அத்தியாயம் 36
பொன் என்று நினைத்தேன்
பூவென்று மலர்ந்தேன்..
உன்னை நினைத்திருப்பேன்
எனை மறந்திருப்பேன்
டிவி பார்த்துக் கொண்டிருந்த பானுவுக்கு சுர்ரென்று இடுப்பில் வலி தாக்க முதலில் அவள் பயந்து போனாள். எல்லோரும் சாப்பிட போய் இருப்பதால் அவர்கள் வரட்டும் என்று பொறுமையாய் பல்லைக் கடித்துக் கொண்டு உட்கார, டாக்டர் சொன்ன தேதிக்கு இன்னும் நாட்கள் இருக்க, இப்போது இந்த வலி எதற்கு என்று குழம்பி போனாள். வலியை அடக்கவும், அவளது பலவீனமான இருதயம் அதை தாங்க முடியாமல் கொஞ்சம் வேகமாய் துடிக்க ஆரம்பித்தது. அதனால் ப்ரெஷர் வேறு ஏற ஆறம்பிக்க அவளை அறியாமல் வேர்த்து ஒழுகியது.
அம்மாஞ்சியை கூப்பிடலாம் என்று எழ நினைக்கையில் அடிவயிற்றில் சுரன்று வலியும், கர்ப்பப்பை வாய் திறந்து நீரும் வெளியாக, எதுவும் தெரியாத பானு எழுந்திருக்கவே பயந்தாள். சரி அவர்கள் வரட்டும் என்று மீண்டும் சோபாவிலேயே சாய்ந்து விட, அங்கு எல்லோரும் இருந்ததால் , சிரிப்பும் பேச்சுமாய் எல்லோரும் சாப்பிட நேரம் ஆயிற்று.
ஷ்யாம் மட்டும் சற்று அவசரமாய் சாப்பிட, “என்ன அம்மாஞ்சி அவசரம்..? ஒ.. அங்க பானு சாப்பிடாமல் காத்திருக்கா என்றா..? என்று கேட்ட பரத்…
“அம்மா கொஞ்சம் சாதம் பிசைந்து கிண்ணத்தில் ஸ்பூன் போட்டு அம்மாஞ்சி(அத்தான்) கையில் கொடுத்து விடுங்க.. அவர் கொண்டு போய் ஊட்டி விட்ருவார். இன்னைக்கு உங்களுக்கு அந்த வேலை மிச்சம்..” என்று வேடிக்கையாய் சொல்ல..
ஷ்யாமின் குணம் அறிந்த பெரியவர்கள் இதை அவன் எப்படி எடுத்துப்பானோ என்று நினைத்தனர்.
ஆனால் அவன் எளிதாக, “கொடுங்க மாமி.. நான் கொடுக்கிறேன் அவளுக்கு..” என்று கேட்டுவிட்டு கை கழுவ எழுந்தான்.
“என்ன அதுக்குள்ளே சாப்பிட்டுட்டே..?” என்று தாத்தா கேட்க..
“இல்லை. போதும் அவ தனியா இருக்கா.. கொடுங்க மாமி..” என்று விஜயாவின் கையில் இருந்து கிண்ணத்தை வாங்கிக் கொண்டு ஹாலுக்கு சென்றவன்…
“பானு .. “ என்று அழைக்க, அரை மயக்க நிலையில் தன்னை திரும்பி பார்த்த பானுவைப் பார்த்த மாத்திரத்தில் தன் கையில் உள்ள கிண்ணத்தை நழுவ விட்டான்.
“பானு..” என்று அவன் கத்திய கத்தலில் வீடே அதிர்ந்தது. அடுத்த நொடி டைனிங் ஹாலில் இருந்து எல்லோரும் வந்து விட, “டேய் பரத், யுகா வண்டியை எடுங்கடா…” என்று சத்தம் போட இருவரும் வாசலுக்கு ஓடினர்.
பானுவை கையில் வாரியவன், “மாமா அவ ரிப்போர்ட்ஸ் எல்லாம் எடுத்திட்டு ரஞ்சன், ஹரி கூட நீங்க முதல்ல வந்திடுங்க. மத்தவங்க பின்னால வரட்டும்..” என்று சொல்லிக் கொண்டே பானுவை காரின் பின் இருக்கையில் கிடத்தி தன் மடியில் வைத்துக் கொண்டு “யுகா வண்டியை ஹாஸ்பிடலுக்கு விடு..” என்றான்.
காரில் போகும்போதே டாக்டர்க்கு அழைத்து விஷயத்தை சொன்னவன், டாக்டர் எதுக்கும் ஒரு ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் கூட வச்சுக்கோங்க..” என்றும் சொன்னான்.
யுகா வண்டியை விரட்டியதை பார்த்து பரத்துக்கு பயமாக இருந்தது. அந்த அளவு விரைவாக செலுத்தி, ஹாஸ்பிடல் வந்து சேர்ந்ததும் காத்திருந்த ஹாஸ்பிடல் ஊழியர்கள் அவளை ஸ்ட்ரச்சரில் ஏற்றி எமெர்ஜென்சிக்குள் கொண்டு சென்றனர். பின்னாலேயே வந்த ஆனந்தன் எல்லா ரிப்போர்ட்சையும் கொண்டு வந்து அவன் கையில் கொடுத்தார்.
உள்ளே சென்று பானுவை செக் பண்ணி விட்டு வெளியே வந்த லேடி டாக்டர், “மிஸ்டர். ஷ்யாம் அவங்களுக்கு பனிக்குடம் உடைஞ்சிடுச்சு. இப்ப ஆபேரஷன் பண்ணி பேபி எடுக்கணும். நீங்க சொன்னமாதிரி ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் சொல்லி வச்சிருக்கோம். அவர் வந்ததும் ஆபரேசன் பண்ணனும். எல்லா பார்மலிடிஸ்ல சைன்பண்ணிடுங்க. குழந்தை ஒன் மந்த் இன்குபேட்டர்ல வச்சுதான் பார்த்துக்கணும்..” என்று கூறிவிட்டு சென்று விட, ஆனந்தன் அதிர்ந்து அமர்ந்து விட்டார். அதற்குள் எல்லோரும் வந்து விட, ஆளாளுக்கு ஆனந்தனுக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தனர்.
எதுவும் காதில் வாங்காமல் சென்னையில் தாங்கள் ஏற்கனவே பானுவின் ரிப்போர்டை காட்டிய ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் டாக்டர் அப்பாயின்மென்ட் வாங்குவதற்கு ஷ்யாம் முயற்சி செய்து கொண்டு இருந்தான். அவனுடைய விடா முயற்சியால் அடுத்த அரைமணி நேரத்தில் அந்த டக்டர் இந்த ஹாஸ்பிடலுக்கு வந்தார். அவர் வந்ததும் அவருடைய முன்னிலையில் லேடி டாக்டர் ஆபரேசன் செய்து குழந்தையை எடுத்தார். பானுவைப் போலவே அழகான பெண் குழந்தை… குழந்தையை எல்லோரும் அதற்குரிய ஸ்பெசல் வார்டில் இன்குபேட்டரில் சென்று பார்த்தனர்.
பானுவின் மயக்கம் தெளியாததால் அவளுடைய சிகிச்சையை ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் டாக்டர் மேற்கொள்ள அவள் ஐசியூவுக்கு மாற்றப் பட்டாள். “என்னடா இது..? குழந்தை தான் பிறந்தாச்சே..! அப்புறமும் எதுக்கு அவளை ஐசி யூல வச்சிருக்கா…”
“இல்லம்மா. அவளுக்கு ஒரு சின்ன ப்ராப்ளெம் இருக்கலாம்னு டாக்டர் சந்தேகப் படறாங்க.. அதான் இன்னும் இரண்டு நாள்ல சரியாயிடுவா….” என்று சொன்னவன் தனது குழந்தையை சென்று பார்த்தான்.
உள்ளங்கை அளவே இருந்த அந்தக் குழந்தையை பார்த்த அவனுக்கு சந்தோசத்தில் கண்ணீர் வந்தது. அது பேசவில்லை. சிரிக்கவில்லை. தூங்குகிற சின்னஞ்சிறு சிசு.. அதற்கே நமக்கு இப்படி இருக்கிறதே.. அப்ப தன்னை பெற்ற தாய்க்கு எப்படி இருக்கும்.. அந்த நொடி தனது தாயின் அருமை புரிய, அவர்களுக்கு தன்னிடத்தில் இருந்த எதிர்பார்ப்பு புரிந்தது. தனக்கு மனைவியாக வருபவள் மூலம் வரும் குழந்தையை அவர்கள் தங்கள் பேரக் குழந்தையாக பார்க்கத்தான் போகிறார்கள், என்றாலும் அந்த குழந்தை தங்களின் பரம்பரையை சொல்லும் விதமாக் இருந்தால்தான் அவர்களுக்கு சந்தோசம் என்று நினைத்ததில் தவறில்லை என்றே நினைத்தான்.
அடுத்த மூன்று நாட்களும் பானுவுக்கு எல்லா டெஸ்ட்களும் எடுத்து அவளுடைய நோயின் தன்மையை கண்டறிய அவர்கள் முயற்சி எடுத்துக் கொண்டனர். பானுவின் தொப்புள் கோடி திசுக்களை பாதுகாத்து வைக்க வேண்டும் என்று அவன் ஏற்கனவே சொல்லி இருந்த படியால் அது படியே அந்த ஹாஸ்பிடல் டாக்டர்கள் செய்து இருந்தனர்.
ஷ்யாமை அழைத்த ஹார்ட் ஸ்பெசலிஸ்ட், “அவங்க அம்மா பிரச்சினை இவங்களுக்கும் இருக்கு. ஆனால் இப்பதான் லேசா தெரியுது. இன்னும் ரொம்ப சீரியஸ் ஆகலை.. பிறந்த தொப்புள் கோடி திசுக்களை நம் சேமிச்சு வச்சிருக்கோம் இல்லையா.. அது மூலம் இவங்க பிரச்சினையை எப்படி தீர்க்கலாம்னு நான் பாம்பேல உள்ள டாக்டர்ஸ் கிட்ட பேசிட்டு சொல்றேன். தேவைப் பட்டா அவங்களை இங்க வரவழைச்சு பேசண்டை காட்டி ஒபினியன் கேட்கலாம்.. டோன்ட் வொரி.. மெடிக்கல் இப்ப எவ்வளவோ முன்னேறி இருக்கு.. இதுக்கு தீர்வு நிச்சயம்..” என்று ஆறுதல் சொல்லி சென்றார்.
நான்கு நாட்கள் கழித்து ஸ்பெசல் வார்டுக்கு வந்த மனைவியை பார்த்த ஷ்யாமின் கண்கள் கலங்கியது. அவர்கள் இருவரையும் தனியே விட்டு எல்லோரும் வெளியில் சென்று விட, அருகில் அமர்ந்தவனின் நெஞ்சில் சாய்ந்த பானு, “நானும் எங்கம்மா மாதிரி போயிடுவேன்னு நினச்சு பயந்திட்டேளா..?” என்று கேட்டாள்.
அவளை விலக்கி, முகத்தை உற்றுப் பார்த்த ஷ்யாம் உனக்கு தெரியுமாபானு…?”
“தெரியும். அம்மா இறந்த கொஞ்ச நாள்லேயே ஒரு நாள் அப்பா பீரோல உள்ள ரிப்போட் பார்த்து தெரிஞ்சு கிட்டேன். அதனாலேயே எங்க அப்பாவை இங்க எல்லோரடேயும் சேர்த்து வச்சிடணும்னு முடிவு பண்ணி எங்க அப்பா கிட்ட அடம் பிடிச்சு இங்க வந்தேன். ஒரு வேலை நானும் போயிட்டா எங்க அப்பா தனியா ஆயிடுவார். அந்த மாதிரி அவர் தவிக்கக் கூடாதுன்னு நினச்சேன். அதனால்தான் எங்க அப்பா உங்களை மாப்பிள்ளையா தேர்ந்து எடுத்ததுக்கு தலையாட்டினேன்.
உங்களை எனக்கு பிடிச்சு இருந்தாலும், உங்களுக்கு என்னை பிடிக்கததுனால, ஒருவேளை நான் இறந்தா அது உங்களை பெரிய அளவுல பாத்திக்கதுன்னு நினச்சேன். அதனாலதான் உங்களை நெருங்க நான் அவ்வளவு ஆர்வம் கான்பிக்கலை. ஒரு வேளை குழந்தை பிறந்தா நீங்க அதுல கமிட் ஆக வேண்டியிருக்கும்னு நினச்சேன். குழந்தை இல்லேன்னா நீங்க உங்க காதலி திரும்பி வந்தாக் கூட, அவ கூட வாழ்க்கையை அமைச்சிக்கலாம்னு நினச்சேன்.. ஆனால் எதிர்பாராத வரவு இந்தக் குழந்தை… அம் சாரி.. உங்களோட வாழ்கையில் நான் தெரியாம நுழைந்ததுக்கு…!” என்று சொன்னாள்.
“அடிச்சு பல்லை உடைச்சிடுவேன். ஏண்டி நான் என்ன அவ்வளவு கெட்டவனா.. எனக்கு எங்க வீட்டு ஆட்கள் மேல கோபம்தான். அது கூட இப்ப கிடையாது. தெரிஞ்சோ, தெரியாமலோ எங்க வீட்டு ஆட்கள் எனக்கு செய்த நல்ல விஷயம் உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சது. அதை விட சந்தோசம் ரோஜாக் குவியல் மாதிரி ஒரு மகளை எனக்கு நீ கொடுத்தது.. இனி இந்தப் பேச்சு எதுக்கும் இடமில்லை. நாளை மும்பை ஸ்பெசலிஸ்ட் வராங்க.. அவங்க என்ன சொல்றாங்களோ அது படி ட்ரீட்மெண்ட் . இன்னும் மூனே மாசம். நீ திடகாத்திரமான பானுவா மாறரே.. அதுக்கு நான் பொறுப்பு. வேற எதாவது எதிர்மறையா பேசின.. இருக்கு உனக்கு.. விதம் விதமா தண்டனை கொடுப்பேன்…!”
“என்னனு சொல்லுங்க அம்மாஞ்சி(அத்தான்)..! என்று உதட்டைக் குவித்தவளிடம்…
அவள் உதட்டை பிடித்து கிள்ளியவன், “கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரின்னு ஒரு பழமொழி உண்டு. அதுக்கு உதாரணம் நான் தான், வாழ்கையை ஆரம்பிக்கவே இல்லை. அதுக்குள்ளே பிள்ளை, உடம்பு சரியில்லைன்னு ஆயிரம்.. உடம்பு குணமாகட்டும். அப்புறம் உன்னை வச்சுக்கறேன்..”
“யாராவது பொண்டாட்டியை வச்சுப்பாங்களா…?” என்று சிரித்தாள்
அப்போது உள்ளே வந்த காயத்திரி “ரஞ்சுவும் , வித்யாவும் உண்டாகி இருக்காங்க. இந்த ஹாஸ்பிடல்ல தான் செக்கப் பண்ணி சொன்னாங்க..” என்று சொன்னாள்.
உள்ளே வந்த ரஞ்சு, வித்யாவிடம் ஷ்யாம் ”இதுல கூட அக்கா தங்கை போட்டியை விட மாட்டீங்க போல இருக்கு..?” என்று கிண்டலாக வினவ..
“அதெப்படி, ஒருத்தரை விட்டு ஒருத்தருக்கு அதிகமாக மத்தவங்க செஞ்சிட்டா.. இப்ப எங்க ரெண்டு பேரயும் ஒண்ணு போல பார்க்கணும்ல…” என்று கெத்தாய் ரஞ்சு சொல்ல, காயத்திரியிடம் “எதுக்கும் ஜாக்கிரதை மாமி..” என்று சொல்லி விட்டு சென்றான்.
மறுநாள் பாம்பேயிலிருந்து வந்த டாக்டர் பானுவை முழுவதுமாக பரிசோதனை செய்தனர். முடிவில் சென்னையில் உள்ள டாக்டர் மும்பையில் இருந்து வந்தவர்கள் எல்லோரும் கலந்து ஆலோசித்து பானுவுக்கு எப்படி ட்ரீட்மெண்ட் கொடுப்பது என்பதை முடிவு செய்தனர்.
ஷ்யாமை அழைத்து , “ மிஸ்டர் ஷ்யாம். நீங்கள் உங்கள் மனைவியை அழைத்துக்கொண்டு மூன்று மாதம் கழித்து பாம்பே வாருங்கள். அங்கு வைத்து ஒரு மாத சிகிச்சை. குழந்தையின் தொப்புள் கொடி திசுக்களிலிருந்து சிலவற்றை எடுத்து உங்கள் மனைவிக்கு ட்ரீட்மென்ட் பண்ண முடியும். நீங்கள் வந்த பிறகு அதைப்பற்றி நாங்கள் உங்களுக்கு விரிவாக விளக்குகிறோம். இப்போதைக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் உடல்நிலை தேறி நீங்கள் அங்கு அழைத்து வரும்போது ஒரு இரண்டு மாத சிகிச்சையிலேயே முழுவதும் குணம் அடைய வாய்ப்புகள் இருக்கிறது… ‘’ என்று கூறி அவனுடைய கையை குலுக்கி விடைபெற்றனர்.
விஷயம் தெரிந்த வீட்டினர் அனைவரும் மிகுந்த சந்தோஷம் அடைய பத்து நாட்களுக்கு பிறகு குழந்தையும் ஓரளவு தேறிய பிறகு பானுவையும், குழந்தையையும் வீட்டுக்கு அழைத்து சென்றனர். குழந்தை நன்கு தேறிய பிறகு ஆறு மாதம் கழித்து பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று ஷ்யாம் உறுதியாக கூறிவிட்டதால் யாரும் எதுவும் சொல்லவில்லை.
வீட்டுக்கு வந்த மனைவியும் குழந்தையையும் ஷ்யாம் தாங்கியதை பார்த்து குடும்பமே மூக்கில் விரலை வைத்தது . குழந்தை எட்டு மாதத்தில் பிறந்ததால் அதை பெற்றோர் தவிர யாரும் அனாவசியமாக தொடக் கூடாது என்பதால், பானுவுக்கும் உடல்நிலை தேற வேண்டும் என்பதால் ஷ்யாமும் தமயந்தியும் மட்டுமே குழந்தையை கவனித்துக் கொண்டனர். அவன் குழந்தையை கவனித்துக் கொண்டதை பார்த்து பானு அவனிடம், “அம்மாஞ்சி(அத்தான்) உண்மையிலேயே நானும் என் பொண்ணு அதிர்ஷ்டம் செஞ்சவங்க…!” என்று சொல்ல…
என்ன என்பது போல் பார்த்த அம்மாஞ்சியிடம், (அத்தான்) “ஒரு பொண்ணுக்கு பிரசவ நேரத்தில் அம்மாவோட உதவிதான் ரொம்ப தேவைப்படும். எனக்கு அம்மா இல்லாத குறையை நீங்க தீர்த்துட்டீங்க..! என்று கண்ணீர் மல்க சொன்னாள்.
அவள் அருகில் வந்து அவளை அணைத்துக் கொண்ட ஷ்யாம் “ நான் தான் உனக்கு நன்றி சொல்லணும். இப்படி தேவதை போல ஒரு குழந்தையை கொடுத்ததற்கு… நான் இப்படித்தான் தெரிஞ்சும் எனக்கு உன்னை கல்யாணம் பண்ணி கொடுத்த மாமாவுக்கு அடுத்து நன்றி சொல்லணும்… பானு உண்மையா மனசார சொல்றேன் ஐ லவ் யூ…” என்றான்.
மூன்று மாதங்கள் கழிந்தவுடன் ஷ்யாம், பானு ,குழந்தை, தமயந்தி, ஆனந்தன் எல்லோரும் பம்பாய் சென்றனர். அங்கு தங்கி கொண்டு இரண்டு மாதங்கள் அங்குள்ள ஹாஸ்பிடலில் பானுவுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இனி பயமில்லை என்று அந்த டாக்டர்கள் சொன்னதும்தான் தனது மனைவியையும் மகளையும் சென்னை அழைத்து வந்தான். மகளுக்கு புனர்ஜென்மம் பெற்று தந்த மருமகனை ஆனந்தன் நன்றியுடன் அணைத்துக்கொண்டார்.
வீட்டுக்கு வந்த பானுவையும் குழந்தையையும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அடுத்த பத்து நாட்களில் நல்ல நாள் பார்த்து குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. கிருஷ்ணய்யங்கார் தங்களது வீட்டிலேயே விழாவை வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.
அதற்கு முன்னர் ரஞ்சுவுக்கும், வித்யாவுக்கும் வளைகாப்பு பண்ணி வீட்டிற்கு அழைத்து வந்துவிடலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படியே வளைகாப்பு செய்து இருவரையும் அழைத்து வந்துவிட்டனர். அதனால் வீடு களைகட்டியிருந்தது. பெயர் சூட்டு விழாவிற்கு வந்திருந்த அனைவரும் குழந்தையின் அழகில் மயங்கி தூக்க முயற்சிக்க, பானுவின் மகள் பிடிவாதமாக அப்பாவை விட்டு கீழே இறங்க மறுத்தாள். ஆறு மாதங்கள் ஆகி விட்ட படியால் அவள் உட்காரவும் சிரிக்கவும் செய்தாள். அவளுக்கு எதுவென்றாலும் அப்பா வேண்டும். ஷ்யாமும் யாரையும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய மகளை தூக்கிக் கொண்டு திரிந்தான்.
வாத்தியார் வரவழைத்து ஹோமங்கள் செய்து, பச்சரிசியில் மோதிரம் கொண்டு ஷ்யாம் எழுதிய பெயர் லக்ஷ்மிகௌரி. அதையே மும்முறை மகளின் காதில் ஓதினான். தனது அம்மாவின் பெயரை தன் மகளுக்கு வைத்த கணவனை வைத்த கண் வாங்காது பார்த்தாள். தனது மனைவியின் பெயரை வைத்த மருமகனிடம் ஆனந்தனுக்கு மதிப்பு பெருகியது.
“அம்மாஞ்சி பானு வந்த புதுசுல, அவளை எதுக்கெடுத்தாலும் முறைச்சிட்டு இருந்தீங்க. இப்ப என்னடான்னா ஆளே மாறிட்டீங்க..! எப்பவும் பானு புராணமா இருக்கு…!”
“நானாவது கல்யாணத்துக்கு அப்புறம் பொண்டாட்டி பின்னால போறேன். நீ எல்லாம் அதுக்கு முன்னாடியே தான், போடுடா தோப்புக்கரணம்னா.. எண்ணிக்கோங்கிற… நீ எல்லாம் என்னை பார்த்து பேசுற…” என்று எல்லார் முன்னாடியும் அவனை வார, கையெடுத்து கும்பிட்ட பரத் “தெரியாம சொல்லிட்டேன் அம்மாஞ்சி, இனி உங்க பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டேன்… எஸ்கேப் ஆகி விட்டான்.
அடுத்து இரண்டு மாதங்கள் கழித்து ரஞ்சுவுக்கு ஆண்குழந்தையும், வித்யாவுக்கு பெண் குழந்தையும் பிறந்தது. அந்தக் குழந்தைகளின் பெயர் சூட்டும் விழா முடிந்ததும் பரத்துக்கும் அவன் காதலித்த பெண்ணையே நிச்சயம் செய்தனர். எல்லோருடைய ஆசைப்படியே திருமணம் செய்து வைத்த பெரியவர்கள், அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதைக் கண்டு சந்தோசம் அடைந்தனர்.
சுபம்..
Very interesting and heart feeling lovable story . Mighavum arumai sagothari.👌👌👌👌👌👌👌👌👌👌💝💝💝💝💝💝💝💝💝💝
மிக்க நன்றி சகோதரி