க… அவனருகிலேயே அவளும் விழுந்தாள்.

அவளைப்பார்த்து ஒருக்களித்து படுத்தவன்….”உனக்கு முன்னாடியே…. உன் சஷிக்கா சைராபுராணம் பாட ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு… உன்னை நேர்ல பார்த்து எப்போ பேசலாம்னு காத்துக்கிட்டுருக்காங்கடா பேபி டால்…” அவளது கன்னத்தை கிள்ளிக் கொண்டே கூற…

அவனது கைகளை தட்டி விட்டவள்…”எப்பபாரு என் கன்னத்தையே பிடிச்சுகிட்டு இருக்கிங்க….” கன்னத்தை தேய்த்தவாறே சிலிர்த்துக் கொள்ள

“உன்னை முதல் முதலாக பார்க்கும் போது உன்கிட்ட ஓடிவந்து… உன் கன்னத்தை கடிக்கனும்னு தாண்டி தோணுச்சு… ” என்று கிட்டே வர… வெட்கத்தில் கண்களை மூடிக்கொண்டாள் சைரா.

ஹூமேஷி “சரா… மை பேபிடால்…” என்றவாறே அவளது அருகில் நெருங்கி படுக்க……

அவனது குரலின் குழைவு….. சைராவிற்கு  அடுத்து நடக்க போவதை உணர்த்தியது… பெண்ணிற்கே உரிய உள்ளுணர்வு உந்த… சட்டென்று எழுந்து கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.

வாயில் வைத்து நன்கு சுவைத்து கொண்டிருந்த சாக்லேட்டை… குழந்தையின் கையிலிருந்து திடீரென்று பிடுங்கினால்…. குழந்தை எப்படி விழிக்குமோ… அதைப்போல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஹூமேஷி.

அவன் விழிப்பதை பார்த்து அடக்கமாட்டாமல் சிரித்தாள் சைரா. அவளை செல்லமாக முறைத்துக் கொண்டே ஹூமேஷி எழுந்து உட்கார…

“அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் மிஸ்டர். உப்மா….” என்று கூறி சிரிக்க… அவளது பேச்சில் அவனும் சிரித்தான்.

“சரி வாங்க போகலாம்…எனக்கு சஷிக்காவ உடனே பார்க்கனும்…” அவனது கையை பிடித்து எழுப்ப…

“உன்னைக் கூட்டிட்டு போறதில எனக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லை… ஆனால் உன் அபிமாமா ஏதாச்சும் சொல்வாறேன்னுதான் தயக்கமா இருக்குடா சரா….” தயக்கத்தின் காரணத்தை கூறினான் ஹூமேஷி.

“அவரை எப்படி சமாளிக்கறதுன்னு எனக்கு தெரியும்… அதுவுமில்லாமல் இனி சஷிக்காவ நான் இங்கே கூட்டிட்டு வரப்போறேன்… டெமி அன்கிளயும் அம்மா-அப்பாக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்போறேன். ஆனால் உங்களைப்பற்றின மறுபக்கத்தை நான் அவங்களுக்கு சொல்லப்போறதில்லை. அவங்களைப்பொறுத்தவரை அவங்க காதல் திருமணம் செய்துகிட்டு வெளிநாட்டில் வாழ்ந்ததாகவே இருக்கட்டும்.

நீங்களும் டெமி அங்கிளும் இனி உங்கள் வேற்றுகிரக உண்மைகளை யாரிடமும் சொல்லக்கூடாது.

இந்த உண்மையை தெரிஞ்சுகிட்ட நானும், அபிமாமாவும் யார்கிட்டேயும் ஏதும் சொல்லப்போறதில்லை. நீங்க உங்க கிரகத்துக்கு போய்ட்டு வாங்க… நானும் நீங்கள் கூப்பிடும் போது அங்கு வந்துவிட்டுப்போகிறேன்….ஆனால் நம்முடைய பெரும்பகுதி வாழ்க்கையை பூமியில் தான் நாம வாழனும்…. அதை மட்டும் எனக்காக செய்விங்களா ஓஜோபேபி…???”….. என்று கண்களில் எதிர்பார்ப்பை தேக்கிக்கொண்டு அவனைப் பார்த்து கேட்க…..

அவளது விளக்கத்தில் உறைந்து போய் நின்றான் ஹூமேஷி.” இது ஏன் தனக்கு தோன்றவில்லை…???” …… எனக்கு என்னுடைய கிரகத்தை பிடிப்பது போல் அம்மாவிற்கு பூமியில் வாழ நான் ஏற்பாடு செய்து கொடுத்து இருந்தால் அபரஜித் அன்கிள் இவ்வளவு தூரம் பிரச்சனை செய்திருக்க மாட்டாரோ…???

டெமிபாபா கொஞ்சம் அவசரப்படாமல் இருந்திருந்தால்… எவ்வளவு மகிழ்ச்சியான வாழ்கையாக இருந்திருக்கும்.

இவ்வாறு யோசித்தவன்… மனதில் திடமான ஒரு முடிவை எடுத்தவனாக… தன்னுடைய திட்டத்தை சைராவிடமும் கூறினான். சைரா மகிழ்ச்சியுடனே அதற்கு ஒத்துக்கொள்ள அவளை அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.

அதன்பிறகுதான் அபரஜித் வந்து பார்த்தது. சைராவிற்கு என்னவாயிற்றோ என்று அவர் வீடு முழுவதும் தேடியும் அவள் கிடைக்கவில்லை. பின்பு ஒரு முடிவெடுத்தவறாக….. ஹூமேஷிக்கு அழைப்பெடுத்தவாறே தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

இங்கே ஹூமேஷியின் வீட்டில் சாக்ஷி ஊட்டிவிட… அவள் ஊட்டிவிட்ட இனிப்பை உண்டவாறே…சாக்ஷியின் இருமகன்கள் அனூப், அபயுடன் அமர்ந்து கேரம் விளையாடிக் கொண்டிருந்தாள் சைரா.

அவளைப் பார்த்து பார்த்து கண்கள் பூரித்தன சாக்ஷிக்கு. இவ்வளவு வளர்ந்துவிட்ட குமரி… இன்றும் அவளது கண்களுக்கு தான் முதல் முதலில் தொட்டிலில் பார்த்த குழந்தையாகத்தான் தெரிந்தாள்.

இன்று காலை அவளை அழைத்துக்கொண்டு வந்து ஹூமேஷியைப்பார்த்து அவள் மனம் பெருமை கொண்டது.

அவளைப்பார்த்ததும் ஓடிவந்து கட்டிக்கொண்டாள் சாக்ஷி.

“சஷிக்கா… உங்களை நான் எவ்வளவு மிஸ் செய்தேன் தெரியுமா…?? ஏன் இவ்வளவு நாள் என்னைப் பார்க்க வரலை…” அவளின் தோள்களில் தொங்கிக் கொண்டு கேட்க…

“உன்னை பார்க்க வந்தா…. உன்கூடவே இருந்துடுவாளே சைரந்திரி… அதான் கூட்டிட்டு வரலை…” பதில் கூறியது டெமெட்ரியஸ்.

அவரைப் பார்த்து புன்னகைத்தவள்…”டெமி அன்கிள்… எவ்வளவு பெரிய கில்லாடி நீங்க… ???” என்று கிண்டல் செய்ய…

“எல்லாத்தையும் வாசல்ல நின்னுகிட்டே பேசுவியா….??? உள்ளே போடி முதல்ல… இழுத்துட்டு போங்கம்மா… உங்க அருமை சைருகுட்டிய..” வண்டியை நிறுத்திவிட்டு அதட்டிக்கொண்டே வந்தான் ஹூமேஷி.

“கரெக்டா சொன்ன மகனே…” என்று டெமி ஹை-ஃபை குடுக்க…

அவர்களைப் பார்த்து முறைத்தவள்… சாக்ஷியுடன் உள்ளே சென்று கொண்டே…

“அன்கிள் இப்படில்லாம் செஞ்சிங்க… ?? நான் இப்படியே வீட்டிற்கு கிளம்பிடுவேன்…” என்று எச்சரிக்க…

“அவங்க கிடக்காங்க… நீ வாடா சைருக்குட்டி…” என்று உள்ளே அழைத்துச்சென்றாள் சாக்ஷி.

“அப்புறம் என்னம்மா… மேலிடமே உனக்குத்தான் சப்போர்ட்… நான் எதுவும் பேசலை…” என்று கூறி சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தார் டெமி.

அங்கே அவள் கண்ட காட்சி சைராவிற்கு கோபத்தை வரவழைத்தது. ஏனெனன்றால் அனூப்பும் அபயும்…. ஹூமேஷி..பொம்மை என்று அடித்துக்கூறிய… சிரியஸை துரத்தி விளையாடிக்கொண்டிருந்தனர்.

பின்னால் வந்த ஹூமேஷியைப்பார்த்து அவள் முறைக்க… அவளை சமாதானப்படுத்த அவசரமாக ஒரு பறக்கும் முத்தத்தை அனுப்பி வைக்க… ஒரு விரலை தூக்கிக் காட்டி அவனை எச்சரித்தாள் சைரா.

புதிதாக வந்த நபர் யார் என்று சாக்ஷியின் பிள்ளைகள் இருவரும் சைராவின் அருகே வர…. அப்பொழுதுதான் அவளது கையில் இருந்த மோதிரத்தை கவனித்தாள் சாக்ஷி.

“ஹூமிகண்ணா… நீ சைருவ கல்யாணமே செய்துட்டியா….?? அவள் விரலில் அணிந்திருந்த மோதிரத்தை பார்த்துக் கேட்க…” அவனை அதிர்ந்து பார்த்தாள் சைரா.

அவள் அதிர்வதை உணர்ந்து கொண்ட சாக்ஷி சைராவை அமர வைத்தவள்…” இந்த மோதிரத்தை அரசர் அவருக்கு மனைவியாகிற பெண்ணுக்குதான் அணிவிப்பார் சைருக்குட்டி…” என்று எடுத்துக்கூற… ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும்…. காதலனின் கள்ளத்தனத்தில் அவன் மீது செல்லக்கோபமும் வந்தது.

“அதான் அப்படி நடந்துகிட்டானா….??” என்று நினைத்த மாத்திரத்தில் சிவந்தது அவளது முகம். வெட்கத்தில் சிவந்த முகத்தோடு அவனை முறைத்து பார்க்க முறைக்க… ஹூமேஷியோ கள்ளச்சிரிப்புடன் அவளைப்பார்த்து கண்ணடித்து வைத்தான்.

இருவரின்‌ நடவடிக்கைகளையும் பார்த்து தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர் டெமியும் சாக்ஷியும். சாக்ஷி தனது பிள்ளைகளை சைராவுக்கு அறிமுகப்படுத்த… இருபிள்ளைகளுக்கும் சைராவை மிகவும் பிடித்துப்போனது.

அப்போழுது..” சஷிக்கா நீங்க ஓஜோ கிரகத்திற்கு போனிங்களா….??? அங்க இருக்கிறவங்க எல்லாம் எப்படி இருப்பாங்க…??” சைரா கேட்க….

அவளருகே வந்து அவளது தோள்மீது கையைப் போட்டு கொண்டு அமர்ந்தான் ஹூமேஷி.

சாக்ஷி அதன் அழகை மனக்கண்ணில் நினைத்தவாறே…” அதன் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது சைரா. வெளித்தோற்றத்தில் கரும்பச்சை நிறத்தை கொண்டிருந்தாலும்… கிரகத்திற்குள் நுழைந்து அங்குள்ள மக்களை பார்க்கும்போது…. மனிதர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசமே தெரியாது… அவர்கள் பேசும் மொழியைத் தவிர… ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித சக்தியை கொண்டவர்கள்… அரசனுக்கு மட்டும்….” என்று சொல்ல வரும்போது ஹூமேஷி சாக்ஷியிடம் கண்களை காண்பிக்க….

“அரசனுக்கு மட்டும்….??என்ன சஷிக்கா….??” என்று ஆர்வத்துடன் கேட்க…

அரசனுக்கு மட்டும் தனிப்பட்ட மரியாதை உண்டு என்று பேச்சை மாற்றி விட்டாள் சாக்ஷி.பின்பு பேச்சும் சிரிப்புமாக சந்தோஷமாக நேரம் செல்ல… தான் வந்த காரியத்தை சொல்ல ஆரம்பித்தாள் சைரா.

சாக்ஷிக்கு இஷ்டமாக இருந்தாலும் டெமி மறுப்பு தெரிவிக்க… அவரை பேசி வழிக்கு கொண்டு வந்து விட்டான் ஹூமேஷி.தாங்கள் பேசியதை செயல்படுத்த சந்தோஷமாக சைராவுடன் கிளம்பினர் சாக்ஷி குடும்பத்தினரும்.

 அத்தியாயம்-21:                                        

சைராவைக்காணாது ஹூமேஷி சொன்ன இடங்களிலெல்லாம் தேடி அலைந்து ஓய்ந்து போன அபரஜித் சோர்வுடன் வீடு திரும்பினார்.

அவரது மனம் நிச்சயமாக அடித்துச்சொல்லியது ஹூமேஷிதான் அவளை எங்காவது அழைத்துச்சென்றிருக்க வேண்டும். முதலில் அவரது அழைப்பெடுத்து பேசிய ஹூமேஷி… ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு இடத்தை கூறி… சைராவை அங்கே விட்டிருப்பதாக கூறிவிட்டு வைத்துவிட்டான். அவர் இப்போது இருக்கும் இடத்தில் இருந்து வெகு தொலைவில் இருந்தது அந்த இடம்… இருந்தாலும் மனம் தளராது காரை விரட்டிக்கொண்டு சென்றார்.

ஆனால் அங்கும் அவள் இல்லை. ஆள் அரவமற்ற பராமரிக்கப்படாத பள்ளியாக இருந்தது அந்த இடம். மறுபடியும் ஹூமேஷிக்கு அழைத்தவர்… அவன் அழைப்பை எடுத்ததுமே… பொறிந்து தள்ளினார்…

“டேய்… என் பொண்ணை எங்கடா வச்சிருக்க…??? அவள் உடம்பில் சின்ன கீறல் இருந்தாலும் நான் உன்னை சும்மா விடமாட்டேன்…. அதுதான் உனக்கு தேவையான சிப்பை எடுத்துக்கிட்டியே…??? அப்புறமும் ஏன் இப்படி நடந்துக்கிற…???

அவள் எங்க வீட்டு தேவதை…. அவளுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா மகேஷ்வரன்-பார்வதி உயிரோடவே இருக்க மாட்டாங்க… நீ என்ன பண்றதா இருந்தாலும் என்னை பண்ணிக்க… எங்க குட்டிமாவ விட்டுடு… அவளை எங்க வச்சுருக்கன்னு இப்பவாவது சரியா சொல்லு ஹூமி…” கோபத்தில் ஆரம்பித்து கெஞ்சலில் முடித்தார் அபரஜித்.

அவரை கொந்தளிக்க வைத்த ஹூமேஷியோ…. அமைதியாகவே பதிலளித்தான்… ” என்மேல நீங்க வச்சுருக்கிற நம்பிக்கையை பார்த்து புல்லரிக்குது அன்கிள்…. சரி… உங்களைப்பார்த்தாலும் பாவமாகத்தான் இருக்கு… 

நீங்க வந்து இடத்திற்கே திரும்பி போங்க….. அங்கதான் இருக்கா உங்க சைரந்திரி….” என்று முடித்துவிட்டான்.

அவருக்கு நம்பிக்கையில்லாமல் மறுபடியும் அவனுக்கு அழைக்க ஆரம்பிக்க… அவனது அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக பதில் வந்தது. மனதளவில் நொந்து போனார் அபரஜித். மறுபடியும் அவர் திரும்பி….அவர் முதலில் இருந்த இடத்திற்கு செல்ல… குறைந்தது மூன்று மணிநேரம் ஆகும்.

“சைராதான் முக்கியம்… அவளுக்கு ஒன்றும் ஆகக்கூடாது…”  என்று கடவுளை வேண்டிக்கொண்டே வண்டியை விரட்டினார். அவ்வளவு வேகமாக ஓட்டியும் ஒரு மணிநேரம் அதிகமாகவே கழிந்து…. தாமதமாகத்தான் அந்த இடத்தை அடைந்தார்.

ஆனால் அங்கும் சைரா இல்லை. கோபத்தில் ஹூமேஷிக்கு மீண்டும் அழைப்பெடுக்க… அவனது எண்ணோ அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

சைராவின் அறைக்கு சென்று பார்த்தால் ஏதாவது துப்பு கிடைக்கும். ஒரு முடிவுக்கு வந்தவராக வீட்டை நோக்கி காரை திருப்பினார் அபரஜித்.

ஆனால் அங்கு அவர் கண்ட காட்சி….   நிதர்சனம் மனதை ரணப்படுத்தினாலும்…..                     வாழ்நாளில் அவர் காண ஏங்கிய காட்சி…

மகேஸ்வரன் பார்வதியுடன் சோஃபாவில் அமர்ந்து…. பார்வதியின் தோளில் சாய்ந்து கொண்டு சாக்ஷி பேசிக்கொண்டிருக்க… டெமியும் ஹூமேஷியும் மற்றொரு சோஃபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்…..

மகேஸ்வரன் ஃபோனிலும் டெமியின் ஃபோனிலும் கேம் விளையாடிக்கொண்டிருந்த சாக்ஷியின் பிள்ளைகள் இருவரும் தான் அவரை முதலில் பார்த்தது….

“ஹை…தாத்தா வந்துட்டாங்க…” ஓடி வந்து அவரைக் கட்டிக் கொள்ள… அவர்கள் பிறந்ததில் இருந்தே அவரின் ஃபோட்டோவை காட்டி தாத்தா என்று சாக்ஷி சொல்லியே வளர்த்திருந்தாள். அவரும் மண்டியிட்டு அமர்ந்து பேரப்பிள்ளைகளை கட்டிக்கொண்டார்.

பின்பு ஏதோ தோன்றியவராக பிள்ளைகளை தலை முதல் கால் வரை பார்க்க… அதைப்பார்த்து சிரித்தனர் டெமியும் சாக்ஷியும். அவர் எதற்காக அப்படி பார்த்தார் என்பது அவர்களுக்கு தெரியாதா..??? மனிதப் பிள்ளைகளைப் போல இருக்கிறார்களா என்று பார்க்கத்தான் அப்படி செய்தது.

பேரப்பிள்ளைகளைப் பார்த்து நிம்மதியுற்றவர்… மற்ற யாரையும் பார்த்து பேசாமல் மாடியேறப் போக… மகேஷ்வரனின் குரல் அவரை தடுத்து நிறுத்தியது…

“நில்லு அபி… எத்தனை வருஷமா பிள்ளையை தவிக்க விடுவ… இப்பவாவது அவளை மன்னிக்க கூடாதா….??? உன்கிட்ட சொல்லாம.. அவள் பதிவுத்திருமணம் பண்ணிகிட்டது தப்புதான்…

உன் கோபமும் நியாயம்தான்…. உன்கிட்ட சொல்லியிருந்தான்னா நம்மளே முன்ன நின்னு ஜாம் ஜாம்னு நடத்தியிருக்கலாம்தான்….ஹூமேஷி பொய்யாக கூறிய விஷயங்களை அப்படியே மகேஷ்வரன் கூற….”

அவர்களைப் பார்த்து ஒரு முறை முறைத்தவர்… அவர்கள் அனைவருக்கும் பழச்சாறு எடுத்து வந்து கொண்டிருந்த சைராவையும் முறைத்து விட்டு அமைதியாக மேலே ஏறிச் சென்று விட்டார். சாக்ஷி கவலையாக சைராவின் முகத்தை பார்க்க.. எல்லாவற்றையும் தான் சரி செய்வதாக கண்களை மூடி திறந்தாள் சைரா.

சைரா தனது பெற்றோரிடம் அபரஜித்தை சமாதானப்படுத்தி அழைத்து வருவதாக கூறி மேலே ஏறினாள்.

அவள் படிகளில் ஏறும்போது … மகேஷ்வரன் “நீ கவலைப்படாத குட்டிமா… அவன் கோபமெல்லாம் கொஞ்சநேரம்தான்… “என்று சாக்ஷியை சமாதானப்படுத்துவது தெரிந்தது.

கூடவே அவர் ஹூமேஷியைப் பார்த்து…”நீங்க கூட சொல்லாமல் மறைச்சுட்டிங்களே தம்பி… எங்கள் அனுவின் அண்ணன் மகன் என்பதை….உங்க பெற்றோர் இறந்தது கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு என்று பேச… அதுவும் எத்தனையோ வருடங்கள் பிள்ளையை பெற்றவர்கள்… அந்த பிள்ளை நல்லா வாழறத பார்க்க முடியாம அந்த ஆண்டவன் இப்படி பண்ணிட்டாரே…”அதைக்கேட்டு சிரித்துக்கொண்டே படியேறினாள் சைரா.

அபரஜித்தின் கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள் சைரா. நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தவர்… அவளை ஒரு வெற்றுப்பார்வை பார்க்க….

“மாமா நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…” என்று ஆரம்பித்தாள் சைரா.

“….” பதில் ஏதும் கூறாமல் அபரஜித் அமைதியாகவே அமர்ந்திருக்க…

எப்படியும் இந்த விஷயத்தை பேசியே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தவளாக பேச ஆரம்பித்தாள் சைரா.

” மாமா… நீங்க என்ன நினைக்கிறிங்கன்னு எனக்கு தெரியும். ஆனால் நிதர்சனத்தை நாம ஏத்துகிட்டுதானே ஆகனும்… இன்னும் எத்தனை நாள் பயத்துக்காக நம்ம சந்தோஷத்தை தொலைக்கப்போறிங்க….” என்று பேச…

“அப்போ நீயும் அந்த இன்னொரு வேற்றுகிரகவாசியைத்தான் மணக்கபோறியா சைரந்திரி…???” நேரடியாக விஷயத்திற்கு வந்தார் அபரஜித்.

“ஆமா மாமா…” என்று உடனடியாக பதில் சொன்னாள் சைரா….

“விளைவுகள் தெரியாம காதல் உங்க கண்ணையெல்லாம் மறைக்குது… “என்றார் அபரஜித்.

“இல்லை மாமா…. நாம எல்லாரும் இப்படியே இருக்கப்போறோமா என்ன…??? எல்லாரும் ஒருநாள் மரணத்தை தழுவத்தான் போறோம்… மனிதர்களிலும் மிருகங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்…. அவர்களின் போலி முகமூடிகளை நம்பி உயிர்பலிகளை குடுக்கிறேமே… அதை என்ன சொல்வது…. ???

வேற்றுகிரகவாசிகள் என்றாலே கெட்டவர்கள் என்று சித்தரிப்பவர்கள்…. பூமியைத் தவிர வாழ்வதற்கு வேறு கிரகங்கள் இருக்கிறதா…??? என்று…..ஏன் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்…???

அப்பாடியானால் உயிர் நிரந்தமற்றது என்று தெரிந்தும்….. உயிர் வாழும் ஆசையில் மனிதகுலம் எதை நோக்கிச்செல்கின்றது…???” …. பொட்டில் அறைந்தார் போல் கேட்க… முதன்முறையாக வீணான பயத்தில்…. மகளுடன் கழிக்க வேண்டிய சந்தோஷமான நாட்களை …. இழந்துவிட்டோமோ என்று சிந்தித்தார் அபரஜித்.

“வாழ்க்கை என்றாலே பல சவால்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் மாமா… ஆனால் நம் மீது உண்மையான அன்பை வைத்திருப்பவர்கள்… நம்முடன் துணை நிற்கும் போது எப்படிப்பட்ட சூழலையும் கடந்து வந்துவிடலாம்…. அந்த நம்பிக்கை எனக்கு ஹூமேஷி மேல் இருக்கிறது மாமா…

எனக்காக அவரது கிரகத்தை விட்டு என்னுடன் வாழ்வது மட்டுமே முக்கியம் என்று… அந்த விண்ணைத்தாண்டி வந்துவிட்டார்… என் வாழ்க்கை அவரோடு தான்… “என்று பேசி முடிக்கவும்… கைகளை தட்டிக்கொண்டு டெமி உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. அவர் பின்னேயே சாக்ஷியும் ஹூமேஷியும் வர….

“சபாஷ்… அருமையான வார்த்தைகள் சைரா… இவ்வளவு சின்ன வயதில் உனக்கு எவ்வளவு மனப்பக்குவம்…” டெமி அவளைப் பாராட்டி தனது தோள்களில் சாய்த்துக் கொண்டார்.

சாக்ஷி ஓடிவந்து அபரஜித்தை கட்டிக்கொள்ள…இம்முறை அவளை விலக்கி விடவில்லை அவர்…. மகளை கட்டிக்கொண்டு அழுதுவிட்டார்.

“என்னை மன்னிச்சுடு குட்டிமா….” வெகு நாட்களுக்கு பிறகு மகளிடம் பேச…

“அப்பா நீங்கதான்ப்பா என்னை மன்னிக்கனும்…” என்று அவளது கால்களை பிடித்துக்கொள்ள…

“என்னையும் மன்னிச்சுடுங்க மாமா…” என்று டெமியும் அவரது கால்களில் விழ…

“என் பொண்ணை ராணி போல் வச்சுருக்கிங்க….இத்தனை நாள் உங்களை ஒதுக்கி வைத்ததற்கு நீங்கள்தான் என்னை மன்னிக்க வேண்டும் மாப்பிள்ளை…” என்று கூற… சந்தோஷத்துடன் அவரைக்கட்டிக் கொண்டனர் டெமியும் சாக்ஷியும்.

“ராணி போல் இல்லை மாமா… உண்மையான ராணியேதான்…. ஓஜோ கிரகத்தின் அதிகாரப்பூர்வ அரசனும் அரசியும் இவங்கதான்னு ஹூமேஷி அறிவிச்சுட்டாரு…..”என்று கூறினாள் சைரா.

அபரஜித் வியந்து பார்க்க… டெமி ” நீங்கள் நினைத்தது போல் ஹூமி எனது சொந்த மகன் அல்ல மாமா… ஓஜோ கிரகத்தின் அரசனுக்கும் அரசிற்கும் பிறந்த இளவரசன் ஓஜோ ஹூமேஷி.

அரச குடும்பத்தினருக்கே உரிய ஓஜோ என்கிற பெயரை அவர்கள் மட்டுமே வைத்துக்கொள்ள முடியும். அரசனும் அரசியும் இறந்து விட்டதால் இளவரசர் என்னுடைய பொறுப்பில் இருந்தார். அதைத்தான் நீங்கள் தவறாக எண்ணிவிட்டிர்கள்…” தன்மையாக எடுத்துக்கூறினார்.

“என்னை மன்னிச்சுடு ஹூமி… ” அபரஜித் ஹூமேஷியிடமும் மன்னிப்பு கேட்டவர்…

சைராவை அழைத்து ‘” உன் செயினை இப்போ கழட்டிக் குடு சைருக்குட்டி….” சைரா மகிழ்ச்சியோடு அதை அவர் கையில் குடுக்க….

“நான் என் முழு சம்மதத்தோட இந்த மெமரி சிப்பை  குடுக்கறேன் ஹூமேஷி… இதை வைத்துக்கொண்டு உன் கிரகத்துப்பிரஜைகளை காப்பாற்று… என்னால் முடிந்த உதவிகளை நான் செய்கிறேன்..”என்று கூறி அதை அவனது கையில் குடுக்க.. நன்றி கூறி அதைப்பெற்றுக்கொண்டவன்…. அவரை அணைத்துக்கொண்டான்.

“ம்ம்…போதும்..போதும்… பேசி அழுதது கட்டிப்பிடிச்சதெல்லாம்… இனி எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம்… கீழே வேற அம்மாவும் அப்பாவும் நமக்காக காத்துக்கிட்டுருப்பாங்க… வாங்க போகலாம்… “என்று அனைவரையும் அறைக்கு வெளியே அனுப்ப…

தான் மட்டும் பின்தங்கிய ஹூமேஷி… அவளின் கையைப்பிடித்து உள்ளே இழுத்தவன்…. இதழோடு இதழணைக்க… அவனது தோள்களை இறுக்கிக் கொண்டாள் சைரா. சிறிதுநேரம் கழித்தே அவன் விடுவிக்க… சந்தோஷமாக அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்.

“நான் நினைச்சே பார்க்கல பேபிடால்… இவ்வளவு பெரிய விஷயத்தை நீ சாதிச்சு காமிப்பன்னு….என்ன மகேஷ்ரன் அங்கிள்- பார்வதி ஆன்டிகிட்ட உண்மையை மறைக்குறதுதான் கஷ்டமா இருக்கு….”என்று அவளை அணைத்துக்கொள்ள…

“பொய்மையும் வாய்மையிடத்துங்கிற மாதிரி… நாம உங்கள பற்றிய உண்மைகளை மறைச்சு… அவங்களுக்கு சந்தோஷத்தைதான் குடுத்துருக்கோம் ஓஜோபேபி….” அவனை சமாதானப்படுத்தியவள்… பின்பு தனது வழக்கமான குறும்புத்தனம் தலைதூக்க….

“எனக்கு என்னவோ பாருபேபிய சமாளிச்சது தான்….. மலையைப்புரட்டி போட்ட மாதிரி இருக்குடா ஓஜோக்குட்டி….” என்று பேச…

“என்னடி ‘டா’ போட்டு கூப்பிடற…” ஹூமேஷி அவளை நிமிர்த்து பார்க்க

“எங்க ஊர்ல புருஷனை ‘டா’ போட்டுத்தான்டா கூப்பிடுவாங்கடா…” என்று கூறி  கதவை திறந்து கொண்டு வெளியே ஓட… அவளைத்துரத்திக் கொண்டு ஓடினான் ஹூமேஷி.

கீழே அவர்கள் இறங்கி வருவதற்குள் அவர்களது திருமண நிச்சயத்தை பேசி முடித்திருந்தனர் சாக்ஷியும் டெமியும். சைரா மகிழ்ச்சியோடு அன்னையின் தோள்களை கட்டிக் கொள்ள…

“நான் நினைச்சபடியே உன்னோட கல்யாணம் நடக்கப்போகுதுடா சைரு…” மகளை நெட்டி முறித்து திருஷ்டி கழிக்க…. வெட்கத்துடன் தலைகுனிந்தாள் சைரந்திரி.

மகேஷ்வரன் கடவுளுக்கு மனதில் நன்றி கூறிக்கொண்டிருந்தார்… குருஜி எச்சரித்த நாட்களை நல்ல விதமாக மகள் கடந்து… நல்ல வாழ்க்கையும் அமைந்து விட்டது… கடவுளின் கிருபையால் மட்டுமே என்று உறுதியாக நம்பினார்.

அவர்களது குடும்ப ஜோசியரே அவர்களது கல்யாணத்தை முன்னின்று நடத்த… இனிதே தங்களது இல்லற வாழ்க்கையில் இணைந்தனர் சைராவும்-ஹூமேஷியும்.

அவர்களது வரவேற்பில் மணப்பெண் தோழியாக நின்றிருந்த சௌமியாவையை விக்ரம் சுற்றி சுற்றி வர அவனைத்திரும்பியும் பார்க்காமல் சென்று கொண்டிருந்தாள் அவள்.

“டீ சௌமி… விக்ரம் சார் உன்னையவே சுத்தி சுத்தி வர்றாரு… நீ என்னவோ அவரைப்பார்த்து இந்த முறை முறைக்கிற…??? உனக்கு அவரைப் பிடிக்கலையாடி….???”….

முன்மேடையில் இருந்து சௌமியாவையே கண்ணில் காதல் பொங்க ஏக்கத்துடன் பாரத்துக்கொண்டிருந்த விக்ரமை பார்த்தவாறே கேட்டாள் சைரா.

“பிடிக்கலைன்னு யார் சொன்னது…???? அந்த கே..கேக்கு(கடமை கண்ணாயிரம்)… கே..கே..என்னா(காதல் கண்ணாளன்) நான் பிரமோஷன் குடுத்து ரொம்ப நாளாச்சு….. அது என்கிட்ட லவ் சொன்ன விதத்துலதான் கடுப்பாகி முறைச்சுகிட்டு இருக்கேன்…” என்று கூற…

“அடிப்பாவி..‌ பிடிச்சுகிட்டேவா முறைக்கிற…??? அப்படி என்னடி பண்ணிட்டாரு…???” ஆர்வத்துடன் சைரா கேட்க… 

 

“திடீர்னு ஒருநாள் கால் பண்ணி… சௌமியா உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்லி… எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற பார்க்குக்கு வரேன்னு சொன்னாருடி….

நானும் ஆசையா இவர் தன்னோட காதலை சொல்லப்போறாருன்னு ஆசையா கிளம்பிப்போனா….”

“போனா… என்னாச்சு சொல்லுடி..?? காதலை சொன்னாரா இல்லையா…?? ” அனைவரும் மேடையில் நின்று தாங்கள் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருப்பதை கவனித்தவாறே அவசரப்படுத்தினாள் சைரா.

இதில் அவளது ஓஜோபேபியோ… யாரும் அறியாமல் அவளது இடுப்பில் தனது கைகளால் இன்ப இம்சை கொடுத்துக் கொண்டிருந்தான்.

“அதெல்லாம் சார் காதலை சொல்லிட்டாரு…. ஆனால் என் கையில் ஒரு கிலோ டெல்லி இனிப்புகளை கொடுத்து…

நான் உன்னை காதலிக்கிறேன் சௌமி… “ஐ லவ் யூ….” நீ என் காதலை நீ ஏற்றுக்கொண்டு… என்னை மணந்து கொள்வாயா கண்மணின்னு கேட்டுச்சு பாரு….

கண்மணியாம்… கண்மணி… என்னைப் போண்டாமணி ரேஞ்சுக்கு நினைச்சு வச்சுருக்கான்டி… எவனாச்சும் இப்படி காதல் சொல்வானா…??? என்னைப்பார்த்தா       “மினி கடோத்கஜி” மாதிரி தெரியுதா அவனுக்கு…!!! என்னை தீனிப்பண்டாரம்னே முடிவு பண்ணிருக்கான்.

இதுல அவனுக்கு இந்த அற்புதமான யோசனையை குடுத்தது யாரு தெரியுமா??

நம்ம அபிஅங்கிள் தான்… “எனக்கு என்ன பிடிக்கும்னு இதுபோய் அவர்கிட்ட கேட்டதுக்கு…?? எங்க சௌமிக்கு டெல்லி இனிப்பு ரொம்ப பிடிக்கும் தம்பின்னு அவர் சொல்லியிருக்காரு…” அதை இந்த லூசு அப்படியே வாங்கிட்டு வந்து நிக்குது…

நான் என்ன அவ்வளவா சாப்பிடறேன்… கொஞ்சமாதான் சாப்பிடறேன்….  ஒரு பத்துரூபா ரோஜாப்பூ கிடைக்கலியா இவனுக்கு…??? ” என்று வராத அழுகையை துடைத்துக்கொள்ள… மேடை என்றும் பாராது அடக்கமாட்டாமல் சிரித்து வைத்தாள் சைரா. அது அழகான புகைப்படமாக படமெடுப்பவரின் புகைப்பட கருவியில் அழகாய் பதிந்தது.

தேன் நிலவுக்கு அவளை அமெரிக்காவிற்கு அழைத்துச்சென்ற ஹூமேஷி… சைராவின் குறிக்கோளையும் நிறைவேற்றி அதற்கு வெற்றிகரமாக காப்புரிமையும் பெற்றுக்கொடுத்து… அவள் பெயரிலேயே தனியாக மருந்துகள் தயாரிக்கும் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவி… இந்தியாவில் இலவசமாக அந்த மருந்தை விநியோகித்தான்.

ஓஜோ கிரகத்து பிரஜைகளின் வாழ்க்கையை சீர்படுத்தியவன்… அபரஜித்தின் உதவியால் மண்வளத்தையும் மீட்டெடுத்து விட்டான். கிரகத்தின் முழு பொறுப்புகளையும் டெமியிடம் ஒப்படைத்துவிட்டு…தான் பூமியிலேயே தனது வாழ்க்கையை வாழப்போவதாக கூறிவிட்டான்.

தங்களது காதல் வாழ்க்கையின் பரிசாக… ஒரு அருமையான நாளில் ஆண்மகவை ஈன்றேடுத்தாள் சைரா. அவனுக்கு “விஸ்வஜித்” என்று பெயர் சூட்டினார் பார்வதி.

அதன்பின் அவர்களது வாழ்க்கையில் சந்தோஷம்… சந்தோஷம் மட்டுமே நிரம்பி வழிந்தது.

********சுபம்********

 எபிலாக்:

நகரின் பிரசித்திபெற்ற மண்டபத்தில் சௌமியாவின் வளைகாப்பு விமரிசையாக நடைபெற்று கொண்டிருந்தது. உட்கார்ந்திருக்கும் போதே சோர்வுடன் தெரிந்த மனைவியப்பார்த்த விக்ரம்… வேகமாக உள்ளறைக்கு சென்று…மனைவிக்காக தயாரித்து வைத்திருந்த பழச்சாறை எடுத்து வந்து… வளை அடுக்கிக்கொண்டிருக்கும் பெண்களை கடந்து எடுத்துக்கொண்டு போக…

தன் கணவன் தனக்காக பழச்சாறை எடுத்து வருவதை கண்களில் காதலுடனே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் சௌமியா. அவன் அவள் அருகே செல்லும்முன் தடுத்தார் லஷ்மியம்மாள்.

“அச்சோ… ஏன் தம்பி… நீங்க இந்த வேலையெல்லாம் பார்க்குறிங்க…?? கொஞ்சநேரம் வளை அடுக்குற வரைக்கும்தான் தம்பி… இப்போ அரைமணிநேரம் முன்னதான் அவளுக்கு சாப்பாடு ஊட்டினிங்க…??” என்று அவனை தடுக்க..

” நீங்க சும்மா இருங்க அத்தை… நீங்க இப்படி சொல்லிதான் நான் அவளுக்கு கொஞ்சமா ஊட்டிட்டேன்… இப்பவே களைச்சு தெரியுறா… அவங்களை கொஞ்சம் நிப்பாட்ட சொல்லுங்க… நான் அவளுக்கு பழச்சாறு மட்டும் கொடுத்துட்டு வந்துடறேன்…” என்ற விக்ரமின் அட்டகாசத்தை பார்த்து சிரித்துக்கொண்டே… அங்கு வந்தாள் சைரா… தனது ஒரு வயது மகனை தூக்கிக்கொண்டு.

“அண்ணா… நீங்க இப்படியே அவளுக்கு ஊட்டிவிட்டுகிட்டே இருந்தா… அவளுக்கு ஆர்த்தி எடுத்து வீட்டுக்குள்ள கூட்டிக்கிட்டு போகும் பக்கத்து வீட்டு நிலைவாசலையும் சேர்த்து வைச்சாதான் முடியும்…” என்று அவனை கலாய்க்க…

“நீ சும்மா இரு சைரு… எப்பப்பாரு உங்க ரெண்டுபேருக்கும் இதே வேலையாப்போச்சு… என் பேபிம்மாவை கலாய்க்கலனா உனக்கு தூக்கம் வராதே…”

அதற்குள் வளைபோட்டு முடித்து… விக்ரமை அழைத்தனர். வேகமாக மனைவியின் அருகே சென்றவன்…அவளுக்கு பழச்சாறை புகட்டிய பிறகே… ஆரத்தி எடுப்பதற்கு அவளருகே அமர்ந்தான்.

சரியாக ஆரத்தி எடுக்கும் நேரத்தில் உள்ளே நுழைந்தான் ஹூமேஷி. சைரா அவனைப் பார்த்து புன்னகைக்க அவன் காலியாக இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தான். அவனருகில் அமர்ந்திருந்தது ஜோசியர் ரகுராமன்.

இவனைப் பார்த்து அவர் புன்னகைக்க… அவனும் பதிலுக்கு புன்னகைத்தான்.

அப்பொழுது ஜோசியர்…” வந்த வேலையை வெற்றிகரமாக முடிச்சிட்டேளா ஹூமேஷி…??” என்று கேட்க…

“என்ன சொல்றிங்க சார்..??” ஹூமேஷி சற்று கவனத்துடன் பேச…

“எனக்கு தெரியும் ஹூமேஷி… நீ பூமியைச்சேர்ந்தவன் அல்ல என்பது…உங்கள் திருமணத்தில் நான் உன் கைகளை பார்க்கும் போது… அதில் பொய்யான ரேகைகளே இருந்தன… என் தீர்க்கம் எப்பொழுதும் பொய்யாகாது….” மெதுவான குரலில் பேச…

“குருஜி…” என்று ஹூமேஷி தயங்க…

“நீ நல்லவன் சக்திகளை நல்ல விதத்தில் கையாளுபவன் என்பதும் எனக்குத்தெரியும்… இந்த உண்மை என்னுள்ளேயே புதைந்து விடும்…. கவலைப்படாமல் நீங்கள் சந்தோஷமாக வாழுங்கள்…” என்று ஆசிர்வதித்தவர்….

“உனது மகன் ‘விஸ்வஜித்’…. அண்டத்தை ஆளப்பிறந்தவன்… அவனது சக்திகளை அடக்கி… அவனது ஆக்ரோஷத்தை அடக்க… நீ சற்று சிரமப்பட வேண்டும்…அவனிடம் மட்டும் பொறுமையைக் கையாளு… வெற்றி உனக்கே…” என்று கூறிவிட்டு எழுந்து சென்று விட்டார்.

அப்போது அங்கு வந்த சைரா…” என்னங்க… ஜோசியர் அன்கிள் என்ன பேசினாரு…??” என்று கேட்டவள்… மகனை அவனிடம் கொடுக்க… அவனை வாங்கிக்கொண்டான் ஹூமேஷி.

“நலம் விசாரிச்சாருடா… நம்ம கிளம்பலாமா…??” என்று கேட்க…

“இல்லைங்க… நான் வர்றதுக்கு எப்படியும் இரவாயிடும்… நீங்க விஜூவ கூட்டிகிட்டு அப்பாகூட கிளம்புங்க… நானும் அம்மாவும் வந்துக்கிறோம்…” என்று கூறிவிட்டாள்.

“ஓகேடா பேபிடால்… வா நம்ம சௌமிக்கு பரிச குடுத்துட்டு… அப்பறம் நான் கிளம்பறேன்…” என்றவன்… அவளுடன் சேர்ந்து சென்று…

அபூர்வ ரக மரகதக்கற்களால் ஆன வளையல்களை மனைவியின் கையில் கொடுத்து அவளுக்கு அணிவித்தான்.

“வாவ்… ரொம்ப அழகாயிருக்கு ஹூமி அண்ணா…” சௌமியா சந்தோஷப்பட…

“உனக்காகத்தான்டா…” தங்கையாக பாசம் காட்டும் சௌமிக்கு ஆசிர்வாதம் செய்தவன் மகனை தூக்கிக்கொண்டு… மாமனாருடன் கிளம்பி விட்டான்.

வீட்டிற்கு வந்து மகேஷ்வரன் சற்று நேரம் இளைப்பாற… மகனைத்தூக்கிக்கொண்டு படுக்கையறையில் உள்ள தொட்டிலில் இட்டவன்… தனது கைகளை போலவே அணிந்திருக்கும் மற்றொரு கை உறையை கழற்றி வைத்தான்.

தனது உண்மையான கைகளால் மகனை தொட்டால்… தன்னைப்போலவே மகனுக்கு அமைந்திருக்கும் மந்திர இறக்கைகளின் சக்தி உயிர் பெற்று விடும். அவனுக்கு ஐந்து வயதாவது ஆன பின்புதான் அவற்றின் சக்தியை ஹூமேஷியால் கட்டுப்படுத்தி… மகனுக்கு விவரம் தெரிய வரும்போது அதன் உபயோகத்தை அவனால் சொல்லிக்கொடுக்க முடியும்.

அரச குடும்பத்தினர்க்கு மட்டுமே இருக்கும் சக்தி அது. அதைத்தான் சாக்ஷியை சொல்லவிடாமல் தடுத்து விட்டான். இன்றுவரை அவன் சைராவிடம் சொல்லவில்லை… சொல்லப்போவதும் இல்லை… தங்களது அறையில் மாலை மாட்டப்பட்டிருந்த அபரஜித்தின் புகைப்படத்தின் முன்பு நின்று மனதிற்குள் நினைத்து கொண்டான் ஹூமேஷி.

சரியாக அந்த நேரம் கதவைத்திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் சைரா.

“என்னடா இது… ஓஜோக்குட்டி… தூங்காம இன்னும்…. முழிச்சுட்டுருக்கிங்களே…இது சரியில்லையே????” என்றவாறே அவனது அருகே வந்தவள்… மகனைப்பார்க்க… நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான்.

“பால் சாப்பிட்டு தூங்கிட்டானாங்க… ?? சாப்பிட ரொம்ப அடம் பிடிச்சானா….??” என்றவாறே தொட்டிலின் திரையை போட்டுவிட….

“அதெல்லாம் என் பையன் சமத்து….” என்றவாறே அவளது கழுத்தில் முகம் புதைக்க….

“ஓஜோக்குட்டி இந்த நகையெல்லாம் கழட்டிட்டு வரேனே..??? இந்த அம்மா சொல்ல சொல்ல கேட்காம அவ்வளவையும் போட்டு விட்டுட்டாங்க….” அவனது அணைப்பில் நெளிந்தவாறே கூற… அவளை விடுவித்தவன்….

“இப்போ இதை கழட்டனும்… அவ்வளவுதான பேபிடால்…?? ” ஹூமேஷி அவளை நோக்கி தனது கைகளை சுழற்ற…

சைரா ஒரு சுற்று சுற்றியதும்… நகைகள் அவனது கைகளில் இருந்தன..

“உங்களை…” என்று கடிந்து கொண்டவள்….

“செய்யறத சொல்லிட்டு செய்ய மாட்டியாடா… ஓஜோக்குட்டி…?? ” அவனை முறைத்தவள்…

“ஆனால் இப்போதான் ஃப்ரீயா இருக்கு…” ஆசுவாசப்பட்டவாறே… மாற்றுடை மாற்றிக்கொண்டு வரலாம் என்று திரும்ப…

“பேபிடால்…” என்றழைத்தான் ஹூமேஷி.

“என்ன…??” என்று திரும்புவதற்குள்… அவளது புடவை அவனது கைகளில் இருந்தது.

“என்னங்க… என்ன இது…” சைரா கைகளால் தன்னை மறைத்துக் கொள்ள…

“இப்போதான் சராடார்லிங் எனக்கு ஃப்ரீயா இருக்கு‌…” கூறிக்கொண்டே அவளைத்தூக்கி கட்டிலில் கிடத்தியவன்… விளக்கை அணைக்க…. காதல் சங்கமம் இனிதே நடந்தேறியது.

*****************

இந்த பதிவை மதிப்பிடுங்கள்
[மொத்தம்: 11 சராசரி: 4.6]

6 Comments

Leave a Reply
  1. Hi Ruthi I really didn’t expect this alien story but wow😍😍😍😍😍 I just loved it I was not able to discontinue the story very nice

  2. Really very very nice Ruthi😍😍 ஏலியன் கதைனே தெரியாம ஸ்டார்ட் பண்ணேன்… சூப்பரா எழுதுறீங்க… சௌமிக்கு பிறந்த குழந்தையாவது கம்மியா சாப்பிடுமா🤣🤣 அருமையான கதை சகி😍😍😍🤩

    • Thankyou so much dear☺️☺️… ஹா..ஹா..😂😂 சௌமி மை டார்லிங் கேரக்ட்ர்😍😍 அவ குழந்தை கம்மியா சாப்பிடுமா? நெவர் பேபி😂😂😉😉😉😉…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you think?

Expert

Written by Ruthivenkat

 

About Author:

 

                  வாசகர்களுக்கு வணக்கம். நான் ருதி வெங்கட். இது எனது புனைப்பெயர். உண்மையான பெயர் உதயா வெங்கட்ரமேஷ். முதுகலை பட்டதாரி, இல்லத்தரசி. கதை படிப்பது மிகவும் பிடித்த விஷயம். அதுவே கதை எழுத ஊக்கசக்தியாக அமைந்து விட்டது. போட்டிக்கதையின் மூலம் எழுத்துப்பயணமும் தொடங்கியது. இதுவரை நான்கு கதைகள் எழுதி முடித்துள்ளேன். முதல்கதை புத்தகமாக  AD பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது. முகநூலில் ஓரளவு வாசகர்களுக்கு முகமறிந்த நபர்தான் . எனது கதைகளை தொடர்ந்து படிக்க Ruthivenkat (ருதிவெங்கட்)என்கிற எனது பெயரை FOLLOW செய்யுங்கள். கதைகளை பற்றிய அறிவிப்புகள் உங்களுக்கு வந்துவிடும்.

               வாசகர்களின் ஆதரவிலும், உற்சாகமூட்டலிலும்தான் கடந்த ஒருவருடத்தில் நான்கு கதைகளை வேகமாக முடிக்க முடிந்தது. உங்களது ஆதரவுகளை தொடர்ந்து வழங்குங்கள். 

 

        நன்றி

Story MakerContent Author

எனை சாய்த்தானே(ளே)!!! 💞-9

எனை சாய்த்தானே(ளே)!!! 💞 – 10